Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

பதினேழாம் அத்தியாயம்

படிகள் பிழைத்தன!

கங்காபாய் - ரமாமணி இவர்கள் சோகக் கதையைக் கூறிவிட்டுச் சூரியா சௌந்தரராகவனைப் பார்த்து, "மாப்பிள்ளை ஸார்! யாரோ ஒரு வடக்கத்தி ஸ்திரீ வந்து சீதா அத்தங்காளைப் பற்றி எச்சரித்தாள் என்றீர்களே? அவள் ரமாமணி என்கிற ரஸியா பேகமாகத்தானிருக்க வேண்டும். சீதாவினிடம் அவள் சிரத்தை கொள்ளக் காரணம் உண்டு என்பது தெரிகிறதல்லவா?" என்றான். "தெரிகிறது, சூரியா! ஆனால் நீ என்ன, இந்தக் காலத்துக் கதை ஆசிரியர்களைப் போல், சடக்கென்று கதையை மொட்டையாக முடித்துவிட்டாயே? கதாநாயகர்களும் கதாநாயகிகளும் பிற்பாடு என்ன ஆனார்கள் என்று சொல்ல வில்லையே?" என்று ராகவன் கேட்டான். "எனக்குத் தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன். நீங்கள் இன்னும் யாரைப் பற்றி என்ன கேட்கிறீர்கள்?" என்றான் சூரியா. "ஏன்? என்னுடைய அருமந்த மாமனாரைப் பற்றிக் கேட்கிறேன். என்னுடைய கலியாணத்துக்குப் பிறகு அவரை நான் ஒரு தடவை கூடப் பார்த்ததேயில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?" என்று ராகவன் கேட்டான். "அதுதான் எனக்கும் தெரியவில்லை. ரஸியா பேகம் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவர்களை நானும் தாரிணியும் எவ்வளவோ தேடித் தேடிப் பார்த்தோம்; பயனில்லை!" என்றான் சூரியா. "எதற்காகத் தேடினீர்கள்?" என்று ராகவன் கேட்டான். "தாரிணிக்குத் தன்னுடைய வரலாற்றில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்தச் சந்தேகத்தைத் தீர்க்க கூடியவர்கள் துரைச்சாமி ஐயரையும் ரமாமணியையும் தவிர வேறுயாரும் இல்லை!" என்று சூரியா சொல்லிவிட்டு, முகத்தில் புன்னகையுடன், "மிஸ்டர் ராகவன்! அதுவல்லாமல் இன்னொரு காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் பெற வேண்டியதாயிருக்கிறது! அதற்காகவும் தேடினோம். இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றான்.

சூரியாவின் குரலும் முகப்பொலியும் ராகவனுடைய மனதில் ஓர் ஐயத்தை உண்டாக்கின. "என்ன காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் வேண்டும்?" என்று கேட்டான். "நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். எனினும், நீங்கள் கேட்கிறபடியால் சொல்லி விடுகிறேன். எப்படியும் ஒருநாளைக்குத் தெரிய வேண்டியதுதானே? நானும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித்திருக்கிறோம்!..." ராகவன் கலகலவென்று சிரித்துவிட்டு, "அட சூரியா! உன்னைப் புத்திசாலியென்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன்!" என்றான். "அந்த அபிப்பிராயம் இப்போது தவறு என்று தோன்றுகிறதா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; இல்லாவிட்டால் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லுவாயா? - இத்தனை நாள் அவளுடன் பழகிவிட்டு? இதைக் கேள், சூரியா! தாரிணியை ஒரு சமயம் நானே கலியாணம் செய்து கொள்ள எண்ணியிருந்தேன். அவளும் என்னைக் காதலிப்பதாக வேஷம் போட்டு நடித்தாள். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்." "ராகவன்! தாரிணியைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். தாரிணி வேஷம் போட்டு நடித்தாள் என்று சொன்னால் அவளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்!" "என்னைவிட அவளை நீ நன்றாக அறிந்து கொண்டிருப்பதாக எண்ணமாக்கும்!" என்றான் ராகவன். "அதில் சந்தேகமில்லை, தாரிணியை உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவளை வேஷம் போட்டாள் என்றோ, நடித்தாள் என்றோ சொல்லமாட்டீர்கள்!" "ஒரு சமயம் என்னைக் காதலித்ததாகக் கூறியவள் இப்போது உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போவது பற்றி என்ன சொல்கிறாய்? இரண்டிலே ஒன்று பொய்யாகத்தானே இருக்கவேண்டும்?"

"ஒரு நாளும் இல்லை யாருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் உரிமை உண்டு அல்லவா? ஏதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்தால் அதைத்திருத்திக் கொள்ள வேண்டாமா? தங்களிடம் ஒரு காலத்தில் தாரிணி அன்பு கொண்டிருந்தது உண்மை. அது வேஷமும் அல்ல; நடிப்பும் அல்ல. ஆனால் பிற்பாடு தன்னுடைய வாழ்க்கை இலட்சியங்களுக்குப் பொருத்தமில்லை என்று தெரிந்த பிறகு தங்கள் விஷயத்தில் அவளுடைய மனதை மாற்றிக்கொண்டாள், அது எப்படித் தவறாகும்?" "சூரியா! நீ வக்கீல் வேலைக்குப் போயிருக்க வேண்டும். போயிருந்தால் நல்ல பெயர் வாங்கியிருப்பாய். கெட்டிக்கார வக்கீலைப் போல் தாரிணியின் கட்சி பேசுகிறாய் ஆனால் அது வீண். தாரிணியைப் பற்றி உன்னைவிட எனக்கு நன்றாய்த் தெரியும். என்னைக் காதலிப்பதாக அவள் வேஷம் போட்டது எதற்காக என்றும் தெரியும். வேறொன்று மில்லை, கேவலம் இரண்டாயிரம் ரூபாய் பணத்துக்காகத்தான்! சுதேசராஜாக்களின் சபைகளைத் தேடிக்கொண்டு போன பாடகியின் மகள் தானே? அவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?" சூரியா கொதித்து எழுந்து, "ராகவன்! ஜாக்கிரத்தை! தாரிணியின் ஒழுக்கத்தைப்பற்றி ஏதாவது சொன்னால்....?" என்றான். மேலே பேசவரவில்லை. அவனுடைய உதடுகள் துடித்தன. "ஏதாவது சொன்னால், என்னடா அப்பா செய்வாய்? ஒரே குத்தாய்க் குத்திக் கொன்று விடுவாயோ? ரஸியா பேகத்தைப் போல!" என்று ராகவன் ஏளனம் செய்தான்.

"சரி, மாப்பிள்ளை! உங்களுடன் பேசுவதில் பிரயோஜனம் இல்லை, நான் போய் வருகிறேன்!" என்று சூரியா புறப்பட்டான். "அடடே! அப்படியெல்லாம் கோபித்துக் கொண்டு கிளம்பாதே, அப்பா! உன் அருமை அத்தங்காள்; - ஒழுக்கத்தில் சிறந்த துரைசாமி ஐயரின் செல்வப்புதல்வி, - சீதா இப்போது எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று சொல்லிவிட்டாவது போ. அவளைப்பற்றி நான் ஏதாவது சொன்னால் கூடச் சண்டைக்கு வருவாயோ என்னமோ? என்னைக் காட்டிலும் சீதாவை உனக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னாலும் சொல்லுவாய்! நான் தாலி கட்டிய புருஷன்தானே? நீ அருமை அம்மாஞ்சி அல்லவா!" சூரியா தரையை நோக்கிக் குனிந்து நின்றான். அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பி இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழேயும் விழுந்தது. "இது என்னடா, சூரியா! பெண்பிள்ளை மாதிரி கண்ணீர் விடுகிறாய்? உன் அத்தங்கா சீதாவின் பெயரைச் சொன்னதுமே இப்படி உடலும் உள்ளமும் உருகிவிடுகிறாயே? அவளுக்கும் உனக்கும் அப்படி என்ன அந்தரங்க சிநேகிதம்..." என்றான் ராகவன். சூரியா கண்களைத் துடைத்துக்கொண்டு பளிச்சென்று ராகவனை நிமிர்ந்து பார்த்து, "என்னை எது வேணுமானாலும் சொல்லுங்கள். தாரிணியைப் பற்றி வேணுமானாலும் சொல்லுங்கள். ஆனால் சீதாவின் பேரில் அவதூறு சொல்கிறவர்களின் நாக்கு அழுகிப் போகும். அத்தகைய பாதகர்கள் கொடிய நரகத்துக்குப் போவார்கள். பூமி பிளந்து அவர்களை விழுங்கி விடும்!" என்றான். சூரியா கூறிய கடுமொழிகளைக் கேட்டு, ராகவன் கூடச் சிறிது பயந்து போனான்.

சூரியா மேலும் கூறினான்:- "சீதாவைப் பற்றி எனக்கு என்ன இவ்வளவு கரிசனம் என்று கேட்டீர்கள் அல்லவா? இதோ சொல்லுகிறேன், சீதாவின் தாயார்:- என்னுடைய அத்தை - கடைசி மூச்சுப் போகும் சமயத்தில் - 'சீதாவைக் கவனித்துக் கொள்!' என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள். அது மட்டுமல்ல, உங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நடந்ததற்கு முக்கிய காரணமாயிருந்தவன் நான். இன்று வரையில் ஒருவரிடமும் நான் சொல்லாத விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள் உங்களுடைய கலியாணத்தன்று அத்திம்பேர் துரைசாமி ஐயர் மாங்கல்யதாரணம் நடந்த பிறகு வந்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? ஆகையினால்தான் என்னுடைய மூத்த அத்திம்பேர் சீதாவை கன்னிகாதானம் செய்து கொடுக்க நேரிட்டது. கலியாணத்தன்று முதல் நாள் என் தகப்பனாருக்கு ஒரு தந்தி வந்தது. 'சீதாவின் கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று தந்தியில் கண்டிருந்தது. துரைசாமி ஐயர் என்று கையெழுத்தும் இருந்தது. அந்தத் தந்தி என்னிடம் கிடைத்தது. அதை நான் என் தகப்பனாரிடம் கொடுக்கவில்லை. வேறு யாரிடமும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவும் இல்லை. மாப்பிள்ளை! நீங்கள் முதன் முதலில் என் தங்கை லலிதாவைப் பார்க்க ராஜம்பேட்டைக்கு வந்தீர்கள். அப்போது தற்செயலாகச் சீதாவும் நீங்களும் பார்த்துக் கொண்டீர்கள். அன்று வரையில் கற்பனை உலகத்திலே மட்டுந்தான் காதல் உண்டு என்று நினைத்திருந்தேன். வாழ்க்கையின் புருஷன் மனைவி சண்டைகளை மட்டுந் தான் பார்த்திருந்தேன். 'கண்டதும் காதல்' என்பது உங்கள் விஷயத்தில் உண்மையானதை என் கண்முன்னே கண்டு பரவசமடைந்தேன்.

அப்படி மனமொத்துக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ளும் உங்களுக்கு நடுவில் தடையாக வருவதற்குச் சீதாவின்தகப்பனாருக்குக் கூடப் பாத்தியதை கிடையாது என்று எண்ணினேன். கலியாணம் நடந்தது, அரைமணி நேரத்துக்கெல்லாம் துரைசாமி ஐயர் வந்தார். 'தந்தி வந்ததா!' என்று கேட்டார். நான் செய்ததைச் சொல்லி, திருமாங்கல்ய தாரணமும் ஆகிவிட்டது என்று சொன்னேன். 'சரி! கடவுளுடைய சித்தம் அப்படியிருக்கும் போது நான் என்ன செய்யலாம்?" என்று துரைசாமி ஐயர் கூறினார். இவ்வளவும் நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் வருகிறது" என்று சொல்லி நிறுத்தினான் சூரியா. இதைக் கேட்ட ராகவனுடைய உள்ளத்தில் கோபம் மேலும் கொந்தளித்துப் பொங்கிற்று. ஆகா! இந்த அதிகப் பிரசங்கி எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையையே பாழாக அடித்துவிட்டான்? இவன் ஏன் குறுக்கிட்டுத் துரைசாமி ஐயரின் தந்தியை அமுக்கியிருக்க வேண்டும். இவன் குறுக்கிடாதிருந்தால் தன் வாழ்க்கையின் போக்கே வேறுவிதம் ஆகியிருக்கலாமல்லவா? எனினும், கோபத்தைவிட விஷயத்தை அறியும் ஆவல் அச்சமயம் ராகவனுக்கு அதிகமாயிருந்தது. "ரொம்ப சரி! உன்னுடைய செய்கையின் நியாயாநியாயத்தைப் பற்றிப் பிறகு கவனிக்கலாம். ஆனால் துரைசாமி ஐயர் எதற்காக அப்படிக் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்தி கொடுத்தார்?" என்று ராகவன் கேட்டான்.

"ரமாமணி என்கிற ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்துச் சிறை தண்டனை பெற்ற சமயத்தில் தாரிணி பீஹாரில் இருந்தாள். அவளைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகத் துரைசாமி ஐயர் பீஹாருக்குப் போனார். தாரிணி தன் தாயாரின் கதியைப் பற்றி அறிந்து அளவில்லாத துயரமும் அவமானமும் அடைந்தாள். தாரிணியின் வருங்காலத்தைப் பற்றிச் சர்ச்சை நடந்தது. தாரிணி இல்வாழ்க்கையை ஏற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று துரைசாமி ஐயர் விரும்பினார். ரமாமணியிடமிருந்து உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தபடியால் தாரிணியின் மனதை அறிய முயற்சித்தார். அதற்கு முன்னாலேயே உங்களுக்கும் தனக்கும் பொருந்தாது என்ற சந்தேகம் தாரிணிக்கும் இருந்தது. தாய் சிறை புகுந்த செய்திக்குப் பிறகு உங்களை மணந்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டாள். துரைசாமி ஐயரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டார். தாரிணி வாழ்க்கையில் ஆதரவின்றித் திரியாமல் உங்களை மணந்து சுகமாயிருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தச் சமயத்தில் ராஜம்பேட்டையில் தங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நிச்சயமா யிருந்தது. ஆகையினால்தான் அப்படித் தந்தி கொடுத்தார்...."

"சூரியா! அந்தத் தந்தியை நீ அதிகப் பிரசங்கித்தனமாக அமுக்கிவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போதாவது உணருகிறாயா!" என்றான் ராகவன். "மாப்பிள்ளை! நான் தவறு செய்ததாக ஒப்புக் கொள்ளமாட்டேன். கடவுளுடைய சித்தம் அவ்விதம் இருந்தது. இன்னமும் நான் சொல்லுகிறேன், உங்களுக்கும் சீதாவுக்கும் தான் பொருத்தம். தாரிணிக்கும் உங்களுக்கும் இலட்சிய ஒற்றுமை ஏற்பட்டிராது. உங்களுடைய இல்வாழ்க்கையும் வெற்றியடைந்திராது!" "நானும் உன் அத்தங்காளும் வெகு ஆனந்தமான இல்வாழ்க்கை வெற்றிகரமாக நடத்தினோம் என்பது உன் எண்ணமாக்கும்!" "ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, மாப்பிள்ளை! எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. இப்போதும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை. சீதா தங்களிடம் வருவதற்குக் காத்திருக்கிறாள். ஏற்கெனவே ஏதாவது நேர்ந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு உங்களையே தெய்வமாகப் பாவிக்கக்கூடிய நிலையில் இருக்கிறாள். அத்தங்காளுக்கு ஒரு வரி கடிதம் எழுதிப் போடுங்கள். உடனே விரைந்து ஓடி வராவிட்டால் என்னைக் கேளுங்கள்." "சூரியா! நீ சொல்வது இந்த ஜன்மத்தில் நடக்கிற காரியம் அல்ல. சீதாவை வரும்படி கடிதம் எழுதுவதைக் காட்டிலும் என்னுடைய கையையே வெட்டிக் கொண்டுவிடுவேன். அவள் பட்டாபிராமனுக்கு வோட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டு சுகமாயிருக்கட்டும். பட்டாபிராமனையே மறுமணம் வேணுமானாலும் செய்து கொள்ளட்டும்! விவாகரத்துக் கொடுக்க நான் தயார்!" என்றான் ராகவன். "ஐயோ! அப்படிச் சொல்லாதீர்கள். சொன்னீர்கள் என்று தெரிந்தாலே சீதா பிராணனை விட்டு விடுவாள். நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்; போனதெல்லாம் போகட்டும். அதையெல்லாம் மறந்துவிட்டு மறுபடியும் சீதாவுடன்

இல்வாழ்க்கை ஆரம்பித்துப் பாருங்கள். நிச்சயமாகச் சந்தோஷமாக வாழ்வீர்கள். ராகவன்! நீங்களும் சீதாவும் அன்யோன்யமாக இல்லறம் நடத்தினால் அதைக்காட்டிலும் எனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய காரியம் வேறு ஒன்றும் இல்லை." ஏற்கனவே ராகவனின் உள்ளம் எரிந்து கொண்டிருந்ததல்லவா? சூரியா தாரிணியின் பெயரைக் குறிப்பிட்டது எரிகிற தீயில் குங்கிலியத்தைப் போட்டது போலாயிற்று. "சூரியா! உனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம் என்று உனக்கு எண்ணமா? நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அதற்காகத் தானா?" என்று சொல்லிக் கொண்டே ராகவன் எழுந்து சூரியாவின் அருகில் வந்து நின்று கொண்டான். "அடே! முட்டாள்! ஜாக்கிரதை! எனக்கு வீணில் கோபம் மூட்டாதே!" என்று இரைந்து கத்திவிட்டுச் சூரியாவின் கண்ணத்தில் பளீர் என்று ஓர் அறை அறைந்தான். சூரியா கையை ஓங்கிவிட்டு உடனே கீழே போட்டான். "ஏன் கையை ஓங்கிவிட்டுக் கீழே போட்டாய்? மகாவீரனாயிற்றே நீ!" என்றான் ராகவன். "மாப்பிள்ளை! முன்னேயாயிருந்தால் உங்களுடைய ஓர் அறைக்கு ஒன்பது அறை கொடுத்திருப்பேன். ஆனால் நானும் தாரிணியும் சமீபத்தில் எங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டோ ம். பலாத்காரத்தினால் பயன் சிறிதும் இல்லை என்று கண்டு மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தை அனுசரிக்கத் தீர்மானித்திருக்கிறோம். அந்தத் தீர்மானத்துக்கு முதல் சோதனை தங்களால் ஏற்பட்டிருக்கிறது....."

"ஓஹோ அப்படியா? மகாத்மாவின் கட்சியைச் சேர்ந்து விட்டாயா? 'ஒரு கன்னத்தில் அடித்தவர்களுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு' என்கிற ஏசுநாதரின் போதனைதானே மகாத்மாவின் போதனையும்! அப்படியானால் இதையும் வாங்கிக் கொள்!" என்று இன்னொரு கன்னத்தில் இன்னொரு அறை அறைந்தான். சுளீரென்று கன்னம் வலித்தது; தலை முதல் கால் வரையில் அதிர்ந்தது. சூரியா பல்லைக் கடித்துக் கொண்டு, "உங்களுக்கு இப்போதாவது திருப்தி ஆயிற்று அல்லவா? மனம் குளிர்ந்து விட்டது அல்லவா? போய் வருகிறேன்!" என்றான். "எனக்கு இன்னும் திருப்தி இல்லை, அப்பனே! சுலபத்தில் என்னுடைய மனம் குளிர்ந்து விடாது!" என்று சொல்லி ராகவன் சூரியாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். "இதோ பார்! சூரியா! இனிமேல் தாரிணியையாவது சீதாவையாவது நீ பார்த்துப் பேசுவதில்லை என்று சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன்னை இந்த நிமிஷமே கொன்று விடுவேன்!" என்றான். "மாப்பிள்ளை! நீங்கள் கேட்பது கொஞ்சம்கூட நியாயம் இல்லை. சீதாவை நான் பார்ப்பதில்லை என்று ஏன் சத்தியம் செய்ய வேண்டும்? என் மனதில் கல்மிஷம் ஒன்றும் கிடையாது. தாரிணி விஷயத்தில் எந்தவிதமான வாக்குறுதியும் நான் கொடுக்க முடியாது.

நீங்கள் வேணுமானால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள். சீதா அத்தங்காளும் தாரிணியும் உங்கள் தாயாரும் குழந்தை வஸந்தியும் உங்கள் காரியத்தைப் பற்றிச் சந்தோஷப்படுவார்கள். வாசலில் காத்திருக்கும் சி.ஐ.டி.க் காரனும் சந்தோஷப்படுவான்!" என்றான் சூரியா. "அடே! முட்டாள்! என்னை இப்படியெல்லாம் பயமுறுத்தலாம் என்றா பார்க்கிறாய்?" என்று ராகவன் சொல்லி விட்டுப் பூரண பலத்துடன் சூரியாவைப் பிடித்துத் தள்ளினான். சூரியா மச்சுப் படியில் உருண்டு கொண்டே போய் நடுவில் இருந்த திருப்பத்தில் சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். இதற்குள் சூரியா விழுந்த சத்தத்தைக் கேட்டுவிட்டு வஸந்தியும் பாட்டியும் ஓடிவந்தார்கள். "இதென்ன சூரியா மாமா? மச்சிலிருந்து விழுந்து விட்டாயா என்ன? ஐயையோ?" என்றாள் வஸந்தி. "ஆமாம் கால் தடுக்கி விழுந்து விட்டேன்!" என்றான் சூரியா. "வஸந்தி! சூரியா தடுக்கி விழுந்து விட்டான். நல்லவேளையாக அதனால் மச்சுப்படிகளுக்குச் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை; படிகள் பிழைத்தன!" என்று ராகவன் கூறி விட்டு, தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே 'ஹே!' என்று சிரித்தான்.
 
பதினெட்டாம் அத்தியாயம்

பட்டாபியின் வெற்றி

தேவபட்டணம் அல்லோலகல்லோலப்பட்டது. "பட்டாபிராமன் வாழ்க! கறுப்பு மார்க்கெட் வீழ்க!" என்ற கோஷம் மூலை முடுக்குகளிலெல்லாம் எழுந்தது. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் தலை நரைத்த வயோதிகர்கள் வரையில் அன்று நடந்த அதிசயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். கறுப்பு மார்க்கெட் வியாபாரத்தில் கொள்ளைப்பணம் சம்பாதித்த பழைய சேர்மன் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் முப்பதினாயிரம் ரூபாய் வாரி இறைத்திருந்ததாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருந்தது. வோட்டு ஒன்று நூறு ரூபாய் வரையில் விலை கொடுத்து வாங்கப் பழைய சேர்மன் பிரம்ம பிரயத்தனம் செய்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆனாலும் அவருக்கு எதிராக நின்ற பட்டாபிராமன் பெரும்பான்மை வோட்டுக்கள் பெற்று வெற்றி அடைந்தான் பொது ஜன அபேட்சகராகிய பட்டாபிராமன் வெற்றியடைந்தது பற்றித் தேவபட்டணத்துப் பொது மக்கள் எல்லோரும் அளவிலாத ஆனந்தமடைந்தார்கள். பலவிதங்களிலும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பட்டாபிராமன் வெற்றி பெற்றதாக வோட்டு முடிவு வெளியானவுடனே ஜயகோஷங்கள் வானளாவ எழுந்தன. "பட்டாபிராமன் எங்கே?" என்று கேட்கும்படியாகப் பூமாலைகள் அவனுடைய தலைக்குமேலே எழுந்து அவன் முகத்தையே மறைத்து விட்டன. முன் ஏற்பாடு எதுவும் இல்லாமலே ஊர்வலம் ஒன்று ஆரம்பமாயிற்று. திறந்த மோட்டார் வண்டி ஒன்றில் பட்டாபிராமனைப் பலவந்தமாகப் பொதுஜனங்கள் ஏற்றி வைத்தார்கள். எங்கிருந்தோ நாதஸ்வர வாத்தியமும் பாண்டு கோஷ்டியும் வந்து சேர்ந்தன. ஊர்வலமும் தேவபட்டணத்து வீதிகளில் எல்லாம் சாவகாசமாகச் சுற்றி வந்து கடைசியில் பட்டாபிராமனுடைய வீட்டில் அவனைக் கொண்டு வந்துவிட்ட பிற்பாடு கலைந்தது.

பொது ஜனங்கள் எல்லாரும் போன பிற்பாடு சில ஆப்த நண்பர்களும் பிரமுகர்களும் பட்டாபிராமனைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள்ளே வந்தார்கள். பட்டாபிராமனுடைய வீட்டிலிருந்த நாற்காலிகளில் எல்லாம் அவர்கள் உட்கார்ந்தும் இடம் போதாமல் பலர் ஜன்னல் விளிம்புகளிலும் உட்கார வேண்டியிருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியே பட்டாபிராமனைப் பாராட்டினார்கள். "பட்டாபிராமன் சேர்மன் ஆவது நிச்சயம்" என்று சபதம் கூறினார்கள். சில பெரியவர்கள் வயதின் உரிமை எடுத்துக் கொண்டு, "மிஸ்ஸஸ் பட்டாபிராமன் எங்கே?" என்று கேட்டார்கள். சந்தோஷம் ஒரு பக்கமும் சங்கோசம் ஒரு பக்கமும் பிடுங்கித்தின்ன, ஸ்ரீ மதி லலிதா அங்கே வந்து சேர்ந்தாள். "இந்த வெற்றியெல்லாம் உங்களுடைய அதிர்ஷ்டபலத் திலேதான்!" என்று லலிதாவைப் பார்த்துத் தனித்தனியாகப் பலர் உபசாரம் சொன்னார்கள்.லலிதா அங்கிருந்துபோன பிறகு ஒருவர், "அந்த அம்மாளுக்கு உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். பட்டாபிராமனுடைய முகம் சுருங்கிற்று. "பரவாயில்லை!" என்று சொன்னான். "சீதா அம்மாளைப் பற்றித்தானே கேட்கிறீர்கள்? அவருடைய உடம்புக்கு என்ன வந்தது? மனதுதான் ரொம்பவும் நொந்து போயிருக்கும்!" என்றார் இன்னொரு நண்பர். "பொது வாழ்க்கை என்றால் இந்த மாதிரி எத்தனையோ தான் இருக்கும். வம்புக்காரர்களுடைய பொய்களுக்கெல்லாம் பயந்து விடவும் கூடாது; மனதைச் சோர்வடைய விட்டு விடவும் கூடாது!" என்றார் எதிர் வீட்டுத் தாமோதர முதலியார். "மிஸ்டர் பட்டாபிராமன்! நீங்கள்தான் சீதா அம்மாளுக்கு தைரியம் சொல்லித் தேற்ற வேண்டும்" என்றார் அட்வகேட் அப்பாராவ்.

"என்ன இருந்தாலும் இந்த மாதிரி அயோக்கியத்தனமாகவா அவதூறு சொல்கிறது? எனக்கு என்னமோ நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது!" என்றான் பட்டாபிராமன். "அப்பா, பட்டாபி! அப்படியெல்லாம் இரத்தத்தைக் கொதிக்கும்படி விட்டு விடாதே! நீ எலெக்ஷனுக்கு நிற்க உத்தேசித்தபோது நான் உனக்கு எச்சரிக்கை செய்யவில்லையா? எலெக்ஷன் என்றால் இப்படித்தான் குப்பை கூளம் எல்லாம் வெளியில் வரும். அதற்காக, 'ஆஹா ஊஹூ' என்று அலறுவதில் பிரயோசனமில்லை!" என்று சொன்னார் தாமோதர முதலியார். "அதெல்லாம் இல்லை, ஸார் இந்த மாதிரி காலிப்பயல்களைச் சும்மா விட்டுவிடக் கூடாது. துண்டுப் பிரசுரம் போட்டவனைக் கோர்ட்டுக்கு இழுத்துச் சந்தி சிரிக்க அடிக்க வேண்டும்!" என்றார் ஒரு ஆக்ரோஷக்காரர். "கோர்ட்டுக்குப் போவது பிசகு, அவதூறு கேஸுகளில் புரூப் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பது நமக்குத் தெரியாதா என்ன? பேசாமல் 'பினீத் கண்டெம்ட்' என்று விட்டுவிடுவது தான் சரி!" என்றார் அட்வகேட் அப்பாராவ். "அதுதான் ஸார், சரி! சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் சந்திரனுக்கு என்ன குறைவு வந்துவிடும்?" என்றார் ஒரு சாந்தமூர்த்தி. "நமக்கு அப்படித் தோன்றுகிறது ஆனால் சந்திரனுக்கு என்ன தோன்றுகிறதோ, என்னமோ!" என்றார் ஒரு ஹாஸ்யப் பிரியர். கடைசியாக, பட்டாபிராமன் அவனுடைய மகத்தான வெற்றியைக் குடும்பத்தோடு சேர்ந்து அனுபவிக்கட்டும் என்று விட்டு விட்டு எல்லாரும் போய்ச் சேர்ந்தார்கள்.

மேற்கூறிய சம்பாஷணையில் சீதாவைப்பற்றிக் கூறப்பட்ட அனுதாப வார்த்தைகள் வாசகர்களுக்கு அவ்வளவாக விளங்காமலிருக்கலாம். விஷயம் என்னவென்று கேட்டால்:- வோட்டுப் போடும் தினத்துக்கு முதல் நாளைக்கு முன்னாள் பட்டாபிராமனை ஆதரித்துக் கடைசிப் பெரும் பொதுக் கூட்டம் நடந்தது. கேவலம் முனிஸிபல் தேர்தல் கூட்டங்களில் சாதாரணமாகக் கண்டிராத பெரும் கூட்டம் கூடியிருந்தது, சுமார் ஐயாயிரம்பேர் இருக்கும். மேடையில் அபேட்சகர் பட்டாபிராமனோடு இன்னும் பல பிரமுகர்களும் பெண்மணிகளும் அமர்ந்திருந்தார்கள். பெண்மணிகளிலே சீதாவும் இருந்தாள். சென்ற ஒன்றரை மாதமாகத் தேர்தல் வேலை செய்ததில் சீதா பிரமாதமான பிரசங்கி ஆகிவிட்டாள். அவளுடைய பேச்சிலே தேசபக்தி ததும்பிற்று; ஆவேசம் பொங்கிற்று; வீரசுதந்திரம் தாண்டவ நர்த்தனம் செய்தது; கறுப்பு மார்க்கெட் சின்னாபின்னமடைந்தது; அக்கிரமமும் அநீதியும் அதோகதி அடைந்தன. பட்டாபிராமனை ஆதரித்த சீதாவின் வார்த்தைகள் அன்பும் ஆதரவும் உருக் கொண்டவையாக வெளிவந்தன. எதிரி அபேட்சகரைத் தாக்கி அவளுடைய சொற்களோ இராமபாணங்களைப்போல் விர்ரென்று பாய்ந்து சென்று அக்கிரமத்தின் உயிர் நிலையில் தைத்தன. ஆகையால் சபையோர் எல்லோரும் வீராங்கனையான ஸ்ரீ மதி சீதாதேவி எப்போது பேசப் போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டி ருப்பது வழக்கமாகி விட்டது. மற்றவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் ஏதோ சகித்துக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் கடைசியாக நடந்த பெரும் பொதுக் கூட்டத்தின் போது சபையோர் பெரும் ஏமாற்றம் அடையும்படி நேர்ந்தது. ஏனெனில் ஸ்ரீ மதி சீதாவின் பேச்சு அன்று நடைபெறவில்லை. வழக்கம்போல் சீதா எழுந்தது என்னமோ உண்மைதான். ஆனால் மூன்று நாலு வாக்கியங்களுக்குமேல் பேசவில்லை; பேச முடியவில்லை. அந்த மூன்று நாலு வாக்கியங்களையும் சீதா விம்மலுடன் பேசினாள் பிறகு குபீரென்று பெரிய அழுகையாக வந்துவிட்டது. எனவே பேச்சை நிறுத்திக்கொண்டு உட்கார்ந்து விட்டாள். நல்ல வேளையாகக் கூட்டத்தில் குழப்பம் எதுவும் ஏற்படாமல் மேடையில் இருந்த பிரமுகர்களும் ஸ்திரீகளும் அங்கிருந்து கலைந்து போக முடிந்ததைப் பற்றியே அனைவரும் சந்தோஷப்பட வேண்டியதாயிற்று. சீதாவின் விபரீத நடவடிக்கைக்குக் காரணமாயிருந்தது இதுதான்:- அன்று பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஜனக் கூட்டத்தின் ஓரப் பக்கங்களில் யாரோ ஒருவன் ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தான். அதைக் கையில் வாங்கிப் படித்தவர்கள் எல்லாரும் மேடைமீதிருந்த சீதாவை உற்றுப் பார்க்கலானார்கள். மேற்படி துண்டுப் பிரசுரங்கள் கைமாறி மாறிக் கூட்டத்தில் பரவிக் கொண்டேயிருந்தன. அநேகருடைய கவனம் மேடையில் நின்று பேசுகிறவர்கள் மீதோ அவர்களுடைய பேச்சிலோ செல்லவேயில்லை. திரும்பத் திரும்ப சீதாவையே அவர்கள் நோக்கிக் கொண்டிருந்தார்கள். சிலருடைய நோக்கில் பரிதாபம் இருந்தது; சிலருடைய பார்வையில் ஆத்திரம் அதிகம் இருந்தது; வேறு சிலருடைய பார்வையில் ஏளனமும் கலந்திருந்தது.

இப்படிக் கூட்டத்தில் பலர் ஏதோ ஒரு பிரசுரத்தைப் பார்ப்பதும் பிறகு தன்னைப் பார்ப்பதுமாயிருந்ததைச் சீதாவும் சிறிது நேரத்தில் கவனிக்கும்படி நேர்ந்தது. இன்னது என்று விளக்கமில்லாத கவலையும் பீதியும் அவள் மனதில் உதித்தன. அந்தப் பிரசுரத்தை வாங்கிப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் பிரசுரத்தை விநியோகித்தவன் பிரசங்க மேடைக்கு அருகில் வந்து அதை விநியோகிக்கத் தொடங்கினான். அப்படி விநியோகிக்கக் கூடாதென்று சிலர் ஆட்சேபித்தார்கள். அந்தப் பையன் நாலுத் துண்டுப் பிரசுரத்தை மேடையில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான். கை மாறி மாறி ஒரு பிரசுரம் சீதாவுக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தது. சீதா அதை கைநீட்டி வாங்கிக் கொண்டாள்; வாங்கிப் படிக்கவும் தொடங்கினாள். முதல் நாலைந்து வரிகளைப் படித்ததுமே அவளுடைய நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது போலிருந்தது. மேலே படித்ததும் இதயம் வெடித்துவிடும் போல் தோன்றியது. படித்து முடித்ததும் உடம்பெல்லாம் ஆயிரம் தேள்கள் கொட்டினாற் போன்ற துன்பம் உண்டாயிற்று. துன்பத்தோடு கலந்து சொல்ல முடியாத கோபமும் ஆத்திரமும் எழுந்தன. அந்தத் துண்டு பிரசுரத்தில் சீதாவைப் பற்றி அவ்வளவு நிந்தனையாக எழுதியிருந்தது. அவளுடைய ஒழுக்கத்தைக் குறை கூறியிருந்தது. அவள் தன் புருஷனை விட்டு விட்டு அம்மாஞ்சி சூரியாவோடு ஓடி வந்தவள் என்று எழுதியிருந்தது. அவள் தேசத் தொண்டில் சிறைபுகவில்லையென்றும் ரயிலில் திருடியதற்காகத் தண்டிக்கப்பட்டவள் என்றும் கண்டிருந்தது. அப்படிப்பட்ட ஜாலக்காரியின் மாயப் பேச்சில் மயங்கும் முட்டாள்களுக்கு நன்றாக டோ ஸ் கொடுத்து விட்டு அந்தத் துண்டுப் பிரசுரம் முடிவுற்றது.

ஒரு பெண்ணின் மனதைப் பாதித்து வேதனைக்குள்ளாக்குவதற்கு வேறு என்ன வேண்டும்? வேதனையிலிருந்து பொங்கி எழுந்த ஆத்திரம் காரணமாகச் சீதா பேச எழுந்தாள். அந்தத் துண்டு பிரசுரத்தைக் குறிப்பிட்டு அதைச் சின்னாபின்னமாக்கி அதை எழுதியவனுடைய மதியீனத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்ற ஆவேசத்துடன் பேச ஆரம்பித்தாள். அவளுடைய நோக்கம் நிறைவேறவில்லை. நாலைந்து வாக்கியங்கள் பேசுவதற்குள்ளேயே அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தபடியால் பேச்சை நிறுத்திவிட்டு உட்காரும்படி நேர்ந்தது. அடுத்த இரண்டு நாளும் சீதா வெளிக்கிளம்பவேயில்லை. கேட்டவர்களுக் கெல்லாம் பட்டாபிராமன் சீதாவுக்கு உடம்பு சரியில்லை என்று பதில் சொல்லிக்கொண்டு வந்தான். மேற்படி சம்பவத்தினால் பட்டாபிராமனுடைய மனமும் வேதனை அடைந்திருந்தது. கோபமோ சொல்ல முடியாமல் வந்தது. எனினும் எலெக்ஷன் முயற்சியில் அவன் சோர்ந்து விடவில்லை. மேற்படி சம்பவம் தேர்தலில் வெற்றி பெறுவதில் அவனுடைய ஆத்திரத்தை அதிகமாக்கி விட்டது. அம்மாதிரி பட்டாபிராமனுக்கு வேலை செய்தவர்களும் அதிக ஊக்கம் கொண்டார்கள். இந்தத் தேர்தலில் ஜெயிக்காவிட்டால் தங்கள் மானமே போய்விடும் என்றும் பிறகு தேவபட்டணத்துப் பொது வாழ்க்கையில், தாங்கள் தலைகாட்ட முடியாதென்றும் அவர்கள் எண்ணி முன்னைவிட ஆவேசமாக வேலை செய்தார்கள். பொது ஜனங்கள் - வோட்டர்கள் மனதில் மேற்படி துண்டுப் பிரசுரம் எந்தவித மாறுதலையும் உண்டாக்கவில்லை. பொது ஜனங்களை முட்டாள்கள் என்று சொல்லி யாராவது அவர்களுடைய ஆதரவைப் பெற முடியுமா? வேறு என்ன விதமாகத் தங்களைத் திட்டினாலும் பொது ஜனங்கள் பொறுத்துக் கொள்வார்கள். "நீங்கள் முட்டாள்கள்" என்று சொல்லி யாரும் அவர்களுடைய ஆதரவைப் பெறலாம் என்று எதிர்பார்க்க முடியாது! "நாங்களா முட்டாள்கள்? துண்டுப் பிரசுரம் எழுதிய நீதான் முட்டாள் என்பதை நிரூபித்து விடுகிறோம்!" என்று தேவபட்டணம் பொது ஜனங்கள் தீர்மானித்தார்கள்.

மேலும், கறுப்பு மார்க்கெட்டில் பணம் சேர்த்த பழைய பெருச்சாளி இப்படியெல்லாம் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறைக் கிளப்பிவிட்டுத் தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்ளப் பார்க்கிறான் என்ற அபிப்பிராயமும் பொது மக்களிடையே பரவியது. அந்தப் பொதுஜன அபிப்பிராயத்தையே வோட்டுகளும் பிரதிபலித்தன. முடிவில், பட்டாபிராமன் பெரும் வெற்றி அடைந்தான். அந்த மகத்தான வெற்றியானது பட்டாபிராமனுக்கு நியாயமாக அளித்திருக்கவேண்டிய ஆனந்தத்தை அளிக்கவில்லை. 'தெள்ளிய பாலில் சிறிது நஞ்சையும் சேர்த்துவிட்டது போல், அவனுடைய வெற்றி குதூகலத்தைச் சீதாவைப் பற்றிய அவதூறு பிரசாரம் பாதித்துவிட்டது! யாருடைய தூண்டுதல் அந்த எலெக்ஷனில் அவன் நிற்கும்படியான ஊக்கத்தை அளித்ததோ, யாருடைய மகத்தான முயற்சி அவனுடைய வெற்றிக்குக் காரணமாயிருந்ததோ, யார் அவனுக்குச் சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் ஆறுதல்கூறி, உற்சாகமூட்டி வந்தாளோ, அத்தகைய சீதா வெற்றிக் கொண்டாட்டக் குதூகலத்தை அவனுடன் பகிர்ந்து அனுபவிக்க முடியவில்லை. இரண்டு நாளாக மச்சு மேலிருந்து கீழே இறங்காமலேயே இருந்து வருகிறாள். சீதாவும் சேர்ந்து கொண்டாட முடியாத இந்த வெற்றியினால் என்ன பிரயோஜனம்? இவ்விதம் பட்டாபிராமன் மனச் சோர்வுக்கு ஆளாகியிருந்த போது லலிதா தன்னுடைய தாயாருடன் பட்டாபிராமனின் ஆபீஸ் அறைக்கு வந்தாள். பட்டாபிராமன் வெற்றியடைந்ததில் அவனுடைய மாமியாரைப் போல் சந்தோஷமடைந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது! முதல் தடவையாக மாப்பிள்ளையிடம் சங்கோசத்தை விட்டுச் சரஸ்வதி அம்மாள் கலகலப்பாகப் பேசினாள்.

சந்தோஷத்தை பலவிதத்திலும் தெரிவித்த பிறகு, "இந்த வைபவத்தையெல்லாம் பார்க்க அவர் இல்லாமற் போய்விட்டாரே என்று நினைத்தால் மட்டும் மனது வேதனைப்படுகிறது!" என்று சொல்லிக் கொண்டு இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டாள். உடனே, இந்தச் சமாசாரத்தைப் பிரஸ்தாபித்து விட்டதற்காக வெட்கப்பட்டவளாய் விரைந்து சமையற்கட்டுக்குப் போய்விட்டாள். "நீங்கள் என்ன வேணுமோ சொல்லுங்கள். அம்மாவுக்கு உங்கள் பேரில் உள்ள பாசம் வேறு யாரிடமும் கிடையாது!" என்றாள் லலிதா. "யார் இல்லை என்றார்கள்? உன் அம்மாவுக்கு என்பேரில் ரொம்பப் பாசந்தான். ஆனால் அந்தப் பாசம் எனக்குப் பிராண சங்கடமாயிருக்கிறது!" என்றான் பட்டாபிராமன். "அது போனால் போகட்டும், சீதா இப்படி இரண்டு நாளாகப் படுத்த படுக்கையாக இருக்கிறாள், நீங்களும் எலெக்ஷன் மும்முரத்தில் இருந்து விட்டீர்கள். இப்போது மாடிக்குப் போய் அவளுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு வரலாம், வாருங்களேன்!" என்றாள் லலிதா. "என்ன சமாதானத்தைச் சொல்வது? வீண் பிடிவாதத்துக்கு நாம் என்ன செய்யமுடியும்? யாரோ வழியிலே போகிறவன் என்னமோ பிதற்றினான் என்பதற்காகப் குப்புறப்படுத்து ஓயாமல் அழுது கொண்டிருக்கிறதா? என்ன இருந்தாலும் பெண்பிள்ளை என்பது சரியாயிருக்கிறது. இப்படிப்பட்ட கோழை மனதுள்ளவர்கள் பொது வேலைக்கு வரவே கூடாது!" என்றான் பட்டாபிராமன். "சூரியாவும் அன்றைக்கு அப்படித்தான் சொன்னான். எலெக்ஷன் தொல்லைக்குப் பெண்பிள்ளைகள் போகக்கூடாது என்றான்...." "சூரியா என்ன உளறினால் இப்போது என்ன? அவன் என்னை எலெக்ஷனுக்கே நிற்கக்கூடாது என்று சொன்னான். நின்றதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? இன்றைக்கு ஊரெல்லாம் 'ஜே' கோஷம் செய்கிறதோ இல்லேயோ" என்று பட்டாபி கர்வம் ததும்பப் பேசினான்.

"அதற்கு என்ன ஆட்சேபணை? வெறுமனேயா ஜயகோஷம் செய்கிறார்கள்? 'பட்டாபிராமனுக்கு ஜே!' என்றுதான் கோஷிக்கிறார்கள்! நம்முடைய கலியாணத்தன்று எல்லாரும் என்னைப் பிடிவாதம் செய்ததின் பேரில் 'மாமவ பட்டாபிராமா' என்று நான் பாடினேன். அது இன்றைக்குத்தான் நிஜமாயிற்று. இன்று தானே உங்களுக்கு பட்டாபிஷேகம்!" என்று லலிதா அன்பு ததும்ப பதில் கூறினாள். "சரி சரி! நீ உன்னுடைய பழைய பெருமையைப் பீத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டாயாக்கும். இன்னும் எனக்குப் பட்டாபிஷேகம் ஆகவில்லை இன்றைக்குத் துவஜாரோகணந்தான் நடந்திருக்கிறது. சேர்மன் வேலையும் கிடைத்த பிறகுதான் பட்டாபிஷேகம் நடந்தது என்று சொல்லலாம்." "அதற்கு என்ன பிரமாதம்? இது ஆனதுபோல் அதுவும் ஆகிவிடுகிறது! என் வாக்குப் பொய்யாகாது; நீங்கள் வேணுமானால் பாருங்கள்!" "ரொம்ப லட்சணந்தான். உன்னுடைய திருவாக்கின் மகிமையினாலேதான் எனக்குத் தேர்தலில் வெற்றி கிடைத்தது என்று உன் எண்ணமாக்கும்! எலெக்ஷனுக்கே நான் நிற்கக் கூடாது என்று நீ முரண்டு பிடித்ததை மறந்து விட்டாயாக்கும்! அந்தச் சமயம் சீதா மட்டும் என்னுடைய கட்சியில் நின்று பேசியிராவிட்டால்....." "அதைப்பற்றி யார் என்ன சொன்னார்கள்? சீதா அத்தங்கா இந்தத் தேர்தலில் நமக்குச் செய்த ஒத்தாசையை மறக்க முடியுமா?" "அப்படியொன்றும் உன் அத்தங்கா பிரமாத ஒத்தாசை எனக்குச் செய்துவிடவில்லை. அவள் இல்லாவிட்டால் நான் ஜெயித்திருக்க மாட்டேன் என்கிறாயா?"

"அழகாய்த்தானிருக்கிறது! நான் அப்படி சொல்வேனா என்ன? உங்களுடைய தியாகத்தினாலும் செல்வாக்கினாலும் நீங்கள் ஜயித்தீர்கள்; அதைப் பற்றிச் சந்தேகமில்லை. ஆனால் சீதா அத்தங்காவும் எவ்வளவோ பாடுபட்டு ஒத்தாசை செய்திருந்தாள் அதை நாம் மறக்கக்கூடாது. கொஞ்சம் மேலேபோய் அத்தங்காவைப் பார்த்துவிட்டு வரலாம். வாருங்கள், நீங்கள் இரண்டு வார்த்தை 'உன்னால்தான் ஜெயித்தேன்' என்று சொல்வதினால் ஒன்றும் முழுகிப் போய்விடாது, அவளுக்குத் திருப்தியாயிருக்கும்." "அவளுடைய திருப்திக்காவா நான் ஜன்மம் எடுத்திருக்கிறேன்? அதெல்லாம் முடியாத காரியம். ஊரெல்லாம் திரண்டு வந்து ஊர்வலம் நடத்தி எனக்கு வாழ்த்து சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே யிருந்துகொண்டு இவளுக்கு மச்சுப்படி இறங்கி வரக்கூட முடியவில்லை! அவள் இறங்கிவந்தால் வரட்டும்; வராவிட்டால் போகட்டும். நான் போய் அவளுடைய முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு கெஞ்ச முடியாது! தெரிகிறதா?" இப்படி பட்டாபிராமன் ஆத்திரமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ மச்சுப்படி இறங்கிவரும் சத்தம் கேட்டது. உடனே அந்தத் தம்பதிகள் பேச்சை நிறுத்தினார்கள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் சீதா அறைக்குள்ளே பிரவேசித்தாள். "அத்தங்கா! உனக்கு நூறு வயது!" என்றாள் லலிதா. "வாருங்கள்! வாருங்கள்! இப்போதுதான் மாடிக்கு வந்து உங்களைப் பார்க்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் நீங்களே இறங்கி வந்துவிட்டீர்கள். தலைவலி இப்போது எப்படியிருக்கிறது?" என்றான் பட்டாபிராமன். "உங்களுடைய வெற்றிச் செய்தி கேட்டதும் தலைவலி பறந்து போய்விட்டது! ரொம்ப சந்தோஷம்!" என்றாள் சீதா. "எல்லாம் நீங்கள் கொடுத்த ஊக்கத்தினாலும் செய்த ஒத்தாசையினாலுந்தான். உங்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன்!" என்றான் பட்டாபிராமன். "நான் என்ன அப்படிப் பிரமாத ஒத்தாசை செய்து புரட்டிவிட்டேன்? லலிதாவின் அதிர்ஷ்டத்துக்கு எல்லாம்தானே நடக்கும்!" என்று சீதா சொல்லிவிட்டு லலிதாவின் கன்னங்களைத் தடவிக் கொடுத்துத் திருஷ்டி கழிக்கும் பாவனையாக நெற்றியில் கையை வைத்து நெரித்துக் கொண்டாள்.

லலிதாவுக்கு ஆனந்தமாயிருந்தது. சீதா மலர்ந்த முகத்துடன் எழுந்து வந்ததை நினைத்துக் களிப்படைந்தாள். தன் கணவரோ சற்றுமுன் கடுமையாகப் பேசியதை மறந்து அவளிடம் மரியாதையாகப் பேசுகிறார். பட்டாபிராமனுடைய வெற்றியினால் லலிதாவுக்கு ஏற்பட்ட குதூகலம் இப்போது பூர்த்தியாகிவிட்டது. "அத்தங்கா! இந்த மனுஷருடைய பேராசையைக் கேள். இவருக்கு இந்த எலெக்ஷனில் வெற்றி கிடைத்தது போதாதாம். சேர்மன் பதவியும் கிடைத்தால்தான் சந்தோஷப்படலாமாம்?" என்றாள் ஸ்ரீ மதி லலிதா. "உன் அதிர்ஷ்டத்துக்கு அதுவும் தானே நடக்கிறது!" என்று சீதா கூறினாள். அப்போது பட்டாபி குறுக்கிட்டு, "இவள் சொல்கிறதை நீங்கள் நம்பாதீர்கள், இவளுக்கு 'சேர்மன் ஒயிஃப்' என்று தன்னை எல்லாரும் கொண்டாட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது! அந்தப் பழியை என் தலையின் பேரில் போட்டுவிடப் பார்க்கிறாள்!" என்று சொன்னான். "லலிதா அப்படி ஆசைப்படுவதில் என்ன தவறு? எனக்குக் கூடத்தான் நீங்கள் சேர்மன் ஆகிப் பார்க்கவேண்டும் என்று ஆசையாயிருக்கிறது!" என்று பரிவுடன் கூறினாள் சீதா. "அந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் நீங்கள் முன்போல் எனக்கு உதவி செய்யவேண்டும். மாடியிலே போய்ப்படுத்துக் கொள்ளக்கூடாது." "இனிமேல் என்னால் உங்களுக்கு உபகாரம் கிடையாது. ஒருவேளை அபகாரம் நேர்ந்தாலும் நேரும். இரண்டு நாளாக நான் தீவிரமாக யோசனை செய்து பார்த்தேன். ஸ்திரீகள் எலெக்ஷன் முதலிய பொதுக் காரியங்களில் தலையிடவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பொது ஜனங்கள் ரொம்பப் பொல்லாதவர்கள்!" என்றாள் சீதா. "நீங்கள் சொல்வது சுத்தத் தப்பு. இன்றைக்கு என்னை வாழ்த்துக்கூற வந்தவர்கள் எல்லோரும் தங்களைப்பற்றி அன்புடன் விசாரித்தார்கள், ஒருவராவது தவறாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை." "இன்றைக்கு ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள்; ஆனால் நாளைக்குச் சொல்வார்கள்." "பொது ஜனங்கள் பேரில் ஏன் உங்களுக்கு இவ்வளவு அவநம்பிக்கையோ தெரியவில்லை எவனோ ஒரு காலிப்பயல் என்னமோ பிதற்றினால் அதற்காக எல்லாரையும் சேர்த்துக் குறை சொல்லலாமா?"

"அந்த நோட்டீசை நீங்கள் பார்த்தீர்களோ என்னமோ தெரியவில்லை. பார்த்திருந்தால் உங்களுக்கும் என்னைப்போல் இரத்தம் கொதித்திருக்கும். அம்மாதிரியெல்லாம் எழுதியவனை வெட்டிப் போட்டு விடலாம் என்று தோன்றியிருக்கும்!" இந்தச் சமயத்தில் லலிதா குறுக்கிட்டு, "போதும் இந்தப் பேச்சு! சந்தோஷமான சமயத்தில் அந்த அக்கிரமத்தைப் பற்றி எதற்காகப் பேசவேண்டும்! சாப்பிடப் போகலாம், வாருங்கள்!" என்று சொன்னாள். மூன்று பேரும் சாப்பிடுவதற்குப் போனார்கள். சாப்பிடு கிறபோது சிரிப்பும் விளையாட்டுமாயிருந்தது. உணவு அருந்தியதும் சீதா மச்சு அறைக்கும் பட்டாபிராமன் வாசல் திண்ணைக்கும் போனார்கள். பிறகு சரஸ்வதி அம்மாள் லலிதாவிடம், "இந்தப் பெண் இனிமேல் இங்கே அதிக காலம் இருப்பது நன்றாயிராது. சீக்கிரம் ஊருக்குக் கிளம்பிப் போனால் நன்றாயிருக்கும்!" என்றாள். "நன்றாயிருக்கிறதடி, அம்மா நீ சொல்லுகிறது; காரியம் ஆகிறவரை காலைப்பிடி என்று சொல்வதுபோல அல்லவா இருக்கிறது? அத்தங்கா மட்டும் வந்திராவிட்டால் உன் மாப்பிள்ளை எலெக்ஷனுக்கு நின்றிருக்கமாட்டார், ஜயித்துமிருக்கமாட்டார். நீயே எத்தனையோ தடவை அவ்விதம் சொல்லியிருக்கிறாய். இப்போது 'சீதா சீக்கிரம் ஊருக்குப் போனால் தேவலை' என்கிறாயே?" "அவள் செய்ததை நான் இல்லை என்றா சொல்கிறேன்? ஏதோ ஒத்தாசை செய்தாள்; வாஸ்தவந்தான். ஆனால் கடைசியில் பெரிய கல்லாகத் தூக்கிப் போட்டுவிட்டாள்!" "வீணாகப் பழி சொல்லாதே! அவள் என்ன செய்தாள், பாவம்!"

"அவள் என்ன செய்தாளோ என்னமோ எனக்கு எப்படித் தெரியும்? புகை உள்ள இடத்தில் நெருப்பு இல்லாமற் போகாது. ஏதோ அவளுடைய நடத்தையில் கல்மிஷம் இல்லாமற் போனால் அப்படித் துணிந்து அச்சுப் பிரசுரம் போடு வார்களா?" என்றாள் சரஸ்வதி அம்மாள். "அம்மா! அம்மா! அத்தங்காளைப்பற்றி அவதூறு சொல்லாதே! சொன்னால் உனக் குத்தான் பாவம்!" "நான் சொல்லவில்லையடி, அம்மா, நான் சொல்லவில்லை! என் வாயை வேணுமானால் நீ மூடலாம்; ஊர் வாயை மூட முடியுமா? அடுத்தபடி இன்னொரு பெரிய வேலை இருக்கிறதே, சேர்மன் வேலை. இது மாப்பிள்ளைக்கு ஆக வேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருக்கிறது. சீதா நல்ல எண்ணம் உள்ளவளாயிருந்தால் இரண்டு நாளில் கிளம்பிப் போய்விடுவதுதான் நியாயம். அவளுக்கும் ஒரு புருஷன் இருக்கிறான். ஒரு குழந்தையும் இருக்கிறாள் அல்லவா? இன்னொருவர் வீட்டிலேயே இவள் வந்து உட்கார்ந்து கொண்டிருந்தால், இவளுடைய குடும்பம் என்ன ஆகிறது? நீ இப்படிப் போய் இன்னொருவர் வீட்டில் இருப்பாயா? யோசித்துப்பார்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். அம்மா சொல்வதிலும் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்று லலிதாவுக்கு தோன்றியது.
 
பத்தொன்பதாம் அத்தியாயம்

பாம்புக்கு வார்த்த பால்

பட்டாபிராமனுடைய மாமியாரின் மனோரதம் வீண் போகவில்லை. தேவபட்டணத்து முனிசிபல் சேர்மன் பதவிக்கு நடந்த தேர்தலிலும் பட்டாபிராமனுக்கே வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி தனியாக வரவில்லை. இடி, மின்னல், பெருமழை, பிரளயம், இவற்றுடன் சேர்ந்து வந்தது. சீதாவுக்கு ஏற்பட்ட மனச் சோர்வு இரண்டு மூன்று தினங்களிலேயே மறைந்து போய்விட்டது. சரஸ்வதி அம்மாள் அடிக்கடி முணுமுணுத்ததைப் பொருட்படுத்தாமல் பட்டாபிராமனும் லலிதாவும் சீதாவை உற்சாகப்படுத்துவதில் முனைந்தார்கள். முதல் தேர்தலில் ஏற்பட்ட வெற்றிக்காக நடந்த உபசார விருந்துகளுக்கும் வாழ்த்துக் கூட்டங்களுக்கும் சீதாவையும் தவறாமல் உடன் அழைத்துப் போனார்கள். சென்ற இடங்களில் எல்லாம் சீதா தன்னுடைய கலகலப்பான சுபாவத்தினாலும் சாதுர்யமான பேச்சுகளினாலும் அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தி வந்தாள். எதிரி மனப்பான்மை கொண்டவர்கள் சிலரும் பொறாமைக்காரர்களும் தங்களுக்குள் ஏதோ அப்படி, இப்படி என்று பேசிக் கொண்டது உண்மைதான். ஆனால் அது ஒன்றும் பட்டாபிராமன் காது வரையில் வந்து எட்டவில்லை. நாளாக ஆக, பட்டாபிராமனுக்குச் சேர்மன் பதவி நிச்சயம் என்று ஏற்பட்டது. சேர்மன் தேர்தல் தினம் நெருங்க நெருங்க, பட்டாபிராமன், லலிதா, சீதா - ஆகிய இவர்களின் உற்சாகமும் உச்சத்தை அடைந்து வந்தது. ஆனால் குறிப்பிட்ட தேதிக்குச் சரியாக இரண்டு நாள் இருக்கும்போது லலிதாவின் தலையில் இடி விழுந்தது போன்ற ஒரு திடுக்கிடும் சம்பவம் ஏற்பட்டது.

அன்று காலையில் பட்டாபிராமன் வெளியிலே போயிருந்தான். சீதா தன்னுடைய மாடி அறையில் உட்கார்ந்து, ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். அச்சமயம் தபால்கள் வந்தன. லலிதா தபால்களை வாங்கிக்கொண்டு வந்து பட்டாபி ராமனுடைய மேஜையின் மேல் வைத்தாள்.பிறகு தனக்கு ஏதாவது கடிதம் உண்டா என்று பார்ப்பதற்கு அசிரத்தையாகத் தபால்களைப் புரட்டினாள். அவளுடைய பெயருக்கு ஒரு கடிதம் இருந்தது. சாதாரணமாய் விலாசத்தைப் பார்த்ததும் யாரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதென்று அவளுக்குத் தெரிந்துவிடுவதுண்டு. ஏனெனில் அவள் பெயருக்குக் கடிதம் எழுதக் கூடியவர்கள் வெகு சிலர்தான், சூரியா ஒருவன். சீதா டில்லியிலிருந்தபோது அடிக்கடி எழுதுவான். கல்கத்தாவிலிருந்து சித்ரா எழுதுவாள், இன்னும் இரண்டொருவர்தான். ஆனால் இந்தக் கடிதத்தின் மேல் விலாசத்திலிருந்து அதை எழுதியது யார் என்று தெரியவில்லை. ஆகையால் வழக்கத்தைக் காட்டிலும் சிறிது ஆர்வத்துடனேயே உறையை உடைத்தாள். ஏனோ தெரிய வில்லை; அவளுடைய நெஞ்சம் கொஞ்சம் பலமாகவே அடித்துக் கொண்டது. உறைக்குள்ளே கடிதம் ஒன்றுமில்லை. அதற்குப் பதிலாக அச்சடித்த பத்திரிகைத் துண்டு ஒன்று இருந்தது. லலிதா திரும்பவும் உறைக்குள் பார்த்தாள். மடித்திருந்த பத்திரிகைத் துண்டைப் பிரித்து அதற்குள் ஏதாவது கடிதம் இருக்கிறதோ என்று பார்த்தாள். தவறிக் கீழே விழுந்திருக் கிறதோ என்று பார்த்தாள் இல்லையென்று நிச்சயமாயிற்று. ஏதோ தவறுதலாகக் கடிதத்தை வைப்பதற்குப் பதில் இந்தப் பத்திரிகையை வைத்து விட்டாற் போலிருக்கிறது.

அப்படி வைத்தது யாராக இருக்கும்!' என்று எண்ணிக்கொண்டே அச்சுத்தாளைப் பார்த்தாள். அதில் கொட்டை எழுத்தில் போட்டிருந்த ஒரு தலைப்பு அவளுடைய கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. "பட்டாபிராமன் லீலைகள்" என்ற அந்தத் தலைப்பைப் பார்த்ததும் அவளுடைய மனது பதறியது; உடம்பு நடுங்கியது. இரண்டு வரி படித்ததும் பதறலும் நடுக்கமும் அதிகமாயின. அதற்குமேல் அங்கேயிருந்து படிக்கக்கூடாது என்று தோன்றியது. ஒருவேளை பட்டாபிராமன் அங்கு வந்துவிட்டால்? அல்லது சீதாதான் வந்துவிட்டால்? அவர்களுடைய கண்ணிலே இது படக்கூடாது! நிச்சயமாய்க் கூடாது! ஆகையால் அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் ஓடிச் சென்று கதவையும் தாள் போட்டுக் கொண்டாள். ஜன்னல் ஓரமாக நின்று படித்தாள். பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை கண்களில் கொதிக்கும் வெந்நீரைப் போன்ற, உஷ்ணத்துடன் கரகரவென்று ஜலம் கொட்டத் தொடங்கிக் கண்களை அடியோடு மறைத்துவிட்டது. அடிவயிற்றி லிருந்து வெப்பமான புகை போல ஏதோ கிளம்பி மார்பை அடைத்துக் கொண்டு மேலேறி மூச்சுத் திணறும்படி செய்து தலைக்குள்ளே பிரவேசித்தது. தலை கிறுகிறுவென்று சுழலத் தொடங்கியது. மயக்கம் வந்து கீழே தள்ளி விடுமோ என்று தோன்றியது. அந்த நிலைமையில் லலிதா ஆச்சரியமான மனோதிடத்துடன் அந்தப் பத்திரிகைத் துண்டைத் தன் பெட்டிக் குள்ளே வைத்துப் பூட்டினாள். பிறகு கட்டிலின் மேலே மெத்தையின் மீது தொப்பென்று விழுந்தாள். சிறிது நேரம் கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நின்றது. மனமும் தெளிவடைந்தது,"சீச்சீ! யாரோ அயோக்யன், பொறாமைக்காரன், எதையோ கன்னா பின்னாவென்று எழுதி அச்சுப் போட்டு விட்டதற்காக நம்முடைய மனதை மீற விட்டுவிடலாமா?" என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.

பிறகு எழுந்து கண்களையும் முகத்தையும் நன்றாகத் துடைத்துக் கொண்டு நிலைக்கண்ணாடியில் பார்த்து நெற்றிப் பொட்டையும் சரிப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். "அம்மா! சமையல் ஆகிவிட்டதா? அவர் வரும் நேரமாகி விட்டதே" என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்குச் சென்ற லலிதாவின் முகத்திலோ குரலிலோ சற்று முன் அவள் அநுபவித்த கொடிய வேதனைக்கு அடையாளம் கொஞ்சம் கூட இருக்கவில்லை. இப்படி லலிதாவுக்கு நரக வேதனை அளித்த விஷயம் என்னவென்று கேட்டால்:- கொஞ்ச காலமாகத் தேவபட்டணத்தில் 'மஞ்சள் பத்திரிகை' ஒன்று நடமாடிக் கொண்டிருந்தது. அதில் அந்த ஊர்ப் பிரமுகர்களுடைய சொந்த வாழ்க்கையில் உள்ள ஊழல்களையெல்லாம் வெளிப்படுத்து கிறது என்னும் வியாஜத்தில் சொல்லவும் எழுதவும் தகாத ஆபாச விஷயங்களையெல்லாம் எழுதித் தள்ளிக் கொண்டி ருந்தார்கள். அந்த ஆபாசப் பத்திரிகை பெரும்பாலும் இரகசியமாகப் பரவிக் கொண்டிருந்தது. நல்ல மனிதர்கள், நாகரிகமான மனிதர்கள் அதை வாங்குவதற்கும் படிப்பதற்கும் லஜ்ஜைப்பட்டார்கள். ஆயினும் பலருடைய மனதில் தங்களைப் பற்றி ஏதாவது அவதூறு வந்திருக்கிறதோ என்ற பீதி குடிகொண்டிருந்தது. சிலர் அந்த ஆபாசப் பத்திரிகையை இரகசியமாக வாங்கிப் படிப்பதும், மற்றவர்களைப் பற்றிக் கேவலமாக எழுதியிருப்பதைப் படித்து விட்டுச் சந்தோஷப்படுவதும், தங்களைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்து விட்டு அவஸ்தைப்படுவதும் அதை வேறு யாரும் படிக்காமலிருக்க வேண்டுமே என்று கவலைப்படுவதுமாயிருந்தார்கள். இந்த முட்டாள்தனப் படுகுழியில் விழாதிருந்தவர்களில் பட்டாபிராமன் ஒருவன். அந்தப் பத்திரிகையை அவன் பார்த்ததுமில்லை; படித்ததுமில்லை. யாராவது அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தாலும் உடனே அவன் தன்னுடைய அருவருப்பை வெளியிட்டு அந்தப் பேச்சை அடக்கிவிடுவான். ஆகவே பட்டாபிராமனுடைய வீட்டுக்குள்ளே அந்த மஞ்சள் பத்திரிகை அதுவரையில் பிரவேசியாமலிருந்ததில் ஆச்சரியம் இல்லையல்லவா?

அந்த மாதிரி ஒரு ஆபாசப் பயங்கரப் பத்திரிகை நடந்து வருகிறதென்று லலிதா பராபரியாகக் கேள்விப்பட் டிருந்தாள். அவளுக்குத் தெரிந்த இரண்டொரு மனிதர்களைப் பற்றி அதில் கேவலமாக எழுதியிருந்ததென்பதும் அவள் காதில் விழுந்திருந்தது. அதையெல்லாம் கேட்ட போது, 'இதுவும் ஒரு பத்திரிகையா? இப்படியும் எழுதுவதுண்டா?' என்று அவள் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் இப்போது அந்தப் பத்திரிகையிலிருந்து வெட்டி எடுத்தத் துண்டைத் தானே படித்துப் பார்க்க நேர்ந்தபோது அவள் ஆச்சரியப்பட முடியவில்லை. ஆச்சரியத்துக்குப் பதிலாக ஆத்திரமும் துயரமும் அளவிலாத குரோதமும் பொங்கி எழுந்து அவளைத் திக்குமுக்காடும்படி செய்தன. கர்மசிரத்தையாக யாரோ வெட்டி எடுத்து அவளுக்கு அனுப்பி யிருந்த பத்திரிகைப் பகுதியில் பட்டாபிராமனும் சீதாவும் காதலர்கள் என்றும், சீதாவை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் லலிதா ஒரு முழுமூடம் என்றும், இப்பேர்ப்பட்ட ஒழுக்கத்திற் சிறந்த பட்டாபிராமனைத்தான் தேவபட்டணத்து மகாஜனங்கள் நகர சபைத் தலைவராகப் பெறும் பாக்கியத்தை அடையப் போகிறார்கள் என்றும் எழுதியிருந்தது. கட்டுரையில் பாதிவரையில் இந்த அருமையான விஷயங்கள் இருந்தன. அதற்கு மேலே படிக்க முடியாமல் லலிதா நிறுத்தி விட்டாள். ஆனால் அந்த ஆபாசக் குப்பையை உடனே தீயில் போட்டுக் கொளுத்தாமல் பெட்டிக்குள் பூட்டி வைத்த காரணம் என்ன? அவளுடைய அந்தரங்கத்துக்கும் அவளைப் படைத்த கடவுளுக்குந்தான் தெரியும்! பத்திரிகையைப் படித்த உடனே ஏற்பட்ட முதல் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் பிறகு லலிதாவின் பேச்சும் நடவடிக்கையும் முன்னைக் காட்டிலும் அதிக உற்சாகமா யிருந்தன. அத்தகைய ஒரு பயங்கரமான விஷயத்தைப் படித்த பிறகும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் முன் மாதிரியே நடந்து கொள்கிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு எக்களிப்பை ஊட்டியது; அவளுடைய நடத்தையில் காணப்பட்ட அதிகப்படி குதூகலத்தைத் தேர்தல் தினம் நெருங்கியதால் ஏற்பட்டது என்று மற்றவர்கள் எண்ணினார்கள்.

ஆனால் யாரேனும் கூர்ந்து கவனித்திருக்கும் பட்சத்தில் லலிதா வெளிக்கு எவ்வளவு குதூகலத்தைக் காட்டினாலும் அவளுடைய மனதில் ஏதோ ஒரு வேதனை அரித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பார்கள். அதோடு சீதாவின் விஷயத்தில் அவள் நடந்து கொண்டதிலும் ஒரு மாறுதல் இருப்பதைக் கண்டிருப்பார்கள். இந்த நிலைமையில் சேர்மன் தேர்தல் நாளும் வந்தது, தேர்தலும் நடந்தது. பட்டாபிராமன் மகத்தான வெற்றியை அடைந்தான். அது காரணமாக மறுதடவை தேவபட்டணம் அல்லோலகல்லோலப்பட்டது. பொதுஜன வெற்றிக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு முக்கியமான நண்பர்கள் பட்டாபியின் வீட்டுக்கு வந்து வெகு நேரம் இருந்து பசிக்கொண்டிருந்து விட்டுப் போனார்கள். இன்றைக்கும் ஸ்ரீ மதி சீதாதேவி வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதைப்பற்றி ஒரு நண்பர் பிரஸ்தாபித்தபோது இன்னொருவர் அவர் தோளைத் தொட்டுத் தன்னுடைய மூக்கின் பேரில் விரலை வைத்து எச்சரித்தார். "நீச மனிதர்களின் அவதூறுகளையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. பொருட்படுத்தினால் அந்த நீசர்களுக்குத் தான் கௌரவம் கொடுத்த தாக முடியும். இந்த விஷயத்தை வீட்டுப் பெண்களுக்கும் சொல்லி வைக்க வேண்டும்!" என்று மற்றொரு நண்பர் கூறினார். இதெல்லாம் பட்டாபிராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று பட்டாபிராமன் கேட்டதற்கு, "அந்த 'அல்கா' விஷயங்கள் இந்தச் சந்தோஷ சமயத்தில் என்னத்திற்கு?" என்று இன்னொருவர் சொல்லி முடித்து விட்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் பட்டாபிராமனைத் தனியே விட்டு விட்டுச் சிநேகிதர்கள் போய்ச் சேர்ந்தார்கள்.

நண்பர்கள் இருக்கும்போதே பட்டாபிராமனின் எண்ணம் அடிக்கடி லலிதா - சீதாவின் பேரில் சென்றுகொண்டிருந்தது. இரண்டு பேருக்கும் இன்றைக்கு என்ன வந்துவிட்டது என்று ஆச்சரியப்பட்டான். நண்பர்கள் போன பிறகு, "லலிதா! லலிதா!" என்று கூப்பிட்டான். அதற்குப் பிறகு லலிதா "சாப்பிடப் போகலாமா!" என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள். அவசரமாகக் கண்ணைத் துடைத்துக்கொண்டு வந்தவளின் முகம்போல அவள் முகம் காணப்பட்டது. "இது என்ன? முகம் ஏன் அழுது வடிகிறது? நான் ஜயித்து விட்டேனே என்று ஒரு குரல், அழுதாயா, என்ன!" என்று பட்டாபிராமன் காரமாகக் கேட்டான். "நான் ஒன்றும் அழவில்லை; என் முகத்தைப் பார்த்தால் உங்களுக்கும் ஒருவேளை அழுது வடிகிறாப் போலத்தான் இருக்கும்!" என்று லலிதாவும் குரோதமாகப் பதில் சொன்னாள். "உங்கள் எல்லோருக்கும் இன்றைக்கு என்ன வந்து விட்டது?" என்று பட்டாபிராமன் கேட்டான். "உங்கள் எல்லோருக்கும் என்று யாரைச் சொல்கிறீர்கள்? என் ஒருத்தி விஷயந்தான் எனக்குத் தெரியும்!" என்றாள் லலிதா. "யாரைப் பற்றிக் கேட்கிறேன் என்று உனக்குத் தெரியவில்லையா? உன் அருமைத் தோழி இல்லை. ஒரு வேளை உங்கள்...." "யாருடைய தோழியாயிருந்தாலும் இருக்கட்டும். அவளுக்கு என்ன வந்துவிட்டது? அன்றைக்கு நான் ஜயத்துடன் வந்தபோதும் மச்சிற்குப் போய்க் குப்புறப் படுத்துக்கொண்டிருந்தாள். இன்றைக்கும் அப்படியே செய்கிறாளே?" என்றான் பட்டாபிராமன். "அவள் சமாசாரம் எனக்குத் தெரியாது. நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்." "உனக்கும் இன்றைக்கும் உடம்பு சரியில்லை போலிருக்கிறது. ஒருவேளை உன் அம்மாவுக்கு ஏதாவது தெரியுமா என்று கேள். இன்றைக்கு ஏதாவது பலமாக மண்டகப்படி செய்தாளோ, என்னமோ?" "என் அம்மாவின் தலையை எதற்காக உருட்டுகிறீர்கள்? அவள் ஒருவரையும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. நாளைக்கே அவளை ஊருக்குப் போய்விடச் சொல்கிறேன். நானும் வேணுமானாலும் போய் விடுகிறேன். எந்த நாய் இந்த வீட்டில் இருக்க வேண்டுமோ இருக்கட்டும்."

பட்டாபிராமன் லலிதாவை எரித்து விடுகிறவனைப்போல் பார்த்தான். அடுத்த நிமிஷம், 'இந்த அசட்டுச் சண்டையை வளர்த்துவதில் பிரயோஜனமில்லை' என்று தீர்மானித்தவனாய்ச் சமையலறையை நோக்கி நடந்தான். சில நாளாக அவனுடைய மனதில் ஒரு சந்தேகம் தோன்றிக் கொண்டிருந்தது. தன் மாமியார் சீதாவைப்பற்றி அடிக்கடி நிந்தனை பேசி நிஷ்டூரம் சொல்கிறாள் என்றும் அதற்கு லலிதாவும் இடங்கொடுத்து வருகிறாள் என்றும் ஐயங்கொள்ள ஏதுக்கள் இருந்தன. அந்தச் சந்தேகம் இப்போது உறுதிப்பட்டது நேற்று வரையில் நல்ல உற்சாகத்துட னிருந்தவள் இன்றைக்கு மச்சிலிருந்து கீழே இறங்காமல் இருக்கும் காரணம் என்ன? சீதாவின் காது கேட்கத் தன் மாமியார் ஏதோ நிந்தைமொழி சொல்லியிருக்க வேண்டும். அதைக் குறித்துச் சீதா லலிதாவைக் கேட்டிருக்கலாம். லலிதா தன் தாயாருக்குப் பரிந்து பேசியிருக்கலாம். சீதா மனம் நொந்து போயிருக்கிறாள். வேறு காரணம் ஒன்றும் இருப்பதற்கில்லை. உண்மை அப்படியிருப்பதினாலேதான் லலிதாகூட இன்றைக்குச் சீதாவைப் பற்றிக் கடுமொழி பேசுகிறாள். ஐயோ! பாவம்! அநாதை சீதா இவர்களுடைய வாயில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.மாமியார் ஒரு ராட்சஸி என்பதில் சந்தேகம் இல்லை. தன்னிடம் அவள் பயபக்தியுடன் இருப்பதாக நடிப்பதெல்லாம் வெறும் பாசாங்கு.ராட்சஸியின் பெண்ணிடம் ராட்சஸ குணம் இல்லாமற் போகுமோ? தாடகையும் சூர்ப்பனகையும் போன்ற இரண்டு ராட்சஸிகளிடம் அகப்பட்டுக் கொண்டு பேதை சீதா தவிக்கிறாள்! அடாடா! அவளுடைய தலை விதியை என்னவென்று சொல்வது? அங்கே தாலி கட்டிய புருஷன்தான் பரம முட்டாளாயிருக்கிறான். பெண்டாட்டியைத் திண்டாட விட்டுவிட்டுக் கெட்டலைகிறான் என்றால், தஞ்சம் புக வந்த இடத்திலும் சீதாவுக்கு இந்தக் கதியா நேர வேண்டும்? அதிலும் அவளால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகளையெல்லாம் உத்தேசிக்கும் போது, தன்னுடைய சொந்த வீட்டில் அவளுக்கு அவமதிப்பும் மனத்துயரமும் ஏற்படலாமா? கடவுளுக்கு அடுக்குமா?

இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே பட்டாபிராமன் சாப்பிட்டு முடித்தான். லலிதாவுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. சாப்பிட்டானதும் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது விரித்திருந்த படுக்கையில் படுத்துக்கொண்டான். சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதா வந்து சேர்ந்தாள். அவள் வந்ததையே கவனியாதிருந்தவன் போலிருந்தான் பட்டாபிராமன். ஐந்து நிமிஷம் சும்மா இருந்து பார்த்துவிட்டு, "ஏன்னா? என் பேரில் ஏதாவது கோபமா?" என்று லலிதா கேட்டாள். "கோபம் என்ன வந்தது, கோபம்!" என்றான் பட்டாபிராமன். "கோபம் இல்லாததற்கு அடையாளமா இப்படிவெடுக்கென்று பேசுகிறீர்கள்?" "முட்டாள்கள் நிறைந்த இந்த வீட்டில் வேறு எப்படிப் பேசுவது?" என்றான் பட்டாபிராமன். லலிதா சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, "ஏன்னா? இன்று நடந்த சேர்மன் எலெக்ஷனில் உங்களுக்கு எவ்வளவு வோட்டு? எதிரிக்கு எவ்வளவு வோட்டு?" என்று கேட்டாள். "எவ்வளவு வோட்டாயிருந்தால் உனக்கு என்ன?" "எனக்கு ஒன்றும் இல்லையா?" பட்டாபிராமன் மௌனம் சாதித்தான். "உங்களுடைய ஜயத்தில் எனக்கு ஒன்றும் பாத்தியதை கிடையாதா? நிஜமாக என்னைப் பார்த்துச் சொல்லுங்கள்!" "பாத்தியதை உள்ளவளைப் போல் நீ நடந்து கொண்டாயா?" "என்ன விதத்தில் நடந்து கொள்ளவில்லை? சொல்லுங்களேன்!" "எனக்கு இன்றைக்குச் சேர்மன் பதவி கிடைத்தது. இனி மூன்று வருஷத்துக்கு இந்த ஊருக்கே நான் ராஜா மாதிரி. அவ்வளவு பெரிய வெற்றியுடன் நான் இன்று வீட்டுக்குத் திரும்பி வந்தேன். நீ எப்படி என்ன வரவேற்றாய்? அழுதுவடிய முகத்தைக் காட்டிக் கொண்டு நின்றாய்!" "என் முகத்தில் எப்போதும் இருக்கிற இலட்சணந்தானே இருக்கும்? புதிதாக எப்படி வந்துவிடும்?"

"இலட்சணத்தைப் பற்றி இப்போது யார் என்ன சொன்னார்கள்? நீ சந்தோஷமாக என்னை வரவேற்றாயா என்று கேட்டேன்." "நான் சந்தோஷமாகத்தானிருந்தேன். உங்களுக்கு அழுது வடிகிறது போலத் தோன்றியது. சீதா சந்தோஷமா வந்து வரவேற்கவில்லையே என்று உங்களுக்குக் கோபம். அந்தக் கோபத்தை என் பேரில் காட்டினீர்கள்." "அப்படித்தான் வைத்துக்கொள்." "அந்த நீலி மாடி அறையில் குப்புறப் படுத்துக்கொண்டு அடம்பிடித்தாள், அதற்கு நான் என்ன செய்வேன்?" "அவளை சாக்ஷாத் லக்ஷ்மி என்றும் சரஸ்வதி என்றும் நீதான் சொல்லிக் கொண்டிருந்தாய் இப்போது நீலியாகி விட்டாளா?" "நான் கபடமில்லாதவள்; அவளையும் என்னைப்போல் நல்லவள் என்று நம்பி ஏமாந்து போய் விட்டேன்." "அவள் நல்லவள் இல்லை - கெட்டவள் என்று எப்போது தெரிந்தது?" லலிதா மௌனம் சாதித்தாள். "நேற்று வரையிலேகூட உற்சாகமாக இருந்தாளே? இன்றைக்குத் திடீரென்று அவளுக்கு என்ன வருத்தம் வந்து விட்டது?" என்று பட்டாபிராமன் மறுபடியும் கேட்டான். "எனக்கு என்னமாய்த் தெரியும்? என்னிடம் அவள் சொல்லவில்லை!" என்றாள் லலிதா. "நீயே யோசித்து உத்தேசமாகச் சொல்லேன் பார்க்கலாம்." "அவளுக்கு புருஷன், குழந்தை, குடும்பம் உண்டு அல்லவா? அவர்களோடு போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும்." "அவள் போவதை யார் வேண்டாம் என்றார்கள்?" "வேண்டாம் என்று சொல்லாதிருந்தால் போதுமா? புறப்பட்டுப் போவதற்கு ஏதாவது செய்து கொடுத்தால்தானே போவாள்? அதைத்தான் அம்மாவும் சொல்கிறாள்!"

பட்டாபிராமன் மௌன சிந்தனையில் ஆழ்ந்தான். ஆஹா! நாம் சந்தேகித்தது சரிதான், மாமியாரின் வேலைதான் இது! பெண்ணின் மனத்தையும் கெடுத்து இருக்கிறாள். இரண்டு பேரும் சீதாவை ஏதோ சொல்லியிருக்கிறார்கள்! இந்தப் பரிதாபத்துக்கு என்ன பரிகாரம்? கணவனால் கைவிடப்பட்ட அந்த அநாதைக்கு என்ன கதி? "ஏன்னா? 'யமதூதன்' என்கிற பத்திரிகையை நீங்கள் பார்த்தீர்களா?" என்று லலிதா கேட்டதும் பட்டாபிராமன் திடுக்கிட்டான். தன்னை வீட்டுக்கு கொண்டுவிட வந்திருந்த நண்பர்கள் ஏதோ ஜாடைமாடையாகச் சொன்னது ஞாபகம் வந்தது, ஓகோ! அப்படியா சமாசாரம்? அந்தக் குப்பைப் பத்திரிகையில் ஏதோ எழுதியிருக்கிறதாக்கும்! அதை மெனக்கட்டு யாரோ வந்து லலிதாவிடம் சொல்லி அவளுடைய மனதைக் கெடுத்திருக்கிறார்கள்! "நான் கேட்டதற்கு நீங்கள் பதில் ஒன்றும் சொல்லவில்லையே?" என்று லலிதா தூண்டினாள். "அந்தக் கந்தலை நான் படிக்கவில்லை; படிக்கப் போவதுமில்லை." "நீங்கள் படிக்காவிட்டால் ஊரெல்லாம் படிக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா?" "ஏது, பேச்சு ரொம்ப பலமாயிருக்கிறதே! நீ இருக்கிற வரையில் உலகம் அஸ்தமிக்காது!" "உங்களுக்கு என்னைக் கேலி செய்யத்தான் தெரியும். ""ஊரெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறதது" "ஊரெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறதா? எதற்காக?"

"'யமதூதன்' பத்திரிகையில் எழுதியிருப்பதைப் பற்றித்தான். அண்டை வீட்டு அம்மாமி, எதிர்வீட்டு அம்மாமி எல்லாரும் என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனார்கள். ஊரெல்லாம் தெரிந்துதானிருக்கிறது. உங்களுக்கு மட்டுந்தான் தெரியாது." "அப்படியா சமாசாரம்? 'யமதூதன்' பத்திரிகையில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறதாம்? உனக்குத் தெரியுமா விஷயம்?" "எல்லாம் தெரியும்." "அப்படியானால் சொல்லேன்." "வாயினால் சொல்லவே முடியாது, அவ்வளவு அசிங்கமான விஷயம். அவரவர்களே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்." பட்டாபியின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. "அந்தப் பத்திரிகை உன்னிடம் இருக்கிறதா?" என்று கேட்டான். "இருக்கிறது" என்றாள் லலிதா. பட்டாபிராமனுக்கு அளவில்லா கோபம் வந்தது. காரியார்த்தமாகக் கோபத்தை அடக்கிக் கொண்டு, "எங்கே? அதைப் போய் எடுத்து வா, பார்க்கலாம்?" என்றான். "இங்கேதான் இருக்கிறது!" என்று சொல்லி விட்டு லலிதா மின்சார விளக்கை ஏற்றிப் பெட்டியைத் திறந்து அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்துக் கொடுத்தாள். பட்டாபிராமன் எழுந்து நின்ற வண்ணம் அதைப் படித்தான். படிக்கும்போது அவனுடைய ரத்தம் கொதித்தது என்றால் அது மிகையாகாது. அந்தக் கந்தல் பத்திரிகையில் அச்சாகியிருந்த ஆபாசக் கட்டுரையில் முதற் பகுதியில் பட்டாபிராமனும் சீதாவும் கள்ளக் காதல் செய்வதாகவும் லலிதா சுத்த முழு மூடம் என்றும் கண்டிருந்தது. பிற்பகுதியில் சூர்யாவுக்கும் சீதாவுக்கும் ஏற்கெனவே இருந்த நேசத்தைப் பற்றியும், சூரியா சீதாவுக்காக அவளுடைய கணவனிடம் தூது சென்றது பற்றியும் சௌந்தரராகவன் தூதனைச் செம்மையாக உதைத்து அனுப்பி விட்டது பற்றியும் எழுதியிருந்தது.

பல்லைக் கடித்துக் கொண்டு எல்லாவற்றையும் படித்து முடித்த பிறகு, "நெருப்புப் பெட்டி இருக்கிறதா?" என்று பட்டாபிராமன் கேட்டான். "எதற்கு?" என்றாள் லலிதா. "கொடு, சொல்கிறேன்!" லலிதா எடுத்துக் கொடுத்தாள். நெருப்புக் குச்சியைக் கிழித்து அந்தப் பத்திரிகைத் துண்டைப் பட்டாபிராமன் கொளுத்தப் போனான். "ஐயையோ! அதைக் கொளுத்தாதீர்கள்!" "ஏன்?" "அதில் பாதிதான் படித்திருக்கிறேன். பாக்கிப் பாதி படிக்க வேண்டும்" என்றாள் லலிதா. "அது வேறேயா?" என்று சொல்லிக்கொண்டே பட்டாபி அதைக் கொளுத்திச் சாம்பலாக்கினான். "அது என்ன அவ்வளவு அவசரம்? நான் சொன்னது உங்களுக்கு இலட்சியமில்லையா! குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது சரியாயிருக்கிறதே!" பட்டாபிராமன் லலிதாவிடம் நெருங்கி வந்து பளீர் என்று அவளுடைய கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான். "இந்தக் குப்பையையெல்லாம் வாங்கவும் கூடாது; படிக்கவும் கூடாது என்று நான் சொல்லவில்லையா? என்னமாய்த் துணிந்து வாங்கினாய்?" என்றான். லலிதா திக்பிரமையிலிருந்து விடுபட்டுத் தேம்பிக் கொண்டே, "நான் ஒன்றும் வாங்கவில்லை; தபாலில் வந்தது" என்றாள். "தபாலில் அனுப்பியது யார்?" "யாரோ தெரியாது." "இந்த மாதிரி ஒன்று தபாலில் வந்ததும் ஏன் என்னிடம் சொல்லவில்லை? பெட்டிக்குள்ளே வைத்து எதற்காகப் பூட்டினாய்? இது பொக்கிஷமா வைத்துப் பாதுகாப்பதற்கு?" "அப்புறம் சாவகாசமாகச் சொல்லலாம் என்று இருந்தேன்."

"அப்புறமாவது, சொல்லவாவது? தரித்திரம் பிடித்த மூதேவி நீ! உன் மனது அசிங்கத்துக்கு ஆசைப்படுகிறது. ஆகையினாலேதான் இதைப் பெட்டியில் வைத்துப் பூட்டினாய்", லலிதா மௌனமாயிருந்தாள். விளக்கை அணைத்துவிட்டு வந்து பட்டாபிராமன் மறுபடியும் படுத்துக் கொண்டான். லலிதா, "நான் செய்தது பிசகுதான்; தயவு செய்து மன்னித்து விடுங்கள்!" என்று சொன்னாள். "ரொம்ப சரி, இனிமேல் இப்படி எனக்குத் தெரியாமல் ஒரு காரியமும் செய்யாதே. இப்போது பேசாமல் படுத்துக் கொண்டு தூங்கு" என்றான் பட்டாபி. அவ்வாறே லலிதா படுத்துக்கொண்டாள், ஆனால் தூக்கம் வரவில்லை. தேம்பலும் அழுகையும் வந்தது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். கொஞ்ச நேரம் கழித்து, "ஏன்னா! சேர்மன் வேலை என்றால் தினம் ஆபீஸுக்குப் போக வேண்டியிருக்குமோ?" என்று கேட்டாள். "ஆமாம், ஆமாம். 'எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்' என்று நீ எதிர்வீட்டு அம்மாமி, பக்கத்து வீட்டு அம்மாமி எல்லாரிடமும் பெருமையடித்துக் கொள்ளலாம்." "அதற்காக ஒன்றும் நான் கேட்கவில்லை. தினந்தினம் அப்படி என்ன வேலை இருக்கும் என்று தெரிந்து கொள்ளக் கேட்டேன்." "தூக்கம் வருகிறது; என்னைத் தொந்தரவு செய்யாதே! எல்லாம் நாளைக்குச் சொல்கிறேன்." தூங்குவதற்கு லலிதா மனப்பூர்வமான முயற்சி செய்தாள் எனினும் தூக்கம் வரவில்லை. ஆகவே பட்டாபியின் தூக்கத்தைக் கெடுக்காதிருக்கும் பொருட்டுத் தூங்குவது போலப் பாசாங்கு செய்தாள். மணி பதினொன்று அடித்தது.
 
கடிகாரத்தின் நிமிஷ முள் முழு வட்டத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்தது. மணி பன்னிரெண்டு அடித்தது, எங்கிருந்தோ ஒரு விம்மல் சத்தம் கேட்டது. நெஞ்சைப் பிளக்கும்படியான சோகமும் வேதனையும் நிறைந்த விம்மல் சத்தம் அது. தூக்கமின்றிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பட்டாபிராமன் காதில் அது விழுந்து திடுக்கிடச் செய்தது. மறுபடியும் அந்த விம்மல் சத்தம். மேல் மாடியிலிருந்துதான் அந்த விம்மல் வருகிறது; சீதாதான் விம்முகிறாள்; சந்தேகம் இல்லை. தன்னுடைய உள்ளத்தை இந்த உலகத்தில் உண்மையாக உணர்ந்தவள் சீதாதேவி ஒருத்திதான். தன்னுடைய ஆசாபாசங்களில் பூரண அநுதாபம் உள்ளவள் அவள். தனக்கு வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஊட்டியவள் அவள்.தன் வாழ்க்கைக்கே ஓர் ஆதர்சத்தை அளித்தவள் அவள். அத்தகைய சீதா தன்னந்தனியாகப் படுத்துக் கொண்டு விம்மி அழுகிறாள். நெஞ்சு உடையும்படியான வேதனையினால் துடிக்கிறாள். நள்ளிரவு ஆகியும் தூங்காமல் தவிக்கிறாள். அவளுக்கு என்ன துயரமோ, என்னமோ? தன் மாமியாரும் மனைவியும் கூறிய நிந்தை மொழிகள்தான் அவளை இப்படி வதைக்கின்றனவோ? அல்லது வேறு ஏதேனும் துயரச் செய்தி கிடைத்திருக்கிறதோ? ஆகா! இந்தச் சந்தர்ப்பத்தில் அவளுக்கு ஆறுதல் கூறாவிட்டால் தான் உயிரோடிருந்து என்ன பயன்? அவள் தனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கெல்லாம் வேறு எந்த விதத்தில் நன்றி செலுத்தப் போகிறோம்? லலிதாவை எழுப்பி அழைத்துக் கொண்டு போகலாமா? கூடவே கூடாது! அவள் சீதாவை விரோதிக்கத் தொடங்கி பயனில்லை. அவளை அழைத்துக் கொண்டு போவதில் பயனில்லை. ஒருவேளை அவளாலேயேதான் இந்தத் துக்கம் சீதாவுக்கு நேர்ந்திருக்கிறதோ, என்னமோ? பட்டாபிராமன் சத்தம் போடாமல் எழுந்து கட்டிலிலிருந்து இறங்கினான்.

அறையின் கதவைச் சத்தமில்லாமல் திறந்து வெளியேறினான். சத்தமின்றி அடிமேல் அடி வைத்து மாடிப்படி மீது ஏறத் தொடங்கினான். தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த லலிதா படுக்கையிலிருந்து எழுந்தாள். திறந்திருந்த கதவு வழியாக வெளி வந்து வாசற்படிக்கருகே நின்றாள். பட்டாபிராமன் மேலே ஏறுவதைப் பார்த்துக்கொண்டு திக்பிரமை பிடித்து நின்றாள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் லலிதாவின் தாயார் திடீரென்று லலிதாவின் பின்னால் வந்து நின்றாள். லலிதா திரும்பிப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்டாள். சரஸ்வதியம்மாள் இரகசியம் பேசுகிற குரலில், "பார்த்தாயாடி, பெண்ணே! பாம்புக்குப் பாலை வார்த்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும் என்று நான் முட்டிக் கொள்ளவில்லையா? அந்தச் சண்டாளி என்ன செய்து விட்டாள் பார்த்தாயா? உன் குடியைக் கெடுத்து விட்டாளே!" என்று தூபம் போட்டாள். "லலிதா, 'உஷ்!' என்று வாயில் விரலை வைத்துச் சரஸ்வதி அம்மாளை அடக்கினாள். பட்டாபி மச்சுப்படி ஏறும் சத்தம் நின்றது. அறையின் கதவைத் திறக்கும் 'கிறீச்' சத்தம் கேட்டது. மின்சார விளக்குப் போடும் 'கிளிக்' சத்தம் கேட்டது. பின்னர் கதவைச் சாத்தும் சத்தமும் கேட்டது. "போடி, பெண்ணே, போ!" என்று சரஸ்வதி அம்மாள் தூண்டினாள். ஆனால் லலிதாவுக்கு அச்சமயம் தூண்டுதல் அவசியமாயிருக்கவில்லை. ஆவேசம் வந்தவளைப் போல் மச்சுப்படிகளில் வேகமாக ஏறிப் போனாள். மேல்மாடித் தாழ்வாரத்தின் வழியாகச் சென்று சீதாவின் அறைக் கதவை இலேசாகத் திறந்தாள். உள்ளே பார்த்த காட்சி அவள் ஒருவாறு எதிர்பார்த்ததே. ஆனாலும் அவளை ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது. பட்டாபிராமன் சீதாவின் முகவாய்க் கட்டையைத் தன் கையினால் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். சீதாவின் கண்களில் ததும்பிய கண்ணீர்த் துளிகள் மின்சார விளக்கின் மங்கலான ஒளியில் நல்முத்துக்களைப் போல் பிரகாசிக்கின்றன. லலிதா தன் வாழ்நாளில் என்றும் அநுபவித்திரா ரௌத்ராகாரத்தை அடைந்தாள்.
 
இருபதாம் அத்தியாயம்

அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி

பொதுக் கூட்டத்தில் சீதாவைப் பற்றி அவதூறாக எழுதிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டதல்லவா? அதனால் மனம் நொந்து போன சீதாவுக்கு மற்றொரு அதிர்ச்சி அடுத்து ஏற்பட்டது. அது சூரியாவிடமிருந்து வந்த கடிதந்தான். அந்தக் கடிதத்தில், "சென்னைக்கு நான் போய்ச் சேர்ந்த அன்றைக்கே எதிர்பாராத விதமாகச் சௌந்தரராகவனும் சீமையிலிருந்து திரும்பி வந்துவிட்டார்!" என்று சூரியா எழுதியிருந்ததைப் படித்ததும் சீதாவுக்கு ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. அது வியப்புடன் மகிழ்ச்சியும் கலந்த அதிர்ச்சி. அந்த வாக்கியத்தைப் படித்தவுடன் சீதாவுக்குத் தன்னுடைய துன்பங்களெல்லாம் தீர்ந்து விட்டதாகத் தோன்றியது. உடனே பறந்துபோய்ச் சௌந்தரராகவனை அடைந்துவிட வேண்டும் என்னும் அளவிலா ஆவல் உண்டாயிற்று. ஆனால் மேலே சூரியா எழுதியிருந்ததைப் படித்ததும் ஏமாற்றமும் துயரமும் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டது. சூரியா தனக்கு நேர்ந்த அனுபவங்களைச் சுருக்கமாகச் சொல்லி விட்டுக் கடிதத்தைப் பின்வருமாறு முடித்திருந்தான்:- "அத்தங்கா! உன் கணவர் திரும்பி வந்ததும் உன்னை அவரிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று எவ்வளவோ ஆசை கொண்டிருந்தேன். உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தப்பபிப்பிராயங்களையெல்லாம் என்னுடைய சாமர்த்தியமான பேச்சினால் போக்கிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். இனிமேல் உங்களுக்கு என்றைக்கும் சச்சரவு ஏற்படாதபடி சிநேகம் செய்து வைக்க வேண்டும் என்று ஆவலாயிருந்தேன். அதெல்லாம் வெறும் பகற்கனவாக முடிந்தது. "பல காரணங்களினால் எனக்குத் தற்சமயம் ஊருக்குத் திரும்பி வர கஷ்டம் இல்லை. இங்கிருந்து டில்லிக்குப் பிரயாணமாகிறேன். அங்கிருந்து மறுபடியும் கடிதம் எழுதுகிறேன்.

"ஒருவேளை கல்கத்தா போன பிறகு உன்னுடைய கணவரின் மனம் மாறி உனக்கு ஏதாவது கடிதம் எழுதினால் உடனே எனக்குத் தெரியப்படுத்தக் கோருகிறேன். என்னுடைய டில்லி விலாசந்தான் உனக்குத் தெரியுமே? "கடைசியாக ஒரு விஷயம், நான் சொல்லப்போவது உனக்குப் பிடிக்காவிட்டால் மன்னித்துவிடு. பட்டாபிராமன் தேர்தல் சேற்றில் இறங்கியதும் எனக்குப் பிடிக்கவில்லை. அவனுக்காக நீ தேர்தல் வேலை செய்வதையும் நான் விரும்பவில்லை. கூடியவரையில் நீ வெளியில் கிளம்புவதை நிறுத்திக் கொள்வது நலம். உலகம் பொறாமை நிறைந்த பொல்லாத உலகம். தேவபட்டணமோ ரொம்பவும் சிற்றறிவு படைத்த மக்கள் நிறைந்தது. இதற்குமேல் நான் சொல்ல வேண்டியதில்லை." இதைப் படித்து முடித்ததும் சீதாவுக்கு வந்த துயரத்தையும் ஆத்திரத்தையும் சொல்ல முடியாது. உலகத்தின் பேரிலும் கடவுள் பேரிலும் கோபம் வந்தது. அதைக் காட்டிலும் தான் பெற்ற பெண்ணாகிய வஸந்தி கண்மணியின் பேரிலும் கோபம் வந்தது. அம்மா வேண்டியதில்லையென்று எண்ணித்தானே வஸந்தி அப்பாவுடன் கல்கத்தா போய்விட்டாள்? அவள் இனிமேல் எனக்குப் பெண் இல்லை என்று கூறும் வரைக்கும் சீதாவின் கோபம் வரம்பு மீறிப் பொங்கியது. இந்தச் சூரியா எனக்கும் அவருக்கும் நடுவில் மத்தியஸ்தம் செய்து வைக்கப் பார்த்தானாம்! இவன் யார் மத்தியஸ்தம் செய்வதற்கு? அவருக்கு மனைவி வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டால் எனக்குப் புருஷன் வேண்டியதில்லை! அவ்வளவு அகங்காரமும் வைஷம்யமும் உள்ள புருஷனிடம் போய்ச் சேர்ந்து தான் என்ன பிரயோஜனம்? எவ்வளவு நாளைக்கு ஒத்து வாழ முடியும்? இத்தனை நாள் பிரிந்திருந்ததினால் அவருடைய உள்ளத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. நான் மட்டும் எதற்காகப் போய் அவர் காலில் விழுந்து சரணாகதி அடையவேண்டும்? வேண்டவே வேண்டாம்.

இந்தச் சூரியாவின் புத்தியைப் பார்! நான் தேர்தல் வேலையில் தலையிடுவது இவனுக்குப் பிடிக்கவில்லையாம்! எதற்காக இவனுக்குப் பிடிக்கவேண்டும்? அந்தத் தாரிணி என்ன செய்தாலும் சூரியாவுக்குப் பிடிக்கும்! அவள் ஆண் பிள்ளைகளைப் போல் வேஷ்டி கட்டிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தாலும், 'அடாடா! என்ன தைரியம்!' என்பான். நான் எது செய்தாலும் அவனுக்குப் பிடிக்காது. எதற்காகப் பிடிக்க வேண்டும்? இவனுக்குப் பிடிக்கிற காரியத்தைச் செய்யத்தானா நான் பெண்ணாகப் பிறந்திருக்கிறேன்? நான் மேடையில் ஏறி நாலு வார்த்தை பேசினாலும் அதற்காகச் சந்தோஷப்பட்டு மெச்சுகிறவர்கள் இல்லாமற் போகவில்லை! அவர்களுடைய அன்பும் அபிமானமும் எனக்குப் போதும்!....இத்தகைய மனோபாவத்துடனேயே சீதா தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் சகித்துக் கொண்டு மறுபடியும் வெளிப்படையாகக் குதூகலமாயிருக்கத் தொடங்கினாள். பட்டாபிராமனுடன் பார்ட்டிகளுக்கும் கூட்டங்களுக்கும் போகலானாள். சூரியாவினிடமிருந்து வந்த கடிதத்தை அவள் யாரிடமும் காட்டவில்லை. ஆயினும் சூரியா தன் குழந்தையை அழைத்து வராததின் காரணத்தை மட்டும் சொல்வது அவசியமாயிற்று. சௌந்தரராகவன் சீமையிலிருந்து திரும்பி வந்து வஸந்தியை அழைத்துக் கொண்டு கல்கத்தா போய்விட்டதாகவும் அதனாலே தான் சூரியா குழந்தையை அழைத்துக்கொண்டு வரவில்லையென்று லலிதாவிடம் கூறினாள். லலிதா மற்றதையெல்லாம் ஒருவாறு ஊகித்துக் கொண்டு முன்னைக் காட்டிலும் சீதாவை அதிக அபிமானத்துடன் நடத்தி வந்தாள்.

ஆனால் லலிதாவின் தாயாருக்கு விஷயம் தெரிந்த போது அவளுடைய வாய் சும்மா இருக்கவில்லை. பட்டாபிராமனும் லலிதாவும் போட்ட வாய்ப்பூட்டு உத்தரவு சரஸ்வதி அம்மாளிடம் செல்லவில்லை. எது எப்படியிருந்தாலும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் புருஷனோடு போய் இருக்க வேண்டிய அவசியத்தைப்பற்றி ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டிருந்தாள். அது சீதாவுக்குப் தெரிந்தபோது அவளுக்கு லலிதாவின் பேரில் கோபம் வந்தது. தன்னை அவமானப்படுத்துவதற்காகவே லலிதா தன் தாயாரை அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் வைத்திருப்பதாக நினைத்தாள். மாமி என்ன வேண்டுமானாலும் உளறட்டும்; லலிதா என்ன வேணுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். பட்டாபிராமன் தன்னை இந்த வீட்டின் ராணியாக மதித்து மரியாதை செய்து கொண்டிருக்கிறான். அப்படியிருக்கும்போது தான் யாருக்கு பயப்பட வேண்டும்? இப்படிச் சீதாவின் உள்ளத்தில் சண்டமாருதம் சுழன்று சுழன்று அடித்து அவளை அப்படியும் இப்படியும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்க, நாட்கள் சென்று கொண்டிருந்தன. சேர்மன் தேர்தல் தினம் நெருங்கி வந்தபோது ஒன்றன் பின் ஒன்றாகச் சீதாவுக்குப் பல அதிர்ச்சிகள் ஏற்பட்டு அவளைக் கதிகலங்கச் செய்தன. டில்லியிலிருந்து கடிதம் வந்தது, சூரியா எழுதியிருந்தான். "தாரிணியிடம் கலந்து ஆலோசித்தேன், உனக்கும் உன் புருஷனுக்கும் மத்தியில் மற்றவர்கள் தலையிடுவதால் தீமைதான் விளையும் என்று தாரிணி அபிப்பிராயப்படுகிறாள். நீயே கல்கத்தாவுக்குச் சென்று அவரிடம் மனம் விட்டுப் பேசி விடுவது தான் நல்லது என்று கருதுகிறாள். அத்தங்கா! முன்னொரு சமயம் நீ இப்படிச் செய்வதென்று தீர்மானித்திருந்தாய். உன் கணவரிடம் போய், 'போனதெல்லாம் போகட்டும்; இனிப் புதிய வாழ்க்கை தொடங்குவோம்' என்று சொல்லிக் கொள்ள எண்ணியிருந்தாய். யாரும் எதிர்பாராத காரணத்தினால் அது தடைபட்டு விட்டது. அந்தத் தீர்மானத்தை இப்போது ஏன் நிறைவேற்றக் கூடாது?

நீ உடனே கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போவதுதான் நல்லது என்று எனக்கும் தோன்றுகின்றது. இங்கே புது டில்லியில் மாஜி திவானுடைய குமாரிகள் இருவர்கள் இருந்தார்களே, ஞாபகம் இருக்கிறதா? அவர்கள் கல்கத்தாவுக்குப் போயிருப்பதாக அறிகிறேன். இதனால் என்னுடைய கவலை அதிகமாயிருக்கிறது. இந்த நிலைமையில் நீ கல்கத்தாவுக்கு உடனே புறப்படுவது நல்லதல்லவா?" இதைப் படித்ததும் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலாயிற்று சீதாவுக்கு. "அப்படியா சமாசாரம்? அவர் 'வா' என்றுகூட அழைக்காமல் நானாகப் போய் அவர் காலில் விழ வேண்டுமா? முடியவே முடியாது! அவர் எந்தப் பேய் பிசாசை வேண்டுமானாலும் கட்டிக் கொண்டு அழட்டும்! எனக்கு என்ன வந்தது? நான் மேடை மீதேறினால் கண் கொட்டாமல் என்னைப் பார்த்து நான் சொல்லும் வார்தையைப் பயபக்தியுடன் கேட்பதற்கு ஆயிரம் பதினாயிரம் பேர் காத்திருக்கிறார்கள். புது டில்லியில் ஒன்றும் அறியாத பெண்ணாயிருந்த பழைய சீதா அல்ல நான்! ஒருவர் காலிலும் போய் விழுந்து கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை எனக்கு!"..... சேர்மன் தேர்தல் நடந்த தினத்தன்று சீதாவுக்கு இரு கடிதங்கள் வந்தன. அவற்றில் ஒன்று கல்கத்தாவிலிருந்து வந்திருந்தது. பின்வருமாறு சித்ரா எழுதியிருந்தாள்:- "என் அருமை சிநேகிதியே! உன்னை எவ்வளவோ புத்திசாலி என்று நான் நினைத்திருந்தேனே! இது என்ன பைத்தியக்காரத்தனம்! உன் கணவர் இங்கே எங்களுக்கு எதிர் வீட்டு மச்சிலேதான் இருக்கிறார். காலையிலும் மாலையிலும் அவர் ஜன்னல் ஓரமாக வந்து உட்கார்ந்து பிரமை பிடித்தவர் போல் இருப்பதைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. என் கணவர் அவரைச் சிரமப்பட்டுச் சிநேகம் செய்து கொண்டிருக்கிறார். இரண்டொரு நாள் நானும் இவருடன் போய் உன் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தேன். என்ன அதிசயமான குழந்தையடி அது? அப்படிப்பட்ட அருமைக் குழந்தையை நீ என்னமாக விட்டுப் பிரிந்திருக்கிறாய்?

"ஒரு நாள் வஸந்தி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். என் வாய் சும்மா இருக்கக்கூடாதா! 'உன் அம்மா எப்போ வரப் போகிறாள்?' என்று கேட்டு விட்டேன். 'எங்க அம்மா வரவே மாட்டாள்' என்றாள் குழந்தை. 'ஏன்?' என்றேன். 'எங்க அம்மாவுக்கு அப்பாவைக் கண்டால் பிடிக்காது' என்றாள். 'உனக்கு யாரைப் பிடிக்கும்?' என்று கேட்டேன். 'எனக்கு அப்பாவையும் பிடிக்கும்; அம்மாவையும் பிடிக்கும்' என்றாள். 'அப்படியானால் நீ அப்பாவோடேயே இருக்கிறாயே? அம்மாவைப் பார்க்க ஆசையாக இல்லையா?' என்றேன். 'ஆசையாகத்தான் இருக்கிறது; அதற்கு என்ன செய்கிறது? எங்க அப்பா தனியாக இருக்கிறாரே? அவரை விட்டு விட்டு எப்படிப் போகிறது?' என்றாள் சீதா! இந்தக் குழந்தையைப் பெற்ற தாய் நீதானே? குழந்தைக்கு இருக்கும் ஈவிரக்கத்தில் பத்தில் ஒன்றாவது உனக்கு இராமற் போய்விடுமா? "இரண்டு நாளைக்கு முன்னால் உன் கணவர் உன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை இவர் தெரிந்து கொண்டார். சில நாளாக இரண்டு அதி நாகரிகப் பெண்மணிகள் எதிர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வெகு நேரம் உன் கணவரிடம் பேசிவிட்டுப் போகிறார்கள். என் கணவருக்கு இது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. ஒரு நாள் 'அந்தப் பெண்கள் யார்?' என்று கேட்டாராம். 'டில்லியில் எனக்குத் தெரிந்தவர்கள்!' என்றாராம். 'ரொம்ப நெருங்கிய சிநேகிதம் போலிருக்கிறது!' என்று இவர் கேட்டாராம். 'இன்னும் ரொம்ப நெருங்கிய சிநேகமாக வேணும் என்று பார்க்கிறார்கள். என்னைக் கலியாண வலையில் சிக்கவைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள்!' என்றாராம். அவருடைய மனதை இன்னும் நன்றாய் அறிவதற்காக இவர், 'நீங்களும் எத்தனை காலம் தனியாக வாழ்க்கை நடத்த முடியும்? இரண்டு பேரில் ஒருவரைக் கலியாணம் செய்து கொள்வது தானே?' என்று கேட்டதற்கு உன் கணவர் என்ன பதில் சொன்னார், தெரியுமா? 'தெய்வம் இருந்த கோயிலில் பிசாசைக் குடியேற்றச் சொல்கிறீர்களா?' என்றாராம்.

"என் அருமை சிநேகிதியே! உன்னை உன் கணவர் 'தெய்வம்' என்று வாய் திறந்து சொல்லியிருக்கிறார். நீ எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கிறாய். இந்த வெட்கக்கேட்டை நான் என்னவென்று சொல்வது? "அதெல்லாம் போகட்டும் நேற்று முதல் வஸந்திக்குச் சுரம் அடிக்கிறதாம். குழந்தை தூக்கத்தில் 'அம்மா வரமாட்டாள்' என்று பிதற்றுகிறாளாம். உன் மனதில் கொஞ்சமாவது ஈரம் என்பது இருந்தால் உடனே புறப்பட்டு வந்து சேரு!" இந்தக் கடிதம் சீதாவைக் கலங்க வைத்து விட்டதில் ஆச்சரியம் இல்லையல்லவா? சித்ரா எழுதியிருப்பதெல்லாம் உண்மையாயிருக்குமா? அல்லது என்னை வரவழைப்பதற்காகக் கற்பனை செய்து எழுதியிருக்கிறாளா? அவர் தன்னைத் 'தெய்வம்' என்று குறிப்பிட்டது நிஜமா? அப்படியானால் 'உடனே புறப்பட்டு வா!' என்று ஒரு வரி ஏன் எழுதிப் போடக் கூடாது? குழந்தைக்குச் சுரம் என்பதும் பொய்தானோ, என்னமோ? ஒருவேளை உண்மையாக இருந்துவிட்டால்?.... கடவுளே! என் குழந்தையைக் காப்பாற்று! நான் செய்திருக்கும் பாவங்களுக் காக எனக்கு என்ன தண்டனை விதித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். என் குழந்தைக்கு ஒன்றும் நேராமல் இருக்கட்டும். சித்ரா எழுதியிருப்பது உண்மையானாலும் கற்பனையானாலும் உடனே புறப்பட்டுப் போக வேண்டியது தான். இனிமேல் தாமதிக்கக் கூடாது, இன்றிரவே லலிதாவிடமும் பட்டாபிராமனிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டியதுதான். இவ்விதம் எண்ணிக்கொண்டே சீதா தன் பெயருக்கு வந்திருந்த இன்னொரு உறையைப் பிரித்தாள். அதற்குள்ளே அச்சடித்த பத்திரிகைத் துண்டு ஒன்று இருந்தது. இரண்டு நாளைக்கு முன்பு லலிதாவுக்கு வந்த அதே பத்திரிகைத் துணுக்குத் தான். லலிதா மட்டும் அதைப் பார்த்து சீதா பாராமல் இருந்துவிடப் போகிறாளே என்ற கவலையினால் யாரோ ஒரு புண்ணியவான் கர்ம சிரத்தையாக அதைச் சீதாவுக்கும் அனுப்பி வைத்திருந்தான்! அந்தப் பத்திரிகைத் துணுக்கைப் படித்த போது சீதாவுக்கு கண்கள் இரண்டும் பற்றி எரிவது போலத் தோன்றியது. அவமானம் பொறுக்க முடியவில்லை. பூமி பிளந்து அதற்குள்ளே தான் போய்விடக் கூடாதா? அந்த மாதிரி பாக்கியம் ஜனக மகாராஜனுடைய புத்திரியாகிய சீதா தேவிக்குக் கிடைத்தது. மகாபாவியாகிய தனக்கு அந்தப் பாக்கியம் எங்கே கிடைக்கப் போகிறது?

சொல்ல முடியாத, சகிக்க முடியாத அவமானத்தினால் சிறிது நேரம் பிரமை பிடித்திருந்த பிறகு கொஞ்சங் கொஞ்சமாகச் சீதாவுக்குச் சுய உணர்வு வந்து சிந்தனா சக்தி ஏற்பட்டது. இரண்டு நாளாக லலிதாவின் நடத்தையில் ஏற்பட்டிருந்த மாறுதலுக்கு இதுதான் காரணமோ? இந்த மாதிரி ஒரு விஷயம் வந்திருப்பதைப் படித்த பிறகும் லலிதா தன்னை இந்த வீட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தாளா? அப்படியானால் அவள்தான் சீதை, சாவித்திரி, தமயந்தி எல்லாரும்! அவளுடைய முகத்தில் தான் இனி விழிக்க முடியாது. பட்டாபிராமனையும் ஏறெடுத்துப் பார்க்க முடியாது. அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பிட வேண்டியதுதான்; இரவில் எல்லாரும் படுத்துத் தூங்கியான பிறகு! தான் செய்ய வேண்டியதைப் பற்றிச் சீதாவுக்குச் ஏதாவது கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும், அன்றிரவு பத்து மணிக்கு மேல் கீழ்க்கட்டில் நடந்த ரகளையினால் அது தீர்ந்து போய்விட்டது. அது சின்ன வீடு, லலிதாவுக்கும் பட்டாபிராமனுக்கும் படுக்கையறையில் நடந்த சம்பாஷணையோ உரத்த சத்தத்தில் நடைபெற்றது. அதில் பாதிக்குமேல் சீதாவின் காதில் விழுந்து அவளை இந்த உலகத்திலேயே நரக வேதனைக்கு உள்ளாக்கியது. புருஷனும் மனைவியும் எப்போது தூங்கப் போகிறார்கள் என்று சீதா காத்திருந்தாள். பேச்சுக் குரல் அடங்கி ஒரு மணி நேரத்துக்குப் புறப்பட எண்ணினாள். அதுவரையில் படுக்கையிலே குப்புறப் படுத்துக்கொண்டு தான் பெண்ணாய் பிறந்தது முதல் நாளது வரையில் அநுபவித்த துன்பங்களையெல்லாம் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக் கொண்டாள். உலகத்தில் எத்தனையோ பெண்கள் பிறந்து வாழ்கிறார்களே? அவர்களில் யாராவது தன்னைப் போலக் கஷ்டப்பட்டதுண்டா? தன்னை மட்டும் கடவுள் ஏன் இப்படிச் சோதனை செய்கிறார்? ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் கதாநாயகி 'பேதையாய்ப் பிறந்த நாளாய்' என்று பாடியிருப்பது சீதாவுக்கு நினைவு வந்தது. அந்தச் சோகக் கட்டத்துப் பாட்டு அவள் துயரத்தை அதிகமாக்கிற்று. அவளை அறியாமல் விம்மல் வந்தது. கீழே இருப்பவர்களுக்குக் கேட்காமலிருக்க வேண்டுமே என்ற நினைவினால் விம்மலை அடக்கப் பார்த்தாள். எவ்வளவு முயன்றாலும் அடக்க முடியவில்லை. குப்புறப் படுத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் விம்மல் வந்து கொண்டிருக்கும் என்று எழுந்து பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட யத்தனித்தாள்.

இந்தச் சமயத்தில் மச்சுப்படியில் யாரோ ஏறிவரும் காலடிச் சத்தம் கேட்டது. ஏதோ ஒரு விபரீதம் மாடி ஏறி வருகிறது என்று அவள் உள் உணர்வுக்குத் தோன்றி நெஞ்சு பதைபதைத்தது. அறையின் கதவு திறந்தது, வந்தவன் பட்டாபிராமன்தான் என்று மனதுக்குத் தெரிந்துவிட்டது. ஐயோ! இவன் எதற்காக இங்கே, இந்த வேளையில் தனியாக வருகிறான்! தன்னைக் கொலை செய்வதற்கு வருகிறானா? இல்லையென்றால் தன்னுடைய ஆத்மாவைக் கொலை செய்வதற்கு வருகிறானா? இவனை எப்படித் திரும்பிப் போகச் செய்வது? குப்புறப் படுத்தவண்ணம் தூங்குவதுபோல் அசையாம லிருக்கலாம். தூங்குவதாக எண்ணிக்கொண்டு ஒருவேளை திரும்பிப் போய்விடமாட்டானா? சீதாவின் ஆசை நிராசையாயிற்று. அவள் தூங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டு பட்டாபிராமன் திரும்பிப் போகவில்லை; உள்ளே வந்தான். அவள் அருகிலும் வந்தான், வந்து அவள் தோள்களைத் தொட்டு மெதுவான குரலில், "சீதா" என்றான். சீதா தள்ளி எழுந்து அவன் கைகளை உதறித் தள்ளிவிட்டு உட்கார்ந்தாள். "பயப்படாதே, சீதா! நான்தான்!" என்றான் பட்டாபிராமன். பிறகு அவன் ஏதேதோ சொன்னான். சீதா கேட்டுக் கொண்டேயிருந்தாள். முதலில் அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. ஆகா! அந்தப் பத்திரிகையிலே யாரோ எழுதியிருந்தது சரியாய்ப் போய் விட்டது! இவன் தன்னிடம் காதலை வெளியிடுகிறான். தனக்காக, என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்கிறேன் என்கிறான். தனக்காக வீடு வாசலையும் சேர்மன் வேலையையும் விட்டுவிட்டு இலங்கைக்கோ ஆப்பிரிக்காவுக்கோ அந்தமான் தீவுக்கோ வரத் தயாராயிருக்கிறானாம்! தன்னுடைய விம்மல் சத்தம் இவனுடைய இதயத்தைப் பிளந்து விட்டதாம். இவனுடைய மனைவியும் மாமியாரும் செய்த அநீதிகளுக்கெல்லாம் பரிகாரம் செய்து விடுவானாம்! வாயைத் திறந்து 'சரி' என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதுமாம்! கடவுளே! இவனுடைய மூளை இப்படியா பிசகிப் போக வேண்டும்; புருஷர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்களோ? இவனை எப்படி இங்கிருந்து அனுப்புவது? என்ன வார்த்தை சொன்னால் போவான்? இவனுடைய பேச்சுக் குரலை கேட்டு லலிதா எழுந்து வராமலிருக்க வேண்டுமே? வந்தால் எவ்வளவு அவமானமாயும் விபரீதமாயும் முடியும்? ஐயோ! இவன் எதற்காகத் தன் முகவாய்க் கட்டையைத் தொடுகிறான்? தொட்டுக் கொண்டு என்னமோ உளறுகிறானே?...

அறைக் கதவு மறுபடி திறந்தது. லலிதா வந்து வாசற்படியில் ரௌத்ராகாரமாக நின்றாள். சீதாவுக்குச் சப்த நாடியும் விட்டது. கொஞ்ச நஞ்சமிருந்த சிந்தனா சக்தியும் போய்விட்டது. மனது ஒன்றையும் நினைக்க முடியவில்லை. உடம்பையும் அவளால் அசைக்க முடியவில்லை. ஆனால் காது தீக்ஷண்யமாயிருந்தது. நெருப்பைக் கக்கிக்கொண்டு வரும் அக்கினி அஸ்திரங்களைப் போல் லலிதா கூறிய கொடிய மொழிகள் காதில் விழுந்தன. "அடிபாவி! சண்டாளி! இப்படியா எனக்குத் துரோகம் செய்வாய்? 'பாம்பை வீட்டிலே வைத்துப் பால் வார்க்கிறாயே?' என்று அம்மா சொன்னாளே? அவள் வாக்கு உண்மையாகி விட்டதே! உன்னை இதற்காகவா இங்கே அழைத்து வந்தேன்? என் குடியைக் கெடுத்து விட்டாயே? அடி, குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! அன்றைக்கு என்னைப் பெண் பார்க்க வந்தவனைக் குறுக்கே நின்று மறித்துக் கலியாணம் செய்து கொண்டாய், அதற்காக நான் சந்தோஷப்பட்டேன். அவனோடு வாழத் தெரியாமல் ஓடிவந்தாய், அப்படியும் எனக்குப் புத்தி வரவில்லை. உன்னை மறுபடியும் என் வீட்டுக்கு அழைத்து வந்து சீராட்டித் தாலாட்டினேன். என் கழுத்துக்கே கத்தி வைத்துவிட்டாய்! நீ நன்றாயிருப்பாயா? ஆனால் உன்னைச் சொல்லி என்ன பிரயோஜனம்? இந்தப் பாவி இப்படிப்பட்ட கள்ளத்தனம் செய்யும் கிராதகனாக இருக்கும் போது நீ என்ன செய்வாய்? உன்னைச் சொல்லி உபயோகமில்லை. இந்தச் சண்டாளனைத் தேடிப் பிடித்து என்னைக் கொண்டு வந்து தள்ளினார்களே, அவர்களைச் சொல்ல வேண்டும்....!" இத்தனை நேரமும் பேச முடியாமல் திகைத்திருந்த பட்டாபிராமன் இப்போது துள்ளிப் பாய்ந்து, "லலிதா! வாயை மூடு ஜாக்கிரதை!" என்றான். "என்னங்காணும் அதட்டுகிறீர்! செய்கிறதையும் செய்து விட்டு இது வேறேயா?

எத்தனை நாளாக உம்முடைய லீலைகளை நடத்தி வருகிறீர்! அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்ததற்கு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிட்டதே! நான் அந்தப் பத்திரிகையைத் தொட்டதற்காக ஆத்திரம் பொங்கி வந்ததே! அதில் எழுதியிருந்ததெல்லாம் உண்மைதானே! என் கைப்பட நானே அந்தப் பத்திரிகைக்குக் கடிதம் எழுதுகிறேன். இதோ தெரு வாசலுக்குச் சென்று கூச்சலிட்டு ஊரைக் கூட்டுகிறேன்.பட்டாபிராமனுக்கு ஒரு நொடியில் என்னவெல்லாமோ பயங்கரமான எண்ணங்கள் உதித்து மறைந்தன. "லலிதா! வாயை மூடுகிறாயா, இல்லையா? மூடாவிட்டால் இதோ உன்னைக் கொன்றுவிடுவேன்!" என்று சொல்லிக் கொண்டே அருகில் இரண்டடி எடுத்து வைத்தான். "கொன்று விடுங்கள்! பேஷாகக் கொன்று விடுங்கள்! உம்! ஏன் கொல்லாமல் சும்மா நிற்கிறேள்?" என்று லலிதா கூச்சலிட, பட்டாபிராமன் விகாரமான முகத் தோற்றத்துடன் கையைப் பயங்கரமாக ஆட்டிக் கொண்டு வந்து லலிதாவை நெருங்கி அவளுடைய கழுத்தில் கையை வைத்தான். கழுத்தில் அவன் கை பட்டதோ இல்லையோ, லலிதா, "ஐயோ! அம்மா! என்னைக் கொல்லுகிறார்களே! உன் மாப்பிள்ளையும் சீதாவும் சேர்ந்து மென்னியைப் பிடித்துக் கொல்லுகிறார்களே!" என்று பயங்கரமாய்க் கூவிக் கொண்டே கீழே தடால் என்று விழுந்தாள். அவளுடைய உதடுகளும் கை கால்களும் பயங்கரமாகவும் கோணல் மாணலாகவும் இழுத்தன. கண்கள் செருகிக் கறுப்பு விழி மறைந்து வெள்ளை விழி மட்டும் தெரிந்தது, வாயிலிருந்து நுரை வந்தது. தொண்டையிலிருந்து களகளவென்று ஒரு சத்தம் உண்டாகிப் பயங்கரத்தை அதிகப்படுத்தியது. பட்டாபிராமன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து தன் இரண்டு கைகளாலும் லலிதாவைத் தூக்கி எடுத்துக் கொண்டான். அச்சமயம் அவனுடைய மாமியார் குறுக்கே வந்து, "என் பெண்ணை ஒருவரும் தொட வேண்டாம் அவளைக் கீழே விடும்!" என்றாள். "ஏ மூதேவி! விலகிப் போ!" என்று சொல்லிக் கொண்டே மாமியாரை ஒரு இடி இடித்து அப்பாற்படுத்திவிட்டுப் பட்டாபிராமன் கீழே சென்றான். கட்டிலில் கொண்டு போய் லலிதாவைக் கிடத்தி அவள் முகத்தில் தண்ணீரை விசிறித் தெளித்துச் சிகிச்சை செய்யத் தொடங்கினான்.
 

New Threads

Top Bottom