dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
10. திருமண ஏற்பாடு!
'என்ன திடிர்னு என் பொண்ணு ஓகே சொல்லிட்டா? ஒரு வேலை நாம தான் அவளை தப்பா நினைச்சிட்டோமோ? எதுக்கும் கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்' என்று அவளின் பதிலில் முதலில் சற்று குழப்பமடைந்தாலும் இப்பொழுது இதை பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம் என்று நிம்மதியடைந்தார் பாஸ்கர்."அப்புறம் என்ன மோகன் என் பொண்ணு ஓகே சொல்லிட்டா?" என்று பாஸ்கர் கண்ஜாடை காட்ட அவரும் சரி என்னும் விதமாக தலையாட்டி தன் பேச்சை தொடர்ந்தார்.
"அப்போ பாஸ்கர் இப்பயே தட்டு மாத்திக்கலாம்" என்று தன் மனைவியை பார்க்க, அவர் தன் அருகில் இருந்த தாம்புல தட்டை எடுத்து தன் கணவன் கையில் தந்து சிரித்தார்.
"இந்தாடா. நம்ம பசங்க ரெண்டு பேருக்குமே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க அதனால டைம் வேஸ்ட் பண்ணாம இந்த தட்ட வாங்கிக்க அடுத்த முகுர்த்ததுலயே கல்யாணதேதிய முடிவு பண்ணிறலாம்" என்று தட்டை தன் நண்பனிடம் நீட்டினார்.
சிரித்தபடி அவரிடம் இருந்து தட்டை வாங்கிகொண்டு,”ரொம்ப சந்தோஷம்டா! நீ சொல்ற மாதிரியே பண்ணிடுவோம்" என்றார்.
'அடப்பாவிங்களா! என்ன இவங்க ஜெட்டு வேகத்துல என்னைய தூக்கிட்டு போறதுக்கு துடிக்கறாங்க, எங்கப்பா அதுக்குமேல என்னை எப்போ இந்த வீட்டவிட்டு துரத்தலாம்னு ரொம்ப வேகமா ஓகே சொல்லிட்டார். இதுங்க முகரைய பார்த்தா அவ்ளோ நல்லவங்க மாதிரி தெரியலையே? எனக்கென்னவோ இது இயல்பா நடக்கற மாதிரியும் தெரியலை? இதுங்க ரெண்டும் ஏற்கனவே பொறுமையா உட்கார்ந்து பேசி முடிவெடுத்து ப்ளான் பண்ணா மாதிரி தெரியுதே? நடந்துங்கடா எதுவா இருந்தாலும் ஒரு கை நானா நீங்களா பார்த்துடுறேன்' என்று நினைத்து கொண்டிருந்தாள்.
எதையும் வெளிகாட்டி கொள்ளாமல் புன்னகை முகத்துடன் தன் மகள் நிற்பதை பார்த்து அவளுக்கும் இதில் விருப்பம் என்று நினைத்து சந்தோஷமாக இருந்தார் பாஸ்கர்.
வந்தவர்கள் எல்லோரும் உரையாடிவிட்டு கிளம்பினர்.
தங்கள் அறையில் அவளின்பெற்றோர் பேசியதை கேட்ட செல்வி அதன்பின் தீர்க்கமான ஒரு முடிவு எடுத்துவிட்டாள்.
பாஸ்கர் தனக்கு வேலை இருப்பதாக கூறி வெளியே சென்றிருந்தார். அவர்கள் செல்வதற்காக காத்திருந்த தாமரைசெல்வி தன் அறைக்கு வந்து கதவை தாழிட்டு கொண்டு கட்டிலில் தொப்பென விழுந்தாள்.
"ஒரே நாளில் என்னவெல்லாம் நடந்துவிட்டது" என்று தன் மனம் ஒருபுறம் கவலைகொண்டாலும் தன்னவனை சேரும் காலமும் நெருங்கி கொண்டு வருகிறது என்ற நினைப்பே அவளுக்குள் இனிமையாக இருந்தது.
'இதெல்லாம் எதுவும் தெரியாம இந்த மண்டு என்ன பண்ணுதுன்னு தெரியலையே?' என்று தன் மொபைல் எடுத்து சரவணத்தமிழனுக்கு போன் செய்தாள்.
தன் வீட்டில் தாமரைசெல்வியின் புகைப்படம் ஒன்றை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த சரவணத்தமிழன், தன் மொபைலில் செல்வியின் முகம் கொண்டு அவள் பெயர் வருவதால் அவள் அழைப்பதை பார்த்து அவன் கண்களால் அவனையே நம்ப முடியாமல் திரும்பவும் அடிக்கும் போனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
'செல்வி தான் எனக்கு போன் பண்றாளா? இந்த நேரத்துல எதுக்கு போன் பண்றா?' என்று பதற்றம் தொற்றிக்கொள்ள வேகமாக போனை எடுத்து”ஹலோ!” என்றான்.
"ஹலோ!" என்று செல்வியின் குரல் மெதுவாய் ஒலித்தது.
"செல்வி. இந்த நேரத்துல என்ன போன் பண்ணிருக்க ஏதாவது அவசரமா?" என்று பதட்டமான குரலில் கேட்டான்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள ரெண்டுநாளா பார்க்கவே முடியல. அதான் போன் பண்ணேன்" என்று கூறினாள் உடனே.
"அப்படியா? என்னவோ ஏதோன்னு நான் பயந்துட்டேன்" என்றான் .
'போடா! இங்க என்ன நடக்குதுன்னு கூட தெரியாம சும்மாவே பயப்படுது. கடவுளே சேவ் மீ இந்த மக்குகிட்ட நான் மாட்டிகிட்டு... என்ன பண்ண போறனோ தெரியலை' என்று மேலே பார்த்து கடவுளை வேண்டினாள்.
"போன் பண்ணிட்டு அமைதியா இருக்க? என்ன விஷயம் செல்வி ?" என்று பொறுமையாக கேட்டான் .
"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்" என்றாள் தயக்கத்துடன்.
'என்ன கேளு?' என்று சொல்லிவிட்டாலும் 'என்ன கேட்பாளோ?' என்ற பதட்டம் அவனுக்குள் இருந்தது.
"அது... நீங்க உண்மையாவே என்னை விரும்பலையா?" என்று தட்டு தடுமாறி தான் கேட்க நினைத்ததை கேட்டுவிட்டாள் செல்வி.
மனதிற்குள் மலை அளவு ஆசை இருந்தாலும் வெளிகாட்டாமல்,”அதான் அன்னைக்கே சொல்லிட்டேனே? அப்புறம் எதுக்கு திரும்பி இந்த நேரத்துக்கு போன் பண்ணி கேக்குற?" என்றான் உள்ளே சென்ற குரலில்.
'இவன் திருந்த மாட்டான். எப்படியும் இந்த பக்கிய தான் நான் காதலிச்சி தொலைச்சிடேன். என்ன பண்றது? நானே தான் ஏதாவது பண்ணனும்' என்று தனக்குள் நினைத்து கொண்டவள்.
"ஒண்ணுமில்லை! இன்னைக்கு என்னை பெண் பார்க்க வந்திருந்தார்கள். எல்லோருக்கும் பிடித்து போய்விட்டது. தட்டும் மாற்றி விட்டார்கள். வரும் நல்ல முகுர்த்தத்திலேயே கல்யாணத்தேதியும் முடிவு செய்திருக்கிறார்கள்" என்றாள்.
தன் தலையில் யாரோ பெரிய பாறாங்கல்லை தூக்கிப்போட்டால் ஏற்படும் பிளவுப்போல் பெரிய வலியை தனக்குள் உணர்ந்தான் சரவணத்தமிழன்.
'நான் இது எதிர்பார்த்தது தான்' என்று தனக்குள் மருகினாலும்,”அப்படியா? வாழ்த்துக்கள் செல்வி" என்று வாழ்த்த மனமில்லாமல் வாழ்த்தினான்.
'என்னடா நீ? காதலிக்கற பொண்ணு எனக்கு வேற பையன் கூட கல்யாணம்னு சொல்றேன். நீ என்னடான்னா புடிச்சி வச்ச புள்ளையார் மாதிரி அப்படியான்ற? உன்னையெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணி குப்பக்கொட்ட போறேனோ? இரு, எப்படியும் நான் முடிவு பண்ணிட்டேன். உன்ன அழ வைக்காம விடமாட்டேன்' என்று நினைத்துக்கொண்டு”சரி! நாளைக்கு அவர்கூட நான் வெளிய போகபோறேன். அவர பத்தி பேசிட்டு இருக்கும் போதே அவர் செகண்ட் லைன்ல வரார் பாருங்க, சரி நான் அப்புறம் பேசுறேன். பை" என்று போனை கட் செய்தாள்.
'என்ன நாளைக்கு அவன் கூட வெளிய போகப்போறாளா? இத என்னால தாங்கிக்க முடியுமான்னு தெரியல பேசாம வேலையவிட்டு நின்றலாமா? இல்ல அது தப்பாகிடும், அதுவுமில்லாம என்னோட ட்ரைனிங் பாதிலையே விடமுடியாது அது என் கரியர பாதிக்கும். என்ன தான் நடக்கும் பார்த்துடலாம். நானா விரும்பி ஏத்துகிட்டதுதானே எவ்வளவோ கஷ்டப்பட்டுருக்கேன் இது என்ன புதுசா? எல்லார்த்தையும் பார்த்துடலாம்' என்று தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு நடுநிசி வரை உறக்கம் வராமல் புரண்டவன் வெள்ளி முளைக்கும் நேரத்தில் உறங்கிப்போனான்.
அடுத்து வந்த நாட்களில் இருவரின் விழிகளும் பார்வைகளை மட்டும் பரிமாறிக்கொண்டன.
அவளும் அவன் என்ன தான் செய்கிறான் என்று பொறுத்திருந்து பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தாள். உள்ளுக்குள்ளேயே அவள் தனக்கில்லை என்று புழுங்கி கொண்டிருந்த சரவணத்தமிழன் அவளை பார்ப்பதைக்கூட தவிர்த்துவிட்டான் வலுக்கட்டாயமாக வெளியே செல்லும் வேலையாய் தேர்ந்தெடுத்து, அந்த வேலையையும் வெளியிலேயே முடித்து விட்டு அப்படியே தன் வீட்டுக்கு செல்லும்படி பார்த்துக்கொண்டான்.
இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த செல்வி, 'டேய் நீயெல்லாம் ஒரு மனுசனா? நானும் பார்த்துகிட்டு இருக்கேன். இங்க உன்ன ஒருத்தி உயிரா நினைக்குறான்னு தெரிஞ்சும் இப்படி தவிக்கவிடறியே? உன்னை நான் என்ன செய்யறது? எல்லார்த்துக்கும் சேர்த்து வச்சு உனக்கு ஒரு வாரத்துக்கு சாப்பாடு போடாம பட்னி போடறேன். நீயா என் கழுத்துல தாலி கட்டற மாதிரி நான் தான் செய்யணும், செய்யறேன். என் செல்லகுட்டிகாக இதுகூட செய்யமாடேனா? இது எல்லாத்தையும் நான் அன்னைக்கு நீ என்னை விரும்புறேன்னு சொன்னியே அதுக்கப்புறம் தான் முடிவெடுத்து இருக்கேன். எங்க அப்பா பார்க்கின்ற மாபிள்ளையவிட என்னை மட்டும் இல்லாம என் கொடும்பத்தையும் சேர்த்து நல்லா இருக்கணும்னு நினைக்கிற உன்னை கல்யாணம் பண்ணிகிட்டா நான் நிச்சயம் நல்லா இருப்பேன்' என்று தனக்குள் பேசிக்கொண்டாள்.
வேகமாக அடுத்த இருபதாவது நாள் முகுர்த்த நாளாக திருமணத்தேதியை முடிவு செய்து விட்டனர் பெரியவர்கள்.
"என்ன செய்யனும்னு நினைக்கிறிங்களோ செய்ங்கடா. நான் எல்லார்த்தையும் பார்த்துகிறேன்" என்று அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் சந்தோஷமாக ஏற்றுகொள்வது போல் அமைதியாக இருந்தாள் நம் செல்வி.
திருமணத்திற்கு திருமண அழைப்பிதழ், பட்டுபுடவை, நகைகள் முதற்கொண்டு சீர் செய்ய தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி குவித்தார்கள்.
இவை எல்லாவற்றையும் தூரத்தில் இருந்து சரவணத்தமிழன் பார்த்துக்கொண்டிருந்தான் செல்வி தனக்கில்லை என்ற வேதனை அவனுக்கு ஒருபுறம் இருந்தாலும் அவளை இவ்வளவு ஆழமாய் நேசிக்கும் பெற்றோரின் அன்பில் அவள் திளைத்திருக்கிறாள் என்று சிறிது சந்தோஷபட்டான்.
இன்னும் இரண்டு நாளில் திருமணம், செல்வி சரவணத்தமிழனுக்கு போன் செய்தாள்.”ஹலோ! தமிழ் நான் உங்களை உடனே பார்க்கணும்' என்றாள்.
"என்ன செல்வி ? இன்னும் இரண்டு நாளில் திருமணத்தை வைத்துகொண்டு என்னை எதற்கு பார்க்கவேண்டும் என்கிறாய்? என்னால் எங்கேயும் வரமுடியாது” என்றான் சற்று பதட்டமான குரலில்.
"இப்ப நீங்க வரல.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது. நான் இப்பயே உங்களை பார்க்கணும், வரமுடியுமா முடியாதா?" என்று கோபமாய் கேட்க.”சரி நான் வரேன் , எங்க வரணும்?" என்று கேட்டான்.
"பார்க்குக்கு வாங்க" என்று போனை கட் செய்தாள்.
அரைமணி நேரம் கடந்தபின் சரவணத்தமிழன் அங்குவந்து சேர்ந்தான்.
அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறெங்கோ பார்த்தபடி நிற்க,”என்னை பார்க்க வந்துட்டு, எதுக்கு வேற எங்கயோ பார்த்துட்டு இருக்கீங்க? என்னை நேருக்குநேரா பாருங்க தமிழ்" என்று அவள் கூறுவதை கேட்டதும் அவள் விழிகளோடு தன் விழயை ஒரு நொடி சந்திக்க செய்தான்.
மறுநொடி தன் விழியை நகர்த்திக்கொண்டு”அதெல்லாம் இருக்கட்டும்! இப்ப எதுக்கு என்னை வர சொன்ன அதுக்கு முதல்ல பதில் சொல்லு? இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். இப்படி என்னோட நின்னு பேசறத யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? நீ முதல்ல கிளம்பு" என்றவனை நிறுத்தினாள்.
"ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட பேசணும்னு வரச்சொன்னேன். நான் பேசவந்ததை பேசிடறேன்" என்று அவனை நோக்கினாள்.