Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

Status
Not open for further replies.
உறவின் தேடல் -11.1

பண்ணையாரின் குடும்பம்
மட்டுமின்றி, ஊர் முக்கியஸ்தர்கள் பெரிய மனிதர்கள் தலைக்கட்டுக்காரர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் என அனைவரும் கோயிலுக்கு வந்து சேர்ந்து இருந்ததால் கலவரம் சற்றே மட்டுப்படுத்தப்பட்டது... எதிரெதிர் தரப்பினர் கைகலப்பை விட்டு விட்டு பிரிந்து நின்றனர்.

அனைவரையும் ஒரு அழுத்தமான பார்வையோடு எதிர்கொண்ட பண்ணையார்,‌ குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடக்கும் தன் மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு துக்கத்தை தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டவர் தன் ஆட்களிடம், “என்னடே வேடிக்கை பார்த்துக்கிட்டு மச மசன்னு நிக்கிறீக? மொதல்ல இவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்கடே.. என் மகனுக்கு ஏதாவது ஆச்சு நான் யாருன்னு அம்புட்டு பேரும் தெரிஞ்சுக்குவானுகடே. இந்த பஞ்சாயத்தை சுமூகமாக தீர்த்துப்புட்டு போலாம்னுதே வந்தேன்.‌ ஆனா எம்மவனுக்கு எதாவது ஆச்சு நானே அம்புட்டு பேரையும் வெட்டி சாச்சுப்புடுவேன்டே. என்னடே நான் பாட்டுக்கு சொல்லிக்கிட்டே இருக்கேன் மசமசன்னு நின்னுகிட்டே இருக்கவனுங்க.‌ இப்ப எம்மவனைத் தூக்கிட்டு போறியலா இல்ல நானே தூக்கிட்டு போகவாடே..” என்று தன் கணீர் குரலில் சொன்னதும் பரபரவென்று அங்கிருந்தவர்கள் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

கூட்டத்தில் நின்றிருந்தவர்களுள் நால்வர் வேகமாக ஓடிவந்து கைத்தாங்கலாக தேவேஷ்வரை தூக்கி காரில் போட்டுக்கொண்டு மருத்துவமனையை நோக்கி சென்றனர்.‌ அந்த வண்டியின் பின்னே அவனது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் சென்றார்கள்.

ஆனால், சிவசுப்பிரமணியமோ அவர்களுடன் செல்லாமல் பஞ்சாயத்து தலைவர்களின் முன்னால் தன் புகாரை முன் வைத்தார்.

“நான் இதுநாள் வரைக்கும் இங்க நடக்குற எந்த விடயத்துலையும் நேர்மையாத்தேன் இருந்துருக்கேன். எது செஞ்சாலும் நேர்மையாத்தேன் செஞ்சேன்,‌ என் நடவடிக்கையில பொய்யோ, பிராடோ இருந்ததில்லை, அது உங்க எல்லாருக்கும் தெரியும். என் பையன் செஞ்சது தப்பாவே இருக்கட்டுமே, அவன் தப்பு செஞ்சா, அதை அப்பங்குறன் முறையில எங்கிட்ட தானே சொல்லிருக்கோணும். இல்லையா பஞ்சாயத்தைக் கூட்டியாவது சொல்லி இருக்கலாமே? அதை விட்டுப்புட்டு இப்படி என் புள்ளையைக் கொலை பண்ற அளவுக்கு போயிருக்காங்கன்னா அவிங்களுக்கு எம்முட்டு தகிரியம் இருக்கோணும். இதெல்லாம் தப்பில்லைங்களா? இதுக்கு நீங்களே ஒரு ஞாயத்தை சொல்லுங்க...” என்று கேட்டிட.‌

அங்கிருந்த யாருக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
தேவேஷ்வரின் நண்பர்கள் கூட்டமும் சரி, புது மாப்பிள்ளையான கார்த்திக் மற்றும் அவனது மனைவியான கீதாவும் சரி,‌ ஊர் மக்களும் சரி அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்புடனே செய்வதறியாது நின்றிருந்தனர்.

வெளியூரில் இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்று விட்டு அப்போதுதான் வீடு திரும்பி இருந்த கார்த்திக்கின் பெற்றோர்களும் தகவல் அறிந்து அவசர அவசரமாக கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு குழுமியிருந்தக் கூட்டத்தை கண்டு அவர்களுக்கு பயம் இல்லை, ஆனால் தேவேஷ்வரின் நிலையை அறிந்து மனமுடைந்து விட்டனர். தன் மகனுக்காக உயிரை கூட இழக்கத் துணிவான் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இதற்கும் இரு குடும்பத்துக்கும் இடையே பல வருடங்களாக பேச்சு வார்த்தையே இல்லை. சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தாரும் பேசிக் கொள்வதில்லை அப்படி இருக்கும் போது தன் மகனுக்காக இந்த அளவிற்கு இறங்கி, தன் உயிரை கூட துச்சமென மதித்து அவன் நேசித்தவளை கட்டி வைத்திருக்கிறானே என்று தேவேஷ்வரின் மேல் அவர்களுக்கு அளவு கடந்த அன்பும், மரியாதையும் பெருகியது.

அனைவரும் வந்து விட்டதை உறுதிசெய்த பஞ்சாயத்து குழுவினர் கோவிலிலேயே இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தையைத் துவங்கினார்கள். முதலில் இரு தரப்பினரிடமும் பொத்தாம் பொதுவாக, “ஐயா உங்க பொண்ணும், இவங்க பையனும் கல்யாணம் பண்ணிட்டாங்க இதுல கூட பழகுனவங்கங்குற முறையில, கூட நின்ன பசங்கள்ல ஒருத்தரை குத்தி கொலை பண்ற அளவுக்கு போயிருக்கீங்களே, இதெல்லாம் நல்லாவா இருக்கு,‌ இந்த ஊர் பஞ்சாயத்துல இது மாதிரிரியான புகார் வந்ததே கிடையாது..” என்று ஆரம்பிக்கும் போது இடையில் குறுக்கிட்டனர் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் அவளைச் சார்ந்தோர்கள்.

“சரிதானுங்க... உங்க ஊரு பஞ்சாயத்துல இந்த மாதிரி வந்துருக்க வாய்ப்பு இல்லை தானுங்க, ஏன்னா வழக்கமா இங்கிருக்க பசங்க தானுங்க எங்க ஊரு பொம்பளை புள்ளைகளை கூட்டியாந்துடுறானுங்க, இதெல்லாம் என்ன பொழப்புங்களோ?” என்று வரைமுரையின்றி பேசவும் இருதரப்பினர் இடையேவும் வாய்ச்சண்டை ஆரம்பித்தது. இரு ஊர்க்காரர்களும் வாயிக்கு வந்ததை சொல்லி திட்ட ஆரம்பித்தனர்.‌ சிறிது நேரத்தில் வாய்ச்சண்டை முற்றி இரு தரப்பினரிடையேயும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. வாய்ச்சண்டை கைகலப்பாகி மீண்டும் கூச்சலும் குழப்பமுமாக அந்த இடமே அதகளப்பட்டது.


மீண்டும் அவர்களை அடங்குவதற்குள் பஞ்சாயத்து குழுவிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது. ”இங்க பாருங்க ஒழுங்கு முறையா நீங்க சொல்ல வந்ததை சொல்ற மாதிரி இருந்தா சொல்லுங்க, இல்லன்னா பேசாம ஒதுங்கி நில்லுங்க, கூட்டத்துல பிரச்சினையை உருவாக்காதீங்க” என்று கொஞ்சம் கறாராக சொன்னதும் தான் அடங்கினார்கள்.

“சரிங்க ஐயா, நாங்க சொல்ல வந்ததை சொல்லிப்புடுறோம். நாங்க பக்கத்து ஊர்க்காரவுக, எங்க ஊரு எந்த அளவு கட்டுப்பாடும் பாரம்பரியம் கொண்டதுன்னு உங்க எல்லாருக்குமே நல்லா தெரியும். அப்படி இருக்கும் போது நாங்க ஏங்கய்யா வேணும்னே பிரச்சினை பண்ண போறோம். இன்னைக்கு என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சுருந்தேனுங்க.‌ கல்யாணத்தன்னைக்கு எம்பொண்ணைத் தூக்கி இருக்காங்க, இதை எப்டீங்க ஐயா எங்களால சும்மா விட முடியும்..?” என்று ஒரு பெற்றோராய் நியாயமான முறையில் தங்களது எண்ணத்தை முன் வைத்தார் பெண்ணின் தந்தை.

அதை போல் நடுநிலையாக அமர்ந்து இருப்பவர்களும் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி,
“ஏம்மா நீ ஒருத்தனை விரும்பி இருந்தா வீட்டுல தாராளமா சொல்லி இருக்கலாமே? உனக்கு மாப்ளை பார்த்து, எல்லாமே முடிவாகி, ஊரு உறவுக்கெல்லாம் சொல்லி அனுப்பி, கடனை உடனை வாங்கி எல்லாத்தையும் செஞ்சதுக்கு பிறகு கடைசி நேரத்துல இப்படி பண்றது சரியாம்மா? உன்னோட குடும்பம் இன்னைக்கு நாலு பேரு முன்னாடி அசிங்கப்பட்டு நிக்கிதே அது உனக்கு பரவாயில்லையா? உன்னை பெத்து, வளர்த்து, படிக்க வெச்சு, இவ்வளவு நாளா உன்னை பொத்தி பொத்தி பார்த்துக்கிட்டவங்களுக்கு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்க தெரியாதா.?” என்று கேட்டதும் மௌனமாய் தலை குனிந்து நின்றாள் கீதா.

சிறிது நேரம் கழித்து அவர்களை நிமிர்ந்து பார்த்தவள், “அவங்க எனக்கு எல்லாமே செஞ்சாங்க தான் நான் இல்லைன்னு சொல்லலைங்க ஐயா. ஆனா நான் இவரை நேசிக்கிறேன்னு சொன்னா, அவங்க எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா? கண்டிப்பா வைக்க மாட்டாங்க, என்னை துண்டு துண்டா வெட்டி போடுவாங்களே தவிர இவருக்கு கட்டிக்குடுக்க மாட்டாங்க, ஏன்னா நாங்க வேற வேற ஜாதியாம், அவங்க சொல்ற முதல் காரணமே இதுதான்.‌ ஏங்கய்யா தெரியாமத்தேன் கேட்குறேன் காதல் என்ன ஜாதி பார்த்து, அந்தஸ்து பார்த்து, கலரைப் பார்த்தா ஐயா வருது. அது மனசோட சம்மந்தப்பட்டது. எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் புடிச்சு இருந்துச்சு, ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா எதிர்கால வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுச்சு அதான் ஐயா காதலிச்சோம், இதுல என்ன தப்பைக் கண்டுட்டாங்களாம்?

பிடிச்சவங்களோட வாழ்றது தானே ஐயா வாழ்க்கை. பிடிக்காதவங்களை கட்டிக்கிட்டு எப்படி ஐயா காலம் முழுக்க வாழ முடியும். ஆனா பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிற எல்லாரும் சொல்லுறது என்னவோ போகப் போக பழகிடும், போக போக எல்லாமே சரியாகிடுங்குறது தான். எங்க அவங்களை மனசாட்சியைத் தொட்டு சொல்ல சொல்லுங்க பாக்கலாம், அவங்க சந்தோஷமா இருக்காங்கன்னு.‌ அவங்களால சொல்ல முடியாது ஐயா, ஏன்னா அவங்க ஊருக்காக வேணா நடிக்கலாம் ஆனா உண்மையாவே அப்படிப்பட்டவங்க யாரும் சந்தோஷமா இருக்கமாட்டாங்க.

குடும்பத்துக்காகவும்,‌ கௌரவத்துக்காகவும் கல்யாணம் பண்ணிக்கிற ஒரு பொண்ணுக்கு, எந்தவொரு சூழ்நிலையிலும் தான் நேசிச்சவனை மறுபடியும் நினைச்சு பாக்காம இருக்குற அளவுக்கு நல்லா பார்த்துக்குற கணவன் கிடைப்பானா? கண்டிப்பா கிடைக்கமாட்டான் ஐயா. எங்காவது ஆயிரத்துல ஒன்னு ரெண்டு பேர் இருக்கலாம். இங்க எல்லாரும் நல்லவங்க கிடையாது. ஒருவேளை அவ ஏற்கனவே ஒருத்தனை நேசிச்சாங்குற விடயம் கணவனுக்கோ, அவனோட குடும்பத்துக்கோ தெரிய வந்தா அந்த பொண்ணோட நிலமை என்னாகும்னு இதுவரைக்கும் நீங்க யாராவது யோசிச்சு பார்த்துருக்கீங்களா? பெத்தவங்களுக்கு அவங்களோட கௌரவம் முக்கியம். பொண்ணை பெத்தோமா,வளர்த்தோமா, கல்யாணம் பண்ணி வச்சுட்டா நம்மளோட கடமை முடிஞ்சுரும்னு நினைக்கிறீங்க, ஆனா அதுக்கப்புறம் எங்களோடு வாழ்க்கை என்ன ஆகும்னு ஒரு நாளாவது, எந்த பெத்தவங்களாவது எங்களோட இடத்துல இருந்து யோசிச்சுப் பாத்திருக்கீங்களா..?” என்று தன் மனக்குமுறல்களை இறக்கி வைத்தாள் கீதா.‌

“என்னம்மா நீ சொல்றதைப் பார்த்தா, பெத்தவங்க அக்கறையே இல்லாம ஏதோ கடமைக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி பேசுற? பெத்தவங்க பிள்ளைகளுக்காக எவ்வளவு பண்றாங்கன்னு உனக்கு தெரியுமா? அவங்க போடுற நகையில இருந்து, அங்க புகுந்த வீட்ல போய் அவங்க பயன்படுத்துற பொருட்கள் வரை அத்தனையும் வாங்கி குடுக்குறாங்க.‌ துணிமணி, நகை நட்டு, சீர்சினத்திங்க, பண்ட பாத்திரங்க, மாப்பிள்ளைக்கு உண்டான நகை, வண்டி வாகனம் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்து பார்த்து வாங்குறாங்க.‌ வீட்டை அடமானம் வெச்சு கடன் வாங்கியாவது தன் பொண்ணோட கல்யாணத்த நல்ல முறையில நடத்தணும்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் எதுக்கு உங்க சந்தோஷத்துக்காகத் தானே,‌ அப்படி இருக்கும் போது நீயே இப்படி பெத்தவங்களை குறை சொல்லலாமாம்மா?” என்று முதியவர் ஒருவர் கேட்டார்.

“பணங்காசு யாருக்கு வேணும் ஐயா. எவ்வளவு பணம் இருந்தாலும் புகுந்த வீட்ல நல்ல மனுஷங்க அமையலன்னா அந்த வாழ்க்கை நரகம் ஐயா. எனக்கு இவரை புடிச்சிருக்கு அதனால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வீட்ல சொன்னா கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க பெரிய பிரச்சினை வரும்னு தான் இந்த முடிவு எடுத்தோம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ஐயா நேத்து மதியம் வரைக்குமே எனக்கு கல்யாணம்னு இவருக்குத் தெரியாது.‌ தெரிஞ்சதுக்கு அப்புறம் சாக துணிஞ்சுட்டாரு. இவரோட நண்பர்கள் தான் இவரைக் காப்பாத்தி கூட்டிட்டு வந்து என் முன்னால நிறுத்துனாங்க. அப்ப கூட நான் இவரோட போக நினைக்கலை, எங்குடும்பத்தை நினைச்சு தயங்குனேன்.

ஆனா இவங்க தான் பேசி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இல்லன்னா நானும் சராசரியான சாதாரண ஒரு பொண்ணா அப்பா அம்மா பார்த்து வச்ச பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கடனேன்னு உதட்டளவுல மட்டும் சிரிச்சுக்கிட்டு, உள்ளுக்குள்ளையே எல்லாத்தையும் போட்டு புதைச்சுக்கிட்டு மீதியிருக்க வாழ்க்கை வாழ்ந்திருப்பேன் ஐயா. என் குடும்பத்துக்கு கெட்ட பேரைக் கொண்டு வரணும்னு நான் ஒருநாள் கூட நெனைச்சது கிடையாது அதனால தான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன். ஆனா எனக்காக அவரு உயிரை விட தயாரா இருக்கும் போது அவருக்காக நான் இதைக்கூட செய்யலன்னா என்னோட நேசம் இந்த இடத்துல தப்பாகிடும் ஐயா, அதனால தான் என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு துணிஞ்சு இவங்களோட வந்துட்டேன். எங்களுக்காக அவரோட நண்பர் இப்ப சாக கிடக்கிறாரு. நாங்க இதுக்கு மேல யாருக்கும் பாரமா இருக்க விரும்பல ஐயா எங்களை விட்ருங்க” என்று அழுகையோடு சொன்னாள் கீதா.‌

அவள் பேசி முடித்ததும் அதன் தொடர்ச்சியாக கார்த்திக் பேசினான். “ஆமாங்கய்யா என் குடும்பமும் சரி இவளோட குடும்பமும் சரி என்னைக்கும் ஒன்னு சேர வாய்ப்பே கிடையாது. ஏன்னா இரண்டு பக்கமும் ஜாதிதான் பெருசா இருக்கு. ஒருத்தன் பணக்காரனா, ஏழையாங்குறதை விட முன்னுக்கு வந்து நிக்கிறது அவங்க ஜாதி தான்.‌ அதனால தான் சொல்றேன் கண்டிப்பா அவங்க எங்களை ஏத்துக்க மாட்டாங்க, இனிமே ஏத்துக்கவும் வேணாம். நாங்க இந்த ஊரை விட்டு எங்கையாவது போயிடுறோம். நல்லா வாழுறமோ, கஷ்டப்படுறமோ ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்து மீதி இருக்க வாழ்க்கையை வாழ்ந்துக்குறோம்...‌ இதோட எங்களை விட்டுட சொல்லுங்க"
என்று சொன்ன கார்த்திக்‌ கீதாவின் கரங்களோடு தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டு திரும்பி தன் தாய் தந்தையைப் பார்த்தான்.‌ அவனது தந்தையோ விரைப்பாக நின்று இருந்தார். அந்த கோலமே அவர் அதீத கோபத்துடன் இருக்கிறார் என்பதை அவனுக்கு உணர்த்தியது. அவனது தாயோ கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தார்.
 
உறவின் தேடல் -11.2

தாயைக் கண்களால் சமாதானப்படுத்தியவன்,

“மன்னிச்சிடுங்க அம்மா, மன்னிச்சிடுங்க அப்பா உங்களுக்கு தலைக்குனிவை உண்டாக்கிடடேன். இது வரைக்கும் நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சுருக்கீங்க.இதுநாள் வரைக்கும் நான் கேட்டு, நீங்க எதுவும் இல்லைன்னு சொன்னது இல்ல எல்லாமே வாங்கி தந்துருக்கீங்க. ஆனா விரும்புன பொண்ணைக் கைகாட்டி கேட்டா எங்க இல்லன்னு சொல்லிடுவீங்களோன்னு பயமா இருந்துச்சு அதனால தான் இப்படியொரு முடிவு எடுத்தேன். ஒத்துக்குறேன், பெத்து வளர்த்தவங்களை மறந்துட்டு நேத்து வந்தவ முக்கியம்னு சொல்லி நான் தற்கொலை பண்ற அளவுக்கு போயிருக்கக் கூடாதுதான். ஆனா 24 வருஷமா வளர்த்த உங்களை விட, இப்ப மூனு வருஷமா பழகுன இவ எனக்கு பெருசா போயிட்டாப்பா.‌ ஏன்னா மீதி இருக்க வாழ்க்கையை நான் இவளோட தானே வாழணும்.‌ உங்களையும் பிடிக்கும் அப்பா, ஆனா அவ இல்லாம வாழ முடியும்னு தோணல. என்னை மன்னிச்சிடுங்க அப்பா உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும்னு தெரியும். முடிஞ்சா நல்லா இருங்கன்னு வாழ்த்துங்க அது போதும், கொன்னு புதைக்கணும்னு நினைச்சிடாதீங்க அப்பா..” என்றவன் பஞ்சாயத்தாரின் புறம் திரும்ப, “எங்களுக்கு ஒரே ஒரு உறுதி மட்டும் இரண்டு குடும்பத்துக்கிட்ட இருந்தும்‌ வாங்கி தாங்க. இங்கிருந்து நாங்க வெளிய போனதுக்கு அப்புறம் அவங்க எங்களைத் தேடக்கூடாது. பிரச்சினையை ஆறப்போட்டு கருவறுக்குறோம்னு சொல்லி எதையும் பண்ணக்கூடாது.‌. நான் இதை ஏன் சொல்றேன்னா இதுக்கப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு நாங்க எங்க இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி தேடி கண்டுபிடிச்சு எங்களை கொல்ல தான் நினைப்பாங்க, ஏன்னா அவங்க கௌரவம் தானே அவங்களுக்கு முக்கியம். அதான் சொல்றேன் அவங்க எங்களைத் தேடக்கூடாது, இல்ல எங்களைக் கொன்னா தான் இவங்களோட கௌரவம் நிமிர்ந்து நிற்கும், அவங்க ஜாதிக் கொள்கையும் தலை நிமிர்ந்து நிற்கும்னு அவங்க நெனச்சா இப்பவே எங்களைக் கொன்னு போடலாம், அவ்வளவு நாளெல்லாம் வெயிட் பண்ண வேணாம். ஏன்னா நாங்க ஏதோ கண்காணாத இடத்துக்கு போயி சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கும் போது இவங்க எங்களை எதாவது பண்ணிட்டா, நாளைக்கு எங்க பிள்ளைங்க அநாதையா நிக்கும் இல்லையா அதான் சொல்றேன்” என்று தீர்க்கமாக சொல்லி முடித்தான்.



பஞ்சாயத்தினரோ நடுநிலையாக இரு குடும்பத்தையும் பார்த்து,

“நீங்க என்ன சொல்றீங்க? பிள்ளைங்க அவங்கவங்க முடிவை சொல்லிட்டாங்க. அவங்க பிரிஞ்சு வர்றதுக்கும் விருப்பப்பட்டல. கூடவே எங்கிருந்தாலும் நாங்க நல்லா வாழுறோம்,எங்களை எதுவும் செய்யக்கூடாதுன்னு உறுதி வாங்கித் தரச் சொல்றாங்க. பெத்த புள்ளைங்க மனசுல நம்மளை கொன்றுவாங்களோன்னு நினைக்கிற அளவுக்காய்யா அம்புட்டு பேரும் பழமையில ஊறி கெடக்குறது. காலம் எவ்வளவோ முன்னேறிடுச்சு, எவ்வளவோ மாற்றங்கள் வந்துருச்சு, அப்பவும் நீங்க இப்படியே இருந்தா என்னங்கய்யா பண்றது.‌ சரி விடுங்க அது அவங்கவங்க தனிப்பட்ட விஷயம், பிள்ளைங்க கேட்குறதுக்கு நீங்க உறுதி கொடுக்கணும், அதுவும் இந்த ஆத்தா மேல சத்தியம் பண்ணி கொடுக்கணும். சத்தியத்தை மீறினா குடும்பம் குலநாசம் ஆகும் அதுக்கு எடுத்துக்காட்டா இந்த ஊர்ல ஒரு குடும்பம் இருக்கு அதையும் மறந்துடாதீங்க. ஆத்தா சக்தி வாய்ந்தவ, அவ மேல சத்தியம் பண்ணி, அந்த பிள்ளைகளுக்கு அவுக கேட்குற உறுதியைக் குடுத்து புடுங்க, பஞ்சாயத்தை முடிச்சுக்கிடலாம் அல்லாருக்கும் சோலி கெடக்குதுல்லப்பா” என்று சொன்னார்கள்.



முதலில் கார்த்திக்கின் குடும்பம் முன்னால் வந்து நின்றது. அனைவரின் முன்னாலும் வந்து நின்ற கார்த்திக்கின் தந்தை, “இனி அவென் எங்க போனாலும் சரி, எப்படி போனாலும் சரி எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு ஒரு பையன் பொறந்தான்,‌ அவன் 24 வயசுல செத்துப் போயிட்டான்னு நெனச்சு தலைமுழுகிக்குறோம். அவனுக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்மந்தமுமில்லை.‌ எப்ப அவென் நேத்து சாதி புள்ளைய விரும்புனானோ அப்பவே அவன் எங்க புள்ளயா இருக்க தகுதி இல்லாதவனா ஆயிட்டான்.‌இப்ப கல்யாணம் வேற பண்ணிட்டான், இதுக்கு மேல இவன் எங்களுக்கு தேவை கிடையாது..‌

இவன் எப்படி போனாலும் சரி அதுக்கும் எங்களுக்கும் எந்தவொரு சம்மந்தமும் கிடையாது.. என் வீட்டு எழவுக்கு கூட அவென் வரக்கூடாது நாங்களும் அவென் வீட்டுக்கு போகமாட்டோம் இது இந்த ஆத்தா மகமாயி மேல சத்தியம்” என்று சொல்லி விட்டு கார்த்திக்கின் தந்தை விஸ்வநாதன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல.‌ அவனின் தாய் சங்கரியும் திரும்பி திரும்பி தன் மகனைப் பார்த்தவாறு அழுது கொண்டு சென்றார்..



அடுத்ததாக கீதாவின் தாய் தந்தையரும் அவரது சொந்த பந்தங்களும் அனைவரையும் முறைத்துப் பார்த்தவாறே தான் நின்றிருந்தனர்.‌ பின்னர் அவளது தந்தை தாய் வாயைத் திறந்து பேசினார்.

“இப்பவும் அவ எங்க பொண்ணு தான்,‌ தவமிருந்து பெத்து, இவ்வளவு நாள் பாசத்தைக் கொட்டி வளர்த்துட்டமே அதான் அவ எங்க புள்ளை இல்லன்னு சொல்ல முடியல. ஆனா நாளைக்கு அவ செத்தாலோ இல்ல,அவ வீட்ல ஏதாவது நல்லது கெட்டதுன்னாவோ நாங்க போய் நிக்க மாட்டோம்.‌ யாரை கூட்டிட்டு போனாளோ அவனே எல்லாத்தையும் பார்க்கட்டும். நாளைக்கு எங்க கிட்ட எதையும் கேட்டு வந்து நிக்க கூடாது. இந்த ஆத்தா மேல சத்தியமா சொல்றோம், இவங்களைக் கொல்ற அளவுக்கு போக மாட்டோம்..” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தவங்களைத் தடுத்து நிறுத்தினார் தேவேஷ்வரின் தந்தை சிவசுப்பிரமணியம்.‌



“கொல்ற அளவுக்கு போகமாட்டோம்னா அப்புறம் என்ன பண்ணுவீங்க? கை, காலை முறிச்சுப் போட்டு படுத்த படுக்கையா ஆக்கிருவீகளோ?” என்று கேட்டார்.



“ஏன் அதை கூட செய்யிறதுக்கு எங்களுக்கு உரிமை இல்லையா? இத்தனை சொந்த பந்தம் முன்னாடி எங்களை தலை குனிய வெச்சுருக்காங்க அப்படி இருக்கும் போது இதைக் கூட நாங்க பண்ண கூடாதா?” என்று கீதாவின் தந்தை கேட்டதும் சிவசுப்பிரமணியத்துக்கு சுள்ளென்று கோபம் எழுந்தது.



“இது என்னடே பேச்சு? மொதல்ல பிள்ளைக்கு கல்யாணம் பண்ண நெனச்சவியன், பிள்ளைக்கு இதுல சம்மதமான்னு கேட்டுட்டு கல்யாணத்தை நிச்சயம் பண்ணி இருக்கணும்டே. அதை விட்டுட்டு இப்ப வந்து உம்மேல தப்பு இல்லாத மாதிரி பேசிக்கிட்டு இருக்கவென். நானும் பார்த்துகிட்டு இருக்கேன் என்ன பெரிய சண்டியரு மாதிரி பேசிகிட்டு இருக்கவனுங்க, என்ன உங்களுக்குத்தேன் அருவா புடிக்கத் தெரியுமோ? எங்களுக்கும் கை இருக்கு, அதுக்கும் அருவா புடிக்கத் தெரியும்டே. அதனால பேசுறதை யோசிச்சு பேசிப் பழகிக்கோங்கடே.



இப்ப உங்க பிரச்சனைத்தேன் என்ன? எப்படி இருந்தாலும் உம்மவளை ஒரு பையனுக்கு கட்டி கொடுக்க போறீங்க தானேடே. அதையே என்னோட மச்சான் மவனுக்கு கட்டிக்குடுத்தா உங்களுக்கு அம்புட்டு கௌரவக் குறைச்சலா போயிடுமோ? இதுக்கும் சாதியில உங்களை விட நாங்க ஒன்னும் குறைஞ்சவுக கிடையாதுடே. உங்களை விட உசந்தவுக வீட்ல தான புள்ளை கல்யாணம் கட்டிக்கிட்டு இருக்கா,‌ அதனால நீங்க ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டீங்க, கிளம்பி போங்கடே. எம்மவனுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நான் மறுக்கா பஞ்சாயத்தெல்லாம் கூட்டிக்கிட்டு இருக்கமாட்டேன் பாத்துக்கிடுங்க, நேர போலீஸ் ஸ்டேஷனுக்குத்தேன் போவேன்,‌ அப்புறம் அம்புட்டு‌ பேரும் ஜெயில்ல இருந்து வெளியே வர முடியாது.‌ எம்மவென் மட்டும் பொழச்சு எந்திரிச்சு வராமலிருக்கட்டும் உங்க அம்புட்டு பேருக்கும் இருக்குடேய்” என்று கை நீட்டி அனைவரையும் எச்சரிக்கும் விதமாக பேசிவிட்டு பஞ்சாயத்து குழுவினருக்கு சின்ன தலையசைப்பைக் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சிவசுப்பிரமணியம்.



தன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பியவர் நேராக சென்றது தன் மகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு தான். செல்லும் போதே தன் சின்ன மகன் விக்கிக்கு அழைத்து எந்த மருத்துவமனை என்று கேட்டு தெரிந்து கொண்டவர் நேராக அங்கே தான் சென்றார்.‌



அங்கே மருத்துவமனையிலோ அவசர சிகிச்சை பிரிவில், தேவேஷ்வருக்கு அவசர அவசரமாக சிகிச்சைகள் நடந்துகொண்டிருந்தது. அதிக அளவு இரத்த போக்கு காரணமாகவும், பலமாக கத்தி குத்தப்பட்டதன் விளைவாகவும் எப்பவோ நினைவு தப்பிப் போய் இருந்தான் தேவேஷ்வர்.



மருத்துவமனைக்கு வந்தவர் தளர்ந்த நடையோடு உள்ளே நுழைந்தார்.‌மகன் செய்யும் செயல் அனைத்திலும் ஏதோ ஒரு நியாயம் இருக்கும் என்பதை நம்புபவர் சிவசுப்பிரமணியம்.‌ அவனிடம் அதிகமாக பேசியது கிடையாது தான். எதுவாக இருந்தாலும் மனைவியிடம் சொல்லி தான்,‌ அவனிடம் சொல்ல சொல்வார். அவனும் அப்படித்தான் தனக்கு எது தேவை என்றாலும் தாயின் வழியாக காய் நகர்த்தி நிறைவேத்திக் கொள்வானே தவிர நேருக்கு நேராக தந்தையிடம் நின்று எதையும் கேட்டதும் கிடையாது, பேசியதும் கிடையாது.



எது எப்படி இருந்தாலும் மகனின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் சிவசுப்பிரமணியம்.‌ அதே போல்தான் அவனும் தந்தைக்கு ஒன்று என்றால் எதையும் செய்யத் துணிவான் அந்த அளவுக்கு தந்தையின் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்தான் தேவேஷ்வர்.



இதோ அவசர சிகிச்சைப்பிரிவின் முன்பு வந்து நின்றவர் அழுது கொண்டிருக்கும் தன் சின்ன மகனிடம்,‌“டாக்டர் என்னடே சொன்னாரு?” என்று கேட்டார்.



“அவுக எதுவும் சொல்ல மாற்றாவ அப்ப...‌ அங்கிட்டு இங்கிட்டு போய்க்கிட்டே இருக்காங்களே தவிர எதுவுமே சொல்ல மாட்றாவ?” என்று சொல்லி கண்ணை கசக்கினான் விக்கி.



“அடேய் விக்கி நீ எதுக்குடே அழுவுறவென். நீ ஆம்பளைப் பையன்டே நீ எதுக்கும் அழுவுக்கூடாது. என் மவனுக்கு எதுவும் ஆகாதுடே, கண்டிப்பா அவென் எந்திரிச்சு வருவியான். நீங்க இப்படி அழுதுக்கிட்டே இருந்தா எல்லாம் சரியா போயிடுமாடே, மொதல்ல அல்லாரும் கண்ணைத் தொடங்க” என்று சொன்ன நேரம் மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்தார்.



அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு தேவேஷ்வரின் நிலையைப் பற்றி விசாரித்தனர்.‌

“அவருக்கு கத்திக் குத்தி கொஞ்சம் ஆழமாத்தேன் இருக்கு. எதேச்சையாக குத்தலை, பிளான் பண்ணி ஆழமா சொருகியிருக்கானுவ.‌ எனக்கென்னமோ தப்பா படுதுங்க ஐயா, பார்த்துக்கிடுங்க. பத்தாததுக்கு பின்னந்தலையில வேற அடிபட்டு இருக்கு,‌ கஷ்டப்பட்டு உயிரை காப்பாத்திட்டோம் ஐயா.‌ ஆனா அவர் என்ன கண்டிஷன்ல இருக்காருன்னு ரெண்டு நாள் ஆனாத்தேன் சொல்ல முடியும். கண்டிப்பா இவரு ஒரு நாலு மாசமாவது பெட் ரெஸ்ட் எடுக்கணும். இது போலீஸ் கேஸ் ஐயா,‌ஏன்னா கொலை பண்ண முயற்சி பண்ணிருக்காவுக கண்டிப்பா நீங்க போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிடுங்க ஐயா. நீங்க ஊர் பெரிய மனுஷருங்குறதுனாலத்தேன் நான் எந்த பார்மலிடீஸ்ஸூம் இல்லாம அவருக்கு ட்ரீட்மென்ட் பார்த்தேன். அது மட்டும் இல்லாம நம்ம ஊர்க்காரர் பையன், என் தம்பியோட ஸ்நேகிதங்குறதுனாலையும் தான் நான் செஞ்சேன். பார்த்துக்கோங்க ஐயா,‌ சீக்கிரம் போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் பண்ணிடுங்க எல்லாம் தம்பியோட நல்லதுக்குத்தேன்” என்று சொல்லி விட்டு மருத்துவராக இருந்த அவர் சென்று விட,‌ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தொய்வோடு சேரில் அமர்ந்து விட்டார் சிவசுப்பிரமணியம்..


உதவி செய்தவனையே
உலகம் குற்றவாளியாக்கி
கூண்டில் ஏற்றி விடும்
கொஞ்சமேனும் சிந்தித்து செயல்படாவிடில்..!

- தேடல் தொடரும்..



கருத்துத்திரி


 
உறவின் தேடல் -12.1

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தடுமாறி அமர்ந்தது சிறிது நேரம் தான், அதன் பிறகு தன்னிலை அடைந்தவராய் அடுத்து செய்ய வேண்டியவற்றை சிந்தித்தவர், முதலில் கார்த்திக் மற்றும் கீதா இருவரையும் இந்த ஊரில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்.‌ ஆனால் தேவேஷ்வர் அதுக்கும் கூட ஏற்பாடு செய்திருந்ததாய் அவனது நண்பர்கள் சொல்லியதற்கு பிறகே அவருக்கு தெரிந்தது தேவ்வின் முன்னேற்பாடுகளைப் பற்றி.

தன் மகனின் புத்தி கூர்மையை எண்ணி வியந்து போவதா? அல்லது இப்படி பிரச்சனையில் மாட்டிக்கொண்டு மருத்துவமனையில் குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறானே என்று கவலைப் படுவதா? என்று தெரியாமல் தவித்துப் போனார் சிவசுப்பிரமணியம்.‌

ஆனால் ஏற்கனவே தன் நண்பர்களிடம் தேவ் சொல்லி வைத்திருந்ததால் கார்த்திக், கீதா இருவரையும் வெகு தூரத்திற்கு, யாருக்குமே தெரியாத இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள் அவனது நண்பர்கள். அதுமட்டுமின்றி அவர்கள் பத்திரமாக சென்று சேர்ந்ததை உறுதி செய்து கொண்ட பின்பும் தங்களது வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையிலேயே தேவ் கண் விழிப்பதற்காக காத்திருந்தார்கள்.

மறுநாள் விடியலில் அனைவருக்கும் நற்செய்தியாய் தேவ்வின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. முழுதாக 24 மணிநேரம் கடந்ததுக்கு பிறகு ஒரு வழியாக விழிகளைத் திறந்து தான் எங்கிருக்கிறோம் என்று ஏறிட்டுப் பார்த்தவனுக்கு நேற்று என்ன நடந்தது என்பது முழுதாக நினைவு வந்தது. ஆனால் என்ன, முதலில் அவனது நினைவில் வந்து நின்றது வாணியின் முகம் தான்.
அவளைப் பற்றிய நினைவுகள் முதலில் அவன் நினைவுக்கு வந்து சேர்ந்ததால் அவன் முகம் சற்று பூவாய் மலர்ந்து புன்னகைப் பூவைப் பூத்தது..


அதன் பிறகே தன் குடும்பத்தாரைக் கண்டவனுக்கு ஏதோ நினைவு வர பதற்றத்துடனும், அதே நேரம் தழுதழுத்த குரலில் தன் நண்பர்களில் ஒருவனைப் பார்த்து, “டேய் கார்த்திக், கீதா ரெண்டு பேரையும் பத்திரமாக அனுப்பி வெச்சுட்டீங்களா இல்லையாடா? ஆமா, நேத்து ஏதாவது பெரிய பிரச்சனை ஆச்சா,‌அவங்க ரெண்டு பேரும் பத்திரமா‌இருக்காங்க தானே” என்று கேட்க.

”அவங்க ரெண்டு பேரும் பத்திரமாத்தான்டா இருக்காங்க. அவங்களை நல்லபடியா பஸ் ஏத்தி அனுப்பி வெச்சாச்சு. ஆனா உனக்குத் தான் இப்படியானதை நினைச்சு எங்களுக்கு கவலையா இருக்குடா” என்று பதில் தந்தார் சிவசுப்பிரமணியம்.‌

தன் தந்தையைத் திரும்பிப் பார்த்து விட்டு கண்களை மூடி கொண்டவன், “நான் வேணும்னே எதையும் செய்யலங்கப்பா.‌ என்ன பண்றது கடைசி நேரத்துல இப்படியொரு சூழ்நிலை வந்ததால உங்கக்கிட்ட எதையும் சொல்ல முடியல” என்று முதல் முறையாக தந்தைக்கு நேரடியாக பதில் உரைத்தவன், அவர் முகத்தைக் காணாமல் கண்கள் மூடிய நிலையிலேயே, தான் நினைத்ததை சொல்லி முடித்தான்.

அதேநேரம் மருத்துவரும் மீண்டும் ஒரு முறை அவனை பரிசோதித்து விட்டு‌ சிவசுப்பிரமணியத்திடம்,
“இதுக்கு மேல உயிருக்கு ஆபத்து இல்லைங்கய்யா. என்ன காயம் தான் ஆற ரொம்ப நாள் ஆகும். என்னங்கய்யா நான் சொன்ன மாதிரி கம்ப்ளைன்ட் கொடுத்துட்டீங்களா?” என்று கேட்டார் மருத்துவர்

“இனிமே தான் கம்ப்ளைன்ட் கொடுக்க போகணும்” என்று சிவசுப்பிரமணியம் சொன்ன போதே அதை தடுக்கும் விதமாய், “யாரும் எந்த கம்ப்ளைன்ட்டும் கொடுக்க வேண்டாம் அப்பா” என்றான் தேவ்..

“உன்னைக் கொல்ல பாத்துருக்காங்க தேவ், அப்படி இருக்கும் போது கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று சொன்ன மருத்துவரை விழிகள் சிவக்க பார்த்தவன்,
“என்ன அர்த்தம், நீங்க எதுவும் செய்ய வேணாம்னு அர்த்தம். நாங்க பண்ணுன வேளைக்கு, பொண்ணைப் பெத்தவங்க கோபப்படாம இருந்தா தான் ஆச்சரியம்.‌ தப்பு நம்ம மேலையும் இருக்கும் போது எப்படி நாம கம்ப்ளைன்ட் கொடுக்க முடியும்? சப்போஸ் எனக்கு எதாவது ஆகி இருந்தாலும் சரி, இனிமே ஆனாலும் சரி நீங்க யாரும் கம்ப்ளைன்ட் கொடுத்து அவங்களைக் கோர்ட்டுக்கு இழுக்கக் கூடாது. ஏன்னா அவங்க பொண்ணைப் பெத்தவங்க. எனக்கு இவரை, இவளை பிடிச்சிருக்குன்னு வீட்டுல சொல்லாதது அவங்க ரெண்டு பேரோட தப்பு.‌ முழுமையா எல்லா தப்பும் பெத்தவங்க மேலையே இருக்குன்னு சொல்ல முடியாது.‌ பசங்க தங்களோட விருப்பத்தை சொல்லாத வரைக்கும் பெத்தவங்களுக்கு, பசங்களோட மனசுல என்ன இருக்குன்னு எப்படி தெரியும்..?”

“சரி.. நீயே சொல்ற மாதிரியே வச்சுப்போம்.‌ பசங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சா மட்டும்,‌ அவங்க நேசிச்சவங்களைக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்களா?” என்று கேட்ட தன் நண்பன் ஒருவனை தீயென முறைத்தான் தேவ்.

“அப்படி அவங்க பண்ணி வைக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சதால தானே நாமளே பண்ணி வச்சோம். சரி முடிஞ்சது முடிஞ்சதாவே போகட்டும் இதுக்கு மேல அதைப்பத்தி பேசாதீங்க.‌ எனக்கு ஒன்னும் இல்ல, நான் நல்லா இருக்கேன், அதனால எந்த கம்ப்ளைன்ட்டும் கொடுக்க வேணாம்” என்று தேவ் சொல்லிட.

மருத்துவராகப்பட்டவரோ, “நான் சொன்னா நீங்க கேக்க மாட்டீங்க, பட்டா தான் உங்களுக்கு புரியும். அவங்க இதோட இந்த பிரச்சினைய விட்ருவாங்கன்னு எனக்கு தோணல, உங்களோட நல்லதுக்கு தான் சொல்றேன், அதுக்கு மேல உங்க விருப்பம்” என்று சொல்லி விட்டு செல்ல. தேவ் கட்டாயம் கம்ப்ளைன்ட் கொடுக்க கூடாது என்று தெரிவித்ததால் சிவசுப்பிரமணியமும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. ஆனால் அதன் விளைவு என்ன என்பதை கூடிய விரைவில் அவர்கள் காணப் போகிறார்கள் என்பதை விதி மட்டுமே அறியும்...

தேவ் கண் விழித்ததால் நண்பர்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு கிளம்பினார்கள் அதிலும் தேவ்,‌ அவர்களை வற்புறுத்தி போகச் சொன்னதால் தான் அவர்களும் கிளம்பிச் சென்றார்கள்...
விக்கியை மட்டும் மருத்துவமனையில் விட்டு விட்டு மற்றவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து தங்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டு,‌ தேவ்வுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்கள்.‌ ஊர் பெரிய மனிதர்கள், முக்கியஸ்தர்கள், பஞ்சாயத்தார்கள் என அனைவரும் மருத்துவமனைக்கு வந்து தேவ்வைப் பார்த்து விட்டு சென்றார்கள்.

கார்த்திக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட வந்து பார்த்து விட்டு சென்றார்கள்.‌பகையை மறந்து இரு குடும்பமும் ஒட்டி உறவாடவில்லை என்ற போதும் தன் மகனுக்காக இத்தனை ரிஸ்க் எடுத்து கத்திக் குத்து வாங்கி மருத்துவமனையில் கிடப்பவனை ஒருமுறை சென்று பார்த்து விட்டு வந்தால் நாம் குறைந்து விட மாட்டோம் என்று கார்த்திக்கின் தந்தை நினைத்ததால் தான், தேவ்வை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
தேவ்வும் வந்தவர்களிடம் இன் முகத்துடன் உரையாடி, அவர்களுக்கு சற்று தெம்பூட்டி, கார்த்திக்கை மன்னிக்கும்படி வேண்டுதல் வைத்து அவர்களை சமாதானப்படுத்தி, அதன் பிறகே வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.


இங்கே வாணியோ விடிய விடிய உறக்கமில்லாமல் எதை எதையோ நினைத்து மருகிக் கொண்டிருந்தவள் விடியும் தருவாயில் தான் கண் அயர்ந்தாள். ஆனால் எப்போதும் போல் அவள் வைத்திருக்கும் அலாரம் அடித்து அவள் உறக்கத்தை கெடுத்தது. திகுதிகுவென எரியும் கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.. இன்னும் கொஞ்ச நேரம் உறங்கச் சொல்லி கண் கெஞ்சியது,‌ ஆனால் காலையில் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் இருந்ததால் வேறு வழியில்லாமல் படுக்கையை விட்டு எழுந்தாள்.‌

தன் அறையில் இருக்கும் ஒற்றை சாமிப்படத்தை நிமிர்ந்துப் பார்த்து வணங்கி விட்டு எழுந்து கிணற்றடிக்கு சென்றாள். கிணற்றில் நீரை சேந்தி முகம் கழுவியவள், மீண்டும் தான் இருந்த அந்த அறைக்கு வந்து மளமளவென்று, அந்த அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.‌ துவைத்து போட்டிருந்த துணிகளை மடித்து வைத்து விட்டு வீட்டை ஒழுங்குபடுத்தியவள், ஒரு பக்கெட்டில் நீரைக் கொண்டு வந்து அதில் துணி தொட்டு தரையை அழுத்தமாக துடைத்து எடுத்தாள். பின்பு அந்த அதிகாலை வேளையில் கிணற்றிலிருந்து இறைத்திருந்த பச்சை தண்ணீரை தலையில் அள்ளி ஊற்றினாள். சூடு வைக்கப்பட்ட இடத்தில் தண்ணீர் பட்டதும் இன்னும் எரிய ஆரம்பித்தது..

இருந்தும் நேரம் இல்லாததால் அவசர அவசரமாக குளித்து முடித்தவள் தன்னிடம் இருந்த நைந்து போன சுடிதாரில் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு, ‌கடவுள் படத்தின் முன்பு நின்றவள்,‌ கழுத்திலிருந்த தாலியை வெளியே எடுத்து போட்டாள்.
கை கூப்பிக்கடவுளை வணங்கியவள், “கடவுளே அவர் யார் என்னன்னு தெரியல, அவரு எந்த ஊருன்னு கூட தெரியல, ஆனாலும் அவரு இப்ப என்னோட புருஷன். அதனால தயவு செஞ்சு அவரைக் காப்பாத்திடு, அவருக்கு எதுவும் ஆகக்கூடாது..” என்று வேண்டியவாறு குங்குமத்தை எடுத்து தாலியிலும், நெற்றி வகிட்டிலும் வைத்தாள்.‌அதுவும் நெற்றியில் முடிக்கற்றைக்குள் சிறியதாக, எவர் கண்ணுக்கும் தெரியாதவாறு வைத்துக் கொண்டவள் தாலியை உடைக்குள் மறைத்துக் கொண்டு வெளியே வந்து, அந்த அறையின் கதவை சாத்தினாள்.

பின்னர் அந்த பெரிய வீட்டின் உள்ளே செல்வதற்காக இருக்கும் பின்பக்க வாசல் கதவை தட்டினாள். ஆனால் அதுவோ இவள் கை வைத்ததும் திறந்து கொண்டது. அதிலிருந்தே காமாட்சி எழுந்து கதவை திறந்து வைத்து விட்டு சென்றிருக்கிறார் என்பதை உணர்ந்தவள், எப்போதும் போல் 'இவங்க என்னைக்கு தான் திருந்துவாங்களோ?’ என்ற எண்ணத்தோடு உள்ளே வந்தாள். இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லை என்பது வீட்டின் நிசப்தத்தில் புரிந்தது. அதையெல்லாம் அவள் கண்டு கொள்ளவில்லை, மளமளவென்று வீட்டின் முன் வாசல் கதவை திறந்தவள் ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் விளக்குமாரோடு வாசல் தெளிக்கத் தயாரானாள்…

அந்த வீதி எங்கும் எவரும் எழுந்ததற்கான அடையாளம் சிறிதுமில்லை. அந்த குளிரில் ஊரில் யாரும் எழுந்து வாசல் தெளித்து கோலம் இட விரும்பவில்லை. ஆனால் இவளுக்கு தலைக்கு மேல் வேலை இருக்கும் போது இந்த குளிரை அவள் பொருட்படுத்த முடியாதே. இவள் நிம்மதியாகப் படுத்து உறங்க இது ஒன்னும் அவள் வீடு இல்லையே, அவளே இங்கு அண்டிப் பிழைத்து கொண்டிருக்கிறாள் அப்படி இருக்கும் போது அவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டியது அவள் கடமை ஆயிற்றே.

குளிர் தாங்க முடியாமல் துப்பட்டாவை இழுத்து போர்த்திக் கொண்டு வெளியில் வந்தவள் மளமளவென்று வாசலில் தண்ணீர் தெளித்துக் கூட்டி இறுதியாக தனக்கு தெரிந்த அளவிற்கு சிறிய கோலம் ஒன்றையும் போட்டு முடித்தவள் உள்ளே செல்ல திரும்பிய வேளையில், பால்காரர், அந்த வீட்டு வாசலில் வந்து நின்று வண்டியின் ஹாரனை அழுத்தினார்.

அதைக் கேட்டு சடாரென்று திரும்பியவள்,“என்ன அண்ணா இன்னைக்கு நேரமே வந்துட்ட மாதிரி இருக்குது” என்று கேட்டவள் அவசரமாக பால் பாத்திரத்தை எடுக்க செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து நகர்ந்தாள்..‌

ஆனால் அதற்குள், “கொஞ்சம் உடம்பு சரியில்லம்மா.. இன்னைக்கு பால் ஊத்த போக வேணாம்னு எங்க வீட்டுக்காரம்மா சொல்லிக்கிட்டு இருந்தா, ஆனா எனக்குத் தான் மனசு கேட்கலை. நான் வரலைன்னா வேற யார் இந்த வேலையைப் பார்க்குறது..? அதனால தான் கொஞ்சம் வெள்ளுனே வந்து பால் ஊத்திட்டு அப்படியே ஆஸ்பத்திரி போகணும்மா” என்றவர் சொன்னதும் இவள் பதறிவிட்டாள்.

“உடம்புக்கு என்ன பண்ணுது அண்ணா?” என்று கேட்டவள் வேகமாக ஓடிச்சென்று பால் பாத்திரத்தை கொண்டு வந்தாள்.

“ஒன்னுமில்லமா சும்மா காய்ச்சல் தான். அடிக்கடி வேற வருது என்னன்னு தெரியல, அதான் ஒரு எட்டு ஆஸ்பத்திரி போய் பார்த்துட்டு வந்துடலாம்னு இருக்கேன்” என்றவாறு எப்போதும் அவள் வாங்கும் அளவிற்கு பாலை அவளுக்கு ஊத்தியவர் கவனமாக ஞாபகம் வைத்து, “நேத்து பால் கொழுக்கட்டை வச்சியே, நீ கொஞ்சமாவது குடிச்சு பார்த்தியாம்மா?” என்று கேட்க.

அவளோ புன்னகை ஒன்றை கொடுத்தாள்.‌ அவள் சிரிப்பில் ஒரு வேதனை மறைந்திருப்பதை உணர்ந்தவர்,“உனக்கு ஏங்கண்ணே இந்த தலையெழுத்து? பேசாம நீ அனாதை ஆசிரமத்துல இருந்திருந்தா கூட நிம்மதியா ஒரு வேளை சாப்பாட்டை சாப்டிருப்ப.. ஆனா இங்க வந்து எவ்வளவு கஷ்டப்படுற,‌ உன்னைப் பார்த்தா கஷ்டமா இருக்குமா. நீ இங்க வந்து கஷ்டப்படணும்னு விதி இருக்கும் போல கண்ணு..” என்றவர் கலங்கிய குரலில் சொன்னார்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லன்ணா. அனாதை ஆசிரமத்துல இருந்தா சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லைன்னு நெனைச்சு வருத்தமா இருக்கும். ஆனா இப்ப சொந்தக்காரங்க வீட்டுல தான் இருக்கேன், என்ன அவங்க வீட்டுல உறவா இல்லாம அன்னியமா இருக்கேன் அவ்வளவு தான்..”

“நீ என்னமோ சொல்ற கண்ணு, ஆனா எனக்கு தான் மனசே ஆற மாட்டேங்குது. பணக்காரங்களா இருந்தா இப்படிதான் நடந்துக்குவாங்களோ? பணம் இருந்தா மட்டும் பத்தாதுமா அவங்க கிட்ட கொஞ்சம் குணமும், நல்ல எண்ணமும் இருக்கணும். உன்னை எல்லாம் அவங்க இந்த பாடு படுத்துறதுக்கு கண்டிப்பா அனுபவிப்பாங்க” என்று தாங்க முடியாத வேதணையில் சொன்னார்.

அவர் சொன்னதை கேட்டு பதறியவள், “வேணாம் அண்ணா, உங்க வாயால சாபம் கொடுத்துடாதீங்க, நல்லவங்க சொன்னா பளிச்சிடும்.‌ அவங்க என்னைக் கொடுமை செஞ்சாலுமே பரவாயில்லை, எங்க இருந்தாலும் அவங்க நல்லா இருந்துட்டு போகட்டுமே அண்ணா. சரிங்கண்ணா வேலை கெடக்கு, நான் வரேன்” என்று சொல்லி விட்டு வீட்டிற்க்குள் சென்றவளை விழிகள் கலங்க பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் பால்காரர் பரமசிவம்.‌..

வாணியும் கண்ணில் பூத்த கண்ணீரை துடைத்துக்கொண்டு சமையலறையில் நுழைந்து சமைப்பதற்கான வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். முதலில் பாலைக் காய்ச்சி அனைவருக்கும் தனித்தனியாக டீ, காபி, பால், என அது அதுக்குகுண்டான ஃபிளாஸ்கில் ஊற்றி வைத்து விட்டு காலை உணவாக இட்லி,பூரி, சாம்பார், பல சட்னி வகைகளை செய்து முடித்தாள்.‌ பின்பு அனைத்தும் ஓரம் கட்டி விட்டு வீட்டைக் கூட்டிப் பெருக்க ஆரம்பித்தாள்.
 
உறவின் தேடல் -12.2


கீழே உள்ளவற்றை மட்டும் கூட்டி சுத்தம் செய்தவள் மாப்பு போட்டு அனைத்தையும் சுத்தமாக துடைத்து அழுக்கெடுத்தாள்.‌ அதே நேரம் வாயில் கதவை யாரோ தட்டுவது போல் இருக்க எட்டிப்பார்த்தாள். மேல் பகுதிகளை மட்டும் கூட்டி தூய்மைப்படுத்துவதற்கு எப்போதும் வரும் வேலைக்காரி பொன்னி வந்திருந்தார். அவளை உள்ளே வரச் சொன்ன வாணி, “அக்கா இன்னும் யாரும் எந்திரிக்கலை. மேலே வரான்டாவை மட்டும் சுத்தம் பண்ணிடுங்க. 11 மணி போல வந்து எல்லாரோட ரூமையும் சுத்தம் பண்ணிடுங்க” என்றதுமே சின்ன துடைப்பத்துடன் தன் வேலையைப் பார்க்கச் சென்றார் பொன்னி.

இடையே ஆதவ் வந்து பிளாஸ்குகளை எடுத்துக் கொண்டு சென்றவன் அவரவருக்கு உண்டானதை அவர்கள் அறையில் வைத்து விட்டு தன்னறைக்கு சென்று விட்டான். தினமும் இதை செய்ய வேண்டியது அவனுடைய வேலை.

இவளோ மீதமிருந்த மற்ற வேலைகளை செய்து முடித்தவள் சமைத்த உணவுகளை டேபிளில் எடுத்து வைத்து விட்டு மதிய உணவுக்கானவற்றை செய்ய ஆரம்பித்த போது தான் அனைவரும் கீழே இறங்கி வந்தார்கள். நேற்று போல் இன்றும் அனைவரும் பூஜை அறையின் முன்பு கூடி கடவுளை வணங்கி விட்டு உணவுண்ண டேபிளில் வந்து அமர்ந்தனர். அவர்கள் வருவதற்கு சொற்ப நொடிகளே இருந்த வேளையில் அனைவருக்கும் உண்டான உணவு பரிமாறி விட்டு சமையலறையில் தஞ்சம் அடைந்து விட்டாள் வாணி.

அனைவரும் உணவினை உண்டு முடித்து விட்டு ஹாலில் அமர்ந்திருந்த வேளையில் தான் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர் இருவர். அவர்களைக் கேள்வியோடு பார்த்த ஆதிவிநாயகம்,‌“யாருங்க நீங்க? யாரைப் பாக்கணும்?” என்று கேட்டார்.

வந்தவர்களுள் ஒருவர், “இங்கே மதுர வாணின்னு ஒரு பொண்ணு இருக்குறதா கேள்விப்பட்டோம்,‌அவங்களைத் தேடி தான் வந்தோம்.‌அவங்க இங்க தான் இருக்காங்களா?” என்றதும் அனைவரது முகமும் குழப்பத்தில் ஆழ்ந்தது.‌

தன் பெயர் அடிபடவும் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள் வாணி. வாணியைக் கண்டதும் பூவாய் மலர்ந்தது வந்தவர்களின் முகம்.‌ கூடவே மலர்ந்த முகத்துடன்,“நல்லா இருக்கியா வாணி?” என்றொருவர் கேட்டதும்.

இவளும் மகிழ்வோடு,“நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க சார்” என்றாள் பதிலுக்கு.

“நல்லா இருக்கோம்மா. ஆமா நீ என்னம்மா இங்க வந்துட்ட? மேற்கொண்டு நீ படிக்கிறியா இல்லையா? சொல்லு என்ன மேஜர் எடுத்துருக்க?”

“சாரி சார் நான் இன்னும் காலேஜ் சேரலை. உங்களுக்கே நடந்ததெல்லாம் தெரியும். என் ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாருமே ஆக்சிடெண்டுல இறந்து போயிட்டாங்க. யாரும் இல்லாம ஆதரவைத் தேடி, இப்ப இந்த வீட்டுல வந்து அடைக்கலமாகி இருக்கேன். மேற்கொண்டு எனக்கு படிக்கணும்னு ஆசை இல்ல சார்” என்றவளை கூர்மையாத் துளைத்தது எதிரில் நின்றவரின் பார்வை.

“ஏம்மா பொய் சொல்ற. நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போகணும், கை நிறைய சம்பாதிக்கணும், சொந்தக்காலுல நிக்கணுங்குறது தானே உன்னோட இலட்சியம். எவ்வளவு சொத்து இருந்தாலும் சொந்த கால்ல நிக்கணும்னு ஆசைப்படுறேன்,‌எனக்குன்னு தனி அடையாளம் வேணும்னு சொல்லிக்கிட்டு இருந்த, நீயா இப்ப திடீர்னு இப்படி சொல்றது. ஏன் உன்னை யாரும் படிக்க வைக்க மாட்டேன்னு சொன்னாங்களா? அதனால தான் இப்படி பேசுறியா?” என்று கேட்டவர் அங்கிருந்தவர்கள் அனைவரையும் பார்த்திட, யாரும் எதுவும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தனர்.‌ மீனாட்சிக்கோ அடுத்து அவள் என்ன சொல்வாளோ என்று சற்று பதற்றமாகவே இருந்தது.

வாணி பேசுவதற்கு முன் ஆதி விநாயகமே பேச ஆரம்பித்தார்.‌ “ஏன் சார் அந்த பொண்ணு தான் படிக்க விருப்பம் இல்லன்னு சொல்லுதே, அப்புறம் எதுக்கு நீங்க கட்டாயப்படுத்துறீங்க?”

“வாணியே விருப்பம் இல்லைன்னு சொன்னாலும், கட்டாயம் அந்த பொண்ணு 2 டிகிரி படிச்சே ஆகணும் சார். ஏன்னா அவங்க அப்பா ஆல்ரெடி அந்த பொண்ணு எந்த காலேஜ்ல சேர்ந்து படிக்கணும்னு முடிவு பண்ணி முழு பீஸையும் கட்டி இருக்காரு. பாருங்க இதுதான் அந்த ஃபார்ம், ரெசிப்ட் எல்லாம்” என்று அனைத்தையும் காண்பிக்க. அனைவரும் மூச்சடைத்து நின்றனர்

மீனாட்சியோ பதில் பேச வாயைத் திறக்க அவரை தடுத்து நிறுத்தியது அகிலின் பார்வை. மகனின் கண்டிப்பு பார்வையில் எதுவும் பேசாமல் அமைதியானார் மீனாட்சி.‌ ஆனால் அடுத்ததாக அவன் தான் பேச்சைத் துவங்கினான்.

“ சரி சார் நீங்க சொல்ற மாதிரியே அந்த பொண்ணு படிக்க போகுதுன்னே வச்சுக்குவோம். ஆனா காலே‌ஜ்க்கு மட்டும் தானே அவங்க அப்பா பீஸ் கட்டி இருக்காரு, ஹாஸ்டல் செலவு எல்லாத்தையும் யாரு பார்ப்பா, மத்த செலவெல்லாம் யாரு பார்ப்பா?” என்று கேட்டான்.

“ஓ நீங்க அப்படி சொல்றீங்களா? சரி மொதல்ல நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க, இந்த பொண்ணு எதுக்கு இந்த வீட்ல இருக்குது? வாணி உங்களுக்கு எல்லாம் என்ன உறவு வேணும்?” என்று கேட்க.‌ அனைவரும் திரும்பி ஒட்டுமொத்தமாக மீனாட்சியின் முகத்தைத் தான் பார்த்தார்கள்.‌

அவள் பதில் சொல்வதற்கு முன் தாங்கள் ஏதாவது பதில் சொல்லி வைத்தால் அதற்கும் மீனாட்சி எதாவது சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணி வைத்தால் என்ன செய்வது என்றே அவர்கள் அமைதி காத்தனர். மீனாட்சியோ வாயை திறந்து,“அவ என்னோட அண்ணன் பொண்ணு” என்று சொன்னாள்.

“ஓ அப்ப நீங்க வாணியோட சொந்த அத்தையா? அப்புறம் என்ன நீங்க தான் இருக்கீங்கள்ல நீங்க வாணியை பார்த்துக்க மாட்டீங்களா? அண்ணன் பொண்ணுக்காக இது கூட செய்ய மாட்டீங்களா? மிஞ்சிப் போனா என்ன ஒரு வருஷத்துக்கு ஒரு பத்தாயிரம், இல்லன்னா இருபதாயிரம் வருமா, இதர செலவுகள். அதைக் கூட செய்ய மாட்டீங்களா? இந்த மாதிரி காலகட்டத்துல தான் சொந்த பந்தமெல்லாம் உதவியா இருக்கணும், இதைக் கூட செய்யலைன்னா எப்படிங்க” என்று வந்திருந்த வாணியின் பன்னிரெண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் இருவரும் கேள்வி எழுப்ப மீனாட்சியிடம் பதில் இல்லை. மாறாக ஓர விழியால் வாணியை முறைத்தாள்‌.‌ வாணியோ அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் படபடப்புடன் நின்றிருந்தாள்.

“இல்ல சார் ஆல்ரெடி நாங்களே எல்லாத்தையும் நஷ்டத்துல தான் பண்ணிட்டு இருக்கோம். அப்படி இருக்கும் போது இவ்வளவு செலவு பண்ண எங்க கிட்ட பணம் இல்லை” என்று மீனாட்சி சொன்னதும் அவர் மீனாட்சியின் கழுத்தில் இருக்கும் நகை மற்றும் வீடு இருக்கும் சூழ்நிலை மற்றவர்களின் தோரணை என அனைத்தும் எடை போட்டவர் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.

பின்னர், “சரி இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க, உங்களால முடியாதுன்னா நேரடியா சொல்லிடுங்க. எதுக்கு உங்களுக்கு கஷ்டம் நாங்களே ஏதாவது டிரஸ்ட் மூலம் பணம் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்துடுறோம், அந்த பொண்ணை எங்களோடு அனுப்பி வைங்க” என்று கேட்டனர்..

அதைக் கேட்டு அந்த வீட்டில் மூவருக்கு அதீத ஆனந்தம். ஆதி விநாயகம், பூங்கோதை நாச்சியார், ஆதவ் மூவருக்கும் அத்தனை ஆனந்தம். இங்கிருந்து எப்படியாவது தப்பித்து சென்று, வாணி எங்காவது நல்லபடியாக பிழைத்துக் கொண்டால் போதும் என்று தான் அவர்கள் மூவருக்கும் தோன்றியது.

ஆனால் அதற்கும் முட்டுக்கட்டையை வைத்தார் மீனாட்சி.‌ “ஆனா எங்க அண்ணன் நான் தான் அவளை பார்த்துக்கணும்னு சொல்லி இருக்காரு, அதனால யாரை நம்பியும் நான் அவளை அனுப்ப முடியாது. பரவால்ல, அவ படிச்சது போதும் அவ இங்கேயே இருக்கட்டும்.‌ ஒரு அஞ்சாறு வருஷம் போனதுக்கு அப்புறம் யாராவது ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்துடுறோம்..” என்று சொல்லி அனைவரது வாயையும் அடைத்தார்.

மேற்கொண்டு வந்தவர்களும் என்ன பேசுவது என்று தெரியாமல் தயக்கத்துடன் அமர்ந்திருந்தவர்கள் ஓர விழியால் ஆதிவிநாயகத்தைப் பார்த்து என்ன செய்வது என்று சைகையால் கேட்க. அவரும் இரு விரல்களை காட்டிட,‌ அடுத்த பிளானை பயன்படுத்த சொன்னார்.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட அந்த ஆசிரியர்கள், “சரிமா உங்களுக்கும் வேணா எங்களுக்கும் வேணாம் நாங்க ஒன்னே ஒன்னு மட்டும் செய்யறோம். அவங்க அப்பா கட்டுன காசை வாங்கிக் கொடுத்துடுறோம் அந்த பொண்ணு இங்க இருந்தே ஏதாவது கவர்ன்மென்ட் காலேஜ்க்கு படிக்க போகட்டும். அந்த பொண்ணுக்கு உண்டான தொகையை அவங்க அப்பா கட்டுன பணத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா, மாசா மாசம் நாங்க அனுப்பி வெச்சுடுறோம். இப்ப அந்த பொண்ணு படிக்க சம்மதம் சொல்லுவீங்களா?” என்று கேட்டனர்.

மீனாட்சியோ சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “சரி அவ போகட்டும் நாங்க தடுக்க மாட்டோம். ஆனா காலேஜ்ல படிக்கிற வேலையை மட்டும் பாக்கணும், அது இதுன்னு ஏதாவது செஞ்சுட்டு வரக்கூடாது. அதுக்கு அவ உறுதி கொடுத்தா நான் தாராளமாக அவளை காலேஜ்கு அனுப்புறேன்” என்றார்.

அவர்களும் வாணியைப் பார்த்து புனனகைத்து விட்டு,

“அதெல்லாம் வாணி அப்படிபட்ட பொண்ணு கிடையாதுங்க. ஏன்னா இத்தனை வருஷமா எங்க ஸ்கூல்ல படிச்சதால வாணியை பத்தி எங்களுக்கு நல்லா தெரியும்.‌நீங்க தாராளமா படிக்க வைங்க மாசா மாசம் வாணியோட செலவுக்கு தேவையான பணத்தை நாங்க போட்டு விட்டுட்றோம். மொத்தமா கொடுத்தா வாணி காலேஜ் படிக்குதா இல்லையான்னு எங்களுக்கு தெரியாம போயிடும். அதனால தான் மாசா மாசம் அனுப்பி வைக்கிறோம், முடிஞ்சா அடிக்கடி நாங்களும் வந்து பார்த்துட்டு போறோம். நீங்க கேட்கலாம், மத்தவங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு என்னன்னு? இதே வாணி இடத்துல ஒரு பையன் இருந்திருந்தா நாங்க கவலைப்பட மாட்டோம். ஏன்னா பசங்க கூலி வேலை செஞ்சாவது பொழச்சுக்குவாங்க. ஆனா பொண்ணுங்களுக்கு படிப்பு தான் காலத்துக்கும் உதவியா இருக்கும். ஏதோ எங்களால முடிஞ்ச உதவியை செஞ்சோம். எங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு நல்லா இருந்தா எங்களுக்கு நிம்மதி தானே அதுக்காக தான் வந்தோம். இவ்வளவு நேரம் நாங்க கேட்டதுக்கும் பதில் சொன்னதுக்கும் நன்றிங்க”என்று சொல்லி எழுந்து நின்ற இருவரும் வாணி கொண்டு வந்து கொடுத்த பழச்சாறை வாங்கிக் குடித்து விட்டு, “உனக்கு தேவையான டீசி மத்தது எல்லாத்தையும் வாங்குறதுக்கு நீ ஒரு தடவை அங்கு வர்ற மாதிரி இருக்கும், வர்றியாமா?” என்றிட.

“நாளைக்கு வந்து எல்லாத்தையும் வாங்கிக்குறோம்” என்ற மீனாட்சியின் பதிலைக் கேட்ட பிறகே அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். மெயின் கேட் வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்தாள் வாணி. அவர்கள் வெகுதூரம் சென்று விட்டதை பார்த்து விட்டே அங்கிருந்து நகர்ந்தாள். ‘இவங்க வந்துட்டு போனதுக்கு வீட்ல என்ன பிரச்சனை வெடிக்கப் போகுதோ?’ என்ற பயத்துடனே வீட்டினுள்ளே நுழைய,‌“ஏன்டி நீ தான் போன் பண்ணி அவங்களை வர சொன்னியா?” என்று எடுத்த எடுப்பிலேயே வாணியின் பக்கம் கேள்வியை திருப்பினார் மீனாட்சி.

அவளோ பதற்றத்துடன், “இல்ல மேடம் நான் அப்படியெல்லாம் எதுவும் பண்ணலை”என்று பயந்தவாறே சொன்னாள்.

“நீ சொல்லாம அவங்க எப்படி, இவ்வளவு தூரம் வீடு தேடி வந்து இந்த மாதிரி பேசிட்டு போவாங்க.‌ உங்க அப்பன் கடனாளியாக இருக்கேன்னு சொன்னான், உனக்கு மட்டும் லட்சக்கணக்குல எங்கிருந்து நீ காலேஜ் படிக்க ஃபீஸ் கட்டி இருப்பான்.‌.? என்ன, என்னைக் கொடுமை படுத்துறாங்க வந்து காப்பாத்தி கூட்டிட்டு போங்கன்னு அவங்களுக்கு போன் பண்ணி சொன்னியாடி” என்று கேட்டவாறு யாரும் எதிர்பாராத விதமாக அவள் தலையை பற்றி சுவற்றில் மோத வைத்திருந்தார் மீனாட்சி.

‘அம்மா..’ என்ற அலறலோடு கீழே விழுந்த வாணி தட்டுத்தடுமாறி எழுந்து நின்று விழிகளில் வழியும் கண்ணீரோடு, “நான் அப்படி ஏதும் பண்ணலம்மா” என்றாள்.

“அம்மான்னு கூப்டா கொன்னுடுவேன், மரியாதையா மேடம்னு கூப்டுடி. நீ எதுவும் சொல்லாம அவங்களுக்கு எப்படிடி நீ இங்க இருக்குறது தெரியும்..” என்று சொன்னவாறு

மீண்டும் அவளை அடிக்க வர, பூங்கோதை நாச்சியார் அவர்கள் இருவருக்கும் இடையே வந்து வழிமறித்து நின்றவாறு, “இங்க பாரு மீனாட்சி இவ்வளவு தான் உனக்கு மரியாதை. அந்த பொண்ணைப் புடிக்கலையா தள்ளி நிக்க பழகிக்க, இதுக்கு மேல கொடுமை பண்ணுனா ஊர் உலகம் எல்லாம் உன்னைப் பத்தி தப்பா பேசும். ஏற்கனவே அவங்க இருந்த வீட்டுல போய் விசாரிச்சா அங்கிருக்கவங்க இந்த பொண்ணு எங்க இருக்கான்னு சொல்ல போறாங்க.‌ அப்படி இருக்கும் போது தேவையில்லாம இந்த புள்ளைய எதுக்கு நீ இப்படி கஷ்டப் படுத்துற..?” என்று சற்று கோபமாகவே கேட்டார்.

“அவளுக்காக என்னையே நீங்க குறை சொல்றீங்களா அத்தை..?”

“இல்லம்மா, ஊர்ல இருக்கவங்க யாரும் உன்னை குறையா பேசிட கூடாது, தப்பா பேசக்கூடாதுங்குறதுக்காக தான் சொல்றேன்..” என்றவர் சட்டென்று வாணியின் புறம் திரும்பி,“இங்க பாரு நீ காலேஜுக்கு போ, போகாம இரு

அதெல்லாம் எங்களுக்கு தேவை இல்லை, வீட்டு வேலையெல்லாம் கரெக்டா செய்யணும். காலையில எந்திரிச்சு சமைச்சுட்டு நீ காலேஜ் போயிடு, மதிய சமையலை பொன்னி செஞ்சுருவா, அதே போல நைட் சமையலை நீ செஞ்சுடு இது தான் என்னோட முடிவு. இதுக்கு மேல தேவையில்லாம இந்த வீட்டுல இதை வெச்சு வேற எந்த பிரச்சினையும் வர வேணாம்னு நினைக்கிறேன். மீனாட்சி உனக்கு மட்டும் இல்லை இங்க இருக்க அத்தனை பேருக்கும் இதைத்தான் சொல்றேன், நம்ம குடும்பத்துக்கு ஒரு கௌரவம் இருக்கு, அதை வீதியில போற மாதிரி ஏதாவது நடந்துட்டா அதுக்கப்புறம் சொத்தை எல்லாம் அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வச்சுட்டு அத்தனை பேரையும் தெருவுல நிக்க வெச்சுருவோம் ஞாபகம் வச்சுக்கோங்க” என்று வழக்கத்திற்கு மாறாக கோபமாக சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார் பூங்கோதை நாச்சியார்.

இவற்றை எல்லாம் பார்த்து விட்டு

அலுவலகம் செல்ல தயாராகி வந்த அகிலும்,“பாட்டி சொல்றது கரெக்ட்னு தான் தோணுது அம்மா. நீங்க எதுக்கு தேவையில்லாம சாக்கடையில போயி கல்லெறியணும்னு நினைக்கிறீங்க, சாக்கடையில கல்லெறிஞ்சா அந்த சாக்கடை உங்க மேலதான் தெரிக்கும்.‌ அவ யாரோ ஒருத்தின்னே ஞாபகத்துல வச்சுக்கோங்க.‌ இந்த வீட்ல இருக்குற வரைக்கும் வேலைக்காரி மாதிரி இருந்துட்டு போறான்னு நினைச்சுக்கோங்க. எதுக்கு தேவை இல்லாம அவளை டார்ச்சர் பண்ணி நீங்க கெட்ட பெயர் எடுக்கணும்னு நெனைக்கிறீங்க.‌ அவ காலேஜ் படிச்சா மட்டும் பெரிய ஆளா வந்துருவாளா? இல்ல தானே அப்புறமென்ன, விடுங்க அவ காலேஜ் போகட்டும். இன்னொரு விசயம் அப்படியே அவ யாரையாவது லவ் பண்ணுனாலும் சரி கண்டுக்காதீங்க. எவனையோ இழுத்துக்கிட்டு எங்கேயாவது ஓடி போய் தொலையட்டுமே! நமக்கு ஒரு இம்சை குறையுமே! அவ எப்படியோ போய் தொலையிறா விடுங்கம்மா. எதைப் பத்தியும் யோசிக்காம, டென்ஷன் ஆகாம வீட்ல ரெஸ்ட் எடுங்க. இல்லையா வாங்க ஆபீஸ் போலாம், நான் உங்களை ட்ராப் பண்றேன்” என்று சிறிதும் மனசாட்சி இல்லாமல் பேசியவனை இவனெல்லாம் ஒரு மனுசனா என்ற எண்ணத்தோடு பார்த்து விட்டு ஆதி விநாயகமும், ஆதவும் அங்கிருந்து சென்று விட்டனர்……

- தேடல் தொடரும்...

https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-comments.615/
 
உறவின் தேடல் -13.1



அதன் பிறகு எப்போதும் போல் தன் சமையல் வேலையை தொடங்கினாள் வாணி. மதியத்துக்குண்டான சமையலை முடித்து விட்டு தன் அறைக்கு வந்தவள் சமைப்பதற்கு எதுவுமில்லையே என்ற யோசனையோடு அமர்ந்திருக்கையில், பூங்கோதை நாச்சியார் இந்த மாதம் அவளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றார்.‌



அதை வாங்கிக்கொண்டு கடைக்கு சென்றவள் வீட்டுக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு வந்தாள். மீண்டும் அவள் சமைத்து முடித்து உணவை உண்ணும் போது மணி இரண்டுக்கு மேலே ஆகியிருந்தது. இது எப்போதும் நடப்பது தானே என்று பெருமூச்சு விட்டவள் மதிய உணவை சாப்பிட்டு விட்டு மீதமிருந்ததை டிபன் பாக்ஸில் போட்டு கொண்டு கோவிலை நோக்கி நடந்தாள்.‌



செல்லும் வழியில் அந்த பெரியவருக்கு தான் கொண்டு வந்த உணவைக் கொடுத்து விட்டு கோவிலுக்கு வந்தவள் மனமுவந்து ஆண்டவனை வேண்டிக் கொண்டாள்.‌ தனக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்று வேண்டாதவள் எப்போதும் போல் தன் அத்தை குடும்பத்தைச் சேர்ந்தோரின் நலனுக்காக வேண்டிக் கொண்டாள்.



திட்டமிட்டு செய்யப்படவில்லை என்ற போதும், அவன் கையால் தவறுதலாக தன் கழுத்தில் தாலி ஏறிவிட்டது. ஆகவே இப்போது அவன் தன் கணவன் என்பதால், அவனுக்கு எதுவும் நேரக்கூடாது, அவன் நன்றாக இருக்க வேண்டும்,‌ அவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் மனமுருக வேண்டிக் கொண்டாள்.‌ பின்னர் சிறிது நேரம் அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.



‘அவரைப் பற்றி யாரிடம் கேட்பது. அவர் நல்லா இருக்காரான்னு யாருக்கிட்ட கேட்டு தெரிந்து கொள்வது’ என்று தெரியாமல் யோசனையோடு தான் அமர்ந்திருந்தாள். கோயில் அர்ச்சகரிடம் கேட்டால் சொல்வார் தான் ஆனால், முன்ன பின்ன தெரியாதவரைப் பற்றிய தகவல்களை தான் கேட்டு தெரிந்து கொள்வதால் தன்னைப் பற்றி அவர் எதுவும் தவறாக நினைக்கக் கூடும், நீ எதுக்குமா அவரைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிற, அவரு உனக்கு யாரு’ என்று கேள்வி கேட்டு தன்னை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் எதையும் கேட்காமல் அமைதியாக அமர்ந்திருந்தவள், நேரமாவதை உணர்ந்து வீட்டிற்க்கு கிளம்பினாள்.



வீட்டிற்கு வந்ததும் பின்பக்கம் செடிகள் இருந்த பகுதியில் சற்று நேரம் காலாற நடந்தாள்.‌ பின்பு மீண்டும் உள்ளே நுழைந்து ஈவினிங் சிற்றுண்டி உணவைத் தயார் செய்து வீட்டில் இருந்தோருக்கு கொடுத்து விட்டு இரவு உணவிற்கானவற்றை தயார் செய்தாள்.



இரவு உணவை தயார் செய்து விட்டு அவர்களுக்குப் பரிமாறி விட்டு தன் அறைக்கு அயர்வோடு ‌வந்து சேர்ந்தாள். பகல் முழுவதும் வேலை செய்ததன் விளைவாக உடல் களைப்படைந்த போதும் துவைக்க வேண்டிய துணிகள் இருந்ததால் அவற்றை ஊற வைத்து விட்டு வந்து சமையலை கவனித்தாள். தனக்கு தேவையானதை சமைத்து முடித்து விட்டு கிணற்றில் நீர் சேந்தி துணிகளை துவைத்தவள் அவற்றைக் காயப்போட்டு விட்டு தன்னறைக்குள் நுழைந்தாள். பின்னர் சமைத்ததை தட்டில் போட்டு சாப்பிட்டு விட்டு, பாத்திரங்களை சுத்தப்படுத்தி வைத்து விட்டு படுக்கையில் விழுந்த போது எப்போது போல், மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது...



மறுநாள் விடியலில் அவள் தன் அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது, எழுந்து கீழே வந்த பூங்கோதை நாச்சியார் அவளிடம், “நீ சமைச்சது போதும், மத்த வேலையெல்லாம் பொன்னி பாத்துக்குவா நீ போய் கிளம்பி வாம்மா.‌ இன்னைக்கு சர்டிபிகேட் எல்லாம் வாங்க போகணும்னு உங்க அத்தை நைட்டு சொல்லிக்கிட்டு இருந்தா” என்றதும் விருக்கென்று அவரை நிமிர்ந்து பார்த்த வாணி,

“இன்னொரு தடவை அவங்களை என்னோட அத்தைன்னு சொல்லாதீங்க பெரியம்மா, நீங்க சொன்னது அவங்களோட காதுல விழுந்தா அதுக்கும் சத்தம் போடுவாங்க” என்று சொல்லி விட்டு தயாராக தன்னறைக்குச் சென்றாள்..



மீண்டும் ஒருமுறை குளித்து முடித்து தன்னிடம் இருந்த உடைகளிலேயே சற்று சாயம் வெளுக்காத சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டாள்.‌தன் அறையில் இருந்து அவள் வெளியே வரும் வேளையில் பின்பக்கம் இருந்த கிணற்றின் அருகில் நின்றிருந்தான் ஆதவ்.



அவனைக் கண்ட பின்பும் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர முயன்றாள் வாணி. ஆனால் அவனே அவளை வழிமறித்து நின்றவன், “என்கூட பேச கூடாதுன்னு உங்க அத்தை சொல்லிட்டாங்களா, அதனால தான் என்னைப் பார்த்தும், பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பிக்கிட்டு போறீங்களோ?” என்று கேட்டிட..



திரும்பி அவனை பார்த்து முறைத்தவளோ,“முதலாளிக்கிட்ட பேசாம தொழிலாளிங்க எங்க முதலாளி போவாங்க. என்னதான் இருந்தாலும் நீங்க எங்களுக்கு சம்பளம் கொடுக்குற இடத்துல இருக்கீங்க, நான் உங்க வீட்டுல வேலை செய்யிற வேலைக்காரி. என்னுடைய இடம் இது தான்னு தெரியும் போது அந்த இடத்துல நிக்கிறது தானே எனக்கு நல்லது” என்று சொல்லி விட்டு அவள் அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விட, அவள் பேசியதைக் கேட்டு இவனுக்கு தான் என்னவோ போலிருந்தது.



'தந்தை செய்த தவறுக்கு மகளைத் தண்டிப்பது மட்டும் இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நியாயமாகப்படுகிறது போல' என்று நினைத்துக் கொண்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன்,“கடவுளே எப்படியாவது இந்த பொண்ணுக்கு நல்ல புத்தியை கொடுப்பா” என்று வாய்விட்டே கடவுளிடம் புலம்பி விட்டு வீட்டிற்குள் வந்தான்..



அவர்கள் இருவரும் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே வருவதை கண்டு விட்டு முறைத்தவாறு உணவு உண்ண அமர்ந்தான் அகில் பிரசாத்.

படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த மீனாட்சியோ அவள் போட்டிருந்த உடையை பார்த்து விட்டு முகம் சுழித்தவள்,

‘தான் நினைத்தது போலவே செய்து வைத்திருக்கிறாளே' என்று எண்ணி கடுப்பானவர் தன் கையிலிருந்த பார்சலை அவள் கையில் கொடுத்தார்.‌



“இப்ப எதுக்குடி இதை போட்டுக்க, என் மானத்தை வாங்குறதுக்கா.‌ நாம போற இடத்துக்கு இந்த மாதிரி போட்டுட்டு வந்து நின்னா, எங்களை அவங்க தப்பா பேசுவாங்க அதுதானே உனக்கு வேணும்.‌ அதுக்காக தானே இதை போட்டுக்கிட்டு வந்து நிக்கிற,போ போய் மரியாதையா இதை போட்டுட்டு வா” என்றதும் மறுபேச்சு பேசாமல் அதை வாங்கிக் கொண்டு உடை மாற்ற தன்னறையை நோக்கி சென்றாள்..



உடையை மாற்றிக் கொண்டவள் மறக்காமல் ஏனோ தானோவென்று சமைத்து வைத்ததை வாய்க்குள் தள்ளிக் கொண்டு தான் வந்திருந்தாள்.‌ அவள் வருவதற்குள்ளாகவே இவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு அமர்ந்திருக்க, மீனாட்சியோ‌ இவளின் வருகைக்காக காத்திருந்தார்.



இவளைக் கண்டதும் மீனாட்சி எழுந்து நிற்க, கூடவே அகிலும் எழுந்து நின்றான். இதைக்கண்டு இவளுக்கு தான் கை கால் உதறியது. ஏற்கனவே கண்ணாலேயே என்னைக் கொலை பண்ணுவான், இவனும் வேற வர்றானா, போச்சு என்னென்ன நடக்க போகுதோ?என்று மனதில் நினைத்துக் கொண்டு அவர்கள் முன்னே பலியாடு போல் சென்றாள் வாணி. செல்லும் அவளையே விழிகள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தனர், ஆதிவிநாயகமும் பூங்கோதை நாச்சியாரும்..



அவர்கள் தலை மறைந்ததும் வேக வேகமாக தன் அறைக்குச் சென்ற ஆதி விநாயகம் அன்று வந்திருந்த ஆசிரியர்களுள் ஒருவருக்கு அலைபேசியில் அழைத்து, “அவங்க இங்க இருந்து கிளம்பிட்டாங்க சார். நான் சொன்ன மாதிரி எல்லாத்தையும் இதுவரைக்கும் செஞ்சுட்டீங்க, இதுக்கப்பறமும் செஞ்சிட்டா நல்லாருக்கும். அவங்க அப்பா கொடுத்ததுன்னு சொல்லி எல்லாத்தையும் அந்த புள்ளைகிட்ட குடுத்து விட்ருங்க. பணம் மட்டும் கிடையாது சார், இதுக்கு முன்னாடி அவங்க வீட்டுல பயன்படுத்துன பொருட்கள் அந்த பொண்ணோட துணிமணிங்கன்னு எல்லாத்தையும் அந்த பொண்ணுக்கிட்ட கொடுக்க முடிஞ்சா குடுத்து விட்ருங்க சார் ப்ளீஸ் உங்க புண்ணியத்துல அந்த பொண்ணு நல்லா இருக்கும் இல்லையா” என்றார்.



அந்த பக்கம் பேசிய ஆசிரியரோ,

“கவலப்படாதீங்க ஐயா நான் மறக்காம குடுத்து விட்டுட்றேன். இதெல்லாம் எங்களால நடக்கலைங்க ஐயா, இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான்.‌ எங்களுக்கு கூட இந்த யோசனை தோணல. அந்த பொண்ணு எங்க போனாலும் நல்லா இருப்பான்னு தான் நாங்க நெனைச்சுக்கிட்டு இருந்தோம். நீங்க போன் பண்ணி சொல்ற வரைக்கும் எங்களுக்கு இப்படி ஒரு விஷயம் அங்க நடக்குதுன்னு தெரியாதுங்கய்யா. நீங்க கவலப்படாதீங்க நான் மத்ததெல்லாம் பார்த்துக்குறேன் ஐயா. முடிஞ்சவரைக்கும் அந்த பொண்ணு படிப்பை முடிச்சதும் எங்கேயாவது நல்ல வேலையில் அமர்த்தி, ஒரு நல்ல மாப்பிள்ளைய பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சுருங்க ஐயா, பாவம் ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணுங்கய்யா அங்க வந்து வீட்டு வேலை எல்லாம் செய்யுதுன்னு நீங்க சொன்னதைக் கேட்டதுமே ரொம்ப கஷ்டமா போச்சு, பார்த்துக்கோங்கய்யா” என்று சொல்லி விட்டு அந்த ஆசிரியரும் அழைப்பைத் துண்டித்தார்.



பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட ஆதி விநாயகம் தன் முகத்தை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் தன் மனைவியிடம், “இந்த உதவியை நாம அந்த பொண்ணுக்கு செய்யலன்னா கண்டிப்பா பாவத்தோட தான் நாம செத்துப் போயிருப்போம் நாச்சி. அந்த பொண்ணு அவங்க வீட்டுல செல்லமா வளர்ந்துருக்கு, அந்த புள்ளைய போயி நம்ம மருமக கொடுமைப்படுத்துறா பாத்தியா. அவங்க அப்பன் தப்பு செஞ்சவனாவே இருக்கட்டுமே, அவன் அப்பன் செஞ்ச பாவத்துக்கு அவ செத்துப் போயிட்டான்னு நெனச்சு விட்டுட வேண்டியது தானே, எதுக்கு வாழவேண்டிய பொண்ணை இப்படி கஷ்டப்படுத்தணும். இவ பொண்ணு மட்டும் பாரின்ல போய் படிக்கும் போது இந்த பொண்ணு மட்டும் இவங்களுக்கு சேவகம் பண்ணிக்கிட்டே இருக்கணுமோ, அதான் அவங்களை போன் பண்ணி வர சொன்னேன்.‌ காலேஜ்ல சேர்க்குறதுக்கு ஐடியா சொன்னேன், எப்படியோ அவங்க மூலமா உன் மருமகளை வழிக்கு கொண்டு வந்தாச்சு..” என்று சொன்னவாறு பெருமூச்சு விட்டார்.



“நீங்க செஞ்சது நல்லதுக்கு தாங்க நான் இல்லைன்னு சொல்லலை. அதுக்காக அவ இங்கிருந்து படிக்கிற மாதிரி செய்யாம ஏதாவது ஹாஸ்டல்ல தங்கி படிக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கலாமே. பாவம் அந்தப்புள்ள பொழுதன்னைக்கும் இங்க வேலை செய்யுது, இந்த வேலை பத்தாதுன்னு தன்னோடு துணியையும் துவைச்சு, தனக்கும் தனியா சமைச்சுக்குது பாவங்க அந்த பொண்ணு. நானே இதை எல்லாம் சொல்லக்கூடாது ஆனாலும் சொல்றேன், என் மருமக செய்யிற இந்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்காம மட்டும் சாக மாட்டாங்க” என்று அந்த பெரிய மனுஷி வாணி படும் வேதனை தாளாமல் தன் மருமகளுக்கு சாபமிடுகிறோம் என்பதை உணராமல் சொல்லி வைத்தார்.





இங்கிருந்து கார் கிளம்பியது. ஓட்டுனர் இருக்கையில் அகில் அமர்ந்திருக்க, முன்பக்கம் மீனாட்சி ஏறிக்கொண்டார். தயக்கத்துடன் பின்பக்கம் ஏறி அமர்ந்தாள் வாணி. வேண்டா வெறுப்பாக மீனாட்சி எடுத்துக் கொடுத்த அந்த அடர் மஞ்சள் சுடிதார் அவள் நிறத்திற்கு அத்தனை எடுப்பாக இருந்தது. வாணியோ பதைபதைப்புடன் சற்று பயத்துடன் தான் அமர்ந்திருந்தாள்.‌இங்கு வந்த இத்தனை மாதங்களில் முதல் முறையாக இந்த ஊரைத் தாண்டி செல்கிறாள், அப்படி இருக்கும் போது உள்ளே பயம் இருக்கத்தான் செய்யும்.



வீட்டிலேயே அந்தப் பேச்சு பேசுபவர்கள் இங்கே ஏதாவது சொல்லி விடுவார்களோ என்ற பயத்துடன், தன்னைச் சேர்ந்தவர்கள் எவரேனும் தன்னை பார்த்து விடுவார்களோ, ஏதாவது கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான் அவளைக் கொல்லாமல் கொன்றது. தன்னையே தன் அத்தைக்கு பிடிக்கவில்லை, இதில் தன்னைச் சேர்ந்தவர்களை பார்த்தால் என்ன சொல்வாரோ என்ற எண்ணமும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக சாதாரணமாக இருக்க விடாமல் ஏதோ சூழலுக்குள் தள்ளி விட்டது போல் இம்சைப்படுத்திக் கொண்டிருந்தது.



ஈரோட்டில் உள்ள மிகப்பெரிய கல்லூரியான திண்டலில் இருக்கும் வேளாளர் மகளிர் கல்லூரியை நோக்கி தான் செல்கிறார்கள். அந்தக் கல்லூரியுடன் இணைந்திருக்கும் தனியார் பள்ளியில் தான் வாணி படித்து கொண்டிருந்தாள்.‌ அதனால் தான் இப்போது அங்கே செல்கிறார்கள்.



அங்கே சென்றவர்கள் முதலில் அவளது சூழ்நிலையை தெரிவித்து விட்டு,‌ ஏன் இத்தனை மாதங்களாக சான்றிதழ்கள் வாங்க வரவில்லை என்பதற்கான காரணத்தையும் சொன்னார்கள். பின்னர் தேவையான படிவங்களை பூர்த்தி செய்து, அலுவலகத்தில் கொடுத்து விட்டு சிறிது நேரம் காத்திருந்தார்கள்.‌



பின்னர் தேவையானவற்றை வாங்கிக் கொண்டவர்கள் கிளம்புகையில் அவளை வழியனுப்பி வைக்க ஏராளமானோர் வந்தனர்.‌ ஆசிரியர்கள் முதற்கொண்டு தற்போது அங்கே கல்லூரியில் சேர்ந்து இருக்கும் அவளது தோழிகள் வரை விஷயம் கேள்விப்பட்டு அனைவரும் அங்கே வந்துவிட்டனர்.



அனைவரும் அவளை சூழ்ந்துக்கொண்டு நலம் விசாரித்தார்கள்.‌ பல மாதங்களுக்குப் பிறகு தன் வகுப்பு தோழமைகளைக் கண்டவள் அவர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு வருகிறேன் என்று மீனாட்சியிடம் பர்மிசன் கேட்டு விட்டு சற்று தள்ளி வந்தாள்.. உயிர் தோழமை ஒருவர் கூட அவளுக்கு இல்லை. எல்லாரும் நண்பர்கள் தான் என்ற எண்ணத்தில் அனைவரிடமும் பாரபட்சம் காட்டாமல் தான் வாணி பழகுவாள்.



தற்போதும் அவர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்தவள், பல மாதங்களுக்கு பிறகு உண்மையான மகிழ்வுடன் புன்னகைத்தாள். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களிடமிருந்து விடைப்பெற்றவள் ஆசிரியர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom