Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

அத்தியாயம் 7




அவள் எப்படி தன் வீடு வந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. வீட்டை அடைந்தவுடன் தயிரை தன் அண்ணியிடம் கொடுத்து விட்டு குளியறைக்குள் நுழைந்து கொண்டாள். அவளுக்கு ஓவென்று அழலாம் போல் இருந்தது. ஏன் என் மனம் இப்படி துடிக்கிறது? அவனுக்கு பெண் பார்த்தால் எனக்கென்ன வந்தது, நான் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறேன்? நான் அவனை காதலிக்கிறேனா? அது தான் அவனை பார்த்தால் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருக்கிறதா? இது சரி வருமா? மனமே அடங்கு. என்னால் ஏணி வைத்தால் கூட அவன் உயர்வை அடைய முடியாது. இதை ஏன் என் மனம் ஏற்க மறுக்கிறது? நான் அவனை நினைப்பதே பெரிய தவறு. என் நிலை என்ன அவன் உயர்வு என்ன? கடவுளே என்ன இது சோதனை? என்று மௌனமாக அழுதாள். குளியலறையில் இருந்து வெளியே வந்தவுடன் பார்வதி என்னடி? இவ்வளவு நேரம் குளிக்கிறே? எனக்கும் அலுவலகத்திற்கு நேரம் ஆகுது, நான் குளிக்க வேண்டாமடி என்று புலம்பிக் கொண்டே பாத்ரூமுக்கு குளிக்க சென்றாள். துர்கா அப்போதுதான் மணியை பார்த்தாள், மணி எட்டு ஆகியிருந்தது. முருகா இவ்வளவு நேரம் ஆயிடுச்சு! இன்னைக்கு காலை டிபன் சாப்பிட முடியாது, கொண்டு போய் அலுவலகத்தில் தான் சாப்பிட வேண்டும் என்று நினத்தவளாக அன்று செய்த ரவா உப்புமாவை டப்பாவில் அடைத்து தொட்டுக்கொள்ள, கொஞ்சம் நாட்டு சர்க்கரையும் அதிலேயே வைத்து, மதிய உணவையும் ஒரு டப்பாவில் போட்டு இரண்டையும் எடுத்து வைத்தாள். ஐந்து நிமிடத்தில் தயாராகி, அண்ணியிடம் நான் ஆபீஸுக்கு போயிட்டு வரேன் அண்ணி என்று குரல் கொடுத்தாள். பார்வதி அப்போதுதான் குளித்து விட்டு வெளியே வர, என்னடி டிபன் சாப்பிடலையே? என்று விசாரித்தாள். இல்ல அண்ணி நேரம் ஆயிடுச்சு, சரியான நேரத்திற்கு போகலனா பஸ் போயிடும் என்று கூறிக் கொண்டே வாசலை நோக்கி நடந்தாள். பார்வதிக்கு அவள் டிபன் சாப்பிடாமல் போவது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. என்ன இந்த பெண் இப்படி இருக்கிறாளே? நிறைய வேலை செய்கிறாள், நேரம் தவறாமல் சாப்பிட வேண்டாமா? நாளையில் இருந்து அவளை சாப்பிடாமல் அனுப்பக்கூடாது என்று மனதிற்குள் நினைத்தவாறே அவள் தன் அலுவலகத்திற்கு கிளம்பினார்.

துர்காவிற்கு அன்று வேலையே ஓடவில்லை மனதில் பாரம் அழுத்தியது. அன்று மேனேஜர் சொல்வதை எல்லாம் இரண்டு முறை கேட்டு தெரிந்து கொண்டாள். அவரே,” என்னம்மா உடம்பு சரியில்லையா?எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பாய்”, இன்னைக்கு என்ன உன் முகமே சரியில்லை என்று விசாரித்தாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்! பஸ்ஸில் நெரிசல் அதிகம் அதனால்தான் கொஞ்சம் அசதியா இருக்கு, என்று சொல்லி சமாளித்தாள். மாலையில் அலுவலகம் முடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றாள். அங்கு வீற்றிருக்கும் ஆண்டவரை பார்க்கும்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் ஆறு போல் பெருகியது. ஆண்டவா! என்னை இந்த இக்கட்டில் இருந்து நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று மனதுருகி வேண்டி கொண்டு வீடு திரும்பினாள்.

அவள் வேண்டுதல் இறைவனை சென்று அடைந்ததோ என்னவோ மறுநாள் மாலை மூன்று மணிக்கு ஆபீஸ் போனில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. போனிற்கு parallel connection இருந்தது. ஆதலால் அவள் டேபிளில் இருந்தும் எடுக்கலாம். அவள் ஹலோ என்று கூறுகையிலேயே, மறுமுனையில் ஹலோ! துர்கா தானே, நான் சுஹேல் பேசுறேன், என்று குரல் கேட்கவே அவளின் அத்தனை செல்களும் சந்தோஷத்தில் துடித்தது . என்ன சுஹேல் இந்த நேரத்தில் அழைக்கிறாய்?, என்ன விஷயம் ? என்று கேட்க, சுஹேல், உன்னிடம் முக்கியமாக ஒரு விஷயம் பேச வேண்டும், மாலை அலுவலகம் முடிந்ததும் பக்கத்தில் இருக்கும் ரெஸ்டாரன்ட் க்கு வருகிறாயா? நானும் விரைவாக வந்து விடுகிறேன். அங்கு பேசலாம் என்று கூறி போனை வைத்தான். துர்காவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன விஷயம், எதற்காக கூப்பிடுகிறான்? ஒரு வேளை அவனுக்கு பார்த்த பெண் பற்றிய அபிப்ராயம் கேட்க விரும்புகிறானோ, ஆமாம்! அப்படித்தான் இருக்கும், என்று நினைக்கியிலேயே அவள் மனம் கசந்தது. மணி ஐந்தரை அடித்ததும் தன் பையை எடுத்துக் கொண்டு ரெஸ்டாரண்ட்யை நோக்கி விரைவாக சென்றாள்.

அங்கு ஏற்கனவே சுஹேல், இவளுக்காக காத்திருந்தான். இவளை பார்த்ததும், துர்கா இங்கு இருக்கிறேன், என்று கையால் சைகை செய்தான். அவன் இருக்கும் இடம் நோக்கி துர்கா சென்றதும், வா! துர்கா, உட்கார், என்று எதிர் இருக்கையை காட்டி அமரச் சொன்னான். அவள் அமர்ந்ததும் என்ன துர்கா சாப்பிடுற? டிபன் ஏதாவது ஆர்டர் பண்ணவா என்று கேட்டதும், அதெல்லாம் வேண்டாம் பழரசம் சொல்லுங்கள் என்று கூறவும் அவன் பேரரை அழைத்து இரண்டு ஆப்பிள் ஜூஸ் சொல்லிவிட்டு அவளை பார்த்தான். அவள் முகத்தில் சிறிது அசதி தெரிந்தாலும் முகம் அழகுடன் தான் இருந்தது. கொஞ்ச நேரம் மௌனமாகவே சென்றது. அவனே என்ன விஷயம் என்று சொல்லட்டும் என அவள் மௌனம் காத்தாள். ஜூஸ் வந்தவுடன் இருவரும் பருக தொடங்கினர்.
பருகிக் கொண்டே இருக்கும்போது சுஹேல் அவளிடத்தில் ஒரு கார்டை கொடுத்து அவளை படிக்கச் சொன்னான். கார்டின் முகப்பில் சிவப்பு வண்ண ரோஜாக்கள் மின்னின. உள்ளே திறந்து பார்த்தாள். அதில் என்னுயிர் துர்காவிற்கு என ஆரம்பித்து,

எனது உயிரில் கலந்து நீ என்னவளாகிவிட்டாய்
என்று நான் உனை பார்த்தேனோ
அன்றே எனை நான் இழந்தேன்
இன்று என் உயிர் உன்னிடத்தில்
என் உயிரை திருப்பி தருவாயா? அல்லது
என் உயிரை உன்னோடு சேர்ப்பாயா! அன்பே
பதில் உன்னிடத்தில்.

