- Messages
- 50
- Reaction score
- 56
- Points
- 18
அத்தியாயம் 40
கயலும் ரேச்சலும் காவல் நிலையம் அடைந்த போது மணி பத்தரையை நெருங்கி இருந்தது, அங்கு இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்தனர். அதில் ஒருத்தர் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி கொண்டிருந்தார். கயல் சென்று விழித்து கொண்டிருந்த காவலரிடம் விஷயத்தை கூற, அவர் இந்நேரத்திற்கு மருத்துவமனை எல்லாம் சென்று விசாரிக்க முடியாதும்மா. இப்போது இங்கு உயர் அதிகாரியும் இல்லை. நீ புகார் கொடுத்து விட்டு போனால் நாளை காலையில் விசாரிக்கிறோம் என்று கூறவே கயலுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்ன சார்? ஒரு குழந்தையை கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று சொல்கிறோம். நீங்கள் என்னவென்றால் நாளை விசாரிப்பதாக சொல்கிறீர்கள். அதுவரைக்கும் அந்த குழந்தைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று கூற, என்னால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாதும்மா. நாளைக்கு தான் உயர் அதிகாரி வருவார், நீ நாளை வந்து பார். இப்பொது இங்கிருந்து கிளம்புங்கள் என்று கூறி அவர் தன் வேலையை பார்க்க தொடங்கினார். ரேச்சலும் டாக்டர் நாம் நாளை வரலாம். இனிமேலே இங்கு இருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறவும் கயலும் சரி ரேச்சல் நீயும் குழந்தையும் இன்று இரவு என் வீட்டில் தங்கி விடுங்கள். நாளை காலை நாம் காவல் நிலையம் செல்லலாம் என்று கூற, ரேச்சலும் சம்மதிக்கவே அனைவரும் கயலின் வீட்டிற்கு சென்றனர்.
ஒரு குழந்தையுடன் காரை ஓட்டிய அந்த இருவரில் ஒருவன் "என்னடா இன்னொரு குழந்தையை கண்டு பிடிக்கவே முடியவில்லை. அந்த நர்ஸ் எங்கு கொண்டு போனாள் என்றே தெரியவில்லை. இருட்டில் அவள் முகம் கூட சரியாக பார்க்கவில்லை. அந்த தொலைந்து போன குழந்தை எங்கேன்னு கேட்டா என்னடா பதில் சொல்லறது? நடந்ததை சொல்லவேண்டியது தான். நாம் என்ன அந்த நர்ஸ் குழந்தையை தூக்கி கொண்டு போகும் என்று எதிர்பார்த்தோமா? எல்லாம் ஐயா பாத்துப்பார் என அவன் தைரியம் கூறினான். கார் ஓ.ம்.ஆர் சாலையில் சென்று அங்கிருக்கும் ஒரு பெரிய பங்களா முன் நின்றது. கார் சத்தத்தை கேட்டு உள்ளிருந்து ஒருவன் வர, அவன் இவர்களிடம் என்னடா ஆச்சு? ஏன் இவ்வளவு நேரம்? ஐயா உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கார் என்று சொல்ல , மூவரும் உள்ளே விரைந்தனர். அங்கு அந்த மருத்துவரின் பெண்ணை வாயில் துணி அடைத்து ஒரு புறமாக கட்டி போட்டிருந்தனர். அந்த சிறுமிக்கு சுமார் பத்து வயது இருக்கும். பயத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது. உடல் நடு நடுங்க மிகவும் பயந்து காணப்பட்டாள். அங்கு ஒரு சோபாவில் ஒய்யாரமாக உமர் அலி உட்கார்ந்திருந்தார். அவருடைய இரு பக்கமும் இருவர் நின்று இருந்தனர். இவர்கள் உள்ளே நுழைந்ததும் கையில் இருக்கும் ஒரு குழந்தையை பார்த்து, என்னடா ஒரு குழந்தை மட்டும் இருக்கு, இன்னொரு குழந்தை எங்கே என்று கேட்க, அது வந்து ஐயா என்று முதலில் இழுத்து பின் நடந்ததை கூறினான், அதைக் கேட்ட உமர் அலிக்கு கோபம் பொங்கியது. ஏன்டா? ஒருத்தனும் ஒரு வேலையை கொடுத்தா ஒழுங்காக செய்யமாட்டீங்களாடா! தடி பசங்களா! உங்களை எல்லாம் வச்சிக்கிட்டு நான் மேய்ப்பதற்கு பதிலா ஆடு மாடுகளை மேச்சா கூட அதுகள் எனக்கு பலன் கொடுத்திருக்கும். முட்டாள் ! அந்த நர்ஸ் போயி காவல் அதிகாரியிடம் சொன்னா நான் மறுபடியும் கம்பி என்ன வேண்டியதுதான் என்று கூறி அந்த மருத்துவமனைக்கு போன் செய்து அங்கிருப்பவரிடம் சிலதை செய்யுமாறு கூறி போனை வைத்தார். அந்த இரு அடியாட்களும் தலை குனித்துக் கொண்டு மௌனமாக நின்று இருந்தனர். இந்த குழந்தையை சாகடிக்க வேண்டாம். அப்புறம் எங்க குடும்பத்திற்கு அந்த பழி வந்து விடும். ஏதாவது அனாதை ஆசிரமத்தில் யாரும் பார்க்காத போது இந்த குழந்தையை போட்டிட்டு வந்துருங்க. இதையாவது ஒழுங்காக செய்வீங்களா? என்று கேட்க, அவர்கள் இருவரும் சரி ஐயா என்று தலையாடினார்கள். இந்த பொண்ணையும் அவர்கள் வீட்டில் விட்டுருங்க. இந்த பொண்ணும் அவங்க அம்மாவும் நாளைக்கே ஊரு விட்டு கிளம்பிடனும்னு அந்த பொண்ணுகிட்ட சொல்லி விடுங்க என்று கட்டளை பிறப்பித்தார்.எனக்கு நாளைக்கு காலையிலேயே ஊருக்கு திரும்பணும். அதுக்குள்ளே இந்த வேலையை முடிச்சிட்டு வாங்க என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார். துர்கா மயக்கம் தெளிந்தவுடன் தன் அருகில் பார்த்தாள். குழந்தையை காணவில்லை. எங்கே என் குழந்தைகள்? ஒரு வேளை சுத்தப்படுத்த எடுத்துக் கொண்டு போயிருப்பார்களோ? என்று எண்ணியவளாக கண்களை சுழற்றினாள். அவள் அருகில் பார்வதி நின்று கொண்டிருந்தாள். அவளிடம் துர்கா, "எங்கே என் குழந்தைகள்?" என மெல்லிய குரலில் கேட்க, பார்வதிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கடவுளே! இந்த பெண்ணிற்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? நான் பதில் சொன்னால் இவளால் தாங்கி கொள்ள முடியுமா?என மனதிற்குள் கலங்கியவளாக, துர்கா இப்ப எப்படி இருக்கும்மா? என்று வினவ துர்கா பரவாயில்லை அண்ணி என்று சோர்வாக சொன்னாள். நீ ரொம்ப களைப்பா இருக்கே! அப்படியே கண் மூடி கொஞ்ச நேரம் தூங்கு என சொல்ல, துர்கா மீண்டும் என் குழந்தைகள் எங்கே என்று கேட்டாள். பார்வதியால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது. அதைக் பார்த்த துர்கா என்ன அண்ணி??என்ன ஆச்சு? என் குழந்தைகள் எங்கே ? என்று மீண்டும் பதறியவளாக அண்ணியின் முகத்தை பார்க்க, அப்போது அங்கே செவிலியர் வந்தார். என்ன துர்கா மயக்கம் தெளிந்திடுச்சா? என்று இப்போ எப்படி இருக்கு? என்று நாடியை தொட்டு பார்த்துக் கேட்க, கண்களில் பயம் தெரிய துர்கா அவளிடம் என் குழந்தைகளை குளிப்பாட்ட எடுத்து கொண்டு போய் இருக்கீங்களா? என்று பாவமாய் கேட்டாள். அந்த செவிலியருக்கு தன்னுடைய பணியில் இது போல் அனுபவம் இருந்ததால் அவள் துர்காவிடம் உடனே பதில் கூறாமல். "நீ ஒன்றும் கவலைப்படாதே! எல்லாம் சரியாகிவிடும் என்று கூற, துர்காவிற்கு ஒன்றுமே புரியாமல், நான் ஒன்று கேட்டால் நீங்க வேற ஒன்னு சொல்றீங்களே! என்று அப்பாவியாய் சொல்ல, அந்த செவிலியர் உன் குழந்தைகள் பிறந்தவுடனே இறந்து போய்டுச்சும்மா! என்று சொன்னது தான் தாமதம் துர்கா இல்லை நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்! என் குழந்தைகளை என்னிடம் தந்து விடுங்கள் என்று கத்திக் கொண்டே மூர்ச்சையானாள்.
சுஹேல் சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும் அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. இன்னும் சில மணி நேரத்தில் துர்காவை பார்க்க போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் சந்தோஷத்தை ஏற்படுத்தியது . செக்கிங் முடிந்து தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து டாக்ஸி ஒன்றை பிடித்து தன்னுடைய மாமா வீட்டிற்கு வந்தான். கதவை தட்டியதும் அனீஸ் தான் வந்து கதவை திறந்தாள். ஏனோ அவள் முகத்தில் புன்னகை சிறிதும் இல்லை. அவளை பார்த்து சுஹேல். "ஏ வாலு, இப்போதான் தூங்கி எழுந்தியா?" நான் உன் தூக்கத்தை கலைச்சிட்டேனோ? என்று அவன் கிண்டல் அடிக்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை சுஹேல், உள்ளே வா! குளிச்சிட்டு வா! நான் டிபன் ரெடி பன்றேன் என்று மெல்லிய குரலில் கூற, என்ன அனீஸ்! உனக்கு திருமணம் முடிவான பிறகு ரொம்ப அமைதி ஆயிட்டியா? நான் பார்த்த அனீஸ் வேறு, இப்போ பார்க்கிற அனீஸ் வேற மாதிரி இருக்கே! என்று கூறி கலகலவென சிரித்தான். அனீஸ் எந்த பதிலும் கூறாமல் மௌனமாக தன் வேலையை பார்க்கலானாள். சுஹேல் மாமி எங்கே போய் இருக்காங்க? என்று வினவ, அதற்கு மேல் அனீஸால் பதில் பேசாமல் இருக்க முடியவில்லை. துர்காவிற்கு பிரசவம் ஆயிடுச்சி, அதனாலே உம்மா அங்கே தான் இருக்காங்க என்று கூற, சுஹேல் முகத்தில் பளிச்சென மின்னல் தோன்றியது. என்ன குழந்தை பிறந்திடுச்சா! இதை தானே முதலில் சொல்லணும். லூசு! என்ன குழந்தைகள் அனீஸ்? துர்கா எப்படி இருக்கா? என கேள்வி மேல் கேள்வி கேட்க, அனீஸால் அழுகையை அடக்க முடியவில்லை. அவள் அவனை பார்த்து கண்ணீர் சிந்தியபடி குழந்தைகள் இறந்து போய்விட்டனவாம் சுஹேல் என்று கூறி அழுதாள்.அவளால் தன் தோழியின் துன்பத்தை தாங்கி கொள்ள முடியவில்லை. சுஹேலால் நம்பவே முடியவில்லை. என்னது குழந்தைகள் இறந்து விட்டனவா! போன மாதம் துர்காவை பரிசோதித்த மருத்துவர் குழந்தைகள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதாக துர்கா கூறினாளே! என்னாச்சு? என்று இருக்கமான முகத்துடன் வினவ, தெரியல சுஹேல். குழந்தைகள் பிறந்தவுடன் அழும் சத்தம் கூட கேட்டது என்று சொன்னார்கள். பிறகு எதனால் இறந்தது என்று தெரியவில்லை என்று அவள் சொல்லிக்கொண்டே இருக்கும்போதே என்ன மருத்துவமனை என்று பேரும் முகவரியும் கேட்டுக் கொண்டே கிளம்ப, அனீஸ் இப்ப தானே வந்தே, பிரெஷ் பண்ணிட்டு சாப்பிட்டு போ என்று கூற, எனக்கு பசி இல்லை அனீஸ், நான் உடனே துர்காவை பார்க்கணும், அவ பாவம் மனசு உடைஞ்சு போயிருப்பா என்று கூறிக்கொண்டே அவசரமாக கிளம்பினான். இவனுக்குதான் துர்கா மீது எவ்வளவு பாசம் என்று எண்ணிக்கொண்டே அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் அனீஸ்.