Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

Status
Not open for further replies.
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 25


அருண் அடித்து பிடித்து இரவு பணியில் இருந்த மருத்துவரை அழைத்து வந்த போது சோமசேகர் வினோத் படுத்திருந்த படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரது உடல் வலியால் துடித்து கொண்டிருந்தது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட டாக்டர் உடனே அவசர பிரிவு நர்ஸ்களை வரவழைத்தார். "ஆமாம் இவர் ஏன் டாக்டர்களின் கோட்டை போட்டிருக்கிறார்?"

"அதை பிறகு சொல்கிறேன் டாக்டர் " என்றான் அருண்ICU வில் சோமசேகர் அனுமதிக்கப்பட்ட பின்பு வெளியே அருணும் வினோத்தும் நடந்து கொண்டிருந்தனர்.வினோக் இன்னும் மம்மி வேடத்திலிருந்து வெளியே வராமல் இருந்தான்.

"முதலில் அந்த பேண்டேஜ்களை கழற்றி எறி வினோத். உன்னை பார்த்தால் பிணவறையிலிருந்து எழுந்து வந்த பிணம் போல் இருக்கிறாய்"

"ஏன் பேச மாட்டீர்கள் ? அந்த நீதிபதி டாக்டர் என்று சொல்லி கொண்டு என் அறைக்குள் வரும் முன்பாகவே நீங்கள் அவரை பிடித்திருக்கலாம். நீங்கள் யாரோ ஒரு நர்சை சைட்டடிக்க போய் விட்டீர்கள் போலிருக்கிறது" என்றபடி பேண்டேஜ் துணிகளை கழற்றினான் வினோத்.

"அபாண்டமாக என் மீது பழிபோடாதே வினோத்.நம்பைக்கிற்கு தீ வைத்து என் கவனத்தை திசை திருப்பி விட்டார் சோமசேகர் "

"என்னது? என்னுடைய பைக் எரிந்து விட்டதா? இன்னும் தவணைத் தொகையை முழுதாக கட்டி முடிக்கவில்லையே பாஸ்?"

"அப்படியானால் இன்சூரன்ஸ் காலாவதியாகி இருக்காது. நாம் பணத்தை க்ளைம் பண்ணி கொள்ளலாம். இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது"

" ஆனால் ஒரு நீதிபதி கொலைகாரனாக இருப்பார் என்பதை நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை தானே?"

"ஆமாம். நாம் அப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லை." என்றான் அருண்.

வினோத்தின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எதுவோ சத்தத்துடன் கீழே விழுந்தது.

"என்ன அது?"

"அது சோமசேகர் கொண்டு வந்த கத்தி. படுக்கையில் அவரை படுக்க வைக்கும் போது குத்தி கிழித்து விடக் கூடாது என்று எடுத்து என் பேண்ட் பாக்கெட்டில் போட்டு வைத்தேன்" என்ற வினோத் அந்த புதிய கத்தியை அருணிடம் கொடுத்தான்.

அதை தடவி பார்த்த அருண் " இந்த கத்தி ரொம்பவும் புதிதாக இருக்கிறது. அனேகமாக நேற்று தான் செய்திருப்பார் போலிருக்கிறது. நாளை காலை நீ சோமசேகரின் வீட்டிற்கு போகிறாய். அங்கே நமக்கு வேறு ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடி பார்க்க வேண்டும்"

"அது தானே பார்த்தேன். என்னடா இன்னும் வேலை சொல்லவில்லையே என்று "

"கவலைப்படாதே! இந்த வழக்கில் இது தான் உனக்கு கடைசி வேலை"

அது சரி. இவர் ஏன் தேவராஜை கொலை செய்ததை ஒப்பு கொள்ள மறுக்கிறார்?"

"அதுதான் எனக்கும் புரியவில்லை. அவர் கொலை செய்யாவிட்டால் வேறு யார் செய்திருக்க முடியும்? வயதானதால் ஏற்பட்ட ஞாபக பிசகு என்று நான் நினைக்கிறேன்"

"இப்போது பிரான்சிஸ் அன்பரசு கொலைகாரன் யார் என்று கேட்டால் யாரை சொல்வீர்கள்?"

"இப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்ய மாட்டேன் கொலைகாரனை சட்டத்திடம் தான் ஒப்படைப்பேன்."

வெளியே மெல்ல விடிந்து கொண்டிருந்தது.

ICU விலிருந்து வெளியே வந்த டாக்டர் கண்ணாடியை கழற்றியதும் வினோத் "ஆள் காலி போல " என்றான்.

"ஹீ இஸ்நோ மோர் .அவருடைய விதி முடிந்து விட்டது" என்றார் டாக்டர் .

"இட்ஸ் ஓகே டாக்டர் .போஸ்ட் மார்டம் பண்ணிட்டு பாடியை இங்கேயே வையுங்கள்" என்ற அருண் "வா ! அவருடைய வீட்டிற்கு போய் அமெரிக்கா மகளுக்கு தகவல் சொல்லலாம்" என்றான்.

" வீட்டு சாவி?" என்றான் வினோத்.

"டாக்டர் அவரிடம் சாவி எதாவது?"

"ஒரு கொத்து சாவி கிடைத்தது. இருங்கள் எடுத்து வருகிறேன்"

டாக்டர் கொடுத்த சாவியை வாங்கி கொண்டு இருவரும் ஒரு ஆட்டோவை பிடித்தனர்.

அருணுக்கு அவருடைய வீடு நன்றாக தெரியும் என்பதால் ஆட்டோவை விரட்டினான்.

ேசாமசேகர் வீட்டிற்கு முன்பாக நின்ற ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அனுப்பிய அருண் வீட்டை நெருங்கிய போது அவனது போன் அடித்தது.

"ஹலோ! அருண் ஸ்பீக்கிங் ."

"நான்பிரான்சிஸ் அன்பரசு பேசுகிறேன். கொலைகாரனை பிடித்து விட்டீர்களா?"

"அவசரப்படாதீர்கள். நான் ஒரு அவசர வேலையில் இருக்கிறேன். கிட்டத்தட்ட அவனை நெருங்கி விட்டேன். பிறகு அழைக்கிறேன்"

" உனது போனுக்காக காத்திருக்கிறேன்"

மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அருண் வீட்டு கதவை திறந்தான். இருவரும் உள்ளே நுழைந்தனர். மேசையில் கிடந்த டைரியில் அவரது மகளின் அமெரிக்க தொலைபேசி எண்கள் கிடைத்தன.

அருண் அந்த எண்ணிற்கு அழைத்தான்.

"ஹலோ. யார் பேசுவது?" என்றது பெண் குரல்.

"நீங்கள் அனிதா தானே? சோமசேகரின் மகள்?"

"ஆமாம்"

"நான் எதிர் வீட்டிலிருந்து பேசுகிறேன். உங்கள் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. மயக்கமாகி கீழே விழுந்து விட்டார். உடனடியாக இங்கே கிளம்பி வர முடியுமா?"

"நோ பார்மாலிட்டிஸ், என்னிடம்பொய் சொல்லாதீர்கள். என்அப்பாவுக்கு என்னவானது?" அவளது தைரியம் அருணுக்கு பிடித்திருந்தது. அவன் உண்மையை உடைத்து சொல்லி விட முடிவெடுத்தான்.

"அவர் நேற்று இரவு இறந்து விட்டார். உடனே கிளம்பி வாருங்கள்"

" உடனே வருகிறேன்" மறுமுனையில் வெடித்து கிளம்பிய விசும்பலுடன் போன் வைக்கப்பட்டது.

"வெளிநாட்டு வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை " என்றான் வினோத்.

இருவரும் வீட்டை சல்லடை போட்டு சலிக்கத் தொடங்கினர்.ஓன்றும் கிடைக்காமல் ஏமாந்து போய் வீட்டை சுற்றி வரும் போது தான் அந்த செட்டை பார்த்தார்கள். வீட்டின் பின்புறமாக இருந்த ஒரு கைவிடப் பட்டமெக்கானிக் செட் அது. இருவரும் அதற்குள் நுழைந்தனர். புழுதியும் ஒட்டடையும் நிறைந்த அந்த செட்டில் சமீபமாக சிலவேலைகள் நடந்த தடயங்கள் புதிதாக காணக் கிடைத்தன. கடைசல் மெசினின் கீழ் சிதறி கிடந்த இரும்பு துகள்களை பார்த்தான் வினோத்.

" நேற்று தான் இந்த கத்தியை செய்திருப்பார் போலிருக்கிறது. வேறு ஏதாவது கிடைக்கிறதா பார்? என்றான் அருண்.

சிறிது நேர தேடலுக்கு பிறகு பழைய டேபிளின் பிராயரில் அந்த நோட் புக் கிடைத்தது. அதில் கொலை செய்யப்பட்டவர்களின் போட்டோவை ஒட்டி குறுக்கே சிவப்பு மார்க்கால் பெருக்கல் குறி போட்டிருந்தார் சோமசேகர். அதை புரட்டி பார்த்த அருண் "என்னடா இதில் அந்த தேவராஜின் போட்டோவே இல்லையே?"

"எனக்கும் அது தான் புரியவில்லை?"

"தேவராஜை சோமசேகர் கொலை செய்யவில்லையென்றால் வேறு யார் செய்திருப்பார்கள்?" என்றான் வினோத் குழப்பத்துடன் ..

"எனக்கு இப்போது தான் திரை விலகுகிறது.தேவராஜை கொன்றது சோமசேகர் இல்லை"

"வேறு யார் ?"

"ஒரு புத்திசாலி" என்றான் அருண் தீர்க்கமாக . வினோத் ஓன்றும் புரியாமல் திகைத்து நின்றான்.
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 26


அந்த தனி அறையில் சைமன் கட்டில் மேல் அமர்ந்திருந்தான். அவனை சுற்றி அருணும் வினோத்தும் ரஞ்சனும் மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர். அறைக்கு வெளியே இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.

" என்ன சைமன்? உடல் நிலை இப்போது பரவாயில்லையா?" என்றான் சைமன் .

"இப்போது தேவலை."

"உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?"

" கேளுங்கள்"

" உங்களை கொலைகாரன் எந்த ஆயுதத்தால் கொலை செய்ய முயற்சித்தான்?"

"அரதப்பழசான கேள்வி. கத்தியால் தான்."

"அந்த கத்தி எங்கே?"

" கொலைகாரன் கொண்டு போய் விட்டான் என்று நினைக்கிறேன்"

"நீங்கள் உண்மையை சொல்ல வேண்டும். நன்றாக நினைவுபடுத்தி சொல்லுங்கள்"

" கத்தி தான் அங்கே கிடைக்கவில்லையே? ஓன்று அது சைமனிடம் இருக்க வேண்டும். இல்லையென்றால் கொலைகாரனிடம் இருக்க வேண்டும்" என்றார் ரஞ்சன்

"யூ ஆர் ரைட்.அந்த நுனி உடைந்த கத்தி கொலைகாரனிடம் இல்லை. அதனால் தான் இந்த கத்தியை மீண்டும் புதிதாக செய்திருக்கிறான். அவனிடம் பழைய கத்தி இருந்திருந்தால் அவன் இந்த புது கத்தியை செய்ய வேண்டிய அவசியமில்லை" என்ற அருண் சோமசேகர் கொண்டு வந்த கத்தியை ரஞ்சனிடம் கொடுத்தான்.

"அப்படியானால் அந்த கத்தி என்னிடம் இருக்கிறதென்று கூறுகிறீர்களா?"

"கண்டிப்பாக .அதை நீயே சொல்லியிருக்கிறாய்"

"நான் எப்போது சொன்னேன்?" என்றான் சைமன்பதட்டத்துடன் .

"உன்னுடைய வாக்குமூலத்தில் நீ என்ன சொல்லியிருக்கிறாய் என்று படிக்கிறேன். கேள். கொலைகாரன் மூன்று முறை என்னை கத்தியால் குத்தி காயப்படுத்திய பின்பு அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். நான் அவனை துரத்தி சென்றேன். அவன் என் தலையில் கல்லால் தாக்கிவிட்டு காணாமல் போய் விட்டான். இது தானே நீ கொடுத்த வாக்குமூலம் "

"ஆமாம்"

" இதில் மாற்றமில்லையே?"

"இல்லை"

"மூன்று கத்திகுத்து பட்ட நிராயுதபாணியான ஒருவன் கத்தியோடு ஓடும் ஒருவனை துரத்திக் கொண்டு ஓடுவானா? லாஜிக் இடிக்கிறது. அதே உன் கையில் கத்தி இருந்திருந்தால் அவன் உன்னிடமிருந்து தப்பி ஓடுவது சரியாக இருந்திருக்கும் "

"எனக்கு சரியாக எதுவும் நினைவில்லை."

"நடந்ததை நான் சொல்கிறேன். சரியாக இருக்கிறதா என்று பார் . கொலைகாரனை துரத்தும் போது உன் கையில் அந்த உடைந்த கத்தி இருந்தது உண்மை. அதை நீ எங்கேயோ ஓளித்து வைத்து விட்டு மயக்கமாகி விட்டாய். நீ மயக்கமாக மருத்துவமனையில் கிடந்ததெல்லாம் வெறும் நடிப்பு. இரவில் உன்னுடைய பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள் நீ மயக்கமாகத் தான் இருக்கிறாய் என்று அசட்டையாக இருந்த நேரத்தில் நீ அங்கிருந்து வெளியேறிவிட்டாய். அன்று இரவு உன் தொழில் கூட்டாளியான தேவராஜை அதே கத்தியால் குத்தி கொன்று விட்டாய். உன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உனக்கு கொலைகாரன் ரிசர்வ் செய்து வைத்திருந்த 9/10 என்ற எண்ணை அவன் கையில் எழுதினாய்.அதனால் ஓரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விட்டாய்.தேவராஜை கொன்ற பழியை சீரியல் கொலைகாரன் மீது போட்டு விட்டாய். அத்தோடு இந்த வழக்கிற்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை உனக்கு நடந்தது வழிப்பறி தாக்குதல் என்பதாக எல்லோரையும் நம்ப வைத்து விட்டாய். நாங்களும் அப்படி நம்பித்தான் உன்னை சந்தேகிக்காமல் இருந்தோம். சோமசேகர் செய்த புதிய கத்தி தான் உண்மையை வெளியே கொண்டு வந்தது. "

வினோத்தும் ரஞ்சனும் அருண் சொன்னதை நம்ப முடியாமல் உட்கார்ந்திருந்தனர்.

சைமன் அருண் சொன்னதை கேட்டு விகாரமாக சிரித்தான்.

"நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.தேவராஜை கொன்று விட்டால் கம்பெனி முழுவதும் எனக்கு சொந்தமாகிவிடும். அதனால் தான் அவனை நான் கொன்றேன். ஆனால் அதை உங்களால் நிருபிக்க முடியாது"

"ஏன்?"

"அந்த உடைந்த கத்தி என்னிடம் இருந்தால் நீங்கள் சொன்னதை நிருபிக்கலாம். அந்த கத்தி தான் என்னிடம் இல்லையே?"

" என்ன செய்தாய் அதை?"

"நான் சொல்ல மாட்டேன். அது இனி உங்கள் கைக்கு கிடைக்காது"

"அயோக்கியராஸ்கல்! உண்மையை சொல் " என்று அவன் சட்டையை பிடித்தார் ரஞ்சன்.

"கூல்.சரியான ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது" என்று சிரித்தான் சைமன்.

"அவனை விடுங்கள் ரஞ்சன். இவனை சோமசேகரிடமிருந்து காப்பாற்றியது பெரிய தவறு" என்றான் அருண்.

"அந்த ஆளின் முகம் மட்டும் சட்டென்று எனக்கு நினைவுக் கு வரவில்லை. அவரை கோர்ட்டில் பார்த்தது மட்டும் உடனே நினைவுக் கு வந்திருந்தால் அவர் பெயரை சொல்லி மாட்டி விட்டிருப்பேன். பாவம் செத்து போய்விட்டார்" என்று கிண்டலாக சிரித்தான் சைமன் .
"இப்போது என்ன செய்வது?" என்றார் ரஞ்சன்.

" கொலைகாரன் செத்து போய் விட்டதால் இவனுக்கு இனி போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. பாதுகாப்பை விளக்கி கொள்ளுங்கள். இவனை சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது. அதற்கு வேறு வழி இருக்கிறது" என்ற அருண் வினோத்துடன் வெளியேறினான். சற்று நேரத்தில் ரஞ்சன் பாதுகாப்பிற்கு இருந்த போலீசுடன் வெளியேறினார். அரை மணி நேரத்திற்கு பிறகு சைமன் சிட்டியடித்தபடி உல்லாசமாக வெளியேறினான். எதிர்கடையில் நின்று கொண்டிருந்த அருண் அவனை செல்போன் கேமிராவில் படம் எடுத்தான்.

பிரான்சிஸ் அன்பரசு விற்கு போன் செய்தான் அருண்.ரிங் போனதும் உடனே எடுத்த அன்பரசு " உன்னுடைய போனிற்குத் தான் வெயிட்டிங். யார் என் தம்பியை கொன்றது என்று கண்டுபிடித்து விட்டாயா?"

" கண்டுபிடித்து விட்டேன். அவன் பெயர் சைமன் .அவனது போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கிறேன். வேறு ஏதாவது தகவல் வேண்டுமா?"

" அவனது புகைப்படம் போதும். என் ஆட்கள் எங்கிருந்தாலும் தூக்கி வந்து விடுவார்கள். நான் அவனுக்கு நரகத்தை காட்டுகிறேன்"

" நல்லது " என்று போனை அணைத்த அருணைப் பார்த்த வினோத்" இது தப்பில்லையா?" என்றான்.

"வேறு வழியில்லை வினோத். சில நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாகவும் நீதி பரிபாலனம் செய்ய வேண்டியதாயிருக்கிறது" என்றபடி சைமனின் போட்டோவை வாட்ஸ்அப்பில் அன்பரசுவிற்கு அனுப்பினான்.

"நாளைக்கு பேப்பரில் ஏதாவது ஒரு மூலையில் சைமனின் போட்டோ வந்திருக்கும்.. ஒரு தீமையை அழிக்க அதை விட பெரிய தீமை தேவைப்படுகிறது.வா.கிளம்பலாம்" என்றான் அருண்.வினோத் காரில் ஏறியதும் கார் அங்கிருந்து கிளம்பியது.
முற்றும்
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom