Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

Status
Not open for further replies.
அத்தியாயம் 11

இருவர் எண்ணங்களை இப்போது ஆராய்ந்தால், ஒரே மனரீதியில் இருந்தனர். தமிழினியும், அமுதனும் இருவரும் எப்பொழுதும் நண்பர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், இடையில் வருபவர்கள் ஏதேனும் செய்தால் என்ன செய்வது.? என்ற மனப்போராட்டத்தில் இருந்தனர்.

அதே வாய்க்கால் பக்கம் தோட்டத்தில் அமர்ந்து, இருவரும் நீண்ட நேரமாக எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தனர். ஆனால், அவர்களின் மனம் இப்போது அமைதியாக இல்லை. ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் நண்பர்களுக்கு, நெடுநேரமாக பேசாமல் இருப்பது பிடிக்காமல் போகவே, இருவரும் பேச ஆரம்பித்தனர்.

“ஏண்டா நண்பா, நாம கடைசி வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ் ஆ இருக்கவே முடியாதா.? நம்மள பிரிச்சிடுவாங்களா.?” என்றாள் தமிழினி.

“தெரியல தமிழு. எனக்கு மட்டும் என்ன தெரியும்.? நாம இப்போதான் ஸ்கூல் படிச்சிட்டிருக்கோம். இன்னும் மேல பதினொண்ணாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு படிக்கணும். அப்பறம் காலேஜெல்லாம் போக வேண்டி இருக்கு. அதுக்கும் அப்பறம் வேலைக்குப் போகணும். இத்தனையும் இருக்கு. அதுக்கப்பறம் தான, கல்யாணமெல்லாம் பண்ணுவாங்க.” என்றான் அமுதன்.

“டேய். எனக்கு என்ன தெரியும்னு சொல்லிட்டு, இப்போ கல்யாணம் வரைக்கும் போயிட்ட.? ஹூம்ம்.. திருட்டுப் பையன் டா நீ.” என்று அவன் தலையில் ஒரு குட்டு குட்டினாள்.

“ஸ்ஸ்ஸ்... ஆஆஆ.. வலிக்குது தமிழு. நீ அடிச்சாலும், என்ன பண்ணாலும் எனக்கு வலிக்குது.” என்று தலையைத் தேய்த்துக்கொண்டே சொன்னான் அமுதன்.

“ஹூம்ம்ம்.. ஒழுங்கா திண்ணா தான உடம்புல சத்து இருக்கும். என்ன தான் சாப்பிடறியோ.?” என்றான்.

“ம்ம்.. சரி, இனிமேல் நீ அடிச்சா வலி தாங்கிக்க வேண்டியாவது நான் கொஞ்சம் அதிகமா சாப்பிடறேன். சரியா.?” என்று முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டே சொன்ன அமுதனைப் பார்த்தவள் சிரித்தாள்.

“அப்பா, இவ்ளோ நேரம் அமைதியா இருந்தது நல்லாவே இல்ல. இப்போ பாரு, எவ்ளோ அழகா கலகலன்னு சிரிக்கற. இப்போதான் நல்லா இருக்கு.” என்று அவனும் சொல்லிக்கொண்டே சிரித்தான்.

நண்பர்கள் இருவரும் சிரித்தது அங்கிருந்த மரம், செடி கொடிகளுக்குப் பிடித்ததோ, என்னவோ அவைகளும் அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதாய் அனைத்தும் மெல்லிய தென்றல் காற்றை வீசின. அந்தக் குலுகுலு காற்றை ரசித்தவாறே இருவரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“இப்போ, நாம என்ன பண்ணுவோம் தமிழு.? எல்லாரும் சொல்ற மாதிரி நம்மள கல்யாணம் பண்ணிக்கறவங்க நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சிடுவாங்களா.? அப்போ நாம கடைசி வரைக்கும் நண்பர்களா இருக்கவே முடியாதா.?” என்று தமிழினி சொன்னதையே திருப்பி அவன் கேட்க,

“ஹூம்ம். இதைத்தானடா நானும் கேட்டேன். நமக்கு அதெல்லாம் எப்படிடா தெரியும்.? அதுக்கெல்லாம் நமக்கு இன்னும் வயசு இருக்கு டா. அதுக்குள்ள நாம அதைப்பத்தி முடிவு பண்ண முடியாதே.?” என்றாள்.

“ஏன் முடியாது தமிழு.? நாம ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் இதே மாதிரி இருக்கணும்னா, அதுக்கு நம்மளக் கல்யாணம் பண்ணிக்க போறவங்க சம்மதிச்சா தான முடியும்.?” என்று அமுதன் சொல்ல, அவள் ஆமோதிப்பதைப் போல் தலையாட்டினாள்.

“ஒரு வேளை சம்மதிக்கலன்னா என்ன பண்றது.? அதுக்குப் பேசாம நாம கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துட்டா என்ன.?” என்று அவன் சொன்னதும், ஒரு மாதிரியான யோசனையில் இருந்தாள் தமிழினி.

“ஏய்.. என்ன தமிழு யோசிக்கற.?” என்றான் அமுதன்.

“இல்லடா நண்பா. அது சரிவருமான்னு தெரியல. ஏன்னா, அதுக்கு நம்ம அப்பா, அம்மா ஒத்துக்கணுமே. அவங்க நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க. எவ்வளவு தான் நாம ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தாலும், நமக்கு கடைசி வரைக்கும் துணையா வர ஒருத்தர் வேணும்டா.” என்றாள்.

“நீ என்ன தமிழு, இப்படிச் சொல்ற.?” என்றான்.

“ஆமாடா, நாம இப்போதைக்கு அப்படிப் பேசிக்கலாம். ஆனா, இன்னும் கொஞ்ச நாள் போனா நம்ம மனசு மாறும். அப்போ, வேற ஒரு முடிவு எடுப்போம். அதனால, இப்போதைக்கு நாம இதைப்பத்தி எந்த ஒரு முடிவும் பண்ணாம இருக்கறதுதான் சரி. நம்ம அய்யாகிட்ட சொல்லிப் பாரு. அவரும் இதையே தான் சொல்வாரு.” என்றாள்.

“ஹூம்ம். சரி, நீ சொன்ன மாதிரி, நம்ம மனசு மாறிக்கிட்டே தான் இருக்கும். நாம் இன்னும் கொஞ்சம் பெரிசானதும், முடிவு பண்ணிக்கலாம்.” என்று அவனும் அவளின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்தான்.

“அமுதா, டேய்.. அமுதா.. எங்க இருக்கப்பா.?” என்று தூரத்தில் இருந்தவாறே, அழகேசனின் குரல் கேட்டது. அவரின் குரல் கேட்ட மாத்திரமே இருவரும் எழுந்து ஓடினர்.

“அப்பா, நாங்க இங்க இருக்கோம்..” என்று கைகளைக் காட்டியவாறே, ஓடினான் அமுதன், கூடவே தமிழினியும் ஓடினாள்.

ஒருவழியாக இவர்களே அவரிடம் சென்று விட்டனர்.

“உன்ன எங்கெல்லாம் தேடறது பா.?” என்றார் அழகேசன்.

“ஏம்பா.. என்னாச்சு.. எதுக்கு நீங்க தேடிட்டு வறீங்க.? நாங்க எப்பவும் இங்க தானப்பா இருப்போம்.?” என்றான் அமுதன் மூச்சு வாங்கியவாறே.

“அவசரத்துல ஞாபகம் இல்லப்பா. சரி விடு. முதல்ல வா. உடனே நாம ஊருக்குக் கிளம்பணும். கோலாகலம் பெரிய மனுஷி ஆயிட்டா. உங்க அத்தை இப்போதான் தகவல் சொன்னா, இப்போ போனா தான் சரியா இருக்கும். நான் தான் குடிசை கட்டணும். அதுக்குத்தான் ஓடி வந்தேன் உன்னக் கூட்டிட்டுப் போகணும்னு. தமிழ் மா. நாங்க அவசரமா ஊருக்குப் போறோம். உன்ன வீட்டுல விட்டுட்டுப் போறோம். சரியா.” என்றார்.

“பரவால்லைங்க அய்யா. நான் போய்க்கறேன். எனக்கு எதுவும் அவசரமில்ல. நீங்க ரெண்டு பேரும் பார்த்துப் போயிட்டு வாங்க.” என்று நிதானமாய்ச் சொன்னாள் தமிழினி.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, அமுதன் மட்டும் அமைதியாக இருந்தான். அவனுக்கு அத்தை வீட்டுக்கு போக வேண்டும் என்றதுமே, மனதில் பல எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. சிறு வயதிலேயே அவனுக்கு அங்கே போக விருப்பம் இருக்காது. நடந்த அந்த சம்பவத்திற்க்குப் பிறகு அமுதன் அங்கே போகவே இல்லை. நிம்மதியாக இருந்தான்.

அவ்வப்போது விசாலாட்சி மட்டுமே அங்கே வந்து அவர்களைப் பார்த்து விட்டுச் செல்வாள். கூடவே, கோலாவும் வருவாள். வந்தால், அவன் அதிகமாகப் பேச மாட்டான். அவளோ, இவன் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருப்பான். அவர்கள் கிளம்பி விட்டால் போதும் என்று இருக்கும் அவனுக்கு.

அதனால் தான், இன்று கூட கிளம்புவதற்க்கு அவனுக்கு விருப்பமே இல்லை. ஆனால் வேறு வழியில்லாமல் இன்று போக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அமுதன்.

இவன் யோசித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தனர் தமிழினியும், அழகேசனும்.

“என்னாச்சு பா.?” என்றார் அழகேசன்.

“அப்பா, அங்க நானும் கட்டாயம் வரணுமா.?” என்றான் அமுதன் என்றான் பாவமாக.

அவனின் மனநிலையை உணர்ந்தவராய், “வேற வழியில்ல டா தம்பி. நீ வரலன்னா உங்க அத்தை என்னை வார்த்தைகளிலேயே கொன்னுடுவா. உனக்குத்தான் அவளப் பத்தி தெரியுமே.? அதுவும் இல்லாம, நான் தாய் மாமன்னால நிறைய சடங்குகள், சம்பிரதாயங்கள் பண்ணனும், முறைப்படி சீர் செய்யணும். அதனால, கட்டாயம் போய்த்தான் ஆகணும் அமுதா.” என்றார் அழகேசன்.

“சரிப்பா, போகலாம். வாங்க.. நான் போயிட்டு வரேன் தமிழு.” என்று வார்த்தைகளில் ஒரு உயிரே இல்லாமல் சொல்லிக்கொண்டு போகும் தன் நண்பனைப் பாவம் என நினைத்தாள் தமிழினி.

இருவரும் உடனே பேருந்தில் ஏறிவிட்டனர். இரண்டு மணி நேரப் பயணம். இவர்களுக்காகவே காத்திருந்ததைப் போல் உறவுக்காரர் ஒருவர், அவர்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அவர்கள் வந்து இறங்கியதும், தனது பைக்கில் இருவரையும் அழைத்துச் சென்றார். வீடு அருகில், வர வர அமுதனுக்கு படபடப்பு அதிகமானது. பிடிக்காத ஊருக்கு வந்துவிட்டோம் என்று அவன் பேருந்திலிருந்து இறங்கும் போது நினைத்தபடியே வந்தான்.

அங்கே எல்லாம் தயாராய் இருந்தனர். கோலாவுக்கு நாட்டுக்கோழி முட்டையும், நல்லெண்ணையும் தரப்பட்டது. கஷ்டப்பட்டு அதைக் குட்டித்தாள் அவள். அதே போல், அவளை அவளின் அம்மா விசாலாட்சியின் வழி அத்தை முறைப் பெண் ஒருவர், தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்தார்.

அடுத்து சடங்குக்கான ஏற்பாடெல்லாம் செய்து கொண்டிருக்கும் போது இவர்களும் வந்து விட, குடிசை கட்டுவதற்க்கான நேரமும் வர, அழகேசன் முறைப்படி குடிசை கட்டினார்.

அழகேசனின் பெற்றோர்கள் முன்னரே வந்து அமர்ந்திருந்தனர். அதற்க்குள், கோலாவை பாவாடை தாவணி உடுத்திவிட்டு, நகைகள் இருந்தவற்றைப் போட்டு விட்டு, அவளுக்கு அலங்காரம் செய்து குடிசைக்குள் விட நேரம் பார்த்து அழைத்து வந்தனர்.

அழகேசன் குடிசை கட்டும் போதே, உறவுக்காரர் ஒருவர் சும்மா இருக்காமல், “ஏம்பா அமுதா நீயும் போய் அப்பாவோட குடிசை கட்டு, நீயும் முறைப்பையன் தான.?” என்று வம்பிழுக்க.

அழகேசனோ அவரை ஒரு பார்வை பார்த்தார். அதற்க்குள் நடேசன் வந்து, “ஏங்க, அதான் பெரியவர் தாய் மாமா குடிசை கட்டறார் இல்ல. அப்பறம் எதுக்கு சின்னப் பையனக் கட்ட சொல்லிட்டு.? இருக்கட்டும். நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.” என்று சொன்னதும் தான், “அப்பாடா... தப்பித்தேன்..” என்று நிம்மதியாக அமர்ந்தான் அமுதன்.

கோலாவைக் கூட்டி வந்து அவளை முறைப்படி பெரியவர்கள் காலில் விழச் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிய பிறகு குடிசைக்குள்ளே விட்டனர். அமுதன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருந்தவனிடம், வம்பிழுத்த உறவுக்காரர் சும்மா இருக்காமல்,

“ம்ம்.. கோலாகலம் எவ்ளோ அழகா இருக்கால்லா டா மாப்பிள்ளை பையா.? அவள என்ன அப்படிப் பார்த்துட்டிருக்க.? இப்போவே அப்படிப் பார்க்கற.? இன்னும் கல்யாண வயசு வந்தா எப்படிப் பார்ப்பியோ.?” என்று சொல்ல, அதைக் கேட்கப் பிடிக்காதவன் அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு விருட்டென்று எழுந்து அழகேசன் இருக்கும் இடம் தேடிப் போனான்.

அவர் குடிசை கட்டிய இடத்தில் இருக்க, அங்கே சென்று அவருடன் நின்று கொள்ள, “என்னாச்சு டா தம்பி. ஏன், இங்க வந்து நின்னுட்டிருக்க.?” என்றார்.

“இல்லப்பா, அந்த மாமா சும்மா சும்மா என்னை வம்பிழுத்துப் பேசிட்டே இருக்கார். அதனால அங்க இருக்க முடியாம இங்க வந்துட்டேன்.” என்று சொன்னான்.

அதற்க்குள் அவனைப் பார்த்த விசாலாட்சி, “டேய். அமுதா.. வந்துட்டியா. நான் இருந்த நிலையில உன்னைப் பார்க்கவே இல்ல. பாரு, உன் வருங்காலம் பெரிய மனுஷி ஆயிட்டா. சந்தோஷமா.?” என்று கேட்க, அவனுக்கோ ஒரு மாதிரி ஆனது. இதில் கோலா வேறு குடிசையில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்தபடி வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்துக்கொண்டிருந்தாள்.

அழகேசனுக்கே சிறு பிள்ளைகளிடம் ஏன் தான் இப்படியெல்லாம் பேசி மனதைக் கெடுக்கிறார்களோ என்று எரிச்சலாக இருந்தது.

அங்கே தான் அவரின் தொல்லை தாங்க முடியாமல் எழுந்து இங்கே வந்தால், இங்கு அதற்க்கும் மேல் அல்லவா இருக்கிறது. ம்ஹூம்ம். பேசாமல் வெளியே சென்று விடலாம் என்று நினைத்து வெளியே சென்று நின்று கொண்டிருந்தான் அமுதன்.

அங்கே அதற்க்கும் மேல் பெரிய தொல்லையாக குமரேசன் நின்று கொண்டிருக்க, இப்போது அவனுக்கு ஏன் வெளியே வந்தோம் என்றும் ஆனது. குமரேசன் அவனை முறைத்தவாறே நின்று கொண்டிருந்தான்.

அதற்க்குள் நடேசன் வந்து குமரேசனிடம், “டேய்.. குமாரு போய் சாப்பாடு சொல்லிருந்தவங்க கிட்ட போய் சாப்பாடு வாங்கிட்டு வந்துடு. கூட யாரையாவது கூட்டிக்கிட்டுப் போ.” என்றார்.

அவர் சொன்னதுமே, குமரேசன் அமுதனைப் பார்த்தான். “இங்க வா அமுதா. போய் சாப்பாடு எடுத்துட்டு வந்துடலாம்.” என்று கூப்பிட, அவனோ முழித்தான். அவனுக்கு அவனிடம் கொஞ்சம் பயம் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தவனை,

“என்ன யோசிச்சிட்டு இருக்க, வா.. போயிட்டு வரலாம்.” என்றான்.

அதற்க்குள் அழகேசன் வர, அவரிடம் சொல்லிவிட்டுச் சென்றான் அமுதன். ஒரு தயக்கம் அவனிடம் இருந்து கொண்டேதான் இருந்தது. வேறு வழியில்லாமல் அவனுடன் சென்றான் அமுதன்.

போகும் போதே அவன் பேச்சுக் கொடுத்தபடி வந்தான் அமுதனிடம், “அப்பறம் எப்படி இருக்க.? பத்தாவதா படிக்கற.?” என்று சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தான்.

“ம்ம்.. ஆமா அண்ணா.” என்று ஒரே வார்த்தையில் முடித்தான் பேச்சை.

“ஓ.. நல்லா படிக்கிறியா.?” என்றான்.

“ம்ம்ம்..” என்றான் அமுதன்.

“ஏன். எங்கிட்ட பேச மாட்டியா.? இன்னும் சின்ன வயசுல நடந்ததையே நினைச்சிட்டு இருக்கியா.?” என்றான் குமரேசன்.

“இல்ல அண்ணா, அப்படியெல்லாம் எதுவும் இல்ல.” என்றான்.

அதற்க்குள் சாப்பாடு எடுக்கும் இடம் வந்து விட்டது. அவர்களிடம் ஒரு பெரிய டிபன் காரியரை வாங்கிக்கொண்டு கிளம்பினர்.

திரும்பவும் பேச்சை ஆரம்பித்தான் குமரேசன். “என்னை என்னன்னு கூப்பிட்ட.? அண்ணான்னு தான. முறைப்படி நான் உனக்கு மச்சான். இனிமேல் அப்படித்தான் கூப்பிடணும். நீ நாளைக்கு கோலாவக் கல்யாணம் பண்ணா, அப்படித்தான ஆகும்.” என்றான்.

அய்யய்யோ.. இவன் என்ன இப்பொழுதே இதைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறான். என்னதான் செய்வது.? இங்கே வந்ததிலிருந்து ஒவ்வொருவரும் என்னை நோகடிக்கிறார்களே என்று இருந்தது அமுதனுக்கு.

அவன் எதுவும் பேசாமல் வருவதைக் கண்டு, “என்ன எதுவுமே பேசாம வர.? ஆமா, இன்னும் அந்தப் பொண்ணோட தான் சுத்திட்டு இருக்கியா.? அவள நினைச்சுட்டு நீ கோலாவ எங்கயாவது ஏமாத்தின.? நான் உன்னை என்ன பண்ணுவேன்னே தெரியாது.” என்று திடீரென மிரட்டலாகப் பேசினான்.

வீடு வந்துவிட இறங்கியவனை, “என்ன சொன்னதெல்லாம் மனசுல வைச்சுக்கோ. சரியா.?” என்றபடி ஆட்களைக் கூப்பிட்டு டிபன் கேரியரை எடுத்துக்கொண்டு போனான். அமுதனுக்கு பயமும், பதட்டமும் அதிகரித்தது.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1267

உங்களின் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விமர்சனங்களை கீழே உள்ள
கமெண்ட்ஸ் லிங்கில் பதிவிடவும் தோழமைகளே...

https://www.sahaptham.com/community/threads/தமிழுக்கு-அமுதென்று-பேர்-comments.580/
 
அத்தியாயம் 12


சடங்கு
முடிந்து திரும்பி வந்த போதும் அங்கே நடந்த எவையுமே அமுதனுக்கும், அழகேசனுக்கும் மறக்கவில்லை.

கோலாவிற்க்கு உடனே உறவினர்களை அழைத்து சீர் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர். அழகேசனுக்கும், அவரின் பெற்றோருக்கும் எத்தனை நகை போட வேண்டும், எவ்வளவு ரொக்கம் அளிக்க வேண்டும் என்று குழப்பமாக இருந்தது.

அதற்க்காக அவர்கள் மூவரும் கலந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அது நடேசனின் அம்மாவின் காதுகளுக்கு எட்ட, அவரோ ஜாடை, மாடையாய் பேச ஆரம்பித்தார்.

“ஹூம்ம்.. சொந்த மக பேத்திக்கும், தங்கச்சிக்கும் செய்யறதுக்கே இந்த அளவுக்கு யோசிக்கறாங்க. இவங்க யோசிக்கறதப் பார்த்தா எதுவும் செய்ய மாட்டாங்க போலிருக்கே.” என்று பேச, அதை விசாலாட்சி கேட்டுவிட்டாள்.

“அத்தை, நீங்க பாட்டுக்கு உங்க வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதீங்க. அதெல்லாம் எங்க வீட்டுல என்னை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க. அதுவும், எங்க அண்ணன் எனக்கு எல்லாமே செய்வாரு.” என்றாள் கோபத்தில்.

“ஹூம்ம்.. நீதான் அப்படி சொல்லிட்டிருக்க, உங்க வீட்டுல அதப் பத்தி எதுவுமே பேச மாட்டிங்கறாங்களே. ரொம்ப யோசிக்கற மாதிரிதான் தெரியுது.” என்றார் அவர் திரும்பவும்.

கோபத்தில் எழுந்து அவர்களிடம் சென்றாள் விசாலாட்சி, “அம்மா, அப்பா, அண்ணா எனக்கு என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நீங்க கோலாவுக்கு 5 பவுனுக்கு நகையும், அப்பறம் ரொக்கமும், குடுங்க. அது போக பட்டுப்புடவை, சீர் அது இதுன்னு சபையவே அமர்க்களப்படுத்தற மாதிரி இருக்கணும். என்னால இவ்ளோ தான் சொல்ல முடியும். அதுக்கு மேல உங்க இஷ்டம்.” என்று தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லியே விட்டாள்.

“என்னடா அழகு இவ இப்படி சொல்லிட்டுப் போறா.? அவ்ளோ பணமும், நகையும், சீரும் எப்படி உடனே ஏற்பாடு பண்ண முடியும். இதெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம பேசிட்டுப் போறாளே உன் தங்கச்சி.” என்று வருத்தப்பட்டார் அவரின் தந்தை.

“விடுங்கப்பா. அவளா அதையெல்லாம் பேசல, வேற பக்கம் கொளுத்துன திரி, இவ இங்க வந்து பட்டாசா வெடிச்சிட்டுப் போறா.? நம்ம கடமை என்ன செய்யணுமோ அதை செஞ்சிட்டுப் போலாம். எனக்கு இது மாதிரி நடக்கும்னு தெரியும். அதனால தான், நான் முன்னேற்பாடா பணம் கொண்டு வந்திருக்கேன். நானும், அம்மாவும் கடைத் தெருவுக்குப் போய் நகையும், பட்டுப்புடவையும் வாங்கிட்டு வந்திடறோம். மீதியெல்லாம் செஞ்சிடலாம்.” என்று வேறு வழியில்லாமல் சொன்னார்.

“ஆமாண்டா. அழகு. நமக்கு வேற வழியில்ல. அவ வாயைத் தொறந்து கேட்டதுக்கப்பறமும், நாம செய்யலன்னா அது நமக்குத்தான் அசிங்கம். நாம செய்யற கடமைய செஞ்சிடலாம் விடுங்க.” என்றார் அழகேசனின் அம்மா.

மூவருக்கும் சங்கடமாய் இருந்தாலும், கடமையைச் செய்தாக வேண்டுமே என்று அமைதியாய் கடைத் தெருவுக்கு கிளம்பினர். அங்கே இருந்தால் எவரேனும் தன்னை ஏதாவது சொல்வார்கள் என்று அமுதனும் அவர்கள் கூடவே கடைத் தெருவுக்குக் கிளம்பினான்.

இரண்டு நாட்களில் சடங்கு சீர் அவர்கள் வீட்டிற்க்குப் பக்கத்திலேயே இருந்த சிறிய அளவிலான மண்டபத்தில் நடைபெற்றது. உறவினர்கள் அனைவர் முன்னிலையிலும், சபையே ஆச்சர்யப்படுவது போல், அழகேசனும், அவரது பெற்றோரும் கோலாவுக்கு நகை, பணம், புடவை மற்றும் சில சீர் வரிசைகள் என்று செய்தனர்.

அப்போதுதான் விசாலாட்சிக்கு நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. அதே சந்தோஷத்தோடு அவளின் அத்தையைப் பார்த்தாள். அவரின் முகத்தில் ஈயாடவில்லை. என்ன சொல்ல முடியும். குறையே சொல்ல முடியாத அளவிற்க்கு அனைத்தையும் செய்து விட்டனர்.

ஆனாலும், அவர் அதை பெரிதாக சொல்லாமல், “ம்ம்.. இன்னும் 5 பவுன் சேர்த்தே போட்டிருக்கலாம். சரி, இன்னும் கல்யாணத்துக்கு செய்ய வேண்டி இருக்கே.? செய்யட்டும்.” என்றார் அனைவர் முன்னிலையிலும்.

எப்படி இது போல் ஒருவர் மனது சங்கடப்படும்படி பேச முடிகிறது.? அவர்கள் இவ்வளவு செய்ததை பெரிதாகப் பேசாவிட்டாலும், குறை சொல்லாமலாவது இருந்தால் பரவாயில்லை. ஆனால், அதிலும் குற்றம் கண்டுபிடித்து சொல்லத்தான் சில பேர் இருக்கிறார்கள் இதுபோல்.

அப்போதே விசாலாட்சி, “ஹூம்ம். அதெல்லாம் எங்கண்ணன் சிறப்பா செஞ்சிடுவாரு. யாருக்கு செய்யறாரு.? நாளைக்கு அவர் வீட்டுக்கு வரப் போற மருமகளுத்தான செய்யறாரு.” என்று அவர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவதைப் போல் பேசினாள்.

நடேசனும், அவரது பெற்றோரும் அவளது நினைப்பை நினைத்து சலித்துக்கொண்டனர். இவள் வீணாக மனதில் கோட்டை கட்டுவது மட்டுமல்லாமல் கோலாவின் மனதிலும் ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு அதில் துளியும் விருப்பமில்லை என்பதை இவள் எப்பொழுது தான் புரிந்து கொள்வாளோ என்று தெரியவில்லை.

அழகேசன் இதுவரை சேமித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் தங்கை மகளின் சீருக்கே செலவழித்து விட்டார். அவர் என்ன செய்வாரோ என்ற கவலை அவரின் பெற்றோர்களை ஆட்கொண்டது. அனைவரும் ஊருக்கு செல்வதற்க்காக பேருந்திற்க்காக காத்திருந்தனர்.

அப்போது, அவரின் தந்தை கவலையுடன் சொன்னார், “ஏம்பா அழகு. நீ வைச்சிருந்த மொத்த பணத்தையும் இதுக்கே செலவழிச்சிட்டியே.? இனி செலவுக்கு என்ன பண்ணுவ.?” என்றார் கவலையுடன்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லப்பா. மாசம் பொறந்தா சம்பளம் வந்துடும். அதை வைச்சு சமாளிச்சுக்கறேன். நீங்க அதை நினைச்சு கவலைப்பட்டு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்க. சரியா.?” என்றார் அக்கறையுடன்.

“அடுத்த மாசம் அறுவடை இருக்குப்பா. அதனால அதுக்குப் பணம் எடுத்து வைச்சுட்டுத்தான் மீதி கொஞ்சம் பணத்த எடுத்துட்டு வந்தேன். ஆனா, அது பத்தாம போயிடுச்சு. நல்ல வேளை நீ வைச்சிருந்த. இல்லன்னா இவ்ளோவும் நம்மால பண்ணிருக்கவே முடியாது.” என்றார் அவர்.

“ஹூம்ம்.. நாம என்ன பண்ணி என்ன பிரயோஜனம். விசாலம் நம்மள விட்டுக்கொடுக்கலன்னாலும், அவளும் அவங்க பேசறாங்கன்னுதான இதெல்லாம் பண்ண சொல்லிக் கேட்டா. நாமளும் நம்மால முடிஞ்சதுக்கு மேலயே பண்ணியாச்சு. ஆனா, அதுக்கும் திருப்தி ஆகாம தான அந்த சம்பந்தி அம்மா பேசினாங்க.” என்று ஆற்றாமையில் பேசினார் அழகேசனின் அம்மா.

“சரி, விடும்மா. என்ன பண்றது. பொம்பளப் பிள்ளைகள நாம எதுவும் சொல்ல முடியாது. போற இடத்துல அவங்க வீட்டுல என்ன சொல்றாங்களோ அதைத் தான கேட்க வேண்டியிருக்கு. அதுக்கு அவ மட்டும் என்ன விதி விலக்கா. அதான் கேட்டிருக்கா. விடு, அவள எதுவும் சொல்லாத. நான் எப்படியும் சமாளிச்சுக்குவேன். நானும், அமுதனும் தான். எங்களுக்கு என்ன பெரிய செலவு இருக்கப் போகுது.? நீங்க வீணா மனசப் போட்டு குழப்பிட்டு இருக்காம போயிட்டு வாங்க. நான் வேற ஒரு நாள் லீவப்போ ஊருக்கு வரேன்.” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரின் பெற்றோர்கள் செல்லும் பேருந்து வந்துவிட அவர்கள் அதில் ஏறி கிளம்பி விட்டனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் செல்லும் பேருந்தும் வந்துவிட அவர்களும் கிளம்பினர். பேருந்தில் வரும் போதுதான் தன்னுடைய மனதில் இருந்தவற்றை சொன்னான் அமுதன்.

“ஓ.. இப்படியெல்லாம் பேசறானா அந்தக் குமரேசன். சரி, விடுடா தம்பி. இப்போதான் அப்படியெல்லாம் பேசுவாங்க. நாளைக்கே நீங்க எல்லாரும் பெரியவங்களா ஆனதுக்கப்பறம் இந்தப் பேச்செல்லாம் எங்க போச்சுன்னே தெரியாத மாதிரி போயிடும். எல்லாரும் காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிடுவாங்க. அதனால நீ இதெல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்காத. சரியா. அப்பா இருக்கும் போது நீ எதுக்குடா கவலைப்படற.?” என்றார் அழகேசன் அவனைப் பிடித்துக்கொண்டே.

அமுதனுக்கு அழகேசனை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. உலகில் யாருக்கேனும் இப்படி ஒரு அப்பா கிடைத்திருப்பார்களா.? என்று தோன்றும். அம்மாவின் பாசத்தையும், அப்பாவின் அறிவுரையும் ஒன்று சேர்த்த தாயுமானவராய் இருக்கும் தனது அப்பா கிடைக்க தான் என்ன பேறு செய்தோம் என்று நினைத்தான்.

அதே போல், அங்கு நடந்த விஷயத்திலும் எத்தனை பொறுமையாய் அனைத்தையும் செய்தார் என்பதை கூடவே இருந்து அவன் பார்த்திருந்தான். அதே போல், பேருந்து நிறுத்தத்தில் அவர் பெற்றோருடன் பேசும் போதும் சரி, யாருடைய கையையும் நம்பாமல் தனது சொந்த உழைப்பை மட்டுமே நம்பும் அவரது குணம் அவனை ஆச்சர்யப்பட வைத்தது.

இதுவரை ஒருமுறை கூட அவனிடம் கடிந்து கொண்டதோ, கோபப்பட்டதோ, ஒரு சிறு முறைப்போ கூட செய்ததில்லை அழகேசன். பாசமாகவும், பண்பாகவும், விளக்கமாகவும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை எடுத்துச் சொல்வார். தங்கத்துக்கு இணையான குணம் கொண்டவரை நினைத்து பெருமைப்பட்டான் அமுதன்.

அவரைப் பற்றி யோசித்துக்கொண்டே வந்ததில் தூங்கியபடியே ஊர் வந்து சேந்தனர். அடுத்த நாள் இருவரும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

நான்கு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்ததால் அழகேசன் அன்று பள்ளிக்கு சிறிது முன்னரே கிளம்பி விட்டிருந்தார். இப்போது அவர் தான் பள்ளியின் துணை முதன்மை ஆசிரியர். அதனால், அனைவருக்கும் முன்னோடியாய் இருந்து வழி நடத்த வேண்டும் என்பது அவரது எண்ணம்.

பழையபடி இப்போது அமுதன் சைக்கிளில் செல்வதோடு, தமிழினியும் சாத்தப்பன் அவளுக்காக வாங்கிக் கொடுத்த சைக்கிளில் அவனோடு செல்கிறாள். இருவரும் பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். மணிக்கணக்காய் பள்ளியிலேயே அமர்ந்து படித்தனர். அதற்க்கான ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகமே செய்தது.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே, அந்தப் பள்ளியில் மாணவர்கள் படிக்க முடியும். அடுத்து பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர முடியும். அதற்க்காகவே பத்தாம் வகுப்பு மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு படித்தனர்.

யாருக்கு எந்த சந்தேகமாய் இருந்தாலும் அதை தீர்த்து வைத்தாள் தமிழினி. சில சமயம் வகுப்புக்கு பாடமே எடுப்பாள். அதில் அவளும் படித்துக்கொள்வாள். ஆசிரியராகும் எண்ணம் அவளுக்குள் ஊறிப் போனது.

பொதுத் தேர்வுக்காக படிப்பதற்க்கு விடுமுறை விட்டிருந்த நேரம், இருவரும் அமுதனின் வீட்டில் அமர்ந்து கலந்துரையாடி படித்துக்கொண்டிருந்தனர். அப்போது அழகேசன் கையில் இரண்டு டம்ளர்களுடன் அவர்களிடம் வந்தார்.

“டேய் பசங்களா, இந்தாங்க டீ. குடிச்சிட்டு அப்பறமா படிங்க.” என்று டம்ளர்களை நீட்டினார். இருவரும் வாங்கிக் குடித்தனர்.

“அய்யா. நீங்க டீ ரொம்ப அருமையா போடறீங்க.” என்று அவரைப் பாராட்டினாள் தமிழினி.

“ஓ.. அப்படியா. நன்றி தமிழ்.” என்றார்.

“சரி, கொஞ்ச நேரம் படிக்காம ஒரு விஷயத்தைப் பத்தி கலந்துரையாடுவோமா.?” என்றார் அவர்களிடம்.

“ம்ம்.. சரி பா..” என்றபடி இருவரும் புத்தகத்தை கீழே வைத்து விட்டு அவர் என்ன சொல்வார் என்று பார்த்தனர்.

“இப்போ, பொதுத் தேர்வுக்காக படிக்கறீங்க. சரி. ஆனா, இது எதுக்காகன்னு தெரியுமா.?” என்று ஒரு கேள்வியை அவர்களிடம் வைத்தார் அழகேசன்.

“தெரியாது பா. எல்லாரும் பப்ளிக் எக்ஸாம் தான் நம்ம மாநிலத்துல பெரிய எக்ஸாம்னு சொல்வாங்க.” என்றான் அமுதன்.

“ஆமா, அய்யா. அப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க.” என்றாள் தமிழினியும்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு சிரித்தவாறே, “அப்படிக் கிடையாது பா. இந்த எக்ஸாம் நீங்க எழுதி மார்க் எடுத்தா தான் மேல ப்ளஸ் ஒன் அப்பறம் ப்ளஸ் டூ படிக்க, ஒரு குரூப் எடுக்க முடியும். அந்த குரூப் படிச்சா தான் அடுத்து ப்ளஸ் டூ முடிச்சதும் நீங்க மேல கல்லூரியில எந்தப் படிப்பு படிக்க நீங்க விருப்ப்ப்படறீங்களோ அதைத் தேர்வு செய்ய முடியும். அதுக்குத்தான் இந்த பொதுத் தேர்வு. ஆக மொத்தம் இந்த இரண்டு பொதுத் தேர்வு தான் நீங்க என்னவா ஆவீங்கன்னு முடிவு பண்ற எக்ஸாம்ஸ்.” என்று விளக்கமாய்ச் சொன்னார் அழகேசன்.

“ஓஓ.. இவ்வளவு விஷயம் இருக்காப்பா இதுல.?” என்று ஆச்சர்யமாய்க் கேட்டான் அமுதன்.

“ஆமாடா அமுதா. இந்த எக்ஸாம் எதுக்கு எழுதறோம்னே இத்தனை நாள் தெரியாம இருந்திருக்கோம் பாரேன்.” என்றாள் தமிழினி.

“சரி விடுங்க. அதான் இப்போ நான் சொல்லிட்டேன் இல்ல.? இன்னும் ஒரு கேள்வி உங்க்கிட்ட கேட்கணும். நீங்க மொதல்ல என்னவாகணும்னு நினைக்கறீங்க.? தமிழ் ஏற்கனவே முதலமைச்சர் கிட்டயே டீச்சர் ஆகணும்னு சொல்லிட்டா. ஆனா, அது ஏன்னு தான் இன்னும் கேட்கல. நீ சொல்லு தமிழ் ஏன்.? எதுக்காகா.?” என்று அவளிடம் கேட்டார் அழகேசன்.

“அது அய்யா. எனக்கு மொதல்ல என்னவா ஆகணும்னு கனவு எதுவும் இருந்தது கிடையாது. ஆனா, எப்போ வடிவு டீச்சரப் பார்த்தேனோ, அப்போவே அவங்கள மாதிரி டீச்சரா தான் ஆகணும்னு முடிவு பண்ணினேன். ஏன்னா, ஸ்கூல்ல இப்போ என்கூட எல்லாரும் சகஜமா பேசறதுக்கு முக்கியக் காரணமே வடிவு டீச்சர் தான். அவங்க சொன்னதுனால தான் தினமும் பரிசுப் பொருள் வாங்க எல்லாரும் என்கிட்ட பேசினாங்க. இதுவே வேற யார் சொல்லியிருந்தாலும் எல்லாரும் கேட்டிருப்பாங்களான்னு தெரியல. ஆனா, ஒரு டீச்சர் சொன்னா எல்லாருக்குமே ஒரு நம்பிக்கை வருது. ஒரு விஷயம் கேட்கணும்னு தோணுது. அதனால தான் நானும் உங்கள மாதிரி, வடிவு டீச்சர் மாதிரி டீச்சராகி எல்லா மாணவர்களுக்கும் பாடத்தோட சேர்த்து நல்ல விஷயங்களையும் அவங்களுக்கு கத்துக் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.” என்றாள் தமிழ்.

“ம்ம்ம்.... சபாஷ்...” என்று அழகேசன் கைத்தட்ட, அமுதனும், “ஏஏஏ... சூப்பர் தமிழு..” என்று கைத்தட்டினான்.

அதைப் பார்த்து சிரித்தவாறே அம்ர்ந்திருந்தாள் தமிழினி.

“அதுமட்டுமில்ல தமிழ். நீ என்னாவா ஆனாலும், அதாவது இப்போ டாக்டர், இன்ஞ்சினியர், போலீஸ், கலெக்டர் எதுவா இருக்கட்டும், எல்லாத்துக்குமே ஒரு ஆசிரியரோட உறுதுணை இல்லைன்னா எதுவும் சாதிக்க முடியாது. அவங்க கத்துக்கொடுக்கற விஷயங்கள் தான், அவர்களை பின்னாடி ஒரு நல்ல துறையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுவதற்க்கு உதவியா இருக்கு.” என்றார் அழகேசன்.

“அப்பா... சூப்பர் பா.. அதானால தான் குருவை கடவுளுக்கு நிகரா சொல்றாங்களா.?” என்றான் அமுதன்.

“ஆமாண்டா தம்பி. சரி, தமிழ் சொல்லிட்டா. நீ இன்னும் என்னன்னு சொல்லலையே.” என்றார்.

“நானா..” என்று இழுத்தவனை என்ன சொல்லப் போகிறான் என்ற ஆவலில் பார்த்தனர் தமிழினியும், அழகேசனும்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1314

உங்களின் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் தோழமைகளே...


 
அத்தியாயம் 13

தமிழ் அவளின் விருப்பத்தை சொன்ன நிலையில், அமுதன் என்ன சொல்லப் போகிறான் என்ற ஆவலில் இருந்தனர் இருவரும்.

“சரி ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன விளையாட்டு காட்டட்டுமா. நீங்களே கண்டுபிடிங்க. யாரு சரியா சொல்றீங்கன்னு பார்க்கலாம்.” என்று அவர்களிடம் விளையாட்டாகச் சொன்னான் அமுதன்.

“ம்ம்ம்.. உனக்கு கலெக்டர் ஆகணும்னு ஆசை. சரியா.? ஏன்னா, எப்பவும் நிறைய பேருக்கு உதவி பண்ணனும். அதுக்கு ஒரு நல்ல துறைல இருந்தா தான் முடியும்னு சொல்லுவியே. அதனால அதுதான் சரின்னு நினைக்கிறேன்.” என்றாள் தமிழினி.

“சரி, அப்பா நீங்க சொல்லுங்க.” என்று அழகேசனிடம் கேட்க,

“போலீஸ் ஆகணும்னு நினைக்கறியோ. ஒரு தடவை இந்தப் பஞ்சாயத்துல நடக்கற அநியாயத்தப் பத்தி உன்கிட்ட பேசும் போது, உன்னை அறியாமலேயே நீ கோபமா, இவங்கள எல்லாம் போலீஸ் கிட்ட புடிச்சுக் குடுக்கணும். அப்பாதான் திருந்துவாங்கன்னு சொல்லுவியே. சரியா.?” என்றார் அவர்.

இருவரையும் பார்த்து சிரித்தவன், “பரவால்லா ரெண்டு பேரும் ஓரளவுக்கு சொன்னீங்க. ஆனா, எனக்கு இந்த ரெண்டையும் விட இன்னொரு துறைல தான் போகணும்னு விருப்பப்படறேன்.” என்றான்.

“ஓ.. அப்போ ரெண்டுமே இல்லையா.? அப்பறம் வேற என்னவா இருக்கும்.? ம்ஹூம்ம் கண்டுபிடிக்கவே முடியல. நீயே சொல்லு.” என்றாள்.

“நான் வக்கீல் ஆகணும்னு விருப்பப்படறேன்.” என்றான்.

“ஓ.. சூப்பர் டா நண்பா. அந்தத் துறைய அவ்வளவு சீக்கிரம் யாரும் தேர்ந்தெடுக்க மாட்டாங்க. ஆனா, நீ அதை தேர்ந்தெடுத்திருக்கறத நினைச்சா, ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றாள் தமிழ்.

“ஓஓஓ.. பரவால்லையே தம்பி, ரொம்ப நல்ல துறையத்தான் தேந்தெடுத்திருக்க. ம்ம் உனக்கு சரியான துறை தான். நீ தான் பேச்சுப் போட்டில வல்லவன் ஆச்சே. நான் கூட இதை எதிர்பார்க்கல. சரி காரணம் என்ன.?” என்றார் அழகேசன்.

“அப்பா, நீங்க என்கிட்ட பஞ்சாயத்துல நடக்கற விஷயங்களப் பத்தி பேசும் போது நீங்க சொன்ன மாதிரி கோபம் வரும். அநியாயம் பண்றவங்களப் பார்த்தா, அவங்கள தண்டிக்கணும்னு தோணும். ஆனா, அதுக்கு போலீஸானா மட்டும் பத்தாது. ஏன்னா, போலீஸோட கடமை தப்பு பண்றவங்களத் தூக்கி ஜெயில்ல போடறதோட முடிஞ்சிடும். அவங்க மேல கேஸ் மட்டும் தான் போடுவாங்க. ஆனா, வக்கீல்களால மட்டும் தான் அந்தக் கேஸை எடுத்து வாதாடி அவங்களுக்கு உரிய தண்டனையை வாங்கித் தர முடியும். அதனால தான் நான் அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க முடிவு பண்ணேன்.” என்று சொன்னான் அமுதன்.

“சபாஷ் டா தம்பி.. பலே.. பலே.. என்ன அருமையா ஒரு விஷயம் சொன்ன. சரி இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்.? நானும் இதைப் பத்தி சொன்னதில்லையே.” என்று அழகேசன் சந்தேகமாகக் கேட்க,

“ம்ம்.. அதுவாப்பா.. நான் பேச்சுப் போட்டிக்காக நிறைய விஷயங்களப் பத்தி வடிவு டீச்சர் கிட்ட கலந்து பேசுவேன். அப்போ தான் ஒரு சமயம் இந்த விஷயங்களத் தெரிஞ்சுக்கிட்டேன். வடிவு டீச்சர் எனக்கு ரொம்பவே உதவியா இருப்பாங்க.” என்றான் அமுதன்.

“ஆக மொத்தம், நீங்க ரெண்டு பேரும் உங்க கனவ தேர்ந்தெடுக்க உதவியது வடிவுக்கரசி டீச்சர் தான் காரணம்னு சொல்றீங்க சரியா.?” என்றார் அழகேசன்.

“ஆமாம் பா. சரியா சொன்னீங்க.” என்றான் அமுதன்.

“ஆமாங்கய்யா. அவங்களால தான் நான் இந்த அளவுக்கு வந்திருக்கேன்.” என்றாள் தமிழினியும்.

“இதை ஒரு நாளாவது வடிவு டீச்சர்கிட்ட சொல்லிருக்கீங்களா.?” என்றார் அழகேசன்.

“ம்ஹூம்ம். ஆனா, இந்தப் பள்ளிக்கூடத்த விட்டு போறதுக்குள்ள கண்டிப்பா சொல்லணும்னு தோணுது பா.” என்றான் அமுதன்.

“ஆமாங்கய்யா. கண்டிப்பா தேர்வு முடிஞ்சதும் அவங்ககிட்ட சொல்லிடறோம்.” என்றாள் தமிழினி.

அதே போல் பொதுத்தேர்வை நல்லபடியாக எழுதி முடித்தனர். எழுதி முடித்த கையோடு, வடிவுக்கரசி டீச்சரிடம் சென்றனர்.

“டீச்சர், உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தப் பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறோம். முதல்ல நன்றி டீச்சர்.” என்றனர் இருவரும்.

சிரித்த வடிவு டீச்சர், “முதல்ல எதுக்கு நன்றி சொல்றீங்க.?” என்றார்.

“டீச்சர் இன்னைக்கு நான் இந்த பள்ளிக்கூடத்துல எல்லாப் பசங்களோடையும் சகஜமா இருக்கறதுக்குக் காரணமே நீங்கதான். எல்லாருமே என்கிட்ட பேசினதுக்குக் காரணமும் நீங்கதான். அதுக்கு முதல் நன்றி டீச்சர். அப்பறம், நான் டீச்சராகணும்னு இருக்கேன். அதுவும் உங்களைப் பார்த்துதான். என்னுடைய கனவுக்கும் நீங்க தான் அடித்தளமா இருந்திருக்கீங்க டீச்சர். இனிமேல் நாங்க இந்தப் பள்ளியில இருக்க முடியாது. அதனால தான், உங்ககிட்ட சொல்லணும்னு வந்தோம்.” என்று தமிழினி உணர்ச்சி பொங்க கூறிக்கொண்டிருந்தாள்.

“ஆமா டீச்சர். நீங்க அன்னைக்கு பேச்சுப் போட்டிக்காக சொன்ன சில விஷயங்களால தான், நான் என்னோட கனவைத் தேர்ந்தெடுக்க முடிஞ்சது. உங்களுக்கு என்னுடைய நன்றிகள் டீச்சர்.” என்றான் அமுதனும்.

அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. “உங்கள மாதிரி மாணவர்களைப் பார்க்கும் போது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் இன்னும் நிறைய விஷயங்களைக் கத்துக்க வேண்டி இருக்கும். ஏன்னா, கனவை மட்டுமே தேர்ந்தெடுக்கறது பெரிய விஷயம் கிடையாது. அதுக்கு நீங்க உங்களைத் தகுதியானவங்களா மாத்திக்கணும். அதுதான் நாம் அடையற கனவுக்கு செய்யும் ஒரு மரியாதை. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு விஷயங்களைத் தெரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க. லைப்ரரி அதாவது நூலகம் இதுக்கு ரொம்ப உதவியா இருக்கும். அங்கே நிறைய புத்தகங்கள் இருக்கும். நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்க முடியும். சரியா.?” என்றார் வடிவுக்கரசி.

“கண்டிப்பா டீச்சர். ஆனா, நம்ம ஊருல நூலகமே கிடையாதே. அப்பறம் எப்படி டீச்சர் தெரிஞ்சுக்கறது.?” என்று தமிழினி கேட்க, அந்தக் கேள்வி வடிவு டீச்சரை மிகவும் யோசிக்க வைத்தது.

“சரி, பசங்களா நாம் எல்லாரும் சேர்ந்து இந்த ஊருல லைப்ரரி திறக்க ஏற்பாடு பண்ணலாம். சரியா. அதுக்கப்பறம் நீங்க எல்லாரும் சேர்ந்து போய் படிக்கலாம்.” என்றார் வடிவு.

“அப்படியா டீச்சர்.? அந்த மாதிரி நாமளே பண்ண முடியுமா டீச்சர்.? அதுக்கு யார் கிட்ட கேட்கணும் டீச்சர்.?” என்றார்கள் இருவரும்.

“நாம் அரசுத் துறையில இருக்கறவங்களக் கேட்டுப் பார்க்கலாம். அதோட நம்மால முடிஞ்சதையும் பண்ணலாம்.” என்றார்.

“ம்ம். டீச்சர். எனக்கு முதலமைச்சரோட பி.ஏ வத் தெரியும். அவங்க எந்த உதவின்னாலும் கேட்கச் சொல்லி இருக்காங்க. முதலமைச்சர் கண்டிப்பா பண்ணுவாருன்னு அன்னைக்கு நாங்க விருது வாங்கும் போது சொன்னார்.” என்றாள் தமிழினி.

“பரவாலையே. அப்போ நம்ம வேலை இன்னும் எளிதா முடிஞ்சிடும். அவருக்கு நாம ஒரு கடிதம் எழுதி அதை அவங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவங்க பார்த்தால் கண்டிப்பா நமக்கு அதுக்கான ஏற்பாடு பண்ணுவாங்க.” என்றார் வடிவுக்கரசி.

“சரிங்க டீச்சர்..” என்று சொன்னவர்களைப் பார்த்து சிரித்தவர், “சரி வாங்க, அதை உடனே பண்ணிடலாம். நீங்க நான் கொடுக்கற கடிதத்தைப் போய் தபால் பெட்டியில போட்டா போதும். கண்டிப்பா ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் நமக்கு பதில் தெரிஞ்சிடும்.” என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய்க் கடிதம் எழுதி அவர்களை தபால் பெட்டியில் போட்டு விடச் சொன்னார்.

அவர்களும் அதே போல் போஸ்ட் பாக்ஸில் போட்டு விட்டு அவரவர் வீட்டுக்குத் திரும்பினர். அடுத்த நாளில் இருந்து விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்தனர் இருவரும். அதை அழகேசனுடன் கலந்து பேசினர்.

“அப்பா, நேத்து வடிவு டீச்சர் நம்ம ஊருலயே லைப்ரரி வைக்கறதப் பத்தி சொன்னாங்க. அதுக்கு கடிதம் ஒன்னை முதலமைச்சருக்கு எழுதி எங்களை போஸ்ட் செய்யச் சொன்னாங்க. இந்த லீவுல முதல் படியா அந்த வேலையைச் செய்துட்டோம் பா. ஆனாலும், வேற பயனுள்ளதா எப்படி இந்த லீவ செய்யறதுன்னு யோசிச்சுட்டிருக்கோம். நீங்களும் எங்களுக்கு கொஞ்சம் உதவுங்களேன்.”

“ம்ம். நல்ல விஷயம் தான். நாங்க எல்லாம், லீவு விட்டா ஊருல இருக்கற தாத்தா, பாட்டி வீட்டுக்கும், அத்தை, மாமா வீட்டுக்கும் போய் வருவோம். அதுக்கே ஒரு மாசம் பத்தாது. ஆனா, நீங்க தேர்வு முடிஞ்ச கலைப்பு கூட இல்லாம, ஏதாவது பயனுள்ளதா பண்ணனும்னு நினைக்கிறீங்களே அதுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.” என்று இருவரையும் பார்த்து சொன்னார்.

“எங்களுக்கும் அந்த ஆசை இருக்குப்பா. ஆனா, ஊருக்குப் போறத நினைச்சாலே பயமா இருக்கு.” என்றான் அமுதன்.

“தாத்தா, பாட்டி ஊருக்கு போகலாம் தானே தம்பி. அவங்களும் உன்னை எப்போதிலிருந்து கேட்டுட்டே தான் இருக்காங்க. ஆனா, நீ தான் போக மாட்டேங்கிற. அங்கயும் போய் அவங்க பண்ற விவசாயத்தைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமே. அதுவும் ஒரு நல்ல விஷயம் தானே.” என்றார் அழகேசன்.

“விவசாயம் பண்றது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஏன்னா, அது ரொம்ப அற்புதமானவங்களால மட்டும் தான் உண்மையா பண்ண முடியும். மண்ணை உயிராய் நேசிக்கறவங்க அந்த பூமிய என்னைக்கும் விட்டு வரமாட்டாங்க, யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க. அப்படிப்பட்ட விஷயத்தை நீ ஒரு முறையாவது வாழ்நாள்ல தெரிஞ்சுக்க வேண்டாமா.? வாழ்க்கைல உனக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னா, அது எந்த விஷயமா இருந்தாலும் நீ அதை கத்துக்க முயற்சி செய்யணும். இனி தான் ஊருல அறுவடை நாள் வரும். அதெல்லாம் நீ கண்டிப்பா பார்க்கணும். எனக்கு விவசாயம் தெரியும். எனக்கு அது பிடிச்ச விஷயம் தான். ஆனா, அதை விட எனக்கு ஒரு ஆசிரியரா இருக்கறது ரொம்பப் பிடிச்சதால, என்னால அதைத் தொடர முடியல. ஆனா, நீ அதை தெரிஞ்சுக்காமயே போயிடக் கூடாது. இதோ, தமிழினி கூட சில சமயம் அவளோட அம்மா, அப்பாக்கு உதவியா வயல்ல இறங்கி வேலை செய்யறத நீயே பார்த்திருக்க தானே.? அவளுக்கு அந்த விஷயம் கொஞ்சமாவது தெரியும். ஆனா, உனக்கு அது தெரியாமலேயே போயிடக் கூடாது. அதே மாதிரி, தாத்தா, பாட்டிகள் கூட இருக்கற நிமிஷங்கள் ரொம்ப அலாதியானது. அது ரொம்ப அற்புதமா இருக்கும். அவங்களோட அக்கறையாகட்டும், சமையலாகட்டும், பேச்சாகட்டும், ஊர் சுத்திக் காட்டறதாகட்டும் எல்லாமே நீ இதுவரைக்கும் தெரிஞ்சுக்காமயே போயிட்ட. இன்னும் அவங்களோட காலங்கள் எத்தனை நாளுக்குன்னு தெரியாது. அதனால, நீ இந்த முறை கண்டிப்பா தாத்தா, பாட்டி வீட்டுக்குப் போய் இருந்துட்டு வா.” என்றார் அழகேசன்.

அமுதன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான். அவனின் மனதில் இருக்கும் எண்ணத்தை அழகேசனால் முழுமையாய்ப் படிக்க முடிந்தது.

“நீ எதுக்காக இப்படி அமைதியா இருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. அங்க போனா, அத்தையும் உன்னை அவ வீட்டுக்குக் கூப்பிடுவா. அதுக்குத் தான பயப்படற.” என்றார்.

“ம்ம்ம்..” என்று தலையாட்டினான்.

“டேய்.. நண்பா. நீ வக்கீலா ஆகணும்னு சொல்லிட்டு இந்த சின்ன விஷயத்துக்கே பயந்தா எப்படி.? உன் மனசுல என்ன தோணுதோ அதை அப்படியே தைரியமா அவங்ககிட்ட பேசிடு. இப்போவே நீ எதையும் சொல்லாம அவங்களைக் கண்டு பயந்தா அதுவே அவங்களுக்கு சாதகமா எடுத்துட்டு உன்னைப் பேசுவாங்க. ஒரு தடவை நீ நிமிர்ந்து பேசினா தான் அதுக்கப்பறம் உன்கிட்ட அப்படி நடந்துக்க மாட்டாங்க. பேச்சுப் போட்டில பேசும் போது மட்டும் எப்படி நெஞ்ச நிமிர்த்தி உன்னால பேச முடியுது.? அதே மாதிரி நீ வாழ்க்கைலயும் நெஞ்ச நிமிர்த்தி தைரியமா பேசு. அப்போதான், உன்னை யாரும் குறைவா எடை போட மாட்டாங்க. இந்த முறை நீ கண்டிப்பா பாட்டி ஊருக்குப் போயிட்டு வா.” என்று தமிழினி தைரியமாகப் பேச அழகேசனே அசந்து போனார்.

“அருமை தமிழ். ம்ம். பாரு அமுதா உன் தோழியே எத்தனை தைரியமா உனக்கு ஊக்கம் கொடுத்து உன்னை வழிநடத்தறா. நீ தாராளமா போயிட்டு வா. அப்படியே அத்தை கேட்டாலும், உனக்கு என்ன தோணுதோ அதை அப்படியே சொல்லிடு. ஏன்னா, அவ அறுவடை நேரத்தில் அங்க வருவா. அதனால தான் சொல்றேன்.” என்றார் அழகேசன்.

“நான் போறேன் பா. ஆனா, எனக்கு ஒரு சின்ன ஆசை. கூடவே நீங்களும், தமிழினியும் வரணும்னு எனக்கு ஆசை. அப்படி வந்தா நான் கண்டிப்பா போறேன்.” என்று அமுதன் சொல்ல, தமிழினி அதிர்ச்சியானாள்.

“டேய்.. நண்பா. அய்யோ.. என்னால முடியாது. அப்பா, அம்மாவை விட்டு இதுவரைக்கும் நான் எங்கயுமே வந்தது இல்ல. எனக்குன்னு இருக்கறது அவங்களும், நீங்களும் தான். ஆனாலும், என்னால வர முடியாது. நீ என்னை தப்பா நினைக்காத. நான் கிளம்பறேன். ஊருக்குக் கிளம்பற மாதிரி இருந்தா சொல்லு, நான் வந்து உன்னைப் பார்த்துட்டுப் போறேன். ” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் தமிழினி.

அவளின் பதில் ஏமாற்றத்தைத் தரவே, அமுதனின் முகம் வாடியது. அதை உணர்ந்தவராய் அழகேசன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1223

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமென்ட்ஸ் லிங்கில் தரவும்...

 
அத்தியாயம் 14

அழகேசன் வழக்கம் போல் அமுதனின் மனம் வருத்தப்படாமல் இருக்க, தமிழின் வீட்டிற்க்குச் சென்று எப்படியோ ரங்கனையும், கோகிலாவையும் சம்மதிக்க வைத்து அவர்கள் மூலம் தமிழையும் சம்மதிக்க வைத்து, இப்போது அமுதனையும், தமிழினியையும் அழைத்துக்கொண்டு அவரின் சொந்த ஊரான உடுமைலைப்பேட்டை அருகில் உள்ள ருத்ரா பாளையம் எனும் கிராமத்திற்க்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

மூவரும் பேருந்தை விட்டு இறங்கியதும், அமராவதி ஆறு கரை புரண்டோடும் அந்தக் கிராமம் அவர்களை அன்புடன் வரவேற்றது. கொள்ளை அழகாய் ஓடும் அமராவதி ஆற்றைப் பார்த்து ரசித்தபடி நின்றனர் இருவரும்.

“என்ன பசங்களா, எப்படி இருக்கு எங்க ஊரு.? இதுதான் நான் பிறந்து வளர்ந்த கிராமம். இந்த ஆத்துல தான் நாங்க எப்பவும் குளிப்போம், துவைப்போம், நீச்சலடிப்போம்.” என்று தன் பழைய ஞாபகங்களை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார் அழகேசன்.

“ரொம்ப அருமையா இருக்கு ஐயா.. இந்த ஆத்தைப் பாத்தவுடனே போய் அப்படியே குதிச்சு நீச்சலடிக்கணும் போல இருக்கு.” என்றாள் தமிழினி.

“ஆமா, தமிழு. எனக்கும் அப்படித்தான் இருக்கு.” என்றான் அமுதனும்.

மூவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் பின்னால் டிவிஎஸ் வண்டியின் சத்தம் கேட்டது. யாரென்று திரும்பிப் பார்த்தனர். அழகேசனின் அப்பாதான் வண்டி ஓட்டிக்கொண்டு வந்திருந்தார்.

“இதோ தாத்தா வந்துட்டாரே.!” என்று அவரைப் பார்த்து சிரித்தார்.

“எப்பப்பா வந்தீங்க.? ரொம்ப நேரமா காத்திட்டிருக்கீங்களா.? நான் பெட்ரோல் போட்டுட்டு வர நேரம் ஆயிடுச்சு.” என்று கேட்டார் தாத்தா.

“அதெல்லாம் இல்ல பா. பசங்க ஆத்தைப் பாத்துட்டு நின்னுட்டு இருந்தாங்க. அவங்களுக்கு பழைய விஷயங்களை சொல்லிட்டு இருந்தேன்.” என்றார் அழகேசன்.

அவருக்குப் பின்னாலேயே இன்னொரு வண்டியில் தாவணி அணிந்த ஒரு பெண் வந்து அவர் பக்கமாக நின்றாள். இவர்களோ யாரென்று தெரியாமல் பார்த்துக்கொண்டு நிற்க, அழகேசன் கண்டுபிடித்து விட்டார்.

“ஏய்.. மாரியம்மா.. எப்படி இருக்க.? நல்லா பெரிய பொண்ணா வளர்ந்துட்ட. சின்னப் பொண்ணா இருக்கும் போது பாவாடை, சட்டைல பார்த்தது. இப்போ பாரு, அடையாளமே தெரியல.” என்று அவளை ஆச்சர்யமாய்ப் பார்த்தபடி கேட்டுக்கொண்டு நின்றார் அழகேசன்.

“ஆமா, மாமா. நல்லா இருக்கேன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க. வாத்தியார் வேலையெல்லாம் எப்படிப் போகுது.?” என்று படபடவென்று பேசினாள்.

“நானும் நல்லா தான் இருக்கேன். அதோட, பிடிச்ச வேலைன்றதனால ரொம்ப சிறப்பா போயிட்டிருக்கு வேலை.” என்றார் அழகேசன்.

“ம்ம்.. உங்கள மாதிரி எல்லாரும் மேல படிச்சிட்டு நிலத்தையெல்லாம் அம்போன்னு விட்டுட்டுப் போனா, எப்படி சோறு கிடைக்கும்.?” என்றாள் மாரி.

“அதுக்கென்ன பண்றது மாரி. நான் எதுவும் வேணும்ட்டு பண்ணலையே. அதுவும் சிறந்த பணி தானே.?” என்றார் சமாளித்தவாறே அவளுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல்.

“ம்ம்.. சரி, சரி.. அமுதனா இது.? நானும், இவன சின்னப் பையனா இருக்கும் போது பார்த்தது. நல்லா வளர்ந்துட்டான். இப்போ என்ன படிக்கற.?” என்று அமுதனைப் பார்த்துக் கேட்டாள்.

அவனும், “10-வது படிக்கிறேன்.” என்றான் பணிவுடன்.

அவனுக்கு அருகில் நின்றிருந்த தமிழினியைப் பார்த்தாள். “இது யாரு மாமா.? உங்களுக்கு ஒரே பையன் தான.? புதுசா இருக்கு பொண்ணு.?” என்றாள் மாரி.

“இது அமுதனோட தோழி, இவளும் எனக்கு பொண்ணு மாதிரி தான். பேரு தமிழினி. ரெண்டு பேரும் ஒரே பள்ளிக்கூடத்துல, ஒரே வகுப்புல தான் படிக்கிறாங்க.” என்றார் அழகேசன்.

“சரி, சரி கிளம்பலாமா.? தமிழ் வா. என்கூட வண்டில வந்து ஏறிக்க.” என்று உரிமையுடன் கூப்பிட்டாள் மாரி.

அதற்க்குள் அமுதனின் தாத்தா, “ஏன் மாரி. உனக்கு அப்பறம் கிளம்பின நானே முன்னாடி வந்துட்டேன். நீ ஏன் இவ்ளோ நேரம் கழிச்சு வர.?” என்று கேள்வி கேட்ட தாத்தாவைப் பார்த்து,

“வழில வம்பு பண்றதுக்குன்னே சில எருமைக நின்னுட்டு இருந்துச்சு தாத்தா. அதுகளை எல்லாம் அடிச்சு விரட்டிட்டு வர வேண்டாமா.? அதுல தான் லேட் ஆயிடுச்சு.” என்றபடி வண்டியைக் கிளப்பினாள் மாரி.

அவள் சொன்னது அவருக்கு ஜாடையாய்ப் புரிந்தது. “ஓ.. சரி, சரி..” என்றபடி, “டேய்.. அழகேசா, இந்தா வண்டில நீயும், அமுதனும் போங்க. நான் நடந்து வரேன்.” என்றார்.

“அப்பா, நீங்க அமுதனக் கூட்டிட்டு கிளம்புங்க. நான் அப்படியே காலார வரேன். வழில எனக்கு ரெண்டு, மூணு வேளை இருக்கு.” என்றபடி நடக்கத் துவங்கினார்.

“ஏண்டா பேராண்டி. போலாமா.?” என்று வண்டியைக் கிளப்ப,

“ம்ம்.. போலாம் ரைட்.. தாத்தா..” என்றான் அமுதன்.

“என்ன பேராண்டி, சுத்தி முத்தியும் பாத்துட்டே வர, எப்போ நீ சின்ன வயசுல ஊருக்கு வந்தது. அதுக்கப்பறம் வரவே இல்ல. ஏன், இங்கல்லாம் வர மாட்டியா.? தாத்தா, பாட்டியப் பாக்கணும்னு எண்ணமே வராதா.?” என்று தாத்தா வண்டியை ஓட்டிக் கொண்டே கேள்விகேட்டுக் கொண்டு வந்தார்.

“அப்படியெல்லாம் இல்ல தாத்தா. எனக்கு வரணும்னு தான் ஆசை. ஆனா, உங்க மகளப் பார்த்தா தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கும்.” என்றான்.

“யாரு, விசாலத்தைப் பார்த்து பயப்படறியா.? அவ என்ன பண்ணா உன்ன.? நீ தாயில்லாப் புள்ளையா இருக்கும் போது, அவதாண்டா உன்ன எடுத்து வளர்த்துனா. அவளப் பார்த்தா பயப்படற.?” என்றார்.

“அதெல்லாம் சின்ன வயசோட போச்சு தாத்தா. கோலாவோட சீரப்போ பாத்தீங்கள்ல எப்படியெல்லாம் பேசறாங்க. என்னை அவங்க மாப்ளன்னு சொல்றாங்க. எனக்கு என்ன வயசாகுது, இப்போ போய் கல்யாணத்தப் பத்தி பேசறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு தாத்தா. எப்பவும் இதே பேச்சு தான். கோலாவையும் அப்படி சொல்லி சொல்லியே, அவ என்கிட்ட நடந்துக்கற முறையும், பேசற முறையும் சரியில்ல. அதனாலயே, எந்த ஊருக்கும் போகக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்தத் தடவை அப்பா தான் என்னை வற்புறுத்திக் கூட்டிட்டு வந்தார். அத்தையும் அறுவடைக்கு வருவாங்கன்னு சொன்னாரு. ஆனா, ஏதோ ஒரு தைரியத்துல வந்துட்டேன்.” என்று சொல்லி முடிக்கும் போது வீடு வந்து சேர்ந்தார்கள்.

அவன் சொன்ன கதையைக் கேட்டபடியே வந்தவர், “சரி விடு பேராண்டி. பார்த்துக்கலாம்.” என்று அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்தவாறே சிரித்தார். அது அவனுக்கு அழகேசன் செய்வதைப் போலவே இருந்தது.

அதற்க்குள் உள்ளிருந்து வெளியே வந்த அவனது பாட்டி, “கண்ணு, வாடா ராசா.. வா.. வா..” என்று அவனை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.

“நல்லா இருக்கியா கண்ணு. ஏன் அன்னைக்குப் பார்த்தத விட, இன்னைக்கு இளச்சிப் போயிட்ட. ஒழுங்கா சாப்பிடறதில்லையா.? உங்கப்பன் சோத்த ஒழுங்கா ஆக்கிப் போடறானா இல்லையா.? இதுக்குத்தான், இன்னொரு கல்யாணம் பண்ணிக்கடான்னு அன்னைக்கே தலப்பாடா அடிச்சிக்கிட்டேன். கேட்டாதான.? இப்போ பாரு அவனும் கஷ்டப்பட்டுட்டு, உன்னையும் சரியா கவனிக்காம கஷ்டப்படுத்தறான்.” என்று வந்தவுடனேயே அவனிடம் தன் புலம்பலை ஆரம்பித்தார் பாட்டி.

“ஏய், கமலம்.. எத்தனை வருஷம் கழிச்சுப் பேரன் நம்ம வீட்டுக்கு வந்திருக்கான். நீ இப்படித்தான் சதா புலம்பிட்டே இருப்பியா.? அப்பறம், அவன் ஏண்டா இங்க வந்தோம்னு நினைக்கப் போறான்.?” என்றார் தாத்தா.

“சரி, சரி.. நீங்களே போதும், அவனுக்கு சொல்லிக் கொடுத்துடுவீங்க போலிருக்கே. விடுங்க. நீ வாடா ராசா. போய் முகம், கை, காலெல்லாம் கழுவிட்டு வருவியாம். உனக்காக பாட்டி என்னென்னவெல்லாம் செஞ்சு வைச்சிருக்கேன் பாரு.” என்றபடியே அவனை அழைத்துக் கொண்டு உள்ளே போனார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர், எங்கே இந்த மாரியை இன்னும் காணவில்லை என்றபடி திண்ணையில் அமர்ந்தபடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர் பார்த்துக்கொண்டே அமர்ந்த ஐந்து நிமிடங்கள் கழித்து, உள்ளே வண்டியில் நுழைந்தாள் மாரி. கூடவே அவள் வண்டி முழுக்க, நுங்கு மரத்தில் இருந்து ஒரு முழு நுங்கு குலையையே எடுத்து வந்திருந்தாள். அதுமட்டுமல்லாமல் தமிழினியின் கையில் ஒரு பெரிய தர்பூசணிப் பழம் இருந்தது.

அதோடு ஒரு பெரிய வயர் கூடையில் பனம் பழங்கள் இருந்தன. அனைத்தையும் எடுத்துக்கொண்டு தமிழினியையும் கூட்டிக் கொண்டு உள்ளே வந்த மாரியை அழைத்தார் தாத்தா.

“ஏன் மாரி நம்ம தோட்டத்துக்காரர் கிட்ட சொன்னா எல்லாத்தையும் வந்து குடுத்துட்டுப் போறார். நீ எதுக்கு இத்தனையும் எடுத்துக்கிட்டு, அந்தப் புள்ளையையும் சுத்த வைச்சுக் கூட்டிட்டு வர.?” என்றார்.

“தாத்தா, நீங்க தோட்டத்துக்காரர் கிட்ட சொன்னா, வியாபாரத்துக்கு கொடுத்தது போக, எது மிச்சமிருக்கோ அதைத்தான் நமக்கு கொடுத்து விடுவார். ஆனா, நாம நேர்ல போய் வாங்கும் போது, நமக்கு எது நல்லா இருக்குமோ அதை நாமலே தேர்ந்தெடுத்து வாங்கிக்கலாம். அதனால தான் இந்தப் பொண்ணையும் கூட்டிட்டு, தோட்டத்துக்குப் போயிட்டு அப்படியே நம்ம ஊரையும் சுத்திக் காட்டிட்டு வந்தேன். அந்தப் பொண்ணுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு நம்ம ஊர.” என்றபடி அனைத்தையும் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அவர்கள் நுழையும் வாசலுக்கு முன்பாக அனைத்தையும் வைத்து அடுக்கி விட்டு, அப்படியே வராண்டாவில் அமர்ந்தாள் மாரி. அதற்க்குள் அமுதனும், கமலம் பாட்டியும் வந்து விட்டனர்.

“அம்மாடி ஆத்தா மாரியம்மா, என்ன பனை மரத்தையே வெட்டி எடுத்துட்டு வந்துட்டியா.? குலை, குலையா எடுத்துட்டு வந்திருக்க.?” என்று அவளை கேலி செய்தார் பாட்டி.

“இங்க பாருங்க பாட்டி. இது தான் வேணாங்கறது. நம்ம வீட்டுக்கு ஒரம்பரைங்க வராங்கன்னு தெரிஞ்சா இதெல்லாம் பண்றது வழக்கம் தானே.? அதுவும் வந்திருக்கிறது சின்னப் பசங்க. அவங்க அப்பப்போ சாப்பிட ஏதாவது வேணும் இல்ல. அதனால தான் எல்லாம் வாங்கிட்டு வந்தேன். நீங்க பாரு கேலி பண்றீங்க.” என்றாள் மாரி.

அவளின் பேச்சை சட்டை செய்யாத பாட்டி, தமிழினியைப் பார்த்தார். “இதுதான் உன் சிநேகிதியா. உங்கப்பன் சொல்லிருக்கான். இந்தப் பொண்ணு தான சின்ன வயசா இருக்கும் போது உன்னை தீயிலிருந்து காப்பாத்தினது.?” என்று கேட்டார்.

“ஆமா பாட்டி. இன்னைக்கு நான் உயிரோட இருக்கறதுக்கு காரணமே அவ தான். அதே மாதிரி போன வருஷம் கூட, வாய்க்கால்ல வெள்ளம் போனப்போ, அதுக்குள்ள குதிச்சு ரெண்டு பசங்களோட உசுரக் காப்பாத்துனா. நிறைய நல்ல விஷயங்கள் பண்ணிருக்கா பாட்டி. அதுக்குத்தான் ரெண்டு முறை முதலமைச்சர் கையால விருது வாங்கிருக்கா. அவளோட மேல் படிப்புக்கான செலவையும் அரசே ஏத்துக்கும்னு சொல்லிட்டாங்க.” என்று தன் தோழியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே சென்றான் அமுதன்.

“ம்ம்ம்.. அப்படியா.. இங்க வாடா கண்ணு. உனக்கு சுத்தி தான் போடணும்.” என்று அவளைத் தன் கைகளால் அளந்து த்ருஷ்டி சுத்தினார் கமலம் பாட்டி.

“இங்க பாருடா.!! இந்தக் கதைய.! எனக்குத் தெரியாம போச்சே. பார்க்கறதுக்கு ரொம்ப சாதாரணமா இருக்க. ஆனா, எவ்வளவு பெரிய விஷயங்கள் பண்ணிருக்க. நீயும் என்னை மாதிரி தான் போல.” என்றாள் மாரி.

எதையுமே பேசாமல் அமைதியாய் சிரித்துக்கொண்டே நின்றிருந்தாள் தமிழினி. “மாரி, நீ உன்னை மாதிரின்னு சொல்லி அந்தப் பொண்ண சிறுசாக்கிடாத. அந்தப் பொண்ணு பண்ணிருக்கறதெல்லாம் ரொம்பப் பெரிய விஷயம்.” என்றார் தாத்தா உள்ளே வந்தவாறே.

“ம்ம்.. தாத்தா நீங்களுமா.?” என்று அவரை செல்லமாக முறைத்தாள் மாரி.

“ஏண்டா மா. இந்தச் சின்ன வயசுலயே எப்படி இவ்வளவு தெளிவா, யோசிச்சு உன்னால அந்த கடினமான சமயத்துல சமயோஜிதமா அமுதனையும், அந்தப் பசங்களையும் காப்பாத்த முடிஞ்சது.?” என்றார் தாத்தா.

“தெரியல தாத்தா. கடவுளோட அருள்ன்னு தான் சொல்லணும். ஆனா, ஒரு விஷயத்த மட்டும் நான் மனசில நினைச்சுப்பேன். எந்த ஒரு கடினமான சமயத்திலும், பதட்டப்படாம யோசிச்சு என்ன செய்யணுமோ, அதை சரியா செய்யணும்னு ஒரு எண்ணம் எப்பவும் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கும். அப்படி தான் சின்ன வயசுல செஞ்சு அமுதனக் காப்பாத்தினேன். ஆனா, இந்த முறை அவனோட உதவியால தான் அந்த ரெண்டு பசங்களையும் என்னால காப்பாத்த முடிஞ்சது.” என்று அந்தக் கதையையும் சொன்னாள் தமிழினி.

“எப்படியோ, ஒரு நல்ல விஷயத்த நீ பண்ணதும் இல்லாம, எங்க அமுதனையும் அதுல இருந்து மீட்டு, அவனை உதவி செய்யற அளவுக்கு நீ தான் பண்ணிருக்க. அந்தப் பெருமை உன்னைத்தான் சேரும்.” என்றார் கமலம்.

“சரி, சரி பாட்டி. விருந்தாளியா வந்த பொண்ண, இப்படித்தான் நிக்க வைச்சு பேசிட்டே இருப்பீங்களா.? கூட்டிட்டுப் போய் அவள உங்க கவனிப்பால அசர வையுங்க.” என்றாள் மாரி.

“ஏய்.. அப்படி சொல்லாத மாரி. தமிழ் விருந்தாளி இல்ல. இனிமேல் இவளும் எனக்குப் பேத்தி தான்.” என்றவர் அமுதனை ஒரு பக்கமும், தமிழினியை இன்னொரு பக்கமும் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டு, இருவர் நெற்றியிலும் முத்தமிட்டார்.

அந்த அணைப்பின் உண்மையான அன்பை உணர்ந்தாள் தமிழினி. அவளுக்கு இது போன்ற அன்பு புதியது. ஏனென்றால், சிறு வயது முதலே அப்பா, அம்மா, இவர்கள் இரண்டு பேரின் அன்பைத் தவிர வேறு யாருடைய அன்பையும் உணராதவள் தமிழினி.

யாரென்று தெரியாத தன்னை இவர்கள் அரவணைத்து அன்பு செலுத்துவது கடவுளின் பரிபூரண அருளால் மட்டுமே நடந்தது என்று நினைத்தவள் அவருக்கு நன்றி சொன்னாள். ஆனால், இந்த அன்பு நிலைக்குமா.? என்பது தான் கேள்விக்குறி.??

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1262

உங்களின் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன...
விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...

 
அத்தியாயம் 15

அழகேசன் நீண்ட நேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தார். ஆனால், வரும் போது மிகவும் யோசனையுடனும், அதே போல் கவலையுடனும் வருவது போல் இருந்தது. அதை அவரின் தந்தை கவனித்து விட்டார்.

அதுவரை அவரைக் காணவில்லை என்று தேடியபடி திண்ணையில் அமர்ந்திருந்தவர். அவரை அழைத்தார். “என்னாச்சு அழகு, ஏன் ஒரு மாதிரி இருக்க.? வந்ததும் வீட்டுக்கு வராம உனக்கு என்ன முக்கியமான வேலை வந்துடுச்சு.?”

“ஒண்ணும் இல்ல பா. என்னோட பால்ய சிநேகிதனப் பார்க்கலாம்னு போயிருந்தேன். பாவம் அவன் படற கஷ்டத்தப் பார்த்து ரொம்ப மனசு கஷ்டமாயிடுச்சு. அதப்பத்தி யோசிச்சுட்டே வந்தேனா.? அதான்.” என்றார் அழகேசன்.

“யாரைச் சொல்ற.?” என்றார் அவர்.

“அதான் பா. ஜம்புலிங்கம். நாங்கள்லாம் ஜம்புன்னு கூப்பிடுவோமே.?” என்றார் அழகேசன்.

“அட ஜம்புவா.? ஹூம்ம். அவனோட நிலைமைக்கு அவன் தான் காரணம். யாராவது சொன்னா கேட்டாத்தானே.? தேவையில்லாதவங்க சொன்னதக் கேட்டுட்டு இப்போ அவஸ்தைப்படறான்.” என்றார்.

அதற்க்குள் மாரி அங்கே காஃபியை கொண்டு வந்து தாத்தாவிற்க்கு கொடுத்தபடி இவர்களது பேச்சையும் கேட்டுக்கொண்டு நின்றாள்.

“என்னப்பா சொல்றீங்க.? என்ன அவன் கேட்காம போயிட்டான்.?” என்றார் அழகேசன்.

“யாரைப்பத்தி மாமா கேக்கறார் தாத்தா.?” என்றாள் மாரி.

“அதான். அந்த ஜம்புவப் பத்தி கேட்டுட்டிருக்கான்.” என்று அவர் சலித்தபடி சொல்ல,

“ஓ.. அதுவா.? ஹூம்ம். மாமா, அவரோட கதை இப்போ ஊருக்கே தெரியும். சாதாரணமா இருந்த நிலத்துல கண்ட, கண்ட வேதியியல் பொருட்களை சேர்த்துப் போட்டாரு. மண்ணு நிறைய விளைச்சலக் கொடுக்குதுன்னு ஆசைப்பட்டு அதையே வருஷக்கணக்கா உபயோகப்படுத்தி, மண்ணை அதுக்கு ஏத்த மாதிரி பழக்கிட்டாரு. அந்த பொருட்களை வாங்கறதுக்கு பணம் அதிகமா செலவாச்சு. அதுக்கப்பறம் பேங்க்ல கடன் வாங்கினாரு. விளைச்சல முதல்ல அதிகமா கொடுத்தாலும், அதோட இயற்கையான ருசி தெரியாமயா போயிடும்.? அதுலயே அவர்கிட்ட உற்பத்தியாகற எந்த ஒரு பொருளையும், யாரும் வாங்க முன்வரல. கடனும் அதிகமாகிப் போச்சு. நாங்க எல்லாருமே சொன்னோம். மண்ண அதோட இயற்கையாவே இருக்க விடுங்க. அது நேரம் அதிகம் எடுத்துக்கிட்டாலும், கொடுக்கற விளைச்சல நிறைவா கொடுக்கும். அதே மாதிரி, ருசியும் மாறாம இருக்கும்னு. ஆனா, அவர் எங்களையும், இந்த மண்ணையும் நம்பல. வேற யாரோ சொன்னதைத் தான் நம்பினார். அதான், இப்போ கஷ்டப்படறார். இப்போ புலம்பியும், யோசிச்சும் என்ன பிரயோஜனம். இயற்கையை யார் மாத்தணும்னு நினைச்சாலும் இதுதான் கதி.” என்று அந்தக் கதையை சொன்னாள் மாரி.

அப்போதுதான் என்ன விவரம் என்று முழுவதுமாய்ப் புரிந்தது அழகேசனுக்கு. “இப்போ, அந்த மண்ல எது இயற்கையா விளைவிச்சாலும் விளையாதா.?” என்றார் அழகேசன்.

“ம்ஹூம்ம்.. மாமா, ரெண்டு வருஷமா அவர் அந்த மருந்துகளைப் போட்டு நிலத்த நல்லா பழக்கி வைச்சுட்டார். அதுவும் அதோட இயல்ப விட்டு இதுக்கு மாறிடுச்சு. அதுல இருக்கற மருந்தும் சேர்ந்து தான் அந்த மண்ல விளைவிக்கிற உணவுப் பொருட்களுக்குப் போகும். அதையெல்லாம் சாப்பிடறது யாரு.? நாமளும், அடுத்த தலைமுறையும் தானே.? அதனால எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும்னு தெரியுமா.? எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடும். சும்மா காச்சல், சளின்னு வந்தாலே ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டியதாப் போயிடும். இதெல்லாம் சொன்னா எங்க கேட்கப் போறாங்க. இவர மாதிரியே கொஞ்சம் பேரு, இதே தப்பப் பண்ணப் பார்த்தாங்க. ஆனா, நாங்க தான் அப்படி, இப்படிப் பேசி, அதைத் தடுத்தோம். மருந்தெல்லாம் தெளிச்சு, பூச்சிக்கொல்லி மாதிரி ஏதேதோ அடிச்சு, அவரோட நிலத்துப் பக்கம் போனாலே, ஒரு மாதிரியா மருந்து வாசம் அடிக்கும். கிட்டத்தட்ட மூணு ஏக்கர் அப்படியே ஆயிடுச்சு. அந்த மூணு ஏக்கர் நிலத்துக்கும் மருந்தத் தெளிச்சு அதோட நச்சுத்தன்மையெல்லாம் அதுல இறங்கிடுச்சு. இப்போ புலம்பினா என்ன பண்ண முடியும். இனி அது அவ்வளவுதான்.” என்றாள் மாரி.

“இத்தனை விஷயம் நடந்திருக்கா.? யார்கிட்ட இவன் இதெல்லாம் வாங்கிப் போட்டான். நீங்க எல்லாரும் அதை எப்படி தெரிஞ்சுக்கிட்டீங்க.?” என்றார் அழகேசன்.

“அதுவா, பக்கத்து ஊருல இருந்து ஒரு ஆளுதான் வந்து எல்லாத்தையும் கொடுத்து, இதெல்லாம் உபயோகிச்சா நல்லா விளைச்சலக் கொடுக்கும்னு சொல்லி, அவர் தலைல நல்லா மிளகா அரைச்சிட்டான். நம்மளோட, பாட்டன், பூட்டன் காலத்துல இருந்து நம்ம தாத்தா காலம் வரைக்கும் எல்லாருமே இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றித்தான் எல்லாத்தையுமே செஞ்சாங்க.? அதை ஏன் மாத்தனும்.? அப்போவெல்லாம் நாம என்ன கொறைச்சலா விளைச்சலப் பார்த்துட்டோம். இத்தனை வருஷமா, நாம என்ன வழிமுறையப் பின்பற்றினோமோ, அதுவே சரியான வழிதான்னு தெரியாம போயிடுச்சு அந்த மனுஷனுக்கு. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காராம் பண்ற கதையாதான் ஆச்சு.” என்று எல்லாக் கதையையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் மாரி.

“விவசாயம் பண்றது முக்கியமில்ல. இந்த மண் எத விரும்புதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நாமளும் அதை செஞ்சா தான் அதுவும் நமக்கு நல்லதப் பண்ணும்னு அவனுக்குத் தெரியாம போச்சு.” என்றார் தாத்தா.

இவர்கள் அனைவரும் வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த தமிழினியும், அமுதனும் வாசலுக்கு வந்தனர்.

“அப்பா, வந்துட்டீங்களா.? எங்க போனீங்க.? பாட்டி நீங்க எப்போ வருவீங்கன்னு பார்த்துட்டு இருக்காங்க. வாங்க..” என்றபடி அவரை அழைத்துக்கொண்டு சென்றனர்.

சமையல் கட்டுக்கு முன்னே இருக்கும் பெரிய திண்ணையில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டே மதிய உணவை சாப்பிட்டனர். கமலம் பாட்டியின் கைமணத்தில், மீன் குழம்பும், நெத்திலி மீன் கார வறுவலும், நாட்டுக்கோழி ரசமும் வாயும், வயிறும் வேண்டாம் என்று சொன்னாலும் மனம் கேட்காது என்று தோன்றியது. அத்தனை ருசி. பாட்டியின் கைமணம் என்றால் சும்மாவா.?

“பாட்டி, ரொம்ப அருமையா இருக்கு. அப்பாவோட கைமணம் உங்களது மாதிரின்னு இப்போதான் தோணுது. உங்க சமையலோட ருசி இன்னும் கொஞ்சம் சிறப்பா இருக்கு.” என்றான் அமுதன்.

பாவம், அம்மாவின் கைமணத்தில் இதுவரை சாப்பிடக் கொடுத்து வைக்காதவன், பாட்டியின் கைமணத்தை ருசித்து சாப்பிட்ட போது, அதைப் பார்த்த அழகேசனுக்கு கண்களில் இருந்து தானாக கண்ணீர் வந்தது. அதை யாரும் கவனிக்காதபடி துடைத்தார் அழகேசன்.

சாப்பிட்டு முடித்த இரண்டு மணி நேரத்திற்க்குப் பிறகு, பனம்பழத்தை சுட்டுக் கொண்டிருந்தாள் மாரி. இருவரும் அதைப் பார்த்து அவளிடம் வந்தனர்.

“அக்கா, இதை சுட்டு தான் சாப்பிடணுமா.? நிறைய நாள் பார்த்திருக்கேன், சாப்பிடணும்னு ஆசைப்பட்டிருக்கேன். ஆனா, சாப்பிட்டது கிடையாது.” என்று தமிழினி சொல்ல,

“ஆமாமா, நானும் தான் சாப்பிட்டது இல்ல.” என்றான் அமுதன்.

“டேய்.. பயலே, பொய் சொல்லாத. நீ நாலு வயசா இருக்கும் போது இங்க வந்தப்போ, இதே மாதிரி பாட்டி சுட்டுக் கொடுத்தாங்க. முதல்ல எனக்குக் கொடுத்துட்டாங்கன்னு எத்தனை அடம் பண்ண தெரியுமா.? ஹூம்ம். அத நீ கொஞ்சம் கூட ருசி பார்க்காம கோவத்துல வேண்டாம்னு சொல்லிட்ட. அப்பறம் எப்படி இதோட அருமை உனக்குத் தெரியும்.? இது நெய்யும், தேனும் கலந்த மாதிரி தித்திப்பா இருக்கும். இதெல்லாம் வாழ்க்கைல சாப்பிடாதவங்க துரதிருஷ்டசாலிக தெரியுமா.?” என்று மாரி சொல்லிக்கொண்டிருக்க, அமுதனும், தமிழினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அவளின் ஒவ்வொரு பேச்சும், செயலும், வித்தியாசமாய்த் தெரிய இவள் இங்கே யார் என்ற எண்ணம் அமுதனுக்கு மேலோங்கியது. அழகேசனைத் தேடினான்.

அழகேசன் பின்னாலிருக்கும் தென்ன்ந்தோப்பில் கயித்துக் கட்டிலைப் போட்டு படுத்துக்கொண்டிருந்தார். ரம்மியமாய்க் காற்று வீசிக் கொண்டிருக்க, அதன் அரவணைப்பில் மதிய நேர வானொலி நிகழ்ச்சியை ஒலிக்க விட்டவாறு, அவர் படுத்திருந்தார்.

வானொலியில் 80-களின் இளையராஜா பாடல்கள். அமுதன் மட்டும் அவரிடம் சென்றான். தமிழினியோ, மாரி செய்வதை அப்படியே பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

“அப்பா, அப்பா..” என்று இவனின் சத்தம் கேட்டவுடனேயே அவர் எழுந்து அமர்ந்தார். “என்னாச்சு டா தம்பி.?” என்றார் அவனை பக்கத்தில் அமர வைத்தபடி.

“அப்பா இந்த மாரி அக்கா யாரு.? இங்கயே இருக்காங்க. வித்தியாசமா பேசறாங்க, நடந்துக்கறாங்க. அதான், உங்ககிட்ட கேட்கலாம்னு வந்தேன்.” என்றான் அமுதன்.

அவன் கேட்டவுடனேயே சிரித்த அழகேசன், “ம்ம்.. உனக்கு மாரியப் பத்தி தெரிஞ்சுக்கணுமா.? அவளப் பத்தி உனக்கு சொல்லணும்னா ஒரு நாளே பத்தாது. அவ்வளவு இருக்கு அவகிட்ட விஷயங்கள்.” என்றார்.

“சரி, சொல்லுங்கப்பா நான் கேக்கறேன்.” என்றான் அமுதன் ஆவலுடன்.

“மாரி, என்னுடைய பெரியப்பாவோட அதாவது, எங்கப்பாவுடைய அண்ணனுக்கு மகள் வயித்துப் பேத்தி. அதாவது, எனக்கு அக்காவோட பொண்ணும். அதுவும், ஒரே பொண்ணு. ரொம்ப செல்லமா வளர்ந்தவ. அவளுக்கு பயம்னா என்னன்னே தெரியாது. அவ மூணு வயசு இருக்கும் போது, எல்லாரும் வயல்ல வேலை பார்த்துட்டிருக்கும் போது, இவளும் வயல்ல அவங்க கூட விளையாடிட்டு இருந்தா. யாரும் பார்க்காத நேரத்துலு, ஒரு தண்ணி பாம்பு வயல்ல இருந்திருக்கு. அத ஏதோ பொம்மைன்னு நினைச்சு அத கையில் புடிச்சு ஆட்டி ஆட்டி விளையாடிருக்கா. எங்க அக்காவும், மத்தவங்களும் பார்த்து பதறி, அவகிட்ட இருந்து அந்தப் பாம்ப வாங்கி தூரப் போட்டாங்க. நல்ல வேளை, அது தண்ணிப் பாம்புன்னால பரவால்ல. இதுவே விஷப் பாம்பா இருந்தா என்ன பண்றது.? அப்போவே அவ அவ்வளவு தைரியம். எல்லா விஷயத்தையும் சீக்கிரம் கத்துக்கணும்னு ஒரு வைராக்கியம் அவளுக்குள்ள இருக்கு. அதனால, படிப்பு, கிராமத்துல பாடற நாட்டுப்புறப் பாட்டு, மத்தவங்களுக்கு ஒரு விஷயத்த தெரிஞ்சுக்கிட்டு அதைக் கத்துக்குடுக்குறது, இதெல்லாம் அவளோட சிறப்பு. அப்பறம், இப்போதான் டிகிரி முடிச்சிருக்கா. அதுவும், பி.எஸ்.ஸி அக்ரிகல்ச்சர் கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல மெரிட் சீட்ல கிடைச்சு படிச்சா. முதல் வகுப்புலயே தேறினா. அவளோட திறமைக்கு அவளுக்கு எங்கெங்கயோ இருந்து வேலை வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அதையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு இந்த ஊர்ல தான் விவசாயம் பண்ணுவேன்னு இருந்துட்டா. ரொம்பத் திறமையான பொண்ணு. படிப்பு முடிச்சு இப்போ, நம்ம வயக்காட்டையும், எல்லா நிலத்தையும் பாத்துக்கறா. அப்பறம் நம்ம விவசாயிக எந்த மாதிரியான சந்தேகமா இருந்தாலும், அதை அவகிட்ட தான் கேட்பாங்க. ஏன்னா, இந்த ஊர்லயே அந்தப் படிப்ப முடிச்ச ஒரே ஆள் அவ தான். அதுவும், இல்லாம எல்லாமே இயற்கையா இருக்கணும்னு அவளுக்கு ஒரு மனப்பான்மை. வயல்ல இறங்கி வேலை செஞ்சா ரெண்டு ஆளுக்கு சமமா வேலை செய்வா. அதுக்குத் தகுந்த மாதிரி நல்லா சாப்பிடுவா, ஊட்டச்சத்துள்ள உணவா எடுத்துக்குவா. எப்பவும் திடமா இருப்பா. ஆனா, அவ மனசு ரொம்ப இளகுன மனசு. உண்மையா பழகுறவங்களுக்காக உயிரையே கொடுப்பா. நீயே அவளப் போகப் போக தெரிஞ்சுக்குவ.” என்று அவளின் அனைத்து சிறப்புகளையும் சொன்னார் அழகேசன்.

“ம்ம்.. ஓ.. சரி பா.. ஆனா, ஏன் அந்த அக்கா இங்கயே இருக்காங்க. அவங்களுக்கு வீடு இல்லையா.? அவங்க அப்பா, அம்மா எங்க.?” என்றான் அமுதன்.

அவனின் இந்தக் கேள்வியை எதிர்பார்க்காதவர் சில நிமிட மௌனத்திற்க்குப் பிறகு பதிலளித்தார். “அவளுக்குன்னு யாருமே இல்ல தம்பி. உனக்காவது அப்பா நான் இருக்கேன். ஆனா, அவளுக்கு அம்மா, அப்பா, கூடப்பிறந்தவங்கன்னு யாருமே இல்ல.” என்றார்.

“ஏன் பா.? என்னாச்சு.? அவங்கள்லாம் எங்க.?” என்றான் அமுதன் அழகேசனின் பதிலை எதிர்பார்த்தவாறே.

“ஹூம்ம்.. அவளோட, அப்பா மிலிட்டரில இருந்தார். அவரோட சிபாரிசுல தான், எங்க அண்ணனும் மிலிட்டரில சேர்ந்தான். ஆனா, ரெண்டு பேருமே அங்க நடந்த போர்ல ஒரே சமயத்துல இறந்துட்டாங்க. அப்போ, அவளுக்கு வயசு அஞ்சு. அக்காக்கு மாமா போன துக்கம் தாங்கல. தினம் அழுது, அழுது சரியா சாப்பிடாம, தூங்காம இவளையும் சரியா கவனிக்காம இருந்தா. அப்போவெல்லாம் தாத்தாவும், பாட்டியும் தான் அவள வீட்டுக்கு எடுத்துட்டு வந்து பார்த்துட்டாங்க. எங்க பெரியப்பா, பெரியம்மா கூட அந்த அளவுக்கு பார்த்துட்டது கிடையாது. அக்கா வீடு, அதோ அங்க இருக்கே அதுதான். ஆனா, அவங்க வீடு கொஞ்ச தூரம் போகணும். அதனால, தான் எங்க அப்பா, அம்மா கூடவே இருந்தாங்க. ஆனா, என்ன பிரயோஜனம், அவர் இறந்து சரியா ரெண்டே மாசம். அக்காவும், நெஞ்சு வலி வந்து இறந்துட்டா. விவரம் தெரிஞ்சு அவளோட, அம்மாவும், அப்பாவும் இறந்தப்போ அவளப் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதுக்கப்பறம், பெரியப்பாவோட ரெண்டு பசங்களும் சொத்து கேட்டு தகராறு பண்ண ஆரம்பிச்சாங்க. அவர் மகளுக்கும் உரிமை இருக்குன்னு சொல்லி, அக்காக்கு சேர வேண்டிய மூணு ஏக்கர் நிலத்த மாரி பேருக்கு மாத்தி அதுக்கு காவலா உங்க தாத்தாவோட பெயரையும் போட்டு உயில் எழுதி வைச்சுட்டாரு. அதுல அந்த அண்ணன்களுக்கு உடன்பாடு இல்ல. இருந்தாலும், சொத்து அதிகமா அவங்களுக்குத்தான் போய் சேர்ந்ததால சரின்னு விட்டுட்டாங்க. அதுக்கப்பறம் அவங்களோட பேச்சு வார்த்தையே இல்லாம போயிடுச்சு. அப்ப இருந்து அவ இங்க தாத்தா, பாட்டியோட தான் இருக்கா. அவங்களையும் இவதான் பார்த்துக்கறா.” என்று அவளின் முழுக்கதையையும் சொல்லி முடித்தார் அழகேசன்.

“என்ன மாமா, என்னோட கதையைச் சொல்லிட்டிருக்கீங்களா.?” என்று கேட்டபடியே பின்னால் வந்து நின்ற மாரியை இருவரும் விழித்தபடி பார்த்தனர்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1262

உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் தோழமைகளே,




 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom