Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL தமிழுக்கு அமுதென்று பேர் - Tamil Novel

Status
Not open for further replies.
அத்தியாயம் 6

அன்று கோடை விடுமுறை முடிந்து அனைவரும் பள்ளிக்கு திரும்பவும் வரும் நாள். தமிழினி இரண்டு வருடங்களாக உற்சாகமாய் சென்றாள். ஆனால், இன்றோ அவளுக்கு பள்ளிக்கு செல்வதற்க்கு ஏனோ மனம் ஒப்பவில்லை.

காரணம் தெரிந்தது தானே, அமுதன் இனிமேல் வரமாட்டான் என்பதால் சோகமாகவே இருந்தாள். பள்ளிக்கு கிளம்பி நடந்து செல்லும் வழியில், அன்று அமுதன் அவளிடம் வந்து கேட்டது அவளுக்கு திரும்பவும் நினைவுக்கு வந்தது.

அப்பொழுது தமிழினி மாடுகளுக்கு கழனித் தண்ணீரை குடிக்க கலந்து கொண்டிருந்தாள். அமுதன் ஓடி வருவதைப் பார்த்தாள்.

மூச்சிரைக்க ஓடி வந்தவன், “தமிழு.. தமிழு..” என்றான்.

“ஏண்டா நண்பா, இப்படி ஓடி வர.? என்ன விஷயம்.?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“உன்கிட்ட.... கொஞ்சம்... பேசணும்..” என்று அவனுக்கு இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்க.

“இரு.. நீ முதல்ல தண்ணி குடி வா..” என்று சொன்னவள், கைகளைக் கழுவிக்கொண்டு அவனை அழைத்துக்கொண்டு போய் திண்ணையில் அமர வைத்தாள்.

உள்ளே சென்றவள், அவன் குடிக்க தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து தந்தாள். அதை வாங்கி மடக், மடக்கென்று குடித்தவன், தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தான். அவனிடம் சொம்பை வாங்கி வைத்தவள்,

“இப்போ சொல்லு டா நண்பா..” என்றாள்.

“தமிழு.. எங்க அத்த ஊர்ல இருந்து வந்திருக்காங்க. என்னை அவங்க கூட கூட்டிட்டு போறாங்களாம். அங்கயே என்னை பள்ளிக்கூடத்துல சேர்த்து விடறாங்கன்னு அப்பாகிட்ட சொல்லியிருக்காங்க. அப்பாகிட்ட கேட்டேன், அவர் உன் இஷ்டம். நீயே முடிவெடுன்னு சொல்றார். நான் இப்போ என்ன பண்றது தமிழு.? எனக்கு உன்னை, அப்பாவ, நம்ம ஊர விட்டுட்டு போக மனசே இல்ல. எனக்கு இங்க இருக்கறதுதான் பிடிச்சிருக்கு. ஆனா, அத்த கேட்க மாட்டங்க. அப்பாதான் நீ அங்க போய் இருந்துட்டு அப்பறமா அவங்க கிட்ட பேசுன்னு சொல்றார். நான் என்ன பண்ணட்டும்.?” என்றான் பாவமாக.

அமுதனை நினைக்கையில் பாவமாய் இருந்தது தமிழினிக்கு. சிறிது நேரம் யோசித்தவள், “அய்யா சொல்றதுதான் சரி. நீ அங்க போயிட்டு உனக்கு என்ன தோணுதோ அதையே செய். நீ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சரிதான் நண்பா.” என்றாள் சிரித்துக்கொண்டே.

“எனக்கு உன்னை நினைச்சா தான் பாவமா இருக்கு தமிழு. நான் மட்டும் தான் உனக்கு ஃப்ரெண்டா இருக்கேன். வேற யாருமே உன்கிட்ட பேசமாட்டிங்கறாங்க. நானும் அங்க போயிட்டா, நீ என்ன பண்ணுவ.?” என்று வெள்ளந்தியாய் கேட்ட அமுதனை நினைத்து அவளுக்கு உள்ளுக்குள் அழுகையே வந்தது. ஆனால், அதை வெளிப்படுத்தினால் எங்கே அவன் செல்ல மாட்டானோ என்று நினைத்தவள்,

“இல்லடா நண்பா. இப்போ கொஞ்சம் பேரு என்கிட்ட நல்லா தான் பேசறாங்க. விளையாடறாங்க. நான் சமாளிச்சுக்குவேன். நீ நல்லபடியா போயிட்டு வா. நீ இங்க வந்தா நாம் ரெண்டு பேரும் பார்க்கலாம். சரியா.?” என்று அவனை சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினாள்.

“சரி, தமிழு. நான் அங்க போயிட்டு சொல்றேன். நீ பார்த்து இரு. அம்மா, அப்பாவப் பார்த்துக்கோ. எங்க அப்பாவையும் பார்த்துக்கோ. அப்பா, நான் இல்லைன்னா ரொம்ப கஷ்டப்படுவார்.” என்று கண்கள் கலங்கினான்.

“டேய்.. எதுக்கு டா அழுகுற. நான் அய்யாவ பார்த்துக்கறேன். நீ பத்திரமா போயிட்டு வா.. நல்லா படி. என்னை மறந்துடாத டா நண்பா..” என்று அவளும் சற்று கண்கள் கலங்க,

“அப்படியெல்லாம் சொல்லாத தமிழு. என்னோட சிறந்த தோழி நீதான். உன்னை எப்படி நான் மறப்பேன். நான் இங்க வந்தா கண்டிப்பா உன்னைப் பார்க்க வரேன்.” என்றான்.

“சரிடா நண்பா..” என்று முதன் முறை பேசிய போது செய்தவாறே, தலையை ஒருபுறமாய் ஆட்டிச் சிரித்தாள் தமிழினி.

அதைப் பார்த்ததும் அமுதன் சிரித்துவிட்டான். அவளும் சிரித்து அவனை வழியனுப்பினாள். அதை நினைத்துப் பார்த்துக்கொண்டே பள்ளிக்கு வந்து சேர்ந்தாள்.

மூன்றாம் வகுப்பில் இருந்த அனைவரும், இப்போது அப்படியே நான்காம் வகுப்புக்கு சென்றிருந்தனர். அனைத்து பிள்ளைகளும் அவர்வர் இடத்திலேயே மாறாமல் அமர்ந்திருக்க, அவள் எப்போதும் அமரும் கடைசி பென்ச்சில் சென்று அமருவதற்க்காக குனிந்து கொண்டே வந்தவள், அங்கே இன்னொரு பை இருப்பதைப் பார்த்தாள்.

நிமிர்ந்தவளுக்கு ஆச்சர்யம், அமுதன் அங்கே சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தான். “தமிழு..” என்றான். தமிழினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

தான் அணிந்திருந்த பள்ளிப்பையை அவசரமாகக் கழட்டியவள், “டேய் நண்பா.. வந்துட்டியா.? எப்போ வந்த.? அங்கயே பள்ளிக்கூடத்துல சேர்ந்துடுவேன்னு சொன்ன.?” என்றாள்.

“ஆமா, தமிழு..” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே, “டிங்டிங்டிங்டிங்டிங்...” என்று மணி ஒலிக்க, அனைவரும் காலை பிரார்த்தனைக்கு ஓடினர்.

“சரி வா போலாம். மணி அடிச்சிடுச்சு. நான் உனக்கு சாயங்காலம் சொல்றேன்.” என்று சொல்ல, இருவரும் சேர்ந்து சென்றனர். எப்படியோ அவன் வந்துவிட்டான் என்ற உற்சாகமும், சந்தோஷமும் அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

அன்று உற்சாகமாய் முதல் நாள் பள்ளி வகுப்பை ஆரம்பித்தனர். புதிதாய் ஒரு ஆசிரியை வந்திருந்தார் வகுப்புக்கு.

“வணக்கம் பசங்களா, நான் தான் உங்களோட வகுப்பு ஆசிரியை வடிவுக்கரசி. நான் இப்போதான் புதுசா உங்க பள்ளியில் சேர்ந்திருக்கேன். உங்களுக்கு பாட்த்துல ஏதாவது சந்தேகம் இருந்தா கண்டிப்பா என்கிட்ட தைரியமா கேட்கலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்க என்னப் பார்த்து பயப்படத் தேவையில்ல. உங்களுக்கு நிறைய விஷயங்கள தினமும் கத்துக் கொடுப்பேன். நீங்க எல்லாரும் என்ன பண்ணனும்னா அதை தினமும், வீட்டுக்குப் போய் படிக்கணும். சரியா..” என்று அவர் சொல்ல,

அனைத்து பிள்ளைகளும் ஒன்று சேர, “சரிங்க டீச்சர்..” என்று கத்தினர்.

“சரி.. எனக்கு ஒவ்வொருத்தரா உங்கள அறிமுகப்படுத்திக்கோங்க. அப்போதான, நான் உங்கள பேர் சொல்லிக் கூப்பிட முடியும்.” என்று அவர் சொல்ல, அவர் பேசும் விதம் அனைவருக்கும் பிடித்துப் போனது.

ஒவ்வொருவராய் ஆரம்பித்து சொல்லி முடிக்க, கடைசி பென்ச்சில் இருந்த அமுதனும், தமிழினியும் அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

“நீங்க ரெண்டு பேர் மட்டும் ஏன் தனியா உட்கார்ந்து இருக்கீங்க.? நீ பொண்ணுங்க இருக்கற இடத்துலயும், நீ பசங்க இருக்கற இடத்துலயும் தான உட்காரணும்.?” என்று தன் கேள்வியை முன் வைத்தார் அவர்களிடம்.

அமுதன் எழுந்து நின்று, “இல்ல டீச்சர். இவ கிட்ட யாருமே பேசமாட்டாங்க, உட்காரமாட்டாங்க. அவ பாவம் தானே டீச்சர். எங்க அப்பாதான் இனிமேல் நீ அவகூட தான் உட்காரணும்னு சொன்னார். அதானால தான் டீச்சர் அவ கூட உட்கார்ந்திருக்கேன்.” என்றான்.

அப்போதுதான், அழகேசன் அவரிடம் தமிழினியைப் பற்றி கூறியது நினைவுக்கு வந்தது. “நீ தான் அழகேசன் வாத்தியாரோட பையனா.?” என்றார் அவர்.

“ஆமாங்க டீச்சர்.” என்றான் அமுதன் கைகளைக் கட்டிக்கொண்டு பவ்யமாக.

“இங்க பாருங்க, பள்ளிக்கூடத்துக்கு வந்துட்டா, நீங்க எல்லாரும் ஒண்ணுன்னு நினைக்கனும். கூட படிக்கற எல்லா பிள்ளைங்களையும் ஒண்ணாதான் பார்க்கணும். அப்பா, அம்மா சொல்றாங்கன்னு யாரையும் ஒதுக்கி வைக்கக் கூடாது. சில சமயம் அம்மா, அப்பா கூட தப்பு பண்ணுவாங்க. அதனால, நீங்க எல்லாருமே தமிழினி கூட நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆ இருக்கணும். சரியா.. நீங்க யார் யாரெல்லாம் அவ கூட ஃப்ரெண்ட் ஆகறீங்களோ அவங்களுக்கு ஒரு பரிசு குடுப்பேன். இப்போ பாருங்க, அமுதன் தான் முதல்ல என்கிட்ட இருந்து பரிசு வாங்கப் போறான். இங்க வா அமுதன். நீயும் வா தமிழினி.” என்று அவர்களை அழைத்தவர் இருவரையும் கைகள் கொடுத்து குலுக்கச் சொன்னார். பிறகு, இருவருக்கும் தன் பையில் வைத்திருந்த ஒவ்வொரு லெட் பேனாவை அளித்தார்.

“எல்லாரும் இப்போ அமுதனுக்கு கைத்தட்டுங்க.” என்று சொல்ல, அனைவரும் கைத்தட்டினர்.

“அவன் தான் தமிழினியோட முதல் ஃப்ரெண்ட். இதே போல யாரு யாரெல்லாம் தமிழினிகிட்ட தினமும் கைக்கொடுத்து ஃப்ரெண்ட் ஆகறீங்களோ அவங்களுக்கும் இதே மாதிரி பரிசு கொடுப்பேன்.” என்று சொன்னதும், இந்த முறை பிள்ளைகள் அனைவரும் சொல்லாமலேயே கைத்தட்டினர். அவர் சிரித்தார். தமிழினியின் மனதில் அன்று முதல் வடிவுக்கரசி டீச்சர், எவரெஸ்ட் சிகரத்தைப் போல் உச்சியில் அமர்ந்து கொண்டார். தெய்வமாக நினைத்தாள் அவரை.

அவரிடம், “ரொம்ப நன்றி டீச்சர்..” என்று கண்கள் கலங்க சொன்னவளின் கண்களைத் துடைத்து விட்டு, அவளைத் தழுவிக் கொண்டார். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவளும், எந்தப் பிள்ளைகளும். அதே போல், அனைத்தையும் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார் அழகேசன்.

இது அனைத்துமே, அவர் சொல்லியே வடிவுக்கரசி செய்தார். தமிழினியை இன்றும் அனைவரும் ஒதுக்கி வைப்பதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே இந்த ஆண்டு முடிவெடுத்திருந்தார். புதிதாக வந்த வடிவுக்கரசியோ மிக எளிமையாகவும், நன்றாகவும் பேசவே இவர்களைப் பற்றி அவர் சொன்னார். அப்போதே, அவரும் கண்டிப்பாக அவளுக்கு உறுதுணையாய் நிற்பேன் என்று வாக்களித்தார். அதன் படி இன்று பிள்ளையார் சுழி போடப்பட்டது.

மதிய உணவு வேளை முடிந்து வந்த போது, சில மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வந்து ஓரமாய் வைத்தபடி இருந்தனர். அனைவருக்கும் புதிய புத்தகங்கள் அளிக்கப்பட்டது. அனைவரும் புதிய புத்தகத்தின் வாசனையை உணர்ந்தவாறே, ஆவலுடன் ஒவ்வொரு பக்கங்களாய் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அனைவரின் பெயரையும் அவர் எழுதிக்கொள்ளச் சொல்ல, பென்சிலில் பெயரை எழுதிக்கொண்டனர். என்னென்ன நோட்டுகள் வாங்க வேண்டுமென்று போர்டில் எழுதினார் வடிவுக்கரசி. வழக்கம் போல் அமுதன் மட்டுமே எழுதிக்கொண்டான். ஏனென்றால், அதை எப்பொழுதுமே வாங்கிக்கொடுப்பது அழகேசன் தான்.

முதல் வகுப்பில் ஆரம்பித்து, இப்போது வரை அழகேசன் தான் தமிழினிக்கு நோட்டுகள் வாங்கிக் கொடுத்தது. அதனால், அமுதன் தான் அனைத்தையும் எழுதிக்கொள்வான். அதை முன்னரே ரங்காவிடமும், கோகிலாவிடமும் சொல்லிவிட்டார்.

அவர்கள் ஒத்துக்கொண்ட பிறகே, அவர் அவளுக்கு எல்லாம் செய்தார். பள்ளிக்கு அவள் போடும் சீருடை முதற் கொண்டு, பள்ளிக்குத் தேவையான பொருட்கள், பள்ளிக்கு கொண்டு செல்லும் பை, என்று அனைத்தையுமே இரண்டாகவே வாங்கி விடுவார் அழகேசன்.

தன்னால் முடிந்தது என்று அவரால் இயன்ற உதவிகளை அவளுக்கென்று செய்து வந்தார். இப்போது, வடிவுக்கரசியும் அவளுக்கென்று உதவி செய்ய முன் வந்ததைக் கண்டு அவள் மிகவும் சந்தோஷப்பட்டாள்.

இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, இருவரும் அன்று நடந்தவைகளை இருவரும் அசை போட்டபடி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் நினைவு வந்தவளாய் தமிழினி கேட்டாள், “டேய் நண்பா என்னதான் ஆச்சு.? அத்தை எப்படி உன்னை அனுப்பினாங்க.?” என்று கேட்க,

அமுதனோ, “நான் வீட்டுக்குப் போயிட்டு துணி மாத்திட்டு தோப்புக்கு வரேன். அங்க உட்கார்ந்து நாம் ஜாலியா பேசலாம். சரியா.?” என்றான் ரகசியத்துடன்.

“ஹூம்ம். ஏண்டா, இப்பவே சொன்னா ஆகாதா.? தோப்புக்கு போய் தான் சொல்லுவியா.?” என்று அவனைத் திட்டிக் கொண்டே அடிக்க வர, அவன் ஓடியே விட்டான்.

“டேய்ய்.. நில்லுடா எருமை..” என்று கோபத்தில் விடும் மிருக வார்த்தைகளை உபயோகித்தாள்.

அவன் தயாராகி தோப்புக்கு வந்து விட்டான். அவளும் ஒரு கரும்பு கட்டையை எடுத்துக்கொண்டே தயாராக வந்தாள்.

“எதுக்கு தமிழு, இந்தக் காஞ்ச கரும்பு கட்டை.? ஏதாவது புலியோ, நரியோ வந்துடும்னு எடுத்துட்டு வந்தியா.?” என்றான்.

“ம்ம்.. வாடா. உனக்காகத்தான் எடுத்துட்டு வந்தேன். அப்போ ஓடிட்ட இல்ல. அதான் எடுத்து வந்தேன் உன்னை அடிக்க.” என்று அவள் அதை வைத்து ஓங்க, அவன் அதை பிடுங்கிக் கொண்டான்.

“டேய். குடுத்துடு. இல்ல, அய்யாகிட்ட சொல்லிடுவேன்.” என்றாள் மிரட்டலாக.

அவனோ சிரித்துக்கொண்டே சென்று ஒரு பக்கமாய் அமர்ந்து கொண்டு கொக்கனித்தான். அவள் அவனை முறைத்தாள்.

“தமிழு நான் அங்க நடந்தத சொல்லட்டுமா.?” என்றதும், அவள் சிலுப்பிக்கொண்டே திரும்பினாள்.

“ஏய்.. கோச்சுக்காத தமிழு. நான் உனக்காகத்தான் வந்துட்டேன் தெரியுமா.? ஆனா, நீ கோவிச்சுக்கற.?” என்றான் பாவமாக.

கொஞ்சம் சமாதானமாய், “சரிடா சொல்லு.” என்றாள்.

அமுதன் நடந்ததை விவரித்தான். அங்கே சென்று இருந்த மூன்று நாட்கள் மட்டுமே அவனுக்கு எப்பொழுதும் போல் இருந்தன. அதன் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தடவை அவனிடம் நடந்து கொண்டவை அவனுக்குப் புதிதாய் தெரிந்தன.

அத்தை அவரது வேலையாக இருப்பார். அமுதனும், கோலாவும் இதுவரை பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடுவர். குமாரசாமியோ, பெரிய பசங்களோடு கிரிக்கெட் விளையாடக் கிளம்பி விடுவான்.

இந்த முறை அமுதன் அங்கே உள்ள பெண் பிள்ளைகளோடு விளையாடுவதைப் பார்த்தால், கோலாகலம் அந்தப் பிள்ளைகளை அடித்து விடுவது, கிள்ளி விடுவது, என்று ஒரே ரகளையானது. அமுதனுக்கு வெளியே போய் விளையாட முடியாமல் போனது.

கோலாவோ, அவளோடு மட்டுமே விளையாட வேண்டும் என்று சொல்ல, அவனுக்கு அவளைப் பிடிக்கமலே போனது. அவளோடு பேசவே இல்லை. அவள் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்ல, பெரியவர்களோ நன்றாகவே அமுதனைத் திட்டி விட்டனர்.

“எங்க கோலாவையே நீ வேணாம்னு சொல்றியா. உனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.? உன்னையெல்லாம் வைச்சிருக்க வேண்டிய இடத்துல வைச்சிருக்கனும். உன்னைக் கூட்டிட்டு வந்தாள்ல அவள சொல்லணும்.” என்று நடேசனின் அம்மா சொல்ல அமுதன் அழுதே விட்டான்.

விசாலாட்சி சமாதானம் செய்தும் அவன் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவனுக்கு உடனே ஊருக்கு வந்து விட வேண்டும் போல் இருந்தது. அன்று முழுக்க, யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் இருந்தான்.

(தொடரும்...)

வார்த்தைகளின் எண்ணிக்கை : 1280

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள லிங்கில் தரவும் நட்புக்களே,


 
அத்தியாயம் 7

அமுதன், இப்படி யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் இருந்ததைக் கண்டு விசாலாட்சிக்கு மிகுந்த வேதனையானது. அவள் தன் கணவன் நடேசனிடம் சொன்னாள்.

“என்னங்க இது.? அமுதா இப்படியே இருந்தான்னா என்ன பண்றது.? அண்ணாகிட்ட அவ்வளவு வாய் கொடுத்து பேசிட்டு வந்ததெல்லாம் வீணாகிடும் போல இருக்குதே.” என்று புலம்பினாள்.

“விசாலம், அவன் அப்படி இருந்தா அதுக்கு நாமென்ன பண்ண முடியும்.? நீ தான் அவனையும், உங்க அண்ணனையும் புடிச்சு தொங்கற. ஆனா, எனக்கு ஒண்ணும் நம்ம பொண்ண, பின்னால இவனுக்குக் கொடுக்கணும்னு எந்த ஆசையும் இல்ல. அவள வேற ஒரு நல்ல இடத்துல கட்டிக் கொடுக்கணும்னு தான் என்னோட ஆசை. அப்போதான் அவ நல்லா இருப்பா. நீதான் தேவையில்லாம இவனைப் புடிச்சிட்டு ஆடற. நானும், சரி இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்னு இருந்தேன். ஆனா, இன்னைக்கு சொல்லிட்டேன். வீண் ஆசையை மனசுல போட்டு வைக்காத. அதுவும் இல்லாம, நமக்கு இருக்கற கடன்ல நீ இவன வேற கூட்டிக்கிட்டு வந்து பள்ளிக்கூடத்துல சேர்த்து படிக்க வைக்கப் போறன்னு சொல்ற. சோத்துக்கு காசு யாரு கொடுப்பா.? நான் தான் கூத்து, பாட்டுன்னு போயி சம்பாதிக்கறேன். அத வைச்சு உனக்கும், எம்புள்ளைகளுக்கும், என் அப்பன், ஆத்தாளுக்கும், சோறு போடறதே அதிகம். எங்க அண்ண, தம்பிங்க மாதிரி உஷாரா இவங்கள வேண்டாம்னு சொல்லிருந்தா பரவால்ல. பெத்த கடனுக்கு இருந்துட்டு போகட்டும்னு அவங்களையும் பாத்துக்கறேனே ஏன் தெரியுமா.? அவங்க மனசு நொந்தா நாமளும், நம்ம புள்ளைங்களும் நல்லாவே வாழ முடியாது. அதனாலதான். நான் இதையெல்லாம் பார்த்துட்டிருந்தா, நீ உன் அண்ண பையனக் கூட்டி வந்து என்ன இன்னும் கடன்காரனாக்கப் பார்க்கற.?” என்றார் கோபமாக.

“அட நீங்க வேற, காரணம் இல்லாமலா நான் எங்க அண்ணனப் புடிச்சுத் தொங்கறேன்.? எங்க அப்பா, அம்மாவோட வீடு, நிலம், அப்பறம் பத்து ஏக்கரா நிலம் இதுக்கெல்லாம் ஒரே வாரிசு யாரு.? அமுதன் தான.? எங்க பெரிய அண்ணன் எப்போவே செத்துட்டாரு. சின்ன அண்ணந்தான் எல்லாமே பார்த்துட்டிருக்கு. எங்க அப்பா எப்போவே அமுதன் பேருல சொத்த எழுதி வைச்சுட்டாரு. அவங்க ரெண்டு பேரோட உசுரு போச்சுன்னா, அது முறைப்படி அவங்க கைக்கு வந்துடும். எங்க அண்ண எனக்கு எல்லாத்தையும் விட்டுக்கொடுக்காம செய்வாரு. ஆனா, அமுதனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா, வரவ எப்படி இருப்பாளோ, என்ன செய்வாளோ, யாருக்குத் தெரியும். அதனாலதான், இப்போவே நம்ம கோலாவ அவனுக்குன்னு சொல்லி வைச்சுட்டா, பின்னால எந்தப் பிரச்சினையும் வராது. அவளுக்கும் எல்லா உரிமையும் இருக்கும். எங்க அண்ண ஒருத்தர் தான, அதனால அவங்கள இங்கயே வரச் சொல்லிட்டு, நம்ம கூடவே நம்ம பொண்ணையும் வைச்சுக்கலாம். அதுக்கு தான் நான் இப்படி திட்டம் போட்டேன். ஆனா, இவன் யாரோ அந்த பொண்ணு கூடவே தான் சுத்தறான்னு சொன்னதும், அதை முளையிலே கிள்ளி விடணும்னு தான் இவன் இங்க கூட்டிட்டு வந்தேன். நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க.?” என்று விசாலாட்சி சலித்துக்கொண்டாள்.

“ஹூம்ம். நீ ஒரு கணக்கு போடற. ஆனா, ஆண்டவன் என்ன கணக்கு பண்ணி வைச்சிருக்கான்னு தெரியலையே.? சரி, நீ சொல்ற மாதிரி நடந்ததுன்னா சந்தோஷம் தான். நம்ம பொண்ணு நம்ம கூடவே இருப்பா. ஆனா, ஒருவேளை நீ சொன்னது நடக்காம போச்சுன்னா, நான் சொன்ன மாதிரி அவள ஒரு பெரிய இடத்துல தான் கட்டிக் கொடுப்பேன். சரியா.?” என்றார் நடேசன்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் சொன்னதுதான் நடக்கும் பாருங்க.” என்றவாறே மீண்டும் ஒருமுறை அமுதனை சமாதானப்படுத்தும் நோக்கில் அவனிடம் சென்றாள் விசாலாட்சி. அவளின் எண்ணத்தை நினைத்து பெருமூச்சொன்றை விட்டபடி முகம் கழுவ துண்டை எடுத்துக்கொண்டு கிணத்தடிக்குச் சென்றார் நடேசன்.

“டேய்.. அமுதா, தங்கம். கொஞ்சம் எழுந்திரி டா. உன்னைக் கெஞ்சிக் கேட்கறேன் டா. அத்தைகிட்ட பேசமாட்டியா. நான் உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கித் தரேன் தான, கொஞ்சம் சாப்பிடு டா. நான் வேணும்னா ஊட்டி விடறேன்.” என்றாள்.

அவன் அவளை முறைத்துக்கொண்டே கண்களை உருட்டிப் பார்த்தான். “சரி, இனிமேல் கோலா உன்கூட சண்டை போட மாட்டா. நான் அவகிட்ட சொல்லி வைக்கறேன். நீ யாருகூட போய் விளையாடனுமோ விளையாடு. சரியா.?” என்றதும் தான் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேட்டான்.

“நிஜமா தான் சொல்றீங்களா.? நான் போய் விளையாண்டா, கோலா எல்லாத்தையும், அடிக்கிறா. யாருமே என்கூட விளையாட வரமாட்டிங்கறாங்க. இதுக்கு பேசாம நான் எங்க ஊர்லயே இருந்திருப்பேன்.” என்று திரும்பவும் கண்ணீர் விட்டான்.

“டேய்... ராசா.. அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நான் தான் சொல்லிட்டேன்ல. நீ போய் யாருகூட வேணும்னா விளையாடு. சரியா. இப்போ சாப்பிடு. இந்தா...” என்று ஒரு வாயை ஊட்டினாள்.

குமரேசன், “அம்மா.. அம்மா..” என்று அழைத்துக்கொண்டே வந்தான். “ஏண்டா குமாரு.. இங்க தான் இருக்கேன்..” என்று சத்தமாகச் சொல்ல அங்கே வந்த குமரேசன், அவனது அன்னை அமுதனுக்கு ஊட்டி விடுவதைப் பார்த்தான். அவனுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

“ம்மா.. எழுந்திருச்சு வா.. எனக்கும், அப்பாவுக்கும் சாப்பாடு போடு.” என்று சற்று அதட்டலாகச் சொன்னான்.

“டேய்.. அங்கதானடா இருக்கு. தட்டு எடுத்துக் குடுத்து பாட்டிய சாப்பாடு போடச்சொல்லி சாப்பிடுங்க ரெண்டு பேரும். நான், அமுதனுக்கு சாப்பிட வைச்சுட்டுத்தான் வருவேன்.” என்று சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றான் குமரேசன்.

“ம்மா... ஏன் இவனே சாப்பிட மாட்டானா.? நீயே தான் ஊட்டி விடணுமா.? எனக்கு ஒரு நாளாவது பாசமா இப்படி ஊட்டி விட்டிருப்பியா.? இவன் வந்ததுல இருந்து எப்பப்பாரு நீ இவனையே தான் கவனிக்கற. நாங்கள்லாம் என்ன ரோட்ல போறதா.?” என்று சொல்ல, அதுவரை பொறுமையாய் இருந்தவள்,

“டேய்... வாய மூடுடா.. எதுக்கு இப்போ இப்படி கத்திட்டிருக்க.? சோத்தப் போட்டு உனக்கு திங்கத் தெரியாதா.? நான் வேற வந்து உனக்கு ஊட்டி விடணுமா.? அவன் தான் சின்னப் பையன் அதனால அவனுக்கு ஊட்டி விட்டுட்டிருக்கேன். இதெல்லாம் போய் பெருசுபடுத்துவியா.?” என்று திட்டினாள்.

“இப்போ, நீ வரப் போறியா, இல்லையா.?” என்று அவன் வீம்பாய்க் கேட்க, “போ.. வந்து தொலையறேன்..” என்று வெறுப்புடன் அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த அமுதன், “அத்தை, நானே சாப்பிட்டுக்கறேன். நீங்க போய், மாமாவுக்கும், அண்ணாவுக்கும் சாப்பாடு போடுங்க.” என்று அவள் கையில் இருந்த தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான். அவளுக்கே அவனைப் பார்த்து பாவமாய் இருந்தது.

கோபத்தோடே வந்த விசாலாட்சி அவர்களுக்கு சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டே, “எல்லாம் என்ன சொல்லி என்ன பண்றது.? நல்லா எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கானே, அவனே எல்லாத்தையும் பண்ணிக்குவான்னு நினைச்சேன் பாருங்க, என்ன சொல்லணும்.” என்று முணகியபடி தலையில் அடித்துக்கொண்டே சோற்றை இருவருக்கும் போட்டாள்.

அன்னையின் தகாத வார்த்தைகளைக் கேட்ட குமரேசன், கோபத்தோடு தட்டை தூரமாக தள்ளி விட்டுவிட்டு, எழுந்து சென்றான்.

“டேய்.. சோத்தையா தட்டி விட்டுட்டுப் போற. ஒரு நாள் இல்ல, ஒரு நாள் சோறில்லாம அலையும் போதுதான் அதோட அருமை தெரியும். பட்டினியோடயே கிட. எனக்கென்ன.?” என்று நடேசனுக்கு குழம்பை எடுத்து ஊற்றினாள்.

“நீ ஏன் அவனத் திட்டற.? அவன் என்ன பண்ணான்.?” என்று நடேசன் கேட்க.

“வேற என்ன, திமிரு. கொழுப்பெடுத்து அலையறான். கண்ட கண்ட பசங்களோட திரியறான்ல அதான், அவங்களோட குணமும் சேர்ந்து வருது. வாய் ரொம்ப நீளுது.” என்று அவனை வசை பாடினாள்.

இதற்க்கு மேல் பேசினால், தனக்கு இதுவும் கிடைக்காமல் போய் விடுமோ என்று அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டார் நடேசன்.

குமரேசனுக்கு, அமுதனை சிறிய வயதில் இருந்தே பிடிக்காது. விசாலாட்சி, அமுதன் இங்கே வந்ததிலிருந்து அவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததால், குமரேசனை சரியாக கவனிக்காமல் பெரியவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டாள். ஆனால், எதுவும் அறியாத வயதில் அம்மாவின் பாசத்திற்க்காக ஏங்கினான் குமரேசன். அதனால், அமுதனைப் பார்க்கும் போதெல்லாம் இவனால் தான் அம்மா தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

கோலாகலம் அவனது தங்கை என்பதால் அவள் மேல் கொஞ்சம் பாசம் இருந்தது. ஆனால், அமுதன் தனக்கு என்ன வேண்டும்.? அவன் மேல் தன்க்கு எதற்க்கு அக்கறை.? என்று நினைப்பான். இதை நடேசன் மட்டுமே உணர்ந்திருந்தார். விசாலாட்சியிடம் சொன்னால், அதை அவள் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

அதனால் தான், அவன் இங்கே வருகிறான் என்றால் அவனுக்கு எரிச்சலாக இருக்கும். அவன் அன்னை அமுதனை மட்டுமே தங்கத்தட்டில் தாங்குவாள் என்ற எண்ணத்தில் கோபமாகவே இருப்பான். அவன் மீதுள்ள வெறுப்பு காயம் உண்டாக்கிய தழும்பைப் போல் ஆழமாய் அவன் மனதில் தங்கிவிட்டது. அதில் இன்னும், காயத்தை ஏற்படுத்துவது போல் விசாலாட்சி நடந்துகொள்வது தான் அவனால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாப்பிட்டு முடித்த பிறகுதான் நடேசன் அவனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் தந்தார். கோபத்தில் இருந்தவன், முதலில் மறுத்தான். பிறகுதான், தந்தையின் வற்புறுத்தலில் சாப்பிட்டான்.

இப்படியாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன. ஒரு நாள், கோலா பொறுமை இழந்து பக்கத்து வீட்டுப் பெண்ணை கடித்தே வைத்து விட்டாள் என்று பக்கத்து விட்டுப் பெண்மனி வந்து சத்தம் போட்டு விட்டுச் சென்றார்.

அமுதனின் கையைப் பிடித்ததால் அவளின் கையைக் கடித்தேன் என்று அவள் சொல்ல, அமுதனுக்கு அவள் மேல் கோபம் வந்து அடித்து விட்டான். அழுதுகொண்டே நின்ற கோலாவை குமரேசன் கேட்க, அவள் அமுதன் அடித்ததாய்ச் சொல்ல, அதுவரை அவன் மேல் வைத்திருந்த கோபமும், வெறுப்பும் ஒன்று சேர, அமுதனை நன்றாகவே அடித்து உதைத்து விட்டான் குமரேசன். பாவம் அமுதன், வலி தாங்க முடியாமல் கத்த வீதியே கூடிவிட்டது. அவர்களைத் தடுத்து வீட்டிற்க்குள் கூட்டி வர விசாலாட்சி பட்ட பாடு அவளுக்கு மட்டுமே தெரியும்.

உள்ளே வந்ததும், குமரேசனுக்கு அடிகள் சராமாரியாக விழுந்தன. ஆனால், அவனோ எந்த ஒரு அசைவும் இன்றி விரைப்பாக நின்று கொண்டிருந்தான். அடித்து, அடித்து அவளுக்குத்தான் கைகள் வலித்தன.

இதைப் பார்த்த பெரியவர்கள், விசாலாட்சியிடம் சண்டைக்கு வந்தனர். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லி ஓய்ந்தது இல்லாமல், அடுத்து இரவு நடேசன் வந்ததும் அவனிடம் மேலும் சண்டை. அன்று இரவு யாருமே நிம்மதியாக உறங்கவில்லை.

அடுத்த நாள் காலையில் நடேசன் எழுந்ததுமே, “இதப்பாரு விசாலம், முதல் பஸ்ஸூக்கே அவனைக் கூட்டிட்டுப் போய் உன் அண்ண வீட்டுல விட்டுட்டு வா. அவன இங்கயே வைச்சு வளர்க்கணும், படிக்க வைக்கணும்னு கனவு கானாத. உன் கனவெல்லாம் அவங்க பெரிசானதுக்கப்பறம் பார்க்கலாம். இதுக்கு மேல எதுவும் பேசாத.” என்று அவள் பேச ஆரம்பிக்கும் போதே நடேசன் அவளின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வேறு வழியில்லாமல் அவனைக் கூட்டிக்கொண்டு பஸ் ஏறினாள் விசாலாட்சி. அவனிடம் எதுவும் பேசாமல் வந்தாள். அவன் வரும் வழியெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தான். அவள் எதுவும் பேசவில்லை.

வீடு வந்து சேர்ந்ததும், அழகேசனை ஓடி வந்து கட்டிக்கொண்டான் அமுதன். “டேய்.. அமுதா. என்ன திடீர் விஜயம்.? உங்க அத்தை உன்னைக் கூட்டிட்டே வர மாட்டேன்னு சொன்னா. இப்போ என்னடான்னா பள்ளிக்கூடம் திறக்கறதுக்கு முன்னாடியே வந்துட்டியே. உங்க அத்தை முகமும் சரியில்லையே.? என்னதான் நடந்தது.?” என்று அவர் விசாலாட்சியைப் பார்த்துக்கொண்டே கேட்க, அவளோ முறைத்தாள்.

“அப்பா, அத்தை என்கூட பேசவே மாட்டிங்கறாங்க. நீங்களே கேளுங்க.” என்று சொல்லிக்கொண்டு தண்ணீரைக் குடிக்கச் சென்று விட்டான்.

“என்னாச்சு விசாலம்.? ஏதோ அவன அங்கயே பள்ளிக்கூடத்துல சேர்த்து விடறேன்னு சொல்லிட்டிருந்த, இப்போ என்னாச்சு.?” என்றார்.

“அண்ண, நானே பயங்கர கோபத்துல இருக்கேன். இந்தச் சின்னப் பசங்க சண்டைல என் தலை உருண்டது தான் மிச்சம்.” என்று சொல்ல ஆரம்பித்தவள், நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

“சின்னப் பசங்க சண்டை போட்டது இவ்ளோ பெரிய விஷயம் ஆயிடுச்சா.?” என்றார் அழகேசன்.

“என்னத்த சொல்ல..?” என்று சலித்துக்கொண்டாள் விசாலாட்சி.

“சரி, விடு. எல்லாம் வளர்ந்து பெரியவங்களா ஆனா, சரியாகிடும்.” என்று சமாதானம் சொன்னார். அவளும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அதன் பிறகு தான், அழகேசனுக்கு நிம்மதியாக இருந்தது. எங்கே தன் பிள்ளையைப் பிரிந்து இருக்க நேருமோ.? என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இப்போதுதான் அந்த மனக்கவலை தீர்ந்தது. திரும்பவும் அவனை தோப்பிற்க்கு அழைத்துச் சென்றார்.

“என்னாச்சு அமுதா, உங்க அத்தை என்னென்னமோ சொன்னா.? நடந்ததெல்லாம் உண்மையா.?” என்று கேட்க,

அமுதனோ, “அப்பா, எனக்கு அங்க போய் இருக்கவே பிடிக்கல பா. அங்க அத்தனை பேரு இருந்தாலும், எனக்கு யாரும் இல்லாத மாதிரியே தோணுது பா. இங்க நாம ரெண்டு பேர் தான் இருக்கோம். ஆனா, எனக்கு ஒரு நாள் கூட நாம தனியா இருக்கோமேன்னு நினைச்சதே இல்லப்பா. நீங்க சுதந்திரம் கொடுக்கற மாதிரி அங்க யாருமே இருக்கறதில்லப்பா. நான் எது பண்ணாலும் அவங்களக் கேட்டுட்டு தான் பண்ணனும்னு சொல்றாங்க. அதே மாதிரி, தமிழு கூட எத்தனை தடவை விளையாண்டிருக்கேன், மத்த பசங்களோட விளையாண்டாலும் அவ எதுவுமே சொல்லமாட்டா பா. ஆனா, இந்த கோலா இருக்காள்ல, அவ கூட மட்டுமே தான் நான் விளையாடணும்னு சொல்றா. வேற எந்தப் பசங்களோ, பொண்ணுகளோ விளையாண்டா, அவங்களப் புடிச்சு அடிக்கறா, நேத்து ஒரு பொண்ண கடிச்சே வைச்சுட்டாப்பா. அவங்க அம்மா எப்படித் திட்டினாங்க தெரியுமா.? எனக்கு வந்த கோபத்துக்கு அவள அடிச்சுட்டேன். அதுக்கு இந்த குமார் அண்ணா, என்னை பயங்கரமா அடிச்சிட்டாங்க பா. என்னால வலியே தாங்க முடியல. எப்பவும் இப்படியே தான் பண்றாங்க. அந்த தாத்தா, பாட்டி எப்பப் பாரு என்னை ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க, திட்டிக்கிட்டே இருக்காங்க. மாமா என்கூட பேசறதே இல்ல. எனக்கு எப்போ உங்ககிட்ட அத்தை கூட்டிட்டு வருவாங்கன்னு இருந்தது. எனக்கு இங்க இருக்கிற சந்தோஷம், சுதந்திரம் வேற எங்கயுமே இருக்காதுன்னு தோணுது பா. இனிமேல் யார் வந்து கூப்பிட்டாலும், நான் உங்களை விட்டுப் போக மாட்டேன் பா.” என்று அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையாய்க் கேட்டுக்கொண்டிருந்த அழகேசன் சிரித்தார்.

“சரிப்பா, நீ என்னை விட்டு எங்கயும் போக வேண்டாம். இங்கயே இரு.” என்று அவனை அணைத்துக்கொண்டது வரை தமிழினியிடம் சொல்லி முடித்தான் அமுதன். ஆனால், அவன் அத்தையும், மாமாவும் பேசிக்கொண்டது மட்டுமே அவனுக்குத் தெரியவில்லை. மீதி அனைத்தையும் தமிழினியோடு அவன் பகிர்ந்து கொண்டான்.

“நீ மொதல்லயே வந்துட்ட தானே, அப்பறம் ஏண்டா என்னைப் பார்க்க வரல.?” என்றாள் தமிழினி.

“அதுவா, அப்பாதான் சொன்னாரு, நீ இப்போவே போய் பார்க்காதே. பள்ளிக்கூடம் திறந்ததும் போய்ப் பாருன்னு. கொஞ்சம் ஆச்சர்யமாய் இருக்கும்னு. அதனால தான் உன்னோட சந்தோஷத்தை இன்னிக்கு பார்க்க முடிஞ்சது.” என்று சொல்லி சிரிக்க,

“ஏண்டா, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமா.? நீ என்னடான்னா எனக்கு ஆச்சர்யம் கொடுக்கறியா.? உன்ன..” என்றபடி, அந்தக் கரும்புக் குச்சியை அவனிடமிருந்து பிடுங்கி அவனை அடிப்பதற்க்குச் செல்ல, அவன் தப்பிக்க முயல, நண்பர்களின் உற்சாகம் மீண்டும் பிறந்தது.

(தொடரும்...)

வார்த்தைகளின் எண்ணிக்கை : 1478


உங்கள் விமர்சனங்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் லிங்கில் பதிவிடவும் நட்புக்களே...

 
அத்தியாயம் 8

ஆகஸ்டு 15 சுதந்திர விழா மெட்ராஸில் உள்ள கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது தான் முதலமைச்சர் கொடியேற்றி வைத்தார். நம் தேசியக் கொடியின் பாடல் பாடப்பட்டது. கம்பீரமாக நின்று வீரவணக்கம் செலுத்திக்கொண்டிருந்தார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, பல மாவட்டங்களில் இருந்து வந்த நடனக் கலைஞர்கள் அனைவரும் அவர்களது திறமையை முதலமைச்சர் முன்பாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.

அதே போல், பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அனைத்தையும் கண்டுகளித்த முதலமைச்சர் அடுத்து பல்வேறு சாதனைகள் புரிந்ததற்க்கான விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தயாரானார்.

விருது வாங்குவதற்க்குத் தயாராக அமர்ந்திருப்பவர்கள் வரிசையில் காத்திருந்தாள் தமிழினி. கூடவே அவளுடன், அமுதனும், அழகேசனும் இருந்தனர். இப்போது பதினைந்து வயது பருவப் பெண் தமிழினி. அதே பதினைந்து வயது இளம் வாலிபனாக அமுதன்.

ஏற்கனவே ஒருமுறை தமிழினி இதே போல் விருதை வாங்கியுள்ளாள். இப்போது எதற்க்காக இங்கே வந்திருக்கிறாள்.? அதே போல், அமுதனும், அழகேசனும் எதற்க்காக வந்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கான பதில் பின்வருமாறு..

நன்றாக வளர்ந்து விட்டார்கள் தமிழினியும், அமுதனும்.. பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பருவமடைந்த பெண்ணாய் ஆனாள் தமிழினி. இந்த வயதில் தான் பல பெண் பிள்ளைகள் ஆண்களிடமிருந்து, ஏன் தன் அப்பாவிடமிருந்தும் கூட சற்று விலகியே இருப்பர். அது இயல்பாக நடக்கும் விஷயம் தான் என்றாலும், தமிழினி அதற்க்கு நேர்மாறாகவே இருந்தாள்.

வயதுக்கு வந்த பிறகும் கூட, அவள் அமுதனிடமும் சரி, அழகேசனிடமும் சரி எந்த் ஒரு பாரபட்சமும் பார்க்காமல் பழகி வந்தாள். அவர்களுக்கும் அது ஒன்றும் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. எப்பொழுதும் போலவே இருந்தனர்.

ஆனால், ஊர் வாயை அடக்க முடியாதே. ஒன்று பேச ஆரம்பித்து, ஒவ்வொரு நபராக சென்று கடைசியில் கோகிலாவின் காதுகளில் விழுந்தது. அவளுக்கு தமிழினி மேல் நம்பிக்கை இருந்தாலும், ஊர் பேசும் போது அதை அவளிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அன்று மாலை எப்பொழுதும் போல பள்ளி முடிந்து வீடு திரும்பியவளை அழைத்தாள் கோகிலா. “தமிழு இங்க வா..” என்றாள்.

முகம் கை, கால் கழுவிக்கொண்டு வந்து நின்றபடி, “சொல்லும்மா..” என்றாள்.

“இப்படி உட்காரு..” என்று திண்ணையில் தன் பக்கத்தில் அமர வைத்தவள் கேட்டாள்.

“இப்பவும் நீ அமுதனோட தான் வந்தியா.?” என்றாள்.

“இதென்னமா கேள்வி, நானும், அவனும் எப்பவும் ஸ்கூலுக்கு ஒண்ணாதான் போவோம், ஒண்ணாதான் வருவோம். என்னமோ புதுசா கேட்கற.?” என்றாள் சிரித்துக்கொண்டே..

“அதெல்லாம் சரிதான். இனிமேல் அப்படி அவன் கூட சேர்ந்து போகாத. நீ இப்போ சாதாரண பொண்ணு இல்ல. நீ வயசுக்கு வந்துட்ட. அது நியாபகம் இருக்குல்ல.?” என்றாள் கோகிலா.

அம்மா எதற்க்காக சொல்கிறாள் என்று புரிந்தது. “ஏம்மா.. யாராவது, ஏதாவது சொன்னாங்களா.?” என்றாள் தமிழினி.

“ஆமா, தமிழு.. எல்லாரும் அதென்ன பொம்பளப் புள்ள, எப்பப்பாரு ஆம்பளப் பையனோடயே சுத்திட்டு திரியறான்னு பேசறாங்க. அவன் ஆம்பளப் பையன் தமிழு. ஆனா, நாம அப்படிக் கிடையாது. மத்தவங்க சொல்ற மாதிரி நாம ஏன் நடந்துக்கணும்.? பத்தாததுக்கு நாம ஏழைங்க. நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி தான் இருக்கணும். ரொம்ப ஆசைப்படக்கூடாது. என்ன நான் சொல்றது புரியுதா.?” என்று கோகிலா சொல்லிக்கொண்டிருக்க,

அப்போதுதான் கேட்டைத் திறந்து கொண்டு வந்தார் ரங்கராஜன். வரும் போதே இருவரையும் பார்த்தவர், ஏதோ ஒரு விஷயம் முக்கியமாய் போய்க்கொண்டிருப்பதாய் உணர்ந்தார்.

“என்ன, ஆத்தாளும், மகளும் ரொம்ப மும்முரமா பேசிட்டிருக்கீங்க.? என்ன விஷயம்.?” என்றார். அவர் கேட்டதும், கோகிலா அனைத்தையும் சொல்ல,

ரங்கனோ, “அதுக்கு நீ என்ன சொல்லிட்டிருக்க புள்ளைகிட்ட.?” என்றார்.

“எதுக்குங்க வீண் வம்பு. ஏற்கனவே நாமன்னா, இந்த ஊருக்கு ஆகாதவங்களா இருக்கோம். எந்த உதவியும் பண்ண மாட்டிங்கறாங்க. அப்படி இருக்கும் போது இந்தப் பேச்சுக்கும் நாம ஆளாகணுமான்னு தான் அவள கொஞ்சம் அடக்க, ஒடுக்கமா நடந்துக்க சொல்றேன்.” என்றாள் கோகிலா.

“ஆமா, நம்ம பொண்ணு அப்படிப் பண்ணா நமக்கு என்ன சிலை வைச்சிடப் போறாங்களா, இல்ல நம்மள மதிக்கத் தான் போறாங்களா. அடிப்போடி இங்க எதுவுமே மாறாது. நம்மள மாதிரி அடித்தட்டு மக்கள் எல்லாரும் சாகறவரைக்கும் இந்த மாதிரி பேச்சுக்கு ஆளாகிட்டு தான் இருக்கணும். ஹூம்ம்.. ஊர் வாய அடக்க முடியுமா.? தினமும் ஏதாவது பேசிட்டுத்தான் இருப்பாங்க. நாம நமக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணிட்டுப் போகணும். நமக்கு இந்த ஊருலயே உதவி பண்ற ஒரே மனுஷன் அந்த அழகேசன் வாத்தியாரு தான். அந்தப் பையன் அமுதனும் ரொம்ப தங்கமான பையன். அவங்களோட ஆதரவு இல்லைன்னா நம்ம பொண்ணு இன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு தான் போயிருக்க முடியுமா.? இல்ல, இந்தளவுக்கு பரிசும், பேரும் தான் வாங்கிருக்க முடியுமா.? எல்லாம் பொறாமை தான். அப்படி, இப்படி பேசி, அவளோட படிப்பையும், வாழ்க்கையையும் வீணாக்க நினைக்கறாங்க. நம்ம நிலைமை நம்ம பொண்ணுக்கும் வந்துடக் கூடாது கோகி. நாம் பட்ட அவமானம் கொஞ்ச, நஞ்சமில்ல. அவளாவது படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வந்து அவளுக்கான மரியாதைய அவளாவே தேடிக்கட்டும். நீ எல்லாத்தையும் போட்டு குழப்பிட்டு, வீணா அவ மனசையும் நோகடிக்காத. எனக்கு என்னோட தமிழ் மேல நிறைய நம்பிக்கை இருக்கு. எத்தனை பேர் வந்து சொன்னாலும், என் பொண்ணு எப்படிப்பட்டவன்னு எனக்குத் தெரியும். நீ போய் உன் வேலையைப் பாரு.” என்று சொல்லிவிட்டு துண்டை எடுத்துக்கொண்டு வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றார் ரங்கன்.

“என்னமோ பண்ணுங்க. செல்லம் கொடுத்து கெடுக்கறீங்க.” என்றபடி புலம்பிக்கொண்டே உள்ளே சென்றாள் கோகிலா.

அப்பா தன்னை இந்தளவுக்கு புரிந்து வைத்துள்ளார் என்று நினைக்கும் போது தமிழினிக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தது. ஆனால், அம்மாவை என்ன சொல்லி சமாதானம் செய்வது. அவளையும் தப்பு சொல்ல முடியாது. அவள் தினமும் வேலை செய்யும் இடத்தில் உள்ள பெண்கள் ஜாடை, மாடையாக பேசும் போது அவளும் பாவம் என்ன செய்வாள்.? அதைப் புரிந்து கொண்டாள் தமிழினி.

ஆனால், இத்தனை வருட நட்பை எப்படி திடீரென்று மாற்ற முடியும். நாங்கள் இருவரும் சாதாரணமாகத் தானே இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவன் எப்படி சின்ன வயதிலிருந்து எந்த ஒரு எண்ணத்தில் என்னிடம் இருக்கிறானோ, அதே எண்ணம் தான் எனக்கும் உண்டு. எங்களுக்கிடையில் இருப்பது நட்பு மட்டும் தான் என்று இந்த ஊருக்கு எப்படி புரிய வைப்பது.? என்று அந்த இரவு முழுவதும் இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் பள்ளிக்கு அவள் மட்டுமே சென்று கொண்டிருந்தாள். அமுதன் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் பொறுமை இழந்தவனாய் பள்ளி வந்து சேர்ந்த போது, அவள் முன்னரே வந்துவிட்டதை அறிந்தவன், கோபத்தோடு அவளிடம் வந்தான்.

“ஏய்... தமிழு.. எப்போ வந்த..? சொல்லிட்டு வரமாட்டியா.? நான் நீ வருவன்னு பார்த்திட்டிருந்தா., நீ முன்னாடியே வந்து உட்கார்ந்துட்டிருக்க.?” என்றான் அமுதன் கோபமாக.

அவள் எதுவும் பேசவில்லை. அவளுடன் இப்போது அனைவரும் சகஜமாக பேசிக்கொள்கின்றனர். தமிழினி என்றால் அந்தப் பள்ளிக்கே தெரியும். அத்தனை பிரபலமானவள். பாட்டு, நடனம், படிப்பு, விளையாட்டு என்று அனைத்திலும் ஒன்று விடாமல் பரிசுகளை அள்ளிச் செல்வதால் அவளிடம் பழகுவதற்க்கென்றே அனைவரும் போட்டி போட்டனர்.

அவள் தான் வகுப்பில் முதல் ரேங்க் எடுக்கும் மாணவி. அதே போல், அமுதனும் சலித்தவனில்லை. பேச்சு, கவிதை, கட்டுரை, விளையாட்டு என்று அவனும் பரிசுகள் வாங்குபவன் தான். இருந்தாலும் தமிழினிக்கு அடுத்தது தான் அவன் என்று சொல்ல வேண்டும்.

இப்போது அவள் முதல் பென்ச்சில் பெண் பிள்ளைகளுடன் தான் இப்போது அமர்ந்திருக்கிறாள். அமர வைத்தவர் வடிவுக்கரசி டீச்சர். முதல் ரேங்க் எடுத்ததற்க்கான பரிசு அவள் முதல் இருக்கையில் அமர வேண்டும் என்பது.

அவளுடன் சேர்ந்து அனைவரும் இப்போது நன்றாக படிக்க ஆரம்பித்தனர். அனைவருக்கும் எந்த ஒரு தயக்கமும் இன்றி அனைத்தையும் சொல்லிக்கொடுப்பாள். டீச்சரிடம் கேள்வி கேட்க பயமாய் இருக்கும் அனைவரும் இவளிடம் தான் தங்களின் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வர்.

அதே போல், அமுதனும் இரண்டாம் ரேங்க் எடுப்பவன் என்பதால், ஆண் பிள்ளைகளின் வரிசையில் முதல் இருக்கையில் அமர்ந்திருப்பான். எனவே, இருவரும் பக்கமாகவே அமர்ந்திருப்பதைப் போல் ஒரு உணர்வு இருக்கும். இவருவரும் தான் வகுப்பினுடைய லீடர்ஸ். இருவரும் சேர்ந்தே டீச்சர் சொல்லும் அனைத்தையும் செய்வர்.

எப்பொழுதும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பர். மதிய உணவை பறிமாறிக்கொள்வர். ஒன்றாகவே சைக்கிளில் போகவும், வரவும் இருப்பர். சில சமயங்களில் நடந்து கொண்டே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அவளுக்காக வருவான் அமுதன்.

இப்படியெல்லாம் இருந்து கொண்டு திடீரென்று தன்னுடன் வராமல் இருந்தால் எப்படி இருக்கும்.? அவன் கோபத்தில் பேசிக்கொண்டிருக்க, இவளோ அமைதியாகவே இருந்தாள்.

“நான் பேசிட்டே இருக்கேன். நீ என்ன அமைதியா இருக்க.? ஏன்னு சொல்லப்போறியா இல்லையா.?” என்றான்.

“ஏய்.. அவன் தான் கேட்கறான் இல்ல. என்னன்னு சொல்லேன். அவ்ளோ ஃப்ரெண்ட்ஸா இருந்துட்டு இப்போ என்னவாம்.?” என்றாள் பக்கத்திலிருந்த தோழி பரமேஸ்வரி.

அப்பொழுதும், அமைதியாகவே இருந்தாள். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. அதற்க்குள் பள்ளியின் மணி ஒலிக்க, அனைவரும் எழுந்து பிரேயருக்கு சென்றனர். அவன் எதுவும் பேசாமல் சென்று விட, அவளோ அப்படி இருக்க மிகவும் சிரமப்பட்டு தன்னைத் தானே வருத்திக்கொண்டாள்.

பிரேயர் முடிந்ததும், எப்பொழுதும் போல வகுப்புகள் ஆரம்பித்தன. ஏனோ, இன்று எந்த ஒரு பாடத்தையும் கவனிக்காமல் ஒரு சோக முகத்துடனேயே காணப்பட்டாள் தமிழினி. இவள் ஏன், எதற்க்காக இப்படி இருக்கிறாள் என்ற குழப்பத்தில் இருந்ததால் அமுதனாலும் சரியாக பாடத்தை கவனிக்க முடியவில்லை.

அன்று முழுவதும் அப்படியே நாள் சென்று விட்டது. பள்ளியில் இருந்து திரும்பும் போது கூட அவன் பேச முயற்சி செய்தும் அவள் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் கிளம்பி விட்டாள். அவனுக்கு இதை யாரிடம் போய் கேட்பது என்று தெரியவில்லை. அப்போது தான் நினைத்தான், ஒரே வழி அவனது அப்பா அழகேசன் தான் என்று தோன்றியது.

மாலை வீடு திரும்பியதும் அவரது வரவிற்க்காகக் காத்திருந்தான். அவர் வந்து முகம், கை, கால்களை கழுவி வந்த பிறகே சொல்ல ஆரம்பித்தான்.

“என்னாச்சு டா தம்பி. வந்ததில இருந்து என் பின்னாடியே சுத்திட்டிருக்க.? என்ன விஷயம்.?” என்று பாலை அடுப்பில் வைத்தபடியே கேட்டார்.

“அப்பா, தமிழுக்கு என்னாச்சுன்னு தெரியல. இன்னைக்கு முழுக்க அவ என்கிட்டா பேசவே இல்ல. எவ்ளவோ கேட்டுப் பார்த்துட்டேன். சுத்தமாவே பேசல.” என்று தன் வருத்தத்தை முன் வைத்தான்.

“ஏன்.? என்னாச்சு.? ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா.?” என்றார் அவர் டீத்தூளை பாத்திரத்தில் போட்டவாறே.

“அய்யோ.. இல்லப்பா. நாங்க சாதாரண ஃப்ரெண்ட்ஸ் மாதிரி சண்டை போட்டுக்க மாட்டோம். எத்தனை தான் சண்டை போட்டாலும், உடனே பேசிக்குவோம். இப்படியெல்லாம் இருந்த்தே இல்ல. இத்தனை வருஷத்துல அவ என்கூட பேசாம இருக்கறது இதுதான் முதல் முறை.” என்றான்.

“ஹூம்ம்.. சரி இப்போ நான் என்ன டா தம்பி பண்றது.?” என்றார் டீயை வடித்துக்கொண்டே.

“நீங்க தான் அவ கிட்ட என்னன்னு கேட்டு பேசி, சொல்லணும். அவ உங்ககிட்டன்னா பேசுவா.” என்றான்.

“ம்ம்ம்.. உன் நட்புக்கு தூது நானா.? சரி இந்தா டீயைக் குடி. அவகிட்ட போய் பேசிட்டு வரலாம்.” என்று ஒரு டம்ளரை அவனிடம் நீட்டினார்.

இருவரும் டீயைக் குடித்து முடித்துவிட்டு தமிழினியைப் பார்க்கக் கிளம்பினர். அவள் வீட்டிற்க்கு சென்றபோது, அவள் மாடுகளுக்கு கழனித் தண்ணியை கலந்து கொண்டிருந்தாள். இவர்களைப் பார்த்ததும் “வாங்க அய்யா..” என்றபடி “அம்மா.. அம்மா..” என்று உள்ளே ஓடினாள்.

“பாருங்கப்பா.. உங்கள மட்டும் தான் வர சொல்றா. என்னை கண்டுக்கவே இல்ல பாத்தீங்களா..?” என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான் அமுதன்.

“சரி, விடுடா தம்பி.. பாத்துக்கலாம்.” என்று அவனை சமாதானம் செய்தார்.

தமிழினி வெளியே வரும் போது, உடன் கோகிலாவும் வந்தபடி வணக்கம் வைத்தாள்.

“உட்காருங்க அய்யா..” என்று திண்ணையைக் காண்பித்து உட்காரச் சொன்னாள்.

அவர் அமர்ந்ததும், “நான் ஒரு முக்கியமான பஞ்சாயத்த தீர்ந்து வைச்சிட்டுப் போலாம்னு வந்தேன். எங்க ரங்காவ இன்னும் காணோம்.?” என்றார்.

“அவர் இனிமேல் தானுங்கய்யா வருவார். என்ன பஞ்சாயத்துங்கய்யா.? யாருக்குங்க.?” என்றார் தெரியாமல்.

“அட, நம்ம தமிழுக்கும், அமுதனுக்கும் தான்.” என்றார் சிரித்துக்கொண்டே..

கோகிலாவின் கண்கள் பெரிதாகி தமிழினியைப் பார்த்தது. அவளோ, முகத்தை தொங்கப்போட்டவாறே நின்று கொண்டிருந்தாள்.

“என்னாச்சு தமிழ் மா.. நீயும், அமுதனும் நல்ல நண்பர்கள் தானே.? திடீர்னு ஏன் நீ அவனோட பேச மாட்டிங்கற.? அவன் வந்ததுல இருந்து என்கிட்ட புலம்பித் தள்ளிட்டான். நீதான் ஏன், எதுக்குன்னு சொல்லணும்.” என்றார் அழகேசன்.

தமிழினி, கோகிலாவைப் பார்த்தாள். கோகிலாவுக்கு எப்படி இவரிடம் சொல்வது என்று தெரியவில்லை. திணறிக்கொண்டிருந்தாள்.

“அட, ஏன் எதுவுமே பேசாம நிக்கற.? சொல்லும்மா. உனக்கு என்ன பிரச்சினை இவனோட.?” என்று திரும்பவும் கேட்க,

“அத நான் சொல்றேனுங்கய்யா..” என்றபடி கேட்டினை திறந்து கொண்டு உள்ளே வந்தார் ரங்கராஜன்.

எல்லோரும் அவரைப் பார்த்தபடியே இருந்தனர்...

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை: 1274

உங்களின் விமர்சனங்களை கீழே உள்ள லின்க்கில் பதிவிடவும் நட்புக்களே...

 
அத்தியாயம் 9

கேட்டைத் திறந்து கொண்டு வந்த ரங்கனை அனைவரும் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

“வணக்கங்கய்யா. நீங்க இது மாதிரி அப்பப்போ வந்து போனா ரொம்ப சந்தோஷமா இருக்குமுங்க. எங்களுக்கு இந்த ஊர்ல ஆதரவு தரவரு நீங்க மட்டும் தான். அந்த ஒரு ஆறுதல்ல தான் நாங்க வாழ்ந்துட்டிருக்கோம்.” என்று பணிவுடன் பேச.

அழகேசன் சிரித்துக்கொண்டே, “உங்களுக்கு என்னைக்கும் என்னோட ஆதரவு நிச்சயம் இருக்கும். நீங்க அதைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம். சரியா.? சரி ரங்கா. உனக்குத் தெரியுமா தமிழ் ஏன் அமுதன் கிட்ட பேச மாட்டிங்கறான்னு.? என்ன காரணம்னு கோகிலாகிட்டயும், தமிழ் கிட்டயும் கேட்டுப் பார்த்துட்டேன். அவங்க ரெண்டு பேருமே சொல்லாம ஒருத்தர் முகத்த ஒருத்தர் பார்த்துக்கிட்டே நிக்கறாங்க.” என்று அவரிடம் சொன்னார்.

“அது ஒண்ணும் இல்லைங்கய்யா, அதுக ரெண்டும் சின்னப் பசங்க. சின்ன வயசுல இருந்தே ஒண்ணுக்கொண்ணா பழகறாங்க. ஆனா, வயசு ஏற ஏற சில கண்ணுக எல்லாம் அதை தப்பாதானுங்க பார்க்குது. நம்ம மனசிலயும், அந்த சின்னஞ்சிறுசுக மனசிலயும் எதுவும் இல்லன்னு நமக்குத் தெரியுதுங்க. ஆனா, சில மனுஷங்க அதையெல்லாம் பார்க்கறாங்களா.? வேணும்னே இவகிட்ட பேசிருக்காங்க. அதை அவ தமிழுகிட்ட சொல்லிருக்கா. நான் நேத்தே அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவளை எதுவும் சொல்லாதன்னு இவகிட்ட படிச்சுப் படிச்சு சொன்னேங்கய்யா. ஆனா, அது பாவம் புள்ள மனச வேதனைப்படுத்திடுச்சு. அதனால தான் பாவம் அவளும் என்ன பண்றதுன்னு தெரியாம, யார்கிட்டயும் சொல்லவும் முடியாம பேசாம இருந்துட்டா. இதுல தமிழோட தப்பு எதுவும் இல்லைங்க. என் பொண்டாட்டியோட தப்புதாங்க. நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்கய்யா. அதெல்லாம் போகப்போக சரியாப் போயிடும். நான் அவகிட்ட சொல்றேனுங்க.” என்று சொல்லிமுடித்தார் ரங்கா.

“ஓ.. இதுதான் விஷயமா.? நான் கூட என்னவோ, ஏதோன்னு நினைச்சேன். இதப்பாரு ரங்கா. நீ சொல்ற மாதிரி, இது கோகிலாவோட தப்பும் இல்ல. இது ஒட்டுமொத்த சமுதாயத்தோட தப்புன்னு தான் நான் சொல்வேன். ஏன்னா, இந்த சமுதாயத்தப் பொறுத்த வரைக்கும் பொதுவா ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல இருக்கற ஆணும், பெண்ணும் சிரிச்சிப் பேசினாலே அதுக்கு ஏதேதோ பேர் வைச்சுப் பேச ஆரம்பிச்சிடுது. அது இயல்பா நடக்கற விஷயம் தான். ஒருத்தர் நம்ம பொண்ணப் பத்தி தப்பா பேசினா யாரா இருந்தாலும், ஏன் அது நானாக் கூட இருந்தாலும் கஷ்டமாத்தான் இருக்கும். அதுவும் இல்லாம, கோகிலா வயக்காட்டுல வேலை செய்யும் போது அங்க இருக்கற பொம்பளைங்க வாயெல்லாம் ஒண்ணு மாத்தி ஒண்ணு எதையாவது பேசிட்டுத்தான் இருக்கும். அதைக் கேட்கறப்போ கண்டிப்பா ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். அதனால தான் கோகிலா தமிழ் கிட்ட பேசிருக்காலே தவிர அவ மேல நம்பிக்கை இல்லாம இல்ல. முதல்ல ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க. பசங்க ரெண்டு பேரும் தெளிவா இருக்காங்க, நாம அவங்க மேல நம்பிக்கை வைச்சிருக்கோம். அதே போதும் நமக்கு. ரங்கா சொல்ற மாதிரி ஊர் வாய அடக்க முடியாது. இப்போதைக்கு எத ரொம்பப் பெரிய விஷயமா பேசறாங்களோ, அது அடுத்த விஷயம் வரும் போது வந்த தடம் தெரியாம மறைஞ்சு போகும். அதனால இதை நாம பெரிய விஷயமா எடுத்துக்காம, அவங்கள எப்பவும் போல பழக அனுமதிக்கனும். ஒண்ணும் அறியாத பிள்ளைங்க மனச நாமளே நோகடிக்கக்கூடாது. நம்ம மாணிக்கம் மாதிரி என்ன நாஞ்சொல்றது சரிதான.?” என்று சொல்லி சிரித்தார்.

அதனை ஆமோதிக்கும் விதமாக அனைவரும் தலையாட்டிச் சிரித்தனர். “இதோ பாரு கோகிலா, அப்படியே உன் முன்னாடி நம்ம பசங்களப் பத்தி யார் பேசினாலும், நீயும் உன்னால அவங்க வாய மூடும் படியா பேசிவிடு. இல்ல, வேற யார் வீட்டுலயும், எங்கயும் நடக்காத கதையா, அதுல ஒண்ணு, ரெண்டு அவுத்து விடு. எல்லா நாக்கும் தன்னால அடங்கிடும். அப்பறம் பாரு உன் பக்கமே வரமாட்டாங்க.” என்றார் அழகேசன்.

“சரிங்கய்யா..” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் கோகிலா.

“என்ன தமிழ், அம்மா இனிமேல் எதுவும் சொல்ல மாட்டாங்க. இனியாவது அமுதன்கிட்ட பேசறியா.?” என்றார்.

“என்ன மன்னிச்சிடுங்க அய்யா. இதை எப்படி அவன் கிட்ட சொல்றதுன்னு தெரியாம தான் அப்படி பேசாம இருந்தேன். மத்தபடி அவன் கிட்ட பேசாம நான் வேற யார்கிட்ட போய் பேசுவேன். என்னுடைய நண்பனாச்சே.” என்று சொல்ல, அப்பொழுது தான் கோகிலாவுக்கு அவன் எத்தகைய இடத்தை தமிழின் மனதில் பிடித்திருக்கிறான் என்று புரிந்தது.

“சரி ரெண்டு பேரும் இனிமேல் எப்பொழுதும் போல நல்ல நண்பர்களா இருக்கணும். யார் என்ன சொன்னாலும் அதை நீங்க பெரிதுபடுத்தாம, ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காம இருக்கணும். புரிஞ்சுதா.?” என்றார் அழகேசன்.

“நிச்சயமா இருப்போம் பா..” என்று அமுதன் சொல்ல, “நிச்சயமா இருப்போம் அய்யா..” என்று தமிழினியும் ஒன்று சேர கூறினர்.

ஊர் பஞ்சாயத்தை நியாயமான முறையில் தீர்த்து வைக்க முடியவில்லை என்றாலும், நண்பர்களுக்கு இடையில் நடந்த இந்தப் பஞ்சாயத்தை அவரால் தீர்த்து வைக்க முடிந்ததே என்று நினைத்து சந்தோஷப்பட்டார்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை இருவரும் தோட்டம், வாய்க்கால் என்று சுற்றியபடியே பேசிக்கொண்டிருந்தனர்.

“மன்னிச்சுக்கோடா நண்பா.. எனக்கு அம்மா இப்படி சொன்னதும், என்ன பண்றதுன்னு தெரியாம தான் உன்கூட நேத்து பேசாம இருந்துட்டேன். நல்ல வேளையா அய்யா வந்துதான் இத சரிபண்ணியிருக்கார். அய்யாவுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது.” என்று அழகேசனைப் புகழ்ந்தாள் தமிழினி.

“ம்ம்.. எனக்கு அப்பாவைத் தவிர இந்தப் பிரச்சினைய வேற யாராலும் தீர்த்து வைக்க முடியாதுன்னு தோணுச்சு. அதனால தான் அப்பா வந்தவுடனேயே கையோட கூட்டிட்டு வந்துட்டேன்.” என்றான் அமுதன்.

“ஏன் அய்யாவால, என்கூட பேசாம இருக்க முடியாதோ.?” என்றாள்.

“கிட்டத்தட்ட அப்படி தான் தமிழு. நீ நேத்து பேசாதப்போ எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. நேத்து வகுப்புல நடத்துன பாடம் எதையுமே கவனிக்கல. நீ ஏன் பேச மாட்டிங்கற.? நான் ஏதாவது தப்பு பண்ணீட்டனா.? இப்படியெல்லாம் யோசிச்சு யோசிச்சே எனக்கு தலையே வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. நீ ஒரு நாள் பேசலன்னாலும் எனக்கு ஒரு மாதிரி தான் இருக்கும்.” என்றான் அமுதன்.

“என் மேல அத்தனை பாசமாடா உனக்கு.?” என்றாள் தமிழினி.

“ம்ம். ஆமா, நீ தான் என் உயிர்த் தோழியாச்சே.?” என்றான் அமுதன் அவளைப் பார்த்தவாறே.

அவளும் சிரித்துக்கொண்டே “ம்ம்ம்..” என்று தலையாட்டிச் சிரித்தாள். பேசிக்கொண்டே அப்படியே வாய்க்கால் பக்கமாகச் சென்று கொண்டிருந்தனர்.

வழக்கத்தை விட வேகமாகவே தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. இரண்டு வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் தண்ணீரின் அளவு சிறிது அதிகமாகவே காணப்பட்டது. அதைப்பார்த்துக்கொண்டே வந்தவர்கள், இரு சிறுவர்கள் மேலே நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்தவாறே அங்கே விளையாடிக்கொண்டிருந்தனர்.

திடீரென்று கால் இடறி தவறி இருவரும் வாய்க்காலில் விழுந்தனர். பாவம் நீச்சல் தெரியாத சிறுவர்கள் போலும், நீரில் மூழ்கி மூழ்கி எழ முடியாமல் தவித்தனர். கண நேரத்தில் நடந்த அந்த சம்பவத்தைப் பார்த்த அமுதனும், தமிழினியும் பதறினர்.

“டேய்.. அமுதா, அங்க பாரு.. அய்யோ அந்தப் பசங்களக் காப்பாத்தனும். நீ போய்.. ஏதாவது கயிறு இருந்தா கொண்டு வா.. சீக்கிரம் போ..” என்று அவனை துரத்த, தோட்டத்தில் உள்ள மோட்டார் ரூமில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்க ஓடினான்.

அதற்க்குள் தமிழினி தன்னால் முயன்று அவர்களை மூழ்க விடாமல் செய்ய வேண்டும் என்று வாய்க்காலில் குதித்தாள். நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும், முயற்சி செய்து அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றாள்.

அதற்க்குள் அமுதன் மரம் ஏற உதவியாக இருந்த ஒரு பெரிய கயிறுடன் ஓடி வந்தான். தமிழினியும் நீரில் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“அய்யோ. தமிழு நீ எதுக்கு அதுக்குள்ள அவசரப்பட்டு குதிச்ச.? நானும் வரேன்.” என்று குதிக்க முயன்றவனை,

“வேண்டாம் டா. நீ அந்தக் கயிற ஒரு என்னோட அளவுக்கு கட்டி முடிச்சு போட்டு என்கிட்ட தூக்கிப் போடு, அப்பறம் அந்த மரத்த சுத்தி நின்னுக்கோ, நான் சொல்லும் போது பலம் முழுக்க சேர்த்து இழு. அதுக்கப்பறம் உன்னால முடிஞ்ச அளவுக்கு சத்தம் போட்டு கத்தி ஊரக் கூட்டு. அதே போதும்.” என்றபடி, அவன் தூக்கிப் போட்ட கயிறை தன்னுடன் கட்டிக் கொண்டு உள்ளே மூழ்கினாள்.

அதற்க்குள் அமுதன், அவள் சொன்னதைப் போல் ஒரு பெரிய மரத்தை சுற்றியபடி தயாராக இருந்தான். அதே போல், “யாராவது வாங்க.. யாராவது வாங்க.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..” என்று குரலை உயர்த்தி கத்தியபடி இருந்தான்.

உள்ளே மூழ்கிய தமிழினி, மேலே அந்த இரு சிறுவர்களையும் தன் இரு கையால் தன் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி இழுத்தபடி, “டேய்.. அமுதா இப்போ இழுடா..” என்று கத்தினாள்.

அவனும் முயன்ற அளவு அந்தக் கயிற்றை பிடித்தபடி இழுத்தான். அவன் ஒருவனால் மட்டுமே அது சாத்தியப்படவில்லை. கத்திக்கொண்டே இருந்தவன் குரல் கேட்டு அங்கு வந்த இரு ஆட்கள் ஓடி வந்தனர்.

அவர்களில் ஒருவர் வாய்க்காலில் குதிக்க, ஒருவர் அமுதனோடு சேர்ந்து கயிற்றைப் பிடித்து இழுத்தார். வாய்க்காலில் குதித்தவர், ஒரு சிறுவனைப் பிடித்துக்கொள்ள, தமிழினியை அவர்கள் இருவரும் இழுத்தனர்.

அதற்க்குள் இன்னும் சில ஆட்கள் வந்துவிட்டனர். ஒட்டுமொத்தமாக சேர்ந்து அந்த சிறுவர்களையும், தமிழினியையும் கரை சேர்த்தனர். அந்த சிறுவர்களை கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்து நன்றாக வயிற்றை அமுக்கி தண்ணீரை வெளியே தள்ளினர்.

சிறிது நேரம் கழித்தே, அந்த சிறுவர்கள் இருமியபடி மூச்சு விட்டனர். அப்போதுதான் அவர்களுக்கு நிம்மதியானது. தமிழினிக்கும், அமுதனுக்கும் அப்போது தான் உயிரே திரும்ப வந்தது.

“டேய் பசங்களா.. நீங்க பொழச்சிட்டீங்க டா..” என்று அவர்கள் இருவர் முதுகில் தட்டி விட்டனர். அதே போல், தமிழினியையும், அமுதனையும் வெகுவாக பாராட்டினர்.

“ரொம்ப அருமையான விஷயம் பண்ணிருக்கீங்க கண்ணுகளா. நீங்க ரெண்டு பேரும் இல்லன்னா இந்தப் பசங்கள இன்னைக்கு பொணமாத்தான் பார்த்திருக்கணும். தமிழு உன்னோட தைரியத்துக்கு எவ்ளோ பாராட்டினாலும் பத்தாது.” என்று ஆளாளுக்கு பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்க..

அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தனர் அந்தப் பையன்களின் பெற்றோர்கள் இருவரும். “டேய்.. ஏண்டா இப்படிப் பண்றீங்க. விளையாட வாய்க்கா பக்கம் போகாதீங்கன்னு அடிச்சிக்கிட்டோமே.? கேட்டீங்களா.? ஏதாவது ஆயிருந்தா நாங்க என்னடா பண்றது.?” என்றபடி அந்தப் பையன்களைப் பிடித்துக்கொண்டே அழுதுகொண்டிருந்தனர்.

“அட, அதான் காப்பாத்திட்டாங்கள்ல. அப்பறமும் ஏன் அழுதுட்டிருக்கீங்க. போய் அந்தப் பசங்க்கிட்ட நன்றி சொல்லுங்க. அதுவும் தமிழ் தான் ரொம்பப் போராடி காப்பாத்தினா. அவள தெய்வமாத்தான் நீங்க கும்பிடணும்.” என்று பலரும் சொல்லிக்கொண்டிருந்தனர்.

தமிழினியை ஓடி வந்து கட்டிப்பிடித்தபடி, “என்ன மன்னிச்சிரு கண்ணு. நீதான் காப்பாத்துனதா சொல்றாங்க. நீ மட்டும் காப்பாத்தலன்னா எங்க உயிரே போயிருக்கும்.” என்று ஒரு சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க அவளிடம் நன்றி தெரிவித்தனர்.

மற்றொரு சிறுவனின் பெற்றோருக்கோ, மிகவும் சங்கடமாக இருந்தது. எப்படி இவளின் முகத்தில் முழிப்பது.? எத்தனையோ முறை தாங்களே அவளை இகழ்ந்து பேசியிருக்கிறோம். அதே போல், ஒரு முறை அவள் அவர்களின் மகளுடன் பேசியதைக் கண்டு அவளை அழைத்து கண்டித்திருக்கிறோம்.

ஆனால், இன்று அவள் தான் அவர்களின் நீண்ட நாள் பலனைத் திருப்பித் தந்துள்ளாள். இரண்டாவது ஆண் குழந்தை வேண்டும் என்பதற்க்காக ஏறாத கோயிலில்லை, வேண்டாத தெய்வமில்லை. அத்தனை வேண்டுதலுக்கும் பலனாகக் கிடைத்த செல்வத்தை இன்று ஒரு நொடியில் இழக்க நேரிட்ட தருணத்தில் தெய்வமாய் வந்து காப்பற்றியவளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.

அதற்க்குள் விஷயம் கேள்விப்பட்டு பஞ்சாயத்திலிருந்து ஓடி வந்தார் சாத்தப்பன். இவர் எதற்க்காக ஓடி வந்தார் என்பது தானே, சந்தேகம். அவரின் மகள் வயிற்றுப் பேரன் தான் அந்தச் சிறுவன்.

“என்னாச்சு..? என்னாச்சு..? ஏம்மா என்னாச்சு மா தம்பிக்கு..?” என்று பதறியபடியே வந்தவர் சட்டையெல்லாம் நனைந்தபடி, அவன் சாதாரணமாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவர், “டேய் தம்பி உனக்கு ஒண்ணும் ஆகலையே..? பையனக் குடு.” என்றபடி தோள்களில் தூக்கி வைத்தபடி அவனைப் பார்த்து அழுதார் சாத்தப்பன்.

“எப்படி மா ஆச்சு.? இவன் எப்படி தனியா வந்தான்.? யாரு இவனக் காப்பாத்தினாங்க.?” என்று அவர் அவர்களிடம் கேட்க, அவர்களோ தமிழினியைக் காட்டினர்.

அவனின் பெற்றோர்கள் ஒரு பக்கம் திணற, தமிழினி தான் காப்பாற்றியது என்று தெரிந்த சாத்தப்பனோ அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தார்.

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1214

உங்களின் விமர்சனங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவிடவும் தோழமைகளே...


 
அத்தியாயம் 10

ஊரே அந்த இடத்தில் கூடி விட்ட நிலையில், தமிழினியை ஏறெடுத்துப் பார்க்க சாத்தப்பனுக்கு வெட்கமாய் இருந்தது. அவளைப் பெற்றவர்களை, எத்தனை பேச்சு பேசியிருப்பார்கள், எத்தனை தடவை அவர்களுக்கு எதிராக நடந்திருப்பார்கள். கொஞ்ச, நஞ்சமல்ல அவர்களுக்கு இழைத்த அநீதிகள்.

ஆனால், இன்றோ அதையெதையும் அறியாத சிறு உள்ளம் தான் அவர்களை தலை நிமிரச் செய்திருக்கிறது. அவர்கள் நினைத்திருந்தால் எவரையும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் பொறுமையாய் இருந்ததோடு, அவர்களின் மகளையும் நன்றாக வளர்த்திருப்பது ஊருக்கே எடுத்துக்காட்டு. இன்று அதை நிரூபித்து விட்டாள் தமிழினி.

தலைகுனிந்தவாறே இருந்தவர்களைப் பார்த்து, “அய்யா.. எதுக்கு எல்லாரும் இப்போ அழுதுட்டிருக்கீங்க.? தம்பி பொழச்சுட்டான் தானே. எல்லாரும் சந்தோஷப்படுங்க.” என்று எதார்த்தமாய்ச் சொல்ல,

அவர்கள் அனைவரும் அவளை கையெடுத்து கும்பிட்டனர். “எங்கள மன்னிச்சிரு கண்ணு. நாங்க எத்தனையோ தடவை உன்னத் திட்டியிருக்கோம், உன் மனச நோகடிக்கற மாதிரி தேவையில்லாததெல்லாம் பேசிருக்கோம். ஆனா, நீ இன்னைக்கு எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாம எங்க பையனக் காப்பத்திக் குடுத்திருக்க. அவனுக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்தா, நாங்க என்ன பண்ணிருப்போம்னே தெரியல. நீ தான் எங்க குலதெய்வம். உனக்கு கோயில் கட்டி கும்பிட்டாலும் தப்பில்ல.” என்று உணர்ச்சி பொங்கக் கூறினர்.

“அதெல்லாம் நான் எப்பவும் மனசில வைச்சுக்கிட்டது இல்லைங்கம்மா. நீங்க தம்பிய கவனமா பாத்துக்கங்க. நீச்சல் கத்துக்குடுங்க. அது போதும்.” என்றாள் தமிழினி பெருந்தன்மையாய்.

அவளின் கள்ளம் கபடமில்லாத பேச்சில் யாராக இருந்தாலும், மனம் இறங்குவர். சாத்தப்பனும் மனம் இளகினார்.

“என்னையும் மன்னிச்சிரு கண்ணு, நானும் நிறைய தப்பு பண்ணிருக்கேன். உங்க குடும்பத்துக்கு நிறைய பாவங்கள் செஞ்சிருக்கேன். அதுதான் இன்னைக்கு என் பேரனோட உயிர காவு வாங்கப் பாத்திருக்கு. ஆனா, நீ தான் தெய்வமா வந்து காப்பாத்திக் கொடுத்திருக்க. உனக்கு நன்றி சொல்றதுக்குக் கூட எனக்கு அருகதை இல்ல. என்ன நினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு.” என்று அவளிடம் கையெடுத்து கும்பிட்டு வெட்கித் தலைகுனிந்தார்.

“அதெல்லாம் இல்லைங்கய்யா. எனக்கும் அந்த தெய்வம் தான் உறுதுணையா இருந்துச்சு. அமுதனும் இல்லைன்னா என்னாலயும் இதைப் பண்ணிருக்க முடியாது. நீங்க அவனுக்கும் நன்றி சொல்லுங்க.” என்றாள் தன் நண்பனை விட்டுக்கொடுக்காமல்.

“நன்றி தம்பி..” என்று அவனின் கைகளைப் பிடித்து நன்றி கூறியபடி சென்றனர்.

அவர்கள் சென்றவுடன், “ஏய்.. தமிழு. உயிரப் பணயம் வைச்சு காப்பாத்துனது நீ. என்னை எதுக்கு சொல்லிட்டிருக்க.?” என்றான் அமுதன்.

“டேய்.. நண்பா.. நீ இல்லைன்னா என்னால எப்படி இதை செஞ்சிருக்க முடியும் சொல்லு. நீ மட்டும் கயித்தப் போட்டு காப்பாத்தலன்னா, அந்தத் தண்ணி என்னையும் அடிச்சிட்டுப் போயிருக்கும். அப்பறம் நானும் என்னாகியிருப்பேன்னு தெரியல. அதனால தான் உன்னையும் சொன்னேன்.” என்றாள்.

“எப்படிப் பார்த்தாலும், நீ தான் அந்த நேரத்துல அதப் பண்ண சொன்னது. இல்லன்னா எனக்கு இந்த மாதிரி யோசனையெல்லாம் எங்க வரப் போகுது.?” என்றான் அமுதன்.

“நான் யோசனை சொன்னாலும், அதை செயல்படுத்த ஒரு தனி தைரியமும், பலமும் வேணும் தானே. அது உன்கிட்ட இருந்ததால தான் இது சாத்தியமாச்சு.” என்றாள் தமிழினி.

“ம்ஹூம்ம்... அதெல்லாம் இல்ல, உன்னாலதான்..” என்றான் அவன் ஒத்துக்கொள்ளாமல்.

“ம்ஹூம்ம்.. இல்ல உன்னாலதான்..” என்றாள் அவளும் பிடிவாதமாக.

“சரி, சரி.. நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருந்ததால தான் இது நடந்துச்சு சரியா..” என்று சொல்லிக்கொண்டே சிரித்தபடி வந்தார் அழகேசன்.

“அப்பா.. பாருங்க.. என்ன நடந்துச்சு தெரியுமா.?” என்று அவன் நடந்ததைச் சொல்ல வர,

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். அதுதான் ஊர் முழுக்க பேசிட்டிருக்கே. உங்கள நினைச்சு எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு பசங்களா. என்ன ஒரு தைரியம், என்ன ஒரு வேகம். அதுவும், தமிழ் நீ மறுபடியும் நம்ம ஊருக்கு இன்னொரு பெருமையத் தேடித் தந்திருக்க. இந்தத் தடவையும் உனக்கு விருது நிச்சயம். மறுபடியும் முதல்வர் கையால விருது வாங்க ரெடியா இரு..” என்றார் அழகேசன்.

“ம்ம்ம்.. அப்படிச் சொல்லுங்கப்பா..” என்று அவளிடம் “பார்த்தியா.?” என்பதைப் போல் பார்த்தான் அமுதன்.

“அய்யா.. இப்பவும் சொல்றேன். அமுதா இல்லைன்னா இது சாத்தியமே இல்ல. அதனால அவனுக்கும் இந்த விருது போய்ச் சேரணும்.” என்றாள் தீர்க்கமாக.

“அது முடியாதே தமிழ். மாவட்டத்துல ஒருத்தருக்குத் தான் அந்த விருது. ரொம்ப ரிஸ்க் எடுத்தது நீதான். அந்த ரெண்டு பசங்களையும் காப்பாத்திருக்க. அதனால உனக்குத்தான் கிடைக்கும்.” என்றார் அழகேசன்.

“ஆனா, நான் அமுதனுக்கும் வாங்கித் தருவேன்.” என்று சபதம் எடுத்தாள்.

“ம்ம்.. சரி அத நாம் அப்போ பார்க்கலாம்.” என்றார் அழகேசன்.

வீர, தீர செயல்கள் புரிந்தவர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதோ, இப்போது விருது வாங்குவதற்க்குத் தயார் நிலையில் அவளது பெயரைச் சொன்னதும் தமிழினி சென்றாள்.

அவளைக் கண்டதும் அப்போது அவள் விருது வாங்கிய முதல்வரே இருக்க, “இதே பெயரை நான் ஏற்கனவே கேட்டிருக்கேனே.” என்றார்.

“ஆமாங்கய்யா. நான் சின்ன வயசுல உங்க கையால தான் இதே விருத வாங்கினேன். இப்பவும் வாங்கறேன்.” என்றாள் புன்னகையுடன்.

“ஓ.. அப்படியா ரொம்ப சந்தோஷம், ரொம்ப பெருமையா இருக்கு மா.” என்று அவளிடம் சொன்னவர், இவள் எந்த செயலுக்காக விருதை வாங்குகிறாள் என்பதையும் கேட்டறிந்தார்.

“என்னுடைய நண்பன் இல்லைன்னா, என்னால அன்னைக்கு அந்தப் பசங்களக் காப்பாத்திருக்க முடியாது. அவனும் என்கூட தான் வந்திருக்கான். நீங்க அவனுக்கு இந்த விருதத் தரணும்.” என்று தன் கோரிக்கையை வைக்க, அவனையும் அழைக்கச் சொல்லி, அவனுக்கு ஒரு விருதை வழங்கினார்.

“உனக்கு பெருந்தன்மை ரொம்ப அதிகம் மா. உனக்கு என்னவாகனும்னு ஆசை.?” என்று கேட்டார்.

“எனக்கு ஒரு ஆசிரியர் ஆகணுங்க அய்யா. ஆனா, மேல படிக்கணும்னா எங்க அப்பா, அம்மானால முடியுமான்னு தான் தெரியல.” என்றாள்.

அப்போதே அவர், “நீ கவலைப்படாத மா. உன்னுடைய மேல் படிப்புக்கு உண்டான செலவை அரசே ஏத்துக்கும். நீ நல்லா படிச்சா போதும்.” என்றார்.

அவளுக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அவரின் கால்களின் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். அவர் உடனே தனது பி.ஏ விடம் சொல்லி அவளுக்கான எல்லா விவரங்கள் அடங்கிய பேப்பரில் முதல்வரின் கையொப்பமிட்டு அவளிடம் தரச் சொன்னார்.

அவரிடமிருந்து நன்றி சொல்லி விடைபெற்று, அழகேசனிடம் வந்தவர்கள், “அய்யா., நான் தான் சொன்னேனே அவனுக்கும் நிச்சயம் இந்த விருதை வாங்கிக் கொடுப்பேன்னு. பார்த்தீங்களா.?” என்றாள் சந்தோஷத்தில்.

அவள் விருது வாங்கியதை விட, அவனுக்கு அந்த விருதை சிபாரிசு செய்து வாங்கிக் கொடுத்தது தான் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அழகேசன் அறிந்து தமிழினியை நினைத்து பெருமைப்பட்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும், தலைமையகம் வந்து காத்திருந்து, அனைத்தையும் பெற்றவர்கள் திரும்பி ரயிலில் பயணித்து, இரவு ஊர் வந்து சேர்ந்தனர்.

அடுத்த நாள் ஊரே அவர்களுக்கு பாராட்டு விழா கொண்டாட பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. எல்லா பெருமையையும் தேடித் தந்த பெண்ணைப் பெற்றதற்க்கு ரங்கராஜனும், கோகிலாவும் பெருமைப்பட்டனர்.

ஊருக்கே அழைப்பு விடுத்திருந்தார் அழகேசன். அதில் விருப்பமில்லாமல் கலந்து கொண்டவர்கள் இருவர். ஒன்று பஞ்சாயத்து தலைவர் மாணிக்கம். மற்றொன்று அவரின் வலது கை பெரியசாமி.

சாத்தப்பனோ இப்போது அடியோடு மாறிவிட்டார். நடந்த அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர்கள் இருவரோடு பழகுவதையும், பேசுவதையும் குறைத்துக்கொண்டார்.

பெரியசாமி கூட, அடிக்கடி கிண்டல் செய்தபடி, “தலைவரே, சாத்தப்பன் திருந்திட்டானாம். அதனால நம்ம கூட இனிமேல் சேர மாட்டாராம். பாவம் பண்ணதுக்கு பிராய்ச்சித்தமா இனிமேல் நியாயத்துக்கு பக்கமா தான் நிப்பானாம். இதெல்லாம் நடக்கற கதையா சொல்லுங்க.?” என்று மாணிக்கத்திடம் சொல்வார்.

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும் என்று அமைதியாக அங்கிருந்து நகர்ந்து விடுவார் சாத்தப்பன். இப்போது அவரின் வழக்கம் அதிகமாக அழகேசனுடன் இருப்பதாயிற்று. பஞ்சாயத்தானாலும், அழகேசனிடம் பேசிவிட்டு நியாயத்துக்கு சிறிது பரிந்து பேசி, எப்படியோ ஒன்றிரண்டு நியாயங்களை வழங்கினர்.

அழகேசனும் அவருடைய மனமாற்றத்தை பெரிதும் வரவேற்றார். இதெல்லாவற்றுக்கும் காரணம் தமிழினி. அதனால், அவளைப் பார்த்தாலே அவர் அவ்வப்போது சிரிப்பார். அக்கறையுடன் பேசுவார். அவள் பள்ளி செல்வதற்க்காக புதிதாக சைக்கிள் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், அழகேசன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு அவரும் உறுதுணையாய் வந்து அவரால் இயன்ற உதவிகளைச் செய்தார். அனைவரும் கூடிவிட்ட நிலையில் தமிழினியையும், அமுதனையும் முன்னே நிற்க வைத்தபடி, பேச ஆரம்பித்தார் அழகேசன்.

“நம்ம ஊரு பொண்ணு இன்னைக்கு நம்ம ஊருக்கு மறுபடியும் பெருமை தேடித் தந்திருக்கா. அவளோட தைரியத்தையும், பெருமையையும் சொல்லத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணேன். ஏன்னா, யாருக்கும் ஒண்ணும் புதுசா சொல்லித் தெரிய வேண்டியது இல்ல. ஒரு காலத்துல நம்ம ரங்கனையும், கோகிலாவையும் யாருமே மதிக்காம இருந்தாங்க. ஏன், சில பேரு அவங்கள ஏமாத்தவும் செஞ்சிருக்காங்க.” என்றபடி அவர் பெரியசாமியைப் பார்க்க, அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“தலைவரே.. இதெல்லாம் ரொம்ப அதிகம். என்னைத்தான் சொல்லாம சொல்லிட்டிருக்கான் அழகேசன்.” என்றார் மாணிக்கத்திடம் முணுமுணுத்தபடி.

“யோவ்.. விடுய்யா. அதுக்காக நீ போய் அவன்கிட்ட சண்டை போடப் போறியாக்கும். இப்போ, ஊருல அதிக சப்போர்ட் அவனுக்குத்தான். பத்தாததுக்கு சாத்தப்பனும் இப்போ அவன்கூட சேர்ந்துட்டான். நம்ம பாடு திண்டாட்டமா இருக்கு. இங்க வந்தது கூட, அவனுங்க நம்மள எதுவும் பேசிடக்கூடாது பாரு அதுக்குத்தான். இல்லைன்னா, இந்தக் கன்றாவியையெல்லாம் பார்க்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா.? வாய மூடிட்டு பேசாம உட்காருய்யா..” என்று அவர் கடுப்புடன் முணுமுணுத்தபடி சொல்ல, வந்த கோபத்தையும் அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று பெரியசாமிக்கு.

அங்கே அழகேசன் இன்னும் தொடர்ந்தபடி இருந்தார். ஆனா, அவங்க ரெண்டு பேரும் அதுக்காக ஒண்ணும் துவண்டு போகல. பொறுமையா இந்த ஊருலயே எல்லா சவால்களோடையும் வாழ்ந்தாங்க. அதே மாதிரி, அவங்க பொண்ண பள்ளிக்கூடத்துலயே சேர்த்துக்கக் கூடாதுன்னு சிலர் சொன்னாங்க. ஆனா, அந்தப் பொண்ணோட குணத்துக்கு அந்தக் கடவுளே முதலமைச்சர் ரூபத்துல படிக்க ஏற்பாடு பண்ணாங்க. இப்போ பாருங்க, அவளோட தைரியத்தால இதோட மூணு உயிர்களக் காப்பாத்தி இருக்கா. அதுல, என் பையன் அமுதனும் ஒருத்தன். இந்த முறை அவனும் அவளுக்கு உதவியா இருந்து மற்ற ரெண்டு பசங்களையும் காப்பாத்தி இருக்காங்க. அந்த நல்லெண்ணத்தப் பாராட்டி அவங்களுக்கு விருதும் கிடைச்சிருக்கு. அதோட, தமிழோட மேற்படிப்புக்கான செலவை அரசே ஏத்துக்கும்னு முதலமைச்சரே சொல்லிட்டார். இதுக்கு மேல என்ன வேணும். ஒரு நல்ல நண்பர்களா இருக்கற அவங்களப் பாராட்டி, எல்லாரும் அவங்க ரெண்டு பேரையும் வாழ்த்தணும்னு நான் தாழ்மையுடன் எல்லாரையும் கேட்டுக்கறேன்.” என்று தனது உரையை முடித்தார் அழகேசன்.

அவர் பேசி முடித்ததும், கைத்தட்டல்களால் அந்தப் பள்ளியே அதிர்ந்தது. “பாருங்க தலைவரே இந்தப் புள்ளைக்கு நேரத்த. படிக்கவே விடக்கூடாதுன்னு பார்த்தா, இப்போ அரசு செலவுல இலவசமா படிக்கப் போகுது. ஹூம்ம்..” என்று சலித்துக்கொண்டார் பெரியசாமி.

“விடுய்யா.. நீ வேற சும்மா, எதுக்கெடுத்தாலும் எதையோ ஒண்ண சொல்லிக்கிட்டு. அந்தப் புள்ளைக்கு நேரம் நல்லா தான் இருக்கு. நமக்கு தான் நேரமே சரியில்ல. இவனுக எப்படா இந்த நிகழ்ச்சிய முடிப்பாணுகன்னு இருக்கு. சட்டு, புட்டுன்னு கிளம்பலான்னு பார்த்தா விட மாட்டானுக போலிருக்கே.?” என்று எரிச்சலில் பெரியசாமியிடம் முணுமுணுத்தார்.

நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. அனைவரும் அவர்களை வெகுவாகப் பாராட்டினர். ஆனால், சில கண்கள் எப்பொழுதும் போல அவர்களுக்கு இடையில் என்ன இருக்கிறது என்பதைப் போல் ஜாடையாக பேசிக்கொண்டிருக்க, அது அழகேசனின் காதில் விழுந்தது.

அப்போதே, அழகேசன் உடனே சென்று மைக்கில் சொன்னார். “ஊருக்கு ஒண்ணு சொல்லிக்க விருப்பப்படறேன். ஒரு பொண்ணும், பையணும் சேர்ந்து பழகினா அதத் தப்பா பார்க்கறதே எல்லாருடைய வாடிக்கையா போச்சு. ஆனா, இந்தப் பசங்க அதுக்கு நேர்மறையானவங்க. அவங்களுக்கு இடையில் இருப்பது ஒரு நல்ல நட்பு மட்டும் தான். நீங்க அத மதிக்காட்டியும் பரவால்ல. அதை கொச்சைப்படுத்தி பேசாதீங்க. அவங்களப் பார்த்தாவது எல்லா பெண் பிள்ளைகளும், ஆண் பிள்ளைகளும் ஒரு நல்ல நட்பு வட்டாரத்தோட பழகட்டும். அதுக்கு பெத்தவங்க முதல்ல பிள்ளைங்கள நம்பணும். அப்போதான் பிள்ளைங்க அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்குவாங்க. எல்லாரும் வந்து இந்த நிகழ்ச்சிய சிறப்பா நடத்திக் கொடுத்ததுக்காக நன்றி.” என்று சொன்னார்.

அது பலருக்கு புத்தியில் உரைத்தது. சிலர் காது கொடுத்துக் கேட்பதாய் தெரியவில்லை. சிலரோ, “எல்லாம் இந்தக் கல்யாணம் ஆகற வரைக்கும் தான். அதுக்கப்பறம் வரப் போறவங்க சொல்றதத் தான, இந்தப் பசங்க ரெண்டும் கேட்டாகணும்.” என்றபடி பேசிக்கொண்டே சென்றனர்.

பேசுபவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பர். அவர்களை குற்றம் சொல்ல முடியுமா.? ஆனால், இதை அமுதனும், தமிழினியும் கேட்டு விட்டனர். அப்போதே அவர்களின் முகம் மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கள்ளம், கபடமில்லா நண்பர்களின் உள்ளம் உடைந்து விட்டது. என்னாகுமோ.?

(தொடரும்...)


வார்த்தைகளின் எண்ணிக்கை : 1261

உங்களுடைய விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விமர்சனங்களை கீழே உள்ள
கமெண்ட் லிங்கில் பதிவிடவும் தோழமைகளே...

 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom