Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL ஒழுகும் நிலவு வழியும் இரவு - Tamil Novel

Status
Not open for further replies.
பொழில்

சுதந்திர வேட்கை
உதிர்ந்த உயிர்கள்
செந்நிற மண்
மரண ஓலம்
கணை மாரி
அறசீற்றம்
வாளாய் நீ
சுழற்ற நான்!!!

வேலு நாச்சியார் கோட்டைக்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுது, யாரோ உயிரைப் பிடித்து இழுக்கும் உணர்வு. தானும் தனது கணவரும் வாழ்ந்த சீமை இப்படி வெள்ளையனின் கைப்பாவையாக இருக்கிறதே என்று எண்ணி மருகினாள். தாங்க இயலாத துன்பம்‌ அவளை ஆட்டிப் படைக்க, அவள் மண்ணில் அமர்ந்து, அந்த மண்ணை எடுத்து தன் கண்ணங்களில் பூசிக்கொண்டாள்.

சோர்ந்திருந்த மனம் வீரத்தினை மீட்டெடுத்தது. வேகமாக எழுந்து சென்றாள் வேலு நாச்சியார்.

குயிலி மனதில் ஒரு வியடம் மட்டுமே இருந்தது. ஒரு வடிவம் மட்டுமே இருந்தது. அது வேலு நாச்சியார் அரியணையில் அமர்ந்திருக்கும் பிம்பம் மட்டுமே.

ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலின் அருகில் சென்று அம்மனை‌த் தரிசனம் செய்தாயிற்று. வெகு நாட்கள் கழித்து அம்மனைக் கண்‌ குளிரக் கண்டதில் புத்துயிர் பெற்றது போல் இருந்தது உடையாள் காளி படைப் பிரிவினருக்கு. மற்ற பெண்களும் கோட்டைக்குள் வந்தனர். அனிச்சம், நளன் மற்றும் பொன்னி, கோட்டைக்குள் வந்தனர்.

கோவிலின் வலப்புறம் இருந்த ஆயுதக் கிடங்கிற்குப் பாதுகாப்புகள் அதிகமாய் இருந்தது. அந்தப் பாதுக்காப்பு வளையத்தை எவரும் தகர்க்க முடியாத வகையில் அரணாய் துப்பாக்கி வீரர்கள் நின்றிருந்தனர்.

வேலு நாச்சியாரின் மனதில் திகில் படர்ந்தது. இந்த ஆயுதக் கிடங்கை எங்கனம்‌ அழிக்கப் போகிறோம் என்று. ஏனெனில் அது ஒன்றுதான் அவர்களின் பலம். கோட்டைக்குள் வந்திருக்கும் சொற்பப் படையினரை வைத்து நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்று‌ நினைக்கையில் மனதில் ரயில் வண்டி தடதடத்தது. குயிலி வேலு நாச்சியிரின் எண்ணங்களை மொழி பெயர்த்துவிட்டாள். அவள் அறியாத உணர்வுகள் நாச்சியிடம் இருக்கக் கூடுமா‌ என்ன?

சட்டென்று அவளின் மூலையில் ஒரு எண்ணம் உதித்திட, சாமி வந்தது போல் ஆட ஆரம்பித்தாள். அங்கிருந்த பெண்கள் அனைவரும் அவளைத் தாங்கிப் பிடித்தனர். விபூதியை அவள் நெற்றியில் தடவி அவளிடம்‌ குறி கேட்டனர்.

"ஆடாத ஆட்டம்‌ போட்டவனெல்லாம் இன்று பிணக் கோலம் பூணப் போகிறான். விடிவு காலம் வந்துவிட்டது. வராஹி தேவி வந்து வந்துவிட்டாள் அரக்கனை வதைத்து ரத்தம் குடித்திட" என்று அவள் குதியாட்டம் போட, அங்கிருந்த பெண்கள் குலவையிட ஆரம்பித்தனர்.

பூஜை‌ப் பொருட்கள் அனைத்தையும் தன் மேல் எடுத்து கவிழ்த்துக் கொண்டாள். ஏனோ ஆங்கிலேய வீரர்கள் அனைவரும் விசித்திரமாய்ப் பார்த்திருந்தனர் இந்த ஆட்டத்தை‌. அவர்களுக்கு இதெல்லாம் புதிதாயிற்றே. கொஞ்சம் ‌ஏளனமும் இருந்தது‌ அவர்கள் பார்வையில். அம்மனுக்கு விளக்கேற்ற வைத்திருந்த நெய்யை எடுத்து தன் மேல் கவிழ்த்துக் கொண்டு ஆடினாள் குயிலி. அங்குக் காவல் புரிந்து வீரர்களின் கவனம் முழுக்க ‌முழுக்க குயிலியின் மேல் இருந்தது. வேலு நாச்சியார் இதை அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, போரைத் துவங்கிவிடலாம் என்று எண்ணியிருந்தாள்.

அனிச்சமும் நளனும்‌ நிகழ்பவை அனைத்தையும்‌ மிகவும் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குயிலி ஏதோ திட்டம் தீட்டிவிட்டாள் என்று அறிந்து கொண்ட பெண்கள் பலர், அவளைப் போல் ஆட ஆரம்பித்தனர். குயிலி மெதுவாக அங்கிருந்து நகர்ந்து ஆயுதக் கிடங்கை நோக்கி அடி மேல் அடி வைத்து செல்ல ஆரம்பித்தாள். அருகில் சென்றதும் தீப்பந்தம் எடுத்துக் கொண்டு உள்ளேயும் நுழைந்து விட்டாள். இன்னும் சில அடிகள்தான் இருந்தது... தீப்பந்தம் கொண்டு ஆயுதக் கிடங்கை‌ அழித்து விடலாம் என்று இவள் கனவு காண, இவளைச் சுற்றி வளைத்தனர் ஆங்கிலேய வீரர்கள். அனைவரின் கைகளிலும் துப்பாக்கி. தோட்டாக்கள் இவள் உடலை சல்லடையாகத் துளைக்கத் தயார் நிலையில் இருந்தது. அந்நிலையில் கையில் இருக்கும் தீப்பந்தத்தைத் இலக்கு நோக்கி தூக்கி எரியவும் இயலாது. அவளைச் சுற்றி வளைத்த வீரர்கள் தடுத்துவிடுவர். அடுத்துக் கணக்கில்லாமல் தோட்டாக்கள் அவள் உடலைத் துளைக்கும். இன்னும் சில நொடிகளில் உயிர் துறக்கப் போகிறோம் என்று சிறிதும் அஞ்சவில்லை அவள். மாறாக ராணியின் கனவை நிறைவேற்ற என்ன செய்லாம் என்ற உத்வேகம் குடிகொண்டது மனதினில். எதிரில் இருப்பவர்களுக்கு, அவளின் கனவைப் பொசுக்கச் சில தோட்டாக்கள் போதுமென்றால், இவளுக்குக் கனவை மெய்ப்பிக்கச் சில நொடி போதுமென்று தோன்றியது. அவனுக்கு ஒரு வழி இருக்கிறதென்றால், நமக்கு ஒரு வழி பிறக்காமல் போய்விடுமா என்ன? ஆம். பிறந்துவிட்டது. இருள் சூழ்ந்திருந்த அவள் மூளையில், ஒளியொன்று தோன்றியது. அது அவள் கையில் ஏந்தியிருக்கும் தீப்பந்தத்தை விடப் பிரகாசமாய் இருந்தது. தீப்பந்ததைத் தன் மேல் வைத்துத் தன்னைத் தீக்கிறையாக்கத் திடமாய் முடிவெடுத்தாள். நெய்யும் எண்ணெயும் கொண்டு நனைந்திருந்த உடல், தோட்டாக்கள் துளைக்கும் முன்னரே பற்றிக் கொண்டு எறிந்தது. அனைவரும் சிலயெனச் சமைந்துதான் நின்றனர் ஒரு நிமிடம். ஆயுதக் கிடங்கை நோக்கி ஓடினாள் குயிலி. அவளின் இந்தச் செய்கையைச் சற்றும் எதிர்பார்க்காத வீரர்கள் திகைத்தனர். தடுக்க நின்றிருந்த வீரர்கள் செய்வதறியாமல் விலகி நின்றனர். அவர்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது. உயிருடன் சாதிக்க முடியாத காரியத்தை, உயிர் கொடுத்து சாதித்து முடித்தாள். தீயின் கோர நாக்குகள் அவள் பொன்னுடல் முழுவதும் பரவி உயிர் வலியை ஏற்படுத்தினாலும், அவள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது இறுதி நொடிகளைப் பயனுள்ளதாக மாற்ற, ஆயுதக் கிடங்கில் நுழைந்து அங்கிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் தீக்கிறையாக்கினாள். ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியது. நரகாசுரனை அழித்துத் தீபாவளி பண்டிகை கொண்டாடிவிட்டாள் குயிலி. வெடித்ததில் பல வீரர்கள் மாண்டு போக, கோட்டைக்குள் குழப்பம் மேலோங்கிட, உடையாள்‌ காளி படைப் பிரிவினர், மக்களைக் கோட்டையிலிருந்து அப்புறப்படுத்த ஆயத்தங்கள் செய்தனர். இன்னும் சற்று நேரத்தில் உக்கிரமான போர் தொடங்க போகிறது என்று அங்குள்ள மக்களும் அவர்களுக்கு ஒத்துழைத்தனர்.

ஆயுதக் கிடங்கு பற்றி எரியும் காட்சியைக் கண்ட நாச்சியாவிற்குப் விழிகளில் பெருமிதம் குடிகொண்டது. குயிலி நினைத்ததைச் சாதித்துவிட்டாள் என்று ஆனந்தத்தில் திளைத்தாள். குயிலி தன்னைப் பலியாக்கியது தெரிந்தால் என்ன நிகழுமோ.

கோட்டைக்கு வெளியிலும் அந்த எதாரொலி ஒலிக்க, ஆங்கிலேய வீரர்கள் திண்டாடினர். அவர்களின் ஒழுங்குநிலை கலைந்தது. கவனம்‌ சிதறியது.

அந்தக் குழப்பங்களைப்‌ பயன்படுத்தி, திப்பு சுல்தானின் படையினர் கோட்டைக் கதவுகளைத் தகர்த்தெறிந்தனர். நாச்சியாரின் படைகள் ஆவேசத்துடன் கோட்டைக்குள்‌ பிரவேசித்தது. அகழியில் பசித்திருக்கும் முதலைகள் போல் இரை தேடி அலைந்தனர். குதிரை‌ வீரர்கள் சூறாவளியாய் உள்நுழைந்து புழுதியைப் படர விட ஆங்கிலேயர்கள் சற்றுத் திணறிப் போயினர். மேலே எழும்பியிருந்த புழுதி திரையொன்றை நெய்திருந்தது. அதில் பார்க்கும் திறன் இழந்து தவித்தனர் ஆங்கிலேய வீரர்கள். அவர்களை மேலும் திணறடிக்க, வளரி பாய்ந்து உயிர்நிலையில் தாக்கியது. புரவியில்‌ வீற்றிருந்த வீரர்களோ அணிவகுத்து சங்கிலித்தொடராய் சென்று வெள்ளையனின் தலை கொய்தனர். தோட்டாக்களில் இருந்து தப்ப குதிரையின் கடிவாளத்தை‌ ஏற்றிப் பிடிக்க, குதிரை முன்னங்கால் இரண்டையும் தூக்கி திமிறி ஒலியெழுப்ப, தோட்டாக்கள் இலக்கை அடையவில்லை.‌ அதற்குள் அவர்களைக் கவண் கற்கள் மாரி போல் தாக்க, நிலைகுலைந்து போயினர் ஆங்கிலேயர்கள். உடையாள்‌‌ காளி பிரிவினர் பாதிக்கும் மேல் மாளிகையின் மேன்‌ மாடத்தில் இருந்தனர். முன்பே முடிவுகட்டியிருந்ததுதான். எப்படி மேல் மாடம் செல்வது என்று தவித்திருக்க, குயிலி வழிவகைச் செய்துவிட்டாள்.

உயிரற்ற சடலங்களின் மேல் சட்டைச் செய்யாமல் குதிரைகள் பாய்ந்தோட எங்கும் குருதி வெள்ளம். மரண ஓலங்கள் எதிரொலி செய்ய, இரவு பொழுது காளி அவதாரம் எடுத்தது போல் இருந்தது. காலாட்படை வீரர்கள் ஒருபுறம் கோட்டைக்குள் வில்லையும் வேலையும் கொண்டு எதிரியின் நெஞ்சினைப் பதம் பார்த்தனர். கோட்டை இப்பொழுது உதிரத்தால் குடமுழுக்கு ஏற்றுக் கொடூரமாய்க் காட்சியளித்தது. கொடுத்தாயிற்று. தாபம் கொண்ட மண்ணிற்கு வெள்ளையனின் கழுத்து திருகி, உதிரம் பிழிந்து அருந்த வழி செய்து முடித்தனர்.

கோட்டையின்‌ நிலை கண்ட நிலவும் சளைத்து களைத்துப் போனதோ? நிலா‌ பெண் ஓடி ஒளிந்து கொண்டாள் மேகத்துக்கு இடையில். அனிச்சமும் அதே நிலையில்தான் இருந்தாள். நளனின் பின்னால் ஒளிந்து கொண்டாள். ராஜா ராஜேஸ்வரி ஆலயத்தில் தூனின் மறைவில் இருந்தனர் இருவரும். கோவில் வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் இருந்தது. மக்கள் அனைவரையும் அழகாக அப்புறப்படுத்தி இருந்தனர்.

வேங்கையெனச் சீறிப் பாய்ந்தாள் வேலு நாச்சியார். அவள் உடல் முழுக்க குறுதியால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. மஞ்சள் பூசிய வதனம் முழுக்க எதிரியின் உதிரம். விழிகளின் சீற்றம் மிண்ணியது.
கொத்துக்கொத்தாய் எதிரிகளைக் கொன்று குவித்தாயிற்று. களையெடுப்பதுதான் அவளுக்குக் கைவந்த கலையாயிற்றே. காளியின் அவதாரம் எடுத்திருந்தாள் அவள். திரும்பிய திக்கெங்கும் தலைகளும் முண்டங்களும் தனித்தனியே கிடந்தது. கோட்டை முழக்க அவள் வெற்றியின் சின்னங்கள். கோட்டை வாயிலிலிருந்து அரியணை வரை அவள் செல்லும் இடங்களில் எல்லாம் தலை உருண்டது. தளபதி பாஞ்சோர் அவளிடம் சரண் புகுந்தான்.

"பஞ்சம் பிழைக்க வந்தவனுக்கு இத்தனை கர்வமா? துப்பாக்கி முனையில் ஆள்பவன் மனிதன்தானா? நாங்கள் ஆண்ட பரம்பரையடா. மாண்ட பரம்பரையாகச் சரித்திரம் எழுத நினைத்திருக்கிறாய். அதை உன் உதிரம் கொண்டே அழித்துவிட்டேன். என் மண்ணின் மைந்தர்கள் இனி அடிமை கோலம் பூண வேண்டாம். மனதினில் பயம்‌ பேணவும் வேண்டாம். துப்பாக்கி முனையில் நாங்கள் மாண்டு போயிருக்கலாம். மாண்டு போனதால் மீளாமல் போய்விடுவோம் என்று எண்ணிய அற்ப பதரே!! மாண்டது உயிர். எங்கள் வீரம் அல்ல. உன்னால் மண்ணில் சிந்திய உதிரத்திட்டுகள் உரமாய் மாறி, என் பிள்ளைகளுக்குச் சுதந்திர வேட்கைப் புகட்டிவிட்டது. இனி சீமைக்குள் வரும் வெள்ளையனின் கதி என்னவென்று உன் வரலாறு மொழியட்டும்.... யாரங்கே. இந்த அற்பனை இழுத்துச் சிறையில் அடையுங்கள். இவனுக்கான தண்டனைகள் கலந்தாசிக்கப்பட வேண்டும். இனி அந்நியன் எவனும் இம்மண்ணில் கால் தடம் பதிக்க அஞ்ச வேண்டும்" என்று கூறிவிட்டு அரியணை‌ நோக்கி சென்றாள்.

கணவனை‌ இழந்து அகதி போல் ஓடிய நினைவுகள் நினைவில் தோன்றி அவளை வாட்டியது. தன் பெண் வெள்ளச்சியைக் காக்க எத்தனைப் போராட்டங்கள். அவள் மலர் கம்பளத்தில் ராணியாய் மிடுக்காய் நடந்து வந்தாள். பாதங்களில் அணிந்திருந்த சதங்கை‌ நூபுர நாதம் எழுப்பியது.

கோட்டை முழுக்க விளக்கு ஏற்றப்பட்டது. சீமை ராணியின் ஆளுகைக்குக் கீழ் வந்துவிட்டதெனப் பறை கொட்டப்பட்டது.

கையில் கணவனின் வாள்... வெள்ளையனின் உதிரத்தால் மிண்ணியது. அவள் செல்லும் திசையில் வாளின் நுனி கோடிட்டுச் சென்றது. அரியணையில் சென்று அமர்ந்தவள், அதன் கைபிடியில் தலை சாய்த்தாள். கணவனின் மடி சாய்ந்த நிம்மதியோ இல்லை‌ அவர் கனவு நினைவான நிம்மதியோ, வதனத்தில் முகாமிட்டிருந்த சீற்றம் தணிந்து பேரமைதிக் குடியேறியது.

படைத் தளபதிகள் அனைவரும் சபையில் இருந்தனர். குயிலியைத் தவிற.

குயிலி எங்கே என்று வினவினாள் வேலு நாச்சியார்.

ஒருவரும் மொழிய முன் வரவில்லை. சபை நிசப்தமாக இருந்தது.

"யாரங்கே... எங்கிருந்தாலும் வரச் சொல்லுங்கள் அவளை... இது சீமை ராணியின் கட்டளை என்று கூறுங்கள்" என்றாள்‌ அதிகாரத் தொணியில். சீமை ராணி என்று கூறும்‌ பொழுது அத்தனை கர்வம். தன் நாட்டை மீட்டெடுத்த மகிழ்ச்சி என்று அத்தனை உணர்வுகளும் கலந்திருந்தது.

அசரவையின் கஞ்சிகங்கள் படபடவென அடித்து ஓய்ந்தது.

"ஏன் அனைவரும் அமைதியாக இருக்கிறீர்கள். குயிலி எங்கே?" என்று வினவியவளின் விழிகளில் மெல்லிய பயம் எட்டிப் பார்த்தது.

குயிலியின் கறுகிப் போன உடல் வேலு நாச்சியாரின் முன் கிடத்தப்பட்டது.

அதைக் கண்ட ராணி பதைபதைத்துவிட்டாள். அது யாரென்று தெரியாதுதான். அடையாளம் தெரியாத அளவு சிதைந்திருந்தது. ஆனால் அவள் கேட்ட வினாவிற்கு விடை இதுவென்றால்.... அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.

"ஆயுதக் கிடங்கை அழிக்க........ அவள்..... இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை" என்று திக்கி திணறினாள். வார்த்தைகள் உதிர்க்க திராணியற்று மறைமுகமாக எடுத்துரைத்தாள் வீரமங்கை ஒருத்தி. உடையாள் காளி படையின் தளபதி அவளல்லவா குயிலி? குயிலியின் இழப்பு அவர்களுக்கும் பெரிய இழப்பு. அவள் அறிவின் செறிவும், ஆற்றலும்தானே படையை வழிநடத்தி சென்றது‌.

"ஆயுதக் கிடங்கை அழிப்பதற்கு........... அவள்.... என்ன.... செய்தாள்..?" ஏன் இப்படி? எனது குயிலியா இது?" என்று தவித்தாள் வேலு நாச்சியார். விழிகளில் இருந்து உவர்நீர் வடிய ஆரம்பித்தது. அழுவது அவளின் வீரத்திற்கு இழுக்கென்று அறிந்திருந்தாலும், கட்டுப்படுத்த இயலவில்லை. குயிலிக்கு யார் இவள்? இல்லை அவள்தான் யார் இவளுக்கு? ஏன் இப்படி ஒரு முடிவைத் தேடிக் கொண்டாள்.

ஆயுதக் கிடங்கை அழிக்க அவளையே ஆயுதமாக மாற்றி விட்டாள். ஆங்கிலேயர்களைத் திசைத் திருப்ப, பொன் தேகத்தின்‌ மேல் நெய்யூற்றி ஞெழிகோல் கொண்டு தீமூட்டி வெடித்து சிதறிப் போனாள்‌ ஆயுதக்‌ கிடங்குடன்.

இதைக்‌ கேட்டதும் அதிர்ச்சியில் எழுந்து நின்றாள் நாச்சியார். மங்கையின் மறைவைப் பற்றி அவள் கூறியது நினைவில் நிழலாடியது ராணிக்கு.

"வெள்ளையனின் தோட்டாக்கள் ஊடுருவும் சாபம் நிச்சயம் அளிக்கமாட்டேன் என்று தன் கணவனை இப்படி ஒரு செயல் புரிய வைத்திருக்கிறாள் மங்கை. அவள் மிகவும் உயர்ந்து நிற்கிறாள். என் மனதில் நீங்காமல் நின்றுவிட்டாள். அவளைக் கண்டு பொறாமை கொள்கிறது எனது நெஞ்சம்" என்றாள் குயிலி.

"குயிலி... அடி தோழி.. ஏன்‌ இப்படி செய்தாய். என்னை‌ ஆதரவற்று தவிக்கவிட்டு சென்றாயே? மங்கையின் முடிவை நீயும் தேடிக்‌கொண்டாயா? என் நிலையை நினைத்துப் பார்த்தாயா? என்‌ சூளுரை பொய்த்துப் போகாமல் இருக்க, நீ உயிர் அளித்துவிட்டாயே? எனக்கு எளிதாக வெற்றியை அளிக்க, உன் உயிரைப் பணயம்‌ வைத்துவிட்டாயே" என்று தவித்தாள் வேலு நாச்சியார்.

மங்கை, குயிலி என்று பெண் போறாளிகளின் உதிரத்தால் வடித்ததே இந்த ராஜ்ஜியம்‌.

ராணி அழுவதைக் கண்டு அனைவரும் அழுதனர். சுதந்திரம் கிடைத்துவிட்டதே என்று ஆனந்தம் கொள்ள முடியாமல் போயிற்று. ராணியை வருந்த வேண்டாம் என்று கூறவும் ஆட்கள் இல்லை. ஏனெனில் ராணியுடன் அந்தரங்க தோழியாக இருந்தவள் குயிலி மட்டுமே.

அடுத்து குயிலிக்கு ஈமச்சடங்குகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. அவளின் நினைவாகக் கோவில் ஒன்று எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது. சீமை வேலு நாச்சியாரின் கட்டுக்குள் முழுவதுமாக வந்தது. ஆங்கிலேயரின் எச்சங்கள் அழிந்து போனது.

நிகழ்ந்த அனைத்தையும் கண்ட அனிச்சம் மீண்டும் மயங்கி விழுந்தாள். அதுவும் குயிலியின் தியாகம் அவளின் மனதை‌க்‌ கூராய்க் கிழித்துவிட்டது.

போரினைக் கண்ட இருவரும் மடிந்து போயினர் என்று கூறினால் மிகையாகாது. போர் என்ற வார்த்தைக்கு பொருள்‌ அறியாதவர்கள் அனிச்சமும் நளனும். ஒரு மனிதனை இன்னொரு மனதன் ஏன் இப்படித் தாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் உலகத்தில் மனித இனம் அழிந்து கொண்டே வருகிறது. அதைக் காக்க அரும்பாடு படுகின்றனர். குழந்தைப் பிறப்பில் இருந்து எதுவும் இயல்பாய் இல்லை. அனைத்திற்கும் ஒரு சட்டம். ஒரு திட்டம். ஆனால் இங்கு இப்படி மனிதனைக் கொன்று குவிப்பதனால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது.

பொன்னியின் வாயிலாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கங்களையும் கொடுமைகளையும் ஓரளவு அறிந்நு வைத்திருந்தனர். இருந்தாலும் இவ்வளவு கொடூரத்தை நேரில் பார்க்க திராணியில்லை அவர்களிடம் என்றுதான் கூற வேண்டும். உயிரை துச்சமெனக் கருதவும் நெஞ்சுரம் வேண்டுமே. ஆனால் அவர்கள் ஒரு உயிரை காக்க மட்டுமே போராட தெரிந்தவர்கள்.

மங்கை ஏன் இறந்தாள் என்ற வினா நெஞ்சை நாறாய் கிழித்திருக்க, அதற்கு விடை புரியும் முன்னரே குயிலி வந்து சேர்ந்து கொண்டாள்.

அதுவும் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறும் பொழுது, அனிச்சத்தின் இதயமும் வெடித்துச் சிதறியது.

அன்னை கூறிய கனவு உலகம் இவ்வளவு கொடியதா? நீரும் நிலமும் வரமென அவள் தேடித் தவிக்க, உயிரும் உடலும் துச்சமென இவர்கள். ஒரு உயிரின் தொன்மப்படிமம் கிடைத்துவிடாதா என்று நிலம் அகழ்தெடுக்கும் அவர்கள். பல உயிர்களைத் தொல் படிமங்களாக மாற்றும் இவர்கள். என்ன சிந்தித்தாலும் இவர்களின் வேட்கையும் மனநிலையும் அனிச்சத்திற்குப் பிடிபடவில்லை. அதீத அழுத்தத்துடன் ரத்தக் குழாயில் உதிரம் பாய்ந்தோட, மயங்கி சரிந்தாள் அவள். நளன் மயங்கவில்லை. மற்றபடி அவனும் பேச்சிழந்து மூச்சிழந்து நின்று கொண்டிருந்தான்.
பொன்னழகி அனிச்சத்திற்கு முதலுதவி செய்தாள்.

கோட்டையின் நிலையைப் புடம் போட்டு விளக்க ஆதவன் உதித்தான். ஆனால் அந்தோ பரிதாபம். கோட்டை தன் கம்பீரத்தை மீட்டெடுத்திருந்தது. போரின் அறிகுறிகள் அறவே இல்லை. உயிர் துறந்த வீரர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. ஆங்கிலேய வீரர்களையும் அடக்கம் செய்தனர்.

ஒழுகும் நிலவு!!!
 
புடவி

அந்தி வேளை
மலை முகடு
விழும் அருவி
நனையும் ஞாயிறு
அலையும் தென்றல்
இசையும் சுனை
தெறிக்கும் சாரல்
சிவந்த வானம்
சிதறிய செம்மை
பொழியும் எழில்
பகலின் நிழல்
காயும் திங்கள்
இமையாமல் இருள்‌
அமிழ்தமாய் நீ
பருக நான்.

கொடியும் அமராவும் மரத்தின் அடியில் ‌அமர்ந்திருந்தனர். நீண்ட நேர அமைதி. பொருளற்ற அமைதி. வரையறுக்கப்படாத அமைதி. அதைக்‌‌ கலைக்கும் எண்ணம் இருவருக்கும் இல்லையா என்ன? மலர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள். செழியனின் திருமணம்‌ பற்றி மலர் கொடிக்கு அனைத்தும் கூறியிருந்தாள்தான். ஆனால் அமராவை‌ பற்றி அவ்வளவாகக் கூறவில்லை. அமராவைப் பற்றி அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லையே. பார்க்க அழகான பெண் என்று மட்டுமே கூறியிருந்தாள். ராஜா வீட்டு பெண்ணாயிற்றே. கொஞ்சம் திமிரும்‌ இருக்கும் என்றுதான் எண்ணியிருந்தாள் கொடி. இப்பொழுது அவளைப் பார்க்க வரும்பொழுது கூட, ஏதோ வம்பிழுக்க வந்தது போல் முதலில் தோன்றியது. ஆனால் அருகில் அவள் முகம் பார்க்கும் பொழுது, அவள் சிந்தனையின் கோளாறு உணர்ந்து கொண்டாள்‌ கொடி. பேச வேண்டும் என்று கூறிவிட்டு, என்ன பேசுவதென்று தெரியாது அமர்ந்திருக்கும் அமராவைப் பார்த்து, அவளுக்கு ஆச்சர்யமே. விஷயம் அறிந்து குத்திக் கிழிக்க வந்திருந்தால் இந்த அமைதி தேவையில்லையே.

வெகு நேரம் சென்ற பின்னும் எதுவும் பேசாமலிருப்பது அப்பொழுது தான் அவளுக்கு உரைத்ததோ என்னவோ, கையில் வைத்திருந்த குங்குமத்தை கொடிக்கு நீட்டினாள். இந்த ஒரு விடயம் போதும். நுனி முதல் அடி வரை அமராவின் குணத்தைப் புடம் போட்டு விளக்கிவிட்டது.

"சமத்துவமா......." என்று கொடி கூறி முடிப்பதற்குள், "பரவாயில்லை அமரான்னே கூப்பிடலாம்" என்றாள் அமரா.

"இது சமத்துவம் இல்ல.. ஒரு சுமங்கலி இன்னொரு சுமங்கலிக்குக் குங்குமம் கொடுத்தா, தீர்க்க சுமங்கலியா வெகு நாட்கள் வாழலாம்ங்கிறது நம்பிக்கை" அமரா.

"நீங்க ரொம்பப் புத்திசாலி. அழகா பேசுறீங்க. தன்மையா‌ நட்ந்துக்குறீங்க. நீங்க நிச்சயம் நல்லாயிருப்பீங்க.... தீர்க்க சுமங்கலியா... நூறு வருஷம்" என்றாள் கொடி.

"ரொம்ப நன்றி. வாழ்க்கையை நல்லா புரிஞ்சிக்கிட்ட உங்ககிட்டேருந்து கிடைக்கிற வாழ்த்து நிச்சயம் என்னை வாழ வைக்கும். நான் இருக்கது இருக்கட்டும் கொடி. நீங்க எப்படி இருக்கீங்க?" அமரா. பெயர் கொண்டு உரிமையுடன் அவளை விளித்ததிலே கொடிக்கு நன்கு விளங்கியது. அவள் எல்லாம் ‌அறிந்து வந்திருக்கிறாள் என்று.

"என்ன பதில் சொன்னா நீங்க நிம்மதியா இருப்பீங்க?" என்றாள் கேள்வியாகக் கொடி.

"நான் எதிர்பார்ப்பது உண்மையான பதில். என்னோட நிம்மதி உங்க பதிலில் இருக்கா என்ன?" என்றாள் சிரித்துக் கொண்டே.

"நல்லா பேசுறீங்க?"

"நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே."

"புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி இருக்கீங்க."

"நல்லா இருக்கீங்களான்னு கேட்டது தப்பா என்ன?"

"ம்ம்ம் நல்லாருக்கேன். நீங்க நல்லாருக்கீங்களா?" என்றாள் சிரித்துக் கொண்டே.

"ம்ம்ம்.. ரொம்பவே. நீங்க வாழணும்னு நினைச்ச வாழ்க்கையை நான் வாழ்ந்துட்டு இருக்கேன்" என்று அமரா கூற, கொடி மெலிதாக நகைத்தாள்.

"அமரா... பயமா இருக்கா.. நான் என்னைக்குமே உங்க வாழ்க்கையை வாழ நினைச்சதில்ல. கவலைப்படாதீங்க."

"கவலை எனக்கில்ல. என்னோட புருஷனுக்கு. உங்களை நினைச்சு."

"என்னை‌ நினைச்சு அவர் ஏன் கவலைப் படணும். இனி உங்களை மட்டும் நினைக்கச் சொல்லுங்க. அவங்கவங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ முடியும்."

"விதிக்கப்பட்ட வாழ்க்கைனா விருப்பமில்லாம வாழறதா?"

"விதிக்கப்பட்ட வாழ்க்கையை விருப்பமுள்ளதாவும்‌ மாத்திக்கலாம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. ஆனா விருப்பங்கள் சொல்ல உரிமை இருக்கா என்ன?"

"அவர் சொன்ன மாதிரி நீங்க வித்யாசமான பொண்ணுதான்."

"நீங்க கூட... யாரும் இப்படிச் செய்ய மாட்டாங்க."

"உங்களுக்குக் கோவம் வரலையா?"

"யாரு மேல?"

"என் புருஷன் மேல."

"அவர்‌ மேல நான் கோவப்பட்டு என்ன ஆகப் போகுது. நம்ம சமூகமே இப்படி ஒரு கட்டமைப்போட வாழும் போது, அவரைக் குத்தம் சொல்றதுல்ல அர்த்தம் இல்லை."

கொடி கூறுவது உண்மைதானே. நூறு வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர்கள் பல இடங்களில் தங்களின் வெற்றிக் கொடியை நாட்டி, அங்கிருக்கும் மக்களை அடிமைப் படுத்தி வைத்திருந்தனர். அந்த இடத்தில் ‌இருந்த செழுமைகளையும்‌ களவாடி சென்றனர். ஆனால் அதில் போராடி வென்ற சில சாம்ராஜ்ஜியங்கள் இருக்கிறது. போராடி என்று சொல்வதைவிட எளிதாகவே வென்றுவிட்டனர். ஆங்கிலேயர்களை ஓட ஓட விரட்டியடித்தனர். தங்களை மண்ணில் கால் வைத்தவனின் முடிவு எத்தகையது என்று செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்த சாம்ராஜ்ஜியங்கள் நூறாண்டுகளாகக் கொடிக் கட்டி பரந்து விரிந்து கிடக்கிறது. அதன் பிறகு பல சிற்றரசுகளால் அவை பிரிந்து, இன்றளவும் ராஜாவின் ஆளுகைக்குக் கீழ் இருக்கிறது. ஆங்கிலேயர்களை விரிட்டி அடித்த வீரர்களுக்கு, கொஞ்சம் கர்வமும் தலைக்கேறிவிட்டது. அதனால் ஆட்சி முறையில் அடுக்குமுறையும் சேர்ந்துவிட்டது. அவர்கள் புதுப்புது சட்டங்கள் இயற்றி மக்களைக் கட்டுக்குள் வைத்தனர்.‌ அதுவும் பெண்கள் ஆண்களின் அடிமைகளாகவே சித்தரிக்கப்பட்டிருந்தனர். ஒரு ஆணால் கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தில் பெண்களுக்கும் சிறிது மதிப்பிருந்தது. ஆனால் தொடர் வெற்றியின் பலனாக, ஆணவம் கொண்டுவிட்டான் ஆண் என்பவன். அது அப்படியே அடுத்தடுத்த தலைமுறைக்கு அலுங்காமல் குலுங்காமல் கடத்தப்பட்டு, அடக்குமுறைகளாக உருமாற்றம் பெற்றுவிட்டது.

"நாம ஆங்கிலேயரிடமே அடிமையாய் இருந்திருக்கலாமோ?" அமரா.

கொடி பதிலேதும் கூறவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள். அதுதான் உண்மை என்று அவளும் நினைத்தாள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

"அடிமைப்பட்டுச் சுதந்திரம் கிடைச்சிருந்தா கொஞ்சம் பொறுப்பு வந்திருக்குமோ. இல்லை ஒரு உயிரின் மேல் மதிப்பாவது வந்திருக்கும். நம் தலைவிதி. வேறொருவன் வந்து வலிக்க வலிக்கப் புரிய வைத்திடும்‌ நிலைமையில் நாம் இருக்கிறோம்" என்றாள்‌ அமரா வருத்தத்துடன்.

"என்ன‌ கொடி? எதுவும் பேசாம இருக்கீங்க?"

"எதுவும் பேசணும்னு தோணல. நான் கிளம்பவா?" என்று கிளம்பத் தயாரானவளை தடுத்தாள் அமரா.

"உங்க தோழியா‌ நான் இருக்கலாமா?"

"வேண்டாம் அமரா"

"ஏன்? என்னால எதுவும் பிரச்சினை வரும்னு நினைக்கிறீங்களா?"

"ஏதோ சில காரணங்களால் நம்ம வாழ்க்கை இப்படி அமைஞ்சிருக்கலாம். ஆனால் இனி அவரவர் வாழ்க்கையைப் பாக்குறதுதான் நல்லது. ராஜா‌வீட்டு மருமக நீங்க. உங்க தகுதிக்கு நீங்க எங்கிட்ட தன்மையா பேசுறதே பெரிய விஷயம். இதுக்கு மேல உங்க வாழ்க்கைலையும் என்னால சிக்கல் வர வேண்டாம். என்னோட வாழ்க்கைலையும் சிக்கல் வேண்டாம்" என்றாள் நிதானமாக.

"பயமா‌ இருக்கா?"

"இல்ல இதுதான் நிதர்சனம். நாம இப்படி இருக்கதுதான் நல்லது. உங்க மனசு சுத்தமா இருக்கு. அதான் இப்படி ‌கேக்குறீங்க. ஆனா சூழ்நிலைகள் அதற்குச் சரிபட்டு வராது. எங்கேயாவது பார்த்தா ஒரு சன்னமான சிரிப்பு. அது போதும். அதுக்கு மேல நமக்குள்ள எதுவும் வேண்டாம்" என்று கூறிவிட்டு கிளம்பி சென்றாள் கொடி.

அவள் அப்படிக் கூறியது அமராவுக்கு ஏமாற்றமே. கொடிக்கும் அப்படிக் கூறியது விருப்பமில்லைதான். ஆனால் அமரா அவளுடன்‌ உரையாடுவதை நிச்சயம் தேவர் பிள்ளை விரும்ப மாட்டாரே. இங்கு வாழ்நாளே எவ்வளவு நாள் என்று உறுதியில்லாத பொழுது இது தேவையில்லாத நட்பு என்று தோன்றியது.

கொடி முதிர்ச்சியுடன் நடந்து கொள்வது போல் அனைவருக்கும் தோன்றியது. செழியன்‌ உட்பட‌ அப்படிதான் நினைத்தனர். மலர் கூட அப்படித்தான் நினைத்திருந்தாள். ஆனால் அமராவுக்கு வேறு தோன்றியது. கொடியின் இந்த முதிரச்சியின் பின் சோகமோ சிக்கலோ இருக்கிறது‌ என்று நினைத்தாள். விரக்தியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு‌ தோழியாக அவளுக்கு ஏதேனும் உதவ‌ முடியுமோ என்றுதான் அவள்‌ வினவியது. ஆனால் அதையும் ஏற்க முடியாத‌ அளவு அப்படி என்னதான் மனதிற்குள் வைத்திருக்கிறாள் கொடி என்று அமராவுக்கு வருத்தமாக இருந்தது.

திரும்பி வரும்பொழுது முகம் முழுக்கச் சிந்தனையுடனே வந்தாள் அமரா. அவளின் முகத்தில் படர்ந்திருந்த சிந்தனை ரேகைகள் செழியனை சென்றடையாமல் இல்லை. செழியனும் அமைதியாகவே அவளுடன் வந்தான்.

"என்ன ஆச்சுன்னு கேக்க மாட்டீங்களா?" அமரா.

"நீதான் கேக்கக்கூடாதுன்னு சொன்ன?"

"அப்படிச் சொன்னா கேக்கமாட்டீங்க? அப்படியே வீட்ருவீங்களா?"

"இப்ப கேக்கணுமா வேண்டாமா?"

"நீங்க ஒன்னும்‌ செய்ய வேண்டாம். சும்மா நடந்து வாங்க."

அவளின்‌ செல்ல கோபம் அவனுடைய ரசனைக்குள் வந்தது. அதன் பலனாக இதழ்க்கடையில் மெல்லிய புன்னகை. அதெப்படி நேற்றுவரை ஒரு பெண்ணைப் பிடித்திருந்தது என்று கூறினான். இன்று இவளைப் பிடித்திருக்கிறது. எப்படி‌ சாத்தியம் என்று தன் மனதிடம் கேட்டுப்பார்த்தான். அதனிடம் ஒப்புக் கொள்ளும் அளவு பதிலேதும் இல்லை.

வாழ்வில் சில விடயங்களைச் சரிகட்டி வாழ நினைப்பதைக் காட்டிலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்வது வாழ வழிவகைச் செய்திடும். அப்படிதான் அமரா செழியனை அப்படியே ஏற்றுக் கொண்டாள். இது மிகவும் கடினமான காரியம். அப்படி மனம் சொல்வதை மூளை ஏற்று நடந்துவிடாது. மூளை சொல்வதை மனம் ஏற்று நடந்துவிடாது. ஆனால் மனதிற்கும் மூளைக்குமான எல்லைகள் வகுத்துவிட்டால், இது சாத்தியப்படும்.

அவளைப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தான் செழியன்.

"இப்படி நடந்து வரலாமா?" என்றான் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு.

"வேண்டாம்.. எனக்காக ஒன்னும் இதெல்லாம் செய்ய வேண்டாம்" என்றாள் கைகளை உருவிக்கொண்டு.

"இது உனக்காக இல்லை. எனக்காக. எனக்குப் பிடிக்கணும்னு தோணுது."

"ஏன்‌ அப்படித் தோணுது?"

"பிடிக்கிறதுக்குக் காரணம் தேடாது மனசுன்னு நீதான சொன்ன?"

அவளின் ‌பாதம் அடுத்த அடி எடுத்து‌ வைக்காமல் நிறுத்தம் செய்திருந்தது.

"அமரா... உண்மையா‌ கேக்குறேன்.‌ இன்னைக்குப் பிடிச்ச கையை நான் விட மாட்டேன். என்னோட கனவுகளை நிறைவேத்த எனக்குத் துணையா‌ இருப்பியா?" என்றான் செழியன்.

"நான் இருக்கதா என்னைக்கோ சொல்லிட்டேன்."

"எப்போ?"

"உங்க கையைப்‌ பிடிச்சு அக்னியை வலம் வரும்போது."

"எனக்கு நிம்மதியா இருக்கு. நீ கொடிகிட்ட என்ன போசிருப்பேன்னு என்னால ஒரளவு கணிக்க முடியும்."

"ஓ.. அந்தளவுக்கு‌ என்னைப் பத்தி தெரியுமா?"

"மத்த விஷயத்தில் தெரியுமா தெரியாதான்னு தெரியாது. ஆனால் இந்த விஷயத்தைப் பொறுத்த அளவு உன்னோட அடுத்த அடி என்னவா இருக்கும்னு என்னால கணிக்க முடியும். கொடியைப் பக்தியும் கொஞ்சம் தெரியும். நீ என்ன சொல்லிருப்ப. அவ என்ன சொல்லிருப்பான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. கொடியைப் பத்தி இனி நீ கவலைப் படாதே. அவ வாழ்க்கையை அவ பாத்துப்பா. அதைத்தான் எங்கிட்டையும் சொன்னா. உன்கிட்டயும்‌ சொல்லிருப்பா" என்றான் அவர்களின் உரையாடலை ஓரளவு கணித்து.

வீட்டிற்கு இருவரும் சென்றனர். தேவர் பிள்ளைக்குச் சற்று ஆச்சரியம் தான். செழியனிடம் இப்படி ஒரு மாற்றத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. அவன் அமைதியாகச் சத்தியாகிரகம் செய்யப் போகிறான் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் உண்மையில் அவன்‌ அமைதியாகவே சத்தியாகிரகம் நடத்திக்கொண்டுதான் இருந்தான். அமராவிடம் ஒதுக்கம் காண்பிப்பது நியாயமும் இல்லை. அதனால் விளையப் போவது நன்மையும்‌ இல்லை. மேலும் அவள் அவனுக்கு ஏற்றார் போல் நடந்து‌ கொள்கிறாள்.

அன்றிலிருந்து இருவரின் இல்லறமும் நல்லறமாகவே சென்றது. சில மாதங்கள் சென்றிருந்தது. இருவருக்குள்ளும் இருந்த புரிதல் காதலாக மாறியிருந்தது என்றும்‌ சொல்லலாம். அமராவும் செழியனும் மனம் ஒத்த தம்பதிகளாக இன்னும் சில அடிகளே இருந்தது என்றும்‌ கூறலாம்.

அவர்கள் இருவரும் அடிக்கடி அரசியின் அறைக்குச் செல்வார்கள். கோதையூரில் அரச மாளிகை மிகவும் உயரம் உள்ளது. அதுவும் அரசியின் அறை இருக்கும் தளத்திலிருந்து பார்த்தால், மொத்த ஊரும் விழிகளுக்குப் புலப்படும். பலகணியில் கைக்கோர்த்து ஊரை ரசிப்பதும், கதைகள் பேசுவதும் அவர்கள் இருவரின் வழக்கம். சில சமயம்‌ ஆனந்தமாய்க் கதைகள் பேசி‌ மொழியாடினாலும், விழிகள் அங்கிருந்த பெரும்‌ விருட்சத்தின் பால் சென்றுவிட்டால், ஒப்புமையில்லா அமைதி தோன்றிவிடும் இருவரிடத்திலும்.

அரசி தூக்கிட்டு இறந்ததாகச் சொல்லப்பட்டதால், அந்த மரம் இருவரின் இதயத்தையும் கூரு போட்டுவிடும்.
அவர்கள் அதைக் காணும்‌ பொழுதெல்லாம் ஏதோ விசித்திர உணர்வு தொற்றிக் கொள்வது‌ போலத் தோன்றும்.

"உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்" என்றாள் அமரா.

"சொல்லு அமரா."

"கொடி‌ கர்பமா இருக்கா" என்றாள் அறிவிப்பாக. அவன் அமைதியாக இருந்தான்.

"உனக்கு எப்படித் தெரியும்?"

"வயிறு கொஞ்சம் மேடா இருந்துச்சு. கேட்டேன்" என்றவளின் விழிகளில் மெல்லிய ஏக்கம் படர்ந்திருந்தது.

"கொடி கர்பமா இருக்கது இருக்கட்டும். உனக்கு என்ன தோணுது நம்ம வாழ்க்கையைப் பத்தி? உனக்கு என்னோட குழந்தை வேணுமா?" பதிலேதும் சொல்லாமல் அவள் செல்லப் பார்க்க, அவளைக் கைப்பிடித்துத் தடுத்தான் செழியன்.

"பதில் சொல்லாம விடமாட்டேன்."

"இதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது."

"கோவமா?"

"இது உங்களுக்குத் தோண ரெண்டு மாசமா?"

"ரெண்டாவது நாளே தோணுச்சு. ஆனாலும் ஒரு தயக்கம். முதல் நாளே ஒரு பெண்ணைக் காதலிச்சேன்னு சொல்லி, அடுத்த நாள் உன்னையும் காதலிக்கிறதா சொன்னா அது அபத்தமா தோணுச்சு. இதையெல்லாம் விட நீ என்னைத் தப்பா நினைச்சிருவியோன்னு மனசுல கொஞ்சம் ‌பயம்."

"இப்படியெல்லாம் ஆண்கள் யோசிப்பாங்களா? நான் பார்த்துமில்லை. கேட்டதுமில்லை. பிடிச்சிருந்தா எத்தனை பெண்களுடன் வேணாலும் குடும்பம் நடத்தும் ஆண்கள்தான் எனக்குப் பரிட்சியம்."

"அப்போ நான் அந்த இனம் இல்லைனு வச்சுக்கோ" என்றான் அவளை அருகில் அழைத்து.

"அரசியோட மறுபிறவியோ நீங்க. உங்க அம்மாவோட ஏக்கத்தினால் திரும்பவும் அவுங்க உருவத்தில் வந்து பிறந்திருக்காங்களோ?" அமரா.

அவள் கூற்றைக் கேட்டவன் நகைத்தான்.

"எங்க அம்மாவைக் கேளு. அரசியோட மறுபிறவி நீதான்னு சொல்றாங்க. இழந்த சந்தோஷத்தை‌ மீட்டுக் கொடுத்துட்டியாம்" என்றுரைத்தவன், அவளைச் சிறையெடுத்திருந்தான். அவளின் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தவன் முதல் முத்தம் ஒன்றை வைக்க, அவள் அவன் கைகளுக்கு அடங்கி ஒடுங்கி மடிந்து போகத் தயாராகவே இருந்தாள்.

இமையாமல் ஓர் இரவு, இழைய இருவர் என்று அவர்களின்‌ தனிமை‌ இனிமையாய் அமைந்தது. அவளின் அணுக்கம், இவனின் இணக்கம் என்று அதற்குச் சாட்சியாக, அமரா கருவுற்றிருந்தாள். இப்பொழுது உலகிலே மிகவும் மகிழ்ச்சியான ஒருவர் உண்டென்றால் அது கோகிலம்தான். ஆனால் அதைவிடத் தேவர்பிள்ளை மகிழ்ச்சியாக இருந்தார் என்று கூறினால் மிகையாகாது.

அமரா இந்த விடயம் உரைக்கவும், ஊரையே அமர்க்களப்படுத்திவிட்டார் தேவர் பிள்ளை. பரிவட்டம் கட்ட வாரிசு வந்தாயிற்றே. பிறக்க போவது ஆண்பிள்ளைதான் என்று அவருக்குத் திண்ணம். அமரா வீட்டிருந்து வந்து‌ சீர்‌ வைத்துக் கௌரவித்துச் சென்றனர். ராஜா வீட்டிற்கு வாரிசு வரப்போகிறதென்று, ஊர் முழுக்கத் தம்பட்டம் அடித்துக் கூறிவிட்டனர். அதற்காக ஒரு விழாவும் ஏற்பாடு செய்தனர். செழியனும்‌ மகிழ்ச்சியாகவே இருந்தான். ஆனா

விழாவில் வாயெல்லாம் பல்லாகத் திரிந்த தேவர் பிள்ளையை வார்த்தைகளால் வலிக்க வலிக்க அடித்தான் செழியன். அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணமாயிற்றே.

அவனிடம்‌ வந்து வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவரிடமும், தனக்குப் பெண் பிள்ளைதான் பிறக்கும் என்றும், அதற்கு அரசி என்று பெயரிடப் போவதாகவும் கூறினான். இதைக்கேட்ட தேவர் பிள்ளை கொதித்தெழுந்தார். கோவத்தை அடக்கிக் கொண்டு காத்திருந்தார், அவனைக் குத்திக்கிழிக்க.

விழா முடிந்ததும் வீட்டினர் மட்டுமே அமர்ந்திருந்தனர். சாப்பிடுவதற்கு அனைத்தும் தயாராய் இருந்தது. தேவர் பிள்ளையின் முகத்தில் எள்ளும்‌ கொள்ளும் வெடிக்க, அதை இன்னும் சில மணிநேரம் ரசித்திட வேண்டும் என்று செழியன் நினைத்தான். அமராவை‌ அமர வைத்து, அவளுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தான்.

"அமரா... நல்லா சாப்பிடு. இப்படி ஒழுங்கா சாப்பிடாம இருந்து, நம்ம அரசியும் ஒல்லியா பிறக்கவா?" என்று‌ அரசியில் ஒரு அழுத்தம் கொடுத்தான். ஒரு தட்டு பறந்து சென்று விழுந்தது. தேவர் பிள்ளை உக்கிர மூர்த்தியாக நின்றிருந்தார்.

பின்‌ ஊரே மறந்த ஒரு பெயரை தன் மகன் உச்சரிப்புச் செய்து நச்சரித்துக் கொண்டிருக்கிறானே. கோகிலத்தை முறைத்தார் அவர். அடுத்த அடி அவருக்கு விழ வேண்டியது.

"இதுக்கு மேல எனக்கு விருப்பமில்லாத விஷயம் நடந்தா, கொலை செய்யவும் நான் தயங்க மாட்டேன்" என்றிர் கண்டனத்துடன்.

"அதுதான் உங்களுக்குக் கைவந்த கலையாயிற்றே. இனி இப்படிப் பல காரியம் நடக்கும். நிம்மதியில்லாம நடைபிணமா நீங்க இருக்கணும். ஒரு கொலைச் செஞ்சுட்டு குற்ற உணர்வுகூட இல்லாம இருக்கீங்க.‌ சுத்தியிருக்கவுங்களும் மறந்துட்டாங்க. அதை இனிமே ஞாபகப் படுத்துறதுதான் என்னோட வேலை" என்று செழியனும் சரிக்கு சரி கத்தினான்.

"அமரா.. சாப்பிட்டு முடிச்சோன, அரசியோட அறைக்குப் போ. அரசியோட ஓவியம் ஒன்னு மேல இருக்கு. அதை எடுத்து வந்து பூஜை‌ அறையில் வை. நாளையிலிருந்து அவளைத்தான் நாம சாமியா கும்பிடணும். அப்பதான் அவளே வந்து நமக்கு மகளா பொறப்பா" என்று‌ கூற எதுவும் செய்ய முடியாமல் எழுந்து சென்றார் தேவர் பிள்ளை.

கோகிலம் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. தனது மகளுக்கு இத்தனை வருடங்கள் கழித்து நியாயம் கிடைக்கப் போகிறது. வினை விதைத்தவன் வினையறுக்க வேண்டும். விதைத்துவிட்டார். இனி அறுவடை காலம். அவர் இட்ட பாவங்களுக்குப் பட்டு நோக வேண்டிய காலம் வந்துவிட்டது.

செழியனும்‌ அமராவும் தனித்திருந்தனர். செழியன் ‌அவளை நன்றாகவே பார்த்துக் கொண்டான். அதில் அவளும்‌ உச்சி குளிர்ந்து போயிருந்தாள். பின் உலகத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் மனைவி என்பவளை ஒரு பொருளாய் காண்கையில், இவளுக்குக் கிடைத்திருப்பது தேவ வாழ்க்கையல்லவா?

"அமரா.. என்ன யோசனையா‌ இருக்க?"

"ம்ம்ம்..‌யோசனைதான். இந்தத் தருணத்துக்குத் தான் நீங்க காத்திட்டு இருந்தீங்களோன்னு."

"எந்தத் தருணத்துக்கு?"

"உங்க அப்பாவைப் பழி வாங்க?"

"நான் பழி வாங்குறதா தோணுதா உனக்கு?"

பதிலில்லை அவளிடம்.

"இதுக்காகதான் உன்கூட‌ வாழ ஆரம்பிச்சதா நினைக்கிறியா?"

"இல்லை" என்று இடவலமாகத் தலையாட்டினாள்.

"காலம் கடந்தாவது கொஞ்சம் நீதி வேண்டாமா? நீ சொல்லலாம். இன்னும் எத்தனையோ பிரச்சினை இருக்குன்னு. ஆனா என்னோட வீட்ல சமைக்காத நீதியை நான் வெளில பரிமாற முடியுமா?" என்றான் தெளிவாக.

"ம்ம்ம்... உண்மைதான். இனி இந்த‌ மாதிரி மாற்றங்கள் நிறைய நடக்குமா? உங்க ஒருத்தர் மனசுல‌ இருக்க மாற்றம் நல்வினையை விதைக்குமா? அது நம்மளைத்‌ திருப்பி அழிச்சிருமோன்னு பயமா இருக்கு?"

"என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறியா?"

"நிச்சயம் இல்லை. எல்லாரும் ஒரே மாதிரி இருக்கும் போது நீங்க மட்டும் ‌ஏன் இப்படித் தனிச்சு இருக்கீங்கன்னு தெரியலை. என் புருஷன் நல்லது நடக்க விதையா இருக்கது எனக்கு‌ சந்தோஷம் தான். ஆனால் விதையை முளைக்க வழிவிடனுமேங்கிற வருத்தம்தான்."

"அமரா.. ஒரு புரட்சி பல பேர் சேர்ந்து கூட்டமா செஞ்சிருக்கலாம். ஆனால் அதற்கு விதையா ஒருத்தன் தான் இருக்க முடியும். ஒருத்தர் ஒரு தனித்துவமான கருத்தை சொல்லும் போது அவர் கூட்டத்திலிருந்து விலகி நிக்கற மாதிரி இருக்கலாம். ஆனா தனியி இருக்கதா பொருள் கிடையாது. அவனுக்குப் பக்க பலமா அவன் கருத்தரித்த நல்ல கருத்து இருக்கே. அது மனசுல ஆழமா வேரூன்றி இருந்துச்சுன்னா, அதுவே அவனைப் பகடையாய் பயன்படுத்திச் சாதனைகள் புரியும். அதைச் சுமந்தவனுக்கு அது சோதனையைக் கொடுத்தாலும், பின்னாடி ஒரே நாள் நிலைச்சு நிக்கும். எதிரியா இருந்த மொத்த கூட்டத்தையும் தனக்குப் பின்னாடி சேத்துக்கிட்டு. அந்த விதை நானா இருந்துட்டு போறேன்."

கொஞ்சம் கொஞ்சமாக மாலை என்னும் மயங்கிய பொழுதை இருள்‌ அகழ்ந்தெடுக்கத் தொடங்கியது. நட்சத்திரங்களும் ஒற்றை மதியாளும் மேல்‌ வானை வண்ணமயமாக்கிட, புள்ளிணங்கள் கோகிலமாய் ஒலியெழுப்பிட, இருண்மை‌ சூத்திரம் இதமாய்ப் படர்ந்தது. பகலும் இரவும் மாறி மாறி பொழுதினை சுற்றி சுளுக்கெடுக்க, அமராவின் நாட்களும் இனிமையாகவே சென்றது. வளர்பிறையாய் விரிந்த வயிற்றில் மெல்லிய அசைவுகள். அவளின் இதயத் துடிப்பின் அரரீசி ஒலித்தது. தாய்மையின் பேரரவம் உடல் முழுக்க ஒலித்துக் கொண்டே இருந்தது. கொடியை அதன்பிறகு இரண்டு முறை சந்தித்தாள். அவளுக்கும் வயிறு பெறுத்திருந்தது. நிறைமாதம். கொடி கூறியது போல, ஒரு சின்னச் சிரிப்பை மட்டுமே உதிர்த்துச் சென்றாள்.

மலருக்கும் திருமணம் முடிந்திருந்தது. மலருக்குச் சொந்தத்தில் தான் திருமணம். அதே ஊர்தான். அதனால் மலரும்‌ கொடியும் ஒன்றாகவே‌ இருப்பார்கள். பெரும்பாலும் கோவிலில் இருவரையும்‌ சேர்த்தே பார்ப்பாள் அமரா. மலரிடம்‌ அவ்வப்பொழுது அமரா உரையாடுவதுண்டு. கொடியின் விழியில் விரவியிருக்கும் உணர்வை எவ்வளவு முயன்றும் அமராவால் மொழிபெயர்க்க முடியவில்லை.

இது ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூகம். அதில் பெண்கள் ஓரமாய் வாழ்கின்றனர், சில பல அடக்குமுறைகளுடன். அமரா இயல்பில் விதிவிலக்கு. கொடி அனுபவத்தின் விதிவிலக்கு. இப்பொழுது சிந்தனைகளின் அழுத்தமாய் வலம் வருகிறாள் கொடி. வாய்ப்பு கிடைத்தால் தன் சிந்தனைகளையும் நிந்தனைகளையும் வெளிப்படுத்திவிடுவாள் என்று நினைத்தாள் அமரா. பலருக்கு அனுபவங்கள் இருந்தாலும், மூளை சிந்திப்பதில்லை. சிந்தனைகளுக்கும் தடை விதித்துவிட்டனர் போல.

இதுவரையில்லாமல் அமராவும் கொடியும் கொஞ்சம்‌ முற்போக்குச் சிந்தனை உடையவர்களாக இருந்தனர். பல‌தலைமுறையாய்‌ அடிப்பட்டிருந்தாலும், எண்ணங்களில் கூட, உதிக்காத கருத்துக்களுக்கு உரிமைக்காரிகளாக இருந்தனர். ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்று‌ வாழ்வியல் முறைமைகள் படைத்தது நிச்சயம் ஒரு பெண்ணாக இருக்க முடியாது. இந்தக் கருத்தும் ஏதோ ஒருவன் மனதில் விழுந்த விதை. அடக்கி ஆண்டுவிட்ட மனதின் ஆணவ‌ ஒலி. அதை எவ்வளவு வலுவாக அவன் கருத்தரித்திருந்தால், இத்தனை தலைமுறை கடத்தமுடியும். அதுவும் பெண்களே நாம் இப்படித்தான் வாழ வேண்டும் ‌என்று‌ திண்ணமாக‌ எண்ணுமளவு. இவர்களின் எழுச்சிக்குத் துணையாகச் செழியன் இருப்பானா? இந்த எழுச்சியில் வெல்லப் போவது யார்? துவலப்‌ போவது‌ யார்? மூவரும் எதிர்பார்க்கும் சமுதாயம் உருவாகுமா?

நிலவு ஒழுகும்...

 

பொழில்

பகலும் வெயிலும்
மங்கலமும் இசையும்
மலரும் மணமும்
நெற்றியும் சுட்டியும்
மணையும் வினையும்
மாலையும் கழுத்தும்
கைகளும் பிணைப்பும்
நாணும் முடியும்(முடிச்சு)
நீயும் நானும்


சில நாட்கள் கடந்திருந்தது. நளனும் அனிச்சமும் அந்தச் சூழலுக்குத் தங்களைப்‌ பழக்கப் படுத்திக்கொண்டனர்.

அதுவும் பொழிலின் உணவு முறைகள் அவர்கள் இருவரையும் அடிமைப்படுத்திவிட்டது. உணவு முறைகள் சமைக்க ஒரு நூலே இருக்கிறதாம். மடை நூல் என்று பொன்னி கூற வாய் பிளந்தனர்.

உணவு சமைப்பது, பந்தி விரிப்பது, அதில் தலைவாழை விரித்து, உப்பில் தொடங்கிப் பாயாசம் வரை ஒரு ஒழுங்குடன் பரிமாறப் படுவதைக் கண்டு விழிவிரித்துப் பார்த்தனர்.

உணவு உண்ண அமர்ந்தால் உண்ணலும்(பசிதீர உட்கொள்ளல்) துய்த்தலும்(சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்) இல்லை அவர்கள் இருவரிடத்திலும். விழுங்கல், மாந்தல்(பெரு வேட்கையுடன் உண்ணுதல்), நுங்கல்(ஒரே வாயில் உறுஞ்சி குடித்தல்), இவைதான் அவர்கள் இருவரின் செயலாக இருக்கும்.

வாழையிலை விரித்து, அதில்நெற்சோறு, வரகுச்சோறு, வெண்ணற்சோறு, நண்டுக் கறி, உடும்புக் கறி, வரால்மீன் குழம்பு, கோழியிறைச்சி வற்றல், பன்றியிறைச்சி, முயல், ஈயல், மாங்கனிச் சாறு, மாதுளங்காய்-மிளகுப்பொடி-கறிவேப்பிலை பொரியல், ஊறுகாய் கூட்டு பொறியல், அவியல், பிரட்டல், மசியல் என்று அனைத்தும் பரிமாறப்பட, நளனும் அனிச்சமும் என்ன உணர்ந்தார்கள் என்றே கூறமுடியாது. காலையில் கண் விழித்ததில் இருந்து அங்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவர்கள் இருவரையும் வியப்புக்குள்ளாக்கியது. காலையில் மூலிகைச் சாரில் நாள் தொடங்கி மீண்டும் ஒரு மூலிகைச்‌ சாரில் நாள் முடியும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம். இவை அனைத்திற்கும் பொருள் கூட அறியாத ஒரு உலகத்தில் பிறந்திருக்கிறோமே என்று வருந்தினர் இருவரும்.

நாவின் வழியே நாகரீகம் தோன்றயது‌ என்பது உண்மைதான் போல. ஆதி மனிதன் முதலில் நாகரீகம் கண்டது, உண்ணும் உணவின் வழிதானே.

அவர்கள் இருவரும் விரும்பி உணவு உட்கொள்வதைப் பார்த்து விதவிதமாய்ச் சமைத்தார் பொன்னழகி.

இருவரும் வயலில் இறங்கி வேலை பார்த்ததனர். விதையிட்டு அது மறுநாள் மண்ணிலிருந்து வெடித்துக் கொண்டு வருவதைப் பார்த்து ஆனந்தம் கொண்டனர். நெற்கதிரை கடவுளாய் பாவித்து, போற்றிய பெருமைகளை விழி கொள்ளா ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஒவ்வொன்றையும் மனதில் குறித்துக் கொண்டனர். அதைக் கற்றுக்‌ கொள்ள வேண்டும் என்ற‌ ஆர்வம் இருரிடமும் மேலோங்கியிருந்தது.

ராணி வேலு நாச்சியார் கோட்டையைப் பிடித்த பின்பு ஊர் முழுக்கக் கொண்டாட்டங்களும் களியாட்டங்களும்தான். புனல் நீராடல் விழாக்கள் கொண்டாடப்பட்டது. உழவு சார்ந்த விளையாட்டான மாடுபிடித்தல், வீர விளையாட்டான மல்யுத்தம், வாட்போர், மட்போர் என்று அனைத்து விதமான விளையாட்டுகளும் நிகழ்ந்தது‌. நளன் மற்றும் அனிச்சம் இருவருக்கும் ஒரு நிமிடம் கூட, பொழுது சலித்துப் போகவில்லை. அவர்களும் களைத்துப் போகவில்லை. அவர்களின் அதீத ஆர்வம்‌ கண்ட பொன்னி கூட வியந்தார். அவர்களின் ஊரில் இது எதுவும் இல்லை என்று கூறி சமாளித்து வைத்தனர்.

கழனியின் வாசமும், அதன் ஸ்பரிசமும் இருவரையும் மயக்கி வைத்திருந்தது. வயலில் இறங்கி விளையாடுவதே இருவருக்கும் வேளை தவறாத வேலை.

ஒருநாள்‌ இருவரும் வரப்பில் இருந்து சாலைக்கு ஓடி வந்தனர். அனிச்சத்தைத் துரத்திக்கொண்டு நளன் ஓடி வந்தான்.

அப்பொழுது அங்கு வந்த ஒருவர், "தம்பி, சற்று நேரம் ஓடாதீர்கள். இந்த எருமை மாட்டிற்கு ஓடுபவர்களைக் கண்டால் பிடிக்காது" என்று எச்சரித்துவிட்டு சென்றார்.

அந்த எருமை மாடு‌ மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்தது. இருவரும் அந்த எருமையைத் திரும்பி பார்த்தனர்.

"நளன், அந்த உருவத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு. ஏன் இது இப்படி இருக்கு. பொன்னி அக்கா வீட்ல வெள்ளை நிறத்தில் அழகா ஒரு உயிரினம் இருக்குமே..." என்று சிந்தனையுடன்‌ கூறினாள்.

"பசு மாடு" என்று நளன்‌ கூற, "உனக்கு எப்படி இதெல்லாம் ஞாபகம் இருக்கு" என்று சலித்துக் கொண்டாள்.

"சரி நீ சொல்லு. பசு மாடுக்கு என்ன வந்துச்சு" என்றான் நளன்.

"அது எவ்ளோ சாதுவா இருக்கு. அதைச் சாமியா கும்பிடுறாங்க" என்றாள்‌ அனிச்சம்.

இங்குச் சாமி, கோவில் என்றெல்லாம் மக்கள் பக்தியுடன் இருப்பது அவர்களுக்கு ஆச்சரியம் தான். அவர்கள் உலகைப் பொறுத்தளவு அண்டம்‌ மட்டுமே கடவுள்.

"அனி...‌ இதுவும் சாதுவான விலங்குதான்" என்றான் அவன்.

"பார்த்தா அப்படித் தெரியல" அனி.

"பொன்னி அக்கா அடிக்கடி சொல்லுவாங்களே. எருமை மாட்டுல மழை பெஞ்ச மாதிரின்னு. அதுக்கு அர்த்தம் என்ன அக்கான்னு கேட்டேன். அது கொட்டுற மழைலையும் இந்த மாடு அசையாம இருக்குமாம்" என்று விளக்கம் அளித்தான்.

"ஓ... அப்போ உன்னை மாதிரியா?" என்றாள் குறும்பு கூத்தாடியக் குரலில்.

"உன்னை... இரு... உனக்கு நான் யாருன்னு காட்றேன்" என்று கூறியவன், அவளின் கையைப் பிடித்து இழுக்க, அவள் அவனிடம் இருந்து தப்பி ஓடினாள். நளன் அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.

திடீரென அவர்கள் பின் அந்த எருமையும்‌ ஓடி வர, இருவரும் பயந்துவிட்டனர். அவ்வளவு நேரம் சாதுவாய் இருந்த எருமைக்கடா அசுர வேகத்தில் அவர்களைத் துரத்தி வர, அதனிடம் இருந்து தப்பிக்க, தடகள வீரர்கள் போல் அவர்கள் இருவரும் ஓடினர். கால்கள் இலக்கில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது‌. மூச்சுவிடவும் நேரமின்றி ஓடினர். இதற்கு மேல் ஓட முடியாது என்று அனிச்சம் கீழே அமரப் பார்க்க, மாடு மிக அருகில் வந்துவிட்டது. நளன் அனிச்சத்தை இழுத்துக் கொண்டு பக்கவாட்டில் சென்று விழுந்தான். ஏதோ சப்தம் கேட்டு ஓடி வந்த சிலர், அந்த மாட்டின் கொம்பைப் பிடித்து அடக்கினர்.

அனிச்சமும் நளனும் மூச்சிறைக்க அந்தச் சம்பவத்துக்குச் சாட்சியாகினர். அவர்கள் இருவரையும் அமர வைத்து, அருந்த தண்ணீர் அளித்தனர். நீரைப் பருகியதும்தான் இருவருக்கும் உயிர் வந்தது.

"இதற்கெல்லாம் அச்சம் கொள்வதா? புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரப்பரம்பரை நாம். பிறந்திருக்கும் குழந்தைக்கு எதைப் பழக்குகிறோமோ இல்லையோ, வீரத்தைப் பழக்கிவிடுவோம். நீங்கள் இப்படி இருப்பது நம் சீமைக்கே இழுக்கல்லவா?" என்று பெருமை பேசினர் சிலர். அவர்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். செய்தி கேட்டு பொன்னியும் அந்த இடத்திற்கு வந்தார்.

இருவரையும் பார்த்து திருஷ்டி கழித்தார்.

"எருமைக்குப் பயப்படக்கூடாது. எதிரில் யார் இருந்தாலும் எதிர்த்து நிற்கும் மனோபலம் வேண்டும். அதற்குச் சான்று பல கண்டீர்களே. மரணத்தை எதிர்த்து நின்ற மங்கை, மரணத்தை விருந்து வைத்து அழைத்துக் கொண்ட குயிலி என்று வீரமகள்கள் வலம் வரும் பூமி இது. உங்கள் இருவருக்கும் பயிற்சி அளிக்கச் சொல்கிறேன்" என்று பொன்னி‌ கூற இருவரும் நன்றாக மண்டையை ஆட்டினர்.

"திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்துவிட்டேன். வரும் மங்கல தினத்தன்று அரண்மனையில் ராணியின் தலைமையில் திருமணம் நிகழும். இனி உங்கள் வாழ்விற்குத் தேவையான அனைத்தும் ராணி அளிப்பார். ஆனால் பாதுகாப்பு ராணி அளிக்கமாட்டாள். அதை நீங்கள் வீரம் பயில்வதன் மூலம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு சென்றாள்.
********

நளனும் அனிச்சமும் தனிமையில் அமர்ந்திருந்தனர். அந்த மரத்தின் அடியில். அது அவர்களின் உயிராய்ப் போய்விட்டது. இவர்களுக்கும் அந்த மரத்திற்கும் விளக்கமுடியா தொடர்பு போல.

"நளன், எல்லாருக்கும் முன்னாடி அசிங்கமா போச்சு. நீ என்னைப் பக்கவாட்டில் இழுத்தியே. அதை முதலே செஞ்சிருக்கலாம்" என்று சலித்துக் கொண்டாள்.

"என்ன செய்றது. உன்னால முடியாதுன்னு நீ விழுந்த அப்பறம்தான் எனக்குத் தோணுச்சு. ஆனா நமக்கு உண்மையா வீரம்ங்கிறது இல்லை. அப்பறம் எதுக்கு அது இருக்க மாதிரி காட்டிக்கணும். போலித்தனம் ரொம்ப நாள் நிலைக்காது அனி."

"பனிப்புயல் வரப்போகுதுன்னு துரிதமா செயல்ப்பட்ட‌ நீயா இப்படிச் சொல்ற. இந்த உலகத்துக்கு வந்தோன நீ நிறையவே மாறிட்ட."

"அது அப்படி இல்ல அனி. பனிப்புயல் எனக்குப் பழக்கப்பட்ட ஒரு விஷயம். அதனால மூளைக்குத் தெரியும். அப்படி ஒரு சங்கடமான சூழல் வந்தா எப்படிச் செயல் புரியணும்னு. ஆனா இந்த எருமை மாடு எனக்குப் புதுசாச்சே. அதான் மூளை யோசிக்க நேரம் எடுத்துக்குது" என்று விளக்கினான்.

"நளன், உனக்கு இந்த உலகம் பிடிச்சிருக்கா?"

"சொல்லத் தெரியல அனி."

"பொய்‌ சொல்லாத.. உனக்குப் பிடிச்சிருக்கு" என்றாள் அவள்.

"சரி, எதை வச்சு அப்படிச் சொல்ற?"

"பொன்னி அக்கா நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டாங்க. நீ ஏன் எதுவுமே சொல்லல?"

"என்ன‌ சொல்லணும்?"

"உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம்னு சொல்லலாமே."

"உன்னைப்‌ பிடிக்கலைனு நான் எப்பவாச்சும் சொன்னேனா?"

"பேச்சை மாத்தாத."

"நீதான் புரியாம பேசுற. கல்யாணம் வேண்டாம்னு சொல்ல காரணம் என்ன இருக்கு. இந்த உலகம் உன்னோட‌ கற்பனை உலகம். இதுல ஒருநாள் உன்னை வாழ வைக்க முடியாம போய்டுமோன்னு நான் பல தடவை நினைச்சதுண்டு. அப்படி இருக்கப்ப எனக்கு இது ஒரு வாய்ப்பு. அதை எப்படி விடுவேன். இன்னொரு காரணம் கூட இருக்கு... " என்று கூறியவன் தனது பேச்சை நிறுத்தினான்.

"அது என்ன?"

"அதை அப்புறம் சொல்றேன். நீ சொல்லு, உனக்கு இந்த உலகம் புடிக்கலையா? இவ்ளோ கேள்வி கேக்குற?"

"உண்மையைச் சொல்லணும்னா பிடிச்சிருக்கு. ஆனா பயமா இருக்கு. இங்க இருக்கது உயிருக்கு உத்தரவாதம் இல்லையோன்னு தோணுது" என்றாள்‌ அவள்.

அவளின் பயத்திற்கு என்ன காரணம் என்று அவன் நன்றாகவே அறிவான். இங்கு வந்த நொடி அவள் இந்த உலகை அனுஅனுவாய் அனுபவித்தாள். ஆனால் மங்கையின் இறப்பிற்குப் பிறகு அனைத்தும் தலைகீழாகிவிட்டது.

"சரி... உனக்கு‌ இந்தக் கல்யாணம் பிடிக்கலையா?"

பதிலேதும் அவள் கூறவில்லை.

"என்ன அனி. பதிலே சொல்லாம இருக்க" என்று அழுத்திக் கேட்டான் மற்றொரு முறை.

"கல்யாணம் பிடிக்கலைனு இல்லை. இங்க கல்யாணம் செய்றது சரியா வருமான்னு ஒரு எண்ணம்‌. நாம எப்போ திரும்பப் போவோம்" என்று அவள் வினவ, அவன்‌ சிரித்துக் கொண்டான்.

"நல்ல கேள்வி. ஆனால் யாரை நண்ணிக் கேட்பது?" என்றான் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழியில்.

"ம்ம்ம்... நல்லா பேச கத்துக்கிட்ட. சரி.. யாரையும் கேட்க வேண்டாம். உனக்கு என்ன தோணுது சொல்லு."

"ஒருவேளை திரும்பி போகலைனா என்ன செய்வ?" என்று அவன் வினவ, அதைச் சிந்தியாதவள்‌ போல் அதிர்ச்சியுடன் நளனைப் பார்த்தாள்.

"நாம ஏன்‌ இங்க வந்தோம். எப்படி வந்தோம். இதெல்லாம் விடையில்லா வினா. நாம போய் யாருக்கிட்டயாச்சும் சொன்னாக் கூட‌ நம்ப மாட்டாங்க. ஆனா நாம இங்க வந்ததுக்குக் காரணம் மங்கை அம்மாதான்" என்று நளன் கூற, புரியாமல் பார்த்தாள் அவனை.

"எனக்கு மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு"

"இரு வேறு பிரபஞ்சம். இரு வேறு காலம். நடந்த விஷயங்களை வச்சு பார்க்கும்‌ போது இவர்கள் காலத்தை‌க் கடந்து நாம வாழ்ந்திருக்க வேண்டும்.‌ நமக்குக் கிடைச்ச எலும்பு கூடு, நம்ம உலகத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்த மங்கை அம்மாவோடதா இருக்கலாம். அதனால இரண்டாயிரம் வருடம், இவர்களைவிட நாம முன்னோக்கி இருக்கோம்னு ஒரு முடிவுக்கு வரலாம்."

"அங்க கிடைத்த எலும்பு கூடு எப்படி அங்க வாழ்ந்த மங்கையா இருக்கும்னு உறுதியா சொல்ற."

"அந்த இடத்திற்குப் போனோன உனக்கு ஏன் அப்படிக் கனவு வரணும்."

"நீ சொல்றபடி பாத்தாலும், எனக்கும் அந்த எலும்பு கூடுக்கும் ஏதோ பந்தம் இருக்கு. அதனால எனக்கு அந்தக் கனவு ‌வந்திருக்கலாம் இல்லையா?"

"ம்ம்ம் அதுவும் உண்மையா இருக்கலாம். ஆனால் உன்னோட எண்ணங்கள் பிரபஞ்சம் தாண்டி பயனிச்சிருக்கு, இந்தக் கருவியால். அதாவது உன் கனவில் நிகழ்ந்த நிகழ்வு உண்மையா நடக்க இருந்த பிரபஞ்சத்துக்கு நம்மை இந்தக் கருவி கடத்திருக்கு" என்று தனது சட்டைப்‌ பையில் இருந்து ஒரு கருவியை எடுத்தான். கைகளுக்கு அடக்கமாய் ஒரு சிறிய கருவி.

"எனக்குப் புரியலை. இது தீரன் வீட்டில் இருந்ததுதானே. நாம இங்க வந்ததுக்குக் காரணம் இந்தக் கருவியா? இல்லை இங்கே நடந்த சம்பவமா?" என்றாள் குழப்பத்துடன்.

"இரண்டும் இருக்கணும். முதன்மை‌ காரணம் மங்கை அம்மாவுக்கு இங்க நடந்த அசம்பாவிதம். இரண்டாவது காரணம் இந்தக் கருவியா இருக்கலாம்."

"அப்போ நீ என்ன சொல்ல வர. இந்த உலகப் இரண்டாயிரம் வருடம் பின்னோக்கி இருக்குன்னா, இன்னும்‌ இரண்டாயிரம் வருடம் கழித்து, இந்த உலகத்துக்கும் நம் கதிதானா?"

"அப்படியும்‌ சொல்ல முடியாது. இது எழுதி வச்சு நடக்குறதில்லையே. இப்போ இங்க எதிர்பாரா விதமா நாம வரல. அந்த மாதிரி எல்லாப் பிரபஞ்சத்திலும் எல்லாம் ஒரே மாதிரி நடக்கணும்னு அவசியம் இல்லை. வேற ஒரு பிரபஞ்சத்தில் ஆங்கிலேயரின் பிடியில் இந்த இடம் இல்லாமல் இருக்கலாம். அங்கு மங்கையம்மா உயிரோட இருந்திருக்கலாம். நீயும் வேறு காலகட்டத்தில் பிறந்து வாழ்ந்திருக்கலாம். இது எல்லாமே அனுமானம்தான். என்ன நடக்கும்னு உறுதியா நம்மளால சொல்ல முடியாது" என்று அவன் பெருங்கதைகள் பல உரைக்க, அவள் மலைத்துப் போனாள்.

"அனி..‌ இங்க இருக்கவரை வேற எதையும் யோசிக்காத. எனக்கு நீயும் நானும் நிம்மதியா இருக்கணும். ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வாழணும்" என்றான் கெஞ்சலும் கொஞ்சலுமாக.

அனிச்சம் அவளை நினைத்தே நொந்து கொண்டாள். அங்கு இப்படி ஒரு உலகம் இருக்கிறது என்று அவனை வாட்டி வதைத்தாள். இங்கு வந்த பிறகு, இது ஏன் இப்படி இருக்கிறது என்று அவனை வதைக்கிறாள். இரண்டிற்கும் அவன் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று சிந்திக்கவில்லை அவள். அதன்பிறகு அவனுக்காகக் கொஞ்சம் வாழ வேண்டும் என்று முடிவு செய்தாள்‌.

*********

"பொன்னி அக்கா.... மங்கை அக்காவைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்" என்றாள் அனி. நளன்‌ விடமாட்டாயா என்று ஒரு பார்வைப் பார்த்து வைத்தான். அவள்‌ அதைக் கண்டு கொள்ளவில்லை.

"மங்கையைப்‌ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஏன்?" பொன்னி.

"அவுங்களைக் காப்பாத்த முடியலைங்கிறது‌ எங்க மனசோட ஏக்கமாயிருச்சு.‌ அதான் அவுங்களைப்‌ பத்தி தெரிஞ்சுக்கணும்னு மனசு துடிக்கிது" என்றாள் இறைஞ்சுதலாக.

"மங்கையைப் பற்றி எனக்கு ஓரளவுதான் தெரியும். அவள் உடையாள் காளி படையின் ஒரு பிரிவிற்குத் தளபதி. வாள் சண்டையிலும்‌ வேல் எரிவதிலும் தேர்ச்சி பெற்றவள். அவளிடம் பெண் என்ற நளினம் நான் பார்த்தவரை இருந்ததில்லை. மதம் கொண்ட களிறாய் வேகம் பேணுபவள். பத்தாண்டுகளுக்கு மேல் கணவனைப் பிரிந்து வாழ்பவள். ஒரு வருடத்திற்கு முன்பே அவள் கணவனைத் தேடி வந்தது. அதுவரை அவள்‌ ராணியிடம் பணியாற்றினாள். இப்பொழுதும் ராணியடம்தான் பணி. குழந்தை பேறு என்பதால் ராணியின்‌ கட்டளையின் பேரில் கணவனுடன் இருந்தாள்" என்று மங்கையைப்‌ பற்றிப் பல அரிய மர்மமான தகவல்களை அளித்தாள்.

"ஏன்.. அப்படி.. எதாவது காரணம் ‌இருக்கா?"

"காரணம் இருக்கலாம். ஆனால் அந்தக் காரணம் அறிந்தவர்கள் மூவர் மட்டுமே. அதில் இருவர் இப்பொழுது இல்லை" என்றாள்‌ பூடகமாக.

"புரியல அக்கா... கொஞ்சம் புரியிற‌ மாதிரி சொல்லுங்க."

"அந்தக் காரணம் தெரிந்தவர்கள் மங்கை, அவளது கணவன் மற்றும் ராணி. இந்த‌ மூவரில் இருவர் உலக வாழ்வை துறந்துவிட்டனர். ஆனால் ராணியிடம் இருந்து அந்தக் காரணத்தை நிச்சயம் தெரிந்து கொள்ள இயலாது" என்று அவள் கூறவும், அனிச்சத்திற்குச் சற்று ஏமாற்றமாய் இருந்தது.‌

மங்கையின் வீட்டிற்கு அழைத்துச்‌ சென்றாள் பொன்னி. உள்ளே சென்றவளின் விழிகளில் பட்டது மங்கை வரைந்திருந்த ஓவியங்கள் தான். விடுதலைப் போராட்டங்களை மிகத் தத்ரூபமாக வரைந்திருந்தாள். ராணி வேலு நாச்சியாரின் ஓவியம் ஒன்றும் இருந்தது. அவளின் அன்னை ஓவியம்‌ நன்றாக வரைவாள் என்று அவள் அறிந்த ஒன்றுதானே.

அவளின் உலகில் அவள் அன்னை வரைந்த ஓவியங்களில் ஒரு ஏக்கம் இருக்கும். உயிர்வளி காற்றை இயற்கையாகச் சுவாசிக்க முடியாத ஏக்கம்.

இங்குள்ள ஓவியங்களிலும் அதே ஏக்கம்தான். சுதந்திர காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்று ஏக்கம் படர்ந்திருந்தது அனைத்து ஓவியங்களிலும்.

ஓவியங்களின் வர்ணங்களும் கருவும் வேறு வேறாய் இருந்தாலும், இரண்டிலும் பின்னணியும்‌, அது சுமந்திருந்த உணர்வும் ஒன்றுதான். ஏக்கம் சுமந்த ஓவியங்கள். இரண்டும் நிறைவேறா ஏக்கம். அந்த உலகில் அவரது ஏக்கம் நிறைவேறுமா என்று கூட ஆராய்ச்சி செய்ய முடியாது. ஆனால் இங்கு. இரண்டு நாட்கள் அவள் உயிர் துறக்காமல் பொறுத்திருந்தால் சுதந்திர காற்றையேனும் சுவாசித்திருப்பாளே. அப்படி என்ன அவசரமோ. நிதானமின்றிச் சென்றுவிட்டாள்.

பொன்னி இதைக் கூறியே அலுத்துக் கொண்டாள் அவர்கள் இருவரிடமும்.

"சுதந்திரம் வேண்டும் என்று தவமிருந்தவள் அவளே. அவள் பிள்ளைப் பிறக்கும் பொழுது, சிவகங்கை சீமையில் ஆங்கிலேயரின் சுவடுகள் இருக்காது என்று தீர்க்கமாய் நம்பியவள். அவளுக்குப் பெண் பிள்ளைதான் வேண்டும் என்றாள். பிள்ளைக்குப் பெயர் வேலு நாச்சியார் என்று வைக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டாள். அவள் எழுதிய சித்திரங்கள் உயிர் பெற்று வந்தது. ஆனால் அவள் உயிருடன் இல்லாமல் போய்விட்டாள். ஏனோ ராணிக்கு உற்றாருடன் வாழவும் கொடுத்து வைக்கவில்லை. உயிராய் போற்றிய நட்புடன் வாழவும் கொடுத்து வைக்கவில்லை. குயிலி எப்படி ராணியின் அந்தரங்க தோழியாக இருந்தாளோ, மங்கையும் அப்படிதான். ஆனால் ராணிக்காக உயிர் கொடுக்கவும் கொடுப்பினை வேண்டும். அதாவது அவளுக்கு வாய்த்ததே!"

அதன்பிறகு மங்கையின் வீட்டிலிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பினர் இருவரும். மங்கையின் ஓவியங்கள் பார்த்த பிறகு, அனிச்சத்தின் மனதை பல ஞிமிறுகள்(வண்டுகள்) குடைந்துவிட்டது. ராணியிடம் எப்படியாவது பேசி மங்கையைப்‌ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் ‌என்று முடிவு செய்தாள்.

அவர்களின் திருமண நாளும் வந்தது. கோட்டைக்குள் திருமணம்‌ நடத்த மண்டபமும் மாளிகையும் தனியே இருந்தது.

விழாக்கோலம் பூண்டிருந்த கோட்டையைக் கண்டு நளனும் அனிச்சமும் திதைத்திருந்தனர்.

பொன்னியுடன் கோட்டைக்குள்ளே தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இவர்களுடன் சேர்த்து இன்னும் இரு தம்பதியருக்குத் திருமணம்.

"பொன்னி அக்கா, இதென்ன இவ்வளவு‌ ஆடம்பரம்" என்றனர் இருவரும்.

ஏனெனில் அவர்களின் உலகில் கைரேகைத் திருமணம். அது மட்டுமல்லாமல் அவர்களின் மரபணுக்களின் மாதிரி பெற்று அதைப் பரிசோதனைக்கு‌ அனுப்புவர். அடுத்து குழந்தைப் பெற்றுக் கொள்ள. இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் புதிதாய் இருந்தது மற்ற இருவருக்கும்.

"என்ன இப்படி மொழிந்துவிட்டீர்கள். திருமணம் என்பது சுலப காரியமா என்ன? வேற்றுலகத்தில் இருந்தா வந்திருக்கிறீர்கள். திருமணம் ஒரு திருவிழா இங்கு. முதலில் பொருத்தம் பார்க்க வேண்டும். மனம் பொருந்திவிட்டால் மணப்பொருத்தம் பார்க்க மாட்டோம். அடுத்து மங்கலம் நிறைந்த மணநாள் குறிக்க வேண்டும். முரசறைந்து
நகர மக்கட்குத் தகவல் அளிக்க வேண்டும். அது அவர்களுக்கு அழைப்பு விடுப்பது போல். அனைவரும் திருமணத்தில் பங்கு கொண்டு விழாவை சிறப்பித்து, தம்பதியரை‌ வாழ்த்த வேண்டும் என்று முரசறைந்து அழைப்புகள் விடுப்போம். பின் மணநாளின் முதல்நாள்,
மணவினை நிகழும் இடத்தை அலங்காரம் செய்வோம்.
சிறப்பு இறைவழிபாடு மற்றும் இசை நாடகம் என்று ஏற்பாடுகள் செய்வோம். பின் மணமேடை ஒப்பனை, மங்கல் வாத்தியங்கள் என்று மணவினை நிகழும் நாள் மிகச் சிறப்பாக இருக்கும் படி நிரல்கள் வகுப்போம். வாழ்த்த வந்தோருக்கும் சரி, தம்பதியருக்கும் சரி, இந்த நிகழ்வு நினைவினில் நீங்காமல் இடம் பெற்றிட வேண்டும் என்பதே குறிக்கோள்" என்று‌ பொன்னி கூற, நளனும் அனிச்சமும் வியந்து பார்த்தனரா இல்லை‌ அயர்ந்து நின்றனரா என்று அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

செம்முது பெண்டிர்(கற்பு நெறியில் சிறந்த பெண்) கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க வலம் வந்து, உளுந்து, நெல், உப்பு, மலர், வெற்றிலைச்சுருள்,சந்தனம் ஆகிய மங்கலப் பொருட்களையும் தமது கைகைகளில் அடக்கி, காந்தள் இதழ் போல் தம் மெல்லிய கரம் குவித்து, கைகளில் இருந்த மங்கலப் பொருட்களைப் பந்தக்கால் தோறும் உறையும் நான்முகக்கடவுளுக்குத் தூவி வணங்கிட, அவரைத் தொடர்ந்து வந்த கன்னிப்மார்களும் இங்கனம் கைகளில் இருந்த மங்கலப் பொருட்களைத் தூவி ஏழுமுறை வணங்கி, தெய்வங்களுக்கு மடைக் கொடுத்தனர். அவர்களின் கொலுசொலியும் சிரிப்பொலியும் இணைந்து கொண்டு மங்கல வாத்தியம் இசைந்தது அந்நிகழ்விற்கு.

மணவறை நிலத்தை மேடாகப் புனைந்து, வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர். மங்கலமாகப் பெரிய தவிசை(இருக்கை) அதில் வைத்தனர். பொற்காசும், மணியும், முத்தும் வைத்து அலங்கரித்தனர். மங்கலகரமாக விளக்குகள் ஏற்றினர்.

மக்களும் ஒருங்கிணைந்து கூடி மணவினைச் செயல்களில் ஈடுபட்டனர். சுதந்திரம் கிடைத்து முதலில் நடக்கும் சுபநிகழ்வு, ஆதலால் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்கக்கூடாது என்பது நாச்சியாரின் கட்டளை. மங்கலச் செயல்களாகக் கோட்டை வாயில்களில் கமுகு, வாழை ஆகியவற்றைத் தொங்கவிட்டனர். பல வர்ண மலர்களைச் சரமாய்த் தொடுத்து அரண்மனையைப் பூந்திரள் கொண்டு அழகுபடுத்தினர். அகில்புகையூட்டி அரண்மனை முழுக்க நறும்புகை ஈன்றனர்.

பெரிய தாம்பாலத்தில் தக்கோலம் , ஏலக்காய், கிராம்பு(லவங்கம்), சாதிக்காய், கற்பூரம் எனும் ஐவகை மங்கலப் பொருள்களுடன், வெற்றிலையையும் பாக்கையும் வலப்பக்கம் வைத்தனர். சந்தனத்துடன், மஞ்சளையும் தடவி இரும்பாற் செய்த விளக்கினிடத்தில் நிறைக்கப்பட்ட நெருப்பு நிறைகளைச் சுற்றி நறும்புகையூட்டி தேவர்களை வணங்கினர்.

'தேவீர் நீர்மலையிடத்திருந்தாலும், மண்ணிடத்திருந்தாலும், விண்ணிடத்திருந்தாலும் இங்கு வந்து இந்தப் படையலைப் பெற்று மணமக்களுக்கு மங்கலத்தைக் கொடுக்க வேண்டும் ' என்று வேண்டுவது வழமை.

மணப்பெண்ணாய் இருந்த அனிச்சத்தை அழகாக அலங்காரம் செய்தனர். சந்திரப் பிரபை, முத்துவடம், மங்களசரம், மாதுளங்காய் மாலை, மூக்குவளை, புல்லாக்கு, கர்ணபூரம், கைவளை, மணிச்சலங்கை போன்ற ஆபரணங்கள் கொண்டு தலையிலிருந்து கால்வரை அனிச்சம் அலங்கரிக்கப் பட்டிருந்தாள்.

மணிச்சிகை, ஞாழல், காந்தள், கொன்றை, முல்லை, நொச்சி போன்ற மலர்கள் அவள் சிகையை அலங்கரித்திருந்தின.

ஆம்பல், குவளை, வெட்சி, தேமா
உந்தூழ், வகுளம், மௌவள், செருவிளை, கூவிளம் போன்ற நூறு வகையான மலர்கள் கொண்டு மணமேடை அலங்கிரித்திராந்தனர்.

சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கியது. மணவினையின் விடியலில் காப்பு‌ கட்டினர் மணமக்களுக்கு.
காப்பு நூல் கட்டி, மங்கல நீர் கொண்டு வந்து, மந்திரங்கள் ஓதி, மணமகன் அழைப்பு விடுத்து, வேள்வித்தீ வளர்த்து, அம்மி மிதித்து, பாத பூசை செய்து, அருந்ததி பார்த்து, அறம் பின்பற்றுவதாய் வாக்களித்து,மங்கல அணி‌ அனிவித்தான் நளன்.

மணச் சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். மணவினையில் பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. யாழும், குழலும் இனிமையாய் ஒலித்தது. அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் நாடகங்கள் இயற்றப்பட்டது.

அங்கு நடந்த அனைத்து சடங்குகளையும் சிரத்தையுடன் செய்தனர் நளனும் அனிச்சமும். பட்டாடையில் பூரணப் பொலிவுடன் விளங்கிய அனிச்சம், நளனின் விழிகளுக்கு விருந்து படைத்தாள்.

கம்பராமாயணம் திருமணம் சடங்கை

" மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை,பேரிகை பொங்கின;
மறையவர் புகலும் நான்மறை, கங்குலின் ஒலிகளும்
மாகடலும் போன்றதே"

எனக் குறிப்பிடுகிறது. இன்னும் சில சங்ககால குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டது இந்த திருமணச்‌ சடங்குகள்.

நிலவு ஒழுகும்!!!

 


சில மாதங்கள் கடந்திருந்தது. கொடிக்கு குழந்தைப் பிறந்திருந்தது.
பிள்ளை பிறந்ததும் கொஞ்சம் வாழ்வின் மேல் பிடிப்பு வந்தது கொடிக்கு. பின் நிச்சயம் அவள் பெற்றெடுத்த மகவு அவளை ஆராதிக்கும். கடந்த ஒரு வருடமாக அவள் வாழும் வாழ்வை நினைத்துப் பார்த்தவளுக்குக் கண் விழிகள் கரித்தது. சத்ய வேலன் சத்தியத்தின் மறுவுருவமாய் இல்லை. அதிகாரத்தின் ஆணவமாய் அவன் இருந்தான் என்றால் மிகையாகாது. உடலாலும் மனதாலும் அவள் பட்ட வேதனைகளை வரிசைப் படுத்தினால், வாழ்க்கை முடிந்துவிடும். நித்தம் நித்தம் அவளைக் குத்திக் கிழிக்க ஒரு புதிய‌வழிமுறைக் கடைப்பிடிக்கப்படும். அவசர திருமணத்தில் இது ஒரு இலவச இணைப்பு.‌ எங்கு ஒரு பெண்ணின் உணர்வுகள் கொல்லப்பட்டு, வேறு திருமணம் செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் இலவச தரவிறக்கமாகக் கொடுமைகளும் வந்துவிடும். பெண்களை அடக்கியாள அது ஒரு காரணமாய்ப் போய்விடும்.

கசந்த அனுபவங்கள் கற்பித்த பாடமே முதிர்ச்சி. முதிர்ச்சி வேண்டுமென்றால் , கால்கள் புண்ணாகும் என்று தெரிந்தாலும் முட்பாதையில் நடைப் பயில வேண்டும். அவளும் நடந்தாள். இப்பொழுது ஒரு இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டாள். இனி பிள்ளையேனும் முல்லில் பூக்களிடுவானே. பாத கமலங்கள் சற்றேனும் இதம் பெறும்.

இன்னும் இரு மாதங்களில் அமராவுக்குக் குழந்தைப்‌ பேறு. அதுவரை இரவும் பொழுதும் நன்றாகவே கழிந்தது.

அந்த ஒரு நாள் வரும்வரை. மங்கலத்தின் மறுவுருவம் அந்த ஊர். மூளிகளற்ற ஊரின் பிண்ணனியில் பெரும் காரணம் ஒன்று இருக்கிறது.

மறுநாள் ஊரே கலங்கி நின்றிருந்தது. இல்லை. இல்லை. ஊரில் உள்ள பெண்கள் கலங்கி நின்றனர். ஏனெனில் ஊர் முழுக்க முரசு கொட்டிய செய்தி அப்படி. ஒரு இளம் வயதுடைய பெண்ணின் கணவன் இறந்துவிட்டான். அந்தச் செய்தி கேட்டதுமே அங்குள்ள பெண்களின் வயிற்றில் கிலி தோன்றியது. உணர்வுகளைக் கொன்றது போல் அதையும் கொன்றுவிட வேண்டும்.

அவனைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று ஈமச்சடங்குகள் நிறைவேற்றி முடித்தனர். அவனுடைய மனைவிக்குப் பொட்டழித்து, வளையல் உடைத்து, முடியை‌ மழித்துக் கைம்பெண் கோலம் பூணும் சடங்கினை செய்து முடித்தனர்.

அந்தப் பெண் அழுதுகொண்டே இருந்தாள். அழுதது தன் கணவன் இறந்ததற்காக இல்லை. இனி தன்னையும் உயிரோடு எரித்துவிடுவார்களே என்ற கவலையால். ஆம் காலம் காலமாகச் சதி என்னும் கொள்கையினைப் பின்பற்றினர் ஊர் மக்கள். கணவனை எரித்த இடத்தில் உயிரோடு பெண்ணை எரித்துவிடுவதே இந்தச் சடங்கு.

அந்தப் பெண்ணிற்குச் சடங்குகள் செய்த முது பெண்டீரும் அழுதனர். மனதிற்குள் ஓலம். வெளியில் விசும்பல் ஒலியின் அரவம் இருக்கக் கூடாது. ஏனெனில் இது மகழ்ச்சியாக நிறைவேற்ற வேண்டிய சடங்காம். கணவன் இருக்கும் இடமே மனைவிக்குச் சுவர்கம். அதனால் அவன் எங்குச் சென்றானோ அங்கு மனைவியை அனுப்பி வைக்கப் போகிறார்கள். இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது. இப்படிக் கூறுவது ஆண் சமூகம்தான்.

கணவனின் மேல் உயிரை வைத்திருக்கும் பெண் கணவனுக்காக உயிரைத் துறக்க வேண்டும். அப்பொழுது தான் அவள் பத்தினி பெண் என்று ஒப்புக் கொள்ளப்பட்டாள். மனதளவில் கூட மனசுனக்கம் இருத்தல் கூடாது. அப்படி இருக்கும் பெண்கள் தெய்வமாய்ப் போற்றப்பட்டனர்.

என்ன‌ அழகான ஆழமான நூதன கொலை இது.‌ ஒரு சட்டதிட்டம் இயற்றி, அதை ஒரு இணக்குழுவினரை ஏற்க வைத்தாயிற்று. அதுவும் தெய்வம் என்று கூறி. நாம் மனிதனாய் இருந்தால் போதாதா? தெய்வமாய் இருக்க அவசியமென்ன என்று சிந்தித்திருந்தால், இவ்வகையான நூதனக் கேடுகள் நிகழ்த்தப்பட்டிருக்காது. மனதியாய் மதிக்கப்படாதவள், தெய்வமாய்ப் போற்றப்படும் முகாந்திரம் என்னவாக இருக்கக் கூடும். லட்சணங்கள் பொருந்திய லட்சுமி தேவியாய் இருக்க, பெண்ணினம் அளித்த கொடை என்ன? குறிப்பட்டு ஒன்றைக் கூறிவிட முடியாது. அடி முதல் அந்தம் வரை புனிதம் பேணுவதற்குப் பின் கொடூரமான காரணங்கள் பல இருக்கிறது.

அமராவும் அங்கிருந்தாள். நடக்கும் நிகழ்வுகளைக் கொதிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் மனம் ஒன்றை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தது. சுடுகாட்டிற்குச் சென்ற ஆண்கள் அனைவரும் சிறிது‌ நேரத்தில் திரும்பி வந்து ஒரு கொலைச் செய்யப் போகின்றனர்.

அவளால் அங்கு அமர முடியவில்லை. சிறு வயதில் இருந்து அவளை மிகவும் பாதித்த விடயம் இதுதான். அவள் வீட்டில் அழுது கதறியிருக்கிறாள். ஆனால் மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. இது நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. அந்த ஊர் மங்கலகரமாக இருக்க இதுதான் காரணம். கணவனை இழந்தவள் வாழத் தகுதிகள் அற்றவள். அவளை எரித்துவிட்டால், எஞ்சியிருப்பது மஞ்சள் குங்குமம் சூடிய செம்மையுடைய அழகு பெண்டீர். மங்கலம் என்னும் சொல்லின் பின் மறைந்திருக்கும்‌ அரக்கத்தனம் இது.

எழுந்து வேகமாகச் சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் சென்றாள். வேக நடை என்று கூறுவதற்குப் பதில், ஓட்டத்திற்கு முந்தய நிலை என்று கூறலாம். வியர்த்து வழிந்தது. வயிறு பெருத்திருந்தது. அதனால் மூச்சு வாங்கியது. இடையில் ஆதரவற்றுத் தனித்திருந்த விருட்சம் இருந்தது. அந்த இடத்தைக் கடக்கும் பொழுது கொஞ்சம் காற்று அதகமாய் வீசி அவளுக்குச் சுகம் அளித்தது. அரசியின் ஆசிர்வாதம் போல.

ஆண்கள் அனைவரும் சுடுகாட்டில் பிணத்தை எரித்துவிட்டு வீடு திரும்பினர், மற்றொரு நடைப்பிணத்திற்குக் காரியம் செய்ய‌. குறுக்கு வழியில் நடந்து வந்திருந்தாள் அமரா. அந்தக் கூட்டத்தில் வந்த செழியன் இவளைப் பார்த்துத் திடுக்கிட்டான். எதற்காக இப்படி நடந்து வருகிறாள் என்று சிந்தித்தாலும், கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றான், அவளைத் தனித்துச் சந்திக்க.

அவளின் கரம் பிடித்து ஒரு மறைவான இடம்‌ நோக்கி அழைத்துச் சென்றான்.

"அமரா... என்ன இது? நீ இங்க வரக்கூடாது. சுடுகாட்டுக்கு இப்படித் தனியா வரலாமா? அதுவும் வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு" என்று அவன் கண்டிக்க, அவள்‌ அழுதாள்.

மனைவியின் அழுகைக்குக் காரணம் புரியாமல் அவன் தவித்தான்.

"அமரா.. என்ன ஆச்சு‌ சொல்லு?" என்று பதிறினான்.

"இங்க பெண்கள் வரக்கூடாதா? அப்பறம் இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிரோட ஒரு பெண்ணை எரிக்க ஏற்பாடுகள் நடக்குதே. ‌அப்போ மட்டும் அவ இங்க வரலாமா? அவளைத் தனியா உயிரோட எரிக்கப் போறீங்களே. இது நியாயமா?" என்று அவள் வினவ, அவன் அதிர்ந்து நின்றான்.

இப்படி ஒரு சடங்கு பின்பற்றப்படுவது அவன் அறிந்ததே. அதில் முன்பெல்லாம் பெரிய கருத்து இல்லை. அமராவுடன் ஆன திருமணத்திற்குப் பிறகு, அவனுடைய நிலைபாடு என்னவென்றால், இது தவறு‌ என்பதே. ஆனால் ஒரே நாளில் அனைத்தும்‌ மாறிவிடுமா என்ன?

"செழியன், இதைத் தடுத்து‌ நிறுத்துங்க முதலில். இது நடக்கவே கூடாது. இங்க நடக்குற கொடுமையான விஷயத்தில் முதல் விஷயம் இதுதான்" என்று அவனை உலுக்க, அவன் சிலையாய் நின்றிருந்தான்.

"நீங்க செத்தா நானும் சாகணுமா?" என்று கத்தினாள் அமரா.

அப்பப்பா என்ன ஒரு வினா. வலிக்காமல் வார்த்தையில் விஷத்தைத்‌ தடவி எய்துவிட்டாள். ஆனால் இந்தச் சொல்லை ஊர் முன் இவள் உதிர்த்திருந்தால், அந்தக் கணமே கொன்றுவிடுவார்களே.

"உங்களை எனக்குப் பிடிக்கும். என் வாழ்க்கையோட விளிம்புவரை உங்களை நினைச்சுக்கிட்டே என்னால வாழமுடியாதா? தன்னுடைய சாவை இப்படி ஒரு பெண்ணும் விரும்புவதில்லை. யாரும் வெளியில் சொல்வதில்லை. ஆனால் மனதிற்குள் அழுது கொண்டிருக்கின்றனர். நீங்க நினைச்ச மாற்றம் வர முதிலல் இந்த விஷயம் நடக்கக் கூடாது. நான் ஒருமுறை சொன்னேனே. நினைவிருக்கா? உங்களுக்கு நடந்த அநியாயத்தில் வாழ வழி இருந்தது. ஆனா இந்த அநியாயத்தில் வாழ வழியே இல்லை. இனியாவது இது நடக்காம இருக்கணும்" என்று மன்றாடினாள் அவனிடம்.

"அமரா.. அழாத.. இதை எப்படியாவது நிறுத்தலாம்" என்று சிறிது சிந்தித்தவன், "அமரா...‌ நீ வீட்டுக்கு போ. உன்னைக்‌ காணும்னு சொல்லி ஒரு நாடகம் நிகழ்த்தி, இன்னைக்குப்‌ பொழுதைக் கழிச்சுடலாம். சூரியன் மறைஞ்சா போதும். இந்தச் சடங்கை‌ நாளைக்குத் தள்ளிப் போடலாம். இன்னைக்கு ராத்திரிக்குள்ள அந்தப் பெண்ணை வேறு ஊரில் வாழ வைக்க ஏற்பாடு செய்யலாம்" என்று செழியன்‌ கூற, அவனை ஏமாற்றத்துடன் பார்த்தாள் அமரா.

"அமரா.. அப்படிப் பார்க்காத. நானும் நீயும் மட்டும் இதை எப்படி மாத்த முடியும். இப்போதைக்கு இது ஒன்னுதான் வழி. சரி‌ நீ போ. நான் பார்த்துக்கிறேன்" என்று அவளைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.

அதன் பிறகு ‌செழியன் நினைத்தபடியே, அமராவைக் காணவிவ்லை என்று பெரியதொரு நாடகம் நிகழ்த்தி, அன்றைய பொழுதைக் கடத்திவிட்டான். அமராவைக் காணவில்லை என்று கூறியதும் தேவர் பிள்ளையே அதிர்ந்துவிட்டார். அவரின் குடும்ப வாரிசை சுமந்திருக்கிறாளே. என்ன ஒரு விசித்திரம். பெண்ணால் தழையும் பரம்பரை வேண்டும். ஆனால் அவன் இல்லையேல் அவளும் இருக்கக் கூடாது. அமராவைத் தேடும் பணி சிறப்பாக நடைப்பெற்றது. சுற்றி நடந்த அமளிதுமளியில் அந்தப் பெண்ணை மறந்தனர். செழியன் அந்தப் பெண்ணை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றான். செழியனின் நண்பன் ஒருவனும் உதவினான். வேறு ஊரில் சில நாட்கள் மறைந்து வாழ வேண்டும் அவள். இதுவும் சவாலான ஒன்றே. மிக விரைவில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு அவளை அழைத்துக் கொள்வதாகத் திட்டம்.

அந்தப் பெண்ணை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் செல்லும் பொழுது கொடியின் கணவன் சத்யன் பார்த்துவிட்டான். அவனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். அவனைப் பற்றிய அறிமுகம் இங்குத் தேவையில்லையே. அவன் எப்படிப்பட்டவன் என்று‌ கொடியின் மௌனம் கூறிவிடும்.

அமரா கோகிலத்தின் உதவியுடன் வீடடிலே மறைந்து கொண்டாள். கோகிலம் முதலில் அதிர்ந்தாலும், சரி என்று ஒப்புக் கொண்டார். அவருக்கும் இந்தச் சடங்கு பிடிக்காது. யாருக்குதான் பிடிக்கும். அனைவரும் மனதிற்குள் பூட்டி வைத்தனர். இப்பொழுது எழுச்சி என்று ஒன்று வந்ததும், நடந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. பூனைக்கு‌ யார் மணி கட்டுவது என்ற வினாதான். ஒருவர் கட்டிவிட்டால் அடுத்தவரும் தயங்காமல் கட்டிவிடுவார்கள்.

அமரா வீட்டில் இருப்பாள் என்று யாரும் நினைக்கவில்லை.

செழியன் அவனுடைய நண்பனுடன் அந்தப் பெண்ணை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்தால், சத்யன் அவனுடைய வீட்டில் நின்று கொண்டிருந்தான். அனுப்பி வைத்த பெண் தரையில் துவண்ட கொடியாய் கிடந்தாள்.

அவர்களைக் கண்ட செழியன் திடுக்கிட்டான். செழியனின் நண்பன் அங்குக் கட்டி வைக்கப்பட்டிருந்தான். அந்தப் பெண் அடி வாங்கியதில் உணர்வுகளற்று கிடந்தாள். என்ன நடந்தது என்று அவனால் ஒரளவு கணிக்க முடிந்தது. அவன்தான் திட்டத்தின் மூலம் என்று அறிந்த பின்னர் அமராவைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இவை அனைத்தும் ரகசியமாகச் செய்யப்பட்டது. சத்யன் ரகசியமாகவே இந்தக் காரியம் செய்திருந்தான். அதன்பிறகு வீடு முழுக்கத் தேடி அமராவையும் நடுக்கூடத்தில் நிறுத்தியிருந்தனர். கோகிலமும் வாங்கிய அடியில் அமைதியாய் நின்றிருந்தார்.

அமரா செய்வதறியாது நின்றிருந்தாள்.

"செழியா, தேவையில்லாத விஷயத்தில் நீ தலையிடாத. இது ஊரோட நம்பிக்கை. இதை மாத்தினா ஊரோட அமைதி போயிரும்" என்று கத்தினார் தேவர் பிள்ளை.

"அறிவிருக்கா உங்களுக்கு. இப்படி ஒரு சட்டத்தைப் போட்டது உங்களை மாதிரி ஒரு கேடு‌ கெட்டவனாத்தான் இருக்க முடியும். இனி இந்த ஊரில் இந்தப் பலிகள் நடக்கக் கூடாது. நடக்கவும் விடமாட்டேன்" செழியன்.

"உன்னை யாரும் கேக்கல. நீ இருந்தா ஏதாவது பிரச்சினை பண்ணுவ. சத்யா.. இவனையும்‌ கட்டிப்போடு. நாளைக்குச் சடங்கு முடியிற வரைக்கும் இவன் கட்டியே இருக்கட்டும்" என்று அதிகாரம் செய்ய, செழியனைப் பிடத்துக் கட்ட, சத்யன் முயற்சிகள்‌ மேற்கொள்ள, அனைத்தும் தோல்வியையே தழுவின.

இருவருக்கும் சண்டை முற்றியது. தேவர் பிள்ளை அமைதியாக அமர்ந்திருந்தார். அமரா இடைப்புகுந்து தடுக்கச் செல்ல, கோகிலத்தை முறைத்தார். கோகிலம் அமராவை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றார். அவர் நன்றாக அறிவாரே தன் கணவனைப் பற்றி. இந்தக் காரியத்தை நடத்தி‌முடிக்காமல்‌ ஓய‌ மாட்டார் அவர் என்று.

சத்யனும் செழியினும் உருண்டு பிரண்டனர். அங்கிருந்த சாமான்கள் எல்லாம் உடைந்தது. சத்யன் செழியனை அடக்க மட்டுமே முற்பட்டான். ராஜாவின் பிள்ளையாயிற்றே. அது எப்படி அவனைத் தாக்க முடியும். ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை நன்கு அறிவான் அவன். ஆனால் செழியனுக்கு அவ்வாறு ஏதும் காரணங்கள் இல்லையே. அவன் பலம் கொண்ட வரை சத்யனைத் தாக்க, சத்யன் அங்கிருந்த சுவரில் முட்டி மோதி கீழே விழுந்தான்.

அவன் மயங்கிவிட்டான் என்று தெரிந்ததும் செழியன் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க தரையிவ் மடிந்து அமர்ந்தான். வியர்வை வழிந்து‌ கொண்டிருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. இடியும்‌ மின்னலும் தாக்க, அந்த இரவே சூன்யமான இரவாய் மாறிப்போனது.

தேவர் பிள்ளை அவனை அடிக்கக் கை ஓங்கி வர, அவரின் கையைப் பிடித்துத் தடுத்தான் செழியன். உக்கிரமாக அவரைப் பார்த்தவன், ஓங்கி ஒரு அடி வைத்தான் கண்ணத்தில். அவனை அதிர்ந்து பார்த்தார் அவர். இதை அவர் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

எதிரிலிருப்பவனுக்குப் பயம்‌ என்ற ஒன்று இருக்கும்வரை தான் அவர் வாழ முடியும் என்ற பெரும் சிந்தனையை மறந்துவிட்டார் போல. செழியன் முடிவுக்கு வந்துவிட்டான். இனி என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று. அவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் போல. இனி என்ன நடந்தாலும் நினைத்ததைச் சாதித்து விட வேண்டும் என்று.

செழியின் மயங்கியிருக்கும் சத்யனுக்கு முதலுதவி செய்ய அமர்ந்தான். அவனைத் திருப்பித் தன் மடியில் தலை வைக்க, தலை துவண்டு கீழே சரிந்தது.

கூடத்தில் அசாத்திய அமைதி நிலவியது. சத்யன் இறந்துவிட்டான். தேவர் பிள்ளை மற்றும் செழியன்‌‌ இருவருமே அதிர்ந்துவிட்டனர்.

செழியன் உலகை மறந்து நின்று கொண்டிருந்தான். அடுத்து என்ன செய்வது. அவன் ஒருவனைக் கொன்றுவிட்டான் என்ற எண்ணமே அவனைச் செயலிழக்க வைத்திருந்தது.

நொடி பொழுதில் தேவர் பிள்ளையின் மூளையில் திட்டம் ஒன்று உதித்து விட்டது‌ போல. அங்கு மனிதன் என்ற ஒருவன் உணர்விழ்ந்து நின்றதனால், மனிதம் மரித்துப் போனது.

பேரரவம் கேட்டதில் அமராவும், கோகிலமும் வெளியில் வந்து பார்க்க, அதிர்ந்துவிட்டனர். அவனை உள்ளே அழைத்துச்செல் என்று கட்டளையிட்டார் தேவர் பிள்ளை.

அவருக்கும் வேறு உபயம்‌ இல்லையே. நிகழ்ந்ததை ஓரளவு கணித்துவிட்டார். அதனால் மனம் வேதனையில் உழன்றது.

அவர்கள்‌ மூவரையும் ஓர் அறைக்குள் வைத்து வெளியில் தாழ்ப்பாள் போட்டார். செழியனின் நண்பனிடம்‌ சென்றார்.

"செழியனைக் காப்பாத்த ஒரே வழிதான் இருக்கு. செழியன் இந்தப் பெண்ணைக் காப்பாத்த திட்டம் தீட்டினான்னு வெளில தெரிஞ்சா, அவனுக்கு ஆபத்து. நானே பஞ்சாயத்துல அவன் பக்கம் பேச முடியாது. அதனால, இந்தச் சத்யன் இந்தப் பெண்ணை இழுத்துகிட்டு போனதாவும், அவனை நீ பிடிச்சதாவும் சொல்ற நாளைக்கு ஊர் முன்னாடி" என்று அவனை மிரட்டினார்.

அவனுக்கும் வேறு வழியிருக்கவில்லை. அதனால் அதற்கு ஒப்புக் கொண்டான். அந்தப் பெண்ணிற்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

மறுநாள் விடியலில் தேவர்பிள்ளை அவர் நினைத்ததைச் சாதித்து விட்டார்.
அந்தப் பெண்ணை உயிருடன் எரித்து விட்டனர். இதில் அவள் இப்படி ஒரு முடிவு எடுத்ததால், குடும்பம் மொத்தமும் சேர்ந்து அவளை அடித்தது. அதெப்படி அவள் வீட்டுப் படி தாண்டி செல்லலாம் என்று. அவர்களைப் பொறுத்தவரை பெண் என்பவள் இடுகாட்டிற்குச் செல்ல மட்டுமே படி தாண்ட வேண்டும் போல. ஒரு வேளை படி தாண்டா பத்தினியின் பொருள் இதுவாய் இருக்குமோ.

எப்படியும் இப்படி ஒரு தவறை செய்த சய்தயனுக்குத் தண்டனைகள் வழங்கப்படுவது நிச்சயம். ஆனால் அந்தத் தட்டனையை‌ அனுபவிக்கும் முன்னரே அவன் இறந்துவிட்டான். இனி அவன் செய்த தவறை வேறு எவரும் செய்ய முற்படக்கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சத்யனின் முடிவைக் கண்ட அவர்களது பெற்றோர் கதறி அழுதனர். சத்யனை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது.

நிலவு ஒழுகும்...

 
இருள்‌ பூசிய குழல்
பெருவெடிப்பாய் வகிடு
வெட்டி வைத்த பிறைநிலவு
சுருள் பால்வெளியாய் பின்னல்
நட்சத்திரத் திட்டாய் பொட்டு
கருந்துளை விழிப்பாவைகள்
மேகத் துண்டு கன்னம்
அந்திவானம் குழைத்து அதரம்
வெட்கத்தில் நீ
விகல்பமாய் நான்


அனிச்சத்திற்கும் நளனுக்கும் திருமணம் முடிந்திருந்தது. இருவரும் என்ன நினைக்கிறார்கள் என்றே கணிக்க முடியவில்லை. அடுத்தவர் மனதில் உள்ளதை அல்ல. அவரவர் மனதில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லலாம். மனதின் ஓரம் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது. நளன் எதிர்பார்த்த பெண்ணாய் மாறியிருந்தாள் அனிச்சம். இப்பொழுது அவளின் மனதில் அவன் மட்டுமே நிறைந்திருந்தான். மங்கையோ அந்த உலகமோ அவள் மதியில் இல்லை. நினைவின் இடுக்குகளில் கொஞ்சம் மறைத்து வைத்துவிட்டாள் போல.

நளனைப் பற்றிச் சொல்வதற்கில்லை. அவளின் சொக்கும் அழகில் அவன் கட்டுண்டு கிடந்தான். இதுவரை அவளை இப்படிப் பார்த்ததில்லையே. அடிக்கடி அவளைப் பார்த்துக்கொண்டான். மனதில் அவளின் பிம்பத்தைச் சேமித்தும் வைத்தான்.

அவளுக்கும் நளனைப் காண என்னவோ போல் இருந்தது. புதிதாய் வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டதோ என்னவோ. அவளின் கைப்படித்து அவன் வேள்வித்தீயை வலம் பொழுது அவனின் ஸ்பரிசம் அவளுக்குள் தீ மூட்டி சென்றது.

அக்கினிப் பழத்தை அரைத்துப் பூசியிருந்தது மாலைப் பொழுது. ராமாயணம் நாடகமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது.

அதில் ராமனும் சீதையும் முதன் முதலில் சந்திக்கும் நிகழ்வு நடந்தேற, நளனும் அனிச்சமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு பார்வையில் இத்தனை காதலா? அண்ணலும் நோக்கினான்... அவளும் நோக்கினாள். இந்த ஒரு வரி போதும். கம்பன் எழுத்து வித்துவான் என்று கூறிவிடலாம்.‌ ஆனால் அவன்‌ எழுத்தில் இருக்கும் மாயம் அவரின் நாயகர்களைக் கட்டிப்போட்டது மட்டுமின்றிக் கேட்கும் அனைவரையும்‌ கட்டிப் போடுகிறதே. கம்பன் மாய வித்தகன் என்றும் சொல்லலாம் இந்த வகையில்.

விழியின் வழியே அவர்கள் இருவரும் கடத்திய உணர்வுகள் இவர்களையும் ஆட்கொண்டது. அவளின் மையல் சிரிப்பில் கண்ணங்களில் கிண்ணக்குழி தோன்ற, அதில் விரும்பியே விழுந்தான் அவன். அன்று முழுவதும் அவன் பார்வையில் குடி கொண்டிருந்த மன்மதச் சாயலில், அவள் உடலின் உட்புறச் சுவரில் யாரோ கீதம் பாடியது போன்ற உணர்வு.

ஒருவழியாக அனைத்து சடங்குகளும் முடிவு பெற, ராணியிடம் விடைபெற்றனர்.

வேலு நாச்சியார் தம்பதியர்களுக்குப் பரிசு பொருட்கள் அளித்தார். தங்க காசுகளும், பல உண்ணத மணிகளும் வழங்கப்பட்டது. ஆசி பெறுவதைக் கூட இருவரும் விசித்திரமாய்ப் பார்த்து வைத்தனர்.

அனிச்சத்தைக் கண்டதும், வேலு நாச்சியாருக்கு, மங்கையின் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு சாயல் இருக்கிதோ? இல்லை மங்கைக்கும் இவளுக்கும் சம்மந்தம் இருக்கிறதா? என்று மனதில் எண்ணியவர், "யாரம்மா நீ. பொன்னழகி உன்னைப் பற்றியும் உன் கணவனைப் பற்றியும் உரைத்தாள். ஆனால் ஏதோ ஒன்று முரண்படுகிறது. உனக்கும் மங்கைக்கும் என்ன தொடர்பு" என்று நாச்சியார் வினவ, அனிச்சம் என்ன சொல்வதென்று தெரியாது விழித்தாள்.

"தொடர்பு ஒன்னும் இல்லமா. நாங்க ரொம்பத் தொலைவில் இருந்து வருகிறோம். இங்கு வந்ததும் முதலில் பார்த்தது, மங்கை அம்மாவைத்தான். அதுவும் அந்த நிலையில் காணவும் எங்கள் இருவரால் காப்பாற்ற முடியவில்லை என்ற கழிவிரக்கம். அதனால் அவருடன் ஒரு பிணைப்பு. வேறு ஒன்றும் இல்லை" என்று நளன்‌ கூறினான்.

ராணியின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை அவர்கள் இருவராலும் கணிக்க இயலவில்லை.

"ம்ம்ம்... மங்கையை உனக்கு இவ்வளவு பிடித்திருப்பதால் எனக்கும் உன்னைப் பிடிக்கிறது. உன்னிடம் ஏதோ ஒன்று‌ இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேள்" என்று கூறினாள்.

"மங்கை அம்மாவை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?" அனிச்சம்.

"அதில் சந்தேகமென்ன?"

"எனக்கு மங்கை அம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் போல் உள்ளது. உங்களால் சொல்ல முடியுமா" என்றவளை சிந்தனையுடன் பார்த்தாள்.

"ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" நாச்சியார்.

அவள் பதிலேதும் கூறாமல் ராணியைப் பார்த்தாள்.

சிறிது சிந்தனைக்குப் பின் அனிச்சத்திற்குப் பிடித்தமான பதிலை ராணி உரைக்க, நன்றியுரைத்துவிட்டு இருவரும் விடைபெற்றனர்.

இருவரும் பொன்னியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாட்டு வண்டிப் பயணம். மாடுகள் ஓடும் பொழுது, அதன் காலடி சப்தம் கேட்க, அது இனிய இசையைப் பரப்பியது. வண்டிமாடு முன்னே செல்ல, அவர்களின் உலகம் பின்னே பயணிப்பது போல் இருந்தது. மாட்டு வண்டியின் பின்னால் திரும்பி அமர்ந்திருந்தனர். வண்டி செல்லும் எதிர் திசையில். வண்டி அசைந்தாட, அனிச்சத்தின் கால்களில் இருந்த சதங்கை ஒலி எழுப்பியது. அதை ரசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் நளன்.

செல்லும் வழியெங்கும் வரிவடிவங்களாகத் தெரிந்த வயல்வெளிகளும், வனத்தின் வனப்புகளும் இருவரின் விழிகளுக்கும் விரிந்து படைத்தது. அவர்கள் உலகத்தில் இருந்து முற்றிலுமாக இந்த உலகத்தின் குடிகளாக மாறிவிட்டனர் போல. பொருள் புரியாத பல உணர்வுகள் உள்ளுக்குள் கொட்டிக் கிடந்தாலும், யாரும் விளக்கிடாமல், புரிந்து கொள்ள முடிந்தது.

இரவு அவர்கள் இருவரும் தனித்திருந்தனர். மாளிகையின் அலங்காரம் தோற்றுவிட்டது அந்த அறையின் அலங்காரத்தில். நறும்புகை அறை முழுக்க விரவியிருக்க, அதில் அன்று முகிழ்ந்த மலர்களின் மயக்கும் மணமும் சேர்ந்து ஒருவித இம்சையைக் கெடுத்தது இருவருக்கும்.

மௌனதத்தை உடைப்பது யார் என்று போட்டி போல. இறுதியில் ஆணுக்கே அதில் முதலுரிமை என்று ஆனது.

"அனி, ரொம்ப அழகா இருக்க" என்று அவன் கூற, பதிலேதும் கூறவில்லை. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டதால் எழுந்து சாரளதத்தின் அருகே சென்றாள்.

அவளின் பதற்றம் அவனுக்கு விளங்காமல் இல்லை. புதிதாய் புத்துணர்வு பெற்ற பல உணர்வுகள் இருவரையும் ஆட்கொண்டது. அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவள் சாரளதத்தின் வழியாக ஒழுகிக் கொண்டிருந்த நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"மகாராணி, என்னையும் கொஞ்சம் பார்க்கலாம்" என்று அவளின் கைகளைப் பிடித்தான். கைகளில் அவள் அணிந்திருந்த கைவளை கலகலத்து ஒலியெழுப்பியது.

சில்லிட்டிருந்த அவள் கைகளுக்கு, அவன் கரங்களில் இருந்த வெப்பம் மோட்சமளிதத்து.

"அனி, பயமா இருக்கா?" என்றான் நளன்.

பதில் கூறாமல் அவள் கைகளை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள். நளனின் முகத்தில் மெல்லிய சுணக்கம்.

அவளின் இந்த ஒதுக்கம் அவனுக்குப் புதிது. பல நாட்கள் அவன் அருகில் இருந்திருக்கிறாள். தனிமையிலும் இருந்திருக்கின்றனர். ஆனால் இப்படியெல்லாம் ஒருநாளும் அவள் நடந்து கொண்டதில்லை.

அவன் கோவமாய்ச் சென்று அமர்ந்தான். சில நொடிகள் மௌனம் மீண்டும். அவன் அருகில் சென்று அமர்ந்தாள் அனிச்சம்.

அவன் தள்ளி அமர்ந்து கொண்டான். அவனின் செல்லக் கோவம் கண்டு அவள் மென்னகை உதிர்த்தாள். அவன் அருகில் சென்று அமர்ந்து, அவனின் தோள் வளைவில் சாய்ந்து கொண்டாள்.

அவளும் சிந்தனை செய்துவிட்டாள். ஏன் இப்படி உணர்ந்தும் உணரா உணர்வுகள் ஆட்கொள்கிறது என்று. விடையும் கிடைத்தது. என்றும் இல்லாமல் நளனின் ஆவல் மிகுந்த பார்வை, அவனின் சிறு தீண்டல்கள் என்று அவளை இப்படி ஒரு உணர்வுக்கு ஆளாக்கியிருக்கிறது. பல சமயங்களில் அவர்கள் சேர்ந்திருந்திக்கிறார்கள். அவன் நெஞ்சில் சாய்ந்திருக்கிறாள். அவன் கைகளைப் பிடித்து நடந்து சென்றிருக்கிறாள். பனித்தீவில் அவனுடன் தினித்திருக்கிறாள். ஆனால் இவ்வளவு வெட்கமும் வந்ததில்லை. முகமும் சிவந்ததில்லை. நத்தையாய் கூட்டிற்குள் சருங்கியதில்லை. ஆனால் இங்கு வந்த பிறகு புதிதாய் சில உணர்வுகள் ஒட்டிக் கொண்டது. ஒருவேளை இதுதான் அவள் எதிர்பார்த்த காதல் உணர்வோ?

"கோவமா?" என்று அவன் நெஞசினில் சாய்ந்து கொண்டாள் அனிச்சம். ஆனால் சில நொடிகளில் விலகியும் விட்டாள்.

"உனக்கு என்ன பயம் இப்போ?"

"இல்ல.. நீ இப்படி எல்லாம் நடந்ததில்ல. உன்னோட பார்வையிலிருந்து எல்லாமே புதுசா இருக்கு. அதான் கொஞ்சம்...."

"ம்ம்ம்... நீ என்னைப் பார்த்ததே இல்லைனு சொல்லு."

"இல்ல. நீ பொய் சொல்ற. முன்னாடியும் என் கையைப் பிடிச்சிருக்க. ஆனா இப்போ வேற மாதிரி இருக்கு."

"வேற மாதிரின்னா?"

"சொல்லத் தெரியல" எனவும் சில நொடிகள் மௌனம்.

"ம்ம்ம்.. எனக்குள்ளயும் சில மாற்றம் இருக்கு" என்று அவளைச் சற்று இறுக்கிக் கொண்டான் பின்னிருந்து.

"என்ன அது?"

"உன்னோட கற்பனை உலகம் ‌இவ்ளோ அழகா இருக்கேன்னு மட்டும்தான் நேத்துவரை நினைச்சேன். ஆனால் அதில் நான் உணராத உணர்வுகளும் இருக்குங்கிறது இப்போதான் புரியிது. ரொம்பவே புடிச்சிருக்கு."

"அழகா இருக்குல்ல" என்றாள் வானத்தைப் பார்த்து.

அவனும் "ஆம்" என்றான் மையலுடன்.

"அன்னைக்கு நாம பனித்தீவில் பார்த்த இரவு மாதிரி இந்த இரவும் அழகா இருக்கு."

"அதைவிட."

"அப்படியா‌ என்ன? எனக்கு அப்படித் தோணல.‌ அங்க வானம் எனக்குப் பக்கத்தில் இருந்த உணர்வு. நட்சத்திரத்தைப் பிடிக்கிற உணர்வு. இங்க எல்லாமே தூரமா இருக்கு."

"உன்னோட‌ கோணம் வேற. என்னோட கோணம் வேற."

"அப்படி என்ன வேற கோணம் உனக்கு?"

"அன்னைக்கு வானம் ரொம்ப அழகா இருந்துச்சு. இன்னைக்கும் அழகா இருக்கு. நான் சொன்ன கூடுதல் அழகு உன்னால்" என்று அவன் கூற, அவனைக் கேள்வியாய் பார்த்தாள்.

"உன்னைக் கண்ணாடியில் பாத்தியா?" என்றவன்‌ எழுந்து சென்று அறையில் இருந்த கண்ணாடியை எடுத்து வந்தான்.

அவள் அவளைப் பார்க்க மறுத்துவிட்டாள். திரும்பி அமர்ந்த அவளைத் திருப்பி, "கண்ணாடி வேண்டாம். நானே சொல்றேன்" என்று அவன்‌ கூற, நெஞ்சம் படபடத்து அடங்கியது அவளுக்கு.

"நளன்‌ நெஞ்சுக்குள்ள யாரோ படபடன்னு தட்டுற மாதிரி இருக்கு" என்று அவனைச் சற்றுப் பிடித்துத் தள்ள, "நானும் கேக்கணும்" என்றான் நளன்.

"நளன்‌, எனக்கு ஒரு மணி நேரம் கொடு" என்றாள் கெஞ்சுதலாக.

"எதுக்கு?"

"அதுக்குள்ள நான் என்னைத் தயார் படுத்திக்கிறேன்."

"எதுக்கு?"

"ஐயோ... எல்லாத்துக்கும் விளக்கம் கேப்பியா?"

"நான் ஒரு கேள்வி கேட்டா நீதான் பக்கம் பக்கமா விளக்கம் சொல்லுவியே. இப்போவும் சொல்லு."

"கொஞ்ச நேரம் வேற ஏதாவது பேசலாமா?"

"விளங்கிறும்... இத்தனை வருஷம் பேசததையா இப்போ பேசணும்" என்று சலித்துக் கொள்ள, அவள் சிரித்தாள்.

"அப்பா.. நீ‌ கொஞ்சம் என்னோட நளனா இரு. அப்பதான் என்னால எப்பவும் போல இருக்க முடியும். இன்னைக்குக் காலைலேர்ந்து நீ பார்த்த பார்வை இருக்கே. கொன்னுட்ட."

"பிடிக்கலையா?"

"பிடிச்சிருக்கு. ஆனா போதும். என்னால இதுக்கு மேல தாங்க முடியல."

"எனக்குப் பத்தாது. இன்னும் வேணும்" என்று அவன்‌ கூற அவனை அடித்தாள் அவள்.

"நீ இப்போ கொஞ்சம் பழைய அனியா மாறிட்ட போல"

"நீ‌ இப்படியே இரு கொஞ்ச நேரம். நான் மாறிடுவேன்."

"அப்புறம்?" என்றான் விஷமமாக.

"ம்ம்ம் அப்புறம் போய்த் தூங்கலாம்" என்றாள் அவளும் விஷமமாக.

"உன்னை இவ்ளோ நேரம் சும்மா விட்டதே தப்பு" என்று அவளைப் படித்து இழுக்க, அவன் இழுப்பிற்கு அவளும் வந்தாள்.

"நான் ஒன்னு சொல்லவா? உனக்கு இன்னைக்கு முழுக்க இந்தப் புது உணர்வு இருக்கும். பார்க்கலாமா?" என்று வம்பிழுத்தான் அவளை.

"சரி.. அப்போ நான் கேட்ட ஒரு மணி நேரம் கொடு. பார்க்கலாம்.. நீ சொன்னது நிஜமா இல்லை நான் சொன்னது நிஜமான்னு" என்றாள் அவள்.

சரி என்று தள்ளி அமர்ந்து கொண்டான் அவன். அதுவும் அவளுக்கு ரசிக்கவில்லை.

"பக்கத்தில் இருக்கலாம். உன்னோட கையை வச்சிக்கிட்டு சும்மா இரு. இது போதும்."

"அப்படிலாம் என்னால இருக்கு முடியாது" என்று அவன் கூற, சட்டை செய்யாமல் அவன் மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

அவன் பதில் கூறாமல் இருந்தான். அவள் தொடர்ந்து பேசினாள்.

"அங்க பாரு நளன்... அந்த நிலா ஏவ்ளோ அழகா இருக்கு. அதைச் சுத்தி முளைத்திருக்கும் நட்சத்திரம். அந்த நட்சத்திரம் எல்லாம் மிணுக்கிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் கர்வம் அதிகமாகவே இருக்குல்ல. அதுக்கு நிலாதான் அழகு, அதன் பொலிவுக்குப் பக்கத்தில் கூடப் போக முடியாதுன்னு தெரியும். ஆனாலும் ஒரு ஆசைல மிணுக்கிக்கிட்டே இருக்கு" என்றாள் அவள்.

சப்தமாக நகைத்தான். "இதெல்லாத்தையும் மிஞ்சுற மாதிரி நான் ஒரு விஷயம் சொல்லவா?"

"ம்ம்ம்.."

"நட்சத்திரம் எல்லாம் சும்மா மிணுக்கிக்கிட்டு இல்லை. அது புறம் பேசுது. யாருடா இது.. நம்ம உலகத்துக்குப் புதுசா அழகி ஒருத்தி வந்திருக்காளேன்னு பொறாமையோட உன்னைப் பார்க்குது. அதான் அதிகமா மிணுக்குற மாதிரி நமக்குத் தெரியிது."

"நீ இப்படியெல்லாம் கூடப் பேசுவியா?"

"ஏன் பேச வராதுன்னு நினைச்சியா?"

"உனக்கு பேசப் பிடிக்காதுன்னு நினைச்சேன். ஏனா நிலாவ பத்தி பேசுறதெல்லாம் கால விரயம்னு சொல்றவனாச்சே. இயற்கையை ரசிக்கிறது உனக்குச் சுத்தமா பிடிக்காதே. உருப்படியா ஏதாச்சும் செய்யணும்னு சொல்லுவ."

"நீ எப்ப பார்த்தாலும் அந்த நிலாவையே பார்த்துட்டு இருந்தா எனக்கு எப்படிப் புடிக்கும்" என்றதும் அவள் வியப்பாக அவனைப் பார்த்தாள்.

"பொய் சொல்லாத. உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்" என்றதும் நகைத்தான் அவன். பின் எத்தனை முறை அவனிடம் திட்டு வாங்கியிருக்கிறாள். இப்பொழுது வந்து நீ அதையே பார்த்துக் கொண்டிருந்தாய் என்று‌ காரணம் கூறிவிட்டால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன.

"அது அப்படி இல்லை அனி. ஒரு கற்பனை உலகத்திக்குள்ள நீ தொலைஞ்சு போய்ட கூடாதுங்கிற பயம். எதுவுமே இல்லாத உலகத்தில், உன்னோட ஏக்கங்கள் உன்னை வாழவிடாது. அதனால் சில சமயம்‌ உன்னைத் திட்டியிருக்கலாம். ஆனால் இங்கதான் எல்லாம் இருக்கே. அதனால ரசிக்கலாம். தப்பில்லை."

"நீயும் ரசிக்கிற."

"நானும் ரசிக்கிறேன். ஆனால் நீ ரசிக்கிறதை இல்ல" என்றவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

"நான் ரசிக்கிறதை சொல்லவா?" என்றான் அவன்.

"ம்ம்ம்.. சொல்லு."

"இந்தக் குங்குமம் உன்னோட கன்னத்தின் சிவப்பு முன் தோற்றுவிடும். இந்தத் தோடு, நீ செவி மடுக்கும் சொற்களின் முன் தோற்றுவிடும். இந்தக் கழுத்தணி, உள்ளே செல்லும் மூச்சுக் காற்று முன் தோற்றுவிடும். நீ பேசும் மொழியின் முன் தோற்றுவிடும், இந்த வளையல்களின் ஓசை. இது எல்லாத்துக்கும் முன்னாடி நானும் தோற்றுப் போய்தான் நிற்கிறேன்" என்று அவன் அடுக்கிக் கொண்டே செல்ல, அவளின் முகத்தில் வெட்கம் பூவாய்ப் பூத்தது.

அவன் இவ்வளவு ரசனைக்காரனா என்ன? இந்த ஆடையும் ஆபரணங்களும் அவனை ரசிகனாக்கிவிட்டதா?

"நான் சொன்ன நேரம் இன்னும் முடியலையே. திரும்பவும் அதையே பேசுற" என்று அவள் வெட்கத்துடன் சலித்துக் கொள்ள, "சரி வேற பேசலாம்" என்று சிரித்துக் கொண்டான் அவன்.


"அன்னைக்கு என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டியே. அதுக்கு இப்போ பதில் சொல்லவா?"

"என்ன கேள்வி?"

"காதல்னா என்னனு கேட்டியே? அதுக்கு இப்போ பதில் சொல்லவா?"

"ம்ம்ம்.. சொல்லு.." என்றாள் ஆர்வமாக.

"நம்ம உலகத்தைப் பொறுத்தவரை அன்பு ஒரு பண்டமாற்று பொருளா இருக்கலாம். ஆனால் இங்கு அதற்கு பொருளே வேற. இங்க அன்பு பல பரிமாணங்களில் இருக்கு."

"நீ ரொம்ப‌ மாறிட்ட நளன்."

"நீயும் இந்த உலகமும் என்னை மாத்திட்டீங்க."

"சரி..‌நீ சொல்லு.. அப்படி என்ன அன்பிற்கு பல பரிமாணங்கள்."

"தன் கணவனைக் கொன்றவனைப் பழி வாங்கிய வேலு நாச்சியாரிடம் புதுவிதமான வீரம்‌ சுமந்த அன்பு. ஆங்கிலேயரின் கையால் சாவு வரக்கூடாதுன்னு நினைத்த மங்கை சுமந்த தாய் நாட்டின் மீதான அன்பு. வேலு நாச்சியாருக்காக உயிரை அளித்த குயிலியின் நட்பு. நாம யாருன்னே தெரியாம இருந்தாலும், நமக்கு அடைக்கலம் கொடுத்த பொன்னி அக்கா. இப்படி பல விதமான அன்பு இருந்தாலும், அதில் வென்றது மங்கையின் கணவனின் அன்புதான்."

உண்மையில் இது எல்லாம் அவளுக்கும் பிடித்திருந்தது. ஆனால் மங்கையின் கணவன் செய்ததை அவளால் இன்னும் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

"எனக்கு என்னமோ அப்படி தோணல. அவர் மேல இன்னும் கோபம் இருக்கு" என்றாள் அவள் வெளிப்படையாக.

"தன் மனைவியின் வார்த்தை நெஞ்சைக்‌ கூராய் கிழித்திருந்தாலும், அவளின் சொல்லுக்கு இணங்கி, அவளை கொன்ற மங்கையின் கணவன் உண்மையில் உயர்ந்தவன் தான். உனக்கும் ஒருநாள் புரியும்."

"நீ‌, பொன்னி அக்கா எல்லாரும் அந்த செய்கைக்கு பின் இருக்கும் அன்பை ஏத்துக்கிட்டீங்க. ஆனால் என்னால எப்பவும் ஏத்துக்க முடியாது."

"அப்புறம் எதுக்கு ராணிக்கிட்ட, மங்கையைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு கேட்ட."

"அது.. அது..."

"உன்‌ மனசின் ஓரமா அவர் மேல ஒரு நல்ல எண்ணம் இருக்கு. ராணி சொல்ற கதையில் அது நியாயப்படுத்தப்படுமோனு நினைக்கிற" என்று சந்தேகமின்றி உரைத்தான் அவன்.

அவள் திடுக்கிட்டு விழித்தாள். அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா என்று அவளே மறுபரிசீலனை செய்து பார்க்க தயங்கிய ஒரு விடயத்தை, அவள் மனதின் எண்ணத்தை, இவன் இப்படி ஐயமின்றி கூறுகிறானே என்று வியந்தாள்.

"ஆனா ஒரு விஷயம். அன்னைக்கு நான் செத்தா நீ என்ன செய்வன்னு கேட்டியே. அதுக்கு இப்போ பதில் சொல்றேன்" என்று அவன் கூறியதும் அவள் ஆர்வம் மின்ன அவனைப் பார்த்தாள்.

"நீ செத்தா நானும் சாகணும்னு தோணுது. உண்மையா செத்துப் போவனான்னு தெரியாது. ஆனா இப்போ என்னால அந்த கேள்விக்கு தயக்கமில்லாம பதில் சொல்ல முடியும்" என்றதும் மீண்டும் திடுக்கிட்டாள். அவனின் திடீர் அன்பு அவளை திடுக்கிட வைத்ததோ? ஆனால் மனதின் மெல்லிய பாகத்தைத் தொட்டுச் சென்றது.

அவளின் திடுக்கிடல் கண்டு, அவன் பேச்சை மாற்றினான்.

"சரி உனக்கு என்ன பிடிச்சது சொல்லு."

"இன்னைக்கு ஒரு நாடகம் நடந்ததே. அதில் சீதா தேவியை எனக்கு ரொம்பவே பிடிசச்து. மனசைவிட்டு இன்னும் அகலாத பாத்திரம் சீதாம்மா" அனிச்சம்.

"ஏன்?"

"ராமன் நினைக்கிறதுக்கு முன்னாடியே அவர் என்ன நினைப்பார்னு கணிக்கனும்னா அது எப்படிப்பட்ட காதலா இருக்கணும்."

"எனக்குச் சீதைப் பிடிக்கல.."

"ஏன்.."

"ராமன் ஊருக்கு நல்லது செஞ்சிருந்தாலும், சீதைக்கு நியாயம் செய்யல. ஆனா மகாபாரதத்தில் வரும் திரௌபதை சபையில் கணவன்மார்களை எதிர்த்துக் கேள்வி கேட்டா. அவளுக்கு நடந்த அநீதிக்கு பழி தீர்த்துட்டா."

"அப்படிப் பார்த்தாலும் அவள் கணவர்களை ஏன் ஏத்துக்கணும். தப்பு செஞ்சது அவுங்கதானே. அவர்களை வேண்டாம்னு சொல்லிருக்கலாமே."

"இதுல அவளோட சாமர்த்தியம் இருக்கு அனி. சபையில் அவமானம் செய்த கௌரவர்களை, பழி தீர்க்க கணவர்களைக் கேடயமாக உபயோகித்தாள். நல்லா யோசிச்சு பாரு. பாண்டவர்களை மூலமாய்க் கொண்டு திரௌபதை அவமதிக்கப்பட்டாள். அவளை அவமதிக்க, கௌரவர்களுக்கு அவளின் கணவர்கள் தேவைப்பட்டனர். அதே கணவர்களைக் கொண்டு அவனைப் பழி தீர்த்துவிட்டாள். துணிவு மிக்கப் பெண்கள் அழகா இருக்காங்க‌. மங்கை, குயிலி, ராணி வேலு நாச்சியார் இப்படி இந்த உலகத்தில் எத்தனை துணிவுள்ள பெண்கள்."

"எதிர்த்துக் கேள்வி கேட்டாதான் உனக்குப் பிடிக்குமா?"

"அதுவும் ஒரு காரணம். இன்னொரு காரணமும் இருக்கு."

"அது என்ன?"

"இவ்வளவு கஷ்டப்பட்டுக் கல்யாணம் பண்ணி கடைசியில் பிரிஞ்சிருக்கவா? ராமனும் சீதையும் பிரிஞ்சது எனக்குப் பிடிக்கல."

இந்த உலகத்திற்கு வந்து சில நாட்களே ஆனாலும், எவ்வளவு அனுபவங்கள். காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை புதுப்புது அனுபவங்கள்.

"எனக்கு இப்போ என்னென்னமோ தோணுது" அனி

"என்ன தோணுது?"

"நாம ரெண்டு பேரும் இந்த உலகத்தில் தனியா இருக்க மாதிரி தோணுது."

"அப்பறம்" என்று கூறி அவளை மடியில் படுக்க வைத்தான்.

"நளன் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. எழுந்து உக்காந்துக்கவா?"

"அனி, உண்மையைச் சொல்லணும்னா எனக்குப் பொறுமையே இல்லை. உனக்காக ரொம்பவே பொறுமையா இருக்கேன். நீ கேட்ட ஒரு மணி நேரம் முடிஞ்சிருச்சு"

"சரி.. இன்னும் எனக்கு ஒரு மணி நேரம் குடு.. அதுக்குள்ள தயாராகிக்கிறேன்" என்றாள் சிரித்துக் கொண்டே.

"ஷ்ஷ்... இதுக்கு மேல நீ எதுவும் பேசக்கூடாது. ஏற்கனவே உன்னைத் தயார் செய்துதான அனுப்பியிருக்காங்க."

"அதுதான் பிரச்சனையே. அதுனாலதான் நான் இப்படி ஆகிட்டேன்."

"அதுல என்ன பிரச்சனை?

"வரும் போது இந்தப் பாலை கையில் கொடுத்து, நிறையச் சொன்னாங்க. என்னன்மோ சொல்லி, எனக்கு இல்லாம இருந்த உணர்வையெல்லாம் வர வச்சுட்டாங்க" என்றாள் சலித்துக் கொண்டே.

"அப்படி என்ன சொன்னாங்க?"

"அதெல்லாம் சொல்ல முடியாது."

"அனி... எனக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும். உண்மையாவே உன்னை எப்படிக் கையாளணும்னு தெரியல எனக்கு."

"இது என்ன பெரிய கம்பு சூத்திரமா. உனக்கு எப்படித் தோணுதோ அப்படி ஆரம்பிச்சுக்கோ" என்றாள் சிரித்துக் கொண்டே.

"அது சரி. மகாராணியோட ஒப்புதல் கிடைச்சிருச்சு போல" என்று கூறியவனின் மார்பில் அனிச்சம் தஞ்சம் புகுந்திருந்திருந்தாள்.

அவளின் கற்பனை உலகில் அவனும் அவளும் அன்பைப் பரிமாற, இருள் போர்வையாய் மாறியிருந்தது. அவனின் அத்துமீறல்களால் அவளை இம்சைகள் செய்தான்.

இடைவெளி என்பதே‌ இல்லாமல் இருவரும் களைப்பின் மிகுதியில் இருந்தனர். இரவும் களைத்துப் போனது. பகல் மென்மையுடன் தெளிய ஆரம்பித்தது.

விகல்பமின்றி புள்ளினங்கள் கோகிலமாய் ஒலியெழுப்ப, அவளும் அவனுடைய மார்பிலிருந்து எழுந்து கொள்ள முயன்றாள். ஆனால் அவன் விடவில்லை. மீண்டும் இழுத்துக் கொண்டான்.

அவள் ஒரு வினா எழுப்பினாள்.

"நளன், இது தப்பில்லையா?" என்று அவள் வினவ, அவன் திடுக்கிட்டான்.

"என்ன ஆச்சு அனி.. ஏன் குழப்பமாவே இருக்க? இப்போ இங்க என்ன தப்பு நடந்துச்சு?"

"நம்ம உலகத்தோட நிபந்தனைகள் எல்லாம் நினைவிருக்கா?"

"நாம அங்கயே இல்லாதப்போ, அதை‌ இன்னும் ஏன் பிடிச்சு தொங்குற" என்றான் ஆற்றமையுடன்.

"ஒருவேளை எனக்கு குழந்தை உருவானா?" என்று அவள் வினா எழுப்ப, அவன் முகத்தில் சிந்தனையெல்லாம் இல்லை. அவன் முன்னமே சிந்தித்ததுதான்.

"குழந்தை வந்தா தப்பா என்ன? குழந்தையைப் பெத்து வளர்க்கலாம்" என்றான் அவன் சாதாரணம் போல்.

"அதெப்படி, குழந்தைக்கு ஏதாச்சும் ஆபத்து வந்தா?"

"அனி..‌ உன்னோட பயம் அர்த்தம் இல்லாதது. நாம நினைச்சது எதுவுமே நடக்கல. இது எல்லாமே அண்டத்தோட திருவிளையாட்டு. இப்போ இங்க வந்து நம்ம உயிர் வாழும் போது, நம்ம குழந்தைக்கு என்ன பிரச்சினை வரும்னு நினைக்கிற. ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன். இங்க உள்ள சாப்பாடு நாம சாப்பிட்டதே இல்லை. ஆனாலும் நாம சாப்பிடும் போது நமக்கு ஒவ்வாமை வரல. அப்போ இது நம்ம மரபணுவில் எங்கோ தகவலா இருக்கு. நம்ம பூர்வ குடிகள் இப்படித்தான் வாழ்ந்திருக்கணும். அதனால ஒன்னும் ஆகல. அதே மாதிரி, நமக்கு என்ன நடந்தாலும் அதை காலத்திடம் விட்டுடு. இதுவரைக்கும் நடந்தது எல்லாமே நண்மையா இருக்கும் போது இனிமேயும் நண்மைதான் நடக்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு" என்று அவன் கைகளை உயர்த்த, அவனுடைய கைகளில் அவளின் கைகள் அடங்கிவிட்டன.

"எதுக்கும் கவலைப் படாத அனி. எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்" என்று வாக்களித்தான் அவளுக்கு. எப்படி என்றெல்லாம் அவனுக்கும் தெரியாது. ஆனால் கேடு ஒன்றும் நிகழாது என்று அவன் மனம் அடித்துக் கூறியது.

நிலவு ஒழுகும்!!!













 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom