Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL மர்மயோகி - Tamil Novel

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
மர்மயோகி - Intro
ரத்னபுரியை ஆள்பவன் தீரன். அவனுடைய தம்பியான வீரன் தன் அண்ணனின் கனவுகளை நிறைவேற்றுபவன். மிகுந்த ஒற்றுமையுள்ள சகோதரர்களான இவர்களின் தங்கை நீலவேணி.சகோதரர்களை ஒழித்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறான் அத்தை மகனான ஜெயசிம்மன்.போர்களத்தில் எதிரிகளை உயிரோடு விடும் வழக்கம் சகோதரர்களுக்கு இல்லை என்பதால் தன் உயிரை காப்பாற்றி கொள்ள நினைக்கிறான்.அதற்காக நீலவேணியை காதல்வசப்படுத்தி கர்ப்பிணியாக்குகிறான் ஜெயசிம்மன்.தன் தங்கையின் கர்ப்பத்திற்கு காரணமான ஜெயசிம்மனை போரில் தோற்கடித்து அவனை சிறைபிடித்து மணமகனாக்க நினைக்கிறான் தீரன்.ஆனால் போர்களத்தில் சகோதரர்களை வஞ்சகமாக கொல்கிறான் ஜெயசிம்மன்.தனக்காக தன் அண்ணன்கள் இறந்ததை அறிந்த நீலவேணி தற்கொலை செய்து கொண்டு இறக்கிறாள்.அதற்கு முன்னால் அரசனுக்கு இனி வாரிசே நிலைக்காது என்று சாபம் கொடுக்கிறாள்.

தன் உயிர் நண்பனான தீரனை கொன்ற ஜெயசிம்மன் மீது படையெடுக்க முடிவெடுக்கிறான் உயிர் நண்பனான ரணதீரன்.ஜெயசிம்மன் ரணதீரனின் நாட்டை அடுத்துள்ள சிங்கபுரத்தின் இளவரசி நித்ரா தேவியை மணக்கிறான்.இப்போது இரு நாடுகளிடையே சிக்கி தவிக்கிறான் ரணதீரன்.மருமகனான ஜெயசிம்மன் மீது படையெடுத்தால் பெண் கொடுத்த சிங்கபுரமும் ரணதீரன் மீது படையெடுக்கும்.தன் நண்பனின் மரணத்திற்கு பழி வாங்க முடியாமல் கையறு நிலையில் தவிக்கிறான் ரணதீரன்.

நீல வேணியின் சாபத்தை காலாவதியாக்க ஜெயசிம்மன் கடவுளான சுந்தரேஸ்வரருக்கு முடி சூட்டி இனி அவரே மன்னர் தான் அவரின் சேவகன் என்று அறிவிக்கிறான்.அவனுக்கு பிறக்கும் இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து இறக்கின்றன.இதற்கு நீலவேணியின் சாபம்தான் காரணம் என்று நினைக்கும் ஜெயசிம்மன் அவளை தெய்வமாக்கி கோயில் கட்டுகிறான்.நாட்டை கடவுள் ஆள்வதால் அவனது கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்க யாராலும் முடிவதில்லை.அண்டை நாட்டு அரசர்களும் தெய்வ குற்றமாகி விடும் என்று அவன் நாட்டின் மேல் படையெடுப்பதில்லை.

தன்னை சாய்க்க யாருமேயில்லை.கடவுளே தன் பக்கம் என்று இறுமாந்து இருக்கிறான் ஜெயசிம்மன்.

இரு நாடுகளிடையே சிக்கியிருக்கும் தன்நாடு விரைவில் ஜெயசிம்மனால் கபளிகரம் செய்யப்படும் என்று அஞ்சும் ரணதீரன் ராயரின் மூலமாக கள்வர்களான ஆதித்தனையும் அரிஞ்சயனையும் வரவழைக்கிறான்.ஜெயசிம்மனை வீழ்த்த சகோதரர்கள் இருவரும் களம் இறங்குகின்றனர்.அரிஞ்சயன் வழக்கமான இளம்துறவி வேடத்திலும்,ஆதித்தன் துறவியின் பிரதான சிஷ்யனாகவும் ரத்னபுரி மண்ணில் கால் பதிக்கின்றனர்.

 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
மர்மயோகி
அத்தியாயம் 1

ரத்னபுரியின் எல்லையில் இரண்டு குதிரைகள் களைப்புடன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தன. அவற்றின் மேல் ஆரோகணத்திருந்த இரண்டு வாலிப வீரர்களும் தங்களின் குதிரையைப் போலவே வெகுவாக களைத்து போயிருந்தனர். அந்த வாலிப வீரர்களில் இளையவன் குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய தண்ணீர் குடுவையை எடுத்தான். எடுக்கும் போதே அதன் கனம் குறைவாக இருப்பதை கைகளால் உணர்ந்தவன்அதில் நீர் குறைவாகவே இருப்பதையும் இருவரது தாகத்தையும் தணிக்க அந்த நீர் போதாது என்பதையும் உணர்ந்தவனாக "அண்ணா! உனக்கு தாகம் அடிக்கிறதா?" என்று அருகில் இருந்தவனிடம் கேட்டான். நீர் அதிகமாக இருந்த போ தெல்லாம் தான் அதை குடித்துவிட்டு மீதியைதன் அண்ணனுக்கு தரும் பழக்கம் உள்ள அவன் இப்போது நீர் வேண்டுமா என்று கேட்பதிலிருந்து தம்பிக்கு தாகம் அதிகம் என்பதையும் தன்னை விட்டு விட்டு நீர் அருந்த அவன் விரும்பவில்லை என்பதையும் அறிந்து கொண்ட அண்ணன்" எனக்கு தேவையில்லை. நீயே முழு நீரையும் அருந்தலாம்" என்று தம்பிக்கு பரிபூரண அனுமதியை கொடுத்தான்.

கட்டுமஸ்தான தேகத்தை கொண்ட இளையவன் தண்ணீர் குடுவையை முழுமையாக வாயில் கவிழ்த்தான். அதிலிருந்த சொற்ப நீரும் அவன் வாயினுள் சிறு நீர்வீழ்ச்சியாக பாய்ந்தது. தண்ணீர் குடுவையை பழையபடி தொங்க விட்ட இளையவன் "நம்மிடம் தண்ணீர் இல்லை. கையிருப்பில் உணவும் இல்லை. நாம் சீக்கிரமாக அவற்றை தேடி கொள்ள வேண்டும்" என்றான்.

"பொறு. வழியில் தென்பட்ட பயணி ஒருவன் இந்த வழியில் ஒரு கிராமம் இருப்பதை கூறினானல்லவா? அந்த கிராமம் நெருங்கி விட்டதென்று நினைக்கிறேன். அங்கே நமக்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்து கொள்ளலாம்" என்றான் மூத்தவன். அவனது பதிலைக் கேட்ட இளையவன் அமைதியாக பாதையின் இரு மருங்கிலும் இருந்த இயற்கை காட்சிகளை ரசிக்க துவங்கினான். நீண்ட தூர பயணம் காரணமாக குதிரைகளின் வாயில் நுரை தழும்பி தரையில் ஓழுகி பாதையில் தனித்த அடையாளத்தை உண்டாக்கி கொண்டிருந்தது. செம்மண் புழுதி குதிரைகளின் காலில் ஏறி அவற்றின் இயற்கையான நிறத்தை மாற்றி சிவப்பு நிறமாக மாற்றியிருந்தன.

மூத்தவன் குதிரைகளைப் போல் வெகுவாக களைத்திருந்தாலும் அவனது முகத்தில் அதை வெளிகாட்டாத ஓரு புன்னகை இருந்தது. யாரும் எளிதில் நம்பும்படியான ஒரு வசீகரம் அவனது முகத்தில் குடிகொண்டிருந்தது. எதையும் ஆழமாக யோசித்து முடிவெடுப்பவன் என்பதை அவனது தீட்சண்யமான கண்கள் வெளி காட்டின. அவனுக்கு அருகில் வந்து கொண்டிருந்த இளையவனோ துடுக்கும், குறும்புத்தனமும் இணைந்த கலவையாக இருந்தான். எந்த வம்பு தும்புக்கும் போகாதவன் போல் அவனது முகம் இருந்தாலும் வருகிற வம்புகளை இரண்டில் ஒன்று பார்த்து விட அவன் எப்போதும் தயாராகவே இருந்தான்.

இருவரும் சாலையோரத்தில் இருந்த மரங்களையும் அவற்றில் இருந்த கனி பூ வகைகளையும் ரசித்தபடி மெதுவாக குதிரையில் வந்து கொண்டிருந்தனர். பாதையின் ஓரத்தில் நிறைய குதிரைகள் நின்று கொண்டிருப்பதை பார்த்த மூத்தவன் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து குதிரையின் வேகத்தை இன்னமும் குறைத்தான். குதிரைகள் நின்ற இடத்திலிருந்து உள்ளே ஓரு தோப்பு இருப்பதையும் அங்கே ஒரு கும்பல் பேசிக் கொண்டு நிற்பதை இருவரும் பார்த்தனர்.

"அண்ணா!அங்கே ஓரே கூட்டமாக இருக்கிறது. என்னவென்று பார்ப்போமா?" என்றான் இளையவன் .

"நானும் அதை கவனித்தேன். நம் குதிரைகளை இங்கேயே ஏதாவது மரத்தில் கட்டி வைத்துவிட்டு உள்ளே சென்று பார்ப்போம்" என்றான் மூத்தவன்.

இருவரும் குதிரைகளை மரத்தில் கட்டி வைத்துவிட்டு தோப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

நடக்கும் போதே வேலி ஓரத்தில் நின்று கொண்டிருந்த குதிரைகளை பார்த்த இளையவன் "இவை அரசாங்க குதிரைகள் போல் தோன்றுகின்றன. அவற்றின் முதுகில் ரத்னபுரியின் அரசாங்க சின்னங்கள் சூட்டு கோலால் பதியப்பட்டிருப்பதை என்னால் இங்கிருந்தே பார்க்க முடிகிறது."

"அப்படியானால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களிடம் நாம் எந்த வம்பு தும்பும் வைத்து கொள்ள கூடாது."

"நாமாக வம்பிற்கு போவதில்லை. வந்த சண்டையை விடுவதில்லை. எல்லாமே அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறது."

"சரியாகச் சொன்னாய். இன்று யாருடைய ராசியில் சந்திராஷ்டமம் இருக்கிறதென்று பார்த்து விடுவோம்" என்றான் மூத்தவன்.

புதிதாக இரண்டு பேர் தோப்பினுள் நுழைவதை பார்த்த மொத்த கூட்டமும் பேசுவதை நிறுத்திவிட்டு அமைதியானது.யார் இந்த புதியவர்கள் என்பது போல் எல்லோரும் தங்களையே பார்ப்பதை உணர்ந்த இளையவன் "நாங்கள் இந்த நாட்டிற்கு புதியவர்கள். இங்கே என்ன நடக்கிறதென்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?" என்றான்.

" உன் வேலையை பார்த்துக் கொண்டு உன் வழியே செல். இது அரசாங்கத்தின் பிரச்சனை " என்றான் காவலர் தலைவன் போலிருந்தவன்.

"அவர்களிடமே நியாயம் கேட்போம். மரத்திலிருந்து இளநீரும்,பனை மட்டைகளும் காற்றடித்து தானாகவேகீழே விழுந்து கிடந்தால் அதற்கும் வரி கேட்கிறார்கள் தம்பி. இப்படி ஒரு அநியாயத்தை வேறு எங்காவது கேட்டதுண்டா?" என்றான் தோட்டத்தின் உரிமையாளன்.

"இதென்ன விந்தை? இப்படி ஒரு அராஜகத்தை நான் வேறு எங்குமே பார்த்ததில்லையே?" என்றான் மூத்தவன்.

"எங்கள் நாட்டை தூய்மையாக வைத்திருக்க மன்னர் போட்ட உத்தரவு அது.யார் குப்பை போட்டாலும் அதன் எடைக்கு தகுந்தபடி வரி செலுத்தியாக வேண்டும் என்பது மன்னரின் கடுமையான உத்தரவு" என்றான் காவலர்களில் ஒருவன்.

"அய்யா. அது தேவையில்லாமல் குப்பை போடுபவர்களுக்காக கொண்டு வரப்பட்ட சட்டமாக இருக்கலாம். தானாகவே கீழே விழும் இயற்கை பொருட்களுக்கு அவை பொருந்தாது." என்றான் இளையவன்.

"உனக்கு ஓன்றும் தெரியாது. நீ வாயை மூடிக் கொண்டு அமைதியாக இரு.வெளி நாட்டை சேர்ந்தவர்களிடம் நீ நம் மன்னரின் சட்டத்தை குறை கூறி பிலக்கணம் வைத்து நம் நாட்டின் நற்பெயரை கெடுத்த குற்றத்திற்காகஇந்த நிமிடத்திலிருந்து நீ தேசவிரோதியாகிறாய்" என்றான் காவல் படை தலைவன் தோட்டக்காரனை பார்த்து.

" என்ன? நான் தேசவிரோதியா?" என்று அதிர்ச்சியடைந்தான் தோட்ட உரிமையாளன்.

"இளநீர் காற்றடித்து விழுந்ததற்கெல்லாம் கைதா?இது அநியாயம் " என்றான் இளையவன்.

" எங்கள் நாட்டு சட்டத்தை குறை கூறியதுடன் அநியாயம் என்று விமர்சனம் செய்த குற்றத்திற்காக உங்கள் இருவரையும் நான் கைது செய்ய உத்தரவிடுகிறேன்" என்றான் காவல் படை தலைவன்.

"இதற்கு மேல் நாம் வாயை திறந்து கொட்டாவி விட்டாலும் அதையும் குற்றத்தில் சேர்த்து கொள்வான் போலிருக்கிறதே?" என்றான் மூத்தவன்.

" அதிகப் பிரசங்கி. திமிராக வா பேசுகிறாய்?" என்ற காவல் படை தலைவன் தன் கையில் சுற்றிவைத்திருந்த நீளமான சவுக்கை கீழே விட்டு ஒரு சொடுக்கு சொடுக்கினான்.

"சந்திராஷ்டமம் யாருக்கென்று இப்போது தெளிவாக தெரிந்து விட்டது" என்றான் இளையவன்.

அவன் தன் நீளமான சவுக்கை சுழற்றும் முன்பாகவே எங்கிருந்தோ வந்த ஒரு குறுவாள் அவன் கையில் மின்னல் வேகத்தில் பாய்ந்தது.

அனைவரும் கத்தி வந்த திசையில் பார்த்தனர். அங்கே பாதையின் நடுவே குதிரையில் ஓருவன் அமர்ந்திருந்தான். அவனது கையில் மற்றோரு குறுவாள் எறிய தயார் நிலையில் இருந்தது.

கூட்டம் மொத்தமும்" பார்த்திபன் " என்றது.

"அவனை பிடியுங்கள்" என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டான் காவல் தலைவன். அவனை பிடிக்க நகர்ந்த வீரர்களை வழிமறித்தனர் சகோதர்கள் இருவரும் .

"எங்களை தாண்டி சென்று விட்டால் என் சொத்து முழுவதும் உனக்கே" என்றான் இளையவன் வாளை உருவியபடி.

"மேன்மேலும் தவறு செய்கிறீர்கள்?" என்றான் காவல் அதிகாரி.

"அவர்களை தடுக்க வேண்டாம் நண்பர்களே! அவர்களுக்கு நான் ஒருவன் போதும் " என்றான் அந்த பார்த்திபன். தன்னை நோக்கி ஓடி வந்த வீரர்களில் ஓருவனது காலை நோக்கி குறுவாளை எறிந்தான் பார்த்திபன். அவன் வலி தாளாமல் சட்டென்று நின்றதால் அவனுக்கு பின்னால் வந்த வீரர்கள் அவன் மீது மோதி விழுந்தனர்.

"முட்டாள்கள். படுத்தபடி வானத்தை பார்த்தது போதும். எழுந்து தாக்குதல் நடத்துங்கள்" என்று கத்தினான் காவல் அதிகாரி.

தன்னை சூழ்ந்து கொண்ட வீரர்களை வாளால் தேக்கி நிறுத்திய பார்த்திபன் சொற்ப நேரத்திலேயே அவர்களை துரத்தியடித்தான்.

காவல் அதிகாரி தட்டு தடுமாறி நடந்தபடி " என் கையில் காயம் ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் உன்னை பந்தாடியிருப்பேன்." என்றான்.

"அதனால் என்ன பூபதி ?உன் காயம் ஆறும் வரை நான் காத்திருக்கிறேன். நானும் நீயும் அடிக்கடி சந்திப்பவர்கள் தானே? அடுத்தமுறை என்னை பார்த்ததும் ஓடாமல் என்னை வாள் சண்டையில்வென்று காட்டேன். பார்ப்போம்" என்றான் கேலியாக,

காவல் அதிகாரி தனியாக நின்ற தன் குதிரையில் ஏறிய படி" கோழைகள் என்னை தனியாக விட்டு விட்டு ஓடிவிட்டார்கள்." என்று முணுமுணுத்தான்.

"பூபதி! அப்படியே ஓடி விடு. உன் பயந்தாங்கொள்ளி வீரர்களை நம்பி வீர சாகசங்கள் செய்ய நினைக்காதே! இந்த முறையும் உன்னை மன்னித்து தொலைக்கிறேன். போய் விடு.இன்னொரு முறை இந்த இடத்தில் உன்னை பார்த்தால் உன் உயிர் உன்னிடம் இருக்காது" என்றான் பார்த்திபன்.

"உ ன்னை நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன். முதலில் என் காயத்தை பார்க்கிறேன்"

காவல் அதிகாரி அங்கிருந்து போன பின்திரும்பி பார்த்தவன்

"அந்நியர்களே! யார் நீங்கள்?" என்றான்.

" என் பெயர் ஆதித்தன். இவர் என் அண்ணன் அரிஞ்சயன்"

" நல்லது. ரத்ன புரிக்கு உங்களை வரவேற்கிறேன். பத்திரமாக பயணம் செய்யுங்கள்" என்ற பார்த்திபன் தன் குதிரையில் சிட்டாக பறந்து மறைந்து விட்டான்.

"யார் இந்த ஆபத்பாந்தவன்?" என்றான் அரிஞ்சயன் .

"அரசனாக இருக்க வேண்டியவர்.இப்படி தலைமறைவாக இருக்கிறார்" என்றான் ஒருவன்.

சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

" இப்படி ஒரு ஆசாமி இருப்பதை ரணதீரன் நம்மிடம் சொல்லவே இல்லையே?" என்றான் ஆதித்தன்.

"அதுதான் எனக்கும் புரியவில்லை" என்றான் அரிஞ்சயன் .

இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
மர்மயோகி

அத்தியாயம் 2

சகோதரர்கள் இருவரும் பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் இதற்கு மேலும் இருப்பது உசிதமல்ல என்பதால் அங்கிருந்து தங்களின் குதிரைகளுடன் மெல்ல நழவினர். களைப்படைந்திருந்த குதிரைகளை பார்த்த அரிஞ்சயன் "ஆதித்தா! குதிரைகள் வெகுவாக களைத்திருக்கின்றன. அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம் - இல்லையென்றால்களைப்பின் மிகுதியால் குதிரைகள் மயங்கி விழுந்து விடவும் கூடும்." என்று தன் தம்பியை எச்சரித்தான்.

"அதை நானும் கவனித்தேன். இந்த கோமாளிகள் மட்டும் நம் வழியில் குறுக்கிடாமல் இருந்திருந்தால் நாமும் நம் குதிரைகளும் சற்று நேரம் இளைப்பாறியிருக்கலாம். அந்த காவல் அதிகாரியின் கெடுபிடியால் அந்த கிராம மக்கள் வேறு பயந்து போயிருக்கிறார்கள். அவர்களை மேலும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று தான் நாம் கிளம்பி வந்து விட்டோம்" என்றான் ஆதித்தன்.

"ஆமாம். யார் இந்த பார்த்திபன் ? இவனைப் பற்றி ரணதீரன் நம்மிடம் எதுவுமே சொல்லவில்லையே?"

"அதைப் பற்றித்தான் நானும் யோசிக்கிறேன் அண்ணா. ஒரு வேளை ஜெயசிம்மனின் ஆட்சிக்கு எதிராக இந்த பார்த்திபன் கிளம்பி இருப்பானோ? என்று எனக்கு தோன்றுகிறது."

"அந்த பெரியவர் ஜெயசிம்மனுக்கு பதிலாக இப்போது அரசனாக இருக்க வேண்டியது இந்த பார்த்திபன் தான் என்று சொன்னதை நீ கவனித்தாயா?"

"கவனித்தேன். ஆனால் அதைப் பற்றி முழுமையான தகவல்கள் எதையும் என்னால் அறிய முடியவில்லை. அந்த காவல் அதிகாரி பூபதியும் அவனது பரிவாரங்களும் அதற்கு இடையூறாக வந்து தொலைந்து விட்டார்கள். எனக்கென்னவோ இந்த பார்த்திபன் சமீப காலமாகத் தான் இந்த மாதிரி அரசுக்கு எதிரான கலகங்களில் ஈடுபட்டு வருவது போல் தோன்றுகிறது. இல்லையென்றால் இவனைப் பற்றி ராயரோ அல்லது ரணதீரனோ நம்மிடம் சொல்லி இருப்பார்கள்"

"ஆனால் ஒரு விசயத்தை கவனித்தாயா? பிரம்மராயரும் ரணதீரனும் நம்மிடம் சொன்னது போலவே கொடுமையான ஆட்சியைத் தான் ஜெயசிம்மன் நடத்தி கொண்டிருக்கிறான் என்பதை நாம் நம் கண்களாலேயே பார்த்து விட்டோம்"

" கீழே விழுந்த இளநீரையும், பனை மட்டைகளையும் குப்பையின் கணக்கில் சேர்த்து வரி விதிப்பதெல்லாம் கொடுமையின் உச்சம் "

"இது வரை நாம் எத்தனையோ எதிரிகளை சந்தித்திருக்கிறோம். அவர்கள் அனைவருமே மக்களை கசக்கி பிழிந்தவர்கள். தன் நலத்திற்காக பொது நலத்தை மறந்தவர்கள். ஆனால் இந்த ஜெயசிம்மன் வேறு மாதிரியான எதிரியாக இருக்கிறான். தன்னுடைய அரசியல் லாபங்களுக்காக மதத்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறான். இவனை வெல்வது மிகவும் கடினம்."

"அதுதான் எனக்கும் சிந்தனையாக இருக்கிறது. அருகில் இருக்கும் மலைநாட்டு மன்னன் ரணதீரன் ஜெயசிம்மனை விட படைபலத்தில் வலுவானவன். அவனாலேயே ரத்னபுரியின் மீது படையெடுக்க முடியவில்லை. வரி என்றமக்களை வாட்டி வதைக்கும் ஜெயசிம்மனின் மீது ரணதீரனுக்கு தீராத வெறுப்பு இருக்கிறது. தன் நண்பர்களான தீரனையும் விரனையும் வஞ்சகமாக கொன்ற ஜெயசிம்மனின் மீது அவனுக்கு தீராத பகையும் இருக்கிறது. அந்த பகையை தீர்த்து கொள்ள ஜெயசிம்மனை அழித்தொழிக்க வழி தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறான்"

"அதற்கு காரணம் ஜெயசிம்மனின் மதம் கலந்த அரசியல்.அந்த கேடயம் அவனை ரணதீரனிடம் இருந்தும் காப்பாற்றுகிறது. மக்களிடம் இருந்தும் காப்பாற்றுகிறது!"

"அந்த கேடயத்தை சுக்குநூறாக உடைக்கத் தானே நம்மை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்."

"இதுவரை இப்படி ஒரு சூழலை நாம் இருவருமே எதிர்கொண்டதில்லை. அதனால் தான் எனக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது"

"இப்போதைக்கு என்னிடம் இருக்கும் ஒரே திட்டம் முள்ளை முள்ளால் எடுப்பது தான். கடவுளின் அடிமை என்று கூறி அரசியல் செய்பவனை அவனது கடவுளைப் பயன்படுத்தியே வீழ்த்துவோம். அதற்கு முதலில் நீ பழையபடி இளம் துறவியாக மாறிவிட வேண்டியது தான் "

"அடப்பாவி. மீண்டும் எனக்கு காவி வேடமா?" என்றான் அயர்ச்சியுடன் அரிஞ்சயன் .

"அதற்கு உங்களின் முகம் வெகு பொருத்தமாக இருக்கிறது. பார்க்கும் அனைவரும் உங்களை துறவியாகவே நினைக்கும் படி உங்களின் பேச்சும், செய்கையும் இருப்பதை நானே பல முறை வியப்புடன் பார்த்திருக்கிறேன்."

" அடிக்கடி துறவி வேடம் போட்டு போட்டு கடைசியில் ஒரு நாள் நான் உண்மையாகவே துறவியாக மாறி விடப் போகிறேன் பார்"

"மக்கள் அவர்களைத் தான் நம்புகிறார்கள். ஆண்டவனின் தூதுவராக நினைத்து நீங்கள் சொல்வதை வேதவாக்காக நினைத்து நடக்கிறார்கள்"

"அதுவும் சரிதான். எனக்கு இளம் தூவி வேடம் என்றால் உனக்கு?"

"நான் வழக்கம் போல் உங்களின் தலைமை சீடன்.பைராகியின் மாளிகையில் நீங்கள் சில கண்கட்டுவித்தைகளை கற்று கொண்டிர்களே? அதை பிரயோகிக்கும் நேரம் நெருங்கி விட்டது என்று நான் நினைக்கிறேன்."

"ஆமாம். அவற்றை செய்தால் பாமர மக்கள் என்னை மிக எளிதாக நம்பி விடுவார்கள். நல்ல நேரத்தில் அதை நீ ஞாபகப்படுத்தினாய் "

"நம் நோக்கம் மக்களை ஏமாற்றுவதல்ல. மதத்தை வைத்து மக்களை ஏமாற்றும் அந்த எத்தனை ஏமாற்றுவது தான் "

"கவலைப் படாதே! இந்த யோகி செய்யும் சித்து வேலைகள் வெகு விரைவிலேயே அந்த ஜெயசிம்மனின் காதுகளை சென்றடையும். அவனே நம்மை அரண்மனைக்கு அழைப்பான்"

" ஆனால் நாம் அங்கே போக கூடாது. அவனை நம் இடத்தை தேடி வர வைக்க வேண்டும்"

" அவனது அரண்மனைக்கு போவது நமக்கு அனுகூலம் தானே? பிறகு ஏன் நாம் அங்கு போக மறுக்கவேண்டும்?"

"துறவிக்கு வேந்தன் துரும்பல்லவா? அவன் அழைத்ததும் நாம் போனால் நம்மை இளப்பமாக நினைப்பான் நமக்கு மதிப்பிருக்காது. அதுவே வரமுடியாது என்று பிகு செய்தால் அவன் நம்மை உண்மையாகவே நம்புவான்"

"ஆஹா.! இதற்குத்தான் என் தம்பி வேண்டும் என்பது " என்று அரிஞ்சயன் ஆதித்தனின் தோளில் தட்டி கொடுத்தான்.

இருவரும் பேசியபடியே குதிரைகளை மெதுவாக நடத்தி சென்றனர். மெதுவாகவே சென்றதால் குதிரைகள் பாதையின் ஓரமாக இருந்த பசும் புற்களையும் செடி கொடிகளையும் மேய்ந்தபடி நடை போட்டன. ஆதித்தனின் கண்களில் சற்று தூரத்தில் இருந்த ஒரு சத்திரம் தென்பட்டது.

"அப்பாடா!அதோ அங்கே ஓரு சத்திரம் தென்படுகிறது. வாருங்கள் அங்கே சற்று நேரம் இளைப்பாறுவோம்."

" நம்மை விட குதிரைகள் அதிகமாக களைத் திருக்கின்றன. அவற்றிற்குத் தான் உணவும் தண்ணீரும் ஓய்வும் தேவைப்படுகின்றன." என்றான் அரிஞ்சயன்

இருவரும் சத்திரத்திற்கு வெளியே இருந்த மரத்தில் குதிரைகளை கட்டி விட்டு சத்திரத்தினுள் நுழைந்தனர். இவர்களை பார்த்ததும் வரவேற்ற சத்திரத்து நிர்வாகி" சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறீர்கள். சமையல் இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும். சத்திரத்தின் பின்னால் கிணறு இருக்கிறது. குளித்து விட்டு வாருங்கள். அதற்குள் உணவு தயாராகி விடும்" என்றார்.

"நன்றி ஐயா! எங்களுடைய குதிரைகள் மிகவும் பசியோடு இருக்கின்றன. அவற்றிற்கும் உணவு வேண்டும்"

"நீங்கள் உள்ளே வரும் போதே அதையும் நான் கவனித்தேன். கவலைப்படாதீர்கள். என்னுடைய பணியாள் குதிரைகளை பராமரிப்பதில் கைதேர்ந்தவன். அவன் கேட்கும் தொகையை நீங்கள் முகம் சுழிக்காமல் கொடுத்தாலே போதும் "

"அதற்கென்ன?வாயில்லா பிராணிகளை நன்றாக கவனித்தால் அவரை நாங்கள் நன்றாக கவனித்து விடுகிறோம்"

சத்திரத்து பணியாள் ஓருவன் ஊற வைத்த கொள்ளுடன் குதிரைகளை நோக்கி நடந்தான். குதிரையில் பயணிக்கும் வழி போக்கர்களுக்கான அத்தனை வசதிகளும் அந்த சத்திரத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட சகோதரர்கள் இருவரும் திருப்தியுடன் புன்னகைத்து கொண்டனர்.

இருவரும் சத்திரத்தின் பின்புறம் இருந்த கிணற்றில் நீரிறைத்து திருப்தியாக நீராடிவிட்டு உடையை மாற்றி கொண்டனர்.

"அந்த சாமியார் உடையை இப்போதே மாற்றி கொள்ளட்டுமா? இல்லை வேறு இடத்தில் மாற்றி கொள்ளட்டுமா? என்றான் அரிஞ்சயன்

" ரத்னபுரிக்குள் நுழையும் போது நீங்கள் யோகியாக மாறினால் போதும்.அதுவரை சாதாரண உடையே போதும் ".

"அப்படியா சொல்கிறாய்? பின்னாட்களில் யாராவது சத்திரங்களில் யோகி வந்தாரா என்று விசாரிக்க போகிறார்கள்"

"நீங்கள் தான் கண் கட்டுவித்தைகள் தெரிந்த மர்மயோகியாயிற்றே? நீங்கள் எப்படி நாட்டிற்குள் நுழைந்தீர்கள் என்பதே மர்மமாக இருக்க வேண்டும். இந்த மாதிரியான மர்ம கதைகளில் தான் மக்களுக்கு ஆர்வம் அதிகம். மீதி கதையை அவர்களே புனைந்து கொள்வார்கள்"

"அதுவும் சரிதான். சரி வா சாப்பிடலாம்"

இருவரும் சத்திரத்தினுள் நுழைந்தனர்.ஏற்கனவே பந்தி உபசரிப்பு நடந்து கொண்டிருந்தது. இருவரும் அதில் கலந்து கொண்டு ஆளுக்கொரு இடத்தை பிடித்து கொண்டு அமர்ந்தனர். சாப்பிட்டு முடித்ததும் சத்திரத்தின் முன்பு இருந்த திண்ணையில் இருவரும் சற்று நேரம் படுத்து இளைப்பாறினர். மெல்லிய குறட்டையுடன் கண்ணயர்ந்து விட்ட ஆதித்தனை பார்த்து மெலிதாக புன்னகைத்து கொண்டான் அரிஞ்சயன் .

இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு இருவரும் பயணத்திற்கு தயாராகினர். குதிரைகளை கவனித்து கொண்ட பணியாளனுக்கு அவன் கேட்ட தொகைக்கு மேலேயே கொடுத்து அவனை குளிர்வித்தான் ஆதித்தன். அவனது வாயெல்லாம் பல்லானது.

உணவிற்காக சத்திரத்து நிர்வாகியிடம் பணம் கொடுக்க ஆதித்தன் நின்ற போது அவர் "நீங்கள் வெளியூர்வாசிகள் என்றால் உங்களுக்கு பாதி விலை தான் " என்றார்.

குழம்பி போன ஆதித்தன் "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அனைவரும் ஒரே மாதிரியான உணவைத் தானே உண்டோம்?உள்ளுர்வாசிகளுக்கு ஒரு விலை .அயலூர் வாசிகளுக்கு ஒரு விலையா?"

"ஆமாம். இங்கே அப்படித்தான். வெளியூர்வாசிகளுக்கு இங்கே உணவு பாதி விலை தான்.இது மன்னரின் உத்தரவு .அதிதி தேவோ பவ என்பது மன்னரின் எண்ணம் "

" இதை உள்ளுர்வாசிகள் ஏற்று கொள்கிறார்களா?"

"இல்லை. உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இதை மன்னரிடம் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. சொல்வதற்கு மன்னியுங்கள். எங்கள் நாட்டில் வெளிநாட்டினருக்குத் தான் சலுகைகளும், முன்னுரிமைகளும் "

"விசித்திரமாக இருக்கிறது. மண்ணின் மைந்தர்களை புறக்கணிக்கும் ஒரு அரசை இங்கு தான் பார்க்கிறேன்" என்ற ஆதித்தன் அவர் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு அரிஞ்சயனுடன் அங்கிருந்து கிளம்பினான்.

ரத்னபுரிக்குள் இருவரும் நுழைந்த போது காவலர்கள் சிலர் இருவரையும் சுற்றி வளைத்தனர்.

"இருவரும் குதிரையிலிருந்து இறங்குங்கள்.ரத்னபுரிக்குள் நுழையும் முன்பாக இருவரும் ஓருவருக்கு மரியாதை செலுத்த தவறி விட்டீர்கள். அவருக்கு மரியாதை செய்த பின் உள்ளே போகலாம்" என்றான் காவலன் ஓருவன்.

இருவரும் குதிரையிலிருந்து இறங்கினர்.

"யார் அந்த ஆசாமி? நாங்கள் எதற்காக அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்?"

"இது இங்கே சம்பிரதாயம். மன்னரின் கட்டளையும் கூட. நீங்கள் பணிந்து மரியாதை செலுத்த வேண்டியது யார் தெரியுமா?"

" யார்?"

"அது ஒரு பெண் "

சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
மர்மயோகி

அத்தியாயம் 3


ஆதித்தனும் அரிஞ்சயனும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

" ஒரு பெண்ணிற்கு மரியாதை செய்த பின்புதான் இந்த நாட்டிற்குள் பிரவேசிக்க வேண்டுமா? இது என்ன விசித்திரமான விசயமாக இருக்கிறது"

"இது விசித்திரம் அல்ல.எங்கள் நாட்டின் சம்பிரதாயம். இப்படி ஒரு விசயத்தை சட்டமாக்கியவர் எங்கள் மன்னர். இதை விமர்சனம் செய்ய இங்கே யாருக்கும் உரிமையில்லை." என்றான் இருவரையும் வழிமறித்த காவலன்

"இதற்கு மேல் பேசினால் வேறு ஏதாவது காரணத்தை கூறி நம் மீது வரிவிதித்தாலும் விதிப்பார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கேட்டு நடப்பதுதான் நமக்கு நல்லது " என்றான் அரிஞ்சயன்

" உன் நண்பன் மிகவும் புத்திசாலி. சூழ்நிலையை சட்டென்று புரிந்து கொண்டு அதற்கு தகுந்தது போல் நடந்து கொள்கிறான். நீயும் அதை அவனிடம் இருந்து கற்று கொள்" என்று ஆதித்தனுக்கு உபதேசம் செய்தான் காவலன்.

"முயற்சி செய்கிறேன் ஐயா. இவர் என்னுடைய நண்பர் இல்லை. என்னுடைய உடன்பிறப்பு. நண்பராக கணித்து நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்." சட்டென்று தன்னை சுதாரித்து கொண்ட காவலன் தவறாகிப் போன தன் கணிப்பை சமாளிக்க நினைத்தான்

"உன்னுடைய சகோதரனின் சமயோசிதம் உன்னிடம் இல்லை."

"ஆமாம். நீங்கள் சொல்வது உண்மைதான். என் சகோதரனிடம் நான் கற்று கொள்ள வேண்டிய விசயங்கள் நிறையவே உள்ளது. ஆமாம். நாங்கள் மரியாதை செலுத்த வேண்டிய பெண்ணை எங்கே சந்திப்பது?"

"இதோ ! இந்த பாதையில் சற்று தூரம் செல். உனக்கே புரியும்" என்றான் காவலன்.

ரத்னபுரிக்கு புதிதாக வந்து சேரும் அத்தனை பேரையும் அந்த பாதையில் காவலர்கள் அனுப்பி வைப்பதை அப்போதுதான் சகோதர்கள் கண்ணுற்றனர். குதிரைகளை காவலர்களிடம் ஒப்படைத்து விட்டு இருவரும் அந்த பாதையில் நடக்கத் துவங்கினர்.

"ஒரு நாட்டில் பிரவேசிக்கும் முன்பு அந்த நாட்டில் இருக்கும் ஒரு பெண்ணை சந்தித்து மரியாதை செலுத்த வேண்டுமாம். புதிராக இருக்கிறது இந்த விசயம்."

" இந்த நாட்டில் நடக்கும் எல்லா விசயங்களுமே விசித்திரமாகத் தான் இருக்கிறது. ஒரு பெண்ணிற்கு அரசியல் களத்தில் இவ்வளவு மரியாதை இருக்கிறதென்றால் அந்த பெண் யாராக இருப்பாள்?" என்றான் ஆதித்தன் சிந்தனையுடன் .

"ஒருவேளை அந்த பெண் ஜெயசிம்மனின் ஆசை நாயகியாக இருப்பாளோ?"

"அப்படி ஒரு அழகி இருந்தால் அவளை தன் அந்தப்புரத்தில் வைத்தல்லவா போசித்துக் கொண்டிருப்பான். இப்படி கடைசரக்காக கண்டவர்களின் கண்களுக்கும் விருந்தாக்க மாட்டானே ?"

"நீங்கள் கூறுவதும் சரிதான். அந்த பெண்ணைப் பார்த்து மரியாதை செலுத்த வேண்டும் என்று வேறு கூறுகிறார்கள். நாமோ வெறும் கையுடன் அவளைப் பார்க்க சென்று கொண்டிருக்கிறோம்."

" மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலே அரசியல் ஆதாயம் கருதிய சந்திப்பு என்று தானே பொருள்.?"

"நீங்கள் கூறுவதும் உண்மை தான் "

இருவரும் பேசியபடியே அந்த பாதையில் நடந்த போது அவர்களின் கண்களில் அந்த கோவில்பட்டது. மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்த அந்த கோவிலில் மற்ற கோவில்களைப் போல் ராஜகோபுரமோ கொடி மரமோகாணப்படவில்லை. அந்த பாதையில் வந்த அனைவரும் அந்த கோவிலில் கூட்டமாக கூடி நின்று கொண்டிருந்தனர். இருவருக்கும் முன்பாக வந்த பலரும் கோவிலில் வழிபாட்டை முடித்து கொண்டு வந்த வழியே திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

எதிரே வந்த ஒருவனை தடுத்து நிறுத்திய ஆதித்தன் அவனிடம் "காவலர்கள் இங்கே ஒரு பெண்ணிற்கு மரியாதை செலுத்த சொன்னார்களே அந்த பெண் யார்?" என்றான்.

ஆதித்தனின் கேள்விக்கு வாய்விட்டு சிரித்த அவன் "தம்பி! நீங்கள் சந்திக்க வந்த பெண் உயிருள்ள பெண் அல்ல. என்றோ இறந்து தெய்வமாகி விட்டவள்.இந்த கோவிலில் இருக்கும் நீலிதேவி தான் அந்த பெண் "

தாங்கள் சந்திக்க வந்த பெண் ஒரு தெய்வம் என்று தெரிந்ததும் சகோதர்கள் இருவரும் திடுக்கிட்டு போனார்கள்.

"இந்த பெண் எப்படி இறந்தாள்? எதற்காக இவளை இப்படி தெய்வமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு "அதைப் பற்றி என்னிடம் எதையும் கேட்காதீர்கள். நான் வீணாக சிறையில் என் வாழ்நாட்களை கழிக்க விரும்பவில்லை" என்றபடி பதட்டத்துடன் நகர்ந்து சென்றான்.

இருவரும் இனி இதைப் பற்றி யாரிடம் கேட்டாலும் பதில் வராது என்று உணர்ந்து கொண்டனர். இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையில் இருக்கும் நாட்டில் யாரும் தங்களின் சந்தேகத்திற்கு விடையளிக்க மாட்டார்கள் என்று உணர்ந்து கொண்ட இருவரும் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

உள்ளே பூசை நடக்க துவங்கியிருந்தது. ஆதித்தன் உள்ளேயிருக்கும் சுவாமி விக்ரகத்தை எட்டி பார்த்தான். அங்கே வழக்கமான சாமிகளின் சிற்பம் இல்லாமல் ஒரு அழகிய பெண்ணின் சிற்பம் இருப்பதையும் அந்த சிற்பத்தின் உயிறு லேசாக மேடிட்டிருப்பதையும் கவனித்தான். சிற்பமாகவே அழகாக காட்சியளிக்கும் இந்த பெண் உயிரோடு இருக்கும் போது பிரமாதமான அழகியாகத்தான் இருந்திருப்பாள் என்று நினைத்து கொண்டான் ஆதித்தன்.

அதே நேரம் அந்த பெண் யாராக இருப்பாள் என்ற குறுகுறுப்பும் அவனது மனதில் எழுந்தது. இங்கே யாரிடம் அதை பற்றி கேட்டாலும் பதில் கிடைக்காது என்பதால் அமைதியாக நின்று நடப்பதை கவனித்தான். மற்ற கோயில்களில் நடப்பது போலத்தான் பூஜை புனஸ்காரங்கள் என்று வழக்கமான நடைமுறைகள் நடந்து முடிந்தன. அந்த கோவில் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டிருக்கவில்லை. ஏதோ ஒரு சிறு தெய்வ வழிபாட்டு கோயில் போலவே அதன் நடைமுறைகள் இருந்தன.

சகோதரர்கள் இருவரும் வழிபாட்டை முடித்து விட்டு வந்த வழியாகவே வெளியேறினர். காவலர்களிடம் இருந்த குதிரையை வாங்கி கொண்டவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். சற்று தூரம் பயணித்த பின்புதங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்ட ஆதித்தன்" அண்ணா! நீங்கள் மாறுவேடம் புனைய இதுவே நல்ல சந்தர்ப்பம். இங்கேயே உருமாறிக் கொள்ளுங்கள்" என்றான். மரங்கள் அடர்ந்த புதர் பகுதிக்கு குதிரையை நடத்தி சென்ற அரிஞ்சயன் குதிரையில் இருந்த தன்னுடைய பையை எடுத்து கொண்டு மறைவிற்கு போனான்.பையிலிருந்த காவி துணியை கட்டி கொண்டவன் கழுத்தில் ருத்ராட்ச கொட்டையை அணிந்து நெற்றியில் திருநீறும் குங்குமமும் பூசி முழுதுறவியாக வெளியே வந்தான்.

காத்து கொண்டிருந்த ஆதித்தனை குதிரையுடன் நெருங்கியவன் "சிஷ்யா! குருவின் தோற்றம் எப்படி இருக்கிறது?வெகு பொருத்தமாக இருக்கிறதா? இல்லை குறைகள் ஏதாவது இருக்கிறதா? குறைகள் இருந்தால் சொல். களைந்து விடுவோம்" என்றான்.

"ஆஹா.நிஜ துறவி தோற்றான் போங்கள். சிவகடாட்சம் அப்படியே உங்களுக்கு வாய்த்திருக்கிறது" என்றான் ஆதித்தன்.

"பிறகென்ன.? இங்கிருந்து கிளம்பி நல்ல கோவில் ஓன்றை பார்த்து உட்கார்ந்து விட வேண்டியதுதான். நாளையிலிருந்து ஞானதிருஷ்டியால் நாட்டு மக்களுக்கு குறி சொல்ல நல்ல யோகி ஒருவர் கிடைத்து விட்டார்"

"முதலில் மக்கள் நம்மைப் பற்றி பரபரப்பாக பேச வேண்டும். அப்படி பேசினால் தான் ஜெயசிம்மன் நம்மை பார்க்க ஆசைப்படுவான்"

"அதற்கு என்ன செய்யலாம் என்று நீயே கூறேன்"

அதற்கு எளிதான வழி ஒன்று இருக்கிறது. நமக்கு நன்றாக தெரிந்த களவு தான் இதற்கும் உதவப் போகிறது "

"களவா? சிஷ்யா .! பூர்வாசிரம தொழிலை யெல்லாம் நீ மறந்து விடு. இப்போது நான் முற்றும் துறந்த முனிவர். நீ என் பாதாரவிந்தங்களை சரணடைந்து அந்த ஈசனை காண முயலும் சிஷ்யன்."

"அது சரி குருவே.! மக்கள் நம்மை நம்ப வேண்டுமென்றால் குழி தோண்டி புதைத்த நம்பூர் வாசிரம தொழிலை குழியிலிருந்து உயிர்பிக்க வேண்டியதிருக்கிறது"

"களவும் கற்று மற என்று முதியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். உன் திட்டத்தை விளக்கமாக கூறு. பிறகு என் கருத்தை நான் சொல்கிறேன்"

"சுவாமி. நம்முடைய பழைய தொழிலான களவுதான் உங்களை சக்தி வாய்ந்த சாமியாராக மாற்றப் போகிறது. உங்கள் சிஷ்யனான நான் அங்காடி தெருவுக்கு வரும் வணிகர்களிடம் இருக்கும் சிறு சிறு பொருட்களை திருடப் போகிறேன். திருடும் பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்க போகிறேன். அந்த இடத்தை நான் உங்களிடம் கூறுவேன்."

"எனக்கு புரிந்து விட்டது. என்னுடைய ஞானதிருஷ்டியால் காணாமல் போனவர்களின் பொருட்களை நான் கண்டுபிடித்து கொடுப்பேன்.பிறகு மக்கள் என்னை நம்புவார்கள் என் புகழைப் பாடுவார்கள். அந்த புகழ் பாடும் ஓசை ஜெயசிம்மனின் காதுகளில் விழும். பிறகு அரண்மனை வாசல் நமக்காக திறக்கும். பலே! பலே! நல்ல திட்டம் தான்."

"இதற்கு மூல காரணம் நம்முடைய பழைய தொழில் தான் சுவாமி."

"அதை நீ மேற்கொள்ள எனக்கு மறுப்பில்லை. பொய்மையும் வாய் மையிடத்து என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். "

"அது பொய்மைக்கு சாமி . இது திருட்டு "

"சிஷ்யா! குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாற நினைக்காதே.! குரு சொல்வதை அப்படியே நம்பி செயலாற்று.பரந்தாமனின் காலடிகள் உனக்காக இறங்கி வரும்."

" மன்னித்து விடுங்கள் குருவே! நீங்கள் சொல்வதை இனி அப்படியே கேட்பேன். அதன்படியே நடப்பேன்.வீண் ஆய்வுகள் செய்து உங்களை எதிர்த்து பேசி உங்கள் கோபத்திற்கு ஆளாகமாட்டேன்" என்றான் ஆதித்தன் கேலி சிரிப்புடன்.

" நல்லது. அடக்கம் உன்னை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் " என்று கண்ணடித்து சிரித்தான் அரிஞ்சயன்

குருவும் சிஷ்யனும் நகரத்தினுள் பிரவேசித்தனர்.. இருவரும் கண்ணில் ஏதாவது கோவில்கள் தென்படுகிறதா என்று பார்த்தபடி குதிரைகளை மெதுவாக நடத்தி சென்றனர். மக்களில் சிலர் மட்டும் காவி உடைதரித்திருந்த அரிஞ்சயனை வினோதமாக பார்த்து விட்டு அவரவர் வேலையில் ஆழ்ந்தனர்.

"இங்கே கூட்டம் அதிகமாக உள்ள கோவில் எதுவென்று விசாரிப்போம். அங்கேயிருந்து தான் நம்புகழ் வேகமாக பரவும் " என்றான் ஆதித்தன்.

வழியில் தென்பட்ட ஓருவனை தடுத்து நிறுத்திய ஆதித்தன்" இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற கோவில் எதுதம்பி?" என்றான்.

"எதற்காக கேட்கிறீர்கள்?"

"நாங்கள் வட நாட்டிலிருந்து வரும் சாதுக்கள்.கடவுளை வழிபடுவதற்காக கேட்கிறோம்."

"இந்த நகரத்தில் புகழ் பெற்ற கோவில் சுந்தரேஸ்வரர் கோவில். அது அங்காடி தெருவிற்கு அருகில் இருக்கிறது."

"மிகவும் நன்றி தம்பி" என்றான் ஆதித்தன்.

"இங்கே வா குழந்தாய்" என்று வழி சொன்னவனை அழைத்த அரிஞ்சயன் காற்றில் வலது கையை ஒரு சுற்று சுற்றினான். அடுத்த நொடி அவனது வெற்றுகையிலிருந்து மணம் வீசும் திருநீறு கொட்ட ஆரம்பித்தது.

ஆதித்தனும், வழிகாட்டிய சிறுவனும் திகைத்துப் போய் நின்றனர்.

அரிஞ்சயனின் முகத்தில் மந்தகாசப் புன்னகை ஓன்று தோன்றியது.​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
மர்மயோகி

அத்தியாயம் 4


காற்றில் கைகளை அசைத்து திடிரென அரிஞ்சயன் திருநீரைவரவழைத்து கொடுத்ததை பார்த்த ஆதித்தனும் சிறுவனும் அதிசயத்து போயினர். சிறுவன் பயபக்தியுடன் அரிஞ்சயனை வணங்கி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

"ஆஹா.! இதென்ன அதிசயம்? வெறும் கையில் விபூதி வரவழைப்பது?" என்று சிரித்தான் ஆதித்தன்.

" எல்லாம் நம் நண்பன் பைராகியிடம் கற்று கொண்ட வித்தைகள் தான். விபூதியை அரிசிக் கஞ்சியில் உருட்டி உருண்டையாக்கி கட்டை விரல் நகத்தின் அடியில் ஓளித்து வைத்து கொண்டால் யார் வேண்டுமானாலும் வெறும் கையில் விபூதியை வரவழைக்கலாமே? என்றான் அரிஞ்சயன் சிரித்தபடி.

" ஆன்மிகத்திற்கு மக்களின் அறியாமை தான் முதலீடு போலிருக்கிறதே? நம் நல்ல காரியம் ஒன்றிற்காக இந்த மாதிரி பித்தலாட்டங்களையும், தகுடுதத்தங்களையும் செய்து கொண்டிருக்கிறோம். இதை சுயநலவாதிகள் பயன்படுத்தினால் என்னாவது?"

"மக்கள் ஏமாந்து போவார்கள். ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றும் நபர் உல்லாச வாழ்க்கை வாழ்வான். மக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படாத வரை இந்த மாதிரியான ஆசாமிகளுக்கு கொண்டாட்டம் தான்." என்றான் அரிஞ்சயன் .

"சரி நான் சுந்தர ரேஸ்வரர் கோயிலில் எனக்கென்று ஒரு இடத்தை தேடிப் பிடிக்கிறேன். நீ என்ன செய்யப் போகிறாய்?"

"நான் அங்காடி தெருவில் என் கைவரிசையை காட்டி விட்டு பிறகு வந்து உங்களுடன் இணைந்து கொள்கிறேன்." என்ற ஆதித்தன் அங்கிருந்து கிளம்பினான்.

"பார்த்து கவனம் ." என்ற அரிஞ்சயன் தன் சகோதரனை பிரிந்தான். " மாட்டி கொள்ளும் படி திருடுபவன்திருடனே அல்ல. மாட்டி கொள்ளாமல் திருடுவதில் தான் ஒரு கள்வனின் சாமர்த்தியம் இருக்கிறது" என்று தனக்குள் சொல்லி கொண்டபடி நடந்தான் ஆதித்தன்.வழியில் தென்பட்டவர்களிடம் வழியை விசாரித்தவனாக அங்காடி தெருவிற்கு வந்து சேர்ந்தான் ஆதித்தன். பகலில் செயல்படும் இதே அங்காடிகள் இரவிலும் செயல்படும். அப்போது அவற்றின் பெயர் அல் அங்காடிகள். அல்லும் பகலும் என்றால் இரவும் பகலும் என்றல்லவா அர்த்தம்.? ஏதேதோ யோசித்தபடி கடைதெருவில் நடந்து கொண்டிருந்தான் ஆதித்தன்.

தாங்கள் விற்கும் பொருளின் பெயரையும் விலையையும் கூவி விற்கும் வணிகர்கள். சரக்கை பாருங்கள் என்று கையை பிடித்து இழுக்கும் வியாபாரிகள் இவர்களிடமெல்லாம் நாசூக்காக மாட்டிக் கொள்ளாமல் விரைந்து கொண்டிருந்தான் ஆதித்தன்.

மக்களின் நடமாட்டத்தால் நெருக்கடிக்கு உள்ளான கடைத்தெருவில் தான் குதிரையுடன் செல்வது உசிதமல்ல என்று நினைத்த ஆதித்தன் குதிரையை பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்தி வைக்க விரும்பினான்.

சற்று தொலைவில் இருந்த குதிரை கொட்டடி ஒன்றில் குதிரையை சொற்ப தொகை ஓன்றை கொடுத்து குதிரையை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு கடைவீதிக்குள் நுழைந்தான். காய்கறியிலிருந்து கல்யாணத்திற்கு வாங்கும் தங்கம் வரை எல்லாமும் தனித்தனி வீதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. ஆதித்தன் தன் கை வரிசையை எங்கேயிருந்து துவக்குவது என்று யோசித்தான். காய்கறி கடை போன்ற சாதாரண கடைகளுக்கு வருபவர்கள் சொற்பமான பணத்தை மட்டுமே கொண்டு வருவார்கள். அவை பறிபோனாலும் அந்த சொற்ப பணத்திற்காக காவல் அதிகாரியிடம் போய் நிற்பதா என்று நினைத்து அலட்சியமாக விட்டு விடுவார்கள். ஆனால் நகை கடைக்கு வருபவர்கள் தங்கமோ, வைர மோவாங்க அதிகமான பொருளை கொண்டு வருவார்கள். அவர்கள் நகைகளை வாங்குவது வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்றவிசேசங்களுக்காக இருக்கலாம். இல்லை தங்கள் நீண்ட நாள் சேமிப்பை தங்கமாக மாற்ற விரும்பலாம். அவர்களின் பெரும் தொகையோ, தங்கமோ காணாமல் போனால் அவர்களால் அந்த இழப்பை தாங்கி கொள்ளவே முடியாது. அதனால் திருட்டு போனதை பற்றி காவல் அதிகாரியிடம் கண்டிப்பாக புகார் தெரிவிப்பார்கள்.

அதை விடவும் நகை கடை முதலாளிகள் தங்கள் தெருவில் திருட்டு நடந்தால் தங்களின் வியாபாரம் கெடும், கடையின் ராசியைப் பற்றி வாடிக்கையாளர்கள் தவறான அபிப்ராயத்திற்கு வந்து விடுவார்கள் என்பதால் திருட்டை பற்றி கண்டிப்பாக புகார் கொடுப்பார்கள் என்பது ஆதித்தனின் கணிப்பு. கூட்டம் மிகுந்த நகை கடை வீதி ஆதித்தன் கைவரிசை காட்ட தோதாக அமைந்து விட்டது. கூட்டத்தில் அங்கே இங்கே இடிப்பது போலவும் உதவி செய்பவன் போல் நடித்தும் ஆதித்தன் தன்னுடைய கைவரிசையை காட்டி விட்டான்.

சிறிது நேரத்திற்கு பிறகு மடி நிறைய பொருள் சேர்ந்ததும் போதும் என்ற மனதுடன் ஆதித்தன் அங்கிருந்து கிளம்பினான். இருப்பவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் தான் இன்று இல்லாதவர்களிடமே கைவரிசையை காட்டி விட்டதற்காக அவனது மனம் வருந்தியது. ஆனால் வேறு வழியில்லை. இந்த எளியவர்கள் தான் யோகியின் புகழை பரப்ப போகிறார்கள் என்று தன் மனதை அவனே சமாதானம் செய்து கொண்டான்.

அவன் தன் குதிரையை மீட்டுக் கொண்டு சுந்த ரேஸ்வரர் கோயிலுக்கு வந்து சேர்ந்த போது அரிஞ்சயன் கோயிலுக்கு பின்புறம் இருந்த மண்டபம் ஓன்றில் இடம் பிடித்திருந்தான். மண்டபத்தின் விட் டத்தை பார்த்தபடி படுத்திருந்தவன் ஆதித்தனின் காலடி ஓசையை கேட்டதும் எழுந்து உட்கார்ந்தான்.ஆதித்தனைப் பார்த்ததும்" என்ன சிஷ்யா? போன காரியம் ஜெயம்தானே?" என்றான். அப்போது அவனது உதடுகளில் ஒரு விசமபுன்னகை மலர்ந்தது.

"பூரண ஜெயம் குருவே! இனி திருடிய ஆபரணங்களை ஒளித்து வைக்க வேண்டியதுதான் பாக்கி.."

"அதைப் பிறகு செய்து கொள்ளலாம்.இந்த கோயிலுக்கு வரும் வழியில் நான் ஒரு தகவலை கேட்டேன். அதைக் கேட்டதும் எனக்கு தலை சுற்றி விட்டது."

"அப்படி என்ன தகவலை கேட்டிர்கள் குருவே?"

" சொல்கிறேன் கேள். இந்த நாட்டின் மன்னன் யார்?"

"ஜெயசிம்மன் "

"அதுதான் இல்லை. இந்த நாட்டின் மன்னன் இந்த கோயிலில் வீற்றிருக்கும் சுந்தரேஸ்வரர் தானாம். அவருக்குத்தான் கிரீடம் சூட்டி செங்கோல் கொடுத்து அரசனாக முடிசூட்டியிருக்கிறான் நம்முடைய இனிய எதிரி -ஜெயசிம்மன் கடவுளின் அடிமையாக தாசனாக இருந்து நாட்டை ஆள்கிறானாம். கடவுளின் ஏகபோக பிரதிநிதி நான் என்கிறான் ஜெயசிம்மன் "

" இதைத்தான் ராயரும், ரணதீரனும் நம்மிடம் சொன்னார்கள்."

"அவர்கள் சொல்லும் போது எனக்கு அது பெரிய விசயமாகத்தெரியவில்லை. இப்போது அது விஸ்வரூபமெடுத்து தெரிகிறது. எளிதான ஓரு காரியத்தை வெகு சிக்கலாக்கி விட்டது போல் தோன்றுகிறது.

"ஆமாம். கடவுளின் பெயரால் அவன் ஆட்சி நடத்துவதால் அவனை எதிர்ப்பது கடவுளை எதிர்ப்பது போல. தன் நண்பர்களை கொன்று அரசாட்சியை கைப்பற்றிய ஜெயசிம்மனின் மீது படையெடுக்காமல் ரணதீரன் கையறு நிலையில் வேடிக்கை பார்க்க காரணமும் அது தான்.ஜெயசிம்மனின் வரிகொடுமையால் அல்லல் பட்டாலும் பொதுமக்கள் அவனுக்கு எதிராக புரட்சி செய்யாமல் சகித்துக் கொண்டு வாழக் காரணம் ஜெயசிம்மன் சுந்தரேஸ்வரரின் பிரதிநிதி என்பதால் தான்."

"நாம் சந்தித்த எதிரிகளில்இவன் பயங்கர புத்திசாலியாக இருக்கிறான். கடவுளின் பெயரால் தன்னை எதிரிகளிடம் இருந்தும் காப்பாற்றி கொள்கிறான். தன் ஆட்சி மீது அதிருப்தி அடைந்த மக்களிடம் இருந்தும் தன்னை தற்காத்து கொள்கிறான். இப்படி கடவுளையே கவசமாக அணிந்திருப்பவனை நாம் எப்படி வெல்வது ? இவனுடன் யுத்தம் செய்வது கடவுளோடு யுத்தம் செய்வதற்கு சமம்"

"ஆமாம். நீங்கள் சொல்வது உண்மைதான். இவனை வெல்வது நமக்கு கடினமாகத் தான் இருக்கப் போகிறது. ஆனால் தீர்வு இல்லாத பிரச்சனைகளை கடவுள் உருவாக்குவதில்லை."

" இங்கு பிரச்சனையே கடவுள் தானப்பா! அந்த ஒரு குறுக்கீடு மட்டும் இல்லாதிருந்தால் நம் வேலை எளிதாக முடிந்திருக்கும்."

"இப்போது ஜெய சிம்மனின் கை ஓங்கியிருக்கிறது. அந்த கையை கீழிறக்கத்தான் நாம் இருவரும் யோசிக்க வேண்டும்"

"யோசிப்போம்.அது சரி!பொருளை இழந்தவர்களில் ஓருவன் கூட வா கோயிலுக்கு முறையிட வரவில்லை?"

" திருடியவன் நாசமாக போக வேண்டும் என்றுபுழுதிவாரி தூற்றி சாபம் கொடுக்கவாவது பொருளை இழந்தவர்களில் யாராவது இங்கே வர வேண்டுமே?" என்ற அரிஞ்சயன்

" வருவார்கள். காத்திருப்போம்.ஆமாம்!அந்த நீலி தேவி கோவிலை பற்றி யாரிடமாவது விசாரித்தாயா? நான் அதைப் பற்றி கேள்வி கேட்டாலே யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள்."

"இல்லை அண்ணா.நான் யாரிடமும் விசாரிக்கவில்லை. கடைவீதியில் யாரிடமும் கேட்க முடியவில்லை. என் கைகளுக்கும் கண்களுக்கும் ஓயாது வேலை கொடுத்ததால் வாயிற்கு வேலை கொடுக்க மறந்து விட்டேன்" ' என்றான் ஆதித்தன்.

"அந்த கோயிலில் உள்ள பெண்ணின் சிலைக்கும் ஜெய சிம்மனுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. இங்குள்ள மக்களுக்கு அது தெரியும். ஆனால் வாய் திறக்க மறுக்கிறார்கள்" என்றான் அரிஞ்சயன் ஆழ்ந்த யோசனையுடன் .

"இந்த நாட்டில் எல்லா மக்களும் இந்த கடவுளை நம்புகிறார்கள். அதனால் அந்த கடவுளின் பிரதிநிதியான ஜெயசிம்மனை எதிர்க்க அஞ்சுகிறார்கள்."

" எல்லா மக்களும் கடவுளை நம்புகிறார்கள் என்பதை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால் ஜெய சிம்மனை எதிர்க்க அஞ்சுகிறார்கள் என்பதை நான் ஏற்க மாட்டேன்"

"கடவுளின் பிரதிநிதியான ஜெயசிம்மனை எதிர்க்க இந்த நாட்டில் யார் இருக்கிறார்கள். ?நம் இருவரை தவிர."

"ஏன் இல்லை ?மூன்றாவதாக ஒரு நபர் இருக்கிறான்."

"யார் அது?"

" அவன் பெயர் பார்த்திபன் " என்றான் ஆதித்தன்.

" எதிரிக்கு எதிரி நண்பன் என்கிறாயா?" என்று புன்னகைத்தான் அரிஞ்சயன் .​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
மர்மயோகி

அத்தியாயம் 5


ஆதித்தன் பார்த்திபனின் பெயரைக் குறிப்பிட்டதும் அரிஞ்சயன் புன்னகைத்தான்" எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்கிறாய்? ஆனால் நம் நண்பனை நாம் எங்கே சென்று தேடுவது ?அவன் எங்கே இருக்கிறான் என்று நமக்கு மட்டுமல்ல இங்கே யாருக்கும் தெரியாது போலிருக்கிறதே?" என்றான் அரிஞ்சயன்

"இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. அநீதி நடக்கும் இடத்தில் மிக சரியாக அவன் வந்து சேர்கிறான் என்றால் அவனுக்கு தகவல் கொடுக்கவும் ஆட்கள் இருக்க வேண்டும்"

"நீ சொல்வதும் சரிதான். அப்படி அவனுக்கு தகவல் கொடுக்கும் ஆட்கள் இருந்தால் விரைவில் திக்கெட்டும் பரவப் போகும் இந்த யோகியின் கீர்த்தியை கேட்டு விரைவிலேயே அவன் நம்மை சந்திக்க இங்கு வந்து சேர்வான்.அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும். அது சரி யார் இந்த பார்த்திபன் என்று விசாரித்தாயா?"

"இன்னும் அவனைப் பற்றி நான் விசாரிக்கவே இல்லை. எனக்கென்னவோ அவன் ஜெயசிம்மனின் காட்டாட்சியை எதிர்த்து புரட்சி செய்பவன் போல் தோன்றுகிறது "

" எல்லாபுரட்சி தலைவர்களுக்கும் தனிப்பட்ட விரோதங்கள் இருக்கத்தான் செய்யும். அந்த ஜெயசிம்மன் இந்த பார்த்திபனை என்ன செய்து பகைத்து கொண்டானோ தெரியவில்லை."

"இப்போது தான் நாம் ரத்ன புரிக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். நம் பார்வைக்கு துண்டு துண்டாகத் தான் சித்திரம் ஒன்று காணக் கிடைக்கிறது. விரைவிலேயே முழுச் சித்திரமும் நமக்கு காணக் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றான் ஆதித்தன்.

"சரி. அதை நாம் பிறகு பார்த்து கொள்ளலாம். இப்போது நீ திருடி வந்த பொருட்களை பதுக்கி விட்டு வா. கவனமாக இரு." என்று விடை கொடுத்து தம்பியை அனுப்பி வைத்தான் அரிஞ்சயன் .

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த ஆதித்தன் தான் களவு செய்த பொருட்களையும் அவற்றை ஓளித்து வைத்த இடங்களையும் அண்ணனிடம் ஒப்புவித்தான். அதை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டான் அரிஞ்சயன் .

சற்று நேரத்தில் பொருளை இழந்தவர்களில் ஒருவன் கண்ணில் கண்ணீருடன் கோயிலுக்கு வந்து சேர்ந்தான்.''கடவுளே.! உனக்கு கண் இல்லையா? போயும் போயும் ஏழை குடியானவனிடம் தான் உன் திருவிளையாடலை காட்ட வேண்டுமா? நான் சிறுக சிறுக சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த பணத்தில் இன்று கொஞ்சம் தங்கம் வாங்கினேன். அது என் வாழ்நாள் சேமிப்பு .அதை எந்த பாவியோ என்னிடமிருந்து திருடிச் சென்று விட்டான். அவனை நீ தான் கடவுளே தண்டிக்க வேண்டும். என் தங்கத்தை திருடியவன் நன்றாகவே இருக்க மாட்டான் "

அவனது சத்தத்தை கேட்டு அவனை சுற்றி சிறியதாக ஒரு கூட்டம் கூடியது. இது தான் தான் தலையை நுழைக்க சரியான நேரம் என்று உணர்ந்த ஆதித்தன்" அண்ணா.சங்கீதம் கேட்க ஆரம்பித்து விட்டது. நான் போய் வரவா?" என்றான்.

"இனி என்னை அண்ணா என்று அழைக்காதே! குருவே என்று கூப்பிடு! நான் நிஷ்டையில் ஆழ்கிறேன்" என்று சொல்லிவிட்டு தன் கண்களை இறுக மூடிக்கொண்டான் அரிஞ்சயன் .

ஆதித்தன் மெல்ல நடந்து அழுது கொண்டிருப்பவனை நெருங்கினான். அவனது தோளில் கை வைத்தவன் ஆதுரத்துடன்" என்ன நடந்தது அய்யா?" என்றான்.

"நான் படாதபாடு பட்டு சம் பாதித்து வைத்திருந்த என் தங்கம் களவு போய்விட்டது அய்யா"

"உங்களிடம் களவாடியது யார் என்று தெரியுமா?"

" தெரியவில்லை ஐயா. அவன் மட்டும் என் கையில் சிக்கினால் அவன் கதி அதோ கதிதான் "

"கவலைப்படாதீர்கள். காவலர் தலைவனிடம் தங்கம் களவு போனதை தெரிவித்து விட்டீர்களா?"

'இன்னும் இல்லை. காவலரிடம் சொல்லி பயனில்லை என்பதால் தான் நாட்டை ஆள்பவரிடம் முறையிட வந்திருக்கிறேன்"

"உமக்கு நேரம் நன்றாக இருக்கிறது. இதோ கோயிலின் பின்புறம் வட நாட்டிலிருந்து வந்த ஒரு யோகி இருக்கிறார். அவரின் பிரதான சீடன் நான். அவர் அஸ்டமா சித்திகளில் வல்லவர்.இரும்பை தங்கமாக்கும் ரசவாதம் அறிந்தவர். "

" இருக்கட்டும் அய்யா. அவரிடம் திருடு போன என் தங்கம் கிடைக்குமா?"

" திருட்டு போனது எவ்வளவு?"

"ஒரு சவரன் "

"யோகி மட்டும் மனம் வைத்தால் அதற்கு மேலும் கூட கொடுக்க கூடும். வா அவரிடம் சென்று முறையிடலாம்." என்றான் ஆதித்தன்

"எனக்கு சாமியாரின் மீது துளியும் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் உனக்காக உன்னுடைய வற்புறுத்தலுக்காக வருகிறேன்."

ஒரு சிறு கூட்டம் ஆதித்தனை பின் தொடர்ந்தது. கண்களை மூடி நிஷ்டையில் இருந்த யோகியின் காதுகளில் ஆதித்தன்" சுவாமி " என்றான்.

கோபத்துடன் கண்ணை திறந்த யோகி"யார் என் நிஷ்டையை கலைத்தது " என்றான்.

"நான் தான் சுவாமி .தயை கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள் சாமி " என்றான் ஆதித்தன் பணிவுடன் .

"நீயா ? ஈசனுடன் நான் அளவளாவி கொண்டிக்கும் போது எதற்காக எங்கள் இருவரையும் இடையூறு செய்தாய்?"

"இப்போது ஈசனுடனா பேசி கொண்டிருந்தீர்கள்?"

"ஆமாம் மூடனே"

"என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி .ஈசனின் அடியவர் ஒருவருக்கு ஒரு சோதனை .அதனால் தான் இடையூறு ஏற்படுத்த வேண்டியதாகிவிட்டது."

"ஈசனின் அடியவர்களுக்கு சோதனையா? என்னவென்று கூறு. உடனே தீர்த்து வைக்கிறேன்."

"நீயே சொல் நண்பா உன் பிரச்சனையை?" என்று களவு கொடுத்தவனை முன்னால் தள்ளினான் ஆதித்தன்.

அவன் தன்னுடைய தங்க ஆபரணம் திருட்டு போன கதையை விஸ்தாரமாக மீண்டும் யோகியிடம் கூறத் தொடங்கினான். அனைத்தையும் கேட்ட யோகி" கவலைப்படாதே மகனே! ஈசனிடம் பேசி வெகு விரைவிலேயே உன்னுடைய தங்க ஆபரணத்தை உன்னிடம் மீட்டு கொடுக்கிறேன் - அதுவரை அமைதியாக இரு" என்ற யோகி மீண்டும் தன் கண்களை மூடிக் கொண்டு நிஷ்டையில் ஆழ்ந்தான். அவன் மனதில் ஆதித்தன் சொன்னவையெல்லாம் மனப்பாடமாக ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் அதில் ஒரு குழப்பம் நடந்து விட்டிருந்தது. ஆதித்தன் இரண்டு சவரன் ஆபரணம் ஒன்றையும் ஒரு சவரன் ஆபரணம் ஓன்றையும் திருடி வந்திருந்தான். துரதிர்ஷ்டவசமாக இரண்டும் ஒரே அணிகலனாக இருந்து விட்டதால் அரிஞ்சயன் குழம்பி போனான். இரண்டில் எது வந்திருப்பவனுடையது என்று தெரியாமல் விழித்தவன் அதைக் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டால் தன் தீர்க்க தரிசனத்தின் மீது யாருக்காவது சந்தேகம் வந்துவிடும் என்பதால் அவனே இதுதான் அந்த ஆபரணம் என்று தப்பான ஓரு முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தான். வந்திருந்தவன் தொலைத்த தோ ஒரு சவரன்.அரிஞ்சயன் நினைத்தது இரண்டு சவரன்.

ஒரு முடிவுக்கு வந்தவனாக கண்களை திறந்த அரிஞ்சயன்" உன்னுடைய ஆபரணம் எங்கிருக்கிறது என்று ஈசன் எனக்கு சொல்லி விட்டான்" என்றான் மந்தகாசப் புன்னகையுடன் .

அழுது சிவந்த கண்களுடன் இருந்தவன் " என் பொருள் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள் சுவாமி " என்று அரிஞ்சயனின் காலில் விழுந்து கதறினான்.

"கவலைப்படாதே மகனே! உன் ஆபரணத்தை திருடிய அந்த கள்வன். அதை கோயில் குளக்கரை ஓரத்தில் இருக்கும் நான்கு மரங்களில் மூன்றாவது மரத்தின் அடியில் ஓளித்து வைத்திருக்கிறான். அதை போய் எடுத்து கொள்"

"மிகவும் நன்றி சுவாமி.! எனக்கு ஒரு சந்தேகம் சுவாமி . இடமிருந்து மூன்றாவது மரமா? இல்லை வலமிருந்து மூன்றாவது மரமா என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது சாமி . நீங்கள் அதை தெளிவு படுத்தலாமே?"

எதிர்பாராத இந்த கேள்வியால் திருதிருவென விழித்த அரிஞ்சயன் ஒருவாறு தன்னை சமாளித்து கொண்டான். ஆதித்தன் இதென்ன எதிர்பாராத இடையூறு என்று திகைத்து நின்றான்.

தன்னை ஒருவாறு சமாளித்து கொண்ட அரிஞ்சயன்" மகனே! உனக்கு இருக்கும் அதே சந்தேகம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அதற்காக நான் அடிக்கடி ஈசனை தொந்தரவு செய்ய முடியாது. நீ என்ன செய்கிறாய் இரண்டு இடங்களிலும் தேடிப்பார்க்கிறாய். கண்டிப்பாக இரண்டில் ஏதாவது ஒரு இடத்தில் உன்னுடைய ஆபரணம் கிடைக்கலாம் என்று என் அந்தராத்மா சொல்கிறது " என்றான்.

"மிகவும் நன்றி சுவாமி. நீங்கள் சொன்ன இடத்தில் நான் தேடிப்பார்க்கிறேன்."

" கட்டாயமாக நீ தேடுவது கிடைக்கும். இப்போது ஆபரணத்தை தேடும் நீஅதே ஆர்வத்தை ஈசனை தேடுவதிலும் காட்டலாமே?"

"ஈசனோடு பேசத்தான் நீங்கள் இருக்கிறீர்களே ஸ்வாமி!" என்றவன் சிறு கும்பலுடன் அரிஞ்சயன் குறிப்பிட்ட இடத்தை நோக்கி நகர்ந்தான். தேங்கி நின்ற சிலரும் அரிஞ்சயன் கண்களை மூடிக் கொண்டதால் தொந்தரவு செய்ய விரும்பாமல் பயத்துடன் அங்கிருந்து கலைந்தனர்.

சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டு விட்ட ஆதித்தன்"குருவே! நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்" என்றான்..

" என் நினைவாற்றலில் ஏற்பட்ட சிறு பிழை அது சிஷ்யா! அவன் தொலைத்ததை விட கூடுதலாகவே அவனுக்கு கிடைக்கப் போகிறது. ஆனந்த அதிர்ச்சியில் அவன் நனைய போகிறான். அவனை என் ஞாபகபிசகால் கூடுதலாக கனப்படுத்திவிட்டேன் போலிருக்கிறது" என்றான் அரிஞ்சயன் -

"நடந்த தவறை நாம் என்ன சொல்லி சமாளிப்பது?"

"வேறு என்ன சொல்வது ? ஈசனின் கிருபை என்று சொல்லித்தான் சமாளிக்க வேண்டும். நகை கூடுதலாக கிடைத்த மகிழ்ச்சியில் அவனுக்கு தலைகால் புரியாது.அதனால்அவன் ஊருக்குள் நம்புகழை மிக வேகமாக பரப்புவான். அதுவும் நமக்குநன்மை தானே? நம் வேலை இன்னமும் எளிதாகி விடும்"

" அடுத்து வருபவன் இரண்டு சவரனை தொலைத்து விட்டு ஒரு சவரன் உள்ள ஆபரணத்தை கண்டடைந்தால் என்ன நினைப்பான்?"

" வந்தவரை லாபம் என்று நினைப்பான். எல்லாம் ஈசனின் திருவிளையாடல் " என்றான் அரிஞ்சயன் . எதிர்பாராமல் நடந்த இந்த குழப்பத்தில் அவன் நொந்து போயிருந்தான்.

"என்னை மன்னித்து விடு ஆதித்தா. நான் ஞாபக பிசகால்கொஞ்சம் சொதப்பி விட்டேன்" என்றான் அரிஞ்சயன் மன்னிப்பு கேட்கும் தொனியில்!

"சரி விடுங்கள். பார்த்து கொள்ளலாம்." என்றான் ஆதித்தன்.

அதே நேரம் ஒரு குதிரை மண்டபத்திற்கு எதிரே வந்து நின்றது. அதிலிருந்து குதித்து இறங்கினான் பூபதி. அவனது வலது கையில் பார்த்திபன் எறிந்த கத்தியால் உண்டான காயத்திற்கு மருந்து போட்டு துணியால் கட்டியிருந்தான். இருவரையும் நோக்கி பூபதி வேகமாக அடியெடுத்து வைத்து நடந்தான்.

" வில்லங்கம் ஒன்று விரைவாக வருகிறதே?" என்று முணுமுணுத்தான் அரிஞ்சயன்​
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
மர்மயோகி

அத்தியாயம் 6


தங்களை நோக்கி நடந்து வரும் பூபதியை இருவரும் மனக்கலக்கத்தோடு பார்த்து கொண்டிருந்தனர். இருவருக்கும் அருகே வந்து நின்ற பூபதி இருவரையும் ஒரு முறை ஏற இறங்க பார்த்தான். ஆதித்தனை ஒரு முறை கூர்ந்து பார்த்தவன்" உன்னை நான் எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே?" என்றபடி மோவாயை தேய்த்து கொண்டான்.எது வந்தாலும் ஆதித்தனே சமாளிக்கட்டும் என்று நினைத்த அரிஞ்சயன் இது தான் சாக்கு என்பது போல் நிஷ்டையில் மூழ்கியவன்போல் தன் கண்களை இறுக மூடி அமர்ந்து கொண்டான். ஆனாலும் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலை கவனிக்க தன் செவிகளை அவன் திறந்தே வைத்திருந்தான்.

"என்னை உங்களுக்கு நினைவில்லையா?" என்றான் ஆதித்தன் வியப்புடன்.

"உன்னை எங்கோ பார்த்தது போல் உ ள்ளது. ஆனால் எங்கே பார்த்தேன் என்று தான் எனக்கு தெரியவில்லை." என்றான் பூபதி குழப்பத்துடன் .

"இன்று காலை தான் நாம் இருவரும் சந்தித்தோம். இளநீருக்கு வரி கேட்டு ஒரு தோட்டத்தில் சற்று கெடுபிடியாக நடந்து கொண்டிர்களே? அங்கே தான் நாம் முதன் முதலில் சந்தித்தோம் "

"அட ஆமாம். என்ன ஒரு ஞாபகப் பிசகு. ஆமாம் அப்போது உன்னுடன் இன்னொரு நபரும் இருந்தானே அவன் எங்கே?" என்றான் பூபதி.

அட முட்டாளே அவன்தான் உன் கண் எதிரே கண்களை மூடியபடி அமர்ந்திருக்கிறானே? அவனைக் கூடவா உனக்கு அடையாளம் தெரியவில்லை என்று தன் மனதிற்குள் நினைத்து கொண்ட ஆதித்தன் "பாவம். அவன். அங்கே நடந்த குழப்பத்தில் பயந்து போய் தன் சொந்த ஊருக்கே ஓடி விட்டான்" என்றான்.

"ஓடியவன் பயந்தாங்கொள்ளி என்றால் நாட்டிற்குள் வந்து விட்ட நீ தைரியசாலியா? போகட்டும். நீ எப்படி இங்கே வந்தாய்? யாரை சந்திக்க வந்தாய்?"

"நான் யோகியின் பரம பக்தன்.அவர் இங்கே இருப்பதாக எனக்கு தெரிய வந்தது. அதனால் அவருடைய சிஷ்யனாக மாற முடிவு செய்து இங்கே வந்து விட்டேன்."

"இந்த யோகி இங்கே இருப்பது உனக்கு எப்படி தெரியும்?"

"அவர் என் கனவில் வந்து இந்த நாட்டில் இருப்பதாக கூறினார். அதனால் தான் அவரைத் தேடி கிளம்பி வந்து விட்டேன். துணைக்கு வந்த நண்பன் இவரை காணாமலேயே அந்த தோப்பில் நடந்த குழப்பங்களால் பயந்து போய் திரும்ப போய் விட்டான்."

"கனவில் வருமளவிற்கு இந்த யோகி அவ்வளவு சக்தி மிக்கவரா? இவரைப் பற்றி உனக்கு முழுதாக தெரிந்தால் தெரிந்த விவரங்களை என்னிடம் கூறு"

"எதற்காக?"

" எல்லாம் ஒரு காரணமாகத் தான்."

"யோகி இமய மலையில் தவம் செய்து அஷ்டமா சித்திகளை அடைந்தவர். தண்ணீரில் நடப்பார். ஆகாயத்தில் பறப்பார். அவரால் முடியாத காரியம் என்று எதுவும் பூமியில் கிடையாது."

"அப்படியா சொல்கிறாய்? சரி நீ சொல்வதை நான் அப்படியே நம்புகிறேன். வரும் வழியில் ஓரு சிறு கூட்டம் குளத்திற்கு அருகே இருந்த மரத்தினடியில் இருந்து தங்க ஆபரணங்களை மீட்பதைப் பார்த்தேன். விசாரித்த போது அது யோகியின் அருள்வாக்கு என்று சொன்னார்கள். அதனால் தான் அவரைக் காண வந்திருக்கிறேன்"

"உங்களுடை பொருள் ஏதாவது காணாமல் போய் விட்டதா என்ன?"

"ஆமாம். வெளியே சொன்னால் வெட்ககேடு. நீ வெளியே சொல்ல மாட்டாய் என்றால் நான் உண்மையை கூறுகிறேன்"

"நீங்கள் சொல்லும் உண்மையை நான் எனக்குள் வைத்துக் கொள்வேன். யாரிடமும் மூச்சு விட மாட்டேன். தைரியமாக சொல்லுங்கள்" என்று பூபதியை ஊக்கப்படுத்தினான் ஆதித்தன்.

ஆதித்தன் கொடுத்த தைரியத்தால் துணிச்சலாக வாயை திறந்தான் பூபதி

" நான் சொல்வதை வைத்து என்னை தவறாக நினைத்து கொள்ளாதே நண்பா.!அரசாங்க அதிகாரி என்றால் அன்பளிப்புகள், நன்கொடைகள், கையூட்டுகள் குவிவது வழக்கமானது தானே? எனக்கும் ஓரு ஆபரணம் கையூட்டாக கிடைத்தது. அதை வாங்கி கொண்டு கடைவீதி வழியாக வரும் போது யாரோ ஒரு ஏமகாதகன் அதை என்னிடமிருந்து எடுத்து கொண்டு விட்டான். நிச்சயமாக சொல்கிறேன். அவன் உள்ளூர் திருடனாக நிச்சயம் இருக்க முடியாது. ஏனென்றால் அவர்களை எனக்கு மிக நன்றாக அடையாளம் தெரியும். இது நிச்சயமாக வெளியூர் திருடனின் கைவரிசை தான். திருடனிடம் பொருளை பறிகொடுத்தவர்கள் காவல் அதிகாரியிடம் புகார் கொடுப்பார்கள். இங்கே காவல் அதிகாரியிடமே களவாடிவிட்டார்கள். இதை எங்கே போய் சொல்வது? இதை வெளியே சொன்னால் எனக்கு அவமானமில்லையா?" என்றான் பூபதி பரிதாபத்தோடு.

காவல் அதிகாரியிடமே கனவு செய்து விட்டகன் தம்பியை நினைத்து அரிஞ்சயனுக்கு சிரிப்பு வந்தது. அதை சிரமப்பட்டு அடக்கி கொண்டவன் இருவரின் உரையாடலையும் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தான்.

ஆதித்தனோ கூட்டத்தில் யார் யாரிடமோ கைவரிசையை காட்டினோம்.இவனிடமும் தெரியாத்தனமாக திருடி விட்டோமே என்று நினைத்து வருந்தினான்.

ஆதித்தன் யோசித்து கொண்டிருப்பதைப் பார்த்த பூபதி " என்ன யோசிக்கிறாய்? என்னுடைய களவு போன பொருள் திரும்ப கிடைக்குமா? கிடைக்காதா?" என்றான்.

"இதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? பதில் சொல்ல வேண்டியது யோகியார் தான். அவரை நான் நிஷ்டையில் இருந்து எழுப்புகிறேன். நீங்களே கேட்டு பாருங்கள்" என்றான் ஆதித்தன்.

எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த அரிஞ்சயன் தன் கண்களை திறந்தான். எதிரே நின்ற பூபதியை பார்த்து "குழந்தாய்! என் அருகே வா!" என்றான்.

அருகில் வந்து நின்ற பூபதி பயபக்தியுடன் அரிஞ்சயனை பார்த்தான்.

" நீ சொல்வதை எல்லாம் நானும் கேட்டு கொண்டுதான் இருந்தேன். உன்னுடைய ஆபரணம் உனக்கு கிடைக்கும். அதற்கு முன் எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும்."

"சொல்லுங்கள் சுவாமி . நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன். என் மனைவி மிகவும் ஆசைப்பட்டு கேட்டது அந்த ஆபரணம் ஒன்றைத்தான். மதியம் சாப்பாடு கொண்டு வந்த பணியாளனிடம் வேறு அதைப் பற்றி சொல்லி விட்டேன். என் மனைவி அந்த ஆபரணத்தை காண ஆவலுடன் காத்திருப்பாள். இப்போது நான் அதை தொலைத்து விட்டு வெறும் கையுடன் வீட்டிற்கு திரும்பினால் என் நிலமை என்னாவது?" என்றான் பூபதி பயத்துடன் .

"நான் துறவியாக மாற எது காரணமாக இருந்ததோ அதுவே தான் உனக்கும் வாய்த்திருக்கிறது"

"சுவாமி. இல்லறத்திலிருந்து துறவறத்திற்கு வந்தவரோ?"

"ஆமாம். அப்படித்தான் வைத்து கொள்ளேன்.. அது இருக்கட்டும். நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்?"

" கேளுங்கள் சுவாமி . எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்."

"உனக்கு பதில் தெரியும் கேள்விகளைத் தான் நான் கேட்பேன்."

"அப்படியென்றால் சரி. கேளுங்கள். குருகுலத்தில் ஆசிரியர்கள் கேள்வி கேட்டு என்னை சித்ரவதை செய்ததால்தான் நான் பள்ளிக்குப் போகவே அஞ்சினேன்"

"கவலைப்படாதே! அவ்வளவு கடினமான கேள்விகளை நான் கேட்கப் போவதில்லை. முதல் கேள்வி.பார்த்திபன் என்பவன் யார்?"

"நீங்கள் எதற்காக அவனைப் பற்றி கேட்கிறீர்கள்?" என்றான் சந்தேக பார்வையுடன் பூபதி.

"என்னை சந்தேகிக்கிறாயா என்ன?" என்று தன் குரலில் அழுத்தம் கொடுத்து கேட்டான் அரிஞ்சயன் .

தர்மசங்கடத்துடன் நெளிந்த பூபதி " நான் அப்படி நினைக்கவில்லை. நீங்களோ முற்றும் துறந்த முனிவர். அவனோ ஒரு தேசவிரோதி. அவனைப் பற்றி நீங்கள் கேட்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது."

"நீ ஆச்சரியப்படத் தேவையில்லை இதோ இங்கே நிற்கிறானே என் பிரதான சீடன் - அவனிடம் எனக்கு உதவியாக ஒரு ஆளை அழைத்து வரச் சொல்லியிருந்தேன். இவனும் எனக்கு உதவியாக இவனது நண்பணை அழைத்து வந்தான்.வரும் வழியில் அந்த பார்த்திபன் ஏற்படுத்திய குழப்பத்தில் இவனது நண்பன் பயந்து போய் அவனது சொந்த ஊருக்கே திரும்ப ஓடி விட்டான். என் பக்தகோடிகளில் ஒருவனை விரட்டி. விட்ட அந்த பார்த்திபன் மீது நான் கடும் கோபத்தில் இருக்கிறேன். அதனால் தான் அவனைப் பற்றி விசாரிக்கிறேன். சத்ரு சம்ஹார யாகம் ஓன்றை நடத்தி அவனை அழித்து விட முடிவு செய்திருக்கிறேன்"

" அவனா? அவன் இதற்கு முன்னால் மன்னராக இருந்த தீரன், வீரனின் இருவரின் கடை குட்டி தம்பி . ஒரு புரட்சி கூட்டத்தை வைத்து கொண்டு எங்கள் வேலையில் இடையூறு செய்வது தான் அவனுடைய முழு நேர வேலை .அவனைப் பிடித்து தருபவர்களுக்கு மன்னர் மிகப்பெரிய தொகையை அறிவித்திருக்கிறார். நானும் அவனைப் பிடிக்க பல முறை முயற்சி செய்திருக்கிறேன் - பயல் விலாங்கு மீனாக ஓவ்வொரு முறையும் நழுவி தப்பித்து கொண்டு விடுகிறான். பல முறை என்னை காயப்படுத்தி இருக்கிறான்.. என்னுடன் வந்தவர்களில் நான் மட்டும் தான் வீரன். மற்றவர்கள் அவனை கண்டாலே ஒடிவிடுகிறார்கள். நான் தான் ஓவ்வொரு முறையும் அவனை எதிர்த்து நின்று விழுப்புண்களை பரிசாகப் பெறுகிறேன்.அவன் ஒரு தேச விரோதி சுவாமி.காலையில் கூட வீண் குழப்பம் செய்து என் கையை காயப்படுத்தி விட்டான். உங்களுக்கு மட்டும் அவன் எதிரியல்ல. எனக்கும் கூட அவன் எதிரி தான். மக்களிடையே வரி வசூலிக்க அவன் பெரும் தடையாக இருக்கிறான்.
அவனை அழிக்க நீங்கள் செய்யும் யாகத்திற்கான முழு செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு முன்னதாக என்னுடைய தொலைந்த ஆபரணம் எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும்" என்றான் காரியமே கண்ணாக பூபதி.

"இதோ உன் ஆபரணத்தை பற்றி ஈசனிடம் பேசிவிட்டு சொல்கிறேன்" என்று மீண்டும் கண்களை மூடிக்கொண்டான் அரிஞ்சயன்.

சற்று நேரம் கழித்து கண்களை திறந்தவன்" உன்னுடைய ஆபரணம் இரண்டு தெரு தள்ளி இருக்கும் குயவன் வீட்டு வாசலில் இருக்கும் கொய்யா மரத்தின் அடியில் இருப்பதாக ஈசன் கூறுகிறான். தவறான வழியில் அந்த பொருளை நீசம்பாதித்ததால் அதன் அளவு குறைவாக இருக்க கூடும்"

" இதையும் அவரேதான் சொன்னாரா? இருக்கட்டும். கூட குறைய என் பொருள் எனக்கு திரும்ப கிடைத்தால் போதும். என் மனைவியிடம் நல்ல பெயர் அது கிடைக்காது தான். தப்பிக்க ஏதாவது ஒரு பொருள் இப்போதைக்கு என் கையில் இருக்க வேண்டும்" என்றான் பூபதி.

"மங்களம் உண்டாகட்டும்" என்றான் அரிஞ்சயன் ஆசிர்வதிக்கும் தொனியில் .

"அதுதான் என் மனைவியின் பெயர். உங்களுக்கு எப்படி தெரிந்தது? ஓ ! உங்களுக்குத்தான் ஞானதிருஷ்டியில் அனைத்தும் தெரியுமே? கல்யாணம் ஆனதிலிருந்து எங்களுக்கு குழந்தை இல்லை. அதனால் மணவாழ்வில் மகிழ்ச்சி இல்லை. அவளை மகிழ்வூட்டவே இந்த நகை, கையூட்டு எல்லாமே !ஞானியான நீங்களே சொல்லி விட்டீர்கள். கண்டிப்பாக எனக்கு குழந்தை பிறந்து விடும்" என்றான் மகிழ்ச்சியோடு பூபதி.

அரிஞ்சயனும் ஆதித்தனும் இதென்னடா புது வித வம்பு என்பது போல் ஓருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.​
 
Last edited:

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
மர்மயோகி

அத்தியாயம் 7


தற்செயலாக ஆதித்தன் மங்களம் உண்டாகட்டும் என்று என்று ஆசிர்வாதம் செய்ததும் அதை பூபதி தன்னுடைய மனைவியின் பெயர் என்று கூறி மகிழ்ந்ததும் சகோதர்கள் இருவருக்கும் வியப்பை தந்தது .

பூபதி அங்கிருந்து குதிரையில் ஏறி கிளம்பியதும் அரிஞ்சயனின் பக்கம் திரும்பிய ஆதித்தன்" தற்செயலாக நீங்கள் சொன்ன வார்த்தையை கூட அந்த மூடன் தீர்க்கதரிசனமாக எண்ணிக் கொண்டு விட்டான்"

"இதுவெல்லாம் காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதைதான். மக்கள் அவர்களின் வாயிலிருந்தே சில குறிப்புகளை நமக்கு கொடுப்பார்கள். நாம் அதை சரியாக கிரகித்துக் கொண்டு திருப்பி சொன்னால் திரி காலமும் அறிந்த ஞானி என்று நம்மை கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்" என்று புன்னகைத்தான் அரிஞ்சயன் .

"நீ ங்கள் சொல்வதும் சரிதான். இப்போதைக்கு அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது." என்று அண்ணன் சொன்னதை அப்படியே ஆமோதித்தான் ஆதித்தன்.

"அந்த ஆபரண மாற்றத்தை கூட மிக அழகாக சமாளித்து விட்டீர்கள். அவனது மதிப்பு குறைந்த நகைக்கு கையூட்டு வாங்குவதை காரணமாக சொல்லி அவனை சமாளித்தீர்களே அது வெகு பிரமாதம்."

" அவன் ஆண்டவனுக்கு பயப்படுவதை விட அவன் மனைவிக்குத் தான் அதிகமாக பயப்பட்டான்." என்று சிரித்தான் அரிஞ்சயன்

அதே நேரம் சிறு கும்பலுடன் மண்டபத்தை நோக்கி வந்து வந்து கொண்டிருந்தான் ஆபரணம் கிடைத்தவன். அவனது கையில் மின்னிக் கொண்டிருந்தது அவன் தோண்டி எடுத்த ஆபரணம்.

நேராக மண்டபத்திற்கு வந்தவன் கண்ணீர் மல்க நெடுஞ்சாண் கிடையாக அரிஞ்சயனின் காலில் விழுந்தான்.

"நீங்கள் சொன்ன இடத்தில் என்னுடைய நகை கிடைத்து விட்டது சுவாமி .! என் நகையை மீட்டுக் கொடுத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சுவாமி. என் வாழ்நாள் சேமிப்பை மீட்டு கொடுத்த உங்களை என்னால் மறக்கவே முடியாது" என்று கதற ஆரம்பித்தான்.

அரிஞ்சயன் மெல்ல எழுந்து அவனை தூக்கி நிறுத்தினான்.

"அழாதே அப்பனே! சோதனைகள் வரும் போது ஆண்டவனை நினைப்பது தான் மனிதனின் சுபாவம். அந்த சுந்தரேஸ்வரர் உன்னை சோதித்து திருவிளையாடல் புரிந்திருக்கிறார். நீ நன்றி சொல்ல வேண்டியது அந்த ஈசனுக்குக்குத்தான். அவனுடைய அடியார்களின் துயரை துடைப்பதே என்னுடைய வேலை. எனக்கு நன்றி சொல்லி ஆண்டவனை அவமானப்படுத்திவிடாதே!"

"நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. உங்களுக்கு நான் எதையாவது செய்தே தீர வேண்டும்"

"ஏன் இப்படி அடம் பிடிக்கிறாய்? நீ ஏதாவது எனக்கு செய்ய நினைத்தால் மக்களிடம் போய் மகேசனின் பெருமையை கூறு. அதுவும் ஒரு புண்ணிய காரியம் தான் "

" அப்படியே செய்கிறேன் ஸ்வாமி " அவன் இருவரிடமும் விடை பெற்று கிளம்பினான்.

அவனுக்கு பின்னால் வந்த கூட்டமும் சுவாமி சுவாமி என்று அரிஞ்சயனின் காலில் விழ ஆரம்பித்தது. அதனால் கோபமடைந்த அரிஞ்சயன் "மூடர்களே! நான் ஒரு சாதாரணமானுட பிறவி. மலஜலம் கழிக்கும் உங்களை போன்ற நரன். என்னை கும்பிட்டு கடவுளின் மதிப்பை குறைக்காதீர்கள். நீங்கள் வழிபட வேண்டியது ஆண்டவரை .அவரின் பெயரை சொல்லி வாழும் அவரின் அடியாரை அல்ல" என்று கண்டித்தான் அரிஞ்சயன் .

சற்று நேரத்தில் கூட்டம் குறைந்து தனிமை நிலவியது.

"என்னை வணங்க வேண்டாம் என்று சொன்னால் தான் இந்த மக்கள் அதிகமாக வணங்குவார்கள். செய்ய வேண்டாம் என்று சொல்வதை செய்வதில் தான் மக்களுக்கு தனி இன்பம்" என்றான் அரிஞ்சயன் ஆதித்தனைப் பார்த்து.

"இப்போது நகையுடன் போனவனுக்கு ஒரு சவரனுக்கு பதில் இரண்டு சவரனாக கொடுத்திருக்கிறீர்கள். அவன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறான். ஒன்றுக்கு நான்காக உங்களைப் பற்றி ஊருக்குள் சொல்ல போகிறான்."

"நான் எங்கே அவனுக்கு கூடுதல் சவரனை கொடுத்தேன்?அது பூபதியின் ஆபரணமல்லவா? இரண்டும் ஒரே வடிவமைப்பில் இருந்தது நம்முடைய அதிர்ஷ்டம். இப்போது நகையை மீட்டு சென்ற இருவரும் நகரமெங்கும் நம் புகழை பரப்புவார்கள்."

"உங்கள் நினைப்பு தவறு.பூபதி கையூட்டு பணத்தில் நகையை வாங்கியிருப்பதால் அதை தொலைத்ததை பற்றி வெளியே மூச்சு விட மாட்டான். ஒரு காவல் அதிகாரி தன் உடமையை தொலைத்ததை ஊர் எள்ளி நகையாடும்.ஒரு சவரன் குறைவான நகை திரும்ப கிடைத்தது பற்றி அவன் யாரிடமும் பேசப்பிரியப்பட மாட்டான் "

"நீ சொல்வது சரிதான். ஆனால் இந்த நகை திருடு போன விவகாரத்தை அவன் கண்டிப்பாக தன் மனைவியிடம் கூறுவான். நான் ஆசிர்வாதம் செய்த மங்களம் உண்டாகட்டும் என்ற மங்கள வார்த்தை அவனை பேச வைக்கும். ஊர் வாயை மூடலாம். ஒரு பெண்ணின் வாயை மூட முடியுமா? அவனுக்கு பதில் அவனுடைய மனைவி நம்மை பற்றி பேசுவாள்" என்று கண்ணடித்து சிரித்தான் அரிஞ்சயன் .

தான் சற்றும் எதிர்பாராத கோணத்தில் தன் அண்ணன் சிந்திப்பதை பார்த்த ஆதித்தன் வியந்து போனான்.

"இந்த கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை. உண்மையாகவே நீங்கள் ஞானி தான் " என்று தன் அண்ணனை புகழவும் செய்தான்.

அதைக் கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டான் அஞ்சயன்.

சகோதரர்கள் இருவரும் நினைத்தது போலவே அவர்களின் புகழ் நகரின் எட்டு திக்கிலும் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது.

கடை வீதியில் தங்கள் பொருள்களை தொலைத்த அத்தனை பேரும் வரிசை கட்டி அரிஞ்சயனிடம் வந்து நிற்க ஆரம்பித்தனர். அவனும் சலிக்காமல் வெவ்வேறு இடங்களை குறிப்பிட்டு அங்கே அவர்களின் பொருள் இருப்பதாக குறி சொல்ல ஆரம்பித்தான். பொருள் திரும்ப கிடைத்தவர்கள் போட்டி போட்டு கொண்டு யோகியின் புகழைப் பரப்ப ஆரம்பித்தனர்.வெகு விரைவிலேயே இருவரின் புகழும் பட்டி தொட்டியெங்கும் பரவ ஆரம்பித்து விட்டது. ஆதித்தன் காலையில் ஏதாவது ஒரு வீதியில் புகுந்து ஜன சந்தடியைப் பயன்படுத்தி பொருள்களை களவாடி ஓளித்து வைப்பதும் மாலையில் யோகியார் அதை கண்டுபிடித்து கொடுப்பதும் வாடிக்கையானது.

ஆதித்தன் சென்று வரும் வீதிகளில் திருட்டு போவதை யாரும் கவனித்து பார்த்து கண்டுபிடிப்பதற்கும் இந்த விளையாட்டை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஆதித்தன் நினைத்து கொண்டான்.அரிஞ்சயனை பற்றி தன்னிடம் விசாரிக்கும்மக்களிடம் அவர் ஒரு மர்மயோகி என்று பதில் கூறி அவர்களின் மனதில் பயத்தையும் மரியாதையையும் உருவாக்கினான்.

ஒருநாள் காலையில் தன் குதிரையில் வந்து இறங்கிய பூபதியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. அவனுடன் வந்த பணியாள் ஒரு தட்டு நிறைய இனிப்பு பலகாரங்களை கொண்டு வந்திருந்தான். அவன் எதற்கு வந்திருக்கிறான் என்று புரியாத ஆதித்தனை ஓடி வந்து கட்டி தழுவிய பூபதி " நண்பா! என் மனைவி கருவுற்றிருக்கிறாள். நான் தந்தையாகப் போகிறேன். இதற்கு காரணம் நம்முடைய மர்மயோகியின் வாயிலிருந்து வந்த மங்களம் உண்டாகட்டும் என்ற வார்த்தைகள் தான் .அவரை நிஷ்டையிலிருந்து எழுப்பு நண்பா. இந்த மகிழ்ச்சியான செய்தியை யோகியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்"

பூபதி தாங்க இயலாத மகிழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தான். தட்டி லிருந்தலட்டுவின் நெய்மணம் அரிஞ்சயனின் நாசியில் நுழைந்தது. ஏற்கனவே லட்டு பிரியனான அரிஞ்சயன் தன் வாயில் சுரந்த எச்சிலை விழிங்கியபடி கண்களை திறந்தான். அதைப் பார்த்த பூபதியின் முகம் மலர்ந்தது.

"ஆஹா.சுவாமியே கண் திறந்து விட்டார். உங்களின் ஆசிர்வாதம் பலித்துவிட்டது சுவாமி . என் மனைவி மங்களம் உண்டாகி விட்டாள். நான் தந்தையாகி விட்டேன். என்னை ஆசிர்வதியுங்கள் சுவாமி " என்றபடி தடாலென காலில் விழுந்தான் பூபதி.

" எல்லாம் ஆண்டவனின் கிருபை. என் கையில் என்ன இருக்கிறது? " என்றான் அரிஞ்சயன் லட்டு இருந்த தட்டை பார்த்தபடி.

"அப்படி சொல்லாதீர்கள் சுவாமி உங்கள் ஆசிர்வாதத்தில் தான் குழந்தை பிறந்ததாக இந்த அடியவன் நம்புகிறான். என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இனிப்பு கொண்டு வந்திருக்கிறேன். சுவைத்து பாருங்கள் சுவாமி "

"அதற்கென்ன சுவைத்து விட்டால் போகிறது." என்று இரண்டு லட்டுகளை எடுத்து கொண்ட அரிஞ்சயன் அதை முகர்ந்து பார்த்து விட்டு "சுத்தமான பசு நெய்வாசம் வீசுகிறது" என்று பாராட்டவும் செய்தான்.

இப்படியான நிகழ்விற்கு பிறகு நகரத்தில் மர்ம யோகியின் புகழும், செல்வாக்கும் உயரத் தொடங்கியது. நகரத்தின் முக்கிய பிரமுகர்களும், பெரும் வியாபாரிகளும் மர்மயோகியின் காலடிதங்கள் இல்லத்தில் காலடி வைக்க வேண்டும் என்று வரிசை கட்ட ஆரம்பித்தனர். ஆதித்தனுக்கு முன் போல் திருடும் வேலை இல்லாமல் போய்விட்டது. யாகம், பூஜை 'ஆன்மீக சொற்பொழிவு என்று அரிஞ்சயனின் வாழ்க்கை முறை மெல்ல மாற ஆரம்பித்தது. எங்கே தன் அண்ணன் உண்மையாகவே சாமியாராக மாறிவிடுவானோ என்று ஆதித்தனே அஞ்சும் அளவிற்கு தத்ரூபமாக சாமியாராகவே மாற தொடங்கியிருந்தான் அரிஞ்சயன் .

புதிதாக நகரத்திற்கு வந்த மர்ம யோகியின் புகழ் இருவரை உறுத்த தொடங்கியது. அதில் முதலாமவன் நாட்டின் மன்னனான ஜெயசிம்மன் .மற்றோருவன் புரட்சிகாரனான பார்த்திபன். இது எதுவும் தெரியாமல் நித்திய கடமையில் கண்ணாக இருந்தனர் சகோதரர்கள் இருவரும் . வாழ்க்கை ஆறு போன்றது. அது எப்போதும் நேராக ஓடுவதில்லை. நேராக ஒடிக்கொணடிருந்த சகோதரர்களின் வாழ்க்கை பாதையை திசை திருப்ப நினைத்தது விதி.​
 
Last edited:

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
மர்மயோகி

அத்தியாயம் 8


ஜெயசிம்மன் தனது அரண்மனை உபரிகையில் நின்று வானத்தில் மறையும் சூரியனை பார்த்து கொண்டிருந்தான். இரை தேடி கூட்டை விட்டு பறந்த பறவைகள் மீண்டும் தங்களின் கூடுகளுக்கு திரும்ப தொடங்கி இருந்தன.அவை எழப்பும் நானாவித இரைச்சலை ரசிக்கும் நிலையில் அவனது மனம் இல்லை. அவன் கண்கள் இலக்கற்ற சூன்யத்தில் லயித்திருந்தன. தன்னை வருடிச் செல்லும் தென்றல் காற்றின் இதத்தை கூட அவனால் அனுபவிக்க முடியவில்லை. யாரோ நடந்து வரும் ஓசை தரையில் எதிரொலித்தது அவனது ஐம்புலன்களும் உசாராகின.

"யாரது, " என்றான் ஜெயசிம்மன் அச்சுறுத்தும் தொனியில் .

எதிரே நடந்து வந்த காவலன் ஒருவன் ஜெயசிம்மனை பார்த்ததும் தன் நடையை நிறுத்தி தலையை தாழ்த்தி முகமன் கூறினான்.

" கொந்தரவிற்கு மன்னர் என்னை மன்னிக்க வேண்டும். உப தளபதிகளில் ஓருவரான பூபதி உங்களை காண வந்திருக்கிறார்"

" அவனை உடனே வரச் சொல் " என்றான் ஜெயசிம்மன் .

சில நிமிடங்களில் உள்ளே வந்த பூபதி தலை தாழ்த்தி தன் மரியாதையை செலுத்தினான்.

"வா.பூபதி. என்ன அதிசயமாக இந்த பக்கம் வந்திருக்கிறாய்.? அந்த பார்த்திபனை பிடித்து விட்டாயா என்ன ?"

"இல்லை அரசே! அவனைப் பிடிக்க என்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் செய்து கொண்டு தான் இருக்கிறேன். பயல் விலாங்கு மீனாக என்னிடமிருந்து நழுவிக் கொண்டிருக்கிறேன். ஆனால் கூடிய விரைவில் அவனை நான் பிடித்து விடுவேன்"

"உ ன்னிடம் இப்போது நான் ஒரு மாற்றத்தை காண்கிறேன். முன்பெல்லாம் பார்த்திபனை பற்றி நான் ஏதாவது கேள்விகள் கேட்டால் நீ பதில் கூற தட்டு தடுமாறுவாய். மென்று முழுங்குவாய் .இப்போது உன்னுடைய பேச்சில் அதிகமான நம்பிக்கை தெரிகிறதே? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்.?"

"அது வந்து மன்னா! நீங்கள் சொல்வது உண்மைதான். என்னுடைய இந்த மாற்றத்திற்கு காரணம் நகரத்திற்கு புதிதாக வந்திருக்கும் ஒரு யோகி"

"யோகியா? யார் அவர்? எந்த நாட்டை சேர்ந்தவர்?" என்ற ஜெயசிம்மனின் புருவங்கள் வியப்பால் உயர்ந்தன.

"அவரைப் பற்றிய எந்த விவரங்களும் எனக்கு தெரியவில்லை மன்னா. அவரது பிரதான சீடன் எனக்கு நெருங்கிய நண்பனாகி விட்டான். அவனது வாயை கிளறிய போது அந்த யோகி இமய மலையில் இருந்து வந்ததாக கூறினான். அவனுக்கே அவரைப் பற்றிய பல விசயங்கள் முழுதாகத் தெரியவில்லை. அவரைப் பற்றிய விசயங்கள் அனைத்துமே மர்மமாக இருப்பதால் மக்கள் அந்த யோகியை மர்மயோகி என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர்."

"புதிரான விசயமாக இருக்கிறது நீ சொல்வது?"

"அதை விடவியப்பான விசயம் நிறையவே நடந்திருக்கிறது. நகரத்தின் எல்லையில் ஒரு சாமியார் வருவது நமது எல்லைப் புறத்து காவல் வீரர்கள் யாருக்கும் தெரியவில்லை' எல்லையை தாண்டி எந்த சாமியாரும் உள்ளே வரவில்லை என்று சாதிக்கிறார்கள். அவரது சிஷ்யனோ சுவாமி பரகாய பிரவேசம் அறிந்தவர். ஆகாய வழியில் நினைத்த இடத்திற்கு போக கூடியவர் என்று சொல்கிறான்."

"அதை நீ நம்புகிறாயா?"

"நம்பாமல் என்ன செய்வது அரசே ? அந்த யோகி மக்களிடம் இருந்து காணாமல் போன அத்தனை பொருட்களையும் கண்டுபிடித்து கொடுத்து விடுகிறார். சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.சுவாமி என்னை மங்களம் உண்டாகட்டும் என்று சொல்லி ஆசிர்வதித்தார். அன்று இரவே என் மனைவி வாந்தி எடுத்து விட்டாள். "

"பழையது எதையாவது சாப்பிட்டிருப்பாள். அது உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் போயிருக்கும்."

"இல்லை மன்னா! அவள் கர்ப்பம் தரித்து விட்டாள். அந்த மகிழ்ச்சியை கொண்டாடவே உங்களுக்கு இனிப்பு கொண்டு வந்திருக்கிறேன்."

" வாழ்த்துக்கள் பூபதி!" என்ற ஜெயசிம்மன் பூபதி நீட்டிய இனிப்பை எடுத்து கொண்டான். தன்னுடைய காணாமல் போன ஆபரணத்தை துறவி தான் கண்டுபிடித்து கொடுத்தார் என்பதை பூபதி சொல்லாமல் மறைத்து விட்டான்.

ஜெயசிம்மனின் வாய் இனிப்பை சுவைத்து கொண்டிருந்தாலும் அவனது முகம் சிந்தனையில் இருந்தது. அதைப் பார்த்த பூபதி " மன்னர் ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கி விட்டீர்கள் போலிருக்கிறதே ? என்றான்.

"அந்த யோகியை நம்முடைய திட்டத்திற்கு பயன்படுத்தி கொண்டால் என்ன?"

"நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை மன்னரே?"

'அந்த யோகி முக்காலமும் அறிந்தவர் என்கிறாய். அவரது ஞானதிருஷ்டியை பயன்படுத்தி பார்த்திபன் எங்கே இருக்கிறான் என்று கண்டறிந்து கைது செய்து விடலாமே? ஓரு தொல்லை ஒழிந்து விடுமல்லவா?" அவனது திட்டத்தை கேட்ட பூபதி அயர்ந்து போனான். ஆஹா இப்படி ஒரு திட்டம் நம் மனதில் தோன்றவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டான். தான் ஏன் காவல் அதிகாரியாகவும் ஜெயசிம்மன் ஏன் அரசனாகவும் இருக்கிறான் என்று அவனுக்கு அப்போதுதான் ெதரிந்தது.

"ஆஹா. அற்புதமான யோசனை.இது எனக்கு தோன்றாமல் போய் விட்டது.பார்த்திபனை பிடிக்க இதை விட நல்ல யோசனையை யாரும் கூற முடியாது"

"அந்த சைத்தானை பிடிக்க இதை விட்டால் வேறு மார்க்கமில்லை. என்னுடைய பிரதிநிதியாக நீயே சென்று அந்த மர்மயோகியை இங்கே அழைத்து வா" என்றான் ஜெயசிம்மன்

"முற்றும் துறந்த முனிவருக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாருங்கள். அரசரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. நான் உடனே சென்று யோகியை இங்கே அழைத்து வருகிறேன்."என்ற பூபதி அங்கிருந்து விடைபெற்று கிளம்பினான்.

பூபதிவிடை பெற்று சென்ற பின் முன்னும் பின்னுமாக நடை பழகிய படி சிந்தனையில் ஆழ்ந்தான் ஜெயசிம்மன் .அவனது சிந்தனையை அறுத்தது ஒரு கொலுசொலி.

"யாரது? நித்ராதேவியா?" என்றபடி திரும்பினான் ஜெய சிம்மன் .

திரைச்சீலைமறைவிலிருந்து வெளியே வந்தாள் அவனது மனைவி நித்ராதேவி.

"இது வரை நீ இங்கேயா மறைந்திருந்தாய்?" என்ற ஜெயசிம்மனின் குரலில் வியப்பு மண்டி கிடந்தது.

எதிரே நின்ற நித்ரா தேவியின் கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. அவளது அழகான முகம் களையிழந்து காணப்பட்டது. ஜெயசிம்மனின் முகத்தை உற்று பார்த்த நித்ராதேவி" உங்களை பார்க்கத்தான் இங்கே வந்தேன். பூபதியோடு நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன். எதற்கு வீணாக உங்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்று திரைச்சீலைமறைவில் நின்று விட்டேன்"

"பூபதி பேசியதை நீயும் கேட்டாயா?"

"ஆமாம். முழுதாக கேட்டேன். அடுத்தடுத்து பிறந்து இறந்து போன நம் குழந்தைகளை காப்பாற்றும் உபாயத்தையோகியிடம் கேட்க உங்களுக்கு தோன்றவில்லை. உங்களின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் அந்த பார்த்திபனை பிடிக்க யோகியின் உதவியை நாடும் உங்களை நினைத்தால் என் நெஞ்சு குமுறுகிறது, "

"என்னை மன்னித்து விடு நித்ராதேவி. எனக்கு அப்போது என் குழந்தைகளை பற்றி நினைக்க தோன்றவில்லை."

"உங்களுக்கு எப்படி தோன்றும்? சதா சர்வகாலமும் எதிரிகளை வேட்டையாடுவதையும், நாட்டின் பரிபாலனத்தையும் முழு நேர தொழிலாக மாற்றி கொண்டு விட்டீர்கள். வீட்டில் உங்களுக்காக ஒரு பெண் காத்து கொண்டிருப்பதை மறந்து விட்டீர்கள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை இழந்து விட்டு அவற்றின் நினைவில் துடிக்கும் பெண் நான். கண்களை மூடினால் என் செல்வங்களின் பொக்கைவாய் சிரிப்பு நினைவுக்கு வந்து விடுகிறது. அந்த செல்வங்களை இழந்த வலி என்னை உயிரோடு கொல்கிறது. நீங்கள் நம் பிள்ளைகளை மறந்து விட்டீர்கள். நான் இன்னும் அவர்களை மறக்க முடியாமல் தவியாக தவிக்கிறேன்." என்ற நித்ராதேவியின் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தி கொண்ட ஜெயசிம்மன்

"எனக்கும் அதே வேதனைகள் இருக்கத்தான் செய்கின்றன. பெண் என்பதால் நீ உன் உணர்ச்சிகளை உடனே வெளிகாட்டி விடுகிறாய்.அரசனாக இருக்கும் நான் அப்படி எளிதாக என் உணர்வுகளை வெளிகாட்ட முடியாது.அப்படி காட்டினால் என்னை எல்லோரும் பலவீனமாக நினைப்பார்கள். என் வேதனைகளை வெளிகாட்ட முடியாமல் நான் உள்ளுக்குள்ளேயே மருகிக் கொண்டிருக்கிறேன்." என்றான்.

"அந்த யோகியிடம் நீங்கள் கேட்க வேண்டியது பார்த்திபனை அல்ல. நம்மை நிழலாக தொடரும் நீலியின் சாபத்திற்கான பரிகாரம் . அப்படி ஒரு பரிகாரத்தை யோகி சொல்லிவிட்டால் என் தலையை விற்றாவது அதை நான் நடத்தி காட்டுவேன். என்னுடைய அடுத்த குழந்தையாவது நீலியின் சாபத்திற்கு ஆளாகாமல் நீடுழி வாழ வேண்டும். இந்த மண்ணை ஆள வேண்டும்.எனக்கென்று ஒரு குழந்தை வேண்டும். அது என்னை அம்மா என்றழைப்பதை நான் காது குளிர கேட்க வேண்டும்"

"நீ சொல்வது சரிதான்.இந்த ராஜ்ஜியத்தை எனக்கு பின் ஆள ஒரு வாரிசு வேண்டும். நீலியின் சாபத்திலிருந்து விடுபட அவளது மனதை குளிர் செய்யத்தான் நீலிக்கு கோயில் கட்டினேன். அவளை தெய்வமாக்கி அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று உத்தரவிட்டேன் இருந்தாலும் அவள் மனம் இரங்க வில்லை."

"நீலியை சாந்தப்படுத்தும் வழியோகிக்கு தெரிந்திருக்கலாம். அவரை உடனே இங்கு வரவழையுங்கள்" என்றாள் நித்ராதேவி.

"அவரை அழைத்து வரத்தான் பூபதியை அனுப்பியிருக்கிறேன்" என்றான் ஜெயசிம்மன்

நித்ராதேவியை அருகே அழைத்து தழுவிக் கொண்ட ஜெயசிம்மன் " கவலைப்படாதே நித்ராதேவி. இனி ஒருபோதும் கண்ணீர் நிறைந்த கண்களுடன் என் முன் தோன்றாதே! என் மனம் வலிக்கிறது. எங்கே முத்து பல்மோகன புன்னகை ஓன்றை எனக்காக சிந்து பெண்ணே!" என்றான்.

நித்ராதேவி நாணத்துடன் அவனது தோளில் முகத்தை புதைத்து கொண்டாள்.

வெளியே மெல்ல இருள் சூழ்ந்து தென்றல் காற்று வீச ஆரம்பித்தது. வானத்து நிலவு கார் இருள் கிழித்து வெளிச்சத்தில் பூமி பந்தை நீராட்ட தொடங்கியது.

அதே நேரம் கோயில் மண்டபத்தில் தன் முன் நின்று கொண்டிருந்த பூபதியிடம் "என்னை பார்க்க அவன் தான் வர வேண்டும். நான் அங்கு வர முடியாது" என்று சீறிக் கொண்டிருந்தான் அரிஞ்சயன் .​
 
Last edited:

Latest posts

New Threads

Top Bottom