Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL மர்மயோகி - Tamil Novel

அத்தியாயம் 33

கோவில் மண்டபத்தில் இருந்த ஆதித்தனும், அரிஞ்சயனும் தங்களின் இருப்பிடத்தை காலி செய்து விட்டு காட்டுக்குள் கிளம்பி விட்டனர். இருவரும் அடிக்கடி அரண்மனைக்கு போய் வந்ததால் அவர்களை பற்றி யாரும் சந்தேகிக்கவேயில்லை. தன் அண்ணனுக்காக உயர்தர மான ஒரு குதிரையை விலைக்கு வாங்கியிருந்தால் ஆதித்தன். இருவருமே குதிரையில் ஏறிகாட்டை நோக்கி பயணமானார்கள். காட்டின் எல்லையில் அவர்களை வரவேற்க காத்திருந்தான் பளியன் ஒருவன்.

" என்ன நண்பா ? நீ தான் எங்களை அழைத்து செல்ல வந்தவனா?" என்றான் ஆதித்தன்.

"ஆமாம். உங்களை பத்திரமாக அழைத்து வரச் சொல்லி தலைவரின் உத்தரவு. வாருங்கள் போகலாம்" என்றான் அவன்.

மூன்று குதிரைகளும் காட்டு பகுதிக்குள் நடை போட ஆரம்பித்தன. தன் சுற்றுபுறத்தை பார்வையிட்ட அரிஞ்சயன் " இவ்வளவு கடினமான நில பகுதியில் படை நடத்தி வருவது வெகு சிரமம், ஜெயசிம்மன் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டான் என்று நினைக்கிறேன்" என்றான் ஆதித்தன்.

வழிகாட்டி அதை கேட்டு புன்னகைத்தான். "சரியாகத் தான் சூழலை புரிந்து வைத்திருக்கிறீர்கள். நாம் செல்லும் பாதையில் கூட பாதி வழியில் குதிரையிலிருந்து இறங்கி கால்நடையாகத் தான் பயணிக்க வேண்டும். ஆனால் மிகப் பெரும் சைன்யம் இதன் வழியாக வரும் போது அத்தனை இயற்கை வளங்களும் சர்வநாசமாகி விடும் என்று நினைக்கும் போது தான் மனம் வருத்தமடைகிறது."

"இங்கேயிருந்து படைகளின் வருகையை நடமாட்டத்தை கண்காணிக்க ஏதாவது ஏற்பாடு செய்து வைத்திருக்கிறீர்களா?" என்றான் அரிஞ்சயன்

"இல்லை. அதற்கான எந்த ஏற்பாட்டையும் நாங்கள் செய்யவில்லை. அவ்வளவு பெரிய சைன்யம் இந்த காட்டுக்குள் நுழைவதை இயற்கையே காட்டி கொடுத்து விடும். இங்கே காட்டில் சிறு சலனம் ஏற்பட்டாலும் பறவைகள் பறந்து காட்டி கொடுத்து விடும். அந்நியர்களின் வருகையை கண்டால் கத்தும் ஆட்காட்டி குருவி ஓன்று போதும். ஆட்களில் நடமாட்டத்தை கண்டு கொள்ள "

"இவ்வளவு பெரிய சைன்யம் தனக்கான பெரும் உணவு பொருளோடு தான் இங்கே வரும். அவர்களால் இங்கே கொண்டு வர முடியாத ஒரே பொருள் தண்ணீர் தான். இவ்வளவு தூரம் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தாகத்தால் தவிப்பார்கள். சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சம் அவர்களின் உடலில் உள்ள நீரை உறிஞ்சி விடும். அதனால் அவர்கள் நீர் நிலைகளை தேடி ஓடியாக வேண்டும்"

"நீங்கள் சொல்வது சரிதான். இதை எங்கள் தலைவரும் யோசித்தார்.அதற்காகத்தான் வழியில் உள்ள நீர் நிலைகளில் ?"

"விசத்தை கலந்து விட்டீர்களா? அது மிகப் பெரிய பாவமாயிற்றே?"

"இல்லை. அதுவெல்லாம் குரூர மனம் படைத்த நகரவாசிகளின் வழக்கம். நாங்கள் வேட்டையாடும் விலங்குகளுக்கே கண்டிப்பான விதிமுறைகள் வைத்திருக்கிறோம். கர்ப்பமான விலங்குகளை 'குட்டி ஈன்ற தாய் விலங்குகளை நாங்கள் கொல்ல மாட்டோம். ஐந்தறிவு, நான்கறிவு பெற்ற விலங்குகளிடமே கருணை காட்டும் நாங்கள் நீர் நிலைகளில் விசம் கலக்கும் கேவலமான செயலை செய்ய மாட்டோம். இறந்து போன விலங்குகளின் உடல் பாகத்தை அந்த நீர் நிலைகளில் போட்டு வைத்திருக்கிறோம். அழுகிய மாமிசங்களின் நாற்றமடிக்கும் அந்த தண்ணீரை யாராலும் குடிக்க முடியாது"

"பரவாயில்லை. பளியர் இன தலைவனும் வியூகம் வகுப்பதில் வல்லவனாகத்தான் இருக்கிறான். சரியான காரியத்தைத் தான் செய்து வைத்திருக்கிறான். அவனது இந்த செயலை நான் மனதார பாராட்டுகிறேன்." என்றான் அரிஞ்சயன்.

"அந்த பாராட்டை அவரை சந்திக்கும் போது நேரிலேயே சொல்லிவிடுங்கள். இனி குதிரைகள் இந்த வழியில் பயணிக்க முடியாது. நாம் கால்நடையாகத் தான் பயணிக்க வேண்டும்" என்றான் வழிகாட்டி.

மூவரும் குதிரையிலிருந்து இறங்கி கரடு முரடான வழியற்ற புதர்களின் வழியாகப் பயணிக்க ஆரம்பித்தனர்.

நீண்ட நேர நடை பயணத்திற்கு பிறகு காலியான ஒரு கிராமத்தை வந்தடைந்தனர். சற்று நேரத்திற்கு முன்புதான் அங்கிருந்தவர்கள் அந்த இடத்தை காலி காலி செய்திருக்க வேண்டும் என்பதை அங்கிருந்த சூழ்நிலைகளின் மூலமாக எளிதாக புரிந்து கொண்டனர் சகோதரர்கள் இருவரும் .

"இப்போது தான் இடத்தை காலி செய்திருப்பார்கள் போல் தெரிகிறது" என்றான் அரிஞ்சயன்

"ஆமாம். சூரியன் மறைவதற்குள் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து விட வேண்டும் என்பது தலைவரின் திட்டம். அதோ மேற்கு திசையில் ஆதவன் மறையத் துவங்கி விட்டான். நாம் இனி பிசாசுக்குகையை நோக்கித்தான் பயணிக்க வேண்டும். அங்கே தான் என்னை வரச் சொல்லி உத்தரவு கொடுத்திருக்கிறார். "

"அந்த இடம் அதிக தொலைவோ? இருள் வேறு சூழ ஆரம்பித்து விட்டது.இனி கொடிய விலங்குகளின் நடமாட்டம் வேறு துவங்கி விடும். இனி கவனமாக நாம் பயணம் செய்தாக வேண்டும்"

"கவலைப்படாதீர்கள். பிசாசுக்குகை மிக அண்மையில் தான் இருக்கிறது. அது சமவெளியை ஓட்டியே இருப்பதால் நாம் குதிரைகளில் பயணம் செய்து வெகு எளிதாக அங்கே சென்று சேர்ந்து விடலாம்" என்றான் வழிகாட்டி.

அவன் சொன்னதை போலவே சற்று நேர குதிரை பயணத்தில் பிசாசுக்குகையை வந்தடைந்தனர் மூவரும்.

புற்கள் அடர்ந்த சமவெளியின் ஓரத்தில் பாறைகளின் நடுவே யாரும் எளிதில் காணமுடியாத இடத்தில் இருந்தது அந்த குகை.குகைக்கு மேலிருந்த பாறையில் காவல் பணியில் இருந்தவர்கள் மூவரையும் அடையாளம் கண்டுகொண்டனர். மர்மயோகியும் அவனது சீடனும் பிசாசு குகைக்கு வந்து சேர்ந்து விட்ட செய்தி பளியர் குலத் தலைவனின் காதுகளுக்கு கொண்டு செல்லப் பட்டது.

அவர்களை வரவேற்க பார்த்திபனும், பளியர் குல தலைவனும் குகைவாசலுக்கு விரைந்தனர்.

குதிரையிலிருந்து இறங்கிய இருவரையும் பார்த்திபனும் பளியர் தலைவனும் கட்டியணைத்து வரவேற்றனர்.

"மறைந்து கொள்ள சரியான இடத்தைத் தான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறீர்கள்" என்றான் ஆதித்தன்.

" நாளை காலை வரை தான் இது நம்முடைய தங்குமிடம் .நாளை காலை நாம் வேறிடத்திற்கு சென்றாக வேண்டும்" என்றான் பளியர் தலைவன்.

" ஏன்?"

"ஏனென்றால் அந்த காரணத்தை சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. என் ஆட்களில் சிலர் துரோகிகளாக மாறி ஜெயசிம்மனின் பக்கம் சாய்ந்து விட்டனர்" என்ற பளியர் இன தலைவன் பிங்களனுக்கும் தனக்கும் இடையே நடந்த கருத்து மோதல்களை விவரித்தான்.

அதை முகத்தில் எந்த சலனமும் இன்றி கேட்டு கொண்டிருந்தான் ஆதித்தன்.

" அவன் குலம் கெடுக்கும் கோடாரிகாம்பாக மாறி விட்டான். நாளை ஜெயசிம்மனை அவன் தான் இங்கே அழைத்து வரப்போகிறான். இந்த காட்டின் அத்துணை வழிகளும் அவனுக்கு அத்துபடி. நாம் எங்கே சென்று மறைந்தாலும் அவனால் கண்டுபிடித்து விட முடியும்."

"ஜெயசிம்மனுக்கு பயந்து நாம் பின் வாங்கி ஓடப்போவதில்லை. அவனை எதிர்த்து நாம் யுத்தம் செய்ய போகிறோம். அந்த யுத்தத்தின் முக்கிய பகடைகாய் பிங்களன் தான் "

" என்ன சொல்கிறாய் ஆதித்தா? அவனொரு இனத் துரோகி"

அதை நான் மறுக்கவேயில்லை. ஜெயசிம்மன்பிங்களன் இருக்கும் தைரியத்தில் தான் தன்னுடைய சேனைகளை வழி நடத்தி வருகிறான். அவன் காட்டின் உள்ளே வந்ததும் நாம் யுத்தத்தை தொடங்குவோம்.அதை அவன் எதிர்பார்த்தி ருக்க மாட்டான். நாம் ஓடி ஒளிவோம் என்றே அவன் நினைத்திருப்பான். அந்த சண்டையின் நடுவே பிங்களனை நாம் கொன்று விட்டாலோ இல்லை கடத்தி வந்து விட்டாலோ ஜெயசிம்மன் நிர்கதியாகி விடுவான். வழிகாட்ட ஆள் இல்லாத நிலையில் அவன் திரும்பி நாட்டிற்கு செல்லவே முயற்சிப்பான்."

"எனக்கு இன்னமும் ஒரு விசயம் புரியவில்லை. ஜெயசிம்மன் இப்படி காட்டிற்குள் நுழைந்து பார்த்திபனை தேடுவதை விட ஏதேனும் தந்திரம் செய்து பார்த்திபனை நகரத்திற்கு வரவழைத்து கைது செய்து விடலாமே?"

" அவன் பார்த்திபன் தப்பி சென்ற பதட்டத்தில் இருப்பதால் இப்படியான ஒரு சிந்தனை அவன் மனதில் தோன்றாமல் போயிருக்கலாம்"

"இப்போது மட்டும் பார்த்திபன் நாட்டிற்குள் இருந்தால் மக்களை ஜெயசிம்மனுக்கு எதிராக திருப்பி விடலாம்.அதை தடுத்து நிறுத்த ஜெயசிம்மனும் நாட்டினுள் இல்லை. அதிகாரத்தை வைத்திருக்கும் பெண்ணோ பூரண கற்பவதியாக இருக்கிறாள். "

"நல்ல யோசனைதான். இங்கேயிருந்து நாட்டிற்குள் செல்ல குறுக்குவழி ஏதாவது உண்டா?" என்றான் ஆதித்தன்.

"ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதில் அபாயம் அதிகம் உண்டு. அந்த வழியில் பலா மரங்கள் நிறைய இருப்பதால் அவற்றை தின்ன வரும் கரடிகள் நடமாட்டம் அதிகம் உண்டு. இந்த இரவு நேரத்தில் அந்த பாதையில் பயணிப்பது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத செயல்"

"ஒரு நாட்டின் அரசனாக ஆசைப்படுகிறவன் அபாயங்களை சந்தித்துத் தானாகவேண்டும். நீ என்ன சொல்கிறாய் பார்த்திபா? அபாயங்களை சந்திக்க ஆசைப்படுகிறாயா?" என்றான் அரிஞ்சயன்

" என் நண்பர்களை அபாயத்தில் விட்டு விட்டு செல்ல என் மனம் ஒப்பவில்லை. மற்ற படி அந்த கரடிப் பாதையில் பயணிக்க எனக்கு எந்த பயமுமில்லை."

"எங்களைப்பற்றி கவலைப்படாதே பார்த்திபா! இந்த நாட்டு நலனுக்காக எங்கள் இனத்தையே பலி கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இதோ அரிஞ்சயனும் ஆதித்தனும் எங்களுக்கு பக்கத் துணையாக இருக்கிறார்கள். அவர்களை மீறி எந்த அபாயமும் எங்களை நெருங்கி விடாது. நீ தைரியமாக இங்கிருந்து புறப்படு" என்றான் பளியர் குல தலைவன் -

"எனக்காக பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என்று எல்லோருடைய உயிரையும் பணயம் வைக்கிறீர்கள் .என் உயிர் உள்ளவரை இந்த நிகழ்வை நான் மறக்க மாட்டேன். வருகிறேன் நண்பர்களே " என்ற பார்த்திபன் தன்னுடைய சில நண்பர்களை அழைத்து கொண்டு உள்ளூர் வழிகாட்டி ஒருவனுடன் அங்கிருந்து கிளம்பினான். இருள் நடுவே சிறு தீப்பந்த ஒளி ஒன்று பிசாசு குகையிலிருந்து வெளியேறியது.

அதை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர் அனைவரும்
 
அத்தியாயம் 34

பார்த்திபன் வழிகாட்டி ஒருவனை அழைத்துக் கொண்டு தனக்கு நம்பகமான சில நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் போவதை பார்த்து கொண்டிருந்த ஆதித்தன் அரிஞ்சயனின் பக்கமாக திரும்பினான்." அண்ணா! இப்போது ஜெயசிம்மன் நாட்டிற்குள் இல்லை. அவன் பார்த்திபனையும் பளி இன தலைவனையும் கொல்வதற்காக வனத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். இப்போது இங்கிருந்து செல்லும் பார்த்திபனால் நாட்டு மக்களை தன் பக்கம் திருப்பி ஒரு புரட்சியை ஏற்படுத்திவிட முடியுமா? அங்கே அவனை எதிர்கொள்ள காத்திருப்பது நித்ராதேவி" என்றான்.

"உனது கேள்வியின் நோக்கம் புரிகிறது.ஜெயசிம்மனின் சிறையிலிருந்து தப்பி வந்த பார்த்திபன்ன வீரகாவியத்தின் கதாநாயகனைப் போலத்தான் மக்கள் நினைக்கிறார்கள். அதனால் அவனுக்கு நாட்டுக்குள் ஆதரவு அதிகரித்திருக்கும். அதனால் பார்த்திபன் பின்னால் நிற்க அனைவரும் முன்வருவார்கள். ஒரு பெண் இப்போது அதிகாரத்தில் இருப்பதால் அவளை வீழ்த்துவது எளிது என்ற எண்ணமும் கூட அவனுக்கு ஆதரவாக திரும்பும் "

"இனி புரட்சியை ஏற்படுத்தி வெல்வதும் வீழ்வதும் பார்த்திபனின் சாமர்த்தியத்தில் தான் உள்ளது. நாம் அனுப்பிய ஓலை ரணதீரனின் கைகளுக்கு கிடைத்திகுந்தால் அவன் இந்நேரத்திற்கு மலையமானை தன்னாட்டு வழியே அனுமதித்திருக்க மாட்டான்."

"இன்று இரவு நாம் அனைவரும் நிம்மதியாக உறங்குவோம். நாளை காலை நாம் என்ன செய்வதென்று திட்டமிடுவோம்" என்றான் அரிஞ்சயன்

சகோதரர்களை பின்பற்றி அனைவரும் குகைக்குள் சென்றனர். .

அதே நேரம் காட்டுக்குள் முகாமிட்டு தங்க துவங்கியிருந்தனர் ஜெயசிம்மனின் ஆட்கள் .தன்னுடைய படை வீட்டில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் ஜெயசிம்மன் அவனுக்கு எதிரே பணிவாக நின்றிருந்தான் பிங்களன்.

அவனை ஒரு முறை ஏற இறங்க பார்த்தவன் "பிங்களா!உன்னை நம்பித்தான் நான் இந்த காட்டில் அடி எடுத்து வைத்திருக்கிறேன். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப பளியர் இன தலைவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், பதவி மோகத்தாலும் நீ என்னுடன் இணைந்திருக்கிறாய். நீ எனக்கு உதவி செய்தால் உன் ஆசைகள் அனைத்தையும் நான் நிறைவேற்றி வைப்பேன். நீ என்னை வஞ்சிக்க நினைத்தாலோ, இல்லை துரோகம் செய்யலாம் என்று நினைத்தாலோ உன் உயிர் பறவை உடலை விட்டு பறந்து விடும். ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை செய்தான்.

" மன்னா! நான் உங்களுக்கு துரோகம் செய்ய நினைப்பேனா? என்னை நீங்கள் பரிபூர்ணமாக நம்பலாம்"

"நம்புகிறேன்.நம்மை அவர்கள் நினைத்தது போல் காட்டிற்குள் வரவழைத்து விட்டார்கள். அடுத்தது அவர்களின் வியூகம் என்னவென்று உனக்கு தெரியுமா?"

"இல்னை அரசே! எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் கடைசி நேரத்தில் கிராமத்தை காலி செய்து விட்டு காட்டிற்குள் பின் வாங்கி ஓடுவதில் தான் அவசரம் காட்டினார்கள்."

" என்படையை எதிர்க்க அவர்களால் முடியாது என்று அவர்களுக்கே மிக நன்றாக தெரியும் "

"அது உண்மைதான். ஆனால் அவ்வளவு அவசரம் காட்டினாலும் யாரோ இருவரின் வருகைக்காக பளியர் இனத் தலைவன் காத்திருந்தான்."

"யார் அவர்கள் ?"

" சொன்னால் நம்ப மாட்டிர்கள்"

"பரவாயில்லை. சொல் "

"அவர்கள் மர்மயோகிக்கும் அவரது பிரதான சீடனுக்காகவும்தான் காத்திருந்ததாக என் ஆட்கள் கூறினார்கள்"
அதை கேட்டதும் ஜெயசிம்மனின் முகம் மாறியது.

"மர்மயோகியா?" என்ற ஜெயசிம்மனின் புருவங்கள் முடிச்சிட்டன. அவர்களுக்காக பளியர் குல தலைவன் ஏன் காத்துக் கொண்டிருந்தான் என்ற கேள்வி அவனது மனதில் உதயமானது. தன்னுடைய நலம் விரும்பியான மர்மயோகி தன்னுடைய எதிரிக்கும் நண்பனாக இருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

"ஆம். அவரேதான். அவரும் அவரது சீடனும் இணைந்து தான் பார்த்திபனை மீட்க உதவி செய்தார்கள். பார்த்திபனை மீட்கும் முயற்சியில் பின்னால் இருந்து உதவியவர்கள் அவர்கள் தான். அந்த யாகம் கூட அவர்களின் நாடகம் தான் "

"எனக்கு புரிந்து விட்டது. அந்த பல்லக்கு, பரிவார நாடகமெல்லாம் ஒரு காட்டுவாசியின் மூளையில் உதிக்கக் கூடிய திட்டமாக இருக்காது என்று நான் நினைத்தேன் அது இன்று உண்மையாகிவிட்டது. ஆனால் மர்மயோகி பார்த்திபனும் பளியர் குல தலைவனுக்கும் எதற்காக உதவி செய்கிறான் என்று தான் எனக்கு ெதரியவில்லை. அது எனக்கு தெரியக்கூடாது என்று வேறு நினைத்திருக்கிறான். எல்லாமே மர்மமாக இருக்கிறது." என்றான் ஜெயசிம்மன் .

"அவர்கள் பார்த்திபனை மன்னனாக்க நினைக்கிறார்கள். அதற்கு தடையாக இருக்கும் உங்களை அகற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம் என்று நினைக்கிறேன்" என்றான் பிங்களன்.

"அவர்களின் பூர்வாசிரம வரலாற்றை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவற்றை தெரிந்து கொள்ளவும் இப்போது நேரமில்லை. அவர்கள் இப்போது எங்கே இருப்பார்கள் என்று நினைக்கிறாய்?"

"சர்வ நிச்சயமாக சொல்வேன். அவர்கள் இப்போது நாட்டில் இல்லை. காட்டில் தான் இருக்கிறார்கள் என்று "

"அப்படியானால் நல்லது. அவர்கள் நாட்டிற்குள் இருந்தால் நித்ரா தேவிக்கு ஏதேனும் தொல்லைகளை கொடுக்க நேரலாம். ஏற்கனவே இல்லாத ஆளைக் காட்டி பார்த்திபனை மீட்டு சென்ற திறமைசாலிகள் அவர்கள். அவர்கள் இப்போது காட்டிற்குள் இருப்பது கூட நமக்கு அனுகூலம் தான். எல்லா மாங்காய்களையும் ஓரே கல்லில் வீழ்த்தி விடுவதைப் போல் எல்லா எதிரிகளுக்கும் ஓரே இடத்தில் சமாதி கட்டி விடலாம்" என்றான் ஜெயசிம்மன் .

"அனைவரையும் ஒரே இடத்தில் மடக்கி பிடிக்க வேண்டியதில்லை. யாராவது ஒருவர் நம்மிடம் அகப்பட்டாலும் போதும். அவனை பணயமாக்கி மற்றவர்களை பிடித்து விடலாம். நண்பர்களுக்காக உயிரையே கொடுப்பார்கள் அவர்கள் " என்றான் பிங்களன்..

"அதீதமான அன்பும், பாசமும் பலவீனமான குணங்கள்" என்று புன்னகைத்தான் ஜெயசிம்மன்

அதே நேரம் காட்டு வழிப் பாதையில் பார்த்திபன் பயணமாகி கொண்டிருந்தான். அவனும் அவனது குழுவும் வழி காட்டியின் துணையோடு காட்டு பகுதியில் மெல்ல மெல்ல முன்னேறி கொண்டிருந்தனர்.

"பார்த்திபா' எனக்கு இந்த புரட்சி செய்யும் யோசனையே பிடிக்கவில்லை. அதுவும் ஒரு பெண்ணை எதிர்த்து " என்றான் சகாக்களில் ஒருவன்.

" என்ன செய்வது நண்பா ? எனக்கும் இந்த யோசனையில் பிடித்தம் இல்லைதான். ஆனால் சகோதரர்கள் இருவரும் இதை கண்டிப்பாக சொல்லும்போது என்னால் தட்டி கழிக்க முடியவில்லை. ஏற்கனவே ஒரு முறை அவர்களுக்கு தெரியாமல் நான் செய்த காரியம் சித்தி பெறவில்லை. அத்துடன் எனக்கு சிறைவாசத்தையும் பெற்று தந்து விட்டது. அதனால் தான் மறு பேச்சு பேசாமல் அவர்களின் பேச்சுக்கு கீழ்படிந்தேன்." என்றான் பார்த்திபன்.

"அவர்களின் பேச்சை கேட்டு நடப்பதை தவிர வேறு மார்க்கமும் நமக்கு இல்லை என்பது தானே உண்மை?"

"இப்போதைக்கு அவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதுதான் உசிதமான காரியம் "

வழிகாட்டி" பாதையில் பார்த்து பயணம் செய்யுங்கள். ஏராளமான அட்டை பூச்சிகள் உங்கள் ரத்தத்தை உறிஞ்ச தயாராக இருக்கின்றன. அப்படி அவை உங்களை கடித்து விட்டால் பயந்து விடாதீர்கள். என்னிடம் நிறைய புகையிலை இருக்கிறது. அதை வாயில் போட்டு குதப்பி பூச்சியின் மீது துப்பி விடுங்கள். அவை புகையிலையின் எரிச்சல் தாளாமல் உங்கள் உடவை விட்டு விலகி விடும்" என்று காத்திருக்கும் அபாயத்தை எடுத்து கூறி எச்சரிக்கை செய்தான்.

அந்த சிறு குழு இருட்டின் நடுவே தீப்பந்தத்தின் துணையோடு மெல்ல மெல்ல முன்னேறி கொண்டிகுந்தது. தீப்பந்த வெளிச்சத்தை பார்த்த மான்களும், முயல்களும் கண்களை இமைக்க மறந்து சற்று நேரம் நின்று விட்டு பிறகு குதித்தோடி மறைந்தன.

எல்லோருக்கும் முன்பாக வழிகாட்டியபடி சென்று கொண்டிருந்த வழிகாட்டி திடிரென நின்றான். அவனுக்கு பின்னால் சென்றவர்கள் அவன் மீது முட்டி கொண்டு நின்றனர். "என்னாயிற்று? ஏன் இப்படி நிற்கிறீர்கள்?" என்றான் பார்த்திபன்

"ஓன்றுமில்லை. சற்று நேரத்திற்கு முன்பாக சிறுத்தை ஓன்று இந்த வழியாகப் பயணம் செய்திருக்கிறது. அதன் காலடிதடம் தான் இது "

"அதனால் அபாயம் ஓன்றும் நேராதே?"

"இந்த இருளில் அந்த விலங்கு எங்கே ஓளிந்து கொண்டிருக்கிறதென்று யார் கண்டார்கள்? எதற்கும் தற்காப்பிற்காக ஆயுதங்களை தயாராக கையில் எடுத்து கொள்ளுங்கள். பேசுவதை நிறுத்தி விடுங்கள். எந்த சிறு சலசலப்பு எழுந்தாலும் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமாக தனியாக இருக்காதீர்கள், "என்றான் வழிகாட்டி.

அவர்களின் வேகம் வெகுவாக குறைந்தது .அனைவரும் கையில் ஆயுதங்களுடன் கவனமாக முன்னேறிைனர்.வழியில் எதையோ மிதித்த வழி காட்டியின் முகம் மலர்ந்தது. "அது என்ன?" என்றான் சகாக்களில் ஒருவன்.

"அது புலியின் மலம் "

" என்ன புலியின் மலமா?" என்று மூக்கை பொத்தினான் அவன்.

"அருவெறுக்காதே நண்பா. இந்த பொருள் இப்போது மிகவும் தேவை " என்ற பதகன் ஒரு துணியில் அதை எடுத்து முடிந்து கொண்டான்.

"இது அந்த புலியின் மலமாகத் தான் இருக்க வேண்டும். அதைப் பார்க்கும் போது எனக்கே வயிற்றை கலக்குகிறது"

"எதற்கும் நான் உன்னை விட்டு இரண்டடி தள்ளியே வருகிறேன். நாற்றம் குடலைப் பிடுங்குகிறது"

நண்பர்கள் தங்களுக்குள் கேலியாக பேசிக் கொண்டிருந்தனர். பதகன் திடிரென தன் உதடுகளில் கையை வைத்து பேச வேண்டாம் என்று சைகை செய்தான். அவனுக்கு முன்னால் இருந்த புதரிலிருந்து சிறு சலசலப்பு எழுந்தது. நண்பர்கள் பேச்சை மறந்து மவுனமானார்கள்.

புதரிலிருந்து வெளிவந்த நான்கைந்து கரடிகள் அவர்கள் வழியை மறித்தபடி நின்று கொண்டிருந்தன. தீவட்டி வெளிச்சத்தை பார்த்த கரடிகள் பலத்த குரலில் உறு மத்தொடங்கின.

அந்த சிறு குழு மூச்சு விடவும் மறந்து போய் திகைத்து நின்றது.
 
அத்தியாயம் 35

கதிரவன் அதிகாலையில் கிழக்கில் உதிக்க ஆரம்பித்தான். விடிய விடிய ஆலோசனைகளில் ஈடுபட்டுகளைத்திருந்த ஆதித்தனும், அரிஞ்சயனும், பளியர் இனத் தலைவனும் எழுந்து கொண்டனர். அவர்கள் மிகவும் சொற்ப நேரமே உறங்கியிருந்தனர்.

குகை மெல்ல மெல்ல பரபரப்படைய ஆரம்பித்தது. மலை வாசிகளிடம் காலையில் உணவு உண்ணும் பழக்கம் இல்லாததால் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். மலைவாழ் மக்களின் தலைவனான பளியர் தலைவன் தன்னுடைய ஆட்களை சிறு சிறு குழுவாக பிரித்து நிறுத்தினான். அவர்களுக்கு தலைவனாக ஒருவனை நியமித்தவன் அவர்களை காட்டில் உள்ள தேன்கூடுகளை ராணி தேனீக்களுடன் எடுத்து வர உத்தரவிட்டான். பிசாசு குகைக்கு வரும் சமவெளி பகுதிகளில் இரண்டடி நீளமுள்ள குழிகள் தோண்டப்பட்டு அவற்றின் உள்ளே சேகரித்து கொண்டு வரப்பட்ட தேன்கூடுகளை வைத்து அவற்றின் மேல் காய்ந்த புற்களை பரப்பி மண்ணை கொண்டு மூடினார்கள்.

வெறும் கண்களில் பார்க்கும் போது குழிகளோ மூடப்பட்ட புது தடயங்களோ தெரியாமல் அந்த சமவெளி பகுதி பழைய தோற்றத்திலேயே இருப்பது போல் காணப்பட்டது. சமவெளி பகுதியில் நடந்து வரும் ஜெயசிம்மனின் படை வீரர்கள் மூடி வைக்கப்பட்ட அந்த குழிகளில் தங்கள் கால்களை விட்டு இடறி விழுந்தால் போதும் உள்ளே இருக்கும் தேனீக்கள் ஆக்ரோசத்துடன் வெளியேறி அவர்களை கொட்டத் துவங்கி விடும். அப்படி அவர்கள் சிதறி ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருந்தனர்.

தங்களின் தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றை செய்து முடித்தவர்கள் கனமான மரத்துண்டுகளை கயிற்றில் கட்டி அவற்றின் மறு முனையை மரத்தின் வேரில் பொருத்தி வைத்திருந்தனர். ஓடி வரும் வீரர்களின் கால் அந்த கயிறு கட்டிய முளைகுச்சிகளில் பட்டு அவற்றை விடுவிக்கும் போது அவை விசையுடன் வீரர்கள் மீது விழும்படி செய்து வைத்தனர். குதிரைகளை வீழ்த்த இரண்டு மரங்களுக்கு இடையே வலுவான வேரை கட்டி வைத்திருந்தனர். எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டு அவர்கள் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது தூரத்தில் ஜெயசிம்மனின் படைகள் வருவதை சத்தத்தின் மூலமாக உணர முடிந்தது.

பளியர் தலைவன் சுறுசுறுப்படைந்தான். " பெண்கள், வயோதிகர்கள் , குழந்தைகள் மூவரும் இங்கிருந்து கிளம்புங்கள். உங்களை என்னுடைய சில வீரர்கள் பாதுகாப்பான பசுபதி மலைக்கு கூட்டி செல்வார்கள். கிளம்புங்கள்" என்று உத்தரவிட்டான். ஒரு சிறு குழு அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று கிளம்பியது.

அவர்களை அனுப்பி வைத்த பளியர் இன தலைவன் தன் வீரர்களை பார்த்து "தயாராகுங்கள்" என்றான்.

அடுத்த நிமிடம் வில்லிலிருந்து அம்பு மழை பொழியத் கொடங்கியது. திடிரென நிர்மலமான வானம் கருக்கத் தொடங்கியதை கவனித்த பிங்களன்" விரர்களே! அவர்கள் அம்பு மழை பொழியத் துவங்கி விட்டார்கள். கேடயத்தால் உங்கள் உடலை காத்து கொள்ளுங்கள்" என்றபடி தன் உடலை கையிலிருந்த கேடயத்தால் மறைத்து கொண்டான். சற்று நேரத்தில் அந்த பகுதி முழுக்க அம்பு மழை பொழிய ஆரம்பித்தது. தரையெங்கும் அம்புகள் மண்ணில் குத்தி நின்றன.

அதைப் பார்த்து கொண்டிருந்த ஜெயசிம்மன் தன்னுடைய குதிரை படை வீரர்களை முன்னோக்கி செல்ல ஆணையிட்டான். நாற்காற் பாய்ச்சலில் பாய்ந்த புரவிகள் மரங்களிடையே கட்டப்பட்டிருந்த காட்டு கொடிகளில் கால்கள் இடறி நிலை தடுமாறி குப்புற விழுந்தன. மரங்களின் நடுவே இருந்து திடிர் திடிரென கனமான மரத்துண்டுகள் பாய்ந்து வந்து சில வீரர்களை பலி கொண்டன.

அவற்றை ஒரு வாறு சமாளித்தபடி முன்னேறியவர்கள் சமவெளி பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

இனி எந்த தடையும் இருக்காது என்று நினைத்த ஜெயசிம்மன் "முன்னேறுங்கள்" என்று உத் தரவிட்டான்.

கையில் ஆயுதங்களுடன் வெகு வேகமாக ஓடி வந்த வீரர்கள் மூடி வைக்கப்பட்ட குழிகளில் காலை விட்டு இடறி விழுந்தனர். அந்த குழிகளில் ஏற்கனவே இருந்த தேனீக்கள் சீற்றத்துடன் வெளியே கிளம்பி கொட்ட ஆரம்பித்தன.

எதிர்பாராத இந்த தாக்குதலால் ஜெயசிம்மனின் படைகள் நிலை குலைந்தன.

அவன் தன்னுடைய படைகளை பின் வாங்க ஆணையிட்டான்.பிங்களனுடன் அவன் ஆலோசிக்க துவங்கினான்.

"நாம் மொத்தமாக கூட்டமாக இருப்பது அவர்களுக்கு தாக்குதல் நடத்த மிகவும் வசதியாக உள்ளது. நாம் சிறு சிறு குழவாக பிரிந்து கொள்வது நமக்கு நல்லது " என்றான் பிங்களன்.

"ஒரு காட்டுவாசி கூட்டம் என்னுடைய சைன்யத்திற்கு தண்ணீர் காட்டுகிறது. இத்தனைக்கும் அவர்கள் சொற்ப கூட்டம். நம்மை விட எண்ணிக்கையிலும் குறைவு ." என்று பொறுமினான்ெஜயசிம்மன் .

"எண்ணிக்கைக்கும் வீரத்திற்கும் சம்மந்தம் இல்லை மன்னரே! இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெறுவது கடினம்தான். ஆனால் முயற்சி செய்வதில் தவறில்லை."

"முடிந்த வரை மோதிப் பார்ப்போம். இல்லையென்றால் தலைநகர் திரும்புவோம். அந்த பார்த்திபனை நம் இடத்திற்கு வரவழைத்து பொறி வைத்து பிடிப்போம். ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது "

"நான் அவர்களின் இனம் தான். அவர்கள் படையெடுப்பை பார்த்து பதறி சிதறி ஓடி பதுங்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி முழு அளவிலான ஒரு யுத்தத்திற்கு தயாராக இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை."

"நீ சொன்னது போல் வீரர்களை பத்து பேர் கொண்ட தனித்தனி குழுவாக பிரித்து கவனமாக முன்னேறச் சொல் " என்றான் ஜெயசிம்மன்

பிங்களன் அவனது ஆணைப்படி வீரர்களை சிறு சிறு குழுவாகப் பிரித்தான். அவர்களின் குழுவை பார்வையிட்ட ஜெயசிம்மன்" இப்போது வெகு கவனமாக முன்னேறுங்கள் "என்று உத்தரவிட்டான்.

அவர்கள் முன்னேறுவதை தன்னுடைய குதிரையில் உட்கார்ந்தபடி ஜெயசிம்மன் பார்வையிட்டு கொண்டிருந்தான்.

அவனை சுற்றி நின்ற வீரர்களில் பிங்களனின் ஆட்களும் கலந்து நின்றிருந்தார்கள். அவர்களில் ஒருவனைப் பார்த்து பிங்களன் கண்ணை காட்டினான். அதைப் பார்த்து தலையசைத்தவன் தன் இடுப்பில் இருந்த தோல் பையை எடுத்து பிரித்தான். அதிலிருந்த நாகப் பாம்பை குதிரையின் முன் கால்களுக்கிடையே வீசினான்.

கீழே வீசப்பட்ட பாம்பு கோபத்துடன் சீறியது. அதன் சீறல் சத்தத்தை கேட்ட குதிரை தன் காலருகே பாம்பு இருப்பதை தெரிந்து கொண்டது.உடனே மிரண்ட குதிரை அங்கிருந்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. குதிரை சரிவில் இறங்கி ஓட ஆரம்பித்தபோது தாழ்வாக இருந்த ஒரு மரக்கிளை ஜெயசிம்மனின் தலையில் மோதி அவனை வீழ்த்தியது. தலையில் அடிபட்ட ஜெயசிம்மன் தரையில் மயங்கி சரிந்தான்.

"அய்யோ! அரசர் காயம் பட்டு விட்டார்" என்றபடி ஓடிச் சென்ற பிங்களன் ெஜயசிம்மனின் தலையை தூக்கினான். அனைவரும் அவனை நெருங்கிய போது அதிர்ந்தனர்.ஜெயசிம்மனின் கழுத்தில் குறுவாள் ஓன்றை அழுத்தி பிடித்திருந்தான் பிங்களன்.

"ஆயுதங்களை கீழே போடுங்கள். இல்லையென்றால் இவனது உயிர் தப்பாது" என்றான் பிங்களன் கண்டிப்பான குரலில்.

எதிர்பாராத இந்த நிகழ்வால் அனைவரும் திகைத்து நின்றனர்.
 
அத்தியாயம் 36

கரடிகள் கூட்டம் ஒன்று தங்களை சுற்றி சூழ்ந்ததும் பார்த்திபனின் நண்பர்கள் திகைத்து போனார்கள். ஆனால் அவர்களை அழைத்து வந்த வழிகாட்டியோ எந்த பயமும் இன்றி இதெல்லாம் வழக்கமான செயல்தானே என்பது போல் இயல்பாக காணப்பட்டான்.

'என்ன நண்பா ?நாம் இப்போது இறந்த பிணங்களை போல் நடிக்க வேண்டுமா?" என்றான் பார்த்திபன்

"அது நல்ல உத்திதான். ஆனால் அது இங்கே பயன்படாது. இதற்கு வேறு ஒரு உபாயம் உள்ளது"

" என்ன அது?"

"என்னிடம் உள்ள புலி மலத்தை பகிர்ந்து நாம் அனைவரும் பூசிக்கொள்வது தான் இப்போது இருக்கும் ஒரே வழி "

" என்ன சொல்கிறாய் நீ?"

"புலி தான் நேரில் வர வேண்டும் என்பதில்லை. புலி நடமாட்டம் இருந்தாலே போதும்.கரடிகள் அந்த வழியிலிருந்து விலகி விடும். இப்போது நம் மீது வீசும் புலி மலத்தின் வாசம் அவற்றை விலக செய்யும் "

"வாசமல்ல நண்பா. நாற்றம் என்று கூறு"

"உலகின் விலை மதிப்பு மிக்க வாசனை திரவியம் உயிர் தான் அதை காப்பாற்ற இப்போது இந்த நாற்றம் தான் உதவ போகிறது "

இப்போது அவர்களுக்கு அவன் பேச்சை கேட்பதை தவிர வேறு வழியில்லை. அனைவரும் அவனிடம் இருந்த புலி மலத்தை பகிர்ந்து உடலில் பூசிக் கொண்டனர். அவன் சொன்னது போலவே அதன் வாசனையை நுகர்ந்த கரடிகள் வழியிலிருந்து விலகி மறைந்தன.

இருந்த ஒரே இடையூறும் விலகிய பிறகு அந்த குழுவின் வேகம் அதிகரித்தது.கிழக்கே சூரியன் உதிக்கும் போது அவர்கள் விஜயபாகுவின் மாளிகைக்கு வந்து சேர்ந்தனர்.அதிகாலையில் கதவு தட்டப்படும் சத்தத்தை கேட்டு கதவை திறந்த விஜயபாகு பார்த்திபனை பார்த்ததும் அன்புடன் தழுவிக் கொண்டான்.

பார்த்திபன் நகரத்திற்குள் வந்து விட்ட சேதி மின்னலை போல் பரவத் ெதாடங்கியது. ஜெயசிம்மனின் படையெடுப்பிற்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டு நகரத்திற்குள் நுழைந்த பார்த்திபனின் செயல் மிக பெரிய சாகசமாக பார்க்கப்பட்டது.

அவனுக்கான ஆதரவு மக்களிடம் அதிகரிக்க ஆரம்பித்தது. ஜெயசிம்மனின் பிடியிலிருந்து விடுபட இதை விட நல்ல நேரம் இனிவாய்க்காது என்பதை அனைவருமே உணர்ந்திருந்தனர்.ஜெயசிம்மன் காட்டில் அகப்பட்ட நிலையில் நாட்டை ஒரு பெண் ஆளும் சூழலில் ஆட்சி மாற்றத்தை எளிதில் ஏற்படுத்திவிட முடியும் என்று அனைவரும் நினைக்க ஆரம்பித்தனர்.

இதற்காகவே காத்திருந்தது போல் மக்கள் எழுச்சி தன்னால் எழஆரம்பித்தது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை முன்பாக எதிர்பார்த்து கொண்டிருந்த விஜயபாகு ஏராளமான ஆயுதங்களை வாங்கி மறைத்து வைத்திருந்தான். இப்போது அவற்றை தாராளமாகவே மக்களுக்கு வினியோகம் செய்தான்.

ஜெயசிம்மன் இல்லாத நிலையில் நித்ராதேவியை நம்பி களமிறங்க விரும்பாத அரசாங்க தரப்பு ஆட்கள் அனைவரும் அணி மாற ஆரம்பித்தனர். ஒவ்வொரு இடமும் பார்த்திபனிடம் எளிதாக வீழ்ந்துகொண்டிருந்தன.

பார்த்திபன் வெகு தயக்கத்தோடு தான் தன் ஆட்களுடன் அரண்மனைக்குள் நுழைந்தான். அங்கே அவனை எதிர்க்க யாருமே இல்லை. எல்லோரும் நித்ராதேவியை அனாதரவாக கைவிட்டு ஓடிப் போயிருப்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான்.

அவன் அந்தப்புரத்திற்குள் நுழைந்த போது மஞ்சத்தில் நித்ராதேவி பிரசவ வலியால் துடித்து கொண்டிருப்பதை பார்த்தான். அவன் கையிலிருந்த வாள் தானாகவே கீழே விழுந்தது.

ஓடிச் சென்று அவளை தாங்கியவன்" பயப்படாதே பெண்ணே! நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். வயிற்று பிள்ளையோடு என் சகோதரியை கொன்ற உன் கணவனை போல் நான் கொடியவனல்ல. யார் அங்கே ?அரண்மனை வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள்"

" என் கணவருக்கு என்னாயிற்று? " என்றாள் நித்ராதேவி.

உயிர்போகும் வலியிலும் தன் கணவனை பற்றி விசாரிக்கும் அவளது அன்பில் மனம் நெகிழ்ந்து போனான் பார்த்திபன். மனைவி விசயத்தில் ஜெயசிம்மன் நிறைய புண்ணியம் செய்திருக்கிறான் என்று நினைத்த பார்த்திபன் "கவலைப்படாதே சகோதரி. அவனது உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது" என்றான்.

அரண்மனை வைத்தியர் வந்து சேர்ந்ததும் சில சேடிப் பெண்களை வரவழைத்து துணைக்கு இருக்கச் செய்தவன் அங்கிருந்து வெளியேறினான்.

" இவ்வளவு எளிதில் அதிகார பறிப்பு நடக்கும் என்று நான் நினைத்து கூடப் பார்க்கவில்லை." என்றான் விஜயபாகு.

"இன்னும் ஆபத்து முழுதாக நம்மை விட்டு விலக வில்லை. ஜெயசிம்மன் முதல் ஆபத்து. இரண்டாம் ஆபத்து மலையமான்.இந்த இரண்டு ஆபத்துகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்"

"ஜெயசிம்மனை பற்றி நமக்கு கவலையில்லை. அவனுக்கு நகரத்தில் இருந்துதான் உணவு காட்டுக்குள் போகிறது. அந்த உணவு சங்கிலியை நம் ஆட்கள் துண்டித்து விட்டார்கள். காட்டில் வாழும் கலையை அவன் அறிந்ததில்லை. பளியர்களுக்கும் நமக்கும் இடையில் வகையாக மாட்டிகொண்டான் அவன். அடுத்தது மலையமான் அவனை ரணதீரன் தடுத்து நிறுத்தியிருக்கிறான். ஆனால் வெகு நாட்கள் அதை செய்ய முடியாது"

"ஜெயசிம்மன் இப்படி அகப்பட்டு தவிப்பதை மலையமான் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான் என்றா நினைக்கிறாய்?"

" சொந்த மருமகன் வேறு. தன் மகளை காப்பாற்றவாவது அவ இங்கே வந்து சேருவான்."

"அவனை எப்படி சமாளிப்பது என்று தான் நான் யோசித்து கொண்டிருக்கிறேன்"

அதே நேரம் காட்டில்

பிங்களன் பணயக் கைதியாக ஜெய சிம்மனை பிடித்து வைத்து கொண்டு அனைவரையும் மிரட்டி கொண்டிருந்தான். அவனது தோழர்களில் ஒருவன் தகவல் சொல்லபளியர் இனத் தலைவனிடம் வந்து சேர்ந்தான்.

"இந்த துரோகி எதற்காக இங்கே வருகிறான்!?" என்றான் பனி இன தலைவன்.

" அவன் துரோகி யல்ல .நம்முடைய நண்பன் தான்" என்றான் ஆதித்தன்.

" என்ன சொல்கிறாய் நீ?"

"பிங்க ளனை உனக்கு எதிராக திருப்பி விட்டது நான் தான். அவன் தான் இப்போது ஜெயசிம்மனை கத்தி முனையில் சிறை பிடித்திருக்கிறான்." என்று புன்னகைத்தான் ஆதித்தன்.

"அவர்கள் உனக்கு எதிராக துரோகிகள் போல நடித்தார்கள். அவர்களை ஜெயசிம்மன் முழுதாக நம்பினான்.விளைவு நம் கை ஓங்கி விட்டது. அவன் வீழ்ந்து விட்டான்"

"நீங்கள் சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லை."

"பிங்களன் தலைவனுக்கான தகுதியை உடையவன். தன் மக்களை காப்பாற்ற அவனுக்கு இதை தவிர வேறு வழி இருக்கவில்லை"
"நினைத்து பார். பெரும் சைன்யத்துடன் நம்மை தேடி வனத்திற்குள் வரும் அவனை நம்மால் அலைகழிக்க முடியுமே தவிர தவிர்த்து கொள்ள முடியாது. நாம் அவன் கைக்கு அகப்படவில்லை என்ற கோபத்தில் அவன் இந்த வனத்தையே தீ வைத்து அழிக்கவும் நினைக்கலாம். உங்களை மட்டுமல்ல இயற்கையையும், வன விலங்குகளையும் காப்பாற்ற எனக்கு வேறு வழி ெதரியவில்லை. ஜெயசிம்மன் வனத்திற்குள் நுழைய சரியான ஆளைத் தேடுவான் என்று யூகித்தேன். அதனால் தான் பிங்க ளனை உனக்கு எதிராக பேச வைத்து துரோகியாக நடிக்க வைத்தேன். என்னுடைய யுக்தி பலித்து விட்டது. எதிரிக்கு எதிரி நண்பன் என்று நினைத்து பிங்க ளனை ெஜயசிம்மன் தன்னுடன் சேர்த்து கொண்டான் "

" இதை நீங்கள் என்னிடம் சொல்லி விட்டே செய்திருக்கலாம்"

"அரசின் ஒற்றர்கள் எங்கெங்கே ஊடுருவி இருப்பார்கள் என்று யாருக்கு தெரியும் "

"பேசிக் கொண்டிருந்தது போதும். வாருங்கள்.பிங் களனின் உதவிக்கு போகலாம்"

ஆதித்தனின் சிறு படை தைரியமாக ஜெயசிம்மனை நோக்கி நடை போட்டது.

பளியர் இனத் தலைவனை பார்த்த பிங்களனின் முகம் மலர்ந்தது.

"என்னை மன்னித்துவிடுங்கள் தலைவரே! நம் மக்களை காப்பாற்ற எனக்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை."

"உன்னை தவறாக நினைத்ததற்கு நீ தான் என்னை மன்னிக்க வேண்டும் பிங்களா. எனக்கு பிறகு தலைவர் பதவிக்கு தகுதியானவன் நீதான். என்னை விடவும் மக்களை நீ அதிகம் நேசிக்கிறாய். நீயும் உன் நண்பர்களும்ேசர்ந்து நம் இனத்தையும் வனத்தையும் காப்பாற்றி விட்டீர்கள் "

பளியர்கள் ஜெயசிம்மனின் ஆட்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து நிராயுதபாணியாக்கினார்கள்.

ஜெயசிம்மன் கண் விழிக்கும் தருணத்திற்காக அனைவரும் காத்திருந்தனர்.
 
அத்தியாயம் 37

ரணதீரன் கோவில் விசேசத்தை காரணம் காட்டி தன் படைகளை நாட்டை கடக்க அனுமதிக்காததால் மலையமான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தான். காப்பு கட்டிய பிறகு நாட்டை விட்டு யாரும் வெளியேறவும் கூடாது. உள்ளே வரவும் கூடாது என்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருவதை அவனும் அறிவான். நிறை மாத கர்ப்பிணியான தன் மகளை தனியாக விட்டு விட்டு தன்னுடைய மருமகன் எதிரியை தேடி வனத்திற்குள் சென்றதை மலையமான் சற்றும் ரசிக்கவில்லை. அவளின் உதவிக்கு தன்னால் போக முடியாத மன உளைச்சல் அவனை மயங்கி விழவைத்தது.

மயங்கி விழுந்த அவனை காண அரண்மனை வைத்தியர் அமுதவாணர் விரைந்து வந்தார். அவனது நாடியை பிடித்து பார்த்து உடல்நிலையை சோதித்து பார்த்தவர்" எதையும் நினைத்து உங்களை குழப்பி கொள்ளாதீர்கள். மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள், "

'அது எப்படி முடியும்? என் மகள் பூரண கர்ப்பவதியாக தனியாக இருக்கிறாள். அவளுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் அற்ப ஆயுளில் மடிந்து விட்டன. அந்த குழந்தையை நான் பார்த்தே யாக வேண்டும்"

"பதட்டம் வேண்டாம். தவறாக எதுவும் நடந்து விடாது. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் "

"அப்படித்தான் நானும் நினைத்தேன்.என் பேரப்பிள்ளைகளை பார்த்து விட்டு தலைக்கு மேல் போட்டு பிடித்து அவர்களின் பொக்கை வாய் சிரிப்பை ரசித்து விட்டு வந்த சில நாட்களில் அவர்கள் இறந்த செய்தி வந்து சேர்கிறது .பிறகு எப்படி நான் நல்லவற்றை எதிர்பார்ப்பது?"

" என்ன சொல்கிறீர்கள் அரசே ? உங்களின் பேரப்பிள்ளைகளை தலைக்கு மேல் தூக்கி போட்டு பிடித்தீர்களா?"

"ஆம்"

"நான் சொல்வதை நினைத்து கோபப்படாதீர்கள். உங்கள் பேரப்பிள்ளைகளின் சாவுக்கு நீங்கள் தான் காரணம்"

மலையமான் திகைத்து நின்றான். அவனது உடலும் குரலும் நடுங்கியது. "வைத்தியரே! நீர் என்ன சொல்கிறீர்கள்?"

"நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் மன்னா. பிறந்த குழந்தையின் மண்டையோடு மிருதுவானது. நீங்கள் குழந்தையை உயரமாக தூக்கி போட்டு பிடிக்கும் போது மூளையில் இருக்கும் மெல்லிய ரத்த குழாய்கள் பாதிப்படையும்.அது மரணத்தில் கொண்டு போய்விடும். எனக்கென்னவோ நீங்கள் தூக்கி போட்டு குழந்தையை கொஞ்சியதால் தான் மரணம் சம்பவித்து இருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது."

"வைத்தியரே! நீர் சொல்வதை என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என் பேரப்பிள்ளைகளின் மரணத்திற்கு நானே காரணமாக இருந்து விட்டேன் போலிருக்கிறதே? நான் ஒரு கொலைகாரன் இரண்டு அப்பாவி குழந்தைகளை கொன்றவன். இந்த விசயம் என் மகளுக்கு தெரிந்தால் அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்.? நான் எப்படி அவள் முகத்தில் விழிப்பேன்? எனக்கு மன்னிப்பே கிடையாது. நான் ஒரு பாவி" என்று அழுது புலம்பிய மலையமான் படுக்கையில் சரிந்து விழுந்தான்.

அதை கண்டு அதிர்ச்சியடைந்த அமுதவாணர் "என்னை மன்னித்து விடுங்கள் மன்னா, என் வைத்திய சாஸ்திர அறிவை உடல் நிலை பலவீனமான உங்களிடம் காட்டியது மிகப் பெரிய தவறு. தயவு செய்து மன அமைதி கொள்ளுங்கள்." என்ற அமுதவாணர் மலையமானின் கையை பிடித்தார். மலையமானின் நாடி நின்று போயிருந்தது.

"அய்யோ மன்னா! உங்கள் சாவுக்கு நானே காரணமாகி விட்டேனே? "என்று கதற ஆரம்பித்தார் அமுதவாணர்.

அதே நேரம் அரண்மனையில் கண் விழித்தாள் நித்ராதேவி அவள் கண் விழிப்பதற்காக காத்திருந்த பார்த்திபன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

"கவலை வேண்டாம் சகோதரி. உன் கவலையை போக்க ஒரு வாரிசு பிறந்து விட்டது. மகாலட்சுமியின் அம்சமாக ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. உன்னோடும் உன் கணவனோடும் எனக்கு எந்த பகையும் கிடையாது. அவன் ஆட்சி செய்யும் முறை தான் தவறு. அதை மாற்றத்தான் நான் முயன்றேன்."

"அண்ணா" என்றாள் நித்ராதேவி கண்ணீருடன் .

"இந்தபிஞ்சின் முகத்தை பார்த்தாவது ஜெயசிம்மனின் மனம் மாறட்டும்"

அதே நேரம் உள்ளே வந்து வணங்கிய வீரன் ஒருவன் "ஒரு துயரமான செய்தி. மன்னர் மலையமான் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மரணித்துவிட்டார். ஜெயசிம்மன் புரட்சி காரர்களால் கைது செய்யப்பட்டு விட்டார்." என்றான்.

"மனதை திடப்படுத்தி கொள் பெண்ணே.! அடுத்தடுத்து இரண்டு துயரங்கள் உன்னை தாக்கியிருக்கின்றன. அவற்றிலிருந்து மீள உன் குழந்தை தான் உனக்கு உதவ வேண்டும். என்னுடைய நாடு எனக்கு திரும்ப கிடைத்து விட்டது. நீ ஜெயசிம்மனுடன் உன் நாட்டிற்கு திரும்பி செல்லலாம். மலையமானின் நாட்டை ஆள உன் வழியாக அவனுக்கு உரிமை கிடைத்து விட்டது."

அதே நேரம் காட்டில் தலை குனிந்து நின்றிருந்தான் ஜெயசிம்மன். அவனது பார்வை மர்மயோகியின் மீது நிலைத்திருந்தது.

"கடைசியில் நீங்களும் எனக்கு துரோகம் செய்து விட்டீர்கள்" என்றான் அவன் ஆற்றாமையுடன் .

"நாங்கள் உன் நாட்டிற்குள் நுழைந்ததே உன்னை வீழ்த்தத் தான்.அதற்காக இந்த காவி உடையை பயன்படுத்தி கொண்டோம். மக்களை துன்புறுத்தும் உன் ஆட்சியை வீழ்த்த எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை." என்றான் அரிஞ்சயன் .

" இவர்கள் யார் என்று தெரியாமல் பேசுகிறாய். இவர்கள் தான் ஆதித்தனும், அரிஞ்சயனும். அவர்கள் இறங்கிய காரியத்தில் தோல்வியடைந்ததேயில்லை." என்றான் பிங்களன்.

"பிங்களா! என்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டாய்"

"இல்லை. கத்தியை மட்டும் தான் கழுத்தில் வைத்தேன். பெரும் படையுடன் வரும் உன்னை சமாளிக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை."

"' ஜெயசிம்மா உனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. உன் மாமனாரும் மறைந்து விட்டாராம்." என்றான் பளியர் இன தலைவன்.

"உனக்கென்று ஒரு நாடு கிடைத்து விட்டது. இந்த நாட்டில் உனக்குபிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன. இப்போது இருக்கும் இந்த குழந்தையை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்றால் நீ இந்த நாட்டை விட்டு வெளியேறிந்தான் ஆக வேண்டும்"
என்றான் ஆதித்தன்.

ஜெயசிம்மனுக்கு ஆதித்தன் சொல்வது சரியென்றே தோன்றியது. முகம் தெரியாத அந்த எதிரியை தான் இன்னும் கண்டுபிடிக்க வேயில்லை. அவன் குழந்தையை கொல்ல அரண்மனையில் காத்திருக்கலாம். தன் வாரிசை காப்பாற்ற இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியேயில்லை என்று அவனுக்கு தோன்றியது. பேசாமல் இந்த நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று அவன் நினைத்தான்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ஜெயசிம்மன் தனது மனைவியுடனும் குழந்தையுடனும் மாமனாரின் நாட்டை நோக்கி கிளம்பினான். அவனை வழியனுப்பி வைத்த பார்த்திபனிடம் "அண்ணா! என் குழந்தையின் காதணி விழா உங்கள் மடியில் தான் நடைபெற வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தாள்.

பார்த்திபன் அதை புன்னகையுடன் ஏற்று கொண்டான். தேர் கிளம்பி செல்வதை பார்த்து கொண்டிருந்த பார்த்திபன் "எங்கே நமது சகோதரர்கள்?" என்றான்.

"அவர்கள் சற்று முன் தான்கள் வர் புரத்தை நோக்கி கிளம்பியிருக்கிறார்கள்," என்றான் விஜயபாகு .

"வந்த வேலை முடிந்தவுடன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடுகிறார்கள்."

"நல்லவருக்கு அடையாளம் சொல்லாமல் கிளம்புவதுதானே?"

கள்வர் புரத்திற்கான பாதையில் குதிரையை விரட்டி கொண்டிருந்த ஆதித்தன் "அந்த குழந்தைகள் எப்படி இறந்தன என்று நமக்கு தெரியவே இல்லையே?" என்றான்.

"நாம் அதை பைராகியிடம் கேட்டு தெரிந்து கொள்வோம். ஜெயசிம்மன் நல்ல தகப்பன். தன் குழந்தையை காப்பாற்றி கொள்ள நாட்டையே விட்டு கொடுத்து விட்டான்"

" எதிர்காலம் சூனியமாகும் போது நிகழ்காலத்தை விட்டு கொடுப்பது தவறில்லை.அது புத்திசாலித்தனமான முடிவு தான். பார்த்திபன் அந்த குழந்தைக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்"

"சரியான நேரத்தில் மலையமான் மறைந்தது தான் விதி "

" எல்லாமே நமக்கு சாதகமாக நடந்து முடிந்து விட்டது"

கள்வர் புரத்தின் பாதையில் இரண்டு குதிரைகள் விரைய ஆரம்பித்தன!
 

New Threads

Top Bottom