3. மருகும் மனதின் ரகசிய அறையில்...
விடியற்காலையில் சுபமுகூர்த்த நேரம் நெருங்க மண்டபமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஒருபுறம் மணமகள் வெட்கச்சிரிப்போடு தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கதாநாயகனோ அப்பொழுதுதான் உறக்கம் கலைந்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான். மகனின் அறைக்குள் வந்த ராஜேஸ்வரியின் தன் மகன் தயாராக இருப்பதை அறிந்து அவன் முன் சென்றவர் கண்ணில் அன்போடு அக்னி தேவ்க்கு திஷ்டி கழித்து, "அப்புனு உன்ன இந்த மாதிரி மணக்கோலத்துல பாக்கணும்னு அம்மாக்கு எத்தனை நாள் ஆசை தெரியுமா. இன்னைக்குதான் அந்த ஆசை நிறைவேறி இருக்கு. நீ எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் அப்பு'னு..."என கண்ணில் நீரோடு பேசும் தாயைப் பார்த்த ...
அக்னி சந்திர தேவ் தான் , "அம்மா எதுக்காக இப்போ அழுறீங்க . உங்களோட ஆசைக்காக தான் இந்த கல்யாணமே. என் அம்மா எப்பவுமே சந்தோஷமா இருக்கணும். அதுதான் இந்த மகனோட ஆசை" என்றான்.
"அப்போ அம்மாக்காக தான் இந்த கல்யாணமா! உனக்கு என் மருமகளை பிடிக்கலையா அப்பு'னு." என மகாலட்சுமி ஏக்கமாக பார்க்க,
சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவரையே பார்த்து இருந்த தேவ் தன்னை பழைய நினைவுக்குள் அழைத்துச் சென்ற மனதை கட்டுப்படுத்திக் கொண்டு "அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் பிடிச்சு தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிறேன் போதுமா. இப்போ நீங்க அழாம போங்க. நான் இன்னும் முழுசா தயார் ஆகல " என்று தன் தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான் .
ஏசி மாளிகையில் சிறிதாக புகை மூட்டப்பட்ட ஹோம குண்டத்தின் அருகில் ஐயர் அமர்ந்து எதிர்கால வாழ்க்கைக்கான மந்திரங்களை ஓத..., சிறிது நேரத்தில் தேவ் அங்கு வரவழைக்கப்பட்டான். வந்தவன் சபையில் இருக்கும் அனைவருக்கும் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்தபடி, தனக்கான மண மேடையில் அமர.. ஐயர் மன மகனுக்கான மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார். மந்திரங்கள் முழுதாக முடிந்திருக்க மணமகளை அழைத்து வரச் சொல்ல....
அந்த நேரம் .... மண்டப வாசலில் மங்கை ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். தங்க நிற முழு ஜரிகை நெய்த புடவை மற்றும் அதற்கு பொருத்தமாக ரத்த நிற ரவிக்கை அணிந்து கொண்டு, முகத்தில் ஒப்பனையையே தேவையில்லாத அளவிற்கு அழகில் மிதந்து கொண்டிருந்த முகத்தில் சிறிது கண் மையிட்டு... வளைந்த வானவில்லுக்கு நடுவில் சிகப்பு நிற பொட்டிட்டு, உதட்டிற்கு மிதமான சாயம் பூசி இருக்க .... காதில் பெரிய ஜிமிக்கி கம்மல் மற்றும் அதற்குப் பொருத்தமாக கழுத்தையொட்டியபடி வைரத்தில் ஆன ... பதக்க மாலையும் (நெக்லஸ்), அதற்கு அடுத்தபடியாக மூன்று அடுக்கு கொண்ட பெரிய ஆரமும்,
அளவான இடுப்பில் ஒட்டியானம் என உடம்பில் நகைகளால் பொறுத்தி கர்வமான அலங்கரித்துடன் இருந்தாள். மேலும் கை இரண்டிற்கும் மருதாணியை புஜம் வரை பூசி இருக்க , பூ அலங்காரத்துக்கு என நீண்ட தலை முடி ஜடையும் என்று கல்யாண பெண்ணிற்கு உரிய அனைத்து அலங்காரத்தையும் கொண்டு அன்ன நடை இட்டு.... மெல்ல மணவறைக்கு நுழைந்தவள் அங்கிருக்கும் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக தேவ் பக்கத்தில் அமர்ந்தாள். ஐயர் சொல்லிக்கொண்டிருந்த மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தவன்... தன் அருகில் அமர்ந்திருக்கும் வருங்கால மனைவியை காண பார்வையை திருப்ப.... அங்கே அமர்ந்திருந்தவளின் முகத்தை கண்டதும், மழை நேரத்தில் சட்டென பெரும் சத்தத்துடோடு தாக்கும் மின்னல் போல பல மடங்கு வீரியமான மின்னலை வெடித்தது அவனின் இதயம்.
ஏற்கனவே மணப் பெண்ணைப் போலவே அலங்கரித்து வாசல் வழியில் வந்தவளை அங்கு அமர்ந்திருந்தவர்கள் வித்தியாசமாக பார்க்க, நேராக மணமகன் பக்கத்தில் அமர்ந்ததும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது அங்கிருந்தவர்களுக்கு. அதிலும் பெண் வீட்டாருக்கும் செல்வகுமார், ராஜேஸ்வரி தம்பதியருக்கும் நிலநடுக்கத்தில் நிற்பது போன்ற அதிர்வு. யாருக்கும் ஒன்றும் புரியாமல் நினைவுகளை இழந்து ஸ்தம்பித்து நிற்க, அங்கே கல்யாண மண்டபம் நிலையில்லாத நிலையில் இருந்தது.
முதலில் சூழ் நிலையிலிருந்து மீண்ட பெண் பெற்றோர் வந்தவளிடம்... "யாருமா நீ என் பொண்ணு உட்கார வேண்டிய இடத்தில நீ வந்து உட்கார்ந்து இருக்க. எந்திரிம்மா முதல்ல.." கோபமாக கட்டளையிட்டனர்.
வந்த அல்லி ராணியோ... பக்கத்தில் அமர்ந்திருந்த தன் வருங்காலத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, பொறுமையாக எழுந்து நின்றவாறு "இங்க பாருங்க இது ஞாயமா எனக்கு நடக்க வேண்டிய கல்யாணம். எனக்கு துரோகம் பண்ணிட்டு.. உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க பாக்குறாரு மிஸ்டர் அக்னி சந்திர தேவ். " என்று பெரும் இடியை செல்வகுமார் ராஜேஸ்வரி தம்பதியருக்கு கொடுக்க..,
"என்ன சம்பந்தி இதெல்லாம். இந்த பொண்ணு சொல்றது உண்மையா?" என்ற பெண்ணின் பெற்றோருக்கு பதிலளிக்க முடியாமல் செல்வகுமார், ராஜேஸ்வரி இருவரும் தன் மகனை பார்க்க..
"அவனோ அவள் சொன்ன வார்த்தையில் கட்டுக்கடங்காத தீப்பிழம்பு இமயமலை போல் உள்ளுக்குள் கொதித்து கொண்டு இருந்தான்.
"அவங்களை என்ன கேட்கிறீங்க. நான் ஒருத்தி இப்படி இருக்கிறது அவங்களுக்கு இப்பதான் தெரியும். என்ன காதலிச்சது இதோ இங்க உட்கார்ந்துட்டு இருக்கானே இவன் தான். கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு என்கூட ஊரு ஊரா சுத்திட்டு... இப்போ நான் ஊர்ல இல்லாத சமயமா பார்த்து உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கான். இவனும் நானும் அஞ்சு வருஷத்துக்கு மேல காதலிச்சிட்டு இருக்கோம். என்னை ஏமாத்திட்டு உங்க பொண்ண கல்யாணம் பண்ணா.. அங்க பாருங்க போலீஸ்காரங்க நிக்கிறாங்க. நான் வரும் போது அவங்களையும் சேர்த்து தான் கூட்டிட்டு வந்தேன். என்னை ஏமாத்திட்ட தா இதோ இவன் மேலயும் உங்க பொண்ணு மேலயும் கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ளே தள்ளிடுவேன்."என்றுவிட்டு சாவகாசமாக திரும்பவும் மணவறையில் பெண்ணிற்கான இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
அவள் சொல்லிய வார்த்தையில் பெண்ணின் பெற்றோர்கள்... செல்வகுமார் இடம் தகாத வார்த்தையில் பிரச்சனை செய்ய அந்த இடம் மொத்தமும் அக்னி சந்திர தேவ்விற்கு எதிராக திரும்பியது. மகனைப் பற்றி நன்கு தெரிந்த பெற்றோர்கள்... இதை பொய்யென நிரூபிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
நேரம் செல்ல செல்ல... அனைவரின் குற்ற பார்வைக்கு ஆளான தேவ் தன் பெருமை மொத்தத்தையும் இழந்து...
"போதும் நிறுத்துங்க. இதுக்கு மேல யாரும் எதுவும் பேச வேண்டாம். தப்பு பண்ணது நான். என்னை பெத்தவங்க கிட்ட கேள்வி கேட்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இங்க நடக்குறது என் தனிப்பட்ட விஷயம். இத தப்பு சரின்னு சொல்ல உங்களுக்கு இடமில்லை." என்றவன்....
அங்கிருந்த பெண்ணின் பெற்றோர்களிடம், "மன்னிச்சிருங்க. இதுக்காக நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். உங்க பொண்ண நான் ஏமாத்தல. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்திருந்தா இதோ இவளோட வார்த்தையை நம்பி சண்டை போட்டிருக்க மாட்டீங்க. என்னை நம்பாத உங்களுக்கு பதில் சொல்லணு'ம்னு அவசியமும் எனக்கில்லை . உங்களுக்கு உண்மை ஒரு நாள் தெரியவரும். அது வரைக்கும் உங்க பார்வைல நான் குற்றவாளியாவே இருக்கேன். " என்றான்.
"பாத்தீங்களா உங்க பையன் பேசுறதை. என்ன பையனை வளத்து வச்சிருக்கீங்க. ஒரு பெரிய பிஸ்னஸ் மேன் பையன் பண்ற வேலையா இது. எவ்வளவு பெரிய மனுஷனா இருந்துட்டு பிள்ளையை வளர்க்குறது ல இப்படி கோட்டை விட்டுட்டீங்களே. இவ்வளவு நடந்ததுக்கப்புறமும் என் பொண்ண உங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சா என்ன விட பெரிய முட்டாள் யாரும் இல்லை. இவ்வளவு தூரம் எங்க குடும்பத்தை கூட்டிட்டு வந்து அசிங்க படுத்திட்டிங்க. இதற்கான தண்டனை உங்களுக்கு நிச்சயம் தருவேன் .என்றவர்கள் அங்கிருந்த அனைத்து சொந்தத்தை யும் கூட்டிக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.
அனைவரும் கலைந்து சென்றதும் மீதமிருந்த சொந்தங்களுக்கு மத்தியில்... எதுவும் பேச முடியாமல் செல்வகுமார் ஒரு பக்கமாக சென்று அமர்ந்து கொண்டார். இது செல்வகுமார் ராஜேஸ்வரி தம்பதியருக்கு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்த.... தான் செய்த செயலின் தண்டனை இதுவென வருந்தி அமைதி காத்தனர். இவர்கள் அமைதிக்கு மாறாக... அவர்களின் மகன் தான் மணவறையில் அமர்ந்திருந்த அவளின் கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து கீழே தள்ளி விட்டு,
"யாரடி நீ உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். எப்பவோ நடந்த விஷயத்துக்கு இப்போ பழிவாங்க வந்தியா. ச்சீ !உன்ன மாதிரி பொண்ணலாம் பார்த்தா கூட பாவம். என் அப்பா அம்மா உனக்கு என்ன பாவம் பண்ணாங்க. எதுக்காக அவங்களை இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தின. நல்லா ஞாபகம் வச்சுக்கோ இன்னைக்கு நீ பண்ண தப்புக்கான தண்டனைய வாழ்க்கை முழுக்க கொடுத்துகிட்டே இருப்பேன். மரியாதையா இந்த இடத்தை விட்டு போயிடு." என்றதோடு நில்லாமல் கீழே விழுந்தவளை மீண்டும் கைப்பற்றி வாசலை நோக்கி அழைத்துச் செல்ல...,
அவன் கையை தட்டி விட்டவள்.. ஏய்! இன்னொரு தடவை மேல கை வச்சா அப்புறம் அவ்வளவுதான். என்ன கேட்ட ! யார் நானா? பதில் உன்கிட்டதான் இருக்கு. என்ன வெளியே அனுப்ப உனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ என்னை காதலித்தது உண்மை. என்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லி கழட்டி விட்டதும் உண்மை. என்னை இங்க இருந்து அனுப்புனா... உன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தர்ணா பண்ணுவேன். எனக்கு ஞாயம் கிடைக்கிற வரைக்கும் உன் வீட்ல இருக்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன். என்னை ஏமாத்திட்டு நீ வேற எவளுக்காது தாலி கட்டுன அப்புறம் வாழ்க்கை முழுக்க கை இல்லாம தான் இருப்ப. " என்றவள் கலைந்திருந்த முடியை சரி செய்தவாறு மணவறைக்கு சென்று மீண்டும் அமந்து கொண்டு..."சும்மா முறைச்சி கிட்டே இருக்காம... ஒழுங்கா வந்து தாலிய கட்டுற வழியை பாரு. இல்லனா மண்டபத்துக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் உலகத்துக்கே தெரியவரும். ஏற்கனவே இங்க இருந்து போனவங்க உன்னை பத்தி இந்நேரம் சொல்லியிருப்பாங்க. என்னையும் வெளியே அனுப்பிட்டா இருக்க கொஞ்ச மரியாதையும் மொத்தமா போயிரும். உனக்கு வேற வழியே இல்லை." என்றாள்.
நடப்பதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமர்ந்திருந்த செல்வகுமாருக்கு அருகில் சென்ற ராஜேஸ்வரி... "என்னங்க! இப்போ என்ன பண்றது இப்படி அமைதியா உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம். இந்த பொண்ணு சொல்ற எதுவும் உண்மை இல்லை'ன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என ஒரு தாயாய் தன் மகனுக்கு ஆதரவுக் கரம் நீட்ட..
அதை கேட்டவளோ, "என்ன சொன்னீங்க அத்தை.. உங்க பையன் என்னை காதலிக்கலையா ! நல்ல காமெடி . இதோ என் கையில இருக்க இந்த போட்டோவைப் பார்த்துட்டு அப்புறமா சொல்லுங்க. " என்று சேலையில் மறைத்து வைத்து இருந்த புகைப்படங்களை அவர்முன் வீச அதில் தேவ்வும் புதிதாக வந்தவளும் சிரித்த முகமாக கண்ணில் காதலோடு காதல் பறவைகளாய் காட்சியளிக்க... தாயின் கண்கள் அதிர்ச்சியோடு தன் மகனை நோக்கியது.
அவனும் அதை எதிர்பார்க்காததால்... மௌனமாக அவரையே பார்த்திருக்க...
"தேவ் .... போய் மண மேடையில உட்காரு. "
என்ற தாயின் வார்த்தையில் உடலில் இருக்கும் ரத்தம் மொத்தமும் உறைந்தவன் போல தன் தாயையே பார்த்திருக்க,
அண்ணனின் நிலை உணர்ந்த திவி
"அம்மா... அண்ணா அப்படி எதுவும் பண்ணி இருக்காது ம்மா. ஒரு போட்டோவ வச்சு அண்ணாவை சந்தேகப்படாத. என்ன நடந்துச்சுன்னு ஒரு வார்த்தை கேளு ம்மா." என பேசும் மகளை நிறுத்துமாறு கை அசைத்தவர்,
"இனி ஒரு வார்த்தை பேசினா உன் அம்மா உயிரோட இருக்க கடைசி நாள் இதுவா தான் இருக்கும். உன் அண்ணனை போய் உட்கார சொல்லு. ஐயரே நீங்க ஆக வேண்டியதை பாருங்கள்." என கூறிய ராஜேஸ்வரி தன் கணவன் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.
வாங்க! வாங்க ! மிஸ்டர் அக்னி சந்திர தேவ். அதான் உங்க அம்மாவே உத்தரவை கொடுத்துட்டாங்களே. வந்து ஆம்பளையா லட்சணமாய் தாலியை கட்டுங்க." என்றவளை கடும் கோபத்தில் முறைத்துப் பார்த்தவன் ஏதோ சொல்ல வர அதற்குள் முந்திக் கொண்ட அவளோ "அட எதுக்கு இப்ப இந்த முறைப்பு. தாலி கட்ட கஷ்டமா இருந்தா சொல்லுங்க நானே உங்களுக்கு கற்றேன்."என்று கர்வம் நிறைந்த கண்ணில் கண் சிமிட்டி அவனையே வெற்றிக் களிப்போடு பார்க்க...
தன் நிலைமையை நொந்தவாறு அவள் அருகில் இயந்திரமாய் அமர்ந்தான். அடுத்தடுத்து சடங்குகள் செய்து விட்டு .. அய்யர் கொடுத்த மாங்கல்யத்தை கையில் வாங்கியவன் ,
"அன்பினி சித்திரை... உன் வாழ்க்கையில இந்த நாள் ல மறந்துடாத. இனி உனக்கு ஒவ்வொரு நாளும் நரகமா தான் இருக்கும். என்ன பழி வாங்க வந்த உன்னை... உன்னோட உயிர் போகுற கடைசி நிமிஷம் வரைக்கும் சித்திரவதை பண்ணுவேன். எதுக்காக இவனோட வாழ்க்கையில வந்தோம்னு தினம் தினம்.. துடிக்க போற. சிரி இதுதான் வாழ்க்கையில நீ சிரிக்கிற கடைசி சிரிப்பு." என்றபடி அவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு முடித்தவன் குங்குமத்தை கையில் எடுத்து நெற்றி வகிட்டிலும், தாலியிலும் வைத்தான்.