Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

Status
Not open for further replies.
உறவின் தேடல் -13.2

கூடவே வாணியின் சொந்த வீட்டை வாங்கியிருந்தவர்கள் அவர்கள் உபயோகித்தவற்றை மொட்டை மாடியில் இருந்த ஒரு அறையில் போட்டு வைத்திருந்தனர். ஆதி விநாயகம் அவர்களது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அழைத்து, அவற்றையெல்லாம் கொண்டு சென்று பள்ளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரிடம் ஒப்படைக்க சொல்லி இருந்தார்.
இதையும் கூட தாங்கள் தான் செய்ததாக அவளது பள்ளி ஆசிரியர்கள் மீனாட்சியிடம் சொன்னார்கள்.‌ வேண்டாமென்று மறுத்தவளை வற்புறுத்தி வாங்க வைத்தார்கள். அதிலும் மீனாட்சி மறுக்க முடியாத அளவிற்கு அவர்களது செயல்கள் இருந்ததால் வாணியும் அனைத்தையும் வாங்கிக் கொண்டாள். மூன்று லெதர் பைகளும், அவளது கரடி பொம்மை, அவளுக்கு மிகவும் பிடித்த பிள்ளையார் சிலை, சில அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மூட்டை என‌ அனைத்தும் காரில் ஏற்றப்பட்டது. மீனாட்சியால் எதையும் மறுத்து பேச‌ முடியவில்லை.‌
காரில் வரும் போது மீனாட்சிக்கு ஒரு விஷயம்தான் உறுத்திக் கொண்டே இருந்தது. 'அனைவரிடமும் அவள் சாதாரணமாக பேசினாள், தங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே, ஏன்' என்ற கேள்வி அவரை உறுத்திக் கொண்டே இருக்க வரும் வழியில் டீ குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினான் அகில். அப்போது அந்த கேள்வியை வாணியிடம் கேட்டு வைத்தார் மீனாட்சி.
“ஏன்டி நான் தான் உன்னை கொடுமைப் படுத்துறேன்னு எல்லாரும் சொல்றாங்களே, அதை ஏன் நீ யார்கிட்டயும் சொல்லலை.‌ சொல்லியிருந்தா மறுபடியும் உன்னை எங்களோட அனுப்பி வச்சுருக்க மாட்டாங்கல்ல.”
“உங்களோட வராம நான் வேற எங்க மேடம் போறது. எனக்குத்தான் சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லையே. இந்த உலகத்துல தனியாளா கண்டிப்பா வாழமுடியாது. யாரையாவது சார்ந்து வாழ்ந்தா தான் பாதுகாப்பும் நிம்மதியும் கிடைக்கும். இப்ப வரைக்கும் எனக்கு பாதுகாப்பா நீங்க இருக்கீங்க,‌ தங்க இடம் குடுத்துருக்கீங்க அது வரைக்கும் எனக்கு போதும். பாதுகாப்பா இருக்கணும்னு சொல்லித்தானே எங்க அப்பா உங்கக்கிட்ட என்னை நம்பி விட்டுட்டு போனாரு, அதனால தான் என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் நான் இங்கிருந்து போக மாட்டேன் மேடம்” என்று சொல்லி விட்டு அவள் அமைதியாகிவிட.‌ மீனாட்சிக்குத் தான் ஏதோ சுருக்கென்று உள்ளுக்குள் தைத்தது. அவளுக்கு நாம் கொடுமை செய்த போதும், அநீதி இழைத்த போதும், கேவலமாக நடத்திய போதுமே, அதை எல்லாம் மறந்து என்னை தியாகி‌ போல் நினைக்கிறாளே' என்று யோசித்தவருக்கு மனதுக்குள் ஏதோ இடறியது.‌ அவள் சொன்ன வார்த்தை அவரை சற்று அசைத்துப் பார்த்தது. அதன் பிறகு அவர் அவளிடம் எதுவும் கேட்கவில்லை அகில் வந்து காரை எடுத்ததும் இருவரும் அமைதியாகி விட்டனர்...
மீண்டும் ஒரு மணி நேரம் சென்றிருந்த நிலையில் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.‌ முதலில் இறங்கிய மீனாட்சி விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட, தன் திங்ஸ் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த வாணியை தடுத்து நிறுத்தினான் அகில்.
“நில்லு” என்றான் அதிகாரமாய்.
முதல் முறை அவனே அழைத்துப் பேசுகிறான் என்றதும் பதற்றத்துடன் அவன் புறம் திரும்பியவள் என்னவென்று நினைப்பது என புரியாமல்,“என்னங்க சார்” என்றே கேட்டிருந்தாள்.
“ஒஒ.. இப்ப மட்டும் சார், ஆனா அங்க மட்டும் வேற மாதிரி சொல்றது, என்ன நடிக்கிறியா.‌ ‌உன்னோட பிரண்ட்ஸ்கிட்ட நீ என்ன சொன்னன்னு நானும் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்” என்றதும் வாணிக்கு பயத்தில் கிடுகிடுவென்று கை, கால்கள் ஆட ஆரம்பித்தது.
பயத்துடனே, “நான்...நான் தப்பா எதுவும் சொல்லலைங்களே சார்?” என்றாள்.‌ அடுத்த கணம் அவளை அடிப்பதற்கு கையை ஓங்கியவன் தாங்கள் வெளியே நிற்பதை உணர்ந்து கையை கீழே இறக்கி ஒரு உதறு உதறிக் கொண்டவனாய் அடங்காத கோபத்தோடு, “என்ன நடிக்கிறியா, சொல்லுடி நடிக்கிறியாங்குறேன். இங்கே நல்லவ மாதிரி சார் மோருங்க வேண்டியது. அங்க உன் பிரெண்ட்ஸ் கிட்ட, எங்களை கைக்காட்டி அவங்க என்னோட அத்தை, இவர் என்னோட அத்தான் அப்படின்னு சொல்ற‍, என்ன உறவுமுறையைச் சொல்லி மயக்கி கைக்குள்ள போட்டுக்கலாம்னு பாக்குறியா?” என்றதும் அவள் முகம் வெளிறியது...
கையில் இருந்தவற்றை கீழே வைத்தவள் அவன் முன்பு கைகூப்பிய நிலையில் நின்றவாறு,“மன்னிச்சிடுங்க சார், இல்லை இல்லை மன்னிச்சுடுங்க முதலாளி ஏதோ தெரியாத்தனமா சொல்லிட்டேன்.‌ அந்த இடத்துல நீங்க ரெண்டு பேரும் என்னோட முதலாளி, நான் உங்க வீட்ல வேலை செய்யிற வேலைக்காரின்னு சொன்னா நான் இங்க வேலைக்காரியா இருக்கேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடும், அப்புறம் மறுபடியும் அதை வெச்சு வேற ஏதாவது பிரச்சினை வந்தா என்ன பண்றதுன்னு தான், அப்படி சொல்லலைங்க முதலாளி இல்லேன்னா, இது மாதிரி சொந்த உறவுகள்னு சொல்லியிருக்க மாட்டேன். மன்னிச்சிடுங்க இனிமே எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சரி நான் இதையே சொல்லிடுறேன், தயவு செஞ்சு இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க..” என்றவள் தன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கீழே விழுவதைக் கூட பொருட்படுத்தாமல் இறக்கி வைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அகிலோ அவள் பேசியதைக் கேட்டு சிறிதும் மனம் இளகவில்லை.‌ அலட்சியமாகக் தோளைக் குலுக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டான். ஆனால் அவர்கள் பேசுவதை எதேச்சையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ஜீவனின் விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்தோடியது.
‘பணம் இருந்தால் மனிதர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களோ, சொந்தங்களுக்கு கூட மதிப்புக் கொடுக்க மாட்டாங்களா, எல்லாத்தையும் பணத்தோட அடிப்படையில தான் நிர்ணயம் செய்வாங்களா’என்று நினைத்த அந்த விழிகளுக்கு சொந்தக்காரரோ, “இந்த பொண்ணுக்கு என்ன தலையெழுத்தோ, இங்க வந்து கஷ்டப்படுது” என்று புலம்பிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தது. ஆனால் வாணியின் கஷ்டத்திற்கு விடிவு காலம் வரும், அதுவும் தன்னால் தான் வரும் என்பதை அந்த உருவம் நினைத்துக்கூட பார்த்திருக்காது.
அன்றைய நாள் அவ்வாறே கழிந்தது. மறுநாள் விடியலில் ஆதி விநாயகம், பூங்கோதை நாச்சியார் இருவருமே சேர்ந்து, “நாங்களே இவளை கல்லூரியில கொண்டு போயி சேர்த்துட்டு வந்துடுறோம். ஏன்னா வீணா உனக்கு அலைச்சல், இன்னைக்கும் நீ சிரமப்பட வேண்டாம்மா, இதை நாங்களே செஞ்சுடுறோம்” என்று சொன்னதும் மீனாட்சியும் தனக்கு அதிக வேலை இருப்பதால் சரியென்று சொல்லி விட்டார்..
முக்கியமான மீட்டிங் இருப்பதால் அகிலும் வரவில்லை என்று சொல்லி விட்டான்.‌ அன்று கல்லூரிக்கு தன் பைக்கில் செல்லாமல் காரை எடுத்தான் ஆதவ்.‌ முன்பக்கம் தாத்தா ஏறிக்கொள்ள பின்பக்கம் பூங்கோதை நாச்சியாரும் வாணியும் ஏறி அமர்ந்ததும் கார் கரூரை நோக்கி கிளம்பியது.
கொடுமுடியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கரூர்.‌ கரூரில் இருக்கும் கலைக்கல்லூரியில் தான் ஆதவ் படித்து கொண்டிருக்கிறான்.‌ ஏனோ மற்ற பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்க அவனுக்கு விருப்பமில்லை. எப்படியும் படித்து முடித்ததும் தந்தையோ, அண்ணனோ பார்த்துக் கொண்டிருக்கும் தொழிலைத்தான் தலையில் கட்டப் போகிறார்கள் அதற்கு எதற்கு தேவையில்லாமல் பொறியியல் பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்து லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க வேண்டும் என்பதாலேயே மேனேஜ்மென்ட் குரூப்பை தேர்வு செய்து படித்துக் கொண்டிருக்கிறான்..
ஒருவழியாக தன் கல்லூரி இருக்கும் ஏரியாவை நெருங்கியதும் ஆதவ் தன் தாத்தாவிடம்,“தாத்தா நான் காலேஜுக்கு லீவு போட்டா தான் ரிட்டன் உங்களோட வரமுடியும், என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க..” என்றான்.
“நீ வரலன்னா வேற யாருடா காரை டிரைவ் பண்ணுவா, இந்த வயசுல என்னைக் கார் ஓட்ட சொல்றியா படவா ராஸ்கல்” என்று சொன்ன தன் தாத்தாவை திரும்பி பார்த்து முறைத்தான் ஆதவ்.
“அதுக்குதான் நான் சொன்ன காலையிலே லீவ் சொல்லிடுறேன்னு, நீங்க தான் எதுவுமே சொல்லலை. லீவ் எதுவும் சொல்லாம நான் பாட்டு காலேஜுக்கு வந்தும் கிளாஸ்கு போகலன்னா என்ன நினைப்பாங்க. அட்மிசன் போட்டு முடிச்சதும் மூணு பேரும், வேணும்னா பஸ் ஏறி வீட்டுக்கு போங்க, நான் காலேஜ் முடிச்சுட்டு கார்ல வந்துடுறேன்” என்றதும் வாணிக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது.
“பெரியய்யா அவரைக் காலேஜ் போக சொல்லுங்க, நாம திரும்பி கார்லையே வீட்டுக்கு போயிடலாம்.‌ நான் கார் ஓட்டுவேன், அவரோட உதவி ஒன்னும் நமக்கு தேவையில்லை. நானே கார் ஓட்டுறேன்” என்று வெடுக்கென்று சொன்னவள் தன் முகத்தை ஜன்னலோரம் திருப்பி வைத்துக் கொண்டாள்.
“என்னது, உனக்கு கார் ஓட்ட தெரியுமா.‌ இது ஒன்னும் பொம்மைக் கார் இல்லை, நெஜக் கார்” என்று ஆதவ் கிண்டல் குரலில் சொன்னதைக் கேட்டதற்கு பிறகும் பதில் கூட சொல்லாமல் அமைதியாக இருந்தாள் வாணி.
ஆதவும், ஆதி விநாயகரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் குசுகுசுவென்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள்.‌
“பாரு உங்க பெரியம்மா பண்ணி வச்ச வேலையால யார் கிட்டையும் அந்த பொண்ணு முன்ன மாதிரி பேசவே மாட்டேங்குது” என்று சொன்ன தன் தாத்தாவை முறைத்த ஆதவ்,‌ “உங்கக்கிட்டயாவது ரெண்டு வார்த்தை பேசுறா, என்கிட்ட சுத்தமா பேசவே மாட்டேங்குறா தாத்தா. ஏன் பேசமாட்டேங்குறன்னு கேட்டா, முதலாளி, தொழிலாளி, வேலைக்காரிங்குறா. ஆனா ஒன்னு, கூடிய சீக்கிரம் வீட்ல ஏதாவது பெரிய கலவரம் நடக்கும், அன்னைக்கு எல்லாரையும் இவ வச்சு செய்யப் போகிறா வேணா பாருங்க” என்று சொன்னவனுக்கு தெரியவில்லை அந்த பிரச்சினைக்கு முழுமுதற் காரணமாக தான் தான் இருக்கப் போகிறோம் என்று..


- தேடல் தொடரும்..

https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-comments.615/
 
உறவின் தேடல் -14.1

அவன் சொன்னதைக் கேட்டு முறைத்த ஆதி விநாயகம்,

“அப்படியெல்லாம் அந்த பொண்ணு பண்ணாதுடா, பார்க்க எவ்வளவு அமைதியா இருக்குது. உங்க பெரியம்மா பண்றதுக்கெல்லாம் எங்க தான் போய் இந்த விஷயம் முடியும்னு தெரியல. எல்லாருமே ஒரு கட்டம் வரைக்கும் தான் பொறுமையா இருப்பாங்க, அதுக்கு மேல தாங்க முடியாம அவங்களும் கோபப்பட தான் செய்வாங்க. கோபப்பட்டா அந்த பொண்ணு கோபப்பட்டுட்டு போகுது அந்த பொண்ணைக் கொடுமை பண்ண , தெரிஞ்சதுல்ல கோவப்பட்டா வாங்கிக்க சொல்லு உங்க பெரியம்மாவை” என்றவர் வாணியும் பூங்கோதை நாச்சியாரும் தங்களை கவனிப்பதை உணர்ந்து தள்ளி அமர்ந்து கொண்டார்.‌

ஆதவ்வும் பின்னால் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியை வேகமாக செலுத்தினான்.‌ நல்லவேளையாக கையோடு கல்லூரிப் பையை எடுத்துக் கொண்டு வந்திருந்தது நல்லது என்று நினைத்தவன் கல்லூரி வந்ததும் உள்ளே காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு தன் கல்லூரி பையோடு இறங்கினான்.‌

மற்றவர்களிடம், “வாங்க ஆபீஸ் ரூம் எங்க இருக்குன்னு காட்டுறேன்” என்றவன் கவனமாக சாவியைத் தன் தாத்தாவின் கையில் கொடுத்து விட்டு முன்னே நடந்தான்.‌ அவன் பின்னே மற்ற மூவரும் நடந்து சென்றார்கள்.‌ அலுவலக கட்டிடத்தை கைகாட்டி, “அது தான் ஆபீஸ் ரூம், போங்க போயி நீங்களே எல்லாத்தையும் பார்த்துக்கோங்க தாத்தா, ஏன்னா உங்கக்கூட தான் புத்திசாலியான ஆட்கள் இருக்காங்களே” என்று சொன்னவன் தன் வகுப்பு இருந்த கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

செல்லும் அவனையே சில நிமிடங்கள் குறுகுறுவென்று பார்த்தாள் வாணி.‌‘நான் நார்மலா பேச மாட்டேங்கிறேன்னு இவ்வளவு கோவம் வருது.‌ஆனா பேசுனா நமக்குள்ள இருக்க நட்பைக் கொச்சைப்படுத்துறாங்க, நான் என்ன பண்ணட்டும். ஒருத்தவங்கக்கிட்ட சாதாரணமா பழகி கெட்ட பேர் வாங்கிக்கிறதுக்கு பதிலா, பேசாம இருந்து கெட்ட பேரு வாங்கிக்கலாம்..’ என்று நினைத்தவளாய் பெரியவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள்.

சிறிது தூரம் சென்ற ஆதவ்வோ திரும்பி அவர்களைப் பார்த்தான்.
அவர்கள் அந்த அலுவலக கட்டிடத்திற்குள் நுழைவதை மறைந்திருந்து பார்த்து விட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், ‘நாம ஹெல்ப் பண்றோம்னு சொன்னா மறுபடியும் அது இதுன்னு ஏதாவது பேசுவா தேவையா நமக்கு.‌ ஆனா ஒன்னு எங்க பெரியம்மா பண்றதுக்கு எல்லாம் நாங்க ஒரு நாளைக்கு நல்லா அனுப்பவிக்க போறோம்னு மட்டும் நல்லா தெரியுது. யாரா இருந்தாலும் சரி, அவங்களோட சுயமரியாதையோ, தன்மானத்தையோ சீண்டிப்பார்த்த இப்படித்தான் நடக்கும்.‌ நாங்க சும்மா எதார்த்தமா, ஜோவியலா பழகுறதுக்கே இப்படி பேசுறாங்களே, அது மாதிரி இருந்தா எல்லாம் உயிரோட விடமாட்டாங்க போல.‌ கருமம்டா யார் தான் இந்த கல்யாணத்தை கண்டுபிடிச்சாங்களோ?’ என்று எண்ணியவாறு தன் வகுப்பு இருந்த கட்டிடத்தை அடைந்தவன் படிகளில் ஏற ஆரம்பித்த போது கால் ஸ்லிப் ஆகி விழச் சென்றான். கீழே விழாமல் இருக்க சட்டென்று பிடிமானத்திற்காக அருகிலிருந்த கைப்பிடியை பிடிக்க கையை நீட்டினான். அதே நேரம் மேலிருந்து கீழே இறங்கி கொண்டிருந்த பெண்ணின் மீது அவன் கை தெரியாமல் எதேச்சையாக பட்டு விட, சட்டென்று கையை பின்னே இழுந்தவன், அதிர்வுடன் சுவர் ஓரம் சாய்ந்து படியிலேயே அமர்ந்து விட்டான்.

அவன் கைப்பட்ட பெண்ணோ அனல் விழிகளுடன் அவனை முறைத்து,“பார்த்து வர மாட்டீங்களா மிஸ்டர், உங்களுக்கு கண்ணு என்ன பின்னாலையா இருக்கு” என்று கேட்டவள் அதன் பிறகே அவன் தன் சீனியர் என்பது உரைக்க அதிர்வுடன், “சாரி சீனியர் வேணும்னே பேசலை, கை மேல படவும் கோவத்துல பேசிட்டேன் சீனியர் சாரி” என்று பதற்றத்துடன் சொன்னாள்.

அவனோ அப்போது தான் அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தவன், ‘ஓஓ நம்ம டிப்பார்ட்மெண்ட் ஜூனியர் பொண்ணா’ என்று மனதிற்குள் நினைத்தவனாய் வெளியே, “பரவால்ல பரவால்ல ஜூனியர் சாரி. லைட்டா ஸிலிப் ஆகவும் கைப்பிடியை பிடிக்க போனேன், நீங்க குறுக்க வரவும் கை மேல பட்ருச்சு வேணும்னு எதையும் பண்ணல சாரி” என்று சொல்லி விட்டு எழுந்தவன் வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தான்.

ஆனால் அவன் அந்த படியின் மேல் ஏறி வளைவில் திரும்பி செல்லும் வரை, அவன் தலை மறையும் வரை நின்று பார்த்து இருந்த பெண்ணோ, “சீனியர்ஸ்லையே இவர் கொஞ்சம் நல்ல டைப் போல. மத்த சீனியர்ஸா இருந்தா இன்னேரம் காச் மூச்சுன்னு கத்தியிருப்பாங்க ஆனா நல்லவேளையா இவரு அப்படி எதுவும் பண்ணல, அது வரைக்கும் சந்தோஷம். சீனியர்ஸ்ஸா இருந்தா மட்டும் கெத்து வந்துரும் போல, தலையில கொம்பு முளைச்சிரும் போல” என்று இதழசைவில் சொல்லி விட்டு அவள் அங்கிருந்து நகர்ந்திட, வளைவில் திரும்பி நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதவ்வோ,
“வாய் மட்டும் எல்லா பொண்ணுங்களுக்கும் அதிகமோ. இந்த சின்ன விடயத்துக்கே கோபம் என்னம்மா வருது, ஆண்டவா என்ன இப்படி சண்டைக்கு வர்றா நல்லவேளையா நான் தப்பிச்சேன்” என்று புலம்பியவாறு தன் வகுப்பிற்கு வந்து சேர்ந்தான்..

அலுவலக கட்டடத்திற்குள் நுழைந்த மூவரும் நேராக சென்று கடைநிலை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து சேர்க்கைக்கு என்னென்ன புரோசிஜர் என்பதை கேட்டு தெரிந்து கொண்டனர். அதுவும் இது தாமதமாக சேர்க்கப்படும் சேர்க்கை என்பதால் அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டனர்.‌ அவர்கள் இருவரையும் அருகில் இருக்கும் இருக்கையில் அமர வைத்த ஆதி விநாயகம் தாத்தா, “நீங்க ரெண்டு பேரும் இங்கையே இருங்க நான் போய் பேசிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு, அனுமதி பெற்று தாளாளர் அறைக்குள் நுழைந்தார்.

கிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்குப் பிறகு அந்த கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் தாத்தா, அவரை பின்தொடர்ந்து தாளாளரும் வந்தார். அவர்களைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக பாட்டியும், வாணியும் எழுந்து நின்றார்கள்..

தாளாளரோ வாணியிடம்,
“கண்டிப்பா உங்களுக்கு சீட்டு இருக்கும்மா நீங்க தாராளமா படிக்கலாம்மா, ஆனா என்ன எடுத்து படிக்க விரும்புறீங்க?” என்று கேட்டார்..

இவளோ சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “நான் தாவரவியல் எடுத்த படிக்கணும்னு ஆசைப்படுறேன் ஐயா” என்று முகம் விகசிக்கச் சொன்னாள்.

அவரோ அதைக்கேட்டு புன்னகைத்தவாறு, “கண்டிப்பா நீங்க விருப்பப்பட்ட படிப்பையே படிக்கலாம் என்னோட வாங்க”, என்றவராய் மீண்டும் அவர்களை அலுவலக கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றவர் அதற்குண்டான பார்மாலிட்டீஸ் அனைத்தையும் தானே முன்னின்று செய்தார்.

அவர் அவ்வாறு செய்வதற்கு காரணம் ஆதிவிநாயகத்தின் மீது அவர் வைத்திருந்த மதிப்பு மட்டும் கிடையாது. மற்றவர்களுக்கு அவர் செய்யும் உதவியும் ஒரு காரணம்.
ஆதி விநாயகம் அடிமட்டத்திலிருந்து வந்ததாலோ என்னவோ யாராவது கோவில்களுக்கு நன்கொடை கேட்டாலோ, பள்ளி, கல்லூரிகளுக்கு உதவி கேட்டாலோ பாரபட்சம் பார்க்காமல் வாரி வழங்குவார். அதனாலேயே அவரை பெரும்பாலானோருக்கு தெரிந்து இருந்தது.

அதை மனதில் வைத்துக் கொண்டு தான், தானே முன்வந்து வாணியை கல்லூரியில் சேர்த்து விடுகிறேன் என்று சொன்னார் ஆதி விநாயகம். அவர் எதிர்பாராமல் செய்த உதவிகள் தான் இப்போது அவர்களுக்கு தக்க சமயத்தில் கை கொடுத்தது.

பார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்துக் கொண்டு அவளுக்கு உண்டான வகுப்பறையை பியூனிடம் காட்ட சொல்லி விட்டு , ஆதிவிநாயகத்திடம் விடை பெற்ற தாளாளர் தன்னுடைய வேலையை கவனிக்க தன் அறைக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு பெரியவர்கள் இருவரும் வீட்டிற்கு கிளம்ப முடிவு செய்ய அவளோ, “ஒரு நிமிஷம் இருங்க பெரியய்யா கிளாஸ் ரூம் எங்க இருக்குன்னு பார்த்துட்டு நானும் உங்களோடவே வந்துடுறேன். நாளையில இருந்து நான் இங்க ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றவள் அவர்கள் இருவரையும் ஒரு மரத்தடியில் அமர வைத்து விட்டு பியூனுடன் நடந்து சென்றாள். இவள் சேர்ந்திருக்கும் வகுப்பிற்கு மிக அருகில் நின்று வகுப்பை கைகாட்டிவிட்டு பியூன் சென்று விட ஒருமுறை வகுப்பு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை முழுதாக மனதில் பதிய வைத்துக் கொண்டு மீண்டும் பெரியோர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் வாணி.

“பார்த்துட்டு வந்துட்டேன் வாங்கய்யா போலாம்” என்று சொன்னவாறு கவனமாக அவரிடமிருந்து கார் சாவியை வாங்கிக்கொண்டு கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றாள். இவ்வளவு நேரமும் அவர்கள் செய்யும் அனைத்தையும் முதல் வகுப்பிற்கு பர்மிஷன் போட்டு விட்டு பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஆதவ். வகுப்பு வரைக்கும் சென்றவன் மனது கேளாமல் மீண்டும் திரும்பி வந்து இவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தான்.‌

ஆனாலும் முன்னே சென்று உதவ தோன்றவில்லை.‌ மீண்டும் அவள் ஏதேனும் காலையில் சொன்னது போல் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றே மறைந்து நின்று அவர்களைப் பார்த்தவன், அவள் காரை இயக்கி, அந்த கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறும் வரை நின்று பார்த்து விட்டு அதன் பிறகே தன் வகுப்பிற்கு வந்தவன், பேராசிரியரிடம் எக்ஸ்கியூஸ் கேட்ட பின்பு வகுப்பிற்குள் நுழைந்தான்...

கல்லூரியிலிருந்து காரை இயக்கிய வாணி லாவகமாகவும், அதே நேரம் சீரான வேகத்திலும் காரை ஓட்டி சென்றாள். அவள் லாவகமாக கார் ஓட்டுவதைக் கண்டு பூரித்துப் போன பெரியவர், “யாருமா உனக்கு கார் ஓட்ட கற்று கொடுத்தது?”என்று கேட்டார்.

பொங்கி வந்த அழுகையை கஷ்டப்பட்டு தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டவள்,
“அப்பாதான் கத்துக் கொடுத்தாரு பெரியய்யா” என்றாள்.

“உங்க அப்பாவும் நல்லவன் தான் ஆனா என்ன எங்களால அவனோட ஒட்டி உறவாட முடியல. அவன்கிட்ட நல்ல குணமும் இருக்குது தான் ஆனாலும் அவன் ஏன் கொஞ்ச நாளா அப்படி நடந்துகிட்டான்னு புரியல. எங்கக்கிட்டான்னு கூட பரவால்ல, சொந்த தங்கச்சிக்கிட்ட கூட அவன் ஏன் அந்த மாதிரி நடந்துகிட்டான்னு எங்களுக்கு இன்ன வரைக்குமே தெரியாதுமா” என்றார் ஒருவித தவிப்புடன்.

அவளோ, “பரவாயில்ல பெரியய்யா எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னா சில தில்லு முல்லு செய்யணும், பொய் சொல்லணும், மத்தவங்க முதுகுல குத்தணும், மத்தவங்களுக்கு துரோகம் பண்ணனும்னு எங்க அப்பாவுக்கு தெரியாம போயிடுச்சு. ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு அவர் மேல கோபத்தையும், வெறுப்பையும் வர வெச்சுருக்கலாம். ஆனா இதுக்கு மேல அதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்லையே, அதான் அவரே உயிரோட இல்லையே பெரியய்யா” என்று வேதனையோடு சொன்னவள் ஒற்றை விரலால் விழி நீரை துடைத்துக் கொண்டு கார் ஓட்டுவதில் கவனத்தை செலுத்தினாள், அதன் பிறகு காரில் யாரும் பேசவே இல்லை.

சிறிது தூரம் கடந்ததும் கடைவீதியில் காரை நிறுத்தச் சொன்னார் ஆதி விநாயகம். அங்கே அவள் கல்லூரி செல்வதற்கு தேவையான அனைத்தையும் வாங்கினார் பாட்டி. அவள் வேண்டாம் என்று மறுக்க மறுக்க அனைத்தையும் வாங்கினார். 'உடைகள் எடுக்க வேண்டும்' என்றதற்கு,
“இல்ல பாட்டி நான் அப்பா வீட்டுல யூஸ் பண்ணுன திங்ஸ் எல்லாத்தையும் கொடுத்து விட்டுருக்காங்க, அதுலையே எனக்கு எல்லா விதமான உடைகளுமே இருக்குது. எனக்கு புதுசா எதையும் எடுக்க வேணாம்” என்றாள். பின்னர் அவளுக்கு தேவையான மற்ற இதர அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு மூவருமே அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தார்கள்..
 
உறவின் தேடல் -14.2


கல்லூரி சென்று வந்த அசதியில் தன் அறையிலேயே இருந்து கொண்டாள் வாணி. மீதமிருந்த வீட்டு வேலைகளை பொன்னி பார்த்து விட்டதால் அவளுக்கு எந்த வேலையும் இல்லை. இரவு உணவையும் பொன்னியே சமைத்திட, தனக்கு தனியாக எதையோ சமைத்து உண்டாள் வாணி. அதன் பிறகு அந்த பெரிய வீட்டுப் பக்கமே அவள் செல்லவில்லை. ஆனால் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த ஆதவ்வோ விழியால் வாணியைத் தேடினான்.‘சரி அவ ரூம்ல இருப்பா போல அதான் ஆளைக்காணோம். சாதாரணமா அவக்கிட்ட பேசினா கூட மறுபடியும் ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சு தப்பா பேசுவாங்க அதனால அவளை விட்டு விலகி இருக்குறதே நமக்கு நல்லது’ என்று நினைத்தவன் அவள் இருக்கும் பக்கம் கூட தலையைத் திருப்பாது, இரவு உணவை உண்டு விட்டு தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

முழுமையும் கருப்பாக இல்லாமல் ஆங்காங்கே பஞ்சை பொதித்து வைத்தாற் போல் புகை மூட்டமாக இருக்கும் அதிகாலைப் பொழுதில் எப்போதும் போல் விழிப்புத் தட்டியது வாணிக்கு. எழுந்து குளித்து முடித்து , பெரிய வீட்டுக்குள் நுழைந்து முன்புற வாசலுக்கு வர, அங்கே ஏற்கனவே வாசல் தெளித்துக் கூட்டிக் கொண்டிருந்தாள் பொன்னி..

அதைக்கண்டு அதிர்ந்தவள்,
“என்ன பொன்னி அக்கா நான் செய்ய வேண்டிய வேலையை நீங்க செய்யிறீங்க. அதிசயமா நீங்க வாசல் கூட்டிக்கிட்டு இருக்கீங்க, இது என்னோட வேலை தானே, ஏன் நீங்க செய்யிறீங்க?” என்று படபடப்புடன் கேட்டாள்.

“இதுக்கு மேல இதெல்லாத்தையும் நானே பார்க்கணும்னு பெரியம்மா சொல்லிட்டாங்க பாப்பா. நீ ஒழுங்கா படிக்க மட்டும் போவியாம்”

“ஆனா இந்த வேலை கூட செய்யாம நான் இந்த வீட்ல இருக்கறதுக்கு எனக்கு ஒரு மாதிரி இருக்கும் அக்கா, நான் என்ன பண்ணட்டும்?” என்றவள் குழப்பத்துடன் கேட்டாள்.

ஏற்கனவே வாசல் கூட்டி முடித்திருந்த பொன்னி கோலம் இட்டவாறே அவளை நிமிர்ந்து பார்த்து, “உனக்கு மாச மாசம் செலவுக்கு பணம் தருவாங்கல்ல அதுல சேர்த்து வெச்சு உன்னால முடிஞ்சதை வாடகை மாதிரி கொடுத்துடு” என்றார்.

“ஆனா அப்படி கொடுக்குறது சரியா வருமா அக்கா..?”

“அதெல்லாம் சரியா வரும். எந்த வீட்டுல இருந்தாலும் தன்மானத்தோடு இருக்கணும் கண்ணு. உன்னை இதுவரைக்கும் இந்த வீட்ல யாரும் மதிச்சு நான் பார்த்தது கிடையாது .ஏதோ ஆண்டவனா பார்த்து மனசு வச்சதால உனக்கு ஒரு விடிவு காலம் வந்துருக்குது. நல்லா படிச்சு வாழ்க்கையில் முன்னேறுற வழியைப் பாரு. நான் ஒன்னே ஒன்னு தான் சொல்லுவேன். இதுநாள் வரைக்கும் இந்த வீட்ல நீ அனுப்பவிச்ச கஷ்டத்தை பார்த்தவங்குற முறையில நான் சொல்றேன், நல்லா படிச்சு நல்ல வேலையில சேர்ந்ததும் இங்கிருந்து வெளிய போயிரு அதுதான் உனக்கு நல்லது. இல்லைன்னா, அதை என் வாயால சொல்ல கூடாது தான், ஆனாலும் சொல்றேன் அந்த மீனாட்சி அம்மா உன் வாழ்க்கையே நாசமாக்கிடுவாங்க நீ இங்கிருந்து போயிரு கண்ணு” என்று சொன்னவள் தான் சின்னதாக போட்டிருந்த கோலத்தை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து விட்டு தன் மற்ற வேலைகளை கவனிக்க உள்ளே செல்ல திரும்பிய அதேநேரம் பால் காரரும் வந்து சேர்ந்தார்.

சரி பாலையாவது வாங்கலாம் என்று நினைத்து அங்கிருந்து வாணி நகர்ந்த வேளையில்,
“உன்னை எந்த வேலையும் செய்ய விட வேணாம்னு சொல்லி இருக்காங்க, தள்ளி நின்னு கண்ணு” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று பாத்திரத்தோடு வந்த பொன்னி பாலை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள் அதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் பால்காரர் பரமசிவம்.

சற்று முன்பு நடந்த நிகழ்வை ஆச்சரியத்தோடு பார்த்தது மட்டுமின்றி அதை வாய் விட்டு கேட்டும் விட்டார். “என்னம்மா ஆச்சு அதிசயத்திலும் அதிசயமா நீ செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் பொன்னி செஞ்சுக்கிட்டு இருக்குது, அப்படி என்ன தான் ஆச்சு?” என்று வியப்போடு கேட்டார்.

அவளோ, “அதிசயம் எல்லாம் என் வாழ்க்கையில எப்போதாவது தான் நடக்கும் அண்ணா. இப்பவும் அப்படியொரு அதிசயம் தான் நடந்துருக்கு.‌ நான் படிச்ச ஸ்கூல்ல இருந்து ரெண்டு சாருங்க வீட்டுக்கு வந்து என்னைக் காலேஜ்ல சேர்க்குறதைப் பத்தி வீட்ல பேசுனாங்க. ஏதோ ஒரு காலேஜ்ல நான் படிக்கிறதுக்கு அப்பா ஏற்கனவே ஃபீஸ் கட்டி இருந்தாராம்.‌ அதை திரும்பவும் வாங்க தந்துடுறோம், இங்க இருக்க காலேஜ்ல இந்த பொண்ணை சேர்த்து படிக்க வைங்கன்னு கேட்டாங்க” என்றாள்.

“என்னம்மா சொல்ற ஆச்சரியமா இருக்கே.‌ இந்த வீட்டு அம்மா அதுக்கு ஒத்துக்கிச்சா என்ன?” என்று சந்தேகத்தோடு கேட்டார் பரமசிவம்.

“அவங்க சம்மதிக்காம என்ன பண்ணுவாங்க அந்த அளவுக்கு நான் படிச்ச ஸ்கூல்ல இருந்து வந்த சார் ரொம்ப கண்டிப்பா கேட்கவும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டாங்க. அது மட்டுமில்லாம எல்லா செலவையும் அவங்களே பாத்துக்கிறேன்னு சொன்னாங்க. அப்பா கொடுத்த பணத்தை எப்படியாவது திரும்ப வாங்கி மாசாமாசம் அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க,‌ அதனால தான் இவங்களும் படிக்க வைக்க ஒத்துக்கிட்டாங்க அண்ணா. கரூர் கலைக் கல்லூரியில தான் சேர்ந்திருக்கேன்ணா. இன்னையில இருந்து காலேஜ் போகப் போறேன்” என்றாள் முகம் முழுதும் பூரிப்பான புன்னகையோடு.

அதைக் கேட்டு தானும் முகமலர்ந்தவர், “அப்படியாம்மா ரொம்ப சந்தோஷம். என் பொண்ணும் அங்க தான் படிக்கிறா” என்றார்.

“என்ன அண்ணா சொல்றிங்க, உங்க பொண்ணு அங்கையா படிக்கிறாங்க சூப்பர் அண்ணா. உங்க பொண்ணு பேர் என்ன, அவங்க என்ன படிக்கிறாங்க” என்று கேட்க,
“என் பொண்ணு அங்க ஏதோ இந்த தாவரங்களைப் பத்தி படிப்பாங்களாமே அதைப் படிக்கிற‌ குரூப்பை எடுத்துருக்குறதா சொன்னாம்மா!” என்றார்.

அவளோ அதைக் கேட்டு இன்னும் ஆனந்தம் அடைந்தாள்.
“நானும் அதுதான் படிக்கப் போறேன் அண்ணா. ஆமா, உங்க பொண்ணு பேரு என்ன?” என்று கேட்டாள்.

“அவ பேரு மலர்விழி, நாங்க மலர்னு கூப்பிடுவோம்” என்றார்.

“அப்ப இன்னைக்கு போய் உங்க பொண்ணை மீட் பண்ணி பிரண்டாகிக்கிறேன். நீங்க எப்படி இவ்வளவு ஸ்வீட்டா, இவ்வளவு நாள் என் மேல அக்கறையா இருந்தீங்களோ அதே போல உங்க பொண்ணு இருப்பாங்கன்னு நினைக்கிறேன், ரொம்ப சந்தோசம் அண்ணா” என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் வந்தவள் மதியத்திற்கு தேவையான உணவை சமைத்து அதையே காலை உணவாக சாப்பிட்டு விட்டு மதியத்துக்கும் டிபன் பாக்ஸில் போட்டு அடைத்தவள் கல்லூரி செல்ல தன்னிடம் இருக்கும் நல்ல சுடிதாரில் ஒன்றைப் போட்டு கொண்டு கிளம்பினாள்.

கல்லூரிக்கு கிளம்பியவளுக்கு கல்லூரிக்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை.‌ யோசனையோடு நின்றவள் பின் தன்னிடமிருந்த சேமிப்பில் இருந்து சிறிதளவு பணத்தை எடுத்து கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் கவனமாகக் கதவைத் தாழிட்டு பூட்டி விட்டு பெரிய வீட்டிற்குள் நுழைந்தாள்.‌

பெரியவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் காலை உணவை உண்டு கொண்டு இருந்தனர். பெரியவர்களின் முன்னால் சென்று நின்றவள், “பெரியய்யா, பெரியம்மா என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க. நான் முதல் நாள் காலேஜ் போறேன், படிச்சு பெரியாளா வரணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று சொல்லி அவர்கள் இருவரது காலிலும் விழ சோபாவில் அமர்ந்திருந்த இருவரும் எழுந்து ஆசீர்வாதம் செய்ததோடு கையில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வைத்து,‌“படிச்சு பெரியாளா வரணும்மா, பத்திரமா போயிட்டு வாம்மா” என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தனர்.

தயக்கத்துடனே அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டவள் அப்போது தான் சாப்பிட்டு விட்டு ஹாலுக்கு வந்த மீனாட்சியின் அருகில் சென்று நின்றாள். குனிந்து அவரின் பாதம் தொடாமல் நின்றவாறே அவரிடம், “போயிட்டு வரேன் அம்மா” என்றிட.

பதிலுக்கு அவரும், “ம்ம்.. போ போ” என்று சொன்னதோடு தன் வேலையை கவனிக்க சென்று விட்டார். அவர் அவ்வாறு உதாசீனப்படுத்துவது போல் பேசியது மனதைக் காயப்படுத்திய போதும் இது தெரிந்தது தானே, எப்போதும் நடப்பது தானே என்று எண்ணியவள் வாசலை நோக்கி நடக்க முயன்ற வேளையில் அவளைக் கடந்து கடகடவென்று தன் காரை நோக்கிச் சென்றான் அகில்..

உடனே அவன் பெயரை சொல்லி அழைத்த ஆதிவிநாயகம்,
“கரூர் பக்கம் தானே போற, அப்படியே இந்த பொண்ணை இறக்கி விட்டுட்டு போயேன்டா” என்றார்.

சற்றென்று தன் நடையை நிறுத்தியவன் திரும்பி தன் தாத்தாவை முறைத்தவாறு,
“இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரியலையா தாத்தா. ஒரு வேலைக்காரியை நான் கொண்டு போயி இறக்கி விட்டுட்டுப் போகணுமா. அவ தான் நம்ம வீட்டுல வேலை செய்யறாளே தவிர, நான் ஒன்னும் அவங்க வீட்ல போய் வேலை செய்யல. விட்டா என்னை அவளுக்கு சம்பளம் இல்லாத டிரைவராக்கிடுவீங்க போல” என்று வெடுக்கென்று சொன்னவன் விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்க, அதைக் கேட்ட வாணிக்கு தான் என்னவோ போலானது.

திரும்பி ஆதி விநாயகத்தை, ‘ஏன் பெரியய்யா.‌உங்கக்கிட்ட உதவி செய்ய சொல்லி கேட்டேனா?’ என்பது போல் பார்த்தவள் எதுவும் பேசாமல் அந்த வீட்டிலிருந்து வெளியேறினாள். காரில் அமர்ந்த அகிலோ காரை எடுக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அந்த காரை தாண்டி செல்ல முற்பட்ட வாணியை சொடுக்கிட்டு அழைத்தான்.

அவளோ நின்ற இடத்தில் இருந்தே திரும்பி பார்க்க,
“இங்க வா” என்றான் அதிகாரமாக.

அவளோ இரண்டு அடி எடுத்து வைத்து காரின் அருகே வந்து நிற்கையில், “நீ என்ன பெரிய மகாராணியா. ஒரு ஆள் கொண்டு போய் காலேஜ்ல விட்டுட்டு வரணுமோ. நேத்து ஒரு நாள் தான் அவங்களோட வெளிய போன அதுக்குள்ள இந்த அளவுக்கு அவங்களை பேச வச்சிருக்க. மை ஏதாவது தடவுனியா இல்ல,‌ ஏதாவது ஒரு மந்திரவாதிக்கிட்ட போய் மந்திரிச்சு ஏதாவது வாங்கிட்டு வந்து அவங்களை மயக்கிட்டியா?” என்று ஏக வசனத்தில் பேசியவன் அவள் அமைதியாக நிற்பதைப் பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தான்.

“ஆனா ஒன்னு இந்த சொத்தை அடையிறதுக்காகவும், சொகுசா வாழ்றதுக்காகவும் நீயெல்லாம் என்ன வேணாலும் பண்ணுவன்னு உன்னைப் பார்த்தாவே தெரியுது. ஆமா இதெல்லாம் உங்க அம்மா சொல்லிக்கொடுத்தாளா, இல்ல உங்க அப்பா சொல்லிக் கொடுத்தானா?” என்றான் மட்டு மரியாதை இன்றி.. அவள் மீதுள்ள கோபத்தில் தான் படித்தவன், நாகரீகமானவன், ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவன் என்பதையெல்லாம் மறந்து மிகவும் கீழ்த்தரமாக பேசினான்.

அவன் சொன்னதைக் கேட்டு வாணிக்கு அழுகையும் கோபமும் ஒரு சேர வந்தது. ஆனால் அவர்களை எதிர்த்துப் பேசும் இடத்தில் தான் இல்லை என்பதை உணர்ந்தவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர முயன்ற வேளையில், “ஏய் நில்லுடி நான் பாட்டுக்கு கேள்வி கேட்டுட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு போறியே, இதுக்கு என்ன அர்த்தம்.?”என்று கர்ஜித்தான்.

எதுவும் பேச வேண்டாம் என்றெண்ணி விலகிப்போனாலும், விலகிச் செல்ல விடாமல் வம்பு வளர்ப்பவனை நினைத்து இவளுக்கு இன்னும் கோபம் அதிகரித்தது. அந்த இடத்திலேயே நின்று அவனைத் திரும்பிப் பார்த்து, “உங்களுக்கு என்ன முதலாளி வேணும்?” என்றாள்.

“இந்த வார்த்தை, இந்த வார்த்தையைத் தான் எதிர்பார்த்தேன். இதே வார்த்தையை எந்த இடத்துலையும் நீ யூஸ் பண்ண கத்துக்க. நான் உனக்கு சம்பளம் கொடுக்குற முதலாளி அதையும் ஞாபகம் வச்சுக்க. இது நாள் வரைக்கும் நீ சும்மா இருக்கேன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன் இப்ப எங்க வீட்ல இருந்து நீ செய்யிற வேளைக்கு காசு தரங்க தானே , அதனால நாங்க சம்பளம் கொடுக்குற முதலாளி அதை மறந்துறாத, எப்பவுமே நியாபகம் வச்சுக்கிட்டு பேசக் கத்துக்கோ. பெரியவங்க அது சொன்னாங்க, இது சொன்னாங்கன்னு உன் மனசுல ஏதாவது நெனச்சிட்டு இருந்த, ஊர் முன்னாடி நிறுத்தி அசிங்கப்படுத்திருவேன்.

ஏன்னா எனக்கு உன்னை மட்டும் இல்ல, உன் குடும்பத்தைக் கண்டாலே ஆகாது சுயநலம் பிடிச்ச குடும்பம்” என்று சொன்னவாறு காரின் கண்ணாடியை ஏற்றி விட்டான். விழியில் இருந்து வெளி வரும் கண்ணீரை அவன் முன்பு காட்டக்கூடாது என்று நினைத்தவளாய் விடுவிடுவென்று மெயின் கேட்டை தாண்டி வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் வாணி.

ஆதவ்வோ கல்லூரி செல்ல கிளம்பியவன் வாசலுக்கு வருகையில் தான் இந்த காட்சியை கண்டான். அதுவும் தன் அண்ணன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு அவனுக்கு காது கூசும் போது, ஒரு பெண்ணான அவள் எப்படி உணர்வால் என்று நினைத்தவனுக்கு அகிலின் மேல் கோபம் கோபமாக வந்தது.

‘தன் பெரியம்மா எப்படியோ, அதே போல் தன் அண்ணனும் இருக்கான். தன் பெரியம்மாவின் ஆண் வெர்ஷன் தன் அண்ணன் போல’ என்று நினைத்திருந்தவனுக்கு அது இப்போது முழுமையாக புரிந்தமையால் எதுவும் பேசாமல் தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான். ஆனால் வாணியை நினைத்து பாவமாக இருந்தது.

அவள் சென்று பேருந்து நிறுத்தத்தில் நின்ற இரண்டு நிமிடங்களிலேயே பேருந்து ஒன்று வந்தது. முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு வந்த பேருந்தில் அவள் ஏறிக் கொண்டாள்.‌ ஆனால் தொலைவில் அந்த பேருந்தை நோக்கி ஓடி வந்த ஒரு பெண்ணோ பேருந்தை தவற விட்டு விட்டாள்.

“சுத்தம் பஸ் போயிருச்சா?” என்று புலம்பியவாறு வேகமாக சாலையின் நடுப்பகுதியில் இருந்து சாலையைக் கடக்க முயன்ற வேளையில் அவளை இடிப்பது போல் கொண்டு வந்து காரை நிறுத்தினான் அவன்.

அவளோ கார் வந்ததைக் கவனிக்கவே இல்லை. பேருந்தைப் பிடித்து விடலாம் என்ற பரபரப்பில் ஓடி வந்ததால் சாலையில் வரும் வாகனத்தை கவனிக்காமலேயே சாலையைக் கடந்து பாதி தூரம் வந்துவிட்டாள்

தற்போது திடீரென்று தன்னை இடிக்க வந்த காரை கண்டு அதிர்ந்து நின்றவள் பயத்தில் கையில் இருந்த கல்லூரிப் பையை நழுவ விட்டாள். பின்னர் இடைவிடாது ஒலித்த ஹாரன் சத்தத்தில் தன்னிலை பெற்றவள் கீழே கிடந்த பையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று நடந்து சென்று சாலையோரம் நின்று, அந்த கார் செல்ல வழிவிட்டாள். ஆனால் ஏற்கனவே கோபத்தில் வாணியை வாயிக்கு வந்ததெல்லாம் சொல்லி திட்டி விட்டு வந்த அகிலோ யாரோ ஒரு பெண் குறுக்கே வருவதைக் கண்டதும் கோபத்தோடு காரை நிறுத்தியவன், அதே கோபத்தோடு காரை விட்டு கீழே இறங்கி வந்தான்.


- தேடல் தொடரும்..


https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-comments.615/
 
உறவின் தேடல் -15


அப்பெண்ணோ தன் கல்லூரிப் பையை எடுத்துக்கொண்டு பயத்துடன் ஓரமாக சென்று நிற்க, அவனோ காரை விட்டு கீழே இறங்கி வெளியே வந்தவன் அந்த பெண்ணின் அருகே வந்து, “கொஞ்சம் கூட உங்களுக்கு அறிவுங்குறதே இருக்காதா,‌ கண்ணை பின்னால வச்சுக்கிட்டா நடக்குறீங்க.‌ ரோட் கிராஸ் பண்ணும் போது ரோட்டுல வண்டி வருதா இல்லையான்னு பார்க்க மாட்டீங்களா. நான் பிரேக் அடிச்சதால பரவாயில்ல, இல்லன்னா என்னாகுறது, நான் கவனிக்காம இருந்துருந்தா இன்னேரம் உங்களை அடிச்சு தூக்கி இருப்பேன், நீங்களும் ரத்த வெள்ளத்துல கெடந்துருப்பீங்க. உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா, பொண்ணுங்களே இப்படி தானோ என்னவோ,‌ நீங்கல்லாம் என்ன மாதிரி ஜென்மங்களோ தெரியலை” என்று ஏகத்திற்கும் திட்டி தீர்த்தவன் அவள் முகத்தை கூட பார்க்காமல் வேகமாக அங்கிருந்து நகர முயன்றான்.

ஆனால் அதற்குள் கல்லொன்று அவன் தலையில் வந்து மோதியது. வலியுன் அவன் திரும்பிப் பார்க்க தன் கையில் ஒற்றை கல் ஒன்றை உருட்டியவாறு அவனை நெருங்கிய அந்தப் பெண்,
“என்ன சொன்ன, என்ன சொன்ன கண்ணை பின்னாடி வச்சுக்கிட்டு வர்றோம்மா, நாங்க கண்ண எங்கையோ வச்சுக்கிட்டு வர்றோம் அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். ஆமா இதென்ன உங்க அப்பா வீட்டு ரோடா உங்க இஷ்டத்துக்கு வண்டி ஓட்டிட்டு வர்றதுக்கு.
நீங்க போட்டு குடுத்தீங்களா கவர்மெண்ட் தானே போட்டு குடுத்துச்சு. மொதல்ல ரோட்டுல வரும் போது மெதுவா வண்டி ஓட்டக் கத்துக்கங்க அதுக்கப்புறம் ரோட்டை எப்படி கிராஸ் பண்ணனும்னு எனக்கு வந்து கிளாஸ் எடுங்க. பொண்ணுங்கன்னா இப்படி தான், அப்படி தான்னு பேசுற நீங்க, நாங்க என்ன செய்யறோம், ஏது செய்யறோங்குறதை பாக்குறதுக்கு தான் பொறந்துருக்கீங்களோ?” என்றவள் தொலைவில் பேருந்து வருவதைக் கண்டு விட்டு பேருந்து நிறுத்தத்திலிருந்த நடை மேடையில் ஏறி நின்றாள்.

அதேநேரம் எதிர்ப்புறத்தில் இருந்து வந்த ஒரு பெண்,
“ஏய் என்னாச்சு மலர் எதுக்கு அவர்கிட்ட இப்படி சண்டை போடுற” என்று கேட்டிட,

“சண்டை போடாம என்ன பண்றது எல்லாம் ஆம்பளைங்கிற திமிருல பேசுறாங்க. இவங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கன்னா இளக்காரம் என்ன வேணா பேசலாம்னு நினைச்சிட்டு இருக்காங்க. பெரிய கார் வச்சுருக்காங்குற காரணத்துக்காக அவங்க எது சொன்னாலும் கேட்டுட்டு போக முடியுமா, அப்படி எல்லாம் என்னால கேட்டுட்டு போக முடியாது. அவர் ஒரு வார்த்தை விட்டாரு பதிலுக்கு நானும் பதில் வார்த்தைத் திருப்பிக் கொடுத்தேன் அவ்வளவு தான்” என்றவள் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆனால் அவர் பேசியதிலிருந்து, அவள் அடித்தது வரை அனைத்தும் அகிலை அதிர்வுற செய்திருந்தது. ‘சரியான வாயாடியா, பஜாரியா இருப்பா போல, இப்படி பேசுறா’ என்று நினைத்தவனாய் காரை அலுவலகத்திற்கு கிளப்பினான் அகில் பிரசாத்..

பேருந்தில் அமர்ந்திருந்த மலருக்கோ இன்னும் ஆத்திரம் அடங்கிய பாடில்லை. ‘நானே பஸ்ஸை தவற விட்டுட்ட அதிர்ச்சியில ரோட்டுல அப்படியே நின்னுட்டேன். அதுவும் அதிர்ச்சியில தான் அப்படி நின்னனே தவிர வேணும்னே பண்ணலையே. அவன் என்னடான்னா என் மேல இடிக்கிற மாதிரி காரைக் கொண்டு வந்து நிறுத்துனது மட்டுமில்லாம சண்டைக்கு வேற வர்றான், சரியான சிடுமூஞ்சியா இருப்பானோ இவனுக்கெல்லாம் யார் தான் இவ்வளவு பெரிய கார் வாங்கி தந்தாங்கன்னு தெரியல. காலேஜ்கு கிளம்பும் போதே இப்படின்னா,‌ இன்னும் காலேஜ்ல என்னென்ன பிரச்சனைங்க வந்து சேருமோ தெரியலையே’ என்று நினைத்தவளாய் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த காட்சிகளைக் காண ஆரம்பித்தாள்.

மலருக்கு முன்பு சென்ற பேருந்தில் இருந்த வாணியோ முதல் முறை கல்லூரி பயணத்தை ஆர்வத்துடன் ரசித்தாள். அதிலும் புதுமுகங்கள், புது இடம், புது மனிதர்கள் என்னென்ன விஷயங்கள் புதுசாக கற்றுக்கொள்ள போகிறோமோ என்று நினைத்தவள் கவனமாக தன் நெஞ்சைத் தொட்டுக் கொண்டிருக்கும் தாலியின் மீது கைவைத்து மானசீகமாக அதை கட்டியவனிடம் பேசலானாள்.

‘இப்பவும் நீங்க யாரு என்னன்னு எனக்கு தெரியாது ஆனா உங்களுக்கு சரியாகியிருக்கணும், நீங்க நல்லா இருக்கணும்னு அதை மட்டும் தான் இவ்வளவு நாளா நான் கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன். நீங்க என்னோட வாழ்க்கையில வந்ததாலோ என்னவோ தெரியல கொஞ்சம் நல்ல விஷயமும் நடக்குது. இதே மாதிரி சீக்கிரமே உங்களை நான் பாக்கணும், இதை உங்கக்கிட்ட சொல்லணும், அதுக்கப்புறம் உங்களுக்கும் பிடிச்சிருந்தா உங்களோடவே என்னைக் கூட்டிட்டு போயிடணும்' என்று மனதில் நினைத்தவளாய் இந்நேரம் அவன் என்ன செய்து கொண்டிருப்பான் என்று யோசிக்கலானாள்.

அவளது எண்ணத்தின் நாயகனோ தன் அறையில். தன் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். முழுதாக காயம் சரியாகும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அவன் தாய் அன்பு கட்டளையிட்டிருந்ததால் தான் வேறு வழி இல்லாமல் படுக்கையில் படுத்திருக்கிறான்.

ஆனால் அவனுக்கும் கண் விழித்ததில் இருந்து வாணியின் நினைவு தான். ஆனால் என்ன செய்வது வெளியில் செல்ல முடியாத நிலையில் அவள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவள் என்பது பற்றி எல்லாம் எப்படி கண்டு பிடிப்பது என்று தெரியாமல் அடிக்கடி எதை எதையோ யோசிப்பான்.

தற்போதும் கூட முழுதாக காயம் ஆறியதற்குப் பிறகு கண்டிப்பாக அவள் யார் எந்த ஊர் என்பதை தேட வேண்டும், அதற்கு தன் தேடுதல் வேட்டையை முதலில் கோயிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தவனாய் படுத்திருந்தவன் தன்னையறியாமல் உறங்கி விட்டான். ஆனால் யாரோ தன்னை நினைப்பது போலவும், தன்னை அழைப்பது போலவும் உணர்ந்தவன் திடுக்கிடலுடன் கண் விழித்து எழுந்தமர்ந்தவன் சுற்று முற்றும் விழிகளால் அலசி ஆராய்ந்தான். தான் இருப்பது தனது அறை என்பது புரிந்தது, ஆனால் தன்னை அழைத்தது யார் என்று யோசித்தவனுக்கு, ஒருவேளை அவள் அழைத்து இருப்பாளோ என்று தோன்ற, நிச்சயமாக அவரள் தான் என்னை நினைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவனுக்கு நெஞ்செல்லாம் காதலென்ற உணர்வு சாரல் மழையைப் போல் மெல்ல மெல்ல அவனுள் பொழியத் தொடங்கி இருந்தது.

அவன் மருத்துவமனையில் இருந்த வேளையில் அவனின் தந்தை சிவசுப்பிரமணியம் அதன் பிறகு தன் மகனை ஆபத்து நெருங்காதவாறு பார்த்துக் கொண்டார். யாரும் அறியாமல் தான் மட்டும் தனியே சென்று தன் மகனுக்கு பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் மனு கொடுத்ததோடு மட்டுமின்றி புகாரும் கொடுத்து விட்டு வந்தார். அதே போல் தன் இளைய மகனையும் பத்திரமாக கல்லூரி சென்று வரும்படி கூறியவர் துணைக்கு டிரைவரையும் மேலும் இருவரையும் அனுப்பி வைத்தார்.‌ நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது இதோ பல பரிசோதனைகளுக்குப் பிறகு வீட்டிலிருந்தவாறே தேவேஷ்வரை பார்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள். எப்போதும் தன் அறையில் தான் இருப்பான். அவனுக்கு தேவையானவற்றை அவனது தாய் அஞ்சலை முகம் சுளிக்காமல் செய்தார்.

மகனுக்காக தினமும் ஒரு வேளை விரதம் இருந்தார். தினமும் கோயிலுக்கு சென்று மகன் பெயரில் அபிஷேகம் செய்தவர், அந்த திருநீறை கொண்டு வந்து அவனது நெற்றியில் இடுபவர் சொட்டு சொட்டாக கண்ணீரை விட்டு விட்டு, தன் மகன் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்வார்.‌ இதையெல்லாம் அறிந்த போதும் ஏனோ அனைவரையும் மீறி அவன் மனம் வாணிடம் தான் சென்று நின்றது.‌

அவள் யார், எந்த ஊராக இருப்பாள், பார்க்க அத்தனை அழகாக இருந்தாளே, அவள் பெயர் என்னவாக இருக்கும் என்று ஏதேதோ கற்பனையில் மிதந்தவன் நிச்சயம் அவளைத் தேட வேண்டுமென முடிவெடுத்தான். தன் கரத்தில் இருந்து நழுவி விழுந்த தாலியானது இன்னும் அவள் கழுத்தில் இருந்தால் ஒரு நொடி கூட யோசிக்காமல் அவளை தன்னுடன் அழைத்து வந்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

அவளைத் தேடிக்கொண்டு அவன் செல்வதற்கு தேவையில்லை, அவனது எதிர் வீட்டில் தான் அவள் இருக்கிறாள் என்பதை அவன் அறியும் நாளும் வெகு விரைவில் வர காத்திருந்தது. ஆனால் அதை அறிகையில் இருவரது உள்ளத்திலும் ஏற்படும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளைத் தாங்கிட இருவருக்கும் தைரியம் இருக்கிறதோ என்னவோ, அதை இறைவன் ஒருவனே அறிவான். இறைவனுக்கு விதியும் ஒத்துப் போவதால் தான் இப்படியெல்லாம் நிகழ்கிறதோ என்னவோ!

கல்லூரியின் முன்பு நின்ற பேருந்தில் இருந்து இறங்கிய வாணி தயக்கத்துடன் தான் கல்லூரிக்குள் நுழைந்தாள். அவள் அந்த வராண்டாவை கடந்து செல்வதற்குளாகவே மலர் வந்த பேருந்தும் கல்லூரியின் முன்பு நிற்க, பேருந்தில் இருந்து இறங்கி மலரும் கல்லூரிக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தாள்.

தன் எதிரே செல்லும் ஒரு பெண்ணை ஆர்வத்துடன் கண்டாள் மலர். ஏனெனில் பெரும்பாலும் இக்காலத்தில் சுடிதார் அணியும் பெண்கள் துப்பட்டா அணிவது கிடையாது. ஆனால் அவள் முன்னே செல்லும் பெண்ணோ துப்பட்டா அணிந்திருந்ததோடு இருபுறமும் பின் செய்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படத் தான் செய்தாள். ஒரு முறை தன் தோள்பட்டையைத் திரும்பிப் பார்த்தாள், கல்லூரி கிளம்பி வரும் அவசரத்தில் எப்போதும் துப்பட்டாவை பின் செய்தது கிடையாது என்பதை நினைவு கூர்ந்தாள். யோசனையோடு இந்த பொண்ணு யாரா இருக்கும் என்று நினைத்தவாறே வேக எட்டுக்களுடன் வாணியை நெருங்கினாள்.

ஆனால் அதற்குள்ளாகவே வாணியை இரு இளைஞர்கள் வழிமறித்து நின்றார்கள். அதைக்கண்ட அச்சத்துடன் ஓரடி பின்னால் எடுத்து வைத்த வாணி,“யார் நீங்க?” என்று கேட்டாள் சட்டென்று வரவழைத்த தைரியத்துடன்.‌

தான் புதிதாக படிக்க வந்திருக்கும் கல்லூரியில் தனித்து நடந்து செல்கையில் இரு ஆண்கள் வழி மறித்தால் எந்த ஒரு பெண்ணும் சற்று பயப்படுவாள், அது அவர்களது இயல்பு. இருந்தாலும் வாணி ஏதோ குருட்டு தைரியத்தில். 'யார் நீங்க?’ என்று கேட்டிருந்தாள். ஏனெனில் சுற்றிலும் இத்தனை பேர் இருக்கும் போது தன்னை யாரும் எதுவும் சொல்லி விட முடியாது, செய்து விட முடியாது என்ற எண்ணத்தில் தான் அவர்களிடம் பேசினாள்.

அந்த இரு இளைஞர்களும் அவளை மேலிருந்து கீழ் வரை ஆராயும் பார்வை பார்த்தவர்கள்,
“என்ன நியூ அட்மிஷனோ?” என்று கேட்டனர்.

வாணியும், “ஆமா நியூ அட்மிஷன் தான். நீங்க ரெண்டு பேரும் யாரு, எந்த டிபார்ட்மென்ட், எந்த கிளாஸ், எந்த இயர், எதுக்கு இப்படி எங்கிட்ட கேள்வி கேட்குறீங்க?” என்றாள் படபடவென்று..

அவளை கிண்டலாக பார்த்த இருவருளுள் ஒருவன், “நாங்க ரெண்டு பேரும் தேர்ட் இயர்.‌ உன்ன பார்த்தாலே தெரியுது நீ பர்ஸ்ட் இயர்னு. அப்ப உனக்கு நாங்க சீனியர், சீனியரைப் பார்த்தா இப்படி தான் பேசுவியா மரியாதை கொடுக்க மாட்டியா..” என்றிட,

இன்னொருவனோ, “ம்ம்.. இதுக்கு தண்டனை குடுத்தே ஆகணும். அதனால நீ என்ன பண்ற உன்னோட ரெண்டு காதுகளையும், இரண்டு கையால மாத்தி மாத்தி புடிச்சுக்கிட்டு, 20 தோப்புக்கரணம் போடு அதுக்கப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் குட் மார்னிங் சொல்லு பார்க்கலாம்” என்று சொன்னான்.

அவர்கள் இருவரையும் அதே கிண்டல் குறையாத பார்வை பார்த்தவள், “அப்படியெல்லாம் சொல்லவும் முடியாது, தோப்புக்கரணமும் போட முடியாது. வேணும்னா நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு 100 தோப்பு கரணம் போட்டுட்டு எனக்கு குட் மார்னிங் சொல்லிட்டு போங்க. பர்ஸ்ட் இயரா இருந்தா நீங்க சொன்னதெல்லாம் செய்யணுமா என்ன, அப்படி எல்லாம் என்னால செய்ய முடியாது வழி விடுங்க” என்று சொல்லி விட்டு அவர்களை சுத்தி கொண்டு நடந்தாள் வாணி.

மலரோ அவள் பேசிய தோரணையைக் கேட்டு சிரித்து விட்டாள். பெரும்பாலும் இவர்கள் இருவர் தான் சீனியர் என்று கெத்தாக சுத்திக்கொண்டு அனைவரிடமும் வம்பு வளர்த்துக் கொண்டு இருப்பார்கள் இப்படிப்பட்டவர்களையே வாயடைத்துப் போக வைத்து விட்டாலே இந்த பெண் என்று நினைத்தவள் இன்னும் வேகமாக ஓடிச்சென்று வாணியின் முன்னே நின்றவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு,
“ஹாய் என்னோட பெயர் மலர்விழி, உங்க பேர் என்ன, நீங்க எந்த ஊரு, எந்த டிபார்ட்மென்ட்?” என்று கேட்டாள்.

திடீரென ஒரு பெண் தன்முன்னே வந்து நின்றதும அதிர்ந்தாள் வாணி.‌ ஆனால் அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் பெயர் ‘மலர்விழி' என்றதும் சட்டென்று பரமசிவம் அண்ணா சொன்ன மலர்விழியாக இருக்குமோ என்று நினைத்தாள் வாணி.

பின்னர் அதை அறிந்து கொள்வதற்காக மலரிடம் பேச்சு கொடுத்தாள்.
“என்னோட பேர் மதுரவாணி உங்க பேர் மலர்விழின்னு தானே சொன்னீங்க உண்மையாவே நீங்க மலர்விழியா, நீங்க எந்த டிபார்ட்மென்ட், நீங்க கொளத்துப்பாளையமா?” என்று கேட்டாள் ஒருவித ஆர்வத்துடன்.‌

அவளது அந்த ஆர்வம் எதற்கென்று புரியாத மலரோ, “ஆமா என்னோட பெயர் மலர்விழி தான். நான் கொளத்துப்பாளையம் தான். நான் பாட்னி (தாவரவியல்) டிபார்ட்மெண்ட்” என்றாள்.

“சூப்பருங்க நானே உங்களைப் பாக்கணும், உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.‌ நானும் கொளத்துபாளையம் தான். உங்க அப்பா பரமசிவத்தை எனக்கு நல்லா தெரியும்.‌ எங்க வீட்டுக்கும் அவரு தான் பால் ஊத்துவாரு..” என்றாள் பூரிப்போடு..

“அப்படியா.‌ எங்கப்பா முக்காவாசி ஏரியாவுக்கு பால் ஊத்துவாரு. அந்த ஊருல தான் நாங்களும் இருக்கோம், ஆனா உங்களை நான் பாத்ததே இல்லையே. அதே ஊருல இருக்க எனக்கு தெரியாம நீங்க எப்படி இந்த ஊர்லையே பொறந்து வளர்ந்து இருப்பீங்க. எனக்கு ஒன்னுமே புரியல, ஒருவேளை நீங்க வெளியூர்ல இருந்து இப்ப தான் இங்கே குடி வந்துருக்கீங்களா?” என்று கேட்டாள் மலர்.

”இல்லை இல்லை இல்லை..
இங்க இருக்க எங்க அத்தை வீட்டுக்கு..” என்று உண்மையைச் சொல்ல வந்தவள் சட்டென்று வார்த்தையை தனக்குள் விழுங்கிக்கொண்டு, “இங்க இருக்க தெரிஞ்சவங்க வீட்டுல பேயிங் கெஸ்ட் மாதிரி தங்கி இருக்கேன்” என்றாள்.

அவள் ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் மறைத்ததிலேயே ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மலர் மேலும் அது பற்றி கேட்டு அவளை கஷ்டப் படுத்த வேண்டாம் என்று எண்ணி,
“பரவால்ல நீங்க சொல்ல நினைச்சதை தாராளமா சொல்லலாம்.‌ கட்டாயமா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, தோணுனா சொல்லலாம். நாம இப்ப இங்கிருந்து போலாம், ஆமா நீங்க எந்த டிபார்ட்மென்ட்னு சொல்லவே இல்லையே?” என்று ஞாபகம் வந்தவளாக கேட்டாள்.

”நானும் அதே பாட்னி டிபார்ட்மென்ட் தான் வாங்க போலாம்” என்று சொன்னவாறு மலரின் கை விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டு நடந்தாள் வாணி.

அதை உணர்ந்து புன்னகைத்த மலர், “ஓகே இந்த நிமிஷத்துல இருந்து நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஓகேவா” என்றிட,

“கண்டிப்பா.. எனக்கு நெருங்கிய தோழிகள் இந்த ஊர்ல யாரும் இல்லை.‌ அதனால நீ தான் என்னோட பெஸ்ட் பிரெண்ட்” என்று தான் பிடித்திருந்த மலரின் கையில் அழுத்தம் கொடுத்து சொன்னாள் வாணி.‌ அந்த நிமிடத்தில் ஆரம்பித்த அவர்களது நட்பு இன்று வரை தொய்வில்லாமல் தொடர்கிறது.


இருவரும் ஒன்றாகவே வகுப்பில் வந்து அமர்ந்தவர்கள் அன்றைய வகுப்புகளை ஒருவித உற்சாகத்தோடே கழித்தனர். நியூ அட்மிஷன் என்பதால் அனைவருக்கும் அவளை அறிமுகப்படுத்தி வைத்தார் பேராசிரியர். அதன்பின் கடந்து சென்ற‌ வகுப்புளுக்கான குறிப்புகளை எடுப்பதிலேயே அவளுக்கு அன்றைய நாள் பொழுது கடந்து சென்றது. மதிய உணவு இடைவேளையில் அந்த கல்லூரியை வாணிக்கு சுற்றி காட்டினாள் மலர். கூடவே கேன்டீன் அழைத்துச் சென்று தங்கள் நட்பு ஆரம்பித்த இந்த தினத்தை கொண்டாடும் விதமாக சுட சுட சமோசாவும், டீயும் வாங்கி கொடுத்தாள் மலர்.

வெகு நாட்களுக்கு பிறகு சமோசாவை வாயிலிட்டு மெல்ல சுவைத்து விழுங்கினாள் வாணி. ஏனெனில் அந்த வீட்டில் பெரும்பாலும் அவளுக்கு இது போலான பலகாரங்கள் செய்ய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை உண்பதற்கு வாய்ப்புகள் கிடைத்ததில்லை. வெளியில் சென்று வாங்கி சாப்பிடும் அளவிற்கு அவளது பொருளாதார நிலையும் சரியாக இல்லை என்பதால் வெகு நாட்களுக்கு பிறகு அனுபவித்து அந்த சிற்றுண்டி உணவை உண்டாள். அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளை ஒருவித நெகழ்வுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் மலர். ஏதோ சொல்ல முடியாத துக்கம் ஒன்றை அவள் சுமந்து கொண்டிருப்பது போலவே மலருக்கு தோன்றியது.

இவளுக்கு தன் தந்தையை தெரிந்திருக்கிறது என்றால் நிச்சயம் தன் தந்தைக்கும் இவளைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தெரிந்திருக்கும் அவரிடம் கேட்டு அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள் மலர்..

அதன் பின்பு வந்த வகுப்புகள் யாவும் சற்று கலகலப்புடன் சென்றன. கல்லூரி முடிந்ததும் இருவரும் பேசி சிரித்தவாறே வாயிலை நெருங்கும் தறுவாயில் தன் இருசக்கர வாகனத்தில் அவர்களைக் கடந்து சென்றான் ஆதவ்..
அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் மலருடன் பேசியவாறு பேருந்து நிற்கும் இடத்தில் வந்து நின்றாள் வாணி.

இருவரும் கலகலத்து பேசி கொண்டிருக்கும் போது காலையில் வாணியை வழிமறித்து பேசிய அந்த இருவரும் மீண்டும் அவள் அருகே வந்து நின்று, “ஏதோ இன்னைக்கு உனக்கு முதல் நாளுங்குறதால நீ சொன்னதை மறந்துட்டு மன்னிச்சு விடுறோம். ஆனா இன்னொரு தடவை இதே போல நடந்துக்கிட்ட மத்த சீனியர்ஸ்கிட்ட சொல்லி உன்னை ரேக்கிங் பண்ண சொல்லிடுவோம் ஞாபகம் வச்சுக்க” என்று மிரட்டும் தொனியில் சொல்ல,‌ அதேநேரம் தன் வண்டியின் ஹாரனை ஒலிக்க விட்ட ஆதவ் அவர்கள் தன் புறம் திரும்பியதும், “என்ன சீனியர்ஸ் ஏதோ சொன்ன மாதிரி கேட்டுச்சு. எதாவது சொன்னீங்களா?” என்று கேட்டான்.

ஏற்கனவே ஒரு பெண்ணிடம் வம்பு வளர்த்து அவனிடம் அடிவாங்கி இருந்ததால் இருவரும் சற்று பவ்வியத்துடன்,
“ஒண்ணும் இல்லை ஆதவ்” என்று சொல்லி விட்டு தங்கள் வண்டியில் ஏறி அங்கிருந்து பறந்து சென்று விட்டனர்.

- தேடல் தொடரும்..

 
உறவின் தேடல் -16

சீனியர்ஸ் இருவரும் ஆதவைப் பார்த்து பயந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதைக் கண்டு அனைவரும் சிரித்தனர். அதிலும், “என்னாச்சு ஏன் அவங்க ரெண்டு பேரும் இவரை பார்த்து பயந்து ஓடுறாங்க” என்று எதுவும் அறியாதது போல் வாணி கேட்டு வைக்க,‌ மலரோ, “கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படி தான் பஸ்ட் இயர்ஸூக்கு அட்மிஷன் போட்டாங்க.‌ அட்மிஷன் முடிஞ்சதும் ஸ்டூடண்ட் வர ஆரம்பிச்சாங்க அப்ப இவங்க ரெண்டு பேரும் ராகிங் பண்ணிட்டு இருந்தாங்க. அதைப் பார்த்துட்டு அந்த சீனியர் தன்னை விட மூத்தவங்கன்னு கூட பாக்காம அடி வெளுத்துட்டாரு அதுல இருந்து யாரும் இங்க ராகிங் பண்றது கிடையாது. மறுபடியும் அவங்க உன்னை ராகிங் பண்றதை அவர் பார்த்துட்டாரு போல அதான் திட்டவும் ஓடிட்டாங்க. ஆனா ஒன்னு அந்த சீனியர் மாதிரி யாருமே இருக்க மாட்டாங்க, யாராவது ஹெல்ப் கேட்ட உடனே செய்யறது அவரு தான். அதே மாதிரி பொண்ணுங்க கிட்டயும் நல்லா பேசுவாரு பழகுவாரு, ஜெனியூன்னா நடந்துக்குவாரு. எனக்கு அவங்க ஃபேமிலி மெம்பர்ஸை அவ்வளவா தெரியாது.‌ இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சது இவரை, அந்த பாட்டி அப்புறம் அந்த தாத்தா.‌ அவங்க மூணு பேரையும் ரொம்ப பிடிக்கும், மத்தவங்க எல்லாம் யார் கிட்டயும் அவ்ளோ க்ளோசா பேச மாட்டாங்க போல, நான் வேற யாரையும் நோட் பண்ணல.. கூடவே அம்மா அவங்க வீட்டுக்கு போறதில்ல, அதனால நானும் அந்த வீட்டுக்குள்ள வந்ததில்லை” என்றாள்..

‘மத்தவங்க எல்லாம் வெளியாளுங்கக்கிட்ட பேசுறது என்ன, நிமிர்ந்து பார்த்துட்டாலே அதிசயம் தான்’, என்று மனதில் நினைத்து கொண்டாள் வாணி.
ஆனால் இவர்களது உரையாடல்களை கேட்ட இரு ஜோடி காதுகள் அத்தகவல்களை பத்திரமாக நெஞ்சில் பதுக்கி வைத்துக் கொண்டது.

அதே நேரம் அவர்கள் செல்லும் பேருந்து வந்ததால் இருவரும் பேசுவதை விடுத்து பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள்.‌ உங்க வீடு எங்க இருக்கு, எந்த ஏரியா, எந்த சந்து என்பது முதற்கொண்டு அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டாள் மலர். ஆனால் வீட்டு என்னை மட்டும் வாணி தெரிவிக்கவில்லை.அவர்கள் இறங்கும் பேருந்து நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கி நடக்கத் துவங்கினார்கள்.

சரியாக அதேநேரம் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வர கிளம்பிக் கொண்டிருந்தான் அகில்.‌ அன்று நாள் முழுவதுமே அவனுக்கு சற்று எரிச்சலாகவே தான் இருந்தது. அதிலும் காலையில் பேசிய அந்த பெண்ணை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் கன்னத்தில் நாலு அறை கொடுத்து தன் கோபத்தை தணித்துக் கொள்ள வேண்டும் என்று கூட எண்ணியிருந்தான்.

தான் அவளை அடித்தால், அதை அவள் திருப்பி செய்ய இரு நிமிடங்கள் கூட ஆகாது என்பதை அவன் உணர தவறியிருந்தான். தான் ஒரு வார்த்தை அவளை தவறாகப் பேசியதற்கே ஓராயிரம் வார்த்தைகள் அவள் தன்னை இழிவு படுத்தி விட்டாள், அப்படி இருக்கும் போது தான் அவளை அடிக்க கை நீட்டுகையிலேயே,‌ அவள் தன்னை அறைந்து இருப்பாள் என்பதை அவன் சற்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை. அந்தக் கோபத்தை அலுவலகத்தில் தன்னிடம் பணிபுரியும் மற்ற தொழிலாளர்களிடம் தான் காட்டினான்.

அதே எரிச்சலான மனநிலையோடே அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவன், ‘முதல்ல வீட்டுக்கு போயி ஸ்ட்ராங்கா காபி குடிக்கணும் அப்ப தான் தலைவலி விடும்', என்று நினைத்தவனாய் அவசர அவசரமாக வீட்டுக்கு கிளம்பினான். ‌அவன் வருவதற்குள்ளாகவே வாணி தன் அறைக்கு சென்று சேர்ந்திருக்க, பேருந்து நிலையத்திலிருந்து எதிர்ப்புற சாலையை கடந்து ஒரு சந்தில் நுழைந்து தன் வீட்டிற்கு செல்லும் சேரி நிறைந்த பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மலர்.

வீட்டுக்கு வந்த வாணி பின்புறம் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து குளித்து முடித்து வேறு உடை அணிந்தவள் இரவு உணவுக்கு தேவையானவற்றை நறுக்கி,‌ இரவுணவை சமைக்க ஆரம்பித்தாள். சமைத்து முடித்ததும் அன்றைய எழுதும் பணிகள் அவளை உள்ளிழுத்துக் கொள்ள, இன்முகத்துடன் அவற்றைச் செய்ய ஆரம்பித்தாள்.‌ சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

ஆதி விநாயகமும் பூங்கோதை நாச்சியாரும் கதவை தட்டிவிட்டு அவள் அறையின் வெளியே நின்று இருந்தார்கள்.‌ அவர்கள் இருவரையும் பார்த்ததும் தயக்கத்துடன் எழுந்து நின்றவள்,
“உள்ள வாங்க பெரியய்யா, பெரியம்மா” என்று அவர்களை உள்ளே அழைத்தாள்.

உள்ளே வந்தவர்கள் கையில் இருந்த பொருட்களை அவளிடம் கொடுத்து விட்டு கீழே அமர்ந்தவர்கள், “முதல் நாள் கல்லூரி எப்படி இருந்துச்சு?” என்று பொத்தாம் பொதுவாக பேச்சை ஆரம்பித்தனர்.‌ அதன்பிறகு மடை திறந்த வெள்ளம் போல் கல்லூரியில் நடந்தது தனக்கு கிடைத்த புது தோழியின் அறிமுகம் முதல், தன்னை ரேகிங் செய்த சீனியர்களுக்கு தான் கொடுத்த பதிலடி, அதன் பிறகு அந்த சீனியர்களை ஆதவ் ஓட ஓட விரட்டியது வரை அனைத்தையும் புட்டு புட்டு வைத்தவள் முகம் மலர இதழ் விரிய புன்னகைத்தாள்.

சொல்லப்போனால் இப்போதான் அவளது உண்மையான புன்னகையையே அவர்கள் பார்க்கிறார்கள். இருவருமே மெய்மறந்து அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க,‌ அவர்களை முன்னே அனுப்பி வைத்து விட்டு கதவுக்கு அந்தப் பக்கம் நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதவுக்கு அவளது அந்த புன்சிரிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.‌ ‘ஆண்டவா இதுக்கு மேலையாவது அவ சந்தோஷமா இருக்கணும்' என்று நினைத்தவனாய் அவ்விடத்தை விட்டு சென்று விட்டான்.‌ சிறிது நேரத்தில் தன்னிலைப் பெற்றவளாய் அமைதி காத்த வாணி, “நீங்க மட்டும் இந்த உதவியை செய்யாம இருந்திருந்தா கண்டிப்பா இதுக்கு மேல நான் படிச்சுருக்க மாட்டேன், நல்ல நட்பும் கிடைச்சுருக்காது, நல்ல காலேஜ்ல சீட்டும் கிடைச்சுருக்காது. வாழ்நாள் முழுக்க இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் பெரியய்யா, பெரியம்மா,‌ ஆமா இது என்னது?” என்று அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சுட்டிக்காட்டி கேட்டாள்.

“நீ காலேஜ் போற இல்லையா, காலையில் சமைச்சு கொண்டு போற சாப்பாடு கெட்டுப்போகாம இருக்குறதுக்காக ஹாட் பாக்ஸ் மாதிரி சில்வர்ல வாங்கிட்டு வந்துருக்கோம். அப்புறம் வாட்டர் பாட்டில் ரெண்டும் வாங்கிட்டு வந்தோம், இதை வச்சுக்கம்மா வேணாம்னு சொல்லாத”

“இல்ல என்கிட்ட டிபன் பாக்ஸ் இருக்கு. இது வேணாமே” என்று சொல்லி அவள் மறுத்தாள்.‌ ஆனால் அவர்களோ பிடிவாதமாக அதை அவளிடம் கொடுத்து விட்டு, “நல்லா படிக்கணும் சரியா!” என்று சொல்லி விட்டு சென்று விட்டனர்.
அவர்களை நன்றியுடன் பார்த்தாள் வாணி.

இங்க வீட்டிற்கு வந்த மலர் தன் தந்தை பால் ஊற்ற சென்று விட்டதால் அமைதியாக தன் வேலையை கவனித்தவள் இரவு அவர் வீட்டுக்கு வந்ததும் அவள் முதலில் கேட்ட கேள்வி, “அப்பா மதுர வாணியை உங்களுக்கு எப்படி தெரியும், அவளுக்கு என்ன பிரச்சனை?” என்பது தான்.

வாணியை முதன் முதலாக சந்தித்ததிலிருந்து அவள் அங்கு அனுபவிக்கும் கஷ்டங்கள் வரை அனைத்தையும் தன் மகளிடம் தெரிவித்தார் பரமசிவம். அதிலும் சொந்த அண்ணன் மகளையே இப்படி வேலைக்காரியை விட மோசமாக நடத்தும் அந்த பெண்மணியை அறவே வெறுத்தவர், அதையும் சொன்னார்.

கண் கலங்க தன் தந்தையைப் பார்த்தவள், “செய்யாத தப்புக்கு இந்த பொண்ணு தண்டனை அனுபவிக்கிற மாதிரி இருக்குப்பா. அவங்க அப்பா தப்பே பண்ணி இருக்கட்டும் அதுக்காக இவளை தண்டிப்பது எந்த விதத்துல நியாயம்?” என்றிட.

“அதை நினைச்சா தான் எனக்கும் கவலையா இருக்குதும்மா. இன்னும் சொல்லப்போனா கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் அந்த பொண்ணைப் பத்தி எதுவும் தெரியாது. சொந்தக்காரங்க பொண்ணு போல, லீவுக்கு இங்க வந்து இருக்குன்னு நினைச்சேன். அதுக்கப்புறம் தான் எனக்கே விஷயம் தெரியும். இதுல கொடுமை என்ன தெரியுமா, அவங்களுக்கு விதவிதமா சமைச்சு வைக்கும் அந்த பொண்ணு, ஆனா அதை அந்த பாப்பா சாப்பிடக் கூடாதாம். தனக்கு குடுத்துருக்க ரூம்ல தானே சமைச்சு சாப்பிடணுமாம் இதெல்லாம் கொடுமை இல்லையா?” என்று ஆதங்கத்தோடு சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டு மலருக்கு கண்ணீரே வந்துவிட்டது. இன்று அவள் சமோசாவை அவ்வளவு உணர்வு பூர்வமாக சுவைத்து, ரசனையுடன் உண்டதற்கான காரணம் இப்போது அவளுக்கு புரிந்து போனது.

“இனிமே அவ என் பொறுப்புப்பா அவளை படிக்க வெச்சு நல்ல நிலைமைக்கு ஆளாக்கி அந்த வீட்டை விட்டு வெளியே கொண்டு வர வேண்டியது என் கடமை நீங்க கவலைப்படாதீங்க. என்ன ஆனாலும் அவளை விட்டு நான் விலகி போகமாட்டேன்.” என்றாள் உறுதியுடன்.

ஏதோ ஒரு விதத்தில் தன் மகளும் அந்த பெண்ணின் துயரத்தை துடைக்க உறுதுணையாக இருக்கப் போகிறாள் என்ற மகிழ்வில் சரி என்று தலையசைத்த பரமசிவத்திற்கு தெரியவில்லை இருவரது வாழ்வும் கூட இறுதிவரை ஒன்றாகத்தான் பிணைக்கப்பட்டிருக்கிறதென்று..

பின் மறுநாள் விடியலில் அவசர‌ அவசரமாக கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த தன் மகளின் கையில் இரண்டு நூறு ரூபாய் தாள்களை வைத்தார் பரமசிவம்.‌ எப்போதும் ஐம்பது ரூபாய் தரும் தந்தை இன்று இருநூறு ரூபாய் கொடுத்ததும் மகிழ்வுடன் நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்தவள், “நீங்க என்னோட அப்பாவா, சொல்லுங்க ப்ளீஸ் நீங்க என்னை பெத்தவர் தானா. இல்ல வேற்றுகிரகவாசி யாராவது என்னோட அப்பா உருவத்துல இங்க வந்துட்டாங்களா. நீங்க யாரு, எதுக்கு இப்படி எங்க அப்பாவோட உருவத்துல வந்துருக்கீங்க?” என்று அவள் சற்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டதும் பக்கென்று சிரித்து விட்டார் மலரின் தாய் ஆராயி.

மகள், மனைவி இருவரையும் முறைத்தவர், “என்ன என்னைப் பார்த்தா உங்களுக்கு அடையாளம் தெரியலையா?” என்று அவரும் சற்று குரலை மாற்றி கூற, அனைவரும் சிரித்து விட்டனர்.‌

பின்பு சிரிப்பை கைவிட்டவர், “இது உனக்கு மட்டும் இல்ல அந்த பொண்ணுக்கும் சேர்த்துதான். அந்த பொண்ணு சொன்னதை வச்சு பார்க்கும் போது மாச மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகை பணம் மாதிரி தரும் போல. அந்த வீட்டுல வேலை செய்யும் பொன்னி இது மாதிரி செய்யின்னு சொன்னதும் அந்த பாப்பாவும் சரின்னு சொல்லுச்சு, அதனால அப்படித்தான் செய்ய போகுதுன்னு நினைக்கிறேன். முடிஞ்ச வரைக்கும் நம்ம கஷ்டம் நம்மளோடவே போகட்டும். ஆனா அந்த பொண்ணாவது கொஞ்சம் கஷ்டத்துல இருந்து வெளியே வரணும், அதுக்கு நாம நம்மளால முடிஞ்ச உதவியை செய்யலாம். கொஞ்சநாள் ரெண்டு பேரும் பஸ்ல போங்க அதுக்கப்புறம் நான் எதாவது டூவீலர் ஏற்பாடு செய்யிறேன்” என்றார் பரமசிவம்.

சரி என்று சொல்லிவிட்டு கல்லூரிப்பையை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினாள் மலர்.‌ அவர்களுக்கு சொந்தமாக வீடு இருக்கிறது, அதுவும் கூரை வீடு தான்.‌ வீட்டுக்கு பின்புறம் பட்டிபோல அமைத்து மாடுகளை வளர்த்து வருகின்றனர்.‌ அதில் தான் பாலை கறந்து தினமும் அனைத்து வீடுகளுக்கும் விநியோகம் செய்து கொண்டு வருகிறார் பரமசிவம். வீட்டு வேலை, இதர வேலைகளை செய்து முடித்துவிட்டு மாடுகளுக்கு தீவனம் போட்டு, தொட்டிகளில் அவை குடிக்க தண்ணீர் நிரப்பி வைத்து விட்டு அருகில் இருக்கும் வீடுகளுக்கு வீட்டு வேலை செய்ய சென்று விடுவார் ஆராயி.

வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு மீண்டும் மதியம் 12 மணிக்குள் வீட்டுக்கு வருபவர் மாடுகளுக்குத் தீவனம் வைத்து, தண்ணீர் காட்டி விட்டு சற்று ஓய்வெடுப்பார். பிறகு கட்டுத்தரையை கூட்டி சுத்தம் செய்து விட்டு, வீட்டு வேலைகளையும், தன் உடல் தூய்மையையும் கவனிப்பார், பிறகு அனைத்து மாடுகளிலிருந்தும் பாலை கறந்து கேனில் ஊற்றி தன் கணவனிடம் கொடுத்து அனுப்புவார்.

பரமசிவமும் அவ்வளவு நேரம் வேறு வேலைக்கு சென்று விட்டு 4 மணி போல் வீட்டிற்கு வருபவர் குளித்து முடித்து பால் கேனை வாங்கிக்கொண்டு பாலூத்த கிளம்பிவிடுவார், இதுதான் அவர்களது அன்றாட வாழ்க்கை நடைமுறைகள். ஒரே பெண் என்பதால் மலருக்கு சற்று செல்லம் அதிகம். அவளுக்கு தந்தையிடம் எந்த அளவிற்கு செல்லம் அதிகமோ, அதே அளவிற்கு தாயிடம் கண்டிப்பும் உண்டு..

எப்போதும் போல அவள் பேருந்து நிலையத்திற்கு வந்து நின்ற போது வாணி இன்னும் வராமல் இருப்பதை உணர்ந்து, ‘என்ன ஆச்சு ஏன் இன்னும் வாணி வரலை’ என்று நினைத்தவாறு அவள் தங்கியிருக்கும் வீடு இருந்த வீதியின் பக்கமே பார்வையை வைத்துக் கொண்டு நின்று இருந்தாள். அப்போது அவளைத் தாண்டி சென்றது அகிலின் கார்.

மலருக்கு அவனது காரையும், ஓட்டுநர் இருக்கையில் இருந்த அவனையும் அடையாளம் தெரிந்தது, இருந்தும் அவனை கண்டதும் வெடுக்கென்று முகத்தை திருப்பியவளாய் வாணியை எதிர்பார்த்து நின்றிருக்க, சரியாக தூரத்தில் அவர்கள் செல்லும் பேருந்து வந்தது.

‘ ஐயையோ! வாணி இன்னும் வரலை அதுக்குள்ள பஸ் வேற வருதே?’ என்று அவள் பதற்றத்துடன் நினைத்துக் கொண்டிருக்கும் போது ஓட்டமும் நடையுமாக ஓடிவந்து, சிறு புன்னகையுடன் மலரின் அருகில் நின்றாள் வாணி.

இதை கவனிக்காமல் சென்றிருந்தான் அகில். அவள் வெடுக்கென்று முகத்தை திருப்பியதும் இவனுக்கும் சுள்ளென்று கோபம் எழ, “ஆமா இவங்க பெரிய பேரழகி நாங்க இவளைப் பார்த்ததும் அப்படியே ரோசம் பொத்துகிட்டு வந்துருச்சு சரியான இராட்சசி, திமிர் பிடிச்சவ” என்று திட்டிக் கொண்டே காரை வேகமாக செலுத்தி அவன் அங்கிருந்து சென்றிருந்ததால் மலரின் அருகில் வந்து வாணி நின்றதை கவனிக்கவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பையும் அறிந்திருக்கவில்லை.

ஆனால் அவன் அதை அறிந்து கொள்கையில் அனைத்தும் கைமீறி சென்றிருக்கும்..

நேற்று போல் இல்லாமல் இன்று இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்கு சென்றனர். ஒன்றாக அமர்ந்து அன்றைய நாள் பொழுதை கடத்தினார்கள். அவ்வப்போது மலரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தன் குறிப்பேடுகளில் கவனமாக அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டாள் வாணி..

அதுவும் அவ்வபோது அவர்களுக்கு தெரியாமல் பெண்கள் இருவரையும் கண்காணித்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல் தான் அவர்கள் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான் ஆதவ். அவனுக்கே தெரியாமல் அவனிடம் தன் மனதைப் பறி கொடுத்திருந்தாள் அந்த ஜூனியர் பெண். அதனால் ஆதவ்வைக் கண்காணிக்க ஆரம்பித்தாள்..

அதிலும் அவ்வப்போது ஆதவ்வின் செயல்கள் அந்த இரு பெண்களையும் சுற்றியே நகர்வதைக் கண்டவளுக்கு 'ஒரு வேளை பிளே பாயா இருப்பானோ?'௭ன சந்தேகம் வந்தது. ஆனால் அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் விதமாக அவன் மற்ற பெண்களிடம் கண்ணியத்துடன் பழகுவதோடு, தேவையின்றி பேசாததை கண்டறிந்தாள்.

ஆதவ் அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு அரண் போல் செயல் படுவதை உணர்ந்தவளுக்கு அவர்கள் இருவரும் ஒன்று அவனுக்கு தெரிந்த பெண்களாக இருக்க வேண்டும் அல்லது ஒரே ஊரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.‌ அப்படி இருக்கும் பட்சத்தில் தங்கள் ஊரை சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியவள் அதை உறுதி செய்யும் விதமாக தன் தோழிகள் இருவரை அனுப்பி அந்த பெண்கள் இருவரும் எந்த ஊர் என்ற டீடைல்லை விசாரித்து விட்டு வரச் சொன்னாள். விசாரித்ததில் அவர்கள் இருவரும் அவனது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது, அதனால் அந்த சந்தேகத்தை விடுத்து அவன் பின்னே சுற்ற ஆரம்பித்தாள், அன்று படியில் அவனிடம் தன் மனதைப் பறி கொடுத்த அவனது டிபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த ஜூனியர் மாணவி சுவாதீனா.

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. இதை ஏதும் அறியாத ஆதவ்வோ எப்போதும் போல் தான் உண்டு தன் படிப்புண்டு என‌ இருந்தவன் மூன்றாம் ஆண்டின் பாதியை எட்டி இருந்தான். மலர், வாணி இருவரும் தங்கள் முதல் வருட கல்லூரி வாழ்க்கையில் ஆறு மாதத்தினை நல்லபடியாக முடித்திருந்தனர். இந்த ஆறு மாத இடைவெளியில் தினம் கோவிலுக்கு செல்ல முயற்சித்தாள் வாணி. நேரமின்னை காரணமாக செல்ல முடியாததால் வாரம் இருமுறை எப்படியாவது கோயிலுக்கு சென்று விடுபவள் மானசீகமாக தன் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிற்றை தந்தவனுக்காக வேண்டிக் கொள்வாள்..‌

அதேபோல் எப்போதாவது மலர் தாமதமாக கல்லூரிக்கு கிளம்பி வரும் போது எதிரில் அகிலைக் காண நேரிடும். ஆனால் அவன் முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதால், இவளும் எதுவும் பேசமாட்டாள், அவனை கவனிக்காதது போலவே சென்று விடுவாள். இப்படியே தான் இந்த ஆறு மாத காலமும் நகர்ந்து சென்றிருந்தது.


இங்கு தேவேஷ்வருக்கு சற்று உடல்நிலை சரியானதும் வெளியே செல்ல முற்பட்டவனை மீண்டும் வீட்டிற்குள் அடைத்து வைத்து எங்கும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.‌ கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் முடிந்த பின்பு அவன் உடல்நிலை சற்று சீரானது,‌ ஆனால் எங்கே அவனுக்கு மீண்டும் ஆபத்து வந்து விடுமோ என்று நினைத்து அவனை வெளியே அனுப்ப பயந்தார்கள். மேலும் பதினைந்து நாட்கள் கடந்த பிறகே வீட்டை விட்டு வெளியே வந்தான்.

அவன் முதலில் சென்றது கோயிலுக்கு தான். கடவுளை வணங்கி விட்டு அர்ச்சகரிடம் பேச்சு கொடுத்தவன் வாணியைப் பற்றி விசாரிக்க, அவரோ அவனை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தவர்,
“இங்க நிறைய பொண்ணுங்க வர்றாங்க நீங்க யாரை கேட்குறீங்கன்னு தெரியலையே தம்பி” என்று மழுப்பலாக பேசினார்.

இவனோ அன்று அவள் உடுத்தியிருந்த ஆடை அலங்காரங்கள் முதற்கொண்டு, அவளது பின்னலின் நீளம் வரை அனைத்தையும் சொல்ல அப்போதும் அவர் சொல்ல மறுத்தார். ‘இவர் எதுக்கு அந்த பொண்ண பத்தி கேக்குறாரு. வேணாம் நாம சொல்லாம இருக்குறது நல்லது, பாவம் மறுபடியும் அந்த பொண்ணுக்கு கஷ்டம் வராம இருக்கணும் அதுக்காகவாவது நாம சொல்லாம இருக்குறது நல்லது' என்று நினைத்தவர்,
“அப்படி எந்த பெண்ணையும் நேக்கு தெரியாது” என்று பதில் சொல்லி அனுப்பி வைத்து விட்டார்.

ஆனால் அதன் பிறகும் நாள் தவறாமல் கோயிலுக்கு வர ஆரம்பித்தான். ஆனால் அந்த வாரத்தில் மாதவிலக்கு ஏற்பட்டு இருந்ததால் வாணி கோவிலுக்கு வரவில்லை.‌ வாரம் முழுவதும் கோயிலுக்கு வந்து, அவளைத் தேடி நொந்துப் போனவன் ‘ஒருவேளை அந்த பொண்ணு இந்த ஊர் இல்லையோ’ என்று நினைத்து பெருமூச்சு விட்டவனாய் தளர்வோடு வீட்டிற்கு வந்தான்.

பின் தன் நண்பன் கார்த்திக்குக்கு அழைத்தவன் அவனது நலனையும், அவனது மனைவி கீதாவின் நலனையும் கேட்டு அறிந்து கொண்டான். தற்போது கீதா இரு மாத கருவை சுமந்து கொண்டு இருப்பதால் அவர்கள் அதைத் தெரிவித்தனர்.‌

மனமகிழ்வோடு அவர்கள் இருவருக்கும் வாழ்த்து சொன்ன தேவேஷ்வர்,“என்ன ஆனாலும் சரி இந்த ஊர் பக்கம் வந்துடாதீங்க.‌கீதாவோட ஃபேமிலி மெம்பர்ஸ் இன்னும் தீவிரமா உங்களை தேடிக்கிட்டு இருக்க மாதிரி தெரியுது, கண்டிப்பாக உங்களை தேடி கண்டு பிடிச்சே ஆகணுங்குற வெறியில இருக்காங்க, அதனால முடிஞ்சவரைக்கும் பத்திரமா இருங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

மேலும் நண்பன் ஒருவனுக்கு அழைத்து சில விஷயங்களை பேசி முடித்துவிட்டு அழைப்பை துண்டித்தான்.‌ அன்று வாணியின் கழுத்தில் மாலை இடும் போது அருகிலிருந்த நண்பனுக்கு தான் அழைத்திருந்தான்.

அவனுக்கும் அப்பெண்ணின் நினைவு இருந்தாலும் சற்று தயக்கத்துடன் தேவேஷ்வரிடம் ஒரு கேள்வியை முன் வைத்தான். அந்த கேள்வி இன்னும் தேவேஷ்வரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. ‘ஒருவேளை அந்த பொண்ணு அந்த தாலியை தூக்கி எறிஞ்சிட்டு போயிருந்தா என்ன பண்றது. இந்த ஆறு மாசத்துல அந்த பொண்ணுக்கு கல்யாணமாகியிருந்தா என்ன பண்றது?’ என்றெல்லாம் அவன் கேட்டு வைக்க தேவேஷ்வரின் மனமோ அப்படியும் நடந்திருக்குமோ என்றெண்ணி தவிக்க துவங்கியது.

அவனது மற்றொரு மனமோ ‘இல்ல அப்படியெல்லாம் இருக்காது‌. அன்னைக்கு தாலிய கழட்டி குடுன்னு கேட்டதற்கு திருப்பித் தர முடியாதுன்னு சொன்னாங்க, அப்படிப்பட்ட பெண் எப்படி அதை கழட்டி எறிஞ்சுட்டு போயிருக்க முடியும், எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்க முடியும் கண்டிப்பாக அப்படியெல்லாம் நடந்துருக்காது, பார்ப்போம் தேடிப் பார்ப்போம் அவங்க எனக்குன்னு பொறந்தவங்களா இருந்தா என் தேடலோட விளைவா அவங்க கிடைப்பாங்க' என்று எண்ணியவன் மறுநாளில் இருந்து கோயிலுக்கு தினமும் சென்று கோயிலுக்கு வெளியே கடை வைத்திருப்பவர்களிடம் விசாரிக்கலாம் என்று எண்ணியிருக்க, அதற்கு முட்டுக் கட்டையாய் அவன் மறுநாள் காலையில் கிளம்பும் போது அவன் முன்னே வந்து நின்றார் சிவசுப்பிரமணியம்.

தந்தையை நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் பேசாமல் தலை குனிந்து கொள்ள, அவரும் சமையல் கட்டு பக்கம் திரும்பி, “இந்த அஞ்சலை வெளியவா” என்றழைத்தார்.

அவசர அவசரமாக அடுப்பு வேலையை விட்டு விட்டு வெளியே வந்தவர் தந்தை மகன் இருவரும் எதிரெதிரே முறுக்கிக் கொண்டு நின்றிருப்பதைக் கண்டு சட்டென்று நெஞ்சில் பரவிய அச்சத்துடன், “சொல்லுங்கங்க ” என்றார் கணவனிடம்.

“துரை எங்க கிளம்பிட்டாருன்னு கேளு” என்றார் தன் மனைவியிடம்.

அவனோ தயக்கத்துடன்,
“கோயிலுக்கு போறேம்மா” என்று சொன்னது தான் தாமதம் ஹாலில் இருந்த சோபாவை எட்டி உதைத்து தள்ளியவர், “கோயில்ல தினமும் உம்புள்ளைக்கு என்ன சோலின்னு கேளுலே. அங்கன சும்மா சாமி கும்பிட போனவியன் எதுக்காக அங்கிருக்கவுககிட்ட யாரையோ விசாரிக்கோணும்‌. தெனமும் கோயிலுக்கு போறியான் புள்ளை உருப்பட்டுருவியான்னு நான் கனா கண்டுக்கிட்டு இருந்தா உம்புள்ள என்ற மானத்தை வாங்கத்தேன் அங்கன போறான்னு இப்பத்தேன் தெரிய வருது.கோயிலு பூசாரித்தேன் சொல்லி அனுப்பியிருக்காரு, இவன் பண்ற கேடித்தனத்தை..” என்று உறுமினார்.

“ஏனுங்க யாரோ சொன்னாகன்னு நம்ம புள்ளைய ஏசுதீயலே, இது நல்லாவா இருக்கு”

“ஒருத்தன் சொன்னா வுட்டுறலாம், பத்து பேரு சொன்னா நான் என்ன நெனைக்கட்டும். உம்புள்ளைய மருவாதையா இருக்கச்சொல்லு இல்லன்னா நான் புள்ளைன்னு பாக்கமாட்டேன் அடி வெளுத்துப்புடுவென். உம்புள்ள‌ கோயிலுக்கெல்லாம் போக வேணாம் அதான் படிச்சு முடிச்சுட்டான்ல, நம்ம நெல்லு குடோனுக்கு போச்சொல்லு. அப்படியே வயக்காட்டையும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வர சொல்லு. கூடவே சாயங்காலத்துக்குள்ள கரூர் டவுன் வரைக்கும் போயி தோட்டத்துக்கு தேவையான உரத்தையெல்லாம் நாம வழக்கமாக எடுக்கிற கடையில எடுத்துட்டு வரச் சொல்லு. விலாசம் அந்த டிவி பொட்டி மேல இருக்க நோட்டுல இருக்கு எடுத்துக்கிட்டு போய் வரச்சொல்லுலே. இதுக்கு மேலயாவது உம்புள்ளைய கொஞ்சம் சூதானமா இருக்கச்சொல்லு.‌ மத்தவியளுக்காக அதச்செய்யறேன், இதச்செய்யறேன்னு வயசு திமிருல ஆடிக்கிட்டு தேவையில்லாம எதையாவது இழுத்துக்கிட்டு வந்து நின்னான்னு வச்சுக்க, இதுக்கு மேல ஆம்பிள பிள்ளை, தோளுக்கு மேல வளந்தவியன்னு கூட பார்க்க மாட்டான் கட்டி வெச்சு தோலை உருச்சுப்புடுவெங்குறதை நெனப்புல வெச்சுக்கிட்டு கிளம்ப சொல்லு” என்று காட்டமாக சொல்லி விட்டு வெள்ளைத் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நடையை கட்டினார்.

அவர் சொன்னதைக் கேட்டு ஸ்தம்பித்து விட்டான் தேவேஷ்வர். தந்தை சொல்லை மீறி சென்றாலும் பிரச்சனை போகாவிட்டாலும் தன் மனம் கவர்ந்தவளைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றிருந்தான்..

- தேடல் தொடரும்..
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom