Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL மர்மயோகி - Tamil Novel

அத்தியாயம் 13

ஜெயசிம்மன் ரத்னபுரியில் இல்லை என்பதையும் அவன் எங்கே போனான் என்பதையும் அறியாத வீரனும், தீரனும் நிலை குலைந்து போயினர்.நீலவேணியை மணப்பதற்கு பூரண உரிமையுள்ள ஜெயசிம்மன் திருமணத்திற்கு மறுக்க மாட்டான் என்றே இருவரும் நினைத்திருந்தனர். விரைவிலேயே ரத்னபுரிக்கு வந்து சேர்ந்த ஜெயசிம்மனும் தன்னை சந்திக்க நினைத்த இரு சகோதரர்களையும் தவிர்த்து வந்தான்.

ஜெயசிம்மனின் மனநிலையில் ஏதோ ஒரு மாற்றம் நடந்திருப்பதை தெரிந்து கொண்ட தீரன் தன் தம்பியை அழைத்து ஜெயசிம்மனிடம் பேசும் படி அறிவுறுத்தியிருந்தான். தன் அண்ணனின் அறிவுறுத்தலை ஏற்று தன்னிடம் பேச்சு நடத்த வந்த வீரனிடம் தனக்கும் நீலவேணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் தான் நீலவேணியை காதலிக்கவே இல்லை என்றும் அவளுடைய கர்ப்பத்திற்கு காரணகர்த்தா தான் இல்லையென்றும் அபாண்டமாக பொய் கூறினான் ஜெயசிம்மன்.

அவனது பொய்யை கேட்ட வீரனுக்கு ரத்தம் கொதித்தது. தன் தங்கையின் கற்பை இழிவுபடுத்தி பேசிய ஜெயசிம்மனின் நாவை அறுத்து அவனது உயிர் பறவையை விண்ணில் பறக்க விட அவனது இதயம் துடித்தது. ஆனால் அவனை தண்டித்தால் கெடப் போவது தன் தங்கையின் வாழ்க்கைதான் என்பதால் தன்னுடைய கோபத்தை அடக்கி கொண்டு " இறுதியாக என்ன சொல்கிறாய் ஜெய சிம்மா? என் தங்கையை உன்னால் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாதா?" என்றான் வீரன்.

"என்னை மன்னித்து விடுங்கள். யாரிடமோ கெட்டு போன உங்கள் தங்கையை நான் மணந்து கொள்வது சரியல்ல ! வீண் பழி சுமத்தி என் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள், "என்றான் ஜெயசிம்மன் .

"யார் வாழ்க்கையோடு யார் விளையாடுவது? என் தங்கையின் வாழ்வை சீரழித்து விட்டு நல்லவன் போல் நடிக்கிறாயா? என் அண்ணன் என்னை பொறுமையாக பேசும் படி சொல்லி அனுப்பினான். அதனால் நான் உன்னிடம் பொறுமையோடு பேசிக் கொண்டி ருக்கிறேன். இதே மாதிரி என் அணணனிடம் நீ பேசியிருந்தால் உன் தலைஇந்நேரம் தரையில் உருண்டி ருக்கும்." என்றான் வீரன் கோபத்தோடு

அவனது கோபத்திற்கு சற்றும் அசராத ஜெயசிம்மன் " ஒரு அப்பாவியை நீங்கள் அச்சுறுத்தி பணிய வைக்க முயல்கிறீர்கள். நான் ஒரு அப்பாவி. நீதி நேர்மைக்கு பயந்தவன். உங்கள் தங்கை வேறு யாரிடமோ ஏமாந்து விட்டு அப்பாவியான என்னுடைய பெயரைச் சொல்லி தப்பிக்க நினைக்கிறாள். அவள் செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?" என்றான் அமைதியாக .

தன் குற்றங்களை ஒப்புக் கொள்ள மறுக்கும் அவனிடம் இனி வாதாடி பயனில்லை என்பதை உணர்ந்த வீரன் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினான்.

தன் தம்பி சொன்னவற்றை கவனமாக கேட்டு கொண்டிருந்தான் தீரன். அவனுக்கு இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை. கண்டிப்பாக ஜெயசிம்மன் சொன்னவற்றை தன் தங்கை நீலவேணி கேட்க நேர்ந்தால் அவமானத்தில் உயிரையே விட்டு விடுவாள் என்பதால் அந்த விசயத்தை தன் தங்கையிடம் சொல்லாமல் மறைத்து விட முடிவு செய்தான்.

கையறு நிலையில் இருந்தார்கள் இரண்டு சகோதரர்களும்.

"இப்போது நாம் என்ன செய்வது?" என்றான் வீரன் கசப்பான புன்னகையுடன் .

" என்ன செய்வதென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓற்றர் படை தலைவன் நேற்று ஒரு தகவலைக் கொண்டு வந்தான் - சிங்கபுரத்தின் இளவரசி நித்ராதேவியை திருமணம் செய்து கொள்வதாக ஜெயசிம்மன் வாக்களித்திருப்பதாகவும் அவளை அடிக்கடி தனிமையில் சந்திப்பதாகவும் தகவல் கூறினான்"

"அப்படியானால் மலையமானுக்கு பிறகு சிங்கபுரத்தின் அரசனாக ஜெயசிம்மன் தான் வருவான். அவனது வாழ்க்கையில் வாராது வந்த வாய்ப்பு .அதிர்ஷ்டம் ஜெயசிம்மன் மாளிகை கதவை தட்டுகிறது. இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு அவனைத் தேடி வந்திருக்கும் போது அவன் நீலவேணியை திருமணம் செய்து கொள்ள நிச்சயமாக சம்மதிக்க மாட்டான் "

"நீ சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். அவனது இடத்தில் நான் இருந்தாலும் இதையே தான் செய்வேன்"

" இதை தடுக்க ஒரு வழிதான் இருக்கிறது"

"என்ன அது?"

"நித்ராதேவியை எனக்கு பெண் கேட்பது " என்ற வீரனை அன்போடு பார்த்தான் தீரன்.தங்கையின் வாழ்வை காப்பாற்ற குறையுள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் தன் தம்பியின் தியாகத்தை நினைத்து அவனது உள்ளம் நெகிழ்ந்தது.

"அது காலம் கடந்த முயற்சி.ஜெயசிம்மனுக்கு முன்பாக நாம் அவளை பெண் கேட்டிருந்தாலும் கூட நம் மீதான முன்பகையால் மலையமான் நமக்கு பெண் தர மறுத்திருப்பான். இப்போது நிலமை வேறு மாதிரியாக இருக்கிறது. ஜெயசிம்மனும் நித்ராதேவியும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கி விட்டனர். அதை மலையமான் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். அவனது மவுனம் சம்மததிற்கு அறிகுறி.இந்த நிலையில் நாம் தலையிடுவது தவறு என்று நான் நினைக்கிறேன்." என்றான் தீரன்.

"எனக்கும் சூழ்நிலை நன்றாகவே புரிகிறது. இப்போது நாம் என்ன செய்வது?"

"சுந்தரேஸ்வரரின் தேர் திருவிழா விரைவில் நடக்க இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியோடு அதில் கலந்து கொள்ள நாடெங்கும் இருந்து வருவார்கள். அந்த கொண்டாட்டங்கள் முடியட்டும் நாம் தினமும் வழிபடும் அந்த சுந்தரேஸ்வர ரே இந்த பிரச்சனைக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டுவார்" என்றான் தீரன் யோசனையுடன் .

"அப்படியே செய்வோம்.அதுவரை அமைதியாக இருப்போம்." என்றான் வீரன் அமைதியாக .

அவர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த சுந்தரேஸ்வரரின் தேர் திருவிழா தொடங்கியது. நாட்டின் வெவ்வேறு பாகங்களில் உள்ள மக்கள் அனைவரும் சுந்தரேஸ்வரரின் தேர் திருவிழாவில் கலந்து கொள்ள அலை அலையாக குவிய ஆரம்பித்தனர். பக்கத்து நாட்டிலிருந்து வந்த பக்தர்களை கூட சோதனை எதுவுமின்றி ரத்னபுரி உள்ளே அனுமதித்து கொண்டிருந்தது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்த மலையமானும், ஜெயசிம்மனும் தங்களின் காரியத்தில் இறங்கினர். தன் வீரர்களுக்கு மஞ்சள் ஆடை அணிவித்து பக்தர்களின் வேடத்தில் ரத்ன புரிக்குள் ஊடுருவச் செய்தனர் இருவரும் . வாடகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வியாபாரிகள் புரவி வணிகர்களாக வே டமிட்டு ரத்னபுரிக்குள் நுழைந்தனர்.

ரத்னபுரியை அடுத்திருந்த காட்டு பகுதியில் அவர்கள் ஓவ்வொருவராக தலைமறைவாகி தங்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டு பகுதியில் தங்கியிருப்பதை பார்த்த பளியர் குலத் தலைவன் அதை பற்றி எச்சரிக்கை செய்து ரத்னபுரியின் அரண்மனைக்கு செய்தி அனுப்பினான். வெளியூரை சேர்ந்தவர்கள் சத்திரத்தில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் காட்டு பகுதியில் தங்கியிருப்பதாக நினைத்த இரு சகோதரர்களும் அந்த தகவலை அலட்சியம் செய்தனர். அவர்களுக்கு தங்கள் தங்கையை பற்றிய கவலையே மிகப் பெரிதாக இருந்தது. திருவிழா முடிந்த அசதியில் ரத்னபுரி மக்கள் களைத்து போயிருந்தார்கள்.

இதற்காகவே காத்திருந்த ஜெயசிம்மன் சிங்கபுரத்திலிருந்து ரத்னபுரிக்கு திரும்பி வந்தான்.தனக்கு ஆதரவு கொடுக்கும் உள்ளூர் ஆதரவாளர்களையும், காட்டில் பதுங்கி கிடந்தவர்களில் சிலரையும் தன் மாளிகைக்கு வரவழைத்தவன் சதி திட்டத்தை விவரிக்க ஆரம்பித்தான்.முதல் வேலையாக வீரனுக்கு நீலவேணியை பற்றிப் பேச வேண்டும். யாருக்கும் சொல்லாமல் தனியாக வரவேண்டும் என்று தூது சென்றவனிடம் சொல்லி அனுப்பினான். வேதனையில் வாடும் தன் அண்ணனுக்கு நல்ல சேதி ஓன்றை சொல்லி இன்ப அதிர்ச்சி தருவோம் என்று தன் வீரத்தை நம்பி தனியாக வந்த வீரனை தன் மாளிகையில் தன் ஆட்களை வைத்து படுகொலை செய்தான் ஜெயசிம்மன் . அடுத்ததாக தன்னுடைய கூலிப்படைகளை ஒன்றிணைத்து கொண்டவன் தீரனின் மீது தாக்குதலை தொடங்கினான். தன் தங்கையின் செயலால் நொந்து போயிருந்த தீரன் தன் தம்பியும் கொல்லப்பட்டதால் திகைத்து போனான்.

ஜெயசிம்மனின் ஆட்கள் உள் நாட்டிலேயே வீடுகளை எரித்து மக்களை தாக்குவதை அறிந்த தீரன் தன் படைகளை திரட்டினான். அந்த நேரத்தில் ரணதீரனின் உதவியை கேட்கலாம் என்று அவனுக்கு தோன்றவேயில்லை. உள்நாட்டு கலகத்தை தானே அடக்கி விடலாம் என்று தன் படைகளுடன் கிளம்பியவன் தன் தங்கை நீலவேணிக்கு ஒரு சத்தியத்தை செய்து கொடுத்தான். உன் வாழ்வை பாழ்படுத்திய அந்த ஜெயசிம்மனை போரில் தோற்கடித்து அவனை சிறைபிடித்து உனக்கே மணம் முடித்து வைப்பேன் என்பது தான் அவனது சத்தியம். ஜெயசிம்மனை கொல்லாமல் உயிரோடு சிறைபிடிப்பதே அவனுடைய லட்சியமாக இருந்தது.

தீரனை வீழ்த்த வேண்டும் என்று வெகு கவனமாக திட்டமிட்டு வைத்திருந்த ஜெயசிம்மனின் போர் யுக்திகளுக்கு முன்னால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த தீரனின் போர் வியூகங்கள் செயல் இழந்தன. இந்த போரில் தன் தங்கை வாழ வேண்டும் என்பதற்காக தீரன் எப்படியும் தன்னை கொல்ல மாட்டான் என்று தெரிந்து கொண்ட ஜெயசிம்மன் இரக்கமேயில்லாமல் அவனை கொல்ல திட்டம் தீட்டினான்.ஜெயசிம்மனை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்த தீரன் அவனது முன்னேற்பாடான திட்டங்களால் திக்குமுக்காடிப் போனான். அவனை போர் முனையில் கொல்வதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்த போதெல்லாம் நீலவேணியின் முகத்தை நினைத்து அதை தவிர்த்து விடுவான் தீரன்.

தீரன் மட்டும் சற்று பொறுமையாக இருந்து தன் உயிர் நண்பனான ரணதீரனை உதவிக்கு அழைத்திருந்தால் ஜெயசிம்மனின் கதி அதோகதியாகி இருக்கும். தீரனின் அதீதமான தன்னம்பிக்கை அவனுக்கே அபாயமாக வந்து முடிந்தது.ஜெயசிம்மனின் வாள் தன் மார்பில் பாய்ந்து மரணப்படுக்கையில் கிடந்த போது கூட தீரனின் எண்ணம் முழுக்க நீலவேணியே நிறைந்திருந்தாள். "என்னை மன்னித்து விடு நீலவேணி " என்ற முணக லோடு அவனது உயிர் பறவை உடலை விட்டுப் பறந்தது. இருந்த ஒரு தடைகல்லும் நீங்கி விட்ட மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்தான் ஜெய சிம்மன் .அவன் எதிர்பார்க்காத ஒரு விசயம் ரணதீரனின் ரூபத்தில் வந்தது. தன் உயிர் நண்பனான தீரன் ஜெயசிம்மனால் கொல்லப்பட்டதை அறிந்த ரணதீரன் தன் படைகளை திரட்ட ஆரம்பித்தான். எல்லோரும் ஜெயசிம்மனால் ரணதீரனை சமாளிக்க முடியாது என்று நினைத்த போது தன்னை காப்பாற்றி கொள்ள இதுவரை யாரும் எடுக்காத ஒரு புது வகை ஆயுதத்தை கையில் எடுத்தான் ஜெயசிம்மன் .அது மதம் கடவுள் என்னும் ஆன்மீக ஆயுதம். தன்னை தற்காத்து கொள்ள ஆன்மீகத்தையும் ஆண்டவனையும் துணைக்கு அழைத்து கொண்டான் ஜெய சிம்மன்.

அவனது புதுவிதமான ஆன்மீகவியூகத்தில் சிக்கி தவித்தான் ரணதீரன். இதுவரை அவன் அப்படி ஒரு வியூகத்தை சந்தித்ததேயில்லை.
 
அத்தியாயம் 14

தன்னுடைய உயிர் நண்பனான தீரனையும் அவன் சகோதரன்வீரனையும் ஜெயசிம்மன் வீழ்த்தி ரத்னபுரியின் சிம்மாசனத்தை கைப்பற்றி விட்டான் என்று ரணதீரனுக்கு தெரிந்த மறுகணமே அவன் ஜெயசிம்மன் மீது படையெடுக்க ஆயுத்தமானான். அதே நேரம் உள்ளூர் புரட்சியின் மூலம் ரத்னபுரியின் சிம்மாசனத்தை கைப்பற்றிய ஜெயசிம்மன் அரண்மனைக்குள் ஆர்ப்பாட்ட மாக நுழைந்தான். அவனை எதிர்க்க இப்போது யாரும் இல்லை.திரன் வழக்கமாக அமரும் சிம்மாசனத்தை கண்களில் ஆசை அலைமோதவெறித்து பார்த்தபடி ஒரு சுற்று சுற்றி வந்தான் ஜெயசிம்மன் .அந்த சிம்மாசனத்தை கவர்ந்து அதில் உட்கார வேண்டும் என்பது அவனது வாழ்நாள் கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறி விட்ட மகிழ்ச்சியில் அவனுக்கு தலைகால் பரியவில்லை. ஆசையோடு அதில் அமர்ந்தவன் தன் கால்களை ஓன்றின் மீது ஒன்றாக போட்டு கொண்டு ஆர்ப்பாட்டமாக சிரித்தான்.

"போதும். நிறுத்து உன் சிரிப்பை" என்றது ஒரு பெண் குரல்.

ஜெயசிம்மன் குரல் வந்த திசையில் பார்த்தான். அங்கே தலை விரிக்கோலமாக நின்று கொண்டிருந்தாள் நீலவேணி .அவளுக்கு அருகே அவளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு வீரர்கள் அந்த முயற்சியில் முற்றிலுமாக தோற்று நின்றிருந்தனர். அந்த வீரர்களில் ஒருவன் "மன்னிக்க வேண்டும் மன்னரே! நாங்கள் இந்த பெண்ணை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். இந்த பெண் எங்களின் தடைகளை மீறி உங்களை சந்தித்தேயாக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றதுடன் உங்களின் அனுமதி இல்லாமல் அரண்மனைக்குள்ளும் பிரவேசித்து விட்டாள் " என்றான் மன்னிப்பு கேட்டும் தொனியில் .

அவர்களை எரிப்பது போல் பார்த்த ஜெயசிம்மன் " நன்றாக உங்கள் வேலையை செய்தீர்கள். கிளம்புங்கள் இங்கிருந்து " என்றான் எரிச்சலான குரலில்.

அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியேறியதும் நீலவேணியின் பக்கம் திரும்பியவன்" என்ன நீலவேணி ?நீ இன்னமுமா உயிரோடு இருக்கிறாய்?" என்றான் ஏளனமான குரலில்.

"நீ இன்று உயிரோடு இருப்பதே உன்னை கொல்லக் கூடாது என்று என் அண்ணனிடம் நான் வாங்கிய சத்தியத் தால் தான். அதை நீ மறந்து விடாதே" என்றாள் நீலவேணி சீற்றத்துடன் . ஜெய சிம்மன் கடகடவென்று சிரித்தான்.

"அது எனக்கும் தெரியும் நீலவேணி. தன்னை எதிர்ப்பவர்களை தீரன் இதுவரை உயிரோடு விட்டதில்லை என்று எனக்கு தெரியும். அதனால்தான் என் உயிரைக் காப்பாற்றி கொள்ள உன்னை கேடயமாக்கி கொண்டேன். நான் உண்மையாகவே உன்னை காதலிக்கவில்லை. உன் வயிற்றில் வளரும் பிள்ளைக்காகவாவது என்னை கொல்லாமல் விட்டு விடுவான் உன் அண்ணன் என்று நினைத்தேன். அதன்படியே போர்க்களத்தில் என்னை கொல்ல பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் அவற்றையெல்லாம் நழுவ விட்டான் உன் அண்ணன் "

"இன்று நீ உயிரோடு இருக்கிறாய் என்பது என் அண்ணன் போட்ட பிச்சை"

" அதை நான் மறுக்கவேயில்லை பெண்ணே. அதற்காக நான் உன் அண்ணனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த நன்றியை ஏற்றுக் கொள்ளத்தான் உன் இரண்டு அண்ணன்களில் ஒருவர் கூட உயிரோடு இல்லை. அதை நினைக்கும் போது எனக்கே மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது" என்றான் ஜெய சிம்மன் தன் தோள்களை அலட்சியமாக குலுக்கிய படி .

"அடப்பாவி. என் அண்ணன்களை வஞ்சகமாக கொன்ற உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா?"

"அரசியல் அதிகாரத்திற்கு அதுவெல்லாம் தேவையில்லாதவை பெண்ணே. இப்போதும் ஓன்றும் கெட்டு விடவில்லை. உன் அழகு கர்ப்பிணியாக இருப்பதால் கொஞ்சமும் குறையவில்லை. நான் அந்த வலிப்பு காரி நித்ராதேவியை திருமணம் செய்து கொள்ள போகிறேன். நீ வேண்டுமானால் என் அந்தபுரத்தில் ஆசை நாயகியாக இரேன்" என்றான் ஜெயசிம்மன் விசமச் சிரிப்போடு.

"ஈனப் பிறவியே! நான் செய்த ஒரே தவறு காதல் என்ற பெயரால் உன்னிடம் ஏமாந்தது தான். அதற்கு பரிகாரமாக என் அண்ணன்களை இழந்து விட்டேன். இனி மீதமிருப்பதுமானமும் உயிரும் மட்டும் தான். அதையும் உன்னிடம் இழக்க நான் விரும்பவில்லை." என்ற நீலவேணி தான் மறைத்து எடுத்து வந்திருந்த குறு வாளை எடுத்து தன் நெஞ்சில் பாய்ச்சி கொண்டாள்.

அவள் கீழே விழந்து துடிப்பதை ரசித்து கொண்டிருந்த ஜெயசிம்மன் " நீ உயிரோடு இருப்பது எனக்கு பெரும் பிரச்சனை பெண்ணே. அதனால் தான் உன் கோபத்தை தூண்ட சில வார்த்தைகளை பிரயோகித்தேன். உணர்வுகளின் கொதிநிலையில் நீ இந்த மாதிரியான முடி வைத்தான் எடுப்பாய் என்று நான் எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை நீ கனகச்சிதமாக நிறைவேற்றி விட்டாய். நீ பூமிக்கு வந்த வேலை முடிந்து விட்டது. போய் வா பெண்ணே!" என்றான்.

ரத்தம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நீலவேணி " கயவனே! வஞ்சகமாக எங்களை வென்று விட்டதாக மனப்பால் குடிக்காதே.! இதோ என்னையும் என் குடும்பத்தையும் அழித்ததற்காக நான் மனம் நொந்து உனக்கு சாபமிடுகிறேன். எந்த அரச பதவிக்கு ஆசைப்பட்டு நீ துரோகத்தையும், வஞ்சகத்தையும் செய்தாயோ அந்த அரச பதவியில் அமரும் கடைசி ஆசாமி நீதான். உனக்கு பிறக்கும் சந்ததிகள் வாரிசுகள் யாரும் அந்த அரச பதவியில் அமர உயிரோடு இருக்க மாட்டார்கள். உன் வாரிசுகள் உனக்கு நிலைக்காது. இது என்னுடைய சாபம் " என்றாள் வேதனையில் துடித்தபடி.

சிம்மாசனத்தில் இருந்து இறங்கி வந்த ஜெயசிம்மன் " என்னைப் பார்த்து சாபம் கொடுக்கிறாயா பெண்ணே! நன்றாக சாபம் கொடு. நான் அதையும் மீறி வாழத்தான் போகிறேன். அதை பார்க்கத்தான் நீ இருக்க போவதில்லை" என்றான்.

சிறிது நேரத்தில் நீலவேணியின் உயிர் உடலை விட்டு பறந்தது. அவளது உடலை வீரர்கள் அப்புறப்படுத்திய பின்பு உள்ளே வந்த ஜெயசிம்மனின் தளபதிகளில் ஓருவன் "அரசே ! இந்த தகவலை சொல்வதற்காக என்னை மன்னித்து விடுங்கள். மக்கள் உங்களுக்கு எதிராக போராடத் தொடங்கி விட்டனர். உங்களை மன்னராக ஏற்க அவர்கள் மறுக்கிறார்கள் நாடு முழுவதும் உங்களுக்கு எதிரான கலவரம் தொடங்கி விட்டது. இதற்கு சரியான ஒரு தலைமை கிடைத்து விட்டால் நம் கஷ்டப்பட்டது அத்தனையும் வீணாகி விடும். நம்மால் அப்படி ஒரு கலவரத்தை சமாளிக்க முடியாது" என்றான்.

"நான் இப்படி சூழல் ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்தேன். நீலவேணி அந்த தலைமையை இட்டு நிரப்பி விடக் கூடாது என்பதால் தான் அவளை நான் தற்கொலைக்கு தூண்டி விட்டேன். வாழ்க்கையில் வராது வந்த மாமணியாய் கிடைத்த இந்த ஒரு வாய்ப்பை நான் வீணடிக்க விரும்பவில்லை. என் பதவியை எப்படிக் காப்பாற்றி கொள்வது என்று எனக்கு தெரியும் . என்ன செய்தால் இந்த கலவரம் அடங்கும் என்றும் எனக்கு தெரியும் "

" பக்கத்து நாட்டு ரணதீரன் தன் நண்பர்களை கொன்றதற்காக நம் மீது படையெடுக்க முழு முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது."

"நான் இதை எதிர் பார்த்தேன். இந்த கலவரத்தையும் ரணதீரனையும் சமாளிக்க ஒரு வழி இருக்கிறது.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை நாளை அடிக்கப் போகிறேன். விடியட்டும். நாளைய பொழுது நமதாகும் " என்றான் ஜெயசிம்மன்

ஜெயசிம்மனின் திட்டம் என்னவென்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பினான் தளபதி.

ஜெயசிம்மன் யோசனையில் ஆழ்ந்தான். ஆட்சியை பிடித்தால் தனக்கு யார் யாரிடம் இருந்து எதிர்ப்பு வரும். அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்ற துல்லியமான திட்டம் ஜெய சிம்மனிடம் முன்பே இருந்தது. அதை செயல்படுத்த இதுவே தக்க தருணம் என்று அவன் நினைத்தான்.

மறுநாள் விடிந்தது. ரத்ன புரிக்கு மட்டும் விடியல் என்ற பெயரில் ஒரு கிரகணம் சூழ்ந்தது.

புதிதாக நாட்டை கைப்பற்றிய ஜெய சிம்மன் மன்னனாக தான் முடிசூடிக் கொள்ளாமல் கடவுளான சுந்தரேஸ்வரருக்கு மன்னனாக முடிசூட்டினான். இனி தான் சுந்தரேஸ்வரரின் அடிமையாக ஆட்சி நடத்தப் போவதாக அறிவித்தவன் தன் நாட்டின் மீது படையெடுப்பது கடவுளான சுந்தரேஸ்வரரின் மீது படையெடுப்பதற்கு சமமானது என்ற அறிவிப்பை எல்லா நாட்டு மன்னர்களுக்கும் அனுப்பி வைத்தான். தனக்கு ஜெய சிம்மன்அனுப்பி வைத்த அந்த அறிவிப்பை படித்த ரணதீரன் தடுமாறிப் போனான். இப்போது ஜெயசிம்மன் மீது படையெடுப்பது கடவுளின் மீது படையெடுப்பது போன்றது என்பதால் அவன் தன் போர் நடவடிக்கைகளை தற்காலிகமாக கிடப்பில் போட்டு வைத்தான்.

ரத்னபுரியின் அரசன் கடவுளான சுந்தரேஸ்வரர் என்று அறிவித்த ஜெயசிம்மன் அவரது ஆட்சியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தெய்வநிந்தனையின் பெயரால் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்துவிட்டான். கடவுளின் பெயரால் ஜெயசிம்மன் புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி விட்டதால் மக்கள் எதிர்ப்பை கைவிட்டு விட்டு நடப்பதை ஏற்றுக் கொள்வதே தங்களின் தலைவிதி என்று முடங்கி விட்டனர். இப்படியாக இரண்டு தரப்பு எதிர்ப்பையும் ஒரே செயலில் முடக்கி வைத்தான் ஜெயசிம்மன். தன் வருங்கால மருமகனின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால் மலையமான் மகிழ்ந்து போனான். தன் காலம் முடிவதற்குள் தன் மருமகன் ரணதீரனையும் கொன்று மூன்று நாடுகளையும் ஒரே நாடுகளாக மாற்றி விடுவான் என்ற நம்பிக்கை அவனுக்கு தோன்றியது.

வலிப்பு வந்த தன் மகளை திருமணம் செய்து கொள்ள மறுத்த சிற்றரசர்கள் இப்போது தன் மகள் மூன்று நாடுகளுக்கு அதிபதியான ஒருவனை மணந்து கொள்வதை பார்த்து பொறாமை பட்டே சாக வேண்டும் என்பது மலையமானின் ஆசை.தான் சொன்னது போலவே நித்ராதேவியை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகளை முடுக்கிவிட்டான் ஜெயசிம்மன் .

ஒரே நேரத்தில் மலையமானிடமிருந்தும் ஜெயசிம்ம இடமிருந்தும் திருமண அழைப்பு வந்தபோது ரணதீரன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போனான்.ஜெயசிம்மனின் அடுத்தடுத்த காய் நகர்த்தல்களில் அவன் மிகுந்த புத்திசாலி என்பதையும் அவனை சமாளிப்பது மிக கடினம் என்பதையும் ரணதீரன் புரிந்து கொண்டான். இரு நாடுகளிடையே சிக்கியிருக்கும் தன்னையும் அவன் விட்டு வைக்க போவதில்லை என்று ரணதீரனுக்கு தெளிவாகவே புரிந்தது.ஜெயசிம்மனை சமாளிக்க யாரால் முடியும் என்று அவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.
 
அத்தியாயம் 15

இக்கட்டான நேரத்தில் தனக்கு படை கொடுத்துதவிய மலையமானுக்கு நன்றி காட்டும் விதமாக அவனது மகளான நித்ராதேவியை திருமணம் செய்து கொண்டு விட்டான் ஜெயசிம்மன் .அந்த திருமணத்திற்கு போகாவிட்டால் ஜெயசிம்மனை அவமானப்படுத்துவதாக நினைத்து அதையே சாக்காக வைத்து தன் மீது படையெடுத்து விடுவானோ என்ற பயத்தில் வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக அந்த திருமணத்தில் கலந்து கொண்டான் ரணதீரன். அவனுக்கு அப்போதே ஒரு உண்மை புரிந்து விட்டது. தன் மண உறவின் மூலம் சிங்கபுரத்துடனான உறவை பலப்படுத்தி கொண்டு விட்ட ஜெயசிம்மன் இனி தன்னை ரொம்ப நாட்களுக்கு விட்டு வைக்க மாட்டான்.

இந்த உண்மை புரிந்தவுடன் தன் நாட்டு படைகளை பலப்படுத்த தொடங்கி விட்டான் ரணதீரன். எல்லைப் பகுதிகளில் கடும் கண்காணிப்பை ஏற்படுத்தினான். அவனது உலை கூடங்கள் ஏராளமான ஆயுதங்களை இரவு பகலாக உற்பத்தி செய்து கொண்டிருந்தன. இவை அனைத்தையும் தன்னுடைய ஒற்றர் படையின் மூலமாக அறிந்த ஜெயசிம்மன் தனக்குள் புன்னகைத்து கொண்டான். பொறியில் சிக்கிய எலியாக மாட்டிக் கொண்டு விட்ட ரணதீரனை எப்போது வேண்டுமானாலும் வீழ்த்தலாம் என்பதால் அவனை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டான். அரசு அதிகாரத்திற்கு ஆசைப்பட்ட ஜெயசிம்மன் தன்னை அதற்கு தகுதியானவனாக்கி கொள்ளவில்லை. நிர்வாக திறமையில்லாத அவன் கண்டபடி வரிகளை போட்டு மக்களை துன்புறுத்த தொடங்கினான். கடவுளின் பெயரால் அவன் ஆட்சி நடத்துவதால் மக்கள் அவனை எதிர்க்க வழியின்றி பொறுமையாகவும், சகிப்புத்தன்மையுடனும் வாழப் பழகினர்.

ஜெயசிம்மன் நித்ராதேவியுடன் இல்லறம் நடத்தியதன் விளைவாக அவள் விரைவிலேயே கர்ப்பமானாள். அவளது கர்ப்பிணி கோலத்தை பார்த்த ஜெயசிம்மனுக்கு ஏனோ நீலவேணியின் ஞாபகம் வந்து போனது.அரசாள வாரிசு நிலைக்காது என்ற அவளின் சாபம் ஏனோ அவனது காதில் ஒலித்தது. மனம் நிலை கொள்ளாது தவித்த ஜெயசிம்மன் நீலவேணியின் ஆத்மாவால் தனது மனைவிக்கு ஏதாவது நடந்து விடுமோ என்ற பயத்தில் சில மந்திரவாதிகளை அழைத்து யாகம் செய்தான்.

அவர்கள் செய்த யாகத்தின் பயனோ இல்லை நித்ராதேவி பூர்வ ஜென்மத்தில் செய்த நல்வினையின் பயனாகவோ என்னவோ அவளுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை ஓன்று பிறந்தது. பிரசவத்தில் களைத்து போய் படுத்திருந்த நித்ராதேவி தன் பச்சிளம் பாலகனை பார்த்து மகிழ்ச்சி கடலில் நீ ந்தினாள். ஜெயசிம்மன் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தான். தனக்கு பிறகு அரசாள தனக்கொரு மகன் பிறந்து விட்டான் என்ற நினைப்பில் அவன் நாடு முழுவதும் தான தர்மங்கள் செய்வது, புத்தாடை வழங்குவது என்று தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டி கொண்டிருந்தான். தனக்கு பேரன் பிறந்த செய்தியை கேட்ட மலையமான் அவனை காணவிரைந்தோடி வந்தான். பொக்கைவாய் சிரிப்போடு இருந்த தன் பேரனை பார்த்தவன் தன் மகிழ்ச்சியை வெளிகாட்டும் விதமாக அவனை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிகாட்டினான்.

சில நாட்கள் ரத்னபுரியில் தங்கியிருந்து தன் பேரனை கொஞ்சி மகிழ்ந்த மலையமான் அதன் பிறகு தன்னுடைய நாட்டிற்கு திரும்பினான். அவன் தன்னுடைய நாட்டிற்கு திரும்பிய சில நாட்களில் குழந்தையின் உடல்நிலை சீர்கெட துவங்கியது. திடிரென தன் மகனின் உடல்நிலை மோசமாவதை அறிந்த ஜெயசிம்மன் நாட்டில் உள்ள மிகச் சிறந்த வைத்தியர்களையெல்லாம் அரண்மனைக்கு வரவழைத்து குழந்தைக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தான்.வைத்தியர்கள் தங்களால் முடிந்த எல்லா வைத்திய முறைகளையும் செய்து குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர். தன் பேரனின் சுகவீனத்தை அறிந்த மலையமான் தன் நாட்டின் சிறந்த வைத்தியர்களையும் ரத்னபுரிக்கு அனுப்பி வைத்தான். வெவ்வேறு வைத்திய முறைகள் அந்த பிஞ்சு உடம்பில் பிரயோகிக்கப்படுவதை கண்ணில் கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தாள் நித்ராதேவி. தன் மகனின் நிலை கண்டு தாயின் உள்ளத்தோடு பரிதவித்து கொண்டிருந்தாள் நித்ராதேவி. எல்லோருடைய முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராக மாறின. எந்த வைத்திய முறைகளும் பயனளிக்காமல் சிறுவன் தன்னுடைய மூச்சை நிரந்தரமாக நிறுத்தி கொண்டு விட்டான்.

தன் மகனின் மரணத்தால் அதிர்ந்து போனான் ஜெயசிம்மன் . மரணம் எதனால் நிகழ்ந்தது ? நோய் குறி என்னவென்று எந்த வைத்தியரும் சொல்ல முடியவில்லை. ஒரு முதிய வைத்தியர் மட்டும் வெகு நேர தயக்கத்திற்கு பிறகு " மன்னா! நீலவேணியின் சாபம் பலிக்க ஆரம்பித்துவிட்டது போல் தோன்றுகிறது. அவளை அமைதிப் படுத்த எதையாவது செய்யுங்கள். அவள் மனம் குளிர்ந்தால் அடுத்த குழந்தையாவது உயிரோடு பூமியில் தங்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.

தன் மகளின் . மரணத்தால் வேதனையில் வாடிக் கொண்டிருந்தான் ஜெயசிம்மன் தான் செய்த பாவங்களுக்கு ஒரு பாவமும் அறியாத ஒரு பச்சிளம் பாலகன் பரிகாரம் தேடுவதை அவனால் தாங்கி கொள்ள வே முடியவில்லை. தன்னுடைய அறிவு, புத்திசாலித்தனம் அனைத்துமே நீலவேணியின் சாபத்திற்கு முன்னால் செயலிழந்து போய்விட்டது என்று உணர்ந்து கொண்டவன் கசப்பான புன்னகையுடன் ஆறுதல் சொன்ன முதியவரை பார்த்து "முதியவரே! வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். நீங்களே அவளது மனம் குளிர ஏதாவது ஒரு வழியைக் கூறுங்கள். அது எவ்வளவு செலவு பிடித்ததாக இருந்தாலும் பரவாயில்லை. என் அடுத்த குழந்தையை காப்பாற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்" என்றான்.

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு ஜெயசிம்மன்வந்து விட்டதை உணர்ந்து கொண்ட முதியவர் சிறிது நேர ஆழமான யோசனைக்கு பிறகு"அகாலமரணத்தை தேடிக் கொண்ட நீலவேணியின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் அவளுக்கு ஒரு கோவிலை கட்டிநாள்தோறும் வழிபடுவதே நல்லது. மனிதப் பிறவியான அவளை வழிபாடுகளும், பூஜை, புனஸ்காரங்களும் தெய்வநிலைக்கு உயர்த்தி விடும்.தெய்வம் என்றால் பக்தனின் கோரிக்கையை நிறைவேற்றியே தீர வேண்டுமல்லவா?" என்றார்.

ஜெயசிம்மனுக்கு அவர் சொல்வது சரி என்று தோன்றியது. உடனடியாக நீலவேணிக்கு கோவில் கட்ட தன்னுடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டான். நீலவேணி என்ற பெயரில் கோவில் கட்டினால் தன்னுடைய பூர்வாசிரம துரோக வரலாறு வெளியே தெரிந்துவிடும் என்பதால் அவன் கட்ட போகும் கோவிலில் இருந்த தெய்வத்தின் பெயரை நீலி தேவி என்ற நாட்டார் குலதெய்வமாக மாற்றினான். அவன் எதை மறைக்க நீலவேணியின் பெயரை நீலி என்று மாற்றினானோ அந்த வரலாறு நாட்டு மக்களிடம் வெகு வேகமாக பரவியது. அவனுக்கு முன்னால் யாருக்கும் நிலவேணியைப் பற்றி பேச தைரியம் இல்லாவிட்டாலும் அவனது முதுகுக்கு பின்னால் மக்கள் அவனது துரோகத்தை பற்றி தைரியமாகவே பேசிக் கொண்டிருந்தனர்.

ஜெயசிம்மனுக்கு மக்கள் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்தாலும் அதை அவன் வெளிக்காட்டி கொள்வதில்லை. அவனது மனைவி நித்ராதேவி முதலில் நீலவேணியைப் பற்றி சொன்ன கற்பனையான கதைகளை நம்பினாலும் காலம் அவளுக்கு நீலவேணியின் முழு கதையையும் விரைவிலேயே சொல்லி விட்டது.ஜெயசிம்மனின் கொடூரமான இன்னொரு முகம் அவளுக்கு தெரிந்தாலும் அவளைப் பொறுத்தவரை ஜெயசிம்மன் ஒரு நல்ல கணவனாகவே நடந்து கொண்டிருந்ததால் அவளால் அவனைப் பற்றிய கதைகளை நம்ப முடியவில்லை. அன்பான கணவனாக அன்பை தன் மீது அள்ளி அள்ளி பொழிந்து கொண்டிருந்த ஜெயசிம்மனின் அன்பில் அவள்திக்குமுக்காடிக் கொண்டிருந்தாலும் தன் குழந்தைகளை இழந்து விட்ட வேதனை அவனை ரொம்பவே பாதித்தது. இதற்கெல்லாம் காரணகர்த்தா ஜெயசிம்மன் என்பதால் அவன் மீது அவளுக்கு மெல்லிய கோபமும் உண்டு. ஆனால் அதை அவனிடம் வெளிக்காட்ட அவளுக்கு தெரியவில்லை.

ஜெயசிம்மனிடமிருந்து அவனது கொடுர ஆட்சியிலிருந்து யாராவது தங்களை காப்பாற்ற மாட்டார்களா என்று ரத்னபுரி மக்கள் ஏங்கி கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய ரணதீரனோ தன்னையும் தன் நாட்டையும் ஜெயசிம்மனிடமிருந்து காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தான். அப்போது ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தவன் தான் பார்த்திபன். தீரன் வீரன் சகோதரர்களின் சிற்றப்பா மகனான பார்த்திபன் அதுநாள் வரை குருகுலத்தில் கல்வி கற்று வந்தான். வீரத்திலும் கல்வி கேள்விகளிலும் சிறந்தவனான பார்த்திபன் தன் சகோதரர்களும் தன் பாசத்திற்கு உகந்த ஒரே சகோதரியான நீலவேணியும் ஜெயசிம்மனால் வஞ்சகமாக கொல்லப்பட்டு நாடு அவனுக்கு அடிமையானதை அறிந்தான். அடுத்த அரசனாவதற்கு வாரிசு அடிப்படையில் பூரண தகுதி உடைய பார்த்திபன் இனியும் காலம் தாழ்த்த கூடாது என்பதால் அவனை குருகுலத்திலிருந்து அனுப்பி வைத்தார். அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு ரத்னபுரிக்கு வந்து சேர்ந்தான் பார்த்திபன்.

ஜெயசிம்மனின் நிர்வாக சீர் கேட்டால் தன் நாடு குட்டி சுவரானதை இதுவரை காதில் கேட்டு வந்த பார்த்திபன் அவற்றை இப்போது தன்னுடைய கண்களாலேயே அவற்றை நேரில் கண்டான். தன் நண்பர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு ஜெயசிம்மனின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடத் தொடங்கினான். விரைவிலேயே அவனுக்கு ஆதரவு பெருகத் தொடங்கியது.ெஜயசிம்மனுக்கு எதிராக யாராவது வர மாட்டார்களா என்று தவித்து கொண்டிருந்த மக்களுக்கு பார்த்திபனின் எழுச்சி வரப்பிரசாதமாகி போனது.ஜெயசிம்மனின் ஆளுகையை பிடிக்காத பெரிய மனிதர்களும் அரசியல் பிரமுகர்களும் மெல்ல மெல்ல பார்த்திபனின் பக்கம் சாய ஆரம்பித்தனர். பெருகி வரும் பார்த்திபனின் புகழை பற்றிய செய்திகள் ஜெயசிம்மனின் காதுகளை எட்டின.

துவக்கத்தில் பார்த்த்பனைஒரு பொருட்டாக ஜெயசிம்மன்மதிக்கவில்லை. அரசியல் செல்வாக்கும், அரசு அதிகாரமும் இல்லாத ஒரு தனி மனிதன் எல்லா அதிகாரங்களையும் பெற்றிருந்த தன்னை என்ன செய்து விட முடியும் என்று கொஞ்சம் இறுமாப்பாக அலட்சியமாகக் கூட இருந்து விட்டான். அவனுக்கு பின்னால் ஒரு கூட்டம் சேர ஆரம்பித்ததும் அவன் வரி வசூலிக்கும் அதிகாரிகளை விரட்டியடித்து பொது மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதும் ஜெயசிம்மனின் கோபத்தை தூண்டின. ஊரில் ஒரு நாய் குரைத்தால் ஊரில் உள்ள எல்லா நாய்களும் குலைக்க ஆரம்பித்து விடும் என்ற பழமொழியை நன்றாக அறிந்திருந்த ஜெயசிம்மன் முதலில் குரைக்கும் நாயான பார்த்திபனை கொன்று அந்த முதல் குரலை அடக்கி விட நினைத்தான். பொதுமக்களின் ஆதரவு பார்த்திபனுக்கு அதிகமாகவே இருந்ததால் அவன் விலாங்கு மீனாக ஜெயசிம்மனின் வலையில் சிக்காமல் தப்பித்து கொண்டிருந்தான்
 
அத்தியாயம் 16

தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் ஒரு கதை போன்ற வடிவத்தில் சொல்லி முடித்தான் பார்த்திபன். அவன் சொன்ன அனைத்தையும் வெகு கவனமாக கேட்டு கொண்டிருந்தனர் சகோதரர்களான ஆதித்தனும் அரிஞ்சயனும். தன் தொண்டையைகனைத்து கொண்ட ஆதித்தன் அங்கு நிலவிய கனத்த அமைதியை கலைத்தான்.

"இப்போது எனக்கு இங்கு நடக்கும் நிலவரம் முழுதாகப் புரிந்து விட்டது. ஆனால் இதற்கு என்ன மாதிரியான தீர்வை தேடுவது என்று தான் எனக்கு புரியவில்லை." என்றான் ஆதித்தன்

"இதற்கு இருக்கும் ஓரே தீர்வு ஜெயசிம்மனின் மரணம் தான் அதை தவிர வேறு வழியில்லை. எனக்கு தெரிந்த வழி இது ஒன்று தான். ஆட்சி கவிழ்ப்பில் சிறந்தவர்கள் நீங்கள் இருவரும். உங்களுக்கு வேறு ஏதாவது யோசனைகள் இருந்தாலும் கூறுங்கள். நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். இந்த நாட்டின் அரியாசனம் வாரிசு அடிப்படையில் எனக்குறியது என்றாலும் அதை நான் ஏற்க விரும்பவில்லை. அரசனாக வேறு யாருக்காவது தகுதி இருந்தால் அவர்களிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு நான் ஒதுங்கி கொள்ளவும் தயார். எனக்கு தேவை ரத்னபுரி மக்களின் அமைதியான வாழ்க்கை அவ்வளவுதான். அதற்கு உத்தரவாதம்தரும் எந்த திட்டத்தையும் நான் ஏற்றுக் கொள்ள தயார் " என்றான் பார்த்திபன்.

"ராஜ்ஜியத்தை மறுப்பவனுக்கே ராஜ்ஜியம் கிடைக்க வேண்டும் என்பது விதி.முதலில் நாம் நம் பலம் பலவீனங்களை பற்றி பேசி ஒரு முடிவு எடுக்கலாம். " என்றான் அரிஞ்சயன்

"சரி.. பார்த்திபா! நீ இப்போது எங்கே தங்கியிருக்கிறாய்? நீ விருப்பப் பட்டால் எங்களின் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கூறலாம். இல்லையென்றால் அது உனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்து விட்டு போகட்டும்"

"நான் உங்களை என் நண்பர்களாக ஏற்றுக் கொண்டு விட்டேன். உங்களிடம் உண்மையை கூறாமல் வேறு யாரிடம் உண்மையை கூறப் போகிறேன்.? நான் இப்போது தங்கியிருப்பது நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் அடர்ந்த வனப்பகுயில். அங்கே எனக்கும் என் கூட்டத்தாருக்கும் அடைக்கலம் கொடுத்து உணவு கொடுத்து உபசரிப்பதுமலைவாழ் பளியர் குலத் தலைவன். தீரனுடன் நெருங்கிய நட்பு கொண்டவன். ஜெய சிம்மனை எதிர்ப்பவன் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கேற்ப என்னை நண்பனாக ஏற்று என்னுடன் இணைந்து கொண்டவன்.நம்பகமான தோழன்" என்றான் பார்த்திபன்.

" நல்லது. நம்பகமான ஒருவன் உனக்கு நண்பனாக கிடைத்து விட்டான். நல்ல நண்பர்கள் துணை இருந்தாலே பாதி காரியம் வெற்றிகரமாக முடிந்தது போலத்தான். ஆமாம். உன் ஆதாவாளர்கள் மொத்தமாக எத்தனை பேர் இருப்பார்கள்..?"

அவர்கள் சுமார் 500 பேர் வரை இருப்பார்கள். மீதி 200 பேர் மறைவாக எங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறார்கள். இவ்வளவுதான் இப்போதைக்கு என்னுடைய பலம் _ என்னை ஆதரிப்பவர்கள் அனைவருமே நம்பகமானவர்கள். நாட்டிற்காக உயிரையே தரக் கூடியவர்கள்."

" நல்லது. உண்மையை ஒழிக்காமல் சொல்லிவிட்டாய். ஆனால் நான் சொல்வதற்காக நீ மனம் கலங்காதே! உன்னிடம் உள்ள சொற்ப நபர்களை வைத்து கொண்டு நாம் புரட்சியில் ஈடுபட முடியாது.அப்படி ஈடுபட்டால் தேன் கூட்டில் கல் எரிந்தது போலத்தான். நம் புரட்சி வென்று விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. நம் எதிர்பார்ப்புக்கு மாறாக தோற்றுவிட்டால் நாட்டிற்காக உயிரை விட நம்மோடு இணைந்தவர்களை பற்றி நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் விளைவு இன்னதென்று தெரிந்தே நம்மோடு இணைந்து கொண்டவர்கள். அவர்கள் தம்முடைய செயலுக்காக உயிரை விடுவது கூட நல்லதுதான். ஆனால் உனக்கு மறைமுகமாக உதவி செய்தவர்களை ஜெயசிம்மன் கண்டுபிடித்து தண்டித்தால் அதை பார்த்து பயப்படும் மக்கள் நாளை வேறு யாராவது புரட்சி என்று முனைந்தால் அவர்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள். அதுதான் விளையக்கூடியதிலேயே மிகப்பெரிய தீமை. அது ஜெயசிம்மனுக்கே அனுகூலம் ." எனறான் ஆதித்தன்.

"இப்போது என்ன செய்வது? என்னிடம் மிக குறைவான எண்ணிக்கையில் தான் ஆட்கள் உள்ளனர். உள்நாட்டு கலகத்தில் ஜெயசிம்மன் ஈடுபட்டு தீரனை கொன்று ரத்னபுரியை கைப்பற்றிய போது அவனிடம் 3000 வீரர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பான்மையினர் சிங்கபுரத்தை சேர்ந்தவர்கள்."

"அவ கூட போதுமான எண்ணிக்கைதான். அவ்வளவு வீரர்கள் இருந்தாலும் கூட போதும். நாமும் ஒரு உள்நாட்டு புரட்சியை மேற்கொண்டு முயற்சி செய்து பார்க்கலாம்"

"எண்ணிக்கையை அதிகரிக்கஅதற்கு நான் என்ன செய்வது?" என்றான் பார்த்திபன் பரிதாபமாக .

"நீ ஓன்றும் செய்ய வேண்டியதில்லை. நீ கொஞ்சம் காலதாமதமாக வந்தால் போதும்" என்று புன்னகைத்தான் அரிஞ்சயன்

அவன் பூடகமாக எதையோ சொல்ல வருகிறான் என்று பார்த்திபனுக்கு நன்றாக புரிந்தாலும் அது என்னவென்று அவனுக்கு விளங்கவில்லை.

"எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை" என்றான் பார்த்திபன் குழப்பத்துடன் .

"இன்னுமா புரியவில்லை.? நீ அரசு அதிகாரிகள் வரி வசூலிக்கும் போது அங்கே வராமல் சற்று தாமதமாக அங்கே வந்து வரி வசூல் பணத்தை மொத்தமாக பிடுங்கி கொண்டு விடு என்று சொல்கிறேன்."

"மக்களிடம் கொள்ளையிடசொல்கிறீர்களா?"

"இல்லை. மக்களிடம் கொள்ளையடிக்கும் அதிகாரிகளிடமிருந்து அந்த பணத்தை திருடச் சொல்கிறேன். நீ அப்படி செய்தால் ஜெயசிம்மனின் கோபம் அதிகரிக்கும்."

"திருடிய பணத்தை நான் என்ன செய்வது?"

"இல்லாத ஏழை எளிய மக்களுக்கு தானம் செய். ஜெய சிம்மனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக அந்த பணத்தை வாரி வழங்கு. மக்களிடம் உனக்கு ஆதரவு அதிகரிக்கும். உன் ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் உயர ஆர்ம்பிக்கும். அவை நாளை நாம் நடத்தப் போகும் புரட்சிக்கு அனுகூலம் தானே?"

"ஓ! நீங்கள் அப்படி சொல்கிறீர்களா? நான் எதற்காக காதை சுற்றி மூக்கை தொட வேண்டும் என்று நினைக்கிறேன்.. நாளை அரண்மனையில் இருக்கும் ஜெயசிம்மன் மர்மயோகியின் ஆசிர்வாதத்தை வேண்டி இங்கே உங்களை நாடி வரப்போகிறான்.இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் இனி எப்போதும் வாய்க்காது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அவன் கதையை முடித்தால்தான் என்ன?" என்றான் பார்த்திபன். அவனது குரலில் அவசரம் தெரிந்தது.

பார்த்திபனின் யோசனையை கேட்ட ஆதித்தனும் அரிஞ்சயனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

"எனக்கும் இது நல்ல யோசனையாக தோன்றுகிறது. எகள் காலத்தை வீணடிக்க வேண்டும்.? நாளை ஜெயசிம்மனின் கதையை நாம் முடித்துவிட்டால் சிங்கபுரத்தின் சைனியம் கூட ரணதீரனின் அனுமதியின்றி இங்கே வர முடியாது." என்றான் அரிஞ்சயன்

"அவசரப்பட வேண்டாம். நாம் நிதானமாகவே அடி எடுத்து வைப்போம். நாளை நாம் ஜெயசிம்மனை இங்கே வர சொல்லியிருக்கிறோம். அவனும் வரப் போகிறான். அவனை கவரும் விதமாக பேசி அவனை நம் கைக்குள் போட்டு கொள்ளலாம். அதன் பிறகு நாம் தெளிவாக ஒரு திட்டத்தை வகுக்கலாம்." என்றான் ஆதித்தன்

பார்த்திபனின் முகத்தில் ஏமாற்றம் சூழ்ந்தது. அரிஞ்சயனை ஏமாற்றத்துடன் பார்த்தவன்" என்ன உங்கள் தம்பி என் திட்டத்திற்கு உடன்பட மறுக்கிறார்? அவர் ஜெயசிம்மனை பார்த்து பயந்து விட்டாரோ?" என்றான் ஏளனமான குரலில்.

" என் தம்பி இதுவரை பயந்து நான் பார்த்ததில்லை. அவன் தயங்குவது அப்பாவி மக்களின் படுகொலையை நினைத்து தான். ஜெய சிம்மன் நம்மால் கொலை செய்யப்பட்டு விட்டான் என்றால் அவனது ஆதரவாளர்கள் பொது மக்களை கொல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஏராளமான மக்களை நாம் பலி கொடுக்க வேண்டியதிருக்கும்.அதனால் தான் என் தம்பி தயங்குகிறான். அவனது எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்" என்றான் அரிஞ்சயன் .

"ஒரு நாடு நன்றாக இருக்க ஒரு கிராமத்தை பழி கொடுப்பது நல்லது என்றல்லவா மனுநீதி சொல்கிறது? நீங்கள் சிலரின் உயிருக்காக தயங்குவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது" என்றான் பார்த்திபன்.

"அரசை நிர்வகிப்பவன் ஆண்டவனுக்கு நிகரானவன். அவன் தன்னுடைய அனைத்து செயல்களையும் முடிவுகளையும் அலசி ஆராய்ந்து இதனால் நாட்டு மக்களில் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள். அவற்றிலிருந்து அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்றெல்லாம் சரியான முறையில் திட்டமிட்ட பின்பே தன் யோசனைகளை செயல்படுத்த வேண்டும். மனு நிதியில் சொல்லப்பட்டதாலேயே அது வேத வாக்கு அல்ல.அன்றைய காலகட்டத்திற்கு அந்த நீதி பொருத்தமாக இருந்திருக்கலாம். அவைஎல்லா காலத்திற்கும் பொருந்தி போக வேண்டிய அவசியம் இல்லை" என்றான் ஆதித்தன்.

அவனை வியப்போடு பார்த்து கொண்டிருந்தான் பார்த்திபன்.

கள்வர்களான நீங்கள் இருவரும் இவ் வளவு நியாயவான்களாக நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்ப்பவர்களாக இருப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு அரசனுக்கான நெறிமுறைகளை நீங்கள் தெளிவாகவே எடுத்துக் கூறி விட்டீர்கள். உங்களைப் பற்றி தவறாக நினைத்து விட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்" என்று தன் மனதில் தோன்றியதை வாய் விட்டு சொல்லவும் செய்தான்.

"மக்களின் நலனே முக்கியம் என்று நாங்கள் காரியமாற்றி வருகிறோம் பார்த்தி பா! எங்களுக்கு மன்னர்களின் நலனை விட மக்களின் நலனே பெரிது. அதனால் தான் எங்களின் களவு வேலையை விட்டு விட்டு இந்த மாதிரியான பொதுச் சேவையில் இறங்கியிருக்கிறோம்" என்றான் அரிஞ்சயன் .

" ஏது? இப்படி ேபசியே இரவை கழித்து விட உத்தேசமா? நமக்காக தயார் செய்த விருந்து சாப்பாட்டை இன்னும் கண்ணிலேயே காட்டவில்லையே? இரவு பட்டினியோடுதான் யோகியாருக்கு உ றக்கம் போலும் " என்றான் ஆதித்தன்.

"என்னை மன்னித்து விடுங்கள். வந்த காரியத்தை நான் மறந்து விட்டேன். அறுசுவை உணவுகளும் தயாராக உள்ளன. வாருங்கள். அனைவரும் உண்ணலாம்." என்றான் அதுவரை மூவரின் உரையாடல்களை கேட்டு கொண்டு நின்றிருந்த விஜயபாகு .

நால்வரும் உணவு இருக்கும் இடத்தை நோக்கி நடை போட்டனர்.

உன்னுடைய புண்ணியத்தில் இன்று இந்த கட்டையின் வயிறு நிரம்ப போகிறது " என்றான் அரிஞ்சயன் .

அதே நேரம் மாளிகையின் கதவு தட்டப்பட்டது. விஜய் பாகுவை மூவரும் பார்த்தனர். அவனது முகம் சவமாக வெளுத்தது. "இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள்?" என்று முணுமுணுத்தவனாக வாசலை நோக்கி நடந்தான் விஜயபாகு .
 
அத்தியாயம் 17

தன் பின்னால் நின்ற மூவரையும் பதட்டத்துடன் பார்த்த விஜயபாகு "இங்கேயே சற்று மறைவாக இருங்கள். நான் என்ன வென்று பார்த்து வருகிறேன். சூழ்நிலைக்கு தகுந்ததுபோல் குறிப்பறிந்து நடந்து கொள்ளுங்கள் "என்றவன் மாளிகையின் கதவை நோக்கி நடந்தான்.

பார்த்திபனின் பக்கம் திரும்பிய ஆதித்தன்" பார்த்திபா! வந்திருப்பவர்கள் உன்னை தேடி வந்திருக்கலாமென்று நினைக்கிறேன். எங்களை பற்றி இங்கே எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். துறவிகள் என்று சொல்லி எங்களை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். ஆனால் உன் நிலைமை அப்படி அல்ல. நீ ஜெயசிம்மனால் தேடப்படும் ஒரு குற்றவாளி. நீ இங்கே இருப்பது அவவளவு நல்லதல்ல. நீ இங்கே இருப்பது விஜயபாகு விற்கு பெரும் கேட்டை தேடித் தரும். அதனால் நீ இங்கேயே யார் கண்ணுக்கும் படாமல் ஓளிந்து கொள்" என்றான்.

"நீங்கள் சொல்வதும் சரிதான். நான் இங்கேயே எங்காவது ஒளிந்து கொள்கிறேன்." என்ற பார்த்திபன் இருளில் மறைந்தான்.
கதவை திறந்த விஜய பாகு எரிச்சலுடன்" யார் நீங்கள் ?இந்த அகால வேளையில் கதவை தட்டி என் உறக்கத்தை கெடுக்கிறீர்களே? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றான் எரிச்சல் நிரம்பிய குரலில்.

வெளியே நின்றிருந்த அரசாங்கத்தின் குதிரை வீரர்கள் "உங்கள் உறக்கத்தை கெடுத்ததற்காக எங்களை மன்னித்து விடுங்கள்.உங்கள் இல்லத்தின் முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் நிறைய குதிரைகள் நின்று கொண்டி ருக்கின்றன. நள்ளிரவு நெருங்கி விட்டது.இன்னமும் குதிரைகள் இங்கே நிற்பது குழப்பத்தை தருகிறது. அதனால் தான் விசாரித்து விட்டு போகலாம் என்று வந்தேன். தொந்தரவிறகு மன்னியுங்கள்" என்றான் காவல் அதிகாரி.

"உன் அக்கறைக்கு மிகுந்த நன்றி. என் வீட்டில் இன்று விருந்து நடக்கிறது. சுந்தரேஸ்வரர் கோவில் மண்டபத்தில் தங்கியுள்ள மர்மயோகியும் அவரது சீடனும் சிறப்பு விருந்தினர்களாக இங்கே எழுந்தருளி உள்ளனர். வெளியே நிற்பது அவர்களின் குதிரைதான்.உனக்கு சந்தேகம் இருந்தால் உள்ளே வந்து தாராளமாக பார்க்கலாம்" என்றான் விஜயபாகு .

"அவரைப் பற்றி நானும் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். சமீப காலமாக அவர் சில பெரிய மனிதர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்வதாக கேள்விப்பட்டேன்."

"அந்த வரிசையில் இன்று என் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார். இப்போது உணவருந்த தயாராகி கொண்டிருப்பார். இந்த நிகழ்வு அவருக்கு தெரிந்தால் அவரது மனம் சங்கடப்படலாம். அதைத்தான் நீ விரும்புகிறாயா?" என்றான் விஜயபாகு .

"இல்லை ஐயா. என்னை மன்னித்து விடுங்கள் என்னுடைய கடமையை நான் செய்தேன். தவறாக நினைத்து கொள்ளாதீர்கள்" என்ற காவலனை நோக்கி சில பொற்காசுகளை நீட்டினான் விஜயபாகு .

"உன் கடமையை எண்ணி நான் பூரித்துப் போய் கொடுக்கும் அன்பு பரிசு. இதை பெற்றுக் கொள்" என்றான் விஜய பாகு

அவன் சற்றே தயங்கி நின்றான்.

"தயங்கா தே வீரனே! என் அன்புபரிசை பெற்று கொள். இதை நான் வேறு யாரிடமும் கூற மாட்டேன். பயப்படாதே"

"இல்லை. நான் அதற்காக தயங்கவில்லை. நாங்கள் நான்கு பேர் இங்கு வந்திருக்கிேறாம். நீங்கள் மூன்று பொற்காசுகளை தந்திருக்கிறீர்கள். இதை எங்களுக்குள் எப்படிப் பிரித்து எடுத்து கொள்வது என்று தான் நான் யோசித்து கொண்டிருக்கிறேன்"

அடப்பாவி என்று மனதில் நினைத்து கொண்ட விஜயபாகு "அதனால் என்ன? கூடுதலாக ஒரு நாணயத்தை நானே தருகிறேன். இதை நீ முன்பே சொல்லியிருக்கலாம்" என்றபடி தனது மடியிலிருந்து இன்னொரு பொற்காசை எடுத்து நீட்டினான்.

வாயெல்லாம் பல்லாக அதை வாங்கி கொண்டவன்" மிகப் பெரிய மன தய்யா உமக்கு " என்றபடி தனது ஆட்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் போவதை உறுதிப்படுத்திக் கொண்டு விட்ட விஜயபாகு வீட்டின் உள்ளே நுழைந்து கதவை பழையபடி தாளிட்டான்.

என்ன நடந்தது என்பதை பார்வையால் கேட்ட இருவருக்கும் நடந்த சம்பவத்தை முழுதாக எடுத்து கூறினான் விஜயபாகு.

அவன் கூறியதை கேட்டபடி இருளிலிருந்து வெளியே வந்தான் பார்த்திபன். "நீ இங்கிருந்து போய் விட்டாய் என்று நான் நினைத்தேன்" என்றான் அவனைப் பார்த்த விஜயபாகு .

"உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. நீ ஒரு வியாபாரியாதலால் பேசியே எதையும் சமாளித்து விடுவாய் என்று எனக்கு தெரியும் " என்று சிரித்தான் பார்த்திபன்.

மூவரும் உணவுக்கூடத்திற்குள் நுழைந்தனர். அங்கே அவர்களுக்காக அருசுவை உணவும் அதை பரிமாற ஒரு பரிசாகனும் காத்திருந்தனர். நால்வரும் கை கால்களை கழுவி விட்டு தரையில் உணவு உண்ண அமர்ந்தனர்.

உணவு உண்டு முடிக்கும் முன்பாகவே அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தனர் இப்போதைக்கு ஜெயசிம்மன் மீது எந்த கொலை முயற்சி தாக்குதல்களும் செய்யக் கூடாது. அதற்கு தகுதியான நேரம் வரும் வரை பார்த்திபன் தன் ஆட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொள்வது . நாளை வர இருக்கும் ஜெயசிம்மனை தன் பக்கம் இழுத்து வைத்திருப்பது மர்மயோகியான அரிஞ்சயனின் வேலை. இப்படி ஒரு பொதுவான உடன்படிக்கைக்கு அனைவரும் வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு இடையே எந்த விதமான தகவல்தொடர்புகள் நடைபெற வேண்டுமானால் அதற்கு விஜயபாகு வைபப்படுத்திக் கொள்வது என்றும் முடிவானது. இரவு போஜனத்திற்கு பிறகு அந்த நால்வர் அணி பிரிந்தது. மூன்றாம் சாமம் உதயமானபோது அவரவர் அவரவர் இடத்தில் நிலை கொண்டு தூக்கத்தில் ஆழ்ந்தனர். தனக்கு எதிரான இந்த சதி வேலைகள் பற்றி எதுவும் தெரியாமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான் ஜெயசிம்மன்

அதே நேரம் சுந்தரேஸ்வரர் கோவில் மண்டபத்தில் படுத்திருந்த ஆதித்தன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அவனுக்கு அருகே படுத்திருந்த அரிஞ்சயன் மெல்லிய குறட்டையுடன் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ஆதித்தனின் மனதில் நெருஞ்சி முள்ளாக ஒரு கேள்வி உறுத்தி கொண்டிருந்தது.ஜெயசிம்மனுக்கு அடுத்தடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளும் சிறிது நாட்களிலேயே மரணத்தை தழுவியதை அவனால் நம்ப முடியவில்லை.

ஆதித்தன் எப்போதும் மறுபிறவி, விதி, சாபம், சோதிடம் போன்றவற்றை நம்புகிறவன் கிடையாது. அவற்றில் சாதகமான விசயங்கள் இருந்தால் அவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறவன். அதுவும் எதிரிகள் அவற்றை நம்பும் போது அவனது வேலை சுலபமாகிவிடுகிறது என்பதால் மட்டுமே அவற்றை அவன் பயன்படுத்தி கொள்வான். ஆனால் எதிரியும் ஆதித்தனைப் போலவே மேலே சொன்ன விசயங்களை நம்பாதவனாக இருந்து விட்டால் அவனது வேலை இன்னும் கடினமாகி விடும்.

இப்போது ஜெயசிம்மனின் இரண்டு குழந்தைகள் இறந்து போனதற்கு கூட நீலவேணியின் சாபம் காரணமாக இருக்கக் கூடும் என்பதை ஆதித்தன் நம்பவில்லை. அது ஒரு சதி செயலாக இருக்கக் கூடும் என்று அவன் நினைத்தான். யாரோ ஒரு ஆசாமி அது ஆணோ அல்லது பெண்ணோ அரண்மனைக்கு உள்ளேயிருந்து குழந்தைகளை எந்த சந்தேகமும் வராமல் கொன்று விடுகிறானோ என்று அவனுக்கு தோன்றியது. அந்த நபர் ஜெயசிம்மனுக்கு ஆகாதவனாக இருக்க வேண்டும். அவன் ஜெயசிம்மன் மீதான கோபத்தை அவன் குழந்தைகளின் மீது காட்டுவதாக ஆதித்தனுக்கு தோன்றியது. ஒரு வேளை அந்த நபர் நீலவேணிக்கு அணுக்கமாக இருந்து அவள் இறந்து போனதற்கு பழி வாங்க அரண்மனையில் இருந்து கொண்டே குழந்தைகளை கொன்று அவளது சாபம் நிறைவேறுவதாக தோன்ற செய்கிறார்களோ என்று ஆதித்தனுக்கு தோன்றியது.

காலையில் எழுந்ததும் இந்த சந்தேகத்தை பற்றி தன் அண்ணனிடம் பேச வேண்டும் என்று நினைத்தவன் சற்று நேர யோசனைக்கு பிறகு தன் முடிவை மாற்றி கொண்டான். நீலவேணியின் சாபத்திற்கு பயந்து தான் ஜெயசிம்மன் நாளை மர்மயோகியை பார்க்க இங்கே வருகிறான் என்பதால் இதைப் பற்றி பேசினால் அரண்மனைக்குள் இருக்கும் அந்த முகம் தெரியாத கொலையாளி எச்சரிக்கை அடைந்து விடுவான் என்பதால் இப்போதைக்கு தான் அண்ணனிடம் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டான். தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்த பிறகு அவன் மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்தான்.

மறுநாள் அதிகாலை . சூரியன் மெல்ல மெல்ல உதிக்க தொடங்கி தன் கைகளை எட்டு திக்கும் விரித்து பூமியைத் தழுவத் தொடங்கினான். தன் வழக்கமான காலை கடன்களை முடித்துவிட்டு அண்ணனும் தம்பியும் கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். சற்று நேரத்தில் மக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஜெயசிம்மன் தன் மனைவி நித்ராதேவியுடன் மர்மயோகியை காண வந்ததால் மக்களிடையே ஏற்பட்ட பரபரப்பு அது.

அரிஞ்சயன் பரபரப்புடன் காணப்பட்டான்.ஜெயசிம்மனுடனான முதல் சந்திப்பிலேயே அவனை அசரடித்து விட வேண்டும் என்று யோசித்த அரிஞ்சயன் அதற்காக சில ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான். அவை அனைத்துமே அவனது நண்பன் பைராகியிடமிருந்து கற்று கொண்ட வித்தைகள் தான். மர்மயோகிக்கு முன்னால் வந்து நின்ற ஜெயசிம்மன் அவரை வணங்கி நின்றான். மர்மயோகியின் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை தோன்றியது.

ஜெயசிம்மளோடு வந்திருந்த அவனது ஆட்கள் தங்கள் கையோடு கொண்டு வந்திருந்த பழவகைகளை கூடைகளோடு இறக்கினார்கள். தன் பாதத்தை தொட்டு வணங்கிய நித்ராதேவியை புன்னகையோடு பார்த்தான் மர்மயோகி.

"சுவாமிக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்!" என்றான் ஜெயசிம்மன்

" வருக மகனே! நான் உன் அரண்மனைக்கு உன்னை தேடி வரவில்லை என்று உனக்கு கோபமா ? " என்றான் மர்மயோகி.

தன் மனதில் இருப்பதை அப்படியே படித்து சொன்ன அவனின் ஆற்றலால் மலைத்து போன ஜெயசிம்மன் தன் அதிர்ச்சியை வெளிக்காட்டி கொள்ளாமல் லாவகமாக அதை மறைத்தபடி "அப்படி எதுவும் இல்லை சாமி. சித்தன் போக்கு சிவன்போக்கு என்பதை நான் நன்கு அறிந்தவன் சுவாமி " என்றான்.

அவனது சமாளிப்பை பார்த்து புன்னகைத்தமர்மயோகி " நேற்று இரவே ஆண்டவன் உனக்கான ஒரு தகவலை எனக்கு அனுப்பி விட்டான் மகனே!" என்றான்.

" என்ன செய்தி சுவாமி?" என்றான் ஜெயசிம்மன் பரபரப்புடன்.

அவனது பரபரப்பை உள்ளூர ரசித்த மர்மயோகி மண்டபத்தூணில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தின் பழுத்த இலையை பறித்தவன் "இதோ இதை அக்னியில் காட்டு மகனே! உனக்கு கடவுள் அனுப்பிய செய்தி உன் கண்ணுக்கு தெரியும் "

ஜெயசிம்மன் அந்த பழுத்த இலையை அருகேயிருந்த தீபத்தின் சுவாலையில் காட்டினான். அதன் நெருப்பில் இலையிலிருந்த எழுத்துகள் தெரிய ஆரம்பித்தன.ஜெயசிம்மன் பிரமிப்போடு அந்த எழுத்துகளை படிக்க ஆரம்பித்தான். அந்த எழுத்துகள்" புதிய உதயம்" என்றன. வெறும் இலையில் எழுத்துகள் தோன்றியதை பார்த்த ஜெயசிம்மன் திகைப்பின் உச்சியில் இருந்தான்.

அதே நேரம் நித்ராதேவி வெட்டுண்ட மரம் போல் மயங்கி விழுந்தாள். எதிர்பாராத இந்த சம்பவத்தால் அனைவரும் திகைத்துப் போயினர்.
 

New Threads

Top Bottom