Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

Status
Not open for further replies.
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 25

வீட்டில் நுழைந்த கையாய் சுகுமாரியை வேலை வாங்க ஆரம்பித்தாள் பர்வதம்..

" உங்காத்ல ஒக்காந்துண்டு இருக்கறா மாதிரி இங்க இருக்கப்படாது புரியறதா.. போய் சாதாரண உடைய உடித்திண்டு இத பீரோல வெச்சுட்டு வா.. கசங்கிடப் போறது.. நகையெல்லாம் நாள்கிழமைக்கு போட்டுக்கலாம்.. இந்த ரெட்டவடம்லாம் எதுக்கு.. குடு பீரோவுலே வெச்சுடறேன்.. இந்த பாரு குமாரி.. நீ தான் ஆத்து மூத்த மாட்டுப் பொண்ணு.. எல்லாருக்கும் வேண்டிய நீதான் கவனுச்சுக்கனும்.. புரியறதா.. வா.. அடுப்புல பாலக் காச்சி எல்லாருக்கும் காபி போட்டு குடு.. எப்டி உங்கம்மா வளத்திருக்கான்னு பாக்கறேன்.. " அடுக்களைக்குள் கொண்டு விட்டாள்..

" ம்ம்ம்.." கண்களை விரித்து தலை அசைத்தாள் சுகுமாரி..

தட்டுத் தடுமாறி பாலைகாச்சி காபி கலந்து கொண்டு வந்தாள்.. கூடத்தில் பட்டாளமாய் உட்காந்திருக்க கொஞ்சம் தடுமாற்றத்துடன் அனைவருக்கும் கொடுத்தாள்.. வாங்கிக் குடித்த பர்வதம் முகம் சுறுங்கியது.. " ஏன்டி , உங்காத்ல சக்கரை போட்டெல்லாம் காபி குடிக்க மாட்டேளா.. ஹூம் கசந்து வழியறது.. ஒரு காபி கூட போட்டுத் தர சொல்லித்தரலையா உங்கம்மா.. மண்டபத்ல அத்தன ஜம்பமா பேசினா.. இவ்வளவுதான் அவோ லட்சனமா.. தலைலெழுத்து.. " தலை அடித்துக் கொள்ள.. அவசரத்தில் சக்கரை கலக்காதது அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது சுகுமாரி.

" ம.. மன்னுச்சுக்கோங்கோ.. அவசரத்துல மறந்துட்டேன்.." கொஞ்சம் அவமானமாய் இருந்தது..

" ஹூம்.. நன்னாத்தான் இருக்கு.. சக்கரை டப்பாவை இங்க வெச்சுட்டு குரு மூர்த்திக்கு காபிய கொண்டு குடு.. பாவம் புள்ளை களச்சு போயிருக்கான்.. போ.." பர்வதம் மிரட்ட அடுக்களைக்குள் ஓடினாள் சுகுமாரி..

" ஹூம்.. நானும்தான் பொண்ண பெத்துருக்கேன்.. கோமதி என்னமா வேலை பாப்பா.. எந்த வேலையா இருந்தாலும் சட்டுனு முடிச்சுட்டு வந்துடும் என் குழந்தை.. இத மாதிரியா... ஹூம்.. பிரமஹத்தி.."

பர்வதத்தின் அதிர்ந்த குரல் சுகுமாரிக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது. விழுங்கிக் கொண்டாள்.. குருமூர்த்தி வெட்டி முறித்தது போல் கட்டிலில் மல்லாந்து கிடக்க.. அவனை அழைத்து பானத்தை கொடுத்தாள்.. வாங்கியவன் அயர்வாய் அவளைப் பார்த்தான்...

" சுகு.. காலெல்லாம் ஒரே வலி.. கொஞ்சம் கால அமுக்கி விடு.. " கட்டளையிட்டான்.. கட்டிலின் மேல் அமரப் போனவளை கண்களால் சுட்டான்.. " கீழ உட்காரு.."

தரையில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கிவிட்டாள்.. தன் பிஞ்சு விரல்கள் நோக..! நேரம் ஆக பர்வதத்தின் குரல் அவளை அதிரச் செய்தது.... " டீ குமாரி.. என்னடி பண்ணின்டு இருக்கே.. உள்ள உனக்கென்ன வேலை.. வாடி இங்க.." பதறி பாதியில் எழுந்தாள்.. அவன் முறைத்தான்..

" அ.... அம்மா கூப்படறா.. வந்துடறேன்.. " பாவமாய் பார்த்தாள்.. அவன் வெறித்துவிட்டு திரும்பிப் படுத்தான்.. அவசரமாக வெளியில் ஓடி வந்தாள்..

" காபிய குடுத்தமா வந்தமான்னு இல்லாதைக்கு என்ன பண்ணின்டு இருக்கே.. ம்ம்ம்...நான் சொன்னாத்தான் உள்ள போனும்.. இங்க ஆயிரத்தெட்டு வேலைய வெச்சுண்டு அங்க என்ன குழசல்..." பர்வதம் கண்களை உருட்டினாள்.. என்ன சொல்வதெனத் தெரியாமல் தலை ஆட்டினாள் சுகுமாரி..

" எம்பொண்ணு கோமதிக்கிட்ட கேட்டுண்டு ரவைக்கு சாப்பாடு பண்ணிடு.. உந்தோப்பனார் குடுத்துவிட்டு கட்டுசாதமெல்லாம் ஊசிப் போயிடுத்து.. பழயதக் குடுத்துப்புட்டு ஜம்பம் வேறே.. ஹூம்.. அதக் கொண்டு போய் கொல்லைல கொட்டிட்டு சூடா பொங்கலும் , இட்லியும் பண்ணிடு.. இருபத்தி ரெண்டு பேர் இருக்கா.. "

" தலையத் தலைய ஆட்டிண்டு நிக்காதைக்கு போ.. போயி வேலையப் பாரு.. கோமதி.. கண்ணு.. அவளுக்கு எப்டி சமைக்கனும்னு கத்துக்குடு.. ஒன்னுந்தெரியாதவள தலைல கட்டிட்டா.. நீதானே கண்ணு பிரமாதமா பண்ணுவியே.. போம்மா.. போய் பாத்துக்கோ.." தன் மகள் கோமதியிடம் அன்பு பொங்க கூறினாள் பர்வதம்..

" ம்ம்.. சரிம்மா.. மன்னி வா.. " பெருமை பொங்க கூட்டிக் கொண்டு நடந்தாள் கோமதி.. பர்வதத்தின் ஆறாவது குழந்தை.. ஒரே செல்வமகள்..!

பாதி தெரிந்தும் தெரியாமலும் கோமதி ஏதோ சொல்லிக் கொடுக்க , நன்றாக சமைக்கும் சுகுமாரி குழம்பிப் போனாள்.. " உப்பு இவ்ளோ போட்டா கரிக்குமே.. காரம் ரொம்ப ஜாஸ்தி.. சாம்பாருக்கு இவ்ளோ ஆகாதே.. " சுகுமாரி கேட்க கோபமானாள் கோமதி.

" நான் சொல்றத செய்.. நேக்கு தெரியாதா.. என்னமோ கரைகண்டவ மாதிரி பேசறியே.. ம்ம்ம்.." முறைத்தாள்..

எதற்கு வம்பென்று அவள் கூறிய அளவைப் போட்டு சமைத்து முடித்தாள் சுகுமாரி.. அனைவரும் அமர ஒற்றை ஆளாய் பரிமாறினாள்.. சாப்பிட்டவர்கள் முகம் அஷ்டகோணலாக , லோகநாயகி பர்வதத்தை சீண்ட ஆரம்பித்தாள்...

" ஏன்டி பர்வதம்.. உன் நாட்டுப் பொண்ணுக்கு நடக்கத்தான் தெரியாதுன்னு பாத்தா , சமைக்கக் கூட தெரிலீயேடி.. இப்டி காரத்தையும் உப்பையும் அள்ளிக் கொட்டினா உடம்பு என்னதுக்கு ஆறது.. பாவம்டி நீ.. நோக்கு வாச்சது அவ்ளவு தான்.. என்னமோ போ.."

பர்வதம் எரிமலையானாள்..

" ஏன்டி , நோக்கு சமைக்க சொல்லிக் கொடுத்தும் பண்ண வராதா.. எம்பொண்ணுட்டயே கத்துக்க ஆகலேன்னா எதுக்கு லாயக்கு நீ.. ஹூம்.. எல்லாம் என் தலையெழுத்து.."

" ஆமம்மா.. உப்புக்கும் காரத்துக்கும் அளவு சொன்னா அவ இஷ்டத்துக்கு போடறா.. எம்பேற கெடுத்துடுவா போலவே.. இனி நீ ஆச்சு உன் மாட்டுப் பொண்ணு ஆச்சு.. இனிமே நேக்கு சொல்லாதே.. நீயே பாத்துக்கோ.. ஹூம் வாய்ல வெக்க விளங்கலே.." தன் பங்கிற்கு கோமதி தூற்றிவிட்டு எழுந்தாள்..

அனைவரும் பாதி வயிருடன் எழுந்திருக்க சுகுமாரிக்கு கண்களில் நீர் கொண்டது..

" எல்லாத்தையும் கொண்டு மாட்டுக்கு கொட்டு.. மனூஷா சாப்படற மாதிரியா இருக்கு.. கர்மம்.." பர்வதம் அர்ச்சித்துவிட்டு நகர்ந்தாள்.. கலக்கத்தில் உணவருந்தாமல் அங்கேயே அமர்ந்து கொண்டாள்..

இரவு பதினொன்றைத் தாண்ட , ஊர் நியாயத்தையும் , வெற்றுப் பேச்சையும் பேசிவிட்டு அனைவரும் படுக்க , பர்வதம் சுகுமாரியை அறைக்குள் உறங்க அனுமதி தந்தாள்.. உடலெல்லாம் கலைத்துப் போக மெதுவாக நடந்து உள்ளே நுழைந்தாள் சுகுமாரி.. அவளுக்காய் காத்திருந்தவன் அவள் வர புன்னகைத்து அர்த்தமாய் பார்த்தான்.. அன்று இரவு அரைகுறை உறக்கத்துடன் கடக்க.. விடியக் காலையில் சத்தமாக எழுப்பினாள் கோமதி..

" மன்னி... மன்னி... இன்னும் என்ன தூங்கிண்டு இருக்கே.. மணி ஆயிடுத்து... எந்திரி.. போய் லெஷ்மிய குளிப்பாட்டிட்டு பாலக் கரந்துண்டு வா.. அம்மாக்கு காலைல அஞ்சு மணிக்கு காபி குடிக்கற பழக்கம்.." கூறிவிட்டு அவள் சென்று உறக்கத்தைத் தொடர , தலை சுற்ற தட்டுத் தடுமாறி எழுந்த சுகுமாரி குளித்து முழுகி , பாத்திரத்துடன் தொழுவத்திற்குள் நுழைந்தாள்..

இதுவரை மாட்டிடம் பால் கறந்த பழக்கமில்லாமல் பயத்துடன் நின்றாள்.. லக்ஷ்மி அவளை அன்புடன் பார்க்க மெல்லிய சந்தோஷத்துடன் அதற்கு தடவிக் கொடுத்தாள்.. குறுகிய நேரத்தில் அது சுகுமாரியிடம் ஒட்டிக் கொள்ள , அதை குளிப்பாட்டி பொட்டிட்டு மடுவை பிடித்து பால் கரந்தாள்.. அதற்குத் தீணி வைத்துவிட்டு, அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க , அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்..

வழக்கம்போல் அவளை ஏசியபடி அவளது உபசரனைகளை ஏற்றுக் கொண்டனர்.. நாட்கள் ஓடியது.. சமைப்பது வீட்டு வேலைகளைச் செய்வது , எல்லோரையும் கவனிப்பது மட்டுமே அவளின் தலையாயக் கடமையாக விதிக்கப்பட்டது.. ஊதியமில்லா சேவகன் போல் இரவுபகல் பாராமல் உழைத்தாள்.. பர்வதத்தின் குத்தல் பேச்சையும் , கோமதியின் திமிரையும் , குருமூர்த்தியின் அலட்சிய போக்கையும் பொறுத்துக் கொண்டு அனுசரித்து நடக்க ஆரம்பித்தாள்.. எல்லோரும் உண்டது போக மிச்சத்தை சாப்பிட்டாள்..

வீட்டு மாப்பிள்ளையாய் இருந்த சடகோபன் மட்டும் சுகுமாரியிடம் கொஞ்சம் கனிவாய் நடந்து கொண்டான்..

கோமதி கர்பமானாள்.. உள்ளமெல்லாம் பூரித்துப் போக பர்வதம் தன் மகளை அலுங்காமல் குலுங்காமல் பார்த்துக் கொண்டாள்.. கோமதியை கவனிக்கும் பொறுப்பும் சுகுமாரியின் தலையில் விழுந்தது.. சின்னப் பெண் என்று பாராமல் அனைவரும் அவளை ஏவினர்..

ஒருபுறம் உடல் உளைய மறுபுறம் மனம் புழுங்க வாய் பேசாமல் ஜடம் போல் இருந்தாள்.. மகிழ்ச்சி என்பது மருந்துக்குக் கூட இல்லாமல் போனது.. அவளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை குரு மூர்த்தி.. அவனுக்கு அவள் உடல் தேவைப்பட்டது அவ்வளவே.. அதுவுமின்றி அவனது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.. அடிக்கடி இரவு வெளியில் சென்று வருவதும் , பல நாட்கள் இரவில் வராமலும் இருந்தான்..

சுகுமாரிக்கு கொஞ்சம் கொஞ்சம் அவன் நடத்தை மீது சந்தேகம் வர ஆரம்பித்தது.. நடுஇரவில் அவன் வரும் பொழுது அவன் மீது அடிக்கும் மல்லிகைப் பூ வாசமும் ஜவ்வாது வாசமும் அவன் தவறு செய்வதை ஊர்ஜிதப் படுத்தியது.. அவன் தீண்ட அருவருப்பாய் இருந்தது.. அதையும் மீறி அவனது அத்துமீறல் அவளை ரணமாக்கியது..

சில நாட்கள் செல்ல.. இரவில் அவனுடன் உறங்க பர்வதமோ , கோமதியோ விடுவதில்லை.. அறையின் வாயில் கதவிற்கு முன்னால் கோமதி படுத்துக் கொண்டு அவளை உள்ளே செல்ல தடையாக இருந்தாள்..

உள்ளுக்குள் கலவரம் மூண்டிருந்தது சுகுமாரிக்கு.. தன் கணவன் தன்னைவிட்டு போய்விடுவானோ என்ற பயம் அவளை அலைக்கழித்தது..

ஒருநாள் இரவு...

வழக்கம்போல அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு பின்னரவு அவள் அறைக்குள் செல்ல எண்ண அங்கு வாசலில் கோமதி படுத்துக் கொண்டு உறங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்..

அவளை எழுப்ப மனமின்றி ஒரு ஓரமாக தாண்டிச் செல்ல , பர்வதத்தின் குரல் அவளை வெலவெலக்கச் செய்தது..

" அடியே.. கூறுகெட்டவளே.. அறிவில்ல.. கர்பவதிப் பொண்ண தாண்டறயே உனக்கு கூறு இருக்கா.. புள்ளைய வயத்துல சுமந்துண்டு இருக்கா எம்பொண்ணு , அவளத் தாண்டி உன் பாவத்த சேக்கறியா.. என் பரம்பரையே நாசமாப் போகனும்னு நெனைக்கறியா.. வந்து ஒரு வருஷம் ஆயுடுத்து.. உனக்குத்தான் வயத்துல ஒன்னும் மொலைக்கலே.. அதுக்காக எம்பொண்ணு வயத்துல வளர்ரத
அழிக்கப் பாக்கறியே படுபாவி.. நீ நன்னா இருப்பியா.. அப்படி என்னடி சல்லாபம் வேண்டி இருக்கு.. சீ... " பர்வதம் உச்சஸ்தாயில் கத்த , அனைவரும் எழுந்து கொண்டனர்.. சுற்றி எல்லோரும் அவளை அசிங்கமாகப் பார்க்க கூசியது சுகுமாரிக்கு.. அங்கேயே செத்துவிடமாட்டோமா எனத் தோன்றியது.. இதயத்தை கிழித்த கூரிய வார்த்தைகளை கேட்க இயலாமல் காதுகளை மூடிக் கொண்டாள். கண்களில் நீர் பொழிந்தது.

" என்னடி முழுச்சுண்டு இருக்கே.. எம்பொண்ணு கால்ல விழுந்து மன்னிப்பு கேளு.. தப்பு பண்ணிட்டேன்னு.. ம்ம்ம்.." பர்வதம் கண்களை உருட்ட , சுயமரியாதை அத்தனையும் மனதில் புதைத்து கோமதியின் கால்களைப் பற்றினாள் சுகுமாரி.. கோமதிக்கு சந்தோஷத்தில் முகம் மலர்ந்து போனது.. அன்றிலிருந்து சமையல்கட்டே படுக்கை அறை ஆனது சுகுமாரிக்கு..

நாட்கள் முட்களாய் நகர.. குரு மூர்த்தி வீட்டிற்கு வருவதை அவ்வப் பொழுது தவிர்த்திருந்தான்.. வந்தாலும் அவனது காம வேட்கையைத் தணித்துக் கொள்ள இவளை உபயோகப் படுத்திக் கொண்டான்.. சில நேரங்களில் பகலென்றும் பாராமல்..! அறையைவிட்டு வெளிவரும் சுகுமாரிக்கு அனைவரது கேளியான அசிங்கப் பார்வை ஊசியாய் குத்தியது.. கல்யாணமாகாத நாலு மச்சினன்களின் ஜாடையான கிண்டல் பேச்சும் , அவளை பார்த்தவிதமும் தலைகுனிய வைத்தது..

குருமூர்த்தியின் ஆரப்பாட்டம் அதிகமாக பொறுக்க இயலாமல் ஒரு நாள் பர்வதத்திடம் கூறினாள்.. " அ.. அம்மா.. அ.. அவர் போ... போக்கே.. சரி.. இல்ல.." தட்டுத் தடுமாற..

" யாரோட போக்க சொல்றே... நீ ரொம்ப நல்லவளோ.. யாரடி சொல்றே.. ம்ம்ம்.." பர்வதம் கர்ஜிக்க..

" அ... அவர் தான்.. வேளைகெட்ட வேளைல வெளில போய்ட்டு வர்ரார்.. அவர் மேலே.. எதேதோ வாசன வர்ரது... அவர.. கொஞ்சம்.. கண்டிச்சு..." சுகுமாரி நிறுத்தும் முன்னே எரிமலையானாள் பர்வதம்..

" என் பிள்ள சொக்கத் தங்கம்.. அவனையே குறை சொல்றியே உன் நாக்கு அழுகிப் போகாது.. ஆம்பளைனா நாலு எடத்துக்கு போய்ட்டு வரத்தான் செய்வான்.. பொண்டுசட்டி மாதிரி ஆத்லயா உட்காந்து இருப்பான்.. அவன் போக்க சொல்ல நீ யாருடி.. பெரிய கரைகண்டவளோ.. ஒரு புள்ளைய பெத்துகுடுக்க வழியக் காணும்.. அவன குறை சொல்றியோ.. இதுதான் முதலும் கடைசியும்.. இனியும் அவனப் பத்தி பேசினியோ.. உங்காத்துக்கு உன்ன துரத்திப்புடுவேன்.. சொன்னபடி நகையப் போட வக்கில்லே உங்கப்பனுக்கு.. வாய் மட்டும் நீளறது.. வாய மூடிண்டு போடி... வந்துட்டா.. " ஆங்காரியாய் கத்தினாள்..

அதற்குமேல் பேச வழியின்றி ஊமையானாள் சுகுமாரி..

கோமதிக்கு பெண்குழந்தை பிறந்தது.. அதற்கு சுந்தரவல்லி எனப் பெயர் வைத்து அமர்க்களமாக பண்டிகை வைத்துக் கொண்டாடினாள் பர்வதம்..
சுந்தரவல்லிக்கு இரண்டரை வயது நிறைய.. சூள் கொண்டாள் சுகுமாரி..

நாட்கள் நகர , வயிற்றின் சுமையும் ஏற அதனுடன் வேலைகளை செய்து வந்தாள்.. கவனிக்க ஆள் இல்லை.. அதே இளக்கார பார்வை , அதே மிஞ்சிய சாப்பாடு என நாட்கள் நகர்ந்தது.. பெற்றவர்களைக் காண வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.. குருமூர்த்தியிடம் சொல்லியும் எந்த பிரயோஜமும் இல்லாமல் போனது..

பெண்கள் சவகாசம் மட்டுமின்றி வேறு சில கெட்ட பழக்கங்களும் அவனை சிதைக்க ஆரம்பித்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் நோய்வாய்ப் பட ஆரம்பித்தான்.. சுகுமாரியின் பெற்றோர் இரண்டு மூன்று முறை வந்து பார்த்து சென்ற போதும் அவர்களுடன் அவளை அனுப்ப சம்மதிக்கவில்லை பர்வதம்..

சீமந்தத்தை செலவு செய்து மண்டபத்தில் நடத்திவிட்டு அவளை அழைத்துப் போக கட்டளை இட்டாள் பர்வதம்.. வேறுவழியின்றி கடனை வாங்கி சுகுமாரிக்கு சீமந்தம் நடத்தி அவளை அழைத்துப் போனார்கள்..

அழகான ஆண்பிள்ளை பிறந்தது.. மகிழ்ந்து போயினர் சுப்ரமண்யமும் ருக்மணியும்.. பையன் வீட்டிற்கு செய்தி அனுப்பியும் யாருமே வரவில்லை.. தகுந்த சீரோடு மாப்பிள்ளைக்கு தங்க அணிகலனும் வைத்து பெண்ணையும் குழந்தையையும் கூட்டி வருமாறு மறுசெய்தி சொல்லிவிட்டாள் பர்வதம்.. குருமூர்த்தி கூட தன் குழந்தையை பார்க்க வரவில்லை..

சோர்ந்து போனாள் சுகுமாரி.. மேலும் மேலும் சுமையேற நொடிந்து போனார் சுப்ரமண்யம்.. இருந்த நிலத்தை விற்று அத்தனை சீரையும் செய்து சுகுமாரியை கொண்டு விட்டார்..

பச்சை உடம்புக்காரி எனப் பாராமல் அந்தக் கூட்டம் அவளை ஏவ ஆரம்பித்தது.. குழந்தையையும் கவனித்துக் கொண்டு மற்றவர்கள் தேவையையும் நிறைவேற்றி மாடுபோல வேலை செய்தாள் சுகுமாரி.. உடல் மெலிந்து போனது..!

ஒருவருடம் செல்ல , குருமூர்த்தி காசநோயில் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையானான்.. நெஞ்சம் அடித்துக் கொண்டது சுகுமாரி.. கல்லானாலும் கணவன் என்ற ஸ்தானம் அவளை நிலைகுலையச் செய்தது.. குழந்தை பிறந்து ஒருவருடம் ஆகாத நிலையில் அவன் நோய்வாய்ப் பட்டதைக் கண்டு குழந்தையை தூற்ற ஆரம்பித்தாள் பர்வதம்..

" எந்த நேரத்ல பொறந்ததோ சனியன் அப்பன இப்டி படுக்கைல போட்டுடுத்தே.. அடியே குமாரி இந்த தரித்திரத்த அவன்கிட்ட விடாதே.. சீ.."

நாட்கள் நகர நகர குருமூர்த்தியின் நிலை கவலைக்கிடமானது.. எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனின்றி ஒரு நாள் கண்களை மூடினான் குருமூர்த்தி..

நிற்கதியான சுகுமாரி கதறி அழுதாள்.. பிள்ளையைக் கண்டு அரற்றினாள்..

பெற்ற பிள்ளைய பறிகொடுத்த பர்வதத்திற்கு வெறி ஏறியது.. " இந்த பீடை எப்பப் பொறந்ததோ அப்பவே எம்பையனுக்கு சனி பிடுச்சுடுத்து.. நன்னா இருந்தவன் அல்பாய்சுல போய்ட்டானே.. வந்த ஒரு வருஷத்துல அப்பன முழுங்கிடுத்தே.. இது இனிமே என்வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது.. தூக்கிண்டு வெளில போ.. போய்த்தொலை.. தரித்திரம் தர்த்ரம்.." குழந்தை நடேசன் மீது தன் ஆத்திரம் அத்தனையும் கொட்டித் தீர்த்தாள் பர்வதம்.. கோமதியும் சேர்ந்து கொண்டு சுகுமாரியை கரித்துக் கொட்டினாள்..

" இவ வந்த வேளை தாம்மா.. எங்கண்ணனுக்கு இப்டி ஆய்டுத்து.. எப்போ காலடி எடுத்து வெச்சாளோ அப்பவே இந்தாத்து சந்தோஷம் போயிடுத்து.. இனி இவ இந்தாத்துக்குள்ள இருந்தா நாம எல்லாரும் ஒவ்வொருத்தரா போக வேண்டியதது தான்.. இவள ஆத்ல சேக்காதே.. அந்த மாட்டுத் தொழுவத்துல இருக்கச் சொல்லு... இவ திமிருக்கு அது தான் தண்டனை.. மாட்டோட மாடா கெடக்கட்டும்... அப்பத்தான் புத்தி வரும் இவளுக்கு.. "

அந்த சூழலில் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது எங்கு செல்வது என மனம் புழுங்கி தவித்துப் போனாள் சுகுமாரி.. ஈமக் காரியம் எல்லாம் முடிய ,மாட்டுத் தொழுவத்தில் ஓர் வேலைக்காரி போல் ஆனாள்..

கொள்ளையிலே பாத்திரம் கழுவ துணி துவைக்க மாட்டைக் கழுவஎன எல்லா வேலையையும் அவள் தலையில் கட்டினர்.. என்றாவது ஒரு நாள் தன்னையும் தன் குழந்தையையும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் மீந்து போன சாதத்தை சாப்பிட்டு வாழ்ந்தாள் சுகுமாரி..

நாட்கள் மெள்ள நகர , தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தான் நடேசன்.. கஷ்டத்திலும் அவனது பிஞ்சு மொழி அவளை மனம் குளிரச் செய்தது.. அவனது கள்ளச் சிரிப்பில் கரைந்து போனாள்.. இப்படியே சில நாள் செல்ல..

அன்று...

வேலையில் மூழ்கி இருந்த சுகுமாரி கவனிக்காத பொழுது நடேசன் தத்தி தத்தி நடந்து வீட்டின் உள்ளே சென்றான்.. அங்கு சுந்தரவல்லி விளையாட்டாய் அவனைக் கொஞ்ச.... அவ்வளவே...

ஆவேசமாக வெளியில் வந்தாள் கோமதி..

" ஏன்டி.. உனக்கு அவ்வளவு திமிராப் போயிடுத்தா.. உன் குழந்தைய உள்ள அனுப்ச்சு ஒறவு கொண்டாடப் பாக்கறியா.. அப்படியே நீயும் ஒட்டிக்கலாம்னு.. அந்த சனியன் எங்க எல்லாரோட உயிரையும் எடுத்துண்டு போறதுக்கா.. எம்பொண்ணு சின்ன குட்டின்னு அவளோ ஸ்நேகம் பண்ண வெச்சு சாதுச்சிடலாம்னு நெனப்போ.. அம்மா.. இங்க வா... " அவள் கத்திய கத்தில் வீடே அங்கு திரண்டது..

பர்வதம் தன் பங்கிற்கு சத்தமிட.. அதற்கு மேல் பொறுக்காத சுகுமாரி முதன் முறையாக எதிர்த்து பேசினாள்..

" அப்படி என்ன என் குழந்தை பண்ணிடுத்து.. எதோ தெரியாம உள்ள வந்துட்டான்.. நான் கவனிக்கலை.. அவன் உன் அண்ணன் பையன் தானே.. அவனுக்கும் இந்தாத்ல உரிமை உண்டு தானே.. " சுகுமாரி படபடவென பேச வெறித்தாள் கோமதி..

" பாத்தியாம்மா இவ திமிர.. உரிமை உண்டாமே.. அந்த குழந்தைய வெச்சு சொத்துல பங்கு வாங்கிக்கலாம்னு திட்டம் போட்ருக்கா.. எவ்ளோ நெஞ்சழுத்தம் பாரு.." தன் நந்துருணித் தனத்தை ஆரம்பித்தாள் கோமதி.. கண்கள் சிவந்தாள் பர்வதம்..

" புள்ளையே போய்ட்டான்.. அவன் பெத்தது இங்கெதுக்கு.. பங்கு போட நீயாருடி.. பிச்சக்கார குடும்பத்துல பொறந்துட்டு எஞ்சொத்த ஏப்பம் விட பாக்கறியா... மொதல்ல உன் புள்ளைய தூக்கிண்டு இங்கேத்து வெளிய போடி.. பாவம் பாத்து சோத்தப் போட்டா எஞ்சோத்துலயே கைய வெக்கறியா வீணாப் போனவளே... டி கோமதி அவ பெத்தத தூக்கி வெளில வீசுடி.. தூக்கிண்டு போட்டும்.." பர்வதம் கத்த உள்ளே ஓடினாள் கோமதி...

" ஏய்.. நில்லுடி.. எங்குழந்தை மேல கைய வெச்சே.. அப்பறம் உன் கை இருக்காது.... "உக்ரமானாள் சுகுமாரி.

அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து வெலவெலத்துப் போயினர்..

வேகமாக உள்ளே நுழைந்து நடேசனை இடுப்பில் இடுக்கிக் கொண்டு கம்பீரமாக வெளியில் வந்தாள் சுகுமாரி..

"உங்கள மாதிரி கேடுகெட்டவாகிட்ட இருந்தா என் குழந்தையும் கெட்டுப் போயிடும்.. என் ஆத்துக்காரர் வாழ்ந்த இடத்துல இருக்கனும் , சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுன்னுதான் , பிச்சைகாரி மாதிரி நீங்கள்ளாம் நடத்தினப்பையும் இத்தன நாள் வாயப் பொத்திண்டு இருந்தேன்.. உங்க சொத்துபத்துக்காக இல்லே.. மனசு மாறி என்னையும் குழந்தையையும் ஏத்துப்பேள்னு நம்பினேன்.. எப்போ என் குழந்தையையே தூக்கி எறியத் துணிஞ்சேளே இனிமே உங்க சொந்தமும் வேண்டாம் பந்தமும் வேண்டாம்.. என் குழந்தைய ராஜாமாதிரி வளக்க நேக்கு தெரியும்.. எப்பாடு பட்டாலும் என் குழந்தைய வளத்து காமிப்பேன்.. அந்த வைராக்யம் நேக்கு இருக்கு.. இனிமே உங்க யாரு முகத்லையும் முழிக்க மாட்டேன்.. இது சத்யம்.. உறவு அத்து போயாச்சு.. இனிமே என் குழந்தை வாழ்க்கைல கேடு செய்யனும் நெனச்சேள்
இந்த சுகுமாரி ஆங்காரி ஆயிடுவேன் ஜாக்ரதை.." மூச்சிறைக்கக் கூறிவிட்டு அவர்கள் முகத்தில் விழிக்காமல் நடேசனை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் சுகுமாரி..!

பேயறைந்தது போல் அனைவரும் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்..!

பவித்ராவும் பங்கஜமும் அதிர்ச்சி விலகாது பார்த்துக் கொண்டிருக்க , நடேசன் கண்களில் நீர் மெள்ள வழிந்து ஓடியது.. சுகுமாரியின் கால்களை கட்டிக் கொண்டார்..

" அம்மா.. நீ.. நீ இத்தன கொடுமையைத் தாங்கிண்டு என்ன வளத்தியா.. ஒரு... ஒரு வார்த்தை கூட இது வர சொன்னதில்லையே... " அவர் கலங்க அவரது தலையை மென்மையாக வருடினாள் சுகுமாரி..

" எல்லாம் உனக்காகத்தான் நடேசா.. என் குழந்தைய யார் எது சொன்னாலும் என்னால தாங்க முடியாது.. மறுபடியும் அதே குடும்பத்துல எப்டி என் பேத்திய குடுப்பேன்.. சொல்லு.."

பாட்டி கேட்க.. அத்தனைபேரிடத்திலும் அமைதி மட்டுமே பதிலாக வந்தது..!!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 26

சுகுமாரி கேட்ட கேள்விக்கு பதிலறியாமல் அந்த இடமே அமைதியில் ஆழ்ந்தது..!

" ஹ்ம்ம்ம்.. சொல்லப்டாது... வாயால சொல்ல முடியாத அளவு கஷ்டப்பட்ருக்கேன்.. குழந்தையோட பொறந்தாத்துக்கு வந்தேன்.. இருந்த நிலம்புலம்லாம் வித்து கஷ்ட ஜீவனத்துல இருந்த அப்பாக்கு சுமையா நானும் சேர்ந்துண்டேன்.. பொண்ணு வாழ்க்கை இப்டி ஆயுடுத்தேன்னு புழுங்கிப் புழுங்கி ஒரு நாள் அவரும் போய் சேர்ந்துட்டார்.. அம்மா மட்டுமே துணையா இருந்தா.. எனக்கு படிப்பு அவ்வளவா கிடையாது.. ஆனா, ஒரு வேலை சொன்னா அத சட்டுன்னு புடுச்சுண்டு பண்ணிடுவேன்.. இருக்கறதெல்லாம் வித்து வித்து சாப்டாச்சு.. ஒரு கட்டத்லே ஜீவனம் நடத்தவே காசு இல்லாம போயுடுத்து.. மாத்து துணி இல்லாமே , சாப்பாட்டுக்கே கஷ்டம்... அம்மா வடாம் வத்தல்லாம் நன்னாப் பண்ணுவா.. அவளன்ட கத்துண்டு வடகம் வத்தல் போட்டு பிழைக்கலாம்னு தொடங்கினேன்.. அம்மா முடியாதவ.. என்ன பாத்து பாத்து வேற அவ தினம் அழுது அழுது சுகவீனமாயிட்டா.. அதனால நானே பண்ண ஆரம்பிச்சேன்.. ஆரம்பத்ல யாரும் வாங்கலே.. ஆத்லயே உட்காந்திருந்தா நடக்காதுன்னு உன்னையும் இடுப்புல தூக்கிண்டு வீடு வீடாப்போய் விக்க ஆரம்பிச்சேன்.. ஏதோ ஒன்னு ரெண்டு விக்கும்.. ஆனா நான் மனம் தளரலை.. உன்ன நல்லபடியா வளக்கனும்கற வைராக்யம் என் மனசுல ஊரிண்டே இருந்தது.. உன்ன நன்னா படிக்க வெச்சு , தலை நிமிந்து நீ வாழப் பாக்கனும்கறது தான் என்னோட சிந்தனை முழுக்க இருந்தது.. தனிமனிஷியா இந்த சமூகத்ல வாழறது ரொம்ப கஷ்டமாத்தான் இருந்தது.. பலரோட ஏச்சு பேச்சும் , தப்பான பார்வையும்... ஹூம்.. அத்தனையிலும் என்னையும் காத்துண்டு உன்னையும் நான் நெனச்சபடி நன்னா வளத்தேன்.. நீயும் நன்னா படிச்சு நல்ல உத்யோகத்த தேடின்டே.. ம்ஹ்ம்..... நான் கஷ்டப்பட்டதுக்கு நீ எனக்கு நிம்மதிய குடுத்தே ராஜா.. மனசு குளுந்துதான் போயிருந்தது.. ஆனா... விதி இப்படி வலிய வந்து நம்ம குடும்பத்துக்கு வினை செய்யும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கலே.. " கண்களில் நீர் நிறைய தலை குனிந்தாள் சுகுமாரி..

" அம்மா.. அம்மா.. அப்படி எதுவும் நடாக்காதும்மா.. நான் அது நடக்க விடமாட்டேன்.. அத்துப் போன உறவு அத்துப் போனதாவே இருக்கட்டும்.. பவிக்கு வேறு நல்ல மாப்ளையா பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணத்த பண்றேன்.. நீ பட்ட கஷ்டத்துக்கு நம்ம குடும்பம் நன்னா வாழனும்மா.. " நா தழுதழுக்கக் கூறினார் நடேசன்..

பவித்ராவிடம் திரும்பி.. " பாட்டி சொன்னதெல்லாம் கேட்டேல்யோ.. அந்த குடும்பம் நமக்கு வேண்டாம்.. இனியும் அவன்தான் வேணும்னு பிடிவாதம் பிடிக்க மாட்டேன்னு நம்பறேன்.. உன்ன பொண்ணு பாக்க வரேன்னு சொன்னவாள்ட பேசி சம்மதிக்க வைக்கறேன்.. அவனையே முடுச்சுடலாம்... இதுல எந்த மாத்தமும் இல்லே.." கூறிவிட்டு நகர்ந்தார்..

பவித்ராவிற்கு தலையில் இடியை இறக்கியது போல் இருந்தது.. எதுவும் பேச இயலாமல் தடுமாறினாள்.. ஒரு புறம் ரிஷி , மறுபுறம் பாட்டி.. மனம் நிலையில்லாமல் அலை பாய்ந்தது.. பாட்டியின் மீது பரிதாபம் ஏற்பட்ட போதும் ரிஷியை மறப்பது ஆகாத செயலாய் இருந்தது.. மனப் போராட்டத்தில் இடிந்து போனாள்.. எல்லாம் முடிந்தது போல் ஓர் உணர்வு.. தானும் ஜடம்போல வாழவேண்டும் என்பதை நினைக்க நினைக்க கண்ணீர் அருவிபோல பொங்கியது.. சத்தமாக அழ முடியாமல் அறைக்குள் நுழைந்து குமுறினாள்.. பங்கஜத்திற்கு யாரை சமாதானப் படுத்துவது எனத் தெரியாமல் தவித்தாள்..

பொழுதெல்லாம் எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்திருந்தாள் பவித்ரா.. நினைக்க நினைக்க உள்ளுக்குள் ரணம் ஏறிக்கொண்டே போனது.. இனி இந்த வாழ்க்கை வேண்டுமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.. யாரிடமாவது தன் ஆற்றாமையை கொட்டி அழுது தீர்க்க வேண்டும் போல் இருந்தது பவிக்கு.. நெஞ்செல்லாம் அடைத்த வலியில் மூச்சு முட்டிப் போனது.. இரண்டு நாட்கள் இப்படியே கடக்க , காலேஜிற்கு செல்லவும் பிடிக்காமல் வீட்டில் இருக்கவும் பிடிக்காமல் மொட்டை மாடியே கதியென கிடந்தாள்.. தன் நிலை உணர்ந்து பாட்டி மனம் இறங்குவாளா என தவித்தாள்.. பாட்டி தன் முடிவில் தீர்க்கமாய் இருந்தாள். மறுபடியும் பாட்டியிடம் எப்படி பேசுவது என வழி தெரியவில்லை.. உள்ளுக்குள் புகைந்து புகைந்து மருகினாள்..!

பங்கஜத்திற்கு தன் மகளின் நிலை கண்டு மனம் கலங்கியது.. ஆறுதலான வார்த்தைகளைக் கூறி அவ்வப்பொழுது தேற்ற முயன்றாள்..

" பவி.. ஏன்டி இப்டி வாழ்க்கைய இழந்தவ மாதிரி இருக்கே.. நாம நினைக்கறது எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்க முடியாதும்மா.. விதி ரொம்ப வலியது.. அது அதன் போக்குல தான் நம்மள இழுத்துண்டு போகும்.. எங்கயோ இருந்தவன உன்ன பாக்க வெச்சு மனச சலனப்படுத்தி , அவனே நம்ம உறவுக்காரனாக்கி இப்போ தள்ளி நிக்க வைக்கறது.. இத்தனைக்கும் அவன் உன்ன கல்யாணம் பண்ணிக்க முறை உள்ளவன்தான்.. என்ன பண்றது.. இத்தன கொடுமைய பாட்டிக்கு பண்ணிட்டாளே அவா.. அந்த கஷ்டம் நீயும் படப்படாதுன்னு தானே பாட்டி பதறரா.."

"
பாட்டி சொல்றதுலயும் அர்த்தம் இருக்கத்தானே செய்யறது.. உன் பாட்டிக்கே இத்தன கொடுமை பண்ணவா அவ பேத்தின்னு தெரிஞ்சா உன்ன என்ன பண்ணுவா.. சொல்லு.. தெய்வாதீனமா அந்த மாமி வாயாலயே உண்மைய வர வெச்சு , சரியான சமயத்ல உன்ன காப்பாத்திட்டார் பகவான்.. எல்லாரும் ஒத்துண்டப்பறம் எதுக்காக அவாள பத்தி பாட்டி கேக்கனும்... அந்த மாமி சொல்லனும்.. பெருமாள் இருக்கார்.. புருஞ்சுக்கோ பவி.. இன்னிக்கு அவன் நமக்கு இல்லையேன்னு வருத்தமாத் தான் இருக்கும்.. ஆனா , அவன கல்யாணம் பண்ணின்டு நீ நரக வேதனைய அனுபவிச்சா... அப்ப தோனும்.. பாட்டி சொன்னது சரின்னு.. அதனால மனச போட்டு அலட்டிக்காம எல்லாம் கனவா நெனச்சு மறந்துடு.. உனக்குன்னு நல்ல வாழ்க்கை அமையும்.. கலங்காதடி பட்டு.. பெத்த வயிறு துடிக்கறது.. நீ சாப்படாம இருக்கறத பாத்தா நேக்கு சோறு எறங்க மாட்டேங்கறது.. தயவு செஞ்சு எல்லாத்தையும் மறந்துட்டு புது மனிஷியா வாடி கண்ணு.. அப்பத்தான் என் மனசு ஆறும்... "

" மறந்துடு மறந்துடுங்கறயேம்மா... எப்டிமா முடியும் , நெனச்ச உடனே தூக்கி எறியறதுக்கு.. இத்தன போராட்டுத்துக்கு நடுவுலயும் அவருக்கு நான் தான் எனக்கு அவர்தான்னு தீர்க்கமா ரெண்டு பேரும் இருந்ததாலதானேம்மா இத்தன தூரம் அவர் வந்து பாத்து , பேசி... ம்ஹ்ம்ம்... மார்கழி மாசம் எப்போ அவர பாத்தேனோ.. அந்த கோதை மாதிரி நானும் அவர என் மனசுல ஏத்துண்ட்டேன்மா.. இனி வேற கல்யாணம் வேற ஒருத்தன்னு என்னால.. என்னால.. மனச மாத்திக்க முடியாதும்மா... ஆண்டாளப் போல நானும் அவர நெனச்சுன்டே கன்னியாவே காலத்த கழுச்சடறேன்.. அந்த கிருஷ்ணனுக்கு கருணை இருந்தா எங்கள சேத்து வைக்கட்டும்.. இல்லைனா இப்டியே இருந்துட்டு செத்துப் போயிடறேன்.. வேற யாரோடையும் வாழ என்னால முடியாது..." பவி தீர்க்கமாய் சொல்ல பங்கஜம் கலக்கம் கொண்டாள்..

" இப்டி அடம்பிடிக்கறியே பவி.. அப்பா இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டார்.. யார்கிட்ட போய் நான் மண்டியிடறது.. பகவானே.. எம்பொண்ணு வாழ்க்கைல இப்டி விளையாடறியே.. நீதான் அவளுக்கு நல்லவழி காட்டனும்.." கவலை கொண்டபடி பூஜை அறைக்கு சென்றாள் பங்கஜம்..

சிறிது நேரத்தில்..

போன் அடித்தது.. சுரத்தில்லாமல் பார்த்தாள் பவித்ரா. ரிஷி அழைத்துக் கொண்டிருந்தான்.. மனது முழுக்க சங்கடத்தில் பிசைய அவனிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் பரிதவித்தாள் பவித்ரா.. இரண்டு மூன்று முறை அவன் அழைத்தும் எடுத்துப் பேச மனம் வரவில்லை.. சிறிது நேரம் விட்டு அவன் மறுபடியும் அழைக்க... நடுங்கும் கைகளுடன் எடுத்து காதில் வைத்தாள்..

" ஹலோ... ஹலோ.. பவி... எ... என்ன ஆச்சு.. ஏன் போன எடுக்கல.."

அமைதியாக இருந்தாள்..

" பவி.... லைன்ல இருக்கியா.. ஹலோ.." கொஞ்சம் பதட்டமானான்..

" ம்ம்ம்.... " மெள்ள முனகினாள்..

" ஹப்பா.. என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்... ஆர் யூ ஓகே.. "

" ம்ம்ம்... " அழுகை முட்டிக் கொண்டு வந்தது..

" அப்பறம்.. எதாவது விஷயம் தெரிஞ்சதா.. பாட்டிக்கிட்ட பேசினியா.. மூனு நாளா எனக்கு போனே பண்ணலயே.."

எதைச் சொல்வது.. எப்படி சொல்வது எனத் தடுமாறினாள்.. " பே.. பேசிட்டேன் ரிஷி.. "

" அப்படியா.. என்ன சொன்னாங்க.. அம்மாவ அவங்களுக்கு எப்டி தெரியுமாம்.. என்ன விஷயத்துனால அவங்க அப்டி பேசினாங்க.. பழய பகையா.. எதாவது அம்மா தப்பு பண்ணிட்டாங்களா.. என்னன்னு சொன்னா சரி பண்ண பாக்கலாம்.. " அவன் கேள்விகளை அடுக்க..

" பாட்டி....... அ... அம்மாவோடு மாமி..."

" வாட்... மாமின்னா.. மாமாவோட ஒய்ஃபா.. அப்போ.. அ.. அம்மாக்கு தெரிஞ்சிருக்கனுமே.. எ.. எப்டி.. " அவன் குழம்பிப் போக..

பவி முழுக்கதையும் போனில் எப்படி விளக்குவது எனத் தடுமாறினாள்.. " ரிஷி.. பாட்டி... பாட்டி... ரொம்ப ஹர்ட் ஆகிருக்காங்க.. அது வெரி சாட் ஸ்டோரி.. எ.. எல்லாத்தையும்.. போன்ல பேச முடியாது.. ஆனா... ஒன்னு மட்டும் நிச்சயம்.. ந.. நம்ப கல்யாணம் ந... நடக்காது.. " கனத்த குரலுடன் பவி கூற.. அதிர்ந்தான் ரிஷி..

" எ... என்ன சொல்ற பவி.. புரியறமாதிரி சொ.. சொல்லு.. வேற வழியே இல்லியா.. அப்டி என்ன நடந்தது.."

" எதுவும் பேசற மனநிலைல இப்ப நான் இல்ல ரிஷி.. உ.. உங்களுக்கு நான் இல்லன்னு.. தெரிஞ்சுபோச்சு.." பவி உடைய..

" பவி... ப்ளீஸ்.. எதா இருந்தாலும் நான் சரி பண்றேன்.. தயவுசெஞ்சு மனச தளர விடாத... ப்ளீஸ் பவி.. உன்ன பாக்க முடியுமா.. நீ... நீ வரமுடியுமா..."

" ஹ்ம்ம்.... "

" நாளைக்கு ஈவினிங் அம்மா கோயிலுக்கு போனும்னு சொன்னாங்க.. அங்க வரியா.. அவங்களுக்கும் விஷயம் தெரிஞ்சா இதுக்கு ஒரு ரூட்காஸ் கண்டுபிடிக்கலாம்.. வந்துடறியா.."

" ம்ம்ம்... சரி.." நம்பிக்கை இன்றி தலை அசைத்தாள்..

மறுநாள் மாலை...

கொஞ்சம் படபடப்பாக இருந்தாள் பவி.. ரிஷியை பார்க்க செல்வது அப்பாவுக்கோ பாட்டிக்கோ தெரிந்தால் அவ்வளவுதான்.. பெரிய பூகம்பமே வெடித்துவிடும்.. கோயிலில் வேறு யாரும் பார்த்துவிட்டால்.. பயம் அடிவயிற்றை கவ்வியது.

நேரம் வேறு ஆகிக் கொண்டே போனது.. கடிகாரத்தை பார்த்து பார்த்து தவித்தாள்.. ஏனோ கைகாலெல்லாம் நடுங்கியது.. மனதில் ஓர் சஞ்சலம் பரவ அப்படியே அமர்ந்திருந்தாள்.. அவனுடன் சேர வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் உழன்றாலும் உடலின் சக்தியெல்லாம் வடிந்து போக எழத் திராணியின்றி உட்காந்திருந்தாள்.. சுந்தரவல்லி தன்னைக் கண்டு என்ன சொல்வார்களோ.. அன்று பாட்டி விரட்டியது போல் தன்னை கண் கொண்டு பார்க்காமல் விரட்டி விடுவாளோ என்ற சிந்தனை அடிவயிற்றை பிசைந்தது.. போவதா வேண்டாமா என்ற குழப்பம் மேலிட தயக்கத்துடன் இருந்தாள்.. மணி ஆறாக போன் ஒலித்தது.. ரிஷிதான் அழைத்திருந்தான்..

நடப்பது நடக்கட்டும் என எழுந்து தயாரானாள்.. பங்கஜம் உள்ளே வந்தாள்.. " என்ன பவி.. எங்க கிளம்பிட்டே.. "

" ம்ம்ம்.. கோ.. கோயிலுக்குமா.. மனசு சரியில்லே.. அதான் கோயிலுக்கு போயிட்டு வரலாம்னு.."

பங்கஜம் அவள் முகத்தை ஆராய்ந்தாள்.. பவியின் கண்களில் தெரிந்த மெல்லிய பயம் அவளுக்கு புரிந்தது... சிறிது நேரம் அவளை கூர்ந்து பார்த்தவள்.. " தனியாப் போறியா.. நானும் வரட்டுமா பவி.."

பவி மெள்ள அதிர்ந்தாள்.. " இ.. இல்லம்மா.. நா.. நானே போய்ட்டு வந்துடறேன்.."

" ம்ம்ம்.. பாத்து போய்ட்டு வா பவி.. பெருமாள்ட்ட உன் கவலையெல்லாம் கொட்டிட்டு வா.. நல்லது நடக்கட்டும்.. அப்பா வர்ரதுக்குள்ள போய்ட்டு வந்துடு.. சரியா.. " அர்த்தத்துடன் அவளுக்கு விடை கொடுத்தாள் பங்கஜம்.

கிளம்பி கோயிலை அடைந்தாள் பவித்ரா.. என்ன பேசுவது.. சுந்தரவல்லியை எப்படி எதிர் கொள்வது என கலக்கத்துடன் கோயிலுக்குள் நுழைந்தாள்.. சுற்றும் முற்றும் அவர்களைத் தேடியபடியே நடந்தாள்.. போனில் ரிஷியை அழைத்து பேசலாமா என நினைக்க , சந்நதியின் உள்ளிருந்து ரிஷியும் சுந்தரவல்லியும் வெளிப்பட்டனர்.. முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தையின் மனநிலையோடு தயங்கித் தயங்கி முன்னே சென்றாள் பவி.. பின்னால் திரும்பி சந்நதியை சேவித்துவிட்டு திரும்பிய சுந்தரவல்லியின் முன் போய் நின்றாள்.. எதேச்சியாக திரும்பிய சுந்தரவல்லி ,பவித்ராவைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்து போனாள்.. மின்னிய கண்கள் கண நேரத்தில் கோபமாக மாறியது.. தலையை திருப்பிக் கொண்டு நடந்தாள்.. அருகில் நின்றிருந்த ரிஷி , அவளை அழைத்தான்.. " அ.. அம்மா.. பவி வந்திருக்கா.. உ.. உன்ன பாக்க.."

" என்ன யாரும் பாக்க வேண்டாம்.. இங்கிதமே இல்லாம வெளில துரத்தினவாட்ட எனக்கென்ன பேச்சு.. எனக்கு மானம் மரியாதை இருக்கு.. ரிஷி.. வா போலாம்.. " கூறிவிட்டு நகர்ந்தாள்.. ரிஷி பவியிடம் பேசு என செய்கை காட்ட வேகமாக சுந்தரவல்லியின் முன் போய் நின்றாள்..

" மாமி.. ப்ளீஸ்.. ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்றத கேக்க முடியுமா.. "

" உன்கிட்ட எனக்கென்ன பேச்சு.. வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்.. இவன் நீதான் வேணும்னு அழுச்சாட்யம் பண்ணதால உங்காத்துக்கு வந்தேன்.. என்கிட்ட பணியறாமாதிரி பேசி என்ன சம்மதிக்க வெச்சு , வேணுமின்னே கடைசில அசிங்க படுத்திட்டேள்.. எனக்கென்ன தலையெழுத்தா.. கண்டவாள்ட்ட பேச்சு வாங்கறதுக்கு.. இது வரைக்கும் யாரும் என்கிட்ட இப்படி தரக்குறைவா நடந்துண்டதில்ல.. நானும் அப்படி சீப்பட்டவ இல்லே.. அப்படி என்ன கொலைகுத்தம் பண்ணிட்டேன்னு உங்க பாட்டி கோவமா பேசினா.. பெரியவான்னு மரியாதை குடுத்து பேசினது என்தப்பு.. ஹ்ம்.. உங்க பாட்டி உங்க பூர்வீகம் யாரு எவர்னு கூட நேக்கு தெரியாது.. என்கிட்ட எதுக்கு கோவப்படனும்.. இனி யார் சொன்னாலும் ஏன் உன் பாட்டியே என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டாலும் இந்த கல்யாணம் நடக்காது.. என்ன, குடும்பத்தோட நாடகமாடறேளா.. என்ன பாத்தா எப்டி தெரியறது.. எதோ பழகின பாவத்துக்கு உன் குணத்துக்குத்தான் அன்னிக்கு பேசாம வெளில போய்ட்டேன்.. இல்லைனா இந்த சுந்தரவல்லிய பத்தி தெரிஞ்சிருக்கும்.. இனிமே உன்கிட்ட பேச எதுவுமில்லை.. நீ கெளம்பிடு.. என் பையன் மனச கலச்சதெல்லாம் போதும்.. இனி அவன தொந்தரவு பண்ணே நான் சும்மா இருக்க மாட்டேன்.. " பொறிந்து விட்டு நடக்க ஆரம்பித்தாள் சுந்தரவல்லி..

ரிஷிக்கே சுந்தரவல்லி பேசியது அதிர்ச்சியை தந்தது.. பவி அதற்குமேல் பேச தடுமாற ஓடிச் சென்று அம்மாவை நிப்பாட்டினான்.. " அம்மா.. ப்ளீஸ் கொஞ்சம் நில்லு.. உன் கோபம் நியாயம் தான்.. எனக்கும் அன்னிக்கு கோபம் வந்தது.. இவ பாட்டி கத்தினதுக்கு இவ எப்டி பொறுப்பாக முடியும்.. அவளுக்கே அது அதிர்ச்சியாத்தான் இருந்தது.. அவ நிலைலேந்து பாரும்மா.. என்ன நடந்ததுன்னு தெரியாம நீ சத்தம் போடறது நன்னால்ல மா... அவ சொல்ல வர்ரத கொஞ்சம் கேளு.. ப்ளீஸ்.. " ரிஷி சமாதனமாய் பேச , பவியை முறைத்தாள் சுந்தரவல்லி..

" அப்படி என்ன பெரிய சிதம்பர ரகசியத்த சொல்லப் போறா.. சொல்லச் சொல்லு.. உனக்காக இதையும் கேட்டுக்கறேன்.. இப்போ நீ தானே பெரிய மனுஷன்.. ஹ்ம்.. சொல்லவந்தத சொல்லிட்டு போடிம்மா.. அப்பறம் இதுக்கும் என்ன போட்டு இம்சிப்பான்."

" எ... எங்க பாட்டி சுகுமாரி.. உ.. உங்க மாமாவோட ஆத்துக்காரி.. உங்க மாமி.."

" என்னது... மாமியா.. இது என்ன கட்டுகதை..."

" பாட்டி தான் சொன்னா.."

" ஹூம்.. எனக்கு நாலு மாமாக்கள்.. நாலு மாமிகளையும் நேக்கு தெரியும்.. எனக்கு தெரியாம எங்கேந்து மொளச்சா இந்த புது மாமி... யாரையோ நெனச்சுண்டு உங்க பாட்டி புத்தி சுவாதீனம் இல்லாம உளரிருக்கா.. அதையும் நம்பின்டு வந்துட்டே.. ஹூம்.. மாமியாம்.." சுந்தரவல்லியின் முகத்தில் ஏளனம் தாண்டவமாடியது..

மூச்சை ஒரு முறை இழுத்து வெளிவிட்ட பவித்ரா மெதுவாக கேட்டாள். " உங்களுக்கு குருமூர்த்தின்னு ஒரு மாமா இருந்தாரா.. "

சுந்தரவல்லியின் முகம் சட்டென மாறியது.. குழப்ப ரேகைகள் முகமெங்கும் பரவியது..

" அ.. அவர்... என் மூத்த தாய் மாமா.. அவர்.. அவருக்கென்ன.. அவர் நான் சின்ன பொண்ணா இருக்கும் போதே போய்ட்டாரே.. "

" அவரோட ஆத்துக்காரிதான் என் பாட்டி... பேர் சுகுமாரி.."

" என்னது.. " அதுவரை படபடப்பாக பேசிக் கொண்டிருந்த சுந்தரவல்லியின் கண்கள் சுறுங்க சிந்தனை பின்னோக்கி நகர்ந்தது.. யோசனையுடன் ஓரமாய் அமர்ந்தாள்.. சிறிது நேரம் அமைதியில் கடந்தது.

" எனக்கு நாலஞ்சு வயசிருக்கும் போதே அவர் போய்ட்டாரே.. அவரோட ஆத்துக்காரி பண்ண கொடுமையாலதான் அவர் அல்பாயிசுல செத்து போய்ட்டார்னு எங்கம்மா சொல்லிருக்கா.. அதுக்கபறம் அந்த மாமி சொத்த குடுக்க சொல்லி சண்டை போட்டுண்டு ஆத்தவிட்டே போய்ட்டான்னு சொல்லக் கேள்வி.. அதுக்கப்பறம் அவாளப் பத்தி எங்காத்ல பேசினது இல்லே.. எனக்கு அ.. அவாள பாத்த ஞாபகம் இல்லயே... "

" நீங்க அவளா பாத்திருக்கேள்.. எங்க அப்பாவோட விளையாடி இருக்கேள்.. சின்ன வயசுல.." பவி கூற சுந்தரவல்லி புரியாமல் கண் விரித்தாள்..

" என்ன.. நேக்கு.. நேக்கு தெரியுமா.. என்ன சொல்றே.."

" உங்காத்து வேலைக்காரிய ஞாபகம் இருக்கா.. அவா குழந்தை.. மாட்டுத் தொழுவத்துல தங்கி வேல பாத்தாளே.." பவி பூடகமாய் கேட்க சுந்தரவல்லியின் புருவம் நெறிந்தது.. சிறு வயது நினைவுகளை திரும்ப நினைவுக்கு கொண்டு வர கண்களை குறுக்கினாள்..

சிறிது நேரம் நகர குறுகிய கண்கள் விரிந்து ஒளிர்ந்தது.. " ஆ... ஆமா.. கொள்ளைல ஒரு மாமி பத்துபாத்ரம் தேய்க்க துணி துவைக்கன்னு இருந்தா.. அவா.. அவாளுக்கு என்ன.." குழப்பத்துடன் சுந்தரி பார்க்க..

" அவங்கதான் உங்க மூத்த மாமி.. குருமூர்த்தி மாமாவோட ஆத்துக்காரி.. என் பாட்டி சுகுமாரி.. " பவி கூற ஒரு நிமிடம் அதிர்ந்து அவளை பார்த்தாள் சுந்தரவல்லி..

" எ.. என்ன சொல்றே... " வார்த்தைகள் தடுமாற..

" ம்ம்ம்.. ஆமா.... அவங்க.. "அருகில் அமர்ந்து பவித்ரா பாட்டியின் கசப்பான வாழ்க்கைக் கதையை கூற ஆரம்பித்தாள்..

பவி ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல சுந்தரவல்லியின் முகம் அதிர்ச்சியில் உறைந்து போனது.. ரிஷியும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனான்..!

பவி பொறுமையாக நிதானமாக பாட்டிக்கு நடந்த கொடுமைகளை ஒவ்வொன்றாக காலக் குறிப்புடன் விளக்க , சுந்தரவல்லிக்கு முகம் வியர்வை வழியக் கன்னிப்போனது.. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர இயலாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்..

" இப்ப சொல்லுங்க.. பாட்டி கோவப்பட்டது தப்பா.. அவா நிலைல இருந்தா யாரா இருந்தாலும் அப்படி தானே யோசிப்பா..." பவி கேட்க பெருங்குழப்பத்துடன் பதிலளிக்காமல் அமர்ந்திருந்தாள் சுந்தரவல்லி..

நேரம் கடந்து கொண்டே இருந்தது..

" நான் இப்போ சொன்னதெல்லாம் உண்மை.. என் பாட்டி பொய் சொல்ல மாட்டா.. நானும் தான்.. என் பாட்டி பட்ட ரணத்துக்கு மருந்தே இல்ல.. ஆறாத வடு அது... எந்த பொண்ணுக்கும் நடக்கக் கூடாதத என் பாட்டி அனு அனுவா அனுபவிச்சிருக்கா.. வீட்ட விட்டு வெளில வந்தப்பறம் அவ பட்ட கஷ்டத்த கேக்க என்னாலயே முடியலே.. அதையெல்லாம் தாங்கிண்டு வைராக்யத்தோட என் அப்பாவ வளத்து ஆளாக்கி இருக்கா.... ஹ்ம்ம்.. எனக்கும் அப்படி ஆயிடுமோ பயந்து , மறுபடியும் இன்னொரு ரணம் வேண்டாம்னுதான் அன்னிக்கு நீங்க யாருன்னு தெரிஞ்ச உடனே உங்கள வெளில போகச் சொல்லிட்டா.. " பவி நிறுத்த அங்கு ஓர் வெறுமை பரவியது..

" இனிமே நான் சொல்றதுக்கு எதுவுமே இல்லே.. உயிருக்கு உயிரா நேசிக்கற ரிஷி ஒரு பக்கம் , பாசப் போராட்டத்துல இருக்கற பாட்டி ஒரு பக்கம்.. ரெண்டுக்கும் நடுவுல நான் தத்தளுச்சுண்டு இருக்கேன்.. வேற கல்யாணம் பிக்ஸ் பண்ண அப்பாவும் தீர்மானமா இருக்கார்.. என் நிலைமை யாருக்குமே புரியல.. ம்ஹ்ம்.. எங்க கல்யாணம் நடக்கறதும் நடக்காததும் , பாட்டியோட ரணத்த ஆத்தறதும் அவன் கைலதான் இருக்கு.." சந்நதி நோக்கி கை காமித்தாள்.

"பாட்டி எதுக்கு கோவப்பட்டான்னு தெரியாம நீங்க சங்கடப்படக் கூடாதுன்னுதான் இத்தனையும் சொன்னேன்.. ஹ்ம்ம்.. என் வாழ்க்கை விதிப்படி நடக்கட்டும்.. கெளம்பறேன்.." பாரம் இறங்கிய மனமுடன் பவி கூறிவிட்டுக் கிளம்ப..

சுந்தரவல்லியின் மனம் பாரத்தை ஏற்றிக் கொண்டு படபடத்தது..!

அடுத்த முடிவை நோக்கி..!!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் தங்கள்.!

அத்யாயம் - 27

பவித்ரா கூறிவிட்டு செல்ல அவளை பார்த்தபடியே அப்படியே அமர்ந்திருந்தாள் சுந்தரவல்லி.. மனமெல்லாம் பாரம் கூடி இருந்தது.. அவள் கூறியது , உண்மையில்லாப் பொய்யென ஒதுக்கவும் இயலவில்லை.. பொய்யில்லா உண்மையென்று ஏற்கவும் இயலவில்லை.. தன் குடும்பத்தில் நடந்த விஷயங்கள் பல தன்னிடம் மறைக்கப்பட்டதா , தானும் அப்பாவத்திற்கு ஆளானவளா என நினைக்க நினைக்க மனம் சஞ்சலம் கொண்டது..! பின்னோக்கி ஓடிய சிந்தனையை இழுத்துப்பிடிக்க இயலாமல் கண்கள் நிலைத்திருக்க அமர்ந்திருந்தாள்..!

" அம்மா.. அம்மா... " ரிஷி உலுக்க திடுக்கிட்டு நினைவு திரும்பினாள்..

"டைம் ஆச்சுமா.. நடை சாத்தப் போறா.. வா போலாம்.." அவன் அழைக்க மெள்ள எழுந்து சந்நதியின் முன் நின்று சேவித்தாள்.. மனம் ஏனோ தவறு செய்தது போல் சஞ்சலம் கொண்டது.. சிறிது நேரம் அப்படியே நின்று விட்டு மெள்ள நடக்க ஆரம்பித்தாள்..

ரிஷி எதுவும் பேசாமல் அவளுடன் வெளியே வந்தான்.. கோயிலில் இருந்து வெளி வந்த பின்னும் அவளால் வெளிவர இயலவில்லை.. மனம் இறுக்கம் கொண்டது..!

இருவரும் வீட்டினை அடைந்தனர்.. எந்த சிந்தனையும் இன்றி நேராக சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். விழிகள் ஓரிடத்திலேயே நிலை கொண்டது.. பாட்டியின் கதை அவளுள் ஓர் பாதிப்பை உண்டு செய்ததை ரிஷி உணர்ந்திருந்தான்.. அவளை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்தான்..

எவ்வளவு நேரத்துளிகள் அங்கு அமர்ந்திருக்கிறோம் எனத் தெரியாமல் எண்ண ஓட்டத்தில் லயித்திருந்த சுந்தரவல்லியின் சிந்தனையை கலைத்தார் சந்திரசேகர்..!

" சுந்து... சுந்து... என்ன ஆச்சு.. இப்டி உட்காந்து இருக்கே.."

" ஆ... ஒ.. ஒன்னுமில்லண்ணா.. ஒ.. ஒன்னுமில்ல.." மெள்ள தலை அசைத்தாள்.

அவளருகில் அமர்ந்தவர் தனிந்த குரலில் கேட்டார்.. " இல்லியே... எப்பவும் கலகலன்னு சுத்திண்டு இருப்பே.. இப்டி அமைதியா உட்காந்து நான் பாத்ததில்லையே.. ம்ம்ம்.. என்ன ஆச்சு.."

பெருமூச்சு எழுந்தது அவளுள்..

" அந்த பாட்டி உன்ன திட்டி அனுப்பிச்சத நெனச்சு இன்னும் வருத்தப்பட்டுண்டு இருக்கியா.. எதோ தராதரம் தெரியாம பேசிட்டா.. வயசானவா தானே.. விடு.. அந்த பொண்ணுக்கு நம்ம பையன கல்யாணம் பண்ணிக்க குடுப்பினை இல்லை.. அவ்வளவுதான்.. ஹா.." சிரிப்புடன் அவர் கூற.. பதிலேதும் கூறாமல் அமர்ந்திருந்தாள்.

அதற்குமேல் அவளை தொந்தரவு செய்ய விருப்பமின்றி தள்ளிச் சென்றார்..

தன் அம்மாவின் குணத்தையும் பாட்டி தாத்தாவின் குணத்தையும் பார்த்து பல நேரங்களில் அஞ்சி இருக்கிறாள். அந்த குடும்பத்தில் தப்பிதமாக தான் பிறந்து விட்டேனோ என பல சமயங்களில் நினைத்ததுண்டு.. ஆனால் காலப் போக்கில் எல்லாம் பழகிப் போக தானும் வீண் ஜம்பத்துடன் உலவி வந்ததை நினைவு கூர்ந்தாள்.. பவி கூறிய விஷயத்தால் தன் வாழ்வில் நடந்த அத்தனை கசப்பான நிகழ்வுகளும் நினைவுகளில் வந்து வந்து போனது.. சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் இடியாக விழுந்த அத்தனை சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கட்டி அவள் நினைவில் நிழலாடியது.. திருமணம் முடிந்து அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் அதன்தாக்கத்திலிருந்து வெளி வந்ததும் , அதனையெல்லாம் மறந்து வேறு பாதையில் பயணித்து வந்த போதும் , பவியின் சொற்கள் பழசையெல்லாம் கிளரிவிட்டு சென்றதாய் உணர்ந்தாள்..!

சமையலில் கவனமில்லாமல் , எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தாள்.. என்னவென்று சொல்லத் தெரியாத சங்கடம் நெஞ்சை பிசைந்தது..

ஒரு வாரம் இப்படியே கடக்க , அவளை கவனித்துக் கொண்டிருந்த சந்திரசேகர் மறுநாள் அவளை அமர வைத்து பேச ஆரம்பித்தார்..

" சுந்து.. உட்காரு.. உன்கிட்ட பேசனும்.."

என்ன கேட்கப் போகிறாரோ என்ற மனக் கலக்கம் வந்து வந்து போனது.. மெதுவாக அமர்ந்தாள்..

" ஹ்ம்ம்ம்... உனக்கு என்ன ஆச்சு.. ஒரு வாரமா பாக்கறேன் எதோ பறிகுடுத்தவ மாதிரி உலவிண்டு இருக்கியே... என்ன விஷயம்.. "

அப்பொழுதும் தன்குடும்பத்தில் நடந்த கொடுமைகளைச் சொல்லத் தயங்கி செயற்கைப் புன்னகை உதிர்த்தாள்.. " ஒ.. ஒன்னுமில்லையே.. நான்.. நான் நன்னாத்தான் இருக்கேன்.. ஒன்னுமில்லண்ணா.."

" சுந்து.. உனக்கு நடிக்க வராது.. இருபத்தி ஆறு வருஷமா உன்கூட வாழ்ந்துண்டு இருக்கேன்.. உன்னோட முகத்த வெச்சே கண்டுபுடுச்சுடுவேன்.. இதுவரைக்கும் ரெண்டு பேரும் எதையும் மறைச்சது கிடையாது.. அப்படித்தான் வாழ்ந்துண்டு இருக்கோம்.. ஆத்துக்காரர்னா வெறும் அதிகாரம் பண்றவன் மட்டும் இல்ல.. அனுசரனையா நடத்துக்கறவனும் தான்.. பொண்களோட கட்டுப்பாட்டுக்கு விதி போடறவன் தான் ஆனா , இரக்கம் இல்லாதவன் இல்ல நான்.. நீ சங்கடத்துல இருக்கும் போது அத பகிர்ந்துக்கதான் விரும்புவேன்.. உன்ன கைப்பிடுச்சது எந்த சூழ்நிலைலன்னு நோக்கே தெரியும் இல்லையா.. அன்னிக்கு சொன்னது தான்.. உன் சுக துக்கத்ல நேக்கும் பங்குண்டு.. உன் ஆத்துக்காரர்கற உரிமையோட கேட்கறேன்.. என்ன ஆச்சு.. சொல்லு.. சால்வ் பண்ண முடியுமான்னு பாக்கறேன்.."

தன் கல்யாணம் நடந்தவிதம் சட்டென கண்களின் முன் வந்து நிழலாட தலையை கவிழ்த்துக் கொண்டாள்.. சிறிது நேரம் அமைதியில் கடக்க..

மெள்ள தொண்டையை செறுமிக் கொண்டு பேசினாள்.. " போ.. போன வெள்ளிக் கிழமை.. அந்த பொண்ணு பவித்ராவ கோயில்ல பாத்தேன்.. என்ன பாக்கத்தான் வந்துருப்பா போல.. ரிஷி சொல்லி வந்தாளான்னு தெரியலை.. அவ.. அவ சொன்ன விஷயம் என்ன உருக்கிடுத்து.. அது.. அதுலேந்து என்னால வெளில வர முடியலை.. ஏதோ.. கில்ட்டி ஃபீலிங்.."

" என்ன சொன்னா அவ... " சந்திரசேகர் தீவிரமாகப் பார்த்தார்..

" அவ பாட்டி... சுகுமாரி.. எ.. என்னோட மூத்த தாய்மாமாவோட ஒய்ஃபாம்.."

" எ.. என்னது.. உனக்கு நாலு மாமா தானே.. அவாதான் பிரிஞ்சு போயி.. இவர் எந்த மாமா.." முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது..

கண்களில் கலக்கம் பரவ திக்கி திக்கி அத்தனையும் சொன்னாள் சுகுமாரி.. பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் அவளை கண்ணிமைக்காமல் பார்த்தார்.. அவள் எல்லாம் சொல்லி முடிக்க..

" இத அத்தனையும் நீ நம்பறயா சுந்து.. அந்த பொண்ணு பொய் சொல்லிருந்தா..."

சுந்தரவல்லி இல்லை என தீர்க்கமாக தலை அசைத்தாள்.. " அவ சொன்ன பல விஷயங்கள் என் மனசுக்கு உண்மைன்னு தான் படறது.. என் சின்ன வயசுல நடந்ததெல்லாம் அவாளுக்கு எப்படி தெரியும்.. அந்த பொண்ணு அவள ஏத்துக்கனும்கறதுக்காக இதலாம் எப்டி சொல்லுவா. அதுவுமில்லாம எங்காத்ல நடந்த விஷயங்கள் தான் உங்களுக்கு தெரியுமே.. எந்த சூழல்ல நம்ம கல்யாணம் நடந்ததுன்னு.. அம்மா பாட்டியும் அப்படித்தான்.. அதுதான் நேக்கு மனக் கலக்கமா இருக்கு.."

பெரும் அமைதியில் ஆழ்ந்தார்..

" இப்போ.. நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியலே.. ஒரு பொண்ணுக்கு மனசறிஞ்சு துரோகம் பண்ணிருக்கா.. அ.. அதுக்கு.. எனக்கு ஒன்னும் புரியல.."

அவளையே கூர்ந்து பார்த்தார்.. " அப்படிதான்னு நீ நம்பினா. தீர்வு உன் கைலதான் இருக்கு.." அவர் அர்த்தத்துடன் கூற கனமான மனமுடன் மெள்ள தலை ஆட்டினாள் சுந்தரவல்லி..!

மறுநாள் மாலை...

சுகுமாரி பாட்டி ஹாலில் அமர்ந்திருக்க , வாசலில் காரின் ஹார்ன் ஒலி கேட்டது..

யாரென பார்க்க ஸ்ரீதரை அனுப்பினாள் சுகுமாரி.. ஓடிச் சென்ற பார்த்தவன் அதே வேகத்தில் திரும்ப வந்தான்.. " பாட்டி அந்த அங்கிளும் ஆன்டியும் திரும்ப வந்துருக்கா.. கூட யாரோ ஒரு தாத்தா.."

" யாருடா அது.. " சுகுமாரி குழப்பமடைய..

" அதான் பாட்டி அன்னிக்கு நீ சண்டை போட்டியே.. அவா தான்.." அவன் கூறிக் கொண்டிருக்க சுந்தரவல்லி ரிஷி , சந்திர சேகருடன் உள்ளே நுழைந்தாள்..

பாட்டியின் முகம் கோபத்தில் சட்டென சிவந்தது..

" உங்கள யாரு வரச் சொன்னா.. எதுக்கு திரும்ப திரும்ப வந்து இம்சை படுத்தறே.. என்ன நிம்மதியா இருக்க விடமாட்டேளா... கெளம்புங்கோ.." பாட்டி சத்தமிட உள்ளுக்குள் இருந்த பங்கஜமும் பவியும் ஹாலுக்கு ஓடி வந்தனர்.. மூவறையும் கண்ட பவித்ரா திக்குமுக்காடிப் போனாள்.. எதற்காக வந்திருப்பார்கள் என உள்ளூற பயம் ஓடியது.. பங்கஜமும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அதே சமயத்தில் வேலைக்கு சென்ற நடேசனும் குழப்பத்துடன் உள்ளே நுழைந்தார்.. இவர்களைக் கண்டு பதட்டமடைந்தார்..

" எ.. எதுக்கு வந்தேள்.. ஆ.. பிரச்சனை பண்ணாம கிளம்புங்கோ.. சொல்றேன்லயோ.. கிளம்புங்கோ.. " படபடத்தார்..

" சார்.. நான் சொல்ல வர்ரத கொஞ்சம் கேளுங்கோ.. நாங்க பிரச்சனை பண்ண வரலை.. சுந்தரவல்லி பாட்டிட்ட மன்...." சந்திரசேகர் கூற வருவதை முழுமையாகக் கேட்காமல் நடேசன் குரலை உயர்த்தினார்..

" நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.. கேட்டதெல்லாம் போதும்.. இப்போ போப்போறேளா இல்லையா.. உங்க உறவே வேண்டாம்.. பேசாம போங்கோ.."

" இ.. இல்ல.. நீங்க தப்பா புரிஞ்.."

" நான் சரியாத்தான் புருஞ்சுண்டு இருக்கேன்.. குடும்பத்தோட வந்து பயமுறுத்தறேளா.. நான் நெனச்சா...."

" ஹையோ... நான் சொல்ல வர்ரத..."

மூவரும் பேச வந்ததை பேசமுடியாமல் தடுமாற...

" அப்பா......." அதிர்ந்த குரல் அனைவரையும் அமர்த்தியது.. பவித்ரா மூச்சிறைக்க நடுவில் வந்து நின்றாள்..

" கொஞ்சம் அமைதியா இருக்கியா.. அவ்ளோதூரம் பாட்டி துரத்தி அடுச்சப்பயும் திரும்ப வந்துருக்கான்னா அதுக்கு நல்ல காரணமே இருக்காதா.. சொல்லப் போனா அவா திரும்பி வரனும்கற அவஸ்யம் அவாளுக்கு இல்ல.. போடின்னு என்ன தூக்கி எறிச்சுட்டு போக எவ்வளவு நேரம் பிடிச்சிருக்கும்.. பாட்டி கதைய முழுக்க அவாளுக்கு சொல்லிட்டேன்.. அவா என்ன சொல்ல வரான்னு கேட்டுட்டு அப்பறம் பேசு... ப்ளீஸ்.." பவி தவிப்புடன் கூற அவளை வெறித்துவிட்டு அமர்ந்தார் நடேசன்.. சுகுமாரி பாட்டி படபடப்பு மேலிட பவியையும் சுந்தரவல்லியையும் பார்த்தாள்..!

" நீங்க உட்காருங்கோ.. அம்மா அவாளுக்கு தண்ணு கொண்டுவா.." பவி பங்கஜத்திடம் கூற நடேசனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே சென்றாள் பங்கஜம்.. நீரினைக் கொண்டு வந்து கொடுத்தாள்..

கொஞ்சம் ஆசுவாசமாக... சுந்தரவல்லி பேச ஆரம்பித்தாள்.


கண்களில் கலக்கம் இருந்தது.. " மா.. மாமி.. எ.. என்ன மன்னுச்சுடுங்கோ.."

கோபம் குறையாமல் சுகுமாரி பார்த்துக் கொண்டிருக்க..

" நீ.. நீங்க தான் என் மாமின்னு நேக்கு தெரியாது.. உங்களுக்கு நடந்த கொடுமை எதுவும் எனக்கு தெரியாது. நீங்க சொன்னத பவி சொன்னப்பறம் தான் உங்களுக்கு நடந்த கொடுமையெல்லாம் நேக்கு தெரிஞ்சது.. நீங்க எங்காத்த விட்டு போகும் போது எனக்கு வயசு நாலு அல்லது அஞ்சு தான் இருக்கும்.. அப்போ நடந்த விஷயத்த புருஞ்சுக்கற வயசு எனக்கு இல்ல.. எ.. எங்காத்ல ஆத்துவேலை பாக்கற ஒரு பொண்ணாத்தான் ஞாபகம் இருக்கு.. எங்க பாட்டி அம்மாவ பத்தி அவா குணம் பத்தி நேக்கு தெரியும்.. அந்த குடும்பத்துல பொறந்தவ தான் நானு.. ஆ... ஆனா நான் அப்படி இல்ல மாமி.. நீங்க நினைக்கற மாதிரி நான் இல்ல.. நீங்க த்ரேஷம் கொண்டதுக்கு நூத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் இருக்கு.. அத.. அத தப்புன்னு சொல்ல எ.. எனக்கு எந்த தைர்யமும் கிடையாது.. அ.. அன்னைக்கு நீங்க கோபப் பட்ட போது எனக்கு உங்க மேல வெறுப்பு இருந்தது.. அவமானத்ல கோபம் வந்தது.. ஆ.. ஆனா , உங்க கோபம் நியாயம்னு புரிஞ்சப்போ எ.. எனக்கு என்மேலேயே ஒரு வெறுப்பு வந்தது.. அ.. அப்படிப்பட்ட குடும்பத்ல பொண்ணா பொறந்துட்டோமேன்னு.. பவி சொன்னத நான் உண்மையா நம்பறேன்.. எந்த வித உள்நோக்கத்தோடயும் அவ பேசல.. அவ எல்லாம் சொல்லி முடுச்சப்பக் கூட இது எஙக கல்யாணத்துக்காக சொல்லலை உங்க மனசு சங்கடத்துலயும் குழப்பத்லையும் இருக்கப்படாதுன்னு தான் சொன்னேன்னு சொன்னா.. அ.. அது அவளோட பெருந்தன்மையத் தான் காண்பிச்சது.. " சுந்தரவல்லி கனமான மனதுடன் பேச பாட்டியின் முகம் மெல்ல மாறியது.. கோபத்திலிருந்து மெதுவாய் சாந்தமானாள்...

" இப்போ கூட எங்குடும்பம் தப்பானது இ்ல்ல அவா அப்படி பண்ணிருக்க மாட்டான்னு உங்களண்ட வாதட வரல.. அந்த அளவுக்கு கல்நெஞ்சக் காரியா நான் இல்ல.. ஹ்ம்... தப்பி பொறந்துட்டேன்.. என் அம்மா பாட்டி குணம்லாம் எனக்கு வரலை... நல்ல வேலை.. உங்கள நோகடுச்சதுக்குத்தான் பகவான் எங்க குடும்பத்த மொத்தமா பிரிச்சானோ என்னவோ.. என் பதினஞ்சு வயசு வரைக்கும் மாமா மாமிக்கள் அம்மா அப்பா தாத்தா பாட்டின்னு எல்லா சொந்தத்தோடையும் ராஜ உபசாரத்தோடதான் வாழ்ந்தேன்.. ஆத்துக்கு ஒத்த பொண்ணுன்னு தங்கத் தட்ல தாங்கித் தடுக்கிடுவா.. பெரிய பரம்பரை பணம் பவிசுன்னு கர்வத்தோட தான் இருந்தேன்.. எப்போ ஒவ்வொரு மாமாக்களுக்கும் கல்யாணம் ஆச்சோ.. வினை தானா தேடி வர ஆரம்பிச்சது.. தன்னவிட உசத்தியான குடும்பத்ல பொண்ண எடுத்துத்தான் பாட்டி பாத்து பாத்து கல்யாணம் பண்ணி வெச்சா.. வந்த மாமிக்கள் ஒவ்வொருத்தரும் தன் ஆம்படையான கைக்குள்ள போட்டுண்ட்டா.. ஹ்ம்.. ஆத்ல சண்டை சச்சரவுகள் ஆரம்பிச்சது.. அப்போதான் அம்மா பாட்டியோட குணம் தெரிய ஆரம்பிச்சது.. வாய்க்கு வந்தபடி ஏச்சும் பேச்சும்... ஒருத்தர ஒருத்தர் தூத்திப் பேசிண்டு வம்பளந்துண்டு த்ரேஷம் வளத்துண்டு.. வீடு வீடா இல்லாம போய்டுத்து..

ஹ்ம்... அத்தனையிலும் எந்த பாதிப்பும் இல்லாம இருந்தவர்னா எங்கப்பா ஒருத்தர் தான்.. அவரால தான் நான் இப்பவும் கொஞ்சம் நல்லவளா இருக்கேன்.. தலைகனத்தோட திரிஞ்சப்பலாம் என்ன அடக்கி வெச்சவர் அவர்தான்.. அவர் சொன்ன புத்திமதிகள் எனக்கு அப்பறம் அப்பறமாத்தான் உரைக்க ஆரம்பிச்சது.. அம்மாவோட இருக்கறச்ச வெட்டி ஜம்பம் மட்டும் தான் தலைதூக்கி இருந்தது.. தாத்தாவும் இவா இம்சை பொறுக்காம ஒருநாள் கண்ண மூடிக்க, அதுக்கப்பறம் தான் நிஜமான வாழ்க்கை என்னனு நேக்கு புரிய ஆரம்பிச்சது.. பணத்துக்கு முன்னாடி சொந்த பந்தமெல்லாம் சும்மான்னு புரிஞ்சது.. மாமிகள் பேச்சக் கேட்டுண்டு மாமாக்கள் சொத்தெல்லாம் பிரிச்சுண்டு போய்ட்டா.. பொண்களுக்குத்தான் அப்போலாம் சொத்துல உரிமை கிடையாதே.. எங்க பாட்டியையும் நிர்கதியா விட்டுட்டு எங்களுக்கும் சல்லி பைசா தராம எல்லாத்தையும் கொண்டு போய்ட்டா.. உங்களுக்கு பண்ண பாவத்த பாட்டியும் அம்மாவும் அப்பறம் தான் அனுபவிச்சா.." மூச்சுவிடாமல் சுந்தரவல்லி கூறி வர.. சுகுமாரி பாட்டி கண்களில் லேசாக ஈரம் பூத்தது..

" அப்பாக்கு புரோகிதம் தான்.. ஒரு ஓட்டு வீட்லதான் தங்கி இருந்தோம்.. எனக்கும் கல்யாண வயசு ஆயிடுத்து.. எங்க பாட்டி பத்தி தெரிஞ்சவா யாரும் பையனத் தரலை.. கொஞ்ச நாள்ல அப்பாவும் போய் சேந்துட்டார்.. என்ன செய்யறதுன்னே தெரியாத நிலை.. எதோ என்ன பீஏ வரைக்கும் எங்கப்பா படிக்க வெச்சிருந்தாலும் வேலைக்கு போற அளவுக்கு அப்போ தைர்யம் இல்லே.. அந்த சமயத்துல தான் இவரோட தாத்தா எதேச்சியா எங்களப் பார்த்தார்.. அம்மாவோட தாத்தா அவருக்கு பண்ண உதவிய மறக்காம பிரதி உபகாரமா இவருக்கு என்ன கல்யாணம் பண்ணி வெச்சா... வாழ்நாள் முழுக்க உன் கண்கலங்காம பாத்துப்பேன்னு சத்ய பிரமானம் பண்ணின்டு தான் எனக்கு மூனு முடுச்சு போட்டார்.. இன்னி வரைக்கும் காப்பாத்திண்டு இருக்கார்.. என் பழைய கதையெல்லாம் இவருக்கு
தெரியும்.. எங்க அம்மா போற வரைக்கும் அவாள கவனுச்சுண்டது இவர்தான். என்ன வேலைக்கு அனுப்சதில்லே.. பிற்போக்கான குடும்பமா இருந்தாலும் என்ன என்னிக்கும் தவிக்கவிட்டதில்லே.." சுந்தரவல்லி நிறுத்த பாட்டி கொஞ்சம் இளகி இருந்தாள்..

" உ... உங்களுக்கு பண்ண பாவத்துக்கு பிராயசித்தம் தேடித் தான் இங்க வந்தேன்.. உண்மையிலே எம் மனசு தவிச்சுடுத்து மாமி.. எங்காத்துக்காரா பண்ணின கொடுமைக்கெல்லாம் நான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கறேன்.. எங்கள ம.. மன்னிச்சு ஏத்துக்கோங்கோ மாமி.. " கண்ணீருடன் பாட்டியின் கால்களில் விழுந்து சுந்தரவல்லி நமஸ்கரிக்க , சுகுமாரிக்கு உடலெல்லாம் புல்லரித்துப் போனது..

" எ... எழுந்திரு.. எழுந்திரும்மா..." அவளது தோள்களைத் தாங்கி தூக்கினாள் பாட்டி..

" இ.. இது.. பொய்யான நடிப்பு இல்ல மாமி.. மனசார தான் உங்களண்ட மன்னிப்பு கேக்கறேன்.. மன்னிச்சேன்னு சொல்லுங்கோ.. அப்பத்தான் என் மனசு ஆறும்.."

" ஐயோ.. மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசாதம்மா.. நீ.. நீ.. இவ்ளோ நல்லவன்னு நே.. நேக்கு தெரியாம போயிடுத்து.. நீ.. நீ தான் என்ன மன்னிக்கனும்.. உ.. உன்ன புரிஞ்சுக்காம.. நான்.. நான்தான்.. " பாட்டி முழுவதுமாய் நெகிழ்ந்து வார்த்தை வராமல் சுந்தரவல்லியின் தலையை வருடினாள்..

" எங்காத்து சொந்தம்னு யாரும் இல்லையேன்னு உள்ளூர சங்கடப்படாத நாளே இல்லை.. சொந்தம்னு பேருக்கு இருந்தவாள்லாம் விலகிப் போய்ட்டா.. அ.. அந்த பெருமாள் தான்.. பவித்ராவ எனக்கு காமிச்சு எ.. எனக்கு மறுபடியும் சொந்தத்த தேடித் தந்துருக்கார்.. " கையெடுத்து கும்பிட்டாள் சுந்தரவல்லி.

" பிராயச்சித்தமா உங்க பேத்திய என் மாட்டு பொண்ணாக்கிக்க ஆசப் படறேன்.. இவா மூலம் பிரிஞ்ச நம்ம குடும்பம் சேரட்டும்.. அதுக்கு நீங்க தான் மனசு வெக்கனும் மாமி.. பவித்ரா எங்காத்துக்கு மாட்டுப் பொண்ணா வரனும்னு மனப்பூர்வமா விரும்பறேன்.. ரிஷியும் அவள மனசார விரும்பறான்.. உங்க பொண்ண என் பொண்ணு மாதிரி பாத்துப்பேன்.. அவள கண்கலங்காம பாத்துக்கறது என்னோட கடமை.. இது சத்யம்.. நான் தேடிக்கற பிராயசித்தம்.."

பாட்டியின் உத்தரவிற்காய் சுந்தரவல்லியும் ரிஷியும் காத்திருக்க..

" என் பேத்தியோட சந்தோஷத்துக்கு அவளோட நியாயமான சுதந்திரத்துக்கு எந்த பங்கமும் உண்டாக்காத ஒரு பையன் அமையனும்னு தான் பெருமாள பிராத்தனை பண்றேன்.. என் பேத்திய காலம் முழுக்க பாத்துப்பியா... " சுகுமாரி கேட்க அருகில் வந்த ரிஷி அவளது கையின் மேல் தன் கையை வைத்து அழுத்தினான்..

" பொண்கள்னா ஆண்களுக்கு ஒருபடி கீழ தான்.. ஆணோட துணையில்லாம அவாளால தனுச்சு எதுவும் பண்ண முடியாதுங்கற எண்ணத்தோடதான் இது நாள் வரைக்கும் இருந்தேன் பாட்டி.. அதையெல்லாம் நீங்க ஒடச்சு போட்டுட்டேள். நீங்க ஒரு பாடம்.. ஒரு பொண்ணு நெனச்சா ஆண்களுக்கு மேலே இருக்க முடியும்.. அகம்பாவத்தால அடக்காம அவன அன்புல அரவணச்சு போறாங்கறத புருஞ்சுண்டேன்.. பவியோட சுதந்திரத்துக்கு நான் எப்பவும் தடையா இருக்க மாட்டேன் பாட்டி.." ரிஷி மனப்பூர்வமாய் கூறினான்..

மனம் நிம்மதியாக சுகுமாரி பாட்டி நடேசனை பார்த்தாள்.. அத்தனையும் பார்த்து உணர்ச்சி வசப்பட்டிருந்த அவர் புன்னகையுடன் தலை அசைக்க பாட்டி இதழ் விரித்தாள்..

" இந்த சம்பந்தம் நேக்கு சம்மதம்..." பாட்டி சொல்ல..

பவி வேகமாக ஓடி வந்து பாட்டியை கட்டிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.. பேச வார்த்தை இன்றி இருவரும் தங்கள் கோபத்தை உடைத்தெரிந்து கட்டிக் கொண்டனர்.. பாட்டியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது..

" தே... தேங்க்ஸ் பாட்டி.. உ.. உன்கூட பே.. பேசாம இருந்ததுக்கு மன்னிச்சுக்கோ.."

" ஹ்ம்.... உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம்.. நீ நன்னா இருக்கனும் கண்ணு... அந்த நிம்மதியோட நான் போய் சேந்தா போதும்.." அவளை அணைத்து தலையை வருடிக் கொடுத்தாள் சுகுமாரி..

அத்தனை பேர் முகத்திலும் சந்தோஷம் கூத்தாட.. பங்கஜம் வேகமாக உள்ளே சென்று வெற்றிலை பாக்கு தட்டை கொண்டு வந்து நடேசன் கையில் கொடுத்தாள்..

" ரொம்ப வருஷம் கழுச்சு சொந்தமெல்லாம் சேந்திருக்கேள்... இதே சந்தோஷத்தோட இப்பவே தாம்பூலம் மாத்திண்டுடலாம்.. எங்க பொண்ண உங்க பையனுக்கு தர எங்களுக்கு முழு சம்மதம்.. இந்தாங்கோ." தட்டை இருவருமாய் சேர்ந்து சுந்தரவல்லி தம்பதியரிடம் கொடுக்க..

" எங்களுக்கும் என் பையன உங்க பொண்ணுக்கு கொடுக்க பரிபூரண சம்மதம்.. " தட்டை மாற்றிக் கொண்டனர்..

சுகுமாரி பாட்டி முழுமையான மகிழ்ச்சியில் கனிந்து போயிருந்தாள்.. ஆனந்த கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது..

" ரிஷி ,ரெண்டு பேருமாச் சேந்து பாட்டி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கங்கோ.. " சந்திரசேகர் சொல்ல.. பவியும் ரிஷியும் இருவரும் இணைந்து பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்..

மனமெல்லாம் சந்தோஷம் பூக்க பவித்ராவின் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டான் ரிஷி..!

மகிழ்ச்சியுடன் நாட்கள் நகர பவியும் தன் படிப்பை வெற்றிகரமாக முடித்தாள்.

பெரியவர்கள் பார்த்து குறித்த ஓர் சுபயோக சுப தினத்தில் சுகுமாரி பாட்டியின் தலைமையில், அனைவரின் நல் ஆசியோடு பவித்ராவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டினான் ரிஷிகேசன்..

கோதையை ஆட்கொண்ட அந்த அரங்கனின் சந்நதியின் முன்...!
அளவில்லா அவன் பேரருளுடன்..!!


சுபம்.

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom