Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL ஏ.எஸ் வைரஸ் - Tamil Novel

Status
Not open for further replies.

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18

10

அவளது மௌனம் அவரது கோபத்தை மேலும் அதிகரிக்க, “நான் பாட்டுக்கு கேட்டுட்டே இருக்கிறேன்... நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??” என அடிப்பதற்குக் கையை ஓங்கவும், அதற்குள் குறுக்கே வந்தார் சாரதா.

“என்னங்க... தோளுக்கு மேல் வளர்ந்த பொண்ணை இப்படித்தான் அடிக்கிறதா?? இப்போ என்ன?? இந்த ஒரு தடவை மார்க் கம்மி ஆயிட்டா அவ்வளவுதானே... எதோ குடி முழுகிப் போன மாதிரி கத்திக்கிட்டு இருக்கிறீங்க?? இந்தத் தடவை விட்டதை அடுத்தத் தடவை பிடிப்பா... தேவையில்லாம கத்துறதை விட்டுட்டு வந்து டீ குடிங்க...” எனக் கூறவும், சாரதாவை முறைத்தார் நாராயணன்.

“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கிறேன்.. நீ வந்து டீ குடிக்கச் சொல்ற... இது ஒன்னும் குடி முழுகி போற காரியம் இல்லைதான்... மார்க் எல்லாம் இரண்டாம் பட்சம், ஆனா நம்ம பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கணும்... அதற்கான தீர்வை நாம சொல்லணும்.. அவளுக்கு ஏதாவது பிரச்சனை அப்படினா அவ கூடவே இருந்து அவளைச் சரி பண்ற வழியே பார்க்கணும்... அதற்கு நான் ட்ரை பண்ணா நீ பாட்டுக்கு ஏதேதோ உளறிக்கிட்டு இருக்கிற?? என அவர் சீற, தன் மகளை அமைதியாக இருக்குமாறு கண்களால் ஜாடை செய்தார் சாரதா.

தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளை எப்படிப் பெத்தவங்க கிட்ட ஓபனா சொல்லுவா? மனசு திறந்து பேசுறவரைக்கும் வெயிட் பண்ணுவோம்... அவளாவே சொல்லுவா...” எனக் கூற, “சரி... நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்... டீ எடுத்துட்டு வா..” எனத் தனது அறைக்குச் சென்றுவிட்டார் நாராயணன்.

தன் மகளைத் தனியே அழைத்துக் கொண்டு சென்ற சாரதா, “வெண்பா.. உன்னை வீட்டில் இருக்கும்போது மட்டும் தானே அந்தப் பப்ஸ்மாஷ் யூஸ் பண்ண சொன்னேன்? இப்படி மார்க் குறைஞ்சிட்டு வந்து நிக்கிற?? உங்க அப்பாவைப் பார்த்தியா?? எப்படிக் கத்திட்டு இருக்கிறார்ன்னு... பார்த்து பக்குவமா நடந்துக்கோ... இனி இந்த மாதிரி நடக்கக் கூடாது...” எனக் கூறவும், “சரிமா..” என்றுவிட்டாள் வெண்பா.

உண்மையில் அவளுக்குச் சற்றே குற்ற உணர்வாக இருந்தது; ஏனெனில் எப்போதும் வகுப்பில் நல்ல மதிப்பெண்களும் நல்ல தரங்களும் பெறுபவள் அவள். ஆனால் இப்போது தன்னைப் பாராட்டிய ஆசிரியைகளே தன்னைப்பற்றித் தந்தையிடம் புகார் அளிக்கும் நிலைமைக்கு வழிவகுத்து விட்டோமே என வெகுவாக வருந்தினாள். இனி இவ்வாறான சூழ்நிலைக்கு வழிவகுக்கக் கூடாது என நினைத்தவள் அந்தச் செயலியை வீட்டில் விடுமுறை நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதற்கான குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் மற்ற நேரங்களில் படிப்பில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்னும் தீர்மானத்திற்கு வந்தாள்.

மறுநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் முகம், கை, கால்களை அலம்பி விட்டு, தனது அறைக்குச் சென்று வீட்டுப் பாடங்களைச் செய்யத் தொடங்கினாள். இத்தனை நாட்களாக வீட்டிற்கு வந்ததும் அதிக ஒப்பனை செய்து கொண்டு, அந்தச் செயலில் மூழ்கிக் கிடப்பவள் இப்போது புதிதாகப் படிக்கத் தொடங்கவும், என்னவாயிற்று இவளுக்கு? ஏன் வீடியோ பதிவு செய்யாமல் போய் உட்கார்ந்து கொண்டான் எனச் சிந்தித்தார் சாரதா. அதைத் தன் மகளிடம் கேட்கவும் செய்துவிட்டார்.

அவரைத் தீர்க்கமாகப் பார்த்தவள்; “அம்மா... அது ஒரு பொழுதுபோக்கு தானே தவிர அது மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன் ம்மா... அப்பா திட்டும்போது நான் பதில் சொல்லாம தலைகுனிந்து நிற்கும் போது ரொம்பவே அவமானமா போச்சு... இனி நான் அதைப் பயன்படுத்த வேண்டாம்ன்னு முடிவுக்கு வரலை... ஆனா குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் யூஸ் பண்ண போறேன்...” எனத் தன் முடிவைத் தெரிவித்து விட்டு, வேலைகளில் மூழ்கிப் போனாள்.

தனது வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு, அலைபேசியை எடுத்து, அவள் அறிவிப்புகள் பெட்டகத்தைத் திறந்து பார்க்க அவளைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்து இருந்தது. அதில் ஆனந்தக் கூத்தாடியவள், தன் தாயிடம் சென்று அம்மா தெரிவிக்க, அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. “சூப்பர்... சூப்பர்... வெண்பா... உன் ஸ்கூல்லகூட மொத்தம் 800 பேர் தான் படிக்கிறாஞா... ஆனா ஆயிரம் பேர் உன்னை ஃபாலோ பண்ணி இருக்கிறாங்க... ரொம்ப ரொம்ப ரொம்ப ஹாப்பி நானு... ரொம்பப் பெரிய ஆளா வரப் போற பாரு.. இலவோ நாளா இது எனக்கே தெரியாம இருந்து இருக்குது... இப்ப அதை உலகம் தெரிஞ்சு ரெகக்நைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க... இந்த ஆயிரம் பாலோவர்ஸ் வந்ததுக்கு ஒரு ஸ்பெஷல் வீடியோ போடு என வழிகாட்டினார்.

“எப்படிமா ஸ்பெஷல் வீடியோ போடுறது??” என அவள் தன் தாயிடமே வினவ, “புதுசா ஒரு புடவை எடுத்து வச்சிருக்கிறேன்... அதைக் கட்டிக்கிட்டு, அப்படியே கொஞ்சம் பூ வச்சிக்கிட்டு, கொஞ்சமா மேக்கப் போட்டு.. ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு...’ பாட்டுக்கு வாயசைச்சு பேசு... அப்டேட் பண்றப்போ அபவுட் கேக்கும்ல அங்கே ‘தேங்க்ஸ்... நீங்க எல்லாரும் என்னுடைய கான்பிடன்ஸ் லெவலை அதிகமாக அதிகமாக்கி இருக்கிறீங்க... நம்ம ஃபேமிலி ஆயிரம் பேர் கொண்ட ஒரு ஃபேமிலியா விரிந்து நிற்கிறது...’ அப்படின்னு சொல்லி போடு” எனத் தன் மகளுக்குக் கற்றுக் கொடுத்தார் அந்தத் தாய்.

உண்மையில் இவர் போன்ற தாய்கள் இருக்கவே செய்கின்றனர். பொதுவாகத் தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளும் தனக்குக் கிடைக்காத காரியங்களும் தன் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும், அவர்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என நினைப்பவர் தான் தாய். இங்கேயும் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தான் சிறுவயதில் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட ஒப்பனைகள், நடனம் ஆட வேண்டும் என ஆசைப்பட்ட தருணங்கள், பாட வேண்டும் என விரும்பிய பாடல்கள் என அனைத்து ஆசைகளையும் தன் மகள் வாயிலாக நிறைவேற்ற சித்தம் கொண்டிருந்தார் சாரதா.

தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் திரையில் தோன்ற வைப்பதற்காக முதல் கட்டமாகதான் அந்தச் செயலியின் வாயிலாக முயற்சி செய்து பார்க்க தொடங்கினார். அவருக்கு வெண்பா பெரியவள் ஆகும் வரை எல்லாம் காத்திருக்கப் பொறுமை இல்லை; முன்னேற்றம் என்பது இன்றைய நிகழ்ந்துவிட வேண்டும் என்றும், அவள் உலகம் போற்றும் ஒரு திரைப்பட நாயகியாகவோ இல்லை கதாநாயகியாகவோ ஆகிவிட வேண்டும் எனும் பேராசை அவருக்குள்.

ஒருவிஷயம் அவருக்குப் புரியவில்லை இது நிரந்தரம் இல்லை என்பது. நாம் நன்றாகச் சிந்தித்துப் பார்த்தோமானால் ஒரு காரியம் புலப்படும்; இங்கே நாம் “கனவுக்கன்னி”, “ஆசை நாயகி”, “ட்ரீம்கில்லர்...” “லேடி சூப்பர் ஸ்டார்” எனக் கொண்டாடிக் கொண்டிருக்கும் எத்தனை பேருக்கு அதே துறையிலேயே சிறப்பான எதிர்காலம் இருக்கிறது, எத்தனை பேரின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது என எவராலும் அறுதியிட்டு கூற இயலாது.

ஏனெனில் இங்கே கொண்டாடுபவர்கள் குறிப்பிட்ட காலம் வரைதான். இங்கே ட்ரென்ட் என விளிக்கப்படும் காரியம் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று.

அந்தக் காலத்தில் நடிகைகளுக்குப் பஞ்சம் இருந்தது நடிகைகளுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு கலைஞருக்கும் சற்றே பஞ்சம் இருந்தது; திரையில் தோன்றுபவர் என்றால் ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் அடுத்தடுத்துத் தன்னை முன்னேற்றிக் கொண்டே இருந்தால் மட்டுமே மனதில் தங்குவர். சிறிதுநேரம் கண்களையாவது உறுத்தும் தூசிபோல நிற்பார். இல்லையேல் நீரின் மேல் விழுந்த ஒருதுளி மையாகக் கரைந்து விடுவர்.

இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் பல பேருக்குக் கொண்டாடப்படும் காலம் மட்டுமே அவர்களது ஒட்டுமொத்த நல்வாழ்வின் வாழ்வுக்காலமாக இருக்கும். மற்ற பக்கங்கள் எல்லாம் அவர்களது வாழ்வில் கரிய பக்கங்களாக இருக்கும். இருப்பினும் அதை அறிந்தே அந்தத் தற்காலிக மகிழ்ச்சிக்காகவும் கொண்டாடப்படுவதற்காகவும் மயங்கி, அதன் மேல் ஆசை கொண்டு அனைத்து பக்கங்களையும் சிதைத்துக் கொள்பவர்களும் கருமையாக்கி கொள்பவர்களுமே அதிகம்.

இந்த உண்மை நன்கு தெரிந்திருந்தும் சாரதா தன் மகளை ஏதேனுமொரு புகழேணியின் உச்சியில் ஏற்றி வைத்து அழகு பார்க்க ஆசை கொண்டார். தன் மகள் புடவை கட்டி, தலை நிறையப் பூவுடன் அமர்ந்து வாயசைத்துக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டவருக்குக் கண்களில் நீர் சுரந்தது.

என் மகள் இத்தனை வளர்ந்து விட்டாள், அவளது அழகு இத்தனை ஆராதிக்கத் தக்கதா எனத் தன்னைத் தானே வியந்து, தன் மகளின் நிலை குறித்துப் பெருமிதம் கொண்டார் ‘தன்னைத் தான் மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுப்பய மொச்சைக் கொட்ட... ஊரையே மீசிக் கொள்ளுமாம் உளுத்தபய மொச்சக் கொட்ட...’ என ஊரில் பெரியவர்கள் கூறுவதைப் போல.

தன் மகள் இத்தனை அழகாக இருக்கிறாள் என்பதில் அவருக்குக் கர்வம் பிறந்தது. திரைத்துறையைத் தன் மகள் தான் கோலோச்சப் போகிறாள் என்கிற அளவுக்கு அவர் கற்பனை கோட்டையைக் கட்டி, அதற்குக் கிரகப்பிரவேசம் நிகழ்த்தி அங்கே நிரந்தர முதலாளியாகத் தன் மகளை அமரவைக்கும் அதிரவைக்கும் கனவையும் வெகு சிறப்பாகக் கண்டு முடித்துவிட்டார்.

இப்போது அவருக்கு இருக்கும் பொறுப்பெல்லாம் கனவை நனவாக்கி, அவரது மகளை மகா பேரரசியாக - நிரந்தரப் பேரரசியாக – தன்னிகரற்ற பேரரசியாக ;முடி சூட்டுவது மட்டுமே அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு அவர் தயாராகவே இருந்தார்.

உண்மையில் இது சாரதாவின் இயல்பு குணம் என்றாலும் அந்த இயல்பை வெகு விரைவாக ஊக்குவித்தது அவரது உடலில் கலந்திருக்கும் ஏஎஸ் வைரஸ் ஆகும். ஏனென்றால் முன்பே தெரிவித்தபடி ஏஎஸ் வைரஸ் நமக்குள் புகுந்துவிட்டால் ஒளியைவிட வேகமாக அனைத்து செல்களுக்குள்ளும் ஊடுருவும், பரவும், பிரியும் தன்மை கொண்டது. ஒருமுறை தாக்கிவிட்டால் அதை வெளியேற்றுவது சற்றுச் சிரமம் தான். இந்த ஏஎஸ் வைரஸ் என்றால் என்ன எனத் தாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என நினைக்கிறேன்.

ஆகவே அதன் அர்த்தம் யாதென விளக்கவேண்டிய பொறுப்பு இவ்விடம் என்னுடையது. ஏஎஸ் என்பதன் முழுப்பதம் அட்டென்ஷன் சீக்கிங் (Attention Seeking) அதாவது கவனயீர்ப்பு, ஒருவரது கவனத்தைத் தன்னை நோக்கி திருப்புவது; இங்கே அனைவரது கவனத்தையும் தன் மகளின் மீது திருப்ப வேண்டும் என ஆசை கொண்டார் சாரதா.

ஆனாலும் இது அவளது பள்ளிப் படிப்பின் காலம், அவளுக்குப் போதிய வயது நிரம்பவில்லை என நினைத்தவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அவள் நன்றி நவில்ந்த வீடியோவை பதிவேற்றி விட்டு தனது வேலைகளில் மூழ்கிப் போக, அந்த வீடியோ பலரால் பார்க்கப்பட்டது. எண்ணிக்கை குறைவென்றாலும் அப்போதைக்கு அந்தச் செயலியைப் பயன்படுத்துபவர்கள் குறைவு எனத் தன்னைத் தான் தேற்றிக் கொண்டார் சாரதா.

ஏனென்றால் அந்தச் செயலி அப்போதுதான் புழக்கத்திற்கு வந்திருந்தது; ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு காணொளியிலும் காணும் இடம்தோறும் அந்தச் செயலியை குறித்து விளம்பரம் செய்து கொண்டுதான் இருந்தார்கள். “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்பதற்கிணங்க, முதலில் ஒருவனை வீழ்த்த வேண்டும் என்றால் அவனுள் உறங்கிக் கிடக்கும் ஆசையைத் தூண்ட வேண்டும்.

இங்கேயும் அதுதான் நிகழ்ந்து கொண்டிருந்தது; திரையில் ஒளிரும் பிறரது நிழல் உருவங்களைப் பார்க்கையில் நாமும் அதுவாக இருந்தால் எப்படி இருக்கும், தன்னையும் அத்தனை பேர் பார்த்தால் எப்படி இருக்கும் என ஒருவித ஆவல் பிறப்பது இயல்புதான். அது ஒரு தனி மனிதனுக்கான எதிர்பார்ப்பும் கூட. அது சரி தவறு என நியாயத்தீர்ப்புக்கு ஆட்படாது.

ஏனெனில் அது எவருள்ளும் உறங்கிக் கிடக்கும் ஒரு ஆசை தான் அது. தனது செயல்களை எவரேனும் பாராட்டி விட மாட்டரா எனும் ஏக்கம் பிறப்பது இயல்புதான். ஏனெனில் மனித மனம் மயங்குவதும் ஏங்குவதும் ஒரு சிறு பாராட்டுக்காகத் தானே இப்போது சாரதாவின் மனம் தன் மகளை எவரேனும் பாராட்டி விட மாட்டாரா என ஏங்கித் தவித்தது.
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18

11

எப்போதும் பள்ளி ஆண்டு விழாக்களில் அவளது நடனம் இடம் பெற்றால் அதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என்னும் நோக்கில் ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கி வைத்திருந்தார் சாரதா. மேலும் எந்த வேலைகள் இருந்தாலும் ஆண்டு விழாவிற்கும் மற்ற நிகழ்வுகளுக்கும் தவறாமல் சென்று விடுவார்.

வெண்பா பூப்பெய்திய பிற்பாடு அவளின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு நடனமாட தடை விதித்திருந்தார் நாராயணன். ஒருவகையில் அவர் ஒரு கன்சர்வேட்டிவ், டிபிக்கல் தந்தையும் கூட. ஏனென்றால் மேடையில் ஆடுகையில் எவரும் தன் மகளை விமர்சித்து விடக்கூடாது, அவளின் தோற்றத்தை ரசித்து ஏதேனும் வார்த்தைகளை உதிர்த்துவிடக் கூடாது, அவளின் அங்க வளைவுகளை எவரேனும் விமர்சித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். ஒற்றை மகளாக இருந்தாலும் அவளைக் கண்டிப்புடனும் கண்ணியத்துடனும் வளர்க்க வேண்டும் எனத் தனக்குள் உறுதி பூண்டிருந்தார் நாராயணன்.

ஆகவே தான் அவளுக்கு நடனமாட தடை விதிக்கப்பட்டது. மேலும் படிக்கும் பள்ளியில் ஒவ்வொரு விழாவிற்கும் ஒப்பனைக்காக ஒன்றுபோல் புதிதாக வாங்கப்படும் ஆடைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகை வசூலிக்கப்படும். அதைக் கொடுப்பதில் நாராயணனுக்கு விருப்பம் இல்லை. அவசரகதியில் தயார் செய்யப்படும் அந்த உடைகளில் தரம் இருக்காது, பிற்காலத்தில் தன் மகள் அதை அணிவதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அவரது எண்ணம்.

அப்போதெல்லாம் சாரதா அவரைத் திட்டிக்கொண்டே இருப்பார். “ஒரே ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருக்கிறோம்... அந்தப் பொண்ணுக்கு ஒரு டிரஸ் எடுக்குறதுக்குக் காசு கொடுக்கறதுக்கு எவ்வளவு யோசிக்கிறீங்க? இந்தச் சின்னச் சின்ன விஷயங்கள் தான் வருங்காலத்தில் பெரிய பெரிய மெமரிஸ் ஆகும்... அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க.. இப்படி வெறுமனே படிச்சுட்டு இருந்தா அவளுக்குன்னு வருங்காலத்தில் எந்த நினைவுகளும் இருக்காது.. வெறுமனே தத்தி மாதிரி வளர்ந்து நிற்பா... இந்த 300 ரூபாயில் என்ன கோட்டையைக் கட்டிடப் போறீங்க?? எனக் கேள்வி கேட்பார்.

ஆனால் அதற்கெல்லாம் அசருபவர் அல்ல நாராயணன். தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து விடுவார். இதில் மற்றொரு காரணமும் இருக்கிறது அவர்கள் பள்ளியில்.. அவர்கள் பள்ளியில் மட்டுமல்லாது பல பள்ளிகளிலும் சற்று அழகாக, நிறமாக இருக்கும் மாணவிகளை மட்டும்தான் ஆண்டு விழா நிகழ்வுகளில் கலை நிகழ்ச்சிகளுக்குச் சேர்ப்பது வழக்கம். மாநிறத்தில் இருக்கும் வெண்பாவை சேர்த்துக் கொள்வது என்பது சற்று அரிதான காரியம் தான்.

அதிலும் இயல்பான பெண்களை விடச் சற்று உயரமாக இருக்கும் வெண்பாவை கலை நிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொள்ள ஆசிரியைகள் யோசிப்பர். அவ்வப்போது நாராயணன் வேறு பள்ளிக்குச் சென்று, “இவளை டான்ஸில் எல்லாம் சேர்க்க வேண்டாம்... ஏதாவது கராத்தே, சிலம்பம் இது போன்ற தற்காப்புக் கலைகளில் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்க... அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறேன்...” என்று விடுவார்.

அவரது கண்டிப்பான குணத்தை அறிந்திருந்த ஆசிரியர்கள்; அவரது செயலுக்கு மறுபேச்சு பேச தயங்கி வெண்பாவை கலைநிகழ்ச்சிகளைவிட்டு ஒதுக்கியே வைத்திருந்தனர். மேலும் அவளைவிட நன்றாக நடனம் புரியும், நன்றாக அபிநயம் செய்யும் மாணவிகள் அந்தப் பள்ளியில் இருக்கவே செய்தனர் எனவே வெண்பாவிற்கான சோபிக்கும் வாய்ப்புகள் சற்றே குறைவுதான்.

இவற்றையெல்லாம் அமைதியாக அமர்ந்து பட்டியலிட்ட சாரதா; இந்தக் காரணிகள், கூற்றுகள் எல்லாவற்றையும் சீராய்ந்து, கூராய்ந்து, தனக்குத் தானே சிந்தனை செய்து அவ்வப்போது தன் மகளை நடன வீடியோக்கள் பதிவேற்ற பணித்தால் என்ன என்னும் முடிவுக்கு வந்தார்.

அவளது படிப்பு கெடாத வகையில் காணொளிகள் பதிவேற்றினால் நாராயணனிடம் திட்டு வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என முடிவு செய்து கொண்டவர்; அதை அவளிடமும் தெரிவித்தார்.

“வெண்பா நீ இனி தினமும் பப்ஸ்மாஷ் பண்ணாதே... உங்க அப்பா கிட்ட திட்டு வாங்க முடியாது... அதனால நீ வீட்டுல லீவ்ல மட்டும் 1 அல்லது 2 வீடியோஸ் பண்ணு... அண்ட் எந்த ஒரு விஷயமும் அதிகமா கிடைச்சா சலிச்சுப் போயிடும்... சோ நீ உன்னோட பாலோவர்சை உன்னோட வீடியோவுக்காக வெயிட் பண்ண வை... ரேர் பொருள்களைதான் மக்கள் விரும்புவாங்க, எதிர்பார்ப்பாங்க... கியூரியாசிட்டி கிரியேட் பண்ணலாம்...” எனக் கூறிவிட, தாய் சொல்லை தட்டாத தத்தையவள்; சரி எனச் சம்மதித்தாள்.

முத்து மாமா - வெண்ணிலா வீட்டில்...

கடந்த இரண்டு மணி நேரமாகத் தனது மகன் திருத்தணிகையைக் குறிப்பிட்ட மந்திர உச்சாடன இறை பாடலைப் பாடுமாறு கூறி வற்புறுத்திக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. சிறுவனுக்கு அதன் வரிகள் சரியாக உச்சரிக்க இயலாமல் போகவே ஒவ்வொரு வார்த்தையாக, ஒவ்வொரு எழுத்தாகக் கூறி அவனை உச்சரிக்க வைத்து எப்படியேனும் அதை அவனைப் பாட வைத்து விடவேண்டும் என அவனை டார்ச்சர் செய்து கொண்டிருந்தாள் அவள்.

“கண்ணா.. இன்னும் ஒரே ஒரு தடவை நீ முழுசா பாடினா அம்மா ரெக்கார்ட் பண்ணி எங்க வாட்ஸ் அப் குருப்ல போட்டுடுவேன்...” என அவள் கூற, அவனோ பாவமாகத் தன் தாயை பார்த்தான்.

கடந்த இரண்டு மாதமாக வெண்ணிலாவின் வேலையே இதுதான். எதேச்சையாக ஒருமுறை வெண்ணிலாவின் மகன் திருத்தணிகை பாடிய ஒரு சிறுவர் பாடலை அவளது புலனத்தின் ஸ்டேட்டஸில் வைக்கவும், அவளது தோழிகள் அனைவரும், “உன் பையன் செம சூப்பரா பாடறான்...” எனக் கூறவும் அவளுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது.

தினமும் ஏதாவது ஒரு வீடியோவை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து, அனைத்துக் குழுக்கள் மற்றும் அனைத்துத் தனிப்பட்ட நபர்களுக்கும் அனுப்பி வைத்து விடுவாள். அவர்களும் பார்க்கிறார்களோ இல்லையோ “செம...”, “சூப்பர்...”, “வாவ்...” என ஏதேனும் ஒன்றை தட்டிவிட்டு விடுவர். அதைக் காண்கையில் உச்சி குளிர்ந்து போவாள் வெண்ணிலா.

ஆரம்பத்திலிருந்தே சிறுவன் திருத்தணிகைக்கு இது போன்ற விஷயங்களில் ஆர்வம் இல்லை. அவனின் ஆர்வம் எல்லாம் பக்கத்துவீட்டுச் சிறுவர்களுடன் விளையாடுவதும் அவர்களுடன் ஓடியாடி நேரத்தை போக்குவதும் தான்.

ஆனால் தாங்கள் குடியிருக்கும் நகரம் சற்றே பெரிய நகரம் என்பதாலும் பிரதான சாலையில் தங்களது வீடு அமைந்து இருப்பதால் அவனுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதாலும் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்கமாட்டாள் வெண்ணிலா. வேறுவழியின்றி வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து ஏதேனும் ஒன்றை அலைபேசியில் பார்த்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் அமர்ந்திருப்பான் திருத்தணிகை.

இப்போதெல்லாம் தனது ஓய்வு நேரங்களில் கூட அவனை வற்புறுத்த ஆரம்பித்துவிட்டாள் வெண்ணிலா. அ... ஆ.... இ... ஈ... என அவன் உயிரெழுத்துகளை உச்சரித்துப் பழகுவதைக் கூட அவள் தனது அலைபேசியில் படம் பிடித்து வைத்துக் கொண்டு இருப்பாள்.

அவனுக்கு ஒருவித அசௌகரியமாக இருந்தது; இருப்பினும் 4 வயது சிறுவனால் அதை எவ்வாறு வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியும்?? அதுவும் தன்னை இவ்வாறாக டார்ச்சர் செய்வது தன் தாயே என்று இருக்கையில் அந்தச் சிறு குழவிதான் என்ன செய்யும்?? அவன் இயல்பாக அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்ப்பதைக்கூட அவள் படம்பிடித்துக் கொண்டிருப்பாள். ஏனெனில் அந்தச் சமயத்தில் கூட அவன் ஏதேனும் ஒரு பாடலை பாடி விட மாட்டானா என்பதற்காகத் தான் இது.

முத்துவும் இதைப் பெரிதாகக் கண்டு கொள்வது கிடையாது; ஏனென்றால் ஒவ்வொரு நாளிலும் வேலை முடித்து வருபவன், களைப்பாக அமர்ந்து இரவு உணவை உண்டு கொண்டிருக்கையில், “மாமா இன்னைக்கு நம்ம திருத்தணிகை ஒரு பாடலை பாடினான் தெரியுமா? அதை என் ப்ரென்ட் கவிதா ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிட்டா... அவ பொண்ணு அஞ்சு வருஷமா பாட்டுக் கிளாஸ் போறாளாம்.. ஆனா அவளை விட நம்ம பையன் தான் சூப்பரா பாடுறானாம்...” என்பாள்.

“மேலும் கீழ் வீட்டுக் கீர்த்திகா சொன்னா, நம்ம பையன் சூப்பர் சிங்கர் போனா அவன்தான் டைட்டில் வின் பண்ணுவானாம்...” என்பதாக அவள் அடுக்கிக்கொண்டே போக அவனுக்கும் தன் மகனின் செய்கைகளில்

பெருமையாக இருந்தது.

தன் மகனின் வளமான ஒளிமயமான எதிர்காலம் குறித்துத் தனக்குத்தானே பெருமிதம் கொண்டான்; அவனது எதிர்காலம் அருமையாக இருக்கும், தான் கடினப்பட்டு முன்னேறி அதைப் போல அவனும் கடினப்பட்டுக் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இருக்காது எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.

இங்கே அவன் தனது குழந்தைத்தனத்தைத் தொலைத்து விடப் போகிறான் என்பது அவனுக்குத் தெரியாது; தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் நிகழ்ந்தவாறு இருக்க, அனைத்து வீட்டிலும் ஏதோ ஒரு வகையில் இந்த ஏஎஸ் வைரஸ் அடியெடுத்து வைத்திருந்தது. பலர் அதற்குத் தங்கள் மனதை ஊர்தியாகக் கொடுத்திருந்தனர் பலர் அது தங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அதை உணர மறுத்து (மரத்து) இருந்தனர்.

முன்னர்க் குறிப்பிட்டவாறு அந்தப் பப்ஸ்மாஷ் செயலியால் பெரிய அளவில் தாக்கங்கள் எதுவும் ஏற்படவில்லை; மக்கள் அவ்வப்போது தங்களது வேலைக்கு இடையிலும் சோர்வை போக்கவும் அதில் காணொளிகளைப் பதிப்பித்துக் கொண்டும் பார்வையிட்டுக் கொண்டும் இருந்தனர். அவர்களைப் பொருத்தவரையில் தொலைக்காட்சியைப் போன்று அதுவும் ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. மேலும் அதில் சிறப்பம்சங்கள் எனக் குறிப்பிடத்தக்க வகையில் எதுவுமில்லை, அதாவது மனதில் வக்கிரங்களை இறக்கி வைக்கும் அளவில் பெரிதாக எதுவும் இணைக்கப்பட்டிருக்கவில்லை. ஆங்காங்கே சிற்சில காணொளிகள் காணக் கிடைத்தன, அவ்வளவே. நாகரீகமான காட்சிகளை மட்டுமே தொலைக்காட்சிகளும் தங்களது நிகழ்ச்சிகளில் ஒன்றாக அதை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால் சாரதாவின் தான் புகழ்மீதான தாகம் மட்டும் தீர்ந்தபாடில்லை. தன் மகளை அனைவரையும் கட்டியிழுத்து, கவனமீர்ப்பு செய்யும் வகையில் ஏதேனுமொரு காணொளியை பதிவேற்றுமாறு அவ்வப்போது வலியுறுத்திக் கொண்டிருப்பார். அதில் வரும் “சூப்பர்”, “அருமை” என்னும் கமெண்டுகளை எண்ணி சிலாகித்து, அதிலே லயித்துப் போயிருப்பார்.

ஒவ்வொரு இல்லத்திலும், குடும்பத்திலும் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கப் பெரிய அளவில் குடும்பத்தில் மாற்றம், சிதைவு, பிரச்சனை, வாக்குவாதம், பிரிவு என்பதெல்லாம் ஏற்படவில்லை; கவனயீர்ப்பைத் தூண்டும் ஏ.எஸ் வைரஸும் ஒவ்வொருவரின் மூளையிலும் முடங்கிக் கிடந்தது உடலில் இருக்கும் மண்ணீரல் போல. எந்த வேலையும் செய்யாமல், தான் எதற்கு இத்தனை பேரில் உடலுக்குள் சென்று பலுகிப் பெருகினோம் எனத் தெரியாமல் ஒரு ஓரமாகத் தேங்கிக் கிடந்தது கசடு போல.

இங்கே உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் வைரஸ் குறித்துத் தெரிவித்தேயாக வேண்டும். அது உயிரைக் குடிக்கும் தன்மையது, அதே போன்று ஏ.எஸ் வைரஸ் உறவுகளைச் சிதைக்கும் தன்மையது. அதாவது இன்னமும் ஏன் எய்ட்ஸ் நோயிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றால் அதன் மரபணு மாதிரி DNA மற்றும் RNAவால் ஆனது.

DNA வைரஸ் என நினைத்து அதை அழிப்பதற்கான மருந்தைக் கண்டுபிடித்துச் செலுத்தினோமேயானால் அது RNA வைரஸாகத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கும். RNA என நினைத்துச் செலுத்தினால் DNA ஆக மாறி நிற்கும். புல்லின் மீதிருக்கும் பனித்துளிக்கு ஒப்பான உயிரைக் கொல்லும் வைரசே இத்தகு தந்திரம் மிக்கதென்றால் வாழ்வின் பிடித்தரமாக விளங்கும் உறவுகளைச் சிதைக்கும் ஏ.எஸ் வைரஸ்??

அது DNA, RNA என எந்த மரபு பொருளையும் கொண்டிருக்காத ஒரு மரத்துப்போன அதே சமயத்தில் மகா வஞ்சகம் மிக்க வைரஸ். இதயத்தில் ஈரத்தை கசிய வைக்கும் சித்தமெல்லாம் அதற்குக் கிஞ்சித்தும் இருக்கவில்லை இந்த வைரசிற்கு. அதற்கு எந்த உறவுகளும் எந்தப் பாரபட்சமும் எந்த விதிமுறைகளும் கிடையாது. அதன் நோக்கமெல்லாம் கவன ஈர்ப்புச் செய்ய வேண்டும், அதன் பொருட்டு எவராக இருந்தாலும் தன்னை நோக்கி கவனத்தை இருக்க வேண்டும்; அது எவராக இருந்தாலும். அது மட்டுமே அதன் தலையாயக் குறிக்கோள்.

மூலப் பொருளும் மூளைப் பொருளும் இல்லாத ஏ.எஸ் வைரஸின் துகள்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டன. “வேலையே செய்யாமல் இருந்ததால் நம் சிந்தனை மழுங்கி சோர்வாக இருக்கிறது. ஆதிகாலம் முதல் தோன்றியிருந்தாலும் நம்மால் சரிவரச் செயலாற்ற இயலவில்லையே... ஆரம்பம் முதல் அடைந்து தானே கிடந்தோம். இப்போதுதான் எழுந்து பணியாற்ற வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. ஆனாலும் போதுமான அளவு வாய்ப்பு கிடைக்கவில்லையே...” எனத் தங்களுக்குள் அங்கலாய்த்துக் கொண்டன.

அவர்களது வேண்டுதலும் ஆசையும் இறைவனுக்குக் கேட்டு விட்டதோ என்னவோ உடனடியாகச் சில அறிவாளிகளின் மூளைக்குள் புதுவித யோசனைகள் உதிக்கச் செய்தார். அவர்கள் அனைவரும் தமது அறிவுக்குக் கிட்டிய வகையில் புதிதாக வடிவமைத்தனர் கிங்காங் செயலியை.
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18

12

இந்தக் கிங்காங் எனும் பதத்திற்கு நேரடிப் பொருள்தான். இது ஒரு வகை மனிதக் குரங்கு. அதாவது மனிதனைப் போன்றே தான் இருக்கும்; ஆனால் அதன் செயல்பாடுகள் தனித்துவமாக இருக்கும்; தன்னைச் சுற்றி இருக்க எவரையும் காயப்படுத்துவது, நோகடிப்பது குறித்துச் சிந்திக்காது. பகுத்தறிவும் கிடையாது. அது போன்ற ஒரு உயிரினம் தான் கிங்காங்.

அதன் நாமத்தை தாங்கிய இந்தக் கிங்காங் செயலியும் மனிதர்களை அவ்வாறாக மாற்றும் நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தி குறித்து அறிந்ததும் ஏஎஸ் வைரஸ் நுண்ணியிரிகள் புத்துணர்வு பெற்றன. அவை தங்களுக்குள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டிருந்தன.

இருப்பினும் பப்ஸ்மாஷ் செயலியைப் போலல்லாமல் இந்தச் செயலி சரிவர மனிதர்களைச் சென்று சேருமா, தாங்கள் உருவானதன் தங்கள் பிறவிப் பயனை அடைவோமா. இத்தனை நூற்றாண்டுகளாக எந்த வேலையையும் செய்யாமல் முடங்கிக் கிடந்தவர்கள் இப்போது செயலாற்ற வாய்ப்பு கிட்டுமா என்பதாகத் தங்களுக்குள் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்தக் கிங்காங் செயலி அண்டை நாட்டில் இருந்து நம் நாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டபோது சிலர் தயங்கினர், உள்ளே நுழைவதற்கு மின்னஞ்சல் முகவரி கொடுப்பது அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்வது ஆகியவை பாதுகாப்பானதாக இருக்குமா என்பது போன்ற பல கேள்விகள் பலருக்கு எழுந்தாலும் சிலர் தைரியமாக உள்நுழைந்து விட்டனர்.

வெளியே நின்று பார்ப்பதைக் காட்டிலும் உள்ளே சென்று அதன் கட்டமைப்புகளையும் பிரத்தியேக சிறப்பம்சங்களையும் பார்வையிட்டால் அதன் அனுபவம் எவ்வாறு எனத் தெரிந்துவிடும் அல்லவா?? அதன்பிறகு மெயில் ஐடி இதுவாவது என்பதாக எண்ணம் அவர்களுக்கு.

இங்கே ஒரு சாரார் அதன் நன்மை - தீமைகள் குறித்து ஆராய்ந்து, விவாதித்துச் சாமானிய மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளிகளைப் பதிவேற்றிக் கொண்டிருக்க, அங்கே பலர் தங்களுக்கு அங்கே கணக்குகளைத் தொடங்கி, பப்ஸ்மாஷ் செயலியில் இல்லாத பல சிறப்பம்சங்களை அங்கே கண்டு அவற்றைப் பயன்படுத்தும் நிலைக்கும் முன்னேறியிருந்தனர்.

இத்தனை காலம் செயலாற்றல் கிடந்த ஏஎஸ் வைரஸ் நுண்ணுயிர்களுக்குக் கொண்டாட்டம்!!! அவர்களது பெருக்கம் ஜரூராக நடந்து கொண்டிருந்தது!! நூறு மடங்கு வேகத்தில் தங்களுக்கான அடுத்த உயிரிகளைப் பிரிந்து, பிறப்பித்துக் கொண்டிருந்தன.

ஆரம்பத்தில் அந்தப் பப்ஸ்மாஷ் செயலியைப் போல் பெரும்பாலானோர் நுழையாமல் இருக்கவே, தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் வலையொளிகளிலும் காணும் இடங்களிலும் அது குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஒவ்வொரு விளம்பரங்கள் செய்கையிலும் அது குறித்து மக்களனைவரும் கேள்விப்படுகையிலும் அனைத்து இடங்களிலும் உறங்கிக்கிடந்த வைரஸின் துளிகள், துகள்கள் பேரானந்தம் கொண்டன. தாங்கள் இந்த உலகத்தைக் கோலோச்ச போகும் நாளுக்காகக் காத்துக் கிடந்தன. அந்த நாட்களும் வெகு தொலைவில் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும்!!

முதலில் குயில் செயலியில் அவ்வப்போது பாடல்களை ஆடியோவாகப் பதிவேற்றிக் கொண்டிருந்த சத்யா; அவ்வப்போது “சூப்பர்”, “வாய்ஸ் நல்லா இருக்குது...” எனக் கமெண்ட்கள் வரவும் அதை எவ்வாறு தனது வளர்ச்சிக்கான மூலதனமாகப் பயன்படுத்தலாம், அந்த இரண்டு கமெண்டுகளை எவ்வாறு இருபது கமெண்டுகளாக மாற்றலாம், மேலும் அதன் மூலம் தன்னைத் தான் எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம், தன் திறமையை உலகறியச் செய்யலாம் என்பது குறித்துச் சிந்திக்கலானாள்.

அப்போதுதான் ஒருவர் அவளது பாடலை பார்த்துவிட்டு “மேம்... உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குது... டூயட் போட்டா நல்லா இருக்கும்... ஒரு முழுபாட்டாவே நான் என் போனில் சேவ் பண்ணி வச்சுக்குவேன்...” எனக் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

அதைப் பார்த்ததும் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் ஒரு கணம் யோசித்தாள் சத்யா. ‘ஆடியோவில் தானே டூயட் இதுல என்ன பெரிய விஷயம் இருக்குது?’ எனச் சிந்தித்தவள்; ஏற்கனவே ஒருவர் பாடி வைத்திருந்த பாடலின் நகலை எடுத்து அதில் பெண்களுக்கான பாடலை மட்டும் மியூட் செய்துவிட்டு, தான் பாடிய குரலை இணைத்து பதிவிட்டாள்.

அந்தப் பாடல் நிஜப்பாடலுக்கு நிகராகக் கனகச்சிதமாக இருக்கவே, கேட்பவர்கள் அனைவருக்கும் பிடித்துவிட்டது; அந்தப் பாடலை பதிவேற்றிய பிறகு அவளைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கியது. அவள் இதில் இருக்கும் சூட்சுமத்தைக் கண்டு கொண்டாள்.

என்ன செய்தால் அனைவரும் பாராட்டுவர் எனும் விஷயம் தெரிந்து விட்டது அல்லவா?! இனி தனக்குக் கிடைத்த துடுப்பை, துருப்புச் சீட்டை இறுக்கமாக பற்றிக் கொள்வாள் சத்யா. ஆம், குறிப்பிட்ட நபரின் குரலை எடுத்து அதையும் தனது குரலுடன் இணைத்து ஆடியோக்களைப் பதிவிடத் தொடங்கினாள்.

சம்பந்தப்பட்ட நபருக்கும் இந்தச் செய்தி சென்று சேர்ந்துவிட அந்தச் செயலின் வழி அவளைத் தொடர்பு கொள்ள முயன்றார் அவர். அவளது கமெண்டில் “ஹாய் மேம்... இந்தப் பாடலை பாடியது நான்தான்.. ரெண்டு பேர் வாய்ஸும் சேர்ந்து இந்தப் பாடல் ரொம்ப நல்லா இருக்குது... ரெண்டு பேரும் சேர்ந்து லைவ்வில் ஒரு டூயட் பாடினால் என்ன??” என்ற அவரது இயல்பான கோரிக்கையைப் பார்த்த அவருக்கான ரசிகர்கள், “சூப்பர் சார்.. நீங்களும் மேமும் சேர்ந்து லைவ்வில் ஒரு ஆடியோ போட்டால் சூப்பரா இருக்கும்... நாங்க எல்லாரும் அதைச் சேவ் பண்ணி வச்சுட்டு, அப்பப்போ கேட்டுக்க நல்லா இருக்கும்..” என அவரை வற்புறுத்த, சத்யாவிடம் அவளது மின்னஞ்சல் முகவரியை வேண்டினார் அவர்.

அவர் கேட்டது என்னவோ சாதாரணமாகத்தான், அதில் தவறான நோக்கமென்று என எதுவும் இருக்கவில்லை. ஏனென்றால் எப்போது லைவில் வரலாம், அதற்கு முன்னரான தயாரிப்புகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசிப்பதற்காகவே மின்னஞ்சல் கேட்டார். ஏனெனில் எடுத்த எடுப்பில் எதிரில் இருப்பவர் எவர் என அறியாமலேயே தொலைபேசி எண்ணையோ அல்லது தொடர்புக்கான எண்ணையோ வினவுவது நாகரீகமில்லை அன்றோ?! ஆகவேதான் சத்யாவைத் தொடர்பு கொள்வதற்குப் பொத்தாம் பொதுவாக மின்னஞ்சல் முகவரியை கேட்டார்.

அவர் கேட்டதும் சத்யாவின் மனம் பதைபதைக்கத் தொடங்கியது. அது எதற்காகவெனில் இது போன்ற செயலிகளில் எல்லாம் நுழையக்கூடாது எனப் பிரபு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தான்.

ஆனால் அவனுக்குத் தெரியாமல் உள்ளே நுழைந்தது மட்டுமன்றி, பயன்படுத்தி, இப்போது ஒருவர் மின்னஞ்சல் முகவரி கேட்கிறார் என்றால் அதன் மூலம் என்னென்ன பிரச்சினைகள் விளையுமோ என யோசித்தவள் ஒரு கணம் தயங்கினாள்.

பின்னர் எல்லாம் நம்மின் வளர்ச்சிக்காகத் தானே.. நம்மை இத்தனை பேர் பின்தொடர்கிறார்கள் என அறிந்தால் பிரபுவும் நிச்சயமாகச் சந்தோஷப்படுவான்; தன் மனைவியின் வளர்ச்சியில் களிகூரும் கணவர்களின் அவனும் ஒருவன்தான் எனத் தன்னைத் தான் தேற்றிக் கொண்டு, ஒருவாறாகச் சற்றுத் தைரியத்தை வரவழைத்தவள்; குறிப்பிட்ட நபருக்கு தனது மின்னஞ்சல் முகவரியை அனுப்பினாள்.

அவர் சற்றே நாகரீகமானவர் போல; அவளுக்கு அனுப்பியிருந்த முதலில் தன்னைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தெரிவித்தவர், அதன் பிற்பாடு தான் வேலைக்கு இடையில்தான் பாடல்களைப் பாடி பதிவேற்ற, பொழுதுபோக்கிற்காக வருவதாகக் குறிப்பிட்டு, தனது வேலை முடித்து வந்து இரவு 7 மணிக்கு பிற்பாடு பாடுவது தனக்குச் சவுகரியமாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவளுக்கு எந்த நேரம் தோதுவாக இருக்குமோ அந்த நேரத்தை குறிப்பிடுமாறும் கேட்டிருந்தார்.

அவர் ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்பியிருக்க, தனக்குப் படிக்கத் தெரிந்ததைச் சற்றே சிரமப்பட்டுப் பிரயோகப்படுத்தி, வாசிக்க முடிந்ததேயன்றி அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

எவரிடமாவது கேட்கலாம் என்றால் அதன் சாராம்சத்தை அறிந்தால் அவர்கள் எவ்வாறாக எதிர்வினையாற்றுவரோ எனப் பயந்தாள். மேலும் தனது பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே தன்னைத் துச்சமாக எண்ணிக் கொண்டிருக்கையில் இவ்வாறு தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை அவர்கள் கலைத்துவிட்டால் இல்லை தட்டிப்பறித்து விட்டால் என்ன செய்வது எனச் சிந்தித்தவள்; அந்தக் குறிப்பிட்ட மின்னஞ்சலை ஒரு நோட்டில் எழுதி நான்காம் வகுப்பு படிக்கும் தன் மகனிடம் சென்றாள்.

அவன் அந்த நகரத்தின் பிரபலமான ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அங்கே கட்டணம் சற்று அதிகமாயினும் தன் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும், ஆங்கிலம் தெரியவில்லை - ஆங்கில அறிவு குறைவாக இருக்கிறது என என்றேனும் எவரும் அவனை மட்டம் தட்டி விடக்கூடாது என்பதற்காகத் தன் வருமானத்திற்கு அதிகமான கட்டணம் வசூலிக்கும் அந்தப் பள்ளியிலே சேர்த்திருந்தான் பிரபு.

வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவனான அவனிடம் அந்தக் காகிதத்தை நீட்டிய சத்யா; “டேய்... ரக்ஷன்... இதுல என்ன இருக்குதுன்னு அம்மாகிட்ட சொல்லு பார்ப்போம்...” எனக் கேட்டாள்.

அவனும் அதை வாசித்துப் பார்த்து விட்டு, “இது யாரு எழுதினதுமா?? இது எப்படி உனக்குக் கிடைச்சுது?? உனக்கு யாரு இங்கிலீஷ்ல எழுதினது??” எனக் கேட்டான்.

“அது... அது வந்து... அதுவா...” என ஒரு கணம் யோசித்தவள்; “இங்க பக்கத்துல ஒருத்தங்க... அவங்களுக்கு இப்படி ஒரு மெசேஜ் வந்ததாம்... இதுக்கு என்ன அர்த்தம்ன்னு அவங்களுக்குத் தெரியாது... இப்பதான் பேங்க் அக்கவுண்ட் மோசடி அது இதுன்னு என்னென்னவோ சொல்றாங்களே.. போன்லேயும் என்னவோ வருது... அதனாலதான் நான் உதவி பண்ணலாமேன்னு நினைச்சேன்.. அப்புறம் நீ தான் நல்லா இங்கிலீஷ் பேசுறியே அதான் உன்கிட்ட எடுத்துட்டு வந்தேன்... இதுல என்னடா சொல்லி இருக்குது?” என அவள் கேட்க, முழுவதுமாக வாசித்துப் பார்த்தவன்; “இது ஒன்னும் இல்லமா.. ஒருத்தர் அவரைப் பத்தி சொல்லி, ஏதோ ஒரு லைவ் வர சொல்லி இருக்கிறார்...” எனக்கூறிவிட்டு அதில் இருக்கும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் உரிய பொருளை கூறலானான்.

நல்லவேளையாக அந்தச் செயலியில் தனது பயனர் பெயரில் சத்யா எனக் கொடுக்காமல் ‘ரவுடி பேபி’ எனக் கொடுத்திருந்தாள் சத்யா.

அன்புள்ள ரவுடி பேபி,

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் ராகவன், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருக்கிறேன். பாடல் பாடுவது எனக்குப் பொழுதுபோக்குதான். அவ்வப்போது சோர்வு தீர பாடல்களைப் பாடுவேன். அதுவே செயலியின்வழி பதிவு செய்து கொள்ளலாம் எனும் அம்சம் கிடைக்கும்போது பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன். உங்களது குரல் எனது குரலுடன் இயைந்து சென்று, ரசிகர்களை மகிழ்வித்ததில் பெருத்த மகிழ்ச்சி!! உங்களுடன் லைவ்வில் பாடி, மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆர்வமாக இருக்கிறேன். நான் பணிக்கு செல்பவன் என்பதால் இரவு ஏழுமணிக்கு பின்னரே சற்று ஓய்வு நேரம் கிட்டும். உங்களுக்கு எந்த நேரம் தோதுவாக இருக்கும் எனத் தெரிவித்தால் அதற்கு ஏற்றார்போல் எனது நேரத்தை நான் மாற்றியமைத்துக் கொள்வேன். கூடிய விரைவில் என்ன பாடலை பாடலாம், எப்போது பாடலாம் என்பது குறித்து உங்களுக்குத் தகுந்த நேரத்தை தேர்வு செய்துவிட்டு எனக்குப் பதில் அனுப்புங்கள். ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம்.

உங்கள் பதிலை எதிர்பார்த்து,

ராகவன் என அவன் படித்துக் காட்டவும், “சரிடா... இதுக்கு உனக்கு உனக்குப் பதில் எழுத தெரியுமா??” எனக் கேட்டாள் சத்யா.

“அம்மா போன வாரம் தான் எங்க மிஸ் லெட்டர் லேட்டர் ரைடிங் சொல்லிக் கொடுத்தாங்க.. பார்மல் லெட்டரா இன்பார்மல் லெட்டரா??” என அந்தச் சிறுவன் ஆர்வமாக வினவ, “தெரியலடா... நான் நாளைக்குக் கேட்டு வைக்கிறேன்..” என நழுவிவிட்டாள் சத்யா.

அது எதற்காக என்றால் உடனடியாக என்ன பதில் அனுப்பவேண்டும் எனத் தெரிவித்து விட்டால் தன் மகனுக்குத் தன் மேல் சந்தேகம் எழும் இல்லையேல் தன் கணவனிடம் இது குறித்துத் தெரிவித்து விடுவான் என அஞ்சினாள் சத்யா. மேலும் தனக்குத் தோதுவான நேரம் குறித்துச் சிந்தித்து முடிவு செய்வதற்குப் போதுமான கால அவகாசம் தேவைப்பட்டது. எனவே தன் மகனிடம் இருந்து விடைபெற்று சென்றவள்; இரவு முழுவதும் தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.

இரவு ஏழு மணி என்றால் தன் கணவனும் குழந்தைகளும் வீடு திரும்பிவிடுவர்; அவர்கள் இருக்கையில் எவ்வாறு இதை நிறைவேற்றுவது எனச் சிந்தித்தவளுக்குள் உறங்கிக்கிடந்த குடும்பத்தலைவி என்னும், பொறுப்பான தாய் என்னும் உருவம் மேலெழுந்து ‘கண்டிப்பாக இந்த லைவ் போய்த்தான் ஆகணுமா? கணவனுக்கும் குழந்தைகளுக்கும் தெரியாமல் அப்படி என்ன வேண்டி கிடக்குது??’ என்பதாகக் கேள்வி கேட்க, அந்த ஓலத்தை அவளது செவிகளில் கேட்க விடாமல் தடுத்துவிட்டன அவளுக்குள் புகுந்திருந்த வைரஸ் நுண்ணுயிரிகள்.

ஒருவாறாகச் சிந்தித்து, தெளிந்தவள் தனக்குத்தானே, “மூன்று மணிக்கே அவரை லைவ் வருமாறு கூறலாம்..” என முடிவு செய்து கொண்டாள். மறுநாள் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்த தன் மகனிடம் சென்றவள்; “கண்ணா ரக்ஷன்... அதாவது அவங்க வீட்ல சௌகரியமான சூழ்நிலை இல்லையாம்... அப்புறம் அவங்க வீட்டுக்காரரும் குழந்தைகளும் இருக்கிறப்போ பாடல் பாடி அனுப்ப முடியாதாம்... அதனால மூணு மணிதான் அவங்களுக்குச் சவுகரியமான நேரம்... இல்லைன்னா மதியம் லஞ்ச் பிரேக்கில் ஒன்றரையிலிருந்து ரெண்டரையில் அந்தக் கேப்ல லைவ் வச்சுக்கலாம் என அவங்க சொன்னாங்க... இதை.. அப்படியே இங்கிலீஷ்ல எழுதி கொடுக்கிறியாடா கண்ணா..” எனக் கேட்டாள்.

அவனும் தனக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி எளிமையான ஒரு கடிதத்தை எழுதி அவளிடம் நீட்ட, தனது மொபைலில் ஒவ்வொரு எழுத்தாகத் தேடியெடுத்து, பதிலை தட்டச்சுச் செய்து அனுப்பி விட்டாள் சத்யா.

அவளது நிலையைப் புரிந்து கொண்ட ராகவனும் “ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட் யுவர் சிச்சுவேஷன் ரவுடி பேபி... ஐ வில் டூ இட்...” எனப் பதிலனுப்ப, அதற்கும் தன் மகனிடமே அர்த்தத்தைக் கேட்டு, பதிலையும் பெற்று அனுப்பினாள்.
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18

13

இறுதியாகக் குறிப்பிட்ட நாளில் இருவரும் சேர்ந்து “நறுமுகையே... நறுமுகையே...” பாடலை பாடி பதிவேற்றுவது என உறுதிசெய்யப்பட்டது. இருவரும் அந்தப் பாடலை பலமுறை கேட்டு, தங்களுக்குள் பயிற்சி செய்து வைத்திருக்க, அந்த நாளும் வந்தது.

“நறுமுகையே... நறுமுகையே..

நீ ஒரு நாழிகை நில்லாய்...

செங்கனி ஊறிய வாய் திறந்து

நீயொரு திருமொழி சொல்லாய்...

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றித் தரள நீர்வழிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா...” என ராகவன் பாட, அதன் அடுத்தக் கவியாக,

“திருமகனே.. திருமகனே...

நீ ஒரு நாழிகை பாராய்...

வெண்ணிற புரவியில் வந்தவனே

வேல்விழி மொழிகள் கேளாய்..

அற்றைத் திங்கள் அந்நிலவில்

கொற்றப் பொய்கை ஆடுகையில்

ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா..” எனப் பாடினாள் சத்யா.

இவ்வாறாக நேரலையில் இருவரும் பாடி அந்தக் குயில் செயலியில் பதிவேற்ற அந்தப் பாடல் அனைவருக்கும் பிடித்துவிட்டது. ராகவனைப் பின்தொடர்பவர்கள் பலர் சத்யாவையும் பின்தொடரத் தொடங்கினர். இதைப் பார்த்தவளுக்கு ஆனந்தம் தாங்கவில்லை தனது குரல் ராகவனது குரலுடன் இயைந்து போவது மட்டுமின்றித் தனக்கும் பிரத்தியேகமான குரல் வளம் இருக்கிறது எனத் தன்னைத் தான் மெச்சிக் கொண்டாள்.

“வாவ்...”, “நைஸ்...”, “சூப்பர்...”, “வாய்ஸ் பென்டாஸ்டிக்...” எனப் பற்பல கமெண்டுகள் வந்த வண்ணமிருக்க, வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கிய சத்யா, தனியொரு உலகில் சஞ்சரிக்கத் தொடங்கியிருந்தாள்.

ஆனால் கவனமாகஇதுகுறித்துப் பிரபுவிடம் கிஞ்சித்தும் ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை. ஏனென்றால் அவன் திட்டுவான் என்பதையும் தாண்டி தான் தன்னை நிரூபித்து விட்டு வந்து தன் கணவனிடம் கூறிக் கொள்ளலாம் என்பதற்காகவும் தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் ராகவனால் அந்தச் செயலியில் உயிர்ப்பாக இருக்க இயலவில்லை. அவருக்குப் பணிச்சுமை அதிகமானதால் அவர் சரியான நேரத்தில் பாடல்களைப் பதிவேற்ற இயலவில்லை.

இங்கே நாம் தொடர்ந்து நமது உழைப்பை கொடுத்துக் கொண்டிருந்தால், இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தால் மட்டும்தான் பலரது நினைவுகளில் வாழ்ந்திருப்போம் இல்லையேல் ‘வல்லவனுக்கு வல்லவன் வந்தே தீருவான்’ என்பதைப்போல நம்மை மறந்து விட்டு, அடுத்ததை நோக்கி சென்று விடுவர். நேரில் பார்த்து, பேசி, பழகிய நெருக்கமான உறவுகளிடமே இப்படியென்றால் முகம் பாராது, குரலை மட்டுமே (அல்லது எழுத்தை மட்டுமே) காட்டும் செயலியில் இது போன்றவை எல்லாம் சர்வ சாதாரணம் அல்லவா!! ஆகவே அனைவரும் ராகவனைக் காட்டிலும் அதிக உயிர்ப்புடன் இருக்கும் மற்ற பயனர்களைத் தேடிச் சென்றுவிட்டனர்.

இந்தச் சமயத்தில் சத்யாவிற்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை சற்றே குறையத் தொடங்கியது. இதைச் சரிசெய்ய எண்ணியவள்; அடுத்ததாக என்ன நடவடிக்கையில் இறங்கலாம் எனச் சிந்தித்தாள். ஏற்கனவே ராகவன் சென்றிருந்ததால் அவளது தன்னம்பிக்கை வேறு சற்றே குறைந்திருந்தது. இருப்பினும் நம்பிக்கையுடன் அந்த முடிவை எடுத்தாள் தனது முகத்தைக் காட்டி பாடலைப் பாடுவது என.

இம்முறை எவருடனும் டூயட் செய்யாது, தனது முகத்தை மட்டுமே காட்டி தனது திறமையை மட்டுமே முன்னிறுத்தி களத்தில் இறங்கியவள்; ஒரு பக்திப்பாடலை பாட, அதை எவரும் கண்டுகொள்ளவில்லை.

அவளுக்குப் புரிந்துவிட்டது, இங்கே ஏதேனும் ஒன்றை சிறப்பாகப் பாடினார் மக்கள் மதிப்பர் என்பதையும் தாண்டி அவர்களது கண்களைக் கவரும் அதாவது அட்ராக்ட் செய்யும் ஏதேனும் ஒன்றை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என. இதை உடனடியாகச் செயல்படுத்த நினைத்தவள் சற்றே கிறக்கம்தரும், கேட்போரை கிறங்கடிக்கும் கவர்ச்சிகரமான தாளங்கள் கொண்டதொரு பாடலை பதிவேற்ற எண்ணினாள்.

எப்போதும் சுண்ணாம்பு பூசப்பட்டுச் சற்று நடுத்தரமாக இருக்கும் அவளது வீட்டுச் சுவர்கள் சற்றே பார்வையில் சற்றே அலட்சியமாகத் தெரிந்தன. அனைவரது பார்வைக்காகவும் பாடல்களைப் பதிவேற்றுபவளது பின்னால் அழகானதொரு புடவையைத் துணையாகக் கொண்டு அழகு செய்யப்பட்டிருக்கும்.

ஏனெனில் தனது பொருளாதார நிலைமை சற்றே தாழ்ந்ததாக இருக்கிறது எனக் காட்டுவதில் ஒருவித தாழ்வு மனப்பான்மை அவளுக்கு. ஆகவேதான் தனது பட்டு சேலைகளையோ இல்லை பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஒரு ஃபேன்சி புடவையயோ ஸ்க்ரீனாக வைத்துக் கொள்வாள்.

இவ்வாறாக நிகழ்ந்து கொண்டிருக்கையில்தான் முதல்முறையாக “கண்ண தொறக்கணும் சாமி...” பாடலை பாட முடிவெடுத்தாள். வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் அந்தப் பாடலை பாட முடிவு செய்தவள்; அந்தப் பாடலுக்கு ஏற்றார்போல் உதட்டை கடித்து, கண்களைக் குறுக்கி, போதையேற்றுவது போலப் பாடி, பாவனைச் செய்துவிட, ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது.

அவளுக்குள் அந்தக் கவனயீர்ப்பு செய்யும் நுண்ணுயிர்களின் ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்க, அவள் இவ்வாறு செய்யவும் அவளைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை மளமளவென அதிகரிக்கத் தொடங்க, அந்தத் தீங்கு செய்யும் கவனயீர்ப்பு நுண்ணியிரிகள் தங்களுக்குள் களிகூர்ந்து, பண்டிகையை ஆசாரிக்கத் தொடங்கிவிட்டன.

அவளைச் சுற்றி நடந்த மாற்றங்கள் அனைத்தும் அவளுக்கு ஒருவித சிலிர்ப்பையும் போதையையும் தந்தன. அவளைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாக உயர்ந்து கொண்டிருக்க, தனது தன்னம்பிக்கை உச்சத்தைத் தொட்ட மகிழ்ச்சியில் இருந்தாள் சத்யா.

அப்போதுதான் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது சிலரும் முன்னரே அது குறித்துப் பரிந்துரை செய்திருந்தனர். “உங்க வாய்ஸ்... ரொம்ப நல்லா இருக்குது... சூப்பரா பாடுறீங்க... அதெல்லாம் ஓகே... ஆனா அதை விட நீங்க ரொம்பச் சூப்பரா நடிக்கிறீங்க... உங்களுக்கு ஆக்டிங் சூப்பரா வருது... நீங்க ஏன் இந்தப் பப்ஸ்மாஷ் செயலியில் ஆக்ட் செஞ்சு வீடியோ போடக்கூடாது?? அது செட் ஆகலன்னா இல்ல புதுசா வந்திருக்கிற கிங்காங் ஆப் யூஸ் பண்ணி பாருங்களேன்...” என.

இது குறித்துச் சிந்தித்தவள்; இதுவும் நல்ல விஷயம் தான் எனத் தனக்குள் சிந்தித்துக்கொண்டு, அந்த இரண்டு செயலிகளையும் தனது அலைபேசியில் நிறுவி, பயன்படுத்திப் பார்க்கத் தொடங்கினாள். பப்ஸ்மாஷ் செயலில் அதிக அளவு ஆடியோக்கள் இல்லை, மேலும் போதை தரும் எந்த வகை ஆடியோக்களும் இல்லை. வெறுமனே பாடல்களும் சற்று நகைச்சுவையான உரையாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

ஆனால் கிங்காங் செயலில் பல அம்சங்கள் இருந்தன. அதில் ஏதேனுமொரு பாடலை சேர்த்துக்கொள்ளலாம் இல்லை நமது சொந்த குரலில் உரையாடிக் கொள்ளலாம், நேரலை செல்லும் வசதி இருந்தது, மேலும் பல வித்தியாசமான ஆடியோக்கள் அங்கே இருந்தன. ஆடியோக்கள் இல்லையாயினும் நாமே பலவற்றை உள்ளே இணைத்துக்கொள்ளலாம். அதுபோகப் பல முகத்தை அழகாகக் காட்டுவதற்கும் விதவிதமான அஷ்டகோணங்களைச் செய்வதற்கும் பில்டர்கள் அங்கே கொடுக்கப்பட்டிருந்தன.

இதைப்பார்த்த சத்யா முடிவுசெய்து விட்டாள் அது தான் தனக்கான செயலி என. குயில் மற்றும் பப்ஸ்மாஷ் செயலியை அன்இன்ஸ்டால் செய்தவள்; கிங்காங் செயலிக்குள் அடியெடுத்து வைத்தாள். இங்கே வெண்பாவும் அதையேதான் செய்தாள், மூர்த்தியும் அதையேதான் செய்தான்.

வெண்ணிலா இன்னும் இதுகுறித்துப் போதுமான அறிவைக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் அவள் தினமும் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பவள். பல விஷயங்கள் அவளுக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் அவள் இன்னமும் அந்தப் புனிதமான(!) உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கவில்லை. ஆனால் வெண்பா, சத்யா, மூர்த்தி மூவரும் உள்ளே நுழைந்திருந்தனர்.

எதேச்சையாக வீட்டில் அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த பிரபுவின் கண்களில் தனது அலைபேசியில் நிறுவப்பட்டிருந்த கிங்காங் செயலி சிக்கியது. சத்யாவை அழைத்தவன்; அதற்கான முகாந்திரம் என்ன, அது மனித குலத்தைச் சிதைக்கும் ஆபத்தான செயலி எனத் தொலைக்காட்சியில் குறிப்பிட்டார்கள் எனக் குறிப்பிட, தான் அதில் பயனரில்லை எனவும் அதை அவ்வப்போது பொழுதுபோக்காகப் பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறினாள் சத்யா.

அவளது கூற்றை உண்மை என நம்பிய பிரபு, “சரி சத்யா.. பார்த்து யூஸ் பண்ணு... இங்கே எல்லாமே டிஜிட்டல் மயமாகுது... எவ்வளவு முன்னேறுதோ அதற்குத் தக்க ஆபத்தும் அதிகமாகுத்து... எனவே என்ன யூஸ் பண்ணினாலும் பாதுகாப்பா யூஸ் பண்ணு... தேவையில்லாத இடத்தில் போன் நம்பரும் மெயில் ஐடியும் கொடுத்துடாதே... அப்புறம் நமக்குதான் ஆபத்து...” என எச்சரிக்கை செய்ய, “சரிங்க மாமா.. நான் பார்த்துக்கிறேன்...” என உறுதி அளித்து விட்டாள் சத்யா.

அவளை எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே மறுக்கரத்தில் அந்தச் செயலியை அலைபேசியில் இருந்து நீக்கி இருந்தான் பிரபு. அவன் சென்ற பிறகு அலைபேசியை எடுத்து பார்க்க, குறிப்பிட்ட செயலி அங்கே இருக்கவில்லை. அதைப் பார்த்ததும் சற்றே கோபமாக வந்தது சத்யாவிற்கு. “இவரு ஏன் இப்படி எல்லாம் பண்றாரு?? டிவியிலேயும் செய்தியிலேயும் ஆயிரம் சொல்லுவாங்க.. அதெல்லாம் உண்மையா?? இன்னைக்கு மழை வரும்னு சொல்றாங்க வரவா செய்யுது?? அதுமாதிரிதான் இதுவும்.. நாம பத்திரமா யூஸ் பண்றதுல தான் இருக்குது.. இவருக்கு வேற வேலையே இல்ல..” எனத் திட்டிக் கொண்டே உள்ளே நுழைய முயற்சிக்க, அவளது கடவுச்சொல் தவறு என வந்தது.

இப்போதும் பிரபுவின் மேலிருந்த கோபம் அதிகமானதே தவிர அவன் மீது அவன் கூறியதில் இருக்கும் நியாயம் அவளுக்குப் புலப்படவில்லை. கோபமாகப் பாஸ்வேர்ட் மறந்து விட்டது என்பதை அழுத்தி, ஒருவாறாக அதை மீண்டும் பெற்று உள்ளே நுழைந்து விட்டாள்.

யூடியூபில் ஆப்களை மறைத்து வைக்கும் சீக்ரெட்லாக் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது எனத் தேடி, அந்தக் கிங்காங் செயலியை அதற்குள் இணைத்துவிட்டாள். எனவே இன்று முதல் கிங்காங் செயலி அவளது அலைபேசியில் நிறுவப்பட்டிருக்கும், ஆனால் எவருக்கும் தெரியாது. இவ்வாறு புத்திசாலித்தனமானதொரு செயலை செய்திருந்தாள் சத்யா.

முதலில் தனக்கு ஏதேனும் ஒரு வகையில் அங்கீகாரம் கிட்ட வேண்டும், தனது திறமையை உலகமே பார்க்க வேண்டும் என்பதற்காக எல்லாம் சத்யா அந்தச் செயலிக்குள் நுழையவில்லை; தனக்கு ஒரு பொழுதுபோக்காகத் தான் உள்ளே நுழைந்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஒருவித பாசி போன்ற ஒன்று அவள் கழுத்தில் சுற்றிக் கொண்டு உள்ளே அமிழ்த்தியது. இதை இலந்தை முள் போல என்று கூட வர்ணித்துக் கொள்ளலாம். உள்ளே செல்கையில் எளிதாகச் சென்றுவிடலாம்; வெளியே வருவது சற்றுச் சிரமம்தான். அப்படியான சுழலில் சிக்கிக் கொண்டாள் சத்யா.

இங்கே வெளியேறவேண்டும் என எந்த முகாந்திரமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. மேலும் அவளது சிந்தையிலும் அப்படி ஒரு எண்ணம் உதித்திருக்கவில்லை. எனவே வழக்கம் போலக் காணொளிகளைப் பதிவேற்றிக் கொண்டுதான் இருந்தாள்.

அவளுக்கு இதில் பொருளாதார ரீதியாகப் பெரிதான லாபம் என எதுவும் இல்லை. காண்பவர்களின், பின்தொடர்பவர்களின் ஊக்கமும் கமெண்டுகளும் மட்டுமே அவளின் அவளுக்கான சன்மானம். அவளுக்கு இது ஒன்றும் பெரிய அளவில் வருத்தமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவள் பொருளாதார நோக்குடன் உள்ளே நுழையவில்லை.

இவ்வாறாக நாட்கள் சென்று கொண்டிருக்க, தனக்கான சிறிய உலகில் ராணியாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் சத்யா குறிப்பிட்ட அந்தக் காணொளியை காணும் வரை. அந்தக் காணொளிக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் ஹார்ட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தன. இங்கே ஹார்ட்டுக்கள் என்பது நமது முகநூலில் கொடுக்கப்படும் லைக் போன்றது.
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18

14

அதைப் பார்த்த சத்யா, மயங்கிவிழாத குறைதான். மூக்கின் மேல் விரலை வைத்து விட்டாள். “நான் அவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போடுறேன், அங்கே 10 ஆயிரம் லைக் தாண்ட மாட்டுது.. இங்கே அப்படி என்ன இருக்குது அப்படின்னு ஒரு லட்சம் லைக் கொடுத்திருக்காங்க..” என அந்தக் காணொளியை பார்க்க, அது ஒரு இளம் பெண்ணின் காணொளி. அவள் புடவை அணிந்திருந்தாலும் அங்க வளைவுகளை எடுத்துக்காட்டுமாறு அணிந்திருந்தாள். மேலும் உடல் அசைவுகள் ஒவ்வொன்றும் கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் இருந்தன; பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் பாடலும் ஒருமாதிரியாக அனைவரது சிந்தையையும் நஞ்சாக்கும் தன்மையுடைய ஒரு பாடல்தான்.

நாமும் இதைப் போல் செய்தால் என்ன? நமக்கும் ஒரு மில்லியன் ஹாட்ஸ் வரும் அல்லவா எனச் சத்யா சிந்தித்துக் கொண்டிருக்க, தனது சூழ்நிலை அவளுக்குப் புரிய வந்தது. ஏனெனில் அவள் வாழும் சமூகம், அவளது குடும்பம் ஆகியவை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்குபவை; அவள் வாழும் சமூகத்தில் இப்போதும் பெண்கள் சர்வ சாதாரணமாகச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தும் வாய்ப்பு கிட்டினாலும் தங்களது சொந்த புகைப்படத்தைப் பதிவேற்றும் அளவிற்கு முன்னேறி இருக்கவில்லை. ஆகவே சற்று தயங்கினாள். மேலும் பொருளாதார ரீதியாக எந்த வகை லாபமும் கிட்டாத செயலுக்காகத் தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சுயமரியாதையையும் தனது எதிர்காலத்தையும் சிதைத்துக் கொள்ள அவள் தயாராக இல்லை.

எனவே இப்படியே தொடரட்டும் என்றேனும் வாய்ப்புக் கிட்டினால் தன்னைத்தான் அப்கிரேட் செய்து கொள்ளலாம் என இருந்துவிட்டாள். ஆனால் விதி வலியது அல்லவா? குக்கீஸில் நாம் பார்வையிட்ட பொருள், காணொளிகள் சம்பந்தப்பட்டவை தான் மீண்டும் மீண்டும் நம் கண்முன்னே தோன்றும். அதுபோல அந்தக் குறிப்பிட்ட பெண்ணின் காணொளிகள்மீண்டும் மீண்டும் அவளுக்குக் காட்டப்பட்டுக் கொண்டே இருந்தது.

அவற்றைப் பார்க்க பார்க்க, அவளுக்குச் சற்றே வெறியேறியது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒருநாள் அந்தப் பெண் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தாள், தனக்குச் சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிட்டியிருக்கிறது எனத் தன் சொந்த குரலில் ஒரு காணொளியை பதிவேற்றியிருந்தவள்; “ஹாய் செல்லம்ஸ்... தேங்க்ஸ் ஃபார் யுவர் லவ்ஸ்... எனக்குச் சினிமாவில் வாய்ப்பு கிடைச்சிருக்குது... இப்பதான் கேவிஎம் சார் கால் பண்ணினாரு... என்னோட கிங் காங் வீடியோஸ் பார்த்துட்டு தான் எனக்குக் கால் பண்ணி இருக்காரு... ரொம்ப நல்லா இருக்குதுன்னு சொன்னாரு... அவரும் என்னோட ஃபேன் தானாம்... இதுக்கெல்லாம் முக்கியக் காரணம்... நீங்களும் உங்க சப்போர்ட்டும் தான்.. தேங்க்ஸ் டியர்ஸ்... இனி இந்த ஆப் நான் யூஸ் பண்றது கொஞ்சம் ரேர்தான்... கூடிய சீக்கிரமே பிக் ஸ்கிரீன்ல சந்திப்போம்... பாய் செல்ல குட்டிஸ்... மிஸ் யூ... லவ் யூ...” எனப் பதிவிட்டு இருந்தவள்; இறுதியாக 4 முத்தமிடும் ஸ்மைலிகளை இணைத்திருந்தாள்.

இதைப் பார்த்ததும் சத்யாவிற்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது, உள்ளுக்குள் ஒரு பறவை செத்து விழுந்தது; வானத்தில் பறந்து கொண்டிருந்த பட்டம் நூலறுந்து பொத்தென்று தரையில் விழுந்தது போன்ற ஒரு உணர்வு. “ஏன் நான் எந்த விதத்தில் அவளை விடக் குறைந்து போய் விட்டேன்? அவளை விட அழகாக இருக்கிறேன், அவளைக் காட்டிலும் அழகாக எனக்கும் காணொளிகள் நடிக்கத் தெரியும்... ஆனால் எனக்குக் கிடைக்காத வாய்ப்பு அவளுக்கு ஏன் கிடைத்தது?” எனத் தனக்குள் சிந்திக்கலானாள்.

அல்லும் பகலும் அது குறித்துச் சிந்தித்து, இடையில் தனக்குக் குடும்பம் என ஒன்று இருப்பதையே மறந்து போனாள். காலையில் எழுந்து கடனே என ஏதோ ஒன்றை அரைகுறையாகச் சமைத்து, கணவனையும் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து விடுவாள். அவர்கள் விரைந்து வீட்டை விட்டு வெளியேறினால்தானே தான் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலும்; ஆகவே தான் விரைந்து அனுப்பி விடுவாள்.

அதன் பிற்பாடு தன்னிடம் இருக்கும் அழகான புடவைகளைக் கட்டி, ஒப்பனைகள் செய்து கொண்டு காணொளிகளைப் பதிவுசெய்யத் தொடங்குவாள். அவளிடம் இருக்கும் சிறுசிறு ஒப்பனை பொருட்கள் எல்லாம் அந்தக் காணொளிகளைப் பதிவிடுவதற்குப் போதுமானதாக இருக்கவில்லை.

எப்போதும் குடும்பச் செலவுக்காகப் பிரபு கொடுக்கும் சொற்ப பணத்தில் மிச்சம் பிடித்துச் சேமித்து வைத்து இருப்பவள்; இப்போது அந்தப் பணத்தை ஒப்பனைகளுக்காகச் செலவிடத் தொடங்கினாள். மேலும் வெறுமனே புடவை மட்டும் கட்டிக்கொண்டு காணொளிகளைப் பதிவேற்றினால் ரசிக்க மாட்டார்கள் என எண்ணியவள் தன் கணவனுக்குத் தெரியாமல் முதன் முறையாக ஒரு விலை உயர்ந்த ஆடையை வாங்க முடிவு செய்தாள்.

ஆடை வாங்குவதற்கும் கணவனிடம் அனுமதி கேட்க வேண்டுமா? இதைப் பெண் அடிமைத்தனம் இல்லையா என எவருக்கும் கேள்விகள் எழுந்தால்....??? எழுவது இயல்புதான். இருப்பினும் அவளும் அடிமை இல்லை, வீட்டின் மொத்த வருமானத்தில் செலவு செய்வதில் அவளுக்கும் உரிமைகள் இருக்கிறது தான்.

ஆனால் கணவன் தான் செய்யும் அனைத்து காரியங்களையும் மனைவியுடன் பகிர்ந்து கொள்கையில் மனைவியும் தான் செய்யும் புதிய விஷயங்களையும் கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது ஒரு இயல்பான எதிர்பார்ப்புதான்; மேலும் ஒரு ஆரோக்கியமான குடும்பக் கட்டமைப்பிற்கு இன்றியமையாத ஒன்றுதான் அந்தப் பகிர்தல். அடிமைத்தனம் என்றெல்லாம் ஒன்றுமில்லை;

பிரபு புதிதாக ஒரு கைக்குட்டை வாங்கினால் கூட அவளிடம் வந்து காண்பித்து, “எப்படி இருக்குது?? பத்து ரூபாய்க்கு மூன்று கைக்குட்டை என்றான்... நல்லா இருக்குதேன்னு வாங்கிட்டு வந்துட்டேன்.. நீ ஒண்ணை வச்சிக்கிட்டுப் பசங்களுக்கு ஆளுக்கு ஒண்ணு கொடுத்துடு.. எங்கேயும் போனா வந்தா ஒரு டீசன்டா கொண்டு போறதுக்கு நல்லா இருக்கும்...” என்பான். அவ்வாறானதொரு இல்லறம் நடத்திக் கொண்டிருக்கையில் அந்த விலை உயர்ந்த ஆடை வாங்க இருப்பதைக் குறித்து அவனிடம் கலந்தாலோசித்திருக்கலாம். இல்லையேல் இப்படியானதொரு சூழ்நிலையில் தேவைக்காக வாங்கிவிட்டேன் என அவனிடம் ஒரு செய்தியாகவாவது தெரிவித்திருக்கலாம்.

ஆனால் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று, 1500 ரூபாய் செலவில் இரண்டு சுடிதார்கள் எடுத்து வந்தவள்; அதை அவனிடம் தெரிவிக்காமலேயே தனது ஆடைகளுக்குள் பதுக்கி வைத்து விட்டாள். அவன் சென்ற பின்பு அந்த ஆடைகளை அணிந்துகொண்டு, காணொளியை பதிவு செய்யத் தொடங்குவாள் சத்யா.

இப்போதெல்லாம் பிரபுவிற்குச் சத்யாவின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. எப்போதும் குழந்தைகள் நலனிலும் அக்கறை செலுத்துபவள், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அவர்களுக்காகச் செய்பவள் இப்போது குடும்பம் குறித்ததான சிந்தனையில் பின் தங்கியிருப்பதை அவன் கண்டுகொண்டான்.

இருப்பினும் அவரிடம் கேட்க முற்பட்டாலோ இல்லை அவளைக் கண்காணிக்கத் தொடங்கினாலோ அவளைச் சந்தேகப்பட்டது போலாகிவிடும், அவள் மனதளவில் உடைந்து போவாள் என நினைத்தவன் கேட்காமல் அமைதி காத்தான்.

இது சத்யாவிற்கு வசதியாகிப்போனது; தனது செயல்களைத் தொடர்ந்து அரங்கேற்றியவண்ணம் இருந்தாள்.

எவ்வாறு இன்டிபென்டன்ட் மியூசிசியன்களுக்கு முன்னுதாரணம் (அ) இன்ஸ்பிரேஷன் ஹிப் ஹாப் தமிழா ஆதியோ, சின்னத்திரை கலைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன் சிவகார்த்திகேயனோ அவ்வாறாக அதைப்போல அந்தப் பெண்ணையும் தனக்கு ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டாள் சத்யா. சத்யா மட்டுமன்றி அந்தச் செயலியைப் பயன்படுத்தும் பலரும் அவளைப் போன்றே தங்களுக்கும் அந்த வாய்ப்பு கிட்டிவிடாதா என ஏங்கவே செய்தனர்.

அவளைப் போன்ற பல காநோளிகளைப் பதிவேற்றினால் தனது திறமையையும் அங்கீகரிக்க எவரேனும் முன்வருவர், அதன் மூலம் உச்சத்திற்குச் சென்று விடலாம், அனைவரது பார்வையும் தன் மீது திரும்பும் என நினைத்தவள்; சற்று ஆடைகளின் அளவைக் குறைத்து, காணொளிகளைப் பதிவேற்றலாம் என முடிவு செய்தாள்.

அதன் முதற்கட்டமாகச் சுடிதாருக்கு துப்பட்டா அணியாமல் ஒரு காணொளியைப் பதிவேற்ற, “இது கொஞ்சம் வித்தியாசமா இருக்குது...”, “நல்லா இருக்குது...” எனப் பதிவிட்டவர்களின் மத்தியில் இரண்டு பேர், “சிஸ்டர் நீங்க புடவை கட்டி பண்ற வீடியோஸ் தான் நல்லா இருக்கு... சுடிதார் போடுறதா இருந்தா ஷால் போட்டுட்டு பண்ணுங்க... இது ஒரு மாதிரி இருக்கு, நல்லா இல்லை..” என்பது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டுவிட, இவளுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் பேர்வழி என இவளை பின்தொடர்வோர் அவர்களிடம் சென்று, “என்ன பெண்ணடிமைத்தனத்தை விதைக்க வருகிறீர்களா?? இத்தனை நூற்றாண்டுகளாக அடிமைகளாக இருந்த பெண்கள் இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்து இருக்கிறார்கள்... அவர்களை நசுக்கி விடாதீர்கள்...” என்பதாகச் சண்டையிடத் தொடங்க, தற்காலிகமாக அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் களத்தில் இறங்கினாள் சத்யா.

இரு தரப்பினருக்கும் பொதுவாக, “இங்கே நாம் பொழுதுபோக்கிற்காக வந்திருக்கிறோம்... சண்டைகள் வேண்டாமே...” எனப் பதிவிட்டுவிட்டு விலகிவிட்டாள். இதே நிலைதான் மூர்த்திக்கும்.

அவன் பதிவேற்றும் காணொளிகள் எதற்கும் போதுமான வரவேற்பு கிட்டவில்லை. ஆனால் அவன் இதற்கெல்லாம் அசரவில்லை, அவனது தன்னம்பிக்கையை எப்போதும் பாராட்டியே ஆகவேண்டும்!! ஒருவர் பார்த்திருந்தால் கூட ஏன் அந்த ஒருவர்கூடப் பார்த்திராவிட்டால் கூடக் காணொளிகளைப் பதிவேற்றி கொண்டேயிருப்பான் அவன்.

அவனைப் பின்தொடர்பவர்களைக் காட்டிலும் அவன் பதிவேற்றும் காணொளிகளின் எண்ணிக்கை அதிகம். அவனுக்கு மிகச் சரியாக, அந்த ஆடியோவில் ஒலிக்கும் குரலுக்கு ஏற்ற உதட்டசவைக் கொடுக்க வராது; ஆனாலும் தளராமல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தான் அவன்.

நாம் பொதுவாக முயற்சி செய்த அனைத்து வீடியோக்களையும் நமது தனிப்பட்ட கோப்பில் (draft) சேமித்து வைப்போம், பின்னாளில் ப்ளூப்பர்ஸ் எனப் பீற்றிக் கொள்வோம். ஆனால் மூர்த்தி அதையும் பதிவேற்றி விடுவான்.

ஒரு கட்டத்தில் ஒருவன், “நீ செய்வதெல்லாம் க்ரிஞ்டா...” எனக் கருத்துப் பகுதியில் பதிவிட்டிருக்க, அவனுக்கு அதற்கான பொருள் கூடத் தெரியவில்லை. அவனளவில் “Super” என்றால் “நன்றாக இருக்கிறது”, “Sooppperrr” என்றால் “மிக மிக நன்றாக இருக்கிறது” அவ்வளவுதான்.

இவன் தனக்குத் தானே கொடுத்த வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்க, அவனைச் சீண்டும் வகையில் கருத்துக்களைப் பதிவிடுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவர்கள் தன் போக்கிற்கு அவனைக் கலாய்த்து எத்தனை கமெண்டுகள் பாதி விட்டாலும் அவன் அசராமல் அத்தனைக்கும் சிரித்துவிட்டு கடந்து விடுவான்.

இது ஒருவகையில் பாராட்டத்தக்க விஷயமும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயமும் கூட. நம்மைப் பற்றி அவர் என்ன பேசினாலும் அதைக் குறித்துக் கண்டுகொள்ளாமல் கடந்து விடுதல் மிகச்சிறப்பு. இதற்குப் பல பல உதாரணங்களும் உண்டு.

இவன் இவ்வாறு அமைதியாக இருப்பதைக் கொண்டு ஒரு கும்பல் அவனைச் சீண்டுவதற்காக அந்தக் கிங்காங் செயலியில் கூடத்தொடங்கியது. எப்போதும் நேர்மறையான விஷயங்களை விட எதிர்மறையான விஷயங்கள் எளிதில் மக்களைச் சென்றடைந்து விடும். எதிர்மறையிலேயே பலரைச் சென்றடைந்திருந்தான் மூர்த்தி.

அவன் ஒரு காணொளியை பதிவேற்றியிருந்தால் அவனது அப்பாவித்தனத்தையும் அறியாமையையும் சீண்டும் வகையில் கலாய்த்து ஒரு இருபது முப்பது பேராவது கருத்துக்களைப் பதிவிட்டு இருப்பர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவன்; தனது சொந்த குரலில் தனது வட்டார வழக்கில் திட்டி, காணொளிகளைப் பதிவேற்றி இருந்தான்.

“ஏலே... முட்டாப்பயலுவளா... விளங்காத பயலுவளா... என்னல கமெண்டு போட்டுக்கிட்டு கிடக்கிய... சும்மா என்னத்தையாவது போட்டுக்கிட்டு கிடக்கிய.. உங்களுக்கு வேற சோலியே இல்லையோ?? உங்க வீட்டுல பிள்ளகுட்டியல்லாம் இல்லையோ?? போங்கல.. போய்ச் சோலியப் பாருங்க...” எனப் பதிவேற்றியிருக்க, அது அந்தச் செயலில் பலருக்குப் பிடித்துப் போய்விட்டது.

செயலியில் பலர் அதை மறு பதிவு செய்திருந்தனர்; இவ்வாறாக நெகட்டிவிட்டியிலேயே குளிக்கத் தொடங்கினாள் மூர்த்தி. அவன் இவ்வாறாக வட்டார மொழியில் பேசியது கேட்டவர்களுக்குச் சற்றே விசித்திரமாக இருந்தது. ஏனெனில் அவர்களில் பலர் இதுபோன்ற பேச்சையும் இவ்வாறான நடையும் கேட்டதில்லை; எனவே அது மீண்டும் மீண்டும் பகிரப்பட்டது.

இப்போது கிங்காங் செயலியில் குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவராக மூர்த்தியும் வளர்ந்துவிட்டான். கண்டுகொள்ளப்படாமல் இருந்தவனுக்குள் புகுந்திருந்த ஏ.எஸ் வைரஸ்கள் எப்போதோ பாய் விரித்துப் படுத்து ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தன. அவற்றைத் தட்டி எழுப்பும் வகையில் இருந்தது இந்த மறுபதிப்புகள் அதாவது ரிபோஸ்ட்கள்.

அவை(ASV) அனைத்தும் எழுந்து அமர்ந்து தூக்கக்கலக்கத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, லேசாகக் கவனயீர்ப்புச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் உதிக்கத் தொடங்கியது மூர்த்திக்குள். அதே நடையில் அவன் தனது குரலால் வட்டார மொழியில் பேசி ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தான்.

அன்று கார்த்திக் என்ற ஒருவன் மூர்த்தியை திட்டி கருத்துக்களைப் பதிவிட்டு இருந்தான். இதுகாறும் அமைதியாக இருந்திருந்த மூர்த்தி; வழக்கம்போல வெகுண்டெழுந்து, “ஏல... கார்த்திக்... எவம்ல நீ?? என்னல வேணும் உனக்கு... அமைதியா கிடந்துக்கச் சொல்லிட்டேன்.. வில்லங்கமாயிப்புடும் பாத்துக்க...” என்ற அவனது இந்த அப்பாவித்தனமான அறியாமையான பேச்சு சற்று நகைக்கத்தக்கதாக இருந்தாலும் ஒரு விதத்தில் ரசிக்கத்தக்கதாகத்தான் இருந்தது, பொழுது பொழுதுபோக்கிற்காகப் பார்க்கலாம்.

இதைத் தொடர்ந்து பலர் வேண்டுமென்றே அவனைச் சீண்டிக்கொண்டும் அவனது வாயில் விழுந்து கொண்டும் இருந்தனர்.
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18

15

சத்யாவின் வீட்டில் குடும்பத்தைக் கவனிப்பதில் அவள் பின்தங்கியிருந்தால், இங்கே மூர்த்தி வேலைக்குச் சென்ற இடத்திலும் இதையே பிரதானமாகச் செய்து கொண்டிருந்தான்.

அன்று மதியம் சமைத்துக் கொண்டிருந்த சாரதாவின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. யார் என எடுத்து பார்க்க, அவர்களின் உறவினர் ஒருவர் தான் அழைத்திருந்தார்.

“என்னாச்சு அண்ணி?” என அவர் விசாரிக்க, உன் பொண்ணை சரியா கவனிக்க மாட்டியா?? அவ என்ன பண்றான்னு பார்த்து கண்டிக்க மாட்டியா? இப்ப பாரு டிவியில அவளோட வீடியோ வருது..” என அவர் சற்றே திட்டும் தொனியில் பேசவும், திடுக்கிட்டுச் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்துப் பார்த்தார் சாரதா.

அதற்குள் அந்த நிகழ்ச்சி முற்றுப்பெற்றிருந்தது. “என்ன அண்ணி சொல்றீங்க?? என்ன ப்ரோக்ராம்ல வந்தா?? புரியல நீங்க சொல்றது..” எனச் சாரதா அவரிடம் வினவ, “அதான் அந்தக் கிங்காங்ன்னு.. டிவியில என்னமோ போட்டு ஆடிக்கிட்டு இருக்கா உன் பொண்ணு... என் பையன் தான் சொன்னான் இது நம்ம வெண்பா அப்படின்னு.. அதான் உனக்குக் கால் பண்ணி கேட்கலாம்னு நினைச்சேன்... நம்ம வெண்பாவா இல்ல அந்த மாதிரி இருக்கிற வேற எதுவும் பொண்ணா??” என அவர் விசாரிக்க, இப்போது தன் மகளைக் குறித்தும் தன் மகளின் முன்னேற்றத்தை குறித்தும் வெளிவிட்டுவிட வேண்டாம் என எனக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந்த சாரதா, “இல்ல அண்ணி... அவ ஸ்கூலுக்குப் போறா... அவளுக்கு எப்படி இதுக்கெல்லாம் நேரம் கிடைக்கும்?? கிளாஸ்ல முதல் மார்க்கு வாங்குறா.. இதுக்கெல்லாம் நினைச்சுப் பார்த்தா கூட நேரமில்லை...” எனச் சமாளித்து அழைப்பை துண்டித்துவிட்டார் ஏனெனில் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டும், தன் மகளின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் (அ) பதவிஉயர்வு கிட்ட வேண்டும் என்பதற்காகச் சாரதாதான் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்குக் காணொளிகளை அனுப்பியிருந்தார்.

இவ்வாறாக இரண்டு மூன்று நாட்களாகப் பலர் ராதாவிடம் நேரிலும் அலைபேசியிலும் தொடர்புகொண்டு பேசியவண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவரிடமும் உண்மையைத் தெரிவிக்காமல் தவிர்த்திருந்தார் சாரதா.

அப்போதுதான் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. எப்படியும் இதுவும் உறவினர் எவரிடமாவது இருந்து வரும் எச்சரிக்கை அழைப்புதான் என நினைத்தவர் முதலிலேயே அழைப்பை ஏற்கவில்லை.

“இவங்களுக்கு வேற வேலையே இல்ல...” எனச் சலித்துக் கொள்ள, மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு...

அலட்சியத்துடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க, அவள் ‘ஹலோ’ சொல்லும் முன்னரே, “ஹலோ... மிஸ்.வெண்பா இருக்கிறாங்களா??” என எதிர் முனையில் நாகரிகமாக ஒரு ஆணின் குரல்.

“யாராக இருக்கும்?” என யோசித்தவாறே சாரதா வினவ “மேம்... நாங்க கேகேஆர் புரோடக்சன் ஹவுஸில் இருந்து பேசுறோம்... லயனிகா டிவி இருக்குதுல்ல... அந்தச் சேனல்ல மாறிலி மானிடர்கள்ன்னு ஒரு சீரியல் போயிட்டு இருக்குது தெரியுமா?? அதில் செகண்ட் ஹீரோயின் ஒரு ரோல் புதுசா இன்ட்ரடியூஸ் ஆகுது... நாங்க வெண்பா மேடத்தோட பப்ஸ்மாஷ், கிங்காங் வீடியோஸ் பார்த்தோம்... அவங்க இந்த ரோலுக்கு சரியா இருப்பாங்கன்னு தோணுது...” என அவன் கூறவும் சாரதாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. என் மகள் எடுத்த எடுப்பிலேயே சின்னத்திரையில் நடிப்பதா?? அதுவும் இரண்டாவது கதாநாயகியாக....?? அப்படியானால் அனைவரின் பார்வையும் அவள்மீது விழவே விழாதே.. இறுதிவரை துணைநடிகையாக மட்டுமே இருந்து மடிந்து போவாளே பதைபதைத்தவர் பின்னர் யோசித்துக் கூறுவதாகக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.

அழைப்பை துண்டித்த பிறகு நன்றாக அமர்ந்து யோசித்துப் பார்த்தார். ‘மடத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு..’ எனக் காத்திருந்தால் காலமும் நேரமும் வயதும் சென்றுவிடும்; அதன்பின்னர் வருந்திப் பயனில்லை. எனவே ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ என்பதற்கிணங்க கிடைத்த வாய்ப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு தன்னைதான் முன்னேற்றிக் கொண்டே வாய்ப்புகளைத் தேடவேண்டும் எனத் தீர்மானித்தவர்; தன் மகளிடம் இதுகுறித்துத் தெரிவிக்க முடிவு செய்தார்.

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த வெண்பாவை ஆர்வமாக வரவேற்று அமர வைத்தார் சாரதா. அவளுக்குப் பிடித்த ரவாலட்டு, சமோசா தயாரித்து வைத்திருந்தார். அவர் வெகுவிமரிசையாக அவளை வரவேற்க, சற்றே துணுக்குற்றவள்; “அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?? இவ்ளோ பாசமா வரவேற்கிற... அப்பா ஏதும் சொன்னாரா?? ஏதும் நல்ல விஷயமா??” என விசாரித்தவாறே உள்ளே வந்தாள் வெண்பா.

அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டு, அவளுக்குப் பிடித்த தின்பண்டங்களையும் குளம்பியையும் அவனிடம் உண்ணக் கொடுத்தார் சாரதா. “என்னம்மா நீ.... என்ன ஸ்பெஷல்ன்னு சொல்லமாட்ற... நான் எவ்ளோ ஆர்வமா கேட்கிறேன்...” என அவள் சினுங்க, “இரு... இரு... சொல்றேன்...” என்றவர்; “இப்போ ஒருவேளை சீரியல்ல உன்னை நடிக்கச் சொன்னா நீ என்ன பண்ணுவ??” என நேரடியாகவே கேட்டார்.

“அம்மா எனக்கு நடிக்க வராதுன்னு உனக்கு நல்லாவே தெரியும்.. அப்புறம் அது என்னோட ஆம்பிஷனும் இல்ல பேஷனும் இல்ல... படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்... அதுதான் அப்பா எனக்குச் சொல்லி கொடுத்திருக்கிறாங்க... ஆனாலும் நம்ம கிங்காங் ஆப்பை விடச் சீரியல்ல நடிச்சா நிறைய ரீச் கிடைக்கும்... இங்கே ஆப் வச்சிருக்கிறவங்க மட்டும்தான் நம்மைப் பாப்பாங்க, பாராட்டுவாங்க, கொண்டாடுவாங்க... ஆனால் சீரியல்ல நடிச்சா நிறையப் பேரு நம்மள பார்ப்பாங்க... ஒரு விதமா எமோஷனலி கனெக்ட் ஆகலாம்... குடும்பத்தோட ஆணிவேராய் இருக்கிற குடும்பத் தலைவிகள் நம்மையும் குடும்பத்துல ஒருத்தரா பாப்பாங்க அப்படின்னு எப்பவோ யாரோ சொன்னதா பேட்டியில் பார்த்த ஞாபகம்... இப்ப ஏன் கேக்குற??”

“ஒண்ணும் இல்லடா... நீ லயனிகா டிவி பார்த்திருக்கிறியா?? அதிலே மாறிலி மானிடர்கள் சீரியல் பார்த்திருக்கிறியா?? அதிலே செகண்ட் ஹீரோயின நடிக்கச் சொல்றாங்க... உன்னோட கிங்காங் வீடியோஸ் நல்லா இருக்குதாம்... முதல்ல செகண்ட் ஹீரோயினா என்ட்ரி இருக்குமாம்... போகப்போகக் கதை உன்னைச் சுத்தி நடக்கிற மாதிரி மாறும் அப்படின்னு சொன்னாங்க...” எனச் சாரதா விளக்கமளிக்க வெண்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

(மேலே குறிப்பிட்ட லயனிகா எனது அபிஷியல் ஆடியோ சேனல். மாறிலி மானிடர்கள் சகாப்தம் வண்ணங்கள் போட்டியில் பச்சை வண்ணத்தில் எழுதிக் கொண்டிருக்கும் போட்டிக்கதை. நேரம் இருப்பின் அதையும் முயற்சித்துப் பாருங்கள்)

பதினைந்து வயது சிறுமிக்கு என்ன தெரியும்?? தன் வாழ்வில் முக்கியமான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுப்பதற்கு அவளுக்கு எந்த முதிர்ச்சியும் இல்லை; பகட்டாக இருப்பவை, கண்களைக் கவரும் தன்மையுடன் இருப்பவைதான் அவளைப் பொருத்தவரையில் சிறந்தவையாகத் தெரியும். தாய்தந்தையர் தான் எது சரி எது தவறு எனச் சுட்டிக்காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இங்கே சாரதா அவளைத் தீயவழியில் நடத்தினார் என்று நான் சாடவில்லை, உலகநாயகனின் கூற்றைப் போல நல்லவழியில் ஆக்கப்பூர்வமாக நடத்தியிருக்கலாம் என்பதுதான் எதிர்பார்ப்பு. அவ்வளவுதான். அவ்வளவே அவ்வளவுதான்.

அவளைக் குறிப்பிட்ட தொலைக்காட்சி தொடரில் நடிக்க வைக்க முடிவு செய்தார் சாரதா. வெண்பா அவரது மகள் மட்டுமின்றி நாராயணனின் மகளும் அல்லவா?? அவள்மீது இருவருக்கும் சம உரிமையும், சம பொறுப்புகளும் இருக்கிறதல்லவா??? அவளது வாழ்வில் எந்த முடிவாக இருந்தாலும் நாராயணனிடமும் கேட்டுத்தானே முடிவு செய்ய இயலும்?? எனவே அவரிடம் கேட்டு, முறைப்படி அனுமதி பெற்றுவிட்டு,; தன் மகளை நடிப்பதற்கு அனுமதிக்கலாம் என நினைத்தவர் அன்று மாலை வீடு திரும்பிய தன் கணவரிடம் இதற்கு அனுமதி கோரினார்.

இரவு உணவை உண்டுகொண்டிருந்த தன் கணவனிடம் மென்மையாக எடுத்துரைக்க வேண்டி, “ப்பா... நீங்க சீரியல்லாம் பார்த்திருக்கிறீங்களா??” என மெதுவாக ஆரம்பித்தார்.

“அதெல்லாம் வேஸ்ட்... வீட்டில நேரம் போகாம இருக்கவங்க மட்டும்தான் சீரியல் பார்ப்பாங்க... எனக்கு ஆயிரம் வேலை இருக்குது... இப்படிக் கால் காசுக்கும் பெறாத சீரியல்ஸ் பாக்குறதுல எனக்கு விருப்பமில்ல...” என அவர் கூறிவிட, கோபமாக வந்தது சாரதாவுக்கு.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எப்படித் தன் மகளுக்கு அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது எனக் கூற எனத் தயக்கமாக இருந்தது. இருப்பினும் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அது ஒண்ணும் இல்லப்பா.. நம்ம வெண்பாவை சீரியல்ல நடிக்கக் கூப்பிடுறாங்க...” எனச் சாரதா கூறியதுதான் தாமதம்; ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கி விட்டார் நாராயணன்.

“என்ன பேச்சு பேசுற நீ??! நாட்டுல பாதிக் குடும்பம் கெட்டுப் போறதே இந்தச் சீரியல் பார்க்கிற ஆளுங்களாலதான்.. எந்தச் சீரியல்லயாவது உருப்படியா ஏதாவது ஒரு விஷயம் வருதா?? எப்ப பாரு அழுகாச்சிதான்... ஊர்ல இருக்கிற எல்லாப் பிரச்சனையும் ஹீரோயினுக்கு மட்டும் தான் வரும், அந்தப் பிரச்சினையும் கண்டிப்பா அவளுக்குச் சாதகமாகதான் முடியும்... இதுக்குப் பேசாம பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே.. எல்லாச் சீரியல்லேயும் ஒரே பிளாட்... இந்தச் சொசைட்டிக்கு நல்லது சொல்ற மாதிரி, நல்ல கருத்து சொல்ற மாதிரி எதுவுமே இல்லை... எல்லாச் சீரியல்லேயும் ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், அந்த ஹீரோ ஹீரோயினுக்கு நடக்காத ஃபர்ஸ்ட் நைட்... அவனைப் பிரிச்சு கூட்டிட்டு போறதுக்கு அதே வீட்டுக்குள்ளேயே குடியிருக்கிற வில்லி... மருமக பணக்கார வீட்டில் பொறக்கல, வரதட்சனை அதிகம் கொண்டு வரலன்னு நிதமும் குத்திக்காட்டிட்டு இருக்கிற மாமியார், படிக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டு குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா மாறணும், புருஷனுக்குச் சேவை செஞ்சே தேயணும்ன்னு வற்புறுத்துற மாமியார்... இதுக்கு எல்லாத்துக்கும் அல்டிமேட்டா பெண்டாட்டி வயித்துல இருக்கிற குழந்தை தன்னோடது இல்லைன்னு சந்தேகப்பட்டு விரட்டி விடுற ஹீரோ, இதுல அவனால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சும் அவனுக்குத் தன் பொண்ணைக் கட்டிக்கொடுக்கிற அப்பா... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இதுல ஏதாவது ஒரு விஷயம்... ஏதாவது ஒரு விஷயம் இந்தச் சொசைட்டி முன்னேத்துற மாதிரி இருக்குதா?? அப்படிப்பட்ட ஒரு சாக்கடையைப் பாக்குறதே தப்புன்னு சொல்றேன்... அதுல என் பொண்ணை நடிக்க வேற சொல்லுறியா?? உனக்கு ஒண்ணு தெரியுமா?? திரையில் வர்றது மூலமா எல்லாரையும் சிரிக்க வச்சு, அழ வச்சு, ரசிக்க வச்சிருந்தாலும் அவங்களோட வாழ்க்கை போராட்டம் அவ்ளோ கஷ்டம். ஒவ்வொரு நிமிஷமும் ஓடிட்டே இருக்கணும்... தனக்காக, தன் குடும்பத்துக்காக நேரம் செலவழிக்காம அடுத்தடுத்த வாய்ப்புகள தேடி, ஓடிட்டே இருந்தா மட்டும்தான் அவங்களால அந்தத் துறையில் நிலைத்து நிற்கமுடியும்... அப்படிப்பட்ட ஒருத்தியா என் பொண்ணு போராடுறத நான் விரும்பலை... இப்போ நான் அந்தத் துறையை இழிவாகவும் தரக்குறைவாகவும் சித்தரிக்கல... நம்ம செய்யுற டாக்டர், டீச்சர் தொழில் மாதிரி அதுவும் ஒரு தொழில்தான்... ஆனால் நிரந்தரமான வருமானமும் நிரந்தரமான பொசிஷனும் இல்லாத ஒரு துறை அது. தினமும் 100 ரூபாய், 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவாங்க எத்தனை பேர் தெரியுமா?? வாரத்தில் ரெண்டு மட்டுமே வேலை இருக்கும் அவங்களுக்கு... இப்படிப்பட்ட ஒரு துறையில் போராடி, சர்வைவ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு யோசிச்சுப் பாரு... நம்ம பொண்ணு ஹீரோயினாவே நடிச்சாலும் கடைசிவரை ஹீரோயினாவேதான் நடிக்கப் போறாளா?? வெளியே இருந்து பாக்குறதுக்கு இது பஈசியா இருக்கலாம்.. ஆனா அவ்வளவு கஷ்டம் அவங்களுடைய ஜீவனம்... சோ எதையும் அரைகுறையா பார்த்துட்டு வந்து பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்காத... என் பொண்ணு நல்லா படிச்சு ஒரு நல்ல ஜாப்ல செக்யூர்டா இருக்கணும்னு ஆசைப்படறேன்... தேவையில்லாம எதையாவது பேசி அவ மனசை கெடுத்துடாத... அவ படிக்கிற பொண்ணு... படிக்கட்டும்..” எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார் நாராயணன்.

நாராயணனிடம் வாக்குவாதம் செய்வது சரிப்பட்டு வராது எனத் தெளிந்த சாரதா; தன் தரப்பிலிருந்து என்ன முயற்சி எடுக்கலாம் எனச் சிந்திக்கத் தொடங்கினார்
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18

16

அதன்படி, மறுநாள் மாலை எந்த வேலையும் செய்யாமல், வீட்டை சுத்தம் செய்யாமல், பாத்திரங்களையும் துலக்காமல், வீட்டில் விளக்கு ஏற்றாமல், ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தார்.

முந்தைய நாள் நடந்த நிகழ்வுகளால் சற்று துணுக்குற்ற நாராயணன்; தன் மகளைத் தன் மனைவி எங்கே தவறான பாதையில் வழிநடத்தி விடுவாரோ என அஞ்சி, டியூஷனில் சேர்க்க சென்றிருந்தார்.

டியூஷனில் சேர்த்து விட்டு மாலை 7 மணிக்கு அவர் வீடு திரும்புகையில் வீடு கும்மிருட்டாக இருந்தது. “என்னாச்சு?? இந்த மாசம் சரியா கரண்ட் பில் கட்டிட்டேனே?? என்னவா இருக்கும்???” எனச் சிந்தித்தவாறே உள்ளே வந்து ஹாலில் விளக்கை ஒளிரவிட, சோபாவில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அமர்ந்திருந்தார் சாரதா.

“ஏய்... என்னாச்சு உனக்கு?? ஏன் லைட் போடாம பிசாசு மாதிரி உட்கார்ந்திருக்கிற??” எனச் சற்றே கண்டிப்பான குரலில் கேட்க, பிடித்துக்கொண்டார் சாரதா.

“ஏதோ உங்களுக்கு மட்டும் தான் பொண்ணு வாழ்க்கையில அக்கறை இருக்கிற மாதிரி ஓவரா பண்றீங்க... அவளைப் பத்து மாசம் சுமந்து பெத்தவ நான்... அவளுக்கு எது சரி, எது தப்புன்னு எனக்குத் தெரியாதா?? ஏதோ நான் அவளைக் கெடுத்துடுவேன். அவ வாழ்க்கையைச் சிதைத்துடுவேன் என்கிற மாதிரி பேசிட்டு இருக்கீங்க?? அவ வாழ்க்கையில் முன்னேறணும், அவளுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கணும், அவளுடைய திறமையைப் பலர் அங்கீகரிக்கணும் அப்படிங்கறதுக்காகத் தான் அந்த வாய்ப்பை தேடினேன்... என்னென்னவோ பேசுறீங்க...” எனச் சாரதா பொரிந்து தள்ளத் தொடங்க, “என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?? ஏன்டி... அவ ஒன்பதாவதுதான் 9வது தான் படிக்கிறான் 15 வயது தான் ஆகுது இப்போ போய்ப் படிக்கிறா... இதுதான் அவ வாழ்க்கையை சரியா அமைச்சிக்க வேண்டிய நேரம்.. இப்ப போய்ச் சினிமாவில் நடிக்க வைக்கிறேன், டிவில வர வைக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருக்குற... இதெல்லாம் நிறந்தரம் இல்லன்னு தெளிவா சொன்னேனே... புரியலையா உன் மரமண்டைக்கு?? இன்னைக்குச் சூப்பர் ஃபிகர், கனவுக்கன்னி கொண்டாடுறவன் நாளைக்கே மார்கெட் போயிருச்சுனா கண்டுக்கவே மாட்டான்... அழகா இருக்கா, நல்லா ஆடுறா அப்படின்னு யாராவது நாலுபேர் உசுப்பேத்திவிட்டா அதை நம்பி மோசம் போய்டாதே... நாளைக்குப் பிரச்சனைன்னு வந்தா வெண்பாவுக்கு நாமதான் நிக்கணும்... அவங்க வரமாட்டாங்க அதை முதலில் புரிஞ்சுக்கோ... இதுக்கு மேல இது பத்தி என்கிட்ட பேசாத...” என அவர் கறாராகக் கூறிவிட, தனது முடிவில் உறுதியாக இருந்தார் சாரதா.

“சரியான கண்ட்ரி ப்ரூட்டா இருக்கீங்க நீங்க.... உங்களுக்குப் போய் எங்க அப்பா கட்டிக் கொடுத்து என் வாழ்க்கையிலேயே மண்ணள்ளி போட்டுட்டாரு.. எனக்குச் சின்ன வயசுல ஆடணும், பாடணும்ன்னு நெறைய ஆசைகள் இருந்துச்சு... ஆனா அதையெல்லாம் நாலு சுவத்துக்குள்ள முடக்கி வச்சுட்டார் எங்க அப்பா... அப்புறம் அவரையேமாதிரி பெண்களை அடிமைப்படுத்துற உங்க தலையில என்னைக் கட்டிவச்சு, என் மொத்த வாழ்க்கையையும் முடமாக்கிட்டார்..” எனச் சாரதா பேச, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் நாராயணன்.

“என்னடி சொன்ன?? நான் உன்னை அடக்கி வைக்கிறேனா?? கல்யாணமான புதுசுல எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.. ஏதாவது வேலைக்குப் போ, புதுசா ஏதாவது கத்துக்கோன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்... இப்போ கூட ஒண்ணும் கெட்டு போகல... உனக்கு ஆடணும் பாடணும்னு ஆசை இருந்தா கத்துக்கோ... பரதமோ கதக்களியோ குச்சுப்புடியோ ஏதோ ஒண்ணைக் கத்துக்கோ... உன் வயதில் இருக்கிறவங்களுக்குத் தனியா அரங்கேற்றம், போட்டிகள்ன்னு ப்ரோபஷனலா நெறைய விஷயங்கள் இருக்குது.. அது ஒரு தனி ட்ராக்... அங்கே நீ போ, கலையை வளர்க்க முயற்சி பண்ணேன்... ஆனா என் பொண்ணைச் சீரழிச்சிடாதே... ஒருவேளை அவளுக்கும் இந்த மாதிரி விஷயத்துல இன்ட்ரஸ்ட் இருந்தா டான்ஸ் கிளாஸ் சேர்த்துவிடு... அவளும் கலையைக் கத்துக்கட்டும்.. ஆனா இந்த மாதிரி ஒரு விஷயத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன்....” என அவர் உறுதியாகக் கூறி விடவும் கத்த தொடங்கிவிட்டார் சாரதா.

“உங்கள மாதிரி ஒருத்தருக்கு பொண்டாட்டியா வாழுறதுக்கு நான் விஷத்தை குடித்துச் செத்திருக்கலாம்...” எனக் கையில் வைத்திருந்த விஷத்தை திறந்து வாயில் ஊற்றப்போக, அதைத் தட்டிவிட்ட நாராயணன்; அதே வேகத்தில் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

இதைச் சாக்காக எடுத்துக்கொண்ட சாரதா என்னை அடித்து விட்டாய் அல்லவா இனி நீயே வந்து என்னைக் கெஞ்சாத வரையில் நான் உன்னைத் தேடி வரமாட்டேன் எனச் சபதம் பூண்டவராக அங்கிருந்து கிளம்ப எத்தனித்தார்.

“நீ போவதாக இருந்தால் போ... ஆனா என் பெண்ணைக் கூட்டிட்டு போகாதே... உன்னால வந்த சண்டை உன்னாலேயே போகட்டும்... கொஞ்ச நாள் உன் அம்மா வீட்ல இரு... உனக்குப் புரியும் நான் எதுக்காக வேணாம்னு சொன்னேனேன்னு... அமைதியா யோசிச்சு பார்த்துட்டு ஒரு வாரம் தங்கி இருந்துட்டு வா...” என நாராயணன் கூற, அவருக்குப் பதில் எதுவும் பேசாமல் அமைதியாகத் தயாரான சாரதா செல்லும் வழியில் வெண்பாவையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டார்.

இரவு தாமதமாகியும் வெண்பா வீட்டிற்கு வரவில்லை என்பதனால் அவள் படிக்கும் டியூஷனுக்குச் சென்று விசாரிப்பதற்காகக் கிளம்பினார் நாராயணன். அங்கே வெகுநேரத்திற்கு முன்னரே சாரதா வந்து அழைத்துக் கொண்டு சென்றுவிட்டதாக அவர்கள் தெரிவிக்கவும் அதிர்ந்தார் நாராயணன்.

உடனடியாகச் சாரதாவின் பெற்றோருக்கு அழைத்து நடந்த விவரத்தை தெரிவிக்க, அவர்களுக்கு நாராயணன் மீது சற்றே வருத்தம்!!

“என்ன இருந்தாலும் நீங்க அவளைக் கைநீட்டி அடிச்சிருக்கக் கூடாது மாப்பிள்ளை...” என அவர்கள் கூற, “தப்புதான்... ஆனா அந்த நேரத்தில் என் பொண்ணைக் கெடுத்து விடக்கூடாது அப்படிங்கிற பயம்தான் இருந்ததே தவிர அவளைக் கைநீட்டி அடிக்கணும் அப்படிங்கிற எண்ணம் எனக்குத் துளியும் இல்லை... அந்த இடத்தில் நான் ஒரு புருஷனாக நடந்து கொள்வதைக் காட்டிலும் வெண்பாவின் அப்பாவாக நடந்தேன்.. இருந்தாலும் சாரி மாமா..” எனத் தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டார் நாராயணன்.

அதற்கு மேல் அவர்களிடம் பேசி பயனில்லை என முடிவு செய்தவர்; சாரதாவும் வெண்பாவும் அங்கே வந்தால் தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

மேலும் சாரதா அவரது சகோதரர்களின் வீட்டிற்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை யூகித்தவர் அவர்களுக்கும் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தார். அவர்களும் நிலைமையைப் புரிந்துகொண்டு சாரதா அங்கு வந்தால் தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.

ஆனால் மறுநாள் காலை வரையில் சாரதா அவ்விடம் சென்றதாகத் தகவல் வந்தபாடில்லை. அனைவருக்கும் பயமாகிவிட்டது. இரண்டு பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி எங்கோ சென்றுவிட்டால் குடும்பத்தினருக்கு எத்தகைய அச்சம் தோன்றும் என்பது அனைவரும் அறிந்தவொன்றுதான். இங்கே வயதுப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார் சாரதா; எனவே அச்சத்துடன் சேர்ந்து பதைபதைப்பும் தொற்றிக்கொண்டது.

என்ன செய்வதென யோசித்தவர்கள்; காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்னும் முடிவுக்கு வந்தனர். அப்போதுதான் நாராயணனின் ஒரு அழைப்பு வந்தது சாரதாவின் எண்ணிலிருந்து. பதற்றத்துடன் அழைப்பை ஏற்றவர்; “எங்கே இருக்கிறா?? உன்னை யாரும் வெண்பாவை கூட்டிட்டுப் போகச் சொன்னது?? அவ என் பொண்ணு ஒழுங்கா... வீட்டுக்கு வந்துடு... எதுவாயிருந்தாலும் உட்கார்ந்து பேசிக்கலாம் நாம்.. நான் சொல்றதை கேளு...” எனப் பொறுமையாகப் பேச. “நான் வர மாட்டேன்...” என்றார் சாரதா உறுதியாக.

“சொன்னா கேளு... எந்தப் பிரச்சனை இருந்தாலும் பொறுமையாகப் பேசி தீர்த்துக்கலாம்...” என நாராயணன் அமைதி உடன்படிக்கைக்கு அடிகோல, “அதெல்லாம் எனக்குத் தெரியாது... நீங்க என்னைக் கைநீட்டி அடிச்ச மாத்திரத்தில் நான் அங்கே வரமாட்டேன்... எனக்கும் சுயமரியாதைன்னு ஒண்ணு இருக்குது... நானும் என் பொண்ணும் உங்கள பிரிஞ்சு போனதா நினைச்சுக்கோங்க... என்னைக்காவது ஒரு நாள் நாங்க பெரிய ஆளா வருவோம், என் பொண்ணு உயர்ந்து நிற்பா... எல்லாரும் அவருடைய வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்படுவீங்க... அப்போ நீங்க எல்லாரும் தேடி வந்து ஒட்டிக்குவீங்க... அப்படியொரு சந்தர்ப்பத்தில் உங்களை வந்து சந்திக்கிறேன்... அதுவரைக்கும் குட்பாய்...” எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார் சாரதா.

பின்தொடர்பவர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தாங்கள் இருவரும் சேர்ந்து காணொளியில் தோன்றலாம் என முடிவு செய்து கொண்டனர் அர்ஜுனும் ரோஜாவும். முதலில் இருவரும் சேர்ந்து சமைக்கலாமா அல்லது வேறு ஏதேனும் ஒன்றை செய்யலாமா என யோசித்தவர்கள்; பின்னர் அனைவரும் விரும்பும் ‘கப்பிள் சீரிஸ்’ என அழைக்கப்படும் ஒன்றையே தொடர முடிவு செய்தனர்.

முதலில் சிறுசிறு லவ் டிப்ஸ், ரிலேஷன்ஷிப் டிப்ஸ் எனக் கலகலப்புடன் வழங்கிக் கொண்டிருந்தவர்கள்; ஒரு கட்டத்தில் கிங்காங் செயலிக்குள் நுழைந்து விட்டனர். மற்ற செயலிகளைக் காட்டிலும் இங்கே பதிவிடுவது எளிதாக இருந்ததால் இதிலேயே தொடர முடிவு செய்தனர். பெரிதாக வரவேற்பு இல்லையாயினும் ஒருவித நிம்மதியுடன் இருந்தனர்.

ஒரு நாள் நேரலையில் ரோஜா எதையோ பேசிக்கொண்டிருக்க, அதைக் கவனியாமல் அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய அர்ஜுன் பின்னாலிருந்து அணைத்து விட்டான். “அச்சோ அர்ஜுன் சார்... லைவ் போய்க்கிட்டு இருக்குது...” என அவள் சற்றே குழைவான குரலில் மிழற்ற, அவனோ சிறு புன்னகையுடன் விலகிசென்றுவிட்டான்.

இதைக் கண்டவர்கள் இதுவரை பொருத்தத்தையும் “ஆஹா... ஓஹோ...” எனப் புகழ்ந்துரைக்கத் தொடங்கினர். அவளுக்கு ஆனந்தம்!! “ஜாடிக்கேத்த மூடி..” என்பது போன்ற விமர்சனங்கள் பதிவிடப்பட, உண்மையிலேயே நெக்குருகிப் போனாள் ரோஜா.

மெய்யாகவே இருவரும் சிறந்த கணவன் - மனைவி தான். ஆனால் நிம்மதியை குலைக்கும்/குடிக்கும், இந்தக் கவனயீர்ப்பு செய்யத்தூண்டும் நுண்ணுயிரிகள் உள்ளே புகுந்த பின்னரும் அவ்வாறாக இருப்பாரா என்பதுதான் சந்தேகமே!! அவர்களது அப்பழுக்கற்ற அதீத நேசம் இயற்கையாக அடி மனதில் இருந்து பிரவாகித்ததாக இருக்குமா இல்லையேல் பட்டனை தட்டியவுடன் எரியும் விளக்கைப் போல ஆகுமா என்பது காலத்தின் கையிலேயே....!! இல்லை இல்லை அந்த நுண்ணுயிரிகளின் கையிலேயே....!! அவற்றின் வளர்ச்சிக்கு தீனி போடுவரா இல்லையா என்பதுதான் காலத்தின் கையில்!!
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18

17

அன்று வழக்கம்போலக் கப்பிள் டிப்ஸ் வழங்கிவிட்டு அமர்ந்த ரோஜாவுக்கு இரண்டு நாட்களில் வரப்போகும் தன் கணவனின் பிறந்த நாள் நினைவுக்கு வந்தது. அதற்கு என்ன வாங்கலாம் என யோசித்தவள் எதுவும் கிட்டாமல் போகவே, தனது கிங்காங் நண்பர்களிடம் அதாவது பின்தொடர்பவர்களிடம் கேட்கலாம் என முடிவு செய்தாள்.

அதன்படி, கேமராவை ஆன் செய்தவள்; “ஹலோ பிரண்ட்ஸ்... எப்படி இருக்கீங்க?? உங்க எல்லார்கிட்டயும் ஒரு விஷயம் கேக்குறதுக்கு வந்திருக்கிறேன்.. என்னோட அர்ஜுன் சாருக்கு நாளைக்கு மறுநாள் பர்த்டே வருது... எங்களுக்குக் கல்யாணம் ஆனதுக்கப்புறம் வர்ற முதல் பர்த்டே.. சோ இதுவரைக்கு அவர் லைப்ல கொண்டாடி இருக்காத ஒரு மறக்கமுடியாத பர்த்டேவா அதைக் கொண்டாட ஆசைப்படுறேன்.. அதுக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான ஒரு கிப்ட் கொடுக்க ஆசைப்படுறேன்... ஆனா என்ன கொடுக்கிறதுன்னு தெரியல... லவ் பண்ணி லவ் மேரேஜ் பண்ணி இருந்தாலாவது ஏதாவது தெரிந்து இருக்கும் நாங்க அரேஞ்ச் மேரேஜ்... சோ நீங்க ஏதாவது டிப்ஸ் கொடுங்க... உங்களுக்கு நாங்கஎத்தனை டிப்ஸ் கொடுக்கிறோம்... இந்த விஷயத்தில் மட்டும் எனக்கு ஹெல் பண்ணுங்கபா...” எனப் பேசி, அந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தாள்.

சில மணி நேரங்களிலேயே பலன் கிடைத்திருந்தது. ஆயிரம் பார்வைகள் (வியூக்கள்) சென்றிருக்க, சில நூறு கருத்துகள் (கமெண்டுகள்) வந்திருந்தன. தன் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பிலும் அக்கறையும் உச்சி குளிர்ந்து போனவள் அவற்றிலிருந்து சிறந்த ஒரு பொருளை தேர்ந்தெடுத்து அவனுக்குப் பரிசாகக் கொடுக்கலாம் என முடிவு செய்தாள்.

மறுநாள் காலையிலேயே “சிஸ்டர்... உங்க அர்ஜுன் சாருக்குக் கிப்ட்ஸ் வாங்கிட்டீங்களா...” என அவர்கள் கேட்க, “இல்ல... இன்னிக்கு ஈவ்னிங் தான் வாங்க போறேன்...” எனப் பதிலளித்தாள் ரோஜா.

“ஓகே சிஸ்டர் நீங்க வாங்கிட்டு வந்ததும் வீடியோ எடுத்து அப்லோட் பண்ணுங்க... நாங்க பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கிறோம்...” என அவர்கள் கேட்க, “சரி...” எனச் சம்மதித்தாள் ரோஜா.

அன்று மாலையே அருகிலிருந்த ஜவுளி கடை ஒன்றிற்குச் சென்றவள் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் தனது அர்ஜுனுக்கு ஒரு சட்டையையும் வேஷ்டியும் வாங்கினாள். ஏனென்றால் அர்ஜுன் ஒரு பழமை விரும்பி; அவனுக்கு டிரடிஷனல் ஆக இருப்பது பிடிக்கும், ஆகவே அவனுக்குப் பிடித்ததை வாங்கியிருந்தாள்.

மறுநாள் காலையில் அவனுக்குச் சிறப்பான உணவாகத் தயார் செய்வதற்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு, மேலும் அவனுக்கு ஒரு வாட்ச் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் ரோஜா. அந்தப் பொருள்கள் அனைத்தையும் மேஜையில் பரப்பி வைத்து, “இங்க பாருங்க ப்ரெண்ட்ஸ்... இந்த ஷர்ட், வேஷ்டி இரண்டும் அர்ஜுன் சாருக்கு... அப்புறம் இந்த வாட்ச் அவருக்குத் தான்... எப்பவும் வார் வச்ச வாட்ச் தான் கட்டுவாரு... எனக்கு அவர் கோல்டன் கலர் செயின் வச்ச வாட்ச் போட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு...” என அவனிடம் கூற வேண்டிய காரியங்கள் அனைத்தையும் காணொளியிலேயே கூற, கேட்பவர்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது.

இங்கே பலருக்கும் அப்படித்தான்; அடுத்தவரின் காரியங்கள் என்றால் சுவாரசியமாக இருக்கும். அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும் அவர்களின் அந்தரங்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ள அதீத ஆர்வம் காட்டுவர். இதில் ஆண்-பெண், படித்தவர்-படிக்காதவர் என்பதெல்லாம் எவ்வித பாகுபாடும் கிடையாது அடுத்தவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவே. இது ஒரு வகையில் மானுபேக்ச்சரிங் டிபெக்ட் என்றுகூட வைத்துக் கொள்ளலாம். ரோஜா தன் கணவனின் பிறந்தநாள் பரிசுகளைக் காணொளியாகப் பதிவிடவும், அனைவரும், “அக்கா... அப்படியே நீங்க சாருக்குக் கிப்ட் கொடுக்கும்போது அவர் எப்படி ரியாக்ட் பண்றாருன்னு வீடியோ எடுத்து போடுங்க...” எனக் கேட்டனர்.

தனக்குப் பிறந்தநாள் பரிசை தேர்வு செய்ய உதவியாக இருந்தவர்கள் தானே, மேலும் அனைவரும் தங்களைப் பின்தொடர்பவர்கள் - அவர்களும் தங்களது குடும்பத்தில் ஒரு அங்கம்தான், எனவே அவர்களது ஆசையை நிறைவேற்ற வேண்டும், அனைவரது பார்வையையும் கருத்தையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகச் சரியெனச் சம்மதித்தாள் ரோஜா.

மறுநாள் காலையில் காலை உணவாக இட்லி, தோசை, பூரி, பொங்கல் என அனைத்தையும் செய்து தயாராக வைத்தவள்; அவனை எழுப்பினாள்;

“குட் மார்னிங் ரோஜா...” என்றவாறு எழுந்து கொண்டவன்; தேநீருக்காகக் கையை நீட்ட, அவன் நெற்றியில் முத்தமிட்டவள்; “ஹாப்பிப் பர்த்டே அர்ஜுன் சார்...” என்றாள்.

“தேங்க்யூ...” எனப் பதிலுக்குக் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டுக் குளியலறை நோக்கி சென்றுவிட்டான் அவன். அவன் தயாராகிக் கீழே வரவும், தான் சமைத்து வைத்து இருந்த அனைத்து பொருட்களையும் அவனுக்கு ஆசை தீர பரிமாறினாள்.

அவன் அலுவலகத்திற்குக் கிளம்புகையில், “அர்ஜுன் சார்... இன்னிக்குச் சீக்கிரம் வந்துடுங்க..” எனக் கூறவும், அவள் நெற்றியில் முட்டியவன்; “உத்தரவு மகாராணி...” எனச் சிரித்தவாறே கன்னத்தைக் கிள்ளி விட்டுச் சென்றான்.

முன்னரே காலை உணவுகளைப் புகைப்படம் எடுத்து வைத்திருந்தாள் ரோஜா. அவற்றைக் காணொளியாகத் தயாரித்து, தன் நண்பர்களுக்கு அதாவது பின்தொடரும் நண்பர்களுக்குக் காண்பிக்க முடிவு செய்தாள்.

“இங்க பாருங்க ஃபிரண்ட்ஸ்... இது அர்ஜுன் சார் பர்த்டேக்காக நான் ஆசை ஆசையா சமைத்தது... இட்லி அவருக்கு ரொம்பப் பிடிக்கும், பொங்கல் எனக்கு ரொம்பப் பிடிக்கும், தோசை-பூரி எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கும்... தோசையும் தக்காளி சட்னியும் கொடுத்தா அர்ஜுன் சார் ரொம்ப ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவார்.. பூரிக்குச் சட்னிதான் அவருக்குப் பிடிக்கும்...” என அவள் கூற, “சூப்பர் சிஸ்டர்... உங்க ரியல் லைஃப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்குது...” என ஆமோதித்தனர் பின்தொடர்வோர்.

அவளைப் பின்தொடர்வோர்களில் பாதிப் பேர் கல்லூரி மாணவிகளாக இருக்க, அவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் உடன்பயிலும் மாணவிகளிடமும் மாணவர்களிடமும் அர்ஜுன் - ரோஜாவின் அன்னியோன்யத்தைக் குறித்து விவரித்துக் கொண்டிருப்பர்; ஓய்வு வேளைகளில் எல்லாம் வருங்காலத்தில் தாங்களும் அப்படியானதொரு ஜோடிகளாக இருக்க விரும்புவதாகக் கூறி சிலாகித்னர். தங்கள் நண்பர்களையும் அவர்களைப் பின் தொடருமாறு அறிவுறுத்துவர். அவர்களும் சரி எனச் சம்மதிக்க அர்ஜுன் ரோஜாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. ஆம், நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் பெருக்கத்தினால் உயரவே தொடங்கியது.

அன்று மதியம் அவனுக்காகப் பிரத்தியேக உணவை தயாரித்து,நேரிலேயே சென்று பரிமாறிவிட்டு வந்தாள் ரோஜா. அதையும் ஒரு காணொளியாகப் பதிவிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்.

அன்று மாலை அவன் வீட்டிற்கு வரவும், தான் வாங்கி வைத்திருந்த புதுச் சட்டையையும் வேட்டியையும் அவனிடம் கொடுத்து, “இதை மாத்திட்டு வாங்க அர்ஜுன் சார்...” என்றாள் ரோஜா. அவனும் அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன், “என் பொண்டாட்டி எனக்காக எல்லாம் வாங்கி வைத்திருக்கிறா...” எனச் சிரித்துக்கொண்டே உடைமாற்ற சென்றான்.

அவன் உடைமாற்ற விட்டு வெளியே வருகையில், அவனது அலுவலக நண்பர்களும் அண்டை வீட்டில் உள்ளவர்களும் வந்திருந்தனர். அனைவரும் “ஹாப்பிப் பர்த்டே அர்ஜுன்...” எனக் கத்த, அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஏனென்றால் அவனைப் பொருத்தவரையில் பிறந்தநாள் என்றால் புதுச் சட்டை அணிந்து கோவிலுக்குச் சென்று வருவது, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு இனிப்பு தருவது, மதிய உணவில் சிறப்பு உணவாக எக்ஸ்ட்ராவாகச் சக்கரைப்பொங்கல் இடம் பிடித்திருக்கும், இரவு உணவாகச் சப்பாத்தியும் குருமாவும் கிடைக்கும், அரிதிலும் அரிதாக எப்போதாவது விடுமுறையில் பிறந்தநாள் வந்தால் மதிய உணவில் அசைவம் இருக்கும்.

இதுநாள் வரையில் அவன் கொண்டாடிய பிறந்த நாள்கள் எல்லாம் இப்படியானவையே. ஆனால் முதல் முறை தன் மனைவி இவ்வாறாகக் கொண்டாடவும் சிலிர்த்துப் போய் விட்டான். தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் கிட்டவில்லை அவனுக்கு.

முன்னரே கூறியது போல் அவனது மகிழ்ச்சி கலந்த முகத்தை அண்டை வீட்டு சிறுவன் ஒருவன் காணொளியில் பதிவு செய்து கொண்டிருந்தான். “வாங்க அர்ஜுன் சார் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்...” என அவன் கண்களைக் கட்டி, கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

ஒரு அறையில் அழகாக அலங்காரம் செய்து, அதன் நடுவில் “ஹாப்பிப் பர்த்டே அர்ஜுன் சார்...” என எழுதப்பட்ட கேக் இருந்தது. அதைப் பார்த்ததும் அவனது கண்கள் பனிக்க, “ஐயோ அர்ஜுன் சார்... சின்னப் பிள்ளைங்க மாதிரி கண்கலங்கிட்டு... முதல்ல கண்ணைத் துடைங்க... வாங்க... எனக்கூறிவிட்டுக் கேக்கை வெட்டுமாறு கூறினாள். கேக்கை வெட்டி, அவளுக்கு முதல் துண்டை ஊட்ட, அவனிடமிருந்து அந்தக் கேக்துண்டை வாங்கி, அவன் வாயில் திணித்தாள் ரோஜா.

பின்னர் வந்தவர்கள் அனைவருக்கும் கேக்கை அவன் கொடுக்க, அனைவருக்கும் குளிர்பானம் கொடுத்து நன்றி தெரிவித்தாள் ரோஜா. இதுவரையும் வாழ்த்திவிட்டு அனைவரும் சென்றுவிட, காணொளியை பதிவிடுவதற்குக் காமிராவை ஆன் செய்து வைத்துவிட்டு, அவனருகில் வந்தாள் ரோஜா.

“அர்ஜுன் சார்... நான் உங்களுக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கிறேன்..” என அவள் கூற இவ்வளவு நேரம் கொடுத்தது எல்லாமே சர்ப்ரைஸ் கிப்ட் தானே...” என அவன் கேட்க, “இது வேற சார்...” எனத் தான் வாங்கி வைத்திருந்த கைக்கடிகாரத்தை அவனிடம் நீட்டினாள். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அவளது முத்தமிட, முத்தமிட அவளும் மகிழ்ச்சியுடன் அவனுக்குக் கொடுத்தாள்.

இந்தக் காட்சியை மட்டும் நீக்கிவிட்டு, காணொளியை பதிவிட, அவர்கள் அனைவரும் மொத்த காணொளியையும் பதிவிடுமாறு கேட்டனர். அதுகுறித்து யோசித்து விட்டுப் பதிவிடுகிறேன் என்றவள் அர்ஜுனிடம் வந்தாள். தயங்கியவாறே அவள் தன்னருகில் வருவதைக் கண்ணுற்றவன்; “என்னாச்சு ரோஜா... இவ்வளவு தயங்குற...” என அவளது முகத்தைப் பிடித்து நிமிர்த்த, “அது ஒன்னும் இல்ல அர்ஜுன் சார்... உங்க பர்த்டேக்கு என்ன கிப்ட் கொடுக்கிறதுன்னு தெரியல.. அதனால நம்ம பாலோவர் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டேன்... அவங்க நிறைய ஐடியாஸ் குடுத்தாங்க... அப்புறம் உங்க பர்த்டே நல்லா செலிபிரேட் பண்றத அவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு வீடியோஸ் போட்டேன்... இப்போ அவங்க உங்க பர்த்டே செலிப்ரேஷன் ஃபுல்வீடியோ கேக்குறாங்க.. அதை ஃபார்வேர்ட் பண்ணி போடட்டுமா...” எனக் கேட்க, “இதுக்குத் தான் இவ்ளோ யோசிச்சியா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கப்பிளா வீடியோஸ் போட்டதுக்கு அப்புறம் நல்ல வியூஸ் இருக்குதுதானே... அதெல்லாம் ஒண்ணுமில்ல...” என்றுவிட்டான் அர்ஜுன்.

அவர்கள் எதிர்பார்த்ததைவிட அந்தக் காணொளி அதிகப் பார்வைகளைச் சம்பாதித்தது. ஆச்சரியப்பட்டுப் போய்விட்டான் அர்ஜுன். “ரோஜா... நாம ப்ரீ டைம்ல இந்த மாதிரி குட்டி குட்டி வீடியோஸ் போட்டா என்ன?? நமக்குள் நடக்குற சின்னச் சின்ன விஷயங்கள், அதுல கொஞ்சமா பாட்டு அந்தச் சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி... அப்புறம் நிறையக் காதல்... கொஞ்சம் ஊடல்... இப்படி ஒவ்வொரு எமொசனையும் குட்டிக்குட்டியா பதிவு பண்ணா அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்.. நிறையப் பேர் நம்மைப் பாலோ பண்ணுவாங்க.... அப்புறம் நமக்கும் நம்ம இளமை காலத்தைக் கேப்ச்சர் பண்ணி வச்சு பின்னாடி பாக்குறதுக்கு ஒரு மெமரி இருக்கும்..” என்க, அவளுக்கும் அது சரி எனவே தோன்றியது.

“ஓகே அர்ஜுன் சார்...” எனச் சம்மதித்தாள். அதன் பெயரில் அவர்களது அவர்கள் பல காணொளிகளைப் பதிவேற்ற ஆரம்பித்தனர். அப்போதுதான் மானட்டைசேஷன் என்கிற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட அளவு பின்தொடர்பவர்கள், ஹார்ட் வியூஸ் வைத்திருப்பவர்கள் அந்த அம்சத்தைப் பெற தகுதியானவர்கள்; அவர்கள் அந்தச் சிறப்பு வசதிக்கு தகுதிபெற்ற பின்னர் நாம் பதிவேற்றும் காணொளிகள் அனைத்திற்கும் பார்வைகளுக்கு ஏற்ப பணம் கொடுக்கப்படும், இது ஒருவகையான சம்பாத்தியம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

முதலில் பொழுதுபோக்கிற்காகப் பதிவிட்டுக் கொண்டிருந்த அர்ஜுன் ரோஜாவிற்கு இதுவும் ஒரு வகையில் ஊக்கமாகிப்போனது.
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18

18

அர்ஜுனும் ரோஜாவும் ஜோடியாக இணைந்து பதிவிட்ட காணொளிகள் வரவேற்பைப் பெறவே, அதைத்தொடர்ந்து செய்யலாயினர். முதல் காணொளியில் மிக எளிமையான வீட்டில் நடக்கும் சிறுசிறு விஷயங்களாக ஆரம்பித்தனர்.

அதன்படி அவர்கள் பதிவிட்ட சிறுசிறு காணொளிளின் சாராம்சம் பின்வருமாறு :

• அர்ஜுன் கூடத்தில் அமர்ந்து அன்றைய நாளின் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கிறான். பின்னணியில் மெலிதான இசை ஒன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ரோஜா... காபி...” என அவன் கேட்க, குளித்து முடித்துவிட்டுத் தலையில் துண்டுடன் கையில் குளம்பிக் கோப்பையுடன் வருகிறாள் ரோஜா. அவனிடம் குவளையை நீட்ட, அதைப் பெற்றுக்கொண்டு அவளைப் பார்த்தவாறே குடித்தவன்; அடுத்த நொடியே துப்பி விடுகிறான். அவன் குடித்த குளம்பியைத் துப்பவும், “அச்சோ... என்னாச்சுங்க...” என வினவுகிறாள் ரோஜா. “நீயே குடிச்சு பாரு... சர்க்கரை இல்லை...” என்பதாக அவன் அவளிடம் நீட்ட, அதை வாங்கிக் குடித்துப் பார்த்தவள் “இல்லையே... சரியாதான இருக்குது...” எனக் கூறவும், அவளிடமிருந்து கப்பை வாங்கிக் கொண்டவன்; மீண்டும் குடித்துப் பார்த்துவிட்டு, “இப்ப சரியா இருக்குது...” எனக் கூறிவிட்டு புன்னகையுடன் குடிக்கத் தொடங்கும் தொடங்கவும் அவனது புன்னகைகேகான காரணத்தை அறிந்து கொண்டவள்; செல்லமாக அவனது தோளில் தட்ட, பின்னணியில் ‘ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்... அவை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்...” என்னும் பாடல் ஒலிக்கிறது.

• அர்ஜுன் ரோஜாவை எழுப்புகிறான். அவள் சோர்வின் மிகுதியால் எழுந்து கொள்ள இயலாமல் புரண்டு படுக்க, எதேசையாக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மாதவிலக்கிற்கான உபயோகப் பொருள் அவனது கண்களில் சிக்கியது. அதைக் கண்ணுற்றவன்; அவளுக்கு மாதவிலக்கு எனப் புரிந்துகொண்டு, தேநீருடன் வந்து அவளை எழுப்பி, குடிக்க வைக்க, அவன் தோளில் சாய்ந்து கொள்கிறாள் “நோய்மடியுடன் நீ விழுந்தால் தாய்மடியாவேன்...” என்னும் பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

• அன்று அவர்களது வீட்டில் துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்யவில்லை. வீட்டில் மின்சாரமும் இல்லை. என்ன செய்வதென யோசித்தவள்; தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்க, அங்கே தண்ணீர் இல்லை... அவனது ஐந்து சட்டைகள், ஐந்து பேன்ட்டுகள், அவளது ஐந்து நைட்டிகள் என அனைத்தும் துவைக்கப்படாமல் இருக்க, வேறு வழியின்றி இருந்த தண்ணீரில் அவற்றை ஊற வைத்துவிட்டுத் தெருமுனையில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடிக்கச் செல்ல முடிவு செய்கிறாள். அதைக் கண்ணுற்றவன்; இடுப்பில் குடத்தைத் தூக்க முற்படும் போதே, “ரோஜா கொஞ்சம் தலை வலிக்குது... தைலம் தேய்ச்சு விடுறியா?” எனக் கேட்கிறான் அர்ஜுன். அவளும் அவனுக்குத் தைலம் தேய்த்துவிட்டு, தேவையான பணிவிடைகள் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, தன்னருகில் படுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறான் அவன். வேறுவழியின்றிப் படுத்துக் கொண்டவள் சோர்வின் மிகுதியால் கண்ணயர்ந்துவிட, சிறிது நேரம் கழித்துத் தன்னுணர்வு வந்து எழுந்து கொள்கிறாள் நேரத்தை அலைபேசியை எடுத்துப் பார்க்க, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்து இருக்கிறது. பதறியடித்துக் கொண்டு வெளியே வந்து பார்க்க அவள் ஊற வைத்த துணிகள் அனைத்தும் துவக்கப்பட்டு, கொடியில் காயப் போடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்கிறாள் அவள். பின்னணியில் “உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது... உன் துயரம் சாய என் தோள் உள்ளது...” எனப் பாடல் இசைக்கிறது.

இவ்வாறானதொரு ‘முற்றிலும் காதல் - மெல்லிய காதல்’ என்பதாகக் காணொளிகளை இவர்கள் பதிவேற்றிக் கொண்டிருக்க, அதீத காதலை காட்சிப்படுத்திக் கொடுத்துக் கொண்டிருந்தனர் இன்னொரு தம்பதியர். சற்றே நெருக்கமான காட்சிகளையும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளையும் காதல் என்ற பெயரில் பதிவு செய்து, பதிவேற்றிக் கொண்டிருக்க, பார்ப்பவர்களுக்குச் சற்றே எரிச்சலாக இருந்தது. இவற்றையெல்லாமா பதிவிடுவது என ஆதங்கம் தோன்றாமல் இல்லை; ஆனால் இப்படியான காணொளிகளைப் பதிவிடுபவர்களுக்குதான் மிகுந்த வரவேற்பு இருந்தது.

இவர்களைப் போன்றே ஜோடியாகக் காணொளிகளைப் பதிவேற்றம் ஒவ்வொருவரும் தங்களுக்கு இயன்ற வகையில் தங்களுக்கான ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, தங்களைப் பின்தொடர்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் இருந்தனர். இவ்வாறு ஜோடியாகக் காணொளிகளைப் பதிவேற்றுபவர்கள் பலவிதம்.

அர்ஜுன் ரோஜாவை போலத் தம்பதியர்களுக்கு இடையே நடக்கும் சிறுசிறு காதல் ஊழல் ஆகியவற்றைக் காட்சி படுத்துபவர்கள் ஒரு ரகம், ‘தாமதமாக வரும் கணவனின் சட்டையைக் கூட மோப்பம் பிடித்து, சந்தேகப்பட்டுச் சண்டையிடும் மனைவி’ இதுபோன்ற காட்சிகளைப் பதிவிடுபவர்கள் ஒரு ரகம், ‘மனைவியை வேலையைச் செய்ய விடாமல் அனைத்து வேலைகளையும் செய்யும் கணவன் - அதைச் சோபாவில் அமர்ந்து ரசித்துவிட்டு இறுதியாக நெற்றியில் முத்தாய்ப்பாக முத்தமிடும் மனைவி ‘இது ஒரு ரகம். ‘சோபாவில் அமர்ந்துகொண்டு அவனைக் காலை அமுக்கிவிடச் சொல்லும் மனைவி’ காணொளிகள் ஒரு ரகம், “என்னங்க கடைக்குப் போயிட்டு வரேன்.... என்னை மாதிரியே மாவு பிசைந்து வைங்க...” எனக்கூறிவிட்டு கடைக்குச் செல்லும் மனைவி - வந்து பார்த்தால் அபாயத்தில் வரும் எலும்புக்கூடு போன்ற வடிவமைப்பில் இருக்கும் மாவு - ஏன் எனல் கேட்டால் உன்னை மாதிரியே தானே பிசைந்து வைக்கச் சொன்னேன் அதுதான் எனக் கூறும் கணவன் – அவனைப் பிரம்பால் வெளுக்கும் மனைவி ஒரு ரகம், சாப்பாட்டில் உப்புக் குறைந்துவிட்டது என்பதற்காக மனைவியைக் கன்னத்தில் அறையும் கணவன் – ஷூவுக்குச் சரியாகப் பாலிஷ் போடவில்லை என்பதற்காகக் கூட அடிக்கிறான், வெறுத்துப் போனவள் ஒரு கட்டத்தில் அவனைத் திருப்பி அடிப்பதும் பின்னணியில் ‘ஆண் அடக்கணும், பெண் அடங்கணும், எழுதி வச்சவன் யாரு??’ பாடல் ஒலிப்பது - இது ஒரு ரகம்... இவ்வாறாகக் கணவன்-மனைவி இணைந்து பதிவேற்றும் காணொளிகள் கணக்கிலடங்காதவை.

இவற்றைப் பார்ப்பதற்குத் தனியே ஒரு கூட்டம் வேறு. சாமானியர்கள் அனைவரும் இவற்றைப் பார்ப்பதிலேயே பாதி நேரத்தை செலவிட்டுகே கொண்டிருந்தனர் அலுவலக இடைவெளியிலும் கல்லூரி இடைவேளையிலும் இதுபோன்றதான காணொளிகளைப் பார்த்து, தங்களுக்குள் ஆயிரம் எதிர்பார்ப்புகளையும் கற்பனைகளையும் உருவாக்கிக்கொண்டு, கனவுலகில் சிறகடிடிக்கத் துவங்கியிருக்கும் இளைஞர்கள் பலர்.

இவர்களைப் பார்த்து பலரும் தாங்களும் காணொளியை பதிவிடத் தொடங்கியிருந்தனர். ‘சொல்லாத கதை என்றும் பேசாத பேச்சு என்றும் எதுவும் இல்லை... ஒருவரை மாற்றி ஒருவர் பரவி வருவது தான்’, ‘தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்’ என்பதெல்லாம் இங்குத் தேவையே இல்லை. ஒருவரது காணொளியில் காணக் கிட்டாத ஏதேனுமொரு சிறப்பம்சத்தைப் புதிதாகத் தங்களது காணொளியில் இணைத்து, புதிதாக ஒரு ஜோடி கிளம்பியிருக்கும்.

இவ்வாறாக ‘கிங் காங்’ செயலியில் ஜோடியாகச் செய்யும் காணொளிகளுக்குத் தனி மவுசு இருந்தது. இவற்றைக்கண்ட பல முரட்டு சிங்கிகளும் என்றேனும் ஒரு நாள் தங்களுக்கும் இதைப்போன்ற வாய்ப்பு கிட்டாதா என ஏங்கத்துவங்கினர். இளம்பெண்களுக்குத் திருமண வாழ்வென்பது இவ்வாறாகச் சிவப்பு கம்பளத்தின் மீது தூவப்பட்ட ரோஜா இதழ்களின் மீது நடப்பது போன்றதொரு பயணம், எப்போது தங்களை ‘பேம்பர்’ செய்து கொண்டிருக்கும் ஒருவனே கணவனாகக் கிடைப்பான் எனத் தவறாகக் கற்பனை செய்துகொண்டு, கனவில் மிதக்க தொடங்கினர்.

இங்கே இந்தச் செயலியைத் தவிர உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்கிற ஒருவித பிரம்மை உருவாகியிருந்தது; காணொளி பதிவர்களுக்கு நிதமும் அடுத்ததாக எந்த மாதிரியான காணொளியை பதிவிடலாம்?? நேற்றைய பார்வைகளில் இருந்து அதிகமான பார்வைகளைப் பெறலாம்?? நேற்றைய கருத்துகளிலிருந்து அதிகமான கருத்துகளை, கருத்துரைகளைப் பெறலாம்?? என்கிற ரீதியான சிந்தனை; பார்ப்பவர்களுக்கும் அவர் எப்போது காணொளியை பதிவேற்றுவார்?? என்கிற ரீதியான சிந்தனை.

இவ்வாறாக நிஜம் தொலைத்து போலியான ஒரு மமதை கொண்ட உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர் ஒரு கும்பல்.

இவ்வாறாக ஜோடிகளாக இணைந்து, காணொளிகளை அதாவது குறுங்காணொளிகளைப் பதிவேற்றுபவர்கள் ஒரு உட்பிரிவு என்றால், பெரும் பிரிவுகள் கணக்கிலடங்காதவை; இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு பெரும் பிரிவுக்குள் அடக்கம்.

வெண்ணிலாவும் தனது தோழிகளின் எதிர்பார்ப்பிற்கேற்ப இப்போது சமூக வலைதளத்திற்கு அடியெடுத்து வைத்து விட்டாள். தன் மகனின் காணொளிகள் ஏற்கனவே கைவசம் இருக்க, அதை ஒவ்வொன்றாகப் பதிவேற்றிக் கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் அது அனைவருக்கும் பிடித்துப் போகவே, தினமும் அவனை முன்னிலும் அதிகமாக நச்சரிக்கத் தொடங்கிவிட்டாள்.

அவனது பாடல் பாடும் திறமை, நடிக்கும் திறமை ஆகியவற்றைக் கண்டு, அவனுக்காகத் தனியே ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டனர். பள்ளியில் ஆசிரியர்கள் கூட அவனது திறமையைப் புகழ்ந்துரைப்பர்.

வெறும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமின்றி அவ்வப்போது சமுதாயத்தில் நடக்கும் ஏதேனும் ஒன்றைக் குறித்து விழிப்புணர்வு காணொளிகளைப் பதிவேற்றுமாறு கூறுவாள் வெண்ணிலா. அதாவது மக்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் ஏதேனும் ஒன்றைக் குறித்துச் சிறு கருத்துரை ஒன்றை தயார் செய்து, அதைச் சிறுவனை மனப்பாடம் செய்யச் சொல்லி, காணொளியில் தானாகப் பேசுவது போல நடிக்கச் செய்வாள்.

உதாரணத்திற்கு விவசாயிகள் ஏதேனும் ஒரு கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கூறி, அரசை கண்டனம் செய்யும் விதமாகக் காணொளியை பேசுவான் அவன். இதற்கிடையில் அவன் புகழை சம்பாதித்திருந்தானே தவிர, குழந்தைத்தனத்தை முற்றிலுமாகத் தொலைத்திருந்தான்.

எப்போதும் புலனக் குழுக்களில் அடிக்கடி பகிரப்படும் பார்வேர்ட் மெசேஜ் போலத்தான். “14 வயதிற்குக் கீழே உள்ள குழந்தைகளைப் பணியில் அமர்த்தினால், அது குழந்தை தொழிலாளர்; இதுவே 14 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளைச் சினிமாவில் நடிக்க வைத்தால், அவர்கள் குழந்தை நட்சத்திரம்...” இதுதான் நமது சமூகத்தின் இன்றைய சூழ்நிலை.

திருத்தணிகையும் அப்படியே ஆனான். பள்ளிக்குச் செல்வதெல்லாம் அருகிப் போனது; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காணொளி - ஒவ்வொரு விஷயங்கள் என அவன் பேசிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகிப் போனான். வைரஸைக் காட்டிலும் அவனது புகழ் பெருகி நின்றது.

வெண்ணிலாவும் தன் மகனுக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் நெக்குருகிப் போனாள். அவளுக்கு அவனது அங்கீகாரத்தைக் குறித்து இருந்த சிலிர்ப்பு அவனது எதிர்காலத்தைக் குறித்துச் சிறிதும் இல்லை; ஏதோ மறுநாளிலேயே உலகம் அழிந்து விடுவதைப்போல அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரத் துரிதப்படுத்தினாள்.
 
Last edited:

Min Mini

Member
Messages
85
Reaction score
88
Points
18

19

குழந்தையின் ‘திறமையை உலகறியச் செய்கிறேன் பேர்வழி’ என உந்தித் தள்ளும் பெற்றோர் ஒருபுறம், குழந்தைகளை வயதுக்கு மீறிய வசனங்களையும் உரையாடல்களையும் பேசுமாறு கூறி அவர்களைப் பிஞ்சிலேயே பழுக்கச் செய்யும் பெற்றோர் ஒரு புறம், இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக இருக்கும் இன்னொரு பெற்றோர் - அவர்கள் புகழுக்காக எதையும் செய்யத் துணியும் ரகம்.

பதின்ம வயதிலேயே தங்கள் குழந்தைகளைக் காட்சி பொருளாக்கி விடுபவர்கள் பலர். உதாரணத்திற்குக் குறிப்பிட வேண்டுமானால் சாரதாவை எடுத்துக் கொள்ளலாம்.

தன் மகளின் திறமையை உலகறியச் செய்ய வேண்டும், அவளைக் குறித்து அனைவரும் புகழ்ந்துரைக்க வேண்டும் என்கிற ஆசையில் மிதந்தவர்; அந்த வழி பாதுகாப்பானதுதானா, ஆயுளுக்கும் நிரந்தரமான ஒன்றா என்பது குறித்துச் சிந்திக்க மறந்து விட்டார். அவரைப் பொருத்த வரையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும், அனைவரது பார்வையும் அவளை நோக்கி வரவேண்டும் அவ்வளவே.

சிலர் இருக்கின்றனர் வாழை மரத்தைப் போல. வாழை மரம் எவ்வாறு தான் வாழ்ந்து முடித்த பின்னர்த் தனக்குக் கீழே இன்னொரு சந்ததியை அவ்விடத்தில் விட்டுவிட்டு மடிகிறதோ அதைப் போலவே தனக்குப் பிந்தைய தனது குழந்தைகள் அவ்விடத்தில் கோலோச்ச வேண்டும் என விரும்புவர், அதன்பொருட்டு எந்த எல்லைக்கும் செல்லத் தயங்கமாட்டர். நேபாடிசம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

தாங்கள் செல்லுமிடத்திற்கெல்லாம் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது, கேமிராவின் வெளிச்சத்தை அவர்கள்மீது பட வைக்க வேண்டும் என்பதற்காகப் பிரத்தியேகமாக ஏதேனும் ஒன்றை செய்யத் தூண்டுவது, இல்லையேல் அதீத மெச்சூரிட்டி அடைந்தது போலக் காட்டிக் கொண்டு ஏதேனுமொன்றை பிதற்றச் செய்வது என இருப்பர்.

இங்கே திருத்தணிகையின் படிப்புதான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. சரியாகக் கற்காமல், தன் தாய் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தான். நன்றாக அமர்ந்து சிந்தித்தோமானால் ஒரு காரியம் கண்ணுக்குப் புலப்படும். அது யாதெனில் இங்கே ‘குழந்தை நட்சத்திரம்’ எனப் புகழப்படும், கொண்டாடப்படுபவர்கள் எல்லாம் ஒரு கட்டடத்திற்கு மேல் காணாமல் போயிருப்பர்.

அவர்களே காணாமல் போய்விட்டனர் என்றால் அவர்களின் எதிர்காலம்??? புகழேணியில் உச்சத்தில் இருந்தவர்கள் ஒரு கட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் போனால் அவர்களின் மனசிதைவு??? படிப்பையும் சரிவரக் கற்காததால் போதிய கல்வித்தகுதியையும் பெற்று, அந்த வழியிலும் முன்னேற இயலாது; மேலும் கடந்தகாலப் புகழின் எதிரொலிகள் அனைத்து புறமும் எதிரொலித்ததைக் காட்டிலும் புறக்கணிப்புகள் மிகுந்திருக்கும். இப்படியானதொரு சூழலை சமாளிக்க இயலாமல் தடுமாறி, அவர்கள் எந்தத் திசையில் வேண்டுமானாலும் செல்ல வாய்ப்புகள் அதிகம்.

இங்கே கண்டிக்க வேண்டிய பெற்றோரும் புகழுக்கு மயங்கி, அவர்களைத் தவறான வழியில் வழிநடத்துவதே வேதனைக்குரிய விஷயம்.

இங்கே இவ்வாறாகச் சென்றுகொண்டிருக்க, மூர்த்தியின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகமானது. “ஏலே... முட்டாப்பயலுவளா... வெளங்காத பயலுவளா...” என ஒவ்வொருவரையும் வசைபாடிக் கொண்டிருந்தவன்; ஒரு கட்டத்தில் காதுகூசும் அளவிலான வார்த்தைகளை வீசத் தொடங்கிவிட்டான்.

அவனின் காணொளிகளைத் தொடர்ந்து காணும் பலர் அந்த வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்க மாட்டர்; மேலும் தங்களால் பேச இயலாத வார்த்தைகளை இவன் பேசுகிறானே என்னும் குஷியில் மேலும் மேலும் அவனைச் சீண்டி, உத்வேகப்படுத்தி, அது போலப் பேசுமாறு தூண்டுவர்.

அவனும் அது குறித்ததான எந்தப் பயமும் இல்லாது பலர் உலா வரும் அந்தச் சமூக வலைத்தளச் செயலியில் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி, அனைவரையும் விமர்சித்து, அர்ச்சித்து வந்தான்.

பலரும் வேண்டுமென்றே அவனை “தலைவரே...” எனக் கலாய்த்து உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர். அவர்களும் பதிலுக்கு அவனை மோசமான வார்த்தைகளால் கருத்துரையில் புகழ்ந்துரைக்க, அவனும் அடுத்தக் காணொளியில் அவர்களை வறுத்தெடுத்து விடுவான்.

ஒருநாள் அவனது வீட்டிற்கு ஒரு பார்சல் வந்திருக்க, “மாமா... உங்க பேருக்கு ஒரு பார்சல் வந்திருக்கு...” எனக் கொண்டு வந்து கொடுத்தாள் தனம்.

அது என்னவெனப் பிரித்துப் பார்த்தால், குழந்தைகள் பயன்படுத்தும் ‘பேம்பர்ஸ்...’. கோபத்தில் அவனது மனைவி அவனைப் பார்த்து முறைக்க, “ஏய்... என்ன முறைக்கா?? நான் என்ன பண்ணுனேன்?? எவனோ அகம்பிடிச்ச பய அனுப்பி விட்ருக்கான்... இரு எவன்னு விசாரிக்கேன்??” என்றவாறே கிங்காங் செயலிக்குள் நுழைந்தான்.

“நண்பர்களே.. வணக்கம்.. எவனோ ஒருத்தன் எனக்கு வீட்டுக்குப் பேம்பர்ஸ் அனுப்பிருக்கான்... ஏலே கொஞ்சமாவது அறிவு இருக்கால?? என்னத்த அனுப்புதோம்ன்னு தெரிஞ்சுதான் அனுப்புதியலா?? யாம்ல இப்டி பண்ணுதிய??” என அவன் திட்டி பதிவிட, காண்போர் குதூகலமாயினர்.

அவனைச் சீண்டுவதற்கு மேலும் ஒரு வழியாகிப் போனது. அன்று முதல் அவனுக்கு வரும் கடிதங்கள், பார்சல்களின் எண்ணிக்கை கூடிப் போனது.

ஆனால் எதையும் ஸ்போர்டிவ்-ஆக எடுத்துக் கொள்ளும் மூர்த்தி இதற்கெல்லாம் அசரவில்லை. அவனைப் பொருத்த வரையில் அவர்கள் அனுப்புவதும் அவனுக்கு ஒரு கன்டென்ட் அவ்வளவுதான். அவர்கள் அனுப்பியிருப்பதைக் குறித்து, மோசமான வார்த்தைகளால் வர்ணித்து, காதுகூசுமளவிற்கு வார்த்தைகளால் திட்டி பதிவிடுவான். அவனுக்குதான் குறிப்பிடத்தகுந்த அளவிற்குப் பணம் வருகிறதே!

இப்போது அவன் செய்து வந்த மரக்கடை மரம் அறுக்கும் வேலையையும் விட்டுவிட, குடும்பம் அன்றாடத் தேவைகளுக்கே அல்லாட ஆரம்பித்தது. தனம் தான் பீடிசுற்றி, தோட்ட வேலைகளுக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்தாள். மூர்த்தியோ கிஞ்சித்தும் அதுகுறித்துச் சிந்தித்தானில்லை. அவனைப் பொருத்தவரையில் அந்தச் செயலியில் இருப்பவர்களைத் திட்டிக் கொண்டே இருக்க வேண்டும், அவனது கவனத்தையும் அவனை நோக்கி ஈர்க்க வேண்டும். அவ்வளவே அவ்வளவுதான்.

இங்கே பலருக்கு சமூக வலைத்தளம் என்பது மனதின் வக்கிரங்களையும், வெளிப்படுத்த இயலாத குரூரங்களையும் இறக்கி வைக்கப் பயன்படும் ஒரு குப்பைத் தொட்டி. அவர்களைப் பொருத்தவரையில் பிரபலமானவர்களின் புகைப்படத்தின் கீழே இருக்கும் கருத்துப் பெட்டிகள் எல்லாம் தங்களின் மனதின் கழிவுகளை வெளியேற்றும் கழிப்பறை. எவரிடமும் கூற இயலாத, மனதிற்குள் இத்தனை நாட்களாக வெளிவிடாமல் அடக்கி வைத்திருந்த கழிவு கசடுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக அவ்விடம் கொட்டுவதில் அலாதி இன்பம் அவர்களுக்கு. எத்தனை இடங்களில் பார்க்கிறோம் பிறரின் அங்கங்களையும் செயல்களையும் நாகூசும் வார்த்தைகளால் வர்ணித்துக் கருத்துகளைப் பதிவிட்டிருப்பதை.

கண்டுகொள்ளாமல் செல்பவர்களுக்கே இந்த நிலை என்றால் உடனுக்குடன் பதிலளித்து, செமையாக என்டர்டெயின் செய்யும் மூர்த்தியின் விஷயத்தில் கேட்கவா வேண்டும்? நாயைக் கல்லைக் கொண்டு எறிந்தால் அது குரைக்கத் தானே செய்யும்! அதன் ஓலத்தில் இன்பம் காண்பதில் அதீத இன்பம் இவர்களுக்கு.

இவ்வாறு நிதமும் கடிதங்கள் வருவதும், “எத்தனை போஸ்டுதான்மா வரும்?? உன் வீட்டுக்காகவே இந்தத் தெருவுக்கு அடிக்கடி வர வேண்டியதா இருக்கு?” எனத் திட்டியவாறே அஞ்சல்காரர் கொடுத்துவிட்டு செல்வது வழக்கமாகிப் போனது.

தன் கணவன் இவ்வாறான காணொளிகளைப் பதிவிட்டு வருகிறான் என அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரிந்துவிட்டது, ஏற்கனவே துச்சமாக எடைபோடுவோர் இன்னும் கேவலமாக நடத்துகின்றனர் என அறிந்தும் அவனைக் கண்டிக்க இயலாத நிலையில் இருந்தாள் தனம்.

ஏனென்றால் அவன் கோபத்தில் தன்னை அடித்தாலும் பரவாயில்லை, எங்கேனும் சென்றுவிட்டால்?? மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என அஞ்சினாள். எனவே தன்னால் இயன்றமட்டும் அமைதியாகக் காலத்தைக் கடத்தி வந்தாள்.

இப்படியாகக் காலங்கள் கடந்து கொண்டிருக்கையில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கடிதங்கள் வந்த வண்ணமிருந்தன. நாளுக்குநாள் அவற்றின் தீவிரமும் அதிகரித்துக் கொண்டிருந்ததே தவிரக் குறைந்தபாடில்லை.

அவன் எப்போதும் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் கடிதத்ததில் எழுதியிருப்பதை அப்படியே படித்து விடுவான். அருகில் அவனது பிள்ளைகள் படித்துக் கொண்டிருப்பதை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டான். அன்றும் அதைப் போலப் படித்துவிட, மிகவும் கொச்சையான வார்த்தை ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அவனது குழந்தைகள் மூவரும் அதிர்ந்து போய் அவனை நோக்க, சமையலறையில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த தனம் ஓடிவந்தாள். குழந்தைகள் மூவரையும் தன் மார்போடு அணைத்துக் கொண்டவள்; “மாமா... என்னதான் நெனச்சிட்டு இருக்கிய?? நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன்... தினந்தினம் உங்க அட்டூழியம் கூடிக்கிட்டு போவுதே தவிரக் குறைஞ்சபாடில்ல... உங்களுக்குப் பிடிச்சிருந்தா என்னத்தையோ பண்ணிட்டு போங்க... பிள்ளைய இருக்க இடத்துல இருந்து பேசி ஏன் அதுவ மனசையும் நஞ்சாக்குதிய?? அதுவளாவது நாளைக்கு வாழ்க்கையில உருப்படணுமா இல்ல உங்களை மாதிரி கெட்டுக் குட்டிச்சுவரா போவணுமா??” என ஆதங்கத்தில் வார்த்தைகளை உதிர்த்தாள்.

அவள் பேசிய வார்த்தைகளில் கோபம் வந்தாலும் தான் நடந்து கொண்ட விதம் தவறு எனப் புரிந்தது அவனுக்கு. என்னதான் குடும்பத்தின் மீது அக்கறை இல்லாதவன் போல நடந்து கொண்டாலும் அவனும் சராசரி தந்தைதானே!! ஆகவே எதுவும் பேசாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

வெளியே சென்றவன் மனம் வருந்தி, மனங்கசந்து அழுது, திருந்தி வருவான் என நினைத்தால் அதுதான் தவறான விஷயம். அவனுக்குள் புகுந்திருக்கும் ஏஎஸ் வைரஸ்கள் எவ்வாறு அவனை மீண்டுவர அனுமதிக்கும்?? வீட்டில் அவ்வாறான கடிதங்களை வாசித்துப் பதிவிடாமல் இருக்க முடிவு செய்திருந்தான் அவ்வளவுதான். திருந்திவிட்டான் எனப் பேராசை கொள்வதெல்லாம் கூடாது.

அன்றுமுதல் அவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு திடலில் தன் நண்பர்கள் சிலருடன் சென்று அமர்ந்து கடிதங்களைப் படித்துப் பதிவிடுவான்.

மூர்த்தியின் இந்தக் காணொளிகளுக்கு இருந்த ரசிகர்களுக்கு ‘ரவுடி பேபி’ சத்யாவும் ஒருத்தி. என்ன பதிவிட்டாலும் ‘சூப்பர் மூர்த்தி மாமா...” எனப் பதில் பதிவிடுவாள். அவளும் இப்போது கிங்காங் செயலில் ஒரு பிரபலம்தான். அவள் என்ன காணொளி பதிவிட்டாலும் பார்வைகளும் கருத்துரைகளும் குவிந்து கிடக்கும்.

மாடர்ன் உடைகள், ஷார்ட்ஸ்கள் அணிந்து அசால்டாகக் காணொளி பதிவேற்றும் நிலைக்கு உயர்ந்திருந்தாள் அவள். பிரபுவும் அவளது குழந்தைகளும் உடனிருக்கையில் இது எவ்வாறு சாத்தியம் எனச் சிந்திப்போருக்காக ஒரு குறும்படம்.... அதாவது ப்ளாஷ்பேக்...

@@@@அன்று ஆலையில் வேலைநிறுத்த போராட்டம் நடந்திருக்க, சீக்கிரமாகவே வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டான் பிரபு. வீட்டிற்கு வருகையில் கதவு பூட்டப்பட்டிருக்க, திருடர் பயத்தினால்தான் தன் மனைவி பூட்டிக் கொண்டு உள்ளே இருக்கிறாள் என அனுமானித்துக் கொண்டான். ஒருவேளை அவள் அசதியினால் உறங்கிக் கொண்டிருந்தால் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதால் தன்னிடமிருந்த மாற்றுச்சாவியின் உதவியுடன் திறந்து கொண்டு உள்ளே வர, அவனுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி!!

புடவையைத் தவிர வேறெதையும் கட்டியிராத தனது மனைவி, விலையுயர்ந்த சுடிதாரை அணிந்து, அளவுக்கு அதிகமான ஒப்பனையுடன் நின்றுகொண்டிருக்க, ஒருகணம் விக்கித்து நின்றான். கையிலிருந்த அலைபேசியின் திரையில் டூயட் பேசிக் கொண்டிருந்தான் மூர்த்தி.

அலைபேசித் திரையில் மூர்த்தியைப் பார்த்ததும் ருத்ர மூர்த்தியாக மாறிவிட்டான் பிரபு.

என்ன நடந்தது, என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து எல்லாம் அவளிடம் விசாரிக்கும் நிலையில் அவன் இல்லை. நிதானமிழந்தவனாக, “என்னடி பண்ணிட்டு இருக்கிற??” எனக் கர்ஜிக்க, “மாமா.... அது வந்து...” எனத் தயங்கினாள் சத்யா.
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom