Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

Status
Not open for further replies.
உறவின் தேடல் -17

கணவர் சென்றபின் மகனின் அருகில் நெருங்கிய அஞ்சலை,
“அப்பாரு சொல்றபடி கேளு கண்ணா உனக்காக எவ்வளவு பெரிய காரியமெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா. அவுக பேச்சை கேட்கலன்னா உன்னை மறுக்கா மறுக்கா வஞ்சிக்கிட்டே இருப்பாங்க, வெளியே போவாத ராசா அப்பா சொல்ற வேலையை செஞசுடுலே. எதுக்காக நீ தெனமும் கோவிலுக்கு போறவென்,‌ அப்பாரு சொல்றது மாதிரி யாரையாவது தேடிக்கிட்டு இருக்கவனா‌‌,‌ அது பொண்ணா?” என்று கேட்டார்.

சட்டென்று அதிர்வுடன் தன் தாயை திரும்பிப் பார்த்தான் தேவேஷ்வர். தந்தை பேசும் போது 'பெண்' என்ற வார்த்தையை உபயோகபடுத்தவே இல்லை ஆனால் தாய் சொல்கிறாரே, ஒரு வேளை உண்மை தெரிந்திருக்குமோ என்ற பதைபதைப்பில், “அப்பாரு எங்கம்மா பொண்ணுன்னு சொன்னாரு, நீங்க பாட்டுக்கு எதையாவது உளறி வைக்காதீக” என்று மழுப்பலாக பதிலுரைத்து அவர் மனதில் இருப்பதை அறிந்து கொள்ள முயன்றான்.

“அவுக சொல்லித்தேன் தெரியோணுமாக்கும்.‌ தெரியாமத்தேன் கேட்குறேன் அவருக்குத்தேன் உன்னை பத்தி சொல்றதுக்கு ஆளுக இருப்பாகளா, எனக்கெல்லாம் தெரிந்தவுக இருக்க மாட்டாகளா, இல்ல அவுகதேன் உன்னிய பத்தி எங்கிட்ட சொல்லாம போயிடுவாகளா.‌ ஒரு வாரத்துக்கு முன்னுக்கவே தெரியும் உன்னோட நடவடிக்கை ஏதோ சரியில்லைன்னு.‌ பூசாரியில இருந்து, கோயிலை கூட்டி பெருக்குறவுக வரைக்கும் அம்புட்டு பேரும் சொல்றாவுக, ஒரு பொண்ணோட அடையாளத்தை சொல்லி விசாரிக்கிட்டு இருக்கவென்னு. அப்படி உனக்கு அந்த பொண்ணைப் புடிச்சிருந்தா நீ என்கிட்ட சொல்லி இருக்கலாமே ராசா, நீயே போய் தேட வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு, நான் பார்த்து கட்டி வெச்சுருக்கமாட்டேனா?” ஆதங்கத்தோடு கேட்டார்.

“அம்மா அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா அவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் ஆனா எந்த ஊருன்னு தெரியல அவங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும், கூடவே அவங்களோட பொருள் ஒண்ணு என்கிட்ட இருக்குது அதை கொடுக்கணும் அதுக்காண்டி தான் தேடுனேன், நீ பாட்டுக்கு எதையாவது நினைச்சுக்கிட்டு இருக்காத சரியா. நான் அப்பாரு சொன்ன வேலையைச் செய்ய போறேன் இல்லைனா அதுக்கும் வந்து சாயந்திரம் திட்டுவாக” என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

மகன் மழுப்பலாய் பதில் உரைத்ததும், இப்போதும் பதற்றத்துடன் இங்கிருந்து தப்பித்து ஓடுவதையும் கண்டு, தான் நினைத்தது தான் உண்மை என்றுணர்ந்த அஞ்சலை,’அந்த பொண்ணு யாருன்னு தெரியல, தெரிஞ்சா அந்த பிள்ளையை நம்ம பையனுக்கு கட்டி வச்சுடணும். ஒரு பொண்ணுக்காக இம்புட்டு தூரம் மெனக்கெடுறான்னா கண்டிப்பா அந்த புள்ளையும் இவனை நல்லா பார்த்துக்கிடும். அந்த பிள்ளை மேல உசுர இருக்கவும் தானே இப்படி தேடி திறியிறியான், கண்டிப்பா அந்த புள்ளைய எம்மவனுக்கு நான் கட்டி வெப்பேன்' என்று நினைத்தவராய் தான் விட்டு விட்டு வந்த சமையல் வேலையை கவனிக்க சென்றார்.


தாயிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று வெளியே ஓடிவந்த தேவேஷ்வரும் அவசர அவசரமாகத் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து முதலில் தோட்டத்துக்கு சென்றவன், அங்கு வேலை ஆட்கள் எல்லாம் வேலை செய்வதை எட்ட நின்று பார்த்து விட்டு வயலில் கூட நுழையாது குடோனுக்கு சென்றுவிட்டான்.‌ குடோனில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் ஒருமுறை மேற்பார்வை கண்டு விட்டு இரண்டு மணி ஆனபோது மீண்டும் வீட்டிற்கு வந்து மதிய உணவை உண்டு விட்டு கரூருக்கு கிளம்பினான். ஏனோ அவனது சிந்தனையில் வாணி தான் நிறைந்திருந்தாள். அவளை ஒரு முறையேனும் எங்காவது கண்டு விட மாட்டோமா என்று அவன் உள்ளம் தவிப்புடன் துடித்தது.

அலைந்து திரிந்து தோட்டத்திற்கு தேவையான உரங்கள் அனைத்தையும் வாங்கி ஆட்டோ ஒன்றை பிடித்து அதில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு தன் இரு சக்கர வாகனத்தை அவன் உதைத்துக் கிளப்பிய போது மணி நான்கை தாண்டியிருந்தது. சலிப்புடன் மணிக்கட்டில் இருக்கும் கடிகாரத்தை ஒருமுறை குனிந்து பார்த்து விட்டு வண்டியை இயக்கியவன் மிதமான வேகத்தில் அங்கிருந்து நகர்ந்தான்.

சரியாக அந்த கலைக் கல்லூரியின் அருகே வந்தபோது அவனது மனதில் ஒரு எண்ணம் எழுந்தது.‌ ‘ஒருவேளை அவ காலேஜ் படிக்கிற பொண்ணா இருந்தா என்ன பண்றது?’ என்ற எண்ணம் எழுந்ததும் அவனது விழிகள் அந்த கல்லூரியின் முகப்பு வாயிலேயே நோட்டமிட்டது.‌ வாயிலைப் பார்த்து விட்டு அதன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான். அந்த கல்லூரியை விட்டு சற்று தள்ளி எதிர்ப்புறம் இருந்த பேருந்து நிலையத்தை பார்த்தவனது விழிகள் அப்படியே நிலை குத்தி நின்றது.

நிச்சயம் தன் மனம் கவர்ந்தவளை அங்கு பார்ப்போம் என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.‌ விழியகலாது, இமைக்கொட்டாது அவளையே பார்த்தான்.

வாணியோ இதை அறியாமல் அருகிலிருந்த மலரிடம் எதையோ சொல்லி சிரித்தவாறு நின்றிருந்தாள். அதுவும் ஆகாய வண்ண நிறத்தில் உடை அணிந்து அவ்வப்போது வெண்பற்கள் தெரிய சிரித்து கண்களை சிமிட்டி கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாள். அவளது பாவனையில் சத்தியமாக தன் மனதை பறிகொடுத்து விட்டான் தேவேஷ்வர். தன்னிலை மறந்து அவளையே பார்த்திருந்தவன் ஒரு உந்துதலில், அவள் முன்னால் தான் சென்று நின்றால் அவளது முக பாவனைகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்கள் அருகில் சென்று தன் வண்டியை நிறுத்தினான்.

மலரிடம் எதையோ சொல்லி விட்டு பைக்குள் இருந்த சாக்லேட்டை தேடிக் கொண்டிருந்தாள் வாணி. அதே நேரத்தில் அவர்கள் அருகே வந்து நின்றான் தேவேஷ்வர்.‌ பேருந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த மலர் அவனைக் கண்டதும் அகமும் முகமும் மலர,
“ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க?” என்றாள் ஒருவித குதூகலத்துடன்.

அவனும் அப்போது தான் மலரைப் பார்த்தவனாய்,
“ஓஓ இந்த காலேஜ்ல தான் படிக்கிறியா, நான் சூப்பரா இருக்கேன்டா நீ எப்படி இருக்குற?” என்று கேட்டான்.

“நான் நல்லா இருக்குறேன் அண்ணா நீங்க இப்ப எப்படி இருக்கீங்க, உங்க உடம்பு பரவாயில்லையா. காலேஜ் படிச்சு முடிச்சுட்டு வந்ததும் வராததுமா வம்பு வளர்த்து வச்சிருக்கீங்க. ஆனாலும் உங்களுக்கு செம தில்லு தான் அண்ணா ஒரு லவ் ஜோடி சேர்த்து வைக்க உங்க உயிரையே பணயம் வச்சிருக்கீங்களே நீங்க கிரேட் தான்” என்றாள் பூரிப்புடன்..

தேவேஷ்வருக்கோ அவள் பாராட்டியதில் தன்னையும் மறந்து வெட்கம் வர தலைகுனிந்து சிரித்தவன்,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லமா, நட்புக்காக எதையும் செய்யலாம் அவ்வளவுதான்” என்றான்.

அப்போதுதான் சாக்லெட்டை எடுத்துக் கொண்டு நிமிர்ந்த வாணி அந்த குரலை எங்கோ கேட்டது போலிருக்கிறதே என்றெண்ணி அவனிடம் பார்வையைத் திருப்பிவள் அவனைக் கண்டதும் இன்பமாக அதிர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் அவளது விழிகளில் ஒரு நிமிடம் வந்துபோன மின்னல் ஒளியை கண்டு அவனது உள்ளம் குதூகலித்தது. அவளும் தன்னை மறக்கவில்லை என்ற உணர்வே அவனை மெய்மறக்கச் செய்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க அதை கண்ட மலர் தயக்கத்துடன்,
“இவளை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என கேட்டாள்.

அதன் பிறகே தான் கேட்ட கேள்வி தவறு என்பது போல் மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டவள், “எதிரெதிர் வீட்டுல இருக்கீங்க அப்படி இருக்கும் போது உங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியாம இருக்குமா” என்றாள்.

அப்போது தான் இருவருக்கும் எதிர் எதிர் வீட்டில் தாங்கள் இருக்கிறோம் என்பதே தெரிந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தனர்.

“எனக்கு இவரை தெரியாது” என்றாள் வாணி மெல்லிய குரலில்.

அதே போல் அவனும் அவளையே குறுகுறுவென்று பார்த்தவாறு, “எனக்கும் இவங்களை தெரியாது மலர்,‌ இவங்க யாரு உன் பிரண்டா?” என்று கேட்டான்.

“ஆமாணா என்னோட பிரண்டு தான் பேர் மதுரவாணி, இப்ப இவ என்னோட பெஸ்ட் பிரென்ட்டாகிட்டா தெரியுமா!”

”சரிம்மா உங்களுக்கு பஸ் வந்துருச்சுன்னு நினைக்கிறேன் நாளைக்கு பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு அவன் அங்கிருந்து நகர,
‘நாளைக்கு ஏன் பார்க்க வேண்டும்?’ என்ற எண்ணம் மலரினுள்ளும் எழாமல் இல்லை. அதேநேரம் ‘தனக்காகத் தான் இப்படியொரு வார்த்தையை சொல்லி விட்டு செல்கிறானோ?’ என்ற கேள்வியோடு அவனையே பார்த்திருந்தாள் வாணி.

அவளது பார்வையின் பொருள் புரியாமல் குழம்பிய மலரோ,‌
“ஏய் உண்மைய சொல்லுடி தேவ் அண்ணாவ உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டாள்.

சட்டென்று பதற்றமடைந்த வாணி,“ இல்லை.. இல்லை இல்லை அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஜஸ்ட் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு அதான் பார்த்தனே தவிர வேற ஒன்னும் இல்லை” என்று மழுப்பலாக பதிலுரைத்தாள்.‌

ஆனால் அவளையே குறுகுறுவென்று பார்த்த மலர்,
“ம்ஹூம் நீ எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறன்னு தெளிவா தெரியுது, ஆனா ஏன் மறைக்கிறன்னு தான் தெரியல. ஆனா கூடிய சீக்கிரம் அதையும் கண்டுபிடிச்சுருவேன்” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

‘அப்பாடா ஒரு வழியா தப்பிச்சோம்’ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட வாணியும் மலரின் பின்னே சென்றாள். ஆனால் பேருந்தில் ஏறுவதற்கு முன் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த தேவேஷ்வரை பார்த்து விட்டு அதன் பிறகு தான் படியேறினாள்.
மலரும் ஓரவிழியால் அதை கவனித்தாலும் எதுவும் தெரியாதது போல் இருந்து கொண்டாள்.

தன் இரு சக்கர வாகனத்தில் மிதமாக பயணித்த தேவேஷ்வருக்கு சிறகின்றி விண்ணில் பறப்பது போலிருந்தது. அவளைப் பார்த்து விட்ட மகிழ்விலும், அவளுக்கும் தன்னை ஞாபகம் இருக்கிறது என்ற உணர்வும் அவனை மகிழ்ச்சியான ஒரு உணர்வு குவியலுக்குள் தள்ளி இருந்தது.
அதிலும் தன்னைக் கண்டதும் அவள் முகத்தில் வந்து போன மின்னலும், மகிழ்வும் அவனை இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித பிரமிப்பில் ஆழ்த்தி இருந்தது.

இப்பொழுதே அவளிடம் தன் மனதில் இருப்பதை தெரிவித்து விடும் ஆவலும் அதிகரித்தது, பரபரப்பும் தொற்றிக்கொண்டது ஆனால் இருக்கும் இடம் சூழ்நிலை கருதி அமைதி காத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படியே அவளை கூட்டிக்கொண்டு எங்காவது சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் எழுந்தது.‌ இருந்தும் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரிந்து விட்டதால், இனிமேலாவது அவளைப் பற்றிய விவரங்களை சேகரித்து அவளிடம் பழகிய பின்னர், அவள் மனதில் உள்ளதையும் அறிந்து கொண்ட பின்னர் தன் மனதில் உள்ளதை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.‌

சற்று நேரத்தில் மலர் வாணி இருவரும் சென்ற பேருந்து அவனைக் கடக்க முயன்றது.‌ ஜன்னலின் ஓரம் அமர்ந்து இருந்த வாணியோ எட்டி எட்டி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். தற்போது அவனை முந்திச் செல்ல பேருந்து முயன்ற வேளையில் அவனை ஓர விழியால் பார்க்காமல் நேரடியாகவே பார்த்தாள் வாணி. அவனோ எதேச்சையாக நிமிர்ந்து அவள் இருந்த ஜன்னல் இருக்கையைப் பார்த்தவன் தன் பற்கள் தெரியும் அளவிற்கு புன்னகைத்து, “எப்படி இருக்க?” என்று கேட்டான் இதழ் அசைவில்..

அவன் அவ்வாறு கேட்டதும் ஒருவித உணர்வுக் குவியலுக்கு உட்பட்ட வாணி சட்டென்று முகத்தை மடியில் இருந்த கல்லூரி பையின் மீது புதைத்துக் கொண்டாள், ஆனால் சில நிமிடங்களில் ஓர விழியால் அவனைப் பார்த்தவள் எதுவும் பேசாமல் புன்னகைக்க முயன்றாள்.‌ ஆனால் அவள் முகமோ அவன் செய்த செயலால் அடுத்த நிமிடம் செக்கச்செவேலென்று சிவந்து போனது.

அவளிடமிருந்து பதில் வராது போக ஒருவித தவிப்புக்குள்ளான தேவேஷ்வர் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தியவன் அவளிருந்த இருக்கைக்கு நேராக வந்ததும் வேகத்தை சமநிலைப்படுத்தியவன் அவளிடம், “எப்படி இருக்குறன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டியா, என்னை ஞாபகம் இருக்குதா?” என்று மீண்டும் இதழ் அசைவில் கேட்டான்.

ஓர விழியால் அவனைப் பார்த்தவளோ அப்போதும் பதில் பேச முற்படவில்லை. ஆனால் அவளது கன்னங்கள் இரண்டும் செம்மையுற்றன.‌ அதைக் கண்டவன் ஒற்றைக் கண் சிமிட்டி இதழ் குவித்து முத்தமிடுவது போல் சைகை காண்பித்து விட, அதைக் கண்ட வாணி செங்கொழுந்தாக சிவந்து போனாள். இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் அமர்ந்திருந்தாள் மலர்.

‘நிச்சயம் இருவருக்குள்ளும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறது' என்று அவளுக்கு தெளிவாகப் புரிந்து போனது. ஆனால் எப்படி என்றுதான் அவளால் கணிக்க முடியவில்லை.‌ கல்லூரி படிப்பை முடித்து விட்டு தேவேஷ்வர் இந்த ஊருக்கு வந்த அன்று தான் அவனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் இருந்தான். சொல்லப்போனால் அந்த நிகழ்வுக்கு பிறகு இப்போது தான் அவன் வெளியில் நடமாட ஆரம்பித்திருப்பதாக பக்கத்து வீட்டு அக்கா பேசிக் கொண்டதை அவள் காலையில் தான் கேட்டு விட்டு வந்தாள். அப்படி இருக்கும் போது இருவருக்குள்ளும் எப்படி பழக்கம் ஏற்பட்டு இருக்கும் என்ற வினாவிற்கான விடை தெரியாமல் குழம்பித் தவித்தாள்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் எந்த ஒரு குழப்பமும் இல்லை இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளால் ரசித்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள் பேருந்து அவனை கடந்து முன்னே சென்று விட்டதால் அவன் பின் தங்கிவிட்டான்.‌ ஆனால் இந்த நிகழ்வு அவனை ஒருவித பிரமிப்பில் ஆழ்த்தியது.‌ அவளிடம் தான் இப்படி பேசுவோம், நடந்து கொள்வோம் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை.‌ அவளை மீண்டும் சந்தித்ததே கனவு போல் இருக்க, இப்போது அவளிடம் தன்னை மீறி முத்தச் சைகை காட்டி விட்டதை எண்ணி தவித்துப் போனான்.

ஏதோ ஒன்று அவன் நெஞ்சை பிசைய மீண்டும் முன்னால் செல்ல முயன்றான். ஆனால் அதற்குள் பேருந்து அசுர வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டிருந்தது. இவனும் வேகமாக செல்லத்தான் முயன்றான் ஆனால் அவள் கூட மலர் இருப்பதால் தான் ஏதேனும் செய்யப் போய், அது அவளுக்கு தெரிந்து மீண்டும் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்ததால் அவன் அப்பேருந்தை பின்தொடவில்லை. அதுவும் தனக்கு பிரச்சினைகள் வந்தால் கூட ஏதாவது செய்து விடலாம், அவளுக்கு வந்தால் என்ன செய்வது என்று எண்ணி தான் பின் தங்கினான்.

பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றதும் மலர்,வாணி இருவரும் இறங்கினார்கள்.‌ மலர் அங்கிருந்து செல்ல முயன்ற வேளையில் வாணி, “மலர் ஒரு நிமிஷம்” என்று அழைத்து தடுத்து நிறுத்தினாள்.

என்ன என்பது போல் திரும்பிப் பார்த்த மலரிடம், “நாளைக்கு நான் கோயிலுக்கு போகணும், அதனால நாளைக்கு நான் காலேஜ் வரலடி” என்றாள் நா தந்தியடிக்க, படபடப்பு கலந்த பயத்துடன்.‌

“அப்படியா.‌ எப்பவும் காலேஜ் வந்துட்டு அதுக்கப்புறம் தானே கோயிலுக்கு போவ, நாளைக்கு என்ன லீவு போட்டுட்டு கோயிலுக்கு போற, எதாவது விஷேஷமா?” என்றதும் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்த வாணி சட்டென்று ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்ல முடிவு செய்தவளாய், “இல்ல நாளைக்கு அம்மாவோட பொறந்தநாளு அதான்”, என்று மழுப்பலாக பதில் உரைத்தாள்.

“சரி சரி தாராளமா போ நான் வேணான்னு சொல்லலை. ஆமா அதை சொல்றதுக்கு ஏன் இப்படி பயப்படுற, நீ எதுக்கும் கவலைப்படக் கூடாது. அம்மா அப்பா எங்க இருந்தாலும் உன்னை பார்த்து பெருமைப்படுவாங்க, சந்தோஷப்படுவாங்க சரியா. ஆமா நீ மட்டும் தனியா போயிட்டு வந்துடுவியா இல்ல நானும் லீவு போட்டுட்டு கூட வரட்டுமா?”

“இல்ல.. இல்ல.. இல்ல.. இல்ல நீ லீவ் போட்டுட்டு எல்லாம் வர வேண்டாம் நாளைக்கு லேப் டெஸ்ட் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. நாளைக்கு ஏதாவது வொர்க் கொடுத்தா என்ன பண்றது, நானும் லீவ் போட்டுட்டேன் நீயும் லீவு போட்டா நமக்கு யாரு நோட்ஸ் தருவாங்க,‌ அதனால நீ காலேஜ் போடி நான் கோயிலுக்கு போறேன்.‌ ஈவினிங் நானே உங்க வீட்டுக்கு வந்து நோட்ஸ் வாங்கிக்கிறேன்” என்று சொல்லி விட்டு வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள் வாணி.

செல்லும் அவளையே சில நிமிடங்கள் குறுகுறுவென்று பார்த்த மலர், “பொய் சொல்றடி. என்கிட்ட மொத மொத பொய் சொல்ற வாணி நீ, அதனால தான் இப்படி பயந்து நடுங்குகிற. எனக்கு என்னமோ எங்கேயோ நீ லாக் ஆகிட்டன்னு தான் தோணுது பார்ப்போம் விஷயம் வெளிய வராமலா போயிரும். உங்க ரெண்டு பேருக்குள்ளையும் ஏதோ சம்திங் சம்திங் ஓடுற மாதிரி இருக்குது, எத்தனை நாள் தான் என்கிட்ட இருந்து இதை மறைக்கிறிங்கன்னு நானும் பார்க்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டு இவளும் வீட்டிற்கு செல்ல திரும்பிய வேளையில் அவளை இடிப்பது போல் வந்து நின்றது அகிலனின் கார்.

அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போலிருந்தது. பயத்தில் வேகமாக துடித்த நெஞ்சை சமன்செய்யும் பொருட்டு வலது கையை இடது நெஞ்சின் ஓரம் வைத்து அழுத்தி விட்டு கொண்டவள் இரண்டடி தள்ளி நின்றவாறு காரையே வெறித்துப் பார்த்தாள், ஏனெனில் அது அகிலனின் கார்.

அதைக்கண்ட பின்னும் எதுவும் பேசத் தோன்றாமல் அங்கிருந்து அவள் நகர்ந்த வேளையில் காரில் இருந்து கீழே இறங்கி வந்த அகிலன், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் எடுத்த எடுப்பிலேயே.

அவளோ அவனை முறைத்துப் பார்த்து விட்டு, “உங்கக்கிட்ட பேசணும்ணு எனக்கு எந்த அவசியமும் கிடையாது”, என்று சொல்லிவிட்டு இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள் அவளது கையை பிடித்து இழுத்து சென்று காரினுள் தள்ளி கதவை லாக் செய்தவன் தானும் மறுபக்கம் ஏறி அமர்ந்து வண்டியை மீண்டும் கரூர் செல்லும் ரோட்டில் திருப்பி இருந்தான். அதற்குள் மழை வேற பெய்ய துவங்கியிருந்தது..

அவனது செயலில் உருவாகியிருந்த உச்சகட்ட கோபத்தோடு காருக்குள் தாறுமாறாகக் கிடந்த மலர் எழுந்து நன்றாக அமைந்தவாறு,
“மரியாதையா காரை நிறுத்தியிருங்க,‌ நான் வீட்டுக்கு போகணும் மழை வேற பெய்து”, என்றாள் படபடப்போடு.

“உன்கிட்ட நான் பேசணும்.‌ அஞ்சு நிமிஷம் தான், நான் பேச வேண்டியதை பேசி முடிச்சுடுறேன் அதுக்கப்புறம் நீ எங்கேயோ போ” என்றான் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு.

“மழை பெய்யுது நான் வீட்டுக்கு போகணும், இப்ப காரை நிறுத்துறீங்களா, இல்ல நான் கார்ல இருந்து கீழே குதிக்கட்டுமா?” என்றவள், சொன்னவாறே காரின் கதவை திறக்க முயல, அடுத்த கணம் அவளது கையிரண்டும் அகிலனின் ஒற்றைக் கையிக்குள் சிறைப்பட்டிருந்தது.

- தேடல் தொடரும்...
 
உறவின் தேடல் -18


அவன் கைகளுக்குள் சிறைபட்டு இருந்த தன் கரங்களை மீட்டுக்கொள்ள ரொம்பவே போராடினாள் மலர். ஆனால் அகிலனின் பிடி உடும்பு பிடியாக இருந்தது. சில நிமிடங்களில் பெருமூச்சு விட்டு தன்னை சமன் செய்து கொண்டவன் மெதுவாக அவளது கரங்களை விட்டுவிட்டு, “இங்க பாரு உன்கிட்ட பேசணும்னு தான் கூட்டிட்டு வந்தேன், வேற எந்த தப்பான நோக்கமும் கிடையாது. ப்ளீஸ் ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இரு என் மனசுல இருக்குறதை நான் சொல்லிட்டு போயிறேன், இல்லனா என்னால நிம்மதியா தூங்க கூட முடியாது” என்றான்.

அவன் சொன்னதை குழப்பத்துடன் பார்த்திருந்தாள் மலர். பின், “எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க நான் வீட்டுக்கு போகணும் டைம் ஆகுது, வீட்ல தேடுவாங்க” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.

மீண்டும் ஒரு முறை ஆழமாக மூச்சை இழுத்து வெளியிட்டவன்,
“நீ என்னை ஒரு நாலு மாசமா ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுற, என்னால தூங்க முடியல சாப்பிட முடியல. எப்ப பார்த்தாலும் உன் நினைப்பாவே இருக்கு, எங்க பார்த்தாலும் நீயே தான் தெரியிற, ஆபீஸ்ல வேலை செய்ய முடியல, கவனம் சிதறுது நான் என்ன பண்ணட்டும் பதில் சொல்லு” என்று கேட்டான்.

அவளோ இன்னும் குழப்பம் சுமந்த முகத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்து,“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு சுத்தமா புரியல. நான் எதுக்கு உங்களை டிஸ்டர்ப் பண்ண போறேன், இன்னும் சொல்லப்போனா எப்பவாவது ரோட்ல உங்களை பார்ப்பேன் ஆனா அப்பவும் நான் அமைதியா கடந்து போயிருவனே தவிர உங்கக்கிட்ட பேசணும்னு முயற்சி பண்ணுனது கூட கிடையாது. அப்படி இருக்கும் போது நான் எப்படி உங்களை டிஸ்டர்ப் பண்ணியிருக்க முடியும்?” என்று கேட்டாள்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அவனிடம் பேச கூட முயற்சிக்காத தான் எப்படி அவனை தொந்தரவு செய்ய முடியும் என்று தான் நினைத்தாள். ஆனால் அவளைப் பற்றிய நினைவுகள் அவனை இம்சிக்கிறது என்றோ, பலநாள் இரவுகள் அவளை நினைத்து தூங்காமல் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு கிடந்திருக்கிறான் என்றோ, கண்ணை மூடினால் அவளைப் பற்றிய கனவுகளும், அவளுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் கண்முன்னே வந்து அவனது தூக்கத்தை எப்போதோ களவாடி சென்றிருந்தது என்றோ அவள் அறிந்திருக்கவில்லை, அவளுக்கு தெரியவுமில்லை. அப்படி ஒரு எண்ணம் அவன் மனதில் வந்து இருக்கும் என்று அவள் யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டாள்..

அவனோ அவள் கேள்வி கேட்ட விதத்தில் இதழ்களில் துளிர்க்கப் பார்த்த புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கியவன்,
“நீ என்கிட்ட நேர்ல பேசலை, என்னை தொந்தரவு பண்ணல ஆனா கனவுல டிஸ்டர்ப் பண்றியே நான் என்ன பண்ணட்டும். எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, ரொம்ப பிடிச்சிருக்கு ஐ திங்க் உன்னை லவ் பண்றேன்னு நினைக்கிறேன், அதனால தான் இப்படி எல்லாம் தோணுது”, என்றான் வெளிப்படையாக.

தனக்குத் தோன்றும் எண்ணத்தை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிப்பூச்சு எதுவுமில்லாமல் இதுதான் விஷயம் இப்படி தான் எனக்கு நடக்கிறது, அதற்கு காரணம் நீதான், அதற்கு பதில் சொல் என்று கேட்டுவிட்டு அவன் அமைதியாகி விட்டான். ஆனால் மலரோ அவன் சொன்னதைக் கேட்டு உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

இப்படி ஒரு கோணத்தில் அவன் பேசுவானென்று அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நட்பைத் தாண்டி ஒரு ஆணிடத்தில் காதல் என்ற ஒரு உணர்வு தனக்கும் தோன்றும், அதை தானும் வெளிப்படுத்துவோம் என்றெல்லாம் அவள் நினைத்து பார்த்தது கூட இல்லை. தனக்கு பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு போக வேண்டும் என்று தான் என்றோ ஒருநாள் தோழிகளுடன் பேசுகையில் சொல்லியிருக்கிறாள், அப்படித்தான் அவளும் நினைத்திருக்கிறாள், இது போல் காதலிக்க வேண்டும் என்று அவள் நினைத்தது கூட இல்லை என்றே சொல்லலாம்.

அப்படி இருக்கும் போது ஒருவன் உன்னை நேசிக்கிறேன், உன் நினைவுகள் என்னைத் துரத்துகிறது, துன்புறுத்துகிறது உன் நினைவாகவே உள்ளது, என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை, ஏன் இப்படி செய்தாய், இதற்கு ஒரு வழி சொல் என்று வெளிப்படையாக நேருக்கு நேராக கேட்கும் போது பெண்ணவளால் பதில் சொல்ல முடியவில்லை.

காருக்குள் பெரும் அமைதி நிலவியது. ஆனால் வெளியே மழையோ பெரும் சத்தத்தோடு பூமியை நனைத்துக் கொண்டிருந்தது. நிமிடங்கள் கரைய துவங்கின, அவளுக்கு வீட்டிற்கு செல்ல நேரம் ஆகிறது என்பதை உணர்ந்தவன் மெதுவாக அவள் கைகள் இரண்டையும் எடுத்து தன் இடது கைக்குள் வைத்து அதன் மீது தன் வலது கையை வைத்து பாதுகாப்பாக பிடித்துக் கொள்வது போல் வைத்துக் கொண்டவன், “நான் உன்கிட்ட உன்னோட விருப்பத்தை கேட்கல, உன்னை எனக்கு பிடிச்சிருக்கு அதனால தான் இப்படி எல்லாம் தோணுதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். நான் புரிஞ்சுகிட்டதை உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன் சொல்லிட்டேன்.

அதே மாதிரி உன் மேல கோவம் இருந்துச்சு தான், ஆனா அந்த கோவம் எப்ப காதலா மாறுச்சுன்னு கேட்டா எனக்கே தெரியலன்னு தான் சொல்லுவேன். அன்னைக்கு ஒரு பெரியவர் ரோட்டுல விழுந்து கிடந்தார்னு உன்னோட துப்பட்டாவை எடுத்து அவருடைய காயத்துக்குக் கட்டுப் போட்ட பாத்தியா அந்த நிமிஷத்துல மாறி இருக்கலாம்.‌ இல்லையா மழையில சின்ன புள்ள மாதிரி ஆட்டம் போட்டு நடு ரோட்டுல விளையாடிட்டு இருந்த பாத்தியா அந்த நிமிஷத்துல உன்னை எனக்கு பிடிச்சுருந்திருக்கலாம்.

அதுவும் இல்லையா வாய்காக்கரையில குளிக்கும் போது அழகா தெரிஞ்சுயே அதுகூட நீ எனக்குள்ள வர்றதுக்கு காரணமாக இருந்திருக்கலாம்” என்றான்.

அவளோ அதிர்ந்து போய் அவன் முகத்தை பார்க்க, “என்ன நானெல்லாம் வாய்க்கால் பக்கம் வரமாட்டேன்னு நினைச்சியா?” என்றதும் அவள் தலை இயல்பாகவே ஆமாம் என்று அசைந்தது.

“எப்பவும் வரமாட்டேன்,‌ எப்பவாது வருவேன் அப்படி வரும் போது தான் உன்னை பார்த்தேன். தப்பா பாக்கல எதேச்சையா பார்த்தேன். தப்புதான் ஆனாலும் அந்த நிமிஷம் நீ வேற ஒரு பொண்ணுன்னு எனக்கு தோனல எனக்கு உரிமையானவன்னு தான் தோணுச்சு.‌ இதுக்கெல்லாம் பேரு என்ன, என்ன அர்த்தம்னு அப்ப புரியல, ஆனா இப்ப புரிஞ்சிடுச்சு. அதான் அதை உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன் சொல்லிட்டேன், நீ எனக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை ஆனா உன்னைத் தவிர வேற யாரையும் என்னால கல்யாணாம் பண்ணிக்க முடியாது. நாங்க ஒன்னும் தொன்றுதொட்டு பணக்காரங்க கிடையாது, உழைப்பால அடித்தட்டுல இருந்து மேல்தட்டு வர்க்கத்தினரா உயர்ந்திருக்கோம், அதனால பொய் சொல்லணும்னு அவசியம் எனக்கு கிடையாது. அதே மாதிரி உன்னை ஏமாத்தணுங்குற எண்ணமும் எனக்கு கிடையாது என் மனசுல இருக்குறதை வெளிப்படையா சொல்லிட்டேன், அவ்வளவு தான் போலாம்” என்று சொன்னவன் அவள் பதிலை எதிர்பாராமல் வண்டியை திருப்பியவன் பேருந்து நிலையத்தின் முன்பு காரை நிறுத்தினான்.‌

தன் கல்லூரி பையோடு கீழே இறங்கியவள் அவனைத் திரும்பியும் பாராமல் விறுவிறுவென்று அந்த கொட்டும் மழையில் நடக்க ஆரம்பித்தாள். சரியாக அவர்கள் ஏரியாவிற்கு செல்லும் சந்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தவள் ஏதோ ஒரு உந்துதலில் பின்னால் திரும்பிப் பார்க்க, கார் கதவை திறந்து விட்டு அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அகில். அந்த பார்வை அவளை ஏதோ செய்ய வேக வேகமாக அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்.

அவள் காரிலிருந்து இறங்கி சென்ற பின்பும், அவள் தலை அங்கிருந்து மறைந்த பின்னும் அவள் சென்ற திசையை பார்த்திருந்தான் அகில். நிச்சயமாக தான் இப்படியெல்லாம் மாறிப்போவோம் என்று அவன் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டான். முதல்முறை காண்கையில் அவளிடம் பிடிக்காததெல்லாம், இப்போது அவனுக்கு பிடித்திருந்தது.‌ சிறிது நேரம் அப்படியே இருந்தவன் மழைத்துளி மேலே விழுந்த பின்புதான் சுயநினைவு பெற்றவனாய் காரின் கதவை இழுத்துச் சாத்தி விட்டு வீட்டிற்கு கிளம்பினான். மழை
அவனுக்கு பிடிக்காது, அதிலும் மழையில் நனைவது என்றால் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்காது.

ஆனால் ஏனோ இப்போது மழையில் நனைய வேண்டும் போலிருந்தது. காரை வீட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு கீழே இறங்கியவன், காரை விட்டு சற்று தள்ளி நின்று கைகளிரண்டையும் அகலமாக விரித்தவன் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். மழைத்துளிகள் அவன் முகத்தில் முத்துமுத்தாய் பட்டுத் தெறித்தது. சில நொடிகளுக்குள்ளாகவே அவன் தேகம் முழுவதும் மழை நீரில் நனைந்திட, தன் மீது விழுந்து உருளும் மழையை ரசித்தான்.

பட்டு பட்டென்று தன் மீது விழுந்து தன் பாதமதில் சேகரமாகும் மழைத் தோழியுடன், தன் மனம் விரும்பும் பெண்ணையும் சேர்த்து ரசித்தான்.‌ இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து சிரித்தான்.‌ அவள் செய்கைகளும், படபடவென பேசிடும் தோரணையும், சடசடவென ஆர்ப்பரித்து பெய்யும் மழைநீரின் சத்தத்தையும் ஒன்றோடொன்று இணைத்து பார்த்து ரசித்தான். எவ்வளவு நேரம் தன்னை மறந்து மழையில் நின்றிருந்தானோ, “அண்ணா” என்ற புகழேந்தியின் குரலில் தன்னிலை பெற்றவன் அதன் பின்பு காரை திறந்து தன் உடமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

தொப்பலாக நனைந்து போய் உள்ளே நுழையும் அவனை அனைவரும் விசித்திரமாக தான் பார்த்தார்கள். ஏன் மழையின் காரணமாக தொப்பலாக நனைந்து வந்து உடை மாற்றியிருந்த ஆதவ்வும் கூட அண்ணனின் இந்த புதிய பரிமாற்றத்தை எண்ணி வியந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும். அனைவரும் தன்னை விசித்திரமாக பார்ப்பதைக் கூட பொருட்படுத்தாமல் அனைவரையும் பார்த்து சம்பந்தமே இல்லாமல் புன்னகைத்து வைத்தவன் விறுவிறுவென்று தன் அறைக்குச் சென்றான்.

அவன் மழையில் நனைந்து தொப்பலாக வந்ததே அனைவருக்கும் அதிர்ச்சி என்றால்! அவன் சிரித்தது வேறு அனைவருக்கும் இன்னும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.
‘ஏதோ சரியில்ல சம்திங் ராங். பார்ப்போம் இவனோட இந்த மாற்றத்துக்கு காரணம் என்னன்னு தெரியாமலா போயிடும்’ என்று நினைத்த ஆதவ்வின் மனதில் வந்து போனது வாணியின் நினைவுகள் தான்.

‘வாணியும் இப்பதான் வீட்டுக்கு வந்த மாதிரி தெரிஞ்சுது, இவனும் இப்ப தான் வர்றான், அதுவும் ஹேப்பி மூடோட வர்றான். ஒருவேளை அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஏதாவது இருக்குமோ?' என்று நினைத்தவனுக்கு அப்படி இருந்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும் என்ற எண்ணமும் எழுந்தது.‌
அப்படி ஒரு வேளை வாணியின் மேல் தன் அண்ணனுக்கு விருப்பம் வந்து, அவர்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தால் நிச்சயம் அவள் சந்தோஷமாக இருப்பாள் என்றும் எண்ணினான்.

ஏனெனில் அகில் எந்த அளவுக்கு பிடிவாதக்காரனோ அதே அளவிற்கு தன் உடமைகளை பாதுகாக்கத் தெரிந்தவன். அதேபோல் தனக்கு பிடிக்காததை அவன் ஒருபோதும் செய்யமாட்டான், அது அவனுக்கு அறவே பிடிக்காது. தனக்கு உடமைப்பட்டதை தன்னிடம் வைத்துக் கொள்ளும் குணம் உடையவன், எவருக்கும் விட்டுக்கொடுக்காதவன் அப்படி இருக்கும் போது தன் மனைவியை மட்டும் காயப்படுத்திடுவானா, அல்லது மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்திடுவானா என்ற எண்ணமும் தோன்ற அவசரமாக இறைவனிடம் வேண்டுதல் வைத்தான். 'நான் நினைத்தது போல் அவர்களிடையே எதாவது இருந்தால் நான் ரொம்ப சந்தோசமா இருப்பேன். கூடவே உனக்கு மொட்டை போட்டுக்குறேன் முருகா’ என்று வேண்டுதல் வைத்தான். ஆனால் தன்னையுமறியாமல் அவளுக்கு தீராத வேதனையை கொடுப்பதற்கு தானும் ஒரு காரணமாகப் போகின்றோம் என்பதை அவனே நினைத்துப் பார்த்திருக்க மாட்டான்..

சொன்னது போல் மறுநாள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு காலையிலேயே கோயிலுக்கு கிளம்பிட்டாள் வாணி. எப்போதும் சுடிதார் அணிபவள் இன்று தாவணி பாவாடை அணிந்து கொண்டு கோவிலுக்கு வந்தாள்.‌ சாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு, கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு ஒரு ஓரமாக அமர்ந்தாள்.‌

அவள் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தாலும் அவளது விழிகள் அவனைத் தான் தேடிக்கொண்டிருந்தது. நிச்சயம் அவன் இங்கு வருவான் என்று அவள் உள்மனம் எடுத்துரைத்தது. வாயிலையே அவள் பார்த்தவாறு அமர்ந்திருக்க, அவளை உரசினார் போல் யாரோ அமரும் அரவம் உணர்ந்து சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவனை ஒட்டினாற்போல் அமர்ந்திருந்தான் தேவேஷ்வர். அவனை அவ்வளவு நெருக்கத்தில் கண்டதும் விதிர்விதிர்த்து போனவள் வாணி.

சட்டென்று அவள் எழ முயன்ற வேளையில், “என்ன பயமா இருக்கா?” என்று கேட்டான்.

“ இல்லை யாராவது பார்த்தா வீட்டுல சொல்லிடுவாங்க அதான்” என்றவள் மழுப்பலாக பதிலுரைக்க,

“சரி அப்ப ஆத்தங்கரையில மீட் பண்ணுவோமா?” என்றான்.

அவளோ, “இல்ல அது தூரமா இருக்கு. வேணும்னா வீட்டுக்குப் பக்கத்துல இருக்க அந்த அரச மரத்துக்கிட்ட மீட் பண்ணலாமா, எனக்கு உங்ககிட்ட சில விஷயங்களை கேட்டு தெரிஞ்சுக்கணும்” என்றாள் வரவழைத்த தைரியத்துடன்.

அவள் அருகில் அமர்ந்திருந்தவனோ தலையை சற்று முன்னே உடலை நீட்டி தலையை மட்டும் அவள் புறம் சரித்து குறுகுறுவென்று அவளைப் பார்த்தவன்,
“அப்ப இவ்வளவு நாளா நீயும் என்னை மறக்கல நினைச்சுக்கிட்டு தான் இருந்துருக்க இல்லையா?” என்றான் எதையோ அறிந்து கொள்ளும் ஆவலோடு.

சட்டென்று தலை குனிந்து கொண்ட வாணி, “ப்ளீஸ் இங்க எதுவும் பேச வேணாம் நம்மளை யாராவது பார்த்தா பிரச்சனையாயிடும். ஈவினிங் அஞ்சு மணிக்கு அங்க வந்துடுங்க, மறக்காம வந்துருங்க நிறைய விஷயம் நான் உங்கக்கிட்ட பேசணும்” என்று சொன்னவள் ஐயர் வரும் ஓசை கேட்டு சட்டென்று எழுந்து நின்றாள்.

பின் அவனை திரும்பியும் பாராமல் தடதடவென்று படிகளில் இறங்கி கோயிலை விட்டு வெளியேறினாள். செல்லும் அவளையே பார்த்து இருந்தவன்,
“இந்த தாவணி பாவாடையில நீ ரொம்ப அழகா இருக்குற அதை கண்டிப்பா நான் உங்கிட்ட ஈவ்னிங் சொல்லுவேன்” என்று சொன்னவனாய் எழுந்து நின்று, திரும்பி கடவுளை ஒருமுறை வணங்கி விட்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினான்.

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்த வாணியும் தடதடக்கும் தன் நெஞ்சை தண்ணீர் குடித்துச் சமன்படுத்தினாள். அவனது அருகாமையும் பேச்சும் ஒரு வித அவஸ்தையான உணர்வை தோற்றுவிக்க நெஞ்சில் குடி கொண்டிருந்த தாலியை வெளியில் எடுத்து கைகளால் பொத்திக் கொண்டவள் அப்படியே கட்டிலில் சாய்ந்து விட்டாள்.

அதே நேரம்,‌“என்னாச்சும்மா ஏன் காலேஜ்க்கு போகலை” என்று
பூங்கோதை நாச்சியாரின் குரல் கேட்டதும் சட்டென்று எழுந்து அமர்ந்தவள் தாலியை நெஞ்சுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

“சொல்லுங்க பெரியம்மா” என்றிட,

“ஏன்மா காலேஜ் போகலை உடம்புக்கு ஏதும் முடியலையா?”, என்றவாறு அவள் கழுத்து, நெற்றி என கை வைத்து பார்த்தார் அவர்.

“இல்ல பெரியம்மா என்னமோ வயித்த வலிக்கிற மாதிரி இருந்துச்சு அதனால தான் போகலை” என்று இரண்டாவது முறையாக பொய் சொன்னாள்.

“சரி சரி.. நீ காலேஜ் போகலைங்கவும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் வேற ஒன்னும் இல்ல, சரி நீ ரெஸ்ட் எடு” என்று சொல்லி விட்டு அவர் சென்றுவிட்டார்.‌ இவளும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். இப்போதெல்லாம் மீனாட்சியின் கண்ணில் பட வேண்டிய அவசியம் இல்லாததால் அவரிடம் திட்டு வாங்காமல் சற்று நிம்மதியாக இருக்கிறாள் என்று தான் சொல்லவேண்டும். மீனாட்சியும் தேவையில்லாமல் அவளை திட்டுவதில்லை. மாமனார்,மாமியார் அவளுக்கு சப்போர்ட் செய்வதால் எதையாவது பேசி தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கெடுத்து வைக்ககூடாது என்று அமைதி காத்தார். ஆனால் தான் பழி வாங்க வேண்டும் என்று சொல்லி கூட்டி கொண்டு வந்தவள் நன்றாக வாழ்கிறாளே என்ற எண்ணம் மீனாட்சியை உறுத்திக் கொண்டே இருந்தது.‌ தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார் அவளை பழி வாங்குவதற்காக..

தேவேஷ்வரோ வீட்டுக்கு வந்தவன் மீண்டும் குடோனுக்கு சென்று ஒருமுறை நோட்டம் விட்டான். பின்னர் வயல்வெளியில் ஆட்கள் வேலை செய்வதை தள்ளி நின்று கண்காணித்தான். அவனது தந்தையும் வயலில் இறங்கி மற்றவர்களுடன் நாத்து நட்டு கொண்டிருப்பதை ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். தனக்கும் அந்த ஆசை இருந்தாலும் தன்னுடைய லட்சியமே வேறு என்பதால் அமைதி காத்தான்.‌ அவனுக்கு மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஆனால் ஒரு செல்போன் ஷோரூம் வைக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசை அதற்காகத்தான் அங்கேயும் இங்கேயும் நண்பர்களை நாயாக அலைய வைத்து லோனுக்கு அப்ளை செய்திருக்கிறான். தந்தையின் தலையீடின்றி தானே முன்னேறவேண்டும் என்ற சுய கௌரவம் அவனை தந்தையிடம் இது பற்றி பேச கூட அனுமதிக்கவில்லை. இப்போதும் அதுபற்றிய சிந்தனையுடன் தான் அமர்ந்திருந்தான். நேரமாவதை உணர்ந்து வீட்டுக்கு வந்தவன் மதிய உணவை உண்டு விட்டு குட்டி தூக்கம் போட்டான். பின்பு மூன்று மணி அளவில் எழுந்து குளித்து முடித்து விட்டு தன் அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்தவனின் விழிகள் எதேச்சையாக ஜன்னலை நாடியது. இங்கிருந்து பார்த்தால் அந்த மரம் தெரியுமா என்று எண்ணியவாறு ஜன்னலை திறந்தவனுக்கு காட்சியளித்தாள் அவன் தேவதை.‌.

தன்னையும் அறியாமல் அப்படியே நின்றவாறு அவளை ரசித்துப் பார்த்தான். அந்த மரத்தின் அடியில் இருந்த கல்லின் மேல் அமர்ந்திருந்தாள். ஐந்தாறு சிறுவர்கள் சற்று ஆழமான அந்த வாய்க்கால் தண்ணீரில் நீந்தியவாறும், ஒருவர் மீது ஒருவர் நீரினை அள்ளி வீசியடித்துக் கொண்டும், அங்கும் இங்கும் அலைபாய்ந்து மூழ்கியவாறும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வாணியோ கண் இமைக்காமல் அதையே பார்த்திருந்தாள்.

ஒரு சிறுவன் ஒருவன் திடீரென நீருக்குள் மூழ்கி போவதைக் கண்டு விட்டு வேகமாக அவர்களை நோக்கி ஓடினாள். தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்த சிறுவனின் தலை முடியை கொத்தாக பற்றி நீருக்குள் இருந்து வெளியே இழுத்து அவளை தூக்கினாள். பிறகு அவனை சுமந்தவாறு கரை ஏறியேறி வந்தாள். அதற்குள் மற்ற பிள்ளைகள் அனைவரும் பதறி விட்டார்கள். அச்சிறுவனை குப்புற படுக்க‌ வைத்தவள் அவசரமாக அவனது வயிற்றில் கைகளை வைத்து அழுத்தி அவன் குடித்திருந்த தண்ணீரை வெளியேற செய்தவள், கண் விழிக்க வைப்பதற்காக அவன் கன்னத்தில் தட்டினாள்.‌ கை கால்களை சூடு பறக்கத் தேய்த்து விட்டாள். அச்சிறுவனின் இதழோடு தன் இதழைப் பொருத்தி, சுவாசக் காற்றை உட்செலுத்தினாள். அதே போல் இருமுறை செய்தாள். சிறிது நேரத்தில் சிறுவன் கண் விழித்து, இருமியவாறு எழுந்த அமர்ந்ததும் ஆசுவாசமாக பெருமூச்சு விட்டவள், பிள்ளைகள் அனைவரையும் பார்த்து, “இங்க பாருங்க பெரியவங்க துணைக்கியில்லாம இப்படி சின்ன பசங்களா ஒன்னா சேர்ந்து வந்து தண்ணியில விளையாடாதீங்க. குளிக்கணும்னா படித்துறையில உட்கார்ந்து குளிங்க, இனிமே தரையில விளையாடுங்க, தண்ணியில விளையாடாதீங்க.” என்று எச்சரிக்கை செய்து அனைவரையும் அங்கிருந்து அனுப்பினாள். பிறகு ஈரமாக இருந்த தன் பாவாடையை முட்டி வரை தூக்கி இறுக்கமாக பிழிந்து உதறினாள்.

அக்காட்சிகளைக் கண்ட தேவேஷ்வர் நெக்குருகி போனான். இவ்வளவு வெள்ளை மனம் கொண்டவளா தான் நேசிக்கும் பெண் என்று நினைத்தவன் அடுத்த கணம் வீட்டில் இருந்து அவசரமாக கிளம்பி இருந்தான். நல்ல வேளையாக அவன் கிளம்புவதை யாரும் பார்க்கவில்லை. தடதடக்கும் இதயத்துடன் அவள் இருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தான் அவன்.

அவளோ யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தன் தாவணியை உருவி பிழிந்து கொண்டிருக்கும் வேளையில் தான் அவள் அருகில் வந்து நின்றான் தேவேஷ்வர்.

அவனை அங்கு எதிர்பார்த்திராத வாணி பதற்றத்துடன் வேகமாக மரத்திற்கு அந்த பக்கம் சென்று நின்று தன் தாவணியை அணிந்தவள்,‌“சொல்லிட்டு வர மாட்டீங்களா?” என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

“ஏன் நான் எதுக்கு சொல்லிட்டு வரணும்” என்றான் மறுபுறம் திரும்பி நின்று கொண்டு. அவள் அப்படி ஒரு நிலையில் இருப்பாள் என்று எதிர்பார்த்திடாத தேவேஷ்வருக்கு அவனையும் மீறி உடல் உதற ஆரம்பித்தது. தடதடக்கும் இதயத்தையும், உதறிக் கொண்டிருக்கும் கை, கால்களையும் சமன்செய்யும் பொருட்டு அகன்ற அந்த வாய்க்காலில் இறங்கி கை,கால், முகம் கழுவியவன், “ஏதோ பேசணும்னு சொல்லி வர சொன்னியே என்ன பேசணும்?” என்றான்.

இருவருமே தாங்கள் ஒருமையில் பேசிக் கொள்வதைக் கவனிக்கவில்லை. அடிக்கும் காற்றில் லேசாக உணர்ந்திருந்த உடையோடு அவன் முன்பு வந்து நின்றவள் தாவணியின் முனையை எடுத்து தன் தோளை சுற்றி போர்த்திக் கொண்டாள்.

அவனோ அவளை நிமிர்ந்து பார்க்காமல் முதுகைக் காண்பித்து நின்றிருந்தவன்,
“சொல்லு” என்றான்.

“இப்ப உங்க உடம்புக்கு பரவாயில்லையா?” என்று கேட்டாள்.

“பாருடா ஆறு மாசத்துக்கு முன்னாடி அடிபட்டு கிடந்தவனை இப்ப வந்து விசாரிக்கிற?”

“நீங்க யாரு, எந்த ஊருன்னு தெரியாம எப்படி என்னை விசாரிக்க சொல்றீங்க?” என்று அவள் குறைபட்டுக் கொள்ள,

“இல்லனா மட்டும் விசாரிச்சுருப்பியா, என் கூடவே வந்து துணைக்கு இருந்திருப்பியா?” என்று கேட்டான் ஒருவித எதிர்பார்ப்புடன். அவளது பதில்,
‘நான் பாக்காம வேற யாரு பார்ப்பாங்களாம்’ என்று வரவேண்டுமென அவன் உள்ளம் நினைத்தது.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதி காத்தாள் வாணி.‌ “எனக்கு எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லி தான் பழக்கம், மறைச்சு பேசி பழக்கம் கிடையாது. அதனால தான் சொல்றது உண்மைதான் பொய்யில்லை. அன்னைக்கு உங்களுக்கு அடிபட்டதும் விட்டுட்டு போக எனக்கு மனசு இல்ல ஆனா அந்த ஐயர் தான் என்னை இழுத்துட்டு போயிட்டாரு. அப்பவும் மறைஞ்சி நின்னு பார்த்தேன், அதுக்கப்புறம் அங்கிருந்து எல்லாரும் போகணும் கலவரம் பெருசாகுதுன்னு சொல்லி என்னை வெளிய இழுத்துக்கிட்டு வந்துட்டாரு இல்லன்னா நான் உங்க கூடவே வந்துருப்பேன். எந்த பிரச்சனை வந்தாலும் உங்களோடவே இருந்து அதை பேஸ் பண்ணியிருப்பேன். ஆமா நீங்க எதுக்கு இப்ப இப்படி கேள்வி கேட்குறீங்க, நான் பாக்காம வேற யாரு பார்ப்பா ஆயிரம் தான் இருந்தாலும்..“ என்று ஏதோ சொல்ல வந்தவள் சட்டென்று வார்த்தைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது போல் அமைதியானாள்.

அவள் சொல்ல வந்ததன் அர்த்தம் புரிபட சட்டென்று அவள் புறம் திரும்பியவன், நெருங்கி நின்று அவள் கரங்களை தன் கரங்களுக்குள் புதைத்து வைத்தவாறு, “கட்டுன பொண்டாட்டி பார்த்துக்காம வேற யாரு பார்த்துக்குவாங்கன்னு தானே சொல்ல வந்த” என்று குதூகலத்துடன் கேட்டான்.

அவளோ தலைகுனிந்து நின்றிருந்தாள், அவனை விலக்கவும் இல்லை, அவனை விட்டு விலகி நிற்கவும் இல்லை, அப்படியே சிலையென சமைந்து நின்றிருந்தாள்.

அவனும், “நீ சொல்லாட்டியும் அதோட அர்த்தம் எனக்கு புரிஞ்சுருச்சு. அன்னைக்கு என் கையிலிருந்து தவறி உன் கழுத்துல விழுந்த தாலியை நீ கழட்டி தூக்கி எறிஞ்சுருப்பியோன்னு யோசிச்சிக்கிட்டே வந்தேன்.இப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா!” என்று கேட்டவனது குரலே மகிழ்வாக ஒலித்தது.

அதற்கு அவள் பதில் பேசும் முன்பே யாரோ பேசும் குரல் கேட்டதும் சட்டென்று அவளை விட்டு விலகி நின்றவன் மரத்திற்கு அந்த பக்கம் எட்டிப் பார்த்தான் ஐந்து இளைஞர்கள் குளிப்பதற்காக வாய்க்காலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். தன்னுடன் இவளைப் பார்த்தால் இவளைத்தான் யாராவது ஏதாவது சொல்வார்கள் என்று நினைத்தவன் சட்டென்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு மரத்தின் பின்னே ஒண்டினான். அவர்கள் முன்னேற முன்னேற இவனும் மரத்தை சுற்றி வர ஆரம்பித்தான்.

அவர்கள் வாய்க்கால் இருக்கும் பக்கம் சென்று வாய்க்காலில் இறங்கிய மறுகணம் மரத்துக்கு அந்தப்பக்கம், அவர்களுக்கு தெரியாமல் மறைவாக இருந்த இடத்தில் நின்றவன், “இதுக்கு மேல இங்கிருக்கிறது ஆபத்துன்னு நினைக்கிறேன், நீ வீட்டுக்குப் போ எதிர்த்த வீட்டில் தானே இருக்க எப்ப வேணாலும் பாத்துக்கலாம்.‌அதே மாதிரி இதுக்கு மேல நீ என் பொறுப்பு, எனக்கு உரிமையானவ, அதனால ஏதாவது பிரச்சனைனா நீ என்கிட்ட தான் வந்து சொல்லணும் சரியா.‌ ஆமா எதுத்த வீட்ல இருக்குறியே, நீ யாரு, உனக்கு அவங்க எந்த விதத்துல சொந்தம்” என்று கேட்டான்.

அதற்கு அவள் பதில் பேசும் முன்பே, “டேய் இங்கே வேற யாரோ பேசுற மாதிரி குரல் கேட்குதுடா” என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் சொன்னதும் சுதாரித்தான் தேவேஷ்வர்.

“இல்லை இன்னொரு நாள் இதுக்கான பதிலைக் கேட்டுக்குறேன் நீ வீட்டுக்கு போ” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான். ஆனால் அப்படி ஒரு நாள் தங்கள் வாழ்வில் இனி வராது என்பதை அவர்கள் இருவருமே அறிந்திருக்கவில்லை.

- தேடல் தொடரும்..
 
உறவின் தேடல் -19

அங்கிருந்து செல்லும் போது திரும்பி திரும்பி அவனைப் பார்த்துக் கொண்டே சென்றாள் வாணி. ஏனோ இப்பொழுது அவனிடம் தன் மனதில் இருப்பதை சொல்லாமல் சென்றால் மீண்டும் ஒரு வாய்ப்பு இதுபோல் அமையாதோ, தன் விருப்பத்தை சொல்ல முடியாமலே போய்விடுமோ என்ற பயம் அவள் நெஞ்சை கவ்வி இழுக்க, பாதி தூரம் சென்றவள் பின்னால் திரும்பி ஏக்கம் சுமந்த விழிகளுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனோ அதைக் கண்டு இன்னும் உருகித்தான் போனான்.‌ ‘கடவுளே இவனுங்க மட்டும் வராம இருந்திருந்தா இப்பவே இவளை என் கூட கூட்டிட்டு போற அளவுக்கு எல்லாத்தையும் பேசி முடிச்சுருந்துருப்பேனே' என்று மனதில் நினைத்து வருத்தப் பட்டான் தேவேஷ்வர்.

அவளோ பின்னால் திரும்பி அவனைப் பார்த்து ஏங்கியவள் அவன் பக்கம் ஓரடி எடுத்து வைக்கையில், ‘வராதே போ வீட்டுக்கு போ’, என்பது போல் சைகை செய்தான் தேவேஷ்வர். வேறு வழியில்லாமல் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டு அவளும் வீடு வந்து சேர்ந்தாள்.‌ ஆனால் இவர்கள் பேசியதை இரு விழிகள் பார்த்துக் கொண்டிருந்ததையோ, அவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட பிரிவை உண்டாக்கும் அளவிற்கு ஆத்திரத்தோடு அது அங்கிருந்து நகர்ந்ததையோ அவர்கள் கவனிக்கவில்லை.

நேராகத் தன் வீட்டிற்கு வந்தவள் தன் அறைக்குள் அடைந்து கொண்டாள் அவ்வளவு நேரம் அவனிடம் பேசியது அவளுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையையும், தனக்கென்று உறவாய் ஓர் உயிர் இவ்வுலகில் உள்ளது என்ற உணர்வையும் தோற்றுவிக்க கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள்.

தேவேஷ்வரோ ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன்,
“எனக்குன்னே எங்க இருந்து தான் வர்றானுங்களோ தெரியல. வந்தது தான் வந்தானுக ஒரு கால்மணி நேரம் கழிச்சு வந்திருக்க கூடாது” என்று புலம்பிக்கொண்டு அவனும் வீடு வந்து சேர்ந்தான். ஆனால் அவன் வீட்டுக்கு வரும் போது ரயில் என்ஜினுக்கு கரி அள்ளி போட்டது போல் புஸு புஸு வென்று மூச்சு விட்டுக்கொண்டு கோபத்தோடு அமர்ந்திருந்தார்.
சிவசுப்பிரமணியம்.

தந்தையின் அந்த நிலை தேவேஷ்வருக்கு நெஞ்சில் கிலியை பரப்பியது, இருந்தும் வரவழைத்து தைரியத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவன் தன் அறைக்கு செல்ல இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டான், “எங்கலே போயிட்டு வர்றவியன்?” என்று கேட்டார் எடுத்த எடுப்பிலேயே.

எப்போதும் தாயை முன்னிறுத்தி தன்னிடம் பேசுவார் இன்று நேரடியாக பேசியது அவனுக்கு உறுத்தலைக் கொடுக்க,
“எங்கேயும் போயிட்டு வரலப்பா சும்மா அப்படியே காத்தாட” என்றவன் வார்த்தைகளை முழுதாக முடிக்கும் முன்பே இடை‌மறித்தது அவரது குரல்.

“உனக்கு ஏதாவது தேவைன்னா என்கிட்ட கேளு நான் வாங்கித் தருவேன், நீயா எதையாவது தேடிப்போயி மாட்டிக்கிட்டு கடைசில பிரச்சினைய இழுத்து வைக்காதலே. இப்ப தான் சிநேகிதப்பய விரும்பி தொலைச்சான்னு கல்யாணம் பண்ணி வச்சு கத்தி குத்து வாங்கிட்டு வந்து உசுரு பொழச்சுருக்க, மறுபடியும் அதே மாதிரி எதையும் செஞ்சு வைக்காதலே.‌ மறுபடியும் சொல்லுறேன் எதுத்த வீட்டுல இருக்குற பொண்ணு பின்னாடி சுத்துற மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டு இருந்த, புள்ளை போனாலும் போயிட்டு போகுதுன்னு உன்னை உயிரோட எரிச்சுபுடுவேன்‌ ஞாபகம் வச்சுக்கிடு” என்றார் கண்டிப்பு குரலில்.

அவனோ தந்தைக்கு இது எப்படி தெரிந்தது என்ற குழப்பத்துடனும், கடவுளே எப்படியாவது இதை சமாளிச்சாகணுமே என்ற பயத்துடனும் வாய்க்கு வந்ததை உளற ஆரம்பித்தான். “என்னப்பா என்னென்னமோ சொல்லுறீங்க.‌ எனக்கு ஒன்னும் புரியலையே?” என்றான்.

“நீ என்ன தான் மறைக்கணும்னு நெனச்சாலும் அது உன்னால முடியாதுல. எதுத்த‌ வீட்டு ஆளுகளுக்கும், நமக்கும் என்னைக்கும் ஆகவே ஆகாது. அதுமட்டுமில்லாம பேசுனா கூட என்னன்னா என்னங்குறதோட நிறுத்திக்கிற அளவுக்குத்தேன் பேச்சு வார்த்தையே இருக்கும். அவுக எல்லாம் புதுசா பணக்காரனானவுக கொஞ்சம் திமிராத்தேன் இருக்காக.

‌அந்த வீட்ல அந்த பெரிய மனுஷக ரெண்டு பேரைத் தவிர அத்தனை பேரோட முகத்துலையும் சிரிப்புங்குறதை பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட வீட்டுக்கு ஒரு புள்ள வந்துருக்கான்னா அவளும் அவுகளை மாதிரித்தானே இருப்பா.‌ அந்த புள்ளைக்கிட்ட வாய்க்காகரையில நீ பேசிட்டு இருந்ததை பார்த்துட்டு வந்து நம்ம மாரிமுத்துதேன் என்கிட்ட சொன்னான். இதுக்கு மேல இதுபோல ஏதாவது கேள்விப்பட்டேன் நீயும் உசுரோட இருக்க மாட்ட,‌ அந்த‌ புள்ளையும் உசுரோட இருக்காது ஞாபகம் வச்சுக்கோ” என்றார்.

‘அடக்கடவுளே அதுக்குள்ள பார்த்துட்டு வந்து பத்த வந்துட்டானுங்களா?’ என்று எண்ணி பெருமூச்சை விட்டவன் “அப்பா அது வேற விஷயம்பா. ஒரு பையன் ஆத்துல விழுந்துட்டான், அந்த பொண்ணு அவனுக்கு ஹெல்ப் பண்ணுனா, அப்ப நானும் எதேச்சையா அதை பார்த்தேன்,‌ அதான் அவங்க செயலை பாராட்டுறது போல இரண்டு வார்த்தை பேசுனேன் வேற எதுவும் இல்லை,‌ நீங்களா எதையாவது நெனைச்சுக்கிட்டு மனசை போட்டு குழப்பிக்காதீங்க. அது மட்டும் இல்லாம நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னா அந்த பொண்ணு எப்படிப்பட்ட பொண்ணா இருக்கணும், அவங்க குடும்பம் எப்படிப்பட்ட குடும்பமா இருக்கணும்னு எனக்கு தெரியாதா. அப்படி எல்லாம் உங்களை, நான் கேவலமான குடும்பத்துக்கு சம்மந்தியாக விட்டுடுவேனா, நீங்களா எதையாவது நெனச்சுக்கிட்டு யாரோ ஏதோ சொன்னாங்கன்னா எம்மேல கோபப்படாதீங்க சரியா!” என்று சொன்னவன் விட்டால் போதும் என்று தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

ஆனால் ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு அந்த மரத்தையே பார்த்திருந்தான். சற்று முன்பு இருவரும் ஒட்டி உரசி கிட்டத்தட்ட அணைத்தாற் போல் நின்றது நினைத்து சிலாகித்துப் போனான்.‌ அந்த மரம் அவனது காதலுக்கு நினைவுச் சின்னமாகிப் போனது. அதிலும் அவர்களிடமிருந்து அவளையும் தன்னையும் காப்பாற்றுகிறேன் என்று அவளை இழுத்து கொண்டு மரத்தின் பின்னே நிற்கையில்,‌ கிட்டத்தட்ட இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி நின்ற இருந்த காட்சியும், தெரியாமல் அவளது தேகத்தில் பட்டும் படாமலும் உரசி சென்ற கைகளினால் உணர்ந்த ஸ்பரிசமும் மீண்டும் கண்முன் வந்து அவனை இம்சித்தது..

‘உன்கிட்ட சம்மதம் கேட்குறனோ இல்லையோ மொத என்னோட அப்பா அம்மாட்ட சம்மதம் கேட்டு அவங்களை சரிகட்டணும் போலையே. உன்னை கைபிடிக்கிறதுக்குள்ள எனக்கு என்னென்ன பிரச்சனையெல்லாம் வரப் போகுதோ தெரியல’ என்று நினைத்தவன் அடுத்து அவளை எங்கு சந்திக்கலாம், எப்படி பேசலாம் என்று முடிவெடுத்தான்.

ஆனால் மகனின் போக்கு சிவசுப்ரமணியத்துக்கு பிடிக்கவில்லை.‌ இவனை இப்படியே விட்டால் சரியாக வராது என்றெண்ணியவர் மறுநாளே அவனை மேற்படிப்பு படிப்பதற்காக வெளியூருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தார். அவன் ஒரேயடியாக அதை‌ மறுத்துப் பார்த்தான், ஆனாலும் அவர் பிடிவாதமாக நின்றார்.

இவனும், ‘நான் போகமுடியாது’ என்று சொல்லி அடம்பிடித்தான். அவனது பிடிவாதம் சிவசுப்பிரமணியத்தை இன்னும் அழுத்தமான முடிவெடுக்க வைத்தது.‌ அவனின் முன்பு மண்ணெண்ணெய் கேனோடு நின்றார்.‌

“இப்ப நீ படிக்க வெளியூருக்கு போகலைன்னா நான் இந்த நிமிஷமே கொளுத்திக்கிட்டு செத்துருவேன், என்ன சொல்லுற, போறியா?” என்றார்.

அப்போதும் அசையாமல் சிலையென நின்றிருந்தான். அதைக்கண்டவரின் ஆத்திரம் அதிகரிக்க, மடமடவென தன் மீது மண்ணெண்ணெய்யை ஊத்திக்கொண்டவர், தீக்குச்சியை உரசிட முயல, ஓடிச்சென்று அவரிடமிருந்து அதை பறித்து வீசியவன் வேறு வழியில்லாமல் படிக்க செல்ல ஒப்புக்கொண்டான். ஆனால்,
“அதான் வெளியூருக்கு போறேன்னு சொல்லிட்டன்ல, கடைசியா ஒரே ஒரு தடவை கோயிலுக்கு போய்ட்டு வர்றேன்”, என்று கேட்க, வேண்டா வெறுப்பாக தலையசைத்து வைத்தார் சிவசுப்பிரமணியம்.

பெரும் மனபாரத்துடன் கோயிலுக்கு வந்தவன், ‘கடவுளே அவளை எப்படியாவது பார்த்துடணும்' என்ற வேண்டுதலோடு கோயிலிலேயே காத்திருந்தான். இங்கு பேருந்துக்கு நேரமானதால் சிவசுப்ரமணியமே அவனைத்தேடி கோயிலுக்கு வந்து விட்டார். கோவில் தூணில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்தவனைக் காண்கையில் அவருக்குமே உள்ளம் உருகியது தான்.

ஆனால் இப்போது தான் உயிர் பிழைத்து வந்து இருக்கிறான், மறுபடியும் அப்பெண்ணின் மூலமாக தேவையற்ற பிரச்சினைகளை கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் ஒரு பக்கம், பத்தாக்குறைக்கு அந்தப் பெண் அந்த வீட்டின் மருமகள் மீனாட்சியின் அண்ணன் மகள், கிட்டத்தட்ட அவ்வீட்டின் மருமகள் போன்றவள், ஒரு வேளை மீனாட்சிக்கு அப்பெண்ணை தன் மகனுக்கு கட்டி வைக்கும் எண்ணம் இருந்து, தன் மகன் அதற்கு குறுக்கே நின்றால் அவர்கள் ஏதாவது செய்துவிடுவார்களோ, அதனால் மீண்டும் தன் மகன் மரணப் படுக்கையில் விழுந்திடுவானோ என்ற பயமும் அவரை அரிக்கத் துவங்கியது.

அதனால் தான் அவசர அவசரமாகத் தன் சிறிய மகனின் உதவியோடு, வெளியூரில் பெரிய மகன் படிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அனுப்பி வைக்க முடிவெடுத்தார். சரியாக ஐந்தறைக்கு வரும் பேருந்தில் தான் அவன் கிளம்புவதாக முடிவாகி இருந்தது. மணி இப்போதே ஐந்தைக் கடந்திருந்தது.‌ சிரமப்பட்டு மகனின் அருகில் சென்றவர்,
அவன் தோள்பட்டையில் கரம் பதித்து,‌“நேரமாகுது எழுந்திரிச்சு வாலே” என்றழைத்தார்.

அதன் பிறகு மறுப்பேதும் சொன்னால் தன் தந்தை இங்கேயே கத்தி மானத்தை வாங்கி விடுவார் என்று நினைத்தவன் திரும்பி கடவுளை ஏறிட்டுப் பார்த்தான்.‌ “தெரிஞ்சோ தெரியாமலோ எங்களை ஒரு பந்தத்துக்குள்ள நீ தான் இணைச்சு வெச்ச, எனக்கு அவள பாக்கணும், பார்த்தே ஆகணும். அவளை பார்க்காம போயிட்டா கண்டிப்பா என்னால நிம்மதியா இருக்க முடியாது, இப்ப எல்லாமே உன் கையில தான் இருக்கு’, என்று மனதில் வேண்டிக்கொண்டு தந்தையுடன் சென்றான்.

சரியாக கரூர் செல்வதற்கு பேருந்து நிலையத்தில் தேவேஷ்வர் நின்றிருக்க, அவனை வழி அனுப்பி வைப்பதற்காக ஒருபுறம் அவனது தாய், தந்தை நின்றிருக்க, மறுபுறம் அவனது தம்பியும், தங்கையும் நின்றிருந்தார்கள். அவனது பஸ் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்களுக்கு மேலாக இருந்த வேளையில் தான் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பி மலர்,வாணி இருவரும் அந்த பேருந்தில் இருந்து இறங்கினார்கள்.

இறங்கிய வாணியின் பார்வை எதேச்சையாக தேவேஷ்வர் நின்றிருந்த பக்கம் சென்றது. அவனைக் கண்டதும் மலர்ந்த அவளது முகம், அவன் கையிலிருந்த பை மற்றும் அவன் நின்றிருந்த தோரணையைக் கண்டு சுருங்கி வாடியது. எங்கோ வெளியூருக்கு கிளம்புவதை உறுதிசெய்வதைப் போல் அவன் முகம் வேதனையை பிரதிபலித்தது. அவனிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியாததை எண்ணி அவள் உள்ளம் தவித்தது.

ஆனால் மலர்க்கு அது போல் இல்லை நேராக அவன் அருகே சென்றவள்,“என்ன அண்ணா ஊருக்கு போறீங்களா?” என்று கேட்டாள்.

அவ்வளவு நேரமும் அவனின் பார்வை யார் இருக்கிறார்கள் என்பதை கூட பொருட்படுத்தாமல் வாணியைத்தான் மேய்ந்து கொண்டிருந்தது. மலரின் குரலில் அவள் பக்கம் பார்வையை பதித்தவன், “மேற்படிப்புக்காக வெளியூர் போறேன் சீக்கிரம் படிப்பை முடிச்சுட்டு வந்துடுவேன்மா. உடம்ப பாத்துக்கோ, தினமும் காலேஜ் போகணும் சரியா! நல்லா படிக்கணும், படிப்பு தான் நம்மை உயர்த்தி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரும், அதனால நல்லா படிக்கணும் சரியா.லேசியா இருந்துக்கிட்டு படிப்பை மட்டும் விட்டுடாதீங்க.‌ அதே மாதிரி நான் போறது ஒன் இயர் கோர்ஸ் தான்.‌ எனக்கு புடிச்சதை தான் நான் படிக்க போறேன் அதேமாதிரி தான் நீங்களும் பிடிச்சதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது. ஒன் இயர் முடிஞ்சதும் இங்க தான் வருவேன், உடம்ப பாத்துக்கோங்க நல்லா படிங்க. எதாவது ஒன்னுன்னா அப்பாக்கிட்ட நம்பர் வாங்கி எனக்கு போன் கூட பண்ணுங்க”, என்று சொன்னவன் வாணியை திரும்பிப் பார்த்து விழியசைவில் ‘போய் வரவா?’ என்று கேட்க,

அவளோ கண்களில் குளம் கட்டிய கண்ணீரோடு கண்களை சிமிட்டி, ‘போயிட்டு வாங்க’ என்பது போல் சைகை செய்தாள். அவளையும் அறியாமல் அவள் விழிகள் கண்ணீரை உதித்தது. அதற்குள் பேருந்து வரவும் அனைவரின் கவனமும் அதன் பக்கம் திரும்ப, வாணியை நேருக்கு நேராக பார்த்தவன்,
“போயிட்டு வரேன் உடம்பை பத்திரமா பாத்துக்கோ, யார் என்ன சொன்னாலும் சரி நல்லா படிக்கணும்.‌ உன்னை என்னைக்குமே நான் மறக்கமாட்டேன், எனக்காக காத்திரு கண்டிப்பா நான் வருவேன் சரியா!” என்று இதழசைவில் சொல்லி வைக்க, அது அவளது செவிகளுக்கு கேட்காவிட்டாலும் அவளால் அவன் சொன்னதை புரிந்து கொள்ள முடிந்தது.‌ சரியென தலையசைத்தாள்.

பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டான் தேவேஷ்வர். அவனது பெற்றோர்கள் பேருந்து அங்கிருந்து நகரும் வரை நின்றிருக்க தான் முடிவு செய்தார்கள் ஆனால் விக்கியோ வாங்க என்று தாய் தந்தையை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். தன் அண்ணனின் பார்வை இதுவரை எந்த பெண்ணின் மீதும் தவறாக பதிந்தது அவன் பார்த்ததில்லை. ஆனால் தற்போது ஒரு பெண்ணை அன்போடு பார்க்கிறான் என்றால் அண்ணனின் மனது என்ன என்பதை அவனுக்கு புரிந்து போனது. அவன் பெற்றோர்கள் அங்கிருந்து நகரும் வேளையில் பேருந்தும் அங்கிருந்து நகர்ந்தது.

எதைப் பற்றியும் யோசிக்காமல், மலரைப் பற்றி கூட யோசிக்காத தேவேஷ்வர், “மதுரா இங்க என்னை பாரும்மா, நீ இப்படி அழுதா என்னால எப்படி நிம்மதியா போக முடியும். கொஞ்சமாவது சிரிச்சுக்கிட்டே வழியனுப்பலாம்ல. உடம்ப பாத்துக்க, நேரத்துக்கு சாப்டு, நான் சீக்கிரம் வந்திடுறேன் சரியா, தைரியமா இருக்கணும் எதுக்கும் பயப்படக்கூடாது” என்று சொல்ல, அவள் தலை சரி என்பது போல அசைந்தது.
மலரோ அதிர்ச்சியுடன் அவர்கள் இருவரையும் பார்த்திருக்க, அதை உணர்ந்தவன் பேருந்து புறப்படுவதை கண்டு விட்டு,
“மலர் உன்கிட்ட நான் அடுத்த தடவ வரும்போது எங்களைப் பத்தி சொல்கிறேன், மதுரா கிட்ட எதையும் கேட்காத. இவ என் சொத்து, என் உசுரு அவளை பத்திரமா பார்த்துக்கமா” என்று சொல்ல மலரின் தலையும் சரி என்பது போல அசைந்தது.
பேருந்து அங்கிருந்து நகர்ந்து, கண்ணை விட்டு மறையும் வரை நின்றிருந்தவர்கள், அதன் பிறகே அங்கிருந்து சென்றார்கள்.

அதன்பிறகு மலர் வாணியிடம் எதுவும் கேட்கவில்லை. ‘அதான் தேவ் அண்ணாவே வந்து சொல்லுறேன்னு சொல்லியிருக்காரே அப்புறம் நாம எதுக்கு வாணியை கேட்கணும், அவருக்கிட்டையே கேட்டு தெரிஞ்சுக்குவோம்’ என்று நினைத்தவளாய் அதை அப்படியே விட்டு விட்டாள். அதன் பிறகு அவள் அதைப்பற்றி வாணியிடம் எதுவும் கேட்கவில்லை. வாணியும் சொல்ல முற்படவில்லை. அதேபோல் அனைவருக்கும் எந்தப் பிரச்சினையுமின்றி தான் மற்ற நாட்களெல்லாம் சென்றது.‌

செல்போன் கடை வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டதால் அது தொடர்பான படிப்பை எடுத்துப் படித்தான் தேவேஷ்வர். அவனுக்கு அங்கிருக்கும் ஒவ்வொரு நாளும் எப்போடா ஊருக்கு போலாம் என்று தான் தோன்றியது. விடுமுறை வருகையில் எல்லாம் ஊருக்கு வருகிறேன் என்று சொன்னான். அப்போதெல்லாம் அவன் தந்தை வரவேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்டார். அதை மீறி வந்தால் நான் கொளுத்திக் கொள்வேன் என்று அவர் மிரட்டியதால் வேறு வழியில்லாமல் பல்லை கடித்துக்கொண்டு நாட்களை ஓட்டினான்,‌‌ அவள் நினைவுகளால் தான் அவனது நாட்கள் அழகாக நகர்ந்தது. மேலும் ஆறுமாதம் கடகடவென ஓடிச்சென்றிருந்தது. ஆதவ்வோ இளங்கலை கல்லூரி படிப்பை முடித்து விட்டு அங்கேயே மேற்படிப்பை துவங்கினான்.‌ அதேபோல் மலர், வாணி இருவரும் தங்கள் முதல் வருட கல்லூரி படிப்பை நல்ல படியாக முடித்து இரண்டாம் வருடத்தில் கால் பதித்தனர்.

இப்போது வாணி கோயிலுக்கு செல்வாள், அவனுக்காக வேண்டிக்கொள்வாள்.‌ அவனது வருகையை வெகுவாக எதிர்பார்த்தாள். ஆனாலும் படிப்பிலும் கவனத்தை செலுத்தினாள்.

மலரும் கூட வாணியின் நிலையில் தான் இருந்தாள். மலரின் நினைவில் அகிலும் வந்து விட்டு செல்வான். அன்றைய நாளுக்கு பிறகு அவன் அவளை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவள் தான் அவன் வரும் வழியெல்லாம் அவனை எதிர்பார்க்கத் தொடங்கி இருந்தாள்.

பொதுவாகவே பெண்களுக்கு ஒருவர் தன்னை அழகாக இருக்கிறார் என்று சொல்லும் வரை தங்களது அழகு கண்ணிலும் தெரியாது கருத்திலும் படாது. ஆனால் ஒருவர் அழகாக இருக்கிறாய் என்று சொல்லிவிட்டால் ஓயாது கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்ப்பார்கள். தங்களை அழகுபடுத்திக் கொள்ள முயல்வார்கள். அதே போல் தான் உன்னை பிடித்திருக்கிறது என்று அவன் சொன்னதில் இருந்து அவன் மேல் ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றியிருக்க அவனை எதிர்பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.

வாணியை சாக்காக வைத்துக் கொண்டு அவர்கள் வீட்டின் முன்னால் நின்று எப்படியாவது அவனைப் பார்த்து விடுவாள். ஆனால் அதை அவன் அறியாமல், மறைந்திருந்து செய்தாள். அதன் பிறகு அகிலும் அவளை தொந்தரவு செய்யவில்லை.‌ பற்றாக்குறைக்கு அவனது கவனக்குறைவால் ஏற்பட்ட குளறுபடியால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுருக்க, அதை நிவர்த்தி செய்வதற்கும், ஈடு கட்டுவதற்கும் உழைப்பதிலேயே அவனது நாட்கள் யாவும் கடந்து சென்றன.

எல்லாம் நன்றாகத்தான் சென்றது மீனாட்சியின் ஒரு செயல் அனைவரது வாழ்வையும் புரட்டிப் போட காத்திருந்தது.
தேவேஷ்வர், வாணி இருவரும் தங்கள் நேசத்தை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்ளவில்லை. அதேபோல் அதில் தன் நேசத்தை சொன்னபோதும் மலரிடம் அவள் விருப்பத்தை கேட்கவில்லை மலரும் அவன் மீது உண்டான இருப்பதை உணர்ந்த போதும் அதை அவனிடம் சொல்லவில்லை..

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அவர்களது அந்தஸ்து, இரண்டாவது அவனது தாய் மீனாட்சி. தன்னைக் கண்டால் துரத்தும் அவர்கள் எப்படி தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணமும், சொந்த அண்ணன் மகளையே வேலைக்காரி போல் நடத்துபவர் தன்னை எப்படியெல்லாம் நடத்துவாறோ என்ற எண்ணமும் அவளை தள்ளி நிற்க வைத்தது. ஆனால் தொலைவில் நின்று அவனை ரசிப்பதையும், அவன் மீதான நேசத்தை அவள் ஒருபோதும் குறைத்துக் கொள்ளவில்லை. அதிலும் நைசாக அந்த வீட்டில் இருப்பவர்களைப் பற்றியும் வாணியிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். தாய் சொல்லை தட்டாத பிள்ளை, தன்னிடம் மட்டும் சிடுசிடுவென பேசுபவன், தன் குடும்பத்தாரிடம் அன்பு செலுத்துபவன், இரக்க குணம் கொண்டவன் என்றெல்லாம் அகிலைப் பற்றி சொல்லி இருக்கிறாள்.

அதுமட்டுமின்றி தன் அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உண்டான படிப்பு செலவுக்கும், திருமண செலவிற்கும் உண்டான பணத்தை முழுதாக கொடுத்து விடுவான். கூடவே அவர்கள் வயதாகி வேலை செய்ய முடியாத நிலையில் வேலையை விட்டு நிற்கும் போது அவர்களுக்கு மாதாந்திரமாக ஒரு தொகையை ஒதுக்கி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்து இருப்பதையும் எப்படியோ பாட்டியின் மூலமாகவோ அல்லது ஆதவ்வின் மூலமாகவோ தெரிந்து வைத்திருந்தாள் வாணி. அதை பேச்சு வாக்கில் மலரிடம் சொல்லி விட, இன்னும் இன்னுமே அகிலை மலருக்கு பிடித்து போனது..
தாய்க்கு பிடிக்காததால் தான் வாணியை வெறுக்கிறான் என்பதையும் அவள் வெகு விரைவிலேயே உணர்ந்து கொண்டாள்.

மேலும் இரு மாதம் கடகடவென கடந்து சென்றிருந்தது. இரண்டாம் வருடம் என்பதால் விளையாட்டு தனத்தை விடுத்து படிப்பில் கவனத்தை பதித்தவாறு தான் பெண்கள் இருவரும் மீதமிருந்த நாட்களை கடந்தார்கள்.

சரியாக அன்று பெண்கள் இருவருக்கும் இன்டர்ணல் எக்ஸாம் நடந்தது. எக்ஸாமை முடித்து விட்டு சற்று தாமதமாகவே இருவரும் அவரவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வாணியோ வீட்டிற்குள் நுழைந்த போது வீடு முழுக்க ஆட்கள் இருப்பதை கண்டு குழப்பமடைந்தாள். ஆனால் அவளால் கேள்வி கேட்க முடியவில்லை. வயிற்று வலி வேறு அவளை பாடாய் படுத்த தயக்கத்துடன் அவர்களை கடந்து செல்ல இருந்த நேரத்தில் அவள் அருகே வந்து நின்ற மீனாட்சி,
“எல்லாரும் பெண்ணை பார்த்துக்கோங்க இவ தான் என் மருமக பேரு மதுர வாணி” என்று அனைவருக்கும் அறிமுகப் படுத்த வாணியை அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

ஆனால் ஆதி விநாயகம் பூங்கோதை நாச்சியார்
சுந்தரேசன், கதிரேசன், ஆனந்தவள்ளி, புகழேந்தி , ஆதவ், வாணி அனைவரும் அதிர்ச்சியாகத்தான் பார்த்தனர்.‌ மீனாட்சி அதன் பிறகு சிறிது நேரம் கூட அவளை அங்கே நிற்க விடாமல் தன்னறைக்கு இழுத்து சென்றவர் தானே அவளுக்கு முகம் கழுவி விட்டு அவள் உடையை மாற்றச் சொல்லி ஒரு புடவை கொடுத்தார். அத்தையின் முகத்தை பார்த்தவாறே உடையை மாற்றிய வாணி எதுவும் பேசாமல் ஸ்டூலில் அமர, தானே அவளுக்கு தலை வாரி விட்டு பின்னலிட்ட மீனாட்சியும் எதுவும் பேசவில்லை.

ஏதோ பலி கொடுப்பதற்கு முன்பு ஆட்டை அலங்கரிப்பது போல் அலங்கரிக்கிறார்களே என்று மட்டும் நினைத்துக் கொண்டாள் வாணி. அலங்காரம் முடிந்ததும் அவளை கீழே அழைத்து வர, ஆதவ் கூட ஒரு நிமிடம் கண்ணை சிமிட்ட மறந்து வாணியைப் பார்த்திருந்தான். செய்து வைத்த கோயில் சிலை போல் அம்சமாக இருந்தாள் வாணி.

அவளை அழைத்து வந்து ஹாலில் இருந்த சோபாவில் அமர வைக்க, அதே நேரம் தன் அறையிலிருந்து தயாராகிக் கீழே இறங்கி வந்தான் அகில். அவன் முகத்தில் துளியும் சிரிப்பில்லை, இறுக்கமாகக் காணப்பட்டான்.‌ அவனும் சற்று இடைவெளி விட்டு வாணியின் அருகில் அமர ஐயர் லக்ன பத்திரிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். லக்ன பத்திரிகை வாசித்து முடித்ததும், இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று ஐயர் சொல்ல விதிர்விதிர்த்து நிமிர்ந்து பார்த்தாள் வாணி. அவள் கண்களிலில் தேங்கியிருந்த கண்ணீர் இப்ப விழவா அப்ப விழவா என்று தொடுத்துக் கொண்டிருந்தது. அதை அங்கிருந்த யாரும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.‌ அகிலோ இறுகிப்போன முக பாவனையில் இருந்தவன் சட்டென்று புன்னகை பூத்த முகத்திற்கு மாறினான். ஏனெனில் சில நிமிடங்களுக்கு முன்பு தான் அவன் அருகில் வந்து ஏதோ சொல்லிவிட்டுச் சென்றார் மீனாட்சி.

அவனோ எந்தவித தயக்கமுமின்றி வாணியின் விரலில் மோதிரத்தை போட்டு விட, கிட்டத்தட்ட உயிரற்ற ஜடம் போல் நின்றிருந்த வாணியின் கையைப் பற்றி மோதிரத்தை வைத்த மீனாட்சி, “ம்ம் போட்டு விடுமா” என்று சொல்லி வற்புறுத்த, ஆதி விநாயகம், பூங்கோதை நாச்சியார், ஆதவ் மூவரையும் இயலாமையோடு பார்த்தவாறு அவன் விரலில் மோதிரத்தை போட்டு விட்டாள் மதுர வாணி. நிச்சயம் முடிந்ததும் வந்திருந்த அனைவரும் உணவுண்டு விட்டு கிளம்பி சென்று விட்டனர். வாணியோ எதுவும் பேச முடியாமல், தொண்டையைக் கவ்வும் துக்கத்தில் அழக்கூட முடியாமல் விக்கித்து போய் நின்றிருந்தாள்.. ஆனால் அகிலோ புன்னகை மாறாத முகத்துடன் நின்றிருந்தான். குற்றவுணர்ச்சி தாளாமல் நொந்து கொண்டிருந்தான் ஆதவ்.

- தேடல் தொடரும்..
 
உறவின் தேடல் -20

வாணியோ அழக் கூட தோன்றாமல் விக்கித்துப் போய் கொழு பொம்மையென நின்றிருந்தாள். வந்திருந்த கூட்டம் கலைந்து சென்றதும் அவ்வளவு நேரம் புன்னகை முகத்தை சுமந்திருந்த, ‌ அகில் அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் தன் அறைக்கு வந்து சேர்ந்தவன் கதவை சாத்தி தாளிட்ட மறுகணம் போட்டிருந்த உடை அனைத்தையும் கழட்டி தூக்கி எறிந்து விட்டு கண்ணாடி முன் சென்று நின்றான். அதில் தெரியும் தன் முகத்தை பார்த்து அருவருத்தவனாய் காறி கண்ணாடியில் உமிழ்ந்தான்.

வாணியோ அதன்பிறகு யார் முகத்தையும் பார்க்காமல் தன் அறைக்கு வந்தவள் குமுறி குமுறி அழுதாள். கையிலிருந்த மோதிரம் அவளை நெருப்பில் நிற்க வைத்தது போல் கொதிக்க வைத்தது, அனலாய் சுட்டதென்றால் நெஞ்சை உரசிக்கொண்டு இருந்த பொன் தாலியோ அவளுக்கு உயிர் வதையைக் கொடுத்தது.‌ அடுத்து என்ன செய்வது என்று அவளால் சிந்திக்கக் கூட முடியவில்லை. அத்தனை பேர் முன்னால் இதில் விருப்பமில்லை என்று சொல்லக்கூட தனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவில்லையே என்று எண்ணி குமுறி குமுறி அழுதாள். அப்போது கதவு தட்டப்பட்டது, முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். கதவுக்கு வெளியே திகுதிகுவென எரியும் நெஞ்சை சமன் படுத்த முடியாமல் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தாள் மலர்.

அவளைக் கண்டதும் பொங்கி வந்த அழுகையோடு அவள் தோளில் சாய்ந்து விட்டாள் வாணி. அவளை உள்ளே இழுத்துக் கொண்டு வந்த மலர் தன் முகத்திலிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு முகத்தை சாதாரணமாக வைத்தவள்,
“என்ன ஆச்சுடி உனக்கு நிச்சயமாமே?” என்று கேட்டாள்.

“எனக்கே தெரியாம ஏற்பாடு பண்ணிட்டாங்கடி. அந்த அகிலுக்கும் எனக்கும் நிச்சயம் முடிஞ்சிருச்சு, என் சம்மதத்தை யாருமே கேக்கலடி” என்று குமுறியவளாய் தன் விரலை புதிதாக ஆக்கிரமித்திருக்கும் மோதிரத்தைக் காட்டினாள்.

அந்த மோதிரம் தான் வாங்கக்கூடிய மதிப்பு கொண்டது தான், ஆனால் அதை போட்டவனின் மதிப்பு தனக்கல்லவா தெரியும் என்று நினைத்தாள். ‘உன்னை நேசிக்கிறேன், உன்னை பிடிச்சிருக்கு என்று சொன்னானே அப்படியிருக்க இன்னொருத்தியை திருமணம் செய்ய எப்படி அவன் சம்மதம் தெரிவித்தான் என்று நினைத்து அவள் உள்ளம் குமுறியது. பதில் பேசாது அந்த மோதிரத்தையே வெறித்துப் பார்த்தவள், “அவங்க கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டதும் நீயும் சரின்னு சொல்லிட்டியா அப்ப தேவ் அண்ணாவோட நிலைமை” என்று கேட்க, அதற்கும் ஒரு மூச்சு அழுது முடித்தவளாய், “என்கிட்ட யாரும் எதுவும் கேட்கவே இல்லையே, நான் உள்ள வந்ததும் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க டிரஸ் மாத்த சொன்னாங்க, என்ன ஏதுன்னு தெரியாம தான் நானும் மாத்துனேன். திடீர்னு எல்லார் முன்னாடியும் கொண்டு வந்து நிப்பாட்டி நான் என்னன்னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே, என்ன நடக்குதுன்னு நான் உணர்றதுக்கு முன்னாடியே நிச்சியத்தை முடிச்சுட்டாங்கடி” என்று சொல்லி அழுதாள்.

“அவங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்காங்க நீ ஒரு உயிருள்ள பொண்ணுடி ஜடம் கிடையாது. அவங்களோட இஷ்டத்துக்கு ஆட முடியாது, வாடி நான் என்னன்னு கேட்குறேன்” என்று சொல்லி வம்படியாக வாணி வேணாம் என்று சொல்லி மறுக்க மறுக்க அவளை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள் மலர்.

முதல்முறையாக அந்த வீட்டிற்குள் வருகிறாள். உள்ளே வரும் போதும் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தான் வந்திருந்தாளே தவிர முன் வாசல் வழியாக வரவில்லை. வீட்டு ஹாலில் தான் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள், அகிலைத் தவிர அனைவரும் அங்குதான் இருந்தார்கள்.

அனைவரின் முன்பும் வாணியை நிறுத்தியவள், “இங்கிருக்குற உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா. அப்பா அம்மா இல்லாத பொண்ணுன்னா உங்க இஷ்டத்துக்கு நீங்க என்ன வேணாலும் செய்ய வைப்பீங்களா, அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு கூட கேட்காம நீங்க பாட்டுக்கு கல்யாணத்தை நடத்த முயற்சி பண்றது எந்த விதத்துல ஞாயம்” என்று கேட்டாள்.

“அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா இல்லையான்னு கேட்க வேண்டியது நாங்க தான் இல்லன்னு சொல்லல. அதே போல இது எங்க குடும்ப விஷயம், அவ எங்க வீட்டு பொண்ணு அதுவும் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணே இதையெல்லாம் கேட்கல நீ ஏன் கேட்கணும். அவளுக்கு அறிவுரை சொல்றதுக்கோ இல்ல, எங்க குடும்ப விஷயத்துல தலையிடுறதுக்கோ உனக்கு என்ன உரிமை இருக்கு. ஆமா நீ யாரு முதல்ல யாரைக் கேட்டு வீட்டுக்குள்ள வந்த?” என்று கேட்டவாறு படியிலிருந்து இறங்கி வந்தான் அகில்.

அவன் குரலைக் கேட்டு ஒருவித எதிர்பார்ப்புடன் நிமிர்ந்து பார்த்த மலர் அவன் வார்த்தைகளை கேட்டு சுக்குநூறாக உடைந்து நொருங்கி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.‌ மனம் முழுமையாக அழுதது ஆனால் கஷ்டப்பட்டு கண்களில் கண்ணீரை தேங்க விடாமல் தடுத்தவள்,‌ “நான் உங்களுக்கு யாரும் கிடையாது தான், இது உங்களோட குடும்ப விஷயம் தான் நான் இல்லைங்கலை. அதே போல அவ எனக்கு உறவு கிடையாது தான். ஆனா அவளுக்கும் எனக்கும் இருக்குற உறவு உங்களோட உறவை விட உசந்தது. அவ எனக்கு உயிர்த் தோழி. அவளோட வாழ்க்கையில அவளுக்கு பிடிக்காம நீங்க எந்த முடிவும் எடுக்க முடியாது. எனக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்குன்னு அவ ஒரு வார்த்தை சொன்னா போதும் நான் இதுக்கு மேல எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன். நானே கூட இருந்து மணப்பெண் தோழியா இருந்து அவளுக்கு எல்லாத்தையும் செய்யறேன், நீங்களே அவக்கிட்ட அவ விருப்பம் என்னன்னு கேளுங்க” என்றாள்.

“கேட்குறேன் ஆனா அதுக்கு முன்னாடி அவக்கிட்ட நான் இரண்டு நிமிஷம் பேசணும். நான் அவளை மிரட்டமாட்டேன், நீ என்னை நம்பலாம் உண்மையா, கடவுள் மேல ஆணையா நான் அவளை மிரட்ட மாட்டேன், இரண்டே நிமிஷம் பேசிட்டு வந்துடுறேன், அதுக்கப்புறம் வந்து அவளோட சம்மதத்தைக் கேட்குறேன்” என்றார்.

“சரி நான் இதுக்கு ஒத்துக்குறேன்” என்ற மலர் வாணியின் அருகில் நெருங்கி,
“அந்த அம்மா என்ன சொன்னாலும் சரி நீ உன் முடிவுல தெளிவா இரு. யாருக்கும் நீ பயப்படணும்னு அவசியம் கிடையாது. அதே மாதிரி தேவ் அண்ணாவ மனசுல வச்சுக்கிட்டு எதுவா இருந்தாலும் சொல்லு. அவரு உனக்காக என்ன வேணாலும் செய்வாரு. என் உசுரே அவ தான் அவளை பாத்துகோமான்னு சொல்லிட்டு போயிருக்காரு அதனால எதுவா இருந்தாலும் பார்த்து முடிவு பண்ணு” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

தடதடக்கும் இதயத்துடனும் பயத்துடனும் தான் அருகில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்தாள் வாணி. அவள் பின்னே நுழைந்த மீனாட்சி கதவை சாத்திவிட்டு அவள் அருகில் நெருங்கி நின்றவர், “இங்க பாரு உன்னை எனக்கு பிடிக்காது தான் ஆனா உன்னால என் பையனோட வாழ்க்கை நல்லா இருக்கணுங்குறத்துக்காக தான் இந்த கல்யாணத்த செய்யணும்னு நினைக்கிறேன்” என்றதும், அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தாள் வாணி.

“ஆமா என் பையனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு நெனச்சு. அவனோட ஜாதகத்தை ஜோசியர்கிட்ட எடுத்துட்டு போனேன். அப்ப அவரு சொன்னாரு உங்க பையனுக்கு முதல் பொண்டாட்டி நிலைக்காது, முதல் பொண்டாட்டி இறந்து போயிடுவாங்க. இந்த ஒரு வாரத்துல அவருக்கு கல்யாணம் நடந்தே ஆகணும் அப்படி நடந்தா தான் அவரோட உயிருக்கு ஆபத்தில்லாம இருக்கும், அவருக்கு இருக்குற கண்டம் நீங்கும் இல்லன்னா மிகப்பெரிய கண்டம் இருக்குதுன்னு சொன்னாரு. உங்க அப்பா எவ்வளவு தப்பு செஞ்சிருக்காரு. என் பங்கு சொத்தைக்கூட எனக்கு தரல. இதுவரைக்கும் எனக்குன்னு அவரு எந்த நல்லதும் செஞ்சது கிடையாது. அவரால நான் அதிகமா காயப்பட்டுருக்கேன் அதுக்கு பிராயச்சித்தமா நீ என் பையனை கல்யாணம் பண்ணிக்கோ. இன்னும் ஆறே மாசத்துல நீ செத்தா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, சப்போஸ் அப்படி நீ சாகலன்னா உனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுறேன் அதுக்கப்புறம் உனக்கு என்ன விருப்பமோ அதயே செஞ்சுக்கலாம். ஆனா அதுவரைக்கும் நீ இந்த வீட்ல என் மருமகளா இருந்து தான் ஆகணும். அப்படி இருக்க முடியாது, இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாதுன்னு நீ சொன்னா அதுக்கு மேல உன் விருப்பம். உங்க அப்பா செய்த தப்புக்கு அவரு மேல இருக்குற கரையை போக்குறதுக்கு இது உனக்கு ஒரு வாய்ப்பு அவ்வளவு தான். நீ மருமகளா வந்தாலும் உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டேன், நல்லா பாத்துக்குவேன்” என்று சொல்லி விட்டு அமைதி காத்தார்.

சட்டென்று தரையில் முழங்காலிட்டு அமர்ந்தவள் ஒரு மூச்சு அழுது முடித்தாள். பின்
எதை எதையோ யோசித்தாள். பின்பு அழுந்தத் துடைத்து முகத்துடன் எழுந்து நின்று,
“நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

வெளியே வந்து அதையே தான் சொன்னாள். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர். ஆதவ்வோ,“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்குற, உனக்கு இவங்க எவ்வளவு கெடுதல் செஞ்சிருக்காங்க அதையெல்லாம் மறந்துட்டியா. அதுவும் என் அண்ணனுக்கு உன்னைக் கண்டாவே பிடிக்காது.‌ ஆனாலும் சிரிச்சுகிட்டே நிச்சியத்துக்கு சந்தோசமா வந்து நிக்கிறான். நீயும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்ற, நீங்க ரெண்டு பேரும் உங்க மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க?” என்றான் அடங்காத சினத்தோடு.

அதைக்கேட்ட மீனாட்சி,
“என்னடா இப்படி சொல்ற இந்த கல்யாணம் நடக்குறதுக்கு முழுமுதற் காரணமே நீ தானே”, என்றதும் அனைவரும் அதிர்ந்தனர்.

ஆதவ்வும், “என்ன சொல்றீங்க பெரியம்மா நான் எப்படி காரணமாவேன். ”

“நீதானே கண்ணா அகில் லவ் பண்றான்னு சொன்ன,‌ அதுவும் வாணியை லவ் பண்றான்னு உன் பிரண்டு கிட்ட நீ தானே சொல்லிக்கிட்டு இருந்த” என்றதும் அதிர்வோடு அனைவரையும் பார்த்தவன்,
“இல்ல தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க பெரியம்மா” என்றான் பதைபதைப்புடன்.

“இல்ல நீ சரியாதான் சொல்லிருக்க. என் பையன் கிட்ட நான் கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டதும் உடனே சரின்னு சொல்லிட்டான். அவளை பிடிக்காம இருந்துருந்தா எப்படி சரின்னு சொல்லி இருப்பான். அவளை பிடிச்சதால தானே சரின்னு சொல்லியிருக்கான்..”

அனைவரும் இப்போது அகிலைப் பார்க்க, அவனோ, “எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம்,‌ என்னை யாரும் வற்புறுத்தக் கிடையாது. அவங்கவங்க வேலையை பார்த்துட்டு போங்க” என்று சொல்லி விட்டு மீண்டும் தன் அறைக்குள் அடைந்தவன் தான் அதன் பிறகு வெளிய வரவே இல்லை.

ஏற்கனவே கல்லூரியில் இன்று வாணியோடு தன்னை இணைத்துப் பேசியதால் பசங்களுக்குள் பஞ்சாயத்து ஆகி விட்டது. கடைசியில் ஆமா அப்படி இருந்தா என்ன தப்பென்று ஆதவ் கேட்டு விட்டதால் மீண்டும் அனைவரும் வாணியை கிண்டல் செய்தனர். அதனால் ஏற்கனவே குற்றவுணர்ச்சியில் இருந்தவனுக்கு, இப்பது தன்னால் தான் அவளுக்கு இப்படி ஒரு நிலை? என்று நொந்து கொண்டவன், ஒரு வாரத்திற்கு முன்பு தனக்கும், அகிலுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை நினைத்துப் பார்த்தான்.

அன்று தன் நேசத்தை மலரிடம் சொன்னதற்குப் பிறகு மலரை அவன் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அவள் கல்லூரியில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்து தொலைவிலிருந்தே அவளைப் பார்த்து விட்டு தான் வீடு வந்து சேர்வான். அப்படி ஒரு நாள் பார்த்து விட்டு நகர்கையில் அவனது காரை ஆதவ் பார்த்து விட்டான். வேகமாக தன் வண்டியை நிறுத்திவிட்டு அண்ணனின் காரை நெருங்கியவன் கார் கண்ணாடியைத் தட்டினான். பெருமூச்சோடு கதவை திறந்தான் அகில்.

“என்னடா”, என்று கேட்டவனிடம்,

“நீ இங்க வெயிட் பண்ற ஆளே கிடையாது அண்ணா, என்ன ஆச்சு எங்க காலேஜ்ல ஏதாவது ஒரு பொண்ண லவ் பண்றியா, அவங்களை பாக்க தான் வெயிட் பண்றியா?”

“ஆமா லவ் பண்றேன் போதுமா!” என்றான்.‌ கையும் களவுமாக மாட்டிக் கொண்டதற்கு பிறகு மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்து உண்மையை ஒப்புக் கொண்டான் அகில்.

“சரி அந்த பொண்ணு யாரு, நம்ம ஊரா?” என்று ஒருவித எதிர்பார்ப்புடன் கேட்டான். ஏனெனில் அவனுக்குத் தான் ஏற்கனவே ஒரு எண்ணம் இருந்ததே தன் அண்ணன் வாணியைத் தான் விரும்புகிறானோ என்று. தற்போது சந்தர்ப்பம் கிடைக்கவும் கேட்டுவிட்டான்.

அகிலும் மலரை மனதில் வைத்துக்கொண்டு, “ஆமா நம்ம ஊரு தான். அதுவும் உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்”, என்று சொல்லி மௌனமாய் புன்னகைக்க,

“யாருணா அந்த பொண்ணு உன்னை வெட்கப்பட வச்சுட்டாங்க. சரி பொண்ணு பேரு என்னண்ணா?” என்று கேட்டதும் ஒரு நிமிடம் தயங்கியவன், ‌“பேரை மட்டும் கேட்காத ஆனா அவ இன்னைக்கு பிரவுன் கலர் சுடிதார் போட்டிருக்கா", என்று சொல்லி விட்டு தனக்கு வந்த அலைபேசி அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருந்தான்.

அதே நேரம் சட்டென்று காரில் இருந்து கீழே இறங்கிய ஆதவ் வாணி அணிந்திருந்த உடையைப் பார்த்தான். அன்று இருவரது கெட்ட நேரமா என்னவோ மலர்,வாணி இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிறத்தில் தான் உடை அணிந்திருந்தார்கள்.

நிச்சயமாக மலரை அவன் நேசிப்பான் என்று ஆதவ்வுக்குத் தோன்றவே இல்லை. வாணியைத் தான் விரும்புகிறான் என்றெண்ணி மகிழ்ந்து போனான். அந்த சந்தோசத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் வீட்டிற்கு வந்ததும் அலைபேசி இணைப்பில் வந்த நண்பனிடம் இதை சொன்னதோடு மட்டுமின்றி,‌ “அப்பவே நெனைச்சேன் எங்க அண்ணனோட மாற்றத்துக்கு காரணம் வாணியா தான் இருப்பான்னு. என்னோட யூகம் சரியாகிடுச்சு, என் அண்ணன் வாணியை விரும்புறாரு கண்டிப்பா அவங்க லைஃப் நல்லா இருக்கும்” என்று உளறிக் கொட்ட அதை எதேச்சையாக மீனாட்சி கேட்டு விட்டார்.

அதைக் கேட்டு அவருக்கு ஆத்திரம் வந்தாலும் அதே நேரம் ஜாதகத்தில் இந்த குறைபாடு இருப்பதை அறிந்ததிலிருந்து அவர் மனம் கணக்கு போட்டது. அவளை திருமணம் செய்து அவள் இறந்து போனாலும் தனக்கு லாபம் தான், அவளை தனியாக வெட்டி விட்டாலும் அவள் கஷ்டப்படுவதை பார்ப்பதற்கும் தனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு தான் இந்த நிச்சயத்திற்கு பிளான் போட்டார். அவரே ஆச்சரியப்பட்டது கஷ்டமே இல்லாமல் வாணி ஒத்துக் கொண்டது தான். கூடவே தன் தாய் கேட்டதுக்கு மறுப்பு சொல்லி பழக்கம் இல்லாததால் தான் அகிலும் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான். கூடவே மலர் எந்த பதிலும் சொல்லாததால் அவளை வற்புறுத்த மனமில்லாமலும் இந்த கல்யாணத்திற்கு சரியென தலையாட்டினான்.

ஒரே வாரத்தில் திருமணம் என்பதால் நிச்சயம் முடிந்த நான்காம் நாள் திருமணம் வைத்திருந்தார்கள். அவர்கள் வீடு திருமண அலங்காரத்தினால் ஜொலி ஜொலித்தது. தன் வாக்கு கொடுத்தபடி மணப்பெண் தோழி இடத்தில் இருந்து அனைத்தையும் செய்தால் மலர்.‌ வாணியுடனே இருந்தாள்,‌ ஆனால் பெரிதாக தோழிகள் இருவரும் முன்பு போல் பேசிக் கொள்ளவில்லை, அமைதி காத்தனர். வாணியின் திருமண செய்தி தேவேஷ்வரின் குடும்பத்தாருக்கும் தெரியவந்தது. சுப்பிரமணியத்துக்கு அப்போது தான் தான் நினைத்தது போல் நடக்கிறது என்றே தோன்றியது. எக்காரணத்தைக் கொண்டும் திருமணம் முடியும் வரை தன் மகனை இங்கே வர விடக் கூடாது என்று முடிவு செய்தார். அண்ணன் மீது இருக்கும் பாசத்தில் விக்கி ஏதேனும் குளறுபடி செய்து வைத்து விடுவானோ என்று நினைத்தவர் தூரத்து சொந்தத்தில் இருக்கும் ஏழு பசங்களை ஒன்றிணைத்து தன் இளைய மகனை அவர்களுடன் சுற்றுலா அனுப்பி வைத்து விட்டார். தந்தையின் இந்த மாற்றம் எதனால் என்று புரியாமலேயே நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பி விட்டான் விக்கி.

இதோ அதோவென்று மூன்று நாட்களும் ஓடிச் சென்று இருந்தது. மலர், வாணி இருவரும் அந்த ஒரு வாரமும் கல்லூரிக்கு விடுப்பு எடுத்து இருந்தார்கள். விடிந்தால் திருமணம் எனும் நிலையில் இரவு 11.30 மணிக்கு ஊர் வந்தடைந்தான் தேவேஷ்வர்.

ஏனோ மனதில் நெருடலாக இருக்கவும் தன்னவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டான். தன் அறையில் இருக்கும் மற்றொருவன் தந்தையின் தொடர்பில் இருக்கிறான், தன்னைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்கிறான் என்று தெரிந்ததால் தான் இவ்வளவு நாள் அமைதி காத்தான். தந்தைக்கு திடீரென்று உடம்பு சரியில்லை என்று அவன் உயிருக்கு கிளம்பிச் சென்றதை சாக்காக வைத்து இவனும் ஊருக்கு கிளம்பி வந்து விட்டான்.

ஊருக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தவன் வாணியின் வீட்டைப் பார்த்வாறே வீட்டிற்குள் நுழைந்த நேரத்தில் அவனைப் பார்த்து விட்டாள் மலர்.‌.‌ அவனும் மலரைக் கண்டவன் வேகமாக அவள் அருகில் நெருங்கி,
“எப்படிமா இருக்குற?” என்றதற்கு,

“நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க என்ன திடீர்னு வந்து நிக்கிறீங்க?” என்றாள் படபடப்புடன்.. இவருக்கு உண்மை தெரிந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விஷயம் தெரிந்தால் இன்னும் இவன் மனது என்ன கஷ்டப்படுமோ, தன்னைப் போல் அவனும் வருத்தப்படுவானோ என்று எண்ணி கலங்கினாள்.

“நான் வந்தது யாருக்கும் தெரியாது திடீர்னு வந்துட்டேன். உன்கிட்ட சொல்றதுக்கு என்னம்மா அவளை உயிரா நேசிக்கிறேன் அவள பாக்கணும் போல இருக்கவும் கிளம்பி வந்துட்டேன். ஆமா அவங்க வீட்ல என்ன விசேஷம்மா”

“அந்த வீட்டு பெரிய பையனுக்கு கல்யாணம் அண்ணா அதான் வீட்ல விசேஷமா இருக்கு” என்றாள்.

“கல்யாணம் பண்றாங்களாம்மா, பொண்ணு யாரும்மா, எந்த ஊரு?”, என்று கேட்டான் எதேச்சையாக.

“பொண்ணு ...பொண்ணு தெரிஞ்ச பொண்ணு தான் அண்ணா. சொந்தக்காரங்க பொண்ணுதான். சரி அண்ணா எனக்கு டைம் ஆகுது நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு நகர பார்த்தவளை தடுத்து நிறுத்தியவன்,“ஆமா நீ எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்துருக்குற?” என்று கேட்க,அவளோ பதில் சொல்லாது முழித்தாள்.

அதே நேரம் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த பரமசிவம் இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு,‌“அடடே! தேவேஷ்வர் தம்பியா, நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க,

“நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க அப்பா..?”

“நீங்க தான் தம்பி என்னை அப்பான்னு கூப்பிடுறீங்க, மத்தவங்க எல்லாம் எங்களோட பேச கூட யோசிப்பாங்க. ஒன்னும் இல்ல பாப்பாவோட சினேகித பிள்ளைக்கு விடிஞ்சா கல்யாணம். இது தான் மணப்பெண் தோழி, அதான் ஏதோ சடங்கு இருக்குன்னு சொல்லியிருந்தாங்க அதான் பாப்பா வந்துச்சு. இந்நேரம் சடங்கு முடிஞ்சுருக்கும்னு பாப்பாவை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்” என்றார் அவர் வெள்ளந்தியாக.

மலர் மணமகளின் தோழி என்றதும் சுருக்கென்று நெஞ்சுக்குள் ஏதோ தைப்பது போல் உணர்ந்த தேவேஷ்வர்,‌“அப்படிங்களா அப்பா அது யாரு எனக்கு தெரியாம என் தங்கச்சிக்கு பிரண்டு, பேரு என்னங்க அப்பா”, என்று கேட்டான்.

‘ஐயோ! அப்பா எங்கே உண்மையை போட்டு உடைத்து விடுவாரே என்ற பயத்தில்,
“அதெல்லாம் காலைல நீங்க பாருங்க தெரியும். அப்பா எனக்கு தூக்கம் வருது வாங்க போகலாம்” என்று சொல்லி பரமசிவத்தை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள்.

ஆனால் அதற்குள் அவரோ,
“அட இருமா சொல்லிட்டு வந்தர்றேன் அது ஒண்ணுமில்ல தம்பி இந்த வீட்டில் ஒரு பொண்ணு வந்து இருந்துச்சுல்ல அந்த பொண்ணு தான் தம்பி கல்யாண பொண்ணு. அந்த பொண்ணுக்கு நடந்ததெல்லாம் சரி இல்லை தம்பி. அந்த பொண்ணை அவ்வளவு கொடுமைப் படுத்துனாங்க. இன்னும் சொல்லப்போனா படிக்கறதுக்கு கூட அவங்க செலவு பண்ணல. அவங்க அப்பா ஏற்கனவே கட்டி வெச்சுட்டுப் போன பணத்தை செலவு பண்றாங்க” என்று ஆரம்பித்து இதுவரை தனக்கு தெரிந்த அனைத்தையும் புட்டு புட்டு வைத்தார்.

அதைக் கேட்டவனுக்கு என்னவோ போலானது. தன்னவள் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறாளா என்ற உணர்வே அவனைக் கொல்லாமல் கொன்றது. அதிலும் தன் மனம் கவர்ந்தவளுக்குத் தான் திருமணம் என்ற விஷயமே அவனை இன்னுமே அதிர்ச்சியில் நிற்க வைத்திருந்தது.

தான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு அவர் மலரை அழைத்துக் கொண்டு செல்ல, மலரோ திரும்பி விழிகளில் வழியும் கண்ணீருடன் கைகூப்பி, “மன்னிச்சிடுங்க அண்ணா” என்று சொல்லி விட்டு நகர அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான் தேவேஷ்வர்.

ஒரு சில நிமிடங்கள் தான் அப்படி நின்றான் அதன் பிறகு அவளிடம் இது பற்றி கேட்டே ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் தன் பையை தூக்கி வீட்டுக்குள் வீசி விட்டு பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து அவள் வீட்டின் பின்புறம் சென்றான். பரமசிவம் சொன்னதை வைத்து அவள் இருக்கும் அறை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தவனாய் சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு கதவை தட்டினான். அவன் காம்பௌண்ட் சுவர் ஏறி குதித்ததை தன் அறையின் ஜன்னல் வழியாக பார்த்து விட்டான் அகில்.

அதைப் பார்த்தவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற வேக வேகமாக கீழே இறங்கி வந்தவன் சத்தமில்லாமல் உறங்குபவர்கள் தொல்லை செய்யாமல் போன் பேசுவது போல் பின்பக்கம் வந்தவன் மெதுவாக வாணி இருந்த அறையை நெருங்கினான்.

நாளைக்கு அகிலுக்கு மனைவியாகி அந்த வீட்டுக்குள் மருமகளாக வரப்போகின்ற காரணத்தினால் இன்று தன் அறையில் இருந்து கொள்கிறேன் என்று அவள் சொன்னதால் யாரும் அவளை வற்புறுத்தவில்லை. அலங்காரங்களைக் கலைத்திட தோன்றாமல் தன் அறையில் கட்டிலில் அமர்ந்து இருந்தாள் வாணி. கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

தாளிடப்பட்ட இருந்த கதவை மெல்லத் தட்டினான் தேவேஷ்வர். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டு கதவை திறந்தாள். சத்தியமாக அங்க தேவேஷ்வர் நின்றிருப்பான் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அவனோ அதிர்ந்து நின்றிருக்கும் அவளைப் பொருட்படுத்தாமல் அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் கதவை ஒருக்களித்து சாத்தினானே தவிர அவசரத்தில் தாளிடவில்லை.

- தேடல் தொடரும்...
 
உறவின் தேடல்-21.1

அவனைக் கண்டு சற்று பயம் கூட வந்தது வாணிக்கு. இருந்தும் மௌனமாகவே நின்றிருந்தாள். அவளை நெருங்கிய தேவேஷ்வர் சற்றும் எதிர்பாராத விதமாக அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவன் சிறிது நேரம் அப்படியே இருந்தான். பின்பு அவளை விலக்கி விட்டு அவள் முகத்தை நிமிர்த்தி தன் முகம் பார்க்க வைத்தவன்,
“சொல்லு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டியா அந்த அளவுக்கு வந்துருச்சா, என்ன மறந்துட்டியா, இல்ல என் கையால கிடைச்சத தூக்கி எறிஞ்சிட்டியா?” என்றான் ஆங்காரத்தோடு.

அதற்கும் அவள் மறுமொழி பேசாமல் அமைதியாக நின்றாள். ஆனால் அவன் கரம் தொட்டு அவள் கழுத்தில் விழுந்த மாங்கல்யம் இன்னும் அவள் நெஞ்சில் தான் அவன் நினைவுடன் மறைந்துக் கிடந்தது.

அவள் மௌனம் இன்னும் அவனை வெறியேற்ற,
“அதுதான் உனக்கும் எனக்கும் கிட்டத்தட்ட எல்லாமே முடிஞ்ச மாதிரி ஆயிடுச்சே இன்னும் எதுக்கு தேவை இல்லாம அவனை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற. வேணா இந்த கல்யாணத்தை நிறுத்திடு இல்லன்னா நான் நிறுத்துவேன்” என்றான் அதட்டலுடன்.

அதற்கு மேலும் அவளால் அமைதியாக இருக்க முடியாமல், தன் அப்பாவின் மேல் இருக்கும் களங்கத்தை துடைக்க தன் காதலை பணயம் வைக்க துணிந்தவள்,‌“இல்லை இந்த கல்யாணம் நடக்கணும். நான் விருப்பப்பட்டுத் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். உங்கக்கிட்ட வசதி இல்ல ஆனா அவங்கக்கிட்ட இருக்குது அது தான் நான் சம்மதிக்க காரணம் போதுமா!” என்றதும் அவளையே சில நிமிடங்கள் குறுகுறுவென்று பார்த்தான்.

பின், “உன் மனசுல நான் இல்லைங்குறதை என்னால நம்ப முடியல. உன்னை மீறி நான் எதுவும் பண்ண மாட்டேன். இனிமே இந்த ஊர் பக்கமே வரமாட்டேன், ஏன்னா உன்னை இன்னொருத்தன் பொண்டாட்டியா என்னால பார்க்க முடியாது” என்றவன் விறுவிறுவென்று அந்த அறையிலிருந்து வெளியேறி இருந்தான்.

அவன் சென்ற பின்பு குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள் வாணி. ஆனால் அவர்கள் பேசுவதைக் கேட்ட அகிலோ அதிர்ந்து போய் நின்றிருந்தவன் எதுவும் பேசாமல் தன் அறைக்கு வந்து சேர்ந்தான்..

தேவேஷ்வரோ தளர்வோடு தன் வீட்டிற்கு வந்தான். பேக்கை எடுத்துக் கொண்டு மீண்டும் ஊருக்கு செல்ல முயன்ற வேளையில் ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்த அவனது தங்கை எழிலரசி அண்ணனைக் கண்டதும் அவனை நெருங்கியவள், “அண்ணா..” என்று ஏதோ சொல்ல வர அவளை திரும்பியும் பார்க்காமல் சென்றவன்,“இனி இந்த வீட்டு பக்கமும் வரமாட்டான், ஊரு பக்கமும் வரமாட்டேன் அதை மட்டும் எல்லார்கிட்டயும் சொல்லிரு, அதே மாதிரி அவளும் நல்லாருக்கட்டும்” என்றவன் எதிர் வீட்டின் புறம் திரும்பி ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் விறுவிறுவென்று நடந்தான்.‌

எழிலோ தன் அண்ணனின் பின்னாலேயே, “அண்ணா அண்ணா..” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தவள் மெயின் கேட்டைத் தாண்டும் வேளையில் கால் இடறி கீழே விழுந்தாள். அதில் அவளது நாக்கு வெளியே வந்ததால், பற்களால் நாக்கு கடிபட்டு துண்டாக கீழே விழுந்தது. தங்கையின் சத்தம் நின்ற போதும் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென்று அங்கிருந்து நடந்து வந்தவன் கார் ஒன்றில் லிஃப்ட் கேட்டு கரூர் வந்து பஸ் ஏறி சென்னை வந்தவன் மீதமிருந்த படிப்பை முடித்து விட்டு நண்பன் ஒருவருடன் பழக்கமாகி லண்டன் வந்து சேர்ந்தான். அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து இப்போது தான் ஊருக்கு திரும்பி வந்திருக்கிறான்.

அதைப்போல் மறுநாள் விடியலில் அனைத்தும் நல்லபடியாக நடந்தது.‌ மணமகளாய் அலங்கரிக்கப்பட்ட போதும் கூட வாணியின் முகத்தில் சிரிப்பில்லை. அகில் ஏற்கனவே மண மேடையில் அமர்ந்திருந்தான். வாணியையும் அழைத்து வந்து அமர வைத்தார்கள். ஐயர் மந்திரங்களை நிற்காமல் ஓதிக்கொண்டிருக்க மணப்பெண் தோழியாய் வாணியின் பின்னே நின்று இருந்தாள் மலர். அவளிடம் தான் அய்யர் தாலியை கொடுத்து அனைவரிடமும் ஆசிபெற்று வாங்கி வரச் சொன்னார். அவளும் அதே போல் ஆசி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாள்.

தாலியைக் கையில் எடுத்த ஐயர் அதை அகிலின் கையில் கொடுக்க, அகிலோ தாலியை கையில் வாங்கியவன் சட்டென்று எழுந்து நின்றான். அவனது செய்கை அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுக்க அந்த மண்டபமே பரபரப்பானது. கரூரிலேயே சற்று பெரிய மண்டபத்தைத் தான் பிடித்திருந்தார்கள். கூட்டமும் ஒரு அளவுக்கு அதிகமாகத்தான் வந்திருந்தது. இவனது செய்கையால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அவனோ எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் கீழே அமர்ந்திருந்த வாணியை அழுத்தமாகப் பார்த்தவன் பின்பு எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் பின்னே நின்று இந்த மலரின் கழுத்தில் தாலி கட்டி மூன்றுமுடிச்சு போட்டிருந்தான். அதை அங்கிருந்த எவரும் எதிர்பார்க்கவில்லை,‌ அதிர்வோடு பார்த்தார்கள். மலரோ அதிர்ச்சியில் அகல விரித்த விழிகளை இமைக்க கூட மறந்தவளாய் அவனைப் பார்த்திருந்தாள்.

சில நிமிடங்கள் கடந்த பிறகே நடந்த நிகழ்வை அனைவராலும் புரிந்து கொள்ள முடிந்தது.‌ நடந்த களேபரத்தை உணராமல் குனிந்து அமர்ந்திருந்த வாணி சலசலப்பை கண்டு விட்டு அமைதியாக நிமிர்ந்து பார்த்தாள். அகில் மலரின் கழுத்தில் தாலி கட்டுவதை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் எழுந்து நின்றாள். பின்பு கழுத்திலிருந்த மாலையைக் கழட்டி மலரின் கழுத்தில் போட்டவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து நின்றாள். ஆளாளுக்கு ஏதேதோ பேச, அனைவரையும் வாயை மூட வைக்கும் விதமாக, “எனக்கு இவளைப் பிடிக்காது. அதுவும் நடத்தக்கெட்ட இவளை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா. நேத்து ஒருத்தன் கூட குடும்பம் நடத்திட்டு இன்னைக்கு இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்த தயாரான இவளை யார் கல்யாணம் பண்ணிப்பா, அவளுக்கு இந்த பொண்ணு எவ்வளவோ பெட்டர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..”
என்றான்‌.

எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள் வாணி. அவன் பேசியதை வைத்தே அவளால் அவனது மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. ஒன்று நேற்றைய தங்களது உரையாடல்களை அவன் கேட்டிருக்கிறான் அல்லது தன்னைப் பற்றி அவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று அவளுக்கு புரிந்தது.

அவனது வார்த்தைகள் அனைவருக்கும் அவள் மீதான கோபத்தையும், அருவருப்பையும் தூண்ட அனைவரும் வாய்க்கு வந்தபடி அவளைப் பேசத் தொடங்கினார்கள். “அம்மா அப்பா இல்லைங்கவும் எப்படியெல்லாம் நடந்துக்குறா. என்ன பண்றது ஏற்கனவே ஒருத்தன் கூட ஜாலியாஇருந்திருப்பா போல, வசதியான ஒருத்தன் கெடைக்கவும், அவனைக் கழட்டி விட்டுட்டு பணத்துக்காக என்ன வேணாலும் செய்வா போல” என்று அனைவரும் வாய்க்கு வந்தபடி பேசினார்கள்.

மீனாட்சி கூட அவளை கேவலமாக திட்ட முனைந்தார். ஆனால் வாணியை அவ்வாறு அனைவரும் பேசுவது மலரை கஷ்டப்படுத்த, “எல்லாரும் ஒரு நிமிஷம் நிறுத்துறீங்களா, யாராவது ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னா அது உண்மையா பொய்யான்னு நீங்க யாரும் யோசிக்க மாட்டாங்க. என் தோழி எவ்வளவு சுத்தமானவ, நல்லவன்னு எனக்கு தெரியும். அவளை காயப்படுத்துறது யாரா இருந்தாலும் சரி அவங்க என்னோட வாழ்க்கைக்கு தேவையும் இல்லை,‌ என் வாழ்க்கையில அவங்க இருக்கணும்னு அவசியம் இல்ல.

என்ன எல்லாரும் சொத்து, பணம் பணம்னு பேசிட்டு இருக்கீங்க அவக்கிட்ட இல்லாத பணமா இவங்கக்கிட்ட இருக்குது” என்றாள்.‌

அதிர்ந்து பார்த்தாள் வாணி.‌ அவளிடம் திரும்பி,“என்ன அப்படி பார்க்குற கொஞ்ச நாளைக்கு முன்னாடி உனக்கு ஒரு லெட்டர் காலேஜ்கே வந்துச்சு இல்லையா. அதை முதல்ல நான் தான் பிரித்துப் படிச்சேன், அது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. அதுல உன்னோட சொத்து விவரம் முதற்கொண்டு எல்லாமே வக்கீல் சார் அனுப்பி வெச்சுருந்தார். அது மட்டும் இல்ல உங்க அப்பா உனக்கு ஒரு லெட்டரும் எழுதி அவர் கிட்ட எப்பவோ கொடுத்துருந்துக்காரு. அதை நான் தான் படிச்சேன், அதுல என்ன இருந்துச்சு தெரியுமா! இதோ நிக்கிறாங்களே உங்க அத்தையோட குடும்பம் அவங்க ஒரு காலத்துல ரொம்ப வறுமையில இருந்தப்ப அவங்களுக்கு நடேசன்கிற பேர்ல உதவி செஞ்சது உங்க அப்பாதான்.

அதே போல உங்க அத்தை பசங்க எல்லாம் படிப்பதற்கு உதவி செய்ததும், ஏதோ ஒரு ட்ரஸ்ட் கிடையாது உங்க அப்பாதான் உதவி செஞ்சிருக்காரு. இதையெல்லாம் அவரு யாருக்கும் தெரியாம பண்ணிருக்காரு. ஆதவ்வோட சொந்த பாட்டிக்கு உங்க அப்பா இங்க வர்றது பிடிக்காது. ஏன்னா உங்க அப்பா வேற கேஸ்ட் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரே காரணத்துக்காக இங்க வரக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க.

உன் தங்கச்சி நல்லா வாழணும்னா நீ இங்க வர கூடாதுன்னு சொல்லி இருக்காங்க, அது மட்டும் கிடையாது அவளுக்கு உண்டான மரியாதையும் கொடுக்க மாட்டேன், என் பொண்ண வச்சு குடும்பத்தை பிரிச்சுடுவேன்னு என்னென்னமோ சொல்லி இருக்காங்க. அதுக்காக தான் உங்க அப்பா இவங்க கிட்ட நல்லவிதமா பழகாம தன்னையே குற்றவாளியா, தன்னையே கேவலமா, கெட்டவனா காட்டிருந்துருக்காரு. அது மட்டும் கிடையாது தான் சம்பாதிக்கிற சொத்துல ஒரு பாதி தன் தங்கச்சிக்கு போகணும்னு உயில் எழுதி வெச்சுட்டு தான் இறந்து போயிருக்காரு.‌ அந்த சொத்து பத்திரமும் அதோட இருந்துச்சு.

அதுல ஒரு பாதி உங்க அத்தைக்கு போனதுக்கப்புறமும் மிச்சமிருக்கிற சொத்து எல்லாமே இப்ப இவங்க வச்சுருப்பதை விட இரண்டு மடங்கு அதிகம்னு எனக்கு நல்லா தெரிஞ்சுது. என்ன அப்படி பார்க்குற எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா இருக்க காரணம் என்ன தெரியுமா, நீ அமைதியா இருந்ததால தான். உன்னால மட்டும் எப்படி வாணி இப்படி இருக்க முடியுது. உன்னுடைய நட்பு கிடைச்சது எனக்கு ரொம்ப பெரிய
பாக்கியம்னு தோணுச்சு. நீயே இதையெல்லாம் பார்த்துட்டு அமைதியா இருக்கும் போது நான் என்ன பண்ண முடியும்னு நெனச்சு நானும் அமைதியா இருந்தேன். ஆனா இவ்வளவும் நீ செத்துக்காக பண்ணுனேன்னு இவங்க சொன்னதை என்னால தாங்கிக்க முடியல. இப்பவும் கூட இந்த கல்யாணத்துக்கு நீ ஏன் ஒத்துக்கிட்டேன்னு எனக்கு தெரியாது, ஆனா சொத்துக்காக மட்டும் நீ ஒத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்.

அது மட்டும் கிடையாது எனக்கு எதுவும் வேணாம் இவங்ககிட்ட இருந்து கிடைக்கிற அன்பு மட்டும் போதும்னு நெனச்சு மறுநாளே அந்த வக்கீலை நீ போய் பார்த்த விஷயம் எனக்கு தெரியும். அதுக்காக நீ காலேஜ் மட்டம் போட்டுட்டு போனதும் எனக்கு தெரியும். கூடவே எல்லா சொத்தையும் உங்க அத்தை பேர்லையே நீ எழுதி வச்சதும் எனக்கு நல்லா தெரியும் வாணி. ஆனா இதெல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா இருந்தேன். ஆனா இப்ப என்னால அமைதியா இருக்க முடியாது. ஏன்னா உம்மேல தப்பு கிடையாது. இப்ப யாராவது ஒரு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம்” என்றாள். குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது அந்த மண்டபமே.

அனைவரையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்த வாணி,
“நான் சொத்துக்காக இந்த வீட்டுக்கு வரல. நீங்க என்னை எவ்வளவு கொடுமைப் படுத்துனாலும், டார்ச்சர் பண்ணுனாலும் எனக்கு சொந்தம் சொல்றதுக்கு நீங்க மட்டும் தான் இருந்தீங்க அதனால தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போனேன். ஆனா நீங்க என்னைப் பத்தி இந்த அளவுக்கு தப்பா கேவலமா யோசிச்சுருக்கீங்கன்னு எனக்கு இப்பதான் புரியுது. இதுக்கு மேல நான் இங்க இருக்க யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன்,‌ அனாதையா தான் உங்க வீட்டுக்கு வந்தேன், இப்பவும் அநாதையாவே இங்கிருந்து போறேன்” என்று சொல்லி நகர முற்பட்டவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய மலர்,
“நான் இருக்குற வரைக்கும் நீ அநாதை கிடையாது. எங்க வீடு வசதியான வீடு இல்லை தான், ஆனால் கண்டிப்பா எங்க வீட்ல சந்தோசத்திற்கு பஞ்சமிருக்காது வா போலாம்” என்று சொல்லி விட்டு இரண்டடி நகர்ந்தவள், அகில் கட்டிய தாலியை ஒரு முறை குனிந்து பார்த்தாள்.

பின்பு அவன் புறம் திரும்பியவள்,
“தெரிஞ்சோ தெரியாமலோ என் கழுத்துல ஒரு தடவை தாலி ஏறிடுச்சு. அதைக் கழட்டி போட்டுட்டு போற அளவுக்கு நான் கலாச்சாரம் தெரியாத பொண்ணு கிடையாது.‌ அதனால இது என் கழுத்துலையே இருக்கட்டும். ஆனா இப்படிப்பட்ட வீட்டுல, குடும்பத்துல என்னால வாழ முடியாது” என்று சொல்லி விட்டு வாணியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தாள் மலர்.

அதன் பிறகு இருவரும் எப்போதும் போலவே கல்லூரி சென்று வரத் தொடங்கி இருந்தார்கள். ஏற்கனவே இருந்த நட்பை விட இன்னும் அவர்களது நட்பு பலமடைந்து இருந்தது. பரமசிவமும் ஆராயிம் வாணியை தங்கள் பிள்ளை போல் தான் பார்த்தார்கள். எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது அடுத்த ஒரு வருடத்தில் இவர்கள் இருவரும் கல்லூரி படிப்பை முடித்த போது பரமசிவம் திடீரென்று சாலை விபத்து ஒன்றில் பலியாகி விட மொத்த பொறுப்பும் ஆராயியிடம் வந்தது. அவர் ஒருவரால் மட்டும் அனைத்தையும் பார்க்க முடியாது என்பதால் கல்லூரி படித்து முடித்த கையோடு பெண்கள் இருவரும் லோன் போட்டு இன்னும் அதிக அளவு மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

அடுத்த ஆறு மாதத்திலேயே தீராத வயிற்று வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆராயி. அவரை பரிசோதித்ததில் அவருக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதடைந்து விட்ட காரணத்தினால் முழுக்க முழுக்க ஹாஸ்பிடல் வாசம் இருந்தார். இவர்களின் பால் வியாபாரத்தில் சம்பாதிக்கும் பணமெல்லாம் ஆராயின் மருத்துவ செலவுக்கே சரியாகிவிட, அடுத்த நான்கு மாதத்தில் அவரும் தன் இன்னுயிரை நீத்துக் கொண்டார்.‌ அதன் பிறகு பெண்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து கொண்டனர். எவரையும் தங்களை அண்ட விடுவதில்லை. அன்றிலிருந்து இன்றுவரை தினமும் மன்னிப்பை வேண்டி அவர்களை வந்த பார்த்துக்கொண்டிருக்கிறார் மீனாட்சி. ஆனால் இருவரும் அவரைக் கண்டு கொள்வதில்லை. சொந்தத்தின் மீதிருந்த நம்பிக்கை அனைத்தும் போயிருந்த காரணத்தினால் மலர், வாணி அவர்களை நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை. வாணிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாமல் தானும் தன் வாழ்க்கையை வாழப் போவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறாள் மலர். .

தேவேஷ்வர் தன் வாழ்வில் நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க அதே நேரம் விக்கியும் தன் மனைவியிடம் அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான். இவர்களைப் போல் மலர், வாணி இருவரும் தத்தமது இணைகளை பற்றியும் தாங்கள் வாழ்வில் கடந்து வந்தவற்றைப் பற்றியும் நினைத்துப் பார்த்தவாறு கண் மூடி படுத்துக் கிடந்தார்கள். அந்த இரவு அனைவருக்கும் ஓர் ஒருவித வலியை பரிசாக கொடுத்திருந்தது.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom