அப்பொழுது அதிதி என்றொரு குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள். வந்திருந்தது கௌதமன்.
அவள் கொதித்துப்போய் விலகப் பார்க்க அவன், "என்னை மன்னிச்சிடு அதிதி. அன்னைக்கு உன்கிட்ட எதையும் விரிவா பேச முடியல. விக்ரமனும் என்னை பேச விடல. உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு உடனே போயிடனும்னு தான் என்கிட்ட சொல்லியிருந்தான். அவன் அன்னைக்கு நம்மளை தள்ளியிருந்து பார்த்துக்கிட்டு இருந்ததால தான் என்னால உன்கிட்ட எதையும் முழுசா சொல்ல முடியல" என புதுக்கதை சொன்னான்.
அவன் கூறுவது புரியாமல் விழித்தவள் புருவங்களை இடுக்கினாள். அவனே அவளுக்கு விளக்கினான்.
"அன்னைக்கு இதே இடத்துல உன்கிட்ட தப்பா பேசினதுக்கப்பறம் விக்ரமன் என்னை போலீஸ்ல மாட்டி விட்டு, என் தொழிலையெல்லாம் முடக்கிட்டான். ஏன்னு கேட்டதுக்கு உங்கிட்ட தப்பா பேசினதை சொல்லி, என்னை மும்பை போகச் சொன்னான். நானும் வேற வழியில்லாம அங்கப் போனேன். ஆனா, விதி தான் என்னை அங்க அழைச்சிட்டுப் போயிருக்குனு நினைக்கறேன் அதிதி" என்றவனின் முகம் இறுதி வாக்கியத்தில் மட்டும் பிரகாசமாக, அவனை விளங்காமல் பார்த்தாள் அதிதி.
"ப்ராமிஸ், அங்க தான் நான் என் தேஜூவைப் பார்த்தேன் அதிதி. அவப் பேரு தேஜஸ்வி. என் ஆஃபீஸ்ல வொர்க் பண்ற பொண்ணு. மிருகமா இருந்த என்னை மனுசனா மாத்தினவ. காதல்னா என்னனு எனக்கு புரிய வச்சவ. அவளை பார்த்தப்பறம் தான் நான் உன்கிட்ட பேசினதெல்லாம் எவ்வளவு தப்பான வார்த்தைகள்னு எனக்கு புரிஞ்சது. நேரா இங்க வந்தவுடனேயே விக்ரமன் கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். ஆனா, அவன் என்கிட்ட மன்னிப்பு கேட்க தேவையில்ல. அதிதிக்கிட்ட போய் கேளுனு சொன்னான். கூடவே, நான் தான் உன்னை மும்பை அனுப்பினேனு அவளுக்கு தெரிய வேணாம்னு கேட்டுக்கிட்டான். நானும் சரினு உன்கிட்ட மன்னிப்பு மட்டும் கேட்டேன். அன்னைக்கு நான் உன்கிட்ட ஏதாவது உளறி வச்சிடுவேனோனு பயந்து தான் அவன் குறுக்கப் புகுந்தான். ஆனா, உன் நிச்சயதார்த்தத் தன்னைக்கு நான் தான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிறதா இருந்தது அதிதி. கடைசில என்னாச்சுன்னா.." என்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நினைவு கூறத் தொடங்கினான் கௌதமன்.
*
நாச்சியம்மை தான் சம்பந்தம் பேச வந்துள்ளதைக் கூறி உதயச்சந்திரனின் உயிருக்கு தான் உலை வைக்கப்போகும் அவர்களின் இக்கட்டான நிலையையும் விவரிக்க, எவ்வாறு தன் பெயர்த்தியை இதிலிருந்து விடுவிப்பது என யோசித்த சங்கரப்பாண்டியன் சமயோஜிதமாய் வார்த்தை அம்புகளை பிரயோகித்தார்.
"நான் இப்போ என் பேத்திக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை குணத்துல ராமன் மாதிரி. அவருக்கு நிகரா உன் வம்சத்துல எவன் இருக்கானோ அவனுக்கு என் பேத்தியைக் கேளு. தர்றேன்" என்று நாச்சியம்மைக்கு கிடுக்குப்பிடி போட்டார்.
அதில் நாச்சியம்மையின் முகம் இருண்டது.
பின், தன்னை சமாளித்துக் கொண்டவர், "நான் என்ன ஜனகன் மக சீதாவையா என் மகனுக்கு பொண்ணுக்கேட்டு வந்திருக்கேன்? அவ அப்பன் ஒரு கொலைகாரன். அவன் இப்ப எங்க இருக்கானு இந்த ஊருக்கேத் தெரியும். சும்மா உளறாம அவளை அனுப்பி விடுங்க" என்றார்.
அச்சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வதென சங்கரப்பாண்டியன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் அம்மாளிகைக்குள் நுழைந்தாள் அதிதி.
இனி நாச்சியம்மையின் முடிவிற்கு அடிபணிவதை தவிர வேறு வழியில்லை என்றவர் அதிதியை அனுப்பி வைக்க முன் வந்த போது தான் ஒரு திருப்பத்தை உண்டாக்கினார் நாச்சியம்மை.
ஆம், விக்ரமனை அனுப்பி அதிதியை அழைத்து வரச்சொன்னார்.
விக்ரமன் அதிதியின் கை பிடிக்கும் போது, என் வம்ச ராமனை பார்த்துக்கொள் என சங்கரப்பாண்டியனை மிதப்பாக பார்த்தார் நாச்சியம்மை. பின், அனைவரையும் கேலியாக பார்த்துவிட்டு தன் காரில் ஏறி அமர்ந்து விட்டார்.