Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

Status
Not open for further replies.
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 5

அவளைக் கண்டு கொள்ளாமல் அவன் செல்ல பவிக்கு சூடேரியது.. சே.. மேனர்ஸே இல்லாதவன்...

பவி... என்ன ஆச்சு.. அமைதியாவே இருக்க... காபி சாப்பிடு... ஆறிடப் போறது... சுந்தரவல்லி விளிக்க , தலை நிமிர்ந்து பார்த்தாள் பவி..

மடமடவென காப்பிக் கோப்பையை வாயில் சாய்த்துக் கொண்டு எழுந்தாள்..

ஓகே மாமி... நான் கெளம்பரேன்.. நேரம் ஆயிடுச்சு.. வீட்ல தேடுவாங்க..

அப்படியா...சரிம்மா.. நீ வந்தது ரொம்ப சந்தோஷம்... ஃப்ரீயா இருக்கும் போது அப்பப்போ வா... என்ன.. இத உன் வீடுமாதிரி நெனச்சுக்கோ..

ம்ம்ம்.... புன்னகையை உதிர்த்து கிளம்பினாள் பவித்ரா...

பவி.. ஒரு நிமிஷம்.... இதோ வந்துட்ரேன்... உள்ளே சென்ற சுந்தரவல்லி குங்குமச் சிமிளுடன் ஒரு சிறிய துணியையும் தட்டில் கொண்டு வந்தாள்... இந்தா இத எடுத்துக்கோ..

குங்குமத்தை நெற்றியில் கீற்றிட்டுக் கொண்டு அதை பெற்றுக் கொண்டு கிளம்பினாள் பவி..!

ஆட்டோ பிடித்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தாள்... உள்ளுக்குள் அவன் மீது கோபம் கோபமாக வந்தது... என்ன ஒரு திமிரு.. ஒருதடவ இன்சல்ட் பண்ணது பத்தாதுன்னு என்ன வார்த்தையெல்லாம் சொல்லிட்டான்.. அந்த மாமி பேச்ச கேட்டு அவங்க வீட்டுக்கு போனது என் தப்பு.. இவன் மட்டும் என்ன பெரிய மேதாவி மாதிரி பேசிட்டு போறான்.. வந்த கோவத்துல ஒரு அறை விட்டுருக்கனும்.. அப்ப தெருஞ்சிருக்கும்..

பொறுமிக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள்..

வீட்டிற்குள் நுழைந்தவள் தன்னறைக்கு சென்று அமர்ந்து கொண்டாள். மறுபடியும் மறுபடியும் அவன் கூறியது நினைவலையில் ஓடியது.. நாள் முழுக்க அவனது சிந்தனையாகவே இருந்தது... அவன் கூறியதையே திரும்பத் திரும்ப ஆராய்ந்தது.. மனதை சமாதானப் படுத்த இயலாமல் புகைந்தாள்..

சே... இனிமே அந்த மாமிகிட்ட கூட பேசக் கூடாது... எப்டி அவாய்ட் பண்றது.. அதுக்காக.. கோயிலுக்கு போகாம இருக்க முடியுமா.. என்ன இது வேண்டாத தொல்லை... சே... இது இவ்ளோ பெரிய விஷயமாகி என் நிம்மதியே குலைக்கறதே.. மனதுக்குள் புலம்பினாள்..

வெளியில் எதுவும் நடக்காதது போல் முகத்தை வைத்துக் கொண்டு வலம் வந்தாள்.. இருப்பினும் இருமுறை அவன் தன்னை அவமானப் படுத்தியதும் , அவனது அலட்சிய வார்த்தைகளும் அவளை அலைக்கழித்தது..

எப்பொழுதும் பொங்கும் சந்தோஷமின்றி ஒருவித இருக்கத்துடன் இருந்தாள்.. வீட்டில் இருந்தவர்கள் பார்வைக்கு புலப்படாமல். அடிக்கடித் தனியாக அமர்ந்து அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.. அவனது வார்த்தைகள் அவளை மிக பாதித்தது.. நாட்கள் இப்படியாக ஓடியது.. ஒருவாரம் தாண்ட...

சுகுமாரி பாட்டிக்கு மட்டும் அவளது மாற்றத்தை மெலிதாய் உணர முடிந்தது.. அவளது கல்யாணப் பேச்சை எடுத்த பிறகுதான் பவித்ரா மனநிம்மதி இன்றி அலைகிறாள் எனத் தோன்றியது.. அவ அப்பா.. வரனப்பத்தி பேசினப்பறம், தன்கிட்ட தன் சமதத்தை கேக்கலைன்னு கோபப்பட்டாளே.. அவ மனசுலயும் தன் வாழ்க்கைய பத்தின அபிப்ராயம் இருக்காதா.. எப்படி இருக்கனும் ஆசை இருக்கும் தானே.. அந்த காலத்ல நமக்கு பண்ணினது மாதிரி இந்த தலைமுறைக்கும் ஆகிடக் கூடாது.. சுதந்திரமே இல்லாம..! பெரியவா பேச்சக் கேட்டு நடக்கற பொண்ணு.. பாவம் குழந்தை.. மனசுல எதையோ வெச்சுண்டு சொல்ல மாட்டாம தடுமாறறா. நம்ம பெரிய மனிஷியா இருக்கோம்.. அவளுக்கு நான்தானே ஆறுதலா இருக்கனும்.. அவ மனசுக்கு புடுச்சாத் தான் எந்த பையனா இருந்தாலும் கல்யாணம்.. அவ விருப்பம்தான்.. நாம கூட இருந்து அவளோட ஆசைய நிறைவேத்தனும்.. மனதில் சிந்தனைகள் ஓட பவியை அழைத்தாள் பாட்டி சுகுமாரி..

பவி கண்ணு.. இங்க வா...

என்னபாட்டி.. என்ன வேணும்... காபி கொண்டுவரவா...

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... இங்கவந்து உட்கார்..

என்ன என்ற குழப்பத்துடன் மெதுவாக அவளருகில் அமர்ந்தாள் பவித்ரா...

சொல்லு பாட்டி... என்ன விஷயம்...

அவள் கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள் பாட்டி... முகத்தை சட்டெனத் தாழ்த்திக் கொண்டாள் பவி..

பவி... என்ன ஆச்சு.... ம்ம்ம்....

ஒன்றும் தெரியாதவள் போல் விழித்தாள்... என்ன ஆச்சு... ஒன்னுமில்லையே... நல்லாத்தான இருக்கேன்.. ம்ம்...

பாட்டி மென்மையாக புன்னகைத்தாள்.. இல்லையே .. இந்த ஒருவாரமா உன்ன கவனுச்சுண்டுதான் வரேன்... என்னவோ போல இருக்கியே..

சமயோஜிதமாக சிரித்தாள்.. இல்லியே.. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..

அப்படியா... எப்பவும் கலகலன்னு ஆத்த சுத்தி சுத்தி வருவே... பாட்டி பாட்டின்னு என்ன ஒட்டிப்பியே... இப்போ பாட்டிய கண்டுக்கறதே இல்லையே... ம்ம்ம்...

அ... அது... தடுமாறினாள்.. பாட்டி.. அப்படில்லாம் எதுவுமில்ல... பைனல் இயர் எக்ஸாம் , படிப்பு , ஆத்து வேலை அப்டி இப்டின்னு போயிடறதா.. அதான் உன்கூட ஒக்காந்து பேச முடியல.. ஹூம்.. பாட்டிமா.. நீ தான் எனக்கு ப்ரண்ட் , ஃபிலாசஃபர் எல்லாமே... உன் கிட்ட மறைப்பேனா.. நீ எதுவும் வருத்தப் பட்டுக்காத.. நான் எப்பவும் போல சந்தோஷமா தான் இருக்கேன்..... சரியா..

இல்ல பவி.. உன் மனசு எனக்குத் தெரியும்.. மனச போட்டு அலட்டிக்காத.. சரியா... அப்பா சொல்லிட்டான்.. அதுக்காக அவன் பாக்கற மாப்பிள்ளையத் தான் நீ கட்டிக்கனும்னு இல்லை.. இந்த கல்யாணத்தப் பொறுத்தவரையில உன் இஷ்டம் தான் கண்ணு.. அதுக்கு எப்பவும் உன் பாட்டி துணையா இருப்பா.. சரியா.. அத நெனச்சே கவலப்படாதைக்கு சந்தோஷமா இரு.. பாட்டி இருக்கேன்.." அவள் கன்னத்தை வாஞ்சையுடன் வருடினாள் சுகுமாரி..

"அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டி.. நீ எப்பவும் என்கூட இருப்பன்னு எனக்கு தெரியும்.. ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுவியா..."

"என்ன கண்ணு..."

"அப்பாட்ட சொல்லி இந்த கல்யாணத்த போஸ்ட்போன் பண்ணிடு.. காலேஜ் படிப்பெல்லாம் முடிஞ்சு கொஞ்ச நாளைக்கு நான் ஃப்ரீயா இருந்துக்கறேனே... ம்ம்ம்.."

"ஹா.. ஹா.. சரி சொல்றேன்.. படிப்பு முடுச்சு ஒரு மூனு மாசமோ.. ஆறுமாசமோ தானே... அதுக்குள்ள நல்ல வரன் உனக்கு அமையும்.. அப்போ வேணும்னா கல்யாணத்த மட்டும் கொஞ்சம் தள்ளி போட்டுக்க சொல்லிடலாம்.. இப்போ அவன் பாக்கறபடி பாக்கட்டும்.. எடுத்த எடுப்புலயே வேண்டாம்னு சொன்ன சங்கடப் பட்டுடுவான்.. பாவம்.."

"ஹூம்... சரி பாட்டி... நான் ரம்யாவ பாத்துட்டு வந்துடறேன்.. ஒருவாரம் ஆச்சு அவள பாத்து... வரேன் பாட்டி.." பவி கிளம்பினாள்..

அவள் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரியின் கண்களில் அந்த நினைவு வந்து போனது...

"அம்மா...... நேக்கு... இப்போ எதுக்கு கல்யாணம்.. வேண்டாமே.. " மருண்ட கண்களுடன் அம்மாவை பார்த்து மெதுவாகக் கூறினாள் சுகுமாரி...

அவளை விநோதமாகப் பார்த்தாள் ருக்மிணி.. " அச்சச்சோ.. என்னடி இது, புதுசா கல்யாணம் வேண்டாம் அது இதுன்னு பெரிய மனுஷி மாதிரி பேசறே... அப்டிலாம் சொல்லக் கூடாது..
அப்பா கேட்டார் அவ்வளவு தான்.. தாண்டவம் ஆடிடுவர்.. பொண் குழந்தைகள் வயசுக்கு வந்துட்டா அடுத்து கல்யாணம் தானே.. கல்யாணம் பண்ணின்டு வாய்க்கு ருஜியா சமைச்சுப் போட்டுண்டு குழந்தை குட்டிகளோட ஆத்துகாரற நன்னா பாத்துக்கறத விட்டுட்டு வேற என்ன இருக்கு பொண்களுக்கு.. தொங்கத் தொங்க தாலி கட்டிண்டு பூவும் பொட்டோட சுமிங்கிலியா இருக்கறது தானே பொண்ணா பொறந்ததுக்கு பெருமை.. அதுதானே சாஸ்வதம்..

தெரண்ட குழந்தைகளுக்கு காலாகாலத்ல கல்யாணம் ஆனுமேன்னு அவாஅவா வயத்துல நெருப்பக் கட்டிண்டு தவிக்கறா.. நோக்கென்ன தெரியும்.. சின்னகுட்டி.. இனிமே இப்டிலாம் பேசப்டாது.. ஆத்துப் பெரியவா சொல்றத கேட்டு நடக்கனும்.. எதையோ யோஜன பண்ணின்டு இருக்கக் கூடாது... சரியா..

ம்ம்ம்... மெள்ளத் தலையாட்டினாள் சுகுமாரி..

அடுப்பில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த வேதவல்லியிடம் திரும்பி.. "பாருங்கோம்மா.. இப்பவே இப்படி எதுத்து கேள்வி கேக்கறதுகள்.. என்ன சொல்றது... எனக்கு கல்யாணம் ஆகும்போது வயசு எட்டு... அவருக்கு பதினாலு.. அப்போ நீங்க ரங்கன புள்ளையாண்டு இருந்தேள்.. ஞாபகம் இருக்கா.. ஹாஹா.. அந்த மாதிரி இவளுக்கும் பண்ணாம இல்லாதைக்கு இந்த வயசுல கல்யாணம் எதுக்காம்.. என்ன சொல்றது.. ஊரும் உலகமும் கெட்டுப் போயிடுத்து.. ஹூம்.. சுகு.. ஆத்த பெருக்கிட்டு கைகால் அலம்பி நெத்திக்கு இட்டிண்டு பூஜ ரூம்ல வெளக்கேத்திடுமா.. சந்த்யா காலம் ஆகப்போறது.. இத பார். தாவணி தலப்ப பின்னால தொங்கவிட்டுண்டே வேல பாக்கக் கூடாது... நன்னா இறுக்க கட்டிக்கனும்.. சரியா.. போ...

ம்ம்ம்... சரிம்மா.. தலையாட்டினாள். வேறெதுவும் கேட்கத் தோணவில்லை..

மாலை, வேலை முடிந்து உள்ளே நுழைந்தார் சுப்ரமணியன்..

எதிரே சுகுமாரி கையில் ஒரு கதை புத்தகத்தை வைத்துக் கொண்டு சிரித்தபடி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள்.. புத்தகத்தில் ஆழ்ந்தவள் அவர் வருவதை கவனிக்கவில்லை..

அதைப் பார்த்து கோபம் தலைக்கேற அவளை முறைத்தவர் சத்தமாக செறுமினார்.. சடாரென நிமிர்ந்தவள் எழுந்து நின்று விலகினாள்.. "வா... வாங்கோ... வாங்கோப்பா.."

" ருக்கு.. அடி ருக்கு.. இங்கவாடி.. " சத்தமாகக் கூப்பிட்டார்..

பதறிக் கொண்டு வெளியே வந்தவள் அறையின் ஓரமாய் நின்று கொண்டு தலைப்பால் தோளை மூடிக்கொண்டாள்.. என்ன என்பது போல அவரைப் பார்க்க..

" நன்னா வளத்து வெச்சிருக்கே உன் சீமந்த புத்ரியை.. யார் வர்ரா.. யார் போறான்னு கூட தெரியாதைக்கு நடுவீட்ல வெக்கமில்லாம சிரிச்சுண்டு ஒக்காந்திருக்கா.."

"என்ன புஸ்தகம்டி அது.." அவள் கையில் இருந்ததை படக்கெனப் பிடிங்கிப் பார்த்தார்..

குழந்தைகளுக்கான கதைப் புத்தகமென அட்டைப் படத்தில் தெரிந்தது.. தூக்கி எறிந்தார் அதை..

" நன்னாருக்கு.. கல்யாணம் ஆகி புக்காத்துக்கு போக வேண்டிய வயசுல கதைபுத்தகத்த படுச்சுண்டு ஒக்காந்திரு.. அங்க போனப்பறம் அவா என்ன காரி துப்பட்டும்.."

பயத்துடன் கண்களில் மெள்ள நீர் கோர்த்தது.. அம்மாவை மெள்ள திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களால் சமாதானம் செய்தாள்..

"குழந்த ஏதோ நேரம் போலையேன்னு..."


" ஆமா.. இப்போ நேரம் போலயேன்னு கண்டத படிப்பா.. நாளைக்கு அங்க போயும் இதத்தான செய்வா.. பேசறா பாரு.. கூறுகெட்டத் தனமா.."

" சுகுமாரி... இது தான் கடைசி... இனிமே புஸ்தகத்த வெச்சுண்டு அங்கஇங்க ஒக்காந்துண்டு பல்ல காமிச்சுண்டு இருந்தியோ அவ்வளவு தான்.. ஜாக்ரதை

பொண்ணா அடக்கமா ஆத்து வேல கத்துண்டு இருக்கியா... குதிரு மாதிரி வளத்து வெச்சிருக்கேள்.. ஒரு வேலைக்கும் லாயிக்கு இல்லையேன்னு சம்மந்தி பேர் நாளைக்கு என்ன கேள்வி கேட்டா நான் எங்க போய் முட்டிக்கறது.. பொறந்த ஒன்னும் பொண்ணா போய்த் தொலஞ்சுடுத்து.. அடுத்தத எதையும் பெத்துக் குடுக்க உங்கம்மாக்கு துப்பு இல்லை.. வயத்த அடச்சுப் போச்சு.. பெண்ண பெத்தவன் தல குனிஞ்சு போக வேண்டிய துர்பாக்யம் எனக்கு... தலையெழுத்து.. இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா ஆத்து வேலய பண்ணப் பழகு.. புரியறதா.. போ...." அவர் கர்ஜிக்க மூச்சடைத்துப் போய் அடுக்களைக்குள் ஓடினாள் சுகுமாரி..

தொண்டையை அடைக்க கண்களில் நீர் வழிந்தது.. சத்தமில்லாமல் கேவிக் கேவி அழுதாள்.. பின்னால் வந்த ருக்மணி அவளை அணைத்துக் கொண்டு கண்களை அழுந்த துடைத்துவிட்டாள்..

" அழாதடி கண்ணு.. அப்பா உன்னோட நல்லதுக்கு தானே சொல்றார்.. நாளைக்கு இன்னொரு ஆத்துக்கு போக வேண்டியவ நீ.. அங்க போய் அவா எல்லாரையும் அனுசருச்சு போக வேண்டியது உன் கடமைம்மா.. பெரியவா எதாவது சொல்றான்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.. இனிமே புஸ்தகத்த வெச்சுண்டு ஒக்காறப் படாது.. அம்மாவோட அடுக்களைல வேலய கவனுச்சுக்கோ.. சரியா.. தோளில் சாய்த்துக் கொண்டாள்..

"ருக்கு.. ருக்மணி.. அங்க என்ன பண்ணின்டு இருக்கே.. உன் பொண்ண சமாதானம் பண்ணது போதும்.. இங்க வா..."

ருக்மணி வெளியே வர பின்னால் வேதவல்லி பாட்டியும் நின்று கொண்டாள்..

" சம்மந்திப் பேர் நாளைக்கு சாயங்காலம் சம்மந்தம் பேச வர்ரா.. அவா முன்னாடி இவோ அங்க இங்க அலஞ்சுண்டு இருக்க போறா.. பாத்து உள்ளே இருந்துக்க சொல்லு.. நாப்பது பேர் வர்ராலாம் வண்டி கட்டிண்டு.. அத்தே , மாமா , சொந்தம் பந்தம்னு அவாத்து பேர் பெரும்படையாம்.. புரியறதா.. அவாளுக்கு வேண்டிய பக்ஷணங்கள் தயார் பண்ணிடு... கூடமாட ஒத்தாசைக்கு சுகுமாரியையும் வெச்சுக்கோ.. என்ன.. நான் போயி.. நம்மாத்து மனுஷள்கிட்ட சேதி சொல்லிட்டு வந்துட்ரேன்.." அவளது பதிலை எதிர்பாராமல் கட்டளை இட்டவாரு துண்டைத் தட்டி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்..

ருக்மணி , வேதவல்லி முகத்தில் சந்தோஷ ரேகை ஊர்ந்தது...

" சுகுமாரி.. உன்ன பொண்ணு பாக்க வர்றாலாம் நாளைக்கு.. நன்னா அலங்காரம் பண்ணிக்கனும்.. ருக்கு.. அந்த மயில்கண் நிறத்துல பட்டுப் புடவை இருக்கே.. போன ஆடிக்கு வாங்கினதே.. அது புதுசாத்தானே இருக்கு அத கட்டிக்கச் சொல்லு.. தங்க விக்ரகம் மாதிரி ஜொலிப்பா... என் கண்ணு.." பாதிபோன பல்தெரிய சிரித்தபடி சுகுமாரியின் கன்னத்தை வருடியவாரு நெட்டி முறித்தாள் வேதவல்லி பாட்டி..

புதுப் புடவை கட்டிக் கொள்ளும் ஆசையில் கவலை மறந்து சிரித்தாள் சுகுமாரி..

நினைவுகளில் மூழ்கியவள் முகத்திலும் புன்னகை விரிந்திருந்தது..

.......

ஹாய் ரம்மி... எப்டிடி இருக்க... விரிந்த புன்னகையுடன் அவள் வீட்டின் உள் நுழைந்தாள் பவித்ரா...

ஹே.. ஒட்டகம்.. எப்டி இருக்கடி.. வாட் எ சர்ப்ரைஸ்.. என்னடி திடீர்னு வந்திருக்க.. ஒரு வாரமா ஆளயே காணும்... வா.. வா... அவளை இழுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினாள் ரம்யா....

யேய்... கேக்கறேன்ல... என்ன ஒரு வாரமா ஆளையும் காணும் ஃபோனையும் காணும்.. என்ன ஆச்சு..

ஒ... ஒன்னுமில்லடி... எக்ஸாம்ஸ் வருதுல்ல.. அதான் படிப்புல மூழ்கிட்டேன்..

இன்னது... படிப்புல மூழ்கிட்டியா.. அடியே... என் காதுலயே பூ சுத்தாத.. உன்னப் பத்தி எனக்கு தெரியும்.. முகத்துலயும் சந்தோஷத்தையே காணும்.. குச்சி முட்டாய் வாங்கித் தரலைன்னு வீட்ல சண்ட போட்டியா... அப்பா எதாவது திட்டிட்டாரா.. ஆ.. ஹாஹா.. பெரிதாகச் சிரித்தாள்..

பவித்ராவிற்கு பக்கென்று இருந்தது.. பாட்டி கூறியது போல இவளும் கேட்கிறாளே என...

சீ... நான் ஹேப்பியாத்தான் இருக்கேன்... உங்களுக்கெல்லாம் தான் அப்டி தெரியுது...

உங்களுக்கா.... ஆ... அப்போ கன்பார்ம் தான்... எதோ திருட்டுத் தனம் பண்ணிருக்க.. ஒழுங்கா சொல்லிரு... இல்ல.. புடுச்சு கீழ தள்ளி விட்ருவேன்...

அமர்ந்திருந்த அவளை பிடித்து பின்னால் சாய்க்க....

ஏய்ய்ய்..... பக்கி... விடு என்ன..

ஹா.. ஹா... பவி.. உன் மூஞ்சியே காட்டிக் குடுத்திருது நீ மூட் அவுட்ல இருக்குன்னு.. என்கிட்ட சொல்லக் கூடாதா...

பவிக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது... சே... இப்டி எல்லாருக்கும் தெரியும்படியா இருப்ப பவி.. நீ சுத்த வேஸ்ட்.." தன்னைத் தானே கடிந்து கொண்டாள்..

கொஞ்சம் அமைதியானவள் பேச ஆரம்பித்தாள்...

அன்னிக்கு அந்த துணிக்கடைல பாத்தோமே.. அந்த அம்மா, அவங்க பையன்...

ம்ம்ம்... நைஸ் கை... அழகா இருக்கான்ல....

ஆமா... அழகு.. அது ஒன்னுதான் குறைச்சல்.. முட்டாள்....

என்னடி ஆச்சு.....

அந்த அம்மா அவங்க வீட்டுக்கு வரனும்னு ஒரே பிடிவாதமா இருந்தாங்க.. நான் வரலைன்னு சொண்னேன். கேக்கல.. போன ஞாயித்து கிழமை வீட்டுக்கு வந்தே ஆகனும்னு கம்பல் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்க..

ம்ம்ம்... சரி....

அங்க அவனும் இருந்தான்..

சோ வாட்....

"சரியான திமிருடி அவனுக்கு.. பெரிய இவனாட்டம் என்ன கண்டுக்கவே இல்ல.. என்ன இன்சல்ட் பண்ற மாதிரி தெனாவெட்டா நடந்துக்கிட்டான்.. எனக்கு செம்ம கடுப்பு... அவங்க வீடாச்சேன்னு அடக்கிட்டு இருந்தேன்.. இதுவே வெளி இடமா இருந்தா வேறமாதிரி ஆகியிருக்கும்..." ஜாக்ரதையாக அங்கு நடந்ததை முழுமையாகக் கூறாமல் மேலோட்டமாய் அவனது குற்றத்தை மட்டும் கூறினாள் பவித்ரா..

என்ன பத்திதான் உனக்கு தெரியுமே.. எனக்கு இந்த ஈகோ புடுச்சவங்களக் கண்டாலே பிடிக்காது.. தூர வெளகிடுவேன்னு...

ம்ம்ம்... அப்டி என்னதான்டி பண்ணான்..

அவன் ஏற்கனவே என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணி திட்டு வாங்கினான்னு சொன்னேன்ல.. அத மனசுல வெச்சுகிட்டு திமிரா நடந்துகிட்டான்.. சரி.. அந்த மாமியோட முகத்துக்காக அவன்ட்ட ஃபார்மாலிட்டிக்கு பேசினேன்.. என்னவோ உலகத்துலயே இவன் ஒருத்தன் தான் ஆம்பள மாதிரி சீனக் காமிச்சுட்டு எழுந்து போயிட்டான்.. வந்த கோவத்துல செம்ம மூட் அவுட்.. ஒருவாரமா எனக்கு அத ஜீரணிக்கவே முடியல... அதான் எங்கயும் போல.. கோயிலுக்கு கூட.. போனா அந்த மாமிய திரும்ப பாக்கனும்.. என்னால சும்மா இருக்க முடியாது... தேவையில்லாம அவங்கள்ட இதைப்பத்தி பேசவும் முடியாது.. வேண்டாத வேலடி எனக்கு..

படபடவென அவள் பேச அவளை பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா....

ம்ஹூம்.. இந்த பசங்களுக்கே பெரிய இவனுங்கன்னு நெனப்பு... கொஞ்சம் அழகா ஹேன்ட்ஸமா இருந்தாப் போதும் வானத்துலேந்து வந்தவங்க மாதிரி திரிவாய்ங்க... நீ அவன விட்ருக்க கூடாதுடி.. நானா இருந்தா அந்த எடத்துலயே லெப்ட் அன்டு ரைட் வாங்கிருப்பேன்...

பவிக்குள் ஓர் சந்தோஷப் புன்னகை மின்னியது.. ஆமாடி நீ சொல்றது ரொம்ப கரெக்ட்... பெரிய இவன்னு நெனப்பு.. என்னலாம் பேசறான்....

என்னது.....

ஆ.... ஒ... ஒன்னுமில்ல... என்ன கண்டுக்காம தெனாவெட்டா போனான்ல அத சொன்னேன்..

ம்ம்ம்... பவி... இத இப்டியே விடக் கூடாது... அவனுக்கு நீ நோஸ் கட் குடுத்தே ஆகனும்.. அவனப் பாக்க அடுத்த சான்ஸ் வரும் போது ஒரு புடி புடுச்சிடு... நாம என்ன கிள்ளுக்கீரையா அவனுக்கு...

என்ன நடந்தது என முழுவதும் அறியாத ரம்யா பவியை ஏத்திவிட...

ம்ம்ம்... தலை அசைத்தாள் பவித்ரா..


தொடரும்..
 
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 6

ரம்யா ஏத்திவிட உள்ளுக்குள் குபுகுபுவென கோபம் பொங்கியது பவித்ராவிற்கு..!

எஸ்... அவனுக்கு நான் யாருன்னு காட்டனும் டி... கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவராப் பேசறான்.. இரு, சரியான நோஸ்கட் குடுக்கறேன்.. அதுக்கப்பறம் அவன் என்பக்கம் தலைவெச்சே படுக்கக்கூடாது.. பொறுமினாள்...

ஏய் பவி... ரொம்ப டென்ஷனாவதடி.. விடு.. சின்ன பய.. அதுக்கு போயி.. மண்ட காஞ்சுக்கிட்டு.. வா.. ரொம்பநாள் கழுச்சு வீட்டுக்கு வந்திருக்க.. உனக்கு காளான் சூப் செஞ்சு குடுத்து என் சமையல் கலை திறமைய டெஸ்ட் பண்ணிக்கறேன்.. நேத்துதான் யூடியூப்ல வீடியோ பாத்தேன்...

ஓய்... நான் என்ன லேப்ல இருக்கற எலியா.. என்ன வெச்சு சோதனை பண்ண.. யப்பா வேணாம்டி.. நான் கெளம்பறேன்... கொஞ்சநாளாச்சும் உயிரோட இருந்துக்கறேன்.. பவி பதறி எழ அவளை பிடிக்க பின்னால் துரத்தினாள் ரம்யா...

ஏய்... ஓடாதடி... நில்லு.. என் சமையல உன்னவிட்டா சாப்பிட யாரும் கெடையாதுடி...

கோபத்தை மறந்து அதிர் சிரிப்புடன் ஓடி விளையாட ஆரம்பித்தாள் பவித்ரா..!

ஒருவாரமாய் இருந்த மன சஞ்சலம் கொஞ்சம் குறைய நிம்மதியானாள் பவித்ரா..

அவளுடன் சேர்ந்து கலகலவென பொழுது நகர...

யேய்.. ரம்மி... மணி நாலுடி... நேரம் போனதே தெரியல... மத்யானம் சாப்ட வரேன்னு வீட்ல சொல்லிட்டு வந்தேன்.. திட்டப் போறாங்க..

ஹலோ.. அதான் வயிறுமுட்ட ஒரு பான சோத்த காலி பண்ணேல.. அப்பறம் என்ன... எங்க வீட்டுக்குதான் வந்துருக்கன்னு அம்மாக்கு தெரியும்ல.. ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. ஒக்காரு அஞ்சு மணிக்கு போகலாம்.. அவளது கைகளைப் பிடித்து இழுத்து அமர்த்தினாள்...

பக்கி... விட மாட்டியே.. அந்த காவ்யா யாரையோ லவ் பண்றாளாமே... யாருடி அது.. உனக்கு மேட்டர் தெரியுமா... ஊர்கதை பேச ஆரம்பித்தார்கள்...

நேரம் நகர.... கடிகாரத்தைப் பார்த்தாள்... மணி ஐந்தே கால் ஆகி இருந்தது...

ஹே ரம்மி.. மணி ஆயிருச்சுடி.. நான் வீட்டுக்கு போய்ட்டு இன்னிக்காவது கோயிலுக்கு போனும்.. ஒரு வாரமா எங்கயும் போகல.. ஒரே டென்ஷன்.. இன்னிக்குதான் நிம்மதியா இருக்கேன்... அந்த அம்மா வர்ரதுக்குல்ல போய்ட்டு ஓடி வந்துரனும்... அவங்க பாத்துட்டா திரும்ப எதாவது பேசிட்டு இருப்பாங்க...

அட... ஏன்டி இப்டி இருக்க.. பாத்தா என்ன.. நீ பாட்டுக்கு போய்ட்டு வா... பேசினா பட்டும் படாம ஒரு ஹை.. ஒரு பை.. அவ்ளோதான்.. சொல்லிட்டு வந்துரு.. இதுக்கு போயி... பட்... அவன் சிக்கினான்.. விட்ராத....

சரிடி... நா கெளம்பரேன்.. கிளம்பினாள்.. மறுபடியும் அவனை ரம்யா நினைவூட்ட உள்ளுக்குள் பொங்க ஆரம்பித்தது..

அவன் நினைவுகள் உள்ளே வந்து அமர்ந்து கொள்ள யோசனையுடன் நடக்க ஆரம்பித்தாள்...

இரண்டு தெருக்கள் தள்ளி அந்த கோயிலின் வழியே நடந்து வந்தாள்..

கண்கள் கொஞ்சம் கலக்கத்துடன் கோயில் வாசலையும் சுற்றுப்புறத்தையும் பார்த்துக் கொண்டே வந்தது.. அவர்கள் தென்படவில்லை...

ஹப்பா... பெருமூச்சுடன் கடக்க.. பின்னால் யாரோ கை வைக்க அதிர்ந்து திரும்பினாள்...

ஹாஹாஹா.... பவித்ரா.. நான் தான்...
சிரித்தபடி நின்றிருந்தாள் சுந்தரவல்லி..

இவ்ளோ பயந்த பொண்ணா இருக்கியே... நீ என்னத் தான் தேடறன்னு நேக்கு தெரியும்.. அந்த கடைக்குள்ள இருந்தேன்.. நீ பாப்பியோன்னு நெனச்சேன்.. ஹாஹா.. அவள் பேசிக் கொண்டிருக்க பவித்ராவின் கண்கள் சுற்றும் முற்றும் தேடியது... அவன் எங்கேனும் நின்று கொண்டிருக்கிறானா என...

என்னடிமா... நாம்பாட்டு பேசின்டே இருக்கேன்.. நீ சுத்தி சுத்தி பாத்துண்டு இருக்கே.. பயந்துட்டியா.. நல்ல பொண்ணு... ஆமா.. ஒருவாரமா உன்னக் காணலயே.. கோயிலுக்கு காலைலே வந்துட்டு போயிடறயா.. ஹூம்.. என்னாலதான் முடியமாட்டேங்கறது... ரிஷி எந்திருச்சாத்தானே.. அவன்தான் கொண்டு வந்துவிடனும்....

அவன் பெயரைக் கேட்டதும் உள்ளுக்குள் ஏதோ மின்னல் வெட்டியது..

இ.. இல்ல மாமி... எக்ஸாம்ஸ் வருது... படிக்க வேண்டி இருக்கு.. அதான்... வரமுடியல...

சமத்து... படிப்பையும் பாத்துக்கணும்.. அதுக்காக ஒரேடியா.. ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே.. அப்பப்போ கோயில் குளம்னு வந்தாத்தான் மனசுக்கு ரிலாக்ஸ்டா இருக்கும்... ஆமா.. எங்க போயிட்டு வர்ரே.. குழப்பத்துடன் கேட்டாள் சுந்தரவல்லி...

