Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெற்றியடி நான் உனக்கு !!!

Savitha Nagaraj

Saha Writer
Messages
8
Reaction score
0
Points
1
அத்தியாயம்-6

ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்த ஸ்ருதி, சிறிது தொலைவிலேயே சாலை ஓரத்தில் நிற்கும் விஜய்யை கண்டுவிட "ஆத்தி... இன்னைக்கு அந்த பைக்கு என்ன பிரச்னையோ தெரியலயே, எதுவா இருந்தா நமக்கு என்ன, நாம அப்படியே கவனிக்காத மாதிரி போய்டலாம்" என நினைத்தவாறு சாலையில் பார்வை பாதிக்க, அவள் எதிர்பாராதவாறு அவளது வண்டி வரும் திசை முன் லிப்ட் என்றபடி தன் வலது கை கட்டை விரல் உயர்த்தி நின்றிருந்தான் விஜய்.

இதற்கு முன் இரண்டு முறையும் அவளாக சென்று அவனுக்கு உதவியிருக்க இன்று, அவனாகவே வந்து அவளிடம் உதவி கேட்டு நிற்பான் என சிறிதும் எண்ணவில்லை ஸ்ருதி. யோசனை முடியும் முன்னரே அவனை, அவளது ஸ்கூட்டி நெருங்கி இருக்க, இன்று அவனுக்கு லிப்ட் குடுக்கமால் தவிர்க்க வேண்டும் என முடிவெடுத்து வண்டியை நிறுத்தினாள்.

"நீங்களா.....நான் உங்கள கவனிக்கல. எங்க இங்க நின்னுட்டு இருக்கிங்க?" என்றாள் அவனை அப்போது தான் பார்த்ததை போல !

அடியே.. நானே பல வேஷம் போடுறவன், என்கிட்டயே நீ பகல் வேஷம் போடுறியா? பத்தடி தூரத்துலயே என்ன பாத்துட்டு, நைஸ்சா பாக்காத மாதிரி நீ போறத கவனிச்சிட்டு தான் நானே லிப்ட் கேட்டு உன் வண்டி முன்னால வந்து நின்னேன் என அவன் மைன்ட் வாய்ஸ் கொடுக்க, வெளியே சிரித்த முகத்துடன் "ஹ்ம்ம்.. பரவாயில்ல ஸ்ருதி, பைக்ல பெட்ரோல் காலி அதான் நின்னுட்டு இருக்கேன். கொஞ்சம் லிப்ட் தரீங்களா?"

"அது... என்னோட பிரண்ட் என் வீட்டுக்கு வந்து எனக்காக வெயிட் பண்றா, நான் சீக்கிரமா வீட்டுக்கு போகணும், அதுனால என்னால இன்னைக்கு உங்களுக்கு லிப்ட் தர முடியாதே" என்று இன்ஸ்டன்ட்டாக ஒரு பொய்யை உரைத்தாள் ஸ்ருதி.

"ஓ... பரவாயில்லை ஸ்ருதி. நீங்க உங்க வீட்டு கிட்டயே என்னை இறக்கி விடுங்க நான் அங்கிருந்து நடந்து போயிடுறேன்" என்று அவன் கூற, இதற்கு மேலும் அவளால் மறுக்க முடியவில்லை.

இருவரும் மெளனமாக பயணத்தை தொடர "இங்க எவ்ளோ நேரமா நின்னுட்டு இருக்கிங்க?" என்று மௌனைத்தை கலைத்து ஸ்ருதி விஜயிடம் வினவினாள்.

இப்போ எதுக்கு இந்த கேள்வி என்ற யோசனையுடனே "ஒரு கால் மணி நேரமா நின்னுருப்பேன் ஸ்ருதி" என பதிலளித்தான் விஜய்.

"அவ்ளோ நேரமாவா! அது வரைக்கும் உங்களுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தர் கூடவா வரலை? இத்தனை நேரம் நின்னதுக்கு கொஞ்சம் தூரம் நடந்துருந்தா பஸ் ஸ்டாப் வந்துருக்கும் நீங்க பிஸ்லயே போயிருக்கலாமே" என்று அவள் சந்தேகத்தை கேட்க

நல்லவேலை அவன் என்ன பதில் சொல்லலாம் என யோசித்தவாறு முழித்ததை, அவள் கண்களுக்கு தெரியாமல் காத்தது அந்த கருப்பு நிற கூலர்.

அவனின் பதிலுக்காக அவள் சைடு மிர்ரரில் அவனது முகம் பார்த்தவாறு காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன், அவளின் முதல் கேள்வியை ஒதுக்கிவிட்டு அடுத்ததுக்கு மட்டும் பதில் உரைத்தான் "நீங்க கேக்குறதும் சரி தான் ஸ்ருதி, உங்ககிட்ட மறைக்க என்ன இருக்கு கைல காசு இல்ல, கிளம்புற அவசரத்துல பர்ஸ்சை வீட்லயே மறந்து வெச்சிட்டேன் அதான் பஸ்ல போகல" என பதில் உரைத்தவன், அடுத்து அவள் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் போக அதில் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

ஸ்ருதியின் வீடு இருக்கும் தெருவில் அவர்கள் நுழைய "இங்கயே நிறுத்துங்க ஸ்ருதி நான் இறங்கிடுறேன்" என்ற அவனது குரலில் வண்டியை நிறுத்தி அவனை இறக்கிவிட்டவள், அவனிடம் விடைபெற்று வீடு சென்றாள்.

வீடு வந்தவள் அசதியில் அப்படியே ஹாலில் இருந்த இருக்கையில் அமர, அவளின் அன்னை தனலட்சுமி கிச்சனில் நின்றவாறே, ஹாலில் பிரணவுடன் அமர்ந்திருக்கும் சாருவை கண்களால் ஸ்ருதிக்கு சைகை காட்ட, முதலில் புரியாமல் விழித்தவள், பின் அதன் அர்த்தம் விளங்கிட எழுந்து அன்னையிடம் சென்றாள் "மா... மறந்துட்டேன் மா" என்றாள் வருத்தத்துடன்.

"மறந்துட்டியா? என்ன டி, அண்ணா அண்ணி கல்யாண நாளுக்கு சர்ப்ரைஸ்சா கேக் வெட்டலாம் நான் ஆர்டர் குடுத்து சாயங்காலம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு இப்போ மறந்துட்டேன் சொல்ற"

"ஆர்டர் எல்லாம் காலைலயே கொடுத்தாச்சு ம்மா... அதை வாங்கிட்டு வர தான் மறந்துட்டேன், இப்போ என்ன அடுத்த தெருல இருக்க கடைல தான் ஆர்டர் பண்ணிருக்கேன், ரெண்டே நிமிஷம் தான் போய் வாங்கிட்டு வரேன்" என்றவாறு வீட்டிலிருந்து கிளம்பினாள் ஸ்ருதி.

"அண்ணா சீக்கிரம் சில்லறைய தாங்க ண்ணா..." என்று அந்த கடைக்காரரிடம் கேட்டு கொண்டிருந்தான் விஜய்.

"அட இரு தம்பி ரெண்டு முட்டை பப்ஸ் வாங்கிட்டு இருநூறு ரூபா குடுத்தா நானும் சில்லறைக்கு எங்க போவேன்" என்றார் கடைக்காரன் கடுப்புடன்.

"என்ன ண்ணா... இந்த ஏரியாலயே உங்க கடை தான் பெரியகடை, அதுவும் இல்லாம உங்க கடைக்கு தான் கஸ்டமர் ஜாஸ்தியா வருவாங்க, உங்க கிட்டயே சில்லறை இல்லனு சொன்னா எப்படி ண்ணா..." என்று சில பல ஐஸ்சுகளை வைத்து சில்லறை வாங்கியவன், அதனை சரிபார்த்தவாறு திரும்ப அவன் முன்னால் நின்றிருந்தாள் ஸ்ருதி.

"டேய் விஜய்...பைக் எடுத்துட்டு வந்துட்டேன் வா டா போலாம்..." விஜய்,ஸ்ருதி இருவரும் குரல் வந்த திசை நோக்க அங்கே வினோத், விஜயின் பைக்கில் அமர்ந்து கொண்டிருந்தான்.

"வினோத்து... பைக் பெட்ரோல் போட்டு எடுத்துட்டு வந்துட்டியா டா"

"நீ எப்போ டா பெர்டோல் போட சொன்ன? பைக் அங்க நிறுத்தி இருக்கேன் அதை எடுத்துட்டு வானு மட்டும் தானே சொன்ன" என்று பைக்ல் அமர்ந்தவாறே வினோத் கத்த, அது தெளிவாக ஸ்ருதியின் செவியை சென்றடைந்தது.

சுத்தம், இப்போ இந்த விளக்கம் ரொம்ப அவசியம். போ டா இப்போ போய் நிம்மதியா தூங்கு என வினோத்துக்கு மனதில் அர்ச்சனை செய்தவன் "ஸ்ருதி அது... அவன்..." என பேச வந்தவனை கடந்து விறுவிறுவென சென்றவள், தான் ஆர்டர் செய்த கேக்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றாள் ஸ்ருதி.

வீடு வந்தவளுக்கு விஜயின் செயல்களில் ஏதோ சரி இல்லை என்பது விளங்க, இனிமே அவன்கிட்ட ஒதுங்கியே இருக்கனும் என முடிவெடுத்தவாறு தான் அண்ணன் அண்ணியின் திருமணநாள் கொண்டாதத்தில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள்.

மறுநாள் சித்தார்த்தின் அலுவலகத்தில் அமர்ந்து, நேற்றைய தினத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிகளின் ஆர்டர் கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தவள், உள்ளே யாரோ வரும் அரவம் கேட்கவே நிமிர்ந்து பார்க்க, அவளது எதிர் இருக்கையில் வந்தமர்ந்தான் விஜய்.

நேற்று அவன் தன்னிடம் பொய் சொல்லி நாடகமாடிவிட்டு இன்று ஏதும் நடவாதது போல், எந்த ஒரு சலனமும் இன்றி தன்முன் அமர்ந்திருந்தவனை காண்கையில் அப்படி ஒரு கோபம் ஸ்ருதிக்கு.

"சித்தார்த் இல்லையா ஸ்ருதி?"

"இல்ல வெளிய போயிருக்காங்க, நீங்க போய்ட்டு அண்ணா வந்த அப்பறம் வாங்க" என்றாள் பட்டென.

"பரவாயில்ல நான் அவன் வர வரைக்கு வெயிட் பண்றேன்"

"உங்களுக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா? அதான் அண்ணா இல்ல சொல்றேன்ல கிளம்புங்க" என்று ஸ்ருதி குரல் உயர்த்திவிட்டு, மீண்டும் தனது வேலையில் கவனம் செலுத்தியவளின் காதுககுளுக்கு இருக்கையை நகர்த்தும் சத்தம் கேட்டதில், அவன் வெளியே சென்றுவிட்டான் என்பதை உணர்ந்தாள் ஸ்ருதி.

மெஸேஜ் டோன் கேட்க, மேசையில் இருக்கும் போன்னை எடுப்பதிற்காக தலை உயர்த்தியவளுக்கு, இருக்கையில் வாகாக சாய்ந்து அமர்ந்திருந்தபடி அவளையே பார்த்துகொண்டிதுந்த விஜய் காட்சியளித்தான் "சீட்ல இருந்து எழுந்த சவுண்ட் கேட்டுச்சே, அப்போ அவன் எழுந்து போகாம நல்லா வசதியா சாஞ்சிக்க தான் சீட்டை நகரத்தினான?" என்றெண்ணியவள், தான் பார்த்துவிட்ட பிறகும் பார்வைமாற்றாமல் அவன் தன்னையே பார்த்து கொண்டிருக்க அதில் அவளின் கோபம் எல்லை கடந்தது.

"ஏய்.... நீ முதல்ல எந்திரி, நேத்து என்ன டா னா காசு இல்லனு பொய் சொல்லி என்கிட்ட லிப்ட் கேக்குற, இன்னைக்கு ஆபீஸ்க்கு வந்து இப்படி என்னயே வெறிச்சி வெறிச்சி பாத்துட்டு இருக்க என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல, என் அண்ணன் பிரண்ட்னு உன்கிட்ட கொஞ்சம் நல்லா பேசினா நீ என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்குற. என்ன என்னை மடக்க ட்ரை பன்றியா நீ" என மரியாதை காற்றில் பறக்க விஜய்யை வார்த்தைகளால் விளாசிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.

"என்ன ஸ்ருதி என்னென்னமோ பேசுற, நான் எப்போ உன்ன மடக்க ட்ரை பண்ணேன் நீ சொல்றது எதும் புரியலையே" என்றான் விஜய் அநியாயத்திற்கு அப்பாவியாய்.

"ஒன்னும் புரியாத மாதிரி நடிக்காத, சரி நான் டைரக்டாவே கேக்குறேன் நீ என்ன லவ் பன்றியா?" என அவள் வார்த்தையை முடிக்கவில்லை "அய்யயோ, என்ன ஸ்ருதி சொல்றிங்க நானா... உங்களையா..." கிட்டத்தட்ட அலறியவன் "என் பிரண்ட் சித்தார்த் தங்கச்சி தானேனு நேத்து ஏதோ விளையாட்டா பண்ணினேன், இப்போ நீங்க என்ன திட்டினதும் நான் வீட்டுக்கு போறதா சித்தார்த்க்கு மெசேஜ் பண்ணேன் அவன் தான் நான் இன்னும் கொஞ்சம் நேரத்துல வரேன் நீ அங்கேயே இருனு சொன்னான் அதான் அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன், போன் பாத்து போர் அடிக்குதுனு உங்க பின்னால இருக்க ஜன்னல் வழியா வெளிய பாத்துட்டு இருந்தேன் அதை நீங்க உங்கள பாக்குறதா நினைச்சி இப்படி எல்லாம் பேசிட்டிங்களே ஸ்ருதி, எவ்ளோ வருஷமா என்ன உங்களுக்கு தெரியும் என்னை போய் நீங்க இந்தளவுக்கு நினைப்பிங்கனு நான் எதிர்பாக்கல" என்றவன் விரைவாக அங்கிருந்து வெளியேறினான்.

அவன் சென்றதும் அவனை பற்றியே சிந்தனை ஸ்ருதிக்கு. இத்தனை வருடத்தில் விஜய் அவளிடம் நேரில் பேசியது கூட இல்லை. அன்று அவளாக சென்று பேசிய பிறகே அவனும் பேச ஆரம்பித்தான். இதற்கு முன் சித்தார்த் போன்னை வீட்டில் விட்டு வெளியே சென்ற சமயங்களில் விஜய் அழைக்க, "அண்ணா வெளிய போயிருக்காங்க" எனும் ஸ்ருதி அவனிடமிருந்து "ம்ம்ம்.. சரிங்க" என்று மட்டுமே பதிலாய் வரும். சித்தார்த் அலுவலகத்தில் இருக்கும் போதும் அவன் அல்லாமல் ஸ்ருதி தனியே இருக்கும் சமயங்களில் வரும்போதும் கூட விஜய் அவளிடம் பேச முயற்சித்ததில்லை.

விஜயின் இரண்டு மூன்று விளையாட்டான செயல்களை சித்தார்த் வாயிலாக கேள்விப்பட்டது ஸ்ருதியின் நினைவில் வர, குழம்பியவள், பின் நாம் தான் அவனை தவறாக நினைத்துவிட்டோம் என்ன வருந்தியவள் அவனிடம் மன்னிப்பும் கேட்ட முடிவெடுத்தாள்.

முடிவெடுத்ததும் போன்னில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டு விடுவோமா என எண்ணினாள், அவனின் போன் நம்பர் அவளிடம் உள்ளதுதான். தங்களின் ஈவென்ட் மேனேஜ்மென்ட்டில் ஒப்புக்கொள்ளப்படும் திருமண நிகழ்வுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரே தேதியில் நடைபெறும் வேளையில் சித்தார்த்துக்கு உதவியாக வருவான் விஜய். அவன் கவனிக்கும் கணக்கு வழக்கின் விபரங்களை ஸ்ருதிக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் வாயிலாக அனுப்பி விடுவான். அப்படி ஒரு தருணத்தில் தான் அவனின் நம்பர் அவளது போன் காண்டாக்டில் சேமிக்கப்பட்டது. முதலில் போன் அழைப்பில் மன்னிப்பு வேண்ட நினைத்தவள், பின் தான் பேசிய அதிகப்படியான பேச்சிக்கு நேரில் தான் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று நினைத்து அவனை நேரில் காணும் தருணத்திற்காக காத்திருந்தாள்.

அவளை அதிகம் காத்திருக்க வைக்காமல், அடுத்த நாளே ஸ்ருதியின் முன் வந்து நின்றான் விஜய். சித்தார்த்தை காண வந்திருப்பான் போலும், ஸ்ருதி மன்னிப்பு கேட்க முடிவெடுத்துவிட்டாள் தான், ஆனால் நேற்றைய பேச்சுக்கள் அவளில் நினைவில் எழ, அதில் திணறியவள் தன்னை சமன்படுத்திக்கொண்டு அவனிடம் "சாரி" என்றாள் வருந்தும் குரலில்.

"எதுக்கு ஸ்ருதி சாரி? ஓ... நேத்து நடந்த விஷயத்துக்கா... அதுக்கு நான் தான் உன்கிட்ட சாரி சொல்லணும், உன்மனசுல அப்படி ஒரு எண்ணம் வர மாதிரி நான் தான் நடந்துக்கிட்டேன்" என்றவன் மேலும் தொடர்ந்தான், "நான் உன்ன சித்தார்த் தங்கச்சியா தான் பாத்தேன், அதனால தான் உன்கிட்ட அப்படி விளையாடினேன், ஆனா என்ன பத்தி உன் மனசுல அப்படி ஒரு ஆசை வரும்னு நான் எதிர்பாக்கல" என்றவனின் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை.

"இல்ல இல்ல நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க" என்றாள் அவனுக்கு விளக்கிவிடும் வேகத்தில்.

"ஆமா ஸ்ருதி நான் உன்ன புரிஞ்சிக்கல தான், இல்லனா நீ உன்மனசுல உள்ள ஆசைய என்கிட்ட மறைமுகமா நேத்து சொன்னப்போ நான் கோவப்பட்டு போயிருப்பேனா" என்றவனின் வார்த்தைகளில் ஸ்தம்பித்தவள், பின் அவன் தன்னிடம் முன்பு சொன்னது போல் ஏதேனும் விளையாடுகிறானா என சந்தேகம் எழ அதை அவனிடமே கேக்டவும் செய்தாள்.

"நீங்க என்கிட்ட அன்னைக்கு போல விளையாடுறிங்க தானே?" என்றவளை புன்சிரிப்புடன் ஏறிட்டவன், இல்லை என்பதை போல் தலையசைத்தான்.

"நான் ஏன் ஸ்ருதி விளையாடப்போறேன், இன்பேக்ட் நீ என்ன லவ் பன்றியா அப்படினு என்கிட்ட கேக்குறவரைக்கும் எனக்கு அப்படி ஒரு எண்ணம் வரலை" என ஒரு அண்டப் புளுகை புளுகியவன், பைனல் டச்சாக
"உனக்கும் என்மேல ஒரு அது இருக்கு
எனக்கும் உன்மேல ஒரு இது இருக்கு அப்போ அது லவ் தானே ஸ்ருதி !!!" என வி.டி.வி சிம்புவை போல் டைலாக் பேசியவனை கண்ட அவளது விழிகள் வட்டமாய் விரிந்தன.
 

Savitha Nagaraj

Saha Writer
Messages
8
Reaction score
0
Points
1
அத்தியாயம்-7

விஜய் கூறிய வி.டி.வி பட டைலாக்கில், கண்கள் விரிய அவனை பார்த்தாள் ஸ்ருதி. பின் தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள் அவனை முறைத்தவாறு பேச தொடங்கினாள் "என்னவெச்சி இப்போ காமெடி பண்ணிட்டு இருக்கிங்களா? என்ன நினைச்சிட்டு இருக்கிங்க நீங்க உங்க மனசுல?"

"ஆமா ஸ்ருதி நான் உன்ன தான் நினைச்சிட்டு இருக்கேன் என்மனசுல அதை தெரிஞ்சே கேக்குறியா" என்றான் விஜய் உதட்டில் விரிந்த சிரிப்புடன்.

ஸ்ருதிக்கு ஐயோ வென்றிருந்தது, அவள் எதார்த்தமாக கேட்டும் கேளிவியை வைத்தே அவன், அவளின் வாய் அடைக்கும் பதிலை கூறினால் அவளும் என்ன தான் செய்வதாம். அவனுக்கு தான் கூறிய என்ன என்ற வார்த்தை கேள்வி வாக்கியமே தவிர அவளை குறிக்கும் வார்த்தை இல்லை என்பதின் அர்த்தத்தை அவனுக்கு விளக்கும் பொருட்டு "நான் என்னனு சொன்னதுக்கு அர்த்தம் என்னை இல்ல" என்றாள்.

விஜய்கோ அந்த சமயத்திலும் வடுவேலுவின் "என்ன வேணும், எண்னெய் தான் வேணும்" காமெடி நியாபகம் வர, முயன்று தன் சிரிப்பை அடக்கியவன், அவளிடம் பேச தொடங்கினான்"அது எப்படி ஸ்ருதி அந்த அர்த்தம் இல்லாம போகும். சரி அதை எல்லாம் விடுங்க நான் உங்க கிட்ட ஒன்னு கேக்குறேன் அதுக்கு பதில் சொல்லுங்க. ஒருத்தவங்க உங்க கிட்ட சாப்டியானு கேக்குறாங்கல, எதுக்காக? எந்த பதிலை எதிர்பாத்து அப்படி வந்து கேக்குறாங்க" என்பதற்கு ஸ்ருதி "இப்போ எதுக்கு இந்த கேள்வி" என்று மனதில் தோன்ற அவனை விசித்திரமாக பார்த்தாள்.

"பதில் சொல்லாமஇருந்தா எப்படி ஸ்ருதி, சரி நான் சொல்லட்டுமா நீங்க கரெக்ட்டானு மட்டும் பாருங்க" என்றவன் தொடர்ந்தான்"நம்மள பாத்து ஒருத்தவங்க சாப்டியானு கேட்டா, நம்ப சாப்பிட்டோமா இல்லையானு அவங்களுக்கு பதில் தெரியணும், சாப்பிடாம இருந்தா ஏன் இன்னும் சாப்பிடாமா இருக்கோங்குற காரணத்தை தெரிஞ்சிக்கனும் அப்படியும் இல்லையா, நானும் வரேன் ஒன்னா போய் சாப்பிடலாம் இல்ல பரிமாறலாம் இப்படி அவங்க விருப்பத்தை செய்ய தான் கேப்பாங்க. இதை எதுக்கு சொல்றேன்னா நீ என்கிட்ட அன்னைக்கு என்னை நீ லவ் பன்றியானு கேட்டதுக்கு, ஒன்னு நான் உன்ன லவ் பண்றேனா இல்லையானு நீ தெரிஞ்சிக்க கேட்ருக்கானும், அப்படி லவ் பண்ணலனா இனிமே பண்ணு அப்படினு எனக்கு ஹின்ட் குடுக்க கேட்ருக்கானும், அதுவும் இல்லயா நீ லவ் பண்றத மறைமுகமா எனக்கு உணர்த்த முயற்சிப்பண்ண கேட்ருக்கானும்....." என அவன் வார்த்தையை இழுதான் விஜய்.

ஸ்ருதிக்கோ சும்மா இருந்தவனை அன்னைக்கு அப்படி கேட்டு நாம் தான் சொறிஞ்சி விட்டுட்டோமோ என்ற எண்ணத்தில் நின்றிருக்க, அவள் அறியாவண்ணம் பெருமூச்சு விட்டவன் "ஒரு வழியா இவளை டைவர்ட் பண்ணியாச்சு, இங்கிருந்து ஓடிடு டா வெற்றிவிஜயா" என அவளின் சிந்தனை கலையாதவாறு மெதுவாக அங்கிருந்து அகன்றான்.

சித்தனை கலைந்து அவள் பார்க்கையில் அவன் அங்கு இல்லை. "அது எப்படி சாப்டியா கேக்குறதும் லவ் பன்றியான்னு கேக்குறதும் ஒன்னாகும்?" என்று மண்டை காய யோசித்தவளின் செவியை அடைந்தது சித்தார்த்தின் குரல் "என்னாச்சி மா ஸ்ருதி ஒரு மாதிரியா இருக்க"

"ஒன்னும் இல்ல ண்ணா... தலை வலிக்குறமாதிரி இருக்கு நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா?"

"என்ன மா திடிர்னு ஏன் தலை வலிக்குது, ஹாஸ்பிடல் போலாமா ஸ்ருதி?"

"இல்ல ண்ணா... வேணாம் லைட்டா தான் வலி இருக்கு வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும்"

"ம்ம்ம்.. நீ கிளம்பு மா போய் ரெஸ்ட் எடு" என சித்தார்த் சொன்னதும். விஜயின் வருகைக்கு முன் தான் பார்த்துக்கொண்டிருந்த கணக்கு புத்தகத்தை மூடி கபோட்டில் வைக்க போனவளிடம் அவளின் அண்ணன் "ஏன் ஸ்ருதி இந்த சாப்டியானு கேக்குறதும் லவ் பன்றியான்னு கேக்குறதும் ஒன்னா மா?"

"என்ன...என்ன...ண்ணா கேட்ட" என்று ஸ்ருதி அதிர்ச்சியாக கூற. "இந்த விஜய் பண்ண வேலை மா, சும்மா இருந்தவனுக்கு போன் பண்ணி காதுல ரத்தம் வர வச்சிட்டான்" என்ற சித்தார்த் சற்று முன் விஜய் கூறிய விளக்கத்தை கூற, அதுதான் அவளுக்கு முன்பே தெரிந்த விளக்கம் ஆயிற்றே அந்த வெறுப்பில் "எங்கிருந்து ண்ணா புடிச்ச அதை" என்று அவளையும் மீறி கூறிவிட்டாள்.

"எதை மா..." சித்தார்த்துக்கு புரியாமல் கேட்க, "அது.....அது..... "என்று அவன் அருகில் மேசை மேல் இருக்கும் தண்ணீர் பாட்டிலை சுட்டி காட்டி "அந்த தண்ணிய சொன்னேன்னா, அது குடிக்க நல்லா இல்ல அதன் எங்க புடிச்சன்னு கேட்டேன்" என்று சமாளித்தாள் ஸ்ருதி.

"இது கேன் வாட்டர் தானே ஏன் நல்லா இல்ல" என்ற சித்தார்த் அதன் அருகில் சென்று பார்வையிட்டவாறு கேன் வாட்டர் ஆராய்ச்சியில் இறங்க, அவனிடமிருந்து விடைபெற்று வீடு சென்றவள் தான், நான்கு நாட்கள் ஆகியும் அந்த ஆபீஸ் பக்கம் தலை வைத்து பார்க்கவில்லை அவள்.

********

"இப்படி என் மூஞ்சிய பாக்க தான் என்னை போன் பண்ணி வரச்சொன்னியா டா" என்றான் இருக்கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த விஜய்.

"நீ ஸ்ருதி கிட்ட ஏதாவது பேசுனியா டா?" என்றான் சித்தார்த்.

"ஏன் டா என்னாச்சு எதுக்கு இப்படி கேக்குற"

"நாலு நாளா அவ முகமே சரியில்ல, ஆபீஸ்கும் வராம வீட்ல இருக்கா. வீட்ல உள்ளவங்க யாரும் அவளை ஒன்னும் சொல்லிருக்கமாட்டாங்க அதான் நீ ஏதும் அவகிட்ட பேசினியானு கேட்டேன்"

"ஆமா டா பேசினேன், ஏன் உன்கிட்ட ஏதாவது சொன்னாளா?"

"இல்ல டா எதுவும் சொல்லல, நானா தான் கேக்குறேன். "

"ஓ... அநியாயத்துக்கு அண்ணனா இருக்கியே டா, தங்கச்சி மேல ஓவர் பாசம் தான். அவங்க முகம் சரியில்லயாம் உடனே விசாரணை கமிஷன் ஆரம்பிச்சி இவரு என்கிட்ட விசாரிக்க வந்துட்டாரு"

"டேய்... நான் உன்ன சந்தேகம் பட்டு எல்லாம் கேக்கல டா உன்ன பத்தி எனக்கு தெரியாதா. அவ கஷ்டம் பட்றமாதிரி நீ பேசிருக்கமாட்ட தான் ஆனா அவ மூஞ்சிய அப்படி வெச்சிட்டு சுத்துறாளே, அதான் பாக்க என்னமோ போல இருக்கு. நான் உன்கிட்ட சொன்னமாதிரியே கொஞ்சம் நாள் போகட்டும் டா விஜய், எங்க வீட்ல பேசி உங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க்குறேன்"

"சித்தார்த்து நீ சொல்றது எல்லாம் சரி தான், நீ உங்க வீட்ல மட்டும் தான் சம்மதம் வாங்கமுடியும் ஆனா உன்னால ஸ்ருதியை முழு மனசா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியுமா?" என்பதற்கு சித்தார்த் மறுப்பாய் தலையசைக்க, "அதுக்கு தான் நான் ஸ்ருதி கிட்ட பேசுறேன். நீ உங்க வீட்டை கவனி, ஸ்ருதிய சம்மதிக்க வைக்குற வேலைய நான் பாத்துக்குறேன்."

"ம்ம்ம்... ஆனா அவ மனசு கஷ்டப்படாத மாதிரி பேசி அவளோட சம்மதத்தை வாங்கு டா, அவ ஏற்கனவே ஒரு கல்யாண ஏற்பட்டுல ரொம்பவே பட்டுட்டா விஜய்" என்றான் சித்தார்த் அவளின் அண்ணனாய் அக்கறையாய்.

"டேய் சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதிங்க டா. அவ தான் ஒன்னும் இல்லாத அந்த ஓட்டை பிளாஷ் பாக்கையே நினைச்சிட்டுயிருக்கானா நீங்களும் அதையே நெனைச்சி அவளை கஷ்டப்படுத்தாதனு சொல்லிட்டு இருக்கிங்க, முதல்ல எல்லாரும் அவளை நார்மல்லா பாருங்க, இந்த பாவம் போல லுக் விட்டு விட்டே தான் இன்னும் அவளுக்கு பழசை நியாபகம் படுத்துறிங்க"

"நாங்க ஏன் டா அவளுக்கு பழசை நியாபகம் படுத்தபோறோம், நாங்க எல்லாரும் அவ கிட்ட எவ்ளோ அன்பா இருக்கோம் தெரியுமா, வார்த்தைல கூட அவளை கஷ்டப்படுத்த கூடாதுனு பாத்து பாத்து பேசுறோம்"

"அது தான் டா ஏன்? எதுக்கு அப்படி பாத்து பாத்து பேசனும்? நீங்க அவளை எந்த விஷயத்துல திட்டுணுமோ அந்த விஷயத்துக்கு திட்டுங்க எதுக்கு கொஞ்சனுமோ அதுக்கு மட்டும் கொஞ்சுங்க. அர்ஜுன் கூட கல்யாண ஏற்பாடு நடக்குற வரைக்கும் இது தானே பண்ணிங்க ஆனா அதுக்கு அப்பறம் அவ என்ன செஞ்சாலும் ஏன்னு கேக்கமற்றிங்க? அப்படி நீங்க கேக்காம விட்டபோலாம் அவளுக்கு என்ன தோணும்னு யோசிச்சு பாத்திங்களா? இந்த கரிசனத்துக்கு எது காரணம் அர்ஜுன் கூட ஏற்பாடு ஆனா கலயாணம் நின்னது தானே. அப்பறம் எப்படி அவ அதை மறப்பா?" என்ற விஜயின் கேள்வியில் இருக்கும் நியாயம் புரிய சித்தார்த் அமைதியாக அமர்ந்திருந்தான். நண்பனை சகஜமாக்கும் பொருட்டு விஜய்யே பேச்சை தொடர்ந்தான்.

"போதும் டா நீ பீல் பண்ணது, போய் முதல்ல மாசமா இருக்க என் தங்கச்சி ப்ரீத்தியை கவனி, அப்பறம் உன் தங்கச்சியை கவனிக்கலாம், ஊரான் தங்கச்சியை ஊட்டி வளத்தா உன் தங்கச்சி தானா வளருவாடா" என்றவனை இருகரம் கூப்பி வணங்கிய சித்தார்த் "டேய் யப்பா... நான் உன்ன இனி எதுமே கேட்கமாட்டேன் தயவு செஞ்சி இப்படி பேசி கொள்ளாத" என்றவனிடம் புன்முறுவலுடன் விடைபெற்று சென்றான் விஜய்.

சித்தார்த்துக்கு, விஜய் பேசியதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அவன் சொல்வது போல் தங்களால் தான் ஸ்ருதி தனது சுயத்தை இழந்து நிற்கிறாளோ என்றெண்ணம் வர அவனது நியாபக அலைகள் அவளுடனான கடந்தகாலத்திற்கு பயணப்பட ஆரம்பித்தது.

இரண்டு வருடத்திற்கு முன்புவரை சித்தார்த்திற்கு தனது தங்கை ஸ்ருதியை வெறுப்பேற்றுவதே அவனது தினசரி வேலைகளுள் முக்கியமான ஒன்று!

கெளதம், ஸ்ருதிக்கு அன்பான அண்ணன் என்றால் மாறாக சித்தார்த்தோ வம்பான அண்ணன் ஆக இருந்தான். இருவரும் வீட்டில் இருக்கும் சமயங்களில் இவர்களின் பஞ்சாயத்தை கேட்கவே அவர்களின் அன்னை தனலட்சுமிக்கு நேரம் போதாது.

ஸ்ருதி தனக்கு பிடித்த பாடலோ அல்லது தொலைக்காட்சி தொடரோ பார்த்துக் கொண்டிருந்தால், அங்கு செல்பவன் சேனலை மாற்றி, ரிமோடை தன் இருக்கையின் கீழ் வைத்துக்கொள்வதும், ஒன்றாக உணவு உண்ணும்போது அவளின் அருகில் அமர்ந்து, அசந்த நேரம் பார்த்து அவளது தட்டில் உள்ளதை அபேஸ் செய்வதும், பூஜை மற்றும் விசேஷ நாட்களில் அன்னையுடன் விரதம் இருப்பவளிடம் அவளுக்கு பிடித்த தின்பண்டம் வாங்கி வைத்துக்கொண்டு, அவள் பார்க்கும் போது அதனை ரசித்து ருசித்து கொறிப்பதும், அவளின் வகுப்பு தோழிகளை கலாய்ப்பதும் என சித்தார்த்தின் செயல்கள் நீண்டுகொண்டே போகும். இவனின் செயல்களின் வெளிப்பாடாய் அவனுக்கு ஸ்ருதியிடமிருந்து அடிகளும் "போ டா நாயே, எரும மாடு" என அவனின் முன்ஜென்ம பிறப்பின் பெயர்களும் அவனுக்கு பரிசாய் கிடைக்கும். இவை அனைத்தும் இந்த இரண்டு வருடத்தில் சுத்தமாய் மறந்தும் மறைந்தும் போனது.

தங்கையுடனான நினைவுகளில் மூழ்கியவனின் மனது, அதனை நினைவுபடுத்தியவனின் நினைவில் மூழ்க தொடங்கியது.

அன்று விஜயின் போனில் ஒலித்த ரிங்க்டோன் பாடலில், அவனுடன் எதுவும் பேசாமல் வேகமாக சர்வீஸ் சென்டரில் பணத்தை செலுத்துவிட்டு தனது வண்டியில் ஏறி பயணித்த சித்தார்த் எப்படி அவனின் ஆபீஸ் வந்துசேர்ந்தான் என்பதை அவனே அறியான்.

ஆபீஸை திறந்து, தனது இருக்கையில் அமர்ந்தவனுக்கு வேலையில் கவனம் என்பது சிறிதும் இல்லை. விஜய்க்கு தன் தங்கையின் மீது காதலா? எப்போது? எப்படி? என்ற கேள்விகளே மனதில் ஓட, தலையை கைகளில் தாங்கியபடி அமர்திருக்க, தன் முன் ஏதோ நிழலாடுவது அறிந்தும் தலை நிமிர்த்தாமல் அதே நிலையில் இருந்தான் சித்தார்த்.

எதிர்ப்பக்கம் நின்றிருந்த விஜய்க்கு நண்பனின் இந்த தோற்றம் மனதை பிசைய, மௌனமாய் நின்றான். சிறிது நேரம் அப்படியே நின்றவன் பின் அவனை நெருங்கி "டேய் சித்தார்த்" என்றவனுக்கு பதிலாய் கிடைத்தது சித்தார்த்தின் மௌனம்.

விஜய்கோ தன் மனதில் இருந்ததை நண்பனிடம் முன்னமே தெரிவித்து இருக்கவேண்டுமோ என்ற காலம் கடந்த ஞாணோதயம்.

"சித்தார்த், ப்ளீஸ் டா ஏதாச்சும் பேசு, திட்டு, என் மேல கோபப்படு, அடி இப்படி எதுவேனா செய் டா, பட் ப்ளீஸ்... பேசாம மட்டும் இருக்காதா டா" இதற்கும் சித்தார்த்திடம் மௌனம் மட்டுமே.

"உன்கிட்ட இதை மறைக்கணும் நினைக்கல டா, ஆனா ஸ்ருதிக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கும் போது, அம்மாகிட்ட சொல்லி உங்க வீட்ல பேசவச்சி அதுக்கு அப்பறம் முதல்ல உன்கிட்ட தான் டா சொல்லணும் நெனச்சேன். ஆனா அதுக்குள்ள இன்னைக்கு இப்படி ஒன்னு நடந்து நீயா தெரிஞ்சிப்பனு நான் எதிர்பாக்கல சித்தார்த்" என்ற விஜய், நண்பனின் முகம் நோக்க அது உணர்ச்சி துடைக்கபட்டு காணப்பட, நொந்தே போனான் விஜய்.

சித்தார்த் மௌனம் தொடர்ந்து நீடிக்கவே, அதில் விஜய்க்கு சிறு கோபம் துளிர்விட, கோபத்துடனே அனைத்தையும் சொல்லிவிடும் வேகத்தில் பேச்சை தொடர்ந்தான் "ஏன் டா இத்தன வருஷ பிரண்ட்ஷிப்ல உனக்கு என்மேல நம்பிக்கை இல்லையா டா? நான் என்ன அவ்வளவு கெட்டவனா? உன் தங்கச்சியை கல்யாணம் பண்ற தகுதி எனக்கில்லையா டா? ஸ்ருதிய என்னை விட யாரும் நல்லா பாத்துக்க மாட்டாங்க, அந்தளவுக்கு நான் பாத்துப்பேன். இப்போ கூட ஸ்ருதி மேல எனக்கு விருப்பம் இருக்குறதை உன்கிட்ட சொல்லாதது மட்டும் தான் நான் பண்ணின தப்பு மத்தது எதுவும் நீ தப்புனு சொன்னா அதை நான் ஏத்துக்க மாட்டேன் டா. இதுவே நீ என்னோட பிரண்ட்டா மட்டும் இருந்தா நான் என்னோட லவ்வை உன்கிட்ட சொல்ல எந்த தயக்கமும் இருந்துருக்காது, ஆனா நீ நான் லவ் பண்ற பொண்ணோட அண்ணா டா நான் எப்படி அதை உன்கிட்ட சொல்லுவேன். ஸ்ருதி உன்னோட தங்கச்சியா தான் எனக்கு முதல்ல தெரியும், அவகிட்ட பேசினது இல்லனாலும் அவ மேல எனக்கு பாசம் இருந்துச்சு டா. ஆனா அதுக்கு அப்பறம் ஒரு கட்டத்துல அது காதலா மாறினப்போ எனக்கே அதிர்ச்சியா தான் இருந்துச்சு. எல்லாத்தையும் தாண்டி உன் பிரண்ட்ஷிப் தான் என் கண்ணுமுன்ன வந்துச்சு, உன் நம்பிக்கையை இழந்துருவேனோனு ஒரு பயம், அதனாலேயே யார்கிட்டயும் சொல்லாம மனசுலயே வச்சிட்டேன்" என்றவன் சிறு இடைவெளி விட்டு

ஒரு பக்கம் நீ, ஒரு பக்கம் என்னோட சொல்லாத காதல் இதோட போராடிட்டு இருந்தேன் டா. எனக்கு ஸ்ருதி மேல லவ் வந்ததுக்கு அப்புறம் என்னால பழைய படி உன்கூட பேச, ஏன் உன் முகம் பாக்க கூட என்னால முடியல டா. அப்போலாம் ரொம்ப ட்ரை பண்ணினேன் டா ஸ்ருதிய மறக்க, ஆனா என் மூளை சொல்ற பேச்சை மனசு கேக்கல... அப்படி தவிச்ச அப்போ தான் உங்க வீட்ல ஸ்ருதியோட கல்யாண பேச்சி ஆரம்பிச்சாங்க இதையே சாக்கா வச்சி மனசை மாத்திக்கணும்னு முடிவு பண்ணேன் ஆனா அப்போ தான் டா நான் நரக வேதனைபட்டேன் என்னால சுத்தமா முடியல அவளை மறக்க முடியல, என்கஷ்டத்தை யார்கிட்டயும் சொல்லவும் முடியல. ஸ்ருதி கல்யாணம் முடியுற வரைக்கும் ஊருலயே இருக்க கூடாதுனு முடிவு பண்ணி கம்பெனியோட வேற பிரான்சுக்கு மூணு மாசம் அங்க வேலைக்கு போனேன். அந்த சமயத்துல தான் என்னென்னவோ நடந்து கல்யாணம் நின்னு போச்சி, உங்க எல்லார்க்கும் கஷ்டம் தந்த விஷயம் எனக்கு சந்தோசம் தந்துச்சி, அப்போவே புரிஞ்சிபோச்சி என்னால ஸ்ருதியை மறக்க முடியாது, அதுவும் இல்லாம இந்த கல்யாணம் நின்னது கூட எனக்காக தான் என்கூட ஸ்ருதிய சேர்க்க தான்னு நான் நம்புறேன். அப்போ முடிவு பண்ணினது தான் இனிமே ஸ்ருதிய எந்த காரணத்துக்காகவும் விட்டுட கூடாதுனு. எனக்கு என் பிரண்ட்டும் வேணும் என் லவ்வும் வேணும் இந்த விஷயத்துல நான் கொஞ்சம் சுயநலவாதி தான் சித்தார்த். நானும் என் லவ்வை உன்கிட்ட மறைக்கணும் நினைக்கல டா, அம்மா உங்க வீட்டுக்கு அனுப்பி பொண்ணு கேக்க வச்சிட்டு உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் என்னை நம்பு டா ப்ளீஸ்" என்று கோபமாய் ஆரம்பித்து கெஞ்சளில் முடித்தான் விஜய்.

அப்போதும் சித்தார்த் மௌனம் கலையாமல் இருக்கவே, விஜய் அங்கிருந்து வெளியேறினான்.

இரவு வீடு வந்த சித்தார்த் யாரிடமும் பேசாமல், முகம் யோசனையில் இருக்க, உணவு முடித்து அறைக்கு நுழைந்தவன் முன் வந்து நின்றாள் ப்ரீத்தி.

"ஏன் மாமா என்னாச்சு முகமே ஏதோ போல இருக்கு, யாரோடயும் பேசவும் இல்ல ஏதாச்சும் பிரச்சனையா"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்ரீத்தி" என்றவனுக்குமே தன் மனதில் உள்ளதை இவளிடம் கொட்டிவிட எண்ணினாலும், அவளின் கோபம் கவலை போன்ற அனைத்தும் குழந்தையையும் பாதிக்கும் என்ற மருத்துவரின் அறிவுரை மனதில் எழ, தலையை தொங்க போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தவன் அருகில் வந்து அமர்ந்தாள் ப்ரீத்தி.

"ஏதோ மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கிங்க போல மாமா, அது ஆபீஸ் சம்மந்தப்பட்டதுனா என்கிட்ட சொல்லவேணாம், ஆனா அதுவே நம்ப வீடு சம்மந்தப்பட்ட விஷயமா இருந்தா கண்டிப்பா எனக்கு தெரியணும் மாமா சொல்லுங்க" என்றவளின் குரலில் அவ்வளவு பிடிவாதம்.

அவனுக்குமே தன் மனதில் உள்ளதை அவளிடம் பகிரும் எண்ணம் ஒருபுறம், இவளிடம் கூறுவாதல் தன் மனத்திலும் ஒரு தெளிவு பிறக்கும் என்ற எண்ணம் மறுபுறம் என நினைத்தவன், காலையிலிருந்து நடந்த விஜயின் சந்திப்பு தொடங்கி அவனது கடைசி உரையாடல் வரை ஒரே மூச்சாக சொல்லி முடிக்க. சிறிது நேரம் அறையில் பெருத்த மௌனம் மட்டுமே நிலவியது.

"உங்களுக்கு விஜய் அண்ணா மேல கோபம் வந்துச்சா மாமா" என்று கேட்டு அந்த மௌனத்தை உடைத்தாள் ப்ரீத்தி, அதற்கு சித்தார்த்திடம் ஆமாமென்ற தலையசைப்பு பதிலாக கிடைக்க, மேலும் அவளே தொடரந்தாள் "ஏன் மாமா கோபம் வந்துச்சி" என்றவளை திகைப்புடன் நோக்கினான் சித்தார்த்.

"ஏன்னு கேட்டா என்ன அர்த்தம் ப்ரீத்தி? அவன் என் தங்கச்சிய லவ் பன்றான் அதை இவ்ளோ நாளா என்கிட்ட இருந்தே மறைச்சிருக்கான் அப்போ கோபம் வராதா"

"உங்க கிட்ட மறைச்சதுக்கு தான் கோபம், அப்போ ஸ்ருதிய அவர் எப்படி லவ் பண்ணலாம்னு உங்களுக்கு கோபம் வரல அப்படி தானே மாமா" என்றவளுக்கு பதிலளிக்க முடியவில்லை சித்தார்த்துக்கு, ஏனெனில் அவனுக்கு அப்படி ஒரு கேள்வி ப்ரீத்தி கேட்கும் வரையில் அவன் மனதில் எழவே இல்லையே!

"எனக்கு தெரிஞ்சி நம்ப ஸ்ருதிக்கு விஜய் அண்ணா தான் பர்பெக்ட் சாய்ஸ் மாமா, நீங்க அவரை இப்போ பிரண்ட்டா நினைக்காம, ஸ்ருதிக்கு அண்ணனா மட்டும் நினைச்சி பாருங்க விஜய் அண்ணாவை வேணாம்னு சொல்லி ரிஜெக்ட் பண்ண உங்ககிட்ட ஏதும் ரீசன் இருக்கா?"

என்றவளின் கேள்வியில் சித்தார்த் வேகமாக இல்லையென தலையசைக்க, அவன் தலையசைந்த வேகத்தில் ப்ரீத்திக்கு சிரிப்பே வந்துவிட்டது "அப்பறம் என்ன மாமா இருக்கு யோசிக்க, விஜய் அண்ணா பத்தி நம்ப வீட்ல எடுத்து சொல்லி பொறுமையா பேசி சம்மதம் வாங்குங்க, இப்போ தூங்குங்க. அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம்" என்று ப்ரீத்தி கூற, தீவிரமான முகத்துடன் சித்தார்த் அவளில் பேச்சை உன்னிப்பாக கவனிக்க, அவள் பேச தொடங்கினாள் "தயவு செஞ்சி இந்த மூஞ்சிய மட்டும் இப்படி சீரியஸ்சா வைக்காதிங்க பாக்க சகிக்கலை" என்று சொல்லி அவள் சிரிக்க, அவனது முறைப்பை பெற்று கொண்டு உறங்கிபோனாள் ப்ரீத்தி.

மறுநாள் வீட்டில் இருந்த விஜய்க்கு சித்தார்த்திடம் இருந்து "என் ஆபீஸ்சுக்கு கிளம்பி வா உன்கிட்ட பேசனும் " என்ற மெசேஜ் வர, சித்தார்த்தை காண தனது பைக்கில் சென்று கொண்டிருந்தான் நம் நாயகன் வெற்றிவிஜயன்.
 

Savitha Nagaraj

Saha Writer
Messages
8
Reaction score
0
Points
1
அத்தியாயம் 8

சித்தார்த்திடமிருந்து மெசேஜ் வரவே அவன் ஆபீஸ்க்கு கிளம்பி சென்றான் விஜய். அழைத்துவிட்டோம் எப்படி ஆரம்பிப்பது என சித்தார்த்தும், அழைத்தது அவன் தானே அவனே முதலில் பேசட்டும் என விஜயும் மௌனம் காக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு எதிரெதிர் இருக்கையில் அமர்திருக்கயில்,
"சங்கீத ஸ்வரங்கள்...
ஏழே கணக்கா...
இன்னும் இருக்கா...
என்னவோ மயக்கம்..."
அந்த மௌனத்தை கிழித்து கொண்டு ஒலித்தது விஜயின் போன் ரிங்க்டோனில் இருவருக்குமே சிரிப்பு வந்துவிட, சிரிப்புடனே கால் அட்டென்ட் செய்தான் விஜய்.

"சொல்லு டா ரம்பம், இல்ல டா நான் இன்னைக்கு கம்பெனி வரல, ரவி அண்ணா ஒய்ப்புக்கு ஏதோ ஒடம்பு முடியாடாலயம் அதான் அவரோட நைட் ஷீட்டை என்ன பாக்க சொல்லிட்டு என்னோட டே ஷிப்ட் அவர் பாக்குறதா சொல்லிட்டாரு டா. நீ பாத்து போ நான் அப்பறமா பேசுறேன்" என போன் கட் செய்தவன், "கோபம் போய்டுச்சா டா சித்தார்த்?" என்று விஜய் கேட்டவுடன் சிரித்துக்கொண்டிருந்த சித்தார்த்தின் முகம் சட்டென கடுமை பூசிக்கொண்டது.

"இதுக்கு நான் ஸ்ருதியோட அண்ணனா உனக்கு பதில் சொல்லனுமா? இல்ல உனக்கு பிரண்ட்டா பதில் சொல்லனுமா? " என்ற சித்தார்த்தின் கேள்வியில் விஜயின் புன்னகை மறைந்தது.

தன் நண்பன் இல்லையில்லை, தான் காதலிக்கும் பெண்ணின் அண்ணனாய் அவன் நிலையில் இருந்து சித்தார்த் கேள்வி எழுப்பவே அப்போது தன் அவனுக்கு ஒன்று உரைத்தது. நேற்று வரையில் எனக்கு என் லவ்வும் வேணும் பிரண்ட்டும் வேணும் என்று வசனம் பேசியவன் மறந்திருந்தான், அவனும் ஒரு பெண்ணின் அண்ணன் என்பதை. அண்ணனாக சித்தார்த்தின் நிலையில் இருந்து பார்க்கையில், இந்த சூழலில் தான் இருந்திருந்தால், அவன் அளவுக்கு பொறுமை என்பது தனக்கு இருந்திருக்குமா? என்று விஜய் யோசிக்கையில் அவன் மனது அவனுக்கு இல்லை என்ற பதிலை அளிக்க, கண்களை மூடி திறந்தவன் பேச தொடங்கினான் "கண்டிப்பா, நீ ஸ்ருதிக்கு அண்ணனா தான் டா பதில் சொல்லணும். எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா, அவளுக்கு இப்போ கல்யாணம் ஆகி குழந்தையும் இருக்கு ஆனா உன் நிலைமை எனக்கு வந்துருந்தா, என் பிரண்ட் ஒருத்தன் என்னோட தங்கச்சியை லவ் பன்றானு தெரிஞ்சா என்னால உன் அளவுக்கு பொறுமை இருந்துருக்க முடியாது சித்தார்த்" என்றவன் சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான் "உன் நிலைமை இப்போ எனக்கு புரியுது டா. ஒரு பிரண்ட்டா நான் உனக்கு பண்ணினது துரோகம் தான். அதுனால என்னைக்கும் நீ ஸ்ருதிக்கு அண்ணனா மட்டும் இருந்து உன் முடிவு சொல்லு. உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் நான் அத எதிர்க்க மாட்டேன் சித்தார்த்" என்றான் விஜய்.

அவன் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்த சித்தார்த், அவனை கூர்மையாக நோக்கி "எதிர்க்க மாட்டியா? எனக்கு புரியலையே நீ என்ன சொல்ல வர டைரக்ட்டா சொல்லு"

"நீ என்ன முடிவெடுத்தாலும் நான் அதுக்கு மறுப்பு சொல்லமாட்டேன் சித்தார்த். என்ன நீ, உன் தங்கச்சிக்கு வேணாம்னு முடிவெடுத்தாலும் நான் அதை மதிப்பேன், உன்ன எந்த ஒரு கட்டாயப்படுத்தியும் என் பக்கம் நிக்க சொல்லமாட்டேன் ஆனா நான் முன்னமே சொன்னது போல என் அம்மா வந்து உங்க வீட்ல ஸ்ருதியை பொண்ணு கேப்பாங்க. என்னை ஏத்துக்குலாமா வேணாமானு ஸ்ருதியே முடிவு பண்ணட்டும்"

"ஓ.... அப்போ என் தங்கச்சி முடிவு தான் நீ கன்சிடெர் பண்ணுவ, ஹ்ம்ம்... ஆனாலும் நீ இவ்ளோ பச்சப்புள்ளயா இருக்க கூடாது. நான் என் தங்கச்சி கிட்ட உன்ன கல்யாணம் பண்ண கூடாதுனு சொல்லிட்டா அவ அதை தான் கன்சிடெர் பண்ணுவா இதை மறந்துட்டியே" என்றான் சித்தார்த், விஜய் அறியாவண்ணம் வாய்க்குள் சிரித்தபடியே.

"நீ சொல்றதும் சரி தான் சித்தார்த். உன் தங்கச்சிக்கு நீ அட்வைஸ் பண்ணலாம் அதை கேட்டு அவளும் என்ன வேணாம்னு சொல்லலாம். ஆனா நான் விரும்பின பெண்ணு கிடைக்க இத்தனை நாள் எந்த ஒரு முயற்சியும் பண்ணல. இப்போ தான் அந்த முயற்சியை ஆரம்பிச்சிருக்கேன் அது வெற்றியாகுறதும் தோல்வியாகுறதும் அவ முடிவுல தான் இருக்கு. அவ வாழ்க்கையை தேர்ந்து எடுக்குறதுல அவளுக்கு இல்லாத உரிமையா? அதெல்லாம் யோசிச்சு நான் முயற்சியே பண்ணாம இருந்தா எப்படி, எனக்கு அவ என்வாழ்க்கைல வேணும்" என்றவனை மெச்சுதலாக பார்வை பார்த்தவன் "அப்போ என் முடிவையும் கேட்டுக்கோ, என் தங்கச்சி ஸ்ருதியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு முழு சம்மதம்" என்றான் சித்தார்த் உதட்டில் விரிந்த சிரிப்புடன்.

விஜய்க்கு சற்று நேரம் எதுவும் விளங்கவில்லை, அவன் ஒன்னு நினைத்துவைத்திருக்க ஆனால் அதை செயல் படுத்தும் முன்பே சித்தார்த்க்கு அணைத்தும் தெரிந்து அவனுக்கும் இதில் முழு சம்மதம் என்று அறிந்த பின் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி.

"எனக்கு நீ இந்த விஷயத்தை முன்னாடியே சொல்லலைனு தான் கோபமே தவிர வேற எதுக்கும் கோபம் வரல டா விஜய். இதையே ப்ரீத்தி சொன்ன அப்பறம் தான் நானே புரிஞ்சிக்கிட்டேன் டா"

"என்ன டா சொல்ற? இது ப்ரீத்திக்கு தெரியுமா"

"ம்ம்ம்...தெரியும் டா நான் தான் சொன்னேன், அம்மணி தான் உனக்கு புள் சப்போர்ட், நீ தான் எங்க ஸ்ருதிக்கு பர்பெக்ட் பேர்-ஆம். அவ சொன்னதுக்கு அப்பறம் தான் எனக்கே தோணுச்சு, உன்ன பத்தி நான் சொல்லி தான் அவ தெரிஞ்சிகிட்டா அவளுக்கு தோணினது ஏன் இத்தன நாள் எனக்கு தோணாம போச்சுன்னு நெனச்சேன் டா" என்றவனை எழுந்து அணைத்துக்கொண்டான் விஜய்.

"தேங்க்ஸ் டா மச்சான்" என்றவனை "நீ சொல்லலானாலும் இனிமே நான் உனக்கு மச்சான் தான் டா" என்ற சித்தார்த், விஜயிடம் இருந்துவிலகி "சமயம் பாத்து கௌதம் கிட்ட பேசிட்டு அதுக்கு அப்பறம் வீட்லயும் பேசுறேன் டா" என்றவரிடம் புன்னகையுடன் விடைபெற்று சென்றான் விஜய். நடந்து முடிந்த நினைவுகளில் இருந்தவனை ப்ரீத்தியின் போன் கால் நடப்புக்கு கொண்டு வந்தது.

"மாமா, எங்க இருக்கிங்க?"

"நம்ப ஆபீஸ்ல தான் ப்ரீத்தி"

"இன்னும் கிளம்பலையா மாமா? எப்போ தான் வீட்டுக்கு வருவிங்க சாப்பிட"

"கொஞ்சம் வேலை இருக்கு ப்ரீத்தி, இப்போ வீட்டுக்கு வர முடியாது நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு"

"காலைல கிளம்புற அப்போ கூட வேலை இருக்கு மதியம் வரமாட்டேன்னு எதுமே சொல்லலையே, இப்போ என்ன திடீர் வேலை? "

"வேலை என்ன டி ரெண்டு நாள் முன்னாடியே தந்தி அடிச்சிட்டா வரும்? காலைல இல்லை இப்போ இருக்கு அதுக்கு என்ன பண்ண முடியும் சும்மா நை..நைனு.. கேள்வி கேட்டுகிட்டு" என்று சித்தார்த் சற்று குரல் உயர்த்தவே, ப்ரீத்தியின் பக்கம் குரலே இல்லை, இந்த அமைதிக்கு பின் வரும் விளைவுகளை உணர்ந்த அந்த அக்மார்க் கணவன், உடனே சுதாரித்து குரலை சகஜமாக்கி பேச தொடங்கினான்.

"கொஞ்சம் வேலை மா, கேட்டரிங் ஆளுங்களை வர சொல்லிருக்கேன் . சடேன்னா ஈவினிங் ஒரு பங்ஷனுக்கு ஆர்டர் வந்துருச்சி. அதான் வீட்டுக்கு வர முடியாது நான் வெளிய சாப்பிடுறேன், நீ சாப்டாச்சா" என்றவனுக்கு ப்ரீத்தியின் பதில் "ம்ம்ம்ம்" மட்டுமே.

"அரேஞ்சுமென்ட் எல்லாத்தையும் முடிச்சிட்டு ஈவ்னிங் வீட்டுக்கு சீக்கிரமா வந்துறேன் நாம ரெண்டு பேரும் பக்கத்துல இருக்க பார்க்ல சின்னதா ஒரு வாக் போய்ட்டு வரலாம்" என்று ஐஸ் வைத்து அவளின் அமைதியை உடைக்க நினைத்தான் சித்தார்த்.

இதற்கும் ப்ரீத்தியின் பதில் "ம்ம்ம்"மட்டுமே.

"சாப்டதுக்கு அப்பறம் போடுற டேப்லெட் எல்லாம் போட்டுட்டியா ப்ரீத்தி" என்று அக்கறை என்னும் ஆயுதத்தை கொண்டு அவளை வீழ்த்த நினைத்தவனுக்கு, அவனின் மனையாள் மௌனம் எனும் கேடயம் கொண்டு அவனின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மீண்டும் அவனுக்கு ஓரு "ம்ம்ம்ம்" மட்டுமே.

அதில் கடுப்பானவன் "போ டி ம்ம்ம்-க்கு பொறந்தவளே" என்று போன்னை வைக்க, ப்ரீத்தியின் இதழிலோ புன்முறுவல்.

*************
ஸ்ருதி, மதிய உணவை முடித்துவிட்டு, தன் அறையில் படுத்து கொண்டிருந்தாள். எப்போதும் போல் இல்லாமல் இந்த சன்டே அவளுக்கு மிகவும் வெறுப்பை தந்தது, காரணம் வாரத்தில் ஆறு நாட்களும் அண்ணனுடைய ஆபீஸ் சென்று வருபவளுக்கு ஓய்வு என்பது சன்டே ஒருநாள் மட்டுமே, அன்று சாப்பிட்டு உறங்கி ஓய்வெடுப்பதிலே அந்தநாள் ஓடிவிடும், ஆனால் ஐந்து நாட்களாக வீட்டிலே இருப்பவளுக்கு இந்த சன்டேவை சமாளிக்க முடியாமல் போக, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள், "ச்சை...இன்னைக்கு என்ன ரொம்ப வெறுப்பா இருக்கு, நாளைல இருந்து ஆபீஸ்க்கு கிளம்பிரானும் என்று நினைத்தவள் மூளையில் விஜயின் பேச்சு மின்னல்வெட்டியது "ஐயோ...ஆமா ஆபீஸ் போனா அவன் வந்து நாம கேக்குற கேள்வி வெச்சி நம்மையே மடக்குவான்... சித்தார்த் அண்ணா கிட்ட சொல்லிடலாம்னு பாத்தா, நீ சொல்ற வரைக்கும் எனக்கு உன்ன லவ் பண்ற ஐடியா வரலனு சொல்லிட்டு சுத்துறான், இதையே அவன் அண்ணா கிட்டயும் சொன்னா என் இமேஜ் தான் டேமேஜ் ஆகும்... என்ன செய்யலாம் என்ன செய்யலாம் " என்று யோசித்தவள் "நாம கோபப்பட்டு அவசரத்துல பேசுறதால தானே அவன் அதை வச்சே பாயிண்ட் பிடிச்சி நம்மள ஆப் பண்றான், இனிமை நாம பொறுமையா தான் பேசனும், அவன்கிட்ட கோபப்பட்டு வார்த்தையை விட்டுடக்கூடாது, முடிஞ்சளவு அவன் கூடவே இனி பேசவும் கூடாது" என்று முடிவெடுத்த பின் மனது சற்று அமைதியடைய, எழுந்து வெளியே வர

"ஸ்ருதி எழுந்துட்டியா? நானே உன்ன எழுப்பனு நினைச்சேன்" என்றாள் சாரு

"என்ன விஷயம் அண்ணி சொல்லுங்க"

"கொஞ்சம் கடை வரைக்கும் போய்ட்டு வரியா, உங்க அண்ணா வந்து கூட்டிட்டு போறேன் சொன்னாரு, ஆனா இப்போ ஏதோ வேலை இருக்காம் வர நைட் ஆகிருமாம்"

ஸ்ருதிக்கு ஏற்கனவே வீட்டில் இருப்பது போர் அடிக்கவே, சாரு கேட்டதும் சம்மதித்தாள் "போய்ட்டு வரேன் அண்ணி, என்ன எங்கயாச்சும் வெளிய போறிங்களா?"

"நாளைக்கு என் பிரண்ட் மேரேஜ், நான் ஏற்கனவே போகணும் சொல்லிருந்தேன்ல அதுக்காக தான் ஸ்ருதி, வளையல் அப்பறம் இன்னும் கொஞ்சம் திங்ஸ் எல்லாம் வாங்கணும், நானும் கூட வரலாம்னு பாத்தா ப்லவுஸ் ஆல்டர் பண்ற வேலை இருக்கு, பிரணவ் தூங்கிட்டு இருக்கான் இப்போ தான் அதை பண்ணமுடியும் அவன் எழுந்தா என்னை ஒன்னும் செய்ய விடமாட்டான், அதுனால நீயே போய் வாங்கிட்டு வந்துறேன்" என்று அதன் விபரங்களை சாரு சொல்ல, அதனை கேட்டுக்கொண்டு தன் அன்னையிடமும் விஷயத்தை சொல்லி அனுமதி பெற்று ஸ்கூட்டியில் சென்று கொண்டுருக்கும் ஸ்ருதி அறியவில்லை, சற்று முன் அவள் பொறுமையை காக்க வேண்டும் என்றெடுத்த முடிவை சோதிப்பதற்கென்றே விதி ஒருவனை வீதியில் விட்டிருக்கின்றது என்பதை.

அந்த பெரிய கடையின் முன் தன் ஸ்கூட்டி நிறுத்திய ஸ்ருதி, உள்ளே சென்று சாரு சொன்ன பொருள்களை வாங்குவதற்காக பார்வையிட்டு கொண்டிருக்க, ஏதோ உள்ளுணர்வு தோன்ற தன் பின்னால் திரும்பி பார்த்தாள். அங்கு வளையல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தான் விஜய்.

அவனை பார்த்ததும் தன் பின்னால் பாலோ செய்து வந்துருப்பானோ என்று எண்ணம் வர, அவளுக்கு கோபம் துளிர்விட தொடங்கியது. இருப்பினும் சற்று முன் தனக்கு தானே வழங்கிய அறிவுரைகள் மனதில் எழ, ஓசைப்படாமல் அங்கிருந்து நகர்ந்து வேறு பக்கம் சென்று பார்வையிட தொடங்கியவளின் கவனத்தை கலைத்தது "எக்ஸ்கியூஸ் மீ அந்த ரெட் நைல் போலிஷை கொஞ்சம் எடுத்து தரிங்களா?" என்ற அவளுக்கு பின்னாலிருந்து ஒலித்த விஜயின் குரல்.

திரும்பி அவனை முறைத்தவள், "ஏன் உங்களுக்கு கை இல்ல நீங்களே எடுத்துக்கோங்க" என்று அவனுக்கு சூடாக பதிலளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று, சாரு அவளிடம் வாங்கி வரசொன்ன அனைத்தையும் வாங்கிவிட்டு பில் போடுவதற்காக லைனில் நின்றவளுக்கு பின் வந்து நின்றான் விஜய்.

ஸ்ருதியின் பொறுமை அவளிடம் இருந்து அப்போவோ இப்போவோ என்று விடைபெற காத்துகொண்டு இருக்க, பொதுஇடம், மக்கள் கூட்டம் போன்றவையால் போக இருந்த பொறுமையை இழுத்து பிடித்து நிறுத்தியிருந்தாள், அதுவும் அவன் வண்டி நிறுத்தும் இடத்திலும் பின் தொடர்ந்து வரவே, அவளுக்கு டாடா காட்டி சென்றது அவளின் பொறுமை.

"எதுக்கு இப்படி என் பின்னாலேயே வர, உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?" என்று சீறினாள்.

"ஹலோ ஹலோ யார கேக்குறிங்க?"

"வேற யார உன்ன தான், நீ தானே என் பின்னால வர உன்னை தான் கேக்குறேன்"

"இங்க பாருங்க ஸ்ருதி, கூல்... ரோட்ல நின்னு எதுக்கு இப்படி கத்துறிங்க? "

"யாரு நான் கத்துறேனா, ரோட்னு தான் நானும் மெதுவா பேசிட்டு இருக்கேன்"

"எது..இது தான் மெதுவா பேசுறதா? நல்லது..."

"ம்ச்ச்...கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, எதுக்கு என் பின்னால வந்துட்டுயிருக்க"

"ஏதே...நான் உன் பின்னால வரேனா? பார் யுவர் கைன்ட் இன்பர்மேஷன் நான் உங்க பின்னால வரல நீங்க தான் எனக்கு முன்னால போறிங்க"

"ரெண்டும் ஒன்னு தான்" என்றாள் பற்களை கடித்தவாறே

"சரி ரெண்டும் ஒன்னு தானே, அப்போ எனக்கு முன்னால எப்படி நீங்க போகலாம்னு நான் உங்ககிட்ட சண்டைக்கு வரலாமா" என்று அவன் மறுகேள்வி கேட்கையில் ஸ்ருதிக்கு, அவனை பற்றி அறிந்தும் அவனுடன் சண்டைக்கு சென்றது தவறோ என்று எண்ணம் எழ, எங்கேயும் சென்று முட்டிக்கொள்வோமா என தோன்றியது அவளுக்கு.

"பதில் சொல்லாம எதுக்கு இப்போ தலைல கை வைக்குறிங்க"

"ஐயா சாமி... நீங்க என் பின்னால வந்த மாதிரி தோணுச்சு அதுதான் கேட்டுட்டேன், இப்போ தான் நீங்க இல்லனு சொல்லிட்டீங்கல, பிரச்சனை மூடிஞ்சிது விடுங்க "

"அதெப்படி விட முடியும், சும்மா போறவனை என் பின்னாலயா வர...என் பின்னாலயா வரனு... கேட்டா எப்படி? நீங்க சொல்றத பாத்த வீட்டுக்கு போய்ட்டு இருந்த நான், உங்கள பாத்ததும் என் பைக் யூ-டர்ன் அடிச்சி உங்க பின்னாடியே பாலோ பண்ணி இந்த கடைக்கு வந்தா மாதிரி பேசுறிங்களே"என்று சற்று முன் நடந்ததை அப்படியே கூறி அதை அவள் உணரும் முன்னே அவன் மீண்டும் பேச்சை தொடர்ந்தான் "நல்லா தெரிஞ்சிக்கோங்க நான் உங்க பின்னால வரல நீங்க தான் எனக்கு முன்னால போனிங்க, நீங்க எனக்கு முன்னால போனா , உங்களுக்கு நான் பின்னால வர மாதிரி தான் தெரியும் அதுக்காக நான் உங்க பின்னால வருவதா அர்த்தம் இல்ல, நீங்க என் முன்னால போறதா தான் அர்த்தம்"

அவனின் விளக்கம் அவளுக்கு தலை சுற்றலை தர, சோர்ந்தவள் "அய்யோ...நான் தெரியாம கேட்டுட்டேன், இனிமே நான் உங்க முன்னால போகவே மாட்டேன் நீங்களே முன்னால போங்க நான் பின்னாலயே வரேன் " என்று ஸ்ருதி அவனுக்கு வழியை விட

"இப்போயாச்சும் நான் உங்க பின்னால வரல நீங்க தான் எனக்கு முன்னால போனிங்கனு உங்களுக்கு புரிஞ்சிதே அதுவே போதும் " என்று இரண்டடி நடந்து சென்றவன் அவள் பக்கம் திரும்ப, என்ன என்பதை போல் ஸ்ருதி புருவம் சுருக்க
"அப்போ நீ ஏன் என் பின்னால வரேன்னு என்னை கேட்டுட்டு
இப்போ நீயே என் பின்னால வரியே, அப்போ இது லவ் தானே ஸ்ருதி" என்ற விஜய், வழக்கம் போல் பயணத்தின் போது அணியும் அந்த கருப்பு கூலரை போட்டுகொண்டு, பைகில் ஏறி அங்கிருந்து செல்ல அவள் பார்வையில் இருந்து மறைந்தான்.
 

Latest posts

New Threads

Top Bottom