Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL ஏ.எஸ் வைரஸ் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

1

“கோடி வைரஸிலே

கொடிய வைரஸ்

எந்த வைரஸ்??

டட்டடட்டா...

கொத்துக் கொத்தாய்

கொல்லும் அந்த

சீன வைரஸ்...

டட்டடட்டா...

கூண்டோடு குடும்பங்களை

குதறும ப்பா

கொல்லி வைரஸ்...

ஆஆஆஆ... ஆஆஆஆ..

ஏஎஸ் வைரஸ்...

ஏஎஸ் வைரஸ் பரவிவருதே கேளய்யா...

கண்வழியா பரவுமே பாரைய்யா... ஐயா...

ஏஎஸ் வைரஸ் பரவிவருதே கேளய்யா...

கண்வழியா பரவுமே பாரைய்யா...” என்னும் பாடலை மக்களின் விழிப்புணர்வுக்காகப் பிரபல இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், நடன இயக்குநர் கொண்ட குழுவொன்று தயார்செய்து கொண்டிருக்க, செய்திவழி இதுகுறித்த விழிப்புணர்வை பரப்பும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.



07 : 59 : 50

07 : 59 : 51

07 : 59 : 52

07 : 59 : 53

07 : 59 : 54

07 : 59 : 55

07 : 59 : 56

07 : 59 : 57

07 : 59 : 58

07 : 59 : 59 என விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் ஊர்திக்கான கவுன்டவுன் போல அந்தக் கருந்திரையில் மஞ்சள் நிற எழுத்துகள் தென்பட்டால் பிள்ளைகளில் பாதிபேருக்கு எரிச்சலில் காதுவழி புகையே வந்துவிடும். ஏனென்றால் அது காலையில் காடு சென்று, மாலையில் வீடு திரும்பி, மண்ணைப் பொன்னாக்கும் ஒவ்வொரு ஆண்மகனும் தங்களை ஆசுவாசப்படுத்தியவாறே அன்றைய நாளின் நிகழ்வுகளை அசைபோடும் வண்ணமாக ஒளிபரப்பப்படும் எட்டுமணி செய்தியை பார்க்கும் நேரம். தங்களின் சுதந்திரம் பறிபோய்விட்டதாகப் பிள்ளைகளும், தொடர் பார்க்கும் குடும்பத் தலைவிகளும் மூக்கைச் சீந்திக்கொண்டிருக்கையில், ஐயாக்கள் மட்டும் நாட்டு நடப்புகளைச் சிந்தைக்குள் செலுத்திக் கொண்டிருப்பர்.

அத்தகைய புகழ்வாய்ந்த கவுன்டவுன் முடிந்த அடுத்த நொடியே, “திடுதிடுதிடு.. டேன்டட்டடேன்... டின்ன்...” என்னும் ஓசையுடன் உலகம் சுழல்வது போன்றதொரு காட்சி விரிந்து மறைய, “ஒளியிலே.... தெரிவது தேவதையா??” என்னும் பாடலை முணுமுணுக்குமளவிற்கு இரண்டு பெண்கள் செய்தி வாசிப்பாளராகக் காட்டப்பட்டனர்.

அம்மா வயதுள்ளவர்கள், அக்கா வயதுள்ளவர்கள் வாசிப்பாளராக இருந்த காலம் மலையேறிப் போய், இப்போது செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஆர்மி, ஃபேன் பேஜ், வ்லாக் என்னுமளவிற்கு நாகரீகம் அப்டேட் ஆகிவிட்டது. நாம் ஏன் அதை விமர்சித்துக் கொண்டு? ஏஎஸ் வைரஸின் தாக்கம் உச்சத்தை அடைகையில் அனைவருமே விமர்சித்துக் கொள்ளட்டும்.

“முக்கியச் செய்திகள்...

இந்தியா முழுவதும் ஏஎஸ் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது...

உலக அளவில் ஏஎஸ் வைரஸ் தொற்றில் இந்தியா முதலிடம்...

முதல் அலையின் கோரதாண்டவமே இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் சீனாவைப் பகைத்துக் கொண்டதால் இரண்டாம் அலை வெகுவிரைவாக, அதிதீவிரமாகப் பரவும் என மனநல மருத்துவர்கள் தகவல்...

தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் இன்று பிரதமர் அனைத்து முதலமைச்சர்களுடன் ஆலோசனை... அனைத்துக் கட்சி கூட்டத்தினருக்கும் கடிதம்வழி தகவல் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்தி....” எனத் தலைப்புச் செய்திகள் வாசித்து முடிந்ததும் விரிவான செய்திகள் வேளை வந்தது.

“வணக்கம்... ருமினி செய்திகள்... வாசிப்பவர் - அனிதா சம்பத்... நாடுமுழுவதும் ஏஎஸ் வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் போதிய முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டுமெனப் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று நமது தேசமே மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது... மக்கள் அனைவரும் ஒத்துழைத்து ஒற்றுமை காத்தால் மட்டுமே நோயின் பிடியிலிருந்து வெளிவர முடியும். அவரவரது நலனை அவரவர் தான் பேணிக் காக்க முடியும். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் வைரஸ் தாக்கத்திற்கு மூலதனமான கண்ணாடிப் பேழைகளை விட்டு வெகுதூரம் விலகியிருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...” (இந்தியில் இருந்ததை வாசகர்களுக்காகத் தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறேன்) எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, பிரதமரின் அறிவுரையை ஏற்று நடக்குமாறு அனைத்துகட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. குடும்பங்களைச் சீரழிக்கும் இந்தக் கொடிய வைரஸை நாட்டை விட்டு விரட்டும்வரை ஓயமாட்டோம், இந்த விஷயத்தில் பிரதமருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என அனைத்து எதிர்கட்சிகளும் தெரிவித்திருக்கின்றன.

நாமக்கல்லில் ஏஎஸ் வைரஸால் தாக்கப்பட்ட மனைவி போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளாததால், அவரது கண்ணாடிப் பேழையைக் கிணற்றுக்குள் வீசியிருக்கிறார் கணவர். அதைக் கண்டு ஆத்திரமடைந்த மனைவி; அரிவாள் மனையால் கணவரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே ஏஎஸ் வைரஸின் பிடியில் முழுவதும் ஆட்கொள்ளப்பட்ட மாணவி ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டின் மேற்கூரைக்குத் தீவைத்த சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் ஏஎஸ் வைரஸ் தாக்கிய கணவன், மனைவி இருவரும் நோயின் உக்கிரத்தால் ஒருவரையொருவர் காயப்படுத்தி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிராதரவாக நின்ற மூன்று வயது மகனும், இரண்டு வயது மகளும் நெல்லை ஜங்ஷனில் இருந்த சரணாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்...” எனக் காணுமிடமெங்கும், கேட்குமிடமெங்கும் ஏஎஸ் வைரஸின் கோரதாண்டவத்தால் ஏற்பட்ட கொடிய விளைவுகளே வியாபித்திருக்க, நடுத்தர மக்களனைவரும் அச்சத்தின் பிடியில் ஆட்பட்டிருந்தனர்.

“இந்த டிவியை முதல்ல ஆஃப் பண்ணி போட்டாலே பாதிப் பிரச்சனை குறைஞ்சிடும்.. அங்கே அப்படி நடந்துது, இங்கே இத்தனை பேரு செத்துப் போயிட்டான்னு செய்தியைப் போட்டு மக்களைக் கதிகலங்க வச்சிடறான்... அவனவன் என்ன சூழ்நிலையில இருக்கிறான்னு அவனுகளுக்குப் புரியமாட்டிக்குது.. ச்ச்சும்மா.. என்னத்தையாவது போட்டுக்கிட்டு... மனுஷன் நிம்மதியா வெளியே போயிட்டு வர முடியுதா?? இவன்பாட்டுக்கு அது பரவுது, இது பரவுது... அங்கே போவாத, இங்கே போவாத... அதைத் தூர போடு, இதைத் தூர போடுன்னு என்னத்தையாவது சொல்லிட்டு கிடந்துக்கிடுதான்... இங்க நம்ம பாடுதானே திண்டாட்டமா இருக்குது... அப்பப்போ போலீஸ்காரன் வேற வந்து வந்து செக் பண்ணிட்டுப் போறான்... நிம்மதியா ஒருவாய் கஞ்சி குடிக்க முடியுதா? கதவைப் பூட்டக்கூடாது, ஜன்னலைப் பூட்டக்கூடாதுன்னு ரூல்சு வேற...” என அங்கலாய்த்தவாறே, அடுத்தச் சேனலை மாற்றினார் தேசத்தின் சராசரிக் குடிமகனான ராமநாதன். குடிமகன் தான் ‘குடி’மகனல்ல. ‘குடி’மகன்கள் பலர் பின்னால் இடம்பெறுவர்!!

உழைப்பின் அடையாளமாகத் திகழும் வியர்வைத்துளிகள்; குளித்தாலும் அவரைப் பிரியாது நெற்றிமீது காதலில் இழைந்து துவள, தோளில் போட்டிருந்த ஆரஞ்சு நிறத்தில் வெள்ளை கட்டம்போட்ட துண்டால் துடைத்தவாறே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

அவர் மாற்றிய தொலைக்காட்சி சேனலில் பிரபல மனநல மருத்துவரின் பேட்டி அப்போதுதான் தொடங்கியிருந்தது. மருத்துவரை பற்றிய அறிமுகத்தைத் தொகுப்பாளர் அளித்துக்கொண்டிருக்க, தனது பிள்ளைகளைச் சத்தமிட்டு அழைத்தார் அவர்.

“ஏலேய்... எல்லாரும் வந்து இதப் பாருங்க.. இவரு என்ன சொல்லுதாருன்னு கேட்டு வையிங்க.. நம்மள நம்மளே பாதுகாத்துக்கிட்டா தான் உண்டு...” எனத் தந்தையின் கனத்தக் குரலில் செவிசாய்த்துப் பிள்ளைகள் அனைவரும் தந்தை அமர்ந்திருந்த நாற்காலியைச் சுற்றி குழுமினர். விருப்பமில்லாவிட்டாலும் கால்களைக் கைகளால் அணைத்தவாறே அமர்ந்திருந்து அந்த நிகழ்ச்சியை ஆர்வமாகக் கவனிப்பது ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை...’ என்னும் மொழிக்காக அல்ல. அவரிடம் திட்டு, அடி வாங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான். ‘பிள்ளைகளை அடிக்கக் கூடாது...’ எனச் சர்க்கார் சட்டமியற்றினால் என்ன?? இன்றளவும் அடிக்கும் பெற்றோரும், அடிக்கு அஞ்சும் பிள்ளைகளும் இருக்கவே செய்கிறார்கள்.

அனைவரின் வருகையையும் அட்டென்டன்ஸ் போட்டுவிட்டு தொடங்கும் ஆசிரியரைப் போல, தனது பிள்ளைகளின் வருகையைக் குறித்துக் கொண்டார் ராமநாதன். சொல்லிவைத்தாற்போல அவர்கள் வந்ததுமே மருத்துவர் பேசவேண்டிய முறை வந்துவிட்டது.

“வணக்கம் டாக்டர்... இன்னைக்கு ஏஎஸ் வைரஸின் தாக்கம் நாடு முழுக்கத் தலைவிரிச்சு ஆடுது... பெரிய பெரிய மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களால் கூட இதுக்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியல... இதுபத்தின உங்களோட கருத்து என்ன? நோயோட வீரியத்தைக் குறைக்கிறதுக்கு உங்ககிட்டே எதாவது ஐடியா இருக்குதா?” எனத் தொகுப்பாளர் கேட்க, தொண்டையைச் செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார் மருத்துவர் மனோஜ் கார்த்திகேயன்.

மனோஜ் : வணக்கம்... அதாவது நாடு முழுவதும் பரவியிருக்குது, கொடிய விளைவுகளை ஏற்படுத்துது எல்லாமே தினம்தினம் செய்திகள்ல கேட்டுட்டு வர்ற விஷயங்கள்தான். இதுக்குத் தீர்வு என்பது இப்போ வரைக்கும் கண்டுபிடிக்கலை.. கண்டுபிடிப்போமா இல்லையா, நோயைக் கட்டுப்படுத்த முடியுமா இல்லையா இதுவே முதல்ல தெரியலை... ஆனா நோய் பரவலைக் குறைக்கிறது ஒரு எளிய வழியை என்னால சொல்ல முடியும். பொதுவா சொல்லுவாங்க இல்லையா, ‘திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ன்னு.. அதேதான் இங்கேயும்.. தனக்கு இருக்கிற இந்த நோயின் பிடியிலிருந்து மீளணும் அப்படின்னு அந்த நோயாளி மனதளவுல தயாராகணும்.. அப்புறமா அந்தக் கண்ணாடிப் பேழையை விட்டு தூரமா வந்து சோஷியல் டிஸ்டான்சிங் கீப் அப் பண்ணனும்.. இதெல்லாம் பண்ணினாலே 75 சதவீதம் நோயைக் குறைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குது..

தொகுப்பாளர் : இவ்ளோ பாதிப்பை ஏற்படுத்தி, அரசுகளையே ஆட்டம் காண வைக்கிற இந்த வைரஸ் எங்கே எப்படித் தோன்றிச்சு, நம்ம உடம்புக்குள்ள போய் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துதுதுன்னு சொல்ல முடியுமா டாக்டர்??

மனோஜ் : கண்டிப்பா... கண்டிப்பா.. நோய் எங்கே இருந்து உருவாச்சுது அப்படின்னு நம்மால அவ்ளோ எக்ஸாக்டா சொல்லிட முடியாது... ஏன்னா மனுஷன் தோன்றினதுல இருந்தே இந்த வைரஸ் இருந்திருக்குது.. வீரியமே இல்லாம இருந்த அந்தக் கண்ணுக்குத் தெரியாத பொருள் இப்போ பூதாகரமா மாறிநிக்குது... இப்போ தோன்றிய நாகரீகம், நம்மோட வாழ்க்கை முறை இப்படிப் பல காரணிகள் அதோட அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்... கண்ணுக்கே தெரியாத அந்த வைரஸ் நமக்குள்ள புகுந்து, பலுகிப் பெருகுறதுக்கு அந்தக் கண்ணாடிப் பேழை ஒரு ஊர்தியா (Vector) இருக்குது.. கண்ணாடிப் பேழை வழியா ஒருத்தர் மத்தவங்க எல்லாரையும் பார்க்கிறப்போ அந்த வைரஸ் நம்ம கண்ணுக்குள்ள நுழைஞ்சிடுது.. சிலருக்கு அவங்க சூழ்நிலைகள் வாழ்க்கை முறைகள் காரணமா உடலில் உருவாகுற ஆன்டிபாடிகளால அழிக்கப்பட்டுடுது... பலருக்கு சரியான ஆன்டிபாடிகள் உருவாகுறது இல்ல... கிராப்ட் (Grapht) மாதிரி அவங்க உடல் அதை ஏத்துக்குது... கண்ணுல வந்து உக்கார்ந்த அந்த வைரஸ் அப்புறமா மூளைக்கு ட்ராவல் ஆகுது.. அங்கே மெடுல்லா, அந்த லிக்விட் எல்லாத்தையும் தாண்டி ஹைப்போதலாமஸ் பகுதியை அடையுறப்போ உடம்போட ஒட்டுமொத்த கண்ட்ரோலையும் தன்வசப்படுத்திக்கிட்டு, நம்ம பாடி பார்ட்சை சர்வாதிகாரம் பண்ண ஆரம்பிக்கும்... அதோட ஆட்சியால உடம்புக்கு குளுகுளுன்னு இருக்கும்.. நாமளும் அதில் சிலாகித்துப் போறப்போ தான் சுத்தி இருக்கிறவங்களுக்கு நம்மோட மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்... அதாவது இந்த நோய் வெளியே தெரியிற காலம் ஆளுக்கு ஆள் மாறுபடும்.. சிலருக்கு மூணு மாதத்திலேயே தெரிஞ்சிடும்.. சிலருக்கு ஆறு மாதம், ஒரு வருஷம்கூட ஆகலாம்.... ஆனா ஒன்ஸ் உங்களுக்கு வந்துடுச்சுன்னா கட்டாயமா சோசியல்லி இன்ஆக்டிவா ஆகிடணும்.. கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் கடைபிடிச்சிட்டா நம்ம லைஃப் சேஃப்.. இல்லைன்னா சிவியராகி, கிரிட்டிக்கல் கன்டிஷனுக்கு இழுத்துட்டுப் போயிடும்... நம்மை மட்டுமில்லாம எல்லாரையும் அஃபெக்ட் பண்ணிடும்...

இந்தியாவுக்குள்ள இது எப்படி வந்துச்சுதுன்னு பார்த்தா இங்கேயே இருந்துச்சு ஆனா சீனாவுல இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டிருக்குது... எப்பவுமே கண்ணுக்குக் குளிர்ச்சியான பொருள்களை ஈசியா அட்ராக்ட் பண்ணுமில்லையா?? அந்த மாதிரி ஒருத்தர் தொட்டு, ஒருத்தர் தொட்டு எல்லா ஆல் ஓவர் இந்தியாவுக்கும் பரவி இன்னைக்கு இந்த நிலைமையில வந்து நிக்கறோம்... என மனோஜ் பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சியில் கேபிள் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

“ச்சே.. நல்ல நேரத்துல கேபிளை உருவிட்டான் விளங்காமப் போறவன்.. இப்பதான் மெட்டிஒலி (ரீடெலிகாஸ்ட்) பார்க்கலாம்ன்னு நெனச்சேன்.. அது அவனுக்குப் பொறுக்கல...” என ராமநாதனின் மனைவி நொடித்துக் கொள்ள, “ச்சே... இந்த மொக்க நியூஸ் பார்த்ததுக்கு நாலு புதுப்பாட்டாவது பார்த்திருக்கலாம்...” எனத் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர் குழந்தைகள்.

சடிதியாக மின்சாரமும் அணைக்கப்பட, சுற்றிலும் இருளானது. மூன்றுசக்கர வாகனத்தில் ஒலிபெருக்கியை மாட்டியவாறே, ஒருவர் அறிவிப்புச் செய்துகொண்டு வந்தார்.

“அன்பார்ந்த ஆனைகுட்டியூர்வாழ் மக்களே... இதன்மூலம் உங்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் அரிசின் ஆணைப்படி, இனி நமது கிராமத்தில் கேபிள் டிவி நெட்ஒர்க் செயல்படாது... வீட்டிலேயே அடைந்து கிடைப்பதால் மக்களுக்கு மனநோய் வந்துவிடக் கூடாது என்பதற்காக வாரத்திற்கு மூன்றுமுறை பஞ்சாயத்துச் சார்பில் பள்ளித்திடலில் “ஒளியும் ஒலியும்” என்ற பெயரில் பழைய, புதிய பாடல்கள் ஒளிபரப்பப்படும்... இரவில் ஆறுமணி நேரமும் பகலில் இரண்டுமணி நேரமும் என மொத்தம் எட்டுமணி நேரம் மட்டுமே மின்சாரச் சப்ளை இருக்கும்... வீட்டுச் செலவுகளுக்காகத் பணமின்றித் திண்டாடுவோர் அந்தக் கண்ணாடிப் பேழையைக் கொண்டு வந்து பஞ்சாயத்தில் ஒப்படைத்துவிட்டு அதற்கேற்ற பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்தப் பேழை உங்கள் வீட்டுப் பேழையாகத் தான் இருக்க வேண்டுமென அவசியமில்லை. பக்கத்து வீட்டிலோ, எதிர்வீட்டிலோ திருடப்பட்டதாகக் கூட இருக்கலாம்... நமக்குப் பேழைதான் முக்கியம்! மேலும் இப்போது இந்த வாகனத்தைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளின் வாகனம் வந்துகொண்டிருக்கிறது. டோர் டெலிவரி போல வீட்டிற்கே வந்து “ஏஎஸ் தொற்று” இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்...” என அறிவிக்கப்பட, ஒருவரையொருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டனர்.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

2

அரசு வாகனத்திலிருந்து இறங்கிய ஐந்து அதிகாரிகளும் ஒரே வீட்டிற்குள் நுழைந்தனர். அதற்கான உடையுடனும், கையில் ஒருவித உபகரணத்துடனும் நுழைந்தவர்களைப் பார்க்கையில் வீட்டிலிருந்தோர் அனைவரும் ஒருவித பயபக்தியுடன் எழுந்து நின்றனர்.

“ம்ம்... ம்ம்... உக்காருங்க... மரியாதை மனசில இருந்தா போதும்...” என்றவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவர்கள்; குடும்பத் தலைவரிடம், “வீட்டுல எத்தனை பேர்?? எத்தனை ரூம்?” என வினவினர்.

“அது... நான், என் பொண்டாட்டி, ரெண்டு பசங்க, எங்க அப்பான்னு அஞ்சு பேர் சார்... கிச்சன், ரெண்டு பெட் ரூம், ஹால், ஸ்டோர் ரூம், பாத்ரூம்...” என அவர் பட்டியலிட்டுக் கொண்டிருக்க, “மொத்தம் எத்தனைன்னு தான் கேட்டேன்.. லிஸ்ட் போட சொல்லலை...” என முறைத்தார் தலைமை அதிகாரி.

அதற்குக் குடும்பத் தலைவர் பதிலளிக்கும் முன்னரே, குழுவினர் எழுந்துவிட்டனர். சுற்றும் முற்றும் கண்களைச் சுழலவிட்ட தலைமை அதிகாரி, “சுரேஷ்... நீங்களும் கார்த்திக்கும் ஒரு பெட்ரூம் போய்ச் செக் பண்ணுங்க... அருண்.. நீங்களும் பாலாவும் இன்னொரு பெட்ரூம் போங்க... நான் பாத்ரூம் போய்ப் பார்க்கிறேன்...” எனக் கூறிவிட்டு, வெளியே நின்று கொண்டிருந்த பஞ்சாயத்து நபர்களை அழைத்தார்.

“ஐயா... சொல்லுங்க அய்யா...” என்றவாறே அவர்கள் வர, “நாங்க செக் செய்யப்போற ரூம்ஸ் தவிர மத்த ரூம்ஸ் கதவை லாக் பண்ணி, சாவியை எடுத்துட்டு வாங்க...” எனக் கட்டளையிட்டார்.

“சரிங்க ஐயா...” என்றவர்; மற்ற அறைக்கதவுகளை மூட எத்தனிக்கையில், முள்ளாக முறைத்து கண்களால் தடைசெய்ய முற்பட்டார் குடும்பத் தலைவர். அதில் பஞ்சாயத்து ஊழியர் சற்றே தயங்க, “நீங்க பூட்ட வேணாம்... நானே பூட்டிக்கிறேன்...” என முன்வந்து தானாகவே பூட்டிவிட்டு சாவியைத் தனது கால்சராய் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டார்.

“எல்லாரும் உக்காருங்க..” எனக் குடும்பத்தினருக்கு கட்டளையிட்டவர்; “இவங்க இங்கே இருந்து ஒரு அடி கூட நகரக் கூடாது... பார்த்துகோங்க..” என ஊழியரிடம் கூறிவிட்டு கடமையாற்றச் சென்றுவிட்டார்.

வந்திருந்த ஐந்து அதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தேடுதல் வேட்டையைத் துவங்கினர். அப்படி எந்தப் பொருளைத் தேடுகின்றனர் என இன்னுமா உங்களுக்குப் பிடிபடவில்லை?? எல்லாம் அந்தக் கண்ணாடிப் பேழையைத் தான். மனித மனங்களைச் சிதைத்து, மனஅழுத்தத்தை உருவாக்கி, அடிப்படைக் கட்டமைப்பை குலைவுறச் செய்துகொண்டிருக்கும் ஏஎஸ் வைரஸ் பரவலுக்குக் காரணமான அந்தக் கண்ணாடிப் பேழையைத் தான்.

வீட்டில் அதிகப் பணமோ, நகையோ இருந்தால் அதைப் பீரோவிலோ இல்லை பெட்டியிலோ வைத்துவிட்டு வெளியூருக்குச் செல்லமாட்டராம். திறந்த வெளியில் இருக்கும் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகளின் ஊடாகவும், சமையலறை அஞ்சறைப்பெட்டியிலும் இன்னும் இன்ன பிற கண்ணுக்கு அகப்படும் எளிய பொருள்களினூடாகப் புதைத்து வைத்துவிட்டுச் செல்வராம். அதுபோல இந்தக் குடும்பத்தினரும் உஷாராக இருந்திருப்பர் போலும். படுக்கையறையில் சந்தேகத்துக்கிடமான எதுவும் அகப்படவில்லை.

ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டிருந்த குளியலறை மற்றும் கழிப்பறைக்குள் நுழைந்த தலைமை அதிகாரி தான் கொண்டு வந்திருந்த Electronics Detector உதவியால் அங்கிருந்த சோப்புப் பவுடர் பொட்டலம், நறுமணத் திரவப் பொட்டலம் எனப் பரிசோதித்தார். அவருக்கும் தோல்வி தான்.

“கள்ளன் பெரியவனா?? காப்பான் பெரியவனா?? எனக் கேட்டால் கள்ளன் தான் பெரியவன்” என்னும் கூற்றிற்கேற்ப, அஞ்சறைப் பெட்டிக்குள் ஒளித்து வைத்தால் என்ன, அரிசிப் பானைக்குள் ஒளித்து வைத்தால் என்ன தேர்ந்த திருடன் மோப்ப சக்தியாலேயே கண்டுபிடித்துவிடுவானாம். இங்கேயும் அதே தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதுவரை பல வீடுகளில் பரிசோதனையை முடித்துவிட்டு வந்திருந்த அதிகாரிகள் சளைத்தவர்களா என்ன??

அடுத்ததாகச் சமையலறைக்குள் நுழைகையில் காய்கறிக் கூடைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையைப் பார்த்துவிட்டனர்.

குடும்பத்தினரைப் பார்த்து முறைத்தவாறே அங்கிருந்த மேஜையில் எடுத்து வந்த வைக்க, ஏக்கமாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் மூத்த மகன். சுரேஷும் கார்த்திக்கும் தங்கள் பங்கிற்குச் சலவை இயந்திரத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த அழுக்குத்துணிகளுக்கான கலனிற்குள் பதுக்கிவைக்கப்பட்ட கண்ணாடிப் பேழையை எடுத்து வந்தனர்.

இரண்டு கண்ணாடிப் பேழைகளையும் ஒருங்கே அங்கிருந்த மேசையில் வைத்த தலைமை அதிகாரி, “கார்த்திக்... அதை எடுத்துட்டு வாங்க...” என ஒரு சுத்தியலைக் கேட்டுவாங்கினார்.

அதிகாரிகள் அனைவரும் அங்கே அரங்கேறப் போகும் அரும்பெரும் செயலைப் பார்க்கும் ஆர்வத்தில் கண்களை அகல விரித்துக் காத்திருந்தனர். இதை அவர்களது கடமை உணர்ச்சி எனத் தவறாக எண்ண வேண்டா. “எனக்குக் கிடைக்காத பொருள் வேறு எவருக்கும் கிடைத்தல் தகாது...” என்னும் தலைசிறந்த எண்ணம்தான். ஏற்கனவே ஏ.எஸ் வைரஸ் தொற்றுப் பரவத் தொடங்கிய நாளிலிருந்து ஓயாத வேலை; அவர்களது வீட்டிலிருந்த அனைத்து கண்ணாடிப் பேழைகளையும் கையகப்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது. இல்லையேல் வேலை பறிக்கப்பட்டு, கடுமையான தண்டனைக்கு ஆளாவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் வேறு வழியின்றி ஒப்படைத்துவிட்டு பணிக்குத் திரும்பியிருந்தனர். வயிற்றுக்குக் காலமும் சூழலும் தெரியாதல்லவா?? மணிமுள் சரியான நேரத்தில் வந்து நிற்கையில் சொல்லி வைத்ததைப் போல ‘என்னைக் கவனி’ என ஓலமிடுமே... அதற்காகவேனும் பணியைக் காத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு.

அவர் தன் கடமையைச் செய்வதற்காகச் சுத்தியலை ஓங்குங்கால், “அச்சோ.. உடைச்சிடாதீங்க.. அதை உங்ககிட்டேயே ஒப்படைச்சிடுறோம்... நாற்பதாயிரம் ரூபா...” என இல்லத்தின் தலைவர் தலையில் அடித்துக் கொண்டு கதற, “ப்ளீஸ் சார்... உடைச்சிடாதீங்க... அப்பாகிட்டே சண்டை போட்டு ஈ.எம்.ஐல வாங்கினது...” என மண்டியிட்டான் வீட்டின் மூத்த மகன்.

பஞ்சாயத்து அதிகாரிகளை நோக்கி அவர் கண்களால் ஜாடை செய்ய, இருவரது கண்களையும் கைகளையும் கட்டி வண்டியில் ஏற்றப்பட்டனர். அங்கே அவர்களைப் போலவே பல வீடுகளிலிருந்து பிடித்து வரப்பட்ட பலர் இருந்தனர். ‘நாய் பிடிக்கும் வாகனம்’ போலப் பீடித்திருக்கும் பிணியால் ‘மனுஷன் பிடிக்கும் வாகனம்’ வந்து நிற்பதைப் பார்த்த நாய்கள் அனைத்தும் குரைப்பதை நிறுத்திவிட்டு, கும்பலாக நின்று ஆவலாக வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தன.

அவர்கள் ஏற்றப்பட்டிருந்த வாகனத்தில் கூச்சலும் அழுகையும் பற்கடிப்புமே நிறைந்திருந்தன. ஒருவரையொருவர் பார்க்கவும் இயலாமல், தொடவும் இயலாமல் கண்களும் கரங்களும் கயிற்றால் கட்டப்பட்டிருக்க, ஓலமிடவும், கூச்சலிடவும் வாய் ஒன்றே பிரதான வலிநீர்ப்பியாக இருந்தது.

இந்தக் காட்சியைக் கண்ட எஞ்சியிருந்தோரின் முகத்தில் சோகமும் பயமும் ஒருசேர அப்பிக் கொண்டது. தங்கள் இல்லத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேழைகளை வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சிலர் மாற்ற முற்பட, சிலரோ தாங்களாகவே முன்வந்து அதிகாரிகளின் வருகைக்கு முன்னர் அதைச் சிதைத்து சில்லுசில்லாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர். விண்ணதிரும் இந்தக் கூச்சல் நெஞ்சை உலுக்கியது, வாழ்வில் என்றுமே அந்தப் பிழையைச் செய்ய முற்படாமல் சிந்தையை முன்னெச்சரிக்கை செய்யும் திறத்தையதாக இருந்தது.

வீட்டினுள் தலைமை அதிகாரி சுத்தியலால் அந்தப் பேழையை உடைத்த கணம், அது சில்லுசில்லாக நொறுங்கிப் போன கணம் அவர்கள் மனதிலிருந்த அத்தனை கனங்களும் கனமிழந்து போன கணம். கண்களுக்குள் அந்தக் காட்சியைச் சேமித்தவாறே ஏக்கப் பெருமூச்சொன்றை உதிர்த்தனர் அனைவரும்.

இந்த அரும்பெரும் செயலை நிகழ்த்தி முடித்துவிட்டு அவர்கள் அடுத்த இல்லத்திற்கு விரைய, “ஐயோ.. ஐயோ... என் புருஷனையும் புள்ளையையும் பிடிச்சிட்டுப் போயிட்டானுங்களே.. இவனுங்க நல்லா இருப்பானுங்களா... கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம் அதை வச்சிருந்தா தப்பா??! இந்த அரசாங்கத்துக்கு வேற வேலையில்லாம என்னத்தையோ ரூல்ஸ் போட்டுத் தொலைச்சிட்டான்... என் வீட்டுல ரெண்டு பேரை அநியாயமா தூக்கிட்டுப் போயிட்டானுங்களே...” எனத் தலையில் அடித்துக் கொண்டு மூலையில் அமர்ந்து அழத் தொடங்கிவிட்டார் அதின் இல்லத்தலைவி.

அமைதியாக நின்று கொண்டிருந்த இரண்டாம் புதல்வன்; அருகே நெருங்கி வந்து, “ம்மா... கவர்மென்ட் ஒரு ரூல் போட்டா சரியா தான் இருக்கும்... யாரும் வேலையில்லாம ரூல் போட்டு இத்தனை பேரை வீடு வீடா செக் பண்ண சொல்லமாட்டாங்க... இப்ப இப்படி அலட்சியமா இருந்தா உயிரிழப்பு அதிகமாகிடும்... சென்னையிலேயும் மும்பையிலேயும் தினம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறாங்கன்னு அப்பப்போ பேப்பர்ல போடுறதை பார்த்துட்டு இருக்கிற தானே... இவங்க இப்ப இனிஷியல் ஸ்டேஜ்ல தானே இருக்கிறாங்க.. கண்டிப்பா சீக்கிரமா சரியாகி திரும்ப வந்துடுவாங்க... நீ அழாம தைரியமா இரு.. அரசாங்கம் சொல்லுற ரூல்ஸை சரியா ஃபாலோவ் பண்ணிட்டாலே பாதி ப்ராப்ளம் சால்வ்ட்... இப்படி ஒரு வியாதியே இல்லைன்னு அசால்டா இருந்தா அப்புறம் நடக்கப் போற விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. ஃபர்ஸ்ட் வேவ், செகன்ட் வேவ்ன்னு எத்தனை வேவ்ஸ் வந்தாலும் நாம கண்ட்ரோலா இருந்தா நல்லா இருப்போம் மா...” என ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும் போதே அறையே அதிரும் அளவிற்குச் சிரித்தார் தாத்தா.

அவர் அவ்வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் உயிரினம். அவர் எவரையும் தொந்தரவு செய்யாவிடினும் எவரும் அவரைக் கவனித்துக் கொள்ளுவதோ, அரவணைப்பதோ இல்லை. ஏனெனில் அவர் ஒரு சீனியர் சிட்டிசன். என்ன பேசினாலும் ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல...” என ஒரு கதையைத் தொடங்கிவிடுவார். மேலும் வயதாகிவிட்டதால் தற்போதிருக்கும் நவநாகரீக சாதனங்களை உபயோகப்படுத்தும் அளவிற்கு அவரது மூளை அதிவிரைவான வேகமெடுக்கவில்லை. ஆகவே தான் அவர் அவ்வீட்டின் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் உயிரினம்.

இதுகாறும் சாய்ந்து படுத்திருந்த சாய்வு நாற்காலியிலிருந்து மெல்ல எழுந்தவர், “வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்; ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்...” என்றவாறே வெளியில் வந்தார்.

தன் மருமகளிடம் சென்றவர், “இங்க பாரும்மா.. இப்ப அழுது புலம்புறதுல ஒண்ணும் ஆகிடாது.. முன்னமே நான் சொல்லுறப்போ கேட்டிருக்கணும்... இப்ப என்ன ஆகப் போகுது.. இருக்கிற ஒரு பையனையாவது ஒழுங்கா கவனிசுக்கிற வழியைப் பாரு... அங்கே அவனுங்களைக் கூட்டிட்டுப் போய் எதுவும் பண்ணமாட்டாங்க, பயப்படாத... கொஞ்ச நாளுக்குத் தனியா வச்சு கதற விட்டு அழ வைப்பாங்க.. அப்புறம் முன்னேற்றம் தெரிஞ்சதும் ஆளுங்களோட பழக வச்சு, வீட்டுக்கு அனுப்பிடுவாங்க... நல்லதே நடக்கும்ன்னு நம்பு...” எனத் தேறுதல் படுத்தினார்.

அதற்குள் பஞ்சாயத்து வாகனத்தில் அறிவிப்பு வழங்கப்பட்டது. “இதனால் ஆனைக்குட்டியூர் மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது போர் அடிக்குது, நாலு சுவத்தையே பார்த்துட்டு இருக்கிறதுக்குப் பிடிக்கலைன்னு எல்லாரும் கம்ப்ளெயின்ட் பண்ணியிருந்தீங்களாம்.. அதனால அதைச் சரிபண்ணுற விதமா அரசாங்கம் புதுசா ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறாங்க.. அதாவது தினமும் நைட் ஏழு மணியில இருந்து பத்து மணிவரைக்கும் விழிப்புணர்வு நாடகம் போடப்படும்... நாடகம்ன்னா சும்மா கூத்து மாதிரி நெனச்சிக்காதீங்க... நீங்க சொல்ற வெப் சீரிஸ் தான் திரைகட்டி போட்டுக் காட்டப் போறோம்.. ஒருநாள் மிஸ் ஆனாலும் அப்புறம் தொடர்ச்சி கிடைக்காது.. அதுனால மிஸ் பண்ணிடாதிய.. அப்புறம் வருத்தப்படுவிய...” என அறிவிப்பு செய்தவாறே கடக்க, வீட்டிலிருந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நல்லா இருந்த வீட்டுல இருந்த பாதிபேரை பிடிச்சிட்டுப் போயிட்டு இப்போ மிஸ் பண்ணாம நாடகம் பாக்கணுமாம்.. நல்லா இருக்கு இவனுங்க திட்டம்... அராஜகம் பண்ணிட்டு திரியுறாங்க.. கடவுளேன்னு சீக்கிரம் எலெக்ஷன் வந்து ஆட்சி மாறணும்...” என அனைத்து குடும்பத்தின் தலைவிகளும் தங்களுக்குள் புழுங்கிக் கொண்டிருக்க, “யத்தா... சும்மா வீட்டுக்குள்ள அடைஞ்சி கிடக்கதுக்குப் பிள்ளையள கூட்டிக்கிட்டுப் போய்ப் பார்த்துட்டு தான் வருவோமே... போனவங்க பத்திரமா வந்து சேருவாங்க... நீ புலம்பாம இரு...” என அறிவுரை வழங்கினர் பெரியவர்கள்.

ஆடித் தள்ளுபடி சிறப்பு இணைப்பு போல மீண்டுமொரு அறிவிப்பைக் கேட்டதும் அனைவருக்கும், “பெருமாளே... கலி முத்திடுத்து...” எனக் கத்தத் தோன்றியது. அத்தகைய அறிவிப்பு யாதெனில், “தினமும் அனைவரும் கம்பல்சரியா படம் பார்க்க வந்துடணும்... ஒவ்வொரு ஆப்சென்ட் ஆகுற நாளுக்கும் ஈக்குவலா உங்க வீட்டுல இருந்து பிடிச்சிட்டுப் போன ஆளுங்க லேட்டா வருவாங்க...” என்பது.

இதைக் கேட்டதும் ஒருநிமிடம் நகைத்தவர்கள்; “சர்வாதிகாரம்ன்னு சொல்லுறது இதுதான் போல... இப்படியெல்லாமா கொடுமைப்படுத்துவாங்க?? நாம எதைப் பார்க்கணும், எதைப் பார்க்கக் கூடாதுன்னு தீர்மானிக்கிறதுக்கு அவங்க யாரு??” எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் வேறு வழியின்றிச் சென்றேயாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டனர். ஏனெனில் அவர்கள் பணயமாக வைத்திருப்பது அவர்களின் ஆருயிரானவர்களை அல்லவா?!

இவர்களுக்குத் தெரியவில்லை மருந்து கசப்பானதாக இருப்பினும் அதன் விளைவுகள் நம்மை நலமுடன் வாழச் செய்யும் என. அதுபோன்றே அரசாங்கத்தின் இந்தச் சர்வாதிகார, துரிதகால நடவடிக்கையும். புரிந்து கொள்வோர் பிழைத்துக் கொள்வார்; புறக்கணிப்போர் பிரிந்து போவார்.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

3

அனைவரும் அலட்சியத்துடன் தங்களது வீடுகளுக்குள் முடங்கியிருக்க, பஞ்சாயத்துச் சார்பில் அதன் அலுவலர்கள் ஒரு குச்சியுடன் ஒவ்வொருவரின் வீட்டின் கதவுகளையும் தட்டத் தொடங்கினர்.

“ம்மோவ்.. வீட்டுல யாரும்மா??” என்கிற வைகைப்புயலின் தொனியில் அனைவரின் வீட்டுக் கதவையும் தட்டிவிட்டுப் புயல்வேகத்தில் அடுத்தவரின் வீட்டிற்குப் புலம்பெயர்ந்திருந்தனர்.

ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும், “ச்சே.. ஏன்தான் இப்படி அராஜகம் பண்ணுறானுங்களோ தெரியல.. கரன்டையும் உருவிடுறாங்க... எல்லாத்தையும் பிடுங்கி வச்சிக்கிறாங்க, வீட்டுல இருக்கிறவங்களையும் பிடிச்சு வச்சாச்சு... இதுல படம் ஒண்ணுதான் குறைச்சல்.. இருக்கிற நெலமையில இவனுங்க பொழுதுபோக்கைத் தரலைன்னாதான் என்ன?? நானே இப்பதான் உலைக்கு வெந்நீ போட்டேன்.. அதுக்குள்ள தட்டி உசுர வாங்குறானுங்களே...” என்கிற முணுமுணுப்புகள் கேட்காமலில்லை.

பெரியவர்களோ “அப்பாடா... ‘ஒலியும் ஒளியும்’ பார்த்து எத்தனை வருஷம் ஆச்சுது.. கடவுள் புண்ணியத்துல இப்போ வாய்ப்பு கிடைச்சிருக்குது... கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்...” என ‘கடைசி’ காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளப் பிரயத்தனப்படச் சித்தமாயிருந்தனர்.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையுடன் தயாராகியும் தயாராகாமலும் புறப்பட்டு, குறிப்பிட்ட திடலை அடைய அங்கே மணல் திட்டுகளுக்கு மத்திமமாக நாற்பரிமாணம் கொண்ட திரை தொங்க விடப்பட்டிருந்தது.

வீடியோ கேமையும் டச் ஸ்க்ரீனையும் பார்த்தே பழக்கப்பட்ட சிறுபிள்ளைகள் இத்தகைய தோற்றத்தைக் கண்டதும் விசித்திரமாக விழிக்க, தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் தங்களது தொடக்கப் பள்ளி நினைவுகளை மீட்டலாயினர். ஏனெனில் அவர்கள் தொடக்கப் பள்ளியில் பயிலுகையில் மாதத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ அனைத்து மாணவ மாணவிகளிடமும் மூன்று ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் வீதம் பணம் சேகரித்து, குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் திரையரங்கத்தினருடன் குறைந்த லாபத்திற்கான உடன்படிக்கையுடன் பள்ளியிலேயே காந்தி, காமராஜர், நேரு போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களும், சார்லி சாப்ளின் நகைச்சுவைத் திரைப்படங்களும் பார்த்த நினைவுகள் தோன்றி மயிர்கூச்செறியத் தொடங்கியது.

அப்போதே அவர்களது மனதுக்குள் ஒருவித துணுக்குகள் தோன்றலாயின. நடுத்தர வயதினர் தங்களது பதின்பருவம் மற்றும் பருவக் காலத்தில் தங்களுக்குத் தோன்றிய நட்புரீதியான, காதல்ரீதியான அனுபவங்கள் நினைவுக்குத் தென்பட, கல்யாணமென்றால் தங்கள் துணையைக் கண்களால் வருடியும், காதலென்றால் கைகூடா கானலை எண்ணி மனதால் மானசீகமாக வருடியும் நினைவுகூர்ந்தனர்.

இவர்களுக்கே இவ்வாறாயின் வயதான குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும்?! அவர்களும் தங்களுக்கான பிரத்தியேக தனிஉலகத்தில் சஞ்சரிக்கத் துவங்கி விட்டனர்.

கும்பல் கும்பலாகச் சென்று அமர்ந்தவர்கள் தங்களுக்குப் பரிச்சயமான நெருக்கமான எவரேனும் அமர்ந்திருக்கின்றனரா எனக் கண்களைச் சுழலவிட்டவாறே அமர்ந்து கொண்டனர்.

விழிப்புணர்வு திரைப்படம் திரையிடப்படுவதற்கான தொழில்நுட்ப வேலைகள் நடந்த வண்ணமிருக்க, வெகுநாளாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த குழந்தைகள் வெறும்மண்ணில் பாதம் பதித்துத் தங்கள் வயது குழந்தைகளுக்குள் விளையாடத் தொடங்கிவிட்டனர்.

பெரியவர்கள் வேறுவழியில்லாமல் தங்கள் வயதுக்காரர்களுடன் குழாமாகக் கூடி விவாதம் செய்யத் தொடங்கிவிட்டனர். அதன் கருப்பொருள் என்னவென நான் கூறித் தான் தெரிய வேண்டுமா என்ன??

ஆண்களென்றால் “அண்ணாச்சி... இவன் ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு அடிக்கடி கரன்ட் கட் பண்ணுதான் பாத்தியளா??”, “போன ஆட்சியில நெறைய செலவு பண்ணிட்டு போயிட்டானுவ... இப்போ எல்லாம் இவனுவ தலையில தான் வுழுது...” எனத் தங்களுக்கு இஷ்டமான கட்சிக்குத் தோதாக ஏதோவொன்றைக் குறித்து விவாதித்துக் கொண்டிருப்பர். தாய்க்குலங்கள் “யக்கா... நம்ம மேல வீட்டு சுந்தரி புதுசா பிரிட்ஜ் வாங்கியிருக்கா பாத்தியளா... சீட்டு போட்டு வாங்கியிருக்காளாம்... பிலுக்குன பிலுக்குத் தாங்கல...”, “கோமதி மவளைப் பார்த்தியளா?? நேத்து மச்சியில உக்கார்ந்து யார்கூடயோ போன் பேசிட்டு இருக்கா... இது என்னவோ சரியா படல... எப்டியும் ஒருநாள் வெளிய வந்துதான ஆவணும்.. அன்னைக்குப் பேசிக்கிடுதேன்...” என்பதாகத் தங்கள் உலகத்தில் தங்களுக்கான எல்லைகளை விஸ்தீரணம் செய்து கொள்ள எத்தனித்திருப்பர்.

“அந்தக் காலத்துல எப்படிலாம் இருக்கும்.. இப்பதான் இப்டி ஒருத்தரையொருத்தர் பார்க்காம வீட்டுக்குள்ளேயே கிடக்குறோம்..” எனச் சிலாகித்த வண்ணம் பெரியவர்கள் அமர்ந்திருக்க, ஒருவழியாகப் திரைப்படம் ஒளிபரப்புச் செய்யப்படத் தயாராகிவிட்டது.

முதற்கட்டமாகத் தொடரை இயக்கியவர், தயாரித்தவர், தொடரில் தோன்றியவர், இசையமைத்தவர் என ஒவ்வொருவரின் பெயரும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகக் காண்பிக்கப்பட, அயர்ச்சியாக இருந்தது அனைவருக்கும்.

“பேசுனதெல்லாம் போதும்டா... முதல்ல திண்டுக்கல் ரீட்டாவ வரச்சொல்லுங்கடா... வரச்சொல்லுங்கடா...” என்னும்ரீதியில் கூட்டத்தில் சிலர் கூச்சலிட, நேரடியாகத் தொடரின் ஆரம்பக்காட்சியை நோக்கி ஃபார்வர்ட் செய்துவிட்டனர்.

முதல் காட்சியில்...

அர்ஜுன் – ரோஜா சோடிக்குத் திருமண ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்க, முத்தரசு – வெண்ணிலா தம்பதி தங்கள் மகனின் இரண்டாவது பிறந்தநாளை சுற்றத்தாருடன் இனிப்பு வழங்கி, பெருவிழா போல ஆசரித்துக் கொண்டிருந்தனர்.

“பரவால்ல.. நல்ல குடும்பப் படமாத்தான் போடுதான்...” எனப் பெரியவர்கள் சிலாகித்துப் பேச, “மகனைப் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க, பேரனையும் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க... அந்த உறுத்தல், வருத்தம் கொஞ்சம்கூட இல்லாம குஷியா படம் பாக்க ஆரம்பிச்சிட்டு பாரு...” என முணுமுணுத்தாலும் டிவியில் பார்க்கும் மெகாசீரியலுக்கு மாற்றாக ஒளிபரப்பப்பட்ட குறுந்தொடரைப் பார்க்கத் தொடங்கினர் இல்லத்தரசிகள்.

“ப்ச்.. டைம் வேஸ்ட்.. இங்கே வந்து இவங்க போரிங் சீரிஸ் பார்க்கிறதுக்கு வீட்டுல இருந்திருந்தா ஏதாவது உருப்படியாவாவது பார்த்திருக்கலாம்..” எனச் சலித்துக் கொண்டனர் இளஞ்சிட்டுகள்.

மறுநாள் காலையில் ரோஜா கண்விழித்துப் பார்க்க அவளது தலைக்கருகில் ஒரு பரிசுப்பெட்டி இருந்தது. அதைப் பார்த்ததும் வெகுவாக மகிழ்ந்தவள்; “அர்ஜுன் சார்.. கிஃப்ட் வச்சிட்டுப் போயிருக்கிறாரு.. அதுவும் எனக்காக...” எனக் களிகூர்தலுடன் கரத்திலெடுத்து கருத்துடன் கவரை களைந்தாள்.

வெகுசிலாகிப்புடன் பிரித்துப் பார்க்க, அது ஒரு “கண்ணாடிப் பேழை...”. அது விலையுயர்ந்தது எனச் சென்ற வாரம் காட்டப்பட்ட தொலைக்காட்சி விளம்பரத்தைக் கொண்டு ஒப்பிட்டுத் தெளிந்தவள் அவன் தன்மீது வைத்திருக்கும் அன்பினை எண்ணிப் பூரிக்கலானாள்.

கண்ணாடி முன்நின்று தலை வாரிக் கொண்டிருந்தவனைப் பின்னாலிருந்து அணைத்தவள்; “அர்ஜுன் சார்... எனக்காகவா வாங்கிட்டு வந்தீங்க??” என அவன் வாய்வழி அவளுக்கான அன்பைக் கேட்கும் ஆவலுடன் விசாரிக்க, “நான் ஆஃபீஸ் போனதுக்கு அப்புறம் என் ரோஜாவோட நெனப்பு வர்றப்போ எல்லாம் அவகூடப் பேசுறதுக்காக வாங்கிட்டு வந்தேன்.. நான் பக்கத்துல இருக்கிறப்போ அவளுக்குப் போர் அடிக்கக் கூடாதுங்கறதுக்காகவும் வாங்கிட்டு வந்தேன்...” என அவளைத் தன்புறம் இழுத்து, கன்னத்தைக் கிள்ளியவாறே கண்களில் முத்தமிட்டான் அர்ஜுன்.

இவ்விடம் இவ்வாறே இனிதான இராப்பகல் கழிந்து கொண்டிருக்க, முத்தரசு – வெண்ணிலா தங்களது புதல்வனின் ஒவ்வொரு செயலிலும் சிலிர்த்து சில்லறைகளை விட்டெறிந்தவண்ணம் இருந்தனர்.

“அம்மா இங்கே வா... வா...

ஆசை முத்தம் தா.. தா...

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு...

உன்னைப் போன்ற நல்லார்

ஊரில் யாவர் உள்ளார்??

என்னால் உனக்குத் தொல்லை

ஏதும் இங்கே இல்லை...

ஐயமின்றிச் சொல்வேன்..

ஒற்றுமை என்றும் பலமாம்..

ஔவை சொன்ன மொழியாம்...

அஃதே எனக்கு வழியாம்...”

என்கிற பாடலை வெண்ணிலா கற்றுக் கொடுக்கத் தன் மழலைக் குரலில் தட்டுத் தடுமாறி, குழறியவாறே சிறுவன் திருத்தணிகை பாட, அதை ஞாபகர்த்தமாகத் தங்களது மின்னணு கண்ணாடிப் பேழையில் பதிவு செய்து வைத்துக் கொண்டான் முத்தரசன்.

மறுநாள் காலையிலும் சிறுவன் உண்டுகொண்டிருக்கையில், “கண்ணா... கண்ணா... அம்மா ஒரு பாட்டு சொல்லித் தர்றேன்... பாடுறியா??” எனக் கேட்டாள் வெண்ணிலா.

“போம்மா... பாட மாட்டேன்... எனக்குப் பசிக்குது.. தோசை வேணும்...” என அவன் சிணுங்க, “தோசை தானே தங்கம்... தோசை பத்தி பாட்டுப் பாடுவோமா?! நீ சமர்த்தா பாட்டுப் பாடுவியாம் அம்மா உனக்குத் தோசை ஊட்டுவேனாம்...” எனச் சமாதானம் பேச முற்பட்டாள் வெண்ணிலா.

திருதிருவென விழித்த சிறுவன் திருத்தணிகை தன் தகப்பன் முத்தரசுவைப் பார்க்க, “வெண்ணிலா.. அதான் அவன் செய்ய மாட்டேன்னு சொல்லுறான்ல.. விடேன்.. அப்புறமா சொல்லிக் கொடுக்கலாம்...” எனத் தன் மகனுக்காகப் பரிந்து பேச முனைந்தான் அவன்.

“நீ ச்சும்மா இரு முத்து மாமா... நம்ம புள்ள எல்லாத்திலேயும் பெஸ்ட்டா வரணும்... அதுக்குதான எல்லாம் சொல்லிக் கொடுக்குறேன்.. நீ குறுக்க வராத...” என அவனைக் கொஞ்சலுடன் கண்டிப்பு செய்துவிட்டுத் தன் மகனிடம் திரும்பினாள்.

“செல்லம்... என் தங்கம்ல... அம்மா உனக்குச் சொல்லித் தர்றதை சொல்லிக்கிட்டே சாப்பிடுவியாம்...” என அவனைத் தாஜா செய்து சம்மதிக்க வைத்தவள்; தன் கணவனிடம் கண்ணாடிப் பேழையைக் கொடுத்துப் பதிவு செய்யப் பணித்துவிட்டு தன் மகனுக்குப் பாடல் கற்றுக் கொடுக்கலானாள்.

“தோசையம்மா... தோசை...

அம்மா சுட்ட தோசை...

அரிசி மாவும் உளுந்து மாவும்

கலந்து சுட்ட தோசை...

அப்பாவுக்கு நாலு...

அம்மாவுக்கு மூணு...

அண்ணாவுக்கு ரெண்டு...

பாப்பாவுக்கு ஒண்ணு...

ஆக மொத்தம் பத்து...

இன்னும் தின்ன ஆசை...

திரும்பக் கேட்டால் பூசை...” என அவள் பயிற்றுவிக்க, ஒன்றுக்குப் பாதியாகப் பாடிவிட்டு தன் உணவில் கவனமாக இருந்தான் திருத்தணிகை.

உண்மையில் மாமியார் மாமனார் என எவரேனும் பெரியவர்கள் எவரேனும் இருந்திருந்தால், “யம்மா வெண்ணிலா... பிள்ளையப் போட்டு என்னத்துக்கு இந்தப் பாடு படுத்துத?? நிம்மதியா சாப்பிட விடேன்...” எனக் கண்டித்திருப்பர்.

ஆனால் இங்கே எவரும் இல்லாததால் அவள் வைத்ததே சட்டமாகிப் போனது. முத்தரசுவும் அவ்வவ்போது கண்டித்தாலும் தன் இல்லாளின் இஷ்டப்படியே விட்டுவிட்டான்.

இவ்வாறே ஒவ்வொரு பாடலாகத் தன் மகனுக்குக் கற்பித்து அவனது ஒவ்வொரு அசைவையும் படம்பிடித்து வைத்திருப்பவள் பகலில் அவன் தூங்கும் வேளைகளில் ஓடவிட்டு, பார்த்து மெய்சிலிர்த்துப் போவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தாள்.

இங்கே அர்ஜுன் – ரோஜா இல்லத்தில் ஒருமாத காலத்தில் காதலும் இன்பமான தருணங்களும் ஏக்கர் கணக்கில் சேமிப்பிற்குக் கிட்டியிருக்க, திருமணத்திற்காக வேண்டப்பட்ட ஒருமாத விடுப்பு முடிந்து அர்ஜுன் அலுவலகப் பணிக்குத் திரும்பும் நாளும் வந்தது.

அந்த நாளின் காலையிலேயே எழுந்து தன் கணவனுக்குக் காலை உணவாக இட்லியும் தக்காளி சட்னியும் தயார் செய்தவள்; திருமணத்திற்குப் பின்னதான முதல்நாள் வேலை என்பதால் சாம்பாரும் காரட் பொரியலும் அப்பளமும் தயார்செய்து பாத்திரத்தில் இட்டு, அதற்கான பைக்குள் திணித்துத் தயாராக வைத்து விட்டாள்.

அவள் இஸ்திரி போட்டு தயாராக வைத்திருந்த சட்டையையும் கால்சராயையும் எடுத்து மாட்டிக் கொண்டவன்; காலுறைகளையும்(Socks) மைபூசப்பட்ட மூடு காலணிகளையும் (Polished Shoes) அணிந்தவாறே சமையலறைக்குள் நுழைய எத்தனிக்க, “ஷூவை வெளியே போய் மாட்டிக்கோங்க அர்ஜூன் சார்... கிட்சனுக்குள்ள ஷூ போட்டுட்டா வருவீங்க?” என உரிமையுடன் கோபித்துக் கொண்டாள் ரோஜா.

“ஓகே.. ஓகே.. இனி வரலை பொண்டாட்டி...” எனக் கொஞ்சியவன்; பாதரட்சைகளைக் கழற்றி வைத்துவிட்டு, உள்ளே வந்து அவளை அணைத்துக் கொண்டவாறே, “இன்னைக்கு என்ன சமையல் ரோஜா?” எனக் கேட்டான் குழைவாக.

“இன்னைக்கு முதல் நாள் இல்லையா அர்ஜுன் சார் அதனால சாம்பார், காரட் பொரியல், அப்பளம்.. தயிர் வேணும்ன்னா சொல்லுங்க ஒரு பாத்திரத்துல பேக் செஞ்சு வைக்கிறேன்...” என அவள் பொறுப்புடன் கேட்க, “நீ கேட்டதிலேயே தயிர் சாப்பிடாமலேயே ஜில்லுன்னு ஆகிட்டேன் பொண்டாட்டி...” என நெற்றியில் முட்டினான் அர்ஜுன். அவனுக்குச் சிலிர்ப்பாக இருந்தது; இந்தக் காலத்திலும் தன்மேல் அன்பைப் பொழிந்து தாய்க்கு நிகரான அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் கற்பாள் கிட்டிய அதிசயத்தை எண்ணி. ‘புதிய துடைப்பம் நன்கு பெருக்கும்’ என்பதை அறியாதவன் போலும் அர்ஜுன்.

“ஈவ்னிங் அங்கே இங்கேன்னு சுத்தாம சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்க.. உங்களுக்குப் பிடிச்ச சமோசா செஞ்சு வைக்கிறேன்...” என அவள் கூற, “கண்டிப்பா தங்கம்..” என்றவன்; “சரி.. சரி.. ஆஃபீஸ்க்கு நேரமாச்சுது... வந்து டிஃபன் எடுத்து வை...” என உணவுமேஜைக்கு உணவருந்த சென்றுவிட்டான்.

அவனுக்குப் பரிமாறி, பணிவிடைகள் செய்து பணிக்கு அனுப்பி வைத்தவள்; சற்று அசதியாக இருக்கவே சிறிது இளைப்பாறிவிட்டு எழுந்து பார்க்க, மணி பதினொன்றைக் காட்டியது.

“அச்சோ.. பதினொண்ணு ஆகிருச்சா... நான் இன்னும் காலையில சாப்பாடே சாப்பிடலையே...” எனப் பதறியவாறே எழுந்து காலை உணவை உண்டுவிட்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.

தொலைக்காட்சியில் நெடுந்தொடர்கள் பார்ப்பதில் எல்லாம் அவளுக்குப் பெருமளவில் ஈடுபாடு இருந்ததில்லை. ஆகவே பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும் சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவள்; ஒரு கட்டத்தில் சோர்வுடன் சோபாவில் சாய, அந்தக் கண்ணாடிப் பேழையின் திரை அர்ஜுனின் பெயரைத் தாங்கி ஒளிர்ந்தது.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

4

ஏறக்குறைய அனைவரும் அந்தக் கண்ணாடிப் பேழை எதுவென யூகித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இனி ஒவ்வொரு முறையும் கண்ணாடிப் பேழை எனப் பொடி வைத்துப் பூடகமாகப் பேசுவதைப் போல வீண் பில்டப் பிரயத்தனங்கள் செய்வதற்கான அவசியமிருக்காது. ஆகவே இதுமுதல் அந்தக் கண்ணாடிப் பேழையை ‘அலைபேசி @ செல்லிடப் பேசி @கைப்பேசி @ மொபைல் @ செல்போன்’ அனைவருக்கும் பெயர் விளக்கப் பிரகடனம் செய்து அறிவிக்கிறாள் இந்த மின்மினி. (மின்மினி என்றால் எவரெனத் திகைக்க வேண்டாம்; இக்கதையை விவரித்துக் கொண்டிருக்கும் சாட்ஷாத் நானே தான்.)

அலைபேசி திரையில் அவனது பெயரைக் கண்டதும் உற்சாகமடைந்தவள்; “அர்ஜுன் சார்...” என்றாள் புத்துணர்வுடன்.

“ரோஜா... என்ன பண்றடா? சாப்பிட்டியா??” என அவன் அக்கறையுடன் விசாரிக்க, “இல்ல அர்ஜுன் சார்.. இப்பதான் காலையில டிபனே இப்பதான் சாப்பிட்டேன்... கொஞ்சம் அசதியா இருந்துச்சுன்னு கொஞ்ச நேரம் படுக்க நெனச்சா இவ்ளோ நேரம் ஆகிடுச்சு.. கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்... நீங்க சாப்பிட்டீங்களா??” என அக்கறையுடன் விசாரித்தாள் அவள்.

“எப்போடா லஞ்ச் டைம் வரும், என் செல்லம்மா எனக்காக ஆசையா சமைச்சு கொடுத்து விட்டதைப் எப்போடா சாப்பிடுவோம்ன்னு காத்திருந்து சாப்பிட்டேன்... செம ருசி... எல்லாருக்கும் ஆச்சரியம்.. இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணான்னு... நான் சொன்னேன் ‘நான் போன ஜென்மத்துல பெரிய புண்ணியம் பண்ணியிருக்கிறேன்.. அதனால தான் இப்படியொரு பொண்டாட்டி கிடைசிருக்கிறா’ன்னு...” என அவன் கூற, “ச்சூ... போங்க அர்ஜுன் சார்...” எனச் சிணுங்கினாள் அவனது மனைமடந்தை.

“என்ன ரோஜா?? வெட்கப்படுறியா??” எனச் சில நிமிடங்கள் கொஞ்சிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட, கட்டிலில் சென்று அமர்ந்தவள்; வீட்டின் அமைப்பை எவ்வாறு மாற்றியமைக்கலாம், எவ்வாறு கவர்ச்சிகரமாக நேர்மறையை எண்ணங்களை விதைக்கும் விதமாக மாற்றலாம் என்பது குறித்துச் சிந்திக்கலானாள்.

அதற்குள் மணி மூன்றைத் தொட்டுவிட, அவளின் மணி வயிற்றிலிருக்கும் வெற்றிடம் சிந்தனையைக் கலைத்து, “அம்மா... நானொரு வெத்து பாண்டமம்மா... கருணைகாட்டி கவனியம்மா...” எனக் கைலாசாவின் நிறுவனரின் தொனியில் அபாயச் சங்கினை ஊதி, தனது இருப்பைக் காட்டியது. தனக்குப் பசிக்கிறது என்பதை உணர்ந்தவள்; சமையலறைக்குச் சென்று சாம்பாரை மீண்டுமொரு முறை சூடுபடுத்தி, பொரியலையும் மறுவறுவல் செய்துவிட்டு, ஊறுகாய் சகிதம் உண்ணத் தொடங்கினாள்.

அவளது வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பதே வழக்கம். கல்லூரியில் படிக்கையில் காலையிலும் மாலையிலும் வீட்டினருடன் ஒன்றாக அமர்ந்து உண்பாள்; மதியம் தோழியருடன் உண்பாள். இந்த ஒருமாத காலமாக அவனுடன் அமர்ந்தே உண்டு பழகியவளுக்குத் தனியாக அமர்ந்து உண்பது சற்றே சிரமமாக இருந்தது.

எரிச்சலுடன் சுற்றும் முற்றும் நோக்கியவளின் சிந்தைக்குள் சிறந்ததொரு யோசனை உதித்தது. நேராகச் சென்று தன்னவன் தனக்குப் பரிசாக அளித்த அலைபேசியை எடுத்துவந்து தொடுதிரையில் கடவுச்சொல்லை உள்ளிட்டாள்.

முகப்புத் திரையில் தானும் அவனும் தம்பதியாக இருக்கும் புகைப்படத்தில் அவனைக் கண்டு கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவள்; “அர்ஜுன் சார் எப்பவும் அழகுதான்.. உம்மா...” எனத் தனக்குள்ளாகவே சிலாகித்துக் கொண்டு நீகுழாய் (YouTube) செயலிக்குள் பிரவேசித்தாள். மன்னிக்கவும், வலையொளி என்பதே யூடியூபின் தமிழாக்கம். சிரித்தால் முகத்தின் தசைகள் செயல்பட்டுப் புத்துணர்வு பெறுமாம், ஆயுள் அதிகரிக்குமாம். உங்களது ஆயுளை அதிகரிக்கச் செய்யும் நல்லெண்ணத்துடன் உங்களைச் சிரிக்க வைப்பதற்காகவே நீகுழாய் என்றேன். என்னை மனப்பூர்வமாக மன்னித்து விட்டேன் என்பவர்கள் அடுத்தப் பாராவிற்கு விஜயம் செய்யவும். ஏனையோரும் விஜயம் செய்யுங்கள். ஏனென்றால் மேலும் மேலும் உங்களைச் சிரிக்க வைத்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் பல காரியங்களைக் கையில் கொண்டுள்ளேனே!!

“என்ன வீடியோ பார்க்கலாம்?” எனச் சிந்தித்துத் துழாவியே கரத்தில் பாதியளவு காய்ந்து போய்விட்டது. “அடியேய் ரோஜா... கையைக் காய வைக்காத, அப்புறம் சொட்டை மாப்பிள்ளைதான் கிடைப்பான்...” என எப்போதோ கல்லூரித் தோழி கூறியது நினைவடுக்கிலிருந்து குதித்து வந்து தன் வதனத்தைக் காட்டிக் கொண்டு சிரித்து வைக்க, ‘அச்சோ... அர்ஜுன் சாருக்குச் சொட்டை விழுந்துடக் கூடாது.. அவரு இப்போ இருக்கிற மாதிரி கியூட்டா தான் எப்பவும் இருக்கணும்..’ எனச் சூடுகண்ட பூனையாக விறுவிறுவெனத் தட்டில் இருந்த உணவை உண்டுவிட்டு கரத்தையும் பாத்திரத்தையும் கழுவி வைத்தாள்.

அவன் அலுவலகம் முடித்து வீடு திரும்பியதும் அவனை வரவேற்கும் விதமாகச் சமோசாவுடன் வேறேதேனும் இனிப்பு வகைகள் தயாரிக்கலாம் எனத் தீர்மானித்தவள்; அதற்கான செய்முறை குறிப்புகளை நீகுழாய்... இல்லை இல்லை வலையொளியில் பார்வையிட்டவாறே இல்லத்தைப் பெருக்கி, பாத்திரங்களைச் சுத்தம் செய்து, துணிகளைத் துணிதுவைக்கும் இயந்திரத்தில் சுழல விட்டுவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி, வீடெங்கும் சாம்பிராணி மணம் கமழச் செய்துவிட்டு சமையலறைக்குத் திரும்பி, ரவா லட்டுவும் சமோசாவையும் தயாரித்து முடிக்கவும் அவன் அலுவலகத்திலிருந்து திரும்பவும் சரியாக இருந்தது.

இல்லத்தின் வாயில்வரை வீசிய எண்ணெயுடன் கூடிய மசாலாவின் வாசத்தை முகர்ந்தவாறே உள்ளே நுழைந்தான்.

“ஜிங்கு ஜிங்குன்னு மண(ன)ம் கொ(கு)திக்குது...

வா வா எனச் சுவை அழைக்குது...” எனப் பாடியவாறே அர்ஜுன் உள்ளே நுழைய, “வாங்க அர்ஜுன் சார்... முதல் நாள் ஆபீஸ் வேலையெல்லாம் சிறப்பா போச்சுதா?” என விசாரித்தவாறே, அவனது அலுவலகப் பையை வாங்கி அங்கிருந்த மேஜையில் வைத்த ரோஜா; “போய் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. டீ போடறேன்...” என அறிவுறுத்தினாள்.

‘மனைவி சொல்மிக்க மந்திரமில்லை’ என்னும் கூற்றைக் கண்டிப்புடன் பின்பற்றும் ஆதர்ச புருஷனான அர்ஜுன் தன் பெண்டுவின் பேச்சைத் தட்டாமல் சென்று உடைமாற்றிவிட்டு வர, மாலைத் தேநீருடன் அன்றைய நாளின் நிகழ்வுகளை அவன் கூற – இவள் கேட்கவெனப் பாங்கான குடும்ப வாழ்வு நகரத் தொடங்கியது.

இந்தக் காட்சியுடன் ஒளிபரப்பு நிறுத்தப்பட, “எலேய்... எவம்ல அது.. படத்த பாதியில ஆப் பண்ணுனவன்? வந்தேம்னு வச்சுக்க... ஒழுங்கா படத்தப் போடுல.. நல்ல கட்டத்துல ஆப் பண்ணிப் போட்டுட்டான் போக்கத்தவன்...” எனக் கத்தினார் கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர்.

“தாத்தா.. இன்னைக்கு இவ்ளோ தான் போட சொல்லியிருக்காவ... சின்னப் பிள்ளையள் எல்லாம் கொசுக்கடியில படுத்திருக்கு... அதுவல்லாம் தூங்குத நேரமாயிட்டு... போங்க.. நாளைக்குப் போடுவோம்...” எனப் பஞ்சாயத்து அலுவலர்களில் ஒருவர் குறிப்பிட, வீறுகொண்ட வேங்கையாக வெகுண்டெழுந்து விட்டார் அந்தப் பெரியவர்.

“ஏல... ராத்திரி பத்து பன்னெண்டு மணி வரைக்கும் அந்த ச்செல்லை தேய்ச்சிக்கிட்டே முழிச்சிக் கிடப்பாவ.. அப்போம்லாம் ஒண்ணும் செய்யாது.. இங்கன மரத்தடியில சுத்தமான காத்துல வெத்து தரையில படுத்து கிடக்கும் போதுதான் அவியளுக்குக் கொசு கடிக்கும் எல்லாம் செய்யும்... ஒழுங்கா போடு இல்லைன்னா அந்த வேட்டி மாதிரி வச்சிருக்கதை தூக்கிப் போட்டு நொறுக்கிட்டுப் போயிருவேன்...” என அவர் கூச்சலிட, “தாத்தா.. அப்படி என்னத்தையும் செஞ்சிராதீரும்... ப்ரோஜக்டரும் எல்ஈடி ஸ்க்ரீனும் லட்சத்துக்கு மேல.. கவர்மென்டு குடுத்துருக்கான்.. நாங்க அவனுக்குக் கணக்கு சொல்லணும்..” எனப் பதறினார் அலுவலர்.

“அப்படின்னா முழுப்படத்தையும் போடு வே... அதை முழுசா பாக்காம நான் இங்கே இருந்து வரமாட்டேன்...” என அவர் அங்கேயே தர்ணா செய்ய எத்தனிப்பவர் போல அமர்ந்து கொள்ள, சங்கடத்தில் நெளிந்த அலுவலர்; மற்றவர்களை நோக்கி, “என்னம்மா... மீதிப் படத்தையும் போட்டுரவா? தாத்தா பார்த்துட்டு தான் போவேன்னு ஒத்தைக் காலுல நிக்காவள...” எனக் கேட்க, அங்கே மயான அமைதி நிலவியது.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

5

அனைவரும் அமைதியாக இருக்க அவ்விடத்தில் குச்சி விழுந்தால்கூட ஒசைகேட்டும் திறத்தைய நிசப்தம் நிலவியது. அது ‘குண்டூசி கீழே விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும்’ என்னும் உவமைதான்; ஆனாலும் இவர்கள் இருப்பது மணல் தரையிலல்லவா?! ஆகவேதான் சூழ்நிலைக்குத் தக்கதாக வளைத்துவிட்டேன்.

அந்த அமைதியைக் கண்ணுற்ற பிடிவாதம் கொண்ட வயதான குழந்தை, “என்னல அமைதியா இருக்கிய... வாயைத் தொறந்து போடுங்கன்னு சொன்னாதான் என்ன?? வாய்க்குள்ள என்ன பழமா வச்சிருக்கிய??” என அதட்டும் தொனியில் பேச, அவருக்குத் துணையாக வந்தனர் மேலும் இரண்டு வயதுமுதிர்ந்த குழந்தைகள்.

“எலேய்.. வயசுக்கு மரியாதை குடுக்க மாட்டியளோ.. அவருதான் அவ்ளோ சொல்லுதாருல்லா... போடுங்கலே...” எனக் கரத்தை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு சட்டமாகச் சம்மணமிட்டு அமர்ந்து, பிடிவாதம் பிடிக்க, “காலம் போன கடைசியில பிடிவாதத்தைப் பாரு... இன்னும் தரையில உக்கார்ந்து காலை உதைச்சு அடம்பிடிக்காதது ஒண்ணு தான் பாக்கி..” என முணுமுணுத்தவாறே, “சரி சார்.. போடுங்க... அவரு இஷ்டப்படியே நடக்கட்டும்.. கழுத மொத்தமா பார்த்துட்டு வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்கவாவது செய்யலாம்...” என இசைந்தனர் ஏனையோர். உண்மையில் அவர்களுக்கும் அதைத் தொடர்ந்து காண வேண்டுமென விருப்பமே; ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதாகப் பவுசு காட்டினர் அனைவரும்.

அனைவரின் கோரிக்கையையும் ஏற்றுத் தொடர் ஒளிபரப்புத் தொடரப்பட்டது.

இப்போது அர்ஜுன் – ரோஜா குடும்பத்தை விடுத்துப் புதிதாக இன்னொரு குடும்பம் காட்டப்பட்டது.

“ஏலே.. அந்தப் படத்தைத் தான் போட்டியா?? நான் வைதேன்னு வேற என்னத்தையும் போட்டுட்டியா?? வேற யாரோ வாரானுவ...” என அந்தப் பெரியவர் அதற்கும் கூச்சலிடத் தொடங்க, “தாத்தா.. கத்தாதிய.. அதே படம்தான்.. படத்துல நாலைஞ்சு ஜோடி வருவாவ...” என அலுவலர் ஒருவர் அடக்க, குறுந்தொடர் இனிதே தொடங்கியது.

அது நடுத்தரத்திற்கும் சற்றே குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள் வாழும் இடம் என்பதை அதன் தோற்றமே பாங்காக எடுத்துக் காட்டியது.

முன்னும் பின்னும் ஒழுங்கற்ற வீடுகள் அமைந்திருக்க, அனைத்தும் ஓடால் வேயப்பட்டவையாகவோ, சென்ட்ரிங் செய்யப்பட்டுத் தரைதளம் மட்டுமே கொண்டிருந்த வீடுகளாகவோ இருந்தன. அரிதிலும் அரிதாக ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும் மாடியில் ஒரு அறை அமைக்கப்பட்டிருந்தது. அநேகமாக அது மாத சம்பளம் பெறும் நபர்களின் சொந்த வீடுகளாகவோ வாடகை வீடுகளாகவோ இருக்கக்கூடும்.

இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் ஆங்காங்கு கழிவுநீர் செல்லும் வாராங்கால்களும் அதைச் சுற்றிலும் சிறுபுற்களும் அமைந்திருக்க, இருமருங்கிலும் குச்சிகள் நாட்டப்பட்டுத் துணிகளைக் காய வைக்கும் அசை போன்றதொரு அமைப்பை ஏற்பாடு செய்திருந்தனர் அவற்றில் வசிப்போர்.

ஒவ்வொரு வீட்டின் வாசலிலோ இல்லை மொட்டைமாடியிலோ உடைந்து போன தண்ணீர் குடத்தைப் பாதியாக வெட்டி, அதற்குள் மண்ணை நிரப்பி, ரோஜா செடிகளோ பட்டன் ரோஜா செடிகளோ இல்லை சவுக்கு முதலான அலங்கார செடிகளோ நாட்டப்பட்டிருந்தன.

சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் சாக்கடை அமைந்திருக்க, அவற்றில் சில சென்டிமீட்டர் முன்னதாகத் தெருகுழாய் நாட்டப்பட்டிருந்த்து. முந்தைய ஆட்சியின் இறுதியில் அடுத்தப் பஞ்சாயத்துத் தேர்தலில் கண்துடைப்புக்காகப் போடப்பட்ட சிமென்ட் சாலைகள் ஆங்காங்கு பெயர்ந்து கொண்டு நின்றன. ஒருபுறம் மேடாகவும் மறுபுறம் சாய்வாகவும் அமைக்கப்பட்டிருந்த சாலையில் துவைத்த கழிவுநீரும் பாத்திரம் தேய்த்துக் கழிவு நீரும் தேங்கி நிற்க, “ஏய்.. கவிதா வெளியே வா... உன் வீட்டு தண்ணி என் வீட்டு முத்தத்துல வந்து நிக்கி பாரு... நானும் பேசக்கூடாது பொறுமையா இருக்கணும்ன்னு பார்த்தா ஒருநாளைக்கு ஒருநாள் உன்னோட அட்டூழியம் தாங்க முடியாம போய்க்கிட்டு இருக்கு... வேணும்ன்னு அதம்பத்துக்குப் பண்ணுதியோ??” எனக் கத்தினார் ஒரு நடுத்தர வயது பெண்மணி.

“ஆமா... உங்க வீட்டு வாசல்ல தண்ணிய திறந்து உடணும்னு எனக்கு வேண்டுதல் பாருங்க.. அவன் ரோடு போடுதவன் அப்டி போட்டுட்டு போயிருக்கான்.. அவன்கிட்டே போய்க் கேக்கதை வுட்டுட்டு என்கிட்டே வந்து கனைச்சிட்டு நிக்கிய...” என உள்ளிருந்து வெளியே வந்த மற்றொரு பெண்மணி பதில் அளித்தார்.

“அடேய்... நாங்க கனைச்சிக்கிட்டு கிடக்கோம்... எங்களுக்கு வேற வேலையே இல்ல பாத்தியா?? வம்புக்கு தண்ணியயும் ஊத்தி விட்டுட்டு எவ்ளோ ஆங்காரமா பேசுத... உனக்கு எவ்ளோ கீராமிட்டித்தனம் இருக்கணும்??”

“நீங்க பொறுமையா சொல்லியிருந்தா நான் பாட்டுக்கு அமைதியா கேட்டுட்டு ஓரமா போயிருப்பேன்.. நீங்க கத்துனிய.. நானும் பதிலுக்குக் கத்துனேன்.. கடைசியில என்னைக் குறை சொல்ல வந்துட்டிய..”

“ஆமா நான் பொறுமையா சொன்னா மட்டும் இவ அப்டியே கேட்டு கிழிச்சிருவா... நானும் ரெண்டு மாசமா சொல்லிக்கிட்டு தானே இருக்கேன்.. நீ காதுல வாங்குவேனாங்கிய... உன் மாமியா இருந்தவரைக்கும் பொட்டிப்பாம்பா இருந்துட்டு இப்போ என்ன வரத்து வார...”

“இப்போ தேவையில்லாம என்னத்துக்குப் பேசுதிய.. ஒழுங்கா தண்ணி வராம பாத்துக்கோன்னு சொல்லியிருந்தா நான் பாட்டுக்கு அடைச்சி விட்டிருப்பேன்.. தாம்தூம்ம்னு குதிச்சா யாருதான் சொன்ன பேச்சை கேப்பா??”

இவ்வாறாகச் சண்டைகள் ஒருபுறம் நிகழ்ந்த வண்ணமிருக்க, ஆண்கள் தங்களது தனி உலகத்தில் தங்களுக்குத் தெரிந்த அரசியலையும் நாட்டு நடப்புகளையும் விவாதித்த வண்ணம் ‘டீ கடை’யில் கண்ணாடி தம்ளரில் தேநீரைப் பருகியவாறு அமர்ந்திருந்தனர்.

அங்கே ஒரு வீட்டில் பிள்ளைகள் குளிப்பதற்காகத் தங்கள் இல்லத்தின் குளியலறையில் வரிசையில் நின்றுகொண்டிருக்க, ஒவ்வொருவருக்காகத் தலைக்கு எண்ணெய் தேய்த்து, தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள் தனம்.

அவளது பிரதிநிதியாகச் சமையலறையில் சோற்றை வடித்துக் கொண்டிருந்த அவளது கணவன் மூர்த்தி, “ஏ தனம்.. சீக்கிரம் தலையைச் சீவி விட்டுட்டு வா... அடுப்புல குழம்பு கொதிச்சிட்டு.. தாளிச்சு ஊத்திட்டா எல்லாருக்கும் பாத்திரத்துல எடுத்து வச்சிருவேன்..” எனக் குரல் கொடுத்தான்.

“இந்தா வாரேன் மாமா...” என்றவள் அருகே நின்று கொண்டிருந்த தன் முதல் மகளிடம், “வித்யா... தங்கச்சிக்கு இந்த ரிப்பனை மட்டும் கெட்டி விட்டிரு..” எனக் கூறிவிட்டுச் சமையலறை நோக்கி விரைந்தாள்.

உள்ளே சென்றவள் சாம்பாருக்கும் கூட்டிற்குமாகப் பொதுவாகத் தாளித்து இரண்டிற்கும் சிக்கனமாகச் சரிபாதியாக ஊற்றிவிட்டு தன் கணவனிடம், “மாமா.. நீங்க எல்லாருக்கும் சம்படத்துல எடுத்து வச்சிருங்க.. நான் போய்க் கஸ்தூரி அக்காகிட்டே ரெண்டு செல்லி பீடி வாங்கிட்டு வந்துர்றேன்.. நேத்து குறையுதுன்னு வாங்கிட்டுப் போனாவ.. இன்னும் தரலை...” எனக் கூறிவிட்டு கிளம்ப எத்தனித்தாள்.

“இந்தா தனம்.. இதெல்லாம் நல்ல பழக்கமில்ல.. வாங்கிட்டுப் போனா கொண்டு வந்து தர்ற பழக்கத்தை ஏற்படுத்திக்க.. நீயே போய் வாங்குறதுக்கு நீ என்ன வட்டியா வசூல் பண்ற.. இந்தத் தடவ இருக்கட்டும்.. அடுத்ததடவ வந்து தாரதா இருந்தா தருவேன் இல்லைன்னா வேற பக்கம் பார்த்துக்கன்னு கறாரா சொல்லிரு...” என மூர்த்திக் கூற, “ஆங்.. ச்சேரி சேரி...” என்ற தனம் கால்களில் வெந்நீரை ஊற்றியது போலப் பறந்து விட்டாள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான குடிசைத் தொழில்களில் ஒன்று பீடி சுற்றுதல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தப் பீடிகளை அளக்கும் அளவைகளில் ஒன்றுதான் செல்லி என்பதும் வண்டல் என்பதும். ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை.

பீடி கடனாகக் கொடுப்பதும் வாங்குவதும் பெண்களின் இயல்பு. ஒவ்வொருவரும் பீடியை ஒப்படைக்கப் பீடிக்கடை என அழைக்கப்படும் பீடி நிறுவனத்திற்குச் செல்வதற்கெனத் தனியே நேரம் ஒதுக்கப்படும். தனத்திற்கு எட்டு மணிக்கு ஒப்படைக்க ஒதுக்கப் பட்டிருந்தது. அதாவது அவளுக்கு எட்டு மணி கணக்கு. அதற்காகத் தான் இவ்வாறு பணிக்குச் செல்லும் தன் கணவனையும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும் தயார் செய்து அனுப்பிவிட்டு தனது வேலைகளையும் சுனங்காமல் சுதாரித்துக் கொண்டிருக்கிறாள்.

(இது குறித்தும் இந்த மக்களின் வாழ்வியல் குறித்தும் விரிவாக எனது ‘மாறிலி மானிடர்கள்’ கதையில் எழுதியிருக்கிறேன். அதுவும் சஹாப்தம் தளத்தின் போட்டிக் கதைதான். பச்சை வண்ணத்தில் உள்ளது. விருப்பம் இருப்பின் முயன்று பாருங்கள்.)

பள்ளிக்குத் தயாராகி வந்த அவளது மூன்று பிள்ளைகளும் காலை உணவாகக் கொஞ்சமாகப் பழைய சோறையும் துவையலையும் உண்டுவிட்டு பள்ளிக்குக் கிளம்புவதற்காகத் தயாராகினர்.

கிளம்புகையில் தான் வீட்டின் கடைக்குட்டி மெதுவாக ஆரம்பித்தாள் “ப்பா... பண்டம் வாங்க துட்டு..” என. மற்ற பிள்ளைகளும் “ஆமாப்பா.. பண்டம் வாங்க துட்டு...” எனக் கேட்க, “மாசக் கடைசி வேற.. துட்டு இருக்கா என்னனு தெரியலையே...” என்றவாறே பையைத் துழாவினான் மூர்த்தி.

பைக்குள் இருந்து இரண்டு ஒரு ஐந்து நாணயங்களை எடுத்து தன் பிள்ளைகளிடம் கொடுத்தவன்; “பாப்பா... நீங்க ரெண்டு பேரும் இந்த அஞ்சு ரூபாய்க்குப் பண்டம் வாங்கிட்டு தம்பிக்கு இன்னொரு அஞ்சு ரூபாயைக் குடுத்துருங்க.. சரியா?” என்கவும், “சரிப்பா... டாட்டா...” எனக் கூறிவிட்டு விடைபெற்றுவிட, தான் பணிபுரியும் மரம் அறுக்கும் கடைக்குச் செல்லலானான் மூர்த்தி.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

6

அன்றைய தினம் முழுவதும் பல வகையான மரங்களை அறுத்தல், அவற்றை லாரியில் ஏற்றுதல் முதலிய பல வேலைகளை வெகு சிரத்தையுடன் நிறைவேற்றிவிட்டு மாலை நேரத்தில் தேநீருக்காகச் சற்றே இளைப்பாறுதலுடன் அமர்ந்திருந்தான் மூர்த்தி.

“யண்ணே.. இந்த மாசத்தோட நீங்க போட்டுருக்கப் பத்தாயிரம் ரூபா சீட்டு முடியப் போதுல்லா.. என்ன வாங்கப் போறிய ப்ரிட்ஜா கிரைண்டரா?? கிரைண்டர வாங்கிப் போடுங்கண்ணே... அக்கா கடையில வாங்குத மாவு நல்லாவே இருக்க மாட்டிக்குன்னு சொன்னாவ...” என உடன் பணிபுரியும் ஒருவன் பேச, “கிரைண்டர் வாங்கணும்ல.. ஆனா அதை அடுத்த மாசம் முடியும்லா ஏழாயிரம் சீட்டு அதுல வாங்கலாம்.. இந்த ரூபாயில ஒரு டச்சு போன் வாங்கலாம்ன்னு பாக்கேன்...” என்றான் மூர்த்தி.

“போனு வாங்கப் போறியளா?? இந்தப் போனு நல்லா தானண்ணே இருக்கு...” என அவன் கேட்க, “நல்லாத் தாம்டே இருக்கு.. ஆனா இந்தப் பட்டன் போனை வச்சிக்கிட்டு என்னத்த செய்ய.. ஒரு டீசன்ட்டா நாலு இடத்துக்குக் கொண்டு போக வைக்க டச்சு போன்தான நல்லா இருக்கும்.. நாலு விஷயத்தைத் தெரிஞ்சிக்கலாம்.. இந்த வாட்சாப்பு இதுலாம் இருந்தா பிள்ளையளும் கூடப் படிக்கப் பிள்ளைய கிட்டே எதுவும் சந்தேகம் இருந்தா கேட்டு தெரிஞ்சிக்கிடும்லா...” எனத் தன்தரப்பு வாதங்களை முன்வைத்தான் மூர்த்தி.

“நீங்க சொல்லுததும் சரிதான்ண்ணே.. எதுக்கு யோசிச்சு, நல்லா விசாரிச்சு பார்த்துட்டு நல்ல போனா வாங்குங்க.. சரியா??” என அறிவுறுத்தினான் அந்த நலம் விரும்பி. அவன் உண்மையில் நலம் விரும்பியாக இருந்திருப்பின் அந்த அலைபேசிக்கான தேவையே இல்லையென உரைத்திருப்பான். இவன் அரைகுறை நலம்விரும்பி போலும்!!

“வெண்பா... வெண்பா...” என அழைத்தவாறே அவளது அறைக்குள் வந்தார் சாரதா.

அவளது அறையில் சுற்றிலும் அழகான புகைப்படங்கள், ஆளுயர கண்ணாடி ஒன்று மாட்டப்பட்டிருக்க, அதனருகே இருந்த புத்தக மேஜையில் இருந்த தனது ஒன்பதாம் வகுப்பு புத்தகங்களுக்குள் முகத்தைப் புதைத்திருந்த வெண்பா, “ஹான் அம்மா...” என நிமிர்ந்து பார்க்க, “வா.. சீக்கிரம் ரெடியாகு.. பக்கத்து தெருவுல புதுசா சீரியல் ஒண்ணு ஷூட் பண்றாங்களாம்... பார்த்துட்டு வரலாம்...” என அழைத்தார் அவர்.

“ம்மா... நாளைக்கு ஹோம் வொர்க் நெறைய இருக்குது... செஞ்சிட்டு போகலைனா எங்க மிஸ் வெளியே அனுப்பிடுவாங்க, பேரன்ட்சை அழைச்சிட்டு வர சொல்லுவாங்க.. நீ போம்மா... நான் படிக்கணும்...” என அவள் மறுக்க, “பேரன்ட்ஸ தானே கூட்டிட்டு வர சொல்லுவாங்க.. நீ அப்பா நம்பர் கொடுக்காம என் நம்பரைக் கொடு.. நான் வந்து பேசுறேன்.. அம்மாவுக்குக் கம்பெனி கொடுக்கிறதுக்கு உன்னைவிட்டா யாரு இருக்கிறாங்க?? வாடா தங்கம்...” என வற்புறுத்தினார் சாரதா.

“ப்ச்.. இப்படியே சொல்லி என்னை மனசு மாற வச்சிடுமா...” எனச் சலித்துக் கொண்டவள்; ஒரு சாதாரண சுடிதாரை அணிந்து கொண்டு தயாராக, “ஏய்.. இது என்ன ட்ரெஸ்.. நாம ஷூட்டிங் பார்க்க போறோம்.. லாஸ்ட் வீக் ஒரு பிங்க் கலர் ஆப் சாரீ எடுத்து கொடுத்தேன்ல.. அதைப் போட்டுட்டு ரெடியாகு..” என்றார்.

“ம்மா... நாம என்ன நடிக்கவா ஷூட்டிங் போறோம்?? ஜஸ்ட் ஓரமா நின்னு பார்க்கத் தானே போறோம்?” என அவள் வெடுவெடுக்க, “அதெல்லாம் எனக்குத் தெரியும்... நீ நான் சொல்றதை செய்...” என அவளை அதட்டி, குறிப்பிட்ட தாவணியை அணிந்து கொள்ள வைத்துவிட்டார் சாரதா.

இயல்பாகவே சற்றே பூசிய உடல்வாகுடன் உடன்பயிலும் மாணவிகளை விடப் பெரியவள் போன்ற தோற்றத்துடன் இருந்த வெண்பா இந்த உடையில் சற்றே முதிர்ச்சியுடன் தென்பட, நெட்டி முறித்துக் கொண்டார் சாரதா. அவளை அமர வைத்துக் கூந்தலில் பூச்சூடி, முகத்திற்கு அதீத ஒப்பனைகளைப் பூசியவர் தன்னுடன் அழைத்துச் செல்ல முற்பட, அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தார் நாராயணன்.

“எங்க போறீங்க?? இவ ஏன் இவ்ளோ மேக்அப் போட்டிருக்கிறா??” என அவர் வினவ, “பக்கத்துக்குத் தெருவுல ஷூட்டிங் பார்க்க போறோம்.. கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்... ஹாட் பாக்ஸ்ல சப்பாத்தியும் குருமாவும் இருக்குது... எடுத்து சாப்பிடுங்க..” எனக் கூறிய சாரதா தன் மகளைத் தரதரவென இழுத்துச் சென்றுவிட்டார்.

அங்கே அவரது நடவடிக்கைகள் சுத்தமாகப் பிடிக்கவில்லை வெண்பாவிற்கு. அதிகக் கூட்டம் இருந்த போதிலும் படப்பிடிப்பு நிகழ்ந்த இடத்தில் முதல் வரிசையில் சென்று நிற்க வைத்தார் அவளை. சத்தமாக ‘வாவ்... ஆசம்..’ என்பது போலப் பேசி அடுத்தவரது கவனத்தைத் தன்புறம் திருப்பும் வகையில் செய்ய வற்புறுத்தினார். இயக்குநரின் பார்வையில் படுவது போல நிற்க வலியுறுத்தினார்.

தன் தாயின் செய்கைகளில் வெகுவாக வெறுத்துப் போனவள், “இனி இதுபோன்ற இடங்களுக்குத் தன் தாயுடன் வரவே கூடாது” என முடிவு செய்து கொண்டாள். அது அவரது பிழையன்று; அவருக்குள் புகுந்திருக்கும் ஏஎஸ் வைரஸின் லீலைகள் என வெண்பா உணரும் நாள் எந்நாளோ?? அதன் பிடியிலிருந்து தன் தாயை மீட்பாளோ இல்லை தானும் சிக்கிக் கொண்டு சிதைந்து போவாளா என்பது இறைவனுக்கே வெளிச்சம்.



தன் கணவன் அர்ஜுன் வேலைக்குச் சென்றதும் வழக்கமாக ஓய்வெடுப்பதைப் போலச் சிறிது நேரம் உறங்கிவிட்டு, மாலை வேளையில் தனது வேலைகளைத் தொடர்ந்தாள் ரோஜா.

அன்றையதினம் சற்றே சோர்வாக இருக்கவே, தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடி களைப்புத் தெரியாமல் வீட்டை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

துடைப்பத்தைக் கையில் பிடித்துக் கொண்டவள் தான் பாடும் பாடலுக்கு ஏற்றதாக முன்னும் பின்னும் ஏற்றமும் இறக்கமாகவும் அதை அசைக்க, அந்தச் செயல் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

எதிலும் ஒருவித கலையையையும் ரசனையையும் செயல்படுத்துவளுக்கு இது மிகவும் பிடித்துப் போகவே, அதையே தொடரலானாள்.

அன்றைய தினமும் எப்போதும் போலவே,

“மேகம் திறந்து கொண்டு

மண்ணில் இறங்கி வந்து

மார்பில் ஒளிந்து கொள்ள வரவா...

மார்பில் ஒளிந்து கொண்டால்

மாறன் அம்பு வரும்

கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா...” எனப் பாடியவாறே துடைப்பத்துடன் அவள் சுழன்று கொண்டிருக்க, “அம்மாடி ரோஜா...” எனக் குரல் கொடுத்தார் பக்கத்து வீட்டில் வசிக்கும் அஞ்சுகம் அத்தை.

“ஹான் அத்தை.. இதோ வர்றேன்..” என்றவாறே ஓடிச் சென்று அவள் கதவைத் திறக்க, “என்னம்மா வேலையை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா??” என விசாரித்தார் அவர்.

“ச்சே.. இல்ல ஆண்ட்டி... வீட்டை தான் பெருக்கிட்டு இருந்தேன்...” என அவள் கூற, “கொஞ்சமா டீத்தூள் இருந்தா குடுடாம்மா... உன் அங்கிள் வர்ற டைம் ஆகிருச்சு.. கடைக்குப் போயி வாங்கிட்டு வர்றதுக்குள்ள அவர் வந்துடுவார்.. அப்புறம் காச் மூச்சுன்னு கத்துவார்...” என்றவருக்கு உதவும் பொருட்டுச் சமையலறை நோக்கிச் சென்றாள் அவள்.

அவர் கேட்ட பொருளை எடுத்து வந்து கொடுப்பதற்குள் கண்களால் வீட்டின் கூடத்தை ஒருமுறை வலம் வந்திருந்தார் அஞ்சுகம்.

அவள் டீத்தூளை எடுத்து வந்து கொடுக்க, “என்னம்மா.. ஹால் ரொம்பக் கலை நயத்தோட இருக்குது... ப்ளவர் வாஷ், ட்ரீம் கேட்சர், வால் ஹாங்கிங் எல்லாம் நீ செஞ்சதாடா?? ரொம்ப நல்லா இருக்குதே..” எனக் கேட்டவாறே வாங்கினார்.

“ஆமா ஆன்ட்டி.. எனக்கு இதிலே எல்லாம் இன்ட்ரெஸ்ட் அதிகம்.. அவரு ஆபீஸ் போனதுக்கு அப்புறம் சும்மா தானே இருக்கிறேன்னு செஞ்சேன்...” என ரோஜா கூற, “ரொம்பச் சூப்பரா இருக்குதும்மா.. எல்லாத்தையும் சூப்பரா ஒரு போட்டோ எடுத்து எனக்கு அனுப்பிவிடு.. என் பொண்ணுக்கு அனுப்பி வைப்பேன்.. அவளுக்கும் இதெல்லாம் ரொம்ப இஷ்டம்... அப்படியே உன்னோட பேஸ்புக், இன்ஸ்டாகிராம்ன்னு எதிலேயாவது அப்லோட் செஞ்சு விடு... லைக்காவது வரும்...” எனக் கூறிவிட்டு அவர் சென்றுவிட, அந்த வார்த்தைகளை அப்போதே மறந்திருந்தாள் ரோஜா.

அர்ஜுன் – ரோஜா ஆகியோரின் வாழ்க்கை ஒருபுறம், முத்து மாமா – வெண்ணிலா, மூர்த்தி மாமா – தனம் வாழ்க்கை ஒருபுறம், சாரதாவின் மகளான வெண்பாவின் வாழ்க்கை ஒருபுறம் எனச் சென்றுகொண்டிருக்க, புதிதாக இன்னொரு குடும்பம் காட்டப்பட்டது.

“ஏலே.. என்னலே... ஒவ்வொரு நேரமும் ஒவ்வொருத்தன் வாரானுவ.. இவனுவ பேரையும் மூஞ்சியும் நியாவத்துல வைக்கதுக்கே ரெண்டு டம்பளர் பால் குடிக்கணும் போலையே...” எனப் பெரியவர் அங்கலாய்க்க, “தாத்தா.. இவ்ளோதான்.. இதுக்குமேல புதுசா யாரும் வரமாட்டாவ...” என ஊராட்சி அலுவலர் சமாதானம் செய்த பின்னர்த் திரைப்படம் இனிதே தொடர்ந்தது.

“சத்யா... கொஞ்ச சீக்கிரம் வர்றியா?? வேலைக்கு நேரமாயிட்டு இருக்குது...” என வாசலில் நின்றவாறே பிரபு குரல் கொடுக்க, “இதோ வரேனுங் மாமா...” என்றவாறே கையில் மின்கட்டண அட்டையுடன் வந்தாள் அவனது மனைவி சத்யா.

“மாமா... இதுல ஐநூறு ரூபா இருக்குது... இருநூத்து முப்பது ரூபா பில் கட்டிட்டு மீதிய பாக்கெட்டுல வச்சுக்கோங்க.. பாத்துச் சூதானமா செலவு பண்ணுங்க.. இந்த மாசம் பெரியவளுக்குப் பொறந்தநாள் வருது, ட்ரெஸ் எடுக்கணும்.. நெறய செலவு இருக்குது..” எனப் பொறுப்பான குடும்பத் தலைவியாக அவள் அறிவுறுத்த, “சரிம்மா... நீ கதவைப் பூட்டிக்கோ... பாத்து பத்திரமா இரு...” எனக் கூறிவிட்டு தனது பணிக்குச் சென்றான் பிரபு.

தனியார் பருத்தி ஆலையில் பணிபுரியும் பிரபுவின் மனைவி சத்யா. இந்தத் தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். சத்யா ஒரு நாகரீக விரும்பி, நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் தன்னை மிகவும் பகட்டானவளாகக் காட்டிக் கொள்வதில் அலாதி இன்பம் அவளுக்கு.

இருப்பினும் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காகத் தன் சுயத்தை ஒடுக்கி, குடும்பத்தின் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரி பெண் அவள்.

பிரபு சென்ற பிற்பாடு வீட்டிற்குள் வந்தவள் வழக்கமான நிறைவேற்றிவிட்டு சற்றே ஓய்வாக அமர்ந்தவள்; எப்போதும் போலத் தனது சிறிய வடிவிலான அலைபேசியில் முகநூலைத் திறந்து பார்வையிடத் தொடங்கினாள்.

எந்நேரமும் போனை பார்த்துக்கொண்டே நேரத்தை செலவழிப்பவள் அல்ல அவள்; ஆனாலும் எப்போதாவது பேசும், பார்க்கும் முகநூலின் காட்சிகள் அவளுக்கு ஒருவித சிலிர்ப்பையே தரும். பக்கத்து வீட்டுப் பரிமளா தொடுதிரை அலைபேசி உபயோகிக்கும் போது தானும் அதை உபயோகித்துப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்னும் எண்ணம் ஒவ்வொரு முறையும் அவளுக்குள் தோன்றி மறைந்தது உண்மை. குடும்பத்தின் சூழ்நிலை கருதியே தற்காலிகமாக அதைத் தள்ளிப் போட்டிருந்தாள்.

முகநூலில் காணும் புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறையும் தட்டி, அது முழுவதுமாகத் திறக்கும் வரை காத்திருந்து, அதன் பிற்பாடு தனது பொத்தான் வைத்த அலைபேசியில் உள்ள பொத்தானை அழுத்தி, அதை விரித்து, ஒவ்வொரு பாகமாகப் பார்த்து சேர்ப்பதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்றாகிவிடும். ஒற்றைப் புகைப்படத்தைப் பார்ப்பதற்கே இந்நிலை என்றால், காணொளியைக் காண வேண்டுமென்றால்??

“ச்சே... என்ன பொழப்பு இது? ஒரு போன் வாங்க கூட முடியாத நிலமையில இருக்கிறோமே... பேசாம ஒரு போன் வாங்கிட்டாதான் என்ன??” எனத் தனக்குத் தானே யோசித்தவள் அன்றிரவே தன் கணவனிடமும் கேட்டுவிட்டாள். அவனுக்கும் அது சரி எனத் தோன்றவே, “நீ சொல்றதும் சரிதான் சத்யா... ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுது... ஒரு போன் வாங்குவோம்... வீட்டிலேயே இருக்கட்டும் அது... யாருக்காவது தேவை அப்படின்னா எடுத்து யூஸ் பண்ணிக்கலாம்... சரியா??” என ஆமோதித்துத் திட்டத்திற்குச் சம்மதித்து விட்டான்.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
7
அடுத்த மாத சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாயில் போனை வாங்கிக் கொண்டு, அந்தத் துண்டை சமாளிக்க இருவரும் அதிகபட்ச வேலை செய்து கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. பிரபு தனது சம்பளத்தில் 3 ஆயிரம் ரூபாயும் அலுவலகத்தில் அட்வான்ஸ் வாங்கிய முன்பணமாக வாங்கிய 2,000 ரூபாயும் எனத் தன் பங்கிற்கு 5000 ரூபாயை முன்னால் வைத்திருக்க, தானும் தன்னால் இயன்ற அளவு 2,000 ரூபாயை கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள் சத்யா.

“ஒவ்வொரு மாசமும் மளிகைச் சாமான் வாங்கினது போகக் கொஞ்சம் மிச்சம் பிடிச்சது இருந்ததுங்க மாமா...” என அவள் நீட்ட, அவனுக்கும் சற்றே பெருமிதமாகத் தான் இருந்தது.

ஒருவழியாகத் தொடுதிரை கொண்ட அலைபேசியை வாங்கவும் அந்த வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர். எதையோ சாதித்து விட்டது போன்ற பெருமிதம் அவர்களுக்குள்.

இதே நிலைதான் அங்கே மூர்த்திக்கும். அவனும் அந்த மாதம் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த சீட்டுப் பணத்தில் புதிதாகத் தொடுதிரை கொண்ட மின்னணு சாதனமான அலைபேசி வாங்கிய பிரமிப்பிலும் பெருமிதத்திலும் அமர்ந்திருந்தான்.

பிரயத்தனப்பட்டு உடல் வலியையும் பொருட்படுத்தாது உழைப்பவன் அவன், அவனது இஷ்டம் போல் நடந்து கொள்ளட்டும் எனத் தன்னைத்தான் சமாதானம் செய்துகொண்ட அவனது மனைவி தனம் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் பல வாங்க வேண்டியதிருந்தும் அனாவசியமாக ஏன் அலைபேசி வாங்கினாய் எனக் கேட்காமல் விட்டு விட்டாள்.

“காதலிகிட்டே லவ்வை சொல்லி ஓகே வாங்கினவனும், புது ஃபோன் வாங்கினவனும் அன்றைக்கு ராத்திரி தூங்க மாட்டான்...” என்பது எவரும் கூறாத உலக நியதி; அதற்கு மூர்த்தியும் சளைத்தவன் அல்ல என நிரூபித்தான். ஆம் அன்று இரவு முழுவதும் தூங்காமல் அலைபேசியில் ஏதேதோ துழாவி கொண்டிருந்தான்.

எட்டாம் வகுப்பு வரை படித்து இருந்தாலும் அவனுக்குப் புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் அதிகம். ஆகவே தன் நண்பனிடம் கொடுத்துப் புதிதாகக் கூகுள் அக்கவுண்ட் மூலம் உள்ளே நுழைந்தவன்; அலைபேசியில் இருக்கும் அனைத்து அம்சங்களையும் ஒரே இரவில் கற்றுத் தேர்ந்து விட்டான்.

சமையலறை ஒன்று, கூடம், மேலும் இன்னொரு அறை என மூன்று அறை கொண்ட அந்தச் சிறிய வீட்டில் அனைவரும் கூடத்தில் படுத்து உறங்குவது வழக்கம்; அருகே படுத்துக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு அவனது கையில் இருந்த அலைபேசியில் இருந்து வந்த ஒளியால் கண் கூசுகிறது, தூக்கம் தடைபடுகிறது, மறுநாள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனத் தனம் அறிவுறுத்த, “சரிமா... சரிமா... சாரி... சாரி...” என்றவன் சமையலறைக்குள் சென்று படுத்துக் கொண்டான்.

அவன் அவ்வாறு நடந்து கொள்ளவும், எழுந்து வந்த தனம், “மாமா ஏற்கனவே அங்க வேலை பாக்குற இடத்துல சூட்டுலதான் நின்னு வேலை பார்க்கிறிய... இப்போ இங்கேயும் அடுப்பாங்கரைக்குள்ள வந்து படுத்துக்கிட்டா என்ன ஆச்சு?? எப்பவும் புழுங்குது, புழுங்குதுன்னுதான் சொல்லுவிய.. அதுக்குத் தான் உங்களுக்கு நேரா ஃபேனை வைப்போம்.. இப்போ உள்ளே வந்து படுத்துக்கிட்டு ஃபோன் பார்த்தா என்னன்னு சொல்றது??” என அவள் அக்கறையுடன் அலுத்துக் கொள்ள, “ஒரு நாள்தானே ஒண்ணும் ஆவாது... நான் பார்த்துகிறேன் நீ போ...” என அவளை அனுப்பிவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தான் அவன். அவளும் அவனது போக்கில் விட்டு விட்டாள்.

அலுவலகம் முடித்துவிட்டு களைப்பாக வந்த அர்ஜுனிடம் தான் அன்று செய்த புத்தம் புதிய டோர் காட்டனை கொண்டு வந்து காட்டினாள் ரோஜா. “அர்ஜுன் சார்.. இது எப்படி இருக்கு??” என அவள் கேட்க, “உனக்கு என்ன ரோஜா... நீ எது செஞ்சாலும் உன்னை மாதிரியே அழகா தான் இருக்கும்...” என அவன் நெற்றியில் முட்ட, “அச்சோ போங்க சார்... எப்ப பார்த்தாலும் உங்களுக்குக் குறும்புதான் என மெலிதாக நாணினாள் ரோஜா.

“உண்மைதான் ரோஜா... நீ எது செஞ்சாலும் அழகா தான் இருக்கும், நல்லாதான் இருக்கும்... கொஞ்சம் இந்த டோர் காட்டனை அங்கே வச்சிட்டு எனக்கு ஒரு டீ எடுத்துட்டு வர்றியா??” என அவன் சற்றே சோர்வான குரலில் வினவ, “ஹையோ... மறந்தே போயிட்டேன் பாருங்க சார்.. இதோ வர்றேன்...” என வேகமாகச் சமையலறைக்குள் ஓடினாள் அவள்.

எதேச்சையாக அர்ஜூனின் அலுவலகத் தோழன் ஒருவன் வீட்டிற்கு விஜயம் புரிய, அவனுடன் வந்திருந்த அவனது மனைவி வரவேற்பு மேசையில் அழகாக வைக்கப்பட்டிருந்த ரோஜாவின் கைவண்ணத்தைப் பார்த்ததும் அதிசயித்துப் பேச மறந்தாள்.

“ஏய் என்னாச்சுப்பா??” என அவனது தோழன் தன் மனைவியின் தோளைத் தட்ட, “ஒண்ணும் இல்லப்பா... டோர் காட்டன் ரொம்ப அழகா இருக்குது... போனவாரம் நான் ஆன்லைன்ல டிசைன்ஸ் பார்த்தேன்னு சொன்னேன் இல்லையா... அதை விட இது ரொம்ப அழகா இருக்குது...” எனக் கூறவும் அர்ச்சுனனுக்குத் தன் மனைவியை எண்ணி பெருமையாக இருந்தது.

“என் ஒய்ஃப் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் ரொம்பச் சூப்பரா பண்ணுவா... வீட்ல இருக்கிற எல்லாப் பொருளும் அவ கைவண்ணம் தான்..” என வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் சுற்றி காட்டத் துவங்கி விட்டான் அர்ஜுன்.

மேஜையில் வைத்திருந்த பூச்சாடி, தொலைக்காட்சிப் பெட்டியை மூட பயன்படுத்துவதற்காக அவள் வைத்திருந்த அழகிய வண்ண நூல்களான திரை போன்ற உறை தொடங்கித் தங்களது படுக்கையறை தலையணையில் அவர் வரைந்திருந்த அழகான ஓவியம் வரை அனைத்தையும் காண்பித்துச் சிலாகித்துப் பேசினான் அவன்.

ஜன்னல்களில் அவள் தீட்டி இருந்த கிளாஸ் பெயிண்டிங், சுவரில் வரைந்திருந்த வாட்டர் கலர் பெயிண்டிங் என ஒவ்வொன்றாகக் காட்ட அவனது தோழனின் மனைவிக்குப் பேச நா எழவில்லை.

“சூப்பர் அண்ணா... நிஜமாவே நீங்க ரொம்ப லக்கி.. ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ்ந்து அனுபவிக்கிற அளவுக்குக் கலைநயம் கொண்ட பொண்டாட்டி உங்களுக்குக் கிடைச்சிருக்கிறாங்க... உங்க வாழ்க்கை எப்பவும் சலிப்புத் தட்டாமல் போகும்... ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு விதமா அலங்கரிக்கிற அளவுக்கு அவங்ககிட்டே புதுப் புது விஷயங்கள் கொட்டிக் கிடக்குது..” எனக் கூறிவிட்டு, தாங்கள் வந்து இருந்த வேலையைக் குறித்துப் பேசி விட்டு அவர்கள் சென்று விட, சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த ரோஜாவை பின்னாலிருந்து அணைத்தான் அர்ஜுன்.

“அச்சோ... அர்ஜுன் சார் என்ன பண்றீங்க?? கையெல்லாம் சோப்பா இருக்குது... வெயிட் பண்ணுங்க... நான் மொத்தமா பாத்திரத்தை கழுவி முடிச்சுட்டு வந்துடுறேன்...” என அவள் சிணுங்க, “பொண்டாட்டி.. இந்தப் பொண்ணு சொல்ற வரைக்கும் எனக்கு உன்னோட திறமையை அப்ரீசியேட் பண்ணனும்ன்னு உரைக்கவே இல்ல.. இப்போதான் எவ்ளோ பெரிய விஷயத்தைக் கண்டுக்காத குருடனா இருந்திருக்கிறேன்னு புரியுது... இனி உன்னோட திறமையை நீ வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கக் கூடாது.. உன்னோட திறமை இந்த நாலு சுவத்துக்குள்ளேயே முடிஞ்சிடக் கூடாது... நீ இன்னும் பெரிய அளவுல வரணும், நெறைய சாதிக்கணும்... என் பொண்டாட்டின்னு நான் பெருமையா சொல்லிக்கிற அளவுக்கு நீ இந்தச் சொசைட்டியில நீ உயர்ந்து நிக்கணும்...” என உணர்ச்சி பொங்கப் பேசினான் அவன்.

“என்ன சொல்றீங்க அர்ஜுன் சார்?” என அவள் புரியாமல் அவனைப் பார்க்க, “எஸ்... நாளைக்கே உன்னோட ஒவ்வொரு திறமையையும் நீ இந்த உலகத்துக்குக் காட்டப் போற... நீ செய்யுற ஒவ்வொரு விஷயத்தையும் குட்டி குட்டியா வீடியோ, போட்டோ எடுத்து ஷேர் பண்றோம், மாஸ் காட்டறோம்... தி கிரேட் ஆர்டிஸ்ட் கம் டிசைனரா என் பெண்டாட்டி ஆகப் போறா... நாம செலிப்ரிட்டி ஆகப் போறோம்...” எனக் கனவு காணத் தொடங்கினான் அர்ஜுன்.

முகநூல் சுவற்றில் அன்றைக்கான அப்டேட்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சத்யாவின் கண்களில் அந்த விளம்பரம் சிக்கியது; என்னவாக இருக்குமென அதைத் திறந்து பார்க்க, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பொழுதுபோக்கு செயலியின் விளம்பரம் அது.

அவளுக்கு இவ்வாறான குக்கீஸ், பிரவுசிங் ஹிஸ்டரி என்பது குறித்தெல்லாம் பெரிதாகத் தெளிவு இல்லை. என்னவாக இருக்கும், புதிதாக வித்தியாசமாக ஏதோவொன்று தென்படுகிறதே எனத் தொடப் போனவளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்ப் பிரபு எச்சரித்தது நினைவுக்கு வந்தது.

“இப்போ எல்லாம் நூதன கொள்ளை அடிக்கிறாங்க, என் ப்ரெண்டு ஒருத்தர் சொன்னாரு வர்ற விளம்பரத்துல எதையாவது ஒண்ணைக் கிளிக் பண்ணினா அது ஏதோ ஒன்னு ஓபன் ஆகுமாம்; அதைத் தொட்டால் நம்ம போன்ல இருக்குற எல்லாமே அவங்களுக்குப் போய்டுமாம். போன் அக்கவுண்ட், ஆதார் எல்லாத்தையும் ஹேக் பண்ணிடுவானாம்... அதனால பார்த்து பத்திரமா ஃபோனை யூஸ் பண்ணு...” என அவன் அறிவுறுத்தி இருக்க, முதலில் பயந்து போய் அந்த விளம்பரத்தை தவிர்த்துவிட்டு வழக்கம்போல முகநூலில் நேரத்தை செலவிடத் தொடங்கினாள்.

வேலை செய்யும் பொழுது களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகத் தொலைக்காட்சியில் பாடல்களைப் பாடல்களை ஒலிக்கவிட்டுக் கொண்டு வேலை செய்தாள் சத்யா. அன்றைய நாளின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சோர்வாகச் சோபாவில் வந்து அமர்ந்தவள்; சோர்வை மறக்கடிப்பதற்காக நகைச்சுவை சேனலுக்கு மாற்றினால், அங்கே சில தினங்களுக்கு முன்னர்க் கண்ட அந்தச் செயலியை பயன்படுத்திச் செய்யப்பட்ட காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.

பல்வேறு வகையான மக்கள் அங்கே ஒலித்த ஆடியோவிற்கு நடித்தும் வாயை மட்டும் அசைத்தும் தங்கலஹு காணொளிகளைப் பதிவேற்றியிருக்க, அதைப் பார்த்தவளுக்கு “இவங்கள்லாம் பண்றாங்க... நானும் இதே மாதிரி வீடியோ பண்ணினால் என்ன??” எனும் எண்ணம் தோன்றியது திண்ணம்.

அப்போதுதான் ஏ.எஸ் வைரஸ் மெல்ல மெல்ல அவளது வீட்டு வாசல் கதவை தட்டத் தொடங்கியிருந்தது. கதவை திறந்து அதை வரவேற்பதும் திறக்காமல் அதைப் புறக்கணிப்பதும் அவளின் கையிலேயே!!

ஆனால் முயற்சி செய்துதான் பார்ப்போமே என உள்ளுக்குள் தோன்றிய ஆசையால் அந்தச் செயலியை தனது அலைபேசியில் நிறுவினாள்; இது சரியா வருமா என யோசித்து யோசித்து அவள் அச்செயலியை திறக்க முயல, அதில் மின்னஞ்சல் கணக்கும் அதைத்தொடர்ந்து தனியாக ஒரு கடவுச்சொல்லையும் உருவாக்கி உள்நுழையக் கோரியது.

“இதெல்லாம் எதுக்குக் கேட்குதுன்னு தெரியலையே... மாமாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாரே... ஏற்கனவே இந்த மாதிரி பண்ணக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரே... என்ன பண்றது?? டிவியில கூடக் காட்டுறாங்களே... அப்போ பாதுகாப்பானதா தானே இருக்கும்... அவங்க சொல்றதால இது சேஃப்பான ஆப்தான்...” எனத் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அதை நிறுவும் முயற்சியில் இறங்கினாள்.

அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான் தொலைக்காட்சியில் காட்டப்படும் ஒவ்வொரு விஷயங்களுக்குப் பின்னாலும் ஒவ்வொரு லாபகரமான விஷயங்கள் இருக்கிறது என. ஏனெனில் இங்கே லாபம் இன்றித் தொழில் புரிவதற்கு எவரும் சேவை செய்ய வரவில்லையே!! லாபம் ஒன்றே பிரதானமன்றோ!!

இரண்டு நொடி விளம்பரமானாலும் அதற்குப் பின்னே பல கோடிகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பதை அறியாத பேதையவள்.

தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமின்றி இன்று நாம் பார்க்கும் ஒவ்வொரு நீகுழாய் காணொளியின் இடையிடையே காட்டப்படும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் பின்னாலும் எத்தனை ரூபாய் முதலீடு இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

விளம்பரம் வந்தாலே உச்சுக் கொட்டி கொண்டு, அதை ஸ்கிப் செய்து விட்டு கடந்து விடுவோம்; அதன் பின்னான நோக்கங்களை நாம் அறியோம். காணொளியிலும் இடையிடையே வாய்வழியாகக் குறிப்பிட்ட ப்ராடக்ட் குறித்துப் பிரச்சாரம் செய்யும் வலையொளி நடிகர் அல்லது உரிமையாளர்கள் ஆகியோரும் வணிகத்தின் பொருட்டு அதைச் செயல்படுத்திச் செயல்படுத்துகிறார்கள் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

இவ்வாறான பலரின் ஒருவளான சத்யாவும், தனது முகவும் எவ்வாறாவது அந்தத் திரையில் வந்துவிட்டால் போதும், இதுகாறும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததற்கும் பக்கத்து வீட்டு பெண்களின் ஒரு வகையான கேலி பேச்சுக்களைச் சகித்துக் கொண்டு வாழ்ந்ததற்கும் பதிலடி கொடுப்பதற்கு இதுவே சரியான தருணம் எனத் தெளிந்தாள்.

தன் திறமையை நிரூபிக்கவும் இது தான் சரியான ஊடகம் எனத் தனக்குள் கோட்டை கட்டத் தொடங்கினாள் சத்யா. இதற்கான முகாந்திரம் என்னவெனில் அவர்களது குடும்பம் பொருளாதாரச் சமநிலை பெறவில்லை; பிரபு - சத்யா குடும்பத்தினரின் வருமானம் உண்பதற்கும் இதர பல அத்தியாவசிய செலவுகளுக்குமே சரியாக இருக்கும். ஆகவே அவள் விரும்பியது போல நாகரிகமான வாழ்விற்கும் நவநாகரீகமான பகட்டான வாழ்விற்கும் வித்திடும் எந்தப் பொருட்களையும் அவளால் சுவீகரித்துக் கொள்ள முடியவில்லை.

இப்போது கிடைத்த அரிதிலும் அரிதான இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தவள், “நானும் இந்தப் பப்ஸ்மாஷ் ஆப்பை இன்ஸ்டால் செய்துட்டேன்.. இனி நானும் இதே ஆப்புல வீடியோ மேக் பண்ணி போடுவேன்.. இந்தச் சேனலுக்குச் சென்ட் பண்ணுவேன், எல்லாரும் என்னைப் பார்ப்பாங்க... அடுத்தடுத்து என்னோட திறமை இந்த உலகத்துக்குத் தெரிய வரும்... எல்லாரும் என் பக்கத்தில் நெருங்கி வருவாங்க...” எனத் தன்னம்பிக்கை பிரவாகித்தது அவளுக்குள்.

அவளுக்குள் முடங்கிக் கிடந்த அத்தனை ஆசைகளும் திறமைகளும் உருக்கொண்டு வந்து, அந்தக் கொடிய ஏ.எஸ் வைரசை வரவேற்கும் பொருட்டு வாயிலைத் திறந்து வரவேற்பு மொழிந்தன.

குறிப்பிட்ட செயலியை நிறுவி, உள்ளே நுழைந்தவள்; அதைப் பயன்படுத்தும் முறை குறித்து ஆராய்ச்சி செய்யலானாள்.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

8

ஒருகட்டத்தில் அனைத்தையும் அறிந்து தேர்ந்தவள் முதன்முதலாக முகத்தைக் காட்டாமல் குரலை மட்டும் பதிவு செய்து, பதிவேற்றம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ‘குயில்’ சேவைக்குள் நுழைந்தாள்.

தனக்கு மிகப் பிடித்த “தூதுவளை இலை அரைச்சு...” என்னும் பாடலின் இசையைத் தேர்வு செய்தவள்; தன்னால் இயன்ற அளவு வீட்டில் அதிக எதிரொலிப்பு இல்லாத அறையில் இன்று பதிவு செய்ய முயன்றாள்.

குட்டி குட்டியாகத் தீப்பெட்டி சைஸில் நான்கு அறைகளைக் கொண்ட ஒரு சிறிய வீடுதான் அது. அனைத்தும் பொருட்களால் நிரம்பி வழியும். அந்தக் குறுகிய வீட்டிற்குள் நின்று எத்தனை பிரயத்தனப்பட்டுக் குரலை பதிவு செய்ய முயன்றாலும் அது ஒரு வித எதிரொலிகள் கலந்த அந்த ஓசையாகவே பதிவாகும். முதன்முறை தனது பொருளாதாரப் பின்னடைவைக் குறித்து அவளுக்கு ஆதங்கம் பிறந்தது.

“இந்த ஒண்டுக் குடித்தனத்தில் இருந்துட்டு ஒரு வேலை கூட நிம்மதியா செய்ய முடியல... முதல்ல இந்த வீட்டை மாத்திட்டு வேறு எங்கேயாவது போகணும்...” என அலுத்துக் கொண்டே கொல்லைப்புறம் நோக்கி விரைந்தாள்.

கொல்லைப்புறத்தில் எப்போதும் அமர்ந்து பாத்திரம் துலக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டவள்; சுற்றிலும் எவரேனும் தன்னைப் பார்க்கின்றனரா என உறுதி செய்து கொண்ட பின்னரே அந்தக் குறிப்பிட்ட இசையை ஒலிக்க விட்டு தனது குரலை அதனோடு இயைந்து ஒலிக்கும் வகையில் பாடலானாள்.

“தூதுவளை இலை அரைச்சு...

தொண்டையில தான் நனைச்சு...

மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா..

தூங்கா மணிவிளக்க...

தூண்டி விட்டு எறிய வச்சு...

உன் முகத்தைப் பார்க்க போறேன் நாள் கணக்கா..

அந்த இந்திரன் சந்திரனும்

மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்...

அந்த ரம்பையும் ஊர்வசியும்

மாமனுக்குத் தொண்டுகள் செய்திடணும்...

நான் காத்தாகி ஊத்தாகி

மாமன தழுவி கட்டிக்கணும்...” எனப் பல்லவி, சரணத்தை மட்டும் பாடி முடித்தபின் அந்தச் செயலிலேயே சரணாகதி அடைந்து விடலாம் போலிருந்தது அவளுக்கு.

பதிவு செய்த குரலை ஒலிக்க விட்டு பார்க்க, அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. “சத்யா உனக்குள்ளே ஒரு ஸ்ரேயா கோஷல் ஒளிஞ்சிட்டு இருந்திருக்கிறா... நீதான் இத்தனை நாளா கவனிக்காம இருந்திருக்கிற...” இருக்கிறதா எனத் தனக்குத் தானே பெருமிதம் கொண்டது அவள் பாராட்டை அறியா மனம்.

குறிப்பிட்ட பாடலை முழுவதுமாகக் கேட்டுப்பார்க்க, அதன் பின்புறம் காற்றடிக்கும் ஓசையும் பக்கத்து வீடுகளில் “அடியே கவிதா... வெளியே வாடி...” போன்றதான ஓசையும், தொலைக்காட்சி தொடரின் ஒலிக்கும் “சந்திரலேகா.... சந்திரலேகா...” என்னும் பாடலின் ஓசையும் கேட்க, அவளுக்கு எரிச்சலாக வந்தது.

“இது என்ன... எனக்குன்னு வந்து சேருதுங்க பாரு..” என எரிச்சலுடன் குறிப்பிட்ட ஆடியோவை டெலிட் செய்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து சத்தங்கள் எதுவும் கேட்காத வகையில் அறையின் அமைப்பை மாற்றி, பொருட்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பாடலை தொடர்ந்தாள்.

மீண்டும் அதே “தூதுவளை இலை அரைச்சு...” பாடலை பாடி பதிவு செய்தவள் ஒருவாறாகப் பல ஃபில்டர்கள் செட்டிங்குகள் என மாற்றி, தனது குரலை சீரமைத்து பாடலை நிறைவு செய்து விட்டாள்.

இப்போது அந்த “தூதுவளை இலை அரைச்சு...” பாடல் சரணம் மற்றும் பல்லவியுடன் தயாராக இருந்தது. இதைப் பதிவேற்றலாமா வேண்டாமா எனத் தனக்குள் யோசித்தவள் “வேண்டாம்.. யாராவது நம்மள சுத்தி இருக்கிறவங்க கேட்டுட்டா தப்பாயிடும்.. நம்ம குரல் இங்கே இருக்கிற எல்லாருக்குமே தெரியும்... ஒருவேளை இந்தக் குரலை நான் தான் பாடினேன் தெரிஞ்சா எல்லாரும் என்ன நினைப்பாங்க??” எனத் தனக்குள் சிந்தித்து, தவறியும் அதை எவரிடமும் காட்டாமல் பதிவேற்றாமல் அப்படியே தனக்குள் சேமித்து வைத்துக்கொண்டாள்.

மறுநாள் அனைவரும் இல்லாத நேரத்தில் தனக்கு நேரம் போகவில்லை என்பதனால் அடுத்ததாக “தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ??” பாடலையும் பாடி பதிவு செய்து வைத்துக்கொண்டாள். அடுத்தடுத்த நாட்களில் “முத்து நகையே... முழு நிலவே...” என்ற பாடல், “மயங்கினேன் சொல்ல தயங்கினேன்...” என அவளுக்கும் அவள் கணவனுக்கும் பிடித்த அனைத்து பாடல்களையும் பாடி பதிவு செய்து வைத்துக் கொண்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் பிரபு வேலைக்குச் செல்லவில்லை. மதிய உணவு முடித்து விட்டு சற்று ஓய்வெடுக்கலாம் என அந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு கட்டிலில் படுத்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தான்.

எத்தனை முயன்றும் தூக்கம் வராமல் போகவே மனதை வருடும் மெல்லிசை பாடல்களைச் சில தினங்களுக்கு முன் மெமரி கார்டில் பதிந்து வைத்திருந்ததை நினைவுகூர்ந்தவன், “புது ஃபோன்ல கேமரா, ஸ்பீக்கர்லாம் எப்படி இருக்குதுன்னு பாக்கவே இல்லையே...” என்பதற்காக, “சத்யா அந்தப் புது ஃபோனை எடுத்துட்டு வாமா...” என்க, “இதோ வரேன் மாமா...” என எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள் சத்யா.

“கொஞ்சம் இந்த மெமரி கார்டை உள்ளே போடும்மா... தூக்கம் வரமாட்டேங்குது, இந்தப் பாட்டைக் கேட்டா நல்லா இருக்கும் போல இருக்குது...” எனக் கூற, “சரிங்க மாமா...” என்றவள்; பாடலை ஒலிக்க விட்டுவிட்டு தனது வேலைகளைத் தொடர சென்று விட்டாள்.

ஒவ்வொரு பாடலாக ஒலித்துக் கொண்டிருக்க, இடையில் பதிவுசெய்து வைத்திருந்த அவளது சொந்த குரலாலான பாடலும் ஒலித்துவிட்டது. உள்ளறையில் வேலையாக இருந்த சத்யா இதைக்கேட்டு விடவும், “அச்சச்சோ... இது எப்படி இடையில கலந்தது?? மாமாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாரே...” எனப் பதறியடித்துக் கொண்டு வெளியே வர, அவனோ கண்களை மூடி பாடலில் சிலாகித்தவாறு படுத்திருந்தான்.

“என்ன.. மாமா எதுவும் சொல்ல மாட்டிக்கிறார்? ஒருவேளை உண்மையாவே நம்ம குரல் நல்லாத்தான் இருக்குதா? இத்தனை நாள் பழகியும் அவர் என்னோட குரலைக் கண்டு பிடிக்கலையா?? இவரே கண்டுபிடிக்கலைன்னா வேற யாரும் அவ்ளோ ஈஸியா கண்டுபிடிச்சிட மாட்டாங்க.. நான் நல்லாத்தான் பாடுறேன்... இனியும் இந்த மாதிரி பாடி அப்டேட் பண்ணனும்...” என நினைத்துக் கொண்டு, “யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க.. அப்பைட்யே கண்டுபிடிச்சாலும் அவங்க கண்டுபிடிக்கிறதுக்குள்ள நான் என் திறமையால மடமடனு வளர்ந்து பெரிய ஆளாகிடுவேன்... அப்புறம் அவங்க எல்லாரும் என்னைக் குறை சொல்ல முடியாது.. அண்டிக் கொள்ளத்தான் வந்தாகணும்...” எனத் தனக்குத் தானே சுய ஊக்குவிப்பு, சுய தேறுதல் செய்து கொண்டாள்.

இவ்வாறாகத் தனக்குத தானே சமாதானம் கூறிக் கொண்டாலும் உண்மையில் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் ஒவ்வொரு ரியாலிட்டி பாடல் போட்டிக்கு பின்னாடியும் பல அரசியல், பலரின் தலையீடுகள் இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு உரையாடல்கள். ஒவ்வொருவரின் ஒவ்வொரு அசைவும் காரணத்துடன் காட்டப்பட்டவை என்பது அவளுக்குத் தெரியும்.

சென்ற வாரம்தான் அனைவருக்கும் பிடித்த, நன்றாகப் பாடக்கூடிய ஒரு போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படாமல் ஓட்டு எண்ணிக்கையில் சுமாராகப் பாடிய போட்டியாளருக்கு அந்த நிகழ்ச்சியின் டைட்டிலும் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடும் சென்று சேர்ந்திருந்தது.

அதுபோன்ற பாடல் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து தனது திறமையை உலகுக்கு நிரூபிப்பது சற்றே கடினம் எனத் தெளிந்தாள்.

பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டது போலாகும் என்னும் கூற்றுக்கு ஏற்ப, கிணற்றுத் தவளையான சத்யாவின் வீட்டிற்குள் நுழைந்து ஒரு ஓரமாக அமர்ந்திருந்த ஏ.எஸ் வைரஸின் தாக்கத்தால் ஏதேனும் ஒன்றை செய்து வேகமாக முன்னேறி விட வேண்டும், தன்னை நிரூபித்து விட வேண்டும் என்னும் ஆசை கனன்று கொண்டிருந்தது.

அதன் முதற்படியாகத் தான் பாடிய பாடலை அந்தச் செயலியில் பதிவேற்றினாள். அந்தப் பாடலை பதிவேற்றி முடித்த அடுத்த ஐந்து நிமிடத்திலேயே எவரேனும் பார்த்திருப்பர், எனது குரலை எனது திறமையை அங்கீகரித்து விட மாட்டாரா என்ற ஏக்கம் பிறந்தது சத்யாவிற்கு.

இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை அதைத் திறந்து பார்த்து, அவளது பாடலைக் கேட்டவர்களின் அவர்களின் எண்ணிக்கையைச் செக் செய்யலானாள். ஒருகட்டத்தில் யாரும் கேட்கப்போவதில்லை என்னும் முடிவுக்கு வந்தவள்; அலைபேசியை அணைத்து, ஒரு பக்கமாக வைத்து விட்டு அன்றாட வேலைகளில் மூழ்கிப் போனாள்.

மறுநாள் காலையில் கணவரும் பிள்ளைகளும் தத்தமது வேலைகளுக்கும் பள்ளிகளுக்கும் கிளம்பிச் சென்று விட, எதேச்சையாக அலைபேசியில் குறிப்பிட்ட ‘குயில்’ செயலியைத் திறந்து பார்த்தவளுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி!!

ஒரே பாட்டில் பெரிய ஆளாவதற்கு இது என்ன சூரிய வம்சம் திரைப்படமா?? இல்லை நீ ஒரு பணக்காரி, இத்தனை நாள் உன்னை ஏழையாக வைத்து உன் மனத்திட்பத்தைப் பரிசோதித்தோம் எனக் கூறி ஃப்ளாஷ்பேக் அவிழ்ப்பதற்கு இது என்ன தொலைகாட்சி தொடரா??

எதார்த்தமான இவ்வாழ்வில் முன்னர்க் குறிப்பிட்டது போல மளமள முன்னேற்றம் இல்லாவிடினும் பூச்சியமாவது படிக்கட்டில் நின்று கொண்டிருப்பவர்களுக்கு முதல் படிக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதுவும் ஒருவகை முன்னேற்றம் தானே!! வாழ்க்கையில் முன்னேற்றம் என வரையறுக்கப்படுவதும் இதுவன்றோ!!

அவளது முதல் குரலை முப்பது பேர் பார்வையிட்டு, பதின்மூன்று பேர் கேட்டிருந்தனர் எனச் செயலியின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. அதிலும் ஒருவர், “நல்லா இருக்குது வாய்ஸ்...” எனப் பதிலுரை கருத்திட்டிருக்க, வானுக்கும் பூமிக்கும் குதிக்கத் தொடங்கி விட்டாள் சத்யா.

“இந்த மாமா நான் சமைச்சதைக் கூட நல்லா இருக்குதுன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரு... 13 பேர் என்னோட குரலை கேட்டு இருக்காங்க... அப்படின்னா என்னோட குரல்ல ஏதோ ஒன்னு இருக்குது, அது அவங்களுக்குப் பிடிச்சிருக்குது அப்படித்தானே அர்த்தம்!!” எனத் தனக்குத்தானே ஏதேதோ முடிவுகளை வகுத்துக் கொண்டவள்; அவரது கருத்திற்கு நன்றி தெரிவித்துப் பதிலைப் பதிவிட்டாள்.

“ஹையோ... எனக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை ரொம்பச் சந்தோஷமா இருக்குது... என் குரலையும் நல்லா இருக்குதுன்னு ஒருத்தங்க சொல்லிட்டாங்களே...” எனத் தனக்குத் தானே பெருமிதத்துடன் வீட்டை முழுவதும் வலம் வந்தாள் சத்யா.

அங்கே ரோஜா வீட்டில்..

அர்ஜுன் தன் மனைவிக்கு அவளது திறமையை வெளிக்கொணரும் வகையில் அதற்கு ஏற்ற ஒரு சமூக வலைத்தளக் கணக்கைத் தொடங்கியிருந்தான்.

தொடங்கி ஒரே நாளில் லட்சம் பேர் பார்த்து விடுவர், தான் ஒரே நாளில் ஒபாமா ஆகிவிடலாம் எனும் கனவு கண்டு கொண்டிருந்த அவனுக்குப் பெரிய சறுக்கலாகிப் போனது.

பெரிய அளவில் வரவேற்பு என எதுவும் இல்லை என்றதும், தன் நண்பர்களிடம் இது குறித்து ஆலோசித்தவன்; தன் மனைவியின் திறமைகளை எவ்வாறு உலகறியச் செய்யலாம் என யோசித்தான்.

தன் கணவன் தனக்காக எடுக்கும் பிரயத்தனங்களில் அவனது அன்பு வெளிப்பட, உச்சி குளிர்ந்து போனாலும் தன் பொருட்டு அவன் கஷ்டப்படுவதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை மென்மையான மலரொன்றின் நாமம் கொண்ட பெண்ணவளின் மனதால்.

ஆகவே அவனிடம் வந்தவள்; “விடுங்க அர்ஜுன் சார்.. விடுங்க எனக்கு இந்த உலக அளவில் ஃபேமஸ் ஆகணும், அப்படியெல்லாம் எந்த ஆசையும் இல்லை... எனக்கு நீங்க தான் உலகம்... உங்களை நல்லா பாத்துக்கணும், அது மட்டும் தான் என்னோட மனசுல இருக்குது... எனக்கும் ஒரு காலத்தில் பெரிய அளவில் ஆசைகள், கனவுகள் இருந்ததுதான் பெரிய ஹீரோயின் ஆகணும், மாடல் ஆகணும்ன்னு... ஆனா இப்போ அதெல்லாம் மலையேறிப் போச்சுது... எனக்காக எல்லாத்தையும் பாத்து பாத்து செய்யறதுக்கு நீங்க இருக்கீங்க, நீங்க தான் என்னோட பெரிய சொத்து... நீங்க தான் என் வாழ்வில் கிடைத்த பெரிய வரம்... உங்களுக்குச் சேவை செய்வதுதான் என்னோட வாழ்வின் மிகப்பெரும் லட்சியமே..” எனக் கூற, அதை மறுத்து உரைத்தான் அர்ஜுன்.

“இங்கே பாரு ரோஜா... கல்யாணம், புருஷன், குடும்பம் இதெல்லாம் ஒரு பொண்ணுக்கு முக்கியம் தான்... ஆனா அதையும் தாண்டி அவளுக்குன்னு ஒரு ஐடென்ட்டியை இந்தச் சொசைட்டியில உருவாக்கணும்... வெறுமனே இந்தச் சமைக்கிறது, துவைக்கிறதுன்னு உன்னோட திறமையும் முடிந்து போகிற கூடாது... இது மட்டுமே உன்னுடைய அடையாளம்ன்னு யாரும் உன்னைக் குறைச்சு எடை போட கூடாது... அதனாலதான் உனக்கு இன்னும் ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோன்னு சொல்றேன்... இங்க பாரு ரோஜா... குடும்பம், புருஷன் அப்படிங்கிற குறுகிய வட்டத்துக்குள்ள உன்னோட உலகம் சுருங்கிடக் கூடாது... நீ சிறகை விரிச்சு உயர உயர பறக்கக் கூடிய பீனிக்ஸ் பறவை... அதை முதல்ல புரிஞ்சுக்கோ..” என அர்ஜுன் தன் மனைவியை உத்வேகப்படுத்தும் நோக்கில் பேச, அவளுக்கோ பெருமை தாளவில்லை.

எத்தனையோ பெண்கள் வேலைக்குச் சென்றாலும் “வீட்டிலேயே இருந்துவிடு, உலகத்தை அறிந்து கொள்ளாத, குடும்பத்தை மட்டுமே பிரதான உறவாக, உலகமாகக் கருதிக் கொண்டு அவர்களுக்குச் சேவை செய்வதொன்றையே தலையாயக் கடமையெனக் கருதி இங்கே முடங்கிக் கொள்...” என அறிவுறுத்தும் கணவன் கிடைத்திருக்க, தனக்கு மட்டும் இத்தனை பொறுப்பான, நலனில் அக்கறை கொண்டுள்ள கணவன் கிடைத்ததை எண்ணி சிலாகித்துப் போனாள்.

“சரி அர்ஜுன் சார்... நான் நாளையில் இருந்து ட்ரை பண்றேன்... என்னால முடிஞ்ச அளவுக்குக் கடமையைச் செய்வோம், பலனை எதிர்பார்க்க வேண்டாம்.. எனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன் அப்படிங்கிற திருப்தியே எனக்குப் போதும்.. அதைப் பார்க்காதவங்க மிஸ் பண்ணிட்டாங்க அப்படின்னு நினைச்சிக்கிறேன் என்றாள் ரோஜா.

அவள் நெற்றியில் முத்தமிட்டவன்; அவளுக்கு ஒரு வலையொளி கணக்கையும் தொடங்கிக் கொடுத்துவிட்டு, “உன் இஷ்டம் போல என்ன வேணா செய் ரோஜா... உன் மனசு சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும்... உன் இஷ்டப்படி பாடுறது, ஆடுறது, வரையுறது, தீட்டுறதுன்னு என்ன தோணுதோ அதைப் பண்ணு...” என உரிமையைக் கொடுத்துவிட, அவள் மனதில் இன்னும் உயர்ந்து போனாள் அர்ஜுன்.

தனக்குத் தெரிந்தவற்றை அவள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருக்கத் தொடங்கினாள்.
 
Last edited:

Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18

9

எப்போதும் முகத்தைக் காட்டாமல் தன் கையில் குறிப்பிட்ட பொருள்களை வைத்துக் கொண்டே “இதை இப்படிப் பின்ன வேண்டும்... இதை இவ்வாறு வரைய வேண்டும்...” எனக் குரல் மட்டும் தெரியும் வகையில் விளக்கிக் கொண்டிருப்பவள்; அன்று முகத்திற்கு ஒப்பனை செய்துகொள்வது குறித்து ஒரு காணொளியை பதிவேற்ற நினைத்தாள்.

விதவிதமாக ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏற்ற வகையில், ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் ஒப்பனை செய்து கொள்வது எவ்வாறு, அதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் யாது, அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பவை குறித்து நேரலையில் செய்முறை விளக்கமளிக்கத் திட்டமிட்டிருந்தாள்.

பொதுவாகவே மேக்அப் போட்டுக்கொள்வது, விதவிதமான அதற்கான உபகரணங்கள் சேமித்து வைப்பது என்பது ரோஜாவின் பொழுதுபோக்குகளில் ஒன்று. தன் அம்மா வீட்டில் ஓய்வாக இருக்கும் சமயங்களில் அருகில் இருக்கும் சிறு பிள்ளைகளுக்கு முகத்திற்கு ஒப்பனை செய்து விட்டு நேரத்தை போக்குவது அவளது வழக்கம். அந்தப் பிள்ளைகளுக்கும் ஒப்பனை செய்து கொள்வது விருப்பம் என்பதால் இவளிடம் விரும்பியே வந்து பழகுவர்.

இப்போது அது குறித்து ஒரு காணொளியை பதிவேற்ற எண்ணிய ரோஜா; அருகில் எவரும் இல்லாததால் தனது முகத்துக்குத் தானே ஒப்பனை செய்து கொள்ள முன்வந்தாள். மேலும் அடுத்தவருக்கு ஒப்பனை செய்வது எளிது, தனக்குத்தான் செய்து கொள்வது சற்றுச் சிரமம் என்பதால் ‘ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல’ என்பதாக அந்தச் சிரத்தைமிக்கக் காரியத்தைக் கையில் எடுத்தாள்.

கண்ணாடி முன் சென்று அமர்ந்தவள்; அன்று விடுமுறையில் இருந்த தன் கணவனின் கைகளில் அலைபேசியைக் கொடுத்து, “அர்ஜுன் சார்... இதைக் கொஞ்சம் வீடியோ எடுக்குறீங்களா??” எனக் கேட்டாள்.

நேரலையில் இவளது நிகழ்ச்சியைக் கண்டு சிலாகிக்கும் அளவிற்குத் தான் இன்னும் முன்னேற்றமடைந்து, அனைவரது மனத்திலும் இடம்பெறவில்லை எனத் தெளிந்தவள்; பார்க்கிறவர் பார்க்கட்டும் என முடிவு செய்து கொண்டவாறே, அவனது கையில் அலைபேசியைக் கொடுத்து விட்டு கண்ணாடி முன் சென்று அமர்ந்தாள்.

முதலில் கிளன்சிங் மில் கொண்டு முகத்தை அலசியவள்; அதன் பிற்பாடு க்ரீம்களைப் பூசிக் கொண்டு தனது ஒப்பனையைத் தொடர்ந்தாள். அலைபேசியைக் கையில் ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்த அர்ஜுன் கண்ணாடியை மறைத்துவிட, அது நேரலை என்பதையும் மறந்து, “அர்ஜுன் சார்.. கொஞ்சம் தள்ளி நில்லுங்க... என்றாள் சற்றே கனிவான குரலில்.

அந்தக் காணொளியை பார்த்துக்கொண்டிருந்த சொற்ப நபர்களில் ஒருவர், “அர்ஜுன் சார் யாரு?? உங்க ஹஸ்பன்டா??” எனக் கருத்துரைக்கான பகுதியில் கேள்வி எழுப்பி விட, ஒப்பனை செய்து கொண்டிருந்தவள் அதைக் கவனித்துவிட்டு, “ஆமா.. அர்ஜுன் சார் என் ஹஸ்பண்ட் தான்...” எனச் சற்றே நாணத்துடன் பதிலளித்தாள்.

“வாவ்... சூப்பர்.. சூப்பர்... உங்க குரலே சொல்லுது ஒருத்தர் இன்னொருத்தர் மேல வச்சிருக்கிற அன்பை...” என மற்றொருவரும் கமெண்ட் பதிவிட உச்சி குளிர்ந்து போனாள் ரோஜா.

“நாங்க லவ் மேரேஜ் இல்ல.. அரேன்ஜ்ட் மேரேஜ்...” எனச் சிரித்தவாறே கூறிவிட்டு அவள் தனது வேலையைத் தொடர, “அர்ஜுன் சாரை நாங்க பார்க்கலாமா??” இரண்டு பேர் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.

“அர்ஜுன் சாரை பார்க்கணுமா?? ஹா ஹா... அவரு கொஞ்சம் ஷை டைப்பாச்சே..” எனச் சிரித்துக்கொண்டே அவள் அவனைப் பார்த்து, “அர்ஜுன் சார்... உங்களைப் பார்க்க ஆவலா இருக்கிறாங்களாம்..” என்கவும், பின்னால் நின்று கொண்டிருந்தவன் வேண்டாம் எனச் சைகையால் உரைத்தான்.

“அர்ஜுன் சார் ரொம்ப வெட்கப்படுகிறார்... இன்னொருநாள் நான் லைவ் வர்றப்போ அவரையும் கூட்டிட்டு வர்றேன்.. இப்போ நாம முதல்ல மேக்அப்பை முடிச்சிடலாம்... இல்லைனா நான் ரெடி பண்ணி வச்சிருக்கிற திங்க்ஸ் எல்லாம் வேஸ்ட் ஆகிடும்..” என அவள் தனது காரியத்தில் கண்ணாக இருந்து, ஒரு வழியாக அந்த ஒப்பனையை நிறைவு செய்து விட்டாள்.

இதைச் செய்து முடித்ததும் முழுவதும் தன்னைக் கண்ணாடியில் காண்பிப்பதற்காக எழுந்து கொண்டவள்; கண்ணாடியை நோக்கி அலைபேசியைத் திருப்ப, பின்னால் நின்று கொண்டிருந்த அவளது கணவனின் உருவமும் அந்தக் காணொளியில் பதிவாகியது.

இருவரையும் ஒன்றாகப் பார்த்த சிலரும் “வாவ்... வாவ்... செம... சூப்பர்... கெமிஸ்ட்ரி அள்ளுது..” என்பது போன்ற கமெண்டுகளை அள்ளி வீச, இருவருக்கும் சற்றே சிலிர்ப்பாக இருந்தது.

“இவ்ளோ அன்னியோன்யமா இருக்கிற நீங்க ஏன் ஒரு கப்பிள் சீரிஸ் பண்ணக் கூடாது? உங்களுக்குள்ள இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங் லெவலுக்கு நீங்க தனியா டிப்ஸ் கொடுக்கிற செஷனே நடத்தலாம்...” என்பதாகச் சிலர் மின்னஞ்சலில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்க, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் ரோஜாவும் அர்ஜுன்.

“ஹான்.. இதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்குது... கன்சிடர் பண்ணுவோம்..” என்பதாகச் சம்பிரதாயத்துக்காகப் பதிலைத் தட்டியவன்; அதுகுறித்துச் சிந்திக்கலானான்.

“நீங்க ஏன் ஒரு கப்பிள் சீரிஸ் பண்ணக்கூடாது?? உங்ககிட்ட இருந்து அப்படி ஒரு விஷயத்தை நாங்க எதிர்பார்க்கிறோம்...” எனச் சிலர் அனுப்பிய குறுஞ்செய்தி தான் அர்ஜுனின் காதுகளில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது என்னவோ மெய்தான்.

எப்போதும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துபவன், “ப்ரைவேசி கான்சியஸ்”ஆக இருப்பவனின் உறுதியை அவர்களது சொல் ஒரு கணம் அசைத்துப் பார்த்தது என்பது மறுக்கவியலாத உண்மை.

அடுத்தடுத்த தினங்களிலும் சமூக வலைதளங்களிலும் இப்படியான குறுஞ்செய்திகள் வரவும் இதுகுறித்துத் தீவிரமாகச் சிந்தித்து ஆலோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான் அர்ஜுன்.

சாரதா வீட்டில்...

பள்ளி முடிந்து வந்த வெண்பா, “அம்மா இன்னைக்கு நான் என் கிளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க் தெரியுமா?? மிஸ் எல்லாரும் ரொம்ப அப்ரிசியேட் பண்ணினாங்க.... ப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஹாப்பி.. நானும் செம ஹாப்பி... கிளாஸ்ல எல்லாரையும் கிளாப் பண்ண சொன்னாங்க தெரியுமா??? ரொம்பப் பெருமையா இருந்தது...” எனத் தனது மாதாந்திர தேர்வு முடிவுகளுடன் சமைத்துக் கொண்டிருந்த தாயிடம் வந்தாள்.

அவள் அந்த அட்டையை நீட்டவும், ஆர்வமில்லாமல் அதை வாங்கிப் பார்த்த சாரதாவின் செயலைக் கண்ணுற்ற வெண்பா; சற்றே ஆதங்கத்துடன், “என்னம்மா... நான் இவ்ளோ ஹாப்பியா இருக்கிறேன்.. உனக்கு ஹாப்பி இல்லையா?? எப்பவும் அஞ்சாவது ஆறாவது மார்க் வாங்குறவ நல்லா படிச்சு. கஷ்டப்பட்டுப் படிச்சு முதல் ரேங்க் வாங்கி இருக்கிறேன்... ஒரு ஸ்மைல் பண்ணி, நெத்தியில கிஸ் பண்ணி, ஒரு ஸ்வீட் கூடச் செஞ்சு தர மாட்டியா??” என வினவ, “ரொம்ப டயர்டா இருக்குது வெண்பா... நாளைக்குச் செஞ்சு தர்றேன்... இன்னைக்கு வேணும்ன்னா ஒரு மணி நேரம் ஃபோன் யூஸ் பண்ணிக்கோ...” எனத் தனது அலைபேசியை அவளிடம் நீட்டினார்.

அவள் ஒன்றும் புரியாமல் பார்க்க, “பாப்பா... உனக்கு டான்ஸ் ஆடுறதுன்னா ரொம்பப் பிடிக்கும் தானே... அப்பாவுக்காகத் தானே நீ ஸ்கூல் ஆனுவல் டேயில டான்ஸ் ஆடாம இருக்கிற... இதோ இந்த ஆப்ல இருக்கிற சாங்க்கு ஆடு..” எனத் தான் அப்டேட் செய்து வைத்திருந்த புத்தம்புதிய பப்ஸ்மாஷ் செயலியை அவளிடம் காட்டினார் சாரதா.

“நான் என்ன செய்யட்டும் அம்மா???” என வெண்பா புரியாமல் கேட்க, “இங்கே பாரு பாப்பா... இங்கே இந்தப் பாடலை ஓட விட்டுட்டு அதுக்கு ஏத்த மாதிரி நீ ஆடணும்... இல்ல உதட்டை அசைக்கணும்..” எனக் கூறிவிட்டு மாதிரிக்காகச் சில காணொளிகளைக் காட்டினார்.

அதைப் பார்த்த வெண்பாவிற்குப் பிரமிப்பாக இருந்தது. “இது நல்லா இருக்குதும்மா... நல்லா நேரம் போகும் போல...” என ஒவ்வொரு காணொளியாகப் பார்வையிடத் தொடங்கித் தொடங்கினாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கும் தான் அதேபோலச் செய்து பதிவேற்றினால் என்ன?? பதிவிடவில்லையாயினும் தானும் அதே போல் முயற்சித்தால் என்ன?? என்னும் எண்ணம் தோன்ற, தனது அறைக்குச் சென்று ‘முக்காலா முக்காபுலா’ பாடலுக்கு ஏற்ற நடனமாடி அதைப் பதிவேற்றி, சரியாக இருக்கிறதா எனப் பரிசோதித்துப் பார்க்கத் தொடங்கினாள்.

தன் தாய் அறிவுறுத்தியவாறே குறிப்பிட்ட பாடலுக்கு நடனமாடி பதிவேற்றி விட்டு அமரவும், அடுத்த ஐந்தாவது நிமிடம் “ஏ சூப்பர்...” “ஆஹா...” “வாவ்....” எனக் கமெண்டுகள் வந்து குவிந்தன.

அதைப் பார்த்தவள் தரையில் பொற்பாதங்கள் மேவாமல் வானத்தில் பறக்கத் தொடங்கினாள்; இந்த நற்செய்தியை தன் தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த தன் தாயிடம் ஓடியவள்; “அம்மா.. அம்மா... இங்கே பாருங்க என்னோட வீடியோவை எத்தனை பேர் பார்த்து இருக்காங்கன்னு...” எனச் சிலாகித்து விவரிக்க, அவளது நெற்றியில் முத்தமிட்டார் சாரதா. வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கினால் முத்தம் கிடையாது, ஆனால் காட்சிப் பொருளாகி, கமென்ட் வாங்கினால் முத்தம் போலும்!! “என் தங்கம்... சூப்பர்டா...” என அவளது செயலை ஆதரித்தார் அவர்.

எப்போதும் பிள்ளைகள் செய்யும் காரியம் சரியாக இருப்பின் தோளைத் தட்டி கொடுக்க வேண்டும்; தவறாகத் தோன்றுகையில் அதைச் சுட்டிக்காட்டி, மீண்டும் அதைச் செய்யாத வகையில் கண்டித்து, நல்வழிகாட்டி, அவர்களைத் தேற்ற வேண்டும். ஆனால் அவருக்குள் புகுந்திருந்த ஏஎஸ் வைரஸின் தாக்கத்தினால் தான் குறுக்கு வழியில் சிந்தித்தது மட்டுமின்றி, தன் மகளையும் தவறான பாதையில் வழிநடத்திக் கொண்டு நடக்கலானார்.

பள்ளி முடிந்து வரவும் தனது அலைபேசியை எடுத்து, தன் தாய் கூறியவாறு ஏதேனும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் இல்லை வாயசைத்துப் பதிவுசெய்து பதிவிடுவது வெண்பாவின் வேலையாகிப் போனது.

முன்பெல்லாம் நன்றாகப் படிக்கும் வெண்பா, தினமும் பள்ளிக்குச் சென்றபின், “இன்னைக்கு என்ன சாங்க்கு டான்ஸ் ஆடலாம்?? எந்த மாதிரி டிரெஸ் பண்ணிக்கலாம்?? எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ணிக்கலாம்?? என்ன கலர் லிப்ஸ்டிக் போட்டுக்கலாம்??” என்பதான சிந்தனையில் இருப்பதால், முன்புபோலப் பாடத்தில் கவனத்தைச் செலுத்தவில்லை.

ஏனோதானோவெனப் படித்ததால் அனைத்து பாடங்களிலும் குறைவான மதிப்பெண்களே பெற்றிருக்க, அவளது வகுப்பின் பொறுப்பாசிரியர், அவளது தந்தை நாராயணனுக்கு அழைத்து விஷயத்தைத் தெரிவித்துவிட்டார். “உங்க வீட்டில என்ன பிரச்சனைன்னு தெரியல.. உங்க பொண்ணு முன்னாடி மாதிரி இல்ல.. எப்பவும் கிளாஸ்ல ரொம்ப இன்வால்வ்டா இருக்கிறவ இப்போல்லாம் ரொம்பக் கேர்லெஸ்ஸா இருக்கிற மாதிரி தெரியுது... ஏனோதானோன்னு தான் கவனிக்கிறா... என்னன்னு கொஞ்சம் கவனிச்சுக்கோங்க சார்...” எனக் கூறிவிட, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் நாராயணன்.

அதே கோபத்துடன் நேராக வீட்டிற்கு வந்தவர்; வெண்பாவை அழைத்து, “என்ன ஆச்சு உனக்கு?? என்னதான் பிரச்சனை?? ஏன் சரியாகப் படிக்க மாட்டிக்கிற?? மாற்ற வீட்டில் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை தானே இருக்குது... அப்புறம் என்ன??? நீ ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கித் தர்றோம்... உன்னுடைய இஷ்டப்படிதான் எல்லாமே இங்க நடக்குது... அப்புறம் படிக்கிறதுக்கு உனக்கு என்ன?? ஒழுங்கா படிச்சுட்டு இருந்ததானே... இப்ப என்னாச்சு உனக்கு??” என வினவ, அவளிடம் அதற்குப் பதில் இல்லை.

அவள் தலையைக் குனிந்தவாறு நின்றுகொண்டிருக்க, தன் மகளுக்காகப் பரிந்து பேச முன்வந்தார் சாரதா. “நீ முதல்ல அமைதியா இரு... நீ செல்லம் கொடுக்கறதால தான் இவ இந்த அளவுக்கு வந்து நிற்கிறா...” என அவரைத் தடுத்த நாராயணன்; “சொல்லு வெண்பா... உனக்கு என்னதான் பிரச்சனை?? பொறுமையா கேக்கிறேன்ல சொல்லு.. உனக்கு ஏதாவது பிரச்சனையா?? இல்ல உன் பிரெண்ட்ஸ் கூடச் சண்டையா?? இல்ல வேற ஏதாவது பிரச்சனையா?? இல்ல டியூஷன் எதாவது சேர்த்து விடணுமா?? எதுவா இருந்தாலும் ஒப்பனா பேசு.. என்னை உன் அப்பா இல்லை ஒரு பிரண்டா நெனச்சு எதுவா இருந்தாலும் ஷேர் பண்ணு... என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்குச் சொலியூஷன் சொல்றேன் இல்லைன்னா அதற்கான மாற்று வழியைச் சொல்றேன்...” என அவர் பேச, வெண்பாவும் உண்மையைக் கூறி விடலாமா இல்லை அமைதியாகவே நின்று சாதித்து விடலாமா என யோசித்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom