Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பார்த்திபன் கனவு

அத்தியாயம் இருபது

பொன்னனும் சிவனடியாரும்

சிவனடியாரைப் பார்த்த பொன்னன் ஏன் அவ்வளவு ஆச்சரியமடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. குதிரையிலிருந்து இறங்கி அந்தச் சிற்ப வீட்டுக்குள் நுழைந்தவர் ஒருவராயும், வெளியில் வந்தவர் இன்னொருவராயும் இருந்ததுதான் காரணம். இரண்டு பேரும் ஒருவர்தானா, வெவ்வேறு மனிதர்களா? இந்த ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் பொன்னன் முகத்தில் வெளிப்படுத்திய போதிலும் வார்த்தைகளினால் வெளியிடவில்லை. வெளியிடுவதற்கு அவனுக்குச் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. ஏனென்றால், அவனைப் பார்த்தவுடனேயே, சிவனடியார், "பொன்னா! எவ்வளவு சரியான சமயத்தில் வந்தாய்? இப்போதுதான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன். உறையூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் சற்று நேரம் கழித்து வந்திருந்தாயானால் என்னைப் பார்த்திருக்க மாட்டாய்..." என்று பரபரப்புடன் பேசிக் கொண்டே போனார். திண்ணையில் அவர்கள் உட்கார்ந்து கொண்டதும், "பொன்னா! சீக்கிரம் உன் சமாசாரத்தைச் சொல்லு! ரொம்ப முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். மகாராணியைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?" என்று கேட்டார்.

பொன்னன், "தெரிந்தது, சுவாமி!" என்றான். பிறகு, தான் கொல்லிமலை அடிவாரத்துக்குப் போனது. அருவியைப் பிடித்துக்கொண்டு மேலேறியது, அங்கே ஒற்றைக் கை மனிதனும் குள்ளனும் வந்ததைக் கண்டு மறைந்திருந்தது. அவர்கள் திரும்பி வருவார்களென்று எதிர்பார்த்து மூன்று நாள் காத்திருந்துவிட்டுத் திரும்பியது ஆகிய விவரங்களைச் சொன்னான். காட்டாற்று வெள்ளத்திலிருந்து விக்கிரமனைக் காப்பாற்றியது முதலியவற்றைச் சொல்லவில்லை. சிவனடியாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டு பிறகு சொல்லலாமென்று இருந்தான். ஒற்றைக் கை மனிதனுடைய தோற்றத்தைப் பற்றி விவரமாகச் சொல்லும்படி சிவனடியார் கேட்க, பொன்னன் அவ்விதமே அவனுடைய பயங்கரத் தோற்றத்தை வர்ணித்து விட்டு, "சுவாமி! அந்த மனிதன் யார்? உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். "பொன்னா! பார்த்திப மகாராஜாவின் பத்தினி அந்தக் கொல்லி மலையிலேதான் எங்கேயோ இருக்கிறாள் சந்தேகமில்லை. இதுவரையில் எனக்கு அர்த்தமாகாத விஷயங்கள் பல இப்போது அர்த்தமாகின்றன. அந்த மனிதன் யார் என்றா கேட்கிறாய்? - மகா புருஷர்களும் பக்த சிரோமணிகளும் தோன்றிய இந்தப் புண்ணிய நாட்டில் நரபலி என்னும் பயங்கர வழக்கத்தைப் பரப்பி வரும் மகா கபால பைரவன்தான் அவன். நானும் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறேன். அவனை நேருக்கு நேர் காண வேண்டுமென்று. இன்று வரையில் முடியவில்லை. அவனைப் பற்றி இன்னொரு சந்தேகம் எனக்கிருக்கிறது. பொன்னா! ஏன் என் கண்ணில் அகப்படாமல் அவன் தப்பித் திரிகிறான் என்பதை ஒருவாறு ஊகிக்கிறேன்; எல்லா உண்மையையும் சீக்கிரத்தில் நாம் இரண்டு பேருமாகக் கண்டுபிடிக்கப் போகிறோம்.

"பொன்னா! அதற்கு முன்னால் நமக்கு இன்னும் முக்கியமான காரியம் ஏற்பட்டிருக்கிறது. உனக்கு இப்போது ரொம்பவும் ஆச்சரியமளிக்கும் விஷயம் ஒன்றைத் சொல்லப் போகிறேன். சோழநாட்டு இளவரசர் திரும்ப வந்திருக்கிறார்" என்று சொல்லிச் சிவனடியார் பொன்னனுடைய முகத்தை உற்றுப் பார்த்தார். அவனுடைய முகத்தில் சிறிது வியப்புக் குறி காணப்பட்டதே தவிர, குதூகலமும் மகிழ்ச்சியும் தோன்றாதது கண்டு, சிவனடியார், "என்ன பொன்னா உனக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டார். பொன்னன் இன்னும் சிறிது ஜாக்கிரதையுடன், "தங்களுடைய வார்த்தையில் எனக்கு அவநம்பிக்கை ஏற்படுமா, சுவாமி? ஆனால், இவ்வளவு அபாயத்துக்குத் துணிந்து இளவரசர் ஏன் வந்தார் என்றுதான் கவலையாயிருக்கிறது" என்றான். "உண்மைதான் பொன்னா! இளவரசருக்கு ஏதோ அபாயம் நேர்ந்துவிட்டது. உறையூருக்குப் போகும் பாதையிலேதான் ஏதோ நேர்ந்திருக்கிறது. நாம் உடனே கிளம்பிப் போய்ப் பார்க்க வேண்டும். அருள்மொழித் தேவியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் இளவரசரைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார். பொன்னன் இப்போது உண்மையாகவே பேராச்சரியம் அடைந்தவனாய், "சுவாமி! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?

இளவரசரை நீங்கள் பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள்? அவருக்கு வழியில் ஆபத்து என்று என்ன முகாந்திரத்தைக் கொண்டு சொல்கிறீர்கள்?" என்று கேட்டான். "பொன்னா! இதென்ன உன்னிடம் இந்த மாறுதல்? நான் சொல்வதில் சந்தேகப்பட்டு முகாந்திரம் கேட்கக் கூட ஆரம்பித்து விட்டாயே? - நல்லது, சொல்கிறேன் கேள்! இளவரசரை நானே பார்த்தேன்; பேசினேன். நான்தான் உறையூருக்கும் அனுப்பினேன்...." "எதற்காக சுவாமி?" "எதற்காகவா? ஜன்ம தேசத்தைப் பார்த்துவிட்டு வரட்டும் என்றுதான். பொன்னா! ஒருவனுக்குத் தன்னுடைய பிறந்த நாட்டில் அன்பு எப்போது பூரணமாகும் என்று உனக்குத் தெரியுமா? கொஞ்ச காலமாவது அயல் தேசத்திலிருந்து விட்டுத் திரும்பிவரும் போதுதான். இரண்டு மூன்று வருஷம் அயல்நாட்டிலிருந்து விட்டு ஒருவன் திரும்பித் தன் தாய்நாட்டுக்கு வரும்போது, பாலைவனப் பிரதேசமாயிருந்தாலும், அது சொர்க்க பூமியாகத் தோன்றும். வளங்கொழிக்கும் சோழ நாட்டைப் பற்றிக் கேட்க வேண்டுமா? உங்கள் இளவரசருக்கு திரும்பவும் இந்நாட்டை விட்டுப் போகவே மனம் வராதபடி செய்ய வேணுமென்று விரும்பினேன்; பார்த்திப மகாராஜாவுக்குப் போர்க்களத்தில் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு. ஆனால் வழியில் இப்படி விபத்து ஏற்படக் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை. ஐயோ பகவானே! நாளை அருள்மொழி ராணி கேட்டால் நான் என்ன செய்வேன்!"

"சுவாமி! இளவரசருக்கு என்ன ஆபத்து நேரிட்டது? அது எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று பொன்னன் கேட்டான். "இன்றைக்கு ரொம்பக் கேள்விகள் கேட்கிறாயே, பொன்னா! என்ன ஆபத்து நேர்ந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ நேர்ந்து மட்டும் இருக்கிறது. அதோ அந்தக் குதிரைக்கு, பகவான் பேசும் சக்தியை மட்டும் அளித்திருந்தால், அது சொல்லும்.... ஆமாம், இந்தக் குதிரைமேல் ஏறிக்கொண்டுதான் உங்கள் இளவரசர் கிளம்பினார். இதே இடத்திலிருந்துதான் புறப்பட்டார். ஆனால், இரண்டு நாளைக்குப் பிறகு குதிரை மட்டும் தனியாகத் திரும்பி வந்திருக்கிறது. இளவரசருக்கு எங்கே, என்ன நேர்ந்தது என்பதை நாம் இப்பொழுது உடனே போய்க் கண்டுபிடிக்க வேண்டும். நீயும் என்னோடு வருகிறாயல்லவா, பொன்னா! உனக்குக் குதிரை ஏறத் தெரியுமா?" என்று சிவனடியார் கேட்டார். "தெரியும் சுவாமி! ஆனால், நான் தங்களுடன் வருவதற்கு முன்னால் தங்களிடம் இன்னும் சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றான் பொன்னன். "என்ன?" என்று சிவனடியார் தம் காதுகளையே நம்பாதவர் போல் கேட்டார். "ஆமாம் இன்னும் சில விவரங்கள் தெரியவேண்டும். முக்கியமாகத் தாங்கள் யார் என்று சொல்ல வேண்டும்" என்றான். சிவனடியாரின் முகத்தில் புன்னகை அரும்பியது. "ஓஹோ! அப்படியா?" என்றார்.

"சற்று முன்னால் சாலையிலிருந்து தாங்கள் குதிரைமீது வந்ததை நான் பார்த்தேன். அப்போது வேறு உருவம் கொண்டிருந்தீர்கள்; இந்த வீட்டுக்குள்ளேயே போய் வெளியே வரும்போது வேறு ரூபத்தில் வந்தீர்கள். ஆனால், இந்த இரண்டு உருவங்களும் தங்களுடைய சொந்த உருவம் அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தச் சந்தேகம் சுவாமி, எனக்கு வெகுநாளாகவே உண்டு. ஆனால், இப்போது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. உண்மையில் தாங்கள் யார் என்று சொன்னால்...." "சொன்னால் என்ன?" "சுவாமி, மிகவும் முக்கியமான ஒரு விஷயம்... தாங்கள் அறிந்து கொள்ள விரும்பக்கூடிய விஷயம் எனக்குத் தெரியும், அதைச் சொல்லுவேன், இல்லாவிட்டால் என் வழியே நான் போவேன்...." சிவனடியார் சற்று யோசித்தார். பொன்னனுடைய முகத்தில் உள்ள உறுதிக் குறியைக் கவனித்தார். "பொன்னா! அவசியம் நீ தெரிந்து கொண்டுதான் தீர வேண்டுமா?" "ஆமாம், சுவாமி." "அப்படியானால், சொல்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். வேறு யாரிடமும் சொல்லக் கூடாது. பரம இரகசியமாய் வைத்திருக்க வேண்டும்" என்றார். "அப்படியே செய்கிறேன், சுவாமி." "போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த பார்த்திப மகாராஜாவின் ஆணையாகச் சொல்வாயா?" "பார்த்திப மகாராஜாவின் ஆணையாகச் சொல்கிறேன், சுவாமி!"

"அப்படியானால், இதோ பார்!" என்று சிவனடியார் அன்று போர்க்களத்தில் பார்த்திபன் முன்னால் செய்தது போல தம்முடைய ஜடா மகுடத்தையும் மீசை தாடிகளையும் நீக்கினார். பொன்னன், "பிரபோ! தாங்கள் தானா?" என்று சொல்லி, அவர் முன்னால் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். "இதற்கு முன்னால் வள்ளி உனக்குச் சொல்லவில்லையா? பொன்னா!" என்று சிவனடியார் (மீண்டும் ஜடாமகுடம் முதலியவற்றைத் தரித்துக் கொண்டு) கேட்க, "வள்ளி பெரிய கள்ளியாயிற்றே? நிஜத்துக்கு மாறான விஷயத்தைச் சொன்னாள். தங்களைத்தான் அவள் சொல்கிறாளா என்று நான் சந்தேகித்துக் கேட்டேன். இல்லை தாங்கள் பார்த்திப மகாராஜா என்று ஒரு பெரிய பொய் புளுகினாள். அவளை இலேசில் விடுகிறேனா, பாருங்கள்! எனக்கும் இப்போது ஒரு பெரிய இரகசியம் தெரியும். அதை அவளுக்குச் சொல்வேனா?" என்றான். பிறகு, பொன்னன் காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கி இளவரசரைக் காப்பாற்றியது முதல் அவரைக் குந்தவிதேவி தன் பல்லக்கில் ஏற்றி அழைத்துச் சென்றது வரையில் எல்லா விவரங்களையும் சவிஸ்தாரமாய்ச் சொன்னான். இதற்கு முன்னாலெல்லாம் எதற்கும் ஆச்சரியம் அடையாதவராயிருந்த சிவனடியார் இப்போது அளவிட முடியாத வியப்புடன் பொன்னன் கூறிய விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, "பொன்னா! உங்கள் இளவரசரைப் பற்றிய கவலை தீர்ந்தது விக்கிரமன் பத்திரமாயிருப்பான். நாம் அருள்மொழி ராணியைத்தான் தேடி விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.
 
அத்தியாயம் இருபத்தொன்று

வஸந்தத் தீவில்

ஒரு வார காலமாக விக்கிரமன் நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கும் சுவர்க்கத்திலிருந்து நரகத்துக்குமாக மாறிக் கொண்டிருந்தான். நாலாபுறமும் பயங்கரமாகத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. பார்த்திப மகாராஜா விக்கிரமனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, "குழந்தாய்! உன்னுடைய ஜன்ம தேசத்துக்காக நீ இந்தத் தீயில் இறங்குவாயா?" என்று கேட்கிறார். அருகில் அருள்மொழி ராணி கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள். "இறங்குவேன் அப்பா!" என்று விக்கிரமன் துணிந்து விடை சொல்கிறான். தந்தையின் கைப்பிடி தளர்கிறது. விக்கிரமன் நெருப்பில் இறங்கிச் செல்கிறான்; உடம்பெல்லாம் கொதிக்கிறது; சுடுகிறது; வேகிறது; எரிகிறது. ஆனால் உணர்வு மட்டும் அப்படியே இருக்கிறது. "ஐயோ! இப்படி எத்தனை காலம் எரிந்து கொண்டிருப்பது? ஏன் உயிர் போகமாட்டேனென்கிறது? ஏன் உடம்பு அப்படியே இருக்கிறது?" என்று எண்ணி விக்கிரமன் துடிதுடிக்கிறான். திடீரென்று ஒரு குளிர்ந்த கை அவனுடைய எரியும் கரத்தைப் பற்றுகிறது; இன்னொரு குளிர்ந்த கை அவனுடைய கொதிக்கும் மார்பைத் தொடுகிறது. எரிகிற அந்தத் தீயின் நடுவில் செந்தாமரையை யொத்த குளிர்ந்த முகம் ஒன்று தோன்றி அவனைக் கருணையுடன் நோக்குகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் அத்தீயிலிருந்து வெளியே வருகிறான். தன்னை அவ்விதம் கையைப் பிடித்து அழைத்து வந்த தெய்வப் பெண்ணுக்கு நன்றி செலுத்த அவன் விரும்புகிறான். ஆனால், அத்தெய்வப் பெண்ணைக் காணவில்லை.

விக்கிரமன் புலிக்கொடி பறக்கும் பெரிய போர்க்கப்பலில் பிரயாணம் செய்கிறான். கப்பலில் நூற்றுக்கணக்கான சோழ நாட்டு வீரர்கள் அங்குமிங்கும் உலாவுகிறார்கள். கப்பல் துறைமுகத்தை விட்டுக் கிளம்பிய போது பார்த்திப மகாராஜாவும் அருள்மொழி ராணியும் விக்கிரமனை ஆசீர்வதித்து, "வெற்றி வீரனாய்த் திரும்பி வா!" என்று வாழ்த்தி அனுப்பிய காட்சி அவன் மனக் கண் முன்னால் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. திடீரென்று பெரும் புயலும் மழையும் அடிக்கின்றன; கப்பல் கவிழ்கின்றது. விக்கிரமன் கடல் அலைகளுடன் தன்னந்தனியாகப் போராடுகிறான். உடம்பு ஜில்லிட்டுப் போய் விட்டது; கைகால்கள் மரத்து விட்டன. "இனித் தண்ணீரில் மூழ்கிச் சாகவேண்டியதுதான்" என்று தோன்றிய சமயத்தில் இந்திர ஜாலத்தைப் போல் ஒரு படகு எதிரே காணப்படுகிறது. படகில் பூரண சந்திரனையொத்த முகமுடைய பெண் ஒருத்தி இருக்கிறாள். எங்கேயோ, எப்போதோ, எந்த ஜன்மத்திலோ பார்த்த முகந்தான் அது. அந்தப் பெண் அவனுக்குக் கைகொடுத்துத் தூக்கிப் படகில் விடுகிறாள். அவள் முகமெல்லாம் நனைந்திருக்கிறது. அலைத்துளிகள் தெறித்ததனாலா, கண்ணீர் பெருகியதனாலா என்று தெரியவில்லை. அவளுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று விக்கிரமன் ஆசைப்படுகிறான். பேச முயற்சி செய்கிறான், ஆனால் பேச்சு வரவில்லை. தொண்டையை அடைத்துக் கொள்கிறது.

விக்கிரமன் ஒரு கொடிய பாலைவனத்தில் நடந்து கொண்டிருக்கிறான். வெயிலின் கொடுமை பொறுக்க முடியவில்லை. கால் ஒட்டிக் கொள்கிறது. உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. நா வரண்டுவிட்டது, சொல்ல முடியாத தாகம். கண்ணுக்கெட்டிய தூரம் மரம், செடி, நிழல் என்கிற நாமதேயமே கிடையாது. எங்கேயோ வெகு தூரத்தில் தண்ணீர் நிறைந்த ஏரி மாதிரி தெரிகிறது. அதை நோக்கி விரைந்து செல்கிறான். எவ்வளவு விரைவாகச் சென்றாலும் ஏரி இன்னும் தொலை தூரத்திலேயே இருக்கிறது. "ஐயோ! கானல்நீர் என்றும், பேய்த் தேர் என்றும் சொல்வது இதுதானா?" என்று நினைக்கிறான்; பிறகு அவனால் நடக்க முடியவில்லை. திடீரென்று கண் இருளுகிறது; சுருண்டு கீழே விழுகிறான். அந்தச் சமயத்தில் 'இவ்வளவு கஷ்டங்களையும் நமது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சோழ நாட்டின் மேன்மையை முன்னிட்டுத்தானே அநுபவிக்கிறோம்!' என்ற எண்ணம் உண்டாகிறது. கீழே கொதிக்கும் மணலில் விழுந்தவனை யாரோ மிருதுவான கரங்களினால் தொட்டுத் தூக்கும் உணர்ச்சி ஏற்படுகிறது. யார் என்று பார்ப்பதற்காகக் கண்ணைத் திறக்க முயற்சி செய்கிறான்.

கண்கள் திறந்துதானிருக்கின்றன - ஆனால் பார்வை மட்டும் இல்லை. "ஐயோ! இந்தக் கொடிய வெப்பத்தினால் பார்வை இழந்துவிட்டோ மோ?" என்று எண்ணி மனம் வெதும்புகிறான். தொட்டுத் தூக்கிய கரங்கள் அவனை மிருதுவான பஞ்சணை மெத்தையின் மேல் இடுகின்றன. "ஆகா! காவேரி நதியின் ஜலம்போல் அல்லவா இனிக்கின்றது!" என்று எண்ணுகிறான். அதே சமயத்தில், அவனுக்குச் சுற்றுப்புறமெல்லாம் குளிர்கிறது. காவேரி நதி தீரத்தில் குளிர்ந்த தோப்புக்களினிடையே இருக்கும் உணர்ச்சி உண்டாகிறது. தன்னைத் தூக்கி எடுத்து வாயில் இன்னமுதை இட்டு உயிர் கொடுத்த தெய்வம் தன் முகத்துக்கருகிலே குனிந்து பார்ப்பதாகத் தோன்றுகிறது. முல்லை மலர்களின் திவ்யபரிமள வாசனை அவனைச் சூழ்கிறது, சட்டென்று அவனுடைய கண்கள் ஒளி பெறுகின்றன. 'ஆகா! எதிரில் தன் முகத்தருகில் தெரியும் அந்த முகம், மாதுளை மொட்டைப் போன்ற செவ்விதழ்களில் புன்னகை தவழ, விரிந்த கருங் கண்களினால் தன்னைக் கனிந்து பார்க்கும் அந்த முகம். தான் ஏற்கெனவே பார்த்திருக்கும் அந்த முகம்தான். எவ்வளவோ ஆபத்துக்களிலிருந்து தன்னைத் தப்புவித்த தெய்வப் பெண்ணின் முகந்தான். அந்த இனிய முகத்தைத் தொடவேண்டுமென்ற ஆசையுடன் விக்கிரமன் தன் கையைத் தூக்க முயன்றான்; முடியவில்லை. கை இரும்பைப் போல் கனக்கிறது. மறுபடியும் கண்கள் மூடுகின்றன, நினைவு தவறுகிறது.

இப்படியெல்லாம் சுவர்க்க இன்பத்தையும், நரகத் துன்பத்தையும் மாறி மாறி அநுபவித்த பிறகு கடைசியில் ஒருநாள் விக்கிரமனுக்குப் பூரணமான அறிவுத் தெளிவு ஏற்பட்டது. கொஞ்சங் கொஞ்சமாகப் பழைய நினைவுகள் எல்லாம் வந்தன. காட்டாற்றங்கரையில் மகேந்திர மண்டபத்தில் அன்றிரவைத் தானும் பொன்னனும் கழித்தது வரையில் நினைவுபடுத்திக் கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான், ஏதோ ஏற்கனவே தெரிந்த இடம்போல் தோன்றியது. நன்றாக ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்துக்கு எல்லையில்லாமற் போயிற்று. ஆமாம்; உறையூரில் காவேரித் தீவிலுள்ள வஸந்த மாளிகையில் ஒரு பகுதிதான் அவன் படுத்திருந்த இடம். "இங்கே எப்படி வந்தோம்? யார் கொண்டு வந்து சேர்த்தார்கள்? இந்த மாளிகையில் இப்போது இன்னும் யார் இருக்கிறார்கள்?" பொன்னனுடைய நினைவு வந்தது. அவன் எங்கே? தாபஜ்வரத்தின் வேகத்தில் தான் கண்ட பயங்கர இன்பக் கனவுகளெல்லாம் இலேசாக ஞாபகம் வந்தன. அந்த அதிசய மாயக்கனவுகளில் அடிக்கடி தோன்றிய பெண்ணின் முகம் மட்டும் கனவன்று - உண்மை என்று அவனுக்கு உறுதி ஏற்பட்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பாதச் சிலம்பின் ஒலி கேட்டபோது, அவள் தானா என்று ஆவலுடன் திரும்பிப் பார்த்தான். இல்லை; யாரோ பணிப்பெண்கள், முன்பின் பார்த்தறியாதவர்கள்.

இன்னும் வைத்தியர் ஒருவர் வந்து பார்த்தார். பணியாட்களும் பணிப்பெண்களும் அடிக்கடி வந்து வேண்டிய சிசுருஷை செய்தார்கள். ஆனால், பொன்னன் வரவில்லை; அந்தப் பெண்ணையும் காணவில்லை. பணியாட்களிடமும், பணிப்பெண்களிடமும் விவரம் எதுவும் கேட்பதற்கும் அவன் மனம் இசையவில்லை. அவர்களோ ஊமைகளைப் போல் வந்து அவரவர் களுடைய காரியங்களைச் செய்துவிட்டுத் திரும்பினார்கள். அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இவ்விதம் ஒரு பகல் சென்றது. இரவு தூக்கத்தில் கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து விக்கிரமனுக்கு அங்கே படுத்திருக்க மனம் கொள்ளவில்லை. உடம்பில் நல்ல பலம் ஏற்பட்டிருப்பதைக் கண்டான்; எழுந்து நடமாடினான். ஒருவிதக் களைப்பும் உண்டாகவில்லை, திடமாகத்தான் இருந்தது. அறைக்கு வெளியே வந்து தோட்டத்தில் பிரவேசித்தான். அங்கிருந்த பணியாட்கள் யாரும் அவனைத் தடுக்கவில்லை. விக்கிரமன் மேலும் நடந்தான். நதிக்கரையை நோக்கி மெதுவாக நடந்து சென்றான் பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குளிர்ந்த காவேரித் தீவைப் பார்க்கப் பார்க்க, அவன் மனம் பரவசமடைந்தது. அந்த மாமரங்களின் நிழலில் நடப்பது அளவற்ற ஆனந்தத்தை அளித்தது. மெள்ள மெள்ள நடந்து போய்க் காவேரிக் கரையை அடைந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவனுடைய மனதில் சாந்தியும் இன்ப உணர்ச்சியும் மேலிட்டிருந்தன.

காவேரி நதியின் இனிய நீர்ப்பிரவாகத்தை விக்கிரமன் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். தண்ணீரில் ஒரு முகம் பிரதிபலித்தது! அது அந்தப் பழைய தெய்வப் பெண்ணின் முகந்தான். காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் தன்னைக் கருணையுடன் நோக்கிய முகந்தான். தாபஜ்வரக் கனவுகளில் தோன்றிச் சாந்தியும் குளிர்ச்சியும் அளித்த முகமும் அதுதான். அந்தப் பெண்ணை மறுபடியும் காணப் போகிறோமா என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். அதே சமயத்தில், அவனுக்குப் பின்புறமாக வந்து ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு குந்தவி தேவி நின்றாள்.
 
அத்தியாயம் இருபத்திரண்டு

"நிஜமாக நீதானா?"

மரத்தடியில் வந்து நின்ற குந்தவிதேவி சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள். விக்கிரமன் திரும்பிப் பார்க்கும் வழியாக இல்லை. காவேரியின் நீர்ப் பிரவாகத்திலிருந்து அவன் கண்களை அகற்றவில்லை. ஒரு சிறு கல்லை எடுத்து விக்கிரமனுக்கு அருகில் ஜலத்தில் போட்டாள். 'கொடக்' என்ற சத்தத்துடன் கல் அப்பிரவாகத்தில் விழுந்து முழுகிற்று. சிறு நீர்த் துளிகள் கிளம்பி விக்கிரமன் மேல் தெறித்தன. குந்தவியின் யுக்தி பலித்தது. விக்கிரமன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய கண்கள் அகல விரிந்தன. கண் கொட்டாமல் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கண்களாலேயே அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான். அவனுடைய உதடுகள் சற்றுத் திறந்தன. ஏதோ பேச யத்தனிப்பது போல். ஆனால், வார்த்தை ஒன்றும் வரவில்லை. ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் திரும்பிக் காவேரியின் பிரவாகத்தை நோக்கினான். குந்தவி இன்னும் சற்று நேரம் நின்றாள். பிறகு மரத்தடியிலிருந்து வந்து நதிக்கரையில் விக்கிரமனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் உட்கார்ந்த பிறகு விக்கிரமனும் இரண்டு மூன்று தடவை அவள் பக்கம் திரும்பினான். ஒவ்வொரு தடவையும் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு குந்தவி, "நான் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்திருந்தாள். விக்கிரமன் மிகவும் அதிசயமடைந்தவனைப் போல் அவளைத் திரும்பிப் பார்த்து, "நீ பேசினாயா?" என்று கேட்டான். "ஆமாம். நான் ஊமையில்லை! என்றாள் குந்தவி. குன்றாத அதிசயத்துடன் விக்கிரமன் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். குந்தவி மறுபடியும் போகத் தொடங்கினாள். "ஏன் போகிறாய்?" என்றான் விக்கிரமன் தழுதழுத்த குரலில். "நீர் பேசுகிற வழியைக் காணோம். அதனால்தான் கிளம்பினேன்" என்று சொல்லிக் கொண்டே குந்தவி மறுபடியும் விக்கிரமனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள். "எனக்குப் பயமாயிருந்தது!" என்றான் விக்கிரமன். "என்ன பயம்? ஒரு அபலைப் பெண்ணைக் கண்டு பயப்படுகிற நீர் தனி வழியே கிளம்பலாமா?" "உன்னைக் கண்டு பயப்படவில்லை." "பின்னே?" "நான் காண்பது கனவா அல்லது ஜுர வேகத்தில் தோன்றும் சித்தப்பிரமையோ என்று நினைத்தேன். பேசினால் ஒரு வேளை பிரமை கலைந்துவிடுமோ என்று பயந்தேன்." குந்தவி புன்னகையுடன், "இப்பொழுது என்ன தோன்றுகிறது? கனவா, பிரமையா?" என்றாள். "இன்னமும் சந்தேகமாய்த்தானிருக்கிறது. நீ கோபித்துக் கொள்ளாமலிருந்தால்....?" "இருந்தால் என்ன?" "நிஜமாக நீதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வேன்."

இவ்விதம் சொல்லி விக்கிரமன் தன்னுடைய கையைக் குந்தவியின் கன்னத்தின் அருகே கொண்டு போனான். ஜுரக் கனவுகளில் நிகழ்ந்தது போல் அந்த முகம் உடனே மறைந்து போகவில்லை. குந்தவி தன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் இல்லை. விக்கிரமனுடைய உள்ளங்கை, மலரின் இதழ் போல் மென்மையான குந்தவியின் கன்னத்தைத் தொட்டது. பிறகு, பிரிய விருப்பமில்லாதது போல் அங்கேயே இருந்தது. குந்தவி அந்தக் கையைப் பிடித்து அகற்றி, பழையபடி அவனுடைய மடிமீது வைத்தாள். புன்னகையுடன், "உம்முடைய சந்தேகம் தீர்ந்ததா? நிச்சயம் ஏற்பட்டதா?" என்றாள். "சந்தேகம் தீர்ந்தது! பல விஷயங்கள் நிச்சயமாயின" என்றான் விக்கிரமன். "என்னென்ன?" "நிஜமாக நீதான் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் வெறும் பிரமையோ கனவோ அல்ல என்பது ஒன்று." "அப்புறம்?" "நீ கையினால் தொட முடியாத தெய்வ கன்னிகையல்ல; உயிரும் உணர்ச்சியுமில்லாத தங்க விக்கிரகமும் அல்ல; சாதாரண மானிடப் பெண்தான் என்பது ஒன்று." "இன்னும் என்ன?" "இனிமேல் உன்னைப் பிரிந்து உயிர் வாழ்வது எனக்கு அசாத்தியமான காரியம் என்பது ஒன்று."

குந்தவி வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிறகு விக்கிரமனைப் பார்த்து, "என்னை உமக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டாள். "ஞாபகமா? நல்ல கேள்வி கேட்டாய்! உன்னைத் தவிர வேறு எந்த ஞாபகமாவது உண்டா என்று கேட்டிருந்தால் அதிகப் பொருத்தமாயிருக்கும். பகலிலும், இரவிலும், பிரயாணத்திலும், போர்முனையிலும், கஷ்டத்திலும், சுகத்திலும் உன் முகம் என் மனத்தை விட்டு அகன்றதில்லை. மூன்று வருஷ காலமாக நான் எங்கே போனாலும், எது செய்தாலும், என் இருதய அந்தரங்கத்தில் உன் உருவம் இருந்து கொண்டுதானிருந்தது." "என்ன சொல்கிறீர்? நான் உம்மை மாமல்லபுரத்து வீதியில் சந்தித்துப் பத்து நாள்தானே ஆயிற்று? மூன்று வருஷமா?...." என்றாள் குந்தவி கள்ளச் சிரிப்புடனும் அவ நம்பிக்கையுடனும். விக்கிரமன் சற்று நேரம் திகைத்துப் போய் மௌனமாயிருந்தான். பிறகு, "ஓஹோ! பத்து நாள்தான் ஆயிற்று?" என்றான். "பின்னே, மூன்று வருஷம் ஜுரம் அடித்துக் கிடந்தீரா?" "சரிதான்; ஜுரத்தினால்தான் அத்தகைய பிரமை எனக்கு உண்டாகியிருக்கிறது. உனக்கும் எனக்கும் வருஷக்கணக்கான சிநேகிதம் என்று தோன்றுகிறது!"

"ஒரு வேளை மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்ததற்கு முன்னாலேயே எப்போதாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதோ?" என்று குந்தவி கேட்டாள். விக்கிரமன் சற்று யோசித்து, "எனக்கு இன்னும் நல்ல ஞாபகசக்தி வரவில்லை. மனம் குழம்பியிருக்கிறது, அதிலும்...." என்று தயங்கினான். "அதிலும் என்ன?" என்று கேட்டாள் குந்தவி. "அதிலும் உன்னுடைய நீண்ட கரிய விழிகளைப் பார்த்தேனானால் நினைவு அடியோடு அழிந்து போகிறது. என்னையும், நான் வந்த காரியத்தையும், இவ்வுலகத்தையும் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்! வருஷம், மாதம், நாள் எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது?" "உமக்கு இன்னும் ஜுரம் குணமாகவில்லை. அதனால்தான் இப்படிப் பிதற்றுகிறீர். நீர் இங்கே தனியாக வந்திருக்கக் கூடாது?" "இல்லை; எனக்கு ஜுரமே இப்போது இல்லை. நீ வேணுமானால் என் கையைத் தொட்டுப்பார்!" என்று விக்கிரமன் கையை நீட்டினான். குந்தவி கையை லேசாகத் தொட்டுவிட்டு, "அப்பா, கொதிக்கிறதே!" என்றாள். "இருக்கலாம்; ஆனால் அது ஜுரத்தினால் அல்ல...."

"இருக்கட்டும்; கொஞ்சம் என் கண்களைப் பாராமல் வேறு பக்கம் பார்த்து ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்லும். நீர் யார், எங்கிருந்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கிறதா? எல்லாமே மறந்து போய்விட்டதா?" என்று குந்தவி கேட்டாள். "ஆமாம்; இங்கே வந்து நதிக்கரையில் உட்கார்ந்து அதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டேன். செண்பகத் தீவிலிருந்து கப்பலில் வந்தேன். இரத்தின வியாபாரம் செய்வதற்காக....." "மாமல்லபுரத்து வீதியில் என்னைப் பார்த்த விஷயமும் ஞாபகம் இருக்கிறதல்லவா?" "இருக்கிறது." "அரண்மனைக்கு வாரும்; சக்கரவர்த்தியின் மகள் இரத்தினம் வாங்குவாள், என்று சொன்னேனே, அது நினைவிருக்கிறதா?" "இப்போது நினைவு வருகிறது." "நீர் ஏன் அரண்மனைக்கு வரவில்லை? ஏன் சொல்லாமல் கிளம்பி இரவுக்கிரவே தனி வழி நடந்து வந்தீர்?" விக்கிரமன் சற்று நிதானித்து "உண்மையைச் சொல்லட்டுமா?" என்று கேட்டான். "இரத்தின வியாபாரிகள் எப்போதாவது உண்மையைச் சொல்லும் வழக்கம் உண்டு என்றால் நீரும் உண்மையைச் சொல்லும்."

"சத்தியமாய்ச் சொல்லுகிறேன் உன்னை இன்னொரு தடவை பார்த்தேனானால், மறுபடியும் உன்னைப் பிரிந்து வருதற்கு மனம் இடங்கொடாது என்ற காரணத்தினால்தான். அது ரொம்பவும் உண்மையான பயம் என்று இப்போது தெரிகிறது...." "செண்பகத் தீவில் இப்படியெல்லாம் புருஷர்கள் பெண்களிடம் பேசி ஏமாற்றுவது வழக்கமா? இதை அங்கே ஒரு வித்தையாகச் சொல்லிக் கொடுக்கிறார்களா?" என்று குந்தவி ஏளனமாகக் கேட்டாள். "நீ ஒன்றை மறந்து விடுகிறாய். நான் செண்பகத் தீவிலிருந்து வந்தேனென்றாலும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்தச் சோழ நாட்டில்தான். இந்தப் புண்ணியக் காவேரி நதியின் கரையில்தான் நான் ஓடியாடி விளையாடினேன். இந்த நதியின் பிரவாகத்தில்தான் நீந்தக் கற்றுக் கொண்டேன். இந்த அழகிய சோழநாட்டின் குளிர்ந்த மாந்தோப்புகளிலும் தொன்னந்தோப்புகளிலும் ஆனந்தமாக எத்தனையோ நாட்கள் உலாவினேன்! ஆகா! நான் செண்பகத் தீவிலிருந்த நாட்களில் எத்தனை நாள் இந்த நாட்டை நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டேன்! இந்தக் காவேரி நதிதீரத்தை நினைத்துக் கொண்டு எத்தனை முறை கண்ணீர் விட்டேன்! மறுபடியும் இந்நாட்டைக் காணவேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டேன்!... அந்த ஆசை இப்போது நிறைவேறியது; உன்னால்தான் நிறைவேறியது! உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?" என்று விக்கிரமன் ஆர்வத்துடன் கூறினான்.

"எனக்கு நீர் நன்றி செலுத்துவதில் என்ன பிரயோஜனம்? உண்மையில் நீர் நன்றி செலுத்த வேண்டியது கோமகள் குந்தவிக்கு..." "யார்?" "சக்கரவர்த்தியின் மகள் குந்தவி தேவியைச் சொல்லுகிறேன். உம்மை இங்கே அழைத்து வருவதற்கு அவர்தானே அனுமதி தந்தார்? அவருக்குத்தான் நீர் கடமைப்பட்டிருக்கிறீர்." "அப்படியா? எனக்குத் தெரியவேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. என் மனம் ஒரே குழப்பத்தில் இருக்கிறது. இந்த இடத்துக்கு நான் வந்து சேர்ந்திருக்கிறேன்; காவேரி நதிக்கரையில் உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தாலே ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கி விடுகிறேன். வேறு ஒன்றிலும் மனம் செல்லவில்லை. நான் எவ்விதம் இங்கு வந்து சேர்ந்தேன் என்பதை விவரமாய்ச் சொல்ல வேண்டும். முதலில், நீ யார் உன் பெயர் என்னவென்று தெரிவித்தால் நல்லது." "மாமல்லபுரத்தில் சொன்னேனே, ஞாபகம் இல்லையா?" "உன்னைப் பார்த்த ஞாபகம் மட்டுந்தான் இருக்கிறது; வேறொன்றும் நினைவில் இல்லை." "என் பெயர் ரோகிணி சக்கரவர்த்தித் திருமகள் குந்தவி தேவியின் தோழி நான்." உண்மையில், அந்தச் சந்திப்பின் போது குந்தவி தன் பெயர் மாதவி என்று சொன்னாள். அவசரத்தில் சொன்ன கற்பனைப் பெயர் ஆனதால் அவளுக்கே அது ஞாபகமில்லை. இப்போது தன் பெயர் 'ரோகிணி' என்றாள்.

அதைக் கேட்ட விக்கிரமன் சொன்னான்: "ரோகிணி! - என்ன அழகான பெயர்? - எத்தனையோ நாள் அந்தச் செண்பகத் தீவில் நான் இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததுண்டு. பிறைச் சந்திரனுக்கு அருகில் ரோகிணி நட்சத்திரம் ஜொலிக்கும் அழகைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், உன்னுடைய கண்களின் ஜொலிப்பிற்கு அந்த ரோகிணி நட்சத்திரங்களின் ஜொலிப்பு கொஞ்சமும் இணையாகாது." "உம்முடைய வேஷத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்...."என்றாள் குந்தவி. விக்கிரமன் சிறிது திடுக்கிட்டு, "வேஷமா?....' என்றான். "ஆமாம்; உண்மையில் நீர் இரத்தின வியாபாரி அல்ல, நீர் ஒரு கவி. ஊர் சுற்றும் பாணன், உம்முடைய மூட்டையில் இருந்தது இரத்தினம் என்றே நான் நம்பவில்லை!" விக்கிரமன் சற்றுப் பொறுத்துச் சொன்னான்! - "இப்போது உன்னை நம்பும்படி செய்ய என்னால் முடியாது. ஆனால் அந்த மூட்டையில் இருந்தவை இரத்தினங்கள்தான் என்று ஒரு நாள் உனக்கு நிரூபித்துக் காட்டுவேன். நான் கவியுமல்ல, என்னிடம் அப்படி ஏதாவது திடீரென்று கவிதா சக்தி தோன்றியிருக்குமானால், அதற்கு நீதான் காரணம். உன்னுடைய முகமாகிய சந்திரனிலிருந்து பொங்கும் அமுத கிரணங்களினால்...."

"போதும், நிறுத்தும் உம்முடைய பரிகாசத்தை இனிமேல் சகிக்க முடியாது" என்றாள் குந்தவி. "பரிகாசமா?" என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். பிறகு, "உனக்குப் பிடிக்காவிட்டால் நான் பேசவில்லை. நான் எப்படி இங்கே வந்து சேர்ந்தேன் என்பதைச் சொன்னால் ரொம்பவும் நன்றி செலுத்துவேன்" என்றான். "காஞ்சியிலிருந்து உறையூர் வரும் பாதையில் மகேந்திர மண்டபம் ஒன்றில் ஜுர வேகத்தினால் பிரக்ஞை இழந்து நீர் கிடந்தீர். அங்கு எப்படி வந்து சேர்ந்தீர்? அதற்கு முன்னால் என்னென்ன நேர்ந்தது என்று நீர் சொன்னால், பிறகு நடந்ததை நான் சொல்லுகிறேன்." விக்கிரமன் தனக்கு நேர்ந்ததையெல்லாம் ஒருவாறு சுருக்கமாகச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குந்தவி தேவி கூறினாள்: "சக்கரவர்த்தியின் மூத்த குமாரர் மகேந்திரரும், குந்தவி தேவியும் காஞ்சியிலிருந்து உறையூருக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். தேவியுடன் நானும் வந்தேன், அந்தக் காட்டாற்றைத் தாண்டி வந்தபோது, மகேந்திர மண்டபத்துக் குள்ளிருந்து 'அம்மா அம்மா' என்று அலறும் குரல் கேட்டது. நான் அம்மண்டபத்துக்குள் வந்து பார்த்தேன். மாமல்லபுரத்தில் பார்த்த இரத்தின வியாபாரி நீர்தான் என்று அடையாளம் கண்டு கொண்டேன். பிறகு குந்தவி தேவியிடம் உம்மையும் அழைத்து வர அனுமதி கேட்டேன். அவர் கருணை செய்து சம்மதித்தார். உமக்கு உடம்பு பூரணமாகக் குணமாகும் வரையில் இங்கேயே உம்மை வைத்திருக்கவும் அனுமதித்திருக்கிறார்."

"ஜுரக் கனவுகளில் நான் அடிக்கடி உன்னுடைய முகத்தைக் கண்டேன். அதெல்லாம் கனவல்ல; உண்மையிலேயே உன்னைத் தான் பார்த்தேன் என்று இப்போது தெரிகிறது." "இருக்கலாம்; நீர் ஜுரமடித்துக் கிடக்கையில் அடிக்கடி உம்மை நான் வந்து பார்த்தது உண்மைதான். இவ்வளவுக்கும் குந்தவி தேவியின் கருணைதான் காரணம்." விக்கிரமன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். குந்தவி கேட்டாள்: "சக்கரவர்த்தியின் மகளைப் பற்றி நான் இவ்வளவு சொல்கிறேன். ஒரு வார்த்தையாவது நீர் நன்றி தெரிவிக்கவில்லையே? அவ்வளவு கல் நெஞ்சமா உமக்கு?" "பல்லவ குலத்தைச் சேர்ந்த யாருக்கும் நான் நன்றி செலுத்த முடியாது!" "குந்தவி தேவியை நேரில் பார்த்தால் இப்படிச் சொல்லமாட்டீர். பிறகு என்னைக்கூட உடனே மறந்து விடுவீர்." "சத்தியமாய் மாட்டேன். ஆயிரம் குந்தவி தேவிகள் உனக்கு இணையாக மாட்டார்கள்! இருக்கட்டும்; இப்போது இந்த மாளிகையில் அவர்கள் இருவரும் இருக்கிறார்களா?" "யார் இருவரும்?" "அண்ணனும் தங்கையும்." "யுவராஜா மகேந்திரர் இங்கே இல்லை. அவர் திரும்பவும் காஞ்சிக்குப் போய்விட்டார். சீன தேசத்திலிருந்து யாரோ ஒரு யாத்திரிகர் வந்திருக்கிறாராம். அவர் இந்தப் பாரதநாடு முழுவதும் யாத்திரை செய்து விட்டுக் காஞ்சிக்கு வருகிறாராம். 'யுவான் சுவாங்' என்ற விசித்திரமான பெயரையுடையவராம். சக்கரவர்த்திக்கு இச்சமயம் முக்கிய வேலை வந்திருப்பதால், அந்த யுவான் சுவாங்கை உபசரித்து வரவேற்பதற்காக யுவராஜா உடனே வரவேண்டுமென்று செய்தி வந்தது. இங்கு வந்த இரண்டாம் நாளே மகேந்திரர் புறப்பட்டுப் போய்விட்டார். பார்த்தீரா, எங்கள் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் கடல்களுக்கப்பால் வெகு தூரத்திலுள்ள தேசங்களில் எல்லாம் கூடப் பரவியிருப்பதை? நீர் போயிருந்த நாடுகளில் எல்லாம் எப்படி?" என்று கேட்டாள் குந்தவி.

"ஆம்; அங்கேயெல்லாம் கூடப் பல்லவ சக்கரவர்த்தியின் புகழ் பரவித்தான் இருக்கிறது." "அப்படிப்பட்ட சக்கரவர்த்தியின் ஆளுகையில் இருப்பது இந்தச் சோழ நாட்டுக்குப் பெருமையில்லையா? இந்த நாட்டு அரசகுமாரன் பல்லவ சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்ட மறுத்து அந்தச் செண்பகத் தீவில் போய்க் காலம் கழிக்கிறானாமே? அது நியாயமா? உம்முடைய அபிப்பிராயம் என்ன?" என்று குந்தவி கேட்டு விக்கிரமனுடைய முகத்தை ஆவலுடன் நோக்கினாள். விக்கிரமன் அவளை நிமிர்ந்து நோக்கி, "என்னைப் பொறுத்த வரையில் நான் இந்தச் சோழநாட்டில் அடிமையாயிருப்பதைக் காட்டிலும், செண்பகத் தீவில் சுதந்திரப் பிரஜையாக இருப்பதையே விரும்புவேன்" என்றான். "நிச்சயமாகவா? என் நிமித்தமாகக்கூட நீர் இங்கே இருக்கமாட்டீரா?" என்று குந்தவி கேட்டபோது விக்கிரமன் அவளை இரக்கத்துடன் பார்த்து, "அத்தகைய சோதனைக்கு என்னை உள்ளாக்க வேண்டாம்!" என்றான். இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அறிந்து கொள்ளாதது போல் நடித்தார்கள். இந்த நாடகம் எத்தனை காலம் நீடித்திருக்க முடியும்!
 
அத்தியாயம் இருபத்துமூன்று

அருவிப் பாதை

உதய சூரியனின் பொற்கிரணங்களால் கொல்லி மலைச்சாரல் அழகு பெற்று விளங்கிற்று. பாறைகள் மீதும் மரங்கள் மீதும் ஒரு பக்கத்தில் சூரிய வெளிச்சம் விழுவதும், இன்னொரு பக்கத்தில் அவற்றின் இருண்ட நிழல் நீண்டு பரந்து கிடப்பதும் ஒரு விசித்திரமான காட்சியாயிருந்தது. வான வெளியெங்கும் எண்ணிறைந்த பட்சிகளின் கலகல தொனி பரவி ஒலித்தது. அதனுடன் மலையிலிருந்து துள்ளிக் குதித்து ஆடிப்பாடி வந்த அருவியின் இனிய ஒலியும் சேர்ந்து வெகு மனோகரமாயிருந்தது. இந்த நேரத்தில் அந்த மலைச்சாரலுக்கு அருகில் இரண்டு உயர்ஜாதி வெண்புரவிகள் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது ஆரோகணித்திருந்தவர்கள் நமக்கு ஏற்கெனவே பழக்கமுள்ளவர்களான சிவனடியாரும் பொன்னனுந்தான். அவர்கள் அந்தக் காட்டாற்றின் கரையோரமாகவே வந்து கொண்டிருந்தார்கள்; பேசிக் கொண்டு வந்தார்கள். சிவனடியார், சற்றுத் தூரத்தில் மொட்டையாக நின்ற பாறையைச் சுட்டிக் காட்டி, "பொன்னா! அந்தப் பாறையைப் பார்! அதைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்டார். "ஒன்றும் தோன்றவில்லை. சுவாமி! மொட்டைப் பாறை என்று தோன்றுகிறது. அவ்வளவுதான்."

"எனக்கு என்ன தோன்றுகிறது, தெரியுமா? காலை மடித்துப் படுத்துத் தலையைத் தூக்கிக் கொண்டிருக்கும் நந்தி பகவானைப் போல் தோன்றுகிறது. இப்போது அந்தப் பாறையின் நிழலைப் பார்!" பொன்னன் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "சுவாமி நந்தி மாதிரியே இருக்கிறதே!" என்றான். "சாதாரணக் கண்ணுக்கும், சிற்பியின் கண்ணுக்கும் இதுதான் வித்தியாசம். பொன்னா! சிற்பி ஒரு பாறையைப் பார்த்தானானால் அதில் ஒரு யானையையோ, சிங்கத்தையோ அல்லது ஒரு தெய்வீக வடிவத்தையோ காண்கிறான். இன்னின்ன மாதிரி வேலை செய்தால் அது அத்தகைய உருவத்தை அடையும் என்று சிற்பியின் மனதில் உடனே பட்டு விடுகிறது...." பொன்னன் குறுக்கிட்டு, "சுவாமி! தாங்கள்...." என்றான். "ஆமாம்! நான் ஒரு சிற்பிதான்! உலகத்தில் வேறு எந்த வேலையைக் காட்டிலும் சிற்ப வேலையிலேதான் எனக்கும் பிரியம் அதிகம்... இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை மட்டும் பூர்த்தி செய்துவிட்டேனானால்... இருக்கட்டும், பொன்னா! மாமல்லபுரம் நீ பார்த்திருக்கிறாயா?" என்று சுவாமியார் கேட்டார்.

"ஒரே ஒரு தடவை பார்த்திருக்கிறேன். சுவாமி!" "அதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது?" "சொப்பன லோகத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது...." "ஆனால் அந்தச் சிற்பங்கள் உண்மையில் சொப்பனமில்லை! நாம் உயிரோடிருப்பதைவிட அதிக நிஜம். கல்லிலே செதுக்கிய அச்சிற்ப வடிவங்கள் நம்முடைய காலமெல்லாம் ஆன பிறகு, எத்தனையோ காலம் அழியாமல் இருக்கப் போகின்றன; நமக்கு ஆயிரம் வருஷத்துக்குப் பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து மகிழப் போகிறார்கள். ஆகா! ஒரு காலத்தில், பொன்னா! மாமல்லபுரம் மாதிரியே இந்தத் தமிழகம் முழுவதையும் ஆக்க வேண்டுமென்று நான் கனவு கண்டு கொண்டிருந்தேன்...." "என்ன, தாங்களும் கனவு கண்டீர்களா?" என்றான் பொன்னன். "ஆமாம்; உங்கள் பார்த்திப மகாராஜா மட்டுந்தான் கனவு கண்டார் என்று நினைக்கிறாயா? அவர் சோழ நாட்டின் பெருமையைப் பற்றி மட்டுமே கனவு கண்டார். நானோ தமிழகத்தின் பெருமையைக் குறித்துக் கனவு கண்டு கொண்டிருந்தேன்.... பார், பொன்னா! புண்ணிய பூமியாகிய இந்தப் பரத கண்டம் வடநாடு, தென்னாடு என்று பிரிவுபட்டிருக்கிறது. கதையிலும், காவியத்திலும் இதிகாசத்திலும் வடநாடுதான் ஆதிகாலத்திலிருந்து பெயர் பெற்று விளங்குகிறது.

வடநாட்டு மன்னர்களின் பெயர்கள்தான் பிரசித்தியமடைந்திருக்கின்றன. பாடலிபுரத்துச் சந்திர குப்தன் என்ன, அசோகச் சக்கரவர்த்தி என்ன, விக்கிரமாதித்தன் என்ன! இவர்களுக்குச் சமமாகப் புகழ் பெற்ற தென்னாட்டு ராஜா யார் இருந்திருக்கிறார்கள்? நம்முடைய காலத்திலேதான் வட நாட்டு ஹர்ஷ சக்கரவர்த்தியின் புகழ் உலகெல்லாம் பரவியிருப்பது போல் மகேந்திர பல்லவரின் புகழ் பரவியிருந்தது என்று சொல்ல முடியுமா? தென்னாடு இவ்விதம் பின்னடைந்திருப்பதின் காரணம் என்ன? இந்தத் தென்னாடானது ஆதிகாலம் முதல் சோழ நாடு, சேர நாடு, பாண்டிய நாடு என்று பிரிந்து கிடந்ததுதான், காரணம். பெரிய இராஜ்யம் இல்லாவிட்டால், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. பெரிய காரியங்களைச் சாதிக்காமல் பெரிய புகழ் பெறவும் முடியாது. வட நாட்டில் ஹர்ஷ சக்கரவர்த்தியின் இராஜ்யமானது. நீளத்திலும் அகலத்திலும் இருநூறு காததூரம் உள்ளதாயிருக்கிறது. இந்தத் தென்னாட்டிலோ பத்துக் காதம் போவதற்குள்ளாக மூன்று ராஜ்யத்தை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலைமை அதாவது - தமிழகம் முழுவதும் ஒரே மகாராஜ்யமாயிருக்க வேண்டும் - தமிழகத்தின் புகழ் உலகெல்லாம் பரவ வேண்டும் என்று மகேந்திர பல்லவர் ஆசைப்பட்டார். நானும் அந்த மாதிரி கனவுதான் கண்டு கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் அந்தக் கனவு நிறைவேறலாம் என்று ஆசையுடன் நம்பியிருந்தேன். ஆனால், அந்த ஆகாசக் கோட்டையானது ஒரே ஒரு மனுஷனின் சுத்த வீரத்துக்கு முன்னால் இடிந்து, தகர்ந்து போய்விட்டது."

"சுவாமி! யாரைச் சொல்லுகிறீர்கள்?" என்றான் பொன்னன். "எல்லாம் உங்கள் பார்த்திப மகாராஜாவைத்தான்! ஆகா! அந்த வெண்ணாற்றங்கரைப் போர்க்களம் இப்போது கூட என் மனக்கண் முன்னால் நிற்கிறது. என்ன யுத்தம்! என்ன யுத்தம்! வெண்ணாறு அன்று இரத்த ஆறாக அல்லவா ஓடிற்று? பூரண சந்திரன் வெண்ணிலாவைப் பொழிந்த அந்த இரவிலே, அந்தப் போர்க்களந்தான் எவ்வளவு பயங்கரமாயிருந்தது? உறையூரிலிருந்து கிளம்பி வந்த பத்தாயிரம் வீரர்களில் திரும்பிப் போய்ச் செய்தி சொல்வதற்கு ஒருவன் கூட மிஞ்சவில்லை என்றால், அந்தப் போர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்!" என்று சுவாமியார் ஆவேசத்துடன் பேசினார். "ஐயோ! அந்தப் பத்தாயிரம் வீரர்களில் ஒருவனாயிருக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே!" என்றான் பொன்னன். "போரில் உயிரை விடுவதற்கு வீரம் வேண்டியதுதான் பொன்னா! ஆனால், உயிரோடிருந்து உறுதி குலையாமல் இருப்பதற்கு அதைக் காட்டிலும் அதிக தீரம் வேண்டும். அந்தத் தீரம் உன்னிடம் இருக்கிறது! உன்னைக் காட்டிலும் அதிகமாக வள்ளியிடம் இருக்கிறது; நீங்களும் பாக்கியசாலிகள்தான்!" என்றார் சுவாமியார். "சுவாமி! வெண்ணாற்றங்கரைப் போரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்!" என்றான் பொன்னன். இந்த வீரப்போரைக் குறித்தும், பார்த்திப மகாராஜா அந்திம காலத்தில் சிவனடியாரிடம் கேட்ட வரத்தைப் பற்றியும் எவ்வளவு தடவை கேட்டாலும் அவனுக்கும் அலுப்பதில்லை. சிவனடியாரும் அதைச் சொல்ல அலுப்பதில்லையாதலால், அந்தக் கதையை மறுபடியும் விவரமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.

சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள், காட்டாறானது சிற்றருவியாகி மலைமேல் ஏறத் தொடங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். இதற்குமேல் குதிரைகளின் மீது போவது இயலாத காரியம். எனவே மலைச்சாரலில் மரங்கள் அடர்த்தியாயிருந்த ஓர் இடத்தில் குதிரைகளை அவர்கள் விட்டார்கள். இவற்றை "மரத்திலே கட்ட வேண்டாமா?" என்று பொன்னன் கேட்டதற்கு "வேண்டாம்" என்றார் சிவனடியார். "இந்த உயர்ஜாதிக் குதிரைகளின் அறிவுக் கூர்மை அநேக மனிதர்களுக்குக்கூட வராது பொன்னா! உங்கள் இளவரசன் ஆற்று வெள்ளத்தில் போனதும் உனக்கு முன்னால் இந்தப் புஷ்பகம் வந்து எனக்குச் செய்தி சொல்லிவிடவில்லையா? இவ்விடத்தில் நாம் இந்தக் குதிரைகளை விட்டுவிட்டுப் போனோமானால், அந்தண்டை இந்தண்டை அவை அசையமாட்டா. கட்டிப் போட்டால்தான் ஆபத்து, துஷ்டமிருகங்கள் ஒருவேளை வந்தால் ஓடித் தப்ப முடியாதல்லவா?" என்று கூறிவிட்டு இரண்டு குதிரைகளையும் முதுகில் தடவிக் கொடுத்தார். பிறகு இருவரும் அருவி வழியைப் பிடித்துக் கொண்டு மலை மேலே ஏறினார்கள்.

பெரிதும் சிறிதுமாய், முண்டும் முரடுமாயும் கிடந்த கற்பாறைகளை வெகு லாவகமாகத் தாண்டிக் கொண்டு சிவனடியார் சென்றார். தண்ணீரில் இறங்கி நடப்பதிலாவது ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டுவதிலாவது அவருக்கு ஒருவிதமான சிரமமும் இருக்கவில்லை. அவரைப் பின்தொடர்ந்து போவதற்குப் பொன்னன் திணற வேண்டியதாக இருந்தது. "சுவாமி! தங்களுக்குத் தெரியாத வித்தை இந்த உலகத்தில் ஏதாவது உண்டா?" என்று பொன்னன் கேட்டான். "ஒன்றே ஒன்று உண்டு. பொன்னா! கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பது என்னால் முடியாத காரியம்" என்றார் சிவனடியார். அவர் கூறியதைப் பொன்னன் சரியாகத் தெரிந்து கொள்வதற்குள், "ஆமாம்.உங்கள் பார்த்திப மகாராஜாவுக்கு நான் கொடுத்த வாக்கினால் என்னுடைய வாழ்க்கை - மனோரதமே எப்படிக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டது. பார்!" என்றார். "அதெப்படி, சுவாமி! முன்னேயும் அவ்விதம் சொன்னீர்கள்! பார்த்திப மகாராஜாவினால் உங்களுடைய காரியம் கெட்டுப் போவானேன்?" என்று கேட்டான் பொன்னன்.

"வாதாபியிலிருந்து திரும்பி வந்தபோது, தென்னாடு முழுவதையும் ஒரு பெரிய மகாராஜ்யமாக்கிவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே வந்தேன். இந்தச் சின்னஞ் சிறு தமிழகத்தில் ஒரு ராஜாவுக்கு மேல் - ஒரு இராஜ்யத்துக்கு மேல் இடங்கிடையாது என்று கருதினேன். சோழ, சேர, பாண்டியர்களின் நாமதேயமே இல்லாமல் பூண்டோ டு நாசம் செய்து விட்டுத் தமிழகத்தில் பல்லவ இராஜ்யத்தை ஏகமகா ராஜ்யமாகச் செய்துவிட வேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், என்ன பிரயோஜனம்? பார்த்திபனுடைய சுத்த வீரமானது என் சங்கல்பத்தை அடித்துத் தள்ளிவிட்டது. அவனுடைய மகனைக் காப்பாற்றி வளர்க்க - சுதந்திர வீர புருஷனாக வளர்க்க - வாக்குக் கொடுத்து விட்டேன். சுதந்திர சோழ இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு நானே முயற்சி செய்ய வேண்டியதாகிவிட்டது! இப்போது நினைத்தால், ஏன் அந்தப் புரட்டாசிப் பௌர்ணமி இரவில் போர்க்களத்தில் பிரவேசித்து பார்த்திபனுடைய உடலைத் தேடினோம் என்று தோன்றுகிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது."

இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் சிவனடியாரும் மேலே மேலே ஏறி சென்றார்கள். சூரியன் உச்சி வானத்தை அடைந்தபோது செங்குத்தான பாறையிலிருந்து அருவி 'ஹோ' என்ற இரைச்சலுடன் விழுந்து கொண்டிருந்த இடத்தை அவர்கள் அடைந்தார்கள். அதற்குமேல் அருவிப் பாதையில் போவதற்கு வழியில்லை என்பதைப் பொன்னன் தெரிவிக்க, சிவனடியார் சிந்தனையில் ஆழ்ந்தவராய் அங்குமிங்கும் பார்க்கத் தொடங்கினார். அருவி விழுந்தோடிய இடத்துக்கு இரு புறமும் கூர்ந்து பார்த்ததில் காட்டுவழி என்று சொல்லக்கூடியதாக ஒன்றும் தென்படவில்லை. இருபுறமும் செங்குத்தாகவும் முண்டும் முரடுமாகவும் மலைப்பாறைகள் உயர்ந்திருந்ததுடன், முட்களும் செடிகளும் கொடிகளும் நெருங்கி வளர்ந்து படர்ந்திருந்தன. அந்தச் செடி கொடிகளையெல்லாம் சிவனடியார் ஆங்காங்கு விலக்கிப் பார்த்துக் கொண்டு கடைசியாக அருவி விழுந்து கொண்டிருந்த இடத்துக்குச் சமீபமாக வந்தார். அருவியின் தாரை விழுந்த இடம் ஒரு சிறு குளம் போல் இருந்தது. அந்தக் குளத்தின் ஆழம் எவ்வளவு இருக்குமோ தெரியாது. தாரை விழுந்த வேகத்தினால் அலைமோதிக் கொண்டிருந்த அந்தக் குளத்தைப் பார்க்கும் போதே மனதில் திகில் உண்டாயிற்று. குளத்தின் இருபுறத்திலும் பாறைச் சுவர் செங்குத்தாக இருந்தபடியால் நீர்த்தாரை விழும் இடத்துக்கு அருகில் போவது அசாத்தியம் என்று தோன்றிற்று. ஆனால் சிவனடியார் அந்த அசாத்தியமான காரியத்தைச் செய்யத் தொடங்கினார்.

அந்த அருவிக் குளத்தின் ஒரு பக்கத்தில் ஓரமாக பாறைச் சுவரைக் கைகளால் பிடித்துக் கொண்டும் முண்டு முரடுகளில் காலை வைத்துத் தாண்டியும், சில இடங்களில் தண்ணீரில் இறங்கி நடந்தும் சில இடங்களில் நீந்தியும் அவர் போனார். இதைப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்ற பொன்னன், கடைசியாகச் சிவனடியார் தண்ணீர் தாரைக்குப் பின்னால் மறைந்ததும், "ஐயோ!" என்று அலறிவிட்டான். "ஒருவேளை போனவர் போனவர் தானா? இனிமேல் திரும்ப மாட்டாரோ?" என்று அவன் அளவில்லாத ஏக்கத்துடனும் திகிலுடனும் நின்றான். நேரமாக ஆக அவனுடைய தவிப்பு அதிகமாயிற்று. சாமியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னென்ன விபரீதங்கள் விளையும் என்பதை நினைத்தபோது அவனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. 'அவரை விட்டு விட்டு நாம் திரும்பிப் போவதா? முடியாத காரியம். நாமும் அவர் போன இடத்துக்கே போய்ப் பிராணனை விடலாம். எது எப்படிப் போனாலும் போகட்டும்' என்று துணிந்து பொன்னனும் அந்தக் கிடுகிடு பள்ளமான குளத்தில் இறங்கினான்.
 
அத்தியாயம் இருபத்துநான்கு

பொன்னன் பிரிவு

பொன்னன் அந்த அதல பாதாளமான அருவிக் குளத்தில் இறங்கிய அதே சமயத்தில், சிவனடியார் அருவியின் தாரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டார். பொன்னனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்லி முடியாது. அவன் மேலே போகலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றபோது, சிவனடியார் அவனைப் பார்த்து ஏதோ கூறியதுடன் சமிக்ஞையினால் "வா" என்று அழைத்தார். அருவியின் பேரோசையினால் அவர் சொன்னது என்னவென்று பொன்னன் காதில் விழவில்லை ஆனால், சமிக்ஞை புரிந்தது. முன்னால் சுவாமியார் போன மாதிரியே இவனும் குளத்தின் ஓரமாகப் பாறைகளைப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறிச் சென்று அவர் நின்ற இடத்தை அடைந்தான். தூரத்தில் நின்று பார்த்தபோது குறுகலாகத் தோன்றிய அருவியின் தாரை உண்மையில் முப்பது அடிக்குமேல் அகலமுள்ளது என்பதைப் பொன்னன் இப்போது கண்டான். சாமியார் அவனுடைய கையைப் பிடித்துப் பாறைச் சுவருக்கும் அருவியின் தாரைக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அழைத்துச் சென்றார். இந்த இடைவெளி சுமார் ஐந்து அடி அகலமுள்ளதாயிருந்தது. மிகவும் மங்கலான வெளிச்சம்; கீழே பாறை வழுக்கல்; கொஞ்சம் கால் தவறினால் அருவியின் தாரையில் அகப்பட்டுக் கொண்டு, அந்தப் பாதாளக் குளத்திற்குள் போகவேண்டியதுதான்! ஆகவே இரண்டு பேரும் நிதானமாகக் காலை ஊன்றி வைத்து நடந்தார்கள். நாலைந்து அடி நடந்ததும் சிவனடியார் நின்று பாறைச் சுவரில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே கிட்டதட்ட வட்ட வடிவமாக ஒரு பெரிய துவாரம் தெரிந்தது. அந்தத் துவாரம் சாய்வாக மேல் நோக்கிச் செல்வதாகத் தெரிந்தது. ஓர் ஆள் அதில் கஷ்டமில்லாமல் புகுந்து செல்லலாமென்று தோன்றியது. ஆனால் அந்தத் துவாரம் எங்கே போகிறது? எவ்வளவு தூரம் போகிறது? ஒன்றும் தெரியவில்லை. ஐந்தாறு அடிக்கு மேல் ஒரே இருட்டாயிருந்தது.

சிவனடியார் பொன்னனுக்குச் சைகை காட்டித் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லிவிட்டு அந்தத் துவார வழியில் ஏறத் தொடங்கினார். சாய்வான மலைப்பாறையில் ஏறுவது போல் கைகளையும் கால்களையும் உபயோகப்படுத்தி ஏறினார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறினான். இன்னதென்று தெரியாத பயத்தினால் அவனுடைய நெஞ்சு பட், பட் என்று அடித்துக் கொண்டது. சற்று ஏறியதும் ஒரே காரிருளாயிருந்த படியால் அவனுடைய பீதி அதிகமாயிற்று. ஆனால், கையினால் பிடித்துக் கொள்ளவும், காலை ஊன்றிக் கொள்ளவும் சௌகரியமாக அங்கங்கே பாறை வெட்டப்பட்டிருப்பதாகத் தெரிந்த போது, கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. இவ்விதம் சிறிது நேரம் சென்ற பிறகு அந்தக் குகை வழியில் மேலேயிருந்து கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. பிறகு வெளிச்சம் நன்றாய்த் தெரிந்தது. சிவனடியார் மேலே ஏறி அப்பால் நகர்ந்தார். பொன்னனும் அவரைத் தொடர்ந்து ஏறி, அடுத்த நிமிஷம் வெட்ட வெளியில் மலைப்பாறை மீது நின்றான். சுற்று முற்றும் பார்த்தான் ஆகா, அது என்ன அற்புதக் காட்சி!

மலை அருவி விழுந்த செங்குத்தான பாறையின் விளிம்பின் அருகில் அவர்கள் நின்றார்கள். அங்கே பாறையில் கிணறு மாதிரி வட்ட வடிவமாக ஒரு பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தின் நடுமத்தியில்தான் குகை வழி ஆரம்பமாகிக் கீழே சென்றது. பள்ளத்துக்கு இடதுபுறத்தில் கொஞ்சம் தூரத்தில் அருவி 'சோ' என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தது. அருவி விழுந்த திசைக்கு எதிர்ப்புறமாகப் பார்த்தால், கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. மூன்று பக்கமும் சுவர் வைத்தாற் போன்ற மலைத்தொடர்கள். நடுவில் விஸ்தாரமான சமவெளி அந்தச் சமவெளியில் கண்ணுக்கெட்டிய தூரம் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட காட்டுக் கொன்றை மரங்கள். எங்கே பார்த்தாலும் பூ! பொன்னிற பூ!

"பார்த்தாயா, பொன்னா! எப்பேர்ப்பட்ட அருமையான இடம்! இந்த இடத்தைக் கொண்டு போய்க் கடவுள் எவ்வளவு இரகசியமான இடத்தில் ஒளித்து வைத்திருக்கிறார், பார்த்தாயா?" என்றார் சிவனடியார். "ஆமாம், சுவாமி! எங்கள் பார்த்திப மகாராஜாவின் சித்திர மண்டபத்தைப் போல!" என்றான் பொன்னன். சிவனடியார் குறுநகை புரிந்தார். "ஆனால் பொன்னா! பகவான் இவ்வளவு அழகைச் சேர்த்து ஒளித்து வைத்திருக்கும் இந்த இடத்தில், மகா பயங்கரமான கோர கிருத்யங்கள் எல்லாம் நடக்கின்றன." "ஐயோ! சுவாமி! ஏன் அவ்விதம் சொல்கிறீர்கள்?" "ஆமாம்; வெகு நாளாய் நான் அறிய விரும்பியதை இப்போது அறிந்தேன். மகா கபால பைரவரின் இருப்பிடம் இந்த மலை சூழ்ந்த பள்ளத்தாக்கில்தான் எங்கேயோ இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து விட்டுத்தான் நான் இங்கிருந்து திரும்பி வருவேன், நீ ...."

"நானுந்தான் சுவாமி! உங்களைத் தனியே விட்டு விட்டு நான் போய் விடுவேன் என்று நினைத்தீர்களா?" "இல்லை பொன்னா! நீ போக வேண்டும். உனக்கு வேறு காரியம் இருக்கிறது. மிகவும் முக்கியமான காரியம்...." "எங்கள் ராணியைக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் முக்கியமான காரியம் என்ன சுவாமி?" "அதற்குத்தானே நான் வந்திருக்கிறேன், பொன்னா! ஆனால் ராணியைக் காப்பாற்றினால் மட்டும் போதுமா? 'என் பிள்ளை எங்கே?' என்று அவர் கேட்டால் என்ன பதில் சொல்வது? இளவரசரும் இப்போது பெரிய அபாயத்தில்தான் இருக்கிறார். மாரப்பனுக்கும் மகா கபால பைரவருக்கும் நடந்த சம்பாஷணையை ஞாபகப்படுத்திக் கொள். மாரப்பனுக்கு ஒருவேளை தெரிந்து போனால், அவன் என்ன செய்வானோ?..."

"சக்கரவர்த்தித் திருக்குமாரியின் இஷ்டத்துக்கு விரோதமாய் என்ன நடந்துவிடும், சுவாமி?" "ஏன் நடக்காது? தேவியின் சகோதரன் மகேந்திரன் கூட உறையூரில் இல்லை, பொன்னா! மாரப்பன் இப்போது சக்கரவர்த்தி பதவிக்கல்லவா ஆசை கொண்டிருக்கிறான்? அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். மேலும் குந்தவியே ஒருவேளை அவரைச் சோழநாட்டு இளவரசர் என்று தெரிந்து கொண்டு மாரப்பனிடம் ஒப்படைத்து விடலாமல்லவா?" "ஐயோ!" "அதனால்தான் நீ உடனே உறையூருக்குப் போக வேண்டும்." "ஆனால், உங்களை விட்டுவிட்டு எப்படிப் போவேன்? ஆ! அந்த மகாகபால பைரவன் உங்களைப் பலிக்குக் கொண்டு வரும்படி சொன்னதின் அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது." "என்னைப் பற்றிக் கவலை வேண்டாம், பொன்னா! என் வாழ்நாளில் இதைப்போல எத்தனையோ அபாயங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். அந்தக் கபால பைரவனை நேருக்கு நேர் நான் தனியாகப் பார்க்கத்தான் விரும்புகிறேன். அவனைப் பற்றி நான் கொண்ட சந்தேகத்தை ருசுப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்!" "என்ன சந்தேகம், சுவாமி?"

"சமயம் வரும்போது உனக்குச் சொல்வேன், பொன்னா! இப்போது நீ உடனே வந்த வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். நேரே உறையூருக்குப் போக வேண்டும். இளவரசரைப் பற்றிச் சந்தேகம் தோன்றாமலிருந்தால், அவர் அங்கேயே இருக்கட்டும். ஏதாவது அபாயம் ஏற்படும் என்று தோன்றினால், அவரை ஜாக்கிரதையாக நீ அழைத்துக் கொண்டு மாமல்லப்புரத்துக்கருகில் என்னை நீ சந்தித்த சிற்ப மண்டபத்துக்கு வந்து சேர வேண்டும். அங்கே வந்து உங்களை நான் சந்திக்கிறேன்!" "தாங்கள் வராவிட்டால்....?" "அடுத்த பௌர்ணமி வரையில் பார். அதற்குள் நான் உறையூரிலாவது மாமல்லபுரத்துச் சிற்ப மண்டபத்திலாவது வந்து உங்களைச் சந்திக்காவிட்டால், நீ என்னைத் தேடிக் கொண்டு வரலாம்." "அப்படியே சுவாமி!" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரிடம் பிரியாவிடை பெற்று அந்தத் துவாரத்துக்குள் இறங்கிச் சென்றான். கீழே வந்து அருவிக் குளத்தைத் தாண்டிக் கரையேறியதும் மேலே ஏறிட்டுப் பார்த்தான். அருவிப் பாறையின் விளிம்பில் சிவனடியார் நின்று பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பொன்னன் அவரை நோக்கிக் கைகூப்பி நமஸ்கரிக்க, அவரும் கையை நீட்டி ஆசீர்வதித்தார். பிறகு பொன்னன் விரைவாக அருவி வழியில் கீழே இறங்கிச் செல்லலுற்றான்.
 

New Threads

Top Bottom