அத்தியாயம்19
மறுநாள் காலை தன் மார்பில் தலை வைத்து சுகமாய் தூங்கிக் கொண்டிருந்த ரதிதேவியை, "பேபி, பேபி, எந்திரி பேபி" என்று அவளின் காதுக்குள் புகுந்து அக்னிமித்ரன் அழைக்க, கேட்ட சத்தத்தில் அரக்க பரக்க விழித்தாள் அவள்.
"ஹேய், ஹேய், என்னாச்சு? நான் தான். விடிஞ்சிருச்சி பாரு" என்றவுடன் நடப்பை உணர்ந்து கொண்டவள்,
மென்மையாய் புன்னகைத்து, "குட் மார்னிங் அண்ட் தான்க்ஸ்" என்றாள்.
"தான்க்ஸா எதுக்கு பேபி?" என்று ஆர்வமாய் கேட்டான்.
"என்னை சீக்கிரம் எழுப்பி விட்டீங்கல்ல? அதுக்குத் தான்"
"ஓ! அதுக்கா? தான்க்ஸ இப்படி தள்ளி நின்னா சொல்லுவாங்க? இப்படி என் கேட்டுக்குள்ள வந்து நெத்தில முத்தம் கொடுத்துல்ல சொல்லனும்?" என்று அவளுக்கு முத்தம் கொடுக்க, பதறி விலகி ஓடியவள், குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள்.
அவளின் செயலில் சிரித்தவன் தன் ஜிம்மிற்குள் புகுந்து கொண்டான்.
இங்கு காலையில் முழிப்பு தட்டியவுடன் எழுந்த வர்ஷினியின் கண்ணில், கண்ணை மூடி சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்த அசோகமித்ரன் பட, ‘பெரிய சூர்ய புத்திரன்னு நெனப்பு.’ என்று அவனுக்கு மனதிற்குள் பழிப்புக்காட்டி விட்டு, எழுந்து குளியலறை சென்றாள்.
காலை ஒன்பதரை மணியளவில் இரண்டு ஜோடிகளும் டைனிங் டேபிளில் ஆஜராகினர்.
மரகதம் தன் பேத்திகளை பேரன்களின் பக்கத்தில் அமர வைத்து, தானே பரிமாறி கண் குளிர்ந்து போனார்.
அதன் பின் நாட்கள் புல்லட் ரயிலைப் போலத்தான் பறந்தது.
"அக்னி, அசோகா, ஒரு மாசம் கழிச்சி நம்ம ஊர்ல கோயில் கொடை நடக்குதுப்போவ். எல்லாரும் வரணும் என்ன?" என்றுவிட்டு மரகதமும், திருநீலகண்டனும் ஒரு வாரத்தில் களக்காட்டிற்கு கிளம்பி விட்டனர்.
அவர்கள் கிளம்பிய அன்று இரவே அனுஷாவும் லண்டன் சென்றுவிட்டாள்.
இரட்டையரின் திருமணம் முடிந்து இரண்டு வாரம் கழிந்த நிலையில்,
அக்னிமித்ரன் சிவனேயென்று தனது தொழிலைப் பார்க்க, ரதிதேவியும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள்.
அவளுக்கு திருமணம் முடிந்து விட்டதை கேள்விப்பட்ட பேராசிரியர்கள் ஜாடையாக, படிப்பில் கவனம் வை என்று கூற, அதில் சிறிது மனச்சுணக்கம் ஏற்பட்டது ரதிதேவிக்கு.
தினமும் தனது காரிலேயே அக்னி அவளை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல, அவளின் கல்லூரித் தோழிகள் சிலர், "ஹேய் ரதி! உன் ஹஸ்பண்ட் கருப்பாயிருந்தாலும் கலையா இருக்காருடி. ஆமா நீ அவரை எப்படி கூப்பிடுவ? ஹான் ஞாபகம் வந்திருச்சி. அத்தான்னு தான? இனி எங்களுக்கும் அவரு அத்தான் தான்டி" என்று விளையாட்டாகக் கூற, ஆவேசமடைந்தாள் ரதி.
‘இனி அவரை வெளிய காலேஜ் கேட் கிட்டவே நம்மளை இறக்கி விட சொல்லணும். உள்ள இவளுக கண்ணு முன்னாடி வரவிடவேக் கூடாது’ என்று மனதில் நினைத்துக்கொண்டு, அதையே கடைப்பிடிக்கவும் செய்தாள்.
இப்போது அக்னிமித்ரன் கூட அவள் அருகில் இல்லாமல் உறங்கி விடுவான் போல, ரதியால் தான் அவனின் ஸ்பரிசம் இல்லாமல் உறங்க முடியாமல் போனது.
தனது அக்கா மித்ரவர்ஷினியைப் போலவே சிறு வயதிலேயே பெரிய மனுஷியாகிவிட்ட ரதிதேவியை கல்பனா விளையாடக் கூட, வீட்டை விட்டு வெளியேற அனுமதியாததால், தனது சிறுவயது விளையாட்டுத்தனத்தை யெல்லாம் தொலைத்தாள் அந்தப் பாவை.
அமைச்சர் மற்றும் சினிமா நடிகையின் மகள் என்பதால், பெரும்பாலும் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்படாமல் அறைக்குள்ளேயே புதிதாய் பிறந்த பறவையைப் போல், உலகம் தெரியாது வளர்க்கப்பட்டாள்.
இப்படி வளர்க்கப்பட்டவள் முழுக்க முழுக்க தன் அன்னை தந்தையின் வற்புறுத்தலால் தான் ப்ரித்வியுடனான கல்யாணத்திற்கு சம்மதித்ததே.
அடிக்கடி வீட்டிற்கு வந்து டைரிமில்க் சாக்லேட்டை நீட்டி, தனக்கு முத்தம் கொடுக்குமாறு கேட்கும் தனது மாமனை கட்டிக்கொள்வதில், தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை அவளுக்கு.
பத்தொன்பதை நோக்கி பயணித்தவளுக்கு மூளை அவ்வளவு தான் வேலை செய்தது.
எப்போதாவது அவள் அத்திபூத்தாற்போல் உலகறிவை பெற காரணமாயிருப்பது, அவளின் பாட்டி மணியம்மை மட்டுமே.
அக்னியைப் போலவே சிறு அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கும் குழந்தையாகவே வளர்ந்தாள் அவள்.
அதன் காரணமாய் இப்போது திருமணம் ஆனப்பின், அக்னிமித்ரன் காட்டும் சிறு பாசத்திற்கும், அன்பிற்கும் ஏங்கி, அவனின் அடிமையானாள்.
அவனின் அன்பு தனக்கு மட்டுமே முழுமையாய் கிடைக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டாள்.
அவன் தன்னை திருமணம் செய்து கொண்ட முறை தவறாயிருப்பினும், அவனின் இந்த அன்பிற்காக அவன் முன்பு செய்த அனைத்தையும் மறக்க, மன்னிக்கத் தயாராயிருந்தாள்.
அவனை தன்னை காக்க வந்த தேவதூதனாக கருதினாள். அவன் சொன்னால் இப்போது அவன் காலடி நாய் குட்டியாகக் கூட அவள் மாறி விடத் தயார் தான். ஆனால், அக்னிமித்ரன் சொல்ல வேண்டுமே?
அவன் திருமணம் ஆன பிறகும் தனது காமக்களியாட்டங்களை தொடர்ந்து கொண்டு தான் இருந்தான்.
அவனைப் பொறுத்தவரை ரதிதேவி அவனுக்கானவள். அதனால் அவளை தன் உடமையாக்கிவிட்டான் அவ்வளவே. அவனுக்கு அவள் மேல் காதலா என்றால், உறுதியாகத் தெரியாது.
எப்படி ஜவுளிக்கடையில் நமக்கு பிடித்த உடையை அடுத்தவர் முதலில் எடுத்தால், அதை நான் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன் என்று லபக்கென பிடிங்கிக் கொள்வோமோ, அதுபோல் தான் சிறுவயதில் தனது மனதில் பதிந்த ரதிதேவியை ப்ரித்விஹாசனிடமிருந்து பிரித்து வந்து, தன்னறைக்குள் வைத்துவிட்டான்.
மத்தபடி அவளுக்கும் மனதுண்டு, அதில் ஆசையுண்டு என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு கிடையாது.
அவள் பொருளல்ல, உயிருள்ள ஒரு மனுஷி என்பதை மறந்தே போனான் அந்த தொழிலதிபன்.