அத்தியாயம் 1
செங்கதிரோனின் பொன்னொளி கிரணங்கள் பட்டு உயிர்களெல்லாம் ஜனித்துக் கொண்டிருந்த அச்சமயத்தில், ஆனை முகத்தோனின் சரீரம் பொன்னென மின்னி, முன்னிருந்த தடாகத்தில் எதிரொளித்தது.
அக்காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட அத்தடாகையானது தாமரை, குவளை மற்றும் அல்லி என முக்கிய மலர்களால் நிறைந்திருந்தது. அவைகளில் தாமரைகள் மட்டும் தன் காதலன் பரிதியைக் கண்ட மகிழ்ச்சியில் இதழ் விரித்திருந்தன.
அன்றைய நாளில் நடைபெறவிருக்கும் தன் செல்லப் பெயர்த்தியின் நிச்சய விழாவிற்காக அங்கு சிறப்பு பூஜை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் சங்கரப்பாண்டியன்.
பூஜையின் நடுவே கடவுளிடம், “அப்பா விநாயகா! நீ தான்பா நல்லபடியா இந்த நிச்சயத்தை கல்யாணம் வரை கொண்டுபோய் அருள் புரியனும்“ என்று தன் கன்னங்களில் போட்டுக்கொண்டார்.
பூஜையை முடித்த அர்ச்சகர் விபூதித் தட்டை நீட்ட அனைவரும் அதனை தொட்டுக் கும்பிட்டனர்.
முறையே பூஜை முடித்து அனைவரும் எதிரிலிருந்த அம்மாளிகைக்குள் புகுந்து கொண்ட சமயம், மாளிகையின் பின்புறத்தில் கொலுவீற்றிருந்த தொப்பைப் பிள்ளையார், 'டேய் தகப்பா! நானே இன்னும் ஒன்னும் அமையாம, தனியா இந்தத் தடாகையில உட்கார்ந்து தவம் கிடக்கேன். இதுல நீ வேற ஏன்டா என்னை டிஸ்டர்ப் பண்ற? உன் பேத்தி கல்யாணத்தை நல்ல முறையில நான் தான் நடத்தி வைக்கணுமா? நெவர். டேய்! நான் என்ன கடவுளா? இல்ல கல்யாண ஆர்கனைசராடா? உன் பேத்தி சம்யுக்தாவை பிரித்விராஜன் தன் ஆடிக்கார்ல வந்து தூக்கிட்டுப் போகப்போறான். அவன் கூட நீயே உன் பேத்தியை அனுப்பி வச்சிட்டு, டாட்டா காட்டப்போறப் பாரு' என நொடித்துக் கொண்டவர், வெளியே தனது அக்மார்க் புன்னகையை வீசி, தன் தும்பிக்கைக்குள் மறைத்துக் கொண்டார்.
அக்காலைப் பொழுதில் பகலவன் தன் தரிசனத்தை பண்ணைபுரத்தில் அமைந்திருந்த அம்மாளிகைக்கும் கொடுத்து ஒளிபெறச் செய்திருக்க, தன் செல்லப் பெயர்த்தியின் நிச்சய விழாவிற்காக வீட்டையே அதட்டி உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார் அங்காளப் பரமேஸ்வரி.
அந்த எழிலகம் மட்டுமல்லாது ஊரையே அடக்கி ஆளும் தொழில்வளம் மற்றும் அரசியல் பலம் வாய்ந்தவர் சங்கரப்பாண்டியன். அவரது பெயர்த்தியின் நிச்சயவிழா என்றால் கேட்கவா வேண்டும்? வீடே அல்லோல கல்லோலப்படுகிறது.
"பெரியம்மா, நாமெல்லாம் இப்படி அடிச்சிப் பிடிச்சி வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம். ஆனா, விழாவோட நாயகி அதிதியம்மாவை இன்னும் காணோமேம்மா?" எனக்கேட்ட பணிப்பெண்ணிடம்,
"அதிதி இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவா தனம். அதுக்குள்ள நீ இந்தப் பூவையெல்லாம் தொடுத்து முடி" என்றார் அங்காளப் பரமேஸ்வரி.
புதிதாக வாங்கிய நகைகளையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்த அவரின் மகள் ஆனந்தவதி, திடீரென தன் தாயிடம், "அம்மா, மாப்பிள்ளை ரொம்பப் பெரிய இடம் போலயிருக்கே? அப்பா கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்." என்று கூற, சுர்ரென்று கோபம் வந்தது அவருக்கு.
"அவங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தா என்ன ஆனந்தி? நம்ம அதிதியைக் கல்யாணம் பண்ண அவங்க கொடுத்து வச்சிருக்கணும். ஆமா, மாப்பிள்ளையோட அப்பா எம்.பி தான். அதனால என்ன? இப்போ நமக்கு தொழில்ல ஏகப்பட்ட நஷ்டம். அது உனக்கு தெரியும் தானே? மாப்பிள்ளையோட அப்பா தான் நமக்கு இப்போ தொழில்ல உதவியா இருக்கார். உங்கப்பாவும், மாப்பிள்ளையோட தாத்தாவும் பால்ய கால சிநேகிதங்க. அவர் தான் உங்க அப்பாக்கிட்ட அதிதியைப் பொண்ணு கேட்டிருக்காரு. நாங்களும் நல்ல குடும்பம்னு சம்மதிச்சிட்டோம்." என்று கூறி அடுத்து வந்த வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.
மறுபுறம், "அந்த அனாதைக் கழுதைக்கு வந்த வாழ்க்கையைப் பார்த்தியா ஆனந்தி?" என்று தன் புறணியை துவங்கினார் மானசா. அவர் ஆனந்தவதியின் அண்ணன் மனைவி.
ஆனந்தவதி இம் கொட்டவுமில்லை. உம் கொட்டவுமில்லை.
"சின்ன வயசுலயிருந்தே உங்க அப்பா அம்மா தான் அவளைத் தலைல தூக்கி வச்சி ஆடி மகாராணி ஆக்கிட்டாங்க ஆனந்தி. என்னையும், எம் பொண்ணையும், ஏன் உன்னைக் கூட இந்த வீட்டுல மதிக்க ஆளில்லையே?" எனத்தன் வெறுப்பை கக்கிக் கொண்டிருந்தார்.
ஆனந்தவதியோ, "விடுங்க அண்ணி, நம்மளைப் பிடிச்சத் தொல்லை இத்தோட ஒழியப் போகுதேனு நாம சந்தோசம் தான் படணும்" என்று பதிலுரைத்ததோடு, மீண்டும் தன் நகைகள், உடைகள் ஆராயும் வேலைகளைத் தொடர்ந்தார்.
இவ்வாறு அவ்வீட்டில் ஆளாளுக்கு ஒவ்வொரு மனநிலையில் பிடித்தும் பிடிக்காமலும் நிச்சய ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டிருக்க, திடீரென ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அக்கணம் அருகில் தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து வரவுசெலவு கணக்குகளை கவனித்துக் கொண்டிருந்தார் சங்கரப்பாண்டியன். தன் மகனிடம் கணக்குகளில் உள்ள சில சந்தேகங்களை கேட்டு தெளிந்துக் கொண்டிருந்தவர், திடீரென தன் வீட்டின் முன்பு வந்து நின்ற கார்களைக் கண்டு எழுந்து நின்றார்.
பல கோடிகளை விழுங்கிய அம்மாளிகையின் முன் எறும்புபோல் வரிசை வரிசையாய் வந்து நின்றது ஆடி, பென்ஸ் கார்களின் அணிவகுப்பு.
ஆடிக் காரிலிருந்து இறங்கிய ஓட்டுநர் நேராய் காரின் பின்பக்கக் கதவை திறந்து வைத்து, தன் எஜமானியின் வருகைக்காய் சிரம் தாழ்த்தி நின்றார்.
தோட்டத்தில் நின்ற சங்கரப்பாண்டியன் அக்கார்களைக் கண்டு அவ்விடம் நோக்கி நகர்ந்தார்.
அங்காளப் பரமேஸ்வரியும் வந்திருப்பது யார்? என அறியும் நோக்கில் தன் கணவரின் அருகில் சென்று நின்று கொண்டார்.
அக்காரிலிருந்து இறங்கியது செங்குளத்தின் குலதெய்வம் நாச்சியம்மை. அறுபது வயதினை தொட்டிருந்தவர் பச்சை நிற சுங்குடிச்சேலையை பின்கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார். நெற்றியில் திருநீற்றை பட்டையாகப் பூசி, கொண்டையைத் தூக்கி வாரி முடிந்திருந்தவர் மிதப்பான பார்வையுடன் அனைவரையும் அளவிட்டார்.
அவரின் வருகையில் வாயில் ஈ போகாத குறையாக நின்றிருந்தனர் சங்கரப்பாண்டியனின் குடும்பத்தினர்.
இருபது வருடங்களுக்கு முன்பு 'இந்தக் குடும்பத்தின் நிம்மதியை அழிப்பதே எனது லட்சியம்' என சூளுரைத்துச் சென்றவர் இப்போது இந்நன்னாளில் வந்திருக்கிறார் என்றால் அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைக்காதா என்ன?
அவரின் வருகையில் ஸ்தம்பித்து போயிருந்த சங்கரப்பாண்டியன், முதல் ஆளாய் சுதாரித்து அவரை வீட்டினுள் வருமாறு வரவேற்றார். ஆம், தமிழர் பண்பாட்டைக் கருதி.
வீட்டிற்குள் நுழைந்ததும் பின்னால் நின்றிருந்த தன் மூன்று மகன்களில் மூத்தவனான கண்ணனை அழைத்து, பழத்தட்டினை டீபாய் மீது வைக்குமாறு பணித்தார் நாச்சியம்மை.
அங்காளப் பரமேஸ்வரி கொண்டு வந்த பழச்சாறை நிராகரித்தவர், "சம்பந்தம் பண்ண வந்த இடத்துல நினைச்சது நடக்காம கை நனைக்கறப் பழக்கம் எனக்கில்ல" என்றார் அதிரடியாக.
அவரின் பேச்சில், "அம்மா! யாருக்கு யார் சம்பந்தம் பேச வந்திருக்கா?" என்றுக் கொந்தளித்தார் சங்கரப்பாண்டியன்.
"அய்யோ! உங்களை இப்படி டென்ஷனாக்கி பார்க்கனும்னு தான் இவ்வளவு நாள் நான் காத்திருந்தது. கொடுத்த உயிர் பலிக்கு பழி வாங்காம சம்பந்தம் பண்ண வந்திருக்கேனேனு நீங்க சந்தோசம் தான் படணும். அதை விட்டுட்டு இப்படிக் கொந்தளிக்கிறீங்க? உங்களை இன்னும் டென்ஷனாக்கிப் பார்க்கணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா, பாருங்க டைம் இல்ல. அதனால நான் வந்த விசயத்தை நேரடியாவே சொல்லிடுறேன். உங்க செல்லப் பேத்தியை என் மகனுக்கு பொண்ணுக் கேட்டு வந்திருக்கேன். என்னப் பார்க்கறீங்க? இருபது வருசத்துக்கு முன்னாடி பணம், பதவினு நீங்க எவ்வளவு ஒசரத்துல இருந்தீங்களோ, அதை விட பத்து மடங்கு நான் இப்போ ஒசந்திருக்கேன். உங்க பிசினஸ்ல இப்ப ரெண்டு வருசமா நீங்க தோல்வியை சந்திக்கிறதுக்குக் காரணமும் நான் தான். என் செல்வாக்கு தான். நீங்க எம்.எல்.ஏவா இருக்கலாம். ஆனா கவர்மெண்ட் இப்ப என் கையில. உங்களால ஒரு ஈர வெங்காயமும் புடுங்க முடியாது. ஆமா, எல்லாம் பணம் தான். இப்போ நான், ஐயா உங்கப் பொண்ணை கொடுங்கய்யானு உங்க முன்னாடி கெஞ்சிட்டு நிற்கல. இருபது வருசத்துக்கு முன்னாடி எப்படி உங்க முன்னாடி நிற்கக் கூட தகுதியில்லைனு சொன்னீங்களோ? அதையெல்லாம் உடைச்சி, என் குடும்பத்துல உங்களை சம்பந்தம் பண்ண வைக்க தான் நான் இப்ப வந்திருக்கேன்." என்று அழுத்தமாய் சொன்னதும்,
"ஏய்! யாரோட வீட்டுல வந்து என்ன பேசுற?" என சங்கரப்பாண்டியனின் இளைய மகன் ஈஸ்வரன் கை ஓங்கும் முன் மூலையில் கிடந்தான், நாச்சியம்மையின் மூன்றாவது மகன் கௌதமனின் கைவண்ணத்தால்.
சங்கரப்பாண்டியன் பதற்றத்தோடு எழுந்து நின்று தன் மகனை அதட்டியவர், பின் நிதானமாய், "இப்போ நான் முடியாதுனு சொன்னா என்ன செய்யறதா உத்தேசம்?" என்றார்.
அக்கேள்விக்கு பதிலாய் நாச்சியம்மை கூறியதைக் கேட்டு சங்கரப்பாண்டியனின் மொத்தக் குடும்பமும் மியூசியச் சிலைகளாகினர். இது நாச்சியம்மை ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்பதால் அலட்சியமாய் மீண்டும் குரலை உயர்த்தினார்.
"இப்ப சொல்லுங்க! இந்த நிச்சயத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே? இன்னைக்கே கல்யாணம் நடந்தாகனும். எல்லா ஏற்பாடும் செய்துட்டு தான் நான் இங்க வந்திருக்கேன். இந்தத் தட்டு கொண்டு வந்ததெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயத்துக்குத் தான். ம்! சீக்கிரம் பொண்ணை என்கூட அனுப்புங்க." என அதிகாரம் செய்தார்.
அனைவரும் நாச்சியம்மை கூறியதைக் கேட்டு அதிர்ந்திருந்த அவ்வேளை, அம்மாளிகையில் தன் காலடியை எடுத்து வைத்தாள் அழகுப்பதுமை அதிதி.
அளவான உயரத்தில் பெண்மைக்குரிய அங்க லாவண்யங்களுடன் ஆசீர்வதிக்கப்பட்ட அதிதிக்கு வயது இருபத்தியொன்று. மையெழுதிய நீண்ட கண்களும், இடைதாண்டிய அடர்ந்த கூந்தலும் அவளது சிறப்பம்சங்கள்.
எப்போதும் சுடிதாரிலேயே வலம் வருபவள், இன்று தன் பாட்டியின் வற்புறுத்தலால் புடவை அணிந்திருந்தாள். அதனால் அவளால் வேகமாக நடக்க முடியவில்லை. இடப்பக்கத் தோளில் கைப்பை கனக்க, மறுபக்க கையிலிருந்த பெட்டியை உருட்டிக்கொண்டே மெதுவாக நடந்து வந்தாள்.
அன்னமென வந்தவளின் அழகில் மயங்கி, அவளை வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் நாச்சியம்மையின் மூன்றாவது மகன் கௌதமன்.
வாசலில் இருந்த கூட்டத்தைக் கடந்து கூடம் நுழைந்தவள், தன் பாட்டியைக் கண்டு புன்னகை சிந்தியபடியே, மற்றவரைக் கண்டு மென்னகை சிந்தினாள்.
பின், புதிதாக இருந்தவர்களை அடையாளம் காண முயன்றாள். அதற்குள் அவளை உன் அப்பா பெயர் என்னவென்று கேட்டு திசை திருப்பினார் நாச்சியம்மை.
“உதயச்சந்திரன்” என்றவள் கூறியது தான் தாமதம் அடுத்த நொடி, "நல்லதாப் போச்சு. கல்யாணப் பொண்ணே வந்துட்டா. விக்ரமா! என் மருமகளை கூட்டிட்டுப் போய் கார்ல உட்கார வைப்பா." என்றார்.
இதுவரை அவரின் மகனென கூறியவுடன் கெட்டப் பழக்க வழக்கங்களின் தத்துப்பிள்ளையான கௌதமனுக்குத் தான் தன் பெயர்த்தியைப் பெண் கேட்கிறாரோ என கலங்கியிருந்த சங்கரப்பாண்டியனின் மனம், தற்போது விக்ரமன் என்றதும் நிம்மதி கொண்டது.
இவ்வளவு நேரம் தன் பெரியன்னையின் பேச்சை, வீட்டு நிலைக்கதவின் மேல் ஸ்டைலாக சாய்ந்து நின்றுகொண்டே கேட்டுக் கொண்டிருந்த விக்ரமன், அவரின் உத்தரவில் நிமிர்ந்து அதிதியைக் கண்டான்.
நிமிர்ந்தவனை கண்ணில் ஆர்வம் பொங்கக் கண்டார் சங்கரப்பாண்டியன்.
கூரிய மூக்கும், திருத்தப்பட்ட தாடி மீசையும், நெற்றியில் கீபோர்ட் வாசிக்கும் கேசமுமென ஆண்மையின் இலக்கணமாய் திகழ்ந்தான் விக்ரமப்பாண்டியன். ஆம், அது தான் அவனது நீண்ட நாமம்.
கையிலிருந்த ஆப்பிள் ஐபோனை பேண்ட் பாக்கெட்டிற்குள் திணித்தவன், தன் கறுப்புநிற பிளேசரை சரி செய்தபடியே, ஆராயும் பார்வையுடன் அவளை நெருங்கினான்.
பயத்தில் வேண்டாம் எனும் விதமாய் தலையசைத்துக்கொண்டே பின்னோக்கி நகர்ந்தாள் அதிதி.
அவன் வரும் முன் வேகமாய் தன் பாட்டியிடம் ஓடியவள், "இவங்கல்லாம் யார் பாட்டி? இங்க என்ன பண்றாங்க? இங்க என்ன நடக்குது?" என அவரின் கைகளை பிடித்துக்கொண்டு பரிதவித்தாள்.
அவரோ விம்மலை மட்டுமே பதிலாய் வழங்க, சங்கரப்பாண்டியன் தன் கனத்த குரலில் அவளை திகைக்கச் செய்தார்.
"இத்தனை வருசம் உனக்கு அம்மா அப்பாவா இருந்த உன் தாத்தாப் பாட்டிக்கு நீ ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சா, இதோ உன் முன்னாடி நிற்கறாங்களே? இவங்கக் கூடப் போ அதிதி. அவங்க சொல்றதைக் கேட்டு இனிமே அவங்க குடும்பத்துல ஒருத்தியா வாழப் பழகு." என அவளின் தாத்தா கூறவும், தூக்கத்தில் நடப்பவள் போல் அவரை நோக்கிச் சென்றாள் அதிதி.
முழு உண்மையையும் கூற முடியாமல் அவளின் பாட்டியும், "ஆமா அதிதி. தயவு செஞ்சு அவங்கக் கூட போயிடும்மா." என தன் வாயை மூடி அழுதார்.
அவர்களின் கண்ணீரை காண சகிக்கவில்லை அவளுக்கு.
மனதிலெடுத்த முடிவுடன் சங்கரப்பாண்டியனை நோக்கி கைக்கூப்பியவள், "நான் போகனும், அவ்வளவு தானே தாத்தா? உங்களுக்கும் பாட்டிக்கும் அது தான் சந்தோசம்னா, நான் கண்டிப்பா அவங்கக் கூடப் போறேன் தாத்தா. உங்க மேல நான் வச்சிருக்கற நம்பிக்கையில போறேன்" எனத் திரும்பி நாச்சியம்மையைப் பார்த்தாள்.
அவள் பார்வையில் ஒரு உறுதி தெரிந்தது.
தழுதழுத்த குரலில், "ஈஸ்வரா, அதிதியோட பெட்டியை அவங்க கார்ல கொண்டு போய் வைப்பா" என்றார் சங்கரப்பாண்டியன்.
தந்தை சொல் தட்டாதப் பிள்ளையாக ஈஸ்வரும் அவளின் உடைமைகளை காரில் கொண்டுபோய் ஏற்ற, ஆனந்தவதிக்கும் மானசாவிற்கும் சந்தோசம் கூத்தாடியது.
அதிதி, நாச்சியம்மையை நெருங்கிய அடுத்த நொடி ஒரு வலிய கரம் அவள் கரம் பற்றியது.
தொடரும்...