Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL கொல்வதெல்லாம் உண்மை - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
வணக்கம்,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

நன்றி
- நித்யா கார்த்திகன்

 
கொல்வதெல்லாம் உண்மை.

அத்தியாயம் - 1

அவன் ஒரு கொலை செய்வதற்காக இரவின் இருளில் காத்திருந்தான். அது ஒரு நெடுஞ்சாலை.சாலையோர மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் நிறமிழந்து வாடிப்போய் கிடந்தன. அவற்றின் மீது கால் வைத்து அவன் நடந்து கொண்டிருந்தான். தூரத்து வானில் பெளர்ணமி நிலா யாரும் பார்க்காமல் காய்ந்து கொண்டிருந்தது. தெருவோர விளக்கு ஒன்று விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் மின்னல் வெட்டு வெளிச்சத்தில் அவன் ஜெர்கினும் காட்டன் பேண்டும் அணிந்திருப்பது தெரிந்தது. தூரத்தில் தெரிந்தஓன்றிரண்டு வீடுகளில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எங்கோ ஒரு நாய் தனியாக ஊளையிட்டு கொண்டிருந்தது.

அவன் நிலை கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தான். முன்னும் பின்னுமாக பூக்களின் மேல் நடக்கத் துவங்கியவன் படபடப்பாக இருந்தான். கையில் கட்டியிருந்த வாட்சை நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்து கொண்டிருந்தான்.அவனது அவசரம் புரியாமல் சின்னமுள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்திருந்த ஆள் வரக்கூடிய நேரம் நெருங்கி கொண்டிருந்தது. அவன் அவசர அவசரமாக பேண்ட் பாக்கெட்டில் இருந்து கையுறைகளை எடுத்து சாவகாசமாக அணிந்து கொண்டான்.
பேண்டின் பின்புறத்தில் சொருகி வைத்திருந்த அந்த வினோத வடிவமைப்பு கொண்ட கத்தியை உருவிக்கொண்டான். அந்த கத்தி நடுவில் ஓட்டைகளோடு துணியில் ரம்ப பற்களோடு இருந்தது. அது அவனே உருவாக்கியகத்தி. கடைகளில் அந்த மாதிரியான கத்தியை நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

தன்னுடைய பழி தீர்க்கும் வைபவத்திற்காக அவனே பிரத்யேகமாக உருவாக்கிய அந்த கத்தி நிலவின் ஓளியில் பளபளத்தது. அந்த கத்தியை லாவகமாக ஒரு சுற்று சுற்றியவன் அதை காற்றில் ஒரு வீசுவிசினான். கத்தியின் கூர்முனை பட்டு அருகிலிருந்த செடியின் இலை ஒன்று துண்டிக்கப்பட்டு காற்றில் மிதந்துதரையிறங்கியது. அவன் திருப்தியுடன் தலையசைத்து சிரித்து கொண்டான். மீண்டும் கடிகாரத்தை பார்த்தவனின் முகத்தில் பரபரப்பு கூடியது. அவன் வரும் நேரம் நெருங்கி விட்டது. அவன் ஜெர் கினுக்குள் கத்தியை பதுக்கினான்

சாலையின் வளைவை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அவனது பிடறியில் ஒரு வேர்வை கோடு இறங்க ஆரம்பித்தது. அவனது இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. பெருமூச்சு விட்டு அவன் மூச்சை ஸ்திரப்படுத்தி கொண்டான். சாலையின் வளைவில் வெளிச்சப்புள்ளிகள் இரண்டு தோன்றின. அவை காரின் ஹேட்லைட்டுகள் அவனது கண்கள் கூர்மையாகின. ஹேட்லைட் வெளிச்சத்திற்கு கீழே இருந்த நெம்பர் பிளேட்டை பார்த்தவன் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள். அவன் எதிர்பார்த்த வண்டி இதுதான். வளை விற்கு பிறகு இரண்டாம் கியரிலிருந்து மூன்றாம் கியருக்கு மாறிவண்டி வேகம் பிடித்தது.

அவன் நடுச்சாலைக்கு வந்தான். தனது வலது கையின் கட்டை விரலை தலைகீழாக காட்டினான். வேகம் பிடித்த கார் பிரேக்கடித்து தன் வேகத்தை குறைத்தது. காரை ஓட்டி வந்தவனுக்கு எரிச்சல் மண்டியது. இதுவரை சாலை ஓரத்தில் லிப்ட் கேட்பவர்களை அவன் பார்த்திருக்கிறான். யார் இவன்? நடுரோட்டில் நின்று லிப்ட் கேட்கிறான். அவன் கோபத்தோடு வண்டியை நிறுத்தினான்.

ஹேட்லைட் வெளிச்சத்தில் நடுரோட்டில் நின்றவன் தன் முகத்தை மறைத்திருந்த இடது கையை எடுத்தான்.
காரை நிறுத்தி கோபத்துடன் இறங்கியவன் அவனது முகத்தை பார்த்ததும் ஆச்சர்யத்துடன் "நீங்களா? இங்கே எங்கே வந்தீர்கள்?" என்றான்.

நடுச்சாலையில் நின்றவன் காரை நெருங்கினான். "உன்னை பார்க்கத்தான் இவ்வளவு நேரமாக காத்திருக்கிறேன்"

" போன் செய்திருந்தால் நானே உங்களை பார்க்க வந்திருப்பேனே? என்னை எதற்காக சந்திக்க நினைத்தீர்கள்?"

"உன்னை கர்த்தரிடம் அனுப்ப."

" என்ன சொல்கிறிர்கள்?"

அவன் மின்னல் வேகத்தில் ஜெர்கினில் இருந்த கத்தியை உருவினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் என்ன நடக்கிறதென்று சுதாரிக்கும் முன்பாக அவன் நெஞ்சில் சரமாரியாக குத்தினான். அவன் அலற முயன்ற போது கத்தி அவனது குரல்வளையை அறுத்தது. அவனது துடிப்பு அடங்கும் வரை நிதானமாக பார்த்து கொண்டிருந்தவன் அவனது மூச்சு நின்று விட்டதை உறுதி செய்தவனாக அவனது வலது கையில் கத்தியால் ஒரு வட்டத்தை போட்டான். அதனுள் 4 / 10என்று எழுதினான். பிறகு தன் நெற்றியில் சிலுவை குறியை போட்டு கொண்டு கத்தியோடு இருளில் மறைந்தான்.

அவன் உறுதியாக காரில் இறந்து போயிருந்தான்.​
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 2


தன் செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தான் வினோத். தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்த அருண் ஹால் சோபாவில் விளையாட்டில் மூழ்கியிருந்த வினோத்தை பார்த்தான்.

"முன்பெல்லாம் வேலை இல்லையென்றால் ஈஓட்டுவார்கள். இப்போது ஈ ஓட்டுவதற்கு பதிலாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்."

"எந்த கேசும் கையில் இல்லை. வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் பாஸ்.?"

"உன்னை கேம் விளையாடுமளவிற்கு ப்ரீயாக விட்டது என்னுடைய தப்பு.அலாவுதீன் பூதம் மாதிரி உனக்கும் ஏதாவது ஒரு வேலையை கொடுத்து கொண்டே இருக்கனும் போல."

"வேலை ஏதாவது இருந்தால் கொடுங்கள் பாஸ்சும்மா இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது."

"என்னடா!வடிவேல் மாதிரி பேசிக் கொண்டு இருக்கிறாய்?" என்ற போது கதவு தட்டப்பட்டது

அருண் "கிளைண்ட்" என்றவன் "நீ போய் கம்யூட்டர் முன்னால் உட்கார்ந்து இதே வேலையை செய்"

"பிசியாக இருப்பது போல் நடிக்க சொல்கிறீர்கள். புரிகிறது."

"அதே " என்ற அருண் "எஸ் கமின் " என்றான் கதவை பார்த்து.

கதவை திறந்து உள்ளே நுழைந்தவர் ரகுவரனின் உயரத்தில் இருந்தார்.. கண்ணில் உயர்தரமான கூலிங் கிளாசும் உதட்டில் ஒரு பைப்பும் தொங்கியது. எதிரே நின்ற அருணை பார்த்தவர் "ஐ ஆம் பிரான்சிஸ் அன்பரசு " என்று கையை நீட்டினார். அவரை சுற்றி ஒரு வினோத வாசனை சுற்றி சுழன்றது.

நீட்டிய கையை பற்றி குலுக்கிய அருண் "பிளீஸ். உட்காருங்கள்" என்றான்

அன்பரசு சோபாவில் புதைந்தார். தன் கையில் இருந்த ஸ்டிக்கை சோபாவின் ஓரத்தில் வைத்தவர் " சம்பிரதாயமான பேச்சுகள் வேண்டாம் மிஸ்டர் அருண்.நான் ஒரு பிஸ்னஸ்மேன்.என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை"

"அப்படியானால் நேரடியாக விசயத்திற்கு வந்து விடுங்கள்" என்றான் அருண் அவர் கூலிங் கிளாசை நேராக பார்த்தபடி.

" என் தம்பி சாமுவேல் ரத்னகுமாரை நேற்று இரவு யாரோ கொன்று விட்டார்கள். அந்த விலைமகள் மகனை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். இது பிளாங்க் செக். எவ்வளவு வேண்டுமோ அதை நிரப்பி கொள்ளுங்கள்" என்ற அன்பரசு கோட் பாக்கெட்டி லிருந்து ஒரு பிளாங்க் செக்கை நீட்டினார்.

அதை வாங்காமல் நின்ற அருண் "நீங்கள் முழு விவரத்தையும் சொல்லவில்லையே?" என்றான்.

செக்கை டீப்பாயின் மேல் வைத்த அன்பரசு தன் போனை எடுத்து யாரையோ அழைத்தார்.

"ரஞ்சன். நீ சொல்லித்தான் நான் இங்கு வந்தேன். நீயே பேசு." என்றபடி போனை அருணிடம் நீட்டினார்.

"ஹலோ" என்றான் அருண்.

"நான் கமிசனர் ரஞ்சன். நான் தான் உங்களைரெக் கமண்ட் செய்தேன். இந்த கேசை எடுத்து கொள்ளுங்கள். எல்லா விவரங்களையும், உதவிகளையும் நான் செய்கிறேன்"

"ஒகே சார். நான் உங்களை அலுவலகத்தில் வந்து சந்திக்கிறேன்." என்று போனை அன்பரசுவிடம் நீட்டினான்.

"அப்புறம் பேசுகிறேன்" என்று போனை அணைத்த அன்பரசு" என்பால்ய சினேகிதன் எனக்காக எதை வேண்டுமானாலும் செய்வான்"என்று புன்னகைத்தார்.

"ஓகே.இதை நான் எடுத்து கொள்கிறேன்" என்று செக்கை எடுத்து கொண்டான் அருண்.

"குட். பாருங்க அருண். அவன் எனக்கு உயிரோடு வேண்டும். நான் பாரின் டிரிப் போகிறேன். திரும்பி வர இரண்டு மூன்று வாரங்கள் ஆகும். அதற்குள் அந்த வேசி மகனை கண்டு பிடித்து விடுங்கள்"

"வீ டூ இட் சார்"

"இதோ என்னுடைய விசிட்டிங் கார்டு. ஏதேனும் அவசரம் என்றால் இதில் உள்ள எண்களுக்கு அழையுங்கள். எந்த எண்ணில் அழைத்தாலும் சிறிது நேரத்தில் நான் லைனில் வந்து விடுவேன்."

"உங்கள் தம்பியை பற்றி எதுவும் சொல்லவில்லையே?"

"அவனை பற்றி என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. எல்லா பணக்கார குடும்பங்களிலும் குடும்ப பெயரை கெடுக்கவென்றே சிலர் பிறப்பார்கள் அல்லவா? என் தம்பியும் அந்த தத்தாரிகளில் ஓருவன். என்னுடைய பணத்தையும், செல்வாக்கையும் நான் அதிகமாக அவனுக்காகத் தான் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த இடங்கள் போலீஸ் ஸ்டேசனாக சில நேரம் கோர்டாக கூட இருந்திருக்கிறது. இதிலிருந்து அவனது கேரக்டரை முடிவு செய்து கொள்ளுங்கள்."

" உங்களைப்போல் மாட்டி கொள்ளாமல் தவறு செய்ய உங்கள் தம்பிக்கு தெரியவில்லை போலும். இதை சொன்னதற்காக என்னை மன்னித்து விடுங்கள்"

"லீவ் இட். நீ சொன்னதில் உண்மை இருக்கிறது. நான் அதை ஆமோதிக்கிறேன். மாட்டி கொள்ளாத குற்றவாளிகள் நிறையவே வெளியே இருக்கிறார்கள்."

" ரத்னகுமாருக்கு மனைவி, குழந்தைகள் யாராவது?"

"மனைவி இல்லை. குழந்தைகள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரியாது"

"அப்படி யாராவது வாரிசு இருந்தால் நீங்கள் பங்கு கொடுக்க வேண்டியதாயிருக்கும் "

" என் தம்பி அந்த விசயத்தில் அலட்சியமாக இருந்திருக்க மாட்டான். பாதுகாப்பு சாதனங்கள் நிறையவே பத்து ரூபாய்க்கு மூன்று என்று மெடிக்கல் ஷாப்களில் விற்கின்றன"

"உங்கள் தம்பியிடம் ஏதாவது இரவு நேரத்தில் அந்த பத்து ரூபாய் கூட இல்லாமல் இருந்திருக்கலாம்."

பிரான்சிஸ் அன்பரசு மெலிதாக சிரித்தார்.

"சொத்துக்காக என் தம்பியை நானே ஆள் வைத்து கொன்று விட்டேன் என்று நினைக்கிறீர்களா? எனக்கு பேஸ் ரீடிங் அதிகமாகவே தெரியும் " என்றவர் கூலிங் கிளாசை கழற்றி அருணை கண்ணுக்குள் பார்த்தார். அந்த தீர்க்கமான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அருண் தலை குனிந்தான்.

"சேச்சே'நான் அப்படி நினைக்கவில்லை"

" உன் டவுட் எனக்கு பிடித்திருக்கிறது. நான் சரியான ஆளிடம் தான் வந்திருக்கிறேன். என்னையே நீ சந்தேகப்பட்டு விட்டாய். உன்னால் அந்த கொலைகாரனை கண்டுபிடித்து விட முடியும் என்று நம்புகிறேன். நான் வருகிறேன்"

பிரான்சிஸ் அன்பரசு அங்கிருந்து போன பின்பும் அவர் மீதான பர்ப்யூம் வாசனை போகாமல் அறையை சுற்றி சுற்றி வந்தது.

"பார்ட்டி பசையுள்ள பார்ட்டி போல் தெரிகிறது" என்றான் வினோத்.

" மேலிடத் தொடர்புக்கும் பஞ்சமில்லை. நினைத்ததை சாதித்து விடுவான் போல் தெரிகிறது.

"செல்வம் உள்ள இடத்தில் குற்றமும் இருக்கும் "

"அந்தரத்னகுமார் யாருகிட்ட என்ன செய்து தொலைத்தானோ தெரியவில்லை. வாழ்க்கையை வாழாமல் போய் சேர்ந்து விட்டான்."

"சாமுவேல் ரத்னகுமார். பிரான்சிஸ் அன்பரசு.வித்தியாசமாக இருக்கிறது பெயர் .ஒரு வெளிநாட்டு பெயரும் தமிழ் பெயரும் சேர்ந்திருப்பது கொஞ்சம் வினோதமாக இருக்கிறது."

"பிரான்சிஸ் அன்பரசு.அபூர்வ சகோதரர்கள் படத்தில் டெல்லி கணே சோட பெயர். "

"அது வில்லன் கேரக்டர் இல்லையா?"

அதே நேரம் அருணின் போனில் மெசேஜ் மணி அடித்தது.

கமிசனர் ரஞ்சித் டெக்ஸ்ட் செய்திருந்தார்.

"இதற்கு அர்த்தம் தெரியுமா அருண் ?" என்றன வார்த்தைகள். அருண் பார்த்ததும் இரண்டு ப்ளூ கோடுகள் நிறம் மாறின.

கீழிருந்த மங்கலான புகைப்படத்தில் பச்சை நிறம் சுற்றி வந்து தெளிவானது. அது சாமுவேல் ரத்னகுமாரின் கை. அதை ஜூம் செய்தான் அருண்.ரத்த கோடுகளாய் பொறுக்கு தட்டி போயிருந்த அந்த எண்கள் கண்ணுக்கு தட்டுப் பட்டன.

4/10

என்றது டிஸ்ப்ளே.அருண் அது என்னவாக இருக்கும் என்று மண்டையை பிய்த்து கொள்ள ஆரம்பித்தான்.​
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 3

அருணும் வினோத்தும் கமிசனர் ரஞ்சனின் அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்த போது அவர் கைகளை பின்னால் கட்டி கொண்டு சன்னல் வழியாக எதையோ வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அருண் அவரது கவனத்தை கலைக்க மெலிதாக இருமினான்.

கவனம் கலைந்து திரும்பி பார்த்த ரஞ்சன் "உட்காருங்கள்" என்று காலியான இருக்கைகளை காட்டினார். இருவரும் உட்கார்ந்தபின்பு சேரில் உட்கார்ந்தரஞ்சன் "அந்த போட்டோவை பார்த்தீர்களா?" என்றார்.

"பார்த்தோம். அந்த 4/10 ஐவகுத்தால் இன்பினிட்டியாக விடை வந்து கொண்டே இருக்கிறது. அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்று எங்களுக்கு விளங்கவில்லை. உங்களுக்கு அதைப் பற்றி ஏதாவது ஐடியா இருக்கிறதா?"

"நத்திங் . பாருங்கள் அருண்.இங்கே எனக்கு வேலை பளு அதிகம். அதனால் என்னால் இதில் இறங்க முடியவில்லை. அந்த அன்பரசுவின் அப்பா தான் என்னை படிக்க வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவர். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது மகனுக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். அதனால் தான் உங்களை சிபாரிசு செய்தேன். நீங்கள் பரிபூரண சுதந்திரத்தோடு இந்த வேலையில் இறங்கலாம் பணத்தை பற்றி கவலைப்படாதீர்கள்."

"நாங்கள் குற்றவாளியை கண்டு பிடித்ததும்?"

"அதை அப்படியே மறந்து விட்டு இயல்பு வாழ்க்கைக்கு போய் விடுங்கள். அவனை என்ன செய்வதென்று அன்பரசு முடிவு செய்து கொள்வான்."

"அப்படியானால் அவனை நீங்கள் சட்டப்படி தண்டிக்க போவதில்லையா?"

"பிரான்சிஸ் அன்பரசு எப்போதும் சட்டத்தை நம்புவதில்லை. சட்டத்தை விட தன் பணம் சக்தி வாய்ந்தது என்பது அவன் நம்பிக்கை. அவனது தம்பி சாமுவேல் ரத்னகுமாரை காப்பாற்ற நீதிபதியின் மகளையே கடத்தி தீர்ப்பை மாற்றி எழுதச் செய்தவன் அவன்."

"நீங்களும் இதற்கு துணை போகிறீர்களா?"

"வேறு வழியில்லை அருண்.அன்பரசுவின் கைகள் வெகு நீளமானவை. அவற்றிலிருந்து தப்பிப்பது கடினம். அவன் தம்பியை கொலை செய்தது அவனது ஈகோவிற்கு விடப்பட்ட சவாலாக அவன் நினைக்கிறான். அதனால் அந்த கொலைகாரனை தன் கையாலேயே கொல்ல நினைக்கிறான். அவன் தனது வெளிநாட்டு டிரிப்பை முடித்துவிட்டு திரும்ப வரும் போது ஆசாமி அவன் கண் எதிரே இருக்க வேண்டும்"

" ரத்னகுமாரை பற்றி உங்களிடம் ஏதாவது தகவல் இருக்கிறதா? இல்லை நாங்கள் வெளியில் தான் விசாரிக்க வேண்டுமா?"

"இந்த பைலில் நாங்கள் சேகரித்த விசயங்கள் இருக்கிறது. இதற்கு மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் நீங்கள் வெளியே தான் விசாரிக்க வேண்டும். " என்ற ரஞ்சன் தன் டேபிள் டிராயரை திறந்து ஒரு பைலை எடுத்து மேஜையில் வைத்தார்.

"போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் "

" அதன் உள்ளேயே இருக்கிறது. அவனை கொல்ல பயன்படுத்திய ஆயுதம் வழக்கமான ஆயுதங்களுடன் ஓத்து போகவில்லை என்கிறது அறிக்கை."

"அப்படியானால் அந்த ஆயுதம் கொலைகாரன் இதற்கென்றே உருவாக்கியது தான் "

"அப்படித்தான் இருக்க வேண்டும். நெஞ்சின் தசைகள் ரம்பத்தால் அறுக்கப்பட்டிருப்பது போல் இருக்கிறது."

" ரத்னகுமார் எதற்காக அந்த சாலையில் காரை நிறுத்த வேண்டும்? அவர் அந்த டைமில்தான் வீட்டுக்குவருவார் என்று கொலைகாரனுக்கு எப்படி தெரிந்திருக்கும்?"

"கொலைகாரன் அவரை பின்தொடர்ந்து கண்காணித்திருக்கலாம். இல்லை ரத்னகுமாரின் பழக்க வழக்கங்கள் நன்றாக தெரிந்த நபராக கொலைகாரன்இருக்க வேண்டும்"

"இந்த இரண்டில் ஓன்றாகத்தான் இருக்க வேண்டும்"

"பெண் தொடர்புகள் ஏதாவது?"

"இருந்திருக்கலாம். விசாரித்தால் தெரியும் "

" ரத்னகுமாரின் பிஸ்னஸ் , வீட்டு அட்ரஸ்?"

" எல்லாமே பைலில் இருக்கிறது. நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம்."

அருண் சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்தான்.

" என்ன யோசனை அருண் ?"

"இது முன்விரோதத்திலோ, பெண் விவகாரத்திலோ நடந்த கொலை போல் தெரியவில்லை."

" என்ன சொல்கிறாய் அருண் ? "

" ரத்னகுமாரின் கையில் இருக்கும் அந்த தசம பின்ன எண்கள் வேறு சேதி சொல்கின்றன."

" என்ன நினைக்கிறாய் நீ?"

"இது ஒரு சைக்கோபாத் கில்லரின் வேலை என்று நினைக்கிறேன். அவர்கள் தான் தங்களுக்கென்று குறிப்பிட்ட பேட்டர்ன் வைத்து கொண்டு அதன் படி கொலை செய்வார்கள். இது ஆரம்பம் தான். இனியும் இதே மாதிரி எண்கள் எழுதிய கொலைகள் தொடர்ந்து நடக்கும் என்பது என்னுடைய யூகம்."

கமிசனர் ரஞ்சன் திடுக்கிடலோடு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

" என்ன சொல்கிறாய் அருண் ?"

" என் மனதிற்கு அப்படித்தான் தோன்றுகிறது" என்றான் அருண்.

அதே நேரம் பாழடைந்த லேத் பட்டரை ஒன்றில் அவன் தன் வினோத ஆயுதத்தை கூர் தீட்ட தொடங்கியிருந்தான்​
 
கொல்வதெல்லாம் உண்மை

அத்தியாயம் 4


மறுநாள் மாலை அருணும் வினோத்தும் சாமுவேல் ரத்னகுமாரை பற்றிய விசாரணைகளை முடித்துவிட்டு அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். அருண் மேஜையின் மேல் அலங்காரத்திற்காக வைத்திருந்த பேப்பர் வெயிட்டை கையில் உருட்டி கொண்டிருந்தான்.

"முதலில் நீ போய் வந்த விசயத்தை சொல் வினோத் " என்றான் அருண்.

"நான் முதலில் அவனது ஸ்பின்னிங் மில்லிற்கு போனேன் பாஸ். அங்கே ரத்னகுமாரை நல்லவிதமாகத்தான் சொல்கிறார்கள். மற்ற எல்லா ஸ்பின்னிங் மில்களிலும் ஞாயிற்று கிழமை விடுமுறை என்றாலும் கூட நம் ரத்னகுமார் தன் மில்லிற்கு விடுமுறை விட்டதில்லை. எப்போதும் அடையா நெடுங் கதவாக இருக்கிறது அவனது மில்லின் கதவு."

"ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்ய தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொள்ளதே?"

"அதையும் விசாரித்தேன். ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்தால் டபுள் சம்பளம் தருவதாக ரத்னகுமார் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறியிருக்கிறான். அதனால் அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால் தொழிலாளிகளிடம் கொஞ்சம் அதிருப்தி இருக்கிறது."

" என்னவென்று ?"

"ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள். அன்றும் வந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என்று தான் "

"அதுவும் சரிதானே? அன்று தானே மனைவி குழந்தைகளுடன் ஓய்வாக இருக்க முடியும்?"

"அதனால் ஞாயிற்றுகிழமை வேலை செய்ய விரும்பாதவர்கள் விடுமுறை எடுத்து கொள்கிறார்கள். பணம் வேண்டும் என்பவர்கள் வேலைக்கு வருகிறார்கள். ரத்னகுமார் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லையாம்."

"வேறு ஏதாவது தெரிந்ததா?"

" ரத்னகுமாருக்கும் அன்பரசு விற்கும் அவர்களின் அப்பா சொத்துகளை சரிசமமாக பிரித்து கொடுத்தாராம். ரத்னகுமார் சூதாட்டம், குடி, பெண்கள் என்று எல்லாவற்றையும் தொலைத்து விட்டாராம். அப்போது தன்னை ஏமாற்றிய ஓருவனை கொலை செய்து விட்டதாக கேள்வி.அண்ணன் அன்பரசுதான் இதில் தலையிட்டு ரத்னகுமாரை காப்பாற்றினாராம்.இந்த ஸ்பின்னிங் மில் கூட அன்பரசு வைத்து கொடுத்ததுதானாம்."

"அப்படியானால் ரத்னகுமாருக்கு என்று தனியாக சொத்துக்கள் எதுவும் இல்லை. அன்பரசுவின் தயவில் தான் அவன் வாழ்ந்திருக்கிறான்."

"ஆமாம். சொத்து விவகாரத்தில் அன்பரசு தன் தம்பி ரத்னகுமாரை தீர்த்து கட்ட முகாந்திரமில்லை. ஸ்பின்னிங் மில்லை பார்த்து கொள்ளும் மேனேஜர் போன்ற வேலையில் தான் ரத்னகுமார் இருந்திருக்கிறான். வெளியே தான் முதலாளி . இப்போது ரத்னகுமாரின் இறப்பு அன்பரசு விற்கு தொல்லை தான்."

" ரத்னகுமார் கொன்ற அந்த ஆசாமியை பற்றி அவனது குடும்பத்தை பற்றி?"

"விசாரித்து விட்டேன். அவன் ஒரு வட மாநில தொழிலாளி. அவனது இறப்புக்கு பிறகு அவனது குடும்பம் சொந்த ஊருக்கே திரும்ப போய்விட்டது. நீங்கள் போன விசயம் என்னவானது?"

"நான் ரத்னகுமாரின் வீட்டிற்கு சென்றேன். அங்கே எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. நிறைய மது பாட்டில்களும் பெண்கள் மறந்துவிட்டு சென்ற ஸ்டிக்கர் பொட்டுக்களும் கண்ணாடியில் கிடைத்தன. அவை சொல்லும் விசயங்கள் வேறு."

"தன்னுடைய சுகத்திற்காக ஏராளமான பணத்தை அள்ளி இறைப்பவன் போல் தோன்றுகிறது."

"தன் தம்பி இறந்த மறுநாளே எவனாவது பாரின் டிரிப்புக்கு கிளம்பி போவானா? அவனது மனநிலையை என்னால் யூகிக்க முடியவில்லை."

"தன் தம்பி சட்டென்று இறந்து போனதை அவனால் நம்ப முடியவில்லை என்று நினைக்கிறேன். அதனால் இறுதி சடங்கை அன்பரசு தவிர்த்துவிட்டது போல் தெரிகிறது. தன் தம்பி இன்னும் உயிரோடு இருப்பதாக அவன் நம்பநினைக்கிறான்."

"நான் ஒரு விசயத்தை சொல்ல மறந்து விட்டேன்.ரத்னகுமாரின் மில்லில் வேலை செய்பவர்களில் சரிபாதி பேர் கிறிஸ்தவர்கள்."

" என்ன சொல்கிறாய் நீ ?"

" உண்மை தான் பாஸ்.வருகை பதிவேட்டை பார்த்த போது கிடைத்த விசயம் இது .அதில் நிறைய கிறிஸ்தவ பெயர்களை நான் பார்த்தேன்.நம்புங்கள்"

"அப்படியானால் அவர்கள் ஞாயிற்றுகிழமை கண்டிப்பாக சர்ச்சிற்கு போயாக வேண்டுமே? அவர்கள் ஞாயிற்றுகிழமை வேலை செய்ய மாட்டார்களே? கடவுளின் ஓய்வு நாளில் வேலை செய்யக்கூடாது என்று அவர்களின் மதம் கூறுகிறதே?"

"ஆமாம் பாஸ். அவர்களுக்கு முதலில் விடுமுறை தர மறுத்து விட்டானாம் ரத்னகுமார். அவர்கள் அத்தனை பேரும் பாதர் அடைக்கலராஜிடம் மொத்தமாக சென்று முறையிட்டார்களாம். அவர் தலையிட்ட பின்புதான்அவர்களாகவே ஞாயிற்றுகிழமைவிடுமுறை எடுத்து கொண்டு விடுகிறார்கள். அந்த விசயத்தில் ரத்னகுமார் அதன் பிறகு தலையிடுவதில்லையாம். இதனால் பாதர் அடைக்கலராஜிற்கு ரத்னகுமாரின் மீது வருத்தமாம்."

" ஆனால் அவரால் வெளிப்படையாக ரத்னகுமாரை பகைத்து கொள்ள முடியாது."

"ஆமாம். அவன் தரும் தசமபாக பணம் பெரிதல்லவா?"

"கல்லறைதோட்டத்தில் தூங்கும் ரத்னகுமாரினால் இவருக்கு இழப்பு தான் "

" எல்லா வழிகளும் அடைபடுகின்றன. ரத்னகுமாரை யார் எதற்காக கொன்றிருப்பார்கள்? அவன் கையில் எழுதப்பட்ட எண்ணிற்கு என்ன அர்த்தம்?"

"இந்த கேஸ் ரொம்ப கஷ்டமாக இருக்க போகிறது."

வெளியே சூரியன் மறைந்து கொண்டிருந்தது.

அவன் இரவின் இருளில் கத்தியை பாண்ட் பாக்கெட்டில் சொருகி கொண்டு தன் இரைக்காக காத்து கொண்டிருந்தான். இரண்டாவது வேட்டை தொடங்கியது.


 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom