Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

Status
Not open for further replies.
அத்தியாயம் 16

மாரியைப் பற்றி அழகேசன் அமுதனிடம் சொல்லிக்கொண்டிருக்க, மாரியே அவ்விடம் வந்துவிட்டாள்.

“ஏண்டா தம்பி, என்னைப் பத்திக் கேட்டிருந்தா நானே சொல்லிருப்பேனே. அத மாமாகிட்ட தான் கேட்பியா.? என்னப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன பண்ணப் போற.?” என்று மாரி ஒரு பார்வையோடு அமுதனைப் பார்த்தாள்.

“அட, சும்மா உன்னப்பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைச்சு என்கிட்ட கேட்டான். நானும் சொல்லிட்டிருந்தேன் மாரி. அதுக்கேன் நீ அவன முறைக்கற.?” என்றார் அழகேசன்.

“நான் முறைக்கறேனா.? ஏண்டா தம்பி, என்னோட பார்வை என்ன அப்படியா இருக்கு.?” என்று திரும்பவும் அவள் அமுதனைப் பார்த்துக் கேட்க, அவன் சிரித்துக்கொண்டே ஆமாம் என்று தலையாட்டினான்.

“டேய்.. பயலே, நிஜமா நான் என்ன பேய் மாதிரி பயமுறுத்துறேனா.?” என்றாள் மாரி.

“இல்ல அக்கா, மாத்தி சொல்லிட்டீங்க. நீங்க கோபத்துல இருக்கற காளி மாதிரி இருக்கீங்க.” என்று அவன் அவளைக் கேலி செய்ய,

“என்னது, காளியா.? ம்ஹூம்ம்.. காளிக்கு கோபம் வந்தா என்னாகும்னு தெரியுமா.? கோபத்துல உலகத்தையே ரெண்டாக்கிடுவா.? அதே மாதிரி தப்பு பண்ற அரக்கர்கள கால்லயே மிதிச்சி கொல்லுவா. இப்போ நீ தப்பு பண்ணிட்ட. அதனால, உன்ன என்ன பண்றேன் பார்.” என்றபடி தன் கையில் வைத்திருந்த பனம்பழம் மற்றும் சிறு கத்தியுடன், கண்களில் கோபம் தெரியுமாறு அகல விரித்துக் காட்டி அவனை பயமுறுத்தியதோடு, அவனைத் துரத்தினாள்.

“அய்யோ.. அக்கா, தெரியாம சொல்லிட்டேன். மன்னிச்சு என்னை விட்டுடுங்க.” என்று சொல்லிக்கொண்டே தென்னந்தோப்பு முழுக்க சுற்றினான். அவளும் இவன் ஓடும் பக்கமெல்லாம் துரத்தினாள்.

அதைப் பார்த்து அழகேசனும், தமிழினியும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஒரு வழியாக முடியாமல் சோர்ந்து ஒரு பக்கமாய் விழுந்த அமுதனைத் தூக்கி நிறுத்தி, “இனிமேல் இந்த மாதிரி பேசுவியா.? சொல்லு.. சொல்லு.?” என்று கையில் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினாள் மாரி.

நிஜமாகவே காளியைக் கண்டது போல மிரண்டிருந்த அமுதனோ, “மாட்டேன். மாட்டேன்..” என்று நடுங்கிக்கொண்டே நின்றான்.

“ம்ம்ம்.. கொஞ்சமாவது பயம் இருக்கணும் என் மேல. இந்தா பனம்பழம் சாப்பிடு.” என்று அவனிடம் நீட்டினாள்.

அவனும், அதை வாங்கிக்கொண்டான். அதைப் பார்த்த அழகேசன், “மாரிக்கு ஒருத்தரப் புடிச்சிருச்சுன்னா, இப்படித்தான் நல்லா அவங்ககூட விளையாடுவா, அவங்களுக்காக எல்லாத்தையுமே பண்ணுவா.” என்று தமிழினியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவளும், அதைக் கேட்டவாறு மாரியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று முழுவதும், மாரியின் ஆவேசமான முகம் பார்த்து அமுதன் அவளிடம் சிறிது விலகியே இருந்தான். அதையும் மாரி கவனித்து விட்டாள்.

இரவு உணவு அருந்தும் போது கூட, தலையைக் குனிந்தவாறு அவன் இருந்ததைப் பார்த்து அவனைக் கேலி செய்தாள்.

“ஏண்டா, பயலே ரொம்ப பயந்துட்டியா.? நான் சும்மா விளையாட்டுக்குத்தாண்டா பண்ணேன். நீ என்ன இவ்ளோ பயந்தாங்கொள்ளியா இருக்க.? இதுல நீ வக்கீலாகப் போறன்னு வேற தமிழ் சொன்னா.?” என்று சொல்ல, அமுதன் உடனே நிமிர்ந்து தமிழினியைப் பார்த்தான். சைகையிலேயே அவளை முறைத்தான்.

“என் பேரன நீ இப்படியா பயமுறுத்துவ.? உனக்கு ரொம்பத்தான் கொழுப்பு.” என்று மாரியின் தலையில் குட்டினார் கமலம்.

“ம்ம்.. பாட்டி, என்னை எதுக்கு குட்டுறீங்க.? நான் தான் விளையாட்டுக்குப் பண்ணேன்னு சொல்றேன்ல. ஆம்பளப் பையன் இதுக்கெல்லாம் பயப்பட்டா முடியுமா.? இன்னும், எவ்ளோ பார்க்க வேண்டியிருக்கு. தைரியமா இருக்கணும்ல.” என்றாள்.

மாரியின் வாயை எவ்வாறு அடக்க வேண்டும் என்று தெரிந்த தாத்தா, “சரி மாரி. நீ வேணும்னா ஒண்ணு பண்ணு. பேசாம நம்ம ஊர் கராத்தே மாஸ்டர் கிட்ட இவனக் கூட்டிட்டு போ. இங்க இருக்கற வரைக்கும் எல்லா வித்தையும் கத்துக்கிட்டு தைரியமான பையனா வரட்டும்.” என்று சொன்னார்.

தாத்தா அப்படிச் சொன்னதுமே, மாரியின் முகம் மாறிப்போனது. சாப்பிட்டும், சாப்பிடாமல் எழுந்தாள். அதை அனைவருமே கவனித்தனர்.

உடனே கமலம் பாட்டி, “ஏங்க, நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்களா.? அவகிட்ட எதைப் பேசணுமோ, அதைப் பேசுங்க. தேவையில்லாததெல்லாம் பேசாதீங்க.” என்றபடி உள்ளே சென்றார்.

அப்போதைக்கு அதை அழகேசன் என்னவென்று கேட்காமல் விட்டாலும், அவருடைய அப்பா, இரவு வெளியே கட்டில் போட்டு படுத்திருக்கும் போது மெல்ல வந்து கேட்டார்.

“அப்பா, நான் சாப்பிடும் போதே இதைப் பத்தி கேட்கணும்னு நினைச்சேன். என்னாச்சு, மாரிக்கு.? நீங்க ஏதோ கராத்தே மாஸ்டர்னு சொன்னதுமே அவ ஏன் எழுந்திருச்சுப் போயிட்டா.? யார் அது.?” என்றார் அழகேசன்.

“அதுவா, அது இந்த ஒரு வருஷமாவே நடந்துட்டிருக்க கதை தான். அந்தக் கராத்தே மாஸ்டரா இருக்கற பையன் இந்த ஊருக்கு வந்து ரெண்டு வருஷமாகுது. பேரு சாமிநாதன். திண்டுக்கல் சொந்த ஊர்ன்னு சொன்னான். அவங்க அம்மா ஊர் இதுதானாம். இங்க இருக்கற அம்மாவோட நிலங்களைப் பார்த்துட்டே, ஒருபுறம் தான் கத்துக்கிட்ட கராத்தேவ சொல்லிக் கொடுக்கறதுக்கு, ஒரு காராத்தே ஸ்கூல் வைச்சு நடத்திட்டிருக்கான். ஒரு வருஷமா மாரியை அங்க, இங்க பார்த்து புடிச்சுப் போய், கடைசியா எங்ககிட்டயே வந்து அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுங்கன்னு கேட்டான். ரொம்ப தைரியம் பா உனக்குன்னு நினைச்சிட்டு அவகிட்ட கேட்டா, அவ மூஞ்சில அடிக்காத குறையா அவனப் புடிக்கலன்னு சொல்லி விரட்டிட்டா. எங்களுக்கே ஒரு மாதிரியா இருந்தது. விசாரிச்சதுல நல்ல பையன் தான்னு சொன்னா, கடைசில மாரிக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லையாம். கடைசி வரைக்கும் இப்படியே இருக்கப் போறாளாம். இது என்ன புதுக்கதையா இருக்குன்னு நாங்களும் அவகிட்ட என்னென்னமோ பேசிப் பார்த்தோம். அவ, கொஞ்சம் கூட ஒத்தே வரமாட்டிங்கறா. அவனோட பேச்ச எடுத்தாலே இப்படி தான், உடனே கோவிச்சுக்கிட்டுப் போயிடுவா. அடுத்த நாள் தான் சதாரணமா இருப்பா. எங்க ஆயுசு இன்னும் எத்தனை நாளுக்குன்னு தெரியாது. அவளுக்குன்னு ஒரு துணை அமைஞ்சுட்டா பரவால்லன்னு நானும், உங்க அம்மாவும் எப்பவும் பேசிக்கிட்டே தான் இருப்போம். ஆனா, என்ன செய்ய.? இவ எதுக்கும் பிடிகொடுக்க மாட்டீங்கறா.” என்று அவர் கவலையாகச் சொல்ல,

“அவளுக்கு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நாம எதையும் முடிவு பண்ண முடியாது இல்ல பா. அவளுக்கு மனச விட்டு பேச யாராவது இருந்தா சொல்லுவா. அக்காவும் இல்ல. நீங்க பெரியவங்க. அதனால தான் அவ எதுவும் சொல்லாம இருப்பா. நீங்க எதுவும் கவலைப்பாடாதீங்க நான் மாரிகிட்ட பேசறேன்.” என்று ஆறுதல் வார்த்தைகளை உரைத்தார் அழகேசன்.

அவரும் நம்பிக்கையுடன் தலையை மட்டும் ஆட்டினார். அன்று இரவு அதோடு கழிந்து விட, அடுத்த நாள் விடியற்காலையிலேயே மாரி எழுந்து குளித்து முடித்து, சாமி கும்பிட்டு விட்டு வரும் போது, தமிழினி எழுந்து விட்டாள். அவளும் குளிக்கச் சென்று விட்டாள். அனைவரும் எழுந்து விட்ட நிலையில், அமுதன் மட்டும் இன்னும் எழுந்திரிக்காமல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். அவனிடம் வந்தவள்,

“டேய்.. சோம்பேறிப் பயலே. இன்னும் எழுந்திருக்காம என்னடா பண்ணிட்டிருக்க.? உனக்கு இன்னும் விடியாம இருக்கா.? எழுந்திரி. மாமா, தாத்தாவெல்லாம் ஆத்துக்குப் போயிருக்காங்க. போ, நீயும் போயிட்டு வா.” என்று அதட்டியபடி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

அதற்க்குள் குளித்து முடித்து அங்கே வந்த தமிழினி, “அக்கா, அவன் எப்பவும் 7 மணிக்கு மேல தான் எழுந்திருச்சு பழக்கம். அதனால தான் இன்னும் தூங்கிட்டிருக்கான்.” என்றாள்.

“இவன என்ன பண்றேன் பாரு.” என்றபடி ஒரு வாளி கிணற்றுத் தண்ணீரை எடுத்து வந்தாள். அவள் வரும் வேகத்தைப் பார்த்து, தமிழினி அவனை வேகவேகமாக எழுப்பினாள்.

“டேய்.. நண்பா எழுந்திரி. எழுந்திரி.. இல்லன்னா மாரி அக்கா உன் மேல தண்ணிய ஊத்திடுவாங்க.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது சுதாரித்தவன், சட்டென கட்டிலை விட்டு எழுந்து விட்டான்.

அதற்க்குள் அங்கே வந்த மாரி அதை தவறி கட்டில் மேல் ஊற்றினாள். கொஞ்சம் ஏமாந்திருந்தால், அவன் மேலே ஊற்றி இருப்பாள். அமுதனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

மாரியோ மிகச் சாதாரணமாக நின்று கொண்டு சிரிக்க, அவன் அவளை முறைத்தவாறு அங்கிருந்து கிளம்பினான். ஆற்றுக்குச் சென்றான்.

கொள்ளை அழகில் அமராவதி ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருக்க, அந்த ஊரில் உள்ள பாதி பேர் அந்த ஆற்றில் தான் குளித்துக்கொண்டிருந்தனர். அழகேசனையும், தாத்தவையும் தேடினான் அமுதன். அழகேசன் அவனைப் பார்த்துவிட்டு சைகை காண்பிக்க, அவன் அவர்களைப் பார்த்து அங்கே சென்றான்.

மாரியின் மேல் இருந்த கோபத்தில் வந்தவன், ஆற்றின் அழகில் தன்னை மறந்து ஆனந்தமாய்க் குளித்தான். அன்று அழகேசன் அவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

“மாரி, பசங்கள இன்னைக்கு டேமுக்கு கூட்டிட்டுப் போயிட்டு வரியா.? அமுதா கேட்டுட்டே இருந்தான்.” என்று சொல்ல, அமுதனோ அழகேசனைப் பார்த்து விழித்தான்.

“அப்படியாடா தம்பி. டேமுக்குப் போலாமா.?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். அமுதனோ பேசாமல் அமைதியாய் இருக்க, “போலாம் கா. நாங்க ரெடி.” என்று தமிழினி சொல்ல, அமுதன் அவளையும் பார்த்து முறைத்தான். இதுவரை தமிழினியின் மேல் வராத கோபம் கூட வந்தது.

ஏனோ, அழகேசன் மாரியைப் பற்றி நல்லவிதமாகவே சொன்னாலும், அமுதனுக்கோ தன்னிடம் நடந்துகொள்ளும் விதத்தில் அவளைப் பிடிக்காமல் போனது.

அழகேசன் சொன்னதினால் மாரியுடனும், தமிழினியுடனும் கிளம்பினான் அமுதன். இருந்தாலும் பேசாமல் உம்மென்று வந்தான். தமிழினிக்கே அவனின் செயல் புதிதாகத் தெரிந்தது.

அவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்ற சில நிமிடங்களில் அணைக்கட்டுக்குச் செல்லும் பேருந்து வந்தது. சில இடங்கள் மட்டுமே அமருவதற்க்கு இருந்த நிலையில், அவர்கள் இருவரையும் இடம் பார்த்து அமரவைத்து விட்டு நின்றபடி வந்தாள் மாரி.

அப்போதுதான் பேசினாள் தமிழினி, “ஏண்டா நண்பா, எதுக்கு நீ இவ்ளோ கோபப்படற.? நானும், நேத்திலிருந்து பார்த்துட்டுத்தான் வரேன். என்ன பிரச்சினை உனக்கு.? அந்த அக்காவப் பார்த்தாலே முறைக்கற.? எழுந்து போயிடற.?” என்றாள்.

“ஆமா, எனக்கு அந்த அக்காவப் புடிக்கல. அப்பா என்னவோ நல்லவிதமாத்தான் எல்லாத்தையும் சொன்னார். ஆனா, அந்த அக்கா என்கிட்ட நடந்துக்கிறதப் பார்த்தயில்ல.? எனக்கு எரிச்சலா வருது. வந்ததில இருந்து என்னைக் கேலி பண்ணிட்டே இருக்காங்க. பயந்தாங்கோலின்னு சொல்றாங்க, தண்ணி எடுத்து என் மேலயே ஊத்த வராங்க. இதெல்லாம் பாத்தா யாருக்கு தான் கோபம் வராது.?” என்று அதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தையெல்லாம் கொட்டினான்.

“டேய். இதெல்லாம் போய் பெருசா எடுத்துப்பியா.? அவங்க உன்னத் தம்பி மாதிரி நினைச்சு உன்கூட விளையாடறாங்க. அதுகூட உனக்குத் தெரியலையா.? நமக்கு கூடப்பிறந்தவங்கன்னு யாரும் கிடையாது, அந்த அக்காவுக்கும் அப்படித்தான். அதனால தான், நாம வந்ததும் நம்ம கூட விளையாடறாங்க. இது புரியாம நீ ஏண்டா நண்பா கோபப்படற.? நீ அந்த அக்கா மாதிரியே விளையாட்டா எடுத்துக்கிட்டா விளையாட்டு. நீ அதைப் பெரிய விஷயமா எடுத்துக்கிட்டா, என்ன பண்ண முடியும்.? இப்போ இல்லன்னாலும், சீக்கிரமே அந்த அக்காவப் பத்தி நீ புரிஞ்சுக்குவ பாரு.?” என்று அவளும் செல்லமாகக் கோபித்துக்கொண்டாள்.

இதுவரை அவனக்கு உயிர்த்தோழியாய் அனைத்திற்க்கும் அவனுக்காகப் பரிந்து பேசியவள், திடீரென்று மாரிக்காகப் பேசியதை அமுதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் மௌனமாக வந்தனர். அதற்க்குள் அமராவதி அணைக்கான நிறுத்தம் வந்ததும், மாரி அவர்களைப் பார்த்து எழுந்து வருமாறு சைகை காட்ட, இருவரும் எழுந்து சென்றனர்.

அப்போதைய அமராவதி அணைக்கட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தது. அங்கே உள்ள அணையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்க்காகவே அழகிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கே நுழைந்துதான் அணைக்கட்டிற்க்குச் செல்ல வேண்டும். அதற்க்கு டிக்கட் எடுக்கப் போனாள் மாரி.

எடுத்துக்கொண்டு வரும் போது, அமராவதி அணையின் வரலாற்றைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

“இங்க பாருங்க பசங்களா, இந்த அணை தான் அமராவதி அணை. இது 1957-ஆம் வருஷம் காமராஜர் முதலமைச்சரா இருக்கும் போது கட்டுனது. திருமூர்த்திமலை அணையிலிருந்து வர, அமராவதி ஆறுக்கு குறுக்கால தான் இந்த அணையக் கட்டுனாங்க. அப்பல்லாம் இந்த அணை இல்லாதப்போ நிறைய வெள்ளம் வருமாம். அப்போவெல்லாம் நம்ம தாத்தாங்க பிறந்த காலம். அவங்களத் தூக்கிட்டு நடையா நடப்பாங்களாம். எங்க போறதுன்னு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அப்போதான் கர்ம வீரர் காமராஜர் இந்த அணையைக் கட்ட ஏற்பாடு பண்ணாராம். அவர மாதிரி ஒரு முதலமைச்சர் நம்ம தமிழ்நாட்டுக்கு அப்போ கிடைக்க எல்லாரும் குடுத்து வைச்சிருக்கனும்.” என்றாள் மாரி.

அவளின் பேச்சை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டே வந்தாள் தமிழினி. ஆனால், அமுதனோ எரிச்சலில் அமைதியாகவே பின்தொடர்ந்தான் அவர்களை.

“இந்த அணைய வெள்ளத்தக் கட்டுப்படுத்தறதுக்காக மட்டும் கட்டல. நம்ம விவசாயிங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான அளவு தண்ணீரை பாசனத்துக்காக திறந்து விடறது மூலமா சரியான விளைச்சலை நம்ம விவசாயிகளால பாக்க முடியும். அதுக்காகவும் தான் இதைக் கட்டினாங்க.” என்று சொல்லிக்கொண்டே அவர்களை அணைக்கு மேலே செல்லும் படிக்கட்டுகளுக்கு அழைத்துச் சென்றாள் மாரி.

“ம்ம். இங்க வாங்க பசங்களா. இங்கிருந்து பார்த்தா, அதோ அங்க தெரியுது பாரு அது என்ன மலைன்னு உங்களால யூகிக்க முடியுதா.?” என்று புதிர் போட்டாள்.

“ம்ம்ம்.. தெரியலையே அக்கா. நீங்களே சொல்லுங்க.” என்றாள் தமிழினி. அமுதனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

“அது பழநி மலை. அதே மாதிரி இந்தப் பக்கம் தெரியுது பாருங்க அது ஆனைமலை பொள்ளாச்சியில இருக்குதே. அதுதான்.” என்றாள் மாரி.

“ஓ.. அப்படியா அக்கா.” என தமிழினி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே வந்தாள்.

“அதே மாதிரி, இங்க தமிழ்நாட்டுலயே முதலைகளுக்குன்னு இருக்கற ஒரு பண்ணை இங்க தான் இருக்கு. இந்திரா காந்தி வன-விலங்குகள் சரணாலயம் இங்க இருக்கு. நிறைய விலங்குகளைப் பார்க்கலாம்.” என்று அவர்களைக் கூட்டிக்கொண்டு அந்த சரணாலயத்துக்குள் நுழைந்து சுற்றிப் பார்த்தனர்.

அவர்களுடன் பேசாமல் வந்தாலும், அமுதனுக்கு கொஞ்சம் பொழுது போனது, மனது ஆறுதலாக இருந்தது. சுற்றிப் பார்த்தவர்களை அழைத்து வந்து, ஒரு மீன் கடையில், அப்போதுதான் அணையில் பிடித்து பொறித்த மீன் வறுவல் வாங்கித் தந்தாள். மீன் மிகவும் சுவையாக இருக்க, இருவரும் நன்றாகச் சாப்பிட்டனர். அதைப் பார்த்து ரசித்தாள் மாரி.

நன்றாக சுற்றிவிட்டு, மூவரும் பேருந்தில் பயணித்து வீடு வந்து சேர்ந்த போது, அங்கே விசாலாட்சி, குமரேசன், மற்றும் கோலாவும் வந்திருந்தனர். அதைப் பார்த்த அமுதனுக்கு இன்னும் பயமும், வெறுப்பும் அதிகமானது. அப்படியே அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்தனர் மூவரும்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1389

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமென்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...

 
அத்தியாயம் 17

மூவரும் அமுதனையே பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் கூடவே நின்ற தமிழினியையும் பார்க்காமல் இல்லை. அவளுக்கு இவர்களை யாரென்று தெரியாததால் சாதாரணமாகவே நின்றாள். மாரி இவர்களைப் பார்த்ததும்,

“வாங்க சித்தி. எப்போ வந்தீங்க.? வாடா குமார் பயலே.” என்று அவனது தலையில் ஒரு தட்டு தட்டினாள்.

“அக்கா.. சும்மா இருங்க. உங்க வேலைய ஆரம்பிச்சுடாதீங்க.” என்று அவளிடமிருந்து சற்று தள்ளியே நின்றான் குமரேசன்.

“ஆம்பளைப் பையன்க எல்லாம் என்னைக் கண்டா கொஞ்சம் தூரமா தான் நிக்கறாங்க.” என்று தன்னை மிகைப்படுத்தியபடி பெருமையாய் சொல்லிக்கொண்டாள் மாரி.

“ம்ம்.. உனக்கு பொழுது போகலன்னா பசங்க கூட தான் எப்பவும் சுத்திக்கிட்டே இருப்ப போல. நாங்க மதியமே வந்துட்டோம். உன்னையும், அமுதனையும் தான் கேட்டோம். டேமுக்கு போயிருக்கீங்கன்னு சொன்னாங்க.” என்று தமிழினியைக் கண்டும் காணாதது போல் மாரியிடம் பேசிக்கொண்டிருந்தாள் விசாலாட்சி.

“அது சரி, இந்த முறை கோலாவக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. நான் கூட அவ வயசுக்கு வந்துட்டதால கூட்டிட்டு வர மாட்டீங்களோன்னு நினைச்சேன்.” என்றாள் மாரி.

“ம்ம்.. வீட்டுல அத்தையும், மாமாவும் வேணாம்னுதான் சொன்னாங்க. இவ தான் ஒரே அடம் அமுதா மாமாவப் பார்க்கணும்னு. சரி அவனும் இங்க தான் இருக்கான்னு தெரிஞ்சு தான் கூட்டிட்டு வந்தேன்.” என்றாள்.

அமுதன் வந்தவர்களிடம் எதுவும் பேசாமல் ஒரு திண்ணையில் அமைதியாய் அமர்ந்திருந்தான். ஆனால், தமிழினி மாரியுடன் இருந்ததால் அவர்கள் அவள் யாரென்று தெரியாமல் இருந்தனர். குமரேசன் தான் அவள் வந்ததிலிருந்து அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருந்தான்.

“டேய்.. பேராண்டி. என்னாச்சு.? அத்தை வந்திருக்கா. நீ எதுவுமே பேசாம உட்கார்ந்திருக்க. வாங்க அத்தைன்னு கூட சொல்ல மாட்டியா.?” என்று கமலம் பாட்டி பேச, அப்போது கூட, அவனுக்கு கேட்க மனம் வரவில்லை. பழைய நினைவுகளே அவன் கண் முன்னே விரிந்தன. அவன் எழுந்து போய், உள்ளே அறையில் இருந்த கயித்துக் கட்டிலில் பேசாமல் படுத்துக்கொண்டான்.

விசாலாட்சிக்கு அவன் ஏதோ ஒரு மனநிலையில் இருப்பதால் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாய் விட்டு விட்டாள். அவன் போய் படுத்துவிட்டான் என்று தெரிந்து அவன் பின்னாலேயே போக கோலாகலம் செல்லும் போது, விசாலாட்சி தடுத்து விட்டாள்.

“சரி, யார் இந்தப் பொண்ணு.? நான் போன வருஷம் வந்தப்போ கூட, நான் பாக்கலையே.?” என்று விசாலாட்சி விசாரிக்க,

“அட, இது நம்ம அமுதனோட ஃப்ரெண்டு தமிழினி. இந்த முறை நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்க விருந்தாளி.” என்று மாரி அவளைப் பிடித்துக்கொண்டே சொல்ல, அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தமிழினியோ அவர்களைப் பார்த்து அழகாய்ப் புன்னகைத்தாள்.

அப்போது இது தான் அவளா.? இதுவரை அமுதனை தங்களிடம் நெருங்க விடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் சூனியக்காரி இவள் தானா.? என்று விசாலாட்சி அவளை முறைத்துக்கொண்டிருந்தாள். கோலாவோ அவளை எரித்து விடுவதைப் போல் பார்த்தாள்.

குமரேசன் மட்டும் அவளை நிதானமாகவே பார்த்துக்கொண்டிருந்தான். ஏனென்றால், தன் தங்கையை ஒத்த அழகில் நின்றிருக்கும் பருவப் பெண் ஒருத்தியின் அழகில் முதன் முறை மயங்கித்தான் நின்றான். அவனுக்கு அவளைப் பிடித்து விட்டது. அவனுடைய வயதும் அதற்க்கு ஏற்றார் போல் தாளம் போட்டது மனதுக்குள்.

“அட, நம்ம அமுதன சின்ன வயசுல காப்பாத்துனது இந்தப் பொண்ணுதான் விசாலம். இந்தப் பொண்ணு இல்லன்னா, நம்ம அமுதன் நம்மகிட்ட இல்ல.” என்று கமலம் பாட்டியும் அவளைப் பிடித்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து கோலாவுக்கும், விசாலாட்சிக்கும் இன்னும் எரிச்சலாகத்தான் இருந்தது.

“ஏன், அவகிட்ட நீங்க யாருமே பேச மாட்டீங்கறீங்க.? என்னமோ எதிரி முன்னாடி வந்து நின்னா எப்படி இருக்குமோ அந்த மாதிரி பார்த்துட்டு நிக்கறீங்க.?” என்று மாரி உடைத்தே கேட்டு விட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அம்மா, வா உள்ள என்ன வேலை இருக்கு.?” என்று சொல்லிக்கொண்டு கமலம் பாட்டியைக் கூட்டிக்கொண்டு சென்றாள் விசாலாட்சி. கோலாவோ, அவளைத் திரும்பத் திரும்ப முறைத்துக்கொண்டே போனாள். தமிழினிக்கு எதுவுமே புரியவில்லை. அமுதனிடம் தான் கேட்க வேண்டும் என்று நினைத்தாள்.

“அவங்க பேசலன்னா போகட்டும். நீ வா, நம்ம வேற வேலையைப் பார்க்கலாம்.” என்று மாரி அவளைக் கூட்டிக்கொண்டு போக, அவளோடு சென்றாள் தமிழினி.

நீண்ட நேரமாக கட்டிலில் படுத்திருந்த அமுதனுக்கு யாரோ தன்னைத் தொடுவதைப் போல் உணர்வு. சட்டென்று எழுந்தவனை, “உஷ்..உஷ்..உஷ்..” என்று தன் விரலை உதட்டின் மேல் வைத்து சைகையில் அவனை அமைதியாக இருக்கும்படி சொன்னாள் கோலாகலம். அமுதனுக்கோ எரிச்சல்.

“ஏய்.. இங்க எதுக்கு வந்த.? எதுக்கு உஷ் உஷ்ன்ற.? இங்கிருந்து போ.. என்னைத் தனியா விடு.” என்றான் அமுதன்.

“ஏன் மாமா கோவிச்சுக்கற.? நான் உன்னை என்ன பண்ணேன்.? உன் கையைத் தொட்டேன். அவ்ளோதான். ஏன், நீ எப்போ பாரு என்கிட்ட எரிஞ்சு, எரிஞ்சு விழற.? என்னைப் பார்த்தா உனக்கு பேசணும், பழகணும்னு தோணலையா.? நான் வயசுக்கு வந்ததுக்கு அப்பறம் எங்க ஸ்கூல்ல எனக்கு எத்தனை பேர் லவ் லெட்டர் குடுத்தாங்க தெரியுமா.? நான் எல்லாத்தையும் கிழிச்சு எரிஞ்சுட்டேன். ஆனா, நீ என்னடான்னா என்னைக் கண்டுக்கவே மாட்டிங்கற.?” என்று ஒரு கிறக்கத்தில் பேசிக்கொண்டிருக்க, இதுவரை எந்தப் பெண்ணிடமும் இதுபோல் வார்த்தைகளைக் கண்டிருக்காதவன், இவளின் பேச்சில் சற்று ஆடித்தான் போனான்.

“ஏய்.. வாயை மூடு. கொஞ்சமாவது அறிவிருக்கா.? வயசுக்கு ஏத்த மாதிரி பேசு. நீ இப்போ எட்டாவது தான் படிச்சிட்டிருக்க.? இந்த வயசுல என்ன பேசணுமோ, அதை மட்டும் பேசு. முதல்ல உன்னை இங்க யாரு வரச் சொன்னா.? எழுந்திருச்சு போ.” என்று அவளைத் துரத்தினான்.

ஆனால், அவளோ அவனின் கையைத் திரும்பவும் பிடிக்க, அவன் கையை உதறினான். “ப்ளீஸ் மாமா, என்கிட்ட பேசு. என்னைப் புரிஞ்சுக்கோ..” என்று குழைந்து குழைந்து பேசிக்கொண்டிருக்க, அங்கு எதேச்சையாக மாரி வந்து விட்டாள்.

அவள் அப்படி பேசியதைக் கேட்டதும், “கோலா, அம்மா உன்னைக் கூப்பிட்டாங்க போ.” என்று அவளை அதட்டி அனுப்பினாள். அமுதன் எரிச்சலாய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவனிடம் வந்தாள்.

“ஏண்டா தம்பி, காலைல இருந்து ஒரு மாதிரியாவே இருக்க.? என்ன பிரச்சினை உனக்கு.? என் மேல கோவமா.?” என்று மாரி கேட்க, அமைதியாகவே இருந்தான் அமுதன். பிறகு, எதையோ புரிந்தவளாய்.

“இங்க பாரு அமுதா. நான் உன்கிட்ட சும்மா விளையாட்டுக்கு தான் நடந்துக்கிட்டேன். உன்னை மட்டுமல்ல, எனக்கு தெரிஞ்சு உன்னை மாதிரி இருக்கற பசங்க எல்லாருமே எனக்கு தம்பிங்க தான். ஏன் தெரியுமா.? எனக்கு மூணு வயசு இருக்கும் போது, எங்கம்மாவுக்கு ஒரு பையன் பிறந்தான். என்னோட தம்பி. ஆனா, அவன் கொஞ்ச நாள்லயே இறந்துட்டான். எனக்கு அப்போ அவ்வளவா விவரம் தெரியாது. நான் அழுதிருப்பனான்னு கூட தெரியாது. அதுக்கப்பறம் எந்த பசங்களைப் பார்த்தாலும் என்னுடைய தம்பின்னு நினைச்சுப்பேன். அவங்க கூட நல்லா விளையாடுவேன். சின்ன வயசுல நீ இங்க வந்தப்போ உன்கூட விளையாடும் போது எனக்கு என்னோட தம்பி தான் திரும்பவும் வந்திருக்கான்னு தோணும். ஆனா, அதுக்கப்பறம் நீ வரவே இல்ல. இப்போதான் வந்திருக்க. என்னோட தம்பி திரும்ப வந்துட்டான்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா, உனக்கு என்னோட விளையாட்டு புடிக்கலன்னு தெரிஞ்சுக்கிட்டேன். என்னை மன்னிச்சிரு. இனிமேல் நான் அப்படி நடந்துக்க மாட்டேன். நீ எப்பவும் போல ஜாலியா இரு. என்னுடைய தொந்தரவு இனிமேல் இருக்காது உனக்கு. சரியா.? வா.” என்று அவள் கையை நீட்ட அவனுக்கோ, கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

அவன் இன்னமும் அமைதியாகவே இருப்பதைப் பார்த்து, அவன் சமாதானமாகவில்லை என்று நினைத்து அவனை அங்கேயே விட்டுச் சென்றாள் மாரி. அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு பின்னாலிருக்கும், தென்னந்தோப்பிற்க்குச் சென்றான். அங்கே அழகேசனும், தாத்தாவும் பேசிக்கொண்டு இருந்தனர். அங்கே சென்று அமர்ந்து கொண்டான்.

அடுத்த நாள் அறுவடையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். அதற்க்குள் மாரி, சூடாக பருப்பு வடையை எடுத்துக்கொண்டு வந்து அவர்களுக்கு வைத்தாள்.

“தாத்தா, மாமா, அமுதா வடை சாப்பிடுங்க. பாட்டியோட ஸ்பெசல் வடை.” என்று அவளும் ஒரு வடையை வாயில் வைத்து சாப்பிட்டவாறே அவர்களுக்கும் கொடுத்துவிட்டுப் போனாள். அப்போது கூட, அவள் சாதாரணமாகவே இருந்தாள். அமுதனுக்கு, தான் தான் அனைத்தையும் பெரிதாக எடுத்துக்கொண்டோமோ என்று தோன்றியது. குமரேசன் வந்தான்.

“டேய்.. அமுதா, நீ இங்க இருக்கியா.? வா.. அப்படியே ஊர சுத்திட்டு வரலாம்.” என்று அவன் கையைப் பிடித்து இழுக்க, அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அழகேசனைப் பார்த்தான். அவரோ சைகையில் “போ..” என்று சொல்ல, வேறு வழியில்லாமல் கிளம்பினான்.

இருவரும் அப்படியே பொடிநடையாக ஒற்றை வழிச் சாலையில் நடந்து கொண்டே வந்தனர். அமுதன் அமைதியாக வருவதைப் பார்த்த குமரேசன், “ஏண்டா, அமுதா. வீட்டுல இருக்காளே அந்தப் பொண்ணு உன் ஃப்ரெண்ட்டாமே.? அப்படியா.?” என்றான்.

“ஆமா, ணா.. நானும், அவளும் சின்ன வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ்.” என்றான்.

“ஓ.. ம்ஹூம்ம்.. சரி, வெறும் ஃப்ரெண்ட் மட்டும் தானா, இல்ல...?” என்று அவன் இழுக்க, அமுதனுக்கு அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரிந்தது. கோபமும் கூடவே வந்தது.

“அண்ணா, அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அவ என்னோட ஃப்ரெண்ட். அவ்ளோதான்.” என்று சொல்ல,

“ம்ம்.. அப்பா கோவம் வருதோ.? சரி விடு. அந்தப் பொண்ண எனக்குப் புடிச்சிருக்கு. உன் ஃப்ரெண்ட் தான, என்கூட கொஞ்சம் பேசச் சொல்லு.” என்றான்.

“அவ அப்படியெல்லாம் யார் கூடயும் அவ்வளவு சீக்கிரம் பேச மாட்டா. அவளுக்குத் தோணுனாத்தான் பேசுவா. அதே மாதிரி நீங்க இந்த மாதிரியெல்லாம் சொல்றீங்கன்னு தெரிஞ்சாலே அவ உங்க பக்கமே வர மாட்டா.” என்று அவன் சொன்னதும், அமுதனின் தலையைத் தட்டினான் குமரேசன்.

“டேய். அதென்ன அதிகமா பேசற.? நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செஞ்சா போதும். சும்மா, தேவையில்லாததெல்லாம் பேசாத. அவ என்கிட்ட பேசணும். அவ்ளோதான் சொல்லிட்டேன்.” என்று மிரட்டிச் சென்றான் குமரேசன்.

அமுதனுக்கு தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எப்படிக் காண்பிப்பது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். அதே போல் தன்னை பயந்தாங்கொள்ளி என்று அனைவரும் சொல்வதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன செய்யலாம்.? என்று யோசித்துக்கொண்டே இருந்த போது தான் அன்று தாத்தா சொன்ன கராத்தே மாஸ்டரின் ஞாபகம் வந்தது.

அவரைத் தேடிச் சென்றான். அந்த காராத்தே மாஸ்டரின் பள்ளி மிக ரம்மியமான வயல்வெளிகளுக்கு அருகில் திறந்த வெளியில் நல்ல காற்றோட்டமான சூழலில் அமைக்கப்பட்டு இருந்தது. அதற்க்காகவே அவரிடம் தாராளமாகக் கராத்தே கற்றுக்கொள்ளலாம்.

உள்ளே, அவருடைய சாதனைகள் அடங்கிய போட்டோக்கள் பலவற்றைப் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்துக்கொண்டே நின்றவன் தோள்களை யாரோ தொட்டனர். திரும்பிய போது, அதே போட்டோவில் இருக்கும் கராத்தே மாஸ்டர் நின்று கொண்டிருந்தார்.

“யாரு தம்பி நீ.? என்ன வேணும் உனக்கு.?” என்றார்.

“நீங்க சாமிநாதன். கராத்தே மாஸ்டர்னு எங்க தாத்தா சொல்லிட்டு இருந்தார். எனக்கு கராத்தே கத்துக்கணும்.” என்றான் அமுதன்.

“எந்த தாத்தா.? நீ யாரு முதல்ல சொல்லு.” என்று அவர் குழம்பி நிற்க,

“நான் அழகேசன் வாத்தியாரோட பையன். என் பேரு அமுதன்.” என்று சொன்னதுமே, அவரது முகம் ஒரு நிமிடம் பொலிவானது.

“மாரியோட மாமா தான அழகேசன் வாத்தியார். அவரோட பையனா நீ.?” என்றார்.

“ஆங்க்.. ஆமா சார்..” என்றான்.

“மாரி உனக்கு அக்காவா.? என்ன பண்ணிட்டிருக்கா.?” என்று மாரியைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க, அமுதன் உள்ளுக்குள், இவர் ஏன் மாரி அக்காவைப் பற்றியே கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

“ஒண்ணும் பண்ணல. வீட்டுல சும்மாதான் இருக்காங்க. என்னை அவங்க தான் பயந்தாங்கொள்ளின்னு சொல்லிட்டாங்க. அதுக்கு தான் நான் கராத்தே கத்துக்கணும்னு நினைக்கிறேன்.” என்றான்.

“தம்பி, நீ நினைக்கிற மாதிரி கராத்தே ஒண்ணும் ஈஸியா கத்துக்கற விஷயம் கிடையாது. அதுல நிறைய விஷயங்கள நீ கத்துக்கணும். உடல் அளவுலயும், மனசளவுலயும். அதே மாதிரி நீ இப்போ, சும்மா விருந்தாளியா தான் வந்திருக்க. இத தொடர்ந்து கத்துக்கிட்டா தான் உன்னால இத முழுசா கத்துக்க முடியும். புரிஞ்சுதா.?” என்றார்.

“பரவால்ல. நான் இருக்கற வரைக்கும் எவ்வளவு கத்துக்க முடியுமோ, அவ்ளோ கத்துக்கறேன். அதுக்கப்பறம் எங்க ஊருல போய் கத்துக்கறேன்.” என்றான்.

அவனின் ஆர்வத்தைப் பார்த்து வியந்தவர், “சரிடா தம்பி. இன்னைக்கு சும்மா எல்லாரும் பண்றத பார்த்துட்டு இரு. நாளைல இருந்து கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குவ. உன்ன பயந்தாங்கொள்ளின்னு சொன்னவங்க முன்னாடி நீ தைரியமானவன்னு நிரூபிக்கனும். சரியா.?” என்று சற்று ஊக்கத்துடன் பேச, அவனுக்கு அப்போதுதான் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.

“கண்டிப்பா மாஸ்டர். ஆனா, இதுக்கு எவ்வளவு பணம் கொடுக்கணும்.? சொன்னீங்கன்னா, அப்பாகிட்ட சொல்லிடுவேன்.” என்றான்.

“அதெல்லாம் வேண்டாம். நீ சும்மா வந்துட்டுப் போ. அதே போதும்.” என்றார்.

அவனுக்கு இன்னும் குதூகலமானது. சிறிது நேரம் அங்கேயே இருந்து எல்லாவற்றையும் பார்த்து விட்டு, சந்தோஷத்தில் நடந்து வந்துகொண்டிருந்தான். இனிமேல் தன்னை யாரும் பயந்தாங்கொள்ளி என்று சொல்ல மாட்டார்கள் என்று நினைத்தவாறு வீடு வந்து சேர்ந்தான்.

வரும் போது, தமிழினி வெளியே அமர்ந்திருந்தாள். கிட்டத்தட்ட அவள் அழுது கொண்டிருந்தாள். மாரி தான் அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த அமுதனுக்கோ மனதே ஒரு மாதிரி ஆனது.

இதுவரை அவள் அழுது அவன் பார்த்ததே இல்லை. இப்போது அவள் அழுததைப் பார்த்து அவனுக்கு பதட்டமானது. என்ன ஆனதோ தெரியவில்லையே என்று நினைத்தபடி ஓடி வந்தான் அமுதன்.



(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1324

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள கமென்ட்ஸ் லிங்கில் தரவும் நட்புக்களே...

 
Last edited:
அத்தியாயம் 18

தமிழினி அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து பதறி ஓடி வந்தான் அமுதன். அருகில் மாரி, “சரி, விடு தமிழ் பாத்துக்கலாம். அவங்க அப்படித்தான். மனுஷங்களோட மனசப் புரிஞ்சுக்கவே மாட்டாங்க.” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

“என்னாச்சு தமிழு.? எதுக்கு இப்போ அழுதுட்டே இருக்க.?” என்றான் அமுதன்.

“ஒண்ணும் இல்ல டா. விடு.” என்றாள்.

“நீ இப்போ சொல்லப் போறியா இல்லையா.?” என்றான் அமுதன்.

“நான் சொல்றேன்.” என்று சொல்ல ஆரம்பித்தாள் மாரி.

தமிழினி, தோப்புப் பக்கமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்த போது, கோலா அவளிடம் வந்தாள்.

“என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க.? உனக்கு அமுதன் மாமான்னா புடிக்குமா.?” என்றாள்.

“ஆமா, புடிக்கும். அவன் என்னோட உயிர் நண்பன்.” என்றாள்.

அவள் அப்படிச் சொன்னதும் அவளின் கையில் ஒரு கிள்ளு கிள்ளினாள் கோலாகலம். “ஸ்ஸ்ஸ்... ஆஆஆ.. எதுக்கு இப்போ கிள்ற.?” என்றாள் தமிழினி கையைத் தேய்த்துக்கொண்டே.

“இங்க பாரு. எனக்கும், அமுதா மாமாவுக்கும் இடையில யார் வந்தாலும், நான் ஒத்துக்க மாட்டேன். அமுதா மாமா எனக்கு மட்டும் தான் சொந்தம். மாமாவ நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நீ இனிமேல் மாமாகிட்ட பேசக்கூடாது. பழகக்கூடாது. அப்படிப் பண்ண, நான் உன்னக் கொன்னுடுவேன்.” என்று தன் கண்களினாலேயே மிரட்டினாள்.

“ஏய்.. வாயை மூடு. என்ன பேச்சு பேசற.? எட்டாவது படிக்கிற பொண்ணு மாதிரியா பேசற.? அவன் என்னோட ஃப்ரெண்ட். அவனுக்கு இந்த மாதிரி பேசினா, புடிக்காது. அத மொதல்ல தெரிஞ்சுக்கோ. என்னால அப்படி இருக்க முடியாது.” என்று சொல்ல, தமிழினி எதிர்பார்க்காத நேரம் அவளைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டாள் கோலா.

கீழே விழுந்ததில் அவளுக்குக் கையில் சிராய்ப்பு ஏற்பட்டது. வலியை சற்று உணர்ந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் பேசினாள் தமிழினி, “உனக்கு என்ன பைத்தியமா.? அறிவே இல்லையா.? இப்படிப் புடிச்சுக் கீழ தள்ளுற.?” என்றாள் ஆவேசமாக.

“என்னையா பைத்தியம்னு சொல்ற.? இரு இரு..” என்று சொன்னவள், ஒரு கல்லை எடுத்து தன் நெற்றியில் வேகமாக அடித்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் ரத்தம் வந்தது. அதை எதிர்பாரா தமிழினியோ, “ஏய்.. எதுக்கு இப்படியெல்லாம் பண்ற.?” என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே, கோலாகலம் வீட்டுக்கு ஓடினாள்.

“அம்மா... அம்மா.. அம்மா...” என்று கத்தி வீட்டையே இரண்டாக்கினாள். அனைவரும் கூடிவிட்டனர். நடந்ததை அப்படியே தனக்கு நேர்ந்ததாக மாற்றி பொய் சொன்னாள் கோலாகலம்.

தமிழினி எழ முடியாமல் கஷ்டப்பட்டு நடந்து வீட்டுக்குள் வரும் போது, அவளைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. அப்போதே அழகேசனுக்கும், தாத்தாவுக்கும் புரிந்து விட்டது. பாதிக்கப்பட்டவள் யாரென்று.

அவள் வந்ததுமே, “ஏய்.. என்ன பண்ணி வைச்சிருக்க என் பொண்ண.? என்ன திமிர் இருந்தா நீ அமுதன் கிட்டப் பேசக்கூடாதுன்னு சொல்லிருப்ப.? ஒரு வீட்டுக்கு வந்தா அடக்க ஒடுக்கமா இருக்கத் தெரியாதா.? இப்படித்தான் இருக்கறவங்க கிட்ட வம்பு பண்ணுவியா.? இதத்தான் உங்கப்பா, அம்மா சொல்லி வளர்த்தாங்களா.?” என்று வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லித் திட்டினாள் விசாலாட்சி.

“போதும், விசாலம். எதுக்கு இப்போ அவள இப்படித் திட்டற.? அந்தப் பொண்ணப் பத்தி எனக்குத் தெரியும். அவ, அப்படி சொல்லிருக்க வாய்ப்பே இல்ல. அவ ரொம்ப நல்ல பொண்ணு. தேவையில்லாம அவளைத் திட்டறத மொதல்ல நிறுத்து. நடந்தது என்னன்னு நமக்குத் தெரியாம எதையும் பேசறது ரொம்பத் தப்பு.” என்று தமிழினிக்காக பரிந்து பேசினார் அழகேசன்.

“ஏண்டா மா. நீ கோலாகிட்ட அப்படி சொன்னியா.?” என்று கமலம் கேட்டுக்கொண்டிருக்க,

“ம்மா.. நீ என்ன அவகிட்டப் போய் விசாரிச்சிட்டு இருக்க.? அதான் கோலாவே சொல்றாளே, அவ அப்படித்தான் பேசிருப்பா. பாரு, நெத்தில காயமெல்லாம் பண்ணிருக்கா. எனக்கு வரக் கோவத்துக்கு இவள என்ன பண்ணுவேன்னு தெரியல. ஆனா, நீங்க என்னடான்னா பொறுமையா விசாரிச்சிட்டு இருக்கீங்க. அண்ணன் என்னடான்னா அவளுக்கு பரிஞ்சு பேசிட்டிருக்கார். உங்களுக்கெல்லாம் சொந்தத்த விட பிறத்தியார் தான் ரொம்ப உசத்தியாப் போயிட்டாங்க இல்ல.?” என்று எகிறினாள் விசாலாட்சி.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் வந்தாள் மாரி. ஆனால், அவளுக்கு அனைத்தும் தெரியும் என்பது போல் தான் அமைதியாக நின்றாள்.

“இதப் பாரு விசாலம். போதும். சின்னப் பசங்க சண்டை போட்டா அதைப் போய் பெரிய விஷயமா எடுத்துப்பியா.? அவங்கள்லாம் அப்படித்தான் அடிச்சிக்குவாங்க, புடிச்சிக்குவாங்க. அதெல்லாம் நாம கண்டுக்கக் கூடாது. கமலம், நீ மொதல்ல அந்தக் களிம்பு மருந்த எடுத்துட்டு வா. புள்ளைங்க ரெண்டு பேருக்கும் மருந்து போட்டு விடணும்.” என்று சொன்னார்.

கமலமும் சரி என்று உள்ளே மருந்தை எடுக்கப் போனார். கோலாவுக்கு விசாலட்சி தானே போட்டு விட்டுக் கொள்கிறேன் என்று வாங்கிக்கொண்டு போனாள். தமிழினிக்கு தாத்தாவே போட்டுவிட்டார்.

“விடு மா. அழாதே. அவ சின்னப் பொண்ணு ஏதோ, தெரியாம பேசிருப்பா. நீ எதையும் பெரிசா எடுத்துக்காத.” என்றார்.

தமிழினியும், சரி என்று தலையாட்டினாள். அழகேசனுக்கு பெருத்த சங்கடமாக இருந்தது. தேவையில்லாமல் விசாலாட்சி செய்த ஒரு காரியம், இப்போது கோலாவின் மனதைக் கெடுத்து, அவள் இப்படி நடந்துகொள்ளும் ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டதே என்று நினைத்து வருந்தினார். அதே போல், இவர்களிடமிருந்து அமுதனைத் தான் எப்படி காப்பாற்றப் போகிறோம்.? என்று அதையும் நினைத்தார்.

மருந்து போட்டு விட்ட பிறகுதான் மாரி, அவளை வெளியே கூட்டி வந்து திண்ணையில் அமரவைத்தபடி சமாதானம் செய்து கொண்டிருந்ததைச் சொல்லி முடித்தாள்.

அமுதனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஏனென்றால், இதுவரை தமிழினியை யாரும் இவ்வளவு கேவலமாகவோ அல்லது திட்டியோ அவன் கேள்விப்பட்டதே இல்லை. அப்படியிருக்க, இன்று அவளை விசாலாட்சி திட்டியதும், கோலாவின் நாடகமும் அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.

“இரு நான் போய் அவள என்ன பண்றேன்னு பாரு.?” என்று வெறியோடு போனவனைத் தடுத்தாள் மாரி.

“இரு அமுதா., நீ இப்போ போய்க் கேட்டா மட்டும் எல்லாம் சரியாகிடுமா.? எந்தப் பிரயோஜனமும் இருக்காது. நான் தான் அவங்க ரெண்டு பேரும் சண்டை போடும் போது பார்த்தேனே. தமிழ் மேல எந்தத் தப்பும் இல்ல. கோலாதான் எல்லாத்துக்கும் காரணம். ஆனா, இவங்க சொன்னா மட்டும் ஒத்துப்பாங்களா.? விடு, இதை நீ பெரிசுபடுத்தாத. பாத்துக்கலாம்.” என்றாள்.

மாரியின் பேச்சுக்கு ஏனோ அன்று கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அமுதனின் உள் மனதுக்குத் தோன்றியது போலும், அமைதியாக விட்டுவிட்டான்.

அன்று முழுவதும், தமிழினி ஒரு மாதிரியாகவே இருந்தாள். இரவு சாப்பிடும் போது கூட, அவர்கள் இருக்கிறார்கள் என்று அவள் மாரியின் அறையிலேயே இருந்தாள். வெளியே வரவில்லை. அமுதனும், மாரியும் அவளுக்காக சாப்பிடாமல் காத்திருந்தனர்.

விசாலாட்சி அமுதனை அழைத்தாள். ஆனால், அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். பேசவே இல்லை. அந்தக் கோபம் முழுக்க தமிழினியின் மேல் தான் திரும்பியது அவர்களுக்கு. திரும்பவும் அவளைப் பற்றி கமலத்திடம் வசை பாடிக்கொண்டிருந்தாள் விசாலாட்சி.

ஆனால், கமலம் பாட்டிக்கும் தமிழினியை ஏனோ மிகவும் பிடித்துப் போனது. அதனால், அவள் அப்படித் தவறு செய்திருப்பாள் என்று நினைக்கத் தோன்றவில்லை. மாரி, தமிழினிக்கும், அமுதனுக்கும் சேர்த்து டிபன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்தாள். மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

அடுத்த நாள் அறுவடை நாள். கரும்பு சாகுபடி விவசாயத்தைத் தான் அழகேசனுடைய தந்தை செய்து வந்தார். அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து, ஆற்றில் நீராடி விட்டு, கடவுளைத் தொழுது கரும்புத் தோட்டத்திற்க்கு வந்தனர்.

அறுவடை செய்ய விவசாய ஆட்கள் வந்திருந்தனர். நீண்ட வருடங்களாக கரும்பு அறுவடையில் சிறந்தவர்களான அவர்கள், சரியான முறையில் கரும்பை வெட்டி எடுப்பர்.

மாரியும், அதில் சிறந்தவள் தான். அவளும் தயாராக ஒரு அரிவாள் கத்தியுடன் இருந்தாள். அமுதன், தமிழினி, கோலாகலம், குமரேசன் அனைவருக்கும் மாரி கரும்பு சாகுபடி பற்றி ஒரு பாடமே நடத்தினாள்.

“இங்க பாருங்க பசங்களா, இன்னைக்கு இந்தக் கரும்பு எப்படி விளைவிச்சு, அறுவடை பண்றாங்கன்னு சொல்றேன். கேட்டுட்டே வாங்க.” என்று சொன்னபடியே ஆரம்பித்தாள்.

அதைக் கேட்டதும், கோலாவும், குமரேசனும் ஆர்வமே இல்லாமல் அமைதியாக இருந்தனர்.

அமுதன், ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் ஒன்றும் தப்பில்லை என்று நினைத்து அமைதியாய்க் கேட்டான். தமிழினி மட்டும் தான் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினாள்.

“கரும்புப் பயிர சரியான நேரத்துல, நல்லா முத்தினதும் தான் அறுவடை செய்யணும். அப்போதான், ஆலைக்கு அனுப்பும் போது, நல்லா சக்கரை மகசூல் கொடுக்கும். அதே மாதிரி கரும்ப வெட்டும் போது, இதோ நான் எப்படி வெட்டறேன் பாருங்க, இந்த நிலத்தோட ஒட்டி இருக்க அடிப்பகுதியில தான் வெட்டணும். அதுவும், சக்கரை மகசூல் அதிகமா கிடைக்க உதவும். அப்பறம், இந்த சோகைய எல்லாம் அப்பப்போ நீக்கிட்டா, கரும்பு எந்த விதத்திலயும் பாதிக்காம இருக்கும். கரும்பு அறுவடைங்கறது ரொம்ப மாசம் ஆகும். ஏன் சில இடங்கள்ல வருஷமே ஆகும். இத நாங்க நட்டு பத்து மாசம் ஆகுது. சரியான பட்டம் பாத்து இந்தக் கரணை இருக்கே இத சரியானதா தேர்வு செஞ்சு நடணும். அப்படி நட்ட கரும்புக் கரணை பத்து மாசம் கழிச்சு, இப்போ தான் முதிர்ச்சியாகி அறுவடைக்கு சரியா வந்திருக்கு. நம்ம ஊரு, அப்பறம் திண்டுக்கல் மாவட்டத்துல இருக்கற பல பகுதிகள்ல தான் கரும்பு உற்பத்தி அதிகமா பண்றோம். நம்ம கரும்பு ஒருவித ருசி வர்றதுக்குக் காரணம் நம்ம அமராவதி ஆற்றோட மகிமைன்னு சொல்லலாம்.” என்றாள் மாரி.

“இவ்ளோ மாசமா எப்படி கா, வேற எதுவுமே பண்ணாம இருப்பீங்க.?” என்றாள் தமிழினி.

“அப்படி இல்ல பொண்ணே, இந்தக் கரும்புக்கு நடுவுல ஊடுபயிரா நாங்க பச்சைப் பயறையும், உளுந்தையும் பயிரிடுவோம். அது கரும்புக்கு தேவையில்லாத பாதிப்புகள் உண்டாக்காம பாத்துக்கும். அதெல்லாம் ரொம்ப அவசியமான பயிர்கள்ன்னால அது, கொஞ்சம் எங்களுக்கு விளைச்சலக் கொடுத்து வியாபாரம் பண்ண உதவும். அது போக, நாங்க தென்னந்தோப்புல தேங்காய், இளநீர் எல்லாத்தையும் வியாபாரம் பண்றோமே.?” என்று தமிழினியின் சந்தேகத்தைத் தீர்த்தாள்.

“இப்போ கரும்ப வெட்டுனதுமே, குறிப்பிட்ட அளவுல சோகையைப் போட்டு ஒரு கயிறால கட்டி வைச்சிடுவோம். அப்பப்போ தண்ணிய தெளிச்சு விட்ருவோம். அப்போதான் வெயிலால கரும்போட நீர்ச்சத்து குறையாம இருக்கும். முழு அறுவடை முடிஞ்சதுக்கு அப்பறம் ஒரே லாரில அதெல்லாத்தையும் ஏத்தி ஆலைக்கு அனுப்பிடுவோம். இதுல, முக்கால்வாசி தான் ஆலைக்கு அனுப்புவோம். மீதி, கால்வாசிய நம்ம தோட்டத்துல இருக்கற அதோ அங்க தெரியுதே, அந்த சின்ன கரும்பாலைல கரும்புச் சர்க்கரை(நாட்டுச் சர்க்கரை), தேம்பாகு, கரும்பால், கரும்புச் சாறு இதெல்லாம் எடுத்து நம்ம தேவைகளுக்கும், அப்பறம் வேற யாராவது முன்னாடியே கேட்டிருந்தா அவங்களுக்கும் கொடுத்துடுவோம். நம்ம வீட்டுல எப்பவும், கரும்புச் சர்க்கரை தான் காபி, டீக்கெல்லாம் பயன்படுத்துவோம். இப்போ தான் ஜனங்க எல்லாரும் புதுசா இந்த வெள்ளைச் சர்க்கரைக்கு அடிமையா மாறிட்டு வராங்க. இந்த்த் தேம்பாகு இருக்குதே அது தேன் மாதிர் அப்படி ஒரு இனிப்பா இருக்கும். தோசை, இட்லின்னு தொட்டுச் சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். கரும்பால் மணம் ஊரையே தூக்கும். அப்படி ஒரு அருமையான மணம் வீசும். அதை வாங்க எத்தனை பேரு நம்ம ஊருல போட்டி போடுவாங்க தெரியுமா.? அவ்ளோ தான் பசங்களா, இப்படித்தான் இந்த கரும்புச் சாகுபடி இத்தனை வருஷமா நடக்குது. எல்லாத்துக்கும் புரிஞ்சுதா.?” என்று அனைத்து தகவல்களையும் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினாள் மாரி.

அவள் சொல்லிக்கொண்டே, வேலையையும் விரைவாகவும், அதே சமயம் கவனமாகவும் செய்தாள். அமுதனுக்கு அவளை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. எத்தனை திறமையானவள் என்று தோன்றியது. அவன் அதை நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கோலா அவனின் கையை வேண்டுமென்றே பிடித்தாள்.

அவனோ திரும்பி, அவளை முறைத்தவாறு கையை உதறினான். மாரி இதை கவனித்து விட்டாள். அவளைத் தனியே இழுத்து வந்தாள்.

“கோலா. எதுக்கு இப்படிப் பண்ற.? சின்னப் பொன்ணுன்னு நினைச்சா உன் வயசுக்கு மீறிதான் எல்லாத்தையும் பண்ணிட்டிருக்க.” என்று அவளைத் திட்ட ஆரம்பித்தாள். அதைப் பார்த்த குமரேசன் வந்து,

“அக்கா, இப்போ எதுக்கு கோலாவத் திட்றீங்க.? அவ என்ன தப்பு பண்ணா.?” என்று கேட்டான்.

“ம்ம்.. வாடா, நீ உன் தங்கச்சிக்கு சப்போர்ட்டா.? அவ சின்னப்பொண்ணு மாதிரியா நடந்துக்கறா.? எப்பப்பாரு அமுதன ஏதாவது பண்ணிட்டே இருக்கா. இதெல்லாம் நல்லாவா இருக்கு. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.? நானும் எல்லாத்தையும் பார்த்துட்டுத்தான் இருக்கேன்.” என்றாள் மாரி.

அதற்க்குள் கோலா அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடினாள். பின்னாலேயே குமரேசனும் ஓடினான். மாரியோ, அறுவடை வேலைகளைத் திரும்பவும் வந்து செய்யத் துவங்கினாள். தமிழினிக்கும், அமுதனுக்கும் சிறிது பயம் ஆரம்பித்தது. எப்படியும், இப்போது அவர்கள் இருவரும் போய் இதைப் பெரிய விஷயமாக்கப் போகிறார்கள் என்று நினைத்தனர். இனியும் இவர்களால் என்னென்ன பிரச்சினைகள் வருமோ.? என்று தோன்றியது.!!

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1240

உங்களின் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும்...

 
Last edited:
அத்தியாயம் 19

கோலாகலத்தை மாரி திட்டியது நியாயமான விஷயமே ஆனாலும், அதைப் பெரிதாக்கினாள் விசாலாட்சி.

அறுவடை முடிந்து மாரியும், தாத்தா மற்றும் அனைவரும் வரும் போதே, அங்கே ஒரு பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தது. யாருமில்லாத வேலையில் மாட்டிக் கொண்டார் கமலம். அவரால் பேச முடியவில்லை. விசாலாட்சிக்கு வாய் தான் வலிக்குமோ, வலிக்காதோ அப்படிப் பேசினாள்.

கலைப்பில் வந்த அனைவருக்கும் அவள் பேசிய வார்த்தைகள் இன்னும் அதிக கலைப்பைத் தான் உண்டாக்கியது. உள்ளே நுழைந்ததுமே மாரியிடம் வந்தாள் விசாலாட்சி.

“உனக்கு ரொம்ப கொழுப்பெடுத்துப் போச்சு. எதுக்கு எம்புள்ளையத் திட்டின.? ரொம்பக் கேவலாம பேசிட்டன்னு சொன்னா.” என்று வீடே அதிரும் படி கத்தினாள் மாரியிடம்.

“சித்தி, என்ன நடந்ததுன்னு தெரியாம சும்மா கத்தாதீங்க. நானும் வந்ததிலிருந்து அவளப் பார்த்துட்டுத்தான் இருக்கேன். அவ நடந்துக்கற விதமே சரியில்ல. அவளோட வயசுக்கு மீறித்தான் நடந்துக்கறா. அது தப்புன்னு தோணுச்சு. அவ எனக்கு தங்கச்சி தான.? அந்த உரிமைல தான் திட்டினேன். அது தப்பா.?” என்றாள் மாரி நியாயமான கேள்விகளுடன்.

“ம்ம்.. நீ ஒண்ணும் அவளத் திட்ட வேண்டிய அவசியம் இல்ல. அவ தப்பு பண்ணினா கேள்வி கேடக் நாங்க இருக்கோம். அப்படி என்ன அவ தப்பு பண்ணிட்டா.? அவ சின்னப் பொண்ணு தான, ஏதோ தெரியாம ஏதாவது பண்ணிருப்பா. அதை நீ பெரிய விஷயமாக்கி அவள எல்லார் முன்னாடியும் திட்டியிருக்க. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா.?” என்று மீண்டும் பொறிந்தாள் விசாலாட்சி.

“அவ அமுதன்கிட்ட நடந்துக்கற முறையே சரியில்ல. அவன் தனியா இருக்கும் போது, அவன கொஞ்சறதும், அப்பறம் வேணும்னே அவன் மேல சாயறதும், உரசுறதும், இன்னைக்கு கையைப் பிடிச்சு இழுத்துட்டு இருந்தா. ஒரு வயசுப் பொண்ணு செய்ய வேண்டிய வேலையா இது.? நானும், பொறுமையா இருந்தேன். ஆனா, இன்னைக்கு என்னால இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியல. அதனால தான் அவளைத் திட்டினேன். அதுவும் அவளைத் தனியா கூட்டிட்டுப் போய் தான் திட்டினேன். எல்லார் முன்னாடியும் ஒண்ணும் திட்டல. வேணும்னா குமரேசனக் கேட்டுப் பாருங்க.” என்று அனைத்தையும் சொல்லியே விட்டாள் மாரி.

“அமுதன்கிட்ட அவ நடந்துக்கிட்டது ஒண்ணும் தப்பில்லையே.?” என்று விசாலாட்சி சொன்னதும், அனைவருக்கும் அதிர்ச்சி.

“எதுக்கு எல்லாரும் இப்படிப் பார்க்கறீங்க. நாளைக்கு எப்படி இருந்தாலும், அமுதன அவதான கட்டிக்கப் போறா. அந்த உரிமைல அவ அவன்கிட்ட அப்படி நடந்திருப்பா. அதுக்குப் போய் திட்டுவியா.? அவ என்கிட்ட எல்லாத்தையும் கேட்டுட்டுத்தான் பண்றா. நீ ஒண்ணும் அவளுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. உனக்குத்தான் எவனையும் புடிக்கல. கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டிருக்க. அதுக்காக எல்லாரும் அப்படியே இருப்பாங்களா.? நீ உன் வேலையைப் பார்த்துட்டுப் போ. என் பொண்ணு எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருப்பா.” என்று விசாலாட்சி பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மாரியை ஈட்டியால் குத்தியதைப் போல் இருந்தன.

அதற்க்கு மேல் மாரி எதுவும் பேசவில்லை. தலையைக் குனிந்தவாறு அமைதியாய் சென்றுவிட்டாள். அவள் அப்படிச் செல்வதை தாத்தாவால் பார்க்கவே முடியவில்லை.

“விசாலம், நீ தெரிஞ்சுதான் பேசறியா.? வார்த்தைகள ஒரேமுட்டா கொட்டிடாத. அப்பறம் அதை அள்ள முடியாது. நீ பேசுன வார்த்தைகள என்னாலயே ஏத்துக்க முடியல. இந்த வயசுல பிள்ளைகளுக்கு எப்படி நல்ல விஷயங்கள கத்துக் குடுக்கணும்னு தான் பெத்தவங்க யோசிக்கணும். ஆனா, நீ உன் பொண்ணுக்கு இந்த மாதிரி விஷயங்களைத்தான் சொல்லிக் கொடுக்கறியா.? இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா.? எந்தத் தாயும் பண்ணாத தப்ப நீ உன் பிள்ளைகளுக்கு பண்ணிட்டு இருக்க. இது அவங்களோட எதிர்காலத்த எந்த அளவுக்கு பாதிக்கும் தெரியுமா.? நாங்க தான் உன்னப் பெத்தோமான்னு இருக்கு.” என்று மிகவும் மனவருத்தத்தோடு பேசினார்.

“விசாலம், இதப் பத்தி நான் உன்கிட்ட மொதல்லயே பேசிருக்கணும். ஆனா, கொஞ்ச நாள் கழிச்சுப் பேசலாம்னு நினைச்சு விட்டுட்டேன். ஆனா, இப்போ பேசியாகணும்னு ஒரு நிலைமைக்கு என்னக் கொண்டுட்டு வந்துட்ட. அமுதனுக்கு என்னைக்குமே கோலா மேல விருப்பம் இருந்தது கிடையாது. நான் அவனுக்கு அப்படி சொல்லிக் கொடுத்ததும் கிடையாது. ஏன்னா அது அவனோட வாழ்க்கை. எந்த மாதிரியான வாழ்க்கைத் துணை வேணும்ங்கறத, அவனே முடிவெடுக்கணும்னு என்னுடைய தனிப்பட்ட கருத்து. என்னால முடிஞ்ச நல்ல விஷயங்களை மட்டும் தான், நான் இதுவரைக்கும் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கேன். அவனுடைய பார்வைகள் என்னைக்குமே புனிதமானது. அதனால, தான் அவனுக்கு பெண் பிள்ளைகள் மேல எந்த ஒரு தனிப்பட்ட அபிப்ராயம் இருந்தது கிடையாது. ஆனா, நீ கோலாவுக்கு இந்த வயசுல எதெல்லாம் சொல்லிக்கொடுக்கக் கூடாதோ, அதெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க. அதனால தான், அவ அமுதன் கிட்ட அப்படி நடந்திருக்கா. அது தப்புன்னு தெரிஞ்சதால தான, மாரி அவளைக் கண்டிச்சிருக்கா. இதுல அவ தப்பு எதுவும் இல்ல. ஆனா, நீ அவதான் தப்பு பண்ண மாதிரி, அவளப் பேசி அவ மனச ரொம்ப நோகடிச்சிட்ட.” என்று அழகேசனும் அவருடைய பக்கத்து நியாயத்தைக் கூறினார்.

“ம்ம்.. எல்லாரும் என் மேலயே தப்பு சொல்லுங்க. இதெல்லாம் காலம் காலமா எல்லார் வீட்டுலயும் நடக்கற கதைதான். அவளுக்கு அமுதன் முறைப்பையன் தான, அதனால தான் அவளுக்கு அவன் மேல விருப்பம் அதிகம். அமுதனுக்கு இப்போ அப்படி ஒரு எண்ணம் வராம இருக்கலாம். ஆனா, கல்யாண வயசு வரும் போது, தன்னைப் போல எல்லா ஆசையும் வரும். அப்போ நீங்க தான் நான் சொன்னது சரின்னு நினைப்பீங்க.” என்றாள் விசாலாட்சி திரும்பவும்.

“விசாலம், நீ இந்த மாதிரி அப்பாவையும், அண்ணனையும் எதிர்த்துப் பேசறது சரியில்ல. அதே மாதிரி மாரிய நீ திட்டினதும் தப்பு. அவளுக்கு எது சரின்னு படுதோ அதைத்தான் அவ பண்ணுவா. அவளுக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லன்னா அது அவளோட முடிவு. அதப்பத்தியெல்லாம் நீ ஏன் பேசற.? அவ கோலாவத் திட்டினது தப்பே இல்ல. அவ எல்லாரையும் தன்னோடவங்கன்னு நினைக்கிறவ. கோலாவ அவளோட தங்கச்சின்னு நினைச்சுத்தான் அவ திட்டியிருக்கா. இதே அவளோட அக்காவா இருந்தா கோலா கேட்க மாட்டாளா.? அப்படிப்பட்டவளப் போய் நீ கேவலமா பேசிட்ட.” என்று கமலமும் பேசினார்.

“வாம்மா, நீ ஒண்ணு தான் என்னைத் திட்டாம இருந்த. இப்போ நீயும் என்னைக் குத்தம் சொல்ல வந்துட்டியா.? எல்லாருமா சேர்ந்து என்ன அவளுக்கு ரொம்ப தான் பரிஞ்சு பேசறீங்க. அவளுக்கு நாதியில்ல. அவளுக்கு என்ன நடந்தாலும் கேட்கறதுக்கு ஆளில்ல. அவளெல்லாம் ஒரு மனுஷியா மதிச்சு நீங்கள்லாம் பேசிட்டிருக்கீங்க. அப்போ, என்னை விட இந்த வீட்டுல அவளுக்குத்தான் எல்லா உரிமையும் இருக்கு போல.” என்று பேசிக்கொண்டே போன விசாலாட்சியை,

தாத்தா “போதும் நிறுத்து விசாலம். இதுக்கு மேல மாரியைப் பத்திப் பேச உனக்கு எந்த அருகதையும் இல்ல. நீ எதுக்கு வந்தியோ அதை வாங்கிட்டுக் கிளம்பு.” என்று வெளிப்படையாகவே பேசிவிட்டார்.

“ஓஓ.. அப்போ, அவ தான் உங்களுக்கு முக்கியம்னு சொல்லாம சொல்லிட்டீங்க. இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்.? ஹூம்ம்.. கட்டிக்கிட்டுப் போனாலும், பெத்தவங்களைப் பார்க்க எப்பவும் ஓடி வரேன்ல, எனக்கு இது தேவைதான். நான் உங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். என்னைக்கு இருந்தாலும், பெத்தப் பொண்ணு தான் வந்து பார்ப்பா. எல்லாரும் சும்மா பேச்சுக்குத்தான் சொல்வாங்க.” என்று மாரியின் காதுபடவே பேசினாள் விசாலாட்சி.

“கமலம், உன் பொண்ணுக்கு என்ன தேவையோ பார்த்து செஞ்சு, எல்லாத்தையும் கொடுத்தனுப்பு. இதுக்கும் மேல மாரியைப் பத்தி அவ பேசினா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என்று சொன்னபடி உள்ளே சென்றார் தாத்தா.

“என்னைத் துரத்தி விடுறதுலயே குறியா இருக்காரு. அவ்வளவு வேண்டாதவளா ஆகிட்டேன் இந்த வீட்டுக்கு. இத்தனை அவமானத்துக்கு அப்பறமும் நான் இந்த வீட்டுல இருந்தா தெருவுல போற நாய் கூட என்னை மதிக்காது. டேய் குமாரு கிளம்பு. ஏய், வாடி கோலா. நம்ம அருமை இவங்களுக்குத் தெரியல. அருமை தெரியாதவங்க வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது. எல்லாத்தையும் எடுத்துட்டு வா. நம்ம வீட்டுக்குப் போலாம். நமக்கு யாரும் இல்லாமையா இங்க வந்தோம்.” என்று தன்னைப் போல பேசியவாறே அவர்களை அதட்டிக் கொண்டே கிளப்பினாள்.

சிறிது நேரத்திலெல்லாம், அவர்கள் தங்களது மூட்டைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட, கமலம் தான் ஓடி வந்து அறுவடை முடிந்து அவளுக்கு எப்பொழுதும் கொடுத்து விடும் பொருட்களான, சர்க்கரை, தேம்பாகு, கரும்பால், கரும்பு, மற்றும் ஐம்பதாயிரம் ரொக்கப்பணம் என்று அனைத்தையும் ஒரு பையில் போட்டு அவள் கிளம்பிவிடும் முன்னே உதறிய அவள் கையில் திணித்தார்.

முதலில் வாங்க மறுப்பதைப் போல் நடித்தவள், பிறகு வேண்டா வெறுப்பாய் வாங்கிக்கொள்வதைப் போல் வாங்கிச் சென்றாள். கமலத்திற்க்கு அழுகையே வந்துவிட்டது. தனியே அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். அமுதனும், தமிழினியும் தான் சென்று சமாதானப்படுத்தினர்.

அழகேசனுக்கும், தாத்தாவுக்கும் பெருத்த சங்கடமாகிப் போனது. “என்னப்பா இப்படி ஆயிடுச்சு.? இந்த வருஷம் அறுவடைக்கு எல்லாரும் இருக்கோம்னு சந்தோஷப்படறதுக்குள்ள இப்படி ஒரு விஷயம் நடந்திருச்சு.” என்று தன் அப்பாவிடம் வருத்தப்பட்டார் அழகேசன்.

“ஹூம்ம். விடு அழகு, அவளுக்கு பாசம், பந்தம், அதுக்கான மதிப்பெல்லாம் தெரியாது. எதையும் லாபமில்லாம செய்யமாட்டா விசாலம். பாவம் நீயும் என்ன பண்ணுவ.? தங்கச்சி தானேன்னு பொறுத்துட்டுப் போற. ஆனா, அவ அப்படிக் கிடையாது. அவளுக்கு சாதகமா வரணும்னு தான் பார்ப்பா. அப்படி அவ யோசிச்ச விஷயம் தான் அமுதன எப்படியாவது கோலாவுக்குக் கட்டி வைக்கணும்னு. நான் அமுதன் பேருல எல்லா சொத்தையும் எழுதி வைச்சதால தான், அவ கோலாவ அமுதனுக்குக் கட்டி வைச்சுட்டா எந்தப் பிரச்ச்சினையும் வராதுன்னு யோசிச்சிருப்பா. இப்போ, தான் நினைச்சது நடக்கலன்னதும் அவளால அதை ஏத்துக்க முடியல. அதுக்காக நம்ம அமுதனோட விருப்பம் இல்லாம நாம எதையும் செய்யக்கூடாது. அதுக்கான வயசு வரும் போது அவனே எல்லாத்தையும் சொல்லட்டும். விசாலத்துக்கென்ன, அவ பணத்துக்காகத்தான் எல்லாத்தையும் செய்வா. அதுக்காக நம்ம பசங்க வாழ்க்கைய கெடுக்கக் கூடாது. அமுதன நல்லா படிக்க வை. அவனுக்கு என்னவா வரணும்னு விருப்பப்படறானோ, அதே படிப்பு படிச்சு அவன் பெரிய ஆளா வரட்டும்.” என்றார் தாத்தா.

அழகேசனும், “கண்டிப்பா பா. சரி, நான் மாரிகிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்.” என்று சொன்னவாறு அவளது அறைக் கதவைத் தட்டிக்கொண்டு சென்றார். அமைதியாய்ப் படுத்திருந்த மாரி அவர் வந்ததும் எழுந்து அமர்ந்தாள்.

“என்னாச்சு மாரி.? விசாலம் பேசினத நினைச்சு ரொம்ப கஷ்டப்படறியா.?” என்றார் அழகேசன்.

“அப்படியெல்லாம் இல்ல மாமா. எனக்குன்னு ஒரு உறவு இருக்குன்னு உங்க எல்லாரையும் பார்த்து தான் நான் எந்த ஒரு கவலையும் இல்லாம இருக்கேன். ஆனா, இன்னைக்கு சித்தி பேசினதும் தான், எல்லா உறவும் ஏதோ ஒரு வகைல காயப்படுத்திடுவாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். நான் தான் ரொம்ப உரிமையா எல்லாரையும் நினைக்கிறேன். ஆனா, எல்லாரும் அப்படி இருக்கறது இல்ல.” என்று விரக்தியாய்ப் பேசினாள் மாரி.

“ஆமா மாரி, இந்த மாதிரி உறவுகள் எல்லாமே உனக்கு நிரந்தரம் கிடையாது. ஏன், தாத்தா, பாட்டியே எடுத்துக்கோ அவங்களுக்கும் இப்போ வயசாயிடுச்சு. அவங்க காலமும் எப்போன்னு தெரியாது. உனக்கு ஒரு உறவு கடைசி வரைக்கும் வேணும்னா நீ ஒரு உனக்குன்னு ஒரு துணையத் தேடிக்கணும். அதுதான் இதுக்கு ஒரே வழி.” என்றார் அழகேசன்.

“என்ன மாமா சொல்றீங்க.? எனக்குப் புரியல.” என்றாள்.

“நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றேன். அந்த உறவுதான் உனக்கு கடைசி வரைக்கும் உறுதுணையா வரும். உனக்கு எந்த ஒரு நிலை வந்தாலும், உண்மையா பாத்துக்கும். உன்னை இப்படிப் பேசறவங்கள எதிர்த்து நிக்கும்.” என்றார் அழகேசன்.

“மாமா, நீங்க சொல்ற மாதிரியெல்லாம் யாரும் இப்போ இருக்கறதில்ல. எல்லாருமே சுயநலவாதிக. திருப்தியே இல்லாதவங்க. பொண்டாட்டி இருந்தாலும், வேற பொண்ணப் பார்க்கற உலகம் மாமா.” என்றாள் மாரி வெறுப்புடன்.

“இதனால தான் நீ கல்யாணத்தையே வெறுக்கறியா.? இல்ல வேற ஏதாவது காரணம் இருக்கா.?” என்றார்.

“இல்ல மாமா. பெருசா ஒண்ணும் காரணம் இல்ல. எனக்கு விவசாயத்தை கடைசி வரைக்கும் பாத்துக்கணும். இந்த நிலங்களை அவ்வளவு சீக்கிரம் விட முடியாது. கல்யாணம் பண்ணா, வேற பக்கம் போக வேண்டி வரும். நிறைய விஷயங்களைத் தியாகம் பண்ண வேண்டி வரும். இதெல்லாம் எதுக்குன்னு தான், கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேன்.” என்றாள் மாரி.

“ஆனா, இதுக்கெல்லாம் ஏத்த மாதிரி ஒருத்தர் உன்னோட வாழ்க்கை துணையா வந்தா அவர நீ ஏத்துக்குவியா.?” என்றார் அழகேசன்.

மாரியோ விழித்தாள். “நான் அந்த கராத்தே மாஸ்டர் சாமிநாதனைத்தான் சொல்றேன். அவர்கிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன். உன்னோட சம்மதத்துக்காகத்தான் காத்திருக்கேன்னு சொன்னார். ரொம்ப நல்ல மனுஷனாத்தான் தெரியறார். இங்க தான் வாழ்க்கை முழுக்க இருக்கப்போறதா சொன்னார். அவருக்கு சொந்தமான நிலத்துல அவரும் விவசாயம் பார்த்துட்டு வரதாதான் சொன்னார். நீ கொஞ்சம் யோசி. இதுமாதிரி உனக்கு அமையறது ரொம்பக் கஷ்டம். உன்னையும், உன்னோட விருப்பத்தையும் ஏத்துக்கிட்டு உனக்காக வாழணும்னு நினைக்கறவங்கள நீ ஏமாத்தக்கூடாது. உனக்கான துணை அவர் தான்னு எனக்குத் தோணுது. நீ தான் இனி யோசிச்சு முடிவெடுக்கணும். நான் நாளைக்கு ஊருக்குக் கிளம்பலாம்னு இருக்கேன். அமுதனும், தமிழினியும் இங்கயே இருக்கட்டும். நான் அப்பறமா வந்து கூட்டிட்டுப் போறேன். அவங்க ரெண்டு பேரும் உன்னோட பொறுப்பு. சரியா.?” என்று சிரித்துக்கொண்டே பேசியபடி சென்றார்.

அவர் சென்ற பிறகு நீண்ட நேரமாக யோசித்தாள் மாரி. மாமா சொல்வதும் சரிதான். இந்த உலகம் தனியாக வாழ்பவர்களை ஏனோ ஏசத்தான் செய்கிறது. துணையோடு வாழ்ந்தால் அதுவும் ஒரு வித நன்மை தான் என்று நினைத்தாள்.

மனதுக்குள் ஏதோ ஒருவித உற்சாகம் குடிகொண்டது. அன்று சாமிநாதன் வந்து பெண் கேட்ட விதத்தை நினைத்துப் பார்த்தாள். அத்தனை ஒரு கண்ணியம் அவனது வார்த்தைகளில். அதுபோல் ஒருவர் கிடைப்பது அரிது. அதை ஏற்காமல் போவது மிகப்பெரிய குற்றம். இனியும் அந்தக் குற்றத்தை செய்யக் கூடாது என்று நினைத்தாள் மாரி.

மனதுக்குள் எதையோ நினைத்துச் சிரித்தவளாக, பக்கத்தில் கிடந்த கரிக்கட்டையை எடுத்து மாரி என்று தன் பெயரை எழுதியவள், கீழே சாமி என்று அவனது பெயரையும் எழுதினாள். பொருத்தமாக இருந்தது. அதை எண்ணிச் சிரித்துக்கொண்டாள்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1397


உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் தோழமைகளே...

 
அத்தியாயம் 20

அடுத்த நாள் அழகேசன் கிளம்பி விட, தமிழினியும், அமுதனும் விடைபெற மனமில்லாமல் அவரிடம் நின்றனர்.

“அப்பா, இன்னும் கொஞ்ச நாள் இருங்கப்பா. அப்பறமா மூணு பேரும் சேர்ந்தே போகலாம்.” என்றான் அமுதன்.

“இல்லடா தம்பி, எனக்கு பள்ளிக்கூடத்துல வேலை இருக்கு. இப்போ உதவி ஹெட் மாஸ்டரா ஆனதுக்கப்பறம் எனக்கு இன்னும் வேலைகள் அதிகமாயிடுச்சு. அதே போல பஞ்சாயத்துலயும் பொறுப்பு இருக்கு. உன்னோட சந்தோஷத்துக்காகத்தான் இந்த மூணு நாளும் இருந்தேன். நீயும், தமிழும் மாரி கூட சேர்ந்து நல்லா ஊரைச் சுத்திப் பாருங்க. அப்பறம் மாரி கூட சண்டை போடாம இரு. அவ உனக்கு அக்கா. சரியா.?” என்றவர், தமிழினியைப் பார்த்தார்.

“தமிழு பொண்ணே, நீ ஒண்ணும் வருத்தப்படாத. நான் உன் அப்பா, அம்மாகிட்ட பேசிக்கிறேன். நீ இங்கயே அமுதன் கூட இரு. நான் உங்க ரிசல்ட் வரதுக்கு முன்னாடி வந்து கூட்டிக்கிட்டுப் போறேன். சரியா.?” என்றார்.

“சரிங்க அய்யா. அப்பா, அம்மாவ கொஞ்சம் பார்த்துக்கங்க. அவங்க ரெண்டு பேரும் நான் இல்லாம ரொம்ப கஷ்டப்படுவாங்க. நீங்க சொன்னதுக்காகவும், அமுதனுக்காகவும் தான் இங்க இருக்க சம்மதிச்சேன்.” என்றாள்.

“சரி, அப்போ நான் கிளம்பறேன். எங்க போனாலும் பார்த்து போய்ட்டு பார்த்து வரணும், அப்பறம் மாரிகூடவே இருங்க.” என்று அவர்கள் மேல் உள்ள அக்கறையைக் காட்டினார்.

சிறிது நேரத்தில் மாரி வண்டியில் தயாராய் நிற்க, அழகேசன் தனது பெற்றோரிடம், அமுதன், தமிழினியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

மாரி, பேருந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அவருடன் நிறுத்தத்திற்க்கு வந்து நின்றாள்.

“ம்ம்.. மாரி, நான் நேத்து சொன்னத யோசிச்சியா.? என்ன முடிவெடுத்திருக்க.?” என்றார் அழகேசன்.

“ஆமா, மாமா. யோசிச்சேன். நீங்க சொன்னது நியாயமான வார்த்தைகள். எனக்கும் அதுதான் சரின்னு தோணுச்சு.” என்றாள்.

“தோணுச்சுன்னா, அப்போ உனக்கு சம்மதமா.?” என்றார்.

“ம்ம்.. ம்ம்...” என்று கீழே தரையைப் பார்த்தவாறு வெட்கப்பட்டு தலையாட்டினாள் மாரி.

“அடப்புள்ள, இத முதல்லயே சொல்லிருந்தா கையோட அந்தப் பையன்கிட்ட நானும், தாத்தாவும் பேசிருப்போமே. அதுக்கப்பறம் கூட நான் கிளம்பிருப்பேன்.” என்றார்.

“இல்ல மாமா. இந்த விஷயத்த நானே அவர்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறேன். அதனால தான், உங்க யார்கிட்டயும் சொல்லல.” என்றாள்.

“ஓஓ.. நீயே உன் விருப்பத்த சொல்லணும்னு நினைக்கிற.? ம்ம்.. அதுவும் நல்ல விஷயம் தான். சரி, காலம் தாழ்த்தாம அதை உடனே சொல்லிடு. சரியா.?” என்றார் அழகேசன்.

“ம்ம்.. சரி மாமா..” என்றாள் மாரியும்.

இருவரும் பேசிக்கொண்டிருக்க, அவர் போக வேண்டிய பேருந்து வந்தது ஏறிக்கொண்டார். விடைபெற்றார் அவளிடம்.

அவள் வண்டியைக் கிளப்பினாள். போகும் வழியிலேயே சரியாக கராத்தே மாஸ்டர் சாமிநாதன் நடந்து போய்க்கொண்டிருந்தான். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த கதை போல, மாரி அவனைப்பற்றி நினைத்துக்கொண்டே போக, அவன் அவளுக்கு முன்னே நடந்து போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவனது அருகில் சென்று வண்டியை நிறுத்தினாள்.

தனக்கு மிக அருகில் வண்டி சத்தம் நிற்பதைப் பார்த்தவன், திரும்பிப் பார்க்க அங்கே மாரி புன்னகை கலந்த முகத்தோடு இறங்கினாள். அவனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ஒரு நிமிடம் அப்படியே நின்றான்.

மாரி, மிக மிக தைரியமான பெண் தான் என்றாலும், அவனது அருகில் வரும் போது சிறிது பதட்டப்படத்தான் செய்தாள்.

“மாரி, இது நீதானா.? என்னைப் பார்த்து சிரிக்கவெல்லாம் செய்யற.? என்ன விஷயம்.? வாத்தியார் ஏதும் சொல்லி விட்டாரா.? என்னைத் திட்ட வந்திருக்கியா.? ஆனா, உன் சிரிப்பப் பார்த்தா திட்ட வந்த மாதிரி தெரியலையே.? வேறென்னவா இருக்கும்.?” என்று யோசித்தவாறு மேலே பார்க்க, அவனது முக பாவனையை ரசித்தாள் மாரி.

ஒரு ஆணை நிமிர்ந்து பார்த்து, அதுவும் ரசிக்கவும் செய்வது இதுவே முதல் முறை. அவளுக்கே அவளுடைய ஒரு நாள் மாற்றம் ஆச்சர்யப்பட வைத்தது. அவன் அவளுடைய பேச்சுக்காகக் காத்திருந்தான். இவளோ யோசித்துக்கொண்டே நின்று கொண்டிருந்தாள்.

“மாரி, நீ பேச மாட்டியான்னு ஏங்கிட்டிருக்கேன். ஆனா, நீ ஏதோ யோசிச்சிட்டே இருக்கியே.? என்ன தான் விஷயம் சொல்லு கண்ணே.” என்று கிட்டத்தட்ட கொஞ்சும் மொழியில் பேச, அவளுக்கு சிரிப்பே வந்து விட்டது. அவள் சிரித்தபடி நிற்க அதைப்பார்த்து ரசித்தான் சாமி.

“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும்.” என்றாள்.

“ம்ம்.. தாராளமா கேளு.” என்றான்.

“உங்களுக்கு எதனால என்னைப் பிடிச்சிருக்கு.? என்னை அவ்வளவு சீக்கிரம் யாரும் பிடிக்கலன்னு தான் சொல்வாங்க. நீங்க மட்டும் தான் பொண்ணு கேட்டு வந்தீங்க. அதனால தான் கேக்கறேன்.” என்றாள்.

“ம்ம். சொல்றேன். நீ அப்படியே எங்கம்மாவோட சாயல். ரொம்ப தைரியமான எங்கம்மா ரெண்டு ஆம்பளைங்களுக்கு சமம். அவங்க முறைச்சுப் பார்த்தாலே எல்லாரும் பயப்படுவாங்க. அவங்களைப் பார்த்து எங்க ஊரே பயப்படும். அம்மாக்கு முனியப்பன் சாமி வரும். ஊருக்கே அருள்வாக்கு சொல்வாங்க. அதே போல, காவல் காப்பாங்க. அப்படி காவல் காக்கும் போது, ஒரு நாள் திருடங்களைப் புடிச்சுக் கொடுத்தாங்க. அதுக்கப்பறம் அவனுங்க ஆளுங்க யாரோ தான், அம்மாவக் கொன்னுட்டாங்க. எங்களால அத ஏத்துக்கவே முடியல. அவங்க ஞாபகமாவே இருக்கும். அப்போ எனக்கு பத்து வயசுதான். உன்னைப் பார்க்கும் போது, எனக்கு எங்கம்மாவப் பார்க்கற ஞாபகம் வரும். அவங்களே திரும்பக் கிடைச்சிட்டதா தோணுச்சு. உன்னை நிறைய இடங்கள்ல பார்த்திருக்கேன். நீ பேசற பேச்சும், உன்னுடைய தைரியமும், அப்படியே எங்கம்மாவ உரிச்சு வைச்ச மாதிரி இருக்கு. அதுவே உன்மேல எனக்கு ஒரு பிரியத்த உண்டாக்கிடுச்சு. அதனால தான் முறையா வந்து உங்க தாத்தா, பாட்டிக்கிட்ட பொண்ணு கேட்டேன். ஆனா, நீ தான் அப்போவே என்னை வேண்டாம்னு சொல்லிட்ட. அதுக்கப்பறம் சரி, பார்த்துக்கலாம்னு நானும் விட்டுட்டேன்.” என்றான்.

“ஓஓஓ.. ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க அம்மா இறந்த கதையைக் கேட்கும் போது. தைரியமான பெண்கள் தான் நாட்டுக்கு அவசியம். ஆனா, அது புடிக்காம இந்த மாதிரி சில ஆட்கள் எமனா வந்து எல்லாத்தையும் கெடுத்துடுறாங்க. நீங்க யாரும் அத எதிர்த்து போலீஸ்ல சொல்லலையா.?” என்றாள் மாரி.

“ஹூம்ம்.. போலீஸெல்லாம் வந்து விசாரிச்சு எல்லாம் பண்ணினாங்க. ஆனா, குற்றவாளி யாருன்னே கண்டுபுடிக்க முடியல. அதுக்கப்பறம் ஒரு நாள், ஊர் எல்லைல அருவா காயத்தோட செத்துக்கிடந்தான். அப்போதான் தெரிஞ்சது, இன்னொருத்தர் முனியப்பன் சாமி ரூபத்துல வந்து அவனைக் கொன்னுட்டாங்கன்னு. அவன் தான் எங்கம்மாவைக் கொன்னவன். சாமியே அவனுக்கு சரியான தண்டனை கொடுத்துடுச்சு. இருந்தாலும், நம்மளைப் பாதுகாத்துக்க, ஒரு தற்காப்புக் கலையைக் கத்துக்கணும்னு எங்கம்மா உயிரோட இருக்கும் போது சொல்லிட்டே இருப்பாங்க. அவங்க இறந்ததுக்கப்பறம் தான், நான் கராத்தேவ முழுமையா கத்துக்கிட்டேன். அதுல பிளாக் பெல்ட்டும் வாங்கினேன். சர்வதேச அளவுல நடக்குற போட்டிகள்ல கூட கலந்துக்கிட்டு ஜெயிச்சேன். அப்போ தான், இந்த கராத்தேவ எல்லாருக்கும் கத்துக்கொடுக்கணும்னு ஒரு ஆர்வம் வந்துச்சு. அதனால தான் இந்த கராத்தே ஸ்கூல ஆரம்பிச்சேன். அதுவும் இப்போ நல்லபடியா போயிட்டு இருக்கு. நிறைய பேர் அதுல ஆர்வம் காட்டுறாங்க.” என்றான்.

“ஆனா, இது உங்க ஊரு இல்லையே. அத ஏன் இந்த ஊருல வந்து சொல்லிக்கொடுக்கறீங்க.?” என்றாள்.

“இது தான் எங்கம்மாவோட சொந்த ஊரு. அம்மா, பொறந்து வளர்ந்த இந்த ஊருல தான் நானும் கொஞ்ச நாள் இருந்தேன். அதனால, இந்த ஊரு மேல எனக்குப் பிரியம் அதிகம். அதே போல, எங்க அப்பாவும், அண்ணனும் எங்க ஊருல இருக்கற நிலங்களப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அங்க ஒரு மில்லும் இருக்கு. ஆனா, அம்மாக்கு சொந்தமான இந்த நிலங்களைப் பார்த்துக்கவும், அதைப் பராமரிச்சு விவசாயம் செய்யவும் யாரும் முன்வரல. அதனால தான், நான் இங்கயே வந்துட்டேன். ஏதாவது ஒரு நாள் தோணும் போது போய் அப்பாவையும், அண்ணன், அண்ணி, குழந்தைகளப் பார்த்துட்டு வருவேன்.” என்றான்.

“ம்ம்.. என்னை மன்னிச்சிடுங்க. உங்கள முதல்ல ரொம்பத் தப்பா நினைச்சிட்டேன். அதனால தான், அன்னைக்குப் பொண்ணு கேட்டு வந்தப்போ, உங்கள வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டேன். ஏன்னா, எனக்கு வாழ்க்கைல எந்த ஒரு துணையும் வேண்டாம்னு நினைச்சேன். அதுல ஏனோ விருப்பமும் இருந்ததில்ல. ஆனா, எங்க மாமா தான் எனக்கு ஒரு உண்மையைப் புரிய வைச்சாரு. வாழ்க்கைத்துணை தான் கடைசி வரைக்கும் கூட வரும். அதை நீ வரும் போதே ஏத்துக்கணும். இல்லன்னா அப்பறம் கிடைக்காதுன்னு சொன்னாரு. அப்போதான் உங்களைப் பத்தியும் சொன்னாரு. எனக்கு இத்தனை நாள் உங்க மேல எந்த ஒரு அபிப்ராயமும் இருந்ததில்ல. நேத்து தான் நிறைய யோசிச்சேன். அவர் சொன்னது தப்பில்லன்னு தோணுச்சு. அதனால தான், உங்ககிட்ட நேர்ல பார்த்து பேச வந்தேன்.” என்றாள் மாரி.

“அப்போ, உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா.?” என்றான் சாமி உற்ச்சாகத்தில்.

“ம்ம்ம்..” என்றாள் அவளும் வெட்கத்தை வெளிப்படுத்தியவாறே.

“அப்பா, கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா இதுக்காக நான் காத்திருந்தேன் தெரியுமா.? பரவால்ல காத்திருந்தாலும், அதுல ஒரு தனி சந்தோஷம் இருக்கு.” என்றான்.

“அப்பா, அண்ணா இருக்காங்கன்னு சொன்னீங்கள்ல. அவங்களோட வந்து முறைப்படி பொண்ணு கேட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கங்க.” என்றாள் மாரி.

“ம்ம்.. அப்படியே எங்கம்மா மாதிரியே பேசற. ரொம்ப சந்தோஷம் மாரி..” என்று உணர்ச்சிவசப்பட்டு அவள் அருகில் வந்து அவளின் கைகளைப் பிடித்தான்.

அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவசரமாய் கைகளை உதற, அவனோ, “ஓ.. மன்னிச்சிடு. ஏதோ ஒரு உற்சாகத்துல கையைப் பிடிச்சுட்டேன். நான் சீக்கிரமே வீட்டுக்கு வரேன்.” என்றான் கண்ணியமாய்.

அவளும் தலையாட்டியவாறே, வண்டியைக் கிளப்பினாள். மாரி போவதையே பார்த்து ரசித்தவாறே நடந்தான் சாமி.

வீட்டில் வந்து தாத்தா, பாட்டியிடம் விஷயத்தைச் சொன்னாள் மாரி. அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்க்கு அளவே இல்லை.

“அப்பா, இப்போதான் எங்களுக்கு உயிரே வந்தது மாதிரி இருக்கு. நீ கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னப்போ, எங்களுக்கு உன்னோட எதிர்காலத்த நினைச்சு ரொம்பக் கவலையா இருக்கும். ஆனா, இப்போ நீ சொன்ன வார்த்தைகளால எங்க மனசே குளிர்ந்திருச்சு மாரி. உங்க அம்மாவும், அப்பாவுமே மேல இருந்து இந்நேரம் சந்தோஷப்பட்டிருப்பாங்க.” என்று சொன்னபடி மாரியை உச்சி முகர்ந்தார் கமலம் பாட்டி.

“ரொம்ப சந்தோஷம்டா கண்ணு. நீ எடுத்திருக்கற முடிவு நல்லது. அதுவும் நீ நேர்லயே அந்தத் தம்பியைப் பார்த்துப் பேசினது ரொம்ப சரி. எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துக்கலாம். நாங்க இருக்கோம். நீ எதுக்கும் கவலைப்படாத. சரியா.?” என்று உணர்ச்சிவசத்தில் பேசினார் தாத்தா.

மாரிக்கு ஆன்ந்தக் கண்ணீரே வந்து விட்டது. அமுதனும், தமிழினியும் வந்து அவளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

“அக்கா, என்னை முதல்ல மன்னிச்சிடுங்க. நான் உங்களை ரொம்பத் தப்பா நினைச்சிட்டேன். தமிழு கூட என்கிட்ட சொல்லுவா, அவங்க உன்னைத் தம்பியா நினைச்சுத்தான் இதெல்லாம் பண்றாங்கன்னு. ஆனா, நான் தான் தேவையில்லாம உங்க மேல கோவப்பட்டேன். நீங்க அன்னைக்கு, உங்க தம்பி இறந்துட்டதா சொன்னப்போ ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. ஆனா, என்னால உடனே உங்ககிட்ட பேசணும்னு தோணல. நேத்து நீங்க எனக்காக அவங்ககிட்ட சண்டை போட்டதும், அவமானப்பட்டதும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. எனக்காக இவ்வளவு தூரம் பரிஞ்சு பேசறது எங்கப்பாவும், தமிழும் தான். இப்போ நீங்களும் சேர்ந்துட்டீங்க. எனக்கு அதுவே ரொம்ப சந்தோஷம். இனிமேல் நீங்க என்ன பண்ணாலும் நான் கோவிச்சுக்க மாட்டேன். உங்களோட தம்பின்னு நீங்க உரிமையா என்கிட்ட நடந்துக்கலாம்.” என்று அமுதன் பேச, வாயடைத்துப் போனாள் மாரி.

“டேய். அமுதா.. நீ தான் உண்மையாலுமே பேசறதா.? என்னால நம்ப முடியல. தழிழு இது உண்மையா.?” என்றாள் தமிழினியைப் பார்த்து.

“ஆமா, அக்கா. என்னோட நண்பன் உண்மையைத்தான் சொல்றான். அவனோட உண்மையான குணம் இதுதான்.” என்றாள் அவளும்.

“ஹூம்ம். சரிடா தம்பி. அப்போ, உன்மேல தண்ணியை எடுத்து ஊத்தினா எதுவும் சொல்ல மாட்டியே.?” என்றாள் மாரி.

“ம்ஹும்ம். மாட்டேன்.” என்றான்.

“அப்போ சரி, தமிழு நீ ரெடியா.? அந்த கிணத்து வாளியை எடுத்து வைச்சுக்கோ, இவன் மேல இப்போ ஊத்தியே ஆகணும்.” என்று மாரி சொல்ல,

“அய்யோ அக்கா, நீங்க ஏதாவது சொன்னா உடனே பண்ணிடுவீங்களா. நான் போறேன்.” என்றபடி ஓட, மாரியும், தமிழினியும் அவனைத் துரத்தினர்.

அதைப் பார்த்து தாத்தாவும், கமலம் பாட்டியும், “டேய்.. பேராண்டி ஓடி ஒளிஞ்சுக்கோ. அவ கையில சிக்கின நீ அவ்ளோதான். அவ சொன்னத செய்வா.” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அமுதன் ஓட்டமாய் ஓடினான். அன்று தான் அந்த வீடு சந்தோஷம் நிறைந்ததாய் இருந்தது அவர்களுக்கு.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1232

உங்களின் விமர்சனங்களைக் கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் தரவும் தோழமைகளே...

 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom