revathy ramu
Member
- Messages
- 50
- Reaction score
- 56
- Points
- 18
அத்தியாயம் 26
ஒரு மணி நேரத்தில் வீட்டை அடைந்தவுடன் வீட்டின் வெளியிலேயே அவளுடைய தந்தை நின்றிருந்தார். அவளுடைய காலில் கட்டை பார்த்ததும், என்னம்மா ஆச்சு? பெரிய அடியா? என்று பரபரப்பாய் கேட்கவும், ஒண்ணுமில்லை அப்பா என்று கூறிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். அங்கு இவள் வரவை எதிர்பார்த்து அவளுடைய அண்ணனும் அண்ணியும் என்ன நடந்தது என்று கேட்க, அவள் அங்கு நடந்ததை முழுவதுமாக விவரித்தாள். கேட்டவர்கள் கண்களில் பயம் தெளிவாக தெரிந்தது. வாசுதேவன், நீ சாலையின் நடுவில் நடந்து போனியா? இல்லை அண்ணா, நடைமேடை ஓரமாகத்தான் நடந்து சென்றேன். அதனால் தான் கயல் என்னை வேகமாக பிடித்து இழுத்த போது நடைமேடையின் விளிம்பு பட்டு அடிப்பட்டது. லாரி ஓட்டுபவன் குடித்திருப்பான் என்று நினைக்கிறேன். சென்னையில் இப்போது ஒரே லாரி தொல்லைதான். போக்குவரத்து நெரிசல் ஆவது இவர்களால் தான் என்று லாரி ஓட்டுபவர்களை திட்ட தொடங்கினார். சரி விடுங்க! பத்திரமாக திரும்பி வந்துட்டா, அதுவே பெரிய விஷயம் என்று பார்வதி ஆறுதல் கூறினாள். நான் உனக்கு ஒரு நல்ல விஷயம் சொல்லலாம் என்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக கிளம்பினேன். அதற்குள் இந்த அசம்பாவிதம் நடந்திடுச்சி என்று வருத்தத்துடன் தமக்கையை பார்க்க, என்ன அண்ணா என்ன விஷயம் என்று ஆவலுடன் துர்கா கேட்டாள். உன்னை CA படிக்க வைக்க ஒரு நல்ல இன்ஸ்டிடியூடில் சேர்பதற்க்காக என் நண்பனிடம் விசாரித்தேன். அவன் மைலாப்பூரில் நல்ல இன்ஸ்டிடியூட் ஒன்று இருப்பதாக கூறினான். நீ CA நுழைவு தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் அதில் சேரலாம் என்றும் கூறினான். அவனும் அங்கு தான் படித்தானாம். CA தேர்வில் வெற்றி பெற அங்கு நல்ல பயிற்ச்சி அளிக்கிறார்களாம். இந்த விஷயத்தை சொல்லி உன்னை சந்தோஷப்படுத்தலாம் என்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாக கிளம்பினால் அதற்குள் உன் போன் வந்தது என்று சொல்லி முடிக்கவும், துர்காவிற்கு சந்தோஷமாக இருந்தது. ரொம்ப நன்றி அண்ணா என்று கூறி கொண்டு அவனை பார்த்து சிரித்தாள். இதுக்கெல்லாம் யாராவது நன்றி சொல்லுவார்களா? நீ நல்லா படித்து பெரிய தணிக்கையாளர் ஆன எனக்கு தானே பெருமை என்று அவன் அவளை உற்சாகப்படுத்தினான். அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் துர்கா தூங்க போனாள். அவளுக்கு தூக்கமே வரவில்லை, ஒரே சிந்தனையாக இருந்தது. எப்படியாவது அந்த இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து நன்றாக படிக்க வேண்டும். ஆனால் மைலாப்பூரில் இருந்து நாம் வேலை செய்யும் அலுவலகத்திற்கு வர தாமதம் ஆகும், என்ன சொல்லி சமாளிப்பது? மயிலாப்பூர் அருகிலேயே வேறு வேலை தான் தேட வேண்டும் அப்போதுதான் படிக்கவும் முடியும் வேலை செய்யவும் முடியும் என்று எண்ணியவளாக தூங்கி போனாள்.
சாம்சன் வீட்டில் அன்று ஒரே அமளி துமளியாக இருந்தது. அன்றைக்குத்தான் கயலை பொண்ணு கேட்டு அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும். அப்படியே நிச்சயமும் செய்திடலாம் என இரு வீட்டாரும் முடிவெடுக்க, ரெபேக்கா அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாய் செய்துக் கொண்டிருந்தாள். மாலை நான்கு மணி ஆனதும் சாம்சன் வேன் ஒன்றை வரவழைக்க, அதில் சாம்சன் அவனின் தங்கை, மற்றும் அவனின் பெற்றோர்கள், வேறு சில உறவினர்களும் ஏறி அமர்ந்தனர். நிச்சயத்துக்கு தேவையான பொருள்களும் ஏற்றி, கயலின் வீட்டை அடைந்தனர்.
கயலின் வீட்டில் கயலின் தம்பி ராகேஷ் இங்கும் அங்குமாக போய் கொண்டு அம்மா ஏவிய வேலைகளை எல்லாம் செய்துக் கொண்டிருந்தான். கயல் தன்னை எளிமையாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அவளின் முகம் முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தது. அவள் இவ்வளவு விரைவாக இந்த திருமணம் நிச்சயமாகும் என்று நினைக்கவில்லை. அவளின் தந்தையின் முகம் இறுக்கமாக இருப்பதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓரே பெண்ணின் நிச்சயம் இன்னும் சில மணி நேரத்தில் நடை பெற போகிறது, இவர் ஏன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றாலும் பெண்ணுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காகவாவது கொஞ்சம் சிரித்த முகத்துடன் இருக்கலாம் என்று நினைக்கையிலேயே அவள் முகம் சுருங்கியது. வீட்டிலேயே நிச்சயம் செய்வதால் உறவினர்களை யாரும் அழைக்கவில்லை. திருமணத்திற்கு அழைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்கள். எனினும் வாஸந்தி மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவோருக்கு சாப்பிட உணவுகளை தயாரித்துக் கொண்டிருந்தாள். எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருந்தார் கமலநாதன்.
வண்டி சத்தம் கேட்டதும், ராகேஷ் ஓடி வந்து பார்த்து விட்டு உள்ளே சென்று அம்மா அவங்க எல்லோரும் வந்துட்டாங்க! என்று அறிவிக்க, சமையல் அறையில் இருந்து வெளியே வந்த வாஸந்தி வாங்க! வாங்க! என்று அழைத்தாள்,கமலநாதனும் வாங்க என்று அழைத்து விட்டு அமர வைத்தார். கமலநாதன், ஜேக்கப், சாம்சன் நாற்காலியில் அமர மற்ற அனைவரும் தரையில் விரிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்தனர். ஜேக்கப் முதலில் பேச ஆரம்பித்தார். உங்க பெண்ணை எங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. என் பிள்ளையையும் உங்களுக்கு போக போக பிடிக்கும். என் பிள்ளை உங்ககிட்ட இருந்து எந்த சீரும் வேணாம் என்கிறான். கயல் எங்க வீட்டிற்கு வந்த பிறகு அவள் எங்கள் வீட்டு பெண்ணல்லவா! அதனால் உங்கள் பெண்ணை மட்டும் அனுப்பினால் போதும் என்று முடித்தார். இதற்கு கமலநாதன் ஒன்றும் கூறாமல் இருக்கவே, வாஸந்தி பேச தொடங்கினாள். அதெப்படிங்க நாங்க எங்க பெண்ணை அப்படியே உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பது? எங்களால் முடிந்ததை அவளுக்கு செய்து தான் அனுப்புவோம் என்று கூற, உங்கள் பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டுமா அதை நீங்கள் தாராளமாக அவளுக்கு செய்யுங்கள். ஆனால் எங்கள் பிள்ளைக்கு எதுவும் வேண்டாம் என்று அவன் தெளிவாக சொல்லிவிட்டான். இது உங்கள் மீது கோபம் என்பது இல்லை. அவனுக்கு உண்மையாகவே வரதட்சணை, சீர் எல்லாம் பிடிக்காது என்று கூறியதும் வாஸந்தி, அதெப்படி மாப்பிள்ளைக்கு ஒன்றும் செய்யாமல் இருப்பது?, ஏதோ எங்களால் முடிந்த சீர் செய்யாமல் இருந்தால் நல்லாயிருக்குமா? என்று கேட்க, சாம்சன் இடைமறித்து, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அத்தை! உங்கள் பெண்ணே எனக்கு நீங்கள் கொடுக்கும் பெரிய சீர் தயவு செய்து இதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் எனக் கூறவே வாஸந்திக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. பரவாயில்லை, பணத்திற்காக இந்த பிள்ளை நம் பெண்ணை காதலிக்கவில்லை, எனவே கயலை நன்றாக வைத்துக் கொள்வான் என்ற எண்ணம் தோன்றியது.
பின்னர் ஜேக்கப் பேச தொடங்கினார், முதலில் நீங்கள் உங்கள் முறைப்படி திருமணம் செய்யுங்கள். கயல் எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு நாங்கள் ஒரு சின்ன விருந்து வைத்து எங்கள் முறைப்படி திருமணம் செய்கிறோம். இதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபணை உண்டா? எனக் கேட்கவும், வாஸந்தி இல்லை என்று தலையாட்டினாள். பின் ஜேக்கப் நீங்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், தங்கள் கணவர் எதுவுமே பேசவில்லையே என்று சட்டென்று கேட்டுவிட்டார். அதை கேட்டதும் கமலநாதர், நீங்கள் சொன்ன அனைத்துக்கும் சம்மதம் என்ற சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் கயலை அவள் அம்மா அழைத்து வர, கயல் அங்கு வந்து அனைவரையும் நமஸ்கரித்தாள். அவளை பார்க்க தேவலோகத்து பெண்ணே அங்கு இறங்கி வந்தது போல் இருந்தது. சிவப்பு வண்ண மெலிதாக கரையிட்ட பட்டு புடவையும் அதற்கு தோதான அணிகலன்களும் அவளை தேவதை போல் காட்டியது. சாம்சனுக்கு பிரிட்ஜ்ஜில் வைத்த ஆப்பிள் போல் இருக்கிறாளே, இவளை அப்படியே கட்டி அணைத்தால் என்ன என்று மனதிற்குள் எழுந்த ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான். பின் வாஸந்தி ஏற்பாடு பண்ண ஐயர் நித்சயதார்த்த பத்திரிகையை படித்தார், திருமண நாள் அடுத்த மாதத்தில் ஒரு முகூர்த்த நாளை சொல்ல, இருவரும் தட்டை மாற்றிக் கொண்டனர். பின் கேசரி, பஜ்ஜி, சொஜ்ஜி பரிமாறப்பட்டது. ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.
கமலநாதன் அவர்கள் கிளம்பி செல்லும் வரை எதுவும் பேசாமல் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இறுகிய பாறை போல் அமர்ந்திருந்தார். அவருக்கு தன் ஒரே பெண்ணுக்கு எப்படி எல்லாம் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கனவு தவிடு பொடியாகிவிட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனதிலே மருகிக் கொண்டிருந்தார்.
அப்பாவின் முகத்தை பார்க்க முடியாத கயல் அவரிடத்தில் வந்தார். என்னப்பா? இந்த கல்யாணம் உங்களுக்கு கொஞ்சம் கூட புடிக்கலயா? நீங்க இப்படி இருப்பது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு அப்பா, சாம்சன் ரொம்ப நல்லவர் அப்பா. கண்டிப்பாக அவர் வாழ்க்கையில் பெரிய நிலையை அடைவார் அப்பா. உங்களுக்கு இன்னும் என்மேல் கோபம் இருந்தால் சொல்லுங்க, நான் இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன். எனக்கு நீங்கள் , அம்மா போதும் அப்பா. காலம் முழுதுவதும் உங்களுடனேயே இருந்து விடுகிறேன் என்று அவள் கண்ணீர் மல்க கூறியதை கேட்ட கமலநாதனுக்கு மனது கனத்தது, அவளிடத்தில் வந்து அவளை அரவணைத்து, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது குட்டி. நீ திருமணமாகி குழந்தைகளை பெற்று வாழ் வாங்கு வாழ வேண்டும்.அதை நங்கள் பார்த்து பூரிப்படையவேண்டும். நான் நினைத்த மாதிரி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியவில்லை என்ற ஆதங்கம் தான். வேறொன்றும் இல்லையம்மா, புதுப்பெண் அழலாமா? கண்ணை துடைத்துக் கொள் என்று அவள் முதுகை தட்டிக் கொடுக்க, கயல் தந்தையின் அரவணைப்பில் அக மகிழ்ந்தாள்.
சுஹேல் மறுநாள் துர்காவின் அலுவலகத்திற்கு போன் செய்தார். துர்கா போனை எடுத்தவுடன், என்ன துர்கா நேற்று தேர்வு எழுதிவிட்டு எனக்கு எப்படி எழுதினாய் என்று போன் செய்து சொல்ல சொன்னேனே? ஏன் போன் பண்ணவில்லை? சுஹேல், நான் உங்களுக்கு மாலை ஆறு மணிக்கு போன் செய்தேன், நீங்கள் ஆபரேஷன் தியேட்டரில் இருப்பதாக உங்கள் வரவேற்பாளர் சொன்னார். அதன் பிறகு எனக்கு வீட்டிற்கு செல்ல நேரமாகிவிட்டதால் திரும்ப உங்களுக்கு போன் பண்ண முடியவில்லை. உன்னுடைய தேர்வு நான்கு மணிக்கே முடிந்து இருக்குமே, ஆறு மணிவரை அங்கு என்ன செய்தாய் என சுஹேல் வினவ, நீங்கள் கயலை பார்க்கவில்லையா, அவள் உங்களிடத்தில் ஒன்னும் சொல்லலை? என துர்கா கேட்கவும், அவள் இன்னைக்கு மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்திருக்கிறாள்.அவளுக்கு இன்றைக்கு திருமணம் நிச்சயம் பண்ண போவதாக சொல்லிருந்தாள். ஆமாம், கயலை ஏன் கேட்கிறாய்? அவளுக்கும் நான் கேட்டதற்கும் என்ன சம்பந்தம்? நேற்று ஒரு லாரி என்னை மோத வந்த போது கயல்தான் என்னை காப்பாற்றினாள். இதை கேட்டதும் சுஹேல் உடனே அதிர்ந்து என்ன துர்கா? சாலையில் கவனம் தேவை இல்லையா? ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று நடந்தால் என்ன செய்வது? என கடிந்துக் கொள்ள, நான் நடைமேடை ஓரமாக தான் நடந்து சென்றேன். அவன் ஏன் ஓரமாக நடந்து சென்ற என்னை இடிக்க பார்த்தான் என்று தெரியவில்லை. லாரிக்காரனை பார்த்தாயா? அல்லது நம்பர் பிளேடையாவது கவனித்தாயா? என சுஹேல் வினவ, இல்லை சுஹேல், கயல் என்னை அவள் புறமாக இழுத்ததால் என்னால் எதுவும் பார்க்க முடியவில்லை. கயலும் என்னை காபாற்றும் அவசரத்தில் எதையுமே கவனிக்கவில்லை என்று கூறியவுடன், நல்ல வேளை அல்லா கிருபையால் தப்பித்தாய். இனிமேலாவது சாலையில் செல்லும்போது கவனமாக செல் துர்கா, இந்த லிட்டில் கேர்ள் இல்லையென்றால் இந்த சுஹேல் பாய் இல்லை என கூறியதை கேட்ட துர்கா புன்னகை புரிந்தாள் என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் இவன், திருமணம் முடிந்த பின்பு இவன் மனம் கோணாமல் நடந்துக்க கொள்ள வேண்டும். அது ஒன்று தான் இவன் நம் மேல் வைத்த அன்புக்கு நாம் காட்டும் நன்றி என்று மனதில் நினைத்தவளாக, சரி சுஹேல்! கயலுக்கு என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் என கூற. அதெல்லாம் இருக்கட்டும், நீ எப்படி தேர்வு எழுதினாய் என்று சொல்லவேயில்லையே?முடிந்தளவுக்கு நன்றாக எழுதினேன். கண்டிப்பாக பாஸ் பண்ணிவிடுவேன் என சந்தோஷமாக கூற, வெரி குட் . இப்படியே எல்ல தேர்வையும் தன்னம்பிக்கையோடு எழுதினால் கண்டிப்பாக சீக்கிரமாக படிப்பை முடித்து விடலாம் என கூற துர்காவும் ஆமோதித்தாள். துர்கா போனை வைத்தவுடன் சுஹேலின் மனம் துர்கா சொன்னதையே அசைபோட்டது, சாலை ஓரம் போய்க்கொண்டிருந்த பெண்ணை ஏன் இடிக்க வந்தான்? இது தற்செயலாக நடந்ததா? அல்லது வேண்டுமென்றே இடிக்க வந்தானா? என பலவாறு சிந்தவாறே தன் வேலையை தொடர்ந்தான்.
Last edited by a moderator: