Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பொய்மான் கரடு

15. பதினைந்தாவது அத்தியாயம்



சேலத்திலிருந்து நாமக்கல்லுக்குச் சென்ற வழியில் மோட்டார் சாரதி சொன்ன கதை இது என்பதை நேயர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர் சொன்ன கதையை ஏதோ எனக்குத் தெரிந்த பாஷையிலும் பாணியிலும் எழுதிக்கொண்டு போகிறேன். சேலம் ஜில்லா கிராமங்களில் குடியானவர்கள் கையாளும் சக்தி வாய்ந்த பேச்சு நடையை என்னால் அவ்வளவு நன்றாகக் கையாள முடியுமா? அல்லது அவர்களுடைய பேச்சில் காணும் ரஸத்தைத்தான் எழுத்திலே கொண்டு வர முடியுமா?



செங்கோடன் லாந்தரைப் பொருத்திக்கொண்டு குடிசைக்குள்ளே நுழைந்த கட்டத்தில் கதை நின்று போயிற்று. ஏனெனில், அதற்குள் நாமக்கல் வந்துவிட்டது. "இந்த நாமக்கல்லுக்குக் கொஞ்சங்கூடப் புத்தியில்லை. இன்னும் கொஞ்சம் அப்பால் தள்ளியிருக்கக் கூடாதோ! கதையின் நடுவில் வந்து குறுக்கிட்டு விட்டதே!" என்று நொந்து கொண்டேன்.



நாமக்கல்லுக்கு வந்த காரியம் முடிந்து முன்னிரவில் திரும்பிப் புறப்பட்டோ ம். மணி சுமார் ஒன்பது இருக்கும். காலையில் போட்ட தூற்றலைக் காட்டிலும் இப்போது கொஞ்சம் அதிகமாகவே விழுந்துகொண்டிருந்தது. 'மழை' என்று கூட அதைச் சொல்லலாம். மேலே வானமும் கீழே நான்கு திசைகளும் இருட்டியிருந்தன. மோட்டார் வண்டியின் முன் விளக்குகள் அந்த இருட்கடலைக் கிழித்துக் கொண்டு சாலையில் சற்று தூரத்துக்கு வெளிச்சமாக்கிக் கொண்டு சென்றன. அந்தப் பிரகாசமான ஒளியில் மழைத்துளிகள் வைரத்துளிகளாக ஒளிர்ந்தன. ஒவ்வொரு சமயம் வானத்தை வெட்டிய மின்னல் பூமியில் நெடுந்தூரத்தைப் பிரகாசமாக்கி விஸ்தார வெட்டவெளிகளையும் ஆங்காங்கு நின்ற மொட்டைப் பாறைகளையும் குட்டை மரங்களையும் ஒரு கணம் காட்டி விட்டு மறைந்தது.



பாக்கிக் கதையைக் கேட்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை மோட்டார் சாரதியிடம் தெரிவித்துக் கொண்டேன். அவரும் கதையைத் தொடங்கினார்:



*******



குடிசைக்குள் செல்லும்போதே செங்கோடனின் உள்ளம் பதைபதைத்தது. என்னத்தைப் பார்க்கப் போகிறோமோ என்று திகில் கொண்டிருந்தது. அங்கே அவன் பார்த்த காட்சியோ பதைபதைப்பையும் திகிலையும் அதிகமாக்கியது. மனிதன் ஒருவன் அலங்கோலமாய் விழுந்து கிடந்தது தெரிந்தது. தன்னைக் கெடுப்பதற்கு முயன்ற இருவரில் ஒருவன் தான் அவன்! பங்காருசாமி என்ற பெயரை உடையவன். அவன் பக்கத்தில் ஒரு கூரிய கத்தி கிடந்தது. அதில் இரத்தக் கறை பட்டிருந்தது. அப்புறம், அடுப்பைத் தோண்டி எடுத்து அப்பாற்படுத்திவிட்டு அங்கே குழி தோண்டியிருந்ததையும் அவன் பார்த்தான். குழி காலியாயிருந்ததையும் கவனித்தான். ஆனால் அந்தச் செம்புக் குடம் பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறதா? இல்லை! மாயமாய் மறைந்துவிட்டது! தான் எண்ணியது சரிதான்! ஆனால் இது என்ன? ஒரு சிறிய பெட்டி திறந்து கிடக்கிறதே! அதற்குள்ளே... ஆத்தாடி! நோட்டுக்கள்! ரூபாய் நோட்டுக்கள்! பெட்டிக்கு வெளியில் பக்கத்திலும் ரூபாய் நோட்டுக்கள்! இன்னும் ஏதோ கறுப்பாகச் சுருள் சுருளாகக் கிடந்தது! ஒன்றும் புரியாமல் திக்பிரமையுடன் செங்கோடன் அந்தப் பெட்டிக்குச் சமீபத்தில் சென்று குனிந்து பார்த்தான். அப்போது தரையில் விழுந்து கிடந்த மனிதன் முனகினான். செங்கோடன் விளக்கை அவன் பக்கம் திருப்பினான். அந்த மனிதன் கொஞ்சம் தலையைத் தூக்கித் தன் சிவந்த கண்களினால் செங்கோடனை விழித்துப் பார்த்தான்! அதனால் செங்கோடனுக்குக் குலை நடுக்கம் ஏற்பட்டது.



"நீயா....! நீயா வந்து தொலைந்தாய்....அவள் எங்கே! அந்தப் பெண் பேய் எங்கே?-அவள்தான் என்னைக் கொன்றவள்!" என்று மெல்லிய குரலில் முணு முணுத்தான், கீழே கிடந்த பங்காருசாமி. "பாவி! சண்டாளி...!" என்று சபித்துக்கொண்டே எழுந்திருக்க முயன்றான். முடியாமல் கீழே விழுந்தான். அவன் தலை சாய்ந்தது. கோரமாக விழித்த சிவந்த விழிகள் மூடிக் கொண்டன.



செங்கோடன் உடனே மந்திர சக்தியிலிருந்து விடுபட்டவன் போலானான். கீழே கிடந்த இரத்தம் தோய்ந்த கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தான். அந்தச் சமயத்தில்தான் எஸ்ராஜும் குமாரி பங்கஜாவும் தயக்கத்துடன் நெருங்கி வந்து குடிசைக்குள்ளே எட்டிப் பார்க்க முயன்றார்கள்.



அவர்களைப் பார்த்ததும், செங்கோடன் ஆவேசம் வந்தவனைப் போல் கத்தியைக் காட்டி, "உள்ளே வராதீர்கள்! வந்தால் உங்களையும் பலி கொடுத்துவிடுவேன்!" என்று கத்தினான். அவர்கள் பயந்து அப்பால் விலகிக் கொண்டார்கள். செங்கோடன் வெளியில் வந்து குடிசையின் கதவைச் சாத்தினான். "ஓகோ!", "கொலை!", "கொலை!" என்று கத்திக்கொண்டு கேணியைப் பார்த்து ஓடி மேட்டின் மீது ஏறினான். கேணி ஓரத்தில் வந்ததும் மடியை அவிழ்த்து அதிலிருந்த பொருளைக் கேணியில் விழும்படி செய்தான்.



அதே சமயத்தில் பக்கத்து தென்னை மரத்துக்குப் பின்னாலிருந்து போலீஸ் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் வெளிப்புறப்பட்டார்.



"அப்பனே, செங்கோடா! என்ன விஷயம்? எதற்காக இப்படி அலறுகிறாய்? கேணியில் என்னத்தைப் போட்டாய்?" என்றார்.



ஒரு நிமிஷ நேரம் செங்கோடன் திகைத்து நின்று விட்டு "நானா? நான் ஒன்றும் கேணியில் போடவில்லை! இனிமேலே தான் போடப் போகிறேன்!" என்றான்.



"என்னத்தைப் போடப் போகிறாய்?"



"ஒரு மனுஷனைத் தூக்கிப் போடப்போகிறேன்."



"மனுஷனையா? மனுஷனைக் கேணியிலே தூக்கிப் போடலாமா? செத்துப் போவானே?"



"அவன் முன்னமே செத்துப் போய்விட்டானுங்க!"



"யார் செத்துப் போனது? செத்தவனை எதற்காகக் கேணியில் போடப் போகிறாய்?"



"ஒருவனைக் கொலை செய்தால், அவனைச் சாக்கிலே கட்டிக் கிணற்றிலே போடலாம் என்று சினிமாவிலே காட்டினாங்களே!"



"யாரை நீ கொலை செய்தாய்?"



"அந்தப் பங்காருசாமியை நான் கொலை செய்து விட்டேன்! இந்தக் கத்தியினால்தான்...!" என்று செங்கோடன் சொன்னபோது, அவன் கை கொஞ்சம் நடுங்கிற்று.



"இங்கே கொடு, அந்தக் கத்தியை!" என்று போலீஸ்காரர் கேட்டதும் செங்கோடன் கொடுத்டுவிட்டான்.



"சரி! வா! நீ கொன்ற ஆளைப் போய்ப் பார்க்கலாம். அவனைத் தூக்கிப் போடுவதற்கு நானும் ஒரு கை கொடுக்கிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரர் குடிசையை நோக்கிப் போனார். செங்கோடனும் அவர் பின்னால் போனான்.



குடிசை வாசலில் எஸ்ராஜும் குமாரி பங்கஜாவும் நின்று கொண்டிருந்தார்கள். பங்கஜா அழுது கொண்டிருந்தாள். எஸ்ராஜ் அவளைத் திட்டிக்கொண்டிருந்தான். கான்ஸ்டேபிளைப் பார்த்ததும் பங்கஜா, "ஐயோ! இங்கேயும் வந்துவிட்டாயா! இந்தப் பாவிகளால் என் கதி இப்படியாச்சு!" என்று அலறினாள்.
 
16. பதினாறாவது அத்தியாயம்



போலீஸ்காரர் அங்கே அந்தச் சமயத்தில் எப்படி வந்தார் என்று சொல்வதற்குக் கொஞ்சம் கதையை பின்னால் கொண்டுபோக வேண்டும். கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் முன்னம் சேலத்தில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி அவர் 'கை காட்டி மரவேலை செய்ய வேண்டியதாயிருக்கும். அதாவது வீதி முனையில் நாற்சந்தியின் நடுவில் நின்று வண்டிகள் போகவும் நிற்கவும் கைகாட்ட வேண்டி வரும். அப்படி நின்றிருந்த நாட்களில் ஒருநாள், நடுப்பகலில் ஓர் இளம்பெண் அவரிடம் வந்து, "போலீஸ்கார ஐயா! நேற்று முதல் சாப்பிடவில்லை! பசியினால் பிராணன் போய்விடும்போல் இருக்கிறது. ஒரு நாலு அணாக் கொடுத்தால் ஓர் அநாதைப் பெண்ணைக் காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்" என்றாள். போலீஸ்காரருக்குப் பாவ புண்ணியத்தில் அவ்வளவு நம்பிக்கையில்லை. ஆயினும் அந்தப் பெண்ணின் அநாதைத் தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபங் கொண்டார். "நீ யார், அம்மா! ஏன் உன்னை அநாதை என்று சொல்லிக்கொள்கிறாய்" என்றார். "ஆம் ஐயா! நான் அநாதைதான். நாங்கள் மலாய் நாட்டில் கிள்ளானில் இருந்தோம். அப்பா பெரிய வியாபாரி. யுத்தம் ஆரம்பித்த சில நாளைக்கெல்லம் புறப்பட்டு ஓடி வந்து விட்டோ ம். வழியிலே கப்பலிலேயே அப்பா செத்துப்போய் விட்டார். நானும் என் தம்பியும் அம்மாவும் மட்டும் இங்கே வந்து சேர்ந்தோம். இங்கே நாங்கள் எதிர்பார்த்து வந்த பந்துக்கள் யாரும் இல்லை. மலாய் நாட்டிலிருந்து சொத்து வருவதற்கும் வழியில்லை. ஜப்பான்காரன் பறிமுதல் செய்து விட்டான். நாங்கள் கையோடு கொண்டு வந்த நகை நட்டுக்களை விற்று இத்தனை நாள் காலட்சேபம் செய்தோம். எல்லாம் தீர்ந்துவிட்டது! இப்போது பிச்சை வாங்கிப் பிழைக்க வேண்டியதாயிருக்கிறது!" என்று சொன்னாள்.



"ஐயோ! பாவம்! நீ படித்த பெண் மாதிரி தோன்றுகிறதே! ஏதாவது வேலை பார்த்துக்கொள்வதுதானே?" என்றார் போலீஸ் கான்ஸ்டேபிள்.



"வேலைக்கு நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்தேன்; கிடைக்கவில்லை. வேலை கேட்கப் போன இடத்தில் ஆண் பிள்ளைகளாயிருந்தால் கண்ணை அடித்து துன்மார்க்கத்துக்குக் கூப்பிடுகிறார்கள். பெண்களாயிருந்தால் நன்றாகத் திட்டி அனுப்புகிறார்கள். நான் என்ன செய்யட்டும்!" என்றாள் அந்தப் பெண்.



"வாஸ்தவந்தான்; உலகம் அப்படிக் கெட்டுப் போய்க் கிடக்கிறது. மனிதர்களுடைய நெஞ்சில் இரக்கம் என்பதே இல்லை!" என்றார் போலீஸ்காரர். இப்படிச் சொல்லி விட்டு நாலு அணாவுக்கு எட்டு அணாவாகக் கொடுத்து அனுப்பினார்.



அந்தப் பெண் போய் விட்டாள். ஆனால் போலீஸ்காரருடைய மனத்திலிருந்து அவள் போகவில்லை. சில நாளைக்கெல்லாம் மறுபடியும் அந்தப் பெண், போலீஸ்காரரை சந்தித்தாள். சாப்பாட்டுக்கு நாலு அணாக் கொடுக்கும்படி கேட்டாள். போலீஸ்காரர் ஒரு ரூபாய் கொடுத்தார். அவர்களுக்குள் மேலும் கொஞ்சம் பழக்கமும் சிநேகமும் ஏற்பட்டன. பெண்ணின் பெயர் பங்கஜம் என்று தெரிந்து கொண்டார். ஒழிந்த நேரங்களில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குப்போய் அவளுடனும் அவள் அம்மாவுடனும் பேசிக் கொண்டிருப்பதில் அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.



போலீஸ்காரருடைய முதல் மனைவி காலமாகி விட்டாள். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. ஆனால் குமாரி பங்கஜாவைப் பார்த்த பிறகு அவருடைய மனம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டு வந்தது.



இன்னொரு நாள் வழக்கம்போல் போலீஸ்காரர் கைகாட்டி உத்தியோகம் செய்த இடத்துக்குக் குமாரி பங்கஜா வந்து "வீட்டில் அரிசி ஆகிவிடது. ஒரு ரூபாய் தர முடியுமா? உங்களை அடிக்கடி கேட்க வெட்கமாயிருக்கிறது" என்றாள். போலீஸ்காரர், "ஏன் வெட்கப்படவேண்டும்? கூடிய சீக்கிரத்தில் நான் மாதா மாதம் வாங்கும் சம்பளத்தை அப்படியே உன்னிடம் கொண்டு வந்து மொத்தமாகக் கொடுக்கும் காலம் வரலாம், இல்லையா? உன் தாயாரைக் கூடக் கேட்டாகிவிட்டது. உனக்குச் சம்மதம் என்றால் உடனே கலியாணந்தான்!" என்றார்.



"சீ! நீங்களும் மற்றவர்களைப் போலத்தானா?" என்றாள் பங்கஜா.



"மற்றவர்களையும் என்னையும் ஒப்பிட்டுப் பேசுகிறாயே! மற்றவர்கள் உன்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார்களா?" என்று கேட்டார்.



"ஆமாம், பின்னே என்ன? எல்லோரும் என்னைக் கந்தர்வமணம் செய்துகொள்வதாகத்தான் சொன்னார்கள். ஓர் அநாதைப் பெண் அகப்பட்டால் நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ன வேணுமானாலும் செய்வீர்கள்! சீ சீ! உன்னுடைய பணம் எனக்கு வேண்டாம்!" என்று ரூபாயை விட்டெறிந்துவிட்டுக் குமாரி பங்கஜா நடையைக் கட்டினாள்.



போலீஸ்காரர் மிக்க ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் அவள் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவள் பத்து அடி தூரம் போனதும் ஒரு விசித்திரமான சம்பவம் ஏற்பட்டது. அந்த வழியே வந்த சைக்கிள்காரன் ஒருவன் குமாரி பங்கஜாவின் மீது தன் வண்டியை மோதினான். அந்த வேகத்தில் அவள் கையில் இருந்த சிறிய பெட்டி தவறிக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அதன் கதவு திறந்தது. திறந்த பெட்டிக்குள் கான்ஸ்டேபிள் பார்த்தார். ரூபாய் நோட்டுக் கத்தைகளாகக் குவித்து வைத்திருந்தது. சில நோட்டுகள் வெளியிலும் சிதறி விழுந்தன. குமாரி பங்கஜா அவசர அவசரமாக அந்த நோட்டுகளைப் பொறுக்கி எடுத்துப் பெட்டியில் வைத்து மூடிப் பூட்டினாள். அதே சமயத்தில் கடைக் கண்ணால் போலீஸ்காரர் தன்னைக் கவனிக்கிறாரா என்று பார்த்துக் கொண்டாள். இப்படிப் பூட்டியதும் அவசரமாக நடையைக் கட்டினாள்.



போலீஸ்காரர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். பெட்டி நிறைய ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு தன்னிடம் அரிசி வாங்கப் பணம் இல்லை என்றாளே? இது என்ன விந்தை? ஆரம்பத்திலிருந்தே என்னை ஏமாற்றிக்கொண்டு வருகிறாளா? அல்லது இன்றைக்குத்தானா? திடீரென்று இவ்வளவு பணம் இவளுக்கு எப்படிக் கிடைத்தது?



மறுநாள் குமாரி பங்கஜா அவரைத் தேடிக்கொண்டு வந்தாள். "நேற்றே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். ஆனாலும் உங்கள் மனத்தைச் சோதிக்க விரும்பியதால் சொல்லவில்லை. மலாய் நாட்டில் எங்கள் வீட்டையும் தோட்டங்களையும் விற்றுப் பணம் அனுப்பியிருக்கிறார்கள். நேற்றுத்தான் வந்தது. ஒரு சினேகிதர் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்தேன்!" என்றாள்.



அவ்வளவு பணத்தை நம்பிக் கொடுக்கும்படி அப்படிப்பட்ட சிநேகிதர் உனக்கு இருக்கிறாரா? அதைவிட பாங்கியில் போட்டு வைப்பதுதானே?" என்றார் போலீஸ்காரர்.



"பாங்கியிலே போட்டால் வட்டி எங்கே கொடுக்கிறார்கள்? நான் கொடுத்தது பங்காருசாமி என்பவரிடம். நல்ல இடத்தில் கடன் கொடுத்து நிறைய வட்டி சம்பாதித்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்."



பங்காருசாமி என்பவன் 'கே. டி.' ஜாபிதாவில் இல்லையே தவிர, மற்றபடி அவன் பேரில் போலீஸ் இலாக்காவுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. அப்படிப் பட்டவனிடமா இவள் பணத்தை நம்பிக் கொடுத்திருக்கிறாள்? ஐயோ! விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவானே? இன்னொரு சந்தேகமும் போலீஸ்காரரின் மனத்தில் தோன்றியது. அதைக் கேட்டுவிட்டார்:



"நேற்று எதற்காக என்னிடம் பணம் கேட்க வந்தாய்?" என்றார்.



"அதுவா? உங்களிடம் ஏதாவது ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டு பேச வேண்டும் என்று இருந்தது. அதனாலே தான் வந்தேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நான் கஷ்ட தசையில் இருந்தபோது நீங்கள் செய்த உதவிகளுக்காக மிக்க வந்தனம். ஒரு நாள் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்துக் கொடுத்துவிடுகிறேன்!" என்று சொல்லிவிட்டு, விடு விடு என்று போய்விட்டள்.



போலீஸ்காரருக்கு அவள் சொன்ன சமாதானத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. இந்தப் பேதைப் பெண்ணை அந்தப் பங்காருசாமி ஏதோ குழியில் கவிழ்க்கப் பார்க்கிறான் என்று சந்தேகித்தார். ஆகையால் குமாரி பங்கஜாவையும் பங்காருசாமியையும் கவனிக்கத் தொடங்கினார்.



திடீரென்று சேலத்திலிருந்து பங்காருசாமி, குமாரி பங்கஜா இருவரும் காணாமற் போனார்கள். பங்கஜாவின் தாயாரைப் போய்ப் பார்த்துக் கேட்டதிலும் தகவல் தெரியவில்லை.



போலீஸ்காரரின் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. இந்த நிலையில் அவரைச் சேலத்திலிருந்து சின்னமநாயக்கன் பட்டிக்கு மாற்றினார்கள்.



அங்கே பங்காருவையும் பங்கஜாவையும் கண்டு போலீஸ்காரர் ஆச்சரியப்பட்டார். பங்கஜா ஒரு நாள் அவரைத் தனிமையில் சந்தித்துத் தன்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடினாள். போலீஸ்காரர் அப்படியே வாக்களித்தார். ஆயினும் இங்கே ஏதோ கிருத்திரிமம் நடக்கப்போகிறது என்ற சந்தேகம் அவர் மனத்தில் உதித்தது. ஆகையால் மேற்படி ஆசாமிகளுக்குத் தெரியாமலேயே அவர்களைக் கவனித்துக்கொண்டு வந்தார்.



போலீஸ்காரருடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான சம்பவம் ஒன்று ஒரு நாள் நேரிட்டது. நாமக்கல் சாலையில் அவர் போக நேரும்போதெல்லாம் பொய்மான் கரட்டையும் அந்தக் கரட்டின் சந்தில் தெரிந்த பொய் மானையும் பார்த்து வியக்காமல் போவதில்லை. 'அருகிலே போய்ப் பார்த்தால் இருட்டைத் தவிர ஒன்றுமில்லை; சாலையிலிருந்து பார்த்தால் தத்ரூபமாக அழகிய மான் தெரிகிறதே? இது என்ன விந்தை? எப்படி நேருகிறது?' என்று அடிக்கடி அவர் யோசிப்பதுண்டு. ஒரு நாளைக்குத் திடீரென்று மேற்படி குன்றின் குகையில் பொய்மானுடைய முழுத் தோற்றத்தையும் காண முடியாமற்போகவே, அவருக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. ஒரு காலும் ஒரு காதும் முகத்தில் பாதியும் மட்டும் தெரிந்தன. மானின் முழு உருவத்தைக் காணவில்லை. இந்த அதிசயத்தைக் கண்டுபிடிக்க எண்ணிக் குன்றின் மீது ஏறிப் பார்த்தார். பொய்மான் குகையில் ஒரு சாக்கு மூட்டையும் ஒரு கள்ளிப் பெட்டியும் வைக்கப்பட்டு இருந்தன. 'மானின் நிழல்தோற்றத்தின் மேல் இச்சாமான்களின் நிழல் எப்படியோ விழுந்திருக்கிறது! ஆகையினாலேதான், முழுமானின் அழகிய தோற்றம் கீழேயிருந்து பார்க்கும்போது காணப்படவில்லை' என்று தெரிந்து கொண்டார்.



அதிசயத்தின் காரணத்தைக் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் குகையில் வைத்திருக்கும் சாமான்களின் மர்மங்களைக் கண்டுபிடித்தாக வேண்டும். அந்தச் சாமான்கள் யாருடையவை? எதற்காக அங்கே வைத்திருக்கிறார்கள்? சாமான்களை உடனே பரிசோதித்துப் பார்க்கப் போலீஸ்காரர் விரும்பவில்லை. மற்றவர்கள் யாரும் கவனிக்க முடியாத சமயத்தில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வைத்தவர்கள் யார் என்றும் கவனித்து வரவேண்டும்.



பங்காருசாமி, பங்கஜா, எஸ்ராஜ்-அவர்களைச் சுற்றிக் கொண்டிருந்த செங்கோடன் ஆகியவர்கள் மீது போலீஸ்காரருக்குச் சந்தேகம் தோன்றியிருந்தது. பொய் மானை மறைந்த பொருள்களை அவர்களில் யாராவது வைத்திருக்க வேண்டும் என்றும், அவை திருட்டுப் பொருள்களாகயிருக்கலாம் என்றும் எண்ணினார்.



ஒரு நாள் பங்கஜா போலீஸ்காரரைத் தேடிப்பிடித்து "எனக்காக ஓர் உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டாள். செங்கோடனிடம் தன் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னாள். கூழைக்காலன் புதையல் இருக்குமிடம் செங்கோடனுக்குத் தெரியும் என்றும், அவனிடமிருந்து அந்த இரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே அவனிடம் சிநேகங்கொண்டதாக நடிப்பதாகவும் கூறினாள். புதையல் கிடைத்தால் போலீஸ்காரருக்கும் பங்கு கொடுப்பதாகச் சொன்னாள். போலீஸ்காரர் மர்மம் இன்னதென்று கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சம்மதித்தார்.



மறுநாள் பொய்மான் கரட்டுக் குகையில் மானின் முழு உருவமும் தெரிந்தது. ஆகையால், தான் செங்கோடக் கவுண்டனுக்குக் கடிதம் கொடுக்கப் போன சமயத்தில் ஆசாமிகள் அச்சாமான்களை எடுத்துக் கொண்டு விட்டார்கள்! அவை என்னவாயிருக்கும்?



மறுபடியும் போலீஸ்காரர் ஏமாற விரும்பவில்லை. செங்கோடன் பொய்மான் கரடுக்குப் பின்னால் குமாரி பங்கஜாவைச் சந்தித்ததும் செங்கோடனுடைய குடிசையை நோக்கிச் சென்றார். மற்ற இரண்டு மனிதர்களும் அங்கே வருவார்கள் என்பது நிச்சயம். ஆகையால் முன்னாலேயே போய்க் கேணிக்கரை மேட்டில் தென்னை மரத்தின் பின்னால் மறைந்து கொண்டார். அங்கிருந்து பார்த்தால் குடிசையின் சமீபத்தில் சுற்றுப்புறமெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் எதிர்பாராதது ஒன்று நிகழ்ந்துவிட்டது. போலீஸ்காரர் போன திசையை மோப்பம் பிடித்துக்கொண்டு அவருடைய நாயும் செங்கோடனுடைய குடிசையை நோக்கி வந்தது. குடிசைக்குச் சமீபத்தில் அதன் குரைப்புச் சத்தமும், மரண ஓலமும் போலீஸ்காரருக்குக் கேட்டது. அவருடைய இரத்தம் கொதித்தது. ஆனாலும் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டருக்கு டியூடி என்றால் டியூடிதான்; வேலை என்றால் வேலைதான்! ஒரு பெரிய மர்மத்தைக் கண்டுபிடிக்கப் போகிற கட்டத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, காரியத்தைக் கெடுத்துவிட விரும்பவில்லை! நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வெளிப்பட வேண்டிய சமயத்தில் வெளிப்பட்டு வந்தார்.



குடிசைக்கு வெளியில் செங்கோடனை நிற்கச் சொல்லி விட்டுப் போலீஸ்காரர் உள்ளே போனார். சுற்றுமுற்றும் பார்த்தார். கீழே விழுந்து கிடந்தவனையும் லாந்தர் வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தார். கவனித்துவிட்டு அவர் வெளியில் வந்து செங்கோடனைப் பார்த்து, "ஏனப்பா! நீயா கொலை செய்தாய்? யாரோ பெண்பேய் தன்னைக் கொன்றதாகவல்லவா உள்ளே கிடக்கிறவன் பழி சொல்லுகிறான்?" என்றார்.



"ஐயோ! என்பேரிலா பழி சொல்லுகிறான்? எனக்கு ஒன்றும் தெரியாதே? நான் உள்ளேயே போகவில்லையே?" என்று பங்கஜா கூவினாள்.



"கொலைகாரி! ஏன் பொய் சொல்லுகிறாய்? என்னையும் இந்தக் கவுண்டனையும் சண்டைபோட விட்டுவிட்டு நீதானே குடிசைக்குத் தனியாகப் போனாய்?" என்றான் எஸ்ராஜ்.



"இப்படி அபாண்டமாய்ப் பொய் சொல்லுகிறாயே?" என்று பங்கஜா ஓவென்று அலறி அழத் தொடங்கினாள்.



சேலத்திலிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலிய மேலதிகாரிகள் இரவுக்கிரவே வந்து சேர்ந்தார்கள். போலீஸ் அதிகாரிகள் மட்டும் அல்ல. அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள். செங்கோடனுடைய புதையலை யாரோ திருடன் அடித்துக் கொண்டு போகப் பார்த்தான் என்றும் அதற்காகச் செங்கோடன் அவனைக் கொன்று விட்டான் என்றும் அக்கம் பக்கங்களில் வதந்தி பரவி விட்டது.



ஜனங்களையெல்லாம் தடுத்துக் குடிசைக்குத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டுப் போலீஸ் இன்ஸ்பெக்டரை மட்டும் கான்ஸ்டேபிள் உள்ளே அழைத்துச் சென்றார்.



பங்காருசாமியின் உதடுகள் இன்னும் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தன. "அந்தப் பெண் பிள்ளையை விடாதீர்கள்! அவள்தான் கொலைகாரி" என்ற வார்த்தைகள் இன்ஸ்பெக்டரின் காதிலும் விழுந்தன.



பிறகு காயம் பட்ட அந்த மனிதனை எடுத்துப் போவதற்கு இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்தார். செங்கோடன், எஸ்ராஜ், குமாரி பங்கஜா ஆகிய மூவரையும் கைது செய்து கையில் விலங்கு போட்டுக் கொண்டு போனார்கள்.



இதற்குள்ளே சிவராமலிங்கக் கவுண்டரின் குடும்பமெல்லாம் அங்கே வந்துவிட்டது! செம்பவளவல்லி செங்கோடனைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் பெருக்கினாள். அவளுடைய மனத்தில் சொல்ல முடியாத வேதனை குடிகொண்டிருந்தது என்பதை அவளுடைய முகக்குறி தெரியப்படுத்தியது. வேதனை இல்லாமல் எப்படி இருக்கும்? இரண்டு நாளைக்கெல்லாம் கலியாணத்துக்குத் தேதி வைத்திருக்கிறபோது இந்த மாதிரி கொலைக் குற்றம் சாட்டி மாப்பிள்ளை கையிலே விலங்கு போட்டுக் கொண்டு போனால் கலியாணப் பெண்ணின் உள்ளம் துடிக்காமல் என்ன செய்யும்?



வேதனைக்கு உள்ளாகியிருந்த செம்பவளவல்லிக்குச் செங்கோடக் கவுண்டன் ஜாடைமாடையாகவும் வாய் வார்த்தை மூலமாகவும் பலவிதமாக ஆறுதல் கூறினான்.



"நீ கொஞ்சங்கூடக் கவலைப்படாதே! என்னை ஏழு வருஷம் ஜெயிலில் போட்டாலும் சரி, திரும்பி வந்து உன்னையே கட்டிக் கொள்கிறேன்!" என்று அவன் சொன்னதைக் கேட்டவர்கள் சிரித்தார்கள்.



"எதற்காகச் சிரிக்கிறீர்கள்? சிரிப்பதற்கு என்னத்தைக் கண்டுவிட்டீர்கள்?" என்று செங்கோடன் அதட்டிவிட்டு, மறுபடியும் செம்பாவைப் பார்த்துச் சொன்னான்: "நான் இல்லாதபோது நீதான் வயல் காடுகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் நீதான் கவனித்துக் கொள்ளவேண்டும். தெரிகிறதா? உன் அப்பா கவனிக்க மாட்டார்; அலட்சியமாய் இருந்துவிடுவார்; நீயும் அலட்சியமாய் இருந்துவிடாதே! என் சொத்தெல்லாம் இனிமேல் உன்னுடையதுதான். கேணி வற்றும்படி தண்ணீர் இறைத்துவிடப்போகிறார்கள்; ஒட்ட இறைத்துவிட்டால் தண்ணீர் ஊறாது. ஜாக்கிரதை! உன் அழகான தம்பிமார்கள் சோளக் கொண்டைகளைத் தீர்த்துவிடப் போகிறார்கள். கொல்லையில் கால் வைக்காமல் பார்த்துக்கொள். அப்படி ஏதாவது உன் தம்பிகள் செய்தார்களோ, தூக்கு மேடைக்குப் போனாலும் திரும்பி வந்து அவர்களுடைய முதுகுத் தோலை உரித்துப் போடுவேன்! ஜாக்கிரதையாய் இருக்கும்படி சொல்லிவை...!"



இப்படிச் செங்கோடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனைப் போலீஸ்காரர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள்!



செம்பா அங்கேயே விம்மிக் கொண்டு நின்றாள். அவளுக்குச் சமாதானம் சொல்லவே முடியவில்லை!
 
17. பதினேழாவது அத்தியாயம்



மறுநாள் சேலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாசராவ் நாயுடு 374ஆம் நம்பர் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டரைக் கூப்பிட்டு, "அப்பா 374! உன்னை என்னமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீ சுத்த உபயோகமற்றவன்!" என்றார்.



"வந்தனம், ஸார்! நான் உபயோகமற்றவனாயிருந்தாலும் சுத்த உபயோகமற்றவன் என்றாவது சொன்னீங்களே! இந்தப் போலீஸ் இலாக்காவில் சுத்தமாயிருக்கிறதே பெரிய காரியந்தானே?" என்றார் நம்பர் 374.



"உனக்கு இப்போது வாய் அதிகமாகிவிட்டது. காரியத்தில் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!"



"இப்படிச் சொல்லிவிட்டீர்களே, ஸார்! உங்களிடம் நான் ஒப்புக்கொண்ட காரியத்தைச் செய்து முடித்தேனா, இல்லையா?"



"அப்படி என்ன பிரமாதமான காரியத்தைச் சாதித்துவிட்டாய்?"



"பிரதமான காரியமோ என்னமோ, எனக்குத் தெரியாது, ஸார்! இந்த ஜில்லாவில் கள்ள நோட்டு நடமாடத் தொடங்கியிருப்பதாக நீங்கள் ஒரு நாள் சொல்லிக் கவலைப்பட்டீர்கள். நான் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தருவதாக ஒப்புக்கொண்டேன். கண்டுபிடித்துக் கொடுத்தேனா, இல்லையா?"



"குற்றவாளிகளோடு, குற்றவாளியில்லாத 'இடியட்' ஒருவனையும் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறாய்! அவன் கேஸையே குட்டிச் சுவராக அடித்துவிடுவான் போல் இருக்கிறது."



"செங்கோடக் கவுண்டனைத்தானே சொல்லுகிறீர்கள்!"



"அவனையேதான்! அவனை உண்மை பேசச் செய்தால் ஒழிய இந்த கேஸில் வீண் குழப்பம் ஏற்படும்."



"அவனையும் உடந்தைக் குற்றத்துக்காகப் பிடித்துத் தீட்டினால் போகிறது!"



"அவனையும் சேர்த்தால் கேஸ் உருப்படாமல் போய்விடும். நம் தரப்பில் அவன் சாட்சி சொன்னால் கேஸை ருசுப்படுத்துவது சுலபம்."



"இதில் என்ன கஷ்டம்? 'உன்னை மன்னித்துவிடுகிறோம், என்று சொன்னால், நாம் சொல்லிக் கொடுக்கிறபடி சாட்சி சொல்லுகிறான்!"



"அது நடக்கிற காரியம் என்று தோன்றவில்லை. கிளிப்பிள்ளையைப் போல், 'நான் தான் கொன்றேன்; நான் தான் கொன்றேன்' என்று உளறிக் கொண்டிருக்கிறான். எதற்காக அப்படி உளறுகிறான் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது! நீ அவனுக்கு அந்தரங்கமானவனைப் போல் நடித்து உண்மையை அறியவேண்டும்."



"பிரயத்தனப்பட்டுப் பார்க்கிறேன், ஸார்! ஆனால் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் தோன்றியிருக்கிறதா, எதற்காக அவன் அப்படி உளறுகிறான் என்று?"



"ஒரு சந்தேகம் தோன்றுகிறது. இந்தப் பெண் அழகு சுந்தரி இருக்கிறாளே-சினிமா உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கப் போகிற வருங்கால பிரபல நட்சத்திரம்!-இந்தக் குமாரி பங்கஜா கள்ள நோட்டுப் பங்காருசாமியைக் குத்திக் கொன்றுவிட்டதாக செங்கோடன் நினைத்துக் கொண்டிருக்கிறான்! அவள்பேரில் இந்தப் பைத்தியக்காரனுக்கு மோகம்போல் இருக்கிறது. அவளைக் காட்டிக் கொடாமல் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு இவன் இப்படி பிதற்றுகிறான்...! இது என்னுடைய ஊகம். உனக்கு ஏதாவது ஊகம் தோன்றுகிறதா?"



"மன்னிக்கவேணும், ஸார்! எனக்கு ஒன்றும் தோன்றவில்லை."



"இதோ பார், சின்னமுத்து! நீ கூட எதையாவது மறைக்கப் பார்க்கிறாயோ, தெரிந்ததையெல்லாம் சொல்லாமல் இருக்கிறாயோ என்று எனக்குச் சந்தேகம் ஏற்படுகிறது."



"இல்லவே இல்லை, ஸார்! நான் எதற்காக மறைக்க வேணும்? இந்தக் கேஸில் உண்மை வெளியாகிக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தால், எனக்குப் பிரமோஷன் கிடைக்கும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! எஜமான் முன்னமே வாக்குக் கொடுத்திருக்கிறீங்களே!"



"அதை நான் மறந்துவிடவில்லை. இந்தக் கேஸ் மட்டும் சரியாக ருசுவாகி குற்றவாளிகளுக்கு 'கன்விக்ஷன்' கிடைக்கட்டும்; உன்னை உடனே மேலே தூக்கிப் போடும்படி அவசியம் சிபாரிசு செய்கிறேன்!"



"எஜமான்! அவசரத்தில் என்னைத் தூக்கிப் போடுவதற்குப் பதிலாகத் தூக்கிலே போடச் சிபாரிசு செய்து விடாதிங்க!"



"சேச்சே! உன்னைத் தூக்கிலே போட்டால், அப்புறம் நம்ம டிபார்ட்மென்டு என்ன ஆகிறது?"



கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் இன்ஸ்பெக்டரின் அறையிலிருந்து வெளியில் சென்றபோது, "எல்லாம் இப்போது தேன் ஒழுகப் பேசுவீங்க! அப்புறம் 374ஆம் நம்பரை அடியோடு மறந்துவிட்டு உங்கள் சுயகாரியத்தைப் பார்த்துக் கொள்ளுவீங்க!" என்று முணுமுணுத்துக்கொண்டே போனார். ஆனாலும் தம்முடைய கடமையைச் செய்வதில் அவர் பின்வாங்கவில்லை. போலீஸ் லாக்அப்பில் இருந்த செங்கோடக் கவுண்டனிடம் சென்றார்.



"தம்பி! இப்படியெல்லாம் அநாவசியமாகப் பொய்யும் புளுகும் சொல்லி அகப்பட்டுக்கொண்டாயே? உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது!" என்றார்.



செங்கோடக் கவுண்டன் மேலே உச்சி மேட்டைப் பார்த்துக் கொண்டு "பொய்யும் புளுகும் சொல்லும் வழக்கம் எனக்குக் கிடையாது!" என்றான்.



"உண்மைதான் உனக்குப் பொய் சொல்லி வழக்கம் இல்லை. ஆகையினால்தான் முன்னுக்குப் பின் முரணாக உளறி அகப்பட்டுக்கொள்கிறாய்! பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா?"



செங்கோடன் போலீஸ்காரரின் முகத்தைக் கவலையுடன் பார்த்து, "அடியிலிருந்து ஒரே மாதிரிதானே சொல்லி வருகிறேன்?" என்றான்.



"என்னத்தைச் சொல்லி வருகிறாய்? 'பங்காரு சாமியை நான் தான் கொன்றேன்' என்று உளறிக் கொண்டு வருகிறாய்! இல்லையா?"



"ஆமாம்; அது நிஜந்தானே!"



"பொறு! 'கத்தியினால் குத்திக் கொன்றேன்' என்றும் பிடிவாதமாய்ச் சொல்லிவருகிறாய், இல்லையா?"



"ஆமாம்; என் கையில் இருந்த கத்தியைக் கூடப் பார்த்தீங்களே?"



"உன் கையில் இருந்த கத்தியை என்னிடம் காட்டினாய். அதில் இரத்தம் தோய்ந்திருந்தது. உன் கையிலும் இரத்தக் கறை இருந்தது. இதெல்லாம் சரிதான். அந்தக் கத்தியினால் நீ பங்காருசாமியைக் குத்திக் கொன்றதாக என்னிடம் சொன்னதையே இன்ஸ்பெக்டரிடமும் சொன்னாயா?"



"ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஓர் எழுத்துக் கூட மாற்றிச் சொல்லவில்லை."



"இனிமேலும் அப்படிச் சொல்லப் போகிறாயா?"



"ஆமாம்; மாற்றிச் சொல்லுகிற வழக்கம் என்னிடம் இல்லை. அந்தக் குலத்தில் நான் பிறக்கவில்லை..."



"குலம் கிடக்கட்டும், தம்பி, குலம்! குலத்தினால் வரும் கேட்டை எவ்வளவோ நான் பார்த்தாகிவிட்டது. இதைக் கேள்! பங்காருசாமியை நீ கத்தியால் குத்திக் கொன்றதாகச் சொன்னாய் அல்லவா? இந்த ஊர்ப் பெரிய டாக்டர் வந்து இன்றைக்கு அவனைச் சோதனை செய்து பார்த்தார். பங்காருசாமியின் உடம்பில் கத்திக் குத்துக் காயமே இல்லை என்று சொல்லிவிட்டார்!"



செங்கோடக் கவுண்டன் திருதிருவென்று விழித்தான்.



"அது எப்படி? கத்தியில் இரத்தம் இருந்ததே?" என்றான்.



"தம்பி! கத்தியில் இருந்த இரத்தம் நாயின் இரத்தம்!" என்றார் போலீஸ்காரர்.



செங்கோடன் மறுபடியும் உச்சி மோட்டைப் பார்க்கத் தொடங்கினான்.



"பங்காருசாமியின் பின் தலையிலேதான் காயம் இருந்தது. அது கத்திக் காயம் இல்லை; கடப்பாறையினால் அடிபட்ட காயம்...!"



"ஓகோ! மறந்துபோய்விட்டேன். நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க! கடப்பாரையினால்தான் அவன் தலையில் அடித்தேன். இப்போதுதான் நினைவு வருகிறது. கத்தியால் குத்தவில்லை. போலீஸ் ஐயா! கொஞ்சம் தான் இப்போது சொல்லுகிறதை எழுதிக் கொள்ளுங்கள்..."



"தம்பி! இப்படியெல்லாம் முன்னுக்குப்பின் விரோதமாக உளறினால் என்ன பிரயோஜனம்? யாரும் நம்ப மாட்டார்கள். இன்ஸ்பெக்டர் சவுக்கு எடுத்துக்கொண்டு வந்து உன்னைச் செம்மையாய்த் தீட்டிவிடுவார்! முதுகுத்தோலை உரித்து விடுவார். விரல் நகங்களில் ஊசியை ஏற்றுவார். என்னிடம் உண்மையைச் சொல்லிவிடு! நான் உன்னைத் தப்புவிக்கிறேன்! பயப்படாதே...!"



"நான்மட்டும் தப்பி என்ன பிரயோஜனம்?" என்று செங்கோடன் கவலையுடன் கூறினான்.



"இன்னும் யார் தப்ப வேண்டும்?" என்றார் போலீஸ்காரர்.



செங்கோடன் தான் தவறாகப் பேசிவிட்டதை உணர்ந்து வாயை இறுக மூடிக்கொண்டான்.



"நீயும் தப்ப வேண்டும்? செம்பவளவல்லியும் தப்ப வேண்டும். அவ்வளவுதானே?" என்றார் போலீஸ்காரர்.



செங்கோடன் மிகக் கோபமாக, "செம்பாவின் பெயரை இதில் இழுக்கவேண்டாம். இழுத்தால் உமக்கும் பங்காருசாமியின் கதிதான்! ஜாக்கிரதை!" என்றான்.



"அப்பனே! என்னிடம் ஏன் மறைக்கப் பார்க்கிறாய்? கிணற்று மேட்டிலிருந்து நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தேன். சகல விவரமும் எனக்குத் தெரியும். செம்பாவின் குற்றத்தை மறைப்பதற்காக நீ செய்த காரியங்கூடத் தெரியும்..."



"உன்னையும் அந்தக் கத்தியால் அங்கேயே கொல்லாமல் போனேனே?" என்றான் செங்கோடன்.



"போனது போய்விட்டது. இனி நடக்க வேண்டியதையல்லவா பார்க்கவேண்டும்? நீயும் தப்பித்துச் செம்பாவும் தப்பிக்க வேண்டுமென்றால் நடந்ததை நடந்தபடி என்னிடம் சொல்லிவிடு!" என்றார் போலீஸ்காரர்.



இன்னும் கொஞ்சம் நயத்தையும் பயத்தையும் கையாண்ட பிறகு செங்கோடன் வேறு வழியில்லையென்று தனக்குத் தெரிந்ததைச் சொன்னான். அவன் குடிசைக்குச் சற்று தூரத்தில் எஸ்ராஜுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது குடிசைக்குள்ளிருந்து, "ஐயோ! செத்தேன்!" என்ற குரல் கேட்டதல்லவா? உடனே அவன் சண்டையை நிறுத்திவிட்டுக் குடிசையை நோக்கி ஓடினான். கேணிக்கு அருகில் எதிரே ஓடி வந்த பங்கஜா அவன் பேரில் முட்டிக் கொண்டபடியால் சிறிது தாமதித்தான். அதே சமயத்தில் ஒரு நிழல் உருவம் குடிசையிலிருந்து வெளிப்பட்டதை அவன் கவனிக்க நேர்ந்தது. அது ஒரு பெண்ணின் உருவம் என்பதைக் கண்டு கொண்டான். அந்தப் பெண் உருவம் கையில் ஒரு பாத்திரத்தைத் தூக்கிச் சென்றது.



ஏற்கனவே, செங்கோடன் மனத்தில் செம்பா அங்கு வந்திருக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியிருந்தது. இப்போது உறுதியாயிற்று. செம்பா தப்பிச் செல்வதற்கு அவகாசம் கொடுப்பதற்கென்றே சிறிது நேரம் பங்கஜாவுடனும் எஸ்ராஜுடனும் பேச்சுக் கொடுத்துக் கொண்டு நின்றான். பிறகு குடிசையை அணுகினான். அப்போது ஓர் உருவம் ஒரு கணம் தோன்றி மறைந்தது. இதனால் குழம்பிய மனத்துடன் குடிசை வாசலுக்குச் சென்று விளக்கை ஏற்றினான். குடிசையின் வாசற்படியில் இரத்தக் கரைக்குப் பக்கத்தில் சிவப்பான ஒரு பொருள் கிடந்தது. அது செம்பா அணிந்திருந்த வளையல் என்பதைக் கண்டுகொண்டான். அவசரமாக எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். இப்போது அவனுடைய மனத்தில் நிச்சயம் ஏற்பட்டு விட்டது. செம்பாதான் உள்ளேயிருந்த ஆசாமியைக் குத்திக் கொன்றவன்; தான் புதைத்து வைத்த பணம் பறிபோகாமலிருப்பதற்காகவே இந்தக் கொலையை அவள் செய்துவிட்டாள்; அவள் கையில் எடுத்துப் போவது அடுப்பின் அடியில் தான் புதைத்து வைத்திருந்த செப்புக் குடந்தான்! தனக்காக இப்படிப்பட்ட காரியம் செய்த பெண்ணைக் காட்டிக் கொடாமல் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டான். குடிசைக்கு உள்ளே போய்ப் பார்த்ததும் பங்காருசாமி கீழே கிடந்தது தெரிந்தது. அந்தப் பாவி இன்னும் செத்தபாடில்லை; தன்னைக் கொன்றவள் ஒரு பெண் என்பதாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான். ஆகவே செம்பாவின் வளையல் அவளைக் கொலைக் கேஸில் மாட்டிவிடக் கூடிய தடையமாகலாம். இன்னும் ஏதாவது அப்படிப்பட்ட தடையம் கீழே கிடக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். பங்காருவின் பக்கத்தில் கிடந்த இரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துக் கொண்டான். தரையில் சிதறிக் கிடந்த பண நோட்டுகள் அவனுடைய மனத்தைக் குழப்பின. அதைப்பற்றியெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முன்னால், முதலில் தன் மடியிலிருந்த செம்பாவின் வளையலைக் கிணற்றுக்குள் போடவேண்டும் என்று தோன்றியது. உடனே வெளியே ஓடி வந்தான். எஸ்ராஜையும் பங்கஜாவையும் பயமுறுத்திக் குடிசைக்கு வெளியிலேயே நிறுத்தி வைத்துவிட்டுக் கேணிக் கரைக்கு ஓடிவந்து வளையலைக் கேணியில் போட்டான். இரத்தம் தோய்ந்த கத்தியையும் கிணற்றில் போட்டுவிட வேண்டும் என்பது அவன் எண்ணம். அதற்குள்ளே போலீஸ்காரர் தோன்றிவிட்டார். செம்பவளவல்லியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தினால், 'நான் தான் கொன்றேன்!' என்று போலீஸ்காரரிடம் அவன் அலறினான். பிறகு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடமும் அதே மாதிரி வாக்குமூலம் கொடுத்தான்.



"ஐயா! போலீஸ்காரரே உள்ளது உள்ளபடி எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்களா?" என்று கேட்டான் செங்கோடன்.



"நான் என்ன வாக்குக் கொடுத்தேன்?" என்றார் போலீஸ்காரர்.



"அதற்குள் மறந்து விட்டீர்களா? உண்மையைச் சொன்னால் என்னையும் செம்பாவையும் தப்பித்து விடுவதாகச் சொன்னீங்களே! என்னைத் தூக்கிலே போட்டால் கூடப் பரவாயில்லை. செம்பாவை மட்டும் காப்பாற்றி விடுங்கள்!" என்றான்.



"ஏதோ என்னால் ஆனமட்டும் பார்க்கிறேன். ஆனால் நீயும் நான் சொல்லிக் கொடுக்கிறபடி இன்ஸ்பெக்டரிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் செம்பாவைக் காப்பாற்ற முடியும்."



"என்ன சொல்ல வேண்டும்?"



"அவரிடம் செம்பாவின் பேச்சையே எடுக்காதே! குமாரி பங்கஜாவிடம் நீ மோகங் கொண்டிருந்ததாகவும். அவள் பேரில் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக நீ குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் சொல். திடுதிப்பென்று உடனே அவ்விதம் சொல்லிவிடாதே! இன்ஸ்பெக்டர் உன் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்துக் கேட்ட பிறகு சொல்!"



செங்கோடன் தன் கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். "இன்ஸ்பெக்டர் அடித்தால் ரொம்ப வலிக்குமா?" என்று கேட்டான்.



"அதிகமாக வலிக்காது; பேய் அறைகிறதுபோல் இருக்கும்!"



செங்கோடன் இன்ஸ்பெக்டரிடம் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியத்தைப் பற்றிப் போலீஸ்காரர் மேலும் வற்புறுத்திய பிறகு ஒருவாறு ஒப்புக்கொண்டான்.



"போலீஸ்கார ஐயா! இந்த விஷயம் செம்பாவின் காதில் விழுந்தால் என்ன செய்கிறது?" என்று கேட்டான்.



"எந்த விஷயம்?"



"நான் குமாரி பங்கஜாவைக் காதலித்தேன் என்று ஒப்புக் கொண்டது!"



"அதைப்பற்றிச் சமாதானம் சொல்வதற்கு உனக்கு வேண்டிய அவகாசம் கிடைக்கும். கலியாணம் ஆன பிறகு ஆயுள் முழுதும் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கலாம்."



"அது போனால் போகட்டும். செம்பாவைப் பார்த்து எனக்காக ஒரு விஷயம் மட்டும் சொல்லிவிடுங்கள். செப்புக் குடத்தில் இருந்த எட்டு நூறு ரூபாயையும் பத்திரமாய் வைத்திருக்கச் சொல்லுங்கள். என்னுடைய கேஸுக்காக ஒரு காலணா கூடச் செலவழிக்க வேண்டாம். நடக்கிறது நடக்கட்டும்!"



"நல்ல கருமி அப்பா, நீ!"



"செம்பாவின் தம்பிகள் சோளக் கொல்லையில் புகுந்து அழித்துவிடப் போகிறார்கள்! நன்றாய் முற்றுவதற்கு முன்னால் ஒரு சோளக் கொண்டை கூடப் பறிக்கக் கூடாது. அப்படி அந்த வாண்டுகள் இளஞ் சோளக் கொண்டையைப் பறித்ததாகத் தெரிந்தால் வந்து அவர்களுடைய மென்னியை முறித்துக் கொன்றுவிடுவேன் என்று சொல்லுங்கள்!"



"போதும்; நீ ஒரு கொலை செய்ததே போதும்! உன் பணத்துக்கும் ஆபத்து வராது. சோளக் கொல்லைக்கும் ஆபத்து வராது. கவலைப்படாதே!" என்றார் போலீஸ்காரர்.
 
18. பதினெட்டாவது அத்தியாயம்



போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் பிறகு அதே லாக் அப்பில் இன்னொரு அறையில் இருந்த குமாரி பங்கஜாவைப் பார்க்கச் சென்றார். போலீஸ்காரரைப் பார்த்ததும் பங்கஜா கண்ணீர் விட்டுக் கதறி அழுது விட்டாள். "நீங்கள் சொன்னதைக் கேட்காதபடியால் இந்தக் கதிக்கு வந்தேன். அந்தப் பாதகர்கள் என்னை இப்படிப் படுகுழியில் தள்ளிவிட்டார்கள்! நீங்கள் தான் என்னைக் காப்பாற்றவேண்டும்!" என்றாள்.



"நடந்தது நடந்தபடி எல்லாவற்றையும் சொன்னால் உன்னைக் காப்பாற்றப் பார்க்கிறேன்! ஒரு விஷயத்தையும் என்னிடம் மறைக்கக்கூடாது!" என்றார் போலீஸ்காரர்.



"இல்லை; மறைக்கவில்லை. உங்களிடம் சொல்லாமல் மறைத்து வைத்ததனால்தானே இப்படிப்பட்ட கதியை அடைந்தேன்! எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்!" என்றாள் பங்கஜா. அவள் தட்டுத் தடுமாறி முன்னும் பின்னுமாய்ச் சொன்னதன் சாராம்சம் இதுதான்:



குமாரி பங்கஜாவும் அவள் குடும்பத்தினரும் மலாய் நாட்டிலிருந்து சொத்து சுதந்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு வந்தவர்கள். வரும் வழியில் தகப்பனாரையும் பறி கொடுத்தாள். போலீஸ்காரரிடம் ஆரம்பத்தில் அவள் நாலு அணா யாசகம் வாங்கியதற்குக் கூறிய காரணமும் உண்மையேயாகும். இதற்கிடையில், பங்காருசாமி என்பவனிடம் அவளுக்கு அறிமுகம் ஏற்பட்டது. போலீஸ்காரரிடம் கேட்டதுபோல் அவனிடம் அரிசி வாங்க நாலு அணா கேட்டதிலிருந்து அந்த அறிமுகம் உண்டாகி வளர்ந்தது. பங்காரு சாமி அடிக்கடி, "உன்னைப் போன்ற அழகும், முகவெட்டும் படிப்பும் புத்திசாலித்தனமும் உள்ள பெண் எதற்காக இப்படிப் பிச்சை எடுக்க வேண்டும்? சினிமாவில் சேர்ந்தால் பிரபல நட்சத்திரமாகி லட்சக்கணக்காகப் பணம் சேர்க்கலாமே!" என்று போதனை செய்து வந்தான். அதிலிருந்து சினிமாவில் நடிக்கும் சபலம் அவளுக்கு ஏற்பட்டது. பங்காருசாமி அடிக்கடி அவளைச் சந்தித்துத் தூபம் போட்டு ஆசையை வளர்த்துவந்தான். குமாரி பங்கஜா மலாய் நாட்டில் சுயேச்சையாக வளர்ந்தவள். வரும் வழியில் பல அநுபவங்களைப் பெற்றவள். ஆகையால் அவளுக்கு மற்றப் பெண்களைப் போல் அவ்வளவு நாணம், அச்சம், சங்கோசம் முதலியவை இருக்கவில்லை. பங்காருசாமி ஒரு சமயம் அவளை ஒரு சினிமா முதலாளியிடம் அழைத்துப் போனான். அதே சமயத்தில் இன்னொரு பிரபல சினிமா நடிகை வந்திருந்தாள். அந்த நடிகை சிரித்தால் அரைப் பைத்தியம் மாதிரி இருந்தது; அழுதால் முழுப் பைத்தியம் மாதிரி இருந்தது. அவளைப் போல் பங்கஜாவுக்குச் சிரிக்கவும் அழவும் தெரியவில்லையென்று கருதியதால், சினிமாவில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லி வருத்தத்துடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.



இதனால் அவள் ஏமாற்றம் அடைந்திருந்தபோதிலும் நிராசை அடையவில்லை. பங்காருசாமியும் தைரியப்படுத்தினான். தானே ஒரு படம் எடுக்கப் போவதாகவும் அதற்காகப் பணம் சேகரித்துக் கொண்டு வருவதாகவும் சொன்னான். படம் ஆரம்பிக்கும் வரையில் காலட்சேபத்துக்காக அவளிடம் பாக்கியிருந்த ஒரே ஒரு நகையான வைர அட்டிகையை விற்றுத் தருவதாகச் சொன்னான். பங்கஜா நம்பிக் கொடுத்தாள். பங்காருசாமியும் விற்றுக் கொண்டு வந்து பணத்தைக் கொடுத்தான். பங்கஜா அதைப் பத்திரமாய் வைத்திருந்தாள். அவசரச் செலவுக்காக ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துப் போய்க் கடையில் சாமான் வாங்கினாள். கடைக்காரன் அந்த நோட்டை வாங்கி மேலும் கீழும் திருப்பிப் பார்த்தான். "அம்மா! இது கள்ள நோட்டு. யாரோ உன்னை ஏமாற்றி விட்டிருக்கிறான். முடியுமானால் அவனிடம் திருப்பிக் கொடுத்து வெள்ளி ரூபாயாக வாங்கு. இல்லாவிட்டால் நோட்டைக் கொளுத்தி விட்டுச் சும்மா இரு. போலீஸுக்குச் செய்தி தெரிந்தால் ஆபத்து வரும்!" என்று எச்சரிக்கை செய்து அனுப்பினான்.



பங்கஜா சொல்ல முடியாத கோபத்துடனும் தாபத்துடனும் உடனே வீடு திரும்பினாள். நோட்டுகளை அடுக்கி வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு பங்காருசாமியைத் தேடிப் போனாள். வழியிலேதான் 374 ஆம் நம்பர் கான்ஸ்டேபிளைச் சந்தித்தாள். பார்த்துப் பேசாமல் போனால் சந்தேகம் ஏற்படும் என்று எண்ணி வழக்கம் போல் பணம் கேட்டாள். பெட்டி திறந்து கொண்டதனால் போலீஸ்காரரின் சந்தேகத்துக்கு உள்ளானாள்.



பங்காருசாமியிடம் பங்கஜா கள்ள நோட்டுகளைத் திருப்பிக் கொடுத்துச் சண்டை பிடித்தபோது அவன் தானும் வேறொருவனிடம் ஏமாந்து போய்விட்டதாகக் கூறினான். அவனைக் கேட்டு வேறு நல்ல பணம் வாங்கித் தருவதாகக் கூறினான். அப்படி பங்காருவை ஏமாற்றியவனான எஸ்ராஜ் ஏற்கனவே கோ-ஆபரேடிவ் சங்கப் பணத்தைக் கையாடியவன். இப்போது சின்னமநாயக்கன்பட்டி கூடார சினிமாவில் எப்படியோ மானேஜர் வேலை சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனைத் தேடிக் கொண்டு பங்காரு போனான். பங்காரு தப்பி ஓடி மறைந்துவிடப் போகிறான் என்ற பயத்தினால் பங்கஜாவும் அவன் கூடப் போனாள். சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் யாருக்கும் தன்பேரில் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காகத் தான் பஞ்சாயத்து மானேஜர் என்றும், பங்கஜா தன் தங்கை என்றும் பங்காரு சொல்லிக் கொண்டான். எஸ்ராஜும் பங்காருவும் கள்ள நோட்டு அச்சிடுவதில் கூட்டாளிகள் என்று பங்கஜா அங்கே தெரிந்து கொண்டாள். எப்படியாவது தன்னுடைய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு சேலம் போகலாம் என்று எண்ணியிருந்தாள்.



ஒரு நாள் அவர்கள் சினிமாக் கொட்டகையில் டிக்கட் விற்கும் இடத்தில் கள்ள நோட்டுகளில் சிலவற்றைச் செலாவணி செய்வதற்காக வைத்திருந்தார்கள். அந்த இடத்துக்குப் போலீஸ்காரர் வந்து எட்டிப் பார்க்கவே இரண்டு ஆசாமிகளுக்கும் சந்தேகம் உண்டாகி விட்டது. உடனே பழைய ஃபிலிம்கள் சிலவற்றைக் கள்ள நோட்டுகளுடன் சேர்த்து வைத்துக் கொளுத்தி விட்டார்கள். ஃபிலிம்கள் சீக்கிரம் தீப்பற்றி எரியுமாதலால் அப்படி செய்தார்கள். அன்றைக்குத்தான் செங்கோடக்கவுண்டன் கூடார சினிமாவில் செய்த கலாட்டாவும் நடைபெற்றது. அந்தப் பட்டிக்காட்டுக் கவுண்டன் மூலமாகத் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எஸ்ராஜும் பங்காருவும் உத்தேசித்தார்கள். போலீஸுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விட்டபடியால் கள்ள நோட்டு அச்சடித்த இயந்திரங்களையும் அச்சடித்த நோட்டுகளையும் அழித்துவிட எண்ணியிருந்தார்கள். அதற்குச் செங்கோடனின் கேணியும் குடிசையும் தக்க இடம் என்று கண்டுபிடித்தார்கள். அத்துடன் செங்கோடக் கவுண்டன் புதைத்து வைத்திருந்த பணத்தையும் கபளீகரம் செய்ய யத்தனித்தார்கள். இதற்கு உதவி செய்யும்படி குமாரி பங்கஜாவைக் கேட்டுக் கொண்டார்கள். அவள் உதவி செய்து அந்தப் பட்டிக்காட்டானைத் தன் மோகவலையில் ஆழ்த்தி வைத்திருந்தால் காரியம் கைகூடிவிடும்; அவளுக்குச் சேரவேண்டிய பணமும் கிடைத்துவிடும். அதோடு எஸ்ராஜுக்குச் சென்னையில் சில சினிமா முதலாளிகளைத் தெரியும் என்றும், அவர்களிடம் பங்கஜாவை அழைத்துப் போய்ச் சிபாரிசு செய்வதாகவும் வாக்களித்தார்கள். அவர்களுடைய துர்போதனைக்குப் பங்கஜாவும் சம்மதித்தாள். அவர்கள் சொற்படியே போலீஸ்காரரிடம் செங்கோடனுக்குக் கடிதம் கொடுத்தனுப்பினாள். பங்கஜா-செங்கோடன் சந்திப்பில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளப் போலீஸ்காரரும் அங்கு இருப்பார் என்றும் அச்சமயம் செங்கோடன் குடிசையில் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்றும் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகச் சில காரியங்கள் நடந்து விட்டன. செங்கோடன் பொய்மான் கரடு உச்சியில் நின்றபோது தன் குடிசையில் வெளிச்சம் தெரிந்ததைப் பார்த்துவிட்டான். பார்த்து, குமாரி பங்கஜா தடுத்தும் கேளாமல் ஓடத் தொடங்கினான்.



"அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியுமே, கான்ஸ்டேபிள் ஸார்! எப்படியாவது என்னை இந்தத் தடவை காப்பாற்றிவிடுங்கள்! இனிமேல் இப்படிப்பட்ட போக்கிரிகளின் அருகிலும் போவதில்லை. பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்கிறேன்!" என்று சொல்லிவிட்டுக் குமாரி பங்கஜா மறுபடியும் விம்மி விம்மி அழுதாள்.



அவள் அழுகையை நிறுத்தும்படி செய்வதற்குப் போலீஸ்காரர் மிகவும் பிரயாசைப்பட வேண்டியிருந்தது.
 
19. பத்தொன்பதாவது அத்தியாயம்



மேற்படி கள்ள நோட்டு வழக்கு விஷயமாக இன்னும் இரண்டொரு துப்புகள் துலங்கவேண்டியது பாக்கி இருந்தது. அதற்காகப் போலீஸ்காரர் கொப்பனாம்பட்டிக்குப் போனார். சிவராமலிங்கக் கவுண்டரிடம் அவருடைய மகள் எப்பேர்ப்பட்ட இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிவித்தார். எப்படியாவது செம்பாவின் பெயர் இந்த வழக்கில் அடிபடாமல் காப்பாற்ற வேண்டுமென்று கவுண்டர் ரொம்பவும் கேட்டுக் கொண்டார்.



செம்பவளவல்லி திக்பிரமை பிடித்தவள் போல் இருந்தாள். அவளுடைய மனத்தில் கேணியும், கேணிக்கரைக் குடிசையும், சோளத் தட்டைக் குவியலும், இரத்தம் தோய்ந்த கத்தியும், சாகும் நாயின் ஓலமும், குழிதோண்டும் மனிதர்களும், பயங்கர ஆயுதம் ஏந்திய போலீஸ்காரரும், சிதறிக் கிடந்த நோட்டுக்களும், கையில் விலங்கு பூட்டிய செங்கோடனும், அவனைப் போலீஸார் கொண்டுபோன போது தன்னைப் பார்த்த பார்வையும், அவன் சொன்ன வார்த்தையும் ஒரே குழப்பமாக வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் அதிகமாக அவள் மனக்கண் முன்னால் ஒரு செப்புக்குடம்-உள்ளே காலியான செப்புக்குடம்-வாயைப் பெரிதாகத் திறந்துகொண்டு காட்சி அளித்தது. அந்த வெறுங்குடம் மனக்கண் முன் தோன்றியபோதெல்லாம் அவளுடைய அடி வயிற்றில் என்னவோ வேதனை செய்தது.



இத்தகைய நிலைமையிலேதான் போலீஸ்காரர் வந்தார். அவரைப் பார்த்ததும் செம்பா பரபரப்புடன், "வாருங்கள்! நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்!" என்றாள்.



"அது எப்படி? எதற்காக?" என்று கேட்டார் போலீஸ்காரர்.



"எதற்காக, எப்படி என்று உங்களுக்கே தெரியும்!" என்றாள் செம்பா.



"ஓகோ! அப்படியா?"



"உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்றிருந்தேன் கேட்கட்டுமா?"



"பேஷாய்க் கேட்கலாம்."



"அவர் எதற்காக 'நான் தான் கொலை செய்தேன்', 'நான் தான் கொலை செய்தேன்' என்று கத்தினார்? என்னைக் காப்பாற்றுவதற்காகத்தானே?"



"ஆமாம்."



"நான் செய்திருப்பேன் என்று அவருக்கு எப்படித் தோன்றியது?"



"நீ குடிசையிலிருந்து வெளியேறியதைச் செங்கோடன் பார்த்துவிட்டான். அதைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு. அவன் லாந்தரைக் கொளுத்திக் கொண்டு குடிசைக்குள் புகுந்தபோது வாசற்படியில் உடைந்த வளையல் ஒன்று கிடந்தது. அது உன்னுடையதுதான் என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது... பின்னே தெரியாமல் இருக்குமா?"



செம்பா தன்னுடைய கைகளைப் பார்த்துக் கொண்டாள்.



"உன்னுடைய ஒரு கையில் சிவப்பு வளை இருக்கிறது. இன்னொரு கையில் இல்லை. மற்றவர்கள் கண்ணில் இது பட்டிருந்தால் ஆபத்தாய்ப் போயிருக்கும்!" என்றார் போலீஸ்காரர்.



"அப்புறம்? அந்த வளையல் என்ன ஆயிற்று?" என்று செம்பா ஆவலோடு கேட்டாள்.



"செங்கோடன் அதை ஒருவரும் அறியாமல் சட்டென்று மடியில் எடுத்துக் கொண்டு கேணிக்கரைக்கு ஓடி வந்து மடியை உதறினான். வளையல் கேணியில் விழுந்தது."



"எவ்வளவு சாமர்த்தியமாகச் செய்திருக்கிறார்! என் பேரில் என்ன கரிசனம்! என்ன அன்பு! அவருக்கு என்னால் இப்படி நேர்ந்துவிட்டதே!" என்று சொல்லிவிட்டுச் செம்பா கண்ணீர் பெருக்கினாள்.



"வேண்டாம், செம்பா! உன் செங்கோடனுக்கு ஆபத்து ஒன்றும் வராது. அவனை விடுதலை செய்து கொண்டு வந்து சேர்க்க நான் இருக்கிறேன். வருத்தப் படாதே!" என்றார் போலீஸ்காரர்.



செம்பா போலீஸ்காரரை ஏறிட்டுப் பார்த்து, "நான் அதற்காக வருத்தப்படவில்லை. அவரை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அப்படி நீங்கள் செய்யாவிட்டால் நான் கோர்ட்டில் வந்து நடந்ததை நடந்தபடி சொல்கிறது என்று தீர்மானித்திருந்தேன்."



போலீஸ்காரர் சிறிது திடுக்கிட்டு, "அதெல்லாம் வேண்டாம். நீ கோர்ட்டுக்கு வந்தால் வீண் சிக்கல் ஏற்படும். செங்கோடனைக் காப்பாற்றுவதற்கு நான் ஆயிற்று!" என்றார்.



"அதற்காக நான் வருத்தப்படவில்லையென்றுதான் சென்னேனே!"



"பின்னே எதற்காக வருத்தம்? எதற்காகக் கண்ணீர்?"



"அப்படி எனக்காகத் தம் உயிரைக் கொடுக்கத் துணிந்தவருக்கு நான் பதில் என்ன சொல்லப் போகிறேன்! திரும்பி வந்ததும் பணக்குடம் எங்கே என்று கேட்பாரே?"



"ஏன், பணக்குடம் எங்கே? பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா?"



"குடம் பத்திரமாக ஐயனார் கோயில் குட்டையில் கிடக்கிறது. அதனால் என்ன பிரயோஜனம்? அந்தக் குடத்தை அவசரமாய்த் தூக்கிக்கொண்டு ஓடினேன் அல்லவா? கொஞ்ச தூரம் போன பிறகுதான் அது கனக்கவே இல்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. உடனே நிலா வெளிச்சத்தில் குடத்துக்குள் பார்த்தேன். குடம் காலியாயிருந்தது! அதைப் பார்த்து என் மூளை குழம்பி விட்டது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். ஊர்க்காரர்கள் ஓடி வரும் சத்தம் கேட்டுக் குடத்தைக் குட்டையில் போட்டுவிட்டு அவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன். கவுண்டர் விடுதலையாகித் திரும்பி வந்து, 'குடத்தில் இருந்த பணம் எங்கே?' என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்? நான் பணத்தை பத்திரமாய் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கையுடன் அவர் இருப்பாரே! அவருடைய கேஸுக்காகக் காலணா செலவழிக்க வேண்டாம் என்று சொல்லியனுப்பியிருக்கிறாரே! அரும்பாடுபட்டுச் சேர்த்த எண்ணூறு ரூபாயும் போய்விட்டது என்று தெரிந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? என்னிடம் அவருக்குள்ள அன்பெல்லாம் விஷமாய் மாறிவிடுமே!" என்று செம்பா புலம்பினாள்.



----------------------

20. இருபதாம் அத்தியாயம்



கதை சொல்லிக்கொண்டே வந்த மோட்டார் டிரைவர் வண்டியை நிறுத்தியதும், மறுபடியும் 'பொய்மான் கரடு'க்குச் சமீபம் வந்திருக்கிறோம் என்று தெரிந்து கொண்டேன். இடது பக்கத்தில் செங்குத்தாகக் கரிய குன்று நின்றது. மழைக்கால இருட்டுச் சூழ்ந்திருந்தபடியால் குகையும் மானும் கண்ணுக்குத் தெரியவில்லை. கார் செல்லும் சத்தமும் கதை சொன்ன குரலும் நின்றவுடனே மழைத் தூற்றலின் சளசளச் சத்தமும் பூமியில் மழை விழுந்ததும் எங்கிருந்தோ கிளம்பும் ஆயிரக்கணக்கான சிறிய ஜீவராசிகளின் கதம்பக் குரலும் சேர்ந்து கேட்டன.



"இப்போது இங்கே நின்று என்ன உபயோகம்? இருட்டில் ஒன்றும் தெரியவில்லையே?" என்றேன்.



இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே பளிச்சென்று ஒரு பெரிய மின்வெட்டுத் தோன்றிச் சுற்றிலும் சூழ்ந்திருந்த காரிருளை அகற்றிக் குன்றுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவ்விதம் மின்னிய நேரத்தில் பொய்மான் குகைக்குள்ளே நெளிந்து நெளிந்து ஒரு பளபளப்பான கயிறு சென்றதையும், குகைக்குள்ளிருந்து கிறீச் சென்று சத்தமிட்டுக்கொண்டு ஒரு சிறிய பிராணி வெளிப்பட்டு ஓடிவந்ததையும் பார்த்தோம். பாம்புக்குப் பயந்து அந்தக் குகைக்குள்ளிருந்த மான் வெளியே ஓடி வந்ததாகவே தோன்றியது. அடுத்த நிமிஷம் மறுபடியும் நாற்புறமும் அந்தகாரம் சூழ்ந்து கொண்டது. கரிய பாறை மட்டும் பயங்கரமாக நின்றது.



மின்னலில் கண்ட காட்சி என்னைச் சிறிது அரட்டிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். "சரி போகலாமே இருட்டில் இங்கே என்னத்தைப் பார்க்கிறது?" என்றேன்.



வண்டி நகரத் தொடங்கியது. சாலையில் வலப்புறத்தில் இருந்த குடிசைகளில் இருட்டும் நிச்சப்தமும் குடி கொண்டிருப்பதைக் கவனித்தேன். "இந்தக் குடிசைகளையே பார்க்க முடியவில்லையே! அரை மைல் தூரத்திலுள்ள செங்கோடக் கவுண்டரின் குடிசை எங்கே தெரியப் போகிறது? மழை இல்லாமல் நிலவு நாளாக இருந்தால் குன்றின் மேல் ஏறிப் பார்த்திருக்கலாம்" என்று நான் சொல்லிக்கொண்டிடேயிருக்கையில், மோட்டார் திடீரென்று ஒரு திரும்புத் திரும்பி வளைந்து சாலையோரத்து மரத்தில் மோதிக் கொள்ளப் போய் மறுபடியும் வேகமாக வளைந்து திரும்பி நடுச்சாலைக்கு வந்தது.



அந்த மழையிலும் குளிரிலுங்கூட எனக்கு உடம்பு வியர்த்துவிட்டது. "என்ன? என்ன?" என்று பக்கத்திலுள்ள மோட்டார் சாரதியின் காது செவிடுபடும்படி கத்தினேன்.



"ஒன்றுமில்லை, ஸார்! பதறாதீங்க! ஒரு நாய் குறுக்கே ஓடியது. அதன்மேலே வண்டி ஏறாமலிருப்பதற்காக வளைத்துத் திருப்பினேன்" என்றார் மோட்டார் டிரைவர்.



இதைக் கேட்டதும் எனக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை.



"என்ன அப்பா, நீ! ஒரு நாயைக் காப்பாறுவதற்காக மனிதர்களைக் கொன்றுவிடுவதற்குப் பார்த்தாயே? அழகாயிருக்கிறது!" என்றேன்.



"அது எப்படி, ஸார்! நாயும் உயிருள்ள ஜீவன் தானே? மனிதனுடைய உயிரைக்காட்டிலும் நாயின் உயிர் எந்த விதத்தில் மட்டம்?" என்றார் டிரைவர்.



இதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.



கார் போய்க்கொண்டே இருந்தது.



மழைத் தூற்றல் போட்டுக்கொண்டேயிருந்தது.



சேலம் ஜங்ஷன் நெருங்கிக் கொண்டேயிருந்தது.



கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள என் ஆவல் வளர்ந்து கொண்டேயிருந்தது.



"கொஞ்சம் நான் அஜாக்கிரதையாயிருந்திருந்தால் அந்த நாய் செத்துப் போயிருக்கும்! ஒரு மயிரிழையில் அது தப்பியது" என்றார் டிரைவர்.



"இன்னும் கொஞ்சம் மோட்டாரை வளைத்திருந்தால் நாமே பைஸலாகியிருப்போம்!" என்று சொன்னேன்.



"அதெல்லாம் இல்லை, ஸார்! மனித உயிர் ரொம்ப கெட்டி! அவ்வளவு இலகுவாகச் சாவு வந்து விடாது!"



"அப்படியே சாவு வந்தாலும் கதையின் முடிவைத் தெரிந்துகொண்ட பிறகு வந்தால் எனக்குக் கவலையில்லை!" என்றேன்.



"அதற்கென்ன, சொல்கிறேன். கதை கொஞ்சந்தான் பாக்கி இருக்கிறது!" என்றார் டிரைவர்.



பணத்தைக் காணோமே என்று கவலைப்பட்ட செம்பவளவல்லிக்குப் போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் ஆறுதல் கூற முயன்றார்.



"செங்கோடன் இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையில் இருக்கும்போது கேவலம் பணத்தைப் பற்றி நீ கவலைப்படுகிறாயே? பணம் கிடக்கட்டும், தள்ளு!" என்று சொன்னார்.



இது செம்பவளவல்லியின் காதில் கொஞ்சமும் ஏறவில்லை.



"நீங்கள் தான் போலீஸ்காரர் ஆச்சே! பணத்தைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். இல்லாவிட்டால், கோர்ட்டில் வந்து நடந்தது நடந்தபடியே சொல்லிவிடுவேன்!" என்றாள்.



"சொன்னால் செங்கோடனுக்குப் பதில் நீ கொலை கேஸில் அகப்பட்டுக்கொள்வாய். அவ்வளவுதானே? அதில் என்ன பிரயோஜனம்?"



"நான் ஏன் மாட்டிக்கொள்கிறேன்? கதவிடுக்கில் மறைந்து நின்று கடப்பாரையினால் மண்டையில் ஓங்கிப் போட்டவர் அல்லவா அகப்பட்டுக்கொள்ள வேண்டும்? உங்களை நான் பார்க்கவில்லை என்று நினைத்தீர்களா?" என்றாள் செம்பா.



போலீஸ்காரர் திடுக்கிட்டுப் போனார். ஏனெனில் செம்பா சொன்னது உண்மையேயாகும். போலீஸ்காரர் அன்று மாலை பங்காருவுக்கும் எஸ்ராஜுக்கும் முன்னதாகவே கேணிக்கரைக்கு வந்துவிட்டார். அந்தப் போக்கிரிகள் குடிசைக்குள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார். அரைகுறையாக அச்சடித்த கள்ள நோட்டுகளை ஃபிலிம்களுடன் சேர்த்துக் கொளுத்தியதைப் பார்த்தார். உள்ளே அச்சமயம் நுழையலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, செங்கோடன்-பங்கஜா இவர்களின் பேச்சுக் குரல் கேட்டது. பிறகு எஸ்ராஜ் விளக்கை அணைத்துவிட்டு வெளியேறினான். அதுதான் குடிசைக்குள்ளே நுழைந்து பங்காருவைக் கையும் களவும் கள்ள நோட்டுமாகப் பிடிக்கத் தக்க சமயம் என்று நினைத்து உள்ளே பிரவேசித்தார். ஆனால் தம் பின்னோடு இன்னும் யாரோ ஒருவர் வரும் சத்தம் கேட்டுக் கதவின் இடுக்கில் ஒளிந்து கொண்டார்.



வருவது ஒரு பெண் என்று அறிந்ததும் அவருக்கு ஒரே வியப்பாகிவிட்டது. அவள் யார், எதற்காக அங்கே வருகிறாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது.



வந்தவள் உள்ளே வந்து அவசரமாகச் செப்புத் தவலையை எடுத்தாள். பங்காரு திரும்பிப் பார்த்து அவளுடைய சேலைத் தலைப்பைப் பற்றினான். கத்தியை எடுத்துக் குத்துவதற்கு ஓங்கினான்-இவை யாவும் கண் மூடித் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டன. போலீஸ்காரருடைய புத்தி பிரமாதமான அவசரத்தில் வேலை செய்தது. பங்காருவுக்குப் பின்னால் கிடந்த கடப்பாரையைச் சட்டென்று எடுத்து அவன் பின் தலையில் ஓங்கிப் போட்டார். பங்காரு, "ஐயோ!" என்று கத்திக் கொண்டு தரையில் விழுந்தான். அவன் இருட்டில் பார்த்தது ஒரு பெண்பிள்ளையைத்தான். அந்தப் பெண் குமாரி பங்கஜாவாக இருக்கவேண்டும் என்று தவறாகத் தீர்மானித்துக் கொண்டான். அவளே தன் தலையில் அடித்தவள் என்று எண்ணிக் கொண்டு தரையில் விழுந்தான். ஆகையினாலேயே பின்னால் அவன் குமாரி பங்கஜாவின் மேல் குற்றம் சாட்டினான்.



செம்பா கையில் தவலையை எடுத்துக்கொண்டு பங்காருவின் பிடியை உதறிக்கொண்டு கிளம்பியபோது, கதவின் இடுக்கில் ஓர் உருவம் கடப்பாரையை ஓங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டாள். அப்படி நின்றவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய போலீஸ் உடை மட்டும் அவளுடைய மனத்தில் பதிந்திருந்தது. அவசரத்திலும் பீதியிலும் அப்போது அதைப்பற்றி யோசிக்க முடியவில்லை. பின்னால் யோசித்துப் பார்த்து, பார்த்து இப்படி இப்படி நடந்திருக்கவேண்டும் என்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.



தாம் கதவருகில் நின்றதைச் செம்பா பார்த்தாளா இல்லையா என்பதைப் பற்றிப் போலீஸ்காரருக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அது இப்போது தெளிந்து விட்டது.



"ஐயா! பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள்" என்றாள் மறுபடியும் செம்பா.



"பணமா? நான் எங்கே போக?"



"நீங்கள்தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும்!"



"என்னைத் திருடன் என்றா சொல்லுகிறாய்?"



"நான் சொல்லவில்லை. நீங்களேதான் ஒப்புக்கொண்டீர்களே!"



"அது எப்போது?"



"அன்றைக்கு அவரிடம் நீங்கள் போலீஸ்காரன் வேஷத்திலே கூட 'திருடன் வருவான்' என்று சொல்லவில்லையா? அதை நான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்."



"செம்பா! நீ பலே கெட்டிக்காரி. இவ்வளவு சாமர்த்தியசாலியாயிருந்துகொண்டு அந்த அசட்டுச் செங்கோடனைப் போய்க் கலியாணம் செய்துகொள்ளப் போகிறாயே, அதை நினைத்தால்தான் வருத்தமாயிருக்கிறது!"



"சிலரைப் போல புத்திசாலிகளாயிருப்பதைக் காட்டிலும் அவரைப்போல் அசடாயிருப்பதே மேல்!"



"அது உன் தலை எழுத்து! எப்படியாவது போ! செங்கோடன் சீக்கிரம் திரும்பிவருவான். உன் கலியாணத்தன்று பணமும் சீதனமாகக் கிடைக்கும்!" என்றார் போலீஸ்காரர்.
 

New Threads

Top Bottom