நான் எங்க போனா இவங்களுக்கு என்ன.. கோபம் வந்தது பவித்ராவிற்கு.. அடக்கிக் கொண்டாள்..

ப்ரெண்ட் வீட்டுக்கு மாமி.. குரூப் ஸ்டடி..

ஓ.... சரிசரி.. ரிஷி என்ன விட்டுட்டு எங்கோ போனான்.. அதான் அவன் வர்ர வரைக்கும் எதாவது வாங்கலாமேன்னு கிப்ட் ஷாப்புக்கு போனேன்... நீயும் வாயேன்.. உனக்கு எதாவது வாங்கித் தர்ரேன்.. அதுக்குள்ள அவன் வந்துடுவான்...

அய்யயோ.. அதெல்லாம் வேண்டாம்... நா.. நான் கெளம்பறேன்..

கூச்சப்படாத.. மாமிதானே வாங்கித்தர்ரேன்... வா.. வா.. அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு கடைக்குள் சென்றாள்..

இது என்ன தொல்லை என மனதில் நினைத்துக் கொண்டு அவளுடன் வேண்டா வெறுப்பாய் சென்றாள் பவித்ரா..

அவன் வருவதற்குள் சென்றுவிடவேண்டும் என்ற மனம் அவசரப் படுத்தியது.. அவனைப் பார்த்தாள் எங்கு தன் நிலை மறந்து பொங்கிவிடுவோமோ என பயந்தாள்..

மாமி.. நேரம் ஆச்சு.. ஆத்ல தேடுவாங்க.. நான் கெளம்பறேனே..ப்ளீஸ்..

இரும்மா... ரெண்டே நிமிஷம்..

ஏம்பா.. அந்த டிசைனர் வளையல் இருக்கே, அத எடு.. கடைக்காரனிடம் பேச ஆரம்பித்தாள்..

அவன் எந்த சமயமும் வருவான் என வாசலையே பாத்துக் கொண்டிருந்தாள் பவித்ரா....

சுந்தரவல்லியின் மொபைல் ஒலித்தது...

ஹலோ... வந்துட்டியா... இங்க தான் கோயில் எதுத்தாப்ல.. கிப்ட் ஷாப் இருக்கே.. ஆ.. அங்கதான்.. வா... போனை கட் செய்தாள்..

ரிஷிதான்.. வந்துட்டான்.. இங்க வரச் சொல்லி இருக்கேன்..

பவித்ரா கலவரமானாள்.. மாமி... நா கெளம்பரேன்.. உங்களுக்கு புடுச்சத வாங்கி வெச்சுடுங்க.. அப்பறம் வந்து வாங்கிக்கறேன்.. வேகமாக கிளம்பினாள்....

இரும்மா.. ரிஷியும் வந்துடுவான்.. அவன் செலக்ஷன் ரொம்ப நன்னாயிருக்கும்..

உள்ளே கொஞ்சம் படபடக்க செய்வதறியாது நின்றிருந்தாள் பவி..

அவன் தேடியபடி உள்ளே நுழைந்தான்... அம்மாவுடன் இவள் நிற்பதைக் கண்டு கொஞ்சம் முழித்தபடி அருகில் வந்தான்.. இவளைக் கண்டு கொள்ளாததுபோல் நேராக அவன் அம்மாவிடம் போய் நின்றான்..

குபுகுபுவென கோபம் பொங்கியது பவித்ராவிற்கு...

என்னமா.. இங்க.. யாருக்கு கிப்ட்...

நம்ம பவித்ராவுக்கு தான் ரிஷி.. அவள் கூற...

அலட்சியமாய் பவியைப் பார்த்தான்.. பவித்ரா முறைப்புடன் அவனை வெறித்தாள்..

சும்மா எதாவது வாங்கிக் குடுக்கலாமேன்னு.. அன்னிக்கு வீட்டுக்கு வந்தப்ப கூட ஒன்னும் தரலை.. பாவம்... ரிஷி நீ தான் நல்லா செலக்ட் பண்ணுவியே , நல்லதா ஒரு ஜோடி எடுத்துக்குடேன்...

அம்மா.... எனக்கு என்ன தெரியும்.. அதுவும் தேவதை மாதிரி இவ்ளோ அழகா இருக்கறவங்களுக்கு நா எப்டி செலக்ட் பண்றது.. நக்கலாக அவளை பார்த்துக் கொண்டே கூறினான்..

பவிக்கு எரிச்சல் மண்டியது... அமைதியாக இருந்தாள்..

போடா... ஏய் இது ரொம்ப அழகா இருக்கு.. பவித்ரா உனக்கு இது புடுச்சுருக்காம்மா....

ம்ம்ம்... பல்லை கடித்துக் கொண்டு தலை ஆட்டினாள்...

அதை பேக் செய்து அவளிடம் நீட்டினாள்... பெற்றுக் கொண்ட பவித்ரா எழுந்து கொண்டாள்...

நான் கெளம்பரேன் மாமி..

ம்ம்ம்.. சரிம்மா... சந்தோஷம்.. நாங்களும் கெளம்பறோம்.. மூவரும் கடையைவிட்டு வெளிவர...

எதிரே பார்த்த சுந்தரவல்லி கண்விரித்தாள்... " ஏய் கோமதி.. ரிஷி.. கோமதி மாமிடா.. இரு ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்.. அவனது பதிலை எதிர்பாராமல் ரோட்டைக் கடந்து அந்தப் புறம் சென்றாள்...

பவியும் ரிஷியும் தனியாக விடப்பட்டனர்...!

ரிஷி எங்கோ மூலையை பார்த்து நிற்க இதுதான் சரியான சமயமென அவனை அழைத்தாள் பவித்ரா..

ஹலோ... ஹலோ மிஸ்டர்...

குழப்பமாக திரும்பியவன் என்ன என்பது போல் பார்த்தான்..

லூக்... நேர விஷயத்துக்கு வர்ரேன்.. நீ நெனைக்கறது மாதிரி நான் வனத்துல பறக்கறவ இல்ல.. நான் தேவதைதான்.. அதுல எனக்கு பெருமைதான்.. ஆனா கண்ண மூடிட்டு திரியறவ இல்ல.. அன்னிக்கு நீ பேசினத்துக்கு உன் வீடுன்னு பாக்காம சத்தம் போட்ருப்பேன்... பட் , நா அந்த மாதிரி பொண்ணு கெடையாது.. மேனர்ஸ் இல்லாம உன்னமாதிரி பேச.. நான் கற்பனைல மெதக்கறவ இல்ல.. நல்லா கண்ணத் திறந்து தரையப் பாத்து நடக்கறவதான்.. தேவைனா நேருக்கு நேரா பேசற தைரியமும் இருக்கு.. உனக்கு என்ன பெரிய இவன்னு நெனப்பா... நான் தப்பு செஞ்சுட்டேன்னு உன்ன மதிச்சு மன்னிப்பு கேக்க வந்தா.. மூஞ்சிய திருப்பிட்டு போற.. சரி , முதல் தரம் ஏதோ கோவத்த மனசுல வெச்சுக்கிட்டு அப்பிடி பண்ணினனு விட்டா , உங்க வீட்டுக்கு வந்து சாரி கேட்ட என்கிட்டையே அப்டி பேசற.. ஆ... நீ ஆம்பளைன்னா , கொம்பா மொளச்சிருக்கு உனக்கு.. சொல்லப் போனா அன்னிக்கு நடந்ததுக்கு நீ தான் எனக்கிட்ட மன்னிப்பு கேட்ருக்கனும்.. தெரியாத ஒருத்தன் மேல விழுந்து கட்டிபுடுச்சா எந்த பொண்ணும் பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டா.. நானாவது திட்டிட்டு விட்டுட்டேன்.. இன்னொருத்தியா இருந்தா அந்த இடத்துலே உன் கன்னம் பழுத்திருக்கும்..

சரி , நீ தெரியாம பண்ணிட்டன்னு தெரிஞ்சப்பறம் நானே வந்து சாரிகேட்டேன்ல.. ஒன்னு அக்சப்ட் பண்ணிருக்கனும்... இல்ல நீயாவது மன்னிப்பு கேட்ருக்கனும்.. அதெல்லாம் இல்லாம பொண்ணுங்க எல்லாரும் ஈகோ புடுச்சவங்க மாதிரி பேசற.. வீணா வம்புக்கு இழுத்து சண்டை போடற ரகம் நான் இல்ல.. தெரிஞ்சுக்கோ.. உன் தப்ப நினச்சு என்கிட்ட ஒரு சாரியாவது கேக்க தோனிச்சா.. ம்ம்.. நீ எவ்ளோ பெரியா ஆம்பளையா இருந்தாலும் எனக்கு கவல இல்ல.. நான் செஞ்சது தப்புன்னா தலகுனிஞ்சு மன்னிப்பு கேப்பேன்.. அதே நேரத்துல என்ன மதிக்காத யாரையும் நான் மதிக்க மாட்டேன்.. இனிமே உன் ஆம்பளத்தனத்த என்கிட்ட காட்டாத.. இதுவே கடைசி.. மைன்ட் இட்.. அழுத்தமாக அதே நேரம் மெல்லிய குரலில் உள்ளிருந்த அத்தனையையும் படபடவென கொட்டித் தீர்த்தாள்..


எதுவும் பேச இயலாமல் மெல்லிய அதிர்ச்சியுடன் அவளையே கண்விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி... முகத்தில் ஈ ஆடவில்லை..

நான் கெளம்பறேன்.. உன் அம்மாகிட்ட சொல்லிடு.. அவனது பதிலை எதிர்பாராமல் விடுவிடுவென கிளம்பினாள் பவித்ரா.. உள்ளுக்குள் பாரம் இறங்கியது போல் இருந்தது...

அவனுக்குள் பாரம் ஏறியது...!!

கோமதி மாமியிடம் பேசிவிட்டு திரும்பிய சுந்தரவல்லி , ரிஷி ரோட்டையே கண்ணிமைக்காமல் பார்த்திருப்பதை கண்டு அவனை உலுக்கினாள்..

ரிஷி.. ரிஷி... என்னடா பிரம்மபுடுச்சவன் மாதிரி ரோட்டையே பாத்துண்டு இருக்க.. பவித்ரா எங்க.... போய்ட்டாளா...

மீண்டவன் மெள்ள தலை அசைத்தான்..

பாவம்டா.. ரொம்ப நல்ல பொண்ணு.. சரி சரி முழுச்சுண்டு நிக்காம வண்டி எடு.. நாழி ஆச்சு....

பவித்ராவின் இத்தனை ஆணித்தரமான பேச்சு அவனை மலைக்க வைத்தது.. வண்டியில் செல்லும் போது அவள் பேசுவதே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.... முதன் முதலாக, தன்மேல் தப்பு இருக்குமோ என்ற எண்ணம் மனதில் குறுகுறுத்தது அவனுக்கு..

வீட்டில் இறங்கியவன் எதுவும் பேசாமல் அவன் அறையை நோக்கி சென்றான். உள்ளுக்கும் ஏதோ ஒரு வித கலக்கம் முதன்முதலாகத் தோன்றியது.. இது வரை எந்த பெண்ணிடமும் இப்படிப்பட்ட போதனையை கேட்டதில்லை.. சின்னவயதிலிருந்து அம்மாவும் அப்பாவும் கூட இத்தகைய அறிவுரையை நடுமண்டையில் அடித்தால் போல் கூறியதில்லை.. அவனை தான் ஆண் என்ற பெருமை கொள்ளும் சிந்தனையுடன் தான் வளர்த்திருந்தனர்.. அப்பாவின் கர்வம் அப்படியே உடம்பில் ஊறி இருந்தது.. கல்லூரித் தோழிகள் கூட இவனை விலகி நின்று பார்த்திருந்தார்களே ஒழியே இவனுடன் உரிமை கொண்டாடியதில்லை.. இவனும் தான் ஓர் ஆண் , அந்த மரியாதையிலே அவர்கள் விலகிச் சென்றார்கள் என்பதை உணரவில்லை..

ஹூம்ம்ம்.. ஒரு நீண்ட பெரு மூச்சு எழுந்தது.. ரூமின் கண்ணாடியின் முன் நின்று தன்னைத் தானே பார்த்துக் கொண்டான்...

தினமும் வனப்புடன் தன்னைக் காட்டும் அந்த கண்ணாடி இன்று ஏனோ அவனை அவ்விதமாகக் காட்டவில்லை..

தவறு செய்து அப்பாவின் முன் நிற்கும் குழந்தை போல் முகம் வாடி இருந்தது.. அவனுக்கே அவன் மேல் பரிதாபம் எழுந்தது.. " சீ.. என்ன பெரிய இவளா.. அவ சொன்னதையே நெனச்சு இப்டி இருக்க.. நீ ஆம்பளடா.. ஆம்பள ஆம்பள மாதிரி தான் இருக்கனும்.. அவ என்னமோ நியாஸ்தினி மாதிரி போதன பண்ணிட்டுப் போறா.. அவமட்டும் ஒழுங்கா.. சாரி கேக்கறாலாம்... நீயும் சாரி கேக்கனுமாம்.. சரியான திமிர் புடுச்சவ.." மனம் ஒரு ஓரமாய் அவனைத் தூண்டி விட்டது.

இருப்பினும் தன் தவறை உணர்ந்து ஒருபுறம் ஊமையாகி நின்றது.. கண்ணாடியையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.. தனைப் பார்க்க ஏனோ பிடிக்கவில்லை.. திரும்பிக் கொண்டான்..

என்ன செய்வதெனத் தெரியவில்லை.. உடைந்து போன நிலையில் மனம் இருந்தது.. அவள் மீது ஒருபுறம் கோபமும் மறுபுறம் குழப்பமும் வந்தது..

அவ நியாயப்படியே வருவோம்.. அன்னிக்கு நான் தெரியாம இடிச்சதுக்கு அவ தான சத்தம் போட்டா.. என்ன ஏதுன்னு சொல்லாம கண்டபடி திட்டினா , எந்த ஆம்பளைக்குதான் கோபம் வாரது.. அது தெருஞ்சும் அவள சட்ட பண்ணாம போனா.. அவளுக்கு கோபம் வருமா... என்னங்கடா நியாயம் இது.. சரி , திட்டிட்டு போனவ போவேண்டியது தான.. எதுக்கு என் பின்னாடி வந்து வந்து சாரி கேக்கனும்.. நான் கேட்டனா.. நான் ஆம்பள.. ஒரு பொண்ணு திட்டினதையே மறந்து அவள கண்டுக்காம போனா.. விடவேண்டியதுதான.. இவள மதிச்சு சாரி கேக்கனுமாம்... சே... இவளுங்கள புருஞ்சக்கவே முடியல.. ஒன்னா கீழே விழ வேண்டியது இல்லைனா தலமேல ஏறி நிக்க வேண்டியது.. கால தரைல வெச்சு நடக்கறவ , தரைய பாத்தே போக வேண்டியது தான.. சும்மா..

தன் மீதான நியாயங்களை அடிக்குக் கொண்டான்.. திடீரென ஒரு கேள்வி எழுந்தது..

ஏன்டா.. அவதான் தன் தப்ப புரிஞ்சுக்கிட்டு மன்னிப்பு கேக்கறாள்ல.. சரின்னு ஒரு வார்த்த சொன்னா கொறஞ்சா போயிடுவ.. அவள சும்மா சும்மா சீண்டினா.. அதான் வெடிச்சுட்டா.. நீ பண்ணதும் தப்பு தான்... அவள்ட்ட நீ சாரி கேக்கறது தான் நியாயம்..

கேள்விக்கு பதில் தெரியாமல் தடுமாறினான்.. இப்படி , ஒரு பெண்கிட்ட மன்னிப்புன்னு எதுவுமே இதுவரை கேட்டதில்லையே.. அது... அது.. ஒரு ஆணுக்கு அழகா.. ஆண்ணா கம்பீரம் தானே.. அடங்கிப் போறதா ஆம்பளத் தனம்.. நான் ஆம்பிள.. ஆம்பளத் தனத்தத தான் காமிப்பேன்.. அவ ஆப்டர் ஆல் ஒரு பொண்ணு அவ தான் அடங்கி போனும்... அதுதான சரி...

முட்டாள்... உன்ன மதிக்கறவள மதிக்காம நீ என்னடா பெரிய... மனம் உரைக்க இடித்திட கொஞ்சமாய் தலை குனிந்தான்..

அவளது ஒவ்வொரு செயலும் கண்முன்னே நிழலாடியது... ஒருதடவ திட்டினவ மறுபடியும் பார்த்தப்ப மன்னிப்பு கேட்டாலே.. இன்னொருத்தியா இப்டி பண்ணிருப்பாளா.. அதையும் அலட்சியமா எடுத்துட்டு போன என்கிட்ட வீட்டுக்கு வந்து கூட சாரி சொன்னாலே.. அப்பவும் அவள சீண்டி தான பாத்தேன்.. அவ சொன்னமாதிரி அங்கயே எல்லாருக்கும்
முன்னாடியும் என்ன அவமானப் படுத்தி இருக்கலாம்... ஏன்.. இப்போ கூட அம்மா இருக்கும் போது கூட பொறுமையாத்தான இருந்தா.. யாரும் இல்லாத சமயத்துல தான தன்னோட உணர்வுகள வெளிப்படுத்தினா.. ஒருத்தியால எத்தன அவமானத்த பொறுத்துக்க முடியும்... ஹூம்..

அவ பொறுப்பானவதான்.. நாகரீகம் தெரிஞ்சவதான்.. இல்லேன்னா இப்டி நடத்திருப்பாளா.. ஷீ இஸ் குட்..

அவள போய் சாதாரணப் பொண்ணா நெனச்சு ரொம்ப தப்பா பேசிட்டேனே.. ரியலி ஐ யம் அஷ்ஷேம் ஆஃப் மி.. என்ன நினச்சு உண்மையா நான் வெக்கப்படறேன்.. தைரியமான பொண்ணுதான்.. மெள்ள சிரித்துக் கொண்டான்..

அவன் மனதில் அவள் நல்ல விதமான பிம்பத்துடன் இப்பொழுது தெரிந்தாள்..!
 
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 7

தன்னுடைய ஆத்திரம் அத்தனையும் ரிஷியிடம் கொட்டிவிட்டு விறுவிறுவென வீட்டிற்குள் வந்த பவித்ரா பாட்டி ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்தும் பார்க்காதது போல் உள்ளறைக்கு சென்றாள்..

சுகுமாரி பாட்டிக்கு விநோதமாய் இருந்தது.. பவி என்றும் இத்தனை பதட்டத்துடன் இருந்ததில்லை.. அவளது செயல் புதிதாகவும் விநோதமாகவும் இருந்தது பாட்டிக்கு..

சில நாட்களாகவே பவியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததை உணர்ந்தவள் அவளை சமாதானம் செய்யலாமென மெள்ள பவியை அழைத்தாள்..

பவி.... பவி... இங்க கொஞ்சம் வரியா..

எரிமலை கொதித்து அடங்கினாலும் சூடு தனியாது என்பது போல் அவனிடம்
கொட்டித்தீர்த்த பின்னும் உள்ளுக்கும் அனல் பொங்கிக் கொண்டுதான் இருந்தது...

மனதிற்குள் தன் ஞாயத்தை , தான் தவறாக அவனிடம் பேசவில்லை என தர்கம் செய்து கொண்டிருந்தாள்... அவ்வேளையில் பாட்டியின் அழைப்பு எரிச்சலை கொடுக்க....

விடுவிடுவென வந்தவள் கொஞ்சம் வெறுப்புடன் அதிர்ந்து கேட்டாள்.." என்ன பாட்டி.... இப்போ என்ன வேணும் உனக்கு"

அவளது இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத பாட்டியின் முகம் சட்டென கருத்தது.. புருவங்கள் குழப்பத்துடன் குறுகின...

ஒரு நிமிடத்தில் தன் சுயத்திற்கு வந்த பவி பாட்டியை பார்க்க தடுமாறினாள்.. " சொல்.. சொல்லு பாட்டி..." கண்கள் மன்னிப்பு கேட்டது..

அவளது முகத்தை சஞ்சலத்துடன் பார்த்த பாட்டி " ஒன்னுமில்ல... நீ வேலைய பாரு.." சுறுக்கெனக் கூறிவிட்டு முகத்தை தாழ்த்திக் கொண்டாள்..

தனக்கிருந்த மனப் புழுக்கத்தில் என்ன சொல்வதெனத் தெரியாமல் வேகமாக உள்ளே சென்றாள் பவித்ரா...

பவியின் இந்த திடீர் மாற்றத்தை பாட்டியால் ஏற்க முடியவில்லை.. மனதைப் பிசைந்தது.. எத்தனையோ முறை பவி கோபப் பட்டிருக்கிறாள்.. இருந்தாலும் அவள் முகத்தில் இத்தனை வெறுப்பு தெரிந்ததில்லை.. மனம் அலைக்கழித்தது சுகுமாரிக்கு.. தன்னிடமிருந்து பவித்ரா விலகுகிறாளோ என்ற தவிப்பும் தன்னை அவமரியாதை செய்த கோபமும் ஒருசேர அவளை கலங்கச் செய்தது.. சோர்ந்து போன முகத்துடன் தன் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.. பவித்ரா திரும்ப வந்து தன்னை சமாதானம் செய்வாள் என்ற அவளது நம்பிக்கை பொய்த்துப் போனது.. கண்களை மூடிக் கொண்டாள்.. காய்ந்த விழி கொஞ்சமாய் நீர் பூசிக் கொண்டது..!

சொல்லத்தெரியாத உணர்வுடன் தன் அறையில் அமர்ந்திருந்தாள் பவித்ரா.. உணர்வுக் கலவையாக இருந்தது மனம்.. வெறுப்பு , வேதனை , கோபம் , சோகமென உணர்வுகள் மாறி மாறி பிரதிபலித்தன..

இருவரிடம் இருந்த பாசப் பாலத்தில் நூலிழை விரிசல் கோடிட்டது..!

இரவெல்லாம் உறக்கமின்றி புரண்டு புரண்டு படுத்தாள் பவித்ரா.. இதுவரை யாரிடம் உணர்ச்சிப் பீரிட பேசியதில்லை.. ரிஷியிடம் மட்டும் ஏன் இத்தனை கோபம்.. யாரோ மூன்றாம் மனிதன் போல் அவனை புறக்கணிக்க மனம் இயலவில்லையே.. அவனோடு கொட்டித்தீர்த்த கோபம் பாட்டியையும் சுட்டுவிட்டதே... " சே.. பாட்டிட்ட நான் அப்டி பேசிருக்கக் கூடாது... என்னதான் உள்ளுக்குள்ள கோவமா இருந்தாலும் பாட்டிட்ட எரிஞ்சு விழுந்திருக்க வேண்டாம்.. பாவம் முகம் எவ்ளோ சுருங்கிடுத்து.." மனம் கொஞ்சம் சஞ்சலப் பட்டது பவிக்கு...

இங்கே....

சுகுமாரிப் பாட்டியும் பவியை நினைத்து தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தாள்.. " அவ்ளோ பெரிய மனுஷி ஆய்ட்டாளா.. அவள இன்னும் குழந்தையாத்தானே பாத்துண்டு இருக்கேன்.. எதனால இத்தன கோபம்.. பாட்டிய பிடிக்கலயோ.. ஒரு வயசுக்கு மேல பாசம் அன்பெல்லாம் மறஞ்சுதான் போயிடுறது.. அவளும் வளந்துட்டாள்யோ.. தன்னிச்சையா முடிவெடுக்கற வயசு.. இனிமே என்கிட்ட அன்பா நடந்துப்பாளா.. இனிமே நான் அத எதிர்பார்க்க கூடாது.. பாவம். அவ கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதிலேந்து தானே பவி இப்டி மாறி போய்ட்டா.. இனி, நான் சொல்றதெல்லாம் கேட்டுப்பாளா.. ஹூம்.. ஆனா, அவ வாழ்க்கை இன்னொருத்தரோ கட்டாயம் ஆகிடக் கூடாது... அவ விருப்பம் போல சந்தோஷமா இருக்கனும்.. இத.. யார்க்கிட்ட சொல்றது.. அவளுக்கு தெளிவாப் புரியறமாதிரி யார் பேசறது.. நடேசன்கிட்ட சொன்னா ஆகாது.. அவனுக்கு பொண்களோட மனசு எங்க புரியும்.. பங்கஜத்துக்கிட்ட சொல்றதுதான் சரி.. தன் பொண்ணோட வாழ்க்கைய பத்தின கவலை அம்மாக்குத்தானே இருக்கும்.. நாளைக்கு முதல்வேளையா பங்கஜதுகிட்ட சொல்லி.. பவித்ராகிட்ட பேசச் சொல்லனும்.." மனசுக்குள் தீர்மானித்தவாறு கண்களை மூடிக் கொண்டாள் சுகுமாரி பாட்டி.. தூக்கம் ஏனோ தூரமாகியது.

அதிகாலையே எழுந்து அமர்ந்த பாட்டியின் சிந்தனை முழுதும் பவியின் மீதே இருந்தது.. " அவ என்னதான் கோபப்பட்டாலும் என் பேத்திதானே.. உடனே பங்கஜத்துக்கிட்ட சொல்லிடனும்.. நேரத்தைப் பார்த்தாள்.. மணி நாலைத் தொட்டுக் கொண்டிருந்தது.. ஹூம்.. பெருமூச்சுடன் அப்படியே அமர்ந்திருந்தாள்.. உறக்கமில்லா இரவும் மன உலைச்சலும் சேர்த்து தலையை கனக்க வைக்க மனம் மெள்ள பின்னோக்கி சென்றது..

" என்ன எழவுக்கு இப்படி ஓரமா ஒக்காந்துண்டு இருக்கே.. போ..
போய் தயாராகு.. ருக்கு.. என்னடி பாத்துண்டு இருக்கே.. அவளக் கூண்டிண்டு போய் தாயார் பண்ணு.. அவாள்லாம் வந்துடுவா.. "

ஏதோ மனபயத்தில் சொல்லத் தெரியாமல் அமர்ந்திருந்த சுகுமாரிக்கு அழுகையாய் வந்தது..

" வாடி கண்ணு.. எதுக்கிப்போ கண்ண கசக்கிண்டு இருக்கே.. பயப்படப் படாது... அவாள்லாம் வந்து உன்ன பாத்துட்டு போப்பறா.. அவ்வளவு தான்.. உடனே அவாத்துக்கு உன்ன அனுப்சிடுவோமா.. மண்டு.. அவாளுக்கு உன்னப் பிடிக்கனும் , தக்ஷணை ஒத்து வரனும்.. அதுக்கபறம் நல்ல நாள் பாத்து , பெருமாள் அனுகிரஹத்தோட உன்ன கர சேக்கனும்.. கொஞ்சநாள் நீ நம்மாத்ல தான் இருப்பே.. "

"பாவம் குழந்தை... இப்பவே அவாத்துக்கு அனுப்சுடுவோம்னு பயப்படறா.. சொல்லத் தெரியாதைக்கு அழறா.. நான் பாத்துக்கறேன்... நீங்க பாருங்கோ.." சமாதனமாய் பேசினாள் ருக்மணி...

சுகுமாரியை அழைத்துக் கொண்டு உள்ளறைக்குள் சென்று அலங்காரத்தை ஆரம்பித்தாள்... ஏனோ மனசை அழுத்தியது சுகுமாரிக்கு..

" அம்மா... எழுந்துட்டேளா... மணி ஆகலயே.. என்னம்மா ராத்திரி சரியா தூங்கலயா.. கண்ணல்லாம் செவந்து போயிருக்கே.. " பாந்தமாய் பேசியபடி உள்ளே நுழைந்தாள் பங்கஜம்..

கவனம் வெளிவந்த சுகுமாரி அவளை பார்த்து தலை அசைத்தாள்.. " பங்கஜம்.. இங்க வா.. உன்கிட்ட பேசனும்.."

" ஏம்மா உடம்புக்கு ஏதாவது படுத்தறதா... " கொஞ்சம் கலவரத்துடன் அருகில் வந்தாள் பங்கஜம்.

" இங்க உட்கார்... நேக்கு ஒன்னுமில்லை.. பவித்ராவ பத்திதான்.."

" அவளுக்கு என்ன...." குழப்பத்துடன் ஏறிட்டாள் பங்கஜம்..

" வந்து... கொஞ்ச நாளா அவோ அமைதியா இல்லையே... கவனிச்சியா.."

கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்த்தாள்... அவளுக்கு என்னம்மா.. நன்னாத் தானே இருக்கா... நேக்கு ஒன்னும் வித்யாசம் தெரிலீயே.."

" இல்ல பங்கஜம்.. அன்னிக்கு கல்யாணப் பேச்சு எடுத்ததிலேந்து அவோ சரியா இல்லை.."

" என்னம்மா... இப்டி சொல்றேள்... கல்யாணம் வேண்டாங்கறாளா..." நெஞ்சம் படபடக்கக் கேட்டாள் பங்கஜம்..

" அப்டி இல்லே பங்கஜம்.. அவ சின்ன பொண்ணு.. பெரியவா பேச்சக் கேட்டு நடக்கறவோ.. அம்மா அப்பா பேச்ச மீறாதவ.. இருந்தாலும்.. அவளுக்குன்னு தனிப்பட்ட ஆசை இருக்கும்லயா..."

" நாம என்னம்மா அவ ஆசைக்கு தடையா இருக்கப் போறோம்.. வாழப்போறவ அவ தான்.. அவளுக்கு ஏத்த வரனாப் பாத்துதானே முடிக்கப் போறோம்.. "

" சரிதாம்மா... இருந்தாலும் அன்னிக்கு நடேசன் அவள்ட சொல்லாம , அவ ஆசை என்னனு கூட கேட்காம , என்கிட்ட பேசினது அவளுக்கு ஒருமாதிரி ஆயுடுத்து.. தனியா என்கிட்ட பொலம்பிட்டா.. தன் முடிவ கேட்காம நாமெல்லாம் சேந்து வரன முடுச்சுடுவோமோன்னு பயப்படறா.. அன்னிலேந்து அவோ சரியா பேசறது கூட இல்லை... ஏதோ பறிகொடுத்தவ மாதிரி இருக்கா... நேத்துக் கூட நான் சாதாரணமா கூப்பிட்டப்போ திடீர்னு கோவப் பட்டுட்டா.. நேக்கு ஒரு மாதிரி ஆயுடுத்து.."

கண்கள் விரிய அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜம்..

" இப்போ என்னம்மா பண்றது.."

" நான் திரும்ப போய் அவள சமாதானம் பண்ண முடியாது.. வெடுக்குனு எதாவது பேசிட்டான்னா நேக்கு தாங்காது.. அப்படி பேசற பொண்ணு கெடையாதுதான்... அதான்...."

" சொல்லுங்கோ.. "

" நீ போய் பாந்தமா அவள்ட்ட பேசி அவளுக்கு புரியவை. நம்மாத்ல அவ ஆசைக்கு மீறி எதுவும் கட்டாயமா செஞ்சுடமாட்டோம்னு.. சரியா.."

கொஞ்சம் கவலை மேலிட தலை அசைத்தாள்..

" பங்கஜம்.... பாத்து சாந்தமா பேசும்மா.. குழந்தை ஏற்கனவே சஞ்சலத்தோட இருக்கா... இன்னொரு விஷயம்.. இது நடேசனுக்கு தெரிய வேண்டாம்.. தெருஞ்சா பாவம் ரொம்ப சங்கடப் படுவான்... என்ன..."

" ம்ம்ம்... சரிமா.." தலை அசைத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்..

அவளிடம் சொல்லியதில் மனதில் சிறிது பாரம் குறைய மெள்ள படுத்துக் கொண்டாள் பாட்டி..

உள்ளுக்குள் இருந்த தவிப்பு அந்த அதிகாலைக் குளிரில் மறைந்து போயிருந்தது பவித்ராவிற்கு... என்றும் போல் அன்றும் விடிகாலையில் எழுந்து குளிக்கச் சென்றாள்.. சில்லென்ற தண்ணீர் தலையில் வழிய சிலர்ப்புடன் உடலில் ஓர் புத்துணர்வையும் தந்தது.. மனதும் சந்தோஷத்தில் குதூகலித்தது... பாட்டியிடம் கோபம் காட்டியதை மறந்து ரிஷிக்கு சரியான பதிலடி கொடுத்ததை நினைத்து மனம் உற்சாகம் கொண்டது.. அதை ரம்யாவிடம் சொல்ல வேண்டும் என்ற ஆவல் மனதில் பொங்க வேகமாகக் குளித்து முழுகி வாசலில் சாணம் தெளித்து கோலம் வரைந்தாள்.. அன்று ஏனோ கோலம் மிக அழகாய் வந்தது போல் ஓர் நிறைவு.. அவ்வப்பொழுது ரிஷியின் அதிர்ந்த முகம் தோன்றி சிரிப்பை மூட்டியது..

கொஞ்சம் பூரிப்புடன் வளைய வந்தாள்.. எப்பொழுதும் போல் பாட்டிக்கு தேவையானதை கொடுத்துவிட்டு வந்தாள்.. சிரித்து ஸ்நேகமாய் பேசினாலும் ஏதோ ஒன்று இருவருக்குள் வெளிப்படையாகப் பேச தடையாய் இருந்தது..

காலை உணவை முடித்துக் கொண்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு ரம்யா வீட்டிற்கு கிளம்பினாள்.

வீட்டின் வாசலின் முன் பிரஷ்ஷை வாயில் குதப்பியபடி அமர்ந்தாள் ரம்யா...

"ஹாய் ரம்மி.." சந்தோஷத்துடன் உள்ளே நுழைந்தாள் பவித்ரா...

ஆச்சர்ய குழப்பத்துடன் கண்விரித்தாள் ரம்யா.. பொறு என கைகளால் அமர்த்திவிட்டு உள்ளே சென்று முகம் கழுவிக் கொண்டு வந்தாள்..

"ஓய்.... என்னடி இது ஆச்சர்யம்... விடிக்காலைலே என்ன பாக்க ஓடி வந்துட்ட.."

"விடிக்காலைலயா... ஏய்.. டைம் என்ன... ஒன்பது மணி ஆயிருச்சு.. நீ இன்னும் பல்லு கூட தேய்க்காம ஒக்காந்துக்கிட்டு இருக்க... டர்ட்டி ஃபெல்லோ..."

"ஹூம்.. நமக்கெல்லாம் ஒன்பது மணிக்கு மேலதான் விடியும்.. இன்னிக்கு என்னமோ சீக்கரம் முழுச்சுட்டேன்... அதவிடு.. அப்பறம்.. என்ன முகத்துல சந்தோஷக் களை தாண்டவமாடுது.. என்ன விஷயம்.."

"ஒன்னுமில்ல டி... சும்மா உன்ன பாத்துட்டு கடல போடலாமேன்னு.." சிரித்தாள்..

"அடியே... ஒட்டகம்.. விஷயம் இல்லாம நீ வரமாட்ட.. சொல்லு.. நானும் சந்தோஷப் பட்டுக்கறேன்.."

"அது... அது.. அவன லெப்ட் அன்டு ரைட் வாங்கிட்டேன்.. ஹா.. ஹா.."

"யாரு.... அந்த கோயில் பார்ட்டியா.. ஆ.. சூப்பர்டி... எப்போ.. "

"ஹ்ம்.. நேத்தே தான்.. நீ வேற என்ன ஏத்திவிட்டுட்டியா.. அந்த கடுப்போட போயிட்டு இருந்தேனா.. கரெக்ட்டா கோயில் பக்கம் அந்த மாமி வந்தாங்க.. என்னடா இது சங்கடம்னு ,போலாம்னு கெளம்பறதுக்குள்ள அவனும் வந்துட்டான்.. இதுல ஃகிப்ட் வேற..

அவன் வாங்கித்தந்தானா... ஆச்சர்யத்துடன் கேட்டாள் ரம்யா..

சீ. சீ.. அவனா... சரியான ஈகோ பார்ட்டி.. அந்த மாமிதான்.. ஏதோ ஆசையா வாங்கித்தர்ரேன்னு.. வந்தவன் என்ன கண்டுக்காம அவன் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தான்.. அந்தமாமி சும்மா இல்லாம அவன செலக்ட் பண்ண சொன்னாங்களா.. அதுக்கு நக்கலடிச்சான்.. செமயா ஏறிருச்சு.. அந்த மாமி அந்த பக்கம் போனப்பறம்.. தனியா சிக்கினான்... பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்.. அவன் முகத்த பாக்கனுமே... ஈயாடல.. ஹாஹா..

சூப்பர்டி பவி.. இப்டி பட்டவங்கள சும்மாவிடக்கூடாது.. என்ன திமிரு அவனுக்கு.. வெல் டன்...

ஹூம்.. எனக்கே கொஞ்சம் பாவமாப் போச்சு.. நான் இப்டி பேசுவேன்னு அவன் எதிர்பார்க்கவே இல்ல.. திருப்பி எதுவுமே பேசல..

ஹா.. இப்போ புருஞ்சிருக்கும் உன்னப் பத்தி.. இனிமே உன் வழிக்கு வரமாட்டான் பயபுள்ள... ஹாஹா....

ஆமாடி.. மனசு இப்பத்தான் ஆறிச்சு.. அதான் உன்கிட்ட சொல்லனும்னு வந்தேன்.. இருந்தாலும் ரொம்ப கோபப்பட்டுட்டோமோன்னு சின்ன வருத்தம் எனக்கு..

அட விடுறி.. சரியாத்தான் பேசிருக்க.. வா.. சூடா பில்டர் காபி சாப்பிட்டு கொண்டாலாம்.. ஸ்வீட் எடு.. கொண்டாடு... ஹாஹாஹா...

அவளுடன் சேர்ந்து சிரித்தாலும் பவியின் மனதில் அவன்மீது ஓர் வருத்தம் ஓடியபடியே இருந்தது...

எல்லா அரட்டையும் முடிந்து மதியம் வீட்டிற்கு வந்தாள்..

அவளிடம் பேச சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தபடி காத்திருந்தாள் பங்கஜம்..

நடேசன் இல்லாத அந்த நேரத்தில் தான் பவியிடம் பேசக்கூடும் என்பதால் அவளிடம் கேட்டுவிடலாம் என அவளறைக்குள் நுழைந்தாள் பங்கஜம்..

எங்கு தொடங்குவது , எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் கொஞ்சம் தயங்கியபடி பவியையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

என்னம்மா..

ஒ.. ஒன்னுமில்ல... ரம்யா ஆத்துக்கு போய்ட்டு வந்துட்டியா.. அவாத்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா..

ம்ம்ம்... தலையசைத்தவள் பங்கஜம் ஏதோ கேட்கத் தடுமாறுவதைப் பார்த்து குழம்பினாள்...

என்னம்மா... எதுக்கோ தயங்கறியே.. என்ன விஷயம்.. சொல்லு..

ம்ம்ம்.. பவி... உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லயாடி.. நேரடியாக கேட்டாள்..

கொஞ்சம் அதிர்ச்சி கலக்க விழித்தவள் அம்மாவை உற்றுப் பார்த்தாள்...

அ... அப்டிலாம் ஒன்னுமில்லம்மா.. ஏன்... இந்த திடீர் சந்தேகம் இப்போ....

இல்லம்மா.. அப்பா கல்யாணப் பேச்சு எடுத்ததுலேந்து நீ ஒருமாதிரியா இருக்கே.. அதான்..

பவிக்கு புரிந்தது.. பாட்டியின் வேலை என்று.. கொஞ்சம் சிரிப்பும் வந்தது...

பாட்டி ஏதாவது சொன்னாளா..

சே.. சே.. பாட்டி எதுக்குடி சொல்றா.... எனக்கே நன்னா தெரியறது.. ஏதோ சிந்தனைலயே இருக்கேன்னு.. பெத்த அம்மாக்கு தெரியாத தன் பிள்ளையப் பத்தி.. நானே தான் கேக்கறேன்.. சொல்லு.. உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லியா.. உனக்கு பிடிக்காம நாங்க எந்த வரனையும் முடிக்க மாட்டோம்.. ஒத்த பொண்ணு.. உன் கல்யாணம் உன் இஷ்டப்படி ஜாம்ஜாம்னு நடக்கும்.. சரியா.. நீ மனசப் போட்டு அலட்டிக்காத.. அப்பாட்ட நேரம் வரும்போது நான் பேசறேன்...

பவிக்கு ஒருபக்கம் சிரிப்பும் ஒருபக்கம் பாவமாய் இருந்தது.. ரிஷியினால் தான் மனசங்கடம் கொண்டதை எப்படி சொல்வாள்..

அம்மா... அது எனக்கு தெரியும்மா.. இருந்தாலும் படிப்பு முடுச்சுட்டு திறமையா கொஞ்சநாள் வேல பாத்து சம்பாதிக்கனும்னு ஆசை.. அதுக்குள்ள அப்பா கல்யாணம் அது இதுன்னதும் மூட்அவுட் ஆயிட்டேன்.. அவ்ளவு தான்.. அப்பாட்ட சொல்லி ஒரு ஒருவருஷமாவது கல்யாணத்த தள்ளிப்
போடு.. அது போதும்..

ஹ்ம்ம்.. என்னமோடிமா.. காலாகாலத்ல உன்ன ஒருத்தன் கையில புடுச்சு கொடுத்துட்டா நாங்க நிம்மதியா இருப்போம்.. சரி.. நான் பேசறேன்.. கொஞ்சம் சமாதானத்துடன் அங்கிருந்து சென்றாள் பங்கஜம்..

அப்படி இப்படி என்று ஒருவாரம் ஓட...

அன்று...

ஹாலில் அமர்ந்து டீவியை பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா..

சுகுமாரி பாட்டியும் அமர்ந்திருக்க , பங்கஜம் காயை நறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்..

பவியின் மொபைல் சினுங்கியது.

யாராக இருக்குமென எடுத்துப் பார்த்தாள்.. புது நம்பராய் இருந்தது.. எடுத்து அட்டண்ட் செய்தாள்..

"ஹலோ... யாரு..."

"ஏய்.. பவித்ரா.. நான் தான் சுந்தரவல்லி.. நன்னாருக்கியா.. "

அய்யய்யோ... இது எங்க போன்ல வந்தது.. மனசுக்குள் கலவரமாகி சுதாரித்தாள்..

"ஆ.. ஆ.... மாமி.. நல்லா இருக்கேன்.. என்னோட நம்பர்.... உங்கள்ட்ட.... எப்டி.. "

" ஏய்.. மறந்துட்டியா.. அன்னிக்கு எங்காத்துக்கு வரச்சொன்னப்போ உன் நம்பரக் கேட்டேனே... நீதான் குடுத்தியே.. மறந்துட்டியா.. ஹாஹா..."

சே.. தலையில் இடித்துக் கொண்டாள்... "ஆ.. ஆமா மாமி மறந்தே போய்ட்டேன்.. எப்டி இருக்கீங்க.." முகம் அஷ்ட கோணலாய் கதக்களி ஆடியது...

"ரொம்ப நன்னா இருக்கேண்டிமா... இப்போதா உன்ன பாத்தா மாதிரி இருக்கு.. அதுக்குள்ளயும் ஒருவாரம் ஓடிடுத்து.. ஹா..ஹா.."

"ஹிஹி... ஆமால்ல...." அசடு வழிந்தாள். அய்யோவென இருந்தது பவிக்கு... இது எதுக்கு போன் பண்ணித் தொல்ல பண்றது.. ஹூம்.. அவன் விட்டாலும் இது விடாது போலிருக்கே.. மனதில் கருவிக் கொண்டாள்..

"சொல்லுங்கோ மாமி.. என்ன விஷயம்.."

"ஏண்டிமா.. விஷயம் இருந்தாத்தான் உன்னண்ட பேசனுமா.. சும்மா கால் பண்ணக் கூடாதா... ம்ம்ம்..."

"அய்யோ.. அப்டிலாம் இல்லமாமி.. நீங்க எப்ப வேணா கால் பண்ணலாம்.. நான் சும்மாதானே இருக்கேன்..." அழுத்தமாகச் சொன்னாள்..

"என்னது...." மாமி குழப்பமாக

"ஒன்னுமில்ல மாமி.. சொல்லுங்க.."

"வர்ர ஞாயித்துக்கிழமை நீ ஃப்ரீ தானே.."

அய்யயோ..... திரும்ப வீட்டுக்கு கூப்பிடவா.. மனதிற்குள் படபடத்தாள்..

"இ.. இல்ல மாமி... அன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு..."

"என்னது.. சன்டே ஸ்பெஷல் கிளாஸா.."

அய்யயோ கண்டுபுடுச்சுடுத்தே.. " இ... இல்ல மாமி.. ப்ரண்ட்... பிரண்ட் ஆத்ல.. க்ரூப் ஸ்டடியத்தான்.. ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லிட்டேன்.."

"நோ.. அன்னிக்கு உனக்கு ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இருக்கு.. நீ வர்ர.. "

குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றாள் பவி... அன்னிக்கு மாதிரி எதாவது நகைக் கடைக்கு கூண்டிண்டு போய் அத வாங்கித்தறேன் இத வாங்கித் தறேன்னு எழவெடுக்கப் போறது.. பதைபதைத்தாள்..

"மாமி.... க்ளாஸ.. சே க்ரூப் ஸ்டடிய மிஸ் பண்ணக் கூடாதே..."

"ஒருநாள் மிஸ் பண்ணா குடி முழுகிப்போயிடாது... நீ வர்ரே... ரிஷி கூட நீ வருவியான்னு ஆர்வமா கேட்டான்..."

"என்னது.... " அந்த வார்த்தையைக் கேட்டதும் ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது.. உள்ளே ஒரு குறுகுறுப்பு..

"அ.. அப்டியா... எங்க.. எங்க மாமி வரனும்.."

இடத்தைக் கூறி மாமி போனைக் கட்செய்ய... பவியின் முகத்தில் அவளை அறியாமல் ஓர் பிரகாசம் குடிகொண்டது..!
 
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 8

மாமியிடம் பேசி போனை கட் செய்ய..

யாரு பவி போன்ல.. பங்கஜம் கேட்டாள்..

அதான்மா.. கோயில்ல ஒரு மாமிய பாத்தேன்னு சொன்னேன்ல.. அவங்க தான்...

என்னவாம்..

சன்டே... எதோ... ஏதோ.. பங்ஷனாம்.. வரனும்னு சொன்னாங்க..

அப்டியா.. போய்ட்டு வாயேன்.. சும்மாதான இருப்பே.. நாலு எடத்துக்கு போய் நல்லதா நாலு மனுஷாள பாத்து பழகிக்கனும்.. போய்ட்டு வா..

ஹூம்... எனக்கு தானே தெரியும்.. மனதிற்குள் பதிலளித்தாள்..

ஞாயிற்று கிழமை..

கொஞ்சம் படபடப்பாக இருந்தது பவிக்கு.. ரிஷி என்னை கேட்டானாமே.. என்னவா இருக்கும்.. புத்தி மாறிடுத்தா.. அடங்கிப் போயிட்டானா.. இல்ல.. என்ன கடுப்பேத்த கேட்ருப்பானா.. என்ன இருந்தா என்ன.. போயிதான் பாப்போமே.. மனதிற்கு சமாதானம் சொல்லி கிளம்பினாள்..

சுந்தரவல்லி சொன்ன இடத்திற்கு சென்று அவளைத் தேடினாள்.. மெயின்ரோடில் இருபுறமும் கடைகளாக இருக்க,சுற்றிச் சுற்றி பார்த்தாள்.

ஒரு பத்து நிமிடம் செல்ல, எதிரே கையை ஆட்டியபடி வந்தாள் சுந்தரவல்லி..

நீண்ட பெரிய சுடிதார் அணிந்து கண்களுக்கு குளுமை கண்ணாடி அணிந்திருந்தாள்.. பவிக்கு ஒரு நிமிடம் சந்தேகம் வர முழித்தாள். அவள் அருகில் வர வரத் தான் தெரிந்தது அது சுந்தரவல்லி என்று. கொஞ்சம் ஆச்சர்யப்பட்டு போனாள்..

" என்னடிம்மா... அப்டி ஆச்சர்யமா பாக்கறே.."

" ஒ... ஒன்னுமில்ல மாமி.." கண்கள் அவளை மேலும் கீழும் மேய்ந்தது.

" ஓ... சுடிதார் போட்டுண்டு இருக்கேன்னு பாக்கறியா.. ஹா.. ஹா.. கோயில் குளம்னு போனாத்தான் புடவை.. மத்தபடி சுடிதார் தான்.. இந்த ட்ரெஸ்ல நன்னாருக்கேனா.. ஹா.."

" ரொம்ப நன்னாருக்கேள்..." பபூன்போல பெரிய கெளன் ஸ்டைல் சுடிதாரில் அவளை பார்க்க சிரிப்பாய் வந்தது பவிக்கு.. அடக்கிக் கொண்டாள்..

" வா.. போகலாம்.. " பவியை கூட்டிக் கொண்டு அந்த கடைத் தெருவின் வழியே சென்றாள்..

இன்று என்ன களேபரம் செய்யப் போகிறாளோ என மனம் தடதடத்தது..

கொஞ்சம் தூரத்தில் ரிஷி நிற்க , அவனைப் பார்த்தவள் கண்கள் கொஞ்சம் மின்னியது.. அருகில் இருவரும் சென்றனர்..

" டொட்டடொய்ங்ங்ங்.... வாயில் பீஜிஎம் போட்டுக் கொண்டே கைகளை விரித்து எதிரே காட்டினாள் சுந்தரி..

அங்கே..

ஊறுகாய் வகைகளும் , வடகம் வத்தல் என பலப்பல உணவுப் பண்டங்கள் ஒரு டேபிளின் மேலே அடிக்கி வைக்கப் பட்டிருந்தது..

முகம் சுருங்க சுந்தரவல்லியின் முகத்தை ஏறிட்டாள் பவி.. புருவம் நெறிந்தது..

" தி இஸ் அவர் பையோ நேசுரல் ஃபுட் பிராடக்ட் ஸ்டால்.. ஹவ் இஸ் இட்.. நைஸ்னா.." அகலச் சிரித்தாள்..

அதிருப்தியில் இருந்த பவியின் முகம் வலுக்கட்டாயமாக புன்னகையை பரவ விட்டது..

" வாவ்... சோ நைஸ் மாமி.. இது.. இது.. உங்க ஸ்டாலா.."

" எஸ்... எங்க லேடிஸ் கிளப்ல மாசம் ஒருதரம் இந்த மாதிரி ஸ்டால் போடுவோம்.. அதுல வர்ர பணத்த ஏழை குழந்தைகள் படிப்புக்கு கொடுத்துடுவோம்.. அமேசிங் நோ.. " அவள் முகத்தில் பெருமிதம் தாண்டவமாடியது..

"யா... யா..." பவியின் முகத்தில் டன் கணக்கில் அசடு வழிந்தது..

"ரிஷியும் எனக்கு ஹெல்ப் பண்ணுவான்.. யூ நோ.. அவனுக்கு சமூக சேவைன்னா ரொம்ப இஷ்டம்.. "

ரிஷியை ஏறெடுத்துப் பார்த்தாள்.. மெல்லிய ஸ்நேகப் புன்னகை அவன் கண்களில் நெளிந்தது..

ஹாய்.... ஹவ் ஆர் யூ..

யா.. ஃபைன்.. நீங்க..

எஸ்.. வெரி ஃபைன்.. பற்கள் தெரிய புன்னகைத்தான்..

பவி.. நீயும் எங்களோட க்ளப்ல ஜாயின் பண்ணி சமூக சேவை பண்ணலாம்.. இது எல்டர் லேடிஸ் க்ளப் தான்.. இருந்தாலும் தெரிஞ்சவன்னு கேட்டுப் பாக்கறேன்.. "

" ச.. சரி மாமி.. ஷூயர்.."

" இதப் பாத்தியா.. கத்ரிக்கா ஊறுகாய்.. எங்களோட புது பிராடக்ட்.. இட்ஸ் வெரி டேஸ்ட்டி.. ஒன்னு வாங்கிக்கோ.. இத பாத்தியா.. பொடலங்காய் வத்தல்... திஸ் இஸ் ஆல்சோ....." சுந்தரவல்லி பேசிக் கொண்டே போக பவியின் பார்வை ரிஷியின் மீது பதிந்திருந்தது...

இன்று ஏனோ அவன் அழகாகத் தெரிந்தான்.. சந்தன நிறத்தில் முக்கால் டிராயரும் , குங்குமச் சிவப்பு பனியனும் அணிந்திருந்தான்.. வெண்மையான முகத்தில் செக்கச் சிவந்திருந்த இதழில் புன்னகை விரிந்திருந்தது.. அளவான கருமையான மீசை மேலுதடை மெலிதாய் மறைத்திருக்க அடர் புருவங்கள் வெளிர் கண்களின் மேல் அவ்வப் பொழுது ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.. சுருள் கேசம் சிறு கொத்தாய் முன்னே புரண்டு நெற்றியில் கோலம் வரைந்து கொண்டிருந்தது..

தனை மறந்து சில கணம் அவனை ரசித்தவள் சுந்தரவல்லி அழைக்க சட்டென திரும்பினாள்..

எதையோ காட்டி விளக்கிக் கொண்டிருந்தாள் சுந்தரவல்லி.. சிறு வெறுப்புடன் திரும்பி அவனைப் பார்த்தவள் முகத்தில் மெலிதாய் கோபம் படர்ந்தது..

இரண்டு மூன்று இளம் பெண்கள் அவனைச் சுற்றி சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்க அவன் அவர்களுடன் சுவாரசியமாய் பேசுவது ஏனோ பிடிக்காமல் போனது அவளுக்கு.. ஹூம்... முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

"டேய் ரிஷி.. பவித்ரா வருவாளான்னு கேட்டியே.. வந்துருக்கா பாரு..
ரெண்டு வார்த்த பேசேன்...

" ஓ.. சாரிம்மா.. கஸ்டமர்கிட்ட பேசின்டு இருந்ததால மறந்துட்டேன்.."

"ஹாய்... எப்டி இருக்கீங்க.. அன்னிக்கு கடைல பாத்தது.. ம்ம்ம்.." என்ன பேசுவதெனத் தெரியாமல் தடுமாறினான்..

அவனது இந்த மாற்றம் பவிக்கு ஒருவித ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது..

"அ.. அந்த.. கிஃப்ட் நல்லா இருக்கா.. போட்டுப் பாத்தீங்களா.. அம்மா செலக்ஷன் எப்பவும் எக்ஸலண்ட்டா இருக்கும்..." சிரித்தான்.

" ரொ...ரொம்ப நல்லா இருந்தது.. தாங்க்ஸ்..." பவிக்கும் என்ன பேசுவதெனத் தெரியவில்லை..

அமைதியாக நின்றிருந்தனர்..

பக்கத்து ஸ்டாலில் இருந்த ஒரு மாமி சுந்தரவல்லியை அழைக்க " பவி.. புராடக்ட்லாம் பாத்துண்டு இரு வந்துட்டரேன்.. மல்லிகா மாமி எதுக்கோ கூப்படறா.. ரிஷி பாத்துக்கோ.." கூறிக் கொண்டே நகர்ந்தாள்..

அவள் செல்ல இருவரும் தனிமையில் விடப்பட்டனர்..

டேபிளில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பண்டங்களை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள் பவி..

" இ.. இங்க இருக்கற பொருட்கள் எல்லாம் ரியல் ஹோம் மேட் ப்ராடக்ட்.. லேடிஸ் தயாரிச்சது.. எல்லாமே தரமானதா இருக்கும்.. லேடிஸோட திறமை பொண்ணான உங்களுக்கு தெரியாமப் போகாது.. ஹ்ம்.. நீ.. நீங்களும் வாங்கி சப்போர்ட் பண்ணுங்க.. " கொஞ்சம் படபடப்புடன் மெலிதாய் புன்னகைத்தான் ரிஷி..

"ஹா.. நீ.. நீங்களா லேடிஸ் பத்தி இப்படி பேசறது.. "ஆச்சர்யம் மாறாமல் கேட்டாள் பவி..

"எஸ்.. ஏ.. நானேதான் பேசறேன்.. நான் ஒன்னும் பெண்களுக்கு எதிரி இல்லங்க.. "அவளது கண்களை நோக்கியவாறு ஆண்மை மிடிக்குடன் சிரித்தான்..

" நைஸ்.. " அவனது கண்களை கண்ணோடு நோக்கினாள். இருவரும் புதிதாய் பார்த்துக் கொண்டனர்.. உள்ளுக்குள் ஏதோ ஸ்நேக உணர்வு பரவி இருந்தது..

இதுவரை இருந்திராத பரிச்சய உணர்வு இருவரிடமும் பரவ கொஞ்சம் சகஜமாய் பேச ஆரம்பித்தனர்..

கொஞ்சம் நேரம் செல்ல சுந்தரவல்லி வந்தாள்..

" என்ன பவித்ரா.. புராடக்ட்லாம் பாத்தியா.. புடுச்சிருக்கா.. ரெண்டுபேரும் நன்னா பேசிடுண்டு இருந்தேள் போலவே.. ரிஷிக்கு ஹ்யூமர் சென்ஸ் ஜாஸ்தி.. கொஞ்சம் கூச்ச சுபாவம்.. பழகிட்டான்னா சிரிக்க சிரிக்க பேசுவான்.. கோபத்துல அவனப்பா மாதிரி.. புடுச்ச புடிய விடமாட்டான்.." சுந்தரவல்லி பெருமையாகச் சொல்ல பவியின் முகத்தில் சிறிய மாற்றம் தெரிந்தது..

"சார் வரலியா மாமி.."

"அவரா.. ஹ்ம்.. இந்தமாதிரி விஷயங்கள்லாம் அவருக்கு பிடிக்காது.. ஏதோ எனக்கு நேரம் இருக்கேன்னு பண்றேன்.. ரிஷி அப்டியில்ல.. பாவம் எனக்காக ஓடியாடி வேலைசெய்வான்.. சமத்து.."

மெல்லிய புன்னகையுடன் அவனை மறுபடியும் பார்த்தாள்.. உள்ளுக்குள் ஏனோ அவனை பிடித்திருந்தது..

"ஓகே மாமி.. நான் கிளம்பரேன்.. டைம் ஆச்சு.."

வந்தது வந்தே ஏதாவது வாங்கிண்டு போடிமா.. உங்க பக்கத்துல இருக்கற வீடுகளுக்கும் சொல்லு.. சரியா..

இரண்டு ஊறுகாய் பாட்டில்களை வாங்கிக் கொண்டு விடை பெற்றாள் பவி..

வரேங்க.. பாக்கலாம்.. ரிஷியை பார்த்து தலை அசைக்க அவனும் கை அசைத்து விடை கொடுத்தான்..

இளங்காற்று முகத்தில் பரவ அதை ரசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள் பவி.. ஏனோ மனம் சந்தோஷத்தில் குதூகலித்தது..

அவளது சந்தோஷத்தைக் கண்டு வீட்டிலிருந்த அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. குறிப்பாக சுகுமாரி பாட்டிக்கு..

எப்பொழுதும்போல் துள்ளிக் குதித்தபடி உற்சாகமாக இருந்தாள் பவி.. மனதில் பாரம் முழுமையாய் குறைந்தது போல் இருந்தது..

அதை கவனித்த பங்கஜம் நேராக பாட்டியிடம் வந்தாள்..

அம்மா.. கவனிச்சேளா.. பவி எவ்வளவு சந்தோஷமா இருக்கா.. பாக்கவே மனசுக்கு நிம்மதியா இருக்கு.. அன்னிக்கு நீங்க சொன்னப்பறம் நான் அவளண்ட போய் பேசினேன் பாருங்கோ.. அதான்.. ஹாஹா.. சமத்து பொண்தான்.. புருஞ்சுப்பா.. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்.. கொஞ்சநாள் போட்டும்னா.. சரி.. உன் இஷ்டம்னு சொல்லிட்டேன்.. அதான் திரும்ப பழய படி நன்னா ஜாலியாயிட்டா.. என் பொண்ணு நான் சொன்னா எப்பவும் கேட்டுப்பா.. ஹாஹா.."

சுகுமாரி மத்யமாய் சிரித்தாள்.. " தெரியும்டி பங்கஜம்.. அதான் உன்ன பேசச் சொன்னேன்.

இருவரும் பேசிக் கொண்டிருக்க தனி அறையில் அமர்ந்திருந்த பவித்ராவிற்கு இருப்புக் கொள்ளவில்லை.. உடனே ரம்யாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளை நச்சரித்தது.. போனை எடுத்து கால் பண்ணினாள்.. இரண்டு மூன்று ரிங் போக அவள் எடுத்தாள்.

" என்னடி ஒட்டகம்... இன்னேரத்துல கால் பண்ற.. எப்டி இருக்க.. இன்னிக்கு சன்டே.. வருவன்னு பாத்தேன்.. உனக்கா ஸ்பெஷல் டிஷ் எல்லாம் பண்ணனும்னு காத்துட்டு இருந்தேன்.."

" இவ ஒருத்தி.. அதெல்லாம் விடு.. சொல்ல வந்த மேட்டற கேளு.."

" அப்டி என்னடியம்மா சுவாரசியமான விஷயம்.."

" அது... அது... அந்த பையன இன்னிக்கு பாத்துட்டு வந்தேன்.."

" ஏய்.. அன்னிக்கி விட்ட டோஸ்ல அவன் உன் பக்கமே தலைவெச்சு படுக்கமாட்டான்னு சொன்ன.. என்ன திடீர்னு.. நீயே போய் பத்தியா... எதுக்குடி... "

" ஹூம்.. நானா ஒன்னும் போகல.. அந்த மாமி இருக்காங்கல்ல.. அவங்க ஏதோ ஸ்டால் போடறேன்.. நீ வரனும்னு ஃபோர்ஸ் பண்ணாங்க.."

" அதுக்கு.."

" தட்ட முடியல.. வயசானவங்க.. ஆசையா கூப்படறாங்க.. போகாம இருந்தா நல்லா இருக்காதுன்னு.."

" சரிதான்.. அப்பறம்.. "

" அங்க... அங்க அவனும் இருந்தான்டி.."

" உன்ன பாத்துட்டு ஓடி போய்ட்டானா..."

" சீ.. அதெல்லாம் இல்ல.. அன்னிக்கி நா விட்ட டோஸ் நல்லா வேல செஞ்சிருக்கு.. மரியாதையா பேசினான்.. அவங்க ஹோம் மேட் புராடக்ட வாங்க சொன்னான்.."

" அதான பாத்தேன்.. மார்க்கெட்டிங் பண்றதுக்காக உன்கிட்ட நல்லபடியா பேசிருக்கான்.. இந்த பசங்களே இப்டிதான்டி.. "

" சீ.. சீ.... இல்லடி.. அவனோட சேன்சஸ் நல்லாவே தெருஞ்சது.. நல்லா சிரிச்சு பேசினான்.. பாவம் நல்ல பையன் தான்டி.. அவங்க புட் புராடக்ட தயாரிக்கற பெண்கள பத்தி உயர்வா பேசினான். அவன் மோசமானவன் இல்லடி.. பெண்கள மதிக்கறவன் தான்.. ஏதோ கோவத்துல என்கிட்ட அப்டி நடந்திருக்கான்.."

" இங்க பார்ரா... சர்டிபிகேட் வேறயா.. நல்லாத்தான் இருக்கு.. அடியே.. அப்டிலாம் ஒடனே இவனுகள நம்பிடாதடி.. தேவைனா பல்ல இளிப்பானுங்க.. அப்பறம் தலமேல ஏறி ஒக்காருவானுங்க.."

" சே... அவன் அப்டி இல்லடி.. அவன் நல்ல குணம் உள்ளவன் மாதிரிதான் தெரியுது.."

" என்னமோ போ.. நீ சொல்ற.. கேட்டுக்கறேன்.. அப்பறம்.. என்னத்த வாங்கின.."

" ரெண்டு ஊறுகாய் பாட்டில் வாங்கினேன்டி.. எல்லாம் ஹோம் மேட்... நீயும் ரெண்டு வாங்கிக்கறியா.. சூப்பரா இருக்கும்.. அவங்களுக்கும் ஹெல்புல்லா இருக்கும்.."

" அடியே.. என்கிட்டயே மார்கெட்டிங் பண்ற அளவுக்கு உன்ன மாத்திட்டானா.. ஹ்ம்.. நானும் ஹோம்மேடா நெறய ட்ரை பண்றேன்.. அவங்க கடைல போட்டு விக்கச் சொல்றியா... போவியா அந்தபக்கம்... ஹூம்... என்கிட்டே ஊறுகாய் விக்கறதப் பாரு..."

" ஹாஹாஹா..." வாய்கொள்ளாமல் சிரித்தாள் பவி.. "சரிடி.. அப்பறம் வரேன்... பை.. போனை வெக்கட்டுமா.."

" வெச்சுருடி... அப்பத்தான இன்னும் நாலு வீட்டுக்கு போய் ஊறுகாய் விக்க முடியும்.. என்னமோ போ.. எங்க போகப்போவுதோ இது.. ஹூம்.. ஓகேடி பை.." போனை அவள் கட்செய்ய.. அவனின் முகம் கண்களை நிறைத்தது பவிக்கு..

" அவ சொல்றமாதிரிலாம் அவன் கிடையாது.. நல்லவன்தான் போல.. இந்த ரம்மிக்கு யாரையும் சரியா ஜட்ஜ் பண்ண தெரியல.. சும்மா ஊறுகாய் பாட்டில் விக்க என்கிட்ட சிரிச்சு பேசுவானா என்ன.. அவன் இருக்கற ஸ்மார்ட்னசுக்கு ஆயிரம் பேர் க்யூல வருவாங்க.. ஹா.. இருந்தாலும் கொஞ்சம் அந்த ஆம்பளத் திமிரு கண்ல தெரியுது... சோ வாட்.. ஆம்பளைன்னா அந்த மிடுக்கு இருக்கத் தானே செய்யும்.. பெண்கள பாத்து வழிஞ்சுகிட்டு நிக்காத குணம்.. கொஞ்சமா கம்பீரம்.. ஹீ இஸ் எ மேன்லி கை.. குட்.." தனையறியாமல் சிரிப்பு மலர்ந்தது அவளுக்கு..

" என்னடா ரிஷி.. அங்கயே பாத்துண்டு இருக்க.. யாரப் பாத்துண்டு இருக்க.. ம்ம்ம்.."

அவனது கண்கள் அவள் சென்ற பாதையை அநிச்சயாக அவ்வப் பொழுது பார்த்துத் திரும்புவதைக் கண்ட சுந்தரவல்லி குழம்பினாள்..

" ஆ.. ஒ... ஒன்னுமில்லையே.. யாராவது கஸ்டமர்ஸ் வர்ராங்களான்னு பாத்துட்டு இருக்கேன்.. நத்திங்.." சமாளித்தான்..

மாலை..

பவி ஹாலில் உட்கார்ந்து தம்பியுடன் விளையாடிக் கொண்டிருக்க , சுறுசுறுப்புடன் உள்ளே நுழைந்தார் நடேசன்..

முகத்தில் சந்தோஷக் களை பரவியிருந்தது..

"என்ன பவி.. அம்பியோட விளையாடிண்டு இருக்கியா.. ஹா.. இன்னும் விளையாட்டு பொண்ணாவே இருக்கே.. கல்யாண வயசு ஆயுடுத்து.. ம்ம்ம்.."

சோபாவில் அமர்ந்தவர் குரல் கொடுத்தார்.. "பங்கஜம்... பங்கஜம்... இங்க கொஞ்சம் வாயேன்.. பவி.. பாட்டியையும் கொஞ்சம் அழச்சுண்டு வாயேன்.."

குழப்ப ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தவள் " என்ன விஷயம்பா.. எல்லாரையும் கூப்படறேள்.." கேட்டாள்..

" எல்லாம் நல்ல விஷயம் தான்.. நோக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயுடுத்து.. போ.. போ.. பாட்டிய கூட்டிண்டு வா.." கூறியபடி சிரித்தார்..

கொஞ்சம் படபடப்பு ஏற உள்ளறைக்கு சென்றாள்..

சேரில் அமர்ந்தபடி கதை புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த பாட்டி அவள் வருவதைக் கண்டு ஏறெடுத்தாள்..

" பாட்டி... அப்பா உன்ன கூப்படறா.. வா..."

" என்னவாம்... " கண் கண்ணாடி கழற்றியபடி கேட்டாள்..

" தெரியலை.. வா.. " அவளை கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு ஹாலுக்கு நடந்தாள் பவித்ரா..

அங்கே பங்கஜமும் நின்றிருக்க பாட்டியை அமரவைத்துவிட்டு அம்மாவிடம் ஒட்டி நின்றாள் பவித்ரா..

எல்லார் முகத்திலும் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவல் கூடி இருந்தது..

ஒருமுறை அனைவரையும் பார்த்தவர் மெள்ள சிரித்தார் நடேசன்.

" என்னடா நடேசா... எங்கள எல்லாரையும் வரச் சொல்லிட்டு நீ பாட்டுக்கு சிரிச்சுண்டு இருக்கே.. என்ன விஷயம்.." பொறுமை தாங்காமல் பாட்டி கேட்க..

" எல்லாம் நல்ல விஷயம் தான்மா.. நம்ம பவிக்கு நல்லது நடக்க நேரம் கூடிடுத்து.."

குழப்பமாக அனைவரும் பார்க்க..

" என் ஆபிஸ் கொலிக் கோவிந்தன் தெரியுமோல்யோ.. அவனன்ட நம்ம பவியோட கல்யாண விஷயம் பத்தி ரெண்டு நாளைக்கு முன்ன பேசிண்டு இருந்தேன்.. இன்னிக்கு அவனுக்கு தெரிஞ்ச வரன் ஒன்னு இருக்குன்னு சொல்லி பவியோட ஜாதகத்த வாங்கிண்டு போயிருக்கான்."

பாட்டியின் முகத்திலும் பவியின் முகத்திலும் மெல்லிய அதிர்ச்சி பரவியது.. பங்கஜம் சங்கடத்துடன் நெளிந்தாள்..

எல்லோரையும் பார்த்தவர்.. " ஏன் எல்லாரும் அமைதியா இருக்கேள். சந்தோஷமான விஷயம் தானே.." கேட்டார்.

" பையன் யாரு.. எந்த ஊர் காரா.. பையன் என்ன பண்றானாம்.. " பங்கஜம் கவனத்தை திசை திருப்பினாள்..

"அதுவா.. பையன் பீஈ படிச்சிருக்கானாம்.. எம் என் சி கம்பெனில மேனேஜர் உத்யோகமாம்.. இந்த சின்ன வயசுலேயே.. பவியவிட அஞ்சு வயசு பெரியவன்.. அவ்ளவுதான்.. அப்பா புரோகிதம் தான். பையன நன்னா படிக்க வெச்சுருக்கார்.. ஆத்துக்கு மூத்த பிள்ளையாம்.. இன்னும் ரெண்டு பொண் குழந்தைகள் இருக்காம்.. நல்ல பொண்ணா அவனுக்கு ஏத்தா மாதிரி தேடிண்டு இருக்காலாம்.. அதான் நம்ம பவி ஞாபகம் வந்ததாம்.. உடனே ஜாதகத்த குடுன்னு வாங்கிண்டு போய்ட்டான்.. "

"ஹூம்... ஜாதகம் பொருந்தி வரனும்.." பங்கஜம் ஆஸ்வாசமானாள்..

" ஏன் பங்கஜம்.. நம்ம பவி குட்டி ஜாதகத்துக்கு என்ன குறைச்சல்.. ராஜயோக ஜாதகம்.. போற எடத்துல ஜாம் ஜாம்னு இருப்பா பாரு.. பையன் சொந்தமா வீடுவேற கட்டிமுடுச்சுருக்கானாம்.. ராஜாவாட்டம் இருப்பானாம்.. இந்த வரன் அமஞ்சுடுத்துன்னா அடுத்த முகூர்த்தத்லே முடுச்சுட வேண்டியது தான்.." அவர் கூறக் கூற பவிக்கு அதிர்ச்சி கூடிக் கொண்டே போனது..

சுகுமாரி பாட்டி முகம் சட்டென வாடிப் போனது..

" இன்னும் குழந்தைக்கு படிப்பே முடியலயே.. அதுக்குள்ள..." இழுத்தாள் பங்கஜம்..

" அதனால என்ன.. இந்த காலத்ல நல்ல வரன் அமையறதே கஷ்டம்.. நாம கண்டீஷன் போட்டுண்டு இருக்க முடியுமா... பகவான் அனுக்ரஹத்ல எல்லாம் நன்னா முடியும் பாரு... சரி.. சரி.. நல்லா சூட ஒரு பில்டர் காபி போட்டு எடுத்துண்டு வா.. " அவர் சுற்றி இருப்பவர்களின் மனநிலை எதையும் யூகிக்காமல் நிம்மதி பெருமூச்சுவிட்டார்..

பவிக்கு சொல்லத் தெரியாமல் வந்தது.. வெடித்துவிடும் கோபம் பொங்கியது.

பாட்டி அவளை கண்களால் சமாதானம் செய்ய பங்கஜம் அவளை இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

" அம்மா... அப்பா பாட்டுக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சுட்டார்.. உன்கிட்ட தானே சொன்னேன்.. இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்னு.. சொல்லலயா அவர்கிட்ட.. " மெல்லிய குரலில் கடிந்து கொண்டாள்..

" இ.. இல்லம்மா.. நேரம் பாத்து தானே அவர்கிட்ட சொல்லனும்.. அதான்.. நீ பொறுமையா இரு.. நான் சமயம் பாத்து பதவீசா சொல்றேன்.. எடுத்தோம் கவுத்தோம்னு சொல்ல முடியாதும்மா.."

" அதுக்கு.. அவர்பாட்டுக்கு கல்யாணம் வரை போய்ட்டார்.. அவன் யாரு என்னனு கூட எனக்கு தெரியாது.. அவனுக்கு புடுச்சா மட்டும் போதுமா.. எனக்கு பிடிக்க வேண்டாமா.. அவன் ஓகே சொன்னா ஒடனே கல்யாணம்கறாரே.. சே.."

" பவி.. டென்ஷன் ஆகாதடி.. இப்போதானே ஜாதகம் குடுத்திருக்கார்.. அதுக்குள்ள எல்லாம் ஆயிடுமா.. பொறு.. "

" நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது.. ஒடனே அவர்ட்ட சொல்லி இதுக்கு ஒரு
முடிவு கட்டு.. இல்லேனா நானே அவர்ட்ட போய் சொல்லிக்கறேன்.."

" அய்யோ.. அந்த மாதிரி எதுவும் பண்ணிடாதே.. நான் பேசிக்கறேன்.. நீ உன் ரூமுக்கு போ.. "

ஹூம்... வெறுப்புடன் படபடவென தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள் பவித்ரா..!

நடேசனிடம் எப்படி சொல்வதென யோசனையில் ஆழ்ந்தாள் பங்கஜம்..!
 
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 9

எப்படி நடேசனிடம் கூறுவது எனக் குழப்பத்துடன் சமையல்கட்டில் பங்கஜம் யோசனையில் ஆழந்திருந்தாள்..

சுகுமாரி பாட்டிக்கு வருத்தம் மேலிட தன் மகனிடம் எப்படி சொல்வதெனத் தெரியாமல் தன் அறையில் சோர்ந்து அமர்ந்திருந்தாள்..

காலையில் இருந்த அத்தனை சந்தோஷமும் வடிந்துவிட ஓர் வெறுமையுடன் ஜன்னலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா..

இதை எதையுமே உணராத நடேசன் சந்தோஷ நிம்மதியுடன் ஹாலில் டீவியை பார்த்துக் கொண்டிருந்தார்..

நேரம் நகர...

" அண்ணா.. டிபன் ரெடியாயிடுத்து.. சாப்படறேளா.. " பங்கஜம் அவரை அழைத்தாள்..

" ம்ம்.. பேஷா சாப்படலாமே.. டேய் ஸ்ரீதரா அக்காவையும் பாட்டியையும் கூப்டு.. ஒன்னா ஒக்காந்திடலாம்.."

அவன் தலையாட்டியபடி ஆடிக் கொண்டே பவித்ராவின் அறைக்கு சென்றான்..

" பவி... பவி... ஏய் அக்கா.. அப்பா சாப்ட கூப்படறா.. வா.."

" நா வரல.. எனக்கு பசிக்கல.. நீ போ.."

" அப்பாாாா... பவிக்கு பசிக்கலயாம்.. வரமாட்டேங்கறா.. " கத்திக் கொண்டே ஹாலுக்கு ஓடினான்..

" என்னாச்சு பவி.. ஏன் சாப்பாடு வேண்டாங்கற.. வா... ரெண்டுவாய் சாப்ட்டு போ.. ராத்திரி சாப்டாம தூங்கப்டாது.. " ஹாலிலிருந்து அவர் குரல் கொடுக்க..

" அய்யோ.. சே.. இந்த குட்டிச் சாத்தான் இருக்கானே.. அவன.. " மனதில் பொறுமியபடி " தோ.. வரேன்பா..." கூறிக்கொண்டே பாட்டியின் அறைக்குள் நுழைந்தாள்..

" பாட்டி வா சாப்படலாம்.. அப்பா கூப்படறார்..."

" நேக்கு பசி இல்ல பவி.. மனசு என்னவோ போல இருக்கு.. நீங்க சாப்டுங்கோ... நேக்கு வேண்டாம்.."

ஹ்ம்ம்ம்.... அருகில் வந்து பாட்டியின் நெற்றியை வாஞ்சையுடன் வருடினாள் பவி... " பாட்டிம்மா.. மனசு வருத்தப்பட்டுட்டியா.. விடு.. "

" இல்லடி கண்ணு... உங்கப்பா அவசர கதியா இருக்கானே.. நான் என்ன பண்ணட்டும் சொல்லு... உனக்கு நல்ல வரனா அமைஞ்சு செளகர்யமா சந்தோஷமா நீ இருக்கனும்.. என் வாழ்க்கை மாதிரி உன் வாழ்க்கையும் ஒருத்தனோட கைல சிக்கிண்டு வெளிவரமுடியாம திணறிடப்படாது.. அதான் நேக்கு பயமா இருக்கு.. வசதியானவன் , அழகானவனா இருந்தாப் போதுமா... குணமானவனா இருக்கனுமே.. உன்ன நல்லபடியா பாத்துக்கறவனா இருக்கனும்.. பெருமாள்ட்ட தினம் அதான் பிராத்தனை பண்றேன்.. அத நெனச்சு நெனச்சுதான் மனசு நோகறது.. "

எதுவும் பேச முடியாதபடி அமைதியாக இருந்தாள் பவி..

" பவி குட்டி.. நீ கவலப் படாதடி.. உனக்கு நல்ல வாழ்க்கை அமச்சு குடுக்காம இந்த உசுரு போகாது.. அது மட்டும் திண்ணம்.. " கண்களில் துளி நீர் கரைந்து வழிந்தது..

" பாட்டிமா.. அழாத.. அழாத.. அப்டிலாம் ஒன்னும் ஆகாது... நான் ஜாம் ஜாம்னு இருக்கப் போறத பாக்க நீ இருப்பே.. அப்டி அப்பா கைகாட்டினா ஒடனே நான் ஒத்துண்டிடுவேனா.. என் விருப்பம் தான்.. அதான் அம்மாட்ட பேசச் சொல்லிருக்கேன்.. கொஞ்ச நாளைக்கு தள்ளிப் போட சொல்லி.. அதுக்கபறம் எனக்கேத்த ஒருத்தன் வராமலப் போயிடுவான்.. இதுக்கு போயி.. வா... சாப்படலாம்.."

" உனக்கென்னடி ராஜாத்தி.. உனக்கேத்த ராஜகுமாரன் கண்டிப்பா வருவான்.. "

" எப்படி... குதிரைலயா... ஹாஹாஹா.." பவி கலுக்கென சிரிக்க பாட்டியும் சேர்ந்து கொண்டாள்.

" விளையாட்டு.. ஹாஹா.. " பவியின் கன்னத்தைச் சேர்த்து நெட்டி முறித்தாள் சுகுமாரி.

" சரி.. சரி.. வா.. அப்பா காத்துண்டு இருக்கார்.. சாப்பிட்டு நிம்மதியா படுத்துக்கோ.." கைத்தாங்கலாக பாட்டியைக் கூட்டிக் கொண்டு ஹாலுக்குள் நுழைந்தாள்..

பாட்டியை சேரில் அமர்த்திவிட்டு அப்பாவின் அருகில் தரையில் அமர்ந்தாள் பவித்ரா..

" என்ன.. பாட்டியும் பேத்தியும் கொஞ்ச ஆரம்பிச்சுட்டேளா.. எத்தனை நாளைக்கு.. " சிரித்தார்..

" உனக்கென்னடா.. எப்பவும் பவி இப்டித்தான் இருப்பா.." பாட்டிக்கு சிறிது கோபம் வந்தது.

" சரி.. சரி.. உன் பேத்தி ஆச்சு.. நீ ஆச்சு.. நேக்கென்ன.. ஹாஹா.. பங்கஜம் இலையப் போடு... " சந்தோஷக் களிப்பில் சிரித்தார் நடேசன்..

அனைவரும் சாப்பிட்டு எழுந்திருக்க பங்கஜத்தைப் பார்த்து கண்களால் ஜாடை செய்தாள் பவி..

சரி சரியென தலையாட்டியபடி விலகினாள் பங்கஜம்..

இரவு அவர்களது அறையில் அமர்ந்திருந்தனர் பங்கஜமும் நடேசனும்..

வெற்றிலையை மென்றபடி அசூயையாய் மெள்ள கட்டிலில் சரிந்து கொண்டார்..

அவரிடம் எப்படி ஆரம்பிப்பது என தயக்கத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜம்..

" என்ன பங்கஜம்.. சந்தோஷம் தானே.. அவோ கல்யாணம் நல்லபடியா முடுஞ்சா பெரும் கடன் தீர்ந்தது.. அப்பறம் ஸ்ரீதர் படுச்சு முடுச்சு வேலைக்கு போய்ட்டான்னா , ரிட்டர்யமன்ட்ட வாங்கிண்டு கிருஷ்ணா ராமான்னு பெருமாளுக்கு சேவை செஞ்சுண்டு காலத்த தள்ளிடலாம்.. ஹ்ம்.. பகவான் அனுக்ரஹம் பண்ணனும்.. என்ன சொல்றே.."

ஹ்ம்ம்ம்.. பெருமூச்சொன்றை சொரிந்தாள் பங்கஜம்..

" அ.. அண்ணா.. நா ஒன்னு சொன்னா கோவிச்சுக்காம கேட்டுப்பேளா.."

" சொல்லு.. இத்தன வருஷமா கேட்டுண்டு தானே இருக்கேன்.. " இதழ் விரிந்தார்..

" அது.. அது... பவி..
பவி.. இப்பத்தான் கலேஜ் ஃபைனல் இயர் போயிண்டு இருக்கா... இன்னும் படிப்பு முடிய நாலு மாசம் இருக்கு.. அதுக்குள்ள கல்யாணமான்னு பவி யோசிக்கறா.."

" யோசிக்கறாளா.. எதுக்காம்.. அவளுக்கென்ன சின்ன பொண்ணு.. எதுஎது எப்பப்ப நடக்கனுமோ அது அது அப்பப்போ நடக்கனும். நடத்திடனும்.. காலம் போனா அப்பறம் யோசிச்சு பிரயோஜனம் இருக்காது.."

" இல்ல... படிப்பு முடுச்சுட்டு ஒரு ஒரு வருஷமாவது வேல பாத்துண்டு , வெளி உலகத்த பத்தி தெரிஞ்சுக்கலாம்னு ப்ரியப் படறா.. அதான்.." இழுத்தாள்..

கொஞ்சம் முகம் மாறியது நடேசனுக்கு.. " பங்கஜம்... நீ என்ன புருஞ்சுண்டுதான் பேசறயா.. இல்லே... அவதான் புரியாம சொல்றான்னா நீயும் என்னன்ட வந்து சொல்றியே.. "

" அப்டி இல்லண்ணா.. வந்து.... பாவம் குழந்தை நம்மாத்ல இன்னும் கொஞ்சநாள் இருக்கனும் ஆசப்படறா.."

நடேசனின் முகத்தில் கொஞ்சம் ஏக்கம் நிறைந்தது..

" நான் என்ன நம்ம குழந்தைக்கு கெட்டதா பண்ண போறேன்.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு தானே அவசரப் படறேன்.. எம்பொண்ண நானே வெரட்டி அடிப்பேனா... ஹ்ம்.. ஒரு அப்பாவோட கவலை பொண்களுக்கு புரியாது.. " கொஞ்சம் அமைதியானார்.. " அதான் அவ படிப்பு முடிய நாலஞ்சு மாசம் இருக்கே.. அது வரைக்கும் சந்தோஷமா இருக்கட்டும்.. அது போதுமே.. இந்த மாதிரி கல்யாணத்த தள்ளிப்போடறது.. அப்பறம் வேலைக்கு போவேன்னு கொடிபிடிக்கிறது.. இப்டியே இருந்து முப்பது வயசு ஆகியும் கல்யாணம் ஆகாம நிக்கறது எல்லாத்தையும் சுத்துமுத்தும் நெறைய பாத்துட்டேன்.. நம்மாத்ல அது மாதிரி நடக்க நான் விடமாட்டேன்... அதே சமயம் அவ விருப்பத்துக்கு மாறா எதையும் செய்யமாட்டேன்.. நல்ல பையனத்தான் தேடிப் புடுச்சு அவள தாரவாத்து கொடுப்பேன்.. புரியறதா.. அவள்ட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிடு... அப்பா மேல கோபப்பட்டாலும் பரவால்ல.. பெத்துக்கறேன்.." படபடவென கூறிவிட்டு படுத்துக் கொண்டார் நடேசன்..

அதற்கு மேல் என்ன பேசுவதெனத் தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜம்..!

மறுநாள் காலை..

பூஜையை முடித்து ஆபிஸிற்கு கிளம்பிய நடேசன் நேராக சுகுமாரியின் அறைக்குள் நுழைந்தார் ..

" என்னடா நடேசா..ஆபிஸ் கிளம்பிட்டியா.. "

" ம்ம்... அம்மா.. உன்கிட்ட ஒருவிஷயம் பேசனும்.."

" சொல்லுப்பா.. என்ன விஷயம்..."

" பவி கல்யாணம் பத்திதான்.. நேத்து பங்கஜம் எதோ சொல்லிண்டு இருந்தா.. பவி என்னவோ படிப்ப முடுச்சுட்டு வேலைக்கு போகனும்.. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றாளாம்.. "

" அ.. அவ.. ஆசப்படறது தப்பில்லையே நடேசா.."

கொஞ்சம் படபடப்பானார் நடேசன்.. " என்னம்மா.. உன் பேத்திக்கு நீ புத்திமதி சொல்வேன்னு பாத்தா.. நீயே இப்டி பேசறே.. அவளுக்கு செல்லம் குடுத்ததெல்லாம் போதும்... வயசு ஆயிடுத்து.. அடுத்த வீட்டுக்கு போய் வாழ வேண்டியவ.. கண்டத யோசிச்சுண்டு இருக்கா.. அவளுக்கு புத்திமதி சொல்லி வை.. காலம் கெடக்கற கெடப்பு உனக்கு தெரியாதது இல்லே.. சரியா.. நானே அவள்ட்ட பேசிடுவேன்.. அது சரியா வராதுன்னு தான் உங்கள்ட சொல்றேன்.. பங்கஜத்துக்கிட்டயும் சொல்லிருக்கேன்.. அவள ஒப்புக்க வைக்கறது உங்க பொறுப்பு.. நான் கெளம்பறேன் டைம் ஆயுடுத்து.." கண்டிப்புடன் சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பினார் நடேசன்..

அவர் செல்வதை சஞ்சலத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரி பாட்டியின் கனத்தமனம் நீரில் மூழ்கிய கல்லாய் கடந்த கால நினைவுகளில் அமிழ்ந்தது..

உள்ளறையில் அமர்ந்திருந்தாள் சுகுமாரி..

மூத்ததாய் பிறந்த தான் ஒரு ஆண்பிள்ளையாக இல்லாமல் பெண்ணாய் பிறந்தது அப்பாவிற்கு கோபமாக இருந்தாலும் வளர வளர எதோ கொஞ்சம் குறைந்திருந்தாலும் , அவ்வப் பொழுது அது வெளிப்படுவதும் , இயற்கையாக உள்ள கோபம் , தான் ஒரு ஆண்பிள்ளை குடும்பத்தலைவன் தன் பேச்சிற்கு மறுபேச்சு கிடையாது என்ற அப்பாவின் குணம் சுகுமாரிக்கு புரிந்து தான் இருந்தது.. இதனால் எந்த பெரியபாதிப்பும் இல்லை... பழக்கமான ஒன்றாகிவிட்டது.. ஆனால்.. இந்த கல்யாணம்.. நினைத்தாலே அடிவயிறு சில்லிட்டு உடல் துவள ஓர் பயம் பரவியது அவளுக்கு..

" அவா வந்து பாத்த உடனே அப்பா என்ன அனுப்பிடுவாளா.. அவாள்லாம் எப்படி இருப்பா.. அந்த பையன்.. அவன் எப்படி பேசுவான்.. அய்யயோ அவன்னு சொல்லிட்டேனே.. தப்பு.. தப்பு.. அவர்னுதானே சொல்லனும்... அப்பறம் மரியாதை இல்லைனு நெனச்சுப்பாளே.. அவா எதாவது சொல்லிட்டா அப்பறம் அப்பா , பாட்டி சொன்னா மாதிரி விஷ்வரூபம் எடுத்துடுவாரே.. அம்மா பாவம்.. அவளுக்கும் திட்டுவிழும்.. " நேரம் காலமின்றி அவ்வப்பொழுது மனதில் பலப்பல சிந்தனைகள் ஓடியது..

கூடவே நாட்களும்...!

பெண்பார்க்கும் படலம் நிகழும் அந்த நாளும் வந்தது..

தாழ்வாரம் , கூடம், சமையலறை என, மல்லிகை , சந்தனமும் பன்னீர் , நெய் வாசமென வீடே மணத்தது..

ருக்மணியும் , வேதவல்லியும் அடுப்பங்கரை புகையில் கண்கள் சிவந்து வியர்த்துக் கொண்டிருக்க , அடுத்தாத்து செம்பா மாமியும் ,
அவள் பெண் தைலாவும் சிரித்தபடி உள்ளே நுழைந்தனர்..

" என்ன ருக்மிணி மாமி... சமையல் பலே ஜோர் போலவே.. தெருமுழுக்க மணக்கறதே.. உங்க கைப்பக்குவமே தனிதான்.. ம்ம்.. மைசூர் பாகா அடுப்புல.. தேங்குழல் வேறயா.. ம்ம்ம்.. வாசன இழுக்கறது.. ஹாஹா.." கண்களால் பக்ஷணங்களை மேய்ந்தபடி விசாரணை மேற்க் கொண்டாள் செம்பா மாமி.

" ஆமாண்டி செம்பா.. ஒத்த பொண்ணு.. அவளுக்கு வரன் பாக்க வர்ராளே.. வர்ர எடம் பெரிய இடமாம்.. அவாள உபசாரம் பண்றத்ல எந்த குறையும் இருக்கப்டாதுன்னு அம்பி சொல்லிட்டான். எதிர் பேச முடியுமா.. பாவம் அதான் ருக்கு வெடிக்காலைலயே ஆரம்புச்சுட்டா.." வேதவல்லி புடவை தலைப்பால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தபடி அங்கலாய்த்தாள்..

" செம்பா.. சுகுமாரி உள்ளதான் இருக்கா... உன் பொண்ணுதான் நன்னா புடவ கட்டிவிடுவாளே.. ரெண்டு பேருமா அவளுக்கு அலங்காரம் பண்ணி தயார் பண்ணிடுங்கோ.. நாழி ஆயுடுத்து வேறே.. அதுக்குள்ள அவா வந்துட்டா அம்பி சத்தம் போடுவன்.. மடமடன்னு அவள தயார் படுத்திடுறியா.."

" ஓ.. தாராளமா.. சொல்லனுமா மாமி.. எங்க இருக்கா அந்த சின்னகுட்டி.. தைலா வாடி..." தன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு உள்ளறைக்குள் சென்றாள் செம்பா.

சொந்தங்கள் சூழ்ந்திருக்க அந்த வீடே களைகட்டியது..

உள்அறையின் நடுவே பாவாடை தாவணியில் நின்றிருந்த சுகுமாரி பயம் பரவிய முகத்துடன் மெள்ள சிரித்தாள்..

அரக்கு நிறத்தில் நீல நிற பாடர் போட்ட பட்டுப்புடவையை கைகளில் கசக்கிக் கொண்டு விழித்துக் கொண்டிருந்தாள்.. " என்னடி சுகு குட்டி.. புடவை கட்டிக்கலாமா.. தைலா.. அந்த கதவ சாத்திட்டு வாடிம்மா.. " எனக்கூறியவாறே புடவையை வாங்கி பிரிக்க ஆரம்பித்தாள் செம்பா... ஒடிசலாய் நெடுநெடுவென வளர்ந்திருந்த சுகுமாரியை அப்படியும் இப்படியும் ரங்கராட்டினம் சுத்த வைத்து உருட்டிப் புரட்டி அவளுக்கு புடவை கட்டி விடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது இருவருக்கும்..

" ஏன்டி ஒட்டடை குச்சி.. ஆள் மட்டும் இவ்ளோ ஒசரமா வளந்திருக்கே.. உடம்புல கொஞ்சம் சதை இருக்கா பாரு.. எப்படிடீ இவளோ அகல ஜரிகை புடவைய உனக்கு கட்டி விடறது.. ம்ம்ம்.. பேசாம புடவைய தரைல விரிச்சுப் போட்டு படுத்து உருண்டுடு.. அப்ப வாச்சும் உடம்புல சுத்திக்கறதான்னு பாப்போம்.." தைலா அவளை சீண்ட சுகுமாரி வேர்த்து வழிய அவளை பாவமாகப் பார்த்தாள்..

" டி தைலா.. போதும்டி உன் பிரசங்கமும் வாய்துடுக்கும்... அவளே பாவம் மருண்டு போயிருக்கா.. அவள சீண்டிண்டு.. சீக்கரம் புடவைய கட்டி அந்த நகையப் பூட்டி பூவ வெச்சுவிடு.. நாழி ஆயிடுத்து.." செம்பா மாமி விரட்ட மளமளவென ஒருவழியாய் அலங்காரம் முடிந்தது..

வாசலில் குதிரைவண்டியின் சத்தம் கேட்கவும் வீடெங்கும் பரபரப்பானது..
தோளில் இருந்த துண்டை இடுப்பில் சுத்திக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தார் சுப்ரமணியன்..

" வாங்கோ.. வாங்கோ.. வரனும் வரனும்.. சாம்பு அந்த பாய விரி... நீங்க உள்ள வாங்கோ.." கொஞ்சம் கூனிட்டு அவர்களை வரவேற்றார் சுப்ரமணியன்..

பத்து பதினைந்து பேர்கள் புடைசூழ உள்ளே நுழைந்தனர் பர்வதமும் , சதா சிவமும்.. அம்மா பின்னால் பட்டுவேட்டி சட்டையுடன் மெல்லிய சிரிப்புடன் வந்தான் குருமூர்த்தி.. மாப்பிள்ளை பையன்..!

வீட்டை கண்களால் அளந்தபடி உள்ளே நுழைந்த பர்வதம் கொஞ்சம் டாம்பீகமாகத் தென்பட்டாள்..!

அனைவரும் கூடத்தில் வந்து அமர உபசார வார்த்தைகளும் குசல விசாரிப்புகளும் இருபுறமும் பரிமாறப்பட்டது..

சிறிது நேரம் போக..

அம்மாவின் அருகில் அமர்ந்திருந்த குரு மூர்த்தி உள்அறையை அவ்வப் பொழுது பார்த்தபடி தலையை குனிந்து கொண்டான்..

" இப்படி வெறுமன பேசிண்டே இருந்தா நேரம் போயிண்டே இருக்கும்.. பொண்ண வரச் சொல்லுங்கோ.." பர்வதம் தன் கணவர் சதாசிவத்திடம் சிடுசிடுக்க அவர் சுப்ரமணியிடம் சத்தமாகக் கேட்டார்.. " பொண்ண அழச்சுண்டு வர்ர எண்ணம் இருக்கா.. "

" க்ஷமிக்கனும்... இதோ.. " பவ்யமாய் கூறிய சுப்ரமணி ருக்மிணியை பார்த்து முறைக்க , அவள் செம்பா மாமியிடம் கண்களால் ஜாடை காட்ட , இருவரும் ஆளுக்கு ஒருபுறமாய் பிடித்தபடி உள்ளறையிலிருந்து சுகுமாரியை அழைத்து வந்தனர்.. ஜிலீரென உள்ளுக்குள் படபடப்பு அதிகரிக்க , அடி எடுத்து வைக்கக் கூட திராணியின்றி தடுக்கிய புடவையில் தட்டுத் தடுமாறி கூடத்திற்கு வந்து நின்றாள் சுகுமாரி..

கூட வந்த ருக்மணியும் , செம்பாவும் அவளை தனித்துவிட்டு பின்னால் விலக , தனியாக அனைவரின் முன் , என்ன செய்வதெனத் தெரியாமல் விழிகள் மருண்டபடி நின்றிருந்தாள் சுகுமாரி..

" பெரியவாள நமஸ்காரம் பண்ணிக்கோ.. " அதட்டலாக சுப்ரமணி சொல்ல.. கண்களில் நீர் திரள தட்டுத்தடுமாறி விழுந்து நமஸ்கரித்து மெள்ள எழுந்தாள்..

நிமிர்ந்து அனைவரையும் பார்க்க தைரியமின்றி தலையை குனிந்து கொண்டாள்..

" என்ன.. பொண்ணு மலங்க மலங்க பார்த்துண்டு இருக்கா.. வாய் பேச வராதா..." பர்வதத்தின் அருகில் இருந்த மாமி உசுப்பேத்த..

" ஹூம்.. அப்டி ஊமப் பொண்ணா எம்பையனுக்கு பாப்பேன் லோகா.. " என கம்பீரமாகக் கூறிய பர்வதம் குழைந்து நின்றிருந்த சுகுமாரியை பார்த்தாள்.. " ஏன்டிமா பொண்ணே.. ஒரு பாட்டு பாடு.. கேப்போம்.. டேய் மூர்த்தி இங்க கேளுடா.." என்று பர்வதத்தின் குரல் உயர்ந்து ஒலித்தது அந்த சபையில்..

விக்கித்துப் போன சுகுமாரியின் இமைகள் படபடக்க, கைகால் உதற..

ருக்மணி பதட்டத்துடன் " வந்து.. வந்து.. குழந்தைக்கு தனியா பாட்டுன்னு எதுவும் சொல்லிவைக்கலை.. ஆத்ல ஸ்லோகம் சொல்வா.. நாள் கிழமை விடமாட்டா.." தயங்கித் தடுமாறிக் கூறினாள்..

" என்னது... ஒரு பாட்டு பாடக்கூடத் தெரியாதா.. குதிர் மாதிரி வளந்துருக்கா.. வெடவெடன்னு வளந்திருக்கா ஒழிய இவ்ளோ ஒல்லியா இருக்காளே.. ஆத்ல சாப்பாட்டு கஷ்டமோ.. இவ்வளவுதான் உங்க வளர்ப்பு.. ம்ஹூம் ஒன்னும் சரி இல்லையே... ம்ம்.. ஆத்துக்காரியம் பெரிய குடும்ப முறை எல்லாம் இவளுக்கு தெரியுமா..." எனத் தலையோடு காலாய் சுகுமாரியை ஏளனப் பார்வையோடு பார்த்தாள் பர்வதம்..

" இது என்னடி மரப்பாச்சிக்கு புடவை கட்டினாப்ல இருக்கு.. பாத்துக்கோ பர்வதம்.. நம்மாத்துக்கு இவ சரியா வருவாளா.." அருகில் அமர்ந்திருந்த பருத்த மாமி ஒருத்தி பர்வதத்திடம் குறைகூற..

" ஹூம்.. பெத்தவா சரியா கவனுச்சுண்டாத்தானே.."சுப்ரமணியை அலட்சியமாகப் பார்த்தாள் பர்வதம்..

அத்தனை ஆர்ப்பாட்டம் செய்யும் சுப்ரமண்யன் பர்வதத்தின் குரலுக்கு முன்னால் அடங்கிப் போனார்.. மாப்பிள்ளையின் தாயார் என்ற ஸ்தானத்தால்..

தன் பெண்ணை நடுக்கூடத்தில் நிறுத்தி ஆளாளுக்கு பேசுவது தீயாய் சுட்டது ருக்மணிக்கு..

இத்தனை களேபரத்திலும் எந்த கவலையும் இன்றி மாப்பிள்ளை தோரணையுடன் சிரித்துக் கொண்டிருந்தான் குருமூர்த்தி..!!


For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom