அத்தியாயம் 8
ஏழாம் மாதம் அதிதி ஞாபகம் வந்தவளாக, "ப்ளவுஸெல்லாம் சின்னதாகிடுச்சு மாமூ" என சிரமப்பட்டு சிணுங்கிக் கொண்டிருந்தாள்.
விக்ரமன், "ப்ளவுஸ் சின்னதாகல அம்முக்குட்டி. நீ தான் பெருசாகிட்டே" என்று கிண்டலடித்தான்.
அவன் வயிற்றில் குத்தியவள், "ரெண்டும் ஒன்னு தான். எனக்கு இப்போ மெட்டர்னிட்டி கவுன் வேணும் மாமூ. வாங்கித் தாங்க" என அடம்பிடிக்கவும், அவளை ஏங்கவிடாமல் மறுநாளே அவள் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லுமளவிற்கு டிரெஸ் வாங்கி குவித்தான் விக்ரமன்.
சாயங்காலம் அந்த கவுனை அணிந்து நடைபயிற்சி கிளம்பியவளைக் கண்ட நாச்சியம்மை, "ஹே குட்டி, என்ன டிரெஸ் இது? அழகா சுங்குடி சேலை கட்டினா உடம்புக்கு நல்லாயிருக்குமில்ல?" என கடிந்தார்.
அதிதி பதில் கூற முடியாமல் விழித்தாள்.
உட்புகுந்த விக்ரமன், "டாக்டர் தான் நாச்சூம்மா இந்த ட்ரெஸ் போடச் சொன்னாங்க" என்று அவளைக் காப்பாற்றி ரகசியமாய் அழவம் காட்டினான்.
நாச்சியம்மை அவளிடம் பால் நிறைந்த டம்ளரை கொடுத்து, "இத குடிச்சிட்டுப் போ. வெறும் வயித்தோட நடந்தா புள்ள என்னாகுறது?" என்றதும் அவரின் கவனிப்பில் மனம் நிறைந்தவள், பாலை அருந்திவிட்டு தன் கணவனுடன் புறப்பட்டாள்.
பாவம் அவளுக்குத் தெரியவில்லை. அந்த கவனிப்பு தனக்கானது அல்ல, தன் குழந்தைக்கானது மட்டுமேயென்று.
நடைபயிற்சி செய்யும் வழியில் அதிதி பஞ்சுமிட்டாய் கேட்க சுகாதாரமானது அல்ல என வாங்கித்தர மறுத்தான் விக்ரமன். அவனிடம், இப்படிச் சொன்னால் கேட்க மாட்டான் என அவன் பலவீனத்தில் கை வைத்தாள் அதிதி.
"மாமூ பாருங்க, இப்போ நீங்க வாங்கித் தரலைனா நான் அம்முலுக்கிட்ட நீங்க இல்லாதப்போ உங்களை பேட் டாடினு சொல்லி, அவ மனசுல உங்களை ஒரு வில்லனா பதிய வச்சுருவேன். ஜாக்கிரதை!" என மிரட்டவும், அரக்கப் பரக்க ஓடியவன் பஞ்சுமிட்டாயை வாங்கி வந்து அவள் வாயில் திணித்தான்.
அவனைக் கண்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தவள் சாப்பிட்டுக்கொண்டே மீண்டும் தன் நடைபயிற்சியைத் தொடர்ந்தாள்.
ஆனால், மார்பும் வயிறும் பெருத்திருந்ததால் சிறிது தூரத்திற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை. கால்வலியில் தன் வயிற்றை பிடித்துக்கொண்டே ஓரிடத்தில் உட்கார்ந்து விட்டாள்.
தன்னை தாண்டிச் செல்லும் தன் கணவனை அழைக்கும் நோக்கில் வேகமாக அவள், "ஆம்புலன்ஸ் நூத்தியெட்டு" என அவனுக்கு தான் வைத்த செல்லப் பெயரை தன்னையும் அறியாமல் கத்த, அதனைக் கேட்டு விக்ரமன் வருவதற்குள் அங்கு நடைபயிற்சி மேற்கொண்டிருந்த கூட்டம் வந்துவிட்டது.
அவளைச் சுற்றி நின்றுகொண்டு, "என்ன செய்யுதுமா? ஆம்புலன்ஸ் கூப்பிடனுமா?" என்றும் பதறியது.
'அய்யோ!' என்று நின்றிருந்தவள் தன் கணவன் அருகில் வரவும் ஆசுவாசமடைந்து அவனை அணைத்துக் கொண்டாள்.