5th May 2019
காலை 7 மணி, ஓட்டேரி காவல் நிலையம் அந்த பிரதான சாலையின் ஓரத்தில சின்னதாய் அமைந்திருந்தது. வெயிலின் தாக்கம் அதிமாக இருந்தாலும் அன்று பெய்த மழை வறண்டு கிடந்த சாலைக்கு உயிர் கொடுத்தது போல் அந்த பைபாஸ் சாலை ஜொலித்துக்கொண்டிருந்தது . அந்த பரபரப்பான சாலையில் ஒரு சிறிய வீடு போல் அந்த காவல் நிலையம் சற்று தாழ்வான இடத்தில் அமைதிருந்ததால் மழை தண்ணீர் குட்டை போல் தேங்கி கிடந்தது. வெறும் நான்கு பேரை கொண்ட காவல் நிலையம் என்பதால் ஒரே நீளமான அறையில் மேஜைகள் நாற்காலிகள் நீண்ட வரிசையில் அமைக்கப்பட்டிருந்தது. நால்வரில் ஒரு கான்ஸ்டபிள் ரைட்டர் என்பதால் அவருக்கு மட்டும் ஒரு பழைய கணினி எதிரில் போட பட்டு இருந்தது.
இன்ஸ்பெக்டர் சாலமன் கீர்ச் கீர்ச் என ஓடும் அந்த மின் விசிறியின் கீழ் தலையை சாயத்த படி கண்களை மூடிக்கொண்டு அசந்திருந்தார், அருகில் இருந்த கான்ஸ்டபிள் விமலின் போன் கிரர் என சிணுங்கியது. சோர்வாக இருந்த கண்கள் போனில் வரும் பெயரை பார்த்தவுடன் பளிச்சென்று விழித்துக்கொண்டது. கர கர குரலுடன் விமல்
"குட் மார்னிங் சார்.. ம்ம்ம்..ஹ்ம்ம்" என்று குரலை சரிசெய்து கொண்டார். மறு முனையில் டெபுட்டி கமிஷ்னர் ஏகாம்பரம்.
"இந்த சாலமன் எங்கயா போனான். எவளோ தடவ போன் பண்றது வீட்டுக்கு கிளம்பிட்டானா?" என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே விமல் இன்னொரு கையால் சாலமனை வேகமாக எழுப்பினான்
சாலமன் - ஆறு அடி உயரம், தூக்கமின்மை காரணத்தால் கண்களை சுற்றி கருவளையம் அது பெரிதாய் வெளியே தெரியாத அளவிற்க்கு கருமையான முகம், பிரம்மாண்டமான உருவம், பேச்சில் நிதானம், தெளிவான அணுகுமுறை என டிபார்ட்மெண்டில் பிரகாசமாக ஜொலிக்கும் ஒரு மனிதன் என்று சொல்லலாம். சிக்கலாக இருந்த பல வழுக்கைகளை தனது தெளிவான சிந்தனையால் தீர்த்த சாலமன்னுக்கு இந்த வழக்கு பெரிய சிம்ம சொப்பனமாக மாறப்போவது அன்று தெரியாது.
"சாரி சார், கொஞ்சம் அசந்துட்ட்டேன்" என்று வழக்கம் போல் தனது மென்மையான குரலில் ஆரம்பித்தார்
"பரவாயில்லை சாலா (நெருங்கிய வட்டாரம் சுருக்கமாக அழைக்கும் புனைப்பெயர்). நீங்க உடனே கிளம்பி முடிச்சூர் போங்க. நம்ப தாம்பரம் கவுன்சிலரோட தம்பி முகிலன் இஸ் நோ மோர்!!"
"ஷூர் சார்" என்று சாலமன் உறுதியளித்தான்.
"நான் இன்னும் முடிக்கல சாலா.. நடந்தது இரட்டை கொலை வழக்கு.. எஸ்க்யூஸ் மீ " என்று சொல்லிட்டுவிட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து மறுபடியும் ஏகாம்பரம் தொடர்ந்தார் "சாரி, ஹ்ம்ம் அந்த ஏரியால இரண்டு கொலைகள் பக்கத்து பக்கத்து தெருவுல நடந்திருக்கு. ஒன்னு நம்ப முகிலன் இன்னொன்னு ஒரு 35 வயது பெண். நம்ப தாம்பரம் சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் அங்க தான் இருக்காரு, ஆனா இந்த கேஸ் நம்மகிட்ட தான் வரப்போகுது. நீ அங்க உடனே போ அப்படியே நம்ப பாரன்சிக் ஆட்களையும் அங்க வரச்சொல்லிட்டு. எனக்கு ஈவினிங்குள்ள கம்ப்ளீட் ரிப்போர்ட் வேணும்." என்று சொல்லி போனை துண்டித்தார் ஏகாம்பரம்.
சாலமனும் மரு பக்கம் போனை துண்டித்துவிட்டு நரேஷிடம் விவரம் கேட்க ஆர்வத்துடன் போன் செய்தார்
"நரேஷ் எப்படி இருக்கீங்க? நா ஸ்பாட்டுக்கு ஒரு கால் மணிநேரத்துல வந்துடுவேன்.. அங்க என்ன நிலவரம்?
"குட் மார்னிங் சார்!! கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியாயிருக்கு.. செத்தது கவுன்சுலார் தம்பி சார். கட்சி மக்கள் நிறையபேர் இருக்காங்க. ரெண்டு சாவும் ஒரே பாட்டர்ன்ல இருக்கு" என்று நரேஷ் விவரிக்க வரும்பொழுது சாலமன் மென்மையாக குறிக்கிட்டான்
"சரி சார்.. நான் இதோ நேர்ல கிளம்பி வரேன் " என்று சொல்லிக்கொண்டே சாலமனும் விமலும் ஜீப்பில் விரைந்தார்கள்.
தொடரும்...