ஆவலுடன் உன் சுஹேல்

என்று கையெழுத்திடப்பட்டு இருந்தது. அதை பார்த்தவுடன் துர்காவிற்கு ஒன்றுமே புரியவில்லை. கண்களில் நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. அதை பார்த்த சுஹேல் அதிர்ந்து விட்டான். என்ன துர்கா நான் உன் மனதை காயப்படுத்தி விட்டேனா? உனக்கு என்னை பிடிக்கவில்லையா? என்று கண்களில் சோகம் ததும்பிய முகத்துடன் கேட்கவும், அவள் அவனது கையைப் பிடித்து அதில் தன் முகத்தைப் பதித்து மீண்டும் அழ தொடங்க, ஸுஹேலுக்கு மிகவும் சங்கடமாக தோன்றியது. அவளின் தலையை வருடிக் கொண்டே எதுனாலும் சொல்லு துர்கா தயவு செய்து அழாதே என்று சுஹேல் கூறியதும், துர்கா தன் அழுகையை நிறுத்திக் கொண்டு, சுகி உங்களுக்கு நான் கொஞ்சம் கூட பொருத்தமானவள் இல்லை. அழகிலும், படிப்பிலும் ,பணத்திலும் என்னால் உங்களுக்கு சமமாக வர முடியாது. என்னிடத்தில் என்ன இருக்கிறதென்று என்னை காதலிக்கிறீர்கள்? நான் உங்களுக்கு ஏற்றவள் இல்லை. இன்று காலையில் அனீஸ் ஒரு புகைப்படத்தை காட்டினாள். அந்த பெண் தான் உங்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவள். அவளை நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால் தான் உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும். அவள் உங்கள் அப்பா, அம்மா பார்த்த பெண். உங்கள் மதமும் கூட ஆகவே உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை மணப்பது தான் உங்களுக்கும் நல்லது. உங்கள் குடும்பத்திற்கும் சந்தோஷம் கிடைக்கும் என்று அவள் கண்ணீருடன் கூறியதைக் கேட்ட சுஹேல், இறுகிய முகத்துடன் நான் அந்த பெண்ணையும் உன்னையும் ஒப்பிட சொல்லவில்லை. உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? இல்லையா என்று மட்டும் பதில் சொல். உன் மனதில் நான் இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். அதை உறுதிப்படுத்த தான் கேட்கிறேன். தயவு செய்து துர்கா உண்மையை சொல்! என்று அவன் கெஞ்சிய பார்வையுடன் கூறவும், துர்காவிற்கு மனம் மிகவும் வருந்தியது. அவள், நம் இரு வீட்டாரின் சம்மதம் கண்டிப்பாக கிடைக்காது சுஹேல். என்னால் என் குடும்பத்தை விட்டு உங்களுடன் வர முடியாது. தாய் இல்லாத என்னை என் அப்பாவும் அண்ணனும் கண்ணும் கருத்துமாக வளர்த்திருக்காங்க, அவங்க மனச நோக வைச்சிட்டு என்னால உங்களை கல்யாணம் செய்துக்க முடியாது. நீங்களும் உங்கள் வீட்டுக்கு ஒரே பிள்ளை. உங்க பெற்றோருக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். அதனாலே இது ஒத்து வராது சுஹேல், என்று அவள் கூறியதும் சுஹேலின் முகம் கறுத்தது.நான் என்ன கேட்டா, நீ என்ன பதில் சொல்ற, நான் உன்னை விரும்புகிறேன், நீ என்னை விரும்புகிறாயா என்று தானே கேட்டேன், அதற்கு ஆமாம் அல்லது இல்லை என்று பதில் சொல்லு. அதை விட்டு விட்டு மற்றவை எல்லாம் பேசுகிறாய். அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிக் கொண்டே இருக்கையிலேயே, அவள் மௌனமாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள். என்ன துரி, இது தான் நீ எனக்கும் என் காதலுக்கும் கொடுக்கும் மரியாதையா? பதில் சொல்! என்றால் மௌனமாக போகிறாய் என்று சற்று உருக்கமாக கூறியதும் என்னை தயவு செய்து கட்டாய படுத்தாதீர்கள், என்று கூறியபடியே விரைந்து பஸ் நிலையம் நோக்கிச் சென்றாள். இதுக்கு மேல் இப்போது இவளிடம் பேசி உபயோகம் இல்லை என்று புரிந்து கொண்ட சுஹேல் அமைதியாய் அவளை போக வழி விட்டான். துர்காவின் மனமோ துக்கத்தில் விம்மியது. நான் விரும்பியவர் என்னை விரும்புகிறார் என்று தெரிந்தும் என்னால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை என்ற ஏக்கத்தில் கண்ணீர் கொட்டியது. எதிர்காலத்தை எண்ணி அவள் மனம் கலவரம் அடைந்தது.

சுஹேலுக்கோ அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை. அவள் என்னை விரும்புகிறாள். ஆனால் எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுகிறாள். அவள் மனதில் நான் இருக்கிறேன் என்ற எண்ணமே அவனுக்குள் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் அவளின் மறுப்பு அவனை என்னவோ செய்தது. இவளை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தவாறே வீட்டை நோக்கி நடந்தான்.

கால் என்னவோ அது போக்கில் நடக்க, மனம் என்னவோ சுஹேலை சுற்றியே வந்துக் கொண்டிருந்தது. வீட்டை அடைந்தவுடன் தான் துர்காவிற்கு தன் உணர்வு வந்தது. ஸுஹேலும் தன்னை நேசிக்கிறான் என்ற நினைப்பே நெஞ்சில் இனித்தாலும் இது எப்படி சாத்தியமாகும் என்ற நினைப்பே அவளுக்குள் ஓங்கி இருந்தது. சிறிது நேரத்தில் அனீஸ் அவள் வீட்டிற்கு வர என்ன துர்கா உடம்பு சரியில்லையா?காலையில் எங்க வீட்டில் இருந்து செல்லும்போதே உன் முகம் சரியில்லை. இப்போது கூட முகமெல்லாம் வீங்கி இருக்கு. என்னாச்சுடி? உனக்கு எங்கிட்ட யாவது சொல்லேன் என்று கேட்கவே “உன் இடத்தில் சொல்லாமல் வேறு யாரு கிட்ட டி என் வேதனையை சொல்ல முடியும் “ என்று சொன்ன துர்கா பார்வதி வருவதை பார்த்து அதற்கு இப்போது நேரம் தோது இல்ல, ஞாயிற்றுக்கிழமை மூன்று மணிக்கு நீயும் நானும் சந்திக்கலாம் அங்கே பேசலாம் என்று தாழ்ந்த குரலில் சொல்லவும் அனீசும் சரிடி , நான் என்னுடைய ஆடையை தைக்க கொடுத்து இருக்கிறேன். அதைப் போய் வாங்கி வருகிறேன் என்று உம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்புறேன். நீயும் வந்துவிடு என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் அனீஸின் வீட்டில் தொலைபேசி மணி அடித்தது. பாத்திமா எடுத்து ஹலோ சொன்னவள் அண்ணா எப்படி இருக்கீக?, மதனி நல்லா இருங்காங்களா? என்று கேட்க மறுமுனையில் நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்கே? என்று நலம் விசாரித்து விட்டு நான் அனுப்பிய பொண்ணு போட்டோ வந்ததா? சுஹேல் என்னம்மா சொன்னான்? என்று கேட்க, பாத்திமாவும் நேத்தே வந்திச்சி அண்ணா! நான் சுஹேல் கிட்ட கொடுத்திட்டேன். அவன் ஒன்னுமே சொல்லலே. போட்டோவை பார்த்தனா, இல்லையா என கூட தெரியல. நான் அவன்கிட்ட போன் தரேன். அவனேய கேட்டுக்கோ, என்று கூறி சுஹேலை அழைத்து, உன் வாப்பா லைன்ல இருக்கார், பேசுப்பா! என்று கூறி நாசுக்காக சென்று விட்டாள். சுஹேல் போனை எடுத்ததும், அவர் அப்பா, முதல் கேள்வியே என்னடா பொண்ணு பிடிச்சிருக்கா? நிக்காஹ்வை முடிச்சிடலாமா? என்று கேட்டார். சுஹேலுக்கு எரிச்சலாய் வந்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, என்னப்பா, பொண்ணு எப்படி பட்டவங்கன்னு தெரியல. நான் நேரில் கூட பார்க்கல. அதுக்குள்ள நிஹ்ஹா வச்சிக்கலாமான்னு கேட்டா என்ன அர்தம்பா, எனக்கு இப்போ நிஹ்ஹா வில விருப்பம் இல்ல. நான் லண்டன் சென்று, என்னுடைய மேல் படிப்பை முடிக்கணும். என்று கூறியதைக் கேட்டதும் அவர் அப்பா ஆச்சரியமுடன் என்னடா! நான் இரண்டு வார்த்தை கேட்டா ஒரு வார்த்தை கூட பேசமாட்டே, இப்போ இப்படி பேசறே, சரி ! நிஹ்ஹா இப்போ வேண்டாம். ஒரு உறுதியாவது பண்ணிக்கலாம். நீ படிச்சிட்டு திரும்பி வந்தவுடன் நிஹ்ஹா வச்சிக்கலாம் சரியா? என்று கேட்கவே, சுஹேல் க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இங்கு துர்காவை எப்படியாவது சம்மதிக்க வைக்கணும், அதுக்கப்புறம் தான் வாப்பாகிட்ட சொல்ல முடியும் என்று யோசித்து என்னாலே இப்போதைக்கு வாரணாசிக்கு வர முடியாது வாப்பா, இங்கு மருத்துவமனையில் நிறைய வேலை இருக்கு. அதனாலே இந்த பேச்சு இப்போதைக்கு வேண்டாம் வாப்பா என்று கூறியதும் மறுபக்கம் போனை படாரென்று வைக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் அவர் கோபமாக இருக்கிறார் என்று சுஹேலுக்கு உணர்த்தியது. இவரை எப்படி சமாளிப்பது என்று திகைத்தவாறு குளியறைக்கு சென்றான். ரெடியாகி திரும்பி வந்து சாப்பிட உட்காரும்போது பாத்திமா ஆரம்பித்தாள். என்ன சுஹேல் பொண்ணு நல்லாத்தானே இருக்கு. உனக்கு சமமா படிச்சிருக்கு, அழகு இருக்கு, அந்தஸ்து இருக்கு, ஏன் சுஹேல் வேண்டாங்கிறே? என்று கேட்கவும் எனக்கு பிடிக்க வேண்டாமா மாமி? என்று கூறி அதற்கு மேல் பேச்சை தொடரா வண்ணம் எழுந்து கொண்டான். பாத்திமாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இவன் ஏன் நிஹ்ஹா வேண்டாம் என்கிறான், மருத்துவமனையில் வேற யாரையாவது விரும்புகிறானோ? என்று பலவாறு சிந்தித்தபடியே அனீசை சிற்றுண்டி உண்ண அழைத்தாள்.


அத்தியாயம் 8



அன்று ஞாயிற்றுக்கிழமை. துர்காவும் அனீசும் வெளியே சந்திப்பதாக கூறிய நாள். துர்கா அன்று சீக்கிரம் எழுந்து தன் வேலைகளை எல்லாம் விரைவாக முடிக்கலானாள். பார்வதி எழுந்து வந்து என்ன துர்கா? இன்னைக்கு அலுவலகம் விடுமுறை தானே, நிதானமாக எழுந்திருக்க வேண்டியதுதானே, இன்னைக்கு கூட ஏன் சீக்கிரம் எழுந்திக்கிறே? என்று கேட்க, இன்னைக்கு கொஞ்சம் வெளியே போகலாம்னு இருக்கேன் அண்ணி. எங்க அலுவலகத்தில் ஒருத்தருக்கு அடுத்த வாரத்தில் கல்யாணம் வருது, அனைவரும் பணம் போட்டு அவருக்கு நல்ல பரிசு பொருளை வாங்கலாம்னு இருக்கோம். என்னிடத்தில் தான் அனைவரின் பணமும் இருக்கு. அதான் சீக்கிரம் வேலை எல்லாம் முடிச்சிட்டு கடைக்கு போகலாம்னு இருக்கேன். சரி ! எப்போ கிளம்பறே? என்று பார்வதி கேட்டாள். மூன்று மணிக்கு போறேன், அப்பதான் சீக்கிரம் வீட்டுக்கு திரும்ப முடியும் என்று கூறி முடித்தாள். வெளியே வெயில் ஜாஸ்தியா இருக்கு. “வெயில் தாழ போயிட்டு வாம்மா” என்று அக்கறையாய் கூறினாள். அவளுடைய அக்கறையை நினைத்து துர்கா மனதில் மகிழ்ந்தாள். சரி ! என்று தலையாட்டிவிட்டு தன் வேலைகளை வேகமாக முடித்தாள். மணி நான்கை நெருங்கவும் இப்போ போனா சரியா இருக்கும். வெயிலும் அவ்வளவாக இருக்காது என்று எண்ணியபடி தன் பையை எடுத்துக்கொண்டு அண்ணி நான் கடைக்கு போயிட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டு வேகமாக நடக்கலானாள்.

என்னடி விஷயம்? எனக்கு நீ தனியாக பேசணும் சொன்னதில் இருந்து ஒரே கலக்கமாக இருக்கு. சீக்கிரம் சொல்லுடி, என்றவுடன், உங்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்ல போறேன், ஆனா நீ என்னை தப்பாக நினைக்க கூடாது என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள் துர்கா. அப்படி தப்பா நினைக்கிற மாதிரி என்ன விஷயம் சொல்ல போற, அனீஸ், சுஹேல் என்னை காதலிக்கிராண்டி! என்று சொன்னதும் அனீஸின் முகத்தில் ஆச்சரியம் தென்பட்டது. “ என்னது அந்த வெள்ளை பூனைக்கு காதலிக்க கூட தெரியுமா?” என்று வாய் பிளக்க, உனக்கு எப்படி தெரியும்? என்று ஆர்வத்துடன் கேட்டாள் அனீஸ். இரண்டு நாட்களுக்கு முன்பு சுஹேல் எனக்கு போன் பண்ணி ரெஸ்டாரன்ட் க்கு வரச் சொன்னான். அங்கதான் தன் காதலை வெளிப்படுத்தினான். "அதனால்தான் மாமா அனுப்பிய பொண்ணோட புகைப்படத்தை பார்க்கவில்லையா?" அது மட்டுமல்ல, இப்போதைக்கு எனக்கு நிக்காஹ் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டான். அதைக் கேட்ட துர்காவின் மனதின் ஓரத்தில் சந்தோஷம் இருந்தாலும் இது எதில் கொண்டு போய் முடியுமோ? என்று பயமாகவே இருந்தது. "நீ என்னடி பதில் சொன்ன" என்று அனீஸ் கேட்டதும், இதெல்லாம் ஒத்து வராது! என்று கூறி வந்துட்டேன்டீ என்று தன் கண்ணீரை குனிந்தவாறே மறைக்க முயன்றாள். அனீஸ்,"உண்மையை சொல்லுடீ, உனக்கு சுஹலை பிடிச்சிருக்கா, நீயும் அவனை காதலிக்கிறாய் தானே?" என்று வினவ துர்கா மௌனமாக இருக்க, அப்போ உனக்கும்அவனை பிடிச்சியிருக்கு, ஆனா ஒத்து வராதுன்னு சொல்லிட்டு வந்துட்டே, சரிதானே என்று அவள் குடைந்து குடைந்து கேட்டகவும் துர்காவால் மறைக்க முடியவில்லை. கண்களில் நீர் ததும்ப என் குடும்பத்தை, என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. முக்கியமாக அவர் வேறு மதம், நான் வேறு மதம், இருவர் வீட்டிலேயும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அப்புறம் எப்படி எங்க காதல் கல்யாணத்தில் முடியும் என்று வேதனையுடன் கூறினாள். அதெல்லாம் சுஹேல் பார்த்துப்பான். உனக்கு விருப்பம் இருக்கா, இல்லையா மட்டும் சொல். "அதெல்லாம் சரி வராதுடி. இந்த பேச்சை இத்துடன் விட்டு விடுவோம். நீயும் வீட்டில் யார்கிட்டயும் சொல்லக்கூடாது. எனக்கு உன்னிடத்தில் பேசினால் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும் என்று தான் சொன்னேன். தயவு செய்து யாரிடமும் சொல்லாதே, என்று மன்றாடிக் கேட்டகவும் அனீஸ் மனதிற்குள் கண்டிப்பாக சுஹேல் இடம் இதைப்பற்றி பேச வேண்டும் என்று எண்ணியவளாக, யாரிடமும் சொல்லமாட்டேன் என்று கூறவும், துர்காவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

இருவரும் ஒரு நகை கடைக்குச் சென்றனர். அங்கு பரிசு பொருள் என்ன வாங்கலாம் என்று பார்த்துக் கொண்டே வந்தனர். வெள்ளி பொருட்கள் இருக்கும் திசையில் துர்காவின் கண்கள் சென்றது. அங்கு ஓர் இடத்தில் ஒரு பெரிய தட்டின் நடுவில் சின்னதாக மஹாலக்ஷ்மி சிலையும் இரு பக்கத்தில் குங்குமம் மஞ்சள் வைக்க இரு கிண்ணங்களும் அதற்கு அடுத்து ஊதுபத்தி சொருக இரு துவாரம் உடைய யானை போன்ற சிலையும் பார்க்க மிக அழகாக இருந்தது. துர்கா அதன் எடையும் விலையும் கேட்க, அது தான் கொண்டு வந்த பணத்திற்கு சரியாக இருந்ததால் துர்கா அதை வாங்கி கொண்டாள். அனீஸ் இடம் காட்ட அவளுக்கும் பிடித்துவிட அதுவே பரிசு பொருளாக வாங்கினாள். கடைக்காரர் பரிசு பொருளாக பேக் செய்து தரட்டுமா? என்று கேட்டார். துர்கா வேண்டாம் சார்! அப்படியே ஒரு கவர்ல போட்டு தாங்க, மறக்காம பில்லை அதோடு வைச்சிடுங்க. கடைக்காரரும் அதை அப்படியே செய்து கூடவே ஒரு துணி கைப்பையும் வைத்தார். அது பார்க்க அழகாக இருக்கவே அனீஸ், " துர்கா இது இலவசமாக தானே தராங்க. நான் எடுத்துகிறேண்டி," என்று கூறவும் துர்கா சிரித்துக் கொண்டே அந்தப் பையை அவளிடம் கொடுத்தாள். பிறகு இருவரும் பேருந்து நிலையம் வந்தடைந்தனர். மணி ஆறரை நெருங்கவும் துர்கா அனீஸிடம்," உங்க வீட்ல தேட மாட்டாங்களா ? நீ டெய்லர் கடைக்கு போறேன்னு தானே வந்தே, “ நீ வந்ததும் உம்மாவிற்கு டெய்லர் கடையில் இருந்த போனில் உன் கூட கடைக்கு போறதா சொல்லிட்டேன்.” அதனாலே உம்மா தேட மாட்டாங்க. என்று பதிலுரைத்தாள்.

சுஹேல் அன்றைக்கு சீக்கிரம் தன் பணிகளை முடிக்கவே அவன் வீட்டிற்கு கிளம்பலானான். வழியில் அவனுடன் வேலை பார்க்கும் மருத்துவர்," நான் கார்ல தான் போறேன், வா! சுஹேல், உன்னை ட்ராப் பண்றேன், என்று கேட்க, இல்லப்பா, நான் பைக் கொண்டு வந்திருக்கேன். அதிலேயே போயிடுவேன் என்று கூறவே அவனும் சரி என்று கூறி இருவரும் பார்கிங் இடத்திற்கு வந்தனர். அவன் கார் நிற்கும் இடம் செல்ல சுஹேல் பைக் நிற்கும் இடம் சென்று பார்த்த போது பைக்கின் டயர் பஞ்சர் ஆகி இருந்தது. "எப்படி பஞ்சர் ஆச்சு, வீட்டில் இருந்து வரும் போது நல்ல தான் ஓட்டிட்டு வந்தேன் என்று யோசிக்கையில் பின்பக்கமாக இருந்து ஹார்ன் ஒலி கேட்க, அவன் திருப்பினான். அங்கு அதே டாக்டர் காரை கிளப்பிக்கொண்டு அவன் பக்கம் வந்தார். என்னப்பா, "பைக் ரிப்பேரா?" என் காரில் ஏறு, "நீ இன்னைக்கு என் காரில் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று இருக்கிறது" என்று சிரித்தபடியே அவன் தன் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள கதவை திறந்து விட்டான், சுஹேல் அதில் ஏறவும் கார் கிளம்பியது.

சுஹேல் காரில் வேடிக்கை பார்த்து கொண்டு வந்த போது வழியில் துர்காவையும் அனீஸையும் பார்த்துவிட்டான். "இருவரும் இங்கே எங்கே?" என்று நினைத்து கொண்டே அந்த டாக்டரை பார்த்து, இங்கு டிராபிக் இல்லாத இடமா பார்த்து கொஞ்சம் நிறுத்து, "நா இறங்கிறேன்!" எனக்கு இங்கு கொஞ்சம் வேலை இருக்கு,"என்று அவசரமாக கூற, அவனும் காரை நிறுத்த சுஹேல் இறங்கிக் கொண்டு, ரொம்ப நன்றி ப்பா என்று கூறி அவனிடம் கழன்று, இருவரையும் நோக்கி சென்றான்.
 


இருவரும் என்னடி, ஒரு பஸ் கூட வரமாட்டேங்குது! ஆட்டோவில் போகலாமா? என்று அனீஸ் கேட்க, துர்கா கொஞ்ச நேரம் பாக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, அங்கு சுஹேலை கண்டதும் ,ஒரு நொடி அவள் முகத்தில் மின்னல் பளிச்சிட்டு மறைந்தது. சுஹேல் அவர்களை நெருங்கி, "என்ன ரெண்டு பேரும் இங்க நிக்கிறீங்க?, என்று கேட்கவும், அனீஸ் "நீ எங்கே இங்கே?", உங்க மருத்துவமனையை இங்கே மாத்திட்டாங்களா என்ன? என்று கேலி செய்யவும், சுஹேல் அவளை பார்த்து முறைத்தான், ஏ வாலு! இங்கே ஒரு நண்பனை பார்க்கலாம் வந்தேன், வீட்டுக்கு போலாம்னு கிளம்பி பேருந்து நிலையம் வந்த போது தான் உங்களை பார்த்தேன், என்று கூறவும், அனீஸ் நம்பிட்டேன் என்று கிண்டல் அடிக்க, அவன் உண்மை தாண்டி என்று அப்பாவியாக முகத்தை வைக்க, சரி! உன் பைக் எங்கே? என்று அடுத்த கேள்வியை தொடுத்தாள் அனீஸ். பைக் பஞ்சர் ஆயிடுச்சு, மருத்துவமனையிலேயே விட்டு விட்டேன், நாளைக்கு போய் தான் அதை சரி பண்ணனும், நேரம் ஆயிடுச்சு, ஆட்டோவில போலாமா! என்று அவன் கேட்கவும் துர்கா, நீங்க ரெண்டு பேரும் ஆட்டோவில் போங்க, "கொஞ்ச நேரத்தில் பஸ் வந்துரும், அதிலேயே நான் வரேன்!" என்று கூறவும் சுஹேலின் முகம் மாறியது. உடனே அனீஸ் உன்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு நாங்க போக முடியாது, நீ வந்தா உன்னை ஆட்டோக்காரன் ஏத்திக்க மாட்டேன் என்று சொல்லுவானா? ரொம்ப பிகு பண்ணாதே! மரியாதையாய் வா! என்று அதட்டவும் அவள் மௌனமானாள். சுஹேல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தி மாலை நேரத்து கதிரவன் மறையும் போது வெளிப்படும் கதிர்கள் அவள் மீது பட்டு அவள் முகம் பளபளப்பதைக் கண்டு அவன் இமை கொட்டாமல் பார்த்து ரசித்தான், அனீஸ் இவர்களுக்கு நடுவில் நந்தி போல் அமரக்கூடாது என்று நினைத்து, சுஹேல்! நீ உள்ளே போ, என்று அவனை முதலில் அமரச் செய்தாள், பிறகு அனீஸ், " துர்கா நீ வா!என்று கூறி அவளை அவன் அருகில் அமரச் சொல்ல, துர்கா, "நீ உட்காருடி, "நான் உன் பக்கத்தில் உட்காரேன்" என்று தயங்க, எனக்கு நடுவில் உட்காருவது பிடிக்காது என்று கூறி அவளை அவன் அருகில் அமர வைத்தாள். அவள் அமர்ந்ததும் அவனுக்கு தென்றல் காற்று பக்கத்தில் வீசுவது போல் சில்லென்று இருந்தது. மனமோ குத்தாட்டம் போட்டது. காற்றில் அவளின் துப்பட்டா அவன் மீது பட்டு பட்டு விலகியது, அதிலே மெய் மறந்த அவன் அந்த சுகத்தை முழுவதுமாக அனுபவித்தான். அனீஸ் வழி எல்லாம் பேசிக் கொண்டே வந்தது எதுவுமே அவன் காதில் விழவில்லை. ஆனால் துர்காவிற்கோ இது மிகவும் சங்கடமாக இருந்தது.அவன் முகத்தைப் பார்க்கவே தைரியம் இல்லாமல் கீழே குனித்துக் கொண்டே வந்தாள். திடீரென்று ஆட்டோக்காரன் சடன் பிரேக் போட, துர்கா சரிந்து சுஹேல் மீது விழுந்தாள். ஒரு மெல்லிய பூங்கொத்து தன் மீது விழுவது போல் உணர்ந்தான் சுஹேல். ஆனால் ஆட்டோக்காரனோ," வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டானா" குறுக்கே புகுந்து நடுவில ஒய்யாரமாய் போறான் பாரு மூதேவி! என்று திட்டிக் கொண்டே வந்தான். இவையெல்லாம் சுஹேலின் காதில் விழுந்தால் தானே!, "அவன் வேறு உலகத்தில் அல்லவா சஞ்சரித்துக் கொண்டு இருந்தான்." சிறிது நேரத்தில் வீடு வரவே மூவரும் இறங்கிக் கொண்டார்கள். துர்கா பணம் கொடுக்க பையை திறந்த போது, சுஹேல் தான் கொடுப்பதாக கூறி ஆட்டோக்காரனுக்கு பேசின பணத்தை விட கூடுதலாகவே கொடுத்தான். ஆட்டோக்காரனுக்கு வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி நன்றி சார், என்று கூறியபடி வண்டியை எடுத்தான். அனீஸ் ஸுஹேலைப் பார்த்து புன்னகை புரிந்தவாரே, நடக்கட்டும்! நடக்கட்டும்! "நான் எதுவும் பாக்கலப்பா, எதுவும் எனக்கு தெரியாது," என்று பேசிக் கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தாள். துர்காவிற்கோ ஒன்றும் விளங்கவில்லை. சுஹேல் ஏ! ராங்கி! நிறுத்து! உன் பேச்சை, சடன் பிரேக் போட்டதாலே பாவம் துர்கா என் மீது விழுந்துட்டா, அதுக்கு ஏண்டி இப்படி கிண்டல் பன்றே! பாவம் துர்கா! என்று போலியான கோபத்துடன் கூறியதும், அனீஸ் ஆமாம்! ஆமாம்! பாவம் தான் துர்கா, "பச்ச புள்ளே பாரு!" ஒன்னுமே தெரியாது, என்று துர்காவை பார்த்து நகைக்க, துர்கா வெட்கம் தாளாமல் தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடிவிட்டாள். அனீஸ், சுஹேலிடம், "நா உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்டா", ராத்திரி நீ மொட்டை மாடியில் இரு. நான் வேலையெல்லாம் முடிச்சிட்டு வரேன், என்று கூறியபடியே வீட்டுக்குள் நுழைந்தாள். சுஹேலுக்கு என்ன விஷயம் என்று ஒரு மாதிரியாய் புரிந்தது. தன்னையும், துர்காவையும் பற்றித் தான் இருக்க வேண்டும் என்று ஓரளவு கணித்து வைத்திருந்தான். அன்று இரவு ஏழு மணிக்கு அனீஸ் சுஹேலை தேடி மொட்டை மாடிக்கு வந்தாள். வந்ததும் வராதுமாக சுஹேலிடம் அனீஸ், "இந்த பூனையும் பால் குடிக்குமா", என்று முகத்தை வைத்துக்கொண்டு என்ன என்ன வேலையெல்லாம் செய்கிறாய்! என்று கிண்டலடித்தபடியே வந்தாள். சுஹேல், "கத்தாதடி", மெல்லமாக பேசு, "நீ கத்தின கத்தில் ஊரே இங்கு கூடிவிடும் போலிருக்கே!",என்று மெல்லமாக அதே சமயம் அழுத்தமாக கூறினான். "என்ன விஷயம்?, சொல்லு! என்று கூறவும், அனீஸ் நா நேரடியாக விஷயத்திற்கு வரேன், "நீ துர்காவை காதலிக்கிறாயா?, அவள் நம்ம மதம் இல்லை என்று தெரிந்தால் உங்க வாப்பாவும் அம்மாவும் சம்மதிப்பாங்களா? எப்படிடா சமாளிக்க போறே? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே போக, சுஹேல் நெஞ்சை நிமிர்த்தி அனீசைப் பார்த்து ,"ஆமாம்! "நான் துர்காவை காதலிக்கிறேன்!". எனக்கு நிஹ்ஹா நடந்தால் அது அவள் கூட மட்டும்தான். எனக்கு சாதி, சமயம், மதம் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை. எனக்கு கடவுள் அன்பு தான். அது துர்காவிடம் நிறைய இருக்கிறது. எங்களுக்குள் நிஹ்ஹா நடந்தால் நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இல்லறம் நடத்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வாப்பாவும் உம்மாவும் சம்மதித்தாலும் இல்லையென்றாலும் எனக்கு துர்காதான் மனைவி, அவளுக்கு நான் தான் கணவன், என்று திட்டவட்டமாக கூறி முடித்தான். அனீஸ் அவனைப் பார்த்து அப்படியே வாயடைத்து நின்றிருந்தாள், துர்காவிற்கு விருப்பம் இல்லை என்றால் என்னடா பண்ணுவே? என்று கேட்க, இல்லை அனீஸ், அவளும் என்னை காதலிக்கிறாள், ஆனால் அவள் குடுமபத்திற்காக பயப்படுகிறாள். கண்டிப்பாக அவள் என்னிடத்தில் வருவாள். என் காதல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, என்று கூறி முடித்தான். என்னவோ எனக்கு பயமா இருக்கு சுஹேல், துர்கா ரொம்ப நல்ல பெண், சிறு வயதிலேயே தாயை இழந்தவள். அதனால் தாய் பாசத்தை அவள் கண்டதில்லை, அவளுடைய அண்ணி நல்லவள் தான், இருந்தாலும் தாயை போல் வருமா? அவள் தன் தந்தைக்கும் அண்ணனுக்கும் கஷ்டம் தரக் கூடாது என்று தான் வேலைக்கு செல்கிறாள். தன் செலவுகளை தானே பார்த்துக் கொள்கிறாள். அவள் தன் தந்தையிடமும் அண்ணனிடமும் வாய் திறந்து எதுவுமே கேட்க மாட்டாள். நான் அவர்களிடம் எதிர்த்து பேசி கூட பார்த்தது கிடையாது. இந்நிலையில் அவள் தன் குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு உன்னிடத்தில் எப்படி வருவாள்? என்று அனீஸ் கேட்க, துர்கா என்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டாள், எனக்கு அது நன்றாக தெரியும் என்று உறுதியாக கூறினான் சுஹேல். உன் வீட்டில் மதம் மாறிய திருமணத்தை எப்படி சம்மதிப்பார்கள்?, கண்டிப்பான உன் தந்தை இந்த திருமணத்தை எதிர்ப்பார், என்ன செய்ய போகிறாய்? "நான் இதல்லாம் யோசிக்காமல் இல்லை, யார் எதிர்த்தாலும் எனக்கு நிஹ்ஹா ஒன்று நடந்தால் அது துர்காவோடுதான்! இல்லையென்றால் நான் இப்படியே ஏஎன் காலத்தை கழித்திடுவேன், என்று அவன் உறுதியாக கூறியதாக கேட்ட அனீஸ் திகைத்தாள். "நானும் அல்லாவை வேண்டிக்கொள்கிறேன்", உங்கள் காதல் வெற்றி பெற என் துணை எப்போதும் இருக்கும் என்று அனீஸ் கூறியதை கேட்ட சுஹேலுக்கு, மனசுக்குள் சிறு அமைதி ஏற்பட்டது. சரி ! சரி! நேரம் ஆகிவிட்டது, கீழே போகலாம், என்று அனீஸ் கூறவே இருவரும் கீழே இறங்கி நடந்து, துர்கா வீட்டை கடந்தபோது, அவள் கீழே அமர்ந்து பூக்கள் தொடுத்துக் கொண்டிருக்க காலடி சத்தம் கேட்டவுடன் தலை நிமிர்ந்தாள். அங்கே அனீஸ் முன்னே செல்ல, அவள் பின்னே வந்த சுஹேல் துர்காவை பார்த்து கண்ணடித்து புன்னகை புரிந்தவாரே செல்ல அதை பார்த்த துர்காவின் முகம் நாணத்தால் சிவந்தது. இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ரொம்ப தான் ஏத்தம், நா அவ்வளவு சொல்லியும் இப்படி நடந்திக்கிறானே?, என்று பொய் கோபம் அவளுள் தோன்றியது. ஆமாம்! பொய் கோபம் தான்! இல்லையென்றால் அவள் ஏன் இப்படி நாணம் கொள்ளவேண்டும்? சுஹி , நீ இல்லாமல் நான் இல்லைதான், ஆனாலும் உன்னை சேர வழி தெரியாமல் தவிக்கிறேன். இதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும், என்று மனதிற்குள் நினைத்தவாறே தன் வேலையை தொடர்ந்தாள் கயல்விழிக்கு அன்றைக்கு இரவு டூட்டி போடப்பட்டிருந்தது. அங்கு அவளும் மற்றும் ஒரு மருத்துவரும், ஒரு செவிலியரும், துப்புரவு ஆட்கள் இருவர் இருந்தார்கள். நோயாளிகளை எல்லாம் பார்த்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தபோது மணி ஒன்பதை நெருங்கி இருந்தது, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து மருத்துவ சம்மந்தப்பட்ட புத்தகத்தை எடுத்து படிக்கலானாள். அப்போது ராசா! உனக்கு ஒன்னும் இல்லப்பா! கண்ண திறப்பா! என்று கத்தியவாறு ஒரு நடுத்தர பெண்மணி வர, அவருடனே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரும், கூட இரண்டு பெரும் ஸ்ட்ரெச்சரில் ஓர் இளைஞனை ரத்த வெள்ளத்தில் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். கயல்விழி அவசரமாய் அவர்கள் அருகில் சென்று என்னாச்சு? என்று கேட்டபோது, அந்த அம்மாவிடமிருந்து ஒரே கதறலாக வெளிப்பட்டு அந்த மருத்துவமனையையே நடுங்க செய்தது, அம்மா! என் பிள்ளையை காப்பாத்துமா! பேச்சு மூச்சு இல்லாமல் இருக்காம்மா! இப்போ நீங்க எங்களுக்கு தெய்வம் மாதிரி! என்று அழுது புலம்பினாள். அமைதியாய் இருங்கம்மா! என்னாச்சுன்னு பாக்குறேன்! என்று கூறியபடியே "ICU வை ரெடி பண்ணுங்க", என்று செவிலியருக்கு உத்தரவிட்டு, அம்மா போலீஸுக்கு ஒரு கம்பளைண்ட் குடுத்திடுங்க, எல்லாம் சரியாயிடும், கவலைபடாதீங்க! என்று கூறியபடியே அந்த அடிப்பட்ட மனிதனுடன் ICU க்குள் சென்றாள் கயல். ரெபேக்கா, "நா போய் போலீசுக்கு சொல்லிட்டு வந்திறேன்," நீ நம்ம புள்ளய பார்த்துக்க! என்று சொல்லியபடியே விரைந்தார் ஜேக்கப், ரெபேக்கா விடாமல் அழுத்துக் கொண்டிருக்க , உள்ளே சென்ற கயல் அந்த இளைஞனை பரிசோதனை செய்தாள்.
 

தலையில் அடிப்பட்டு ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. கைகள், கால்களில் எல்லாம் சிராய்ப்புகள், வலது கையில் எலும்பு முறிந்து இருந்தது. இ ரத்த வழியும் இடத்தில எல்லாம் சுத்தம் செய்து, மருந்திட்டப்பின், தலையில் அடிபட்ட இடத்தில கட்டுப்போட்டு விட்டு, எலும்பு பிரிவு மருத்துவருக்கு போன் செய்தாள், டாக்டர் செழியனா? வணக்கம் டாக்டர்! இங்கு ஒரு நோயாளிக்கு கையில் அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, ரத்தம் நிறைய சென்றுள்ளது. தாங்கள் இப்போது வர முடியுமா? என்று கேட்கவே, மறுமுனையில் அரை மணி நேரத்திற்குள் வருகிறேன், என்று கூறவே போனை வைத்து விட்டு வெளியே வந்தாள். ரெபேக்கா அங்கு ஓயாமல் அழுதுகொண்டிருக்க, கயல் அவர்களிடம் சென்றாள். "டாக்டர் அம்மா இப்போ என் புள்ள எப்படிம்மா இருக்கான்?' உயிர்க்கு ஒன்னும் ஆபத்து இல்லையே! என்று பதற்றத்துடன் கேட்டாள் ரெபேக்கா. "பயபடாதிங்க! நா முதலுதவி செய்து இருக்கேன்", உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை", ரத்தம் நெறைய வெளியே போய் இருக்கு. அதனால ரத்தம் ஏத்தி இருக்கேன்.அதில்லாம கையில எலும்பு முறிவு ஏட்பட்டிருக்கு. அதற்குரிய மருத்துவருக்கு போன் பண்ணி இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்திலே வரதா சொல்லி இருக்காரு. தலையிலே அடிபட்டு இருக்கிறதால MRI ஸ்கேன் எடுக்கணும் என்று கூறவே, "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை", "எம் புள்ளையை காப்பாத்துங்கம்மா", என்று கதறினாள். இது எப்படி ஆச்சு?, என்று கேட்கவும், பைக்கில் போகும்போது எதிரே வந்த ஜீப் மோதி, பைக்கில் இருந்து எகிறி கீழே விழுந்திட்டான், அவன் பர்ஸில் இருந்த அடையாள அட்டையை மற்றும் விசிட்டிங் கார்டை பார்த்துப் புண்ணியவான் ஒருவன் எங்களுக்கு போன் செஞ்சி, அவனையும் ஒரு காரில் ஏத்தி இங்கு அழைச்சிட்டு வரவும் நாங்க சேதி கேட்டு இங்கு வரவும் சரியாய் இருந்திச்சு, என்று அவள் முடிக்கவும் எலும்பு முறிவு மருத்துவர் செழியன் வரவும் சரியாக இருந்தது. கயல் அவர் பின்னாலே உள்ளே சென்றாள். சரியாக ஒரு மணி நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். அதற்குள் ஜேக்கப்பும் வர. எப்படி இருக்கான்? எங்க புள்ள, என்று கேட்க, everything alright, கையிலே ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணியிருக்கேன், ஒரு மாசத்திற்கு கையை தூக்க முடியாது. மேலும் நாளைக்கு MRI ஸ்கேன் எடுத்து ரிப்போர்ட் பார்த்த பிறகு தான் தலையில் அடி எப்படி இருக்கு! என்று சொல்ல முடியும். இப்போ மயக்கமா இருக்கார். ஒரு மணி நேரத்திலே கண் முழிச்சிடுவார், அப்போ நீங்க அவரை தொந்தரவு செய்யாமல் ஒவ்வொருத்தரா போய் பார்க்கலாம், என்று கூறி கயலிடம் திரும்பி ‘ ‘’நான் வீட்டிற்கு செல்கிறேன்’’ கயல், ஏதாவது அவசர தேவை என்றால் என்னை கூப்பிடு! என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். கயல் ரெபேக்கா அருகில் சென்று, "கவலைப்படாதீங்க அம்மா, எல்லாம் சரியாய்விடும் " என்று ஆறுதல் கூற , ரொம்ப நன்றிம்மா! "கடவுள் மாதிரி வந்து எம் புள்ளய காப்பாத்தினீங்க", என்று நெகிழிச்சியாக கூறினாள். "என்னுடைய் கடமையைத்தாம்மா செய்தேன்" , என்று புன்முறுவல் பூத்தவாறே தன் அறைக்குள் சென்றாள் அந்த பூவழகி காயல்விழி. சிறிது நேரம் கழித்து சாம்சனுக்கு மயக்கம் தெளிய முதலில் அவன் அம்மா சென்று பார்த்தார். தம்பி, இப்போ எப்படி இருக்கு?, ரொம்ப வலிக்கிறதா? என்று கண்களில் வேதனையுடன் கேட்பதைப் பார்த்த சாம்சன் மெதுவாக வாயை திறந்து, எனக்கு ஒன்றும் இல்லைம்மா, பயப்படாதிங்க, என்று ஈன குரலில் பேசினான். "உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்னால் தாங்க முடியாதுப்பா", என்று மெல்லிய குரலில் கூறினாள், அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது, அதைப் பார்த்து மனம் தாளாதவனாக சாம்சன், பேச்சை வேறு திசையில் திருப்பினான். பியூலா எங்கம்மா? தனியாவா வீட்டிலே விட்டுவிட்டு வந்தே, என்று கேட்க, பக்கத்து வீட்டில் உள்ள பாட்டி அவளைப் பார்த்துக்கறதான் சொன்னாங்க, அவளுக்கு நாளைக்கு பரீட்சை இல்லையா ! அதுதான் கூட்டிட்டு வரலே, என்று கூறவும், பாவம் பரீட்சையை வச்சிக்கிட்டு என் நிலமை வேறு அவளுக்கு வேதனை தரும், "எனக்கு ஒன்றுமில்லை", பரீட்சையை நல்லா எழுத சொல்லுங்கள்", என்று ஒன்பதாவது படிக்கும் தன் தங்கையின் நிலையை அறிந்து இந்த வேதனையிலும் அவளுக்காக வருந்தினான். பிறகு, சரிம்மா! நீ போஅங்கே பியூலாவிற்கு வேண்டியதை செஞ்சிக் கொடும்மா!, அப்பா என்னை பார்த்துப்பார், என்று கூறவும், அவன் அன்னை போக மனமில்லாமல் இருக்கவே, அங்கு வந்த ஜேக்கப் வா, ரெபி, நான் உன்னை வீட்ல விட்டுவிட்டு வந்திறேன், என்று கூறி அழைத்தான். மகனை பிரிய மனம் இல்லாத அந்த தாய், " நான் நாளைக்கு சீக்கிரமா வந்திறேன்," அதுவரைக்கும் பத்திரமா இருப்பா, என்று கூறி மனமே இல்லாமல் தன கணவனுடன் வீட்டிற்கு புறப்பட்டாள், சிறிது நேரம் கழித்து கயல்விழி அவனை பார்க்க வந்தாள். ஹலோ! , "என் பேரு கயல்விழி", நான் தான் உங்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர், நாளைக்கு தலைமை மருத்துவர் வருவார், மற்ற சிகிச்சை பற்றியும், என்ன மருந்துகள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை பற்றி விளக்கமாக கூறுவார், என்று பேசிக்கொண்டே கயல் அவனை ஆராய்ந்தாள். சற்று மாநிறதிற்கும் கூடுதலான நிறம், ஆனால் கலையான முகம், பிறர் மனதை துளையிடும் கூரிய கண்கள், சுருண்ட கேசம் , நீண்ட மூக்கு, புகை பழக்கம் இல்லை போல் இருக்கிறது, அதனால் தான் அவன் உதடுகள் ரோஸ் நிற வண்ணமாக இருந்தது. உடலையும் கச்சிதமாக வைத்திருந்தான். அவள் அவனையே பார்ப்பதை அந்த நிலையிலும் கண்டு கொண்ட அவன் என்ன டாக்டர் அப்படி பார்க்கிறீங்க? உயிர் போகும் நிலையில் வந்த நான் எப்படி அதிசயமாக பிழைத்து விட்டேன் என்றா? anyway நன்றி டாக்டர், என்று அவன் சிறு புன்னகையுடன் கூற, அவளுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. சே! இது என்ன ஒரு ஆண் மகனை, அதுவும் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை இப்படியா பார்ப்பது? என்ன கயல்? என்று தனக்குள்ளே கடித்துக் கொண்டு, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை மிஸ்டர்.. என்று கூறி நிறுத்த, சாம்சன் என்று முடித்தான் அவன். அவள் மெதுவாக புன்னகைத்து இப்போ எப்படி இருக்கு சாம்சன்?, வலி ரொம்ப அதிகமா இருக்கா, கொஞ்ச நேரத்திலே நர்ஸ் வந்து நீங்க தூங்க ஊசி போடுவாங்க, நல்லா தூங்குங்க! நாளைக்கு கொஞ்சம் better ah feel பண்ணுவீங்க, என்று அவள் சிறு புன்னகையுடன் கூறவும், அவனும் புன்னகை புரிந்தான். அவன் சிரிக்கும் போது முல்லை அரும்பு போல் பல் வரிசையை கண்டதும் கயல் திகைத்து தான் போனாள். "இவன் என்ன மாயக் கண்ணனோ", சிரிப்பாலே என்னை சொக்க வைக்கிறான், என்று ஒரு நொடி நினைத்த போதும், மற்றொரு மனது, "கயல் அடங்குடி!" நீ மருத்துவர், அந்த ஞாபகம் இருக்கா, இல்லையா, இப்படி வருவோர் போவோரை எல்லாம் இப்படி ரசித்தால் உன் தொழிலில் உன் கவனம் எப்படியடி இருக்கும்? என்று கடிந்துரைத்தது. "நான் என்ன எல்லோரையும் இப்படியா பார்க்கிறேன்?", நான் மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது என் பின்னாடி எத்தனை பேர் பைத்தியமாக சுற்றி திரிந்தனர், ஒருவரிடத்திலாவது நான் பேசி இருக்கிறேனா? ஒருவர் முகத்தியாவது பார்த்திருக்கிறேனா? நான் இந்த காலத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறன், என்று பாராட்டியது இன்னொரு மனம். கொஞ்ச நேரத்தில் நர்ஸ் வந்து அவனுக்கு ஊசி போட, சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்தான். கயலும் தன் அறைக்கு சென்று ஒய்வெடுக்கலானாள். மறுநாள் விடிந்ததும் கயல் தன் டூட்டி நேரம் முடிந்துவிட்டதால், வீட்டிற்கு சென்றாள். அங்கு அவள் அம்மா வாஸந்தி அவளை வரவேற்று அவளிடம் காபி கோப்பையை நீட்ட, கயல் ஆவலுடன் அதை பருகினாள். "என்னம்மா இரவு எல்லாம் ஒரே வேலையா? மிகவும் களைப்பா இருக்கே, என்று அந்த தாயுள்ளம் கரிசனத்துடன் வினவ, ஆமாம்மா! இரவு ஒரு விபத்து கேஸ் வந்தது, பாவம் ! அவங்க அப்பா, அம்மா ரொம்ப பயந்துட்டாங்க, அவங்க பையனை இரத்த வெள்ளத்தில் பார்த்ததாலே ரொம்பவும் கலங்கிட்டாங்க, என்று இரவு நிகழ்ச்சியை தன் கண் முன்னே கொணர்ந்து விளக்கினாள். "அந்த பையனுக்கு அப்புறம் என்னம்மா ஆச்சு? என்று வாஸந்தியும் வருத்தத்துடன் வினவ, சரியான நேரத்திலே கொண்டு வந்ததாலே ஆபத்து இல்லாம போயிடிச்சு, இப்போ அவர் கண் விழிச்சிட்டார், என்று கூறவும் வாஸந்தியின் மனது நிம்மதியானது. வாஸந்தி பெண்கள் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணி புரிகிறார். நல்ல பண்புகளை சுவாரசியமாக தன் மாணவிகளுக்கு சொல்லி கொடுப்பார். அவர் வகுப்பு என்றால் மாணவிகள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு வந்து கவனிப்பர். அவர் அவ்வளவு அழகாக பாடம் நடத்துவார். தன் ஒவ்வொரு மாணவிகளையும் தன் பெண்ணை போல தான் நடத்துவார். அவர்களிடம் அன்பாக பேசி அவர்களை ஊக்குவிப்பதும், தவறு புரிந்தால் அவர்களை கண்டிப்பதுமாக இருப்பார். அவர்களுடைய இயல்பான இந்த குணம் அனைத்து மாணவிகளையும் அவர்களிடம் கட்டி போட்டது. தமிழ் செய்யுள் பகுதி நடத்தும் போது, மாணவிகளுக்கு புரியவில்லை என்றால் அவர்களுக்கு பிடித்த பாட்டு மெட்டில், அந்தச் செய்யுளை அவர்கள் மனதில் பதிய வைப்பார். இடையிடையே நல்ல கதைகள் கூறி அவர்களை மகிழ்விப்பார். வீர நங்கையர், விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் பல நல்ல கதைகளையும், வரலாறு நிகழ்வுகளையும் சுவை பட விளக்குவார். அவரின் வகுப்பு என்றால் பக்கத்து வகுப்பில் உள்ள மாணவிகளும் வந்து கவனிப்பார்கள், அவ்வளவு திறம்பட பாட நூல்களையும் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களையும் கூறுவதில் வல்லவர் அவர். தன் கதை, பாடல்கள் மூலம் நல்ல மாணவிகளை உருவாக்குவதே அவருடைய லட்சியமாக இருந்தது. அவர் தன்னுடைய தொழிலை சேவை மனப்பான்மையுடன் செய்து வந்தார். அவள் தன் மகள் கயல்விழியையும் அப்படியே தான் வளர்த்தார். கயலின் அப்பா கமலநாதர் பக்கத்தில் ஒரு மருந்தகம் வைத்துள்ளார். அவருக்கு மருத்துவ தொழில் என்றால் அலாதி பிரியம். தான் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தும், தன்னுடைய குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தன்னுடைய மருத்துவர் ஆசையை துறந்தவர், எனினும் அதன் மீது பற்று இருந்ததால் D. Pharm இரண்டு வருடம் படித்து ஒரு மருந்தகத்தில் சிறிது காலம் வேலை புரிந்து, பிறகு சொந்தமாக மருந்தகம் வைத்து நடத்தி வருபவர். தான் படிக்காத மருத்துவத்தை தன் மகளாவது படிக்க வேண்டும் என்பதற்காக தன் பெண்ணை மருத்துவராக ஆக்கி அழகு பார்ப்பவர். டாக்டர் நரசிம்மன் அவரிடத்தில் மருந்துகள் வாங்கும் பழக்கம் ஆதலால் அவரிடத்திலேயே தன் பெண்ணை வேலைக்குச் சேர்த்துள்ளார், அவர் தன் கடும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர் என்றால் மிகையாகாது. அவருடைய சிறிய மகன் ராகேஷ் பன்ணிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனும் படிப்பில் படு சுட்டி தான், எனினும் அவனுக்கு மருத்துவத்தில் ஆர்வம் இல்லை. அவனுக்கு கலை துறையில் தான் விருப்பம் அதிகம். வரைவதிலும், சிற்பங்கள் செதுக்குவதிலும் அவன் மனம் லயித்திருந்தது. மிகப் பெரிய ஓவியனாக வரவேண்டும் என்பது அவனது ஆசை.
 


கயல், நான் பள்ளிக்கு செல்கிறேமா, உனக்கும் அப்பாவுக்கும் சிற்றுண்டி மேசை மேல் இருக்கு, நீ சாப்பிட்டுவிட்டு, அப்படியே அப்பா வந்தால் அவருக்கும் எடுத்து வைம்மா, இன்னைக்கு எனக்கு ஒரு கலந்துரையாடல் இருக்கு. நான் அதற்கு சீக்கிரமா போகணும், என்று கூறி விரைந்தாள் வாஸந்தி. சரிம்மா!, என்று கூறிய கயல், சிறிது நேரம் காலை செய்தித்தாளை படித்த பின், குளிக்க சென்றாள். குளித்து முடித்து வந்ததும், அம்மா வைத்த சிற்றுண்டியை ஒரு தட்டில் வைத்து தன் தந்தையின் வரவுக்காக காத்திருந்தாள். கமலநாதர் நடைப்பயிற்சி முடித்து வீட்டிற்கு திரும்பியவுடன் கயலை பார்த்து, பேபிமா! வந்திட்டியா? நீ சாப்பிடுவது தானே! எனக்காக எதுக்கம்மா காத்திருக்கிறாய்? என்று செல்லம் கொஞ்ச கேட்க, " டீச்சரம்மா உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்க சொன்னாங்க," இல்லன்னா என்னை பெஞ்ச் மேல் நிக்க வைக்க மாட்டாங்களா, என்று கிண்டலடிக்க, உங்க அம்மா அப்படிப்பட்டவளாமா? என்று தன் மனைவியை வீட்டுக் கொடுக்காமல் சொன்னார். "உங்க பொண்டாட்டியை ஏதாவது சொன்னா உங்களுக்கு கோபம் வரும்லே", அதை ரசிக்கலாம் அதனால் தான் கொஞ்சம் உங்களை சீண்டினேன், என்று அவள் நகைத்தவாறே தந்தையின் முகத்தை நோக்கினாள். அவரின் முகத்திலும் புன்னகை ததும்ப, வர வர உன் வாலுத்தனம் ஜாஸ்தியாயிடிச்சு! என்று செல்லமாய் அவள் கன்னத்தை தட்டினார். சீக்கிரமாக குளித்து விட்டு வாங்கப்பா! ஒன்றாய் சேர்ந்து சாப்பிடலாம்!என்று தந்தையை ஏவ, அவரும் குளிக்கச் சென்றார். மறுநாள் ரெபேக்கா சீக்கிரமாகவே மருத்துவமனைக்கு தன் மகனை காண வந்துவிட்டாள். சாம்சன் இன்னும் மருந்து மயக்கத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ரெபேக்கா, தன் மகனின் அருகில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்படி இருந்த புள்ள, இப்போ கிழிந்த நார் போல படுத்து இருக்கிறானே! என்று நினைத்து கண்ணீர் விட்டாள், அவளுடைய கண்ணீர் துளி அவளுடைய மகனின் கை மேல் விழ, சாம்சன் சட்டென்று கண் விழித்தான். விழித்ததும் தன் தாயைக் கண்டதும் புன்முறுவல் பூக்க, என்ன ராசா! இப்போ எப்படி இருக்கு? வலியெல்லாம் பரவாயில்லையா? என்று கனிவோடு விசாரித்தாள். கொஞ்சம் தேவலமா!, என்று அவள் சிறு புன்னகையோடு கூறினான். அதற்குள் டாக்டர் நரசிம்மன் அங்கு வந்தார். "என்ன மேன்?, " ஆர் யு ஓகே நொவ்"? என்று கேட்ட சாம்சன் மெதுவாக தலை அசைத்தான். உன் மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன், தலையிலே பெரிய அடியெல்லாம் ஒன்னும் இல்லை. ரத்தம் நெறைய போனதால கொஞ்சம் பலவீனமா இருக்கே, " கையை அசையாம பார்த்துக்கோ", ஒரு வாரம் இங்கே இருக்கவேண்டியிருக்கும். அதற்கு அப்புறம் வீட்டுக்கு போகலாம், வீட்டுக்கு போனால் கூட சில வாரங்கள் கையை அசைக்கக்கூடாது, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இங்கு வந்து கையை காட்டிவிட்டு போகணும், நான் எழுதிக் கொடுக்கிற மாத்திரை, மருந்துகளை தவறாமல் சாப்பிடணும். "you will quickly recover soon", என்று தட்டிக் கொடுத்தார். சிறு புன்னகை பூத்தவாரே அவர் சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் சாம்சன். "ரொம்ப நன்றி டாக்டர்", என்று கண்கள் பனிக்க ரெபேக்கா கூறினாள். its ok, டூட்டி டாக்டர் கயல்விழி இன்னும் கொஞ்ச நேரத்திலே வருவாங்க. அவங்க கிட்ட நான் என்ன என்ன மாத்திரைகள் சாப்பிடணும் சொல்லி இருக்கேன், நான் ரெண்டு நாள் கழித்து வந்து பார்க்கிறேன், "Take care" சாம், என்று கூறியபடியே வெளியேறினார். அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கயல்விழி வந்தாள். அவள் கையில் சிறு பூங்கொத்து இருந்தது. அதை அவனிடம் நீட்டி, '' விரைவாக உடல் நலம் தேர என்னுடைய வாழ்த்துகள்'', என்று வாழ்த்தி, மேலும் இங்கு வரும் எல்லா நோயாளிகளுக்கும் நாங்க இந்த மாதிரி மலர் செண்டை கொடுப்போம், இதனால் அவங்க ரொம்ப சந்தோஷம் அடைவாங்க, இது நோயாளிகளுக்கு ஆறுதலும் தெம்பையும் தரும் என்று கூடுதல் தகவலையும் கூறினாள்.அவன் நேற்று மயக்கத்தால் அவளை சரியாக கவனிக்கவில்லை, இன்று அவளை பார்த்ததும், அவன் அசந்து விட்டான், வெள்ளை நிற சாரியில் ரோஸ் நிற குட்டி குட்டி பூக்கள் போடப்பட்டிருந்தது. அதன் மேல் வெண்ணிற கோட் போட்டிருந்தாள். கையில் மலர்ச்செண்டுடன் பார்த்ததும், ஒரு வேளை நான் இறந்து சொர்கத்திற்கு சென்று விட்டேனா!, அங்கு தான் ஒரு தேவதை என்னை பூக்களுடன் வரவேற்கிறதா? என்ற சந்தேகமே அவனுக்குள் வந்துவிட்டது. ஆனால் தேவதை கோட், ஸ்டெதாஸ்கோப் எல்லாம் அணியமாட்டார்களே!, என்று அவனுக்குள் நினைத்துக் கொண்டு அவளை ஒரு வித பாவனையுடன் பார்க்க, "என்ன சாம் மயக்கம் தெளிந்துடுச்சா?", "இப்போ பரவாயில்லை தானே,"என்று வினவ, அப்போதுதான் அவன் தன் நிலையை உணர்ந்தான். இப்படி ஒரு அழகா? "தங்க சிலை போல் அல்லவா மின்னுகிறாள்!" யார் கொடுத்து வைத்துள்ளானோ இவளை மணம் புரிய? என்று தனக்குள் பெருமூச்சு விட்டு, நன்றி ! என்று புன்னகை புரிந்தான். கயல், அவன் சாப்பிட வேண்டிய மாத்திரைகள், மற்றும் அவைகள் எப்போது சாப்பிடவேண்டும் என்று எழுதி தர அதை ஜேக்கப் வாங்கி கொண்டார். நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன் என்று அங்கிருந்து விடைபெற்று சென்றாள். ரெபேக்கா மாத்திரைகள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் மருந்தகத்தில் வாங்கிட்டு வரச் சொல்ல, ஜகோபும் மருந்துச் சீட்டை வாங்கி கொண்டு அங்கிருந்து அகன்றார். ரெபேக்கா சாம்சனிடம்,"இந்த டாக்டரம்மா இல்லன்னா உன்னை இன்னைக்கு உயிரோட பார்த்திருக்க முடியாது", நாங்க நடுநிசியில் உன்னை ரத்த வெள்ளத்தில் இங்கு கொண்டு வந்தபோது எனக்கு ஆறுதல் கூறி சுறுசுறுப்பாக செயல்பட்டாங்க!, "ரொம்ப நல்ல மாதிரி பொண்ணா இருக்காங்க", என்று சாம்சனிடம் கூற அவனுக்கும் அவளின் மீது மரியாதை கூடியிருந்தது. துர்காவிற்கு அன்று விடுமுறை நாள். அன்று தொழிலாளர் தினம் என்று விடுமுறை விட்டிருந்தார்கள். துர்காவிற்கு வீடு, அலுவலகம் என்று மாரி மாரி சென்று வைத்துக் கொண்டிருப்பது அலுப்பாக இருக்கவே, வெளியில் போனால் தேவலாம் என்ற எண்ணம் தோன்ற, அவளுக்கு புத்தக கண்காட்சி நினைவு வந்தது. அவளுக்கு புத்தகம் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். தன்னுடைய ஓய்வு நேரத்தை அவள் பெரும்பாலும் புத்தகத்துடன் தான் கழிப்பாள். இன்னைக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று எண்ணியவளாக வேலைகளை எல்லாம் விரைவாக முடிக்கலானாள். மதியம் நான்கு மணிக்கு, அண்ணியிடம் சொல்லிவிட்டு கிளம்பினார், பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சை பிடித்து புத்தக கண்காட்சி இருக்குமிடம் அடைந்தாள். அவளுக்கு ஒரே ஆச்சரியம்! அத்தனை புத்தக கடைகள்! அறிவியல், ஜோதிடம், பொதுஅறிவு, மற்றும் தலை சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் என்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கடை என்று வரிசையாக கடைகள் அமைந்திருந்தன. எங்கு போவது, எதை வாங்குவது, என்று தெரியாத வண்ணம் அத்தனை கடைகள், அவ்வளவு புத்தகங்கள் என்று வாசிப்போருக்கு ஒரு விருந்தே அங்கு இருந்தது. துர்கா, அனைத்து புத்தக கடைக்கும் சென்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஒவ்வொரு புத்தக கடையாக சென்று வரலானாள். ஒரு கடையில் சங்க இலக்கியங்கள் என்ற பலகை தொங்கியது,அங்கே சென்று ஒவ்வொரு புத்தகமா அலசினாள். அதில் அவளுக்கு பிடித்த திருக்குறளும், ஐம்பெரும்காப்பியமும் இருந்தது. அதை கடைக்காரனிடம் பணம் கொடுத்து பெற்றுக் கொண்டு வெளியே வந்த போது, தற்செயலாக பார்வை அடுத்த கடையிடம் செல்ல, அங்கு நுழைவாயிலில் அவன் நின்றியிருந்தான். ஆம், சுஹேல் தான் அங்கு இருந்தான். அவனைப் பார்த்ததும் மனது படபடக்க, இவன் ஏன் நான் எங்கே போனாலும் அங்கே வருகிறான்? இவனுக்கு மருத்துவமனையில் வேலையே இல்லையா ? என்று பொய் கோபத்துடன் வேகமாக நடக்க, சுஹேல் அவளை பார்த்துவிட்டான், அட, நம்ம ஆளும் இங்க தான் இருக்கா? பார்த்தும் பார்க்காதது போல போறா பார், குட்டி ராட்சசி ! என்று மனதில் திட்டிக் கொண்டேஅவளை பின் தொடர்ந்து வேகமாக சென்றான். அவளை அருகில் கண்டதும் , அப்போதுதான் அவளை பார்ப்பது போல் ஹலோ, துர்கா, இங்கே நீ எப்படி ? நான் இங்கு உன்னை பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை, என்று சிறு புன்னகையுடன் கூறவே, துர்காவும் வேறு வழியின்றி நானும் தான், என்று சிரித்து வைத்தாள். பிறகு, உங்களுக்கு மருத்துவமனையில் வேலை இல்லையா? ஜாலியாக இங்கு சுற்றி கொண்டு இருக்கிறீர்கள், என்று கிண்டல் அடிக்க, அவன் மருத்துவம் சம்பந்தமான புத்தகம் வாங்கவே வந்தேன், இங்கு வந்து பார்த்தால் வானத்து தேவதை ஒன்று கீழே இறங்கி வந்து இந்த புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்கி கொண்டு இருக்கிறது, என்று அவளைப் பார்த்தவாறு புன்னகைக்கு புரிந்துக் கொண்டே கூற, அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. நான் அந்த தேவதையை பார்க்கவில்லையே! என்று வேண்டுமென்றே பதில் கூற, தேவதைக்கு தான் தேவதை என்றே தெரியவில்லை, என்ன கொடுமை! என்று பொய்யான வருத்தத்துடன் அவன் கூற, துர்காவிற்கு சிரிப்பு வந்தது. அவள் கல, கலவென சிரிக்கவும், அவன் கீழே எதையோ தேட ஆரம்பித்தான். என்ன கீழே தேடுகிறீகள்? ஏதாவது பொருள் தொலைத்து விட்டீர்களா? என்று புரியாமல் கேட்டாள். சுஹேல், சிறிது நேரத்திற்கு முன்பு பாக்கெட்டில் இருந்து சில்லரை விழும் சத்தம் கேட்டது, அதுதான் கீழே சில்லரை எதாவது சிதறி இருக்கிறதா? என்று தேடுகிறேன் என்று அவன் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு கூறவும், துர்கா இதெல்லாம் பழைய படத்தில் வரும் வசனங்கள், நாங்க ஏற்கனவே நிறைய கேட்டிருக்கோம் என்று அவள் கிண்டல் அடித்தாள். Old is gold ம்மா, என்று அவன் மறுபடியும் கூற, இருவரும் சேர்ந்து நகைத்தனர். பேசிக் கொண்டே இருவரும் வெளியே வர, சுஹேல், துர்காவிடம் வா! உன்னை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன், நீங்கள் என்ன எனக்கு பாதுகாவலரா அல்லது வாகன ஓட்டுனரா? வெளியில் எங்கே சென்றாலும் அங்கே வந்து என்னை அழைத்து செல்கிறீர்கள்? மருத்துவமனையில் ஒழுங்காக வேலை புரியவில்லை என்று நினைக்கிறேன் என்று நாசூக்காக தன் மறுப்பை தெரிவித்தாள். சுஹேல் அப்போதும் விடவில்லை, மருத்துவமனைக்கு தேவையான, முக்கியமான புத்தங்களை வாங்கினேன், இதுவும் மருத்துவமனை வேலை தான், நமக்கு தெரிந்த பெண் தனியாக செல்கிறார்களே, துணையாக செல்லலாம் என்றால் என்னை தவறாக நினைத்து கேலி செய்கிறீர்களே? இது நியாமா? என்று கேட்கவும், துர்காவிற்கு என்னவோ போல் இருந்தது. அதெல்லாம் இல்லை சுஹேல், நீங்கள் பொறுப்பான மருத்துவர், உங்களுடைய சேவை மருத்துவமனைக்கு மிகவும் அவசியம்.ஏன் வீணாக உங்கள் நேரத்தை என்னை வீட்டிற்கு அழைத்து செல்ல செலவிடுகிறீர்கள்? என்று நினைத்து தான் இப்படி பேசினேன், என்னை தவறாக நினைக்க வேண்டாம், அப்படி உங்களுக்கு தோன்றினால் என்னை மணித்துவிடுங்கள் என்று அவள் வருத்தத்துடன் கூறவும், சுஹேல் நான் சும்மா உன்னை கிண்டல் செய்தேன்! அதுக்கு போய் இப்படி வருத்தப்படலாமா?, நான் வீட்டுற்கு போனால் சுட சுட சாப்பிடலாம், அப்படியே உன்னை வீட்டில் விட்ட மாதிரி இருக்கும், அதனால் தான் உன்னை கூப்பிட்டேன், உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையென்றால் வர வேண்டாம், என்று கூறி நடந்தான். துர்காவிற்கு தர்ம சங்கடமாகிவிட்டது. போகவில்லை என்று கூறினால் தப்பாக எடுத்துக் கொள்வான், என்று நினைத்து, வருகிறேன்! வாங்க போகலாம்! என்று கூறியவாறே பைக் நிற்கும் இடத்திற்கு இருவரும் வந்தனர், பைக்கில் ஏறியதும், துர்கா அவன் மீது படாதவாறு அமர்ந்தாள். அவனுக்கு பைக்கை வானில் ஓடுவதுபோல் பிரமை ஏற்பட்டது. "இவளிடத்தில் ஏதோ மாயம் இருக்கிறது! ", இவள் அருகில் இருந்தால் நான் நானாகவே இல்லை. என்னதான் மாயம் செய்கிறாளோ! என்று தனக்குள் நினைத்தவாறே ஓட்டினான். துர்காவிற்கு சிறு சந்தோஷம் இருந்தாலும் பயமே அதிகம் குடி கொண்டிருந்தது. நான் இவனை பார்க்க வேண்டாம், என்று நினைத்தால் விதி மீண்டும் மீண்டும் சந்திக்க வைக்கிறேதே! என்னதான் செய்வது? என்று நினைத்தவாறே மௌனமாக உட்க்கார்த்திருந்தாள், அவன் பைக்கின் கண்ணாடி வழியாக அவளை பார்த்து, " துர்கா உனக்கு இஞ்சி சாப்பிடுவது பிடிக்குமா?' என்று கேட்க, என்ன இவன் சம்பந்தம் இல்லாமல் எதையோ கேட்கிறான், என்று எண்ணியவளாக, இஞ்சி தனியாக சாப்பிட பிடிக்காது, உணவுடன் கலந்திருந்தால் சாப்பிடுவேன், எதற்காக கேட்கிறீர்கள் ? இல்லை, அதை தின்றால் எதுவுடைய முகமோ எப்படியோ மாறுமாமே? உனக்கு தெரியுமா ? என்று ஒன்னும் தெரியாதவன் போல் கேட்க, துர்காவிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை! சிறிது நேரத்திற்கு பின்பு தான் அர்த்தம் புரிந்து, என்னை குரங்கு என்கிறிர்களா? என்று கோபமாக கேட்டாள், நான் அப்படியா சொன்னேன்! ஏன் வாயிலிருந்து குரங்கு என்ற வார்த்தையே வரவில்லையே! நீயே உன்னை கூறி கொண்டால் அதற்கு நான் பொறுப்பாவேனா? என்று கூறவும், துர்காவிற்கு சிரிப்பு வரவே அதை மறைக்கும் வண்ணம் முகத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டாள், அதை கண்டு கொண்ட அவன், சிரிப்பு வந்தால் சிரித்து விடவேண்டும் என்று கூறவே துர்கா அவனைப் பார்த்து முறைத்தாள். " நீ கோபமாக இருக்கும்போது கூட அழகு செல்லக்குட்டி தான்" என்று அவன் கொஞ்சவும், அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. அது தெரியாமல் இருக்க தலையை குனிந்துக்கொண்டாள். வீடு வந்ததும் இருவரும் இறங்கினார்கள். நல்ல வேளை துர்காவின் வீட்டில் அப்போது யாரும் வெளியில் இல்லை. அப்பாவும் உள் அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். தன் கையில் இருந்த சாவி மூலம் வீட்டை திறந்து அவசரமாக உள்ளே நுழைந்தாள், அனீஸ் இருவரும் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்து விட்டாள். சுஹேல் வந்ததும், அவனருகே சென்று, என்ன சார்! இருவரும் வெளியே உலாவிவிட்டு வருகிறீர்களோ! என்று மெல்லிய குரலில் வினவ, அவன் அவளை முறைத்தான், "உனக்கு ரொம்பத்தாண்டி வாய் நீள...மா ஆயிடுச்சி" என்று பொய்யாக அவளை அடிக்க போக, அவள் முகத்தை இடது வலதுமாக ஆட்டி தோள்பட்டையில் முகவாயை இடித்து, ஹூம் ! என்று சொல்லிவிட்டு சென்றதை பார்த்ததும் சுஹேலுக்கு சிரிப்பு வந்தது.
 

New Threads

Top Bottom