Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

Status
Not open for further replies.
கொல்வதெல்லாம் உண்மை.

அத்தியாயம் 10


அன்று மதியம் வினோத் கொலை செய்யப்பட்டவனின் முழு விவரங்களோடு வந்து சேர்ந்தான். அவனது பெயர் டேவிட் என்று கூறியவன் பைலை மேஜை மீது வைத்து விட்டு சேரில் சாய்ந்தான்.

" என்னதுரை ?அலைச்சல் அதிகமோ ?" என்றான் அருண்.

"வெய்யிலில் அலைந்து பார்த்தால் தெரியும். உங்களுக்கு என்ன பாஸ்? யோசிப்பதாக பெயர் பண்ணிக்கொண்டு ஏசி ரூமில் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள். என் போன்ற பேச்சிலர் பசங்களை வெளியே அலையவிட்டு நிறைய பாவத்தை சேர்த்து கொண்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக உங்களுக்கு நரகம் தான்." என்றான் வினோத் கடுப்புடன்.

"சொர்க்கத்தில் என்ன இருக்கப் போகிறது வினோத். சுற்றிலும் நல்லவர்கள் வாழும் ரொட்டினான ஒரே வாழ்க்கை. அது எனக்கு விரைவிலேயே போரடித்து விடும். நரகம் தான் என்னுடைய சாய்ஸ். அங்கே தான் நிறைய குற்றவாளிகள் , நிறைய க்ரைம் ஸ்டோரிகள் என்று வாழ்க்கை திடுக் திருப்பங்களுடன் நகரும். ஐ லவ் ஹேல் "

"பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல் குற்றவாளிகளோடு பழகி பழகி நீங்களும் மனதளவில் குற்றவாளியாகவே மாறிவிட்டீர்கள் போலிருக்கிறது. நேற்றியிருந்து எனக்கு ஒரு டவுட்?"

" கேள். பதில் தெரிந்தால் கூறுகிறேன்"

"நேற்று ஏதோ ஜாக் தி ரிப்பர் என்று ஒரு பெயரை குறிப்பிட்டீர்களே? அது யார்?"

" அவனா? அவன் இருபதாம் நூற்றாண்டு வரை 200 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத கொலையாளி . 1885ல் லண்டனில் இருக்கும் விலைமாதர்களை மிக கொடுரமாக தேடித் தேடிக் கொன்றவன். அவனைப் பற்றி போலீசிற்கு 1000 துப்புகள் கிடைத்தும் ஆசாமியார் என்று இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. 5 வருடங்கள் தொடர்ந்து கொலை செய்தவன் திடிரென தனது ரத்த வேட்டையை நிறுத்தி கொண்டான். அந்த பிடிபடாத கொலைகாரனுக்கு போலீஸ் வைத்த பெயர் தான் ஜாக் தி ரிப்பர். அவன் யாராக இருப்பான் என்று பல யூகங்கள் இருக்கின்றன. அந்த சந்தேக பட்டியலில் கசாப்பு கடைகாரனில் இருந்து இங்கிலாந்து அரசியின் பல் டாக்டர் வரை பலரின் பெயர் அடிபடுகிறது. ஆனால் என்னுடைய கணிப்பு வேறு "

"அது தானே பார்த்தேன். எல்லோரும் ஊருக்குள் போனால் நீங்கள் நேர் எதிராக சுடுகாட்டிற்கல்லவா போவீர்கள். உங்கள் கணிப்பை சொல்லுங்கள். கேட்போம்."

"ஜாக் திரிப்பர் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த கொலைகாரன் ஒரு பெண் என்பது என்னுடைய யூகம்."

" என்ன தலைகீழாக சொல்கிறீர்கள்?"

"ஆமாம். என்னுடைய யூகம் அது.ஓரு நல்ல பெண் தவறான இடத்தில் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவளுடைய அம்மாவும் சகோதரியும் மோசமான நடத்தை கொண்டவர்களாக இருந்திருக்க கூடும். அதனால் அந்த பெண் நிறையவே பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். மோசமான பெண்களினால் தான் நல்ல பெண்களும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்று அவள் நினைத்திருக்க கூடும். அந்த மன பாதிப்பில் அவள் கொலைகளை செய்திருக்க கூடும்." ( ஆபத்து ஆரம்பம் நாவல்)

"கொலை செய்வது என்ன ரயில் சீசன் டிக்கெட்டா? ஐந்து வருடங்கள் கொலை செய்து விட்டு அப்படியே அமைதியாகி விட?"

"அவள் கொலை செய்த 5 வருடங்களுக்கு பிறகு அவளுக்கு திருமணமாகியிருக்கலாம். அன்பான கணவன் வாய்த்திருக்கலாம். அதனால் கொலை செய்து மாட்டி கொண்டு கிடைத்த நல்ல வாழ்க்கையை இழப்பதை விட கிடைத்த வாழ்க்கையை வாழ்வது மேல் என்று நினைத்திருக்கலாம்."

"நம்பும்படியாகத் தான் இருக்கிறது உங்கள் கதை. இன்னொரு டவுட் கூட எனக்கு இருக்கிறது."

" கேள்"

"அந்த செத்து போன செல்வராணியின் கணவன் ஜோசப் அவன் பெயரும் Jவில் தான் ஆரம்பிக்கிறது. அவனை ஏன் நீங்கள் சந்தேக பட்டியலுக்கு கொண்டு வரவில்லை."

"அவனைப் பார்த்தால் வேலை செய்யும் ஆபிசிலிருந்து பென்சில், பேனா கூட திருட பயப்படுகிறவன் போல் இருக்கிறான். அவனுக்கு கொலை செய்யும் அளவிற்கு தைரியம் கிடையாது. அவனை சந்தேக பட்டியலிலிருந்து தூக்க இன்னொரு காரணமும் இருக்கிறது."
.
"என்ன அது?"

" அவனுக்கு வயது 35 தான். நம் கொலைகாரனுக்கு வயது 50 to 60. லாஜிக்காக ஓத்து வரவில்லை. அதனால் தான் நான் அவனை சந்தேகிக்கவில்லை." என்றான் அருண்.

"நல்ல பாயிண்ட் பாஸ்"

"சரி நீ போய் விட்டு வந்த காரியம் என்னவானது?"

"செத்துப் போன டேவிட்டை பற்றி நானும் அக்கம் பக்கம், அவன் வேலை செய்யும் அலுவலகம் என்று பல இடங்களிலும் விசாரித்து விட்டேன். அவனை பற்றி வெவ்வேறு விதமான தகவல்கள் கிடைக்கின்றன."

" எல்லாவற்றையும் சொல். கேட்கிறேன். அதற்கு பிறகு நாம் ஒரு முடிவுக்கு வருவோம்"

"அந்த டேவிட்டுக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும் நான்சி என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்கள். அந்த ஸ்டெல்லா ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். நன்றாகத்தான் அவளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்திருக்கிறான். சில வருடங்களுக்கு முன்பு அவன் மனைவிக்கு சித்த பிரமை ஏற்பட்டுவிட்டது. பொருட்களை மாற்றி வைப்பது. சாப்பாட்டில் மறந்து நிறைய உப்பு போடுவது, குழந்தையை யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாக பிதற்ற ஆரம்பித்து விட்டாள். அவனும் அவளை பல இடங்களுக்கு கூட்டி போய் குணப்படுத்த முயற்சி செய்திருக்கிறான். கடைசியில் ஒரு நாள் தன் மகளையே அவள் கொன்று விட்டாள். கொலை குற்றத்திற்காக அவள்மனநல விடுதிக்கு போய் விட்டாள். அவளது புத்தி பேதலிப்பை காரணம் காட்டி அவளுடன் குடும்பம் நடத்த முடியாதென்று அவளிடம் விவாகரத்து வாங்கி கொண்டு விட்டான்.கொஞ்ச நாட்கள் குடியும் தாடியுமாக சோகமாக சுற்றி கொண்டிருந்த டேவிட் மிக விரைவிலேயே பணக்கார பெண் ஒருவளை திருமணம் செய்து கொண்டு விட்டான்."

"பாவம் அந்த டேவிட்"

"நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். அவனது அலுவலகத்தில் வேறு மாதிரி பேசுகிறார்கள். டேவிட் பணக்கார பெண் ஒருத்தியுடன் ஏற்பட்ட காதலால் தான் அவளை பைத்தியமாக்கிவிட்டான் என்றும் அந்த குழந்தையை கொன்றது அவன் தான் என்றும் பேசி கொள்கிறார்கள்."

"அடக்கடவுளே! பெற்ற குழந்தையை எவனாவது கொல்வானா?"

"கொன்றிருக்கிறான். கொன்று விட்டு பழியை மனைவி மீது போட்டு விட்டான். அவன் அலுவலகத்தில் ஏராளமான பணத்தை கையாடல் செய்திருக்கிறான். அதை அவனது புது மனைவி தான் கட்டி அவனை மீட்டிருக்கிறாள். "

"போலீஸ் அவனை சந்தேகிக்கவில்லையா?"

"முதல் சந்தேகமே அவன் மீது தான். ஆனால் எப்படியோ நீதிபதியை சரிகட்டி வழக்கிலிருந்து தப்பித்ததுடன் அவனது வக்கீலின் சாதுர்யமான வாதாடும் திறமையால் பழியை மனைவி மீது போட்டு தப்பித்து விட்டான். "

"அப்படியானால் தண்டிக்கப்பட வேண்டிய ஓரு குற்றவாளியைத்தான் நம் கொலைகாரன் போட்டு தள்ளியிருக்கிறான்."

"ஆமாம்.டேவிட்டை கொல்ல அவனுக்கு சரியான காரணம் இருந்திருக்கிறது."

"செத்து போன அத்தனை பேரும் ஏதோ ஓரு விதத்தில் சட்டத்திலிருந்து தப்பியிருக்கிறார்கள். பிறகு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்."

"பைனல் டெஸ்டினேசன் படம் போல் இருக்கிறது" என்றான் வினோத்.

சுவர் கடிகாரம் மணி 5 என்று சத்தமிட்டது.

"நாம் இப்போது கிளம்பினால் தான் பாதர் ஜேம்ஸ் அடைக்கலராஜை சந்திக்க முடியும் "

இருவரும் கிளம்பினார்கள்.​
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 11


அருணும் வினோத்தும் அந்த சர்ச்சினுள் பாதர் ஜேம்ஸ் அடைக்கலராஜை சந்திக்க நுழைந்த போது சுவற்றின் நடுநாயகமாக ஏசு தன் இரண்டு கைகளையும் எடுக்க இயலாமல் தொங்கி கொண்டிருந்தார். வரிசையாக கிடந்த காலி நாற்காலிகளில் காற்று உட்கார்ந்து எழுந்து போய் கொண்டிருந்தது.

"பாஸ் . ஏசு ஒரு தச்சர் தானே?" என்றான் வினோத்

"ஆமாம். அதற்கு இப்போது என்ன?" என்றான் அருண்குரலில் சலிப்பை காட்டி

"ஓன்று மில்லை. பாஸ்! இவர் தொங்கி கொண்டிருக்கும் சிலுவையை இவரே கூட செய்திருக்கலாம் தானே?"

அதற்கு வாய்ப்பில்லை.யேசு அன்பை மட்டுமே போதித்தார். சிலுவை என்பது தண்டனை கருவி. அதனால் அன்பை போதிக்கும் ஒருவர் தண்டணை தரும் ஒரு கருவியை செய்திருக்க முடியாது."

"பாயிண்ட் பாஸ். கரெக்டாக ஒரு காரணத்தை சொல்லி விட்டீர்கள். அதே போல் கொலைகாரன் கொலை செய்வதற்கான காரணத்தையும் நீங்கள் கண்டுபிடித்து விட்டால் அந்த ஆசாமி அகப்பட்டு விடுவான்."

"அது சரி. இங்கே விசாரிக்க கூட யாரும் இல்லையே?" என்று அருண் கேட்டபோது இருளின் நடுவிலிருந்து அவன் வெளியே வந்தான்.

" கர்த்தருக்கு ஸ்தோத்திரம். யார் நீங்கள் ? உங்களுக்கு என்ன வேண்டும்?"

"எங்களுக்கு பாதர் அடைக்கலராஜ் வேண்டும். கிடைப்பாரா?"

"அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி விட்டீர்களா?"

" வாங்கி விட்டோம். 5 மணிக்கு வரச் சொல்லியிருக்கிறார். "

"அப்படியானால் அவரை எளிதாக சந்தித்து விடலாம். அவரது அலுவலகத்தில் தான் இப்போது இருப்பார் என்னுடன் வாருங்கள். அவரிடம் அழைத்து போகிறேன்."

"போகலாம். ஆமாம் உன் பெயர் என்ன?"

" என் பெயர் அந்தோணிராஜ் அசோகன்"

"கன்வெர்டேடா?"

"ஆமாம். சமீபத்தில் தான் மதம் மாறினேன்."

" காரணம் என்னவோ?"

"வேறேன்ன? சாதிக் கொடுமை தான். அதைத் தாங்க முடியாமல் தான் மதம் மாறினேன்."

"இங்கே எப்படி நடத்துகிறார்கள்?"

"பரவாயில்லை. பாதர் எங்களிடம் அன்பாகத்தான் இருக்கிறார். மற்றவர்கள் எங்களை வேறு மாதிரியாக பார்ப்பதை என்னால் உணர முடிகிறது. போகப் போகத்தான் உண்மை நிலை தெரியும் "

"நேற்று எங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தது நீயில்லையா?"

"இல்லை. அது சம்பத் ராஜ் டேனியல். அவர் வீட்டிற்கு போய் விட்டார். நானும் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி விடுவேன்."

ஓரு வீட்டிற்கு முன்பு இருவரையும் நடத்தி வந்தவன் நின்றான்.

"இங்கேயே காத்திருங்கள். நான் அவரிடம் நீங்கள் வந்திருப்பதை கூறி விட்டு வருகிறேன்" என்று உள்ளே போய் விட்டான்.

பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அந்த பில்டிங்கை ஏற இறங்க பார்த்தனர் இருவரும். முன்புறம் இருந்த தோட்டத்தில் இரண்டு ரோஜா செடிகள் சில பூக்களை மலர வைத்திருந்தன . அவற்றில் ஒன்றை பறித்த வினோத் தன் சட்டை பட்டன் ஓட்டையில் சொருகி கொண்டான்.

"நேருன்னு நினைப்போ?" என்றான் அருண்.

"இயற்கையின் காதலன் பாஸ் நான் "

"இயற்கையின் காதலரே! அதை காசு கொடுத்து வாங்கணும். ஓசியில் பறிக்க கூடாது."

"சரி விடுங்க பாஸ்!வெள்ளைகாரன் காலத்தில் கட்டிய இந்த பில்டிங் இன்னும் கனஜோராக நின்று கொண்டிருக்கிறது. இதே நம்மாட்கள் கட்டியிருந்தால் என் மகன் கல்யாணம் செய்வதற்குள் இடிந்து விழுந்து விடும்"

"அவ்வளவு நேர்மையான இன்ஜினியர் எல்லாம் இன்னும் இருக்காங்களா?" என்று அருண் கேட்டு கொண்டிகுந்த போது அந்த அந்தோணிராஜ் அசோகன் வந்து சேர்ந்தான்.

"உங்களை வரச் சொன்னாரு" என்றவன்" இந்த பூவை பறிச்சீங்களா? பாதர் கோபப்படுவாரே?" என்றான்.

"நான் பறிக்கலை. கீழே விழுந்து கிடந்தது. "

"அதை கொடுங்கள். ஏசுவின் காலடியில் வைத்து விடுவோம். அழகான பொருட்கள் எல்லாம் ஆண்டவனுக்கே அர்ப்பணம் "

வினோத் வேறு வழியின்றி அந்த பூவை கொடுத்தான்.அருண் சிரித்தபடி திரும்பி கொண்டான்.

அந்த அந்தோணிராஜ் பூவை கைகளில் ஏந்தியபடி கிளம்பினான்.

"இதெல்லாம் தேவையா?" என்றான் அருண்.

"ஓரு இயற்கை காதலனுக்கு நேர்ந்த சோதனையை பார்த்தீர்களா? ஆமாம் அழகானதெல்லாம் ஆண்டவனுக்கே அர்பணிப்பு என்கிறானே? அவனது மனைவி அழகாக இருந்தால்... ..

"இங்கே ஆபாசமாக பேச கூடாது வினோத்."

"பேசினால் ? "

"இந்த கதைக்கு பரிசு கிடைக்காமல் போய்விடும் .புரிந்து கொள். "

"புரிகிறது. நான் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது என்கிறீர்கள்?"

"அதே தான் "

"சரி வாருங்கள். குயிலை பிடித்து கூண்டில் அடைத்து பாடச் சொல்லுகிற உலகம்" என்றான் வினோத் சோகத்துடன்.

இருவரும் பாதரின் அறைக்குள் நுழைந்த போது தலைக்கு மேல் ஓடியபேனின் கடக் சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருந்தது.

எதையோ எழுதி கொண்டிருந்த பாதர் அடைக்கலராஜ் அதை நிறுத்திவிட்டுஎழுந்து கைகுலுக்கி "உட்காருங்கள்" என்றார்.

இருவரும் உட்கார்ந்ததும் "சொல்லுங்கள். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீர்கள்?"
என்றார்.

"பாதர். உங்கள் சர்ச்சை சேர்ந்த மூன்றுபேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது உங்களுக்கு தெரியும் தானே? அதை நாங்கள் தான் விசாரிக்கிறோம்"

"தெரியும். அவர்களின் இறுதி சடங்கை முன்னின்று நடத்தியதே நான் தான் .ஆமாம் நீங்கள் போலீசா?"

"ஆமாம்.அவர்களை கொன்ற கொலைகாரன் அவர்களின் பாவங்களுக்கு தண்டணையாக அவர்களை கொலை செய்திருப்பது போல் தெரிகிறது."

" இருக்கலாம். அதற்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?"

"அவர்கள் தங்களின் பாவத்திற்கான மன்னிப்பை பாவமன்னிப்பு கூண்டில் உங்களிடம் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்."

"நிறைய பேர் தங்களின் பாவங்களை சொல்கிறார்கள்.இவர்களும் சொல்லியிருக்கிறார்கள்."

"இந்த மூவரின் பாவ மன்னிப்பை மட்டும் எங்களிடம் சொல்ல முடியுமா?,"

"ஸாரி. மை டியர்சன் அதை சொல்ல எனக்கு அனுமதியில்லை. என் சமயம் அதை அனுமதிக்காது. நீங்கள் இதைத் தான் கேட்க போகிறீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்டே கொடுத்திருக்க மாட்டேன். பிளீஸ். கெட் அவுட்."

"நான் சொல்வதை கேளுங்கள் பாதர். அந்த கொலைகாரன் அடுத்தடுத்து நிறைய கொலைகள் செய்ய போகிறான். அதை தடுத்து நிறுத்த உங்களால் தான் முடியும்."

"ஐ சே கெட்அவுட்" என்று விரலால் வாசலை காட்டினார் ஜேம்ஸ் அடைக்கலராஜ்.

இருவரும் வாசலை தாண்டும்போது 'தடால் " என்ற சத்தம் எழுந்தது. இருவரும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர். பாதர் அடைக்கலராஜ் தன் வயிற்றை பிடித்து கொண்டு கீழே விழுந்து துடித்து கொண்டிருந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர். அருணும் வினோத்தும் பாதரை நோக்கி ஓடினர்.
பாதரின் கை மேஜையில் இருந்த மாத்திரை பாட்டிலை காட்டியது.​
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 12


அருண் பாதர் அடைக்கலராஜை நோக்கி ஓடினான். "என்னாச்சு பாதர் " என்றபடி அவரை தூக்கி உட்கார வைக்க முயன்றான்.

வலியால் துடித்து கொண்டிருந்த பாதர் "அந்த மாத்திரையை எடுங்கள்" என்று விரலை மேஜையை நோக்கி நீட்டினார்.வினோத் அவசரமாக அவர் காட்டிய மாத்திரையை எடுத்தான். "இது தானே?" என்று அவரிடம் கேட்டு உறுதிப்படுத்தி கொண்டவன் பாட்டிலில் இருந்த மாத்திரைகளில் ஒன்றை எடுத்து அவர் வாயில் போட்டான். அருண் செல்பில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான். அடைக்கலராஜ் அவசர அவசரமாக தண்ணீரை வாயில் ஊற்றி மாத்திரையை விழுங்கினார்.

"நான் டாக்டரை வரவழைக்கட்டுமா?" என்ற அருண் தன் போனை கையில் எடுத்தான்.

"இல்லை. வேண்டாம். சற்று நேரத்தில் சரியாகிவிடும். இது அடிக்கடி வருகிற வலி தான் . " என்ற அடைக்கலராஜ் எழுந்து உட்கார்ந்தார்.

பாட்டிலில் இருந்த பெயரை படித்த வினோத் "இது பெயின் கில்லர் மாத்திரை . தற்காலிக நிவாரணம் மட்டுமே தரக்கூடியது. உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை வயிற்றில் இருக்கிறது. வாருங்கள் உடனடியாக ஒரு நல்ல டாக்டரைப் பார்ப்போம்" என்று பரபரத்தான் வினோத்.

கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த பாதர் "முதலில் இருவரும் உட்காருங்கள். நான் பயன்படுத்தி கொண்டிருப்பது வலி நிவாரணி என்று எனக்கு தெரியும். டாக்டரிடம் போக நேரமில்லாத அளவிற்கு எனக்கு வேலை பளு அதிகம். அவற்றை ஓரம் கட்டி விட்டு டாக்டரை பார்க்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. வயிற்று வலியால் துடித்த என்னை அப்படியே அம்போவென்று விட்டு விட்டு போகாமல் உதவியதற்கு நன்றி. அதற்கு கைமாறாக நான் எதையாவது செய்ய நினைக்கிறேன். சொல்லுங்கள்.உங்களுக்கு என்ன வேண்டும்" என்றார் கண்களில் நன்றி உணர்ச்சியை காட்டி.

"பொறுங்கள் பாதர். உணர்ச்சிவசப்படாதிர்கள். நாங்கள் இறந்து போன மூன்று பேரை பற்றிய சில விசயங்களை எங்கள் விசாரணையில் கண்டு பிடித்திருக்கிறோம். அவை உண்மையா இல்லையா என்று மட்டும் கூறுங்கள் .அது போதும் "

நாற்காலியில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்ட பாதர் " கேளுங்கள் எனக்கு தெரிந்த உண்மையை சொல்கிறேன். நான் சொல்லும் தகவல்கள் ஒரு உயிரை காப்பாற்றும் என்பதால் நான் அவற்றை சொல்கிறேன்."

"முதலில் சாமுவேல் ரத்னகுமார். அவன் குடிபோதையில் தன்னை அவமதித்த ஒரு வட மாநில தொழிலாளியை அடித்து கொன்று விட்டான். அற்காக உங்களிடம் பாவமன்னிப்பு கூண்டில் பாவமன்னிப்பு கேட்டிருப்பான் என்று நம்புகிறேன்"

"நீங்கள் சொல்வது உண்மைதான். இதே விசயத்திற்காக அவனது அண்ணன் பிரான்சிஸ் அன்பரசு என்னிடம் பாவமன்னிப்பு கேட்டிருக்கிறான்"

"அவர் எதற்காக கேட்டார் என்று சொல்ல முடியுமா?"

"அதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் உங்களுக்கு கோடி காட்ட முடியும் "

"சொல்லுங்கள்"

"கிட் நாப் "

"கடத்தல்.பிரான்சிஸ் அன்பரசு ஒரு கடத்தல் பேர்வழியா?"

"இல்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். அவன் யாரையோ கடத்தி பயமுறுத்தியிருக்கிறான். அது யார் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால் அதை தன் தம்பியை காப்பாற்றுவதற்காக செய்ததாக கூறினான். "

"ஓகே.பாதர். அடுத்தது செல்வராணி. தன் தாய் தகப்பனைசொத்திற்காக?"

"அது உண்மைதான். ஆனால் வக்கீலின் திறமையால் சட்டத்திலிருந்து தப்பி விட்டாள். அதற்காக என்னிடம் பாவமன்னிப்பு கேட்டிருக்கிறாள் "

"அடுத்தது டேவிட் .தன் சுயநலத்திற்காக தன் மனைவியை பைத்தியமாக்கி தன் மகளை கொன்றிருக்கிறான்."

"அதுவும் உண்மைதான். அதற்காக அவனும் என்னிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறான். அவனது மனைவி ஸ்டெல்லாவை மனநல மருத்துவமனையில் சேர்த்ததே நான் தான். மகளை கொன்ற குற்றத்திற்காக அவளை சிறைக்கு அனுப்பாமல் மனநல விடுதியில் வைத்திருக்கிறார்கள்"

"நீங்கள் சொல்லுங்கள்?ஸ்டெல்லா தன் மகளை கொன்றிருப்பாளா?"

"இல்லை. அதை நான் நம்பவில்லை. அவள் அப்பாவி.டேவிட் என்னிடம் பூடகமாகத் தான் தன் பாவத்தை சொன்னானே தவிர விளக்கமாக சொல்லவில்லை. மீதியை நானே யூகித்துக் கொண்டேன்."

"இறந்து போன மூன்று பேருமே கிறிஸ்தவர்கள். தங்களின் தவறுக்கு தண்டணையாக மரணத்தை பரிசாகப் பெற்றவர்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"எனக்கு எதுவும் தோன்றவில்லை."

"இந்த போட்டோக்களை பாருங்கள். இவை செத்து போனவர்களின் கையில் இருந்த எண்கள். இதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கிறதா?" அருண் தன்னிடம் இருந்த போட்டோக்களை டேபிளில் பரப்பினான். ஓவ்வொரு போட்டோவையும் பார்த்த அடைக்கலராஜ் "நோ ஐடியா" என்றார். போட்டோக்களை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்ட அருண் மீண்டும் கேள்விகளை அடுக்க தொடங்கினான்.

"இத்தனை பேர் பாவங்களை மன்னிக்கும் நீங்கள் உங்கள் பாவங்களை யாரிடம் சொல்லி முறையிடுவீர்கள்?"

"நான் நேரடியாக கர்த்தரிடமே சொல்லி மன்னிப்பு கேட்பேன்"

"அதாவது உங்கள் சர்ச்சிற்கு வருபவர்கள் செய்த அத்துணை பாவங்களும் உங்களுக்கு தெரியும். நீங்கள் செய்த பாவம் கடவுளுக்கு மாத்திரமே தெரியும். அப்படித்தானே?"

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"நத்திங் பாதர். உடம்பை பார்த்து கொள்ளுங்கள். நாங்கள் வருகிறோம்"

"சரி கிளம்புங்கள்" என்றார் அடைக்கலராஜ்.

"கடைசியாக ஒரு கேள்வி. இத்தனை பாவம் செய்யும் மனிதர்களுக்கு நடுவில் வாழ்கிறோம் என்று நீங்கள் ஒரு நாள் கூட வருத்தப்பட்டதில்லையா?"

"பாவங்களை மன்னித்த பிறகும் திரும்ப திரும்ப பாவங்களை செய்கிறார்களே என்று அவர்கள் மீது சில சமயம் கோபம் கூட வரும் "

உண்மையாகவா?"

"ஆமாம். சில சமயம் மனித தன்மையற்ற பாவங்களை அவர்கள் செய்து விட்டு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்கும் போது அவர்களை அங்கேயே கொன்று விடலாமா? என்று கூட எனக்கு தோன்றும் " என்றார் அடைக்கலராஜ்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.​
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 13


அருண் போலீஸ் கமிசனர் ரஞ்சனிடம் போனில் பேசிக் கொண்டிருந்தான்.

"அருண்.நேற்று அந்த கொலைகாரன் தன்னுடைய வேலைக்கு விடுமுறை விட்டு விட்டான் போலிருக்கிறது. நேற்று எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை."

" காலையில் உங்களிடமிருந்து வழக்கமாக வரும் போன் வராத போதே நினைத்தேன். என்னடா இன்று எந்த போதும் வரவில்லையே என்று."

"சரி கேசில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா?"

"இருந்தால் உங்களிடம் சொல்லாமல் இருப்பேனா? வழி இல்லாத முட்டுச் சந்தில் முட்டிக்கொண்டு நிற்பது போல் நின்று கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு துப்பு கிடைத்தால் அதை வைத்து கொண்டு நகரலாம். இங்கே நமக்கு எதுவுமே கிடைக்கவில்லையே?"

"கொலைகாரன் மிகுந்த புத்திசாலியாக இருப்பான் போலிருக்கிறது. தன்னைப் பற்றிய எந்த தடயத்தையும் விட்டு செல்லாமல் இருக்கிறான். கொலை செய்யும்போது கையுறைகளை அணிந்திருப்பதால் அவனுடைய கை ரேகை கூட நமக்கு கிடைக்கவில்லை."

"பொறுமையாக காத்திருப்போம். அவனைப் பற்றிய ஏதாவது ஒரு துப்பாவது நமக்கு கிடைக்காமல் போய்விடாது. நீங்கள் தான் பாவம். கொலை நடந்த இடத்தில் ஏரியா இன்ஸ்பெக்டர் வரும் முன்பாக வந்து விடுகிறீர்கள்."

"அது பிரான்சிஸ் அன்பரசு விற்கு நான் செய்யும் பிரதியுபகாரம் அவனுடைய தந்தைக்கு நான் காட்டும் நன்றியுணர்ச்சி .அதை நான் இப்படித்தான் வெளிக்காட்டியாக வேண்டும்."

" ஆனால் இருவருமே அவ்வளவு நல்லவர்கள் போல் எனக்கு தோன்றவில்லையே?"

"ஏ மேன் வித்தவுசண்ட் பேசஸ் .ஒரு மனிதனுக்கு ஆயிரம் முகங்கள் உண்டு. அதில் நல்ல தான முகத்தை நான் பார்த்திருப்பேன் என்று நம்புகிறேன். மற்றவர்களுக்கு அவர்கள் எப்படியோ எனக்கு தெரியாது. என்னைப் பொறுத்தவரை அவர்கள் என்னிடம் நல்ல விதமாகத்தான் நடந்து கொண்டார்கள். உண்மையில் அவர்களுக்கு கொடுரமான வேறு முகம் இருந்திருக்கலாம் - துரதிர்ஷ்டவசமாக அந்த முகத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அப்படி பார்த்திருந்தால் நீங்கள் சொல்லாமலேயே என்னுடைய கருத்து மாறியிருக்கும்."

"புரிகிறது சார். நானும் எங்களால் முடிந்த வரை வேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறேன்."

" பெஸ்ட் ஆப் லக். விரைவிலேயே அவனை கண்டுபிடியுங்கள்"ரஞ்சன் போனை வைத்து விட்டார்.

போனை டேபிளின் மேல் வைத்த அருண் தன் சிந்தனைக் குதிரையை தட்டி விட்டான்.

கொலை செய்யப்பட்ட அத்தனை பேரும் நிறைய பாவங்களை செய்திருக்கிறார்கள். அதற்கு தண்டனையாக மரணத்தை பரிசாக கொலைகாரன் தந்திருக்கிறான்.
இவர்கள் செய்த பாவங்கள் இவர்களுக்கும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே தெரியும். பாதிக்கப்பட்டவர்களும் கூட தங்களுக்கு கெடுதல் செய்த அந்த ஒருவனை மட்டுமே கொலை செய்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்து கொண்டிருக்க முடியும். ஆனால் ஒரு மூன்றாம் மனிதன் இவர்களின் பாவங்களை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான். அவனே சட்டத்தை கையில் எடுத்து கொண்டு இவர்களை தண்டிக்கவும் செய்கிறான். அதுவும் மிக வேகமாக . அதீத அவசரமாக . யார் அவன்? ஒரு வேளை அந்த கொலைகாரன் இறந்து போன மூன்று பேராலும் பாதிக்கப்பட்டவனாக இருந்திருப்பானோ? இந்த வரிசையில் இன்னும் யார் இருப்பார்கள் என்று வேறு தெரியவில்லையே? என்றெல்லாம் அருண் யோசித்து குழம்பி கொண்டிருந்தான்.

அதே நேரம் எந்த கவலையுமின்றி வினோத் தன்னுடைய கேபினில் உட்கார்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

வினோத்தின் செல்போனிலிருந்து விதவிதமான பேச்சு குரல்கள் வந்து கொண்டிருந்ததால் கவனம் கலைந்ததால் எரிச்சலோடு" வினோத். அங்கே என்ன செய்கிறாய்? எப்.எம் கேட்பதாக இருந்தால் ஹேட்போனையூஸ் பண்ணு. எனக்கு அந்த சத்தம் இடைஞ்சலாக இருக்கிறது" என்றான்.

"ஒரு நிமிசம் பாஸ்" என்ற வினோத் கேபினிலிருந்து எழுந்து வந்து அருணின் எதிரே இருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தான்.

"ஓயாது அதைப் பற்றியே நினைத்து டென்சனாகாதீர்கள் பாஸ்! கொஞ்சம் ரிலாக் சாக இருங்கள். இது புதிதாக வந்திருக்கும் ஒரு மொபைல் ஆப். கொஞ்ச நேரம் இதை கேளுங்கள்"

" என்ன ஒரே பேச்சு சத்தமாக இருக்கிறது? என்ன ஆப் இது?" என்றான் அருண் குழப்பத்துடன் .

" Club house ன்னு ஓரு ஆப் பாஸ்! புதிதாக வந்திருக்கிறது. கிட்டத்தட்ட பேஸ்புக் போலதான். ஒரு ரூமை கிரியேட் பண்ணி ஏதாவது ஓரு டாபிக்கை பற்றி ஏழு, எட்டு பேர் பேசலாம். ஒரே கண்டிசன் ஒருத்தன் பேசும் போது மற்றவர்கள் மைக்கை ஆப் பண்ணி மியூட்ல இருக்கணும். கொஞ்ச நேரம் கேளுங்களேன்"

இரண்டு நிமிடங்கள் அதை கேட்ட அருண் "இதென்னடா கிராஸ் டாக் மாதிரியே இருக்கு." என்றான்.

"கிட்டத்தட்ட அதேதான். கொஞ்சம் மேம்பட்ட வடிவம். ஆங்கில படங்களும் கிராபிக்சும் என்று ஒரு தலைப்பில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் கேட்டு பாருங்கள்"

"டெக்னாலாஜி எப்படியெல்லாம் முன்னேறுது பாரு" என்ற அருண் அந்த சம்பாசணைகளை கேட்க ஆரம்பித்தான்.

"அவதார் படத்தோட கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பிரத்யேகமான சாப்ட்வேர்களை உருவாக்க 20 வருடம் பிடித்தது. ஜேம்ஸ் கேமரூன் அதுவரை கதையை வைத்து கொண்டு காத்திருந்தார்" என்றான் ஒருவன்.

"இதென்ன விசயம்.?ஜெமினி மேன் படத்திற்காக வில் ஸ்மித்தை 52 வயதிலும் 25 வயதிலும் காட்ட ஒரு ஸ்பெசல் சாப்ட்வேர் கண்டுபிடித்தார்கள். 15 வருசமாக கதையை சும்மாவே வைத்திருந்தார்கள்" என்றான் இன்னொருவன்.

"டென் கமாண்ட்ஸ் படத்தை பாருங்கள்.கம்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத அந்த காலத்திலேயே மோசஸ் தடியை பாம்பாக்கும் காட்சியை தத்ரூபமாக படமாக்கி இருப்பார்கள். எதுவுமே இல்லாத அந்த காலத்தில் அந்த காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள் என்பது தான் அதிசயம்" என்றான் இன்னொருவன்.

அருணின் மனதில் மின்னல் அடித்தது. டென் கமாண்ட்ஸ். இறைவனின் பத்து கட்டளைகள். அவனுக்கு கொலை செய்யப்பட்டவர்களின் கைகளில் இருந்த அந்த எண்கள் நினைவுக் கு வந்தன. அந்த கீழே உள்ள பத்து என்ற எண் ஒருவேளை பத்து கட்டளைகளை குறிக்குமோ?இந்த எண்ணம் மனதில் தோன்றியதுமே அருண் "யுரேகா " என்று கூச்சலிட்டான்.

வினோத் குழப்பத்துடன் அருணை திரும்பி பார்த்தான்.​
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 14


அருண் யுரேகா என்று கத்தியதும் திரும்பி பார்த்த வினோத்" என்ன பாஸ்! நீங்களும் ஆர்க்கிமிடிஸ் போல் தெருவில் அம்மணமாக ஓடப்போகிறீர்களா? பார்ப்பவர்கள் பாவம் பாஸ்" என்றான்.

"லூசுப் பயலே! இங்கே வா! நான் ஒரு விசயத்தை கண்டு பிடித்திருக்கிறேன். கொலைகாரன் பத்து கட்டளைகளின் அடிப்படையில் தான் கொலைகளை செய்து கொண்டிக்கிறான். உன்னுடைய ஆப்பில் ஒருவன் பேசியதை வைத்து கண்டுபிடித்தேன். எனக்கு உடனே பத்து கட்டளைகள் என்னவென்று தெரிய வேண்டும்"

"அதற்கென்ன? கூகுளாண்டவரை கூப்பிட்டால் போச்சு" என்ற வினோத் அருணின் கையிலிருந்த போனை வாங்கி கொண்டான். அவன் போனை வாங்கியதும் கரண்ட் கட்டானது.

"கரண்ட் போய்விட்டது. சகுனமே சரியில்லையே?" என்றான் வினோத்.

"முதல் தலைப்பை நீ படி. இரண்டாவது தலைப்பை நான் படிக்கிறேன். இன்னும் அரை மணி நேரத்தில் பத்து கட்டளைகளைப் பற்றிய முழு விவரமும் எனக்கு வேண்டும்."

இருவரும் வெகு வேகமாக போட்டி போட்டு கொண்டு படிக்க ஆரம்பித்தனர்.

அரை மணி நேரத்திற்கு பிறகு அவர்களுக்கு கிடைத்த தகவல் இதுதான்.

மோசஸ் சினாய் மலையில் கடவுளிடமிருந்து இரண்டு கற்பலகைகளில் பெற்ற மொத்த கட்டளைகள் 20.

அதை சுருக்கி பத்து கட்டளைகளாக மாற்றி இருக்கிறார்கள். அவை.

1/10. “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.” இந்த கட்டளை ஒரே உண்மையான தேவனைத் தவிர மற்ற தெய்வங்களை வணங்குவதற்கு எதிரானது ஆகும். மற்ற தெய்வங்கள் எல்லாம் போலியான தெய்வங்கள்.

2/10. வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.” இந்த கட்டளை விக்கிரகம் மற்றும் காணக்கூடாத தேவனுக்கு பதிலான சொரூபத்தை உருவாக்குவதற்கு எதிரானது. தேவனை சித்தரிக்கக்கூடிய எந்த சொரூபத்தையும் நம்மால் செய்ய முடியாது. தேவனுக்கு பதிலாக விக்கிரகத்தை உருவாக்குவது தவறான தெய்வத்தை வழிபடுவது ஆகும்.

3 / 10. “உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக் கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.” இந்த கட்டளை தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவது குறித்தது. தேவனுடைய நாமத்தை நாம் அற்பமாக பயன்படுத்தக் கூடாது. நாம் மரியாதை மற்றும் கனத்தோடு அவருடைய நாமத்தை பயன்படுத்துவதன் மூலமே நாம் தேவனுக்கு கனத்தை செலுத்த வேண்டும்.

4/10. “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக் ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக் ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதை பரிசுத்தமாக்கினார்.” இந்த கட்டளை ஓய்வுநாளை (அதாவது ஞாயிற்றுகிழமை, வாரத்தின் கடைசி நாள்) ஓய்ந்திருந்து தேவனுக்கான நாளாக அனுசரிக்க வேண்டும் என்பதை பற்றியதாகும்.

5/10 “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” இது தகப்பனையும் தாயையும் மரியாதையோடும் கனத்தோடும் நடத்த வேண்டும் என்பதற்கான கட்டளை ஆகும்.

6/10. “கொலை செய்யாதிருப்பாயாக.” திட்டமிட்டு மற்ற நபரை கொலை செய்வதற்கு எதிரான கட்டளையாகும்.

7/10. “விபசாரம் செய்யாதிருப்பாயாக.” தன்னுடைய மனைவியைத் தவிர மற்றவர்களோடு பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கு எதிரான கட்டளையாகும்.

8/10. “களவு செய்யாதிருப்பாயாக.” மற்றவர்களுக்குச் சொந்தமான, நமக்கு சொந்தமல்லாத எந்த பொருளையும் அவர்களுடைய அனுமதியின்றி எடுப்பதற்கு எதிரான கட்டளையாகும்.

9/10. “பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.” பிறருக்கு விரோதமாக பொய்சாட்சி கூறுவதற்கு எதிரான கட்டளையாகும். இது பொய்க்கு எதிரான கட்டளையும் ஆகும்.

10/10. “பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக, பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.” தனக்கு சொந்தமல்லாத எதையும் இச்சிப்பதற்கு எதிரான கட்டளையாகும். இச்சையானது மேல்குறிப்பிடப்பட்ட கொலை, விபசாரம், மற்றும் களவு ஆகிய கட்டளைகளில் எதையாகிலும் மீரி நடக்கச் செய்கிறது. எதையாவது செய்வது தவறு என்றால் அதை செய்ய இச்சிப்பதும் தவறானதே ஆகும்.

இவற்றை படித்துப் பார்த்த அருண் எல்லாவற்றையும் ஓரு பேப்பரில் எழுத சொன்னான்.

பத்து கட்டளைகளை பேப்பரில் எழுதி வைத்த வினோத் அவை கொலை செய்யப்பட்டவர்களுடன் ஒத்து போகிறதா என்று பார்த்தான்.

அருண் "முதலில் சாமுவேல் ரத்னகுமார். அவனது கையில் இருந்தது 4/10. இதற்கான கட்டளை ஓய்வு நாளில் வேலை செய்யாதே தனக்கு கீழ் இருப்பவர்களை வேலை வாங்காதே என்று இருக்கிறது. நம்முடைய ஆள் இரட்டை சம்பளம் கொடுத்து ஞாயிற்றுகிழமை வேலை செய்ய சொல்லியிருக்கிறான். அவர்களில் சரிபாதி பேர் கிறிஸ்தவர்கள் என்ற போதிலும் அவன் அதை கண்டு கொள்ளவில்லை."

" ஆரம்பமே இடிக்குதே பாஸ். லீவு நாளில் வேலை செய்ய சொன்னதற்காக யாராவது கொலை செய்வார்களா ? எனக்கென்னவோ லாஜிக் தப்பாக இருப்பது போல் தோன்றுகிறது."

"முதலிலேயே முட்டுக்கட்டை போட்டால் எப்படி வினோத்.?" என்றான் அருண்.

"கோபித்து கொள்ளாதீர்கள். எனக்கென்னவோ அற்ப காரணத்திற்காக கொலையாளி கொலை செய்வது போல் தோன்றவில்லை. இதை நான் திசை திருப்பும் உத்தியாகவே நினைக்கிறேன்"

அருண் ஆயாசத்துடன் சேரில் சாய்ந்தான். அடுத்த நொடிபோன கரண்ட் திரும்பி வந்தது.​
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom