Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

Status
Not open for further replies.
அத்தியாயம் 21

மாரியின் திருமணத்தைப் பற்றி உடனே டெலிபோன் பூத்துக்கு சென்று போன் செய்து அழகேசனுக்கும், விசாலாட்சிக்கும் தகவல் சொன்னார் அவர்களின் தந்தை. அப்போது தான் ஊர் சென்று சேர்ந்த அழகேசன் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர்கள் பெண் பார்க்க வரும் போது திரும்பவும் வருவதாகச் சொன்னார்.

ஆனால், விசாலாட்சியோ அத்தனை ஒன்றும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. “ம்ம்.. சரி வர முயற்சி பண்றேன்.” என்று மட்டும் சொல்லி வைத்து விட்டாள்.

அடுத்த இரண்டு நாட்களில் சாமிநாதனின் குடும்பம் முறைப்படி பெண் பார்க்க அவர்கள் வீட்டுக்கு வந்தனர். சொன்னபடியே அழகேசன் திரும்பவும் வந்தார். விசாலாட்சி தெரிந்ததுதான், அவள் வரவேயில்லை. வருவாள் என்று கமலம் கடைசி வரை நம்பினார். ஆனால், அவள் ஏமாற்றிவிட்டாள் என்று புலம்பினார்.

அகழகேசனும், அவரது தந்தையும் தான் சமாதானப்படுத்தினர். சாமிநாதனின் பக்கம் அவனது குடும்பமும், அவனது அத்தை குடும்பமும் வந்திருந்தது. மாரியை அலங்காரத்தில் பார்த்த போது, கருவறைக்குள் இருக்கும் சாமி போலத் தெரிந்தாள்.

கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். பார்த்ததுமே, சாமிநாதன் ஏன் அவளை விரும்பினான் என்று அனைவருமே கண்டுபிடித்து விட்டனர். சிறிய வயதில் பார்த்த அவனது அம்மாவைப் போலவே இருந்தாள் மாரி.

அவர்கள் மறுப்பே சொல்ல முடியாத அளவுக்கு அவளைத் தேர்வு செய்து விட்டான் சாமிநாதன்.

“அய்யா.. எங்களுக்கு பொண்ண ரொம்பப் புடிச்சிருக்கு. எங்க பையன் முதல்லயே எல்லாத்தையும் சொல்லிட்டான். எங்க குலதெய்வமே திரும்பக் கிடைச்ச மாதிரி உங்க பேத்தி இருக்கா. என் பையனுக்கும் சரி, எங்களுக்கும் சரி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்ல. உங்க பேத்திக்கு நீங்க என்ன செய்யணும்னு விருப்பப்படறீங்களோ அதை செஞ்சா போதும். எப்படி இருந்தாலும், அவங்க ரெண்டு பேரும் தான் அவங்க வாழ்க்கைய வாழப்போறாங்க. இதுல எங்களுக்கு எந்தத் தேவையும் இல்ல. சட்டுபுட்டுன்னு நல்ல நாள் பார்த்து நிச்சயத்தையும், கல்யாணத்தையும் வைச்சுக்கலாம்.” என்று தன் மனதில் உள்ளவற்றை உள்ளபடியே பேசினார் சாமிநாதனின் தந்தை.

“ரொம்ப நல்லது பா. உங்கள மாதிரி குடும்பத்துக்கு எங்க பேத்தி வாக்கப்பட்டுப் போறான்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவளுக்கு அம்மா, அப்பா கிடையாது. எங்க அண்ணனோட மக வயித்துப் பேத்தி தான் மாரி. அவள எங்க பொறுப்புல விட்டுட்டு தான் எங்க அண்ணன் பொண்ணு செத்துப்போனா. அப்போலிருந்து இவ எங்க கூட தான் இருக்கா. அவளுக்கு சொந்தமா மூணு ஏக்கர் நிலம் இருக்கு. அதையும் அவ தான் பாத்துக்கறா. தம்பியும் இந்த ஊர்ல தான் நிலங்களைப் பாத்துக்கறதா சொன்னாரு. எங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்ல. அவளுக்கு என்ன செய்யணுமோ அதைக் குறைவில்லாம செஞ்சுடுவோம். அவ வாழ்க்கை நல்லா இருந்தா போதும்.” என்று சற்று கண் கலங்கியபடியே பேசினார் தாத்தா.

“அப்பாக்கு மாரி மேல ரொம்பப் பாசம் அதிகம். அவருக்கு அவளைப் பிரிஞ்சு இருக்கறது கொஞ்சம் கஷ்டம். அதுக்குத் தகுந்த மாதிரி இந்த ஊர்லயே மாப்பிள்ளை இருக்கற மாதிரி அமைஞ்சது ரொம்ப சந்தோஷம் எங்களுக்கு.” என்று பேசினார் அழகேசன்.

“சரிங்க நல்ல நாள் பார்த்து நிச்சயத்தைக் குறிச்சிடுவோம். அப்பறம் கல்யாணத்துக்கும் நாள் பார்த்துடுவோம்.” என்று கமலம் பாட்டி சொன்னார்.

“கமலம் அந்தப் பஞ்சாங்கத்த எடுத்துட்டு வா. நாள் பார்த்துடலாம்.” என்று அவர் சொல்ல, கமலம் பஞ்சாங்கத்தை எடுத்து வந்தார்.

சிறிது நேரம் பஞ்சாங்கத்தைப் புரட்டிய தாத்தா, தமிழ் மாசம் வைகாசி 1, ஆங்கில மாதம் மே 15 நாள் நல்லா இருக்கு. நல்ல முகூர்த்த நாள். அன்னைக்கு நிச்சயத்தை வைச்சுக்குவோம். அப்பறம், கல்யாணத்தை ரொம்ப நாள் தள்ளிப் போட வேண்டாம்னு பார்க்கறேன். அதனால, வைகாசி கடைசில முகூர்த்த நாள்னு பார்த்தா வைகாசி 30, 31 அதாவது ஜூன் மாசம் 14, 15-ம் தேதி நாள் நல்லா இருக்கு. முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பு, மத்த சடங்கு எல்லாம் வைச்சுக்கலாம். அடுத்த நாள் அதிகாலை 6 லிருந்து 7.30 வரைக்கும் முகூர்த்த நேரம் இருக்கு.” என்று சொல்ல,

“சரிங்கய்யா. நீங்க சொன்ன தேதிலயே நிச்சயத்தையும், கல்யாணத்தையும் வைச்சுக்கலாம். அதுக்கான ஏற்பாடுகளை நாங்க நாளைல இருந்தே ஆரம்பிச்சிடுறோம். நீங்களும் பார்த்து பண்ணிடுங்க.” என்று தெளிவாகவே பேசினார் சாமிநாதனின் அப்பா.

“சரிங்க.. அப்படியே பண்ணிக்குவோம்.” என்றார் அழகேசனும், தாத்தாவும். அதே போல், நிச்சயதார்த்தத்தை சாமிநாதன் ஊரிலும், திருமணத்தை இங்கேயும் நடத்தத் திட்டமிட்டனர்.

செல்லும் போது, சாமிநாதன் ஒருமுறை மாரியைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினான். அவள் உள்ளே இருந்த்தால் வெளியே வரவில்லை. அப்போது, தமிழினி தான் அதைத் தெரிந்து கொண்டு, உள்ளே ஓடிச் சென்று மாரியின் காதில் ஓதினாள்.

உடனே, மாரியும் எழுந்து முன்னே வாசலுக்கு வந்தாள். அப்போது தான் அவனுக்குக் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. மாரியும், அவன் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு, கண்களினாலேயே விடை கொடுத்தாள். அவனும் சிரித்துக்கொண்டே சென்றான்.

அதன் பிறகு, நாட்கள் வேகமாக நகர்ந்தன. மாரியும், சாமியும் தினமும் ஒருமுறையாவது சந்தித்துக்கொண்டனர். நிறைய விஷயங்களைப் பேசினர். அவர்கள் பேசும் விஷயங்களில் பாதி, வயல், வரப்பு, விளைச்சல் என்று விவசாயத்தைப் பற்றியே அதிகமாக இருந்தது.

அவள் செல்லும் போது, அமுதனையும், தமிழினியையும் அழைத்துக்கொண்டே செல்வாள். சாமியின் கராத்தே பள்ளிக்குச் சென்று இப்போது இருவரும் சேர்ந்தே கராத்தே கற்றனர். அதே போல், வயலுக்குச் சென்று விவசாயத்தைப் பற்றியும், அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு பற்றியும், மேலும் சில தெரியாத விஷயங்களையும் கற்றுக்கொடுத்தனர்.

இப்படியாக நாட்கள் செல்ல, அதற்க்குள் நிச்சயதார்த்த நாள் வந்து விட்டது. சாமிநாதனின் ஊரில் நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவர்கள் செய்து விட்டனர். இவர்கள் முக்கியமான சொந்த பந்தங்களைக் கூட்டிக் கொண்டு ஒரு வேனைப் பிடித்துச் சென்றனர். அதற்க்குக் கூட விசாலாட்சி வரவில்லை. ஆனால், நிச்சயம் நல்லபடியாகவே நடந்தது.

அதற்க்குள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதைத் தெரிந்து கொண்டு அழகேசன் அமுதனையும், தமிழினியையும் அழைத்துக்கொண்டு போக வந்தார்.

“டேய்.. பசங்களா. உங்கள என்கூடவே வைச்சுக்கணும் போல இருக்கு. பேசாம என்கூடயே இருந்துடுங்களே. இப்போ ஊருக்குப் போய்த்தான் ஆகணுமா.?” என்று மாரி கேட்க,

அழகேசனோ, சிரித்துக்கொண்டே அவளிடம், “மாரி, அவங்க ரெண்டு பேரும் படிக்கிற பசங்க. அவங்களுக்கு நாளைக்குத் தேர்வு முடிவு வேற வரப்போகுது. அதனால தான் கூட்டிட்டுப் போறேன். அதுவும் இல்லாம, அடுத்து அவங்க மேல படிக்கிற பள்ளிக்கூடத்துக்குப் போகணும். அவங்களை அதுல சேர்க்கணும். இன்னும் நிறைய இருக்கு. உனக்குத் தெரியாததா.? நீ படிச்சவதானே.? உன்னோட கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு லீவு போட்டுட்டு மூணு பேரும் வந்துடறோம். போதுமா.?” என்றார்.

“ஆமா அக்கா. உங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா வரோம். எங்களுக்கும் உங்களைப் பிரிய மனசில்ல. ஆனா, என்ன பண்றது.? எனக்கும் எங்க அம்மா, அப்பாவைப் பார்க்கணும். இவ்ளோ நாள் நான் அவங்களைப் பிரிஞ்சு இருந்ததே அதிகம்.” என்றாள் தமிழினி.

“மாரி கா. உங்க தம்பி இனிமேல் லீவு விட்டாப் போதும் இங்க ஓடி வந்திடுவேன். சரியா.? நீங்க ஒண்ணும் வருத்தப்படாதீங்க.” என்று அமுதனும் ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்.

“சரி பசங்களா.. கல்யாணத்துக்கு வந்துடுங்க. நான் உங்களைத்தான் எதிர்பார்த்துட்டே இருப்பேன்.” என்று அவர்களைக் கட்டிக்கொண்டு பிரியா விடைக்கொடுத்து அனுப்பினாள். மூவரும் ஊர் வந்து சேர்ந்தனர்.

அடுத்த நாள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழினி அவள் பள்ளியிலேயே முதல் மதிப்பெண்ணாக 500-க்கு 482 மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். அதே போல், அவள் கோவை மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்திருந்தாள்.

அமுதன் பள்ளியில் இரண்டாம் இடம், 500-க்கு 475 மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். இருவரும் கணக்குப் பாடத்திலும், சமூக அறிவியல் பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

பள்ளியின் சார்பில் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதே போல், அன்றே அவர்களை அழைத்துச் சென்று பொள்ளாச்சியில் உள்ள சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கையில் கலந்து கொண்டு, அவர்களுக்கு விருப்பமான குரூப்பைத் தேர்வு செய்ய வைத்தார் அழகேசன்.

தமிழினி அறிவியல் பாடத்தையும், அமுதன் வரலாறு பாடத்தையும் தேர்வு செய்து அதற்க்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கு அது கிடைத்தும் விட்டது.

அவர்கள் ஊரில் இருந்து பஸ்ஸில் பயணம் செய்துதான் வர வேண்டும். பொள்ளாச்சி வரை வந்து, பிறகு டவுன் பஸ்ஸில் பள்ளிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிச் செல்ல வேண்டும். வேறு வழியில்லை. நல்ல பள்ளியில் சேர்ந்து படித்துதான் ஆக வேண்டும் என்று அங்கேயே படிக்க சம்மதம் தெரிவித்தனர்.

தமிழினிக்கு அரசு செலவு என்பதால் அவளுக்கு பள்ளிக்கூட பேகைத் தவிர எந்த ஒரு செலவும் இல்லை. இருவரும் சேர்ந்தே பள்ளிக்கு முதல் நாள் ஒன்றாய் வந்தனர்.

ஒருவித எதிர்பார்ப்போடுதான் பள்ளிக்கு வந்தனர். தங்கள் ஊரில் படித்த பள்ளிக்கூடத்தை விட இது கொஞ்சம் பெரியதாகவே இருந்தது. அதே போல் இதில் அமுதனுக்குப் பிடித்த விஷயமாக கராத்தே கற்றுக்கொள்ளும் ஒரு வழியும் இருந்தது.

மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் இந்தப் பள்ளியும் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதே தனிச்சிறப்பு. அதனால், தான் கராத்தே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இங்கு தனக்காகவே அமைந்ததை நினைத்து சந்தோஷப்பட்டான்.

முதல் நாள் அறிமுகத்தோடு அனைவருக்கும் இனிதே முடிந்தது. நிறைய பேர் தன்னுடைய மதிப்பெண்ணை வைத்தே தன்னை எடை போட்டதை தமிழினி உணர்ந்தாள். அதற்க்காகவே சிலர் பேச நினைத்ததையும் தெரிந்து கொண்டாள்.

ஆனால், அவள் எதிர்பார்ப்பதோ, தன் குணத்தைப் பார்த்து தன்னிடம் உண்மையாகப் பழக நினைப்பவர்களைத்தான். இனிமேல் தான் போகப் போகத் தெரியும் என்று விட்டுவிட்டாள்.

அமுதனும், அதே போல் தான். தமிழினி கூட இல்லாமல் வகுப்பறை கூட ஏதோ போல் தோன்றியது. சில மாணவர்கள் அவனிடம் நன்றாகவே பேசினர். அதிலும் அவன் அருகில் அமர்ந்திருந்த பாண்டிராஜன் ஓரளவு நன்றாகவே பேசினான்.

“வணக்கம். நீங்க நல்ல மார்க் எடுத்துட்டு ஏன் இந்த குரூப் எடுத்தீங்க.? இன்னும் வேற நல்ல குரூப்பே கிடைச்சிருக்குமே.?” என்றான்.

“இல்ல, நான் வக்கீல்க்கு படிக்கணும்னு ஆசைப்படறேன். அதனால தான் இந்த குரூப் எடுத்தேன்.” என்று அவனுக்கு விளக்கம் கொடுத்தான் அமுதன்.

“ஓஓ.. நீங்க அவ்வளவு திறமையான பேச்சாளரோ.? அந்த மாதிரி படிப்பெல்லாம் ரொம்ப அரிதா தானே படிப்பாங்க. கேஸெல்லாம் கிடைக்கிறது ரொம்ப அசாதாரணமாச்சே.” என்றான்.

“படிப்பு படிக்கறது மட்டும் நம்ம கடமை இல்ல. அதுக்கப்பறம் நிறைய முயற்சியும், பயிற்சியும் பண்ணனும். அதுக்கான பலன் அதுலதான் தெரியும். எதுலயும் எடுத்ததுமே லாபம் வரணும்னு பார்க்கக் கூடாது.” என்று அமுதன் சொல்ல,

ஆஹா.. இவன் என்ன இத்தனை அருமையாய் பேசுகிறான். தத்துவங்களைப் பொழிகிறான். தான் தெரியாமல் சொல்லிவிட்டோமோ என்று யோசித்துக்கொண்டிருந்தான் அவன்.

“நான் ஏதோ தெரியாம பேசிட்டேன். மன்னிச்சிடுங்க. இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன்.” என்றான் பாண்டி.

“அய்யோ.. நீங்க வேற அப்படியெல்லாம் இல்ல. எனக்கு சொல்லணும்னு தோணுச்சு. அதனால தான் சொன்னேன்.” என்றான் அமுதன்.

அதோடு அவர்களின் இனிய நட்பு ஆரம்பமானது. பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வந்ததும் அமுதனும், தமிழினியும் சேர்ந்து கொண்டனர். அதுவரை அமுதனோடு வந்த பாண்டி, தமிழினியை யாரென்று கேள்விக்குறியோடு பார்த்தான்.

அதே போல், தமிழினியோடு வந்த சில மாணவிகளும் அதே போல் தான் அமுதனையும் பார்த்தனர்.

“அமுதன்.. இது யாரு.? உங்க ஆளா.?” என்று அவனைப் பிடித்து குசுகுசுவென காதில் ஓத, அவனோ முறைத்தபடி,

“இது என்னோட ஃப்ரெண்ட் தமிழினி. தமிழு.. இந்தப் பையன் பேரு பாண்டிராஜன். என்னோட கிளாஸ் தான். கொஞ்சம் நல்லாவே பேசறாங்க. உன்னை என்னோட ஆளான்னு கேக்கறாங்க.” என்று அவளிடம் சொல்ல,

“ஹூம்ம். எல்லாருக்கும் நம்மைப் பார்த்தா அப்படித்தான் கேட்கத் தோணுதுன்னு நினைக்கிறேன். இதே கேள்விய காலைலயே இதோ, என்னோட கிளாஸ் பொண்ணுக கேட்டுட்டாங்க.” என்றாள் தமிழினியும்.

அவர்கள் இருவரும் அப்படிச் சொல்ல, அவர்களுக்கோ ஒரு மாதிரி ஆனது. இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, அனைவரும் அப்படித்தான் யோசித்தனர். ஆனால், அப்படி இல்லை என்று பாண்டியிடமும், தமிழினியின் வகுப்பு மாணவிகளிடமும் தங்களது சிறு வயது முதலான நட்பை விவரித்தனர் இருவரும்.

“அப்பா, நிஜமாலுமே உங்க ரெண்டு பேரோட நட்பு ரொம்ப ஆச்சர்யப்பட வைக்குது. என்னை மன்னிச்சிடுங்க. அது தெரியாம நான் பாட்டுக்கு அப்படிக் கேட்டுட்டேன்.” என்றான் பாண்டி.

“ஏய்.. சாரி தமிழ். நாங்களும் அப்படித்தான் நினைச்சு உன்கிட்ட கேட்டோம். இப்போ தான் தெரியுது நீங்க எவ்வளவு நல்ல நண்பர்கள்ன்னு.” என்று அந்த மாணவிகளில் ஒருத்தியும் சொன்னாள்.

“பரவால்ல.. இருக்கட்டும். இதுமாதிரி நிறைய பேர் எங்க ஊருலயே பேசிருக்காங்க. இதெல்லாம் ரொம்ப சாதாரணம். நாங்க இந்த மாதிரி பேசற பேச்சையெல்லாம் காதுலயே போட்டுக்கறது இல்ல.” என்றாள் தமிழினி.

“ஆமாங்க.. நாங்க ரெண்டு பேரும் அதையெல்லாம் நினைச்சா இவ்ளோ வருஷம் நட்பா இருந்திருக்க முடியாது. அதை புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்குவாங்க. இல்லன்னா, அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்னு விட்டுடுவோம். அவ்ளோதான்.” என்று எளிமையாகச் சொன்னான் அமுதன்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள், அதன் பிறகு ஒவ்வொருவராய் விடை பெற்றனர். அதன் பிறகு தான் அமுதன், தமிழினியிடம் சொன்னான்.

“தமிழு நீ முன்னாடி ஸ்கூல் கேட் கிட்ட வெயிட் பண்ணு. நான் இங்க கராத்தே கத்துக்குடுக்குற மாஸ்டரப் போய் பார்த்துட்டு வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

சரி என்று சொன்னவள், அவன் சொன்னதைப் போல் பள்ளியின் கேட்டிற்க்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட முக்கால்வாசி மாணவர்கள் அனைவரும் போய்விட்டனர்.

கேட்டிற்க்கு அருகில் நிற்கும் வாட்ச்மேனோ டீ குடிக்கச் சென்று விட்டார். தமிழினி சுற்றும், முற்றும் வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அப்போது, அவளை அறியாமல் அவள் கண்கள் அதைப் பார்த்து விட்டன.

அவளுக்கு நன்கு பரிட்சயமான முகம் ஒன்று எதிர்த் திசையில் தன்னைப் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தாள். ஏனோ தெரியவில்லை, அவளுக்கு உள்ளுக்குள் சிறிது நடுக்கம் உண்டானது. அங்கே, குமரேசன் அவளை அசைவின்றி பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1373


உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும்...




 
அத்தியாயம் 22

தமிழினிக்கு ஏதோ ஒன்று தவறாகப்பட்டது. அன்று, அமுதனின் ஊருக்குச் சென்றிருந்த போது, அவன் பலமுறை அவளை ஒருமாதிரியாகவே பார்த்துக்கொண்டிருந்ததை அவள் கவனிக்காமல் இல்லை.

ஏற்கனவே, கோலாகலம் அமுதனிடம் நடந்து கொண்ட முறையையே நியாயப்படுத்திப் பேசிய விசாலாட்சி, கண்டிப்பாக தன் மகனின் பார்வை சரியில்லை என்று கூறினால், “அவன் ஆம்பளப் பையன். அப்படித்தான் இருப்பான். நீ தான் பொம்பளப் புள்ள. அடக்க ஒடுக்கமா ஒரு இடத்துல இருந்திருக்கனும்.” என்று அதற்க்கு மேலும் பேசுவார் என்று நினைத்து அமைதியாய் விட்டு விட்டாள்.

ஆனால், இன்றோ இவன் எதற்க்கு இதுவரை வர வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கையில் அமுதன் வந்து விட்டான். அவன் வரும் போதே தமிழினி ஏதோ ஒரு மாதிரி இருப்பதைப் பார்த்தான்.

“என்னாச்சு தமிழு.? ஏன் இப்படி நின்னுட்டிருக்க.?” என்றான்.

“நண்பா, ஒரே நிமிஷம் எதிர்ல பாரு.” என்றாள்.

“ஏன்.? என்னாச்சு.?” என்றவாறே எதிரில் பார்த்தவன், “அங்க ஒண்ணும் இல்லையே. எல்லாரும் நடந்து போய்ட்டிருக்காங்க. வண்டி, பஸ்ஸெல்லாம் போகுது. அவ்ளோதான்.” என்றான்.

உடனே சட்டென திரும்பிப் பார்த்தவள், அவன் அங்கே இல்லாதது கண்டு சற்று அதிர்ந்தாள். என்ன இது மாயமா.? இல்லை பிரமையா.? அப்படி இருந்தாலும், தனக்கு சம்பந்தமே இல்லாத இவன் எதற்க்கு வர வேண்டும் என்று நினைத்தபடி நின்றாள்.

“ஏய்.. தமிழு.. என்னதான் ஆச்சு.? எதுவுமே சொல்லாம ஏதோ யோசிச்சுட்டே இருக்க.” என்றான் திரும்பவும்.

“இல்ல.. ஒண்ணும் இல்ல வா போலாம்.” என்றாள்.

நடந்துகொண்டிருக்கும் போதே அவள் அதே யோசனையோடு வந்து கொண்டிருக்க அமுதனோ அவளிடம் பேசிக்கொண்டே வந்தான்.

“பரவால்ல தமிழு. அந்தக் கராத்தே மாஸ்டர் கூட, ரொம்ப நல்லாதான் பேசறார். சிலத செஞ்சி காட்டச் சொன்னார். நானும் செஞ்சேன். யாருகிட்ட கத்துக்கிட்டன்னு கேட்டார். சாமிநாதன் சாரப் பத்தி சொன்னதும், அவருக்கு பிடி தாங்கல. அவரப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, பார்த்ததில்ல. நீ அவர்கிட்டயா கத்துக்கிட்டு இருந்தன்னு கேட்டு ஆச்சர்யப்பட்டார்.” என்று அவன் உற்சாகத்தில் சொல்லிக்கொண்டே வந்தான்.

தமிழினியோ அவன் பேச்சுக்கெல்லாம், “ம்ம்..” என்று மட்டும் சொல்லிக்கொண்டு வந்தாள். அவள் கவனம் முழுக்க இப்போது குமரேசன் எதற்க்கு இங்கே வந்தான் என்பதைப் பற்றி மட்டுமே இருந்தது.

இருவரும் சென்று பஸ்ஸில் ஏறினர். கூட்டமாக இருந்தது. நின்று கொண்டே பயணம் செய்தனர். அவர்களது ஊர் நிறுத்தத்தில் இறங்கி இருவரும் நடந்து சென்றுகொண்டே இருக்கும் போது திரும்பவும் பேசினான் அமுதன்.

“வாரம் இரண்டு நாள் கராத்தே கிளாஸ்க்கு போகணும் தமிழு. ஒவ்வொரு புதன்கிழமையும், வியாழக்கிழமையும் ஸ்கூல் முடிஞ்சு ஒன்றரை மணி நேரம் சொல்லித்தராங்களாம். அடுத்த புதன்கிழமைல இருந்து போகணும். அப்போ மட்டும் நீ கொஞ்சம் முன்னாடியே கிளம்பற மாதிரி இருக்கும். இல்லன்னா, நாம வரும்போது இருட்டிடும். நான் எப்படியோ வந்திடுவேன். நீ பாத்து வந்துடுவ இல்ல.?” என்று அக்கறையோடு அவளைப் பார்த்துக் கேட்க,

நண்பனுக்கு தன் மேல் உள்ள அக்கறையை நினைத்து ஒருபுறம் சந்தோஷப்பட்டாலும், இன்று அவன் வந்ததைப் போல் அவன் இல்லாத சமயங்களில் வந்தால் என்ன செய்வது.? என்று நினைத்தாள்.

“என்னாச்சு தமிழு.. அப்போலிருந்து நான் மட்டும் தான் பேசிக்கிட்டே வரேன். நீ எதுவுமே பேச மாட்டிங்கற.? என்னாச்சு உனக்கு.?” என்று சொன்னபடியே அவள் முகத்தைப் பார்த்தான்.

கவலை தோய்ந்த முகத்துடனேயே, “இல்லடா. ஒண்ணும் இல்ல. நான் பார்த்துக்கறேன். நீ தாராளமா கராத்தே கத்துக்கோ.” என்று அவளுக்கு தைரியமளித்தாள் தமிழினி.

“ம்ம்.. இப்படிச் சொன்னாதான் என்னோட தமிழு. சரி, வீடு வந்திருச்சு. பார்த்துப் போ. நாளைக்கு ஸ்டாப்புக்கு வந்திடு. சரியா.?” என்று கிளம்பினான் அமுதன்.

இப்போதைக்கு இதை விட்டுவிடுவோம். எதுவாக இருந்தாலும், அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனது வீட்டின் வேலிபோட்ட கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள் தமிழினி.

அந்த வாரம் அப்படியே சென்று விட்டது. அதன் பிறகு, குமரேசனைக் காணவில்லை. அதனால், நிம்மதியாகவே அமுதனுடன் பள்ளிக்குச் சென்று வந்தாள் தமிழினி. கிட்டத்தட்ட இப்போது அனைவரும் வகுப்பில் நன்றாகவே பேசவும், பழகவும் ஆரம்பித்தனர்.

அடுத்த வாரம் புதன் கிழமை. அன்று முதல் முறையாக பள்ளியின் கராத்தே கிளாஸூக்குச் சென்றான் அமுதன். அன்றைய தினம் தமிழினி தன் கூடவே பேருந்தில் வரும் சில தோழிகளுடன் சென்று கொண்டிருந்தாள்.

அப்போது, பின்னாலேயே யாரோ வருவது போலொரு உணர்வில் தோழிகளில் ஒருத்தி திரும்பிப் பார்த்தாள். ஒருவன் தொடர்ந்து வர, “ஏய்.. பின்னாடி பாருங்க. ஒருத்தன் நம்மள ஃபாலோ பண்ணிட்டே வரான். உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சவனா.?” என்று சொல்ல,

உடனே அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் யாருக்கும் தெரியாத நிலையில் தமிழினி கண்களை அகல விரித்துப் பார்க்க, அனைவருக்கும் புரிந்து விட்டது.

“தமிழ். உனக்குத் தெரிஞ்சவனா.? எதுக்கு பின்னாடியே வரான்.?” என்று அவர்கள் கேட்க, அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அவள் எதுவும் சொல்லாமல் வேகமாக நடக்க, அவளுக்கு ஈடுகொடுத்து அவர்களும் நடந்து சென்று வந்த பேருந்தில் ஏறிச்சென்றனர்.

அவளின் ஊருக்குச் செல்லும் பேருந்தில் போகும் போது, யோசித்துக்கொண்டே வந்தாள். இதயம் இன்னும் வேகமாய்த் துடிப்பதை நிறுத்தவே இல்லை. அப்போதுதான் நினைத்தாள்.

தான் எத்தனை தைரியமானவள்.? இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு சமமானவள் என்று ஊரில் அனைவரும் பேசிக்கொண்டதுண்டு. அப்படியிருக்க, இவன் தன்னைத் தொடர்ந்து வருவதற்க்காகவெல்லாம் பயப்பட்டால் என்னாவது.?

ம்ஹூம்ம்.. இனிமேல் எதற்க்காகவும் பயப்படக்கூடாது. எதையும் தைரியமாய் எதிர்கொள்ள வேண்டும். அவன் என்னை ஒன்றும் தின்றுவிடப் போவதில்லை என்று தெரியும். பிறகு எதற்க்கு நாம் பயப்பட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஊர் வந்து சேர்ந்தாள்.

அடுத்த நாள் இதைப் பற்றி அமுதனிடம் பேசலாம் என்று நினைத்தாலும், ஏதோ ஒன்று தடுத்தது. ஏற்கனவே, அவனின் அத்தை குடும்பத்திற்க்கும் இவனுக்குமான உறவு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இது தெரிந்தால் தேவையில்லாமல் இவன் கண்டிப்பாக அழகேசனிடம் சொல்வான். பிறகு, அது அவர்கள் வீடு வரை தெரிந்து விடும். அதனால், இந்த விஷயத்தை நாமே பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று யோசித்து விட்டுவிட்டாள்.

அன்றும் அமுதனுக்கு கராத்தே கிளாஸ் இருந்ததால், அவள் மட்டுமே தோழிகளுடன் சென்றாள். அன்று ஏனோ அவனைக் காணவில்லை. ஆச்சர்யமாய் இருந்தது. சரி ஆளை விட்டால் போதும் என்று நினைத்து நிம்மதியாய்ச் சென்றாள்.

அடுத்த வாரம் மாரியின் கல்யாணம் வந்துவிட்டது. திங்கள் கிழமை ஒரு நாள் மட்டும் இருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு, விடுமுறை விண்ணப்பத்தையும் கொடுத்து விட்டு வந்தனர்.

அழகேசனோடு, அமுதனும், தமிழினியும் ஊருக்குக் கிளம்பினர். முன்னரே வந்ததால் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துக்கொண்டிருந்தார் அழகேசன். வயதான தந்தையால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியாது என்பதால் அவரே அனைத்தையும் பார்த்துக்கொண்டார்.

மாரிக்கு, அவர்கள் இருவரும் வந்ததில் பெரிய சந்தோஷம். அவர்களைப் பார்த்ததுமே கட்டிக் கொண்டாள். அவர்களுக்கும் அவளைப் பார்த்ததும் சந்தோஷம்.

கமலம் பாட்டிக்கு பலகாரங்கள் செய்ய ஊரில் உள்ள பல நல்ல உள்ளங்கள், அதுவும் மாரியைப் பற்றித் தெரிந்தவர்கள், அவளைப் பிடித்தவர்கள் என்று அனைவரும் வந்து உதவி செய்தனர். அதனால், கமலம் பாட்டியின் வேலைகள் சற்று எளிதானது.

அமுதனும், தமிழினியும் கூட, என்ன வேலை செய்வது.? என்று கேட்டு ஆளுக்கு ஒரு வேலையைச் செய்தனர். பல சமயங்களில் மாரியின் கூடவே இருந்தனர். கல்யாணத்திற்க்கு முந்தைய நாள் தான், ஏதோ அழைத்த மரியாதைக்காக விசாலாட்சி வந்தாள்.

கூடவே குமரேசன் மட்டுமே வந்திருந்தான். இந்த முறை கோலாவைக் கூட்டிக்கொண்டு வரவில்லை. எதற்க்கு வம்பு என்று நினைத்துவிட்டாள் போலும்.

வந்ததிலிருந்து எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. ஏதோ, பெயருக்கு வந்ததைப் போல் தான் நடந்து கொண்டாள். மாரியிடம் சுத்தமாகவே பேசவில்லை.

ஆனால், அதை மாரி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எப்பொழுதும் போலவே இருந்தாள். மாப்பிள்ளை அழைப்பு நடந்துகொண்டிருந்தது. அனைவரும் மண்டபத்திற்க்கு சென்று விட்டனர்.

மாரிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். தமிழினி கூடவே இருந்தாள். ஆனாலும், குமரேசனைக் கண்டதும், ஒரு மாதிரி தான் இருந்தது அவளுக்கு. அவன் அவளைப் பார்த்தவாறும், சில சமயம் அவளை சீண்டுவதைப் போலும் நடந்து கொண்டான்.

அனைத்தையும் அவள் அமுதனுக்காகவே பொறுத்துக்கொண்டாள். அமுதன் கல்யாண வேலைகளில் அழகேசனுக்குத் துணையாக அங்கும், இங்கும் சென்று கொண்டிருந்தான். ஆனால், குமரேசனும் விசாலாட்சியைப் போலவே எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருந்தான்.

அதை, அழகேசனும், தாத்தாவும் நினைத்தாலும், கல்யாணம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இருவரையும் எதுவும் சொல்லாமல் இருந்தனர். அதனால் தான், கமலமும் அமைதியாகவே இருந்தார்.

மாப்பிள்ளை அழைப்பின் போது, “பொண்ணுக்கு அண்ணன், தம்பி யாரும் இருக்காங்களா.? இருந்தா வந்து கால் கழுவி விடுங்க.” என்றார்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர்.

இது தெரிந்து முன்னரே, மாரி அமுதனிடம் சொல்லி வைத்திருந்தாள். “நீ தான் என்னோட தம்பி முறைக்கு, அவரோட கால் கழுவிவிடணும்.” என்று. அதற்க்கு அமுதனும் சம்மதம் தெரிவித்திருந்தான்.

இதுதான் சமயம் என்று எதிர்பார்த்திருந்தவளாய் விசாலாட்சி இடையில் புகுந்து, “டேய்.. குமாரு. எங்க இருக்க.? சீக்கிரம் வா. கூப்பிடறாங்கல்ல. வா, நீதான் மாரிக்கு தம்பி முறையாகுது. நீ தான் கால் கழுவி விடணும்.” என்று அவனை அவசரமாய் அழைத்து அருகில் வைத்திருந்த சொம்பை எடுத்துக் கொடுத்து, சாமிநாதனின் காலைக் கழுவி விடச்சொன்னாள்.

அழகேசனின் தந்தையும், கமலம் பாட்டியும் இதை எதிர்பார்க்கவில்லை. அமுதனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாரி சொன்னதைப் போல் அவருக்கு தான் முறை செய்ய முடியவில்லையே என்று வருந்தினான். இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

மற்ற விஷயங்களைப் பெரிதாய் விசாலாட்சி கண்டுகொள்ளவில்லை என்றாலும், மரியாதை தரும் விஷயங்களைப் பார்த்துப் பார்த்து அதில் தன்னையும், குமரேசனையும் ஈடுபடுத்தினாள்.

மாப்பிள்ளை அழைப்பு முடிந்து அவர்கள் நிச்சய முறைகளை செய்து கொண்டிருந்தனர். இருவீட்டாரும் தட்டை மாற்றிக்கொண்டனர். இன்ன பிற சடங்குகளையும் செய்து கொண்டிருந்தனர்.

இதற்க்கிடையில் தமிழினி எங்காவது தனியாகச் சென்றால், குமரேசன் பின்னாலேயே சென்றான். இதை ஒருமுறை அமுதன் கவனித்து விட்டான். தாங்க முடியாமல் அவனிடம் சென்று சொன்னான்.

“அண்ணா, நீங்க செய்யறது ரொம்பத் தப்பு. எதுக்கு தமிழு பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க.? அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.” என்று சொன்னான்.

“டேய்.. நான் அன்னைக்கே என்ன சொன்னேன். அவகிட்ட என்னைப் பத்தி சொல்லுன்னு சொன்னேன் இல்ல. அவ என்னைக் கண்டுக்கவே மாட்டிங்கறா.? நானும், ரெண்டு வாரமா உன் ஸ்கூலுக்கு வந்து பார்க்கறேன். அவ என்னைக் கண்டாலே ஓடிடறா.? என்ன அவகிட்ட என்னைப் பத்தி தப்புத்தப்பா பேசி வைச்சிருக்கியா.? அதனால தான், அவ அப்படி ஓடறாளா.?” என்று அவனோ மிரட்டினான்.

அப்போது அவன் என்ன சொல்கிறான் என்று அமுதனுக்குப் புரியவே இல்லை. “நீங்க எப்போ எங்க ஸ்கூலுக்கு வந்தீங்க.?” என்றான்.

“அதான், ஒவ்வொரு புதன் கிழமையும் நான் பொள்ளாச்சி கடைத் தெருவுக்கு வருவேன். அப்போதான் அவளைப் பார்த்தேன். நானும் பேசலாம்னு போனா, அவ என்னை பார்த்து ஓடற.? பஸ்ல ஏறுனதுக்கு அப்பறம் எனக்கு எதுவும் பேச முடியாமப் போயிடுது. சரி, இங்கயாவது பேசாலாம்னா எனக்கு நீயே தொந்தரவா சுத்திட்டிருக்க.” என்று சொல்ல,

அன்று தமிழினி ஒருமாதிரியாக இருந்ததன் காரணம் இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. ஆனால், தமிழினி ஏன் இதைத் தன்னிடம் சொல்லாமல் மறைத்தாள் என்று தான் அவனுக்குப் புரியாமல் இருந்தது. சரி, கல்யாணம் முடியட்டும் ஊருக்குச் செல்லும் போது, அவளிடம் பேசிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டான்.

குமரேசன் பேசும் போது கோபம் வந்தாலும், அவன் தன் அத்தையின் மகன் என்ற ஒரே காரணத்தினாலேயே அமைதியாய் இருக்கவேண்டியதாய்ப் போனது. அப்போதைக்கு அதைப் பற்றி எதுவும் பேச முடியாத நிலையில் விட்டான்.

அடுத்த நாள் காலை முகூர்த்த நேரத்தில், மந்திரங்கள் ஒலிக்க, மேளச் சத்தம் கொட்ட அனைவரின் ஆசிர்வாதத்தோடு, மாரியின் கழுத்தில் சாமிநாதன் தாலி கட்டினான்.

தன் குலவிளக்கை தன்னோடு கூட்டிக்கொண்டு போகும் எண்ணத்தில் சாமியின் முகம் ஜொலிக்க, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்க்கையில் திடீரென்று வந்து தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்தவனின் முகத்தைப் பார்த்து ஒருவித பரவசம் கொண்டாள் மாரி.

மாரியைக் கல்யாணக் கோலத்தில் பார்க்கும் போது, அழகேசனின் தந்தைக்கும், கமலம் பாட்டிக்கும், சந்தோஷமாக இருந்தது. இத்தனை நாட்களாய், தங்களுக்குப் பிறகு அவளுக்கு யார் இருக்கிறார்கள்.? என்று தாங்கள் கொண்ட கவலை இன்று அடியோடு போனதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

மாரியின் திருமணம் நல்லபடியாய் நடந்து முடிந்த திருப்தியோடு மாரியிடமும், சாமியிடமும் மற்றும் தாத்தா, பாட்டியிடமும் பிரியா விடைபெற்று மூவரும் ஊருக்குக் கிளம்பினர்.

செல்லும் போதே, தமிழினியிடம் மெல்ல பேச்சுவாக்கில் கேட்டான் அமுதன்.

“தமிழு.. நான் ஒண்ணு கேட்பேன். நீ மறைக்காம என்கிட்ட உண்மைய சொல்லணும்.” என்று கேட்பதற்க்கு முன்னாலேயே புதிர் போட்டான் அமுதன்.

“ம்ம்.. கேளுடா நண்பா. நான் உன்கிட்ட என்ன மறைச்சிருக்கேன்.? என்ன கேட்கப் போற.?” என்றாள்.

“குமரேசன் அண்ணா உன்னைப் பார்க்க நம்ம ஸ்கூலுக்கு வந்தாங்களா.?” என்று அமுதன் கேட்டதும், அதை எதிர்பார்க்காத தமிழினி என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தபடி வந்தாள்.

அமுதனோ, அவள் என்ன சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பில் அவளைப் பார்த்தான்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1292

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள லின்க்கில் தரவும் தோழமைகளே...

 
அத்தியாயம் 23

அமுதன் கேட்ட கேள்வியால் ஒருபுறம் அதிர்ந்து போனாலும், இவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்று யோசித்தாள் தமிழினி.

“சொல்லு. ஏன் பதில் பேச மாட்டிங்கற.?” என்றான்.

“உனக்கு எப்படித் தெரியும்.?” என்றாள்.

“எப்படியோ தெரியும். ஆனா, நீ முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு.” என்றான் சற்று அதட்டலாக.

“ஆமாடா நண்பா.. அன்னைக்கு நம்ம ஸ்கூல் முதல் நாள் சாயங்காலம் பார்த்தேன். நீ கூட கராத்தே கிளாஸ்க்கு கேட்டுட்டு வரும்போது தான் எதிர்ல நின்னு பார்த்துட்டு இருந்தாங்க. நான் திரும்பி நின்னுட்டேன். நீ வரும் போது காணோம். அதுக்கப்பறம், அதே மாதிரி நீ அடுத்த வாரம் கிளாஸ்க்கு போனதுக்கு அப்பறம் பின்னாடியே வந்தாங்க. பொண்ணுங்க கூட கேட்டாங்க. நான் எதுவும் சொல்லாமயே போய் பஸ் ஏறிட்டேன். அதுக்கப்பறம் வந்தா பாத்துக்கலாம்னு இருந்தேன். ஆனா, வரல. இங்க வந்ததுக்கப்பறம் கூட, பின்னாடியே தான் சுத்திட்டு இருந்தாங்க. அவங்களுக்கு என்ன பிரச்சினைன்னு தெரியல. எதுக்கு என் பின்னாடி வரணும்.? எனக்கு ஒண்ணும் புரியல. அவங்க எதுவும் என்கிட்ட பேசாம இப்படிப் பண்ணா என்ன பிரச்சினைன்னு நான் உன்கிட்ட சொல்றது.? அதுவும் இல்லாம உனக்கும், உங்க அத்தை குடும்பத்துக்கும் ஏற்கனவே பிரச்சினை. இதுல நான் வேற புது பிரச்சினைய உண்டு பண்ணனுமான்னு தான் இருந்துட்டேன்.” என்றாள் தமிழினி.

“நீ என்கிட்ட முதல்லயே இதை சொல்லியிருக்கணும் தமிழு. இவ்ளோ நாள் நீ என்கிட்ட மறைச்சதே எனக்கு சங்கடமா இருக்கு. அப்போ, நீ என் மேல வைச்சிருக்கிற நட்புக்கு கொடுக்கற மரியாதை அவ்ளோதானா.? உனக்கு ஒரு பிரச்சினைன்னா நான் பார்க்க மாட்டேனா.?” என்று சற்று ஆதங்கத்தில் பேசினான் அமுதன்.

அவனின் பேச்சு நியாயமானதே என்று அவளும் அமைதியாய் இருந்தாள்.

“முந்தாநேத்து அந்த அண்ணா மூலமா தான் விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு அப்போவே உன்மேல கொஞ்சம் வருத்தம் இருந்தது. மாரி அக்கா கல்யாணம் முடியட்டும்னு காத்திருந்தேன். ஏன், என்கிட்ட சொல்லாம மறைச்ச.? இதுக்கும் நான் அன்னைக்கே ஏன் ஒரு மாதிரியா இருக்கன்னு கேட்டேனே.? அப்போகூட சொல்லியிருக்கலாமே.?” என்று திரும்பவும் வருத்தத்தோடு பேசினான்.

“இல்லடா நண்பா. என்னைத் தப்பா நினைக்காத. உங்க குடும்பத்துக்குள்ள என்னால தேவையில்லாத பிரச்சினைகள் எதுக்குன்னு தான் உன்கிட்ட சொல்லல. மத்தபடி உன்கிட்ட மறைக்கணும்னு நினைக்கல.” என்றாள்.

“ஒரு விஷயத்த தெரிஞ்சுக்கோ தமிழு. இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப முக்கியமானவங்கன்னா அது அப்பாவும், நீயும் தான். அதுக்கப்பறம் தான் எல்லாருமே. அதுவும், அத்தையோட குடும்பத்தை நான் அறவே வெறுக்கறேன். என்னைக் குழந்தையா இருக்கும் போது அவங்க பார்த்துக்கிட்டாங்கன்னு அப்பா சொன்ன நன்றிக்கடனுக்காகத்தான் நான் அவங்க செஞ்ச எல்லாத்தையுமே பொறுத்துக்கிட்டேன். அப்பவும், அன்னைக்கு என்னால மாரி அக்கா அவமானப்பட்டாங்க. அப்போவே முடிவு பண்ணிட்டேன். இதுக்கும் மேல அவங்க உறவு எனக்கு தேவையில்லன்னு என் மனசுல ஒரு எண்ணம் ஆழமா பதிஞ்சிடுச்சு. அதுக்காக அவங்ககிட்ட பேசாமயோ அவங்க வீட்டுக்குப் போகாமயோ இருக்க மாட்டேன். கொஞ்சம் விலகி இருப்பேன். அவ்ளோதான்.” என்றான் அமுதன்.

“இல்ல நண்பா, நீ சொல்றது சரிதான். ஆனா, எந்த உறவுகளையும் அப்படி நாம தூக்கிப் போட முடியாது. ஏன்னா, உறவுகளே இல்லாதவங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும். எங்களை எடுத்துக்கோ, எங்களுக்கு உறவுன்னு யாருமே கிடையாது. அப்பாவும், அம்மாவும் இதுவரை அதை எதிர்பார்த்ததும் கிடையாது. நீயும், அய்யாவும் தான் எங்களுக்கு ஒரு உறுதுணை. இப்போ, ஊருல எல்லாரும் முன்ன விட நல்லாவே எங்க கூட பேசறாங்க, பழகறாங்க. ஆனாலும், யாரும் உறவாட வரதில்லையே. எங்க வீட்டுக்கு எந்த நாளாவது ஒரம்பரைன்னு யாராவது வந்து பார்த்திருக்கியா.? ஹூம்ம்.. யாரும் வந்தது கிடையாது, நான் யார் வீட்டுக்கும் போனதும் கிடையாது. இந்த முறை முதன் முதலா உங்க தாத்தா, பாட்டி வீட்டுக்குத்தான் வந்தேன். உறவினர்களோட வீடு இப்படித்தான் இருக்குமா.? அவங்களோட உபசரிப்பும் இப்படித்தான் இருக்குமான்னு.? நான் என்னையே கேட்டுக்கிட்டேன். அவ்ளோ புடிச்சிருந்தது. அதுவும், மாரி அக்காவையெல்லாம் என்னால நினைக்காம இருக்கவே முடியாது. வருஷம் ஒரு தடவையாவது அவங்களைப் பார்த்துடணும்னு ஒரு எண்ணம் எனக்குள்ள இருக்கு. அந்த அளவுக்கு எல்லாரும் என்கூட ரொம்ப நெருக்கமாயிட்டாங்க. இப்படி இருக்க குடும்பத்துக்கு என்னால எந்தப் பிரச்சினையும் வரக் கூடாதுன்னு நினைச்சேன். அது தப்பா.? சொல்லு.?” என்று தமிழினி பேச, வாயடைத்துப் போனான் அமுதன்.

“என்னால நம்ப முடியல தமிழு. நீ இந்த அளவுக்கு நல்லவளா.? இந்த அளவுக்கு ஒருத்தங்களப் பத்தி உன்னால யோசிக்க முடியுமா.? எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. இப்போ உன் மேல இருந்த சங்கடமும் காணாமப் போச்சு. என்னோட தோழிய நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ நினைச்சதுல எந்தத் தப்பும் இல்ல. ஆனா, என்கிட்ட மறைக்க வேண்டிய அவசியம் இல்லன்னு தான் சொல்றேன். ஏன்னா, இந்த மாதிரி விஷயங்களை என்னை விட அப்பா ரொம்ப சாமர்த்தியமா அணுகுவார். அவர் எதையும் எடுத்தோம், கவுத்தோம்னு செய்யற ஆளு இல்ல. அதனால, விடு நம்ம இந்தப் பிரச்சினை அடுத்த கட்டத்துக்கு போகுதுன்னு தெரிஞ்சா பாத்துக்கலாம். நீ எதுவும் கவலைப்படாத என்ன.?” என்றான் அமுதன்.

“நான் எதுக்கு நண்பா கவலைப்படப் போறேன்.? அதான், என் நண்பன் நீ இருக்கியே. எனக்காக எல்லாத்தையும் பார்த்துக்கறதுக்கு.” என்று அவள் சிறு வயதில் செய்வதைப் போல் தலையாட்டிச் சிரிக்க, அவனும் அதை ரசித்தவாறு சிரித்தான்.

அன்று இரவே இதைப் பற்றி அழகேசனிடம் சொன்னான் அமுதன். அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“இந்தக் குமரேசன என்னதான் செய்யறது.? இந்த அளவுக்கு பொண்ணுங்க பின்னாடி சுத்தற கீழ்த்தரமான வேலையைப் பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. ஆனாலும், இதை இப்படியே விடவும் முடியாது. சரி, போகட்டும் அடுத்த முறை நீ தமிழ் கூட போ. அவன் நீ இல்லாத நேரமா தான் வந்து அவளைத் தொந்தரவு பண்றான்னா, அவ கூட நீ இருக்கறது தான் அவளுக்குப் பாதுகாப்பு. சரியா.?” என்றார் அழகேசன்.

“சரிப்பா. நான் கராத்தே கிளாஸ்க்கு வியாழன், வெள்ளி போய்க்கிறேன். கராத்தே சார்கிட்ட இதைப்பத்தி பேசறேன்.” என்று சொன்னான்.

விடுமுறை நாட்கள் முடிந்து அவர்கள் பள்ளி திரும்பியிருந்த நிலையில் பாடங்களில் பலவற்றை ஆசிரியர்கள் நடத்தி முடித்திருந்தனர். அதே போல், நோட்டில் எழுதுவதும் அதிகமாக இருந்தது. வகுப்பு தோழிகளிடம் தமிழினியும், அமுதன் பாண்டியிடமும் நோட்டுகளை வாங்கி வந்து வீட்டில் உட்கார்ந்து எழுதவே நேரம் சரியாக இருந்தது.

அமுதனின் கோரிக்கையின் படி, பள்ளியின் கராத்தே மாஸ்டர் அவனுக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயிற்சி அளிக்க சம்மதம் தெரிவித்தார்.

அதனால், புதன்கிழமைகளில் இருவரும் ஒன்றாகவே சென்றனர். ஆனால், அதன் பிறகு ஏனோ குமரேசனைக் காணவில்லை. பரவாயில்லை அப்படியே விட்டுவிட்டான் போலும் என்று நினைத்து தமிழினியும் நிம்மதியாக இருந்தாள்.

ஒரு மாதம் கழித்து, ஒரு நாள் வியாழக்கிழமை அமுதன் கராத்தே கிளாஸூக்கு சென்றிருந்த நேரம், தமிழினி பேருந்து நிறுத்தத்தில் தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். அப்போது, குமரேசன் வந்துவிட்டான். உடனே, தோழிகளில் ஒருத்தி தமிழினியிடம் கூறினாள். ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், உள்ளுக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனை முறைத்தாள்.

அவனோ அவளுக்கு அருகில் வந்து, “தமிழ் உன்கிட்ட பேசணும். இங்க நிறைய பேர் இருக்காங்க. தனியா பேசணும். கொஞ்சம் அந்த வீதிக்குப் போய் பேசுவோமா.?” என்றான்.

இவனுக்கு எவ்வளவு தைரியம்.? தன்னிடம் பேசுவதற்க்கு தனியாக அழைக்கிறான் என்று நினைத்தவாறு, “அப்படியெல்லாம் தனியா வர முடியாது. என்ன பேசணுமோ இங்கயே பேசுங்க.” என்றாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவன் மெல்லமாக அவளிடம் பேசினான். “சரி, எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. உன்னை பாட்டி வீட்டுல பார்த்த்துல இருந்தே எனக்கு உன்னைப் பிடிச்சிருச்சு. எப்பவும் உன்னோட நினைப்பாவே இருக்கு. இதை நான் அமுதன்கிட்ட சொல்லிட்டேன். அவன் உன்கிட்ட சொன்னானா இல்லையான்னு தெரியல. நீயும் என்னை விரும்பணும். எனக்கு நீ வேணும். இதை உன்கிட்ட சொல்லணும்னு தான் உன் பின்னாடியே சுத்தினேன். ஆனா, சந்தர்ப்பம் கிடைக்கும் போது, நீ ஓடிடற. அப்பறம், நான் எங்க சொல்றது.? இப்போதான் சொல்லிட்டேனே. இனிமேல் தினமும் வருவேன். நீ அமுதன விட்டுட்டு என்கூட தான் வரணும். அவன் பக்கமே போகக் கூடாது. ஏன்னா, அவனுக்கு என் தங்கச்சி இருக்கா. புரியுதா.?” என்று அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்தாள் தமிழினி.

இதயம் வேகமாய் துடித்தது. அதே போல், இவன் தன்னிடம் சொல்கிறானா.? இல்லை மிரட்டுகிறானா.? என்பது போல் ஆனது. அவன் அப்படித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவளுக்கு அதற்க்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை. அவள் நகர முயலும் போது, குமரேசன் அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

அவளோ, இதை எதிர்பார்க்காமல் கையை அவனிடமிருந்து உதற, அவனோ, “எதுவுமே சொல்லாமப் போனா, விட்டுடுவேனா.? பதில் சொல்லு.” என்று மிரட்டினான்.

அவள் வேகத்தைக் கூட்டி அவனிடமிருந்து கையை இழுத்தபடி ஓடி வந்தாள். அதற்க்குள் அங்கே இருந்தவர்கள் குமரேசனை சத்தம் போட, அவன் அங்கிருந்து வேகமாய்ச் சென்றான்.

தமிழினிக்கு மிகவும் அவமானமாய் இருந்தது. அனைவர் முன்னிலையிலும் ஒருவன் தன் கையைப் பிடித்து இழுத்தது அவளால் தாங்க முடியவில்லை. கிட்டத்தட்ட அழுதே விட்டாள். தோழிகள் தான் அவளைச் சமாதானம் செய்து பேருந்தில் ஏற்றினர். அழுதுகொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

அவள் அழுதுகொண்டே வருப்பதைப் பார்த்ததும், கோகிலாவுக்கு பதட்டமானது.

“என்னாச்சுடி தமிழு.? இப்படி இருக்க.?” என்று அவள் கையைத் தொட, அவள் உடம்போ நெருப்பாய்க் கொதித்தது. நிலையை உணர்ந்து அவளை உள்ளே அழைத்து வந்து உடை மாற்ற வைத்து, படுக்க வைத்து தண்ணீர் பற்றுப் போட்டாள் கோகிலா. கஷாயம் கலந்து கொடுத்தாள். அதைக் குடித்தபிறகு நன்றாக உறங்கினாள் தமிழினி.

ஆனால், என்ன நடந்தது என்று தெரியாமல் கோகிலாவுக்கு சற்று பயமாகவே இருந்தது. ரங்கா வந்ததுமே அனைத்தையும் சொன்னாள் கோகிலா.

அவரோ, “ஏதாவது காத்து, கருப்பு அடிச்சிருக்கும் புள்ளைக்கு. இரு நான் முனியப்பன் சாமி கோயிலுக்குப் போய் மந்திரிச்சு கயிறு வாங்கிட்டு வரேன். கட்டிவிடலாம்.” என்று வந்ததும் வராததுமாக கிளம்பினார்.

கயிறு மந்தரித்து வாங்கி வந்து கட்டி விட்டனர். திருநீறு பூசி விட்டனர். கொஞ்சம் பரவாயில்லை போல் தெரிந்தாள். இருந்தாலும், நடந்ததை எப்படி பெற்றவர்களிடம் சொல்ல முடியும்.? அவர்கள் அதை நினைத்து கவலை கொள்வார்களே. அதே போல், தன்னைப் படிப்பதற்க்கு அனுப்பி வைக்கவும் யோசிப்பார்களே என்று எதுவும் சொல்ல முடியாமல் இருந்தாள் தமிழினி.

அடுத்த நாள் காலை தமிழினியின் வீட்டிற்க்கு வந்தான் அமுதன். அவள் நீண்ட நேரமாக வரவில்லை என்று தெரிந்தே அவன் வந்தான். “அவளுக்குக் காய்ச்சல், படுத்திருக்கிறாள்” என்று கோகிலா சொன்னதால் அவளைப் பார்க்காமல் கூட செல்லும்படி ஆனது.

என்னவாயிற்று இவளுக்கு.? திடீரென்று காய்ச்சல் எப்படி வந்தது என்று யோசித்தவாறே, பேருந்தில் ஏறி பள்ளி வந்து சேர்ந்தான் அமுதன். அன்று மாலை தமிழினியின் வகுப்புத் தோழிகள் அமுதனிடம் அவளைப் பற்றி விசாரிக்க, அவளுக்குக் காய்ச்சல் என்பதை அவர்களிடம் கூறினான்.

அவர்களோ, முந்தைய நாள் நடந்ததை ஒன்றுவிடாமல் கூறினர். அதனால் தான் அவளுக்கு காய்ச்சலே வந்திருக்கும் என்றும் கூறினர். அனைத்தையும் கேட்ட அமுதனுக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ தெரியவில்லை. ஒரு வெறி கொண்டு குமரேசனை எதிர்கொள்ளத் தயாரானான்.

தமிழினியின் தோழிகள் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருக்க, குமரேசன் தமிழினியைக் காணவில்லை என்று தேடினான். அவர்களில் ஒருத்தியிடம் வந்து, “என்னாச்சு, தமிழினி இன்னைக்கு ஸ்கூல்க்கு வரலையா.?” என்று கேட்க,

“அத என்கிட்ட கேளுங்க. நான் சொல்றேன்.” என்றபடி மறைவாய் நின்றிருந்த பக்கத்திலிருந்து வெளிப்பட்டான் அமுதன். அவனைக் குமரேசன் எதிர்பார்க்கவில்லை.

“நீ எங்க வந்த.? உன்கிட்ட எதுக்கு நான் கேக்கணும்.?” என்று சண்டைக்கு வந்தான் குமரேசன்.

“அண்ணா, நீங்க நேத்து நடந்துக்கிட்டது ரொம்பத் தப்பு. தமிழ்கிட்ட கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமப் பேசினதும் இல்லாம, கேவலமா அவ கையைப் புடிச்சு அசிங்கப்படுத்தியிருக்கீங்க. நீங்க என்ன பண்ணாலும், நான் பொறுத்துட்டுப் போயிடுவேன்னு நினைச்சீங்களா.? அவ என்கிட்ட பேசுவா, பழகுவா, ஏன் என்கூடதா இருப்பா. உங்களுக்கு என்ன அதைப்பத்தி.?” என்று அவன் சொல்ல, குமரேசன் அவனை அறைந்து விட்டான்.

“என்ன ரொம்ப்ப் பேசற.? என்னைப் பத்தி என்ன நினைச்ச.? நான் தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல, என் தங்கச்சியத் தவிர எந்தப் பொண்ணையும் நீ நினைக்கக் கூடாது, பழகக் கூடாதுன்னு. திரும்பவும் அப்படித்தான் இருப்பேன்னு சொல்ற.? உனக்கு எவ்ளோ தைரியம்.?” என்றபடி திரும்பவும் அவனை அடிக்கச் செல்ல, ஓங்கிய அவனின் கையைப் பிடித்து முறுக்கினான் அமுதன்.

வலி தாங்காமல், “ஆஆஆஆஆ... வலிக்குது..” என்று கதறினான் குமரேசன். நிறுத்தத்தில் இருந்தவர்கள் அனைவரும் இவர்களின் சண்டையைப் பார்த்தனர்.

தான் கற்றுக்கொண்டிருந்த கராத்தேயின் ஒட்டுமொத்த பலத்தையும் குமரேசனிடம் காட்டினான் அமுதன். அவனை பலம்கொண்டு தாக்கினான். சிலர் அவர்கள் இருவரையும் பிடித்து அவர்களின் சண்டையைத் தடுத்தனர். விஷயம் அப்போதே, ஸ்கூல் வரை சென்று விட்டது.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1279

உங்களின் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விமர்சனங்களைத் தனியாக கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...
 
அத்தியாயம் 24

அழகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் பள்ளிக்கு செல்லும்படி ஆனது. பள்ளியின் முதல்வர் அவன் இப்படி நடந்துகொண்டது முறையற்றது என்று சொல்ல, எப்படியோ அழகேசன் அவனுக்கு ஆதரவாகப் பேசி அவன் பக்கமிருக்கும் நியாயத்தைச் சொல்லி ஒரு வழியாய் அவரை சமாதானம் செய்தார்.

இதற்க்கு மேல் இப்படி நடக்காது என்று ஒரு கடிதம் எழுதி அதில் கையெழுத்து போட்டுக்கொடுத்தவர், அடுத்து அமுதனைக் கூட்டிக்கொண்டு பஸ் ஏறி விசாலாட்சியின் வீட்டிற்க்கே நேரடியாய் சென்று விட்டார்.

அன்று பார்த்து நடேசனும் வீட்டில் இருக்க, குமரேசன் சண்டை போட்டுக்கொண்டு வந்திருப்பதைப் பார்த்து அனைவரும் வீட்டில் மாறி, மாறி கேட்டுக்கொண்டிருந்தனர். பதில் பேசாமலே இருந்தான் குமரேசன்.

திடீரென்று வந்து நின்ற அழகேசனையும், அமுதனையும் பார்த்து அதிர்ச்சியில் இருந்தனர் அனைவரும்.

வந்ததுமே அழகேசன் ஆரம்பித்தார், “இதப் பாரு விசாலம். குமரேசன் பண்றது ஒண்ணும் சரியில்ல. தேவையில்லாம அந்த தமிழ் பொண்ணு பின்னாடி சுத்தி, நேத்து அந்தப் பொண்ணோட கையைப் புடிச்சு இழுத்து பஸ் ஸ்டாப்ல வம்பு பண்ணிருக்கான். அதைக் கேட்கப் போன அமுதனையும் அடிச்சிருக்கான். அவனும் திருப்பி அடிச்சிட்டான். இனிமேல் இது மாதிரி பண்ணக் கூடாதுன்னு அவனுக்குக் கொஞ்சம் புத்திமதி சொல்லிவையுங்க. நானும் உன் பையன்னு தான் பொறுமையா இருந்தேன். ஆனா, இன்னைக்கு இவன் பண்ண வேலைக்கு என்னால சும்மா இருக்க முடியல. அமுதனோட ஸ்கூல் வரைக்கும் தெரிஞ்சு இப்போ அது எவ்ளோ பெரிய பிரச்சினையா ஆயிடுச்சு தெரியுமா.? இதுல அமுதனோட தப்பு எதுவும் இல்ல. ஆனா, அவனுக்குத்தான் கெட்டப் பேரு. அவங்க ஹெட் மாஸ்டரப் பார்த்துட்டு, அவங்க கொடுத்த லெட்டர்ல கையெழுத்துப் போட்டுக்குடுத்துட்டு இப்போ நேரா இங்க வரேன்.” என்று சொல்லிமுடித்தார்.

“பொம்பளப் பிள்ள அடக்க ஒடுக்கமா இல்லைன்னா, ஆம்பளப் பையன் என்ன பண்ணுவான்.? அதான், பின்னாடி வந்திருப்பான். இப்போ, தப்பு எங்க பையன் மேல வந்திருச்சோ.?” என்று குமரேசனின் பாட்டி ஜாடையாகச் சொன்னார்.

“அம்மா, நீ கொஞ்சம் சும்மா இரு. டேய். இங்க வா. மச்சான் சொல்றது உண்மையா.?” என்று கேட்க, அவன் அமைதியாய் நின்றிருந்ததைப் பார்த்தே தெரிந்து கொண்டார் நடேசன்.

அவனை இழுத்துப் பிடித்து கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்தார். அவனை அடிக்கவும் செய்தார். பெரியவர்களும், விசாலாட்சியும் நடேசனைப் பிடித்து இழுத்தனர்.

“மன்னிச்சிடுங்க மச்சான். அவன் ஏதோ வயசுக்கோளாறுல பண்ணிட்டான். இனிமேல் நான் இப்படி நடக்காம பார்த்துக்கறேன்.” என்று சொல்லிவிட்டு நின்றார் நடேசன்.

“நீங்க எதுக்குங்க மன்னிப்பு கேட்கறீங்க.? அவன் ஒண்ணும் தப்பு பண்ணல. அந்தச் சிறுக்கி தான் தப்பு பண்ணிட்டு இவன் மேல பழியப் போட்டிருப்பா. இவங்க ரெண்டு பேரும் அதுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்காங்க. இத நீங்களும் நம்பிட்டு நம்ம புள்ளையப் போய் அடிச்சிட்டீங்களே.! பாவம் அவன். அவனுக்கும், இதுக்கும் சமபந்தமே இருக்காது.” என்று விசாலாட்சி இந்த நேரத்திலும் குமரேசனுக்கு ஆதரவாகப் பேசினாள்.

கோலாகலம் இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் நின்று கொண்டிருந்தாள். அப்போது, அழகேசன் திரும்பவும் பேசினார்.

“இப்படிப் பேசிப் பேசி தான் உன் பொண்ணை கெடுத்து வைச்சிருக்க. இப்போ, உன் பையனுக்கு பரிஞ்சு பேசி அவனையும் கெடுக்கப் பாக்காத. உன்னால நம்ப முடியலைன்னா, வந்து நீயே அவங்க வகுப்புல படிக்கிற பசங்ககிட்ட கேட்டுப் பாரு. அவங்க முன்னாடி தான் இவன் அந்தப் பொண்ணு கையைப் புடிச்சி இழுத்திருக்கான். அத, சில பேர் பஸ் ஸ்டாப்லயே பார்த்திருக்காங்க. இதுக்கு மேலயும் உனக்கு ஆதாரம் வேணுமா. இல்ல, அவங்க எல்லாரையும் கூட்டிட்டு வரவா.?” என்றார்.

“வேண்டாம் மச்சான். நீங்க அவ பேசறத எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. அவளால தான் இன்னைக்கு என் பசங்க இந்த நிலைமைக்கு வந்துட்டாங்க. ஆரம்பத்துலயே கண்டிச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது. ஆனா, எல்லாரோட மனசுலயும் ஆசைய வளர்த்து விட்டுட்டு, அதே மாதிரி ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்கா. இனிமேல் இவ பாத்துக்கிட்ட லட்சணம் போதும். என் பசங்கள எப்படி வைச்சுக்கணும், அவங்களுக்கு என்ன கத்துக்குடுக்கணும்னு எனக்குத் தெரியும். என்னை மீறி என் பசங்க எதுவும் பண்ண மாட்டாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்படி என் பேச்சை மதிக்காம ஏதாவது செஞ்சா அவங்க அப்பான்னு ஒருத்தர் இருக்கறதையே மறந்துட வேண்டியது தான். இனிமேல் இது மாதிரி ஒரு விஷயம் எங்க வீட்டுல நடக்காது. அதுக்கு நானே சாட்சி. அதையும் மீறி யாராவது ஏதாவது பண்ணாங்கன்னா அப்பறம் நான் உயிரோடயே இருக்க மாட்டேன். நீங்க அமுதனக் கூட்டிட்டுப் போய்ட்டு வாங்க.” என்று மரியாதையாகவும், அதே போல் உறுதியாகவும் பேச அதோடு பேச்சை வளர்க்காமல் கிளம்பினர் அழகேசனும், அமுதனும்.

அவர்கள் சென்ற பிறகு, திரும்பவும் பேசினார் நடேசன். “அவன் தப்பு பண்ணிருக்கான். நீ என்னமோ அவன் பண்ணதுதான் சரின்னு அவனுக்கு பரிஞ்சு பேசிட்டிருக்க.? உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. புள்ளைங்கள இப்படித்தான் அது, இதுன்னு சொல்லி மனசைக் கெடுத்து விடுவியா.? இவன், கொஞ்ச நாளா பொள்ளாச்சிக்கு கடைக்குப் போயிட்டு வரேன்னு சொல்லும் போதே நினைச்சேன், ஏதோ தப்பு பண்றான்னு. ஆனா, ஒரு பொண்ண இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துவான்னு நான் நினைக்கவே இல்ல. இதுவே நம்ம கோலாவுக்கு நடந்திருந்தாலும் நீ இதே தான் சொல்லுவியா.? உனக்குப் புடிக்கலைன்னா சும்மா இரு. அதுக்காக, அபாண்டமா பழி போடாத. கொஞ்சமாவது மனசாட்சியோட பேசு.” என்று விசாலாட்சியிடம் சராமாரி கேள்விகளைக் கேட்டார் நடேசன்.

விசாலாட்சிக்கு பதில் பேச முடியவில்லை. பெரியவர்களும் கூட அமைதியாகத்தான் இருந்தனர்.

“அப்போ சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன். அப்பான்னு ஒருத்தர் உங்களுக்கு வேணும்னு நினைச்சா, நான் சொல்றதைக் கேட்டு நடங்க. இல்ல அதெல்லாம் முடியாது, நாங்க எங்க இஷ்டப்படிதான் நடப்போம்னு நினைச்சா, இந்த அப்பா செத்துட்டேன்னு நினைச்சுக்கோங்க.” என்று சொன்னதும், கோலா அழுதுகொண்டே வந்து அவரைப் பிடித்துக்கொண்டு சொன்னாள்.

“அப்பா, ஏன் பா இப்படியெல்லாம் பேசறீங்க. எங்களுக்கு நீங்க வேணும் பா. நீங்க இல்லாம நாங்க எப்படிப்பா இருப்போம்.? இனிமேல் நீங்க சொன்னதை மட்டுமே கேட்கறோம். உங்கள மீறி நடந்துக்க மாட்டோம்.” என்று கதறினாள்.

குமரேசனும் நடுங்கிக் கொண்டே வந்து அவரின் காலைப் பிடித்து, “என்னை மன்னிச்சிடுங்கப் பா. நான் ஏதோ ஒரு வயசுக்கோளாறுல பண்ணிட்டேன் பா. ஆனா, நீங்க இந்த மாதிரி சொல்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அந்தப் பக்கமே போயிருக்கமாட்டேன் பா. நானும், இனிமேல் நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன் பா. என்கிட்ட பேசுங்க பா.” என்று அவனும் கதறினான்.

அவனைத் தூக்கியவாறு, கோலாவையும் பிடித்துக்கொண்டு, “இப்போ தான் நீங்க என்னோட பசங்க. ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க. எப்பவும், நாம வற்புறுத்தி யாரையும் அடிபணிய வைக்க முடியாது. அவங்களுக்கா உங்க மேல விருப்பம் இருக்கணும். அப்படி இல்லன்னா, அதுக்காக கொஞ்சம் காத்திருக்கலாமே தவிர, மனசுல இப்படி வன்மத்த வைச்சுட்டு எதையும் அடைஞ்சுடலாம்னு நினைக்கக் கூடாது. நீங்க விரும்பறவங்களுக்கு உங்க மேலயும் விருப்பம் இருக்கணும் தானே.? அதை விட்டுட்டு உங்க அம்மா பேச்சக் கேட்டு ஆடுனதுக்கு இப்போ என்ன பேரு உங்க ரெண்டு பேருக்கும் கிடைச்சிருக்கு பாத்தீங்களா.? நீங்க இந்த மாதிரியெல்லாம் யோசிக்காம, நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும். அதுதான் இந்த அப்பாவோட ஆசை.” என்று அவர் கண்ணீர் சிந்த,

இருவரும் அதைப் பார்த்து பதறி விட்டனர். “அப்பா, அழாதீங்க பா. எங்களுக்கு கஷ்டமா இருக்கு. நீங்க இந்த மாதிரி பேசியோ, அழுதோ நாங்க பார்த்ததே இல்ல. இன்னைக்கு எங்களால நீங்க தலைகுனிய வேண்டியதா போயிடுச்சு. இனிமேல் நாங்க ரெண்டு பேரும் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே நடந்துக்கறோம். இனிமேல் எந்தக் கெட்ட பேரும் எடுக்கற மாதிரி நடந்துக்க மாட்டோம்.” என்று கோலா அழுதுகொண்டே சொல்ல,

குமரேசனும், “ஆமா பா. நாங்க இனிமேல் தப்பு பண்ண மாட்டோம். நீங்க சொல்ற மாதிரி நல்ல பசங்களா இருப்போம்.” என்றான்.

அப்போதுதான் நடேசனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. தேவையில்லாமல் இத்தனை வருடங்களாக விசாலாட்சி வளர்த்துக்கொண்டிருந்த எண்ணத்தை இன்று அவர் அடியோடு அழித்து விட்டார். இனிமேலாவது அவர்கள் திருந்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அழகேசனும், அமுதனும் ஊர் வந்ததுமே தமிழினியின் வீட்டிற்க்குச் சென்றனர். அங்கே ரங்கன் எதையோ யோசித்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்திருக்க, அவர்கள் கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வருவதைப் பார்த்த்தும் எழுந்து நின்று அழகேசனுக்கு வணக்கம் சொன்னார்.

“தமிழுக்கு இப்போ எப்படி இருக்கு ரங்கா.?” என்று அவரைப் பார்த்ததுமே விசாரித்தார்.

“என்னாச்சுன்னே தெரியலைங்க அய்யா. நேத்துல இருந்து புள்ள காய்ச்சல்ல சுருண்டு படுத்துட்டு இருக்காளுங்க. சரியா சாப்பிடக் கூட இல்லைங்க. பாவம் வாந்தி கூட வந்திடுச்சுங்க. இப்போ தான் கோகிலா உள்ள கூட்டிட்டுப் போய் படுக்க வைச்சிருக்காங்க அய்யா.” என்றார் கவலையுடன்.

“சரி, ஒண்ணும் இல்ல. நான் அவளைப் பார்க்கறேன்.” என்றபடி உள்ளே நுழைய, அவருடன் சேர்ந்து அமுதனும் உள்ளே சென்றான்.

ஒரு சின்ன கொட்டகையில் இத்தனை நாள் எப்படித்தான் இருந்தார்கள் என்று தெரியவில்லை. மிகவும் சிறிய அளவிலான இடம். அன்று தான் முதன் முறை அமுதன் அவர்கள் வீட்டிற்க்குள் வந்தான். எப்போது வந்தாலும், திண்ணையிலேயே அமர்ந்து பேசிவிட்டு சென்று விடுவான்.

அழகேசனும், அமுதனும் வந்திருப்பதைக் கண்டு கோகிலா எழுந்து நின்றாள். தமிழினி படுத்திருந்தவள், எழுந்து உட்கார்ந்தாள்.

“ம்ம்ம்ம்... படு, படு தமிழ். இப்போ, எப்படி இருக்கு.? ஏன் இவ்ளோ சோர்ந்து இருக்க.?” என்று கேட்க, அமைதியாய் இருந்தாள் தமிழினி.

அவள் அப்படி இருப்பதைப் பார்த்து மனதே கேட்கவில்லை அமுதனுக்கு. அழுகையே வந்துவிடும் போல் இருந்தது. ஒரே நாளில் மிகவும் வாடிப் போய்விட்டதாய் உணர்ந்தான். அதை நினைக்கும் போது குமரேசனை இன்னும் நான்கு அடி அடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

“ம்ம்.. கோகிலா கொஞ்சம் வெளிய இரு மா. நான் கொஞ்சம் தமிழ்கிட்ட பேசிட்டு வரேன்.” என்று சொல்ல, கோகிலா இன்னும் கவலையுடனேயே வெளியே வந்தார்.

அவர்கள் என்ன நடந்ததென்று தெரியாமல் இன்னும் பதட்டத்துடனேயே இருக்க, அப்போதுதான் வெளியே வந்தார் அழகேசன். மிக நிதானமாக அவர்களிடம் நடந்த விஷயத்தைக் கூறினார்.

அதைக் கேட்டவர்கள் முதலில் பயத்துடனேயே கேட்டனர். “என்னங்கய்யா சொல்றீங்க.? நீங்க சொல்றத எங்களால நம்ப முடியலைங்க. இப்படியெல்லாம் ஊர் உலகத்துல நடக்குதுன்னு தெரிஞ்சா பேசாம அவ வீட்டுலயே இருந்துட்டு போகட்டும்.” என்று கோகிலா சொல்ல,

“ம்ம்ம். இதுக்குத்தான் அவ பயந்துக்கிட்டு உங்ககிட்ட எதுவும் சொல்லாம இருந்திருக்கா. அதுதான் இன்னும் அவ மனசை ரொம்ப போட்டு அலைகழிச்சிட்டு இருக்கு. அதனாலயே அவளுக்கு இன்னும் உடம்பு நல்லாகாம இருக்கு. முதல்ல பொண்ணுகளுக்கு ஒரு பிரச்சினைன்னா, அது என்ன பிரச்சினை.? எப்படி ஆச்சு.? எந்தப் பிரச்சினைன்னாலும் பாத்துக்கலாம். நீ படி, அது போதும்னு சொல்லுங்க. அப்போதான் பொண்ணுங்க எந்தப் பிரச்சினைன்னாலும் உங்ககிட்ட தைரியமா எல்லாத்தையும் சொல்லுவாங்க. அவங்களுக்கும் உங்க மேல ஒரு நம்பிக்கை வரும். ஆனா, நீங்க இப்படி வீட்டுக்குள்ளயே போட்டு பூட்டி வைச்சா அது நல்லதுக்கில்ல. அவளுக்கு ஒரு பிரச்சினைன்னு தெரிஞ்சதுமே அமுதன் போய் அதைக் கேட்டு அது பிர்ச்சினையே ஆயிடுச்சு. ஆனாலும், நான் எதுவும் சொல்ல்ல. ஏன்னா, இந்த மாதிரி விஷயத்துல அந்த இடத்துல நானா இருந்தாலும் அதைத்தான் செஞ்சிருப்பேன். அவளுக்கு ஒண்ணுன்னா அவன் போய் கேட்டிருக்கானே, அதுதான் வேணும். அந்த மாதிரி பக்கபலமா இருந்தா அவ எதுக்கு இந்த மாதிரி பயந்துட்டு எதுவும் சொல்லாம இருக்கா.?” என்றார் அழகேசன்.

“தப்புதாங்கய்யா.. இனிமேல் நாங்க அப்படி நினைக்க மாட்டோம். அவ மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. அதுவும் இல்லாம, நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு பக்கபலமா இருக்கும் போது, நாங்களுமே இனிமேல் அவளுக்கு உறுதுணையா இருப்போம். அவ நாளைக்கே நல்லாயிட்டு பள்ளிக்கு வருவா. நீங்க எங்க பேச்சை நம்பலாம்.” என்று ரங்கன் உறுதியளித்தார்.

அதே போல், அடுத்த நாள் எப்பொழுதும் போல தமிழினி பேருந்து நிறுத்தத்திற்க்கு வந்து சேர்ந்தாள். அவளை எதிர்பாத்தவனாக அமுதனும் வந்தான்.

“அப்பா, தமிழு இன்னைக்கு இவ்ளோ உற்சாகமா இருக்கே. நேத்து உடம்பு முடியாமப் பார்த்த தமிழா இதுன்னு தோணுது.” என்று சொன்னான் அமுதன்.

“ம்ம்.. ஆமாண்டா நண்பா. என்னோட உற்சாகத்துக்குக் காரணம் நீயும், அய்யாவும் தான். நீங்க மட்டும் நேத்து வந்து எங்கப்பா, அம்மாவுக்கு பேசிப் புரிய வைக்கலைன்னா, நான் என்ன பண்ணிருப்பேன்னே தெரியல. அய்யாவுக்குத்தான் நன்றி சொல்லணும்.” என்றாள்.

“ஓஓ.. அப்போ, உனக்காக சண்டை போட்ட எனக்கு நன்றி சொல்ல மாட்ட.?” என்று கேட்டான் அமுதன்.

“ம்ம். ஒண்ணு தெரிஞ்சுக்கோ நண்பா. நீ எனக்காக எல்லாமே செய்வன்னு எனக்குத் தெரியும். அதை நன்றின்னு சொல்லிட்டா அது ரொம்ப சாதாரண விஷயமாப் போயிடும். நமக்குள்ள எல்லாமே சகஜமா இருக்கணும். இந்த மன்னிப்பு, நன்றியெல்லாம் நம்ம நட்புக்குள்ள இருந்தா அது சாதாரணமா பழகுறவங்களுக்குள்ள சொல்ற மாதிரி இருக்கும். நமக்குள்ள அது தேவையில்லன்னு நினைக்கிறேன். அதுக்கு பதிலா எனக்காக இவ்ளோ செஞ்ச என் நண்பனை மனசார பாராட்டுறேன்.” என்று கைதட்டியபடி, ஒரு புது அர்த்தத்தை தமிழினி சொல்லி முடிக்க, அது அவனுக்கும் சரியென்றே தோன்றியது.

“சரி தமிழு. நம்ம நட்புக்குள்ள இனிமேல், பாராட்டும், ஆதரவும், உபதேசமும் இருக்கட்டும். ஆனா, இந்த மன்னிப்பும், நன்றியும் வேண்டாம். சரிதான.?” என்று அவன் சொல்ல,

“ம்ம்.. அப்படித்தாண்டா என் நண்பா..” என்று எப்பொழுதும் போல் தலையாட்டிச் சிரித்தாள்.

அப்படியே பேசிக்கொண்டு நின்று கொண்டிருந்த வேளையில், அவர்கள் செல்லும் பேருந்தும் வந்து விட அவர்கள் அதற்க்குள் ஏறினர். பேருந்து மட்டும் செல்லவில்லை, அவர்கள் வாழ்க்கையும் வேகமாகச் சென்றது.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1344

உங்களின் விமர்சனங்களை கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...


 
அத்தியாயம் 25

அம்மாஆஆஆ...” என்று விழுந்தெழுந்து, மூச்சிரைக்க தன் உயிரைக் கையில் பிடித்தவாறு, ஓடிக்கொண்டிருந்தான் அவன். நாலைந்து பேர் அவனை விடாமல் கையில் பெரிய பெரிய கட்டைகளுடன் துரத்திக்கொண்டு வந்தனர்.

பொள்ளாச்சியின் கிழக்குப் பகுதியில், காலை வேளையிலேயே அவர்களுக்குப் பயந்து அவன் ஓடிக்கொண்டிருந்த போது, பெரிய கல் ஒன்று இருப்பதை அறியாமல், கால் இடறி கீழே விழுந்தான்.

அப்போது அந்த வலி கூட அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், கையில் இருப்பதை பத்திரமாகக் கொண்டு செல்ல வேண்டும். இவர்கள் கையில் மட்டும் சிக்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தவன், அதைத் தன் நெஞ்சோடு சேர்த்தபடி விழுந்த இடத்திலிருந்து மெல்ல மெல்ல பின்னே நகர்ந்து சென்றான்.

“டேய்.. சொன்னா கேளு. நீ அதைக் குடுத்துட்டீன்னா, உன்ன விட்டற்றோம். வீம்பு பண்ணா, கட்டைலயே அடிச்சிக் கொன்னுட்டு அதை எடுத்துட்டுப் போயிடுவோம். என்ன சொல்ற.?” என்றான் அவனைத் துரத்தி வந்தவர்களில் ஒருவன்.

“இல்ல, நான் தரமாட்டேன். வேண்டாம்.” என்று பயந்தபடியே சொன்னான்.

“டேய் இவன்கிட்ட என்னடா சமாதானம் பேசிட்டு இருக்க நீ.? புடுங்கிட்டு வா. போலாம்.” என்றான் இன்னொருவன்.

“வேண்டாம்.. வேண்டாம்..” என்று அவன் அதை இறுக்கமாய் வைத்தபடி இருக்க, பேசியவன் வந்து பிடுங்க முயன்ற போது,

“ஹலோ.. ஒரு நிமிஷம். யாரு நீங்கள்லாம். ஏன், ஒரு அப்பாவி கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கீங்க.?” என்று கேட்ட குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தவர்கள்,

“டேய். இங்க பாருடா. சார், ஹீரோ மாதிரி வந்து வசனம் பேசிட்டிருக்காரு. நீ யாரு மொதல்ல.? இவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.? உன் வேலையை பார்த்துட்டுப் போவியா.?” என்று சொன்னபடி, அவனிடம் அதைப் பிடுங்கச் செல்ல,

பின்னால் இருந்த ஒருவனுக்கு அடி இடி போல் விழுந்தது. சுருண்டு விழுந்தவனைப் பார்த்தவர்கள், “டேய்.. உனக்கு எவ்ளோ தைரியம்.? எங்க ஆள் மேலயே கை வைக்கறியா.?” என்று இன்னொருவன் அடிக்கக் கட்டையைத் தூக்க, அவனது கையை மடக்கிப் பிடித்துத் திருகினான் அவன்.

வலி தாங்காமல் கத்தியவன், கட்டையைக் கீழே போட்டான். அவனின் நெஞ்சில் ஒரே குத்து. அதில் அவனும் விழுந்தான். இன்னொருவன் அடிக்க வர, அவனது வயிற்றைத் தன் இரும்புக் கரங்களால் குத்தியவன், அவன் நிலை தடுமாறும் போது, மாற்றி மாற்றி வயிற்றிலேயே குத்தினான்.

அதைப் பார்த்து இன்னொருவன் அவனைக் கட்டையால் தாக்க முயன்ற போது, இன்னொரு கை அதைத் தடுத்தது. அதைப் பார்த்த அந்த அடியாள் மிரண்டான்.

சண்டை போட்டுக்கொண்டிருந்தவன், ஒரு நிமிடம் பார்த்த போது புன்னகையோடு “மச்சான்..” என்றபடியே அடிக்க வந்த இன்னொருவனின் கையைப் பிடித்து விரல்களை மடக்கினான். அடியாளின் கையை அசைக்க முடியாதவாறு அவனைக் கீழே தள்ளிவிட்டான்.

“என்ன மாப்பிள பிரச்சினை.? காலங்காத்தாலயே சண்டை போட்டுட்டிருக்க.?” என்று சொல்லிக்கொண்டே அடியாளின் கையை மடக்கி, தாடையில் ஒரு குத்து விட்டான் அவன். வாயில் ரத்தமே வந்துவிட்டது அந்த அடியாளுக்கு.

இதற்க்கு மேல் விட்டால், இருவரும் சேர்ந்து தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்று பயந்து ஓட்டம் பிடித்தனர் அடியாட்கள் அனைவரும்.

“ஓடுங்க.. எல்லாரும். இந்தப் பக்கமே பார்க்கக் கூடாது.” என்று அவர்கள் கொண்டு வந்த கட்டையை அவர்கள் மீது வீசியடித்தான் அவன்.

“அமுதா, உன்னைப் பார்த்து எவ்ளோ மாசமாச்சு.? ரொம்ப நல்லா சண்டை போடக் கத்துக்கிட்டியே. உடம்பும் கொஞ்சம் திடமாயிடுச்சு.” என்றான் அவன்.

ஆம், அவன் அமுதன். ஓடிவந்தவனைக் காப்பாற்றியவன்.

“அத விடுங்க மச்சான். நீங்க எப்படி இங்க வந்தீங்க.? உங்கள நான் எதிர்பார்க்கவே இல்ல இங்க.?” என்றான் அமுதன்.

அவன் மச்சான் என்று சொன்னது கராத்தே மாஸ்டர் சாமிநாதனை. அவனே இடையில் வந்து அவர்கள் இருவரையும் காப்பாற்றியது.

“அட, நான் இங்க தினமும் காய்கறி லோடு கொண்டு வந்து மார்கெட்டுல இறக்கிட்டுப் போவேன். அப்படி இறக்கிட்டு இந்த வழியா வரும் போதுதான் பார்க்கறேன், உன்கூட சில பேர் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. அதான், உடனே வண்டிய நிறுத்திட்டு ஓடி வந்தேன்.” என்றான் சாமிநாதன்.

“பரவால்ல மச்சான், நீங்களும் வந்தீங்க. இல்லன்னா, எனக்கு சமாளிக்கக் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும். பாருங்க நம்ம பாட்டுக்கு பேசிட்டிருக்கோம். பாவம் அவரு, அவர மொதல்ல தூக்கி விடுவோம்.” என்றபடி இருவரும் சேர்ந்து கீழே விழுந்து கிடந்தவனைத் தூக்கி விட்டனர்.

அப்போதும் அவன், தன் நெஞ்சோடு அணைத்திருந்ததை விடாமலேயே இருந்தான். அதைப் பார்த்த அமுதன், “சார் என்ன ஏதோ பத்திரம் மாதிரி இருக்கு. இதுக்குத்தான் உங்களைத் துரத்திட்டு வந்தாங்களா.?” என்று சொன்னான்.

“ஆமா, சார். இத என்கிட்ட இருந்து எடுத்துட்டுப் போகத்தான் ரொம்ப நேரமா துரத்திட்டு இருக்காங்க.” என்று முடியாமல் பேசினான் அவன்.

“இது ஏதோ பத்திர விஷயம் மாதிரி தெரியுது மாப்ள. நீ என்னன்னு விசாரிச்சு அவருக்கு கொஞ்சம் பார்த்து செய். நான் அப்படியே கிளம்பறேன். உங்க அக்கா, எனக்காகக் காத்திருப்பா. அப்பறம் பசங்க எல்லாருமே கிளாஸ்க்கு வந்திடுவாங்க. நான் கிளம்பறேன். சரியா.? அப்பறம் நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க, இவரு வக்கீல் தான். உங்க பிரச்சினை என்னன்னு சொல்லுங்க. இவரே தீர்த்து வைப்பார்.” என்று அமுதனின் தோள்களைப் பிடித்து அவனுக்கு உறுதியாகச் சொல்லிக்கொண்டு கிளம்பினான் சாமிநாதன்.

“ஆங்.. மாமா, மாரி அக்காவையும், நண்டு, சிண்டையும் கேட்டதாச் சொல்லுங்க. நேரம் கிடைக்கும் போது, ஊருக்கு வரேன்.” என்று அவன் சென்று கொண்டிருக்கும் போதே சொல்ல, அவனும், “சரி மாப்ள.. சொல்றேன்.” என்றபடி தான் வந்த மினி டெம்போவை ஓட்டிக்கொண்டு கிளம்பினான்.

ஆம், இப்போது சாமி மற்றும் மாரியின் அழகான வாழ்க்கைக்குக் கிடைத்த வரங்கள் இரட்டைப் பெண் குழந்தைகள். அழகு செல்வங்களாய் அவர்கள் பிறந்த போது, அனைவரும் அடைந்த சந்தோஷத்திற்க்கு அளவே இல்லை. அவர்கள் பெயர் கனிமொழி, அருள்மொழி.

படிப்பு நிமித்தமாய் அமுதன் கோவைக்குச் சென்று வந்தாலும், அவ்வப்போது தாத்தா, பாட்டி ஊருக்குச் சென்று குழந்தைகளோடு பொழுதைக் கழிப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதே போல், இவனோடு மட்டுமே குழந்தைகளும் அத்தனை உற்சாகமாய் விளையாடுவார்கள். துறுதுறுவென்று குழந்தைகள் இருக்கும் போது செல்லமாக அவன் வைத்த பெயர் நண்டு, சிண்டு.

இப்போதும், சாமிநாதன் கராத்தே பள்ளியைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருக்கிறான். கூட சில மூத்த மாணவர்களைத் தனக்கு உதவிக்கு வைத்துக்கொண்டு இன்றும் சிறப்பாய் நடத்தி வருகிறான்.

மாரியின் வேலையோ இப்போது மூன்று மடங்கானது. ஒரு பக்கம் அவளுக்கென்று உள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறாள். அதே போல், தாத்தா, பாட்டியின் நிலத்தில் இன்றும் கரும்பு சாகுபடியைத் தொடர்ந்து செய்து வருகிறாள். பிறகு, சாமிநாதனின் அம்மாவுக்குச் சொந்தமான நிலங்களில் அவன் ஏற்கனவே காய்கறி, கீரை வகைகளை பயிரிட்டு வந்ததால் அதையும் ஒரு பக்கம் பராமரித்து அதை ஊர்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள்.

மாரி குழந்தையைப் பெற்றெடுத்தது மட்டும் தானே தவிர, அதன் பிறகு குழந்தைகளை முழுவதுமாய்ப் பார்த்துக்கொண்டது கமலம் பாட்டியே. சிறிது பெரிதானதுமே அவள் அவர்கள் இருவரையும் பாட்டியிடமே விட்டுவிட்டுச் சென்று விடுவாள்.

ஒற்றையாய் அவர்களை சமாளிக்க முடியாது என்று, கமலம் பாட்டி தெரிந்தவர் ஒருவரை உதவிக்கு வைத்துக்கொண்டு இரு குழந்தைகளையும் வளர்த்தார். இப்போது, இரண்டும் வளர்ந்து நிற்கிறார்கள். இருவருக்கும் நான்கு வயதாகிறது.

அழகாய்ப் பேசுகிறார்கள். அழகாய்ப் பாடுகிறார்கள். தாத்தாவுக்கும், பாட்டிக்கும் பேத்திகளோடு பொழுதைக் கழிப்பதே ஆனந்தமாய் இருந்தது. அவ்வப்போது அமுதனும் வந்துவிட்டால், அந்த இடமே கொண்டாட்டம் தான் அவர்களுக்கு.

சரி, இப்போதைய நாளுக்கு வருவோம். துரத்திவந்த ஆட்களிடமிருந்து அமுதன் காப்பாற்றியதோடு, அவனின் பிரச்சினை என்ன என்பதை முதலில் அறிய முயன்றான்.

“அந்தப் பத்திரத்தக் கொடுங்க.” என்று அமுதன் கேட்டதும், அவன் சற்று தயங்கியவாறே நின்றவனை, “அட, சார். நான் ஒண்ணும் பண்ணிட மாட்டேன். நான் வக்கீல் தான். தைரியமா குடுங்க.” என்று அவனிடம் தன் கையை நீட்டினான் அமுதன்.

அவனும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அதைக் கொடுத்தான். அதை நன்கு ஆராய்ந்தவன், “சரி இது யார் பேர்ல இருக்கற பத்திரம்.?” என்றான்.

“இது என் தங்கச்சி பேர்ல இருக்கற பத்திரம் சார். எங்க குடும்ப வக்கீல் கிட்ட குடுத்து இதை பழையபடி மாத்தனும். அதுக்குத்தான் இன்னைக்கு காலைலயே நேரமா கிளம்பி வந்துட்டிருந்தேன். அதுக்குள்ள இந்த ரௌடிப் பசங்க என்னை துரத்திட்டு வந்துட்டாங்க. நல்ல வேளையா நீங்க வந்தீங்க. இல்லன்னா நான் என்ன பண்ணிருப்பேன்னே தெரியல.?” என்றான் கவலையோடு.

“எந்த வக்கீலப் பார்க்கணும்.?” என்றான்.

“செங்குட்டுவன் சார். எங்கப்பாவும், அவரும் சிநேகிதர்கள். அவர் மூலமா தான் எங்கப்பா எல்லாத்தையும் பண்ணார். அதனால தான், அவர்கிட்ட குடுக்கணும்னு நினைச்சேன்.” என்று அவன் சொல்ல, முகம் மலர்ந்த அமுதன்,

“நான் செங்குட்டுவன் சாரோட ஜூனியர் லாயர் தான். நீங்க சரியான நேரத்துல தான் என் கண்ணுல பட்டிருக்கீங்க. சரி, வாங்க நாம போவோம்.” என்று தன் வண்டியைக் கிளப்பி அதில் அவனை ஏற்றிக்கொண்டு பறந்தான் அமுதன்.

எப்படி அமுதன் இந்த நிலைக்கு வந்தான், அவனது உயிர்த்தோழி தமிழினி என்ன ஆனாள்.? என்று உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான விடை இதோ இங்கே...

இருவரும் பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றனர். அதன் பிறகு, தமிழினி அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இரண்டு வருடம் பயின்று, அதன் பிறகு இரண்டு வருடம் மேலும் பி.எட் படிப்பையும் பயின்று நேரடியாக அரசு மூலமாகவே பொள்ளாச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அரசு செலவிலேயே படிப்பை முடித்து, அரசு வேலையையும் வாங்கி விட்டாள்.

அவளின் பெற்றோர்களுக்கு எந்த ஒரு பாரத்தையும் கொடுக்காமல் நல்ல பெண்ணாய் இன்று ஆசிரியர் துறையில் இருக்கிறாள். இன்று அவளுக்கென்று ஒரு மதிப்பும் கிடைத்துவிட்டது. அவள் பெற்றவர்களுக்கும் பெருமையைத் தேடித் தந்துவிட்டாள்.

ஓலைக் குடிசை வீட்டை மாற்றி இப்போது ஓட்டு வீடாய், கொஞ்சம் செலவு செய்து இரண்டு தனி அறைகள் உண்டாக்கி வீட்டின் அமைப்பையே மாற்றி விட்டாள் தமிழினி. வேலி போட்ட கேட்டும் இன்று இரும்பு கேட்டாக மாறியது. மாட்டுக் கொட்டகையும் ஓரளவு சீர் செய்து, பார்ப்பதற்க்கு நன்றாக இருக்குமாறு மாற்றி விட்டாள்.

முன்னே அவர்கள் வீட்டைப் பார்ப்பவர்கள் ஒருவாறு அருவருப்போடு பார்த்துக்கொண்டு செல்வர். இப்போதோ ஆச்சர்யப்பட்டு செல்கின்றனர். அனைத்தும் தமிழினியின் முயற்சி தான். இப்போது, அவளின் பெற்றோர்கள் தினக் கூலிகள் கிடையாது.

சாத்தப்பனின் ஒரு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி அதில் பல்வேறு தானியங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்போது அவர்களும் முதலாளிகள் ஆயினர். மாரியின் உதவியோடு இயற்கை மாறாமல் அனைத்தையும் அவளின் அறிவுரையின்படி செய்து வருகின்றனர்.

அதே போல் நல்ல மகசூலையும் பெற்று, நல்ல விலைக்கும் விற்று, அதற்கென்று தனி குடோன் ஒன்றையும் பார்த்து அதில் சேமித்து வைத்து, தேவைப்படும் சந்தைகளுக்கு அனுப்பி வருகின்றனர். இவையனைத்தும் தமிழினி வேலைக்குச் சென்ற இந்த இரண்டு வருடங்களில் நடந்தவை.

அமுதனோ, தான் ஆசைப்பட்ட வழக்குறைஞர் படிப்புக்காக கோவை அரசு சட்டக் கல்லூரியில் ஐந்து வருடப் படிப்பை முடித்து, இப்போது பொள்ளாச்சி சப் கோர்ட்டில் ஒரு வருடமாக சீனியர் லாயர் ஒருவரிடம் ஜூனியராக பணியாற்றி வருகிறான். சில காலம் பயிற்சிக்குப் பிறகே தனியாக நின்று சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் அவரிடம் உதவியாளராக இருக்கிறான்.

அமுதன் அவரிடம் ஜூனியராக சேர்ந்த கதையே தனி. அனைவரிடமும் நன்கு விசாரித்து யார் மிகவும் பரபரப்பான வக்கீல், மற்றும் யார் மிகவும் மதிக்கப்படாதவர் எனத் தெரிந்துகொண்டு, சீனியர் லாயராக பதினைந்து வருடங்கள் பணிபுரிந்து கொண்டிருந்த செங்குட்டுவன் என்பவரிடம் வந்தான்.

அவருக்கே எந்த வழியும் இல்லாமல் இருந்ததைக் கண்டான். “நீ ஏன்பா என்கிட்ட ஜூனியரா சேரணும்னு ஆசைப்படற.? எல்லாரும் யார் ரொம்ப ஃபேமஸா இருக்காங்களோ, அவங்ககிட்ட தான் ஜூனியரா சேரணும்னு ஆசைப்படுவாங்க. ஆனா, நீ அப்படியே நேர்மாறா என்கிட்ட வந்திருக்க.?” என்றார் செங்குட்டுவன்.

“ஃபேமஸா இருந்து என்ன சார் பிரயோஜனம்.? அவங்க்கிட்ட ஒழுக்கத்தையும், நேர்மையையும் கத்துக்க முடியுமா சார்.?”

“ஹூம்ம்.. நீ எந்தக் காலத்துல பா இருக்க.? நீதி, நேர்மை இதெல்லாம் செத்து பல வருஷம் ஆகுது. இன்னைக்கு பொய், பித்தலாட்டம் பண்ணி கேஸ ஜெயிக்கறவங்க தான் நல்லா இருக்காங்க. அவங்ககிட்ட தான் அதிகமா பணம் இருக்கு. நீதியையும், நேர்மையையும் காப்பத்தறேன்னு என்னை மாதிரி இருக்கறவங்களால என்னைக்குமே எந்தப் பிரயோஜனமும் இருக்காது. இதுவே பாரு, அந்த வீரபத்திரன் மாதிரி கிரிமினல் வக்கீல்களுக்குத் தான் இன்னைக்கு இந்த மவுசெல்லாம். நமக்குக் கிடையாது. நானும், அவனும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம். ஒரே லாயர்கிட்ட தான் ஜூனியரா சேர்ந்தோம். ஆனா, அவன் நிறைய பொய் சொல்லி ஜெயிச்சிட்டுப் போயிட்டே இருந்தான். ஆனா, நான் பாரு இப்பவும், நீதி, நேர்மைன்னு வேஸ்ட்டா உட்கார்ந்திட்டிருக்கேன். இதுல நீ வேற வந்து என்னை ஜூனியரா சேர்த்துக்கோங்கன்னு சொல்லிட்டிருக்க. என்னை மாதிரியே நீயும் பொழைக்க முடியாது பா.” என்று விரக்தியாய் பேசிக்கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்து அமுதன், “சார், என்ன சொன்னீங்க.? நீதி, நேர்மைன்னு இருந்தா பொழைக்க முடியாதா.? அப்படியெல்லாம் இல்ல சார். அதுக்குத்தான் நாம் போராடணும். காசு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாமா.? அப்போ காசு இல்லாதவங்க எங்க போவாங்க.? அவங்களுக்கு யார் நியாயத்த வழங்குவாங்க.? அதுதான் சார் முக்கியம். நான் இந்தப் படிப்ப படிச்சதே ஏழைகளுக்காக வாதாடணும்னுதான். அவங்களுக்கு எப்படியாவது நியாயத்த வழங்கணும்னுதான்.” என்றான் அமுதன் ஒரு கொள்கையுடன்.

“உன்னைப் பார்த்தா எனக்கு என்னோட சின்ன வயசு ஞாபகம் வருது. ஏன்னா, நானும் இதே மாதிரி பேசிட்டு இருந்தவன் தான். ஆனா, அதெல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல போச்சுன்னா உன்னாலயே தாங்க முடியாது தம்பி. ச்சீசீன்னு ஆயிடும். அந்த மாதிரி பண்றதுக்கு இங்க நிறைய ஆளுங்க இருக்காங்க. நம்ம உயிர எடுக்கறதுக்குக் கூட தயங்க மாட்டாங்க.” என்று சற்று பயமுறுத்தும்படி பேசினார்.

“எடுக்கட்டும் சார். அதனால என்ன.? இந்த உயிர் எப்படி இருந்தாலும் போகத்தான் போகுது. போற வரைக்கும் நம்மளால முடிஞ்ச உதவிய கஷ்டப்படறவங்களுக்கு செஞ்சா அதுவே போதும். போகும் போது நாம் ஒண்ணும் பணத்தையோ, பொருளையோ கொண்டு போகப் போறது இல்ல. பாவத்தையும், புண்ணியத்தையும் தான் கொண்டு போவோம். அப்படி இருக்கும் போது நாம் எதுக்கு சார் பயப்படணும். ஒரே ஒருத்தருக்கு மட்டும் தான் நாம பயப்படணும், அந்தக் கடவுளுக்கு. நாம தப்பு பண்ணா, அவர் பார்ப்பாருன்னு ஒரு பயம் நமக்குள்ள இருந்தா போதும். நான் இப்போ வரைக்கும் அதைத்தான் நினைப்பேன். அதே மாதிரி நான் நிறைய தற்காப்புக் கலையையும் கத்து வைச்சிருக்கேன். என்னை முடிஞ்ச அளவுக்கு பாதுக்காத்துக்க என்னால முடியும். அப்பறம், நீங்க நிறைய புண்ணியத்தையும், மரியாதையையும் சம்பாதிச்சிருக்கீங்க சார். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க. அந்த வீரபத்திரன் மாதிரி ஆளுங்ககிட்ட பணம், புகழ், பேர் இருக்கலாம். ஆனா, பாவம் செஞ்சதுக்கான பலன கண்டிப்பா கடவுள் ஒரு நாள் கொடுப்பார். அப்போதான் நீங்க உண்மைய புரிஞ்சுக்குவீங்க.” என்று பெரிய வசனங்களைப் பேசி முடிக்க, அவரே வாயடைத்துப் போனார்.

“ஹூம்ம்.. நீ எதுல பேர் வாங்கறையோ இல்லையோ, நல்ல பேச்சுத்திறமையாலயே பொழச்சுக்குவ. ஆனா, என்கிட்ட அதிகமா பணத்த எதிர்பார்க்காத.? நானே வருஷத்துக்கு கொஞ்சம் கேஸ் தான் பார்க்கறேன்.” என்றார்.

“சார், நீங்க எனக்கு எந்தவித சம்பளமும் கொடுக்க வேண்டாம். எனக்கு உங்ககிட்ட இருந்து அனுபவம் தான் வேணும். அதே போதும்.” என்றான்.

அன்றிலிருந்து அவருடன் பணியாற்றி வருகிறான். இதோ இப்போது, அடுத்த கேஸூக்காக காப்பாற்றியவனைக் கூட்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கிறான். இவன் யார்.? இவனுக்கு நீதியை அமுதன் வழங்குவானா.? அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1551

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் தோழமைகளே...
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom