Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

அத்தியாயம் 21



சுஹேலும் அவன் தந்தையும் வீட்டை அடைந்தவுடன், அங்கு அவன் உம்மா ஜரீனா இவர்களுக்காக காத்திருந்தாள். சுஹேலை கண்டதும், மலர்ந்த முகத்துடன் வாப்பா ! எப்படி இருக்கே? என்று அன்பொழுக கேட்டாள். அவனும் அன்னையை பார்த்தவுடன் சந்தோஷமாக, நல்லா இருக்கேம்மா! நீங்க எப்படி இருக்கீங்க?என்று கேட்க, எனக்கென்னப்பா நான் நல்லா இருக்கேன், நீ போய் குளிச்சிட்டு வா! சாப்பிடலாம், உனக்கு பிடிச்ச உணவு வகைகளை சமைத்து வைத்திருக்கிறேன், என்று அவனை குளிக்க அனுப்பி விட்டு கணவனின் முகத்தை பார்த்தாள். அவர் முகம் எதையும் பிரதிபலிக்கவில்லை. எனவே அவளாக அவரிடம் பேச்சு கொடுத்தாள்.



"என் பையன் நீங்க கூப்பிட்டதும் வந்துட்டானா? , "அவன் எங்கே அவனா வந்தான்? நான் அல்லவா அவனை வலுக்கட்டாயமாக இங்கு அழைத்து வந்தேன் என்று உசைன் கூறவும், ஜரீனாவின் முகம் சுருங்கியது. நீங்க கூப்பிட்டவுடனே வர மாட்டேன்னு சொல்லிட்டானா? நீங்க அவனை ரொம்ப வைதீகளா? என்று பதட்டத்துடன் கேட்டாள். அவன், மருத்துவமனையில் நிறைய வேலை இருக்கிறது, வர முடியாது என்று தான் முதலில் சொன்னான், நான் தான் நீ வரலைனா இனிமேல் நான் வர மாட்டேன், "நாங்க செத்து போயிட்டதா நினைச்சிக்க", என்று அவனை பயமுறுத்தி கூட்டி வந்தேன் என்று கூறியவுடன் ஜரீனாவுக்கு மனம் மிகவும் சங்கடப்பட்டது, அல்லா! இதைக் கேட்டு அவன் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? இவருக்கு அன்பாக பேச தெரியவில்லையானாலும் பரவாயில்லை, அனுசரணையாகவாவது பேசலாம் இல்லையா? இப்படியா பேசுவது? புள்ள மனசை வேதனை படுத்துனோனே இப்படி பேசறாரு, புத்தி கெட்ட மனுஷன்! என்று ,மனதிற்குள் திட்டியவாறே அங்கிருந்து அகன்றாள். சுஹேலும் அவன் தந்தையும் குளித்துவிட்டு வந்தவுடன், எல்லோரும் சேர்ந்து உணவு சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும், சுஹேல், உம்மா! எனக்கு கொஞ்சம் பயண களைப்பா இருக்கு. நான் போய் சற்று நேரம் என் அறையில் ஓய்வெடுக்கிறேன்,என்று தன் அறையை நோக்கி சென்றான்.



அறையில் படுத்ததும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. துர்காவின் நினைப்பாகவே இருந்தது. இப்போது போல் அப்போது அலைபேசி இல்லாத காலம். துர்காவிடம் எப்படி பேசுவது என்று யோசித்தான், வீட்டில் தொலைபேசி இருந்தாலும் வீட்டில் பேசுவது முடியாத காரியம். ஆதலால் வெளியில் சென்று தொலைபேசி பூத்தில் STD கால் போட்டு தான் பேசவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியவனாக அப்படியே தூங்கி போனான். ஜரீனாவும், உசைனும் ஹாலில் அமர்ந்திருக்க, கதவு தட்டும் ஓசை கேட்டது. ஜரீனா எழுந்து போய் கதவை திறக்க. அங்கு தபால்காரன் நின்னிறுந்தான். அம்மா! உசைன் என்ற பெயருக்கு பதிவு தபால் வந்திருக்கு, அவரை கூப்பிடுங்க, கையெழுத்து போடணும் என்று அவன் ஹிந்தி மொழியில் கூற, ஜரீனா உசைனை கூப்பிட்டு விஷயத்தை சொன்னாள். உசைன் சென்று கையெழுத்து போட்டு தபாலை வாங்கி கொண்டார். அனுப்புனர் முகவரியை பார்த்தபோது, உமர் அலியின் பெயரும் முகவரியும் போடப்பட்டிருந்தது. உசைன் அதை பார்த்தவுடன் பரபரப்பாக கவரை பிரித்தார், அதில் ஒரு கடிதமும் புகைப்படமும் இருந்தது. படத்தில் துர்காவும், சுஹேலும் அருகருகே அமர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். உசைன் துர்காவை புகைப்படத்தில் பார்த்ததும், நேற்று அவளை நேராக பார்த்தது நினைவுக்கு வர, இந்த பெண்ணா? பார்க்க ரொம்ப அமைதியாய் தெரிந்தாளே! என்று அதிர்ச்சியுடன் நின்றார். பிறகு கடிதத்தை படிக்க ஆரம்பித்தார். கடிதத்தில்,



உசைன் அவர்களுக்கு,



உமர் எழுதுவது, நான் தொலைபேசியில் பேசியது போலவே உன் மகனும் ஒரு பெண்ணும் அருகருகே அமர்ந்து கொஞ்சிக் கொண்டு இருந்த புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். இதை விட ஆதாரம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். நான் இப்போதும் உங்கள் பிள்ளைக்கு என் பெண்ணை நிஹ்ஹா செய்து தர சித்தமாய் உள்ளேன், இந்த விஷயத்தை நான் பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை, இது வெறும் வயசு கோளாறு தான், போக போக சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். தங்களின் சம்மதத்தை தொலைபேசியில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்,



இப்படிக்கு,



உமர் அலி.



என்று ஹிந்தியில் எழுதி இருந்தது. உசைன் அந்த கடிதத்தையும், புகைப்படத்தையும் ஜரீனாவிடம் காட்ட, அவள் அதிர்ந்து போனாள். என் பிள்ளை அப்படி இல்லங்க! இவர் ஏதோ தப்பா எழுதி இருக்காரு, ஒரு வேளை அவன் மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் சேர்ந்து வெளியே போய் இருப்பாங்க. அதை இவங்க தப்பா புகைப்படம் எடுத்து இருக்காங்க, என்று தன் ஆற்றாமையை கூறினாள் ஜரீனா.



உசைன் உடனே, நேற்று தான் நான் இந்த பெண்ணை பாத்திமா வீட்டில் பார்த்தேன். பாத்திமாவின் பக்கத்துக்கு வீட்டில் தான் இருக்கிறாள் என்று அவர் மேலும் சில தகவல்களை கூறியபோது ஜரீனாவுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் யோசித்த பின், அவன்கிட்ட கொஞ்சம் தன்மையாக பேசுங்க! என்ன விவரம் என்று முதலில் கேட்டு விட்டு அவன் என்ன சொல்கிறான் என்று தெரிந்துக் கொண்டு பிறகு பேசுங்க! என்று ஜரீனா கெஞ்சும் குரலில் கூறியதை கேட்ட உசைனுக்கு அவளின் உள்ளம் புரிந்தது. சிறிது தணிந்தவராக சரி ! என்று ஒரு வார்த்தையோடு முடித்துக் கொண்டார்.



சிறிது நேரம் கழித்து சுஹேல் விழித்துக் கொண்டான். கடிகாரத்தை பார்த்தான் மணி மதியம் இரண்டு என்று காட்டியது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டேனா? என்று எழுந்து குளியல் அறை சென்று முகம் கழுவி விட்டு வெளியில் வந்தான். ஹாலில் இவனின் தாயும் தந்தையும் இவனுக்காக காத்திருந்தார்கள். இவன் வந்ததும் ஜரீனா, சாப்பிட வாப்பா! என்று அழைக்க, அவனும் டைனிங் டேபிளின் முன் அமர்ந்தான். அவனுக்கு பிடித்த உணவு வைகைகளை சமைத்திருந்தாள் ஜரீனா. சுஹேல் அதை ரசித்து உண்டான், "உங்களுடைய கைப்பக்குவம் யாருக்கும் வராதும்மா" என்று அவன் தன் அம்மாவை புகழ, அவளிடத்தில் சிறு புன்னகை தவிர, எந்த வித மகிழ்ச்சியும் இல்லை. தந்தையை பார்த்தான், அவர் முகமும் இருகியிருந்தது. ஏதோ பிரச்சனை. என்னவோ பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதற்காகத்தானே என்னை இங்கு கூட்டி கொண்டு வந்திருக்கிறார்கள், என்ன விஷயம் என்று அவர்களாகவே சொல்லட்டும்! என்று மனதில் நினைத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தான். கைகழுவிக் கொண்டு ஹாலில் வந்து அமர்ந்து தொலைக்காட்சி பெட்டியை உயிர்பித்தான். அதில் ஷாருக்கான் நடித்த ஹிந்தி பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், அவனுடைய உம்மாவும், வாப்பாவும் அங்கு வந்தார்கள்.



உசைன் சுஹேலை பார்த்து, உன்னிடத்தில் கொஞ்சம் பேசணும், தொலைக்காட்சியை அணை என்று கூற, சுஹேலும் அதனை அணைத்துவிட்டு தந்தையிடம் திரும்பினான். என்ன வாப்பா? என்ன பேசப்போறிங்க? என்று கேட்க, உன்னை எதுக்கு இங்கே அழைத்து வந்திருக்கிறேன்? என்பதை பத்திதான், அதற்கு முன்னால், இந்த புகைப்படத்தை பார்த்து அதில் இருக்கும் பெண் யார் என்று கூறு, என்று அந்த புகைப்படத்தை அவனின் முன் நீட்ட, அதை பார்த்த பின்பு தான் சுஹேலுக்கு அனைத்து விஷயங்களும் விளங்கியது. அவன், வாப்பா , இவள் துர்கா, நம் அத்தை வீட்டிற்கு பக்கத்தில் தான் இருக்கா! ஒரு நாள் நான், அனீஸ், அத்தை மற்றும் துர்கா அனைவரும் சினிமாவுக்கு சென்றோம். அங்கு பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டோம். இந்த புகைப்படம் அங்கு எடுத்ததா தான் இருக்கும். ஆனா இதை நாங்க எடுக்கவில்லை, யார் எடுத்தார் என்று எனக்கு தெரியாது வாப்பா, என்று கூற, உசைன் நீ ஏன் அந்த பெண் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற? ஏன் அனீஸ் , உங்க அத்தை இல்லை, அவர்கள் பக்கத்தில் எல்லாம் உட்கார்ந்து படம் பார்த்தால் படம் பிடிக்காதா? என்று நக்கலடிக்க, நான் முதலில் அனீஸ் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தேன் வாப்பா! அவள் தான் முன் இருக்கையில் இருப்பவர் சற்று உயரமாக இருப்பதால் படம் தெரியவில்லை என்று இடம் மாற்றி துர்காவை அமரச் செய்தாள், இதில் என் தவறு எங்கே இருக்கிறது? என்று சொல்லுங்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், இப்போதே போனை போட்டு அத்தையிடம் கேளுங்கள்! நான் எங்கும் போகவில்லை, இங்கேயே தான் இருக்கிறேன், நான் சொல்லுவது பொய் என்று தெரிந்தால், நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், இந்த அற்ப விஷயத்திற்காகவா என்னை அவசரமாக இங்கு வர வழைத்தீர்கள், என்று கச்சிதமாக கூறவும், உசைன் என்ன கூறுவது என்று ஒரு நொடி திகைத்து, பின் இதற்க்காக மட்டும் இல்லை, உமர், போன வாரம் என்னிடத்தில் தொலைபேசியில் பேசினார். நிஹ்ஹாவை எப்போது வைத்துக் கொள்ளலாம்? என்று கேட்டார், எனக்கும் நீ நிஹ்ஹா செய்து கொண்டு பின் படிப்பது நல்லது என்று பட்டது. நாம் போய் பெண் பார்க்கவேண்டும் அல்லவா! உனக்கும் பெண் பிடிக்க வேண்டும், புகைப்படத்தில் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போல் இருக்காது. அதற்காகவும் தான் உன்னை இங்கு அழைத்து வந்தேன், என்று கூறவும், சுஹேல் வாப்பா! என் லட்சியம் மேற்படிப்பு ஒன்று தான். நான் படிப்பை முடித்து என்னை நானே நிலை நாட்டிக் கொண்ட பின்பு தான் நிஹ்ஹா செய்து கொள்வேன். இதில் இருந்து நான் மாறுவதாய் இல்லை. இதைத் தான் நான் ஆரம்பம் முதல் இன்று வரை சொல்லிக் கொண்டு இருக்கிறேன், வாப்பா! என் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை கூட எனக்கு இல்லையா? என்று அவன் கெஞ்சும் குரலில் கேட்க, உசைனுக்கு என்னவோ போல் இருந்தது. நீ சொல்வதெல்லாம் சரிதான்! ஆனால் பெண் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் சுஹேல். எங்களின் மன திருப்திக்காவது நீ வந்து பெண்ணை பார். மற்றதெல்லாம் பிறகு முடிவெடுக்கலாம் என்று உசைன் கூறவும் அவனால் மறுக்க முடியவில்லை. நான் பெண் பார்க்க வருகிறேன், ஆனால் அந்த பெண்ணைத் தான் உடனே நிஹ்ஹா செய்யவேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதித்தால் நான் வருகிறேன் என்று கூறவும், அருகில் இருந்த ஜரீனா, இவன் இதுக்காவது ஒத்துக் கொண்டானே என்று நினைத்துக் கொண்டு, சரிப்பா! நீ வந்து முதலில் பெண்ணை பார். மற்றதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறி அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள். மறுநாள் உசைன் ஊரில் இருந்து தன் பிள்ளை வந்துவிட்டதாகவும் அன்று மாலையே பெண் பார்க்க வருவதாக தொலைபேசி மூலம் தகவல் சொன்னார் .



அதைக் கேட்டதும் உமர் அலிக்கு தலை கால் புரியவில்லை. தாம் நினைத்த காரியம் பாதி வெற்றி அடைந்துவிட்டது என்று மனதில் சந்தோஷம் பொங்க, ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக செய்ய தொடங்கினார்.
 
Last edited by a moderator:

மறுநாள் மாலை சுஹேலும் அவனின் பெற்றோரும் உமரின் வீட்டை அடைந்தனர். வாசலிலே காத்திருந்த உமர் அவர்களை வரவேற்று உபசரித்தார். சுஹேல் எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று நினைத்தவாறே உள்ளே நுழைந்தான். உள்ளே வந்ததும், வீடு மாளிகை போல் இருந்தது. இவர்கள் வீடும் பெரிது தான் ஆனால் இந்த அளவிற்கு ஆடம்பரமாக அவர்கள் வீடு இல்லை. சினிமாவில் காட்டப்படும் பங்களாகளை போல் அவ்வளவு ஆடம்பரமாய் இருந்தது. உள்ளே சென்றதும் பெரிய வரவேற்பறை, கீழே தரை முழுவதும் சிவப்பு வண்ண கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. பெரிய சோபா இரண்டும், நான்கு சின்ன சோபாக்களும் அந்த ஹாலை அலங்கரித்து இருந்தன. எதிர்புறம் சின்ன சின்ன படிக்கட்டுகள் மேலே செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்தன, மேலே அழகிய மின்விளக்குகள் தொங்கி கொண்டிருந்தன. ஆங்காங்கே பிக்காஸோவின் ஓவியங்கள் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்தன. கீழேயே ஐந்து அல்லது ஆறு அறைகள் இருக்கும் போல் தோன்றியது. மேலே எத்தனை அறைகள் இருக்கும் என்று தெரியவில்லை. ஹாலில் தாஹிரா இவர்களுக்காக காத்திருந்தாள். இவர்களைப் பார்த்ததும், வாங்க! வந்து உட்காருங்க ! என்று வரவேற்றாள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு நடுத்தர வயது பெண்மணி ஒருவர் பழ ரச தட்டுடன் வந்து அனைவருக்கும் பழ ரசம் வழங்கினார். உமர், உசைனிடம் அவரின் வியாபாரத்தை பற்றி விசாரித்து விட்டு, பின் சுஹேலிடம் திரும்பி, என்ன தம்பி நல்லா இருக்கீங்களா? உங்கள் மருத்துவம் தொழில் எப்படி போயிட்டு இருக்கு? என்று அவனையும் கேட்க, அவன் பதில் எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தான். சிறிது நேரத்தில் மும்தாஜ்ஜை அழைத்துக் கொண்டு அவள் அன்னை தாஹிரா வந்தாள். மும்தாஜ் பட்டு புடைவையும் வைர நகைகளுமாக ஜொலித்தாள். அவளை பார்த்தும் சுஹேலுக்கு மனதில் எந்த வித சலனமும் ஏற்படவில்லை. அவன் மனது முழுதும் தான் துர்கா ஆட்கொண்டிருந்தாளே? அவன் அவளை சரியாக கூட பார்க்கவில்லை. ஆனால் மும்தாஜ் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். பார்க்க அழகாத்தான் இருக்கிறான். ஆனால் ஏன் என்னை பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறான். ஒரு வேலை அவன் தாய் தந்தை முன் என்னை பார்க்க கூச்சமாக உள்ளதோ? பெண் தானே வெட்கபடவேண்டும். ஆனால் நானே அவனை நன்றாக பார்த்து கொண்டிருக்கேன், அவன் ஏன் என்னை ஒழுங்காக பார்க்கவில்லை? என்று பல்வேறு கேள்விகள் அவள் மனதில் எழ அவனை நோக்கியே அவள் விழிகள் இருந்தன. சுஹேல் தலை நிமிரவே இல்லை. சிறிது நேரத்தில் அவள் உம்மா அவளை உள்ளே செல்ல சொல்ல, அவளும் உள்ளே சென்று விட்டாள். உமர் பேச ஆரம்பித்தார். " என்னப்பா பெண்ணை பிடிச்சிருக்கா? எப்ப நிஹ்ஹாவை வைத்துக் கொள்ளலாம்? என்று நேரடியாகவே கேட்டு விட்டார். சுஹேலும், அவரின் கண்ணை பார்த்து, எனக்கு இப்போது நிஹ்ஹா செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை. உண்மையை சொன்னால் என் வாப்பா, உம்மா கட்டாயத்தினால் தான் பெண் பார்க்க வந்தேன். நான் மேல் படிப்பு படிக்க வேண்டும், பிறகு பயிற்சி எடுத்து தலை சிறந்த மருத்துவர் ஆக வேண்டும். இதற்கு மூன்று வருடமாவது ஆகும், அதுவரை உங்கள் பெண்ணை காத்திருக்க சொல்லுவதில் எனக்கு விருப்பம் இல்லை. இது ஒரு பெண் பார்க்கும் படலம் என்றில்லாமல் கெட் டு கெதர் என்று எடுத்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் பெண்ணிடமும் சொல்லி விடுங்கள், என்று கறாராக கூறவே உமருக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், " படிப்பா! நிஹ்ஹா பண்ணிக் கொண்டு பிறகு படி, என் பெண்ணும் மருத்துவர் தான், வேணுமின்னா இரண்டும் பேரும் சேர்ந்து வெளிநாட்டில் போய் படியுங்கள், எல்லா செலவுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன், உங்களை யாரும் தடுக்க போவது இல்லை, என்று கூறவும் சுஹேலுக்கு கோபம் வந்துவிட்டது. சார், என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவை நான் என் தாய் தந்தையிடம் கூட கொடுக்கவில்லை என்று கூறி நிறுத்தினான். "என் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை என் தாய் தந்தையிடம் கூட இல்லை", நீ என்னடா சொல்லுவது? என்று அவன் சொல்லாமல் சொல்லியது உமருக்கு விளங்கியது. அவருடைய முகம் தொங்கி போனது. உள்ளே நெருப்பாய் எரிந்தது. இவனை என்ன செய்தால் தகும்? பெண், சொத்து எல்லாம் கொடுத்து நிஹ்ஹா செய்துக் கொள் என்றால் வேண்டாம் என்கிறானே, என்ன மனிதன் இவன்? இவன் என்ன படித்த முட்டாளா? என்று மனதிற்குள் வெதும்பினார். இருந்தாலும் அதை வெளிக் காட்டி கொள்ளவில்லை. உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வருவது என்று எனக்கு தெரியும், என்று மனதில் கருவிக்கொண்டே உதட்டில் புன்னகை புரிந்தார். சுஹேல் அப்படி கூறியது அவனது அன்னைக்கும், தந்தைக்கும் அதிர்ச்சி தான். இருந்தாலும் அதனை மறைத்து, அப்ப நாங்க போயிட்டு வரோம், உங்களையும் உங்க குடும்பத்தையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் என்று கூறிவிட்டு மூவரும் கிளம்பினர். உசைனுக்கு மிகவும் கடுப்பாக இருந்தது. என்ன பிள்ளை இவன்? அவர் அவ்வளவு தன்மையாக பேசுகிறார், இவன் முகத்தில் அடிப்பது போல் இப்படி பேசுகிறானே! சென்னைக்கு சென்று ரொம்பத்தான் மாறிவிட்டான் என்ற கடுகடுத்த முகத்துடன் காரில் ஏறினார். ஜரீனாவுக்கு ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? என்னாயிற்று இவனுக்கு? என்று ஒரே கவலை படிந்த முகத்தோடே வந்தாள். வீட்டை அடைந்தவுடன், என்னப்பா, ஏன் இந்த பெண்ணை வேணாம் என்கிறாய்? அதுவும் முகத்தில் அடிப்பது போல் நேரடியாக அப்படி பேசலாமா? என்று ஜரீனா கூறியவுடன் உம்மா அவர் பேசியது உங்களுக்கு புரியவில்லையாம்மா? அவர் என்னை அவருடைய பெண்ணுக்கு மாப்பிள்ளையாக இல்லை, பொம்மையாக வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார், அவரின் பெண்ணை நான் மணந்தால் அவர் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும் என்று எண்ணுகிறார். பிறகு நான் உங்களுக்கு பிள்ளையாய் இருக்க மாட்டேன், அவர்கள் வீட்டில் மருமகன் என்ற பெயரில் தலையாட்டி பொம்மையாகத்தான் இருப்பேன், இது உங்களுக்கு சம்மதம் தானா? என்று கேட்கவும், ஜரீனா பேச்சற்று அப்படியே சிலையாக நின்றுவிட்டாள். உசைனோ அவர் அப்படியெல்லாம் நினைத்து பேசவில்லை, ஏன் நாம் கூட அவர் அளவுக்கு ஆஸ்தி, அந்தஸ்து உடையவர்கள் தான். நாம் அதனை வெளிகாட்டிக் கொள்ளவில்லை, அவர் வெளிக்காட்டிக் கொள்கிறார், அது தான் வித்தியாசம். அப்படி இருக்கும் போது அவர் எப்படி நிஹ்ஹா ஆனவுடன் உன்னை மதிப்பு குறைவாக நடத்துவார்? எனக்கு தெரிந்து அவரிடமும் அவர் பெண்ணிடமும் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை, என்று கூறவும் . தவறு இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய வேண்டாம் வாப்பா! எனக்கு இப்போது நிஹ்ஹா வேண்டாம் இதை தான் முதலில் இருந்தே சொல்றேன், நீங்கள் தான் வீணாக என்னை இங்கே அழைத்து வந்து பெண் பார்க்க வைத்தீர்கள் என்று கூறவும், இறுதியாக உன் முடிவு தான் என்ன சுஹேல்? என்று உசைன் கேட்கவும் , அப்போதும் இப்போதும் ஒரே முடிவு தான் வாப்பா! நான் படித்து முடித்து சிறந்த மருத்துவர் ஆன பிறகு தான் நிஹ்ஹா எல்லாம். இதை எதற்காகவும், யாருக்காகவும் மாற்றுவதாக இல்லை. உங்களை எதிர்த்து பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் மனதை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய வாழ்நாள் இலட்சியத்தை நான் அடைய வேண்டும் என்று தான் உங்களிடம் மன்றாடுகிறேன்,தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள் வாப்பா! என்று அவன் மிகவும் உணர்ச்சிகரமாக கூறியதை கேட்டதும், உசைனைக்கு அவன் பேசுவது நியாயமாக பட்டது. ஒரே பிள்ளை, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று எப்போதும் என்னிடம் கேட்டது இல்லை. முதல் முறையாக படிக்க வேண்டும் என்று கூறுகிறான், அதுவும் தான் நல்ல நிலமைக்கு வரவேண்டும் என்று தானே விரும்புகிறான் என்று மனதில் நினைத்துக் கொண்டு, இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை, " நீ உன் விருப்பம் போல் செய்! நாளையே நீ சென்னைக்கு போகலாம் என்று இறுகிய முகத்துடன் கூறினார். இதைக் கேட்ட ஜரீனா, என்ன நீங்கள், அவனை நாளையே போகச் சொல்லுகிறீகள்? வந்து இரண்டு நாள் தான் ஆகிறது. ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறான். உடனே செல்ல சொல்றீங்களே! என்று கணவனை கேட்டு விட்டு, மகனிடம் திரும்பி, சுஹேல், என் மனத்திருப்திக்காக இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் இருந்து விட்டு போப்பா! என்று கனிவுடன் கூறியதை சுஹேலால் மறுக்க முடியவில்லை. சரி உம்மா! என்று அவன் கூறியதை கேட்ட அந்த தாயுள்ளம் மகிழ்ச்சியில் மிதந்தது. சுஹேலுக்கு அப்பாடா! என்றிருந்தது. இன்னும் மூன்று வருடங்களுக்கு நிஹ்ஹா பற்றிய பேச்சே எழாது. நாம் நம் படிப்பை தொடரலாம். நாம் அதிகமாக பெண் வீட்டாரிடம் பேசி விட்டோமா? அவர் எப்படி வேணுமின்னா நானே எங்க பொண்ணு கூட சேத்து உன்னையும் படிக்க வைக்கிறேன் என்று கூறலாம். எங்க வீட்டில் வசதிக்கு என்ன குறைச்சல்? அவரிடத்தில் மட்டும் தான் பணம் இருக்கிறதா? அவர்களுக்கு இணையாக எங்கள் வீட்டிலும் தானே இருக்கிறது. பணம் படைத்த எங்களிடமே இப்படி பேசுகிறார் என்றால் பணம் இல்லாதவரிடம் எப்படி நடந்துக் கொள்ளுவார்! இவர் பேசியது எப்படி வாப்பா சரியென்று கூறுகிறார் என்று தான் தெரியவில்லை, வாப்பா தன்னை போலவே எல்லோரையும் நினைக்கிறார், யார் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கு தெரியும்? அவரை பார்த்தால் நல்லவராகத் தான் தெரிகிறது, ஆனால் அவர் பேசுகின்ற முறையும் பார்வையும் சரியாகப் படவில்லை. இனிமேல் அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? அதுதான் இந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாயிற்றே! துர்காவை எப்படியாவது நம் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் போதே அவளிடம் பேச வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. மணியை பார்த்தான், மணி மதியம் 2 என்று காட்டியது. இப்போது அநேகமாக துர்காவிற்கு உணவு இடைவேளை இருக்கும். இப்பொது அழைத்தால் அவளிடம் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு வெளியே செல்ல தயாரானான். அவன் வெளியே வந்ததும், அவன் அம்மாவை பார்த்து, உம்மா நான் சற்று வெளியே சென்று வருகிறேன், வீட்டிலேயே இருப்பது ஒரே போராக உள்ளது என்று கூறி வெளியில் செல்ல முற்பட, ஜரீனா சாப்பாட்டு நேரம் ஆயிடிச்சேப்பா! சாப்பிட்டு போப்பா! என்று அழைத்ததும், காலையில் சாப்பிட்டதே இன்னும் செரிமானம் ஆகவில்லை உம்மா! அதனால் தான் வெளியில் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கழன்றான். நேரே தொலைபேசி பூத்துக்கு சென்று துர்கா வேலை செய்யும் அலுவலகத்திற்கு STD செய்தான். மறுமுனையில் துர்கா எடுத்து ஹலோ சொன்னதும், என்ன "லிட்டில் சுவீட்டி" எப்படி இருக்கே? என்று அவன் கேட்டதும், துர்காவிற்கு போன உயிர் திரும்பி வந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆம்! துர்கா சுஹேல் சென்றதில் இருந்து நடை பிணம் போலத்தான் இருந்தாள். கடமைக்கு அலுவலகம் செல்வது, சாப்பிடுவது என்று சிரத்தையே இல்லாமல் தான் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள். இப்போது சுஹேலின் குரல் கேட்டதும் அவளுக்கு சுய உணர்வு திரும்பியது போல் உணர்ந்தாள். சந்தோஷத்தில் கண்களில் இருந்தும் நீர் தளும்ப, நான் நல்லா இருக்கேன் , நீங்கள் எப்படி இருங்கீங்க? என்று கேட்டதும், சுஹேலுக்கு அவளுடைய நிலை அவள் பேச்சு மூலமே நன்றாக தெரிந்தது. இவளை எப்படி நம் வழிக்கு கொண்டு வரலாம் என்று யோசித்தவனாக, நான் ரொம்ப நல்லா இருக்கேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கையிலேயே அவனுக்குள் பொறி தட்டினால் போல் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. "உனக்கு ஒரு விஷயம் சொல்லத்தான் போன் பண்ணினேன். நேற்று நானும் என் பெற்றோரும் பெண் பார்க்க போனோம். அந்த பெண்ணோட புகைப்படம் கூட நான் அங்கிருக்கும் போது எனக்கு அனுப்பி இருந்தார்களே! நீ கூட பார்த்திருப்பாய் என்று நினைக்கிறேன், அப்பப்பா ! பொண்ணு புகைப்படத்தில் இருப்பதை விட நேரில் அத்தனை அழகு, எல்ல சினிமா நட்சத்திரங்களையும் தூக்கி சாப்பிடுவா போல, அவ்வளவு அழகாக இருக்கிறாள், அவங்க வீட்டை பார்த்த அவ்வளவு செல்வ செழிப்பு, என்று சுஹேல் கூறி கொண்டே போக, துர்கா கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல் கொட்டியது. என்ன துர்கா லைன்லே இருக்கியா? என்று கேட்டுவிட்டு மேலே தொடர்ந்தான், அவங்க வாப்பா நிஹ்ஹா எப்ப வச்சிக்கலாம்? என்று ரொம்பவும் தொந்தரவு செய்கிறார், சரி என்று நானும்.. என்று நிறுத்தினான். துர்காவிற்கோ ஒரே பதட்டம், நீங்கள் ஒப்புக்கொண்டு விட்டீர்களா? என்று அழுகையுடன் கேட்டாள். நீ தான் கிளம்பும்போது சொல்லி அனுப்பினாயே! அந்த பெண்ணையே திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என்று, இப்போது ஏன் இப்படி கேட்கிறாய் துர்கா? என்று அவன் சிரிப்பை அடக்கி கொண்டு பேச, நான் சொன்னால் உடனே அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா? உன்னை எப்போதும் கைவிடமாட்டேன், என்று சொன்னதெல்லாம் பொய்யா? என்று அவள் மிகவும் தீவிரமாக கேட்க, சுஹேலுக்கு சிரிப்பு பொது கொண்டு வந்தது. அவன் போனிலேயே விழுந்து விழுந்து சிரித்தான், என் மீது காதல் இல்லை என்று சொல்கிறாய், என்னை திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாய், பின் நான் என்ன தான் செய்வது என்று அவன் பொய் கோபத்துடன் கேட்க, உடனே துர்கா, உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்? நான் உங்களை காதலிக்கிறேன், திருமணம் செய்துக்க கொள்கிறேன் என்று சொல்லவேண்டும், அவ்வளவு தானே! சொல்கிறேன்! நான் உங்களை ரொம்ப காதலிக்கிறேன்! உங்களை மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன்! போதுமா? என்று சொல்லவும், சுஹேலுக்கு தன்னுடைய யோசனை வெற்றி பெற்று விட்டது என்ற மகிழ்ச்சியில், இப்படியெல்லாம் அழுதுக் கொண்டு, வெறுப்பாக சொல்லுவது தான் காதலா? சிரித்துக் கொண்டு மகிழிச்சியாக சொல்லவேண்டும். அப்போதுதான் நான் ஒத்துக் கொள்ளுவேன்! என்று கூறியதும், போடா! போ ! போய் அவளையே திருமணம் செய்துக்க! என்று பட்டென்று போனை வைத்தாள்.
 


சுஹேலுக்கு சந்தோஷமும், சிரிப்பும் தாங்க முடியவில்லை. என் மேல் இவ்வளவு காதல் வைத்துக் கொண்டு உன்னை காதலிக்கவேயில்லை என்று நாடகம் ஆடினாய்! உனக்குள் இருக்கும் காதலை எப்படி வெளிக் கொணர்ந்தேன் பார்! அதே போல் உன்னை கண்டிப்பாக என்னோடு இணைத்துக் கொள்ளுவேன் என் குட்டி தேவதையே! என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவனுக்குள் அத்தனை மகிழ்ச்சி பீறிட்டு எழுந்தது. இந்த உகலகமே அவன் கைக்குள் வந்து விட்டது போன்று உணர்ந்தான். அந்த சந்தோஷத்தோடே வீட்டை அடைந்தான். வீட்டில் அவள் அன்னை, புன்னகை பூக்கும் தன் மகனின் முகத்தை பார்த்ததும், "என்னப்பா ஓரே சந்தோஷம் உன் முகத்தில் தெரியுது? என்ன விஷயம்? என்று கேட்க, அவன் என்ன சொல்லுவது என்று சிறிது நேரம் தடுமாறி, பின் ரொம்ப நாள் கழித்து நம்ம ஊருக்கு வந்திருக்கேன்லம்மா, இங்கு இருக்கும் அழகு, நான் பழகிய நண்பர்கள் எல்லாம் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு, என்று ஏதோ வாய்க்கு வந்ததை கூறிவிட்டு அங்கிருந்து நைசாக நழுவ பார்க்க, ஜரீனா, சாப்பிட வாப்பா! என்று அழைத்து உணவு வகைகளை தட்டில் எடுத்து வைத்தார். சுஹேல் சாப்பிட அமர்ந்ததும் ஆச்சரியப்பட்டான், வித விதமான உணவு வகைகளை சமைத்திருந்தாள். அத்தனையும் அவனுக்கு பிடித்த உணவு வகைகள். "இத்தனையும் நீங்களே சமைத்தீர்களா? என்று கேட்டதும், ஆமாம் சுஹேல்! நீ ரொம்ப நாள் கழித்து இங்கு வந்திருக்கிறாய், அங்கு நீ உன் வேலையின் காரணமாக ஒழுங்காக சாப்பிட்டு இருக்க மாட்டாய். இங்கு இருக்கும் நாள் வரையிலாவது ஒழுங்காக சாப்பிட வேண்டும் என்று தான் நம் வீட்டில் வேலை செய்யும் சாயிஷா உதவியுடன் எல்லாம் செய்தேன். "எனக்காக ஏன் உம்மா இவ்வளவு கஷ்டப்படுறீங்க?" நீங்க என்ன சமைத்தாலும் எனக்கு பிடிக்கும். இத்தனை வைகைகளை செய்ய வேண்டுமா? ஒன்று இரண்டு வைகைகள் செய்தால் போதாதா உம்மா! என்று அவன் கனிவாக கேட்கவும், " என் பிள்ளைக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்", எனக்கு இதில் எல்லாம் கஷ்டம் ஒன்றும் இல்லப்பா, நான் சமைத்ததை எல்லாம் நீ ஒழுங்கா சாப்பிடலேன்னா தான் கஷ்டப்படுவேன் என்று கூறி அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவன் அருகிலேயே இருந்து பரிமாறினாள். கயல் அன்று மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்திருந்தாள். இன்னைக்கு எப்படியாவது சாம்சனை பார்த்து தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, சீக்கிரமாகவே எழுந்து காலை கடன்களை எல்லாம் முடித்துக் கொண்டு டைனிங் டேபிள் முன் அமர்ந்தாள். வாஸந்தி அவளை பார்த்து, என்னடி இன்னைக்கு சீக்கிரமாக தயார் ஆகி வந்திருக்கே? மருத்துவமனையில் வேலைகள் நிறைய இருக்கா? என்று கேட்கவும், இவர்களிடம் என்ன சொல்லுவது என்று யோசித்த கயல், அம்மா இன்னைக்கு நான் மருத்துவமனைக்கு போகவில்லை, முக்கியமான ஒரு நபரை சந்திக்க வேண்டும், அதற்காகத்தான் விரைவாக தயார் ஆகிவிட்டேன். சீக்கிரம் டிபன் கொடும்மா! வாஸந்தி, யாரடி அது முக்கியமான நபர்? என்று கேட்கவும்,கயலுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. நான் அவரை பார்த்து விட்டு வந்து சொல்றேன் அம்மா! என்னம்மா இத்தனை கேள்விகள் கேட்கிறாய்? என்று கயல் அலுத்துக் கொள்ள, நீ வெளியிலே போறே, காலம் இப்போது ரொம்ப கெட்டு போய் இருக்கு, நீ எங்கே செல்கிறாய் என்று தெரிந்துக் கொள்ள வேண்டாமா? இதற்கு போய் ஏனடி இத்தனை கோவம் உனக்கு? எனக் கேட்க, கோவம் எல்லாம் இல்லம்மா! இங்கிருந்து ஒரு மணி நேரம் தான் அவர்கள் இருக்கும் இடம், சென்று சீக்கிரமாக வந்து விடுகிறேன், கவலைப்படாதே அம்மா! என்று அம்மாவை சமாதானம் பண்ணி விட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு விரைந்தாள். போகும் போதே அவனிடத்தில் என்ன பேசுவது? எப்படி பேசுவது ? என்று சிந்தித்துக் கொண்டே சென்றாள். அவன் நிறுவனத்தை அடையும் வரை அவளிடத்தில் எந்த பதற்றமும் இல்லை. அடைந்த பின்னோ அவள் மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. ஒரு வேளை சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்னை ரொம்ப கேவலமாக நினைப்பானோ? என்றெல்லாம் நினைத்துக் கொண்டு அவனுடைய நிறுவனத்தில் தன்னுடைய வண்டியை நிறுத்தி உள்ளே வந்தாள். வரவேற்பறையில் சிறிது நேரம் காத்திருந்த பின் சாம்சனே வெளியே வந்து அவளை அழைத்துக் கொண்டு அவனுடைய அறைக்கு சென்றான். வாங்க! எப்படி இருக்கீங்க? என்று புன்னகையுடன் கேட்க, கயலுக்கு வியர்த்துக் கொட்டியது. நான் நல்லா இருக்கேன். வீட்டில் உங்கள் அம்மா, அப்பா, தங்கை எல்லாம் நலமாக இருக்காங்களா? என்று விசாரித்தாள். அவன், யாவரும் நலம். உங்களுக்கு ஏன் இப்படி வியர்த்து கொட்டுகிறது? என் அறை குளிரூட்டப்பட்ட அறைதான். இங்கேயே இப்படி வேர்கிறது, நீங்க வண்டியில தான் வந்தீங்களா ? அல்லது நடந்தே வந்தீங்களா? என்று கிண்டல் அடிக்க, அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை, என் உடம்பே என்னை காட்டி கொடுக்கிறதே! அமைதி! கயல் அமைதி! ஆபரேஷன் தியேட்டரில் இருக்கும் போது கூட இவ்வளவு பதற்றம் இல்லை, இப்போ ஏண்டி இப்படி இருக்கே? என்று மனசுக்குள் தன்னையே திட்டிக் கொண்டாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை சாம், " உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்," அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, அதை கூறியவுடன் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்றும் தெரியவில்லை, என்று தயக்கத்துடன் ஆரம்பிக்க, என்ன கயல் ! என்கிட்ட உங்களுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்? ஏதாவது உதவி வேண்டுமா? என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள். என்னால் முடிந்த மட்டும் கண்டிப்பாக செய்கிறேன், கொஞ்சம் குடிக்க தண்ணீர் தாருங்கள்! பிறகு சொல்லுகிறேன் என்று அவள் கூற, அச்சச்சசோ! உங்களை பார்த்த மகிழ்ச்சியில் உங்களை உபசரிக்க மறந்துவிட்டேன், கொஞ்சம் இருங்கள் என்று கூறி, பணியாளரை அழைத்து இரண்டு பழச்சாறு கொண்டு வரச் சொன்னான். பழச்சாறு வரும் வரையில் கயல் அமைதியாகவே இருந்தாள். வந்தவுடன் இருவரும் அமைதியாக அருந்தினார்கள். பின்னும் அவள் அமைதியாக இருக்கவே, சாம்சனே பேச ஆரம்பித்தான். என்னதான் சொல்ல வந்தீர்கள்? தயங்காமல் சொல்லுங்கள், நீங்கள் என்ன சொன்னாலும் நான் கோவப்படமாட்டேன், அல்லது எந்த உதவி கேட்டாலும் என்னால் முயன்றது செய்வேன் என்று அவன் கூறவும், கயல் இருக்கையை விட்டு எழுந்து நின்றாள். அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பி நின்றாள். பின் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு, "நான் உங்களை காதலிக்கிறேன்" உங்களுக்கும் என் மீது விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். தயவு செய்து என்னை தப்பாக நினைக்காதீர்கள்! என்று ஒப்புவிக்கும் மாணவி போல் கட கடவென்று சொல்லிவிட்டாள். சிறிது நேரம் அங்கே ஒரே மௌனம். கயலுக்கு இவன் என்ன சொல்வான் என்றே தெரியவில்லையே என்று ஒரே பயமும் தயக்கமுமாக இருந்தது. கயல் திரும்பி பார்த்ததும், அவன் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் கோபம் இல்லை புன்னகையே இருந்தது. இவளுக்கு அப்பாடா ! என்று இருந்தது. அவனால் அவன் காதுகளையே நம்ப முடியவில்லை. இவள் கூறியது என் காதில் தவறாக விழுந்து இருக்குமோ! என்ற சந்தேகம் வேறு அவனுக்குள் இருந்தது. சிறிது நேரம் ஒன்றுமே புரியவில்லை. தான் தேவதை என்று நினைத்த பெண் தன் மீது காதல் கொள்வது அவனுக்கு வியப்பாக இருந்தது. ஒரு வேளை இது கனவோ என்று கூட நினைக்க தோன்றியது. உண்மை என்று உணரும் போது அவனுக்கு சிரிப்பு வந்தது. அப்போதுதான் கயல் அவனை திரும்பி பார்த்தாள். நான் சொன்னதற்கு நீங்கள் எந்த பதிலும் கூறவில்லையே, என்று கூறி அவன் முகத்தை பார்க்க, சாம்சன், நீங்கள் என்னிடம் விளையாடவில்லையே, நீங்கள் சொன்னது இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை. என்னை நிஜமாகவே காதலிக்கிறீர்களா? என்று அவன் கேட்கவும், ஏங்க, என் மீது இத்தனை சந்தேகம்? பெணகள் யாரும் தங்கள் காதலை ஆணிடம் சொல்லக்கூடாதா? ஏன் எங்களுக்கு மட்டும் காதலை சொல்லும் தைரியம் இல்லையா? அது என்ன அவ்வளவு பெரிய தவறா? என்று கேட்கவும், அவன் உடனே அப்படி எல்லாம் நான் உங்களை தவறாக நினைக்கவில்லை. நான் பெண்களை மதிப்பவன். மிதிப்பவன் இல்லை என்று கூறவும், கயலுக்கு சிரிப்பு வந்தது. என்ன சாம், பஞ்ச் டயலாக் எல்லாம் பேசுறீங்க ! என்று கிண்டல் அடிக்க, சாம்சனும் காதல் வந்தா இதெல்லாமும் வரும் போல் இருக்கு என்று நகைத்தான். திடீரென்று அவன் முகம் மாறியது. எனக்கு உங்க அளவுக்கு வசதி இல்லை, நான் ஒன்றும் அவ்வளவு அழகும் இல்லை என்று கூறியவுடன், கயல், காதல் ஆஸ்தி அந்தஸ்து பார்த்து வருவதில்லை அது மனது சம்மந்தப்பட்டது. மேலும் நீங்கள் அழகில்லை என்று யார் சொன்னது? உங்களை முதன் முதலில் மருத்துவமனையில் பார்த்த போதே எனக்கு பிடித்து போய் விட்டது. அதனால் தான் நீங்கள் மருத்துவமனையை விட்டு சென்ற போதும் உங்களை தேடி உங்கள் நிறுவனத்திற்கு வந்தேன், பிறகு வீட்டிற்கும் வந்தேன். என்னை உங்களுக்கு பிடித்து இருக்கிறதா? இல்லை யென்றால் சொல்லிவிடுங்கள், வசதி இல்லை, அழகு இல்லை என்றெல்லாம் காரணம் சொல்லாதீர்கள்! என்று அவள் பொய்யாக கோபம் கொண்டு வெளியே போக அடி எடுத்து வைக்க, நில்லுங்க கயல்! எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் என்று கூறினான். உடனே அவள், "எனக்கு கூட தான் நீங்கள் வைத்திருக்கும் பேனா பிடிக்கும், இதோ இந்த நாற்காலியை பிடித்து இருக்கிறது. அதோ அந்த சுவர் கடிகாரத்தை பிடித்து இருக்கிறது. நான் அதை கேட்கவில்லை. நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா? என்று தான் கேட்டேன் என அவள் கோபமாக கூற, அவன் சிரித்துக் கொண்டே சரி ! சரி ! கோபித்துக் கொள்ளாதே! நான் உன்னை காதலிக்கிறேன் போதுமா! என்று அவன் கூறவும் அவள் முகம் செந்தாமரை போல் மலர்ந்தது. அப்பாடா! இந்த வார்த்தையை வரவழைக்க நான் பட்ட பாடு சொல்ல முடியவில்லை! என்று அவள் அலுத்து கொள்ள, அவன் சத்தமாக சிரித்தான். அவனின் அழகிய பல் வரிசையை கண்டு, அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, என்ன டாக்டர் மேடம், இப்படி பார்த்துக் கொண்டே இருப்பது தான் காதலா? என்று அவன் வினவும் தான், அவள் சுய உணர்வு பெற்றவளாக, என்ன பேசுவது என்று தெரியாமல் கன்னங்கள் சூடேறி வெட்கி தலை குனிந்தாள். பிறகு நாம் இதைக் கொண்டாட வெளியே சென்று சாப்பிடலாமா? என்று கயல் கேட்க, ஓகே வா போகலாம்! என்று இருவரும் பக்கத்தில் இருக்கும் ஒரு உணவு விடுதிக்கு சென்றனர்.அவர்களுடைய கெட்ட நேரமோ அல்லது நல்ல நேரமோ தெரியவில்லை. கமலநாதன் அன்று அதே உணவகத்திற்கு தன்னுடைய பழைய நண்பருடன் பேசிக் கொண்டு காபி அருந்திக் கொண்டிருந்தார். இவர்கள் உணவு விடுதிக்கு சென்றதும், முதலில் கமலநாதன் அவர்களை கவனிக்கவில்லை. இருவரும் சென்றதும் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு இடத்தை தேடி அமர்ந்தனர், சாம்சன் கயலிடம் "என்ன சாப்பிடுகிறாய்? முதலில் இனிப்பு ஆர்டர் செய்யுங்கள். பிறகு பார்க்கலாம் என்று கயல் கூற, சாம்சனும் இரண்டு ரசகுல்லா ஆர்டர் செய்தான். சாம் கயலையே பார்த்துக்கொண்டிருக்க, கயல் மெனு கார்டை ஆராய்ந்து கொண்டிருந்தாள். சாம் இங்கு எந்த உணவு நன்றாயிருக்கும்? என்று கேட்டுக் கொண்டே அவனை பார்த்த போது, அவன் தன்னையே உற்றுக் நோக்குவது தெரிந்து அவள் தலை குனிந்து கொண்டாள். சிறிது நேரத்தில் ரசகுல்லா வரவே, இருவரும் உண்டனர். பின் சாம்சன் அவளைக் கேட்டு அவளுக்கு பிடித்த உணவு வகைகளை வரவழைத்தான். இருவரும் சாப்பிட்டு கொண்டே இருந்தபோது, திடீரென்று கயலுக்கு புரை ஏறவே, சாம்சன் அவள் அருகே சென்று அவள் தலையை தட்டினான். அவளுக்கு இருமல் நிற்காமல் மேலும் மேலும் வரவே, உணவகத்தில் இருந்த அத்தனை பேரும் அவர்களையே பார்த்தனர். அதில் கமலநாதனும் ஒருவர். என்ன இவள், மருத்துவமனைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்? யாரையோ முக்கியமான நபரை பார்க்க சென்றிருக்கிறாள் என்று வாஸந்தி சொன்னாளே அவன் தானா இவன்? அவன் என்ன உரிமையோடு கயலின் தலையை தடுக்கிறான்? என்னதான் இங்கு நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் குழம்பினார். சிறிது நேரத்திற்கெல்லாம் இருமல் சரியாகி விடவே, கயல் சாப்பிட துவங்கினாள். இருவரும் சாப்பிட்டு முடித்து, கிளம்ப ஆயத்தமான போது கமலநாதன் அவர்களிடம் வந்தார். அப்பாவை பார்த்ததும் கயலுக்கு தூக்கி வாரி போய்விட்டது. இவர் எப்போது இங்கு வந்தார்? நாங்கள் வரும்போது தானா இவரும் வரவேண்டும்? என்று நினைத்தவாறே தந்தையை பார்க்க, அவர், நீ இங்கே என்னம்மா செய்துகொண்டிருக்கிறாய்? யார் இவர்? என கேள்வி கணையால் இவளை துளைக்க, கயல் முதலில் சற்று தடுமாறினாலும், பின் சமாளித்துக் கொண்டு, அப்பா இவர் சாம்சன், இங்கு ஒரு நிறுவனம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். நான் இவரை பார்க்க தான் இங்கு வந்தேன். மற்றதை எல்லாம் வீட்டிற்கு வந்து சொல்கிறேன் அப்பா என்று கூறிவிட்டு சாம்சனை தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தாள். சாம்சன் கமலநாதனை பார்த்ததும் புன்னகை மலர, உங்களை பற்றி கயல் நிறைய சொல்லி இருக்கிறாள். நீங்கள் படிக்காத மருத்துவத்தை உங்கள் மகளை படிக்க வைத்தது, நீங்கள் கயலின் மீது கொண்ட பாசம் என்று நிறைய சொல்லி இருக்கிறாள் அங்கிள். உங்களை பார்த்தது எனக்கு மிகவும் சந்தோசம் என்று தன் கையை அவர் கையோடு சேர்த்து குலுக்கினார். கமலநாதன் பதில் ஏதும் சொல்லாமல் கை குலுக்கிவிட்டு கயலிடம், " நான் வீட்டிற்கு தான் போறேன்", நீ வந்ததும் நாம் பேசலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். கயலுக்கு மனதில் தொடர் வண்டி ஓடியது. மனது தடக் தடக் என்று அடித்துக் கொண்டது. இருந்தாலும் அதை வெளிக் கட்டி கொள்ளாமல் சாம்சனிடம் புன்னகைத்து நான் இங்கிருந்தே கிளம்புறேன், நாளை பார்க்கலாம் என்று சொல்ல, என்ன கயல் உன்னுடைய ஸ்கூட்டி என் நிறுவனத்தின் பக்கத்தில் தான் இருக்கு. இங்கிருந்தே கிளம்பறன்னு சொல்லற ! எனக் கேட்க, ஓ ஆமா ! மறந்துட்டேன்! வாங்க போகலாம்! என்று அவனையும் அழைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டி நிற்கும் இடம் சென்றாள். அவசரமாக அதில் ஏறி அமர்ந்து சாம்சனிடம் விடை பெற்று சென்றாள்.
 
அத்தியாயம் 24





துர்காவிற்கு சுஹேலின் மீது ஒரே கோபமாக வந்தது. அவளுக்கு நிச்சயமாக தெரியும், சுஹேல் கண்டிப்பாக திருமணத்திற்கு சம்மதம் தந்திருக்க மாட்டான், ஆனாலும் அவன் பேசிய விதம் அவள் மனதை வருந்தச் செய்தது. பெண் ரொம்ப அழகு, வசதியான இடம் என்றெல்லாம் புகழ்கிறானே! அப்படியானால் அவனுக்கு நான் அழகாக தெரியவில்லையா?, நான் பணக்கார பெண் இல்லை என்று மறைமுகமாக கூறுகிறானோ? என்றெல்லாம் பலவாறு சிந்தித்தவாறே தன் இல்லம் திரும்பினாள். அவளுக்கு சாப்பிட கூட பிடிக்கவில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு படுக்க செல்ல, பார்வதி வந்து அவளிடம், என்ன துர்கா சாப்பிடவில்லையா? என்று கேட்க, பசி இல்லை அண்ணி என்று கூறிவிட்டு படுக்க சென்று விட்டாள். இவள் சாப்பிடாமல் சென்றது பார்வதிக்கு மனம் கேட்கவில்லை, ஒரு கோப்பையில் பால் எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் சென்றாள். இந்த பாலையாவது குடித்து விட்டு படு என்று கையில் கொடுக்கவும், வேறு வழியின்றி அதை அருந்திவிட்டு படுத்தாள், படுத்ததும் அவளுக்கு தூக்கம் வரவில்லை, சுஹேல் பேசியது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சுஹேல் வந்தால் அவனை திரும்பி கூட பார்க்க கூடாது, அவனிடத்தில் பேசக் கூடாது என்று மனதில் கருவிக் கொண்டே தூங்கி போனாள்.



ஒரு வாரம் முடிந்தவுடன் சுஹேல் சென்னை வந்துவிட்டான். வந்தவுடன் குளித்து முடித்து மருத்துவமனைக்கு செல்ல ஆயத்தமானான். பாத்திமா அவனை சாப்பிட்டுவிட்டு போகச் சொல்ல, அவனும் சாப்பிட அமர்ந்தான். அப்போது வாசல் கதவு தட்டும் ஓசை கேட்கவே, பாத்திமா சென்று கதவை திறந்தாள். அங்கே துர்கா நின்றிருந்தாள். சுஹேலை பார்க்க கூடாது பேச கூடாது என்று மூளை சொன்னாலும் மனசு அதை கேட்கவில்லை .அவள் பார்வை சுஹேலை தான் தேடியது. அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். "துர்கா, வாம்மா!" என பாத்திமா அழைக்க, "நேத்து நீங்க அண்ணியிடத்தில் கீரை வாங்கினா உங்களுக்கும் ஒன்று வாங்குமாறு கூறி இருந்தீர்களாமே! அது தான் கொடுத்து அனுப்பினாங்க! என கீரை நிறைந்த பையை பாத்திமாவிடம் நீட்ட, ஆமா ! நேத்திக்கு சொல்லிருந்தேன், ஞாபகமாக வாங்கி இருக்காங்களே! என்று பேசியவாறு அதனை வாங்கி கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.



அப்போதுதான் எழுந்து வந்த அனீஸ், துர்காவை பார்த்து என்னடி இவ்வளவு காலையிலேயே வந்திருக்கே? என்று கேட்டு விட்டு அவளருகே சென்று மெல்லிய குரலில், "உன் ஆளே பாக்காம இருக்க முடியலையோ ! என்று கிசுகிசுக்க, துர்கா சுட்டு விரலை காட்டி உதைப்பேன் என்பது போல் சொல்ல, அனீஸ் சிறிய புன்னகையுடன் அவளை பார்த்தால் அவளோ விடாமல் கோபமாய் சுஹேலை பார்த்துக் கொண்டிருக்க, என்ன இது? ஒரு வாரம் கழித்து இருவரும் பார்க்கிறார்கள். இப்படி கோபமாக சுஹேலை பார்க்கிறாளே! அதுகுள்ளே இருவருக்கும் என்ன சண்டை? என சுஹேலை பார்க்க, அவனோ சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தான். "என்னதான் இங்கு நடக்கிறது என்று தெரியவில்லையே? என்று கேள்வியாய் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தாள். துர்கா சட்டென்று மணியை பார்க்க அது காலை எட்டு மணி என்று காட்டவும், அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று உணர்ந்த துர்கா, "அனீஸ் நான் போயிட்டு வரேன்", ஆண்ட்டியிடமும் சொல்லிடு என்று அவனிடம் சொல்லாமல் வேண்டுமென்றே அவனை தவிர்த்து தன் வீட்டை நோக்கி ஓடினாள்.



அனீஸ் சுஹேலிடம், உங்க இரண்டு பேரு இடையிலே என்னதான்டா நடக்குது? ஒரு வாரம் கழிச்சு இரண்டு பேறும் பாக்கிறீங்க? அவள் என்னமோ உன்னை முறைக்கிறா ! நீ என்னவோ சிரிக்கிறே! என்னாச்சு ? உங்க இரெண்டு பேரு இடையிலும் ஏதாவது சண்டையா? என வினவ, சுஹேல் தான் அன்று துர்காவிடம் தொலைபேசியில் பேசியதை பற்றி கூற, அனீஸ் மாட்டிக்கிட்டாளா? சுஹேல், உன் ரூட் பாதி கிளையர் ஆயிடுச்சி! துர்கா உன்னை காதலிக்கிறாள் என்று வாய்விட்டு சொல்லிட்டாள். இனி நீ உங்க வீட்டில சொல்லி சம்மதம் வாங்கணும், அவ்வளவுதான்! அப்புறம் நிஹ்ஹா தான் என குதூகலிக்க, அது அவ்வளவு சுலபம் இல்லை அனீஸ், இப்போதைக்கு நிஹ்ஹா வேணாம்னு வீட்டில சொல்லிட்டு வந்துட்டேன், " ஏன்டா? என அனீஸ் கேட்க, நான் மேல்படிப்பு படிக்க வேண்டாமா? துர்காவையும் CA படிக்க சொல்லியிருக்கேன்! நாங்க இரண்டு பெரும் நல்ல நிலையிக்கு வந்த பிறகு தான் நிஹ்ஹா என்று முடிவு செய்து இருக்கிறேன். நான் இப்படி சொல்லலைனா எங்க வீட்டில் சும்மா இருக்க மாட்டாங்க! ஏதாவது ஒரு பெண்ணை பார்த்து எனக்கு நிஹ்ஹா பண்ணி வைச்சுடுவாங்க. அதனால் தான் நான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன் என்று கூறவும், அனீஸ் நீ சொல்வது சரிதான்! என ஆமோதித்தாள். துர்கா அலுவலகம் சென்றதும் அவளுக்கு சுஹேலிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. இவள் சீக்கிரமாக அலுவலகம் வந்துவிட்டிருந்தாள்.அலுவலகத்தில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் யாரும் வரவில்லை. துர்கா தொலைபேசியை எடுத்ததும், ஹலோ! என்ற சொல்லிலே சுஹேல் தான் பேசுகிறான் என்று புரிந்துக் கொண்ட துர்கா, "நான் உங்களிடம் பேச விரும்பவில்லை" என கூற, மறுமுனையில் My little sweetheart நீங்க விருப்பம் இல்லனா பேச வேண்டாம், நான் பேசறதை மட்டும் கேளுங்க என கூறவும், ஸ்வீட் ஹார்ட் என்ற சொல்லிலே அவளுடைய பாதி கோபம் பறந்தோட, ஒன்றும் பேசாமல் இருந்தாள். சுஹேல் தன் வீட்டில் நடந்ததை எல்லாம் விவரமாக கூற, அதை சிறு வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள். பேசி கொண்டே இருந்த அவனுடைய குரல் தீடீரென்று குழைந்து, " துரி, உன்னை தவிர என் மனசில் எந்த பெண்ணுக்கும் இடமில்லை, இது உனக்கு தெரியாதா? உன்னிடத்தில் சும்மா விளையாடினேன். அதற்கு போய் இந்த கோபமா "My little angel" என்று கூறவும், துர்காவிற்கு முழு கோபமும் பறந்தோடி விட்டது. சாரி அண்ட் தேங்க்ஸ் என்று துர்கா கூற, சாரி எதுக்கு? தேங்க்ஸ் எதுக்கு? " உங்க மேல கோபம் பட்டத்துக்கு சாரி, நீங்க என் மேல வைத்திருக்கிற காதலுக்கும், நீங்க வாஙகி கொடுத்த CA விண்ணப்ப படிவத்திற்கும் தேங்க்ஸ் என்று கூற எங்களுக்கெல்லாம் தேங்க்ஸ் இப்படி சொன்னா பிடிக்காது, வேறு மாதிரி தான் சொல்லணும், வேறு மாதிரினா அது எப்படினு எனக்கு தெரியலயே! என அப்பாவியாய் துர்கா கேட்க, நீ கமல் படம் எல்லாம் பார்த்ததில்லையா? வாரணாசியில் இருக்கிற நானே பார்த்திருக்கேன், வசூல் ராஜா MBBS படத்திலே ஒரு வைத்தியம் சொல்லுவாரே அது மாதிரி செஞ்சாத் தான் எனக்கு பிடிக்கும் என்று கூற, துர்கா வெட்கத்தில் மௌனமானாள். என்ன பேச்சையே காணோம்? என்று சுஹேல் கூற, இந்த மாதிரி வைத்தியம் எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு தான். இப்போ இல்ல என அவன் மேல பேசுவதற்கு முன் போனை வைக்கிறேன் என்று வைத்துவிட்டாள். நாணத்தால் அவள் கன்னங்கள் சிவப்பேறியது. ஒவ்வொருத்தராய் அலுவலகத்தில் நுழைய, முதலில் வந்த மேனேஜர், துர்காவை பார்த்து, என்னம்மா இன்னைக்கு சீக்கிரமாகவே வந்திட்டியா? பாவம்! காலையிலே வெயிலில் அவசர அவசரமாக வந்தது முகம் எல்லாம் சிவந்து இருக்கு என்று கூற, துர்காவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தலையை மட்டும் ஆமாம்! என்பது போல் மேலும் கீழும் ஆட்டி வைத்தாள்.



உமர் அலிக்கு ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. கூண்டுக்குள் அடைப்பட்ட புலி போல் இங்கும் அங்கும் உலாவிக் கொண்டிருந்தார், சின்ன பையன்னு பார்த்த எப்படி எல்லாம் பேசறான்! இவன் அந்த பொண்ணை தான் காதலிக்கிறான் என்று உறுதியாக தெரிந்து விட்டது. அந்த பொண்ணை மனசில் வைச்சிட்டு தான் என் பொண்ணை வேண்டாம் என்கிறான், என் பெண் அழகுக்கும் அந்தஸ்துக்கும் ஈடாகுமா அந்த பெண்! அந்த பெண் இருக்கிறதாலே தானே என் பெண்ணை வேண்டாம் என்கிறான், அந்த பெண்ணை இல்லாமல் பண்ணி விட்டால் பிறகு என் காலில் தான் வந்து விழவேண்டும். இவனுக்கு நான் சரியான படம் கற்பிக்கிறேன்! என்று உறுமிக் கொண்டு தொலைபேசியை எடுத்தார், ஏதோ ஒரு நம்பருக்கு டயல் செய்ய, மறுமுனையில் சொல்லுங்க ஐயா, எப்படி இருக்கீங்க? என்று கரடு முரடான குரல் கேட்டதும், என்ன ரங்கா நல்லா இருக்கியா? உனக்கு ஒரு வேலை கொடுக்கலாம்னு முடிவு செய்திருக்கிறேன்! என்ன செய்வாயா? என்று அலட்டலாக கேட்க, என்னங்க ஐயா இப்படி கேட்டுபுட்டீங்க? என்ன வேலை மட்டும் சொல்லுங்க ! நிமிஷத்திலே செஞ்சி முடிகிறேன் என்று அவன் கூறவும், உமர் புன்னகைத்தார். இந்த ரங்காவை அவ்வப்போது தொழில் முறையில் ஏற்படும் சண்டை, சச்சரவுகளுக்கு உபயோகித்துக் கொள்வார். அவருடைய விசுவாசமான ஆள் இவன், நான் உனக்கு ஒரு புகைப்படத்தை அனுப்புகிறேன். அதில் இருக்கும் பொண்ணை நீ தீர்த்துக் கட்ட வேண்டும். எவ்வளவு வேணுன்னாலும் பணம் வாங்கிக்கோ! எனக்கு சீக்கிரமாக செய்து முடிக்கணும், சரியா! என்று கூற, அனுப்பி வையுங்க ஐயா! முடிச்சுடறேன், அதிலே ஒன்னும் கஷ்டம் இல்லை, " வழக்கம் போல் ஏதாவது பிரச்சனை வந்தால் எம் பேரு வெளியே வரக் கூடாது என்று உமர் கூறவும், செத்தாலும் சொல்ல மாட்டேங்க ஐயா! சரி, வேலையை முடிச்சிட்டு போன் பண்ணு என்று கூறி போனை வைத்தார். என்கிட்டேயே உன் வேலையை காட்டுறியா சுஹேல் ! என்று குரூரமாய் சிரித்துக் கொண்டார், அப்போது மும்தாஜ் அங்கே வரவே, தன் முக பாவனையை மாற்றி கொண்டு வாம்மா! என்று கூற, வாப்பா, ஏதாவது பிரச்சனையா? உங்க முகம் என்னவோ போல் இருக்கே ! என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா! தொழில் பிரச்சனை தான். அதை நான் பாத்துப்பேம்மா, நீ அதை பத்தி எல்லாம் கவலை படாதே! என்று சொல்லவும், மும்தாஜ், வாப்பா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று அவள் அருகே வர, என்ன விஷயம் சொல்லும்மா? என்று புன்னகைத்தவாறே உமர் கேட்க, வாப்பா ! சுஹேல் வீட்டில் என்ன சொன்னாங்க? என்று அவள் நேராக விஷயத்திற்கு வர, நீ ஒன்னும் வருத்தப்படாதே குட்டி! வாப்பா இருக்கேன் இல்ல, எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்! நீ இன்னும் கொஞ்ச நாள்லே பாரு! அவங்களே வந்து உன்னை நிஹ்ஹா பண்ணிட்டு போவாங்க! அப்புறம் இந்த செல்ல குட்டிக்கு இந்த வாப்பா ஞாபகம் எல்லாம் இருக்குமா! என்று அவர் கிண்டல் அடிக்க, அவர் தான் படிக்கணும் சொல்லறாரே வாப்பா! " படிக்கட்டும் மா நீயும் மாப்பிள்ளையோடு சேர்ந்து போய் படி! அதற்கெல்லாம் நான் ஏற்பாடு பண்ணறேன். இந்த வாப்பா உனக்காக என்ன வேணுன்னாலும் செய்வார் என்று அவளின் முதுகை தட்டிக் கொடுத்தார். மும்தாஜ் மனதில் பாரம் இறங்கியவளாக முகம் மலர்ந்து, சரி வாப்பா! நான் மருத்துவமனைக்கு செல்கிறேன் என்று கூறி சென்றாள். இந்த பொண்ணை போய் வேணாம்னு சொல்லறானே! சுஹேல் உனக்கு என் பொண்ணு கூடத்தான் நிஹ்ஹா, இதை அந்த அல்லாவே நினைச்சாலும் தடுக்க முடியாது என்று கூறி இறுமாப்பாய் சிரித்தார். அவருக்கு தெரியவில்லை அவரை விட விதி வலியது என்று.



சாம்சன் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்துவிட்டான். இந்த மகிழ்ச்சியான செய்தியை அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவாறே அம்மாவை தேடினான். அவன் அம்மா சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்க, அம்மா ! அம்மா! என்று அழைத்தவாறே சென்று அவள் முன்னே நின்றான். அவர்கள் அவனை பார்த்ததும் " என்ன தம்பி கயல் உன்னை காதலிக்கிறதா சொல்லிட்டாளா? என்று மகிழ்ச்சியுடன் வினவ, அவனுக்கு ஒரே ஆச்சரியமாக போனது. இது எப்படி அம்மா உங்களுக்கு தெரியும்? என்று கண்கள் மின்ன கேட்க, அந்த பொண்ணு உன்னை காதலிக்கிறாள் என்று எனக்கு முன்னாடியே தெரியும் தம்பி, ஆனாலும் உங்கிட்ட சொல்லலே! ஏன் தெரியுமா? காதல் சொல்லி தெரியக்கூடாது. நீயே உணருணும் தான் நான் வாயை திறக்கவில்லை. அம்மா! உங்களுக்கு எப்படி அம்மா காதலை பத்தி இவ்வளவு விஷயம் தெரியும்? மகனே! நானும் உன் அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணவா தான். என்ன அவர் எனக்கு அத்தை பையன். அதனாலே எங்க காதலுக்கு தடை ஒன்னும் இல்லை என்று அவள் கூறவும் சாம்சன் அனுபவம் பேசுது என்று அம்மாவை கிண்டல் அடிக்க, ரெபேக்கா வாய்விட்டு சிரித்தாள். பின் சாம்சன் காலையில் நடந்தவற்றை எல்லாம் கூற, ரெபேக்கா அவளுடைய அப்பாவை கூட பார்த்தியா? எனக் கேட்க, ஆமாம்மா! தற்செயலாக தான் பார்த்தோம்! ஆனா அவர் முகமே சரியில்லைம்மா! என்னை அவருக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன் என வருத்தம் தோய்ந்த முகத்தோடு கூறினான். அதை பத்தி எல்லாம் யோசிக்காதே! கல்யாணம் ஆனா எல்லாம் சரியாயிடும். நீ நாளைக்கே போன் பண்ணி விசாரி. அவங்க அப்பா, அம்மா சம்மதிச்சிடாங்களா என்று கேளு. நல்ல பதிலா சொன்னா, நாளைக்கே போய் பொண்ணு கேப்போம்! அப்படி இல்லனா கயல் கிட்டேயே என்ன செய்யலாம்னு கேளுப்பா. அவள் கண்டிப்பா உன்னை தவிர யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டா, மேற்கொண்டு என்ன செய்யலாம்னு அவளே சொல்லுவா! என அன்னை கூறியவுடன் தான் சாம்சனுக்கு நிம்மதி பிறந்தது.
 
Last edited by a moderator:
அத்தியாயம் 25



கயலுக்காக வாசலிலே காத்திருந்தார் கமலநாதன். ஆம்! அவர் உணவு விடுதியில் கயலையும் சாம்சனையும் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த போது அவர் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அவர் வாஸந்தியிடம் கூட இதை பற்றி பேசவில்லை. வாஸந்தி, கமலநாதனின் முகத்தை பார்த்ததும், என்னாச்சு இவருக்கு? ஏன் ஏதோ போல் இருக்கிறார்? என்று நினைத்துக் கொண்டு, என்னங்க , உடம்பு சரியில்லையா? என்று வினவ, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி வெளி வராண்டாவில் வந்து அமர்ந்துக் கொண்டார்.



கயல் வீட்டிற்கு வந்ததும் தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவரும் அவளை பார்க்க, என்னப்பா? என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்க, கமலநாதன், உன்னிடத்தில் பேசணும்மா, நீ போய் பிரெஷ் ஆயிட்டு வா! என்று அவளை உள்ளே அனுப்பினார். கயலும் தந்தையிடம் என்ன பேசவேண்டும் என்று மனதிற்குள் சிந்தித்துக் கொண்டே குளியல் அறை நோக்கி சென்றாள்

அவள் வெளியே வந்ததும், வாஸந்தி அவளிடம் என்னடி யாரோ முக்கியமான நபரை பார்க்கணும் போனியே பாத்தியாடி? என்று கேட்கவும்தான், அப்பா, சாம்சனை உணவு விடுதியில் பார்த்தது அம்மாவிடம் சொல்லவில்லை என்று தெரிந்தது. இதற்கு மேல் இந்த விஷயத்தை தள்ளி போடக்கூடாது என்று எண்ணியவளாக ," அம்மா, நீயும் என் கூட வாசல் வராண்டாவுக்கு வாம்மா" என்று கூறி அன்னையையும் அழைத்துக் கொண்டு தந்தை இருக்குமிடம் நோக்கி வந்தாள். கமலநாதன் அவளை பார்த்ததும் உட்க்காரு கயல்! என தன்னருகில் அமர்த்திக் கொண்டார். இப்ப சொல்லுமா! நான் உணவு விடுதியில் பார்த்த அந்த முக்கியமான நபர் யார்? நீ ஏன் அவரை பார்க்க போனே? எனக் கேட்டதும் கயல் சற்று தயங்கியவளாக, ஆனால் உறுதியாக அவள் பேச்சு வெளிப்பட்டது. அப்பா, அவர் பெயர் சாம்சன், அவர் அங்கு தான் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கமலநாதன் இடை மறித்து, இதை தான் அங்கேயே சொல்லிட்டியே! மேலே சொல்லம்மா என இறுக்கமான முகத்துடன் கூற, அப்பா, அது வந்து.. "நான் அவரை விரும்பிகிறேன் அப்பா" அவரும் என்னை நேசிக்கிறார். உங்களின் அனுமதியுடன் நான் அவரை திருமணம் செய்துக்க கொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஒரு வழியாக சொல்லி முடிக்கவும் அருகிலிருந்த வாஸந்தி சற்று அதிர்ந்து தான் போனாள், இவனைத்தான் முக்கியமான நபர் என்று சந்திக்க போனாளா? இவளுக்கு ரொம்ப தான் தைரியம் கூடி போச்சு, டாக்டராக இருக்கிறதால வந்த தைரியமா? என்று மனதிற்குள் திட்டியவளாக அவளை பார்த்து பேச ஆரம்பிக்கும் பொது கமலநாதன் கையை காட்டி அவளை பேச வேண்டாம் என்று சைகை காட்டி விட்டு, நாங்கள் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வாய் கயல்? என்று இறுக்கமான முகத்துடன் கேட்க, நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் அப்பா என்று அவள் தைரியமாக கூற, கமலநாதன், இது தான் நீ எங்களுக்கு மகளாக காட்டும் நன்றியா! உன்னை மருத்துவராக்க நானும் உன் அன்னையும் பணத்திற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, அது உனக்கே தெரியும். அப்படி கஷ்டப்பட்டு படிக்க வைத்த எங்களுக்கு உனக்கு ஏற்ற மாப்பிள்ளையை பார்க்க மாட்டோமா? அல்லது எங்களிடம் நம்பிக்கை இல்லையா? என்று கேட்க. அப்பா, நீங்கள் எனக்கு ஏற்றவாறு ஆயிரம் மாப்பிள்ளைகளை பார்க்கலாம், நான் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் எனக்கு பிடித்தவரோடு நான் வாழ்ந்தால் தான் அப்பா என்னால் மனநிறைவோடும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். உங்களையும், அம்மாவுவையும் போல் நானும் சந்தோஷமாக வாழ வேண்டாமா அப்பா? அதற்கு என்னை மணப்பவரை நான் நேசித்து அன்பு செலுத்தினால் தான் என்னால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று கயல் கூற, அவன் நம்முடைய மதமும் இல்லை அவர்கள் வழிமுறைகள் வேறு, நம்முடைய வழிமுறைகள் வேறு, உன்னால் அங்கு போய் எப்படியம்மா சந்தோஷமாய் இருக்க முடியும் என்று கமலநாதன் கேட்கவும், அப்பா, உண்மையான அன்பு மதங்களை எல்லாம் கடந்தது. நான் அவர் மேல் வைத்த அன்பும் அவர் என் மேல் வைத்த அன்பும் என்றுமே மாறாது என்று கூறவும் அதற்கு மேல் கமலநாதனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தன்னுடைய செல்ல மகளை கடிந்து பேசவும் அவருக்கு மனம் வரவில்லை. சரிம்மா! நான் எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் உன் விருப்பம். என்னால் முழு மனதுடன் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இருந்தாலும் என் கடமையை செய்வேன். நாளைக்கே அந்த பிள்ளைக்கு போன் பண்ணு. நல்ல நாளாய் பார்த்து அவர்களை பெண் கேட்டு வரச் சொல் என்று கூறி அவர் சென்றதும், வாஸந்தி மகளிடம் வந்து கயல், நான் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவள் அல்ல. ஆனால் என்னுடைய கவலை எல்லாம் அந்த பையன் உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். நீ சந்தோஷமாக இருந்தால் தான் நாங்களும் சந்தோஷமாக இருக்க முடியும் கயல், என்று கண்களில் நீர் பனிக்க கூறியதை கேட்ட கயல், அம்மா! என்று அவளை கட்டிப்பிடித்து உங்களின் ஆசிர்வாதம் இருந்தால் கண்டிப்பாக நான் நன்றாக இருப்பேன் அம்மா என்று அவளும் கண் கலங்க கூறினாள். அங்கு ஒரு பாசப் போராட்டமே நடந்துக் கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் வாஸந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சரி! கயல், நீ போய் அந்த பிள்ளைக்கு போன் பண்ணிவிட்டு வா. நான் நாளைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு உள்ளே சென்றாள். அப்பாடா! என்றிருந்தது கயலுக்கு. என்ன பூகம்பம் வெடிக்குமோ என்று பயந்து வீட்டிற்குள் வந்ததற்கு இப்போது கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. இப்போதே அவள் முன் கல்யாண கனவுகள் ஓடிக்கொண்டிருந்தது.



துர்காவிற்கு அன்று CA நுழைவு தேர்வு. அவள் நன்றாக படித்து தான் இருந்தாள். இருந்தாலும் மனதிற்குள் பயம் வந்து நடனமாடியது. அன்று அலுவலகத்திற்கும் விடுப்பு எடுத்திருந்தாள். காலை சீக்கிரமாகவே எழுந்து தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று விநாயகரை மனப்பூர்வமாக வணங்கினாள். கடவுளே! என்னை இந்த தேர்வில் ஜெயிக்க வைத்து விடு. இந்த வேண்டுதல் எனக்காக மட்டுமல்ல. என் சுஹிக்காகவும் தான். நான் வாழ்க்கையில் நல்ல நிலமையில் உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு என்னை இந்த தேர்வை எழுத தூண்டியுள்ளார். அந்த நல்ல எண்ணத்திற்காவது என்னை இந்த தேர்வில் தேர்ச்சி செய்து விடு என்று மனப்பூர்வமாக வேண்டினாள். பின் அங்கிருந்த படியில் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்து இருந்தாள். கோவிலில் இருந்து கிளம்பிய போது வழியில் சுஹேலுக்கு போன் பூத்தில் இருந்து போன் செய்தாள். அவளுக்கு தெரியும், பாத்திமா கண்டிப்பாக போனை எடுக்க மாட்டாள், இந்த நேரத்தில் அவள் சமைத்துக் கொண்டிருப்பாள். அனீஸ் அப்பா சம்சுதீனும் நடப்பதற்காக வெளியில் சென்றியிருப்பார். ஒன்று அனீஸ் போனை எடுக்க வேண்டும் அல்லது சுஹேல், இருவரில் யார் எடுத்தாலும் பேசலாம் என்று எண்ணி போன் செய்ய, போனை சுஹேலே எடுக்கவும், அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.சுஹேல், நான் இன்னைக்கு CA நுழைவு தேர்வுக்கு செல்ல போறேன். உங்ககிட்ட சொல்லலாம் என்று தான் போன் செய்தேன். உங்க வீட்டிற்கு வந்து உன்னிடம் பேச முடியாது. அது தான் டெலிபோன் பூத்தில் இருந்து பேசுகிறேன் என்று சொல்லவும் சுஹேல், வாழ்த்துக்கள் துர்கா! நல்லா எழுது! நானே உன்னை கொண்டு போய் தேர்வு எழுதும் மையத்தில் விட்டுறேன், நீ பேருந்து நிலையத்தில் எனக்காக காத்திரு! நான் வந்திறேன்! என்று கூறவும் துர்காவும் சரி என்று போனை வைத்தாள்.



வீட்டிற்கு வந்ததும் கோவில் பிரசாதத்தை பார்வதியிடம் கொடுத்து விட்டு, ஏதோ உண்டேன் என்ற பெயரில் அவசர அவசரமாக இரண்டு இட்லிகளை வாயில் திணித்து கொண்டு காலை உணவை முடித்தாள். பிறகு தேர்வுக்கு தேவையானதை பையில் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பினாள். வீட்டிற்குள் இருந்து ஓடி வந்த லாவண்யா அவளுக்கு ஆல் தி பெஸ்ட் அத்தை என்று சொல்ல, தேங்க் யூ குட்டி என்று செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளி விட்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றாள் சிறிது நேரத்தில் சுஹேல் வந்துவிட, துர்கா அவனின் பைக்கில் ஏறி அவனை தொடாமல் சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டாள். சுஹேலுக்கு கடுப்பாக வந்தது. ஏன் கொஞ்சம் ஒட்டி உட்க்கார்ந்தால் என்ன அம்மணி தேஞ்சி போய்டுவீங்களோ! தேஞ்சி போய்டமாட்டேன் ஆனால் உங்ககிட்ட வீழ்ந்து போயிடுவேன் என்று மனதில் எண்ணியவளாக, கல்யாணம் வரை இந்த தூரம் பின்பற்றினால் தான் எனக்கும் நல்லது, தங்களுக்கும் நல்லது என்று கூறி சிரிக்கவும், ஸுஹேல் இதுக்கு நீ பஸ்சிலேயே போய் இருக்கலாம் என்று கூறி வண்டியை எடுத்தான். அவள் இறங்கும் இடம் வந்ததும், சரி துர்கா, தேர்வு முடிந்ததும், எப்படி எழுதினே என்று எனக்கு போன் பண்ணு. உன்னை திரும்ப அழைச்சிட்டு போக என்னால் வர முடியாது, எனக்கு மருத்துவமனையில் முக்கியமான வேலை இருக்கு. அதனால் நீயே ஆட்டோவிலோ அல்லது பஸ்சிலோ வந்திரு. பை! என்று கூறி வண்டியை தன் மருத்துவமனைக்கு திருப்பினான்.துர்கா தேர்வு எழுதும் அறையை கண்டுபிடித்து அமர்ந்தாள். தன்னால் முடிந்தவரை அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி விட்டு விடை தாளை அங்கு இருக்கும் தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்தாள். சுஹேலுக்கு போன் செய்ய வேண்டும் என்று எண்ணியவாறே சென்று கொண்டிருக்க, பின்புறமாக அவளை நோக்கி வேகமாக வரும் லாரியை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அதை சற்று தொலைவில் நின்றிருந்த பெண் கவனிக்க, சட்டென்று பாய்ந்து வந்து துர்காவை பிடித்து தன் முரமாக இழுக்க, எழுத வேகத்தில் இருவரும் சேர்ந்து நடை மேடையில் விழ, அதன் விளிம்பு பட்டு துர்காவிற்கு காலில் இரத்தம் கசிந்தது. அந்த பெண்ணிற்கோ காய் கால்கள்களில் சிராய்ப்புகள். நல்ல வேலை இருவருக்கும் தலையில் அடிபடவில்லை. துர்கா தன்னை காப்பாற்றிய பெண் யார் என்று பார்க்க, இந்த பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தாள். சட்டென்று அவள் மூலையில் மின்னல் பளிச்சிட, நீங்க கயல் தானே? நீங்க எப்படி இங்கே? என்று துர்கா கேட்கவும், கயலுக்கு அவள் துர்கா என்று நினைவுக்கு வர, நீங்க சுஹேலின் தோழி துர்கா தானே, கொஞ்ச நாள் முன்பு மருத்துவமனைக்கு வந்து விண்ணப்ப படிவம் வாங்கி செண்றீர்களே? என்று கேக்கவே, அவளும் ஆமாம்! என்று தலை அசைத்து விட்டு, அந்த தேர்வு எழுதி விட்டு வந்து கொண்டிருந்த போது தான் இப்படி..என்று அவள் வலியுடன் கூற, ரொம்ப நன்றி கயல், நீங்க வந்து என்னை காப்பதிலேனா நான் இன்னைக்கு.. என பயத்துடன் கண் கலங்கினாள். பரவாயில்லை, துர்கா நீங்க பயப்படாதீங்க, அந்த லாரிக்காரன் ஏன் அவ்வளவு வேகமாக உங்களை நோக்கி வந்தான்? உங்களை காப்பாத்திர அவசரத்தில் லாரியை சரியா பாக்கலே.நம்பர் பிலேடையும் கவனிக்கல, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுனு சொல்லுவாங்களே, அது போல் சின்ன அடியோடு போச்சு. வாங்க துர்கா, பக்கத்தில் ஏதாவது மருத்துவமனை இருந்தால் முதலுதவி செஞ்சிக்கலாம் என்று ஒரு மருத்துவராய் கயல் சொல்ல, துர்காவும் ,கயலும் அருகில் இருக்கும் சிகிச்சையகத்திற்கு சென்றார்கள்.



அங்கு துர்காவிற்கு காலில் இரத்தம் நிற்பதற்கு மருந்து போட்டு கட்டு கட்டி விட்டிருந்தனர். கயலுக்கு சின்ன சின்ன சிராய்ப்புகள் என்பதால் மருந்து தடவி இருவருக்கும் செப்டிக் ஆகாமல் இருக்க ஊசி போட்டனர், துர்கா, கயலிடம் என்ன வேலையா இங்கு வந்தீங்க? என்று கேட்க, எனக்கு மருத்துவம் சம்பந்தமான புத்தகம் வாங்க வேண்டி இருந்தது. அது இங்கே தான் கிடைக்கும் என்று என் தோழி ஒருத்தி சொன்னாள். அதற்காகத் தான் மருத்துவமனைக்கு கொஞ்சம் தாமதமாக வருவதாக சொல்லிவிட்டு புத்தகத்தை வாங்கி செல்லலாம் என்று வந்தேன். நான் வந்ததும் நல்லதாக போய் விட்டது என்று கூறி சிரித்தாள்.



துர்காவால் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை. ஏன்னென்றால் அவளால் இன்னும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. ரொம்ப நன்றி கயல். சமயத்தில் வந்து காப்பாத்துனீங்க, என மறுபடியும் நன்றி உரைத்தாள். எத்தனை தடவை தான் நன்றி சொல்லுவீங்க? சரி! உங்க நன்றியை எனக்கு ஒரு கப் காபி வாங்கி கொடுக்கிறது மூலமா தீர்த்துக்கிறிங்களா? என்று புன்னகையோடு கூறவும், வாங்க போகலாம் என்று இருவரும் அருகில் இருந்த சின்ன உணவு விடுதிக்குள் நுழைந்தனர். அப்போதுதான்துர்காவிற்கு, சுஹேலுக்கு போன் பண்ணவில்லை என்ற நினைவே வந்தது. வீட்டிலேயும் தேடுவார்கள் என்ற எண்ணம் தோன்ற, கயல் நாம கிளம்புவோமா? இங்கு அதிக நேரம் ஆனதாலே எங்க வீட்டிலேயும் தேடிட்டு இருப்பாங்க! பக்கத்தில் ஏதாவது போன் பூத் இருந்தால் நான் போய் வீட்டிற்கு தெரிவிக்கணும் என்று கூற, நானும் கிளம்பறேன் துர்கா! நான் என்னுடைய வண்டியில் தான் வந்தேன். வரும் போதே பார்த்தேன் இந்த உணவு விடுதிக்கு பக்கத்தில் ஒரு போன் பூத் இருக்கு. நீ போய் போன் பண்ணிவிட்டு வா! நான் வேண்டும்மென்றால் உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன், நான் உன்னை வீட்டில் விட்டுட்டு போறேன்என்று சொல்ல, உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நான் ஆட்டோவிலே போயிறேன்! உங்களுக்கு ஏற்கனவே என்னால் தாமதமாகி விட்டது. உங்க வீட்டிலேயும் தேடுவாங்க, அதனாலே நீங்களும் சீக்கிரமாக கிளம்புங்க! என துர்கா உரைத்தாள். சரி துர்கா, நீங்க பத்திரமாக வீட்டுக்கு போயிடுவீங்களா! என கயல் அக்கறையாக கேட்க, கவலைப்படாதீங்க ! பத்திரமாக போயிடுவேன் என்று அவர் கூறி சிரித்தாள். பிறகு இருவரும் வெளியில் வந்தனர். துர்கா போன் பூத் நோக்கி விரைய, கயல் தன் வண்டியை நோக்கி சென்றாள். மருத்துவமனைக்கு போன் பண்ணி வரவேற்பாளரிடம் சுஹேலிடம் பேச வேண்டும் என்று கூற, அவர் ஒரு ஆபரேஷனில் இருக்கிறார், ஒரு மணி நேரத்திற்கு பேச முடியாது என்று கூற, போனை வைத்துவிட்டு, அவளின் அண்ணனுக்கு போன் செய்தாள். அவன் அப்போதுதான் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தான் போன் அடித்ததும் எடுக்க, அண்ணா, "நான் துர்கா பேசறேன்" வழியில் ஒரு சின்ன விபத்து, ஆபத்தெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா. நேரமாகிவிட்டது என்று தான் போன் பண்ணேன். நீங்க அப்பாவிற்கும் அண்ணிக்கும் சொல்லிடுங்க அண்ணா என்று கூறவே, வாசுதேவன் பயந்து விட்டார் போலும், என்னாச்சு துர்கா! எப்படி விபத்து நடந்தது? என நடுங்கிய குரலில் கேட்டார். நான் எல்லாத்தையும் வீட்டிற்கு வந்து சொல்றேன் அண்ணா. இப்போதான் கிளம்புறேன், எப்படியும் வர ஒரு மணி நேரம் ஆகும், அதனால் தான் போன் பண்ணினேன் என்று கூறவும், சரிம்மா! நிதானமாக வா! நான் வேண்ணா வந்து உன்னை அழைத்துச் செல்லவா? நீ அங்கேயே இருக்கியா? எனக் கேட்கவும், அதெல்லாம் வேணாம் அண்ணா, நான் ஆட்டோவில் வந்துருவேன் என்று கூறி போனை வைத்தாள்.
 
Last edited by a moderator:

New Threads

Top Bottom