Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

இருபத்தொன்றாம் அத்தியாயம்

கண்கண்ட தெய்வம்

சீதாவின் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர்த் துளிகள் உலர்ந்து போயின. அவளுடைய மனதில் குடிகொண்டிருந்த பெரும் பாரம் இறங்கி விட்டது. கலக்கம் தீர்ந்து மனதில் தெளிவு ஏற்பட்டிருந்தது. தான் இனி கடைப்பிடிக்க வேண்டிய பாதைதான் என்ன என்பதைப்பற்றி அவள் ஒரு தீர்மான முடிவுக்கு வந்திருந்தாள். லலிதா தன்னுடைய கூரிய சொல்லம்புகளை எய்து கொண்டிருந்த அதே சமயத்தில் சீதாவின் மனதில் அந்த உறுதியான தீர்மானம் ஏற்பட்டு விட்டது. ஆகவே சமீப காலத்தில் அவள் அறிந்திராத மனச் சாந்தியும் ஏற்பட்டிருந்தது. கைப்பெட்டியில் மாற்றி உடுத்திக் கொள்வதற்கு வேண்டிய இரண்டொரு சேலைகளை எடுத்து வைத்துக் கொண்டாள். கைவசம் இருந்த பணத்தையெல்லாம் திரட்டி எடுத்து வைத்துக் கொண்டாள். மேஜை டிராயரைத் திறந்து அதிலிருந்த கடிதங்களையெல்லாம் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டாள். அன்று தபாலில் வந்த பத்திரிகைத் துண்டை அணு அணுவாகப் போகும் வரையில் கிழித்து எறிந்தாள். பிறகு புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கீழ் வீட்டில் சந்தடி அடங்கட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் வரையில் கீழே ஏக ரகளையாகத்தானிருந்தது பட்டாபிராமனுடைய அதட்டல், சரஸ்வதி அம்மாளின் கோபக் குரல் - இவற்றுடன் குழந்தைகள் பட்டு, பாலுவின் அழுகைச் சத்தமும் கலந்து கேட்டது. பாவம்! அந்த அர்த்த ராத்திரிச் சந்தடியில் குழந்தைகள் விழித்தெழுந்து அம்மா மூர்ச்சையாகிக் கிடந்ததைப் பார்த்துவிட்டு அழத்தொடங்கின. சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதாவின் தீனக்குரல் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தடி அடங்கியது, விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்னர் அந்த வீட்டில் நிசப்தம் குடிகொண்டது. மேலும் சிறிது நேரம் சீதா காத்திருந்தாள். வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் போகலாமா என்ற எண்ணம் எழுந்து தொந்தரவு செய்தது. ஆனால் நேரம் ஆக ஆக அவளுடைய பொறுமை குறைந்து வந்தது. அந்த அறையின் நாலு பக்கத்துச் சுவர்களும் அவளை நோக்கி நெருங்கி நெருங்கி வருவதாகத் தோன்றியது. இன்னும் சற்றுநேரம் அறையில் இருந்தால் அந்தச் சுவர்கள் அவளை நெருங்கி வந்து நாலாபுறமும் அமுக்கி மூச்சுத் திணற அடித்துக் கொன்றுவிடும் என்ற பீதி உண்டாயிற்று.

அந்தப் பீதியிலிருந்து விடுவித்துக் கொள்ளச் சீதா விரைந்து எழுந்தாள். மேஜையிலிருந்து ஒரு காகிதம் எடுத்து அதில் லலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினாள். ஒரு வரி, இரண்டு வரி எழுதிக் கிழித்துப் போட்டாள். கடிதம் எழுதுவது சாத்தியமில்லை என்று தீர்மானித் தாள். கைப்பெட்டியையும் மணிபர்சையும் எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் புறப்பட்டாள். அடிமேல் அடிவைத்துச் சத்தமின்றி மெதுவாக நடந்து மச்சுப் படிகளில் இறங்கினாள். கீழ்க்கட்டுத் தாழ்வாரத்தில் நீலவர்ண மின்சார தீபம் எரிந்து கொண்டிருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் அவளுக்கு எதிரே இருந்த சுவரில் ஒரு படம் தென்பட்டது. அந்தப் படத்தில் காந்தி மகாத்மாவின் திருஉருவம் இருந்தது. சாந்தி நிறைந்து புன்னகை தவழ்ந்த மகாத்மாவின் திருமுகமும் கருணை ததும்பிய கண்களும் காந்திஜி உண்மையிலே அங்கு வீற்றிருந்து அவளை ஆசீர்வதிப்பது போன்ற தெய்வீக உணர்ச்சியைச் சீதாவுக்கு உண்டாக்கிற்று. அது ஒரு நல்ல சகுனம் என்றும் அவளுக்குத் தோன்றியது. "கலியுகத்திலே கண்கண்ட தெய்வம் காந்திமகான்தான்" என்று சீதாவின் தாயார் அவளுடைய இளம்பிராயத்தில் அடிக்கடி சொல்லியிருந்தது அவளுடைய மனதில் நன்கு பதிந்து நிலை பெற்றிருந்தது. பெட்டியைத் தரையில் வைத்துவிட்டுச் சீதா மகாத்மாவின் திருவுருவத்தின் முன்னால் நமஸ்கரித்தாள். எழுந்ததும் ஒரு நிமிஷம் கைகூப்பி நின்று, "எந்தையே! என்னை ஆசீர்வதியுங்கள். வாழ்க்கையில் நான் புதியதாக மேற்கொள்ளப் போகும் பாதையில் என்றும் உறுதி தவறாமல் நடப்பதற்கு வேண்டிய மனோபாவத்தை எனக்கு அளியுங்கள்!" என்று வேண்டிக் கொண்டாள். அப்படி வேண்டிக்கொண்டதோடு மட்டும் அவளுடைய மனம் திருப்தி அடைந்துவிடவில்லை. இன்னும் ஏதோ மனக் குறை இருந்தது, சிறிது நேரம் சிந்தனை செய்தாள். உடனே தன் மனக்குறையைத் தீர்க்கும் மருந்து இன்னதென்று புலப்பட்டது.

"காந்தி என்னும் கருணைத் தெய்வமே! 'தங்களுடைய ஆசியை நம்பியே இன்று நான் இந்த வீட்டைவிட்டுத் தன்னந்தனியாக வெளிக் கிளம்புகிறேன். இனி நான் நடக்கப் போகும் பாதையில் எனக்கு எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தங்களுடைய மனதுக்கு உகந்திருக்க முடியாத காரியம் எதையும் செய்யமாட்டேன். எப்படிப்பட்ட நிலைமையிலும் எந்தக் காரியத்தையும் 'இதை காந்தி மகாத்மா ஒப்புக்கொள்வாரா?' என்று எனக்கு நானே கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டுதான் செய்வேன். இவ்விதம் தங்கள் சந்நிதியில் இதோ சத்தியம் செய்கிறேன். இந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றும் சக்தியையும் தாங்கள்தான் எனக்கு அருளவேண்டும்!" இவ்விதம் சீதா மனதிற்குள் தெளிவாகச் சிந்தித்து பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு மகாத்மாவின் படத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தரையிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு மறுபடி புறப்பட்டாள். வாசற்கதவைச் சத்தமின்றித் திறந்துகொண்டு வெளியேறினாள். வெளியேறும்போது அவளுடைய மனம், "இந்த வீட்டில் நான் புகுவதற்கு முன்னால் அன்பும் சாந்தமும் நிலவின. என்னால் விளைந்த குழப்பம் என்னோடு போகட்டும். இனி முன்போலவே அமைதி நிலவட்டும். இந்த வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்பேரில் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள்: அதற்கெல்லாம் பதிலாக நான் பெரும் அபசாரம் செய்துவிட்டேன். கடவுள் என்னை மன்னிப்பாராக!" என்று எண்ணமிட்டது.

பட்டாபிராமனுடைய வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் அரை மைல் தூரத்தில் இருந்தது. சீதா அந்தத் தேவபட்டணத்துக்கு வந்த புதிதில் வெள்ள நிவாரண வேலை செய்ததிலும் பிறகு தேர்தல் வேலை செய்ததிலும் அந்நகரின் தெருக்கள், சந்துபொந்துகள், மூலைமுடுக்குகள் எல்லாம் அவளுக்கு நன்றாகத் தெரிந்து போயிருந்தன. ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நேராகச் சென்ற குறுக்குப் பாதையில் அவள் இப்போது நடந்தாள். வீதிகளிலும் சந்துகளிலும் ஜன நடமாட்டமே இல்லை. காலை மூன்று மணிதான் உலகமே நன்றாய்த் தூங்கும் நேரம் என்று தோன்றியது. திருடர்கள் தங்களுடைய திருவிளையாடல்களை நடத்துவதற்கு அதுவே சரியான நேரம். யாராவது தன்னை அடித்துப் பிடுங்குவதற்கு வந்து சேர்ந்தால்?... சேச்சே! அப்படியெல்லாம் எதற்காகத் தனக்கு நேரப்போகிறது? அப்படியெல்லாம் நேராதா? ஏன் நேராது? தான் துரதிருஷ்டத்துக்கும் துன்பத்துக்குமே பெண்ணாய் பிறந்தவள் ஆயிற்றே? யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் போலிருக்கிறதே? நெருங்குவதற்குத் தயங்கிக் கொஞ்ச தூரத்திலேயே வருகிறது போல் காணப்படுகிறதே? வருகிறவர் ஒருவரா அதிகம் பேரா? எதற்காகத் தன்னை அவர்கள் தொடர்ந்து வரவேண்டும்? ஒருவேளை அவர்களும் தன்னைப் போல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம் அல்லவா? தான் அநாவசியமாக ஏன் பீதிக்கொள்ள வேண்டும்?

பீதி அநாவசியந்தான்! யார் தன்னை என்ன செய்துவிட முடியும்? ஒன்றும் முடியாதுதான்! ஆயினும் நெஞ்சம் படக் படக், என்று அடித்துக் கொள்வதில் குறைவில்லை. காலடிச் சத்தத்துக்கு மேல் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே! கடவுளே! காந்தி மகாத்மா! இந்தப் பேதையைக் காப்பாற்றுங்கள்! இது என்ன பைத்தியம்? யாரிடமிருந்து எதற்காகக் கடவுளும் காந்திஜியும் தன்னை இப்போது காப்பாற்ற வேண்டும்? தனக்கு என்ன பயம்? தனக்குக் கெடுதல் செய்வதில் யாருக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? அப்படியும் நினைப்பதற்கில்லை, இந்த ஊரில் தனக்கு யாரோ விரோதிகள் இருக்கிறார்கள். இருக்கிறதினாலேதான் தன்னைப் பற்றி அப்படித் துண்டுப் பிரசுரம் போட்டார்கள். பிற்பாடு பத்திரிகையில் தன்னையும் பட்டாபிராமனையும் பற்றி அவ்வளவு கேவலமாக எழுதினார்கள். அப்படிப்பட்ட பரம விரோதிகள் என்னதான் செய்யமாட்டார்கள்? ஒற்றர்களை வைத்திருந்து தான் தனியாக வெளிக் கிளம்புவதைக் கவனித்துப் பின்தொடர்ந்து வருகிறார்களா என்ன? பின்தொடர்ந்து வந்து ஒருவேளை தன்னை வெட்டிப் போட்டு விடுவார்களோ? அப்படிச் செய்துவிட்டால் ரொம்ப நல்லதாகப் போய்விடும்! இந்த வாழ்க்கையாகிற பாரத்தை மேலும் சுமக்க வேண்டியிராது? ஆனால் அந்தக் கிராதகர்கள் அப்படிச் செய்வார்களா? அல்லது தான் தனியாகக் கிளம்பிச் சென்றதைக் கவனித்து வைத்துக் கொண்டிருந்து இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து மறுபடியும் பத்திரிகையில் ஏதாவது பயங்கரமாக எழுதுவார்களா? அப்படியெல்லாம் எழுதித் தன்னை அவமானப்படுத்துவதைக் காட்டிலும் ஒரு வழியாகக் கொன்று போட்டு விட்டால் நிம்மதியாகப் போய்விடும்.

ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்னும் பாதி தூரம் இருக்கும் போது பின்னால் யாரோ தன்னைத் தொடர்ந்து வருவதாகச் சீதா சந்தேகித்தாள். ரயில்வே ஸ்டேஷனைக் கிட்டத்தட்ட நெருங்கியபோது அவளுடைய பீதி ஒருவாறு குறைந்து தைரியம் மிகுந்தது. வருகிறது யார் என்று தெரிந்துகொள்ளும் எண்ணத்தோடு முனிசிபல் விளக்கு மரம் ஒன்றின் அடியில் நின்றாள். நின்று பரபரப்புடன் தான் வந்த வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தின் திருப்பத்தில் திரும்பி ஒரு ஆசாமி வந்தான். அவன் வேறு யாரும் இல்லை; சூரியாவின் தம்பி சுண்டுதான்! சீதாவின் மனத்திலிருந்த பயம் என்கிற பாரம் விலகியது. பயம் இருந்த இடத்தில் கோபம் குடிபுகுந்தது. இவன் எப்படி திடீரென்று இங்கே வந்து முளைத்தான்? தன்னை எதற்குப் பின்தொடர்ந்து வந்தான்? வந்ததுதான் வந்தானே, சட்டென்று வந்து தனக்குத் துணையாகச் சேர்ந்து கொள்ளக் கூடாதா? பின்னாலேயே வந்து தன்னை இப்படிப் பயமுறுத்துவானேன்? அசட்டுப் பிள்ளை! கிட்டா மாமாவின் பிள்ளைகளில் சூரியா ஒருவன்தான் கொஞ்சம் சமர்த்து; மற்றவர்கள் எல்லாரும் மோசந்தான். அசட்டுச் சிரிப்புடன் அருகில் நெருங்கி வந்த சுண்டுவைப் பார்த்துச் சீதா, "எதற்காக அப்பா, என்னைப் பின்தொடர்ந்து வருகிறாய்? உனக்கு வேலை இல்லையா அல்லது உன் அம்மா நான் திரும்பி வந்து விடாதபடி ரயிலில் ஏற்றி விட்டு வருவதற்கு உன்னை அனுப்பி வைத்தாளா? யாரோ திருடன் தொடர்ந்து வருகிறானாக்கும் என்று எண்ணியல்லவா பயந்து போய் விட்டேன்?" என்றாள். "இப்படித்தான் உலகத்தில் பல தவறுகள் ஏற்படுகின்றன. ஏதோ சூரியா எழுதியிருக்கிறானே என்பதற்காக நான் உன்னுடைய துணைக்கு வந்தேன். நீ என்னைத் திருடன் என்று எண்ணிப் பயந்து கொண்டாய்! அநாவசியமாக என் அம்மாவையும் வைகிறாய்!" என்றான் சுண்டு. "அது போனால் போகட்டும், சுண்டு! சூரியா கடிதம் எழுதியிருக்கிறானா?" என்று சீதா ஆவலுடன் கேட்டாள். சூரியா ஒருவனாவது தன்னுடைய நன்மையில் உண்மையான கவலை கொண்டவனாயிருக்கிறானே என்று எண்ணிச் சீதா அத்தனை துயரத்துக்கிடையிலும் சிறிது ஆறுதல் பெற்றாள்.

"சூரியா டில்லியிலேயிருந்து எழுதியிருந்தான். ஒருவேளை நீ கல்கத்தாவுக்குப் புறப்படலாம் என்றும், அப்படியானால் நான் சென்னை வரையிலாவது போய்க் கல்கத்தா ரயிலில் உன்னை ஏற்றி விடும்படியும் எழுதியிருந்தான். நீ விரும்பினால் கல்கத்தா வரையிலே கூடப்போகும்படி எழுதியிருந்தான். ஆனால் நீ இப்படி அர்த்தராத்திரியில் ஒருவருக்கும் தெரியாமல் வீட்டுக் கதவைத் திறந்து போட்டு விட்டுப் புறப்படுவாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை....." இத்தனை நாளும் நீ எங்கே இருந்தாய் சுண்டு! உன்னை நான் பார்க்கவே இல்லையே? திடீரென்று இன்றைக்கு எப்படி வந்து முளைத்தாய்?" "உனக்கு எங்கே எலெக்ஷன் தடபுடலில் என்னைப்பற்றிக் கவனிக்க நேரம் கிடைக்கப் போகிறது? இத்தனை நாளும் நான் ராஜம்பேட்டையில் இருந்தேன். இந்த மார்ச்சு பரீட்சையில் தவறிவிட்டேன். அம்மா, சூரியா இரண்டு பேரும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள் அல்லவா? அதற்காக என்னைப் போய் அங்கே இருக்கச் சொன்னார்கள். சூரியாவின் கடிதம் வந்ததும் புறப்பட்டு வந்தேன். அதோடு சேர்மன் தேர்தலின்போது இங்கே இருந்து அத்திம்பேர் வெற்றி பெற்றால் வாழ்த்துக் கூற விரும்பினேன். ஆனால் வாழ்த்துக் கூற அவசியமில்லாமலே போய் விட்டது. சேர்மன் வேலை ஆனதற்காக அத்திம்பேருக்கு அனுதாபம் தான் சொல்லவேண்டும்." "வா ஸ்டேஷன் பக்கம் நடந்து கொண்டே பேசலாம்" என்று சொல்லிச் சீதா நடக்கத் தொடங்கினாள். ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருந்தது, ரயிலோ நாலரை மணிக்குத்தான். ஆகையால் மெள்ள மெள்ளப் பேசிக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். "ராத்திரி நடந்ததெல்லாம் உனக்குத் தெரியுமா, என்ன? எங்கேயிருந்தாய் நீ?" என்று சீதா கேட்டாள். வெட்கத்தோடு முழுவதும் அவனுக்குத் தெரிந்திருக்க முடியாது என்று எண்ணினாள். "எதிர் வீட்டுத் தாமோதரம் பிள்ளை வீட்டில் படுத்திருந்தேன். பிள்ளையும் நானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ரகளையில் பெரும் பாகம் எங்களுக்குக் கேட்டது. மிச்சத்தை இட்டு நிரப்பிக் கொண்டோ ம். சந்தடி ஓய்ந்து சிறிது நேரத்திற்குப் பிறகு நான் தூங்கிவிட்டேன். ஆனால், பாவம் தாமோதரம் பிள்ளை தூங்கவேயில்லை அவருக்கு ரொம்ப வருத்தம். நீ வெளிக் கிளம்புவதை அவர்தான் பார்த்துக் கொண்டிருந்து என்னை எழுப்பி விட்டார்....."

"பாவம்! தாமோதரம் பிள்ளை ரொம்ப நல்ல மனிதர். அவர் அப்போது சொன்னதைக் கேட்காமற் போனோம்; அவர் சொன்னதைக் கேட்டு இந்த எலெக்ஷன் தொல்லையில் இறங்காமலிருந்தால் இப்படியெல்லாம் ஏற்பட்டிராது. என்ன தவறு செய்து விட்டேன்!" "அத்தங்கா! இதெல்லாம் ஒரு தவறு ஆகாது. நீ செய்த அடிப்படையான தவறு பன்னிரண்டு வருஷத்துக்கு முன் ராஜம்பேட்டையில் நடந்தது. ஏதோ அந்தச் சௌந்தரராகவன் திடீரென்று சொன்னதற்காக நீ அவனைக் கலியாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நியாயமாக நீ சூரியாவைக் கலியாணம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தாயானால் இரண்டு பேரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் இரண்டு பேருமே சந்தோஷமின்றிக் கஷ்டப்படுகிறீர்கள்." "நீ சொல்வது தப்பு, சுண்டு! நானும் சூரியாவும் கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாயிருந்திராது." "ஏன் அப்படிச் சொல்கிறாய் அத்தங்கா! சூரியாவுக்கு உன்பேரில் உள்ள அபிமானம் உனக்குத் தெரியாதா, என்ன? நீ நடந்த பூமியை அவன் பூஜை செய்கிறவன் ஆயிற்றே! உன்னுடைய கஷ்டங்களை நினைத்து இரவு பகல் இப்போதுகூட உருகிக் கொண்டிருக்கிறானே? இல்லாவிட்டால் பரீட்சைக்குப் படிக்கும் எனக்கு உன்னைப் பற்றிக் கடிதம் எழுதுவானா?" "சூரியாவுக்கு என் பேரில் அபிமானம் அதிகம் என்பது எனக்குத் தெரியும், சுண்டு! ஆனால் அபிமானம் வேறு விஷயம்,

கலியாணம் வேறு விஷயம். வாழ்க்கையில் அவனுடைய இலட்சியங்களுக்கும் என்னுடைய இலட்சியங்களுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. அவனுக்கு யாருக்காவது உபகாரம் செய்து கொண்டிருந்தால் போதும்; தேசத்துக்கு ஏதேனும் தொண்டு செய்து கொண்டிருந்தால் போதும். புகழிலும் பெயரிலும் அவனுக்கு ஆசையே கிடையாது.எனக்கோ, யாராவது நாலுபேர் என்னை எதற்காவது மெச்சிக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது நான் இருக்கும்போது வேறு யாரையாவது பாராட்டினால் எனக்குப் பிடிப்பதில்லை. நான் பிரசங்க மேடையில் ஏறிப் பேசும்போது நாலுபேர் என்னைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் நின்றால், என்னுடைய பேச்சை மெச்சிக் கை தட்டினால் எனக்கு என்னமோ பட்டாபிஷேகம் பண்ணியது போலிருக்கும். சூரியாவுக்கோ இதிலெல்லாம் ஆசையே கிடையாது. எங்களுடைய வாழ்க்கை எப்படிச் சந்தோஷமாயிருக்க முடியும்?" "நீ சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது, அத்தங்கா! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படி உலகத்தில் ஒத்த மனத்தோடு தம்பதிகள் எங்கே அமைகிறார்கள்!" "புது டில்லியில் ஒருத்தி இருக்கிறாள், சுண்டு! அவள் பெயர் தாரிணி. சூரியாவுக்கும் அவளுக்கும் ரொம்பப் பொருத்தம் எனப் பல சமயம் நான் எண்ணியதுண்டு."

"சூரியாகூட என்னிடம் சொல்லியிருக்கிறான், அந்தத் தாரிணியைப் பற்றி! ஆனால் அவளுக்கு இந்த ஜன்மத்தில் கலியாணம் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே அவர்கள் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்! எப்படி இருக்கிறது கதை! இந்தியாவாவது சுதந்திரம் அடையவாவது? இந்த ஜன்மத்தில் இல்லை! உன்னிடம் சொன்னால் என்ன, அத்தங்கா! இந்தச் சூரியாவுக்குக் கலியாணம் ஆகாத காரணத்தினால், என்னுடைய கலியாணமும் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது....!" சீதாவுக்கு அவளை அறியாமல் சிரிப்பு வந்தது. "நாங்கள் எல்லாரும் கலியாணம் செய்து கொண்டு கஷ்டப்படுவது போதாதா சுண்டு! எல்லாக் கூத்தையும் நீ பார்த்துக் கொண்டுதானேயிருக்கிறாய்?" என்று கேட்டாள். "நீங்கள் செய்த தவறையே நானும் செய்வேனா, என்ன? முன்னால் போகிறவன் குழியில் விழுந்தால் பின்னால் வருகிறவனுக்குத் தீவர்த்தி பிடித்த மாதிரி அல்லவா? எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமே கிடையாது. விளையாட்டுக்காகச் சொன்னேன்?" என்றான் சுண்டு.
 
இருபத்திரண்டாம் அத்தியாயம்

டைரக்டர் சியாம சுந்தர்

எப்போதும் கலகலவென்று பற்பல குரல்களும் விதவித சத்தங்களும் கேட்டுக் கொண்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் கூட அந்த இரவு மூன்றரை மணிக்கு நிசப்தமாயிருந்தது. ஜனங்கள் அங்குமிங்கும் அலங்கோலமாகப் படுத்துத் தூங்கினார்கள். சுண்டுவும் சீதாவும் பிளாட்பாரத்துக்குள் சென்று அங்கே கிடந்த ஒரு மர பெஞ்சியில் உட்கார்ந்தார்கள். "வெகு நாளாக உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று எனக்கு எண்ணம். அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை; இப்போது சொல்லட்டுமா?" என்று சுண்டு கேட்டான். "பேஷாகச் சொல், கேட்கிறேன் பொழுதும் போக வேண்டும் அல்லவா?" என்றாள் சீதா. "அத்தங்கா! ஒவ்வொருத்தருக்கும் இந்த உலகத்தில் பெயரும் புகழும் அடைவதற்கு என்று கடவுள் ஒரு வழியை வகுத்திருக்கிறார். அதை விட்டு விட்டு வெளியே போனால்தான் இல்லாத கஷ்டங்கள் எல்லாம் வந்து சேருகின்றன. இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. 'சதுரத்தில் வட்டத்தைத் திணிக்க முயல்வதைப் போல' என்பார்கள். அது முடியாத காரியம். அதைச் செய்ய முயற்சிப்பதால் வீண் உபத்திரங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொருவரும் கடவுள் தங்களுக்கு வகுத்திருக்கும் வழி இன்னதென்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதிலே தான் ஒருவனுடைய சாமர்த்தியம் இருக்கிறது. அத்தங்கா! நீ எதற்காக இந்தப் பூவுலகில் பிறந்தாயோ அதை நீ இன்னும் தெரிந்து கொள்ளவில்லையென்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்...."

"ரொம்ப உண்மை, சுண்டு! நான் இந்த உலகில் ஏன் பிறந்தேன் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லைதான்!" "நீ உன் கஷ்டங்களினால் மனங்கசந்து இவ்விதம் சொல்கிறாய். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. வாழ்க்கையில் உன்னுடைய துறை இன்னது என்பதை நீ இன்னமும் அறிந்து கொள்ளவில்லையென்றுதான் சொல்கிறேன். நான் கூறப் போவதில் உனக்கு ஒருவேளை நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். அல்லது நான் சொல்லுவதை ஒருவேளை நீ விளையாட்டாக எடுத்துக் கொண்டு கேலிப் பேச்சுப் பேசலாம். அதனாலெல்லாம் என்னுடைய முடிவில் மாறுதல் ஏற்படப் போவதில்லை. உனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பதாகத் தீர்மானித்துக் கொள்வேன்...." "நான் கேலி ஒன்றும் செய்யவில்லை, சுண்டு! நான் கெட்ட கேட்டுக்குக் கேலி வேறேயா? உன் கருத்தைச் சொல்லு!" "அத்தங்கா! நீ நடிப்புக் கலைக்காகப் பிறந்தவள் என்பது என் தீர்ந்த அபிப்பிராயம். நாடக மேடையில் ஏறி நீ நடித்தாயானால் உனக்கு இணை இந்தியாவிலே யாரும் இல்லையென்று புகழ்பெறுவாய். சினிமாத் துறையில் பிரவேசித்தாயானால் கிரேடா கார்போவையும், ரீடா ஹேவொர்த்தையும், நர்மாஷியரையும் போல உலகப் பிரசித்தியே அடைந்துவிடுவாய். உன்னுடைய முகத்தைக் கடவுள் சினிமாத் திரைக்கு என்றே அமைத்திருக்கிறார்." சீதாவின் உள்ளத்தில் பழையபடி சபலம் முளைவிட்டு எழுந்தது. சுண்டுவின் சமத்காரமான பேச்சு அவளுடைய தற்பெருமை உணர்ச்சியைத் தூண்டி விட்டது. "இது வரையில் என்னை அழகானவள் என்று யாருமே சொல்லவில்லை. எனக்கும் வயது இருபத்தெட்டு ஆகப் போகிறது. நீதான் முதன் முதலாகச் சொல்கிறாய்!" என்றாள்.

"நானும் உன்னை அழகி என்று சொல்லவில்லை. அழகு யாருக்கு வேண்டும், அத்தங்கா! பெரும்பாலும் அசடுகள்தான் அழகாயிருப்பார்கள். அழகு வேறு; முகத்தில் ஜொலிக்கும் அறிவின் களை வேறு. நாடக மேடைக்கும் சினிமாத் திரைக்கும் வேண்டியது அழகு அல்ல; முகவெட்டுத்தான் வேண்டும் அது உன்னிடம் இருக்கிறது." "என் முகத்தில் ஒரு வெட்டுக் காயம் கூட இல்லையே, சுண்டு!" "பார்த்தாயா? கேலி செய்கிறாயல்லவா? அதனால்தான் உன்னிடம் சொல்லத் தயங்கினேன்." "கோபித்துக் கொள்ளாதே சுண்டு! நான் கேலி செய்தது தப்புத்தான். மேலே நீ சொல்ல உத்தேசித்திருந்ததைச் சொல்லு." "வெள்ளித் திரைக்கு மிகவும் பொருத்தமான முகவெட்டு உனக்கிருக்கிறது. இந்த முகவெட்டைக் கொண்டு நீ உலகத்தையே வென்று விடலாம். முகவெட்டு மாத்திரம் அல்ல; உள்ளத்தின் உணர்ச்சிகளையெல்லாம் தெள்ளத் தெளிய முகத்தில் வெளியிடும் சக்தியும் உனக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நீ சம்பாஷணை செய்யும் போதும், மேடையில் பிரசங்கம் செய்யும் போதும் நான் கவனித்துப் பார்த்திருக்கிறேன். ஆத்திரமோ, கோபமோ, சோகமோ, மகிழ்ச்சியோ - எந்த உணர்ச்சியானாலும் உன் முகத்திலே பளிச்சென்று தெரிகிறது. நீ வாய் திறந்து பேசவேண்டிய அவசியமில்லை. உன்னுடைய கண்கள் பேசுகின்றன; உன் புருவங்கள் பேசுகின்றன; உன் நெற்றியின் சுளிப்புப் பேசுகிறது; உன் உதடுகளின் துடிப்புப் பேசுகிறது.

இது மாத்திரந்தானா? உன்னுடைய நடையின் அழகைப் பற்றி யாராவது உனக்குச் சொல்லியிருக்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை. உன் நடையின் அழகோடு எந்த ஹாலிவுட் சினிமா நட்சத்திரத்தின் நடை அழகையும் ஒப்பிட முடியாது. அன்னப்பட்சி தண்ணீரில் 'கிளைட்' பண்ணுவது போல நீ நடக்கிறாய். நம்முடைய நாட்டுப் பழங்காலக் கவிகள் 'அன்ன நடை' யைப் பெண்களின் நடையோடு ஒப்பிட்டிருப்பதின் பொருத்தம் உன்னுடைய நடையைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இன்றைக்குக்கூட நான் உனக்குக் கொஞ்சம் பின்னாலேயே வந்து கொண்டிருந்ததின் காரணம் அதுதான். உன் நடையின் அழகைப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே வந்தேன். இந்த மாதிரி நடையுள்ளவள் ஒருத்தியை ஹாலிவுட் டைரக்டர்கள் கண்டால் விடவே மாட்டார்கள். தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள்!" "சுண்டு! நீ மட்டும் என்னைவிட நாலு வயது பெரியவனாயிருந்து என்னைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் எனக்கு இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் ஒன்றும் வந்திராது." "அத்தங்கா! முதலிலேயே நான் சொல்லிவிட்டேனே! காதல், கலியாணம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று.

உண்மையில் எனக்குக் கலியாணம் ஆகிவிட்டது. கலைத்தேவியை நான் மணந்து கொண்டு விட்டேன். வேறு மானிடப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமே எனக்குக் கிடையாது. நீ எதற்காகப் பிறந்தாய் என்பதை நான் தெரிந்து கொண்டிருப்பது போலவே நான் பிறந்த காரணத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் சினிமாக் கதையை உதாரணம் செய்வதற்காக நான் பிறந்தவன். தென்னிந்தியாவில் அறிவாளிகள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால் அவர்களில் யாரும் இதுவரையில் சினிமாக் கலையில் கவனம் செலுத்தவில்லை. அசடர்களும் துர்த்தர்களும் பிழைப்புக்கு வழியில்லாதவர்களுந்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். ஏதோ பி.ஏ. பரீட்சையை முடித்துத் தொலைக்க வேண்டுமென்பதற்காகப் படிக்கிறேன். பி.ஏ. பாஸ் செய்ததும் சினிமாத் துறையில் இறங்குவேன். நீயும் என்னோடு ஒத்துழைத்தால் தென் இந்தியாவை மட்டுமல்ல. இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே நாம் வெற்றி கொள்ளலாம். நான் இன்றைக்குச் சொல்லுகிறேன், கேள்! டைரக்டர் சியாம சுந்தர் எடுக்கப் போகும் முதல் படம் உலகப் பிரசித்தி அடையப் போகிறது. ஹாலிவுட் அகாடமி பரிசு அதற்கு நிச்சயம் கிடைத்தே ஆகவேண்டும்...." "சுண்டு! டைரக்டர் சியாம சுந்தர் என்பது யார்?" "யாரா! நான்தான்! என்னுடைய முதல் படத்தில் நீ கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டால் நான் சொல்ல முடியாத சந்தோஷம் அடைவேன், என்னால் நீ எவ்வளவு பெயரும் புகழும் அடையப் போகிறாய் என்பதை நீயே பார்க்கப் போகிறாய்!"

சீதாவின் உள்ளத்தில் முதலிலேயே சபலம் ஏற்பட்டிருந்தது. இப்போது அது கொழுந்துவிட்டு எரிந்தது. எதற்காக நம்மை மதிக்காத அன்பில்லாத புருஷனிடம் போய்க் கஷ்டப்பட வேண்டும்? வாழ்க்கையை ஏன் நரகமாக்கிக் கொள்ள வேண்டும்? இப்படி நம்மிடம் தேவதா விசுவாசம் வைத்திருப்பவனுடைய முயற்சியில் ஏன் சேர்ந்து உதவி செய்யக் கூடாது? இப்படி எண்ணமிட்ட போது பட்டாபிராமனுடைய வீட்டுச் சுவரில் கண்ட காந்தி மகாத்மாவின் முகம் சீதாவின் மனதின் முன்னிலையில் வந்தது. காந்திஜியின் கருணை ததும்பும் கண்கள் அவளை உற்று நோக்கின. "பேதைப் பெண்ணே! பிரதிக்ஞை எடுத்துக் கொண்டு அரைமணி நேரங்கூட ஆகவில்லையே? அதற்குள் இந்தச் சஞ்சலமா? என் முன்னிலையில் கடவுள் சாட்சியாக எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையைக் காற்றில் விடப் போகிறாயா?" என்று கேட்பதுபோல இருந்தது. சீதா ஆகாசத்தை நோக்கினாள்; வானமெங்கும் ஒரு அங்குல இடம் காலியின்றிச் சிதறிக்கிடந்த நட்சத்திரச் சுடர் மணிகள் அவ்வளவும் கண்ணைச் சிமிட்டிச் சீதாவை எச்சரித்தன. அடுத்த ஸ்டேஷனில் ரயில் வண்டி கிளம்பி விட்டது என்பதற்கு, அறிகுறியாக டிங் டிங் என்று ஸ்டேஷன் மணி அடித்தது. சீதா கூறினாள்: "சியாம சுந்தர், உன்னுடைய அபிமானத்தையும் நீ என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பெரிதும் பாராட்டுகிறேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நான் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டேன். என்னுடைய கணவருக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையென்றும், அதனாலேதான் எனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் வந்தன என்றும் உனக்குத் தெரியுமல்லவா? இன்னும் ஒரு தடவை அவருடன் குடும்ப வாழ்க்கை நடத்திப் பார்ப்பது என்றும், கூடிய வரையில் ஒத்துப்போகப் பார்ப்பது என்றும், பிரதிக்ஞை செய்தேன். மகாத்மா காந்தியின் உருவப் படத்தில் முன்னால் அவ்வாறு சபதம் செய்தேன். அதை இவ்வளவு சீக்கிரத்தில் கைவிட மனம் வரவில்லை. கல்கத்தாவுக்குப் போய் அவரைப் பார்த்து இன்னொரு தடவை அவருடன் வாழ்க்கை நடத்த முயற்சிப்பேன். ஆனால் இதுதான் கடைசித் தடவை. இதிலும் ஒன்றும் சரிக்கட்டி வராவிட்டால் உன்னிடம் வந்து சேருகிறேன்" என்றாள் சீதா.

"அத்தங்கா! நான் சொல்கிறேன், கேள்! உன் கணவன் சௌந்தரராகவன் மட்டும் அறிவுடையவனாயிருந்தால் உன்னைக் குடும்ப வேலை செய்வதற்கு வைத்துக்கொள்ளமாட்டான். சினிமாக் கலைக்கு உன்னை அர்ப்பணம் செய்வான். குடும்ப வேலை பார்க்க லட்சம் கோடி ஸ்திரீகள் இருக்கிறார்கள். ஆனால் வெள்ளித் திரையில் நடித்துப் பெயர் வாங்கக் கோடியில் ஒருவராலேதான் முடியும். அது போனால் போகட்டும்; உன் தலைவிதியின்படி நடக்கிறது. இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? உன்னோடு கல்கத்தாவுக்கு வரட்டுமா? மதராஸ் வரையிலாவது வரட்டுமா?" "வேண்டாம் சியாம சுந்தர்! உன்னோடு பேசிக்கொண்டே போனால் என்னுடைய சஞ்சல மனது மாறிப் போய்விடும். இங்கேயே டிக்கட் வாங்கிக் கொடுத்துப் பெண் பிள்ளைகள் வண்டியில் என்னை ஏற்றி விட்டுவிடு; அதுவே போதும்!" என்றாள் சீதா. "சூரியா என் பேரில் நிச்சயம் கோபித்துக் கொள்ளப் போகிறான்" என்றான் சுண்டு. "எதற்காகக் கோபித்துக்கொள்ள வேண்டும்? சூரியா ராஜம்பேட்டைக்குத் திரும்பி வந்ததும் அவன் என் விஷயத்தில் எடுத்துக் கொண்ட சிரத்தைக்காக என்னுடைய வந்தனத்தை அவனுக்குத் தெரியப்படுத்து." "ராஜம்பேட்டைக்கு அவன் திரும்பி வருவானா என்பதே சந்தேகமாயிருக்கிறது."

"ஏன் அப்படிச் சொல்கிறாய்? ராஜம்பேட்டைக் கிராமத்தைச் சொர்க்கமாக்கிவிடப் போகிறேன் என்று சூரியா சொன்னானே?" "அந்த முயற்சியில் சூரியாவுக்குத் தோல்விதான் உனக்குத் தெரியுமா அத்தங்கா! தபால்கார பாலகிருஷ்ணன் வேலையை விட்டுவிட்டு இப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டான். நம்ம பக்கத்தில் வேலை செய்து வருகிறான். சூரியாவின் முயற்சியை உருப்படாமல் அடிப்பதே அவனுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது. சூரியா எங்கள் ஆட்களுக்கெல்லாம் முன்னைப்போல் ஒட்டிக்கு இரட்டி கொடுத்தும் பயனில்லை; அவர்களுக்குத் திருப்தி இல்லை. 'நிலம் உழுகிறவனுக்குச் சொந்தம்' என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஊரில் எல்லோருடைய நிலமும் சாகுபடியாகி விட்டது. நம்முடைய நிலம் மட்டும் பாதிக்குமேல் தரிசாகக் கிடக்கிறது. சூரியாவின் மனது ரொம்பவும் ஓடிந்து போய் விட்டது." "அந்தப் பாலகிருஷ்ணன் பேரில் எனக்கு எப்போதும் சந்தேகந்தான். அவன் ரொம்பப் பொல்லாதவன் எங்களைப் பற்றி ஒரு குப்பைப் பத்திரிகையில் கன்னா பின்னாவென்று எழுதியிருந்ததல்லவா? அதெல்லாம்கூடப் பாலகிருஷ்ணனுடைய வேலையோ என்னமோ?" "இல்லவே இல்லை, அத்தங்கா! வீண் பழி சுமத்தாதே! பாலகிருஷ்ணனிடம் வேறு என்ன குற்றம் இருந்தாலும் உன்னைப் பற்றிய அவதூறு அவன் எழுதவில்லை. உன்னிடம் அவனுக்குள்ள மதிப்பையும் அபிமானத்தையும் பலமுறை என்னிடம் தெரிவித்திருக்கிறான். உன்னைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப ஆசை." "அந்த மட்டில் சந்தோஷந்தான்."

"உன்னைப்பற்றித் துண்டு பிரசுரம் போட்டதும் மஞ்சள் பத்திரிகையில் எழுதியதும் யார் என்று எனக்குத் தெரியும். எல்லாம் நம்ம ஊர் சீமாச்சுவய்யர் செய்யும் வேலை!" "ஐயையோ! நம்ம சீமா மாமாவா அப்படியெல்லாம் எழுதுகிறார்? நம்ப முடியவில்லையே." "நம்பத்தான் வேண்டும். வேறு என்ன செய்வது? எனக்கு நிச்சயம் தெரியும். பிளாக்மார்க்கெட்டில் இவ்வளவு நாள் சம்பாதித்தது சீமா மாமாவுக்குப் போதவில்லை. அவருக்கு வேண்டிய ஆசாமி சேர்மனாக வர வேண்டும் என்று ரொம்பவும் பாடுபட்டார். அப்படி வருவதற்கு நீ தடையாயிருந்தாய். அதனாலேதான் அவ்விதமெல்லாம் எழுதப் பண்ணினார். ஒரு நாளைக்கு என்னிடம் சீமா மாமா சிக்கிக்கொள்ளப் போகிறார். அப்போது செம்மையாக அவருக்குப் புத்தி கற்பிக்கப் போகிறேன்!" "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், சுண்டு! ஏதாவது எழுதி விட்டுப் போகட்டும்! அவர் மேல் எனக்கு இல்லாத கோபம் உனக்கு என்னத்திற்கு?" "உனக்குக் கோபம் இல்லையென்றால் நான் விட்டு விடுவேனா? ஒரு கை பார்க்கத்தான் போகிறேன். அத்தங்கா! நீ மட்டும் இங்கு இருந்திராவிட்டால் அத்திம்பேருக்கு ஒரு நாளும் சேர்மன் வேலை ஆகியிராது. அதை என் அம்மாவும் அக்காவும் எண்ணிப் பாராததை நினைத்தால் எனக்கு வருத்தமாயிருக்கிறது. அம்மா எப்போதும் ஒரு மாதிரி என்பது தெரிந்த விஷயம். லலிதா எதனால் இவ்வளவு கொடுமையுள்ளவளாகி விட்டாள் என்பதுதான் தெரியவில்லை. உன்னை அர்த்த ராத்திரியில் வீட்டை விட்டுக் கிளம்பும்படி செய்து விட்டாளே!" "லலிதாவைப் பற்றி ஒன்றும் சொல்லாதே, சுண்டு! அவளைப் போல் உத்தமி உலகத்திலேயே கிடைக்கமாட்டாள். என்னுடைய காலத்தின் கோளாறு, நான் இப்படிக் கிளம்ப வேண்டி ஏற்பட்டது." தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. சில நிமிஷத்துக்கெல்லாம் 'புஃப் புஃப்' என்று புகை விட்டுக் கொண்டும், 'கிறீச்' என்று கத்திக் கொண்டும் ரயில் வந்தது. பெண்பிள்ளை வண்டியில் சீதா ஏறி உட்கார்ந்து சுண்டுவிடம் விடை பெற்றுக் கொண்டாள்.
 
இருபத்து மூன்றாம் அத்தியாயம்

சீதாவின் பிரார்த்தனை

கல்கத்தா மெயிலில் இரண்டு தினங்கள் சீதா பிரயாணம் செய்தாள். அந்த இரண்டு நாளும் இரண்டு யுகங்களாகத் தோன்றின. சீதா ஏறியிருந்த அதே மாதர் வண்டியில் கல்கத்தாவுக்குச் செல்லும் இன்னும் சில மதராஸி ஸ்திரீகளும் ஏறியிருந்தார்கள். அந்த ஸ்திரீகளில் ஒருத்தி ஹாவ்ராவில் ஜாகை உடையவள்; சீதாவுக்கு அவள் சிநேகமானாள். பொழுது போவதற்கு அவளுடைய பேச்சுத் துணை கொஞ்சம் உதவியாயிருந்தது. வண்டி ஹாவ்ரா ஸ்டேஷனை அடைவதற்கு வழக்கத்தைக் காட்டிலும் தாமதமாயிற்று. அன்று காலையிலிருந்து ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஜனங்கள் கூடிக்கூடி ஏதோ கசமுசாவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த வண்டியிலிருந்த பிரயாணிகளிடையிலும் ஏதோ கிளர்ச்சி ஏற்பட்டி ருப்பதாகத் தெரிந்தது. ஆனால் ஸ்திரீகளின் வண்டிக்குத் தகவல் ஒன்றும் எட்டவில்லை. ஹாவ்ராவுக்கு முதல் ஸ்டேஷனில் வேறு வண்டியிலிருந்த தென்னிந்தியர் ஒருவர் இறங்கி வந்து மாதர் வண்டியிலிருந்தவர்களைப் பார்த்து, "உங்களுக்கெல்லாம் புருஷத்துணை இருக்கிறதா? அல்லது ஹாவ்ரா ஸ்டேஷனுக்காவது புருஷர்கள் வருவார்களா? தனியாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையாகப் போகவேண்டும். கல்கத்தாவிலே ஏதோ கலாட்டாவாம்!" என்று சொன்னார். இது சீதாவின் மனதில் எந்த விதமான கலக்கத்தையும் உண்டு பண்ணவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ கலாட்டாக்களை அவள் பார்த்தாகிவிட்டது. கல்கத்தாவுக்குப் புதிதாகப் போய் இறங்கிய அன்றைக்கே பெரும் அபாயத்துக்கு அவள் உட்பட நேர்ந்தது. அதையெல்லாம் விட இப்போது என்ன அதிகம் இருந்துவிடப் போகிறது?

ஆனால் ஹாவ்ரா ஸ்டேஷனில் போய் இறங்கியவுடனே தான் நினைத்தது எவ்வளவு தவறு என்று சீதாவுக்குத் தெரிந்துவிட்டது. அன்று 1946- ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி நரகத்தில் வாழும் பேய்கள் அன்றைக்குக் கல்கத்தாவுக்கு விஜயம் செய்து தங்களுடைய நாச வேலைகளை நடத்திக் கொண்டிருந்தன. குழந்தைகள் என்றும், வயோதிகர்கள் என்றும், ஸ்திரீகள் என்றும் பாராமல் அந்தப் பேய்கள் கொன்று தின்றுவிட்டுப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்தன. அந்த ஊளைச் சத்தங்களுக்கிடையே `பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்னும் கோஷம் சில சமயம் கேட்டது. கிரேதாயுகத்திலே வாழ்ந்த இரணியன், இரணியாட்சன் ஆகிய அரக்கர்களும், திரேதா யுகத்தில் இருந்த இராவணன், கும்பகர்ணன், மகோதரன், விருபாட்சன் முதலிய ராட்சதர்களும், துவாபர யுகத்திலே பிறந்த கம்ஸன், சிசுபாலன், தந்தவக்கிரன், பகாசுரன், ஜராசந்தன் ஆகிய மனிதப் பேய்களும் ஒரே சமயத்தில் கல்கத்தாவில் வந்து பிறந்து ஆயிரம் பதினாயிரம், லட்சம் எனப் பெருகித் தங்களுடைய கோர கிருத்தியங்களை நடத்தியதாகத் தோன்றியது. ஸ்திரீகளின் வயிற்றில் கத்தியை செலுத்திக் குடலை வெளியில் எடுத்தல், குழந்தைகளைக் காலைப் பிடித்து வீசி எறிந்து கொல்லுதல். உயிரோடு மனிதர்களைப் பிடித்து எரியும் நெருப்பிலே போடுதல், முதலிய அசுரச் செயல்கள் அன்று கல்கத்தாவில் சர்வசாதாரணமாயிருந்தன.

ஹாவ்ரா ஸ்டேஷனில் சீதா இறங்கியபோது கல்கத்தா நகரத்துக்குள்ளேயிருந்து ஆயிரம் நகரங்களிலிருந்து வருவது போன்ற கோர சத்தம் வருவது கேட்டது. லட்சக்கணக்கான மனிதர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளும் ஓலமிடும் குரலும், ஆயிரக்கணக்கான பேய் பிசாசுகள் ஊளையிடும் குரலும், வீடுகள் தீயிட்டு எரியும் சத்தமும், எரிந்து விழும்போது எழும் சத்தமும், மக்கள் இங்குமங்கும் ஓடும் சத்தமும், துப்பாக்கி வேட்டுச் சத்தமும், துருப்புக்களின் ஆர்ப்பாட்டச் சத்தமும் சேர்ந்து வந்து ரயிலிலிருந்து இறங்கியவர்களின் உடம்பையும் உடம்புக்குள் எலும்பையும் நடுநடுங்கச் செய்தன. சீதாவுக்கு ரயிலில் சிநேகமான ஸ்திரீயை அழைத்துப் போவதற்காக மனுஷர்கள் வந்திருந்தார்கள். கல்கத்தாவில் பயங்கரமான கலகம் நடப்பதாகவும் ஆகையால் யாரும் ஹாவ்ரா பாலத்தைத் தாண்டி அப்பாலே போக முடியாது என்றும் சொன்னார்கள். அந்த ஸ்திரீ தனியாக வந்திருந்த சீதாவைப் பற்றி அவர்களிடம் சொன்னாள். சீதாவும் ஹாவ்ராவுக்கு வந்து இருக்கலாம் என்றும், கலகம் அடங்கிய பிறகு அவளுடைய மனுஷர்கள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு போகலாம் என்றும் சொன்னார்கள். இதைக் கேட்ட சீதாவுக்கு உள்ளம் கலங்கி உலகம் சுற்றியது. சிறிது நிதானித்துக் கொண்டு, "இல்லை; நான் எப்படியும் இன்றைக்குப் போக வேண்டும், எனக்கு ஒன்றும் வராது" என்றாள். "அப்படியானால் போய்ப் பாருங்கள்!" என்றனர் ஹாவ்ராக்காரர்கள். சீதா தட்டுத் தடுமாறி ஹாவ்ரா ஸ்டேஷனிலிருந்து கொஞ்ச தூரத்திலிருந்து பாலம் வரையில் சென்றாள். அங்கிருந்து ஸ்டேஷன் பக்கத்தில் ஓடிவந்த ஒரு பெரும் கூட்டம் அவளைத் தள்ளிக் கொண்டு வந்து ஸ்டேஷன் வாசலில் சேர்த்தது. அதுவரை காத்திருந்த ஹாவ்ராக்காரர்கள் அவளையும் சேர்த்துத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போனார்கள்.

ஹாவ்ராவில் தங்கியிருந்த நாலு தினங்களும் சீதா அநுபவித்த மன வேதனையைச் சொல்லி முடியாது. இன்னும் ஒரு நாள் முன்னால் வராமற் போனோமே, வந்திருந்தால் இத்தகைய பயங்கரமான அபாய காலத்தில் கணவனோடும் குழந்தையோடும் சேர்ந்திருக்கலாமே என்று எண்ணி ஏங்கினாள். ஒவ்வொரு நிமிஷமும் கணவனுக்கு என்ன நேர்ந்ததோ குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ என்று நினைத்து விம்மினாள். இவ்வளவு தூரம் வந்த பிறகு கடைசியில் அவர்களைப் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்று எண்ணியபோது அவளுடைய நெஞ்சை வாளால் அறுப்பது போலிருந்தது. கல்கத்தாவில் நடக்கும் சம்பவங்களைப்பற்றிக் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை வந்துகொண்டிருந்த செய்திகள் அவளுடைய மனப் புண்ணில் அடிக்கடி கொள்ளிக் கட்டையால் சுடுவது போன்ற துன்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. முக்கியமாகப் பச்சிளங் குழந்தைகளைத் தூக்கி எறிந்து கொல்லுகிறார்கள் என்றும், தீயிலே போட்டு வதைக்கிறார்கள் என்றும் வந்த செய்திகள் அவளுக்கு எல்லையில்லாத துன்பத்தை உண்டுபண்ணின. அந்த மாதிரி கதி தன் அருமைக் குழந்தைக்கு ஒருவேளை நேர்ந்திருக்குமோ, நேர்ந்து விடுமோ என்று எண்ணி எண்ணி அவளுடைய மண்டை வெடித்து விடும் போலிருந்தது. இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தால் இனி என்றைக்கும் எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தையை விட்டுப் பிரிவதில்லையென்று மனதிற்குள் ஆயிரந்தடவை சபதம் செய்து கொண்டாள். இந்தத் தடவை தன் கணவன் உயிர் பிழைத்திருந்து தனக்கும் அவருக்கும் சமாதானமாகி விட்டால் அப்புறம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவருடன் சண்டையிடுவதில்லையென்றும் பிரதிக்ஞை செய்துகொண்டாள்.

ஆனால் அவர் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமே? தன்னைக் கண்டதும் "எங்கே வந்தாய்? ஏன் வந்தாய்?" என்று கேட்காமலிருக்க வேண்டுமே? அப்படி அவர் கேட்டாலும் கேட்கட்டும். அதற்காக இவள் இனிமேல் பின்வாங்கப் போவதில்லை. ஏதாவது எப்படியாவது சொல்லிச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். ஆனால் அவர் பிழைத்திருக்க வேண்டுமே? அவருக்கும் குழந்தைக்கும் அபாயம் ஒன்றும் நேராமல் இருக்கவேண்டுமே? இந்தப் பாவியின் அதிர்ஷ்டம் எப்படியிருக்குமோ தெரியவில்லையே? மூன்று நாள் பகலும் இரவும் சீதா தூங்கவேயில்லை. தப்பித்தவறிச் சிறிது கண்ணயர்ந்தாலும் பயங்கரச் சொப்பனங்கள் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள். அவள் படும் துன்பத்தைப் பார்த்து அந்த வீட்டுக்காரர்கள் அவளிடம் மிகவும் அநுதாபம் காட்டி ஆறுதல் கூறினார்கள். ஹாவ்ராவில் வசித்த தென்னிந்தியர்களுக்குக் கவலையில்லாமற் போகவில்லை. கல்கத்தாவில் நடக்கும் பயங்கரக் கலகம் பாலத்தைத் தாண்டி ஹாவ்ராவுக்குள்ளும் வராது என்பது என்ன நிச்சயம்? இது மட்டுமல்ல, அவர்களிலே பலர் உத்தியோகம் பார்த்த ஆபீஸுகள் கல்கத்தாவிலேதான் இருந்தன. அந்த ஆபீஸுகளின் கதி என்ன ஆகிறதோ? கலகம் அடங்கிய பிறகாவது ஆபீஸைத் திறப்பார்களோ என்னமோ? அப்படித் திறந்தால்தான் என்ன? ஷுஹரவர்த்தி ஆட்சி புரியும் நகரத்தில் இனி நிம்மதியாக வாழ முடியுமா?

இவ்வாறெல்லாம் முதல் இரண்டு நாளும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் கலகம் ஆரம்பித்த மூன்றாம் நாளிலிருந்து கொஞ்சம் உற்சாகம் காட்ட ஆரம்பித்தார்கள். ஏனெனில் கலகத்தின் போக்கு மூன்றாம் நாளிலிருந்து கொஞ்சம் மாறத் தொடங்கியது. முதல் இரண்டு நாளும் ஹிந்துக்களின் படுகொலையாகவே நடந்தது. மூன்றாம் நாள் பீஹாரிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து குடியேறியிருந்த பால்கார முண்டர்களும் சீக்கியர்களும் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள். பழிக்குப்பழி வாங்கும் கோஷம் எங்கெங்கும் கிளம்பியது. முதல் இரண்டு நாளும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஷுஹரவர்த்தியும், அவருடைய சகாக்களும் இப்போது கலவரத்தை அடக்கவும் கல்கத்தாவின் நல்ல பெயரை நிலைநாட்டவும் பெருமுயற்சி செய்தார்கள். ஐந்தாம் நாள் அவர்களுடைய முயற்சி பலன் தந்தது; கலவரம் அடங்கியது. சீதா ஹாவ்ரா ஸ்டேஷனில் வந்திறங்கி ஒரு வாரம் சொல்ல முடியாத மன வேதனைகளை அநுபவித்த பிறகு எட்டாம் நாள் அமரநாத்தின் வீட்டை அடைந்தாள். அமரநாத்தின் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் அவளுடைய கணவனும் குழந்தையும் வசித்தார்கள் என்று சித்ராவின் கடிதத்திலிருந்து அவளுக்குத் தெரிந்திருந்ததல்லவா? ஆனால் இப்போது ராகவனும் வஸந்தியும் எதிர் வீட்டில் இல்லை. அமரநாத்தின் வீட்டிலேயே மேல் மச்சில் இருந்தார்கள் என்று தெரிந்தது. அவர்கள் மட்டுமா? புருஷர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளுமாகத் தென்னிந்தியர்கள் சுமார் நூறு பேர் அந்த வீட்டில் இருந்தார்கள். கலகம் நடந்த பிரதேசங்களிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள்தான் அத்தனை பேரும். அவர்களில் பெரும்பாலோரை அபாயங்களிலிருந்து தப்புவித்து அழைத்துக் கொண்டுவந்து சேர்த்தது தன் கணவன் சௌந்தரராகவன்தான் என்பதை அறிந்தபோது சீதாவின் உள்ளம் பூரித்தது. அப்போது தான் பக்கத்திலிருந்து அவருக்கு உதவி செய்யக் கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கமும் கூட ஏற்பட்டது.

சௌந்தரராகவன் செய்த சேவையைப் பற்றியும் அமரநாத்தின் வீடு தென்னிந்தியர்களின் அடைக்கலம் ஆனது பற்றியும் ஹாவ்ராவிலேயே சீதா தெரிந்து கொண்டிருந்தாள். ஆகையால் நேரே அமரநாத் வீட்டுக்குச் சென்று சித்ராவை தேடிப் பிடித்தாள். சித்ரா சீதாவைப் பார்த்ததும், "வந்தாயா, மகராஜி! ஏதோ இந்த மட்டும் இப்போதாவது வந்து சேர்ந்தாயே? உன் புருஷனாச்சு, நீயாச்சு! மேல் மாடியில் படுத்துக் கிடக்கிறார்! போய்க் கவனித்துக் கொள்!" என்றாள். சீதா நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள, "அவருக்கு என்ன? ஏன் படுத்திருக்கிறார்?" என்று கேட்டாள். "அவருக்கு என்னவா? 105 டிகிரி காய்ச்சல், ஜன்னி, பிதற்றல் எல்லாந்தான்! இந்த ஏழு நாளும் அவர் செய்திருக்கிற வேலைக்கு சுரம் வந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சுரம் தெளியாமல் அவர் செத்துப் போனாற்கூடப் பரவாயில்லை. நூறு பேரைக் காப்பாற்றிய மனுஷன் அப்புறம் இருந்தால் என்ன? போனால் என்ன?" என்றாள் சித்ரா. கல்கத்தா படுகொலையின்போது அந்த நகரில் வசித்தவர்கள் சாவைப்பற்றி இப்படி அலட்சியமாய்ப் பேசுவது இயற்கையேயல்லவா? ஆனால் சீதா அப்படி நினைக்கவில்லை, "சித்ரா! உனக்குப் புண்ணியம் உண்டு, இப்படியெல்லாம் பேசாதே. நிஜமாக அவருக்கு அபாயம் ஒன்றும் இல்லையல்லவா? பிழைத்துக் கொள்ளுவார் அல்லவா?" என்றும் கேட்டாள். "அது உன்னுடைய சமர்த்து; உன் பெண்ணின் சமர்த்து. நீங்கள் இரண்டு பேரும் செய்கிற சிசுருஷையில் இருக்கிறது அவர் பிழைக்கிறது. டாக்டர் அப்படித்தான் சொல்கிறார். உன் பெண் வஸந்தி இருக்கிறாளே? மகா சமர்த்து. இந்த ஏழு நாளும் எப்படி எனக்கு ஒத்தாசையாயிருந்தாள் என்று நினைக்கிறாய்? கொஞ்சமாவது பயப்படவேண்டுமே? கிடையாது!

எல்லாரும் குலைநடுங்கிக் கொண்டிருந்தபோது அவள் மட்டும் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் உற்சாகமாகப் பேசிக் கொண்டும் குஷிப்படுத்திக் கொண்டும் இருந்தாள். இப்பேர்ப்பட்ட புருஷனையும் பெண்ணையும் விட்டுவிட்டுத் தேவபட்ட ணத்தில் உனக்கு என்னடி வைத்திருந்தது? போனால் போகட்டும், உடனே இப்போதாவது போய்க் கவனி. வஸந்திக்குக் கை வலித்துப் போயிருக்கும் ஐஸ் வைத்து வைத்து! ஆனாலும் குழந்தை அலுக்காமல் சலிக்காமல் முணுமுணுக்காமல் அப்பாவுக்குச் சிசுருஷை செய்துகொண்டிருக்கிறாள். இந்த வீட்டுக்கு வந்திருக்கும் நூறு பேரைப் பார்த்துக் கொள்வதும் சரி, உன் புருஷன் ஒருவருக்குச் சிசுருஷை செய்வதும் சரி. வேலை செய்தாலும் அப்படி வேலை செய்கிறார்; சுரமாய்ப் படுத்தாலும் அப்படிப் படுத்துகிறார். போ மச்சுக்கு!..." என்று இன்னும் ஏதோ சொல்லிக்கொண்டே சித்ரா விரைந்து போய்விட்டாள். சீதா கவலையும் ஆவலும் முன்னால் தள்ளவும் கூச்சமும் தயக்கமும் பின்னால் இழுக்கவும் தட்டுத் தடுமாறி மச்சுக்குப் போய்ச் சேர்ந்தாள். அங்கேயும் ஒரே ஜனக் கூட்டமும் சந்தடியுமாக இருந்தது. ஆனால் ஒருவரும் சீதாவைக் கவனிக்கவில்லை. அவரவர்கள் தங்கள் தங்களுடைய சொந்த விசாரத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.

மேல் மாடியில் சந்தடியில்லாத அறை ஒன்றே ஒன்று இருந்தது. அதில்தான் ராகவன் இருக்க வேண்டும் என்று எண்ணிச் சீதா வெறுமனே சாத்தியிருந்த கதவை மெதுவாகத் திறந்தாள். அவள் நினைத்தபடிதான் இருந்தது. அந்த அறையில் போட்டிருந்த கட்டிலில் ராகவன் படுத்திருந்தான். அவனுடைய கண்கள் மூடியிருந்தன; உணர்ச்சி இல்லாத நிலையில் ஏதோ முனகிக் கொண்டிருந்தான். தலைமாட்டில் வஸந்தி உட்கார்ந்து அப்பாவின் தலையிலும் நெற்றியிலும் ஐஸ் வைத்துக் கொண்டி ருந்தாள். கதவைத் திறந்துகொண்டு சீதா உள்ளே நுழைந்ததும் வஸந்தி குனிந்திருந்த முகத்தைத் தூக்கி அவளை நிமிர்ந்து பார்த்தாள். சொல்லமுடியாத ஆவலும் வியப்பும் அன்பும் ஆத்திரமும் இரக்கமும் கோபமும் அவளுடைய கண்ணின் பார்வையில் கலந்திருந்தன. அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. சீதாவுக்குப் பேச நா எழவில்லை; தயங்கித் தயங்கிக் கட்டிலண்டை போனாள். ராகவனுடைய உள்ளங்காலை இலேசாகத் தொட்டாள்; ஜில்லென்று இருந்தது, பிறகு இன்னும் சிறிது நகர்ந்து உள்ளங் கைகளைத் தொட்டுப் பார்த்தாள்; கைகளும் ஜில்லென்று இருந்தன. மேலும் சிறிது நெருங்கிக் கழுத்தின் கீழே மார்பில் கையை வைத்துத் தொட்டுப் பார்த்தாள். அடுப்பில் போட்ட இரும்புச் சட்டியைப் போல் கொதிக்கிறது. ஜுரம் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று ஐயமின்றித் தெரிந்தது. இதற்கிடையில் வஸந்தி அம்மா முகத்தையும் அப்பா முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீதா வஸந்தியைச் சந்தித்ததும் என்னவெல்லாமோ சொல்லவேணும் என்று நினைத்திருந்தாள். "என்னைப் பார்க்க வராமல் உன் அப்பாவுடன் போய்விட்டாய் அல்லவா? நீ எனக்குப் பெண் இல்லை!" என்று சொல்வதாகக்கூட உத்தேசித்திருந்தாள். அதற்கெல்லாம் இப்போது சந்தர்ப்பமில்லாமல் போயிற்று.

"வஸந்தி! ஐஸ் பையைச் சற்று என்னிடம் கொடு! உனக்குக் கையை வலிக்குமே?" என்றாள் சீதா. "வேண்டாம், அம்மா! எனக்குக் கை வலிக்கவில்லை. உனக்கு ஐஸ் பை சரியாக வைக்கத் தெரியாது. நெற்றி முழுதும் படும்படி வைக்க வேண்டும்" என்றாள் வஸந்தி. "எனக்குத் தெரியுமடி கண்ணே! தெரியாமற் போனால் நீதான் பக்கத்தில் இருக்கிறாயே, சொல்லிக் கொடு!" என்றாள் சீதா. அவ்வாறே வஸந்தி தன் பக்கத்தில் இருக்க, சீதா ஐஸ் பையை ராகவனுடைய நெற்றியில் வைத்துக் கொண்டிருந்தாள். தாயாரும் பெண்ணும் கொஞ்ச நேரம் ஒருவரையொருவர் பார்ப்பதோடு இருந்தார்கள். வஸந்தியின் முகத்தில் சிறிது நேரத்துக்குப் பிறகு புன்னகை மலர்ந்தது. "அம்மா! நீ இனிமேல் என்னையும் அப்பாவையும் விட்டு விட்டுப் போகவே மாட்டாயே?" என்றாள். சீதாவின் முகமும் சிறிது மலர்ச்சி அடைந்தது. "போகமாட்டேனடி, கண்ணே! முன்னேகூட நான் வேண்டுமென்றா போனேன்? வேறு வழியில்லாமல் போனேன். அப்பாவும் நீயும் என்னை அழைத்துக் கொள்ளாமல் இங்கே வந்துவிட்டீர்கள்!" "அது போனால் போகட்டும், அம்மா! இனிமேல் நீ எங்களை விட்டுவிட்டுப் போகமாட்டாயே!" "போகமாட் டேன்." "ஐந்தாறு நாளாக இந்த ஊரிலே கலகம் பலமாக நடந்தது. கல்கத்தா பட்டணத்திலே உள்ளவர்கள் அவ்வளவு பேரும் கூண்டோ டு கைலாசமாய்ச் செத்துப்போக வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டார்கள், அப்போது எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா? சொல், பார்க்கலாம்!"

"தெரியவில்லை, கண்ணே! நீதான் சொல்ல வேண்டும்." "சாகிறதுக்கு முன்னால் உன்னை ஒரு தடவை பார்க்காமல் செத்துப்போக வேண்டியிருக்கிறதே என்று தோன்றியது. அப்படிச் செத்துப் போய்விட்டால்கூட ஆவி ரூபத்தில் நீ இருக்கு மிடம் வந்து உன்னை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்று தோன்றியது" என்றாள் குழந்தை. "அப்படியெல்லாம் சொல்லாதே வஸந்தி! நல்ல பேச்சாகப் பேசு!" என்றாள் சீதா. "சாவு என்றால் உனக்கு என்னமோ போல் இருக்கிறதாக்கும். இங்கே ஏழு எட்டு நாளாய் ஓயாமல் சாவைப் பற்றித்தான் பேச்சு. அது எங்களுக்குச் சகஜமாய்ப் போச்சு, அம்மா!" "அது இருக்கட்டும், குழந்தை! அப்பாவின் உடம்பைப் பற்றி டாக்டர்கள் என்ன சொன்னார்கள்? என்ன சுரம் என்றார்கள்?" "ஷாக்'கினால் வந்த ஜுரம் என்றுதான் சொன்னார்கள். ரொம்பக் கடுமையாய்த்தான் வந்திருக்கிறது; ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்கள். ஆனால் எனக்கென்னமோ ஒரு அசட்டுத் தைரியம். அப்பா கட்டாயம் பிழைத்துவிடுவார் என்று. ஏழு நாளாக எத்தனை கண்டத்துக்கு அவர் தப்பிப் பிழைத்திருக்கிறார் தெரியுமா?"

"அப்பா செய்ததைப் பற்றி எல்லாரும் சொல்கிறார்களே! அப்படி என்ன செய்தார், வஸந்தி!" "அப்பா செய்ததை யெல்லாம் சொல்வதாயிருந்தால் ஒரு ராமாயணமும் பாரதமும் எழுத வேண்டும் அம்மா! அவ்வளவு செய்திருக்கிறார். ஒன்று சொல்கிறேன் கேள்; ஒரு வீட்டைக் கலகக்காரர்கள் சூழ்ந்து கொண்டு கதவைத் திறக்காவிட்டால் வீட்டுக்கு நெருப்பு வைத்து விடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். இது தெரிந்ததும் அப்பா என்ன செய்தார் தெரியுமா? கவர்ன்மெண்ட் ஆபீஸரை டெலிபோனில் கூப்பிட்டு ஒரு முஸ்லீமின் வீட்டை ஹிந்துக்கள் தாக்குவதாகச் சொன்னார் - அப்படிச் சொன்னால்தான் கவர்ன்மெண்டார் போலீஸை அனுப்புவார்கள் என்று; போலீஸும் வந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு அப்பாவே நேரில் போய் அந்த வீட்டிலிருந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தார். இது தெரிந்தவுடனேயே கலகக்காரர்கள் அப்பாவை அடையாளம் வைத்துக் கொண்டு அவரைக் கொன்றுவிடப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய ஜம்பம் சாயவில்லை....." இந்தச் சமயத்தில் சௌந்தரராகவன் வெறி வந்தவன் போல் பிதற்றத் தொடங்கினான். "ஓகோ! என்னை யார் என்று நினைத்தீர்கள்! கிட்ட வந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவேன். கத்திக்குக் கத்தி, துப்பாக்கிக்குத் துப்பாக்கி, கொலைக்குக் கொலை, பழிக்குப் பழி - தெரியுமா? என்னையும் மகாத்மா காந்தி என்று எண்ணிவிடாதீர்கள்!" என்று கூச்சல் போட்டுக் கொண்டே எழுந்து உட்கார முயன்றான்.

சீதாவும் வஸந்தியும் அவனை மெதுவாகப் பிடித்து மறுபடியும் படுக்கவைத்தார்கள். அப்போது ராகவன் சீதாவை விழித்துப் பார்த்தான். ஆனால் அவள் யார் என்று கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.படுக்கையில் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டு விட்டான். அப்போது சீதா தன் மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்:- "சுவாமி பகவானே! இவர் ஒருவேளை இந்தச் சுரத்தில் இறந்து போவதாயிருந்தாலும் ஒரே ஒரு தடவையாவது என்னைப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொள்ளட்டும். நான் வந்துவிட்டேன், இவருக்கு சிசுருஷை செய்கிறேன் என்பதை அறிந்து கொள்ளட்டும். கடவுளே! இந்த ஒரு வரமாவது எனக்குத் தரவேண்டும்!" இவ்விதம் மனப்பூர்வமாக மன்றாடிப் பிரார்த்தித்தாள் சீதா. ஆனால் அவள் பயந்தது போல் ஒன்றும் நடந்துவிடவில்லை. ராகவனுக்கு நாளுக்கு நாள் உடம்பு குணமாகி வந்தது. நாளுக்கு நாள் அறிவும் தெளிவடைந்து வந்தது.
 
இருபத்து நான்காம் அத்தியாயம்

என் சொர்க்கம்

சீதாவின் வரவினால் ராகவனுடைய சுரம் குணம் அடைந்து வந்ததாகத் தோன்றியது. சுரத்தின் வேகத்தில் அவன் எவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் எப்படியெல்லாம் சத்தம் போட்டுப் பிதற்றினாலும் சீதாவின் கை பட்டவுடனேயே அவன் உடம்பும் மனமும் சிறிது அமைதி அடைந்தது. இதைக் கவனித்த சித்ரா, "அடியே! இதற்கு முன்னால் நீ என்னவெல்லாம் தவறாக நடந்திருந்தாலும் இப்போது நல்ல சமயத்தில் வந்து உன் புருஷனுடைய உயிரைக் காப்பாற்றினாய். நீ செய்த பாவத்துக்கெல்லாம் பிராயசித்தம் செய்து கொண்டுவிட்டாய்!" என்று சொன்னாள். இதைக் கேட்ட சீதாவின் கண்களில் நீ ததும்பிற்று. சீதா வந்த புதிதில் ராகவனுடைய கண்கள் அவளைப் பார்த்தாலும் அவள் யார் என்று அவன் தெரிந்து கொண்டதற்கு அடையாளம் காணப்படவில்லை. ஆனால் இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு ஒரு தடவை சீதாவைப் பார்த்தபோது ராகவனுடைய கண்களில் வியப்பும் முகத்தில் மலர்ச்சியும் தோன்றின. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீதாவுடன் அவன் பேச ஆரம்பித்தான். அவள் கல்கத்தாவுக்கு என்றைக்கு வந்தாள், எங்கே தங்கியிருந்தாள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். ஹாவ்ராவில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தவர்களைப் பற்றி ரொம்பவும் சிலாகித்தும் பேசினான்.

குழந்தை வஸந்தி கேட்ட கேள்வியையே ஒரு நாள் சௌந்தரராகவனும் சீதாவிடம் கேட்டான். "உன் பிரயாண மெல்லாம் முடிந்து விட்டதல்லவா? இனிமேல் எங்கேயும் போக வேண்டாம் அல்லவா?" என்றான். "முன்னேயும் எனக்குப் போக வேண்டியிருக்கவில்லை. இனிமேலும் எனக்கு எங்கும் போல வேண்டியிராது!" என்றாள் சீதா. "அப்படிப் போவதாயிருந்தாலும் வஸந்தியை விட்டு விட்டுப் போகாதே! எங்கே போனாலும் அவளையும் கூட அழைத்துக் கொண்டு போய் விடு!" என்றான் ராகவன். "வஸந்தியையும் விட்டுப் போகவில்லை; உங்களையும் விட்டுப் போக உத்தேசமில்லை" என்றாள் சீதா. "என்னைப் பற்றிக் கவலை என்னத்திற்கு!" என்றான் ராகவன். சீதா பதில் சொல்லாமல் ராகவனுடைய முகத்தைத் துயரம் ததும்பிய கண்களினால் ஏறிட்டுப் பார்த்தாள். மற்றொரு நாள் ராகவன், "சீதா! உனக்கு இந்தக் கல்கத்தா நகரம் ரொம்பப் பிடித்திருக்கிறது என்று சித்ரா சொன்னாள், அது வாஸ்தவந்தானே?" என்று கேட்டான். சீதா சிறிது முக மலர்ச்சியுடன், "ஆமாம்; கல்கத்தா எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இங்கேயே நான் இருந்து விடுவதில் எனக்குப் பூரண சம்மதந்தான்!" என்றாள். "ரொம்ப சந்தோஷம்; நீயும் வஸந்தியும் இங்கேயே இருந்து விடலாம். உங்களுக்கு நல்ல துணையும் இருக்கிறது. சித்ராவையும் அவளுடைய கணவனையும் போல் நல்லவர்கள் எங்கும் கிடைக்கமாட்டார்கள்!" என்று சொன்னான் ராகவன். சீதா சந்தேகக் குரலில், "நானும் வஸந்தியும் மட்டும் இங்கே இருக்கிறதோ? நீங்கள்?" என்றாள்.

"எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை, அதிலும் இங்கே நடந்த கோர கிருத்யங்களையெல்லாம் பார்த்த பிறகு அடியோடு பிடிக்காமற் போய் விட்டது. இங்கே இருந்தேனானால் என்னுடைய மூளை சரியாகவே ஆகாது. உடம்பு கொஞ்சம் சரியானதும் இங்கிருந்து கிளம்பிப் போய் விடவேண்டும் என்று உத்தேசித்திருக்கிறேன்." "தயவு செய்து இப்படிப் பிரித்துப் பேச வேண்டாம். உங்களுக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை என்றால், எனக்கும் பிடிக்கவில்லை. உங்களுக்கு எந்த ஊர் பிடிக்கிறதோ, அந்த ஊர்தான் எனக்கும் பிடிக்கும். நீங்கள் எங்கே போகிறதாக உத்தேசம்?" "நான் பஞ்சாப் மாகாணத்துக்குப் போகிறதாக இருக்கிறேன்." "நீங்கள் பஞ்சாபுக்குப் போகிறதாயிருந்தால், நானும் அந்த பஞ்சாபுக்கே வருகிறேன்." "ஒரு வேளை பஞ்சாப் தேசம் உனக்குப் பிடிக்காது!" "பிடிக்காமல் என்ன? டில்லியில் நாம் இருக்கும்போதே பஞ்சாபுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அமிர்தசரஸில் சீக்கியர்களின் அற்புதமான பொற்கோயில் இருக்கிறதாம். இந்தியாவிலேயே பெரிய மசூதி அங்கே இருக்கிறதாம், அதையெல்லாம் பார்க்கலாம் அல்லவா?" ராகவனுடைய முகம் சுருங்கியது. "சீதா! உன்னை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசு, ஆனால் மசூதி என்கிற பேச்சை மட்டும் நான் இருக்கும் போது எடுக்காதே! என் உடம்பு பதறுகிறது!" என்றான். சீதாவுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்தன. தாஜ்மகாலைப் பார்க்கவேண்டும், அக்பர் சமாதியைப் பார்க்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளினால் தனக்கு நேர்ந்த இன்னல்களையெல்லாம் நினைத்துக் கொண்டாள்.

"ஏதோ யோசியாமல் சொல்லிவிட்டேன். எனக்கு இனிமேல் ஒரு இடத்தையும் பார்க்கவேண்டாம், உங்களையும் வஸந்தியையும் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதுவே போதும்!" என்றாள். சீதாவின் இந்த வார்த்தைகள் சௌந்தர ராகவனுக்குச் சொல்ல முடியாத இன்பத்தை, வெகுகாலமாக அவன் அநுபவித்திராத அபூர்வ மகிழ்ச்சியை அளித்தன. இன்னொரு நாள் ராகவன், "சீதா! எதற்காக நான் இங்கிருந்து பஞ்சாபுக்குப் போகத் தீர்மானித்தேன் தெரியுமா?" என்று கேட்டான். "தெரியாது; எனக்குக் காரணம் தெரிய வேண்டியதுமில்லை! பஞ்சாபுக்கு நீங்கள் போக விரும்புவது ஒன்றே போதும்." "இல்லை; உனக்குக் காரணம் தெரிந்திருக்கவேண்டும். நான் சீமையிலிருந்து திரும்பி வந்தவுடனேயே நான் வேலை செய்யும் கம்பெனிக்காரர்கள் `பஞ்சாபுக்குப் போகிறாயா? அங்கே லாகூரில் ஷாலியார் தோட்டம் இருக்கிறதாம். மானேஜர் உத்தியோகம் தருகிறோம்' என்று கேட்டார்கள். நான் அதற்கு உடனே பதில் சொல்லவில்லை. பஞ்சாப் டில்லிக்குப் பக்கத்தில் இருப்பதால் அங்கே போக எனக்கு அச்சமயம் விருப்பமாக இல்லை. ஆனால் இங்கே ஆகஸ்டு 16ம் தேதி ஆரம்பித்து நடந்த சம்பவங்களைப் பார்த்த பிறகு `வசித்தால் பஞ்சாபிலேதான் வசிக்க வேண்டும்' என்று முடிவு செய்துவிட்டேன். உலகத்தில் எத்தனையோ மகான்கள் எவ்வளவோ மதங்களை ஸ்தாபிக்கிறார்கள். அவர்களுக்குள்ளே சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குருநானக் என்பவரையே நான் மிகப்பெரிய மகான் என்று கருதுகிறேன். அவர்தான் ஒரு மதத்தை ஸ்தாபித்ததோடு ஒரு வீர சமூகத்தையும் படைத்தார்.

உலகத்திலே வீரர்கள் என்று சொன்னால் சீக்கியர்களைத்தான் சொல்லவேண்டும். கேள், சீதா! இந்த ஊரில் கலகம் ஆரம்பித்த முதல் இரண்டு நாள் நான் என்ன நினைத்தேன், தெரியுமா? கல்கத்தாவிலும் வங்காளத்திலும் ஹிந்து என்று சொல்லிக்கொள்ள ஒரு ஆணோ, பெண்ணோ, குழந்தையோ இல்லாமற் போய்விடும் என்று நினைத்தேன். மூன்றாம் நாள் என்ன ஆயிற்று தெரியுமா? கிளம்பினார்கள், சீக்கியர்கள்! இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலோர் டாக்ஸி கார் ஓட்டிய டிரைவர்கள். அவர்கள் கையில் கிர்பானை எடுத்துக்கொண்டு புறப்பட்ட பிறகுதான் கல்கத்தாவிலும் வீர புருஷர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்பட்டது! கல்கத்தாவில் உள்ள முப்பது லட்சம் ஹிந்துக்களும் உயிர் பிழைத்தார்கள்! இப்படிப்பட்ட வீரர்களின் தாய்நாடு பஞ்சாப் தேசம். அத்தகைய நாட்டில் போய் இருப்பதே புண்ணியம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய மனோ நிலையை உன்னால் புரிந்துகொள்ள முடியாமலிருக்கலாம்!" என்று தயங்கிச் சொன்னான் ராகவன். உண்மையில் ராகவனுடைய மனோநிலையை சீதாவினால் புரிந்துகொள்ள முடியவில்லைதான். பஞ்சாபியர்களைப்பற்றி அவளுடைய நினைவுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. டில்லியில் அவள் பஞ்சாபியருடன் பழகியிருக்கிறாள். சுத்த முரடர்கள்; நாகரிகமில்லாதவர்கள். வங்காளிகளின் நாகரிகம் என்ன, படிப்பு என்ன, மரியாதை என்ன? கல்கத்தாவில் வங்காளிகளுடன் அவளுக்கு ஏற்பட்டிருந்த சொற்பப் பழக்கம் அவர்களைப் பற்றி மிக நல்ல அபிப்பிராயத்தை அளித்திருந்தது. அமர்நாத் ஆகியவர்களின் அபிப்பிராயமும் அதற்கு ஒத்தேயிருந்தது.

பழைய காலமாயிருந்தால் ராகவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மறுத்து ஒன்பது வார்த்தை சீதா சொல்லி யிருப்பாள். ஆனால் இப்போது இந்த இயல்பு அவளிடம் மாறிப் போயிருந்தது. ராகவனுடைய உடல்நிலையும் அவனுடன் மாறுபட்டுப் பேசக் கூடாது என்று வற்புறுத்தியது. ஆகையால் ராகவன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதா கூறினாள்: "என்னத்திற்காக இவ்வளவு தூரம் வளைத்து வளைத்துப் பேசுகிறீர்கள்? நான்தான் முன்னமேயே சொல்லி விட்டேனே? எனக்குக் காரணம் ஒன்றுமே தெரியவேண்டியதில்லை. உங்களுக்குப் பிடித்த இடம் எதுவோ அதுதான் எனக்குப் பிடித்த இடம் அந்த நாளிலும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இப்போதும் அவ்விதமே எண்ணியிருக்கிறேன். நடுவில் தலைவிதியின் காரணமாக அங்குமிங்கும் சுற்றியலைய நேர்ந்தது. அதெல்லாம் பழைய கதை, இனிமேல் உங்களை நான் பிரியப் போவதில்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அதுதான் என்னுடைய சொர்க்கம்...." இந்தக் கடைசி வார்த்தை களைக் கேட்டுக் கொண்டு சித்ராவும் அமரநாத்தும் உள்ளே வந்தார்கள். "இப்போதுதான் எனக்கு உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஊரில் கலகம் வந்தாலும் வந்தது உங்கள் இரண்டு பேரையும் ஒன்று சேர்த்து வைத்தது. எப்படிப்பட்ட கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்று இதனாலேதான் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!" என்றாள் சித்ரா. "எங்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக இவ்வளவு பயங்கரமான கலகம் நடக்க வேண்டுமா? அதற்காகப் பத்தாயிரம் பேர் செத்துப் போகவேண்டுமா" என்றாள் சீதா. "இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்தக் கலகத்தை ஆரம்பித்ததே நான்தான் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள் போலிருக்கிறது!" என்று சௌந்தரராகவன் தமாஷ் செய்தான். "கலகத்தை நீங்கள் ஆரம்பித்து வைக்கவில்லை; உங்கள் மனைவி ஸ்ரீமதி சீதாதேவிதான் ஆரம்பித்து வைத்தார்! அவர் ஹாவ்ரா ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய அன்றைக்குத் தானே கலகம் ஆரம்பித்தது?" என்றான் அமரநாத்.
 
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்

அடுத்த ஆண்டு

நமது கதையின் முடிவு நெருங்கி வரும் சமயத்தில் நாமும் கொஞ்சம் அவசரமாகப் போகவேண்டியிருக்கிறது. காலண்டரில் ஏறக்குறைய ஒரு வருஷத்தை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு, அடுத்த 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்கு வருவோம். அன்றைய தினம் சுதந்திர பாரத தேசத்தின் ஜகஜ் ஜோதியான தலைநகரமாய் விளங்கிய டில்லி மாநகரத்துக்குச் செல்வோம். 1942 -ம் வருஷத்திலிருந்து இந்தியா தேசத்துக்கு ஆகஸ்டு மாதம் முக்கியமான மாதமாயிற்று. அந்த வருஷம் ஆகஸ்டு மாதத்திலேதான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அதன் உச்ச நிலையை அடைந்தது. பிற்பாடு, 1946-ம் வருஷம் ஆகஸ்டில் முஸ்லிம் லீக் கொண்டாட விரும்பிய நேர் நடவடிக்கை (டைரக்ட் ஆக்ஷன்) தினம் இந்தியத் தாயின் திருமேனியைப் புண்படுத்தி, அதன் மூலம் ஆகஸ்டு மாதத்துக்கு முக்கியம் அளித்தது. 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதமோ இந்திய சரித்திரத்திலேயே இணையற்ற முக்கியம் பெற்றது. ஆயிரம் வருஷத்துக்கு மேல் அடிமையாக வாழ்ந்திருந்த பாரத தேசம் அந்த வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி சுதந்திர தேசம் ஆயிற்று. நாற்பது கோடி இந்திய மக்கள் விடுதலைப் பேறு அடைந்தார்கள். அதே சமயத்தில் அவர்களில் முப்பத்திநாலு கோடிப் பேர் இந்திய யூனியன் என்னும் தனிச் சுதந்திர நாட்டினராகவும், பாக்கி ஆறு கோடிப் பேர் சுதந்திர பாகிஸ்தான் பிரஜைகளாகவும் பிரிந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த வைபவத்தைத் தேசமெங்கும் மகத்தான உற்சாகத்துடனே கொண்டாடினார்கள். இந்திய சுதந்திர அரசாங்கத்தின் தலைநகரமான டில்லியிலே கொண்டாடினார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? அன்று காலையிலிருந்து டில்லியும் புதுடில்லியும் ஒரே கோலாகலமாயிருந்தன. சுதந்திரத் திருநாளன்று மாலை டில்லி மாநகரம் அளித்த அலங்காரக் காட்சியைப் போல் அதற்கு முன்னால் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் காலத்திலே கூடப் பார்த்திருக்க முடியாது. அந்த நாளில் மின்சார விளக்கு ஏது? அல்லது இவ்வளவு பொதுஜன உற்சாகத்துக்குத்தான் இடம் ஏது? முக்கியமாக, சரித்திரப் பிரசித்தமான 'சாந்தனி சவுக்' என்னும் வெள்ளி வீதியும், அந்த வீதியிலுள்ள மணிக்கூண்டும், டவுன் ஹாலும், இன்னும் சுற்றுப்புறங்களும், அற்புதமான தீபாலங்காரங்களும் ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்துக் கண்கொள்ளாக் காட்சியளித்தன!

சூரியாவும் தாரிணியும் அன்று சாயங்காலம் டில்லியின் குதூகலக் கொண்டாட்டங்களையும் தீபாலங்காரங்களையும் பார்த்துக் கொண்டு வெள்ளி வீதியில் நடந்து கொண்டிருந்தார்கள். டில்லி நகரம் தீபங்களினால் ஜொலித்ததுபோல் அவ்விருவருடைய முகங்களும் பிரகாசமாயிருந்தன. இதே வெள்ளி வீதியில் சூரியாவும் தாரிணியும் போலீஸாரின் கையில் அகப்படாமல் இருப்பதற்காக வேஷந்தரித்துக் கொண்டும், வெளிச்சம் மேலே படாமல் ஒளிந்து மறைந்து கொண்டும் எத்தனையோ தடவை நடந்ததுண்டு. ஆனால் இப்போது அம்மாதிரியான பயமுமில்லை; தயக்கமு மில்லை, ஒளிவு மறைவுக்கு அவசியமும் இல்லை. சூரியா கதர்க்குல்லா அணிந்து கொண்டும், தாரிணி ஆரஞ்சு வர்ணப்புடவை அணிந்து கொண்டும், பகிரங்கமாகக் கைகோத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்தார்கள். பதினாயிரக்கணக்கான ஜனக் கூட்டத்துக்கு மத்தியில் நடந்தபோதிலும் அவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு யாரும் அக்கம்பக்கத்தில் இருப்பதாகவே ஞாபகமில்லை. அவ்வளவு மெய்மறந்த உற்சாகத்துடன் அவர்கள் உல்லாசமாகப் பேசிக் கொண்டு சென்றார்கள். "இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்து கொண்டாட்டமும் நடத்துவதை நம்முடைய ஜீவிய காலத்தில் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருந்ததே! இதைக் காட்டிலும் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்கிறது?" என்றாள் தாரிணி. "நம்மைப் பொறுத்த வரைக்கும் இதைவிட மேலான அதிர்ஷ்டம் ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அது நம்முடைய கலியாண வைபவந்தான்!" என்று சொன்னான் சூரியா. "இன்று டில்லி நகரின் அலங்கார தீபங்கள் வானத்து நட்சத்திரங்களுடன் போட்டி போடுகின்றன என்று சொன்னால் பொருத்தமாகவே இருக்கும். வானத்து நட்சத்திரங்களை எண்ணினாலும் எண்ணலாம். இந்தத் தீபங்களை எண்ண முடியாது போலிருக்கிறதே?" என்றாள் தாரிணி. "நான் ஒன்று சொன்னால் நீங்கள் வேறொன்று சொல்கிறீர்களே? நம்முடைய வரப்போகும் கலியாணத்தைப் பற்றி நான் குறிப்பிட்டேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நாம் திருமணம் செய்து கொள்கிறது என்று பேசி முடிவு செய்திருந்தோமல்லவா? அதைப்பற்றி இப்போது உங்கள் அபிப்பிராயம் என்ன? தயவுசெய்து சொல்லவேணும்?" என்றான் சூரியா.

"இதே வெள்ளி வீதியில் முன்னே நாம் எத்தனை தடவை போலீஸுக்குப் பயந்து தயங்கிப் பதுங்கி நடந்திருக்கிறோம். அதையெல்லாம் நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அப்போது நாம் பேசிக் கொண்டதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. காந்திஜியினாலும் மற்ற மிதவாத காங்கிரஸ் தலைவர்களினாலும் இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப்போவதில்லை - அவர்களையெல்லாம் தலைமைப் பதவியிலிருந்து துரத்தி விட்டுப் பொதுஜனப் புரட்சி இயக்கத்தை நடத்த வேண்டும் - சோசலிஸ்ட் கட்சியினால்தான் அந்த மகா இயக்கத்தை நடத்தமுடியும் என்றெல்லாம் பேசிக் கொண்டோ மல்லவா? கடைசியாகப் பார்த்தால் அந்த மகாத்மா கிழவரும் மிதவாதக் காங்கிரஸ் தலைவர்களுமே இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்களே?" என்றாள் தாரிணி. "அதைப்பற்றி இப்போது என்ன விவாதம்? எந்தச் சட்டியில் சுட்டாலும் பணியாரம் வேகவேண்டியதுதானே முக்கியம்? பணியாரம் வெந்து விட்டது! சுதந்திரம் வந்து விட்டது! நாம் கலியாணம் செய்து கொள்வதற்கிருந்த இதர தடையும் நீங்கிவிட்டது!" என்றான் சூரியா. "இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்து விட்டதென்றா சொல்கிறீர்கள்? எனக்குச் சந்தேகமா யிருக்கிறது!" என்றாள் தாரிணி. "அதிலேகூடச் சந்தேகம் வந்துவிட்டதா? 'காந்திஜியின் ஆத்ம சக்தி வென்று விட்டது!' 'இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது!' 'பண்டிட் மவுண்ட் பேட்டனுக்கு ஜே!' என்று தேசமெல்லாம் ஒரே கோஷமாயிருக்கிறதே! அதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்? ஆகையால் நம் முன்னால் உள்ள அடுத்த முக்கியமான புரோகிராம் நம்முடைய திருமணந்தான்!" என்றான் சூரியா. "சூரியா! ஒரே பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடுகிறீர்களே?" "வேறு என்ன பல்லவியை இன்று பாடுவது? 'ஜனகணமன' 'வந்தே மாதர' கீதங்களைத்தான் ரேடியோவில் விடாமல் கொலை செய்து கொண்டிருக்கிறார்களே! ஆகையால் நம்முடைய கலியாணத் தேதியை இந்த நல்ல நாளில் நிச்சயம் செய்யலாம்."

"இந்தியா தேசம் சுதந்திரம் அடைந்தது உண்மையானால் எதற்காகத் தேசம் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்? சுதந்திர இந்தியா சுதந்திரமாகச் செய்த காரியமா இது?" "இந்தியா இரண்டாகப் பிரிந்ததினால் இப்போது என்ன மோசம் போய்விட்டது? இரண்டு பிரிவுகளும் தனித்தனியாகச் சுதந்திரம் அனுபவித்துப் போகட்டுமே! மேலும், இந்தியா பிரிந்தது என்றால் கோடரியைப் போட்டுப் பிளந்துவிட்டார்களா? அல்லது பீகார் பூகம்பத்தைப் போல் பூகம்பம் வந்து பிளந்துவிட்டதா? அப்படி ஒன்றும் இல்லையே? பாரதபூமி இன்னும் ஒரே பூமியாகத்தானே இருக்கிறது?" என்றான் சூரியா. "அதைப் பற்றித்தான் சந்தேகப்படுகிறேன். தாயின் இரண்டு கைகளையும் வெட்டித் துண்டித்துத் தனியாகப் போட்டுவிட்டது மாதிரி எனக்குத் தோன்றுகிறது!" "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஆதிகாலத்திலிருந்து நம் இந்தியா தேசம் பல ராஜ்யங்களாகப் பிளவுபட்டே இருந்திருக்கிறது." "அந்தப் பிளவுகள் அரசியல் காரணம் பற்றியவை. இது மதத்தின் பெயரால் ஏற்பட்ட பிரிவினை அல்லவா?" "அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை, மதத்திற்காக ஏற்பட்ட பிரிவினை என்று எப்படிச் சொல்லலாம்? இந்தியாவில் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் ஹிந்துக்களும் வாழ்ந்திருக்கத்தானே போகிறார்கள்?" "அதுதான் சந்தேகம், சூரியா! 'டான்' பத்திரிகையை இன்று பார்க்க வில்லையா? அமிருதசரஸ் கடைவீதி தீப்பிடித்து எரிகிறதாமே!" "'டான்' பத்திரிகையில் வந்தது வெறும் புளுகாயிருக்கும்.அப்படியே இருந்தாலும் இருக்கட்டும். தேசத்துக்காக நாம் கவலைப்பட்டதெல்லாம் போதும்! எது எப்படியாவது போகட்டும். இப்போது நம் கலியாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்!" "நமக்குள் கலியாணம் எப்படிச் சாத்தியம்? மத வித்தியாசம் ஒன்று இருக்கிறதே! நீங்கள் ஹிந்து; நான் முஸ்லிம்." "இது என்ன புதிய தடை புறப்படுகிறது! நான் ஹிந்துவுமல்ல; நீங்கள் முஸ்லிமும் அல்ல. நமக்கு மதம் என்பதே கிடையாது.

மனித தர்மந்தான் நம்முடைய மதம். இதைப்பற்றிப் பல தடவை பேசி முடிவு கட்டியிருக்கிறோம்! மேலும் நீங்கள் முஸ்லிம் மதத்தினர் என்பதாக நான் என்றைக்கும் நம்பவேயில்லை. சில சமயம் முஸ்லிம் ஸ்திரீயைப்போல் உடை தரித்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் முஸ்லிம் ஆகிவிட முடியாது." "ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமா யிருந்தால்....?" "ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமாயிருந்தால் அதைப் பற்றி ரஜினிபூர் ராஜகுமாரிக்கு என்ன கவலை?" என்றான் சூரியா. தாரிணி கலகலவென்று சிரித்தாள். "முஸ்லிம் ஸ்திரீயைப் போன்ற வேஷம் சில காரியங்களுக்கு ரொம்பவும் சௌகரியமாயிருக்கிறது. இல்லாவிட்டால் ரஜினிபூர் அரண்மனையை விட்டு நான் வெளிக் கிளம்பியிருக்கவே முடியாது. ரஜினிபூர் ராஜாவும் அவருடைய தாயாரும் என்னை எப்படியாவது அங்கே இருக்கப் பண்ண வேண்டும் என்று பார்த்தார்கள். பாதி ராஜ்யம் கேட்டால்கூடக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நான் முஸ்லிம் ஸ்திரீ என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை! அதனாலேயே நான் அங்கிருந்து புறப்படச் சம்மதித்தார்கள். இப்போது கூட நான் உண்மையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்துவிடவில்லையென்று சொன்னால் போதும்; ரஜினிபூர் அரண்மனைக்கு நான்தான் ராணி!" "கூடவே கூடாது; என் இதய ராஜ்யத்துக்குத் தாங்கள் ராணியாயிருந்தால் போதும்; நமக்குக் கலியாணம் ஆனவுடனே...." "சூரியா! உங்களுக்குக் கூச்சம் என்பதே கிடையாதா? ஆயிரம் பதினாயிரம் ஜனங்களுக்கு மத்தியிலேதானா காதலையும் கலியாணத்தையும் பற்றிப் பேசுவது? கொஞ்சம் தனி இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசக் கூடாதா?" என்றாள் தாரிணி.
 

New Threads

Top Bottom