Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL மர்மயோகி - Tamil Novel

மர்ம யோகி நாவலின் ஆசிரியர் அத்தியாயம் 8 ற்கு பிறகு நிறுத்தி விட்டாரா...
 
அத்தியாயம் 9

ரத்னபுரியின் வடக்கு திசையில் இருந்தது மரங்கள் சூழ்ந்த காட்டு பகுதி. அங்கே கொடிய மிருகங்களும் வன விலங்குகளும் வசித்து வந்தன. அங்கே அந்த மிருகங்களுடனும் இயற்கையான காட்டு வளத்துடனும் இணைந்து வாழ்ந்து வந்தார்கள் பளியர்கள் என்ற பழங்குடி மக்கள் . வன விலங்குகளின் தாக்குதல் நிகழாமல் இருக்க கூடிய மேட்டு பகுதியில் பளியர்கள் வசிக்கும் ஒரு கிராமம் இருந்தது. முள்வேலிகள் சூழ்ந்த குடிசைகள் நிறைந்தஅந்த கிராமத்தில் இருந்த பளியர்களின் முக்கிய தொழில் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் தோல், பற்கள் இவற்றை விற்பது. மாமிசம் உண்பவர்களின் தேவைக்காக பொறி வைத்து சில விலங்குகளை பிடித்து அவற்றை நகரங்களில் விற்று பொருள் ஈட்டுவது, தேன், மிளகு, ஏலக்காய், கனி வகைகள் போன்றவற்றை சேகரித்து விற்பது போன்றவை. அந்த கிராமத்தில் இப்போது அன்னியர்கள் சிலர் அடைக்கலமாகி இருந்தனர். அவர்களை பாதுகாப்பாக காப்பாற்றுவது தான் பளியர்களின் முக்கியமான வேலை. பளியர் கூட்ட தலைவன் இதற்கு முன்பு ரத்னபுரிக்கு மன்னனாக இருந்த தீரனுக்கு நெருங்கிய நண்பன். தீரன் போர்க்களத்தில் வஞ்சகமாக கொல்லப்பட்ட பின்பு ஜெயசிம்மனின் ஆளுகையை ஏற்க விரும்பாமல் இந்த காட்டிற்குள் தன் கூட்டத்தாருடன் இடம் பெயர்ந்து வந்து விட்டான்.

தீரனின் கடைசி தம்பியான பார்த்திபன் ஜெயசிம்மனை எதிர்த்து ஒரு புரட்சி படையை உருவாக்கி இருந்தான். நாட்டில் மறைந்திருந்தால் ஜெயசிம்மனுக்கு பயந்தோ அல்லது பார்த்திபனை பிடித்து கொடுத்தால் பெரும் பணம் கிடைக்கும் என்றோ துரோகிகள் காட்டி கொடுத்து விடுவார்கள் என்பதால் அவன் தான் ஒளிந்து கொள்ள இடம் கேட்டு பளியர் குல தலைவனிடம் வந்து சேர்ந்தான். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப இருவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்.பளியர் குல தலைவன் பார்த்திபனின் குழுவினருக்கு உணவிட்டு பாதுகாப்பாக பார்த்து கொள்வதை தன்னுடைய கடமையாக கருதினான். ஆண்டவன் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் ஜெயசிம்மனை எதிர்க்க துணிபவர்கள் பார்த்திபனின் குழவில் இணைந்து கொண்டிருந்தனர்.ஜெயசிம்மனின் ஆட்கள் பொது மக்களிடம் அராஜகமாக நடக்கும் போதெல்லாம் அங்கே தோன்றும் பார்த்திபன் அவர்களை விரட்டியடித்து நீதியை நிலைநாட்டுவான் .அவனது நடவடிக்கைகளால் மக்களின் அபிமானம் அவன் பக்கம் திரும்பி கொண்டிருந்தது. அப்படியான சூழலில் ஒரு நாள் விடியற்காலையில் குளிருக்கு இதமாக தீ மூட்டிவிட்டு அதை சுற்றி வட்டமாக உட்கார்ந்தபடி பார்த்திபன் தன் ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

எரியும் தீ ஜுவாலையை பார்த்து கொண்டிருந்த பார்த்திபன் "நம் கோபத்தை போலவே தீயின் ஜுவாலையும் கொளுந்து விட்டு எரிகிறது " என்றான்.

"இந்த தீ நம் உடலில் உள்ள குளிரை போக்குகிறது. நம் உள்ளத்தில் எரியும் கோபத்தீ நம் மக்களின் வாட்டத்தை போக்க வேண்டும்" என்றான் குழுவில் ஒருவன்.

"அதற்கு நாம் பெரும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இங்கு நம் குழுவில் சொற்ப நபர்களே இருக்கிறோம். அங்கே நம் எதிரியிடம் ஏராளமான படை பலம் , அதிகார பலம் என்று ஏராளமாக இருக்கின்றன. இப்போது நாம் அவனிடம் மோதுவது முட்டாள்தனமானது. நம்மை முட்டை பூச்சி நசுக்குவது போல் எளிதாக நசுக்கி விடுவான்" என்றான் பார்த்திபன்.

"மலைநாட்டு மன்னன் ரணதீரனும் உன் அண்ணனும் நெருங்கிய நண்பர்களாயிற்றே? நாம் அவனிடம் உதவி கேட்டால் என்ன?"

"நமக்கு அவன் உதவி செய்ய நினைத்தாலும் அவனால் நமக்கு உதவ முடியாது. தன் நண்பனை கொன்று ஆட்சியை பிடித்த ஜெயசிம்மன் மேல் அவன் படையெடுத்து துவம்சம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவனோ கோபத்தை அடக்கி கொண்டு அமைதியாக இருக்கிறான்."

"அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?"

"ஓரே காரணம் தான். அந்த காரணத்தின் பெயர் நித்ராதேவி"

"ஜெயசிம்மனின் மனைவி, சிங்கபுரத்தின் இளவரசி நித்ராதேவியா?" என்றவனின் குரலில் வியப்பு மண்டி கிடந்தது.

"அவளேதான் !" என்றான் அமைதியான குரலில் பார்த்திபன்.

"ஒரு பெண்ணிற்காக ரணதீரன் ரத்னபுரியின் மீது படையெடுக்காமல் இருக்கிறானா? இது என்ன புதுக்கதை?"

"இது புதுக்கதையல்ல. ரொம்பவும் பழைய கதை. . புவியியல் அமைப்பின் படி முதலில் ரத்னபுரி .ரத்னபுரியை அடுத்துமலை நாடு, மலைநாட்டுக்கு அருகே சிங்கபுரம் .அந்தசிங்கபுர சமஸ்தானத்தின் ஓரே பெண் வாரிசு நித்ராதேவி. அவளைத் தான் ஜெயசிம்மன்மணந்திருக்கிறான்.ரத்னபுரிக்கும் சிங்கபுரத்திற்கும் இடையில் அகப்பட்டி ருப்பவன் மலைநாட்டு மன்னன் ரணதீரன்.. அவன் நமக்கு உதவி செய்ய நினைத்து ரத்னபுரியின் மீது படையெடுத்தால் சிங்கபுரம் மலை நாட்டின் மீது போர் தொடுக்கும். ரணதீரன் ஓரே நேரத்தில் இரண்டு நாடுகளை வெவ்வேறு திசைகளில் எதிர்கொள்ள நேரிடும். அதனால் தான் அவன் தன் நண்பனை கொன்ற ஜெயசிம்மன் மீது போர் தொடுக்க முடியாமல் திகைத்துப் போய் அமைதியாக இருக்கிறான். ஆனால் எப்போது வேண்டுமானாலும் ரத்னபுரியும், சிங்க புரமும் இணைந்து தன் நாட்டை கபளிகரம் செய்து விடும் என்ற அச்சமும் அவனுக்கு இருக்கிறது"

"அப்படியானால் இரண்டில் ஏதாவது ஒரு நாட்டை ரணதீரன் வீழ்த்தியே ஆகவேண்டும். இல்லையென்றால் சிறிது நாட்களில் மலைநாடு என்ற நாடே இருக்காது. மலைநாடு இரண்டு நாடுகளின் அங்கமாக மாறிவிடும்."

"சரியாகச் சொன்னாய்.ரத்னபுரியின் மீது படையெடுத்தால் தன்மருமகனை காப்பாற்ற சிங்கபுரமும் மலை நாட்டின் மீது படையெடுக்கும் . இரட்டை தாக்குதல் .அவற்றை எதிர்கொள்ள ரணதீரன் தன் படைபலத்தை தற்போது அதிகரித்து கொண்டிருக்கிறான்"

"ஜெயசிம்மன் சரியான குள்ள நரிபோலிருக்கிறதே? உள்ளுர் மக்களை நான் அரசனல்ல கடவுள் தான் அரசர் நான் அவரின் அடிமை என்று ஏமாற்றுகிறான். அதே பாதுகாப்பு கவசத்தை எதிரி நாட்டு மன்னர்களிடமும் பிரயோகித்து அவர்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறான்.ரண தீரனையும் தன் ராஜதந்திரத்தால் முடக்கி விட்டான். இவ்வளவு சாமர்த்தியமாக காய்களை நகர்த்துபவனை நாம் எப்படி வீழ்த்த முடியும்?"

"ஏன் முடியாது? விடா முயற்சி. விஸ்வருப வெற்றி .பூட்டு உருவாகும் போதே அதற்கான சாவியும் உருவாக்கப்பட்டிருக்கும் "என்றான் பார்த்திபன்

"நான் ஒரு விசயத்தை கேள்விப்பட்டேன் பார்த்தி பா? அது உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை." என்றான் மற்றொருவன்

"நீ கேள்விப்பட்ட விசயத்தை சொல் நண்பா! கேட்போம்" என்றான் பார்த்திபன்

"இரண்டு நாடுகளிடையே சிக்கி கொண்டு தான் தவிப்பதை விரும்பாத ரணதீரன் அதிலிருந்து விடுபட இரண்டு கள்வர்களை நாடியிருப்பதாக தெரிகிறது"

" கள்வர்களா?ரண தீரனுக்கு புத்தி மழுங்கி விட்டதா என்ன? கள்வர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்?" என்று சிரித்தான் பார்த்திபன்.

" நகைக்காதே பார்த்திபா! நீ நினைப்பதுபோல் அவர்கள் சாதாரண கள்வர்கள் அல்ல. கள்வர்புரத்தை சேர்ந்த கள்வர் தலைவனின் மகன்கள். எடுத்த காரியத்தில் தோற்காத வீரர்கள் . தண்ணீரில் தடம் பார்த்து நடக்கும் திறமைசாலிகள். அண்ணன் அரிஞ்சயனும் தம்பி ஆதித்தனும் ஒருவரை ஒருவர் மிஞ்சுவார்கள். மோகினி என்ற பெயர் கொண்ட அபூர்வ சுழி கொண்ட வெண்ணிற புரவி கூட அவர்கள் வசம் உண்டு. களவு மட்டுமல்லாமல் பல்வேறு கலைகளில் சிறந்தவர்கள். பல நாடுகளில் இவர்கள் இருவரால் ஆட்சி மாற்றம் நடந்தேறி இருக்கிறது"

" இரண்டு கள்வர்களும் அவ்வளவு வல்லமை வாய்ந்தவர்களா?"

"இல்லையென்றால் ரணதீரன் ஏன் அவர்களை அழைக்க போகிறான். போன வாரம் சகோதரர்கள் இருவரும் ரணதீரனையும் அவனுடைய அமைச்சர் பிரம்மராயரையும் சந்தித்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை."

"இருவரும் வல்லவர்கள் போல் தான் தெரிகிறது.ஜெயசிம்மனை எதிர்க்க இவர்கள் தான் சரியான ஆட்கள் " என்றான் பார்த்திபன்.

" ஆனால் அவர்கள் இப்போது எங்கேயிருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை"

"அரசாங்க அதிகாரிகளின் நடமாட்டத்தை பற்றி நமக்கு உளவு சொல்ல சில ஆட்களை நாம் வைத்திருக்கிறோமில்லையா? அவர்களில் ஒருவன் ஒரு விசித்திரமான செய்தி ஒன்றை கூறினான்"

"என்ன அது?"

"நாட்டிற்குள் புதிதாக வந்திருக்கும் ஒரு யோகி மக்களின் திருடு போன தொலைந்து போன பொருட்களை திரும்ப தருகிறாராம். மக்கள் கூட்டம் அவரைப் பார்க்க அலை மோதுகிறதாம். நகரத்தின் பெரும் தனவந்தர்கள் அவரை தங்கள் இல்லத்திற்கு அழைத்து மரியாதை செய்கிறார்களாம். நடந்தவை, நடக்க போகிறவை போன்றவற்றை அப்படியே அச்சுபிசகாமல் சொல்கிறாராம் அந்த யோகி."

"இதற்கு முன்னால் அவர் எங்கிருந்தாறாம்?" என்றான் பார்த்திபன் யோசனை செய்தபடி.

"அதைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. அவரின் பிரதான சீடன் அவர் இமய மலையில் இருந்து வருவதாக கூறியிருக்கிறான். அதனால் மக்கள் அவரை மர்மயோகி என்ற பெயரால் அழைக்கிறார்கள்.ஜெயசிம்மன் கூட விரைவிலேயே அவரை சந்திக்க திட்டமிட்டிருக்கிறானாம்."

" அவன் அந்த மர்மயோகியை சந்திக்கும் முன்பாக நான் அவரை சந்திக்க வேண்டும்" என்றான் பார்த்திபன்.

"அவரை சந்தித்து நீ என்ன செய்ய போகிறாய்? இந்த சந்திப்பால் நமக்கு என்ன நன்மை நடக்க போகிறது?"

"அந்த யோகியின் மூலம் நமக்கு சில விசயங்கள் நடக்க வேண்டியிருக்கிறது. அவரை வைத்து நான் சிலவற்றை சாதிக்க நினைக்கிறேன். அவற்றை இப்போது இங்கே சொல்ல முடியாது"

"நமக்கு உளவு சொல்லும் ஆட்களில் யாரையாவது வைத்து துறவியை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்." என்றான் கும்பலில் ஒருவன்.

"நல்லது. சந்திப்பிற்கு விரைவாக ஏற்பாடு செய். அவர் மட்டும் என் திட்டத்திற்கு சம்மதிக்காவிட்டால்?" என்ற பார்த்திபன் தன் இடையில் இருந்த குறுவாளை எடுத்து அருகில் இருந்த மரத்தை நோக்கி வீசினான். மரத்தில் ஏறிக் கொண்டிருந்த பாம்பு ஒன்று அவனது கத்தி பட்டுதலை வேறு உடல் வேறாக துண்டிக்கப்பட்டு விழுந்தது. பார்த்திபனின் உதடுகளில் ஒரு கொடுர புன்னகை மலர்ந்தது.
 
அத்தியாயம் 10

ஒருவருக்கு ஒருவர் எதிரியான இரண்டு நபர்கள் தன்னை சந்திக்க விரும்புவதை அறியாத அரிஞ்சயனின் முன்பு வந்து நின்றான் ஜெயசிம்மனின் தூதுவனான பூபதி. பணிவோடு யோகியை வணங்கியவன்" சுவாமி! உங்களுக்கு நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்திருக்கிறேன். ரத்னபுரியின் மன்னர் ஜெயசிம்மன் தங்களின் புகழை கேள்விப்பட்டு தங்களை சந்திக்க நினைக்கிறார். உங்களின் புனிதமான காலடிகள் தன் அரண்மனையில் பட வேண்டும் என்று அரசர் விரும்புகிறார்." என்றான் பவ்யத்துடன் .

"மிகுந்த மகிழ்ச்சி மகனே.! ஆனால் ஈசன் இந்த கட்டையை இங்கிருந்து நகரக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறான். அதனால் அவனை சந்திக்க நான் அங்கே வர முடியாது. ஆனால் அவன் இங்கு வர எந்த தடையும் இல்லை" என்றான் அரிஞ்சயன் .

ஏற்கனவே ஆதித்தன் அரசன் அழைத்தாலும் அங்கே போகக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்ததால் அதையே பின்பற்ற தீர்மானித்தான் அரிஞ்சயன் அவனது யுக்தி அறியாத பூபதி மேன்மேலும் கெஞ்ச ஆரம்பித்தான்.

"சுவாமி! அரசரே உங்களை காண விரும்புவது உங்களுக்கு பெருமை தானே?"

"இதில் எனக்கென்ன பெருமை இருக்கிறது. எல்லாம் ஈசனின் செயல். எனக்கு அரசனும் ஆண்டியும் ஒன்று தான். ஈசன் அனுமதி கொடுத்தால் இந்த கட்டை அரண்மனைக்கு வரும். இல்லையென்றால் இங்கிருந்தே தன்னுடைய கடமையை செய்யும் "

"அப்படியென்றால் அரண்மனைக்கு வர மாட்டீர்களாசுவாமி! இங்கே உங்களை வீட்டிற்கு அழைக்கும் வணிகர்களின் இல்லங்களுக்கு செல்கிறீர்கள்? ஆனால் அரண்மனைக்கு வர மறுக்கிறீர்கள். இது நியாயமா சுவாமி?" என்றான் பூபதி.

அவனது கிடுக்கிப்பிடி கேள்வியை எதிர்பார்க்காத அரிஞ்சயன் சில நிமிடங்கள் திகைத்து நின்று விட்டான். பூபதியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டவன்" மகனே! காரணமின்றி காரியமில்லை. ஈசன் என்னை அங்கே அனுமதிக்காததற்கு என்ன காரணம் வைத்திருக்கிறானென்று அவனுக்கு மட்டும் தான் தெரியும். அற்பமானுட பிறவிகளான நாம் ஏன் அதை மாற்ற முனைய வேண்டும்?" என்று எதிர் கேள்வியை பூபதியை நோக்கி வீசினான்.

அவனது கேள்விக்கு பதில் சொல்ல தெரியாத பூபதி " சரி சுவாமி. நீங்கள் கூறியதை நான் அப்படியே அச்சு பிறழாமல் அரசரிடம் கூறி விடுகிறேன்" என்றான்.

" எல்லாம் சிவமயம் " என்று லேசாக வளர்ந்திருந்த தாடியை தடவியபடி கூறினான் அரிஞ்சயன் .

" சரி! நான் கிளம்புகிறேன் சுவாமி " என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் பூபதி.

தன்னை காண வந்த பக்தர்களிடம் பேசி கொண்டிருந்த ஆதித்தனை அழைத்த அரிஞ்சயன் தனி இடம் ஒன்றில் ஒதுங்கினான்.

"ஆதித்தா! நம் திட்டம் நிறைவேறி விட்டது.ஜெயசிம்மன் நம்மை சந்திக்க ஆசைப்படுகிறான். பூபதியிடம் அதைச் சொல்லி அனுப்பி இருக்கிறான். நான் அவனை சந்திக்க மறுத்து விட்டேன். எப்படியும் நாளை அவன் நம்மை சந்திக்க வருவான் என்று நினைக்கிறேன்."

"ஆன்மீகம் என்ற பெயரில் நாம் விரித்த வலையில் தனக்கே தெரியாமல் விழப் போகிறான் ஜெயசிம்மன் "

"அது சரிதான். ஆனால் நமக்கு ஜெயசிம்மனை பற்றி ரணதீரன் சொன்னதை தவிர வேறு விவரங்கள் எதுவும் தெரியாதே? அவனை கவர அவன் நம்மை நம்பவேறு ஏதாவது விசயங்கள் நமக்கு தெரிய வேண்டுமே?"

"கவலைப்படாதீர்கள். நாளை காலை வரை நமக்கு நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள் அவனைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து விடலாம்"

" நல்லது. இன்று யாராவது முக்கிய பிரமுகர்கள் தங்களின் இல்லத்திற்கு என்னை அழைத்திருக்கிறார்களா?"

"ஆம். இன்று இரவு நம்மை பிரபல வைர வியாபாரியான விஜயபாகு அழைத்திருக்கிறார். இன்று இரவு உணவு நம்மிருவருக்கும் அங்கே தான் "

" அறுசுவை உணவுகளை தினமும் தின்று என் உடல் இன்னும் ஒரு சுற்று பெருத்து விடும் போலிருக்கிறது. இந்த மக்கள் சோறு போட்டே நம்மை கொன்று விடுவார்கள் போலிருக்கிறது."

"இவையெல்லாம் அன்பு தொல்லைகள். அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்று சிரித்தான் ஆதித்தன்.

அன்று இரவு தன்னுடைய பணிகளை விரைவாகவே முடித்து கொண்டான் அரிஞ்சயன் .இருவரும் ஆளுக்கொரு குதிரையில் ஏறி வைர வியாபாரியான விஜயபாகுவின் பிரமாண்டமான மாளிகையை நோக்கி விரையலாயினர்.

மாளிகையின் முன்பு நின்றிருந்த விஜயபாகு வாயெல்லாம் பல்லாக இருவரையும் வரவேற்றான்.

"சுவாமியின் காலடி பட என்னுடைய குடிசை புண்ணியம் செய்திருக்க வேண்டும். வாருங்கள் சுவாமி " என்று இருவரையும் வரவேற்றான். ", எல்லாம் சிவார்ப்பணம் " என்றபடி குதிரையிலிருந்து இறங்கினான் அஞ்சயன்.இருவரும் குதிரையிலிருந்து இறங்கியதும் ஒருவன் இரண்டு குதிரைகளையும் லாயத்திற்கு அழைத்து சென்றான்.

இருவரையும் மாளிகையின் உள்ளே அழைத்து சென்றான் விஜய பாகு.வாசனாதி திரவியங்களால் நறுமணம் கமழ்ந்த ஒரு கூடத்திற்கு இருவரையும் அழைத்து வந்தவன் அங்கிருந்த நாற்காலியில் இருவரையும் அமர செய்தான்.

"இங்கேயே இருங்கள். சற்று நேரத்தில் வந்து விடுகிறேன்." என்ற விஜயபாகு அருகிலிருந்த கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.

"அற்புதமான வரவேற்பு. அறுசுவை உணவு. துறவியாக நடிப்பதற்கே இப்படி தடபுடலான வரவேற்பு என்றால் நான் இப்போதே உண்மையான துறவியாக மாறிவிடத் தயார் " என்றான் அரிஞ்சயன் .

"அவசரப்பட வேண்டாம். எனக்கென்னவோ இங்கே நடப்பது சந்தேகத்திற்கு இடமளிப்பதாக இருக்கிறது"

"ஏன் அப்படி சொல்கிறாய்?"

"பொதுவாக பெண்களுக்குத் தான் சாமியார்கள், பூஜை, புனஸ்காரங்கள் இவற்றின் மீது அதிக ஆர்வம் இருக்கும். நாம் உள்ளே வந்ததிலிருந்து ஒரு பெண் கூட நம்மை சந்திக்க வரவில்லை என்பதை கவனித்தீர்களா?"

"அட ஆமாம். ஆசிர்வாதம் வாங்க ஒரு பெண் கூட வரவில்லையே?" என்ற அரிஞ்சயன் "ஆதித்தா ! உன்னிடம் ஆயுதங்கள் ஏதாவது இருக்கிறதா?"

"இல்லை. விருந்துப் சாரம் என்பதால் நான் எந்த ஆயுதங்களையும் கொண்டு வரவில்லை. அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு திறமையான வீரன் தனக்கான ஆயுதங்களை தான் எதிரிகளிடமிருந்தே சம்பாதித்து கொள்வான்"

"அதுவும் சரிதான். அந்த விஜயபாகு சென்ற கதவை திறந்து பார். அது நீண்ட நேரமாக பூட்டியிருப்பது போல் தோன்றுகிறது "

ஆதித்தன் விஜயபாகு சென்ற வழியில் இருந்த கதவை திறக்க முயன்றான். அது வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

" நம்மை உள்ளே வைத்து பூட்டி இருக்கிறார்கள்" என்றான் ஆதித்தன்.

" நம்மை யாரோ சாதுர்யமாக ஏமாற்றி இருக்கிறார்கள்"

"ஒருவேளை நம்மைஜெயசிம்மன் அடையாளம் கண்டு பிடித்திருப்பானா?"

"இல்லை. அப்படி அடையாளம் கண்டு பிடித்திருந்தால் அவன் ஏன் என்னை சந்திக்க பூபதியை அனுப்பியிருக்க போகிறான்? இது வேறு வகையான சதிவலை போலிருக்கிறது" என்றான் அரிஞ்சயன் .

"இன்னும் சற்று நேரத்தில் நம்மை சிறை வைத்தது யார் என்று தெரிந்துவிடும்"

நீண்ட அமைதிக்கு பிறகு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. இருவரும் கதவை பார்த்தனர். கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பார்த்திபன் அவனுக்கு பின்னால் கும்பிட்டபடி வந்தான் விஜயபாகு .

"சுவாமி.என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். இவர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரை அழைத்து வரச் சென்றதால் சற்று தாமதமாகி விட்டது"

"பரவாயில்லை மகனே!" என்றான் அரிஞ்சயன்

உள்ளே நுழைந்ததும் இருவரையும் ஏற இறங்க பார்த்த பார்த்திபன்" உங்கள் இருவரையும் நான் இதற்கு முன்பு எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று தான் தெரியவில்லை" என்று நெற்றியை சுருக்கினான்.

யாரை சந்திக்க வேண்டுமென்று சகோதரர்கள் இருவரும் திட்டமிட்டிருந்தார்களோ அந்த பார்த்திபனே தங்கள் முன்னால் வந்து நிற்கும் அதிர்ச்சியை சகோதரர்கள் இருவரும் வெளிக்காட்டி கொள்ளவேயில்லை.

"ஒரு கிராமத்து தோப்பில் கீழே விழுந்த இளநீருக்கும் மட்டைக்கும் நீங்கள் நீதி கேட்ட போது நாங்கள் அங்கே இருந்தோம்."

பார்த்திபனுக்கு சட்டென்று அந்த சம்பவம் நினைவுக் கு வந்து விட்டது. ஆனால் அந்த சம்பவத்தின் போது சகோதரர்கள் தங்கள் பெயரை சொன்னதை அவன் மறக்கவில்லை.

"கனகச்சிதமான வேடப் பொருத்தம் சுவாமி உங்களுக்கு?" என்றான் பார்த்திபன் புன் சிரிப்புடன்!

"இதுவேடமில்லை மகனே.!உண்மை" என்றான் அரிஞ்சயன் திடுக்கிடலை மறைத்தபடி,

"பொய் சொல்லாதீர்கள் சுவாமி .உங்கள் பெயர் அரிஞ்சயன் .இதோ பக்கத்தில் நிற்கும் உங்கள் சகோதரனின் பெயர் ஆதித்தன்" என்றான் பார்த்திபன் கேலி சிரிப்புடன்!

சகோதரர்கள் இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.ஜெயசிம்மன் தான் தங்களை விரைவில்அடையாளம் கண்டு கொள்வான் என்று இருவரும் நினைத்தனர். ஆனால் பார்த்திபன் தங்களை அடையாளம் கண்டு கொள்வான் என்பதை இருவருமே எதிர்பார்க்கவில்லை.

அரிஞ்சயன்" எப்படி எங்களை அடையாளம் கண்டு பிடித்தாய்?" என்றான் திகைப்புடன்.

"உங்கள் இருவரையும் பற்றி நான் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். நேற்று கூட என் ஆட்கள் உங்கள் இருவரின் திறமையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். நீங்கள் இருவரும் தான் திறமைசாலிகளாயிற்றே? எப்படி கண்டு பிடித்தேன் என்று கூறுங்களேன் பார்ப்போம்" என்றான் பார்த்திபன். இருவரது திறமையையும் சோதித்து அறிவதற்காக வேண்டுமென்றே தான் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டான் பார்த்திபன்

"அது மிகவும் எளிது. தோப்பில் நடந்த சம்பவத்தின் போது நாங்கள் இருவரும் எங்களின் பெயரைக் கூறி உன்னிடம் அறிமுகம் செய்து கொண்டோம். அதனால் உன்னால் எங்களை அடையாளம் காண முடிந்திருக்கும் " என்றான் ஆதித்தன்.

புன்னகையுடன் ஆதித்தன் சொல்வதை தலையாட்டி ஆமோதித்த பார்த்திபன்" அது மட்டுமல்ல. விஜயபாகுவின் லாயத்தில் கட்டப்பட்டிருந்த அபூர்வ சுழி கொண்ட வெண்ணிற குதிரையானமோகினியையும் நான் பார்த்தேன். ஓன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல் வந்திருப்பது ஆதித்தனும், அரிஞ்சயனும் என்று கண்டு கொண்டேன். உங்களின் வருகையின் நோக்கம் ?"

"ஜெயசிம்மனை அழிப்பது "

"என்னுடைய நோக்கமும் அதுவே தான்.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கேற்ப நாம் மூவரும் நண்பர்களாகி விட்டோம்." என்று இருவரிடமும் கையை நீட்டினான் பார்த்திபன்.

மூன்று கரங்களும் ஜெயசிம்மனுக்கு எதிராக ஒன்று சேர்ந்தன. அதை புரிந்தும் புரியாமலும் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் விஜயபாகு .
 
அத்தியாயம் 11

ஒரே அணியாக இணைந்து கொண்டு விட்ட மூவரையும் புரியாமல் பார்த்தான் விஜயபாகு .

"இன்னமும் புரியவில்லையா? இங்கே வந்திருப்பவர்கள் கள்வர் புரத்தின் பிரசித்தி பெற்ற கள்வர்களான ஆதித்தனும், அரிஞ்சயனும்." என்று சொல்லி சிரித்தான் பார்த்திபன்.

"விஜயபாகு உன்னுடைய ஆளா ? உன் திட்டப் படி தான் எங்களை இங்கு வரவழைத்தானா?" என்றான் ஆதித்தன்..

" இந்த நாட்டில் ஜெயசிம்மனை எதிர்க்கவும், அழிக்கவும் நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எனக்கு நண்பர்கள் தான். அந்த வகையில் உங்களைப் போலவே விஜயபாகுவும் என்னுடைய நண்பன் தான் "

"சமூகத்தின் மேல் மட்ட ஆட்களுடன் உனக்கு தொடர்பு இருக்கிறதென்றால் நீ சாதாரண புரட்சிகாரனாக இருக்க முடியாது. புரட்சி காரர்களுக்கு அதிகாரத்தில் இருக்கும் அனைவருமே எதிரிகள் தான். முதலில் நீ யார் என்று விளக்கமாக கூறு பார்த்திபா! உன்னுடன் இணைவதா வேண்டாமா என்பதை நாங்கள் பிறகு முடிவு செய்கிறோம்." என்றான் அரிஞ்சயன்

"என்னைப் பற்றி மட்டும்சொன்னால் மட்டும் போதுமா?" என்றான் பார்த்திபன்.

" இந்த நாட்டில் நடக்கும் சில விடை தெரியாத நிகழ்வுகளுக்கும் எனக்கு விடை தெரிய வேண்டும். குறிப்பாக நீலி கோயில்" என்றான் ஆதித்தன்.

"அப்படியானால் உங்களுக்கு என்னைப் பற்றி மட்டும் சொன்னால் புரியாது. இந்த ரத்னபுரியின் முழு வரலாறையும் சொல்ல வேண்டும். அப்போதுதான் இங்கே நடக்கும் பல விசித்திரங்களுக்கு உங்களுக்கு விடை தெரியும் " என்ற பார்த்திபன் ரத்னபுரியின் கதையை சொல்ல தொடங்கினான்.

ரத்னபுரி செல்வ செழிப்பு மிக்க நாடு. அதை ஆண்டு கொண்டிருந்தவன் தீரன். அவனுடைய தம்பியின் பெயர் வீரன். இருவருமே வீரத்தில் சிறந்தவர்கள். உங்களைப்போல் அந்த சகோதரர்களும் ஒற்றுமை மிக்கவர்கள். அவர்களின் ஒரே தங்கை நீலவேணி.அண்ணனும் தம்பியும் தங்கை மீது உயிரையே வைத்திருந்தனர். அவளுக்காக என்ன செய்யவும் தயாராக இருந்தனர். இந்த மூவரின் மாமன் மகன் தான் ஜெயசிம்மன் ஜெயசிம்மனுக்கு நீண்ட நாட்களாக ரத்னபுரியின் சிம்மாசனத்தின் மீது ஒரு கண். அதை அடையத் தடையாக இருக்கும் இரண்டு சகோதர்களின் மீதும் கடும் பகை. ஆனால் அதை ஒரு போதும் வெளிக்காட்டி கொண்டதில்லை.குறிப்பாக தீரனின் வார்த்தைகளை வேதவாக்காக எடுத்து கொண்டு அதை இம்மி பிசகாமல் நிறைவேற்றும் வீரன் மீது அவனுக்கு அதிகமாகவே பயம். தங்களின் அரசதிகாரத்தை எதிர்க்கும் எவரையும் வீரனும் தீரனும் உயிரோடு விட்டதில்லை.

மனதில் அரச கட்டிலை அடைய ஆசைப்பட்ட ஜெயசிம்மன் அதை வெளிகாட்டினால் தன் தலை தப்பாது என்பதால் தன் உயிரைக் காப்பாற்றி கொள்ள நினைத்தான்.அதற்காக அவன் தேர்ந்தெடுத்தது நீலவேணியை .நீலவேணியை காதல் வசப் படுத்தி விட்டால் அண்ணனும் தம்பியும் தன்னிடம் சரணடைந்து விடுவார்கள் என்பது அவனுடைய எண்ணம். ஒருபுறம் தனக்கான படை உதவிகளை ஏற்பாடுகளை செய்து கொண்டே மற்றொரு புறம் நீலவேணியை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி விட்டான். ஒரு நாள்

பெண்கள் மட்டுமே வாழக்கூடிய கன்னி மாடத்திற்கு அருகே இருந்த நந்தவனத்தில் ஜெயசிம்மனுக்காக காத்திருந்தாள் நீலவேணி. கன்னி மாடத்தில் இருந்த பெண்கள் அனைவருக்குமே ஜெயசிம்மனுக்கும் நீலவேணிக்குமான காதல் விவகாரம் தெரிந்தே இருந்தது. நீலவேணியின் காதல் விவகாரத்தை அறிந்திருந்தும் மேலிடத்து விவகாரம் நமக்கெதற்கு என்று கன்ண மாடத்தின் பெண் நிர்வாகி எதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததுடன் நீலவேணி நேரம் கெட்ட நேரத்தில் ஜெயசிம்மனை சந்திக்க கிளம்பி செல்வதை தடுக்காமல் வேடிக்கை பார்க்க மட்டுமே செய்தாள். ஜெயசிம்மன் நீலவேணிக்கு முறை மாமன் என்பதுடன் மணந்து கொள்ளும் உரிமையையும் பெற்றவன் என்பதால் அவள் எதையும் கண்டுகொள்ளாமல் வாளாவிருந்து விட்டாள்.

தோழிகள் யாரும் இல்லாமல் தனியாக காத்துக் கொண்டிருந்த நீலவேணியை காண தன் புரவியில் வந்து சேர்ந்தான் ஜெயசிம்மன் தன் குதிரையை நந்தவனத்தின் மரம் ஒன்றில் கட்டி விட்டு வந்து ஜெயசிம்மன் " நீலவேணி. தாமதமாக வந்ததால் என் மீது கோபமா ? " என்றபடி அவளது முகத்தை தன் பக்கம் திருப்பினான்.ஜெயசிம்மனின் பக்கம் திரும்பிய நீல வேணியின் கண்கள் நீரால் நிரம்பியிருந்தன.

"தாமதமாக வந்ததற்கு யாராவது அழுவார்களா ?" என்றான் ஜெயசிம்மன் முகம் சுருங்கியபடி

"தாமதமாக வந்ததற்கு நான் அழவில்லை. நாம் இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டு விட்டோம். நான் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறேன்" என்றாள் நீலவேணி.

அந்த செய்தியை கேட்டு மனதிற்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவளது கண்களை துடைத்த ஜெயசிம்மன்" இதற்காகவா அழுகிறாய்? இந்திய சிம்மன் ஒரு போதும் உன்னை கைவிட மாட்டான். என்னை நம்பு. நான் விரைவில் உன் அண்ணன் களிடம் பேசி நம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்."

"என்னை ஏமாற்றி விடாதீர்கள். நான் உங்களைத்தான் மலைபோல் நம்பியிருக்கிறேன். என் அண்ணன்களுக்கு இந்த விசயம் தெரிந்தால் அவ்வளவுதான். மானம் பெரிதென்று கருதும் என் அண்ணன்களை நினைத்தால் கான் எனக்கு அச்சமாக இருக்கிறது."

"யாரை நினைத்தும் நீ பயப்படாதே! நான் இருக்கிறேன் - கலங்காதே!" என்ற ஜெயசிம்மன் நீல வேணிக்கு தைரியம் கூறி தேற்றினான். வழக்கம் போல் காதல் மொழிகளை அள்ளி வீசி அவளை அன்பால் திணறடித்தான்.

அதன் பிறகு அவளிடமிருந்து பிரியாவிடை பெற்று கிளம்பினான். தன்னிடமிருந்து விடைபெற்றுகிளம்பும் அவனை கண்ணீர் ததும்பும் விழிகளுடன் பார்த்து கொண்டிருந்தாள் நீலவேணி.

தன்னுடைய மாளிகைக்கு வந்து சேர்ந்த ஜெயசிம்மன்சிங்கபுரத்தின் இளவரசியான நித்ரா தேவிக்கு ஓலை எழுத ஆரம்பித்தான்.ஜெயசிம்மன் உண்மையாகவே விரும்பி கொண்டிருந்தது நித்ரா தேவியைத்தான்.அரசனாக வேண்டும் என்று முடிவு செய்ததுமே தனக்கான படை, பரிவாரங்களை தயார் செய்ய துவங்கி விட்டான் ஜெயசிம்மன்.ரத்னபுரியில் அவனுக்கு உதவி செய்பவர்கள் மிக குறைவு .அப்படி உதவி செய்ய நினைத்தவர்களும் ரத்னபுரியின் அரசனான தீரனுக்கு தெரியாமல் மறைமுகமாகவே உதவி செய்ய விரும்பினார்கள். தன்னுடைய திட்டத்திற்கு அது போதாது என்றாலும் இப்போதைக்கு வேறு வழியில்லை என்ற நிலையில் அதை ஏற்றுக் கொண்டான் ஜெயசிம்மன்

தனக்கு படை கொடுத்து உதவ வேறு யார் முன் வருவார்கள் என்று தேடிய ஜெயசிம்மனின் கண்ணில் பட்டதுசிங்கபுரம் .அதை ஆண்டு கொண்டிருந்த மலையமானுக்கு மிகப் பெரிய குறை ஒன்று இருந்தது. அது என்னவென்றால் தன்னுடைய ஒரே மகளும் நாட்டின் இளவரசியுமான நித்ரா தேவிக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லையே என்ற கவலைதான். நித்ரா தேவிக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல் இருக்க ஒரே ஒரு காரணம் இருந்தது. அது சிறு வயதிலிருந்து அவளுக்கு அவ்வப்போது வந்து போகும் காக்காய் வலிப்புதான். அதை வெகு ரகசியமாக வைத்திருந்தான் மலையமான்.

அந்த ரகசியம் எப்படியோ வெளியே தெரிந்து விட்டதால் யாரும் அவளை பெண் கேட்டு வருவதில்லை. திருமண வயதை கடந்து நிற்கும் தன் மகளுக்கு திருமணம் செய்ய முடியாத நிலமையை எண்ணி மலையமான் மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்தான்.அரசர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ளாமல் புறக்கணிக்கும் தன்னுடைய மகனை அந்தஸ்து குறைந்த யாருக்காவது திருமணம் செய்து கொடுத்து அவனது அந்தஸ்தை மன்னனாக மாற்றவும் முடிவு செய்திருந்தான். இந்த விசயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட ஜெயசிம்மன் மலையமானை தனிமையில் சந்தித்தான். அரச குடும்பத்தை சேர்ந்த ஜெயசிம்மனைமலையமான் ஏற்கனவே அறிவான். ஆனால் தன்னை தேடி வந்த ஜெயசிம்மனை உரிய மரியாதையோடு அவன் உபசரித்தான்.

மன்னர்கள் யாரும் திருமணம் செய்து கொள்ள மறுக்கும் நித்ராதேவியை தான் திருமணம் செய்து கொள்வதாக ஜெயசிம்மன் சொன்னதை நம்ப முடியாமல் மலைத்துப் போய் நின்றான் மலையமான். மலையமான் தன்னுடைய காலம் முடியும் வரைசிங்கபுரத்தின் அரசனாக இருந்து கொள்ளலாம். அதில் ஜெயசிம்மன் தலையிட மாட்டான். அதே நேரம் ரத்னபுரிக்கு அரசனாக நினைக்கும் ஜெய சிம்மனுக்கு தன் படைகளை கொடுத்து மலையமான் உதவி செய்ய வேண்டும். தீரனை வீழ்த்தி ஜெயசிம்மன் மன்னனான பிறகு அவன் நித்ராதேவியை திருமணம் செய்து கொள்வான். பிறகு இரண்டு நாடுகளுக்கு இடையே இருக்கும் மலை நாட்டின் ரணதீரனின் மீது படையெடுத்து அவனையும் வீழ்த்தி தன் நாட்டுடன் இணைத்து கொள்வது தான் ஜெயசிம்மனின் திட்டம்.

ஜெயசிம்மனின் திட்டத்தை கேட்ட மலையமான் தன் வருங்கால மருமகனின் திட்டத்தை கேட்டு திகைத்துப் போனான். அவனுக்கு ஏற்கனவே ரத்னபுரியை ஆளும் தீரன் மீது முன் பகை உண்டு. இப்போது இருவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை தீரனின் உயிர் நண்பனான ரணதீரனின் நாட்டை கடந்து தான் ரத்ன புரிக்கு போர் வீரர்களை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு ரணதீரன் நிச்சயமாக சம்மதிக்க மாட்டான். அதுவும் தன் நண்பனின் மீதான படையெடுப்பு என்றால் அவன் நிச்சயமாக சம்மதிக்க மாட்டான். அவனது கண்ணில் மண்ணை தூவிவிட்டு எப்படி தன் வீரர்களை ஜெயசிம்மனுக்கு துணையாக அனுப்புவது என்று இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.

அதற்கான வழியை கலந்தாலோசிப்பதற்காக அடிக்கடி அரண்மனைக்கு வந்தான் ஜெயசிம்மன் .தன்னுடைய குறைகள் தெரிந்தும் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த ஜெயசிம்மன் மீது அவனை பாராமலேயே காதல் வந்து விட்டது நித்ரா தேவிக்கு .அவளைத் தன் காதல் வலையில் வீழ்த்துவது ஜெயசிம்மனுக்கு அவ்வளவு பெரிய காரியமாக இருக்கவில்லை.

தன்னுடைய மகளுக்கு ஜெயசிம்மனை பிடித்திருப்பதை அறிந்த மலையமான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். எப்படியோ தன் மகளை திருமணம் செய்ய மணமகன் ஒருவன் கிடைத்து விட்டான் என்று மனத் திருப்தி அடைந்த மலையமான் ஜெயசிம்மனும் நித்ராதேவியும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து கொள்வதை கண்டு கொள்ளவில்லை. தன்னுடைய சாம்ராஜ்ஜிய கனவுகளுக்காக இரண்டு பெண்களிடம் ஓரே நேரத்தில் காதல் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான் ஜெயசிம்மன் .

ஓரு புறம் நித்ராதேவியுடன் காதல் விளையாட்டுகளை விளையாடி அவளை மகிழ்வித்தாலும் ஜெயசிம்மன் தன் நாடு பிடிக்கும் ஆசையிலும் கவனமாக இருந்தான்.
சிங்கபுரத்தின் வீரர்களை ரணதீரனின் கண்களை ஏமாற்றி ரத்னபுரிக்கு அழைத்து செல்லும் வழியையும் கண்டு ஜெயசிம்மன் கண்டுபிடித்து விட்டான்.

வருடா வருடம் ரத்னபுரியில் நடக்கும் சுந்தரேஸ்வரர் திருவிழாவை பயன்படுத்தி கொள்ள நினைத்தான் ஜெயசிம்மன்

அதே நேரம் கன்னி மாடத்தில் இருந்த நீலவேணி மயங்கி விழுந்தாள். அவள் மயங்கி விழந்த தகவல் அவளது அண்ணன்களான தீரன் வீரனின் காதுகளை எட்டியது. தங்கைக்கு என்ன வானதோ என்று பதறிய இருவரும் கன்னி மாடத்திற்கு விரைந்தனர்.
 
அத்தியாயம் 12

இளவரசிக்கான தனியான அந்தப்புரத்தில் நுழைந்து கொண்டிருந்தனர் வீரனும் தீரனும். தங்களின் ஓரே அன்புதங்கையான நீலவேணி திடிரென மயங்கி விழுந்ததை அறிந்த இருவரும் அவளுக்கு என்னவானதோ ஏதானதோ என்ற பதட்டத்தில் இருந்தனர். மஞ்சணையில் படுத்திருந்த நீலவேணியின் கையை பிடித்து கொண்டிருந்த மருத்துவச்சி இருவரையும் பார்த்ததும் மரியாதை நிமித்தம் எழந்து நின்றாள். அதைக் கண்டுகொள்ளாத தீரன் நேராக நீலவேணியிடம் சென்றான். "என்னாயிற்றுநீலவேணி ?" என்றான் பரிவுடன் .

வீரன் மருத்துவச்சியை நோக்கினான். "நீலவேணிக்கு என்னவானது?உடலுக்கு ஒப்புகொள்ளாத எதையாவது சாப்பிட்டு விட்டாளா?" என்றான் .

" சொல்கிறேன். அதற்கு முன் அவளுடைய தோழிகளை வெளியே அனுப்புங்கள்" என்றாள் மருத்துவச்சி வீரனின் கண்களை நேராக பார்ப்பதை தவிர்த்தபடி.

மருத்துவச் சியின் தயக்கத்தை பார்த்ததும் ஏதோ விபரிதமாக நடந்திருக்கிறது என்று நினைத்த தீரன் விரலசைத்து அவளது தோழிகள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டான்.

அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறியதும் மருத்துவச்சியின் பக்கம் திரும்பிய தீரன்" பாட்டி. இப்போது இங்கே யாருமில்லை. நீ கூற விரும்புவதை தாராளமாக கூறலாம். ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டும்" என்றான்.

அவனது கண்களை மிரட்சியுடன் பார்த்த மருத்துவச்சி "மன்னா. நான் சொல்லப் போகும் உண்மையை எப்படி சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உண்மையை நான் மறைத்தாலும் காலம் வெளியே கொண்டு வந்து விடும்" என்றாள்.

" பீடிகை போடாதே கிழவி. மறைக்காமல் உண்மையை சொல் " என்றான் தீரன்.

"எனக்கு எப்படி சொல்வதென்றே தெரியவில்லை மன்னா?திருமணமாகாத உங்கள் தங்கை இப்போது கர்ப்பிணியாக இருக்கிறாள். "

" என்ன உளறுகிறாய்? நீயாரைப் பற்றி சொல்கிறாய் என்பதை நினைவில் வைத்திருந்துதான் கூறுகிறாயா?" என்ற தீரனின் முகம் அவமானத்தால் கறுத்தது. இப்படி ஒரு அவமானம் தன் தங்கையின் மூலம் வருமென்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை. தன் குலப் பெருமை இதனால் என்னவாகும் என்று அவன் மனம் குமுறிகொந்தளித்தது.

"நான் உண்மையைத்தான் சொல்கிறேன் மன்னா? ஒரு முறைக்கு இரு முறை நீலவேணியின் நாடியை சோதித்து விட்டேன் - என் மருத்துவ அறிவு பொய் சொன்னதில்லை. ஆனால் இந்த முறை அப்படி பொய்யாக இருக்கக் கூடாதா என்று என் இதயம் துடிக்கிறது." என்றாள் அந்த கிழவி.

வீரன் அங்கிருந்து உடனே வெளியேறினான். கன்னி மாடத்தில் இருக்கும் தன் தங்கையை இந்த கதிக்கு ஆளாக்கிய அந்த ஆடவனைப் பற்றி நீலவேணியின் தோழிகளுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும் என்று வீரன் உறுதியாக நம்பினான். தன் தங்கையின் வாழ்வை நிர்மூலமாக்கியவன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவனை உடனே பிடித்து கொண்டுவர அவனது இரத்தம் துடித்தது.

தன் தம்பி அங்கிருந்து வெளியேறியதும் தீரன் கிழவியின் பக்கம் திரும்பினான்.

"பாட்டி. இந்த விசயத்தை நீ வெளியே சொல்லி விடாதே! என்னுடைய நீலவேணியை இந்த கதிக்கு ஆளாக்கியவன் யாராக இருந்தாலும் அவனை நான் விடப் போவதில்லை. இதோ இந்த தங்க சங்கிலியை என்னுடைய பரிசாக வைத்து கொள்" என்றவரன் தன் கழுத்தில் தொங்கிய கனத்த சங்கிலிகளில் ஓன்றை கழற்றி கிழவியின் கையில் திணித்தான்.

" இந்த விசயத்தை பற்றி நான் யாரிடமும் மூச்சு விட மாட்டேன் .மன்னர் என்னை உறுதியாக நம்பலாம்" என்ற கிழவி தீரனை வணங்கி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

மஞ்சத்தில் படுத்திருந்த நீலவேணி மயக்கத்திலிருந்து மீண்டு கண் விழிக்கும் வரை காத்திருந்தான் தீரன்.

கண் விழித்த நீலவேணி தீரனை பார்த்ததும் மறுகினாள்.

"நீலவேணி " என்ற தீரனின் உரத்த குரல் அரண்மனை சுவர்களில் பட்டு எதிரொலித்தது.

"அண்ணா" என்று இடியோசை கேட்ட நாகமாக மருண்டாள் நீலவேணி.

"யார் அவன்?" என்றான் தீரன்.

" யார்?" என்றாள் நீலவேணி.

" உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தகப்பன் யார் என்று கேட்கிறேன். இப்போது தான் மருத்துவச்சி உன்னை பரிசோதித்து விட்டு நீ கர்ப்பமாக இருப்பதாக கூறினாள். இனிமேலும் பொய் உதவாது.யார் அவன்?" என்றான் தீரன் கோபத்துடன் .

தன் அண்ணனின் முன்பு இப்படி குலப் பெருமைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு அவமானத்தோடு தலை கவிழ்ந்து நிற்போம் என்று நீலவேணி சற்றும் எதிர்பார்த்தவள் இல்லை. என்ன சொல்லி தீரனை சமாளிப்பது என்று அவளுக்கு கொஞ்சமும் புரியவில்லை.
அவள் தடுமாறிக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த வீரன் கனத்த குரலில் சொன்னான்.

" அவன் பெயர் ஜெயசிம்மன் ."

" என்ன? நம்மாமன் மகன் ஜெய சிம்மனா?" என்றான் அதிர்ச்சியுடன் தீரன்.

"ஆம். அவனே தான். இப்போது தான் இவளின் தோழிகளிடம் விசாரித்தேன் .முதலில் உண்மையை சொல்லாமல் மவுனம் சாதித்தாலும் கடைசியில் என் தண்டனைக்கு பயந்து உண்மையை சொல்லிவிட்டார்கள்"

" என்ன நீலவேணி ? வீரன் சொல்வது உண்மை தானா?" என்றான் தீரன்.

"ஆம் அண்ணா.! சின்ன அண்ணன் சொல்வது உண்மை தான் " என்றாள் நீலவேணி பயத்துடன் .

"கவலைப்படாதே! உன்னை மணம் செய்து கொள்ளும் உரிமை அவனுக்கு இருக்கிறதுதான். எங்கே எங்களிடம் பெண் கேட்டால் தர மறுத்து விடுவோமோ என்ற பயத்தில் சற்று வரம்பு மீறி விட்டான். கூடிய விரைவில் அவனிடம் பேசி திருமணத் தேதியை முடிவு செய்கிறேன்" என்றான் தீரன்.

"நீங்கள் இப்படி திடிரென திருமணத்திற்கு சம்மதிப்பீர்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. நன்றி அண்ணா" என்ற நீலவேணி தீரனின் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

"நீலவேணி. என்ன இது சின்ன குழந்தை போல் அழுது கொண்டிருக்கிறாய்? எங்களின் உயிரே நீ தானம்மா" என்ற வீரன் பரிவுடன் அவளது கேசத்தை வருடி கொடுத்தான்.

அதே நேரம் சிங்கபுரத்தின் அரண்மனையில் நித்ராதேவியிடம் பேசிக் கொண்டிருந்தான் ஜெயசிம்மன்

"உன்னை எப்போது திருமணம் செய்து கொள்வோம் என்று என் மனம் துடியாக துடித்துக் கொண்டிருப்பது உனக்கு தெரியுமா?" என்றான் ஜெயசிம்மன் .

"ஏன் இப்படி பதட்டமாக இருக்கிறிர்கள்? நம் திருமணம் நிச்சயமாக நடந்தே தீரும் " என்றாள் நித்ராதேவி.

"அப்படி நடந்து விட்டால் அதற்காக மகிழ்ச்சியடையும் முதல் ஆள் நான் தான். ஆனால் அதற்கு இடையூறு ஓன்று வந்திருக்கிறது, "

"அது என்னவென்று கூறுங்கள். நான் அப்பாவிடம் கூறி அதை நிவர்த்தி செய்கிறேன்"

நித்ராதேவியை கூர்ந்து பார்த்த ஜெயசிம்மன்" நித்ராதேவி நீ என்னை முழுமையாக நம்புகிறாய் அல்லவா?" என்றான்.

"என் குறை தெரிந்தும் என்னை ஏற்றுக்கொள்ளதுணிந்தவர் நீங்கள்.உங்கள் பரந்த உள்ளத்தை நான் நன்றாகவே அறிவேன். உங்களை கவர நான் வேறு யாரை நம்ப போகிறேன்"

"அப்படியென்றால் நான் சொல்வதை கேள். அந்த நீலவேணி என்னுடைய அத்தை மகள். அவளை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவளுக்கு என்னை நிரம்பவும் பிடிக்கும். என்னை கண்டாலே என் மீது இழைவாள், கொஞ்சுவாள். அவளை கண்டாலே நான் பத்தடி தள்ளி நிற்பேன். அவ்வளவு அசூயை அவள் மீது எனக்கு.அவள் காதல் என்ற பெயரில் யாரிடமோ ஏமாந்து விட்டாள். அவள் அந்த ஏமாற்றத்தின் விளைவாக இப்போது கர்ப்பமாக வேறு இருக்கிறாள். நான் உன்னை மணந்து சிங்கபுரத்தின் மன்னனாவது ரத்னபுரியை ஆளும்சகோதரர்கள் இருவருக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன் தங்கை கர்ப்பமானதை தெரிந்து கொண்ட இருவரும் அவளது கர்ப்பத்திற்கு நான் தான் காரணம் என்று கூறி அவளை நான் தான் மணக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் பழியை என் மீது போடுகிறார்கள். நான் ஒரு அப்பாவி. ஒரு பாவமும் அறியாதவன்" என்று கலங்கினான் ஜெயசிம்மன்.

"என்ன ஒரு அநியாயம்? நீலவேணி ஏன் உங்கள் மீது வீண் பழி சுமத்த வேண்டும்"

"அவளுக்கு என்னை மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருக்கிறது. நான் உன்னை காதலிப்பதை அறிந்ததும் அவள் மனம் பொறாமையில் வெம்பிவிட்டது. நான் உன்னை மணக்க கூடாது.சிங்கபுரத்தின் மன்னனாக எதிர்காலத்தில் வந்து விடக் கூடாது என்பதற்காக அந்த மூவரும் ஒன்றாக சேர்ந்து என் மீது பொய் குற்றசாட்டுகளை வைக்கின்றனர். இவற்றையெல்லாம் நீ நம்புகிறாயா?"

"இல்லை.இவற்றை நான் நம்பவில்லை."

"அது ஒன்று போதும் நித்ராதேவி. என் மீதான உன்னுடைய நம்பிக்கை ஒன்றே என் உடலில் உயிரை தக்க வைக்கிறது. இல்லையென்றால் என்றோ நான் பழிக்கு அஞ்சி உயிரை விட்டிருப்பேன்" என்ற ஜெயசிம்மன் அவளை அணைத்து கொண்டான்.

அவளிடம் சிறிது நேரம் காதல் மொழி பேசிவிட்டு மலையமானை சந்திக்க கிளம்பினான்.
அவனது வருகைக்காக காத்திருந்த மலையமான் அவனை ஆரத் தழுவி வரவேற்றார். இருவரும் சற்று நேரம் அளவளாவி கொண்டிருந்தனர்.கெய சிம்மனுக்கு நீலவேணியைப் பற்றிய விவகாரம் வெகு விரைவிலேயே மலையமானின் காதுக்கு வந்து சேரும் என்று தெரியும். அதனால் தன்னுடைய முகத்தை வெகு பரிதாபமாக வைத்து கொண்டு நித்ராதேவியிடம் சொன்ன அதே கதையை மலையமானிடம் எடுத்து விட்டான். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருவன் தன் மகளை மணக்க முன் வருகிறான். அவனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா என்று யோசித்த மலையமான் ஜெயசிம்மனுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறி தேற்றினான்.

பிறகு இருவரும் ரணதீரனின் மலைநாட்டை தாண்டி எப்படி போர் வீரர்களை ரத்னபுரிக்கு கொண்டு சேர்ப்பது என்று ஆலோசிக்க ஆரம்பித்தனர். இறுதியில் ரத்னபுரியில் நடக்கும் சுந்தரேஸ்வரர் தேர் திருவிழாவில் கலந்து கொள்ள எல்லா நாடுகளி விருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வேடத்தில் போர் வீரர்களை ரத்ன புரிக்குள் அனுப்பலாம் என்றும் அரபு வியாபாரிகள் போல் வேடமணிந்த வீரர்கள் குதிரைகளை விற்பனைக்கு கொண்டு செல்வது போல் நாட்டின் உள்ளே ஊடுருவலாம் என்றும் முடிவு செய்தனர்.ஜெயசிம்மன் அரண்மனையில் இருக்கும் முக்கியமான ஆட்களை விலைக்கு வாங்க பெரும் பொருளையும் கொடுத்தான் மலையமான். தனக்கு வேண்டியவைகளையெல்லாம் நைச்சியமாக பேசி மலையமானிடமிருந்து பெற்று கொண்டான் ஜெயசிம்மன் .அதே நேரம் ஜெயசிம்மனின் வருகைக்காக ரத்னபுரியில்வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர் மூவர்.
 

New Threads

Top Bottom