- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
கொல்வதெல்லாம் உண்மை.
அத்தியாயம் 10
அன்று மதியம் வினோத் கொலை செய்யப்பட்டவனின் முழு விவரங்களோடு வந்து சேர்ந்தான். அவனது பெயர் டேவிட் என்று கூறியவன் பைலை மேஜை மீது வைத்து விட்டு சேரில் சாய்ந்தான்.
" என்னதுரை ?அலைச்சல் அதிகமோ ?" என்றான் அருண்.
"வெய்யிலில் அலைந்து பார்த்தால் தெரியும். உங்களுக்கு என்ன பாஸ்? யோசிப்பதாக பெயர் பண்ணிக்கொண்டு ஏசி ரூமில் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள். என் போன்ற பேச்சிலர் பசங்களை வெளியே அலையவிட்டு நிறைய பாவத்தை சேர்த்து கொண்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக உங்களுக்கு நரகம் தான்." என்றான் வினோத் கடுப்புடன்.
"சொர்க்கத்தில் என்ன இருக்கப் போகிறது வினோத். சுற்றிலும் நல்லவர்கள் வாழும் ரொட்டினான ஒரே வாழ்க்கை. அது எனக்கு விரைவிலேயே போரடித்து விடும். நரகம் தான் என்னுடைய சாய்ஸ். அங்கே தான் நிறைய குற்றவாளிகள் , நிறைய க்ரைம் ஸ்டோரிகள் என்று வாழ்க்கை திடுக் திருப்பங்களுடன் நகரும். ஐ லவ் ஹேல் "
"பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல் குற்றவாளிகளோடு பழகி பழகி நீங்களும் மனதளவில் குற்றவாளியாகவே மாறிவிட்டீர்கள் போலிருக்கிறது. நேற்றியிருந்து எனக்கு ஒரு டவுட்?"
" கேள். பதில் தெரிந்தால் கூறுகிறேன்"
"நேற்று ஏதோ ஜாக் தி ரிப்பர் என்று ஒரு பெயரை குறிப்பிட்டீர்களே? அது யார்?"
" அவனா? அவன் இருபதாம் நூற்றாண்டு வரை 200 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத கொலையாளி . 1885ல் லண்டனில் இருக்கும் விலைமாதர்களை மிக கொடுரமாக தேடித் தேடிக் கொன்றவன். அவனைப் பற்றி போலீசிற்கு 1000 துப்புகள் கிடைத்தும் ஆசாமியார் என்று இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. 5 வருடங்கள் தொடர்ந்து கொலை செய்தவன் திடிரென தனது ரத்த வேட்டையை நிறுத்தி கொண்டான். அந்த பிடிபடாத கொலைகாரனுக்கு போலீஸ் வைத்த பெயர் தான் ஜாக் தி ரிப்பர். அவன் யாராக இருப்பான் என்று பல யூகங்கள் இருக்கின்றன. அந்த சந்தேக பட்டியலில் கசாப்பு கடைகாரனில் இருந்து இங்கிலாந்து அரசியின் பல் டாக்டர் வரை பலரின் பெயர் அடிபடுகிறது. ஆனால் என்னுடைய கணிப்பு வேறு "
"அது தானே பார்த்தேன். எல்லோரும் ஊருக்குள் போனால் நீங்கள் நேர் எதிராக சுடுகாட்டிற்கல்லவா போவீர்கள். உங்கள் கணிப்பை சொல்லுங்கள். கேட்போம்."
"ஜாக் திரிப்பர் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த கொலைகாரன் ஒரு பெண் என்பது என்னுடைய யூகம்."
" என்ன தலைகீழாக சொல்கிறீர்கள்?"
"ஆமாம். என்னுடைய யூகம் அது.ஓரு நல்ல பெண் தவறான இடத்தில் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவளுடைய அம்மாவும் சகோதரியும் மோசமான நடத்தை கொண்டவர்களாக இருந்திருக்க கூடும். அதனால் அந்த பெண் நிறையவே பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். மோசமான பெண்களினால் தான் நல்ல பெண்களும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்று அவள் நினைத்திருக்க கூடும். அந்த மன பாதிப்பில் அவள் கொலைகளை செய்திருக்க கூடும்." ( ஆபத்து ஆரம்பம் நாவல்)
"கொலை செய்வது என்ன ரயில் சீசன் டிக்கெட்டா? ஐந்து வருடங்கள் கொலை செய்து விட்டு அப்படியே அமைதியாகி விட?"
"அவள் கொலை செய்த 5 வருடங்களுக்கு பிறகு அவளுக்கு திருமணமாகியிருக்கலாம். அன்பான கணவன் வாய்த்திருக்கலாம். அதனால் கொலை செய்து மாட்டி கொண்டு கிடைத்த நல்ல வாழ்க்கையை இழப்பதை விட கிடைத்த வாழ்க்கையை வாழ்வது மேல் என்று நினைத்திருக்கலாம்."
"நம்பும்படியாகத் தான் இருக்கிறது உங்கள் கதை. இன்னொரு டவுட் கூட எனக்கு இருக்கிறது."
" கேள்"
"அந்த செத்து போன செல்வராணியின் கணவன் ஜோசப் அவன் பெயரும் Jவில் தான் ஆரம்பிக்கிறது. அவனை ஏன் நீங்கள் சந்தேக பட்டியலுக்கு கொண்டு வரவில்லை."
"அவனைப் பார்த்தால் வேலை செய்யும் ஆபிசிலிருந்து பென்சில், பேனா கூட திருட பயப்படுகிறவன் போல் இருக்கிறான். அவனுக்கு கொலை செய்யும் அளவிற்கு தைரியம் கிடையாது. அவனை சந்தேக பட்டியலிலிருந்து தூக்க இன்னொரு காரணமும் இருக்கிறது."
.
"என்ன அது?"
" அவனுக்கு வயது 35 தான். நம் கொலைகாரனுக்கு வயது 50 to 60. லாஜிக்காக ஓத்து வரவில்லை. அதனால் தான் நான் அவனை சந்தேகிக்கவில்லை." என்றான் அருண்.
"நல்ல பாயிண்ட் பாஸ்"
"சரி நீ போய் விட்டு வந்த காரியம் என்னவானது?"
"செத்துப் போன டேவிட்டை பற்றி நானும் அக்கம் பக்கம், அவன் வேலை செய்யும் அலுவலகம் என்று பல இடங்களிலும் விசாரித்து விட்டேன். அவனை பற்றி வெவ்வேறு விதமான தகவல்கள் கிடைக்கின்றன."
" எல்லாவற்றையும் சொல். கேட்கிறேன். அதற்கு பிறகு நாம் ஒரு முடிவுக்கு வருவோம்"
"அந்த டேவிட்டுக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும் நான்சி என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்கள். அந்த ஸ்டெல்லா ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். நன்றாகத்தான் அவளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறான். சில வருடங்களுக்கு முன்பு அவன் மனைவிக்கு சித்த பிரமை ஏற்பட்டுவிட்டது. பொருட்களை மாற்றி வைப்பது. சாப்பாட்டில் மறந்து நிறைய உப்பு போடுவது, குழந்தையை யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாக பிதற்ற ஆரம்பித்து விட்டாள். அவனும் அவளை பல இடங்களுக்கு கூட்டி போய் குணப்படுத்த முயற்சி செய்திருக்கிறான். கடைசியில் ஒரு நாள் தன் மகளையே அவள் கொன்று விட்டாள். கொலை குற்றத்திற்காக அவள்மனநல விடுதிக்கு போய் விட்டாள். அவளது புத்தி பேதலிப்பை காரணம் காட்டி அவளுடன் குடும்பம் நடத்த முடியாதென்று அவளிடம் விவாகரத்து வாங்கி கொண்டு விட்டான்.கொஞ்ச நாட்கள் குடியும் தாடியுமாக சோகமாக சுற்றி கொண்டிருந்த டேவிட் மிக விரைவிலேயே பணக்கார பெண் ஒருவளை திருமணம் செய்து கொண்டு விட்டான்."
"பாவம் அந்த டேவிட்"
"நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். அவனது அலுவலகத்தில் வேறு மாதிரி பேசுகிறார்கள். டேவிட் பணக்கார பெண் ஒருத்தியுடன் ஏற்பட்ட காதலால் தான் அவளை பைத்தியமாக்கிவிட்டான் என்றும் அந்த குழந்தையை கொன்றது அவன் தான் என்றும் பேசி கொள்கிறார்கள்."
"அடக்கடவுளே! பெற்ற குழந்தையை எவனாவது கொல்வானா?"
"கொன்றிருக்கிறான். கொன்று விட்டு பழியை மனைவி மீது போட்டு விட்டான். அவன் அலுவலகத்தில் ஏராளமான பணத்தை கையாடல் செய்திருக்கிறான். அதை அவனது புது மனைவி தான் கட்டி அவனை மீட்டிருக்கிறாள். "
"போலீஸ் அவனை சந்தேகிக்கவில்லையா?"
"முதல் சந்தேகமே அவன் மீது தான். ஆனால் எப்படியோ நீதிபதியை சரிகட்டி வழக்கிலிருந்து தப்பித்ததுடன் அவனது வக்கீலின் சாதுர்யமான வாதாடும் திறமையால் பழியை மனைவி மீது போட்டு தப்பித்து விட்டான். "
"அப்படியானால் தண்டிக்கப்பட வேண்டிய ஓரு குற்றவாளியைத்தான் நம் கொலைகாரன் போட்டு தள்ளியிருக்கிறான்."
"ஆமாம்.டேவிட்டை கொல்ல அவனுக்கு சரியான காரணம் இருந்திருக்கிறது."
"செத்து போன அத்தனை பேரும் ஏதோ ஓரு விதத்தில் சட்டத்திலிருந்து தப்பியிருக்கிறார்கள். பிறகு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்."
"பைனல் டெஸ்டினேசன் படம் போல் இருக்கிறது" என்றான் வினோத்.
சுவர் கடிகாரம் மணி 5 என்று சத்தமிட்டது.
"நாம் இப்போது கிளம்பினால் தான் பாதர் ஜேம்ஸ் அடைக்கலராஜை சந்திக்க முடியும் "
இருவரும் கிளம்பினார்கள்.