Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

Status
Not open for further replies.

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 20

அன்று மாலை வினோத் ரத்தப் பரிசோதனை ரிப்போர்டுடன் வந்து சேர்ந்தான்.அருண் அதைப் பார்த்து விட்டு மேஜையில் வைத்தான்.

"இப்போது நமக்கு ஒரு உண்மை தெரிந்திருக்கிறது. நம்முடைய கொலைகாரன் ஒரு புற்றுநோய் பேசண்ட் அவனது ரத்த வகை ஓகுருப்"

"ஓ இப்போது புரிகிறது. அவன் ஏன் இவ்வளவு வேகமாக எந்த இடைவெளியும் கொடுக்காமல் கொலை செய்கிறான் என்று. தான் சாவதற்குள் தான் வேட்டையாட வேண்டிய நபர்களை கொலை செய்து விட வேண்டும் என்று நினைக்கிறான்."

" ஆனால் ஒரு நாள் இடைவெளி விட்டிருக்கிறான். அன்று அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்திக்கலாம்."

"கரெக்ட். ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் சொற்ப தகவல்களை வைத்து கொண்டு நாம் எப்படி அவனை கண்டுபிடிப்பது?"

"அது எளிது..நகரத்தில் புற்றுநோயிற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனைகள் எத்தனை உள்ளன என்று முதலில் தேடிப் பிடிப்போம்."

"நீங்கள் அந்த மருத்துவமனைகளில் போய் கேட்டதும் இந் தாருங்கள் நோயாளிகளின் லிஸ்ட் என்று தாம்பூலதட்டில் வைத்து டாக்டர்கள் தந்து விடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? நோயாளிகள் சம்மந்தப்பட்ட எந்த விசயத்தையும் வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் எடுத்து கொள்ளும் உறுதி மொழியல்லவா?"

"அட ஆமாம். அதை நான் மறந்து தொலைத்து விட்டேன். அந்த சைமனை அவன் ஏன் கொல்லாமல் விட்டு விட்டான்? அந்த சமயத்தில் அவனுக்கு உடல் உபாதை ஏதாவது ஏற்பட்டிருக்குமோ?"

"பாயிண்ட் பாஸ். நீங்கள் சொல்வது போல் அவனுக்கு உடல் உபாதை ஏற்பட்டிருக்கலாம். கூடவே அவனது முதுமையான வயதும் சேர்ந்து கொண்டிருக்கலாம். அந்த சைமன் வேறு ஒரு முழு ஆட்டை முழுங்குமளவிற்கு காட்டெருமை போல் இருக்கிறான்."

"அந்த சைமனை பார்த்தாயா என்ன?"

"ரஞ்சன் அங்கே தான் இறந்தார். பிளட் ரிப்போர்டை வாங்க செல்லும் போது அவனைப் பார்த்தேன். தலையில் பலமாக அடிபட்டதால் இன்னும் மயக்கத்தில் இருப்பதாக டாக்டர் கூறினார். அவன் கண் விழிக்க இன்னும் ஒரு நாள் ஆக கூடும் என்று மருத்துவமனையில் சொன்னார்கள்"

" அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறதா?"

"கையில் விறகு கட்டையுடன் இரண்டு போலீஸ்காரர்கள் எப்போதும் கொட்டாவி விட்டபடி வராண்டாவில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டும் நர்ஸ்களிடம் அரட்டை அடித்துக் கொண்டும் இருக்கிறார்கள்."

" அவனது மனைவி, குடும்பம்?"

" எல்லோரும் வெளியூர் டூர் போயிருக்கின்றனர்."

" இவனை கொன்றிருந்தால் இவனுக்கு கொலைகாரன் தந்திருக்க வேண்டிய நெம்பர் 9/10. அந்த ஒன்பதாவது கட்டளை என்ன?"

"திடுதிப்பென்று கேட்டால் எப்படி ? நான் கூகுளில் பார்த்து சொல்கிறேன்." என்ற வினோத் செல்போனில் தேடி பிடித்து சொன்னான்.

"அடுத்தவனுக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக"

"அதைப் பற்றி விசாரித்து விட்டாயா? ஆசாமி மீது ஏதாவது கோர்ட், கேஸ் என்று வில்லங்க விவகாரங்கள் இருக்கிறதா?"

"எனக்கு தெரியவில்லை பாஸ். நான் வேண்டுமானால் நாளை விசாரிக்கிறேன்.அப்படியே பாதர் அடைக்கலராஜின் மரணத்திற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டு வருகிறேன்.அவரது மரணம்தான் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது! "

"அது இருக்கட்டும். நீ போன விசயம் என்னவானது?"

அதை ஏன் கேட்கிறீர்கள் ?கொலை செய்யப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரே வக்கீல் வாதாடியிருந்தால் என்னுடைய தியறிக்கு உயிர் வந்திருக்கும். இங்கே வாதாடியவர்களுக்கு ஆஜரான அத்தனை பேரும் வெவ்வேறு ஆட்கள் .ஏராளமான கேஸ்களுடன் பிசியாக இருப்பவர்கள். இவர்களுக்கு ஒருவனை பின் தொடர்ந்து பார்த்து கொலை செய்யுமளவிற்கு நேரம் இல்லை. அதை விட முக்கியமான விசயம் வாதாடிய வக்கீல் ஒருவனுக்கு கூட கேன்ஸர் இல்லை."

" ஆக அந்த தியரியும் பிளாப்பாகி விட்டது. நம் முதுகுக்கு பின்னால் ஆட்டம் காட்டும் அவன் எங்கே தான் இருக்கிறானோ?"

"ஆனால் பாஸ் அவனது நோயை வைத்தும் ரத்த குரூப்பை வைத்தும் அவனை கண்டு பிடிக்க முயற்சி செய்யலாம்"

"அதற்கு வேறு ஏதாவது வழியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது பிரச்சனை என்னவென்றால் கொலைகாரனை கண்டுபிடித்தாலும் கேஸ் முடிந்து ஜட்ஜ்மெண்ட் வருவதற்குள் ஆள்மண்டையை போட்டு விடுவான். அந்த பிரான்சிஸ் அன்பரசு வேறு யார் அந்த கொலைகாரன் என்று தெரிந்து கொள்ள வெறியோடு சுற்றி கொண்டிருக்கிறான்."

" விடுங்கள் - அந்த கவலையெல்லாம் பிறகு. இப்போது இருக்கும் ஒரே கவலை கொலைகாரனை கண்டுபிடிப்பது தான். நம்முடைய முழு கவனத்தை அதில் செலுத்தலாம்" என்றான் வினோத்.

"இந்த மீடியாக்கள் வேறு பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் யார் அந்த நெம்பர் கில்லர் என்று கேட்டு பரபரப்பை கூட்டுகின்றன."

" எல்லாம் டிஆர்பி செய்யும் மாயம். வேறு பரபரப்பான சமாசாரம் கிடைத்து விட்டால் இதை தொங்கலில் விட்டு விடுவார்கள்"

" நீ சொல்வதும் சரிதான் " என்றான் அருண்.

சூரியன் வெளியே மறையத் தொடங்கியிருந்தான். மெல்ல மெல்ல இருள் கவிழ்ந்து கொண்டிருந்தது. நடு இரவில் அவன் கிளம்பினான். அவனது பேண்ட் பாக்கெட்டில் ஒரு கத்தி இரைக்காக காத்திருந்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை.

அத்தியாயம் 21

மறுநாள் காலை அருண் டிவி பார்த்து கொண்டிருந்த போது அவனது போன் அடித்தது. போனின்டிஸ்ப்ளே நெம்பரையும் பேரையும் பார்த்த அருண் டிவியின் சத்தத்தை குறைத்தான்.

அருகில் உட்கார்ந்திருந்த வினோத் போனை எடுத்துப் பார்த்து விட்டு "இன்று ஒரு தகவலா?" என்றான்.

"நேற்று இரவு நாம் தூங்கி கொண்டிருந்த போது கில்லர் ஓவர் டைம் வேலை பார்த்திருக்கிறான்." என்றபடி அருண் போனை எடுத்து "ஹலோ சொல்லுங்கள் சார். இந்த முறை அவன் கொன்றது ஆணா?பெண்ணா?'' என்றான்.

"இந்த முறை அவன் கொன்றது ஆண்.ஏற்கனவே கத்திகுத்து பட்டு மருத்துவமனையில் கிடக்கும் சைமனின் பிசினஸ் பார்ட்னர் தேவராஜ் தான் அது. அவனுடைய கையில் 9/10 என்று எழுதிவிட்டு போயிருக்கிறான் கொலைகாரன்"

" என்ன சொல்கிறீர்கள் ரஞ்சன்.?" என்றான் அருண் அதிர்ச்சியுடன் .

"நேரில் வாருங்கள் பேசிக் கொள்ளலாம்" என்றார் ரஞ்சன்.

"ஓகே. இதோ கிளம்பி விட்டேன்." என்றான் அருண்.

"என்னாச்சு பாஸ்?" என்றான் வினோத்.

அருண் ரஞ்சன் தன்னிடம் கூறியதை அப்படியே வினோத்திடம் கூறினான்.

"இதென்ன பாஸ் வினோதமாக இருக்கிறது? அந்த கொலைகாரன் எப்போதுமே கிறிஸ்துவர்களை குறிவைத்து தானே சொல்வான்? இந்து முறை ஓரு இந்துவை கொன்றிருக்கிறான்."

"அதை விட வினோதமாக இன்னொரு விசயத்தை செய்து வைத்திருக்கிறான். கொலை செய்தவனின் கையில் 9/10 என்று எழுதி வைத்திருக்கிறான். ஆனால் அது மருத்துவமனையில் இருக்கும் சைமனின் கையில் எழுத வேண்டிய எண்கள் "

"ஓரு வேளை சைமனுக்கும் இந்த கில்லருக்கும் எந்த தொடர்பும் இல்லை போலிருக்கிறதே?ஒரு வேளை சைமனை கத்தியால் குத்தியவன் சாதாரண வழிப்பறி திருடனாக இருப்பானோ? நாம் தான் சம்மந்தம் இல்லாமல் அவனை இந்த தொடர் கொலையில் சேர்த்து விட்டோமோ?"

" ஆனால் இப்போது செத்து போனது சைமனின் தொழில் கூட்டாளி .அவனை சைமன் கொன்றிருப்பானோ என்று யோசித்தால் அதற்கும் வாய்ப்பில்லை. அவனோ இன்னும் மயக்கம் தெளியாமல் இருக்கிறான். அதனால் நாம் இந்த கொலையில் அவனை சந்தேகப்பட முடியாது"

"இப்போது தான் கேஸ் கொஞ்சம் தெளிவாவது போல் இருந்தது. இந்த கொலையின் மூலம் தெளிந்த குளத்தில் பெரிய கல்லை தூக்கி போட்டிருக்கிறான் கொலைகாரன்.கேஸ் இன்னும் இடியாப்ப சிக்கலாக மாறியிருக்கிறது"

"ஓகே வினோத் நாம் இருவரும் பணிகளை பிரித்து கொள்வோம். நான் அந்த தேவராஜின் பாடியைப் பார்க்க போகிறேன். நீஎன்ன செய்ய போகிறாய்?"

"நான் பாதரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை வாங்கி வருகிறேன்." என்றான் வினோத்

"சரி. நாம் கிளம்பலாம்" இருவரும் வீட்டை பூட்டினர்.அருண் காரிலும் வினோத் பைக்கிலுமாக ஆளுக்கொரு திசையில் பிரிந்தனர்.

அருண் ரஞ்சனை சந்தித்து விட்டு இறந்து போன தேவராஜின் பாடியை பார்வையிட்டு விட்டு எந்த தடயமும் கிடைக்காமல் சோர்ந்து போய் அலுவலகத்திற்கு திரும்ப வந்தான். ஏற்கனவே அலுவலகத்திற்கு வந்திருந்த வினோத் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.அருணை பார்த்ததும் செல்லை அணைத்து டேபிளில் போட்டவன்" என்னாச்சு பாஸ்?" என்றான்.

"இதற்கு முன்னால் டிட்டோவாக நடந்து முடிந்த அதே சம்பவங்கள் தான். அதேகொலை .அதே கத்தி "

"அந்த உடைந்து போன கத்தியா?"

"ஆமாம். அவனுக்கு புதிய கத்தி செய்ய போதிய நேரமில்லை போலிருக்கிறது"

"சரி. நீ போன விசயம் என்னவானது?"

"அவருக்கு வெகு நாட்களாக அப் பண்டீஸ் என்கிற குடல்வால் பிரச்சனை இருந்திருக்கிறது. அவரும் வயிற்று வலி என்று நினைத்து கொண்டு வலி நிவாரண மாத்திரைகளை எடுத்து கொண்டு ஆப்ரேசனை தள்ளி போட்டிருக்கிறார். அது ஒரு ஆபத்தான வியாதி. சரியான நேரத்தில் ஆப்ரேசன் செய்து குடல்வாலை அகற்றாவிட்டால் அது வெடித்து மரணம் சம்பவித்து விடும். பாதருக்கு நிகழ்ந்ததும் அதேதான். இதை பேச்சு வழக்கில் குண்டி வெடித்து விட்டது என்று சொல்வார்கள்." என்றான் வினோத்.அருண் பதில் சொல்லாது சிந்தனையில் ஆழ்ந்தான்.

"நான் ஒரு விசயம் சொல்லலாமா?" என்றான் வினோத்.

"சொல் " என்றான் அருண்.

"எனக்கென்னவோ பாஸ் கொலைகாரன் நம்மை விட பெரிய புத்திசாலியாக இருப்பான் என்று தோன்றுகிறது "

" எதை வைத்து சொல்கிறாய்?"

" அவனது 9 வது கட்டளைக்கு உரிய ஆசாமி சைமன் என்றே வைத்து கொள்ளுங்கள். கொலைகாரனின் துரதிர்ஷ்டம் அவனை கொல்ல முடியவில்லை. இருவரும் உருண்டு புரண்டு சண்டை போட்டிருக்கிறார்கள். கொலைகாரனுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவன் தப்பி ஓடிவிட்டான். அதனால் அவன் எண்களை எழுத முடியவில்லை.

"அதனால் நீ என்ன சொல்ல வருகிறாய்?"

"வரிசைப்படி கொலை செய்ய வேண்டிய கொலைகாரன் மறுநாள் நள்ளிரவில் சைமனை கொன்று அவனது கையில் நெம்பரை எழுதி இருக்க வேண்டும். ஆனால் அவனோ சம்மந்தமில்லாமல் சைமனின் தொழில் கூட்டாளியை கொன்று சைமனின் கையில் எழுத வேண்டிய எண்களை தேவராஜின் கையில் எழுதியிருக்கிறான்."

"அதனால் இந்த கேசிற்கும் சைமனுக்கும் தொடர்பில்லை என்று உறுதியாகிறது."

"அப்படி நீங்கள் நினைக்க வேண்டும் என்பது தான் அவனது நோக்கம்.அப்படி நினைக்கும் போது நீங்கள் தப்பு செய்கிறீர்கள். சைமனுக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தமில்லை என்று நாம் அசட்டையாக இருப்போம்.அவன் அப்படி நம்மை டைவர்ட் செய்து விட்டு இன்று இரவு சைமனை கொன்று விட்டு 10 என்ற எண்ணை அவன் கையில் எழுதப் போகிறான் என்று நான் நினைக்கிறேன். அவனது ஹிட் லிஸ்டில் சைமனின் பெயரும் இருக்கிறது, "

அருண் அப்படியே அயர்ந்து போனான். தான் தேடிக் கொண்டிருப்பது சாமான்யமான ஆள் இல்லை என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. விதவிதமாக போக்கு காட்டும் அவனை எப்படித் தான் பிடிக்கப் போகிறோமோ என்ற மலைப்பு அவனுள் மண்டியது.

"இன்று இரவு அந்த கொலைகாரன் சைமனை கொல்லப் போகிறான் என்கிறாயா?"

"கண்டிப்பாக . கொலைகாரனை நேரில் பார்த்த ஒரே ஐ விட்னஸ் அவன் தானே?" என்றான் வினோத்.

அதே நேரம் அருணின் போன் அடித்தது. அதை எடுத்து பேசிய அருண். "அந்த சைமன் கண் விழித்து விட்டானாம்" என்றான்.

அப்படியென்றால் கொலைகாரன் யார் என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்" என்றான் வினோத்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 22


அருணும் வினோத்தும் ஓரே பைக்கில் அரசு மருத்துவமனைக்குள் பினாயில் வாசத்தின் ஊடாக நடந்து சைமன் இருந்த தனி அறையை அடைந்த போது அவன் ஏதோ ஓரு ஜுசை குடித்துவிட்டு டேபிளின் மீது டம்ளரை வைத்து விட்டு இவர்களை நிமிர்ந்து பார்த்தான்.

"யார் நீங்கள்?" என்றவனை தீர்க்கமாகப் பார்த்த அருண் "போலீஸ் " என்றான். அவனது முகத்தில் திடிரென பயரேகைகள் மலர ஆரம்பித்தன. எழுந்து உட்கார முயன்றவனை கை நீட்டி தடுத்த "அப்படியே இருங்கள்" என்றான். அவனது முகத்தில் தலையை சுற்றி கட்டு போடப்பட்டிருந்தது. வெளியே தெரிந்த பகுதிகளில் மெல்லிய வீக்கம் தெரிந்தது.

"அன்று இரவு என்ன நடந்தது விளக்கமாக சொல்லுங்கள்"

"நான் எப்போதுமே வேலையை முடித்துவிட்டு வீடு திரும்ப பத்து மணிக்கு மேலாகிவிடும். அன்று இரவும் வழக்கம் போல் காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் அவன் போட்டில் நின்று கட்டை விரலை தலைகீழாக காட்டி லிப்ட் கேட்டான். அவன் ஓரமாக நின்றிருந்திருந்தால் நான் அவனை கண்டுகொள்ளாமல் காரை நிறுத்தாமல் போயிருப்பேன். அவன் நடுரோட்டில் நின்றிருந்ததால் எனக்கு வேறு வழியில்லாமல் காரை நிறுத்தினேன்"

" அவன் எப்படி இருந்தான்?"

"அவன் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் வயதான மனிதர் தான் .அவரை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போதும் சரி இப்போதும் சரி அந்த முகத்தை எங்கு பார்த்தேன் என்பது தான் நினைவுக் கு வரவில்லை. ஆனால் அவன் வெகு நாட்கள் அறிமுகமானது போல் என்னிடம் நடந்து கொண்டான்."

"சரி அந்த அவர் உங்களிடம் ஏதாவது பேசினாரா?"

"ஆமாம். பேசினார். இன்று தான் உனக்கு கடைசி நாள் என்று சொன்னவன் தி டிரென்று என் மீது கத்தியுடன் பாய்ந்து விட்டான். நான் கடைசி நேரத்தில் சுதாரித்து கொண்டு விட்டேன். பிறகு இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட துவங்கினோம். அவன் இரண்டு மூன்று இடங்களில் என்னை கத்தியால் படுகாயப்படுத்தி விட்டான்.அவனதுகத்தியை நான் பிடுங்கி கொண்டேன் .நானும் என்னை காப்பாற்றி கொள்ள தற்காப்பிற்காக அவனை கொல்ல நினைத்தேன் .அந்த முயற்சியில் அவனுக்கும் கத்திகுத்து காயம் ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவன் என்னிடமிருந்து தப்பி ஓட முயற்சி செய்தான். நானும் அவனை விடாது துரத்தினேன். திடிரென்று அவனது வேகம் குறைய ஆரம்பித்தது.நான் அவனை பிடிப்பதற்குள் அவன் கீழே விழுந்து உருண்டு கையில் கிடைத்த கல்லை கொண்டு என்னை தாக்கி விட்டான். நான் மெல்ல மெல்ல நினைவிழந்து கொண்டிருந்த போது அவன் இருட்டில் காணாமல் போய் விட்டான். நானும் மயங்கி விழுந்து விட்டேன்"

"அந்த கத்தி கடைசியாக யாரிடம் இருந்தது?"

"எனக்கு சரியாக நினைவில்லை. அதை கொலைகாரன் தான் கொண்டு போயிருக்க வேண்டும்"

"உங்கள் மீது ஏதாவது கேஸ் இருக்கிறதா? இல்லை முன்பு இருந்ததா?"

அவன் தயங்கினான். "பயப்படாமல் சொல்லுங்கள்." என்றான் அருண்.

" என் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனால் ஒரு கேசில் நான் ஐ விட்னஸாக இருந்து சாட்சி சொல்லியிருக்கிறேன்"

"என்ன கேஸ் அது?"

" நான் வேலையில்லாமல் இருந்த போது நடந்த சம்பவம் அது. எனக்கு எதிர் வீடு ஒரு பணக்காரனுடையது. மனைவி குழந்தை என்று அவன் சந்தோசமாகத்தான் வாழ்ந்து வந்தான். எனக்கே அவன் மீது கொஞ்சம் பொறாமை இருந்தது. இவனைப் போல் வாழ்க்கையை என்ஜாய் செய்ய வேண்டும் என்று கூட நான் பல முறை நினைத்திருக்கிறேன். என்னுடைய கண் பட்டதோ என்னவோ தெரியவில்லை. அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அவனது மனைவியை திடிரென்று அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டது. தினமும் வாய் சண்டை, கைகலப்பு என்று சொர்க்கமாக இருந்த அந்த வீடு நரகமாக மாறிவிட்டது. அந்த குழந்தை தான் பாவம். தன் மீது அன்பு காட்டிய இருவரும் எதற்காக இப்படி சண்டை போடுகிறார்கள் என்று புரியாமல் குழம்பி தவித்தது. அந்த குழந்தையை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருந்தது. ஒருநாள் குடித்துவிட்டு வந்தவன் வழக்கம் போல் தன் மனைவியுடன் சண்டை போட ஆரம்பித்தான். சத்தம் கேட்டு நான் மாடியிலிருந்து அவர்களின் சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். இனிமேல் அவளுடன் தான் வாழ போகிறேன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு என்று அவன் அவளை வற்புறுத்தினான். அவள் அவனது சட்டையை பிடித்து நியாயம் கேட்டதும் அவன் கோபத்துடன் அவளை ஒங்கி அறைந்தான். சுவற்றின் மீது மோதி விழுந்தவளின் உயிர் உடனடியாக போய்விட்டது. அதை திட்டமிட்ட கொலை என்றோ விபத்து என்றோ சொல்ல முடியாது. தற்செயலாக நடந்த அந்த விசயத்தை பார்த்த ஒரே சாட்சி நான் தான்.

நான் பார்த்த விசயத்தை வெளியே சொல்லி விட்டேன். அந்த பெண்ணின் பெற்றோர் அவன் மீது கொலை வழக்கு போட்டனர். அதில் ஐ விட்னஸ்நான் தான். அவனும் தப்பிக்க சட்டத்தை வளைக்க முயன்றான். கடைசியில் சாட்சியான என்னை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விட்டான்"

" அவன் எவ்வளவு கொடுத்தான்?"

" பத்து லட்சம் .அது அவனுக்கு பெரிய தொகை அல்ல. எனக்கோ வாழ்வை மாற்ற போகும் பணம் . அதனால் நான் கோர்ட்டில் அவனுக்கு சாதகமாக பொய் சாட்சி கூறினேன். அதனால் அவன் வடுதலையாகி விட்டான்"

"ஓன்பதாவது கட்டளையும் உண்மையாகிவிட்டது. அந்த ஓன்பதாம் எண்ணுக்குரிய ஆசாமி இவன் தான்" என்றான் வினோத்.

"நீ சொல்வது உண்மைதான். உன்னுடைய தியரி தான் சரி. அவன் நம்மைதிசை திருப்பி விட்டிருக்கிறான்."

"சரி சைமன் உங்கள் கூட்டாளி தேவராஜ் எப்படி ?"

"ரொம்ப நல்லவன். எனக்கு கிடைத்த பணத்தை அவனிடம் கொடுத்து பார்ட்னராகி இருக்கிறேன். எதற்காக அவனைப் பற்றி கேட்கிறீர்கள், "

"அவரை நேற்று இரவு யாரோ கொலை செய்து விட்டார்கள். - "

"அய்யய்யோ! என்னால் இதை நம்ப முடியவில்லையே? யார் சார் அவனை கொன்றது?"

"வேறு யார் ?உங்களை கொல்ல முயன்ற அதே ஆசாமிதான் "

அந்த சைமன் தன் நண்பனை நினைத்து அழத் தொடங்கினான்.

அருண் வினோத்துடன் வெளியேறினான். வெளியே வந்த வினோத் "இவன் மட்டும் கொலைகாரனை அடையாளம் காட்டியிருந்தால் கேஸ் முடிவுக்கு வந்துவிடும்"

"பொறு. கண்டிப்பாக அவனுக்கு நினைவு வரும். அவனுக்கு நினைவு வருவதற்குள் கொலைகாரன் இவனை தீர்த்து விட நினைத்திருப்பான் "

"ஆமாம் பாஸ்! இன்று இரவு கண்டிப்பாக இவனை கொல்ல அந்த கொலைகாரன் தேடி வருவான்" என்றான்.

"அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இன்று இரவு வரப் போகும் கொலைகாரனுக்கு சிறப்பான வரவேற்பை ஏற்பாடு செய்வோம்" என்று கண்ணடித்தான் அருண்.

 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 23


அன்று இரவு கவிழும் முன்பாகவே ரஞ்சனின் உதவியோடும் மப்டி போலீஸாரின் துணையோடும் சைமனை வேறு ஒரு பத்திரமான இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள் அருணும் வினோத்தும்.

"அருண்.உங்களுடைய ஐடியா தான் என்ன? எனக்கு எதுவும் புரியவில்லையே?" என்றார் ரஞ்சன் குழப்பத்துடன் .

"இன்று இரவு அந்த கொலைகாரன் சைமனை கொல்ல வருவான் என்று நாங்கள் இருவரும் எதிர்பார்க்கிறோம். அதனால் அவனை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி விட்டேன்."

"இங்கே அந்த கொலைகாரன் வந்து உங்களிடம் மாட்டி கொள்வான் என்றா நினைக்கிற் ர்கள்?

"அதேதான். இங்கு சைமன் இல்லை என்பது நமக்கு மட்டும் தான் தெரியும். கொலைகாரனுக்கு தெரியாது. ஆனால் அவன் கண்டிப்பாக இங்கே வருவான் என்பது எங்களுடைய நம்பிக்கை"

"எனக்கென்னவோ கொலைகாரன் சாதாரண ஆள் போல் தோன்றவில்லை. அது சரி இங்கே சைமனாக நடிக்க போவது யார்?"

"வேறு யார் ? பள்ளியில் படிக்கும் போதே நாடகங்களில் நடித்து பல விருதுகள் வாங்கிய நம் வினோத் தான்." என்றான் அருண்.

"ஆஹா. பத்தாவது எண்ணை என் கையில் குத்தப்பார்க்கிறீர்களா? நான் இன்னும் கன்னி கழியாத பையன்பாஸ்.சொர்க்கத்தின் கதவு எனக்கெல்லாம் திறக்காது"

"பரவாயில்லை. நீ நரகத்தை கூட சொர்க்கமாக மாற்றி கொள்ள தெரிந்தவன்தான்."

" எப்படியோ எனக்கு ஐஸ் வைத்து என் கதையை முடிக்கப் பார்க்கிறீர்கள்." என்றான் வினோத் பரிதாபமாக .

சிரிப்பை அடக்கி கொண்ட ரஞ்சன்" பெஸ்ட் ஆப் லக்" என்று வினோத்தின் கையை குலுக்கினார்.

" என்ன இப்போதே பயத்தில் உடம்பு சில்லிடத் தொடங்கி விட்டது" என்றார் ரஞ்சன் -

"நீங்கள் வேறு பயமுறுத்தாதீர்கள். ஆமாம் பாஸ் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?'

"வீட்டிற்கு போய் நிம்மதியாக தூங்க போகிறேன்"

"என்னது?" என்றான் வினோத் அதிர்ச்சியுடன்

"அட சும்மா உன்னை பயமுறுத்துவதற்காக சொன்னேன். நானும் வெளியே தான் பதுங்கி இருப்பேன். இதோ என்னுடைய லைசென்ஸ் வாங்கிய துப்பாக்கி. உன்னுடைய பாதுகாப்பிற்காக தருகிறேன். பத்திரமாக தலைமாட்டில் வைத்துக் கொள். இது தேவைப்பட்டால் பயன் படுத்து " என்ற அருண் தன்னுடைய துப்பாக்கியை வினோத்திடம் கொடுத்தான்.

வினோத் நடுங்கும் கைகளுடன் அதை வாங்கி கொண்டான். "சரி உள்ளே வா.! உனக்கு மேக்கப் போட வேண்டும்" என்றான் அருண்.

ஏறக்குறைய அரை மணி நேரங்களுக்கு பிறகு வினோத் தோண்டி எடுக்கப்பட்ட ஒரு எகிப்திய மம்மி போல் உருமாறி இருந்தான். அவனை பெற்ற தாயிற்கு கூட இப்போது பார்த்தால் அவனை அடையாளம் தெரியாது.

"பாஸ்! இதல்லாம் நியாயமா? அவனுக்கு விழுந்தது மூன்றே மூன்று கத்திகுத்து. அதற்கு உடம்பெல்லாம் யாராவது கட்டு போடுவார்களா? இது வேறு சைமன் என்று நினைத்து கொண்டு அந்த கொலைகாரன் திரும்பி போய் விடப் போகிறான்."

" முழுதாக முகத்தை மூடாமல் விட்டிருக்கிறேன் பார். அதற்காக நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டும்"

"உயிரோடு அந்த கொலைகாரன் என்னை விட்டு வைத்தால் சத்தியமாக நன்றி சொல்கிறேன்"

"பயப்படாதே! என்னை மீறி இங்கே எதுவும் நடந்து விடாது."

"உங்களுக்கு என்ன பாஸ்? தைரியம் சொல்லிவிட்டு வெளியே போய் விடுவீர்கள். எனக்குத் தான் இதயம் தாறுமாறாக அடித்து கொண்டிருக்கிறது"

அருண் வெளியேறியதும் தான் கையோடு கொண்டு வந்திருந்த ட்வைன் நூலை கதவின் கைப்பிடியில் கட்டி விட்டு மறு முனையை கையில் சுற்றிக் கொண்டு பழையபடி படுத்து கொண்டான் வினோத். இப்போது யாராவது கதவின் கைப்பிடியை வெளியிலிருந்து திறக்க முயற்சித்தால் வினோத்தின் கையில் இருக்கும் நூல் விரலை இறுக்கத் தொடங்கி விடும். தனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டவன் இடது கையில் ரிவால் வரை இறுகப் பிடித்து கொண்டான்.

மருத்துவமனைக்கு வெளியே இருந்தவராண்டா தூண் ஒன்றில் அருண் மறைந்து நின்று கொண்டிருந்தான். வெளியே இருள் கவிழ்ந்து இரவு ஆரம்பித்தது.

ஆங்காங்கே மின்மினி பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.சில்வண்டுகள் புதர்களுக்கு நடுவேயிருந்து சத்தமிட்டு கொண்டிருந்தன. வானத்து நிலவு உச்சிக்கு வந்திருந்தது. மருத்துவ மனையின் எல்லா அறைகளும் இருட்டாகியிருந்தன. நோயாளிகள் உறங்க ஆரம்பித்திருப்பது மெல்லிய குறட்டை ஓலியில் தெரிந்தது. அருணுக்கு தூக்கம் வர ஆரம்பித்தது.

அதே நேரத்தில் அவன் மருத்துவமனை வளாகத்தின் உள்ளே நுழைந்தான். அவனது ஒரு கையில் டாக்டர்கள் அணியும் வெள்ளை கோட் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தபடி ஜாக்கிரதையாக நடந்து வந்தவன் டூவீலர் பார்க்கிங்கை பார்த்ததும் நின்றான். வரிசையாக நின்று கொண்டிருந்த வண்டிகளை பார்த்தவன் அதில் ஒன்றை தேர்வு செய்தான். பார்க்கிங்கில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவன் தன்பாண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த ஈரமானகை குட்டையை தேர்ந்தெடுத்த பைக்கின் பின் சீட்டின் மேல் விரித்து வைத்து அது பறந்து விடாமல் இருக்க ஒரு கல்லையும் தூக்கி அதன் மீது வைத்து விட்டு எதுவும் தெரியாதவன் போல் நடந்து ஒரு மரத்தின் கீழ் மறைந்து கொண்டான். அவன் தேர்ந்தெடுத்த பைக் அருணுடையது என்று அவனுக்கு தெரியாது.

ஈரமான கர்ச்சிப்பில் இருந்தது வெள்ளை பாஸ்பரஸ். அதை எப்போதும் தண்ணீரில் தான் வைத்திருப்பார்கள். அதை மனித உள்ளங்கையில் கொட்டினால் உடலின் வெப்ப நிலையிலேயே எரிய ஆரம்பித்து விடும். அதை சாணியில் கலந்து குடிசை வீட்டின் மீது எரிந்து விட்டால் சாணி காய காய பாஸ்பரஸ்பற்றி கொள்ளும். பிறகு குடிசையே எரிந்து சாம்பலாகி விடும். அதே டெக்னிக்கைதான் அவன் கை குட்டையில் பயன்படுத்தியிருந்தான். கை குட்டையின் ஈரம் காய்ந்ததும் பைக் தீப்பிடித்து எரிய ஆரம்பிக்கும். அதை வேடிக்கை பார்க்க நிறைய பேர் வார்டிலிருந்து வெளியே வருவார்கள். அவர்களை திசை திருப்பி விட்டால்சைமனை கொல்வது எளிதான வேலையாகி விடும் என்பது அவனுடைய கணக்கு .

அருண் கெஞ்சும் விழிகளை கஷ்டப்பட்டு திறந்து வைத்துக் கொண்டிருந்த போது ஏதோ தீயும் வாசனை அவனது நாசியை தீண்டியது.அருண் மறைவிலிருந்து வெளியே வந்து அந்த நாற்றம் எங்கிருந்து வருகிறது என்று தேட ஆரம்பித்தான். ஏதோ சந்தேகத்துடன் பைக் பார்க்கிங்கை பார்த்தவன் அதிர்ந்தான். அங்கே அவனுடைய பைக் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அருண் பதறிக் கொண்டு ஓடினான்.அருண் தீயை அணைக்கும் முயற்சியில் இருந்த போது அவன் மரத்தின் மறைவிலிருந்து வெளியேறி நடந்தான். அதற்கு முந்தைய நாள் அவன் சைமனின் அறையை அடையாளம் கண்டிருந்ததால் தங்கு தடையின்றி நடந்தான்.

வினோத் இருந்த அறை கதவின் கைப்பிடியை அவன் திருப்பியதும் வினோத்தின் விரலை நூல் இறுக்கியது. வினோத் துப்பாக்கியை இறுக்கி பிடித்தபடி "யாரு" என்றான். அவன் ஏற்கனவே வெள்ளை கோட் அணிந்திருந்தான். "நான் டாக்டர் " என்றான் அவன்.
வினோத் துப்பாக்கியிலிருந்து கையை எடுக்காமல் "உள்ளே வாருங்கள்" என்றான்.

உள்ளே நுழைந்தவன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கத்தியை உருவினான்.

" அன்று தப்பித்து விட்டாய். இன்று கணக்கை நேர் செய்து விடுகிறேன்" என்றபடி கத்தியை தலைக்கு மேல் உயர்த்தினான்.

"சார் நீங்களா?" என்றான் வினோத் உச்சசகட்ட அதிர்ச்சியுடன்!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 24


பைக்கில் பற்றிய தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்த அருண் துணைக்கு நான்கைந்து ஆட்கள் வந்ததும் இயல்பு நிலைக்கு திரும்பினான். ஒரு வேளை இந்த தீவிபத்து கொலைகாரன் தன்னை திசை திருப்ப செய்த காரியமோ என்று யோசித்தவன் தீயை அணைக்கும் முயற்சியை மற்றவர்களிடம் விட்டு விட்டு மருத்துவமனையை நோக்கி ஓடினான். இவ்வளவு நேரம் தனியாக இருந்த வினோத்தின் நிலைமை என்னவான தோ என்று அவனது இதயம் பதட்டத்தில் ஏறுமாறாக துடித்து கொண்டிருந்தது. வினோத்தின் அறை கதவு திறந்திருப்பதை பார்த்தவன் புயல் போல் அந்த அறைக்குள் நுழைந்தான். உள்ளே வினோத் கையில் துப்பாக்கியோடு படுத்திருந்தான். அவனுக்கு எதிரே துப்பாக்கி முனையில் நின்றிருந்த மனிதரைப் பார்த்ததும் "சார் நீங்களா?" என்றான் அருண் திகைப்புடன். அவரை இருவருமே பலமுறை சந்தித்திருக்கிறார்கள். அதே திகைப்பு கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்த அந்த மனிதரின் முகத்திலும் இருந்தது. அவர்கள் இருவரையும் அங்கே எதிர்பார்க்காத அவர் "சைமன் எங்கே?" என்றார் ஆத்திரத்துடன் .

" அவன் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறான் . சமுதாயத்தின் ஐந்து தூண்களில் ஒருவரான நீங்கள் கொலைகாரனாக இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை." என்றான் அருண் தன்னை சுதாரித்து கொண்டபடி.

கத்தியுடன் நின்றிருந்த ஜட்ஜ் சோமசேகர் தனது கத்தியை படுக்கையில் வீசினார். அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு கொண்டு சாய்ந்து அமர்ந்தார்.

"ஒரு நீதிபதி இந்த கொலைகளை செய்திருப்பான் என்பதை உங்களால் நம்ப முடியவில்லைதானே?" என்றார் சோமசேகர் பெருமூச்சு விட்டபடி,

"சத்தியமாக நாங்கள் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவேயில்லை. ஒரு பாதரை கூட வீணாக சந்தேகப்பட்டோம். ஆனால் ஒரு நீதிபதி இப்படி தொடர் கொலைகளை செய்வார் என்று நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை."

" வக்கீல்களை கூட சந்தேகப்பட்டோம். ஆனால் கொலை செய்யப்பட்ட அத்தனை பேரின் வழக்கிலும் நீங்கள் தான் நீதிபதி என்பதை நாங்கள் கவனிக்க தவறிவிட்டோம். செல்வராணி எழுதி வைத்த Jஎன்ற எழுத்து Judge ஐ குறிக்கிறது என்று இப்போது தான் எங்களுக்கு தெரிகிறது." என்றான் வினோத் துப்பாக்கியில் இருந்து கையை எடுத்த படி.

"சொல்லுங்கள்.!எதற்காக இத்தனை கொலைகள் ? " என்றான் அருண்.

" சொல்கிறேன். நான் ஒரு நியாயமான நீதிமான் என்பது உங்களுக்கு தெரியும். என்னிடம் வந்த அத்தனை வழக்குகளையும் சட்டத்திற்குட்பட்டு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சரியான தீர்ப்பையே இத்தனை நாட்களாக வழங்கி வந்ததாக நம்புகிறேன். அதில் சில தவறான தீர்ப்புகளை திருத்த நினைத்தேன். அதற்காகத் தான் இத்தனை கொலைகள்."

"தவறான தீர்ப்பா? நீங்கள் அப்படி தவறான தீர்ப்பை தரக்கூடிய ஆள் இல்லையே? நீதி நேர்மை என்று உயிரை விடுவீர்களே?"

" உண்மைதான். நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால் சாமுவேல் ரத்னகுமார் ஒரு வட மாநில தொழிலாளியை கொலை செய்த வழக்கு என்னிடம் வந்த போது தான் இவற்றிற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. தன் தம்பியை காப்பாற்ற தவறான தீர்ப்பை கொடுக்க சொல்லி அவனது அண்ணன் பிரான்சிஸ் அன்பரசு என்னை மிரட்டினான். நான் மசியவில்லை.மேலிட செல்வாக்கை பயன்படுத்தி எனக்கு அழுத்தம் கொடுத்து பார்த்தான். நான் அதற்கும் மசியவில்லை என்று தெரிந்ததும் என் ஒரே மகளை கடத்தி வைத்து கொண்டான். எனக்கு வேறு வழி தெரியவில்லை . சாட்சிகள் பல்டியடித்ததை காரணம் காட்டி ரத்னகுமாரை விடுதலை செய்தேன்."

"அதற்கு ஏன் பத்து கட்டளைகளை பயன்படுத்தினீர்கள்?"

"போலீசை குழப்பி திசை திருப்பத்தான். கொலைகாரன் ஒரு சீரியல் கில்லர் என்று தோன்ற வைக்க அவர்கள் செய்த பாவங்களை இணைத்து கொண்டேன். அவரவர் பாவங்களுக்கான எண்ணை கையில் எழுதி வைத்தேன்"

"செல்வராணியின் வழக்கும் உங்களிடம் தான் வந்ததா?"

"ஆமாம்.என்னை தவறாக தீர்ப்பெழத வைத்த நான்கு பேரும் தற்செயலாக கிறிஸ்தவர்களாக இருந்து விட்டனர். அனைவரும் ஒரே திருச்சபையை சேர்ந்தவர்கள். செல்வராணியின் வழக்கு என்னிடம் வந்ததை தெரிந்து கொண்ட ரத்னகுமார் செல்வகுமாரியை தூண்டி விட்டான். அவளும் தன் மேலிட தொடர்புகளால் எனக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். நான் சரியான தீர்ப்பை கொடுத்தும் கூட அவளது அம்மாவையும், அப்பாவையும் அவள் சொத்துக்காக கொலை செய்தாள். அதனால் பெற்றோர்களை கனம் செய்யும் 5வது கட்டளையின் படி அவளை கொன்றேன்.. அதே போல் தான் டேவிட்டும்.. அவன் மூன்று குற்றங்களை செய்திருந்ததால் மூன்று எண்களை எழுதி அவனை கொன்றேன். அவன் தன் மனைவி ஸ்டெல்லா வை திட்டமிட்டு பைத்தியமாக்கினான்.. அந்த பெண்ணிற்கு மனநல விடுதியில் நான் தான் ஸ்பான்சர் செய்கிறேன்.தன் மகளை கொன்றான். மனைவியை தவிர வேறு பெண்ணுடன் செக்ஸ் வைத்து கொண்டான்.ஆபிஸ் பணத்தை கையாடல் செய்தான். அந்த வழக்கில் விடுதலை செய்ய சொல்லி எனக்கு பெரிய இடத்திலிருந்து அழுத்தம் கொடுத்தான். அதனால் அவனையும் கொன்றேன்."

"எதற்காக திடிரென இந்த தீர்ப்புகளை திருத்தி எழுத கிளம்பினீர்கள்?"

"எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது டாக்டர் எனக்கு பிளட் கேன்ஸர் என்று சொன்னார். நான் இறப்பதற்குள் என் தீர்ப்புகளை சரியாக திருத்தி எழுத விரும்பினேன். அதனால் நானாகவே ஒரு கத்தியை தயார் செய்து கொண்டு இவர்களை வேட்டையாட களம் இறங்கி விட்டேன்.சத்தியமேவே ஜெயதே என்பது அரசியல் அமைப்பின் நீதி வாக்கியம். இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று கூறி அந்த நீதி தேவதையை ஏமாற்ற நினைத்தவர்கள். அவர்கள் பொய் கூறி உண்மையை கொன்றார்கள். அதனால் தான் நான் கொல்வதெல்லாம் உண்மை என்று கொலை செய்ய இறங்கினேன்."

"உங்கள் வீட்டில் யாருக்காவது இந்த உண்மை தெரியுமா?"

"இல்லை. என் மனைவி கொஞ்ச நாட்களுக்கு முன்னால் இறந்து விட்டாள். ரத்னகுமார் என் மகளை கடத்தி மிரட்டியதுமே அவளுக்கு திருமணம் செய்து வைத்து அமெரிக்காவிற்கு அனுப்பி விட்டேன். நான் தனி ஆள்"

"இந்த சைமன் பொய் சாட்சி சொன்னதற்காக அவனை கொல்ல துடித்து கொண்டிருக்கிறீர்கள்?"

"ஆமாம். அவன் முதலில் அது கொலை என்று சாட்சி சொன்னான். பணம் வாங்கிய பிறகு நான் பார்க்கவில்லை என்று பல்டியடித்தான்."

"நியாயமாக மனைவியை தள்ளி விட்டு கொன்ற அந்த பணக்காரனைத் தானே நீங்கள் சொல்ல வேண்டும்"

"அது தற்செயல் விபத்தா ? இல்லை திட்டமிட்ட கொலையா என்று என்னால் கணிக்க முடியவில்லை. இவனது சாட்சியத்தால் தான் அவன் தப்பினான். அதனால் தான் நான் சைமனை குறி வைத்தேன்."

" அவன் பத்திரமாக இருக்கிறான். அவனது கூட்டாளி தேவராஜை ஏன் கொலை செய்தீர்கள்?"

"தேவராஜா? அது யார்? நான் ஏன் அவனை கொல்ல வேண்டும்?"

"நடிக்காதீர்கள். அவனை கொன்று அவன் கையில் 9/10 என்று எழுதியது நீங்கள் தானே?"

" உளறாதீர்கள். நான் ஏன் அவனை கொல்ல வேண்டும்?இத்தனை கொலைகளை ஒப்பு கொண்ட நான் இதை மட்டும் ஏன் மறுக்க வேண்டும்" என்ற சோமசேகரின் முகம் மாறியது.வலியால் அவரது உடல் நடுங்க தொடங்கியது. கண்கள் மேலே சொருகி கொள்ள அவரது வாயிலிருந்து மெல்லிய கோடாக ரத்தம் வழியத் தொடங்கியது. வினோத் நாற்காலியிலிருந்து சரிந்து விழும் அவரை தாங்கி பிடித்தான்.

"டாக்டர் " என்றபடி அருண் வெளியே பாய்ந்தான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 25


அருண் அடித்து பிடித்து இரவு பணியில் இருந்த மருத்துவரை அழைத்து வந்த போது சோமசேகர் வினோத் படுத்திருந்த படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரது உடல் வலியால் துடித்து கொண்டிருந்தது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட டாக்டர் உடனே அவசர பிரிவு நர்ஸ்களை வரவழைத்தார். "ஆமாம் இவர் ஏன் டாக்டர்களின் கோட்டை போட்டிருக்கிறார்?"

"அதை பிறகு சொல்கிறேன் டாக்டர் " என்றான் அருண்ICU வில் சோமசேகர் அனுமதிக்கப்பட்ட பின்பு வெளியே அருணும் வினோத்தும் நடந்து கொண்டிருந்தனர்.வினோக் இன்னும் மம்மி வேடத்திலிருந்து வெளியே வராமல் இருந்தான்.

"முதலில் அந்த பேண்டேஜ்களை கழற்றி எறி வினோத். உன்னை பார்த்தால் பிணவறையிலிருந்து எழுந்து வந்த பிணம் போல் இருக்கிறாய்"

"ஏன் பேச மாட்டீர்கள் ? அந்த நீதிபதி டாக்டர் என்று சொல்லி கொண்டு என் அறைக்குள் வரும் முன்பாகவே நீங்கள் அவரை பிடித்திருக்கலாம். நீங்கள் யாரோ ஒரு நர்சை சைட்டடிக்க போய் விட்டீர்கள் போலிருக்கிறது" என்றபடி பேண்டேஜ் துணிகளை கழற்றினான் வினோத்.

"அபாண்டமாக என் மீது பழிபோடாதே வினோத்.நம்பைக்கிற்கு தீ வைத்து என் கவனத்தை திசை திருப்பி விட்டார் சோமசேகர் "

"என்னது? என்னுடைய பைக் எரிந்து விட்டதா? இன்னும் தவணைத் தொகையை முழுதாக கட்டி முடிக்கவில்லையே பாஸ்?"

"அப்படியானால் இன்சூரன்ஸ் காலாவதியாகி இருக்காது. நாம் பணத்தை க்ளைம் பண்ணி கொள்ளலாம். இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது"

" ஆனால் ஒரு நீதிபதி கொலைகாரனாக இருப்பார் என்பதை நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை தானே?"

"ஆமாம். நாம் அப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லை." என்றான் அருண்.

வினோத்தின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எதுவோ சத்தத்துடன் கீழே விழுந்தது.

"என்ன அது?"

"அது சோமசேகர் கொண்டு வந்த கத்தி. படுக்கையில் அவரை படுக்க வைக்கும் போது குத்தி கிழித்து விடக் கூடாது என்று எடுத்து என் பேண்ட் பாக்கெட்டில் போட்டு வைத்தேன்" என்ற வினோத் அந்த புதிய கத்தியை அருணிடம் கொடுத்தான்.

அதை தடவி பார்த்த அருண் " இந்த கத்தி ரொம்பவும் புதிதாக இருக்கிறது. அனேகமாக நேற்று தான் செய்திருப்பார் போலிருக்கிறது. நாளை காலை நீ சோமசேகரின் வீட்டிற்கு போகிறாய். அங்கே நமக்கு வேறு ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடி பார்க்க வேண்டும்"

"அது தானே பார்த்தேன். என்னடா இன்னும் வேலை சொல்லவில்லையே என்று "

"கவலைப்படாதே! இந்த வழக்கில் இது தான் உனக்கு கடைசி வேலை"

அது சரி. இவர் ஏன் தேவராஜை கொலை செய்ததை ஒப்பு கொள்ள மறுக்கிறார்?"

"அதுதான் எனக்கும் புரியவில்லை. அவர் கொலை செய்யாவிட்டால் வேறு யார் செய்திருக்க முடியும்? வயதானதால் ஏற்பட்ட ஞாபக பிசகு என்று நான் நினைக்கிறேன்"

"இப்போது பிரான்சிஸ் அன்பரசு கொலைகாரன் யார் என்று கேட்டால் யாரை சொல்வீர்கள்?"

"இப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்ய மாட்டேன் கொலைகாரனை சட்டத்திடம் தான் ஒப்படைப்பேன்."

வெளியே மெல்ல விடிந்து கொண்டிருந்தது.

ICU விலிருந்து வெளியே வந்த டாக்டர் கண்ணாடியை கழற்றியதும் வினோத் "ஆள் காலி போல " என்றான்.

"ஹீ இஸ்நோ மோர் .அவருடைய விதி முடிந்து விட்டது" என்றார் டாக்டர் .

"இட்ஸ் ஓகே டாக்டர் .போஸ்ட் மார்டம் பண்ணிட்டு பாடியை இங்கேயே வையுங்கள்" என்ற அருண் "வா ! அவருடைய வீட்டிற்கு போய் அமெரிக்கா மகளுக்கு தகவல் சொல்லலாம்" என்றான்.

" வீட்டு சாவி?" என்றான் வினோத்.

"டாக்டர் அவரிடம் சாவி எதாவது?"

"ஒரு கொத்து சாவி கிடைத்தது. இருங்கள் எடுத்து வருகிறேன்"

டாக்டர் கொடுத்த சாவியை வாங்கி கொண்டு இருவரும் ஒரு ஆட்டோவை பிடித்தனர்.

அருணுக்கு அவருடைய வீடு நன்றாக தெரியும் என்பதால் ஆட்டோவை விரட்டினான்.

ேசாமசேகர் வீட்டிற்கு முன்பாக நின்ற ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அனுப்பிய அருண் வீட்டை நெருங்கிய போது அவனது போன் அடித்தது.

"ஹலோ! அருண் ஸ்பீக்கிங் ."

"நான்பிரான்சிஸ் அன்பரசு பேசுகிறேன். கொலைகாரனை பிடித்து விட்டீர்களா?"

"அவசரப்படாதீர்கள். நான் ஒரு அவசர வேலையில் இருக்கிறேன். கிட்டத்தட்ட அவனை நெருங்கி விட்டேன். பிறகு அழைக்கிறேன்"

" உனது போனுக்காக காத்திருக்கிறேன்"

மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அருண் வீட்டு கதவை திறந்தான். இருவரும் உள்ளே நுழைந்தனர். மேசையில் கிடந்த டைரியில் அவரது மகளின் அமெரிக்க தொலைபேசி எண்கள் கிடைத்தன.

அருண் அந்த எண்ணிற்கு அழைத்தான்.

"ஹலோ. யார் பேசுவது?" என்றது பெண் குரல்.

"நீங்கள் அனிதா தானே? சோமசேகரின் மகள்?"

"ஆமாம்"

"நான் எதிர் வீட்டிலிருந்து பேசுகிறேன். உங்கள் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. மயக்கமாகி கீழே விழுந்து விட்டார். உடனடியாக இங்கே கிளம்பி வர முடியுமா?"

"நோ பார்மாலிட்டிஸ், என்னிடம்பொய் சொல்லாதீர்கள். என்அப்பாவுக்கு என்னவானது?" அவளது தைரியம் அருணுக்கு பிடித்திருந்தது. அவன் உண்மையை உடைத்து சொல்லி விட முடிவெடுத்தான்.

"அவர் நேற்று இரவு இறந்து விட்டார். உடனே கிளம்பி வாருங்கள்"

" உடனே வருகிறேன்" மறுமுனையில் வெடித்து கிளம்பிய விசும்பலுடன் போன் வைக்கப்பட்டது.

"வெளிநாட்டு வாழ்க்கைக்கு கொடுக்கும் விலை " என்றான் வினோத்.

இருவரும் வீட்டை சல்லடை போட்டு சலிக்கத் தொடங்கினர்.ஓன்றும் கிடைக்காமல் ஏமாந்து போய் வீட்டை சுற்றி வரும் போது தான் அந்த செட்டை பார்த்தார்கள். வீட்டின் பின்புறமாக இருந்த ஒரு கைவிடப் பட்டமெக்கானிக் செட் அது. இருவரும் அதற்குள் நுழைந்தனர். புழுதியும் ஒட்டடையும் நிறைந்த அந்த செட்டில் சமீபமாக சிலவேலைகள் நடந்த தடயங்கள் புதிதாக காணக் கிடைத்தன. கடைசல் மெசினின் கீழ் சிதறி கிடந்த இரும்பு துகள்களை பார்த்தான் வினோத்.

" நேற்று தான் இந்த கத்தியை செய்திருப்பார் போலிருக்கிறது. வேறு ஏதாவது கிடைக்கிறதா பார்? என்றான் அருண்.

சிறிது நேர தேடலுக்கு பிறகு பழைய டேபிளின் பிராயரில் அந்த நோட் புக் கிடைத்தது. அதில் கொலை செய்யப்பட்டவர்களின் போட்டோவை ஒட்டி குறுக்கே சிவப்பு மார்க்கால் பெருக்கல் குறி போட்டிருந்தார் சோமசேகர். அதை புரட்டி பார்த்த அருண் "என்னடா இதில் அந்த தேவராஜின் போட்டோவே இல்லையே?"

"எனக்கும் அது தான் புரியவில்லை?"

"தேவராஜை சோமசேகர் கொலை செய்யவில்லையென்றால் வேறு யார் செய்திருப்பார்கள்?" என்றான் வினோத் குழப்பத்துடன் ..

"எனக்கு இப்போது தான் திரை விலகுகிறது.தேவராஜை கொன்றது சோமசேகர் இல்லை"

"வேறு யார் ?"

"ஒரு புத்திசாலி" என்றான் அருண் தீர்க்கமாக . வினோத் ஓன்றும் புரியாமல் திகைத்து நின்றான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 26


அந்த தனி அறையில் சைமன் கட்டில் மேல் அமர்ந்திருந்தான். அவனை சுற்றி அருணும் வினோத்தும் ரஞ்சனும் மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர். அறைக்கு வெளியே இரண்டு போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர்.

" என்ன சைமன்? உடல் நிலை இப்போது பரவாயில்லையா?" என்றான் சைமன் .

"இப்போது தேவலை."

"உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?"

" கேளுங்கள்"

" உங்களை கொலைகாரன் எந்த ஆயுதத்தால் கொலை செய்ய முயற்சித்தான்?"

"அரதப்பழசான கேள்வி. கத்தியால் தான்."

"அந்த கத்தி எங்கே?"

" கொலைகாரன் கொண்டு போய் விட்டான் என்று நினைக்கிறேன்"

"நீங்கள் உண்மையை சொல்ல வேண்டும். நன்றாக நினைவுபடுத்தி சொல்லுங்கள்"

" கத்தி தான் அங்கே கிடைக்கவில்லையே? ஓன்று அது சைமனிடம் இருக்க வேண்டும். இல்லையென்றால் கொலைகாரனிடம் இருக்க வேண்டும்" என்றார் ரஞ்சன்

"யூ ஆர் ரைட்.அந்த நுனி உடைந்த கத்தி கொலைகாரனிடம் இல்லை. அதனால் தான் இந்த கத்தியை மீண்டும் புதிதாக செய்திருக்கிறான். அவனிடம் பழைய கத்தி இருந்திருந்தால் அவன் இந்த புது கத்தியை செய்ய வேண்டிய அவசியமில்லை" என்ற அருண் சோமசேகர் கொண்டு வந்த கத்தியை ரஞ்சனிடம் கொடுத்தான்.

"அப்படியானால் அந்த கத்தி என்னிடம் இருக்கிறதென்று கூறுகிறீர்களா?"

"கண்டிப்பாக .அதை நீயே சொல்லியிருக்கிறாய்"

"நான் எப்போது சொன்னேன்?" என்றான் சைமன்பதட்டத்துடன் .

"உன்னுடைய வாக்குமூலத்தில் நீ என்ன சொல்லியிருக்கிறாய் என்று படிக்கிறேன். கேள். கொலைகாரன் மூன்று முறை என்னை கத்தியால் குத்தி காயப்படுத்திய பின்பு அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். நான் அவனை துரத்தி சென்றேன். அவன் என் தலையில் கல்லால் தாக்கிவிட்டு காணாமல் போய் விட்டான். இது தானே நீ கொடுத்த வாக்குமூலம் "

"ஆமாம்"

" இதில் மாற்றமில்லையே?"

"இல்லை"

"மூன்று கத்திகுத்து பட்ட நிராயுதபாணியான ஒருவன் கத்தியோடு ஓடும் ஒருவனை துரத்திக் கொண்டு ஓடுவானா? லாஜிக் இடிக்கிறது. அதே உன் கையில் கத்தி இருந்திருந்தால் அவன் உன்னிடமிருந்து தப்பி ஓடுவது சரியாக இருந்திருக்கும் "

"எனக்கு சரியாக எதுவும் நினைவில்லை."

"நடந்ததை நான் சொல்கிறேன். சரியாக இருக்கிறதா என்று பார் . கொலைகாரனை துரத்தும் போது உன் கையில் அந்த உடைந்த கத்தி இருந்தது உண்மை. அதை நீ எங்கேயோ ஓளித்து வைத்து விட்டு மயக்கமாகி விட்டாய். நீ மயக்கமாக மருத்துவமனையில் கிடந்ததெல்லாம் வெறும் நடிப்பு. இரவில் உன்னுடைய பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள் நீ மயக்கமாகத் தான் இருக்கிறாய் என்று அசட்டையாக இருந்த நேரத்தில் நீ அங்கிருந்து வெளியேறிவிட்டாய். அன்று இரவு உன் தொழில் கூட்டாளியான தேவராஜை அதே கத்தியால் குத்தி கொன்று விட்டாய். உன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உனக்கு கொலைகாரன் ரிசர்வ் செய்து வைத்திருந்த 9/10 என்ற எண்ணை அவன் கையில் எழுதினாய்.அதனால் ஓரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விட்டாய்.தேவராஜை கொன்ற பழியை சீரியல் கொலைகாரன் மீது போட்டு விட்டாய். அத்தோடு இந்த வழக்கிற்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை உனக்கு நடந்தது வழிப்பறி தாக்குதல் என்பதாக எல்லோரையும் நம்ப வைத்து விட்டாய். நாங்களும் அப்படி நம்பித்தான் உன்னை சந்தேகிக்காமல் இருந்தோம். சோமசேகர் செய்த புதிய கத்தி தான் உண்மையை வெளியே கொண்டு வந்தது. "

வினோத்தும் ரஞ்சனும் அருண் சொன்னதை நம்ப முடியாமல் உட்கார்ந்திருந்தனர்.

சைமன் அருண் சொன்னதை கேட்டு விகாரமாக சிரித்தான்.

"நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.தேவராஜை கொன்று விட்டால் கம்பெனி முழுவதும் எனக்கு சொந்தமாகிவிடும். அதனால் தான் அவனை நான் கொன்றேன். ஆனால் அதை உங்களால் நிருபிக்க முடியாது"

"ஏன்?"

"அந்த உடைந்த கத்தி என்னிடம் இருந்தால் நீங்கள் சொன்னதை நிருபிக்கலாம். அந்த கத்தி தான் என்னிடம் இல்லையே?"

" என்ன செய்தாய் அதை?"

"நான் சொல்ல மாட்டேன். அது இனி உங்கள் கைக்கு கிடைக்காது"

"அயோக்கியராஸ்கல்! உண்மையை சொல் " என்று அவன் சட்டையை பிடித்தார் ரஞ்சன்.

"கூல்.சரியான ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது" என்று சிரித்தான் சைமன்.

"அவனை விடுங்கள் ரஞ்சன். இவனை சோமசேகரிடமிருந்து காப்பாற்றியது பெரிய தவறு" என்றான் அருண்.

"அந்த ஆளின் முகம் மட்டும் சட்டென்று எனக்கு நினைவுக் கு வரவில்லை. அவரை கோர்ட்டில் பார்த்தது மட்டும் உடனே நினைவுக் கு வந்திருந்தால் அவர் பெயரை சொல்லி மாட்டி விட்டிருப்பேன். பாவம் செத்து போய்விட்டார்" என்று கிண்டலாக சிரித்தான் சைமன் .
"இப்போது என்ன செய்வது?" என்றார் ரஞ்சன்.

" கொலைகாரன் செத்து போய் விட்டதால் இவனுக்கு இனி போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. பாதுகாப்பை விளக்கி கொள்ளுங்கள். இவனை சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது. அதற்கு வேறு வழி இருக்கிறது" என்ற அருண் வினோத்துடன் வெளியேறினான். சற்று நேரத்தில் ரஞ்சன் பாதுகாப்பிற்கு இருந்த போலீசுடன் வெளியேறினார். அரை மணி நேரத்திற்கு பிறகு சைமன் சிட்டியடித்தபடி உல்லாசமாக வெளியேறினான். எதிர்கடையில் நின்று கொண்டிருந்த அருண் அவனை செல்போன் கேமிராவில் படம் எடுத்தான்.

பிரான்சிஸ் அன்பரசு விற்கு போன் செய்தான் அருண்.ரிங் போனதும் உடனே எடுத்த அன்பரசு " உன்னுடைய போனிற்குத் தான் வெயிட்டிங். யார் என் தம்பியை கொன்றது என்று கண்டுபிடித்து விட்டாயா?"

" கண்டுபிடித்து விட்டேன். அவன் பெயர் சைமன் .அவனது போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கிறேன். வேறு ஏதாவது தகவல் வேண்டுமா?"

" அவனது புகைப்படம் போதும். என் ஆட்கள் எங்கிருந்தாலும் தூக்கி வந்து விடுவார்கள். நான் அவனுக்கு நரகத்தை காட்டுகிறேன்"

" நல்லது " என்று போனை அணைத்த அருணைப் பார்த்த வினோத்" இது தப்பில்லையா?" என்றான்.

"வேறு வழியில்லை வினோத். சில நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாகவும் நீதி பரிபாலனம் செய்ய வேண்டியதாயிருக்கிறது" என்றபடி சைமனின் போட்டோவை வாட்ஸ்அப்பில் அன்பரசுவிற்கு அனுப்பினான்.

"நாளைக்கு பேப்பரில் ஏதாவது ஒரு மூலையில் சைமனின் போட்டோ வந்திருக்கும்.. ஒரு தீமையை அழிக்க அதை விட பெரிய தீமை தேவைப்படுகிறது.வா.கிளம்பலாம்" என்றான் அருண்.வினோத் காரில் ஏறியதும் கார் அங்கிருந்து கிளம்பியது.
முற்றும்
 
Status
Not open for further replies.
Top Bottom