Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பார்த்திபன் கனவு

அத்தியாயம் ஏழு

சிதறிய இரத்தினங்கள்

விக்கிரமன் காட்டு வழிக்குள் புகுந்து கண்ணுக்கு மறைந்ததும் ஒற்றர் தலைவன் மீண்டும் அந்தச் சிற்ப வீட்டுக்குள் புகுந்தான். மார்பில் இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிய வண்ணமாகச் சற்று நேரம் அங்கிருந்த தெய்வீகச் சிலைகளை பார்த்துக் கொண்டு நின்றான். அப்போது அவனுடைய கண்களில் நீர் ததும்பிற்று. பிறகு, அங்கு வந்த கிழவியைப் பார்த்து, "அம்மா! இந்தப் பிள்ளை மறுபடியும் ஒருவேளை இங்கு வந்தானானால் அவனுக்குத் தங்குவதற்கு இடங்கொடு; ஆனால் என்னுடைய இரகசியத்தை மட்டும் உடைத்து விடாதே! மறுபடியும் ஐந்தாறு நாளில் நான் வருகிறேன்" என்றான். "அப்படியே சுவாமி" என்றாள் கிழவி. பிறகு ஒற்றர் தலைவன் அந்தச் சிற்ப மண்டபத்தின் பின்புறம் சென்றான். அங்கே விக்கிரமன் ஏறிச் சென்றது போலவே தத்ரூபமாய் இன்னொரு குதிரை இருந்தது. அதன்மேல் வெகு லாவகமாக ஏறி உட்கார்ந்து அவ்வீரன் கிளம்பினான். விக்கிரமன் போன வழியாக அவன் போகாமல் முதல் நாள் இரவு வந்த காட்டுக்கொடி வழியில் புகுந்து சென்றான். சற்று நேரத்துக்கெல்லாம் விக்கிரமன் வழிப்பறிக்கு ஆளான இடத்துக்கு வந்து சேர்ந்தான்.

ஒற்றர் தலைவன் அவ்விடத்தை நெருங்கி அங்குமிங்கும் உற்றுப் பார்த்தான். அவனுடைய முகத்தில் ஆச்சரியக் குறி தென்பட்டது. உற்றுப் பார்க்கப் பார்க்க அவனுடைய அதிசயம் அதிகமாயிற்று. ஆச்சரியத்துக்குக் காரணம் என்னவென்றால் முதல்நாள் இரவு இரத்தின வியாபாரியின் வாளுக்கும், தன்னுடைய வாளுக்கும் இரையாகி விழுந்தவர்களின் உடல்கள் அங்கே காணப்படவில்லை! அவ்விடத்தில் மிகவும் அருவருப்பான, கோரக்காட்சி ஒன்றை ஒற்றர் தலைவன் எதிர்பார்த்தான். இரவில் காட்டுமிருகங்கள் இரை தேடி அங்கு வந்திருக்குமென்றும், அவை இரை உண்ட பிறகு மிகுந்த எலும்புக் கூடுகள் சகிக்க முடியாத காட்சியாக இருக்குமென்றும் அவன் எண்ணினான். ஆனால் அங்கே அப்படியொன்றும் காணப்படவில்லை. காட்டு மிருகங்கள் எலும்பைக்கூட விழுங்கியிருக்குமா? அல்லது உடல்களை அப்படியே இழுத்துக் கொண்டு போயிருக்குமா? அப்படிப் போயிருந்தால், அந்த ஆட்களின் துணிமணிகள் வாட்கள் எல்லாம் எங்கே? - "நாம் போன பிறகு இங்கே யாரோ வந்திருக்கிறார்கள்! என்னமோ நடந்திருக்கிறது!" என்று ஒற்றர் தலைவன் எண்ணினான்.

உடனே அவன் குதிரையிலிருந்து குதித்து இன்னும் கவனமாக அங்குமிங்கும் உற்றுப் பார்க்கத் தொடங்கினான். சட்டென்று ஒரு பொருள் அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. அவனுடைய முகத்தில் அப்போது வியப்பு மட்டுமல்லாமல், கேள்விக்குறியும் தோன்றியது. அந்தப் பொருள் என்னவெனில், ஒரு மண்டை ஓடுதான்! நேற்று அங்கு இறந்து விழுந்தவர்களின் மண்டை ஓடாக அது இருக்க முடியாது. அது மிகப் பழமையான மண்டை ஓடு. "நேற்று நாம் போன பிறகு இங்கு வந்தவன் கபாலிகனாயிருக்க வேண்டும். அவன் கழுத்தில் போட்டிருந்த மண்டை ஓட்டு மாலையிலிருந்து தான் இது விழுந்திருக்க வேண்டும். அவனோ, அவர்களோதான், இங்கே செத்து விழுந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்!" என்று ஒற்றர் தலைவன் எண்ணமிட்டான்.

இன்னும் அவ்விடத்தில் அவன் சுற்றுமுற்றும் பார்த்த போது ஓரிடத்தில் இரத்தினங்கள் கொஞ்சம் சிதறிக் கீழே கிடப்பதைக் கண்டான். குள்ளன் இரத்தின மூட்டைகளைக் கீழே போட்ட போது, ஒரு மூட்டை அவிழ்ந்து போய்ச் சிதறி இருக்கவேண்டும். அந்த இரத்தினங்களைத் திரட்டி எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி ஒற்றர் தலைவன் குனிந்தான். அந்தச் சமயத்தில் கொஞ்ச தூரத்தில் குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது! சத்தத்திலிருந்து நாலைந்து குதிரைகளாவது வருகின்றன என்று தோன்றியது. ஒற்றர் தலைவன் உடனே விரைந்து குதிரைமேல் ஏறி அதைச் செலுத்திக் கொண்டு பக்கத்திலிருந்த காட்டுக்குள் புகுந்தான். குதிரையைக் கொஞ்ச தூரத்தில் விட்டு விட்டுத் தான் மட்டும் இறங்கி வந்து சற்றுத் தூரத்தில் ஒரு மரத்தடியில் நன்கு மறைந்து கொண்டான். அவன் மறைவிலிருந்த போதிலும், பாதை அங்கிருந்து நன்றாகத் தெரிந்தது.

அந்த இடத்துக்கு வந்ததும் குதிரைகள் சடேரென்று நிறுத்தப்பட்டன. ஆறு குதிரைகள் மேல் ஆறு வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்குத் தலைவனாகத் தோன்றியவன் மீது ஒற்றர் தலைவனின் பார்வை விழுந்ததும், அவனுடைய புருவங்கள் நெரிந்து ரொம்பவும் மேலே போயின. அவன் முகத்தில் அப்போது வியப்பு, அருவருப்பு, கோபம் எல்லாம் கலந்து காணப்பட்டன. அந்தத் தலைவன் வேறு யாருமில்லை; மாரப்ப பூபதிதான். வேகமாக வந்து கொண்டிருந்த குதிரையைச் சடேரென்று முதலில் நிறுத்தியவனும் மாரப்ப பூபதிதான். அவன் நிறுத்தியதைப் பார்த்துத்தான் மற்றவர்கள் சடேர், சடேரென்று தத்தம் குதிரைகளை நிறுத்தினார்கள். மாரப்ப பூபதி கீழே இறங்கினான். சற்று முன்னால் ஒற்றர் தலைவன் உற்றுப் பார்த்ததைப் போலவே அவனும் அங்குமிங்கும் பார்த்தான். முதலில் மண்டை ஓடுதான் அவனுடைய கவனத்தையும் கவர்ந்தது.

பிறகு, முதல் நாள் இரவு நடந்த வாட் போரின் அறிகுறிகளைக் கவனித்தான். ஆங்காங்கு இரத்தக் கறை இருந்ததையும் பார்த்தான். உடல்கள் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் அடையாளங்களும் தெரிந்தன. இரத்தினங்கள் அவனுடைய கண்களில் பட்டதும் அவற்றை ஆவலுடன் கைகளில் திரட்டி எடுத்துக் கொண்டான். அந்த இரத்தினங்களைப் பார்த்தபடியே கலகலவென்று சிரித்தான். தன்னுடன் வந்த மற்றவர்களைப் பார்த்து, "பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று" என்றான். இன்னும் சிறிது நேரம் அவனும் மற்றவர்களும் ஏதோ பேசிக் கொண்டு நின்றார்கள். பிறகு, மாரப்ப பூபதி குதிரை மேல் ஏறினான். எல்லாக் குதிரைகளும் நாலுகால் பாய்ச்சலில் புறப்பட்டன.

மாரப்பனும் அவனுடைய ஆட்களும் போன பிறகு, ஒற்றர் தலைவன் தன் குதிரை இருந்த இடம் சென்று அதன் மேல் ஏறிக்கொண்டு, நேற்றிரவு தான் வந்த வழியிலே திரும்பிச் செல்லத் தொடங்கினான். குதிரை அக்காட்டுப் பாதையின் வளைவு ஒன்றைத் தாண்டியதும் உடம்பைச் சிலிர்த்தது. ஒற்றர் தலைவன் குதிரையை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தான். கொஞ்சதூரத்தில் காணப்பட்ட ஒரு சிறு பாறைக்குப் பின்புறத்தில் கழுகுகள் வட்டமிடுவதைக் கண்டான். காட்டுப் பாதையில் கிடந்த உடல்கள் என்னவாயின என்னும் மர்மம் வெளியாயிற்று. தானும் இரத்தின வியாபாரியும் போன பிறகு அங்கு வந்தவர்கள் அவ்வுடல்களை அப்புறப்படுத்தி இந்தப் பாறை மறைவில் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் யாராக இருக்கும்?

அவ்விடத்தில் அதிக நேரம் நிற்காமல் ஒற்றர் தலைவன் மேலே குதிரையை விட்டுக் கொண்டு சென்றான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மாமல்லபுரத்திலிருந்து காஞ்சிக்குப் போகும் இராஜபாட்டையை அவன் அணுகினான். அவ்விடத்தில் அதே சமயத்தில் மாமல்லபுரத்திலிருந்து இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருந்தன. பரிவாரங்களுக்கு மத்தியில் குந்தவி தேவியின் பல்லக்கும் வந்தது. பல்லக்கின் பக்கத்தில் ஒரு கம்பீரமான வெண்புரவி மீது நரசிம்ம சக்கரவர்த்தியின் புதல்வன் மகேந்திரன் வீற்றிருந்தான். இதையெல்லாம் தூரத்திலேயே கவனித்துக் கொண்ட ஒற்றர் தலைவன், அவ்விடத்தில், குதிரையைச் சற்று வேகமாகவே தட்டிவிட்டான். இராஜ பரிவாரங்களையோ பரிவாரங்களுக்கு மத்தியில் வந்தவர்களையோ சற்றும் பொருட்படுத்தாதவனாய் அவர்களுக்குச் சற்று முன்னதாகவே, இராஜபாட்டையில் சந்திப்பைக் கடந்து காஞ்சியை நோக்கிச் சென்றான்.



அத்தியாயம் எட்டு

வேஷதாரி

ஒற்றர் தலைவன் அவ்விதம் இராஜ, பரிவாரங்கள் வருவதைப் பொருட்படுத்தாமல் முன்னால் காஞ்சிப் பாதையில் சென்றதைக் குந்தவி, மகேந்திரன் இருவரும் கவனித்தார்கள். குந்தவியின் பல்லக்கும், மகேந்திரனுடைய குதிரையும் ஒன்றையொன்று ஒட்டியே சென்று கொண்டிருந்தன. மகேந்திரனுடைய தோற்றத்தில், குந்தவியின் மென்மையும் வனப்பும், நரசிம்மவர்மரின் கம்பீரமும் வீரமும் கலந்து பொலிந்தன. அண்ணனும் தங்கையும் அச்சாலையில் பவனி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. ஓர் ஆண்டு காலமாக நரசிம்மவர்மருடைய ஸ்தானத்தில் யுவராஜா மகேந்திரன் இராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான். அப்படியிருந்தும், மேற்கூறிய குதிரை வீரன் இராஜ பரிவாரங்களைக் கண்டு ஒதுங்கி நிற்காமலும் மரியாதை செய்யாமலும் முன்னால் விரைந்து சென்றது எல்லாருக்குமே வியப்பை அளித்தது. "அண்ணா! அதோ குதிரைமேல் போகிறானே அந்த வீரனைப் பார்த்தாயா? என்ன கம்பீரமான வடிவம்! அவன் யார் தெரியுமா?" என்று குந்தவி கேட்டாள். "எனக்குத் தெரியவில்லையே, தங்காய்! அவனுடைய தோற்றத்தில் இராஜ வம்சத்தின் களை காணப்பட்டது. நல்ல ஆஜானுபாகுவாவும் தோன்றினான். அவன் குதிரையைப் பார்! இதற்குள் எவ்வளவு தூரம் போய்விட்டது!" என்றான் மகேந்திரன். "காஞ்சிக்குத்தான் போகிறான் போல் தோன்றுகிறது.

ஒருவேளை அயல் தேசத்தானோ, என்னமோ? இல்லாவிடில், இப்படி நம்மைக் கண்டும் நிற்காமல் போக மாட்டான். நாலு நாளைக்கு முன்பு துறைமுகத்துக்கு வந்த கப்பலின் அயல்தேசத்தார் ரொம்ப பேர் வந்து இறங்கியிருக்கிறார்கள். ஆகையினால் தான் தெரியாத முகங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன!" என்று குந்தவி சொன்னாள். "குந்தவி, செண்பகத் தீவின் இரத்தின வியாபாரியைப் பற்றிச் சொன்னாயே; அவன் வரவேயில்லையே?" என்றான் மகேந்திரன். "இல்லை" என்று சொன்னபோது, குந்தவியின் குரலில் மிகுந்த ஏமாற்றம் தொனித்தது. "எப்படியும் காஞ்சி அரண்மனைக்கு அவன் வராமலா போகிறான்? கண்டிப்பாக வருவான்." குந்தவி இதற்கு ஒன்றும் மறுமொழி சொல்லவில்லை; மௌனமாயிருந்தாள். தன்னுடைய சந்தேகம் உண்மையாயிருக்குமானால், அவன் அரண்மனைக்கு வரமாட்டான் என்று எண்ணினாள். குந்தவியின் மனக்கண்ணின் முன்னால், மூன்று வருஷங்களுக்கு முன் காஞ்சிபுரத்து வீதியில் அவள் பார்த்த சோழ ராஜகுமாரனுடைய முகமும், நேற்று மாமல்லபுரத்துத் தெருவில் சந்தித்த இரத்தின வியாபாரியின் முகமும் மாறிமாறித் தோன்றின. அவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மனிதர்களா? அப்படியானால் அந்த முக ஒற்றுமை மிகவும் அதிசயமான ஒற்றுமைதான்!

குந்தவியின் மௌனத்தையும், அவளுடைய முகவாட்டத்தையும் மகேந்திரன் கவனித்தான். "தங்காய்" என்று அருமையாக அழைத்தான். "என்ன, அண்ணா!" "ஒரு மாதிரியாக இருக்கிறாயே, ஏன்?" "ஒன்றுமில்லை, அண்ணா!" "நான் ஒரு யோசனை செய்திருக்கிறேன், சொல்லட்டுமா?" "சொல்லு, அண்ணா!" "அப்பாவிடம் நான் சொல்லப் போகிறேன்; இந்தப் பல்லவ இராஜ்யத்தின் பாரத்தை அவர்தான் சுமக்க வேண்டும், என்னால் முடியாது என்று." "ஏன், அப்படிச் சொல்லுகிறாய், அண்ணா!" "அவர் இருக்கும்போது நான் இராஜ்யம் ஆளுவது, சிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் பூனை உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது! தேசத்தில் எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்." "கிடையவே கிடையாது, அண்ணா!" "அதோடு எனக்கு வேறொரு முக்கிய காரியமும் இருக்கிறது. இன்னொரு தடவை கடற்பிரயாணம் செய்ய வேண்டும்." "இலங்கைக்கு மறுபடியும் போகப் போகிறாயா?" "இல்லை, செண்பகத்தீவுக்குப் போகப் போகிறேன்." "என்ன அண்ணா, சொல்கிறாய்?"

"ஆமாம், விக்கிரமனை மன்னிக்க வேண்டுமென்று அப்பாவிடம் கேட்கப் போகிறேன். பிறகு செண்பகத் தீவுக்கும் நானே போய் அவனை அழைத்து வரப் போகிறேன். தங்காய்! நான் இந்த நாட்டுக்குத் திரும்பி வந்து ஒரு வருஷம் ஆகிறது. இதுவரையில் ஒரு தடவையாவது நீ சிரித்து நான் பார்க்கவில்லை; உன் முகத்தில் சிரிப்பைப் பார்த்து விட்டுத்தான் இனிமேல் வேறு காரியம் பார்ப்பேன்!" என்றான் மகேந்திரன். இதைச் சொல்லும்போது, அவனுடைய நாத்தழுதழுத்தது. அவனுடைய தொண்டை அடைத்துக் கொண்டது. குந்தவியின் கண்களில் நீர் ததும்பப் பார்த்தது. அவள் சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, "அப்பா சம்மதிக்க மாட்டார்!" என்றாள். "நான் சம்மதிக்கச் செய்கிறேன். நேற்றே அப்பாவிடம் கேட்க வேண்டுமென்றிருந்தேன். இராத்திரி அவர் வரவேயில்லை. இன்று அவரை அவசியம் கேட்கப் போகிறேன்." "அப்பா சம்மதித்து நீ செண்பகத் தீவுக்குப் போனாலும் என்ன பிரயோஜனம்?" "என்ன பிரயோஜனமா? எனக்கு ஒரு மைத்துனன் கிடைப்பானல்லவா?" "அது நடக்காத காரியம், அண்ணா! அந்தக் கர்வம் பிடித்த சோழ ராஜகுமாரன், பல்லவர் குலப்பெண்ணை மணக்கச் சம்மதிக்கமாட்டான்!" என்றாள் குந்தவி.

அப்போது மகேந்திரன் கலகலவென்று சிரித்தான். "தங்காய்! எப்போதாவது உன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டதுண்டா?" என்று கேட்டான். "போ, அண்ணா!" என்றாள் குந்தவி. "போகிறேன் தங்காய், போகிறேன். செண்பகத்தீவுக்குப் போய் அந்தச் சோழ ராஜகுமாரனைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்து உன் முன்னால் நிறுத்தி, கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லாவிட்டால் நான் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியின் பேரன் அல்ல!" என்றான் யுவராஜா மகேந்திரன். குந்தவியும் மகேந்திரனும் காஞ்சியை அடைந்ததும், அரண்மனையில் அவரவர்களுடைய பகுதிக்குச் சென்றார்கள். குந்தவி தன்னுடைய அந்தப்புர அறைக்குள் பிரவேசித்த போது, அங்கே சக்கரவர்த்தி வந்தால் உட்காருவதற்காகப் போட்டிருந்த ஆசனத்தில் வேற்று மனுஷன் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டாள்! அந்த வேற்று மனுஷன், காட்டுக்குறுக்குப் பாதை வழியாக வந்து இராஜபாட்டையில் தங்களைத் தாண்டிச் சென்ற வீரன்தான் என்பது நினைவுக்கு வர ஒரு நிமிஷம் பிடித்தது. இதனால் அவளுடைய ஆச்சரியம் பன்மடங்கு பெருகியதோடு கோபம் பொங்கிற்று.

"யார் ஐயா, நீர்? என்ன தைரியத்தினால் அந்தப்புரத்துக்குள் நுழைந்தீர்?" என்றாள். "தேவி! பல்லவ சாம்ராஜ்யத்தின் ஒற்றர் தலைவன் நான். என் பெயர் வீரசேனன். தங்களிடம் ஒரு துப்பு விசாரிப்பதற்காக வந்தேன்!" என்று அம்மனிதன் சொன்னதும், குந்தவியின் முகத்திலிருந்த கோபம் ஒரு நொடியில் குதூகலமாக மாறியது. "அப்பா! இதென்ன வேடிக்கை?" என்று கூச்சலிட்டுக் கொண்டே குந்தவி ஓடிப்போய் ஒற்றர் தலைவனுடைய தோள்களைக் கட்டிக்கொண்டு அவனுடைய பொய் மீசையைக் களைந்தெறிந்தாள். அப்போது ஒற்றர் தலைவர் இருந்த இடத்தில் நரசிம்மவர்ம சக்கரவர்த்தி காட்சியளித்தார். "உங்களுடைய குரலைக் கொண்டுதான் அப்பா, கண்டுபிடித்தேன். இல்லாவிட்டால் அடையாளம் தெரிந்திராது. எப்படி அப்பா இவ்வளவு நன்றாக வேஷம் போட்டுக் கொள்கிறீர்கள்?" என்று குந்தவி கேட்டாள். "குழந்தாய்! என் தந்தை மகேந்திர சக்கரவர்த்தி எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளில் இதுதான் மிகவும் அருமையான வித்தை!" என்றார் சக்கரவர்த்தி.
 
அத்தியாயம் ஒன்பது

விபத்தின் காரணம்

சக்கரவர்த்தியைக் குந்தவி வியப்புடன் நோக்கினாள். அவளுடைய மைதீட்டிய பெரிய கண்கள் அதிசயத்தினால் விரிந்து மலர்ந்தன. "இது என்ன அப்பா, இது? கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள்? இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய வேண்டும்" என்று கேட்டாள். "ஒரு தேசத்தைப் பரிபாலிப்பவனுக்குப் பல கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் குழந்தாய், முக்கியமாக வேஷம் போட்டுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரஜைகளின் மனோபாவங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். இன்னும் சத்துருக்களைப் பற்றிய இரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம். நாட்டில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்...." என்று சக்கரவர்த்தி சொல்லி வருகையில் குந்தவி குறுக்கிட்டாள். "இப்போது எந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக இந்த வேஷம் போட்டுக் கொண்டீர்கள்? நான் ஏதாவது குற்றம் செய்யப் போவதாகச் சந்தேகமா?" என்று சொல்லி முல்லை மலர்வதுபோல் பல்வரிசை தெரியும்படி நகைத்தாள். "சந்தேகமில்லை. குந்தவி! நிச்சயமாகப் பெரிய குற்றம் ஒன்று நீ செய்திருக்கிறாய். உன்னால் நேற்று இராத்திரி நாலுபேருக்கு மரணம் சம்பவித்தது!" என்று சக்கரவர்த்தி சொன்னதும் குந்தவிக்குத் தூக்கி வாரிப்போட்டது.

"இதென்ன, அப்பா! எனக்கு ஒன்றும் தெரியாதே!" "ஆமாம்; உனக்கு ஒன்றும் தெரியாதுதான். அயல்தேசத்திலிருந்து வந்த இரத்தின வியாபாரி ஒருவனை நீ அரண்மனைக்கு வரச் சொன்னாயா?" "ஆமாம்? சொன்னேன், அது குற்றமா?" "அவனிடம் நீ யாரென்று உண்மையைச் சொல்லாமல், குந்தவி தேவியின் தோழி என்று சொன்னதுண்டா?" "உண்மைதான்; அதனால் என்ன?" "அதனால்தான் ஆபத்து வந்தது. அந்த இரத்தின வியாபாரிக்கு நீதான் சக்கரவர்த்தியின் மகள் என்று யாரோ பிறகு சொல்லியிருக்கிறார்கள். அவன் இதில் ஏதோ அபாயம் இருக்கிறதென்று மிரண்டு போய் விட்டான். மிரண்டு அன்றிரவே உறையூருக்குக் குறுக்குக் காட்டுப் பாதை வழியாகக் கிளம்பிப் போனான்....." "உறையூருக்கா?" என்று குந்தவி கேட்ட குரலில் மிக்க ஆச்சரியம் தொனித்தது. "இல்லை, அப்பா! இரத்தின வியாபாரி காஞ்சிக்கு வராமல் உறையூருக்குப் போவானேன் என்று யோசித்தேன். அங்கே அரண்மனையில்கூட ஒருவரும் இல்லையே!" "அந்த இரத்தின வியாபாரியின் தாயார் உறையூரில் இருக்கிறாளாம். அவளைப் பார்ப்பதற்காகக் கிளம்பினானாம்...."

குந்தவி ஏதோ சொல்ல வாயெடுத்தவள், பல்லைக் கடித்துக் கொண்டு மௌனமானாள். அந்த இரத்தின வியாபாரி உண்மையில் விக்கிரமன்தானோ என்று அவள் மனத்தில் தோன்றியிருந்த சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. அந்தச் சந்தேகம் தன் தந்தைக்கும் ஒருவேளை தோன்றியிருக்குமோ என்று எண்ணினாள். தான் ஏதாவது பிசகாகப் பேசி அவருடைய மனத்தில் சந்தேகத்தை எழுப்பக் கூடாதென்று தீர்மானித்துக் கொண்டாள். "என்ன, அம்மா! யோசனை செய்கிறாய்?" என்று சக்கரவர்த்தி கேட்டார். "ஒன்றுமில்லை, அப்பா! பழைய ஞாபகங்கள் வந்தன. உறையூருக்கு முன் தடவை நாம் போயிருந்ததை நினைத்துக் கொண்டேன்... இருக்கட்டும் அப்பா! அப்புறம் அந்த இரத்தின வியாபாரியின் கதையைச் சொல்லுங்கள்" என்றாள்.

"காட்டுப் பாதையில் இரவில் போகும்போது அவனைத் திடீரென்று நாலு பேர் வளைத்துக் கொண்டு வாளால் தாக்கினார்கள். ஆனால் அந்த இரத்தின வியாபாரி லேசுப்பட்டவன் அல்ல; மூன்று பேரை அவனே தீர்த்துவிட்டான். நாலாவது ஆள் இந்த வாளுக்கு இரையானான்!" என்று சக்கரவர்த்தி தம் வாளைச் சுட்டிக் காட்டினார். மிகுந்த வியப்புடனும் ஆர்வத்துடனும், "நீங்கள் எப்படி அங்கே அந்தச் சமயம் போய்ச் சேர்ந்தீர்கள்?" என்று கேட்டாள் குந்தவி. "இல்லாவிட்டால் இந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய முடியுமா, குழந்தாய்?" "ரொம்பத் தற்பெருமை அடித்துக் கொள்ளாதீர்கள்! 'நரசிம்ம சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் திருட்டுப் புரட்டே கிடையாது!' என்னும் கீர்த்தி என்ன ஆயிற்று? காஞ்சிக்கும் மாமல்லபுரத்துக்கும் இவ்வளவு சமீபத்தில் திருடர்கள் ஒரு அயல் தேசத்து வியாபாரியைத் தாக்குவது என்றால்...!"

"நானும் உன்னைப் போல்தான் அவர்கள் திருடர்களோ என்று முதலில் நினைத்தேன். ஆனால், உண்மையில் அவர்கள் திருடர்கள் இல்லை." "பின்னே யார் அவ்வளவு துணிச்சலாகக் காரியம் செய்தவர்கள்?" "திருட்டையும் வழிப்பறியையும் காட்டிலும் பயங்கரமான விஷயம் குழந்தாய்!" "என்ன, அப்பா!" "அந்த இரத்தின வியாபாரியை நன்றாய்ப் பார்த்தாயல்லவா?" "பார்த்தேன்." "அவனைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?" குந்தவி மென்று விழுங்கிக் கொண்டு, "ஒன்றும் தோன்றவில்லையே!" என்றாள். "அவன் முகத்தில் இராஜ களையைக் கூடவா கவனிக்கவில்லை?" என்று சக்கரவர்த்தி கேட்டபோது குந்தவிக்கு அவர் விக்கிரமனைக் கண்டுபிடித்து விட்டாரோ என்ற சந்தேகத்தினால் உள்ளம் பதறியது. சக்கரவர்த்தி அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே, "நரபலி கொடுப்பவர்களுக்கு இந்த மாதிரி இராஜலட்சணம் பொருந்தியவன் கிடைப்பது மிகவும் அருமை!" என்றார். "ஐயோ!" என்று அலறினாள் குந்தவி. "அப்பா! நமது நாட்டில் இன்னுமா இந்தப் பயங்கரம்?" என்று கேட்டாள்.

"ஆமாம், குழந்தாய்! இந்தப் பயங்கர மூடநம்பிக்கைகளை வேரறுப்பதற்கு முயன்றுதான் வருகிறேன். இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. ஓர் இடத்தில் வேரைக் களைத்தால் இன்னொரு இடத்தில் முளைத்து எழும்புகிறது." "பாவம்! அந்த சாது இரத்தின வியாபாரிக்கு இப்படிப்பட்ட ஆபத்து வந்ததே! நீங்கள் அச்சமயம் அங்கே போயிராவிட்டால் என்ன ஆகியிருக்கும்?" "அவன் அப்படியொன்றும் சாது இல்லை, குந்தவி. அவனும் ஒரு திருடன்தான்; அதனால்தான் இத்தகைய ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டான்!" என்றார் சக்கரவர்த்தி. குந்தவிக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்று விடும் போலிருந்தது. "நிஜமாகவா, அப்பா! இந்த இரத்தினம் எல்லாம் அவன் திருடிக்கொண்டு வந்ததா?" என்று கேட்டாள். "இல்லை, குந்தவி! அவன் இரத்தினம் திருடவில்லை. வேறொரு திருட்டுத்தனம் மாமல்லபுரத்தில் செய்யப் பார்த்தான்! நமது சிற்பிகள் சிலருக்கு ஆசைகாட்டி அவன் வசிக்கும் தீவுக்கு அழைத்துக் கொண்டு போக முயன்றான். இது எப்பேர்ப்பட்ட குற்றம் தெரியுமா, குழந்தாய்! இந்தக் குற்றத்துக்குத் தண்டனை என்ன தெரியுமா?" "தெரியும் அப்பா!"

"ஆகையினால்தான் அவன் தன்னுடைய முயற்சி வெளிப்படாதிருக்கும் பொருட்டு மூட்டை தூக்குவதற்கு ஒரு ஊமைக்குள்ளனை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். ஆனால் அந்தக் குள்ளன்மேல் எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது. அவன் கபாலிகர்களின் ஆள் என்று. அது உண்மையாகிவிட்டது. குள்ளன் இரத்தின வியாபாரியை ஏமாற்றி உறையூருக்கு வழி காட்டுவதாகச் சொல்லிக் காட்டுப்பாதை வழியாக அழைத்துப் போனான். நான் மட்டும் சரியான சமயத்தில் போய்ச் சேர்ந்திராவிட்டால்....?" சக்கரவர்த்தி யோசனையில் ஆழ்ந்தார். "அப்புறம் என்ன நடந்தது; அப்பா! இரத்தின வியாபாரி இப்போது எங்கே?" "சக்கரவர்த்தி, பின்னர் நடந்ததையெல்லாம் ஒருவாறு சொல்லி அவனைத் தம்முடைய குதிரை மீதே உறையூருக்கு அனுப்பி வைத்ததையும் தெரிவித்தார். குந்தவி சற்றுப் பொறுத்து, "இரத்தின வியாபாரி தங்களை இன்னாரென்று தெரிந்து கொண்டானா?" என்று கேட்டாள். "அவனுக்குத் தெரியாது. ஏன் கேட்கிறாய்?" என்றார் சக்கரவர்த்தி. "ஒன்றுமில்லை; வேஷம் எவ்வளவு தூரம் பலித்தது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான்." பிறகு குந்தவி, "அப்பா! ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்றிருந்தேன்" என்றாள்.

"என்ன அம்மா!" "அண்ணா உறையூரே பார்த்ததில்லையல்லவா? நானும் அவனும் உறையூருக்குப் போக எண்ணியிருக்கிறோம்." "ஆகா! ஆனந்தமாய்ப் போய்விட்டு வாருங்கள். உறையூர் என்றதும் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. நேற்று மாமல்லபுரத்தில் மாரப்ப பூபதியைப் பார்த்தேன். அவன் எங்கே வந்தான்? உனக்கு ஏதாவது தெரியுமா?" "தெரியும், மாரப்ப பூபதியை நானும் அண்ணாவும் தான் வரச் சொல்லியிருந்தோம்..." "என்னத்திற்காக?" என்று சக்கரவர்த்தி அதிசயத்துடன் கேட்டார். "அச்சுதவர்மர் தமக்குத் தேகம் மெலிந்துவிட்டதென்றும், இராஜ்ய காரியங்களைக் கவனிக்க முடியவில்லையென்றும் தெரிவித்தார். அதன்மேல் அண்ணா மாரப்ப பூபதியை வரவழைத்து அவனுக்குச் சோழ நாட்டின் சேனாதிபதி பதவியைத் திரும்பவும் கொடுத்திருக்கிறான்." "ஓகோ!" என்றார் சக்கரவர்த்தி மறுபடியும் அவர் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு அவருடன் பேசுவதில் பயனில்லையென்று, குந்தவி யாழை எடுத்துச் சோகம் பொருந்திய இசையை எழுப்பலானாள்.



அத்தியாயம் பத்து

காட்டாற்று வெள்ளம்

சென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம்! - என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை ஆராய்ந்தவர்களுக்கு வியப்பு ஒன்றும் இராது. அருவருப்பாயிருந்தாலும், உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா?" மகேந்திர பல்லவர் காலத்திலும் நரசிம்மவர்மரின் காலத்திலும் தமிழ்நாட்டில் சைவமும் வைஷ்ணவமும் தழைத்து வளர்ந்தன. இவ்விரண்டு சமயங்களும் அன்பையும் ஜீவகாருண்யத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அப்போது தேய்ந்து போய்க் கொண்டிருந்த ஜைன, பௌத்த சமயங்களின் நல்ல அம்சங்களெல்லாம் சைவ - வைஷ்ணவ மதங்களில் ஏற்கப்பட்டிருந்தன. அவற்றுடன் சிவபக்தியும், கண்ணன் காதலும் சேர்ந்து தமிழ் நாட்டைத் தெய்வத் திருநாடாகச் செய்து வந்தன. அப்பர், சம்பந்தர் முதலிய சைவ சமயக் குரவர்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் தெய்வீகமான பாடல்களைப் பாடி நாடெங்கும் பக்தி மதத்தைப் பரப்பி வந்தார்கள். சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் அற்புத சிற்பக் கனவுகளைப் போல் தோன்றி வளர்ந்து வந்தன.

ஒருபுறம் இப்படிப்பட்ட அன்பு - மதங்கள் பெரும்பாலான ஜனங்களிடையே பரவி வருகையில், மிகச் சிலரான மக்களிடையே நரபலியைத் தூண்டும் பயங்கரமான கபாலிகம், சாக்தம், பைரவம் என்னும் மதங்கள் எப்படியோ இரகசியமாக வேரூன்றி வந்தன. இந்த மதங்களை ஆரம்பித்தவர்கள் மிதமிஞ்சிய மூடபக்தியை வளர்த்தார்கள். மூடபக்தி காரணமாக அவர்கள் காளிக்கோயில்களிலும், துர்க்கைக் கோயில்களிலும் தங்களுடைய சிரங்களைத் தாங்களே அநாயாசமாக வெட்டி எறிந்து கொண்டார்கள்! இப்படித் தங்களைத் தாங்களே பலிக்கொடுத்துக் கொள்வதால் அடுத்த ஜன்மத்தில் மகத்தான பலன்களை அடையலாமென்று நம்பினார்கள். இம்மாதிரி நம்பிக்கைகளை வளர்ப்பதற்குப் பூசாரிகளும் இருந்தார்கள். ஆங்காங்கு அடர்ந்த காடுகளிலும், மனிதர்கள் எளிதில் புகமுடியாத மலைப் பிராந்தியங்களிலும் காளி கோயில்களையும், துர்க்கைக் கோயில்களையும் இவர்கள் நிறுவினார்கள்.

மகேந்திர பல்லவரின் காலத்தில் வடக்கே வாதாபியிலிருந்து புலிகேசி என்பவன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது, அவனுடைய சைன்யங்களுடனே மேற்கூறிய பயங்கர மதங்களும் தமிழ்நாட்டில் புகுந்தன. பிறகு, புலிகேசி திரும்பிப் போன அடியோடு ஒரு முறையும், நரசிம்ம பல்லவர் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்ற காலத்தில் ஒரு முறையும், தமிழகத்தில் கொடும் பஞ்சங்கள் தோன்றி ஜனங்களை வருத்தின. இந்தக் காலங்களில் மேற்கூறிய நரபலி மதங்கள் அதிகமாக வளர்ந்தன. இந்த மூட மதங்களை வேரோடு களைவதற்கு நரசிம்ம சக்கரவர்த்தி பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். குருட்டு மத நம்பிக்கையை ஒழிப்பதற்குத் தண்டோ பாயம் மட்டும் பயன்படாது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தங்களுடைய கழுத்தைத் தாங்களே வெட்டிக் கொள்ளச் சித்தமாயிருப்பவர்களை எந்த விதத்தில் தண்டிக்க முடியும்? ஆகையால்தான் அவர் சென்ற இரண்டு வருஷமாகத் தமது மூத்த குமாரனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டுத் தாம் மாறுவேடம் பூண்டு, நாடெங்கும் சஞ்சரித்து, மேற்படி மதங்கள் எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றன, எங்கெங்கே அந்த மதங்களுக்கு வேர் இருக்கிறது என்பதையெல்லாம் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தார். இதனாலேதான் விக்கிரமனுக்கு நேர்வதற்கிருந்த பேராபத்திலிருந்து அவனைச் சக்கரவர்த்தி காப்பாற்றுவதும் சாத்தியமாயிற்று.

ஆனால், விக்கிரமனோ தனக்கு நேர இருந்த அபாயம் எப்படிப்பட்டதென்பதை அறிந்து கொள்ளவில்லை. தன்னைத் திருடர்கள் தாக்கியதாகவே அவன் எண்ணியிருந்தான். ஒற்றர் தலைவனிடம் விடைபெற்று அவனுடைய குதிரைமீது ஏறிச் சென்ற விக்கிரமனுடைய உள்ளத்தில் பல விதமான எண்ணங்கள் அலைமேல் அலை எறிந்து கொந்தளித்துக் கொண்டிருந்தன. அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுடைய உள்ளத்தில் முதன்மையாக இருந்தது. ஒற்றர் தலைவனின் உயர்ந்த ஜாதிக் குதிரை எவ்வளவோ விரைவாகச் சென்றும், அவனுடைய உள்ளத்தின் வேகம் காரணமாக, "குதிரை இன்னும் வேகமாய்ப் போகக் கூடாதா?" என்று தோன்றியது. பிறகு, அந்த ஒற்றர் தலைவனின் கம்பீரத் தோற்றமும் அவன் மனக் கண்முன் அடிக்கடி வந்தது. அவன் தனக்குச் செய்த உதவியை நினைத்தபோது அளவில்லாத நன்றி உணர்ச்சி கொண்டான். இடையிடையே ஒரு சந்தேகமும் உதித்தது. அவ்வளவு அறிவுக் கூர்மையுடைய ஒற்றர் தலைவன் தன்னுடைய இரகசியத்தை மட்டும் கண்டுபிடிக்காமலிருந்திருப்பானா? ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சியில் தன்னை அகப்படுத்துவதற்காக இப்படி குதிரையைக் கொடுத்து அனுப்பியிருக்கிறானோ?

பின்னும், ஒற்றர் தலைவன் கூறிய நரசிம்ம சக்கரவர்த்தியின் இளம் பிராயத்துக் காதற் கதை அவனுக்கு அடிக்கடி நினைவு வந்தது. காட்டின் மத்தியில் இருந்த சிற்பியின் வீட்டில், சிவகாமி நடனமாடுவதும், அதைப் பார்த்துப் பார்த்துச் சிற்பி சிலை அமைப்பதும், இதையெல்லாம் நரசிம்மவர்மர் பார்த்துக் களித்துக் கொண்டிருப்பதுமான மானசீகக் காட்சியில் அவன் அடிக்கடி தன்னை மறந்தான். இவ்வளவுக்கும் நடுவில், பல்லக்கில் இருந்தபடி தன்னை ஆர்வம் ததும்பிய பெரிய கண்களால் விழுங்கி விடுபவள் போல் பார்த்த பெண்ணின் பொன்னொளிர் முகமும் அவன் மனக்கண் முன் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அவ்வளவு அழகு ததும்பும் முகத்தையுடையவளின் நெஞ்சில் வஞ்சனை இருக்க முடியுமா?- ஒரு நாளுமிராது. ஆனால் அவள் யார்? சக்கரவர்த்தியின் மகளா? அல்லது தோழிப் பெண்ணா?

இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டும் இடையிடையே ஊர் கண்ட இடங்களில் இது சரியான வழிதானா என்று கேட்டுக் கொண்டும் விக்கிரமன் போய்க் கொண்டிருந்தான். ஒற்றர் தலைவன் கூறியபடியே குதிரை தானாகவே சரியான உறையூர்ப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அவனுக்கு மிகுந்த வியப்புடன் மகிழ்ச்சியும் அளித்தது. இதனால் ஒற்றர் தலைவனிடம் அவனுடைய நம்பிக்கையும் மரியாதையும் அதிகமாயின. அவன் கண்டிப்பாகச் சொல்லியிருப்பதை நினைத்து, இரவிலே பிரயாணம் செய்யக்கூடாதென்றும், இருட்டுகிற சமயத்தில் ஏதேனும் ஒரு கிராமத்துச் சத்திரத்தில் தங்க வேண்டுமென்றும் எண்ணிக் கொண்டே சென்றான். ஆனால் சூரியன் அஸ்தமிப்பதற்குக் கொஞ்ச நேரம் முன்னதாகவே அவனுடைய பிரயாணத்துக்கு ஒரு பெரிய தடங்கல் ஏற்பட்டு விட்டது.

திடீரென்று கிழக்கே வானம் கருத்தது. கருமேகங்கள் குமுறிக் கொண்டு மேலே வந்தன. குளிர்ந்த காற்று புழுதியை அள்ளி வீசிக் கொண்டு அடித்தது. தூரத்தில் மழை பெய்து தரை நனைந்ததினால் கிளம்பிய மணம் பரவி வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் மழையே வந்துவிட்டது. அற்பசொற்பமாக வரவில்லை; இடியும் மின்னலுமாய் நாலு புறமும் இருண்டு கொண்டு வந்து 'சோ' என்று சோனாமாரியாகப் பொழிந்தது. வானம் திடீரென்று பொத்துக் கொண்டு வெகுநாள் தேக்கி வைத்திருந்த ஜலத்தையெல்லாம் தொபதொபவென்று பூமியில் கொட்டுவது போலிருந்தது. சொட்ட நனைந்து குளிரால் நடுங்கிய விக்கிரமன் ஒரு மரத்தடியில் சற்று நேரம் ஒதுங்கி நின்று பார்த்தான். மழை நிற்கும் வழியாயில்லை. நேரமாக ஆக இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தக் கன மழையோடு இரவின் அந்தகாரம் சேர்ந்து விட்டால் கேட்கவேண்டியதில்லை. எனவே எப்படியாவது மேலே போக வேண்டியதுதான் என்றும் கிராமம் அல்லது கோவில் ஏதாவது தென்பட்டதும் அங்கே தங்கி விடலாமென்றும் எண்ணி விக்கிரமன் குதிரையை மேலே செலுத்தினான்.

சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. பார்க்கும்போது தண்ணீர் முழங்காலளவுதான் இருக்குமென்று தோன்றியது. காட்டாற்றில் மளமளவென்று வெள்ளம் பெருகிவிடுமாதலால் சீக்கிரம் அதைத் தாண்டி விடுவதே நல்லது என்று நினைத்து விக்கிரமன் குதிரையை ஆற்றில் இறக்கினான். கொஞ்ச தூரம் போனதும், பிரவாகத்தின் வேகம் அதிகரித்தது. குதிரை வெள்ளத்தின் குறுக்கே போக முடியாமல் நீரோட்டத்துடன் போக தொடங்கியது. பிரவாகமோ நிமிஷத்துக்கு நிமிஷம் பெருகிக் கொண்டிருந்தது. முன்னால் போகலாமா பின்னால் திரும்பிக் கரையேறி விடலாமா என்று விக்கிரமன் சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, குதிரை பிரவாகத்தில் நீந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இனிக் குதிரைக்கும் ஆபத்து என்று எண்ணமிட்டவனாய் விக்கிரமன் வெள்ளத்தில் பாய்ந்தான்.
 
அத்தியாயம் பதினொன்று

பழகிய குரல்

குதிரை மேலிருந்து வெள்ளத்தில் பாய்ந்த விக்கிரமன் சற்று நேரம் திக்கு முக்காடிப் போனான். படுவேகமாக உருண்டு புரண்டு அலை எறிந்து வந்த காட்டாற்று வெள்ளம் விக்கிரமனையும் உருட்டிப் புரட்டித் தள்ளியது. உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டு விக்கிரமன் தன்னுடைய பூரண பலத்துடன் சமாளித்துத் தண்ணீர் மட்டத்துக்கு வந்தான். பின்னர், வெள்ளத்தின் போக்கை அனுசரித்து நீந்தத் தொடங்கினான். சட்டென்று குதிரையின் ஞாபகம் வந்தது. "ஐயோ! அது வெள்ளத்தில் போயிருக்குமே?" என்ற எண்ணத்தினால் அவன் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தபோது, வெகு தூரத்தில் தான் ஆற்றில் இறங்கிய இடத்துக்கருகில் குதிரை வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். "நல்ல வேளை! குதிரையாவது பிழைத்ததே!" என்று அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. ஏனெனில், தான் தப்பிக் கரையேறலாம் என்ற ஆசை அவனுக்கு வரவரக் குறைந்து வந்தது. அக்கரையை நெருங்க நெருங்க, வெள்ளத்தின் வேகம் அபரிமிதமாயிற்று. யானைகளையும் குன்றுகளையும் கூடப் புரட்டித் தள்ளிவிடக்கூடிய வேகத்துடனும் 'ஓ' வென்ற இரைச்சலுடனும் அந்த வெள்ளம் அலைமோதிக் கொண்டு வந்தது. விக்கிரமனுடைய கைகள் களைப்படையத் தொடங்கின. நீந்திக் கரை ஏறுவது அசாத்தியம் என்றே விக்கிரமன் முடிவு செய்துவிட்டான். ஆகா! விதியின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது; என்னவெல்லாம் பகற் கனவு கண்டோ ம்! ஆகாசக் கோட்டைகள் கட்டினோம்? எல்லாம் இப்படியா முடியவேணும்! தந்தை பார்த்திப மகாராஜா கண்ட கனவைப் போலவே தன்னுடைய கனவும் முடிந்துவிட்டதே!

அவராவது போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். தான் ஆற்று வெள்ளத்தில் அகால மரணமல்லவா அடைய வேண்டியிருக்கிறது! இதற்காகவா இவ்வளவு அவசரமாகத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தோம்? ஐயோ? அம்மாவைப் பார்க்காமலேயல்லவா போகிறோம்! ஒரு தடவையாவது அவளைப் பார்த்து, "அம்மா! தகப்பனாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கடல்களுக்கு அப்பாலுள்ள தேசத்தில் சுதந்திர இராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறேன்" என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லையே! - அவ்விதம் சொன்ன பிறகு இத்தகைய மரணம் சம்பவித்திருந்தால்கூடப் பாதகமில்லை. ஆகா! திரும்புங்காலையில் மாமல்லபுரத்தின் அந்தத் தாமரைக் கண்ணாளைக் கண்டுபிடித்து, அவள் யாராயிருந்தாலும் சரிதான், "என்னுடன் நீயும் தேசப் பிரஷ்டையாகி வரச் சம்மதமா!" என்று கேட்க எண்ணியிருந்தோமே? அவள் ஒருவேளை நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ? அப்படியானால், எத்தகைய ஏமாற்றம் அடைவாள்? - ஆகா, கம்பீரத் தோற்றமுள்ள அந்த ஒற்றர் தலைவனை மறுபடியும் பார்த்து, அவனிடம் குதிரையை ஒப்புவிக்காமல் அல்லவா போகிறோம்?

விக்கிரமனுடைய கைகள் அடியோடு களைத்துவிட்டன. அவனுடைய உடம்பு இரும்பினால் ஆனதுபோல் கனத்தது. முடியாது, இனி ஒரு கணமும் முடியாது... அதோ வெள்ளத்தில் உருண்டு புரண்டு கறுப்பாய் வருகிறதே, அது என்ன? பெரிய மரம் ஒன்றை வெள்ளம் அடித்துக் கொண்டு வருகிறது. நல்ல வேளை! அதைப் பிடித்துக் கொள்ளலாம்... ஐயோ! மரம் அதோ போய் விட்டதே! இனிமேல் நம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லை.... விக்கிரமனுடைய கண்கள் இருண்டன; மதி மயங்கிற்று. அந்தச் சமயத்தில் அவனுக்குத் திடீரென்று படகோட்டி பொன்னனுடைய நினைவு வந்தது! இளம் பிராயத்தில் காவேரியில் நீந்தக் கற்றுக் கொள்ளும் போது, சில சமயம் இம்மாதிரி களைப்படைந்து முழுகும் தருவாய்க்கு வந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் பொன்னன் அவனைத் தூக்கி எடுத்து காப்பாற்றியிருக்கிறான். அம்மாதிரி இச்சமயமும் பொன்னன் வரமாட்டானா?... இது என்ன பைத்தியக்கார எண்ணம்? ஒரு வேளை பொன்னன்தானோ?.... இது என்ன வீண் பிரமை?... அம்மா! அம்மா!..." விக்கிரமனை ஒரு பெரிய அலை மோதிற்று; அவன் நீரில் அமிழ்ந்து நினைவிழந்தான்.

விக்கிரமனுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்து கொண்டிருந்தது. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, பாதாள உலகத்திலிருந்து வருவது போல், - "மகாராஜா" என்ற மெல்லிய குரல் கேட்டது. இது யாருடைய குரல்? கேட்டுப் பழகிய குரல் மாதிரி இருக்கிறதே! ஆம். படகோட்டி பொன்னனுடைய குரல்தான் இது. உண்மையாக நடப்பதுதானா? கனவில்லையா! பிரமையில்லையா! கடைசியாக, காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கியதும், நீந்திக் கை களைத்து நீரில் மூழ்கியதும் விக்கிரமனுக்கு நினைவு வந்தன. ஒரு வேளை இது மரணத்திற்குப் பிறகு மறு உலகத்தில் கேட்கும் குரலோ?- இதுவரையில் விக்கிரமனுடைய கண்கள் மூடியிருந்தன. இப்போது ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தான். ஆமாம்; படகோட்டி பொன்னனுடைய முகந்தான் அது! மழையில் நனைந்து வெள்ளத்தில் முழுகி எழுந்திருந்த பொன்னனுடைய தேகம் முழுதும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. போதாதற்கு அவனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. "பொன்னா! நீ தானா? இதெல்லாம் நிஜமா? அல்லது கனவா?" என்றான் விக்கிரமன். "மகாராஜா! நானும் அதையேதான் கேட்க இருந்தேன். நிஜமாக நீங்கள்தானா? அல்லது? அல்லது இது கனவா? பிரமையா? நிஜமாக விக்கிரம மகாராஜாவையா நான் வெள்ளத்திலிருந்து கரையேற்றினேன்... உயிர் பிழைத்துக் கண் விழித்து என்னுடன் பேசுவது நீங்கள்தானா?- ஒன்றுமே நம்ப முடியவில்லையே! - ஆகா! வள்ளி மட்டும் இங்கே இச்சமயம் இருந்தாளானால்..."

ஆற்றங்கரை அரச மரத்தடியில் ஒரு பெரிய வேரின் மேல் பொன்னன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மடியின் மீது விக்கிரமனுடைய தலை இருந்தது. மழை நின்று சிறு தூறல் போட்டுக் கொண்டிருந்தது. குளிர்ந்த வாடை வீசிற்று. இரவு சமீபித்துக் கொண்டிருந்தபடியால் நாலாபுறமும் இருள் அடர்ந்து வந்தது. விக்கிரமன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். "பொன்னா! நான்தான்; விக்கிரமன்தான். ஒரு அதிசயத்தைக் கேள், வெள்ளத்தில் முழுகும்போது நான் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா? கடைசியாக, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். காவேரி நதியில் நான் நீந்தக் கற்றுக் கொண்டபோது, என் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகும் தருணத்தில் எத்தனை தடவை நீ என்னை எடுத்துப் படகில் ஏற்றி விட்டிருக்கிறாய்? அது எனக்கு நினைவு வந்தது. இந்தச் சமயத்திலும் நீ வரக்கூடாதா என்று நினைத்தேன். கரையிலே ஒரு மனித உருவத்தைப் பார்த்தேன். ஒருவேளை நீதானோ என்றும் எண்ணினேன். இருக்காது- இது பிரமை என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினேன். நிஜமாக நீயாகவே இருந்துவிட்டாயே! என்ன அற்புதம் - அவ்வளவு சரியான சமயத்தில் நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்?" என்றான்.

"எனக்கும் அப்படித்தான் ஆச்சரியமாயிருக்கிறது மகாராஜா....!" அதோ பாருங்கள், அந்த மண்டபத்தை என்று பொன்னன் சுட்டிக் காட்டினான். சற்று தூரத்தில் ஒரு சிறு மண்டபம் காணப்பட்டது. "பெருமழை பிடித்துக் கொண்டபோது, நான் அந்த மண்டபத்தில் ஒதுங்கியிருந்தேன். ஆற்றில் வெள்ளம் பிரமாதமாய்ப் பெருகும் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது அக்கரையில் குதிரைமேல் யாரோ வருவது தெரிந்தது. ஆற்றில் இப்போது இறங்கினால் ஆபத்தாயிற்றே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் மளமளவென்று இறங்கிவிட்டீர்கள். ஆனால், அப்போது நீங்கள் என்று எனக்குத் தெரியாது. குதிரை மேலிருந்து வெள்ளத்தில் குதிப்பதையும், நீந்தி இக்கரைக்கு வர முயற்சிப்பதையும் பார்த்து இவ்விடத்துக்கு வந்தேன். நீங்கள் கை சளைத்து முழுகுவதைப் பார்த்துவிட்டுத் தண்ணீரில் குதித்தேன். மகாராஜா! அந்தச் சமயம் சொல்ல வெட்கமாயிருக்கிறது- 'இந்தப் பெரும் வெள்ளத்தில் நாமும் போய்விட்டால் என்ன செய்கிறது?" என்று கொஞ்சம் யோசனை உண்டாயிற்று. நல்ல வேளையாக அந்த யோசனையை உதறித் தள்ளி விட்டுக் குதித்தேன். அப்படிக் குதிக்காமலிருந்திருந்தால், ஐயோ!" என்று பொன்னன் கண்களை மூடிக் கொண்டான். அவன் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று.

"பொன்னா! அதை ஏன் இப்போது நினைக்கிறாய்? நமது குல தெய்வமான முருகக் கடவுள்தான் அந்தச் சமயத்தில் உனக்கு அவ்வளவு துணிச்சலைக் கொடுத்தார்... இல்லை! இல்லை! காலஞ்சென்ற பார்த்திப மகாராஜாதான் தோன்றாத் துணையாயிருந்து ஆபத்து வரும் சமயங்களிலெல்லாம் என்னைக் காப்பாற்றி வருகிறார்... இருக்கட்டும், பொன்னா! என்ன வெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன்! - மகாராணி சௌக்கியமா?" என்று ஆவலுடன் கேட்டான் விக்கிரமன். மகாராணி என்றதும் பொன்னன் திடீரென்று கண்ணைக் கைகளால் பொத்திக் கொண்டு விம்மத் தொடங்கினான். இதை பார்த்ததும் விக்கிரமனுக்கு ஏற்பட்ட நெஞ்சத் துடிப்பை விவரிப்பது இயலாத காரியம். "ஐயோ, பொன்னா! என்ன விபத்து நேர்ந்துவிட்டது? மகாராணி இறந்துவிட்டாரா" என்று பதைபதைப்புடன் கேட்டான். அப்போது பொன்னன், "இல்லை மகாராஜா இல்லை. மகாராணி எங்கேயோ உயிரோடுதான் இருக்கிறார். ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை...." என்றான். விக்கிரமனுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது! "அதெப்படி! பொன்னா! உன்னிடந்தானே நான் மகாராணியை ஒப்புவித்துவிட்டுப் போனேன்? நீ எப்படி அஜாக்கிரதையாயிருந்தாய்?..." "மகாராஜா! எல்லாம் விவரமாய்ச் சொல்ல வேண்டும். மறுபடியும் மழை வலுக்கும் போலிருக்கிறது. தாங்கள், ஏற்கெனவே நனைந்திருக்கிறீர்கள். குளிர் காற்றும் அடிக்கிறது! அதோ அந்த மண்டபத்துக்குப் போகலாம் வாருங்கள். எவ்வளவோ சொல்ல வேண்டும்; எவ்வளவோ கேட்கவேண்டும். இரவும் நெருங்கி விட்டது." இருவரும் எழுந்திருந்து மண்டபத்தை நோக்கிப் போனார்கள்.



அத்தியாயம் பன்னிரண்டு

சூரிய கிரகணம்

விக்கிரமனும் பொன்னனும் மண்டபத்தை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. இம்மாதிரி ஜன சஞ்சாரமில்லாத இடங்களில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அத்தகைய மண்டபங்களை அந்நாளில் கட்டியிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய கட்டளையினால் கட்டப்பட்டபடியால் அவற்றுக்கு மகேந்திர மண்டபங்கள் என்ற பெயர் வழங்கி வந்தது. மண்டபத்துக்கு வெளிப்புறம் இருந்த திண்ணையில் விக்கிரமனை இருக்கச் செய்து, பொன்னன் உள்ளே சென்று தான் அங்கு வைத்திருந்த உலர்ந்த துணிகளை எடுத்து வந்தான். விக்கிரமன் அவற்றை உடுத்திக் கொண்டான். அந்த மழைக்கால இருட்டில் இனி வழி நடப்பது அசாத்தியமாதலால், அன்றிரவை அந்த மண்டபத்திலேயே கழிப்பது என்று இருவரும் சேர்ந்து தீர்மானித்தார்கள்.

பிறகு, பொன்னன் அருள்மொழி ராணியைப் பற்றிய பின்வரும் அதிசயமான வரலாற்றைக் கூறினான்:- விக்கிரமன் தேசப் பிரஷ்ட தண்டனைக்கு உள்ளாகிக் கப்பல் ஏறிச் சென்ற பிறகு, அருள்மொழி ராணிக்கு உயிர் வாழ்க்கை பெரும்பாரமாயிருந்தது. மீண்டும் தன் புதல்வனை ஒரு முறை காணலாம் என்ற ஆசையினாலும் நம்பிக்கையினாலுமே உயிரைச் சுமந்து கொண்டிருந்தாள். ஆனாலும், முன்னர் கணவனுடனும் பிறகு புதல்வனுடனும் வசித்திருந்த வசந்த மாளிகையில் தன்னந்தனியாக வசிப்பது அவளுக்கு நரக வேதனையாயிருந்தது. இச்சமயத்தில்தான், பார்த்திப மகாராஜாவின் தோழரும் பழைய பல்லவ சேனாதிபதியுமான பரஞ்சோதி அடிகள் தமது தர்ம பத்தினியுடன் தீர்த்தயாத்திரை செய்து கொண்டு உறையூருக்கு வந்தார். அவர்கள் வசந்த மாளிகைக்கு வந்து அருள்மொழி ராணியைப் பார்த்துத் தேறுதல் கூறினார்கள். அருள்மொழி, அவர்களுடன் தானும் ஸ்தல யாத்திரை வருவதாகச் சொல்லவே, அவளையும் அழைத்துக் கொண்டு பிரயாணம் கிளம்பினார்கள். காஞ்சி நகர் ஒன்று நீங்கலாகத் தமிழகத்திலுள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களுக்ழூகெல்லாம் அவர்கள் சென்றார்கள். இரண்டு வருஷகாலம் இவ்விதம் யாத்திரை செய்த பிறகு சென்ற வருஷம் தை மாதத்து அமாவாசையில் காவேரி சங்கமத்தில் ஸ்நானம் செய்யும் பொருட்டு அவர்கள் பரஞ்சோதி அடிகளின் சொந்த ஊராகிய திருச்செங்காட்டாங்குடிக்கு வந்து சேர்ந்தார்கள்.

சென்ற வருஷம் தை அமாவாசையில் மகோதய புண்ணிய காலம் சேர்ந்தது. அதனுடன் அன்று சூரிய கிரகணம் - சம்பூர்ண கிரகணம் - பிடிப்பதாயுமிருந்தது. இந்த விசேஷ புண்ணிய தினத்தை முன்னிட்டு அன்று காவேரி சங்கமத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வதற்காக நாடெங்கும் இருந்து ஜனங்கள் திரள் திரளாக வந்தார்கள். பொன்னனும் வள்ளியுங்கூட உறையூரிலிருந்து நெடுநாள் பிரயாணம் செய்து காவேரி சங்கமத்துக்கு வந்து சேர்ந்தனர். உறையூர் வாழ்க்கை அவர்களுக்கும் பிடிக்காமற் போயிருந்தபடியாலும், அருள்மொழி ராணியை ஒரு வேளை சந்திக்கலாம் என்ற ஆசையினாலுந்தான் அவர்கள் வந்தார்கள். அவர்களுடைய ஆசையும் நிறைவேறியது. திருச்செங்காட்டாங்குடியிலேயே அருள்மொழித்தேவியை அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். புண்ணிய தினத்தன்று காலையில் பரஞ்சோதி அடிகள், அவர்களுடைய பத்தினி திருவெண்காட்டு நங்கை, அருள்மொழி ராணி, பொன்னன், வள்ளி எல்லாருமாக காவேரி சங்கமத்துக்குக் கிளம்பினார்கள். சங்கமத்தில் அன்று கற்பனைக்கடங்காத ஜனத்திரள் கூடியிருந்தது. உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் திரண்டு வந்துவிட்டார்களோ என்று தோன்றிற்று. ஜன சமுத்திரத்தைக் கண்ட உற்சாகத்தினால் ஜல சமுத்திரமும் பொங்கிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

சமுத்திரம் பொங்கிக் காவிரிப்பூம்பட்டினத்தைக் கொள்ளை கொண்ட காலத்துக்குப் பிறகு, காவேரி நதியானது மணலைக் கொண்டு வந்து தள்ளித் தள்ளிச் சமுத்திரத்தை அங்கே வெகு தூரத்துக்கு ஆழமில்லாமல் செய்திருந்தது. இதனால் சமுத்திரத்தில் வெகு தூரம் விஸ்தாரமாக ஜனங்கள் பரவி நின்று ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள். அலைகள் வரும்போது ஜலத்தில் முழுகியும், அலைகள் தாண்டியவுடன் மேலே கிளம்பியும், இவ்வாறு அநேகர் சமுத்திர ஸ்நானத்தின் குதூகலத்தை அநுபவித்துக் கொண்டே புண்ணியமும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட ஜனக் கூட்டத்தின் மத்தியில் பரஞ்சோதி அடிகள், அருள்மொழி ராணி ஆகியவர்களும் ஸ்நானம் செய்வதற்காகச் சமுத்திரத்தில் இறங்கிச் சென்றார்கள்.

இப்போது சூரிய கிரகணம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதிக வேகமாகச் சூரியனுடைய ஒளி குறைந்து கொண்டு வந்தது. கிரகணம் முற்ற முற்ற வெளிச்சம் குன்றி வந்ததுடன், சமுத்திரத்தின் கொந்தளிப்பும் கோஷமும் அதிகமாகி வந்தன. பட்டப் பகலில், மேகமில்லாத துல்லிய ஆகாயத்தில் திடீரென்று சூரிய ஒளி குன்றி இருள் சூழ்ந்து வந்த காட்சியினால் சகலமான ஜனங்களும் மனத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித அச்சம் உண்டாயிற்று. அப்போது இயற்கையிலேயே தெய்வ பக்தியுள்ளவர்கள் அண்ட சராசரங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் இறைவனுடைய லீலா விபூதிகளையெண்ணிப் பரவசம் அடைந்தார்கள். பரஞ்சோதி அடிகள் அத்தகைய நிலையைத்தான் அடைந்திருந்தார். ராணி அருள்மொழித் தேவியும் கண்களை மூடிக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கித் தியானத்தில் ஆழ்ந்திருந்தாள்.

வள்ளி சமுத்திரத்தையே அன்று வரையில் பார்த்தவள் இல்லை. ஆகையால் அவள் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. அவளை அலை அடித்துக் கொண்டு போகா வண்ணம் பொன்னன் அவளுடைய கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். வள்ளி பொன்னனிடம், "எனக்குப் பயமாயிருக்கிறதே! கரைக்குப் போகலாமே!" என்றாள். "இவ்வளவுதானா உன் தைரியம்?" என்று பொன்னன் அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த அதிசயமான துயரச் சம்பவம்- யாரும் எதிர்பாராத காரியம் நடந்து விட்டது. ராணி அருள்மொழி மூடியிருந்த கண்களைத் திறந்தாள். 'குழந்தாய், விக்கிரமா! இதோ வந்து விட்டேன்!" என்று கூவினாள். ராணியின் அந்த அலறும் குரல் ஒலி, அலைகளின் பேரிரைச்சலையெல்லாம் அடக்கிக்கொண்டு மேலெழுந்து பொன்னன், வள்ளி இவர்களின் செவியில் விழுந்தது. அந்த அலறல் ஒலி கேட்டது ஒரு கணம்; மறுகணத்தில் அருள்மொழி ராணி கிழக்கு நோக்கிக் கடலிலே பாய்ந்தாள். ஒரு பேரலை வந்து மோதி அவளை மூழ்கடித்தது.

பொன்னனும், வள்ளியும் 'ஓ'வென்று கதறினார்கள். தியானத்திலிருந்து கண் விழித்த பரஞ்சோதி அடிகள், "என்ன? என்ன?" என்றார். பொன்னன், "ஐயோ! மகாராணி அலையில் போய்விட்டாரே!" என்று அலறினான். உடனே, பரஞ்சோதி அடிகள் தமது பத்தினியையும் வள்ளியையும் நோக்கி, "நீங்கள் உடனே கரை ஏறிவிடுங்கள்!" என்றார். அச்சமயத்தில் சூரிய கிரகணம் சம்பூரணம் ஆயிற்று. வானத்தில் நட்சத்திரங்கள் தெரிந்தன. இருட்டினால் கலவரமடைந்த ஜனங்களின் மத்தியில் "அப்பா!" "அம்மா!" "மகனே!" என்ற கூக்குரல்கள் கிளம்பின. பக்தர்களுடைய பரவசக் குரலில், "ஹரஹர" "சம்போ" என்னும் கோஷங்களும் எழுந்தன. அந்தக் கிரகண அந்தகாரத்தில் கடல் அலைகளுடன் போராடிக் கொண்டு பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி ராணியைத் தேடத் தொடங்கினார்கள்.
 
அத்தியாயம் பதிமூன்று

கபால பைரவர்

அருள்மொழித்தேவி "குழந்தாய்! விக்கிரமா! இதோ வந்துவிட்டேன்!" என்று அலறிக் கொண்டு அலை கடலிலே பாய்ந்தாள் என்ற விவரத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய கண்களில் நீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. அச்சமயம் கடல்களுக்கப்பால் எங்கேயோ தான் இருக்கும் விஷயம் தன் தாயின் நினைவுக்கு வந்து அதன் பயனாகத்தான் அப்படி அவள் வெறிகொண்டு பாய்ந்திருக்க வேண்டும் என்று விக்கிரமன் எண்ணினான். பொன்னன், தானும் பரஞ்சோதி அடிகளும் தேவியைத் தேடியதைப் பற்றிச் சொல்லி வந்தபோது விக்கிரமன், "பொன்னா! சீக்கிரம் சொல்லேன்? மகாராணி அகப்பட்டாரா?" என்று கதறினான். "இல்லையே, மகாராஜா! அகப்படத்தானே இல்லை! அப்புறம் மகாராணியைத் தரிசிப்பதற்கு இந்தப் பாழும் கண்கள் கொடுத்து வைக்கவில்லையே!" என்று பொன்னனும் கண்ணீர் விட்டான். "பின்னே மகாராணி உயிரோடுதான் இருக்கிறார் என்று சற்று முன்பு சொன்னாயே? எனக்கு ஆறுதலுக்காகச் சொன்னாயா? - ஐயோ! இந்தச் செய்தியைக் கேட்கவா நான் கப்பலேறி கடல் கடந்து வந்தேன்!" என்று விக்கிரமன் புலம்பினான். அப்போது பொன்னன், "பொறுங்கள் மகாராஜா! குறையையும் கேளுங்கள். மகாராணி உயிரோடுதான் இருக்கிறார்; சந்தேகமில்லை, அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். நீங்களும் வந்துவிட்டீர்கள், இனிமேல் என்ன கவலை?" என்றான் பொன்னன்.

பிறகு நடந்த சம்பவங்களையும் தான் அறிந்த வரையில் விவரமாகக் கூறலுற்றான். அலைகளுக்கு மத்தியில் அடர்ந்த இருளில் பரஞ்சோதி அடிகளும் பொன்னனும் அருள்மொழி ராணியை வெகுநேரம் தேடினார்கள். மகாராணி அகப்படவில்லை. "பொன்னா! தேவியைச் சமுத்திரராஜன் கொண்டு போய் விட்டான்!" என்று பரஞ்சோதி அடிகள் துக்கம் ததும்பும் குரலில் கூறினார். பொன்னன் 'ஓ' என்று அழுதான். இனிமேல் ஒருவேளை அகப்பட்டாலும் உயிரற்ற உடல்தான் அகப்படுமென்று இரண்டு பேருடைய மனத்திலும் பட்டுவிட்டது. உயிரற்ற உடலை அலைகளே கரையில் கொண்டு வந்து தள்ளிவிடும். இனியும் தேடுவதில் ஒரு உபயோகமுமில்லை. இவ்வாறு மனத்தில் எண்ணிக் கொண்டு இரண்டு பேரும் கரை ஏறினார்கள். அவர்கள் கரைக்கு வந்த சமயத்தில் கிரகணம் விட ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தகாரத்தை அகற்றிக் கொண்டு சூரியனுடைய ஒளி நாலாதிக்குகளிலும் ஸ்தாபித்து வந்தது. மாரிக்காலத்து மாலை வேளையைப்போல் தோன்றிய அச்சமயத்தில், பரஞ்சோதியாரும் பொன்னனும் கரையேறியபோது அங்கே வெடவெடவென்று குளிரில் நடுங்கிக் கொண்டு நின்ற பரஞ்சோதியாரின் பத்தினியும் வள்ளியும், "வாருங்கள்! சீக்கிரம் வாருங்கள்!" என்று கூவினார்கள்.

அவர்கள் விரைவில் அருகில் நெருங்கியதும், யாரோ ஒரு ஒற்றைக் கை மனிதன் அப்போதுதான் கடலிலிருந்து கரையேறியதாகவும், அவன் அந்த ஒற்றைக் கையினால் ஒரு ஸ்திரீயைக் தூக்கிக் கொண்டு போனதாகவும், மங்கிய வெளிச்சத்தில் பார்த்தபோது, அருள்மொழி ராணி மாதிரி இருந்ததென்றும், தாங்கள் கையைத்தட்டிக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும்போதே அம்மனிதன் ஜனக் கூட்டத்தில் சட்டென்று மறைந்து போய்விட்டதாகவும் சொன்னார்கள். ஒரே படபடப்புடன் பேசிய அவர்களிடமிருந்து மேற்கண்ட விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கே சற்று நேரம் ஆகிவிட்டது. முன்னால் அலைகடலில் அருள்மொழி ராணியைத் தேடிய பொன்னனும் பரஞ்சோதியாரும் இப்போது மறுபடியும் ஜனசமுத்திரத்தில் ராணியைத் தேடத் தொடங்கினார்கள், இதுவும் நிஷ்பலனே ஆயிற்று. மாநிலத்திலுள்ள மாந்தர் யாவரும் திரண்டு வந்திருந்தது போல் தோன்றிய அந்தப் பெரிய ஜனக்கூட்டத்தில் ஒற்றைக் கை மனிதனையும் அவர்கள் காணவில்லை! அவன் ஒரு கையினால் தூக்கிச் சென்ற அருள் மொழி ராணியையும் காணவில்லை. எவ்வளவோ தேடியும் அகப்படாமற் போகவே, திருவெண்காட்டு நங்கையும் வள்ளியும் பார்த்ததாகச் சொன்னதிலேயே அவர்களுக்கு அவநம்பிக்கை உண்டாயிற்று. அது ஒரு வேளை அவர்களுடைய பிரமையாயிருக்கலாமென்று நினைத்தார்கள். ஆனால், அம் மூதாட்டியும் வள்ளியுமோ தாங்கள் நிச்சயமாய்ப் பார்த்ததாக ஆணையிட்டுக் கூறினார்கள்.

மற்கண்ட வரலாற்றைச் சொல்லி முடித்தபிறகு அருள்மொழி ராணி இன்னும் உயிரோடுதானிருக்கிறார் என்று தான் நம்புவதற்குக் காரணம் என்னவென்பதையும் பொன்னன் கூறினான். வள்ளியும் அவனும் சில தினங்கள் வரையில் திருச்செங்காட்டாங்குடியிலிருந்து விட்டு, அருள்மொழி ராணியைப் பற்றிய மர்மத்தைத் தெரிந்து கொள்ளாமலே திரும்பி உறையூர் சென்றார்கள். அங்கே போய்ச் சில நாளைக்கெல்லாம் சிவனடியார் வந்து சேர்ந்தார். மகாராணியைப் பற்றிய வரலாற்றைக் கேட்டு அவர் பெருந்துயரம் அடைந்தார். ஒற்றைக் கை மனிதனைப் பற்றிய விவரம் அவருக்குப் பெரும் வியப்பையளித்தது. வள்ளியைத் திரும்பத் திரும்ப அவளுக்கு ஞாபகம் இருக்கும் விவரத்தையெல்லாம் சொல்லும்படி கேட்டார். கடைசியில் அவர், "பொன்னா! வள்ளி சொல்லுவதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. ராணியை ஒற்றைக் கை மனிதன்தான் கொண்டு போயிருக்கிறான். ராணி உயிருடன் இருக்கிறாள் என்பதிலும் சந்தேகமில்லை. அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு" என்றார். பிறகு அவர், "அந்த ஒற்றைக் கை மனிதன் யார், தெரியுமா?" என்று கேட்டார். "தெரியாதே சுவாமி!" என்று பொன்னன் சொன்னபோது சிவனடியார், "அவன்தான் கபாலருத்திர பைரவன், கபாலிக மதக் கூட்டத்தின் தலைமைப்பூசாரி. தமிழகத்தில் நரபலி என்னும் பயங்கரத்தை அவன் பரப்பிக் கொண்டு வருகிறான். அதைத் தடுப்பதற்குத்தான் நான் பிரயத்தனப்பட்டுக் கொண்டு வருகிறேன். எங்கேயோ ஒரு இரகசியமான இடத்தில் அவன் ரணபத்திர காளி கோயில் கட்டியிருக்கிறானாம். அந்த இடத்தைக் கண்டு பிடித்தோமானால், அங்கே அநேகமாக நமது ராணியைக் காணலாம்" என்றார்.

இதைக் கேட்டுப் பொன்னன் நடுநடுங்கிப் போனான். "ஐயோ! மகாராணியை ஒரு வேளை காளிக்குப் பலி கொடுத்திருந்தால்...." என்று அலறினான். "இல்லை பொன்னா, இல்லை! கேவலம் ஒரு பலிக்காகக் கபால பைரவன் இவ்வளவு சிரமம் உள்ள ஒரு காரியத்தில் தலையிட்டிருக்க மாட்டான். வேறு ஏதோ முக்கிய அந்தரங்க நோக்கம் இருக்கிறது. ஆகையால், ராணியை உயிரோடு பத்திரமாய் வைத்திருப்பான். ரணபத்திர காளி கோயில் இருக்குமிடத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்' என்றார் சிவனடியார். இதன்மேல் பல்லவ, சோழநாடுகளைப் பொன்னனும் சிவனடியாரும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பகுதியை ஒவ்வொருவர் தேடுவது என்று தீர்மானித்துக் கொண்டார்கள். பொன்னன் வள்ளியைத் தன்னுடைய அத்தை வீட்டில் விட்டுவிட்டு, சோழநாடு முழுவதும் தேடி அலைந்தான். பிறகு, காவேரியின் அக்கரைக்கு வந்து தேடத் தொடங்கினான்.

மாதக் கணக்காகத் தேடி அலைந்ததற்குக் கடைசியாக நாலு நாளைக்கு முன்புதான் பலன் கிடைத்தது. அந்தக் காட்டாற்றின் கரையோடு பொன்னன் மேற்கே மூன்று, நாலு காத தூரம் போன பிறகு ஒரு பெரிய மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த மலை அடிவாரத்தில் வெகுதூரம் அடர்த்தியான காடு சூழ்ந்திருந்தது. அவன் வழி பிடித்துக் கொண்டு வந்த காட்டாறானது அந்த மலை உச்சியிலிருந்துதான் புறப்பட்டிருக்க வேண்டுமென்றும், அந்த மலை கொல்லி மலையின் ஒரு பகுதியாயிருக்கலாமென்றும் பொன்னன் ஊகித்தான். அந்த வனப்பிரதேசத்தைப் பார்த்தவுடனேயே, இதற்குள் எங்கேயாவது ரணபத்திர காளியின் கோயில் இருக்க வேண்டுமென்று பொன்னனுக்குத் தோன்றியது. அந்த மலைக்கு உட்புறத்தில் காட்டுமிராண்டி ஜனங்கள் வசிப்பதாகப் பொன்னன் கேள்விப்பட்டிருந்தான். அவர்கள் சில சமயம் மலைக்கு வெளியில் வந்து நரபலி கொடுப்பதற்காக மனிதர்களைக் கொண்டு போவதுண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, பொன்னன் அந்த வனப் பிரதேசத்தில் நாலாபுறத்திலும் தேடி அலைய ஆரம்பித்தான். ஆனால், எந்தப் பக்கத்திலும் அதிக தூரம் காட்டுக்குள் புகுந்து போவதற்குச் சாத்தியப்படவில்லை.

கடைசியாக, காட்டாறு பெருகி வந்த வழியைப் பிடித்துக் கொண்டு போனான். போகப் போக ஆறானது குறுகி சிறு அருவியாயிற்று. அந்த அருவியின் வழியாக மலைமேல் ஏறிச் செல்வது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. சில இடங்களில் பெரிய பெரிய பாறைகள் கிடந்தன. சில இடங்களில் ஆழமான மடுக்கள் இருந்தன. இன்னும் சில இடங்களில் முள் மரங்கள் அடர்த்தியாகப் படர்ந்து, புகுந்து போக முடியாமல் செய்தன. வேறு சில இடங்களில் பாறையில் செங்குத்தாக ஏற வேண்டியதாயிருந்தது. பொன்னன் இதற்கெல்லாம் சிறிதும் சளைக்காமல் ஏறிச் சென்று கொண்டிருந்தான். காலையிலிருந்து மத்தியானம் வரையில் இவ்விதம் ஏறி மிகவும் களைத்துப்போன பொன்னன் கடைசியாக ஒரு பாறையின் மீது உட்கார்ந்தான். "இனிமேல் இறங்கிப் போக வேண்டியதுதான்; வேறு வழியில்லை. இராத்திரியில் இந்த வனப் பிரதேசத்துக்குள் அகப்பட்டுக் கொண்டால் காட்டு மிருகங்களுக்கு இரையாக நேரலாம்" என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மனிதப் பேச்சுக் குரல் கேட்டது. அந்த நிர்மானுஷ்யமான காட்டில் மனிதக் குரலைத் திடீரென்று கேட்டதில் பொன்னனுக்கு ஒரு பக்கம் திகிலுண்டாயிற்று. இன்னொரு பக்கத்தில் ஒருவேளை நாம் தேடிவந்த காரியம் சித்தியாகப் போகிறதோ என்ற எண்ணத்தினால் ஆவலும் பரபரப்பும் அளவில்லாமல் பொங்கின. எதற்கும் ஜாக்கிரதையாயிருக்கலாம் என்று பொன்னன் பக்கத்தில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு பாறைக்குக் கீழே சரேலென்று ஒளிந்து கொண்டான்.

சற்று நேரத்துக்கெல்லாம் மேலேயிருந்து இரண்டு மனிதர்கள் இறங்கி வருவது தெரிந்தது. ஆனால் எப்பேர்ப்பட்ட மனிதர்கள்? அவர்கள் மனிதர்கள்தானா? ஒருவன் மனிதன்தான், சந்தேகமில்லை. ஆனால், அவ்வளவு பயங்கரத் தோற்றம் கொண்ட மனிதனை அதற்கு முன்னால் பொன்னன் பார்த்ததேயில்லை. அவனுக்கு அந்தப் பயங்கரத் தோற்றத்தை அளித்தவை முக்கியமாக அவனுடைய உருட்டி விழிக்கும் பார்வையுடைய சிவந்த கண்கள்தான். இன்னும், அவனது உயர்ந்து வளர்ந்த உடலின் ஆகிருதி, நீண்ட பெரிய மீசை, தலையில் அடர்த்தியாக வளர்ந்து சுருட்டை சுருட்டையாகத் தொங்கிய செம்பட்டை மயிர், நெற்றியில் அப்பியிருந்த செஞ்சந்தனம், அதன் மத்தியில் இரத்தச் சிவப்பான குங்குமப் பொட்டு - இவையெல்லாம் அவனுடைய தோற்றத்தின் பயங்கரத்தை அதிகமாக்கின. அவன் ஒரு கரிய கம்பளிப் போர்வையைப் போர்த்தியிருந்தான். ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டியபோது அந்தப் போர்வை நழுவிற்று. அப்போது பொன்னன் "ஹோ!" என்று கதறி விட்டிருப்பான். ஆனால், பயத்தினாலேயே அவனுடைய தொண்டையிலிருந்து சத்தம் வரவில்லை. பொன்னனுக்கு அவ்வளவு ஆச்சரியத்தையும், பயத்தையும் உண்டாக்கிய காட்சி என்னவென்றால், அந்த மனிதனுக்கு ஒரு கை இல்லாமலிருந்தது தான்! அதாவது வலது தோளுக்குக் கீழே முழங்கைக்கு மேலே அவனுடைய கை துண்டிக்கப்பட்டு முண்டமாக நின்றது.

"அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்றதாக வள்ளியும் திருவெண்காட்டு அம்மையும் கூறியவன் இவன்தான்! 'கபால ருத்திர பைரவன்" என்று சிவனடியார் கூறியவனும் இவன்தான்!" என்று பொன்னனுக்கு உடனே தெரிந்து போய்விட்டது. கபால பைரவனின் தோற்றம் மட்டுமல்ல, அவனுடன் இருந்த இன்னொரு மனிதனின் தோற்றமும் பொன்னனுக்குத் திகைப்பை அளித்தது. ஆமாம்; அவனும் மனிதன்தான் என்பது அருகில் வந்தபோது தெரிந்தது. ஆனால், அவன் விபரீதமான குள்ள வடிவமுள்ள மனிதன். பத்து வயதுப் பையனின் உயரத்துடன், நாற்பது வயது மனிதனின் முதிர்ந்த முகமுடையவனாயிருந்தான். அவ்வளவு குள்ளனாயிருந்தும் அவன் கபால பைரவனைப் பின்பற்றி அந்த மலைப் பாறைகளில் அதிவிரைவாகத் தாவித் தாவிச் சென்றது, பொன்னனுடைய வியப்புடன் கலந்த திகிலை அதிகரிப்பதாயிருந்தது. பொன்னன் கூறிய வரலாற்றில் மேற்கண்ட இடத்துக்கு வந்ததும், விக்கிரமனும் அளவில்லாத ஆவலைக் காட்டினான். அந்தக் குள்ளனை நன்றாக விவரிக்கும்படி சொன்னான். பொன்னன் அவ்விதமே விவரித்துவிட்டு, "மகாராஜா! என்ன விசேஷம்? இம்மாதிரி யாரையாவது நீங்கள் வழியில் பார்த்தீர்களா, என்ன?" என்று கேட்டதற்கு, விக்கிரமன், ஆமாம்; பொன்னா, அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். உன்னுடைய வரலாற்றைச் சொல்லிமுடி" என்றான்.

"இனிமேல் அதிகம் ஒன்றுமில்லை மகாராஜா! அருவிப் பாதையில் அவர்கள் இருவரும் வெகுதூரம் இறங்கிப் போய்விட்டார்கள் என்று தெரிந்து கொண்டு நான் மேலே வந்தேன். அவர்கள் இருப்பிடத்தையும் காளி கோயிலையும் கண்டுபிடித்து விடலாம்; ஒருவேளை மகாராணியையே பார்த்தாலும் பார்த்துவிடுவோம் என்ற ஆசையுடன் அந்த அருவிப்பாதையைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறினேன். ஆனால், சிறிது நேரத்துக்கெல்லாம் என் ஆசை பாழாகிவிட்டது. ஏனென்றால், மேலே கொஞ்ச தூரம் போனதும் அருவியானது மூன்று ஆள் உயரத்திலிருந்து செங்குத்தாக விழுந்தது. பாறையும் அங்கே செங்குத்தாக இருந்தது. அவ்விடத்தில் பாறையின் மேலே ஏறுவதோ, மேலே இருந்து கீழே இறங்குவதோ மனிதர்களால் முடியாத காரியம். அப்படியானால் இவர்கள் எப்படி வந்தார்கள்? மேலேயிருந்து யாராவது கயிறு அல்லது நூலேணி தொங்கவிட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த இடத்துக்கும் நான் ஒளிந்திருந்த இடத்துக்கும் மத்தியில் எங்கேயாவது இரகசிய வழி இருக்கவேண்டும். ஆனமட்டும் தேடிப் பார்த்தேன் மகாராஜா, பிரயோஜனப்படவில்லை. எப்படியும் போனவர்கள் திரும்பி வருவார்களென்று நினைத்து, மலை அடிவாரத்துக்கு வந்து மூன்று தினங்கள் காத்திருந்தேன். போனவர்கள் திரும்பி வரவில்லை. அதன்மேல் சிவனடியாரிடம் தெரிவித்து யோசனை கேட்கலாமென்று கிளம்பி வந்தேன். நல்ல சமயத்திலே வந்தேன் மகாராஜா!" என்று பொன்னன் முடித்தான்.

"ஆமாம்.... நல்ல சமயத்தில்தான் வந்தாய், பொன்னா! இல்லாவிட்டால் இத்தனை நேரம் நான் ஒரு வேளை என் தந்தையிருக்குமிடம் போய்ச் சேர்ந்திருப்பேன்" என்றான் விக்கிரமன். "எனக்கும் ஒருவேளை அந்தக் கதிதான் நேர்ந்திருக்கும், மகாராஜா! எப்படிப் பெருகி வந்தது பெருவெள்ளம், அவ்வளவும் அந்த மலையிலிருந்துதானே வந்திருக்கிறது? மழை பிடித்தபோது அங்கே நான் அகப்பட்டுக் கொண்டிருந்தேனேயானால்... தங்களை எங்கே பார்த்திருக்கப் போகிறேன்! மகாராணியைத்தான் எப்படித் தேடப் போகிறேன்?" "மகாராணி அந்த மலையில் இருக்கிறார் என்று உனக்கு நம்பிக்கை இருக்கிறதா பொன்னா?" என்று கேட்டான் விக்கிரமன். "ஆமாம், மகாராஜா! முன்னே, சிவனடியார் சொன்னபோதுகூட எனக்கு அவ்வளவு நம்பிக்கைப்படவில்லை. ஆனால் அந்த ஒற்றைக்கை பைரவனைப் பார்த்த பிறகு, நிச்சயமாக மகாராணி பிழைத்துத்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை உண்டாகிறது." "எப்படியோ என் உள்ளத்திலும் அந்த நம்பிக்கை இருக்கிறது; பொன்னா! என்னைப் பார்க்காமல் அம்மா இறந்து போயிருப்பார் என்று என்னால் நினைக்க முடியவேயில்லை. சென்ற ஆறுமாதமாக மகாராணி என் கனவில் அடிக்கடி தோன்றி வருகிறார். தை அமாவாசையன்று என் பெயரைக் கூவிக்கொண்டு கடலில் பாய்ந்ததாகச் சொன்னாயே, கிட்டத்தட்ட அந்த நாளிலிருந்துதான் அடிக்கடி அவர் கனவில் வந்து என்னை அழைக்கிறார். அவர் உயிரோடுதானிருக்க வேண்டும். ஐயோ, இந்த நிமிஷத்தில் கூட, அவர் என்னைக் கூவி அழைக்கிறார் பொன்னா! அம்மா! அம்மா!" என்று அலறினான் விக்கிரமன். அப்போது பொன்னன் சட்டென்று விக்கிரமனுடைய வாயைப் பொத்தி, "மகாராஜா! பொறுங்கள்!" என்றான். பிறகு, "அதோ கேளுங்கள், ஏதோ சத்தம் கேட்கிறது, மனிதக்குரல்!" என்று காதோடு கூறினான். உண்மையிலேயே அந்த இருண்ட மண்டபத்துக்கு வெளியே யாரோ இருவர் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
 
அத்தியாயம் பதினான்கு

காளியின் தாகம்

பேச்சுக்குரல் நெருங்கி வருவதாகத் தோன்றவே, பொன்னன் விக்கிரமனை மண்டபத்துக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லிவிட்டு எட்டிப் பார்த்தான். மண்டபத்தை நோக்கி இரண்டு பேர் வருவது தெரிந்தது. ஆனால் இருட்டில் முகம் ஒன்றும் தெரியவில்லை. அப்போது பளீரென்று ஒரு மின்னல் மின்னிற்று. மின்னலில் அந்த இருவருடைய முகத்தையும் பார்த்ததும், பொன்னனுடைய உடம்பெல்லாம் ஒரு தடவை பதறிற்று. வந்தவர்களில் ஒருவன் மாரப்ப பூபதி; இன்னொருவன்...ஆம், கபால ருத்ர பைரவன்தான்! அவர்களை அவ்விதம் திடீரென்று பார்த்த பேரதிர்ச்சியை ஒருவாறு பொன்னன் சமாளித்துக் கொண்டு விக்கிரமன் இருந்த இடத்தின் அருகில் சென்று அவரைத் தொட்டு மெல்லிய குரலில், "மகாராஜா!" என்றான். விக்கிரமன், "இதென்ன, பொன்னா? ஏன் இப்படி நடுங்குகிறாய்?" என்பதற்குள், பொன்னன் விக்கிரமனுடைய வாயைப் பொத்தி, "இரைய வேண்டாம்! பெரிய அபாயம் வந்திருக்கிறது; எதற்கும் சித்தமாயிருங்கள்!" என்று காதோடு சொன்னான். விக்கிரமன் இடுப்பைத் தடவிப் பார்த்து, "ஐயோ! வாள் ஆற்றோடு போய்விட்டதே!" என்று முணுமுணுத்தான். வந்தவர்கள் இருவரும் அந்த மண்டபத்தின் வாசல் திண்ணையில் வந்து மழைக்கு ஒதுங்கி நின்றார்கள். அவர்களுடைய பேச்சு உள்ளே இருந்தவர்களின் காதில் சில சமயம் தெளிவாகவும் சில சமயம் அரைகுறையாகவும் விழுந்தது.

அவர்களில் ஒருவனுடைய குரலைச் சட்டென்று விக்கிரமனும் தெரிந்து கொண்டான். திடுக்கிட்டு அவன் எழுந்திருக்கப் போனபோது பொன்னன் அவனைப் பிடித்து உட்கார வைக்க வேண்டியிருந்தது. "மகாப் பிரபோ! காளிமாதா எனக்கு இன்னும் என்ன ஆக்ஞாபித்திருக்கிறாள்? கிருபை கூர்ந்து சொல்ல வேண்டும்" என்றது மாரப்பனின் குரல். இதற்குப் பதில் கூறிய குரலானது கேட்கும்போதே மயிர்க் கூச்சல் உண்டாக்கக் கூடியதாயிருந்தது. ஒருவேளை பேய், பிசாசுகள் பேசுமானால் இப்படித்தான் அவற்றின் குரல் இருக்கும் என்று எண்ணும்படியிருந்தது. "மாதா உனக்கு இன்னும் பெரிய பெரிய பதவிகளையெல்லாம் கொடுக்கக் காத்திருக்கிறாள். உன்னிடம் இன்னும் பெரிய பெரிய காரியங்களையும் எதிர்பார்க்கிறாள். அன்னைக்கு ரொம்பவும் தாகமாயிருக்கிறதாம். ராஜ வம்சத்தின் இரத்தம் வேண்டுமென்கிறாள்!" "ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த அரசிளங் குமரனைக் காளிக்கு அர்ப்பணம் செய்ய முயன்றேன். எப்படியோ காரியம் கெட்டுப் போய்விட்டதே....."

"உன்னாலேதான் கெட்டது; அந்த ராஜ குமாரனுக்காக நானே வந்திருந்தேன். நீ குறுக்கிட்டுக் கெடுத்து விட்டாய்." "மன்னிக்க வேண்டும் பிரபோ...ஆனால் ராஜ குமாரன் வருகிறான் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது? "மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கிறாயே? காளிமாதா சொல்லித்தான் தெரிந்தது. அருள்மொழி ராணியின் வாய்மொழியாக மாதா எனக்குத் தெரிவித்தாள். 'அதோ கப்பலில் வந்து கொண்டிருக்கிறான்! கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறான்?' என்று ராணி சொன்னாள். நான் வந்தேன்! அதற்குள்ளாக நீ நடுவில் குறுக்கிட்டுக் காரியத்தைக் கெடுத்து விட்டாய்." "பிரபோ! க்ஷமிக்க வேண்டும்...." "போனது போகட்டும். மாதா உன்னை க்ஷமித்து விட்டாள். ஆனால், 'தாகம்' 'தாகம்' என்று கதறிக் கொண்டிருக்கிறாள்! ராஜ குல ரத்தம் வேண்டும் என்கிறாள்! இந்த அமாவாசை போய்விட்டது. துலா மாதப் பிறப்பிலாவது தாயின் தாகத்தைத் தணிக்க வேண்டும்.... அவனை நீ எப்படியாவது தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்...." "கொண்டு வந்தால்...." "கொண்டு வந்தால் உன் மனோரதம் நிறைவேறும். பூபதி! காளி மாதாவைச் சரணமாக அடைந்தவுடனே உனக்குச் சேனாதிபதிப் பதவி கிடைக்கவில்லையா? இன்னும்...." "இன்னும் என்ன சுவாமி?" "இன்னும் மிகப் பெரிய பதவிகள் உனக்கு நிச்சயம் கிடைக்கும்." "பெரிய பதவிகள் என்றால்..."

"சோழநாட்டின் சிம்மாசனம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. மாதா கையில் கிரீடத்தை வைத்துக் கொண்டு உன் தலையில் சூட்டக் காத்திருக்கிறாள்." "அவ்வளவுதானா, பிரபோ!" "அதைவிடப் பெரிய பதவியும் அன்னை வைத்துக் கொண்டிருக்கிறாள்." "அது என்னவோ?" "என்னவா? பல்லவ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனம் தான்!" "ஆ!" என்றான் மாரப்ப பூபதி. சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. "ஆனால், அப்படிப்பட்ட மகத்தான பதவி லேசில் கிடைத்துவிடாது. அதற்குத் தகுந்த காணிக்கை காளி மாதாவுக்கு நீ சமர்ப்பிக்க வேண்டும்." "அடியேனிடம் மாதா என்ன எதிர்பார்க்கிறாள்?" "முதலில் பார்த்திபன் மகனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வர வேண்டும்." "செய்கிறேன்; அப்புறம்?" "வரும் துலா மாதப் பிறப்பன்று...." "சொல்லுங்கள், பிரபோ!" "காளி மாதா சந்நிதிக்கு நீ வரவேண்டும்..." "வந்து..." "உன்னுடைய தலையை உன்னுடைய கையினாலேயே வெட்டி மாதாவுக்கு அளிக்க வேண்டும்!" "ஐயோ!" என்று மாரப்பன் அலறினான். "அளித்தால் அடுத்த ஜென்மத்தில் காஞ்சி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகலாம். இல்லாவிட்டால்...." "இல்லாவிட்டால் என்ன பிரபோ!" "ஆத்ம பலிக்கு ஈடான இன்னொரு மகா பலி அளிக்க வேண்டும். அளித்தால் இந்த ஜென்மத்திலேயே சக்கரவர்த்தி பதவி கிட்டும்." "அது என்ன பலி, சுவாமி!" "அந்த விபூதி ருத்திராட்சதாரியைப் பலிக்குக் கொண்டு வர வேண்டும்...."

"பிரபோ! இராஜ வம்சத்து இரத்தத்தை விரும்பும் காளி மாதா கேவலம் ஒரு விபூதி ருத்திராட்சதாரியைப் பலி கொள்ள விரும்புவானேன்?" என்று மாரப்பன் கேட்டான். "பூபதி! உனக்கு தெரிந்தது அவ்வளவுதான்; அந்தப் போலி ருத்திரா ட்சதாரி - உண்மையில் யார் தெரியுமா உனக்கு?" "யார் பிரபோ!" என்று பூபதி வியப்புடன் கேட்டான். "பூபதி! அது மகா மர்மம் - யாரும் அறிய முடியாத இரகசியம் - இதோ அடிக்கும் இந்தக் காற்றின் காதிலே கூட விழக் கூடாது. அருகில் வா! காதோடு சொல்கிறேன்..." சொல்ல முடியாத வியப்புடனும் பயத்துடனும் மேற்படி சம்பாஷனையின் பெரும் பகுதியைக் கேட்டுக் கொண்டு வந்த விக்கிரமனும் பொன்னனும் இப்போது செவிகளை மிகக் கூர்மையாக வைத்துக் கொண்டு கேட்டார்கள். ஆனால் ஒன்றும் காதில் விழவில்லை. திடீரென மாரப்பன் இடி இடி என்று சிரிக்கும் சத்தம் கேட்டது. "பூபதி! ஏன் சிரிக்கிறாய்? மாதாவின் வார்த்தையில் உனக்கு அவநம்பிக்கையா?" என்று கபால பைரவர் கோபக் குரலில் கேட்டார். "இல்லை பிரபோ! இல்லை!" என்றான் மாரப்பன். "பின்னர், ஏன் சிரித்தாய்?" "அந்தச் சிவனடியாரைக் கைப்பற்றிக் கொண்டு வரும்படி இன்னொரு தேவியிடமிருந்தும் எனக்குக் கட்டளை பிறந்திருக்கிறது, அந்தத் தேவி யார், தெரியுமா?" "யார்?" "தர்ம ராஜாதி ராஜ மாமல்ல நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியின் திருக்குமாரி குந்தவி தேவிதான்!" "ரொம்ப நல்லது. காளி மாதா தன் விருப்பத்தைப் பல விதத்திலும் நிறைவேற்றிக் கொள்கிறாள்!" என்றார் மகா கபால பைரவர். இந்தச் சமயத்தில் சற்று தூரத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தமும், இரைச்சலும் ஆரவாரமும் கேட்டன. பொன்னன் சத்தமிடாமல் நடந்து வாசற்படியருகில் வந்து எட்டிப் பார்த்தான். ஐந்தாறு குதிரை வீரர்கள் தீவர்த்தி வெளிச்சத்துடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் மனதிற்குள், "இன்று மகாராஜாவும் நாமும் நன்றாய் அகப்பட்டுக் கொண்டோ ம்!" என்று எண்ணினான். அவனுடைய மார்பும் 'பட்பட்' என்று அடித்துக் கொண்டது. சட்டென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டான்.

அதே சமயத்தில் மாரப்ப பூபதி, "மகாபிரபோ! அதோ என்னுடைய ஆட்கள் என்னைத் தேடிக் கொண்டு வருகிறார்கள்; நான் போக வேண்டும்" என்றான். "நானும் இதோ மறைந்து விடுகிறேன். மாதாவின் கட்டளை ஞாபகம் இருக்கட்டும்...." "மறுபடியும் எங்கே சந்திப்பது?" "வழக்கமான இடத்தில்தான். சித்ரகுப்தன் உனக்காகக் காத்திருப்பான்." இதற்குள் இரைச்சலும் ஆரவாரமும் அருகில் நெருங்கி விட்டன. "நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்." "அப்படியே பிரபோ!" இதற்குப் பிறகு சற்று நேரம் பேச்சுக் குரல் ஒன்றும் கேட்கவில்லை. திடீரென்று கொஞ்சதூரத்தில், "சோழ சேனாதிபதி மாரப்பபூபதி வாழ்க! வாழ்க!" என்ற கோஷம் கேட்டது. பொன்னனும் விக்கிரமனும் மண்டபத்துக்கு வெளியில் வந்து பார்த்தபோது, தீவர்த்திகளின் வெளிச்சத்தில் குதிரைகள் உறையூர்ச் சாலையில் விரைவாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்கள். "மகாராஜா, எப்பேர்ப்பட்ட இக்கட்டிலிருந்து தப்பினோம்?" என்று சொல்லிப் பொன்னன் பெருமூச்சு விட்டான்.

விக்கிரமன், "பொன்னா! என்ன துரதிர்ஷ்டம்? நான் ஏறிவந்த குதிரை, அதன் மேலிருந்த இரத்தினப் பைகள் எல்லாம் ஆற்றோடு போய்விட்டதினால்கூட மோசம் இல்லை; என் உடைவாளும் போய்விட்டதே! என்ன செய்வேன்?" என்றான். "மகாராஜா!" "என்ன, பொன்னா?" "ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. மகாராணி ஸ்தல யாத்திரை கிளம்பும்போது என்னிடம் ஒரு பெட்டியை ஒப்புவித்தார்கள். உங்களிடம் கொடுக்கும்படி...." "என்ன பெட்டி அது? சீக்கிரம் சொல்லு பொன்னா!" "அதில் உங்கள் குலத்தின் வீர வாள் இருக்கிறது. பிடியில் இரத்தினங்கள் இழைத்தது...." "நிஜமாகவா, பொன்னா? ஆகா! முக்கியமாக அந்த வாளுக்காகத்தானே நான் இப்போது தாய் நாட்டுக்கு வந்தேன்! என் தந்தை போருக்குக் கிளம்பும்போது அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பட்டாக்கத்தியையும் திருக்குறள் சுவடியையும் எனக்குக் காட்டி, 'இவைதாம் நான் உனக்கு அளிக்கும் குலதனம்!' என்றார். எங்கள் மூதாதை - பரத கண்டத்தையெல்லாம் ஒரு குடையின் கீழ் ஆண்டு, கடல் கடந்த தேசங்களிலும் ஆட்சி செலுத்திய கரிகாலச்சோழர் - கையாண்ட வாள் அது. பொன்னா! பத்திரமாய் வைத்திருக்கிறாயல்லவா?"

"வைத்திருக்கிறேன். சுவாமி!" "எங்கே?" "வசந்தத் தீவில் புதைத்து வைத்திருக்கிறேன்." "அங்கே ஏன் வைத்தாய்?" "வேறு எங்கே வைப்பேன். மகாராஜா?" "சரி பொன்னா! நாம் இப்போது வசந்தத் தீவுக்குப் போய் அந்த வாளை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். என் தந்தை என்ன சொன்னார் தெரியுமா? ஒன்பது வருஷத்துக்கு முன்னால் சொன்னது நேற்றுத்தான் சொன்னது போலிருக்கிறது. 'விக்கிரமா! இந்தக் கரிகாலச் சோழரின் வீரவாளை வேறொரு அரசனுக்குக் கப்பம் செலுத்தும் கையாலே தொடக்கூடாது. ஆகையினால்தான் என் வாழ்நாளில் நான் இதை எடுக்கவேயில்லை. நீ எப்போது ஒரு கையகலமுள்ள பூமிக்காவது சுதந்திர மன்னனாகிறாயோ, அப்பொழுது இந்த வாளை எடுத்துக்கொள்' என்றார். பொன்னா! நான் இப்போது செண்பகத் தீவின் சுதந்திர அரசன் அல்லவா? இனி அந்த வாளை நான் தரிக்கலாம்...." "மகாராஜா! செண்பகத்தீவுக்கு மட்டுந்தானா? சோழ நாட்டுக்கும் நீங்கள்தான் அரசர்...." "அதற்கு இன்னும் காலம் வரவில்லை பொன்னா! ஆனால் சீக்கிரத்தில் வந்து விடும். நாம் உடனே செய்ய வேண்டிய காரியங்கள் இரண்டு இருக்கின்றன.

அந்த வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயங்கர நரபலிக் கூட்டத்திலிருந்து மகாராணியை விடுவித்து அழைத்துப் போக வேண்டும். இவற்றுள் முதலில் எதைச் செய்வது, அப்புறம் எதைச் செய்வது என்பதை இப்போது தீர்மானிக்க வேண்டும்." அவர்கள் மேலும் யோசனை செய்து, முதலில் உறையூருக்குப் போய் வசந்தத் தீவிலிருந்து வீர வாளை எடுத்துக் கொள்வதென்றும், பிறகு திரும்பி வந்து சிவனடியாரைத் தேடிப் பிடித்து அவருடைய உதவியுடன் மகாராணியைக் கண்டுபிடிப்பதென்றும் தீர்மானித்தார்கள். இருவரும் மிகவும் களைத்திருந்த படியால் அன்றிரவு இந்த மண்டபத்திலேயே உறங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து உறையூருக்குப் போவதென்றும் முடிவு செய்தார்கள். ஆனால் விக்கிரமனுக்கு ஏற்கனவே கடுமையான சுரம் அடித்துக் கொண்டிருந்ததென்பதையாவது, பொழுது விடிவதற்குள் அவன் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைமையை அடைவானென்பதையாவது அவர்கள் அறிந்திருக்கவில்லை.
 

New Threads

Top Bottom