அந்த இருட்டில் போன தனது அண்ணனைக் காணவில்லை என்ற அச்சத்தில் இருந்த தேன்மொழியின் தோளில் யாரோ கை வைக்க, அவள் பயத்தில் உறைந்தே போனாள். ஏதோ ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சட்டென்று திரும்பினாள்.
அங்கே அமுதன் நின்று கொண்டு அவளை அதிர்ச்சியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். “என்னாச்சு தேன்மொழி.? எதுக்கு இங்க நின்னுட்டிருக்கீங்க.?” என்றான்.
அப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது. இருந்தாலும் பயம் போகவில்லை அவளுக்கு. சட்டென்று அவன் மேல் சாய்ந்து அழுதாள். அவனுக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. தான் அவள் மேல் கையை வைக்கவே மிகவும் யோசிக்க, அவளோ தன் மேல் சாய்ந்து அழுவதை நினைக்கும் போது, அவள் மீதான காதல் அவனை இம்சைப்படுத்த, நிலைமையை உணர்ந்தவன் கேட்டான்.
“தேன்மொழி, நீங்க என்னன்னு சொன்னா தானே தெரியும். வளையாபதி எங்க.? அவர் இந்த ஃபைல விட்டுட்டுப் போயிட்டார். அதனால தான் நான் பின்னாலேயே வந்தேன். தயவுசெய்து என்ன நடந்ததுன்னு சொல்லுங்க.” என்றான்.
அவள் தன்னை சற்று நிதானித்துக்கொண்டு, நடந்ததைச் சொன்னாள். அதைக் கேட்ட அமுதன் சற்றும் தாமதிக்காமல் உடனே காரில் ஏறி, வண்டியை ஆன் செய்து ஹெட்லைட்டை நன்றாக எறிய விட்டான்.
அவளிடம், “கார்ல ஏறுங்க.” என்றான்.
அவளும் ஏறிக்கொள்ள, கார் வேகமெடுத்து செல்ல ஆரம்பித்தது. அந்த கும்மிருட்டில் அந்தக் காரின் வெளிச்சம் மட்டுமே இருந்தது. சிறிது தூரத்தில் பார்த்த போது, வளையாபதி கீழே விழுந்து கிடந்தான்.
அவசரமாய் காரை அப்படியே நிறுத்தி விட்டு அவனைத் தூக்கினார்கள் இருவரும். அவனுக்கு நன்றாக அடிபட்டிருந்தது. “அய்யோ.. அண்ணா...” என்று கதறினாள் தேன்மொழி.
“வளையாபதி, என்னாச்சு.? எப்படி அடிபட்டுச்சு.?” என்று அமுதன் கேட்க, பாதி மயக்கத்தில் அவன், “தமி...ழ்... த.. மி.. ழ்... அவ...ங்க.. ளக் கா..ப்பா..த்து..ங்க...” என்று தட்டுத்தடுமாறி சொல்லிவிட்டு மீண்டும் மயங்கினான்.
“தமிழா.. தமிழுக்கு என்னாச்சு.? ப்ளீஸ் வளையாபதி.. சொல்லுங்க..” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுக்கு குரல் தழுதழுத்தது.
“தேன்மொழி ஒரே நிமிஷம் உங்களால எந்த அளவுக்கு கத்த முடியுமோ கத்தி ஊரைக் கூட்டுங்க. நான் அந்தப் பக்கம் போய் பார்க்கறேன்.” என்று சொல்லிவிட்டு ஓடும் போதே அவனது தவிப்பை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவன் சொன்னதைப் போல், “காப்பாத்துங்க... காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.......” என்று விடாமல் சுற்றிலும் சென்று தன் தொண்டையிலிருந்து கத்தினாள் தேன்மொழி.
அவள் கத்திய சத்தம் அருகே இருந்த தமிழினியின் அப்பா ரங்கனுக்கும், கோகிலாவுக்கும் நன்றாகவே கேட்டது. இருவரும் உடனே ஓடி வந்தனர். அதே போல், சிலரும் அவள் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்தனர்.
சிறிது தூரம் சென்றதும் அமுதனுக்கு அங்கே நடப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. ஒருவன் தமிழினியைப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்வது தெரிந்தது. அவளால் கத்த முடியவில்லை. அவள் வாயைத் துணியைக் கொண்டு கட்டியிருந்தனர்.
வந்த கோபத்திலும், வேகத்திலும் அமுதன் ஓடிச் சென்று அவளை இழுத்துச் சென்றவனை ஓங்கி ஒரே அடி தான் அடித்தான். அவன் “அம்ம்ம்மாமாமாமா.....” என்ற அலறல் சத்தத்தோடு அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தான்.
அமுதன், அங்கே அவனால் கீழே விடப்பட்ட தமிழினியைத் தூக்கினான். அவளால் பாவம் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. அவன் மேல் சாய்ந்து கொண்டாள். அதற்க்குள் நாலைந்து அடியாட்கள் அவன் முன்னே ஒடி வந்து நின்றனர்.
கையில், பெரிய பெரிய ஆயுதங்களும், கட்டைகளும் இருந்தன. அதையெல்லாம் சட்டை செய்யாமல் அவன் தமிழினியின் வாயைப் பொத்தியிருந்த துணியைக் கழட்டி விட்டான். அதன் பிறகு தான் அவளால் முழுதாய் மூச்சுவிட முடிந்தது.
“தமிழு.. இப்போ எப்படி இருக்கு.? இவனுங்க எதுக்கு உன்னை இழுத்துட்டுப் போறாங்க.? யார் இவங்க.?” என்றான். அவளால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் அவன் மேல் சாய்ந்திருந்தாள் தமிழினி.
“அதை நான் சொல்றேன். நீதான் வக்கீலா.? உன்னை அடிச்சா முதல்ல சரியாகும். ஒழுங்கா அந்தப் பொண்ண விட்டுடு. இல்லன்னா உன்னைக் கொன்னுட்டு தான் நாங்க அந்தப் பொண்ணத் தூக்கிட்டுப் போவோம்.” என்றான் ஒருவன்.
அமுதனோ அவர்களை முறைத்தவாறே, “டேய்.. எவ்ளோ தைரியம் இருந்தா என் தமிழ இழுத்துட்டுப் போவீங்க.? இதுல அவள விடச் சொல்றீங்க.? என்ன மீறி நீங்க அவளக் கூட்டிட்டுப் போக முடியுமா.? முடிஞ்சா கூட்டிட்டுப் போங்க பார்க்கலாம்.” என்று சவால் விட்டான்.
“டேய்.. இதப் பாருடா வக்கீல் சவால் விடறாரு. ஏன் உனக்கு உயிர் மேல ஆசை இல்லையா.? ஒழுங்கா விட்டுட்டுப் போ.. இல்லன்னா அவ்ளோ தான்.” என்றான் அவன் திரும்பவும்.
அதற்க்குள் அங்கே வந்த ரங்கனும், சிலரும் அந்த அடியாட்களுடன் சண்டை போட்டனர். அவர்கள் கையில் இருந்த கட்டையைக் கொண்டு அடியாட்களிடம் சண்டையிட்டனர்.
அப்போது ரங்கனிடம், “அப்பா, நீங்க தமிழக் கூட்டிட்டுப் போய் கொஞ்சம் தண்ணி கொடுத்து முதலுதவி செய்யுங்க. இவங்கள நான் பார்த்துக்கறேன்.” என்று அவளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு அங்கே இருந்த ஒரு நீலக் கம்பை எடுத்துக்கொண்டான் அமுதன்.
முடியாமல் இருந்த தன் மகளின் கன்னத்தைத் தட்டியவாறே, “தமிழ் மா.. தமிழ் மா.. என்னாச்சு டா உனக்கு.? அப்பாவப் பாருமா..” என்று அழுதபடியே அவளைக் கூட்டிச் சென்றார். அதற்க்குள் கோகிலாவும் அவ்விடம் வந்துவிட்டார். இருவரும் அவளைத் தாங்கிப் பிடித்து கூட்டிச் சென்றனர்.
அமுதன் சிலம்பமும் கற்றிருக்கிறான். கம்பை வைத்து பலமுறை வேகமாக சுழற்றினான். அவ்வளவுதான், அந்த அடியாட்களிடம் இருந்த ஆயுதங்களும், கட்டைகளும் எங்கே போனதென்று தெரியவில்லை. இப்போது அவர்களுக்கு பலவாறு அவனிடமிருந்து அடிகள் விழுந்தன. அடியின் வலி தாங்காமல் அலறியவர்கள் இருட்டில் ஓடி மறைந்தனர்.
இரவு 9 மணி, அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி. தீவிர சிகிச்சைப் பிரிவில் நன்றாக அடிபட்டிருந்த வளையாபதிக்கும், மயக்கமான நிலையில் இருந்த தமிழினிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் தான் இருந்தனர். விஷயம் கேள்விப்பட்டதும் அங்கே செங்குட்டுவனும் வந்துவிட்டார்.
தேன்மொழி தன் அண்ணனுக்காக கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தமிழினிக்காக அவளது பெற்றோரும், அமுதனும், அழகேசனும் கவலையுடன் இருந்தனர். அமுதன் கிட்டத்தட்ட அழுதுகொண்டிருந்தான்.
அழகேசன் தான் அவனைச் சமாதானம் செய்துகொண்டிருந்தார். “அமுதா, நீ அழக்கூடாது. தைரியமா இருக்கணும் டா. பெத்தவங்க தான் அழுதுட்டு இருக்காங்க. நீயும் அழுதா, யார் அவங்களுக்கு ஆறுதல் சொல்றது.? தமிழுக்கு ஒண்ணும் ஆகாது.?” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
“அப்பா, என்னால முடியல. ப்ளீஸ். புரிஞ்சுக்கோங்க. அவள நான் எப்படிப்பட்ட நிலைல பார்த்தேன் தெரியுமா.? அப்படிப் பார்த்ததும் என்னால தாங்கவே முடியல பா. பாவம் பா தமிழு. அவளுக்கு இந்த கேஸ்ல எந்த சம்பந்தமுமே இல்ல. ஆனா, அவள ஏன் இப்படிப் பண்ணாங்கன்னு எனக்குத் தெரியல.? யார்ன்னு தெரிஞ்சுதுன்னா, கண்டிப்பா அவங்கள நான் சும்மா விடமாட்டேன். பாருங்க.” என்று சொன்னபடி தன் கண்களில் இருந்து வந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.
“எனக்கு யார்ன்னு தெரியும் அமுதா. வேற யாரு, இந்தக் கேஸ்ல நீ ஜெயிக்கக் கூடாதுன்னு நினைக்கிற ரெண்டே பேர், அந்த ராமைய்யாவும், வீரபத்திரனும் தான் இப்படிப் பண்ணிருக்கணும்.” என்றார் செங்குட்டுவன்.
“அதுக்கு, சம்பந்தமே இல்லாம தமிழ ஏன் சார் இழுத்துட்டுப் போகணும்.? அவ என்ன சார் தப்புப் பண்ணா.?” என்றான் அமுதன்.
“உன்னோட கவனத்த திசை திருப்ப நினைச்சிருக்கலாம். உன்னோட ஃப்ரெண்ட்க்கு ஒண்ணுன்னா உன்னால தாங்க முடியாதுன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதனால அப்படிப் பண்ணிருப்பாங்கன்னு என்னோட அசம்ஷன். பட், எக்ஸாக்ட்டா என்ன நடந்ததுன்னு அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். யாராவது ஒருத்தர் கண்ணு முழிச்சு சொன்னா கூட அது மூலமா நமக்குத் தெரிய வரும்.” என்றார் செங்குட்டுவன்.
“தெரிய வரட்டும் சார். நான் அவங்களை ஒரு வழி பண்ணிருவேன். அவங்க என்ன நினைச்சாங்க என்னைப் பத்தி.? இந்த மாதிரி பண்ணா நான் பயந்துடுவேன்னா.? கிடையாது. எனக்குள்ள தூங்கிட்டிருக்கற குணத்த அவங்க சீண்டிட்டாங்க. அதை முழுசா அவங்ககிட்டக் காட்டப் போறேன்.” என்று கோபமாகவும், தைரியமாகவும் பேச,
“ம்ம்.. இந்த மன உறுதி தான் வேணும் அமுதா. நீ மனசொடிஞ்சு போயிட்டா அது எதிரிகளுக்கு சாதகமாப் போயிடும். அதனால, நீ எதிர்த்துப் போராடு. அதுக்கு நாங்க எல்லாருமே உனக்கு உறுதுணையா இருப்போம்.” என்றார் செங்குட்டுவன்.
“ஆமாடா தம்பி. நீ தைரியமா இரு. எல்லாத்துக்கும் அந்த ஆண்டவனும், நாங்களும் உனக்குத் துணையா நிப்போம்.” என்றார் அழகேசன்.
இவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, ஒரு நர்ஸ் வெளியே வந்து, “அந்தப் பொண்ணு கண்ணு முழிச்சிட்டாங்க.” என்று சொல்ல, அனைவரும் தமிழினியைப் பார்க்கச் சென்றனர்.
ஒருபக்கம் அவளது பெற்றோரும், மறுபக்கம் அமுதனும், அழகேசனும் நின்றுகொண்டிருந்தனர். ஆவலோடு அவளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் மெல்ல கண் அசைவில் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“தமிழ் மா.. இப்போ எப்படி இருக்கு.? என்னாச்சு மா உனக்கு.? எப்படி ஆச்சு.?” என்று ரங்கனும், கோகிலாவும் அழுதுகொண்டே கேட்டனர்.
“அது... அது.... என்ன....” என்று அவள் பேச முயலும் போது களைப்பில் அப்படியே மயங்கினாள். திரும்பவும் அவள் மயங்கியதைப் பார்த்து அவர்கள் அனைவரும் பயந்து விட்டனர்.
அப்போது அங்கே வந்த டாக்டர், “ஏங்க, இப்படி சுத்தி நின்னுட்டு, அழுதுட்டு அவங்களைப் பார்த்தா எப்படி இருக்கும்.? அவங்க ரொம்ப டயர்டா இருக்காங்க. இப்போதான் குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு. அவங்கள யாரும் இப்போதைக்கு டிஸ்டர்ப் பண்ணாதீங்க. வெயிட் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டுப் போக, அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர்.
பொள்ளாச்சியில் உள்ள அந்த பெரிய பங்களாவில் சத்தம் கூடமானவரை வாசல் வரைக்கும் கேட்டது. பின்னே வக்கீல் என்றால் சும்மாவா, பேச்சும், குரலும் சற்று அதிகமாகத்தானே இருக்கும். வீரபத்திரன் தான் கத்திக்கொண்டிருந்தார்.
“நான் உன்கிட்ட என்ன சொன்னேன்.? கேஸ் முடியற வரைக்கும் என்னோட அனுமதி இல்லாம எதுவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லிருந்தேன்ல. அப்பறம் எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலையப் பண்ணிட்டு வந்து நிக்கற.? உன்னையெல்லாம் ஒரு மனுஷன்னு நினைச்சு, உனக்காக இங்க வந்து இந்தக் கேஸ எடுக்க நினைச்சேன் பாரு, என்னையத்தான் செருப்புலயே அடிச்சுக்கணும். இது இப்போ எவ்ளோ பிரச்சினைல போய் முடியும்னு தெரியுமா.? நாளைக்கு கோர்ட்ல, தேவையில்லாம இதுக்கும் நான் விளக்கம் கொடுக்கணும்.” என்று தலையில் கை வைத்தபடி கோபத்தில் அமர்ந்திருந்தார் வீரபத்திரன். எதிரில் ராமைய்யா நின்றிருந்தார்.
“யோவ்.. நீ என்ன நினைச்சுட்டு இருக்க.? இது எல்லாருக்குமே இந்நேரம் தெரிஞ்சிருக்கும். அவனுங்க எல்லாருமே நான் தான் பண்ணிருப்பேன்னு என்னைத்தான் சந்தேகப்படுவானுங்க. அதுவும், அந்த செங்குட்டுவன் இருக்கானே, அவனே போதும். கன்ஃபார்மா நான் தான் பண்ணியிருப்பேன்னு அவனோட ஜூனியர்கிட்ட சொல்லி வைச்சிருப்பான். அவன் நாளைக்கு இதப்பத்தி கேள்வி கேட்பான். நீயா பதில் சொல்லப் போற.? நான் தானே ஏதாவது சொல்லி சமாளிக்கணும். உனக்கென்ன.? கடவுளே, உன்னை என்ன பண்ணனும் தெரியுமா.?” என்று ராமைய்யாவை கடிந்து கொண்டார்.
ராமைய்யாவோ அவர் முன்பு வேறு எதுவும் பேச முடியாமல் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டிருந்தார். அனைத்து வேலைகளையும் அரங்கேற்றியது அவரே. வீரபத்திரனிடம் எந்த ஒரு முன்னறிவுப்பும் இல்லாமல் சில ஆட்களை வைத்து வளையாபதியை அடிக்கவும், தமிழினியைக் கடத்தவும் திட்டமிட்டார்.
“தயவுசெய்து என் கண் முன்ன நின்னு என்ன டென்ஷன் பண்ணாதய்யா. போய்த் தொலை. நாளைக்கு கோர்ட்ல பார்க்கலாம்.” என்று வெறுப்பாய் சொல்லி அவரைத் துரத்தினார்.
அவமானம் தான் ராமைய்யாவுக்கு. ஆனால், வேறு வழியில்லையே, இந்த கேஸில் தன்னைக் காப்பாற்ற அவர் நம்பியிருக்கும் ஒரே ஒரு ஆள் அவர் மட்டுமே. அவரையும் பகைத்துக் கொண்டால், தன்னை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று நினைத்துத்தான் அனைத்தையும் தாங்கிக் கொண்டு சென்றார்.
அவர் சென்றதும், வீரபத்திரனின் இளைய மகன் அருகே வந்து கேட்டான். “அப்பா, எதுக்கு இந்த மாதிரி ஆளுகளோட கேஸெல்லாம் ஹேண்டில் பண்றீங்க.? நீங்க எப்பவுமே உங்க கிளையண்ட்ஸக் கூட பார்த்துதான சூஸ் பண்ணுவீங்க. எதுக்கு வீணா இந்த ஆளுகிட்ட எல்லாம் கத்திட்டு, நீங்களும் டென்ஷன் ஆயிட்டு, இதெல்லாம் தேவையா பா.” என்றான்.
“டேய், சின்னவனே எனக்குத் தெரியும்டா. யாரோட கேஸ எடுக்கணும், எடுக்கக் கூடாதுன்னு. ஒருத்தன் என்கிட்ட வந்திருக்கான்னா, அவன் கொட்டி கொட்டி என்கிட்ட கொடுத்தாத்தான் முடியும். இவனும், அப்படி மாட்டிக்கிட்டவன் தான். இந்தக் கேஸ ஜெயிச்சுக் கொடுத்தா என்ன கொடுப்பன்னு கேட்டேன். எதுவா இருந்தாலும் தரேன்னு சொன்னான். அதான், அவனுக்கு கிடைக்க இருக்க சொத்துல, பாதி பங்க அப்படியே கொடுத்துரு, நான் இந்தக் கேஸ உனக்கு சாதகமா முடிச்சுக் கொடுக்கறேன்னு சொன்னேன். அவனுக்கு வேற வழியில்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னை மாதிரி வேற யாரையும் அவனால தேடிப்பிடிக்க முடியாது. அதனால, சரின்னு தலையாட்டிட்டான். அதனால தான் இந்தக் கேஸ எடுத்திருக்கேன்.” என்றார் மகனிடம்.
“ஓ.. அதுதான் விஷயமா பா. நான் கூட எதுக்கு இவரோட கேஸெல்லாம் எடுக்கறீங்கன்னு நினைச்சேன். இப்போ புரியுது பா.” என்றான் சிரித்துக்கொண்டே.
“தெரிஞ்சுக்கோ டா. நான் அப்படிப் பண்ணலன்னா நாம இன்னைக்கு இந்த மாதிரி வசதியா இருக்க முடியுமா.? நமக்கெல்லாம் எந்தத் தாத்தா சொத்து சேர்த்து வைச்சிருந்தாரு.? எல்லாம் சுத்தம். ஹூம்ம்.. நானா, எல்லாத்தையும் வாங்கி சேர்த்தேன். எனக்கப்பறம் என் குழந்தைங்களுக்கு எந்த ஒரு குறையும் வந்திடக் கூடாதுன்னு தான் இதெல்லாம் பண்றேன். நீங்களும் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.” என்று அறிவுரை வேறு வழங்கினார் வீரபத்திரன். அவர் மகனும் சிரித்துக்கொண்டு நன்றாகவே தலையாட்டினான்.
அநியாயத்தின் மூலமாக ஜெயித்த விஷயங்கள் எத்தனை நாளுக்கு நிலைக்கும்.? அப்போதைக்கு அனைத்துமே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் அனைத்தும் பொய் என்று தெரியவரும் போது, நம் நியாயங்களைக் கேட்க நமக்கென்று இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
சாகும் போது எதையும் கொண்டு செல்லப் போவதில்லை. நாம் செய்த பாவங்களும், புண்ணியங்களும் தான் நம் கூடவே வரும் என்று இவருக்கு யார் சொல்லி புரியவைப்பது.? எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதற்க்கான பதில் சொல்லும் காலமும் வரும்...
(தொடரும்...)
வார்த்தைகளின் எண்ணிக்கை : 1380 உங்களின் விமர்சனங்களை கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...
வெறி கொண்டு எழுந்த சிங்கம் போல் அமுதன், அனைத்து ஆதாரங்களையும் ராமைய்யாவுக்கு எதிராக சேகரித்துக்கொண்டிருந்தான். அடுத்த நாள் நீதிமன்றத்தில் அமுதன் சொல்லியிருந்த அனைவரும் ஆஜராகி இருந்தனர்.
அமுதனின் கண்களில் கோபம் தீ விட்டு எரிந்து கொண்டிருந்தது. அனைவரையும் தனது கேள்வியான அம்புக் கணைகளைத் தொடுத்து மிரட்டக் காத்திருந்தான். வீரபத்திரனே அவனது முகத்தில் நேற்றைக்கும், இன்றைக்குமான வித்தியாசத்தை உணர்ந்தார். அவரே கொஞ்சம் பயந்து தான் போயிருக்கிறார். ஆனால், அதை வெளிக்காட்டவில்லை.
நீதிபதி வந்ததும், அதுவரை இருந்த சலசலப்பு குறைந்து அமைதி உருவானது. அவர் அமர்ந்த உடனே, இன்றும் அமுதனையே பார்த்தார்.
“மிஸ்டர். அமுதன், நீங்க சொன்னவங்க எல்லாரும் வந்துட்டாங்களா.?” என்றார்.
“ஆமா யுவரானர். எல்லாரும் வந்திருக்காங்க.” என்றான் அமுதன் சற்று உயரிய குரலில்.
“ஓகே, நீங்க உங்க தரப்பு வாதத்தை ஆரம்பிக்கலாம்.” என்று நீதிபதி சொன்னதும், “தேங்க் யூ மை லார்ட். நான் மிஸ்டர்.மாரிமுத்துவ முதல்ல விசாரிக்கணும்னு நினைக்கிறேன்.” என்றான்.
“யெஸ்..” என்று அவர் சொல்ல, மாரிமுத்து வந்து கூண்டில் நின்றார்.
அவர் நிற்கும் தொணியையே ஒரு பார்வை பார்த்தவாறு வந்த அமுதன் அவரைப் பார்த்து, “சொல்லுங்க மாரிமுத்து, நீங்க என்ன பண்றீங்க.? உங்க பிஸினெஸ்ஸெல்லாம் எப்படிப் போகுது.?” என்று கேட்க, அனைவரின் மனதிலும், இவன் எதற்க்குத் தேவையில்லாத கேள்விகளைக் கேட்கிறான் என்பது போல் ஒரு எண்ணம்.
“ஓ.. பரவால்ல. நீங்களும் நல்ல பிஸினெஸ் பண்றீங்க. அதே மாதிரி உங்க பசங்கள்ல ஒருத்தரை எஸ்.ஐ ஆக்கீட்டீங்க, இன்னொரு பையன் கந்து வட்டி பிஸினெஸ் பண்ண ஏற்பாடு பண்ணிட்டீங்க. ஒரு நல்ல அப்பாவா எல்லாத்தையும் அவங்களுக்காகப் பண்ணிருக்கீங்க. ஆனா, ஒரு விஷயம் தான் எனக்குப் புரியல. இதுக்கெல்லாம் ஏது மூலதனம்.?” என்றான்.
அவன் அப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்காதவர், “அதென்ன தம்பி அப்படிக் கேட்டுட்டீங்க.? என்னோட உழைப்பு தான் மூலதனம். அதனால தான் இந்த அளவுக்கு வந்திருக்கோம். என்னோட கஷ்டம் என் பசங்களுக்கும் வந்திடக் கூடாதுன்னு தான் அவங்கள்ல ஒருத்தனுக்கு போலீஸ் வேலையும், வட்டிக்கு கடன் கொடுக்கற பிஸினஸையும் பண்ணிக்கொடுத்தேன்.” என்றார் பெருமிதமாக.
“ஓ.. நீங்க அப்படி சொல்றீங்க. ஆனா, நான் விசாரிச்சதுல, நீங்க ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்ததாகவும், அதுக்கப்பறம் திடீர்னு இந்த மூணு வருஷத்துல தான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கறதாகவும் கேள்விப்பட்டேனே.? அது உண்மையா, பொய்யா.?” என்றான் அமுதன்.
அவரோ எதுவும் பேசாமல் திருதிருவென்று விழித்தார். உடனே வீரபத்திரன் எழுந்தார். “யுவரானர், இந்தக் கேஸூக்கு எந்த சம்பந்தமும் இல்லாத இவரைக் கூட்டிட்டு வந்து எதுக்கு அமுதன் டைம் வேஸ்ட் பண்றார்ன்னு எனக்குப் புரியல. ஏதாவது பிரயோஜனமான சாட்சியா இருந்தாக் கூட பரவால்ல. எதுவும் சம்பந்தமில்லாத இவரை எதுக்கு விசாரிக்கக் கூப்பிடணும். எல்லாரையும் குழப்பணும். பாவம், முதன்முதலா வாதாடறதால எங்க, எப்படி சாட்சிகளையும், ஆதாரத்தையும் கையாளணும்னு அவருக்குத் தெரியலன்னு நினைக்கிறேன்.” என்றார்.
“அமுதன், வீரபத்திரன் சொல்ற மாதிரி இந்தக் கேஸூக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்.?” என்றார் நீதிபதி.
“இருக்கு யுவரானர். நான் இன்னும் முழுசா யாரையும் விசாரிக்கல. இறுதியில உங்களுக்கே புரியும் நான் எதுக்காக இவங்கள விசாரிக்கணும்னு நினைச்சேன்னு. அடுத்து நான் எஸ்.ஐ யா இருக்கற மிஸ்டர். ராஜாவ விசாரிக்கணும்னு நினைக்கிறேன்.”
“யெஸ் ப்ரொசீட்..” என்று நீதிபதி அனுமதியளிக்க, அந்த எஸ்.ஐ வந்து கூண்டில் நின்றார்.
“வணக்கம் மிஸ்டர். ராஜா. நீங்க ஒரு எஸ்.ஐ. நிறைய கேஸ் விஷயமா பல இடங்களுக்குப் போக வேண்டி வரும், இல்லையா.?” என்று அமுதன் கேட்டதற்க்கு, “ஆமா..” என்று தலையாட்டினார்.
“கரெக்ட்.. அப்போ, மே மாசம் 16 அன்னைக்கு, அதாவது வளையாபதியோட அப்பா, அம்மா தற்கொலை பண்ணிக்கிட்ட நைட், நீங்க உங்க ஸ்டேஷன்ல முக்கியமான ஒரு கேஸ் வந்தப்போ கூட அங்க இல்லாம நீங்க எங்க போனீங்க.? ஏன்னா, அடுத்த நாள் அவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டதும் முதல் ஆளா அங்க நீங்க, உங்க தம்பி, அப்பா எல்லாருமே அங்கே இருந்ததா எனக்குத் தெரிய வந்துச்சு. அதனால தான் கேட்டேன்.” என்றான் அமுதன்.
அவன் இப்படிக் கேட்பான் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை. “நான் ஒரு முக்கியமான விஷயமா பொள்ளாச்சிக்கு வந்திருந்தேன். வேலை முடிக்கவே எனக்கு ரொம்ப டைம் ஆயிடுச்சு. அதனால, அங்கேயே தங்கிட்டு அடுத்த நாள் போகலாம்னு இருந்தேன். அதுக்கப்பறம் தான் வளையாபதியோட அப்பா, அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டு அங்கே போனேன்.” என்றார் அவர்.
“ஓ.. சரி. நீங்க போகலாம்.” என்று அவன் மனதிற்குள் எதையோ நினைத்தவாறே சொன்னான். அடுத்து அவன் விசாரிக்கக் கேட்டது, கந்துவட்டி கந்தன். மாரிமுத்துவின் இளைய மகன். அவர் கூண்டில் வந்து நின்றதும்,
“ஆமா, சார். பின்ன, எல்லாரும் சிரிச்சுக்கிட்டே பணத்தை மட்டும் வாங்கிக்கிடுறாங்க. மாசமானா வட்டியைக் கொடுக்கறதுக்கு கசக்குது. கொஞ்சம் கறாரா இருந்தாதான் வசூல் பண்ண முடியுது.” என்றார் சலித்துக்கொண்டே.
“ஹூம்ம்.. ஆமா நீங்க கறாரா இருந்தாதான் உங்க பணத்த வசூல் பண்ண முடியும். ஆனா, நீங்க திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டாதான் கொலையே பண்ணிடுவீங்க. இல்ல.?” என்று கேட்டதும், அவர் அதிர்ச்சியானார்.
“சார், என்ன இப்படியெல்லாம் பேசறீங்க. நான் யார்கிட்டயும் பணம் வாங்கலையே.?” என்றார்.
“ஹூம்ம்.. நீங்க வாங்கல. உங்க ரெண்டு பேருக்காகவும் உங்க அப்பா வாங்கிருக்காரு. அதுவும் வளையாபதியோட அப்பாகிட்ட. அவர் அந்தப் பணத்த திருப்பிக் கேட்டிருக்கார். அதைத் தர முடியாதுன்னு சொல்லி அவர் திமிரா பேசிருக்கார். அவரும் இதுக்காக கோர்ட், கேஸூன்னு போவேன்னு மிரட்டிருக்கார். அதனால தான் கோபத்துல நீங்களும், உங்க அப்பா, அண்ணா அப்பறம் ராமைய்யா எல்லாரும் சேர்ந்து வளையாபதியோட அப்பா, அம்மாவக் கொன்னுட்டீங்க. கொலைய தற்கொலையா மாத்தியிருக்கீங்க.” என்று ஆவேசமாய் அமுதன் கத்த,
“இல்ல, இல்லங்க. இவர் சொல்றது பொய். எங்களுக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. மங்கலம் எங்களோட அக்கா. ராமைய்யா எங்களோட மாமா. அவ்ளோதான். மத்தபடி எங்களுக்கும் வளையாபதியோட அப்பா, அம்மாவுக்கு எந்த சம்பந்தமும் இல்ல.” என்று கந்தன் சற்று பதட்டமாய்ப் பேசினான்.
வீரபத்திரனே அமுதனின் பேச்சில் சற்று ஆடித்தான் போனார். இருந்தாலும், தான் ஏதாவது இந்த இடத்தில் பேசித்தான் ஆக வேண்டும் என்று எழுந்தார்.
“யுவரானர் இந்தக் கேஸ்ல நான் முதல்ல இருந்தே சொல்லிட்டிருக்கேன். அமுதன் தேவையில்லாம கேஸ்ல சில சாட்சிகள விசாரிக்கணும்னு நினைச்சார். இப்போ, என்னடான்னா திடீர்னு அவங்களும், என்னோட கிளையண்ட் மிஸ்டர். ராமைய்யாவும் சேர்ந்து தான் இந்தக் கொலைய பண்ணிருக்காங்கன்னு சொல்றார். இன்னும், யாரையெல்லாம் இந்தக் கேஸ்ல இன்வால்வ் பண்ணி அவங்க மேலயும் கொலைப் பழியப் போடுவாருன்னு தெரியல. இது ஏதோ இவர் நினைக்கற மாதிரி திருடன், போலீஸ் விளையாட்டுன்னு நினைச்சிட்டார். இது யாருமே சம்பந்தப்படாத தற்கொலை கேஸ். இதைத் தேவையில்லாம எடுத்து, என்னோட டைம், உங்க டைம் இதெல்லாத்தையும் வேஸ்ட் பண்ணிட்டிருக்கார் மிஸ்டர். அமுதன். அப்படி இவர் சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு யுவரானர்.?” என்று கேட்க,
“அமுதன், எதை வைச்சு நீங்க இதெல்லாத்தையும் சொல்றீங்க. இதுக்கு எல்லாம் என்ன ஆதாரம்.?” என்றார் நீதிபதி.
“இருக்கு யுவரானர். அதுக்கு முன்னாடி நான் பேச்சியம்மாளை விசாரிக்கணும்னு நினைக்கிறேன்.” என்று அவன் அப்பொழுதும் எதுவும் சொல்லாமல் நீதிபதியைக் கேட்கவே, இவன் எதன் அடிப்படையில் அனைத்தையும் சொல்கிறான் என்ற குழப்பத்தினிடையே அவர் “யெஸ்..” என்றார்.
பேச்சியம்மாள் சற்று பயந்தபடியே வந்து கூண்டில் நின்றார். கூண்டில் ஏறியதும் பயத்துடன் தன் கணவரைப் பார்த்தார். அவரோ தன் உருட்டைக் கண்களால் ஏதோ சைகையில் சொல்ல அவர் திரும்பினார். அந்த நேரம் அமுதன் அவரைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவர் தயங்கியபடியே அவனைப் பார்த்தார்.
“சொல்லுங்க பேச்சியம்மாள். நீங்க என்ன சொல்றீங்க.? இந்தக் கேஸூக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னா.?” என்று அமுதன் கேட்க,
“ஆமாங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க இங்க வரணும்னு என் பையன் சொன்னான். அதுக்குத் தான் வந்தேன்.” என்றார் அப்பாவியாய்.
“ஆனா, நான் அதைக் கேட்கறதுக்காக உங்கள இங்க கூப்பிடல. எனக்கு இன்னொரு விஷயம் கேட்கணும் உங்ககிட்ட.” என்றான்.
“பொய். நீங்க சொல்றது எல்லாமே பொய். உங்களுக்கும் அவங்களுக்கும் ஏணி வைச்சாக் கூட எட்டாது. உங்களைப் பெத்தவங்க வேலையாட்களா வளையாபதியோட ஜமீன்ல நுழைஞ்சு அவரோட தாத்தாவ உங்க அக்கா மூலமா மயக்கி, அவரைத் திருமணம் செய்ய வைச்சிருக்காங்க. ஆனா, அவருக்கு ஏற்கனவே இன்னொரு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவங்களோட திருமணம் ஆகி இருந்தது. அவங்களுக்குப் பிறந்தவர் தான் வளையாபதியோட அப்பா, ரத்தினவேல். அவருக்கு அதற்க்குப் பிறகு ஒரு தங்கை பிறந்தார். ஆனால், அவருடைய அம்மாவிற்கு அல்ல. அவரை மயக்கிய இரண்டாம் மனைவியான இவரின் அக்கா மணியம்மாளுக்கு. அவர் தான் மங்கலம். ஆனால், இந்த ரகசியம் அந்த ஜமீன் பரம்பரைக்கு மட்டுமே தெரியும். ஏன்னா, ஒரு ஜமீந்தார் இது போல் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார் என்றாலோ, இல்லை குழந்தை பிறந்தது என்றாலோ அது அவர்களுக்கு கவுரக் குறைச்சலாக மாறி விடும். தங்கள் பரம்பரையை யாரும் மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில், அப்படி ஒரு விஷயமே நடக்காத படி மறைத்து விட்டார்கள். ரத்தினவேலின் அம்மாவோ, மங்கலத்தை தன் குழந்தை தான் என்று சொன்னது மட்டுமல்லாமல் அவரைப் பெற்ற பிள்ளை போலவே வளர்த்தார். ஆனால், நாளடைவில் அவருடைய அம்மா வீட்டிற்க்கு அது சரியாகப் படவில்லை. என்ன இருந்தாலும், அவள் உன் அம்மா இல்லை என்றே சொல்லி வளர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் தன் அம்மாவும் இறந்துவிட, தனது சித்தியின் ஞாபகம் அவரை விடவில்லை. அவரது வீட்டிற்க்குச் செல்லும் போதெல்லாம் பேச்சியம்மாள் அவரது ஏழ்மை நிலையைச் சொல்லி சொல்லி ரத்தினவேலிடம் இருந்து பணத்தை வாங்கி வரும்படி மங்கலத்திடம் சொல்லியிருக்கிறார். மங்கலமும், அதையே செய்திருக்கிறார். ஊதாரியான மாரிமுத்து அந்தப் பணத்தை குடித்தே அழித்துள்ளார். பிள்ளைகள் பெரிதாக ஆனதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அலைமோத, ரத்தினவேலிடம் திருப்பித் தருவதாகச் சொல்லி அவரிடம் கிட்டத்தட்ட பதினைந்து லட்சத்தை வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் உடனடியாக வட்டியைத் திருப்பிக் கொடுத்தவர் அதன் பிறகு மெல்ல மெல்ல அதைத் தராமல் விட்டிருக்கிறார். மாதங்கள் வருடங்கள் ஆக, அதை மங்கலத்திடம் கேட்டுள்ளார் ரத்தினவேல். ஆனால், இவர்களுக்குத் திருப்பித் தரும் எண்ணம் இருந்தால் தானே தருவார்கள். அதை முடியாது என்றே சொல்லிவிட்டனர். அதுவே அவருக்குப் பெரிய சங்கடம். அடுத்து தன் தங்கை விரும்பியவரான ராமைய்யாவையே திருமணம் செய்து வைத்தார் ரத்தினவேல். ஆனால், ராமைய்யாவோ பேராசைக்காரர். எப்படியாவது இந்த மொத்த சொத்தையும் அபகரிக்கும் திட்டம். மங்கலத்தின் மூலமாக ஜமீன் இத்தனை வருடங்கள் காத்து வந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டார் ராமைய்யா. இதுதான் வாய்ப்பு என்று, ரத்தினவேலிடம் அவரது ஜமீன் ரகசியத்தைக் கூறிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். பலமுறை பயந்த ரத்தினவேல், இந்த முறை பயப்படவில்லை. சொத்தைத் தரவில்லை என்ற கோபத்தில் இவர்களை முதலில் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று எத்தனையோ நாட்கள் நினைத்திருக்கிறார். முடியவில்லை. அதற்க்குள் தன் உயிருக்கு என்றைக்கிருந்தாலும் ஆபத்து உண்டு என்பதையறிந்த ரத்தினவேல் தனது பால்ய நண்பரான வழக்கறிஞர் திரு. செங்குட்டுவனை நாடி அனைத்து சொத்தையும் தனது பிள்ளைகளான, வளையாபதிக்கும், தேன்மொழிக்கும் மாற்றி உயிலை எழுதியுள்ளார். அது நடந்த சில தினங்களிலேயே ராமைய்யாவுக்கு இந்த உண்மை தெரிந்துள்ளது. இவர்களால் இனி எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்தவர், மாரிமுத்து மற்றும் அவர்களது மகன்களின் உதவியுடன் ரத்தினவேல் மற்றும் அவரது மனைவியை தற்கொலை வடிவில் கொலை செய்துள்ளார். இது மங்கலத்திற்க்கும், பேச்சியம்மாளிற்க்கும் நன்றாகவே தெரியும்.” என்று தன் நீண்ட உரையைக் கூறி முடித்தான் அமுதன்.
வீரபத்திரனுக்கு ஆச்சர்யம். இவன் எப்படி இத்தனை ஆதாரங்களைத் தேடினான்.? விட்டால் இன்றே இவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவான் என்று நினைத்தவர்,
“அப்ஜெக்ஷன் யுவரானர். அமுதன் ஏதோ படத்திற்க்காக கதை எழுதுகிறார் என்று நினைக்கிறேன். ஏதோ அவரே நேரில் அனைத்தையும் கண்டதைப் போல் எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் எப்படி இத்தனை ஆணித்தரமாக அனைத்தையும் கூறுகிறார் என்றுதான் தெரியவில்லை. ராமைய்யாவுக்கும், இவர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த சாட்சிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வேண்டுமென்றே இந்த வழக்கை திசை திருப்ப அமுதன் போட்டிருக்கும் திட்டம் தான் இது யுவரானர். இது வெறும் தற்கொலை தான். இது எந்த விதத்திலும் கொலையாக இருக்க முடியாது. ஏனென்றால் பிரேதப் பரிசோதனையிலும், இது முழுக்க முழுக்க தற்கொலை தான் என்று ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. கைரேகைகளும், அவர்கள் இருவருடையது மட்டுமே என்று உள்ளது. இதற்க்கு மேல் இந்த வழக்கில் என்ன ஆதாரம் வேண்டும் யுவரானர். என்று வீரபத்திரன் தன் தரப்பு வாதத்தை முன் வைக்க,
“மிஸ்டர். அமுதன், இந்த வழக்கில் நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால் அதை நேரில் பார்த்த சாட்சி, அல்லது வேறு ஏதேனும் ஆதாரம் போன்றவற்றை நீங்கள் எங்களுக்குக் காட்ட வேண்டும். ஏனென்றால் வீரபத்திரன் சொல்வதைப் போல், இது தற்கொலை தான் என்பதற்க்கான அனைத்து ஆதாரங்களும் ராமைய்யாவின் தரப்பில் உள்ளது.” என்றார் நீதிபதி.
“எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் நான் இதைச் சொல்ல மாட்டேன் யுவரானர்.” என்றான் அமுதன்.
“சரி, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு அதைப் பற்றி பேசுவோம்.” என்று நீதிபதி எழுந்தார்.
வீரபத்திரன் அமுதனையே முறைத்தார். அவனோ செய்கையாலேயே தன் கையை கழுத்துக்கு அருகே உயர்த்தி, “நீங்கள் அனைவரும் அவ்வளவுதான்.” என்பதைப் போல செய்கை காட்டினான்.
அதுவே அவருக்கு ஒரு மாதிரியானது. எந்த ஒரு ஆதாரத்தை மிக உறுதியாய் வைத்துக்கொண்டு இவன் இத்தனை ஆட்டம் ஆடுகிறான் என்று எண்ணினான். அதே போல், இத்தனை குறுகிய காலத்தில் இவன் எப்படி இத்தனை விவரங்களை சேகரிக்க முடியும்.? என்றும் நினைத்தார் வீரபத்திரன்.
தனது தோல்வி, ராமைய்யா என்கிற ஒரு முட்டாளால் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதோ என்று நினைத்தவர், அதை ஏற்றுக்கொள்ள முடியாதவராய் வேகமாய்ச் சென்றார்.
அமுதனின் அதிரடி ஆதாரங்களால் திக்கற்றுப் போயிருந்தார் வீரபத்திரன். சில நிமிடங்கள் ராமைய்யாவுக்கு நல்ல அர்ச்சனைகள் அவரிடமிருந்து விழுந்துகொண்டிருந்தன.
“ஏய்யா. அவனால எந்த சாட்சிகளையும் கொண்டு எதுவும் பண்ண முடியாதுன்னு ஆணவமா பேசினியே.? இப்போ என்னாச்சு.? அவன் கிட்டத்தட்ட நம்மள நெருங்கிட்டான். எந்த உண்மையையும் யார்கிட்ட இருந்தும் கறக்க முடியாதுன்னு நானும் நினைச்சா, இப்போ அந்தப் பொடிப் பையன் என்னை மாதிரி எல்லார்கிட்ட இருந்தும் எப்படி அவங்க வாயாலயே உண்மையை வரவைக்கறதுன்னு எல்லா வித்தையையும் கத்துட்டு வந்து எப்படி கேள்வி கேட்கிறான் பாரு.? நானே ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன். ஆனா, இதை இப்படியே விட்டா இன்னும் அவன் என்னெல்லாம் சொல்வானோ.? இப்போ வரைக்கும் எந்த சாட்சி, ஆதாரத்த அடிப்படையா வைச்சு அவன் பேசிட்டு இருக்கான்னு தெரியல. அவன் கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணப்போற சாட்சிகள் எல்லாரையுமே விசாரிச்சாச்சு. ஆனா, அவங்கள வைச்சு இவன் என்ன கணக்குப் போட்டிருக்கான்னு தான் இன்னும் எனக்கு புரியவே இல்ல. எல்லாம் உன்னால தான். ஏண்டா இந்தக் கேஸ் எடுத்தோம்னு இருக்கு. உன்னால தான்யா இன்னைக்கு என்னோட மானமே போகுது. இதுல அந்த ஜட்ஜூம் வேற அவனுக்கே எப்பவும் ஆர்கியூ பண்ற சான்ஸ் தராரு. என் நேரமே சரியில்ல.” என்று எல்லாவற்றையும் இழுத்து வைத்து புலம்பிக்கொண்டிருந்தார் வீரபத்திரன்.
தொண்டையில் சாப்பாடு கூட இறங்கவில்லை அவருக்கு. தனது தோல்வி முடிவாகிவிட்டதோ என்று தோன்றிய பயத்தை அடக்கிக்கொண்டு சாப்பிட்டு முடித்தார்.
மதிய உணவு வேளை முடிந்து அனைவரும் திரும்பவும் ஆஜராகி இருந்தனர். இப்போதும் அமுதனைப் பார்த்தபடி நீதிபதி கேட்டார்.
“சொல்லுங்க அமுதன், நீங்க எதன் அடிப்படைல இத்தனை விஷயங்களை உண்மைன்னு சொல்றீங்க.? அதுக்கான தக்க ஆதாரங்களை நீங்க இன்னும் வெளிப்படையா சொல்லல.” என்றார்.
“கண்டிப்பா இப்போ சொல்றேன் யுவரானர். அதுக்கு முன்னாடி நான் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராமைய்யாவை திரும்பவும் விசாரிக்க வேண்டும்.” என்றான்.
“யெஸ்.” என்றார் நீதிபதி.
ராமைய்யா வந்து நிற்க, அமுதன் அவரைப் பார்வையால் எரித்து விடுவதைப் போல் பார்த்தபடி ஆரம்பித்தான்.
“ராமைய்யா, உங்களுக்குப் பிறந்தது ஒரே பையனா.? இல்ல வேறு குழந்தைகள் இருக்காங்களா.?” என்றான் சந்தேகப் பார்வையோடு.
“என்ன இப்படி சந்தேகமா கேட்டுட்டீங்க, எனக்கு ஒத்த புள்ள தான். அவனையும் இப்போ பறிகொடுத்துட்டு வந்து நிற்கறேன்.” என்று தழுதழுத்தபடி பேசினார்.
அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு நீதிபதியிடம் திரும்பியவன், “ராமைய்யா சொல்றது அப்பட்டமான பொய் யுவரானர். ஏன்னா, அவருடைய குழந்தை பிறந்த உடனேயே இறந்து போயிடுச்சு. இந்த உண்மை ராமைய்யாவுக்கும், வளையாபதியின் அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். மங்கலத்துக்குக் கூட இந்த விஷயம் தெரியாது.” என்று அமுதன் சொல்லிக்கொண்டிருந்த போதே மங்கலம் அதிர்ச்சியாய் கூண்டில் நின்று கொண்டிருந்த ராமைய்யாவைப் பார்த்தார். அவரின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்தார் ராமைய்யா.
“இந்த விஷயம் தெரிந்தால் தன் தங்கைக்கு என்னாகுமோன்னு நினைச்ச வளையாபதியோட அப்பா, அதே மருத்துவமனையில் அன்னைக்கே பிறந்த வேறொருவரின் குழந்தையை, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி தன் தங்கைகிட்ட இதுதான் உன்னோட குழந்தைன்னு சொல்லிட்டார். அந்தக் குழந்தை தான் இறந்து போன இவங்களோட பையன்னு சொல்லப்படற ராமு என்கிற ராமலிங்கம். அவரைப் பெத்தவங்க யாருன்னு வளையாபதியோட அப்பாவுக்கு மட்டும் தான் தெரியுமே தவிர, அவங்களை ராமைய்யா கூட பார்த்தது கிடையாது. அது தெரியாம இருக்கறதே நல்லதுன்னு நினைச்சார். என்னதான் பணம் வாங்கினாலும், ஒரு நாள் இல்ல ஒரு நாள் பெத்த மனசு பிள்ளையைப் பார்த்தா ஏங்கும் தானே, அப்படித்தான் ராமுவோட நிஜ பெற்றோர்கள் அப்பப்போ மறைவா இருந்து ராமுவ அங்கங்க பார்த்துக்குவாங்க. அவர் இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டதும் தாங்க முடியாம அழுதாங்க. ஆனா, அது தற்கொலை இல்ல கொலைன்னு நாங்க போட்ட கேஸத் தெரிஞ்சுக்கிட்டு என்னை வந்து பார்த்தாங்க. அதோ அங்க உட்கார்ந்திருக்காங்களே அவங்க தான் அவரோட உண்மையான பெற்றோர். அதுக்கான தக்க ஆதாரங்கள் இதோ.” என்று அமுதன் நீதிபதியிடம் ஒரு பேப்பரை நீட்டினான்.
அது ஒரு மெடிக்கல் ரிப்போர்ட். அவர்களிடம் பேசியபடி அழுதுகொண்டிருந்தார் மங்கலம். அதே சமயம் ராமைய்யாவின் மீது கோபமும் இருக்க, அவரை முறைத்தபடி பார்த்தார்.
“சரி யுவரானர். இவர் சொல்ற மாதிரி ராமு அவங்க பையன் இல்லைன்னாலும், இப்போ எதுக்கு இதைப் பத்தி அவர் சொல்லணும்.? அவரும் இப்போ உயிரோட இல்ல. சொல்லப்போனா, இந்தக் கேஸ்ல வளையாபதியோட அப்பா, அம்மா கொலை செய்யப்பட்டிருக்காங்கன்னு சொன்னவர், இப்போ என்னடான்னா தேவையில்லாத ஏதேதோ விஷயங்களைக் கொண்டு வந்து நுழைச்சுட்டு இருக்கார். முன்பே இது போல நிறைய விஷயங்களை சொன்ன அமுதன் இப்போ வரைக்கும் வெறும் வாய்ச்சவடாவில் தான் இருக்காரே தவிர எந்த ஒரு சாட்சியையும் காட்டவில்லை. தேவையில்லாத நேரத்தை வீணடிக்கும் நோக்கோடு இந்தக் கேஸ் போய்க்கொண்டிருப்பதாக நினைக்கிறேன் யுவரானர்.” என்று பெருமையாய்த் தன் வாதத்தை முன் வைத்தார் வீரபத்திரன்.
“அமுதன். நீங்க இன்னமும் எந்த சாட்சியையும் இங்க காட்டல. ஆனா, விஷயங்களை விளக்கறதால மட்டும் அனைத்தையும் உண்மைன்னு எடுத்துக்க முடியாது.” என்றார் நீதிபதி.
“ஆமாம் யுவரானர். ஆனால், எல்லாத்துக்கும் முன்னால் இன்னொரு விஷயத்தையும் நான் சொல்லணும்னு நினைக்கிறேன். ராமுவும் தற்கொலை பண்ணிக்கிட்டதா தான் எல்லாரும் சொல்றாங்க. ஆனா, எனக்கு என்ன சந்தேகம்னா, வளையாபதியோட அப்பா, அம்மா தற்கொலை பண்ணது மாதிரியே அதே ரூம்ல, அதே மாதிரி தற்கொலை பண்ணிக்கிட்டது தான் என்னை சந்தேகத்தோட உச்சிக்கே போக வைச்சது. அதைப் பத்தி ஆராய்ச்சி பண்ணப்போ தான் இன்னொரு முக்கியமான விஷயம் தெரிய வந்தது. தேன்மொழியை நல்ல ஒரு தோழி போல பார்த்த ராமு அவரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல. ஆனா, ஏதேதோ காரணம் சொல்லி எப்படியோ இருவருக்கும் கல்யாணம் முடிச்சாங்க. ஆனா, அதுக்கு முன்னாடியே ராமுவுக்கு இவங்களோட கொலை விஷயம் எப்படியோ தெரிஞ்சிருக்கு. அதனால எங்க அவர் இந்த விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லிடுவாரோன்னு பயத்துல அவரையும் தற்கொலைங்கற பேர்ல கொலை பண்ணிருக்காங்க. இந்த இடத்துல என்ன ஒரு விஷயத்தைப் பார்க்கணும்னா, என்ன இருந்தாலும் ராமு தன்னோட பையன் இல்லைங்கற எண்ணம் ராமைய்யாவோட அடி மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு. இந்த சொத்த எப்படியாவது அவங்களுக்கு சாதகமா வர அவர தேன்மொழிக்கு கல்யாணம் பண்ணி வைச்சு எல்லாத்தையும் அபகரிக்கணும்னு திட்டம் தீட்டினாங்க. ஆனா, அதுக்கப்பறம் என்ன நடந்ததோ கல்யாணம் ஆன நைட்டே அவரும் கொலை செய்யப்பட்டிருக்கார்ன்னு எனக்கு ஒரு சந்தேகம் அடிமனசுல இருந்திட்டிருக்கு.” என்று அமுதன் சொல்ல,
“இல்லைங்க. இது பொய். இவர் சொல்றதெல்லாம் உண்மையில்லைங்க.” என்று ராமைய்யா உடல் முழுதும் வேர்த்து பதட்டப்பட்டவாறு சொல்ல,
“உண்மை என்னன்னு நான் சொல்றேங்கய்யா” என்றவாறே எழுந்து நின்றார் மங்கலம்.
அவர் அப்படிச் சொன்னதும், ராமைய்யாவின் பதட்டம் இன்னும் அதிகமானது. வேண்டாம் என்றவாறு சைகையில் அவரை மிரட்டினார். ஆனால், அதற்க்கெல்லாம் அசராமல் நின்றார் மங்கலம்.
அதே போல், மறுபக்கம் வீரபத்திரனும் அதிர்ச்சியுடனும், பதபதைப்புடனும் உட்கார்ந்திருந்தார். இது என்ன ஒரு புது குழப்பம் என்றவாறே அந்த நீதிமன்றத்தில் ஒரு சிறிய சலசலப்பு ஏற்பட்டது.
“நீங்க எதை சொல்றதா இருந்தாலும், இந்தக் கூண்டுல வந்து சொல்லுங்க மா.” என்றார் நீதிபதி.
அவர் சொன்னதும் வந்து நின்றார் மங்கலம்.
“முதல்ல என்னை மன்னிச்சிடுங்க அய்யா. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். யாரை நம்பணுமோ அவங்களை நம்பாம இத்தனை நாளா இந்த ஆள் பண்ண அயோக்கியத்தனத்துக்கு கூட உடந்தையா இருந்துட்டேன். குழந்தை இறந்தது தெரிஞ்சா நான் தாங்க மாட்டேன்னு தெரிஞ்சு தான் என்னோட அண்ணன் எனக்கு எவ்ளோ பெரிய விஷயத்தைப் பண்ணிருக்காரு. யாருக்கோ மாசா மாசம் பணம் அனுப்பறாரு. உன்னோட சொத்த எல்லாத்தையும் அவர் வேற யாருக்கோ தாரை வார்த்துக் கொடுக்கறாருன்னு இந்த ஆள் தான் என்கிட்ட தப்பு தப்பா சொல்லி என் மனச அப்படியே மாத்திட்டாரு. ஆனா, இப்போ கொஞ்சம் முன்னாடி தான், என் பையனை உண்மையாலுமே பெத்தவங்க என் முன்னாடி வந்து என்னைக்குமே நின்னுடக் கூடாதுன்னு தான் என்னோட அண்ணா இவங்களுக்குப் பணம் அனுப்பிருக்காருன்னு அவங்க சொல்லித் தெரிஞ்சுக்கிட்டேன். அதே மாதிரி, என்னோட அண்ணனையும், அண்ணியையும் சொத்துக்காக கொலை பண்ணத் திட்டம் போட்டதும் இந்த ஆள் தான். ரொம்ப வருஷமா என்னோட மனசுல விஷத்த விதைச்சதுல என்னோட மூளையும் மழுங்கிப் போச்சு. என்ன இருந்தாலும் என்னோட கூடப் பிறந்த அண்ணா இல்லையேன்னு அதுக்கும் தலையாட்டினேன். சொத்து எல்லாத்தையும் அவரோட பசங்க பேருக்கே மாத்திட்டாரு, இனிமேல் நமக்கு எந்த வழியும் இல்ல, நாம நடுரோட்டுல தான் நிக்கணும்னு சொல்லி தான் இந்தக் கொலைய தற்கொலை மாதிரி மாத்திட்டாங்க. அதுக்கு உடந்தையா என்னோட சித்தப்பா மாரிமுத்து, அவங்க பசங்க ராஜா, கந்தன் எல்லாத்தையும் கூட்டு சேர்த்துக்கிட்டாரு. ஏன்னா, அவங்க என்னோட அண்ணன்கிட்ட தரவேண்டிய பணத்தை அவர் திருப்பிக் கேட்கக் கூடாதுங்கற எண்ணத்துல அவங்களும் இதுக்கு சம்மதிச்சாங்க. அன்னைக்கு ராத்திரி எப்பவும் போல அண்ணாவும், அண்ணியும் பால்ல தூக்க மாத்திரை போட்டு குடிச்சிட்டுப் படுத்தாங்க. அவங்க ரெண்டு பேருமே தூக்க மாத்திரை போடலன்னா தூக்கம் வராது. ஆனா, எப்பவும் ஒரு மாத்திரை தான் போட்டுக்குவாங்க. அவங்க குடிக்கறதுக்கு முன்னாடியே அதுல நான் இன்னும் நாலு சேர்த்துப் போட்டுட்டேன். அதனால அவங்களால எழுந்திரிக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் போட்டோம். அவங்க நல்லா தூங்கினதுக்கப்பறம் எங்க சித்தப்பாவும், அவரோட பசங்களும் இவரும் கையுறை எல்லாம் போட்டுக்கிட்டு, ஒரு பெரிய தூக்கு கயிற வைச்சு, காத்தாடி மேல போட்டு ஒருத்தர் கயிற அவங்க கழுத்துல மாட்ட, இன்னொருத்தர் அந்தக் கயிற மேல புடிச்சு இழுத்து அந்த இடத்துலயே அவங்க ரெண்டு பேரும் தூக்குல துடிதுடிக்க செத்தாங்க. அவங்க தற்கொலை பண்ணிக்கிட்ட மாதிரி இருக்க, ராஜா தான் அவங்க கைரேகைய கயிறுலயும், அப்பறம் அவங்க ரெண்டு பேரும் ஏறின மாதிரி ஒரு நாற்காலியையும் வைச்சான். அதனால, இது யாருக்குமே கொலைன்னே தெரியாதுன்னும் சொன்னான். ஆனா, இந்த விஷயம் எப்படியோ என் பையனுக்குத் தெரிஞ்சு தான் அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அதுக்கப்பறம் எங்கள உண்மைய வளையாபதிகிட்டயும், தேன்மொழிகிட்டயும் சொன்னாத்தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்னு சொன்னான். இவரும், நீ முதல்ல கல்யாணம் பண்ணு அடுத்த நிமிஷமே சொல்லிடறேன்னு சொல்லி சமாளிச்சுட்டார். ஆனா, அவர் கல்யாணம் முடிஞ்சு சொல்லலன்னு தெரிஞ்சதும் அவனுக்கு கோபம் வந்து நானே எல்லார்கிட்டயும் உண்மைய சொல்லப் போறேன்னு சொல்லிட்டிருந்தான். நான் தான் அப்படியெல்லாம் சொல்லாத டான்னு சமாதானம் பண்ணி வைச்சிருந்தேன். அதுக்கப்பறம் அண்ணா, அண்ணியோட ரூம்ல அவன அதே மாதிரி தூக்குல தொங்குனதப் பார்த்ததும், என்னோட இதயமே சுக்கு நூறா வெடிச்சிடுச்சு. அப்போ கூட, இந்த ஆளு நம்ம பையன் நாம உண்மைய சொல்லலன்னு தான் பழிவாங்க அதே மாதிரி தற்கொலை பண்ணிக்கிட்டான்னு சொல்லி என்னை சமாளிச்சார். ஆனா, இப்போ தான் எனக்கு இந்தத் தம்பி சொன்ன மாதிரி அவனையும் கொலை பண்ணிட்டாங்கன்னு தெரியுது. என்னோட பாவத்துக்கு சரியான தண்டனைய கடவுள் தந்துட்டாருன்னு என் பையன் செத்தப்பவே நினைச்சேன். ஆனா, இந்த ஆள் அப்போ கூட அதை, இதையும் சொல்லி என் மனச மாத்தி சொத்த பறிக்கறதுல தான் நம்ம குறிக்கோள் இருக்கணும்னு சொல்லி சொல்லியே அந்தப் பிள்ளைங்க ரெண்டு பேரையும் கொடுமைப்படுத்த சொன்னாரு. அவருடைய பேச்சக் கேட்டு கேட்டு தான் நான் இப்படி ஆயிட்டேன். ஆனா, இப்போ கூட நான் சொல்லலன்னா என்னோட பையனோட ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காது. என்னோட தப்புக்கு தகுந்த தண்டனைய நான் அனுபவிக்கத் தயாராயிட்டேங்கய்யா. என்னோட உயிரே போனாலும் சரி. இந்தப் பாவிங்களுக்கும் சரியான தண்டனையக் குடுங்க.” என்று அழுதபடி தன் வாக்குமூலத்தை சொல்லி முடித்தார் மங்கலம்.
“தட்ஸ் ஆல் யுவரானர். என்கிட்ட எந்த ஆதாரத்தை அடிப்படையா வைச்சு இதெல்லாம் சொல்றீங்கன்னு கேட்டீங்களே. இந்த ஆதாரங்களை சொன்னா கண்டிப்பா மங்கலம் வாயிலிருந்தே எல்லா உண்மைகளும் வரும்னு என்னோட அஸம்ஷன். அதனால தான், நான் உங்களை காத்திருக்கச் சொன்னேன். இனி, குற்றம் செய்த குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையைத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவரானர்.” என்று அமுதன் பேசி முடித்து அவனுடைய இருக்கையில் அமர்ந்ததும் நீதிபதியே அவனது புத்திசாலித்தனத்தை நினைத்து புன்னகைத்தார்.
வீரபத்திரனோ இந்த வழக்கு அப்படியே தலைகீழாக மாறியதை நினைத்து அதிர்ச்சியானார். அதே போல், அமுதனின் புத்திசாலித்தனத்தால் தன்னுடைய பக்கம் இருப்பவரே உண்மையைத் தானாக சொல்லும்படி செய்தது அவருடைய இத்தனை வருட வழக்குகளில் யாருமே துணிந்து செய்யாத ஒன்று.
தான் செய்த பெரிய முட்டாள்தனம் ராமைய்யாவைப் போன்ற முட்டாளை நம்பி இந்த வழக்கை எடுத்தது. அது இப்போது தனக்கே திரும்பி பெரிய அளவில் சதி செய்துவிட்டதை நினைத்து நொந்து கொண்டார்.
“வீரபத்திரன், மிஸ்டர். வீரபத்திரன்...” நீதிபதி அழைப்பதைக் கூட காதில் கேட்காமல் யோசனையாய் இருந்தவர் சட்டென்று, “யெஸ் யுவரானர்..” என்றார்.
“உங்க சைட்ல இருந்தவங்களே தானா முன்வந்து வாக்குமூலம் கொடுத்துட்டாங்க. இதுல உங்க கேள்விகள் எதுவும் இருக்கா.?” என்று கேட்க,
“இல்லை யுவரானர்.” என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டு நொந்தவராய் அப்படியே இருக்கையில் அமர்ந்தார் வீரபத்திரன். வேறு என்ன சொல்ல முடியும். வழக்கை ஒரே நிமிடத்தில் முடித்து விட்டான் அமுதன். இதற்க்கு மேல் கேட்பதற்க்கு என்ன கேள்விகள் இருக்க முடியும்.?
“அமுதனின் ஆதாரங்களின் அடிப்படையிலும், திருப்புமுனையாய் மங்கலத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் இந்த வழக்கில் இருந்து வளையாபதியின் பெற்றோர் மற்றும் ராமு தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது ஊர்ஜிதமாகிறது. இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்த முக்கியக் குற்றவாளி ராமைய்யாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், மாரிமுத்து, அவரது மகன்கள் ராஜா, கந்தன் ஆகியோருக்கு இருபது ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மங்கலம், பேச்சியம்மாள் ஆகியோருக்கு ஏழு வருட சிறை தண்டனையும் விதித்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மங்கலம் தானாகவே முன் வந்து இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாலேயே அவருக்குத் தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. உறவுகளின் மதிப்பு தெரியாமல் இது போல் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடும் ராமைய்யாவைப் போன்றோருக்கு இதுவே தக்க பாடமாக இருக்கட்டும்.” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அவர் சொல்லி முடித்த நிமிடம் அந்த நீதிமன்றமே கைத்தட்டலால் அதிர்ந்தது. அமுதனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
“டேய்.. அமுதா... சூப்பர் டா. கங்க்ராட்ஸ் மை பாய்.. உன்னோட ஹார்ட் வொர்க் மட்டுமில்ல, அதோட ஸ்மார்ட் வொர்க்கும் சேர்ந்துதான் ஜெயிச்சிருக்கு. உன்னை நீ நிரூபிச்சிட்ட. இனிமேல் உனக்கான இட்த்தை நீ தக்கவைச்சுக்குவ. ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று அமுதனைக் கட்டிப்பிடித்து பாராட்டிக்கொண்டிருந்தார் செங்குட்டுவன்.
அதே போல், அனைவரின் வாழ்த்து மழை அவனை நனைத்துக் கொண்டிருந்தாலும், அவனின் கவனம் முழுக்க மருத்துவமனையில் இருக்கும் தமிழினி மீதும், வளையாபதி மேலும் தான் இருந்தது. அவர்களைக் காணும் ஆவலில் உடனே கிளம்பியவனின் முன் வந்து நின்றார் வீரபத்திரன்.
அவரால் எதுவும் பேச முடியாவிட்டாலும், “ரொம்ப ஸ்மார்ட்டா எல்லாத்தையும் மடக்கிட்ட. கங்க்ராட்ஸ்.” என்று சொன்னபடி அங்கிருந்து நகர்ந்தார்.
அவரைப் பார்த்துக்கொண்டிருந்தவனிடம், “இதுதான் ஃபர்ஸ்ட் டைம் அவனோட தோல்விய ஒத்துக்கிட்டதும், தான் தப்பு செஞ்சத நினைச்சு ஃபீல் பண்றதும். பேரதிசயம் தான். எல்லாமே உன்னால தான் அமுதா. உன்னை நினைச்சு எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு.” என்று திரும்பவும் செங்குட்டுவன் பாராட்ட,
“சார்.. நாம உடனே ஹாஸ்பிடல் போகணும். நான் போய் தமிழப் பார்க்கணும். இந்தக் கேஸ இன்னைக்கு ஜெயிச்சுட்டுத்தான் அவ முகத்துல முழிப்பேன்னு நான் அவ மேல சத்தியம் செஞ்சிருக்கேன். இப்போ அது நிறைவேறிடுச்சு. கிளம்பலாம் சார்.” என்றபடி செங்குட்டுவனை அழைத்துக்கொண்டு அந்த நீதிமன்றத்தை விட்டு விரைந்தான் அமுதன்.
(தொடரும்...)
வார்த்தைகளின் எண்ணிக்கை : 1558
உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...
வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட தமிழினியைக் காணப்போகும் ஆவல் தான் அமுதனுக்கு அதிகமாய் இருந்தது. ஏனென்றால், அவளும், அழகேசனும் தான் அமுதனின் சகலமும். இவன் வாழ்வில் அவள் வரவில்லையென்றால் அமுதன் இந்நேரம் உயிரோடு இருந்திருக்கவும் முடியாது, அதே போல் இந்த வெற்றியைக் கண்டிருக்கவும் முடியாது.
முந்தைய நாள் இரவு அவனுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. தமிழினியையும், வளையாபதியையும் மருத்துவமனையில் சேர்த்திருந்த போதுதான், எதேச்சையாய் ராமுவின் பெற்றோரைக் காண முடிந்தது.
தேன்மொழியிடம் பேசிக்கொண்டிருந்தவர்கள், திடீரென அமுதனிடம் வந்தனர். அவன் தான் வளையாபதியின் வழக்கை எடுத்திருக்கும் வக்கீல் என்று தெரிந்துதான் அவனிடம் வந்து அனைத்து உண்மைகளையும் சொன்னார்கள்.
கெட்டதிலும், ஒரு நல்லது போல் அந்த நிமிடம் தான் அவனுக்கு அனைத்து விஷயங்களும் மூளைக்குள் போய் அவனை சிந்திக்க வைத்தது. அன்று இரவு முழுவதும் தூங்காமல் யோசனையிலேயே எப்படி இந்த வழக்கை திசை திருப்பி இவர்களை மாட்ட வைக்கலாம் என்றெல்லாம் யோசித்தான்.
அதன் முடிவில் அவனுக்குத் தோன்றிய யோசனைதான் மங்கலம். அதுதான் அவன் யூகத்தின் உச்சம். அவன் யூகித்ததைப் போலவே மங்கலம் தன் வாயாலேயே அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டார். வழக்கை வென்றும் விட்டான்.
இந்த வழக்கை வெல்லாமல் அவள் முகத்தைப் பார்க்கக் கூடாது என்று சபதமெடுத்திருந்தான். அந்த சபதம் நிறைவேறி விட்டது. இதோ இப்போது அவன் உயிர்த்தோழியைக் காணும் ஆவலில் தான் போய்க்கொண்டிருக்கிறான் மருத்துவமனைக்கு.
செங்குட்டுவனும், அமுதனும் மருத்துமனைக்குச் சென்றனர். வெளியே காத்துக்கொண்டிருந்த அழகேசன் ஆவலில் ஓடிவந்தார். அவரைப் பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிக்கொண்டான் அமுதன்.
“அப்பா, தமிழு இப்போ எப்படி இருக்காப்பா.? நான் கேஸ்ல ஜெயிச்சிட்டேன் பா. அவளப் பார்க்கணும்னு தான் ஓடி வந்தேன்.” என்றான் அமுதன் சிறிது கண்களில் கண்ணீர் சிந்தியவாறே.
அவன் சொன்னதும், அவனை நினைத்து சந்தோஷமும், பெருமையும் பட்ட அழகேசன், “ரொம்ப சந்தோஷம் டா தம்பி. தமிழுக்கு எதுவும் ஆகல. அவ இப்போ நல்லாதான் இருக்கா. இன்னைக்கு காலைல கண் முழிச்சதுல இருந்து அவ உன்னைத்தான் கேட்டுட்டே இருக்கா. நீ வா, அவள பார்க்கப் போலாம்.” என்று அவனை அழைத்துக்கொண்டு போனார்.
“வளையாபதிக்கு எப்படி இருக்கு பா.?” என்றான்.
“ம்ம்.. அந்தத் தம்பியும் கண் முழிச்சிடுச்சு. நல்லாதான் இருக்கு. ரெண்டு பேரையுமே பார்த்துடுவியாம் வா.” என்றார் அழகேசன்.
அவன் சென்ற போது, இருவரும் நார்மல் வார்டில் அவரவர் பெட்டில் எழுந்து அமர்ந்தபடி இருந்தனர். அமுனைப் பார்த்ததும் வளையாபதி புன்னகைத்தான்.
“எப்படி இருக்கீங்க வளையாபதி.? இப்போ நல்லா இருக்கீங்களா.?” என்று நலம் விசாரித்தான்.
“இப்போ ஒண்ணும் பிரச்சினை இல்ல அமுதன். பரவால்ல. பாவம், தேனு தான் என்னை நினைச்சு அழுதுட்டே இருக்கா.” என்றான்.
தேன்மொழியை ஒரு கணம் பார்த்தபடி, “பயப்படாதீங்க. நான் இருக்கேன். அண்ணாவுக்கு எதுவும் ஆகாது.” என்று ஆறுதலாய்ப் பேசியவன் இரண்டு பெட் தள்ளிப் படுத்திருந்த தமிழினியைப் பார்த்தான்.
தமிழினியோ, “அமுதா....” என்று மெல்லிய குரலில் சொன்னவாறே, கூப்பிட அவளைப் பார்த்ததும், திரும்பவும் ஆனந்தக் கண்ணீர் வடித்தபடியே வந்தான் அமுதன்.
அவளது அருகில் வந்து அமர்ந்தவன், “எப்படி இருக்க தமிழு.? உன்னை இப்படிப் பார்க்கவே முடியல.” என்று அவள் கையை தன் கண்ணில் ஒற்றியபடி அழுதான்.
“டேய்.. இங்க பாரு அமுதா.. எனக்கு ஒண்ணும் இல்ல டா. நீ இருக்கும் போது எனக்கு எதுவும் ஆகாது. நீ ஆகவும் விடமாட்ட. அன்னைக்கு நீ வருவன்னு நம்பினேன். அதே மாதிரி வந்து என்னைக் காப்பாத்திட்ட. அந்த நம்பிக்கைல தான் இருந்தேன். எனக்கு அதுவே போதும். இப்போ நான் நல்லா தான் இருக்கேன் டா. நீ அழாத. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” என்றாள் தமிழினியும் அழுதவாறே.
“சரிப்பா.. ரெண்டு பேரும் இப்படி அழுதா என்ன பண்றது.? அதுதான் எல்லாம் சரியாயிடுச்சே. இனிமேல் தான் நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்.” என்று செங்குட்டுவன் சொல்ல,
“எப்படி மாமா சந்தோஷமா இருக்கறது, இந்தக் கேஸ்ல நாம ஜெயிச்சாத்தான் உண்மையான சந்தோஷமே.” என்றான் வளையாபதி.
“வளையாபதி, இந்தக் கேஸ்ல நாம ஜெயிச்சாச்சு. அமுதன் இன்னைக்கு என்னமா வாதாடி எல்லாத்தையும் வசமா சிக்க வைச்சுட்டான் தெரியுமா.?” என்று அவர் அமுதனின் தோள்களைப் பெருமையாய்த் தட்டியவாறே சொன்னார்.
“அப்படியா மாமா.? நிஜமாவா.? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க.” என்று கேட்டதும், செங்குட்டுவன் கோர்ட்டில் நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னார்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு அமுதன். எங்க பக்கம் இருக்க நியாயம் எங்க செத்துப்போயிடுமோன்னு நினைச்சேன். ஆனா, அது இப்போ உங்க மூலமா எங்களுக்கு உயிரோட வந்திருக்கு. எத்தனை அநியாயங்கள் எங்களுக்குத் தெரியாம அந்த வீட்டுல நடந்திருக்கு.? எதுவுமே தெரியாம நாங்க பாவப்பட்ட ஜென்மங்களா இருந்திருக்கோம். இப்போதான் உண்மையெல்லாம் தெரிஞ்சிருக்கு. அதுவும் எங்க அத்தை மூலமாவே எல்லா உண்மையையும் சொல்ல வைச்சதுதான் ரொம்பப் பெரிய விஷயம். சொத்துக்காக எங்க மாமா மாதிரி சில ஆளுங்க பண்ற விஷயத்துக்கெல்லாம் முற்றுப்புள்ளியா இது இருக்கணும். உங்களுக்கு என்னோட நன்றியை மட்டும் சொன்னாப் பத்தாது. நான் அதுக்கும் மேல ஏதாவது செய்யணும் அமுதன். உங்களுக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க.” என்று உணர்ச்சிவசத்தில் கேட்டான் வளையாபதி.
“நன்றியெல்லாம் எதுக்கு வளையாபதி, நான் என்னோட கடமையத்தானே செஞ்சேன். உங்க பக்கம் நியாயம் இருந்துச்சு. அதனால தான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணேன். அப்பறம், எனக்கு வேணும்னு நினைக்கறதை அப்பறமா கேட்கறேன். அப்போ நீங்க மறுக்காம எனக்குத் தரணும்.” என்று தேன்மொழியை ஓரப்பார்வையால் பார்த்தவாறே அவனிடம் கேட்டான்.
“கண்டிப்பா அமுதன். உங்களுக்கு எவ்வளவு வேணும்னாலும் செய்யலாம்.” என்று திரும்பவும் சொன்னான்.
“என்ன தமிழு, இப்போ ஓகே வா நான் ஜெயிச்சுட்டேன். கேஸ்ல மட்டும் இல்ல, மக்களோட மனசுலயும் தான். எல்லாமே உன்னால தான். நீ என்னை என்கரேஜ் பண்ணலன்னா நான் இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டேன்.” என்ற அமுதனைப் பார்த்து சிரித்த தமிழினி,
“ரொம்ப சந்தோஷமா இருக்குடா அமுதா. உன்னோட வெற்றியைப் பார்க்கணும்னு தான் நான் இவ்ளோ நாள் காத்துட்டிருந்தேன். இப்போ அது நிறைவேறிடுச்சு. அதுவே எனக்குப் போதும்.” என்றாள்.
“சரி, சரி ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் இப்படியே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பேசிட்டே இருந்தா எப்படி.? நீங்க ரெண்டு பேருமே உங்க ரெண்டு பேருடைய வெற்றிக்குக் காரணம். ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க கிடையாது. அதுதான் உண்மை. போதுமா.?” என்றார் அழகேசன்.
வளையாபதியும், தேன்மொழியும் அவர்களின் நட்பின் ஆழத்தைக் கண்டுவிட்டார்கள். இவர்களுக்குள் இவர்கள் வைத்திருக்கும் பாசமும் வெளிப்பட்டது.
ஒரு மாதம் கடந்தது. இப்போது, வளையாபதி அதற்க்குள் ஒரு பெரிய முடிவை எடுத்திருந்தான். தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் அவன் சில ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்கும் கொடுத்துவிட்டான்.
தனக்கென்று ஒரே ஒரு இடத்தை மட்டும் எடுத்துக்கொண்டான். அது அவனுடைய அப்பாவின் சொந்தக் காசில் வாங்கிய தோட்டமும், அதைச் சேர்ந்ததாய் ஒரு சிறிய அளவான வீடு.
அவ்வப்போது, அவர்கள் அங்கே வந்ததுண்டு. சிறிய வயதில் வளையாபதியையும், தேன்மொழியையும் கூட்டிக்கொண்டு வந்து அவர்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்துக்கொண்டு செல்வர் அவர்களின் பெற்றோர்.
அந்த ஜமீன் வீட்டில் இல்லாத ஒரு சந்தோஷமும், நிம்மதியும் ஏனோ, அந்த வீட்டில் கிடைப்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இப்போது அங்கேயே சென்று விட்டார்கள் இருவரும். தோட்டத்தைப் பராமரித்து அதைப் பார்த்துக்கொள்ள சிலரையும் வைத்தான் வளையாபதி. தேன்மொழி வழக்கம் போல் எந்த ஒரு பயமும், வேதனையும் இல்லாமல் நிம்மதியாய் பள்ளிக்குச் சென்று வந்தாள்.
அன்று விடுமுறை நாள் மாலை, அமுதனும், தமிழினியும் தாங்கள் சிறிய வயதில் செல்லும் தோட்டத்தில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இதுபோல் அமர்ந்து பேசி, வருடங்கள் ஆனது.
குறிப்பிட்ட படிப்பு, மற்றும் வேலைப்பளுவால் அவர்களுக்கு பேசக்கூட நேரம் இல்லாமல் போனது. ஆனால், இப்போதோ ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசவே இருவரும் அங்கே சென்றிருந்தனர்.
“அமுதா, நாம ஒரு நாள் இதே இடத்துல ஒரு விஷயத்தைப் பத்தி பேசிட்டிருந்தோமே ஞாபகம் இருக்கா.?” என்று முதலில் ஆரம்பித்தாள் தமிழினி.
“ம்ம்ம்.. நம்ம வாழ்க்கையோட முக்கியமான கட்டத்தைப் பத்தி முடிவெடுக்கும் போது, நாம ரெண்டு பேரும் சேர்ந்து முடிவெடுக்கணும்னு சொன்னோம்.” என்றான் அமுதன்.
“ம்ம்.. அதைப்பத்தி தான் பேசறேன்.” என்றாள் தமிழினி.
“ப்ச்.. எனக்கு ஒரு மாதிரி இருக்குடா. எப்படி சொல்றதுன்னு தெரியல.?” என்று சிறிது வெட்கத்துடன் கூறிய தமிழினியைப் பார்ப்பதற்க்குப் புதிதாய்த் தெரிந்தாள் அமுதனுக்கு.
“நீ வெட்கப்படறியா தமிழு. அய்யோ.. அம்மாடி.. ஆச்சர்யம் தான். நான் பார்த்த வீரமங்கை நீ. உனக்கு வெட்கப்படத் தெரியும்னு நான் இன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். யார் உன்னுடைய வெட்கத்திற்க்குக் காரணம்.?” என்றான் அமுதன்.
ஒரு நிமிடம் அமுதனைப் பார்த்தவள், “டேய்.. நீ கண்டுபுடிச்சிட்டியா.?” என்றாள்.
“ம்ம்ம்.. ஓரளவு கெஸ் பண்ணிருக்கேன். ஆனா, நீதான் சரியான்னு சொல்லணும்.” என்றான்.
கண்களை அகல விரித்துப் பார்த்த தமிழினி, “டேய்.. எப்படி டா.? சரியா சொன்ன.” என்றாள்.
“ம்ம்.. எல்லாம் தெரியும். உனக்கு அவர் மேல ஒரு அபிப்ராயம் இருக்கறதை நான் கவனிச்சேன்.” என்றான் அமுதன்.
“ம்ம்.. அதே மாதிரி அன்னைக்கு அந்த ரௌடிங்ககிட்ட இருந்து என்னைக் காப்பாத்த எவ்ளோ முயற்சி பண்ணார் தெரியுமா.? ஒருத்தன அடிச்சார். நாம நினைச்ச மாதிரி வெகுளி இல்ல அவர். அவர்கிட்டயும் ஒரு தைரியம் இருக்குன்னு புரிஞ்சுது. அதுவே எனக்கு அவர் மேல விருப்பம் வரக் காரணமா இருந்துச்சு.” என்று சொன்னபடி வெட்கத்தில் நெளிந்துகொண்டிருந்த தமிழினி, “சரி, நீ ஏதோ சொல்லணும்னு நினைச்சியே, என்ன அது.?” என்றாள்.
குழைந்த அவனை செல்லமாய் முறைத்தவாறே, “ம்ம்.. திருட்டுப் பயலே.. நீயும் தானா.?” என்றாள்.
“ம்ம்.. ஆமா தமிழு. எனக்கு ஒரு பொண்ணு மேல காதல் வந்திருக்கு.” என்றான்.
“என்னது, காதலா.? இது எப்போ இருந்து டா.?” என்றாள்.
“அது எப்போன்னு எனக்கே தெரியல. ஆனா, அது கன்ஃபார்ம் பண்ணது ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான்.” என்றான்.
“ஹூம்ம்.. எனக்குத் தெரியாம பல வேலை பார்த்திருக்க போலயே.?” என்றாள் தன் இடுப்பில் கை வைத்தபடி.
“ஆனா, இதை தேன்மொழி எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலையே.?” என்றாள் தமிழினி.
“ம்ம்ம்.. இதுக்குத்தான் ஒரு ஃப்ரெண்ட் வேணும்ங்கறது. நீதான் எப்படியாவது தேன்மொழிக்கிட்ட பேசி சம்மதம் வாங்கணும். உன்கிட்ட நான் முதல் முதலா கேட்கற ஒரு விஷயம் தமிழு. நீதான் பேசணும்.” என்று தன் காதலைச் சொல்ல தோழியிடம் தூதனுப்பினான்.
“ஹூம்ம். சரி, சரி... பாத்துக்கலாம் விடு. உன்னை நினைக்கும் போது ரொம்ப்ப் பெருமையா இருக்கு டா. ஒரு விதவைப் பொண்ணுக்கு வாழக்கை கொடுக்கறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்ல. ரொம்ப சந்தோஷம்.” என்று அவன் தோள்களைத் தட்டிக்கொடுத்தாள்.
“அப்பறம், நீயும் தான் எனக்காக வளையாபதிகிட்ட பேசணும். என்னால இந்த விஷயத்தை அவர்கிட்ட உடனே சொல்ல முடியாது. அதனால நீதான் ஹெல்ப் பண்ணனும்.” என்றாள்.
“கண்டிப்பா தமிழு. நான் பேசறேன்.” என்றான்.
“சரி போலாம் வா.. அப்பா நமக்காகக் காத்துட்டிருப்பார்..” என்றபடி இருவரும் கிளம்பினர்.
இருவரின் எண்ணங்களும் ஒரு வீட்டில் உள்ளது. ஆனால், அவர்கள் இருவரின் மனதில் என்ன உள்ளது என்று தெரியாமலே விருப்பம் கொள்ளும் இந்த நண்பர்களின் எண்ணம் ஈடேறுமா.?
அன்றைய தினம் அமுதனுக்கும், தமிழினிக்கும் மிக முக்கியமான நாள். ஏனென்றால் அவர்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தைப் பற்றி இருவரும் பேச வேண்டிய நாள். ஆனால், அதற்க்கு முன்னர் தங்கள் வீட்டில் பெற்றோரின் சம்மதமும் இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டனர்.
அவர்கள் எதிர்பார்க்காமல் அழகேசனும், ரங்கா-கோகிலா தம்பதியினரும் உடனே தங்களது சம்மதத்தைத் தெரிவித்தனர்.
“எங்களுக்கு பரிபூரண சம்மதம். முதல்ல போய் அவங்க ரெண்டு பேர்கிட்டயும் உங்க விருப்பத்தைச் சொல்லுங்க. ஒரு நல்ல நாள் பார்த்துடலாம்.” என்றார்கள் மூவரும்.
இருவரும் திருப்தியாகவும், சந்தோஷமாகவும் தங்கள் வாழக்கைத் துணையோடு பேசப் புறப்பட்டனர். பொள்ளாச்சி, மசாணி அம்மன் கோவில். மிக சக்தி வாய்ந்த தெய்வம்.
படுத்திருக்கும் நிலையில் வீற்றிருக்கும் அம்மனை தரிசித்தால் தாங்கள் நீண்ட நாளாக மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் சீக்கிரமே நிறைவேறும். அதனால் தானோ என்னவோ, அவர்கள் இருவரையும் அங்கேயே வரச் சொல்லியிருந்தனர் அமுதனும், தமிழினியும்.
இருவரும் பேசிக்கொண்டே அம்மனை தரிசித்து முடித்து ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்க, சரியாக வளையாபதியும், தேன்மொழியும் வந்தனர். இருவரையும் அம்மனை தரிசித்து விட்டு வருமாறு கூறியவர்கள், அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்று தங்களுக்குள் சிறிது ஒத்திகை பார்த்துக்கொண்டனர்.
அவர்கள் வந்ததும், அமுதன் வளையாபதியைக் கூட்டிக்கொண்டு போனான். தமிழினி தேன்மொழியைக் கூட்டிக்கொண்டு போனாள். அந்தப் பேச்சை ஆரம்பிப்பதற்க்கே அவர்களுக்கு நீண்ட நேரம் ஆனது. முதலில் அமுதன்.
“வளையாபதி, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னுதான் இங்கே வரச் சொன்னேன். நீங்க என்னோட ஃப்ரெண்ட் தமிழினியப் பத்தி என்ன நினைக்கறீங்க.?” என்றான் அமுதன்.
அவன் அவளைப் பற்றிக் கேட்டதும் வளையாபதிக்கு உள்ளூர ஒரு சந்தோஷம், மற்றும் ஒருவித சொல்ல முடியாத உணர்வும் உண்டானதை அவனால் உணர முடிந்தது.
“அவங்க ரொம்ப தைரியமான பொண்ணு. தேனு என்கிட்ட அவங்களப் பத்தி நிறைய சொல்லிருக்கா. அன்னைக்கு அந்த ரௌடிங்க கிட்ட அவங்க போராடிட்டு இருந்தத நினைச்சா இன்னும் ரொம்பப் பாவமா இருக்கு.” என்று உணர்ச்சிவசத்தில் பேசினான் வளையாபதி.
“விடுங்க. அந்த டைம் நீங்க தான போய் அவளுக்காக சண்டை போட்டீங்க. அதுக்கப்பறம் தானே நான் வந்தேன். சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ ஒரு விஷயம் ஃப்ரான்க்கா சொல்லணும்னா தமிழுக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா.?” என்று பட்டென்று விஷயத்தை உடைத்தே கேட்டு விட்டான் அமுதன்.
வளையாபதிக்கு வானத்தில் பறப்பதைப் போன்றிருந்தது. ஆனாலும், ஏதோ ஒரு விஷயத்தால் அவனின் முகம் வாடியது. அதைப் பார்த்த அமுதன் கேட்டான், “ஏன் என்னாச்சு வளையாபதி.?” என்றான்.
“ஒரு விஷயம் அமுதன், உங்க ஃப்ரெண்ட்க்கு நான் சரியான ஆளான்னு எனக்குத் தெரியல. ஏன்னா, அவங்க டீச்சர். ரொம்பப் படிச்சவங்க. நான் டென்த் கூட பாஸ் பண்ணல. அப்படி இருக்கும் போது இது எப்படி ஒத்து வரும்னு அவங்க நினைக்கறாங்க.?” என்றான் திடீரென்று.
“வளையாபதி, இதெல்லாம் ஒரு விஷயம் கிடையாது. அவளுக்கு அது பிரச்சினை இல்லைன்னு தானே, உங்களத் தேர்ந்தெடுத்திருக்கா. அப்படியே, உங்களுக்கு எது கேட்கணும்னாலும் அதை நீங்களே நேரடியா தமிழு கிட்ட கேளுங்க. எல்லாமே தெளிவாயிடும். சரியா.? என்றான். அவனுக்கும் அதுவே சரியென்று பட்டது.
அப்படியே இருவரும் பேசிக்கொண்டிருக்க, அங்கே தமிழினியும், தேன்மொழியும் வந்தனர்.
வந்தவள் வளையாபதியின் அருகே வந்து, “அண்ணா, வா போலாம்.” என்றாள் ஒரு மாதிரியாக. அவள் அமுதனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவனைக் கிட்டத்தட்ட இழுத்துச் சென்றாள்.
அதைக் கண்டு ஏதோ சரியில்லை என்று நினைத்த அமுதன், தமிழினியைப் பார்க்க அவளோ செய்கையால், “பொறு..” என்று மட்டும் சொன்னாள்.
வளையாபதிக்கே தேன்மொழி செய்தது மிகவும் சங்கடமாக இருந்தது. அப்படி என்ன நடந்த்தென்று இவள் தன்னை இப்படி இழுத்துக்கொண்டு போகிறாள் என்று ஒரு மாதிரியாக ஆனான். தமிழினியைப் பார்த்து ஒரு வார்த்தைக்கு கூட பேச முடியவில்லை. வீட்டிற்க்குச் சென்றதும் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாய் வண்டியைக் கிளப்பினான்.
அவர்கள் சென்றதும் அமுதன், “என்னாச்சு தமிழு.? ஏன் தேன்மொழி கோவமா போறாங்க.?” என்றான்.
“தேன்மொழிகிட்ட உன் விஷயமா பேசினேன் அமுதா, அவங்களுக்கு இதுல விருப்பம் இல்லையாம். நீன்னு இல்ல, வேற யாரா இருந்தாலுமே இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்களாம். நானும், எவ்வளவோ பேசிப் பார்த்தேன். அவங்க ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க. நான் என்னடா பன்றது. இதுக்காகத்தான் கூப்பிட்டீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்னு கோவமா பேசிட்டுப் போறாங்க. எனக்கே கொஞ்சம் சங்கடமா இருந்தது. இப்போ என்ன பண்றது சொல்லு.?” என்றாள் தமிழினி கவலையாக.
“சரி விடு, அதனால என்ன.? ஆனா, நான் உன்கிட்ட ரொம்ப சந்தோஷமான விஷயம் சொல்லப் போறேன். வளையாபதிக்கும் உன் மேல விருப்பம் இருக்கு தமிழு. ஆனா, அவர் படிக்காதவர்ன்னு கொஞ்சம் ஃபீல் பண்றார். உன்கிட்ட பேசச் சொன்னேன். ஆனா, பாசிட்டிவான ரியாக்ஷன் தான்.” என்று சொன்னவன் முகத்தில் மகிழ்ச்சி.
ஆனால், தமிழினியோ சோகமாய் இருந்தாள். அவளின் கவலையைப் புரிந்துகொண்டவன், “ஏய்.. விடு தமிழு. நானே ஃபீல் பண்ணல. நீ ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற.? இந்தத் தேன்மொழி இல்லன்னா, வேற ஏதாவது ஒரு மொழி. இதுக்குப் போய்..” என்று அவன் அவள் தோள்களைப் பிடித்தவாறே பேச, அவள் அவனது முகத்தை உற்று நோக்கினாள்.
அதைப் பார்த்தவன் அந்தப் பக்கமாய் தலையைத் திருப்பிக் கொண்டான். தன் தோள்களைப் பிடித்திருந்த அவன் கையை உதறி விட்டவள், “இங்க பாரு அமுதா, நீ என்னை சமாதானப்படுத்தறேன்னு உன்னையே நீ ஏமாத்திக்காத. நீ என்ன பண்ணுவியோ தெரியாது, தேன்மொழிய எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி அவங்கள மேரேஜ்க்கு சம்மதிக்க வை. இல்லன்னா நானும் வளையாபதிகிட்ட பேசப் போறதும் இல்ல, கல்யாணம் பண்ணிக்கப் போறதும் இல்ல.” என்று உறுதியாய்ச் சொன்னபடி முன்னே நடந்தாள் தமிழினி.
இதென்ன சோதனை அம்மா.? என்று அந்த மாசாணி அம்மனைப் பார்த்தவாறே மனதில் எதையோ நினைத்துக்கொண்டு பின்னே சென்றான் அமுதன்.
*******************
வந்ததிலிருந்து எதுவுமே பேசாமல் அமைதியாக சமையல் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் தேன்மொழி. பொறுமை இழந்து வளையாபதி கேட்டான்.
“தேனு, என்னதான் நடந்தது.? எதுக்கு அவங்க முன்னாடி அப்படி என்னை இழுத்துட்டு வந்த.? அவங்க நம்மள என்ன நினைச்சிருப்பாங்க.? சொல்லு.” என்றான்.
அவள் பேசவில்லை. அப்பொழுதும் அமைதியாகவே இருந்தாள். “அதை நான் சொல்றேன் வளையாபதி.” என்றவாறே திறந்திருந்த கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தார் செங்குட்டுவன். கூடவே அமுதனும் வந்திருந்தான்.
அவர்களைப் பார்த்ததும் வளையாபதி, “மாமா.. வாங்க. அமுதன் வாங்க.” என்று அவர்களை வரவேற்றான். ஆனால், தேன்மொழி ஏனோ அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.
இதை எதிர்பார்த்தவர்களாக, “நீ அவகிட்ட எது பேசினாலும் அவ எதுவும் சொல்லமாட்டா. நாங்களே விஷயத்துக்கு வரோம். அமுதனுக்கு தேன்மொழியைப் பிடிச்சிருக்கு. அவள கல்யாணம் பண்ண சம்மதமான்னு தமிழ் கிட்ட சொல்லிக் கேட்டிருக்கான். ஆனா, அவ அதுக்கு கோவிச்சுக்கிட்டு முடியாதுன்னு பட்டுன்னு சொல்லிட்டு உன்னை இழுத்துட்டு வந்துட்டா. இதுதான் விஷயம். நீதான் இனி சொல்லணும்.” என்று செங்குட்டுவன் அனைத்தையும் சொன்னார்.
ஒரு நிமிடம் சந்தோஷப்பட்ட வளையாபதி, “இதுல சொல்றதுக்கு என்ன மாமா இருக்கு.? ராமு இறந்ததுக்கப்பறம், அவளோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு நான் நினைச்சு வருத்தப்படாத நாளே இல்ல தெரியுமா.? அமுதன் மாதிரி ஒருத்தர் என் தங்கச்சிய ஏத்துக்கறார்ன்னா அத நான் நிச்சயம் தடுக்க மாட்டேன். ஆனா, இதுல தேனுவோட சம்மதமும் முக்கியம்.” என்றான்.
“தேனு... தேனு... இங்க வா..” என்று அவன் அழைக்க, அங்கே பேசிக்கொண்டிருந்தவற்றை உள்ளேயே கேட்டுக்கொண்டிருந்தவள், வெளியே வந்து அவர்கள் முன்பு நின்றாள்.
“தேனு.. ஏன் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லல.? அமுதன் சார் எவ்ளோ நல்லவர். அவர மாதிரி ஒருத்தர் உன்னை ஏத்துக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும். ஆனா, நீ ஏன் வேணாம்னு சொல்ற.?” என்றான் வளையாபதி.
அமைதியாய் இருந்தாள். “ஆமாம் மா தேனு. அமுதனுக்கு அவ்ளோ சீக்கிரம் யாரையும் பிடிக்காது. ஆனா, பிடிச்சிருச்சுன்னா அவங்களுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவான் தெரியுமா.? ஏன் என்னோட பொண்ணு அஞ்சலி, அமெரிக்கால இருக்காளே, அவகூட அமுதனக் கல்யாணம் பண்ணிக்க இண்ட்ரஸ்ட் காமிச்சா. ஆனா அமுதனுக்கு என்னோட பொண்ணு மேல இண்ட்ரஸ்ட் இல்ல. சரி, என் பொண்ணுக்கு அமுதனக் கல்யாணம் பண்ணிக்க குடுப்பனை இல்லன்னு நினைச்சுக்கிட்டேன். நீ என்னடான்னா தானா வர நல்ல வாழ்க்கைய வேண்டாம்னு சொல்ற.?” என்றார் செங்குட்டுவன்.
“போதும் மாமா, எனக்கு யாரும் வாழ்க்கை குடுக்கவும் வேண்டாம், என்னை யாரும் ஏத்துக்கவும் வேண்டாம். இந்த வீட்டுல நான் பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டுப் போறேன். எங்க அண்ணனுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா நான் தானா ஒதுங்கிப்பேன்.” என்று தேன்மொழி சொல்ல,
“உங்க அண்ணனுக்கு வர வாழ்க்கையையும் சேர்த்துதான் நீ வேண்டாம்னு சொல்ற தேன்மொழி. தமிழினி உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிருக்கா. ஆனா, நீ அமுதனோட விருப்பத்தை ஏத்துக்கலன்னா, உங்க அண்ணனை தமிழினி ஏத்துக்க மாட்டா.” என்றார் செங்குட்டுவன்.
அதைக் கேட்டதும், தேன்மொழி வளையாபதியை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். அவள் உண்மையாலுமா.? என்பதைப் போல் பார்க்க, அவனும் “ம்ம்..” என்று தலையாட்டினான். உடனே தேன்மொழி யோசிக்க ஆரம்பிக்க, அமுதன் உடனே கூறினான்.
“சார். இதென்ன மார்க்கெட் வியாபாரமா.? ஒன்னைக் கொடுத்து தான் ஒன்னை வாங்கணும்னு. இது வாழ்க்கை. பிடிக்காம ஏத்துக்கிட்டா, ரொம்பக் கஷ்டமாயிடும். தேன்மொழி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்கப்பறம் உங்களுக்கு எல்லாமே புரியும்.” என்றான்.
அவன் அவ்வளவு தூரம் சொல்லும் போது அவளால் மறுக்க முடியவில்லை. அதே போல், வளையாபதியும் கண்களால் கெஞ்ச, வேறு வழியில்லாமல் அவனுடன் பேச தனியே சென்றாள்.
“தேன்மொழி நீங்க நினைக்கற மாதிரி நான் ஒண்ணும் உங்களோட இந்த நிலைமையைப் பார்த்து உங்கள ஏத்துக்கணும்னு நினைக்கல. உங்கள நான் காலேஜ் படிக்கும் போதே ரெண்டு மூணு தடவை பொள்ளாச்சில பஸ் ஏற வரும் போது, அங்கங்கே பார்த்திருக்கேன். அப்போவே உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, அந்த டைம்ல அந்த ஃபீலிங்க்ஸ்க்கு பேர் என்ன்ன்னு தெரியல. ஒரு பொண்ணப் பார்க்கறோம், பிடிக்குதுன்னா உடனே அதை காதல்ன்னு முடிவு பண்ற அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. அது ஒரு அற்புதமான உணர்வு. அதை நான் முழுசா உணரும் போதுதான் உண்மைன்னு அப்போ நினைச்சேன். ஆனா, அது நடக்கும்னு நான் நிஜமாலுமே நினைச்சதில்ல. அன்னைக்கு உங்கள எங்க வீட்டுல பார்த்த போதே நான் பார்த்த பொண்ணு நீங்க தான்னு நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, உங்க மேல இருக்கற காதல் தான்னு நான் உணர்ந்தது எப்போ தெரியுமா.? அந்த இருட்டுல, நீங்க பயத்துல என் மேல சாஞ்சுக்கிட்ட போதுதான். அப்போவே முடிவு பண்ணிட்டேன், உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு. இதுவரைக்கும் இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்லல. ஏன், தமிழுகிட்ட நான் எந்த விஷயத்தையும் மறைச்சதில்ல. ஆனா, அவகிட்ட கூட நான் இதை நேரடியா சொல்லல. அப்பறம், அவ கண்டிப்பா உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்குவா. அதுக்காக, நீங்க என்னைக் கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியம் இல்ல. அதையும் நீங்க தெரிஞ்சுக்கணும்.” என்று தன் தெளிவான முடிவை அவளிடம் சொன்னான் அமுதன்.
“என்ன இருந்தாலும் நான் ஒரு விதவை. உங்களுக்கு இப்போ ஏத்துக்க மனசு இருக்கலாம். ஆனா, நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழும் போது, ஏதாவது ஒரு வார்த்தை தேவையில்லாததப் பேசிட்டா, அப்ப்றம் என்னால தாங்க முடியாது.” என்று தேன்மொழி கண்ணீர் விட,
அவளுக்கு அருகே வந்த அமுதன், அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டுச் சொன்னான்.
“உனக்கு நடந்தது ஒரு பொம்மைக் கல்யாணம். அது உன்னோட அத்தையும், மாமாவும் தங்களோட லாப நோக்கத்துக்காக செஞ்ச ஒரு சதிச் செயல். அதுல பலியானது ராமு. நீ என்ன தப்பு செஞ்ச.? நீயா எதுவும் கற்பனை பண்ணிக்க வேண்டாம். என்னைப் பார்த்தா நான் அப்படியெல்லாம் பேசறவன்னு உனக்குத் தோணுதா.? நான் தமிழு அழுதாலே தாங்க மாட்டேன். இதுல, நீ அழுக விட்டுடுவேனா.? நான் உனக்கு உண்மையா இருப்பேன். நீ என்னை முழுசா நம்பலாம்.” என்று அவள் கைகளைப் பிடித்தான்.
திரும்பவும் அழுதவள், தன்னை அறியாமலேயே அவன் மேல் சாய்ந்துகொண்டாள். தன் ஏக்கத்தையும், துக்கத்தையும் போக்க தோள்கள் கிடைத்ததாய்த் தோன்றியது தேன்மொழிக்கு.
பரிதாபப்பட்டு தனக்கு வாழ்க்கை கொடுக்க யாரும் முன்வர வேண்டாம் என்றொரு எண்ணத்திலேயே இத்தனை நாட்களும் வாழ்ந்தாள் தேன்மொழி. அப்படிச் சொன்னாலும், அவளுக்கு அமுதன் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது.
அவன் உண்மையைச் சொன்னதன் மூலமாக, அமுதனின் உண்மையான அன்பைப் புரிந்துகொண்டாள். ஒரு வழியாக தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.
இது ஒருபுறமிருக்க, வளையாபதி இன்னும் தமிழினியிடம் நேரடியாகப் பேசவில்லை. அவர்கள் சந்தித்த போது,
“உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே.? என்ன இருந்தாலும் நான் படிக்கல. நீங்க ரொம்பப் படிச்சவங்க. உங்களுக்கு நான் ஒத்துவருவேனான்னு தெரியலங்க.” என்றான் பாவமாய்.
“அட நீங்க என்னங்க, படிப்பெல்லாம் ஒரு விஷயமா.? நீங்க படிக்காத மேதை. உங்க தங்கச்சிய இந்த அளவுக்கு படிக்க வைச்சிருக்கீங்க. எத்தனை நல்ல நல்ல காரியங்கள் பண்ணிருக்கீங்க. அதெல்லாம் எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா.? எல்லாராலும் இந்த மாதிரி இருக்க முடியுமா.? எனக்கு இதெல்லாம் தான் தெரியுது. படிப்பு தானே, நான் சொல்லித்தரேன். அவ்ளோதான்.” என்றாள் தமிழினி.
“இல்லைங்க...” என்று வளையாபதி இழுக்க, “இங்க பாருங்க, இப்போ கூட உங்களுக்கு நான் ஒத்து வருவேனான்னு நீங்க யோசிக்கல. அப்படி யோசிச்சிருந்தாதான் அது சுயநலம். நான் உங்கள விரும்பறதுக்குக் காரணமே உங்க மனசு தான். அதுதான் எனக்கு வேணும். எப்போ நானும், அமுதனும் கடைசி வரைக்கும் நட்பா இருக்கணும், எங்க நட்புக்குள்ள எந்த ஒரு பிரச்சினையும் வந்திடக்கூடாதுன்னு நீங்க நினைச்சீங்களோ, அப்போவே நீங்க தான் என் வாழ்க்கைத் துணைன்னு முடிவு பண்ணிட்டேன். இன்னும் என்னங்க வேணும்.?” என்று உறுதியாய்ச் சொன்னாள் தமிழினி.
அவன் யோசித்துக்கொண்டே இருக்க, சட்டென்று அவனது கையைப் பிடித்தவள், “இந்தக் கையைப் பிடிச்சுத்தான் நான் என்னோட வாழ்க்கையைத் தொடங்கணும், வாழ்க்கை முழுக்க பிடிச்சுக்கிட்டே நடக்கணும்னு ஆசைப்படறேன். அதை நிறைவேத்துவீங்களா.?” என்று அவள் காதலுடன் பார்த்த பார்வையில் மயங்கியே போனான் வளையாபதி.
அவ்வளவுதான், இனிதே அனைத்தும் ஆரம்பித்தன. அழகேசனும், ரங்கா-கோகிலா தம்பதியினரும் இவர்கள் சம்மதம் தெரிவித்ததும் முகூர்த்த நாள் பார்ப்பது, மண்டபம் பார்ப்பது என்று அடுத்தடுத்த நாட்களில் பரபரப்பாக இருந்தனர்.
இரண்டு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. பத்திரிக்கை அடித்தும் விட்டார்கள். அவர்களின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இதற்க்கிடையில் பஞ்சாயத்துக்கு ஒரு நாள் அமுதனையும், தமிழினியையும் அழைத்திருந்தார் அழகேசன்.
இப்போது பஞ்சாயத்தில் நிறைய விஷயங்கள் மாறியிருந்தன. நியாயமற்ற முறையில் தொடர்ந்து பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறி அமுதன் வழக்கு தொடர்ந்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
மாணிக்கமும், பெரியசாமியும் இனி பஞ்சாயத்தின் எந்த ஒரு விஷயத்திலும் தலையிடக்கூடாது என்று கோர்ட்டில் சொல்லிவிட்டார்கள். அதனால், இருவரும் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை.
இப்போது பஞ்சாயத்தில், சாத்தப்பன் தான் தலைவர். அதே போல், அழகேசனின் அறிவுரையிலேயே முக்கிய முடிவுகளை எடுக்கிறார். அதனால், இப்போது பஞ்சாயத்தில் நியாயத்துக்கான வழி கிடைத்துள்ளது.
அவர்கள் வந்திருப்பதை அறிந்து ஒட்டுமொத்த ஊரே பஞ்சாயத்தில் கூடியிருந்தது. நீண்ட வருடங்கள் கழித்து பஞ்சாயத்தில் நிற்க்கும் போது ஒருவித சந்தோஷம் உண்டானது அவர்கள் இருவருக்கும்.
“இப்போ நம்ம பஞ்சாயத்து எதுக்கு கூடியிருக்குன்னு பாத்தீங்கன்னா, யாரை ஒரு காலத்துல எந்த ஒரு விஷயத்துக்கும் லாயக்கு இல்லைன்னு நினைச்சு ஒதுக்கி வைச்சாங்களோ, அவங்க பொண்ணு இன்னைக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியரா இருக்கா. அவ காப்பாத்துன அமுதன் தான் இன்னைக்கு வக்கீலா இருக்கான். இருவரும் இப்போ வரைக்கும் நட்பா தான் இருக்காங்க. அதைக் கூட தப்புத் தப்பா இந்த ஊர் முழுக்க எப்படியெல்லாம் பேசிருப்போம். இப்போ அவங்க தங்களோட வாழ்க்கைத் துணையத் தேர்ந்தெடுத்திருக்காங்க. நம்ம அழகேசன் வாத்தியாருக்காக நம்ம ஊர் மக்கள் கூடியிருந்து அவங்க ரெண்டு பேரோட கல்யாணத்த சிறப்பா நடத்திக் கொடுக்கணும்னு இந்த பஞ்சாயத்து சார்பா உங்க எல்லாரையும் நான் வேண்டிக் கேட்டுக்கறேன்.” என்று தன் உரையைச் சொல்லி முடித்தார் சாத்தப்பன்.
அனைவரும் அதைக் கேட்டு மகிழ்ந்தனர். அவர்களை ஆசீர்வாதித்தனர். அனைவருடைய இல்லத்திற்க்கும் சென்று பத்திரிக்கை வைத்தனர் அமுதனும், தமிழினியும்.
உறவே இல்லை என்று இருந்த ரங்கா-கோகிலா தம்பதியினருக்கு, அவர்களின் திருமண நாளாம் இன்று ஊரே ஒன்று திரண்டு வந்திருப்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அனைவரும் அவர்களின் இல்ல திருமண விழா போல், அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தனர்.
வாழைப் பந்தல் கட்டுவதில் இருந்து, பந்தி பறிமாறுவது, வந்தவர்களை கவனிப்பது, இன்ன பிற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்று அனைத்தையும் அவர்களே செய்தனர்.
அதே போல், அமுதனின் தாத்தா-பாட்டி, மாரி-சாமிநாதன் மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளோடு வந்திருந்தனர். பிறகு சங்கடங்களை புறம் தள்ளி விட்டு அழகேசனும், அமுதனும் வேண்டிக்கொண்டனதன் பேரில் நடேசன்-விசாலாட்சி, அவர்களோடு குமரேசன் புதிதாய்த் திருமணமான தன் மனைவியுடனும், கோலாகலம் தன் ஒரு வயது பெண் குழந்தையுடனும் வந்திருந்தனர்.
மணமக்கள் அமுதன்-தேன்மொழி, வளையாபதி-தமிழினி, தங்கள் திருமணத்திற்க்கு அனைவரும் வந்து சென்ற நிகழ்வை நினைத்துப் பரவசமடைந்தனர். அனைவரும் மணமக்களை இன்று போல் என்றும் நலமுடன் வாழ ஆசிர்வாதித்தனர். நால்வருடைய திருமணம் ஒரு திருவிழா போல் இனிதாக நடைபெற்று முடிந்தது.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.