Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

Status
Not open for further replies.
உறவின் தேடல் -08

அழும் தன் தாயைத் தேற்ற வழியறியாது செல்லும் அவர்களையேப் பார்த்திருந்தான் அகில். அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லும் மலர்விழியும் கண்ணாடியின் வழியாக தங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் அகிலைப் பார்த்தவளுக்கு இன்னும் கோபம் அனலாகத் தகித்தது.

‘கடந்து சென்ற‌ அனைத்தையும் இல்லை என்று அவனால் மறுக்க முடியுமா? என் தோழியை அவமானப்படுத்த எண்ணி அவன் செய்த செயலை, எதுத்து ஏன் செய்தாய்? என்று கேட்ட ஒரே காரணத்துக்காக தன் வாழ்வையும் அல்லவா, பாலுங் குழியில் தள்ளி விட்டான். அவனது செயல், எங்கள் இருவரது வாழ்க்கையை நிர்மூலமாக்கியது என்றால், அவனுரைத்த வார்த்தைகள் என் தாய் தந்தையின் உயிரையும் அல்லவா குடித்து விட்டது.‌ இப்போது தாங்கள் இருக்கும் இந்த நிலைக்கு காரணம் இவன் ஒருவன் தானே?’ என்று எண்ணியவளுக்கு இப்போதே அவனைக் கொன்று புதைத்து விடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.

ஆனால் வாணியின் ஒற்றைச் சொல்லிற்கிணங்கி இதுவரை அமைதி காக்கிறாள். எதிரில் அவனைப் பார்த்தாலும் கடந்து செல்ல பழகிவிட்டாள் தான், ஆனால் அவனை மன்னிக்கும் எண்ணம் துளியும் அவள் மனதில் இல்லை.

அமைதியாக வாகனத்தை ஓட்டினாலும் அவள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள், என்ன என்ன விதமான எண்ணங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கும் என்பதை உணர்ந்த வாணி அவளது தோள் பட்டையில் கரம் பதித்து,
“என்னால தானடி உனக்கு இத்தனைக் கஷ்டமும்?” என்று சொன்னாள்.

சட்டென்று தான் ஓட்டிக் கொண்டிருந்த எக்ஸலை நிறுத்திய மலர்விழி,“கீழே இறங்குடி..” என்றாள்.

வாணி கீழே இறங்கி நின்றதும் தானும் கீழே இறங்கியவள், சட்டென்று வாணியின் புறம் திரும்பி சப்பென்று அவளது கன்னத்தில் அறைந்திருந்தாள்.
“இது மாதிரி பேசாதன்னு நான் உங்கிட்ட பலதடவை சொல்லிட்டேன், ஆனாலும் நீ கேட்கமாட்டேங்குறியேடி”

“நீயும் தான் நான் சொல்றதை கேட்கமாட்டேங்குற, வேணான்டி இந்த கோவத்தை விட்ரு, அதான் உன்னோட வாழ்க்கைக்கு நல்லதுடி”

“எதுடி நல்லது, அவனோட காலுல நான் போயி விழுறதா? இல்ல உன்னையும் என்னையும் அசிங்கப்படுத்துனவனை நம்பி அவன் வீட்டுக்கு போறதா?” என்று கோபத்தோடு மலர் கேட்டாள்.

“இல்ல, மலர் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடி.. ஆயிரந்தா இருந்தாலும் இனிமே அது தான்டி உன் குடும்பம்”

“வேணா வாணி இனி அப்படி சொல்லாத, எனக்கு கோவமா வருது. என்னைக்கு நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையையும் நாசம் பண்ணுனானோ,அந்த நிமிஷமே புருஷனாவது, மண்ணாவதுன்னு விட்டுட்டு வந்துட்டேன். மறுபடியும் மறுபடியும் அதை பத்தி பேசாத, நடந்ததை எல்லாம் கெட்டக்கனவா நெனச்சு மறக்கணும், அதுல இருந்து வெளியே வரணும்னு ரொம்ப சிரமப்பட்டு முயற்சி பண்ணி, இப்ப வெளியவும் வந்துட்டேன், மறுபடியும் அதுக்குள்ள என்னைப் போக வைக்காத அதுக்கப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று நா தழுதழுக்க சொன்னாள் மலர்.

“நீ ஏன் மலர் இப்படி இருக்க? நீயாவது கொஞ்சம் அனுசரிச்சு போலாமேடி. நடந்ததை மாத்த முடியாது தான், அதுக்காக எத்தனை நாள் அதையே பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்குறது? உனக்குக் கெடச்ச நல்ல வாழ்க்கையை நீ மிஸ் பண்ற மலர்..”

“பரவால்ல உனக்கு துரோகம் பண்ண நினைச்ச அவனோட வாழணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது, அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு தேவையும் இல்லை. ஏன் பணம் இருந்தா தான் நல்ல வாழ்க்கை அமையுமா? இப்ப என்ன அவன் தாலி மட்டும் தானே கட்டுனான், அதை தூக்கி தூர போட்டுட்டு போறதுக்கு எனக்கு கொஞ்ச நேரம் ஆகுதுடி. ஆனா அதை செய்யாம நான் இன்னமும் அதை கழுத்துல சுமக்குறதுக்கு காரணம் அவங்கிட்ட இருந்து சட்டப்படி டிவோர்ட்ஸ் வாங்குறதுக்காக மட்டும் தான். வேறு எதையும் நீ மனசுல நினைச்சுக்காத. அப்படிப்பட்ட எண்ணம் ஏதாவது இருந்தா அதை அடியோட அழிச்சுடு, என்னைக்கும் அவனோட போய் நான் வாழ மாட்டேன்..” என்றாள் தீர்க்கமாக.


“நீ தப்பு பண்ற மலர். சும்மா வாய் வார்த்தைக்காக எது வேணாலும் பேசலாம் ஆனா, நீ சொல்றதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரணுமேடி?”

“அதெல்லாம் ஒத்து வரும். வராம எப்படி போகும்? நீ என்னை அவங்கூட போய் வாழுன்னு கட்டாயப்படுத்துனா நான் போயிருவேன்னு நெனைக்கிறியா, அது நான் உசுரோட இருக்க வரைக்கும் நடக்காது.. ”

“வேற என்ன தாண்டி பண்ணனுங்குற? அதான் ஊரறிய உங்கழுத்துல தாலி ஏறிடுச்சே, அப்புறமும் ஏன்டி இப்படி அடம் புடிக்கிற? அவரைப் பார்த்தாலும் பாவமா இருக்குடி. அஞ்சு வருஷமா உனக்காக காத்துருக்காரு. போதாக்குறைக்கு செய்யிற பிஸ்னஸ்ஸை விட்டுட்டு உன்னைப் பாக்குறதுக்காகவே தெனமும் இங்க வர்றாரு. அதைப் பார்த்துமாடி உன் மனசு இறங்கலை?”

“எதுக்குடி இத்தனை நாள் இல்லாம இப்ப என் மனசு மாறணும்னு நினைக்கிறவ, அந்த வீட்டுக்கு போயி நான் வாழணும்னு நெனைக்கிறவ?”

“இதென்னடி கேள்வி. நீ நல்லாருக்கணும்னு நினைக்கிறேன் அதனால தான் நீ அங்க போய் சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறேன்..”

“ஓஓஓ.. நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறியா? சரி நான் நல்லாருக்கணும்னு நீ ஏன்டி நெனைக்கணும்? நான் என்ன உனக்கு உறவா?”

“ஏய் மலர் இதென்னடி பேச்சு?நீ எனக்கு உறவில்லடி அதைவிட உசந்தவ, என் உயிர்த்தோழிடி.. அப்படி இருக்கும் போது நீ நல்லாருக்கணும்னு நான் நினைக்கிறதுல என்னடி தப்பு இருக்கு?”

“ஓஓஓ...நீ அப்படி வர்றியா? சரிடி உம்பேச்சுக்கே வர்றேன். நீ எப்படி உன் தோழியான நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறியோ, அதே மாதிரி தானே என்னோட தோழியான நீயும் நல்லாருக்கணும்னு நான் நினைப்பேன், அதை ஏன்டி நீ புருஞ்சுக்க மாட்டேங்குற?”

“அடியேய் மலர் நான் எதைப் பத்தி பேசுனா நீ எதைப் பத்திடி பேசுற? நான் உன் வாழ்க்கை நல்லாருக்கணும்னு அதைப் பத்திப் பேசுனா எதுக்கு நீ தேவையில்லாம இதைப் பத்தி பேசிட்டு இருக்க?” என்று சற்று கோவமாகவே கேட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைத்தபடி, “உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நீ நெனைக்கலாம். ஆனா உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நான் நினைக்க கூடாது அப்படி தானே! இங்க பாருடி என்னோட முடிவு ஒன்னே ஒன்னு தான், என் வாழ்க்கை எப்படி போகுதுன்னு நீ கேட்க கூடாது. மனசை மாத்திக்கன்னு சொல்லக்கூடாது. அப்படி கேட்கணும்னு நீ நெனச்சா, இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு நீ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சரின்னு சொல்லு நல்ல மாப்ளையா நான் பார்க்குறேன்” என்றாள் மலர்.

“எல்லாமே தெரிஞ்சும் நீயே இப்படி பேசுறியேடி, என்னால எப்படி இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க முடியும்?”

“இப்ப இதை சொல்றவளுக்கு அன்னைக்கு புத்தி எங்கடி போச்சு? இப்ப எனக்கு தாலிகட்டி இருக்காரே ஒரு பெரிய மனுஷன், அன்னைக்கு அந்த மனுஷனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி மணமேடை வரைக்கும் வந்தியேடி அப்ப மட்டும் எப்படி உனக்கு தைரியம் வந்துச்சு. அப்ப எந்த முகத்தை வெச்சிகிட்டு மணவறையில வந்து உட்கார்ந்த? இதையெல்லாம் உன்னைக் குத்திக் காட்டனுங்குறதுக்காக பேசுறேன்னு நினைக்காத வாணி உன்னால எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு தனியா வாழ முடியும் தான். ஆனா நீ இப்படி இருக்குறதை என்னால பார்க்க முடியாது. உன்னால எல்லாத்தையும் மறக்க முடியும் முயற்சி பண்ணுடி. அவரே எல்லாத்தையும் மறந்துட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழும் போது நீ மட்டும் ஏன்டி இப்படி தனி மரமா நிக்கணும்?”

“என்னோட விதி இதுதான், அதை மாத்த யாராலும் முடியாது. அதனால இதோட இந்த பேச்சை விட்ரு மலர். இனிமே நான் உன்னைப் பத்தியும், உன் வாழ்க்கையைப் பத்தியும் எதுவும் பேச மாட்டேன். ஆனா தினமும் உன்னோட புருஷனும், உன்னோட மாமியாரும் நம்ம இருக்க இடத்துக்கு வர்றாங்க.‌ முடிஞ்சா அவங்களை வரக் கூடாதுன்னு சொல்லிடு. அவங்களப் பாக்க கூட எனக்கு பிடிக்கல, நான் எல்லாருக்கும் நல்லது செய்யணும்னு தாண்டி நினைச்சேன். ஆனா கடைசியில எனக்கு எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லது செஞ்சுட்டாங்க. இதோட இந்த பேச்சை விட்டுடு” என்று சொல்லி விட்டு இந்த முறை தான் வண்டி எடுத்தாள் வாணி .

பின்னால் ஏறி அமர்ந்த மலரோ,
‘போடி போ எத்தனை நாளைக்கு இப்படியே முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறேன்னு நானும் பார்க்குறேன்டி’ என்று நினைத்துக் கொண்டவள் அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள்.
இப்போது வாணியின் மனது நிலையில்லாமல் தவித்தது..

இருவரும் சலசலத்து ஓடும் காவிரி ஆற்றின் கிளை பிரிவான அந்த சிறிய வாய்க்காலின் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி நின்றார்கள். சுற்றி முற்றிலும் ஆட்கள் யாருமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அனைத்தும் பச்சை பசேலென்ற வயல்களாகவே நிறைந்திருந்தன. வாய்க்காலின் இரு புறமும் கோரை புற்கள் உயர்ந்து அடர்த்தியாக வளர்ந்திருந்தன.

பெரும்பாலும் அப்பகுதியில் இருக்கும் பெண்கள் குளிப்பதற்கும், அழுக்குத் துணிகளையும் துவைப்பதற்கும் இவர்களைப் போல் இந்த கால்வாயைத் தேடி வருவது உண்டு. அதனால் அமர்ந்து குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பெரிய பெரிய தட்டையான பாறைகளைப் பெயர்த்து கொண்டு வந்து கரையோரம் போட்டிருந்தார்கள்.

இவர்கள் இருவரும் வாய்க்காலுக்குள் இறங்கி நின்றவர்கள் துணி அலசுவதற்காகக் கொண்டு வந்த பக்கெட்டில் துணிகளை அள்ளிப் போட்டு நீருக்குள் முக்கி எடுத்து வெளியில் வைத்தார்கள். பின்பு போட்டு இருந்த தாவணியை துவைப்பதற்காக அவிழ்க்க ஆரம்பித்தார்கள்.பெரும்பாலும் கிராமப்புறங்களில் அனைவரும் தாவணி பாவாடை அணிவது தான் வழக்கம். இப்போது காலம் மாறி விட்ட நிலையில் எங்கே அனைவரும் தாவணி பாவாடை அணிகிறார்கள்? எல்லாம் சுடிதார் தான் போடுகிறார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் பெரும்பாலும் இவர்கள் இருவரும் தாவணி பாவாடை தான் அணிவார்கள். அதிலும் சுடிதார் போட்டால் ஊர் மக்கள் பேசும் பேச்சை காது குடுத்து கேட்க முடியாது, அதை தவிர்ப்பதற்காகவே இருவரும் இப்படி தாவணிப்பாவாடையை போட்டுக்கொள்கிறார்கள்.

இருவரது வாழ்விலும் தெரிந்தோ தெரியாமலோ கழுத்தில் தாலி ஏறி விட்ட காரணத்தினால் அவர்கள் பெரும்பாலும் சுடிதார் அணிவதில்லை. எப்போதும் தாவணி பாவாடை தான் அணிகிறார்கள், கோவிலுக்கு போகும் போது மட்டும் தான் புடவை அணிவார்கள். அதுவும் தங்களிடம் இருக்கும் நாலே புடவையைத் தான் மாத்தி மாத்தி அணிவார்கள். தேவைக்கு அதிகமாக அவர்கள் துணிமணிகளும் எடுத்துக் கொண்டது கிடையாது பணத்தையும் சேர்த்துக் கொண்டது கிடையாது. சம்பாதிக்கும் பணம் மொத்தமும் பேங்கில் தான் உறங்கிக் கொண்டிருக்கிறது.

முதலில் பெண்கள் இருவரும் தாவணியைக் கழட்டி அந்த பக்கெட்டுக்குள் போட்டவர்கள் இடுப்பில் இருந்த பாவாடையை எடுத்து மார்பில் முடிந்து கொண்டு மற்ற உடைகளையும் அவிழ்த்து ஒன்றாக போட்டவாறு துவைக்க ஆரம்பித்தார்கள். மலர் இருவரது துணிகளைத் துவைத்து வைக்க, வாணி அவற்றை அலசி நன்றாகப் பிழிந்து பக்கெட்டுக்குள் போட்டாள். இவ்வாறே அனைத்து துணிகளையும் துவைத்து அலசி அலசி பிழிந்து பக்கெட்டுக்குள் போட்டு ஓரமாக நகர்த்தி வைத்து விட்டு பெண்கள் இருவரும் வாய்க்காலில் அமர்ந்து குளிக்க ஆரம்பித்தார்கள். எதுவும் பேசிக் கொள்ளாமல் இருவரும் தனித்தனியாக சோப்பு தேய்த்து குளித்து விட்டு இறுதியாக, ‌ ஒருவருக்கொருவர் தெரியாமலேயே மஞ்சள் கிழங்கை உரசி முகத்திற்கு போடுவது போல் கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றுக்குப் போட்டார்கள்.

மலரின் கழுத்தில் இருக்கும் தாலியைப் பற்றி வாணிக்குத் தெரியும். ஆனால் வாணியின் கழுத்தில், ஐந்து வருடங்களாக கிடக்கும் மஞ்சள் கயிற்றை ஒருமுறை கூட மலர் பார்த்தது கிடையாது. இப்போது குளிக்கும் போது கூட எங்கே மலர் பார்த்து விடுவாளோ என்று கயிற்றை பின்னுக்குத்தள்ளி பாவாடையை நன்றாக மேலே ஏற்றி முடிந்து கொண்டு தான் குளித்தாள். அதுவும் தன்னை நோக்கி மலர் திரும்பும் போதெல்லாம் சட்டென்று தண்ணீருக்குள் அமர்ந்து விடுவாள். இதுவரை மலரால் அந்த கயிற்றை கண்டு பிடிக்க முடியவில்லை. உடை மாற்றும் போது கூட இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க மாட்டார்கள். கூச்சம் என்று சொல்வதை விட சீக்கிரம் குளித்து விட்டு இந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும் என்பதாலேயே அவர்கள் நேரத்தை வீணடிப்பதில்லை.‌ ஏனெனில் கரையோரம் செல்லும் பாதையை ஊர் மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள்.‌ அருகிலிருக்கும் வயலுக்கு செல்வோரும், வீடு திரும்புவோரும் இந்த பாதையில் தான் போவார்கள் அதனாலேயே இருவரும் குளித்து முடித்து, மாற்றிக் கொள்ள கொண்டு வந்த உடையை அணிந்துகொண்டு வாய்க்காலை விட்டு வெளியேறியவர்கள் எக்ஸலை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.

தங்களுக்கென்று தாங்களே முயன்று எவரது உதவியுமின்றி போட்டுக்கொண்ட கூரை வீட்டை அடைந்த போது, அவர்கள் வீட்டருகே கார் ஒன்று நின்று இருந்தது.

அதைக் கண்டதும் அது யாருடையது என்பதை புரிந்து கொண்டவள் போல், “அவர் இங்கிருந்து போகலை போல மலர், உன்கிட்ட அவர் ஏதோ பேச நினைக்கிறாருடி. போ போய் பேசிட்டு வா என்ன தான் சொல்றாருன்னு பார்ப்போம்” என்று சொன்ன வாணியை முறைத்தாள் மலர்.

கூடவே அவள் ஏதோ பேச வருவதற்குள்ளாகவே அவர்களை நெருங்கி இருந்த அகில் பிரசாத்தின் கையில் காகிதம் ஒன்றும் இருந்தது. அகில் மலரே நெருங்கிய அடுத்த நிமிடம் வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்து இருந்தாள் வாணி. அந்தக் கூரை வீட்டிற்குப் பின்புறமாக துணி காயவைக்க, கொடிக்கயிறு கட்டப்பட்டிருக்க துவைத்த துணிகளை அதில் காயப் போட்டுக் கொண்டிருந்த அவளது மனதில் ஏதேதோ ஓடியது.

‘இப்ப என்ன சொல்ல வந்துருக்காருன்னு தெரியலையே? அந்த வீட்டுல இருக்க எல்லார் மேலையும் நான் பாசமா தானே இருந்தேன். அப்புறம் எதுக்கு எல்லாரும் சேர்ந்து எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணுனாங்க. சத்தியமா அப்பா அம்மா இல்லாம ஒரு பொண்ணு தனியா வாழ்ந்தா என்னென்ன கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கணும்னு இந்த வயசுலையே என்னை உணர வெச்சிட்டாங்க?

யார் என்ன சொன்னாலும் சரி அந்த குடும்பத்தாளுங்களை நான் நம்ப போறது கிடையாது.‌ ஆனா என்னோட ஃபிரண்ட்டை மிஸ்டர் அகில் நல்லா பார்த்துக்குவாருன்னு தான் தோணுது. இந்த அஞ்சு வருஷத்துல அவளை விட்டுட்டு வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணாம, அவளைத் தேடி வர்றாருன்னா, அதுலையே எனக்கு புரிஞ்சுருச்சு அவரு மலரை வொய்ஃபா ஏத்துக்கிட்டாருன்னு‌.‌ என் பிரண்டுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சா போதும் வேற எதுவும் எனக்கு வேணாம்.‌ அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்துட்டு இங்கிருந்து எங்காவது கண்காணாத இடத்துக்கு போயிடணும்.‌ ஏன்னா என்னால இந்த ஊர்ல இருக்க முடியாது. அப்படி இருந்தேன்னா பழைய நினைவுகள்ல மூழ்கி செத்துருவேன் போல’ என்று மனதில் நினைத்தவாறே அனைத்து துணிகளையும் காயப்போட்டு விட்டு மாட்டு கொட்டகைக்கு சென்றுவிட்டாள்.

மாடுகள் அனைத்தும் வரிசையாக கட்டப்பட்டிருக்க ஆங்காங்கே ஒரு சில மாடுகள் சாணி போட்டிருந்தன. தாவணியின் முனையையும்,‌ பாவாடையையும் எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு, கட்டை விளக்குமாத்தை எடுத்து அவற்றை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

இங்கே மலரை நெருங்கிய அகில் அவள் முகத்தையே பார்த்திருந்தவன், “எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்கலாம்னு நினைச்சுகிட்டு இருக்க? நமக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல, முழுசா அஞ்சு வருஷமாகிடுச்சு ஆனா அப்பவும் வீட்டுக்கு வரணும்னு உனக்கு தோணவே இல்லையா? சரி‌ தப்பு எங்க பேருலையே இருக்கட்டும். அதுக்காக இப்படியே ரெண்டு பேரும் யாரும் இல்லாத அனாதை மாதிரி இருந்தா எல்லாம் சரியா போயிடுமா? இந்த உலகத்துல யாரும் தப்பு பண்ணுறதே இல்லையா, தப்பை உணர்ந்து அவங்க திருந்துறதுக்கு ஒரு வாய்ப்பு கூட குடுக்காம இப்படி ஒரேயடியா தண்டனை கொடுத்தா என்னடி அர்த்தம்" என்றான் உரிமையாக.

நிமிர்ந்து அவனை நேருக்கு நேராக பார்த்தவள், “தப்பு செஞ்சா மன்னிக்கலாம். ஏன் அவங்க திருந்துறதுக்கும் ஒரு வாய்ப்பு கூட கொடுக்கலாம். ஆனா துரோகம் செஞ்சவங்களை எப்படி மன்னிக்க முடியும்? அதுவும் சொந்தக்காரங்களுக்கு துரோகம் செய்த உங்களை என்னால எப்படி மன்னிக்க முடியும்..”

“சரி நாங்க துரோகம் செஞ்சோம்னே வெச்சுக்க, ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டோம்.‌ ஆனா அது தப்புன்னு இப்ப புரிஞ்சுகிட்டோமே! இப்பவாவது நாங்க திருந்த ஒரு வாய்ப்பு தரலாம் இல்லையா?”

“காலம் கடந்ததுக்கு அப்புறம் வாய்ப்பு கொடுக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. அன்னைக்கு நீங்க அதை செய்யாம இருந்திருந்தா இப்ப எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும்..”

“உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும்னா‌ என்ன அர்த்தம்? இப்போ உன் வாழ்க்கையும் என்னால நாசமா போச்சுன்னு சொல்ல வர்றியா?” என்று, அவளது வலது கையில் முழங்கைக்கு மேலே அழுத்தமாக பற்றி தன்னை நோக்கி இழுத்து நிறுத்தி கோபத்தோடு கேட்டான்.

அவனிடமிருந்து தன் கைகளை கடினப்பட்டு பிரித்தெடுத்து தள்ளி நின்று கொண்ட மலர், “உங்களால தான் என் வாழ்க்கை நாசமா போச்சு. நீங்க உங்க கோபத்தை வேற வழியில காட்டி இருக்கலாம். இல்ல நான் பேசுனது தப்பா இருந்துருந்தா நாலு பேர் முன்னாடி என்னை அடிச்சுருக்கலாம், தேவை இல்லாம எதுக்கு எங்கழுத்துல தாலி கட்டுனீங்க?” என்று அவனிடம் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டாள்...

எட்டி நின்ற அவளை இழுத்து தன் அருகில் நிற்க வைத்தவன்,
“ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன்டி. ரொம்ப ரொம்ப லவ் பண்ணுனேன் அதனால தான் தாலி கட்டுனேன் போதுமா!” என்று சொல்ல.

அவன் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ந்தவள் ஆவென்று வாய் பிளந்தவாறு அவனைப் பார்க்க, அவனும் “நிஜமா நான் சொல்றது உண்மை தான்டி. நான் உன்னை விரும்புறேன் ரொம்ப ரொம்ப விரும்புறேன்” என்றான்.

அவன் மீண்டும் ஒருமுறை அதே வார்த்தையை சொன்னதில் இதழோரம் வருத்த முறுவல் ஒன்றைச் சிந்தியவள்,
“எத்தனை பொண்ணுக்கிட்ட இதே வார்த்தையை சொல்லி இருக்கீங்க? இதே வார்த்தையை, இதே டோன்ல நீங்க இன்னொருத்தருக்கிட்ட சொல்லி, அதை நான் எங்காதல கேட்டிருக்கேன். அதனால மறுபடியும் இப்படி சொல்லிக்கிட்டு என் முன்னாடி வந்து நிற்காதீங்க, அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகரப் பார்க்க..

மீண்டும் அவளது கையை பிடித்து இழுத்து தன் அருகே நிறுத்தியவன், “இப்ப கடைசியா என்ன தான்டி சொல்லுற?” என்க.

“இன்னுமா உங்களுக்கு புரியல? இதுக்கு மேல என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்றேன். நீங்க எத்தனை தடவை நடையா நடந்தாலும் என்னோட பதில் இதுதான், தயவு செஞ்சு எங்களோட வாழ்க்கையை விட்டுப் போயிடுங்க. இப்ப தான் கொஞ்ச நாளா அவ நிம்மதியா இருக்கா, மறுபடியும் அவளை அதே நிலமைக்கு கொண்டு போயி விட்டுடாதீங்க. நானும் இல்லைன்னா இந்நேரம் அவ செத்து சுண்ணாம்பா போயிருப்பா..”

“அப்ப இது தான் உன்னோட முடிவு இல்லையா?”

“இதுதான் என்னோட முடிவு. இனிமேலாவது என்னை விட்டு விலகிடுங்க” என்றாள்..

“சரி இது தானே உன் முடிவு, அப்ப இந்த டிவோர்ட்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு போடி” என்றான் அகில்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல் மறு பேச்சு பேசாமல் பத்திரத்தை வாங்குவதற்காக அவன் முன்பு கையை நீட்டினாள்.‌ அவனும் சலனமே இல்லாமல் விவாகரத்து பத்திரத்தை அவள் கையில் வைத்தான்.

அந்தப் பத்திரத்தின் மேல் ‌இருந்த பேனாவை எடுத்து கொட்டை எழுத்தில் அழகாக மலர்விழி என்று கையெழுத்திட்டவள், அதை அவன் கையில் கொடுத்து விட்டு,
“இனிமே எக்காரணத்தைக் கொண்டும் நீங்களும் உங்க அம்மாவும் இந்த வீட்டு வாசப்படியை மிதிச்சிடாதீங்க தயவு செஞ்சு இங்கிருந்து போங்க”, என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக அங்கிருந்து ஓடி விட்டாள்.
எங்கே அங்கேயே நின்று இருந்தால் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்து தன் நிலையை அவனுக்கு உணர்த்தி விடுமோ என்ற பயத்தில்.

அந்த குடிசை வீட்டிற்குள் நுழைந்த‌ அடுத்த கணம் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள் மலர்விழி.

அதேநேரம் அவள் செல்லும் போது எந்த இடத்தில் நின்றிருந்தானோ அதே இடத்தில் நின்றிருந்த அகிலின் கண்ணில் நீர் துளிர்த்திருந்தது. புறங்கையால் கண்ணீரை துடைத்தவன், “என்னோட காதலை சொன்ன பிறகும், என்னை வேணான்னு சொல்லிட்டு போறியில்லடி. போ போ இதுக்கு நீ கண்டிப்பா அனுபவிப்படி”என்று சொல்லி விட்டு கோபத்தோடு தன் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

தாமதமானாலும்
உள்ளத்தில் உருவாகி
ஊனுயிராய் உடலில் கலந்திருக்கும் உன் மீதான நேசத்தைக் கொட்டி விட்டேனடி..

கொட்டி விட்ட நேசத்திற்கு
பதிலாய் கொடுந்தேளின்
விஷத்தைப் போல்...
கனலென தகிக்கும்
நெருப்புக் கங்கினைப் போல்
வார்த்தை கொண்டு வதைப்பதேனடி..?

- தேடல் தொடரும்....


https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-comments.615..
 
உறவின் தேடல் -9.1

வேக வேகமாக வீட்டுக்குள் ஓடிவந்த மலர், சாணி போட்டு மொழுகியிருந்த தரையில் பொத்தென்று கீழே விழுந்து மீண்டும் எழுந்து அமர்ந்தவள் முழங்காலைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். தன்னை மறந்த நிலையில் எதை எதையோ நினைத்து அழுது கொண்டிருந்தாள்.‌ அந்த நேரத்தில்,“நீ அழுது முடிச்சுட்டன்னா நான் உள்ளே வரலாமா?” என்று வாயிலில் நின்று கேட்டாள் வாணி..

வாணியின் குரலைக் கேட்டதும் அழுவதை நிறுத்தி விட்டு வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் மலர். வாயிலில் நின்றிருந்த வாணியின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்து
‌ சட்டென்று எழுந்து நின்று, தன் கண்களை அழுந்தத் துடைத்தவள், “யாரு புள்ளை இங்க அழுவுறது? அப்படி யாரும் இங்க அழுதுக்கிட்டு இல்லை” என்றாள் முயன்று வரவழைத்த தைரியக் குரலில்.

அவளைப் பார்த்து சிரித்தவாறே உள்ளே நுழைந்த வாணி,
“ஏன்டி உண்மையை மறைக்கிற? நீ அழுதுட்டு இருந்ததை நான் பார்த்தேன். உங்களுக்குள்ள என்ன பேச்சு வார்த்தை நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது, ஆனா நீ விடுற கண்ணீர் அவருக்காகன்னு மட்டும் தெரியும்.‌ எப்பவுமே எங்கிட்ட எல்லாத்தையும் சொல்ற நீ, இப்ப என்கிட்ட எதை எதையோ மறைக்கக் கத்துக்கிட்ட இல்ல..” என்று சொன்னவாறே அவளை நெருங்கிட, மலரோ வாணியைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.‌

வாணியின் அழுத்தமான பார்வையைக் கண்டு மலரின் விழிகளில் மீண்டும் நீர் கோர்த்துக்கொள்ள அவசரமாக அதை துடைத்தவள், “நான் எதையும் உங்கிட்ட மறைக்க வேண்டிய அவசியம் இல்லை வாணி. நீ எதுக்குடி இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க? நம்ம ரெண்டு பேருக்குள்ளயும் எந்த ஒளியும் மறைவும் இல்லையே , அப்புறம் எதுக்குடி நீ இப்படி பேசுற?” என்றிட.

“என்ன பேச வைக்கிறது நீதான் மலர். எங்க உன் மனசுல அகில் பிரசாத் மேல எந்த பீலீங்ஸூம் இல்லைன்னு சொல்லு பார்க்கலாம். உன்னால சொல்ல முடியாதுடி. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ அழுதியே அதுவே சாட்சி, உன் நேசத்துக்கு.‌ நீ எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிற மலர், அதை தாங்கிக்க முடியாம அழுகுற. உன் நிலமையை என்னால புரிஞ்சுக்க முடியுதுடி. இப்பவாவது உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லுடி” என்று கேட்க .. அப்போதும் மலர் மௌனமாக இருந்தாள்.‌ மறுத்து பேசவும் இல்லை, வாணி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும் இல்லை.

சிறிது நேரம் அவளும் ஏதாவது சொல்வாளென்று அமைதி காத்தாள் வாணி.‌ ஆனால் நொடிகள் கடந்த போதும் மலரின் வாயில் இருந்து எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை என்றதும் சட்டென்று மலரை நெருங்கிய வாணி அவள் முகவாயில் கரம் பதித்து, நாடியை நிமிர்த்தி தன் முகம் பார்க்க வைத்தவள், “உன் புருஷனான அகில் பிரசாத்தை நீ விரும்புறேன்னு எனக்கு தெரியும்டி. அவருக்காக சாமி கும்பிட்டு, விரதம் இருக்குறதும் தெரியும்.‌ நீயே நினைச்சாலும் உன்னால இனிமே எதையும் மறைக்க முடியாது உண்மையை சொல்லு. அவர் உன் மனசுல இருக்காரு தானே? கட்டாய கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் அவரை நீ வெறுக்கலை, இப்ப பிரிஞ்சு வந்ததுக்கு அப்புறமும் அவரு நல்லா இருக்கணும்னு நெனைக்கிற, எனக்கு தெரியாம நெத்தி வகுட்டுல குங்குமம் வச்சுக்குற, இவ்வளவு ஏன் புருஷன் நல்லாருக்கணும்னு சுமங்கலி பூஜை கூட செய்யிறன்னு எனக்கு தெரியும்.‌ இதையெல்லாம் நான் பாக்கலன்னு நினைக்கிறியா? எல்லாத்தையும் நான் பார்த்துருக்கேன். அதனால உன் மனசுல இருக்குறதை மறைக்க நினைக்காத?” என்றாள்...

மலரிடமிருந்து மறுப்பாய் எந்தவொரு வார்த்தையும் வரவில்லை, மாறாக அவள் விழிகளில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டிக் கொண்டிருந்தது. அவள் அழுவதை தாங்கிக்கொள்ள முடியாத வாணி தோழியை இழுத்து அணைத்துக் கொண்டு,
“ப்ளீஸ்டி அழுகாத? நீ எந்த தப்பும் செய்யல. நீ அழுகுற அளவுக்கு இப்ப எதுவும் நடக்கல” என்று சமாதானப்படுத்த முயன்றாள்.

“எல்லாமே கை மீறிப் போச்சுடி. எல்லாமே என்னால தான். என்னோட அவசர புத்தியால தான் இப்படியெல்லாம் நடக்குது” என்று தலை தலையாக அடித்துக் கொண்டு அழ, மலர் சொன்ன வார்த்தைகள் வாணியை பதற வைத்தது.

“என்னடி.. என்னாச்சு, நீ என்ன பண்ணி வச்ச?” என்று பதட்டமான குரலில் கேட்க.

மீண்டும் ஒருமுறை அழுது தீர்த்த மலர், “அதை எப்படிடி நான் உங்கிட்ட சொல்லுவேன்” என்று சொல்லி மீண்டும் அழ ஆரம்பிக்க, “இங்க பாருடி நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்தா எல்லா பிரச்சினையும் சரியாயிருமா? என்ன நடந்துச்சுன்னு சொல்லு. உன் வீட்டுக்காரர் வந்து உன்கிட்ட என்ன பேசினாரு, அதுக்கு நீ என்ன பண்ணி தொலச்ச?” என்று கேட்டாள்.

“அது..அது.. வந்து அவர் கூடவே வந்துட சொன்னாரு.‌ அவங்க வீட்ல அவருக்கூடவே இருக்க சொன்னாரு. நாம வாழலாம் வான்னு சொல்லி கூப்டாரு ஆனா நான் வர முடியாதுன்னு சொல்லிட்டேன். கோவத்துல என் கூட வர முடியாதுன்னு சொல்றவ எதுக்கு இந்த ரிலேஷன்ஷிப்யை இப்படியே வெச்சுருக்கணும் முடிச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு. கூடவே நானும் எத்தனை நாள் இப்படியே இருக்குறது உன்னை டிவோர்ட்ஸ் பண்ணிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். அதான் விவாகரத்து பத்திரத்தை கொண்டு வந்துருக்கேன் கையெழுத்து போட்டுன்னு சொல்லவும், நானும் கோவத்துல கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டேன்” என்று சொல்லி அழ, அவள் சொன்னதை கேட்டு தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள் வாணி..

‘கடவுளே! அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியலையே? அவங்களுக்குள்ள ஏதோ சின்ன பிரச்சனையா இருக்கும், பேசி தீர்த்துடலாம்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தா, இவங்க என்னடான்னா விவாகரத்து வரை பிரச்சனையை இழுத்து வெச்சுருக்காங்களே? இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.‌ இப்ப என்ன பண்றது?’, என்று யோசித்தவாறு அமர்ந்திருந்தாள் வாணி..

அழுது அழுது ஓய்ந்து போன மலர் சிறிது நேரத்திலேயே முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றவள் விறுவிறுவென்று பின்புறம் இருந்த ஓலையால் வேயப்பட்ட கழிவறைக்குள் நுழைந்து அகலமான தொட்டியில் ஊத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை அள்ளி முகம் கழுவினாள்.

பின்பு வாணியின் அருகில் வந்து அமர்ந்தவள்,“இங்கப்பாருடி நடந்தது நடந்து போச்சு, இனி எதையும் மாத்த முடியாது.‌ எல்லாமே என்னோட தப்பு தான்னு நான் சொல்ல வரல, அவர் அந்த மாதிரி பண்ணாம இருந்திருந்தா எங்க வாழ்க்கை இப்ப நல்லா இருந்துருக்கும், இந்த மாதிரி நாசமா போயிருக்காது. இதுல வேற யாரையும் நான் குறை சொல்ல விரும்பல, முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்..” என்று சொன்னவள் வாணி எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென்று அவளது கையை எடுத்து தன் தலை மீது வைத்து,
“என் மேல சத்தியமா, இனிமே நீ என் வாழ்க்கை சம்மந்தமாக யார்கிட்டயும் போய் கெஞ்சிக்கிட்டு நிக்கிறதோ, இல்ல சமாதான பேச்சுவார்த்தை பேசவோ கூடாது. நான் சொன்னதையும் மீறி போன்னா அடுத்த நிமிஷம் என்னை பொணமா தான் பார்ப்ப” என்றவள் விறுவிறுவென்று எழுந்து நின்று தாவணியின் முனைப்பையும் பாவாடையின் முன் பகுதி சிறிதையும் தூக்கி இடுப்பு இடைவெளியில் சொருகிக்கொண்டவள் சமைப்பதற்காகவே அவர்கள் தடுத்து வைத்திருந்த சமயலறை போன்ற இடத்திற்குள் நுழைந்து இரவு உணவை சமைக்க ஆரம்பித்தாள்..

மலர் இவ்வாறு செய்வாளென்று எதிர்பார்த்திராத வாணி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சிலையென அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள். மலரின் சத்தியத்தை மீறி வாணியால் எதுவும் செய்ய முடியாத என்பதை அவளுமே அறிவாள். ஆனால் நிச்சயம் தன் தோழியின் வாழ்வு இப்படியே போகக்கூடாது தன்னாலான முயற்சியை செய்யணும், ஆனா அதுல தான் தலையிடக் கூடாது, என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் அமர்ந்து இருந்தாள்..

இருளில் கவிழ்ந்திருந்த வானமதில் நட்சத்திர தோழிகளோடு குளிரொளியை வீசியவாறு மகிழ்வோடு உலா வந்தாள் வெண்ணிலவு மங்கையவள்..

நிசப்தமான இரவின் ஏகாந்தமானது அனைவருள்ளும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் குளுமையை தாங்கிக் கொண்டிருந்தது.. அந்த வீட்டின் மொட்டை மாடி, திட்டின் மீது அமர்ந்து இருந்தான் தேவேஷ்வர். அவனின் விழிகள் இரண்டும் கூர்மையாக எதிர் வீட்டையே நோக்கிக் கொண்டிருந்தது.‌ வந்ததிலிருந்து அவனும் நேரம் வாய்க்கும் போதெல்லாம் எதிர்வீட்டினை உலவு பார்த்துவிட்டான். ஆனால் எதிர் வீட்டிலிருந்து எவரையும் அவன் விழிகள் சந்திக்கவில்லை..

அவனது விழிகள் தன் உள்ளத்தில் அரசியாய் இருப்பவளை கரை காணாத ஆவலுடன் தேடி அலைந்தது. ஆனால் அவளோ அவனது கண்களுக்கு விருந்தளிக்காமல் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறாள் என்பதை யாரும் அவனிடம் சொல்ல முன்வரவில்லை. இவனும் எதையும் கேட்டு தெரிந்து கொள்ள முயலவில்லை.

ஏனெனில் தான் அவளைப் பற்றி ஏதேனும் கேட்டால், மற்றவர்கள் அவளையும், தன்னையும் தவறாக நினைக்கக் கூடும்.‌ கூடவே அவளது திருமண வாழ்வுக்கு தன்னால் ஏதேனும் பங்கம் வந்துவிடுமோ, அவளை யாரேனும் ஏதேனும் சொல்லி விடுவார்களோ என்ற எண்ணத்திலேயே அனைத்தையும் மனதிற்குள் போட்டு பூட்டி புதைத்துக் கொண்டான்.

இப்போது இந்த தனிமையில், இரவின் கருமையைப் போல்,
தன் வாழ்வில் இருண்டு போன நாட்களை மீண்டும் திரும்பிப் பார்க்கக்கூட அஞ்சியவனாக எதிரில் தெரிந்த வீட்டை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் கீழே தொங்கிக் கொண்டிருந்த அவனது காலை யாரோ சுரண்டுவது போல் இருக்க குனிந்து பார்த்தான்.

சுடர்மதி தான் தூக்கம் கலைந்து எழுந்து வந்து அவன் காலை சுரண்டிக் கொண்டிருந்தாள். ‘தன் மகள் இந்நேரத்துக்கு தூங்காமல இங்கே என்ன செய்கிறாள்?’, என்று நினைத்தவன் கீழே இறங்கி, “அம்முகுட்டி தூங்கு போகலையா சாமி, இங்க என்ன பண்றீங்க?” என்றிட.

“முழிச்சுட்டேன் பா. நீங்க எங்க போனீங்க, நீங்க இல்லாம எனக்கு எப்படி தூக்கம் வரும்? இது நம்ம வீடு போல இல்லப்பா. ஒரு மாதிரி இருக்கு. இதெல்லாம் புதுசா இருக்குப்பா அதான் எனக்கு தூக்கமே வரல” என்று பெரிய மனுஷி போல் பேசிய குழந்தையை வாரி அணைத்து தூக்கியவன், திட்டில் ஏறி அமர்ந்து தன் மகளை மடி மீது அமர்த்திக் கொண்டான்.

குழந்தையோ தாங்கள் ஏற்கனவே இருந்த பகுதிக்கும், இப்போது இருக்கும் பகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொண்டது போல் வினாவெழுப்பியது.. “இங்க எவ்ளோ அழகா இருக்குல்லப்பா. பாருங்க எத்தனை ஸ்டார்ஸ் தெரியுதுன்னு, ரொம்ப அழகா இருக்குப்பா. அப்பா, ஏன்பா இங்க யார் வீட்டுலையும் லைட்டே எரியலை? அங்க எல்லாம் ரொம்ப வெளிச்சமா தானே இருக்கும்” என்று கேட்டது சிறு வாண்டு..‌

தன் மடியில் அழகே உருவாய் அமர்ந்திருக்கும் குழந்தையின் தலையை வருடிக் கொடுத்தவாறு சுற்றிலும் இருக்கும் பகுதிகளை விழிகளால் அலசியவன்,
“நீ சொல்றது உண்மைதான்டா, நம்ம மொத இருந்த இடத்துல நைட்டை பகலா காட்ட முயற்சி பண்ணுவாங்க. ஆனா இங்க அப்படியில்லை பகல் பகலா இருக்கும், நைட் நைட்டாவே இருக்கும். கூடவே இங்க இருக்க மனுஷங்க எதார்த்தமா இருப்பாங்க தான் ஆனாலும், இங்க இருக்கவங்க நமக்கு வேண்டான்டா குட்டிமா. இங்க இருந்தா நம்மளால நிறைய பேருக்கு பிரச்சினை வரும், நாம அங்கையே போயிடலாம், உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் அங்கதானே இருக்காங்க” என்று சொல்ல.

'பிரண்ட்ஸ்' என்றதும் சட்டென்று தன் தந்தையை திரும்பிப் பார்த்த குழந்தை, “ஆமா என் பிரண்ட்ஸ் எல்லாம் அங்க தான் இருக்காங்க. அப்பா.. அப்பா, காலைல என் பிரண்டுகிட்ட பேசணும் போன் பண்ணி தருவீங்களா?”என்றதும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்ட தேவ், “கண்டிப்பா போன் பண்ணி தர்றேன்டா. ஆனா நீ எந்த பிரண்ட்னு சொல்லவே இல்லையே?” என்று கொஞ்சலாய் கேட்டவனை கிலுக்கி சிரித்தவாறு பார்த்தது குழந்தை.

“அச்சோ அப்பா ஒவ்வொரு தடவையும் இதையே தான் கேட்குறீங்க? நான் எத்தனை தடவை சொன்னாலும் உங்களுக்கு மறந்து மறந்து போயிடுது, நான் ராகுல்கிட்ட தான் பேசணும்னு சொன்னேன். இதை நீங்க ஞாபகம் வச்சுக்க மாட்டீங்களா? எனக்கு எல்லாரையும் விட ராகுலைத் தான் ரொம்ப பிடிக்கும் தெரியுமா?” என்று தலையை ஆட்டிக்கொண்டு கைகளை அகல விரித்து சொன்ன குழந்தையை தலை சரித்து அன்பாக பார்த்தவன், “ஏன் உனக்கு ராகுலை மட்டும் பிடிக்கும், மத்தவங்கள பிடிக்காது?” என்று கேட்டான், தன் மகளுக்கு ராகுலை பிடித்ததிற்கானப் பதிலை தெரிந்து கொள்வதற்காக.

குழந்தையோ அவனது தலைமுடியைக் கலைத்து விட்டு மீண்டும் அவன் முகத்தை பார்த்து கலகலவென்று புன்னகைத்தது. அதன் சிரிப்பில் தன் கவலைகள் யாவும் மறைவது போல் உணர்ந்தவன், “என் தங்கப்பொண்ணுல்ல சிரிக்காம பதில் சொல்லுங்க சாமி” என்றான்.

“ம்ம்ம்.. ஏன்னா ரோட்ல போகையில நான் கீழே விழுந்ததும் ராகுல் தான் ஓடிவந்து என்னை தூக்கி விட்டு, எனக்கு ஹெல்ப் பண்ணுனான் அப்பா. மத்தவங்க எல்லாரும் சிரிச்சாங்க. அதனால நான், ராகுல் கூட மட்டும் தான் பிரண்டா இருப்பேன், மத்தவங்க கூட பேசுனாலும் அவன் தான் என்னோட பெஸ்ட் பிரண்ட்..” என்றிட

குழந்தையை இன்னும் நன்றாக இழுத்து நெஞ்சில் சாய்த்து அமர்த்திக்கொண்டவன்,
“இங்க பாருடா அம்முகுட்டி அப்பா ஒன்னே ஒன்னு சொல்லுறேன் புரிஞ்சுக்க, அதை நல்லா ஞாபகம் வெச்சுக்க.‌ உதவி செய்யறவங்க அத்தனை பேரும் நல்லவங்க கிடையாதுடா, அதே போல நம்மளை பிடிக்காம விலகி நிக்கிறவங்களும் கெட்டவங்க கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலை அமையும் போது நல்லவங்களும் கெட்டவங்களாகலாம், கெட்டவங்களும் நல்லவங்களாகலாம். அதனால நீ யாரையும் அதிகமா நம்ப வேண்டாம். உனக்கு ஒருத்தர் உதவி செஞ்சாங்கன்னா, பதிலுக்கு நீயும் அவங்களுக்கு உதவி செஞ்சிடு.‌ முடிஞ்ச வரைக்கும் எல்லாருக்கும் நல்லவனா இருக்க முயற்சி பண்ணவே கூடாதுடா. அப்படி பண்ணுனா கடைசியா நாம சுயத்தை இழந்துட்டு தான் நிக்கணும். இங்க நல்லதுக்கும் காலம் இல்லை, நல்லது செய்யறவங்களுக்கும் காலம் இல்லடா” என்று எதையோ மனதில் வைத்துக்கொண்டு, குழந்தைக்குப் புரிகிறதா புரியவில்லையா என்பதை எல்லாம் உணராமல் சொன்னான்.

தந்தை மகள் இருவரையும் காணாமல் மொட்டை மாடிக்கு வந்த விக்கி இவர்கள் பேசுவதை கேட்டு விட்டு,“நீங்க சொல்றதும் ஒருவகையில் உண்மை தான் அண்ணா, இங்கே யாருமே நிரந்தரமா நல்லவங்களா இருக்க முடியாது. சூழ்நிலை வரும்போது நல்லவங்க கெட்டவங்களாவும், கெட்டவங்க நல்லவங்களாவும் மாறுறது இயல்பான ஒன்னுணா. அதே போல தான் நம்ம ஒரு விடயம் நடந்துருச்சுன்னு நெனச்சுட்டு இருக்கோம், ஆனா அந்த விடயம் நடக்காமலும் போயிருக்கலாம் இல்லையா! கூடவே நமக்கு கிடைக்க வேண்டியது நமக்கு கிடைக்காம போகாது, அது நமக்காக காத்துக்கிட்டு இருக்குங்குறதையும் நீங்க புரிஞ்சுக்கோங்க அண்ணா” என்று சொன்னவாறு அவர்களருகே வந்து நின்றான் விக்கி..
 
உறவின் தேடல் -9.2


தன் தம்பி சொன்னதன் அர்த்தம் புரியாமல் குழம்பிய தேவேஷ்வர், “நீ என்ன சொல்ற விக்கி? எனக்கு சரியா புரியல..”. என்றிட.

“புரியாத வரைக்கும் சந்தோஷம் விடுங்க. அதை நானா சொல்றதை விட கூடிய சீக்கிரம் புரிஞ்சுக்க வேண்டியதெல்லாம் நீங்களே புரிஞ்சுக்குவிங்க அண்ணா. எனக்கு நீங்க ஒன்னே ஒன்னை மட்டும் சொல்லுங்க, இங்கு எத்தனை நாள் இருக்கப் போறீங்க?”

“இங்க எத்தனை நாள் இருப்பேன்னு தெரியல. இப்பவே அங்க எதையும் சமாளிக்க முடியாம என் ஃப்ரெண்ட் திணறுறான்.‌ அதனால கண்டிப்பா நான் சீக்கிரமே இங்கிருந்து போயாகணும்னு நினைக்கிறேன்..”

“சரி நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு போங்க, நாங்க யாரும் தடுக்க மாட்டோம். ஆனா போறதுக்கு முன்னாடி நீங்க ஆரம்பிச்சு வச்ச பிரச்சனையை நீங்களே முடிச்சு வச்சுட்டு போங்க..” என்று சொன்ன விக்கியை அதிர்வுடன் திரும்பிப் பார்த்தான் தேவேஷ்வர்.

சட்டென்று கைப்பிடிச் சுவரின் கட்டையில் இருந்து குழந்தையோடு இறங்கியவன் குழந்தையை கீழே இறக்கிவிட்டு,
“அம்மு குட்டி அப்பாவோட ரூம்ல போய் இருக்கீங்களா? அப்பா ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன்.‌ ம்ம், தனியா இருந்துக்குவியா, இல்லை பயமா இருக்கா? பயமா இருந்தா அப்பா வர்ற வரைக்கும் பாட்டி ரூம்ல வேணா போய் இருக்கீங்களா?” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்த குழந்தை,‌“எனக்கு பயமெல்லாம் இல்லப்பா என்னுடைய டெடிபியர் இருக்கு, அதனால நான் இருந்துப்பேன் நீங்க சீக்கிரம் வாங்க” என்று சொன்ன பிஞ்சு குழந்தை காலில் சத்தமிடும் கொலுசு அணியாமல் அழகுக்காக மட்டுமே அணிந்திருந்த பாசி கொலுசு தெரியும் படி, தான் அணிந்திருந்த ஸ்கர்ட்டை தூக்கிப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து அசைந்து அசைந்து நடந்து சென்றது.

குழந்தையையே பார்த்திருந்த விக்கி, “ஏங்கன்ணா பாப்பாக்கு சலங்கை வெச்ச கொலுசு எடுத்து போட்டு விட்ருக்கலாம்ல. அது கால் நிறைய இருக்குமே பாக்க அழகா இருக்கும்” என்றிட.

“இல்லடா இது தான் பாப்பாவுக்கு அழகா இருக்கும்” என்றான் தான் பார்த்து பார்த்து மகளுக்கு வாங்கிக் கொடுத்த கொலுசு அழகாக இருக்கிறது என்ற மிதப்பில்..

அதற்கு விக்கியோ,“இல்லன்ணா நீங்க நினைக்கிறது தான் சரி, செய்யிறது தான் சரின்னே நினைக்கிறீங்க.‌ இப்ப கூட நான் வாங்கி கொடுத்தேன், அதனால பாப்பாவுக்கு அழகா இருக்குன்னு தான் சொல்றீங்க. ஆனா ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கல, எல்லாரு மாதிரியும் பாப்பாவுக்கு வெள்ளியில முத்து அதிகமா வச்ச கொலுசு போட ஆசை இருந்திருக்கலாம். இல்லன்னா அப்படி ஒன்னு இருக்குறது கூட தெரியாம இருந்துருக்கலாம், எதுக்கும் ஒரு தடவை வாங்கி கொடுத்து பாருங்க ணா பாப்பா எப்படி ஃபீல் பண்றான்னு தெரியுமில்ல...”

“அதுக்கு என்னடா தாராளமாக வாங்கி கொடுக்கலாம். என் பொண்ணுக்கு இல்லாததா? என்னோட சொத்து முழுக்க என் பொண்ணுக்கு தான்டா. நான் இதுவரைக்கும் சம்பாதிச்சது, இனிமே சம்பாதிக்க போறதுன்னு எல்லாமே என் பொண்ணுக்கு தான்டா அப்படி இருக்கும் போது இதைக் கூட என் பொண்ணுக்கு நான் வாங்கித் தர மாட்டனா” என்று சொன்னான்.

தன் அண்ணனையே குறுகுறுவென்று பார்த்த விக்கி, “மூச்சுக்கு முன்னூறு தடவை என் பொண்ணு, என் பொண்ணுன்னு சொல்றீங்களே, உண்மையாலுமே அம்முக்குட்டி உங்க பொண்ணா அண்ணா?” என்று கேட்டான்.

தம்பியை முறைத்த விக்கி,
“இது என்ன கேள்வி விக்கி என்னோட பொண்ணை, என் பொண்ணுன்னு தான் நான் சொல்ல முடியும், வேற ஒருத்தன் பொண்ணுன்னா சொல்ல முடியும். நீ கேட்கிற கேள்வியே சரி இல்ல விக்கி” என்று சற்று கோபம் கலந்த குரலில் கேட்க..

இடைவெளி விட்டு நின்றிருந்த தன் அண்ணனை நெருங்கி நின்ற விக்கி, “நெஜமா, அம்மு குட்டி உன் பொண்ணா அண்ணா? நான் கேட்டதுக்கு உன் நெஞ்ச தொட்டு, மனசாட்சிப்படி உண்மையான பதிலை மட்டும் சொல்லுணா” என்றான்.

ஓரிரு நிமிடங்கள் அமைதி காத்த தேவேஷ்வர் நிமிர்ந்து தன் தம்பியின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தான். பின்பு அவன் கண்களைப் பார்த்து, “ஆமாம் அம்மு குட்டி என்னோட பொண்ணு தான்டா. இப்ப எதுக்கு தேவையில்லாம இத்தனை தடவை, அதையே திரும்பத் திரும்பக் கேட்குற?” என்றான் சற்றே சலிப்புடன்.

“காரணம் இல்லாம நான் கேட்கல அண்ணா காரணம் இருக்குது. ஆனா இப்ப கேட்டதுக்கு தைரியமா பதில் சொன்னீங்கல்ல இதுக்கு அப்புறம் எப்படி பதில் சொல்றீங்களோ அதை வச்சு நான் முடிவு பண்ணிக்கிறேன் அம்மு குட்டி யாரோட பொண்ணுன்னு”, என்றதும் விதிர்விதிர்த்து போய் தன் தம்பியை பார்த்தான் தேவேஷ்வர்.

“இங்க பாரு விக்கி, தேவையில்லாம எந்த பிரச்சினையையும் இழுத்து வைக்காத, இந்த பேச்சை இதோட விட்டுடு" என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர முயன்றான்.

சட்டென்று தன் அண்ணனின் கையைப் பிடித்து நிறுத்திய விக்கி,‌“எதுக்குணா பயந்து ஓடுறீங்க? நீங்க தானே சொன்னீங்க அம்மு குட்டி உங்களோட பொண்ணுன்னு, அப்புறம் என்ன நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போங்க” என்றான் விடாப்பிடியாக.

எங்கே அவன் ஏடாகூடமாக கேட்டு வைத்து, தானும் அதற்கு ஏடாகூடமாக பதிலுரைத்து விடுவோமோ என்று பயந்த தேவேஷ்வர், “எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்டா, பாப்பா ரூம்ல தனியா இருப்பா நான் போறேன்” என்று சொல்லி விட்டு நழுவ பார்க்க, அப்போதும் அவனைத் தடுத்து நிறுத்தினான் விக்கி.‌

தேவேஷ்வரிடம் கொஞ்சம் நஞ்சம் இருந்த தைரியமும் ஆட்டம் காண ஆரம்பித்தது. ‘ஐயோ என்ன கேட்க போறானோ?’ என்ற பயம் கலந்த பதட்டத்துடன், “ஏன் இப்படி மிட் நைட்ல டார்ச்சர் பண்ற விக்கி பாப்பா தனியா இருப்பா நான் போறேன்டா” என்று சொல்லி மீண்டும் அங்கிருந்து நகர்ந்து செல்ல பார்த்தான்.

“இல்லன்ணா நீங்க நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம பயந்து ஓட பார்க்குறீங்க. பயம் இல்லன்ன இருந்து பதில் சொல்லிட்டு போங்க, வேணும்னா அதுவரைக்கும் பிரகதியை பாப்பா கூட இருக்க சொல்றேன்”

“இல்ல வேணா,நீ கேள்வியை கேளு நான் சீக்கிரம் பதில் சொல்லிட்டு போகணும்” என்று தடதடக்கும் இதயத்தை சமன் செய்தவாறு கேட்டான் தேவ்.

நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட விக்கி..
“ஹஸ்பெண்ட் அண்ட் வொஃயிப் ரிலேஷன்ஷிப்பை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அண்ணா..?”

“கணவன் மனைவி உறவைப்பத்தி நினைக்கிறதுக்கு எனக்கு இருக்குடா. அது ரொம்ப ஆத்மார்த்தமான உணர்வு.. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்குடுத்து ரொம்ப நாள் சந்தோசமாக வாழ வேண்டிய உறவு” என்று ஏதோ ஒரு நினைவில் வானில் தெரிந்த வெண்ணிலவைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

அண்ணனின் தோள்பட்டையில் கரம் பதித்த விக்கி,“அண்ணி எப்படி இறந்து போனாங்க அண்ணா? அண்ணி போனதுக்கு அப்புறம் உங்களோட பிசிக்கல் ஃபீலிங்ஸை எப்படி கன்ரோல் பண்றீங்க, எதாவது அஃபேர்ஸ் இருக்கா?” என்றதும் அதிர்ந்தான் தேவ்.

சட்டென்று விக்கியைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன், “என்ன பேச்சு பேசுற விக்கி? எனக்கு பிசிக்கலா எந்த பீலிங்ஸூம் வந்தது கிடையாது. அதே மாதிரி உங்க அண்ணி ஒன்னும் இறந்து போகல விக்கி, இன்னொரு தடவ அப்படி சொல்லாத. என் மனசுல என்னைக்கும் அவ வாழ்ந்துட்டு தான் இருக்கா. என்னோட மதுரா ஒன்னும் இறந்து போகல இன்னொரு தடவை இப்படி சொன்ன அவ்வளவுதான் பார்த்துக்க..” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான்.

அவன் தன்னையும் அறியாமல் தன்னவளின் பெயரை உச்சரித்து விட்டு சென்றதை தேவ் கவனிக்கவில்லை. ஆனால் தன் அண்ணனின் முக பாவனைகளில் இருந்து, அவனது அசைவுகள் வரை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த விக்கிக்கு தேவ் உளறி விட்டுச்சென்ற 'மதுரா' என்ற வார்த்தை இதுவரை அவனுக்கிருந்த சந்தேகத்தை போக்க, இதழோரம் உறைந்திருந்த புன்னகையோடு,
“கண்டிப்பா நீங்க இங்கிருந்து போகும் போது உங்களோட மதுரா கூட தான் போவீங்கன்ணா கவலைப்படாதீங்க, இப்பவே அதுக்குண்டான வேலையை பார்க்குறேன்..” என்று முனகலாய் சொல்லி விட்டு தன் அறையை நோக்கி சென்றான்.

அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்த பிரகதி அவன் வந்ததும்,“உங்க அண்ணாக்கிட்ட பேசினீங்களா?” என்றாள் ஆர்வம் போட்டியிட.

“ம்ம்.. பேசிட்டேன் அவர் சொன்னதை வெச்சு பார்க்கும் போது கண்டிப்பா அவர் மனசுல இன்னும் வாணி தான் இருக்காங்க. அது மட்டும் இல்ல அம்முகுட்டி அவரோட குழந்தையா இருக்க வாய்ப்பே கிடையாது. இன்னும் என்ன எல்லாம் நம்ம கிட்ட இருந்து மறைச்சு வெச்சுருக்காருன்னு தெரியல பாப்போம்...”

“என்னமோங்க நல்லது நடந்தா சரி. ஆனா ஒருத்தர் ஒருத்தரை விரும்பியும் ஒன்னு சேர முடியாம ஆளுக்கொரு திசையில இருக்குறதெல்லாம் கொடுமைங்க, சீக்கிரமே அவங்களோட தவ வாழ்க்கைக்கு முடிவு தெரியணும். ஆமா நானும் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த நாளுல இருந்து கேட்குறேன், அப்படி என்னதான் உங்க அண்ணனோட வாழ்க்கைல நடந்துச்சு, எதுக்கு உங்க அண்ணா இந்த ஊரை விட்டுப் போனாருன்னு ஆனா நீங்க பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க?”

“அதைச் சொல்ல ஆரம்பிச்சா பெரிய கதையா போகுமே?”

“ பரவால்ல சொல்லுங்க நான் கேட்கிறேன்..” என்ற தன் மனைவியை குறுகுறு விழிகள் கொண்டு ஏறிட்டு பார்த்தவன்,
“இது கதை கேட்குற நேரமாடி?” என்று கொஞ்சலாய் குழைய..

“என்ன பேச்சு திசை மாறுது? பிச்சுப்புடுவேன், பையன் வேற தூங்காம எழில் ரூம்ல இருக்கான். எப்ப வேணா எழில் அவனை இங்க தூக்கிட்டு வரலாம், அதனால அடக்கி வாசிங்க.. தேவையில்லாததை பேசாம மொதல்ல கதையை சொல்லுங்க”

“தெரிஞ்சுக்கிட்டே ஆகணுமாடி..”

“ஆமா தெரிஞ்சுக்கணும்..” என்றவள் கழுத்தை ஒரு வெட்டு வெட்டி திருப்பிக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.

“எங்களுக்கே முழுசா தெரியாதுடி”

“தெரிஞ்சதை சொல்லுங்க” என்று சொன்னவள் முகத்தை ஆர்வத்துடன் வைத்துக் கொள்ள..

“சரி சொல்றேன் ஆனா நான் சொன்னதுக்கு அப்புறம் நீ சப்போஸ் எங்கேயாவது வாணியை பார்க்குற சூழ்நிலை வந்தாலும் அவளை பார்த்து அழுதுடாத, அதே மாதிரி எதையும் கேட்டு வச்சிராத அதுக்கப்புறம் என்னைக்குமே உன் முகத்த கூட அவங்க திரும்பி பார்க்க மாட்டாங்க. இப்ப இருக்கவங்க பழைய வாணி கிடையாது, இவங்க ரொம்பவே மாறிட்டாங்க புரிஞ்சுதா.!”

“புரிஞ்சுதுங்க நீங்க உங்க அண்ணங்கதைய சொல்லுங்க...” என்று ஆர்வம் போட்டியிட பரபரப்புடன் கேட்டாள் பிரகதி...

தன் அண்ணனின் வாழ்க்கைக் கதையை சொல்ல ஆரம்பித்தான் விக்கி. அதேநேரம் தன் மகளை நெஞ்சில் சாய்த்து படுக்க வைத்து தட்டிக் கொடுத்தவாறே தன் கடந்த கால வாழ்வை‌ப் புரட்டி பார்க்க ஆரம்பித்தான் தேவேஷ்வர்..


நினைவுகளால் மட்டுமே நிலைத்திருக்குதடி
இவ்வுயிரும்..
அவ்வுயிரை சுமக்கும்
உடலும்..!
வலிகளால் மட்டுமே
கடந்து விட்டேனடி
ஐந்து வருடங்களை..!
ஆனாலும் உயிரிழக்க
தோன்றவில்லையடி
ஓர் உயிர் எனை
உயிர்ப்பித்ததால்..!

- தேடல் தொடரும்..


 
உறவின் தேடல் ‌‌-10.1



ஐந்து வருடங்களுக்கு முன்பு..




அடி வயித்தில் ஏற்பட்ட ஆழமான காயங்களும், தலையில் ஏற்பட்ட காயங்களும் தேவேஷ்வரை மயக்கம் அடைய செய்ய, சட்டென்று மயங்கிக் கீழே சரிந்தான், அதை கண்டு அதிர்ந்து நின்றிருந்தாள் வாணி. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவளது கை பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் அர்ச்சகர்..



அவருடன் சென்றாலும் பெண்ணவளின் விழிகளோ கீழே சரிந்து கிடந்த தேவேஷ்வரின் மீதுதான் இருந்தது. ஆலயத்தை விட்டு ஒரு வழியாக அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தவர், “கலவரம் பெருசாகுறதுக்குள்ள நீ எப்படியாவது வீட்டுக்குப் போயிடுமா” என்று சொல்ல.



“என்ன ஆச்சு சாமி? யாரு அவங்க” என்று கேட்க வந்தவள் அப்படியே பாதியிலேயே பேச்சை நிறுத்திக் கொண்டாள் தங்களது எதிர் வீட்டில் இருக்கும் பண்ணையாரான சிவசுப்பிரமணியமும் அவரது குடும்பத்தாரும் கோவிலை நோக்கி வருவதைக் கண்டு விட்டு.



“நீ கேட்குறதுக்கு நான் பதில் சொல்லி இருப்பேன்மா ஆனா இப்ப இங்க என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியாதுமா, அதனால நீ பத்திரமாக வீட்டுக்கு போயிடுமா” என்று சொல்லி அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.‌ அவள் அங்கிருந்து நகர்ந்து செல்வதைப் பார்த்து விட்டு தான் அவரும் வேறு புறமாக கோயிலுக்குள் நுழைந்தார். இங்கே கொலை முயற்சியும், கலவரமும் நடந்ததைப் பார்த்து விட்டு யாரோ காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு மட்டுமின்றி தேவேஷ்வரின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்திருக்க,‌அவன் குடும்பத்தை சார்ந்தவர்கள் அடித்து பிடித்து கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்..



வாணியோ கலங்கிய விழிகளோடு ‘அவருக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது, சீக்கிரம் அவரு சரியாகிடணும்.‌ எனக்கு மட்டும் எதுக்கு இப்படி எல்லாம் நடக்குது? தெரிஞ்சோ தெரியாமலோ அவரோட கையாலி எங்கழுத்துல தாலி விழுந்துருச்சு, எனக்கு தாலி கட்டுனவரை நீதான் காப்பாத்தணும் தாயே மகமாயி! அவரை காப்பாத்தி குடுத்துரு என் ஆயூசுக்கும் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை உனக்கு விரதம் இருக்குறேன்’ என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தவள் சலசலத்து ஓடும் காவிரி ஆற்றின் கிளை பிரிவான வாய்காலின் கரையோரம் இருந்த ஒரு மரநிழலில் அமர்ந்து விட்டாள். பல மணிநேரம் கடந்தே பிறகே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பது நினைவு வர எழுந்து நடக்க ஆரம்பித்தாள். வீட்டில் தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சியை எதிர்பார்க்காமலேயே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.



காம்பவுண்ட் கேட்டை திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு எப்போதும் போல் இல்லாமல் வீடு வித்யாசமாக இருப்பது போல் தோன்றியது. அடுத்த நிமிடமே மானசீகமாக தன் தலையில் கொட்டிக் கொண்டு,‌‘இந்த வீடும் சரி வீட்ல இருக்கவங்களும் சரி என்னைக்குத்தான் நார்மலா இருந்துருக்காங்க. எப்பவும் இந்த வீடு இப்படித்தானே இருக்குது, நான் வந்ததுல இருந்து அதைத்தானே பார்க்குறேன்’ என்று நினைத்தவாறு வீட்டிற்குள் நுழைந்தவள் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.



அதுவோ கிட்டத்தட்ட மணி ஐந்தாகப் போகிறது என்று காட்டியது. ‘அடக்கடவுளே அதுக்குள்ள மணி அஞ்சு ஆயிடுச்சா? வழியில கோமதி அக்கா எங்கிட்ட பேச்சு குடுக்காம இருந்துருந்தா மொதல்லையே வந்துருக்கலாம். இப்ப வீட்டு வேலை வேற அதிகமா இருக்குமே’ என்று நினைத்தவாறு அவசர அவசரமாக தனக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்கு செல்வதற்காக பின் பக்கம் செல்லும் பாதையை நோக்கி காலெடுத்து வைத்த வாணி, “அங்கையே நில்லுடி..” என்ற குரல் கேட்டு சட்டென்று நின்றாள்..



அந்தக் குரல் யாருடையது என்பது அவளுக்கும் தெரியும்.‌ ஆனால் எங்கே காலையில் கோவிலில் நடந்தது தெரிந்து தான் தன்னை நிறுத்தி இருக்கிறாரோ என்ற எண்ணத்தில் பதைபதைப்புடன் வேக வேகமாக கை கொண்டு கழுத்தை வருடி தாலிக்கயிறு தெரிகிறதா என்று ஆராய்ந்தாள். தாலிக் கயிறு கைகளுக்கு தட்டுப்படவில்லை என்றதும் தான் சற்று ஆசுவாசம் அடைந்தவள் மெதுவாக திரும்பி மாடிப்படியைப் பார்த்தாள்.



படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த மீனாட்சி, அவளருகே வந்து நின்றவர் அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“இந்த புது டிரஸ்ஸை யாருடி வாங்கி கொடுத்தது?” என்று கேட்டார்.



வாணி தன் வாயைத் திறந்து பதில் சொல்லு முன்பே தேவையில்லாமல் அங்கே வந்து ஆஜரானான் ஆதவ்..



பெரியம்மாவின் அருகில் வந்து நின்றவன்,‌“எதுக்கு பெரியம்மா அவளைத் திட்டிக்கிட்டே இருக்கீங்க? அவளும் நம்ம வீட்டு பொண்ணு தானே. ஒத்துக்கிறேன் வாணி உங்களோட அண்ணன் பொண்ணு தான் நான் இல்லைன்னு சொல்லலை. அவங்களால நீங்க எவ்வளவோ கஷ்டத்தை அனுபவிச்சீங்க அதையும் நான் இல்லைன்னு சொல்லலை. இதுநாள் வரைக்கும் அவரு உங்களுக்கு எதுவும் செய்யாம இருந்துருக்கலாம், உங்களை அவமானப்படுத்தி பேசியிருக்கலாம், மரியாதை குடுக்காம இருந்துருக்கலாம்.



அதுக்காக நீங்க இப்படி பண்றது சரியில்லை பெரியம்மா. அப்பா செஞ்ச தப்புக்கு பொண்ணை பழி வாங்கணும்னு ஏதாவது அவசியம் இருக்குதா என்ன? ஏன் இப்படி ரூடா நடந்துக்குறீங்க. எத்தனையோ பேருக்கு நல்லது செய்றீங்க.‌நம்ம கம்பெனியில வேலை செய்யறவங்களுக்கு கிப்ட் வாங்கி கொடுக்குறீங்க, புதுத்துணி வாங்கி குடுக்குறீங்க,‌ போனஸ்ஸா பணம் குடுக்குறீங்க. அதே போல வாணியும் இந்த வீட்டுல வேலைக்காரி மாதிரி தான் இருக்கா, அவளுக்கு என்னைக்காவது ஒரே ஒரு டிரஸ் எடுத்து கொடுத்துருப்பீங்களா.?”, என்று தன் இத்தனை நாள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தான் ஆதவ்.



“என்ன பழக்கம் இது ஆதவ்? பெரியவங்களை எதுத்து பேசுறது?” என்று அவன் தாய் கண்டிப்பாகச்‌ சொன்னதைக் கூட பொருட்படுத்தாமல் மீண்டும் தன் வாதத்தை முன் வைத்தான்.



“இல்லம்மா இவ்வளவு நாள் இவங்க பண்றதை எல்லாம் பார்த்துக்கிட்டு நானும் பொறுமையா தான் இருந்தேன். சாதாரணமான ஒரு டிரஸ் போட்டதுக்கு அவங்க இது மாதிரி கேள்வி கேட்குறது ரொம்ப தப்பும்மா. இன்னும் சொல்லப் போனா அவங்க ஒரு தடவை கட்டுன புடவையை இன்னொரு தடவை கட்டுறதே கிடையாது, அது இங்கயிருக்க எல்லாருக்குமே தெரியும். அந்த டிரஸூம் எங்க போகுதுன்னு எனக்கும் தெரியும். ஏழைகளுக்கு, இல்லாதவங்களுக்கு கொடுக்குறாங்க,‌ அதையே புதுசா வாங்கி குடுத்தா என்ன?ஏன் யூஸ் பண்ணுனதை குடுக்கணும்? வாணிக்கும் அவங்க பழைய டிரஸ்ஸ தான் குடுப்பாங்க, புதுசே வாங்கி தரமாட்டாங்க. இன்னிக்கு வாணி புது டிரஸ் போட்டது அவங்க கண்ணை உறுத்தியிருக்கு அதனால தான் இப்படி கேட்குறாங்க?” என்று கோபமாகவே கேட்டான்.



“ஆமா நான் அப்படி உறுத்துனதுனால தான் கேட்குறன்னே வச்சுக்கோ. நமக்கு தெரியாம இப்ப புது டிரஸ்ஸோட வந்த நிக்கிறவ நாளைக்கு யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்க மாட்டான்னு என நிச்சயம். அதுமட்டும் இல்லாம அவ இந்த வீட்டோட வேலைக்காரி மட்டும் தான்,‌ நம்ம வீட்ல ஒருத்தி இல்லை அதை நல்லா புரிஞ்சுக்க..” என்றார்.



தன் பெரியம்மாவைக் கூர் விழிகள் கொண்டு பார்த்தவன்,

“அதுல என்ன தப்பு இருக்கு பெரியம்மா? இது அவ வாழ்க்கை சோ, அவளோட வாழ்க்கைத் துணை யாருன்னு தேர்ந்தெடுக்குறதுக்கு வாணிக்கு எல்லா உரிமையும் இருக்கு. இதுல நீங்களோ நானோ தலையிடுறதுக்கு நமக்கு என்ன உரிமை இருக்கு.‌..”



“சரி ஆதவ் அவ கல்யாணம் பண்ணிக்க போன்றவனை தேர்ந்தெடுக்குறதுக்கு அவளுக்கு உரிமை இருக்குன்னே வச்சுப்போம். நீ சொல்ற மாதிரி அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிற்காம,‌வயித்தை தள்ளிக்கிட்டு வந்து நின்னா என்ன பண்றது? கேட்க ஆளில்லைன்னு அவ தறிக்கெட்டு போய் ஊர் மேய்ஞ்சுட்டு வந்தா என்ன பண்றது?”



“ஓஓஓ.. நீங்க அப்படி வர்றீங்களா? பெரியம்மா எனக்கு ஒரு விடயம் தான் புரியவே மாட்டேங்குது. இல்ல வாணி வேலைக்காரி, இந்த வீட்ல ஒருத்தி இல்லைன்னு சொல்றீங்க, அப்ப அவ யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கு என்ன, இல்ல எப்படி போனா தான் உங்களுக்கு என்ன.?”



“ஏன்னா அவளை நான் தான் இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன், அதனால நான் சொல்றபடி தான் அவ கேட்கணும்,‌ அதுபடி தான் அவ நடந்துக்கணும். இந்த வீட்டோட வேலைக்காரியா தான் அவளைக் கூட்டிட்டு வந்திருக்கேன். இந்த வீட்டுல ஒருத்தியா அவளை நான் என்னைக்குமே ஏத்துக்கவும் மாட்டேன், நினைக்கவும் மாட்டேன்.‌ தேவை இல்லாம இந்த விடயத்துல நீ ஆஜராகாத ஆதவ்.‌.”



“ஏன் நான் தலையிடக்கூடாது.. அப்படி தான் கேட்பேன்” என்று வீம்புக்காக மல்லுக்கு நின்றான்.



“இல்ல தெரியாம தான் கேட்குறேன் என்னைக்கும் இல்லாம, என்ன புதுசா இன்னிக்கு அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வர்ற? என்ன உன்னையும் மயக்கி கைக்குள்ள போட்டுக்கிட்டாளா என்ன?” என்று நரம்பில்லாத நாக்கால் வார்த்தைகளை வெளியிட்டு தேள் கொடுக்கு போல் விஷத்தைக் கொட்டினார் மீனாட்சி.



அதைக்கேட்டு துடிதுடித்துப் போனாள் வாணி. விழிகளில் தேங்கியிருந்த கண்ணீரோடு அவரை நிமிர்ந்து பார்த்தவள் வேறு எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று அந்த உடையை கழட்டியவள் வேறு உடை மாற்றிக் கொண்டு அந்த உடையை ஒரு பையில் திணித்தாள்..



‘தன் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது’ என்று நொந்து கொண்டவள் எப்போதும் போல் இரவில் தலையணைக்கு துணையாக கண்ணீரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் விறுவிறுவென்று ஹாலுக்கு வந்தாள்.‌ அனைவரும் அதே இடத்தில் தான் நின்றிருந்தனர். நேராக ஆதவ்விடம் சென்று அந்த கவரை நீட்டினாள்.



அவனோ அடிபட்டப் பார்வையுடன் அவளைப் பார்த்தான். “நீங்க ஒரு தோழியா, உங்க தங்கச்சி மாதிரி நெனச்சு எனக்கு இந்த டிரஸ்ஸை வாங்கி கொடுத்தீங்க ஆனா அதுக்கு உங்க வீட்டு ஆளுங்க ரொம்ப பெரிய பேர் வச்சுட்டாங்க. இந்த வீட்ல நான் ஒன்னும் சும்மா இல்லையே, வீட்டு வேலை செய்யிறேன் தானே? வேலைக்காரிக்கான எல்லையோட தானே நிக்கிறேன்.



அதேபோல நானே தானே சமைச்சு சாப்பிடுறேன் இந்த வீட்ல இருந்து ஒரு பருக்கையைக் கூட நான் தொட்டு பாக்குறதில்லையே. அந்த சமைக்கிற பொருளும் நீங்க வாங்கி கொடுக்கலையே, எனக்கு மாசாமாசம் உங்களோட பாட்டியும் தாத்தாவும் கொடுக்குற காசை வச்சு தானே மளிகை சாமான் வாங்கி சமைச்சு சாப்பிடுறேன். அப்படி இருக்கும் போது எனக்கு இந்த பெயர் எல்லாம் தேவையா சார். நீங்க கொடுத்ததை நீங்களே வாங்கிக்கங்க சார்.என்ன கொஞ்ச நேரம் அதை போட்டுட்டு இருந்தேன், வேணும்னா அதுக்கு உண்டான பணத்தை நான் சேர்த்து வச்சு குடுத்துடட்டுமா?” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் ஆடிப் போயினர்.



ஆதி விநாயகம் மற்றும் பூங்கோதை நாச்சியார் இருவரையும் முறைத்த மீனாட்சி,

“யாரைக் கேட்டு நீங்க இவளுக்கு மாசம் மாசம் சம்பளங்குற பேர்ல பணம் கொடுத்துட்டு இருக்கீங்க? வேலைக்காரியா இருக்கவளுக்கு என்னத்துக்கு சம்பளம்? அவ செய்யிற வேலைக்காக தான் இந்த வீட்டுல இருக்குறதுக்கு இடம் கொடுத்துருக்கமே, அதுவே அவளுக்கு போதும்.‌ அதுவே அதிகம்னு நான் நினைச்சுட்டு இருக்கேன்,‌ அப்படி இருக்கும் போது நீங்க எதுக்கு சம்பளம் கொடுத்துட்டு இருக்கீங்க..?” என்று கேட்டார்.‌



“என்னம்மா இப்படி சொல்ற? இங்க சமைக்கிற சாப்பாட்டையும் சாப்பிட கூடாதுன்னு சொல்லிட்ட. தனியா தான் சமைச்சு சாப்பிடணும்னும் சொல்ற, மளிகை சாமான், அரிசி, காய்கறி எல்லாம் இல்லாம அவ எப்படி சமைச்சு சாப்பிடுவா? கைலையும் காசு இல்லைன்னா அந்த பொண்ணு சமைக்கிறதுக்கான எல்லாத்தையும் எங்கிருந்து வாங்கும். அதனால தான் மாசம் 1,000 ரூபா கொடுத்தோம். ரொம்பல்லாம் இல்லை மாசம் 1000 ரூபா குடுக்குறதுக்கு கூட இப்படி சொன்னா என்ன அர்த்தம்மா?” என்று பூங்கோதை நாச்சியார் கேட்க.



“நான் என்ன சொல்லியிருந்தேன் அத்தை. என்னைக் கேட்காம அவளுக்கு நீங்க எதுவும் செய்யக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன் தானே. அத்தை, மாமா ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க, இதுவரைக்கும் இந்த வீட்டுல நான் எதையுமே பெருசா அதிகாரம் பண்ணனும்னு நினைச்சதும் கிடையாது., எங்கிட்ட எதா இருந்தாலும் சொல்லணும்னும் கேட்டுக்கிட்டது கிடையாது.‌ ஆனா இவ விடயத்துல யாரும் தலையிடாதீங்க அவ்வளவு தான் சொல்லுவேன்..” என்றவர் யாரும் எதிர்பார்த்திராத நேரம் சமையலறைக்குள் நுழைந்து நன்கு பழுக்கக் காய்ச்சிய கரண்டியை கொண்டு வந்து தவிப்புடனும், அடுத்து என்ன நடக்குமோ? என்ற பதைபதைப்புடனும் நின்றிருந்த வாணியின் கெண்டைக்காலில் சூடு வைத்தார் மீனாட்சி.‌



அதைக்கண்டு அங்கிருந்த அனைவரும் பதறி விட்டனர்.. ஆனால் அப்போது தான் அலுவலகம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த அகில் பிரசாத்தோ சலனமில்லாமல் அக்காட்சியைக் கண்டு விட்டு எதுவும் நடவாதது போல் மேலே ஏறி தன் அறைக்கு சென்று விட்டான். அந்த காட்சியைக் கண்டு ஆதவ்வின் கண்களில் கூட நீர் கோர்த்துக் கொண்டது.‌



பூங்கோதை நாச்சியாரோ,

“என்ன மீனாட்சி இப்படி பண்ணுற? தாய், தகப்பன் இல்லாத பிள்ளையை இப்படி தான் கஷ்டப்படுத்துவியா, இதே உன் பிள்ளையா இருந்தாலும் இப்படி தான் பண்ணுவியா?” என்றதற்கு..



“என் புள்ளையா இருந்தா நான் எதுக்கு இப்படி அடுத்தவங்க வீட்டுல விட்டுட்டு சாகப் போறேன் அத்தை. அதே போல நான் செத்த அடுத்த நிமிஷம் எதைப்பத்தியும் யோசிக்காம பணத்துக்காக, சொகுசான வாழ்க்கைக்காக எம்புள்ளையும் இன்னொருத்தரோட வீட்ல போய் இருக்க மாட்டா, மறுநிமிஷமே அவளும் தூக்கு போட்டு செத்துருப்பா” என்று சொல்ல அந்த வார்த்தை சுருக்கென்று வாணியின் மனதைத் தைத்தது.



சூடு பட்ட இடம் வேறு திகுதிகு வென்று அனலைக் கொட்டியது போல் எரிந்தது. அஞ்சனம் தீட்டப்படாத சிறிய கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிய நிமிர்ந்து மீனாட்சியை ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் பேசாமல் விந்தி விந்தி நடந்தவாறு தன் அறைக்கு வந்து சேர்ந்தவள் கதவை தாழிட்டு விட்டு கதவின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.



தன் வீட்டில் தான் வளர்ந்த விதம் என்ன என்பதை நினைத்தவளுக்கு இன்னும் நெஞ்சை அடைத்தது. அவர்கள் சொன்னது போலங தன் தந்தையும் தாயும், அண்ணனும் இறக்கையில் அவர்களுடன் தன்னையும் அழைத்துச் சென்றிருந்தால் தனக்கு இந்த கஷ்டமெல்லாம் வந்திருக்காதே என்று எண்ணியவள் தன்னால் முடிந்த மட்டும் அழுது தீர்த்தாள்.‌ ஆனால் அவள் தன் அறைக்கு வந்த அடுத்த 15 நிமிடத்தில்,

“ஏய்.. நைட் சாப்பாடு செய்யிறதுக்கு உங்க அம்மாவா வருவா, வந்து வேலையைப் பாருடி..” என்று மீனாட்சியின் குரல் கேட்கவும் எதுவும் பேசாமல் கிணற்றடிக்கு சென்று நீரை சேந்தி முகத்தை கழுவிக் கொண்டு வந்து அவர்களுக்கான இரவு உணவை சமைக்க ஆரம்பித்தாள்.



தன் தாயின் செய்கையை என்ன என்பதை தம்பியின் வாயிலிருந்து கேட்க நேர்ந்த போதும் அகிலிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை.‌



“அதான் அம்மா அவங்க விஷயத்துல தலையிடக் கூடாதுன்னு சொல்றாங்கல்ல. அப்புறம் எதுக்கு தேவை இல்லாம எல்லாரும் தலையிடுறீங்க? அவங்கவங்க வேலையை மட்டும் பாருங்கடா” என்று சொல்லி விட்டு எப்போதும் போல் தன் அறைக்குள் நுழைந்து தன் அன்றாட வேலையை பார்க்க ஆரம்பித்தான்.‌



இங்கோ நின்று கொண்டு சமைக்க கூட முடியாமல் திணறிய வாணி கால்வலி எடுத்த போதும் இரவு உணவை சமைத்து விட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த அதே நேரம் அவளின் முன்பு வந்து நின்றார் பூங்கோதை நாச்சியார்.



அவரை நிமிர்ந்து பார்த்தவள்,

“சொல்லுங்க பெரியம்மா ஏதாவது செய்யணுமா?” என்று கேட்டாள்.



அவரோ கண்களில் தேங்கிய கண்ணீரோடு, ‌ தன் கையிலிருந்த பணத்தை அவள் கையைப் பிடித்து அதில் வைத்தவர்,‌“வேணாமா இந்த வீட்ல நீ இருக்க வேணாம். இந்த பணத்தை வச்சுக்கிட்டு நீ எங்கேயாவது போய் நல்லா படி, எப்படியாவது பொழைச்சுக்கோ. இங்க இருந்து நீ கஷ்டப்பட வேணாம்.‌நாளுக்கு நாள் உங்க அப்பா மேல இருக்க கோவத்துல உன்னை உங்க அத்தை ஏதாவது செஞ்சாலும் செஞ்சிடுவா,‌ அதனால நீ இங்கிருந்து போயிடுமா. வேற எங்காவது போய் நிம்மதியா வாழ்ந்துக்க,‌ தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுமா” என்றார்.
 
உறவின் தேடல் -10.2


அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த
வாணி, “என்ன பெரியம்மா நீங்களே இப்படி சொல்றீங்க? அவங்க என்ன கஷ்டப்படுத்துனாலும் சொந்தம்னு சொல்லிக்க நீங்கல்லாம் இருக்கீங்கன்னு தான் நான் நெனச்சுக்கிட்டு,‌ கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்கேன். அப்படி இருக்கும் போது நீங்களே இப்படி வெளிய போக சொன்னா நான் எங்க பெரியம்மா போவேன், எனக்கு யாரைத் தெரியும்.
அப்பா அம்மாவும் இல்லை கூட பொறந்தவனும் உயிரோட இல்ல அப்ப நான் எங்க தான் போவேன், அநாதையா நிக்கிறவளை மறுபடியும் அநாதையாக்கி அனுப்புறீங்களே?” என்று அழுதுகொண்டே சொன்னாள்.
“நீ சொல்றது எனக்கு புரியாம இல்லம்மா ஆனா நீ இங்க இருந்து கஷ்டப்படுறதை வேற எங்காவது போய் நிம்மதியா இருக்கலாமே..”
“நீங்க கவலைப்படாதீங்க பெரியம்மா சீக்கிரம் எல்லாமே சரியாகிரும். ஒரு நாள் எங்க அத்தையேட மனசு மாறுங்குற நம்பிக்கையில தான் நான் இந்த வீட்டுல இருக்கேன். தயவு செஞ்சு என்னை இங்கிருந்து போகச் சொல்லிடாதீங்க பெரியம்மா” என்று கைகூப்பி வணங்கியவள் அந்த பணக்கட்டை திருப்பி அவரிடமே கொடுத்து விட்டு தன் அறைக்கு வந்தாள்.
மீனாட்சியின் அந்த செய்கை அந்த வீட்டில் இருந்த யாருக்கும் பிடிக்கவில்லை. அகில் பிரசாத்தோ எதையும் கண்டுகொள்வதில்லை, தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருப்பான்.
ஆனால், 'இப்படியே விட்டால் இது சரிவராது அந்த பெண் வெளியில் சென்றாலும் கௌரவத்துடன் வாழ வேண்டும். இங்கிருந்து தன் மருமகளின் கையால் கஷ்டப்படக்கூடாது’ என்று நினைத்த ஆதி விநாயகம் யாருக்கும் தெரியாமல் அதற்குண்டான வேலைகளை கச்சிதமாக செய்து முடித்தவர் அதன் பிறகே தன் வேலையை பார்க்கச் சென்றார்..
அவர்களுக்கு உண்டான இரவு உணவை சமைத்து முடித்தவள் அவர்களுக்கு அதை தட்டில் பரிமாறி விட்டு ஓரமாக சமையலறையினுள் நின்று கொண்டாள். அனைவரும் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றதும் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தி வைத்து விட்டு அதன் பிறகே தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள். சரியாக அவள் பின்பக்க வாசலைத் தாண்டிய நேரம் சட்டென்று பின் பக்க கதவை அடைத்து யாரோ தாழிடும் சத்தம் கேட்டது. நிச்சயம் அது மீனாட்சியாகத் தான் என்பது தெரிந்த போதும், எப்போதும் நடப்பது தானே என்று நினைத்தவள் எதுவும் பேசாமல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள்.
அந்த அறையில் பெரிதாக அப்படி ஒன்றும் பொருட்கள் இல்லை. நைந்துபோன நான்கு சுடிதார்கள், வெளுத்துப் போன ஒரே ஒரு புடவை அதுவும் பூங்கோதை நாச்சியாரின் வற்புறுத்தலால் அவரது பழைய புடவையை மீனாட்சி கொடுத்தது. அது தவிர அவள் படுத்து உறங்குவதற்கு ஒற்றை பாய் அதுவும் நைந்து கிழிந்து போகும் நிலையில் இருந்தது. ஒரு தலையணை, போர்த்திக்கொள்ள ஒரு பெட்ஷீட்டையும் பெரிய மனது பண்ணி கொடுத்திருந்தார் மீனாட்சி.‌ கூடவே சமைப்பதற்காக ஒரு மண்ணெண்ணெய் அடுப்பும், அதில் வைத்து சமைக்க ஒரு சிறிய குக்கர், ஒரு குழம்பு பாத்திரம்,‌ஒரு வடை சட்டி,‌ இரண்டு கரண்டி,‌ ஒரு தட்டு,‌ ஒரு சொம்பு,‌ஒரு பிளாஸ்டிக் குடம் அதற்கு ஒரு மூடி‌ இது மட்டுமே மீனாட்சி அவளுக்கென்று கொடுத்த பொருட்கள்.‌ அதை வைத்து தான் இத்தனை நாட்களாக சமாளித்துக் கொண்டிருந்தாள் வாணி.
இப்பவும் அறைக்குள் வந்தவளுக்கு மீனாட்சி வைத்த சூடு தீராத வலியைக் கொடுத்த போதும் பசி வயிற்றை கிள்ளியது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது வேறு கிறுகிறுவென்று வர, என்ன இருக்கிறதென்று தேடிப்பார்த்தாள். மளிகைப்பொருட்களைப் போட்டு வைத்திருந்த நான்கே பிளாஸ்டிக் டப்பாக்களை ஆராய்ந்து பார்த்தாள்.‌ அனைத்திலும் பொட்டலமாகத் தான் மளிகை பொருட்கள் இருந்தன.‌இதைத்தவிர அதிகமாக அவளால் பொருட்களை வாங்க முடியாது. வாங்குவதற்கு காசு இருக்காது, அதேபோல் மீனாட்சியும் வாங்கித் தரமாட்டார்.‌
எனவே இருப்பதைத் தேடிப் பார்த்தவள் சேமியா பாக்கெட் கையில் தட்டுப்படவும், அதை செய்து விடலாம் என்று முடிவு செய்து வெங்காயம், தக்காளி நறுக்கி அவசர அவசரமாக சேமியாவை செய்தவள் அதை தட்டில் போட்டு அவசர அவசரமாக சாப்பிட ஆரம்பித்தாள். பாதியை சாப்பிட்டு முடித்தவளுக்கு அப்போது தான் தேவேஷ்வரின் நினைவு வந்தது.
அவன் பெயர் தெரியாது, அவன் யாரென்று கூட தெரியாது ஆனால் இப்போது அவன் இவளின் கணவன். அதை நினைத்தவளுக்கு அதற்கு மேல் அந்த உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. ‘கடவுளே அவரு பொழைச்சுக்கணும், அவரை காப்பாத்திடு’ என்று மீண்டும் ஒருமுறை கடவுளிடம் வேண்டிக் கொண்டவள் வேறு வழியில்லாமல் தட்டிலிருந்த மீதியையும் வாய்க்குள் தள்ளி விட்டு அனைத்தையும் எடுத்துச் சென்று கிணற்றடியில் போட்டு தண்ணீரை இறைத்து பக்கெட்டில் ஊத்தி அந்த நேரத்திற்கு பாத்திரம் துலக்கினாள்..
சத்தம் வராமல், உறங்குபவர்கள் எழுந்து கொள்ள கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து சத்தம் வராமல் பாத்திரங்களைச் சுத்தம் செய்தவள், தன் அறைக்கு வந்து படுத்த போது மணி 11- ஐ தாண்டி இருந்தது.
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள் கதவு தட்டப்படும் சத்தத்தில் எழுந்து அமர்ந்தாள். “யாரது..” என்று கேட்டவளுக்கு பதிலாய்,
“ நான் தான்மா” என்று குரல் கொடுத்தார் பூங்கோதை நாச்சியார்.
எழுந்து சென்று கதவைத் திறந்தாள் வாணி.. அங்கே ஆதி விநாயகம், பூங்கோதை நாச்சியார், ஆதவ் மூன்று பேரும் நின்றிருந்தனர்.‌
”நீங்க இங்க என்ன செய்றீங்க?” என்று கேட்டாள். ஆனால் அவர்களோ அவளுக்கு பதில் சொல்லாமல் மூவரும் உள்ளே நுழைந்தனர்.‌ அதைப் பார்த்து விட்டு,‌“அச்சோ இந்த நேரத்துல மூனு பேரும் எதுக்கு வந்துருக்கீங்க?” என்று பதட்டத்துடன் கேட்க.
“சும்மாதான் வந்தோம்..” என்ற நாச்சியார் அவளை அமர வைத்தவள் அவளது காயத்திற்கு ‌ தன் கையாலையே மருந்து வைத்து விட்டார்.
அவ்வளவு நேரம் மறுபுறம் திரும்பி நின்று கொண்டிருந்தான் ஆதவ். “மருந்து வெச்சுட்டேன் ஆதவ்” என்று பூங்கோதை நாச்சியார் சொன்னதுக்கு பிறகே அவளின் புறம் திரும்பி நின்றான்.
“காலையில நான் டிரஸ் குடுக்கும் போது நீ வேணான்னு தான் சொன்னா. ஆனா நான் தான் உன்னை வாங்கிக்க சொல்லி வற்புறுத்துனேன். அதோட நான் விட்டிருந்தா உனக்கு இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது சாரி வாணி.‌ இதுக்கு மேல நான் இந்த தப்பை செய்ய மாட்டேன். உனக்கு ஒன்னே ஒன்னை மட்டும் சொல்றேன் கேட்டுக்க வாணி, நீ இங்க இருக்குற வரைக்கும் உனக்கு கஷ்டம் தான் வரும், கொஞ்சம் யோசிச்சு பாரு வாணி. இங்க இருந்து கிளம்புறதா இருந்தா சொல்லு உன்னை நல்ல பாதுகாப்பான இடத்துக்கு நான் அனுப்பி வைக்கிறேன்..” என்றவன் பூங்கோதை நாச்சியாரிடம்,
“பாட்டி வாங்க போலாம். நாம இங்க வந்த விஷயம் தெரிஞ்சா உங்க மருமக இன்னும் ஆட்டமா ஆடுவாங்க..” என்றதும் மூவரும் கிளம்பி தயாரானார்கள்.
“எதையும் நினைக்காம தூங்குமா உனக்கு அவ்வளவு சீக்கிரம் எந்த அநீதியும் நடக்க விடமாட்டோம்” என்று சொல்லி விட்டு சென்றார் பூங்கோதை நாச்சியார்.‌
ஆதி விநாயகமோ அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவர் செல்லும் போது அவள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டு,
“விதி உன்னை இங்க கொண்டு வந்து சேர்க்காமையே இருந்துருக்கலாம். உன்னைப் பத்தி நெனச்சா எனக்கு தூக்கமே வர மாட்டேங்குதுமா, சீக்கிரமே எல்லாம் சரியாகும் கவலப்படாம தூங்குமா..” என்று கலங்கிய குரலில் சொல்லி விட்டு சென்றார். அவர்கள் சென்ற பின்பும் பித்து பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் வாணி. அவர்கள் சொல்லி விட்டு செல்வதைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தாள். ஆனால் மறுநொடியே அவளது தந்தையும் தாயும் கூறிய வாத்தைகள் நினைவுக்கு வர முற்றிலும் அந்த முடிவை ஒதுக்கித் தள்ளிவிட்டு படுத்து உறங்க முயற்சித்தாள்..

தந்தையின் வழிகாட்டுதலும்
தாயின் வழிமுறைகளும்
நல்லவையாக இருந்தாலும்
இச்சமூகத்தில் உயிர்ப்புடன்
வாழ்வதற்கு அவை
ஒத்துவராதவை
முரண்பாடானவை ‌என்பதை
உணர்ந்த போதும் மாற்றிக்
கொள்ள முடியாமல்
பேதையவள் விழி
பிதுங்கி நிற்கிறாள்..
வேதனையை பரிசாக
ஏற்றுக் கொண்டு..
- தேடல் தொடரும்..
























 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom