Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 16



"நீங்க உங்க கடமையை செய்ய நான் என்னைக்கும் குறுக்க நிற்க மாட்டேன்" என்ற மித்ரவர்ஷினியின் சர்க்கரைப் பேச்சில் சிரித்தவன்,


"அப்ப என்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதம்னு சொல்றியா?" என்று கேள்வி எழுப்பினான்.


ஆம் என்று தலையை மட்டும் அசைத்தாள்.


"ம்? சரி, அப்ப‌ நாம கல்யாணம் பண்ணிக்கலாம். அப்பறம் முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் பாரு. நமக்கு கல்யாணம் ஆனதுக்கப்பறம் நீ வெளிய எங்கேயும் வேலைக்கு போகக்கூடாது. பொறுப்பான மனைவியா என்னையும், நம்மப் புள்ளைங்களையும் பார்த்துகிட்டு வீட்ல இருந்தா மட்டும் போதும். இதுக்கு உனக்கு ஓகேவா?" என்று கேட்டவன், தன் அன்னையின் செயல்களிலிருந்து பாடம் பல கற்றிருந்தான்.


குழந்தை வரை யோசித்துப் பேசுபவனை நினைத்து பல்லைக் கடித்தவள், சந்தானத்தின் நினைவு வரவும், "எனக்கு ஓகேங்க. ஆக்‌ஷூவலி எனக்கும் ஹவுஸ் வைஃப்பா இருக்கத்தான் ஆசை" என்று பொய் கூறினாள்.


"அப்ப ஓகே. நெக்ஸ்ட் ஃபங்க்ஷன்ல நம்ம மீட் பண்ணலாம்" என்றதோடு அவளிடம் எதுவும் சொல்லாமல் விடைபெற்று விட்டான்.


அவளோ புடவையை அவிழ்த்துக்கொண்டே அனிச்சையாய் புலம்பினாள்.


"ச்சே! கடைசில என் வாயாலயே என்னை கட்டிக்கோன்னு கெஞ்சுற நிலைமைக்கு என்னை கொண்டு வந்துட்டானே. இவனை என் கால்ல விழ வைக்கணும்னு பார்த்தா, என்னை அவன் கால்ல விழ வச்சிடுவான் போல? விடக்கூடாது. அவனா நானான்னு ஒருக்கை பார்த்திடனும்" என்று சிலுப்பினாள்.


கீழே வந்தவனிடம் மீனாட்சி காப்பி கோப்பையை நீட்ட, வேண்டாம் என மறுத்தவன் முக்கியமான வேலை ஒன்று வந்து விட்டதாகக் கூறி கிளம்பி விட்டான்.


நேரே தனது வீட்டிற்கு சென்றவன் தன் அன்னையிடம் திருமணத்திற்கு தனது சம்மதத்தை தெரிவித்தான். அடுத்த கணமே திருமண ஏற்பாடுகள் அனைத்தும் துவங்கப்பட்டன.


தன் அண்ணன்களின் திருமணத்திற்காக அனுஷாவும் இந்தியா வந்திருந்தாள். அது அவள் வீ.கேவுடன் அறிமுகமாகியிராத காலக்கட்டம். தன் அண்ணன் அண்ணியரின் உடைகளை தானே வடிவமைத்தாள் அவள்.


மறுபுறம் தினமும் இரவு எட்டு மணியளவில் ரதிதேவிக்கு அழைப்பு விடுத்து, சுமார் இரண்டு மணிநேரம் அவளுடன் கடலை போடும் அக்னிமித்ரன், அவளுக்கு பிடித்தது பிடிக்காததையெல்லாம் அவளறியாமலேயே கறந்தான்.


ஏற்கனவே அவன் செய்த செயலால் உள்மனதுக்குள் பயந்து கொண்டிருந்தவள், அவனுடன் இயல்பாக பேச முடியவில்லை எனினும், தன் பாட்டி மணியம்மையின் வற்புறுத்தலால் ஓரளவு பேசினாள்.


இவர்களின் திருமணத்தை அனைவருக்கும் அறிவிக்கும் விதமாய் ஒரு வாரத்திற்குப் பின் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண அறிவிப்பு விழாவில், முக்கியமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.


ஐந்து நட்சத்திர விடுதியில் இவ்விழாவிற்காக பெரிய மேடை ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஜோடிகளும் உட்காரும் வகையில் தனித்தனியே, அதிக வேலைப்பாடுகள் கொண்ட இருக்கைகளும் போடப்பட்டிருந்தன.


விழா தொடங்கியதும் இரண்டு ஜோடிகளும் மேடைக்கு அழைத்து வரப்பட்டு, இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.


அடர் நீலநிற கோட் ஷூட்டில் ஆணழகனாய் திகழ்ந்தான் அக்னிமித்ரன். அவனின் விரிந்த தோள்களும், தீட்சண்யமான கண்களும், மேல் கோட்டிற்கு உள்ளே அணிந்திருந்த வெண்ணிற சட்டையின் முதலிரண்டு பட்டன்களை திறந்து விட்டமையால் தெரிந்த உரமேறிய நெஞ்சும், உதட்டிற்கு மேலிருந்த கருத்த கத்தை மீசையும், அவனை பேரழகனாய் காட்டின.


அவனருகில் தன் முக ஜொலிஜொலிப்புடன் போட்டிப்போடும் அளவிற்கு வெண்கற்களால் ஆன, அதிக வேலைப்பாடுகள் கொண்ட, பல்லாயிரங்களை விழுங்கிய, அடர் நீல நிற லெஹாங்காவை, அக்னிமித்ரனுக்கு பொருத்தமாய் அணிந்திருந்தாள் ரதிதேவி.


அவர்களுக்கு வலப்புறம் இருந்த இருக்கையிலோ இடை தாண்டிய முடியை கர்ல் செய்து முதுகில் பரப்பி விட்டு, ரவிக்கையையும் பாவாடையையும் சுமக்கவே இவள் கூடுதலாக சாப்பிட்டிருக்க வேண்டுமோ? என காண்போர் எண்ணும் அளவிற்கு கூடாரம் போல் விரிந்த கடல் நீல நிற கொசுவலை லெஹாங்காவை அணிந்திருந்தாள் மித்ரவர்ஷினி.


அசோகா தன்னை நெருங்கி நிற்கக்கூடாது என்பதற்காகவே அதனை அணிந்திருந்தாளோ என்னவோ?


அவளருகில் அதே நிறத்திலமைந்த கோட் ஷூட்டில், ஜெல் வைத்து தனது கேசத்தை படிய வாரி, அசோகமித்ரனும் மன்னர் அசோகராய் மிளிர்ந்தான்.


இரு ஜோடிகளையும் கண்டு ஓரமாய் நின்றிருந்த களக்காட்டு தம்பதியர் மனம் நிறைந்து போயினர்.


விழா ஆரம்பமாக ஒவ்வொருவராக வந்து வாழ்த்து கூறிவிட்டுச் சென்றனர்.


அதில் அசோகமித்ரனின் கல்லூரித் தோழிகள் சிலர் வந்திருக்க, அவர்களிடம் உற்சாகம் ததும்ப சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான் அந்த காவலதிகாரி.


ஏற்கனவே அவனிடம் காதலை சொல்லியிருந்து அவனால் நிராகரிக்கப்பட்டவர்கள், இப்போது மித்ரவர்ஷினியின் கொள்ளை அழகை கண்டு, பொறாமையில் அவளை வெறுப்பேத்தவென்றே அசோகாவிடம் வெகுநேரம் பேசினர்.


அவன் சிரிக்கும் போது மின்விளக்குகளால் பளீரிட்ட அவனின் முன்னெற்றி முல்லைப் பற்களையே வெறித்துக் கொண்டிருந்த மித்ரவர்ஷினிக்கு, உள்ளுக்குள் கொஞ்சம் கடுப்பாகவே இருந்தது.


‘டேய்! உனக்கு பாய் ஃப்ரெண்ட்ஸே கிடையாதா?’ என்றவள் உள்ளுக்குள் குமுறிய வேளை, அசோகமித்ரனின் உயிர்த்தோழன் மனோகரன் மேடையேறினான்.


அவன் அவளிடம், "ஹாய் சிஸ்டர், இவன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸரா இருக்கதால பெரிய விஸ்வாமித்திரனோனு நெனச்சுடாதீங்க. சரியான சாக்லேட் பாய் இவன். காலேஜ்ல ஒரு பியூட்டிய விட மாட்டான். எல்லார்கிட்டயும் சகட்டுமேனிக்கு கடலை போடுவான்" என சொல்ல, அசோகமித்ரனை தன் பார்வையால் சுட்டெரித்தாள் மித்ரவர்ஷினி.


ஆனால், அவன் அவளை கண்டு கொண்டால் தானே?


"டேய்! வந்தவுடனேயே உன் வேலையை ஆரம்பிச்சுட்டியா? நாரதா! ஆமா ஹேமாவை எங்கடா காணோம்?" என்றான் ஆதுரமாக.


"ம்? முன்னாள் காதலன் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வர, நான் என்ன மலர் டீச்சர் புருசனா? வீட்லயே விட்டுட்டு வந்துட்டேன்" என்றதும், அவர்களின் பேச்சைக் கேட்டு முகம் சுளித்தாள் மித்ரவர்ஷினி. தள்ளிப்போயும் நின்றுகொண்டாள்.


அதன் பின்பு அவர்கள் புறம் திரும்பவேயில்லை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"டேய்! உண்மைய சொல்லுடா?" என்று அவன் வயிற்றில் குத்தினான் அசோகா.


"ஒன்னுமில்லடா அவ அப்பாவுக்கு கொஞ்சம் ஹெல்த் ப்ராப்ளம். அதான் பெங்களூர்ல இருக்க அவ அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. ஆனா, மேரேஜுக்கு கண்டிப்பா வந்திடுவா" என அவன் தோள்தட்டிச் சென்றுவிட்டான்.


வர்ஷினியின் புறம் திரும்பிய அசோகா, "ஹேய்! என்னாச்சு? அந்தப் பக்கம் திரும்பிட்ட? கம்மியர்! மனோவும், ஹேமாவும் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ். ரொம்ப ஜாலியான டைப்" என்று சொல்லும் போது, அனுஷா குறுக்கிட்டாள்.


"அண்ணா, அண்ணி, ஒரு போஸ் கொடுங்க. அண்ணா அண்ணியை ஒட்டி நில்லுங்க. அண்ணா அண்ணியைப் பார்த்து ரொமான்டிக் லுக் ஒன்னு விடுங்க. அண்ணி அண்ணா தோள்ல கைப்போட்டு நில்லுங்க. அண்ணா நீங்க இப்ப அண்ணியோட ஹிப்ப பிடிச்ச மாதிரி போஸ் கொடுக்கணும். கமான் காயிஸ், ஹான் ஹான் கரெக்ட் கரெக்ட். அப்படியே லேசா சிரிங்க பார்ப்போம்" என்ற அனுஷா தன் அலைபேசியை தயார் செய்ய, குளிர்ந்த மலராய் தன் இடையில் படிந்த அவன் கரத்தின் மேலேயே, எடுயென்று நிலைத்தது அவளது பார்வை.


தன்னால் இயன்ற அளவு, அண்ணா அண்ணி இப்படி போஸ் கொடுங்க, அப்படி போஸ் கொடுங்க என்று, அவர்களை வைத்து செய்து விட்டாள் அனுஷா.


இவர்களை இவ்வளவு படுத்தியெடுத்தவள், அக்னிமித்ரன் ரதிதேவி இணையையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுடன் தானும் இணைந்து பல செல்ஃபிகளை தட்டித் தள்ளினாள்.


அந்நேரம் அவளின் அலைபேசி இசைக்க, ரதியிடம், "அண்ணி என் ஃப்ரண்ட்ஸ் வீடியோ கால் வந்திருக்காங்க. அண்ணாவை என் ஃப்ரண்ட்ஸுக்கு காமிச்சுக்கறேன்" என்றாள்.


‘காமிக்கிறதென்ன உங்க அண்ணனை டேக் ஒட்டி ஓ.எல்.எக்ஸ்ல போட்டுக் கூட வித்துக்கோ. யாருக்கு வேணும் உங்க அண்ணன்?’ என்று உள்ளுக்குள் ஓடினாலும், அதனை வெளியே சொல்ல திராணியில்லாதவள், ஊமையாய்
நின்றாள்.


அக்னியோ, "அனும்மா அவக்கிட்ட என்ன பர்மிஷன் கேட்டுக்கிட்டு? கொடுடா அண்ணன் பேசுறேன்" என்றான்.


ரதியின் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்தது.


"ம்ஹூம், மாட்டேண்ணா. இனிமே நீங்க அண்ணியோட ப்ராபர்ட்டி. அண்ணி சொன்னா தான் உங்ககிட்ட கொடுப்பேன். நீங்க சொல்லுங்க அண்ணி?" என்று பிடிவாதம் செய்தாள்.


அது அக்னிமித்ரனின் புத்திக்குள் ஏறியதா என்றால், இல்லை.


ரதிதேவி, இம் என்றது தான் தாமதம், உடனே அனுஷாவிடமிருந்து அலைபேசியை வாங்கி வளவளக்கத் தொடங்கிவிட்டான்.


அப்போது மேடையேறிய இரு‌ குடும்ப பெரியவர்களும், இரு இணைகளையும் மோதிரம் மாற்றிக்கொள்ளச் சொல்ல, இரு ஆண்மகன்களும் மோதிரத்தை தங்கள் வாழ்நாள் துணையானவர்களுக்கு மாட்டிவிடத் தயாராகினர்.


அக்னிமித்ரன் ரதியின் பன்னீர்ப்பூ விரலுக்கு வலிக்குமோ எனப் பயந்து, மெதுவாய் மோதிரத்தை அணிவித்துவிட்டவன், மென்முத்தம் பதிக்க, மேனி சிலிர்த்து தன் கையை விலக்கிக் கொண்டாள் ரதிதேவி.


"இவன் வேற எதையாவது பண்ணி என்னையும் செய்ய வைக்கிறான்" என்று முணுமுணுத்த அசோகாவோ, வர்ஷினிக்கு மோதிரத்தை அணிவித்துவிட்டு, இவனும் முத்தம் கொடுப்பானா? என எதிர்பார்த்திருந்தவர்களிடம், "அதெல்லாம் நான் தனியா கொடுத்துக்கறேன். ஏன்னா எனக்கு கையில முத்தம் கொடுக்கப் பிடிக்காது" என்று மறுத்துவிட்டான்.


அப்போது தான் மித்ர வர்ஷினியால் மூச்சுவிடவே முடிந்தது.


"கொடுக்கற ஃபர்ஸ்ட் கிஸ்ஸை லிப்ஸ்ல கொடுத்தா தானே கிக்கா இருக்கும்?" என்று அவள் மூச்சுவிடும் நேரத்தில், காதின் ஓரம் குனிந்து கிசுகிசுப்பாய் கூறியவன் கண்ணடிக்க,


பொய்கையில் நீந்த வேண்டியவற்றை தன் விழிகளாகக் கொண்டவள், விதிர் விதிர்த்துப்போய், ‘கடங்காரன், கடங்காரன், எல்லாரும் சுத்தியிருக்கும் போது எப்படி பேசுறான் பாரு? எப்படியோ இப்ப முத்தத்துலயிருந்து தப்பிச்சாச்சு. ஆனா பின்னாடி மத்ததுலயிருந்து எப்படி தப்பிக்கறது?’ என்று இப்போதே மனதுக்குள் புலம்பத் துவங்கிவிட்டாள்.


விழா ஆரம்பித்து வெகுநேரம் சென்று அவ்விடத்திற்குள் நுழைந்தான் ப்ரைம் ஸ்டார் ப்ரித்விஹாசன்.


காரிலிருந்து கீழே இறங்கிய ப்ரித்வியை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து நின்று, "சார் எப்படி சார் நீங்க மிஸ் ரதிதேவியை பிசினஸ்மேன் அக்னிமித்ரன் கட்டிக்க சம்மதிச்சீங்க? அவங்க உங்க ஃபியான்ஸே தான? போன தடவை கொடுத்த பேட்டியில நீங்களும் அவங்களும் மேட் ஃபார் ஈச் அதர்னு சொன்னீங்க. இப்ப என்னன்னா உங்க ட்விட்டர் போஸ்ட்ல அக்னிமித்ரனும் ரதிதேவியும் இறைவனால் இணைக்கப்பட்ட ஜோடினு வாழ்த்து போட்டிருக்கீங்க. எதை சார் நாங்க நம்பறது?" என்று அடுக்கடுக்காய் கேட்க, என்ன சொல்வதெனத் தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் ப்ரித்விஹாசன்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 17



சொல்ல வேண்டிய பதிலை யோசித்து முடித்தவன் ப்ரித்வி, "நான் அப்ப சொன்னது அப்ப உண்மை. இப்ப சொல்றது இப்ப உண்மை. எனக்கும் மிஸ் ரதிதேவிக்கும் நடக்கயிருந்த கல்யாணம் எங்க பேரண்ட்ஸால ஃபிக்ஸ் பண்ணப்பட்டது. மேரேஜ் பத்தி நாங்க ரெண்டுபேரும் மனம்விட்டு பேசிக்க நேரமே கிடைக்கல. அதனால தான் ரதிதேவியும், அக்னிமித்ரனும் காதலிச்சது எனக்குத் தெரியாமலேயே போயிருச்சி. இப்ப தெரிஞ்சதும் ராமனையும் சீதாவையும் சேர்த்து வைக்க, அனுமனா மாறிட்டேன். சிம்ப்பிள்!” என்று தன் தோள்களை குலுக்கினான்.


வலப்புறமிருந்து, "சூப்பர் தலைவா!" என்ற ரசிகரின் விசில் சத்தம், அங்கு நின்றிருந்தவர்களின் காதை கிழித்தது.


இன்னொரு கேள்வி கேட்க வந்த செய்தியாளரை கையமர்த்தி தடுத்தவன், தன் பாதுகாவலர்களின் உதவியுடன் உள்ளே சென்றுவிட்டான்.


மேடையில் இரு ஜோடிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு, தன்னிடத்தில் வந்து அமர்ந்தவனின் உள்ளம் உலையாய் கொதித்தது.


அச்சுப்பதுமையாய் அமர்ந்திருந்த ரதிதேவியை பார்க்கப் பார்க்க, அவனின் ஆத்திரம் கூடிக்கொண்டேப் போனது.


சிறிது நேரத்தில் அவ்விடத்திலிருந்து கிளம்பியவன், தூரத்தில் நின்று தொடர்ந்து தன் அண்ணன் அண்ணிகளை புகைப்படம் எடுக்கிறேன் என்று படுத்திக் கொண்டிருந்த அனுஷாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டே சென்றான்.


அவனின் கார் வெளியே செல்ல, ஒரு பென்ஸ் கார் உள்ளே நுழைந்தது.


அதிலிருந்து இறங்கியது வேறு யாருமில்லை. பூர்ணிமாவும் கல்பனாவும் உறுப்பினராய் விளங்கும் மகளிர் சங்கத்தின் தலைவி அனுபாமா தான். எவ்வித ஆடம்பரமுமின்றி சாந்த சொரூபிணியாய் தன் கணவருடன் உள்ளே நுழைந்தார் அவர்.


அவரை சாமரம் வீசி வரவேற்றனர் பூர்ணிமாவும், கல்பனாவும்.


பூர்ணிமாவை எதிலாவது மாட்டிவிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த கல்பனாவிற்கு அனுபாமாவை கண்டதும், அந்த யோசனை உதயமானது.


மெதுவாய் அனுபாமாவின் அருகில் சென்று அமர்ந்தவள், "ஏன் மேடம் வர இவ்வளவு லேட்? ட்ராஃபிக்ல எதாவது மாட்டிக்கிட்டீங்களா?" என்று அனுசரனையாய் விசாரித்துவிட்டு,


"என் பொண்ணு ரொம்ப சின்னப்பொண்ணு மேடம். வாழப் போற இடத்துல சந்தோசமா நீடூழி வாழ, உங்களை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் ரொம்ப முக்கியம் மேடம். நீங்களே இப்படி லேட்டா வந்தா எப்படி?" என உரிமையாய் கோபப்பட்டாள்.


எதிர்பார்த்தபடியே நெற்றியைச் சுருக்கிய அனுபாமா, "என்னது சின்னப்பொண்ணா? உன் பொண்ணுக்கு இப்ப வயசென்ன ஆகுது கல்பனா?" என்றார் சற்றே சந்தேகமாக.


"பதினெட்டு முடிய இன்னும் ரெண்டு மாசம் இருக்குது மேடம். மாப்பிள்ளைக்கும் இருபத்தியேழு வயசா…குது" என்றாள் ராகமிழுத்து.


"அடக்கடவுளே! ரெண்டு பேருக்கும் ஒன்பது வயசு வித்தியாசமா கல்பனா? இந்த கல்யாணத்துக்கு நீ எப்படி சம்மதிச்ச?" என்றார் ஆற்றாமையாக.


"நாங்க எங்க மேடம் இந்த கல்யாணத்தை முடிவு பண்ணோம்? பூர்ணிமாவோட பையன் தான் எங்க வீட்டுக்கு வந்து, அவரும் எங்கப் பொண்ணும் லவ் பண்றதா சொல்லி எங்களை கார்னர் பண்ணாரு. நாங்களும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டோம். என் பொண்ணு இப்ப பி.எஸ்சி படிப்பை டிஸ்கன்டியூ பண்ணிட்டு தான் கல்யாணமே பண்ணிக்கப்போறா மேடம். அவளுக்கு மேல படிக்க ரொம்ப ஆசை. நீங்க வேணும்னா என் பொண்ணுகிட்ட கேளுங்களேன், உனக்கு படிக்க ஆசையா இல்லையான்னு. பாவம் மேடம் என் பொண்ணு" என்று சோகநாடகம் நடத்தினாள்.


"அட! இந்தப் பையன் ஏன் கல்யாணத்துக்கு இப்படி அவசரப்படுறான் கல்பனா? அதுவும் அவ எவ்ளோ சின்னப்பொண்ணு? தப்பு கல்பனா. நான் இப்பவே பூர்ணிமாவை கூப்பிட்டு அவப்பையனை கன்வின்ஸ் பண்ணி, உன் பொண்ணை மேலப் படிக்க வைக்க சம்மதம் வாங்கறேன். நீ கவலைப்படாத கல்பனா" என்றதும், அக்னியையும், பூர்ணிமாவையும் மாட்டிவிட்ட திருப்தியில், கழன்றுகொண்டாள் கல்பனா.


மணமக்களை வாழ்த்திவிட்டு இறங்கிய அனுபாமா பூர்ணிமாவின் அருகில் சென்று, "உன் பையனுக்கும், உன் வருங்கால மருமகளுக்கும் ஒன்பது வயசு வித்தியாசமாமே?" என்று கணீர்குரலில் கேட்க,


"ஐயோ! இல்ல மேடம் அச்சுவுக்கும், வர்ஷினிக்கும் அஞ்சு வயசு தான் வித்தியாசம்" என்றாள் பூர்ணிமா.


"நான் உன் இன்னொரு பையன் அக்னிமித்ரனை பத்திப் பேசறேன் பூர்ணிமா. அவனும் உன் பையன் தான?" என்று காட்டமாய் கேட்டார்.


"ம், ஆ..மா ஆமா மேடம். நான் எவ்வளவோ சொன்னேன். என் பையன் தான் லவ்வு அது இதுன்னுட்டான். அதான் பசங்க சந்தோசத்தை ஏன் கெடுக்கணும்னு நாங்க சம்மதிச்சிட்டோம் மேடம்" என்று ஓரக்கண்ணால் பார்த்தாள்.


"சரி விடு, சின்னஞ்சிறுசுக ஆசைப்பட்டுட்டாங்க. ஆனா, இனி நீதான் வீட்டுல பெரிய மனுஷியா இருந்து அறிவுரை சொல்லனும் பூர்ணிமா. உன் மருமக நல்லா படிச்சி பட்டம் வாங்கின பின்னாடி தான், அவளை குழந்தை பெத்துக்கச் சொல்லனும். இருபத்தியோரு வயசுல தான் ஒரு பொண்ணு முழுமையான மன வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் அடையுறா பூர்ணிமா. ஸோ, நீ கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இரு அவங்கக்கிட்ட." என்று கூற,


"சரிங்க மேடம், வீட்டுக்கு போனதுக்கப்பறம் என் பையனுக்கு எடுத்து சொல்றேன்" என்று நழுவதிலேயே குறியாய் இருந்தாள் பூர்ணிமா.


கல்பனா‌ அவளின் அவஸ்தையைக் கண்டு குதூகலித்தாள்.


அனுபாமா சுலபத்தில் விடாமல், "இல்ல பூர்ணிமா, நீ இப்பவே என் கண்ணு முன்னாடியே உன் பையன் கிட்ட பேசனும். அவன் ஏதாவது மறுப்பு சொன்னா, நான் உனக்கு உதவிக்கு வரேன். போ! உன் புள்ளைக்கிட்ட பேசு. நீ குழந்தை வளர்ப்பு பத்தி எவ்ளோ மேடைகள்ல என்கூட பேசி கைத்தட்டு வாங்கியிருக்க? உன் வளர்ப்பு சோடை போகாது பூர்ணிமா. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ கேட்டதும் உன் மேல உள்ள பாசத்துல எப்படி உன் மகன், உடனே சம்மதிக்கறான் பாரு. அப்படி சம்மதிக்கலைனா, நான் உனக்கு துணைக்கு வர்றேன்." என்று ஊக்க,


‘என்ன நான் அவன்கிட்ட போய் பேசறதா? அவனோட பதினஞ்சு வயசுல அவன்கிட்ட பேசினது. அதுக்கப்பறம் பயபுள்ள நான் இருக்க திசை பக்கம் கூட வரமாட்டான். இப்ப எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு, அவன்கிட்ட போய் நான் அட்வைஸ் பண்றது?’ என்று தயங்கி தயங்கி அவனருகில் சென்றாள்.


தன் திருவாய் மலர்ந்து, "அக்னி" என்று மெதுவாய் அழைத்தாள்.


அவளை துச்சமாய் பார்த்தவன், ‘இவங்க வாயில இருந்து தான் என் பேர் வருதா? இருக்காது? ஒருவேளை வந்ததுனா?’ என்று அவளின் வாயையே பார்த்திருந்தான்.


மறுபடியும் அவள் அழைக்க, தன் சந்தேகம் நிவர்த்தியாகி, "என்ன?" என்று புருவத்தை உயர்த்தினான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
‘அப்படியே அவங்க அப்பாவை மாதிரியே இருக்கான் கருவாயன்’ என்று மனதில் முனகிக்கொண்டு, "ஒன்னுமில்லப்பா. ரதி ரொம்ப சின்ன பொண்ணுல்ல? அதனால.."


“அதனால?”


“இல்ல, அவளோடப் படிப்பு பாதியிலேயே நிற்குதில்ல? ஸோ, அவ நம்ம வீட்டுக்கு வந்த பின்னாடி, அவ படிப்பு தொடரணும்னு நான் ஆசைப்படுறேன்"


"ஓ! யூ சி, உங்க ஆசையை உங்க ஆசை மகன் அச்சுக்கிட்ட சொன்னா வேலைக்காகும். என்கிட்ட எதுக்கு சொல்றீங்க வீணா?” என்று கர்வமாய் வேறு பக்கம் பார்த்தான்.


‘அய்யோ! நேரங்காலம் தெரியாம இவன் வேற படுத்துறானே’ என புலம்பியவள்,


"இல்லப்பா, அவளுக்கும் படிக்கணும்னு ஆசை இருக்கும்ல? ஏம்மா ரதி, உனக்கு படிக்க ஆசை இருக்கு தானே?” என்று கேட்க, வேகமாய் ஆமென மேலும் கீழுமாய் தலையாட்டினாள்.


பின், அக்னியின் முறைப்பை கண்டு, இல்லையென வலப்புறமும் இடப்புறமுமாய் அவளின் தலையாடியது.


"ம்! பார்த்தீங்கல்ல? அவளுக்கு விருப்பமில்லையாம். நீங்க போகலாம்" என்று நறுக்குத் தெறித்தான்.


"நான் உன் அம்மா சொல்றேன் கேளுப்பா. அவளை படிக்க வைப்பா" என்று கெஞ்சலாய் சொன்னாள் அன்னை.


"ஹாஹாஹா! அம்மா… யாரு நீங்க? அதுவும் எனக்கு? போங்க பூர்ணிமா மேடம் வெளிய யாராவது கேட்டா சிரிக்கப் போறாங்க. எனக்குத் தெரிஞ்சு என் அம்மா என்னைத் தொட்டுத் தூக்கினதில்ல. பாசமா முத்தம் கொடுத்ததில்ல. மடியில வச்சு மரஞ்செடியை காட்டி சாப்பாடு ஊட்டினதில்ல. ஒழுகற மூக்கை மனமொப்பி துடைச்சதில்ல. என் சந்தோசத்துல சிரிச்சதில்ல. என் துக்கத்துல அழுததில்ல. மொத்தத்துல என் அம்மா எனக்கு அம்மாவாவே இல்ல. அப்படி இருக்கறப்ப, இப்ப வந்து அம்மான்னா? பேபி இந்த மேடம் நல்லா காமெடிப் பண்றாங்கல்ல?" என்று கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாமல் இமைகளை‌ச் சிமிட்டி சமாளித்தவன், மற்றவர் பார்வைக்கு காட்சி பொருளாகாமல் ரதியின் புறம் திரும்பிக்கொண்டான்.


அவனின் பால்ய கால கஷ்டத்தில் தான் மாலை மாலையாய் கண்ணீர் உகுத்தாள் அந்த பிள்ளை மனதுக்காரி.


அக்னிமித்ரன் அவளை கல்லூரிக்கு அனுப்ப மறுக்கிறான்; அதனால் தான் அவள் இப்போது கண்ணீர் வடிக்கிறாள் என தவறாக புரிந்துகொண்ட அனுபாமா, அவர்களின் அருகில் வந்தார்.


"ஏப்பா அக்னிமித்ரா, இதுவரை அச்சுவை பத்தி மட்டும் தான் உன் அம்மா சொல்லி கேட்டிருக்கேன். நீ உன் தாத்தா பாட்டிக்கிட்ட தான் வளர்ந்தியாமே? இருந்தாலும் பூர்ணிமா தன்னோட அன்பை காட்டாம இருந்திருக்க மாட்டா. ஒரு பெத்தத் தாயை‌ மதிக்காதவன் என்னப்பா புள்ள? இந்த உலகத்துல அம்மாவுக்கு ஈடானவ எவளும் கிடையாது. நீ கொஞ்சம் உன் அம்மா பேச்சுக்கு மரியாதை கொடு. அவ ஒரு விஷயம் செஞ்சா, அதுல அவ சுகத்தை விட உன் சுகந்தான் ஆயிரம் மடங்கு இருக்கும். ஒரு தாய்க்கு இருக்கற ஒரே சுயநலம் அவ பிள்ளைக மட்டும் தான். தயவு செஞ்சு‌ நீ உன் அம்மா பேச்சைக்கேட்டு ரதியை படிக்க வைப்பா" என்று கூறியதும்,


அவன் என்ன சொல்லப்போகிறானோ? என இதயம் இயங்கும் லப்டப் சத்தம் காதில் கேட்க, பதைபதைப்புடன் அவனையே பார்த்திருந்தாள் பூர்ணிமா.


அவளை ஓரக்கண்ணால் பார்த்தவன், எதுவும் கூறாமல் சரியென்றதோடு முடித்துக் கொண்டான்.


"பார்த்தியா பூர்ணிமா, உன் வளர்ப்பை? ஒரு தாயா நீ ஜெயிச்சிட்ட. நீ பாசம் கொட்டி வளர்த்ததனால தான் அவன் உன் பேச்சை கேட்கறான். உன்னை மாதிரி ஒரு பொறுப்புள்ள அம்மா கிடைக்க அவன் கொடுத்து வச்சிருக்கணும். பிஸினஸ் மேகசின்ல உன் பையன் போட்டோ தான் இப்போ நகர்வலம் வருதாமே? எக்ஸ்போர்ட் பிசினஸ்ல உங்க கம்பெனி தான் கொடிக்கட்டி பறக்குதாமே? என் ஹஸ்பண்ட் சொன்னாரு. உன் பையனை நினைச்சி நீ ரொம்ப பெருமை படனும். இப்படி ஒரு புத்தசாலி பையன் எனக்கில்லையேன்னு பொறாமையா இருக்கு பூர்ணிமா" என்று மனதிலிருந்து கூற, குற்றவுணர்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.


அவளுக்கு தொண்டைக்குள் ஏதோ அடைத்தது.


இதுவரை தான் சரியென்று நினைத்து செய்த தவறுகளனைத்தும் போட்டிக் போட்டுக்கொண்டு வந்து, அவளை மிரட்டின.


தான் எங்கு தாயாய் தவறினோம் என்று புரிந்து மனத்துயர் கொண்டாள்.


முதன் முதலில் அக்னிக்கு தாயாய் அவனை பார்த்தாள். அவன் தன்னிடம் எதிர்பார்த்த அனைத்தையும் காலம் கடந்து புரிந்து வருந்தினாள்.


அவன் எதிர்பார்த்த பாசம் அனைத்தையும் இப்போது தன்னால் அவனுக்கு கொடுக்க முடியுமா? என்று நினைத்து ஒரு தாயாய் தன்னையே வெறுத்தாள்.


ஆனால், இனியாவது அவனுக்கு ஒரு நல்ல தாயாய் நடக்க வேண்டுமென்கிற உறுதி அவளுள் எழுந்தது.


நெருங்கி அவன் தலை கோத முடியவில்லை எனினும், அவனை தூரத்திலிருந்தே தாய்மை பொங்க காண்பதில் பேருவகை கொண்டாள்.


தனது கண்களை திறந்து வைத்ததற்காக மகளிர் சங்கத் தலைவி அனுபாமாவின் காலில் சென்று விழுந்து எழுந்தாள்.


அச்சமயம் இரு இணைகளும் மேடையை விட்டு கீழிறங்க, தன் மகனை இப்பொழுது தான் ஈன்றது போல், பூர்ணிமா தாய்மை ஊற்றெடுக்கப் பார்த்தாள்.


"என்ன பூர்ணிமா உன் கறுப்பு பையனை அந்த பார்வைப் பார்க்கற?" என்ற கல்பனாவின் கேலியில் சுரீரென்று கோபம் வந்தது அவளுக்கு.


‘மைன்ட் யுவர் வேர்ட்ஸ் கல்பனா!’ என்று அதட்டல் போட அவள் மனம் துடித்தாலும், தற்போது அவள் தனக்கு சம்பந்தி ஆகப்போவதால்,


“ஒன்னுமில்ல கல்பனா. என் பையன்கிட்ட இருக்க எதைப் பார்த்து உன் பொண்ணு மயங்கியிருப்பான்னு யோசிச்சேன். நீயே சொல்லு, என் பையன்கிட்ட மயக்கற விஷயம் எது? அவனோட காந்தவிழியா? கார்மேகக் கருப்பா? கர்வமா? கற்பூர புத்தியா? கருத்தான பேச்சா?" என்று பாராட்டு பத்திரம் வாசிக்க, வந்த இடம் தெரியாமல் நழுவிவிட்டாள் கல்பனா.


தனித்து நின்ற பூர்ணிமாவோ இப்போது கல்பனாவிடம் கூறியது போல், இருபத்தியேழு வருடங்களுக்கு முன்பே மூன்று மாத அக்னியை பார்க்க வந்த தன் தோழிகள் அனைவரிடமும் அவனுக்கு ஆதரவாய் விட்டுக்கொடுக்காமல் பேசியிருந்தால், தன் பையனை தான் பிரிந்திருக்க நேர்ந்திராதோ? என்று யோசித்துக் கொண்டிருக்க, திடீரென அவளின் தலையில் யாரோ சுத்தியல் வைத்து அடித்தது போல் விண் விண்ணென்று தெறித்தது.


வலியில் கதி கலங்கியவளின் கண்கள் இருட்ட, சமாளித்து நின்றவள் நீரை எடுத்துப் பருகினாள். சற்று தேவலாம் போல் இருந்தது.


கடவுள் அவரவருக்குரிய தண்டனையை, காலம் கடந்தாலும் தந்தே தீருவான் என்பது பூர்ணிமாவின் விஷயத்தில் உண்மையாகுமா?



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இந்த நாவல் உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்கள் எனக்கு செய்யக்கூடிய பேருதவி ஒன்று உள்ளது பாதாம்ஹீர்ஸ். முகநூலில் நாவல் குறித்த விமர்சனப்பதிவொன்றை எழுத வேண்டும்.

முடிந்தால் உங்களுக்கு தெரிந்த‌ குடும்ப நாவல் வாசகர்களுக்கு ஸ்டோரிலிங்கை ஷேர் செய்யவும்🙂
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom