மண்வாசம் - 1
இரண்டு வருடங்களாக மழை இல்லாமல் பொய்த்துப் போன பூமி அது.வழக்கத்திற்கு மாறாக அங்கு மக்களின் கூட்டம் எல்லையம்மன் கோவிலில் காணப்பட்டது,ஆங்காங்கே சிறுவர்கள் விளையாடுவதும்,பெண்களின் கூக்குரல் சத்தமும் வேட்டிசட்டை அணிந்த ஆண்களின் நடமாட்டமும் இருந்தன. கோவில் அர்ச்சகர் சுவாமியை பூக்களால் அலங்கரித்துக்கொண்டிருந்தார். ஆங்காங்கே பெண்கள் பொங்கல் வைக்கத்துவங்கினர். எல்லை அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டவுடனே மழையோ வெளுத்து வாங்கியது. மழையில்லாமல் விவசாயத்திற்கு கஷ்டமாகியிருந்தன இந்த இரண்டு வருடமும். சொட்டு நீர் பாசனம் மூலம் சில திராட்சை தோட்டமும்,மற்றும் கிழங்கு வகைகளும் ஒரு சிலர் கம்பு பயிர் ஆகியவற்றை தான் இதுவரை பயிரடபட்டன. தற்போது மழை வந்துள்ளதால் இனி இந்த ஊரின் சாபக்கேடு நீங்கியது. இனி பருவக்காலத்தில் மழை நன்றாக பெய்யும் எனவே மேலும் பல பயிர்களை பயிரடலாம் என முடிவு செய்தனர் அவ்வூர் மக்கள்.
அவ்வூரின் பெயர் திருவலங்காடனூர். முன்பு செழிப்பான பச்சைபசேலன்ற பயிர்கள் விளையும் பூமியது. ஆனால் என்ன ஆயிற்றோ சரியாக தெரியவில்லை மழையன்றி பொய்த்து போயிற்று இரண்டு வருடமாய். அவ்வப்போது சாரல் வீசிவிட்டு செல்வதோடு சரி மற்றப்படி பருவக்காலத்தில் மழையில்லாது வரண்டு போயிற்று. இனி அந்த கவலை இல்லை வழுமையாக பயிரிடும் வாழை, தக்காளி ,கேழ்வரகு என்று அனைற்றையும் பயிரிட மக்கள் தயாராகினர்.
“அம்மா,எல்லையம்மன் தாயே எப்படியோ எங்கள் ஊருக்கு மழை பொழிய வச்சிட்ட ரொம்ப நன்றி” என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தாள் கயல்விழி. பி.எஸ்.ஸி வேளாண்மை துறை முதலாவது ஆண்டு சேர்ந்து படித்துவருகிறாள்.
அவள் பிராத்தனை செய்வதை தூரத்தில் இருந்து ஒரு ஆடவன் கவனித்துக்கொண்டிருந்தான். அவன் வேறுயாருமல்ல அந்த கிராமத்திற்கு புதிதாய் வந்த மருத்துவர் டாக்டர் பாண்டியன். பாண்டியன் சிறுவயதில் இங்கு வளர்ந்தவர் தான் என்றாலும் நகரத்திற்கு குடிபெயர்ந்து பிறகு வளர்ந்து மருத்துவபடிப்பு முடித்துவிட்டு மீண்டும் இந்த கிராமத்திற்கே வந்துள்ளார்.இவனது முழுப்பெயர் ரத்தினவேல் பாண்டியன். ஆனால் சுருக்கமாக பாண்டியன் என்று மக்கள் அழைத்து வந்தனர்.
கயல்விழி அங்கிருந்து அகன்று செல்லும் வரையில் அவனது பார்வையிலிருந்து விலகவில்லை. ஆனால் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது கூட அவள் அறிந்திருக்கவில்லை.சற்று நேரம் கழித்து தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் வீட்டைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் அழகான மற்றும் பழமையான திண்ணை அடங்கிய தொட்டிகட்டி வீடு. எந்நேரமும் அவளது வீட்டில் தையல் மிஷின் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கும். தைப்பது வேறுயாருமல்ல அவளது விதவை தாய் தான். கணவன் இறந்த பிறகு பெற்றோர் வீட்டில் தஞ்சம்.அடைந்த பேதை பெண்ணவள். தன் மகளை படிக்க வைத்து ஆளாக்க தன் கைத்தொழிலை ஆயுதமாக எடுத்துக்கொண்டு போறாடிக்கொண்டிருக்கிறாள். கயல்விழியோ தாயின் கஷ்டத்தையும் வயதான தாத்தா பாட்டியையும் புரிந்து நடந்துக்கொள்கிறாள்.
எந்த கஷ்டத்தையும் இதுவரை அவள் தந்ததே இல்லை. முடிந்த அளவு அணுசரனையோடு நடந்துக்கொள்வாள். பி.எஸ்.ஸி அக்ரிகல்சர் இவளுடைய கனவு. இவ்வூரிற்கு தன்னால் முடிந்த விவசாயத்தின் நுனுக்கங்களை சொல்லிக்கொடுத்து பயனடையச்செய்யவேண்டும் என்பதே இவளது குறிக்கோள்.
“ஏய் கயல்விழி படிச்சியாடி”என்று தாயின் குரலில் தெளிந்தவள். ஐயோ நாளைக்கு எக்ஸாம்க்கு இன்னும் படிக்கவேயில்லை என்பதை நியாபகம் கொண்டு படிக்க தயாராகினாள். 32வது பக்கத்தில் படித்துக்கொண்டு இருக்கும் போது நியாபகத்திற்கு ஒன்று எட்டியது.
‘வாட் இஸ் சர்பேஸ் இரிகேஷன்’என்ற கேள்வியை வாசித்துவிட்டு சிந்திக்க துவங்கினாள், ம்ம் அன்னைக்கு மேம் ஏதோ சொன்னாங்களே இதை பற்றி. ஆங் நியாபகம் வந்தாச்சு. மனசுல பதியவச்சிப்போம். என்றபடி படித்துக்கொண்டு இருந்தாள். பொதுவாக அவளுக்கு புரிந்து படிப்பதில் ஆர்வம் அதிகம். வேளாண்மை பிடித்த துறை என்பதால் அதை சந்தோஷமாக தன் கடமை உணர்ந்து படிக்கின்றாள்
கயல்விழியின் தாய் லட்சுமி தன் மகளுக்கு உடனே திருமணம் முடிக்க வேண்டும் என்று எண்ணத்துவங்கினர். காரணம் ஒன்றும் பெருசில்லை. திருமணம் முடித்துவிட்டால் தன் பாரம் குறையும் என்று தான் .பெண்கேட்டு வந்தால் உடனே மணம் முடித்துவிடவேண்டும் என்று நினைக்க. அதற்கு ஏற்றாற்போல் லட்சுமியின் நாத்தனார் தன் மூத்த மகனுக்கு பெண்கேட்டு வந்தார்.
“லட்சுமி நீயும் தனியா எம்புட்டு நாள் கஷ்டப்படுவ. அவள் படிச்சது எல்லாம் போதும். உன் பாரமும் தீரட்டும் சீக்கிரமே என் பையன் எழிலரசனுக்கும் கயல்விழிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாமே” என்க
அதற்கு லட்சுமி முதலில் தயங்கினாள்..
‘என்னதான் இருந்தாலும் என் மகளை இரண்டாம்தாரமா எப்படி கட்டிக்கொடுக்கிறது. அவள் சின்ன பொண்ணு ஆச்சே. அவள் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு பதில் சொல்லுவோம் என்று நினைத்து’
“அண்ணி எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க. நான் கயல் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுறேன்” என்றதும்.
“ஏன் லட்சுமி இரண்டாம்தாரமா தரணுமேனு யோசிக்கிறியா” என்று பட்டென்று போட்டு உடைக்கவும். பதில் சொல்ல இயலாது தயங்கினாள். அதற்குள் கயல் கல்லூரியிலிருந்து வந்தாள்.
“வாடி என் மருமகளே இப்பதான் வரியா?” என்றதும்
“ஆமாம் அத்தை எப்படி இருக்கீங்க ,நீங்க என்ன விஷயமா வந்துருக்கீங்க. இது என்ன கையில் தாம்பூலம் எல்லாம்” என்று ஆச்சியத்துடன் பார்க்க..
“எல்லாம் நல்ல விஷயம்தான் மா. அப்றமா உங்கள் அம்மா உன் கிட்ட சொல்லுவா” என்று சொல்லிவிட்டு சரி நான் கிளம்புறேன் என்று நடையைக்கட்ட..
“மா, என்ன விஷயம் சொல்லேன்” என்று நச்சரித்தாள் கயல்…
“அது வந்து எழிலுக்கு உன்னை பெண்கேட்டு வந்துருக்காங்க. உனக்கு சம்மதமா” என்று வினவ..
“என்னது கல்யாணமா? மா விளையாடாதிங்க நான் படிக்கணும். இந்த கிராமத்துக்கு எதாவது செய்யணும். நான் ஒன்னும் சும்மா டைம்பாஸ்க்கு காலேஜ் போகல புரியுதா. நீ வேண்டாம்னு சொல்லிட்டா உடனே படிக்கிறதை நிப்பாட்டி வீட்டில் இருக்கிறதுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை .இந்த பேச்சை இதோட மறந்திடு மா. ஐயம் வெரி சாரி” என்று சொல்லிவிட்டு தனது புத்தகத்தை மேஜைமேல் வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள்
நாட்கள் வெகுவாக கடந்துக்கொண்டே போனது.
தன் வயது தோழிகளுடன் வயல்வெளி பக்கம் நடந்துச்சென்றுக்கொண்டிருந்தாள். மழை பொழிந்ததன் காரணமாக பச்சைபசேலன்ற காட்சி கண்களுக்கு விருந்தளித்தது. அப்போது அளவுக்கு அதிகமான நீர்பாசனத்தினால் பயிர் சற்று அழுகிக்கொண்டு இருப்பதை கவனித்தாள்.
“ஐயா, பயிர் இப்படி நாசமாகாமல் இருக்கணும்னா நான் ஒரு வழி சொல்லட்டுமா” என்றதும். அந்த நிலத்தின் உரிமையாளரும் விவசாயியுமான ராமலிங்கம் அவளிடம் என்ன என்பதுபோல் கேட்க…
“ஒன்னுமில்லை ஐயா, மேற்பரப்பில் நீர்பாசனம் செய்தால் மண்ணுக்கும் பயிருக்கும் எவ்வளவு நீர் தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி நீரை குட்டையாக வெளியேற்றிவிடும். உங்கள் பயிரும் பாதுகாப்பா அழுகாமல் இருக்கும். முயற்சி பண்ணி பாருங்க என்று ஆலோசனை தந்துவிட்டு தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு நடந்துவந்துக்கொண்டிருந்தாள்.
இதை தூரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த பாண்டியன் அவளது பேச்சினை பார்த்து அசந்துப்போய்.
“இவள் ஒரு அக்ரிகல்சர் டாக்டர் போலருக்கு” என்று மனதிற்குள் பாராட்டிவிட்டு புறப்பட்டான்.
சிறுவயதில் அவளை பார்த்ததுண்டு. கை சப்பியவாறு ஒரு ப்ராக் அணிந்துக்கொண்டு எண்ணெய் வைக்காத தலையுடன் சுற்றித்திரிந்தவள். இன்று அவளோ முடியை பறக்கவிட்டப்படி கோதிக்கொண்டே அழகான சல்வார் அணிந்து மாடர்ன் மங்கையாக சுற்றி வருகிறாளே என்று வியப்பு அவனுக்கு. இப்படி எத்தனை நாள் தான் அவளை பார்த்துக்கொண்டே நாட்களை கடத்துவது. போய் காதலை சொல்லிவிடுவோமா என்று மனம் ஏங்கியது. ஆனால் படிக்கிற பொண்ணு வேற…இப்ப போய் காதல் அது இதுனா நல்லாவா இருக்கும். பாவம் அவள் நல்லா படிக்கட்டும். கிராமத்து பைங்கிளியாய் அழகாய் வலம்வந்துக்கொண்டிருக்கும் அவளை காதலால் கட்டிப்போட விருப்பம் இல்லை அவனுக்கு. கொஞ்ச நாள் போகட்டும் பிறகு போய் காதலை சொல்லிப்போம் என்று விட்டுவிட்டான். ஆனால் என்றாவது ஒருநாள் காதலை சொல்லியேத்தீருவான். அதுவரை மண்வாசம் போல் அவளை நுகர்ந்தவாறே நாட்களை கடத்தப்போகிறான் பாண்டியன்.
“நீயின்றி நானில்லை…
உனக்கான காத்திருப்பும் சுகமே
என் கண்மணியே!
காத்திருப்பேன் காதலை சொல்ல
மண்வாசம் போல் நீ என்றும்
எனக்குள் இருக்க...
மழையாய் உன்னுடன் இருப்பேனடி”
இப்படி அவனுக்குள் கவிதையாய் அவளை வர்ணித்தப்படி நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறான் பாண்டியன். அன்று அழைப்பேசி மணி அடித்தது. எடுத்து காதில் வைத்தவன்.
“மா சொல்லுங்கள் என்ன விஷயமா கூப்டிங்க” என்று வினவியவுடன்.
“பாண்டி,என்ன நீ மெடிக்கல் கேம்புன்னு போயிட்டு இப்ப என்னடானா அங்கேயே டேரா போட்ட. எப்போ நீ சென்னைக்கு வரப்போகிற.” என்று அழுத்தமாய் கேட்ட தாய் சிவகாமியிடம்.
“மா,ரத்தினவேல் பாண்டியன் எங்கேயும் போயிடமாட்டேன் இங்கே தானே இருக்கேன் கிராமத்துல. சின்னவயசுல நான் விளையாடி திரிந்த கிராமம் தானே. நல்ல பரிட்சயமான மக்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை.”என்று சிரித்தவாறே கூறினான்.
“ஆமாம் ஆமாம் ரொம்ப பரிட்சயம் தான். ஆளைப்பாரு. சரி சரி ஊருக்கு வந்துட்டு போயேன்டா. உன்னை டாக்டருக்கு படிக்க வச்சதே சேவை பண்றதுக்கு தான். அது எனக்கு புரியுது. இருந்தாலும் எங்களை கண்டுக்காமல் நீ அங்கேயே இருந்தால் எப்படி டா” என்றுரைக்க.
“சரிதான் மா, ஆனால் கேம்புக்கு வந்த இடத்தில் எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு பழைய நியாபகம் எல்லாம் வருது ரொம்ப நல்லாருக்கு மா, அதான் இங்கேயே இருந்துட்டேன். மா,உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா இரண்டு வருஷமா மழையே இல்லாமல் இருந்த இந்த ஊருக்கு மழை நல்லா கொட்டி தீர்த்துருச்சு. இப்ப எல்லாமே பசுமையா அழகா இருக்கு மா,நீங்க வீடியோ கால் பண்றப்ப உங்களுக்கு நான் காட்டுறேன்” என்க
“அது சரி டா திருவலங்காடனூர் நல்லா செழிப்பான கிராமம் ஆச்சே இந்த இரண்டு வருஷம் மழை இல்லாமல் போனதுக்கு என்னடா காரணம்?எதாவது சாபக்கேடு போலருக்கு”என்றவுடன் இந்த முறை சற்று கோபத்துடன்.
“மா நீங்களும் இப்படி பேசினால் எப்படி? வேற எதாவது வானிலை மாற்றமா கூட இருக்கலாம். எதுக்கு எடுத்தாலும் தெய்வக்குத்தம் சாபக்கேடு அப்டினு முடிவு பண்ணா எப்படி” என்க.
“நீ படிச்சவன், இதெல்லாம் நம்ப மாட்ட நாங்க அப்படி இல்லையே டா.” என்றதும்.
“சரி படிச்சவன் அம்மா மாதிரி நடந்துக்கோ. சரி அதெல்லாம் இருக்கட்டும். வீடு கட்டுமான பணி எப்படி போயிட்டு இருக்கு. இப்ப பில்டிங் எதுவரைக்கும் வந்துருக்கு.” என்று கேட்டவுடன்.
“அதுவா எல்லாம் லாப்டர் வரை வந்துருக்கு டா,எங்கே கடக்கால் போட்டப்போ வந்தவன் தானே நீ அதுக்கப்புறம் வரவேயில்லை சார். அதுக்கு தான் சொல்றேன் வந்துப்போடா னு” என்று சிவகாமி சலித்துக்கொள்ள.
“வரேன் வரேன் நாளைக்கே கிளம்பி வரேன் போதுமா போனை வை. அப்பாவையும் அண்ணன் அண்ணி தங்கச்சி எல்லாரையும் கேட்டதாக சொல்லு.”
என்று சொல்லிவிட்டு கைப்பேசியை வைத்துவிட்டு மெடிக்கல் கேம்ப் நடக்கும் இடத்திற்குச் சென்றான். அங்கே இவனுக்காக பல நோயாளிகள் காத்துக்கிடந்தனர்.
….