நிறம் மாறும் நிஜம்
1
"ஹலோ தர்மா! தர்மா தானே?" ஆலயப் பிரதக்ஷிணம் ஆரம்பித்தவனைக் குரல் இழுத்து நிறுத்தியது.
"ஆமா. சார் யாருன்னு…" என்று மாஸ்க் மறைவின் வழியே கேட்டான் தர்மா.
"ஐ அம் வினீத் மேனன். நினைவிருக்கா? மூன் பேப்பர் மில்ஸ் மிஸ்டர் ஸ்ரீநிவாஸன் வீட்டுக் கல்யாணத்தில் மீட் பண்ணினோம்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் நாற்பதுகளில் இருந்த அந்த செழிப்பான மனிதர்.
"ஓ, வணக்கம். எப்படி இருக்கீங்க சார்?"
"கொரோனாக்குப் பயந்துக்கிட்டே நல்லா இருக்கேன். உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். *மிஸ்டர் பாலகோபாலன் நம்பூதிரியை நான் சமீபத்தில் மீட் பண்ணினேன், உங்களைப் பற்றி ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார்" என்றார் மேனன்.
(*பார்க்க:
நாக மேகலை)
"அவன் என் ஃப்ரெண்ட் தான்" என்றான் தர்மா.
"உங்க ஃப்ரெண்ட்ஷிப்பைப் பற்றி, அதோடு சமீபத்தில் நீங்களும் உங்க ஸிஸ்டர்ஸும் அவங்க ஃபேமிலிக்குச் செய்த உதவியைப் பற்றி ரொம்ப உயர்வா பேசினார். அதிலிருந்தே உங்களை மீட் பண்ணணும்னு ஆசை. அகஸ்மாஸ்தா கோவிலில் சந்திக்கும்படியா நேர்ந்திருக்கு."
"சந்தோஷம் சார். அப்புறம் மீட் பண்ணலாம்" என்றான் தர்மா நாசூக்காக.
"உங்களை நான் மீட் பண்ணணும்னு நினைச்சதுக்குக் காரணம் உங்களைப் பாராட்ட மட்டுமில்லை, உங்க உதவி கேட்கவும்தான். எனக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா?" என்று கெஞ்சும் குரலில் கேட்டார் மேனன்.
தர்மா மாஸ்கின் பின்னால் புன்னகைத்தான். "என் ஆஃபீஸுக்கு வாங்களேன், விரிவா பேசலாம்" என்றான்.
"எப்போ வரட்டும்? உங்க கன்வீனியண்ட் டைம் சொல்லிட்டீங்கன்னா வசதியா இருக்கும்" என்றார் விடாக்கண்டர்.
"சரி, இன்னிக்கு மதியம் இரண்டு மணிக்கு மேல வாங்களேன்" என்று தர்மா சொன்னதும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, "ரொம்ப தாங்க்ஸ் தர்மா" சொல்லி, கோயிலின் வெளியே சென்று மறைந்தார் மேனன்.
தர்மா நிறுத்திய பிரதக்ஷிணத்தைத் தொடர ஆரம்பித்தான்.
*****
மணி சரியாக இரண்டு.
சதுரா துப்பறியும் நிறுவனத்திற்குள் மேனன் நுழைந்தபோது, சுழல்நாற்காலியில் தர்மா வீற்றிருந்தான். அருகில் ஸ்டெனோ மேஜை போன்ற ஒன்றின் பின்னால் தர்ஷினி. இப்புற மேஜைமீது சாய்ந்துகொண்டு, தன்யா!
"வெல்கம், மிஸ்டர் மேனன்" என்று எழுந்து வரவேற்றான் தர்மா.
அறிமுகங்கள் முடிந்து எல்லோரும் அமர்ந்ததும் "சொல்லுங்க மேனன், நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?" என்றான் தர்மா.
"டிடக்டிவ் ஏஜன்சிக்கு வேறு எதற்கு வருவேன்? ஒரு கேஸோட வந்திருக்கேன்" என்றார் மேனன்.
"சரியா போச்சு. ஏற்கெனவே நாங்க கேரளக் கரைக் கேஸ்களை அதிகமா எடுத்துக்கறதா ஒரு குற்றச்சாட்டு இருக்கு…" என்று சிரித்தாள் தன்யா.
"போன தடவை அந்த நாக மேகலை கேஸ்லகூட, மல்லுவுட் தான் பிடிக்குமா, ஏன் கோலிவுட் பிடிக்காதான்னு ஒரே இ-மெயில் மழை" என்றாள் தர்ஷினி.
"அதுக்குத்தான் சொன்னேன், திரில்லர், டிடக்டிவ் ஸ்டோரீஸ் நிறைய வரதுன்னு மலையாளப் படங்களா பார்க்காதீங்கன்னு" என்று அவர்களை வம்புக்கிழுத்தான் தர்மா.
"அடடே! இவர் மலையாளப்பட்டம் பார்க்கிறதேயில்லை பாரு! த்ரிஷ்யம்-2 ரிலீஸ் ஆன அன்றைக்கே பார்த்தாச்சு. இப்போ மோகன்குமார் ஃபேன்ஸ் பார்க்கத் தவம் இருக்கார்" என்றாள் தன்யா.
"ஆமா, மம்முட்டி, மோகன்லால் த்ரில்லர் படம் ஒண்ணு விடமாட்டான். அதோட சித்திக் சாரோட பெரிய ஃபேன் ஆச்சே தர்மா. இதில் எங்களை என்ன பேச்சு?" என்றாள் தர்ஷினி.
இந்தப் பேச்சை ரசித்துக் கேட்ட மேனன் "இந்த ஸிப்லிங் பைட்டிங் கேட்கவே இனிமையா இருக்கு. அதுவும் என்னைப் போன்ற ஒற்றை மரத்திற்கு" என்றார்.
"சாரி, பேச்சு எங்கேயோ போயிடுச்சு. இதோ விஷயத்திற்கு வந்துடலாம். சொல்லுங்க மேனன்" என்றான் தர்மா.
மேனன் ஒரு பெருமூச்சுவிட்டுப் பேசத் தொடங்கினார்.
"என் பூர்வீகம் கேரளாதான், ஆனால் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில். என் மொழியும் அடையாளமும் தமிழ்தான். உங்களுக்குத் தெரிஞ்ச அளவுகூட எனக்கு மலையாளம் தெரியாது…"
தர்மா, தன்யா, தர்ஷினி புன்னகைத்தார்கள்.
"இங்கே பி எஸ் ஹைஸ்கூலில்தான் என் படிப்பு எல்லாம். டிகிரி வாங்கினதுக்கு அப்புறம் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல மேனேஜரா வேலை பார்த்துட்டிருந்தேன். ஏழு வருஷத்திற்கு முன்னாடி என் வாழ்வில் ஒரு திருப்பம்… எனக்குத் தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் எங்க உறவுக்காரங்க எல்லோரையுமே போய்ப் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன். அப்போ இந்த விஷயத்தை நான் பெரிசா எடுத்துக்கலை.
"கொஞ்ச நாளைக்கப்புறம் எனக்குச் செய்தி கிடைச்சது – என் சொந்தக்காரர் இறந்துட்டார்னும் வாரிசில்லாத அவர் தன்னுடைய சொத்துகளையெல்லாம் என் பெயரில் எழுதியிருக்கார்னும் தெரிஞ்சுக்கிட்டேன்."
"வாவ்! வாட் அ விண்ட்ஃபால்!" என்றாள் தன்யா.
"பெரிய அதிர்ஷ்டம்தான். ஈசிஆர் ரோட்டில் கடற்கரைக்கு அருகில் பெரிய லேண்ட் அந்தச் சொத்துகளோடு எனக்குக் கிடைச்சது. என்னுடைய அனுபவத்தை நம்பி அந்த இடத்தில் ஒரு ரிசார்ட் கட்டி நடத்த ஆரம்பிச்சேன். இன்றைக்குச் சென்னையிலேயே நம்பர் ஒன் பீச் ரிசார்ட்னு பேர் வாங்கியிருக்கு சில்வர் ஸாண்ட்ஸ்."
தன்யாவுக்கும் தர்ஷினிக்கும் தூக்கிவாரிப் போட்டது.
மேனன் மென்மையாகப் புன்னகைத்தார். "உங்க ஸிஸ்டர்ஸ்க்குப் புரிஞ்சுட்டுது. ஆக்ட்ரஸ் யாமினி விவகாரமாத்தான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன்."
"யாமினியா? யார் அவங்க?" என்றான் தர்மா.
இப்போது தன்யாவும் தர்ஷினியும் புன்னகைத்தார்கள். தர்ஷினி சொன்னாள் - "சாரி மிஸ்டர் மேனன். மலையாளத்தில் த்ரில்லர் மூவீஸ் மட்டும்தான் தர்மா பார்ப்பான். தமிழில் க்ளாசிக் கறுப்பு-வெள்ளைப் படங்களைத் தாண்டி அவன் க்ராஜுவேட் பண்ணவேயில்லை. ஹிந்தி சுத்தம். ஆங்கிலத்தில் ஜுராஸிக் பார்க் மட்டுந்தான் பார்த்தான்…"
"…அதுக்கே அவனுக்கு ஜுரம் வந்துடுத்து" என்றாள் தன்யா குறும்பாக. தர்மா அவளை நோக்கி விளையாட்டாகக் கையை ஓங்கினான்.
மேனனும் சிரித்துவிட்டார். "அப்போ உங்களுக்கு முதல்லேர்ந்து கதை சொல்லணும். டூ யூ ஹேவ் டைம்?"
"என்ன பொன்னியின் செல்வன் கதையா சொல்லப் போறீங்க? சுருக்கமா சொல்லலாம். கோ அஹெட்" என்றான் தர்மா.
மேனன் தன் எண்ணங்களை ஒழுங்குபடுத்துபவர் போன்று சிறிதுநேரம் மௌனமாக யோசித்தார். பிறகு பேச ஆரம்பித்தார்.
"எங்க ரிசார்ட்க்கு டூரிஸ்ட்ஸ், உள்ளூர்க்காரங்க இரண்டுபேருமே வருவாங்க. ஒரு மாற்றத்தை விரும்பற குடும்பஸ்தர்கள் அதிகமாக வருவதுண்டு. குழந்தைகளுக்காகப் பாதுகாப்பான ஆக்டிவிட்டீஸ் – நீச்சல், இன்னும் பலவிதமான விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கோம். டைம்ஷேர் மாதிரி காட்டேஜ் எடுத்துக் கொண்டு மாதம் ஒருமுறை வந்து தங்கிவிட்டுப் போகிறவர்கள் உண்டு. இவர்களுக்குத் தனியாகக் காம்பவுண்ட், ப்ரைவேட் பீச் எல்லாம் உண்டு.
"இன்னொரு காம்பவுண்டில்தான் டைம்ஷேர் இல்லாத மற்ற விருந்தாளிகள் தங்குவது. அங்கே மிகப் பெரிய வசதியான ரெஸ்டாரண்ட், குழந்தைகளுக்கான பெரிய தீம் பார்க் எல்லாமே உண்டு. என்றாலும் டைம்ஷேர் காட்டேஜஸ்ல தங்குகிறவர்கள் பெரும்பாலும் இந்தக் காம்பவுண்டுக்கு வருவதில்லை. அவர்கள் அமைதியை நாடித்தானே வருகிறார்கள்?
"சினிமா, டீ வி சீரியல் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று அரசு அனுமதி கொடுத்தபிறகு, போன ஜனவரி மாதத்தில் ஒரு படப்பிடிப்புக் குழு எங்க ரிசார்ட்டில் வந்து தங்கினாங்க. ஒரு வாரத்துக்கு முதலில் தங்கப் போறதா சொன்னாங்க. ஆனால் தொடர்ந்து மூன்று வாரங்கள் எங்க ரிசார்ட்டிலேயே தங்கி ஷூட்டிங்கை நடத்தினாங்க…"
"ரிசார்ட்டிலே ஷூட் பண்ணினாங்களா?" என்று கேட்டாள் தன்யா.
"இல்லல்ல, எல்லோரும் ரிசார்ட்டில் தங்கிக்கிட்டுச் சுற்றுவட்டாரத்தில் ஷூட்டிங்கை நடத்தினாங்க. முக்கியமா பக்கத்தில் இருந்த ஒரு பண்ணையிலும் அதிலிருந்த பங்களாவிலும் ஒரு போர்ஷன் படப்பிடிப்பு நடந்தது. அதற்கு இங்கிருந்து போய்விட்டு வருவது ரொம்பச் சுலபமா இருந்தது…"
தர்மா இப்போது இடைமறித்தான். "இந்தப் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்தவங்களா யாமினி?"
"ஆமா. யாமினி டாப் நடிகையா இருந்தவங்க. நேஷனல் அவார்ட் வின்னர்" என்று தர்மாவுக்காக விளக்கினார் மேனன். "ஹீரோவும் டாப் ஆர்டிஸ்ட். பெரிய பேனர். பெரிய டைரக்டர்."
"சரி, இப்போ கேஸ் என்ன? யாமினி படப்பிடிப்பிலிருந்து ஓடிட்டாங்களா சுஜாதாவோட ப்ரியா கதையில் வருகிற மாதிரி? அவங்களைத் திருப்பிக் கூட்டிட்டு வரணுமா?" என்றான் தர்மா. அவன் குரலில் கொஞ்சம் எரிச்சல் கலந்திருந்தது.
மேனன் அவனை வியப்புடன் "அட க்ராக்கே!" என்ற பார்வை பார்த்தார். இவர்களை நம்பிக் கேஸ் தரலாமா வேண்டாமா என்றே அவர் குழம்ப ஆரம்பித்துவிட்டது போலிருந்தது.
"ப்ளீஸ் மிஸ்டர் மேனன். தர்மாவுக்கு நான் புரியும்படியா சொல்றேன்" என்றாள் தன்யா. "கடந்த பிப்ரவரி மாதம் யாமினி ரிசார்ட்டில் தன் அறையில் மரணமடைந்தாள். தற்கொலை என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் காணப்பட்டது" என்றாள் டீவியில் செய்தி வாசிப்பவரைப் போல.
"யாமினியின் காதலன் அவளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்தார். இரண்டு மூன்று முறை இது திரும்பத் திரும்ப நிகழ்ந்தது. இப்போ ஜாமீனில் வெளியே இருக்கார்.
"இதற்கிடையில் வேறு தடயங்கள் கிடைச்சிருக்கறதாகவும், வேறு நபர்கள்மீது சந்தேகம் விழுந்திருக்கறதாகவும், இன்னும் ஏதேதோ செய்திகள் வந்துட்டேயிருக்கு. ஆனா அஃபீஷியல் போலீஸ் ந்யூஸ் ரொம்பக் கம்மி" என்று தன்யாவைத் தொடர்ந்தாள் தர்ஷினி.
"ஐ ஸீ" என்றான் தர்மா யோசனையாக.
"சரியா சொல்லிட்டீங்க" என்றார் மேனன். "இந்த யாமினியோட வழக்கைத் துப்பறிஞ்சு உண்மைகளைக் கண்டுபிடிக்கணும்னுதான் உங்களைக் கேட்டுக் கொள்ள வந்தேன்."
"இது தற்கொலை. இதிலே நாங்க கண்டுபிடிக்க என்ன சார் இருக்கு? போலீஸும் மெத்தனமா இல்லையே, ஆக்ஷன் எடுத்துக்கிட்டுத் தானே இருக்காங்க" என்றாள் தன்யா.
"போலீஸா? அவங்க தினமும் ஒண்ணு சொல்றாங்க. திடீர் திடீர்னு வந்து விசாரணை பண்றாங்க. பேரர்களையும் ஆஃபீஸ் ஸ்டாஃபையும் மிரட்டற வேலையை நல்லா செய்யறாங்க. என்ன ரிசல்ட் கிடைச்சிருக்கு சொல்லுங்க? என்னுடைய ரிசார்ட் பேர் கெட்டதுதான் கண்ட பலன். நாளுக்கு நாள் கெஸ்ட்ங்க குறைஞ்சுக்கிட்டே வராங்க!" என்று புலம்பினார் மேனன்.
"கெஸ்ட்ங்க குறைவதற்குக் காரணம் கொரோனாவாயிருக்கும்" என்றான் தர்மா.
"ப்ளீஸ்! என்னுடைய பிஸினஸ் ஏன் குறையறது கூடறதுன்னு எனக்கு நல்லா தெரியும். கொரோனா ஸெகண்ட் வேவ் வந்தபோது, எங்க ரிசார்ட் பாதுகாப்பானதுங்கற காரணத்திற்காகவே பல கஸ்டமர்கள் வந்து தங்கியிருந்தாங்க. இப்போ கடந்த ஒரு மாத காலமா பலர் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க, புது கெஸ்ட்களும் வரதில்லை…"
"ஓகே. உங்க க்ளையண்டீல் குறைஞ்சதுக்கு யாமினியோட மரணம்தான் காரணம்னு நினைக்கறீங்களா?"
"இல்லை. அவ இன்னும் எங்க ரிசார்ட்டில் நடமாடறதுதான் காரணம்னு நினைக்கறேன்!"
(தொடரும்)