Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL ஏ.எஸ் வைரஸ் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

1

“கோடி வைரஸிலே

கொடிய வைரஸ்

எந்த வைரஸ்??

டட்டடட்டா...

கொத்துக் கொத்தாய்

கொல்லும் அந்த

சீன வைரஸ்...

டட்டடட்டா...

கூண்டோடு குடும்பங்களை

குதறும ப்பா

கொல்லி வைரஸ்...

ஆஆஆஆ... ஆஆஆஆ..

ஏஎஸ் வைரஸ்...

ஏஎஸ் வைரஸ் பரவிவருதே கேளய்யா...

கண்வழியா பரவுமே பாரைய்யா... ஐயா...

ஏஎஸ் வைரஸ் பரவிவருதே கேளய்யா...

கண்வழியா பரவுமே பாரைய்யா...” என்னும் பாடலை மக்களின் விழிப்புணர்வுக்காகப் பிரபல இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், நடன இயக்குநர் கொண்ட குழுவொன்று தயார்செய்து கொண்டிருக்க, செய்திவழி இதுகுறித்த விழிப்புணர்வை பரப்பும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.



07 : 59 : 50

07 : 59 : 51

07 : 59 : 52

07 : 59 : 53

07 : 59 : 54

07 : 59 : 55

07 : 59 : 56

07 : 59 : 57

07 : 59 : 58

07 : 59 : 59 என விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் ஊர்திக்கான கவுன்டவுன் போல அந்தக் கருந்திரையில் மஞ்சள் நிற எழுத்துகள் தென்பட்டால் பிள்ளைகளில் பாதிபேருக்கு எரிச்சலில் காதுவழி புகையே வந்துவிடும். ஏனென்றால் அது காலையில் காடு சென்று, மாலையில் வீடு திரும்பி, மண்ணைப் பொன்னாக்கும் ஒவ்வொரு ஆண்மகனும் தங்களை ஆசுவாசப்படுத்தியவாறே அன்றைய நாளின் நிகழ்வுகளை அசைபோடும் வண்ணமாக ஒளிபரப்பப்படும் எட்டுமணி செய்தியை பார்க்கும் நேரம். தங்களின் சுதந்திரம் பறிபோய்விட்டதாகப் பிள்ளைகளும், தொடர் பார்க்கும் குடும்பத் தலைவிகளும் மூக்கைச் சீந்திக்கொண்டிருக்கையில், ஐயாக்கள் மட்டும் நாட்டு நடப்புகளைச் சிந்தைக்குள் செலுத்திக் கொண்டிருப்பர்.

அத்தகைய புகழ்வாய்ந்த கவுன்டவுன் முடிந்த அடுத்த நொடியே, “திடுதிடுதிடு.. டேன்டட்டடேன்... டின்ன்...” என்னும் ஓசையுடன் உலகம் சுழல்வது போன்றதொரு காட்சி விரிந்து மறைய, “ஒளியிலே.... தெரிவது தேவதையா??” என்னும் பாடலை முணுமுணுக்குமளவிற்கு இரண்டு பெண்கள் செய்தி வாசிப்பாளராகக் காட்டப்பட்டனர்.

அம்மா வயதுள்ளவர்கள், அக்கா வயதுள்ளவர்கள் வாசிப்பாளராக இருந்த காலம் மலையேறிப் போய், இப்போது செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஆர்மி, ஃபேன் பேஜ், வ்லாக் என்னுமளவிற்கு நாகரீகம் அப்டேட் ஆகிவிட்டது. நாம் ஏன் அதை விமர்சித்துக் கொண்டு? ஏஎஸ் வைரஸின் தாக்கம் உச்சத்தை அடைகையில் அனைவருமே விமர்சித்துக் கொள்ளட்டும்.

“முக்கியச் செய்திகள்...

இந்தியா முழுவதும் ஏஎஸ் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது...

உலக அளவில் ஏஎஸ் வைரஸ் தொற்றில் இந்தியா முதலிடம்...

முதல் அலையின் கோரதாண்டவமே இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் சீனாவைப் பகைத்துக் கொண்டதால் இரண்டாம் அலை வெகுவிரைவாக, அதிதீவிரமாகப் பரவும் என மனநல மருத்துவர்கள் தகவல்...

தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் இன்று பிரதமர் அனைத்து முதலமைச்சர்களுடன் ஆலோசனை... அனைத்துக் கட்சி கூட்டத்தினருக்கும் கடிதம்வழி தகவல் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்தி....” எனத் தலைப்புச் செய்திகள் வாசித்து முடிந்ததும் விரிவான செய்திகள் வேளை வந்தது.

“வணக்கம்... ருமினி செய்திகள்... வாசிப்பவர் - அனிதா சம்பத்... நாடுமுழுவதும் ஏஎஸ் வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் போதிய முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டுமெனப் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று நமது தேசமே மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது... மக்கள் அனைவரும் ஒத்துழைத்து ஒற்றுமை காத்தால் மட்டுமே நோயின் பிடியிலிருந்து வெளிவர முடியும். அவரவரது நலனை அவரவர் தான் பேணிக் காக்க முடியும். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் வைரஸ் தாக்கத்திற்கு மூலதனமான கண்ணாடிப் பேழைகளை விட்டு வெகுதூரம் விலகியிருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...” (இந்தியில் இருந்ததை வாசகர்களுக்காகத் தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறேன்) எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, பிரதமரின் அறிவுரையை ஏற்று நடக்குமாறு அனைத்துகட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. குடும்பங்களைச் சீரழிக்கும் இந்தக் கொடிய வைரஸை நாட்டை விட்டு விரட்டும்வரை ஓயமாட்டோம், இந்த விஷயத்தில் பிரதமருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என அனைத்து எதிர்கட்சிகளும் தெரிவித்திருக்கின்றன.

நாமக்கல்லில் ஏஎஸ் வைரஸால் தாக்கப்பட்ட மனைவி போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளாததால், அவரது கண்ணாடிப் பேழையைக் கிணற்றுக்குள் வீசியிருக்கிறார் கணவர். அதைக் கண்டு ஆத்திரமடைந்த மனைவி; அரிவாள் மனையால் கணவரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே ஏஎஸ் வைரஸின் பிடியில் முழுவதும் ஆட்கொள்ளப்பட்ட மாணவி ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டின் மேற்கூரைக்குத் தீவைத்த சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் ஏஎஸ் வைரஸ் தாக்கிய கணவன், மனைவி இருவரும் நோயின் உக்கிரத்தால் ஒருவரையொருவர் காயப்படுத்தி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிராதரவாக நின்ற மூன்று வயது மகனும், இரண்டு வயது மகளும் நெல்லை ஜங்ஷனில் இருந்த சரணாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்...” எனக் காணுமிடமெங்கும், கேட்குமிடமெங்கும் ஏஎஸ் வைரஸின் கோரதாண்டவத்தால் ஏற்பட்ட கொடிய விளைவுகளே வியாபித்திருக்க, நடுத்தர மக்களனைவரும் அச்சத்தின் பிடியில் ஆட்பட்டிருந்தனர்.

“இந்த டிவியை முதல்ல ஆஃப் பண்ணி போட்டாலே பாதிப் பிரச்சனை குறைஞ்சிடும்.. அங்கே அப்படி நடந்துது, இங்கே இத்தனை பேரு செத்துப் போயிட்டான்னு செய்தியைப் போட்டு மக்களைக் கதிகலங்க வச்சிடறான்... அவனவன் என்ன சூழ்நிலையில இருக்கிறான்னு அவனுகளுக்குப் புரியமாட்டிக்குது.. ச்ச்சும்மா.. என்னத்தையாவது போட்டுக்கிட்டு... மனுஷன் நிம்மதியா வெளியே போயிட்டு வர முடியுதா?? இவன்பாட்டுக்கு அது பரவுது, இது பரவுது... அங்கே போவாத, இங்கே போவாத... அதைத் தூர போடு, இதைத் தூர போடுன்னு என்னத்தையாவது சொல்லிட்டு கிடந்துக்கிடுதான்... இங்க நம்ம பாடுதானே திண்டாட்டமா இருக்குது... அப்பப்போ போலீஸ்காரன் வேற வந்து வந்து செக் பண்ணிட்டுப் போறான்... நிம்மதியா ஒருவாய் கஞ்சி குடிக்க முடியுதா? கதவைப் பூட்டக்கூடாது, ஜன்னலைப் பூட்டக்கூடாதுன்னு ரூல்சு வேற...” என அங்கலாய்த்தவாறே, அடுத்தச் சேனலை மாற்றினார் தேசத்தின் சராசரிக் குடிமகனான ராமநாதன். குடிமகன் தான் ‘குடி’மகனல்ல. ‘குடி’மகன்கள் பலர் பின்னால் இடம்பெறுவர்!!

உழைப்பின் அடையாளமாகத் திகழும் வியர்வைத்துளிகள்; குளித்தாலும் அவரைப் பிரியாது நெற்றிமீது காதலில் இழைந்து துவள, தோளில் போட்டிருந்த ஆரஞ்சு நிறத்தில் வெள்ளை கட்டம்போட்ட துண்டால் துடைத்தவாறே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

அவர் மாற்றிய தொலைக்காட்சி சேனலில் பிரபல மனநல மருத்துவரின் பேட்டி அப்போதுதான் தொடங்கியிருந்தது. மருத்துவரை பற்றிய அறிமுகத்தைத் தொகுப்பாளர் அளித்துக்கொண்டிருக்க, தனது பிள்ளைகளைச் சத்தமிட்டு அழைத்தார் அவர்.

“ஏலேய்... எல்லாரும் வந்து இதப் பாருங்க.. இவரு என்ன சொல்லுதாருன்னு கேட்டு வையிங்க.. நம்மள நம்மளே பாதுகாத்துக்கிட்டா தான் உண்டு...” எனத் தந்தையின் கனத்தக் குரலில் செவிசாய்த்துப் பிள்ளைகள் அனைவரும் தந்தை அமர்ந்திருந்த நாற்காலியைச் சுற்றி குழுமினர். விருப்பமில்லாவிட்டாலும் கால்களைக் கைகளால் அணைத்தவாறே அமர்ந்திருந்து அந்த நிகழ்ச்சியை ஆர்வமாகக் கவனிப்பது ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை...’ என்னும் மொழிக்காக அல்ல. அவரிடம் திட்டு, அடி வாங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான். ‘பிள்ளைகளை அடிக்கக் கூடாது...’ எனச் சர்க்கார் சட்டமியற்றினால் என்ன?? இன்றளவும் அடிக்கும் பெற்றோரும், அடிக்கு அஞ்சும் பிள்ளைகளும் இருக்கவே செய்கிறார்கள்.

அனைவரின் வருகையையும் அட்டென்டன்ஸ் போட்டுவிட்டு தொடங்கும் ஆசிரியரைப் போல, தனது பிள்ளைகளின் வருகையைக் குறித்துக் கொண்டார் ராமநாதன். சொல்லிவைத்தாற்போல அவர்கள் வந்ததுமே மருத்துவர் பேசவேண்டிய முறை வந்துவிட்டது.

“வணக்கம் டாக்டர்... இன்னைக்கு ஏஎஸ் வைரஸின் தாக்கம் நாடு முழுக்கத் தலைவிரிச்சு ஆடுது... பெரிய பெரிய மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களால் கூட இதுக்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியல... இதுபத்தின உங்களோட கருத்து என்ன? நோயோட வீரியத்தைக் குறைக்கிறதுக்கு உங்ககிட்டே எதாவது ஐடியா இருக்குதா?” எனத் தொகுப்பாளர் கேட்க, தொண்டையைச் செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார் மருத்துவர் மனோஜ் கார்த்திகேயன்.

மனோஜ் : வணக்கம்... அதாவது நாடு முழுவதும் பரவியிருக்குது, கொடிய விளைவுகளை ஏற்படுத்துது எல்லாமே தினம்தினம் செய்திகள்ல கேட்டுட்டு வர்ற விஷயங்கள்தான். இதுக்குத் தீர்வு என்பது இப்போ வரைக்கும் கண்டுபிடிக்கலை.. கண்டுபிடிப்போமா இல்லையா, நோயைக் கட்டுப்படுத்த முடியுமா இல்லையா இதுவே முதல்ல தெரியலை... ஆனா நோய் பரவலைக் குறைக்கிறது ஒரு எளிய வழியை என்னால சொல்ல முடியும். பொதுவா சொல்லுவாங்க இல்லையா, ‘திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ன்னு.. அதேதான் இங்கேயும்.. தனக்கு இருக்கிற இந்த நோயின் பிடியிலிருந்து மீளணும் அப்படின்னு அந்த நோயாளி மனதளவுல தயாராகணும்.. அப்புறமா அந்தக் கண்ணாடிப் பேழையை விட்டு தூரமா வந்து சோஷியல் டிஸ்டான்சிங் கீப் அப் பண்ணனும்.. இதெல்லாம் பண்ணினாலே 75 சதவீதம் நோயைக் குறைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குது..

தொகுப்பாளர் : இவ்ளோ பாதிப்பை ஏற்படுத்தி, அரசுகளையே ஆட்டம் காண வைக்கிற இந்த வைரஸ் எங்கே எப்படித் தோன்றிச்சு, நம்ம உடம்புக்குள்ள போய் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துதுதுன்னு சொல்ல முடியுமா டாக்டர்??

மனோஜ் : கண்டிப்பா... கண்டிப்பா.. நோய் எங்கே இருந்து உருவாச்சுது அப்படின்னு நம்மால அவ்ளோ எக்ஸாக்டா சொல்லிட முடியாது... ஏன்னா மனுஷன் தோன்றினதுல இருந்தே இந்த வைரஸ் இருந்திருக்குது.. வீரியமே இல்லாம இருந்த அந்தக் கண்ணுக்குத் தெரியாத பொருள் இப்போ பூதாகரமா மாறிநிக்குது... இப்போ தோன்றிய நாகரீகம், நம்மோட வாழ்க்கை முறை இப்படிப் பல காரணிகள் அதோட அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்... கண்ணுக்கே தெரியாத அந்த வைரஸ் நமக்குள்ள புகுந்து, பலுகிப் பெருகுறதுக்கு அந்தக் கண்ணாடிப் பேழை ஒரு ஊர்தியா (Vector) இருக்குது.. கண்ணாடிப் பேழை வழியா ஒருத்தர் மத்தவங்க எல்லாரையும் பார்க்கிறப்போ அந்த வைரஸ் நம்ம கண்ணுக்குள்ள நுழைஞ்சிடுது.. சிலருக்கு அவங்க சூழ்நிலைகள் வாழ்க்கை முறைகள் காரணமா உடலில் உருவாகுற ஆன்டிபாடிகளால அழிக்கப்பட்டுடுது... பலருக்கு சரியான ஆன்டிபாடிகள் உருவாகுறது இல்ல... கிராப்ட் (Grapht) மாதிரி அவங்க உடல் அதை ஏத்துக்குது... கண்ணுல வந்து உக்கார்ந்த அந்த வைரஸ் அப்புறமா மூளைக்கு ட்ராவல் ஆகுது.. அங்கே மெடுல்லா, அந்த லிக்விட் எல்லாத்தையும் தாண்டி ஹைப்போதலாமஸ் பகுதியை அடையுறப்போ உடம்போட ஒட்டுமொத்த கண்ட்ரோலையும் தன்வசப்படுத்திக்கிட்டு, நம்ம பாடி பார்ட்சை சர்வாதிகாரம் பண்ண ஆரம்பிக்கும்... அதோட ஆட்சியால உடம்புக்கு குளுகுளுன்னு இருக்கும்.. நாமளும் அதில் சிலாகித்துப் போறப்போ தான் சுத்தி இருக்கிறவங்களுக்கு நம்மோட மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்... அதாவது இந்த நோய் வெளியே தெரியிற காலம் ஆளுக்கு ஆள் மாறுபடும்.. சிலருக்கு மூணு மாதத்திலேயே தெரிஞ்சிடும்.. சிலருக்கு ஆறு மாதம், ஒரு வருஷம்கூட ஆகலாம்.... ஆனா ஒன்ஸ் உங்களுக்கு வந்துடுச்சுன்னா கட்டாயமா சோசியல்லி இன்ஆக்டிவா ஆகிடணும்.. கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் கடைபிடிச்சிட்டா நம்ம லைஃப் சேஃப்.. இல்லைன்னா சிவியராகி, கிரிட்டிக்கல் கன்டிஷனுக்கு இழுத்துட்டுப் போயிடும்... நம்மை மட்டுமில்லாம எல்லாரையும் அஃபெக்ட் பண்ணிடும்...

இந்தியாவுக்குள்ள இது எப்படி வந்துச்சுதுன்னு பார்த்தா இங்கேயே இருந்துச்சு ஆனா சீனாவுல இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டிருக்குது... எப்பவுமே கண்ணுக்குக் குளிர்ச்சியான பொருள்களை ஈசியா அட்ராக்ட் பண்ணுமில்லையா?? அந்த மாதிரி ஒருத்தர் தொட்டு, ஒருத்தர் தொட்டு எல்லா ஆல் ஓவர் இந்தியாவுக்கும் பரவி இன்னைக்கு இந்த நிலைமையில வந்து நிக்கறோம்... என மனோஜ் பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சியில் கேபிள் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

“ச்சே.. நல்ல நேரத்துல கேபிளை உருவிட்டான் விளங்காமப் போறவன்.. இப்பதான் மெட்டிஒலி (ரீடெலிகாஸ்ட்) பார்க்கலாம்ன்னு நெனச்சேன்.. அது அவனுக்குப் பொறுக்கல...” என ராமநாதனின் மனைவி நொடித்துக் கொள்ள, “ச்சே... இந்த மொக்க நியூஸ் பார்த்ததுக்கு நாலு புதுப்பாட்டாவது பார்த்திருக்கலாம்...” எனத் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர் குழந்தைகள்.

சடிதியாக மின்சாரமும் அணைக்கப்பட, சுற்றிலும் இருளானது. மூன்றுசக்கர வாகனத்தில் ஒலிபெருக்கியை மாட்டியவாறே, ஒருவர் அறிவிப்புச் செய்துகொண்டு வந்தார்.

“அன்பார்ந்த ஆனைகுட்டியூர்வாழ் மக்களே... இதன்மூலம் உங்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் அரிசின் ஆணைப்படி, இனி நமது கிராமத்தில் கேபிள் டிவி நெட்ஒர்க் செயல்படாது... வீட்டிலேயே அடைந்து கிடைப்பதால் மக்களுக்கு மனநோய் வந்துவிடக் கூடாது என்பதற்காக வாரத்திற்கு மூன்றுமுறை பஞ்சாயத்துச் சார்பில் பள்ளித்திடலில் “ஒளியும் ஒலியும்” என்ற பெயரில் பழைய, புதிய பாடல்கள் ஒளிபரப்பப்படும்... இரவில் ஆறுமணி நேரமும் பகலில் இரண்டுமணி நேரமும் என மொத்தம் எட்டுமணி நேரம் மட்டுமே மின்சாரச் சப்ளை இருக்கும்... வீட்டுச் செலவுகளுக்காகத் பணமின்றித் திண்டாடுவோர் அந்தக் கண்ணாடிப் பேழையைக் கொண்டு வந்து பஞ்சாயத்தில் ஒப்படைத்துவிட்டு அதற்கேற்ற பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்தப் பேழை உங்கள் வீட்டுப் பேழையாகத் தான் இருக்க வேண்டுமென அவசியமில்லை. பக்கத்து வீட்டிலோ, எதிர்வீட்டிலோ திருடப்பட்டதாகக் கூட இருக்கலாம்... நமக்குப் பேழைதான் முக்கியம்! மேலும் இப்போது இந்த வாகனத்தைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளின் வாகனம் வந்துகொண்டிருக்கிறது. டோர் டெலிவரி போல வீட்டிற்கே வந்து “ஏஎஸ் தொற்று” இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்...” என அறிவிக்கப்பட, ஒருவரையொருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டனர்.
 
Last edited:

2

அரசு வாகனத்திலிருந்து இறங்கிய ஐந்து அதிகாரிகளும் ஒரே வீட்டிற்குள் நுழைந்தனர். அதற்கான உடையுடனும், கையில் ஒருவித உபகரணத்துடனும் நுழைந்தவர்களைப் பார்க்கையில் வீட்டிலிருந்தோர் அனைவரும் ஒருவித பயபக்தியுடன் எழுந்து நின்றனர்.

“ம்ம்... ம்ம்... உக்காருங்க... மரியாதை மனசில இருந்தா போதும்...” என்றவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவர்கள்; குடும்பத் தலைவரிடம், “வீட்டுல எத்தனை பேர்?? எத்தனை ரூம்?” என வினவினர்.

“அது... நான், என் பொண்டாட்டி, ரெண்டு பசங்க, எங்க அப்பான்னு அஞ்சு பேர் சார்... கிச்சன், ரெண்டு பெட் ரூம், ஹால், ஸ்டோர் ரூம், பாத்ரூம்...” என அவர் பட்டியலிட்டுக் கொண்டிருக்க, “மொத்தம் எத்தனைன்னு தான் கேட்டேன்.. லிஸ்ட் போட சொல்லலை...” என முறைத்தார் தலைமை அதிகாரி.

அதற்குக் குடும்பத் தலைவர் பதிலளிக்கும் முன்னரே, குழுவினர் எழுந்துவிட்டனர். சுற்றும் முற்றும் கண்களைச் சுழலவிட்ட தலைமை அதிகாரி, “சுரேஷ்... நீங்களும் கார்த்திக்கும் ஒரு பெட்ரூம் போய்ச் செக் பண்ணுங்க... அருண்.. நீங்களும் பாலாவும் இன்னொரு பெட்ரூம் போங்க... நான் பாத்ரூம் போய்ப் பார்க்கிறேன்...” எனக் கூறிவிட்டு, வெளியே நின்று கொண்டிருந்த பஞ்சாயத்து நபர்களை அழைத்தார்.

“ஐயா... சொல்லுங்க அய்யா...” என்றவாறே அவர்கள் வர, “நாங்க செக் செய்யப்போற ரூம்ஸ் தவிர மத்த ரூம்ஸ் கதவை லாக் பண்ணி, சாவியை எடுத்துட்டு வாங்க...” எனக் கட்டளையிட்டார்.

“சரிங்க ஐயா...” என்றவர்; மற்ற அறைக்கதவுகளை மூட எத்தனிக்கையில், முள்ளாக முறைத்து கண்களால் தடைசெய்ய முற்பட்டார் குடும்பத் தலைவர். அதில் பஞ்சாயத்து ஊழியர் சற்றே தயங்க, “நீங்க பூட்ட வேணாம்... நானே பூட்டிக்கிறேன்...” என முன்வந்து தானாகவே பூட்டிவிட்டு சாவியைத் தனது கால்சராய் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டார்.

“எல்லாரும் உக்காருங்க..” எனக் குடும்பத்தினருக்கு கட்டளையிட்டவர்; “இவங்க இங்கே இருந்து ஒரு அடி கூட நகரக் கூடாது... பார்த்துகோங்க..” என ஊழியரிடம் கூறிவிட்டு கடமையாற்றச் சென்றுவிட்டார்.

வந்திருந்த ஐந்து அதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தேடுதல் வேட்டையைத் துவங்கினர். அப்படி எந்தப் பொருளைத் தேடுகின்றனர் என இன்னுமா உங்களுக்குப் பிடிபடவில்லை?? எல்லாம் அந்தக் கண்ணாடிப் பேழையைத் தான். மனித மனங்களைச் சிதைத்து, மனஅழுத்தத்தை உருவாக்கி, அடிப்படைக் கட்டமைப்பை குலைவுறச் செய்துகொண்டிருக்கும் ஏஎஸ் வைரஸ் பரவலுக்குக் காரணமான அந்தக் கண்ணாடிப் பேழையைத் தான்.

வீட்டில் அதிகப் பணமோ, நகையோ இருந்தால் அதைப் பீரோவிலோ இல்லை பெட்டியிலோ வைத்துவிட்டு வெளியூருக்குச் செல்லமாட்டராம். திறந்த வெளியில் இருக்கும் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகளின் ஊடாகவும், சமையலறை அஞ்சறைப்பெட்டியிலும் இன்னும் இன்ன பிற கண்ணுக்கு அகப்படும் எளிய பொருள்களினூடாகப் புதைத்து வைத்துவிட்டுச் செல்வராம். அதுபோல இந்தக் குடும்பத்தினரும் உஷாராக இருந்திருப்பர் போலும். படுக்கையறையில் சந்தேகத்துக்கிடமான எதுவும் அகப்படவில்லை.

ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டிருந்த குளியலறை மற்றும் கழிப்பறைக்குள் நுழைந்த தலைமை அதிகாரி தான் கொண்டு வந்திருந்த Electronics Detector உதவியால் அங்கிருந்த சோப்புப் பவுடர் பொட்டலம், நறுமணத் திரவப் பொட்டலம் எனப் பரிசோதித்தார். அவருக்கும் தோல்வி தான்.

“கள்ளன் பெரியவனா?? காப்பான் பெரியவனா?? எனக் கேட்டால் கள்ளன் தான் பெரியவன்” என்னும் கூற்றிற்கேற்ப, அஞ்சறைப் பெட்டிக்குள் ஒளித்து வைத்தால் என்ன, அரிசிப் பானைக்குள் ஒளித்து வைத்தால் என்ன தேர்ந்த திருடன் மோப்ப சக்தியாலேயே கண்டுபிடித்துவிடுவானாம். இங்கேயும் அதே தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதுவரை பல வீடுகளில் பரிசோதனையை முடித்துவிட்டு வந்திருந்த அதிகாரிகள் சளைத்தவர்களா என்ன??

அடுத்ததாகச் சமையலறைக்குள் நுழைகையில் காய்கறிக் கூடைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையைப் பார்த்துவிட்டனர்.

குடும்பத்தினரைப் பார்த்து முறைத்தவாறே அங்கிருந்த மேஜையில் எடுத்து வந்த வைக்க, ஏக்கமாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் மூத்த மகன். சுரேஷும் கார்த்திக்கும் தங்கள் பங்கிற்குச் சலவை இயந்திரத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த அழுக்குத்துணிகளுக்கான கலனிற்குள் பதுக்கிவைக்கப்பட்ட கண்ணாடிப் பேழையை எடுத்து வந்தனர்.

இரண்டு கண்ணாடிப் பேழைகளையும் ஒருங்கே அங்கிருந்த மேசையில் வைத்த தலைமை அதிகாரி, “கார்த்திக்... அதை எடுத்துட்டு வாங்க...” என ஒரு சுத்தியலைக் கேட்டுவாங்கினார்.

அதிகாரிகள் அனைவரும் அங்கே அரங்கேறப் போகும் அரும்பெரும் செயலைப் பார்க்கும் ஆர்வத்தில் கண்களை அகல விரித்துக் காத்திருந்தனர். இதை அவர்களது கடமை உணர்ச்சி எனத் தவறாக எண்ண வேண்டா. “எனக்குக் கிடைக்காத பொருள் வேறு எவருக்கும் கிடைத்தல் தகாது...” என்னும் தலைசிறந்த எண்ணம்தான். ஏற்கனவே ஏ.எஸ் வைரஸ் தொற்றுப் பரவத் தொடங்கிய நாளிலிருந்து ஓயாத வேலை; அவர்களது வீட்டிலிருந்த அனைத்து கண்ணாடிப் பேழைகளையும் கையகப்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது. இல்லையேல் வேலை பறிக்கப்பட்டு, கடுமையான தண்டனைக்கு ஆளாவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் வேறு வழியின்றி ஒப்படைத்துவிட்டு பணிக்குத் திரும்பியிருந்தனர். வயிற்றுக்குக் காலமும் சூழலும் தெரியாதல்லவா?? மணிமுள் சரியான நேரத்தில் வந்து நிற்கையில் சொல்லி வைத்ததைப் போல ‘என்னைக் கவனி’ என ஓலமிடுமே... அதற்காகவேனும் பணியைக் காத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு.

அவர் தன் கடமையைச் செய்வதற்காகச் சுத்தியலை ஓங்குங்கால், “அச்சோ.. உடைச்சிடாதீங்க.. அதை உங்ககிட்டேயே ஒப்படைச்சிடுறோம்... நாற்பதாயிரம் ரூபா...” என இல்லத்தின் தலைவர் தலையில் அடித்துக் கொண்டு கதற, “ப்ளீஸ் சார்... உடைச்சிடாதீங்க... அப்பாகிட்டே சண்டை போட்டு ஈ.எம்.ஐல வாங்கினது...” என மண்டியிட்டான் வீட்டின் மூத்த மகன்.

பஞ்சாயத்து அதிகாரிகளை நோக்கி அவர் கண்களால் ஜாடை செய்ய, இருவரது கண்களையும் கைகளையும் கட்டி வண்டியில் ஏற்றப்பட்டனர். அங்கே அவர்களைப் போலவே பல வீடுகளிலிருந்து பிடித்து வரப்பட்ட பலர் இருந்தனர். ‘நாய் பிடிக்கும் வாகனம்’ போலப் பீடித்திருக்கும் பிணியால் ‘மனுஷன் பிடிக்கும் வாகனம்’ வந்து நிற்பதைப் பார்த்த நாய்கள் அனைத்தும் குரைப்பதை நிறுத்திவிட்டு, கும்பலாக நின்று ஆவலாக வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தன.

அவர்கள் ஏற்றப்பட்டிருந்த வாகனத்தில் கூச்சலும் அழுகையும் பற்கடிப்புமே நிறைந்திருந்தன. ஒருவரையொருவர் பார்க்கவும் இயலாமல், தொடவும் இயலாமல் கண்களும் கரங்களும் கயிற்றால் கட்டப்பட்டிருக்க, ஓலமிடவும், கூச்சலிடவும் வாய் ஒன்றே பிரதான வலிநீர்ப்பியாக இருந்தது.

இந்தக் காட்சியைக் கண்ட எஞ்சியிருந்தோரின் முகத்தில் சோகமும் பயமும் ஒருசேர அப்பிக் கொண்டது. தங்கள் இல்லத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேழைகளை வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சிலர் மாற்ற முற்பட, சிலரோ தாங்களாகவே முன்வந்து அதிகாரிகளின் வருகைக்கு முன்னர் அதைச் சிதைத்து சில்லுசில்லாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர். விண்ணதிரும் இந்தக் கூச்சல் நெஞ்சை உலுக்கியது, வாழ்வில் என்றுமே அந்தப் பிழையைச் செய்ய முற்படாமல் சிந்தையை முன்னெச்சரிக்கை செய்யும் திறத்தையதாக இருந்தது.

வீட்டினுள் தலைமை அதிகாரி சுத்தியலால் அந்தப் பேழையை உடைத்த கணம், அது சில்லுசில்லாக நொறுங்கிப் போன கணம் அவர்கள் மனதிலிருந்த அத்தனை கனங்களும் கனமிழந்து போன கணம். கண்களுக்குள் அந்தக் காட்சியைச் சேமித்தவாறே ஏக்கப் பெருமூச்சொன்றை உதிர்த்தனர் அனைவரும்.

இந்த அரும்பெரும் செயலை நிகழ்த்தி முடித்துவிட்டு அவர்கள் அடுத்த இல்லத்திற்கு விரைய, “ஐயோ.. ஐயோ... என் புருஷனையும் புள்ளையையும் பிடிச்சிட்டுப் போயிட்டானுங்களே.. இவனுங்க நல்லா இருப்பானுங்களா... கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம் அதை வச்சிருந்தா தப்பா??! இந்த அரசாங்கத்துக்கு வேற வேலையில்லாம என்னத்தையோ ரூல்ஸ் போட்டுத் தொலைச்சிட்டான்... என் வீட்டுல ரெண்டு பேரை அநியாயமா தூக்கிட்டுப் போயிட்டானுங்களே...” எனத் தலையில் அடித்துக் கொண்டு மூலையில் அமர்ந்து அழத் தொடங்கிவிட்டார் அதின் இல்லத்தலைவி.

அமைதியாக நின்று கொண்டிருந்த இரண்டாம் புதல்வன்; அருகே நெருங்கி வந்து, “ம்மா... கவர்மென்ட் ஒரு ரூல் போட்டா சரியா தான் இருக்கும்... யாரும் வேலையில்லாம ரூல் போட்டு இத்தனை பேரை வீடு வீடா செக் பண்ண சொல்லமாட்டாங்க... இப்ப இப்படி அலட்சியமா இருந்தா உயிரிழப்பு அதிகமாகிடும்... சென்னையிலேயும் மும்பையிலேயும் தினம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறாங்கன்னு அப்பப்போ பேப்பர்ல போடுறதை பார்த்துட்டு இருக்கிற தானே... இவங்க இப்ப இனிஷியல் ஸ்டேஜ்ல தானே இருக்கிறாங்க.. கண்டிப்பா சீக்கிரமா சரியாகி திரும்ப வந்துடுவாங்க... நீ அழாம தைரியமா இரு.. அரசாங்கம் சொல்லுற ரூல்ஸை சரியா ஃபாலோவ் பண்ணிட்டாலே பாதி ப்ராப்ளம் சால்வ்ட்... இப்படி ஒரு வியாதியே இல்லைன்னு அசால்டா இருந்தா அப்புறம் நடக்கப் போற விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. ஃபர்ஸ்ட் வேவ், செகன்ட் வேவ்ன்னு எத்தனை வேவ்ஸ் வந்தாலும் நாம கண்ட்ரோலா இருந்தா நல்லா இருப்போம் மா...” என ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும் போதே அறையே அதிரும் அளவிற்குச் சிரித்தார் தாத்தா.

அவர் அவ்வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் உயிரினம். அவர் எவரையும் தொந்தரவு செய்யாவிடினும் எவரும் அவரைக் கவனித்துக் கொள்ளுவதோ, அரவணைப்பதோ இல்லை. ஏனெனில் அவர் ஒரு சீனியர் சிட்டிசன். என்ன பேசினாலும் ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல...” என ஒரு கதையைத் தொடங்கிவிடுவார். மேலும் வயதாகிவிட்டதால் தற்போதிருக்கும் நவநாகரீக சாதனங்களை உபயோகப்படுத்தும் அளவிற்கு அவரது மூளை அதிவிரைவான வேகமெடுக்கவில்லை. ஆகவே தான் அவர் அவ்வீட்டின் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் உயிரினம்.

இதுகாறும் சாய்ந்து படுத்திருந்த சாய்வு நாற்காலியிலிருந்து மெல்ல எழுந்தவர், “வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்; ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்...” என்றவாறே வெளியில் வந்தார்.

தன் மருமகளிடம் சென்றவர், “இங்க பாரும்மா.. இப்ப அழுது புலம்புறதுல ஒண்ணும் ஆகிடாது.. முன்னமே நான் சொல்லுறப்போ கேட்டிருக்கணும்... இப்ப என்ன ஆகப் போகுது.. இருக்கிற ஒரு பையனையாவது ஒழுங்கா கவனிசுக்கிற வழியைப் பாரு... அங்கே அவனுங்களைக் கூட்டிட்டுப் போய் எதுவும் பண்ணமாட்டாங்க, பயப்படாத... கொஞ்ச நாளுக்குத் தனியா வச்சு கதற விட்டு அழ வைப்பாங்க.. அப்புறம் முன்னேற்றம் தெரிஞ்சதும் ஆளுங்களோட பழக வச்சு, வீட்டுக்கு அனுப்பிடுவாங்க... நல்லதே நடக்கும்ன்னு நம்பு...” எனத் தேறுதல் படுத்தினார்.

அதற்குள் பஞ்சாயத்து வாகனத்தில் அறிவிப்பு வழங்கப்பட்டது. “இதனால் ஆனைக்குட்டியூர் மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது போர் அடிக்குது, நாலு சுவத்தையே பார்த்துட்டு இருக்கிறதுக்குப் பிடிக்கலைன்னு எல்லாரும் கம்ப்ளெயின்ட் பண்ணியிருந்தீங்களாம்.. அதனால அதைச் சரிபண்ணுற விதமா அரசாங்கம் புதுசா ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறாங்க.. அதாவது தினமும் நைட் ஏழு மணியில இருந்து பத்து மணிவரைக்கும் விழிப்புணர்வு நாடகம் போடப்படும்... நாடகம்ன்னா சும்மா கூத்து மாதிரி நெனச்சிக்காதீங்க... நீங்க சொல்ற வெப் சீரிஸ் தான் திரைகட்டி போட்டுக் காட்டப் போறோம்.. ஒருநாள் மிஸ் ஆனாலும் அப்புறம் தொடர்ச்சி கிடைக்காது.. அதுனால மிஸ் பண்ணிடாதிய.. அப்புறம் வருத்தப்படுவிய...” என அறிவிப்பு செய்தவாறே கடக்க, வீட்டிலிருந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நல்லா இருந்த வீட்டுல இருந்த பாதிபேரை பிடிச்சிட்டுப் போயிட்டு இப்போ மிஸ் பண்ணாம நாடகம் பாக்கணுமாம்.. நல்லா இருக்கு இவனுங்க திட்டம்... அராஜகம் பண்ணிட்டு திரியுறாங்க.. கடவுளேன்னு சீக்கிரம் எலெக்ஷன் வந்து ஆட்சி மாறணும்...” என அனைத்து குடும்பத்தின் தலைவிகளும் தங்களுக்குள் புழுங்கிக் கொண்டிருக்க, “யத்தா... சும்மா வீட்டுக்குள்ள அடைஞ்சி கிடக்கதுக்குப் பிள்ளையள கூட்டிக்கிட்டுப் போய்ப் பார்த்துட்டு தான் வருவோமே... போனவங்க பத்திரமா வந்து சேருவாங்க... நீ புலம்பாம இரு...” என அறிவுரை வழங்கினர் பெரியவர்கள்.

ஆடித் தள்ளுபடி சிறப்பு இணைப்பு போல மீண்டுமொரு அறிவிப்பைக் கேட்டதும் அனைவருக்கும், “பெருமாளே... கலி முத்திடுத்து...” எனக் கத்தத் தோன்றியது. அத்தகைய அறிவிப்பு யாதெனில், “தினமும் அனைவரும் கம்பல்சரியா படம் பார்க்க வந்துடணும்... ஒவ்வொரு ஆப்சென்ட் ஆகுற நாளுக்கும் ஈக்குவலா உங்க வீட்டுல இருந்து பிடிச்சிட்டுப் போன ஆளுங்க லேட்டா வருவாங்க...” என்பது.

இதைக் கேட்டதும் ஒருநிமிடம் நகைத்தவர்கள்; “சர்வாதிகாரம்ன்னு சொல்லுறது இதுதான் போல... இப்படியெல்லாமா கொடுமைப்படுத்துவாங்க?? நாம எதைப் பார்க்கணும், எதைப் பார்க்கக் கூடாதுன்னு தீர்மானிக்கிறதுக்கு அவங்க யாரு??” எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் வேறு வழியின்றிச் சென்றேயாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டனர். ஏனெனில் அவர்கள் பணயமாக வைத்திருப்பது அவர்களின் ஆருயிரானவர்களை அல்லவா?!

இவர்களுக்குத் தெரியவில்லை மருந்து கசப்பானதாக இருப்பினும் அதன் விளைவுகள் நம்மை நலமுடன் வாழச் செய்யும் என. அதுபோன்றே அரசாங்கத்தின் இந்தச் சர்வாதிகார, துரிதகால நடவடிக்கையும். புரிந்து கொள்வோர் பிழைத்துக் கொள்வார்; புறக்கணிப்போர் பிரிந்து போவார்.
 
Last edited:

3

அனைவரும் அலட்சியத்துடன் தங்களது வீடுகளுக்குள் முடங்கியிருக்க, பஞ்சாயத்துச் சார்பில் அதன் அலுவலர்கள் ஒரு குச்சியுடன் ஒவ்வொருவரின் வீட்டின் கதவுகளையும் தட்டத் தொடங்கினர்.

“ம்மோவ்.. வீட்டுல யாரும்மா??” என்கிற வைகைப்புயலின் தொனியில் அனைவரின் வீட்டுக் கதவையும் தட்டிவிட்டுப் புயல்வேகத்தில் அடுத்தவரின் வீட்டிற்குப் புலம்பெயர்ந்திருந்தனர்.

ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும், “ச்சே.. ஏன்தான் இப்படி அராஜகம் பண்ணுறானுங்களோ தெரியல.. கரன்டையும் உருவிடுறாங்க... எல்லாத்தையும் பிடுங்கி வச்சிக்கிறாங்க, வீட்டுல இருக்கிறவங்களையும் பிடிச்சு வச்சாச்சு... இதுல படம் ஒண்ணுதான் குறைச்சல்.. இருக்கிற நெலமையில இவனுங்க பொழுதுபோக்கைத் தரலைன்னாதான் என்ன?? நானே இப்பதான் உலைக்கு வெந்நீ போட்டேன்.. அதுக்குள்ள தட்டி உசுர வாங்குறானுங்களே...” என்கிற முணுமுணுப்புகள் கேட்காமலில்லை.

பெரியவர்களோ “அப்பாடா... ‘ஒலியும் ஒளியும்’ பார்த்து எத்தனை வருஷம் ஆச்சுது.. கடவுள் புண்ணியத்துல இப்போ வாய்ப்பு கிடைச்சிருக்குது... கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்...” என ‘கடைசி’ காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளப் பிரயத்தனப்படச் சித்தமாயிருந்தனர்.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையுடன் தயாராகியும் தயாராகாமலும் புறப்பட்டு, குறிப்பிட்ட திடலை அடைய அங்கே மணல் திட்டுகளுக்கு மத்திமமாக நாற்பரிமாணம் கொண்ட திரை தொங்க விடப்பட்டிருந்தது.

வீடியோ கேமையும் டச் ஸ்க்ரீனையும் பார்த்தே பழக்கப்பட்ட சிறுபிள்ளைகள் இத்தகைய தோற்றத்தைக் கண்டதும் விசித்திரமாக விழிக்க, தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் தங்களது தொடக்கப் பள்ளி நினைவுகளை மீட்டலாயினர். ஏனெனில் அவர்கள் தொடக்கப் பள்ளியில் பயிலுகையில் மாதத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ அனைத்து மாணவ மாணவிகளிடமும் மூன்று ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் வீதம் பணம் சேகரித்து, குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் திரையரங்கத்தினருடன் குறைந்த லாபத்திற்கான உடன்படிக்கையுடன் பள்ளியிலேயே காந்தி, காமராஜர், நேரு போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களும், சார்லி சாப்ளின் நகைச்சுவைத் திரைப்படங்களும் பார்த்த நினைவுகள் தோன்றி மயிர்கூச்செறியத் தொடங்கியது.

அப்போதே அவர்களது மனதுக்குள் ஒருவித துணுக்குகள் தோன்றலாயின. நடுத்தர வயதினர் தங்களது பதின்பருவம் மற்றும் பருவக் காலத்தில் தங்களுக்குத் தோன்றிய நட்புரீதியான, காதல்ரீதியான அனுபவங்கள் நினைவுக்குத் தென்பட, கல்யாணமென்றால் தங்கள் துணையைக் கண்களால் வருடியும், காதலென்றால் கைகூடா கானலை எண்ணி மனதால் மானசீகமாக வருடியும் நினைவுகூர்ந்தனர்.

இவர்களுக்கே இவ்வாறாயின் வயதான குழந்தைகளுக்குச் சொல்லவா வேண்டும்?! அவர்களும் தங்களுக்கான பிரத்தியேக தனிஉலகத்தில் சஞ்சரிக்கத் துவங்கி விட்டனர்.

கும்பல் கும்பலாகச் சென்று அமர்ந்தவர்கள் தங்களுக்குப் பரிச்சயமான நெருக்கமான எவரேனும் அமர்ந்திருக்கின்றனரா எனக் கண்களைச் சுழலவிட்டவாறே அமர்ந்து கொண்டனர்.

விழிப்புணர்வு திரைப்படம் திரையிடப்படுவதற்கான தொழில்நுட்ப வேலைகள் நடந்த வண்ணமிருக்க, வெகுநாளாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த குழந்தைகள் வெறும்மண்ணில் பாதம் பதித்துத் தங்கள் வயது குழந்தைகளுக்குள் விளையாடத் தொடங்கிவிட்டனர்.

பெரியவர்கள் வேறுவழியில்லாமல் தங்கள் வயதுக்காரர்களுடன் குழாமாகக் கூடி விவாதம் செய்யத் தொடங்கிவிட்டனர். அதன் கருப்பொருள் என்னவென நான் கூறித் தான் தெரிய வேண்டுமா என்ன??

ஆண்களென்றால் “அண்ணாச்சி... இவன் ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு அடிக்கடி கரன்ட் கட் பண்ணுதான் பாத்தியளா??”, “போன ஆட்சியில நெறைய செலவு பண்ணிட்டு போயிட்டானுவ... இப்போ எல்லாம் இவனுவ தலையில தான் வுழுது...” எனத் தங்களுக்கு இஷ்டமான கட்சிக்குத் தோதாக ஏதோவொன்றைக் குறித்து விவாதித்துக் கொண்டிருப்பர். தாய்க்குலங்கள் “யக்கா... நம்ம மேல வீட்டு சுந்தரி புதுசா பிரிட்ஜ் வாங்கியிருக்கா பாத்தியளா... சீட்டு போட்டு வாங்கியிருக்காளாம்... பிலுக்குன பிலுக்குத் தாங்கல...”, “கோமதி மவளைப் பார்த்தியளா?? நேத்து மச்சியில உக்கார்ந்து யார்கூடயோ போன் பேசிட்டு இருக்கா... இது என்னவோ சரியா படல... எப்டியும் ஒருநாள் வெளிய வந்துதான ஆவணும்.. அன்னைக்குப் பேசிக்கிடுதேன்...” என்பதாகத் தங்கள் உலகத்தில் தங்களுக்கான எல்லைகளை விஸ்தீரணம் செய்து கொள்ள எத்தனித்திருப்பர்.

“அந்தக் காலத்துல எப்படிலாம் இருக்கும்.. இப்பதான் இப்டி ஒருத்தரையொருத்தர் பார்க்காம வீட்டுக்குள்ளேயே கிடக்குறோம்..” எனச் சிலாகித்த வண்ணம் பெரியவர்கள் அமர்ந்திருக்க, ஒருவழியாகப் திரைப்படம் ஒளிபரப்புச் செய்யப்படத் தயாராகிவிட்டது.

முதற்கட்டமாகத் தொடரை இயக்கியவர், தயாரித்தவர், தொடரில் தோன்றியவர், இசையமைத்தவர் என ஒவ்வொருவரின் பெயரும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகக் காண்பிக்கப்பட, அயர்ச்சியாக இருந்தது அனைவருக்கும்.

“பேசுனதெல்லாம் போதும்டா... முதல்ல திண்டுக்கல் ரீட்டாவ வரச்சொல்லுங்கடா... வரச்சொல்லுங்கடா...” என்னும்ரீதியில் கூட்டத்தில் சிலர் கூச்சலிட, நேரடியாகத் தொடரின் ஆரம்பக்காட்சியை நோக்கி ஃபார்வர்ட் செய்துவிட்டனர்.

முதல் காட்சியில்...

அர்ஜுன் – ரோஜா சோடிக்குத் திருமண ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்க, முத்தரசு – வெண்ணிலா தம்பதி தங்கள் மகனின் இரண்டாவது பிறந்தநாளை சுற்றத்தாருடன் இனிப்பு வழங்கி, பெருவிழா போல ஆசரித்துக் கொண்டிருந்தனர்.

“பரவால்ல.. நல்ல குடும்பப் படமாத்தான் போடுதான்...” எனப் பெரியவர்கள் சிலாகித்துப் பேச, “மகனைப் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க, பேரனையும் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க... அந்த உறுத்தல், வருத்தம் கொஞ்சம்கூட இல்லாம குஷியா படம் பாக்க ஆரம்பிச்சிட்டு பாரு...” என முணுமுணுத்தாலும் டிவியில் பார்க்கும் மெகாசீரியலுக்கு மாற்றாக ஒளிபரப்பப்பட்ட குறுந்தொடரைப் பார்க்கத் தொடங்கினர் இல்லத்தரசிகள்.

“ப்ச்.. டைம் வேஸ்ட்.. இங்கே வந்து இவங்க போரிங் சீரிஸ் பார்க்கிறதுக்கு வீட்டுல இருந்திருந்தா ஏதாவது உருப்படியாவாவது பார்த்திருக்கலாம்..” எனச் சலித்துக் கொண்டனர் இளஞ்சிட்டுகள்.

மறுநாள் காலையில் ரோஜா கண்விழித்துப் பார்க்க அவளது தலைக்கருகில் ஒரு பரிசுப்பெட்டி இருந்தது. அதைப் பார்த்ததும் வெகுவாக மகிழ்ந்தவள்; “அர்ஜுன் சார்.. கிஃப்ட் வச்சிட்டுப் போயிருக்கிறாரு.. அதுவும் எனக்காக...” எனக் களிகூர்தலுடன் கரத்திலெடுத்து கருத்துடன் கவரை களைந்தாள்.

வெகுசிலாகிப்புடன் பிரித்துப் பார்க்க, அது ஒரு “கண்ணாடிப் பேழை...”. அது விலையுயர்ந்தது எனச் சென்ற வாரம் காட்டப்பட்ட தொலைக்காட்சி விளம்பரத்தைக் கொண்டு ஒப்பிட்டுத் தெளிந்தவள் அவன் தன்மீது வைத்திருக்கும் அன்பினை எண்ணிப் பூரிக்கலானாள்.

கண்ணாடி முன்நின்று தலை வாரிக் கொண்டிருந்தவனைப் பின்னாலிருந்து அணைத்தவள்; “அர்ஜுன் சார்... எனக்காகவா வாங்கிட்டு வந்தீங்க??” என அவன் வாய்வழி அவளுக்கான அன்பைக் கேட்கும் ஆவலுடன் விசாரிக்க, “நான் ஆஃபீஸ் போனதுக்கு அப்புறம் என் ரோஜாவோட நெனப்பு வர்றப்போ எல்லாம் அவகூடப் பேசுறதுக்காக வாங்கிட்டு வந்தேன்.. நான் பக்கத்துல இருக்கிறப்போ அவளுக்குப் போர் அடிக்கக் கூடாதுங்கறதுக்காகவும் வாங்கிட்டு வந்தேன்...” என அவளைத் தன்புறம் இழுத்து, கன்னத்தைக் கிள்ளியவாறே கண்களில் முத்தமிட்டான் அர்ஜுன்.

இவ்விடம் இவ்வாறே இனிதான இராப்பகல் கழிந்து கொண்டிருக்க, முத்தரசு – வெண்ணிலா தங்களது புதல்வனின் ஒவ்வொரு செயலிலும் சிலிர்த்து சில்லறைகளை விட்டெறிந்தவண்ணம் இருந்தனர்.

“அம்மா இங்கே வா... வா...

ஆசை முத்தம் தா.. தா...

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு...

உன்னைப் போன்ற நல்லார்

ஊரில் யாவர் உள்ளார்??

என்னால் உனக்குத் தொல்லை

ஏதும் இங்கே இல்லை...

ஐயமின்றிச் சொல்வேன்..

ஒற்றுமை என்றும் பலமாம்..

ஔவை சொன்ன மொழியாம்...

அஃதே எனக்கு வழியாம்...”

என்கிற பாடலை வெண்ணிலா கற்றுக் கொடுக்கத் தன் மழலைக் குரலில் தட்டுத் தடுமாறி, குழறியவாறே சிறுவன் திருத்தணிகை பாட, அதை ஞாபகர்த்தமாகத் தங்களது மின்னணு கண்ணாடிப் பேழையில் பதிவு செய்து வைத்துக் கொண்டான் முத்தரசன்.

மறுநாள் காலையிலும் சிறுவன் உண்டுகொண்டிருக்கையில், “கண்ணா... கண்ணா... அம்மா ஒரு பாட்டு சொல்லித் தர்றேன்... பாடுறியா??” எனக் கேட்டாள் வெண்ணிலா.

“போம்மா... பாட மாட்டேன்... எனக்குப் பசிக்குது.. தோசை வேணும்...” என அவன் சிணுங்க, “தோசை தானே தங்கம்... தோசை பத்தி பாட்டுப் பாடுவோமா?! நீ சமர்த்தா பாட்டுப் பாடுவியாம் அம்மா உனக்குத் தோசை ஊட்டுவேனாம்...” எனச் சமாதானம் பேச முற்பட்டாள் வெண்ணிலா.

திருதிருவென விழித்த சிறுவன் திருத்தணிகை தன் தகப்பன் முத்தரசுவைப் பார்க்க, “வெண்ணிலா.. அதான் அவன் செய்ய மாட்டேன்னு சொல்லுறான்ல.. விடேன்.. அப்புறமா சொல்லிக் கொடுக்கலாம்...” எனத் தன் மகனுக்காகப் பரிந்து பேச முனைந்தான் அவன்.

“நீ ச்சும்மா இரு முத்து மாமா... நம்ம புள்ள எல்லாத்திலேயும் பெஸ்ட்டா வரணும்... அதுக்குதான எல்லாம் சொல்லிக் கொடுக்குறேன்.. நீ குறுக்க வராத...” என அவனைக் கொஞ்சலுடன் கண்டிப்பு செய்துவிட்டுத் தன் மகனிடம் திரும்பினாள்.

“செல்லம்... என் தங்கம்ல... அம்மா உனக்குச் சொல்லித் தர்றதை சொல்லிக்கிட்டே சாப்பிடுவியாம்...” என அவனைத் தாஜா செய்து சம்மதிக்க வைத்தவள்; தன் கணவனிடம் கண்ணாடிப் பேழையைக் கொடுத்துப் பதிவு செய்யப் பணித்துவிட்டு தன் மகனுக்குப் பாடல் கற்றுக் கொடுக்கலானாள்.

“தோசையம்மா... தோசை...

அம்மா சுட்ட தோசை...

அரிசி மாவும் உளுந்து மாவும்

கலந்து சுட்ட தோசை...

அப்பாவுக்கு நாலு...

அம்மாவுக்கு மூணு...

அண்ணாவுக்கு ரெண்டு...

பாப்பாவுக்கு ஒண்ணு...

ஆக மொத்தம் பத்து...

இன்னும் தின்ன ஆசை...

திரும்பக் கேட்டால் பூசை...” என அவள் பயிற்றுவிக்க, ஒன்றுக்குப் பாதியாகப் பாடிவிட்டு தன் உணவில் கவனமாக இருந்தான் திருத்தணிகை.

உண்மையில் மாமியார் மாமனார் என எவரேனும் பெரியவர்கள் எவரேனும் இருந்திருந்தால், “யம்மா வெண்ணிலா... பிள்ளையப் போட்டு என்னத்துக்கு இந்தப் பாடு படுத்துத?? நிம்மதியா சாப்பிட விடேன்...” எனக் கண்டித்திருப்பர்.

ஆனால் இங்கே எவரும் இல்லாததால் அவள் வைத்ததே சட்டமாகிப் போனது. முத்தரசுவும் அவ்வவ்போது கண்டித்தாலும் தன் இல்லாளின் இஷ்டப்படியே விட்டுவிட்டான்.

இவ்வாறே ஒவ்வொரு பாடலாகத் தன் மகனுக்குக் கற்பித்து அவனது ஒவ்வொரு அசைவையும் படம்பிடித்து வைத்திருப்பவள் பகலில் அவன் தூங்கும் வேளைகளில் ஓடவிட்டு, பார்த்து மெய்சிலிர்த்துப் போவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தாள்.

இங்கே அர்ஜுன் – ரோஜா இல்லத்தில் ஒருமாத காலத்தில் காதலும் இன்பமான தருணங்களும் ஏக்கர் கணக்கில் சேமிப்பிற்குக் கிட்டியிருக்க, திருமணத்திற்காக வேண்டப்பட்ட ஒருமாத விடுப்பு முடிந்து அர்ஜுன் அலுவலகப் பணிக்குத் திரும்பும் நாளும் வந்தது.

அந்த நாளின் காலையிலேயே எழுந்து தன் கணவனுக்குக் காலை உணவாக இட்லியும் தக்காளி சட்னியும் தயார் செய்தவள்; திருமணத்திற்குப் பின்னதான முதல்நாள் வேலை என்பதால் சாம்பாரும் காரட் பொரியலும் அப்பளமும் தயார்செய்து பாத்திரத்தில் இட்டு, அதற்கான பைக்குள் திணித்துத் தயாராக வைத்து விட்டாள்.

அவள் இஸ்திரி போட்டு தயாராக வைத்திருந்த சட்டையையும் கால்சராயையும் எடுத்து மாட்டிக் கொண்டவன்; காலுறைகளையும்(Socks) மைபூசப்பட்ட மூடு காலணிகளையும் (Polished Shoes) அணிந்தவாறே சமையலறைக்குள் நுழைய எத்தனிக்க, “ஷூவை வெளியே போய் மாட்டிக்கோங்க அர்ஜூன் சார்... கிட்சனுக்குள்ள ஷூ போட்டுட்டா வருவீங்க?” என உரிமையுடன் கோபித்துக் கொண்டாள் ரோஜா.

“ஓகே.. ஓகே.. இனி வரலை பொண்டாட்டி...” எனக் கொஞ்சியவன்; பாதரட்சைகளைக் கழற்றி வைத்துவிட்டு, உள்ளே வந்து அவளை அணைத்துக் கொண்டவாறே, “இன்னைக்கு என்ன சமையல் ரோஜா?” எனக் கேட்டான் குழைவாக.

“இன்னைக்கு முதல் நாள் இல்லையா அர்ஜுன் சார் அதனால சாம்பார், காரட் பொரியல், அப்பளம்.. தயிர் வேணும்ன்னா சொல்லுங்க ஒரு பாத்திரத்துல பேக் செஞ்சு வைக்கிறேன்...” என அவள் பொறுப்புடன் கேட்க, “நீ கேட்டதிலேயே தயிர் சாப்பிடாமலேயே ஜில்லுன்னு ஆகிட்டேன் பொண்டாட்டி...” என நெற்றியில் முட்டினான் அர்ஜுன். அவனுக்குச் சிலிர்ப்பாக இருந்தது; இந்தக் காலத்திலும் தன்மேல் அன்பைப் பொழிந்து தாய்க்கு நிகரான அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் கற்பாள் கிட்டிய அதிசயத்தை எண்ணி. ‘புதிய துடைப்பம் நன்கு பெருக்கும்’ என்பதை அறியாதவன் போலும் அர்ஜுன்.

“ஈவ்னிங் அங்கே இங்கேன்னு சுத்தாம சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்க.. உங்களுக்குப் பிடிச்ச சமோசா செஞ்சு வைக்கிறேன்...” என அவள் கூற, “கண்டிப்பா தங்கம்..” என்றவன்; “சரி.. சரி.. ஆஃபீஸ்க்கு நேரமாச்சுது... வந்து டிஃபன் எடுத்து வை...” என உணவுமேஜைக்கு உணவருந்த சென்றுவிட்டான்.

அவனுக்குப் பரிமாறி, பணிவிடைகள் செய்து பணிக்கு அனுப்பி வைத்தவள்; சற்று அசதியாக இருக்கவே சிறிது இளைப்பாறிவிட்டு எழுந்து பார்க்க, மணி பதினொன்றைக் காட்டியது.

“அச்சோ.. பதினொண்ணு ஆகிருச்சா... நான் இன்னும் காலையில சாப்பாடே சாப்பிடலையே...” எனப் பதறியவாறே எழுந்து காலை உணவை உண்டுவிட்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.

தொலைக்காட்சியில் நெடுந்தொடர்கள் பார்ப்பதில் எல்லாம் அவளுக்குப் பெருமளவில் ஈடுபாடு இருந்ததில்லை. ஆகவே பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும் சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவள்; ஒரு கட்டத்தில் சோர்வுடன் சோபாவில் சாய, அந்தக் கண்ணாடிப் பேழையின் திரை அர்ஜுனின் பெயரைத் தாங்கி ஒளிர்ந்தது.
 
Last edited:

4

ஏறக்குறைய அனைவரும் அந்தக் கண்ணாடிப் பேழை எதுவென யூகித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இனி ஒவ்வொரு முறையும் கண்ணாடிப் பேழை எனப் பொடி வைத்துப் பூடகமாகப் பேசுவதைப் போல வீண் பில்டப் பிரயத்தனங்கள் செய்வதற்கான அவசியமிருக்காது. ஆகவே இதுமுதல் அந்தக் கண்ணாடிப் பேழையை ‘அலைபேசி @ செல்லிடப் பேசி @கைப்பேசி @ மொபைல் @ செல்போன்’ அனைவருக்கும் பெயர் விளக்கப் பிரகடனம் செய்து அறிவிக்கிறாள் இந்த மின்மினி. (மின்மினி என்றால் எவரெனத் திகைக்க வேண்டாம்; இக்கதையை விவரித்துக் கொண்டிருக்கும் சாட்ஷாத் நானே தான்.)

அலைபேசி திரையில் அவனது பெயரைக் கண்டதும் உற்சாகமடைந்தவள்; “அர்ஜுன் சார்...” என்றாள் புத்துணர்வுடன்.

“ரோஜா... என்ன பண்றடா? சாப்பிட்டியா??” என அவன் அக்கறையுடன் விசாரிக்க, “இல்ல அர்ஜுன் சார்.. இப்பதான் காலையில டிபனே இப்பதான் சாப்பிட்டேன்... கொஞ்சம் அசதியா இருந்துச்சுன்னு கொஞ்ச நேரம் படுக்க நெனச்சா இவ்ளோ நேரம் ஆகிடுச்சு.. கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்... நீங்க சாப்பிட்டீங்களா??” என அக்கறையுடன் விசாரித்தாள் அவள்.

“எப்போடா லஞ்ச் டைம் வரும், என் செல்லம்மா எனக்காக ஆசையா சமைச்சு கொடுத்து விட்டதைப் எப்போடா சாப்பிடுவோம்ன்னு காத்திருந்து சாப்பிட்டேன்... செம ருசி... எல்லாருக்கும் ஆச்சரியம்.. இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணான்னு... நான் சொன்னேன் ‘நான் போன ஜென்மத்துல பெரிய புண்ணியம் பண்ணியிருக்கிறேன்.. அதனால தான் இப்படியொரு பொண்டாட்டி கிடைசிருக்கிறா’ன்னு...” என அவன் கூற, “ச்சூ... போங்க அர்ஜுன் சார்...” எனச் சிணுங்கினாள் அவனது மனைமடந்தை.

“என்ன ரோஜா?? வெட்கப்படுறியா??” எனச் சில நிமிடங்கள் கொஞ்சிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட, கட்டிலில் சென்று அமர்ந்தவள்; வீட்டின் அமைப்பை எவ்வாறு மாற்றியமைக்கலாம், எவ்வாறு கவர்ச்சிகரமாக நேர்மறையை எண்ணங்களை விதைக்கும் விதமாக மாற்றலாம் என்பது குறித்துச் சிந்திக்கலானாள்.

அதற்குள் மணி மூன்றைத் தொட்டுவிட, அவளின் மணி வயிற்றிலிருக்கும் வெற்றிடம் சிந்தனையைக் கலைத்து, “அம்மா... நானொரு வெத்து பாண்டமம்மா... கருணைகாட்டி கவனியம்மா...” எனக் கைலாசாவின் நிறுவனரின் தொனியில் அபாயச் சங்கினை ஊதி, தனது இருப்பைக் காட்டியது. தனக்குப் பசிக்கிறது என்பதை உணர்ந்தவள்; சமையலறைக்குச் சென்று சாம்பாரை மீண்டுமொரு முறை சூடுபடுத்தி, பொரியலையும் மறுவறுவல் செய்துவிட்டு, ஊறுகாய் சகிதம் உண்ணத் தொடங்கினாள்.

அவளது வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பதே வழக்கம். கல்லூரியில் படிக்கையில் காலையிலும் மாலையிலும் வீட்டினருடன் ஒன்றாக அமர்ந்து உண்பாள்; மதியம் தோழியருடன் உண்பாள். இந்த ஒருமாத காலமாக அவனுடன் அமர்ந்தே உண்டு பழகியவளுக்குத் தனியாக அமர்ந்து உண்பது சற்றே சிரமமாக இருந்தது.

எரிச்சலுடன் சுற்றும் முற்றும் நோக்கியவளின் சிந்தைக்குள் சிறந்ததொரு யோசனை உதித்தது. நேராகச் சென்று தன்னவன் தனக்குப் பரிசாக அளித்த அலைபேசியை எடுத்துவந்து தொடுதிரையில் கடவுச்சொல்லை உள்ளிட்டாள்.

முகப்புத் திரையில் தானும் அவனும் தம்பதியாக இருக்கும் புகைப்படத்தில் அவனைக் கண்டு கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவள்; “அர்ஜுன் சார் எப்பவும் அழகுதான்.. உம்மா...” எனத் தனக்குள்ளாகவே சிலாகித்துக் கொண்டு நீகுழாய் (YouTube) செயலிக்குள் பிரவேசித்தாள். மன்னிக்கவும், வலையொளி என்பதே யூடியூபின் தமிழாக்கம். சிரித்தால் முகத்தின் தசைகள் செயல்பட்டுப் புத்துணர்வு பெறுமாம், ஆயுள் அதிகரிக்குமாம். உங்களது ஆயுளை அதிகரிக்கச் செய்யும் நல்லெண்ணத்துடன் உங்களைச் சிரிக்க வைப்பதற்காகவே நீகுழாய் என்றேன். என்னை மனப்பூர்வமாக மன்னித்து விட்டேன் என்பவர்கள் அடுத்தப் பாராவிற்கு விஜயம் செய்யவும். ஏனையோரும் விஜயம் செய்யுங்கள். ஏனென்றால் மேலும் மேலும் உங்களைச் சிரிக்க வைத்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் பல காரியங்களைக் கையில் கொண்டுள்ளேனே!!

“என்ன வீடியோ பார்க்கலாம்?” எனச் சிந்தித்துத் துழாவியே கரத்தில் பாதியளவு காய்ந்து போய்விட்டது. “அடியேய் ரோஜா... கையைக் காய வைக்காத, அப்புறம் சொட்டை மாப்பிள்ளைதான் கிடைப்பான்...” என எப்போதோ கல்லூரித் தோழி கூறியது நினைவடுக்கிலிருந்து குதித்து வந்து தன் வதனத்தைக் காட்டிக் கொண்டு சிரித்து வைக்க, ‘அச்சோ... அர்ஜுன் சாருக்குச் சொட்டை விழுந்துடக் கூடாது.. அவரு இப்போ இருக்கிற மாதிரி கியூட்டா தான் எப்பவும் இருக்கணும்..’ எனச் சூடுகண்ட பூனையாக விறுவிறுவெனத் தட்டில் இருந்த உணவை உண்டுவிட்டு கரத்தையும் பாத்திரத்தையும் கழுவி வைத்தாள்.

அவன் அலுவலகம் முடித்து வீடு திரும்பியதும் அவனை வரவேற்கும் விதமாகச் சமோசாவுடன் வேறேதேனும் இனிப்பு வகைகள் தயாரிக்கலாம் எனத் தீர்மானித்தவள்; அதற்கான செய்முறை குறிப்புகளை நீகுழாய்... இல்லை இல்லை வலையொளியில் பார்வையிட்டவாறே இல்லத்தைப் பெருக்கி, பாத்திரங்களைச் சுத்தம் செய்து, துணிகளைத் துணிதுவைக்கும் இயந்திரத்தில் சுழல விட்டுவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி, வீடெங்கும் சாம்பிராணி மணம் கமழச் செய்துவிட்டு சமையலறைக்குத் திரும்பி, ரவா லட்டுவும் சமோசாவையும் தயாரித்து முடிக்கவும் அவன் அலுவலகத்திலிருந்து திரும்பவும் சரியாக இருந்தது.

இல்லத்தின் வாயில்வரை வீசிய எண்ணெயுடன் கூடிய மசாலாவின் வாசத்தை முகர்ந்தவாறே உள்ளே நுழைந்தான்.

“ஜிங்கு ஜிங்குன்னு மண(ன)ம் கொ(கு)திக்குது...

வா வா எனச் சுவை அழைக்குது...” எனப் பாடியவாறே அர்ஜுன் உள்ளே நுழைய, “வாங்க அர்ஜுன் சார்... முதல் நாள் ஆபீஸ் வேலையெல்லாம் சிறப்பா போச்சுதா?” என விசாரித்தவாறே, அவனது அலுவலகப் பையை வாங்கி அங்கிருந்த மேஜையில் வைத்த ரோஜா; “போய் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. டீ போடறேன்...” என அறிவுறுத்தினாள்.

‘மனைவி சொல்மிக்க மந்திரமில்லை’ என்னும் கூற்றைக் கண்டிப்புடன் பின்பற்றும் ஆதர்ச புருஷனான அர்ஜுன் தன் பெண்டுவின் பேச்சைத் தட்டாமல் சென்று உடைமாற்றிவிட்டு வர, மாலைத் தேநீருடன் அன்றைய நாளின் நிகழ்வுகளை அவன் கூற – இவள் கேட்கவெனப் பாங்கான குடும்ப வாழ்வு நகரத் தொடங்கியது.

இந்தக் காட்சியுடன் ஒளிபரப்பு நிறுத்தப்பட, “எலேய்... எவம்ல அது.. படத்த பாதியில ஆப் பண்ணுனவன்? வந்தேம்னு வச்சுக்க... ஒழுங்கா படத்தப் போடுல.. நல்ல கட்டத்துல ஆப் பண்ணிப் போட்டுட்டான் போக்கத்தவன்...” எனக் கத்தினார் கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர்.

“தாத்தா.. இன்னைக்கு இவ்ளோ தான் போட சொல்லியிருக்காவ... சின்னப் பிள்ளையள் எல்லாம் கொசுக்கடியில படுத்திருக்கு... அதுவல்லாம் தூங்குத நேரமாயிட்டு... போங்க.. நாளைக்குப் போடுவோம்...” எனப் பஞ்சாயத்து அலுவலர்களில் ஒருவர் குறிப்பிட, வீறுகொண்ட வேங்கையாக வெகுண்டெழுந்து விட்டார் அந்தப் பெரியவர்.

“ஏல... ராத்திரி பத்து பன்னெண்டு மணி வரைக்கும் அந்த ச்செல்லை தேய்ச்சிக்கிட்டே முழிச்சிக் கிடப்பாவ.. அப்போம்லாம் ஒண்ணும் செய்யாது.. இங்கன மரத்தடியில சுத்தமான காத்துல வெத்து தரையில படுத்து கிடக்கும் போதுதான் அவியளுக்குக் கொசு கடிக்கும் எல்லாம் செய்யும்... ஒழுங்கா போடு இல்லைன்னா அந்த வேட்டி மாதிரி வச்சிருக்கதை தூக்கிப் போட்டு நொறுக்கிட்டுப் போயிருவேன்...” என அவர் கூச்சலிட, “தாத்தா.. அப்படி என்னத்தையும் செஞ்சிராதீரும்... ப்ரோஜக்டரும் எல்ஈடி ஸ்க்ரீனும் லட்சத்துக்கு மேல.. கவர்மென்டு குடுத்துருக்கான்.. நாங்க அவனுக்குக் கணக்கு சொல்லணும்..” எனப் பதறினார் அலுவலர்.

“அப்படின்னா முழுப்படத்தையும் போடு வே... அதை முழுசா பாக்காம நான் இங்கே இருந்து வரமாட்டேன்...” என அவர் அங்கேயே தர்ணா செய்ய எத்தனிப்பவர் போல அமர்ந்து கொள்ள, சங்கடத்தில் நெளிந்த அலுவலர்; மற்றவர்களை நோக்கி, “என்னம்மா... மீதிப் படத்தையும் போட்டுரவா? தாத்தா பார்த்துட்டு தான் போவேன்னு ஒத்தைக் காலுல நிக்காவள...” எனக் கேட்க, அங்கே மயான அமைதி நிலவியது.
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom