Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

பன்னிரண்டாம் அத்தியாயம்

சீதாவின் பெருமிதம்

"சீதா! வாடி, அம்மா! நான் சகல விஷயமும் கேள்விப்பட்டேன்! மாப்பிள்ளை இந்த எலெக்ஷனிலே ஜயிக்கிறதற்காக நீ ரொம்பப் பாடுபடுகிறாயாம், எனக்கு ரொம்ப சந்தோஷம். சொந்த மனுஷாள் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்? இந்த மாதிரி சமய சந்தர்ப்பத்துக்கு ஒத்தாசை செய்வதற்காகத்தானே பந்துக்கள் வேண்டும் என்கிறது?" என்றாள் சரஸ்வதி அம்மாள். சூரியா சொன்னதிலிருந்து மாமியின் மனோபாவத்தைச் சீதா கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்த போதிலும் சரஸ்வதி அம்மாள் இவ்வளவு அன்பும் ஆதரவுமாகப் பேசியது சீதாவுக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "மாமி! நீங்கள் வந்துவிட்டீர்கள் அல்லவா! என்னுடைய தலைப்பொறுப்பு நீங்கிற்று. இனிமேல் எல்லாம் உங்கள் பாடு! இன்னும் இரண்டு நாளில் நான் ஊருக்குப் புறப்பட வேண்டும்!" என்று சொன்னாள். "ஊருக்குக் கிளம்புகிறாயா? அழகாய்த் தானிருக்கிறது! நான் வந்துவிட்டேனே என்று சொல்கிறாயா? நான் நாளைக்கே ஊருக்குப் போய்விடுகிறேன், சீதா!...." "மாமி! மாமி! சத்தியமாய் நான் அதற்காகச் சொல்லவில்லை. உங்கள் பேரில் எனக்கு என்ன விரோதமா? எப்போதாவது உங்க ளுடைய வார்த்தையை எதிர்த்து நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா? உண்மையாகவே நான் ஊருக்குப் போக வேண்டும் என்றிருக்கிறேன்..." "எல்லாம் மாப்பிள்ளைக்கு எலெக்ஷன் ஆன பிற்பாடு போகலாம். நீ சொல்லித்தான் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறாராம். நீ மீட்டிங்கில் பேசுகிறாயாம்; பாடுகிறாயாம். உன்னால்தான் மாப்பிள்ளைக்குச் சேர்மன் வேலை ஆகப் போகிறதென்று இந்த ஜில்லாவெங்கும் பேச்சாயிருக்கிறது. அப்படியிருக்க, நீ திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்றால், மாப்பிள்ளைக்கு யார் ஒத்தாசை செய்வார்கள்?"

"உங்களுடைய மாப்பிள்ளைக்கு யாருடைய ஒத்தாசையும் வேண்டியதில்லை. அவருடைய சாமர்த்தியத்துக்கு இன்னொருத்தரின் ஒத்தாசை எதற்கு? அதிலும் என்னால் என்ன பிரமாதமாகச் செய்துவிட முடியும்? உங்களுடைய பெண் லலிதா அடிக்கடி 'அஸ்து' சொல்லாமலிருந்தால் அதுவே மாப்பிள்ளைக்கு பிரமாத ஒத்தாசையாயிருக்கும். இந்த அதிசயத்தைக் கேளுங்கள், மாமி! உங்கள் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நிற்கிறது பற்றி இந்த தேவபட்டணத்தில் உள்ள அத்தனை ஜனங்களும் சந்தோஷப்படுகிறார்கள். யாரிடம் இவர் போனாலும் 'உங்களுக்குத்தான் எங்களுடைய ஓட்டு!" என்று சொல்லுகிறார்கள். ஆனால் லலிதாவுக்கு மட்டுந்தான் இது ஒன்றும் பிடிக்கவில்லை. ஓயாமல் முணு முணுத்துக் கொண்டிருக்கிறாள். மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றதனால் ஏதோ குடி முழுகிப் போய்விட்டது போல் சண்டை பிடிக்கிறாள். அவருக்கும் 'சீ!' என்று போய் விடுகிறது! அவர் மனம் வெறுத்து 'எனக்கு இந்த எலெக்ஷனும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம்! எங்கேயாவது காசி ராமேஸ்வரத்திற்குப் போய் விடுகிறேன். இல்லாவிட்டால் திருவண்ணாமலைக்குப் போய் ரமண ரிஷிகளின் ஆசிரமத்தில் சேர்ந்துவிடுகிறேன்' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். இன்று காலை முதல் பாருங்கள், இரண்டு பேருக்கும் ஒரே சண்டை!...." சரஸ்வதி அம்மாள் கோபத்தோடு தன் குமாரி லலிதாவைப் பார்த்து, "ஏண்டி லலிதா! இப்படித்தான் செய்கிறதா? அழகாயிருக்கிறதடி! உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன? யாராவது கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கூத்தடிக்கிறாயா? இனிமேல் அந்த மாதிரியெல்லாம் வாயைத் திறந்து சொல்லக் கூடாது! இல்லா விட்டால், இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு!"

"சரி, அம்மா! நான் போய்விடுகிறேன்!" என்று லலிதா விளையாட்டுப் புன்சிரிப்புடன் கூறினாள். "பார்த்தீர்களா, மாமி இவள் சொல்வதை? ஊருக்குப் போய் விடுகிறாளாம்! நன்றாயிருக்கிறதல்லவா கதை? நாளைக்கு மாப்பிள்ளை எலெக்ஷனில் ஜயித்ததும், இவளைச் 'சேர்மனுடைய ஒயிப்' என்றும், 'மிஸ்ஸஸ் சேர்மேன்' என்றும் கொண்டாடப் போகிறார்களா? வேறு யாரையாவது கொண்டாடப் போகிறார்களா? டீ பார்ட்டி களுக்கும் டின்னர்களுக்கும் இவளை அழைத்து மாலை போடப் போகிறார்களா? வேறு யாரையாவது அழைத்து மாலைப் போடப் பாகிறார்களா? 'எங்கள் வீட்டுக் கலியாணத்துக்கு வரவேண்டும்', 'எங்கள் வீட்டுக் கிரஹப்பிரவேசத்துக்கு வரவேண்டும்' என்று இவளை வருந்தி வருந்தி அழைக்கப் போகிறார்களா? வேறு யாரையாவது அழைக்கப் போகிறார்களா? குரூப் போட்டோ வில் இவள் அகத்துக்காரர் பக்கத்தில் ஜம்மென்று உட்காரப் போகிறாளா? வேறு யாராவது உட்காரப் போகிறார்களா? அதெல்லாம் தெரியாமல் இவள் ஓயாமல் ஏதாவது நிஷ்டூரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கொஞ்சம் இவளுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டும்!" "கொஞ்சம் சொல்கிறது என்ன? நிறையச் சொல்லுகிறேன். இவள் மாத்திரம்தான் இப்படி என்று நினைக்காதே. இவளுடைய அண்ணா இருக்கிறானே, உன்னுடைய அம்மாஞ்சி சூரியா, அவனும் இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டிருக்கிறான். எலெக்ஷனுக்கு நின்று விட்டதால் ஏதோ குடி முழுகிவிட்டது போல உளறுகிறான். 'வாயை மூடிக் கொண்டிரு! மாப்பிள்ளையிடம் ஏதாவது உளறி வைக்காதே!' என்று கண்டித்து அவனை அழைத்துக்கொண்டு வந்தேன்.

அண்ணாவும் தங்கையும் ஒரே அச்சு. இரண்டு பேரும் அப்பாவைக் கொண்டு பிறந்துவிட்டார்கள்! பிதிரார்ஜித நிலங்களையெல்லாம் பிரித்து ஆட்படைகளுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார் பாரு! அப்பாவைப் போலத்தான் பெண்ணும் பிள்ளையும் இருப்பார்கள். எலெக்ஷனுக்கு நிற்கக்கூடாதாம்; பணங்காசு சம்பாதிக்க கூடாதாம். ஆனால் ஜெயிலுக்கு மட்டும் போக வேண்டுமாம்! அடியே, சீதா! உனக்கு இருக்கிற புத்தியிலே எட்டிலே ஒன்று இவர்களுக்கு இருக்கக் கூடாதா?" சீதாவின் உடல் பூரித்தது; உள்ளத்தில் கர்வம் ஓங்கி வளர்ந்தது. தன்னைக் கண்டால் வேப்பங்காயைப் போல் கசந்து கொண்டிருந்த மாமி இப்படித் தன்னைச் சிலாகிக்கும் காலம் ஒன்று வரும் என்று சீதா கனவிலும் எண்ணியதில்லை. அப்படிப்பட்ட காலம் வந்தே விட்டது! இதை நினைத்துச் சீதாவின் நெஞ்சம் பெருமிதத்தினால் வெடித்து விடும் போல் விம்மியதில் வியப்பில்லையல்லவா! லலிதாவுக்கோ அம்மாவின் பேச்செல்லாம் ஒரு விதத்தில் கசப்பாயும் இன்னொரு விதத்தில் சந்தோஷ மாயும் இருந்தது. அம்மாவின் அப்பட்டமான சுயநலப் பேச்சுக் கசப்பாயிருந்தது. தன் அருமைத் தோழியின் விஷயத்தில் அம்மாவின் மனோ பாவம் மாறியது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அளித்தது. இந்த ஒரு நல்ல பயனுக்காகவே தன் புருஷன் தேர்தலுக்கு நின்றது சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது.

"அம்மா! இத்தனை நாளைக்குப் பிறகு இப்போதாவது நீ அத்தங்காள் நல்லவள் என்றும் புத்திசாலி என்றும் ஒப்புக் கொண்டாயே? அதற்காக ரொம்ப சந்தோஷம்?" என்றாள். "அதென்ன அப்படிச் சொல்கிறாய், லலிதா! நான் எப்போதாவது உன் அத்தங்காளைப் பொல்லாதவள் என்றோ அசடு என்றோ சொல்லியிருக்கிறேனா? சீதா! நீயே சொல்லடி, அம்மா! உன்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒழுங்காகக் குடித்தனம் செய்து வாழவில்லையே என்று வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறேன். அது ஒரு தப்பா? அதுவும் ஏதோ அபிமானத்தினால்தான் சொன்னேனே தவிர, வேறு அவர்கள் பேரில் எனக்கு என்ன வருத்தம்? எனக்கு என்ன அவர்கள் கெடுதல் செய்துவிட்டார்கள்? ஊருக்குப் போகிற பேச்சை மட்டும் எடுக்க வேண்டாம், சீதா! இந்த வீட்டில் இனிமேல் உன் இஷ்டப்படி ஏதாவது நடக்காவிட்டால் என்னைக் கேள்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "மாமி! அதற்காக மட்டும் நான் சொல்லவில்லை. என் குழந்தை வஸந்தியிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, பள்ளிக்கூடம் சாத்தப் போகிறார்கள் என்று. குழந்தையைப் பார்ப்பதற்கு நான் போக வேண்டாமா?" "சூரியாவைப் போய் வஸந்தியை அழைத்துக் கொண்டு வரச் சொன்னால் போகிறது. நீ மட்டும் இந்த எலெக்ஷன் முடிகிற வரையில் இந்தண்டை அந்தண்டை போகக் கூடாது." "நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் போக வில்லை, மாமி! சூரியாவையே போக சொல்லுங்கள். ஆனால் உங்கள் பெண்ணிடம் மட்டும் நீங்கள் கொஞ்சம் சொல்லி வையுங்கள். அவள் அபசகுணம் போல எதற்கெடுத்தாலும் 'அஸ்து' என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது..."

"லலிதாவைப் பற்றி இனிமேல் நீ கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம். லலிதா வாயைத் திறந்தால் நீ என்னைக் கேள். நாலு அறை கொடுத்து ஒரு அறையில் தள்ளிக் கதவைப் பூட்டி விடுகிறேன். நாலு வருஷமாய் மாப்பிள்ளை வருமானமே இல்லாமலிருக்கிறார். இந்த சேர்மன் வேலையாவது கிடைக்க வேண்டுமே என்று நம்முடைய குல தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். சீமாச்சு மாமா மெனக்கெட்டு வந்து உன்னைப்பற்றி ஏதேதோ புகார் சொன்னார். அதை யெல்லாம் நான் கேட்பேனா? 'போங்காணும்! யார் மேலாவது கோள் சொல்வதே உமக்கு வேலை! உம்முடைய வேலையைப் பாரும்!' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். சீமாச்சு மாமாவுக்கு இப்போதுள்ள சேர்மன் ஜவுளி லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தாராம். அதிலே ரொம்பப் பணம் இவருக்கு லாபமாம். இரண்டு மச்சு வீடு கட்டியாகிவிட்டது! அதற்காகப் பழைய சேர்மனுக்கு சீமாச்சு மாமா விழுந்து விழுந்து வேலை செய்கிறாராம். சிநேகம், பந்துத்வம் எல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. இந்தக் காலத்திலே காசு பணந்தான் பெரிது. சீதா! உன்னைப் போலச் சொந்த மனுஷ்யாளிடம் அபிமானத்துடன் இருப்பவர் களை நான் பார்த்ததேயில்லை. இந்தப் பெண் தத்துப் பித்து என்று என்னவெல்லாமோ பேசியிருந்தும் நீ பொறுமையா யிருந்திருக்கிறாயே? அதைச் சொல்லு! உனக்கு இவள் என்ன வேணுமானாலும் செய்யலாம். தோலைச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலும் தகும்!" என்று சொன்னாள் சரஸ்வதி அம்மாள். சீதா சற்று முன் தான் அடைந்த மனவேதனையை அடியோடு மறந்து, குதூகலத்தினால் மெய்மறந்தாள்.
 
பதின்மூன்றாம் அத்தியாயம்

ராகவன் பகற் கனவு

நீலத்திரைக் கடலைக் கிழித்துக் கொண்டு நீராவிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த எஸ்.எஸ். எலிஸெபத் என்னும் பிரயாணக் கப்பல். அதில் நமது கதாநாயகன் சௌந்தரராகவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். பெரும் பிரயத்தனம் செய்து அந்தக் கப்பலில் சௌந்தரராகவன் இடம் பெற வேண்டியிருந்தது. மகாயுத்தம் முடிந்து ஒரு வருஷம்கூட ஆகவில்லை யாதலால் கப்பல்களில் பிரயாணிகளுக்கு இடம் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. யுத்தம் முடிந்து சில மாதத்துக்கெல்லாம் ராகவன் இங்கிலாந்துக்குச் சென்றான். போதிய காரணமில்லாமல் தன்னைச் சர்க்கார் உத்தியோகத்திலிருந்து நீக்கிவிட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடுவது இங்கிலாந்து சென்றதன் நோக்கம். என்னதான் கம்பெனி வேலை என்றாலும், அதில் சம்பளம் எவ்வளவுதான் கிடைத்தாலும், சர்க்கார் உத்தியோகத்துக்கு ஈடாகாதென்பது ராகவனுக்குச் சீக்கிரத்திலேயே தெரிந்து போய்விட்டது. மேலும் எதற்காகத் தன் பேரில் ஒரு வீண் அபாண்டம் சர்க்கார் தஸ்தாவேஜுகளில் இருக்க வேண்டும்? யுத்தத்தில் பிரிட்டன் தோற்றுப் போய் இந்தியாவில் அரசாங்கம் மாறியிருந்தாலும் ஒருவாறு மனநிம்மதி அடைந்திருக்கலாம். ஆனால் யுத்தத்தில் பிரிட்டன் ஜயித்து இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சி நிலைத்திருக்கிறது! அவ்விதமிருக்கும்போது சர்க்கார் உத்தியோகத்தை எப்படி அவன் அலட்சியம் செய்ய முடியும்.

ஆரம்ப காலத்தில் ராகவனுடைய பொருளாதார ஞானத்தை மெச்சி உத்தியோகம் கொடுத்த துரை இங்கிலாந் திலேதான் அச்சமயம் இருந்தார். அவரிடம் தன்னுடைய கட்சியைச் சொல்லி முறையிட்டுச் சிபாரிசு பெறலாம் என்ற ஆசை அவனுக்கு இருந்தது. அந்த ஆசை எவ்வளவு வீண் ஆசை என்பது இங்கிலாந்துக்குப் போன பிறகு தான் தெரிந்தது. யுத்தத்தின் போது ஜெர்மன் விமானங்கள் இங்கிலாந்தின் பெரும் பகுதியைப் பாழாக்கியிருந்தன. கோடானு கோடி பணம் யுத்தத்தில் செலவான காரணத்தினால் இங்கிலாந்து 'இன்ஸால்வெண்ட்' ஆகிவிடுமோ என்று பயப்படும்படியான நிலைமையில் இருந்தது. ஆங்கில மக்கள் போதிய உணவில்லாமலும், உடையில்லாமலும் மற்ற வாழ்க்கை வசதிகள் இல்லாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் ராகவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி யார் உருகிக் கண்ணீர் வடிப்பார்கள்? அவனுடைய குறையைக் காதிலேதான் யார் வாங்கிக் கொள்வார்கள்? ராகவனுக்கு உத்தியோகம் கொடுத்து அவனைச் செல்லப் பிள்ளையைப் போல் நடத்திய துரைகூட இப்போது அவனுடைய புகாரைப் பொருட்படுத்தவில்லை. "மிஸ்டர் ராகவன்! இங்கே நாங்கள் அன்றாடம் ஜீவனம் செய்கிற பாடே பெரும்பாடாக இருக்கிறது. பெரிய பெரிய சீமான்கள் எல்லாருமே தினந்தோறும் க்யூவில் நின்று அரை ராத்தல் ரொட்டி வாங்கிக் கொண்டு வந்து காலட்சேபம் செய்யவேண்டியிருக்கிறது; நீ உனக்கு உத்தியோகம் போனதைப் பற்றிப் பிரமாதப்படுத்துகிறாய்.

உன்னுடைய புகாரை எடுத்துக்கொண்டு நான் இங்கே யாரிடமாவது சிபாரிசு செய்யப் போனால் என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்! நீ வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு வேலை கிடைத்தால் நான் கூட வந்துவிடுவேன்! இங்கே நீ வீணாக அலைந்து காலங் கழிக்காதே! இந்தியாவுக்குத் திரும்பிப் போய்க் கிடைத்திருக்கும் உத்தியோகத்தைச் சரியாகக் காப்பாற்றிக் கொள்!" என்று மாஜி வரவு செலவு இலாகாத் தலைவர் கூறிய புத்திமதி ராகவனைத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. அது மட்டுமல்லாமல் துரை இன்னொரு விஷயமும் சொன்னார்:- "ராகவன்! இனிமேல் இந்தியாவில் சர்க்கார் உத்தியோகத்துக்கு முன்னைப் போல் அவ்வளவு மதிப்பு இராது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்து விடுவது என்று இங்கே தொழிற் கட்சி மந்திரிகள் தீர்மானம் செய்து விட்டார்கள். அது சரியான தீர்மானம்! ஏனெனில் எங்களால் இனிமேல் நாற்பது கோடி ஜனங்கள் உள்ள ஒரு தேசத்தைக் கட்டி ஆள முடியாது. அதற்கு வேண்டிய ஆள் பலமும் வசதிகளும் இங்கே இல்லை. இந்தியா சுதந்திரம் பெற்றால் முதலில் காங்கிரஸ்காரர்கள்தான் அதிகாரத்திற்கு வருவார்கள். காங்கிரஸ் அதிகாரத்தின் கீழ் நீ சர்க்கார் உத்தியோகம் பார்க்க விரும்ப மாட்டாய் அல்லவா?" ராகவனுடைய உள்ளம் மேலும் குழப்பத்தை அடைந்தது. துரையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆயினும் சர்க்கார் உத்தியோகம் திரும்பக் கிடைக்கும் என்ற ஆசை போய்விட்டது! நல்லவேளை, கம்பெனி உத்தியோகத்தை அவன் விட்டுவிடவில்லை. நாலு மாதம் லீவு வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தான். திரும்பிப் போய்க் கம்பெனி உத்தியோகத்தை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.

இந்தியாவுக்குப் போகும் கப்பலில் இடம் கிடைப்பது மிகவும் பிரயாசையாயிருந்தது. கப்பலுக்காக காத்திருந்த சமயத்தில் அங்குமிங்கும் அவன் சுற்றியலைந்தான். அப்படி அலைந்த போது அவன் கண்ட காட்சிகளும் கேட்ட விஷயங்களும் அவனுடைய மனதில் ஆச்சரியமான ஒரு மாறுதலை உண்டாக்கின. ஆகா! இந்த இங்கிலீஷ்காரர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய தீரர்கள்? நாட்டின் சுதந்திரத்துக்காக என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நாட்டின் சுபிட்சத்துக்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள்? ஆனால் இந்தியாவில் நாம் இத்தனை காலமும் என்ன செய்து வந்தோம். அன்னியர்களின் கீழ் அடிமை உத்தியோகம் பார்த்து வந்தோம். அதைத் திரும்பப் பெறுவதற்காகக் கெஞ்சி மணியம் செய்ய இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். சீ! இது என்ன மானங்கெட்ட பிழைப்பு? இங்கிலீஷ் படிப்பு என்ன மாதிரி நம்முடைய புத்தியைக் கெடுத்து விட்டது? போனதற்கெல்லாம் பரிகாரமாக, இனிமேல் நடந்து கொள்ளவேண்டும். இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஏதேனும் ஒரு பிரமிக்கும்படியான காரியம் செய்ய வேண்டும்... எஸ்.எஸ். எலிஸபெத் கப்பலின் மேல் தளத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு சௌந்தரராகவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது மேற்கண்டவாறு பற்பல எண்ணங்கள் வந்துபோய்க் கொண்டிருந்தன. மனதை அதன் போக்கிலேயே விட்டபோது பதினைந்து வருஷங்களுக்கு முன் கராச்சியிலிருந்து பம்பாய்க்குக் கப்பலில் பிரயாணம் செய்ததில் வந்து மனம் நின்றது.

ஆகா! அந்தப் பிரயாணம் எவ்வளவு ஆனந்தமாக இருந்தது! அது பெரும்பாலும் சாமான்கள் அடுக்கிய சாதாரண நாலாந்தரமான கப்பல்தான்; இந்தக் கப்பலின் விஸ்தீரணத்திலோ கம்பீரத்திலோ அழகிலோ வசதியிலோ எட்டில் ஒரு பங்குகூட அந்தக் கப்பலில் இல்லை! ஆயினும் அந்தக் கப்பலில் அவன் அப்போது செய்த பிரயாணம் ஆகாய வெளியில் புஷ்ப ரதத்தில் தேவ தேவியர்களுக்கு மத்தியில் கந்தர்வர்களின் கானத்தைக் கேட்டுக் கொண்டு செய்த பிரயாணத்தைப் போல் ஆனந்தமயமாயிருந்தது. காரணம், அதே கப்பலில் தாரிணியும் பிரயாணம் செய்ததுதான். அடடா! என்ன தவறு செய்து விட்டோ ம்? கொஞ்சம் பிடிவாதம் பிடித்துத் தாரிணியைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்திருக்கும்? தாரிணியிடமிருந்து மனம் சீதாவிடம் பாய்ந்தது. தாரிணியைப் புறக்கணித்தது ஒரு பிசகு என்றால், சீதாவை மணந்து கொண்டது அதைவிடப் பெரிய பிசகு. கிட்டாவய்யர் மகள் லலிதாவைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இல்வாழ்க்கை நிம்மதியாகவாவது இருந்திருக்கும். லலிதாவைப் பார்க்க போன இடத்தில் இவள் குறுக்கே வந்து சேர்ந்தாள்! கண்களை அகல விரித்துப் பார்த்து நம்முடைய மதியை மயக்கிவிட்டாள்! ஒரு விஷயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கண்ணழகிலே மட்டும் சீதாவுக்கு இணையில்லைதான். தாரிணியின் கண்களைக் காட்டிலுங்கூடச் சீதாவின் கண்கள் கொஞ்சம் அதிகம் அழகானவை என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் கண்ணழகு மட்டும் ஒரு பெண்ணிடம் இருந்தால் போதுமா? போதாது என்பதற்குத் தன்னுடைய வாழ்க்கையே அத்தாட்சி! அந்தக் கண்களின் வழியாக அவளுடைய உள்ளத்தின் இயல்பைப் பார்க்கும் சக்தி தனக்கும் இல்லாமல் போய்விட்டதே? சீச்சீ! என்ன சஞ்சலபுத்தி? என்ன சண்டை பிடிக்கும் சுபாவம்? என்ன அசூயை? என்ன ஆத்திரம்? பெண்களின் கெட்ட குணங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பிரம்மதேவன் சீதாவைப் படைத்திருக்க வேண்டும்! 'சீதா' என்னும் பெயரைக் காட்டிலும் சூர்ப்பனகை என்னும் பெயர் அவளுக்கு அதிகப் பொருத்தமாயிருக்கும்.

சீச்சீ! இது என்ன எண்ணம்? தவறு முழுவதும் சீதாவினுடையதுதானா? தன் பேரிலும் தவறு இருக்கத்தான் இருக்கிறது! அவளை நடத்தவேண்டியபடி முதலிலிருந்தே நடத்தியிருந்தால் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அடங்கி நடந்திருப்பாள். புது டில்லி நாகரிக வாழ்க்கைக்கு அவளைத் தயார்ப் பண்ண யத்தனித்தது அல்லவா இப்படி வினையாக வந்து முடிந்தது? அவள் சுபாவம் கெட்டுப் போனதற்கு அந்த மடையன் சூரியாவும் ஒரு காரணம். தன்னுடைய அபிப்பிராயங்க ளைக்காட்டிலும் சூரியாவினுடைய அபிப்பிராயங்கள் அல்லவா அவளுக்கு மேலாகப் போயிருந்தன? கடைசியாக எப்படிப் பட்ட படுகுழியில் கொண்டு போய் அந்தப் படுபாவி அவளைத் தள்ளி விட்டான்? இந்த ஸ்திரீகளின் சுபாவமே அதிசயமானது தான்! சூரியாவிடம் அப்படி என்ன அழகை, அற்புதத்தை, இவர்கள் கண்டு விட்டார்களோ, தெரியவில்லை. சீதாவாவது 'அம்மாஞ்சி' என்று சொல்லி உருகிக் கொண்டிருந்தாள். தாரிணிக்கும் சூரியாவுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்குள் எப்படிச் சிநேகம் ஏற்பட முடியும்? ஆகா! சூரியாவைப் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்புவிப்பதற்காகத் தாரிணி எப்பேர்ப்பட்ட சாகஸமான காரியம் செய்தாள்: என்ன துணிச்சல்! என்ன தைரியம்? இரண்டு பேரும் அன்றைக்கு மறைந்தவர்கள் அப்புறம் வெளிப்படவே இல்லை! மத்திய சர்க்காரின் துப்பறியும் இலாகா எவ்வளவோ முயன்றும் பயனில்லை! எப்படி அவர்கள் மாயமாய் மறைந்திருப்பார்கள்?

இதில் ரொம்பவும் விசித்திரமான வேடிக்கை என்னவென்றால், கல்கத்தாவில் சீதாவைத் தாரிணி என்ற பெயரால் கைது செய்து பாதுகாப்பு சிறையிலே வைத்திருந்ததுதான்! இந்த விஷயம் கல்கத்தாவுக்கு வந்து, கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் ராகவனுக்குத் தெரியவந்தது. ஆனாலும் அதைப்பற்றி அவன் நடவடிக்கை ஒன்றும் எடுக்க முடியாமல் இருந்தது. அவள் தாரிணி இல்லை, சீதா என்று தான் சொன்னால், அவள் கைதியானபோது ஏன் அதைச் சொல்லவில்லை என்று கேட்பார்கள் அல்லவா? டில்லியிலிருந்து அவள் கல்கத்தா வந்த காரணம் என்னவென்று கேட்பார்கள் அல்லவா? அந்தக் கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்வது? கிடக்கட்டும், கிடக்கட்டும்! சிறையிலேயே அடைந்து கிடக்கட்டும்; நன்றாக புத்தி வரட்டும்; எல்லாருக்கும் விடுதலை கிடைக்கும்போது அவளுக்கும் விடுதலை கிடைத்து வெளி வரட்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் சீதாவுக்கு இன்னொரு 'சான்ஸ்' கொடுத்துப் பார்க்க வேண்டியதுதான்! அவளுடன் இல்லறம் நடத்த இன்னொரு பிரயத்தனம் செய்ய வேண்டியதுதான்! இவ்விதம் சௌந்தரராகவன் மனமுவந்து தயவு செய்து எண்ணிய தற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று, சீதாவுடன் தான் இல்வாழ்க்கை நடத்தாவிட்டால் பாமா என்கிற பிசாசின் வாயில் விழ வேண்டியிருக்கும்! அது இரும்புச் சட்டியிலிருந்து அடுப்பு நெருப்பில் விழுவது போலாகும் இரண்டாவது காரணம், குழந்தை வஸந்தி, சீமைக்குப் புறப்படுமுன் ராகவன் சென்னைக்குத் தன் மகளைப் பார்க்கப் போயிருந்தான். அப்போது குழந்தை தன் கபடமற்ற கண்களினால் தந்தையை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, "அப்பா! அம்மாவை அழைத்து வரவில்லையா?" என்று கேட்டாள். அந்தக் கேள்வியில் தொனித்த ஆதங்கத்தை ராகவனால் மறக்கவே முடியவில்லை. குழந்தையை முன்னிட்டாவது மறுபடியும் ஒரு தடவை குடித்தனம் நடத்திப் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தான். மூன்றாவதாக இன்னொரு காரணமும் இருந்தது; அது கொஞ்சம் விசித்திரமான காரணந்தான்.

ராகவன் புதுடில்லியை விட்டுக் கிளம்புவதற்கு முன்னால் ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வீட்டுக்குள் திடீரென்று ஒரு ஸ்திரீ வந்தாள். அவளுடைய தோற்றம் அச்சத்தை அளித்தது. அதைவிட அவள் பேச்சுப் பயங்கரமாயிருந்தது. "நான் யார் தெரியுமா?" என்று கேட்டாள். "தெரியாது!" என்றான் ராகவன். "உன் மனைவி சீதாவின் தாயார் நான்!" என்றாள் அந்த ஸ்திரீ. ராகவன் சிரித்துக் கொண்டே, "சீதாவுக்கு எத்தனை தாயார்?" என்று கேட்டான். "சிரிக்காதே! உன் சாமர்த்தியம் உன்னோடு இருக்கட்டும். சீதா என்னுடைய மகள், வயிற்றில் பெற்ற மகள் அல்ல; ஆனாலும் அதைவிட அதிகம். உன் மனைவி ஒரு ரத்தினஹாரம் போட்டுக் கொண்டிருந்தாளே? அது இருக்கிறதா? அல்லது விற்றுச் சாப்பிட்டு விட்டாயா? என்று கேட்டாள். ராகவன் சிறிது வியப்பும் அச்சமும் அடைந்தான். ஆயினும் வெளிக்கு அதைரியத்தைக் காட்டிக்கொள்ளாமல், "நீ எதற்காகக் கேட்கிறாய்? நீ யார்? உன் பெயர் என்ன?" என்று அதட்டிக் கேட்டான். "சொல்கிறேன், கேள். நான் உன் மாமியார்; என் பெயர் ரஸியா பேகம்; அந்த ரத்தின ஹாரத்தை நான் சீதாவுக்குக் கொடுத்தேன், அதனாலேதான் கேட்கிறேன். அது போனால் போகட்டும். சீதாவை நீ கஷ்டப்படுத்துகிறாய் என்று எனக்குத் தெரியும். உங்களிடமிருந்து தொல்லைப்படுவதைக் காட்டிலும் சிறையிலிருப்பது மேல் என்று எண்ணி அவள் சிறைக்குப் போயிருக்கிறாள். ஒரு நாள் வெளியில் வருவாள். அப்போது அவளை நீ சரியாக நடத்திப் பத்திரமாய்ப் பாதுகாக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உன்னை இந்தக் கத்தியால் ஒரே குத்தாகக் குத்திக் கொன்றுவிடுவேன்!" என்று சொல்லி ஒரு கத்தியை எடுத்துக் காட்டினாள். ராகவன் இப்போது உண்மையாகவே பயந்து நடுங்கிப் போனான். அவனால் வாயைத் திறக்கவே முடியவில்லை. சட்டென்று ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. "ரஜனீபூர் பைத்தியம்" என்று ஒரு ஸ்திரீ ரஜனிபூர் ராஜாவைக் கொல்லப் பார்த்தாள் என்றும் அவள் டில்லியில் திரிந்து கொண்டிருந்தாள் என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். "நீ ரஜனிபூர்...." என்று தயக்கத்துடன் அவன் கேட்க ஆரம்பித்தவுடனே, "ஆமாம்; நான் ரஜனிபூர் மகாராணிதான்! என் அருமை மகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்! இல்லாவிட்டால் உன்னை நிச்சயமாய்க் குத்திக் கொன்று விடுவேன்!" என்று சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ போய்விட்டாள். இந்தச் சம்பவம் கொஞ்ச நாள் வரையில் ராகவனுடைய மனதில் இடைவிடாமல் குடி கொண்டிருந்தது. ரஜனிபூர் பைத்தியம் என்பது யார் என்றும் அவளுக்கும் தன் மனைவி சீதாவுக்கும் என்ன சம்பந்தம் என்றும் அறிந்து கொள்ளப் பெரிதும் ஆவலாயிருந்தது. வேறு வழியில் இதைப்பற்றித் தெரிந்து கொள்ள முடிய வில்லை. சீதாவைக் கேட்டுத் தெரிந்து கொண்டால்தான் உண்டு. நாளடைவில் ரஸியா பேகத்தின் வார்த்தைகளின் வேகம் மறைந்துவிட்டாலும் இன்னமும் உண்மையை அறிந்து கொள்ளும் ஆவல் ராகவனுடைய மனதில் இருக்கத்தான் இருந்தது. அதற்காகவாவது சீதாவை மறுபடியும் கூட்டி வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.... கடற்காற்று சுகமாக அடித்துக் கொண்டிருந்தது. கடல் அலைகளின் ஓசை பின்னணி சங்கீதத்தைப் போலக் கேட்டுக் கொண்டிருந்தது. ராகவனுக்குக் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தன்னை அறியாமல் சாய்மான நாற்காலியில் படுத்த வண்ணம் அவன் தூங்கிப் போனான்.

அந்தப் பகற் தூக்கத்தில் ராகவன் ஒரு கனவு கண்டான். ஒரு பெரிய அரண்மனை, அதில் தர்பார் மண்டபம், பளிங்கு மேடையில் முத்து விதானத்தின் கீழ் அமைந்த நவரத்தின சிம்மாசனத்தில் ராணி ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். "ரஜினிபூர் மகா ராணிக்கு ஜே!" என்ற கோஷம் எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்தது. முதலில் தூரத்தில் நின்று பார்த்த ராகவன் அந்தச் சிம்மாசனத்தை நெருங்கிப் போனான். பத்து அடி தூரத்தில் சென்றதும் மகாராணி ராகவனைப் பார்த்துப் புன்னகை புரிந்து, "நான் யார் தெரிகிறதா?" என்று கேட்டாள். "ரஜினிபூர் ராணி!" என்றான் ராகவன். "நன்றாகப் பார்!" என்றாள் ராணி! உற்றுப் பார்த்த போது ராகவனுடைய உள்ளத்தைக் கவர்ந்த வேறொரு முகமாகத் தெரிந்தது. "ஆ! தாரிணி! நீயா?" என்று கேட்டான் ராகவன். "இன்னும் நன்றாய்ப் பார்! பார்த்துச் சொல்லு!" என்றாள் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மாது, ராகவன் பார்த்தான். இப்போது சீதாவின் முகமாகத் தெரிந்தது. "ஆ! சீதா! நீ தானா. தாரிணி மாதிரி எப்போது மாறினாய்!" என்று கேட்டான். "நான் மாறவில்லை, உங்கள் கண்களும் மனமும் மாறிவிட்டன" என்றாள் சீதா. "நான் உன்னைக் கஷ்டப்படுத்தியதை யெல்லாம் மன்னித்துவிடு!" என்றான் ராகவன். "நான் உங்களைக் கஷ்டப்படுத்தியதற்கும் நீங்கள் என்னைக் கஷ்டப்படுத்தியதற்கும் சரியாய்ப் போயிற்று. ஆகையால் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை. குழந்தை வஸந்தி எங்கே?" என்று சிம்மாசனத்தில் கிரீடமணிந்து வீற்றிருந்த சீதா கேட்டாள்.

"ஆகா! வஸந்தியை மறந்து விட்டேனே! இதோ போய் அழைத்து வருகிறேன்!" என்று ஓடத் தொடங்கினான். வஸந்தியை எங்கேயோ விட்டு விட்டு வந்ததாக அவனுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் எங்கே என்பது நினைவில் இல்லை. ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்று கொண்டே ஓடினான். கால் புதைந்த ஆற்று மணலைக் கடந்து ஓடினான். ஓடையில் இறங்கித் தண்ணீரில் நனைந்து கொண்டு ஓடினான். காட்டிலும் மலையிலும் ஓடினான். பெரியதொரு அரண்மனையின் மேல்மாடி முகப்பில் ஓடினான். முதலில் "வஸந்தி!" "வஸந்தி!" என்று கூச்சலிட்டுக் கொண்டே ஓடினான். பிறகு கூச்சல் போடவும் முடியாமல் தொண்டை நன்றாக அடைத்துக் கொண்டது. கால்கள் தடுமாறின; தலைச் சுற்றியது. ஒரு பெரும் பிரயத்தனம் செய்து, "ஐயோ! வஸந்தி!" என்று கூச்சலிட்டான். யாரோ தோளைப் பிடித்துக் குலுக்கினார்கள்; உடனே விழிப்பு வந்து விட்டது. கனவு மயக்கத்தில் வஸந்திதான் என்று நினைத்துக் கொண்டு, "ஆ! என் கண்மணி! வந்து விட்டாயா!" என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்தான். அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கியவள் வஸந்தி அல்லவென்றும் பாமா என்றும் தெரிந்து கொண்டான். தன் மனதிற்குள்ளே, "அட பிசாசே! சற்று நேரம் என்னைச் சும்மா விடமாட்டாய்?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். அந்தக் கனவு கண்டது முதல் ராகவனுக்கு வஸந்தியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அளவின்றிப் பெருகிற்று. குழந்தையை இனிமேல் என்றைக்கும் விட்டுப் பிரிவதில்லை என்று அடிக்கடி தீர்மானித்துக் கொண்டான். கனவை நினைத்துக் கொண்டு அவளுக்கு விபத்து ஒன்றும் நேராமல் இருக்கவேண்டுமே என்று ஓயாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான்.

பம்பாய்த் துறைமுகத்தில் கப்பலிலிருந்து கீழே இறங்கியவுடனே ஆகாய விமானத்தில் ஏறிச் சென்னைப்பட்டணத் துக்குச் சென்றான். பத்மாபுரத்தில் தன் தந்தை பத்மலோசன சாஸ்திரிகளின் வீட்டை அடைந்தான். வீட்டு வாசலில் வண்டி ஒன்று காத்துக் கொண்டிருந்தது. 'யாராவது ஊருக்குப் போகிறார்களா?' என்று மனத்தில் நினைத்துக் கொண்டான். டாக்ஸி வண்டியின் சத்தத்தைக் கேட்டு அவனுடைய தாயார் வெளியில் வந்து பார்த்தாள். மகனை ஆவலுடன் வரவேற்றாள். "ஏன்டாப்பா! வருகிறதாகக் கடிதம் கூட எழுதவில்லையே!" என்று ஆவலாகச் சொன்னாள். ராகவன் அதைப்n பொருட் படுத்தாமல், "அம்மா! யாராவது ஊருக்குக் கிளம்புகிறார்களா?" என்று கேட்டான். "ஆமாண்டா, அப்பா! நீ வருகிறது தெரியாதோ இல்லையோ? சூரியா வந்திருக்கிறான். குழந்தை வஸந்தியை அழைத்துக் கொண்டு புறப்படுவதற்கிருந்தான். அதற்குள் நல்லவேளையாக நீ வந்து விட்டாய்!" என்றாள். "குழந்தையை எங்கே அழைத்துப் போவதாகச் சொன்னான்?" "தேவபட்டணத்துக்குத்தான். அங்கே அவள் அம்மா இருக்கிறாள் அல்லவா?" "ஓகோ! அப்படியா!" என்று கர்ஜித்தான் ராகவன். காமாட்சி அம்மாள், "நீ வந்துவிட்டபடியால் இன்றைக்குக் குழந்தை போவதற்கில்லை!" என்றாள். "இன்றைக்கும் இல்லை; என்றைக்கும் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். சூரியாவுடன் ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாராக நின்ற வஸந்தி அப்பாவைப் பார்த்ததும் ஒரே ஓட்டமாக ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டாள். ராகவன் கால்சட்டைப் பையிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சூரியாவை நோக்கிக் குறி பார்த்து, "அடே காலிப்பயலே! உன்னைப் போன்ற அயோக்கிய சிகாமணியைக் கொன்றால் துளிக்கூடத் தோஷமில்லை!" என்று கர்ஜித்தான். சூரியா ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான்.
 
பதிநான்காம் அத்தியாயம்

ரஜினிபூர் ராஜகுமாரி

சூரியா தன் திகைப்பை நீக்கிக் கொண்டு, "மாப்பிள்ளை! இது என்ன கோபம்? இங்கிலாந்தில் இருந்தபோது இங்கிலீஷ் சினிமாக்கள் அதிகமாகப் பார்த்தீர்களா, என்ன? ஒரு காரணமுமில்லாமல் துப்பாக்கியால் சுடுவேன் என்கிறீர்களே? தோட்டாக்களை வீணாக்க வேண்டாம். பின்னால் ஏதாவது அவசியமான காரியத்துக்கு உபயோகமாயிருக்கும்" என்றான். "எப்போதும் நீ அரட்டைக் கல்லித்தனமாகப் பேசுகிறதில் கெட்டிக்காரன் என்று எனக்குத் தெரியும். உன் அதிகப் பிரசங்கத்தை என்னிடம் காட்ட வேண்டாம், சீதாவை அழைத்துக்கொண்டு ஓடினவன் அல்லவா நீ? இப்போது வஸந்தியையும் `கிட்நாப்' செய்ய வந்துவிட்டாய்! உன்னைப் போலீஸில் பிடித்துக் கொடுத்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன். தப்பி ஓடப் பார்க்காதே! ஓடினால் கட்டாயம் சுட்டுவிடுவேன்!" என்றான் ராகவன். ராகவனுக்குப் பின் புறத்தில் நின்று கொண்டிருந்த காமாட்சி அம்மாள், "அப்பா! ராகவா! இது என்ன ரகளை வந்ததும் வராததுமாய்? அப்படியொன்றும் சூரியா செய்யத் தகாத காரியத்தைச் செய்யக் கூடியவன் அல்ல. நான்தான் வஸந்தியை அவள் அம்மாவிடம் அழைத்துப் போகும்படி சூரியாவிடம் சொன்னேன். வெகு நாளாக அந்தக் குழந்தை அப்பா, அம்மா இரண்டு பேரையும் பார்க்காமல் ஏங்கிக் கிடந்தது!" என்றாள்.

வஸந்தி, "சூரியா மாமா! நான் அப்பாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் சட்டென்று இங்கிருந்து ஓடிப்போய் விடுங்கள்!" என்றாள். குழந்தையின் மழலையைக் கேட்ட ராகவனுடைய மனம் சாந்தமும் சிறிது வெட்கமும் அடைந்தது. "மிஸ்டர் சூரியா! பொம்மனாட்டிகள் எல்லோருமே உன்னுடைய கட்சியில்தான் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். சரி! இந்தத் தடவை போனால் போகிறதென்று விட்டு விடுகிறேன். விடு சவாரி! நிற்காதே! கெட் அவுட்!" என்றான் ராகவன். "ஸார்! நான் போகத்தான் போகிறேன். ஆனால் போவதற்கு முன்னால் உங்கள் மனதில் உள்ள ஒரு தப்பெண்ணத்தை நிவர்த்திக்க விரும்புகிறேன். உங்கள் மனைவி சீதாவை நான் அழைத்துக்கொண்டு ஓடிப் போனதாகச் சற்று முன்பு சொன்னீர்கள். நிஜமாகவே நீங்கள் அவ்விதம் நம்புகிறீர்களா என்று தெரியவில்லை. நம்பினால் அதைக் காட்டிலும் தவறு வேறொன்றுமில்லை. ரஜனிபூர் ராஜாவின் ஆட்கள் சீதாவைக் கைப்பற்றிக்கொண்டு போனார்கள். அதைத் தடுத்து நிறுத்தி சீதாவைக் காப்பாற்றிக் கொண்டு வருவதற்காகவே நான் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன். அப்போதுதான் போலீஸார் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். சத்தியமாகச் சொல்கிறேன்!" என்று சொன்னான் சூரியா.

"ஆமாண்டா அப்பா. ராகவா! இதையெல்லாம் சூரியா என்னிடமும் சொன்னான். அவன் சொன்னதெல்லாம் எனக்கு நம்பிக்கையாயிருந்தது, சீதாவும் அதே மாதிரிதான் சொன்னாள்!" என்றாள் காமாட்சி அம்மாள். "அம்மா பட்ட கஷ்டத்தை யெல்லாம் கேட்டால் அதிசயமாகவும் பயங்கரமாகவும் இருக்கு, "அப்பா! அரபிக்கதைகளிலே வருகிறது போல் இருக்கு!" என்றாள் வஸந்தி. ராகவன் தன் கைத் துப்பாக்கியைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, "அப்படியானால் அதையெல்லாம் எனக்கும் விவரமாகச் சொல்லிவிட்டுப் போ! சூரியா! ஊருக்குப் போக அவசரம் ஒன்றும் இல்லை!" என்றான். "அப்படியே ஆகட்டும், மாப்பிள்ளை ஸார்! எனக்கு அவசரம் ஒன்றும் இல்லை!" என்றான் சூரியா. சூரியா ரஜனிபூர் ராஜாவின் ஆட்களைப் பற்றிக் குறிப்பிட்டவுடனேயே ராகவனுடைய மனதில் அதைப்பற்றிச் சூரியாவிடம் பூரா விவரமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டாகி விட்டது. ஆகையால், ஸ்நானம், சாப்பாடு எல்லாம் முடிந்ததும் சூரியாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய பழைய மாடி அறைக்குப் போய்ச் சேர்ந்தான். "சூரியா கப்பலில் வரும்போது நான் ஒரு பயங்கரமான சொப்பனம் கண்டேன், குழந்தை வஸந்தி காணாமற் போய் விட்டது போலவும் அவளைத் தேடிக் கொண்டு நான் பூமியிலும் வானத்திலும் நீரிலும் நெருப்பிலும் புகையிலும் பனியிலும் ஓடி ஓடி அலைந்ததாகவும் கண்டேன். குழந்தையின் குரல் மட்டும் `அப்பா! அப்பா!' என்று பரிதாபமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவள் இருக்கும் இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. கனவு கலைந்து எழுந்ததும் `இனி ஒரு நாளும் வஸந்தியை விட்டுப் பிரிவதில்லை!' என்று சபதம் செய்து கொண்டேன். ஆகையினால்தான் நீ வஸந்தியை அழைத்துப் போக வந்திருக்கிறாய் என்று கேள்விப்பட்டதும் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது! அதை நீ பொருட்படுத்த வேண்டாம்!" என்றான் ராகவன்.

"மாப்பிள்ளை, ஸார்! கனவு காண்கிற விஷயத்தில் தாங்களும் தங்களுடைய மனைவியும் போட்டி போடுவீர்கள் போலிருக்கிறது. நாம் ஆக்ராவுக்குப் போயிருந்தபோது அத்தங்காள் கனவு கண்டது பற்றிச் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? ஆனால் அத்தங்காளின் வாழ்க்கையில் அந்த பயங்கரக் கனவைக் காட்டிலும் பயங்கரமான பல சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்து விட்டன!" என்று சொன்னான் சூரியா. "அந்தச் சம்பவங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தான் உன்னை இருக்கும்படி சொன்னேன், சூரியா! நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத் தோன்றவில்லையா? சீதாவைப் பற்றி அவளுடைய கணவனாகிய எனக்குத் தெரிந்திருப்பதைக் காட்டிலும் உனக்கு அதிகமாகத் தெரிந்திருப்பது ஆச்சரியம் அல்லவா?" என்று ராகவன் குத்தலாகக் கேட்டான். "ஆச்சரியமான விஷயந்தான்; இல்லை என்று சொல்லவில்லை. சந்தர்ப்பங்கள் அப்படி ஏற்பட்டு விட்டன. மேலும், நீங்கள் அநாவசியமாக என்னவெல்லாமோ சந்தேகப்பட்டுக் கொண்டு அத்தங்காளைப் பற்றிக் கவனியாமல் இருந்து விட்டீர்கள்....."

"என்னுடைய சந்தேகங்கள் அவசியமா அநாவசியமா என்பதைப்பற்றி இப்போது சர்ச்சை வேண்டியதில்லை. ரஜனிபூர் ராஜாவின் ஆட்கள் உன் அத்தங்காளைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று ஒரு கதை சொன்னாயல்லவா?...." "அது கதையல்ல, மிஸ்டர் ராகவன்! சத்தியமாக நடந்தது?" "அப்படியே இருக்கட்டும், ரஜினிபூர் ஆட்கள் சீதாவைப் பிடித்துக் கொண்டு போனது எதற்காக? பிடித்துக்கொண்டு போய் என்ன செய்தார்கள். நீ சொல்லுவதை மட்டும் உண்மை என்று நிரூபித்துவிடும் பட்சத்தில் அந்த ரஜினிபூர் சமஸ்தானத்தையே ஒழித்துக் கட்டிவிட்டு மறு காரியம் பார்ப்பேன்!" என்றான் ராகவன். "என்னால் ஒன்றையும் நிரூபிக்க முடியாது, மாப்பிள்ளை! எப்பொழுதோ யாரோ செய்த காரியத்தை நான் எப்படிச் சாட்சி விட்டு நிரூபிக்க முடியும்? நான் சொல்வதை நீங்கள் நம்பினால்தான் உண்டு." "அப்படியானால் நம்பிக்கை உண்டாகும்படியாக உன்னுடைய கதையைச் சொல், பார்க்கலாம்." "மறுபடியும் `கதை' என்றே கூறுகிறீர்கள். நான் என்ன சொல்லி என்ன பிரயோஜனம்?" "நமக்குள் வீண் விவகாரம் வேண்டாம்! முதலில், ரஜினிபூர் ராஜாவின் ஆட்கள் எதற்காகச் சீதாவைப் பிடித்துக் கொண்டு போனார்கள் என்று சொல். ஒருவேளை காணாமற்போன ரஜினிபூர் ராஜகுமாரி என்பதாகச் சீதாவை நினைத்துக் கொண்டார்களோ?" என்று ராகவன் கேலியாகக் கேட்டான்.

"ஆமாம்; உங்களுக்குத்தான் தெரிந்திருக்கிறதே?" என்றான் சூரியா. "சூரியாவினுடைய பதில் ராகவனுடைய ஆவலை அதிகமாக்கிற்று. "நான் ஏதோ குருட்டாம் போக்காய்ச் சொன்னேன். நீ அதுதான் உண்மை என்கிறாய். நான் ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போக வேண்டியதுதான். ஆயினும் பாக்கி விவரங்களையும் தெரிந்து கொள்வதற்காக அடியோடு ஆச்சரியக் கடலில் முழுகிப் போய்விடாமல் மேலே தலையை மட்டும் நீட்டி வைத்துக்கொண்டிருக்கிறேன்!" என்று சொன்னான் ராகவன். "இன்னும் உங்களுடைய கேலிப் பேச்சுப் போகவில்லை, மாப்பிள்ளை, ஸார்! நீங்கள் எப்போதாவது ஒரு விஷயத்தைக் கவனித்ததுண்டா? தாரிணி தேவியும் சீதா அத்தங்காளும் அசப்பிலே பார்க்கும்போது உருவ ஒற்றுமை கொண்டவர்களாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியதுண்டா?" என்று சூரியா கேட்டான். ராகவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. மனதில் பற்பல ஐயங்களும் ஊகங்களும் அலைமோதிக் கொண்டு எழுந்தன. ஆயினும் வெளிப்படையான அமைதியுடன், "இல்லை சூரியா! பெண்மணிகளின் உருவங்களையோ அவர்களுடைய உருவ ஒற்றுமை வேற்றுமைகளையோ நான் அவ்வளவாக கவனிப்பதில்லை. நீ சொல்வதுபோல் தாரிணியும் சீதாவும் ஓரளவு உருவ ஒற்றுமை உள்ளவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம் அதனால் என்ன?" என்று கேட்டான்.

"வேறொன்றுமில்லை, ரஜினிபூர் ஆட்கள் தாரிணிதேவி என்று நினைத்துக்கொண்டு சீதாவைக் கைப்பற்றிக் கொண்டு போனார்கள்!...." "ஆகா! அப்படியானால் தாரிணி....?" என்று ராகவன் ஆரம்பித்து, ஒரு பெரிய கேள்விக் குறியுடன் வாக்கியத்தை நடுவில் நிறுத்தினான். "ஆமாம்; ரஜினிபூர் ராஜகுமாரி உண்மையில் தாரிணி தேவிதான்!" என்றான் சூரியா. ராகவன் சற்றுநேரம் வியப்பினால் திகைத்திருந்தான். பிறகு, "உனக்கு எப்படித் தெரிந்தது, சூரியா? தாரிணியுடன் எத்தனையோ காலம் நான் பழகியவன். அவளும் என்னிடம் சொல்லவில்லை; நானும் சந்தேகிக்கவில்லையே?" என்றான். "தாரிணி என்னிடம் சொல்லவில்லை! நானும் சந்தேகிக்கவில்லை. சீதா அத்தங்காள் மூலமாகத்தான் எனக்கு முதலில் தெரிந்தது." "தாரிணி என்று எண்ணிக் கொண்டு சீதாவை பிடித்துப் போனார்கள் என்று எப்படி அனுமானித்தாய்?" "சீதாவை அவர்கள் கைப்பற்றிய முதல் நாள் நானும் தாரிணி தேவியும் வெள்ளி வீதிக்குப் பின்னால் உள்ள காந்தி மைதானத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்....."

அசூயை நிறைந்த குரலில் ராகவன், "என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டான். "புரட்சி இயக்கத்தை எப்படித் தொடர்ந்து நடத்துவது, இந்தியாவின் சுதந்திரத்தை எப்படிக் கைப்பற்றுவது, வெள்ளைக்காரர்களை நாட்டைவிட்டு எப்படி வெளியேற்றுவது - என்பது போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி அவ்விடமிருந்து போன பிறகு மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். அவர்களுடைய தோற்றத்தைப் பார்த்தவுடனேயே சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தெரிந்து போய்விட்டது. தாரிணியைக் கைப்பற்றுவதற்கு நான் உதவி செய்தால் லட்சம் ரூபாய் கொடுப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய நோக்கம் என்னவென்பதை அப்போது நான் அறியவில்லை. சமஸ்தான ராஜாக்களின் வழக்கத்தையொட்டி துர்நோக்கங்கொண்டு தாரிணியைக் கொண்டுபோக எண்ணுகிறார்கள் என்று எண்ணினேன். அவர்களை நன்றாகத் திட்டி அனுப்பினேன். மறுநாள் அதே காந்தி மைதானத்தில் ஏறக்குறைய அதே நேரத்தில் அதே இடத்தில் நானும் சீதா அத்தங்காளும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்...."

"ஆகா! அப்படிச் சொல்லு! உத்தமியாகிய அத்தங்கா சீதா, யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டுக் கிளம்பிக் காந்தி மைதானத்திற்கு வந்தாள் அல்லவா? எதற்காக?" "மாப்பிள்ளை! நீங்கள் கோபித்துக் கொள்வதில்லையென்றால் உண்மையைச் சொல்லி விடுகிறேன்." "நான் கோபித்துக் கொள்வதானால் பொய் சொல்வாயாக்கும்." "சரி!" எப்படியானாலும் நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். ராகவன்! சற்று முன்னால் நீங்கள் என்னைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாகச் சொன்னீர்கள். அப்படிச் செய்திருப்பின் ஒன்றும் மோசம் போயிருக்காது. ஆனால் முன்னொரு தடவை என்னைப் போலீஸில் பிடித்துக் கொடுப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தீர்கள். தங்கள் வீட்டைச் சுற்றி இரகசியப் போலீஸ் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்திருந்தீர்கள். அந்தச் சமயம் நான் கைதியாகியிருந்தால் புரட்சி இயக்கத்துக்குப் பெருந்தீங்கு நேர்ந்திருக்கும். அவ்விதம் நேராமல் தங்கள் மனைவி சீதாதான் காப்பாற்றினாள். உங்கள் வீட்டுக்கு நான் வரவேண்டாம் என்று எனக்கு எச்சரிக்கை செய்வதற்காகக் காந்தி மைதானத்துக்கு வந்தாள்....."

சீதா தன்னைத் தேடி வந்தது பற்றி முழு உண்மையையும் சூரியா சொல்லவில்லை; பாதிதான் சொன்னான். அதுவே ராகவனுடைய மனதில் கொதிப்பை உண்டாக்கப் போதுமானதாயிருந்தது. `ஆகா! அந்தச் சண்டாளி அப்படியா செய்தாள்? இந்தக் காலிப் பயலைக் காப்பாற்றிக் கொடுப்பதில் அவளுக்கு ஏன் அத்தகைய சிரத்தை ஏற்பட்டது?' என்று மனதிற்குள் எண்ணிப் பொருமினான். வெளிப்படையாக, "சூரியா! ஒரு பெண் பிள்ளையின் பேச்சை நீ இவ்வளவு தூரம் நம்பக்கூடியவன் என்று நான் எண்ணவில்லை. நான் ஏதோ தமாஷாகப் பேசியதை உண்மை என்று நினைத்துக் கொண்டு வந்து உன்னிடம் ஏதோ உளறியிருக்கிறாள்!" என்றான். "இருக்கலாம் மிஸ்டர் ராகவன்! தமாஷாகக்கூடக் கெடுதலான காரியங்களைப் பற்றிப் பேசக்கூடாதென்று இதிலிருந்து ஏற்படுகிறது. உங்களுடைய தமாஷ் பேச்சிலிருந்து எவ்வளவு விபரீதங்கள் நேர்ந்துவிட்டன, பாருங்கள்!" என்றான் சூரியா.

"அந்த விபரீதங்களைப் பற்றிய விவரத்தை இன்னும் நீ எனக்குச் சொல்லுகிற வழியாக இல்லை. அதைத் தெரிந்து கொள்வதற்கோ எனக்கு ஒரே பரபரப்பாயிருக்கிறது!" என்றான் ராகவன். "நீங்கள் சொல்லும்படி விட்டால்தானே? குறுக்கே ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தால் எப்படிச் சொல்லுவது? சற்று மௌனமாகக் கேட்டால் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்!" "சரி! இதோ மௌனம்!" என்று சொல்லி ராகவன் கேலியாகத் தன் வாயைப் பொத்திக் கொண்டான். பிறகு சூரியா, சீதாவைத் தாரிணி என்று நினைத்துக் கொண்டு ரஜினிபூர் சமஸ்தானத்து ஆட்கள் கைப்பற்றிக் கொண்டு போனது முதல் சீதா கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்து கைதியானது வரையில் எல்லாவற்றையும் சுருக்கமாகக் கூறினான். "ரஜினிபூர் ஆட்கள் செய்த தவறையே கல்கத்தா போலீஸ்காரர்களும் செய்தார்கள். சீதா அத்தங்காளைத் தாரிணிதேவி என்று கருதிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்!" என்று சூரியா சொல்லி முடித்தான்.
 
பதினைந்தாம் அத்தியாயம்

கங்காபாயின் கதை

சூரியா சொல்லிய கடைசி விஷயம் ராகவனுடைய எண்ணத்தை வேறு வழியில் செலுத்தியது. பலவித சந்தேகங்கள் அவன் மனதில் உதித்தின. "ரஜினிபூர்ப் பைத்தியம்" என்று சொல்லப்பட்ட ஸ்திரீ தன்னிடம் சீதாவைப் பற்றி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. இந்த விஷயத்தில் இன்னும் ஏதோ மர்மம் இருக்கிறதென்றும் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் எண்ணினான். ஒரு வேளை சீதாதான் உண்மையில் ரஜினிபூர் இளவரசியோ, என்னமோ; இந்தப் போக்கிரி சூரியாவும் அவனுடைய காதலி தாரிணியும் சேர்ந்து ஏதோ சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களோ என்னமோ? இல்லாவிட்டால் சீதா தவறாகச் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தும் இவர்கள் ஏன் அவள் தாரிணி இல்லை என்று சொல்லி அவளை விடுவிக்க முயற்சி எதுவும் செய்யவில்லை? "சூரியா! தாரிணிதேவிதான் காணாமற்போன ரஜினிபூர் இளவரசி என்று ஏதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்? ஏன் அந்த ராஜகுமாரி சீதாவாக இருக்கக்கூடாது?" என்றான் ராகவன். சூரியாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. "சீதா, ரஜினிபூர் ராஜகுமாரி என்று ஏற்பட்டால், எவ்வளவோ நலமாயிருக்கும், மிஸ்டர் ராகவன்! ஏனெனில், தாரிணிக்கு அந்த 'ராஜகுமாரி' என்கிற பட்டமே வேப்பங்காயாக இருக்கிறது. எனக்கும் அப்படித்தான்; ஆனால் சீதா அத்தங்கா ரொம்பவும் 'ரொமாண்டிக்' இயல்பு உள்ளவள். தான் ராஜகுமாரி என்று ஏற்பட்டால் அத்தங்காளுக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். தங்களுக்கும் அது திருப்தியளிக்கும் என்று தெரிகிறது. அத்தங்கா பேரில் தங்களுக்குள்ள கோபத்தையெல்லாம் மறந்து சந்தோஷம் அடைவீர்கள். ஆனால் அப்படியில்லையே, என்ன செய்வது? யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவர்களுக்குப் பார்த்துக் கொடுக்கிறார்!" என்று சூரியா சொன்னான்.

"உன்னுடைய வேதாந்தம் அப்புறம் இருக்கட்டும். சீதா டில்லியை விட்டுப் போன சில நாளைக்கெல்லாம் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதைச் சொல்லுகிறேன், கேட்கிறாயா?" "பேஷாகக் கேட்கிறேன்; சொல்லுங்கள்!" என்றான் சூரியா. அதன் பேரில் ராகவன், திடீரென்று ஒரு நாள் கையில் கத்தியுடன் தோன்றிச் சீதாவைச் சரியாக நடத்தவேண்டும் என்று தனக்கு எச்சரிக்கை செய்து விட்டுப்போன வெறி கொண்ட ஸ்திரீயைப்பற்றிச் சூரியாவிடம் விவரமாகச் சொன்னான். "அந்த ஸ்திரீ யார்? சீதாவைப் பற்றி அந்த வடநாட்டு ஸ்திரீக்கு ஏன் அவ்வளவு சிரத்தை உண்டாக வேண்டும்? உன்னால் சொல்ல முடியுமா?" என்று ராகவன் கேட்டான். "சொல்ல முடியும்" என்று சூரியா சொன்ன பதில் ராகவனைத் தூக்கி வாரிப் போட்டது. "அந்த ஸ்திரீயின் முதல் பெயர் ரமாமணிபாய். இப்போது அவள் பெயர் ரஸியாபேகம், சீதா அத்தங்காள் மீது அவளுக்கு வாஞ்சை ஏற்படக் காரணம் உண்டு. அது பெரிய கதை, மாப்பிள்ளை ஸார்! கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கும் கதை. எனக்கும் வெகு காலம் வரை தெரியாமல்தானிருந்தது. சில மாதத்துக்கு முன்புதான் தெரிந்து கொண்டேன். அதுவும் ரஸியா பேகம் சொல்லித்தான் தெரிந்தது. அந்தத் துர்ப்பாக்யவதி பெரும்பாலும் வெறி கொண்டு திரிகிறவள். அபூர்வமாகச் சில சமயம் அவளுடைய மனம் தெளிகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் தற்செயலாய் அவளைப் பார்த்த போது கேட்டுத் தெரிந்து கொண்டேன். சீதா அத்தங்காளிடங்கூட அதைப்பற்றிச் சொல்லவில்லை. தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாதலால் சொல்கிறேன்!"- இந்தப் பூர்வ பீடிகையுடன் ஆரம்பித்து ரஸியா பேகத்தைப் பற்றிய அபூர்வ வரலாற்றைச் சூரியா கூறினான்.

முப்பது வருஷத்துக்கு முன்னால் ரஜினிபூர் சமஸ்தானத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருந்த மகாராஜா மற்றும் பல சமஸ்தான மன்னர்களைப் போலவே சிற்றின்பப் பிரியனாயிருந்தான். இராஜ்ய காரியங்களைத் திவானும் பிரிட்டிஷ் ரிஸிடெண்டும் பார்க்கும்படி விட்டுவிட்டுத் தான் லீலா விநோதங்களில் காலங்கழித்து வந்தான். அந்த லீலா விநோதங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பல துர்மந்திரிகள் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவன் மதோங்கர். ஒரு சமயம் ரஜினிபூர் மகாராஜாவின் சபைக்கு மகாராஷ்டிர தேசத்திலிருந்து பாடகி ஒருத்தி வந்து பாடினாள்; அவள் பெயர் கங்காபாய். மகாராஜாவுக்கு அவளுடைய பாட்டும் பிடித்திருந்தது; அவளையும் பிடித்திருந்தது. பாடகியுடன் அவளுக்குத் துணையாக அவள் தமக்கையும் வந்திருந்தாள். தமக்கையின் பெயர் ரமாமணி; அவள் நல்ல தைரியசாலி. உலக விவகாரங்களில் தனக்கு மிஞ்சியவள் கிடையாது என்று அவளுக்கு எண்ணம். மகாராஜாவின் முன்னிலையில் மூன்று நாள் இன்னிசைக் கச்சேரி நடந்த பிறகு மதோங்கர் என்பவன் அந்தப் பெண்கள் தங்கியிருந்த ஜாகைக்கு வந்தான்; பாடகியை மகாராஜாவுக்கு ரொம்பவும் பிடித்திருப்பதாகத் தெரியப்படுத்தினான். அதற்கு ரமாமணி, "அப்படியானால் மகாராஜா என் தங்கையைக் கலியாணம் செய்து கொள்ளட்டுமே?" என்றாள். "மகாராஜாவின் உத்தேசமும் அதுதான்!" என்றான் மதோங்கர். ரமாமணி 'கலியாணம்' என்ற வார்த்தையினால் ஏமாந்து போய்விட்டாள். தன் தங்கைக்கு இதோபதேசம் செய்து சம்மதிக்கப் பண்ணினாள். "மகாராஜா எவ்வளவு பெரிய ரஸிகர் என்பதை நீயே பார்த்துத் தெரிந்து கொண்டாய். அவருடைய ராஜ்யமோ ரொம்பக் கீர்த்தி வாய்ந்தது, ஐசுவரியத்துக்கு அளவேயில்லை. இப்படிப்பட்ட அரண்மனையில் மகாராணியாயிருக்கப் பூர்வ ஜன்மத்தில் நீ தவம் செய்திருக்க வேண்டும்" என்றாள். 'கலியாணம்' என்னும் கேலிக்கூத்து நடந்தது. அது கேலிக்கூத்து என்பது அந்தப் பெண்களுக்கு அப்போது தெரியாது. கொஞ்ச நாளைக்குப் பிற்பாடுதான் மகாராஜாவுக்கு ஏற்கெனவே மூன்று கலியாணங்கள் ஆகி அரண்மனையில் மூன்று ராணிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

இதையறிந்து ரமாமணி திடுக்கிட்டாலும் ஆசையையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை. அந்த மூன்று ராணிகளுக்கும் குழந்தை இல்லை என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஒருநாள் மகாராஜா கங்காபாயைப் பார்க்க வந்திருந்தபோது அவரைத் தனியாக ரமாமணி சந்தித்தாள். கத்தியைக் காட்டிப் பயமுறுத்தினாள். தன் தங்கைக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை ரஜினிபூர் இளவரசனாக்க வேண்டும் என்று வாக்குறுதி பெற்றார். அவ்விதமே மகாராஜாவிடம் ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள். இதெல்லாம் மதோங்கருக்குத் தெரிந்தது. ரஜினிபூர் ராஜ்யம் யாருக்குப் போக வேண்டும் என்பது பற்றி அவனுக்கு வேறு யோசனை இருந்தது. ஆகையால் ரமாமணியின் சூழ்ச்சிக்கு அவன் பதில் சூழ்ச்சி செய்தான். ராணி கங்காபாய்க்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அதைப் பிறந்த உடனே கொன்று விடவேண்டும் என்று மருத்துவச்சியிடம் ஏற்பாடு செய்தான். மதோங்கர்! மருத்துவச்சியிடம் பேசியதை மூன்றாவது மகாராணி கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் தர்ம சிந்தையும் உதாரகுணமும் படைத்த உத்தமி. ரமாமணியை அழைத்து வரச் செய்து மதோங்கரின் சிசுஹத்தி ஏற்பாட்டைப் பற்றிக் கூறினாள். பிரசவ காலம் நெருங்குவதற்கு முன்பு நாலாவது மகாராணியை பம்பாய்க்கு அழைத்துக்கொண்டு போய்விடும்படியும் அதற்கு வேண்டிய ஒத்தாசை தான் செய்வதாகவும் கூறினாள். மூன்றாவது மகாராணி கூறியது உண்மை என்பதற்கு வேண்டிய ஹேஷ்யங்கள் ரமாமணிக்குக் கிடைத்தன. மகாராஜாவோ அந்தச் சமயம் ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தார். ஆகவே ரமாமணி மூன்றாவது மகாராணியின் யோசனைப்படியே காரியம் செய்தாள். தங்கை கங்காபாயை அழைத்துக்கொண்டு மதோங்கருடைய காவலாளிகளுக்குத் தெரியாமல் பம்பாய்க்குப் பிரயாணமானாள்.

ராஜபுத்திர நாட்டு வழக்கத்தைக் கங்காபாய் மேற்கொண்டு 'பர்தா' ஸ்திரீகளுக்குரிய முகமுடி அணிந்திருந்தாள். ஆகையால் அவளை அழைத்துக்கொண்டு பிரயாணம் செய்வதில் அதிக கஷ்டம் ஏற்படவில்லை. ஆனால் வேறுவிதமான கஷ்டங்கள் ஏற்பட்டன. கையில் கொண்டு வந்திருந்த பணமும் ரயில் டிக்கட்டுகளும் வழியில் காணாமற் போய்விட்டன. ஆகையால் பம்பாய் நகரையடுத்திருந்த சின்ன ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் டிக்கட் பரிசோதனை செய்த ரயில்வே உத்தியோகஸ்தன் அந்த ஸ்திரீகளிடம் டிக்கட் இல்லையென்று கண்டு அவர்களை இறக்கிவிட்டுவிட்டான். இரண்டு பேரும் பெண்கள், ஒருத்தி ஒன்பது மாதம் கர்ப்பம். கையில் பணம் இல்லை, ஆனால் கங்காபாய் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றை விற்றால் பணம் கிடைக்கும் எங்கே, எப்படி விற்பது? ரமாமணி நகையை விற்பதற்குப் போனால் ஒன்பது மாதத்துக் கர்ப்பிணி ஸ்திரீயை எங்கே விட்டு விட்டுப் போவது? அல்லது யாரிடம் சென்று உதவி கேட்பது? அதுவோ சின்னஞ்சிறிய ஸ்டேஷன்; வேளையோ இரவு வேளை. பம்பாயை அடுத்துள்ள சிறு ஸ்டேஷன்களில் ரயில் வரும்போது கூட்டம் கசகசவென்று இருக்கும். ரயில் போனதும் ஸ்டேஷன் நிர்மானுஷ்யமாகிவிடும். ரமாமணி தங்கையை அழைத்துக் கொண்டு பிரயாணிகள் தங்கும் வெயிட்டிங் அறைக்குச் சென்றாள். கங்காபாய்க்கு நிலைமை இன்னதென்று ஒருவாறு தெரிந்து விட்டது. முகத்தை மூடியிருந்த பர்தா துணிக்குள்ளேயிருந்து விம்மல் சத்தம் கேட்கத் தொடங்கியது. ரமாமணி அவளுக்கு ஆறுதல் கூற முயன்றாள்.

அந்தச் சமயத்தில், "அது என்ன விம்மல் சத்தம்?" என்று தெரிந்து கொள்வதற்காக இராத்திரி ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எட்டிப் பார்த்தார். ஒரு பர்தா ஸ்திரீயையும் பர்தா இல்லாத இன்னொரு ஸ்திரீயையும் கண்டார். அவர்கள் மகாராஷ்டிர தேசத்தவர் என்பதை அறிந்துகொண்டு மராத்தி பாஷையில், "என்ன விஷயம்?" என்று விசாரித்தார். அப்படி விசாரித்த ஸ்டேஷன் மாஸ்டர்தான் சீதாவின் தந்தை துரைசாமி ஐயர். ரமாமணிபாய் அறைக்கு வெளியே வந்து அந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் தங்கள் நிலைமையை ஒருவாறு எடுத்துக் கூறினாள். இராத்திரி தங்க இடம் வேண்டும் என்றும் மறுநாள் காலையில் தன் தங்கையை பம்பாயில் ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். "உதவி செய்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார். துரைசாமிக்கு அப்போது சம்பளம் சொற்பம். அவருடைய மனைவி ராஜம்மாள் அதே சமயத்தில் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு முதல் குழந்தை பேற்றை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால் செலவுக்குச் சம்பளம் போதாமல் மேல் வரும்படி ஏதாவது கிடைத்தால் தேவலை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. ஆகையினால்தான் "எனக்கு என்ன தருவீர்கள்!" என்று கேட்டார். அந்தப் பெண்களின் தோற்றத்தைப் பார்த்ததில் அவர்களிடம் பணம் நிறைய இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ரமாமணி, "நீங்கள் இந்த சமயத்தில் உதவி செய்தால் எங்களிடம் உள்ள எந்தப் பொருளைக் கேட்டாலும் கொடுத்துவிடத் தயார். என்னையே வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்!" என்று சொன்னாள். துரைசாமிக்கு வெட்கமும் வியப்பும் உண்டாயின. இந்த மாதிரி பதிலை அவர் எதிர்ப்பார்க்கவில்லை.

மனதிற்குள், "சிவ சிவா! ஒரு மனைவியைக் காப்பாற்றுவதே என்னால் முடியாத காரியமாயிருக்கிறது. உன்னையும் கட்டிக்கொண்டு என்னத்தைச் செய்வது?" என்று எண்ணிக் கொண்டார். ஆயினும் அந்தப் பெண்களின் பரிதாப நிலை அவருடைய இதயத்தை இளகச் செய்திருந்தது. "அப்படியெல்லாம் சொல்லவேண்டாம், அம்மா! எனக்குப் பிரதி பிரயோஜனம் ஒன்றும் வேண்டியதில்லை. என்னால் முடிந்த உதவியை உங்களுக்குச் செய்கிறேன்!" என்றார். மறுநாள் காலையில் தன்னுடைய மனைவியை எந்தப் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாரோ, அதே ஆஸ்பத்திரியில் கங்காபாயையும் கொண்டுப்போய்ச் சேர்த்தார். ஆனால் இது விஷயத்தை அவருடைய மனைவியிடம் சொல்லவில்லை. சொன்னால் வீண் சந்தேகத்துக்கும் வீண் பேச்சுக்கும் இடமாகும் என்று சொல்லவில்லை. தினந்தோறும் பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தம் மனைவியைப் பார்க்கப் போனபோது ரமாமணியையும் துரைசாமி பார்த்து வந்தார். ரமாமணி துரைசாமியிடம் அளவில்லாத நன்றி பாராட்டினாள். அந்த நன்றி வெகு சீக்கிரத்தில் அத்தியந்த விசுவாசமாகவும் ஆருயிர்க் காதலாகவும் பரிணமித்து வந்தது. ராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இராத்திரியில் ஆஸ்பத்திரியில் குழந்தைப் பேறு அடைந்தார்கள். இதற்குள்ளே மதோங்கர் எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு அந்தப் பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தான். ரமாமணிக்கு இது தெரிந்தது, மதோங்கரின் கையில் அகப்படாமல் கங்காபாயுடன் வேறு இரகசிய இடத்துக்குப் போய்விட விரும்பினாள். அதற்கும் துரைசாமியின் உதவியைக் கோரினாள். ரமாமணியின் மோக வலையில் முழுவதும் சிக்கிக் கொண்ட துரைசாமி அவளுடைய கோரிக்கைக்கு இணங்கினார். விஸ்தாரமான பம்பாய் நகரில் சுலபமாய்க் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் ஜாகை பிடித்து அவர்களைக் கொண்டு போய் வைத்தார்.

ரமாமணியும் அவள் தங்கை கங்காபாயும் குழந்தை தாரிணியும் அங்கே வசிக்கத் தொடங்கினார்கள். துரைசாமி தன்னுடைய மனைவி ராஜம்மாளுக்குத் தெரியாமல் ரமாமணியின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தார். தாரிணி பிறந்த வேளையில் பிறந்த ராஜம்மாளின் ஆண் குழந்தை சீக்கிரத்தில் இறந்து போயிற்று. அந்தத் துக்கத்தை மறப்பதற்காகத் துரைசாமி அடிக்கடி ரமாமணியின் வீட்டுக்குப் போய்த் தாரிணியை எடுத்துக் கொண்டு சீராட்டினார். இப்படியாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன. ரஜினிபூர் மகாராஜா ஐரோப்பாவிலிருந்து திரும்பினார். ரமாமணி பம்பாயில் அவர் தங்கியிருந்த ஜாகைக்குச் சென்று பேட்டி காண விரும்பினாள். பேட்டி கிடைப்பதே கஷ்டமாயிருந்தது. சண்டை பிடித்துப் பேட்டி கண்டு மகாராஜாவிடம் நிலைமையை பற்றிச் சொன்னபோது ரஜனிபூர் மகாராஜா தமக்கு அவர்களைத் தெரியவே தெரியாது என்று சாதித்துவிட்டார். ரமாமணிபாய் அவர் கைப்பட எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை எடுத்துக் காட்டினாள். மகாராஜாவின் உத்தரவுப்படி அவருடைய ஆட்கள் பலவந்தமாக அந்தக் கடிதத்தை ரமாமணியிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவளை வெளியே துரத்திவிட்டார்கள். ரமாமணி அளவில்லாத துயரத்துடனும் ஏமாற்றத்துடனும் ஜாகைக்குத் திரும்பிச் சென்றாள். கங்காபாயிடம் எல்லா விவரங்களையும் சொன்னாள். கங்காபாய் மூர்ச்சித்து விழுந்தாள். அப்புறம் அவளுடைய உடல்நிலை நாளுக்கு நாள் சீர்க்கேடு அடைந்து வந்தது. சில மாதத்துக்கெல்லாம் கங்காபாய் இந்த மண்ணுலகை நீத்தாள்.
 
பதினாறாம் அத்தியாயம்

ரமாமணியின் தோல்வி

தாரிணி உண்மையில் ஒரு ராஜகுமாரி என்று எண்ணியதும் ராகவனுடைய உள்ளம் புயற்காற்றில் அலைகடலைப் போல கொந்தளித்தது. அதுவரை அவனுக்கு விளங்காமலிருந்த பல விஷயங்கள் விளங்கின. தாரிணி சாதாரணப் பெண் அல்ல என்று பலமுறை தான் எண்ணியது எவ்வளவு சரியாய்ப் போயிற்று என்று நினைத்துக் கர்வம் கொண்டான். ஒரு ராஜகுமாரியின் காதலுக்குத் தான் ஒரு சமயம் உரியவனாயிருந்தது குறித்துப் பெருமிதம் அடைந்தான். அந்த அபூர்வமான காதலைத் தான் பயன்படுத்திக் கொள்ளாமல் போனதை எண்ணி ஆதங்கம் அடைந்தான். ரஜினிபூர் ராஜ்யமே தனக்கு வந்திருக்க வேண்டியது என்றும், அது அநியாயமாக நஷ்டமாகிவிட்டது என்றும் அவனுடைய அந்தரங்கத்தில் ஒரு சபல நினைவு தோன்றி மறைந்தது! தான் எவ்வளவோ முயன்றும் அறிய முடியாத தாரிணியின் பிறப்பு மர்மத்தை இந்தச் சூரியா அறிந்துகொள்ள முடிந்தது பற்றி ஒரு பக்கம் வியப்பு உண்டாயிற்று. ராஜகுமாரி தாரிணி இந்தச் சூரியாவிடம் அந்தரங்கத்தை வெளியிட்டிருப்பதை எண்ணி மனம் எரிந்தான். தாரிணி, சூரியா, சீதா - ஆகிய மூவர் மீதும் அவனுக்கு அளவில்லாத கோபம் பொங்கி வந்தது. அந்த மூன்று பேரும் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்குச் சதி செய்ததாக அவனுக்குத் தோன்றியது. ஆயினும், இன்னும் சில விவரங்களைச் சூரியாவிடம் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆகையால் தன்னுடைய கோபத்தைக் காட்டி இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்று தீர்மானித்தான். ஆத்திரத்தையும் எரிச்சலையும் அசூயையும் குரோதத்தையும் கஷ்டப்பட்டு மனத்திற்குள் அடக்கிக் கொண்டு, "சூரியா! நீ சொன்ன கங்காபாயின் கதை ஸ்காட் நாவல்களையும் டூமாஸ் நாவல்களையும் தோற்கடிக்கும் அதிசயமான கற்பனைக் கதையைப் போல இருக்கிறது. கேட்பதற்கு வெகு சுவாரஸ்யமாயிருக்கிறது!" என்றான். "கற்பனைக் கதையெல்லாம் மிஞ்சி விடும் உண்மைச் சம்பவங்கள் நம்முடைய சுதேச சமஸ்தானங்களில் எத்தனையோ நடந்திருக்கின்றன. ஆனால் எனக்கு அந்தக் கதைகள் சுவாரஸ்யமா யிருப்பதில்லை. உள்ளத்தைப் பிளக்கும் துக்கத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்குகின்றன. கங்காபாயையும் ரமாமணியையும் போல் எத்தனை ஆயிரம் பெண்கள் துர்க்கதி அடைந்தார்களோ, யாருக்குத் தெரியும்? அவ்வளவு பெண் தெய்வங்களின் சோகக் கண்ணீரும் சாபமும் நம்முடைய சுதேச சமஸ்தானங்களை இன்னும் பொசுக்கி அழித்து விடவில்லையே!" என்று சூரியா கூறினான்.

"அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை. இது கலியுகம் அல்லவா? கற்பரசிகள் சாபங் கொடுத்துப் பொசுக்கும் சக்தியெல்லாம் திரேதாயுகத்துடன் போயிற்று. இப்பொழுதெல்லாம் அக்கிரமக்காரர்களுக்குத்தான் காலம். மேலே சொல்! கங்காபாய் காலமான பிறகு ரமாமணி என்ன செய்தாள். அந்த அதிர்ஷ்டக்கார ஸ்டேஷன் மாஸ்டர் என்னுடைய அருமை மாமனார், - என்ன செய்தார்? வைசம்பாயனரைப் பார்த்து ஜனமேஜய மகாராஜன் கேட்பது போலக் கேட்கிறேன்!" என்றான் ராகவன். "மேலே சொல்லுவதற்கு அதிகம் இல்லை. ஒருவேளை என்னைவிட உங்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆயினும் எனக்குத் தெரியாத மீதி விவரங்களையும் சொல்லி விடுகிறேன்" என்றான் சூரியா. கங்காபாயின் சோக முடிவு ரமாமணியைக் குலுக்கிப் போட்டுவிட்டது. அவளுடைய அறிவே கலங்கிவிட்டது. அந்த நிலைமையில் ரமாமணி இருந்தபோது குழந்தை தாரிணியைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்புத் துரைசாமி ஐயருக்கு ஏற்பட்டது. இதனால் அவருக்கு அக்குழந்தையிடம் ஏற்கெனவே இருந்த பாசம் மேலும் வளர்ந்து உறுதிப்பட்டது.

ரமாமணிபாய்க்கு அறிவு கொஞ்சம் தெளிந்தபோது தன் தங்கையின் அகால முடிவுக்குக் காரணமாயிருந்த ரஜினிபூர் ராஜாவையும் அவருடைய துர்மந்திரி மதோங்கரையும் பழிக்குப் பழி வாங்குவது என்று சங்கல்பம் செய்து கொண்டாள். இந்த உத்வேகமே அவளுடைய உடலுக்கும் உயிருக்கும் வலிமையைத் தந்து எத்தனையோ கஷ்டங்களைச் சகிக்கும் சக்தியை அவளுக்கு அளித்து வந்தது. பழிவாங்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் குழந்தை தாரிணியை மதோங்கர் வசத்தில் பாதுகாப்பதற்கும் ரமாமணிக்குப் புருஷத் துணை அத்தியாவசமாயிருந்தது. ஆதலின் பெண்மைக்குரிய சகல சாமர்த்தியங் களையும் பிரயோகித்து ஸ்டேஷன் மாஸ்டர் துரைசாமியின் சிநேகத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டாள். துரைசாமி ஐயரின் பாடு, ரொம்பவும் சங்கடமாகத்தான் இருந்தது. அவர் தம்முடைய சொற்ப சம்பளத்தைக் கொண்டு, பம்பாய் நகரில் இரண்டு தனிக் குடும்பங்களை நடத்தவேண்டி வந்தது. பணக்கஷ்டம் அதிகமாயிற்று, அதோடு தன் மனைவி ராஜம்மாளிடம் உண்மை நிலையைச் சொல்லுவதற்கு வழியில்லாததால், பணச் செலவுக்குப் பொய்க் காரணம் சொல்ல வேண்டியதாயிருந்தது. குதிரைப் பந்தய தினங்களில் பந்தயத்துக்குத் தான் போய் வந்ததாகவும் பணம் நஷ்டப்பட்டதாகவும் சொல்லி வந்தார். முதலில் பிறந்த ஆண் குழந்தை இறந்து போனதில் ராஜம்மாள் பெருந் துயரத்துக்கு ஆளானாள். அதோடு உத்தமமான ஒழுக்கம் படைத்தவர் என்று தான் எண்ணியிருந்த கணவன் குதிரைப் பந்தயத்துக்குப் போக ஆரம்பித்திருப்பது பற்றிப் பெரிதும் வருந்தினாள். அதைத் தவிர வேறு கெட்ட நடவடிக்கைகளுக்குத் தன் கணவர் ஆளாகியிருப்பாரோ என்ற சந்தேகங்கள் அவள் மனதில் தோன்றின. அவற்றை வெளியிட்டுக் கணவரிடம் கேட்கும் தைரியம் ஏற்படவில்லை. மனதிற்குள்ளேயே துயரத்தை வைத்து வளர்த்து வந்தாள்.

இதற்கிடையில், தாரிணி பிறந்த இரண்டு வருஷத்துக்குப் பிறகு ராஜம்மாளுக்குச் சீதா பிறந்தாள். இதற்குப் பிறகாவது தன் கணவனுடைய நடவடிக்கைகள் திருந்தும் என்று ராஜம்மாள் எதிர்பார்த்தாள். அவ்வித நல்ல மாறுதல் ஏற்படாதது கண்டு மேலும் மனம் குன்றினாள். நாட்கள் வருஷங்களைப் போலவும், வருஷங்கள் யுகங்களைப் போலவும் ராஜம்மாளுக்குப் சென்று வந்தன. ரமாமணிக்கும் அப்படித்தான்; ஆனால் குழந்தைகளான சீதாவுக்கும் தாரிணிக்கும் வருஷங்கள் இறகு கட்டிக் கொண்டு பறந்து சென்றன. துரைசாமி ஐயருக்கோ கழிந்த நாட்களையும் வருஷங்களையும் கணக்குப் பண்ணுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. தாரிணிக்கு வயது வந்தபோது தன்னுடைய தாயும் தகப்பனாரும் உலகத்தில் உள்ள மற்ற தாய் தந்தையரைப் போல் மணம் செய்துகொண்டு வாழ்கிறவர்கள் அல்ல என்னும் விஷயம் தெரிய வந்தது. தன்னுடைய தாயின் மர்மமான காரியங்கள் அவளுக்குப் பலவித ஐயங்களை உண்டாக்கின. ஒவ்வொரு சமயம் விலை உயர்ந்த ஆபரணங்களை அவளுடைய தகப்பனாரிடம் தாயார் கொடுத்து விற்றுக்கொண்டு வரச் சொல்லுவதைக் கவனித்திருந்தாள். ஒரு நாள் தாயாரிடம் சந்தேகங்களை வெளியிட்டாள். அதன் பேரில் ரமாமணி ரஜனிபூர் ராஜாவினால் தன்னுடைய தங்கை கங்காபாய்க்கு நேர்ந்த கதியைப் பற்றியும் அதற்குப் பழிக்குப்பழி வாங்கத் தான் தீர்மானித்திருப்பது பற்றியும் தாரிணியிடம் கூறினாள். கங்காபாயின் கதையைக் கேட்டதிலிருந்து தாரிணியின் மனம் தான் பிறந்த தேசத்தின் நிலைமையைப் பற்றிச் சிந்திக்க தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்திலும் சமூகத் தொண்டிலும் ஈடுபடும் ஆர்வம் உண்டாயிற்று.

அச்சமயம் இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்த உப்புச் சத்தியாகிரஹ இயக்கத்தில் கலந்து கொண்டாள். பிற்பாடு, பீஹார் பூகம்பத்தைப் பற்றிய செய்தி வந்தபோது பூகம்பத்தினால் துன்புற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகச் சென்றாள். ஏறக்குறைய இதே சமயத்தில் ராஜம்மாள் நீடித்த நோய்வாய்ப் பட்டிருந்தாள் என்றும் பிழைப்பது துர்லபம் என்றும் ரமாமணிக்குத் தெரியலாயிற்று. தன்னால் கஷ்டத்திற்கு ஆளான ராஜம்மாளையும் அவளுடைய குமாரி சீதாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரமாமணியின் மனதில் வெகு காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை நிறைவேறுவதற்கு இதுதான் தருணம் என்று எண்ணினாள். ரஜனிபூர் ஆபரணங்களில் தன்னிடம் மிச்சமிருந்த ஒரே ஒரு ரத்தின ஹாரத்தையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு துரைசாமி இல்லாத சமயத்தில் ராஜம்மாளைப் பார்க்கச் சென்றாள். சீதாவின் கலியாணத்துக்கு என்று ரத்தின ஹாரத்தையும் பணத்தையும் கொடுத்துவிட்டுத் திரும்பினாள். இந்த முக்கியமான கடமை தீர்ந்த பிறகு ரமாமணி தன் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற முயன்றாள். பம்பாய்க்கு வந்திருந்த ரஜனிபூர் ராஜாவைக் கத்தியினால் குத்திக் கொல்லப் பிரயத்தனம் செய்தாள். அந்தப் பிரயத்தனம் பலிக்கவில்லை. கொலை செய்ய முயற்சித்ததாகச் சிறையில் அடைக்கப்பட்டாள். சிறையில் இருந்தபோது ரமாமணியின் பைத்தியம் முற்றியது. சிறையி லிருந்து பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குச் சென்று சில காலத்துக்குப் பிறகு அங்கிருந்து விடுதலை அடைந்தாள். ரஜனிபூர் ராஜாவும் அதற்குப் பிறகு அதிக காலம் உயிரோடிருக்கவில்லை. ஆகவே விடுதலையாகி வந்த ரமாமணி அடுத்தாற்போல் தான் பழி தீர்க்க வேண்டிய மதோங்கரின் பேரில் கவனம் செலுத்தினாள். புது டில்லியின் சாலைகளில் அலைந்து திரிந்து மதோங்கரைத் தனியாகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த முயற்சியிலும் ரமாமணி தோல்வியே அடைந்தாள். ஏனெனில், அவள் மதோங்கரை வெகு காலம் தேடிக் கொண்டிருந்தது கடைசியில் ஒரு நாள் பிடித்து விட்டோ ம் என்று எண்ணிய சமயத்தில், ரமாமணிக்கு முன்பாகவே மதோங்கரின் பேரில் பழி தீர்க்க விரும்பியவன் ஒருவன் தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டான்!
 

New Threads

Top Bottom