மர்மயோகி
அத்தியாயம் 2
சகோதரர்கள் இருவரும் பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் இதற்கு மேலும் இருப்பது உசிதமல்ல என்பதால் அங்கிருந்து தங்களின் குதிரைகளுடன் மெல்ல நழவினர். களைப்படைந்திருந்த குதிரைகளை பார்த்த அரிஞ்சயன் "ஆதித்தா! குதிரைகள் வெகுவாக களைத்திருக்கின்றன. அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம் - இல்லையென்றால்களைப்பின் மிகுதியால் குதிரைகள் மயங்கி விழுந்து விடவும் கூடும்." என்று தன் தம்பியை எச்சரித்தான்.
"அதை நானும் கவனித்தேன். இந்த கோமாளிகள் மட்டும் நம் வழியில் குறுக்கிடாமல் இருந்திருந்தால் நாமும் நம் குதிரைகளும் சற்று நேரம் இளைப்பாறியிருக்கலாம். அந்த காவல் அதிகாரியின் கெடுபிடியால் அந்த கிராம மக்கள் வேறு பயந்து போயிருக்கிறார்கள். அவர்களை மேலும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று தான் நாம் கிளம்பி வந்து விட்டோம்" என்றான் ஆதித்தன்.
"ஆமாம். யார் இந்த பார்த்திபன் ? இவனைப் பற்றி ரணதீரன் நம்மிடம் எதுவுமே சொல்லவில்லையே?"
"அதைப் பற்றித்தான் நானும் யோசிக்கிறேன் அண்ணா. ஒரு வேளை ஜெயசிம்மனின் ஆட்சிக்கு எதிராக இந்த பார்த்திபன் கிளம்பி இருப்பானோ? என்று எனக்கு தோன்றுகிறது."
"அந்த பெரியவர் ஜெயசிம்மனுக்கு பதிலாக இப்போது அரசனாக இருக்க வேண்டியது இந்த பார்த்திபன் தான் என்று சொன்னதை நீ கவனித்தாயா?"
"கவனித்தேன். ஆனால் அதைப் பற்றி முழுமையான தகவல்கள் எதையும் என்னால் அறிய முடியவில்லை. அந்த காவல் அதிகாரி பூபதியும் அவனது பரிவாரங்களும் அதற்கு இடையூறாக வந்து தொலைந்து விட்டார்கள். எனக்கென்னவோ இந்த பார்த்திபன் சமீப காலமாகத் தான் இந்த மாதிரி அரசுக்கு எதிரான கலகங்களில் ஈடுபட்டு வருவது போல் தோன்றுகிறது. இல்லையென்றால் இவனைப் பற்றி ராயரோ அல்லது ரணதீரனோ நம்மிடம் சொல்லி இருப்பார்கள்"
"ஆனால் ஒரு விசயத்தை கவனித்தாயா? பிரம்மராயரும் ரணதீரனும் நம்மிடம் சொன்னது போலவே கொடுமையான ஆட்சியைத் தான் ஜெயசிம்மன் நடத்தி கொண்டிருக்கிறான் என்பதை நாம் நம் கண்களாலேயே பார்த்து விட்டோம்"
" கீழே விழுந்த இளநீரையும், பனை மட்டைகளையும் குப்பையின் கணக்கில் சேர்த்து வரி விதிப்பதெல்லாம் கொடுமையின் உச்சம் "
"இது வரை நாம் எத்தனையோ எதிரிகளை சந்தித்திருக்கிறோம். அவர்கள் அனைவருமே மக்களை கசக்கி பிழிந்தவர்கள். தன் நலத்திற்காக பொது நலத்தை மறந்தவர்கள். ஆனால் இந்த ஜெயசிம்மன் வேறு மாதிரியான எதிரியாக இருக்கிறான். தன்னுடைய அரசியல் லாபங்களுக்காக மதத்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறான். இவனை வெல்வது மிகவும் கடினம்."
"அதுதான் எனக்கும் சிந்தனையாக இருக்கிறது. அருகில் இருக்கும் மலைநாட்டு மன்னன் ரணதீரன் ஜெயசிம்மனை விட படைபலத்தில் வலுவானவன். அவனாலேயே ரத்னபுரியின் மீது படையெடுக்க முடியவில்லை. வரி என்றமக்களை வாட்டி வதைக்கும் ஜெயசிம்மனின் மீது ரணதீரனுக்கு தீராத வெறுப்பு இருக்கிறது. தன் நண்பர்களான தீரனையும் விரனையும் வஞ்சகமாக கொன்ற ஜெயசிம்மனின் மீது அவனுக்கு தீராத பகையும் இருக்கிறது. அந்த பகையை தீர்த்து கொள்ள ஜெயசிம்மனை அழித்தொழிக்க வழி தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறான்"
"அதற்கு காரணம் ஜெயசிம்மனின் மதம் கலந்த அரசியல்.அந்த கேடயம் அவனை ரணதீரனிடம் இருந்தும் காப்பாற்றுகிறது. மக்களிடம் இருந்தும் காப்பாற்றுகிறது!"
"அந்த கேடயத்தை சுக்குநூறாக உடைக்கத் தானே நம்மை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்."
"இதுவரை இப்படி ஒரு சூழலை நாம் இருவருமே எதிர்கொண்டதில்லை. அதனால் தான் எனக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது"
"இப்போதைக்கு என்னிடம் இருக்கும் ஒரே திட்டம் முள்ளை முள்ளால் எடுப்பது தான். கடவுளின் அடிமை என்று கூறி அரசியல் செய்பவனை அவனது கடவுளைப் பயன்படுத்தியே வீழ்த்துவோம். அதற்கு முதலில் நீ பழையபடி இளம் துறவியாக மாறிவிட வேண்டியது தான் "
"அடப்பாவி. மீண்டும் எனக்கு காவி வேடமா?" என்றான் அயர்ச்சியுடன் அரிஞ்சயன் .
"அதற்கு உங்களின் முகம் வெகு பொருத்தமாக இருக்கிறது. பார்க்கும் அனைவரும் உங்களை துறவியாகவே நினைக்கும் படி உங்களின் பேச்சும், செய்கையும் இருப்பதை நானே பல முறை வியப்புடன் பார்த்திருக்கிறேன்."
" அடிக்கடி துறவி வேடம் போட்டு போட்டு கடைசியில் ஒரு நாள் நான் உண்மையாகவே துறவியாக மாறி விடப் போகிறேன் பார்"
"மக்கள் அவர்களைத் தான் நம்புகிறார்கள். ஆண்டவனின் தூதுவராக நினைத்து நீங்கள் சொல்வதை வேதவாக்காக நினைத்து நடக்கிறார்கள்"
"அதுவும் சரிதான். எனக்கு இளம் தூவி வேடம் என்றால் உனக்கு?"
"நான் வழக்கம் போல் உங்களின் தலைமை சீடன்.பைராகியின் மாளிகையில் நீங்கள் சில கண்கட்டுவித்தைகளை கற்று கொண்டிர்களே? அதை பிரயோகிக்கும் நேரம் நெருங்கி விட்டது என்று நான் நினைக்கிறேன்."
"ஆமாம். அவற்றை செய்தால் பாமர மக்கள் என்னை மிக எளிதாக நம்பி விடுவார்கள். நல்ல நேரத்தில் அதை நீ ஞாபகப்படுத்தினாய் "
"நம் நோக்கம் மக்களை ஏமாற்றுவதல்ல. மதத்தை வைத்து மக்களை ஏமாற்றும் அந்த எத்தனை ஏமாற்றுவது தான் "
"கவலைப் படாதே! இந்த யோகி செய்யும் சித்து வேலைகள் வெகு விரைவிலேயே அந்த ஜெயசிம்மனின் காதுகளை சென்றடையும். அவனே நம்மை அரண்மனைக்கு அழைப்பான்"
" ஆனால் நாம் அங்கே போக கூடாது. அவனை நம் இடத்தை தேடி வர வைக்க வேண்டும்"
" அவனது அரண்மனைக்கு போவது நமக்கு அனுகூலம் தானே? பிறகு ஏன் நாம் அங்கு போக மறுக்கவேண்டும்?"
"துறவிக்கு வேந்தன் துரும்பல்லவா? அவன் அழைத்ததும் நாம் போனால் நம்மை இளப்பமாக நினைப்பான் நமக்கு மதிப்பிருக்காது. அதுவே வரமுடியாது என்று பிகு செய்தால் அவன் நம்மை உண்மையாகவே நம்புவான்"
"ஆஹா.! இதற்குத்தான் என் தம்பி வேண்டும் என்பது " என்று அரிஞ்சயன் ஆதித்தனின் தோளில் தட்டி கொடுத்தான்.
இருவரும் பேசியபடியே குதிரைகளை மெதுவாக நடத்தி சென்றனர். மெதுவாகவே சென்றதால் குதிரைகள் பாதையின் ஓரமாக இருந்த பசும் புற்களையும் செடி கொடிகளையும் மேய்ந்தபடி நடை போட்டன. ஆதித்தனின் கண்களில் சற்று தூரத்தில் இருந்த ஒரு சத்திரம் தென்பட்டது.
"அப்பாடா!அதோ அங்கே ஓரு சத்திரம் தென்படுகிறது. வாருங்கள் அங்கே சற்று நேரம் இளைப்பாறுவோம்."
" நம்மை விட குதிரைகள் அதிகமாக களைத் திருக்கின்றன. அவற்றிற்குத் தான் உணவும் தண்ணீரும் ஓய்வும் தேவைப்படுகின்றன." என்றான் அரிஞ்சயன்
இருவரும் சத்திரத்திற்கு வெளியே இருந்த மரத்தில் குதிரைகளை கட்டி விட்டு சத்திரத்தினுள் நுழைந்தனர். இவர்களை பார்த்ததும் வரவேற்ற சத்திரத்து நிர்வாகி" சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறீர்கள். சமையல் இன்னும் சற்று நேரத்தில் முடிந்துவிடும். சத்திரத்தின் பின்னால் கிணறு இருக்கிறது. குளித்து விட்டு வாருங்கள். அதற்குள் உணவு தயாராகி விடும்" என்றார்.
"நன்றி ஐயா! எங்களுடைய குதிரைகள் மிகவும் பசியோடு இருக்கின்றன. அவற்றிற்கும் உணவு வேண்டும்"
"நீங்கள் உள்ளே வரும் போதே அதையும் நான் கவனித்தேன். கவலைப்படாதீர்கள். என்னுடைய பணியாள் குதிரைகளை பராமரிப்பதில் கைதேர்ந்தவன். அவன் கேட்கும் தொகையை நீங்கள் முகம் சுழிக்காமல் கொடுத்தாலே போதும் "
"அதற்கென்ன?வாயில்லா பிராணிகளை நன்றாக கவனித்தால் அவரை நாங்கள் நன்றாக கவனித்து விடுகிறோம்"
சத்திரத்து பணியாள் ஓருவன் ஊற வைத்த கொள்ளுடன் குதிரைகளை நோக்கி நடந்தான். குதிரையில் பயணிக்கும் வழி போக்கர்களுக்கான அத்தனை வசதிகளும் அந்த சத்திரத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட சகோதரர்கள் இருவரும் திருப்தியுடன் புன்னகைத்து கொண்டனர்.
இருவரும் சத்திரத்தின் பின்புறம் இருந்த கிணற்றில் நீரிறைத்து திருப்தியாக நீராடிவிட்டு உடையை மாற்றி கொண்டனர்.
"அந்த சாமியார் உடையை இப்போதே மாற்றி கொள்ளட்டுமா? இல்லை வேறு இடத்தில் மாற்றி கொள்ளட்டுமா? என்றான் அரிஞ்சயன்
" ரத்னபுரிக்குள் நுழையும் போது நீங்கள் யோகியாக மாறினால் போதும்.அதுவரை சாதாரண உடையே போதும் ".
"அப்படியா சொல்கிறாய்? பின்னாட்களில் யாராவது சத்திரங்களில் யோகி வந்தாரா என்று விசாரிக்க போகிறார்கள்"
"நீங்கள் தான் கண் கட்டுவித்தைகள் தெரிந்த மர்மயோகியாயிற்றே? நீங்கள் எப்படி நாட்டிற்குள் நுழைந்தீர்கள் என்பதே மர்மமாக இருக்க வேண்டும். இந்த மாதிரியான மர்ம கதைகளில் தான் மக்களுக்கு ஆர்வம் அதிகம். மீதி கதையை அவர்களே புனைந்து கொள்வார்கள்"
"அதுவும் சரிதான். சரி வா சாப்பிடலாம்"
இருவரும் சத்திரத்தினுள் நுழைந்தனர்.ஏற்கனவே பந்தி உபசரிப்பு நடந்து கொண்டிருந்தது. இருவரும் அதில் கலந்து கொண்டு ஆளுக்கொரு இடத்தை பிடித்து கொண்டு அமர்ந்தனர். சாப்பிட்டு முடித்ததும் சத்திரத்தின் முன்பு இருந்த திண்ணையில் இருவரும் சற்று நேரம் படுத்து இளைப்பாறினர். மெல்லிய குறட்டையுடன் கண்ணயர்ந்து விட்ட ஆதித்தனை பார்த்து மெலிதாக புன்னகைத்து கொண்டான் அரிஞ்சயன் .
இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு இருவரும் பயணத்திற்கு தயாராகினர். குதிரைகளை கவனித்து கொண்ட பணியாளனுக்கு அவன் கேட்ட தொகைக்கு மேலேயே கொடுத்து அவனை குளிர்வித்தான் ஆதித்தன். அவனது வாயெல்லாம் பல்லானது.
உணவிற்காக சத்திரத்து நிர்வாகியிடம் பணம் கொடுக்க ஆதித்தன் நின்ற போது அவர் "நீங்கள் வெளியூர்வாசிகள் என்றால் உங்களுக்கு பாதி விலை தான் " என்றார்.
குழம்பி போன ஆதித்தன் "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அனைவரும் ஒரே மாதிரியான உணவைத் தானே உண்டோம்?உள்ளுர்வாசிகளுக்கு ஒரு விலை .அயலூர் வாசிகளுக்கு ஒரு விலையா?"
"ஆமாம். இங்கே அப்படித்தான். வெளியூர்வாசிகளுக்கு இங்கே உணவு பாதி விலை தான்.இது மன்னரின் உத்தரவு .அதிதி தேவோ பவ என்பது மன்னரின் எண்ணம் "
" இதை உள்ளுர்வாசிகள் ஏற்று கொள்கிறார்களா?"
"இல்லை. உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இதை மன்னரிடம் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. சொல்வதற்கு மன்னியுங்கள். எங்கள் நாட்டில் வெளிநாட்டினருக்குத் தான் சலுகைகளும், முன்னுரிமைகளும் "
"விசித்திரமாக இருக்கிறது. மண்ணின் மைந்தர்களை புறக்கணிக்கும் ஒரு அரசை இங்கு தான் பார்க்கிறேன்" என்ற ஆதித்தன் அவர் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு அரிஞ்சயனுடன் அங்கிருந்து கிளம்பினான்.
ரத்னபுரிக்குள் இருவரும் நுழைந்த போது காவலர்கள் சிலர் இருவரையும் சுற்றி வளைத்தனர்.
"இருவரும் குதிரையிலிருந்து இறங்குங்கள்.ரத்னபுரிக்குள் நுழையும் முன்பாக இருவரும் ஓருவருக்கு மரியாதை செலுத்த தவறி விட்டீர்கள். அவருக்கு மரியாதை செய்த பின் உள்ளே போகலாம்" என்றான் காவலன் ஓருவன்.
இருவரும் குதிரையிலிருந்து இறங்கினர்.
"யார் அந்த ஆசாமி? நாங்கள் எதற்காக அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்?"
"இது இங்கே சம்பிரதாயம். மன்னரின் கட்டளையும் கூட. நீங்கள் பணிந்து மரியாதை செலுத்த வேண்டியது யார் தெரியுமா?"
" யார்?"
"அது ஒரு பெண் "
சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.