Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
எனது நாவல்களை புத்தகமாகப் பெற விரும்புவோருக்கு,

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 18



அந்த திருமண அறிவிப்பு விழாவில் வந்தவர்களை வரவேற்று விருந்து முடிய, இரவு பதினொன்றரையானது.


வாழ்த்த வந்தவர்களில் ஒருவர், "அடடடடா! அசோக மித்ரன் மித்ர வர்ஷினி பேர் பொருத்தமே அமோகமா இருக்கே!" என்று கூற, அவரை கொலைவெறியுடன் பார்த்த வர்ஷினி,


"யோவ்! ஆம வாயா, ஒழுங்கு மரியாதையா ஓடிரு. இல்ல என் கையாலயே அடிபட்டு சாவ" என்று அவரின் காதோரம் வார்த்தைகளை கடித்து துப்ப, பேந்த பேந்த விழித்தவர் ஓடியே விட்டார்.


ஒரு வழியாய் நிச்சயம் நல்ல முறையில் நடக்கப்பெற்று, திருமண நாள் வர, ஒருவருக்கும் நிற்க நேரமில்லை.


மிகப்பெரிய மண்டபத்தில் அந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாகன நிறுத்துமிடம், சாப்பிடும் இடம், வரவேற்பறை, மணமகள் மற்றும் மணமகன் அறை, விருந்தினர்கள் அறை என அனைத்தும் விசாலமானதாயிருந்தது.


திருமணம் நடைபெறும் மேடையில் அமைக்கப்பட்ட மணவறைகள், அழகுற பூக்களால் ஜோடிக்கப்பட்டிருந்தன.


தொழிலதிபர்கள், அரசியலில் உள்ள பெரும் புள்ளிகள், திரைத்துறையினர், சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் அமரவென இடங்கள் தனித்தனியாய் வகுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.


மணநாளன்று காலையில் செய்தியாளர்கள், கட்சித்தொண்டர்கள் மற்றும் ஊடகத்துறையினர் என அனைவரும் அங்கே தான் குவிந்திருந்தார்கள்.


மண்ணள்ளி போட்டாலும் கீழே விழாது; நின்றிருப்பவர்களின் தலையில் தான் விழும். அவ்வளவு கூட்டம்.


மண்டபத்தை சுற்றிலும் பல ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டு பளிச் பளிச் என மின்னி பார்ப்போர் கண்ணை பறித்தது.


அரக்கு நிறப்பட்டு மற்றும் தங்க ஆபரணங்கள் அணிந்து மணமகள்கள் இருவரும் கனக சுந்தரிகளாய் திகழ, ஆண்மகன்கள் இருவரும் பட்டுவேஷ்டி சட்டை அணிந்து சுந்தரர்களாய் பார்க்கும் இளம்பெண்களை எல்லாம் கவர்ந்திழுத்தார்கள்.


அங்கிருந்த இளசுகளின் கண்கள் முழுதும் இவர்கள் மீதே.


நீதிதாசனின் குடும்ப வழக்கப்படி தங்கச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட திருமாங்கல்யத்தை பிரதமர் கையில் எடுத்துத் தர, மணமகன்கள் இருவரும் அதனை வாங்கி மணமகள்களுக்கு தலை வழியே கழுத்தில் அணிவித்து விட்டனர்.


தான் சொன்னது போலவே அனைவரின் முன்னிலையிலும், ரதிதேவியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து விட்டான் அக்னிமித்ரன்.


தனது நெஞ்சை அழுத்திய விஷயத்தால் மித்ரவர்ஷினியின் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர், அவளின் கன்னத்தில் குதித்தது.


வேதம் ஓதுவார் குங்குமத்தை நீட்ட, அதனை தங்களின் பெருவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் மத்தியில் எடுத்துக்கொண்ட இருவரும், முறையே தங்கள் மனையாளின் நெஞ்சில் பல போட்டோ ப்ளாஷ்களின் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்த தங்கத்தாலியில் வைத்துவிட்டனர்.


மஞ்சள் கலந்த அரிசி தூவி, மனமார தங்கள் புதல்வர்களை வாழ்த்தினர் நீதிதாசன்-பூர்ணிமா தம்பதியர்.


அந்நேரத்தில் நீதிதாசனின் வீட்டிற்கு ஆரம்பித்திருக்கும் கஷ்டக்காலத்தை எண்ணி சந்தானமும், பிரகாஷும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.


தங்கள் மகனின் திருமணத்தை கண் குளிர காண முடியவில்லையெனினும், தங்கள் பேரன்களின் திருமணத்தை அருகிலிருந்து கண்டுகளித்த களக்காட்டு தம்பதியர் இருவருக்கும், மனம் நிறைந்து போனது.


அனைத்தையும் கண்டு பொறுக்க முடியாமல், அக்னிமித்ரன் மீது கொலைவெறியில் அமர்ந்திருந்த ப்ரித்விஹாசன், அதை மறைக்க கறுப்பு நிற கூலர்ஸ் அணிந்திருந்தான்.


தனது டிபார்ட்மெண்ட் ஆட்கள் வரவும், அவர்களை வரவேற்கும் விதமாய் மேடையிலிருந்தபடியே தலையசைத்தான் அசோகமித்ரன்.


தாலி கட்டு முடிந்தவுடன் பிரதமருக்கும், அவரின் கூட்டாளிகளுக்கும் என்று தனியறையில் விருந்து பரிமாறப்பட்டது.


அது நிறைவு பெற்றவுடன் வெளியே வந்தவர், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சந்தானத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளினார். அது தானே சந்தானத்திற்கும் தற்போது வேண்டும்.


எல்லாம் முடிந்து அவர் தனது தொண்டர்களுடன் அடுத்த நிகழ்ச்சிக்கு சென்று விட, அப்போது தான் மண்டபத்தில் இயற்கையான காற்றோட்டத்தை உணர முடிந்தது. மொத்தக் கூட்டமும் பாதியளவு குறைந்திருந்தது.


அடுத்த சடங்காக மணமகள்களின் காலில் மணமகன்கள் மெட்டி அணிவித்து விட்டனர்.


"இப்பவே உங்க பசங்க அவனுக பொண்டாட்டிங்க கால்ல விழுந்துட்டானுக பாருங்க?" என்று பூர்ணிமா நீதிதாசனிடம் கண்ஜாடைக் காட்ட,


"இது என்ன பிரமாதம். நான் தான் இருபத்தியெட்டு வருஷத்துக்கு முன்னாடியே உன் கால்ல விழுந்துட்டேனே பூமா?" என்று காதோரம் முணுமுணுத்தவரைக் கண்டு, அவர்பால் காதல் பெருகினாலும் வெளியே, ஆமாம் ஆமாம் என்று முகத்தை நொடித்துக் கொண்டாள் பூர்ணிமா.


இரவில் திருமண வரவேற்பு வைக்கப்பட்டது. திருமணத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் அனைவரும், அப்போது வருகை புரிந்து அவர்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.


இரவு பன்னிரண்டு மணியளவில் அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பயந்து பயந்து முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் ரதிதேவி.


இளஞ்சிவப்பும் மஞ்சளும் கலந்து கட்டம் போட்ட ஷிபான் புடவையை அணிந்து கையில் பால் செம்புடன் உள்ளே நுழைந்தவளை பார்த்து, கட்டிலிலிருந்து எழுந்த அக்னிமித்ரன் அவளின் அருகில் செல்ல, பயந்து பின்னோக்கி நகர்ந்தாள் ரதிதேவி.


அதனை கண்டு சிரித்தவன், "பேபி வாட் ஹாப்பண்ட்? எதுக்கு பயப்படுற? இப்போதைக்கு அத்தானுக்கு எதுவும் வேணாம். உன் படிப்பு முடிஞ்சதும் இதெல்லாம் வச்சுக்கலாம் என்ன?” என்றவுடன், தைரியம் பெற்ற ரதி, தன் மனதினை அரிக்கும் அந்தக் கேள்வியினை கேட்டாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"நீங்க அப்பாக்கிட்ட அந்தப் போட்டோவை காமிச்சீங்களா?"


"எந்தப் போட்டோவை காமிச்சீங்களா?"


"அதாங்க அந்தப் போட்டோ. அன்னைக்கு நைட் நீங்க எங்க வீட்டுக்கு வந்தப்போ எடுத்தீங்களே?"


"சேச்சே! அது நம்ம பெர்சனல் போட்டோ பேபி. அதை எப்படி உங்க அப்பன் அந்த கடுவா மீசைக்கிட்ட காட்டுவேன்?"


"அப்ப சோசியல் மீடியாவுல போட்டுடுவேனு சொன்னது?"


"அது சும்மா உல்லுல்லாய்க்கு. உன்னை மிரட்ட தான் அப்படி சொன்னேன். அது உனக்கு பிடிக்கலைனா இப்பவே டெலிட் பண்ணிடுறேன்" என அவளின் முன்னேயே அனைத்தையும் அழித்தான்.


அவன் புகைப்படங்களை அழித்ததில் மனதில் ஒரு தெம்பு வரப்பெற்றாலும், ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு இழக்கக்கூடாத ஒன்றை தான் இழந்து‌‌ விட்டதாக கண்ணீர் வடித்தாள்.


அவனிடம் ஆற்றாமையாக, "அன்னைக்கு ஏன் அப்படி பண்ணுனீங்க?" என்றாள்.


அவ‌ன்‌ தன் பார்வையை கூர்மையாக்கி, "என்ன பண்ணுனாங்க?" என்றான்.


"என்.. என்.." திக்கித் திணறியவள் தொண்டையடைத்து அழ,


"பேபி ப்ளீஸ். அழாத. இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது"


"நீங்க ஏன் நான் சுயநினைவுல இல்லாதப்போ என்னை மோசம் பண்ணுனீங்க?"


"மோசம் பண்ணினேனா? யூ மீன் ரேப்?"


அவள் தலை ஆமென்று ஆடியது.


"ஹாஹாஹா. நான் சொன்னதை நம்பிட்டியா பேபி? நான் பார்க்கறதுக்கு முன்ன பின்ன இருந்தாலும், விருப்பமில்லாத பொண்ணை தொடுற அளவுக்கு மோசமானவன் இல்ல பேபி. கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான். அன்னைக்கு என் சுண்டு விரல் கூட உன் மேல படலைன்னு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். அன்னைக்கு உன் ட்ரெஸ்ஸை கழட்டினதென்னவோ உண்மை தான். பட், கண்ணை மூடிட்டு தான் பேபி கழட்டினேன். அதுவும் நீ எனக்கு கிடைச்சே ஆகணுங்கற கோபத்துல தான் அப்படி பண்ணினது. நெனச்ச மாதிரியே நீயும் அதுல பயந்துப் போயிட்ட. ஹே! ஹே! இதான வேணாங்கறது. நடந்து முடிஞ்சதைப் பத்தி யோசிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்ல பேபி. ப்ளீஸ் அழாத. உனக்கு ஆறு வயசா இருக்கறப்போ, என் பெர்த்டே பங்ஷன்ல தான் உன்னை பார்த்தேன் குட்டிப்பொண்ணா துறுதுறுன்னு. அந்த குட்டிப்பொண்ணை என் கண்ணு முன்னாடி வச்சு, கூடவே வாழனும்னு தோனிச்சு. அதான் பிளான் பண்ணி உன்னை தூக்கிட்டேன்.”


"அப்போ அப்பாவை பழி வாங்கப்போறேனு சொன்னது?"


"உங்கப்பாவை எப்படி வேணும்னாலும் என் கால்ல வந்து விழ வைப்பேன் பேபி. ஆனா அது உன்னை யூஸ் பண்ணியில்ல."


ஏதோ புரிந்தும் புரியாததுமான நிலையிலிருந்தாள் ரதிதேவி.


அதனை கண்டுகொண்டவன் அவளின் தோளில் அணைவாய் கைப்போட்டு, "இப்போதைக்கு எதைப் பத்தியும் யோசிக்காத பேபி. உன் படிப்பை மட்டும் பாரு. ஆனா நீ பக்கத்துல இல்லாம என்னால தூங்க முடியாது. ஸோ, நான் தூங்கும் போது மட்டும் நீ என் கைக்குள்ளேயே இருக்கணும். சரியா?" என்று, நகர்ந்தவளை தன்னோடு அணைத்துத் தூக்கி கட்டிலில் இறக்கிவிட்டான்.


பின், அவளை அணைத்துக்கொண்டே அவன் சொகுசாய் தூங்க, பேதையவள் தான் அவனிடமிருந்து வந்த ஆண்மை கலந்த வாசனையால் தூங்க முடியாமல் தவித்துப் போனாள்.


மறுபுறம் அசோகமித்ரனின் அறையில், வழவழப்பான இரவு உடை அணிந்து, அமைதியாய் அவனருகில் அமர்ந்திருந்தாள் மித்ரவர்ஷினி.


ஆங்காங்கே கண்ணாடிக் குடுவைகளில் நறுமண மெழுகுவர்த்திகள் ஒளிர்விட்டு, அறையில் இதம் பரப்பிக் கொண்டிருக்க, முதலிரவும் அதுவுமாய் முகத்தில் எந்தவொரு பதட்டத்தையும் காட்டாமல் இருந்தவளைக் கண்டு, "வர்ஷினி" என்று அன்பாய் அழைத்தான்.


ஆனால், முதல் சொற்பொழிவு அவளுடையதாய் இருந்தது.


"நம்ம ரெண்டு பேருமே மெச்சூர்ட் பீப்பிள். அதனால ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டதுக்கப்பறம், இதையெல்லாம் வச்சிக்கலாம்னு நான் நினைக்கறேன். ரெண்டு உடல்கள் இணையுறதுக்கு முன்னாடி ரெண்டு மனங்கள் இணையுறது தான் சரியா இருக்கும்னு எனக்கு தோணுது. நீங்க என்ன நினைக்கறீங்க?" என்றதும்,


"கரெக்ட் தான் வர்ஷினி.‌ நானும் முதல்ல அப்படித் தான் நெனச்சிட்டிருந்தேன். ஆனா உன்னை இவ்வளவு கிட்ட தினம் என் கண் முன்னாடி வச்சிக்கிட்டு என்னால கட்டுப்பாடோட இருக்க முடியும்னு தோணல?" என கண்ணடித்ததோடு,
மெத்தையிலிருந்த அவளின் கை மேல் தன் கையை வைக்க, அவள் பதறி விலகினாள்.


அவளின் செயலில் வாய்விட்டு சிரித்தவன், "பயப்படாத வர்ஷினி. உன் மேல‌ நான் பாய்ஞ்சிட மாட்டேன். நீ ரொம்ப தைரியமா தெரிஞ்சியா? அதான் நீ பயப்பட்டா உன் முகம் எப்படி இருக்கும்னு பார்க்க, சும்மா விளையாடினேன். நல்லாவே பயப்படுற. அப்பறம் நீ சொன்ன மாதிரி நாம ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்ட பின்னாடியே இதெல்லாம் வச்சிக்கலாம்" என்றதோடு, அவளுக்கு முதுகுகாட்டிப் படுத்துவிட்டான்.


இவனை எந்த கணக்கில் சேர்ப்பது என புரியாமல் தவித்த மித்ர வர்ஷினியும், அவனுக்கு மறுபுறம் சென்று படுத்துவிட்டாள்.


மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த அசோகாவிற்கு நடு ஜாமத்தில் அறையின் உஷ்ணம் அதிகமாக உள்ளது போல் தோன்ற, கண்ணை மூடிக்கொண்டே தடவி அருகிலிருந்த ரிமோட்டை எடுத்து ஏசியை அதிகரிக்கும் பட்டனை அழுத்தினான்.


ஏசியின் கீழிருந்த ஸ்பீக்கர் நடுசாமம் ஒரு மணிக்கு, அதிரும் குரலில் பாடியது.


"ஆழியிலே முக்குளிக்கும் அழகே!
ஆவியிலே தத்தளிக்கும் அழகே!
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா?
மூச்சோடு குடியேறவா?
உன் இடையோடு நடமாடும்
உடையாக நான் மாறி
எந்நாளும் சூடேறவா?
என் ஜென்மம் ஈடேறவா!"



பதறி எழுந்து ரிமோட்டை போட்டுத் தட்டியவன், அப்போது தான் கவனித்தான் அது ஏசி ரிமோட் அல்ல, ஹோம் தியேட்டர் ரிமோட் என்பதை.


அதனை கீழேப் போட்டுவிட்டு எழுந்து சென்று ஸ்பீக்கரை அணைத்தவன், ஏசியை கூட்டி வைத்து விட்டு வந்து படுக்கையில் சரிந்தான்.


படுக்கையில் விழுந்தவனின் மூளை, அப்பாட்டிலுள்ள வரிகளின் தாக்கத்தில் எதையெதையோ சிந்தித்தது.


உடல் முழுதும் வியர்த்துப் போயிருக்க, திரும்பி வர்ஷினியைப் பார்த்தான்.


உடல் முழுவதும் கம்பளியால் போர்த்திக்கொண்டு ஆடாமல் அசையாமல் படுத்திருந்தாள்.


உறங்கிக் கொண்டிருந்தவள் திடீரென அவன் மேல் ஒருக்காலை போட்டு கட்டியணைத்துக்கொண்டு தூங்க, அதன் பின் அசோகாவின் நிலைமை இன்னும் மோசமானது.


விடி விளக்கின் ஒளி துப்பிக் கிடந்த இரவில், அழகு அப்பிக் கிடந்த அவள் உடலும், தித்திக்கும் தீர்த்தத்தால் உப்பிக் கிடந்த அவள் உதடும், அவனின் ஆளுகைக்கு உட்படாமல் தப்பிக் கிடந்தன.


அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் விழி கூட்டிற்குள் நீண்ட நேரத்திற்கு பிறகே, உறக்கம் வந்து குடி கொண்டது.




தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம்19



மறுநாள் காலை தன் மார்பில் தலை வைத்து சுகமாய் தூங்கிக் கொண்டிருந்த ரதிதேவியை, "பேபி, பேபி, எந்திரி பேபி" என்று அவளின் காதுக்குள் புகுந்து அக்னிமித்ரன் அழைக்க, கேட்ட சத்தத்தில் அரக்க பரக்க விழித்தாள் அவள்.


"ஹேய், ஹேய், என்னாச்சு? நான் தான். விடிஞ்சிருச்சி பாரு" என்றவுடன் நடப்பை உணர்ந்து கொண்டவள்,


மென்மையாய் புன்னகைத்து, "குட் மார்னிங் அண்ட் தான்க்ஸ்" என்றாள்.


"தான்க்ஸா எதுக்கு பேபி?" என்று ஆர்வமாய் கேட்டான்.


"என்னை சீக்கிரம் எழுப்பி விட்டீங்கல்ல? அதுக்குத் தான்"


"ஓ! அதுக்கா? தான்க்ஸ இப்படி தள்ளி நின்னா சொல்லுவாங்க? இப்படி என் கேட்டுக்குள்ள வந்து நெத்தில முத்தம் கொடுத்துல்ல சொல்லனும்?" என்று அவளுக்கு முத்தம் கொடுக்க, பதறி விலகி ஓடியவள், குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள்.


அவளின் செயலில் சிரித்தவன் தன் ஜிம்மிற்குள் புகுந்து கொண்டான்.


இங்கு காலையில் முழிப்பு தட்டியவுடன் எழுந்த வர்ஷினியின் கண்ணில், கண்ணை மூடி சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்த அசோகமித்ரன் பட, ‘பெரிய சூர்ய புத்திரன்னு நெனப்பு.’ என்று அவனுக்கு மனதிற்குள் பழிப்புக்காட்டி விட்டு, எழுந்து குளியலறை சென்றாள்.


காலை ஒன்பதரை மணியளவில் இரண்டு ஜோடிகளும் டைனிங் டேபிளில் ஆஜராகினர்.


மரகதம் தன் பேத்திகளை பேரன்களின் பக்கத்தில் அமர வைத்து, தானே பரிமாறி கண் குளிர்ந்து போனார்.


அதன் பின் நாட்கள் புல்லட் ரயிலைப் போலத்தான் பறந்தது.


"அக்னி, அசோகா, ஒரு மாசம் கழிச்சி நம்ம ஊர்ல கோயில் கொடை நடக்குதுப்போவ். எல்லாரும் வரணும் என்ன?" என்றுவிட்டு மரகதமும், திருநீலகண்டனும் ஒரு‌ வாரத்தில் களக்காட்டிற்கு கிளம்பி விட்டனர்.


அவர்கள் கிளம்பிய அன்று இரவே அனுஷாவும் லண்டன் சென்றுவிட்டாள்.


இரட்டையரின் திருமணம் முடிந்து இரண்டு வாரம் கழிந்த நிலையில்,
அக்னிமித்ரன் சிவனேயென்று தனது தொழிலைப் பார்க்க, ரதிதேவியும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள்.


அவளுக்கு திருமணம் முடிந்து விட்டதை கேள்விப்பட்ட பேராசிரியர்கள் ஜாடையாக, படிப்பில் கவனம் வை என்று கூற, அதில் சிறிது மனச்சுணக்கம் ஏற்பட்டது ரதிதேவிக்கு.


தினமும் தனது காரிலேயே அக்னி அவளை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல, அவளின் கல்லூரித் தோழிகள் சிலர், "ஹேய் ரதி! உன் ஹஸ்பண்ட் கருப்பாயிருந்தாலும் கலையா இருக்காருடி. ஆமா நீ அவரை எப்படி கூப்பிடுவ? ஹான் ஞாபகம் வந்திருச்சி. அத்தான்னு தான? இனி எங்களுக்கும் அவரு அத்தான் தான்டி" என்று விளையாட்டாகக் கூற, ஆவேசமடைந்தாள் ரதி.


‘இனி அவரை வெளிய காலேஜ் கேட் கிட்டவே நம்மளை இறக்கி விட சொல்லணும். உள்ள இவளுக கண்ணு முன்னாடி வரவிடவேக் கூடாது’ என்று மனதில் நினைத்துக்கொண்டு, அதையே கடைப்பிடிக்கவும் செய்தாள்.


இப்போது அக்னிமித்ரன் கூட அவள் அருகில் இல்லாமல் உறங்கி விடுவான் போல, ரதியால் தான் அவனின் ஸ்பரிசம் இல்லாமல் உறங்க முடியாமல் போனது.


தனது அக்கா மித்ரவர்ஷினியைப் போலவே சிறு வயதிலேயே பெரிய மனுஷியாகிவிட்ட ரதிதேவியை கல்பனா விளையாடக் கூட, வீட்டை விட்டு வெளியேற அனுமதியாததால், தனது சிறுவயது விளையாட்டுத்தனத்தை யெல்லாம் தொலைத்தாள் அந்தப் பாவை.


அமைச்சர் மற்றும் சினிமா நடிகையின் மகள் என்பதால், பெரும்பாலும் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்படாமல் அறைக்குள்ளேயே புதிதாய் பிறந்த பறவையைப் போல், உலகம் தெரியாது வளர்க்கப்பட்டாள்.


இப்படி வளர்க்கப்பட்டவள் முழுக்க முழுக்க தன் அன்னை தந்தையின் வற்புறுத்தலால் தான் ப்ரித்வியுடனான கல்யாணத்திற்கு சம்மதித்ததே.


அடிக்கடி வீட்டிற்கு வந்து டைரிமில்க் சாக்லேட்டை நீட்டி, தனக்கு முத்தம் கொடுக்குமாறு கேட்கும் தனது மாமனை கட்டிக்கொள்வதில், தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை அவளுக்கு.


பத்தொன்பதை நோக்கி பயணித்தவளுக்கு மூளை அவ்வளவு தான் வேலை செய்தது.


எப்போதாவது அவள் அத்திபூத்தாற்போல் உலகறிவை பெற காரணமாயிருப்பது, அவளின் பாட்டி மணியம்மை மட்டுமே.


அக்னியைப் போலவே சிறு அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கும் குழந்தையாகவே வளர்ந்தாள் அவள்.


அதன் காரணமாய் இப்போது திருமணம் ஆனப்பின், அக்னிமித்ரன் காட்டும் சிறு பாசத்திற்கும், அன்பிற்கும் ஏங்கி, அவனின் அடிமையானாள்.


அவனின் அன்பு தனக்கு மட்டுமே முழுமையாய் கிடைக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டாள்.


அவன் தன்னை திருமணம் செய்து கொண்ட முறை தவறாயிருப்பினும், அவனின் இந்த அன்பிற்காக அவன் முன்பு செய்த அனைத்தையும் மறக்க, மன்னிக்கத் தயாராயிருந்தாள்.


அவனை தன்னை காக்க வந்த தேவதூதனாக கருதினாள். அவன் சொன்னால் இப்போது அவன் காலடி நாய் குட்டியாகக் கூட அவள் மாறி விடத் தயார் தான். ஆனால், அக்னிமித்ரன்‌ சொல்ல வேண்டுமே?


அவன் திருமணம் ஆன பிறகும் தனது காமக்களியாட்டங்களை தொடர்ந்து கொண்டு தான் இருந்தான்.


அவனைப் பொறுத்தவரை ரதிதேவி அவனுக்கானவள். அதனால் அவளை தன் உடமையாக்கிவிட்டான் அவ்வளவே. அவனுக்கு அவள் மேல் காதலா என்றால், உறுதியாகத் தெரியாது.


எப்படி ஜவுளிக்கடையில் நமக்கு பிடித்த உடையை அடுத்தவர் முதலில் எடுத்தால், அதை நான் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன் என்று லபக்கென‌ பிடிங்கிக் கொள்வோமோ, அதுபோல் தான் சிறுவயதில் தனது மனதில் பதிந்த ரதிதேவியை ப்ரித்விஹாசனிடமிருந்து பிரித்து வந்து, தன்னறைக்குள் வைத்துவிட்டான்.


மத்தபடி அவளுக்கும் மனதுண்டு, அதில் ஆசையுண்டு என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு கிடையாது.


அவள் பொருளல்ல, உயிருள்ள ஒரு மனுஷி என்பதை மறந்தே போனான் அந்த தொழிலதிபன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அக்னிமித்ரன் இவ்வாறு ரதியின் மன நிலை புரியாது நடந்து கொண்டிருக்க, மறுபுறம் அசோகமித்ரன் அரசாங்கம் தனக்கு பணித்த கடமைகளையெல்லாம் திறம்பட செய்து பாராட்டுக்களை குவித்துக் கொண்டிருந்தான்.


இப்போது தான் புதிதாக வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தாள் மித்ர வர்ஷினி.


அசோகாவிடமிருந்து ஆதாரங்களை எல்லாம் எப்படி எடுப்பது எனவும், திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள்.


"எப்படிடி உன் லவ்வரை மறந்து இவரை உன்னால கட்டிக்க முடிஞ்சது?" என்று அலைபேசியில் கேட்ட தனது தோழி ஜனனியிடம்,


"எப்பவும் என்னால அவரை மறக்க முடியாது ஜனனி. கண்டிப்பா ஒரு வருஷத்துல டிவோர்ஸ் வாங்கிட்டு நான் அங்க மதுரைக்கு தான்டி வரப்போறேன். இங்க இருக்கவே எனக்குப் பிடிக்கல. நரகம் மாதிரி இருக்கு" என்று மனதில் அடக்கி வைத்திருப்பதையெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள்.


அந்நேரம் உள்ளே நுழைந்த உருவம் ஒன்று அவள் கூறியவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு, வந்த வழி தெரியாமல் வெளியே நழுவி விட்டது.


மனதில் இருப்பதை யாரிடமேனும் தெரிவித்தால் தானே நிம்மதி? மனம் என்ன குப்பை சேகரிப்பு தொட்டியா? அனைத்தையும் சேமித்து வைக்க?


மனதிலிருப்பதை யாரிடமேனும் கூறாமல் இருந்தால் கண்டிப்பாய் ஒருநாள் மன அழுத்தத்திற்கு உள்ளாவோம் என்பதை அவள் உணர்ந்திருந்தாளோ என்னவோ, அடிக்கடி தனது தோழி ஜனனியை தொடர்பு கொண்டு, தனது மனதை இலகுவாக்கி கொண்டாள்.


அக்னிமித்ரன்-ரதிதேவியின் திருமணம் நடந்து முடிந்த இந்த இருபது நாட்களில் எந்தவொரு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல், தனது கேரவனிலேயே சுற்றிக் கொண்டிருந்தான் ப்ரித்விஹாசன்.


மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என பயந்து தான், அவன் அந்த திருமண விழாவில் கலந்து கொண்டதே.


மேடையில் அக்னிமித்ரன் ரதிதேவியின் கைகளை பிணைத்துக் கொண்டிருந்ததை காண காண அவனுக்கு உள்ளுக்குள் எரிமலையே வெடித்துச் சிதறியது. வெளியே இயல்பாக முகத்தை வைக்க, பெரிதும் சிரமப்பட்டான்.


அந்தக் கடுப்பில் எந்தப் படப்பிடிப்பிற்கும் செல்லாமல், தன் கேரவனுக்குள்ளேயே வட்டமிட்டான்.


அவனை நம்பி படத்தை ஆரம்பித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவரும் புலம்பத் தொடங்க, அவன் அதனை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.


பலரிடம் தான் வாங்கிய முன்பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டான்.


விஜய்குமாரை ப்ரித்விஹாசனின் பரிந்துரையின்படி திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் ஒருவர், அவனிடத்தில் பிரித்வியின் இந்த வாடிக்கையைப் பற்றிக் கூற, கேரவனில் வாசம் செய்பவனை சந்திக்கச் சென்றான் வீ.கே.


எப்பொழுதும் முழு போதையில் மட்டையாகிக் கிடப்பவன், இன்று கொஞ்சம் குறைவாய் குடித்திருந்ததால் நிதானத்துடன் இருந்தான்.


விஜய்குமாரைக் கண்டதும், "வா வீ.கே" என்று வரவேற்றான்.


"ஏன் சார் இப்படி பண்றீங்க? உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்க உடம்பையும் கெடுத்து, பேரையும் கெடுத்துக்கறீங்க?" என்று ஆதங்கமாகக் கேட்டான்.


"இல்ல வீ.கே, உனக்கு எதுவும் தெரியாது. என் நிலைமைல நீ இருந்தா தூக்கு மாட்டி தற்கொலை பண்ணியிருப்ப. அந்தளவுக்கு நான் மனசு நொந்துப்போய் இருக்கேன். உனக்கு நான் சொல்றது எதுவும் புரியலைல? புரியுற மாதிரியே சொல்றேன். என் அக்காப்பொண்ணு ரதிதேவி தெரியுமா? என் எங்கேஜ்மெண்ட்ல கூடப் பார்த்தியே? அவ தான். சின்ன வயசுலயிருந்தே அவ எனக்கு தான்னு சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க என்னைப் பெத்தவங்க. ஆனா, இப்ப அவ எனக்கு இல்லைனு ஆனதை என்னால ஏத்துக்க முடியல வீ.கே. ஐ பேட்லி நீட் ஹர். நீ பொறந்தப்ப யாரையாவது இவ உனக்கு தான்னு சொல்லிட்டு, இப்ப இல்லைனு சொன்னா உனக்கு எப்படி இருக்கும்? இது எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா? அந்த அக்னிமித்ரன் தான். என் அக்காப்பொண்ணை பேசி மயக்கினவன், என் கண்ணு முன்னாடியே அவளை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வந்து நிற்கறான். ஆனா அவன் அவளை உண்மையா லவ் பண்ணல வீ.கே. என் அக்கா மாமாவை அவன் கால்ல விழ வைக்கத்தான் இப்படியெல்லாம் பண்ணியிருக்கான். இது தெரியாம என் அக்காப்பொண்ணும் அவன்கிட்ட ஏமாந்துட்டா. அவன் கல்யாணம் ஆனப் பின்னாடியும், பல பொண்ணுங்களோட கூத்தடிக்கறதை நிறுத்தல தெரியுமா? என் ரதிக்குட்டி பாவம். அவளுக்கு இது எதுவுமே தெரியாது. அவனை ஏதாவது பண்ணனும் வீ.கே" என்றதும், விஜய்குமாருக்கு குழப்பமாக இருந்தது.


"என்ன சார் அந்தப் பொண்ணும், அக்னிமித்ரனும் லவ் பண்றது உங்களுக்கு தெரிஞ்சதும், நீங்க விலகிட்டதா தானே சோஷியல் மீடியால சொன்னீங்க? இப்ப என்னன்னா ஏதேதோ புதுக்கதையெல்லாம் சொல்றீங்க?” என்றான் சந்தேகமாக.


"நான் இப்ப சொல்றது தான் உண்மை வீ.கே. அவன் லவ் எல்லாம் பண்ணல. என் மாமாவோட இல்லீகல் பிசினஸ் டாக்குமெண்ட்ஸ் சிலதை திருடி வச்சிட்டு, என் மாமாவையும், அக்காவையும் வழிக்கு கொண்டு வந்துட்டான். ஆனா, நான் எப்படி இப்ப கலங்கி நிற்கறனோ, அதே மாதிரி அவனும் கலங்கணும் வீ.கே" என்றவன் தெளிவாய் தான் மன்மதலீலைகள் புரிந்ததையும், அதை வைத்து அக்னிமித்ரன் தன்னை மிரட்டியதையும் மட்டும் விஜய்குமாரிடம் கூறாமல் மறைத்து விட்டான்.


அக்னிமித்ரனை வில்லனாக்கி தன்னை பெரிய ஒழுக்கசீலனாய் காட்டிக்கொண்டான்.


ப்ரித்விஹாசனுக்கும் ரதிதேவிக்கும் நிச்சயம் நடந்த அன்று அக்னிமித்ரன் விஜய்குமாரிடம் நல்ல முறையில் நடந்திருந்தால், அவன் மனம் அக்னிக்காகவும் ஒரு நொடி யோசித்திருக்குமோ?


ஆனால், தற்போது அதற்கு வழியில்லாமல் போனது.


"அவன் என் முன்னாடி கைக்கட்டி வாய் பொத்தி நிற்கணும் வீ.கே. நான் சொல்றதையெல்லாம் கேட்டு பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டனும்.” என்று வெறிபிடித்தவன் போல் கத்தவும்,


"அது எப்படி சார் முடியும்?” என்றான் விஜய்குமார்.


"முடியும் வீ.கே. அவனோட பலவீனமே அவனோட தங்கச்சி தானாம். அங்க அடிச்சா தான் அவன் ஈஸியா விழுவான். அங்க தட்டணும் வீ.கே.”


ப்ரித்வியின் மாஸ்டர் பிளானில் மிரண்டான் விஜய்குமார்.


"அந்தப் பொண்ணை எப்படி சார் தூக்கறது? பாவம் ஒன்னும் தெரியாத பொண்ணைப்போய்" என்று அனுஷாவிற்கு ஏந்து பேசினான்.


"இல்ல வீகே. அவளை லவ் பண்ற மாதிரி நடிச்சு, அவக்கூட ஒன்னு ரெண்டு போட்டோஸ் எடுத்தாக்கூட போதும். அதை வச்சி அவனை என் கட்டுப்பாட்டுக்குக் கீழ கொண்டு வந்து ஆட்டிப் படைச்சிருவேன். அதுக்கு தான் ஆள் யாரையாவது ஏற்பாடு பண்ணனும். ஆனா, யாரை அனுப்புறதுன்னே தெரியல" என்று சொல்ல,


எல்லாவற்றையும் கேட்டவன் அவனின் விசுவாசியாய், "நான் அந்த வேலையை செய்றேன் சார்" என்றான்.


அவனை ஒரு நிமிடம் கூர்ந்துப் பார்த்த ப்ரித்விஹாசன் கண்கள் மின்ன, சரியென்று சொல்லி உடனே அவனை தன் செலவில் லண்டன் அனுப்பி வைத்தான்.


அக்னிமித்ரனின் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் லண்டன் சென்றான் விஜய்குமார்.


அங்கு சென்று முழுதாய் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் இப்போது அனுஷா அவனது கைகளில்.



தொடரும்...
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom