Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
அடித்து ஊற்றியது மழை. ஷவரின் அடியில் நின்றாலும் இந்த அடித்து ஊற்றும் மழையில் கிடைக்கிற ஆனந்தம் கிடைக்காதென்று சொட்டச்சொட்ட நனைந்தாள் அதிதி. அடைமழையில் உடை நனைந்து, மகிழ்ச்சிக் கரையுடைத்து வளைந்தாடுபவளை அக்குடிலில் இருந்து ரசித்துப் பார்த்தான் விக்ரமன்.


அவள் மழையில் ஆடிய ஆட்டத்தில் அவனே மழையாகிப்போனதை அறியாதவள் மழை நின்ற பிறகு அவனை ஈரமாக்கும் பொருட்டு கட்டியணைத்தாள். அவர்களிருவரும் இருந்த உலகின் வெப்பம் தணிந்தது. ஆனால், அவர்கள் உடலின் வெப்பம் தணிய மறுத்து, துணை சேர துணிந்தது. இறுதியில் வெற்றியும் கண்டது.


வானும் மண்ணும் கொண்ட கூடலை மனிதர்கள் இல்லையென்று பொய் சொல்லக்கூடுமென சான்றை உண்டாக்கியது இயற்கை. ஆம், மண்மணம்!


இரவில் தங்கள் இருப்பை உணர்த்த, மழைக்காலப் பாடகர்கள் தங்கள் பாட்டு கச்சேரியைத் தொடங்கினர். தவளைகளின் 'தரிகிடத் தத்தோம்' இசையை செவியிலும், மண்வாசனையை நாசியிலும் உணர்ந்தவர்கள் நடுஜாமம் பனிரெண்டு மணிக்கு தங்கள் கண்களைத் திறந்தனர்.


தன்னவளுக்காய் அடுப்படியில் குத்துக்காலிட்டு அமர்ந்து, கருப்பட்டி காப்பியை தயாரித்தான் விக்ரமன். உடன் பதமாக நிலக்கடலையும் வறுத்தான். காப்பியை அருந்தியவள் நிலக் கடலையை ரசித்துக் கொரித்தாள்.


மழையில் நனைந்து இரண்டு நாள் காய்ச்சலில் விழுந்தவளை தாயாய் நலம் பேணினான் விக்ரமன். அவனின் அக்கறையில் விரைவில் உடல்நலம் தேறினாள் அதிதி. உடன் இந்த உலகிலேயே மிகவும் கொடுத்து வைத்தப்பெண் தான் தான் எனவும் எண்ணிக் கொண்டாள்.


அங்கிருந்த ஒரு வாரமும் சொர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் போன்றே இருவரும், இனி இறந்தாலும் பரவாயில்லை என எண்ணும் அளவிற்கு அன்பையும், ஆனந்தத்தையும் ஆழ்ந்து அனுபவித்தனர்.


அந்த நாட்களுக்குப் பின் தனக்கு தனிமை வேண்டும் நேரமெல்லாம் அவளை அழைத்துக்கொண்டு, அக்குடிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான் விக்ரமன். நாச்சியம்மை இதனை கண்டும் காணாமலும் இருந்தார்.


மனதில் ஸ்ருதிக்கு வன்மம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயேப் போட்டு புதைத்துக் கொண்டாள். பின்னே, நாச்சியம்மையை பகைத்து அவளால் அவ்வீட்டில் வாழ முடியுமா என்ன?


வந்த புதிதிலேயே ஸ்ருதிக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதை கண்டுகொண்ட அதிதி, கீர்த்தியும் ராதாவும் தன்னிடம் பாசமாக இருப்பதைக் கண்டு சற்றே மனம் ஆறுதலாக உணர்ந்தாள்.


அதேபோல் வீட்டில் இருந்த மற்றவர்களும் அவளிடம் நல்ல முறையிலேயே நடந்து கொண்டனர். காரணம், நாச்சியம்மையின் உத்தரவு.


ஆனால், இவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒருவன் அதிதியை கண்கொத்தி பாம்பாக கண்காணித்துக் கொண்டிருந்தான். அவன் வேறு யாருமல்ல, கௌதமன் தான்.


எப்பொழுது முதன்முதலாக அதிதியை கண்டானோ, அப்போதே அவனுக்கு அதிதி மீது தீராத ஆசை ஏற்பட்டுவிட்டது. தன் அன்னை அதிதியை தனக்குத் தான் திருமணம் செய்து வைக்கப் போகிறார் என்று நம்பிக் கொண்டிருந்தவனுக்கு அவர் திடீரென விக்ரமனிடம் அதிதியை அழைத்து வருமாறு கூறியது ஏமாற்றத்தை உண்டாக்கியது.


அதிதி தனக்கானவள் என்னும் எண்ணம் அவன் மனதில் ஆழப் புதைந்திருந்த காரணத்தால், அதிதி விக்ரமனுடன் டைனிங் டேபிள், வெளியிடங்கள் என பேசிச் சிரிக்கும் போதெல்லாம் பொறாமை உணர்வால் வெந்து தணிந்தான்.


இதனால் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியிலேயே இருந்து வந்தான்.


ஆனால், அதிதியை தனித்துப் பார்க்கும் நேரமெல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் அவளை தாபப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். இது தெரியாமல் அதிதியும் அவனைக் காணும் போது கள்ளங் கபடமில்லாமல் சிரித்து வைப்பாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
ஒரு நாள் பூங்காவில் அமர்ந்து பிடித்தப் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள் அதிதி.


அவளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த கௌதமன் வேகவேகமாக படிகளில் இறங்கி வந்து அவளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.


திடீரென தன்னை ஏதோ துளைப்பது போல் தோன்ற அதிதி நிமிர்ந்து பார்த்தாள். எதிரே வெறித்த பார்வையுடன் கௌதமன் நிற்கவும் ஒரு கணம் அதிர்ந்து போனாள். அவளுக்கு ஏதோ சரியில்லாதது போலத் தோன்றியது.


அவளின் உள்ளுணர்விற்கு தப்பாது அவள் அருகில் வந்தவனும், "என்ன அதிதி பூ தொடுக்குறியா? பூ உன்னை மாதிரியே அழகா இருக்குல்ல? இந்தப் பூவை ஒரு தடவையாவது மோந்து பார்க்கணும்னு ஆசையா இருக்கு அதிதி. பார்க்கவா?" என பூவை எடுத்து முகர்ந்து பார்த்தபடியே அவளை தாபப்பார்வை பார்த்தான்.


அதில் விதிர்த்துப்போன அதிதி, அவன் கையிலிருந்த பூவினை வெடுக்கென்று பறித்தாள்.


"இந்தப்பூ எப்பவுமே உங்களுக்குக் கிடைக்காது" என்று முகத்தை சுளித்து சொல்லிவிட்டு, அவ்விடம் விட்டு நகரப் பார்த்தாள்.


ஓடப் பார்த்தவளின் கைகளை எட்டிப் பிடித்தவன், "என்னடி ரொம்ப ஓவரா பண்ற? உன்னை எப்படியாவது ஒரு தடவையாவது அடைஞ்சே ஆகணும். இதுவரை விருப்பமில்லாத எந்தப் பொண்ணையும் நான் கட்டாயப்படுத்தி தொட்டதில்ல. ஆனா உன்னை பார்க்கும் போது மட்டும்.. ஹே! நீ பார்க்க எப்படியிருக்க தெரியுமா?" என்று கண்களாலேயே அவளை கபளீகரம் செய்தான்.


அவனின் பார்வையில் அருவருப்படைந்தவள் அவன் கையை உதறினாள்.


"அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படுறியே நீயெல்லாம் ஒரு மனுசனாடா? உன் மூஞ்சில முழிச்சாக் கூட பாவம் வந்து சேரும். ச்சீ! இப்படி சிறுமைப் புத்தி கொண்டவனா நீ இருப்பனு நான் நெனச்சிக் கூடப் பார்க்கல. இதை வீட்ல இருக்கவங்கக்கிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா?"


"என்னாகும்? போய் சொல்லித்தான் பாரேன். யார் உன்னை நம்புவாங்க? யாரு விக்ரமன் கிட்ட சொல்லப் போறியா? அவனுக்கு நான் உயிர்த்தோழன் மாதிரி. எங்க அவன்கிட்ட போய் சொல்லிப்பாரு. நீ தான் அடுத்த கணமே இந்த வீட்டை விட்டு வெளியேறுவ. ஏன்னா ஐயா இந்த வீட்டுல போட்டுக்கிட்டு இருக்கிற பிரம்மச்சரிய வேஷம் அப்படி." என்று அவன் மிதப்பாகக் கூறவும்,


அதிதி வெறி வந்தவள் போல், "மத்தவங்க எதுக்குடா? நானே போதாதா உன் முகத்துல காறித்துப்ப? இன்னொரு தடவை என் வழில வந்து பாருடா, அப்போத் தெரியும்! நீ என்ன வேஷம்னாலும் போட்டுக்கோ. ஆனா என்கிட்ட வாலாட்டின ஒட்ட நறுக்கிருவேன்." என்று சீறியவள் அவனை முறைத்துக் கொண்டே வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டாள்.


"நீ எங்கப் போயிருவனு நானும் பார்க்கறேன்டி" என மனதில் கருவியவனும் தன் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விட்டான்.


இவையனைத்தையும் இரு உருவங்கள் வெவ்வேறு இடங்களில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு உருவம் சந்தோசத்துடனும், மற்றொரு உருவம் அதிதியை எவ்வாறு கௌதமனிடமிருந்து காப்பதெனவும் அவ்விடத்திலிருந்து அகன்றது.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
நாவல் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன குண்டுமல்லீஸ்❤️
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 7


இரவில் தன்னறைக்கு வந்த அதிதி, லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது கணவனை நெருங்கி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


"என்ன பார்வையெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு?" என்று கேட்டவனைக் கண்டு சிரித்தவள்,


"ஒண்ணுமில்லங்க" என்று மழுப்பினாள்.


"இல்ல. ஏதோ இருக்கு. என்னனு சொல்லு?" என்று ஊக்கவும்,


"அய்யோ! உண்மையாவே ஒண்ணுமில்லங்க. நான் சும்மா தான் உங்களைப் பார்த்தேன்" என்று பூசினாள்.


"ம்ஹீம், அப்படி சும்மா எல்லாம் பார்க்கக்கூடாது அம்முக்குட்டி" என லேப்டாப்பை அணைத்தவன் உடன் அவளையும் அணைத்தான்.


அவன் அணைப்பிலிருந்தபடியே, "கௌதமன் உங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்டா?" என்று மெதுவாக ஆரம்பித்தாள் அதிதி.


"ம், ஃப்ரெண்ட் தான். இப்போ இல்ல. பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி. இப்போ ரெண்டு பேரும் அவ்வளவா பேசிக்கிறதில்ல. ஆமா அவனைப் பத்தி நீ ஏன் கேட்கற?" என்று அவன் கேட்ட கேள்வியில் திருதிருத்தவள், தன்னையும் அறியாமல் மனதிற்குள் நிம்மதியடைந்தாள்.


பின், "இல்ல உங்களை விட அவர் ரெண்டு வயசு பெரியவரு. அப்படியிருக்க உங்களுக்கு கல்யாணம் பண்ணியிருக்காங்களேனு அவரைப் பத்தி கேட்டேன்" என்று சமாளித்தாள்.


அவளை ஆழ்ந்துப் பார்த்தவன் சிறிதே ஃபிளாஷ்பேக் உண்டியலில் விரிசலை உண்டாக்கினான்.


"கௌதமனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கத் தான் அன்னைக்கு நாங்க உன் வீட்டுக்கு வந்தோம். ஆனா, உன் தாத்தா விட்ட வார்த்தையால இப்போ நீ என் மடியில கிடக்கற மாதிரி ஆகிடுச்சு." எனவும்,


அவன் போட்ட புதிர் புரியாமல், "என் தாத்தாவா? என்ன சொன்னாரு?" என்றவள் கேட்க,


அனைத்தையும் நினைவு கூர்ந்தவன் அவளிடம் எதையும் கூற விரும்பாதவனாக, "என்னைப் பார்த்ததுமே உன் தாத்தாவுக்கு லவ்வோ லவ்வு. என் பேத்தியை விக்ரமனுக்குத் தான் கட்டித் தருவேனு ஒரே அடம். அதான் என் பெரியம்மாவும் சரினு சொல்லி என்னை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க." என அவன் சிரிக்காமல் கூறவும், அவனை முறைக்க முயன்றவள் பின், தோற்று அவனின் வாயில் அடித்தபடியே,


"பொய், பொய், வாயில இருந்து வர்றதெல்லாம் பொய்" என்று கூறிச் சிரித்தாள்.


பின், தீவிரமாக கூறினான் விக்ரமன்.


"கௌதமனுக்கு போதைப்பழக்கமும், பெண் சகவாசமும் உண்டு அதிதி. இது எங்களுக்கு தெரியும்னு அவனுக்குத் தெரியாது. அதான் என் நாச்சூம்மா ஒரு பொண்ணோட வாழ்க்கையை ஏன் பாழாக்கணும்னு என்னை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க." என்றதும், அவன் கூறிய பொய்யில் அதிதியின் மனதில் ஒரு படி உயர்ந்து போனார் நாச்சியம்மை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய் மாதிரி, இந்த நாவலை எழுதிக் கொண்டிருப்பவர் உங்கள் ஷிவானி செல்வம். ரிவ்யூ எழுதும் போது நித்யா கார்த்திகன் அக்கா பெயரை போட்டு‌ வச்சீங்க.... அழுதுருவேன் அழுது😂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
"இன்னைக்கு என் அம்முக்குட்டி மூளை ரொம்ப வேலை பார்க்குது போலயே? தப்பாச்சே" என நெருங்கியவனின் தலையில் குட்டியவள்,


"இன்னைக்கு உங்களுக்கு ஒண்ணும் கிடையாது" என திரும்பி படுத்துக் கொண்டாள்.


அவனா விடுபவன்? இறுதியில் அவள் தான் அந்த விடாக்கண்டனுக்கு விடும் கண்டியாக நேரிட்டது.


அவ்வப்போது அதிதியை எவ்வாறெல்லாம் நெருங்க முடியுமோ அந்த முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டிருந்தான் கௌதமன். ஆனால், அனைத்து முயற்சிகளிலும் அவன் கண்டது தோல்வியே.


மும்பையில் உள்ள தங்களின் புது தொழிற்சாலையினை நிர்வகிக்க நம்பிக்கையான ஆள் ஒருவர் தேவைப்பட, கௌதமனை ஒரு வருடம் அங்குத் தங்கி வேலையை கவனிக்குமாறு கூறி மும்பை அனுப்பி விட்டார் நாச்சியம்மை. அவன் சென்றபின் எந்தவொரு பிரச்சனையுமில்லாமல் அக்குடும்பத்தில் பாந்தமாக பொருந்திக் கொண்டாள் அதிதி.


இவ்வாறு நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, திருமணம் முடிந்து இரண்டு மாதம் கடந்த நிலையில், ஒரு நாள் அதிதிக்கு தலை சுற்றுவதைப் போல் இருந்தது.


ஏன் இப்படி? என யோசித்தவளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாய் காரணம் பிடிபட, ஒருவேளை அவ்வாறு இருக்குமோ? என யூகித்து குழப்பத்துடனேயே படுத்துக்கொண்டாள்.


அவளை இழுத்து தன்னோடு சேர்த்தணைத்த விக்ரமன், "என்னாச்சு என் அம்முக்குட்டிக்கு? எழுந்து எழுந்து படுத்துக்கிறாங்க?" எனக் கேட்க, ஒன்றுமில்லை என்றாள்.


அவன், "என்கிட்ட எதுவும் சொல்லக்கூடாத விஷயமா?" எனக் கேட்கவும், இல்லையென்று தலையாட்டியபடியே தனக்குத் தோன்றிய சந்தேகத்தைக் கூறி, அதனை பரிசோதிக்கும் கருவியை வாங்கி வருமாறு கூறினாள்.


இனிமையாக அதிர்ந்தவன் உடனே ஓடிச்சென்று அந்தக் கருவியை வாங்கி வந்து தந்தான்.


அதனைப் பற்றி அறிந்தவளும் குளியலறை சென்று அனைத்து செய்முறைகளையும் செய்து முடித்து வெளியே வர, "ரிசல்ட் என்ன?" என்று ஆர்வமாக ஓடி வந்து கேட்டான் விக்ரமன்.


"ஒரு மூணு நிமிஷம் வெயிட் பண்ணனும்" என்றாள் அதிதி.


இருவரும் நகத்தைக் கடித்துக் கொண்டு பார்த்திருக்க, மூன்றாவது நிமிடத்தில் தோன்றிய இரண்டாவது சிவப்பு கோடு இருவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.


இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு அந்த சந்தோசச் செய்தியை ஜீரணிக்க முயன்றனர்.


அவனிலிருந்து பிரிந்தவள், அவனின் இரு கன்னங்களையும் தாங்கியபடியே ஒவ்வொரு வார்த்தையாக, " வீ ஆர் பிரெக்னன்ட். மாமூ" என்றாள்.


சந்தோஷ மிகுதியில் அவனும் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான்.


"நான் இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா அம்முக்குட்டி? இந்த உலகத்துலயே இப்ப சந்தோஷமான மனுஷன் யாருனு கேட்டா நான் தான்னு சொல்லுவேன்."
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
"நானும் தான் மாமூ. ஆனா எல்லாம் வேகமா முடிஞ்ச மாதிரி இருக்குல்ல?"


"என்ன பண்றது அம்முகுட்டி? என் வேகத்தை குறைக்கத் தான் நானும் ட்ரையல் எல்லாம் பார்த்தேன். பட் நோ யூஸ்." என்றவன் உதட்டைப் பிதுக்கவும்,


அவன் கையில் கிள்ளியவள், "நான் அதையா சொன்னேன்? நமக்கு கல்யாணம் நடந்தது, நான் இந்த வீட்டுல பொருந்திக்கிட்டது, அதை சொன்னேன்" எனவும்,


மேலும், அவளை யோசிக்க வைக்க விரும்பாதவன், "உடனே இந்த விஷயத்தை நம்ம நாச்சூம்மாக்கிட்ட சொல்லணும். அவங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க. வா!" என அவளை கீழே அழைத்துச் சென்றான்.


அவளின் கர்ப்ப செய்தியைக் கேட்ட நாச்சியம்மை, 'எல்லாம் நாம திட்டம் போட்டபடி தான் நடந்துக்கிட்டிருக்கு' என்று மனதில் நினைத்துக்கொண்டே, வெளியில், "நல்லாயிரு குட்டி. இன்னும் எட்டு மாசத்துல எனக்குப் பேரனோ பேத்தியோ பெத்துக் கொடு." என்று ஆசி கூறி அவ்விடம் விட்டு அகன்று விட்டார்.


மதியம் அவளைக் காரில் மருத்துவமனை அழைத்துச் சென்ற விக்ரமன் மருத்துவர் அவள் கர்பத்தை உறுதி செய்யவும், அவரின் சில ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு திருப்திகரமாக வீடு வந்து சேர்ந்தான்.



இரவில் அவள் மடியில் தலை சாய்த்திருந்தவன் ஒரு ஆர்வக்கோளாறில் கேட்டான். "அம்முக்குட்டி, நம்ம அம்முலுவுக்கு என்ன பேர் வைக்கலாம்?" என்று.


அவனின் தலையை தன் மடியிலிருந்து தள்ளி விட்டவள், "நானும் அம்மு நம்ம பொண்ணும் உங்களுக்கு அம்முவா?" எனக்கேட்டு கோபத்தில் புசுபுசுவென்று அனல் மூச்சுவிட்டாள்.


"நீ அம்முக்குட்டிடி. அவங்க அம்முலு" எனக் கூறி அவளை அவன் சமாதானம் செய்யப் பார்க்க,


"அதெல்லாம் முடியாது" என்று அடம் பிடித்தாள் அம்முக்குட்டி.


பி‌ன் அவனே அவளுக்கு நிதானமாக விளக்கினான்.


"என் அம்மா அலமேலு மங்கை தான் நமக்கு மகளா பிறக்கப் போறாங்க அதிதி. அதனால நான் என் அம்மாவை கூப்பிடுற மாதிரி அவளை அம்முலுனு தான் கூப்பிடுவேன்" என்றவனின் அன்னை மீதான நேசத்தில் நெகிழ்ந்து போனவள்,


"சரி, சரி" என்று கொஞ்சம் கீழிறங்கி வந்தாள்.


அவளின் முந்தானை வாசம் பிடித்தவன் திடீரென ஞாபகம் வந்தவனாக, "உனக்கு பையன் பிறக்கனும்னு எல்லாம் ஆசை இல்லையாடி? பொண்ணுன்ன உடனே ஏத்துக்கிட்ட?" எனவும்,


"இருக்கு தான். ஆனா எனக்கும் என் அம்மாவைப் பார்க்க ஆசை வந்திடுச்சி." என இதழில் புன்னகையும், கண்களில் கண்ணீருமாய் கூறியவளை இறுக்கி அணைத்து உச்சி முகர்ந்தான் விக்ரமன்.


உண்மையில் அவன் ஒரு தாயுமானவன்.


*


இரண்டாம் மாதம் என்பதால் வாந்தியும் மயக்கமும் அதிதியைப் போட்டு படுத்தியது. சாப்பிட்ட அனைத்தையும் உடனே வாந்தி எடுத்து வைத்தாள்.


எதையும் சாப்பிடாமல், வெறுமனே தண்ணீர் குடித்தால் கூட வாந்தி வருகிறது என துவண்டு கிடந்தவளை அதட்டினார் நாச்சியம்மை.
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
"இந்த நேரத்துல வெறும் வயித்தோட இருக்கக்கூடாது குட்டி. சாப்பிட்டாவது வாந்தியெடுக்கணும். அப்போ தான் ஒன்னு ரெண்டாவது வயித்துக்குள்ள போகும். இப்படியா வயித்துல இருக்க அந்த உசுரை பட்டினி போடுவ?"


அவரின் அடாவடித்தனம் கொஞ்சம் வேலை செய்தது.


விக்ரமனும் அவள் தன் பெரியம்மா பேச்சுக்குத் தான் கட்டுப்படுவாள் என்றெண்ணி அமைதி காத்தான்.


மூன்றாம் மாத முடிவில் தொலைக்காட்சியில் கிரில் சிக்கன் விளம்பரத்தைப் பார்த்த அதிதிக்கு திடீரென பிரியாணி சாப்பிட ஆசையெழுந்தது.


என்ன தான் அதிதி அசைவப் பிரியையாக இருந்தாலும், இங்கு சனிக்கிழமை வீட்டில் யாரும் அசைவம் சாப்பிடமாட்டார்கள் என்பதால் தனது ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.


ஆனால், இன்றோ எவ்வளவு முயற்சித்தும் அதை சாப்பிட்டே ஆக வேண்டுமென்கிற எண்ணம் வலுக்க, 'என்னடா இது? இதை எப்படி நான் அவர்கிட்ட கேட்பேன்?' எனத் திருதிருவென விழித்தாள்.


சிறிது நேரம் தூங்கினால் அந்த உணர்வு மறைந்துவிடும் என தூங்கவும் முயற்சி செய்தாள்.


ஆனால், அதை நீ உண்ணாமல் உன்னை நான் விடப்போவதில்லை என அவள் மாமியார் அலமேலுமங்கை கங்கணம் கட்டிக் கொண்டிருந்ததை பாவம்! அவள் அறியவில்லை.


சாயங்காலம் மறுபடியும் அதே விளம்பரம் ஓட டீவி பார்த்துக் கொண்டிருந்த தன் கணவனின் அருகில் அமர்ந்தவள், அவன் வலக்கையைப் பிடித்தாள்.


"என்னடா?" எனக் கேட்டுக்கொண்டே அவள் மடியில் தன் தலை வைத்தான் விக்ரமன்.


அவன் தலையை கோதிக்கொண்டே, "எனக்கு சிக்கன் பிரியாணி சாப்பிடணும் போலயிருக்கு. ப்ளீஸ் வாங்கித் தாங்க." என்று தயங்கி தயங்கி ஒரு வழியாய் கேட்டுவிட்டாள் அதிதி.


"என்னது? சிக்கன் பிரியாணியா? அதுவும் சனிக்கிழமையா?" என அவள் மடியிலிருந்து பதறி எழுந்தவன்,


"பெரியம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?" என ஹைவோல்டேஜில் ஷாக் வாங்கியவன் போல் கேட்டான்.


"ப்ளீஸ் வாங்கித் தாங்க" என்றவள் பரிதாபமாய் கேட்கவும், வேறு வழியில்லாமல் தனது அலைபேசி மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்தான்.


வாயிற்காவலர் தனது அறைக்கு அதை கொண்டு வந்து தந்ததும் அவள் கேட்ட சிக்கன் பிரியாணியை அவளிடம் கொடுத்தான். அவளும் அவனைப் பார்த்து அழவம் காட்டிக் கொண்டே சாப்பிட்டாள்.


அவளருகில் வந்தவன் இயல்பாய் ஒரு சிக்கன் பீஸை எடுத்து சுவைத்துப் பார்க்க வாயில் வைத்த பிரியாணி கீழே விழும் அளவிற்கு அவனை அதிர்ந்து பார்த்தவள், "நீங்க இன்னைக்கு அசைவம் சாப்பிடுவீங்களா?" என்றாள்.


"நான் எப்போ சாப்பிடமாட்டேனு சொன்னேன்?" என சப்புக் கொட்டிக்கொண்டே சாப்பிட்டவன், சிரித்துக்கொண்டே தன் லேப்டாப்பில் மூழ்கினான்.


அவள் சாப்பிட்டு முடித்த அரைமணி நேரத்தில் திடுமென அவ்வறைக்குள் பிரவேசித்தார் நாச்சியம்மை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
"ஹேய் குட்டி, நீ சனிக்கிழமை இறைச்சி சாப்பிடுவியா? எவ்வளவு தைரியம்? ஓஹோ! எல்லாம் இவ செய்யுற வேலையா?" என்றவரின் பார்வை அவளின் வயிற்றுப் பகுதிக்குச் சென்றது.


"அடிக்கழுதை! என்ன பயம் விட்டுப்போச்சா? எத்தனை தடவை சொல்லிருக்கேன்? சனிக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாதுனு. வெளிய வா, மரத்துல கட்டி வச்சு தோலை உரிக்கிறேன்." என மிரட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.


அம்மிரட்டலில் அரண்டு நின்றவளைப் பார்த்து வயிற்றை பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான் விக்ரமன்.


"என்னங்க, என்னாச்சு அத்தைக்கு? பாப்பாவை திட்டிட்டு போறாங்க?" என்று சிணுங்கியவளை,


"பின்னே? அவங்க பண்ணின வேலை தானே இது? சரி விடு. இனி நீ தாராளமா இந்த வீட்ல சனிக்கிழமை சிக்கன் சாப்பிடலாம் அம்முக்குட்டி" என்றதும்,


"அத்தை அப்படி ஒண்ணும் சொல்லலையேங்க? திட்டிட்டு தானேப் போறாங்க?" என்றாள் அதிதி.


அவன் புரியும்படி விளக்கினான்.


"அவங்க உன்னை திட்டலைடி. அவங்க தங்கச்சியை தான் திட்டிட்டுப் போறாங்க. எங்கம்மா ஒரு அசைவப் பிரியை, அதான்" எனவும்,


"அப்படியா?" என ஆச்சரியமாய் பார்த்த அதிதி,


"ஹை! இனிமே நான் நினைச்சதெல்லாம் சாப்பிடலாமா?" என சிறுகுழந்தை போல் குதூகலித்தாள்.


உண்மையில் அவள் ஒரு குழந்தை தான். அனைவரையும் நல்லவர் என நம்பிவிடும் குழந்தை.


நான்காம் மாதத் தொடக்கத்தில் காலையில் கட்டிலில் படுத்திருந்தவளிடம் நெருங்கிய விக்ரமன், "ஆபீஸ் போயிட்டு வரேன் அம்முக்குட்டி." என்றது தான் தாமதம், உடனே வாஷ் பேசினை நோக்கி ஓடியவள் குடலே வெளியே வந்து விடும் அளவிற்கு வாந்தி எடுத்தாள்.


அவளின் அருகில் வந்து தோள் தாங்கியவனை தள்ளிவிட்டு, "பக்கத்துல வராதீங்க மாமூ. உங்க பெர்ஃப்யூம் ஸ்மெல் தான் எனக்கு ஒத்துக்கல." என்றாள்.


"ஏன்டி ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் உங்க பெர்ஃப்யூம் வாசனை மயக்குதுங்கனு சொன்ன? இப்போ இப்படி சொல்ற?" என்றதும்,


"ஹான்? அது எனக்கு அப்ப பிடிச்சிருந்தது. இப்ப உங்க அம்முலுவுக்கு தான் இந்த பெர்ஃப்யூம் வாசனை பிடிக்கலையாம்." எனவும்,


அவளை முறைத்தவன், எல்லாம் என் நேரம்டி என்பது போல் சட்டையை கழற்றி வீசிவிட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு ஆபிஸ் புறப்பட்டான்.


இதுபோல் பல கூத்துகள் நடந்தது அம்மாதத்தில்.


தனக்கு ஐந்தாம் மாதம் நடக்கும் போது, அதிதி சோபாவில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருக்க, விக்ரமன் அருகில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தான்.


திடீரென புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழ முயன்றவளை தடுத்தவன் அவள் விசுவாசியானான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
"என்ன வேணும் அம்முக்குட்டி? நீ உட்காரு நான் போய் உனக்கு வேண்டியதெல்லாம் எடுத்துட்டு வர்றேன்" என்றான்.


அவன் கன்னத்தை தடவியபடியே கேலியாக சொன்னாள் அதிதி.


"எனக்காக நீங்க என்ன வேணா செய்யலாம் மாமூ. ஆனா யூரின் பாஸ் பண்ணனும்னா நான் தானே போயாகணும்? இல்ல எனக்காக நீங்க டாய்லெட் போயிட்டு வர்றீங்களா? நீங்க உங்க உணர்ச்சிகளை கொஞ்சம் கட்டுப்படுத்துங்க மாமூ" என்று கேலியாக கூறியதும்,


"ஹேய்! என்ன விளையாடுறியா? இப்போ கால்மணி நேரத்துக்கு முன்னாடி தானே போன?" என்றவன் சண்டைக்கு வரவும், அதற்கும் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே பதிலளித்தாள்.


"ஐயோ மாமூ! உங்க ஆர்வக் கோளாறுக்கு அளவில்லாமப் போச்சு. இப்போல்லாம் எனக்கு அடிக்கடி யூரின் வருது மாமூ. நீங்க ஆபிஸ் போயிடுறதால உங்களுக்குத் தெரியல. படுத்தாதீங்க மாமூ." என்று சொல்லிக்கொண்டே மிகுந்த சிரமம் எடுக்காமல் டாய்லெட் நோக்கி நடந்து சென்றாள்.


டீவியில் டக்கவுட் ஆனார் கேப்டன் தோனி.


அன்று ஆறு மாத சிசுவினை வயிற்றிலும் வார நாளிதழை கையிலும் ஏந்தி உட்கார்ந்திருந்தாள் அதிதி.


அவளின் காலடியில் இருந்த விக்ரமன் திடீரென, "ஹேய் அம்முக்குட்டி, நகம் எல்லாம் போன மாசத்தை விட இந்த மாசம் ரொம்ப ஸ்ட்ராங்காகிடுச்சுடி. எப்படி அழகா வெட்டியிருக்கேன் பாரு” என்று கர்வமாகக் கூறவும், தொழிலுலகத்தில் கொடி கட்டி பறக்கும் தன் கணவனை அலட்சியமாகப் பார்த்தவள்,


"ஆமா ரொம்பத்தான்" என முகம் நொடித்துக் கொண்டாள்.


அப்போது, ராதா போட்ட மாதுளம் பழ ஜூஸை எடுத்துக்கொண்டு வந்த நாச்சியம்மை, தொலைக்காட்சியில் பேய் படம் ஓடுவதைக் கண்டு, "இதெல்லாம் இப்போ பார்க்கக் கூடாது விக்ரமா. வாயும் வயிறுமா இருக்கற குட்டி. கொஞ்சம் சந்தோசமான படமா போட்டு காட்டுப்பா" எனவும், உடனே தொலைக்காட்சியை அணைத்தான் விக்ரமன்.


அதிதியின் கையில் பழச்சாறை திணித்து அவளருகிலேயே அமர்ந்து கொண்டவர், அவளின் வயிற்றில் தன்னிரு கைகளையும் வைத்து இதமாக தடவிக் கொடுத்தார்.


திடீரென ஓரிடத்தில் சதை நெளிந்ததை உணர்ந்து பரவசமடைந்து அவளிடத்தில், "குழந்தை உதைக்குதில்ல?" எனக் கேட்க, அவளும் ஆமாமென தலையாட்டினாள்.


அதிதி மகிழ்ச்சியுடன், "ஃபர்ஸ்ட் டைம் குழந்தை உதைக்கிது" எனக் கூறவும் விக்ரமனும் ஆர்வத்தில் தன் கைகளை வைத்துப் பார்த்தான்.


தன் தந்தையை ஏமாற்ற விரும்பாத குழந்தை மறுபடியும் தன் பாதங்களால் உதைத்தது.


அந்நேரம் பார்த்து உள்ளே வந்த சின்னவாண்டுகளும் அவளருகில் வந்து, "சித்தி நானு. சித்தி நானு." என சொல்லிக்கொண்டே அவள் வயிற்றில் தங்கள் சிறிய கைகளை வைத்துப் பார்க்க, தெளிவாய் அவர்களுக்கும் காலால் உதைத்து ஹைபை கொடுத்தாள் அம்முலு.


ஆம், வரும் முன்பே அனைவருக்கும் ஐஸ் வைத்துவிட்டாள் அந்த குட்டிப்போக்கிரி.


தொடரும்...
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom