Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL உயிரான உறவை தேடி - Tamil Novel

Status
Not open for further replies.

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -21.2 (இறுதி அத்தியாயம்)

மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் நேராக ஆதவ்வைத் தான் தேடி சென்றாள் வாணி.

அன்றைய நிகழ்வுக்குப் பிறகு அந்த வீட்டினர் யாருடனும் அவள் பேசுவது கிடையாது. அவன் எவ்வளவோ நாட்கள் அவளிடம் பேச முயற்சித்தும் அவள் விலகிச் செல்வதால், வலியே சென்று அவளிடம் பேசாமல், அவளுக்கு நேரம் கொடுத்து, அவள் தன்னை புரிந்து கொள்வதற்கு அவகாசம் கொடுத்து விலகி நிற்கிறான். இப்போது அவனும் அவர்களது அந்த கம்பெனியில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறான்.

மீனாட்சி சுத்தமாக அங்கு செல்வதை நிறுத்திவிட்டார். வயது முதிர்வின் காரணமாக ஆதிவிநாயகம், பூங்கோதை நாச்சியார் இருவரும் அறையை விட்டு வெளியே வருவதே கிடையாது. பிள்ளைகள் மூனு பேரும் தான் இப்போது அனைத்துப் பொறுப்புகளையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

இவ்வளவு நடந்தாலும் அனைவரும் தத்தமது வாழ்வில் முன்னேறிக் கொண்டிருந்தனர் தான். ஆனால் தேவேஷ்வரே எதிர்பாராத ஒன்று ஆஷ்விதாவுக்கு அவன் மேல் இருந்த நேசம் தான்..
எதிர் வீட்டில் இருக்கிறான் என்றாலும் அவ்வப்போது அவனைப் பார்ப்பாள். ஆனால் இருவரும் பேசிக் கொண்டதே கிடையாது. தேவேஷ்வரோ அவளை இதற்கு முன்பு பார்த்தது கூட கிடையாது. ஆனால் அவள் பார்த்திருக்கிறாள். அவன் இங்கு பள்ளிப்படிப்பு படிக்கும் போது அவள் அவனை கவனித்திருக்கிறாள். அப்போதே அவளுக்கு அவனை பிடித்திருந்தது.

அந்த பிடித்தம் சரியாக அவள் கல்லூரி படிப்பை படிக்க போவதற்கு முன்பாக விடுமுறையில் இருந்த நாட்களில் காதலாக மாறி இருந்தது. அவள் அப்போது,‌ அங்கே இருக்கும் போது அதை உணரவில்லை. ஆனால் இங்கே படிப்பிற்கென வந்த பிறகு தான் அவன் மீதான நேசத்தை உணர்ந்தாள்.‌ அதனாலேயே படித்து முடித்து விட்டு அவனிடம் தன் நேசத்தை சொல்ல வேண்டும் என்று அவள் எண்ணியிருக்க, அவள் ஊருக்கு வரும் போது வீட்டின் நிலைமையே தலைகீழாக மாறி இருந்தது. அனைத்தையும் அரசல் புரசலாக கேள்விப்பட்டவள் இதற்கெல்லாம் காரணம் தேவேஷ்வர் தான் என்பதை அறிந்து வைத்திருக்கவில்லை. அதனால் தான் அவன் எங்கே இருக்கிறான் என்ன ஏது என்று கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்து லண்டன் வந்து சேர்ந்தவள் அவனது அலுவலகத்திலேயே வேலைக்கு சேர்ந்து விட்டாள். அப்போதும் அவளால் அவன் மனதை ஜெயிக்க முடியவில்லை.
அவனுக்கென அவள் காத்திருக்கிறாள், ஆனால் அவளது நிலை இளவு காத்த கிளியின் நிலை தான்.

வெகு நாட்கள் கழித்து அந்த வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தவளாய் அந்த வீட்டு வாசலில் நின்றாள் வாணி. ஆனால் உள்ளே செல்ல ஏதோ ஒன்று தடுத்தது. அவளையும் அறியாமல் அவள் விழிகள் எதிர் வீட்டை நோட்டமிட்டது. பின்பு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவளாய் வீட்டுக்குள் நுழைய செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த மீனாட்சி அவளைப் பார்த்து விட்டு அப்படியே சிலையாக நின்றார். அவரை கவனிக்காமல் உள்ளே நுழைந்தவள், “ஆதவ்” என்று அழைத்திட, அடித்து பிடித்து தன்னறையில் இருந்து ஓடி வந்தான் அவன்.

அவனுக்குத் தான் அவளது குரல் தெரியுமே.அகிலைத் தவிர மற்ற அனைவரும் ஹாலுக்கு வந்து விட்டனர். ஆதவ்விடம்,“உங்க அண்ணன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் அவரை வரச் சொல்லு” என்றதும் அவனும் அறையில் அடைந்து கிடந்த அகிலை அழைத்து வந்தான்.

“நேத்து மலர்கிட்ட என்ன சொன்னீங்க.?”

“என்ன சொல்லணும்னு எதிர்பார்க்குற. கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆகுது இன்னும் நான் இப்படியே இருந்தா என்ன ஆகிறது. எனக்கு அப்புறம் இன்னும் பசங்க இருக்காங்க எனக்கு கல்யாணம் ஆனா தானே அவங்களுக்கு பண்ண முடியும்னு வீட்ல சொல்றாங்க. அதான் அவக்கிட்ட கடைசி முடிவைக் கேட்டேன் அவ முடியாதுன்னு சொல்லிட்ட அதான் டிவோர்ட்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டேன்.”

“அவ மனசுல நீங்க தான் இருக்க்ங்க. பைத்தியக்காரி எனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுத்துட்டு அவ வாழ்க்கையை வாழணும்னு நினைச்சிட்டு இருக்கா. அவளுக்கு தெரியல என்னோட வாழ்க்கை அஸ்தமித்து போன ஒரு வாழ்க்கை. முடிஞ்சு போன என் வாழ்க்கையை தொடங்கி வைக்க முடியாது. உங்க மனசுலையும் அவ தான் இருக்கான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. அவ மேல விருப்பம் இல்லாம யாரோட கட்டாயத்தின் பேர்ல நீங்க அவ கழுத்துல தாலி கட்டியிருக்க மாட்டீங்க. இங்கே இருந்த வரைக்கும் நான் புரிஞ்சுக்கிட்ட இதுதான். நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க, பேசுனா மாறாதது எதுவும் கிடையாது. உங்களோட ஈகோவை எல்லாம் தூக்கி போட்டுட்டு ஒன்னு சேர்ந்து வாழுற வழியைப் பாருங்க. இல்லை இன்னும் நான் உங்களுக்கு தடையா இருக்குறேன்னு நினைச்சா நான் வேணா செத்து போயிடுறேன், அதுக்கப்புறமாவது நீங்க சேர்ந்து வாழுங்க” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே ‘பளார்’ என்று கன்னத்தில் அறை விழுந்தது. அவள் நிமிர்ந்து பார்த்திட, அவள் முன்னால் பத்ரகாளியாக நின்றிருந்தாள் மலர்.

“உன்னை யாரு இங்க வரச் சொன்னது, நீ எனக்காக வந்து இவங்கக்கிட்ட வாழ்க்கை பிச்சை கேளுன்னு உன்கிட்ட நான் சொன்னனாடி”

“சொல்லல தான். ஆனா நீ இப்படி தினமும் அழுறதை என்னால பாக்க முடியாது. மனசு முழுக்க இவரோட நெனைப்பை வச்சுக்கிட்டு எனக்காக உன் வாழ்க்கையை கெடுத்துக்காதடி”

“சரி உம்பேச்சுக்கே வர்றேன். நீ ஒரு கல்யாணம் பண்ணிக்க நான் இவரோட சேர்ந்து வாழுறேன்.”

“அவ்வளவு தானே. உனக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். கல்யாணம் பண்ணிக்க மாட்டனா, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா அதுக்கப்புறம் என்னோட வாழ்க்கை எப்படி போனாலும் நீ வந்து ஏன் எதுக்குன்னு என்னை ஏதும் கேட்க கூடாது சரியா!” என்றதும் சரி என்று தலையாட்டிய மலர் அனைவரையும் நிமிர்ந்து பார்த்து,‌“உனக்கு கல்யாணம் ஆன மறு நாளே இந்த வீட்டுக்கு நான் வந்துடுறேன்” என்று சொல்லி விட்டு நகர இருந்தவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய அகில், ‌
“நான் வேணா மாப்பிள்ளை பார்க்கட்டுமா? உன் தோழியை அவமானப்படுத்துனதுக்கு பிராய்சித்தமா இருக்கும்ல” என்றிட,
“தாராளமாக பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு தன் கையை உருவிக் கொண்டவள் மலரோடு வெளியே வந்தாள்.

பெண்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை இயக்கி அங்கிருந்து நகர முற்பட்ட வேளையில் ‘அம்மா’ என்ற அலறலுடன் எதிர் வீட்டின் முன்னால் இருந்த மணல் திட்டில் இருந்து கீழே விழுந்தாள் அம்மு. அதைப் பார்த்து விட்டு வேகமாக வண்டியை நிறுத்தி விட்டு முதலில் ஓடியது வாணி தான். கீழே விழுந்துக் கிடந்த குழந்தையை எழுப்பி நிற்க வைத்து மேலே ஒட்டி இருந்த மண்ணைத் தட்டிவிட்டாள். “பார்த்து விளையாடக் கூடாதா பாப்பா. வேற எங்காவது அடிபட்ருக்கா?” என்று அக்கறையுடன் கேட்டாள்.

“அடியேதும் படல ஆண்டி” என்று சொல்லி விட்டு தன் கையில் இருந்த மண்ணைத் தட்டியவாறு நிமிர்ந்து அவளைப் பார்த்தக் குழந்தை அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டது

அவளின் அந்த நிலை வாணியை கதிகலங்க செய்ய, “என்னாச்சு பாப்பா?” என்று குழந்தையின் கன்னங்களைத் தட்டி கேட்க.

பெரிய பெரிய மூச்சுக்களாக வெளியிட்ட குழந்தை,
“அப்பா.. அப்பா.. அம்மாப்பா அம்மாப்பா அப்பா அப்பா அம்மாப்பா அம்மாப்பா” என்று கத்த அரற்ற ஆரம்பித்தது.‌ குழந்தையின் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே ஓடி வந்து விட்டார்கள். அதிலும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு வாணியைக் கண்ட தேவேஷ்வர் அப்படியே நிலை குலைந்து நின்று விட்டான்.
குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு குழந்தையை சகஜமாக முயன்று கொண்டிருந்தாள் வாணி. குழந்தையோ அதை வார்த்தைகளையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கடந்த பிறகே தன்னிலைப் பெற்ற தேவேஷ்வர் ஓடிச் சென்று குழந்தையை வாங்கி குழந்தையின் முதுகை நீவி விட்டவன்,“பாப்பா ஒண்ணும் இல்லடா இங்க பாரு, அப்பாவைப் பாரு, உனக்கு ஒண்ணும் இல்லைடா” என்று சமாதானப்படுத்த முயன்றான்.

குழந்தையும், “அப்பா அம்மாப்பா அப்பா அம்மாப்பா அம்ம சாமிகிட்ட போயிட்டாங்கன்னு சொன்னீங்க இதோ பாருங்க அம்மா நிக்கிறாங்க” என்ற குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

“இவங்க உன்னோட அம்மா தான்டா, உன்னோட அம்மா தான்டா அவங்க வந்துட்டாங்கடா அழாதீங்கடா, நீங்க அழகு பொண்ணுல்ல அழுகக் கூடாதுடா செல்லம்” என்றான்.

குழந்தையோ இன்னும் அது போலவே அரற்றி கொண்டிருக்க குழந்தையை விக்கியிடம் கொடுத்தவன், “உன்னோட பையன்கிட்ட கூட்டிட்டு போ ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் விளையாடட்டும். சீக்கிரம் கூட்டிட்டு போ” என்று சொல்ல,

அவனும் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றான்.. குழந்தை இன்னும், “அம்மா அம்மா” என்று கத்தி கொண்டேயிருக்க,

“ உன்னோட அம்மா தான்டா அவங்க உன்னோட அம்மா தான்டா, உன்கிட்டையே அவங்க வந்துட்டாங்கடா அழாத” என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்ற விக்கி சுடர்மதியை சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் இன்னும் குழந்தை சமாதானமாகாமல் இருக்க, வேகமாக உள்ளே ஓடி வந்த தேவேஷ்வர் தன் பையிலிருந்து ஒரு பாக்ஸை வெளியே எடுத்து, அதில் இருந்த சிறிய மாத்திரையை பிரித்தெடுத்து குழந்தைக்கு பாலில் கலந்து குடிக்க வைத்தான். அதைக் குடித்த சில நிமிடங்களிலேயே குழந்தை உறங்கிப் போனது.


அதன்பிறகேபெருமூச்சை விட்டவனாய் வேகமாக வாசலுக்கு வந்து பார்க்க, அங்கே மணல் குவியலின் மீது அமர்ந்து இருந்த வாணி முகத்தை முழங்காலில் புதைத்திருந்தாள். அவளருகே மலரும் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் சென்றவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளை எழுப்பி நிற்க வைத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

ஆனால் அது அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அவளோ அவனுக்கு மறுப்பு தெரிவிக்காமல் நின்றிருந்தவள், “நீங்க இன்னும் என்னை மறக்கலையா?”

“மறக்குறதுக்கு நீ யாரோ இல்ல, என் உசுரு.”

“நான்தான் அம்மான்னு சொல்லி வளர்க்குறீங்களா?” என்றாள்.

“அப்பாவா நான் இருக்கும் போது என்னோட பொண்டாட்டி தானே அம்மாவா இருக்க முடியும். என் உசுரு போற வரைக்கும் நீ மட்டும் தான் என் பொண்டாட்டி அப்படி இருக்கும் போது உன்னைத் தானே அம்மான்னு சொல்லி வளர்க்க முடியும்” என்றான். அதற்கு பிறகும் அவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகளை கேட்க அவளுக்கு தெம்பில்லை. இதற்கே உருகியிருந்தாள்.

“அப்படின்னா உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னதெல்லாம்?”

“ஆமா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அதுவும் ஒரே ஒரு தடவை, என்னோட வைஃப் பேரு மதுர வாணி” என்றான். அதைக் கேட்டு நெக்குருகிப் போனாள்.

“அப்ப அம்மு யாரோட குழந்தை அண்ணா?” என்ற விக்கியின் குரல் பின்புறமிருந்து கேட்டதும், தன் அணைப்பை தளர்த்தி, வாணியை விட்டு விலகி நின்றவன் அவளைத் தோளோடு அணைத்தவாறு, “இங்கிருந்து நான் இலண்டன் போனப்ப ஒரு வீட்டுல‌ வாடகைக்கு தங்கியிருந்தேன். பக்கத்துல ஒரு பேமிலி இருந்தாங்க. அந்த வீட்டு லேடியோட குழந்தை தான் அம்மு. அந்த லேடி குழந்தை பிறக்கும் போது இறந்துட்டாங்க.‌ அவங்க ஹஸ்பண்ட் அதுக்கப்புறம் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. குழந்தை ஹோம்ல விடணும்னு சொன்னாங்க. அதைக்கேட்டு நான் துடிச்சு போயிட்டேன். அந்த குழந்தையை பாக்க மதுர வாணி மாதிரியே இருந்தா அதான் நான் அடாப்ட் பண்ணி வளர்த்துக்கிட்டு இருக்கேன். என்னோட தனிமையை போக்கிக்கத் தான் வளர்த்தேன், ஆனா இப்ப அம்மு என்னோட உயிர் மூச்சாகி போயிட்டா”

“அப்ப எதுக்கு இவ்வளவு நாள் ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கிட்டு இருந்தீங்க?”

“என்ன என்னடா பண்ண சொல்ற, இவளுக்கு கல்யாணம் ஆகியிருக்கும், என்னை மறந்திருப்பா, அவ புருஷனோட எவ்வளவு சந்தோசமா வாழுவான்னு நெனைச்சுக்கிட்டு இங்க வராம இருந்தேன், ஆனா இப்ப, இங்க வந்து பார்த்தா எல்லாமே மாறியிருக்கு” என்று சொன்னவன் பெரு மூச்சு விட,

அவளும், “உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சு, குழந்தை இருக்குன்னு சொல்லிக்கிட்டாங்க. நீங்க சந்தோசமா இருக்கணும்னு தான் என்னைப் பத்தி எதுவும் உங்களுக்கு தெரிய கூடாதுன்னு சொல்லி வச்சுருந்தேன். கூடவே நீ எங்க இருக்கீங்கன்னும் தெரியலன்னு சொன்னதால இப்படியே வாழ முடிவு பண்ணிருந்தேன்” என்றாள் தலை குனிந்தவாறு.

“அப்பதாவுக்கு மட்டும் உடம்பு சரி இல்லாம இருந்திருந்தா நான் இங்க வராம இருந்துருப்பேன். அப்படி வராம போயிருந்தா கண்டிப்பா நீ எனக்கு கெடைச்சுருக்க மாட்ட. முதல்ல நீ எனக்கு உறவானவ, அப்புறம் என் உயிரில் கலந்தவ. உயிரான உறவாய் மாறுன உன்னைத் தேடி கண்டுபிடிச்சு சேர்றதுக்கு எனக்கு இவ்வளவு நாள் ஆயிருச்சு. என்னோட உறவின் தேடலுக்கு கடைசியா விதி நல்ல முடிவைத் தான் கொடுத்துருக்கு. நீ இல்லாத ஒரு வாழ்க்கை என்னைக்குமே எனக்கு நிறைவாய் இருக்காது மதுரா என் கூட வந்துருமா” என்றான் தன் நேசத்தை விழிகளிலும், இதழ் வார்த்தையிலும் சேர்த்து.

“அதுக்கு முறைப்படி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு இங்க இருந்து போங்க.‌ ஊரு உலகத்துக்கு உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரியாது” என்று சொன்னான் விக்கி.

அப்போதுதான் நினைவு வந்தவனாக, “ஆமா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிருச்சா, நீங்க பேசுனதை வெச்சு பார்க்கும் போது அப்படி தான் தெரியுது” என்றான். அங்கிருந்த அனைவரும் அதே வினாவை கேட்டிட, தங்களுக்குள் நடந்த முதல் சந்திப்பை தெரிவித்தான் தேவேஷ்வர். தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்துக் காட்டினாள் வாணி

‘இதை சொல்லாமலேயே இவ்வளவு நாள் தன்னுடன் இருந்துருக்கிறாளே?' என்று எண்ணி மலர் முறைக்க,
“சொல்ல வேண்டிய நேரம் வரணும்னு நான் சொல்லல.‌ அதுமட்டுமில்லாம அவர்தான் நேர்ல வந்து உண்மையை சொல்றேன்னு சொன்னாருல்ல அதான் நானும் சொல்லலை” என்றாள் வாணி, மலரை சமாதானப்படுத்தும் விதமாக.

அந்த நிமிடத்தில் அங்கிருந்து அனைவரும் ஒருவித உணர்வுக் குவியலில் இருந்தார்கள். இவர்கள் இருவரது நேசமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மறுநாள் முகூர்த்த‌ நாள் என்பதால் மீண்டும் ஒரு முறை அதே தாலியை இரு குடும்பத்தாரின் முன்னிலையில் வாணியின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு தன் மனைவியாய் ஏற்றான் தேவேஷ்வர்.

பின்பு அம்மு,‌தேவேஷ்வர், மதுரவாணி மூவரும் அந்த அம்பாளின் சன்னதி முன்பு நின்று வணங்கினார்கள். மறுபுறம் நின்றிருந்த மலரின் அருகில் வந்து உரிமையுடன் வந்து நின்றான் அகில். மலரும் அவன்புறம் திரும்பி புன்னகைத்தாள். தன் கையில் இருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்து விட்டவன்,
“இப்பவாவது சொல்லு, நீயும் என்னை விரும்புனியா?” என்று கேட்டான்.

“ நீங்க உங்களோட காதலை சொன்ன அடுத்த நாளுல இருந்து உங்களை நான் விரும்புறேன்” என்றாள் அவளும் புன்னகைத்தவாறு.

அனைவரும் அன்று தேவேஷ்வரின் வீட்டில் கூடி இருந்தனர். மறு வீட்டு சம்பிரதாயம் முடிந்து அவளை அவளது புகுந்த வீட்டில் விட வந்திருந்தனர். மீனாட்சியோ பெரும் தயக்கத்துடன் வாணியிடம் மன்னிப்பை வேண்ட,‌ அவளோ,
“கோபம்னு சொல்ல முடியாது எனக்கு ஆதங்கம் தான் இருந்துச்சா. எதையும் தீர விசாரிக்காம இப்படி நடந்துக்குறாங்களேங்குற எண்ணம் மட்டும்தான் இருந்துச்சு வேற ஒன்னும் இல்லை அத்தை. நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு அவசியம் இல்லை. அது மட்டுமில்ல உறவுகளும், சில உணர்வுகளும் சரி விட்டுக் கொடுத்து போறதாலையும், சகிப்புத்தன்மையாலும் தான் நிலையாய் நிலைச்சு நிக்கும்.

அதே போல அந்த உறவுல நம்பிக்கை இல்லைன்னா அந்த உறவு நிலைக்காம போயிடும். என்னைப் பொறுத்த வரைக்கும் இவரோட உறவு ஆயுளுக்கும் என்கூட நீண்டுருக்கும், நெருங்கியிருக்கும் ஏன்னா அவர் எப்படி என்கிட்ட பாசத்தை எதிர்பார்த்தாரோ, அதே போல நானும் அவர்கிட்ட பாசத்தை தான் எதிர்பார்த்தேன். உறவுகள் பாசத்தோடு அடிப்படையில் உருவாகி இருக்கணுமே தவிர, பணத்தோட அடிப்படையில உருவாகியிருக்கக் கூடாது.” என்றவளின் புடவையை பிடித்து இழுத்தாள் அம்முக்குட்டி.

அவளைத் தன் கரங்களில் ஏந்தியவாறு, “அம்மாவை ரொம்ப மிஸ் பண்றீங்களா செல்லம்..” என்றாள். அம்முவை தான் பெறாத பிள்ளையென்றே எண்ணினாள். அவள் வாய் ஓயாது அம்மா அம்மாவென அழைப்பது இவளுக்கு தேவகானமாக இருந்தது.

“ஆமாம்மா நீங்க இவ்ளோ நாளா ஏன் என்னைப் பாக்க வரல.?”

“என்னம்மா பண்றது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை சொன்னாங்க, அப்ப உன்னை பாக்க வந்தா உனக்கும் சரியில்லாம போகும் தானே, அதான் வரல” என்றவள் பிள்ளையை சமாதானப்படுத்தும் விதமாக அவளை
அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “இதுக்கு மேல அம்மா உன்கூட தான் இருப்பேன். நாம அங்க இருந்தாலும் சரி, இந்த ஊர்ல இருந்தாலும் சரி நான் உன்கூட தான் இருப்பேன்.” என்றாள்.

“இல்லை எந்த பிளேசே நல்லா இருக்கு நாம இங்கேயே இருக்கலாம், அங்க வேணாம் அங்க ஒரே போர்” என்ற குழந்தையின் விருப்பத்திற்கு இணங்கி இருவரும் இங்கேயே இருக்க சம்மதித்தனர்.

அதுமட்டுமின்றி லண்டனுக்கு அழைத்து தன் நண்பன் விஷ்வாவிடம் அனைத்து விவரங்களையும் சொன்னான்.‌ அதைக் கேட்டு விட்டு அடுத்த பிளைட்டிலேயே இங்கே வந்த விஷ்வா வீட்டிற்குள் நுழையும் போது நிலை‌ தடுக்கி கீழே விழ சென்றவன், எங்கோ வெளியே செல்ல கிளம்பி கொண்டிருந்த எழிலரசியை இடித்துவிட்டான். அதில் இருவரும் சேர்ந்து கீழே விழுந்து எழுந்து நின்றனர்.‌

எழிலோ‌அவனை முறைக்க, அவனும், “ஹாய் பேபி ஹொவ் ஆர் யூ” என்றான் புன்னகையோடு.‌ அதன் பிறகு என்ன விஷ்வா இடறி எழிலிடம் காதலில் விழ, அவனது விருப்பத்திற்கிணங்க மறுத்தாள் அவள்.‌ அங்கிருந்த நாட்களெல்லாம் எழிலை அவன் சுற்றி வருவதை கண்டு தானே முன்வந்து தன் தங்கையை தன் நண்பனுக்கு திருமணம் செய்து வைத்தான் தேவேஷ்வர். அவளது குறையை பெரிதாக எண்ணாமல் அவரது அன்பில் நித்தமும் நனைந்துக் கொண்டிருந்தான் விஷ்வா. ஆஷ்விதா இப்போதெல்லாம் அவனை பார்க்க கூட வருவதில்லை. வந்தாலும் உடனே இங்கிருந்து சென்று விடுவாள். உறவு முறை மாறியதால் அவனை பார்க்கவே சங்கோஜப்பட்டாள். ஆனால் அப்போதும் இப்போதும் எப்போதும் தேவேஷ்வரின் உயிரான உறவும் சரி, உணர்வால் இணைந்த உள்ளமும் சரி மதுர வாணி ஒருவளுக்கே!
 
Last edited:

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் - எபிலாக்..


விடிய விடிய மழை பெய்த காரணத்தால் வீதியெங்கும் மழை நீர் நிரம்பி வழிந்தது. மழை பெய்த காரணத்தால் பவர் வேறு கட்டாகியிருக்க, அந்த ஊரே நிசப்தமாக இருந்தது. அதிகாலை வேளை என்பதால் அனைவரும் விழித்து விட்டிருந்தனர்.

மடமடவென்று ஒடிந்து சரியும் மரக்கிளையின் சத்தத்தைப் போல் ஓயாது சத்தமாக அலை பேசி ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது அந்த வீட்டில்.

சமையல் அறையில் பரபரப்பாக சமைத்துக் கொண்டிருந்த அவள் திட்டிக்கொண்டே ஓடிச்சென்று அலைபேசியை எடுத்து,‌ அழைப்பை ஏற்று காதில் பொறுத்தியவள்,“ஹலோ..” என்றது தான் தாமதம் எதிர்புறம் இருந்த அவனோ படபடவென பொறிய ஆரம்பித்தான்.

“இன்னும் எத்தனை நாள் தான் உங்க அத்தை வீட்ல இருப்ப, என்னையும் உன் பொண்ணையும் உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று அநியாயத்துக்கு குரலில் கோபத்தை காட்ட முயன்று தோற்று கெஞ்சும் குரலில் கேட்டு வைத்தான் தேவேஷ்வர்.

அழைப்பை ஏற்றிருந்த வாணியோ, “அதெல்லாம் வர முடியாது நீங்களும் உங்க பொண்ணும் தனியாகவே சோறு சமைச்சு சாப்பிட்டுக்கங்க, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அப்படி தானே இருந்தீங்க, இப்ப மட்டும் என்னவாம்.”

“மதுரா முடியலம்மா அப்படி பேசாத, அந்த நாட்களெல்லாம் எனக்கு நரகம் தான் மா..” என்று அவன் சோக கீதம் வாசிக்க,

“சரி சரி.. அதுக்குன்னு சோகமா பேசாதீங்க, பொண்ணு அழ போறா. நான் உங்கக்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன், ஆதவ்வுக்கு கல்யாணம் இருக்குது, கல்யாணம் முடிஞ்சதும் அவங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்பி வெச்சு விட்டு இங்க ரெண்டு நாள் இருந்துட்டு தான் வருவேன்னு சொன்னனா இல்லையா. நீங்கதானே வீம்பு பிடிச்சுக்கிட்டு லண்டன்லையே இருந்தீங்க முக்கியமான மீட்டிங் வர முடியாதுன்னு நீங்க தானே சொன்னீங்க, இப்ப எனக்கு போன் பண்ணி இப்படி கத்துனா என்ன அர்த்தம்?” என்றாள் கோபமாக.

“இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன். அம்மு உன்னை கேட்டுக்கிட்டே இருக்கா, நீ எப்ப வருவ, எனக்கு உன்னை பாக்கணும்,‌ இப்ப கிளம்பி வரப்போறியா இல்லையா?” என்று அவனும் குரலில் கோபத்தை காட்ட முயன்றான்.

“ஓஓ. சாருக்கு கோபமெல்லாம் வருதா. எம்மேல கோபப்பட்டுட்டீங்கல்ல இதுக்கு நீங்க அனுபவிக்க போறீங்க. வளைகாப்பு போட்ட கையோட நான் இங்க எங்க அத்தை வீட்டிலையே இருந்துடுறேன். அப்புறம் குழந்தை பிறந்ததும் ஆறு மாசம் கழிச்சு தான் வருவேன், அதுவும் வரணும் தோணுனா தான் வருவேன் எப்படி வசதி” என்றாள் அவனை வெறுப்பேற்றுவதற்காகவே.
ஏனெனில் தினமும் அவனுக்கு இவளது அணைப்பு வேணும், வாசம் வேணும், சிரிப்பு வேணும், அளில்லாமல் அவன் தனியாக இருப்பதே பெரிய விஷயம் தான்.

ஆம் இப்போது வாணி ஆறு மாத கருவை சுமந்து கொண்டிருக்கிறாள். ஆதவுக்கு அவன் நேசித்த பெண்ணான, ‌சுவாதீனாவையே மணம் செய்து வைக்க,‌மொத்த குடும்பத்தில் இருந்தவர்களிடமும் பர்மிஷன் வாங்கியது வாணி தான்.

சுவாதீனா உடனான உறவு சாதாரண நட்பில் ஆரம்பித்து பின்பு செல்போன் சாட்டிங்கில் தொடர்ந்து.‌போன் கால், வீடியோ கால் வரை சென்று இறுதியில் அளவிட முடியாத நேசத்தில் முடிந்திருந்தது. ஆதவ் சுவாதீனாவை நேசிக்க ஆரம்பித்தும் முதலில் அவன் தேடி வந்தது வாணியைத்தான்.‌

அன்றைய நிகழ்வுக்குப் பிறகும் பெரிதாக வாணி அவனிடம் பேச முற்படவில்லை. ஆனால் அவனை முன்பு போல் ஒதுக்கி வைக்காமல் ஓரிரு வார்த்தைகள் பேசுவாள். இவனிடம் மட்டும் இல்லை,‌ அவளது அத்தை குடும்பத்தினர் எல்லாரிடமும் ஒரு ஒதுக்கத்துடன் தான் இருந்தாள். ஆனால் வாணியின் தாய், தந்தை, அண்ணன் இறந்து போன தினத்தன்று அவர்களுக்கு திதி கொடுத்ததோடு மட்டுமின்றி அவர்களுக்கு சாமி கும்பிடவும் ஏற்பாடு செய்தார் மீனாட்சி. அதிலேயே அவர் மனம் மாறி விட்டதை அறிந்து, அதன் பின்பே மெல்ல மெல்ல இவர்கள் அனைவரிடமும் சகஜமாக பேச முயன்றாள் வாணி. அதிலும் இரு வருடங்கள் கழித்து அவள் கருத்தரித்து இருந்ததை தெரிந்து அனைவரும் அவளைப் பார்க்க இலண்டனே வந்து விட்டார்கள். அதிலிருந்து தான் அவர்களுடன் இருந்த உறவை சற்று நெருக்கமாக மாற்றிக் கொண்டாள்.

ஆதவ் தன் நேசத்தைப் பற்றி சொன்னதும் அப்பெண்ணை பற்றி விசாரித்து விட்டு அதன் பிறகே வீட்டில் பேசினாள் வாணி. எந்த வித கெட்டப்பேரும் இல்லாமல் கல்லூரியை முடித்து விட்டு, அவனும் நல்லபடியாக கம்பெனியை பார்த்துக் கொள்ளவதோடு, இத்தனை வருடமாக சுவாதீனாவையே நேசித்து கொண்டிருப்பதால் அவளும் அவனுக்கு உதவி செய்ய சம்மதித்தாள். பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்களது காதல், திருமணத்தில் முடிந்தது.

“இன்னும் ஒரு மாசம் இங்கே இரு‍, வளைகாப்பு முடிஞ்சு, குழந்தை பிறந்ததும் ஒரு அம்மா ஸ்தானத்துல இருந்து என் கடமையை நான் செய்யறேன், அதுக்கப்புறம் நீ லண்டன் போலாம்” என்று சொல்லி மீனாட்சி அவளை இங்கேயே இருக்க வைத்துவிட்டார். அம்மா ஸ்தானம் என்றதும் வாணியும் தன்னை மறந்து, தன்னவனை மறந்து தலையாட்டி விட்டாள். ஆனால் இப்போது அவளால் அவனை விட்டுட்டு இருக்க முடியவில்லை. மெல்ல அவரிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் பெற்று ஊருக்கு சென்று விடலாம் என்று தான் அவருக்குப் பிடித்ததை சமைத்துக் கொண்டிருக்கிறாள் வாணி.

அப்போதுதான் தன் அறையில் இருந்து கீழே இறங்கி வந்த மலர்,
“எனக்கு காபி கொடுடி” என்றாள்.

வாணியும் காபி போட்டுக்கொடுத்து, “இப்ப எப்படி இருக்கு, இன்னும் என்ன வாமிட்டிங் சென்சேஷன் இருக்குதா.?” என்று பரிவுடன் கேட்டாள்.

“எப்படி இருக்கும் மூணு மாசம் தானே ஆகுது அதான் இப்படி டயர்டா இருக்கு போல. ஆனா ஒன்னு நீ எப்படி இதெல்லாம் தாங்கிக்கிட்ட என்னால முடியலடி ஒரே வாமிட்டிங்கா வருது, தலை வேற சுத்துது” என்றவள் சொன்ன போது அவள் தலையை ஒரு கரம் இதமாக அழுத்தி விட்டது. தொடுதலிலேயே அது யார் என்பதை புரிந்து கொண்டவள் காபியை குடித்து விட்டு தன் அருகில் நின்றவனின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து அங்கிருந்து விலகி வெளியே வந்துவிட்டாள் வாணி.

தன் நெஞ்சில் சாய்ந்திருந்த தன் மனைவியின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்த அகிலோ, “ஹாஸ்பிடல் போயிட்டு வரலாமா மலர்?” என்றான்.

“இல்ல பரவால்லங்க கன்சீவ்வா இருக்கும் போது இந்த மாதிரி இருக்குறது நார்மல் தான்னு டாக்டர் சொல்லி இருக்காங்க, நீங்க பயப்படாம ஆபீஸ் போங்க” என்றாள்.

“நீ இப்படி இருக்கும் போது என்னால எப்படி ஆபீஸ் போய் ஒர்க் பண்ண முடியும். நான் இன்னைக்கு ஆபீஸ் போகல வீட்ல இருந்து உன்னை பார்த்துக்குறேன்..”

“இப்படி சொல்லி சொல்லி தான் எல்லா வேலையும் இவ்வளவு நாளா ஆதவ் மாமா தலையிலையும், புகழேந்தி மாமா தலையிலையும் கட்டிட்டு இருந்தீங்க. இப்ப அவங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் முடிஞ்சிருச்சு, அவங்களுக்குன்னு ஒரு ஃபேமிலி லைஃப் இருக்கு, அவங்கவங்க மனைவிக்குன்னு அவங்க டைம் ஸ்பென்ட் பண்ண நெனைப்பாங்க இல்லையா, அதனால நீங்க இப்போ வேலைக்கு போங்க” என்று சொல்லி அதட்டி மிரட்டி அவனை வேலைக்கு அனுப்பி வைத்தாள்.

முன்பு அகிலைக் கண்டு பயந்தவர்கள் எல்லாம் இப்போது அவனைக் கண்டு வாய்ப்பொத்தி சிரிக்கும் நிலைக்கு மாறியிருந்தான் அகில் பிரசாத். இன்னும் சொல்லப்போனால் மலரை அவன் நேசிக்க ஆரம்பித்ததிலிருந்தே அவனது மாற்றம் துவங்கியிருக்க, இப்போது முழுதாக அவளது காதல் கணவனாகவே மாறி இருந்தான். எதற்கெடுத்தாலும் கோபப்படுபவன், இப்போதெல்லாம் அமைதியாக இருக்க பழகிக் கொண்டான்.

ஆதிவிநாயகம், பூங்கோதை நாச்சியார் இருவரும் ஹாலில் அமர்ந்து இக்காட்சிகளை ஒரு வித நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் கீழே இறங்கி வந்த மீனாட்சி ஏதோ‌ யோசனையில் நின்றிருந்த வாணியின் அருகில் வந்து அவள் தலையை வருடிக் கொடுத்தவாறு, “என் பையன் போன் பண்ணுனானா?” என்றார்.

அதேநேரம், “உங்க பையன் போன் பண்ணுனது மட்டும் இல்ல உடனே உங்க மருமகளை எப்படியாவது லண்டன் அனுப்பி வைங்கன்னு எங்கக்கூட சண்டை போட்டு எங்களையும் வலுக்கட்டாயமா இங்க அனுப்பி வெச்சுருக்கான்” என்று சொன்னவாறு உள்ளே வந்தார் சிவசுப்பிரமணியம். அவரைத் தொடர்ந்து அஞ்சலை அவரது இரண்டாவது மகன் விக்னேஷ்வர், அவரது மனைவி பிரகதி, மகன் சத்யதேவ் என மற்றவர்களும் உள்ளே வந்தார்கள்.

“வாங்க வாங்க” என்று சொல்லி அவர்களை வரவேற்ற மீனாட்சி,
“அவரு சொல்றது புரியுது சம்மந்தி. ஆனா பயமா இருக்கே,. வாயும் வயிறா இருக்குற பொண்ணை அவ்வளவு தூரம் அனுப்பி வச்சிட்டு நாம எப்படி சம்பந்தி இங்க நிம்மதியா இருக்க முடியும். நம்ம எழிலையும் கூட இப்ப தானே அனுப்பி வெச்சோம். அது மாதிரி வாணியை பார்த்துக்க வேணாமா, அதான் ஆறு மாசம் ஆயிடுச்சுல்ல வளைகாப்பு போட்டு இங்கையே வைச்சுக்கலாம் குழந்தை பிறந்ததும் அதுக்கப்புறம் அனுப்பி வைக்கலாமே!” என்றார்.

“அதெல்லாம் முடியாது இப்பவே அவளை அனுப்பி வைக்க சொல்லுங்கப்பா. இல்லேன்னா நான் அங்க கிளம்பி வந்துருவேன், நானும் கிளம்பி வந்துட்டா இங்க ஆபீஸை யாரு பாத்துக்குவா. எழிலுக்கும குழந்தை பிறந்து 4 மாசம்தான் ஆகுது,‌ அதனால தான் விஷ்வா வேலைக்கு வர்றது கிடையாது.‌ நான் தான் எல்லாத்தையும் பாக்குறேன். இதெல்லாம் சரிபட்டு வராது எழிலை மறுபடியும் நான் அங்க அனுப்பி வைக்கிறேன் நீங்க பார்த்துக்கோங்க,விஷ்வா ஆபீஸை பார்த்துக்கட்டும், என் பொண்டாட்டியை ஊருக்கு அனுப்பி வைங்க நான் அவளை பத்திரமா பார்த்துக்கிறேன். இது தான் ஃபைனல், மொதல்ல என் பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பி வைக்கிற வழியைப் பாருங்க. உங்க பொண்டாட்டியை விட்டு பிரிச்சு இருந்து பாருங்க, அப்ப தெரியும் என்னோட தவிப்பு என்னன்னு” என்று சிவசுப்பிரமணியம் காதில் வைத்திருந்த போனில் கத்திக் கொண்டிருந்தான் தேவேஷ்வர்.

அவன் பேச ஆரம்பித்த போதே போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டார், ஆதலால் அனைவரும் அவன் பேசியதைக் கேட்டு சிரித்தனர். வாணியோ அதைக் கேட்டு தலை தலையாக அடித்துக் கொண்டு, போனை வாங்கி ஸ்பீக்கரை அனைத்தவள், “இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை, நான் வரணும் அவ்வளவுதானே. சரி விடுங்க நான் உடனே கிளம்புறேன். ஆனா நீங்க ஏன் தான் இப்படி அடம் பிடிக்கிறீங்கன்னு எனக்கு தெரிய மாட்டேங்குது. சின்ன குழந்தை பரவால்ல போல, நீங்க அதைவிட மோசமா நடந்துக்குறீங்க. அம்மு எவ்வளவு சமத்தா இருக்கா ஆனா நீங்க என்னடான்னா இப்படி பண்றீங்க உங்களை எல்லாம் என்ன செய்யறதுன்னே தெரியல” என்று அவள் திட்டிகொண்டு இருக்கும் போதே, “என்ன செய்வ, டைட்டா ஹக் பண்ணி, ஸ்ட்ராங்கா ஒரு லிப்லாக் குடுப்பியா, இல்ல வேற எதாவது ஸ்பெஷலா கிடைக்குமா” என்று சொன்னவாறு வீட்டிற்குள் நுழைந்திருந்தான் தேவேஷ்வர்.

அவனது வார்த்தைகளைக் கேட்டு அந்திவானமாய் சிவந்தது வாணியின் முகம். அதை பார்த்த அனைவரும் சிரித்தனர். எதேச்சையா வாசலைப் பார்த்த மீனாட்சி, “அடடே வா வா மகனே” என்றதும் தான் மற்றவர்களும் தேவேஷ்வரைப் பார்த்தனர்.

இவ்வளவு நேரம் அவன் இலண்டனில் இருந்து அலைபேசியில் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று அனைவரும் எண்ணியிருக்க அவனோ இவ்வளவு நேரம் வீட்டிற்கு வெளியில் நின்று பேசிக் கொண்டு இருந்திருக்கிறான் என்பது அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது.

இவனது வருகை அங்கிருந்த அனைவருக்கும் ஒரு வித மகிழ்வைக் கொடுத்தது. ஏனெனில் வாணியை விட்டு ஒரு வாரம் கூட பிரிந்திருக்க முடியாமல் இலண்டனிலிருந்து ஓடோடி வந்த அவனின் நேசம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, ஏற்கனவே அவனது தேசத்தின் ஆழத்தை பார்த்தவர்கள் தானே. இப்போதும் அனைவரும் புன்சிரிப்போடு தான் அவனைப் பார்த்தார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் ஆதவ்வுக்கும், சுவாதீனாவுக்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர்களைப் பத்துநாள் ஹனிமூனுக்கு தன் செலவில் அனுப்பி வைத்திருந்தாள் வாணி. இன்று எப்படியாவது மீனாட்சியிடம் பர்மிஷன் கேட்ட நாளைக்கு ஊருக்கு சென்று விடலாம் என்று தான் நினைத்திருந்தாள்,‌ அவளுக்கு‌ மட்டும் அவனை பிரிந்திருக்க ஆசையா என்ன, ஆனால் அதற்குள் இந்த ஒருவார பிரிவையே தாங்கிக் கொள்ள முடியாமல் தன் கணவன் இப்படி திடீரென்று கிளம்பி வருவான் என்று அவள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

தந்தையை விட்டு கீழே இறங்கி ஓடி சென்று வாணியின் அருகில் நின்ற அம்மு, “நம்ம இலண்டனுக்கு போக வேண்டாம், இங்கையே இருக்கலாம்னு தானே நான் சொன்னேன். ஆனா நீங்க தான் எழில் அத்தை பாப்பாவை வயித்துல வச்சுருக்காங்க, அதனால விஷ்வா மாமா வேலைக்கு போறது கஷ்டமா இருக்குன்னு சொல்லி அப்பா முதல்ல ஊருக்கு போனாரு,‌ கொஞ்ச நாள்ல நாமளும் அங்க போனோம். அங்க போனதும் என்ன ஆச்சுன்னு தெரியல திடீர்னு உங்க வயித்துல ஒரு பாப்பா வந்துருச்சு, சரின்னு அங்கையே இருந்துருக்கலாம். அதை விட்டுட்டு மறுபடியும் அங்க இங்கன்னு அலைய வச்சுக்கிட்டு இருக்கீங்க நான் என்னோட ஃப்ரெண்ட்ஸ்ஸை எல்லாம் எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா. அதுவும் ராகுலை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றாள் அந்த குழந்தை.

குழந்தையை தூக்கிய வாணி, “அம்மா வயித்துல இருக்குற குட்டி தம்பியோ, குட்டி பாப்பாவோ சீக்கிரம் வெளி வந்துருவாங்க அதுக்கப்புறம் நாம அங்கையே போய் இருக்கலாம். ஏன்னா இங்க இருக்குறதை பார்த்துக்குறதுக்கு எல்லாரும் இருக்காங்க, ஆனா இலண்டன்ல இருக்குறார்ல உங்க விஷ்வா மாமா, அவருக்கு தனியா வேலை செய்ய கஷ்டமா இருக்கும்ல அப்பா போனா ஹெல்ப்பா இருக்கும்ல, அதனால நாம அங்கையே போகலாம் சரியா!” என்றாள்.

அவளது ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் சரி சரி என்று தலையை ஆட்டியது அக்குழந்தை மட்டுமல்ல அங்கிருந்த மற்றவர்களும் தான். அன்பால் ஒரு குடும்பத்தையே கட்டிப்போட்டு வைத்திருந்தாள் வாணி.

இருக்கையை விட்டு தளர்வுடன் எழுந்து அவள் அருகில் வந்த ஆதி விநாயகம், பூங்கோதை நாச்சியார் இருவரும் அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து,
“உன்ன மாதிரி ஒரு பொண்ணு உறவா அமைஞ்சுட்டா அந்த குடும்பம் ரொம்ப கொடுத்து வச்ச குடும்பம்மா. நீ வர்றதுக்கு முன்னாடி இந்த குடும்பம் வேற மாதிரி இருந்துச்சு, ஆனா நீ வந்ததுக்கு அப்புறம் இந்த குடும்பம் ரொம்ப மாறிடுச்சு,‌ ரொம்ப அழகா மாறிடுச்சும்மா. உறவுகளுக்கிடையே
விட்டுக்கொடுத்து போகணும், குடும்பத்துக்குள்ள எப்படியெல்லாம் இருக்கணுங்குறதை நீ வந்து தான்மா புரிய வச்சுருக்க. இதுதான் விதியா விதிச்சுருக்கு போல, நீ கெடச்சது எங்க அதிர்ஷ்டம் தான்மா. அதே மாதிரி உங்களுக்குள்ள இருக்குற இந்த அன்யோன்யமும், அன்பும் என்னைக்கும் இதே மாதிரி இருக்கணும் அதுக்கு எங்களோட ஆசீர்வாதங்கள்” என்றார்கள். பின்பு தம்பதிகள் ஒவ்வொருவராக அவர்கள் பாதம் தொட்டு வணங்கினார்கள். ஆஷ்விதா வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்து கொண்டு அப்ராடில் வசிக்கிறாள்.

அடுத்த மாதத்தில் இருவருக்கும் சதாபிஷேகம் செய்து வைப்பது பற்றி பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்க, வாணியை நைசாக அவள் அறைக்கு அழைத்துச் சென்ற தேவேஷ்வர் அவளது எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அணைத்து விடுவித்தவன், “இதுக்கு மேல என்னை விட்டுட்டு இருக்கணும்னு முடிவு பண்ணுன உன்னைக் கொன்னுட்டு, நானும் செத்துப்போயிருவேன் ஞாபகம் வச்சுக்கோ. இங்க விட்டுட்டு போறதுக்கா உன்னைக் கல்யாணம் பண்ணுனேன். இங்க விட்டுட்டு போறதுக்கா தேடி தேடி உன் பின்னாடி ஓடி வந்தேன். இதுக்கு மேல உன்னை விட்டுட்டு இருக்க முடியாது, மரியாதையா என்கூட கிளம்பி வா இல்லைன்னா நானும் இங்கையே உன்கூடவே இருக்குறேன்” என்று சிணுங்கலுடன் சொல்லி முரண்டு பிடித்தவனை மாறாத காதலுடனும், அளவில்லாத அன்புடனும் அணைத்துக் கொண்டாள் வாணி. அவள் அணைப்பில்,‌ அன்பில் சுகமாய் கரைந்தான் தேவேஷ்வர்.


நேசம் ஒரு வகை போதை தான். அந்த போதை ஒரு போதும் தீருவதில்லை.

காதலும் ஒருவகை தேடல் தான். அத்தேடல் அன்பிற்கான தேடலாய் இருக்கும் வரை அத்தேடலுக்கு நல்ல பெயரும், நல்ல மதிப்பும் உண்டு.
அதே அத்தேடலின் அர்த்தம் மாறுகையில், அத்தேடல் உணர்வின் இச்சைக்கானதாய் மாறுகையில் அதன் பெரும் மாறுபடுகிறது..


இவர்களது அன்பிற்கான உறவின் தேடல் இவர்களுக்கு இன்பத்தை மட்டும் வாரி வழங்க வேண்டும். துன்பத்தை சிறிதாக குறைத்து இன்பத்தை நிறைவாக கொடுக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன் நாமும் விடை பெறுவோம்.

நேசத்திற்காக
உயிரை கொடுப்பது
ஒருவித காதலென்றால்..!
நேசித்தவளுக்காக தன் நேசத்தை கொடுப்பதும்
ஒரு வித காதல் தான்…

‌‌- உறவின் தேடல் மகிழ்வுடன் தொடரட்டும்…
அன்புடன் ரம்யா சந்திரன்...
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom