Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கபிலனின் நிலா - அகிலன் மு

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 8

காற்றில் அலைபாய்ந்த கூந்தல். கபிலனின் இருப்பால் பரவசப்பட்ட மனம். தூரத்தில் தெரிந்த பொதிகை மலைத்தொடரையும், அதன் கீழே ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றின்போக்கையும் பார்த்துக்கொண்டிருந்த மேகலையின் கருவிழிகள், மேலும், கீழும், இடதும், வலதுமாய் உருண்டுகொண்டிருந்தன. கபிலன் அவளை நெருங்க நெருங்க,

மாடிச்சுவரில் இருகைகளையும் ஊன்றி அழுத்தமாய்ப்பற்றிக்கொண்டாள். தடுமாறிய மனதைத் தாங்க முயன்றாள். அவளின் பதட்டம் அதிகரித்தது.

அதுநாள்வரை எந்தவித முன்யோசனையும் இல்லாமல் மேகலையிடம் பேசி, பழகிக்கொண்டிருந்த கபிலன், சற்று தூரமே இருக்கையில், மேகலையைப் பார்த்தான். காற்றில் தவழ்ந்த கருங்கூந்தல், படபடத்த இமைகள், மாநிற அழகு மேனியைத் தழுவிக்கொண்டிருந்த ரத்தச்சிவப்புவண்ணத் தாவணி, தரையில்புரளும் வெளிர்மஞ்சள்நிற முழுப்பாவாடை, சிறிதாய் காலை மடக்கி வலது நுனிக்காலை ஊன்றி நின்றிருந்ததால் தெரிந்த வெளிர்பாதம், அதன்கணுக்காலில் சலசலத்த வெள்ளிக்கொலுசுமணி - இத்தனையும்தான் தெரிந்தது. அங்கே அவனுக்கு மேகலை தெரியவில்லை. அன்றுதான் முதல்முறையாய் அவளைப் பார்ப்பதுபோல் இருந்தது.

அருகில் சென்று வெளிப்புறமாய்த்திரும்பி நின்ற மேகலையின் முதுகுப்புறம் பின்னால் நின்றான். அவள் இதயம் படபடத்தது. மேலும் கீழும் சிறிதாய் ஏறியிறங்கிக்கொண்டிருந்த அவளின் தோல்பட்டைகள்காட்டியது அவளின் மனப்படபடப்பை.

என்ன நினைத்தானோ தெரியவில்லை, மெதுவாக மேகலையின் வலதுதோளில் கைவைத்தான்.

“மேகா, உன்னைய எனக்கு ரொம்பப்பிடிக்கும்”.

இதைச்சற்றும் எதிர்பார்க்காத மேகலை, படாரென்று கபிலனை நோக்கித்திரும்பியவள்,

அவன் மிகஅருகில் நிற்பதைக்கண்டு வெட்கி, பதறித்தலைகுனிந்து, பின்னால் நகன்று அந்த மாடிச்சுவரின் மீது சாய்ந்து நிற்க முயன்றவள், நிதானம் தவறி அப்படியே பின்னால் சாய்ந்தாள். அகன்ற நீண்ட ஓடுவேய்ந்த மேற்கூரையில் தலைகுப்புற விழுந்து கீழே உருள ஆரம்பித்தாள்.

“கபிலா… எனையப்பிடிங்க….” மேகலை பயத்தில் கத்தினாள்.

“மேகா…”.

கத்தியபடிஅவளைப்பிடிக்கக் கையை நீட்டினான். ஆனால் எட்டும் தொலைவிலில்லை.

கபிலனக்கு கண்கள் கலங்கி, காட்சி மங்கியது. நினைவு எங்கோ கரைந்தது.

.

பழுவூர் அரண்மனை. சோழபுரம்.

அரண்மனை மேல்மாடத்திலிருந்து சரிந்து உருண்டு கீழே வீழ்ந்துகொண்டிருந்த கடம்பூர் இளவரசி மணிமேகலையின் அலறல் அந்த அரண்மனை மாடங்களில்மோதி எட்டுத்திக்கும் வளாகம்முழுதும் எதிரொலித்தது. வல்லவன் வந்தியதேவன் கண்ணிமைக்கும் நேரத்தில், அருகிலிருந்த அகன்ற ஆலமரத்தின் நெடிய விழுதுகளைப்பற்றி மின்னல்வேகத்தில் கீழே குதித்தான். குதித்த மறுகணம் மணிமேகலை வல்லவன் இரு கரங்களில் பாதுகாப்பாய் வீழ்ந்தாள், ஆனால் பயத்தில் மயங்கியிருந்தாள். பெருமூச்சுவிட்ட வந்தியத்தேவன், மேலே மாடத்தைப் பார்த்தான். எட்டிப்பதறிப் பார்த்துக்கொண்டிருந்த பழுவூர் இளையராணி நந்தினி, நெஞ்சில் கைவைத்துப் பெருமூச்செறிந்தாள். கண்ணைமூடி மனதார ஈசனை நினைத்தாள்.

“நீலகண்டனே, எனைக்காத்தருளினாய். மணிமேகலையின் நலனுக்காக எனக்கருதி, அவளின் அம்மையப்பரிடம் தானும், அவள் தமையன் கடம்பூர் இளவரசன் கந்தமாறனிடம் வல்லவனும் பொறுப்பெடுத்துக்கொண்டல்லவா, மணிமேகலையை இந்தப் பழூவூர் கொணர்ந்தோம். வந்த முதல்நாளிலேயே நாங்கள் சுமக்கவிருந்த பழிச்சொல்லை, இப்பொழுது நிகழ்ந்த அபசகுண நிகழ்வைத் தடுத்து, எங்களையும் பழியிலிருந்து காத்தாய் அப்பனே”, என மனதாரக் கண்கலங்கி நன்றி சொன்னாள்.

மறுகணம் நந்தினி விறுவிறுவெனக் கீழிறங்கி அரண்மனை ஓய்வறைக்குச் சென்றாள். அங்கே தேக்குமரத்தாலான அகன்ற கட்டிலில், பட்டுவிருப்பின்மேல் மேகலையைகிடத்தி தானும் அருகில் அமர்ந்திருந்தான். மயங்கியிருந்த இளவரசி மணிமேகலையின் வலதுகரத்தை, தன் இருஉள்ளங்கைக்குள்ளும்வைத்து ஆதரவாய்ப்பற்றி, கண்கலங்கியிருந்தான்.

வந்தியத்தேவன் மணிமேகலையின் வலதுகரத்தை ஆதரவாய்ப்பற்றியிருந்த காட்சி, அந்த அறைக்குள்ளே நுழைந்த நந்தினியின் உள்ளத்தை உவகையுறச்செய்தது. தான் நினைத்த காரியம் கனவாகிவிடுமோ என்று அஞ்சிய அவள் மனம் மகிழ்ந்தது. முகம் மலர்ந்தது.


“ஆகா, என்னே துரிதம். என்னே சாதுர்யம். எத்தனை அக்கறை. எத்தனை பரிவு. வல்லவரே, காற்றையும் மிஞ்சும் லாகவத்தில், மின்னலே அஞ்சும் வேகத்திலல்லவா மேல்மாடத்திலிருந்து குதித்தீர்கள். அந்த வேகத்தில், மணிமேகலையின்பாலான உங்கள் உள்ளக்கிடக்கை உறுதியாக்கப்பட்டதே!”

“அவ்வாறல்ல இளையராணி. அது, நண்பனின் தமக்கையின்பால்கொண்ட அக்கறையென்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?”. பட்டென்று தன் உள்ளங்கையிலிருந்து மணிமேகலையின் கரங்களை கீழேவிடுத்தான், வல்லவன்!


“ம்ம்.. அப்படி என்னை எடுத்துக்கொள்ளச் சொல்கிறீர்கள், அப்படித்தானே வல்லவரே”. நந்தினி புன்னகைத்தாள்.

“அது… அப்படிச் சொல்லவில்லை. அதாவது… எனக்கு… மணிமேகலையின்மீதும் மிகுந்த அன்பு உண்டு”

“அடேங்கப்பா. என்ன அதிசயம். காற்றைகிழித்துக்கொண்டுபோன வீரம் குலைகிறது. இளவரசியைத்தாங்கிய கரங்கள் தள்ளாடுகின்றன. ஹூம்ம். என்மனதறிந்து இது ஆழமான காதல்தான். இதையறியாமல்தான் நான், தாங்கள் குந்தவையிடம் காதல்கொண்டதாக தவறாக எண்ணி தங்களிடம் அத்தனை காலம், மேல்மாடத்தில் மணிமேகலையைப் பற்றி பரிந்துரைத்துக் கொண்டிருந்தேனா?!”. அறியாதவள்போல் அங்கலாய்த்தாள் இளையராணி நந்தினி.

வந்தியத்தேவன் முகம் மலர்ந்தது. அவன் இளையராணி நந்தினியின் சொல்லை ஆமோதிக்கவும் இல்லை. மறுக்கவுமில்லை. மறுமொழி சொல்லவுமில்லை.

“சரி. இளவரசி மணிமேகலை கண்விழிக்கும்வரை தாங்களே அருகிலிருங்கள். நான் மறுநாள் நடக்கவிருக்கும் அரசரின் பொன்விழா ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு வருகிறேன்”. வந்தியத்தேவனிடம் சொல்லிவிட்டு இளையராணி நந்தினி அந்த அறையைவிட்டு அகன்றாள்.


வல்லவன் வந்தியதேவன் மீண்டும் இளவரசி மணிமேகலையின் தலையணை அருகே அமர்ந்து, அவள் கூந்தலுக்குள் தன் கைவிரல்களால் ஆதரவாய்க்கோதிவிட்டான். அதேகணம் இளவரசி மணிமேகலை கண்விழித்தாள். வல்லவன் மனம் ஆசுவாசமடைந்தான்.

.

குழித்துறை கிராமம். நந்தினியின் தாத்தா வீடு.


கண்விழித்த மேகலை கபிலன் தன் தலைகோதியபடி தன்னருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தாள். ஆச்சர்யப்பட்டாள். வெட்கப்பட்டாள்.

“என்னாச்சு எனக்கு. நாம மாடிலதான பேசிக்கிட்டிருந்தோம். நான் எப்போ இங்கவந்து படுத்தேன்?. நந்து எங்க?

கபிலனிடம் கேட்டபடியே எழமுயன்றபோதுதான் தன் உடம்பிலிருந்த வலியை உணர்ந்தாள், மேகலை!

“ம்ம்… உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னேன். மாடிலயிருந்து கூரைவழியா உருண்டே இங்கவந்து படுத்துக்கிட்ட. நல்லவேளை, வீட்டுல எல்லாரும் கோயிலுக்குப் போயிருக்காங்க. இல்லேனா நீ போட்ட சத்தத்துல பெரிய களேபரம் ஆகியிருக்கும்”. கபிலன் சிரித்தான்.

மேகலைக்கு ஓன்றும் புரியவில்லை. முழித்தாள்!?

“சரி. நீ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு. நான் எல்லாம் வந்து சொல்றேன்”

மேகலையிடம் சொல்லிவிட்டு. கபிலன் அந்த அறையைவிட்டு வெளியில் போனான். மேகலை நடந்ததை யோசித்துப்பார்த்தாள். கபிலன் தன் தோள்தொட்டது வரை ஞாபகம் வந்தது.

“அப்போ கபிலனுக்கு என்னயதான் பிடிச்சிருக்கு. என்னயதான் லவ் பண்றான். மேகலையாய் ஒரு முடிவுக்கு வந்தாள். கற்பனையில் மிதந்தாள்”

சூடாக சுக்குக் காபிஎடுத்துக்கொண்டுவந்துகொண்டிருந்த கபிலன், மேகலை விட்டத்தைப் பார்த்துப் பூரிப்புடன் இருப்பதைக் கவனித்தான். அவள் என்ன நினைத்துக்கொண்டிருப்பாள் என்பதை யூகித்தான். தன் மனதில் இருப்பதை எப்படிச் சொல்வதென்று சிந்தித்துக்கொண்டே அந்த அறையில் மீண்டும் நுழைந்தான்.

மேகலை காதலுடன் கபிலனைப் பார்த்தாள்.

கபிலன் பார்வையை வேறுதிசையில் மாற்றினான்.

மேகலை மனம் கலவரமடைந்தது.

சிரமப்பட்டு கொஞ்சமாய் எழுந்து, முதுகுப்புறம் வரை தூக்கி, சுவற்றில் தலையணையை வைத்து சாய்ந்து உட்கார்ந்தாள். கபிலன் ஒரு கையில் காபி டம்ப்ளரை பிடித்தபடி, மறுகையால் மேகலைக்கு சாய்ந்து உட்கார உதவினான். சூடான காபியைக் குடிக்க கொடுத்தான்.

“மேகா, நான் சொன்னமாதிரி உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ என்னைய நல்லா பாத்துப்பன்றதுல எனக்கு எந்த சந்தேகமுமில்ல. ஆனா… நான்… என்ன சொல்லவர்றேன்னா…”

தரையைப் பார்த்துக்கொண்டே காபியை உறிஞ்சிய, மேகலை, கபிலன் பேச்சை நிறுத்த, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

கபிலன் தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.

மேகலைக்கு காபியின் சூட்டைவிட, கபிலன் தயங்கி நின்றவிதம் அதிகமாய்ச்சுட்டது.

“நீ என்ன இவ்ளோ லவ் பண்றனு நான் நிலாட்ட பேசறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இப்போ இவ்ளோ குழப்பம் வந்திருக்காது.”

மேகலை கபிலனின் கண்ணையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நான் நிலாட்ட ல்வ பண்றேன்னு சொன்ன விசயம் உனக்கும் தெரியும்ல”

“ஆனா, நிலா உங்கள ல்வ பண்றேனு சொல்லலயே”

“அது…”

“அவ சொல்ற கண்டிஷனக்கு ஒத்துக்குறவன கல்யாணம் பண்ணுவேன்னா. இததான் நீங்க லவ்வுனு சொல்றீங்களா?”

“அவ சீக்கிரம் என்ன புரிஞ்சுப்பா, மேகா. அதுக்கப்புறம் அப்படி கண்டிஷன்போட மாட்டா”

“அப்டீன்னு நீங்க நினைக்கிறீங்க. ஆனா அது அவ இஷ்டப்படிதான் நடக்கும், கபிலா”

அழுத்தமாகவும், கொஞ்சம் கோவமாகவும் சொல்லிவிட்டு, கபிலனின் கண்ணையே தீர்க்கமாகப் பார்த்தாள்.

கபிலனுக்கு பதில் தெரியவில்லை. பேசாமல் இருந்தான்.

“சரி, இப்போ நிலா உங்கள லவ் பண்ணலனு உங்களுக்கு உறுதியாத் தெரிஞ்சா, என்னையபத்தி யோசிப்பீங்களா?”

“அதுக்கு அவளுக்கு நான் தேவையான டைம் கொடுக்கனும்”

“எவ்ளோ நாள்”

“நான் 3 வருஷம் கழிச்சு அவட்டயும், அவுங்க வீட்டுலயும் பேசுறேனு சொல்லியிருக்கேன்”

“3 வருஷம் கழிச்சா? எந்த காலத்துல இருக்கீங்க கபிலன். இதெல்லாம் நடக்குறகாரியமா. இப்போ நீங்க சரின்னா, உங்ககூடயே வரேன்னு நான் சொல்றேன். நீங்க என்னடான்னா 3 வருஷம் பேசாம இருந்துட்டு, போய் பொண்ணு கேப்பீங்கனு சொல்றீங்கெ”

சிறிதாய்ச் சிரித்தாள், மேகலை.

“நீ சொல்றதும் சரிதான் மேகா. எனக்கு இப்போ என்ன முடிவெடுக்குறதுனு தெரியல. நந்து சொன்னதையும், நீ இப்போ கேட்டதையும் யோசிச்சுப்பாத்தா, நிலாவோட மனசுல அவளோட சொந்தபிரச்சனைதான் இருக்கு, நான் இல்லேனு புரியுது. ஆனா…”

“இப்ப என்ன, நீங்க நிலாவ லவ் பண்றீங்க. அவள் புரிஞ்சுக்க டைம் கொடுக்கனும், அவ்ளோதான. நான் வெயிட் பண்றேன், கபிலா. ஆனா 3 வருஷமில்ல. 3 மாசத்துல உங்களுக்கு நிலா யாருனு தெரியும். அப்போ என்னோட அன்பும் புரியும் உங்களுக்கு”.

“சரி, பாக்கலாம்”

கவனமாக மேகலையின் பேச்சைக்கேட்ட கபிலன், பதில் சொல்லிவிட்டு எழுந்து அறைக்கு வெளியே சென்றான். நந்தினி அதேசமயம் அவன் வெளியேறுவதற்குக் காத்திருந்ததைப்போல உள்ள வந்தாள்.

“இங்கதான் இருந்தியா இவ்ளோ நேரம்”

“இல்லடா இப்பதான் வர்றேன்”

“சரி, குளிச்சிட்டு வர்றேன். டின்னர் ரெடியா?”

“அதெல்லாம் உனக்குப் பிடிச்ச இட்லி, தேங்காச் சட்னி, குடல் குழம்பும் இருக்கு. குளிச்சிட்டு வா”

“ஓ சூப்பர்டி. நீ இருக்குறவரைக்கும் நான் ராஜாதாண்டி”

“இந்த நினைப்பு எப்பயும் இருக்கட்டும்”

கபிலனுக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த நந்தினி, மேகலையைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தினாள்.

“சூப்பர்டி. நான் சொல்லிக்கொடுத்ததவிட நீ கபிலண்ட பேசுனதுதாண்டி சூப்பர் ஹிட். அதோட துணிஞ்சு நான் சொன்னதுக்குமேல, மயங்கி மாடிலயிருந்து உருண்ட பார். நானே யோசிக்காத சீன்டி அது”

“நீ வேற நந்து. நானும் யோசிக்கல அப்டி. நீ செய்யச்சொன்னமாதிரி அவன் பக்கத்துல வந்தா, மயங்கி அங்கனுக்குள்ளேயேதான் விழுறமாதிரி நடிக்கனும்னு நினைச்சேன். ஆனா அவன் என் தோள தொட்டானா… அதுல பதட்டத்துல நிஜாமாவே கீழ விழுந்துட்டேன்”

“அதுவும் நல்லதுக்குதான், மேகா. இல்லேனா என்னைக்கு அவன் உன் கைய புடிசிக்கிட்டு இப்டி உக்காந்து பேசிருக்கான். நாம பிளான் பண்ணது நல்லா வேலை செஞ்சிருக்கு”

“என்னவோ நந்து. கபிலன் எனக்குக் கிடச்சா இந்த விழுந்த வலிலாம் ஒன்னுமில்ல”.

“அதான் நீ பேசுனதுல வாயடச்சுப்போய் நின்னானே. மேகா... பெரிய கில்லாடிடி நீ”

இருவரும் சிரித்தனர். மேகா வெட்கிச் சிரித்தாள். நந்து வெற்றிச்சிரிப்புச் சிரித்தாள்.

தனக்குப் பின்னால் இப்படி மெய்யும், பொய்யும் கலந்த ஒருகாதல் நாடகம் நடப்பதை அறியாமல் கபிலன் குளித்துக் கொண்டிருந்தான்.



நாம் கபிலனைத் தொடர்வோம்-8
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 9

மறுநாள் காலை நந்தினியின் அப்பா 50வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். வீட்டின் வெளிச்சுவரின் பிரதான வாயிலின் அகன்ற கதவில் இரண்டு பக்கமும் வாழைமரங்கள் வாழைக்குலை, பூவுடன் நின்றது. அந்த வாயிலிலிருந்து வீட்டின் முகப்பு வரை தென்னங்கீற்றுத் தோரணம் தொங்கியது. வீட்டின் ஒரு பகுதி வெளிப்புறத்தில் கருங்கல்கள் முக்கோணமாய் மூன்று இடங்களில் அடிக்கி வைத்திருந்தனர். அதன்மேல் பெரிய அகன்ற இரும்புச்சட்டிகளும், அண்டாக்களும் வைக்கப்பட்டிருந்தன. நான்கு ஆடுகளும், ஆறு நாட்டுக்கோழிகளும் அருகில் கட்டிவைக்கப்பட்டிருந்தன. வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் மற்றும் அனைத்து காய்கறிகளும், சீரகசம்பா அரிசி மூட்டைகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

அங்கே சமையல்செய்ய ஆண்களும், பெண்களும் சுறுசுறுப்பாய் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அளவான குடும்ப உறவினர்களுடன் விமரிசையாக தொடங்கியது. வெள்ளைக்கலரில் பச்சைக்கரை வேட்டியும், அதே பச்சைக்கலரில் முழுக்கைச் சட்டையும், அதை முழங்கைவரை மடித்தும்விட்டு புதுமாப்பிள்ளைபோல் இருந்தான் கபிலன். ஏதோ வேலையாக முதல் மாடிக்குச்செல்லப் போனான். அந்த அகன்ற மரப்படிக்கட்டுகளின்

கீழ்ப்படியில் கால்வைத்து மேலே பார்த்தான். அப்படியே உறைந்துபோய் நின்றான்.

அங்கே முதல்மாடியிலிருந்து கீழே இறங்குவதற்காக நின்றிருந்தாள், நிலா!. தலைக்குளித்து நீட்டிச்சீவி விடப்பட்ட மென்மையான கூந்தலை தளர்வாக சடைபோட்டு பின்னியிருந்தாள். அதில் தளையத்தளைய மணக்கும் மதுரை மல்லிகைப்பு நான்கைந்து வரியாகத்தொங்கவிட்டிருந்தாள்.பச்சையும், நீலமும் கலந்த பட்டுப்புடவையை நேர்த்தியாகக்கொசுவம் வைத்துக்கட்டியிருந்தாள். கையில் கலகலக்கும் பலவண்ண டிசைனர் வளையல்கள். காலில் மூன்று வரிசை வெள்ளிக்கொலுசு.

கபிலனுக்கு தன் கண்களை அவனாலேயே நம்பமுடியவில்லை. இன்பஅதிர்ச்சியும், ஆச்சர்யமும், காதலும் மீறிட மேலே மெதுவாக அந்த படிக்கட்டுகளில் ஏறினான்.

அவன் கண்கள் காதல்பொங்க நிலாவையே பார்க்க, கீழே இறங்கவந்தவள் வெட்கிப்போய் அப்படியே மேல்படியிலேயே நின்றாள். கபிலன் ஒவ்வொரு படியாக ஏற ஏற, அவள் கால்கள் பின்னால் அடியெடுத்து வைத்தது.

நிலா எப்படி இங்கே? “தாத்தா வீட்டிற்குப் போகும்போது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொன்னாலே, நந்தினி, அது இதுதானா?. கொஞ்சம்கூட நிலா வருவதைப்பற்றி தெரியவில்லையே!?. மூன்று வருடம் வரை நிலாவின் மனதை அறியக்காத்திருக்கவேண்டுமென நினைத்தேனே! அந்த மூன்று வருடங்கள் ஓடிவிட்டதா?”.

அடுத்தடுத்து ஆச்சர்யமான கேள்விகளுடன் மாடியேறிய கபிலன் நிலாவை நெருங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தான்.

அந்த முதல் மாடியின் நடைப்பகுதியில் மாடிப்படிகள் முடிவடைந்த இடத்திற்கு நேரெதிரே, உயர்ந்த பூத்துக்குலுங்கும் செடிகள் அலங்காரமாய் வரையப்பட்ட சுவரில் நிலா சாய்ந்திருந்தாள். அவளின் சேலையின் வண்ணத்திற்கும், அழகாய் நீண்ட கன்னத்திற்கும், மையிட்ட கண்களுக்கும், அந்தச்சுவர் ஓவியத்திற்கும், நந்தவனத்தினிடையே தோகைவிரித்த மயில்போல வசீகரித்தாள், நிலா!. அவளுக்கு முன் அரையடி இடைவெளியில் நெருக்கமாக நின்றிருந்தான், கபிலன்.

நிலாவின் கண்கள் கபிலன் கண்களையே பார்க்க, இருவரின் விழிகளும் இடம் வலமாய் சேர்ந்தே உருண்டன. இடது கையை சுவற்றில்வைத்த கபிலன், வலது கையின் உள்ளங்கையால் நிலாவின் இடது கன்னத்தைத் தாங்கினான்.

.

பழுவூர் அரண்மனை. சோழபுரம்.

அத்துனை நெருக்கத்தில் வல்லவன் வந்தியத்தேவனை பார்த்திராத இளையபிராட்டி குந்தவை, அந்த அரண்மனை அந்தபுரத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய கற்தூணின்பின்னால் மறைவாக சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டாள். வல்லவன் இன்னும் நெருக்கமாக குந்தவையின் முகத்தருகே தன் முகத்தைக் கொணர்ந்தான்.




“வல்லவரே, அரண்மனை அந்தப்புர சேவியர்கள், காவலர்கள், அனைவரும் அரசரின் பொன்விழா தொடக்க ஏற்பாட்டில் வளாகம் முழுதும் சுற்றித்திரிகிறார்கள். யாரேனும் வந்தால் என்ன செய்வதாக உத்தேசம்?”.



“ம்ம்.. இந்த நடனமயில், நடமாடும் அன்னம், துள்ளும் மான், உங்கள்இளைய பிராட்டியின் இதயத்தைக் களவாட வந்தேன் என்று அறிவிப்பேன்”



“மன்னரின் காவலர்கள் உங்களைக் கைதுசெய்து, பின்னர் சோழச்சக்கரவர்த்தியால் கழுவிலேற்றப்படலாம்”



“விசாரணை இல்லாமல், சக்கரவர்த்தி அங்ஙனம் செய்வாரா, என்ன?”,



“விசாரித்தால்…?”



“நான் திருடு கொடுத்தவன். அதற்கு பதிலாகத் திருடுவேன் என்று சொன்னேன். அது தவறாயின் என்னிடம் திருடியவரையும் கைதுசெய்து விசாரியுங்கள்”, என்று பணிவாக பதிலுரைப்பேன்.



“ஹ்ம்ம்… யாரிடம் திருடு கொடுத்தீர், வல்லவரே”



“அவசியம் சொல்லத்தான் வேண்டுமா, இளையபிராட்டியாரே?”



காதல் மயக்கத்தில் ஒருவருக்கொருவர் என்ன சொல்கிறார்கள் எனத்தெரிந்தும், தெரியாததுபோல் உரையாடிக்கொண்டிருந்தனர்.



“எப்போது சக்கரவர்த்தியிடம் விசாரிக்கச் சொல்வது” வல்லவன் புன்முறுவலுடன் குந்தவையிடம் வினவினான்.

.

குழித்துறை கிராமம் - நந்தினி தாத்தா வீடு

“மூனு வருஷம் கழிச்சுதான் வருவேன், பேசுவேன்னு சொன்ன. அதுக்கு நானாச்சும் மூனு மாசம் வெயிட்பண்ணலாம்னு சொன்னேன். இப்ப மூனு நாள்கூட இல்ல. நேத்து நைட்தான் பேசுனோம். அதுக்குள்ள அய்யா காதல் பொங்க நிக்கிறீங்க. அதுவும் என் பக்கத்துல, கன்னத்த புடிச்சிக்கிட்டுவேற!. ம்ம்.. எதுனாலும் டக்குனு பண்ணு, வீட்ல நிறைய ஆளுங்க இருக்காங்க. எப்பனாலும், யார்னாலும் வருவாங்க”

நிலா சொல்லியதைக்கேட்ட கபிலன் ஒரு கணம் குழம்பினான். கீழே குனிந்து ஒரு கணம் யோசித்தான். “நேத்து நைட்பேசுனமா. இப்பதான இவள பார்த்தேன்”.

சட்டென்று நிமிர்ந்து பாத்தான், அதிர்ந்தான். பட்டென கையை அவள் கன்னத்திலிருந்து எடுத்தான். மறுகணம் சடசடவென இரண்டு மூன்று அடி பின்னால் நகர்ந்தான்.

“சாரி, மேகா!, ஏதோ ஞாபகத்துல…”

முழுதாய்ச் சொல்லிமுடிக்காமல் நெற்றியை வருடிக்கொண்டே திரும்பி மடமடவென மீண்டும் கீழிறங்கி போய்விட்டான்.

மயில்போல சுவற்றில் சாய்ந்திருந்த மேகலைக்கு ஒன்றும் புரியவில்லை. ஏமாற்றமும் குழப்பமுமாய் கபிலன்போன திசையையே பார்த்தாள். அசையாமல் நின்றாள்.

“ம்ம்ம்... நடத்து…”. அந்த முதல் மாடியின் நடைப்பகுதியில் மறுபக்கம் கடந்துசென்ற நந்தினி மேகலையைப் பார்த்து நமட்டுச்சிரிப்புச் சிரித்துவிட்டுப் போனாள். மாம்பழமஞ்சள் நிற பட்டுப்புடவையில் நந்தினி அசரடித்தாள்.

மேகலை இன்னும் கபிலனின் நடத்தையால் ஆழ்ந்த வியப்பிலிருந்த மீளாமல் அங்கேயே சுவரில் சாய்ந்து நின்றாள்.

.

கீழ் தளத்தில் விருந்தினர்கள் பரவலாக உடார்ந்திருந்தனர். நந்தினியின் அப்பா சந்தனக்கலர் பட்டு வேட்டி சட்டை, அம்மா இரத்தச்சிவப்பில் பட்டுப்புடவையும், ஜாக்கெட்டும் அணிந்து வந்தவர்களை வரவேற்று உபசரித்துக்க்ண்டிருந்தனர்.

“இந்த ரோஜா மால ரெண்டு மேல்ரூம்ல இருக்கு எடுத்துட்டு வாடான்னேன். சரின்னுட்டு போனவன ரொம்ப நேரமா ஆள காணொமே. நீ பாத்தியாடா” தாத்தா நந்தினியின் அப்பாவிடம் கேட்டுக்கொண்டே அங்கு வந்தார்”.

“நந்தினியும் காணோம். அந்த புதுப்பொண்ணு மேகலை எங்க?”, எங்கபோனாஙக எல்லாப்பசங்களும்?!.

“டே.. மேல ஸ்டோர் ரூம்ல, ரெண்டு மால இருக்கும் எடுத்துட்டு வா”. தாத்தா எல்லோரையும் தேடிவிட்டு, வீட்டிலிருந்த பணியாளை அனுப்பினார்.

வீட்டின் கீழ்தளத்தில், பின்வாசலோரம் ஒரு சிறிய அறையில், தாத்தாவின் பழைய ஈஸிசேர் கிடத்தப்பட்டு இருந்தது. அந்த ரூமைக்கடந்து செல்லும் எவருக்கும் வெளியிலிருந்து பார்த்தால், அந்தப்பழைய ஈஸிசேர்தான் தெரியும். அதிலும் அன்றைய பிறந்தநாள்விழா பரபரப்பில் அந்த ரூம் பக்கம் யாரும் திரும்பவே இல்லை. அந்த அறையின் ஈஸிசேரில், ஜன்னல் வழியாக வானத்தை வெறித்தபடி சாய்ந்திருந்தான், கபிலன்.

நிலாவின்மேலிருந்த அளவுகடந்த காதலும், நிலா தன்னிடம் எப்படி இருக்கவேண்டுமென எண்ணுகிறானோ அப்படி மேகலை இருப்பதாலும், மேகலையில் நிலாவையே பார்த்தான் கபிலன்.

“நான் ஏன் இப்டி பண்ணேன்?! மீண்டும் மீண்டும் இந்தக்கேள்வி கபிலனின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

இந்த குழப்பத்தை உடனே தீர்த்தாக வேண்டும். தீர்மானமாய் அந்த ஈஸிசேரில் இருந்து எழுந்த கபிலன், அந்தச் சிறிய அறையைவிட்டுக்கிளம்பி, மீண்டும் மேகலையைத் தேடிப்போனான்.

.

நாம் கபிலனைத் தொடர்வோம்-9
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 10

"என்னடா.. டயலாக்லாம் பலமா அடிச்சுட்டு மேகாட்ட அடுத்தநாளே சாஞ்சிட்ட".



கீழ் அறையில் இருந்து வெளியே வந்து மேகலையிடம் பேசலாம் என்று சென்றுகொண்டிருந்த கபிலனிடம் நக்கலாகக் கேட்டாள், நந்தினி.



"இவ ஒருத்தி... என்ன ஏதுன்னு புரியாமா எதாவது ஏத்திவிட்டுக்கிட்டு. போய் வேலயப் பாருடி"



சொல்லிவிட்டு நடைவேகத்தைக் குறைக்காமல் சென்றுகொண்டே இருந்தான், கபிலன்.



"செய்றதெல்லாம் செஞ்சிட்டு என்ட ஏறுரியா. ஃபங்ஷன் முடியுமட்டும் மவனே, உன்னைய வச்சுக்கிறேன்"



கபிலன் மேகலையிடம் முழுவதும் வீழ்ந்ததாக மனதுக்குள் மகிழ்ச்சி நந்தினிக்கு. ஆனால் அது தன் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென நினைத்தாள். அவளின் திட்டம், கபிலனுடைய நிலாவின் மீதான காதலைத் திசைதிருப்புவதே, மேகலையுடன் கபிலனைச் சேர்த்துவைப்பதல்ல. இருந்தும் அவள் கபிலனைக் அப்படி கேள்விகேட்பதற்குக் காரணம் அவளின் இயல்பான, கபிலனின் மேலிருக்கும் பொஸஷிவ்னெஸ்.

.

பிறந்தநாள் விழா களைகட்டியது. அந்த வீட்டின் பிரதான மைய வரவேற்பறையின் ஒரு சுவற்றின்பக்கம் சிறிய மேடை அமைத்து நந்தினியின் அப்பாவும், அம்மாவும் அமர வைக்கப்பட்டிருந்தனர்.



உறவினர்கள் எதிரே நாற்காலியில் சேரில் அமர்ந்திருந்தனர். வீட்டு வேலையாட்களும், நந்தினி, கபிலன், மேகலை போன்றோரும் பாட்டியின் வழிகாட்டலில் விழாவை வழி நடத்த உதவிக்கொண்டிருந்தனர்.

மாடியிலிருந்து கீழே உருண்ட வலியில் சுறுசுறுப்பாக நடக்க முடியாவிட்டாலும், கபிலனையே சுற்றிச்சுற்றி வந்தாள், மேகலை. விழாவிற்குத் தேவையான வேலைகளைக்கவனித்துக் கொண்டிருந்ததால் கபிலனால் தனியாக மேகலையிடம் நினைத்ததைப் பேசமுடியவில்லை. விழா முடியட்டும் எனக்காத்திருந்தான். நந்தினி இருவர்மேலும் எப்போதும் ஒரு கண்வைத்திருந்தாள்.



பெரிய சைஸ் கேக் கொண்டுவரப்பட்டது. நந்தினி அப்பா கேக்கைவெட்டினார். அனைவரின் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டார். தாத்தா, பாட்டி ஆசிர்வதித்தனர். கூட்டுக்குடும்பமாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதில் கபிலனும் இருந்தான். மேகலையையும் சேர்த்துக்கொண்டனர்.



மதிய உணவுவேளை. வாழையிலைப்பந்தி. ஆட்டுக்கறிக்குழம்பும், ஆட்டுக்கறிச்சுக்காவும், கோழிக்கால் வருவலும், ரசம், மோர், தயிர் பச்சடியும், பாயசமும், வாழைப்பழமும் பரிமாறப்பட்டது. அனைவரும் ருசித்து உண்டு வெற்றிலையையும், சீவலையும் மென்று குதப்பி களித்திருந்தனர்.



“இரவு ஊர்திரும்பவேண்டும். அதற்குள் கபிலனும், நந்தினியும் இன்னுமொருமுறையேனும் கூட்டத்திலில்லாமல் தனியாகச் சந்தித்தால் நெருக்கம் வளரும். என்ன செய்யலாம்.. ம்ம்…” - நந்தினி யோசித்தாள்.



“கபிலா, ஆத்துக்குப்போலாமா?. மேகலைலாம் இப்படி ஒரு ஆறப்பாத்திருக்க மாட்டா”



“கறிச்சோற தின்னுட்டு கவுந்தடிச்சுப்படுக்குற நேரத்துல, ஆத்துக்குப்போய் குளிக்கப்போறியா? அதுக்கு மொட்டமாடிலபோய் உக்காரலாம்”



“ப்ளீஸ், ஆத்துக்குபோலாம் கபிலா. எனக்காக ஒரு தடவ வாங்கலேன்” - பக்கத்திலிருந்த மேகலை கெஞ்சலாகக்கேட்டாள்.



“ம்ம்… சரி அங்கபோய் தூக்கத்தபோடலாம்” - கபிலன் சரி என்றான். “நாமளும் மேகலைட்ட சொல்ல நினைச்சத சொல்லிரலாம்” - மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.



பதினைந்து நிமிடத்தில் மேகலை, நந்தினி, கபிலன் மூவரும் தாத்தா, அப்பாவிடம் சொல்லிவிட்டுக் ஆத்துக்குக் கிளம்ப தாயராயினர்.



“வெங்கடேசா, பேரப்புள்ளைக ஆத்துக்குப்போகனும்னுதுக... பத்திரமா நம்ம வண்டில கூட்டிட்டுப்போய்ட்டு கூட இருந்து கூட்டிட்டுவா”. தாத்தா கார் ஓட்டுநரிடம் உரிமையாய்ச் சொன்னார்.



“இல்ல தாத்தா, நாங்க கார் ஓட்டனும்னு ஆசையா இருக்கு. நாங்களே போய்க்கிறோம்” நந்தினி டிரைவர் வருவதை தவிர்த்தாள்.



“பாத்து பாத்தறம்மா.. சாய்ங்காலத்துக்குல்ல வந்துருங்க” தாத்தா அக்கறை காட்டினார்.



“சரி தாத்தா. கபிலா போகும்போது நீ ஓட்டு, வரும்போது நான் ஓட்டுறேன்”



நந்தினி தாத்தாவிடம் சொல்லிவிட்டு கபிலனை கார் எடுக்கச் சொன்னாள்.

மூவரும் வீட்டு முற்றத்தில் நின்ற அந்த நீலநிற அம்பாசடர் காரை கபிலன் எடுத்தான். முன்புறம் அருகில் மேகலையும், வழக்கத்துக்கு மாறாய் நந்தினி பின்னாலும் அமர்ந்திருந்தனர்.



கபிலன் காரை ஓட்டினான். சில நிமிடங்கள் மௌனமாய்க் கரைந்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் மனதுக்குள் ஓடியது.



"இதே சீட்ல உரிமையோட உன் பக்கத்துல உக்கார இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கனும்?!" மேகலை

வெட்கப் புன்னகையுடன் கபிலனைப் பார்த்து மானசீகமாய் கேட்டாள்.



"ஆத்துக்குப் போய்ட்டுவரும்போது உனக்கு எல்லாம் தெளிவாயிருக்கும், மேகா" - மேகலையைப் பார்த்துக் கபிலன் சிறிய புன்முறுவலுடன் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.



"ஆத்துல உங்களுக்கு வச்சிருக்கேன்டி ஆப்பு. ரெண்டுபேரும் அதுல ஒன்னா மாட்டி பிரியமுடியாம ஒட்டிக்கப்போறீங்க. அத எப்ப பிரிக்கனும்னு நான் முடிவு பண்ணுவேன்" - ரியர்வியூ மிரரில் மைண்ட் வாய்ஸில் கபிலனையும், மேகலாவையும் பார்த்து குறும்புச் சிரிப்புச் சிரித்தாள்.



கபிலன் தொடர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்தான். மீண்டும் நிமிடங்கள் மௌனமாய்க் கரைந்தன. குழித்தறை ஆற்றங்கரை வந்து சேர்ந்தது.

.

"டே… போனதடவ வந்தப்பையே என்னைய பரிசல்ல கூட்டிட்டுப்போகல, இன்னைக்கு கண்டிப்பா போறோம். நான் ஏற்கனவே தாத்தாட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிட்டேன்"



"நல்லவேள, ஆத்துல குளிச்சிட்டுதான் போகனும்னு சொல்லாம இருந்த. போலாம். எனக்கு ஓகே. மேகா உனக்கு ஓகேவா?"



"ம்ம்.. எனக்கு பரிசல்ல போக ரொம்ப பிடிக்கும். அதலயும் உங்ககூடனா ரொம்ப ஸ்பெஷல்தான்". காதல் பொங்கியது மேகலைக்கு.

.

ஆற்றில் வெள்ளம் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது. தாத்தா ஏற்பாடு பண்ண பரிசலில் மூவரும் ஏஅப்படிநகபிலன் ஓரிடத்திலும் அவனுக்கு அடுத்து நந்தினியும், அடுத்ததாக மேகலையும் அடுத்து பரிசல் ஓட்டுபவரும், சதுரத்தின் நான்கு மூலையில் நால்வர்போல உட்கார்ந்துகொண்டனர். எடை சீராக இருப்பதற்காக அப்படி ஒரு ஏற்பாட்டை பரிசல்காரர் செய்திருந்தார். அப்படியில்லையெனில், ஒரு பக்கம் எடை அதிகரித்து பரிசல் கவிழ்ந்துவிடும். பரிசல் ஆற்றுநீர் செல்லும் திசையில் கிளம்பியது. லாகவமாக நீரை விலக்கி பரிசலைச் செலுத்தினார், ஓடக்காரர்.



மேகலை கபிலனுக்கு எதிர்புறம் அமர்ந்திருந்தாள். அவள் கால்களைப் பாதி மடக்கி, முழங்கால்களை இருகைகளாலும் அணைத்துக்கொண்டிருந்தாள். எதிரே கபிலன் ஒரு காலை நீட்டி, மறுகாலை பாதி மடக்கி முட்டியின் மீது ஓரு கையும், பரிசலின் விளிம்பில் மறுகையும் வைத்திருந்தான்.



மேகலையின் கால்பெருவிரல் கபிலனின் கால்பெருவிரலை தொட்டும் தொடாமலும் இருந்தது. அவ்வப்பொழுது பரிசலின் ஒவ்வொரு அதீத அசைவுக்கும்,ஏரிக்கரைாக நடப்பதுபோல் தன் கால்பெருவிரலால் கபிலனின் பெருவிரலை வருடினாள், மேகலை. கபிலன் அதில் கவனம் செலுத்தவில்லை. அவன் மேகலையிடம் எப்படித் தன் மனநிலையைச் சொல்வது என யோசித்துக்கொண்டே வந்தான். பரிசல் அத்தனை வெள்ளத்திலும் அசைந்து அசைந்து நிதானமாகச் சென்றது. அது யானையின் மீது பவனி செல்லும்போது ஏற்படும் தள்ளாட்ட உணர்வைக் கொடுத்தது. மேகலை தன் விரல் சீண்டலை செய்துகொண்டே இருந்தாள். கபிலன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். கபிலன் பரிசல் செல்லும் திசையில் முகத்தைத் திருப்பிக்கொண்டான். நந்தினி மேகலையின் சீண்டலை புன்முறுவலுடன் கவனித்துக்கொண்டே இருந்தாள்.

.

சோழபுரம் - வீரநாராயண ஏரிக்கரை



கடம்பூர் இளவரசி மணிமேகலை, பழுவூர் இளையராணி நந்தினி, வல்லவன் வந்தியத்தேவன் மூவரும் வீரநாராயண ஏரிக்கரையில் ஆளரவமற்ற ஒரு மணல்திட்டில் ஒரு மாலைநேரம் அளவளாவிக் கொண்டிருந்தனர். அருகில் ஏரியில் நீர் கைதொடும் இடத்தில் பொங்கிச்சென்றது.



சோழச்சக்கரவர்த்தி சுந்தரச்சோழரின் ஆட்சியில் மக்களும், நாடும் எத்துனை வளமாக இருந்தனர் என்பதற்குச் சான்றாக, வீரநாராயண ஏரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.



ஏரியின் வெள்ளத்தைவிட அன்று மணிமேகலையின் மனம், அதிகமாகப் பொங்கி வழிந்துகொண்டிருந்தது, வல்லவனின் மீதான காதலால்!. வல்லவனின் எதிரே, தன் வனப்பான கால்களைக் குவித்து, ஒளிர்முகத்தை அதன்மேல் தாங்கி அவள் அமர்ந்திருந்தாள். அது இரு குன்றுகளுக்கு நடுவே மிளிர்ந்த பௌர்ணமி நிலவைப்போல காட்சிதந்தது.



வல்லவன் ஆற்றின் நீரோட்டத்தையே கவனிப்பதுபோல அமர்ந்திருந்தான். ஆனால் அவன் மனம் முழுதும் பல நாட்களாய்த் தொடரும் மணிமேகலையின் காதல் மனக்குழப்பத்தை தீர்த்துவைக்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.



இளவரசி நந்தினி அதை உணர்ந்திருந்தாள். ஆதலின் அங்ஙனம் ஒரு காரியம் நடந்தேறிவிடக்கூடாதென்றும், அதற்கு எத்தகைய காரியத்தைக் கைக்கொள்வதென்றும் சிந்தனையிலிருந்தாள்.



பல நிமிடங்களுக்கு மணிமேகலையின் பார்வையை விலக்க முயன்று தோற்ற வல்லவன்,



"இளவரசி, உங்கள் பார்வையில் வழியும் காதலுக்கு நான் பொருத்தமானவனில்லை"



"பொருத்தமில்லை என்பது நான் இளவரசி என்பதால்தானே. அந்த பட்டத்தைத் துறந்து, கரிகாலனின் படைத்தளபதி தங்களது பாதம்பற்றி, பதாகையின்றி, நான் நடைப்பயணமாக வர சித்தாமாயிருக்கிறேன்"



"அப்படியில்லை இளவரசி, நான் காலைவேளையில் உங்களை நெருக்கமாக அணைப்பதுபோல் வந்ததற்குக் காரணம்…"



"தொப்…" வல்லவனின் வார்த்தைகள் முடிவதற்குள் மணிமேகலை ஏரிக்குள் வீழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள்.



"வல்லவரே, மணிமேகலையைக் காப்பாற்றுங்கள்". பதறுவதுபோல் நாடகமாடினாள் இளையராணி நந்தினி.



சிரித்தான் வல்லவன் வந்தியத்தேவன்.



"தான் மணிமேகலையை காலால் இடறி ஏரியில் விழவைத்ததை கவனித்துவிட்டாரோ?!" இப்போது உண்மையில் பதட்டம் அதிகரித்தது இளையராணி நந்தினிக்கு.



"பதட்டமடைய அவசியமில்லை,

இளையராணி. இளவரசி மணிமேகலை, நான் அவர்களிடத்தில் என் மனதில் அவர்களில்லை என்ற சொல்லவந்ததை அனுமானித்து, அதைச் சொல்லவிடாமல் எனைத் தவிர்க்கவே தண்ணீரில் விழுந்திருக்கிறார். அவருக்கு ஏரியும் புதிதல்ல, நீந்துவதிலும் கைதேர்ந்தவர்."




நிதானமாய் மறுபதிலுரைத்த வல்லவன், எந்தச்சலனுமுமின்றி மணிமேகலை ஏரிநீரில் வெள்ளம்போன போக்கில் போவதை கவனித்துக் கொண்டிருந்தான்.

.

குழித்துறை ஆற்றங்கரை



பரிசலிலிருந்து நந்தினியால் செயற்கையாக விழவைக்கப்பட்ட மேகலை, ஆற்றுவெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டு, சிறிதுநேர முயற்சிக்குபிறகு கரையைத்தொட்டு ஏறி, சற்று தள்ளி கரையில் நீர் சொட்டச் சொட்ட அமர்ந்திருந்தாள்.



"நந்து, அவளுக்கு துண்டு எடுத்துக்கொடு. கிளம்பலாம்" சலனமில்லாமல் சொல்லிவிட்டு காரை எடுக்கச் சென்றான்.



"நல்லவேள, நம்ம செஞ்சத கவனிக்கல". பெருமூச்சுவிட்டாள், நந்தினி.



அதற்குள் தூரத்திலிருந்து மேகலை நனைந்தபடி நடந்துவந்து சேர்ந்தாள். அனைவரும் வீடு திரும்ப காரில் ஏறினர்.



காரை நந்தினி ஓட்டினாள். அருகில் கபிலன் அமர்ந்தான். பின் சீட்டில் நனைந்தபடி மேகலா.



ரியர்வியூ மிரரில் மேகலையை பார்த்துக்கொண்டே வந்தான், கபிலன். தான் சொல்லவந்ததை அவள் புரிந்துகொண்டதாய் உணர்ந்தான்.



மேகலை தன் முகத்தை கபிலன் இருந்த திசையில்கூட திருப்பவில்லை. கார் ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதைப்போல அமைதியாக இருந்தாள்.



"ஏற்கனவே கபிலன்ட சொன்னபடி மூனு மாசம் பார்ப்போம், ஒத்துவரலேனா அடுத்த என்ன செய்றதுனு யோசிக்கலாம்". கபிலனை விட்டுக்கொடுப்பதாயில்லை, மேகலை.



தாத்தா வீடு வந்து சேர்ந்தனர். இரவு ஊர் திரும்ப தயாராகினர்.



மேகலையால் தன் திட்டம் உடனே கைகூடாது என நினைத்த, நந்தினி தீவிர யோசனைக்குபிறகு பார்த்திபனை தன்வயமாக்கத் திட்டமிட்டாள்.



தன்னைச்சுற்றிப் பின்னப்படும் வலையை அறியாத கபிலன் நிலாவின் நினைவில் மீண்டும் மூழ்கினான்.



நாகர்கோவில் பஸ் புறப்பட்டது.

.

நாம் கபிலனைத் தொடர்வோம்-10
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 11



இரண்டு நாள் குழித்துறையில் கழித்த பிறகு நாகர்கோவில் வீடு திரும்பினர். கபிலன், மேகலை, நந்தினி மூவரும் பேருந்தில் ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு சிந்தனை.



கபிலன் சற்று ஆழ்ந்த சிந்தனையிலிருந்தபடியே கண்ணயர்ந்தான். அவன் மனம் மட்டும் விழித்திருந்தது. பேருந்தின் ஓட்டத்தில் அவன் மனம் கடந்த இரண்டுநாள் நிகழ்வுகளையும் அசைபோட்டது...



“என் மனதைப்பறிக்க

சில பகிரங்க முயற்சிகள்.

இல்லாத ஒன்றுக்காக,

இடைக்காலப் போராட்டம்!

விழி பார்ப்பதால்

களி அடையப்படுகிறது.

அதில்

அறிவியலார் கூற்றுக்கு மாறாக

ஆண்டுகளாக பலவாக,

ஒரே பிம்பமே பொதிந்துள்ளது!

வாஞ்சையுடன் நோக்குகின்ற

விழியிலெல்லாம்

அவள் ஒளிகளே.

ஆதலின் உங்களுக்கு

என் பார்வை அர்த்தமற்றது.!

உள்ளது எதுவெனினும்

உவகையுடன் கொடுத்து விடுவேன்!

இழந்த இதயத்திற்காக

ஏனிந்த வீண்முயற்சி!

உடலைக்கூட தருகிறேன்,

கூறுபோடினும் ஊறில்லை!

அதிர்ச்சி கொள்ளாதீர்;

இதயம் மட்டும்

தொலைந்திருக்கும்!?




...சட்டென்று விழித்தான் கபிலன். அவன் மனமும், அவர்கள் வந்த பேருந்தும் குழித்துறையிலிருந்து, நாகர்கோவில் வந்தடைந்திருந்தது.



பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவில் நந்தினி குடும்பத்தாரும், இன்னொரு ஆட்டோவில் கபிலனும், மேகலையும் ஏறினர். வீடுவரை சென்று மேகலையை விட்டுவிட்டு, தன் வீடு திரும்பினான், கபிலன்.

.

மறுநாள் திங்கள் காலை. அமுதன் மற்றும் மாறனுடன் கல்லூரி வகுப்பறை முன்னிருந்த வேப்பமர நிழலில் வழக்கம்போல் நின்று பேசிக்கொண்டிருந்தான். அவன் மனம் முழுதும் நிலா. கண்கள் பார்ப்பதெல்லாம் வெண்ணிலாவின் உருவமாகவும், கேட்பதெல்லாம் நிலாவின் குரலாகவும் இருந்தது.



மேகலையின் வெளிப்படைக்காதலால் இயல்பாக சஞ்சலப்பட்ட மனத்தாலும், நந்தினி மேகலையின் அதீத காதல் நாடகத்தாலும், துவண்டுபோன கபிலனின் மனம் அதிகமாகத் தேடியது நிலாவை. வகுப்பறை செல்லும் நேரம்வரை வரவில்லை அவள்.



“டே… நீங்கெ போங்கடா. அவ வராளானு கொஞ்ச நேரம் நின்னு பாத்துட்டு வரேன்”.



“டே.. வேலுச்சாமி சார் க்ளாஸ்டா. ஒரு செகண்ட் லேட்டானாலும் விடமாட்டார்.” மாறன் நினைவுபடுத்தினான்.



“ஏற்கனவே க்ளாஸ் டைம் ஆயிருச்சு. இந்நேரம் அவர் க்ளாஸ்க்கு வந்திருப்பாரு. இப்பபோனாலும் விடமாட்டார். இப்ப நாமபோய் நின்னு, அவரு நம்மள உள்ளவிடாம, திருப்பி அனுப்பி நாம வர்றதுக்கு, இப்டியே இண்டோர்போய் டீ.டீ யாவது வெளயாடலாம்”. அமுதன் அருமையாகக் கணித்தான்.



“சரிடா, நீங்கெபோய் வெளயாடிட்டிருங்க. நான் வந்திர்றேன்”



“நீ. இன்னைக்கு நிக்கிற மூடுக்கு, நிலாவப் பாத்தாதான் வருவ. இல்லேனா எப்டியும் நாங்க டீ குடிக்க வெளிய வர்ற வரைக்கும் நிப்ப”. கேலியாகச் சொன்னான் மாறன்.



மூவரும் சிரித்தனர்.



“சரி… நண்பனின் காதலுக்காக நாமளும் சில பல தியாகங்கள செஞ்சோம்னு சரித்திரம் சொல்லட்டும். நீ போலாம்னு சொல்றவரைக்கும் நாங்களும் நிக்கிறோம்டா”.



அமுதன் சொல்ல, மீண்டும் மூவரும் சிரித்தனர்.



சிரித்து முடித்து திரும்பிய கபிலனின் சிந்தை சிலிர்த்தது. வெண்ணிலா கல்லூரிக்குள் அவனுக்கு ஐம்பதடி தூரத்துக்குள் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தாள். இன்று மேகலை அவளுடன் வரவில்லை.



கிளிப்பச்சை நிறத்தில் சீராக அயர்ன் செய்யப்பட்ட காட்டன் சல்வார். கவனமாக மடித்து இடது தோள்பட்டையில் நீளமாகத் தொங்கிய கருப்பு நிற துப்பட்டா. நீள்செவ்வக வடிவில் கல்லூரிப் புத்தகங்கள் இரண்டை நெஞ்சோடு குறுக்காக இடதுகையால் அணைத்திருந்தாள். அதில் பச்சைநிற டிசைனர் வளையல்கள் பாங்காய் அணிந்திருந்தாள். ஒரு வரிசை வெள்ளிக்கொலுசும், அதன் பிணைப்பில் மூன்று குண்டு மணிகளும் அவள் சிவந்த பாதங்களால் அழகாயிருந்தன!.



கபிலன் அவளை நோக்கி எதிரே நடந்தான்.



“கபிலா, எங்கடா போற. அவ பாட்டுக்கு போகப்போறா. அதுக்கு இங்க நின்னே பாக்கலாம்ல”. மாறன் சிரித்தபடியே சொன்னான்.



“விட்றா. ‘பக்கத்துல போயும் நான் பேசல பாரு உன்ட’னு நாளைக்கு நிலாட்ட சொல்லி, அய்யா போட்ட சபதத்த கடைப்படிச்சேனு ப்ரூஃப் பண்ணலாம்ல. ஒரு நட போய்ட்டு வரட்டும். அமுதன் சொல்லிச் சிரித்தான்.



கபிலன் அவர்கள் சொன்னதைக் காதில் வாங்கவேயில்லை. நிலாவை நோக்கி நடந்துபோய்க்கொண்டேயிருந்தான். தற்செயலாக அவளைக் கடப்பதுபோல் நிலாவின் முகத்தையும் அதன் உணர்வுகளையும், அவளின் அருகாமையையும் அனுபவிப்பதில் அப்படியொரு மகிழ்ச்சி.



நிலா அருகில் நடந்துவந்தாள். கபிலன் எதிரே நடந்து சென்றான். கபிலனின் கண்கள் நிலாவின் விழிகளுக்கும், காலுக்கும்; அவள் நெருங்க நெருங்க, நிலாவின் பக்கமாய் இருக்கும் ஏதோ ஒன்றை பார்ப்பதுபோலவும் தவியாய் தவித்தது.



நிலாவின் விழிகள் நிலையாய் சிறிது தூரத்தில் நடைபாதை மண்ணையே பார்த்தது. ஆனால் அது கபிலன் எதிரே வருவதையும் மறைமுகமாக கவனித்தது.



நிலாவும் கபிலனும் ஒருவரையொருவர் கடந்தனர்.



நிலாவின் விழிகளில் ஆழ்ந்த அமைதி. விழிபார்க்கும் திசை கபிலனின்பக்கம் சிறிதும் நகரவில்லை. ஆனால் நெஞ்சோடு புத்தகங்களை அணைத்திருந்த கைகள் இயல்புக்குமேல் இறுக்கமாய்ப் புத்தகங்களைப் பற்றின. இதழ்களில் அழகான புன்னகை பூத்தது.



கபிலன் அதைக் கவனித்தான். அவளுக்கு நேரெதிர் மனநிலையிலிருந்தான். கண்கள் அலைபாய்ந்தன. உதடுகள் பேசத்துடித்தன. கால்களில் ‘விர்ரென்று’ மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்ந்தான்.

.

சோழ நாடு - தஞ்சாவூர் அரண்மனை பாடசாலைக்குச் செல்லும் ராஜபாட்டை



பச்சைநிற பட்டாடையில், இடதுகையில் வேதப் புத்தகங்களை மார்போடு அணைத்துச் சென்ற இளையபிராட்டியின் கைகள் இறுகின, மரகத வளைகள் குலுங்கின, மாணிக்கப் பரல்கள் நிறைந்த பொற்சலங்கைகள் சலசலத்தன. பாவையின் பார்வைமட்டும் நிதானித்திருந்தன. கடந்து சென்ற குந்தவை, தன் மென்புன்னகையாலும், துடித்த கரங்களினாலும் வல்லவன் வந்தியத்தேவன் மனதை கடைந்து சென்றாள்.



சில அடிகள் எடுத்துவைத்த வல்லவன், சிறிதாய் குந்தவை சென்ற திசையைத் திரும்பிப் பார்த்தான். இளையபிராட்டி சட்டென தான்போன திசையில் தன் ஓவியமுகத்தை ஒயிலாகத் திருப்பிக்கொண்டாள்.

.

கல்லூரி வளாகம்



நிலாவும் தன்னைத் திரும்பிப் பார்த்ததில் பூரித்த கபிலன், நண்பர்கள் நின்றிருந்த இடம் நோக்கி நடக்கவில்லை, பூமியை மறந்து வானத்தில் மிதந்தான்.



பச்சை நிற ஆடையிலே

இச்சைராணி அவளிருந்தாள்.

பலமுறை நான் பார்த்தேன்

சிலமுறை அவள் தவி(ர்)த்தாள்!.

காலஞ்சென்று நான் சென்றேன்,

காணவிழைந்து நான் தவித்தேன்.

மின்சாரம்பட்டதுபோல்

என்சரீரம் விறுவிறுக்க,

சாந்தமான அவள் நடையில்

காந்தமாக எனை ஈர்த்தாள்!

தவிர்ப்பதாய்க் காட்டவிரும்பி

தவிப்பாய் நான் முன் சென்றேன்.

கடக்கமட்டும் இயன்ற என்னால்,

அடக்க இயலவில்லை மனத்தவிப்பை!

தூரம் சிறிது கடந்தபின்

ஓரமாய் திரும்பிப்பார்த்தேன்.

நிலையான பார்வையதனை

நிதானமாய் வீசிச்சென்றாள்.

கலையான அப்பார்வையில் -

களிப்புடனே மிதந்துவந்தேன்!




"கம்பரே கவிபாடி கொண்டிருக்கிறீர்களா?! பூலோகத்துக்கு வாருங்கள்". அமுதன் நக்கலாகச் சொல்லி, கபிலனின் கையைப் பிடித்து இழுத்தான்.



"இர்றா..". அமுதன் கையை விலக்கிவிட்ட, கபிலன் இப்பொழுதுதான் யோசித்தான். 'ஏன் நிலா வழக்கத்திற்கு மாறாக தனியாக கல்லூரிக்கு வந்தாள்?!'



"மாறா, உன் தங்கச்சி ஏன் இன்னைக்கு காலேஜ்க்கு வரல?"



"அவ இன்னைக்கு மூட் இல்லனு வரலனு சொல்லிட்டாடா"



மாறனின் பதிலில் கபிலன் புரிந்துகொண்டான், மேகலை வராததற்குக் காரணம் கடந்த இரண்டு நாள் குழித்துறையில் நடந்த சம்பவங்கள்தான்.



"நந்தினி எங்கடா போனா, கபிலா?"



"ம்ம்.. நானும் அதத்தான் யோசிக்கிறேன். எப்பவும் வரலேனா முதல்நாளே சொல்லுவா.. இன்னைக்கு என்னாச்சுனு தெரியல"



"பார்த்திபனையும் காணோம். இன்னைக்கு என்னடா ஆச்சு இவுங்கெளுக்கு?"

.

"என்ன இன்னைக்கு புதுசா. கபிலன் இல்லாம வெளிய போற. அதுவும் என்னைய ஏன் கூப்ட நந்து?"



தன் அப்பாவின் மாருதி பெலெனோ காரை ஓட்டிக்கொண்டிருக்கும் நந்துவிடம் அருகில் முன்சீட்டில் அமர்ந்திருந்த பார்த்திபன் வெளியில் வியப்புடனும், உள்ளே பூரிப்புடனும் கேட்டான்.



நந்தினி சில வினாடிகள் வருத்தமாய் யோசிப்பதைப்போல் கார் ஓட்டிக்கொண்டிருந்தாள்.



பார்த்திபன் மனம் பரபரத்தது.



நந்தினியின் அழகில் மயங்காதவர் எவரும் இல்லை அந்த காலனியில். அதில் மாறனும், பார்த்திபனும் அவள் சொல்லுக்கு சொக்கிப்போகும் நிலையில் இருந்தனர். அதில் மேகாவை மனதில்வைத்து மாறன் வேலைக்காகமாட்டான் என யோசித்து, பார்த்திபனை வளைக்கத் திட்டமிட்டாள், நந்தினி.



"இல்ல. பார்த்திபா.. உனக்கு தெரியாததில்ல. நானும், கபிலனும் எவ்ளோ க்ளோஸ்னு. ஆனா அவன் நிலாட்ட ப்ரப்போஸ் பண்ணதுல இருந்து என்ட டிஸ்டென்ஸ் மெய்ண்டெயின் பண்ண ஆரம்பிச்சுட்டான். என்ட எதயும் ஓபனா பேசுறதில்ல. இதுல மேகாவும் கபிலனே கதின்னு கிடக்கா"



"மேகாவா? என்ன சொல்ற நந்து?". பார்த்திபனுக்கு அது ஆச்சர்யமான செய்தி.



" ஆமா, பார்த்திபா. வீக்எண்ட் எங்க தாத்தா வீட்டுக்கு போனப்பதான் எல்லாம் புரிஞ்சுது. உன்டகூட ஊருக்குபோனத சொல்லமுடியல. கபிலன் சொல்லவேணாம்னு சொல்லிட்டான். சாரி. இப்போ எனக்குனு யாரும் இல்லாத மாதிரி இருக்கு"



"என்ன நந்து. அப்டிலாம் இல்ல. கபிலன் நீ சொன்னா புரிஞ்சுப்பான். அப்டி இல்லேனா நான் இருக்கேன்!"



நந்தினியின் வலையில் அவனாக விழுகிறான் என அவனுக்குத் தெரியவில்லை.



'சொல்லிப் புரிய வைக்காதே' எனச்சொல்லிய மனதைக் கவனமாய்த் தள்ளிவைத்து, 'உனக்கு இதன் நல்ல சான்ஸ். நல்லவனாய் நடி' என மூளை சொல்லியதைச் சொன்னான், பார்த்திபன்.



நந்தினி புன்னகைத்தாள்.



நாம் கபிலனைத் தொடர்வோம்-11
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 12

"கபிலன் இல்லையென்று ஏன் கவலை, நான் இருக்கிறேன்" என்று பார்த்திபன் சொன்னதில் புன்னகைத்த நந்தினியைப் பார்த்து சிறிது கலவரப்பட்டது பார்த்திபன் மனம்.



நந்தினி ஓரு காஃபி ஷாப்பில் காரை நிறுத்தினாள்.



"வா பார்த்திபா. உக்காந்து பேசலாம்"



இருவரும் காரிலிருந்து இறங்கி அந்த காஃபிக்கடைக்குள் நுழைந்தனர். காஃபி ஆர்டர் செய்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தாள், நந்தினி.



“பார்த்திபா, என்ன உனக்குப் பிடிக்குமா?”



“என்ன கேள்வி இது, நந்து?! உன்னைய யாருக்காவது பிடிக்காம இருக்குமா?!



“இல்ல.. நான் இப்டிதான்.. கபிலனுக்கு என்னதான் ரொம்ப பிடிக்கும்னு நினைச்சிட்ருந்தேன். ஆனா அவன் நிலாவ லவ் பண்ண ஆரம்பிச்சவுடனே என்ட முன்னமாதிரி க்ளொஸா இல்ல. அதுக்காக கேட்டேன்.”



“நந்து, நீ கபிலனோட் ரொம்ப க்ளோஸ். அதுனால நான் பெர்சனலா உன்ட எந்த டிஸ்கஸனும் பண்ணதில்ல. ஆனா, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். கபிலன் இடத்துல நான் இருக்கனும். அவனவிட அதிகமா உன்னோட க்ளோஸா இருக்கனும்னு நான் நினைச்சிட்டே இருப்பேன்”



“எனக்குத் தெரியும் பார்த்திபா, உனக்கு என்னைய ரொம்பப் பிடிக்கும்னு. அதான் மாறனும் நீயும் எப்பவும் என்ட ஆசையா பேசும்போதும், உன்னைய நான் அதிகமா கவனிச்சிருக்கேன்”.



பார்த்திபன் சிலிர்த்தான். நந்தினி மனதுக்குள் சிரித்தாள்.



“சொல்லு நந்து… இப்ப நான் என்ன செஞ்சா உனக்கு ரிலாக்ஸா இருக்கும். சொல்லு செய்றேன்.”



“இப்பமட்டுமில்ல பார்த்திபா, என்னைக்கும் நீ எனக்காவே இருப்பியா?”



“என்ன சொல்ற நந்து”



பார்த்திபன் புரிந்தும் புரியாததுபோல் கேட்டான். நந்தினி வெளிப்படையாகவே சொன்னாள்.



“பார்த்திபா நான் உன்னை லவ் பண்றேன். என்கூட இனி எப்பவும் கூட இருப்பியா?”



பார்த்திபனுக்கு பேச்சே வரவில்லை. இவ்வளவு சீக்கிரம், நந்தினிபோன்ற அழகி, தான் தினமும் பார்த்து மனதுக்குள் ரசித்த ஒருவள், கபிலன்போன்ற நெருங்கிய நண்பன் இருக்கும்போது வெளிப்படையாக அவளாகவே வந்து ‘லவ்பண்றேன்’ என்று சொன்னால், எப்படி கேட்பவனுக்குப்பேச்சு வரும்.



“நந்து, எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. இனி நான் எங்க இருந்தாலும் உன்னைய நினைச்சிட்டே இருப்பேன். உன்னை எப்பவும் பக்கத்துல இருந்து பாத்துப்பேன். யாரையும் உன்னை நெருங்கித் தொல்லபண்ண விடமாட்டேன்.”



“இப்பதான் நிம்மதியா இருக்கு பார்த்திபா. ஒன்னு மனசுல வச்சுக்க. நாம லவ் பண்றது கபிலனுக்கு சொல்லலாம். ஆனா நான் உன்ட பெர்சனலா கபிலனப்பத்தி சொல்ற விசயம் நமக்குள்ளயே இருக்கனும். நான் வெளிப்படையா கபிலன்ட டிஸ்டெண்ஸ் மெயிண்டெய்ன் பண்ண மாட்டேன். அவனுக்கு சப்போர்ட்டாதான் பேசுவேன். அத நீ புரிஞ்சுக்கனும். நீயா அவன்ட, என்ட க்ளோஸ்ஸா இல்லாம என்ன செய்யனும்னாலும் செஞ்சுக்கோ, புரியுதா?”



“ம்ம்.. புரியுது நந்து”



“நந்தினி தன்னை காதலிப்பதாகச் சொல்லி தன்கூடயே இருக்கவேண்டும் எனக்கேட்டதே பெரிய விசயம். மத்ததெலாம் எப்டி டீல் பண்றதுனு அப்புறம் பாத்துக்கலாம். இப்ப ‘சரினு’ சொல்லிவைப்போம்” என நினைத்துக்கொண்டான்.



நந்தினி நினைப்பதை பார்த்திபன் கொஞ்சம்கூட தெரிந்துகொள்ளவில்லை.



“இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு பார்த்திபா. சரி போலாமா”



காலியான காஃபி மஃக்கை டேபிளில் வைத்துவிட்டு கிளம்பினர், இருவரும்.



“நீ கார் ஒட்டு பார்த்திபா. உன்கூட பக்கத்துல உக்காந்து வர ஆசையா இருக்கு”



நந்தினி சொன்னதைக் கேட்டு, பூரிப்புடன் காரை எடுத்தான். நந்தினி பார்த்திபனின் இடது கரத்தை ஆறுதலாகப் பற்றிக்கொண்டாள். கபிலன் இடத்தில் தான் அமர்ந்துவிட்டதாக நினைத்தான்.



கபிலன் மனதைக் கலவரப்படுத்தி தன் பக்கம் திருப்ப புது வழி கிடைத்ததாக நந்தினி மகிழ்ச்சியுற்றாள்.

.

கல்லூரி வளாகம்



மதிய உணவு இடைவேளையில் உணவு அருந்திவிட்டு கபிலன், அமுதன் மற்றும்

மாறன் மூவரும் வேப்பமர நிழலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.



காரிலேயே கல்லூரிக்குத் திரும்பினர் நந்தினியும், பார்த்திபனும்.



நண்பர்கள் மூவரும் அமர்ந்திருந்த வேப்பமரத்தைத் தாண்டிப்போய்ப் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தினான், பார்த்திபன்.



நந்தினியின் கார் க்ராஸ் செய்யும்போது, கபிலனும் நந்தினியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.



கபிலன் சிறிது கோவத்தைக்காட்டினான். நந்தினி அமைதியாக வைத்துக்கொண்டாள் முகத்தை. பார்த்திபன் அதைப்பார்த்து பெருமைப்பட்டுக்கொண்டான்.



காரை நிறுத்திவிட்டு வேப்பமரத்தடிக்கு வந்தனர். பார்த்திபன் கொஞ்சம் திமிறாக முன்னால் நடந்து வந்தான். நந்தினி கொஞ்சம் அடக்கி வாசிப்பதுபோல் பின்னாலேயே வந்தாள். கபிலன் இதையெல்லாம் நன்கு கவனித்தான்.



அமுதனும், மாறனும் குழப்பமாய்ப் பார்த்தனர்.



“என்ன நந்து காலைல இருந்து காணோம். எங்க போறேனு சொல்லவேயில்ல. இப்ப ரெண்டு பேரும் ஒன்னா வர்றீங்க. அதுவும் நீ காலேஜ்க்கு கார் எடுத்துட்டு வரமாட்டியே?”



“ஏன், நாங்க வெளிய சொல்லாமப் போகக்கூடாதா” கபிலன் நந்தினியிடம் கேட்ட கேள்விக்கு, பார்த்திபன் தெனாவட்டாக பதில் சொல்லிவிட்டு நந்தினியைப் பார்த்து புன்னகைத்தான்.



நந்தினி கண்ணைச்சுறுக்கி, சிறிதாகத்தலையை அசைத்து, “இதெல்லாம் வேண்டாமே, பளீஸ்” எனச் சன்னமாகச் சொன்னாள் பார்த்திபனிடம்.



பார்த்திபன் தலையாட்டினான். கபிலன் கடுப்பானான்.



“என்ன நந்து என்ன நடக்குது இங்க?”



“நானும் நந்தினியும் லவ் பண்றோம். இனி இப்டி ஒவ்வொரு விசயத்துக்கும் நீ கேள்வி கேக்காம இருக்குறது நல்லது”. மீண்டும் பார்த்திபனே பதில் சொன்னான்.



“பார்த்திபா, ப்ளீஸ்…”. இந்தமுறை நந்து கொஞ்சம் சத்தமாகவே பார்த்திபனிடம் சொன்னாள்.



கபிலன், அமுதன், மாறனும் மூவரும் ஒருவரையொருவர் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டனர். பார்த்திபன் பதிலளித்ததொனியில் மூவரும் கடுப்பானாலும், நந்தினியின் லவ் மேட்டர் என்பதால் பொருத்துக்கொண்டனர்.



“சூப்பர்டி. இத எங்களையும் கூட்டிட்டுப்போய் ஒரு ட்ரீட் குடுத்துச் சொல்லிருக்கலாமே”. பார்த்திபன் நடவடிக்கை எரிச்சலூட்டினாலும், நந்தினிக்காக அதைத் தள்ளிவிட்டு, உளமாற மகிழ்ந்தான் கபிலன்.



“வாழ்த்துக்கள், நந்து. வாழ்த்துக்கள் பார்த்திபா”. மாறன் இருவரிடமும் கைகுலுக்கினான்.



“அப்போ இன்னைக்கு நைட் டின்னர் பார்ட்டி பை நந்தினி…”. அமுதன் கொக்கிபோட்டான்.



“ம்ம்.. போலாம்”. நந்தினி அடக்கமாகப் பதில் சொன்னாள்.



கபிலன் நந்தினியின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். நந்தினி கபிலனைப்பார்ப்பதைத் தவிர்ப்பதுபோல் நடந்துகொண்டாள்.



“சரி ஈவ்னிங் பாக்கலாம் மக்களே. பை நந்து. நான் க்ளாஸ் போறேன். கார் கீ என்டயே இருக்கட்டும்”. நண்பர்களிடமும், நந்துவிடமும் சொல்லிவிட்டு, கார் கீயை தன் ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டே, கபிலனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுச் தன் வகுப்பறை சென்றான், பார்த்திபன்.



கபிலன் எரிச்சலுடன் நந்தினியைப் பார்த்தான். அமுதனும், மாறனும் அவர்களது வகுப்பறைக்குச் முன்னால் சென்றனர்.



கபிலன் கடுப்பாக மரத்தடியிலேயே நின்றுகொண்டேயிருந்தான்.



“சாரிடா. அவனுக்காக நான் சாரி கேட்டுக்குறேன். வா க்ளாஸ் போலாம்”.



கபிலன் கையைப்பிடித்து இழுத்துச்சென்றாள், நந்தினி. அரைமனதுடன் வகுப்பறைக்குச் சென்றான், கபிலன்.

.

மூன்று வருடங்களுக்குப்பின்…



2006 ஜூலை, வெள்ளி மாலை 3 மணி - கல்லூரி வாசல் (அத்தியாயம் 3ன் முடிவில்)



“யார்ரா இவன்? யார்றா அவ நந்தினி? உன் ப்ரண்டுங்ற!. இவன் ஏண்டா அவட்ட உன்னைய பேசக்கூடாதுங்றான்?! - மாப்ள கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, டீக்கடை பெஞ்சில் சரிந்து படுத்துக்கொண்டே கடந்த 3 வருட வாழ்க்கையை சொல்லிக்கொண்டிருந்த கபிலன், எழுந்து உட்கார்ந்தான்.



“அன்னைக்கு கார் கீய விரல்ல சுத்திக்கிட்டே போனவந்தான் மாப்ள. அதுக்கப்புறம் அவன் அழிச்சாட்டியம் தாங்க முடியல. நந்தினிகூட உட்காராத, நடக்காத, பேசாதன்னு… என்னையும், அமுதன், மாறன் எல்லாத்தையும் எதிரி மாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டான்.”



“ஏன், நந்தினி ஒன்னும் சொல்ல மாட்டாளா”



“அவ, பாவம்டா என்னையும் விட்டுக்கொடுக்க முடியாம, பார்த்திபன்மேல இருக்குற லவ்ல அவனையும் ஒன்னும் சொல்ல முடியாம இருக்கா. ஆனா, பார்த்திபன் என்ன பேசுனாலும் நான் எப்பவும்போலதான் அவட்ட இருக்கேன். நந்தினியும் அப்டியேதான் இருக்கா. சொல்லப்போனா லாஸ்ட் 3 வருசத்துல, பார்த்திபன லவ் பண்ண ஆரம்பிச்ச பின்னாடிதான் என்ட ரொம்ப ஒட்டிக்கிட்டா, மாப்ள”



“ம்ம்… இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே மச்சான்?”



“எனக்கும் சில நேரம் அப்டித்தோனும். ஆனா நானோ, நந்தினியோ நினைக்கிறத செஞ்சுட்டுதான் இருந்தோம், இன்னமும் இருக்கோம்.”



“அப்டீங்ற?”



“ஆமா, மாப்ள. அதுக்குமேல இன்னொரு பெரிய மேட்டர் நடந்துச்சு”



"என்ன மச்சான், பெரிசா கொக்கி போடுற"



“சொல்றேன். நீ நம்ம ஆளுங்கல ஊருக்கு அனுப்பு. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க, நீ இன்னைக்கு நைட் இருந்திட்டு காலைல ஊருக்குப்போ, மாப்ள. நைட் மிச்ச கதைய சொல்றேன்”



“சரி, மச்சான். செஞ்சிருவோம்”

.

நாம் கபிலனைத் தொடர்வோம்-12
 

Latest posts

New Threads

Top Bottom